Logo

விடியலுக்கு முந்தைய இருட்டு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6569
vidiyaluku mundhaiya iruttu

சுராவின் முன்னுரை

பிரபல மராத்தி நாடகாசிரியர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், பத்திரிகையாளர், நாடக இயக்குநர் விஜய் டெண்டுல்கர் (Vijay Tendulkar) 1975-ஆம் ஆண்டு எழுதிய ‘நிஷாந்த்’ (Nishanth) என்ற கதையை ‘விடியலுக்கு முந்தைய இருட்டு’ (Vidiyalukku Mundhaiya Iruttu) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

1976-ஆம் ஆண்டு விஜய் டெண்டுல்கர் திரைக்கதை எழுத, இந்தக் கதை இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், நஸ்ருதீன் ஷா, கிரிஷ்கர்னாட், அம்ரிஷ்புரி நடித்த அப்படத்தை பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) இயக்கினார். அந்த ஆண்டின் சிறந்த இந்திப் படத்திற்கான குடியரசுத் தலைவர் விருது அப்படத்திற்கு கிடைத்தது. கேன்ஸ் திரைப்பட விழா, மெல்போர்ன் திரைப்பட விழா, சிக்காகோ திரைப்பட விழா ஆகிய விழாக்களில் ‘நிஷாந்த்’ பங்கு பெற்றது.

1928-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்பூரில் பிறந்த விஜய் டெண்டுல்கர், சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட பல புகழ் பெற்ற நாடகங்களை மராத்தி மொழியில் எழுதியிருக்கிறார். ‘நிஷாந்த்’, ‘மாந்தன்’, ‘ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்ய’ போன்ற பல திரைப்படங்களுக்கு விஜய் டெண்டுல்கர் திரைக்கதை எழுதியிருக்கிறார்.  ‘மாந்தன்’ படத்திற்காக 1977-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் சிறந்த திரைக்கதாசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கும் அவருக்கு, ‘ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்ய’ படங்களுக்காக சிறந்த திரைக்கதாசிரியர் விருதை ‘பிலிம்பேர்’ பத்திரிகை 1981, 1983-ஆம் ஆண்டுகளில் அளித்திருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் பத்மபூஷண் விருது, சரஸ்வதி சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷிப் ஆகியவற்றையும் விஜய் டெண்டுல்கர் பெற்றிருக்கிறார்.

ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தையும், நேரு ஃபெலோஷிப், தேசிய சாகித்ய அகாடமி ஃபெலோஷிப் ஆகியவற்றையும் பெற்றிருக்கும் விஜய் டெண்டுல்கர், 2008-ஆம் ஆண்டு தன்னுடைய 80-ஆவது வயதில் புனேயில் மரணத்தைத் தழுவினார்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா(Sura)


விடியலுக்கு முந்தைய இருட்டு! தெலுங்கானா மண்ணெங்கும் கற்களும் குன்றுகளும் பாறைகளும் பயங்கரமான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தன. ஒரு இடத்தில் பயத்தை எழுப்பும் தோற்றங்கள்... இன்னொரு இடத்தில் மனதை ஈர்க்கக்கூடிய வடிவங்கள்... மிகவும் அழகான கிராமம். தூக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் கிராமம் எப்போதுதான் அழகாக இல்லாமல் இருந்தது?

பொழுது விடிவதற்கு முந்தைய இருட்டுக்கு முன்னால் முழுமையான அமைதியும் மவுனமும் நிறைந்த கிராமம்! பகல் நேரத்தின் ஆரவாரங்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் கிராமத்தில் யாருமே கண் விழித்திருக்கவில்லை. கோழிகள் உறங்கிக் கொண்டிருந்தன. ஆடுகள் உறங்கிக் கொண்டிருந்தன. வெறுமனே குரைத்துக் கொண்டிருக்கும் நாய்கள்கூட உறங்கிக் கொண்டிருந்தன. அதேபோல கோவிலும்!

கோவில்! அதற்குள் கடவுளும் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த மிகவும் பழமையான கோவிலில் குடிகொண்டிருந்த கடவுளும் கிராமத்தைப்போலவே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். கடுமையான இருட்டில் நடக்கக்கூடிய சம்பவங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்கு கடவுள்கூட தயாராக இல்லாமலிருந்தார். கடவுளைப்போலவே கடவுளுக்கு சேவை செய்யக்கூடிய பூசாரியும்...

பொழுது புலர்வதற்கு இன்னும் நேரம் இருந்தது. எனினும், வழக்கமான செயல்களைச் செய்வதற்காக பூசாரி தயார் நிலையில் இருந்தார்.

தினமும் கடவுளை புலர்காலைப் பொழுதில் கண்விழிக்கச் செய்து கண்விழிக்கச் செய்து பூசாரியின் முதுகெலும்பே ஒடிந்து விட்டதைப் போல ஆகிவிட்டது. பூசாரியின் முகத்தில் இருந்த சுருக்கங்கள் தாடி உரோமங்களைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தன. லாந்தர் விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் அவர் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தபோது இரவு முடிவடைந்து கொண்டிருந்தது. எனினும், நல்ல இருட்டு. தனிமையை விரட்டி விடுவதற்காக அவர் காயத்ரி மந்திரத்தை உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்: ""ஓம் பூர்புவ... ஸ்வ தத் ஸவிதுர் வரேண்யம்... பர்கோ தேவஸ்ய தீமஹி... தியோ யோந... ப்ரசோதயாத்.''

பல வருடங்களாக நடந்து வரும் வழக்கமான சடங்குகளின் ஒரு பகுதியாக காயத்ரி மந்திரம் ஆகிவிட்டிருந்தது. லாந்தர் விளக்கின் வெளிச்சமும் காயத்ரி மந்திரமும்!

திடீரென்று பூசாரி மந்திரங்களைக் கூறிக்கொண்டிருந்தது நின்றது. அவரும் நின்றுவிட்டார். ஆனால், அப்படி எந்த நாளிலும் நின்றதில்லை. நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்திருப்பதைக் கண்டு கொண்டதை வெளிப்படுத்தக் கூடிய வினோதமான ஒரு நிற்றல் அது. பூசாரியின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. நம்பிக்கையின்மை நிறைந்து நின்றிருந்த கண்கள்! துடித்துக் கொண்டிருந்த உதடுகள். அகலமாகத் திறந்திருந்த விழிகள். சபை மண்டபத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தையே அவர் கூர்ந்து பார்த்தார்.

ஆச்சரியத்தை சற்று கட்டுப்படுத்துவதற்காக பார்வையில் ஏதாவது கோளாறு உண்டாகியிருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவர் லாந்தர் விளக்கை மேலும் சற்று உயர்த்திப் பிடித்தார். இப்போது அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பார்வைக் கோளாறு எதுவும் இல்லை.

சதுர வடிவத்தில் இருந்த கற்களால் அமைக்கப்பட்ட சபை மண்டபத்தின் தரையிலிருந்து ஒரு கல் அகற்றப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு அதை, அது இருந்த இடத்திலேயே வைப்பதற்கான வீண் முயற்சியும் நடந்திருக்கிறது. சபை மண்டபத்தின் மேற்கூரைப் பகுதியை தங்களுடைய இருப்பிடமாக ஆக்கிக்கொண்ட வவ்வால்கள் புலர்காலைப் பொழுதின் மெல்லிய வெளிச்சத்தைப் பார்த்து அச்சமுற்று சிறகுகளை அடிக்க ஆரம்பித்தன. சிறகுகள் அடிக்கப்பட்டதால் உண்டான சத்தம் திகைத்துப் போய் உறைந்து நின்றிருந்த பூசாரியின் சுய உணர்வைத் தட்டி எழுப்பியது.

அவர் நாலா பக்கங்களிலும் பார்த்தார். யாருமில்லை. எங்கே பார்த்தாலும் பலமானதும், அச்சத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்த வவ்வால்களின் சிறகடிப்புகள் மட்டுமே கேட்டன. அந்த உண்மை என்னவோ அவருடைய மனதை மேலும் அதிகமாகக் கவலைப்படச் செய்தது. அந்த கவலையைச் சுமந்து கொண்டே ஒரு இயந்திரத்தைப்போல அவர் கல்லை நோக்கி நடந்தார். சதுர வடிவில் இருந்த கல்லுக்கு அருகில் தரையில் ஒன்றின்மீது இன்னொன்று என்பதைப்போல படிந்திருந்த காலடிச்சுவடுகள், நடந்திராத ஒன்று என்பதை நடந்ததுதான் என்று காட்டுவதற்கு போதுமாவையாக இருந்தன. தரையில் கிடந்த அணைந்துபோன பீடித் துண்டுகளும் யாரோ அங்கே வந்திருந்தார்கள் என்ற விஷயத்தை வெளிப்படையாகக் கூறிக்கொண்டிருந்தன. தரையில் கிடந்த தங்கத்தாலான டாலர், பூசாரியின் நம்பிக்கையை மேலும் பலமானதாக ஆக்கியது.

தன்னுடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்துவது என்பது பூசாரிக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. அந்த நிமிடமே அவர் கல்லை அகற்றி அதற்குக் கீழே இருந்த குழியைப் பார்த்தார். நடக்கக்கூடாத ஒரு விஷயம் நடந்து முடிந்துவிட்டிருந்தது. தூக்கத்தில் ஆழ்ந்திருந்த கடவுளுக்கு முன்னால் திருடர்கள் நகைகளுடன் தப்பி

ஓடிவிட்டிருக்கிறார்கள். கடவுளின் விலை மதிப்புள்ள நகைகள்! கடவுள்மீது திருடனுக்கு அச்சமில்லாமல் இருந்திருக்கிறது என்றாலும், பூசாரி மிகவும் பயந்த நிலையில் இருந்தார். அந்த அப்பாவி மனிதர் பயந்து நடுங்கினார். அவர் டாலரையே பார்த்தார். யாருடைய கழுத்தையோ அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த டாலர், நகைகள் அணிந்து காட்சியளிக்கும் கடவுளின் வடிவத்தை பூசாரியை நினைக்கச் செய்தது. அதே நேரத்தில் டாலரின் சொந்தக்காரரும் அவருடைய நினைவறையில் முகத்தைக் காட்டினார். நீண்ட ஒரு பெருமூச்சுடன் பூசாரி இருட்டையே பார்த்தார். பல வருடங்களுக்குப் பிறகு அன்றாடம் நடக்கக்கூடிய செயல்களில் திடீரென்று உண்டான இந்த மாற்றத்தை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கிழக்கு திசையில் வெளிச்சம் தெரிந்தது. எங்கோ இருந்து கோழி கூவியது. சிரமங்கள் நிறைந்த அன்றாடச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னால் கடவுளை தரிசிப்பதற்காக கிராமத்து மனிதர்கள் கோவிலை நோக்கி வர ஆரம்பித்தார்கள். தீபாராதனை நடக்கும் நேரத்தில் எப்போதும்போல பூசாரியின் உதடுகளில் இருந்து- "சாந்தாகாரம் புஜங்கசயனம் பத்மனாபம் ஸூரேசம்'' என்ற வார்த்தைகள் வெளிவரவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பக்தர்களிடம் தனிப்பட்ட ஆர்வம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் ஒரு கற்சிலையைப்போல பூசாரி தூண்மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்தார். அங்கிருந்து சற்று பார்த்தால் போதும்- தரையைவிட்டு அகற்றப்பட்ட கல் தெரியும். பக்தர்களின் பார்வை சில நொடிகள் அகற்றப்பட்ட கல்மீது செல்லும். சில நொடிகள் பூசாரியை நோக்கிச் செல்லும். ஆனால், அவர்களுடைய கண்கள் நிரந்தரமாகப் பார்த்துக் கொண்டிருந்தது தங்க டாலரைத்தான்.

பக்தர்களின் முணுமுணுப்புகள் தாங்க முடியாத அளவிற்கு இருந்தன. தெலுங்கானாவில் இருக்கும் பக்தர்களான மக்களைப்

பொறுத்தவரையில், இப்படிப்பட்ட விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையே. ஆனால், எல்லா விஷயங்களையும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருந்தார்கள். பூசாரியைப்போல அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். அமைதியானவர்களாகவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள். எதையாவது மெதுவான குரலில் முணுமுணுக்கவோ முனகவோ மட்டும் செய்தார்கள். ஆழமான ஏதோ கவலை அவர்களுடைய மனதில் நிறைந்திருந்தது. பொழுது புலரப் புலர பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருந்தது.


பெரிய கூட்டம்! எதுவுமே பேசாமல் அமைதியாக கோவிலுக்கு வெளியே கூடி நின்றிருந்தவர்களின் கவலை, சபை மண்டபத்திற்குள் இருந்தவர்களின் கவலையைவிட அதிகமானதாக இருந்தது. அவர்களுடைய உரையாடலை சரியாகக் கேட்க முடியவில்லை. எனினும், மெதுவான பேச்சுகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் சில வார்த்தைகள் தெளிவாகக் காதில் விழுந்தன.

கோவிலில் திருட்டு!பூசாரி யாரிடமும் எதுவும் வாய் திறக்கவில்லை!கடவுளின் நகைகள் திருடப்பட்டிருக்கின்றன.

இனி என்ன நடக்கும்?

முணுமுணுப்புகள், முனகல்கள் நிறைந்த இந்த வார்த்தைகள் கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீட்டையும் போய் அடைந்தன. காட்டாற்றைப்போல கிராமம் கோவிலை நோக்கி வர ஆரம்பித்தது. நடந்திருக்கக் கூடாத ஒரு சம்பவமாயிற்றே அது! இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றதாக இதற்கு முன்பு இருந்தவர்கள் கூறிக்கூட யாரும் கேள்விப்பட்டதில்லை.

கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றிய தகவல் தெரிந்து ஒட்டு மொத்த கிராமமும் நடுங்கிக் கொண்டிருக்க, அந்த கிராமத்தில் இருந்த ஒரு மாளிகையில் இருந்த ஆட்கள் படுக்கையறையில் நிம்மதியாக

உறங்கிக் கொண்டிருந்தார்கள். கிராமத்து தலைவர்களின் மாளிகை! ஜமீன்தார்களின் ஆடம்பரமான மாளிகை!

நன்கு திறந்தால் யானைகூட உள்ளே செல்ல முடியும் என்னும் அளவிற்கு இருக்கக் கூடிய மிகப் பெரிய வாசல் கதவுகள்! பிரம்மாண்டமானதாகவும், ஒரு ஆளின் உயரத்திற்கு இருக்கக் கூடியதுமான வெளிச்சுவர் மாளிகையின் வாசல் பகுதியையும் திண்ணையையும் மறைத்து வைத்திருந்தது. ஒட்டு மொத்த கிராமத்தாலும், "எஜமானர்கள்" என்று அழைக்கப்படும் ஜமீன்தார் சகோதரர்கள்தான் சுகமான தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

ஜமீன்தார் சகோதரர்கள் நான்கு பேர். மூத்தவரான அண்ணா, அஞ்சய்யா, பிரசாத் என்று தனக்கு அடுத்துள்ள இரண்டு சகோதரர்களுடன் ஒரு அறையில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

ஒட்டு மொத்த கிராமத்திற்கும் உண்டானதைப்போல மாளிகைக்குள் இருந்த நிம்மதியான வாழ்க்கைக்கும் குறிப்பிடத்தக்க வகையில் தொல்லை உண்டானது. மாளிகையில் இருந்த நாய்கள் அங்கு வரக் கூடிய மனிதர்களைப் பார்த்து குரைத்தன. நாய்களின் குரைக்கும் சத்தமும், மிகவும் உயர்ந்த குரலில் ஒலித்த ஆட்களின் பேச்சும் சேர்ந்து தாங்க முடியாத ஆரவாரத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. எதுவுமே தெளிவாகக் கேட்கவில்லை. எனினும், அந்த ஆரவாரங்களின் காரணமாக உள்ளே இருந்தவர்களால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இடையில் அவ்வப்போது அவர்கள் திரும்பிக் கொண்டும் புரண்டு கொண்டும் இருந்தார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் சபை மண்டபத்தை அடைந்தவுடன் வாய்விட்டுப் பேச முடியாத அளவிற்கு ஆனது. வழி முழுக்க ஆர்வத்துடன் இருந்த மக்கள் கூட்டம்

உண்மையைத் தெரிந்து கொண்டவுடன் திகைத்துப் போய் நின்றுவிட்டது. சபை மண்டபத்தின் திண்ணையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சதுரக் கல்லையே கிராமத்து மக்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. வழக்கமாக ஒரு இனம் புரியாத பயம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் முகங்களில் ஆர்வத்தின் வெளிப்பாடு தெரிந்தது. உடனடியாக அது பயத்தின் வெளிப்பாடாக மாறி, மவுனத்தின் வடிவம் வந்து குடிகொள்ள ஆரம்பித்தது. மவுனம் அலையென ஓடியது. புதிதாக யாராவது வந்தால் அந்த அலையோட்டத்திற்கு தொல்லை உண்டாகும். ஆமாம்... ஒரு நிமிட நேரத்திற்கு மட்டும். சில நொடிகளுக்கு முழுமையான அமைதி நிலவும். பூசாரி ஏதாவது கூறுவார் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாரும் இருந்தார்கள்.

ஆனால், பூசாரிக்கு மக்கள் கூட்டத்தின்மீதும் அவர்களுடைய மவுனத்தின்மீதும் எந்தவொரு ஆர்வமும் இருக்கவில்லை. அவரும் தன்னுடைய பதைபதைப்பை திகைப்பில் மூழ்க வைத்துக்கொண்டு வயதான கண்களுடன் வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். முற்றிலும் வெறுமையாகக் காட்சியளித்த முகம். தன்னுடைய கைகளால் வழக்கமாக கடவுளுக்கு நகைகளை அணிவிக்கக்கூடிய அந்த கடந்து சென்ற நாட்கள் பூசாரியின் நினைவில் தோன்றின. அதே கைகளால் சதுரக் கல்லை நீக்கி, நடந்திருக்கக் கூடாத உண்மையை அவர் கண்டார்.

2

ண்மையில் நடைபெற்றது என்ன என்ற விஷயத்தை மேலோட்டமாக வெளியே கூறியது தேவதாசிதான். தேவதாசி எந்தச் சமயத்திலும் கடவுளின் நகையை அணிந்ததில்லை. அவற்றைத் தொட மட்டுமே செய்திருக்கிறாள். கனமான மனதுடன் இருந்தாலும், உறுதியான கால் வைப்புகளுடன் அவள் பூசாரியின் அருகில் சென்றாள். கிழவரான பூசாரியை அவள் பார்த்தாள். தொடர்ந்து கூட்டமாக நின்றிருந்த

ஆட்களைப் பார்த்தாள். அதற்குப் பிறகு விக்கிரகத்தின்மீது கண்களைப் பதித்தாள். கடவுளுக்கு நகைகள் அணிவிக்கக் கூடிய கடந்து சென்ற நாட்களின் அந்த சுகமான அனுபவத்தைப் பற்றி திடீரென்று அவள் நினைக்க ஆரம்பித்தாள். பிரம்மாண்டமான திருவிழா சமயத்தில் கடவுள் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக தான் எந்த அளவிற்கு சிறப்பாக நடனமாடினோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.

கோவிலில் தேவதாசிக்கென்றிருந்த ஒரே ஒரு வேலை அதுதான். ஆனால், இன்று தேவதாசிக்கு கடுமையான இன்னொரு வேலையையும் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. பூசாரியால் கூற முடியாமல் போயிருக்கும் விஷயத்தை அவள்தான் கூறவேண்டியதிருக்கிறது. அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டே அவள் கூறினாள்: "நகை திருடப்பட்டு விட்டது. இதற்கு முன்பு இப்படியொரு விஷயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இந்த மாதிரியான ஒரு மோசமான செயல் நடைபெற்றதும் இல்லை. ஆனால், இந்த கிராமத்தில், இந்த கோவிலில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றுவிட்டது. நகையைத் திருடியது எப்படிப்பட்ட திருடனாக இருந்தாலும் சரி... அதற்கான விளைவை அவன் அனுபவித்தே தீருவான்.''

ஆவேசத்துடன் கூறினாலும் முடிந்தவரைக்கும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றியவாறு தேவதாசி இதுவரை பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், உண்மையைத் தெரிந்திருக்கக் கூடிய அவள் திடீரென்று கட்டுப்பாட்டின் எல்லையை மீறிக் கொண்டு உரத்த குரலில் கூறினாள்: "பாவி... அயோக்கியன்! கடவுள் அணிந்திருந்த நகையைத் திருடுவதற்குக் கூட பயப்படவில்லை!'' தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைப்போல, "ம்... கடவுளே திருடனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுப்பார்'' என்று கூறிக்கொண்டே அவள் அந்த இடத்தில் உட்கார்ந்தாள்.

தேவதாசியின் இந்தப் பேச்சைக் கேட்டபிறகும் பூசாரி முன்பு இருந்த அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தார்- முழுமையான மவுனத்தைத் தொடர்ந்து கொண்டு- வாயையே திறக்காமல்- எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தாமல். ஆனால், அந்த மவுனம் எவ்வளவோ செய்திகளைக் கூறிக்கொண்டுதான் இருந்தது.

தங்களுடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கிராமத்து மனிதர்கள் எல்லாரும் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் சபை மண்டபத்தைச் சுற்றிலும் இதற்குள் கூடி நின்றிருந்தார்கள். தேவதாசியின் பேச்சைக் கேட்டவுடன், உணர்ச்சி வசப்பட்டவர்களும் வெறி பிடித்தவர்களுமான கிராமத்து ஆட்களின் பேச்சு காற்றில் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தது. காதைத் துளைக்கக் கூடிய சத்தம்! "குற்றவாளி தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். யாராக இருந்தாலும் சரி... அவனைக் கண்டுபிடித்தே ஆகணும்.'' எல்லாருடைய ஒரே ஆசை அதுவாகத்தான் இருந்தது.


குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்காக கிராமத்தின் ஹெட் கான்ஸ்டபிள் சம்சுதீன் தன் கையில் ஒரு சிறிய பிரம்பை வைத்துக் கொண்டு, சபை மண்டபத்திற்கு ஒரு ரகசிய காவல்துறை அதிகாரியைப் போல, நகைகள் வைக்கப்பட்டிருக்கும் குழியின் அருகில் வரை சென்றார். மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல திடீரென்று அவருடைய கண்கள் டாலர்மீது சென்றது. எதுவும் பேசாமல் அந்த நிமிடமே அந்த டாலரை எடுத்துப் பாக்கெட்டிற்குள் வைத்தார். அதற்குப் பிறகு தன்னுடைய மேலதிகாரி கூறுவதைப்போல ஹெட் கான்ஸ்டபிள் கூறினார்:

"நாம் ஒரு பஞ்சாயத்து நடத்துவோம்.''

பாக்கெட்டிற்குள்ளிருந்து பாதிக்கு மேலாக தேய்ந்து போயிருந்த சிறிய ஒரு பென்சிலை எடுத்து, நின்று கொண்டே அவர் டைரியில் என்னவோ எழுத ஆரம்பித்தார்.

கோவிலில் நின்றவாறு சம்சுதீன் டைரியில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தபோது, விஸ்வத்தின் மனைவி ருக்மிணி வெறுப்பு கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்: "இரவு முழுவதும் நீங்கள் எங்கே இருந்தீங்க! நீண்ட நேரம் நீங்கள் வருவீர்கள் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். தூங்கக்கூட முடியவில்லை.''

மனைவியின் கேள்விக்கு விஸ்வம் எந்தவொரு பதிலும் கூறவில்லை. என்னவோ முணுமுணுத்தவாறு அவர் முகத்தைத் திருப்பிப் படுத்துக்கொண்டார்.

மாளிகையைத் தாண்டியிருந்த ஆரவாரமும் இதற்குள் மேலும் அதிகமாகிவிட்டிருந்தது. எல்லாரையும்விட மூத்தவரான பெரிய ஜமீன்தார் பாதி தூக்கத்திலிருந்து பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்விழித்து எப்போதும்போல உரத்த குரலில் கேட்டார்: "யார்? என்ன விஷயம்? இந்த ஆட்கள் ஏன் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?''

ஆனால், கோபம் கலந்த வார்த்தைகள் மிகவும் அமைதியாக அவரைத் தேடி திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஆனால், முன்பே கண் விழித்து எழுந்துவிட்ட வேலைக்காரன், எஜமானரின் கோபம் கலந்த வார்த்தைகள் காதில் விழுந்த அக்கணமே தயங்கித் தயங்கி கதவின் அருகில் வந்தான். வெளியே நின்று கொண்டே அவன் தடுமாறுகிற குரலில் சொன்னான்:

"கோவிலில் கொள்ளை நடந்துவிட்டது. கடவுள்மீது இருந்த நகை திருடப்பட்டு விட்டது.''

இயல்பான ஆவேசத்துடன் தொடர்ந்து அவன் பயந்து கொண்டே அமைதியாக இருந்தான்.

அப்போது பெரிய ஜமீன்தார் மேலும் சற்று உரத்த குரலில் சொன்னார்: "அப்படின்னா, சம்சுதீனுக்கு தகவல் கொடு. இங்கே கூட்டம் கூடி நின்று கொண்டு ஆரவாரம் உண்டாக்குவதால் என்ன கிடைக்கப் போகிறது? பிறகு, போலீஸ் என்று ஒன்று எதற்கு இருக்கு?''

வெளியே கேட்டுக் கொண்டிருந்த ஆரவாரத்தைவிட ஜமீன்தாரின் கர்ஜனைதான் அவனை முழுமையாக சுய உணர்விற்குக் கொண்டுவந்தது. கிராமத்தின் தலைவராக அவர் இருந்தார். கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் கவனித்துச் செய்யக்கூடிய உரிமை பரம்பரை பரம்பரையாக அவருக்குக் கிடைத்திருந்தது. சோர்வுற்ற கண்களுடன் கட்டிலை விட்டு எழுந்த ஜமீன்தார் சட்டையை எடுத்து அணிந்தார். அதற்குப் பிறகு வெளியே வந்தார்.

வெளியே கூடி நின்றிருந்த ஆட்கள் கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றிக் கூறி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள்: "எஜமான், கொஞ்சம் தயவு காட்டணும். கோவிலுக்கு வரணும். இன்று வரை இப்படிப்பட்ட ஒரு காரியம் நடந்தது இல்லை. உண்மையாகக் கூறப்போனால், இது ஒரு கெட்ட சகுனம்!''

மக்கள் கூட்டத்தை முழுமையாக ஒருமுறை பார்த்துக் கொண்டே, ஒரு வயதான கிழவன் ஜமீன்தாரிடம் பணிவுடன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்:

"நாம் இதைப் பற்றி தீவிரமாக சிந்தனை செய்து ஏதாவது செய்தே ஆக வேண்டும். எஜமான், ஆட்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''

பெரிய ஜமீன்தார் வேண்டுகோளை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு சொன்னார்: "சரி... நான் இதோ வருகிறேன்.'' தொடர்ந்து அவர் கட்டளையிட்டார்: "இப்பவே நீங்கள் போய் நான் இதோ வருகிறேன் என்று அவர்களிடம் சொல்லுங்கள். சீக்கிரம், பன்றிகளே!''

அவர்கள் செல்வதற்கு முன்பே அவர் அறைக்குள் சென்றார். அதற்குள் அஞ்சய்யாவும் பிரசாத்தும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டிருந்தார்கள். அவர்கள் சாதாரண குரலில் கேட்டார்கள்: "வந்தது யார்?''

3

துவுமே நடக்கவில்லை என்பதைப்போல சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவர் சொன்னார்: "கோவிலில் திருட்டு நடந்திருக்கிறதாம். விஷயம் தெரிந்த அக்கணமே பன்றிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆரவாரம் உண்டாக்க இங்கே வந்துட்டாங்க!'' ஒரு மோசமான வார்த்தையைக் கூறிக்கொண்டே அவர் அஞ்சய்யாவையும் பிரசாத்தையும் பார்த்தார்.

அஞ்சய்யாவும் பிரசாத்தும் அர்த்தம் நிறைந்த பார்வையுடன் ஒருவரையொருவர்  பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். கோவிலுக்குச் செல்வதற்காக அண்ணா தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்த ஆரவாரங்கள் அனைத்தையும் கேட்டு, விஸ்வம் முழுமையாக கண் விழித்து எழுந்திருந்தார். ஆனால், என்ன காரணத்தாலோ அவருடைய கண்கள் மூடியே இருந்தன. ருக்மிணியோ முதலிலேயே எழுந்துவிட்டிருந்தாள். திடீரென்று அவளுடைய பார்வை தன் கணவரின் கழுத்தில் போய் நின்றது. "டாலர் எங்கே?'' அவள் கேட்டாள்.

அந்த நொடியே விஸ்வம் கழுத்தில் தன் விரல்களால் தடவிப் பார்த்தார். அவர் கண்களைத் திறந்துகொண்டு என்னவோ சிந்தனையில் மூழ்கினார். ஆனால், ருக்மிணியால் நீண்ட நேரம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் கேட்டாள்: "நீங்கள் அதை எங்காவது ஒளித்து வைத்திருக்கிறீர்களா?'' விஸ்வம்  தன் மனைவியைச் சற்று நேரம் பார்க்க முயற்சித்தார். ஆனால், அது பயனற்றுப் போனது. பதைபதைப்புடன் "ஆமாம்'' என்று கூறினாலும், அபத்தமாகக் கூறிவிட்டோமே என்று பயந்து கொண்டு, அடுத்த நொடியே திருத்திக் கொண்டு "இல்லை'' என்று என்னவோ முணுமுணுத்தவாறு அவர் கட்டிலை விட்டு எழுந்தார். மனமில்லா மனதுடன் ருக்மிணியும் எழுந்திருக்க வேண்டியதிருந்தது. தூக்கக் கலக்கத்தை நீக்குவதற்காக கண்களை நன்றாகக் கழுவி விட்டு, ஹேங்கரில் இருந்து சட்டையை எடுத்து அணிந்துகொண்டு விஸ்வம் கீழே இறங்கினார்.

கீழே அண்ணாவும் அஞ்சய்யாவும் பிரசாத்தும் தேநீர் பருகுவதற்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அவரும் உட்கார்ந்தார். சற்று தூரத்தில் ருக்மிணி கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். ஒரு மடக்கு தேநீர் குடித்தவுடன், இயல்பாகவே உற்சாகம் தோன்றியது என்றாலும், உண்டான நடுக்கத்துடன் அவர் சொன்னார்: "நேற்று இரவு என் டாலர் காணாமல் போயிடுச்சு! போயிடுச்சுன்னு தோணுது.''

ஆனால், விஸ்வத்தின் பதைபதைப்பு சகோதரர்கள் யாரிடமும் எந்தவொரு பின்விளைவையும் உண்டாக்கவில்லை. வழக்கம்போல் தேநீர் பருகிக்கொண்டு அவர்கள் விஸ்வத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அஞ்சய்யா தன் தம்பியைத் திட்டிக்கொண்டே சொன்னார்: "நீ என்றைக்குத்தான் ஒரு ஆளாக ஆவது? நீ நன்றாக வரப்போவதே இல்லை. இல்லாவிட்டாலும், நீ அப்படித்தான். தேவையில்லாததையே செய்வாய். டாலர் காணாமல் போனபிறகும், உன்னோட சிறு பிள்ளைத்தனம் மாறவே இல்லையே! கஷ்டம்... கொஞ்சமாவது சாமர்த்தியம் இருக்கணும்.''


அதோடு சேர்ந்து பிரசாத்தும் சொன்னார்: "பிறகு என்ன? கொஞ்சமாவது சாமர்த்தியம் இருக்கணும்.''

வெட்கம், கூச்சம், குற்ற உணர்வு ஆகியவற்றால் விஸ்வத்தின் தலை அதுவாகவே தாழ்ந்தது. ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் தேநீர் குடிக்க ஆரம்பித்தார். அவர்களுடைய உரையாடலை ருக்மிணி மிகவும் கூர்ந்து  கேட்டுக் கொண்டிருந்தாள். டாலர் விவகாரம் அவளிடம் உண்டாக்கிய கவலை அவளை மேலும் வேதனை அடையும்படி செய்தது. "உண்மையாகவே ஏதோ இருக்கு...'' ருக்மிணியின் மனம்  முணுமுணுத்தது.

அண்ணா தேநீர் குடித்து விட்டு எழ ஆரம்பிக்கும்போது, அஞ்சய்யா மெதுவான குரலில் கேட்டார்:

"அண்ணா, எங்கே போறீங்க?''

அண்ணா மேலும் சற்று மெதுவான குரலில் பதில் சொன்னார்:

"கோவிலில் திருடு நடந்துவிட்டது அல்லவா? நம்முடைய முன்னோர்கள் கோவிலைப் பத்திரமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். காலம் காலமாக கோவில் சம்பந்தப்பட்ட காரியங்களை நாம்தானே கவனித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்? திருடு நடந்துவிட்டது என்னும்போது, உடனடியாக அங்கு போயே ஆக வேண்டும்.''

அவர் மேலும் சில விஷயங்களை நினைத்துப் பார்த்தார். அந்தச் சமயத்தில் பிரசாத் தன் சகோதரருடன் கோவிலுக்குப் போவதற்காகப் புறப்பட்டார். அண்ணா அஞ்சய்யாவிடம் ஒரு தனிப்பட்ட குரலில் சொன்னார்: "நீ நகரத்திற்குப் போக வேண்டாமா? நேரத்தை வீண் பண்ணாதே.''

அதைக் கூறிவிட்டு அவர் வெளியேறினார். பிரசாத்தும் அவருடன் இருந்தார். ருக்மிணி விஸ்வத்தின் அருகில் சென்று நின்றாள். அவர்கள் இருவரையும் சற்று பார்த்துவிட்டு, அஞ்சய்யா நகரத்திற்குச் செல்வதற்கான ஏற்பாடுகளுடன் அறையை விட்டு வெளியே வந்தார்.

ருக்மிணி என்னவோ கூற வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், கூற முடியவில்லை. அவள் எதுவும் பேசாமல் விஸ்வத்தின் தோளில் கையை வைத்தாள். ஆனால் விஸ்வம் மவுனமாக இருந்தார். அவர் தனக்குள் முழுமையாக மூழ்கிவிட்டிருந்தார்.

