Logo

காதல் கடிதம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6474
kaadhal-kaditham

சுராவின் முன்னுரை

வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammed Basheer)  மலையாளத்தில் எழுதிய 'ப்ரேம லேஹனம்' நாவலை 'காதல் கடிதம்' என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
இந்தக் கதை எம்.ஜி. சோமன், ஸ்வப்னா நடிக்க மலையாளத்தில் திரைப்படமாக வந்திருக்கிறது.
ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருக்க கேசவன் நாயர் வருகிறார். அந்த வீட்டின் சொந்தக்காரரின் மகள் சாராம்மா அவரிடம் தனக்கு ஒரு வேலை வாங்கித் தரும்படி கேட்கிறாள்.
ஒரு மாதம் கழித்து, அவளுக்கு தான் ஒரு வேலை பார்த்து வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

'என்ன வேலை ?' என்று அவள் கேட்க, 'என்னை காதலிப்பதுதான் உனக்கு நான் பார்த்து வைத்திருக்கும் வேலை' என்கிறார் கேசவன் நாயர். அதற்கு சாராம்மாவின் பதில் என்ன ? அதற்குப் பிறகு என்ன நடந்தது ?
ஆர்வத்தைத் தூண்டும் சம்பவங்கள் நிறைந்த அருமையான காதல் கதை இது. இந்த நல்ல கதையை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.


அன்புடன்,
சுரா (Sura)


“அன்புள்ள சாராம்மா!

வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது. அதனால்தான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்திலும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ...?

நன்றாக யோசித்து மகிழ்ச்சி தரும் பதில் தருவாய் என்ற முழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

உன்னுடைய கேசவன் நாயர்.”

கடிதத்தை ஒரே மூச்சில் எழுதி முடித்த கேசவன் தம் முதுகுப் பக்கமாய் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார். புன்னகை சிந்திய கோலத்தில் சாராம்மா அங்கு நிற்பதுபோல் ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்த்தார். வெறும் கற்பனைதான்! மீண்டும் தான் எழுதிய அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தார். அதில் கவிதை இருக்கிறது! ஏன், கேசவனின் இதய வெளிப்பாடு முழுக்க அதன் ஒவ்வொரு வரியிலும் உயிர்ப்புடன் குடிகொண்டிருக்கிறதே!

அவருக்குப் பரம திருப்தி! கடிதத்தை பாக்கெட்டில் வைத்த அவர், தாம் பணிபுரியும் பாங்க் கட்டடத்தை விட்டு இறங்கித் தெருவில் கால் வைத்து ஒய்யாரமாக நடந்து போனார். அவள் பதில் எழுதுவாளா? அப்படி எழுதினால், அது என்னவாக இருக்கும்? சாராம்மாவின் குண நலன்களை அலசிப் பார்க்கிறபோது அவள் கேலி செய்வாள் என்றுதான் அவருக்குப் பட்டது. முன் ஒருசமயம் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தார் கேசவன். அன்று சாராம்மாவிடம் பல விஷயங்களைக் குறித்துப் பேசி, கேலி செய்து கொண்டிருந்தார். கடைசியில் பேச்சு, பெண்களில் வந்து முடிந்தது. “தெய்வத்தின் உன்னத சிருஷ்டிதான் பெண்கள்” என்றாள் சாராம்மா. பெரிய ஒரு கவிஞர் பாடியிருந்ததை அவள் மேற்கோளாக வேறு காட்டினாள். அதைக் கேட்டதும் கேசவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “பெண்களின் தலைக்குள் என்ன இருக்கிறது? முழு நிலா வெளிச்சம். அப்போது ஏதோ முற்றும் என்பார்களே” என்று இழுத்தார் அவர். உதாரணமாக, ஏழு முறை திருமணம் செய்து கொண்ட ஒருவனைப் பற்றிய கதையையும் கூறினார். ஏழாமவள் ஏதோ எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஏணி தடுக்கிக் கீழே விழுந்து விடுகிறாள். தலை குப்புற விழுந்த அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுத் திரும்பி வருகிறான் கணவன். குசலம் விசாரித்தான் இன்னும் திருமணமாகாத ஒரு நண்பன். அவனிடம் அந்த ஆசாமி சொன்னானாம்:

“நல்ல வேளை, அடி அவ்வளவு மோசமில்லை.”

“தலை இரண்டாகப் பிளந்து விட்டது என்று சொன்னாங்களே!”

“ஆமாம்...”

“அப்போ மூளை வெளியே தெரிந்திருக்குமே!”

அவ்வளவுதான்; விழுந்து விழுந்து சிரித்துவிட்டான் கணவன். “மூளையா? பொம்பளைகளிடம் எங்கேயாவது மூளை இருக்குமா?” என்றானாம்.

“இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், பெண்களின் தலைக்குள் மருந்துக்குக்கூட மூளை இல்லை. இருப்பது முழு நிலவின் பிரதிபலிப்பு என்பதுதான். வெறும் பைத்தியக்கார, குழம்பிய மூளை!” என்று முடித்தார் கேசவன்.

அப்போது சாராம்மா பதில் ஒன்றும் பேசவில்லை. கேசவனுடன் சேர்ந்து அவளும் கொஞ்சம் சிரித்தாள். அதற்குப் பிறகுகூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கேசவனிடம் சாராம்மா அது பற்றிப் பேசியதில்லை. “இருந்தாலும், காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில் சாராம்மா நிலா வெளிச்சம் பற்றிய சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டால்? நம்மையே கேலி செய்து விட்டால்...” என்றுதான் தோன்றியது கேசவனுக்கு. இருந்தாலும் பெண்ணாயிற்றே. இன்னுமா அதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கப் போகிறாள்? எப்போதோ மறந்திருப்பாள். எதையெதையோ மனதில் அசை போட்டபடி நடந்து போன கேசவன், ஹோட்டல் படிகளில் கால் வைத்தார். காபி குடிக்க வேண்டும் என்று அப்படி ஆவல் ஒன்றும் இல்லை. ஆனாலும் ஒரு கோப்பை பருகியபின் சிந்தனையில் ஆழ்ந்தார். கடிதத்தைப் பெற்றதும் சாராம்மா என்ன செய்வாள்? சொல்லப்போனால் காதல் என்ற ஒன்று இதுவரை சாராம்மாவை அண்டியதாகவே தெரியவில்லை! கிட்டத்தட்ட ஒரு லட்சம் தடவை கேசவன் அதற்காக முயற்சி செய்து பார்த்துவிட்டார். ஆனால் காதல் வாடை வீச ஆரம்பித்துவிட்டாலே கைக்குட்டை வைத்து மூக்கைப் பொத்திக் கொண்டு விடுகிறாள் சாராம்மா! அதன்மேல் அவளுக்கு ஏனோ அத்தனை வெறுப்பு.

அதே சிந்தனையோடு தாம் குடியிருக்கும் வீட்டின் மேல் பகுதிக்குப் படி வழியே ஏறலானார். ஆனால் மேலே நோக்கியதும் ஒரு நிமிஷம் என்ன காரணத்தாலோ ஸ்தம்பித்து நின்றுவிட்டார்!

பெரிய கம்பு ஒன்றைக் கேசவனின் அறை ஜன்னல் வழியே நுழைத்து, உள்ளேயிருந்து எதையோ எடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள் சாராம்மா!

அவ்வளவுதான்; மேலே போகாமல் கீழே வந்துவிட்டார். அப்படி அங்கே எதை எடுக்க முயன்று கொண்டிருந்தாள் சாராம்மா? மணிபர்ஸ் என்றால் அது கேசவனின் பாக்கெட்டில் அல்லவா இருக்கிறது? ஒருவேளை வேஷ்டி, சட்டை எதையாவது எடுக்க எத்தனித்துக் கொண்டிருக்கிறாளோ? இல்லாவிட்டால் ஏதாவது புத்தகத்தைத் தேடியிருப்பாளோ...? அப்படி வைத்துக் கொண்டாலும் அவள் வாசிக்காத புத்தகம் அங்கே என்ன இருக்கிறது? “இது தேவைதானா, சாராம்மா? உன்னை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். உனக்குத் தெரியுமா? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உலகத்தையே உன் கையில் கொண்டுவந்து தருவேன். உனக்குத் தெரியுமா?” இப்படி ஏதாவது ஆளை இழுக்கிற மாதிரி வசனம் பேச வேண்டும். அப்படியே, “இந்தா சாராம்மா! நான் உனக்கு என் இதயத்தைத் திறந்து எழுதிய காதல் கடிதம்” என்று கூறி அந்தக் கடிதத்தை அவளுடைய கையில் திணிக்க வேண்டும். அதை வாசித்து முடித்த அவள், காதலை நினைத்து உருகிப் போய் உட்கார்ந்திருப்பாள். அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம்  செய்வார் கேசவன். அப்போது இரண்டு உள்ளங்களும் சங்கமமாகும்- இப்படி மனத்தில் ஒரு குட்டிக் கதையையே அசை போட்டுக் கொண்டிருந்தார் கேசவன்.

“என்ன, இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?” மேலே இருந்து கேட்டாள் சாராம்மா.

“யாரு, சாராம்மாவா?” தெரியாதவர் மாதிரி கேட்டுக் கொண்டே மாடியேறிப் போனார் கேசவன். இதயத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஒரு துடிப்பு அவருக்கு.

அங்கே வியர்வை வழிய நின்றிருந்தாள் சாராம்மா.

“நானும் ஒரு மணி நேரமா முயற்சி பண்ணிப் பார்க்கிறேன். கம்பியில மாட்டிக்குவேனான்னுது. நாளைக்கு எப்படியும் ஒரு கள்ளச் சாவி தயார் பண்ணிட்டுத்தான் வேறு வேலை பார்க்கணும்.”

“நான் இல்லாத சமயத்தில் என் அறையைத் திறக்கிறதுக்கா?”

சாலையில் போய்க் கொண்டிருந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

கேசவன், “ஆமாம்... அந்தக் கம்பியில அப்படி என்ன மாட்டிக்க மாட்டேங்குது?” என்றார்.

“ஓ! அதைச் சொல்ல மறந்துட்டேனே! கீழே நிக்கிறப்போ என்ன நினைச்சீங்க?”


“நான் நினைச்சேன்...” கேசவன் என்ன பதில் கூறலாம் என ஒரு நிமிஷம் ஆலோசித்துப் பார்த்தார். அவர், “எதையோ எடுக்கப் பிரயத்தனப்படுறதா” என்பதற்குள், “வேறே எதை எடுப்பேன்? உங்களுக்கு வந்த பத்திரிகையைத்தான்! தபால்காரர் ஜன்னல் வழியா உள்ளே போடுறதைப் பார்த்தேன். வேலை ஒண்ணும் இல்லாததால் பொழுது போகவில்லையேன்னு...” என்றாள் சாராம்மா.

