Logo

கிழவனும் கடலும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7278
Kizhavanum kadalum

சுராவின் முன்னுரை

நோபல் பரிசு (Nobel Prize)  பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) எழுதிய Old man and the Sea  நாவலை 'கிழவனும் கடலும்' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் கிழவனின் அனுபவங்களையும், தளராத முயற்சியையும், தன்னம்பிக்கை குணத்தையும், போராடி வெற்றி பெறக்கூடிய உயர்ந்த மனநிலையையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த நாவல் இது.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


மெக்ஸிகோ கடலில் இருக்கும் “கல்ஃப் ஸ்ட்ரீம்” என்ற இடத்தில் மீன்களைப் பிடிக்கும் கிழவன் அவன். அவன் மட்டும் படகில் சென்று மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். மீன்கள் கிடைக்காமல் போய் இன்றுடன் எண்பத்து நான்கு நாட்கள் கடந்து போய்விட்டன. முதல் நாற்பது நாட்கள் ஒரு சிறுவன் கிழவனுடன் இருந்தான். ஆனால், நாற்பது நாட்கள் கடந்த பிறகும் மீன்கள் எதுவும் கிடைக்காமற் போனபோது, உண்மையாகவே கிழவன் மோசமான நிலையை அடைந்துவிட்டான் என்று சிறுவனின் தாயும் தந்தையும் கூறினார்கள்.

அதிர்ஷ்டமில்லாத தன்மையின் மிகவும் கவலைக்குரிய நிலைமை அது. பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக சிறுவன் வேறொரு படகில் செல்ல ஆரம்பித்தான். முதல் வாரத்திலேயே அந்த படகைச் சேர்ந்தவர்கள் மூன்று பெரிய மீன்களைப் பிடித்தார்கள். ஒவ்வொரு நாளும் கிழவன் மீன்கள் எதுவுமே இல்லாத காலி படகுடன் திரும்பி வருவது சிறுவனை வேதனை கொள்ளச் செய்தது. நூல் வளையங்களையோ குத்தீட்டியையோ பெரிய மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படும் தூண்டிலையோ பாய் மரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் பாயையோ எடுத்துக் கொண்டு செல்வதற்கு சிறுவன் கிழவனுக்கு எப்போதும் உதவுவதுண்டு. தானியப் பொடிகள் நிறைக்கப்பட்ட கோணித் துண்டுகளைக் கொண்டு தைக்கப்பட்டதாக இருந்தது பாய். அது ஒரு நிரந்தரமான தோல்வியைப் பறைசாற்றி அறிவிக்கக் கூடிய பதாகையாகத் தோன்றியது.

மெலிந்து சோர்வடைந்த உடலைக் கொண்டவனாக கிழவன் இருந்தான். பின்கழுத்தில் இருந்த சுருக்கங்கள்மீது, கடல் நீரில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் வெப்பம் நிறைந்த சூரியனின் கதிர்கள் விழுந்து கொண்டிருக்க, அவனுடைய கன்னங்களில் தவிட்டு நிறத்தில் கோடுகள் விழுந்திருந்தன. அவை முகத்தின் இரு பக்கங்களிலும் ஆழமாக இறங்கி விட்டிருந்தன. தூண்டில் கயிறுகளில் சிக்கியிருக்கும் பெரிய மீன்களை, கையில் கயிறைச் சுற்றி இழுத்ததன் மூலம் உண்டான ஆழமான புண்கள் உலர்ந்து, அதன் தழும்புகள் கைகளில் இருந்தன. அந்தத் தழும்புகள் அப்படியொன்றும் புதியன அல்ல. மீன்கள் இல்லாத பாலைவனத்தின் மணல்களைப்போல வழக்கமான ஒன்றுதான் அது.

கிழவனின் கண்களைத் தவிர, மற்ற அனைத்தும் முதுமையை அடைந்து விட்டிருந்தன. அந்தக் கண்களுக்கு கடலின் அதே நிறம். உற்சாகம் நிறைந்த, தோல்வியை அறியாத கண்கள்...

“சான்டியாகோ...” படகைக் கரையில் கொண்டுபோய் சேர்க்கக் கூடிய இடத்திலிருந்து கரையில் கால் வைத்து ஏறும்போது சிறுவன் அவனிடம் சொன்னான்: “இனிமேலும் உங்களுடன் என்னால் வர முடியும். நாங்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டிருக்கிறோம்.”

கிழவன்தான் சிறுவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தவன். அவனுக்கு சிறுவனை மிகவும் பிடிக்கும்.

“வேண்டாம்.” கிழவன் சொன்னான்: “நீ இப்போது அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு படகில் இருக்கிறாய். அவர்களுடனே நீ இரு.”

“எண்பத்தேழு நாட்கள் தொடர்ந்து உங்களுக்கு மீன்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தும், பிறகு மூன்று வாரங்கள் பெரிய பெரிய மீன்களை நாம் பிடித்ததும் ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?”

“ஞாபகத்தில் இருக்கு...” கிழவன் சொன்னான்: “நீ என்னை விட்டு போகவில்லை என்பதை நீ தயங்கித் தயங்கி நின்றதிலிருந்தே நான் புரிந்துகொண்டேன்.” “என் அப்பா வற்புறுத்தியதால்தான் நான் போனேன். நான் ஒரு சின்ன பையன்தானே? அவர் சொன்னதைக் கேட்காமல் இருக்க முடியாது.”

“எனக்கு தெரியும். அது மிகவும் இயல்பான ஒன்றுதானே?”

“உங்களுடன் என்னை அனுப்பி வைப்பதில் என் அப்பாவுக்கு நம்பிக்கை இல்லை.”

“ஆனால், நமக்கு நம்பிக்கை இருக்கிறது அல்லவா?” கிழவன் கேட்டான்.

“ம்...” சிறுவன் சொன்னான்: “நான் ஒரு பீர் வாங்கித் தர்றேன். திண்ணையில் உட்கார்ந்து குடிங்க. அதற்குப் பிறகு இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வோம்.”

“ஏன் கூடாது? மீனவர்களுக்கு மத்தியில் இது சாதாரணமாக நடக்கக் கூடிய விஷயம்தானே?”

அவர்கள் திண்ணையில் உட்கார்ந்தார்கள். பல மீனவர்களும் கிழவனைக் கிண்டல் பண்ணினார்கள். அவனுக்கு கோபமே வரவில்லை. வயதான பிற மீனவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கவலையாக இருந்தது. ஆனால், அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. நீர் பெருக்கெடுத்து இருப்பதைப் பற்றியும் சாதகமான தட்பவெப்ப நிலையில் தாங்கள் தூண்டிலைப் போட்ட ஆழங்களைப் பற்றியும் அங்கு கண்ட காட்சிகளைப் பற்றியும் அவர்கள் பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் பெயர் பெற்றிருந்த மீனவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள் தாங்கள் பிடித்த பெரிய மார்லின் மீனை அறுத்துத் துண்டுகளாக்கி, இரண்டு மரத் தடிகளில் நீளமாக தொங்கும்படிச் செய்து, ஒவ்வொரு முனையையும் ஒவ்வொருவர் பிடித்துக் கொண்டு மீன்களை வைக்கும் அறையை நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஹவானாவில் உள்ள சந்தைக்குச் செல்லும் பனிக்கட்டிகள் நிறைந்த ட்ரக் வாகனத்தை எதிர்பார்த்து அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பது எப்போதும் நடக்கக் கூடிய ஒரு செயல்தான். சுறா மீனைப் பிடித்தவர்கள் அவற்றை நுழைவுப் பகுதியின் இன்னொரு பகுதியில் இருந்த சுறா ஃபேக்டரிக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். அங்கு சுறா மீன்களை மரப் பகுதியில் வைத்து வெட்டித் துண்டுகளாக்கி, செதில்களை அகற்றி, சிறகுகளை வெட்டி நீக்கி, தோலை தனியாக உரித்து, உப்பு தடவி உலர வைப்பதிற்கேற்றபடி மாமிசத்தைச் சிறுசிறு பகுதிகளாக ஆக்கியிருந்தார்கள்.

கிழக்கு திசை காற்று வீசும்போது சுறா ஃபேக்டரியிலிருந்து ஒரு வகையான வாசனை துறைமுகம் முழுவதும் பரந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது மெல்லிய வாசனையே இருந்தது. காரணம்- காற்று வடக்கு நோக்கி மாறி வீசி, நேரம் செல்லச் செல்ல இல்லாமல் போயிருந்தது. இப்போது திண்ணையில் இதயபூர்வமான, பிரகாசமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது.

“சான்டியாகோ...” சிறுவன் அழைத்தான்.

“நான் இங்கேதானே இருக்கேன்!” கிழவன் சொன்னான். கண்ணாடிக் குவளையைக் கையில் வைத்துக் கொண்டு சில வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற காரியங்களைப் பற்றிய சிந்தனையில் அவன் மூழ்கி விட்டிருந்தான்.

“நான் போய் உங்களுக்கு நாளைக்குத் தேவைப்படும் மத்தி மீனைக் கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம்... போய் கால்பந்து விளையாடு. இப்போதுகூட எனக்கு படகைத் துடுப்பு போட்டு செலுத்துவதற்கான ஆற்றல் இருக்கிறது. ரோஜேலியை வீசி எறியவும் முடியும்.”

“போய் விளையாடுவதில் விருப்பம்தான்- உங்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க முடியவில்லையென்றால். வேறு ஏதாவது வகையில் உங்களுக்கு உதவியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“நீ எனக்கு ஒரு பீர் வாங்கித் தந்தாய் அல்லவா?” கிழவன் சொன்னான்: “நீ ஒரு சரியான ஆணாக மாறி விட்டிருக்கிறாய்.”


“நீங்கள் என்னை முதல் முறையாக படகில் அழைத்துக்கொண்டு சென்றபோது, எனக்கு என்ன வயது?”

“ஐந்து... நான் மீனை உயிருடன் படகுக்குள் இழுத்தபோது, அது உன்னைக் கொன்று தீர்ப்பதாக இருந்தது. அவன் படகையும் ஒரு வழி பண்ணிவிடுவதாக இருந்தான். உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?”

“மீன் வாலைக் கொண்டு அடித்ததும், படகில் உட்காரக் கூடிய இடத்தை பாதிப்பிற்குள்ளாக்கியதும், நீங்கள் அதை அடிக்கும் சத்தம் காதில் விழுந்ததும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நனைந்து சுருண்டு போய் காணப்பட்ட தூண்டில் நூல்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி நீங்கள் என்னை வீசி எறிந்ததையும், படகு குலுங்கியதையும், மரத்தை வெட்டிக் கீழே சாய்க்கும்போது உண்டாகும் சத்தத்தைப்போல நீங்கள் மீனை அடிக்கும்போது உண்டான சத்தத்தையும், என் உடலெங்கும் பரவிய ரத்தத்தின் அருமையான வாசனையையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.”

“நீ அதை உண்மையிலேயே நினைத்துப் பார்க்கிறாயா அல்லது பின்னால் நான் கூறிய விஷயத்தை வைத்துக் கூறுகிறாயா?”

“நாம் ஒன்று சேர்ந்து கடலுக்குள் சென்றதிலிருந்து நடைபெற்ற எல்லா விஷயங்களும் எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன.”

வெயில் பட்டு வாடிப் போய் விட்டிருந்த, தன்னம்பிக்கை வெளிப்பட்ட, பாசம் நிறைந்த கண்களால் கிழவன் அவனைப் பார்த்தான்.

“நீ என்னுடைய மகனாக இருந்திருந்தால், நான் உன்னை சூதாடுவதற்கு அழைத்துச் சென்றிருப்பேன்.” அவன் சொன்னான்: “ஆனால், நீ உன்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உரியவனாகவும் ஆகிவிட்டாய். பிறகு... நீ அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு படகில் வேறு இருக்கிறாயே!”

“நான் மத்தி மீனைக் கொண்டு வரட்டுமா? இரை போடுகிற வகையில் நான்கு மத்திகள் கிடைக்கக்கூடிய இடமும் எனக்குத் தெரியும்.”

“இன்றைக்கு போடக் கூடிய நான்கு மத்திகள் என்னிடம் இருக்கு. நான் அவற்றைப் பெட்டியில் உப்பு போட்டு வைத்திருக்கிறேன்.”

“நான் புதிதாக நான்கு மத்திகளைக் கொண்டு வந்து தருகிறேன்.”

“ஒன்று போதும்...” கிழவன் சொன்னான். அவனுடைய ஆவலும் தன்னம்பிக்கையும் சிறிதுகூட இழக்கப்பட்டிருக்கவில்லை. இப்போது மெல்லிய காற்று வீசியதும், அவற்றிற்கு புத்துணர்ச்சி வந்து சேர்ந்து விட்டிருந்தது.

“இரண்டு மத்திகள் கொண்டு வருகிறேன்.” சிறுவன் சொன்னான்.

“சரி... இரண்டு மத்திகள்...” கிழவன் சம்மதித்தான். “அவை நீ திருடியவை அல்ல... அப்படித்தானே?”

“நான் திருடுவது உண்டு.” சிறுவன் சொன்னான்: “ஆனால், இவை நான் வாங்கியவையே.”

“நன்றி.” கிழவன் சொன்னான். தனக்கு இந்த அளவுக்கு சாதாரணமான மன நிலையில் இருக்கக்கூடிய தன்மை எப்போது வந்து சேர்ந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தூய்மையான மனதைக் கொண்டவனாக அவன் இருந்தான். ஆனால், தனக்கு சாதாரண மனநிலை வந்து சேர்ந்துவிட்டது என்ற விஷயம் கிழவனுக்குத் தெரிந்திருந்தது. எளிய நிலையில் மனதை வைத்திருப்பது வெட்கக் கேடான ஒரு விஷயமல்ல என்பதையும், அது உண்மையிலேயே மதிப்பை இழக்கச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்பதையும் அவன் தெரிந்து வைத்திருந்தான்.

“இந்த கடலைப் பொறுத்த வரையில் நாளை ஒரு நல்ல நாளாக இருக்கப் போகிறது.” அவன் சொன்னான்.

“நீங்கள் எங்கே போறீங்க?” சிறுவன் கேட்டான்.

“காற்றின் திசை மாறும்போது, கடலின் உட்பகுதிக்குள். வெளிச்சம் வருவதற்கு முன்பே, கடலின் நடுப்பகுதிக்குள் போய்விட வேண்டும்.”

“கடலின் நடுப்பகுதிக்குப் போகும்படி நான் என்னுடைய படகைச் சேர்ந்தவர்களிடமும் கூறுகிறேன்.” சிறுவன் சொன்னான்: “அப்போது பெரிய மீன் உங்களுடைய தூண்டிலில் சிக்கினால், உதவிக்கு எங்களால் வந்துசேர முடியுமே!”

“உன்னுடைய படகுக்காரனுக்கு கடலின் நடுப்பகுதிக்குப் போவதற்கு விருப்பமில்லை.”

“அப்படி இல்லை...” சிறுவன் சொன்னான்: “ஆனால், அவரால் பார்க்க முடியாத சில விஷயங்களை- ஒரு பறவை பறப்பதையோ வேறு சில விஷயங்களையோ என்னால் பார்க்க முடியும். ஒரு டால்ஃபினுக்குப் பின்னால் நான் அவரை அழைத்துக் கொண்டு செல்வேன்.”

“அவனுடைய கண்கள் அந்த அளவுக்கு மோசமாக இருக்கின்றனவா என்ன?”

“பெரும்பாலும் அவர் குருடன்தான்.”

“வினோதமாக இருக்கிறதே?” கிழவன் சொன்னான்: “அவன் எந்தச் சமயத்திலும் ஆமையைப் பிடிப்பதற்காகச் சென்றதில்லையே! அந்தப் பன்றி கண்களை நாசமாக்கிவிடும்.”

“ஆனால், நீங்கள் பல வருடங்களாக மாஸ்கிட்டோ கடற்கரைக்கு ஆமையைப் பிடிப்பதற்காகப் போயிருக்கிறீர்கள் அல்லவா? அதற்குப் பிறகும் உங்களுடைய கண்களில் பிரச்சினை எதுவும் இல்லையே?”

“நான் ஒரு அசாதாரணமான கிழவன்.”

“ஆனால், ஒரு சரியான பெரிய மீனை சந்திப்பதற்கு இருக்கக் கூடிய தைரியம் இப்போது உங்களுக்கு இருக்கிறதா?”

“இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.”

“நாம் இந்த பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டுக்குக் கொண்டு செல்வோம்.” சிறுவன் சொன்னான்: “அப்படின்னா நான் இந்த வீசக் கூடிய வலையைப் பயன்படுத்தி மத்தியைப் பிடிக்கலாமே?”

அவர்கள் படகிலிருந்து பாய்மரம், பாய் ஆகியவற்றை எடுத்தார்கள். கிழவன் பாய்மரத்தைத் தோளில் எடுத்து வைத்தான். உறுதியாக நெய்யப்பட்ட தவிட்டு நிறத்திலிருந்த கயிறுகளும், பெரிய தூண்டிலும், கைப்பிடியைக் கொண்ட உளியும் வைக்கப்பட்டிருந்த பெட்டியைச் சிறுவன் எடுத்துக் கொண்டான். இரைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி, இரும்பாலான கம்பிக்கு அருகில் பாய்மரத்திற்குக் கீழே வைக்கப் பட்டிருந்தது. பெரிய மீன்களைப் படகிற்குள் இழுத்துக்கொண்டு வரும்போது அடித்துக் கொல்வதற்காக அந்த இரும்புக் கம்பியைப் பயன்படுத்துவார்கள். கிழவனின் பொருட்களை யாரும் திருடுவதில்லை. ஈரம்பட்டு நாசமாகிப் போவதற்கு வாய்ப்பு உள்ள பொருட்கள் என்பதால், பாயையும் கனமான கயிறுகளையும் வீட்டுக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது. அங்கு இருக்கக் கூடிய மனிதர்கள் தன்னுடைய பொருட்களைத் திருடுவதில்லை என்ற விஷயம் நன்கு தெரிந்திருந்தாலும், பெரிய ஒரு தூண்டிலையும் உளியையும் படகில் வைப்பது என்பது தேவையற்ற ஒரு ஈர்ப்பு விஷயமாக இருக்கும் என்பதை கிழவன் சிந்தித்துப் பார்த்தான்.

அவர்கள் ஒன்று சேர்ந்து பாதையின் வழியாக மேலே இருக்கும் பகுதியை நோக்கி நடந்து கிழவனின் குடிசையை அடைந்தார்கள். திறந்து கிடந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்கள். சுருட்டிய பாயுடன் இருந்த பாய்மரத்தை கிழவன் சுவரின்மீது சாய்த்து வைத்தான். சிறுவன் பெட்டியையும் பிற பொருட்களையும் அதற்கு அருகில் கொண்டு போய் வைத்தான். குடிசைக்குள் இருந்த ஒரு அறையின் அளவுக்கு கிட்டத்தட்ட பாய்மரம் நீளமானதாக இருந்தது. குவானோ என்று அழைக்கப்படும் அமெரிக்க பனையின் கீழே விழா தளிர் இலைகளைக் கொண்டு அந்தக் குடிசை வேயப்பட்டிருந்தது. அங்கு ஒரு படுக்கையும் மேஜையும் நாற்காலியும் இருந்தன. பிறகு... அடுப்புக்கரியைக் கொண்டு எரித்து சமையல் செய்வதற்காக அசுத்தமான தரையில் இருந்த ஒரு இடம்...


கனமான நார்களைக் கொண்ட குவானோவின் அகலமான இலைகள் தலையை நீட்டிக் கொண்டிருந்த தவிட்டு நிற சுவரில் இயேசுவின் படமும், காப்ரெயைச் சேர்ந்த கன்னியின் படமும் இருந்தன. அவை அவனுடைய இறந்துபோன மனைவியைப் பற்றிய நினைவுகளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தன. முன்பு சுவரில் அவளுடைய மங்கிய நிறத்திலான ஒரு படம் இருந்தது. ஆனால், அதைப் பார்க்கும்போது கனமான தனிமை உணர்ச்சி தோன்றியதன் காரணமாக, அவன் அதை எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டான். மூலையில் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் சுத்தமான ஒரு சட்டைக்குக் கீழே அது இருந்தது.

“சாப்பிடுவதற்கு என்ன இருக்கு?” சிறுவன் கேட்டான்.