கிராமம் முழுவதும் ஒரே ஒரு கேள்வி பெரிதாக கேட்டுக் கொண்டிருந்தது: "யார் திருடனாக இருப்பான்? யார்? கடவுளின் நகையைத் திருடியவன் யாராக இருக்கும்?''

உண்மையிலேயே சொல்லப் போனால், இடையில் அவ்வப்போது  கிராமத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. ஆனால், அந்த மாதிரியான நேரங்களில் திருடு நடைபெற்ற வீட்டின் தலைவனிடம் மேலும் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, மக்கள் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கி விடுவதுதான் வழக்கமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், கோவிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அவர்களை காரணமே இல்லாமல் கோபம் கொள்ளச் செய்தது.

"திருடன் யாராக இருக்கும்?'' இப்படிக் கேட்டவாறு ராமய்யா நாலா திசைகளிலும் நடந்து திரிந்து திருடன் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.

திருடனைக் கண்டு பிடித்துவிட்டதைப்போல வேமண்ணா சொன்னான்: "கோவிலில் நகையைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இடம் எங்கே இருக்கிறது என்பதை நன்கு தெரிந்திருக்கும் ஆள்தான் திருடனாக இருக்க வேண்டும்.''

"அந்த விஷயம் இரண்டு பேருக்குத்தானே தெரியும்? ஒருவர் பூசாரி. இன்னொரு ஆள் ஜமீன்தார்.'' நன்னய்யா வெளிவாசலுக்கு அருகில் நின்று கொண்டு சொன்னான். எந்த அளவிற்குத் தாழ்வான குரலில் அவன் "ஜமீன்தார்" என்ற வார்த்தையை உச்சரித்தான்! அவன் தன்னுடன் வந்து கொண்டிருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். எல்லோரும் முழுமையான அமைதியுடன் இருந்தார்கள். கோவிலும் வந்துவிட்டது. ஆனால், அனைவரின் மனங்களும் ஒரே மாதிரி சிந்தித்துக் கொண்டிருந்தன.

"பூசாரி திருடியிருக்க மாட்டார். அவர் எதற்காகத் திருடணும்? அந்த கிழவருக்கு இனிமேல் சொந்தமென்று சொல்லிக் கொள்வதற்கு என்ன வேணும்?''

"அப்படின்னா யாராக இருக்கும்?''

அந்தக் கேள்விக்கான பதில் அவர்களுக்கு கோவிலில் கிடைத்தது. பதில் கிடைத்த அடுத்த நொடியே அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் செய்தார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடே இல்லை. ஆனால், அந்த கருத்து அவர்கள் எல்லோரையும் அச்சமடையச் செய்யக் கூடியதாக இருந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதற்கு பதிலாக, அவர்கள் வெட்ட வெளியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு ஆளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவன் முணுமுணுத்தான்:

"டாலர் யாருடையதோ, அவன்தான் திருடன். டாலர்...'' தொடர்ந்து அவனால் கூற முடியவில்லை. பெரிய ஜமீன்தார், பிரசாத்துடன் சேர்ந்து முன்னால் வந்து கொண்டிருந்தார். மக்கள் முழுமையான அமைதியுடன் இருந்தார்கள். அவர்களுடைய உரையாடல் பணிவு கொண்டதாக ஆனது. மரியாதையைத் தாண்டி அச்சம்தான் அந்த

பணிவுக்கு காரணமாக இருந்தது. வழியை ஒதுக்கிக் கொடுத்து, மக்கள் அவர்களை சூழ்ந்து நின்றிருந்தார்கள். சம்சுதீன் அவர்களை வரவேற்றார். அகற்றப்பட்ட சதுரக் கல்லை அடைவதற்கு முன்னாலேயே, தான் இதுவரை நடத்திய விசாரணை பற்றிய கதையை அவர் அவர்களிடம் கூறினார். திருடு நடைபெற்ற இடம் எது என்பதை பூசாரி கையால் சைகை செய்து பெரிய ஜமீன்தாரிடம் காட்டினார். சம்சுதீன் ரகசிய போலீஸிடம் இருக்கும் முக வெளிப்பாட்டுடன் சதுரக் கற்களைப் பார்க்க ஆரம்பித்தார். பெரிய ஜமீன்தார் அந்தப் பக்கமாகப் பார்க்கும்போது, அவருடைய மனம் கல்லைப்போல ஆனது. பிரசாத்தின் கண்களோ, தேவதாசி உடலின் சதைப் பகுதிகளையே மேய்ந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்து முடித்த பிறகு, பெரிய ஜமீந்தார் மக்களைப் பார்த்தவாறு சொன்னார்:

"இந்தக் கொடுமையான பாவச் செயலைச் செய்தது யாராக இருந்தாலும் சரி, தெய்வம் அவனுக்குத் தர வேண்டிய தண்டனையைக் கட்டாயம் தரும்.'' தொடர்ந்து ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் கேட்கிற வகையில் கட்டளையிட்டார். "போங்க... போயி மந்திரவாதியை அழைச்சிட்டு வாங்க. யார் குற்றவாளி என்று அவர் சொல்லட்டும். இது என்னுடைய ஸ்பெஷல் கட்டளை. உடனடியாக போய் மந்திரவாதியை அழைச்சிட்டு வாங்க.''

அந்த நிமிடமே மந்திரவாதியை அழைத்துக் கொண்டு வருவதற்காக இரண்டு மூன்று ஆட்கள் ஓடினார்கள். ஜமீன்தாரின் கட்டளைக்கு மரியாதை கொடுப்பதுடன், மந்திரவாதியின் தமாஷையும் பார்க்கலாமே என்ற சிந்தனையில் அவர்கள் இருந்தார்கள்.

முகத்தில் இருந்த கவலையை மறைத்து வைப்பது என்பது தன்னைப் பொறுத்த வரையில் சிரமமான விஷயம் என்பதைப்போல பூசாரி

ஜமீன்தாரையே சிறிது நேரம் பார்த்தார். தொடர்ந்து விக்கிரகத்தையே கண்களை இமைக்காமல் பார்க்க ஆரம்பித்தார்.

சம்சுதீன் அண்ணாவிடம் சொன்னார்: "பெரிய எஜமான், உங்களுடைய முதல் மரியாதையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.''

அதற்குள் பிரசாத் மக்கள் கூட்டத்திற்குள்ளிருந்து கோவிலுக்கு வெளியே வந்துவிட்டிருந்தார்.


4

ந்திரவாதியை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த ஆட்கள் அஞ்சய்யா மோட்டார் சைக்கிளில் நகரத்திற்குச் செல்வதைப் பார்த்தார்கள். மோட்டார் சைக்கிளின் சத்தம் கிராமத்து மக்களுக்கு மிகவும் கர்ண கடூரமாகத் தோன்றியது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சற்று பயத்துடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டார்கள்.

கிராமத்தைச் சேர்ந்த நாய்களுக்கு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஓடுவது என்பது ஒரு தமாஷான விஷயம். ஒரு பெரிய நாய், மோட்டார் சைக்கிளைப் பிடித்தே தீருவேன் என்ற பிடிவாதத்துடன் அதற்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், ஊர்திக்கு முன்னால் நாயின் வேலை விலை போகவில்லை.

"மந்திரவாதி வந்துவிட்டார்... மந்திரவாதி வந்துவிட்டார்...'' மந்திரவாதி வருவதைப் பார்த்துவிட்டு கிராமத்து மனிதர்கள் மெதுவான குரலில் ஒருவரோடொருவர் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவருடைய உடலில் இருந்து அசாதாரணமான வாசனை வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் பாதி நிர்வாண கோலத்தில் மந்திரவாதி இருந்தார். அங்கு வந்து சேர்ந்தவுடன், அண்ணா, பிரசாத் ஆகியோருக்கு முன்னால் மந்திரவாதி தலையைக் குனிந்து கொண்டு நின்றார். அவருடைய கண்கள் கம்பீரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. உதடுகளில் அர்த்தம் நிறைந்த ஒரு புன்சிரிப்பு! பூஜை சடங்குகளுக்காக அவர் சபை

மண்டபத்திற்கு வெளியே இருந்த முற்றத்திற்கு வந்தார். என்னவோ முணுமுணுத்து விட்டு, அவர் சிறிது அரிசியை காற்றில் வீசி எறிந்தார். அதற்குப் பிறகு ஒரு சாட்டையை எடுத்து தன்னைத்தானே அடித்துக்கொள்ள ஆரம்பித்தார். கண்களை மூடியிருந்த மந்திரவாதியின் குரலுக்கு தனிப்பட்ட ஒரு லயம் இருந்தது.

மந்திரவாதியின் சடங்குகளில் அண்ணா அந்த அளவுக்கு ஆர்வம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், பிரசாத்தின் நடவடிக்கை அதற்கு நேர் மாறாக இருந்தது. மந்திரவாதியின் செயல்கள் அனைத்தையும் அவர் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணா சம்சுதீனிடம் கேட்டார்: "எஸ்.ஐ.க்கு நெய் கிடைத்திருக்குமல்லவா?'' இருவரும் எஸ்.ஐ.யின் திறமையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கண்களை மூடிக்கொண்டிருந்த மந்திரவாதியின் தாள லயத்துடன் வந்த குரலை அடையாளம் தெரிந்த உடனே அண்ணா அவரிடம் கேட்டார்: "சொல்லு... திருடன் யார்?''

மக்கள் ஆர்வம் கொண்ட பார்வையுடன் இரண்டு பேரையும் பார்க்க ஆரம்பித்தார்கள். மந்திரவாதி என்ன கூறுவார்? திருடன் யாராக இருக்கும்?

மந்திரவாதி கூற ஆரம்பித்தார்:

"வடக்கு திசையில் ஒரு புதர் காடு!

புதருக்குக் கீழே திருடனின் நண்பன்!

உயரமும் தடிமனும் கொண்டவன்!

அவன் மோசமானவன்! கோழியை அறுப்பவன்!

வடக்கு திசையில் ஒரு புதர்காடு!''

நடனமாடிக் கொண்டு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு தொடர்ந்து திருடனைப் பற்றி தெளிவில்லாத குரலில் குறிப்பாக உணர்த்திக் கொண்டிருந்தாலும், மந்திரவாதி யாருடைய பெயரையும் வாய்திறந்து கூறவில்லை.

பூசாரியின் முகம் என்ன காரணத்தாலோ கவலையுடன் இருந்தது. அவருடைய நடுங்கிக் கொண்டிருந்த உதடுகள் என்னவோ கூறுவதற்காகத் துடித்தன. மக்களின் முகங்களும் வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்குக் கனமேறிப் போய் காணப்பட்டன. தங்களுடைய கோபத்தையும் கவலையையும் அவர்கள் வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அண்ணா அதிகாரக் குரலில் சம்சுதீனிடம் கூறினார்: "என் கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. அவன்தான் திருடன். அந்த கிழவியோட மகன்... ஓடி தப்பிப்பதற்கு முன்னால் அந்தப் போக்கிரியைப் பிடிங்க.'' சம்சுதீன் சைகையைப் புரிந்து கொண்டார்.

மந்திரவாதி ஏற்கெனவே கூறியதையே கூறிக்கொண்டிருந்தார்.

"வடக்கு திசையில் ஒரு புதர் காடு.''

வடக்கு திசையில்தான் மாளிகை இருக்கிறது. மாளிகையின் ஒரு மரத்தடியில் இருந்து கொண்டு ஒரு கோழியின் கழுத்தை விஸ்வம் அறுத்தார். கோழியின் வெப்பமான ரத்தத் துளிகள் அவருடைய கையில் தெறித்து விழுந்தன. விஸ்வத்தைப் பொறுத்த வரையில் கோழியை அறுப்பது என்பது தினந்தோறும் நடக்கக்கூடிய ஒரு சம்பவமே எனினும், உயிர் போகும் வேதனையில் துடிக்கும் கோழிக்கு முன்னால் அவருடைய வறண்டு போன முகம் சந்தோஷமும், ஒரு சிறு குழந்தையின் முகத்தில் இருப்பதைப் போன்ற கள்ளங்கபடமற்ற தன்மையும் கொண்டு காணப்படும். துடித்துக் கொண்டிருக்கும் கோழியைப் பார்த்த பிறகுகூட அதைப் பார்த்ததைப்போல ருக்மிணி

காட்டிக்கொள்ள மாட்டாள். பூஜையில் மூழ்கியிருக்கும் அவள் உடனடியாகக் கண்களை மூடிக்கொள்வாள்.

நடுப்பகல் நேரத்தில் வெயில் ஆட்களை சுட்டெரித்துக் கொண்டிருந்தது. எனினும், அவர்கள் நாலா பக்கங்களிலும் கூடி நின்றிருந்தார்கள். சம்சுதீனும் மற்றவர்களும் கிஸ்தய்யாவை அடித்து உதைத்தனர். மாதிக கிராமம் முழுவதும் கொள்ளை, கொலை, திருட்டு ஆகியவற்றைச் செய்வதில் புகழ் பெற்றிருந்த கிஸ்தய்யாவின் தாய் இளம் வயதிலேயே விதவையாகிவிட்டிருந்தாள். மனைவியும் குழந்தைகளும் கிஸ்தய்யாவை அடித்து உதைப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசாமல் கிராமத்தின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றிருப்பது தாங்கள்தான் என்பதைப்போல கல்லைப் போன்று கனம் கொண்ட மனதுடன் அண்ணாவும் பிரசாத்தும் நின்று கொண்டிருந்தார்கள். கூட்டமாகக் கூடி நின்று, அந்த தமாஷைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் பல்வேறு உணர்ச்சிகளும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அந்த முகங்களில் பரிதாபம் தோன்றியது. பயம் இருந்தது. கோபமும் கோழைத்தனமும் அதிகமாகத் தெரியும் பரிதாபமான- ஒரு வகையான ஆண்மையற்ற தன்மை இருந்தது. கிஸ்தய்யாவை அடித்து அடித்து சம்சுதீன் இறுதியில் மேலும் கீழும் மூச்சு விட ஆரம்பித்தார். அவருடன் இருந்தவர்கள் கைகளைப் பின்னால் பிடித்து கட்டிவிட்டு, அந்த அப்பாவி மனிதனைப் பிடித்து இழுத்து மாட்டு வண்டியில் கொண்டு போய் போட்டார்கள். அவனுடைய வயதான தாய் மயக்கமடைந்து தரையில் விழுந்து அழ ஆரம்பித்தபோது, அவள் முகத்தில் நீர் தெளித்து அவளைச் சமாதானப்படுத்தினார்கள். தன்னுடைய மகன் நிரபராதி என்று அவள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள்.

மாட்டு வண்டி காவல் நிலையத்திற்குச் செல்லும் சாலையில் சென்றது. அண்ணாவும் பிரசாத்தும் திருட்டைப் பற்றி எதற்கு என்று தெரியாமலே கவலையில் மூழ்கியிருந்தனர். அஞ்சய்யா நகரத்திற்குச் சென்றிருந்ததால், விஸ்வம்தான் வயல் பக்கம் சென்றார். அங்கு தொழிலாளிகள் தங்களுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். வயலின் வழியாக நடந்து செல்லும்போது இடையில் அவ்வப்போது விஸ்வத்திற்கு இதற்கு முன்பு நன்கு பழக்கமான பாதைகூட தவறிக் கொண்டிருந்தது. எதையோ நினைத்ததைப்போல, விஸ்வத்தின் கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது. ஒவ்வொரு முறை தொடும்போதும் டாலர் இல்லாத உணர்வு அவருக்கு உண்டானது. உடனடியாக அவருடைய மனம் வேறெங்கோ போய்விடும். அவருடைய சுய உணர்வு அற்ற தன்மையை தொழிலாளிகள் அறிந்திருக்கவில்லை. இடையில் அவ்வப்போது அவர்களுடைய கண்கள் அவர்மீதும் அவருடைய கழுத்திலும் போய் நின்றன. ஒரு இடத்தை அடைந்தபோது தன்னிடம் ஒரு தொழிலாளி என்னவோ கூறியதைப்போல விஸ்வத்திற்குத் தோன்றியது. அந்த நிமிடமே நின்று கொண்டு அவர் கேட்டார்: "நீ ஏதாவது சொன்னியா?''

அந்த கேள்வியைக் கேட்டவுடன் தொழிலாளிகளின் முகங்களில் மவுனத்துடன் சிறிது பயமும் தோன்றியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு கிழவன் சொன்னான்: "இல்லை எஜமான்... நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு? எதுவுமே சொல்லவில்லை. ம்... வெயிலுக்கு நல்ல சூடு இருக்கு.''


"சரி... சரி...'' என்று கூறிக்கொண்டே விஸ்வம் நடையைத் தொடர்ந்தார். ஆனால், வயலின் வழியாக சுற்றி நடப்பதற்கு, உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர் வயலிலேயே உண்டாக்கப்பட்டிருந்த பொருட்கள் வைக்கப்படும் அறையை நோக்கி நடந்தார்.

அஞ்சய்யாவைப் பொறுத்த வரையில் நகரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பது அந்த அளவுக்கு சிரமமான விஷயமாக இருக்கவில்லை. மோட்டார் சைக்கிளையோ, அதன் சத்தத்தையோ  கேட்டு மக்களில் யாருக்கும் பயமில்லை. கடைவீதியாக இருந்தால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் மிகவும் கவனமாக ஒரு பொட்டலத்தை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார். அதன் எடை கிட்டத்தட்ட எவ்வளவு வரும் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே அவர் தெருவில் எதிர் பக்கத்திலிருந்த ஆசாரியின் கடைக்குள் நுழைந்தார். மதிய நேரமாக இருந்ததால் அங்கு எப்போதும் இருக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. அவர் தெருவைக் கடப்பதைப் பார்த்தவுடன் ஆசாரி எச்சரிக்கை உணர்வுடன் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டார். முகத்தில் கிடைக்கப்போகும் வரவை நினைத்து உண்டான சந்தோஷம் படர்ந்து விட்டிருந்தாலும், விலை கூற வேண்டும் என்பதைப்போல ஒரு வியாபாரியின் முகவெளிப்பாட்டை அவர் உடனடியாக எடுத்து அணிந்து கொண்டார். "எஜமான், உங்களைப் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆயிடுச்சே!'' என்று கூறியவாறு அவர் அஞ்சய்யாவை வரவேற்றார். பிறகு அடுத்த நிமிடமே உள்ளே அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார். உள்ளே செல்லும்போது அவர் பணியாளிடம் சொன்னார்: "யாராவது வந்தால், நான் உள்ளே இல்லை என்று சொல்லுங்க.''

தலையை உயர்த்தாமலே பணியாள் "சரி'' என்று சொன்னான். அடுத்த நிமிடமே அவன் வேலையில் மூழ்கினான்.

வேலை செய்வதற்கு மத்தியில், அவ்வப்போது அடைக்கப்பட்ட கதவுக்கு உள்ளே இருந்து வரும் சத்தத்தை அவனால் கேட்க முடிந்தது.

"ஆயிரம்!''

"அதிகம் எஜமான்.''

"பொருளைப் பார்த்துட்டு சொல்லுங்க.''

"அது ஆபத்து எஜமான்.''

"கடை வீதியில் வேறு ஆசாரிகளும் இருக்காங்க.''

"எஜமான், உங்கள் விருப்பம்போல... அப்படின்னா சரி.''

5

"என் கணவரை விட்டுடுங்க, எஜமான். இரவு முழுவதும் அவர் எங்களுடன்தான் இருந்தார்.'' என்று கூறியவாறு கிஸ்தய்யாவின் மனைவி மாட்டு வண்டிக்குப் பின்னால் ஓடினாள். அவளுடன் அவளுடைய குழந்தைகளும் இருந்தார்கள்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அஞ்சய்யா நகரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் அவளுடைய சத்தத்தை கேட்காமல் செய்தது. மாடுகள் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டன. மோட்டார் சைக்கிள் அவளுக்கு அருகில் கடந்து சென்றது.

அஞ்சய்யா தலையைத் திருப்பி மாட்டு வண்டியைப் பார்த்தார். அவர் தலையைத் திருப்பியபோது, கொஞ்சம் ஆட்கள் வழியில் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவர் உடனடியாக பதைபதைத்துப் போனதும் மோட்டார் சைக்கிள் தடுமாறியதும் ஒரே நேரத்தில் நடந்தன. ஒரு வழியாக அவர் வண்டியை நிறுத்தினார். அதற்குள் ஆட்கள் பாதையை விட்டு விலகிவிட்டிருந்தனர்.

"எஜமான், எங்களை மன்னிக்கணும்.'' அவர்கள் பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள்: "எஜமான், நீங்க வருவதை நாங்கள் பார்க்கவில்லை.'' முன்னோக்கி வந்து ஒரு ஆள் உதவுவதற்கு முயன்றபோது அஞ்சய்யா அவனுக்கு நல்ல ஒரு அடியைக் கொடுத்தார். கவனக்குறைவாக நடந்து

பாதையில் சிரமம் உண்டாக்கிய ஆட்களை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அஞ்சய்யா மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அஞ்சய்யாவின் மோட்டார் சைக்கிளின் சத்தம் பூசாரியின் காதுகளிலும் வந்து மோதியது. கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்கு அருகில் அவர் அப்போதும் நின்று கொண்டிருந்தார். கடவுளின் நகையை அங்குதான் வைப்பார்கள். வானத்தில் இருள் படர்ந்துவிட்டிருந்தது. இருட்டில் பூசாரியின் முகம் தெலுங்கானா மலைகளில் இருக்கும் பாறையை ஞாபகப்படுத்தியது.

அதிகரித்துக் கொண்டிருந்த இருள் மாளிகையை முழுமையாக மூடியது. போதையில் மூழ்கிய சத்தமும் குலுங்கல் சிரிப்புகளும் ருக்மிணியின் காதுகளில் விழுந்து பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன. நான்கு சகோதரர்களும் முழுமையாக மது அருந்தியிருந்தார்கள். ஆனால், ஒரு மூலையிலாவது தான்தான் மூத்தவர் என்ற உண்மையை அண்ணா உணர்ந்துகொண்டுதான் இருந்தார். அவர் விஸ்வத்தை அறைக்குச் செல்லுமாறு கூறினார். "நீ இங்கே எதற்கு இப்போது இருக்கிறாய். போ...''

விஸ்வம் தன்னுடைய அறைக்குள் சென்றார். ஆனால், அவருடைய குடல் ரத்தத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.

ருக்மிணி முதுகைத் தடவிக்கொடுத்துக் கொண்டே என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் மற்ற சகோதரர்களை மனதிற்குள் திட்டினாள். ஒருவிதமாக விஸ்வத்தைத் தாங்கிக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தாள். எளிதில் உறங்க முடிகிற மாதிரி அவள் தன் கணவரின் தலையைத் தடவிக் கொண்டிருந்தாள்.

நாட்கள் மிகவும் வேகமாகக் கடந்து கொண்டிருந்தன. உதிர்ந்து விழுந்து கொண்டிருந்த நாட்களுடன் கடந்த கால விஷயங்களும் மறக்கப்பட்டுவிட்டிருந்தன. இதற்குள் கிராமமும் கோவிலில் நடைபெற்ற திருட்டுச் செயலை மறந்துவிட்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், மனதிற்குள் பூகம்பம் உண்டாகிக் கொண்டிருந்தாலும், வெளியே பூசாரியும் அமைதியான மனிதராகவே தெரிந்தார். இரவுகளும் பகல்களும் கடந்து கொண்டேயிருந்தன. இன்று சங்கராந்தி. தெலுங்கானாவில் அந்த அளவிற்கு புகழ் பெற்ற ஒரு திருவிழாக் கொண்டாட்டம். கிராமத்தில் அங்கும் இங்கும் முழு திருவிழாக்கோலம் காணப்பட்டது. ஆனால், அங்கும் ஜமீன்தார்களின் நிழல் படிந்துவிட்டிருந்தது. மக்கள் மாளிகைக்குச் சென்று ஜமீன்தார்களுக்கு "புது தானியம்" கொடுத்தார்கள். சங்கராந்தி நாளன்று ஜமீன்தார்களை மதிக்கிற வகையில் புது தானியம் அளிப்பது என்பது பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வரும் ஒரு சடங்காக இருந்தது.

ஆசிரியர் இல்லாமல் வெறுமனே கிடந்த பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த சிறுவர்கள் திருவிழா நாளன்று ஒரு புதிய விளையாட்டில் ஈடுபட்டார்கள். "திருடனும் போலீஸும்" அல்ல; "திருடனும் ஜமீன்தாரும்".

ஒரு பையன் பெரிய ஜமீன்தாரின் வேடத்தை அணிந்தான். எஞ்சி இருப்பவர்கள் கிராமத்து மனிதர்களின் வேடங்களை. ஜமீன்தாரின் வேடம் பூண்ட சிறுவன் தன்னுடைய மெல்லிய குரலுக்கு சிறிது கரகரப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னான்: "நான் ஜமீன்தார்!''

அப்போது மற்றவர்கள் சொன்னார்கள்:

"சரி... எஜமான்.''

"எனக்கு உங்களுடைய ஆடு வேணும். கோழியும் பசுவும் வேணும்.''

"விருப்பம்போல... எஜமான்.''

"நான் ஜமீன்தார்! நீங்கள் மனைவியை மாளிகைக்கு அனுப்பி வைக்கணும்.''

ஒரு சிறுவன் எழுந்து நின்றான். அவன் குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதைப்போல ஜமீன்தார் வேடம் பூண்டிருந்த சிறுவனை விரலை நீட்டி சுட்டிக்காட்டிக் கொண்டே சொன்னான்: "உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. நீங்கள் ஜமீன்தார் அல்ல; திருடன். நீங்கள் கடவுளின் நகையைத் திருடிவிட்டீங்க. மிகப் பெரிய திருடன்!''


விளையாட்டின் தன்மைக்கேற்ப சிறுவர்கள் ஒருவரையொருவர் மோசமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு சண்டை போட ஆரம்பித்தார்கள். இடையில் அவ்வப்போது அவர்கள் ஜமீன்தாரை "திருடன்... திருடன்...'' என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆள் நடந்து வந்து கொண்டிருந்தான். ஜமீன்தாரை "திருடன்'' என்று கூறுவதைக் காதால் கேட்டு அவன் அதிர்ந்து போய்விட்டான். அந்தப் பகுதியில் எங்கும் ஜமீன்தாரின் ஆட்கள் எப்படியோ இல்லாமற்போனது நல்லதாகிவிட்டது என்று அவன் நினைத்தான்.

"இனிமேல் எந்தச் சமயத்திலும் இந்த மாதிரியான விளையாட்டை விளையாடக்கூடாது.'' மூன்று நான்கு அடிகளைக் கொடுத்துக் கொண்டே அவன் சிறுவர்களைத் திட்டினான்.

சிறுவர்கள் நீர் வழிந்த கண்களுடன் விலகி நின்றிருந்தார்கள். அந்த மனிதன் மேலும் ஒருமுறை முன்னெச்சரிக்கையாகச் சொன்னான்: "இனிமேல் என்றைக்காவது இப்போ விளையாடியதைப் போன்ற விளையாட்டை விளையாடினால், என்னுடைய கடுமையான அடி உதைகளை வாங்குவீங்க.''

தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டே அவன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்: "இந்தப் பள்ளிக்கூடத்துக்கு என்றைக்கு ஆசிரியர் வரப்போகிறாரோ? ஊரில் இருக்கும் எல்லா சிறுவர்களும்  போக்கிரிகளாக ஆகிவிட்டிருக்காங்க!''

ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். சங்கராந்தி நாளன்றே.

கிராமத்திற்கான புதிய ஆசிரியர் தன் மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஜட்காவில் ஏறி வந்து கொண்டிருந்தார். கிராமத்தின் எல்லையில் நுழைந்தவுடன், புதிய இடத்திற்கு வந்திருக்கிறோம் என்ற உற்சாகம் முழுவதும் மனைவிக்கு இல்லாமற் போய்விட்டது. பிள்ளைகள் இருவரும் புதிய இடத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள். பள்ளிக்கூடம் உண்மையிலேயே எங்கே இருக்கிறது என்பதைக் கூறுவதற்கு அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்கக் கூடிய ஒரு மனிதனை ஆசிரியரின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. சில நிமிடங்களுக்கு முன்னால் சிறுவர்களைத் திட்டிய அந்த மனிதனைத்தான் இறுதியில் அவர் பார்த்தார்.

"பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியைச் சற்று சொல்ல முடியுமா?'' ஆசிரியர் அந்த மனிதனிடம் கேட்டார்.

உடனடியாக அவன் ஆசிரியரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தான்.

"நான் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்... ராமகிருஷ்ண ரெட்டி...''

அவன் உற்றுப் பார்த்ததற்கான உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டதைப்போல ஆசிரியர் சொன்னார். மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து சொன்னார். "நான் இந்த ஊருக்கு மாறுதல் பெற்று வந்திருக்கிறேன்.''

"சிறுவர்கள் மிகவும் போக்கிரிகளாக மாறிவிட்டிருக்கிறார்கள் மாஸ்டர்'' என்று கூறிக்கொண்டே அவன் ராமகிருஷ்ண ரெட்டியை வணங்கினான். பள்ளிக்கூடத்திற்குச் செல்லக் கூடிய வழியைக் கூறிவிட்டு, புதிய

ஆசிரியர் ஊருக்கு வந்திருக்கும் தகவலை ஊரெங்கும் கூறுவதற்காக அவன் மிகவும் வேகமாக முன்னோக்கி நடந்தான்.

6

ண்டி பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வந்து நின்றது. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே ஆசிரியருக்கு தங்குவதற்கான ஒரு வீட்டையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். அங்கு போய் சேர்ந்தவுடன், ஆசிரியரின் பார்வை முதன்முதலாக போய் விழுந்தது பள்ளிக்கூடத்திற்கு முன்னால் இருந்த ஒரு குழியின் மீதுதான். அந்தக் குழியை முடிந்த வரையில் சீக்கிரம் மண்ணைப் போட்டு மூட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆசிரியர் ஜட்காவை விட்டு இறங்கினார். அவருடைய மனைவி சுசீலா, குழந்தைகளுடன் மிகவும் கவனமாக கீழே இறங்கினாள். வண்டிக்காரனின் உதவியுடன் அவர் பொருட்கள் அனைத்தையும் வீட்டின் வாசலில் கொண்டு போய் வைத்தார்.

ஏதாவது எடுக்காமல் விட்டு விட்டோமா என்று பார்ப்பதற்காக சுசீலா ஒவ்வொரு பொருளையும் எண்ண ஆரம்பித்தாள். பொருட்கள் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கவில்லை. தாழ்ப்பாளுக்குக் கீழே இருந்த தூசியை வாயால் ஊதிவிட்டவாறு ஆசிரியர் கதவைத் திறந்தார். அறைக்குள்ளிருந்து தாங்க முடியாத அளவிற்கு கெட்ட நாற்றம் வர ஆரம்பித்தது.

அப்போது சுசீலா சொன்னாள்: "இதை இப்போதே சுத்தம் செய்தாகணும். நீங்க அந்த சாளரங்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் திறந்து விடுங்க.''

அவள் மீண்டும் பொருட்களைக் கணக்கிட்டுப் பார்க்க ஆரம்பித்தாள். ஆசிரியர் உள்ளே சென்று சாளரத்தைத் திறந்தார். சுத்தமான காற்று கெட்ட நாற்றத்தை விலகி ஓடச் செய்தது. திரும்ப வாசலுக்கு வந்து அவரும் மனைவியும் சேர்ந்து பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைத்தார்கள். குழந்தைகளை பலகையில் உட்கார

வைத்துவிட்டு, அறை முழுவதையும் அடித்து வாரி சுத்தம் பண்ணுவதில் மனைவி மூழ்கினாள். ஆசிரியரும் வீட்டை வீடாக வைத்திருக்கும் முயற்சியில் தன் மனைவிக்கு உதவ ஆரம்பித்தார்.

திடீரென்று இளைய குழந்தை அழ ஆரம்பித்தது. அவர் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்தார். தொடர்ந்து அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையைத் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தபோது, கூறத்தக்க நோக்கம் எதுவும் இல்லாமல் மூன்று நான்கு ஆட்கள் தன்னுடைய வீட்டைப் பார்த்து நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவர்களிடம் ஏதாவது பேசிப் பார்ப்போமா என்று மனதில் நினைத்தபோது, உள்ளேயிருந்து மனைவியின் குரல் கேட்டது.

"ஏங்க... கொஞ்சம் இங்கே வாங்க.''

உடனடியாக ஆசிரியர் உள்ளே சென்றார். ஆண்- பெண் கடவுள்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றில் படிந்திருந்த தூசியை சுசீலா தட்டி நீக்கிக் கொண்டிருந்தாள்.

மூத்த குழந்தை தன் அன்னையின் அருகில் உட்கார்ந்து புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அடுத்த நொடியே தன் தந்தையின் மடியை விட்டு தம்பியும் இறங்கி அங்கு போய் உட்கார்ந்தான். ஆசிரியரும் மனைவியும் புகைப்படங்களைச் சுவரில் தொங்க விடுவதில் மூழ்கி விட்டிருந்தார்கள்.

ஜமீன்தார் சகோதரர்கள் வயலில் இருந்த அறையில் சீட்டு விளையாட்டில் ஆழ்ந்துவிட்டிருந்தார்கள். அத்துடன் பனங்கள்ளு குடிப்பதிலும் பனங்கள்ளை உள்ளே போகச் செய்வதற்கு மத்தியில், அவர்கள் சில நேரங்களில் முன்பக்கமிருந்த சாளரம் வழியாக தொழிலாளிகளைப் பார்க்கவும் செய்தார்கள். ஜமீன்தார்கள் வேலையாட்களுக்குத் தேவைப்படும் கட்டளைகளை அங்கே உட்கார்ந்து கொண்டுதான் கூறுவார்கள். அவர்களுக்கு மத்தியில் வேலை செய்து

கொண்டிருக்கும் பெண்களை அவர்கள் கண்களை உயர்த்திப் பார்க்கவும் செய்தார்கள்.