“அப்படின்னா, என்னை நேசிக்கலாமே!” மனசினுள் இப்படி நினைத்தபடி தம் பாக்கெட்டினுள் கையை நுழைத்து, ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தார். அதை வாசித்து முடித்த சாராம்மா அதைச் சுருட்டி ஒரு மூலையில் கசக்கி எறிந்தாள்! “வேற விசேஷம் ஒண்ணுமில்லையா?” என்றாள்.

கேசவன் பதில் பேசவில்லை. அறையைத் திறந்து உள்ளே ஒரு மூலையில் கிடந்த பத்திரிகையை எடுத்துச் சாராம்மாவின் கையில் கொடுத்தார். தன் ஷர்டைக் கழற்றி ஆணி ஒன்றில் தொங்க விட்டார். பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள் சாராம்மா.

நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் முகத்தில் வெளிப்பட்டு விடாத மாதிரி பேசினார் கேசவன்.

“அப்புறம் என்ன சங்கதி? இன்னிக்கு சித்தியோடு சண்டை ஒண்ணும் இல்லையா?”

“போகிற போக்கைப் பார்த்தால் சித்தியும் அப்பனும் என்கிட்டேகூட வாடகை வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்கபோல் இருக்கு!”

“விஷயம் அந்த அளவுக்கு வந்திருச்சா?”

“பின்னே என்னவாம்? நான் இப்போ இருக்கிற அறையையும் வாடகைக்கு விட்டுவிட்டு....”

“அப்படின்னா உனக்கு?”

“இவளுக்கு எதுக்கு தனியா அறை? சமையல் அறையிலே ஒரு மூலையில் படுடீன்னு சொன்னா போதாதான்னு பார்க்குறா சித்தி.”

“உன் அப்பன் என்ன சொல்றான்?”

“சித்தி சொல்றப்போ அப்பன் வேண்டாம்னா சொல்லிவிடப் போறார்?”

“சித்தியைக் கல்யாணம் கட்டிக்கிறதுக்கு முன்னாடி குணம் எப்படி?”

“யாருடைய குணத்தைக் கேக்கறீங்க? சித்தியினுடையதையா?”

“இல்லை. உன் அப்பனைப் பத்திக் கேக்கறேன்.”

“அப்போ எனக்கு வெறும் அப்பா என்கிற ஸ்தானத்துல இருந்தார். அவ்வளவுதான். நான் நினைக்கிறேன், ஆண்களுடைய தலைக்குள்ளே ஒண்ணுமே இல்லைன்னு.”

கேசவன் பதில் ஒன்றுமே பேசவில்லை. சிறிது நேரம் கழித்துக் கேட்டார். “அப்படின்னா இந்தக் கட்டடத்திலே உனக்கும் பங்கு இருக்குன்னு சொல்லு.”

“எனக்கு எப்படி இருக்க முடியும்? சித்தி கொண்டு வந்த வரதட்சணைப் பணத்தை வெச்சுத்தான் இந்த வீட்டின் மேலே இருந்த கடனையே அப்பன் அடைச்சாரு. அம்மா சாகப் பொழைக்க கெடக்கிறப்போ ஆன செலவும், செத்தப்புறம் ஆன செலவுமே கடன் உண்டாகக் காரணமாம். அப்பன் சொல்லித்தான் எனக்கே இது தெரியும். அம்மா மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் உயிரோடு இருந்திருந்தா நான் பி.ஏ. முடிச்சிருப்பேன். வேலை கிடைக்கிறதும் அப்படியொண்ணும் கஷ்டமாயிருந்திருக்காது.”

“பி.ஏ. படிச்சுட்டு எத்தனையோ பெண்கள் வேலை இல்லாம இருக்காங்களே! இருந்தாலும் உன் மாதிரி ஒரு பெண்ணுக்கு வேலை இல்லாம இருக்கிறதுங்கறது கொஞ்சம் கஷ்டந்தான்.”

பத்திரிகையின் பக்கங்களிலிருந்து விழிகளை உயர்த்திய சாராம்மா கெஞ்சுகிற பாவனையில் கேட்டாள்:

“நீங்க வேலை பார்க்கிற பாங்க்கில் ஏதாவது காலி இருந்துச்சுன்னா முயற்சி செஞ்சு பாருங்களேன்! அங்கே இல்லாட்டி, வேற எங்கேயாவது...”

கேசவன் முகத்தை உயர்த்தி அவளைப் பார்த்தார். சாராம்மாவின் நனைந்த விழிகளையும் கழுத்து, மார்பு முதலானவற்றையும் ஒரு நிமிஷம் ஆராய்ந்து பார்த்தன அவருடைய கண்கள். பின்பு தமக்குள் எண்ணிப் பார்த்துக் கொண்டார். “ஆண்களை நேசிப்பதைவிடப் பெண்களுக்கு அப்படி என்ன பெரிய வேலை வேண்டிக் கிடக்குது? இதைவிட்டு ஆஃபீஸ் வேலைக்குப் போகிறேன் என்றால்?”

இருந்தாலும் கேசவன் வெளிப்படையாக, “முயற்சி செய்து பார்க்கிறேன்” என்றார்.

“எங்கேயாவது இடம் காலியிருக்கா?”

“இல்லாம என்ன? என் இதயத்திலேதான் ஒரு பெரிய இடம்

காலியா கிடக்குதே! அங்கே வரணும்னா சிபாரிசு, லஞ்சம் எதுவுமே தேவையில்லை.” தம் மார்பைத் தடவித் தமக்குள் இப்படிக் கூறிக் கொண்ட கேசவன் வெளிப்படையாக, “இருக்கு” என்றார்.

“எங்கே?”

“நாளைக்குச் சொல்றேன்.”

“என்ன வேலை?”

“அது...” கேசவனின் அதரத்தில் மென்னகை தவழ்ந்தது. “எதிரே இருப்பவனைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் இதய தாகத்தை வெளிப்படுத்திய அவனுடைய கடிதத்தைக் கசக்கியா எறிகிறாய்? சரி; எறிந்ததுதான் எறிந்தாய்! ஒருவார்த்தை அதைப்பற்றிப் பேசினாயா? என்னை யாருன்னு நினைச்சுக்கிட்டிருக்கே!” ஆணாய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டார் கேசவன். இடது கையால் மேலுதட்டைத் தடவிப் பார்த்தார். ஒரு சிறு அரும்பு மீசையாவது இனி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். கண்களில் இனம் புரியாத ஒளி தோன்றச் சொன்னார்:

“நாளைக்குக் கட்டாயம் சொல்றேன்.”

“சொன்னாப் போதாது. கிடைக்குமா?”

“நிச்சயமாக.”

“இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.” காதல் கடிதம் சம்பந்தமாக ஒரு வார்த்தைகூட பேசாமல் கம்பையும் பத்திரிகைகளையும் கையில் எடுத்துக் கொண்டு படியிறங்கிப் போன சாராம்மா கீழேயிருந்து உரக்கச் சொன்னாள்:

“கேட்டதை மறந்திடாதீங்க!”

கேசவனிடம் கொஞ்சமாவது அசைவு இருக்க வேண்டுமே! அவள் சுருட்டி எறிந்த காதல் கடிதம் அறையின் ஒரு மூலையில் அநாதையாய்க் கிடந்தது. வெறுப்புடன் தமக்குள் அவர், “சேச்சே!” என்று முனகிக் கொண்டார்.

2

ந்தா, என் இதயத்தின் சாவி” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு மறுநாள் காலையில் தன் அறைச்சாவியை சாராம்மாவிடம் கொடுத்து விட்டு பாங்குக்குப் போனார் கேசவன்.

மாலையில் திரும்பி வரும்போது அவருடைய கையில் சாவியைத் தந்தாள் சாராம்மா. முதல் நாள் அவளிடம் படிக்கக் கொடுத்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு மேலே போன கேசவன், நாற்காலியை எடுத்து அறைக்கு வெளியே போட்டுக் கொண்டு புத்தகத்தைப் பிரித்தார். அப்போது எதையோ வெற்றி கொள்ளப் போகும் பெருமிதம் அவருடைய இதயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சாராம்மாவுக்குத் தாம் பார்த்து வைத்திருக்கிற வேலையைப் பற்றிச் சொன்னால் அவள் முதலில் தன்னைக் கொன்று விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பாள்! இதை நினைத்துப் பார்த்த கேசவன் தமக்குத்தாமே சிரித்துக் கொண்டார்.

அப்போது சாராம்மாவே மேலே ஏறி வந்தாள். வேலையைப் பற்றிக் கேட்கவே அவள் வருகிறாள் என்பது தெரிந்தும், குரலில் அதைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் வழக்கமாகப் பேசுவதுபோல் கேசவன் கேட்டார்: “சாராம்மா, வேறென்ன விசேஷம்?”

வழக்கமான புன்சிரிப்புடன் சாராம்மாவும், “ம்... ஒண்ணுமில்லை. அறையிலே ஏதாவது காணாமப் போயிடுச்சா பாருங்க” என்றாள்.

“நான் பார்க்கலையே!” இது கேசவன்.

“அப்படின்னா நல்லாப் பாருங்க.”

கேசவன் ஒன்றும் பேசவில்லை. ஆர்வத்துடன் பத்திரிகை படிக்கிற மாதிரி பாவனை செய்து கொண்டிருந்த அவருடைய மனம், சாராம்மாவிடம் அடுத்துப் பேசப் போகும் சங்கதி குறித்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. இதயத்திலிருந்து அது வெளிப்படும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.


சாராம்மாவோ ஜன்னலோரம் சாய்ந்து நின்று, கேசவன் நாயரின் தலையிலுள்ள சுருண்ட கேசத்தையும், புன்னகை தவழ்ந்து கொண்டிருந்த முகத்தையுமே நோக்கிக் கொண்டிருந்தாள்.

“அந்த வேலை விஷயமா ஒண்ணும் சொல்லலையே!” அவரிடம் வினவினாள் சாராம்மா.

“ஆனா, அது உனக்குப் பிடிக்குமான்னுதான் பார்க்கறேன்.”

“சம்பளம் குறைச்சலா இருந்தாலும் பரவாயில்லை. இங்கே எல்லாருக்கும் பாரமா இருப்பதுபோல் படுகிறது. இந்த வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போயிடுச்சு. சொல்லப்போனா சில நேரங்கள்லே எனக்கு எப்படியெல்லாம் தோணுது தெரியுமா?”