“ஒரு பானை நிறைய மஞ்சள் சாதமும் மீனும்... நீயும் கொஞ்சம் சாப்பிடலாமே?”

“வேண்டாம். நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். நான் நெருப்பைப் பற்ற வைக்கணுமா?”

“வேண்டாம்... சிறிது நேரம் கழித்து நானே பற்ற வைத்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் ஆறிப் போன சாதத்தை சாப்பிட வேண்டியதிருக்கும்.”

“இந்த வீசும் வலையை நான் கொண்டு போகட்டுமா?”

“கட்டாயம்...”

உண்மையிலேயே வீசக்கூடிய வலை எதுவும் அங்கு இல்லை. அவன் அதை எப்போது விற்றான் என்ற விஷயம் சிறுவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. எனினும், அவர்கள் இந்த நடிப்பை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் சாதமும் பானையும் மீனும் அங்கு இல்லவே இல்லை. அந்த விஷயமும் சிறுவனுக்கு நன்றாகவே தெரியும்.

“எண்பத்தைந்து என்பது அதிர்ஷ்டமுள்ள எண்.” கிழவன் சொன்னான்: “ஆயிரம் ராத்தலைவிட அதிகமான எடையைக் கொண்ட ஒரு மீனுடன் நான் வருவதை நீ பார்க்க வேண்டாமா?”

“வீசுகிற வலையை எடுத்துக் கொண்டு போய் நான் மத்தி மீனைப் பிடிக்கிறேன். நீங்கள் திண்ணையில் வெயிலில் காய்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களா?”

“சரி... என்னிடம் நேற்றைய பத்திரிகை இருக்கிறது. நான் பேஸ் பால் விளையாட்டைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.”

நேற்றைய பத்திரிகை என்ற விஷயம்கூட கற்பனைக் கதையாக இருக்குமா என்பது சிறுவனுக்குத் தெரியாமலிருந்தது. ஆனால், கிழவன் படுக்கைக்கு அடியில் இருந்து பத்திரிகையை வெளியே எடுத்தான்.

“மதுக் கடையில் வைத்து பெரிக்கோ என்னிடம் இந்தப் பத்திரிகையைத் தந்தான்.” அவன் விளக்கிக் கூறினான்.

“மத்தி மீன் கிடைத்தவுடன் நான் திரும்பி வந்த விடுவேன். உங்களுக்கும் எனக்கும் சொந்தமான மத்தி மீன்களை பனிக்கட்டிக்கு மத்தியில் வைப்போம். காலையில் பிரித்து எடுப்போம். திரும்பி வந்தவுடன், நீங்கள் எனக்கு பேஸ் பால் விளையாட்டைப் பற்றி சொல்லித் தரணும்.”

“யாங்கிகளால் தோற்க முடியாது.”

“ஆனால், க்ளீவ்லாண்டைச் சேர்ந்த இந்தியர்கள் விட்டுத் தர மாட்டார்கள் என்பதுதான் என் பயமே.”

“யாங்கிகள்மீது நம்பிக்கை வை, என் சிறுவனே. மிகப் பெரிய மனிதரான டி மாக்கியோவைப் பற்றி சிந்தித்துப் பார்.”

“டிக்ரோயிட்டில் இருக்கும் புலிகளையும் க்ளீவ்லாண்டைச் சேர்ந்த இந்தியர்களையும் பார்த்து நான் ஒரே மாதிரி பயப்படுகிறேன்.”

“கவனமாக இரு. இப்படி இருந்தால் சின்ஸினாட்டியில் இருக்கும் சிவப்பிந்தியர்களையும், சிக்காகோவைச் சேர்ந்த வெள்ளை சாக்ஸ்காரர்களையும் பார்த்துக்கூட நீ பயப்பட வேண்டியதிருக்கும்.”

“நீங்கள் இந்தப் பத்திரிகையை வாசித்துப் புரிந்து கொண்டு, நான் திரும்பி வரும்போது என்னிடம் விஷயங்களைக் கூற வேண்டும்.”

“எண்பத்தைந்தில் முடிவடையக் கூடிய ஒரு லாட்டரிச் சீட்டை நாம் வாங்கினால் என்ன? நாளைதான் எண்பத்தைந்தாவது நாள்.”

“நாம் அப்படி ஒன்றை வாங்குவோம்.” சிறுவன் சொன்னான்: “உங்களுடைய மகத்தான சாதனை ஆயிற்றே எண்பத்தைந்து! அதை வாங்கினால் என்ன?”

“இரண்டு முறைகள் அது எந்தச் சமயத்திலும் நடக்காது. ஒரு எண்பத்தைந்தைக் கண்டுபிடிக்க முடியுமா?”

“ஒரு டிக்கெட்டிற்கு ஆர்டர் கொடுப்போம்.”

“ஒரு ஷீட்... அதாவது- இரண்டரை டாலர். யாரிடமிருந்து கடன் வாங்குவது?”

“அது மிகவும் எளிதான விஷயம். எனக்கு எப்போது வேண்டுமானாலும் இரண்டரை டாலர் கடனாகக் கிடைக்கும்.”

“எனக்கும் கடனாகக் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். முதலில் கடன் வாங்குவோம்; பிறகு பிச்சை எடுப்போம்.”

“சிறிது வெயில் காயுங்க, பெரியவரே!” சிறுவன் சொன்னான்.

“இது செப்டம்பர் மாதம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள். பெரிய மீன்கள் வரக்கூடிய மாதம்.” கிழவன் சொன்னான்: “மே மாதத்தில் யாரும் மீன் பிடிப்பவனாக ஆகலாம்.”

“நான் இப்போது மத்தி மீன்களைப் பிடிப்பதற்காகப் போகிறேன்.” சிறுவன் சொன்னான்.

சிறுவன் திரும்பி வந்தபோது கிழவன் நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். சூரியன் மறைந்து விட்டிருந்தது. சிறுவன் பழைய பட்டாளப் போர்வையை படுக்கையிலிருந்து எடுத்து நாற்காலியின் பின்பகுதி வழியாக கிழவனின் தோள்களின் மீது போர்த்தி விட்டான். அசாதாரணமான தோள்கள்... வயதாகி விட்டிருந்தாலும், மிகவும் முரட்டுத்தனமாக அவை இருந்தன. இப்போதுகூட கழுத்திற்கு நல்ல பலம் இருந்தது. தலையை முன்னோக்கி வைத்துக் கொண்டு கிழவன் உறங்கிக் கொண்டிருந்தான். அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- கழுத்தில் இருந்த சுருக்கங்கள் வெளியே தெரியவில்லை. பல முறைகள் தைத்துச் சேர்க்கப்பட்ட துணித் துண்டுகளில் வெயில் பட்டு, பல்வேறு நிறங்கள் தெரிந்தன. கிழவனின் தலை அதிகமாக வயதாகிவிட்டிருந்ததை வெளிப்படுத்தியது. கண்களை மூடிக் கொண்ட பிறகு, முகத்தில் உயிரே இல்லாது ஆகிவிட்டதைப்போல தோன்றியது. செய்தித் தாள் முழங்கால்களுக்கு மேலே கிடந்தது. அவனுடைய கையின் எடை மாலை நேரக் காற்றில் அது பறந்து போய் விடாமல் தடுத்து விட்டிருந்தது. கிழவன் நிர்வாணமான பாதங்களுடன் இருந்தான்.

கிழவனைத் தட்டி எழுப்பாமல் சிறுவன் அந்த இடத்தை விட்டு அகன்றான். திரும்பி வந்தபோதும், கிழவன் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தான்.

“எழுந்திருங்க, தாத்தா.” சிறுவன் அழைத்தான். தொடர்ந்து கையால் கிழவனின் முழங்காலில் மெதுவாகத் தட்டினான்.

கிழவன் கண்களைத் திறந்தான். ஒரு நிமிடம் எங்கோ தூரத்திலிருந்து வந்த கொண்டிருப்பதைப்போல அவனுடைய நடவடிக்கை இருந்தது. பிறகு புன்னகைத்துக் கொண்டே கேட்டான்:

“உன் கையில் என்ன இருக்கு?”

“இரவு உணவு...” சிறுவன் சொன்னான்: “நாம் இரவு உணவு சாப்பிடப் போகிறோம்.”

“எனக்கு அந்த அளவுக்கு பசி இல்லை.”

“வந்து உணவைச் சாப்பிடுங்க. இல்லாவிட்டால் உங்களால் மீன் பிடிக்க முடியாது. பிறகு... உணவு சாப்பிடவும்...”


“சாப்பிடுகிறேன்.” கிழவன் எழுந்து பத்திரிகையை எடுத்து மடித்துக் கொண்டே சொன்னான். தொடர்ந்து போர்வையை மடிக்க ஆரம்பித்தான்.

“போர்வையை உடலில் சுற்றிக் கொள்ளுங்க.” சிறுவன் சொன்னான்: “நான் உயிருடன் இருக்கும்போது, உணவு சாப்பிடாமல் நீங்கள் மீன் பிடிக்கப் போகிறீர்கள் என்ற பிரச்சினையே உண்டாகாது.”

“அப்படியென்றால் நீண்ட காலம் வாழு. உடல்நலத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்.” கிழவன் சொன்னான்: “சாப்பிடுறதுக்கு என்ன இருக்கு?”

“ப்ளாக் பீன்ஸும் சாதமும். பிறகு.. நேந்திரங்காய் சிப்ஸ்... கொஞ்சம் அவியல்...”

திண்ணையிலிருந்த இரண்டு தட்டுகளைக் கொண்ட ஒரு உலோக பாத்திரத்தில் சிறுவன் இந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தான். இரண்டு செட் கத்திகளையும் முட்களையும் கரண்டிகளையும் அவன் பாக்கெட்டில் வைத்திருந்தான். ஒவ்வொரு செட்டும் தாள்களைக் கொண்டு சுற்றப்பட்டிருந்தது.

“இதை யார் தந்தார்கள்?”

“மார்ட்டின்... உரிமையாளர்.”

“நான் அவருக்கு நன்றி கூற வேண்டும்.”

“நான் அவருக்கு ஏற்கெனவே நன்றி கூறிவிட்டேன்.” சிறுவன் சொன்னான்: “இனி நீங்களும் நன்றி கூற வேண்டிய அவசியமில்லை.”

“நான் அவருக்கு பெரிய மீனின் வயிற்றுப் பகுதியைச் சேர்ந்த மாமிசத் துண்டைத் தருவேன்.” கிழவன் சொன்னான்: “ஒரு முறைக்கும் அதிகமாக அவர் நமக்கு உணவு அளித்திருக்கிறார் அல்லவா? அப்படியென்றால் வயிற்றுப் பகுதி மாமிசத்தைவிட அதிகமாக ஏதாவது தர வேண்டும். அவருக்கு நம்மைப் பற்றி அக்கறை இருக்கிறது.”

“அவர் இரண்டு பீர் வேறு கொடுத்தனுப்பியிருக்கிறார்.”

“டின்களில் கிடைக்கக் கூடிய பீர்தான் எனக்கு மிகவும் பிடித்தது.”

“அது எனக்குத் தெரியும். ஆனால், இது புட்டியில் நிறைக்கப்பட்ட பீர். ஹாட்வே பீர். புட்டிகளைத் திருப்பித் தர வேண்டும்.”

“நீ மிகப் பெரிய உதவியைச் செய்துகொண்டிருக்கிறாய்.” கிழவன் சொன்னான். “நாம் உணவு சாப்பிட வேண்டாமா?”

“நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” சிறுவன் அவனிடம் மெதுவான குரலில் சொன்னான்: “நீங்கள் தயாராகாமல் நான் பாத்திரத்தைத் திறக்கவே மாட்டேன்.”

“நான் தயாராகிவிட்டேன்.” கிழவன் சொன்னான். “நான் கையைக் கழுவ வேண்டும்.”

“எங்கே கையைக் கழுவுவீர்கள்?” சிறுவன் சிந்தித்தான்: “கிராம தூய நீர் விநியோக திட்டம் அங்கிருந்த பாதைக்குக் கீழே இரண்டு தெருக்களைத் தாண்டி இருக்கிறது. கிழவனுக்கு நீரையும் சோப்பையும் நல்ல ஒரு துவாலையையும் நான் இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு எப்படி சிந்தனையே இல்லாமல் போய் விட்டேன்? பனிக்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்காக இன்னொரு சட்டையையும் ஒரு மேலாடையையும் தர வேண்டும். பிறகு ஏதாவது வகைப்பட்ட ஷூவையும் இன்னொரு போர்வையையும்...”

“உன்னுடைய அவியல் மிகவும் அருமையாக இருக்கிறது.” கிழவன் சொன்னான்.

“பேஸ் பால் விளையாட்டைப் பற்றிச் சொல்லுங்க.” சிறுவன் அவனிடம் கேட்டுக் கொண்டான்.

“நான் ஏற்கெனவே கூறியதைப்போல அமெரிக்கன் லீக்கில் யாங்கிகளுக்குத்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.” கிழவன் மகிழ்ச்சியுடன் கூறினான்.

“இன்று அவர்கள் தோற்றுவிட்டார்கள்.” சிறுவன் சொன்னான்.

“அது ஒரு பிரச்சினையே இல்லை. மிகப் பெரிய திறமைசாலியான டிமாக்கியோ மீண்டும் வெற்றியைத் தன் கைக்குக் கொண்டு வருவார்.”

“டீமில் திறமைசாலிகள் வேறு சிலரும் இருப்பார்கள் அல்லவா?”

“நிச்சயமாக... ஆனால், அவர் வேறுபட்ட மனிதர். ப்ரூக்லினுக்கும் ஃபிலாடெல்ஃபியாவுக்கும் இடையில் நடக்கக் கூடிய இன்னொரு லீக்கில் நான் ப்ரூக்லின் பக்கம். ஆனால், அப்போது நான் சிந்திப்பது டிக் சிஸ்லரைப் பற்றியும் ஒல்ட் பார்க்கின் மகத்தான அந்த விரட்டல்களையும்தான். அவரைப்போல வேறு யாரும் இன்று வரை பிறந்ததில்லை. நான் இன்று வரை பார்த்தவர்களிலேயே மிகவும் தூரத்தில் பந்தைச் செலுத்தக் கூடியவர் அவர்தான். அவர் திண்ணையில் எப்போது வந்து உட்கார்ந்தார் என்ற விஷயம் உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதல்லவா? அவரை மீன் பிடிப்பதற்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், கேட்பதற்கான தைரியம் வரவில்லை. அதற்குப் பிறகுதான் அவரிடம் கேட்டுப் பார் என்று நான் உன்னிடம் சொன்னேன். உனக்கோ... சிறிதுகூட தைரியம் இல்லை.”

“எனக்குத் தெரியும். அது ஒரு மிகப் பெரிய தவறான விஷயமாகிவிட்டது. அவர் நம்முடன் வந்திருக்க வேண்டும். பிறகு அதை ஆயுட்காலம் முழுவதும் நாம் நினைத்துக் கொண்டே இருக்கலாம்.”

“மிகப் பெரிய வீரரான டிமாக்கியோவை மீன் பிடிப்பதற்காக அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசையாக இருந்தது.” கிழவன் சொன்னான்: “அவருடைய அப்பா மீன் பிடிப்பவராக இருந்தார் என்று கூறுவார்கள். அவரும் நம்மைப் போல ஏழையாக இருந்திருக்க வேண்டும். அதனால் நம்முடைய விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும். மிகப் பெரிய மனிதரான டிஸ்லரின் தந்தை எந்தச் சமயத்திலும் ஏழையாக இருந்தது இல்லை. அவருடைய தந்தை என்னுடைய வயதில் பெரிய லீக்குகளில் விளையாடிக் கொண்டிருந்தார். எனக்கு உன்னுடைய வயது நடக்கும்போது, ஆப்பிரிக்காவுக்குச் சென்ற சதுரமான பாய் இருந்த கப்பலில் பாய்மரத்திற்கு முன்னால் நான் உட்கார்ந்திருந்தேன். அங்கு மாலை நேரங்களில் கடலின் ஓரத்தில் நான் சிங்கங்களைப் பார்த்திருக்கிறேன்.”

“எனக்குத் தெரியும். நீங்கள் என்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க.”

“நாம் பேச வேண்டியது ஆப்பிரிக்காவைப் பற்றியா, பேஸ் பால் விளையாட்டைப் பற்றியா?”

“பேஸ் பால் விளையாட்டைப் பற்றி...” சிறுவன் சொன்னான்: “மிகப் பெரிய விளையாட்டு வீரரான ஜான் ஜெ மாக்ரோவைப் பற்றி சொல்லுங்க. ஜெ என்பதற்கு பதிலாக ஜோதா என்றுதான் அவர் கூறுவார்.”

“முன்பு அவர் சில வேளைகளில் திண்ணையைத் தேடி வருவதுண்டு. மது அருந்திவிட்டால், முரட்டுத்தனமான குரலில் பேசிக் கொண்டிருப்பார். பிரச்சினைகளை உண்டாக்குவார். குதிரைகள் சம்பந்தமான விஷயங்களில் இருந்ததைப் போலவே பேஸ் பால் விளையாட்டிலும் அவர் ஒரே மாதிரி மனதைப் பதித்து விட்டிருந்தார். பாக்கெட்டில் எப்போதும் குதிரைகளைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பார். தொலைபேசியில் குதிரைகளின் பெயர்களை அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பார்.”

“அவர் திறமைசாலியான ஒரு நிர்வாகியாக இருந்தார்.” சிறுவன் சொன்னான்: “என் தந்தையின் கருத்தில் அவர்தான் மிகப் பெரிய திறமைசாலியான மனிதர்.”

“பெரும்பாலான நேரங்களில் அவர் இங்கு வந்ததன் காரணமாக அப்படி நினைத்திருக்கலாம்.” கிழவன் சொன்னான்: “ஒவ்வொரு வருடமும் ட்யூரோச்சர் இங்கு தவறாமல் வந்து கொண்டிருந்தால், அவர்தான் மிகப் பெரிய திறமைசாலியான மனிதர் என்று உன்னுடைய தந்தை கூறிக் கொண்டிருந்திருப்பார்.”

“உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த நிர்வாகி யார்? லுக்யுவா? இல்லாவிட்டால் மைக் கான்ஸாலஸா?”


“அவர்கள் சமமானவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“நீங்கள் மிகச் சிறந்த மீன் பிடிப்பவர்.”

“இல்லை... அதிகமான திறமை கொண்டவர்களை எனக்குத் தெரியும்.”

“க்யேவா...” சிறுவன் சொன்னான்: “சிறந்த மீன் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மதிப்புள்ளவர்கள் மிகச் சிலரே. அதாவது நீங்கள் ஒருவர் மட்டும்தான்.”

“நன்றி. நீ என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறாய். நாம் கூறியது தவறானது என்பதைக் காட்டுகிற எந்த ஒரு பெரிய மீனையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வராது என்று நான் நினைக்கிறேன்.”

“கூறியதைப் போல நீங்கள் மிகவும் திறமை கொண்டவராக இருக்கும் பட்சம், அப்படிப்பட்ட ஒரு மீன் இருக்காது.”

“நினைக்கும் அளவுக்கு மிகவும் சக்தி படைத்தவனாக நான் இல்லாமலிருக்கலாம்.” கிழவன் சொன்னான்: “ஆனால், எனக்கு ஏராளமான உத்திகள் தெரியும். உறுதியான முடிவுகள் எடுக்கத் தெரியும்.”

“நீங்கள் இப்போது போய் படுத்தால்தான் காலையில் உற்சாகமாக இருக்க முடியும். இந்தச் சாமான்களை நான் திண்ணைக்கு திரும்பவும் எடுத்துக் கொண்டு செல்கிறேன்.”

“அப்படியென்றால் குட் நைட்... காலையில் நான் உன்னை எழுப்புகிறேன்.”

“நீங்கள் என்னுடைய அலாரம் மணி.” சிறுவன் சொன்னான்.

“வயதுதான் என்னுடைய அலாரம் மணி.” கிழவன் சொன்னான்: “வயதானவர்கள் ஏன் மிகவும் முன்பே எழுந்திருக்கிறார்கள்? நீளமான ஒரு நாளை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவா?”

“எனக்குத் தெரியாது.” சிறுவன் சொன்னான்: “சிறிய குழந்தைகள் நீண்ட நேரம் மிகவும் நன்றாக உறங்குகிறார்கள் என்ற விஷயம் மட்டும்தான் எனக்குத் தெரியும்.”