ஜமீன்தார் சகோதரர்களைப் பொறுத்த வரையில் இந்த விஷயங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய வழக்கமானவையாக இருந்தன. சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போதே, பனங்கள்ளை உள்ளே போகச்செய்து கொண்டும் பொழுதைக் கழிப்பதற்காக வயல், வயலில் இருக்கும் அறை, கிராமம், தொழிலாளிகளின் சோம்பேறித்தனம் ஆகியவற்றைப் பற்றி பேசிக்கொண்டும் இருப்பது அவர்களுடைய அன்றாடப் பொழுதைக் கழிக்கும் செயல்களாக இருந்தன. இறுதியில் ஏதாவதொரு இளம் பெண்ணின் உடலழகைப் பற்றி பேசி தினமும் இந்தச் செயலை முடிப்பார்கள்.

எப்போதும்போல மூத்த சகோதரர் பிரசாத்திடம் சொன்னார்: "இந்த முறை திருவிழா மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது. ம்... அந்தப் புதிய பசு நல்ல கறவை இருக்கக் கூடியதுன்னு தோணுது.''


பிரசாத்தின் கழுகுக் கண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண்மீது பதிந்து கொண்டிருந்தன. அவர் சொன்னார்:

"இல்லாவிட்டால், நாளைக்கே நாம் நல்ல கறவை உள்ளதா ஆக்கிடுவோம், அண்ணா.''

அஞ்சய்யாவின் கண்களும் அந்தப் பெண்ணின் மீதே விழுந்துவிட்டிருந்தன. அவர் சொன்னார்: ''இந்த புதிய பசுவின் மார்பகம் பார்ப்பதற்கு நல்ல சதைப் பிடிப்பா இருக்கு.''

அண்ணாவும் அங்கேதான் பார்த்துக் கொண்டிருந்தார்.

"பசுவின் மார்பகத்தின் அழகு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதும், அது அதிகமாக பால் தருவதும் எப்போது என்ற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்? நான் திருமணமே செய்து

கொள்ளவில்லை.'' அவர் தொடர்ந்து சொன்னார்: "எனினும், ஒரு பசுவைப் பார்த்தால் போதும்... அது எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதை என்னால் சிரமமே இல்லாமல் கூற முடியும்.''

"துண்டப்பா!'' அங்கு அமர்ந்துகொண்டே அவர் அழைத்தார். தொடர்ந்து சகோதரரிடம் சொன்னார்: "நான் இப்போ உங்களுக்கு பசுவை வரவழைச்சுக் காட்டுறேன்.''

உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு நடுங்கிக் கொண்டே துண்டப்பா உள்ளே வந்தான். அண்ணா அவனிடம் கேட்டார்: "உன் மனைவி புதுசா கல்யாணம் பண்ணி வந்தவள்தானே?''

"ஆமாம் எஜமான்.'' அவன் சொன்னான்: "குடி வந்து பத்து நாட்கள்கூட ஆகவில்லை.''

"சரி... நீ போய் மனைவியை இங்கே வரச் சொல்லு.'' அண்ணா கட்டளையிட்டார்.

பழகிப்போன ஒரு கவலையுடன் துண்டப்பா தன்னுடைய புதிய மணப்பெண் கங்கம்மாவை அறைக்குள் செல்லும்படி கூறி அனுப்பி வைத்தான்.

ஊரில் நிலவும் வழக்கங்களைப் பற்றி சிறிதும் தெரியாதவளாக கங்கம்மா இருந்தாள். "அன்பளிப்பாக" ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவள் அடுத்த நிமிடம் எஜமான்களை நோக்கிச் சென்று அமைதியாக கதவுக்கு அருகில் நின்றிருந்தாள்.

எதுவும் பேசாமல் அவர்கள் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். ஜமீன்தார் சகோதரர்களின் கழுகுக் கண்கள் அந்த அப்பாவி ஏழைப் பெண்ணின் உடலைக் குத்தி உள்ளே ஆழமாக நுழைந்து கொண்டிருந்தன. எல்லா விஷயங்களும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வினோதமான அனுபவமாக கங்கம்மாவிற்கு  இருந்தது.

எஜமான் உண்மையிலேயே தெய்வத்திற்கு நிகரானவர் என்று அவளுடைய தாய் அவளிடம் கூறியிருந்தாள். ஆனால், இந்த எஜமான்களுடைய கண்கள் கவலை நிறைந்த ஒரு பய உணர்வை அவளுக்குள் எழச்செய்தன. அதற்குள் அவர்கள் கங்கம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு முடித்திருந்தார்கள்: "உன்னுடைய கணவனுடன் வாழும் வாழ்க்கையில் உனக்கு சந்தோஷம் இருக்குதா?''

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"பதிலும்" கிடைத்தது. "உனக்கு சந்தோஷம் கிடையாது. நீ எதற்கு வயலில் வேலை செய்ய வேண்டும்? நீ புதிய மணப்பெண்தானே? கங்கம்மா, ஓய்வுடன் இருக்கிற மாதிரி மனதிற்குப் பிடிக்கக்கூடிய வேலையைச் செய்யக்கூடாதா? துண்டப்பா...'' அண்ணா அழைத்தார்.

கதவுக்குப் பின்னால் சற்று தூரத்தில் தள்ளி நின்று கொண்டிருந்த  துண்டப்பா உடனடியாக உள்ளே வந்தான்.

"துண்டப்பா... இனிமேல் நீ தினமும் கங்கம்மாவை மாளிகைக்கு அனுப்பி வச்சிடு. இவள் அங்கே வேலை செய்யட்டும்.''

துண்டப்பாவும் கங்கம்மாவும் எதுவுமே பேசாமல் வெளியேறினார்கள். ஜமீன்தார் சகோதரர்கள் மிகப் பெரிய சிரிப்பு சிரித்தார்கள்.

ஆனால், விஸ்வம் மட்டும் சிரிக்கவில்லை. அவர் தன் சகோதரர்களின் உரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளவும் இல்லை. தன்னுடைய கையில் ராணியின் படத்துடன் இருந்த சீட்டையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

7

வெயில் நன்கு பரவாமல் இருந்தாலும், அதிகாலைப் பொழுதின் பிரகாசம் பரவிவிட்டிருந்தது. ராமகிருஷ்ணா அதிகாலை தூக்கத்தில் மூழ்கியவாறு கட்டிலில் படுத்திருந்தார். அவருக்கு அருகில் சுசீலா கண் விழித்தவாறு படுத்திருந்தாள். அவர்கள் இருவருக்குமிடையே ஒரு

குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. தாயின் இன்னொரு பக்கத்தில் இரண்டாவது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ராமகிருஷ்ணாவை சுசீலா வாஞ்சையுடன் வருடிக்கொண்டிருந்தாள். அவரை கண் விழிக்கச் செய்ய வேண்டும் என்று அவள் நினைத்தாள். மெல்லிய தொடல் மூலம் கண் விழித்து விட்டாலும், கண்களை மூடிக்கொண்டே அவர் கேட்டார்: "ம்... என்ன? என்ன விஷயம்? இன்னும் சிறிது நேரம் நான் தூங்குறேனே!''

சுசீலா கொஞ்சுகிற குரலில் சொன்னாள்: "கிளிகளின் கலகலவென்ற சத்தத்தை நீங்கள் கேட்கவில்லையா? ஆஹா...! சத்தம் எவ்வளவு இனிமையா இருக்கு!''

உடனடியாக அவர் திரும்பிப் படுத்துக்கொண்டே அலட்சியமான குரலில் கூறினார்: "நீயும் ஒரு கலகல சத்தமும்!'' அவர் திரும்பவும் தூக்கத்தில் மூழ்கினார்.

திறந்த கண்களுடன் சுசீலா கிளிகளின் கலகல சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சூரியனின் ஒளிக்கதிர்கள் சாளரத்தின் வழியாக அறைக்குள் நுழைந்தபோது, சுசீலா படுக்கையை விட்டு கட்டாயம் எழுந்திருக்க வேண்டியதாகிவிட்டது. அதிகாலைப் பொழுதின் அழகைப் பார்ப்பது என்பதுடன் வேறு பணிகளும் அவளுக்கு செய்வதற்கு இருந்தன. குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, காலை உணவு தயார் பண்ணுவது ஆகிய விஷயங்கள். வேகமாக எழுந்து அவள் தன்னுடைய வேலையில் மூழ்கினாள்.

மதியம் சுசீலாவைப் பார்ப்பதற்காக ஒரு பக்கத்து வீட்டுப் பெண் வந்தாள். அவர்கள் இருவரும் கோவிலுக்குச் செல்வதற்கு திட்டமிட்டார்கள். அப்போது ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் இருந்தார்.

சுசீலா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து கோவிலுக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பினாள். வழியில் அவர்கள் கிராமத்தைப் பற்றி பேசும்போது, பக்கத்து வீட்டுப் பெண் திடீரென்று மூடு துணியை இறக்கிவிட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து சுசீலா நடுங்கிவிட்டாள். முன்னால் கண்களால் பார்த்தபோது, நான்கு பேர் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் உடலை நடுங்கச் செய்யும் அந்தப் "பார்வை"யைப் பார்த்து ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையைத் தேற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் என்றாலும், அவளுடைய உள் மனம் முற்றிலும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.

"வெட்கம் கெட்டவர்கள்!" இப்படிப்பட்ட கூர்மையான பார்வையை அவள் எந்தச் சமயத்திலும் விரும்பியதில்லை. தாங்கிக்கொள்ள முடியாத கோபமும் கவலையும் சுசீலாவின் முகத்தில் பரவிவிட்டிருந்தன. "வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்" அதற்குள் அங்கிருந்து போய்விட்டிருந்தார்கள். அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்:

"அவங்க யார்?"

"இந்த நான்கு பேரும் கிராமத்தின் ஜமீன்தார்கள். அந்த அளவிற்கு முரட்டுத்தனமும் செல்வாக்கும் உள்ளவர்கள். கிராமம் முழுவதும் அவங்களுக்கு பயந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கு...''  பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள்.

"இருக்கலாம்... எது எப்படியோ... வெட்கம்னு ஒண்ணு கொஞ்சம் கூட கிடையாது.'' முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு அவள் குழந்தையைத் தூக்கினாள். கோவிலுக்குச் செல்லும் பயணத்திற்கு மத்தியில், அவர்கள் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


கிராமத்தில் வந்து சேர்ந்த பிறகு, சுசீலாவிற்கு கிடைத்த முதல் அனுபவமாக அது இருந்தது. ஆனால், அதைவிட ஆச்சரியமான அனுபவம் அன்று சாயங்காலம் ஆசிரியருக்குக் கிடைத்தது.

அன்று சந்தை நாள். பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகு, சமையல் பொருட்கள் வாங்குவதற்காக அவர் சந்தைக்குச்  சென்றிருந்தார். அத்துடன் ஊரைச் சேர்ந்த சில மனிதர்களுடன் அறிமுகமாக வேண்டும் என்பதும் அவருடைய நோக்கமாக இருந்தது. மிகவும் பயங்கரமான சூறாவளி வரப்போகிறது என்பதைப்போல சந்தை முழுவதும் மிகப் பெரிய ஒரு பயம் பரவியிருந்தது. வர்த்தகர்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கட்டி, வேக வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அந்தச் சமயத்தில் ஆசிரியருக்கு அருகில் தூசியைப் பரக்கச் செய்து கொண்டு ஒரு மாட்டுவண்டி சூறாவளியைப்போல வந்து நின்றது. ஜமீன்தார் சகோதரர்கள் நான்கு பேரும் அதில் இருந்தார்கள்.

ஆசிரியர் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அவர்களுடைய செய்கைகளைப் பார்க்க ஆரம்பித்தார். அவர்கள் வண்டியை விட்டு இறங்கி, சந்தையைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டை, கோழி, மாமிசம் போன்ற எதுவாக இருந்தாலும் சரி... தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஒவ்வொருவரும் எடுத்தார்கள்.

பதைபதைத்துப் போய் நின்றிருந்த வர்த்தகர்களில் காசு கேட்கக் கூடிய தைரியத்தை வெளிப்படுத்தியவர்களைப் பார்த்து, அவர்கள் வாயில் வந்த மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டி, அவர்களுக்கு அடி, உதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணின் கோழியை அஞ்சய்யா தன் கையில் எடுத்தார். மிகவும் சிரமப்பட்டு தீனி போட்டு

வளர்த்த அந்த கோழிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் கேட்டாள்: "கோழிக்கான காசு?''

கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி அவளுடைய கன்னத்தைத் தடவியவாறு அஞ்சய்யா சொன்னார்: "சாயங்காலம் மாளிகைக்கு வந்து கோழிக்கான காசை வாங்கிக்கோ. அத்துடன் கோழிவிற்கும் பெண்ணுக்கான காசையும்...''

கோழிக்கு கிட்டத்தட்ட எவ்வளவு எடை வரும் என்று கையில் வைத்துப் பார்த்துக்கொண்டே அண்ணா வண்டியில் ஏறினார். விஸ்வம் அதற்கு முன்பே போய் உட்கார்ந்திருந்தார். மேலும் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்ட பிறகு, மற்ற சகோதரர்களும் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்கள். தூசியை எழச் செய்து கொண்டு மாட்டு வண்டி உடனடியாக அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டது. வர்த்தகர்களின் முகங்களிலும், பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தவர்களின் முகங்களிலும் பரவிய பயமும் கண்களில் தோன்றிய வெறுப்பும் மேலும் சற்று அதிகமானது.

அந்தப் பகுதி முழுவதும் மிகுந்த அமைதியில் ஆழ்ந்துவிட்டதைப் போல இருந்தது. ஒரு கல்லாலான சிலையைப்போல ஆசிரியர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். ஓடிக் கொண்டிருக்கும் மாட்டு வண்டியையே கண்களை இமைக்காமல் அவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

கிருஷ்ணப்பா ஆசிரியரின் அருகில் வந்து சொன்னான்:

"ஆசிரியர் அய்யா, உங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியலைன்னு தோணுது.''

"ஆமாம்... இவங்க யார்?'' ஆசிரியர் கேட்டார்.

"இவங்களா? இவங்கதான் இங்கே உள்ள ஜமீன்தார்கள். இவர்களுடைய பேய்கூத்து செயல்களின் காரணமாக கிராமத்து மக்கள் எல்லாரும் கவலையிலும் சிரமத்திலும் இருக்காங்க. கோழியைக் கையில் எடுத்துக்கொண்டு முதலில் வண்டியில் போய் உட்கார்ந்தவர் அண்ணா. எல்லாரையும்விட மூத்தவர். அவர் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கோழிவிற்கும் பெண்ணின் கன்னத்தைத் தடவினார் அல்லவா? அவர்தான் அஞ்சய்யா. அவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்னால் அவரை விட்டு விலகி எங்கோ போயிட்டாங்க. அதற்குப் பிறகு திரும்பி வரவேயில்லை. கர்ப்பம் ஆனதால் திரும்பி வரவில்லை. இப்படித்தான் அஞ்சய்யா சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகில் நின்று கொண்டு என்னவோ சொல்லிக்கொண்டு இருந்தவர் பிரசாத். அவருடைய மனைவி இறந்துவிட்டாள். அவள் தற்கொலை பண்ணிக்கொண்டாள் என்று சிலர் சொல்றாங்க. இவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து அந்த அப்பாவிப் பெண்ணை சாகடிச்சிட்டாங்கன்னும் பேச்சு இருக்கு.'' அவன் தொடர்ந்து சொன்னான்: "பிறகு... வண்டியிலேயே ஒரு ஆள் உட்கார்ந்திருந்தார் அல்லவா? அவர்தான் விஸ்வம். எல்லாரையும்விட இளைய ஆள். விஸ்வத்திற்கு திருமணம் ஆயிடுச்சு. ஆனால், உண்மையைக் கூற வேண்டுமல்லவா? அய்யா, இவங்களுக்கு எந்தச் சமயத்திலும் மனைவியின் தேவையே இல்லை. இவர்கள் ராஜாக்கள்... ராஜாக்கள்... இவங்களுக்கு தேவை என்று தோன்றுவதெல்லாம் அந்தந்த நேரத்துல கிடைக்கும். கிடைக்காவிட்டால் இவங்க தட்டிப் பறிச்சிடுவாங்க. மிகப் பெரிய முரடர்கள்.''

கிருஷ்ணப்பாவின் வார்த்தைகளைக் கேட்டு ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். அவருடைய முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, அவருடைய மனைவி முகத்தை ஒரு மாதிரி கவலையாக வைத்துக்கொண்டு இருப்பதை அவர் பார்த்தார். "என்ன நடந்தது?'' அவர் கேட்டார். அந்த நொடியே அவள் கோபத்துடன் சொன்னாள்: "உங்களை யார் இங்கே வரச் சொன்னது? இங்கே இருப்பவர்கள் எந்தவொரு நாகரீகமும் இல்லாதவர்களாக இருக்காங்க.''

சந்தையில் நடைபெற்ற சம்பவத்தை நினைத்து திடீரென்று ஆத்திரமடைந்து அவர் சொன்னார்: "என்னை இங்கேதான் இடம் மாற்றம் செய்யணும் என்று நான் சொன்னேனா என்ன?''

அவர் அமைதியாக கட்டிலில் போய் உட்கார்ந்தார். மனைவி உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

சுசீலா சாதாரணமாக இருப்பதைப்போல இருந்தாலும், சந்தையில் நடைபெற்ற சம்பவம் ஆசிரியரின் மனதை மிகவும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்காக அவர் வெளியேறியபோது, வீட்டுக்கு அருகில் ஒரு மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தார். விஸ்வத்தைத் தவிர, எஞ்சியிருந்த மூன்று சகோதரர்களும் வண்டியில் அமர்ந்துகொண்டு வீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியரைக் கண்டவுடன் அண்ணா கேட்டார். "புதிதாக வந்திருக்கும் ஆசிரியர்தானே?''

"ஆமாம்...'' என்பதைப்போல ஆசிரியர் தலையை ஆட்டினார். அதற்குப் பிறகு முன்னோக்கி நடந்து கைகளைக் குவித்துக்கொண்டு சொன்னார்: "நான்தான் ராமகிருஷ்ணரெட்டி. புதிதாக மாறுதல் கிடைத்து வந்திருக்கும் ஆசிரியர்... முன்பு நகரத்திலிருந்த பள்ளிக் கூடத்தில் வேலை பார்த்தேன்.''

"இங்கே இருக்கும் மாணவர்களை நன்கு படிக்க வைக்கணும். பொல்லாத பசங்க. இதற்கு முன்பு இருந்த ஆசிரியர் அந்த அளவுக்கு

சரியாக பாடம் சொல்லித் தரவில்லை. நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும்...'' அண்ணா அறிவுரை கூறும் குரலில் சொன்னார். அஞ்சய்யா சாட்டையால் காளையை அடித்து வண்டியைக் கிளப்பினார். "நன்கு படிக்க வைக்கணும்" என்ற அண்ணாவின் வார்த்தைகள் தன்மீது விழுந்த சாட்டை அடியைப் போல ஆசிரியருக்குத் தோன்றியது.


பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது, சுசீலா வழக்கமான வேலைகளில்  மூழ்கிவிட்டிருப்பதை அவர் சாளரத்தின் வழியாகப் பார்த்தார். "அவள் எதையும் பார்க்கவில்லை. ஒரு வகையில் அது நல்லதாகப் போய்விட்டது." ஆசிரியரின் உள் மனம் முணுமுணுத்தது.

8

மாளிகையில் அமர்ந்து விஸ்வம் என்னவோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். சமீபகாலமாக எல்லா நேரங்களிலும் அவர் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறே காணப்பட்டார். ருக்மிணி அவரின் அருகில் வந்த நின்றாள். அவள் கேட்டாள்:  "சமீபகாலமாக உங்களுக்கு என்ன ஆனது? எப்போது பார்த்தாலும் இப்படி உட்கார்ந்து கொண்டு இந்த அளவிற்கு எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் உங்களின் மனைவி. என்னிடம் எதையும் ஏன் கூறாமல் இருக்கிறீர்கள்?''

மொத்தத்தில் வெறுப்படைந்து விட்டதைப்போல விஸ்வம் திட்டுகிற குரலில் சொன்னார்: "இங்கேயிருந்து போ. என்னைக் கொஞ்ச நேரம் வெறுமனே விடு.'' ஆனால், ருக்மிணி அங்கேயேதான் நின்று கொண்டிருந்தாள். இந்த மனிதருக்கு என்ன ஆகிவிட்டது என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். படிப்பதில் ஈடுபடுவதைவிட, ஒருவரையொருவர் கிள்ளுவது, சத்தம் போடுவது போன்ற விஷயங்களில்தான்

அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. தூரத்தில் பார்க்கும்போதே அது ஒரு பள்ளிக்கூடம் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியும். முற்றிலும் ஒரு பள்ளிக்கூடத்திற்கான சூழ்நிலை. திடீரென்று வெளியே ஒரு பெண்ணின் ஓலம் கேட்டது. மிகவும் உரத்த குரலில் இல்லை என்றாலும், அந்த அழுகைச் சத்தம் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது வேறு யாருடைய குரலும் அல்ல- தன் மனைவி சுசீலாவின் அழுகைச் சத்தம்தான் என்பதை உடனடியாக ஆசிரியரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அழுது கொண்டிருந்தாள். அவள் ஏன் அழ வேண்டும்? சுசீலாவிற்கு என்ன ஆனது?

"காப்பாத்துங்க... என்னைக் காப்பாத்துங்க'' என்ற கூப்பாடு ஆசிரியரை அதிர்ச்சியடையச் செய்தது. அவருடைய கையிலிருந்து புத்தகம் தரையில் விழுந்தது. ஆசிரியர் வெளிவாசலை நோக்கி ஓடினார். புதிய ஏதோ விளையாட்டைப் பார்க்கப் போகிறோம் என்பதைப்போல உற்சாகத்துடன் சிறுவர்களும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். வெளியே வந்த பார்த்தபோது, அந்த அளவிற்கு நாடகத்தனமாக எதுவும் நடந்திருக்கவில்லை. ஒரு மிகவும் சாதாரணமான சம்பவம் மட்டுமே நடந்திருந்தது. ஆனால், ஆசிரியரைப் பொறுத்த வரையில் ஆச்சரியப்படக்கூடிய ஒரு சம்பவமாகத்தான் அது இருந்தது. அண்ணா மாட்டு வண்டியில் உட்கார்ந்திருந்தார். அஞ்சய்யாவும் பிரசாத்தும் சேர்ந்து தங்கள் பலத்தைப் பயன்படுத்தி சுசீலாவைப் பிடித்து இழுத்து வண்டியை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.

ஆசிரியரின் வீட்டுக்கு முன்னால் நடைபெற்ற இந்த விஷயங்களை பள்ளி மாணவர்கள் புதிய ஒரு சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் உற்சாகத்துடன் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் மாணவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டும் இருந்தார்கள்.

"டேய்... டேய்... அங்கே பார். அங்கு என்ன நடக்கிறதுன்னு பார்த்தியா?'' அவர்கள் ஒருவரோடொருவர் கூறிக்கொண்டார்கள்.

நடைபெற்றது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், வேலையில் முழுமையாக ஈடுபட்ட மனநிலையுடன் திகைப்படைந்து போய் விட்டதைப்போல ஆசிரியரும் அந்தப் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார். பட்டப்பகல் வேளையில் கண்களுக்கு முன்னால் அவருடைய மனைவியை ஜமீன்தார்கள் பலவந்தப்படுத்தி இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்கள்.

அப்போது பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அந்தப் பகுதியெங்கும் வந்து சேர்ந்தார்கள். ஆனால், ஒரு மனிதன்கூட ஜமீன்தார்களைத் தடுக்க முயற்சிக்கவில்லை. மிகவும் பயங்கரமான ஒரு விளையாட்டு அமைதியாக, மிகவும் சாதாரணம் என்பதைப் போல நடப்பதாக ஆசிரியருக்குத் தோன்றியது. இந்தக் கொடுமையான செயலைச் செய்வதற்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? ஆசிரியர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

உடனடியாக அவர்களுக்கு முன்னால்போய் நிற்க வேண்டும் என்று தோன்றினாலும், உள் மனதில் உண்டான ஒரு இனம் புரியாத பயம் ஆசிரியரைப் பிடித்து நிறுத்தியது. அவருடைய கால்கள் அங்கேயே உறுதியாக நின்று கொண்டிருந்தன. இதயம் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஈர விழிகளுடன் அவர் அவர்களைத் தடுக்க முயற்சித்தார்.

"வேண்டாம்... நீங்க என்ன செய்றீங்க? இந்தப் பாதகச் செயலை நிறுத்துங்க.''

ஆனால், ஆசிரியரின் வார்த்தைகளை ஜமீன்தார்களா காது கொடுத்துக் கேட்பார்கள்?

அதற்குள் அவர்கள் சுசீலாவை வண்டிக்குள் நுழைத்துவிட்டிருந்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எப்படியாவது முரண்டு பிடித்து தப்பிப்பதற்கு அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஆசிரியரின் குழந்தைகள் உரத்த குரலில் அழ ஆரம்பித்தன.

"இங்கே பாருங்க... கொஞ்சம் உதவுங்க. அவர்களை உடனடியா தடுங்க...'' ஒரு பைத்தியக்காரனைப்போல உரத்த குரலில் அழுது கொண்டே ஆசிரியர் வண்டியை நோக்கி ஓடினார். அதை நெருங்கியவுடன், அவர் ஜமீன்தார்களைத் தடுக்க முயற்சித்தார். அஞ்சய்யாவுடன் அடிதடி ஆரம்பமானது. ஆனால், அவரைப் பொறுத்தவரையில், ஆசிரியர் எதுவாகவும் இருக்கவில்லை. வெறும் ஒரு புழுவையோ பிராணியையோ பார்ப்பதைப்போல் அஞ்சய்யா ஒரே ஒரு அடியில் அந்த அப்பாவி மனிதரை கீழே விழுமாறு செய்து விட்டு, வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பிரசாத்தின் சாட்டை காளைகளின் மேல் விழுந்த அடுத்த நிமிடமே, வண்டி ஓட ஆரம்பித்தது. மாட்டு வண்டி மிகவும் வேகமாக ஆசிரியரின் கண்களுக்கு முன்னால் கடந்து சென்றது.

அவருக்கு முன்னால், எத்தனையோ ஆட்கள் மற்றும் மாணவர்களின் கண்களுக்கு முன்னால் அந்த அயோக்கியர்கள் சுசீலாவை பலவந்தப்படுத்தி கொண்டு சென்றனர். அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. எதுவுமே நடைபெறாததைப்போல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள். எது எப்படியோ- சிறிதும் நம்பிக்கை வரவில்லை. ஆனால், நடக்க வேண்டியது நடந்து முடிந்திருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அந்தச் சம்பவம் ஒரு கெட்ட கனவாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்ததோ முழு உண்மையாக இருந்தது. அவருடைய தங்கமான குழந்தைகள் தங்களுடைய தாயைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, பலத்தைப்

பயன்படுத்தி பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். ஆசிரியரின் மனதிற்குள் சிந்தனையில் நூறுநூறு சிவப்பு எறும்புகள் வரிசையாக ஊர்ந்து கொண்டிருந்தன.

"இப்போது என்னுடைய அன்பான மனைவி என்னுடன் இல்லை. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை." சிந்தனைகள் அலையடித்துக் கொண்டிருக்க, திடீரென்று ஆசிரியரின் உள்மனம் ஒரு போர்க்களமாக மாறியது. அவருடைய ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. ஆவேசத்தில் பெருக்கெடுப்பைத் தடுப்பது என்பது அவருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. இது எப்படி நடந்தது?


ஏதோ ஒரு சாதாரண தமாஷ் நிறைந்த காரியத்தைப் பார்ப்பதைப் போல அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தவாறு ஆசிரியர் சொன்னார். "நீங்கள் யாரும் எனக்கு சிறிய அளவில்கூட உதவி செய்யவில்லை. நீங்கள் ஏன் உதவவில்லை? கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்போல எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, வெறும் கற்சிலைகளைப்போல நீங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன?''

அப்போது எல்லாரும் அவரையே பார்த்தார்கள். இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்து எதையெதையோ புலம்பிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி அவர்களின் கண்களில் தெரிந்தது.

"நீங்கள் ஏன் எதுவுமே செய்யவில்லை? நீங்கள் என்ன காரணத்திற்காக அவர்களைத் தடுக்கவில்லை?'' தாங்க முடியாத மன வேதனை ஆசிரியரை பேச விடாமல் செய்தது.

ஆனால், அவருடைய கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்த அதே சலனமற்ற தன்மை... நாசமாகிப் போன அதே மவுனம்...

"பாவம்...'' மக்கள் தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டார்கள்: "அப்படியே இல்லாவிட்டாலும், அவரால் என்ன செய்ய முடியும்?''

எல்லாருக்கும் முன்னால்... ஆமாம்... தன்னுடைய மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னால் தான் முழு நிர்வாணமாக ஆக்கப்பட்டு விட்டதைப்போல ஆசிரியர் உணர்ந்தார். அவமானத்திற்குரிய ஒரு வெட்கம் அவரைப் பிடித்து இறுக்கியது. மொத்தத்தில் வியர்வையில் நனைந்திருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது.

"பாவம் குழந்தைகள்!'' அங்கு கூடி நின்று கொண்டிருந்தவர்களில் யாரோ முணுமுணுத்தார்கள்.

9

சிரியரின் கண்கள் வீட்டின் வாசலில் நின்று அழுது கொண்டிருந்த குழந்தைகளின்மீது சென்றன. அவர் அருகில் சென்று அவர்களை அள்ளி அணைத்துக் கொண்டார்.

"அம்மா... அம்மா எங்கே போயிட்டாங்க!'' மூத்த மகன் அழுதுகொண்டே கேட்டான்: "நம்ம அம்மாவை அவங்க எங்கே கொண்டு போனாங்க அப்பா?''

அவர்களிடம் என்ன கூற வேண்டுமென்றோ, என்ன செய்ய வேண்டுமென்றோ ஆசிரியருக்குத் தெரியவில்லை. குழந்தைகளைப் போல தானும் அழ ஆரம்பித்துவிடுவோமோ என்று அவர் நினைத்தார். திரண்டு நின்றிருந்த மனிதர்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கு தன்னுடைய ஆண்மைத்தனம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டினால் என்ன என்று நினைத்தார். என்ன செய்ய வேண்டும்? அவர் சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளை நோக்கி விரலை நீட்டியவாறு

அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவியிடம் மெதுவான குரலில் அவர் சொன்னார்: "நான் திரும்பி வருவது வரை இவர்களைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.'' குழந்தைகளை மடியிலிருந்து இறக்கிவிட்டு, ஏதோ ஒரு உறுதியான தீர்மானத்துடன் ஆசிரியர் மாட்டு வண்டி சென்ற பாதையிலேயே மிகவும் வேகமாக நடந்தார்.

தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஆசிரியர் அப்போது  ஓடிக்கொண்டிருந்தார். அவருடைய மனம் மிகவும் வெறுமையாகிவிட்டிருந்தது. தான் என்ன செய்வது? அவர்களுடைய மாளிகையை அடைந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? மாளிகையின் பிரம்மாண்டமான வெளிக்கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மிகவும் பத்திரமாக அவர்கள் எல்லாரும் மாளிகைக்கு உள்ளே இருப்பார்கள். அங்கு எதுவுமே செய்ய முடியாத நிலையில் சுசீலாவும் இருப்பாள். திடீரென்று அவர் ஓடுவதை நிறுத்தினார். ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல ஆசிரியர் நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்துகொண்டிருப்பதையும் நிறுத்தினார். இப்போது அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். மற்ற அனைவரும் தன்னையே கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆசிரியர் உணர்ந்தார். அவர் முழுமையாக வியர்வையில் நனைந்துவிட்டிருந்தார். முன்னால் தீர்மானித்து வைத்திருந்த விஷயத்தில் சிறிது மாற்றம் உண்டாகியிருக்கிறது என்பதைப்போல உறுதியான ஒரு முடிவை எடுத்துவிட்டு அவர் மண்டபத்தை நோக்கி நடந்தார்.

சிறுவர்களில் சிலர் சற்று விலகி அவரைப் பின்பற்றி நடந்து சென்றார்கள். அவர்கள் ஆசிரியரின் மாணவர்கள்தான்.

கிராமத்தின் மண்டபம். அங்குதான் ஹெட்கான்ஸ்டபிள் சம்சுதீனின் அலுவலகம் இருக்கிறது. அவர் அங்கேதான் வசிக்கவும் செய்கிறார். ஆசிரியர் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்கு சென்றிருந்தார்.

ஜமீன்தார்களின் சொந்த ஆளான ஹெட்கான்ஸ்டபிளைத் தேடி... ஆசிரியர் அங்கு சென்றார். இதுநாள் வரை நகரத்தில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த அவர் இறுதியில் போலீஸின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். கிராமத்து மக்களைப் போல கொள்ளையையும் கொலையையும் பொறுத்துக்கொள்வது என்ற விஷயம் அவருக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

ஆனால், ஹெட் கான்ஸ்டபிளோ அவருக்குக் கீழே வேலை செய்யும் அதிகாரிகளோ யாருமே வேலை செய்யும் இடத்தில் இல்லை. மண்டபத்திற்கு வெளியே அமர்ந்தவாறு ஒரு வயதான கிழவன் மட்டும் தன்னுடைய வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே அவரிடம் சொன்னார்: "நான் ஒரு புகார் கொடுக்கணும்.''

ஆனால், கிழவன் தன்னுடைய வேலையிலேயே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஆசிரியர் கூறியது எதையும் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை அல்லது காதில் விழுந்தும் காதில் விழாததைப் போல அவன் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம் ஆசிரியர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். கிழவனின் நடவடிக்கை அவரை மேலும் வெறுப்பு அடையச் செய்தது. அதை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதற்காக கிழவனுக்கு நன்கு காதில் விழுகிற மாதிரி மேலும் சற்று உரத்த குரலில் அவர் கேட்டார். "இங்கு ஹெட் கான்ஸ்டபிள் இல்லையா?''