“எப்படியெல்லாம் தோணுது? சொல்லு, கேக்கறேன்.”

எப்பவும் தமாஷ்தானா? நான் சீரியஸாகவே சொல்றேன். எந்த வேலையா இருந்தாலும் நான் ஒப்புக்கத் தயார்!”

“உனக்கு சமையல் பண்ணத் தெரியுமா?”

“எதுக்கு கேக்கறீங்க?”

“சும்மா கேட்டேன்.”

சாராம்மா சொன்னாள்:

“தெரியும். சோறு சமைக்கத் தெரியும்; கூட்டு வைக்கத் தெரியும்; பலகாரங்கள் செய்யத் தெரியும்; டீ போடத் தெரியும்; காபி போடத் தெரியும்; கொக்கோ-ஓவல்டின் எல்லாம் தயாரிக்கவும் தெரியும்...”

“சுருக்கமாகச் சொல்லப்போனால் கால்படி அரிசி கொண்டு வந்து கையில் கொடுத்தா, அதை வடித்து...”

“என்ன, என்னைச் சமையல்காரியா ஆக்கிடலாம்னு நெனைச்சுட்டீங்களா?”

“சேச்சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. பொதுவா படிச்ச பெண்களுக்கு சமையல்னாலே என்னன்னு தெரியாது. கரி, புகைன்னாலே அவங்களுக்கு ஒத்துக்காது. வகை வகையா டிரெஸ் பண்றதுக்கும், பவுடர் பூசிக்கிறதுக்கும், உதட்டைச் சிவப்பாக்கிக்கறதுக்குமே நேரம் சரியாயிருக்கும். அலங்காரமெல்லாம் முடிஞ்சு அப்படியே பையை ஸ்டைலாகத் தூக்கிட்டுப் போனா...?”

“பையா?”

“அதுதான் ஹேண்ட்பேக்.”

“ஓ!”

“அப்படித் தூக்கிக்கிட்டு ஒய்யாரமாப் போற ஒரு பெண்தானா நீயும்னு பார்க்கறதுக்காகக் கேட்டேன்.”

“என்கிட்டே அப்படிப்பட்ட “பேக்” எல்லாம் இல்லே.”

“சரி, சாராம்மா... அப்படி அந்தப் பையிலே அவங்க என்ன வெச்சிருப்பாங்க?”

“முகம் பார்க்க ஒரு சிறு கண்ணாடி, ஒரு சின்ன பவுடர் டப்பா, சின்னதா ஒரு சீப்பு...”

“அதில் காதல் கடிதம் ஏதாவது இருக்குமா?”

“என்ன சொன்னீங்க? காதல் கடிதமா?”

“ம்... வர்ற ஒவ்வொரு காதல் கடிதத்தையும் அதில் வாங்கி வெச்சிருந்தா சாயங்காலம் முழுசா அது நிறைஞ்சவுடனே குப்பையில் கொண்டு வந்து கொட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.”

“எனக்கு அதைப் பத்தியெல்லாம் ஒண்ணும் தெரியாது. சரி, எனக்கு என்ன மாதிரி வேலை பார்த்து வெச்சிருக்கீங்க?”

“நிச்சயம் உனக்குப் பிடிக்காது.”

“பிடிக்கும்.”

“உண்மையாகவா?”

“சத்தியம் பண்ணிச் சொல்லட்டா? பிடிக்கும் பிடிக்கும்!”

“அப்படின்னா...” கேசவன் சொல்லத் தயங்குவதுபோல் இருந்தது. “அதைப் எப்படிச் சொல்றது? உனக்குப் பிடிக்கலேன்னா...” என்று இழுத்தார்.

“அதுதான் சொல்லிட்டேனில்லே... எனக்குப் பிடிக்கும்னு!”

“ஒருவேளை பின்னாலே அதுக்காக வருத்தப்பட ஆரம்பச்சிட்டியானா?”

சாராம்மா உறுதியான குரலில் சொன்னாள்:

“நிச்சயமா இல்ல! வேலைக்காக நான் எந்தவிதமான கஷ்டத்தையும் தாங்கிக்கத் தயாராயிருக்கேன். ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அது நடந்தது, நீங்க இங்கே குடி வர்றதுக்கு முன்னாடி. மூணு தடவை என்னைப் பெண் பார்க்க வந்திருக்காங்க. ஒவ்வொரு தடவையும் இது முடிஞ்சிடாதான்னு ஆவலுடன் நான் உட்கார்ந்திருப்பேன். இதுவரை கண்டோ- கேட்டோ இராத மனுஷங்களோடு வாழப்போறதை நினைச்சு எனக்குக் கொஞ்சமும் தயக்கம் தோணலை. எப்படியாவது இந்த நரகத்துலேயிருந்து தப்ப மாட்டோமாங்கிற ஒரே சிந்தனைதான் எனக்கு. ஆனா துரதிருஷ்டவசம்னுதான் சொல்லணும். மூணு முயற்சியுமே தகர்ந்து போச்சு. வரதட்சிணை இல்லாம என்னைக் கொண்டு போக யாருக்குமே துணிச்சல் இல்ல! எல்லாம் என் தலையெழுத்துன்னாங்க அப்பாவும் சித்தியும். எல்லாத்துக்கும் நான் ஒருத்திதான் காரணமாம்! இந்த நாட்டிலே மழை பெய்யலேன்னா அதுக்கும் நான்தான் காரணமாம். இங்கேயிருந்து தப்பிச்சா போதும்னு எத்தனையோ இடங்களிலே வேலைக்கு முயற்சி செஞ்சு பார்த்துட்டேன். கிடைச்சாத்தானே!”

“ஏன் கிடைக்காம?”

“கிடைச்சிருக்கா?”

“சொல்றேன்... ஆமாம் வரதட்சிணை அது இது என்கிறாங்களே! அப்படின்னா என்ன!”

“பொண்ணைக் காப்பாத்த ஆணுக்குத் தர்ற சம்பளம்.”

“சரியாப் புரியலே.”

“இப்போ ஒரு ஆள் என்னைக் கட்டிட்டுப் போறார்னு வச்சுக்குங்க...”“

“சரி நான்னே வச்சிக்குவோம்.”

“அப்படிக் கட்டிட்டுப் போற நீங்க எனக்காகச் செலவு செய்ய வேண்டாமா? என் சாப்பாடு, துணிமணி, சோப்பு, பவுடர், சென்ட், பிரசவம், சாவு எல்லாத்துக்கும் செலவு செய்ய முன்கூட்டியே ஒரு மொத்தத் தொகையை உங்க கையில தந்திடறது; அப்படித் தந்தாதான் என்னையே கல்யாணம் கட்டிப்பீங்க!”

“உன்னைக் காதலிக்காதவன் வேணும்னா அப்படிச் செய்வான். உன்னை யாராவது...”

“யாராயிருந்தாலும் கொடுத்துத்தான் ஆகணும். அதுதான் எங்க ஜாதி மரியாதை...”

ஒருவிதத்தில் பார்த்தால் வரதட்சிணை என்ற ஒன்று இருப்பது கேசவன் நாயருக்கு மகிழ்ச்சியையே தந்தது.

“அப்படி ஒண்ணுமட்டும் இன்னிக்கு இல்லாம இருந்தா...” சாராம்மா சொன்னாள்.

“வரதட்சிணையை நான் பலமா ஆதரிக்கிறேன்.” கேசவன் சொன்னார்.

“வரதட்சிணைச் சம்பிரதாயத்தை நான் விரும்புறேன்.”

“எதுக்கு?”

“சொல்றேன். இந்த மாதிரி பழக்கம் நம்பூதிரிகளிடமும் இருக்கு.”

“ஏன்? முஸ்லிம் சமுதாயத்திலே கூடத்தான் இருக்கு.” சாராம்மா.

“வரதட்சிணை தர முடியாதவங்க வரதட்சிணை இல்லாமலே கல்யாணம் செஞ்சுக்கத் தயாராயிருக்கிற பிற சமுதாயத்தவரைத் திருமணம் செய்துக்க முன்வரணும்.”

“புதுமையான ஐடியாதான். அதிருக்கட்டும். இடையில் நான் ஒண்ணு கேட்கட்டா?”

“தாராளமா.”

“எனக்கு என்ன வேலை பார்த்து வெச்சிருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?”

“ஆனா, அது உனக்குப் பிடிக்காதேன்னு பார்க்கறேன்.”

“அதுதான் சொல்லிட்டேனே, எனக்குக் கட்டாயம் பிடிக்கும்னு.”

“அப்படின்னா அது...” கேசவன் சென்ட் பாட்டிலைத் திறப்பது போன்று லாவகமாக இதயத்தைத் திறந்து சொன்னார்: “சாராம்மா, நான் உன்னை விரும்புகிற மாதிரியே நீயும் என்னை முழு மனசோட விரும்பணும். அதுதான் உனக்காக நான் தேடி வெச்சிருக்கிற வேலை.”

சாராம்மா ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துதான் போய்விட்டாள். அவளுடைய முகத்தில் குப்பென்று ரத்தம் பரவ ஆரம்பித்து விட்டது. ஒன்றுமே பேசாமல் மவுனமாய் நின்று கொண்டிருந்தாள்.

கேசவன் தொடர்ந்தார்: “நான் ரொம்ப நாளாகவே உன்னை நேசிக்கிறேன். அதாவது என்னைவிட... என் இதயத்தைவிட...”

அவ்வளவுதான்... அவள் சிரித்து விட்டாள்! இப்போது முகத்தில் இனம் புரியாத ஒரு ஒளி வந்து குடிகொண்டு விட்டதுபோல் இருந்தது!

கேசவன் கேட்டார்: “சாராம்மா, நான் உனக்குத் தேடி வெச்சிருக்கிற வேலை எப்படி?”

மெல்லிய குரலில் சாராம்மா சொன்னாள்: “வேலை பரவாயில்லே; சம்பளம் எவ்வளவு தர்றதா உத்தேசம்?”

“சம்பளம்?” என்று கேட்ட கேசவன் தமக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார்: “வீரப் பரம்பரையின் ரத்தமாக்கும் என் உடலில் ஓடுவது! யுத்தம்னா யுத்தந்தான்! நானா பயப்படுவேன்? வெற்றி அல்லது வீர மரணம்...” “சரி, என்ன சம்பளம் உனக்கு வேணும்?” சாராம்மாவிடம் வினவினார் கேசவன்.

“நீங்களே சொல்லுங்க.”