“அதை நான் ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.” கிழவன் சொன்னான்: “நான் உன்னைச் சரியான நேரத்திற்கு தட்டி எழுப்புவேன்.”

“எஜமானன் என்னைத் தட்டி எழுப்புவதை நான் விரும்பவில்லை. நான் ஒரு மோசமான பையன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.”

“எனக்குத் தெரியும்.”

“நல்லா தூங்குங்க, தாத்தா.”

சிறுவன் வெளியே சென்றான். மேஜைமீது விளக்கே இல்லாமல்தான் அவர்கள் உணவு அருந்தினார்கள். கிழவன் கால் சட்டையை அவிழ்த்து மாற்றி இருட்டில் தூங்குவதற்காகப் படுத்தான். கால் சட்டையைச் சுருட்டி, பத்திரிகைகளை அதற்குள் வைத்து, ஒரு தலையணையாக ஆக்கினான். பிறகு போர்வைக்குள் சுருண்டு, படுக்கையின் ஸ்ப்ரிங்குகளை மூடியிருந்த பழைய பத்திரிகைத் தாள்களின்மீது படுத்து உறங்கினான்.

சிறிது நேரத்திற்குள் அவன் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினான். தான் சிறு வயதைச் செலவிட்ட ஆப்பிரிக்காவை அவன் கனவு கண்டான். நீளமான, பொன் நிறத்தில் இருந்த கடலின் ஓரங்கள்... வெள்ளை நிறத்தில், கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு வெண்மை நிறத்தில் காணப்பட்ட கடற்கரைகள்... உயரமான பாறைகள்... தவிட்டு நிறத்தில் இருந்த பெரிய மலைகள்... எல்லாவற்றையும் கிழவன் கனவில் பார்த்தான். சமீபகாலமாக ஒவ்வொரு இரவிலும் அவன் அந்த கரையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். கனவில் அவன் கடல் அலைகளின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டான். கிராமத்துப் படகுகள் அதைக் கிழித்துக்கொண்டு வருவதையும் பார்த்தான். தூக்கத்தில் கப்பல் தளத்திலிருந்து மிதந்து வரும் தார், கயிறு ஆகியவற்றின் வாசனையை உணர்ந்தான். அதிகாலைப் பொழுதில் கரைக் காற்று கொண்டு வந்த ஆப்பிரிக்காவின் வாசனையையும் அவன் உணர்ந்தான்.

கரையிலிருந்து வந்த காற்றின் வாசனை வந்து மோதியவுடன், அவன் கண் விழித்து, ஆடைகளை மாற்றினான். பிறகு நடந்து சென்று சிறுவனைத் தட்டி எழுப்புவதுதான் எப்போதும் நடக்கக் கூடிய செயல். ஆனால், இன்று இரவு கரையிலிருந்து வந்த காற்றின் வாசனை மிகவும் சீக்கிரமே வந்து சேர்ந்துவிட்டது. தன் கனவில் மிகவும் முன் கூட்டியே அது வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். கடலிலிருந்து தீவுகளின் வெண்மையான உருவங்கள் எழுந்து வருவதை தொடர்ந்து அவன் பார்த்தான். பிறகு கானரி தீவுகளின் பலவிதப்பட்ட கப்பல் துறைகளும் விளக்குகளும் கனவில் தோன்றின. சூறாவளியையோ பெண்களையோ மிகப் பெரிய சம்பவங்களையோ பெரிய மீன்களையோ சண்டைகளையோ போராட்டங்களையோ மனைவியையோ அவன் கனவு காணவில்லை. ஆப்பிரிக்க கடலோரத்தில் நடந்து திரியும் சிங்கங்களைப் பற்றி மட்டுமே அவனுடைய கனவு இருந்தது. மாலை வேளைகளில் பூனைக் குட்டிகளைப்போல அவை விளையாடிக் கொண்டிருந்தன. சிறுவன் மீது பாசம் செலுத்தியதைப்போலவே அவன் சிங்கங்களின்மீதும் அன்பை வெளிப்படுத்தினான். அவன் எந்தச் சமயத்திலும் சிறுவனைப் பற்றி கனவு கண்டதில்லை. கிழவன் சாதாரணமாகக் கண் விழித்து, திறந்து கிடந்த கதவு வழியாக நிலவைப் பார்த்தான். சுருட்டி வைக்கப்பட்டிருந்த கால்சட்டையை சரிசெய்து அணிந்து, குடிசைக்கு, வெளியே வந்து சிறுநீர் கழித்துவிட்டு, சிறுவனைத் தட்டி எழுப்புவதற்காக பாதையின் வழியாக நடந்தான். புலர்காலைப் பொழுதின் குளிர் பட்டு கிழவன் நடுங்கிக் கொண்டிருந்தான். உடல் வெப்பமடைவதற்காகத்தான் நடுங்குகிறது என்பதும், நேரத்தைத் தாமதம் செய்யாமல் தான் படகைச் செலுத்த வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தன.

சிறுவன் வசித்துக் கொண்டிருந்த வீட்டின் கதவு மூடப்பட்டிருக்கவில்லை. கிழவன் கதவைத் திறந்து, ஓசை எதுவும் உண்டாக்காமல் வெற்றுப் பாதங்களுடன் நடந்து உள்ளே சென்றான். முதல் அறையிலேயே ஒரு கட்டிலில் சிறுவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். மறையப் போகும் நிலவின் ஒளியில் அவனை கிழவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் சிறுவனின் ஒரு காலை மெதுவாகப் பிடித்து, அவன் கண்விழித்து தன்னைப் பார்ப்பது வரை அதே இடத்தில் நின்றிருந்தான். கிழவன் தலையை ஆட்டினான். சிறுவன் படுக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியிலிருந்து கால்சட்டையை எடுத்து, படுக்கையில் உட்கார்ந்து கொண்டே அணிந்தான்.

கிழவன் கதவுக்கு வெளியே சென்றான். சிறுவன் அவனைப் பின் தொடர்ந்தான். தூக்க கலக்கம் மாறாத அவனுடைய தோளில் கையை வைத்தவாறு கிழவன் சொன்னான்: “எனக்கு சிரமமாக இருக்கிறது.”

“ஏன்?” சிறுவன் சொன்னான்: “ஒரு மனிதன் இதைத்தான் செய்ய வேண்டும்.”

இருவரும் கிழவனின் குடிசைக்குச் செல்லும் வழியில் கால் வைத்தார்கள். தெரு முழுக்க, இருளில், தங்களுடைய படகுகளின் பாய் மரங்களைச் சுமந்து கொண்டு வெற்றுப் பாதங்களுடன் ஏராளமான மனிதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

கிழவனின் குடிசையை அடைந்ததும் சிறுவன் கூடையிலிருந்து நூல் கண்டுகளையும் குத்தீட்டியையும் பெரிய தூண்டிலையும் எடுத்தான். காற்று போய்விட்டிருந்த, சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய்மரத்தை கிழவன் தன் தோளின்மீது வைத்தான்.

“காப்பி குடிக்கிறீர்களா?” சிறுவன் கேட்டான்.

“இந்த பொருட்கள் எல்லாவற்றையும் படகில் வைத்த பிறகு, ஏதாவது சாப்பிடுவோம்.”

மீனவர்களுக்காக மிகவும் அதிகாலையிலேயே திறக்கப்படும் ஒரு கடையிலிருந்து டின்னில் அடைக்கப்பட்ட பால்கட்டியில் தயாரிக்கப்பட்ட காப்பியை அவர்கள் பருகினார்கள்.


“தூக்கம் சுகமாக இருந்ததா, தாத்தா?” சிறுவன் கேட்டான். அவன் கிழவனுடன் சேர்ந்து நடந்துகொண்டிருந்தாலும் தூக்க கலக்கம் மாறாமல் இருந்தது.

“சுகமாக உறங்கினேன் மனோலின். கிழவன் சொன்னான்: “இன்று எனக்கு முழுமையாக தன்னம்பிக்கை உண்டாகி விட்டிருக்கிறது.”

“எனக்கும் அப்படித்தான்...” சிறுவன் சொன்னான்: “நான் இப்போது நம் இருவருக்கும் தேவையான தூண்டிலில் கோர்க்கக் கூடிய மத்தி மீன்களையும், உங்களுக்குத் தேவையான புதிய இரைகளையும் கொண்டு வருகிறேன். எஜமானன் தானே பொருட்களைக் கொண்டு வருவார். வேறு யார் மூலமும் அதைச் சுமக்கச் செய்வதை அவர் விரும்புவதில்லை.”

“நாம் மாறுபட்டவர்கள்.” கிழவன் சொன்னான்: “ஐந்து வயது நடக்கும்போதே பொருட்களைச் சுமப்பதற்கு நான் உன்னை அனுமதித்தேன்.”

“அது எனக்குத் தெரியும்.” சிறுவன் சொன்னான்: “நான் உடனடியாக திரும்பி வருகிறேன். இன்னும் ஒரு காப்பியைக் குடிங்க. நமக்கு இங்கே கடன் கிடைக்குமே!”

பவளப் புற்றுகள் சேர்ந்து உண்டாக்கிய பாறையின் வழியாக பனிக்கட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் கட்டடத்தை நோக்கி அவன் வெற்றுப் பாதங்களுடன் நடந்தான். அங்குதான் தூண்டிலில் கோர்க்கக் கூடிய இரைகள் வைக்கப்பட்டிருந்தன.

கிழவன் மெதுவாக காப்பியைப் பருகினான். இன்று முழுவதும் இந்த காப்பியைக் குடித்தே நாளைக் கழிக்க வேண்டும் என்பதும்; அதனால் அதைப் பருகியேயாக வேண்டும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். கொஞ்ச காலமாகவே உணவு சாப்பிடுவது என்பது அவனிடம் ஒரு வகையான வெறுப்பை உண்டாக்கி விட்டிருந்தது. அதனால் படகுக்கு உணவைக் கொண்டு செல்வதில்லை. படகின் ஒரு ஓரத்தில் ஒரு புட்டியில் நீர் வைக்கப்பட்டிருக்கும். அன்றைய பொழுது அவனுக்கு மொத்தத்தில் தேவைப்பட்டது அதுதான்.

மத்திகளையும் தாளில் சுற்றப்பட்ட இரண்டு இரைகளையும் கையில் வைத்துக்கொண்டு சிறுவன் திரும்பி வந்தான். அவர்கள் படகு நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். பாதங்களுக்கு மத்தியில் மணல் துகள்கள் நசுங்கி ஓசை உண்டாக்குவதை அவர்கள் உணர்ந்தார்கள். படகை உயர்த்தி நீருக்குள் தள்ளி இறக்கினார்கள்.

“அதிர்ஷ்டம் துணையாக இருக்கட்டும். தாத்தா.”

“அதிர்ஷ்டம் துணையாக இருக்கட்டும்.” கிழவன் திரும்பச் சொன்னான். துடுப்புகளை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்யக் கூடிய வளையங்களுடன் சேர்த்து அவன் துடுப்புக் கயிறுகளைக் கட்டினான். துடுப்புகள், நீரில் உண்டாக்கிய மோதலுக்கு எதிராக முன்னோக்கி இயங்கின. இருட்டில் துறைமுகத்திற்கு வெளியே துடுப்புகளைப் போட ஆரம்பித்தான். வேறு கரைகளிலிருந்து வேறு படகுகள் கடலின் உட்பகுதியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அவற்றின் துடுப்புகள் நீருக்குள் மூழ்கும்போது உண்டாகக் கூடிய சத்தத்தையும், மோதும் போது எழும் சத்தத்தையும் கிழவன் கேட்டான். ஆனால், நிலவு மலைகளுக்குக் கீழே போய் விட்டிருந்ததால், படகுகளைப் பார்க்க முடியவில்லை.

சில நேரங்களில் படகில் யாராவது பேசக்கூடிய சத்தம் கேட்டது. எனினும், துடுப்புகளின் சத்தத்தைத் தவிர, பெரும்பாலான படகுகளும் மிகவும் அமைதியாகவே இருந்தன. துறைமுகத்தின் நுழைவாயிலை விட்டு வெளியேறியதும், படகுகள் பல இடங்களிலும் பரவிப் போய்க் கொண்டிருந்தன. மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தை நோக்கி ஒவ்வொருவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கோ தூரத்தில் இருக்கும் கடலின் நடுப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று கிழவன் இலக்கு வைத்திருந்தான். கரையின் வாசனையிலிருந்து விலகி, கடலின் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புலர்காலைப் பொழுதின் வாசனையை நோக்கி அவன் துடுப்புகளைப் போட்டான். பெரிய கிணறு என்று மீனவர்கள் அழைக்கும் கடலின் பகுதியில் படகைச் செலுத்தும்போது, நீரின் உட்பகுதியையும் பாசிகளின் பிரகாசத்தையும் அவன் பார்த்தான். அங்கு எழுநூறு காதம் ஆழத்தில் பல வகைப்பட்ட மீன்களும் வந்து ஒன்று சேர்ந்திருந்ததால் அந்தப் பெயர் வந்தது. கடலின் அடிப்பகுதியில் நெடுங்குத்தாக நின்று கொண்டிருந்த சுவர்களுக்கு எதிரிலிருந்து நீரோட்டத்தின் சுழல்தான் இந்த வெளிப்பாட்டுக்குக் காரணம். அங்கு செம்மீன், இரையாக கோர்த்து விடக்கூடிய மீன்கள் ஆகியவை கூட்டம் கூடி இருக்கும். சில வேளைகளில் ஆழத்தில் இருக்கும் பொந்துகளில் ஒரு வகையான இனத்தைச் சேர்ந்த ஸ்க்விடுகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும். இரவு நேரத்தில் நீர்ப் பரப்பின் மேற்பகுதியை நோக்கி வரும் அவற்றை, இரையைத் தேடி வரக் கூடிய மீன்கள் உணவாக்கிக் கொள்வதும் உண்டு.

இருட்டில் கிழவனுக்கு புலர்காலைப் பொழுதின் வெளிச்சத்தை அனுபவித்து உணர முடிந்தது. துடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கும்போது, பறக்கக் கூடிய மீன்கள் மேல் நோக்கித் தாவும்போது கேட்கக்கூடிய நெளியும் சத்தமும், இருட்டில் பறக்கும்போது அவற்றின் உறுதியான சிறகுகள் உண்டாக்கும் ஓசையும் கேட்டன. கடலில் தன்னுடைய மிகப் பெரிய நண்பர்களான பறக்கும் மீன்களை கிழவனுக்கு மிகவும் பிடிக்கும். பறவைகள்மீது, குறிப்பாக எந்நேரமும் பறந்து கொண்டே இரையைத் தேடிக் கொண்டிருக்கும் கருப்பு நிறத்தில் இருக்கும் சிறிய கடல் காகங்கள்மீது அவனுக்கு இரக்கம் உண்டு. பெரும்பாலும் அவை எதையும் உண்பது இல்லை. “நாம் நினைப்பதைவிட பறவைகளுக்கு துயரம் நிறைந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது. மீன்களைக் கொத்தி எடுத்துச் செல்லக்கூடிய பறவைகளும், பெரிதாகவும் முரட்டுத்தனம் கொண்டவையாகவும் இருக்க கூடியவையும் இவற்றிலிருந்து விதிவிலக்கானவை. கடலுக்கு இந்த அளவுக்கு கொடூரத் தன்மை இருக்கும்போது, என்ன காரணத்திற்காக கடலின் மேற்பரப்பில் பறந்து திரியும் பறவைகளைப்போல, உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் ஈர்க்கக் கூடியவையாகவும் அழகானவையாகவும் படைக்கப்பட்டிருக்கின்றன? கடல் இரக்கம் உள்ளவளாகவும் அழகானவளாகவும் இருக்கிறாள். ஆனால், மிகவும் கொடூரத்தன்மை கொண்டதாகவும் கடலால் ஆக முடியும். மிகவும் வேகமாகவே அவள் கொடூரத்தன்மை கொண்டவளாக மாறி விடுவாள். பறந்து திரிந்து, நீரைத் தொட்டு, உயர பறந்து கொண்டும் இரை தேடிக் கொண்டும் இருக்கக்கூடிய, மெல்லிய சோகம் நிறைந்த குரலைக் கொண்ட பறவைகள், கடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் பலவீனமானவையாகவே படைக்கப்பட்டிருக்கின்றன.” கிழவன் சிந்தித்தான்.

“லா மார்” என்றுதான் கிழவன் எப்போதும் கடலைப் பற்றி சிந்திப்பான். ஸ்வானிஷ் மொழியில் மனிதர்கள் அவளை அப்படித்தான் அன்புடன் அழைப்பார்கள். அவள்மீது அன்பு வைத்திருப்பவர்கள் சில நேரங்களில் அவளைப் பற்றி மோசமாகவும் பேசுவார்கள். ஆனால், அந்த மாதிரி எப்போது பேசினாலும், அவளை ஒரு பெண் என்று மனதில் நினைத்துக் கொண்டேதான் பேசுவார்கள். சில இளம் மீனவர்கள் விலங்கினங்களைக் குறிக்கக் கூடிய “எல் மார்” என்ற சொல்லைப் பயன்படுத்தி கடலை அழைப்பார்கள். தூண்டில்களைக் கட்டி வைப்பதற்கு மரத்தடிகளை பயன்படுத்துபவர்களும், சுறா மீனின் மாமிசத்தை விற்று ஏராளமான பணம் கையில் கிடைத்ததும் இயந்திரப் படகுகள் வாங்கியவர்களும்தான் அவர்கள்.


ஒரு எதிரி என்றோ ஒரு இடம் என்றோ ஒரு பகைவன் என்றோ தான் அவர்கள் அவளைப் பற்றி குறிப்பிடுவார்கள். ஆனால், கிழவன் எப்போதும் கடலை பெண்ணின் குணத்தைக் கொண்டவள் என்றும், மிகப் பெரிய செல்வங்களை அளிப்பவள் அல்லது தடுத்து வைத்திருப்பவள் என்றும் நினைப்பான். பயங்கரமான அல்லது கொடூரமான ஏதாவது காரியத்தைச் செய்கிறாள் என்றால் அதற்குக் காரணம் அவளால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்பதுதான். ஒரு பெண் என்பதைப் போல நிலவு அவள்மீது ஆட்சி செய்கிறது என்று கிழவன் நினைத்தான்.

கிழவன் நிறுத்தாமல் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தான். தன்னுடைய வேகத்தின் அளவைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருந்தாலும், நீரோட்டத்தில் எப்போதாவது உண்டாகக் கூடிய சுழல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், கடலின் மேற்பகுதி மிகவும் அமைதியாக இருந்ததாலும், துடுப்பைப் போடுவது சிரமமான ஒரு காரியமாக இருக்கவில்லை. செயலின் மூன்றில் ஒரு பகுதியை அவன் நீரோட்டத்தின் போக்கிலேயே விட்டுக் கொடுத்தான். வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்க, தான் நினைத்திருந்ததைவிட அதிகமான தூரத்தை அடைந்து விட்டிருக்கிறோம் என்பதை கிழவன் புரிந்துகொண்டான்.

“ஒரு வார காலம் கடல் ஆழமாக இருக்கும் பகுதியில் நான் சோதனை செய்து பார்த்தேன். அதற்குப் பிறகும் எதுவும் கிடைக்கவில்லை.” அவன் நினைத்தான். “இன்று பலவிதப்பட்ட மீன்களும் ஆல்பக்கோர்களும் கூட்டம் கூடி இருக்கும் இடத்தில் முயற்சி பண்ணி பார்க்க வேண்டும். அவை இருக்கும் இடத்தில் ஒரு பெரிய மீன் இருக்கலாம்.”