அதற்குப் பிறகும், கிழவன் எந்தவொரு பதிலும் கூறவில்லை. வேட்டியைத் தைப்பதிலேயே மூழ்கியவாறு அவன் சொன்னான்: "ஹெட் கான்ஸ்டபிள்!'' என்னவோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு ஆசிரியரின் முகத்தையே பார்த்தவாறு கிழவன் அடுத்த நிமிடம் மண்டபத்தின் ஒரு பகுதியை நோக்கி விரலை நீட்டினான். "நீங்க அங்கே இருங்க. விஷயம் புரிகிறது அல்லவா?'' அவன் சொன்னான்.

ஆசிரியருக்குப் புரிந்தது. அனைத்தும்... அனைத்தும். யுகங்கள் கடந்து போய்க்கொண்டிருப்பதைப் போல அவருடைய ஒவ்வொரு நிமிடமும் கடந்து கொண்டிருந்தது. உள் மனம் ஒரே பதைபதைப்புடன் இருந்தது. கவலையை மறைத்து வைப்பது என்பது ஆசிரியருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால்,  ஹெட் கான்ஸ்டபிளை எதிர்பார்த்து அங்கு உட்கார்ந்திருப்பது என்பது அதைவிட மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அங்கு அமர்ந்துகொண்டு நேரத்தைக் கழிப்பது என்பது அவருக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது.

சில நிமிடங்கள் எழுந்து நின்று கொண்டும் சில நிமிடங்கள் நடந்து கொண்டும் ஒருவிதமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தபோது, நன்கு ஆடைகள் அணிந்த கோலத்துடன் சம்சுதீன் அங்கு வந்து சேர்ந்தார். "ஹெட்" எங்கேயிருந்து வந்திருக்கிறார் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது.


இன்று அவர் சற்று அதிகமான திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் காணப்பட்டார். ஆசிரியரைப் பார்த்தவுடன் வாய்க்குள் போட்ட வெற்றிலையைத் துப்பியவாறு, மிகவும் அமைதியான குரலில் அவரிடம் கேட்டார்: "ஆசிரியர் அய்யா, என்ன விஷயமாக வந்தீங்க?''

"ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு புகார் கொடுக்கணும். அவர்கள் என்னுடைய மனைவியை பலவந்தப்படுத்தி கொண்டு சென்றுவிட்டார்கள்.'' ஆசிரியர் எழுந்து நின்று கொண்டு சொன்னார்.

ஆசிரியரின் வேண்டுகோளை மிகவும் சாதாரணமாக நினைப்பதைப் போல காட்டிக்கொண்டு, உடனடியாக ஹெட் கான்ஸ்டபிள் மெதுவான குரலில் முனகினார்: "ம்...''

வெற்றிலைக்கும் பீடிக்கும் ஆர்டர் செய்துவிட்டு எதையோ தீவிரமாக சிந்திப்பதைப்போல தொடர்ந்து அவர் நாற்காலியில் சாய்ந்து

உட்கார்ந்தார். வெற்றிலையும் பீடியும் வாங்கிக்கொண்டு வரும் வரை கண்களை மூடிக்கொண்டு அவர் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார். இரண்டும் வந்து சேர்ந்தவுடன் ஆசிரியரிடம் கூறினார். "உங்களுடைய மேலான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கொள்வோம். ஆசிரியர் அய்யா, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்.''

"எதைப் பார்த்துக்கொள்வீர்கள்? நீங்க என்ன கூறுகிறீர்கள்? வழக்கு பதிவு செய்து உடனடியாக விசாரணை நடத்தணும் என்றல்லவா நான் கேட்டுக் கொண்டேன்?''

"ஆசிரியர் அய்யா... எல்லாவற்றிலும் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும்.'' அவருடைய பதைபதைப்பைத் தடுத்துக் கொண்டு ஹெட் கான்ஸ்டபிள் சொன்னார். "மனிதன் முழுமையான அமைதி நிலையில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களை நன்கு சிந்தித்த பிறகு நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும் தேவையற்ற மன அழுத்தமும் பரபரப்பும் பதைபதைப்பும் இருப்பதால் எதுவுமே நடந்துவிடப் போவதில்லை. நடக்குமா? உங்களுடைய மனைவியை பலவந்தப்படுத்தி கொண்டு போய்விட்டார்கள் என்பதென்னவோ உண்மை. அது உண்மையிலேயே கவலைப்படக் கூடிய விஷயம் தான். ஆனால், வெற்றிலை போடாமலும் பீடி புகைக்காமலும் இருப்பதால் அவங்க திரும்பி வந்து விடுவாங்களா? ஆசிரியர் அய்யா, நிதானமாக கொஞ்சம் சிந்திச்சுப் பாருங்க. மனிதனாக இருந்தால், பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு தைரியம் இருக்க வேண்டும். தைரியம்... எது எப்படி இருந்தாலும், எல்லா சூழ்நிலைகளையும் புரிந்து கொண்ட பிறகு மட்டுமே எதையும் செய்ய முடியும்.''

இவ்வளவு விஷயங்களும் நடந்த பிறகு, ஆசிரியரின் மனதிற்குள் இருந்த வெறுப்பு மேலும் அதிகமானது. அவர் வெற்றிலை போடவோ, பீடி புகைக்கவோ இல்லை.

"இனிமேல் உங்களுடைய விருப்பம். ஆசிரியர் அய்யா, உங்களுடைய அனுமதியுடன் நான் கொஞ்சம் வெற்றிலை போட்டுக் கொள்ளட்டுமா? அதற்குப் பிறகு புகார் என்ன என்று கேட்கிறேன்.'' அவர் வெற்றிலையை வாய்க்குள் நுழைத்தார். தொடர்ந்து பீடியைப் பற்ற வைத்தார். ஆசிரியரிடமிருந்து நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் கேட்கத் தொடங்கவும் செய்தார். அதற்கிடையில் தேநீருக்கு ஆர்டர் கொடுத்தார்.  தேநீர் மேஜைமீது வரும் வரை அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். தேநீர் வந்து சேர்ந்தவுடன் அதை குடிப்பதற்கு அவசரத்தை வெளிப்படுத்தியவாறு ஆசிரியரிடம் கூறினார்: "ஆசிரியர் அய்யா, உங்களுடைய தொண்டை வறண்டு போயிருக்கும். அது மட்டுமல்ல. நீங்கள் இங்கே வருவது இதுதான் முதல் முறை. அப்படித்தானே? தேநீர் பருகியே ஆக வேண்டும்.''

வேறு வழியில்லாமல் ஆசிரியர் தேநீர் குடிக்க ஆரம்பித்தார். தேநீர் பருகி முடிப்பதற்கு முன்பே ஹெட் கான்ஸ்டபிள் சொன்னார்: "ஆசிரியர் அய்யா, நீங்க நாளைக்கு திரும்பவும் வாங்க. அப்போது நாம் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி தீவிரமாக சிந்திப்போம். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்தையும் செய்துவிடாதீர்கள். செய்தால், எந்தவொரு பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. குறிப்பாக- விஷயங்கள் இந்த அளவிற்குத் தீவிரமானதாக இருக்கும்போது...'' இதைக் கூறிவிட்டு அவர் யாரோ ஒரு ஆளை அழைத்தார்.

"ஆசிரியர் அய்யாவை பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு வா.'' அவர் தொடர்ந்து ஆசிரியரைப் பார்த்துக் கொண்டே சொன்னார். "அப்படின்னா... நான் மற்ற ஃபைல்களைப் பார்க்கட்டுமா?''

ஏமாற்றத்துடன் ஆசிரியர் அங்கிருந்து வெளியே வந்தார். மாணவர்கள் இப்போதும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவருடைய மூளை கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருந்தது. எதையும் அவரால் முறையாக சிந்திக்க முடியவில்லை. ஆசிரியர் வேகமாகத் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தார். அங்கு கூடி நின்றிருந்த கிராமத்து மக்கள் அனைவரும் அமைதியாக நடந்து செல்லும் ஆசிரியரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

10

சிரியர் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் முன்பு இருந்ததைப்போலவே நின்று கொண்டிருந்தனர். எதுவுமே பேசாமல் எல்லாரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்பதைப்போல அவர்களின் முக வெளிப்பாடு இருந்தது. கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விஷயங்கள் எதுவும் புதிதாக இருக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவிக்கு நிம்மதி உண்டானது. ஆசிரியர் வந்து சேர்ந்தவுடன், பொறுப்பிலிருந்து அவள் விடுதலை பெற்றுவிட்டாள் அல்லவா? ஏற்கெனவே அவள் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, குடிப்பதற்கு நீர் தந்து நன்கு கவனித்திருந்தாள். ஆசிரியரும் ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று அவள் நினைத்தாள். அவள் அவரிடம் அதை மனம் திறந்து கூறவும் செய்தாள். ஆனால், "வேண்டாம்'' என்று ஆசிரியர் பதில் கூறிவிட்டார். அப்போது அவள் அவருக்கு அறிவுரை கூறுவதைப் போல சொன்னாள்: "பட்டினி கிடப்பதால் என்ன பிரயோஜனம்? உணவு சாப்பிடாமல் இருந்தால், அப்படி இருப்பவர்களுக்கு ஏதாவது நடக்குமா? தங்களுடைய உடலை எப்படி இருந்தாலும் அவரவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.''

குழந்தைகளை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு கிழவி தொடர்ந்து சொன்னாள்:

"இந்தக் குழந்தைகளை மனதில் நினைத்தாவது சீக்கிரமா ஏதாவது சாப்பிடுங்க."

ஆசிரியர் இப்போதும் கற்சிலையைப்போல நின்று கொண்டிருந்தார். அவர் என்ன சாப்பிடுவார்? முற்றிலும் அசாதாரணமான வகையில் இப்போது அவருடைய ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.

அதே இடத்தில் அவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் பாசம் கலந்த கோபத்துடன் கிழவி ஆசிரியரிடம் சொன்னாள்: "சுத்த பட்டிக்காட்டானைப்போல நடக்கக் கூடாது. நீங்கள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்தானே? உங்களுக்கு ஏதாவது உடல் நல பாதிப்பு உண்டானால், பிறகு இந்தப் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது?''

யார் பார்த்துக்கொள்வார்கள்? ஆசிரியரின் வயிற்றுக்குள் இருந்த கலக்கத்தை யாரால் கண்டுபிடிக்க முடியும்?

இது என்ன? இது பசியா? அல்லது தன்னுடைய அன்பு மனைவியை தன்னிடமிருந்து தனிமைப்படுத்துவதா? உண்மையிலேயே இது என்ன? என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆசிரியர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தன்னுடைய வார்த்தைகள் வெறும் முணுமுணுப்புக்களாக மட்டுமே ஆகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டவுடன், என்னவோ முனகியவாறு கிழவி வீட்டுக்குத் திரும்பினாள். மிகச் சிலரைத் தவிர, பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் அவரவர்களுடைய வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டிருந்தனர்.


அமைதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதை இல்லாமற் செய்தது மூத்த குழந்தையின் கேள்விதான்: "அம்மா எப்போ திரும்பி வருவாங்க?'' ஆனால், அந்தக் கேள்விக்கு பொறுத்தமான ஒரு பதிலை ஆசிரியரால் தர முடியவில்லை.

அவர் இதுவரை தடை செய்து வைத்திருந்த கண்ணீர், "எங்களுடைய அம்மா எப்போ திரும்பி வருவாங்க?" என்று கேட்டவுடன், வெளியேறி வந்துவிட்டது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவர் அடுத்த நிமிடம் வாசலிலிருந்து அறைக்குள் சென்றார். கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டு வெளியே சென்றபோது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது முன்பு இருந்ததைவிட தன்னிடம் மன அம்மதி இருப்பதை ஆசிரியர் உணர்ந்தார். அடுத்த நிமிடம் தன்னுடைய பொறுப்பைப் பற்றிய புரிதலுக்கு அவர் வந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். மாணவர்கள் எல்லாரும் ஏற்கெனவே வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தார்கள். அவருடைய வீட்டைப்போலவே பள்ளிக்கூடமும் ஆள் அரவமற்று யாருமே இல்லாமல் இருந்தது. அவர் பள்ளிக்கூடத்தை மூட ஆரம்பித்தார். கதவுகளையும் சாளரங்களையும் மூடும்போது, நடைபெற்ற சம்பவங்கள் அவருக்கு முன்னால் தோன்றிக்கொண்டிருந்தன. அவர் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். மாணவர்கள் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு அழுகைக் குரல் காற்றில் தவழ்ந்து வந்தது!

ஒருவிதமாக அவர் எப்படியோ வெளியே வந்தபோது... அந்த மறக்க முடியாத சம்பவம் ஆசிரியரின் உள் மனதில் என்ன காரணத்தாலோ காயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. பாம்பு கடித்து விட்டதைப்போல... தன்னுடைய இருத்தலின்மீது யாரோ நெருப்பைப் பற்றவைத்துவிட்டதைப்போல... அதற்குப் பிறகு அந்த நெருப்பில் தான் அங்குலம் அங்குலமாக கரிந்து எரிந்து கொண்டிருப்பதைப்போல...

அவர் யாரிடம் என்றில்லாமல் கூறினார்: "ஏதாவது செய்தே ஆக வேண்டும். இதற்கு எதிராக கட்டாயம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்.'' அவர் தொடர்ந்து சொன்னார்: "நான் எதிர்ப்பது என்று தீர்மானித்துவிட்டேன். ஆமாம்... என்னால் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.''

அந்த உறுதியான தீர்மானம் ஆசிரியரின் முகத்தில் முழுமையாக வெளிப்பட்டது. பள்ளிக்கூடம் மூடப்பட்ட பிறகு, நேராக வீட்டுக்கு வந்தார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அவர் சொன்னார்: "நான் திரும்பி வரும் வரை நீங்கள் இப்படி ஏதாவது விளையாடிக் கொண்டிருங்கள். அதிகமாக சத்தம் போட வேண்டாம்.''

அவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தங்களின் தந்தை எங்கே போகிறார் என்று இருவரும் கேட்கவில்லை.

ஆசிரியர் வெளியேறினார்.

"குழந்தைகளுக்கு இப்போது விஷயங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய அறிவு இருக்கிறது. தங்களின் தாயைப் பற்றி எதுவுமே கேட்பதில்லையே! நான் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எவ்வளவு சீக்கிரம் விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்! இல்லை... இல்லை... அவர்கள் இப்போதும் சிறு குழந்தைகள்தான்... சிறு குழந்தைகள்..." தனக்குத்தானே கூறிக்கொண்டு ஆசிரியர் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்: "இவர்கள் என் பிள்ளைகள்... இவர்களுக்கு நிறைய தைரியம் இருக்கிறது. அதாவது...''

சந்தேகம் நிறைந்த ஒரு விதை அவருடைய மூளையில் முளைத்தது. குழந்தைகள் தன்மீது இரக்கம் எதுவும் காட்டவில்லை! தனக்கு தொந்தரவு தராமல் இருப்பது...

ஏதோ அடி வாங்கியதைப்போல, ஆசிரியர் இப்போது எதையும் சிந்திக்காமல் நடந்து கொண்டிருந்தார். வழியில் கிராமத்து மனிதர்கள் ஆசிரியரைப் பார்த்ததும், ஒரு வார்த்தைகூட பேசாமல் அவரையே பார்க்க மட்டும் செய்தார்கள். கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள்-  அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியரின் மாணவர்கள்தான்- அவரைப் பின்பற்றி நடந்து சென்றார்கள். ஆசிரியரின் கால்கள் நேராக மாளிகையை நோக்கி நடந்து கொண்டிருந்தன. தானே நடக்கவில்லை- மாறாக, யாரோ தன்னை வற்புறுத்தி இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்பதைப்போல ஆசிரியர் உணர்ந்தார்.

முற்றிலும் செயலற்ற மனிதனாக ஆகிவிட்டதைப்போல ஆசிரியர் மாளிகைக்கு முன்னால் சென்றார். அதன் பிரம்மாண்டமான வெளிக்கதவு அடைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் ஒரே அமைதி...

"உள்ளே என் மனைவி சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். ஒருவேளை, அவர்கள் அவளை வேறு எங்காவது கொண்டு போய் விட்டிருப்பார்களோ? எது எப்படி இருந்தாலும், ஜமீன்தார் சகோதரர்கள் உள்ளேதான் இருப்பார்கள். போக்கிரிகள், அயோக்கியர்கள், ஓநாய்கள்... என் மனைவியைப் பறித்துக்கொண்டு சென்றவர்கள் நிச்சயம் உள்ளேதான் இருப்பார்கள்." சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. முழு உடலும் துடித்தது!

எப்படி... இவையெல்லாம் எப்படி நடந்தன?

திருமணமான ஒரு பெண் வீட்டிலிருந்து பறித்துக் கொண்டு போகப்பட்டிருக்கிறாள். ஏராளமான மனிதர்களுக்கு முன்னால்... பட்டப்பகல் வேளையில் கடத்திக் கொண்டு போகப்பட்டிருக்கிறாள். அதிகம் எதற்கு? தன்னுடைய கணவர், குழந்தைகள் ஆகியோர் முன்னால் இருக்கும்போதல்லவா அவர்கள் இந்தக் கொடுமையான... மோசமான செயலைச் செய்திருக்கிறார்கள்? வெட்கம் நிறைந்த ஒரு

பெரிய அலை அவரைச் சுற்றி வளைத்து, பயம் நிறைந்த கோபத்தில் மூழ்கடிக்க ஆரம்பித்தது. முன்பு இருந்ததைப்போல முழு வயிறும் பற்றி எரிவதைப்போல அவருக்குத் தோன்றியது.

இது மனைவியை இழப்பதற்காகவா? இல்லாவிட்டால் பயமா? இல்லாவிட்டால்... சாதாரண பசியா?

"இவருக்கு பைத்தியம் பிடிக்கப்போகிறது.'' அருகில் நின்றிருந்த யாரோ ஒரு ஆள் கூறியது ஆசிரியரின் காதுகளில் விழுந்தது: "இவருக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது.''

அவர் மிகவும் வேகமாக அங்கிருந்து நடந்தார். மாளிகையிலிருந்து வெளியேறி தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த அவமானத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர் சற்று தூரத்திற்குச் செல்ல விரும்பினார். அவருடைய நோக்கம் கோவிலுக்குச் செல்வதாக இருந்தது. ஆசிரியர் ஓடி அங்கு சென்றார். அங்கு முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. கோவிலில் யாருமில்லை. ஆமாம்... அவரை வெறித்துப் பார்ப்பதற்கு அங்கு யாருமே இல்லை. சில பசுக்களையும் நாய்களையும் தவிர வேறு யாருமில்லை.

11

சிரியர் நேராக சபை மண்டபத்திற்குச் சென்றார். கிராமத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அவர் இப்போதுதான் முதல் முறையாக கோவிலுக்கு வந்திருக்கிறார். அவருடைய கண்களில் புதிதாக ஒரு இடத்தைப் பார்க்கும்போது உண்டாகக்கூடிய சந்தோஷம் அதிகமாகவே இருந்தது. அந்தப் பழமையான கோவில் அவரைச் சாதாரண அளவிலொன்றும் ஈர்த்துவிடவில்லை. குளிர்ச்சியாகவும் பிரகாசமாகவும் இருந்த சூழ்நிலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. திருட்டு நடந்த பிறகு பூசாரி அமர்ந்திருந்த மண்டபத்தின் அதே தூணில் சாய்ந்து அவர் உட்கார்ந்தார். கர்ப்பக்கிரகத்தில் இருந்த விக்கிரகத்தைப் பார்த்தார். ஒரு சிறு குழந்தையைப்போல ஆசிரியர் குலுங்கிக் குலுங்கி அழ

ஆரம்பித்தார். கவலையைக் குறைக்கக் கூடிய அழுகை... அங்கு அவர் தன்னுடைய வேதனைகளை மறைத்து வைத்திருப்பதற்கு விரும்பவில்லை.


தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியையும் அவர் செய்யவில்லை. தன்னுடைய முழு கவலைகளையும் ஆசிரியர் வெளியேற்றிவிட விரும்பினார். கண்ணீருடன் சேர்ந்து அவையும் வெளியே வழிந்தோடின. அவமானமும் வெட்கமும்... ஆமாம்... அனைத்தும் தன்னைவிட்டு வெளியே செல்வதைப்போல அவருக்குத் தோன்றியது.

கிழவரான பூசாரி ஆசிரியர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் எந்தவொரு வகையான ஆறுதல் வார்த்தைகளையும் கூறாமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆசிரியர் பூசாரியைப் பார்த்ததும் முழுமையான தர்மசங்கட நிலையில் இருப்பதைப்போல உணர்ந்தார். அவர் உடனடியாக எழுந்தார். அப்போது பூசாரி கூறினார்: "மேலும் சிறிது நேரம் உட்கார்ந்திரு மகனே. இங்கு அமர்ந்திருந்தால், மனதிற்கு மேலும் குளிர்ச்சி கிடைக்கும்!''

ஆசிரியர் மீண்டும் அதே இடத்தில் உட்கார்ந்தார். பூசாரி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவரவரர்களுடைய கவலைகளில் மூழ்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். எனினும், அவர்களால் நீண்ட நேரம் அப்படி உட்கார்ந்திருக்க முடியவில்லை. பூசாரியிடம் ஏதாவது கூறினால் என்ன என்று ஆசிரியர் நினைத்தார். "நான் பள்ளிக்கூட ஆசிரியர். ராமகிருஷ்ண ரெட்டி...'' அவர் சொன்னார்.

"ஆமாம், மகனே... எனக்குத் தெரியும். நீ பள்ளிக்கூட ஆசிரியர். ஞானி... ஞானத்தைப் பிறருக்குப் பகிர்ந்து தரக்கூடிய மனிதர்... ஒரு இடத்தில் மலை இருந்தால், இன்னொரு இடத்தில் நதியும் இருக்கும். பலம் கொண்ட மனிதன் இருக்கும் அதே நேரத்தில் பலமில்லாதவனும்

இருப்பான்.'' பூசாரியின் வார்த்தைகளை ஆசிரியர் மிகவும் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

"மகனே... பலம் உள்ளவன் அந்தக் காலத்திலிருந்தே பலமில்லாதவனை அடக்கி ஆண்டு வந்திருக்கிறான். பலம் கொண்டவன் யாகக்குதிரையை அவிழ்த்து விட்டான். திறமையும் தைரியமும் உள்ளவன் போய் யாகக்குதிரையைக் கையில் பிடிக்கட்டும்... அல்லது அதை அவிழ்த்துவிட்ட மனிதனின் கால்களைப் பிடிக்கட்டும்...''

ஆசிரியர் பூசாரியிடம் எதையும் விவாதம் செய்வதற்காக நிற்கவில்லை. எனினும், தனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதை ஆசிரியரின் முகம் வெளிப்படையாகக் காட்டியது. பூசாரியும் தார்மீகக் கண்ணோட்டத்துடன் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் முயற்சித்துக் கொண்டிருந்தார். "பலமற்றவர்களின் கவலைகளைப் போக்குவதற்கு, ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் கீழான நிலையில் உள்ளவர்களின் கஷ்டங்களைச் சரி செய்வதற்கு நான் முடிந்தவரையில் பாடுபட்டிருக்கிறேன்.'' பூசாரியின் மனதில் எப்போதும் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. "ஆனால்... பல நூற்றாண்டுகளாக பலவீனர்கள் மட்டும் தன் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம்- பலம் கொண்ட மனிதனின் ஒவ்வொரு ஆசையும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. காரணம்?''

பூசாரி ஆசிரியருக்கு ஆறுதல் கூறுவதைப்போலவோ தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைப்போலவோ எதுவும் சொல்லவில்லை. அவர் தனக்காக, ஆமாம்... தனக்காக மட்டும் ஒரு பதிலைத் தேடிக்கொண்டிருந்தார். பலம் கொண்டவன் கடவுளைக் கொள்ளையடித்தான். தண்டனை கிடைத்ததோ பலவீனமானவரும் எந்தத் தவறும் செய்யாதவருமான ஒருவருக்கு. ஏன் அப்படி நடந்தது? பூசாரி சிந்தித்தார்.

ஆசிரியர் பூசாரியையே பார்த்துக்கொண்டிருந்தார். பூசாரி என்ன நினைக்கிறார் என்பதை ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம்- கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றி அவருக்கு சிறிதும் தெரியாதே? ஆசிரியரோ பூசாரியிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவும் இல்லை. எழுந்து நின்று கொண்டு ஆசிரியர் சொன்னார்: "பூசாரி, சாயங்கால நேரம் ஆகிவிட்டது... இனிமேல் நான் புறப்படட்டுமா?''

"உனக்கு தோன்றும்போதெல்லாம் இங்கே வந்துவிடு மகனே. மனதிற்கு அமைதி கிடைக்கும்.'' பூசாரி சொன்னார்.

ஜமீன்தார் சகோதரர்களின் மாளிகை இரவுக்கு முந்தைய இருட்டில் அரக்க வடிவத்தை அணிந்திருந்தது. அந்தப் பக்கம் பார்க்கக்கூட செய்யாமல் ஆசிரியர் வீட்டுக்குத் திரும்பினர்.

வீட்டை அடைந்த பிறகு, குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டு, தூங்குவதற்காகப் படுத்தும், ஆசிரியருக்குத் தூக்கம் வரவில்லை. இரவு முழுவதும் பூசாரி கூறிய விஷயங்களைப் பற்றியும் பிற விஷயங்களையும் அவர் சிந்தித்துக் கொண்டேயிருந்தார். "என்ன நியாயம்?" இந்த கேள்விக்கு பதில் கண்டு பிடிக்கக்கூடிய முயற்சியில் ஆசிரியர் இருந்தார். "நீதியை அடைந்த பிறகுதான் நான் அடங்குவேன்" என்பது- அவரைப் பொறுத்த வரையில் ஒரு வகையில் பார்க்கப் போனால் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு விஷயமாகக்கூட இருந்தது. ஒரு ஹெட் கான்ஸ்டபிள் நம்பிக்கைத் துரோகியாக இருக்கிறான் என்பதற்காக உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே? இந்த சிந்தனை அவருடைய மனதில் புதிய ஒரு திட்டம் உண்டாவதற்குக் காரணமாக அமைந்தது. பொழுது புலர்ந்தவுடன் குழந்தைகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் வீட்டைவிட்டுக் கிளம்பினார். நேராக அவர் தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்றார்.

12

பொழுது புலரும் வேளையில் ஆசிரியர் எங்கோ போய்க் கொண்டிருப்பதை கிராமத்து மனிதர்கள் பார்த்தார்கள். அவர் எங்கு போகிறார் என்ற கேள்வி அவர்களுடைய கண்களில் நிழலாடியது. அவர்களிடம் அதிக ஆர்வம் உண்டானது. ஆசிரியர் இனிமேல் என்ன செய்வார்? பதில் எதுவும் தெரியவில்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டியதுதான். அடுத்த நிமிடமே கேட்கவும் செய்தார்கள்: "இனிமேல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" அத்துடன் இன்னொரு கேள்வியும் இருந்தது: "மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா?''

இதயத்தை வேதனைப்படச் செய்யும் கேள்விகளைக் கேட்டதும், ஆசிரியரின் கவலை மேலும் அதிகமானது. ஆனால், அவர்களுக்கு பதில் கூறாமல் இருக்க அவரால் முடியவில்லை. "என்னிடமும் என் மனைவியிடமும் காட்டிய கொடுமையான பாதகச் செயலுக்கான தண்டனை அந்த துரோகிகளுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டும். நான் அதற்காக தீவிரமாக முயற்சி செய்வேன்.'' அவர் சொன்னார்.

"ஆசிரியர் அய்யா, உங்களுடைய மனைவியிடம் இப்படியெல்லாம் ஜமீன்தார்கள் நடந்து கொண்ட பிறகு, நீங்கள் அவங்களை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள்...''

கிராமத்து மனிதர்கள் இப்படிக் கேட்கும்போது ஆசிரியர் மாளிகையையும் அதன் அடைக்கப்பட்டிருக்கும் கதவுகளையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அடுத்த நிமிடம் அவர் அங்கேயிருந்த கண்களை எடுத்தார். ஆனால், என்ன பதில் கூறுவது? முன்னோக்கி நடக்கும்போது, எச்சிலை விழுங்கிக் கொண்டே அவர் உறுதியான குரலில் சொன்னார்: "ஆமாம்... நான் சுசீலாவைத் திரும்பவும் கொண்டு வருவேன். நிச்சயமாக...'' நடை தொடர்ந்து கொண்டிருக்க, அவர் வார்த்தையை முழுமை செய்தார்: "நான் அவளை மீண்டும் வீட்டுக்குக் கட்டாயம் கொண்டு வருவேன்.'' ஆனால், அதைக் கூறி முடித்தவுடன்,

அவர் முற்றிலும் அமைதியற்ற மனிதராகக் காணப்பட்டார். அதையும் தாண்டி செயலற்ற மனிதராகவும்...

மிகப் பெரிய மாளிகையின் ஒரு அறையில் முற்றிலும் மன அமைதியே இல்லாதவளாக சுசீலா இருந்தாள். பொழுது புலர்ந்தவுடன் அவள் எழுந்து சுற்றிலும் பார்த்தாள். அறையில் கண்ணாடி எதுவும் இல்லை.


கண்ணாடி இருந்திருந்தால் தன்னுடைய களைத்துப்போன முகத்தை அவளால் பார்த்திருக்க முடியும். உடல் மிகவும் சோர்வடைந்து இருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவளுடைய கண்களின் மேற்பகுதி வீங்கிக் காணப்பட்டது. சிவந்து கலங்கிய கண்கள்! கண்கள் இறுக மூடப்பட்டிருந்தாலும், அவளால் தன்னுடைய நினைவுகளைத் தடை செய்ய முடியவில்லை. அந்த நினைவுகளை- அந்த அனுபவத்தை அவளால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஞாபகங்களின் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக அவள் கண்களைத் திறந்தாள்.

சுசீலா தனியாக இருந்து, அமைதியின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மிகவும் பெரிய அந்த பிரம்மாண்டமான மாளிகையில் தான் மட்டுமே இருப்பதைப்போல முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. எங்கிருந்தும் எந்தவொரு வகையான சத்தமும் கேட்கவில்லை. எப்போதும் விரும்பக்கூடிய கிளிகளின்  கலகல சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவற்றின் சத்தங்கள் சுசீலாவை அவளுடைய கடந்த கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றன.

உடனடியாக எழுந்து வழக்கமான வேலைகளில் ஈடுபட வேண்டியதிருக்கிறது. முன்னு அழைக்கிறான். முன்னு அழுகிறான். முன்னு... சுசீலா நினைவுகளில் மூழ்கினாள். ஒரே அமைதி... ஆமாம்...

ஒரே அமைதி. முழு அமைதி மட்டுமே... தன்னுடைய அன்றாடச் செயல்களைச் செய்ய முடியாத அமைதி...

"என் வீடு... என் தங்கக் குழந்தைகள்... என்னுடைய அனைத்துமாக இருக்கும் அவர்...''

ஆனால்... விசாலமான மாளிகையின் அந்த அறையில் எதுவுமே செய்ய முடியாத நிலையிலும் தனிமையிலும் இருந்து கொண்டு வேதனை கொண்ட உடலுடன் அவள் தவித்தாள். விருப்பம் இருந்தாலும், அவளால் எழுந்திருக்க முடியவில்லை. அது மேலும் தாங்கிக் கொள்ள முடியாததாகவும் சிரமமானதாகவும் இருந்தது. இறுதியில் அவள் எழுந்து கதவைப் பார்த்தாள். அது வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அவள் சாளரத்திற்கு அருகில் சென்று நின்றுகொண்டு வெளியே பார்த்தாள். ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். தான் வீட்டில் செய்வதைப்போலவே அந்தப் பெண்ணும் காலை நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தாள். விஸ்வத்தின் மனைவி ருக்மிணிதான் அவள். தன்னுடைய வேலைகளை வேறொரு ஆள் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயத்தை அவள் அறிந்திருக்கவில்லை.

சுசீலா தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்: "இது யாராக இருக்கும்?" அவள் சிந்தனையில் மூழ்கினாள்: "அவர் இப்போது எங்கே இருப்பார்? என்ன செய்து கொண்டிருப்பார்? இனி நான் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியதிருக்கும்? இந்த மாளிகைக்கு வெளியே இப்போது என்ன நடந்து கொண்டிருக்கும்?"

கணவர், குழந்தைகள், தான் என்று மட்டுமே இருந்த அந்த உலகத்திலிருந்து தான் எப்படிப் பிரிந்து வந்தோம் என்ற சிந்தனை அவளை அமைதியற்றவளாக ஆக்க ஆரம்பித்தது. "இதெல்லாம் எப்படி நடந்தது?" சுசீலாவின் உள் மனதில் அசாதாரணமான ஒரு அனுபவம் உண்டானது. அவமானம், கவலைகள் நிறைந்த அனுபவம்...

சாளரத்தை விட்டு விலகி அவள் கதவிற்கு அருகில் சென்றாள். அவள் அதைத் திறக்க முயற்சித்தாள். கதவு வெளியிலிருந்து அடைக்கப்பட்டிருக்கவில்லை. அதை திறந்தவுடன், அவள் ஆச்சரியப்பட்டுவிட்டாள். சந்தோஷம் தரக்கூடிய ஒரு ஆச்சரியம்.

உண்மையாகக் கூறப்போனால்- நான் இந்த அறையில் ஒரு கைதியாக இருக்கவில்லை. விருப்பம்போல் நான் அறையை விட்டு வெளியே போகலாம்.

அறைக்குள்ளிருந்து வெளியே செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு சுசீலாவால் முடியவில்லை. வெளியே செல்வது ஆபத்தான விஷயமாக இருக்குமா? சரி... மாளிகையில் இருக்கும் மற்றவர்கள் எங்கே? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அந்தப் பெண் யார்?

வெளியே போவதா அல்லது வேறு ஏதாவது நடப்பது வரை இங்கேயே இருப்பதா என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானத்தையும் அவளால் எடுக்க முடியவில்லை. அப்படி இல்லையென்றாலும் என்ன நடக்கும் என்று சிந்தித்துக் கொண்டே சுசீலா அறைக்குள்ளிருந்து மெதுவாக வெளியே வந்தாள். மெதுவாக... மெதுவாக... அவள் நடந்து கொண்டிருந்தாள்.