சிறிது நேர யோசனைக்குப்பின் கேசவன் சொன்னார்: “இருபது ரூபாய்.”

“ரொம்பவும் குறைவாயிருக்கே.”

“ஆனா, அதுக்குமேலே ஒரு பைசா என்னாலே தர முடியாது. தினமும் ஒன்பது மணி நேரம் வீதம் முப்பது நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து கிடைக்கிற பணத்திலே உங்கப்பனுக்கு வீட்டு வாடகை, ஹோட்டல்காரனுக்குப் பணம், சலவை செய்பவனுக்கு கூலி எல்லாம் கொடுத்ததுபோக மீதி இருக்கிறது அந்தத் தொகைதான்! அதைச் சேமிக்கவே கொஞ்சம் நஞ்சம் பட்டினி கிடந்தாத்தான் முடியும். அப்படி இந்த வேலையிலே உனக்கு என்ன கஷ்டம் இருக்கு? சொல்லு சாராம்மா?”

“என்ன இருந்தாலும் கஷ்டமான வேலை இல்லையா? உங்களுக்காவது இருபத்துநாலு மணி நேரத்தில் வெறும் ஒன்பது மணிநேரந்தான் வேலை; பாக்கி பதினஞ்சு மணி நேரமும் ரெஸ்ட்தானே. ஆனா எனக்கு அப்படியா? ஒரு நிமிஷமாவது என்னால ஓய்வுன்னு இருக்க முடியுமா? ராத்திரியும் பகலும் சாப்பிடறப்பவும் உறக்கத்திலேயுங்கூட உங்களை நான் நெனச்சிட்டிருக்கணுமா இல்லையா? நீங்க அழுகிறப்போ நானும் அழணும்; நீங்க சிரிக்கிறப்போ நானும் சிரிக்கணும். நீங்க சாப்பிடறப்போ நான் சும்மா உட்கார்ந்திருக்கணும். நீங்க உறங்கறப்போ முழிச்சிருந்து உங்களைக் கவனிக்கணும்.” ஒரு நீண்ட பட்டியலையே ஒப்பித்த சாராம்மா ஒரு தினுசாகக் கேசவனைப் பார்த்தாள். பிறகு, “அது இருக்கட்டும். இந்த வேலை எனக்குத் தற்காலிகமானதா? நிரந்தரமா?” என்றாள்.

“சத்தியமா நிரந்தரமானது.”

சாராம்மாவுக்கு இப்போதுதான் திருப்தி உண்டானதுபோல் இருந்தது.

“நீங்க போய்விட்ட பிறகும் இந்த வேலை இருக்குமில்லே?”

“அதாவது?”

“அதாவது, நீங்க காலமாயிட்டாலும் எனக்கு இந்த வேலை உண்டான்னுதான் கேக்கறேன்.”

“அதில் என்ன சந்தேகம்?”

“அப்புறம் யார் சம்பளம் தர்றது?” சாராம்மாவுக்கு இப்படி ஒரு சந்தேகம்.

கேசவன் ஒன்றும் பேசவில்லை. என்ன பதில் சொல்ல முடியும்? அவரது மவுனம் சாராம்மாவுக்குச் சிரிப்பை வரவழைத்து விட்டது. கேலி செய்கிற தொனியில் அவள் சொன்னாள்: “பொம்பளைங்களுக்கு மூளையிலே நிலா வெளிச்சந்தான் இருக்குன்னு கேலி பண்ணுவீங்களே, இப்போ என்ன சொல்றீங்க? நீங்க செத்துப் போனப்புறம் எனக்கு யார் சம்பளம் தர்றது?”

தீவிரமான யோசனையில் ஆழ்ந்தார் கேசவன்.

“ரெண்டு பேருமே ஒரே நேரத்தில் செத்துப் போயிட்டா?” -கேசவன்.

“ஆசையப் பாரு! நீங்க சாகறப்பவே நானும் போயிடணுமா?”

“சாராம்மா என்னைப் பார்த்தா கேலியாவா இருக்கு?”

“அதெல்லாம் இல்லை. உள்ள விஷயத்தைச் சொன்னா கேலியாம் கேலி! என்ன இருந்தாலும் நான் பொம்பளை இல்லையா? தலையையே பொளந்தாலும் மூளை இருக்குமா அங்கே?”

“சாராம்மா மன்னிக்கணும். உன் அளவுக்கு அழகோ அறிவோ என்கிட்டே இல்லை. ஒத்துக்கறேன்.”

“இப்போ நீங்கதான் என்னைக் கேலி செய்கிற மாதிரி இருக்கு!”

“உன்னைப் போய் நான் கேலி செய்வேனா?”

“சும்மா பண்ணுங்க.”

அவ்வளவுதான். உளற ஆரம்பித்துவிட்டார் கேசவன் நாயர்!

“என் இதயத்து நாயகியை, என் தேவதையை, என் ஆருயிரை நான் கேலி செய்வேனா? என்...”

சாராம்மா இடைமறித்து, “கொஞ்சம் நிறுத்துங்க. உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்” என்றாள்.

“தாராளமாக ஆணையிடு!”

“எப்போதிலிருந்து நான் உங்க இதயத்து நாயகி?”

“என்னிக்கோயிருந்து!”

“இந்த விஷயத்தை ஏன் என்கிட்டே இவ்வளவு நாளா சொல்லல?”

“நான் சொல்லலியா- ஒவ்வொரு நாளும் உன்னை நினைப்பேன். காதல் கடிதம் எழுதுவேன்.”

“அதுக்கப்புறம்?”

“கிழிச்செறிஞ்சிடுவேன்.”

“சரி, உங்க இதயத்து நாயகின்னா நான் என்ன சொன்னாலும் நீங்க கேப்பீங்க இல்லையா?”

“என்ன சொன்னாலும் செய்யத் தயார். யாரையாவது கொல்லணுமா, கொல்றேன். கடலை நீந்திக் கடக்கணுமா, கடக்கறேன். உனக்காக நான் சாகக்கூடத் தயார்!” உணர்ச்சி வசப்பட்டு பேசினார் கேசவன்.

“இப்போதைக்குச் சாக வேண்டாம். எங்கே, தலைகீழா நில்லுங்க பார்ப்போம்.”

“உண்மையாகவே நிக்கணுமா?”

“ஆமாம்.”

“அதாவது சிரசாஸனம்... இல்லியா?”

“ம்...”

சட்டையைக் சுழற்றிய கேசவன் அதை நாற்காலியின்மேல் வைத்தார். வேஷ்டியை மடக்கிக் கட்டித் தலையைத் தரையில் ஊன்றிக் கால்கள் இரண்டையும் மேல் நோக்கித் தூக்கி நின்றார்.

அவரையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து நின்ற சாராம்மா மெல்ல முறுவலித்தாள்.

“பேஷ்.”

கேசவன் நின்ற கோலத்தில் கேட்டார்: “சாராம்மா! உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இல்லையா?”

அவள் பதில் ஒன்றும் கூறவில்லை.

கேசவன் மீண்டும் கேட்டார்.

“சாராம்மாவுக்கு வேலை பிடிச்சிருக்கா?”

ஓசையின்றிப் படியில் இறங்கிப் போன சாராம்மா, கீழே இருந்தபடி “நாளைக்குச் சொல்றேன்...” என்றாள்.

3

“சாராம்மா, நான் சொன்ன வேலை உனக்குப் பிடிச்சிருக்கா?” மறுநாள் மீண்டும் கேசவன் கேட்டார்.

“நாளைக்குச் சொல்றேனே!”- சாராம்மா.

அதற்கு மறுநாள் அவர் கேட்டபோதும் சாராம்மா அதே பதிலைத்தான் கூறினாள்.

இப்படியே சில நாட்கள் சென்றன.

அப்புறம் அவர் ஒன்றும் கேட்கவில்லை. மாறாக, உறுதியான குரலில், “நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்” என்றார் திடீரென்று!

“நல்ல தீர்மானந்தான் எடுத்திருக்கீங்க. அதுக்குப் பிறகாவது யாராவது உங்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதட்டுமே!”

கேசவன் பதில் கூறவில்லை.

சாராம்மா கேட்டாள்:

“அப்போ கட்டாயம் தற்கொலை பண்ணிக்கிறதுன்னு முடிவெடுத்துட்டீங்க?”

“ஆமாம்.”

“அந்த மங்கள காரியத்தை என்னிக்கு நடத்தறதா உத்தேசம்?”

கேசவன் அதற்குப் பதில் கூறாமல் இருக்கவே, அவளே வினவினாள்: “எந்த முறையில் தற்கொலை செய்துக்கலாம்னு யோசனை?”

“இன்னும் அதுபத்தி நான் முடிவெதுவும் எடுக்கல. எப்படிச் செய்யலாம்னு சிந்திச்சுக்கிட்டு இருக்கேன்.”

“ரெயில்வே தண்டவாளத்தில தலையை வெச்சுச் சாகலாம். இல்லாட்டி தூக்குப் போட்டுக்கிட்டுச் சாகலாம். இதிலே எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?”

கேசவன் மவுனமாய் இருக்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:

“இன்னொரு வழியும் இருக்கு. இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஒரு பெரிய கல்லையும் கயித்தையும் எடுத்துகிட்டுப் படகிலே போகணும். நடுத்தண்ணிக்குப் போனவுடனே கயித்தின் ஒரு நுனியைக் கல்லோட பிணைச்சிட்டு மறுநுனியைக் கழுத்திலே இறுக்கமாக் கட்டிக்கணும். அப்படியே படிப்படியாக படகைத் தண்ணீலே மூழ்க வெக்கணும்.”

கேசவன் சொன்னார்:

“எனக்கு இப்போ புதுசா ஒருவழி தோணிச்சு. இங்கேயே தூக்குல மாட்டிக்கிட்டுத் தொங்கிடறது. கால்ல பேப்பர்ல இப்படி எழுதிக்கட்டித் தொங்க விடறது: உலகே! என் சாவுக்கும் சாராம்மாவுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. சாராம்மாவை நான் காதலிக்கிறேன் என்பதும், அவள் என்னைக் காதலிக்கவில்லை என்பதும் உண்மை. நான் எழுதித் தந்த காதல் கடிதம் ஒவ்வொன்றையும் அவள் கிழித்து குப்பையில் எறிந்துவிட்டாள் என்பதும் உண்மை. இருந்தாலும் என் சாவுக்கும் சாராம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்படிக்கு,

சாகும் கேசவன் நாயர்.”

“வேற ஏதாவது விசேஷங்கள்...?”

“ஒண்ணுமில்ல.”