வெளிச்சம் சரியாக வருவதற்கு முன்பே, இரை கோர்க்கப்பட்டிருந்த தூண்டில்களை அவன் கடலுக்குள் எறிந்து விட்டிருந்தான். அவை நீரோட்டத்துடன் சேர்ந்து மூழ்கிக் கிடந்தன. ஒரு தூண்டில் நாற்பது ஆட்கள் ஆழத்தில் கிடந்தது. இரண்டாவது தூண்டில் எழுபத்தைந்து ஆட்கள் ஆழத்திலும் மூன்றாவது தூண்டிலும் நான்காவது தூண்டிலும் நீல வண்ண நீருக்குள் நூறு, நூற்று இருபத்தைந்து ஆட்கள் ஆழத்திலும் இருந்தன. இந்த மீன்களுக்குள் ஒவ்வொரு தூண்டிலும் மாட்டப்பட்டி ருக்கும் கொக்கியுடன் தலை கீழாகக் கிடந்தன. அவை மிகவும் உறுதியாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. கொக்கியின் வெளியே தெரியும் எல்லா பகுதிகளும்- வளைந்த பகுதியும் கூர்மையான முனைப் பகுதியும்- புதிய மத்தி மீனால் இணைக்கப்பட்டிருந்தது... ஒவ்வொரு மத்தியின் இரு கண்களின் வழியாக தூண்டிலின் கொக்கி மாட்டப்பட்டிருந்தது. அதனால் வெளியே நீட்டிக் கொண்டிருந்த உலோகத்தின் பாதிப் பகுதி அணிவிக்கப்பட்ட மாலையைப்போல தோன்றியது. தூண்டிலின் ஒரு பகுதி பெரிய ஒரு மீனுக்கு விரும்பக்கூடிய வாசனை கொண்டதாகவோ சுவையான ஒன்றாகவோ தோன்றாமல் இருக்காது.

சிறுவன் கிழவனுக்கு ட்யூனாவோ ஆல்பக்கோர் இனத்தையோ சேர்ந்த இரண்டு சிறிய மீன்களைக் கொடுத்திருந்தான். மிகவும் ஆழத்தில் போய் விட்டிருந்த இரண்டு கயிறுகளில், ஆழத்தை அளப்பதற்காகப் பயன்படும் ஈயத் துண்டுகளைப்போல சிறிய மீன்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற கயிறுகளில் முன்பு பயன்படுத்தப்பட்டிருந்த பெரிய ஒரு ப்ளூ ரன்னரும் ஒரு மஞ்சள் நிற ஜாக் மீனும் தொங்கிக் கொண்டிருந்தன. எனினும், இப்போதுகூட அவை பயன்படுத்துவதற்கு ஏற்றவையாகவே இருந்தன. நல்ல தரமான மத்தி மீன்கள் அவற்றுக்கு அழகையும் ஈர்க்கக் கூடிய தன்மையையும் அளித்துக் கொண்டிருந்தன. பெரிய ஒரு பென்சிலைப்போல தடிமனாக இருந்த ஒவ்வொரு கயிறும் பச்சை சாயம் பூசப்பட்ட தடியுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அதனால் தூண்டில் இழுக்கப்பட்டாலோ, தொடப்பட்டாலோ, அது தடியைக் கீழே இறக்கி மூழ்கச் செய்யும். ஒவ்வொரு கயிறுக்கும் இருநூற்று நாற்பது ஆட்கள் ஆழத்தில் சுருள்கள் இருந்தன. அவற்றை மற்ற முரட்டுத்தனமான சுருள்களுடன் இணைக்க முடியும். அதனால், தேவைப்பட்டால், ஒரு மீனால் முன்னூறு ஆட்கள் ஆழம் வரை செல்ல முடியும்.

படகுக்கு அருகில் மூன்று தடிகள் நீருக்குள் மூழ்குவதையும் வெளியே உயர்ந்து வருவதையும் கிழவன் பார்த்தான். தூண்டில் கயிறுகள் சரியான முறையில் மேலே எழுந்தும், கீழே தாழ்ந்தும் இருக்கிற விதத்திலும், முறையான ஆழத்திற்குச் செல்கிற மாதிரியும் கிழவன் அமைதியாகப் படகைச் செலுத்தினான். வெளிச்சம் நன்கு வந்து சேர்ந்து விட்டிருந்தது. எந்த நிமிடத்திலும் சூரியன் உதிக்கலாம்.

சூரியன் கடலுக்குள் இருந்து சற்று உயர்ந்தது. இப்போது மற்ற படகுகளை கிழவனால் பார்க்க முடிந்தது. நீருக்குள் சற்று தாழ்ந்து கொண்டும் கரையுடன் மிகவும் நெருங்கியும் படகுகள் நீரோட்டத்திற்குக் குறுக்கில் வரிசையாகத் தெரிந்தன. சூரியனின் பிரகாசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி நீருக்குள் பிரகாசித்தது. சூரியன் உயர்ந்து மேலே வந்தவுடன், சூரியனின் வெளிச்சம் பரந்து கிடந்த நீர்ப்பரப்பில் பட்டு, அது அவனுடைய கண்களில் பிரகாசித்தது. கண்கள் வலித்ததால், அதிலிருந்து பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அவன் துடுப்புகளைப் போட்டான். நீருக்குள் பார்வையைச் செலுத்தி, நீரின் இருண்ட உட்பகுதிக்குள் சென்ற தூண்டில் கயிறுகளைப் பார்த்தான். வேறு யார் செய்ததையும் விட மிகவும் சிறப்பாக அவன் அவற்றை சரியாக இருக்கச் செய்திருந்தான். நீரோட்டத்தின் இருட்டின் ஒவ்வொரு பகுதியிலும், அதன் வழியே நீந்தி வரும் மீனை எதிர்பார்த்து, அவன் விரும்பக்கூடிய இடத்தில், மிகவும் சரியாக தூண்டிலின் கொக்கி இருக்கும். மற்றவர்கள் தூண்டிலின் கொக்கியை நீரோட்டத்துடன் சேர்ந்து பயணிக் கச் செய்வார்கள். தூண்டிலின் கொக்கிகள் நூறு ஆட்கள் ஆழத்தில் இருக் கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவை சில நேரங் களில் அறுபது ஆட்கள் ஆழத்தில் மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.

“ஆனால், நான் மிகவும் சரியாக தூண்டில் கொக்கிகளை இருக்கச் செய்கிறேன்.” அவன் மனதில் நினைத்தான்” “சிறிது கூட அதிர்ஷ்டமில்லை என்பது மட்டுமே விஷயம். ஆனால், யாருக்குத் தெரியும்? ஒரு வேளை, இன்று நடக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாளாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் கையில் வந்து சேர்வது நல்லதுதான். ஆனால், எதையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம். அப்படியென்றால், அதிர்ஷ்டம் வரும்போது, நீங்கள் எதையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பீர்கள்.”

சூரியன் உதயமாகி மேலே வந்து இப்போது இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. கிழக்குப் பக்கம் பார்க்கும்போது, கண்கள் இப்போது அந்த அளவுக்கு வலிக்கவில்லை. இப்போது மூன்று படகுகள் மட்டுமே பார்வையில் தெரிந்தன. அவை மிகவும் தாழ்ந்தும் கரையிலிருந்து மிகவும் விலகியும் காணப்பட்டன.


“வாழ்நாள் முழுவதும் புலர்காலைப் பொழுது சூரியன் என் கண்களை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது.” கிழவன் சிந்தித்தான்: “எனினும் கண்களுக்கு இப்பொழுது எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மாலை நேரத்தில் கண்களில் இருட்டு நுழையாமல் என்னால் சூரியனை நேராகப் பார்க்க முடியும். சாயங்கால நேரத்திலும் சூரியனின் கடுமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால், காலையில்தான் கண்களில் வேதனையே உண்டாகிறது.”

ஒரு நிமிடம், ஒரு படைக் கப்பல் பறவை தன்னுடைய நீளமான கறுப்பு நிற சிறகுகளை விரித்து தனக்கு மிகவும் அருகில் வட்டமிட்டுப் பறப்பதை அவன் பார்த்தான். அது மிகவும் தாழ்வான நிலையில், சிறகுகளைப் பின்னோக்கி சாய்த்து வைத்துக் கொண்டு, சரிந்து, தாழ்ந்து, மீண்டும் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது.

“அவனுக்கு என்னவோ கிடைச்சிருக்கு..” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “அவன் காரணமே இல்லாமல் கண்களில் பட மாட்டான்.”

பறவை வட்டமிட்டுப் பறக்கும் இடத்தை நோக்கி மிகவும் மெதுவாக, ஒரே வேகத்தில் அவன் துடுப்பைப் போட்டவாறு சென்றான். எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அவன் தூண்டில் கயிறுகளைச் சரி பண்ணி வைத்தான். படகு நீரோட்டத்திற்கு சற்று புத்துணர்ச்சி உண்டாக்கியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பறவையின் உதவியைப் பயன்படுத்தாமல் இருந்துவிட்டால்கூட, நேர்த்தியுடனும் முன்பைவிட வேகமாகவும் அவனால் மீன் பிடிக்க முடியும்.

பறவை வெட்ட வெளியை நோக்கி மேலும் அதிகமாக தலையை உயர்த்தி, மீண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதனுடைய சிறகுகள் அசைவே இல்லாமல் இருந்தன. திடீரென்று அது நீரை நோக்கி வேகமாக வந்தது. பறக்கும் பறவை நீரிலிருந்து உயர்ந்து நீர்பரப்புக்கு மேலே ஆவேசத்துடன் குதிப்பதை கிழவன் பார்த்தான்.

“டால்ஃபின்...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “பெரிய டால்ஃபின்...”

கிழவன் துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டு பலகைக்கு அடியிலிருந்து ஒரு தூண்டில் கயிறை வெளியே எடுத்தான். அதற்கு கயிறு சுற்றக்கூடிய ஒரு சக்கரமும் நடுத்தர அளவைக் கொண்ட ஒரு கொக்கியும் இருந்தன. கொக்கியில் மத்தி மீன்களில் ஒன்றை எடுத்து இரையாகக் கோர்த்தான். தொடர்ந்து அதை ஒரு பக்கமாக எறிந்து படகின் பின்பக்கத்தில் இருந்த வளையத்தில் கட்டினான். பிறகு இன்னொரு கயிறிலும் தூண்டிலைக் கட்டி, பலகையின் நிழலில் சுருட்டி வைத்தான். இறுதியாக, நீளமான சிறகுகளைக் கொண்ட ஒரு கறுப்பு நிறப் பறவை நீருக்கு மேலே தாழ்வாகப் பறப்பதைப் பார்த்துக் கொண்டே அவன் மீண்டும் துடுப்புகளைப் போட ஆரம்பித்தான்.

கிழவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பறவை வேகமாக நீரை நோக்கி கீழே வந்து, சிறகுகளைச் சாய்வாக வைத்துக்கொண்டு ஆவேசமாக சுழன்றவாறு, பறக்கும் மீனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. பெரிய டால்ஃபின் நீரில் உண்டாக்கிய மெல்லிய சலனத்தை கிழவனும் பார்த்தான். பறவையிடமிருந்து தப்பித்த மீனை டால்ஃபின் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. மீன் பறந்து போய்க் கொண்டிருப்பதற்குக் கீழே அதே வேகத்தில் டால்ஃபின்களும் பயணித்துக் கொண்டிருந்தன. மீன் கீழே விழும்போது அவை நீரில் மிகவும் கீழே இருக்கும். “அது டால்ஃபின்களின் மிகப் பெரிய ஒரு கூட்டம்தான்.” கிழவன் நினைத்தான். டால்ஃபின்கள் சுற்றி சூழ்ந்து கொண்டிருந்ததால், மீன்களுக்கு தப்பித்துச் செல்வதற்கு வழியில்லை. பறவைக்கு அது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. பறக்கும் மீன்கள் அதனுடைய அலகில் சிக்கும் அளவைவிட பெரியதாக இருந்தன. அது மட்டுமல்ல- பயணிப்பது மிகவும் வேகமாக இருந்தது.

பறக்கும் மீன்கள் மீண்டும் மீண்டும் உயர்ந்து பறப்பதையும், பறவைகள் அவற்றிற்குப் பின்னால் வெறுமனே பறப்பதையும் அவன் பார்த்தான். “டால்ஃபின்கள் என்னிடமிருந் விலகிச்சென்று விட்டனவோ...” அவன் சிந்தித்தான். “மிகவும் வேகமாக நீண்ட தூரத்தை அவை கடந்து சென்றுவிடுகின்றன. ஒருவேளை, கூட்டத்தைத் தவறவிட்டு அலைந்துகொண்டிருக்கும் ஏதாவதொன்றை நான் கண்டுபிடிப்பேன். என்னுடைய பெரிய மீன் அவற்றிற்கு மத்தியில் இங்கு எங்காவது இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.”

இப்போது கரைக்கு மேலே இருந்த மேகங்கள் மலைகளைப்போல உயர்ந்து காணப்பட்டன. சாம்பல் நிறம் மூடியிருந்த நீல நிறக் குன்றுகள்... அவற்றுக்குப் பின்னால் நீளமான ஒரு பச்சைக் கோடாக கரை மாறிவிட்டிருந்தது. நீருக்கு இப்போது அடர்த்தியான நீல நிறம் வந்து சேர்ந்து விட்டிருந்தது. ஊதா நிறத்தின் அளவுக்கு இருண்டு போய் காணப்பட்டது. நீர்ப் பரப்பைப் பார்க்கும்போது, இருண்டு போயிருந்த நீரில் நீந்தி போய்க் கொண்டிருந்த ப்ளாஸ்டன் உயிரினத்தின் சிவப்பு ப்ளாஸ்டன் கோட்டையும், சூரியன் படைத்த வினோதமான பிரகாசத்தையும் அவன் பார்த்தான். தூண்டில் கயிறுகள் நீருக்குள் இறங்கிச் சென்று பார்வையிலிருந்து மறைந்து விட்டிருக்கின்றனவா என்று கிழவன் பார்த்தான். ப்ளாங்டன் உயிரினங்களை இந்த அளவுக்கு பார்க்க முடிந்ததை நினைத்து அவன் மிகவும் சந்தோஷப்பட்டான். அங்கு மீன் இருக்கிறது என்பதே அதற்கு அர்த்தம். நீரில் சூரியன் உண்டாக்கிய வினோதமான பிரகாசம், சூரியன் மேலே உயரத்தை அடைந்திருந்தது, கரைக்கு மேலே இருந்த மேகங்களின் தோற்றங்கள் ஆகியவை நல்ல காலச்சூழ்நிலையைக் குறிப்பாக உணர்த்தக் கூடியவை. ஆனால், பறவை கிட்டத்தட்ட பார்வையிலிருந்து மறைந்து விட்டிருந்தது. நீர்ப் பரப்பில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட, வெயிலில் வாடி வதங்கிப் போய் காணப்பட்ட சர்காஸோ பாசிகளின் சில அடையாளங்களும், படகுக்கு மிகவும் அருகில் போய்க் கொண்டிருந்த ஒரு விஷக்குமிழியின் ஊதா நிறத்தில் அளவெடுத்தாற்போல் இருந்த தண்டுகளும், வானவில்லின் வண்ணங்களுடன் இருந்த ஈரமான நீர்ப் பையும் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. நீர்ப் பை ஒரு பக்கம் திரும்பி, பிறகு மீண்டும் நிமிர்ந்து, நன்கு நீண்ட தண்டுகளை குறிப்பிட்ட தூரம் பின்னோக்கி நீட்டி, உற்சாகத்துடன் நீந்திப் போய்க்கொண்டிருந்தது.

“அக்வா மாலா.” கிழவன் சொன்னான்: “நீ தேவிடியா...” மெதுவாக துடுப்பைப் போட்டுக் கொண்டே அவன் நீரைப் பார்த்தான். தண்டுகளின் அதே நிறத்தில் இருந்த சிறிய மீன்கள் அவற்றிற்கு நடுவிலும், குமிழ்கள் மூழ்கும்போது உண்டாகக் கூடிய சிறிய நிழல்களுக்கு நடுவிலும் நீந்திக் கொண்டிருந்தன. விஷத்திற்கு எதிராக எதிர்ப்புத் தன்மை கொண்டவை அவை. ஆனால், மனிதர்களின் விஷயம் அப்படி இல்லையே! ஊதா நிறத்தில் இருந்த அந்த தண்டுகள் வழுவழுப்பாக தூண்டிலில் சிக்கிக் கிடப்பதுண்டு. மீனைச் சரி செய்யும்போது, கிழவனின் கைகளில் சாட்டையால் அடி வாங்கியதைப் போல அடையாளங்களும் காயங்களும் உண்டாவதுண்டு. விஷத்தன்மை கொண்ட செடியோ விஷத்தன்மை கொண்ட நுண்ணுயிரோ உண்டாக்கக்கூடிய காயங்களுக்கு நிகரானவையாக அவை இருக்கும்.

ஆனால், அக்வா மாலாவிலிருந்து வரும் இந்த விஷம் மிகவும் வேகமாகப் பாயும்- சாட்டையடியைப்போல சிறிதும் நினைக்காமலேயே.


வானவில்லின் பிரகாசத்தைக் கொண்ட இந்தக் குமிழ்கள் அழகானவை. அதே நேரத்தில் கடலிலேயே மிகவும் மோசமான பொருட்களும் அவை தான். பெரிய கடல் ஆமைகள் அவற்றைச் சாப்பிடுவதைப் பார்ப்பதற்கு கிழவன் ஆசைப்படுவான். ஆமைகள் அவற்றைப் பார்த்தால் முன்பகுதி யிலிருந்து நெருங்கி, கண்களை மூடிக்கொண்டு தண்டுகளையும் பிற பகுதிகளையும் சாப்பிட ஆரம்பித்துவிடும். ஓட்டைக் கொண்டு மூடி பாதுகாப்பாக இருந்து கொள்வதற்குத்தான் ஆமைகள் கண்களை மூடிக்கொள்கின்றன. ஆமைகள் அவற்றைத் தின்பதைப் பார்ப்பதற்கு கிழவன் மிகவும் விருப்பப்படுவான். ஒரு காற்றுக்குப் பிறகு கடற்கரையில் குமிழ்கள்மீது நடப்பதிலும், அப்படி அழுத்தி நடக்கும்போது அவை வெடிப்பதைக் கேட்பதிலும் அவனுக்கு மிகவும் விருப்பம் இருந்தது.

கம்பீரமும் வேகமும் ஒன்று சேர்ந்த, பெரிய விலை கிடைக்கக் கூடிய பச்சை ஆமைகளையும் வெள்ளை ஆமைகளையும் கிழவனுக்கு மிகவும் பிடிக்கும். பெரிய முரட்டுத்தனமான மரத் தலைகளையும் மஞ்சள் நிறத்திலிருக்கும் வெளி ஓடுகளையும் வைத்துக்கொண்டு, அசாதாரணமான காதல் சேட்டைகளைக் கொண்ட கண்களை மூடிக்கொண்டு, தண்டுகளையும் பிற உயிரினங்களையும் சந்தோஷத்துடன் சாப்பிடக்கூடிய அவற்றின்மீது அவனுக்கு நட்புணர்வு கலந்த பொறாமை இருந்தது.

பல வருடங்களாக ஆமைகளைப் பிடிக்கச் செல்லும் படகில் போவது எப்போதும் நடக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும், ஆமைகளைப் பற்றி கிழவனுக்கு கற்பனையான எண்ணங்கள் எதுவும் இல்லை. எல்லாவற்றின்மீதும், படகின் அளவுக்கு நீளத்தையும் ஒரு டன் எடையையும் கொண்ட ட்ரங்க் பேக்குகள் மீதுகூட அவனுக்கு பரிதாப உணர்ச்சி இருந்தது. ஆமைகள் விஷயத்தில் பெரும்பாலானவர்கள் இதயத்தை மூடிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். “கிழித்து அறுத்து வெட்டிய பிறகும் ஆமையின் இதயம் பல மணி நேரங்கள் துடித்துக் கொண்டிருக்கும். எனக்கும் அப்படிப்பட்ட ஒரு இதயம்தான் இருக்கிறது. என்னுடைய பாதங்களும் கைகளும் அவற்றிடம் இருப்பதைப்போலவே இருக்கின்றன.” கிழவன் சிந்தித்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக் கொள்வதற்காக அவன் அவற்றின் வெள்ளை முட்டைகளைச் சாப்பிட்டான். மே மாதம் முழுவதும் முட்டைகளைச் சாப்பிட்டான். பெரிய மீனுக்காக செப்டம்பரிலும் அக்டோபரிலும் பலசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் செயலை அவன் செய்தான்.

பெரும்பாலான மீனவர்கள் தங்களுடைய பொருட்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அறையில் உள்ள பெரிய பீப்பாயிலிருந்து ஒவ்வொரு நாளும் அவன் ஒரு புட்டி சுறா ஈரல் எண்ணெய்யைக் குடிப்பான். தேவைப்படும் எல்லா மீனவர்களுக்கும் எடுத்துக் கொடுப்பான். பெரும்பாலான மீனவர்களுக்கு அதன் சுவை பிடிப்பதில்லை. அவர்கள் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அதைவிட இது மோசமாக இல்லை. எல்லா வகைப்பட்ட நீர் போக்குக்கும் ஜலதோஷ காய்ச்சலுக்கும் அந்த எண்ணெய் நல்ல ஒரு மருந்தாக இருந்தது. அதேபோல கண்களின் ஆரோக்கியத்திற்கும் அது உதவக் கூடியதாக இருந்தது.