13

ண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- அது ஒரு மிகப் பெரிய மாளிகைதான். "பிறகு... அங்கே..." அடுத்த நிமிடம் நடந்து கொண்டே சுசீலா அந்த இன்னொரு பெண்ணின் அருகில் சென்றாள். தம்பியின் மனைவி ருக்மிணி மிகவும் அருகில் நின்றிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். என்ன செய்ய

வேண்டுமென்றா, பேச வேண்டுமென்றோ, இருவருக்குமே தெரியாமல் இருந்தது. இறுதியில் சுசீலாதான் மவுனத்தைக் கலைந்தாள்.

"பற்களைத் துலக்கி கொஞ்சம் குளித்தால் நல்லா இருக்கும்னு எனக்குத் தோணுது.'' சுசீலா சொன்னாள்.

"அங்கே...'' சைகை மூலம் கூறியவாறு அவள் தன்னுடைய அறைக்குள் சென்றாள்.

"அவளுக்கு என்மீது வெறுப்பு." சுசீலாவிற்குத் தோன்றியது. அவளுடைய உள் மனதில் ஒரு சிறிய வேதனை உண்டானது. இனிமேலும் இவளிடமிருந்து அவமானப்பட வேண்டியதிருக்குமோ? உடனே இங்கிருந்து வெளியேறினால் என்ன? சுசீலா நினைத்தாள்: "எனக்கென்று ஒரு இடமில்லாத, என்னை யாருமே விரும்பாத இந்த மாளிகையில் இனிமேல் என்ன காரணத்தைக் கொண்டும் இருக்க முடியாது. " அவள் வெளியே செல்வதற்கான வழியைத் தேடினாள். ஆனால், எங்கும் கதவைப் பார்க்க முடியவில்லை. “உண்மையாகவே இது ஒரு மிகப் பெரிய மாளிகைதான்... அவள் மனதில் நினைத்தாள். தான் மேலும் கையற்ற நிலையில் இருப்பதைப் போல சுசீலாவிற்குத் தோன்றியது. ஒரு கைதி தான் மட்டும் தனியாக ஒரு கெட்ட பெண்ணுடன்...”

ஒரு வேலைக்காரி அவளுக்கு அருகில் வந்தாள். பெயர் - போச்சம்மா.

"கொஞ்சம் உமிக்கரி வேணும்.'' சுசீலா சொன்னாள்.                  போச்சம்மா உள்ளே போய் உமிக்கரியுடன் வந்தாள்.

பிறகு, அவளிடம் கேட்டாள்: "குளியலறை எங்கே இருக்கு?''

போச்சம்மா குளியலறைக்குச் செல்லும் வழியைக் காட்டினாள்.அப்படியொன்றும் தான் கைதியாக இல்லை என்று சுசீலா

இப்போது சிந்தித்தாள். தலையில் இருந்த கனத்திலிருந்து சற்று விடுதலை பெற்றதைப்போல அவள் உணர்ந்தாள்.

அடுத்த நிமிடம் அவள் குளியலறைக்குள் சென்றாள். குளியலறைக்குள்ளிருந்து வெளியே வந்தபோது தனக்கு முன்னால்  அஞ்சய்யா நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப்போல அவருடைய முக வெளிப்பாடு இருந்தது. ஒருமுறை அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு, அஞ்சய்யா குளியலறைக்குள் சென்றார்.

சுசீலாவின் இதயம் இப்போது மிகவும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. வேகமாக ஓடி அவள் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டாள். உள்மனதில் மீண்டும் வேதனை நிறைந்த அதே அலை! கோபம், அவமானம், வஞ்சனை ஆகியவை அலைகளாக ஓடிக் கொண்டிருந்தன.


சிறிது நேரத்திற்குப் பிறகு கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இடைவெளி விட்டு விட்டு அந்த சத்தம் வந்தது.

“கதவைத் தட்டுவது யாராக இருக்கும்?” இதயத் துடிப்பு மேலும் அதிகமானது.

தட்டும் சத்தம் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. மிகவும் கவனமாக அவள் கதவின் அருகில் சென்றாள். இப்போது சத்தம் மெதுவாகக் கேட்டது. அந்த போக்கிரிகளில் யாராவது ஒரு ஆளாகத்தான் இருக்கும் என்று கதவைத் தட்டும் சத்தத்தின் தாளத்திலிருந்து அவள் நினைத்தாள். நான்கு பேரில் ஒரு சகோதரர் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். "யாராக இருந்தாலும் சரி... நான் கதவைத் திறக்க மாட்டேன்." அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

"கதவைத் திற...'' அது போச்சம்மாவின் குரல்:

"தேநீர் கொண்டு வந்திருக்கிறேன்.''

சுசீலா கதவைத் திறந்து போச்சம்மாவிடமிருந்து தேநீரை வாங்கினாள். அத்துடன் சாப்பிடுவதற்கும் என்னவோ இருந்தது. பலகாரத்தைப் பார்த்ததும் அவளுக்குப் பசி உண்டானது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் நேற்று மதியத்திலிருந்து அவள் எதுவுமே சாப்பிடவில்லை. உள்ளே வந்து அமர்ந்து அவள் தேநீர் பருக ஆரம்பித்தாள். அத்துடன் பலகாரத்தையும். ஆனால், திடீரென்று ஏதோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர்ந்தாள். அவளுக்கு எல்லா விஷயங்களும் ஞாபகத்தில் வந்தன. குழந்தைகள், வீடு ஆகியவற்றிலிருந்து அனைத்து விஷயங்களும்... அவளுடைய கண்களில் ஈரம் உண்டானது. எதையும் சாப்பிட முடியாமல் அவள் நினைவுகளில் மூழ்கினாள்.

ஆசிரியரின் தனிமைக்கும் அமைதியற்ற நிலைக்கும் ஒரு முடிவு உண்டானது. நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் காவல் நிலையத்திற்குச் சென்றார். ஒரு உயர் காவல்துறை அதிகாரியை அங்கு பார்க்கவும் முடிந்தது. டெப்டி சூப்பிரண்டென்ட் ஆஃப்  போலீஸ்.. ஆசிரியர் தன்னுடைய சோகக்கதை முழுவதையும் அவரிடம் கூறினார். பலவந்தப்படுத்தி தன்னுடைய மனைவியை இழுத்துக் கொண்டு போன சம்பவத்தைக் கூறினார். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயத்தை ரசிப்பதைப் போல காவல் நிலையத்தில் இருந்த மற்ற ஆட்கள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சூப்பிரண்டென்டும் முழு ஈடுபாட்டுடன் அந்தக் கதையைக் கேட்டார்.  ஜமீன்தார் சகோதரர்கள்தான் பலவந்தப்படுத்தி  இழுத்துக் கொண்டு சென்றவர்கள் என்பதைக் கேட்டதுதான் தாமதம், அடுத்த நிமிடம் அவருடைய முக வெளிப்பாடு மாறிவிட்டது. அவருடைய மென்னையான நட்பிற்கு சிறிது குந்தகம் உண்டாகிவிட்டதைப் போல... அவருடைய மனதில் “ஆபீஸரின்”

ஆணவம் உண்டானது. முன்கோபக்காரரும் ஆணவம் பிடித்தவருமாக அவர் மாறினார். முழுமையான காவல்துறை அதிகாரியின் குரலில் அவர் சொன்னார்: "ராமகிருஷ்ணா, நான் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களின் மனைவி ஏதாவது காரணத்தால் உங்களைவிட்டுப் போயிருக்க வேண்டும். அது மட்டும் உண்மை. ஒரு வேளை நீங்கள் ஆண்மையற்றவராகவும், பலமற்றவராகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் எப்போதும் மனைவியைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மனிதராக இருக்கலாம். அப்படி இல்லை என்று உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? இல்லாவிட்டால் உங்களுடைய அழகான மனைவி மாளிகை, நகைகள் ஆகியவற்றின்மீது ஆசைப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் தனக்கு ஒரு பலசாலியான கணவன் வேண்டும் என்பது அவங்களோட ஆசையாக இருக்கலாம். நீங்கள் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர். அவ்வளவுதான். அழகான ஒரு மனைவியை வைத்துக் காப்பாற்றும் அளவிற்கு உங்களால் எப்படி முடியும்? சகோதரா, அப்படிப்பட்ட ஒரு மனைவியிடமிருந்து விடுதலை பெற்றது ஏதோ ஒரு வகையில் நல்லதாகி விட்டது. உங்களை மதிக்கக் கூடிய ஒரு மனைவியை சீக்கிரம் தேடுங்க.''

14

காவல் நிலையத்தில் இருந்த மற்றவர்கள் மேலும் ரசிப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் சிரித்துக் கொண்டே ஆசிரியரை கிண்டல் பண்ணினார்கள். போலிஸ் சூப்பிரண்டென்ட் ஆசிரியரிடம் கூறினார்: "இப்போ நீங்க இங்கேயிருந்து போங்க... அதற்குப் பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நல்ல ஒரு மணமகளைக் கண்டு பிடிங்க.''

போலிஸின் ஒரு தலைப்பட்சமானதாகவும் அவமானப்படக் கூடியதாகவும் இருந்த அந்த நடத்தைக்குப் பிறகு ஆசிரியர் சிந்தித்தார்:

“ஏதாவது அரசியல் கட்சியைச் சேர்ந்த மனிதர்களைச் சந்திப்பது இதை விட நல்லது. அவர்கள் ஜமீன்தார்களுக்கு பயப்பட மாட்டார்கள். அவர்களைப் போலீஸால் எதுவுமே செய்ய முடியாது.”                 

காவல் நிலையத்திலிந்து வெளியே வந்த அவர் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு நல்ல கூட்டம் இருந்தது. ஏதோ ஒரு பெரிய தலைவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் அலுவலகத்தில் உள்ளவர்கள்  இருந்தார்கள். தன்னுடைய கதையை யாரிடமாவது கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆசிரியர் நினைத்தார். ஆனால், யாருக்கும் அதைக் கேட்கக் கூடிய சூழ்நிலை இல்லாமலிருந்தது. அங்கும் கிடைத்தது தோல்வி மட்டுமே! தன்னுடைய முயற்சி இன்னொரு முறை வீணாகிவிட்டதே என்ற கவலையுடன் அவர் அந்த அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.

யாரும் தனக்காக எதுவும் செய்யவில்லையே? எல்லாரும் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்றால், தனக்கு கட்டாயம் நீதி கிடைக்கும். அங்கு குற்றவாளி தப்பிக்கவே முடியாது. நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு ஏதாவதொரு வக்கீலைப் போய் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்தவாறு ஆசிரியர் ஒரு வக்கீலின் அலுவலகத்திற்குச் சென்றார். அவருடைய வார்த்தைகளை முதலில் மிகவும் கவனம் செலுத்தி வக்கீல் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், பலவந்தப்படுத்தி இழுத்துச் சென்றவர்கள் ஜமீன்தார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதுதான் தாமதம்- சட்ட புத்தகத்தை மூடிவைத்து விட்டு, அவர் எழுந்து நின்றார். ஆதாரங்களைப் பத்திரப்படுத்தி வைக்கக்கூடிய அலமாரியைப் பார்த்துக் கொண்டே அவர் சொன்னார்: "மன்னிச்சிடுங்க அய்யா. என்னால் இதை எடுத்துக் கொள்ள முடியாது!''

“வக்கீலும் என்னை கை கழுவி விட்டார். செய்தி பத்திரிகையும் என்னைக் கைவிட்டு விடுமா என்ன? இல்லை... பத்திரிகை என்பது பாரபட்சம் இல்லாத ஒன்றாயிற்றே! பத்திரிகை பரபரப்பான இந்த செய்தியைக் கட்டாயம் பிரசுரிக்கும். அப்போது ஜமீன்தார் சகோதரர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள எல்லாரும் அவர்களுக்கு எதிராகக் கட்டாயம் குரல் எழுப்புவார்கள்.”ஆசிரியர் சிந்தித்தார்.

பத்திரிக்கை அலுவலகம் நகரத்தில் இருந்தது. தாலுக்காவில் இருந்து நகரத்திற்கு வந்த ஆசிரியர் நேராக “சப்தம் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவரை யாரும் அவமானப்படுத்தவில்லை. பத்திரிகை ஆசிரியருக்கு முன்னால் அவர் சென்று நின்றார். அங்கு இருந்தவாறு அச்சகம் முழுவதையும் அவர் ஒருமுறை பார்த்தார். ஜமீன்தார்களின் கதை முழுவதையும் அந்த வகையில் பிரசுரமாகும். அவர் மனதில் நினைத்தார்.”


பத்திரிகை ஆசிரியர் அவரிடம் கேட்டார்: "சரி... என்ன விஷயம்?''

மீண்டும் ஒருமுறை தன்னுடைய சோகக் கதையை ஆசிரியர் கூற வேண்டியிருந்தது. எல்லாவற்றையும்  கேட்டபிறகு, பத்திரிகை ஆசிரியர் சொன்னார்: ''ஆசிரியர் அய்யா, நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மைதான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், மன்னிக்க வேண்டும். ஜமீன்தார்களுக்கு எதிராக எங்களால் எதையும் பிரசுரிக்க முடியாது. எங்களுடைய சிரமத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?''

அனைத்து விஷயங்களும் ஆசிரியருக்கும் புரிந்தன அயோக்கியர்களான ஜமீன்தார்கள் எந்த அளவிற்கு சாமர்த்தியமாக நாடு முழுவதும் வலையை வீசியிருக்கிறார்கள் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் இனிமேல் என்ன செய்வது? இனி கலெக்டரும்... இல்லை... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதியை நிலைநாட்டுவதில் புகழ் பெற்றவர்கள். ஆமாம்... இனிமேல் கலெக்டர்தான் ஏதாவது செய்ய முடியும். ஆசிரியர் நினைத்தார்.

ஆசிரியர் பத்திரிகை அலுவலகத்திலிருந்து நேராக கலெக்டரின்   அலுவலகத்திற்குச் சென்றார். அவர் முதலில் ப்யூனைப் பார்த்தார். அவன் ஆசிரியரைப் பார்த்ததும் சொன்னான்: "அய்யா மிகவும் பிஸியாக இருக்கிறார்.''

"மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக அய்யாவைப் பார்க்கணும். மிகவும் தூரத்தில் இருக்கக் கூடிய கிராமத்திலிருந்து வருகிறேன். நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். நான் என்ன செய்ய வேண்டும்?'' அவர் கேட்டார்.

"நீங்கள் சில விஷயங்களைச் செய்யத்தான் வேண்டும் சார்.'' ஒரு துண்டுத்தாளை எடுத்து ஆசிரியரின் கையில் கொடுத்தவாறு அவன் சொன்னான்: "பெயரையும் வந்ததன் நோக்கத்தையும் இதில் எழுதுங்க... நான் அய்யாவிடம் கூறுகிறேன்.''

ப்யூன் கூறியதன்படி ஆசிரியர் பெயரையும் வந்திருக்கும் நோக்கத்தையும் தாளில் எழுதி அவனிடம் கொடுத்தார். அதை வாசித்துக் கொண்டே அவன் கலெக்டரின் அறைக்குள் சென்றான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்ததும் அவன் ஆசிரியரிடம் சொன்னான். "தயவு செய்து இன்னொரு நாள் வாங்க... அய்யா மிகவும் பிஸியாக இருக்கிறார்.''

கையற்ற நிலையில் நின்றிருந்த ஆசிரியரின் முகத்தில், இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் முழுமையான ஏமாற்றத்தின் கரிய நிழல் படர்ந்தது. அதே இடத்திலேயே ப்யூன் நின்று கொண்டிருந்தான். அவர் வெளியே செல்வதற்காகத் திரும்பினார். ஒவ்வொருவரும் தன்னைப் பார்த்து கிண்டல் மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

என்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டார். தான் ஒரு கிண்டலுக்குரிய கதாபாத்திரமாக ஆகிவிட்டிருக்கிறோம் என்ற விஷயம் அவரை காரணமே இல்லாமல் கோபம் கொள்ளச் செய்தது. அவர் ப்யூனிடம் சண்டை போட ஆரம்பித்தார். "நீ பொய் சொல்கிறாய். உனக்கு லஞ்சம் தர வேண்டும். நீ அந்தத் தாளை கலெக்டரிடம் காட்டவே இல்லை.''

"காட்டவில்லை. ஆமாம்... காட்டவில்லை. நீங்க என்ன செஞ்சிடுவீங்க? என்னை டிஸ்மிஸ் பண்ணிடுவீங்களா?'' அவன் திரும்பக் கேட்டான்.

அதற்குள் அலுவலகத்தில் இருந்த மற்ற ப்யூன்களும், கிடைக்கக் கூடிய சந்தர்ப்பத்தை எதற்கு வீணாக்க வேண்டுமென்று நினைத்தார்கள். ஆர்வமான வேறு சிலரும் அங்கு வந்து கூடினார்கள். எல்லாரையும் ஒன்றாகப் பார்த்ததும், ஆசிரியர் உரத்த குரலில் சொன்னார்:

"நானே கலெக்டரைப் போய் பார்த்துக் கொள்கிறேன்.''

"ராஸ்கல்... நீ என்ன கவர்னரா? பெரிய பிரச்னைக்குரிய ஆளாக இருக்கியே! நட... கலெக்டர் அய்யாவிடம் கொண்டு போய் சேர்க்கிறோம்'' என்று கூறியவாறு அங்கிருந்த ப்யூன்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அவரைப் பிடித்து தரையில் இழுத்துக் கொண்டு சென்று அலுவலகத்திற்கு வெளியே தள்ளி விட்டார்கள்.

"போ... எங்கே வேணும்னாலும் போ....'' அங்கு இருந்த எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். பழி வாங்கிவிட்ட மன மகிழ்ச்சி             அவர்களுக்கு!

பாவம்! ஆவேசமடைந்த ஆசிரியர் பரிதாபமான நிலையில் அவமானப்பட்டுக் கொண்டிருந்தார். மீண்டும்... மீண்டும்... !

இருளில் மூழ்கியிருந்த மாளிகையின் ஒரு அறையில் சுசீலா படுத்திருந்தாள். அவள் மதிய உணவு சாப்பிடவில்லை. சாப்பாடு இருந்த பாத்திரம் ஒரு மூலையில் கிடந்தது. விரிப்பில் படுத்துக்

கொண்டே அவள் தன்னைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது போச்சம்மா இரவு உணவுடன் அங்கு வந்தாள். மதிய உணவு இருந்த பாத்திரம் அங்கு இருப்பதைப் பார்த்ததும் அவள் சிறிது நேரம் என்னவோ சிந்தித்து, அதை திரும்ப எடுத்துக் கொண்டு சென்றாள்.

சமையலறைக்குச் சென்று போச்சம்மா ருக்மிணியிடம் கூறினாள்: "நேற்றிலிருந்து அவங்க எதையும் சாப்பிடவில்லை. மதிய உணவு வைக்கப்பட்ட நிலையிலேயே அங்கே இருக்கு!''

"நான் என்ன செய்யணும்? அங்கே போய் புகழ்ந்து பேசணுமா?'' ருக்மிணி கேட்டாள்: "நான் அவளுக்கு அருகில் போய் “மகாராணி...” உணவு சாப்பிடுங்கன்னு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டுமா? அவங்க சுசீலாவை அவளுடைய குழந்தைகளிடமிருந்து பிரித்திருக்கிறார்கள் என்ற விஷயம் உனக்குத் தெரியுமல்லவா?'' தொடர்ந்து பாராட்டுவதைப்போல பெண்களுக்கே உரிய இரக்கத்துடன் அவள் சொன்னாள்: "அவள் எப்படி உணவு சாப்பிடுவாள்? குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்து விட்டு...''

"அப்படின்னா, இந்த பாத்திரம்...?'' கையில் இருந்த பாத்திரத்தைக் காட்டியவாறு போச்சம்மா கேட்டாள்.

"அதை இங்கேயே வை. இல்லாவிட்டால்... வேண்டாம். அதை இங்கே தா...'' ருக்மிணி போச்சம்மாவிடமிருந்து பாத்திரத்தை வாங்கினாள். அதை கையில் எடுத்துக்கொண்டு அவள் சுசீலாவின் அறைக்குள் சென்றாள். கதவிற்கு எதிராகத் திரும்பியவாறு சுசீலா அப்போதும் படுத்துக் கொண்டிருந்தாள். ருக்மிணி வந்ததைத் தெரிந்து கொண்டிருந்தாலும், அவள் சிறிதுகூட அசையவில்லை. கதவிற்கு அருகில் நின்று கொண்டு ருக்மிணி சொன்னாள்: "ம்... இங்கே பாருங்க... உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். இதைச் சாப்பிடுங்க...''

ஆனால், மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது.

"என்ன... காதில் விழவில்லையா?''

மீண்டும் அதே மவுனம்.

"ஏன் இப்படி பட்டினி கிடக்க வேண்டும்? சாக வேண்டும் என்பது  உங்களுடைய விருப்பமா என்ன?'' ருக்மிணி பாசம் நிறைந்த கோபத்துடன் கேட்டாள்.

ஆனால், எதையுமே காதில் வாங்காததைப்போல மீண்டும் அதே மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது.

"உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? சுருக்கமாகச் சொல்லப் போனால்- அவர்களுக்காகவாவது ஏதாவது சாப்பிடுங்க. குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் போனால், நன்றாக இருக்காதே!''

“குழந்தைகள்!” விரிப்பு சற்று அசைந்தவுடன், ருக்மிணி மேலும் கொஞ்சம் அவளுக்கு அருகில் சென்றாள். தொடர்ந்து சொன்னாள்:  "எழுந்து உணவு சாப்பிடுங்க... தேவையான அளவிற்கு மட்டும் சாப்பிட்டால் போதும். குழந்தைகளை நினைத்தாவது ஏதாவது சாப்பிடாமல் இருக்கக் கூடாது!''

சுசீலா சற்று திரும்பிப் படுத்தாள். தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். "கெட்டவளின்" கண்களில் அன்பும் இரக்கமும் நிறைந்திருப்பதை சுசீலா பார்த்தாள். ருக்மிணியின் கையிலிருந்து பாத்திரத்தை வாங்கி அவள் உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள்.


ருக்மிணி சுசீலாவின் அறைக்குள் சென்றதும், போச்சம்மா நேராக ஜமீன்தார்களின் அறைக்குள் நுழைந்தாள். நான்கு பேரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்கள். ஆசிரியரின் மனைவி நேற்றிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்ற விஷயத்தை போச்சம்மா கூறியவுடன்

அண்ணா சொன்னார்: "நீ எதற்கு கவலைப்படுறே? அதெல்லாம் சரியாகிவிடும். ஆரம்பத்தில் எல்லா பெண்களும் இப்படித்தான் இருப்பாங்க. பிறகு படிப்படியாக சரியா ஆயிடுவாங்க.''

அண்ணாவின் வார்த்தைகளைக் கேட்டு விஸ்வம் குறிப்பாக எதையும் கூறவில்லையென்றாலும், அவருடைய முகத்தில் வருத்தம் பரவிவிட்டிருந்தது. மற்ற சகோதரர்கள் சிரித்துக் கொண்டே ஏதோ பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கேட்டது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பதைப்போல போச்சம்மா வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.

15

ருக்மிணி சுசீலாவின் அறையிலிருந்து வெளியே வந்தபோது, உணவு முழுவதையும் அவள் சாப்பிட்டு விட்டிருக்கின்றாள் என்பதை அவள் கையிலிருந்த பாத்திரம் தெளிவாகக் காட்டியது. ஆள் அரவமற்றுக் கிடந்த கூடத்தின் படிகளில் இறங்கி ருக்மிணி சமையலறைக்குள் சென்றாள். அங்கு போச்சம்மா இல்லை. அவள் சமையலறையில் எஞ்சியிருந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

ருக்மிணி சுசீலாவின் அறையிலிருந்து வெளியேறியவுடன், விஸ்வம் அங்கு வந்தார். அவருக்கு போதை ஏறியிருக்கவில்லை. எனினும், மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டே நடந்தபோது, சற்று போதை இருப்பதைப்போல தெரிந்தது.

மெதுவாக... மிகவும் மெதுவாகக் கதவைத் திறந்து அவர் உள்ளே சென்றார். உடனடியாகக் கதவை அடைக்கவும் செய்தார். ஆள் அரவமற்ற கூடத்தின் இருட்டில் பதுங்கிக் கொண்டு, இன்னொரு நிழல் ஓசையற்ற கால்களுடன் கதவின் அருகில் வந்தது. உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக “நிழல் கதவுடன் காதைச் சேர்த்து வைத்துக் கொண்டு நின்றிருந்தது. போச்சம்மாதான் அது. சிறிது நேரம் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு நின்றிருந்து விட்டு,மெதுவான காலடிச் சத்தங்களுடன் அவள் திரும்பிச் சென்றாள்.”

அறைக்குள் விரிப்பில் படுத்திருந்த சுசீலாவிடமிருந்து சற்று தள்ளி விஸ்வம் விலகி நின்றிருந்தார். விஸ்வம் வந்திருக்கும் விஷயத்தை அவள் அறிந்திருப்பாளோ என்னவோ? சுசீலா கண்களை மூடியவாறு படுத்திருந்தாள். அவளைப் பார்த்தபோது விஸ்வத்திற்கு இரக்கம் உண்டானது. அதையும் தாண்டி கருணையும். ஆனால், அந்தக் கருணை கொடிய காமமாக மாறுவதற்கு அதிக நேரம் ஆகவில்லை. சுசீலாவின் அளவெடுத்தாற்போன்று அமைந்த அவயங்களின்மீது அவருடைய கண்கள் ஊர்ந்தன. அவளிடம் ஏதோ கூற வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. பாம்பு இரையைப் பிடிப்பதைப்போல விஸ்வம் சுசீலாவை நெருங்கினார். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காமம்! சிற்றின்பப் பார்வை!

வரவேற்பரையில் உணவையும் மதுவையும் சாப்பிட்டவாறு, மற்ற மூன்று சகோதரர்களும் போதையில் மூழ்கி விட்டிருந்தனர். போச்சம்மா நேராக சமையலறைக்குச் சென்றாள். அப்போது ருக்மிணி உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பூகம்பம் வந்து விட்டதைப் போல, போச்சம்மா அவளுடைய காதில் என்னவோ முணுமுணுத்தாள். விஸ்வம் சுசீலாவின் அறைக்குள் சென்றிருக்கிறார் என்பதை அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

சுசீலாவின் அறைக்குள் நுழைந்தவுடன் காமவயப்பட்ட விஸ்வம், உணர்ச்சியை அடக்குவதற்காக அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தார். தளர்ந்து போயிருந்த அவள் எதிர்ப்பைக் காட்டினாலும், அதனால் எந்தவித பிரயோஜனமும் உண்டாகவில்லை.

ருக்மிணி மிகவும் கவலையில் ஆழ்ந்தாள். கடுமையான கவலை தங்கி நின்றிருந்த கண்களுடன் தன்னுடைய அறையில் அவள் மட்டுமே தனியாகப் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள்.

செய்ய நினைத்ததை செய்து முடித்துவிட்டு விஸ்வம் சுசீலாவின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கதவை மூடிவிட்டு, அறைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவருடைய காலடிச் சத்தத்தைக் கேட்டபோது, ருக்மிணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்போல விரிப்பில் படுத்திருந்தாள். வேண்டுமென்றே விஸ்வத்திற்கு படுப்பதற்கு மிகவும் குறைவான இடத்தை மட்டுமே ஒதுக்கி வைத்துவிட்டு அவள் படுத்திருந்தாள். அறைக்குள் வந்தவுடன், சிறிது தயக்கத்துடன் விஸ்வம் அந்த காலியாகக் கிடந்த இடத்தில் படுத்தார். “அந்த அப்பிராணி பெண்ணின் விஷயத்தில் தான் எப்படி உள்ளே நுழைந்தோம்- படுக்கையில் படுத்துக் கொண்டே விஸ்வம் சிந்தனையில் மூழ்கினார். அவருக்கு இரக்கம் தோன்றியது. தன்னுடைய தவறைப் பற்றி அவர் முழுமையாக உணர்ந்தார். அப்போது ருக்மிணி சற்று தள்ளிப் படுத்தாள். விஸ்வம் அதே நிலையில் படுத்திருந்தார்.” அவரை நோக்கிக் திரும்பிப் படுத்துக் கொண்ட ருக்மிணி சொன்னாள்: "நீங்க ஏன் அவளைத் தேடிப் போனீங்க? நான் என்ன செத்தா போயிட்டேன்?''

விஸ்வம் அவளையே பார்த்தார். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் மேலே வெறுமனே பார்க்க ஆரம்பித்தார்.

"எனக்கு செத்துப் போயிடலாம்னு தோணுது.'' ருக்மிணி சொன்னாள். ஆனால், விஸ்வம் எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்திருந்தார்.

"இனிமேல் எந்தச் சமயத்திலும் நீங்கள் சுசீலாவைத் தேடிப் போகக் கூடாது. அவள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எல்லாரும் சேர்ந்து அந்த அப்பிராணிப் பெண்ணை நாசம் பண்ணிட்டீங்க.இல்லாவிட்டாலும், உங்களுடைய மூத்த அண்ணன் இப்படித்தானே செய்வார்! அவருக்கு மனைவி இல்லை என்பது சரி... ஆனால், உங்களுக்கு நான் இல்லையா? இந்த மாதிரியான கேவலமான விஷயங்களில் நீங்கள் ஏன் ஈடுபடுறீங்க?''

அதற்குப் பிறகும் விஸ்வம் எதுவும் பேசவில்லை. அவர் எழுந்து விளக்கை அணைத்தார். தொடர்ந்து விரிப்பில் படுத்து தன் மனைவிக்கு நேராக முதுகைக் காட்டிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

பலாத்காரம், இன்னொரு மனிதனின் மனைவியுடன் படுப்பது ஆகிய சுகமான கற்பனையில் சந்தோஷம் நிறைந்ததாக அந்த இரவு அவருக்கு இருந்தது. அதே நேரத்தில், மற்ற மூன்று சகோதரர்களும் சுசீலாவின் அறைக்குள் நுழைந்து என்னெனவோ கூறிக் கொண்டிருந்தார்கள். மது அருந்தி... மது அருந்தி... ஜமீன்தார் சகோதரர்களின் குரல்கள் முழுமையான உளறல்களாக இருந்தன.

ஆசிரியர் ராமகிருஷ்ணா ஏமாற்றத்துடன் நகரத்திலிருந்து மிகவும் கறுத்துப் போன முகத்துடன் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.     வரும் வழியில் அவர் தீவிரமாக சிந்திக்க முயற்சித்தார். “இனி என்ன வழி? இது ஒரு உச்சக்கட்டம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உண்மையிலேயே இது ஒரு கற்சுவர்தான். மிகவும் பெரியதாகவும், உயரம் அதிகம் கொண்டதாகவும் இருக்கக் கூடிய ஒரு கற்சுவர்! தன்னுடைய இருப்பைத் தொடர்வதற்கு, பலவீனமானவனைப் பொறுத்த வரை எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவது மட்டுமே இருக்கக்கூடிய ஒரே வழி. இப்போது சுசீலா என்னுடன் இல்லை. இந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்ப்பதற்கு நான் இருந்தாக வேண்டும்.


இறுதியில், அவர் மவுனமாக வீட்டிற்குத் திரும்பி வந்தார். கிழவியிடமிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார். தந்தையின் இடத்துடன் தாயின் இடத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய முயற்சியில் இப்போது ஆசிரியர் இருந்தார். எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லாமலே ஆசிரியர் எல்லா காரியங்களையும் செய்து கொண்டிருந்தார். உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்தைத் திறந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பிற வேலைகளும் மிகவும் சிரமமான விஷயங்களாக அவருக்கு இருந்தன. ஜமீன்தார் சகோதரர்கள் தன்னுடைய மனைவியை பலவந்தப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்ற அந்த மோசமான நாள் ஆசிரியரின் ஞாபக அறையில் தானே மேலே தலையை நீட்டிய வண்ணம் இருந்தது. எனினும், தோல்வியிலிருந்து உண்டான ஒரு உறுதியான முடிவுடன் அவர் அன்றாடச் செயல்களில் மூழ்கிக்  கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு ஆசிரியர் இப்போது “அம்மாவாகவும் ஆகிவிட்டிருந்தார்.”

பள்ளிக்கூடத்தை விட்டு வந்தபிறகு, ஆசிரியர் கோவிலுக்குச் செல்லும் போது, அவர் மாளிகை இருந்த பக்கம் பார்க்கக்கூட இல்லை. மக்கள் இருந்த பக்கமும் அவர் பார்க்கவில்லை. அங்கு அவர் மீண்டும் பூசாரியைப் பார்த்தார்.

"இப்போ எப்படி இருக்கிறாய் மகனே?'' அவர் கேட்டார்.

"முன்பைவிட சுகமாக இருக்கிறேன்!''

ஆசிரியரின் தளர்ந்து போய் காணப்பட்ட முகத்தை ஆறுதல் கூறுகிறதைப் போல பார்த்துக் கொண்டே பூசாரி சொன்னார்:

"இன்னும் சில நாட்கள் செல்லட்டும். உனக்கு இதை விட சந்தோஷம் கிடைக்கும்.''

நாட்கள் அப்படியே கடந்து கொண்டிருந்தன. சுசீலா மதிய நேரத்தில் தன்னுடைய அறையின் கதவுக்கு அருகில் தனியாக உட்கார்ந்து ஒரு காகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விரக்தியடைந்த முகம். எங்கும் எதுவும் நடக்கவில்லை. அவளுக்கு முன்னால் ஒரு கோப்பை தேநீர் இருந்தது. திடீரென்று ஒரு உற்சாகம் உண்டானவளைப்போல அவள் எழுந்து தேநீர் கோப்பையை சமையலறையில் கொண்டு போய் வைத்தாள்.

ருக்மிணியும் போச்சம்மாவும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தார்கள். சுசீலாவைப் பார்த்ததும், அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டார்கள்.