சாராம்மா சொன்னாள்:


“நீங்க எழுதின காதல் கடிதங்களை நான் கொண்டுபோய் உமிக் கரி மடிக்க உபயோகித்தேன்.”

என்ன கடினமான பெண் இதயம்! பிறகு கேசவன் ஒன்றும் பேசவில்லை. இப்படியே ஏராளமான நாட்கள் ஓடிவிட்டன. யாருடனும் ஒன்றும் பேசாமல், யாரையும் நோக்காமல் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கப் பழகி விட்டார் கேசவன்.

பெண்கள் என்றாலே அவருக்கு அத்தனை வெறுப்பு மூண்டுவிட்டது. உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆணுமே மடையர்கள்! இப்படிப் பலவாறாக அசை போட்டுச் சிந்தித்து கொண்டிருந்த கேசவனின்முன் ஒரு மாலைப்பொழுதில் வந்து நின்றாள் சாராம்மா. எதையோ கேட்கும் பாவனையில் அவரை நோக்கிக் கை நீட்டினாள். கேசவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. சாராம்மா கேட்டாள்: “என் சம்பளம் எங்கே?”

“சம்பளம்? எந்தச் சம்பளம்?” கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர் ஏதோ சொன்ன வார்த்தையைக் காற்றில் பறக்க விட்டதற்குக் குற்றம் சாட்டுகிற பாவனையில் அவள், “ஓ! இது வேறயா? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்! தெரியாமலா சொன்னாங்க என்னோட தலைக்குள்ளே இருப்பது நிலா வெளிச்சம்னு? வேலையை ஒத்துக்கிட்டு இன்னிக்கோட பதினஞ்சு நாளாச்சு!” என்றாள்.

“ஓ...” கேசவனின் முகம் மலர்ந்தது. கண்களில் ஒளியின் ரேகைகள் படர்ந்தன. மகிழ்ச்சியால் கால்பந்து மாதிரி இதயம் விம்மி வீங்கி விலா எலும்புகளைத் தொட்டுப் பார்த்தது.

“பிறகு எதுக்காக நீ அந்த விஷயத்தை இதுவரை என்கிட்டே சொல்லல?”

தாழ்ந்த குரலில் துக்கம் தொனிக்கச் சாராம்மா, “வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கறப்போ, தற்கொலை அது இதுன்னு பேசி முகத்தை உம்முன்னு வெச்சிக்கிட்டு ஏதோ மூணாவது ஆள் மாதிரி நடந்துகிட்டா நான் என்ன செய்யறது?” என்றாள்.

“வேற விசேஷம் ஏதாவது...?”

“இல்ல...”

கேசவன், “இப்படி வா” என்று கட்டளையிட்டார்.

அவர் முன் நடக்க, சாராம்மா பின் தொடர்ந்தாள். இருவரும் மேலே போனார்கள். அறை வாயில் படியருகே அவள் நின்றாள். பெட்டியைத் திறந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்த கேசவன் அவற்றை ஒரு கவரினுள் வைத்து மேலே “திருமதி சாராம்மா அவர்களுக்கு” என்று எழுதினார். பின்பு கவரை அவளுடைய கையில் தந்தார்.

சாராம்மா, “இது என்ன? காதல் கடிதமா?” என்றாள்.

கேசவன் பதில் சொல்லவில்லை. “காதல் கடிதமாம் காதல் கடிதம்! பணத்தைக் கண்டு மூக்கில் விரல் வைக்கப் போகிறாள்!”

ஆனால் அவர் எதிர்பார்த்த மாதிரி அவள் ஒன்றும் விரலை வைக்கவில்லை. ஏதோ காய்கறி வியாபாரம் செய்கிறவள்போல் ரூபாய் நோட்டை எடுத்து முகத்துக்கு நேரே வைத்துப் பார்த்து, “இதெல்லாம் நல்ல நோட்டுதானே!” என்றாள்.

கேசவன் ஒன்றுமே பேசவில்லை.

“சரி! இனிமே இப்படி லேட்டா சம்பளம் தந்தா அவ்வளவு நல்லா இருக்காது. ஒவ்வொரு மாசமும் சரியா ஒண்ணாம் தேதி என் கைக்கு சம்பளம் வரணும்!” என்றாள் அவள்.

கேசவனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவள்மேல் அவருக்குக் கொள்ளை ஆசை! அவளை நெருங்கி வந்தார்.

“ஒரு நாலடி தள்ளி நின்னா நல்லாயிருக்கும்! நம்ம ஒப்பந்தத்தில் ஒண்ணும் இது சொல்லப் படலையே!”

கேசவன் இதற்கு என்ன பதில் சொல்வார்?

4

ப்படியே ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. சாராம்மாவின் கைக்கு நூறு ரூபாய் சேர்ந்தது. அதை வைத்து அவள் என்ன செய்கிறாள் என்பதை கேசவனும் விசாரிக்கவில்லை. இருந்தாலும் மூன்றாம் மாத இறுதியில் சாராம்மா தனக்கு “லாட்டரி டிக்கெட்டில் ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது” என்று சொன்னாள். கேசவன் அவளுக்குத் தந்த சம்பளத்திலிருந்து ஒரு ரூபாய் எடுத்து வாங்கிய சீட்டுக்கு விழுந்த பரிசாம் அது! இது பற்றியெல்லாம் கேசவன் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. பணம் சம்பந்தப்பட்ட சாதாரண விஷயங்களைப்போய் பெரிதாக எப்படி நினைத்துக் கொண்டிருக்க முடியும்? காதல் நோயில் சிக்கிக் கிடந்த அவருக்கு எதுவுமே சரியாகக் கண்ணில் படவில்லை. காதலி சொன்னபடி நடப்பதுதான் அவரது ஒரே நடவடிக்கையாக இருந்தது. அவள் சொன்னாள் என்பதற்காக வெளிநாடுகளில் வேலை கேட்டுப் பல மனுக்களை அனுப்பி வைத்தார். இதெல்லாம் ஏன்? சாராம்மாவுக்கு நோய் கண்டு படுக்கையாக அவள் கிடந்தபோது தாம் டாக்டரை அழைத்து வந்தது, பணம் தந்து அவளுக்காக மருந்து வாங்கித் தந்தது, சித்திக்கும் அவளுக்குமிடையே சமாதானம் உண்டாக்க முயன்றது, சாராம்மாவின் அப்பனிடம் தந்தையின் கடமைகளைப் பற்றிச் சிறு பிரசங்கமே செய்தது- இப்படிப் பல காரியங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் கேசவன். ஆனால் ஒரு விஷயத்துக்காவது அவள் நன்றி சொல்ல வேண்டுமே! இருந்தாலும் கேசவன் அதைச் சகித்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்காதது, “வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது” என்று பீடிகை போட்டு அவள் ஏதாவது பேச ஆரம்பிப்பதுதான்.

அவள் அந்த வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்து விட்டாலே வெலவெலத்துப் போவார் கேசவன். அவள் அப்படிச் சொல்லவே இல்லையென்றால் ஏக திருப்தி அவருக்கு. அதற்காக அவரது பிரேமையில் ஒளி ஒன்றும் குன்றிவிடவில்லை; நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அது வளர்ந்து கொண்டுதான்  இருந்தது. எப்போது பார்த்தாலும் சாராம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும் அவருக்கு.

சாராம்மாவோ- அவள் கேசவனிடம்தான் ஈடுபாடு உள்ளவள் என்பதற்கு அடையாளமாக இதுவரை எதையும் வெளிப்படுத்தவில்லை. பேச்சாக இருக்கட்டும், இல்லை செயலாகட்டும்- எதிலுமே பிடி கொடுக்காமல்தான் அவள் நடந்து கொண்டாள்.

அப்போதுதான் அவர்களிடையே பிரிவு நேரும் என்ற நிலை ஏற்பட்டது. வெளிநாட்டிலுள்ள ஒரு பெரிய கம்பெனியில் கேசவனுக்கு நல்ல வேலை ஒன்று கிடைத்தது. சம்பளமும் ஏராளம். சாராம்மா கூறியபடி வேலையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதிப்போட்டார் கேசவன்.

சாராம்மா சொன்னாள்:

“அப்படின்னா  எனக்கு நூத்திருபத்தைந்தாவது சம்பளம் கிடைக்குமில்லையா?”

அவளுக்குத் தேவை அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றும் வேண்டாம். இருந்தாலும் ஞாபகப்படுத்தி வைத்தாள்.

“கரெக்டா ஒண்ணாம் தேதி மணியார்டர் அனுப்பிடணும்! மேல் விலாசம் தெரியுமில்லே?”

கேசவன் மவுனமாய் நிற்கவே, சாராம்மாவே தொடர்ந்தாள்:

“எப்போ புறப்படறீங்க?”

“பத்து நாட்களிலே வேலையை ஒப்புக் கொள்ளணும். நாளை மறுநாள் புறப்பட்டா சரியா இருக்கும். அதுக்கேத்த மாதிரி பாங்க் வேலையையும் ராஜினாமா பண்ணிட்டேன்.”

“அப்போ கட்டாயம் போறதுன்னு தீர்மானிச்சிட்டீங்க?”

“இதென்ன கேள்வி?”

“நான் இப்போதும் உங்கள் நாயகிதானே?”

“அதில் என்ன சந்தேகம்?”

“எனக்காக சாகக்கூடத் தயார்தானே?”

“நிச்சயமாக.”

“சத்தியமாக?”


“சத்தியமாக.”

சாராம்மா, “இப்போது சாகணும்னு அவசியம் ஒண்ணுமில்லே. நான் சொன்னா வேலைக்குப் போகாம இருப்பீங்களா?” என்று கேட்டாள்.

வேலைக்குப் போகாமல் இருப்பதா? வேலைக்குப் போகாவிட்டால் எவ்வளவு கஷ்டம். வாடகை கொடுக்க முடியாது; உண்ண முடியாது; உடுக்க முடியாது; பிச்சை எடுத்துத் தெருவில் அலைய வேண்டிவரும். நாடியில் கை வைத்து நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் கேசவன்.

சாராம்மா எழுந்து படியின் அருகே போனாள். கேசவன், “சாராம்மா, உன்னிடம் ஒண்ணு சொல்லணும்....” என்றார்.

அவள் திரும்பி வந்தாள். “காதலைப்பற்றி ஏதாவது பேசறதுன்னா அதைக் கேட்டுக் கேட்டு எனக்கு காது புளிச்சுப் போயிடுச்சு!” என்றாள்.

கேசவன் வாய் திறக்காதிருக்கவே, அவளே தொடர்ந்தாள்: “சொல்லுங்க, நான் சம்பளம் வாங்கறவளாச்சே. கேட்காம இருக்க முடியுமா?”