கிழவன் மேலே பார்த்தான். பறவை மீண்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“அவன் மீனைப் பார்த்து விட்டிருக்கிறான்.” அவன் உரத்த குரலில் கூறினான். பறக்கும் மீன்கள் எதுவும் மேற்பரப்பில் கண்களில் படவில்லை. இரை மீன்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கவுமில்லை. ஆனால் கிழவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய ட்யூனா மீன் மேலே தெரிந்தது. அது திரும்பி முதலில் நீரில் தலை குப்புறத் தாவியது. சூரிய வெளிச்சத்தில் ட்யூனா வெள்ளியைப்போல மின்னியது. அது திரும்பவும் நீரில் விழுந்தபோது, இன்னொன்று வெட்ட வெளியில் தன்னை வெளிப்படுத்தியது. அதற்குப் பின்னால் இன்னொன்று. இப்படி எத்தனையோ... நான்கு திசைகளிலும் தாவி குதித்துக்கொண்டிருந்தன. அவை நீரைக் கிழித்து விலக்கி தூண்டிலில் இருந்த இரைக்குப் பின்னால் நீளமாகத் தாவிக் கொண்டிருந்தன. இரையை வட்டமாக சுற்றிக் கொண்டும் இங்குமங்குமாக தள்ளி விட்டுக் கொண்டும் இருந்தன.

“ட்யூனா மீன்கள் மிகவும் வேகமாகப் பயணிக்கவில்லையென்றால், நான் அவை இருக்கும் இடத்தை அடைந்து விடுவேன்.” கிழவன் நினைத்தான். மீன்களின் கூட்டம் நீரில் வெள்ளை நிறத்தைப் பரவச் செய்திருப்பதையும், பைத்தியம் பிடித்து மேற்பரப்பிற்கு வந்திருக்கும் இரை மீன்களுக்கு நடுவில் பறவை தாழ்ந்து பறந்து மூழ்குவதையும் அவன் பார்த்தான்.

“இந்த பறவை மிகவும் உதவியாக இருக்கக் கூடியது.” கிழவன் சொன்னான். இப்போது அவனுடைய பாதங்களுக்கு நடுவில் இருந்த தூண்டில் கயிறு அசைந்தது. துடுப்புகளைக் கீழே போட்டுவிட்டு, கயிறை இறுகப் பிடித்துக் கொண்டு, சிறிய இரைமீனை இழுத்துக் கொண்டிருக்கும் அசைவில் இருந்து அதன் எடை எவ்வளவு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தொடர்ந்து அதை மேல் நோக்கி இழுத்து படகுக்கு கொண்டு வர ஆரம்பித்தான். இழுக்க இழுக்க துடிப்பது அதிகமானது. அதன் உடல் பாகத்தையும் ஓரங்களில் தெரிந்த பொன் நிறத்தையும் கிழவனால் பார்க்க முடிந்தது. படகின் பின்பக்கத்திலிருந்த வெயிலில் ஒரு வெற்றிடத்தில்- வெடிகுண்டின் அளவைக் கொண்டிருந்த அவன் கிடந்தான். மிகவும் வேகமாக அசைந்து கொண்டிருந்த, துடிப்பு நிறைந்த, படுவேகமாகத் துடித்துக் கொண்டிருந்த வாலின் நுனிப்பகுதியை படகின் தளத்தில் வைத்துக்கொண்டு, உயிரற்ற பெரிய கண்களை வெறித்துக் கொண்டு அவன் உயிரை விட்டுக் கொண்டிருந்தான். இரக்கம் தோன்றி, கிழவன் அவனுடைய தலையைத் தொட்டான். பாய்மரத்தின் நிழலில் அவனுடைய உடல் அப்போதும் நடுங்கிக் கொண்டிருந்தது.

“ஆல்பக்கோர்.” அவன் உரத்த குரலில் கூறினான்: “இவன் அருமையான இரையாக இருப்பான். பத்து ராத்தல் எடை வரும்.”

தனியாக இருக்கும்போது உரத்த குரலில் தான் பேச ஆரம்பித்தது எப்போது என்ற விஷயம் கிழவனுக்கு ஞாபகத்தில் இல்லை. முன்பு தனியாகத் இருக்கும்போது, அவன் பாடுவது உண்டு. மீன்பிடிக்கச் செல்லும் படகிலோ, ஆமை வேட்டைக்குச் செல்லும் படகிலோ தனியாக துடுப்பைப் பிடிக்கும்போது இரவு நேரத்தில் சில வேளைகளில் அவன் பாடுவதுண்டு. சிறுவன் அவனை விட்டுச் சென்று, தனிமையில் இருக்கக் கூடிய சூழ்நிலை வந்தபோது அவன் உரத்த குரலில் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், சரியாக ஞாபகத்தில் இல்லை. அவர்கள் இருவரும் ஒன்றாகக் சேர்ந்து மீன்களைப் பிடித்தபோது, தேவைப்படும்போது மட்டுமே அவர்கள் பேசிக் கொள்வார்கள். இரவு வேளையிலோ, மோசமான காலநிலை காரணமாக சூறாவளி உண்டாகக் கூடிய சூழ்நிலை வரும்போதோ, அவர்கள் பேசிக் கொள்வார்கள். கடலில் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, தேவையில்லாமல் பேசாமல் இருந்தது நல்ல ஒரு விஷயம் என்றே பொதுவாக நினைக்கப்பட்டது. கிழவன் எப்போதும் அதில் கவனம் உள்ளவனாகவும், அதைப் பெரிதாகப் பின்பற்றக் கூடியவனாகவும் இருந்தான்.


ஆனால், இப்போது அவன் தன்னுடைய மனதிற்குள் உள்ளவற்றை பல முறைகள் உரத்த குரலில் கூறிக்கொண்டே இருந்தான். அவற்றைத் தடுப்பதற்கு அங்கு யாரும் இல்லையே!

“நான் சத்தம் போட்டு கூறுவதை யாராவது கேட்டால், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைப்பார்கள்.” அவன் உரத்த குரலில் கூறினான்: “ஆனால், பைத்தியம் பிடிக்காததால், நான் அதைப் பற்றி அக்கறை செலுத்தவில்லை. வசதி படைத்தவர்களுக்கு படகில் செல்லும்போது தங்களுடன் பேசிக் கொள்வதற்கும் பேஸ் பால் விளையாட்டைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் ரேடியோக்கள் இருக்கின்றன.”

“இப்போது பேஸ் பாலைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை.” அவன் நினைத்தான். “ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் பார்ப்பதற்கான நேரமிது. அதற்குத்தான் நான் பிறவியே எடுத்திருக்கிறேன். மீன்களின் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு பெரிய மீன் இல்லாமல் இருக்காது.” கிழவன் சிந்தித்தான்: “இரை போடப்பட்டிருக்கும் ஆல்பக்கோரிலிருந்து தனித்துப் பிரிந்து சென்ற ஒரு மீனைத்தான் நான் பிடித்திருக்கிறேன். ஆனால், மிகவும் தூரத்தில் படுவேகமாக அவை நீந்திக் கொண்டிருந்தன. இன்று நீரின் மேற்பரப்பில் தெரிந்து கொண்டிருக்கும் மீன்கள் அனைத்தும் மிகவும் வேகமாக வடகிழக்குப் பக்கம் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. இன்றைய பகல் நேரத்தின் ஏதாவது தனித்துவத் தன்மையாக இது இருக்குமோ? இல்லாவிட்டால் எனக்கே தெரியாத ஏதாவது காலநிலை பற்றிய எச்சரிக்கையா?”

கரையின் பச்சை நிறத்தை இப்போது அவனால் பார்க்க முடியவில்லை. பனியாலான தொப்பியை அணிந்ததைப்போல வெள்ளை நிறத்தில் தோன்றிய நீல நிற மலைகளின் மேற்பகுதியையும் அவற்றின்மீது உயரமான பனி மலைகளைப்போல தோன்றிய மேகங்களையும் மட்டும் பார்க்க முடிந்தது. கடல் மிகவும் கறுத்துப் போய் காணப்பட்டது. இருண்டு போய் இருந்த கடல் நீரில் வெளிச்சம் கண்ணாடியின் வழியாகக் கடந்து செல்வதைப்போல தோன்றியது. சூரியன் உயர்ந்து மேலே வந்தவுடன் நீரின் ஓட்டத்தில் நீந்திச் சென்று கொண்டிருந்த ப்ளாங்க்டன் உயிரினங்கள் ஏராளமாக இருந்தவை காணாமலே போய் விட்டன. நீல நிற நீரின் ஆழத்திற்குள் கயிறுகள் நீண்டதூரம் தாழ்ந்து இறங்கிச் சென்றிருப்பதை மட்டும் கிழவனால் பார்க்க முடிந்தது.

ட்யூனா மீன்கள் மீண்டும் கீழே வந்து சேர்ந்துவிட்டிருந்தன. அந்த இனத்தைச் சேர்ந்த எல்லா வகைப்பட்ட மீன்களையும் ட்யூனா என்றுதான் மீனவர்கள் குறிப்பிடுவார்கள். விற்பதற்காகக் கொண்டு செல்லும்போதோ, தூண்டிலில் கோர்ப்பதற்கான இரைகளுடன் செல்லும்போதோ மட்டும்தான் அவற்றைப் பொதுவாக இனம் பிரித்து கண்டுபிடிப்பார்கள். சூரியனுக்கு வெப்பம் உண்டானது. கழுத்தின் பின்பக்கம் வெப்பத்தின் கடுமையை கிழவன் உணர்ந்தான். துடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கும்போது, முதுகின் வழியாக வியர்வை வழிந்து கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

“நீரோட்டத்துடன் சேர்ந்து அப்படியே போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான்...” கிழவன் நினைத்தான்: “சிறிது நேரம் உறங்கவும் செய்யலாம். என்னை கண் விழிக்கச் செய்வதற்காக தூண்டில் கயிறை என் கால் விரலில் கட்டிவிடலாம். ஆனால், இன்று எண்பத்தைந்தாவது நாள். இன்று நன்றாக மீன் பிடிக்க வேண்டும்.”

தூண்டில் கயிறைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று சற்று தூரத்தில் பச்சை நிறுத்தில் காணப்பட்ட மரத்துண்டுகளில் ஒன்று மிகவும் வேகமாக மூழ்கிக் கொண்டிருப்பதை கிழவன் பார்த்தான்.

“ஆமாம்...” அவன் சொன்னான்: “ஆமாம்...” படகு ஆடாமல் இருப்பதற்காக கிழவன் துடுப்பு போடுவதை நிறுத்தினான். கையை நீட்டி, கயிறைக் கையில் எடுத்து, வலது கையில் பெருவிரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவில் மெதுவாகப் பிடித்தான். இழுத்தலோ, எடையை உணர்த்தலோ இல்லாமலிருந்ததால், பிடித்திருந்தது மிகவும் லாகவமாகவே இருந்தது. தாமதிக்காமல் மீண்டும் கயிறைப் பற்றி இழுத்தான். இந்த முறை அது ஒரு வலிமை மிக்க இழுவையாக இருந்தது. ஆழமானதாகவோ கனமானதாகவோ அது இல்லை. அது என்ன என்று அவனுக்கு சரியாகப் புரிந்தது. நூறு ஆட்கள் ஆழத்தில் ஒரு மார்லின் மீன் தூண்டிலில் கோர்க்கப்பட்டிருந்த மத்தி இரையை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிய மத்தி மீனின் தலையின் வழியாக கையைப் போன்று இருந்த கொக்கி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

கிழவன் இடது கையால் கயிறை மெதுவாகப் பிடித்துத் தடியில் இருந்து அவிழ்த்து விட்டான். இனி மீனுக்கு எந்தவொரு சிரமமும் தோன்றாத அளவுக்கு அவனால் கை விரல்களின் வழியாக அதை கீழே அனுப்பி வைக்க முடியும்.

“இந்த அளவுக்கு பெரிதாக இருக்கும் கடலில், இந்த மாதத்தில் அவன் பயங்கரமானவனாக இருக்க வேண்டும்.” கிழவன் மனதில் நினைத்தான்: “மீனே, அதைச் சாப்பிடு... அதைச் சாப்பிடு... தயவு செய்து அதைச் சாப்பிடு. எவ்வளவு புதிய மீன் அது! அறுநூறடிகள் ஆழத்தில் இருட்டில் குளிர்ந்த நீரில் நீ இருக்கிறாய். இருட்டில் இன்னொரு முறை சுற்றித் திரும்பி வந்து அதை நீ சாப்பிடு.”

மெதுவான ஒரு இழுத்தலை அவன் உணர்ந்தான். தொடர்ந்து பலமான ஒரு இழுத்தல்... தூண்டிலின் கொக்கியிலிருந்து மத்தியின் தலையைப் பிரித்து எடுப்பதற்கு சிரமமாக இருந்தபோது, அப்படி பலமாக இழுத்திருக்க வேண்டும். பிறகு... எந்தவொரு அசைவும் இல்லை.

“முன்னோக்கி வா...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “இன்னொரு முறை சுற்றி வா. அதை ஒரு முறை வாசனை பிடித்துப் பார். அது எவ்வளவு அழகாக இருக்கிறது! இப்போது அதைச் சாப்பிடு. இனி ட்யூனா இருக்கு... எரிச்சல் நிறைந்த, குளிர்ந்த, அழகான ட்யூனா... மீனே, தயக்கமே வேண்டாம். சாப்பிடு...”

கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே கயிறை வைத்துக் கொண்டு கிழவன் காத்திருந்தான். மீன் மேலே வரவோ ஆழத்திற்குள் போகவோ செய்திருக்கலாம் என்பதால், அதையும் பிற கயிறுகளையும் அவன் ஒரே நேரத்தில் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மீண்டும் மென்மையான அதே இழுவை...

“அவன் அதைச் சாப்பிடுவான்.” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “கடவுளின் உதவியுடன் அவன் அதைச் சாப்பிடுவான்:”

அதற்குப் பிறகும் மீன் அதைச் சாப்பிடவில்லை. அது அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டிருந்தது. கிழவனுக்கு எதுவும் புரியவில்லை.

“அவன் அப்படிப் போவதற்கு வழியில்லை.” அவன் சொன்னான்: “அவனால் போக முடியாது என்ற விஷயம் கடவுளுக்குத்தான் தெரியும். அவன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பான். ஒருவேளை, அவன் இதற்கு முன்பு தூண்டிலில் சிக்கியிருக்கலாம். அதைப் பற்றி அவன் எதையோ நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.”

தொடர்ந்து கயிறில் மென்மையாகத் தொடுவதை உணர்ந்தான். அவனுக்கு சந்தோஷம் உண்டானது.


“அது அவனாகத்தான் இருக்கும்.” கிழவன் சொன்னான்: “அவன் அதை சாப்பிட்டு விடுவான்.”

கயிறில் மெதுவாக இழுத்தல் இருப்பதை உணர்ந்ததால் கிழவன் மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். தொடர்ந்து மிகவும் கடினமான, நம்ப முடியாத அளவுக்கு எடையுள்ள ஏதோவொன்று அகப்பட்டிருப்பதைப் போல அவன் உணர்ந்தான். அது மீனின் எடைதான். கட்டப்பட்டிருந்த இரண்டு பருமனான கயிறுகளில் ஒன்றை அவிழ்த்து அவன் கீழ்நோக்கி... கீழ்நோக்கி... கீழ் நோக்கி இறக்கினான். கிழவனின் விரல்களின் வழியாக கயிறு எந்தவித சிரமமும் இல்லாமல் கீழே இறங்கிச் செல்லும்போது, மிகவும் அதிகமான எடை தொங்கிக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அதே நேரத்தில் அவனுடைய விரல்களின் அழுத்தம் கடினமாகவும் இருந்தது.

“என்ன ஒரு மீன்!” கிழவன் சொன்னான்: “அவன் வாயின் ஓரங்களின் வழியாக இரையை விழுங்கியிருக்கிறான். அவன் அந்த இரையுடன் எங்கோ போய்க் கொண்டிருக்கிறான்.” “இனி திரும்பி வந்து அவன் அதை விழுங்குவான்.” அவன் நினைத்தான். அவன் அதை கூறவில்லை. காரணம் ஒரு நல்ல விஷயத்தைக் கூறிவிட்டால், அது நடக்காமலே போய் விடலாம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. என்ன ஒரு பெரிய மீன்! இருட்டில் வாய்க்குள் இரை மீனை நீளமாக வைத்துக்கொண்டு அவன் நீந்திக் கொண்டே தூரத்தில் செல்வதை அவன் கற்பனை பண்ணி பார்த்தான். அந்த நிமிடம் அவன் அசைவதை நிறுத்திக் கொண்டு விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. ஆனால், அப்போதும் எடை இருந்தது. தொடர்ந்து எடை அதிகரித்தது. அவன் மேலும் கயிறை கீழே வெறுமனே விட்டான். ஒரு நிமிட நேரத்தில் விரல்களின் அழுத்தம் அதிகமானது. எடை அதிகமானது. தூண்டில் கயிறு நேராக இறங்கிக் கொண்டிருந்தது.

“அவன் அதை சாப்பிட்டு விட்டிருக்கிறான்.” கிழவன் சொன்னான். அதே நேரத்தில் தன் இடது கையை நீட்டி இரண்டு கயிறுகளின் நுனிகளை அதற்கு அருகில் இருந்த இரண்டு தடிமனான கயிறுகளுடன் சேர்த்துக் கட்டினான். இப்போது அவன் தயார் நிலையில் இருந்தான். முந்நூற்று நாற்பது ஆட்கள் நீளத்தில் இருந்த கயிறு இப்போது மிகவும் பருமனாக இருந்தது. அவன் பயன்படுத்திக் கொண்டிருந்த கயிறுக்கு மேலே அது இருந்தது.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” கிழவன் சொன்னான்: “நல்லா சாப்பிடு. அதைச் சாப்பிடும்போது தூண்டில் கொக்கியின் முனை உன்னுடைய இதயத்திற்குள் நுழைந்து உன்னைக் கொன்றுவிடும். சீக்கிரமாக மேலே வா. நான் உன்மீது குத்தீட்டியைச் செலுத்துகிறேன். சரி... நீ தயாராகி விட்டாயா? உனக்கு ஒரு நேர உணவுக்கு ஏற்ற அளவுக்கு நீளம் இருக்கிறதா?”

“சீக்கிரம்...” கிழவன் உரத்த குரலில் சத்தமிட்டான். தொடர்ந்து இரு கைகளைக் கொண்டும் பலமாக மேல் நோக்கி இழுத்தான். கயிறு படிப்படியாக மேலே வந்தது. கைகளுடைய பலத்தையும் உடலால் செலுத்தக்கூடிய முழு பலத்தைச் சேகரித்தும், கயிறில் இரு கைகளையும் மாறி மாறிப் பிடித்து இழுத்துப் பார்த்தான்.

எதுவும் நடக்கவில்லை. மீன் மெதுவாக நீந்தி தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனை கிழவனால் ஒரு அங்குலம்கூட உயர்த்த முடியவில்லை. அவனுடைய கயிறு பலம் கொண்டதாகவும் எடை அதிகமாக உள்ள மீன்களுக்காக உண்டாக்கப்பட்டதாகவுமாக இருந்தது. நிமிர்ந்து நின்று கொண்டு அவன் அந்த கயிறைத் தன்னுடைய முதுகின் வழியாக இழுத்துப் பிடித்தான். நீர்த் துளிகள் மணி மணிகளாக அதிலிருந்து விழுந்து கொண்டிருந்தன. கயிறு, நீரில் மெல்லிய சத்தத்தை உண்டாக்க ஆரம்பித்தது. படகின் இருப்பிடத்திற்கு எதிரில் சாய்ந்து கொண்டும் மீன் இழுக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராக சாய்ந்து கொண்டும் அவன் கயிறை இறுகப் பிடித்திருந்தான். படகு மெதுவாக வட கிழக்கு திசையை நோக்கி நகர ஆரம்பித்தது.