"நான் ஏதாவது உதவி செய்யணுமா?'' சுசீலா கேட்டாள். ஆனால், பதிலெதுவும் கூறாமல் அவர்கள் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

சுசீலா மீண்டும் சொன்னாள்: "இங்கே பாருங்க... நான் ஏதாவது உதவி செய்யிறேன். உங்களுடன் சேர்ந்து வேலை பார்த்தால் நல்லா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.'' இனிமேல் தான் என்ன சொல்வது என்றோ என்ன செய்வது என்றோ சுசீலாக்குத் தெரியவில்லை. தனக்கு அவமானம் உண்டாகக் கூடிய வகையில் இருந்த அவர்களுடைய செயல் அந்தப் பெண்ணை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. முன்பு நல்ல முறையில் நடந்து கொண்ட ருக்மிணிகூட ஏன் எதுவும் பேசவில்லை? அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

ருக்மிணியும் போச்சம்மாவும் வேலை செய்து கொண்டேயிருந்தார்கள். அவர்கள் எதுவும் பேசாமல் இருந்ததால், சுசீலா கோபத்துடன் அறைக்குள் சென்றாள். உண்மையிலேயே அழ வேண்டும்போல அவளுக்கு இருந்தது. ஆனால், தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததும், அவமானமும், தனிமையும் சுசீலாவின் இதயத்தைப் பற்றி எரிந்து வேதனைப்படுத்திக் கொண்டிருந்தன.

16

ன்னுடைய புதிய வாழ்க்கையுடன் ஆசிரியர் இப்போது முழுமையாக ஒன்றிப் போய்விட்டிருந்தார். பொழுது புலர்ந்தவுடன், சுசீலா செய்வதைப்போலவே அவர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களையும் தினமும் செய்து கொண்டிருந்தார். வீட்டைப் பெருக்கிவாரி, துடைத்து, சுத்தம் செய்வது... குழந்தைகளைக் குளிக்கச் செய்து உணவு தருவது... பள்ளிக்கூடத்திற்குச் சென்று பாடம் கற்றுத்தருவது... இப்படி அனைத்தையும். ஒரேயொரு வித்தியாசம் மட்டும். குழந்தைகளை அவர் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டு செல்வார். இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது அவருடைய கண்கள் இடையில் அவ்வப்போது வீட்டை நோக்கிக் சென்று கொண்டிருக்கும். எது எப்படி இருந்தாலும், கடுமையான வாழ்க்கையின் யதார்த்தங்களை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். யாரும் தனக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருப்பதோ, அவர்களுடைய கேலியோ, வெறித்துப் பார்ப்பதோ ஆசிரியரை இப்போது கவலை கொள்ளச் செய்வதேயில்லை. அவை எதைப் பற்றியும் கவனம் செலுத்தாமல் எப்படி வாழ்வது என்பதை அதற்குள் அவர் தெரிந்துகொண்டு விட்டிருந்தார்.

பிறகு... குழந்தைகள் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவர்களும் முன்பு இருந்ததைவிட முற்றிலும் மாறிவிட்டிருந்தார்கள். குழந்தைகள் எப்போதாவது தங்களின் அன்னையைப் பற்றி விசாரித்தால், கலங்கிவிடாமல் பதில் கூறுவதற்கு இப்போது ஆசிரியரால் முடிந்தது. இப்படி நடந்துகொண்டிருந்தாலும், இரவு நேரங்களில் அவர் மிகவும் வேதனைப்பட்டார். சில இரவு வேளைகளில் அவர் வெளியே கூற முடியாத அளவுக்கு சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். எனினும், வாழ்க்கை இப்போது இயல்பான நிலைக்கு மாறிவிட்டிருந்தது. அசாதாரணமாக ஏதாவது இருக்கின்றன என்றால்,

அவை இரவோ, இரவில் காணக்கூடிய பயங்கரமான கனவுகளோ மட்டும்தான்.

ஒரு இரவு நேரத்தில் தான் எங்கோ செல்வதைப்போல ஆசிரியர் கனவு கண்டார். தனித்து நடக்கும்போது ஜமீன்தார் சகோதரர்களில் மூத்தவரான அண்ணா கட்டிலில் படுத்திருப்பதை திடீரென்று அவர் பார்த்தார். அவர் ஆழமான உறக்கத்தில் மூழ்கியிருந்தார். ஆசிரியரின் கால்கள் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தன. கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது, அந்த அயோக்கியரின் பாதி திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்க, இனம் புரியாத ஒரு வகையான வெறுப்பு ஆசிரியருக்கு அவர்மீது உண்டாக ஆரம்பித்தது. அவருடைய ரத்தம் கொதிக்கவும் கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும் ஆரம்பித்தன. தன்னுடைய கைகளைக் கட்டுப்படுத்த ஆசிரியர் மிகவும் படாதபாடு பட வேண்டியதிருந்தது. மிகவும் சத்தமாக இரைச்சலிட்டுக் கொண்டிருந்த கோப அலை அவரின் மனதிற்குள் இருந்த அமைதியை இல்லாமல் செய்து கொண்டிருந்தது.

ஒரே அமைதி. நாலா பக்கங்களிலும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. முழுமையான அமைதி. குறட்டைச் சத்தத்தைத் தவிர, வேறு எந்த வகையான சிறு சத்தம்கூட அங்கு கேட்கவில்லை. வேறு யாரையும் அங்கு காணவும் முடியவில்லை. அருகில் யாருமில்லை என்று ஆசிரியருக்குத் தோன்றியது. தானும், எலும்பும் சதையும் உள்ள ஒரு மோசமான உருவமும் மட்டும்- முற்றிலும் தனிமைச் சூழ்நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு அங்கு யாருமே இல்லை. அருகிலேயே ஒரு கல் கிடந்தது. கரடியின் உடலையொத்த உரோமங்கள் நிறைந்த அந்த உடல் ஒரே கல் எறிதலில் முகமே இல்லாததாக ஆகிவிடும். ஆமாம்... வெறும் ஒரே எறிதலில்! ஒரு பைத்தியம் பிடித்த மனிதரைப் போல ஆசிரியர் அடுத்த நிமிடம் கல்லின் அருகில் சென்றார்.


தொடர்ந்து தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி கல்லை தரையிலிருந்து தூக்கி அந்த உடலுக்கு அருகில் போய் நின்றார். ஏதோ இன்னொரு ஆணின் மனைவியுடன் உறங்கிய உடல் அது. பல முறைகள் தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் அவள் பலாத்காரத்திற்கு இரையாகியிருப்பாள். ஆசிரியர் நினைத்தார்.

வானத்தைவிட உயர்ந்த மனக்கவலை, கோபம் ஆகியவை நிறைந்த ஒரு பிரம்மாண்டமான கனவு ஆசிரியரைச் சுற்றி வளைத்தது. பாவத்தின் சின்னமான அந்த மூளை துண்டு துண்டாகச் சிதறியே ஆக வேண்டும். அந்த மிருகம் இறந்தே ஆக வேண்டும். தூக்கிப் பிடித்த அந்தக் கல்லால் அதே இடத்தில் அந்தப் பாவி இறக்க வேண்டும். யாருக்கும் தெரியாது. யாரும் பார்க்கப் போவதில்லை. இதுதான் பொன்னான சந்தர்ப்பம்.

ஆசிரியர் பைத்தியம் பிடித்தவரைப்போல அண்ணாவின் தொப்பை விழுந்த வயிறு, பாதி திறந்த வாய், ஆங்காங்கே முடி வளர்ந்து நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் தலை ஆகியவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவருடைய உள்மனதில் மேலும் ஒரு அலை எழும்பியது. பயம் நிறைந்த ஒரு அலை. கட்டுப்படுத்த முடியாத ஒரு அலை அது. மனதிலும் உடலிலும் அது மிகப் பெரிதாக எழுந்து நின்றது. எந்தவொரு காரணமும் இல்லாமல் வியர்வை வழிய ஆரம்பித்தது. நடுங்கிக் கொண்டிருந்த கைகள்... நீர்த் துளிகளைப்போல வியர்வை கழுத்திலிருந்து கீழ் நோக்கி வழிய ஆரம்பித்தது. இப்போது எதையும் பார்க்க முடியவில்லை. எந்த நிமிடமும் கல் கையிலிருந்து கீழே விழுந்துவிடும்.

ஆனால், கல் அந்த மோசமான மனிதரின் உடலின்மீது விழுவதற்கு முன்னால், ஆசிரியர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். முழுமையாக வியர்வையில் குளித்துவிட்ட அவர் வாயால் கூற முடியாத அளவுக்கு பயந்து போய்விட்டிருந்தார். முழுமையான தாகத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர் படுக்கையை விட்டு எழுந்து நீரைப் பருகினார். தாகம் தீர்ந்தவுடன் படிப்படியாக அவர் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார். திரும்பி வந்த சுய உணர்வு பலவீனமான ஒரு கோபத்திற்கு பிறவி கொடுத்தது. தன்னுடைய சொந்த கோழைத்தனத்திலிருந்து உருவாகி தன்மீதே கொண்டிருந்த கோபம்... தான் எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும்? கனவில்கூட பயப்படுவதா?

தன்னுடைய கேள்விகளுக்கான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை.

புலர்காலைப் பொழுதிலிருந்தே மாளிகையில் ஒரே ஆரவாரம்தான். சகோதரர்கள் நான்கு பேரும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். "உன்னுடைய மனைவியிடம் சீக்கிரம் தயாராகி நிற்கும்படி கூறு. இப்போ அவங்க இங்கே வந்திடுவாங்க.'' அண்ணா இடையில் அவ்வப்போது விஸ்வத்திடம் கூறிக் கொண்டிருந்தார்.

"அவர்கள்"... அதாவது கிராமத்து மனிதர்கள். கிராமத்தில் யாருடைய திருமணமாவது நடைபெற்றால், "ஊர்வலம்" முதலில் கோவிலுக்குச் செல்லும். சந்தோஷம் நிறைந்த ஒரு குடும்ப வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள். அது முடிந்தவுடன் நேராக ஜமீன்தார்களின் மாளிகையைத் தேடி எல்லாரும் வருவார்கள். கோவிலில் வேண்டிக் கொள்ளவில்லையென்றால்கூட, காரியம் நடக்கும். ஆனால், மாளிகையில் வந்து முகத்தைக் காட்டவில்லையென்றால், காரியம் குழப்பத்திற்குள்ளாகிவிடும். ஊர்வலம் மாளிகைக்கு மிகவும் அருகில் வந்துவிட்டிருந்தது. அண்ணா

மீண்டுமொருமுறை தன் தம்பிக்கு ஞாபகப்படுத்தினார்: "அவளிடம் சீக்கிரமா தயாராகச் சொல்லு.''

சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருக்கும் வண்ணம் ருக்மிணி ஆடைகள் அணிந்து கொண்டிருந்தாள். பட்டுப் புடவை அணிவதற்கும் ஒப்பனை செய்வதற்கும் உதவுவதற்கு போச்சம்மா அருகிலேயே இருந்தாள். அதற்குள் திருமணக் குழுவினர் மாளிகைக்கு முன்னால் வந்துவிட்டார்கள். "இதோ அவங்க வந்துட்டாங்க'' என்று ருக்மிணிக்கு அறிவித்துவிட்டு, அடுத்த நிமிடமே நான்கு பேரும் வாசல் கதவுக்கு அருகில் வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மின்னிக் கொண்டிருந்த பட்டுப் புடவையை அணிந்துகொண்டு ருக்மிணி வாசல் கதவுக்கு அருகில் விஸ்வத்துடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தாள்.

மணமகனின் தந்தை ஜமீன்தார்களின் கால்களின் அருகில் கொஞ்சம் பணத்தையும் இனிப்பையும் வைத்தான். புதுமணத் தம்பதிகள் நான்கு சகோதரர்களையும் ருக்மிணியையும் பாதங்களைத் தொட்டு வணங்கினார்கள். மணமகனுக்கு ஒரு வேட்டியையும் மணப்பெண்ணுக்கு ஒரு புடவையையும் தந்து ருக்மிணி அவர்களை வாழ்த்தினாள். திருமணக் குழுவினர் ஜமீன்தார்களைப் பற்றிய "துதிப் பாடல்களை" பாடிக் கொண்டிருந்தார்கள்.

சுசீலா சாளரத்தின் வழியாக இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஊர்வலம் திரும்பிச் சென்று கொண்டிருந்தது. தனக்கு அங்கு எந்தவொரு ஸ்தானமும் இல்லை என்பதை திடீரென்று சுசீலா உணர்ந்தாள். துடித்துக் கொண்டிருந்த மனதுடன் கடந்து சென்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அந்த அப்பாவிப் பெண் ஆதரவற்ற நிலையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவர் என்றைக்காவது வருவாரா? என்னை இங்கே இருந்து அழைத்துக் கொண்டு செல்வாரா? நான் இங்கு இப்படிப்பட்ட விஷயங்களைத்தான்

இனிமேலும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என் வாழ்க்கை இங்கேயே முடிந்து விடுமா? அல்லது இனியும் ஏதாவது நடக்குமா? அவர் இப்போது எங்கே இருப்பார்? இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் என்ன செய்து கொண்டிருப்பார்?

தன்னுடைய சந்தேகங்களுக்கான எந்தவொரு பதிலும் சுசீலாவுக்கு தெரியவில்லை. திருமண ஊர்வலம் மாளிகையைவிட்டு சற்று தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. சுசீலாவும் தன்னுடைய உலகத்திலிருந்து தூரத்தில் போய்க் கொண்டிருந்தாள். நாட்கள் கடந்து செல்லச் செல்ல, மாளிகையின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றபடி அவள் மாறிவிட்டிருந்தாள். அவமானம், துயரம், பலாத்காரம்- அனைத்தும் நிறைந்த மாளிகையின் வினோதமான வாழ்க்கை அவளுக்கு இப்போது நன்கு பழகிவிட்டிருந்தது.

அன்று மதியம் தன்னுடைய அறையில் இருந்துகொண்டு சுசீலா விஸ்வத்திடம் சொன்னாள்: "உங்களுடைய மனைவி என்னிடம் மோசமான முறையில் பழகுகிறாள். நீங்கள் என்னைத் தேடி வருவதால், அவள் என்னை வெறுக்கிறாள். நான் உங்களை எங்கே தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவேனோ என்று அவள் எண்ணுகிறாள் என்று நினைக்கிறேன். நீங்கள் ஏன் என்னைத் தேடி வர வேண்டும்? நீங்கள் ஏன் அவளை என்னுடைய எதிரியாக மாற்றுகிறீர்கள்?'' ஆவேசம் சற்று குறைந்தபோது சுசீலாவின் குரல் ஆணவத்துடன் ஒலித்தது:

"நானொன்றும் தரம் தாழ்ந்த பெண் இல்லை. என் விருப்பத்திற்கு எதிராக இங்கு வந்து சேர்வதற்கு முன்னால், நான் மதிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கென்று ஒரு கணவர் இருக்கிறார். வீடும் குழந்தைகளும் இருக்கிறார்கள். உங்களுடைய மனைவியைப் போலத்தான் மிகச் சிறந்த பிராமண குடும்பத்தில் பிறந்தவள் நான். எந்தக் காலத்திலும் பண்ணக்கூடாத ஒரு செயலை

நீங்கள் என்னிடம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து என்னிடம் வருவதை, நான் வரக்கூடாது என்று கூறியிருக்கிறேன் என்பதை அவளிடம்... உங்களுடைய மனைவியிடம் போய் கூறுங்கள்.''


அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், விஸ்வம் ஒரு வார்த்தைகூட வாய் திறக்கவில்லை. அவர் புறப்படுவதற்காக எழுந்து நின்றார். "நான் இனிமேலும் வருவேன்'' என்று உரத்த குரலில் கூறியவாறு விஸ்வம் அறையிலிருந்து வெளியேறினார்.

17

மாளிகையில் அப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்தன. வெறுப்பு, காதல், அதிகார உரிமை ஆகியவற்றின் பெயரில் அங்கு எப்போதும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ருக்மிணிக்கும் சுசீலாவுக்குமிடையே பெரிய அளவில் பேச்சு எதுவுமில்லை. வாயாடியாக இருந்த போச்சம்மாவிற்கு அது ஒரு நல்ல விஷயமாக அமைந்துவிட்டது. அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு "ருக்மிணி புராண"த்தை இன்று போச்சம்மா கூறிக் கொண்டிருந்தாள். "உங்களுடன் மட்டுமல்ல. சின்ன எஜமானிடமும் அவங்க எதுவும் பேசறதே இல்லை. நீங்கள் வெளியிலிருந்து வந்த ஒரு பெண். ஆனால், அவர் என்ன அப்படியா? சின்ன எஜமான்தான் உண்மையான கணவர். அவர் அது எதைப் பற்றியும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை.'' போச்சம்மா சுசீலாவிடம் கூறினாள்.

"அப்படின்னா, சின்ன எஜமான் எதைத்தான் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்?'' உடனடியாக சுசீலா கேட்டாள்.

"உங்களுக்கு எதுவுமே தெரியாததைப்போல...'' வாயில் வெற்றிலையை நுழைத்துக் கொண்டே போச்சம்மா தொடர்ந்து சொன்னாள்: "இப்போது சின்ன எஜமானுக்கு உங்கள்மீதுதான் அதிக விருப்பம். இப்போது அவர் உங்களுடைய அடிமை. பிறகு உங்களை எடுத்துக்கொண்டால், அதற்கு முற்றிலும் தகுதியானவங்க நீங்க...'' இங்குமங்கும் பார்த்துக்கொண்டே

அவள் தாழ்வான குரலில் சொன்னாள்: "நீங்கள் அவங்களைவிட ஆயிரம் மடங்கு அழகு படைச்சவங்க. அறிவு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அவங்களுக்கு உங்களுடைய அறிவில் பாதிகூட இல்லை. நாட்டு நடப்பு பற்றியோ எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியோ அந்த அப்பாவிக்கு எதுவுமே தெரியாது. எதுவுமே இல்லைன்னாக்கூட நீங்கள் ஒரு ஆசிரியரின் மனைவி ஆச்சே!''

ஆசிரியர் என்று கூறி முடிந்தவுடன், அப்படிக் கூறியிருக்க வேண்டியதில்லை என்று போச்சம்மாவிற்குத் தோன்றியது. அடுத்த நொடியே அவள் பேச்சின் போக்கை மாற்றினாள்: "சமீபகாலமாக நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள் அல்லவா? பெரிய எஜமான் லும்பாடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார். தற்போதைக்கு அவங்களோட இன்னொரு வீட்டில் இருக்க வச்சிருக்காங்க. நான் அவளைப் பார்த்தது இல்லை.''

ஆனால், கூறலாமா கூறாமல் இருக்கலாமா என்ற சந்தேகத்துடன் அவள் தொடர்ந்து சொன்னாள்:

"லும்பாடாக்காரி உங்களைவிட அதிகமான அழகைக் கொண்டவள் என்று கேள்விப்பட்டேன். வயதும் அவளுக்கு மிகவும் குறைவு. அதனால்தான் சமீபகாலமாக அவர் உங்களுக்குத் தொல்லை கொடுக்காமல் இருக்கிறார். அவர்கள் ஆண்கள். ஆண்கள்! அவர்களுக்கு எப்போதும் புதுசாவேணும். ஏதாவது ஒரு பெண்ணை பயன்படுத்தி முடிஞ்சாச்சுன்னா, அதற்குப் பிறகு அவள்மீது அந்த அளவுக்கு விருப்பத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது அந்தக் காலத்துல இருந்தே ஆண்களின் குணமாக இருந்து வந்திருக்கிறது என்ற விஷயம்தான் உங்களுக்குத் தெரியுமே! சரி... நேரம் கொஞ்சம் ஆயிடுச்சுல்ல... சரி... அப்போ நான் போறேன்... கொஞ்சம் வேலை இருக்கு...''

"ருக்மிணி  புராணம்" சுசீலாவுக்கு சுவாரசியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவள் எல்லாவற்றையும் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அங்கிருந்து எழுந்து போச்சம்மா ருக்மிணியின் அறைக்குச் சென்றாள்.

"நீங்கள் எதைப் பற்றியும் பதைபதைப்பு அடைய வேண்டாம். மிகவும் சீக்கிரமே அவங்க மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடுவாங்க. இன்றைக்கு நடந்த விஷயம்... ஓ... நான் அதை எப்படி உங்களிடம் கூறுவேன்?'' போச்சம்மா அங்கும் ஒரு கதையைக் கூறினாள். சுவாரசியமாக "புராணம்" முழுவதையும் கூற வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால், சிறிதும் எதிர்பாராமல் ருக்மிணி போச்சம்மாவிற்கு நினைவூட்டினாள். "உன் வேலை முழுவதும் முடிஞ்சிடுச்சா?''

உடனடியாக அவள் சொன்னாள்: "ஓ... பேச்சுக்கு மத்தியில் நான் அதை மறந்திட்டேன். எல்லாவற்றையும் இப்போ செஞ்சிடுறேன்.''

வேலை செய்து முடிந்தபிறகு மீண்டும் அவள் இதைப் பேசிக் கொண்டிருப்பதற்காக சுசீலாவைத் தேடி வந்தாள். போச்சம்மா வருவதற்கு முன்பு, சுசீலா என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவள் கேட்டாள்: "போச்சம்மா, நீ கிராமத்திற்குப் போவதுண்டா?''

"தினமும் போவதுண்டு.'' அவள் சொன்னாள்.

"எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நீ என்றைக்காவது என்னுடைய...'' கணவரை என்று கூறுவதற்கு விரும்பினாலும், சுசீலா திருத்திக் கொண்டாள்: "குழந்தைகளைப் பார்த்திருக்கிறாயா?''

"கட்டாயமா...'' போச்சம்மா சொன்னாள்.

"என்னுடைய அவரை உனக்கு தெரிந்திருக்குமே, போச்சம்மா?''

"அவரை யாருக்குத்தான் தெரியாது? ஒவ்வொரு கிராமத்து மனிதனுக்கும் அவரைத் தெரியும். அவர் ஆசிரியரல்லவா?''

"போச்சம்மா, நீ அவரிடம் கொஞ்சம் போக முடியுமா? எனக்காக அவரிடம் சில விஷயங்களைக் கூற முடியுமா?''

"நிச்சயமா சொல்றேன். நான் என்ன சொல்ல வேண்டும்? நீங்கள் சொல்ற மாதிரியே செய்யிறேன்.'' போச்சம்மா அவளைத் தேற்றினாள்.

"அவரிடம்... அவரிடம்...'' வேகமாகத் துடித்துக் கொண்டிருந்த இதயத்துடன், தன் கணவருக்கு என்ன செய்தியைக் கூறி அனுப்புவது என்று சுசீலா சிந்திக்க ஆரம்பித்தாள். இங்கிருந்து எப்படியாவது தப்பிப்பதற்கு விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன? அல்லது ஒரு நாள் இங்கு வந்து நீங்கள் என்னை அழைத்துக்கொண்டு செல்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் அமைதியாக எல்லாவற்றையும் நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறலாமா? ஆனால், அவர் எங்கே இருக்கிறார்? என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அவர் என்ன செய்தார்? எதுவுமே செய்யவில்லை.

சுசீலா போச்சம்மாவிடம் கருத்து கேட்டாள்: "நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா என்று கேட்டால் எப்படி இருக்கும்? வேண்டாம்... ஆமாம்... ம்... அப்படியே கேட்கலாம். பிறகு அவரிடம் குழந்தைகளைப் பற்றி கேட்கலாம்.''

"மிகவும் நல்லது.'' தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியவாறு முன்னோக்கி நடக்கும்போது போச்சம்மா சொன்னாள்: "அவருடைய பதிலுடன் சாயங்காலம் வர்றேன்...''

சாயங்காலம் அவள் சொன்னாள்: "தானும் குழந்தைகளும் வீட்டில் சுகமாக இருப்பதாக ஆசிரியர் சொன்னார். நீங்கள் சுகமாக இருக்கீங்கன்னு தெரிந்து கொண்டதில், அவருக்கு மிகவும் சந்தோஷம்.''

"ஆசிரியர் வேறு ஏதாவது சொன்னாரா?'' சுசீலாவின் கண்களில் சூரிய உதயம் தெரிந்தது. "எதுவுமே சொல்லவில்லை.'' போச்சம்மா தொடர்ந்து சொன்னாள்: "ம்... அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.''

"இல்லை...'' சுசீலா அதிர்ச்சியடைந்து சொன்னாள்: "அது நடக்காது. அவர் எந்தச் சமயத்திலும்...''

தந்திரத்துடனும் அர்த்தத்துடனும் போச்சம்மா புன்னகைத்துக் கொண்டிருந்தாள். "அவங்க ஆம்பளைங்க...'' அவள் சொன்னாள்: "அவங்களுக்கு எப்போதும் ஒரு பெண் வேண்டும். பெண் இல்லாமல் வாழ முடியாது.''


சுசீலாவை மேலும் அதிகமாக கவலையிலும் துயரம் நிறைந்த சிந்தனையிலும் ஆழ்த்தி விட்டு அங்கிருந்து வெளியேறி போச்சம்மா ருக்மிணியிடம் சென்றாள். தொடர்ந்து இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அங்கும் கூற ஆரம்பித்தாள்.

"போச்சம்மா, அப்படின்னா... நீ சுசீலாவின் கணவரைப் பார்த்தாய்?'' ருக்மிணி கேட்டாள்.

"ம்ஹும்! நான் எதற்குப் பார்க்கணும்? உண்மையாகவே அங்கே போய் அவரைப் பார்த்ததைப்போலவே நான் சொன்னேன். அவ்வளவுதான்.'' போச்சம்மா சொன்னாள்.

போச்சம்மாவின் பச்சைப் பொய்யின் காரணமாக சுசீலா மிகவும் கவலையில் மூழ்கினாள். அவர் திரும்பவும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். அதனால்தான் அவர் என்னைப் பொருட்படுத்தவில்லை.  என்னை விடுதலை செய்ய நினைக்கவில்லை. பிறகு.. அவர் சுகமாக இருக்கிறாராம்... நான் இல்லாமல்! குழந்தைகளும் சுகமாக இருக்கிறார்களாம்... இது எப்படி உண்மையாக இருக்கும்? அப்படியென்றால்...?

இந்த "அப்படியென்றால்" சுசீலாவின் உள்மனதில் புதிய ஒரு உரிமைக்கு பிறவி கொடுத்தது. சாயங்காலம் விஸ்வம் சுசீலாவைத் தேடி வந்தபோது அவள் சொன்னாள்: "எனக்கென்று தனியாக ஒரு சமையலறையை ஏற்பாடு செய்து தாங்க. எனக்கென்று பாத்திரங்களையும்... பிறகு... எனக்கு மட்டுமே என்று இந்த மாளிகையில் ஒரு குளியலறை வேண்டும். எனக்குத் தேவையான உணவை இனிமேல் நானே தயாரித்துக்கொள்ளப்போகிறேன். இன்று முதல் நான் என்னுடைய விருப்பப்படி வாழப் போகிறேன்.''

சுசீலாவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், எப்போதும்போல விஸ்வம் மவுனமாக நின்று கொண்டிருந்தார். ஒரு முடிவான தீர்மானத்துடன் அவர் வெளியே வந்தார்.

இரவில் எப்போதும்போல ஜமீன்தார் சகோதரர்கள் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். போதை முழுமையாக தலைக்குள் ஏறியபோது,  தங்களுக்கு விருப்பமுள்ள விஷயமான புதிய இளம் பெண்ணைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.

"ஆசிரியரின் மனைவி இனிமேல் தேவையில்லை. நாம் அவளை வெளியேற்றி விடுவோம்.'' அண்ணா சொன்னார்.

"சுசீலா தேவையில்லை. ஆரம்பத்தில் பார்க்க சரியா இருந்தாள். ஆனால், இப்போ பழசா ஆயிட்டாள்...'' அஞ்சய்யா சொன்னார்.

"ஆமாம்... ஒரு பிராமண விபச்சாரி...'' பிரசாத் சற்று தெளிவான குரலில் கூறினார். "அவளை வெளியேற்றி வேலை செய்ய விடுங்க.''

"ம்... இனிமேல் அவளை ஆசிரியர் திரும்ப ஏற்றுக்கொள்ள போவதில்லை.'' அண்ணா சொன்னார்: "அப்போ வேலைக்கும் போகாமல் வேறென்ன செய்வாள்?''

மூவரும் ஒரே குரலில் கூறினார்கள்: "ஒரு பிராமண விபச்சாரி!'' ஒரு கர்ஜனையுடன் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். "அந்த புழு அவளுடைய கணவராக இருந்தான். நம்முடைய விரலைக்கூட அவனால் தொட முடியவில்லை. ஹா... ஹா... ஹா... இனி அவளை வெளியேற்றி விடுவோம். நமக்கு அவள் தேவையில்லை.'' மூவரும் ஒன்றாகத் தீர்மானித்தார்கள்.

அப்போது விஸ்வம் எழுந்து நின்று கொண்டு சொன்னார்: "இல்லை... அவளை வெளியேற்ற முடியாது. சுசீலா இந்த மாளிகையில் இருக்கிறாள். இனிமேலும் அவள் இங்கேயேதான் இருப்பாள்.''

மற்ற மூவரும் அவரையே ஆச்சரியத்துடனும் கவலையுடனும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

"நான் அவளை இங்கே குடியமர்த்தியிருக்கிறேன்.'' விஸ்வம் வெளிப்படையாகக் கூறினார்: "இனிமேலும் நான் அவளை இங்கேயே தான் குடிவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.''

அப்போது அண்ணா மெதுவான குரலில் சொன்னார்: "நீயா? அவளை வீட்டிலிருந்து தூக்கி எடுத்துக்கொண்டு வரும்போது எதுவுமே செய்யாத நீயா இப்படிப் பேசுகிறாய்? நீ அவளை இங்கே குடி வைக்கப் போறேன்னா சொல்றே? போதாததற்கு... உனக்குப் பக்கத்திலேயே உன் மனைவி வேறு இருக்கிறாள்.''

"அப்படிச் செய்ய முடியாது. எங்களோட விஷயம் வேறு. நீ அவளை இங்கே குடி வைக்க முடியாது.'' அஞ்சய்யா சொன்னார்.

18

வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்துடனும் போதையுடனும் மூன்று பேரும் எழுந்தார்கள். விஸ்வமும் திடமான முடிவுடன் எழுந்து நின்றார். அவர்களிடம் அவர் உரத்த குரலில் கூறினார்: "நான் உயிருடன் இருக்கும் காலம் வரை சுசீலா இந்த மாளிகையில்தான் வசிப்பாள். நான் மீண்டுமொருமுறை தெளிவாகக் கூறுகிறேன் அவளை இங்கேயிருந்து வெளியேற்றுவதற்கு உங்களால் முடியாது. நாளை முதல் தன்னுடைய உணவை அவள் தானே தயாரித்துக் கொள்வாள்.''

கதவின் மறைவில் நின்று கொண்டு எல்லாவற்றையும் ருக்மிணி கேட்டுக் கொண்டிருந்தாள். சகோதரர்கள் மூன்று பேரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. என்ன கூறுவது என்ற தர்மசங்கடமான நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

"அடி முட்டாள்!'' அண்ணா முணுமுணுத்தார்.

"அவன் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தானே?'' அஞ்சய்யா அடுத்த நொடியிலேயே சொன்னார்.

"அவன் அந்த பிராமண விபச்சாரியை தன்னுடன் குடி வைத்துக்கொள்வதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தால், அவளைக் கொன்று விடுங்க...'' பிரசாத் கோபத்துடன் சொன்னார்.

அவர்கள் அமர்ந்து மீண்டும் குடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது விஸ்வம் மீண்டும் குடிக்கவில்லை. சகோதரர்களிடமிருந்து அவர் தன்னுடைய அறைக்குச் சென்றார். இன்று ருக்மிணி கட்டிலில் இல்லை. அறையின் ஒரு மூலையில் தரையில் படுத்திருந்தாள். அவர் தன் மனைவியைப் பார்த்தாலும், அவளின் அருகில் செல்லவோ ஏதாவது பேசவோ இல்லை. விளக்கை அணைத்துவிட்டு அமைதியாகக் கட்டிலில் போய் படுத்தார்.

சாதாரண ஒரு விபச்சாரி என்ற நிலையில் சுசீலா இப்போது மாளிகையில் நினைக்கப்படவில்லை. ஒரு மனைவியின் நிலையில் அவள் இப்போது கருதப்பட்டாள். ஒருநாள் அவள் நன்கு அலங்கரித்துக் கொண்டு மாட்டு வண்டியில் கோவிலுக்குச் சென்றாள். மாளிகையைச் சேர்ந்த மாட்டு வண்டியில் ஏறி சமீபகாலமாக சுசீலா அவ்வப்போது தான் மட்டும் தனியாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தாள். பூசாரி அவளைப் பார்த்தார். அவள் அவரைப் பார்த்து வணங்கினாள். உடனடியாக ஆசீர்வதித்தவாறு பூசாரி சுசீலாவிடம் சொன்னார்: "எல்லாவிதமான செல்வங்களும் கிடைக்கட்டும் மகளே.''

அவள் கோவிலைச் சுற்ற ஆரம்பித்தாள். அப்போது திடீரென்று சுவரின் மறைவில் சிலையுடன் ஒட்டியவாறு ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். மெல்லிய இருட்டு பரவிவிட்டிருந்தாலும், ஆசிரியர்தான் அது என்பதை சுசீலா புரிந்து கொண்டாள். ஆசிரியரேதான். தங்களின் செயலை மறந்துவிட்டு, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். உலகமே நின்று விட்டதைப்போல தோன்றியது. என்ன பேச வேண்டுமென்றோ என்ன செய்ய வேண்டுமென்றோ யாருக்கும் தெரியவில்லை. கண்களை இமைக்காமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்கள். இறுதியில் மவுனத்தை சுசீலாதான் கலைத்தாள். ஒரு விதத்தில் அவளால் பேச முடிந்தது. "குழந்தைகள் சுகமாக இருக்கிறார்களா?'' சுசீலா கேட்டாள்.

"சுகமாக இருக்கிறார்கள்.''

"வீடு...?''

"ம்... அங்கே அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' அவர் சொன்னார்.

"நீங்கள்...? நீங்கள் திரும்பவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேனே!''


"இல்லை...'' உடனடியாக அவர் அதை மறுத்தார். "நான் அப்படியொரு விஷயத்தை கனவில்கூட நினைக்கவில்லை.''

"ஏன் தேவையில்லை என்று நினைக்க வேண்டும்? நீங்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுங்கள். எதற்கும் உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது!'' சுசீலா அமைதியாகச் சொன்னாள்.