“சாராம்மா உனக்கு எதுவுமே தமாஷ்தான்!”

“இதைத்தான் சொல்லணும்னு நினைச்சீங்களா?”

“இல்லே.”

“பிறகு?”

“நீயும் என்கூட வந்திடு. அங்கே நான் மட்டும் தனியா இருக்க முடியாது!”

சாராம்மாவுக்கு சிரிப்பு வந்தது.

“ஏன்? பயமாயிருக்கா?”

“இல்லே, நான் சாராம்மாவை உயிருக்கு உயிராக...”

“இதுவரை இதை லட்சம் தடவை சொல்லிட்டீங்க. இங்கே பாருங்க. காதல்னா எது?”

அது ஒன்றும் கஷ்டமான ஒன்றில்லை. காதல் எதுவென்று கேசவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதைச் சொல்லத்தான் கொஞ்சம் வெட்கமாயிருந்தது.

“காதல்னு சொல்றது ஒருவிதத்திலே நிலா வெளிச்சம் மாதிரி...” என்றார்.

“நிலா வெளிச்சம்! அதுதானே பெண்களுடைய தலைக்குள்ளே இருக்குன்னு சொல்வீங்க?” குறும்புச் சிரிப்புடன் சொன்னாள் சாராம்மா.

“ஆமாம்” என்றார் கேசவன். “சாராம்மா, நீ வர்றே இல்ல?” என்று கேட்டார்.

“வந்து?”

“என் சம்சாரமா கூடவே இருக்கணும்.”

“நாம வேற வேற மதத்தைச் சேர்ந்தவங்களாச்சே?”

“அதனால் என்ன? ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாப் போச்சு!”

“வரதட்சிணை ஒண்ணும் வேண்டாமா?”

“சாராம்மாதான் என் வரதட்சிணை.”

“சரி. போதும் நிறுத்துங்க. வேற ஒண்ணும் உங்ககிட்டே கேக்கணும்.”

“என்ன?”

“நாம புருஷன்-மனைவியா இருக்கிறதுன்னா அதிலே எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு. ஒருத்தர் கோவிலுக்குப் போனா இன்னொருத்தர் சர்ச்சுக்குப் போகணும். நாம ரெண்டுபேரும் சேர்ந்து ஏதாவது செய்ய முடியுமா? எதிலேயும் கோவிலும் சர்ச்சும் தலைகாட்டுமே!”

கேசவனுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உண்டாகத் தொடங்கின.

“இது என்ன பெரிய விஷயமா? கோவில், சர்ச் ரெண்டுமே நமக்கு வேண்டாம்னு ஒதுக்கிட்டாப் போச்சு. சாராம்மா, நீயே யோசிச்சுப் பார். இவ்வளவு நாளும் நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கே? சித்தியும் அப்பனும் உன்னை எந்த அளவுக்கு துன்பப்படுத்தியிருக்காங்க. அப்போதெல்லாம் சர்ச்சா வந்து உன்னைக் காப்பாத்திச்சு? இல்லாட்டி தேவன்தான் வந்து காப்பாத்தினாரா? கோவில், எனக்கும் ஒண்ணும் பெரிசா பண்ணிடலே.”

“நீங்க சொல்றது சரிதான். இன்னும் சில விஷயம் கேக்கணும்.”

“சொல்லு சாராம்மா. உனக்கு எந்தச் சந்தேகம் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய நான் இருக்கேன்.”

அவளுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்துவிட்டது.

“வேறொரு விஷயம்...”

“கேளு... கேளு.”

“நமக்குக் குழந்தை பிறக்குதுன்னு வெச்சுக்குங்க. அது எந்த மதத்தையும் ஜாதியையும் சேர்ந்தது? இந்துவா அதை வளர்க்க எனக்கு விருப்பமில்லாமல் போகலாம். கிறிஸ்துவனா வளர்க்க என் புருஷனுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம். அப்போ குழந்தையின் நிலை என்ன?”

கேசவன் உண்மையிலேயே விக்கித்துப் போனார். அது பற்றி அவள் கேட்பது ஒரு விதத்தில் நியாயமாகவே பட்டது.

அவர் சிந்தித்தார். தீவிரமாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்தார். ஒரே குழப்பமாக இருந்தது. நரம்புகள் புடைத்து முறுக்கேறின. நெற்றியில் வியர்வை  துளிர்த்து வழிந்தது. ஒரு பதிலும் தோன்றியதாய்த் தெரியவில்லை. அப்போதும் அவர் சிந்திப்பதை விடவில்லை. ஒரே இருட்டாயிருந்தது. திடீரென்று மின்னல் வெளிச்சத்தின் ஒரு கீற்று கண்ணில் பட்டதுபோல் இருந்தது. அவர் சொன்னார்:

“எனக்குத் தோணுது...”

“என்ன?”- அவள் கேட்டாள்.

“சொல்றேன். நம்ம குழந்தைகளை எந்த மதத்தைச் சேர்ந்தவங்களாகவும் இல்லாம நாம வளர்ப்போம்.”

“அப்புறம்?”

“பொதுவாக எல்லா மதங்களைப் பத்தியுமே பாகுபாடு பார்க்காம சொல்லித் தர்றது. வயசு வந்தபிறகு அவங்களாகவே இஷ்டமுள்ள ஏதவாது ஒரு மதத்தைப் பின்பற்றட்டும்” என்றார் கேசவன்.

சாராம்மா கேசவனின் முகத்தைப் பார்க்காமல் குரலில் மகிழ்ச்சி வெளிப்படச் சொன்னாள்:

“சரியாகச் சொன்னீங்க... சரி; பேர் விஷயத்துக்கு வருவோம். பொறக்கிற முதல் குழந்தை பையன்னு வெச்சுக்குங்க. அவனுக்கு என்ன பேர் வைக்கிறது?”

தர்மசங்கடமான நிலை கேசவனுக்கு. “ஆமாம்... அவனுக்கு என்னன்னு பேர் வைக்கிறது? இந்துப் பேர் வைக்க முடியாது. கிறிஸ்துவப் பேரும் வைக்க முடியாது. ஒண்ணு செய்தா என்ன? மற்ற சமுதாயத்திலே பிரபலமாயிருக்கிற ஏதாவதொரு பேரை வெச்சா என்ன?”

“அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான் என் மகன்னு மத்தவங்க நினைக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா?”

“நீ சொல்றதும் சரிதான். முஸ்லிம் பேர் வெச்சா அவனை முஸ்லிம்னு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. பார்ஸி பேர் வெச்சாலும் அதுதான் நடக்கும். சீனக்காரன் பேரோ, ரஷ்யக்காரன் பேரோ வெச்சா...? என்னடா இது ஒரே குழப்பமா இருக்கு!”

“சீனப் பேர் எப்படி இருக்கும்?”

கேசவன், “ஸிங்லி போ” என்றார்.

தனக்குப் பிறக்கப் போகும் ஆண் குழந்தைக்கு வைக்கும் இந்தப் பெயரைச் சொல்லி அன்புடன் அழைத்துப் பார்த்தாள் சாராம்மா:

“ஏன்டா ஸிங்லிபோ... ஏன்டா மகனே; நீ எங்கேடா போனே, ஸிங்லி போ? ஊஹும்... இது எனக்குப் பிடிக்கலே.”

“வேணும்னா ரஷ்யன் பேரு வெச்சுப் பார்ப்போமா நாம? ஸ்க்கின்னு சேர்த்தா போதும்.”

“ஊஹும்... அதுவும் உதவாது.”

“இப்போ சொல்றேன் கேள். ஸ்டைலான பேர்கள்.” கேசவன் மழையெனப் பொழிந்தார். “இந்தியா, காதல், கடிதம், சிறுகதை, ஸஹாரா, ஆகாயம், நிலா வெளிச்சம், மீன், சிம்பாலிஸம், மிட்டாய், நாடகம், சமுத்திரம், செம்மீன் கண்ணன், வெள்ளிக்கிழமை, புதுக்கவிதை, மாணிக்கக் கல், நட்சத்திரம்...”

“நிறுத்துங்க. நான் கூப்பிட்டுப் பாக்கறேன். ஏன்டா மகனே, செம்மீன் கண்ணா! சேச்சே! உதவாது இது. வேண்டாம்!”

அவள் மீண்டும் அழைத்துப் பார்த்தாள்:

“ஏன்டா மகனே, புதுக்கவிதை! நிலா வெளிச்சம்!”

அப்போது கேசவன், “ஒவ்வொரு பேரையும் பேப்பரில் எழுதிக் குலுக்கிப் போடுவோம். மொத்தம் ரெண்டு எடுப்போம். சண்டை எதுக்கு? குழந்தைக்கு ரெண்டு பேரையுமே வெச்சிடுவோம். அதுவும் ஒரு புதுமையாயிருக்குமில்லே?”

சாராம்மாவுக்கும் அது உடன்பாடானதாகவே பட்டது.

சிறு சிறு பேப்பர்த் துண்டுகளில் பெயர்களை எழுதிக் குலுக்கிப் போட்டு ஒன்றைச் சாராம்மாவும் இன்னொன்றைக் கேசவனும் எடுத்தார்கள். கேசவன் தம் பேப்பரைப் பிரித்து வாசித்தார்.


“மிட்டாய்.”

சாராம்மா வாசித்தாள். “ஆகாயம்.”

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கினார்கள்.

சாராம்மா மகனின் பெயரை அழைத்துப் பார்த்தாள்.

“மிட்டாய், ஆகாயம்!”

“தப்பாச் சொல்றே. ஆகாய மிட்டாய். இது எப்படி இருக்கு?” என்றார் கேசவன்.

சாராம்மாவுக்கும் அது பிடித்திருந்தது. அன்பு தவழ அவள், “ஆகாய மிட்டாயீ! நீ எங்கேடா போனே, ஆகாய மிட்டாயீ” என்று சொல்லிப் பார்த்தாள்.

“உண்மையிலேயே பேர் கம்பீரமாய்த்தான் இருக்கு!” கேசவனும் சொல்லிப் பார்த்தார்.

“மிஸ்டர் ஆகாய மிட்டாய்! ஸ்ரீமான் ஆகாய மிட்டாய்! தோழர் ஆகாய மிட்டாய்!”

சாராம்மாவுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம். “என் மகன் கம்யூனிஸ்ட்டா?” என்றாள்.

கேசவன் சிரித்தபடி சொன்னார்:

“இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே! அவனுக்கு இஷ்டம் இருந்தா எதிலே இருந்தா என்ன?”