மீன் ஒரே வேகத்தில் திசை மாறாமல் பயணித்துக் கொண்டிருந்தது. மிகவும் அமைதியாக இருந்த நீர்ப் பரப்பில் இருவரும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். இரை கோர்க்கப்பட்ட பிற தூண்டில்கள் அப்போதும் நீருக்குள் கிடந்தன. அந்த விஷயத்தில் இனி செய்வதற்கு எதுவுமில்லை.

“பையன் என்னுடன் இருந்திருந்தால்...?” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “ஒரு மீன் என்னை இழுத்துக் கொண்டு செல்கிறது. நானோ பிடித்து இழுத்துக் கொண்டு செல்லப்படும் ஒரு மரத்துண்டாக இருக்கிறேன். வேண்டுமென்றால் நான் தூண்டில் கயிறைப் பிடித்து நிறுத்தலாம். ஆனால், அப்படிச் செய்தால் அவன் அதை அறுத்து விடுவான். முடிந்த வரையில் நான் அவனைப் பிடித்து நிறுத்துவேன். தேவைப்படும்போதெல்லாம் நான் அவனை நோக்கி கயிறை இறக்கி விட்டுக் கொண்டிருப்பேன். கடவுளுக்கு நன்றி. அவன் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறான். கீழே போகவில்லை. அவன் ஆழத்திற்குச் செல்வதற்கு முடிவு செய்யும்பட்சம், நான் என்ன செய்வேன் என்பதைப் பற்றி எந்தவொரு தீர்மானமும் இல்லை. அவன் ஆழத்திற்குச் சென்று சாவதாக இருந்தால் நான் என்ன செய்வேன்? தெரியாது. ஆனால், நான் ஏதாவது செய்தே ஆக வேண்டும். எனக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.”

கிழவன் கயிறைப் பின்னோக்கி இழுத்துப் பிடித்து நீரில் அது சாய்ந்து கிடப்பதையும், படகின் வடகிழக்கு திசையை நோக்கிய இடைவெளி இல்லாத பயணத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“இது அவனைக் கொன்றுவிடும்.” கிழவன் நினைத்தான்: “அவனால் எப்போதும் இப்படிப் பயணித்துக் கொண்டிருக்க முடியாது.” ஆனால், நான்கு மணி நேரம் கடந்த பிறகும் எந்தவொரு தடையும் இல்லாமல் மீன், படகை இழுத்துக் கொண்டு கடலில் நீந்திக் கொண்டிருந்தது. அப்போதும் கிழவன் கயிறைத் தோளின் வழியாக இழுத்து இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான்.

“நான் அவனை மத்தியானம் தூண்டிலில் சிக்க வைத்தேன்.” கிழவன் சொன்னான்: “எனினும், நான் இதுவரை அவனைப் பார்க்கவில்லை.”

மீனைத் தூண்டிலில் சிக்க வைப்பதற்கு முன்புதான் கிழவன் தன்னுடைய வைக்கோல் தொப்பியை தலையில் இறுக வைத்திருந்தான். அது அவனுடைய நெற்றியில் காயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மிகுந்த தாகம் எடுத்தது. முழங்கால் போட்டுக் கொண்டு, கயிறில் அசைவு உண்டாகாமல் இருப்பதற்காக மிகவும் கவனத்துடன், முடிந்தவரையில் பின்னால் இருந்த பலகைமீது சாய்ந்து கொண்டு, ஒரு கையை நீட்டி, நீர் நிறைக்கப்பட்டிருந்த புட்டியை எடுத்துத் திறந்து, கொஞ்சம் குடித்தான். தொடர்ந்து பலகையில் சாய்ந்து ஓய்வெடுத்தான். படிகள் இல்லாத பாய் மரத்தில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்தபோது, தேவையில்லாமல் சிந்திக்காமல் இருப்பதற்கும் மனதில் சமநிலையைக் கொண்டு வருவதற்கும் கிழவன் முயற்சித்தான்.


அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். கரை கண்களில் படவில்லை. “காண்பதும் காணாமல் இருப்பதும் ஒன்றுதான்...” அவன் நினைத்தான். ஹவானாவிலிருந்து நான் எப்போதும் மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில்தான் பயணிப்பேன். சூரியன் மறைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கின்றது. அதற்கு முன்னால் அவன் மேலே வந்துவிடுவான். இல்லாவிட்டாலும் நிலவு உதிக்கும் நேரத்திற்கு வராமல் இருக்க மாட்டான். அதற்குப் பிறகும் வராமல் இருந்தால், சூரியன் உதயமாகும் நேரத்திலாவது மேலே வந்து விடுவான். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நல்ல பலத்துடன் இருக்கிறேன். அவனுடைய வாயில் தூண்டிலின் கொக்கி மாட்டப்பட்டிருக்கிறது. எனினும், இந்த அளவுக்கு பலத்தை பயன்படுத்தி பிடித்திருக்க வேண்டுமென்றால், அவன் எந்த அளவிற்கு பெரிய மீனாக இருப்பான்! கயிறை இறுகக் கடித்துப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். அவனைச் சற்று பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நான் யாரை சந்திக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காவது ஒரு முறை அவனைச் சற்று பார்க்க முடிந்தால்...?”

அந்த இரவு மீன் தன்னுடைய பயணிக்கும் வழியையோ திசையையோ மாற்றிக் கொள்ளவில்லை. நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், இந்த விஷயத்தில் மனிதனால் எதையும் கூற முடியாது. சூரியன் மறைந்தவுடன் குளிர்ச்சி உண்டானது. கிழவனின் முதுகிலும் கைகளிலும் முதுமையை அடைந்த கால்களிலும் இருந்த வியர்வை குளிர்ச்சியைத் தந்தது. பகல் நேரத்தில், இரைகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை மூடியிருந்த கோணியை எடுத்து காய வைப்பதற்காக வெயிலில் விரித்து விட்டிருந்தான். சூரியன் மறைந்தவுடன் அவன் கோணியைக் கழுத்துப் பகுதியில் மூடினான். முதுகில் தொங்கிக் கொண்டிருந்த கோணியின் பகுதியை மிகவும் கவனத்துடன் தோளில் கிடந்த கயிறுக்கு கீழே வைத்ததால், முதுகில் கடுமை தெரியவில்லை. கோணி, கயிறுக்குக் கீழே ஒரு மெத்தையைப் போல காணப்பட்டது. பலகையின்மீது அவன் ஒரு மாதிரியாக சாய்ந்து இருந்ததால், கிட்டத்தட்ட சந்தோஷமாகவே இருந்தது. உண்மையாகக் கூறுவதாக இருந்தால், ஒரு விதத்தில் நல்ல ஒரு சூழ்நிலையாக இருந்தது. மொத்தத்தில் கிழவன் அதை சந்தோஷமான தருணம் என்றே நினைத்துக் கொண்டான்.

“அவனுடைய விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது. என் விஷயத்தில் அவனும் எதுவும் செய்ய முடியாது.” கிழவன் நினைத்தான்: “இந்த நிலையில் காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, விஷயங்கள் அப்படித்தான் இருக்கும்.”

ஒரு முறை கிழவன் எழுந்து படகின் அருகில் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தான். நட்சத்திரங்களைப் பார்த்து படகு செல்லும் திசையை ஆராய்ந்து பார்த்தான். தோளிலிருந்து நேராக நீருக்குள் இறங்கிக் கொண்டிருந்த கயிறு ஒரு பிரகாச கோட்டைப்போல தோன்றியது. இப்போது முன்பைவிட அவர்கள் மிகவும் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். “ஹவானாவின் வெளிச்சம் அந்த அளவுக்கு தெளிவாக இல்லை. அத்துடன் நீரோட்டம் தங்களை கிழக்கு திசையை நோக்கி கொண்டு போகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். “ஹவானாவின் வெளிச்சம் முற்றிலும் இல்லாமற் போய்விடும்பட்சம், நாங்கள் மேலும் கிழக்குப் பக்கம் போக வேண்டியதிருக்கும்.” அவன் நினைத்தான்: “மீன் நீந்திச் செல்வது இந்த மாதிரிதான் என்றால், இன்னும் சில மணி நேரங்கள் என்னால் அதைப் பார்க்க முடியும். க்ராண்ட் லீக்கில் இன்றைய பேஸ் பால் விளையாட்டு எப்படி முடிந்ததோ? ஒரு வானொலி இருந்திருந்தால், மீன் பிடிப்பது சந்தோஷமான ஒரு விஷயமாக இருந்திருக்கும். அதைப் பற்றித்தான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.” கிழவன் தொடர்ந்து சிந்தித்தான்: “நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முட்டாள்தனமாக இருக்கக் கூடாது.”

இறுதியில் கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “சிறுவன் என்னுடன் இருந்திருந்தால்...? எனக்கு உதவியாக இருப்பதற்கும், இவை எல்லாவற்றையும் பார்ப்பதற்கும்...”

“முதுமைக் காலத்தில் யாரும் தனிமைப்பட்டு இருக்கக்கூடாது.” கிழவன் சிந்தித்தான்: “ஆனால், அது தவிர்க்க முடியாதது. அழுகிப் போவதற்கு முன்பே ட்யூனா மீனைச் சாப்பிட மறக்கக் கூடாது. உடலில் பலம் இருப்பதற்கு அது அவசியம். உனக்குத் தேவையானது கொஞ்சம்தான். எனினும், அது பிரச்சினை இல்லை. காலையில் அதைச் சாப்பிட வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிடக் கூடாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.” அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்.

இரவு நேரத்தில் இரண்டு கடல் பன்றிகள் படகுக்கு அருகில் வந்தன. அவை உருண்டு புரண்டு கொண்டும், சுவாசம் விட்டுக் கொண்டும் இருக்கும் சத்தத்தை கிழவன் கேட்டான். ஆணின் மூச்சு விடும் சத்தத்திற்கும் பெண்ணின் பெருமூச்சு சத்தத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை அவனால் உணர முடிந்தது.

“கடல் பன்றிகள் நல்லவை.” அவன் சொன்னான்: “அவை விளையாடிக் கொண்டும் குறும்புத் தனங்கள் செய்து கொண்டும் ஒன்றின்மீது இன்னொன்று அன்பு செலுத்திக் கொண்டும் இருக்கும். பறக்கும் மீன்களைப்போல அவர்கள் நம்முடைய சகோதரர்களே.”

தான் தூண்டிலில் சிக்க வைத்த அந்தப் பெரிய மீன்மீது கிழவனுக்கு இரக்கம் தோன்ற ஆரம்பித்தது. “புகழ் பெற்றவனாகவும் அசாதாரணமாவனாகவும் அவன் இருக்கிறான். அவனுக்கு என்ன வயது என்று யாருக்குத் தெரியும்?” அவன் நினைத்தான்: “இந்த அளவுக்கு தைரியசாலியாகவும் வினோதமான முறையில் நடக்கக் கூடியவனுமான இன்னொரு மீனை நான் இதுவரை பிடித்தது இல்லை. ஒருவேளை, அவன் தாவிச் செல்லாமல் இருப்பதற்கு மட்டும் அறிவு கொண்டவனாக இருக்கலாம். தாவுவதாலோ பெரிய அளவில் குதிப்பதாலோ அவன் என்னை ஒரு வழி பண்ணி விடுவான். முன்பு பல முறைகள் அவன் தூண்டிலில் சிக்கியவனாக இருக்கலாம். இந்த விதத்தில்தான் போராட வேண்டும் என்ற விஷயம் அவனுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு மனிதன் மட்டுமே தனக்கு எதிராக இருக்கிறான் என்ற விஷயமோ, அது ஒரு கிழவன்தான் என்பதோ தெரியாமல் இருக்கலாம். என்ன ஒரு பெரிய மீன் அவன்? நல்ல மாமிசமாக இருக்கும்பட்சம், சந்தையில் எந்த அளவுக்கு விலை கிடைக்கும்? ஒரு ஆணைப்போல அவன் தூண்டிலை வந்து தொட்டிருக்கிறான். ஆணைப் போலவே தூண்டில் கயிறை இழுத்துக் கொண்டிருக்கிறான். போராட்டத்தில் பதைபதைப்பு சிறிதுகூட இல்லை. அவனுடைய மனதில் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றனவோ என்பதுதான் என்னுடைய பயம் அல்லது என்னைப்போல ஒரு கையற்ற நிலையில் உள்ளவனாக அவன் இருப்பானோ?” ஜோடிகளாக இருந்த மார்லின் மீன்களின் ஒன்றை தான் தூண்டிலில் பிடித்திருந்த காலத்தை கிழவன் நினைத்துப் பார்த்தான். ஆண் மீன் எப்போதும் பெண் மீனை முதலில் இரையைச் சாப்பிடுவதற்கு அனுமதித்திருந்தது.


தூண்டிலில் சிக்கிய பெண் மீன் மிகவும் பலமாக, பதைபதைத்துப் போய், ஏமாற்றம் நிறைந்த சாகசங்களுடன் போராடியது. அது அவளைத் தளர்வடையச் செய்தது. இவ்வளவு நேரமும் கயிறுக்கு வெளியே இருந்து கொண்டும் நீரின் மேற்பரப்பில் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டும் ஆண் மீன் அந்த இடத்தில் இருந்தது. அவளுக்கு மிகவும் அருகிலேயே அவன் நின்றிருந்தான். அரிவாளைப்போல கூர்மையானதாகவும் கிட்டத்தட்ட அதே தடிமனையும் அளவையும் கொண்டிருந்த வாலால் அவன் தூண்டில் கயிறை அறுத்து விடுவானோ என்று கிழவன் பயந்தான். அவள்மீது குத்தீட்டியைப் பாயச் செய்து, கிழவன் உப்புத்தாளைப்போல இருந்த உடலின் பகுதியில் அடித்துக் கொண்டிருந்தான். கண்ணாடியின் பின்பகுதியில் இருக்கும் பூச்சு என்ன நிறத்தில் இருக்குமோ, அந்த நிறம் வருகிற வரைக்கும் அவன் அவளுடைய தலையின் மேற்பகுதியில் அடித்துக் கொண்டிருந்தான். மிகவும் சிரமப்பட்டு, சிறுவனின் உதவியுடன், படகில் அந்த பெண் மீனை இழுத்து ஏற்றினான். ஆண் மீன் படகிற்கு அருகிலேயே அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது. தொடர்ந்து கிழவன் கயிறுகளைச் சரி செய்வதிலும், குத்தீட்டியைச் சீர்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தபோது, அவள் எங்கே இருக்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக ஆண் மீன் படகுக்கு அருகில் குதித்துத் தாவியது. பிறகு கற்பூரவல்லிகளைப் போன்ற செதில்களை நீட்டி மலரச் செய்து, வண்ணக் கோடுகளைக் காட்டியவாறு அவன் நீரின் ஆழத்திற்குள் சென்றுவிட்டான். அவன் மிகவும் அழகானவனாக இருந்தான். கிழவன் நினைத்துப் பார்த்தான். அவன் துணைக்கு காவலாக நின்றிருந்தான்.

“மீன்களின் விஷயத்தில் என்னை மிகவும் அதிகமாக கவலைப்படச் செய்த நிகழ்ச்சி அதுதான்.” கிழவன் நினைத்தான்: “சிறுவனும் மிகுந்த கவலையில் மூழ்கி விட்டான். நாங்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, வேகமாக வெட்டி நறுக்கினோம்.”

“சிறுவன் இங்கே இருந்திருந்தால்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான். நங்கூரத்தின் வட்டவடிமான பலகைகளில் அவன் சாய்ந்து நின்றான். தோளில் போட்டிருந்த கயிறில் பெரிய மீனின் முன்னோக்கிச் செல்லும் பலம் தெரிந்தது.

“என் கொடூரமான சதிச் செயலைத் தாண்டிச் செல்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியது அவனுடைய தேவையாக இருந்தது.” கிழவன் சிந்தித்தான்.

தூண்டில்களும் வலைகளும் சதிச் செயல்களும் சென்று சேர முடியாத ஆழத்திலுள்ள இருண்ட நீருக்குள் தங்குவது என்பதுதான் அவனுடைய தேர்ந்தெடுத்தலாக இருந்தது. “என்னுடைய தேர்ந்தெடுத்தலோ, அங்கு செல்வதும், எல்லாரையும்விட அவனைக் கண்டுபிடிப்பதும் என்பதாக இருந்தன. உலகத்திலுள்ள எல்லா மனிதர்களையும்விட சீக்கிரமாக... இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம். மதியத்திலிருந்து நாங்கள் ஒன்று சேர்ந்தே இருக்கிறோம். எங்களில் ஒருவனுக்குக்கூட உதவுவதற்கு வேறு யாருமில்லை.”

“நான் ஒரு மீனவனாக ஆகியிருக்கக்கூடாது.” அவன் சிந்தித்தான்: “ஆனால், அதற்காகத்தான் நான் பிறவி எடுத்ததே! வெளிச்சம் வருவதற்கு முன்பே ட்யூனா மீனைச் சாப்பிடுவதைப் பற்றி ஞாபகத்தில் வைத்துக்கொண்டே ஆக வேண்டும்.”

பகல் வெளிச்சத்திற்கு சற்று முன்னால், பின்னாலிருந்த தூண்டில்களிலொன்றில் ஏதோ மோதும் சத்தம் கேட்டது. கழி ஒடிவதையும், படகின் மேற்பகுதியில் கயிறு அசைந்து அவிழக் கூடிய சத்தத்தையும் அவன் கேட்டான். இருட்டில் உறைக்குள் இருந்து கத்தியை வெளியே எடுத்து, இடது தோளில் மீனின் பலம் முழுவதையும் தாங்கிக் கொண்டு, பின்னோக்கி நகர்ந்து, படகின் மேற்பகுதியின் ஓரத்திற்கு நேராக இருந்த கயிறை அறுத்தான். தொடர்ந்து தனக்கு மிகவும் அருகில் இருந்த இன்னொரு கயிறையும் அவன் அறுத்தான். பிறகு... தடிமனான கயிறுகளில் இருந்த வளையங்களை இருட்டில் இணைத்தான். ஒரு கையைக் கொண்டு அவன் மிகவும் திறமையாக அந்தச் செயலைச் செய்தான். கட்டுகளைப் போடும்போது, இறுகக் கட்டுவதற்காக அவன் கயிறுகளை இறுகப் பிடித்தான். அவனிடம் இப்போது முரட்டுத்தனமான ஆறு கயிறுகள் இருந்தன. ஒவ்வொரு தூண்டிலிலிருந்தும் பிரித்தெடுத்த இரண்டையும், மீன் விழுங்கிய தூண்டிலில் இருந்த இரண்டையும் அவன் இணைத்து விட்டான்.

“வெளிச்சம் வந்தவுடன், நான் மீண்டும் நாற்பது ஆட்கள் நீளத்தைக் கொண்ட அந்த தூண்டில் கயிறை எடுத்து அறுத்து, தடிமனான கயிறுகளுடன் இணைப்பேன்.” கிழவன் நினைத்தான்: “இருநூறு ஆட்கள் நீளத்தைக் கொண்ட காட்டலோனியன் கயிறையும் கொக்கிகளையும் ஈயக் கட்டிகளையும் நான் இழக்க வேண்டியதிருக்கும். அவற்றை மீண்டும் வாங்க முடியும். ஆனால், வேறு ஏதாவது மீனை தூண்டிலில் மாட்டி வைத்து, அது இவனை அறுத்தெடுத்துவிடும்பட்சம், இந்த மீனுக்கு பதிலாக வேறொன்றை யார் தருவார்கள்? சற்று முன்பு தூண்டிலை முத்தமிட்ட மீன் எது என்று எனக்குத் தெரியாது. மார்லினோ, ப்ராட் பில்லோ சுறாவோ... எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவன் தூண்டிலில் மாட்டிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முடிந்த வரையில் சீக்கிரமாக அவனை அகற்ற வேண்டும்.”

கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “சிறுவன் என்னுடன் இருந்திருந்தால்...? ஆனால், சிறுவன் என்னுடன் இல்லையே!” அவன் நினைத்தான்: “எனக்கு நான் மட்டுமே... இருட்டு வேளையிலோ இருள் இல்லாத நேரத்திலோ அந்த இறுதிக் கயிறில் கவனத்தை வைத்திருப்பதுதான் உனக்கு இப்போது மிகவும் நல்லது. அதை அறுத்து, இரண்டு தடிமனான கயிறுகளையும் இணைக்க வேண்டியதிருக்கிறது.”