"நான் அதை விரும்பவில்லை. சுசீலா.'' அவர் சொன்னார். சூழ்நிலையை மாற்றுவதற்காக அவளைப் பார்க்காமலே அவர் கேட்டார்: "சுசீலா, நீ நல்லா இருக்கியா?''

"நானா? சுகமாகத்தான் இருக்கேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம்.'' தான் எந்த நிமிடத்திலும் பைத்தியம் பிடித்துவிட்டவளைப்போல அழவோ, உரத்த குரலில் கத்தவோ ஆரம்பித்து விடுவோமோ என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அப்படி நடக்க வேண்டும் என்று அவள் விரும்பவில்லை. அவளுடைய மனதில் கடுமையான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. நாசம் பிடித்த மவுனம் அவர்கள் இருவருக்குமிடையே பரவிவிட்டிருந்தது. இந்த முறை ஆசிரியர்தான் அதைக் கலைத்தார். "நான் முயற்சித்தேன்...'' அவர் கூறிக் கொண்டிருந்தார்.

"உன்னை அங்கேயிருந்து காப்பாற்றுவதற்கு உடல்ரீதியாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை எல்லாவற்றையும் நான் செய்தேன். ஆனால், எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. அவர்கள் நல்ல செல்வாக்கு படைத்தவர்களும் முரட்டுத்தனம் கொண்டவர்களுமாக இருக்கிறார்கள். சுசீலா, உனக்குத்தான் தெரியுமே?'' மீண்டும் பாழாய் போன மவுனம் பரவியது. மனதை முழுமையாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மவுனம். சுசீலா அதை ஏற்றுக்

கொள்வதைப்போல கூறினாள்: "எனக்குத் தெரியும்.'' தொடர்ந்து ஆசிரியரைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: "பரவாயில்லை...'' ஒரு நம்பிக்கையுடன் அவள் சொன்னாள்: "இப்போ என்ன மாறுதல் உண்டாகியிருக்கு?''

"சுசீலா, நான் உன்னை இழந்துவிட்டேன். குழந்தைகள் விஷயம்தான் கஷ்டம். அவர்களுக்கு விஷயத்தைக் கூறி புரிய வைக்கிற சிரமத்தை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? அவர்கள் இரவில் கண்விழித்து தங்களின் தாயைத் தேடுவார்கள். எதையும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். நான் கூறும் எதுவுமே அவர்களுக்குப் புரியாது. வினோதமான ஒரு நிலைமை அது. சுருக்கமாகச் சொல்லப்போனால்- கவலைக்குரிய நிலைமை.''

மீண்டும் முன்பு நிலவிய மவுனம்.

"சரி...'' விடை பெற்றுக் கொள்வதைப் போல சுசீலா முணுமுணுத்தாள். ஆனால், அவர் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும்போது, அங்கிருந்து கிளம்புவது என்பது சிரமமாக இருந்தது.

அவரும் என்னவோ முணுமுணுத்தார். ஆனால், அங்கிருந்து சிறிது கூட அசையவில்லை. சுசீலா அங்கிருந்து அகலாமல் இருக்க, தான் எப்படிக் கிளம்புவது என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள்.

திடீரென்று சுசீலாவின் உள்மனதில் இருந்து தாங்கிக் கொள்ள முடியாத கோபம் கொதிக்க ஆரம்பித்தது. தன்னுடைய கணவரின் கோழைத்தனத்தின்மீது வார்த்தைகளால் கூற முடியாத அளவுக்கு உள்ள மிகப் பெரிய கோபம்! பொறுத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையிலிருந்து உருவான கோபம்! அவள் ஆவேசத்துடன் கூற ஆரம்பித்தாள்.

"குழந்தைகளை முன்னால் வைத்துக்கொண்டு அந்த போக்கிரிகள் என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றபோது, வீட்டிலிருந்து உங்களுடைய கண்களுக்கு முன்னால், அவர்கள் என்னை பலவந்தப்படுத்தி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு போனபோது, நீங்கள் எதுவுமே செய்யவில்லை. நீங்கள் ஏன் உடனடியாக அந்த மாளிகைக்கு நெருப்பு வைக்கவில்லை?''

"விஷயம் அதுவல்ல சுசீலா. நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்.'' ஆசிரியர் விளக்கிக் கூற விரும்பினார். அவர் அதைக் கூறுவதற்கு முயற்சித்தார். ஆனால், ஆசிரியரால் எதையும் கூற முடியவில்லை. அவர் மவுனமாக இருந்தார்.

"சரி... நீங்கள் சிலவற்றைச் செய்தீர்கள். பிரயோஜனம் எதுவும் உண்டாகவில்லை. நடந்தது அதுதான்.'' அவள் ஆவேசத்துடன் கூறிக் கொண்டிருந்தாள்: "ஆனால், இப்போது நீங்கள் மேலும் சில விஷயங்களைச் செய்யப் போகிறீர்கள் அல்லவா? நீங்கள் என்னைக் கைகழுவிவிட்டீர்கள். மனைவியை, தன்னுடைய தங்கமான குழந்தைகளின் அன்னையை போய்க் கொண்டிருந்த பாதையில் விட்டுட்டீங்க. என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் செய்த இறுதி முயற்சி இதுதானா? நான் இங்கு எப்போதும் தரம் தாழ்ந்த ஒரு பெண்ணைப்போல வாழ வேண்டுமா என்ன? வாழ்க்கை முழுவதும் கணவராக, என்னுடைய அனைத்து சொத்துமாக நினைத்து வாழ்ந்த நான் இப்போது உங்களுக்கு எதுவுமே இல்லாதவளாக ஆகிவிட்டேன். அப்படித்தானே! இந்த அளவுக்கு கையற்ற நிலையில் இருப்பேன் என்று நான் எந்தச் சமயத்திலும் நினைத்ததே இல்லை. ஒரு வைப்பாட்டியின் வாழ்க்கை...''

ஒரு வார்த்தைகூட வாய் திறக்க முடியாத நிலையில் இப்போது ஆசிரியர் ராமகிருஷ்ணா இருந்தார்.

சுசீலா கோவிலைவிட்டு வெளியேறி, மாட்டு வண்டியில் மாளிகைக்குத் திரும்பினாள்.

19

சுசீலா திரும்பிச் செல்வதைப் பார்த்தவாறு ஆசிரியர் கோவிலின் கர்ப்பக் கிரகத்தில் நின்றிருந்தார். மனைவியின் குத்தலான வார்த்தைகள் உண்டாக்கிய வருத்தம் அவருடைய இதயத்தை மிகவும் அதிகமாக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. கோழைத்தனமும் பயந்தாங்கொள்ளித்தனமும் சேர்ந்து அவருடைய இதயத்தை அரித்துத் தின்று கொண்டிருந்தன.

அவர் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தார். "நான் ஒரு புழு. கேவலமான ஒரு சாதாரண சிறிய புழு! நான் எந்த அளவுக்கு மிகவும் சாதாரண மனிதனாக இருந்திருக்கிறேன்! சொந்த மனைவியைக்கூட காப்பாற்ற முடியவில்லையே!" ஒரு கோபம் ஆசிரியரைப் பிடித்து இறுக்கியது. கோபத்தின் காரணமாக அவரிடம் குறிப்பிடத்தக்க மாறுதல் உண்டானது. போலீஸ் அதிகாரி கூறிய விஷயங்களை அவர் மனதில் நினைத்துப் பார்த்தார்.

ஒரு பொருளின் பாதுகாப்பை ஏற்றெடுக்க முடியாமல் இருக்கும் வரையில், அது நம்முடையது என்று கூறுவதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை. உரிமைக்குச் சொந்தம் கேட்கக் கூடிய மனிதன் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை விளக்கிக் கூறுவதற்கும் கடமைப்பட்டிருக்கிறான். அது முடியாமல் போய் விட்டால்? என்ன நடக்கும்? அதிகபட்சம்... மரணம். ஆனால், அதற்கு ஏன் முயற்சிக்க வேண்டும்? தைரியத்துடன் மனிதன் போராட வேண்டும். ஒரு இறுதிப் போர்... மனிதன் என்ற நிலையில் தன்னுடைய மதிப்பை அவன் போற்றி பாதுகாக்கத்தான் வேண்டும். தனிமை என்ற ஒன்று இருக்கிறதே! அதை அவன் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.'

திடீரென்று ஆசிரியருக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டானது. அவரிடம் மொத்தத்தில் ஒரு மாறுதல் உண்டானதைப்போல இருந்தது. அநீதிக்கு எதிராக மனிதன் போராட வேண்டியதிருக்கிறது. ஆண் தன்னுடைய ஆண்மைத்தனத்தை நிரூபிப்பதற்காக இறுதி நிமிடம் வரை போராட வேண்டியதிருக்கிறது இந்த வகையில் சிந்திக்கும்போது, தனக்குத்தானே அவர் கூறிக் கொண்டார்: "ஆமாம்... அநீதிக்கு எதிராக நான் போராட வேண்டியதிருக்கிறது. நான் கட்டாயம் போராடுவேன்! இந்த உறுதியான சபதத்துடன் ஆசிரியர் கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு வந்தார். பூசாரி அங்கே இருந்தவாறு அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.


"எப்படி இருக்கிறாய் மகனே?'' பூசாரி கேட்டார்.

"பூசாரி...'' ஆசிரியர் சொன்னார்: "சிறிது நேரத்திற்கு முன்னால் நான் என்னுடைய மனைவியைப் பார்த்தேன்.''

"அப்படியா? அவங்க திரும்பவும் உன் மன அமைதியைக் குலைச்சிட்டாங்களா? உன் மன அமைதி திரும்பவும் இல்லாமற் போய்விடுமா? அப்படியென்றால் உள்ளே போய் கடவுளிடம் பிரார்த்தனை செய். எல்லாவித அமைதிக்காகவும் பிரார்த்தனை செய். உண்மையாக கூறப்போனால், திருமணம் என்பது சொர்க்கத்தில்தான் நடக்கிறது. நாம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள்தான். அத்துடன் மன அமைதிக்காக வேண்டிக் கொள்வதற்கும்...'' பூசாரி ஆசிரியரைத் தேற்றுவதைப்போல கூறினார்.

இந்த முறை ஆறுதல் உண்டாகிற வகையில் இருந்த பூசாரியின் வார்த்தைகள் ஆசிரியரிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி மாற்றத்தை உண்டாக்கவில்லை. அவர் பூசாரியிடம் உடனடியாக வாதம் செய்தார். "நாம் கோழைகளாக இருக்க வேண்டும் என்றா கடவுள் விரும்புகிறார்? சாதாரண மரத்தைப் போல வாழ வேண்டுமென்றா கடவுள் நினைக்கிறார்? தன்னம்பிக்கைதான் மனிதனை மனிதனாக ஆக்குவது.

இல்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?'' ஆசிரியர் தொடர்ந்து சொன்னார்: "பூசாரி, மிகவும் சிறிய மிருகம்கூட... ஏன்...? எறும்புகூட சவாலைச் சந்திக்கிறது. அப்படி இருக்கும்போது ஒரு மனிதன், அவன் எந்த அளவுக்கு சிறியவனாக இருந்தாலும் சரி... கைகளைக் கட்டிக்கொண்டு தன்னுடைய மரியாதையும், தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆதரவையும் இரக்கமே இல்லாமல் மிதித்து நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டுமா?'' ஒரே மூச்சில் கூறி முடித்த ஆசிரியர். பூசாரியின் பதில் என்ன என்பதைக் கேட்பதற்காக சற்று நிறுத்தினார். ஆனால், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. ஆசிரியர் கூறிய விஷயங்களை அவர் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் பூசாரிக்கு, பூசாரியின் மொழியிலேயே கூறி புரிய வைக்க முயற்சித்தார்: "பூசாரி, கோழைகளையும் புழுக்களையும்போல வாழ்வதுதான் மனிதர்களின் கடமை என்று கடவுள் நம்மிடம் கூறியிருக்கிறாரா என்ன?

"யதா யதாஹி தர்மஸ்ய

க்லாநீர் பவதி பாரத

அப்யுத்தான மதர்மஸ்ய

ததாத்மானம் ஸ்யஜாம்யஹம்

பரித்ராணாய சாதுனாம்

வினாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம சமஸ்தாபனார்தாய

சம்பவாமி யுகே யுகே."

கீதையில் வரும் இந்த சுலோகத்திற்கு என்ன அர்த்தம்? கடவுள் எங்கே இருக்கிறது? சுதர்சன சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு கருடன்மீது அமர்ந்து பயணம் செய்து தெய்வம் என்றைக்காவது பூமியில் அவதரிக்குமா? பிறகு... கெட்டவர்களை அழிக்குமா? அப்படியென்றால், அந்த நல்ல நாள் என்று வரும்? இல்லை பூசாரி, இல்லை... உண்மையாகக் கூறுவதாக இருந்தால், கடவுள் எள்ளில் எண்ணெய் கலந்திருப்பதைப்போல மனிதனிடம்தான் இருக்கிறார்.''

அப்போது பூசாரி இதை மட்டும் சொன்னார்:

"கதிர்பர்த்தாப்ரபு: ஸாக்ஷி

நிவாஸ: சரணம் ஸுஹ்யல்

ப்ரபவ: ப்ரச்சய: ஸ்தானம்

நிதானம் பீஜமவ்யயம்.''

ஆசிரியர் கேட்டார்: "தெய்வம் என்றால் என்ன? நாம் மனிதர்கள் என்ற தெய்வங்கள் அல்லவா? நாம் செய்ய வேண்டியது- அநீதிக்கு எதிராக போராடுவதுதான். கெட்ட செயல்களைச் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும். மனிதன் ஆதரவற்றவன். அப்படி இருக்கும் மனிதனின் மனிதத் தன்மையைப் போற்றிக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். தெய்வத்தின் அம்சம் இல்லாமல், பிறகு இது என்ன? அநீதிக்கு எதிரான போரில் மனிதன் தோல்வியைத் தழுவலாம். நீதியை வென்றெடுப்பதில் நாம் வெற்றி பெறாமல் போகலாம்.'' திடீரென்று அவர் தன்னுடைய அனுபவங்களை நினைக்க ஆரம்பித்துவிட்டார். "காரணம் கடவுள் அளவற்ற பலம் கொண்டவர்தான். ஆனால், கீதையில் சொல்லப்பட்டிருக்கவில்லையா? "கர்மண்யே வாதிகார ஸ்தே யா ஃபலேஷ்ய கதாச்சன" என்று? ஒரு மனிதன் தோல்வியை அடைந்திருக்கலாம். திரும்பத் திரும்ப

தோல்வியைச் சந்தித்தான் என்றுகூட ஆகலாம். ஆனால், ஒரு நல்ல உலகத்திற்காக- எல்லா வகையான அநீதிகளுக்கும் எதிராக எப்போதும் மனிதர்கள் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அது மனிதனின்  கடமை. உண்மையாகக் கூறப்போனால் நீதியைப் போற்றிப் பாதுகாப்பதுதான் தெய்வம் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயம். நான் சொல்வது உண்மைதானே, பூசாரி?''

பூசாரியிடம் கூற நினைத்த விஷயங்கள் எல்லாவற்றையும் கூறி முடித்தபோது, ஆசிரியரிடம் என்னவென்று விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டானது. ஆசிரியரின் வார்த்தைகள் இந்த முறை ஒரு மறு சிந்தனைக்கு பூசாரியைத் தூண்டியது. பூசாரியின் மனதில் ஒரு மிகப்பெரிய போராட்டமே நடந்துகொண்டிருந்தது. அப்போது அவர் எதுவும் பேசவில்லை, அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து ஆழமான சிந்தனையில் ஈடுபட்டார். இரண்டு பேரும் மவுனமாக இருந்தார்கள். இறுதியில் பூசாரிதான், மவுனத்தைக் கலைத்தார். "நீ சொன்னது சரிதான் மகனே''. ஆசிரியரின் கரத்தைப் பிடித்துக்கொண்டே அவர் சொன்னார்: "முற்றிலும் சரி... முற்றிலும்...''

சுசீலா மாளிகைக்குத் திரும்பி வந்தாள். அவள் கவலை நிறைந்த மனநிலையுடன் இருந்தாள். சூரியன் மறைந்து, இருள் படர்ந்து கொண்டிருந்தது. விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து அவளுடைய அறைக்குள் சென்றார். கூடத்தில் ருக்மிணியைப் பார்த்தாலும், அவர் அந்தப் பக்கம் பார்க்கக்கூட இல்லை. சுசீலாவின் அறையில் இருக்கும்போது, விஸ்வம் அவளை கரங்களுக்குள் கொண்டு வர விரும்பினார். ஆனால், சுசீலா வெறி பிடித்த சிங்கத்தைப்போல அடுத்த நொடியே போராடி விலகிக் கொண்டாள். அவள் கர்ஜித்தாள். "இங்கேயிருந்து வெளியே போங்க... உங்களுக்குத் தோணுறப்போ... தோணுறப்போ... படுக்குறதுக்கு நானொண்ணும் தேவடியா இல்லை. உங்கள்மீதும் உங்களுடைய மாளிகையின் மீதும் எனக்கு ஒரே

வெறுப்பாக இருக்கு. இங்கேயிருந்து வெளியேறுங்க. விளையாட்டையெல்லாம் மனைவியிடம் வச்சுக்கோங்க.''

கூடத்தில் நின்று கொண்டு ருக்மிணி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். சொல்லப் போனால் சுசீலாவுக்கு ஒரு அடி கொடுத்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. தன் கணவரை விட்டெறிந்து பேசுவதா! ஆனால், அந்த விஷயத்தில் அவளுக்கு ஒரு வகையான சந்தோஷம் உண்டானதைப்போல தோன்றியது. தன்னை ஒதுக்கிய விஸ்வம் மீண்டும் தன்னைத் தேடி வருவாரே என்ற சந்தோஷம் அவளுக்கு உண்டானது.

20

விஸ்வம் சுசீலாவின் அறையிலிருந்து வெளியேறி தன்னுடைய அறைக்குச் சென்றார். ருக்மிணி தேநீருடன் அறைக்குள் வந்தாள். "தேநீர் குடிங்க... மிகவும் களைப்பாக இருப்பீங்க.'' பல நாட்களுக்குப் பிறகு அவள் விஸ்வத்திடம் பேசினாள்.

ஆனால், அவர் பதிலெதுவும் கூறவில்லை. தேநீரையும் பருகவில்லை. சுசீலாவைப் பற்றிய சிந்தனையிலேயே அவர் மூழ்கிவிட்டிருந்தார்.

"நீ எதற்கு இங்கே நின்று கொண்டிருக்கிறாய், நாயே? நீயும் உன் தேநீரும்...'' விஸ்வத்திற்கு தன் மீதே ஒரு வகையான வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், அவருடைய மனைவியிடம் வெளிப்படுத்தியது அந்த வெறுப்பையும் கோபத்தையும் தான்.


தன்னுடைய அமைதியற்ற மனநிலையை மறப்பதற்காக அவர் மது அருந்த ஆரம்பித்தார். விஸ்வம் குடித்துக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் குடித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் எழுந்து அறையில் ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சாட்டையுடன் சுசீலாவைத் தேடி வந்தார். எதையும் கூறாமல் இரக்கமே இன்றி அவளை அடிக்க ஆரம்பித்தார்.

சுசீலா அமைதியாக சாட்டை அடிகள் முழுவதையும் தாங்கிக் கொண்டாள். பிறகு கட்டிலுக்குச் சென்று ஒரேயடியாக படுத்துக் கொண்டாள். தன்னுடைய தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பற்றி அவள் தனக்குள் ஆச்சரியப்பட்டாள். தன்னால் எப்படி அந்த அடிகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ள முடிகிறது என்று அவள் வியப்படைந்தாள். அடித்து... அடித்து கை வலித்தவுடன் சாட்டையை வீசி எறிந்து விட்டு, விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து கட்டிலில் போய் படுத்துக்கொண்டார். அடுத்த நிமிடம் சுசீலா அவரை பலமாக கைகளால் வளைத்து இறுக்கிக் கொண்டாள். அந்த நேரத்தில் அவள் அளவுக்கு மேலே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள். அவளுடைய உடலில் தலையிலிருந்து கால் வரை காமம் நிறைந்து நின்றிருந்தது. சுசீலா விஸ்வத்தை இறுக அணைத்துக் கொண்டாள்.

அன்றொரு நாள் கோவிலில் தன் மனைவியைச் சந்தித்ததற்குப் பிறகு ஆசிரியரின் நடவடிக்கைகளில் கணிசமான மாற்றம் உண்டானது. இப்போது அவர் கோழை அல்ல. முழுமையான தைரியசாலியாக மாறிவிட்டிருந்தார். எப்போதும் போல வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும், அதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் வந்து சேர்ந்திருந்தன. பள்ளிக்கூடத்திற்கு வெளியே அவர் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தார். பலகையின் மீது தினமும் ஆசிரியர் "இன்றைய சிந்தனைக்குரிய விஷயம்'' என்று எழுத ஆரம்பித்தார். முதல் நாள் அவர் எழுதினார்: "விழிப் படையுங்கள்! நீங்கள் தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்!''

"அநீதியான செயல்களைச் செய்பவர்களைவிட குற்றவாளிகள் அநீதியை சகித்துக்கொள்பவர்கள் தான்." இரண்டாவது நாள் ஆசிரியர், எழுதினார்.

மூன்றாவது நாள் அவர் இப்படி எழுதி வைத்தார். "இந்தியர்கள்தான் உலகத்திலேயே மிகவும் ஒதுக்கப்பட்டவர்கள். காரணம்- அவர்கள்தான் மிகவும் அதிகமாக வறுமையின் பிடியில் சிக்கிக்கிடப்பவர்களும், இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள். அளவுக்கும் அதிகமாக உயிர் பயம் கொண்டவர்களாக பாரதத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் பெரிய ஆபத்துகள் நிறைந்த வேலையைச் செய்வதைவிட எந்த அளவுக்கு வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்தாலும் சரி, அதே நிலையில் வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் பணத்தின்மீது மோகம், அதிகார தாகம் ஆகிய விஷயங்களில் அவர்கள் உலகத்தில் மற்ற யாரையும்விட முன்னால் இருக்கிறார்கள்." -இப்படிப்பட்ட வாசகங்களை அவர் தினமும் எழுதி வைப்பார். கிராமத்து மனிதர்கள் மிகவும் கவனமாக அதை வாசிப்பார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆசிரியரின் உதவியுடனோ, எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்களின் உதவியுடனோ வாசகங்களைப் படித்து சற்று புரிந்து கொள்வது என்பது வழக்கமான செயலாக இருந்தது. வாழ்க்கைக்கு புதிய ஒரு அர்த்தம் வந்து சேர்ந்தது. ஒரு புதிய பிரகாசமும் சுறுசுறுப்பும் கிராமத்து மனிதர்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக தெரிய ஆரம்பித்தது.

இந்த புரிதல் விஷயத்தில் பூசாரியின் பங்களிப்பும் சாதாரணமானதல்ல. கோவிலுக்கு வரும் கடவுள் பக்தர்களைத் தன்னுடைய நம்பிக்கையை நோக்கி அவர் வரச்செய்து கொண்டிருந்தார். தர்மத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்த தன்னுடைய பார்வையை அவர் விளக்கிக் கூறினார்.

"விழிப்படையுங்கள்! தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்! அநீதிக்கு எதிராகப் படை திரண்டு போராடுங்கள்!''

ஆசிரியருக்கும் பூசாரிக்கும் தங்களுடைய முயற்சிகளில் ஒவ்வொரு நாளும் வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. நவமி நாளன்று இந்த வெற்றியை முதல் தடவையாக பார்க்க முடிந்தது. "ராமநவமி" நாளன்று கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக சந்தோஷத்துடன் கொண்டாடக் கூடிய எருமைச் சண்டை நடந்து கொண்டிருந்தது.

எருமைகள் இரண்டும் தூசியைக் கிளப்பிக் கொண்டு ஆவேசத்துடன்  ஒன்றையொன்று முட்டிக்கொண்டிருந்தன. மக்களின் ஆரவாரம் காற்றில் உரத்து கேட்டுக் கொண்டிருந்தது. இப்போது கிராமத்து மக்களின் எண்ணத்தில் ஒரு எருமை ஜமீன்தாருடையது; இன்னொரு எருமை தங்களுடையது. அது ஒரு எருமைச் சண்டை அல்ல. மாறாக, மக்களுக்கும் ஜமீன்தாருக்குமிடையே நடக்கும் பெரிய போர்! ஜமீன்தார் சகோதரர்களும் சண்டையைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.

ஆனால், மக்கள் அவர்களைப் பார்த்து சிறிதுகூட பயப்படவோ, மதிப்பு தரவோ இல்லை. பூசாரியும் ஆசிரியர் ராமகிருஷ்ணாவும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தார்கள். அவர்கள் இருவரும் சுற்றி நடந்து ஊர்க்காரர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கிராமத்தின் எல்லையைத் தாண்டி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான முயற்சியில் அவர்கள் இருந்தார்கள்.

இரவில் கிராமத்தின் எல்லையைத் தாண்டி பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மனிதனின் கடமையைப் பற்றி பூசாரி கிராமத்து மக்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் கடமையைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறிக் கொண்டிருந்தார்.

"பல எறும்புகள் ஒன்று சேர்ந்தால், ஒரு கல்லை நகர்த்த முடியும் என்றால், அனைவரும் ஒன்றாக நின்று அநீதியான செயல்களைத் துரத்துவதில் என்ன சிரமம் இருக்கிறது?'' புதிய பிரகாசத்திற்கு ஆழமும் பரப்பும் உள்ள ஒரு அர்த்தத்தைத் தருவது மட்டுமே பொதுக்கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. அதில் அவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவும் செய்தது.

மறுநாள் கிராமத்து மக்கள் மிகவும் கம்பீரமாக "ராமலீலா"வைக் கொண்டாடினார்கள். மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து கோவிலின் வாசலில் வந்து கூடினார்கள்.

கதை "ராவண வத"மாக இருந்தாலும், ஜமீன்தார்களையும் சேர்த்துக் கொண்டு மறைமுகமாக சித்தரித்து, முற்றிலும் வித்தியாசமான முறையில் அந்த முழு கதையிலும் நடித்தார்கள். ராவண வதம் நடந்து கொண்டிருக்கும்போது, எப்போதும் இல்லாத அளவுக்கு ஆவேசமடைந்த மக்கள் உரத்த குரலில் சத்தமிட்டார்கள்: "அவனைக் கொல்லு.... அயோக்கியன்!'' "வதம்" நடந்து முடிந்துவிட்டிருந்தது. ராவணனின் வேடம் தரித்த மனிதன் இறந்ததைப் போலவே தரையில் கிடப்பதைப் பார்த்ததும் அது பெரிய ஜமீன்தார்தான் என்று எல்லாரும் நினைத்தார்கள். ராவணனுடன் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் ஜமீன்தார்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹெட்கான்ஸ்டபிள் அங்கு வந்தார். அவர்களுடைய உரையாடல் அதற்குப் பிறகும் நிற்கவில்லை என்பது மட்டுமல்ல- மேலும் சத்தமாக ஒலிக்கவும் செய்தது. கான்ஸ்டபிள் ஒன்றிரண்டு ஆட்களை வெறித்துப் பார்த்தபோது, அவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே அவர்கள் சொன்னார்கள்: "இதோ ராவணனின் சேனாதிபதி வந்திருக்கிறார். ஜமீன்தார்களின் வால்! லஞ்சம் வாங்கிக் கொண்டு காரியங்களை மறைத்து விடும் வேலைக்காரன்!''

ஹெட் கான்ஸ்டபிள் மக்களின் முகங்களைப் பார்த்தார். எல்லோருடைய முகங்களிலும் தைரியமும் தன்னம்பிக்கையும் வெளிப்பட்டன. அந்த தைரியத்தின் முன்னாலும், தன்னம்பிக்கையின் முன்னாலும் அவர் பின்வாங்குவதைத் தவிர, வேறு வழியில்லை.


வந்ததைப்போலவே அவர் திரும்பிச் சென்றார். "ராமலீலா" முடிவடைந்ததும், பூசாரி கிராம மக்களிடம் சொன்னார்: "நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், சிரிப்பையும் மோசமான வார்த்தைகளையும் நிறுத்திவிட்டு, அநீதிக்கு எதிராகப் போராடுவதற்குத் தயாராகுங்கள்!''

21

மாளிகையில் ஜமீன்தார் சகோதரர்கள் தங்களுடைய லீலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். சுசீலாவும் தன் அறையில் தன்னை அழகுபடுத்திக் கொண்டு விஸ்வத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் மாளிகையின் புதிய வாழ்க்கையுடன் முழுமையாக இணைந்துவிட்டிருந்தாள். விஸ்வம் வந்தவுடன், அவள் அவரை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு காதில் மெதுவான குரலில் சொன்னாள்: "என் வயிற்றில் உங்களுடைய குழந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது.''

அவர் அளவற்ற சந்தோஷத்துடன் சுசீலாவை அணைத்துக் கொண்டார்.

அதிகாலைப் பொழுது புலரப் போகிறது. எங்கிருந்தோ காகம் கரையும் சத்தம் கேட்டது. எங்கிருந்தோ கோழி கூவும் சத்தம் கேட்டது. பொழுது விடியும் நேரத்தில் கிராமத்தின் ஒவ்வொரு வீடும் ஆட்கள் யாருமே இல்லாமல் இருந்தது. காலியாகக் கிடந்த வீடுகளில் கால்நடைகள் இருந்தாலும், எங்கும் ஒரு மனிதனைக்கூட பார்க்க முடியவில்லை. என்னவென்று தெரியாத காரணத்தால், கிராமம் முழுவதும் யாரோ கூறி காலியாகக் கிடப்பதைப்போல தோன்றியது.

ஆண்கள், பெண்கள், வயதான கிழவர்கள், குழந்தைகள் - கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எல்லாரும் கோவிலில் ஒன்று கூடியிருந்தார்கள். விரிந்த கண்களுடன் முழுமையான அமைதியுடன் எல்லோரும் நின்றிருந்தார்கள். சிறு குழந்தைகள்கூட சத்தம் போடாமல் இருந்தனர். லாந்தரின் மஞ்சள் வெளிச்சத்தில் அந்த மக்கள் கூட்டம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியதாக இருந்தது. பூசாரியும் ஆசிரியரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். கூட்டத்தைப்  பிளந்து கொண்டு பூசாரி கடவுளின் சிலைக்கு அருகிலிருந்த கர்ப்பக் கிரகத்திற்குச் சென்றார். சபை மண்டபமும் கோவிலின் வாசலும் மக்களின் கூட்டத்தால் நிறைந்திருந்தன. ஒவ்வொரு நிமிடமும் கடந்து செல்லச் செல்ல, அதற்குப் பிறகும் ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.

பூசாரி அதிகாலை நேர பூஜையை ஆரம்பித்தார். ஆசிரியர் மக்களுக்கு மத்தியில் நடந்து கூட்டம் கூடி நின்றிருந்த ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அநீதிக்கு எதிரான கூட்டு முயற்சியின் இறுதி கால்வைப்பாக அது இருந்தது. ஒன்று- செயல்படுவது! இல்லாவிட்டால் - மரணம். மக்கள் தீர்மானித்துவிட்டிருந்தார்கள்.

அநீதியின் ஒட்டுமொத்த சின்னமாக இருந்த மாளிகை கோவிலில் இருந்து பார்க்கும்போது நன்கு தெரிந்தது. அதுதான் நோக்கமே. அதற்கு உள்ளேயும் அசைவற்று அமைதியும் சந்தோஷமான சூழ்நிலையும் நிறைந்திருந்தன. மனிதர்களும் மிருகங்களும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல மூன்று சகோதரர்களும் ஒரு அறையில் புலர்காலைப் பொழுதின் சுகமான தூக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். விஸ்வம் சுசீலாவுடன் சேர்ந்து கட்டிலில் படுத்திருந்தார். இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்த விளக்கு இப்போதும் மங்கி மங்கி எரிந்து கொண்டிருந்தது. அணையப் போகும் நிலையில் இருந்த அதன் மங்கலான வெளிச்சத்தில் விஸ்வத்தின் ஒரு கை இப்போதும் சுசீலாவின் மார்பில் கிடப்பது தெரிந்தது. சமீபகாலமாக ருக்மிணி தனியாகத்தான் படுத்து உறங்குகிறாள். அவளும் தன்னுடைய அறையில் உறங்கிக் கொண்டிருந்தாள். கனவு கண்டதைப்போல அவள் திடுக்கிட்டு எழுந்தாள். தன்னைச் சுற்றி யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், அவள் மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்.

இரவு முடிவடைந்து கொண்டிருந்தது. கிழக்கு திசையில் மெதுவாக பிரகாசம் பரவிக் கொண்டிருந்தது. சூரியனின் ஒளிக் கதிர்கள்! பறவைகளின் "கலகல" சத்தம் அதிகாலைப் பொழுது சூரியனை வரவேற்றுக் கொண்டிருந்தது. ருக்மிணி மீண்டும் கண் விழித்தாள். எப்போதும்போல கண் விழிக்கும் செயலே அது. அவளுடைய அறையின் சாளரத்திலிருந்து சூரிய வெளிச்சத்தின் மெல்லிய நீல நிறத்தில், ராஜவர்மாவின் அழகான ஏதோ ஓவியத்தைப்போல கோவில் தெரிந்தது. சாளரத்தின் முன்னால் போய் நின்று கோவிலைப் பார்த்துக் கொண்டே ருக்மிணி கைகளைக் கூப்பினாள். கோவிலைச் சுற்றி அங்குமிங்கும் தனித்தனியாகவும் கூட்டமாகவும் ஏராளமான ஆட்கள் கூடி நின்றிருப்பதை அவள் பார்த்தாள். மொத்தத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தைப் போல... அவள் ஆச்சரியப்பட்டாள். "என்ன ஆச்சு?" தனக்குத்தானே அவள் கூறிக் கொண்டாள். "என்னவோ இருக்கு!" உடனடியாக அவள் சாளரத்தின் அருகில் இருந்து நகர்ந்து வாசலுக்குச் சென்றாள். ஒரு வேலைக்காரன்கூட அங்கு எங்கும் இல்லை. "சாதாரணமாக நான் எழுந்திருக்கும்போதே வேலைக்காரர்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். போச்சம்மாவைக் கூட காணோமே! ஏன் யாரும் வேலைக்கு வரவில்லை?" அவள் மீண்டும் ஆச்சரியப்பட்டாள்.