“எப்படியோ என் மகன் நல்லபடியா இருந்தா போதும்” என்று சாராம்மா, என் மகன் என்பதை அழுத்திச் சொல்லத் தொடங்கியதும் கேசவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“சாராம்மா, நானும் பார்த்துக்கிட்டே வர்றேன். என் மகன் என் மகன்னே சொல்றியே? இப்படியா சுயநலம் பிடிச்சு அலையறது? யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க? ஆகாய மிட்டாய்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லேன்னு நினைக்க மாட்டாங்களா? இனிமேலாவது “நம்ம மகன்”னு சொல்லு, தெரியுதா?”

சாராம்மாவுக்கு இதைக் கேட்டுக் கோபம் தலைக்கேறியது. “நான் ஏதோ பேச்சுக்குச் சொன்னா, உங்களுக்குப் பொண்டாட்டியா ஆயிட்டதாகவே நினைச்சுட்டீங்களா மிஸ்டர் கேசவன் நாயர்?” என்றாள்.

அவ்வளவுதான். கேசவனின் முகம் வாடிவிட்டது. தாழ்ந்த குரலில், “அப்போ சாராம்மா சொன்னது...” என்று இழுத்தார்.

“என்ன சொன்னேன்?”

“என் பொண்டாட்டி ஆகிறதா?”

“ஆகி...?”

“எப்போ பாரு இந்த சாராம்மாவுக்கு தமாஷ்தான்!”

“தமாஷாம் தமாஷ்! வாழ்க்கையில் தமாஷ்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“எனக்குத் தெரிய வேண்டாம்!”

“நான் சொன்னா நீங்க கேக்கவா போறீங்க? நான் சாதாரண ஏடீ (ஏண்டி) தான்!”

“அப்படின்னா...” என்று அசடுவழியக் கேட்டார் கேசவன்.

“தமாஷ்! வாழ்க்கையின்...” என்று அவள் படிகளில் இறங்கியபடி சொன்னாள்: “நறுமணம்”.

5

“சாராம்மா, பொழுது விடியறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து புறப்படணும்.” இருள் படரும் நேரத்தில் சொன்னார் கேசவன். பிறகு “கடைசியா ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்று கேட்டார்.

“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கிற இந்த சமயத்தில் சில கேள்விகள் கேக்கணும்.”

கேசவன் மவுனமாக நிற்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:

“கேள்வி ஒண்ணு. அப்பாவுக்குத் தரவேண்டிய வாடகை எல்லாம் கொடுத்தாச்சா?”

“கொடுத்தாச்சு.”

“ரெண்டாவது கேள்வி. ஹோட்டல்காரனுக்குத் தர வேண்டிய பாக்கி?”

“தந்தாச்சு.”

“இப்போ ஒரு துணைக் கேள்வி. பணம் எப்படி உங்களுக்குக் கிடைச்சுது?”

“என் கைக் கடிகாரத்தையும் தங்க மோதிரத்தையும் விற்றேன்.”

“நல்லது. பெருமதிப்புக்குரிய கேசவன் நாயர் இந்த ஊரைவிட்டுச் சென்றபின், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறிய சாராம்மா சிரித்தவாறு படி இறங்கிப் போனாள்.

இதயத்தில் துக்கம் மேலிட கேசவன், “சாராம்மா!” என்று அழைத்தார். ஒரு பதிலும் இல்லை.

 “சாராம்மா, பொழுது விடியறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து புறப்படணும்.” இருள் படரும் நேரத்தில் சொன்னார் கேசவன். பிறகு “கடைசியா ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்று கேட்டார்.

“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்ததாய் இருக்கிற இந்த சமயத்தில் சில கேள்விகள் கேக்கணும்.”

கேசவன் மவுனமாக நிற்கவே சாராம்மாவே தொடர்ந்தாள்:

“கேள்வி ஒண்ணு. அப்பாவுக்குத் தரவேண்டிய வாடகை எல்லாம் கொடுத்தாச்சா?”

“கொடுத்தாச்சு.”

6

கொஞ்சமும் அசையாமல் சிலை போன்று அமர்ந்து விட்டார் கேசவன். இரவு வந்தது. நிலவு மெல்ல மெல்லத் தன் ஒளியைப் பரப்பலாயிற்று. அப்போதும் கேசவன் அசையவில்லை. திடீரென்று என்ன நினைத்தாரோ எழுந்து விளக்கைப் பொருத்தினார். டைம் பீஸில் மணி பதினொன்று ஆகியிருந்தது.

நாலு மணிக்கு அலாரம் வைத்துவிட்டு கதவைச் சாத்திக் கொண்டு கட்டிலில் போய்த் துவண்டு விழுந்தார், அவர். கடைசி இரவு... பசியில்லை; தாகமில்லை; கேசவன் கண்களைத் திறந்த நிலையில் கிடந்தார். தெளிவாக எதையும் அப்போது அவரால் சிந்திக்க முடியவில்லை. கண்கள் இரண்டிலும் நீர் அரும்பிக் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது. உண்மையிலேயே பெண்கள் கடின இதயம் படைத்தவர்கள்தாம். பெண்! பெண்ணைக் கடவுள் எதற்காகப் படைத்தான்? நிச்சயம் நல்ல உத்தேசத்தோடு இருக்காது. மனம் விட்டு அழவேண்டும்போல் இருந்தது கேசவனுக்கு.

அப்போது வெளியேயிருந்து மென்மையான குரல் ஒன்று “உறங்கிட்டீங்களா?” என்றது.

அவள்! கேசவன் அசையவேயில்லை.

மீண்டும் அதே குரல். “திறங்க, நான்தான்.” கேசவன் எழுந்து கதவைத் திறந்தார்.

சாராம்மா அறையினுள் நுழைந்தாள். கேசவன் அறை வாயிலின் அருகேயே நின்று கொண்டார்.

சாராம்மா மெதுவான குரலில், “இங்கே பக்கத்திலே வாங்க, ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள்.

கேசவன் திரும்பி வந்து கட்டிலின்மேல் அசையாமல் அமர்ந்தார். சாராம்மா கதவருகே சென்று வெளியே நோக்கியபடி சிறிது நேரம் நின்றாள். விசேஷமான சத்தம் சந்தடி எதுவுமில்லை. கதவை அடைத்துவிட்டு நாற்காலி ஒன்றை எடுத்துக் கட்டிலோடு ஒட்டியபடி போட்டு அதில் அமர்ந்தாள். கூந்தல் அலங்கோலமாக அவிழ்ந்து லேசாகப் பறந்து கொண்டிருந்தது. முகத்தைக் கைகளால் தாங்கி அமர்ந்திருந்த அந்தக் கோலத்தில்...

கேசவனுக்குப் புல்லரித்தது. இருந்தாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தலையணைமேல் சாய்ந்து கொண்டார். அப்போதும் கண்களில் நீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.

“ஏன் அழறீங்க?” அவள்.

அவர் ஒன்றும் பதில் கூறவில்லை. அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்து மெல்லக் குனிந்து அவருடைய தலையை மெல்லப் பிடித்து விடலானாள். அவருடைய நெற்றியோடு கன்னத்தைப் பதித்து, “என் மேல் கோபமா?” என மெல்ல வினவினாள்.

துக்கமெல்லாம் மனதை விட்டு அகன்று ஓடிவிட்டதுபோல் இருந்தது அவருக்கு. அவளுடைய கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். இருந்தாலும் கண்ணீர் வழிவது நிற்கவில்லை. முகத்தில் ஒரு மூலையில் பிரகாசத்தின் ரேகைகளும் தெரியாமல் இல்லை.

அவள் சொன்னாள்:

“மழை பெய்யறப்போ சூரியன் உதிக்கிற மாதிரி...”

“ம்... உவமையைப் பார் உவமையை! காலையிலே நாலரை மணி வண்டிக்கு என்கூட நீயும் வரணும்.”

“எங்கே?”

“நான் போற இடத்துக்கு...”

“எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத்தான்!”

“விளையாட்டு- அதுதான் தமாஷ், வாழ்க்கையினுடையது எதுன்னு தெரியுமா?” என்றார். அவள் தன் ஜாக்கெட்டினுள் விரலை நுழைத்து தடிமனான ஒரு கவரை எடுத்துக் கேசவனிடம் தந்தாள்.

“வண்டி இங்கேயிருந்து புறப்பட்ட பிறகுதான் இதைத் திறந்து பார்க்கணும். தெரிஞ்சுதா?” என்றாள்.


“ரொம்பவும் கனமாக இருக்கே! காதல் கடிதமா?”

“அப்புறம் எதுன்னு தானாகத் தெரியுது.” சாராம்மா புன்னகையுடன் கூறினாள்.

“வண்டி புறப்பட்ட பிறகுதான் இதைத் திறந்து பார்ப்பேன்னு சத்தியம் பண்ணிக் குடுங்க.”

“சத்தியமாக.”

“இது போதாது. பக்தியும் நம்பிக்கையுமுள்ள எதை வைத்தாவது சத்தியம் செய்யுங்க....”

கேசவன் சாராம்மாவை நோக்கிச் சத்தியம் செய்தார். “என் அன்பு சாராம்மாமீது ஆணையாகச் சொல்றேன். வண்டியில் ஏறின பிறகுதான் இந்தக் கவரைத் திறந்து பார்ப்பேன்.”

சாராம்மா எழுந்து கதவைத் திறந்தாள். “காலையிலே போறப்போ என்னைக் கூப்பிடுங்க. இப்போ அமைதியா உறங்கணும். தெரியுதா?” என்றதும் கீழே இறங்கிவிட்டாள்.

7

டைம்பீஸ் அலாரம் அடித்தது. கேசவன் திடுக்கிட்டு

எழுந்தார். மணி நாலு ஆகியிருந்தது. எழுந்து காலும் முகமும் கழுவிப் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தார். ஆடை அணிந்தார். சாமான்களைக் கட்டிப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். அதன்பின் சாலையில் இறங்கி ஒரு வண்டிக்காரனை அழைத்து வந்தார்.

சாமான்களை வண்டியில் ஏற்றியபின் வெளியே சென்று ஜன்னலோரம் நின்று சாராம்மாவின் அறையை நோக்கி டார்ச் ஒளியை  வீசி, “சாராம்மா! சாராம்மா...” என்று மெதுவாக அழைத்துப் பார்த்தார். ஆனால் ஓர் அரவமுமில்லை. அருகில் போய் கதவை மெல்லத் தள்ளினார். அது தானாகத் திறந்து கொண்டது.