கிழவன் அப்படித்தான் செய்தான். இருட்டில் அது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. ஒரு முறை மீன் குதித்துத் தாவியதைத் தொடர்ந்து அவன் முகத்தில் அடி பட்டுக் கீழே விழுந்து விட்டான். கண்ணுக்குக் கீழே காயம் உண்டாகி கன்னத்தின் வழியாக சிறிது குருதி வழித்து கொண்டிருந்தது. தாடைப் பகுதியை அடைவதற்கு முன்பே அது அடர்த்தியாகி காய்ந்துவிட்டது. அவன் தான் அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்த மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்து ஓய்வெடுத்தான். கோணியைச் சரி செய்துவிட்டு, மிகவும் கவனத்துடன் கயிறில் வேலையைச் செய்தான். இப்போது கயிறு தோளில் புதிய ஒரு பகுதிக்கு வந்தது. கயிறைத் தோளில் இறுகப் பிடித்துக்கொண்டே மீனின் இழுவையையும் படகின் பயணிக்கும் வேகத்தையும் கிழவன் புரிந்து கொண்டான்.

“அந்த கண்ணாமூச்சி விளையாட்டை அவன் எதற்காக நடத்துகிறான் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.” அவன் சிந்தித்தான். “கயிறு அவனுடைய உடலில் சற்று இடம் மாறி விட்டிருக்க வேண்டும். எனக்கு வலித்ததைப்போல அந்த அளவிற்கு மோசமாக அவனுடைய உடல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்காது என்பது மட்டும் உண்மை. ஆனால், எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், இந்தப் படகை அவனால் என்றென்றைக்குமாக இழுத்துப் போய்க் கொண்டிருக்க முடியாது. பிரச்சினைகள் உண்டாகக் கூடிய எல்லா விஷயங்களும் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டன.


என் கையில் இப்போது ஒரு மனிதனால் தாங்கிக் கொள்ள முடிகிற அளவுக்கு உள்ள கயிறுகள் இருக்கின்றன.”

“மீனே...” கிழவன் மிகவும் மென்மையான குரலில் சத்தம் போட்டுச் சொன்னான்: “இறப்பது வரை நான் உன்னை விட்டுப் போவதாக இல்லை.”

“அவனும் என்னை விட்டுப் போக மாட்டான் என்று நான் நினைக்கிறேன்.” கிழவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். பொழுது புலர்வதற்காக அவன் காத்திருந்தான். பொழுது விடிவதற்கு முந்தைய குளிர் நிறைந்த நேரமாக இப்போது இருந்தது. வெப்பம் கிடைப்பதற்காக அவன் மரத்துடன் சேர்ந்து நின்றான். “அவனால் எந்த அளவுக்கு முடிகிறதோ, அந்த அளவுக்கு அதை என்னாலும் செய்ய முடியும்.” அவன் நினைத்தான். புலர்காலைப் பொழுதின் முதல் வெளிச்சத்தில் அவன் கயிறை நீரின் அடிப்பகுதிக்கு இறக்கிவிட்டான். படகு எந்தவித தடையுமில்லாமல் முன்னோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது.

சூரியனின் வெளிச்சம் முதல் முறையாகத் தெரிந்தபோது, அதன் கதிர்கள், கிழவனின் வலதுபக்க தோளில் விழுந்து கொண்டிருந்தன.

“அவனுடைய பயணம் வடக்கு நோக்கி இருக்கிறது.” கிழவன் சொன்னான்: “நீரோட்டம் எங்களை அப்படியே தூரத்தில் கிழக்கு நோக்கிக் கொண்டு போகும். அவன் நீரோட்டத்துடன் சேர்ந்து நீந்தினால்...? அவன் மிகவும் களைப்படைந்துபோய் விட்டிருக்கிறான் என்பதை அது காட்டிவிடும்.”

சூரியன் மேலும் உயர்ந்து மேலே வந்தபோது, மீன் தளர்ந்து போய் இல்லை என்பதை கிழவன் புரிந்துகொண்டான். அவனுக்குச் சாதகமான ஒரே ஒரு அடையாளம் தெரிந்தது. அவன் அந்த அளவுக்கு ஆழத்தில் பயணிக்கவில்லை என்பதை கயிறு சாய்ந்திருந்த விதம் காட்டியது. அதை வைத்து அவன் குதிப்பான் என்று அர்த்தமில்லை. எனினும், குதிக்க வாய்ப்பு இருக்கிறது.

“கடவுள் அவனைக் குதிக்கும்படி செய்யட்டும்...” கிழவன் சொன்னான்: “அவனை கவனித்து கொள்ளும் அளவுக்கு என்னிடம் கயிறு இருக்கிறது.”

“அவனுடைய பயணத்தில் சிறிய தொந்தரவை உண்டாக்கினால், அது அவனை வேதனைப்படச் செய்யும். அவன் குதித்து தாவவும் செய்வான்.” கிழவன் மனதிற்குள் நினைத்தான். “இப்போது பகல் வெளிச்சமாக இருப்பதால் அவன் குதிக்கட்டும். அப்படித் தாவும்போது, அவன் தன்னுடைய முதுகெலும்புப் பகுதியில் உள்ள பைகளை காற்றால் நிரப்புவான். அதற்குப் பிறகு இறப்பதற்கு மிகவும் ஆழத்திற்கு அவனால் செல்ல முடியாது.”

கிழவன் கயிறில் பலத்தைச் செலுத்த முயற்சித்தான். ஆனால், தூண்டிலில் மீனைச் சிக்கச் செய்ததிலிருந்து கயிறு அறுந்து போகும் அளவுக்கு அவன் அதை இறுக்கமாக வைத்திருந்தான். அதை இழுப்பதற்காக பின்னோக்கி குனிந்தபோது, எந்த அளவுக்கு அது சிரமமாக இருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது. இனி சிறிதளவில்கூட பலத்தைப் பயன்படுத்துவதற்கு வழியில்லை என்பது அவனுக்கும் புரிந்துவிட்டது. “நான் இதை எல்லா நேரங்களிலும் அசைத்துக் கொண்டே இருக்கக் கூடாது.” அவன் மனதில் நினைத்தான்: “ஒவ்வொரு அசைவும் தூண்டிலின் கொக்கி உண்டாக்கிய காயத்தைப் பெரிதாக ஆக்குகிறது. அவன் குதித்துத் தாவும்போது, கொக்கி விடுபட்டுப் பிரிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எந்த நிலையில் இருந்தாலும் சூரியனைப் பார்க்கும்போது எனக்கு நிம்மதி உண்டாகிறது. அதற்குக் காரணம் இன்னொரு முறை அதைப் பார்க்க வேண்டியதில்லையே!”

கயிறில் மஞ்சள் நிற பாசிகள் படிந்திருந்தன. ஆனால், அவை கயிறின் உறுதித் தன்மையை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதைப் புரிந்துகொண்ட கிழவன் சந்தோஷத்தில் மூழ்கினான். இரவில் நன்றாக பிரகாசித்துக் கொண்டிருந்த மஞ்சள் நிற பாசிகளே அவை.

“மீனே..” கிழவன் சொன்னான்: “நான் உன்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறேன். எனினும், இந்த பகல் முடிவதற்குள் நான் உன்னைக் கொன்று விடுவேன்.”

“நாம் அப்படி நடக்க வேண்டும் என்று மனதில் நினைப்போம்.” அவன் மனதில் நினைத்தான்.

வடக்கு திசையிலிருந்து ஒரு சிறிய பறவை படகை நோக்கிப் பறந்து வந்தது. நீருக்கு மேலே மிகவும் தாழ்வான நிலையில் பறக்கக் கூடிய ஒரு பாடக் கூடிய பறவை... அது மிகவும் களைத்துப் போய் இருக்கிறது என்பதைக் கிழவன் புரிந்துகொண்டான்.

பறவை படகின்பின் பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டு, அங்கு ஓய்வெடுத்தது. பிறகு அது கிழவனின் தலையைச் சுற்றிப் பறந்து கயிறில் போய் உட்கார்ந்தது. அதற்கு கயிறுதான் சந்தோஷத்தைத் தரக்கூடிய ஒரு விஷயமாக தோன்றியது.

“உனக்கு என்ன வயது?” கிழவன் பறவையிடம் கேட்டான்: “இது உன்னுடைய முதல் பயணமா?”

அவன் உரையாடியபோது பறவை அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. கயிறு சரியான முறையில் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியாத அளவுக்கு அவன் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டான். அழகான பாதங்களால் கயிறை இறுகப் பற்றிக் கொண்டே அவன் இப்படியும் அப்படியுமாக ஆடினான்.

“அது அசைவே இல்லாதது.” கிழவன் பறவையிடம் கூறினான்: “காற்று இல்லாத ஒரு இரவுக்குப் பிறகு நீ இந்த அளவுக்கு தளர்ச்சியடைய வேண்டியதில்லை. பறவைகள் எதற்காக இங்கு வருகின்றன?”

அந்த பறவைகளைப் பிடிப்பதற்குத்தான் புறாவைப் பிடிப்பவர்கள் கடலுக்குள் வருகிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த விஷயத்தையும் அவன் பறவையிடம் கூறவில்லை. எந்த நிலையில் இருந்தாலும், அந்த விஷயம் அவனுக்குப் புரியாதே! தாமதிக்காமல் புறாவைப் பிடிப்பவர்களைப் பற்றி அவன் புரிந்து கொள்வான்.

“நன்றாக ஓய்வெடு, சிறிய பறவையே!” கிழவன் சொன்னான்: “அதற்குப் பிறகு மனிதனையோ பறவையையோ மீனையோபோல சிறிது முயற்சி பண்ணிப்பார்- அதிர்ஷ்டம் துணைக்கு இருக்கிறதா என்று...” பறவை அருகில் இருந்தது கிழவனைப் பேசுவதற்குத் தூண்டியது. கடந்த இரவில் அவனுடைய முதுகு அசைய முடியாத அளவுக்கு மரத்துப் போய் விட்டிருந்தது. அது இப்போது மிகவும் வேதனையைத் தந்தது.

“பறவையே! விருப்பமிருந்தால் நீ என்னுடைய வீட்டில் தங்கு.” கிழவன் சொன்னான்: “பாயை உயர்த்தி அதில் மோதிக் கொண்டிருக்கும் இளம் காற்றில் உன்னை அமரச் செய்துகொண்டு போக முடியாததற்கு வருத்தப்படுகிறேன். எனினும், நான் ஒரு நண்பனுடன் இருக்கிறேன்.”

அந்த நிமிடம் திடீரென்று மீன் ஒரு பக்கமாக சாய்ந்தது. கிழவன் பலகையில் தடுமாறி விழுந்தான். இறுகப் பிடித்துக் கொண்டும், சிறிது கயிறை கீழே இறக்கி விடாமலும் இருந்திருந்தால், அவன் கடலில் விழுந்திருப்பான்.

கயிறு அசைந்ததும் பறவை பறந்து போய்விட்டிருந்தது. அது செல்வதைப் பார்ப்பதற்குக்கூட கிழவனால் முடியவில்லை. வலது கையால் அவன் கயிறையே அக்கறையுடன் தேடிப் பார்த்தான். கையில் காயம் உண்டாகி ரத்தம் வழிந்து கொண்டிருப்பது அவனுடைய கவனத்தில் விழுந்தது.


“அவனை ஏதோ வேதனை கொள்ளச் செய்திருக்கிறது!” கிழவன் உரத்த குரலில் கூறினான். மீனின் பயணிக்கும் திசையை மாற்ற முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவன் கயிறை பின்னோக்கி இழுத்தான். ஆனால், கயிறு அறுபடும் நிலையில் இருக்கிறது என்று தோன்றியவுடன், கயிறை நேராகப் பிடித்து அதன் போக்கிலேயே விட்டுவிட்டு அவன் நின்றான்.

“மீனே... இப்போது உனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது அல்லவா?” அவன் சொன்னான்: “கடவுளுக்குத் தெரியும். எனக்கும் அப்படித்தான்...”

கிழவன் பறவையைச் சுற்றிலும் தேடிப் பார்த்தான். அவன் தன்னுடன் இருப்பதை அவன் விரும்பினான். ஆனால், பறவை அங்கிருந்து போய்விட்டிருந்தது.

“நீ அதிகமான நேரம் இங்கு இருக்கவில்லையே!” கிழவன் நினைத்தான்: கரையை அடையும் வரை நீ போகக் கூடிய இடம் மிகவும் ஆபத்து நிறைந்தது. திடீரென்று அந்த ஒரே இழுப்பில் மீன் என்னை வீழ்த்தும் அளவுக்கு நான் எப்படி இடம் கொடுத்தேன்? நான் மிகப் பெரிய முட்டாளாக ஆகிவிட்டிருக்க வேண்டும். ஒரு வேளை, நான் அந்தச் சிறிய பறவையைப் பார்த்துக்கொண்டு, அவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். இனி நான் என்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்துவேன். பிறகு... பலம் குறையாமல் இருப்பதற்கு ட்யூனா மீனைச் சாப்பிட வேண்டும்.”

“சிறுவன் என்னுடன் இருந்திருந்தால்...! பிறகு... கையில் கொஞ்சம் உப்பும்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான்.

கயிறின் எடையை இடதுபக்க தோளுக்கு மாற்றிவிட்டு, மிகவும் கவனமாக முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு, கிழவன் தன் கையை கடலில் கழுவினான். ரத்தம் வழிவதையும், படகு நகரும்போது கையில் நீர் தொடர்ந்து அடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டே, கையை சிறிது நேரம் நீருக்குள் அவன் மூழ்க வைத்துக் கொண்டிருந்தான்.

“அவன் மிகவும் மந்தமானவனாக ஆகிவிட்டான்.” கிழவன் சொன்னான்.

மேலும் சிறிது நேரம் தன் கையை உப்பு நீரில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், திடீரென்று உண்டான மீனின் இன்னொரு அசைவைப் பார்த்து அவன் பயப்பட்டான். எழுந்து உறுதியாக நின்று கொண்டு, கையை சூரியனுக்கு நேராக நீட்டினான். சிறிய அளவில் ஒரு காயம் உண்டாகி விட்டிருந்தது. ஆனால், கையில் வேலை செய்யக்கூடிய இடத்தில் அது இருந்தது. மீன் பிடிக்கும் செயல் முடிவடையும் வரை கைகளில் எந்தவித பிரச்சினைகளும் உண்டாகாமல் இருக்க வேண்டும். வேலை தொடங்குவதற்கு முன்பே கையில் காயம் உண்டாவதை அவன் விரும்பவில்லை.

“இப்போது நான் அந்தச் சிறிய ட்யூனா மீனைச் சாப்பிட்டே ஆக வேண்டும். கையில் ஈரம் காய்ந்ததும் மரக் கொம்பால் ட்யூனா மீனை அருகில் கொண்டு வந்து இங்கே உட்கார்ந்து அமைதியாக சாப்பிடலாம்.”

ட்யூனா மீன் படகின் பின்பகுதியில் இருந்தது. கிழவன் முழங்காலில் உட்கார்ந்து கொண்டு கயிறு வளையத்தில் படாமல் பாயைக் கட்டக்கூடிய மரத்தடியால் ட்யூனாவைப் பிடித்து இழுத்தான். மீண்டும் கயிறை இடது தோளில் வைத்தவாறு, இடது கையை ஊன்றி, குத்தீட்டியின் நுனியிலிருந்து மீனைப் பிரித்து எடுத்துவிட்டு, குத்தீட்டியை அது இருந்த இடத்திலேயே வைத்தான். முழங்காலால் அழுத்திப் பிடித்துக்கொண்டான். மீனின் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் இருந்த மாமிசத்தை தலையின் பின்பகுதியிலிருந்து வால் வரை நீளமான துண்டுகளாக்கி அறுத்தான். மரச் சக்கைகளின் அளவுகளில் அந்தத் துண்டுகள் இருந்தன. கீழேயிருந்து வயிறு வரை அறுத்தான். ஆறு துண்டுகளை அறுத்தெடுத்து, அவற்றை பலகையில் பரப்பி வைத்தான். காற்சட்டையில் கத்தியைத் துடைத்து, ட்யூனாவின் தேவையற்ற பகுதிகளையும் வாலையும் கடலுக்குள் எறிந்தான்.

“என்னால் ஒரு துண்டு முழுவதையும் சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை.” கிழவன் சொன்னான். மீன் துண்டுகளில் ஒன்றிற்குள் அவன் கத்தியை இறக்கினான். அப்போது கயிறு பலமாக இழுக்கப்படுவதை அவன் உணர்ந்தான். இடது கை மரத்துப் போய் வேதனையைத் தந்தது. கனமாக இருந்த கயிறை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த கையை அவன் வெறுப்புடன் பார்த்தான்.

“இது என்ன கை...” கிழவன் சொன்னான். “தேவையான நேரத்தில் மரத்துப் போய் வேதனையைத் தருகிறது.” “உன்னை நீயே நகமாக மாற்றிக்கொள். இது உனக்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை.” அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

“எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” அவன் சிந்தித்தான். தொடர்ந்து கீழே இருண்டு போய் காணப்பட்ட நீரில் கயிறு சாய்ந்து தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். “இனி இதைச் சாப்பிடு. இது கைகளுக்கு வலிமையைத் தரும். இது கையின் தவறு அல்ல. நீ மீனுடன் போராட ஆரம்பித்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன அல்லவா? எனவே, இப்போது மீனைச் சாப்பிட்டால்தான் அவனுடன் என்றென்றைக்கும் போராட முடியும். -அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

கிழவன் ஒரு துண்டை எடுத்து வாய்க்குள் போட்டு மெதுவாக சுவைத்துப் பார்த்தான். அது பரவாயில்லை என்று கூறக்கூடிய விதத்தில் இருந்தது.

“அதை நன்றாக சுவைத்து சாப்பிட வேண்டும்.” அவன் நினைத்தான்: “இருக்கும் நீர் முழுவதையும் எடுக்க வேண்டும். சிறிது எலுமிச்சம் பழ நீரையோ உப்பையோ சேர்த்து சாப்பிட்டால் மோசமாக இருக்காது.”

“எப்படி இருக்கிறது, கை?” மரத்துப்போய், செயலை இழந்து, கிட்டத்தட்ட மரக் குச்சியைப்போல இருந்து வேதனை தந்து கொண்டிருந்த கையிடம் அவன் கேட்டான்:

“உனக்காக இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம்.”

இரண்டாக அறுத்து வைத்திருந்த ஒரு துண்டின் இன்னொரு பகுதியை கிழவன் சாப்பிட்டான். அவன் அதை மிகுந்த கவனத்துடன் சுவைத்து சாப்பிட்டுவிட்டு, தோலை வெளியே துப்பினான்.

“எப்படி இருக்கிறது, கையே? ம்... நான் மிகவும் முன்கூட்டியே விசாரிக்கிறேனோ?”

கிழவன் இன்னொரு முழு துண்டை எடுத்து சுவைத்தான்.

“இது நல்ல பலத்தைக் கொண்ட, ஆரோக்கியமுள்ள மீன்...” அவன் நினைத்தான்: “டால்ஃபின் மீனுக்கு இனிப்பு அதிகம். இதற்கு இனிப்பே இல்லை என்றுதான் கூற வேண்டும். இதில் நல்ல பலம் அடங்கியிருக்கிறது.”

“நடைமுறை அறிவை வெளிப்படுத்துவதைத் தவிர, வேறு எதிலும் அர்த்தமில்லை.” அவன் நினைத்தான்: “எனக்கு சிறிது உப்பு கிடைத்திருந்தால்...? மீனின் எஞ்சிய பகுதிகளை சூரியன் அழுகச் செய்யுமோ அல்லது உலரச் செய்யுமோ என்று தெரியவில்லை. அதனால் பசி இல்லையென்றால்கூட, அதையும் சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. இந்த மீன் மிகவும் அமைதியானது. அசைவு சிறிதும் இல்லை. நான் அதை முழுவதையும் சாப்பிட்டுவிட்டு தயார் நிலைக்கு வருவேன்.”

“மன்னித்து விடு, கையே!” கிழவன் சொன்னான். “உனக்காகத்தான் நான் இதைச் செய்கிறேன்.”


“மீனுக்கு இரை கொடுக்க என்னால் முடிந்திருந்தால்...?” அவன் சிந்தித்தான்: “அவன் என்னுடைய சகோதரன். ஆனால், நான் அவனைக் கொன்றே தீருவேன். அதற்கு நல்ல பலத்தை உடலில் சேர்க்க வேண்டும்.” மெதுவாக மனதைத் தயார் பண்ணிக் கொண்டு, மரச் சக்கைகளின் அளவுகளில் இருந்த மீனின் துண்டுகள் முழுவதையும் அவன் சாப்பிட்டு முடித்தான்.