வேலைக்காரர்கள் அனைவரும் மாளிகையின் பின்பகுதியில்தான் தங்கியிருந்தார்கள். அவள் அடுத்த நிமிடம் அங்கு சென்றாள். தொடர்ந்து பல தடவைகள் அழைத்தாள்: "போச்சம்மா... ஏய் போச்சம்மா... டேய் ராமேலு...'' ஆனால், எந்தவொரு பயனும்  உண்டாகவில்லை. அவளுக்கு ஒரு பதிலும் எங்கிருந்தும் கிடைக்கவில்லை. ஒரு இருமல் சத்தம்கூட எங்கேயிருந்தும் கேட்கவில்லை. அப்படியே இல்லையென்றாலும், எப்படி கேட்கும்? வேலைக்காரர்களின் வீடுகள் முழுவதும் காலியாக அல்லவா கிடக்கின்றன?

ஏமாற்றத்துடன் திரும்பி வந்து அவள் சமையல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். வேலைக்காரர்கள் வராததால், அது உண்டாக்கிய ஆச்சரியமும் அவளை இடையில் அவ்வப்போது மனதில் அமைதி இல்லாமல் செய்து கொண்டிருந்தது" "இன்று அவர்களுக்கு என்ன ஆயிடுச்சு? அவர்கள் ஏன் வரவில்லை?"

விஸ்வம் கண் விழித்துக் கீழே சென்றார். காலைக் கடன்கள் எல்லாம் முடிந்து அவர் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தார். ருக்மிணியும் அவருக்கு அருகில்தான் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் அவரிடம் பேசுவதற்கு உண்மையிலேயே விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய மனதில் இருந்த ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே, தன் கணவரைப் பார்க்காமலேயே அவள் சொன்னாள்: "இதுவரை ஒரு வேலைக்காரன் கூட வரவில்லை!''

விஸ்வம் டூத் பிரஷ்ஷை எடுக்கும் முயற்சியில் இருந்தார். உடனே அதை வேண்டாம் என்று நிறுத்திவிட்டு, மாளிகையின் பின்பகுதிக்குச் சென்றார். சற்று மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அவர் வேலைக்காரர்களை அழைத்தார். ஆனால், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. முழுமையான அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது. தொடர்ந்து அவர் கர்ஜித்தார்.

"டேய் ராமேலு, நீ என்ன செத்துப்போயிட்டியா?'' அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பொறுமையை இழந்து விட்டு, தொடர்ந்து முணுமுணுத்தார்: "அவர்களுக்கு என்ன ஆச்சு? எல்லாரும் செத்துப் போயிட்டாங்களா? இல்லாவிட்டால், விஷயம் வேறு ஏதாவதா?"

அதற்குள் அண்ணா, பிரசாத், அஞ்சய்யா ஆகியோரும் கீழே வந்துவிட்டார்கள். விஸ்வமும் பின் பகுதியிலிருந்து அப்போது வந்துவிட்டிருந்தார். இயல்பான குரலில் அவர் சொன்னார்: "அண்ணா, ஒரு வேலைக்காரனும் இல்லை. யாரும் இதுவரை வந்து சேரவில்லை. இந்த அட்டூழியத்துக்கு எதிராக ஏதாவது செய்தே ஆக வேண்டும்.''


"ஹும்...'' அண்ணாவின் பதில் அது மட்டுமே. அஞ்சய்யா, பிரசாத் ஆகியோரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் தங்களின் அன்றாடச் செயல்களில் மூழ்கியிருந்தார்கள்.

சுசீலாவும் கண் விழித்து எழுந்து சற்று தூரத்தில் தெரிந்து கொண்டிருக்கும் கோவிலைப் பார்ப்பதற்காக சாளரத்தின் அருகில் போய் நின்று கொண்டிருந்தாள். பல்லக்கின் தாளத்துடன் மெதுவாக ஒரு ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்படுவதை அப்போது அவள் பார்த்தாள். கைகூப்புவதற்குக்கூட மறந்து அவள் நின்ற இடத்திலேயே நின்று விட்டாள்.

கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் ஒட்டுமொத்த கிராமமும் இருந்தது. பூசாரிதான் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவருக்கு மிகவும் அருகில் ஆசிரியரும் இருந்தார். பல்லக்கின் தாளத்திற்கேற்ப முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் இருந்தவர்களின் முகங்களில் புதுமையான ஒரு ஆவேசமும் சுறுசுறுப்பும் தெரிந்தன.

ருக்மிணியும் சாளரத்தின் வழியாக ஊர்வலத்தைப் பார்த்தாள். தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டதைப்போல பதைபதைப்பு நிறைந்த விழிகளுடன் அவள் அண்ணாவின் அருகில் ஓடினாள். ஊர்வலத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டிக் கொண்டே அவள் கேட்டாள்: "என்ன அது?''

"கோவிலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டிருக்கிறது. இன்று ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்ன?'' ஊர்வலத்தைப் பார்த்தவுடன் அண்ணா கேட்டார்.

"ஏதோ விசேஷம் இருக்கு. அது மட்டும் உண்மை.'' பிரசாத் சொன்னார்.

"சாதாரணமா நமக்கு தகவலை முன் கூட்டியே சொல்லிவிடுவாங்களே!'' அஞ்சய்யா கோபத்துடன் சொன்னார்.

"சரி... விசேஷமா அதில் எதுவும் இல்லை. அவர்கள் பிறக்கிறார்கள். திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகு, அவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். பிறகு, அவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள். சரி... பதைபதைப்பதற்கு இதில் என்ன புதுமை இருக்கிறது?'' அண்ணா கேட்டார்.

"ஆனால், ஊர்வலம் இந்த வழியில் வரவில்லையே?'' அஞ்சய்யா சொன்னார்.

"இந்த வழியில்தான் அவர்கள் வரவேண்டும். அவர்கள் இங்கு வராமல் போகமுடியாது. இங்கு வந்து தலை குனியாமல்- மாளிகைக்கு முன்னால் கடந்து செல்லாமல் இருக்க அவர்களுடைய தாத்தாக்களுக்குகூட தைரியம் இருந்ததில்லை'' அண்ணா ஆணவத்துடன் சொன்னார்.

"வேலைக்காரர்களும்...'' விஸ்வம் மீண்டும் கூறினார். அப்போது அண்ணாவிற்கு கோபம் வந்துவிட்டது. "அவங்க இங்கே வரட்டும். சாட்டையால் அடித்து எல்லாரையும் நான் ஒரு வழி பண்றேன்.''

அதற்குப் பிறகு எல்லாரும் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கிவிட்டார்கள். ருக்மிணி சமையல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அஞ்சய்யாவும் பிரசாத்தும் வயலுக்குச் செல்வதற்குத் தயாரானார்கள். அன்றாட வேலைகள் முடிந்து, சுசீலா குளித்துக் கொண்டிருந்தாள்.

பல்லக்கின் தாளத்திற்கேற்றபடி நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தின் உற்சாகம் அதில் கலந்து கொண்டிருந்த முகங்களில் தெரிந்தது. ஊர்வலம் வந்து கொண்டிருப்பது மாளிகையை நோக்கி அல்ல  என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அஞ்சய்யா சொன்னார்:

"அவர்கள் கிராமத்தை விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிறார்களே?''

"ஹும்...'' என்று கூறியவாறு அந்த நிமிடமே பிரசாத் அஞ்சய்யாவைப் பார்த்தார். கட்டளையிட்டால் ஊர்வலத்தில் வந்து கொண்டிருப்பவர்களை மாளிகையின் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறேன் என்று கூறுவதைப்போல அவருடைய பார்வை இருந்தது. ஆனால், இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஆவேசத்துடன் நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தவர்களை அமைதியான விழிகளுடன் பார்த்துக் கொண்டு நின்றிருக்க மட்டுமே அவர்களால் முடிந்தது.

ஊர்வலம் கிராமத்தின் எல்லையை அடைந்ததும், மிகவும் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அதில் வந்து சேர்ந்து கொண்டார்கள். ஊர்வலம் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியது. பல்லக்கின் சத்தம் மேலும் சற்று உரத்துக் கேட்டது.

அஞ்சய்யாவும் பிரசாத்தும் மாட்டு வண்டியில் ஏறி வயலுக்குப் புறப்பட்டார்கள். கிராமத்தில் யாரையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. காலியாக இருந்த கிராமத்திலிருந்து சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் தொடர்ந்து அவர்களுடைய காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. முற்றிலும் மனிதர்கள் இல்லாமலிருந்த கிராமத்தின் வழியாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது காளைகளின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மணிகள் உண்டாக்கிய ஓசை பல்லக்கின் சத்தத்தில் கேட்கவே இல்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.  ஆனால், ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசிக்கொள்ளவில்லை. மனிதர்கள் யாரும் இல்லாத கிராமத்தை விட்டு அவர்கள் வயலுக்குச் செல்லும் வழியில் திரும்பினார்கள்.

மாளிகையில் நின்று கொண்டு ருக்மிணி விஸ்வத்திடம் கூறினாள்:

22

"இன்று இங்கே ஒரு வேலைக்காரன்கூட இல்லை. இந்த வேலைகள் அனைத்தையும் என்னால் எப்படி தனியாகச் செய்ய முடியும்? தனியாக இதைச் செய்தால், சோர்ந்து விழுந்து சாக வேண்டியதுதான்...'' சுசீலாவை மனதில் நினைத்துக் கொண்டே அவள் கூறினாள்: "அவளும் கொஞ்சம் வேலைகளைச் செய்யட்டும். குறைந்தபட்சம் இன்றைக்காவது...''

விஸ்வம் சுசீலாவின் அறைக்குச் சென்று அவளிடம் சொன்னார்: "வீட்டு வேலைகளில் ருக்மிணிக்கு கொஞ்சம் உதவியாக இரு. இன்று  வேலைக்காரர்கள் யாரும் வரவில்லை!''

உடனடியாக சுசீலா கீழே இறங்கிச் சென்றாள். சமையலறையில் கால்களை வைத்ததுதான் தாமதம், அவள் ருக்மிணியிடம் கேட்டாள்: "நான் என்ன செய்யணும்?''

"செய்ய வேண்டியது என்ன என்று ஒரு ஆள் சொல்லித்தரணுமா?'' ருக்மிணி தெளிவானக் குரலில் சொன்னாள்: "அதெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்குச் செய்ய முடிந்ததை செய்யுங்கள். தளர்ந்து விழுந்து இறந்தே போனாலும் சரி... நான் யாருடைய உதவியையும் விரும்பவில்லை!''

புன்னகைத்துக் கொண்டே சுசீலாவும் சமையலறை வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். இருவரும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ருக்மிணி தேநீர்  தயாரித்து முடித்து சுசீலாவுக்கும் கொடுத்தாள். ஒருசில நிமிடங்களுக்காவது இருவரும் தங்களுக்கிடையே ஏதோ சில விஷயங்களைப் பங்கு வைத்துக் கொள்கிறோம் என்பதை தேநீர் கோப்பையை வாங்கும்போது சுசீலாவும், கொடுக்கும்போது ருக்மிணியும் உணர்ந்திருந்தார்கள்.

மாளிகையின் கிணற்றின் கரையில் அமர்ந்து கொண்டு அண்ணா உடம்பு முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அதிகாலை சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு அண்ணாவின் உறுதியான உடல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எண்ணெய் தேய்த்துக்

கொண்டிருக்கும்போது, அண்ணா உடம்பைச் சற்று சொறிந்தார். சொறிந்த இடத்திலிருந்து ரத்தம் கசிவதைப் பார்த்ததும் அவர் வேலைக்கு வராமற்போன வேலைக்காரர்களை வாய்க்கு வந்தபடி திட்டினார்: "ராஸ்கல்ஸ்.''

அண்ணா சிந்திக்க ஆரம்பித்தார்: "வேறு யாராவது என்னுடைய உடம்பில் எண்ணெயைத் தேய்க்கும்போது அரிப்பு வந்தால், எண்ணெய் தேய்ப்பவனின் தலையில் அடித்துப் பிளந்து விடுவேன். ஆனால், என்னுடைய தலையை எப்படி..."

சமையலறையில் ருக்மிணியும் சுசீலாவும் பேசிக் கொண்டே வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய கவலைகளை எப்படியோ இருவரும் புரிந்து கொண்டுவிட்டனர். இன்றுபோலவே, எதிர்காலத்திலும் தங்களுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதைப் பற்றி அவர்கள் இருவரும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.


இன்று அண்ணா சற்று அதிகமான கோபத்தில் இருந்தார். "ராஸ்கல்ஸ்! ஒருவன்கூட வரவில்லை" இன்று குளிப்பதற்கான நீரை அவரே வாரி நிறைத்தார். குளித்து முடித்து அவர் மது அருந்துவார். குடித்தார். மீண்டும் குடித்தார். திடீரென்று விஸ்வம் அவரின் அருகில் வந்து நின்றார்.

"அவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.'' நடுங்கிக் கொண்டிருந்த குரலில் அவர் சொன்னார்.

ஊர்வலம் மெதுவாக மாளிகையை நோக்கி வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் தாளமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதன் மெல்லிய சத்தம் மாளிகையில் கேட்டது. மாளிகையிலிருந்து ஊர்வலம் சற்று தூரத்தில் எறும்பின் அணிவரிசையைப்போல தெரிந்தது.

விஸ்வத்தின் வார்த்தைகளைக் கேட்டதும் அண்ணா மிகவும் சாதாரண குரலில் சொன்னார்: "வரட்டும். இங்கே வந்து...'' தன்னுடைய கால்களைச் சுட்டிக் காட்டி கொண்டே அண்ணா தொடர்ந்து சொன்னார்: "தலை குனியாமல் அவர்கள் எங்கே போவார்கள்? ம்... சீக்கிரம் போய் நீயும் தயாராகு... உன் மனைவியிடமும் அலங்கரித்துக் கொண்டு நிற்கும்படி சொல்லு. நாசமா போனவர்களுக்கு தரிசனம் தருவதற்கு நான் இதோ தயாராகி விட்டேன்.''

ஊர்வலம் மாளிகையை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் சத்தத்தை இப்போது முழுமையாகக் கேட்க முடிந்துது.

"நீ தயாராகி விட்டாயா?'' அண்ணா விஸ்வத்திடம் கேட்டார்.

"ம்... நான் தயாராகி விட்டேன். ஆனால், இதுவரை ருக்மிணியால் தயாராக முடியவில்லை. அவள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்.''  விஸ்வம் சொன்னார்.

"இந்த பெண்கள்...'' முணுமுணுத்துக் கொண்டே அண்ணா சொன்னார்: "எப்போதும் இப்படித்தான். அலங்கரிக்க ஆரம்பித்து எவ்வளவு நேரமாச்சு...!''

சுசீலா ருக்மிணிக்கு உதவிக் கொண்டிருந்தாள். கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு ருக்மிணியின் தலைமுடியை அலங்கரிக்கும் போது, அவள் சொன்னாள்: "ருக்மிணி, நீங்க அழகியாக ஆகிக் கொண்டிருக்கிறீங்க...''

அப்போது கீழே இருந்து விஸ்வம் கூறுவது காதில் விழுந்தது: "சீக்கிரம்... அண்ணா  வெளியே வந்துவிட்டார்!''

முகத்தின் மிடுக்கிற்கு எந்தவொரு குறைவும் உண்டாகாமல் பார்த்துக் கொண்டே அண்ணா மாளிகையிலிருந்து சாதாரணமாக வெளியே வந்தார். ஊர்வலத்தில் மிகவும் முன்னால் இருந்தவர்கள் பரம்பரை

பரம்பரையாகச் செய்வதைப்போல அண்ணாவின் முன்னால் படுத்து அவருடைய கால்களைப் பிடித்தார்கள். ஆனால், சாதாரண ஒரு வணங்கக்கூடிய விழலாக அது இல்லை. மாறாக, கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். எண்ணற்றவர்களை உதைத்த கால்களை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ கால் பார்த்து நின்றிருந்த அண்ணாவுக்கு அப்போது வெளிப்பட்ட மாறுபாடு புரிந்தது. கால்களை பின்னோக்கி இழுக்க முயற்சிக்கும்போது, அண்ணாவின் இடுப்பும் ஆட்களின் கைகளின் பிடியில் சிக்கிவிட்டிருந்தது.

பல்லக்கின் மிகப் பெரிய சத்தம் காற்றில் முழங்கிக் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் கோபக் குரல் அந்த முழங்கிக் கொண்டிருந்த சத்தத்துடன் சேர்ந்து கொண்டது.

அறையின் சாளரத்தின் வழியாக சுசீலா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ருக்மிணி சில நிமிடங்களுக்கு முன்புதான் படிகளின் அருகில் போய்விட்டிருந்தாள். உடனடியாக அவள் சாளரத்தின் அருகில் வந்து ஊர்வலத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். கத்தியை வைத்திருந்த ஒரு கை உயர்ந்ததும், அண்ணாவின் தொப்பை வயிற்றில் ஆழமாக இறங்கியதும் திடீரென்று நடைபெற்றன. அவருடைய குடல் வெளியே தெரிந்தது. சில நிமிடங்கள் சுசீலா தீப்பந்தத்தைப் பார்த்த பன்றியைப்போல திகைத்துப்போய் நின்றுவிட்டாள். அவளால்  எதையும் பேசமுடியவில்லை. தொடர்ந்து அவள் ஓடி படிகளின் அருகில் சென்றாள். வேகமாக முற்றத்திற்குச் சென்று அவள் விஸ்வத்தையும் ருக்மிணியையும் தடுத்தாள்: "கொன்று விட்டார்கள்... அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள்... அவர்கள்...'' விஸ்வத்தின் கையைப் பிடித்துக் கொண்டே சுசீலா சொன்னாள்: "அய்யோ... வெளியே போகாதீங்க...''

சுசீலா என்ன கூறுகிறாள் என்பதே விஸ்வத்திற்குப் புரியவில்லை. அவள் என்ன கூற விரும்புகிறாள்? அசாதாரணமான ஏதோ நடந்திருக்கிறது. வெளியே பல்லக்கின் பயத்தை வரவழைக்கக் கூடிய சத்தம் உரத்துக் கேட்டுக் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் கோபம் கலந்த சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது. உடனடியாக அவர் ஓடி மேலே சென்றார். சாளரத்தின் வழியாகப் பார்த்தபோது, அவரால் தன்னுடைய கண்களையே நம்ப முடியவில்லை. அண்ணாவின் வெட்டப்பட்ட உடல் கால்களால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது!

ஒரு கற்சிலையைப் போல அவர் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். என்ன நடந்தது? சுவரில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு சுய உணர்வு வந்துவிட்டது. துப்பாக்கியைக் கையில் வைத்திருந்தாலும், அவருடைய கைகள் ஆலமரத்தின் இலைகளைப்போல நடுங்கிக் கொண்டிருந்தன. ஊர்வலத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டி, நடுங்கிக் கொண்டிருந்த கைகளுடன் அவர் குண்டுகளைப் பொழிய வைத்தார். "தாய்... தாய்... தாய்..." என்ற சத்தம் பல்லக்கின் தாளத்துடனும் ஊர்வலத்தின் ஆரவாரத்துடனும் சேர்ந்து கலந்தது. இப்போது ஊர்வலம் மேலும் அதிகமான வெறியுடன் இருந்தது. அத்துடன் கட்டுப்பாடு கைகளை விட்டுப் போகவும் செய்தது. மனித உடல்களின் துண்டுகள்... காயம் பட்டு விழுந்து கிடந்த மனிதர்களை மிதித்துக் கொண்டு மக்கள் கதவை மிதித்து உடைக்க ஆரம்பித்தார்கள். விஸ்வம் குண்டுகளைப் பொழிந்து கொண்டேயிருந்தார்.

கதவுகள் உடைக்கப்படுவதைப் பார்த்ததும், சுசீலா உரத்த குரலில் கத்தினாள்: "அவர்கள் உள்ளே வருகிறார்கள்.'' அவள் ஓடி மேலே வந்தாள். ருக்மிணி முற்றத்தில் சிலையைப்போல நின்று கொண்டிருந்தாள். ஒரு புதிய மணமகளைப்போல தோன்றிய ருக்மிணியின் சுய உணர்வு உண்மையிலேயே இல்லாமற்

போய்விட்டிருந்தது. முகத்தில் காயத்தின் அடையாளங்கள்! இடிவிழுந்ததைப்போல அவள் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள்.

மேலே வந்தவுடன் சுசீலா, குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்த விஸ்வத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னாள்: " வேண்டாம்... தயவுசெய்து குண்டுகளைப் பொழியாதீர்கள். அவர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மேலே வருகிறார்கள். குண்டுகளைப் பொழியச் செய்யாதீர்கள். அவர்கள் இதோ... வந்து விட்டார்கள்.''

அதற்குள் விஸ்வத்தின் ஒரு குண்டு ஆசிரியரின்மீது பாய்ந்துவிட்டிருந்தது. ஊர்வலத்தின் கர்ணகொடூரமான ஆரவாரத்துடன், தகர்ந்து விழுந்து கொண்டிருந்த கதவுகளின் சத்தமும் சேர்ந்தபோது, அந்த இடமே அதிர்ந்து கொண்டிருந்தது. கொடூரமான சண்டையில் காரணமாக மாளிகையில் இருந்த நாய்கள்கூட நீட்டி ஊளையிட்டுக் கொண்டிருந்தன. பயந்து அரண்டுபோன கால்நடைகள் முழுவதும் வால்களை உடல்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டன.

"வேண்டாம்... இனிமேல் குண்டுகளைப் பொழியாதீர்கள்... உடனடியாக இங்கிருந்து ஓடிப்போயிடுங்க!'' கெஞ்சியவாறு சுசீலா சொன்னாள். அதற்குப் பிறகு சிறிதும் தாமதிக்காமல் அவள் விஸ்வத்தை பிடித்து இழுத்து மாளிகையின் பின் பகுதிக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள். "உடனடியாக இங்கிருந்து ஓடி தப்பிச்சிடுங்க... எங்காவது  ஓடிப்போங்க விஸ்வம்...'' அவள் மீண்டும் கெஞ்சினாள்.  அதற்குள் விஸ்வமும் மிகவும் பரிதாபமான நிலையில் பயந்து அரண்டு போய்விட்டிருந்தார்.


இருவரும் பின் பகுதிக்கு ஓடினார்கள். வேகமாக கதவைத் திறந்து அவசர அவசரமாக எங்கு போகிறோம் என்றே தெரியாமல் அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் பயங்கரமான கர்ஜனையுடன் முற்றத்திலும் படிகளிலும் திண்ணையிலும் பரவி நின்றிருந்தனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்தக் கூட்டத்தில் ருக்மிணியை ஒரு முறை பார்த்தாலும். அவளுடைய அழுகையை கர்ஜனை அப்படியே அழுத்திவிட்டது.

கிளிகளின் "கலகல" சத்தத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால், எங்கும் ஒரே அமைதி படர்ந்துவிட்டிருந்தது. அஞ்சய்யாவும் பிரசாத்தும் வயலை அடைந்தபோது, அங்கு யாருமில்லை. ஆட்கள் யாருமே இல்லாத வயல். தளர்வாதம் பாதித்திருந்த ஒரு வயதான கிழவன் மட்டும் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். அவனால் நடக்க முடியவில்லை.

"மற்ற தொழிலாளர்கள் எங்கே?'' கோபத்துடன் அவர்கள் கிழவனிடம் கேட்டார்கள். ஆனால், அவனோ மவுனமாக இருந்தான்.

அவர்கள் அவனை அடிக்க ஆரம்பித்தார்கள். அடிகள் வாங்கி உடல் முழுவதும் வலிக்க, அந்த அப்பிராணிக் கிழவன் முணுமுணுத்தான்: "நீங்கள் இதற்கான பலனை அனுபவிப்பீர்கள்... நீங்கள் இதற்கான பலனை கட்டாயம் அனுபவிப்பீர்கள்.''

யாரோ அவர்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு மிருகம் வந்து கொண்டிருப்பதைப்போல அப்போது அவர்களுக்கு தோன்றியது. பகல் நேரத்தில் கனவு காண்பதைப்போல அது ஒருமுறை கண்களில் படும். பிறகு திடீரென்று மறைந்தும் போகும். பிறகு ஓடி வந்து கொண்டிருக்கும் மனிதனை அவர்கள் விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவன் வயலில் வந்து சேர்ந்தான். மாளிகையில் நடைபெற்ற சம்பவங்களை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவன் அஞ்சய்யாவிடமும் பிரசாத்திடமும் கூறினான். அதைக் கேட்டதும் இருவரும் ஒரே குரலில் கூறினார்கள்.

"இல்லை... இல்லை... அப்படி எந்தச் சமயத்திலும் நடந்திருக்காது!''

வயலைத் தேடி வந்த மனிதன் இப்போதும் மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். "அவர்கள் உங்களையும் கொல்வதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.''  நடுங்கிக்கொண்டிருந்த குரலில் அவன் சொன்னான்.

23

னம் புரியாத ஆபத்து அஞ்சய்யாவையும் பிரசாத்தையும் சூழ்ந்துவிட்டிருந்தாலும், வயலுக்கு வந்திருந்த மனிதன் என்ன கூறுகிறான் என்பது அவர்களுக்கு முழுமையாகப் புரிந்தது. அங்கிருந்து ஓடி தப்பிப்பதற்கு அவர்களால் முடியாது. தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஒருவரோடொருவர் ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாமல் வருவதைச் சந்திப்போம் என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டிருந்தார்கள். அதற்கான ஆயத்தங்களையும் ஆரம்பித்தார்கள். வருபவர்களைச் சந்திப்பதற்கு ஏற்றபடி துப்பாக்கியையும் மற்ற ஆயுதங்களையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கால் வைப்பிலும் மிருகங்கள்மீது இருப்பதைப் போன்ற ஆர்வமும் பயமும் உண்டாகிக் கொண்டிருந்தன. பல்லக்கின் சத்தம் உரத்து கேட்டுக் கொண்டிருந்தது. வயல் முழுவதும் ஒரே அமைதி! வருபவர்களைச் சந்திப்பதற்கு தயார்படுத்திக் கொண்டு அஞ்சய்யாவும் பிரசாத்தும் நின்றிருந்தார்கள்.

பல்லக்கின் உரத்த தாளத்திற்கேற்ப ஊர்வலம் வயலில் வந்து கொண்டிருந்தது.

இரண்டு சகோதரர்களும் ஊர்வலத்தை நோக்கி குண்டுகளைப் பொழிய ஆரம்பித்தார்கள். குண்டு வெடிப்பதும், கல் எறிதலும் நடந்தும் ஊர்வலம் அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டுதான் இருந்தது. துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்தவுடன் மக்கள் கடலுக்கு முன்னால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாமற் போய்விட்டது. ரத்தத்தில் குளித்து கிடந்த அவர்களுடைய இறந்த உடல்கள

மிதித்துக் கொண்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் வயலில் இருந்த அறைக்கு நெருப்பு வைத்தார்கள். பல்லக்கின் பெரிய தாளம் ஒவ்வொரு நிமிடமும் கர்ண கொடூரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. அத்துடன் முழுமையான அமைதியற்ற நிலையும்!

மிதித்து நசுக்கப்பட்ட வயல்கள்... பற்றி எரிந்து கொண்டிருந்த          வயலின் அறை. ஊர்வலம் பல்லக்கின் தாளத்திற்கேற்றபடி மீண்டும் முன்னோக்கி நகர்ந்தது. வயலை நோக்கிச் சென்றவர்களில் சிலர் அந்த வழியே உயிரைக் கையில் பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வத்தைப் பார்த்தார்கள். அவர்கள் அவரைப் பிடிப்பதற்காக ஓடினார்கள்.

மாளிகையில் இருந்த சில ஊர்வலத்தில் வந்த மனிதர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். கோபம் தாண்டவமாடிக் கொண்டிருந்த முகங்களுக்கு மத்தியில் சில நொடிகளில் பூசாரியைக் காணவில்லை. ஆனால், திடீரென்று ஊர்வலத்தின் கூட்டத்தில் அவரும் எங்கோ மறைந்து விட்டார். இப்போது தாளம் மட்டும்... பல்லக்கின் தீவிரமான தாளம் மட்டும்...!

விஸ்வமும் சுசீலாவும் உயிரைப் பிடித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். ஓடிக் கொண்டிருக்கும்போது சுசீலா சற்று நின்றாள். "எங்கே அவள்? ருக்மிணி...? அவளுக்கு என்ன நடந்திருக்கும்? வாங்க... நாம் திரும்பிச் செல்வோம். திரும்பிச் சென்று அவள் எங்கே இருக்கிறாள் என்பதைக் கண்டு பிடிப்போம்!''

"வேண்டாம்!''  விஸ்வம் சொன்னார்.

"இப்போது அவள் எங்கே இருப்பாள்?  இப்போது அவளுக்கு என்ன நடந்திருக்கும்?'' பதைபதைப்புடன் சுசீலா கேட்டாள்.

"ருக்மிணி தானே தப்பித்துக் கொள்வாள்.'' சுசீலாவைப்  பிடித்து இழுத்தவாறு விஸ்வம் சொன்னார். மீண்டும் இருவரும் ஓட ஆரம்பித்தார்கள். ஓடி ஓடி இறுதியில் அவர்கள் ஒரு மலையின் அருகில் போய் நின்றார்கள். ஒருவரோடொருவர் கைகளைக்  கோர்த்துப் பிடித்துக் கொண்டே அவர்கள் மலையின்மீது ஏற ஆரம்பித்தார்கள். அவர்கள் முழுமையாகத் தளர்ந்துபோய்விட்டிருந்தார்கள்! எனினும், உயிர் பயம் அவர்களை ஒரு இடத்திலும் நிற்பதற்குக்கூட அனுமதிக்கவில்லை. தூரத்தில் வந்து கொண்டிருந்த பல்லக்கின் சத்தம் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.

மலையின் மேலே இருந்து பார்க்கும்போது, தூரத்தில் முற்றிலும் தகர்ந்துபோன மாளிகையும் அதன் இடிந்த பகுதிகளும் தெரிந்தன. மிதித்து நசுக்கப்பட்ட வயல்கள்! எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த வயலின் அறை. விஸ்வமும் சுசீலாவும் ஒரு பாறையின் மறைவில் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடந்தார்கள். பல்லக்கின் தீவிர சத்தம் எப்போதும் காதுகளில் வந்து மோதிக் கொண்டேயிருந்தது. ஊர்வலம் மலைக்கு கீழே வந்துவிட்டிருந்தது. இருவரும் ஈர விழிகளுடன் பார்த்தார்கள். ஊர்வலம் ஆவேசத்துடன் வேக வேகமாக மலையின்மீது ஏறிக் கொண்டிருந்தது.

"நாம் இங்கேயிருந்து உடனடியாகத் தப்பிக்கணும்.'' சுசீலா சொன்னாள்: "என்னால் இனிமேல் ஒரு அடிகூட ஓட முடியாது''

"பரவாயில்லை....'' - விஸ்வம் சுசீலாவைத் தேற்றினார்: "அவர்களால் நம்மைக் கண்டு பிடிக்க முடியாது!''

"விஸ்வம், அவர்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்கள்... கட்டாயம் கண்டுபிடித்துவிடுவார்கள். வேண்டுமானால் அதற்கு இன்னும் கொஞ்சம் நேரமாகலாம். அவ்வளவுதான்.'' சுசீலா சொன்னாள்.

"ம்... கண்டு பிடிப்பார்கள்!'' அடக்க முடியாத கோபத்துடன் விஸ்வம் என்னவோ முணுமுணுத்தார்.

"இனி என்ன வித்தியாசம் இருக்கிறது! எது எப்படி இருந்தாலும் உங்களுடன் இருக்கிறேனே என்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். நாம் சேர்ந்து இறப்போம்.'' சுசீலா சொன்னாள்.

"சுசீலா, அப்படின்னா உன் கணவர்...?''


"சில நிமிடங்களில் இறக்கப் போகும் ஒருத்திக்கு என்ன கணவர்...! உங்களுடைய மடியில் கிடந்து நான் இறக்கப் போகிறேன்.''

"ஆனால், இறப்பதற்கு நான் விரும்பவில்லை. இந்த நாய்களுக்கு இதெல்லாம் எப்படி முடிந்தது? எல்லாரும் ஆண்மைத்தனம் சிறிதும் தொட்டுக்கூட பார்த்திராத பயந்த குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். கனவில்கூட நான் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் நினைக்கவில்லை.'' விஸ்வம் ஒரு நீண்ட பெருமூச்சைவிட்டார்.

"என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால்...?''

"இறப்பதற்கு முன்பு என்னுடைய குழந்தைகளை ஒருமுறை பார்ப்பதற்கு முடிந்திருந்தால்...?'' கீழே பார்த்துக்கொண்டே சுசீலா சொன்னாள்: "இதோ.... அவர்கள் வந்துவிட்டார்கள். நாலா பக்கங்களிலும் இருந்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.''

ஒவ்வொரு நிமிடமும் ஏறிக் கொண்டிருந்த பல்லக்கின் உரத்த தாளம் இப்போது முற்றிலும் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருந்தது. மக்கள் கூட்டம் ஆரவாரம் எழுப்பியவாறு அருகில் வருவதைப் பார்த்ததும், தங்களுக்குக் கிடைக்கப் போவதை கைகளை நீட்டி வரவேற்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்தவொரு வழியும் இல்லை. உயிர் இரண்டாக இருந்தாலும், ஒரே உடல் என்பதைப்போல

விஸ்வமும் சுசீலாவும் பாறையின் மறைவில் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடந்தார்கள். பாறையின்மீது கோபத்துடன் வந்து கொண்டிருந்தவர்களின் நிழல்கள் விழுந்து கொண்டிருந்தன.

சூரியனின் சிவப்பு நிறம் அடர்த்தியான மஞ்சள் நிறமாக ஆனது. இருள் எப்போதோ வந்துவிட்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.