டார்ச் விளக்கு வெளிச்சம் உள்ளே பாய்ந்தது. அங்கே யாரும் இல்லை. அவள் எங்கே போயிருப்பாள்? டார்ச் வெளிச்சம் மேஜையின்மீது கிடந்த கவரின்மேல் போய் விழுந்தது. கேசவன் இதயம் படபடக்க அதைத் திறந்து வாசித்தார்.

“அன்புள்ள அப்பனும், பெருமதிப்புக்குரிய சித்தியும் வாசிக்க வேண்டும் என்பதற்காகச் சாராம்மா எழுதிக் கொண்டது.

வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாதம் நூற்றிருபத்தைந்து ரூபாய் சம்பளம் வரக்கூடிய ஒருவேலை எனக்குக் கிடைத்திருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள நான் போகிறேன். வரதட்சிணை ஒரு பைசாக் கூட வாங்காமல் கட்டிய சேலையுடன் என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராயிருக்கிற ஓர் ஆண் மகனும் எனக்குக் கிடைத்திருக்கிறார். அவரை நானும் என்னை அவரும் முழு மனதோடு நேசிப்பதால் தீர ஆலோசித்து இந்த முடிவு எடுத்தோம். எங்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்ளும், அப்பனின்- சித்தியின் சாராம்மா.”

கேசவன் அந்தக் கடிதத்தை மேஜைமேல் எடுத்த இடத்திலேயே வைத்து வெளியில் இறங்கி வண்டியில் ஏறி ஒரே வேகமாக ரெயில்வே ஸ்டேஷனைப் போய் அடைந்தார். அங்கே புன்னகை ததும்பிய முகத்துடன் நின்று கொண்டிருந்தாள் சாராம்மா.

“நான் இங்கே வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் அவள்.

“அதுதான் ஆணினுடைய புத்திசாலித்தனங்கறது.”

“நல்ல புத்திசாலித்தனம்! உண்மையைச்  சொல்லுங்க. என் அறைக்குள் போய் அப்பனுக்கும் சித்திக்கும் நான் எழுதி வெச்சிருந்த லட்டரைத் திருட்டுத்தனமா படிச்சீங்களா இல்லையா?”

“சொல்றேன்... சொல்றேன்... ஒண்ணுவிடாம சொல்றேன்.”

இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிச் சாமான் சகிதமாக வண்டியில் ஏறி இருவரும் அமர்ந்தார்கள்.

நீண்டதோர் ஓசை எழுப்பிக் கொண்டு வண்டி புறப்பட்டது. ஒருவருடன் ஒருவர் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் அருகருகே அமர்ந்திருந்தார்கள். வண்டி மூன்று இடங்களில் நின்றது. கடைசியில் பெட்டியில் எஞ்சி நின்றவர்கள் அவர்கள் இருவர்தான்.

வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்றது. டீக்கு ஆர்டர் தந்தார் கேசவன். இரண்டு பேருக்கும் காபி போதும் என்றாள் சாராம்மா. கேசவனோ இரண்டு பேருக்கும் டீ வாங்கிக் கொள்ளலாம்  என்றார். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போகவே, கேசவன் ஒரு டீ குடிக்க, சாராம்மா ஒரு காபி குடித்தாள்.

கதிரவன் மெல்ல உதித்து தன் செவ்விய முகத்தைக் காட்டினான். தங்கம்போல் மினுமினுக்கும் நதியின்மீது பாலத்தில் வண்டி மெல்லச் சென்று கொண்டிருந்தது. டீ- காபி விவகாரத்தை மறந்த கேசவன் மெல்ல அழைத்தார்.

“தங்கமே!”

“என்ன, ஆகாய மிட்டாயின் அப்பனே?”

“அன்பு நிலா வெளிச்சமே.”

சாராம்மா கேசவனைக் கிள்ளினாள்.

கேசவன் கர்ஜித்தார். “ஒரேயடியில் பல்லை உடைச்சிடுவேன்!”

அவ்வளவுதான். சாராம்மாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. என்ன இருந்தாலும் பெண்ணாயிற்றே. கண்ணீருக்குப் பஞ்சமா என்ன? சும்மா அழுவதுபோல் அவள் நடித்தாள். அது கண்ட கேசவனின் மனம் இளகிவிட்டது. அவளுடைய கண்களைத் துடைக்க கையை அருகில் கொண்டு வந்தார்.

“வேண்டாம்... என்னைத் தொடதீங்க...!”- சாராம்மா.

“ஏம்மா அழறே?”

“நான் எவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்திருக்கேன்! என்கிட்டே இப்படியா நடந்துக்கிறது?”

“எப்படி நடந்துக்கிட்டேன்?அப்படி என்ன தியாகத்தைச் செஞ்சிட்டே நீ?”

“அப்பனையும் சித்தியையும் உதறிவிட்டு அந்நியரான உங்கக்கூட வரலியா?”

“சரி... அதுக்காக...”

“எனக்காக காபி குடிக்க... எனக்காகக் கொஞ்சம் தியாகம் செய்ய...”

கேசவன் பதில் ஒன்றும் பேசவில்லை. உலகத்தில் இருந்த, இருக்கும், இருக்கப்போகும் எல்லா பெண்களையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

எனக்காகக் கொஞ்சமாவது தியாகம் செய்ய... சாராம்மா தொடர்ந்தாள்: “ஊஹும்... இப்போ அடிச்சுப் பல்லை உடைச்சிடுவாராம்!”

“தியாக தீபமே! ஏன்டீ ஆகாய மிட்டாயின் தாயே!”

“என்ன?”

“இன்னிக்கு நாம ரெஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டு முறைப்படி எல்லாரும் அறிய கணவன்- மனைவி ஆகப்போகிறோம். உனக்குச் சம்மதந்தானே?”

சற்று மவுனமாக இருந்தபின், “சம்மதம்தான்” என்றாள் சாராம்மா.

“உனக்கு மூணு விஷயத்திலே பரிபூர்ண சுதந்திரம்!”

“என்ன, விவரமாச் சொல்லுங்க.”

“உணவு, உடை, நம்பிக்கை.”

“அப்போ நம்ம வீட்டிலே ரெண்டு சமையல் அறை இருக்குமா?”

“ஒரே ஒரு சிறு சமையலறை.”

“ரெண்டுவித உணவு நான் தயாரிக்கணுமே!”

“வேண்டாம். ஒரே விதம் போதும்.”

“யார் இஷ்டப்பிரகாரம்?”

“என் சமையல்காரியினுடைய...”

அவள் புன்னகையுடன், “நான் காலையில் காபிதான் தயாரிப்பேன்” என்றாள்.

“ஓ.. அப்படியா? அப்படின்னா வெளியே போய் நான் டீ குடிப்பேன்.”

“அதுக்கு நான் சம்மதிச்சாத்தானே! வாங்கற சம்பளம் முழுவதும் என் கைக்கு வந்திடணும்!”

“பிரியமுள்ள பொண்டாட்டியே... அப்புறம் எப்படி நான் டீ குடிப்பது?”

“தியாகம் செய்ய வேண்டியதுதான். நான் எதையெதை எல்லாம் தியாகம் செய்தேன்?”

“நான் உனக்காகத் தலைகீழாய் எல்லாம் நின்னிருக்கேனே!”

“அது என்ன பெரிய தியாகமாம். காதலுக்காக பெரிய சாம்ராஜ்ஜியத்தையே துறந்தவங்க எத்தனை பேரைப் பத்திக் கேட்டிருக்கோம்? எட்டாம் எட்வர்டும் வாலிசிம்ஸனும்...”


“என் அன்புள்ள இன்டர்மீடியட்டே! அவங்க விவகாரத்தை நினைவுபடுத்தறியா? ஏன்டீ நிலா வெளிச்சமே! அது என்ன பெரிய விஷயம்? நான்கூட நாற்காலியில் உட்கார்ந்துக்கிட்டு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே வேண்டாம்னு சொல்ல முடியும். ஆனால் காதலுக்காக ஒரு தடவையாவது தலைகீழாக நிக்கறது என்பதை இதுவரை என் மாதிரி யாருடீ செய்திருக்காங்க?”

“ஆகாய மிட்டாயின் தந்தையே!”

“என்ன பொன்னே!”

“சொல்றேன்.”

அவள் குனிந்து கேசவனின் இரண்டு பாதங்களையும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு முத்தமிட்டாள்.

அவளை அன்பு கனியத் தூக்கி நிறுத்திய கேசவனின் கோட் பாக்கெட்டினுள் அவள் விரலை விட்டாள்.

“என்ன நிலா வெளிச்சமே, என்ன தேடறறே?”

“நான் தந்த கவரை.”

“காதல் கடிதக் கற்றையையா? அதை வாசிக்க நான் மறந்தே போனேன்!”

கேசவன் கவரை எடுத்துப் பிரித்தார். உள்ளே ரூபாய் நோட்டுகள்.

அவற்றை ஒவ்வொன்றாக எண்ணலானார். ஆயிரத்து தொண்ணூற்றொன்பது ரூபாய்கள்.

“இதை வெச்சு ஒரு வாட்சும் மோதிரமும் வாக்கிக்குங்க. என்ன?” என்றாள் அவள்.

கேசவனுக்கு பணத்தைக் கண்டு மகிழ்ச்சி உண்டானதென்றாலும் காதல் கடிதம் வாசிக்கத்தான் அதிக ஆசை. அவர் கேட்டார்.

““மற்றது எங்கே?”

“மற்றதுன்னா...?”

“காதல் கடிதம்?”

“வாசிச்சே ஆகணுமா?”

“சும்மா பார்க்கத்தாண்டீ தங்கம்.”

“அப்படீன்னா பாத்துக்கங்க!” அவள் மென்னகை தவழக் கேசவனைப் பார்த்தாள். “என்ன, பார்த்தாச்சா?”

கேசவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“எங்கே காண்பிச்சாத்தானே?”

அவள் ஜாக்கெட்டினுள்ளிலிருந்து கசங்கி நைந்த ஒரு காகிதத்தை எடுத்து கேசவனிடம் தந்தாள். அதைத் திறந்து வெளிச்சத்தில் பிரித்துப் பார்த்தார் அவர். முன்பு எங்கோ பார்த்த கையெழுத்து! அன்றொரு நாள் மூலையில் அவள் கசக்கிப் போட்ட அவருடைய கடிதந்தான்!

“வாழ்க்கை என்பது ரொம்பவும் இளமையும் மென்மையும் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் நாமேதான் காதல் கடிதங்கள்.”

“எங்கே... இன்னொரு தடவை சொல்லு.”

“சொல்ல மாட்டேன்...” என்று பொய்க்கூச்சத்துடன் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.