கைகளை காற்சட்டையில் துடைத்துவிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“கையே...! இனி கயிறை விடு!” கிழவன் சொன்னான்: “நீ அந்த முட்டாள்தனமான செயலை நிறுத்துவது வரை நான் அவனை வலது கையால் மட்டும் செயல்படச் செய்து பார்த்துக் கொள்கிறேன்.” இடது கையால் பிடித்திருந்த பருமனான கயிறில் கிழவன் தன்னுடைய இடது பாதத்தை வைத்து அழுத்தினான். முதுகின் வழியாக இருந்த இழுப்புக்கு எதிர்பக்கமாக சாய்ந்து படுத்தான்.

“மரத்துப் போயிருக்கும் கையின் தன்மை குணமாவதற்கு கடவுள் உதவட்டும்.” கிழவன் சொன்னான்: “மீன் என்ன செய்யப் போகிறது என்று எனக்குத் தெரியாதே?”

“எனினும், அவன் மிகவும் அமைதியாக தன்னுடைய திட்டத்தைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றுகிறது.” கிழவன் சிந்தித்தான்: “அவனுடைய திட்டம் என்னவாக இருக்கும்? அப்படியென்றால் என்னுடைய திட்டம்? அவனுடைய திட்டத்திற்கு ஏற்றபடிதான் என்னுடைய திட்டத்திற்கு வடிவம் கொடுக்க முடியும். அவன் தாவி குதிப்பதாக இருந்தால், நான் அவனைக் கொன்றுவிடலாம். ஆனால், அவன் எல்லா நேரங்களிலும் நீருக்குக் கீழேயே இருந்து கொண்டிருக்கிறானே! அப்படியென்றால், நானும் எல்லா நேரங்களிலும் அவனுடன் சேர்ந்தே இருப்பேன்.”

மரத்துப் போன கையை காற்சட்டையில் உரசி விரல்களுக்கு வலிமையைக் கொண்டு வர அவன் முயற்சித்தான். அதற்குப் பிறகும் அவை திறக்கவில்லை. “வெயில் படும்போது திறக்கும்.” அவன் நினைத்தான்: “சில நேரங்களில் பலம் கொண்ட பச்சை ட்யூனா மீனை சாப்பிட்டு முடித்த பிறகு, அது திறக்கலாம்.

கட்டாயம் என்னும் பட்சம், என்ன விலை கொடுத்தும் நான் விரல்களைத் திறந்து விடுவேன். ஆனால், பலத்தைச் செலுத்தி அவற்றைத் திறப்பதற்கு நான் இப்போது நினைக்கவில்லை. அது தானே திறந்து பழைய வடிவத்திற்கு திரும்பவும் வரட்டும். நிறைய தூண்டில் கயிறுகளைக் கீழே இறக்கிவிட்டும், ஒன்று சேர்த்து கட்டிக்கொண்டும் இருந்த நேரத்தில் நான் என்னுடைய கையைக் கொஞ்சம் குறை உண்டாகும்படி செய்துவிட்டேன்.”

கிழவன் கடலில் கண்களை ஓட்டினான். தான் இப்போது எந்த அளவுக்கு தனிமையில் இருக்கிறோம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால், ஆழமாக இருந்த கறுத்த நீரில் படிகங்களையும் நீளமாகக் கிடந்த கயிறுகளையும் காற்று இல்லாத கடலின் அசாதாரணமான அலைகளின் அசைவையும் அவனால் பார்க்க முடிந்தது. இப்போது குளிர்காற்றுக்காக மேகங்கள் திரண்டு நின்றிருந்தன. முன்னால் காட்டுக் கோழிகளின் ஒரு கூட்டத்தை அவன் பார்த்தான். அவை கூட்டமாகவும் தனித்தனியாகவும் மீண்டும் கூட்டமாகச் சேர்ந்தும் நீர்ப் பரப்புக்கு மேலே பறந்து கொண்டிருந்தன. கடலில் யாரும் தனியாக இல்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்.

சிறிய படகில் கரையைப் பார்க்க முடியாத அளவு தூரத்திற்கு கடலில் பயணம் செய்வதை நினைத்து பயப்படக் கூடிய சிலரை கிழவன் நினைத்துப் பார்த்தான். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கால நிலை மிகவும் மோசமாக இருக்கும் மாதங்களில் அவர்களுடைய பயம் நியாயமானதே. ஆனால், இப்போது சுழல்காற்று வீசக் கூடிய மாதங்கள். சுழல் காற்று இல்லாதபோது இந்த மாதங்களில் நிலவும் கால நிலைதான் வருடத்திலேயே மிகவும் சிறந்தது.

“சுழல்காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சம், நீங்கள் கடலில் இருக்கும்போது, அதன் அடையாளங்கள் வானத்தில் பல நாட்களுக்கு முன்பே தெரிய ஆரம்பித்துவிடும். கரையில் யாரும் அதை பார்க்க முடியாது. எதைப் பற்றி விசாரிப்பது என்று யாருக்கும் தெரியாது. என்பதுதான் காரணம்.” அவன் நினைத்தான்: “மேகங்கள் திரண்டு நின்றிருக்க, கரை சில மாறுதல்களைக் காட்டுவதுண்டு. எது எப்படி இருந்தாலும், இப்போது சுழல் காற்று எதுவும் வரப்போவதில்லை.”

கிழவன் வானத்தைப் பார்த்தான். வெயில் காலத்தின் மேகக் கூட்டம் ஐஸ்க்ரீம் குவியல்களைப்போல நட்பு வடிவம் அணிந்திருந்தது. மிகவும் உயரத்தில் வெண் மேகங்களின் மெல்லிய சிறகுகள் செப்டம்பர் மாத வானத்தில் பரந்து காணப்பட்டன.

“மெல்லிய காற்று...” கிழவன் சொன்னான்: “மீனே, காலநிலை உன்னை விட எனக்குத்தான் சாதகமாக இருக்கிறது.”

இடது கை மரத்துப் போய் மடங்கி இருந்தது சரியாகவில்லை. எனினும், அவன் அதை மெதுவாக விரித்தான்.

“மரத்துப் போய் கை மடங்கி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை” அவன் நினைத்தான். அது உடல் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்வதைப் போன்றது. டோமைய்ன் விஷத்தன்மையின் காரணமாக வயிற்றுப் போக்கு உண்டாவதோ, வாந்தி வெளியே வருவதோ மற்றவர்களுக்கு முன்னால் அவமானத்தை அளிக்கக் கூடிய செயல்களே. ஆனால், மரத்துப் போகும் செயல் ஒரு மனிதனை அவமானப்பட்டு நிற்கச் செய்கிறது- குறிப்பாக அவன் மட்டும் தனியாக இருக்கும்போது, மரத்துப் போகும் நிலையைப் பற்றி அவனால் இப்படித்தான் சிந்தித்துப் பார்க்க முடிந்தது.

சிறுவன் அங்கு இருந்திருந்தால், மரத்துப்போன கையை அவன் தடவி விட்டிருப்பான். கைத்தண்டிலிருந்து கீழே வரை தடவி, மரத்து மடங்கி இருக்கும் நிலையைச் சரி செய்துவிட்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் அது குணமாகிவிடும்.

நீரில் கயிறு சாய்ந்திருக்கும் நிலையில் வேறுபாடு இருப்பதைப் பார்ப்பதற்கு முன்பே, அவன் வலது கையால் கயிறு இழுக்கப்படும்போது இருக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொண்டான். பிறகு கயிறை நோக்கி குனிந்தான். இடது கையை தொடையில் பலத்துடன் மிகவும் வேகமாக அடித்தான். தூண்டில் கயிறு மெதுவாக மேல் நோக்கி சாய்ந்து கொண்டே வருவதை அவன் பார்த்தான்.

“அவன் மேலே வந்து கொண்டிருக்கிறான்.” கிழவன் சொன்னான். “கையே, எச்சரிக்கையுடன் இரு. தயவு செய்து எச்சரிக்கையுடன் இரு.”

கயிறு மெதுவாக எந்தவித அசைவும் இல்லாமல் மேலே வந்து கொண்டிருந்தது. படகுக்கு முன்னாலிருந்த நீர்ப்பரப்பு உயர்ந்தது. மீன் வெளியே வந்தது. எந்தச் சமயத்திலும் முடிவுக்கே வராததைப்போல அவன் வெளியே வந்தான். அவனுடைய ஓரங்களிலிருந்து நீர் தெறித்து விழுந்து கொண்டிருந்தது. சூரிய வெளிச்சத்தில் அவன் மின்னிக் கொண்டிருந்தான். தலையிலும் முதுகிலும் அடர்த்தியான நீலநிறம் தெரிந்தது. ஓரங்களில் இருந்த சிறகுகள் அகலமான, அதே நேரத்தில் அழகான லாவன்டர் செடியைப்போல வெயிலில் தோன்றின. பேஸ் பால் மட்டையைப்போல அவனுடைய வால் நீளமாக இருந்தது.


வாலின் முனை நீருக்குள்ளிருந்து மேலே வந்தது. தொடர்ந்து எந்தவித ஆரவாரமும் உண்டாக்காமல், நீச்சல் வீரனைப்போல மீண்டும் நீருக்குள்ளேயே அவன் போய்விட்டான். வாலின் அரிவாளைப் போன்ற பெரிய பாகம் கீழே இறங்கிச் செல்வதை கிழவன் பார்த்தான். கயிறு மிகவும் வேகமாக வெளியே வர ஆரம்பித்தது.

“படகைவிட இரண்டு அடிகள் அதிகமான நீளத்தை அவன் கொண்டிருக்கிறான்.” கிழவன் சொன்னான். மிகவும் வேகமாக என்று கூற முடியாவிட்டாலும், சீரான முறையில் கயிறு கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தது. மீனுக்கு பதைபதைப்பு சிறிதும் இல்லாமலிருந்தது. அறுந்து விடாத அளவுக்கு பலத்தைப் பயன்படுத்தி தன் இரண்டு கைகளாலும் கிழவன் கயிறைப் பிடித்து இழுத்தான். தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்தி மீனின் வேகத்தைக் குறைக்க முயலும் பட்சம், மீன் கயிறு முழுவதையும் இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் என்பதையும், அது அறுந்து விடும் என்பதையும் அவன் புரிந்து கொண்டிருந்தான்.

“அவன் ஒரு பெரிய மீன்தான். என்னுடைய பலத்தை அவனுக்குத் தெரிய வைக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “சொந்த பலம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கோ, ஓடி விலகிச் செல்லும் பட்சம் என்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கோ, நானாக இருந்தால் எப்படிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அவற்றில் தலையை நுழைத்து ஏதாவது அறுபடும் நிலை வரை போய்க் கொண்டிருப்பேன். அதே நேரத்தில் தெய்வத்திற்கு நன்றி. மீன்களைக் கொல்லக் கூடிய நம் அளவுக்கு அவை அறிவு படைத்தவை அல்ல. எனினும், நம்மைவிட பெருந்தன்மை கொண்டவையாகவும், திறமை கொண்டவையாகவும் அவை இருக்கின்றன.”

கிழவன் ஏராளமான பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறான். ஆயிரம் ராத்தல்களுக்கும் அதிகமான எடையைக் கொண்ட எவ்வளவோ மீன்களை அவன் வாழ்க்கையில் கண்டிருக்கிறான். அந்த அளவுக்கு மிகப் பெரிய இரண்டு மீன்களைப் பிடிக்கவும் செய்திருக்கிறான். ஆனால், அப்போது அவன் மட்டும் தனியே இல்லை. இப்போது தன்னை தனி மனிதனாக.. கரையைக்கூட பார்க்க முடியாத கடலில், தான் இன்றுவரை பார்த்ததிலேயே மிகவும் பெரிதாகவும் இன்றுவரை கேள்விப்பட்டதிலேயே அளவில் மிகவும் பெரிதானதாகவும் இருக்கக்கூடிய மீனுக்குப் பின்னால் அவன் இருக்கிறான். அப்போது கூட, கழுகின் நகத்தின் பிடியில் சிக்கியிருப்பதைப்போல கிழவனின் இடது கை இறுக்கமாக இருந்தது.

“எனினும், மரத்துப் போய் இருந்த கையின் நிலை குணமாகாமல் இருக்காது.” கிழவன் நினைத்தான்: “என்னுடைய வலது கைக்கு உதவியாக இருக்க, நிச்சயமாக அது சரியாகாமல் இருக்காது. மூன்று விஷயங்களை நண்பர்கள் என்று குறிப்பிடலாம். மீனும் என்னுடைய இரண்டு கைகளும்... அது மரத்துப் போய் மடங்கி இருக்கக் கூடாது. மரத்துப் போய் இருக்கிற அளவுக்கு விலை மதிப்பு அற்றது அல்ல அவை.” மீன் மீண்டும் மந்தமானதாக ஆனது, அது வழக்கமான வேகத்துடன் போய்க் கொண்டிருந்தது.

“அவன் எதற்காக குதித்துத் தாவினான் என்று நான் ஆச்சரியப் படுகிறேன்.” கிழவன் நினைத்தான். “தான் எந்த அளவுக்கு பெரிதாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக அவன் குதித்துத் தாவியிருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும், எனக்கு இப்போது விஷயம் புரிந்துவிட்டது. நான் எப்படிப்பட்டவன் என்பதை அவனுக்குத் தெரிய வைக்க வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். ஆனால், அப்போது அவன் என்னுடைய மரத்துப்போய் மடங்கி இருக்கும் கையைப் பார்த்து விடுவானே! நான் இயல்பாகத் தெரிவதைவிட பெரிய ஆள் என்று அவன் நினைக்கட்டும். நான் அப்படி ஆகவும் செய்வேன். அந்த மீன் நானாக இருந்தால்... எனக்கு எதிராக உள்ள எல்லா குணங்களும் அவனிடம் வந்து சேரட்டும். எனக்கு என்னுடைய பலமும் அறிவும் மட்டும் இருந்தால் போதும்.”

கிழவன் படகின் பலகையில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்தான். சிரமங்களை பொறுமை குணத்துடன் ஏற்றுக்கொண்டான். மீன் திசையை விட்டு மாறாமல் நீந்திக் கொண்டிருந்தது. இருண்ட நீர்ப்பரப்பின் வழியாக படகு மெதுவாக நீங்கிக் கொண்டிருந்தது. கிழக்கு திசையிலிருந்து வந்த காற்று மோதியதும், நீரில் ஒரு சிறிய உயர்வு உண்டானது. மதிய நேரம் வந்தபோது, மரத்துப்போய் விட்டிருந்த கிழவனின் இடது கை சீரான நிலைக்கு வந்தது.

“மீனே, இதோ உனக்கு ஒரு கெட்ட செய்தி.” கிழவன் சொன்னான். தோளை மூடியிருந்த கோணிக்கு மேலே இருந்த கயிறை அவன் சற்று இடம் மாற்றினான்.

அவன் வசதியாக உட்கார்ந்திருந்தாலும், சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆனால், அதை ஒப்புக் கொள்வதற்கு அவன் தயாராக இல்லை.

“நான் மத நம்பிக்கை கொண்ட மனிதன் அல்ல.” கிழவன் சொன்னான். “எனினும், இந்த மீனைப் பிடிப்பதற்கு பத்து முறை “நம்முடைய தந்தையையும்” பத்து முறை “புனிதமரி”யத்தையும் உச்சரிப்பேன். இந்த மீனைப் பிடிக்க முடிந்தால், டி கோப்ராவிலிருக்கும் கன்னி மரியத்தின் இடத்திற்கு நான் புனிதப் பயணம் செல்வேன். சத்தியமாக...”

கிழவன் இயந்திரத் தனமாக பிரார்த்தனைச் சொற்களைக் கூற ஆரம்பித்தான். மிகவும் களைத்துப்போய் இருப்பதால் சில நேரங்களில் பிரார்த்தனைகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடியாமற் போய்விடும். அப்படிப்பட்ட நேரங்களில் பிரார்த்தனைச் சொற்களை மிகவும் வேகமாகக் கூறுவான். அப்படிக் கூறும்போது, அந்தச் சொற்கள் இயல்பாகவே ஞாபகத்தில் வர ஆரம்பித்தவிடும். “நம் தந்தை”யைவிட “புனித மரிய”த்தின் பெயரைக் கூறுவது மிகவும் எளிமையாக இருக்கிறது.” கிழவன் நினைத்தான்.

“புனித மரியமே, உன்னை வணங்குகிறேன். கடவுள் உன்னுடன் இருக்கிறார். பெண்களில் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். உன் கருப்பையின் பழமான இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. புனித மரியமே, கடவுளின் அன்னையே, பாவிகளான எங்களுக்காக இப்போதும், எங்களுடைய மரண நேரத்தின் போதும். நீ பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆமென்...” தொடர்ந்து அவன் சொன்னான்: “புனித கன்னியே, இந்த மீனின் மரணத்திற்காகவும் நீ பிரார்த்தனை செய்ய வேண்டும். இவன் ஆச்சரியப்படக் கூடிய விதத்தில் இருக்கிறான் என்றாலும்...”

பிரார்த்தனையைக் கூறி முடித்ததும், மனதில் மேலும் சற்று நிம்மதி உண்டானதைப்போல இருந்தது. ஆனால், சிரமங்கள் சிறிதும் குறையாமலிருந்தன. மாறாக, சற்று அதிகமாகவே இருப்பதைப் போல தோன்றியது. உட்கார்ந்திருந்த பலகையில் சாய்ந்தவாறு, இயந்திரத்தனமாக இடது கையின் விரல்களை அசைத்து வேலையை ஆரம்பித்தான்.

இளம் காற்று வீசிக் கொண்டிருந்தாலும், வெயில் மிகவும் சூடாகவே இருந்தது.

“அந்த சிறிய தூண்டில் கயிறை படகின் பின்பகுதி வழியாக மீண்டும் கீழே இறக்கி விடுவதுதான் இப்போதிருப்பதைவிட நல்லது.” அவன் சொன்னான்:


“இன்னொரு இரவு மீன் இதே மாதிரி போய்க் கொண்டிருந்தால், நான் இனியும் கடலில் சாப்பிட வேண்டியதிருக்கும். புட்டியில் இருந்த நீர் தீரும் அளவுக்கு வந்துவிட்டது. டால்ஃபின் மீனைத் தவிர, வேறு எதுவும் இங்கே கிடைப்பது மாதிரி தெரியவில்லை. கிடைத்த நிமிடத்திலேயே சாப்பிடுவதாக இருந்தால், அது அந்த அளவுக்கு மோசமாக இருக்காது. ஆனால், அதனை ஈர்ப்பதற்கு என்னிடம் விளக்கு இல்லையே! பச்சையாக சாப்பிடுவதாக இருந்தால், பறக்கும் மீன் சிறந்ததாக இருக்கும். அறுத்து துண்டு துண்டுகளாக ஆக்க வேண்டியதில்லை. இப்போது என்னுடைய முழு பலத்தையும் நான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டியதிருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, அவன் இந்த அளவுக்கு பெரியவனாக இருப்பான் என்பதை நான் அறிந்திருக்கவே இல்லை.”

“எனினும், நான் அவனைக் கொல்வேன்.” கிழவன் தீர்மானமான குரலில் சொன்னான்: “அவனுடைய அனைத்து உயர்வுத் தன்மைகளுடனும், மதிப்புடனும்...”

“இது நியாயமற்ற ஒரு செயலாக இருக்கலாம்.” அவன் நினைத்தான்: “எனினும், ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும் என்பதையும், ஒரு மனிதனால் எதை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நான் அவனுக்குக் காட்டப்போகிறேன்.”

“வினோதமான ஒரு கிழவன் நான் என்று சிறுவனிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்.” அவன் சொன்னான்: “இப்போது அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.”

ஒரு ஆயிரம் முறைகள் அவன் அதை நிரூபித்திருக்கிறான் என்பது இப்போது விஷயமல்ல. இப்போது மீண்டும் அவன் அதை நிரூபித்துக் காட்டப் போகிறான். ஒவ்வொரு முறையும் புதிது புதிதானதுதானே சந்தர்ப்பங்கள். ஒரு செயலைச் செய்யும்போது, கடந்த காலத்தைப் பற்றி அவன் எந்தச் சமயத்திலும் நினைத்துப் பார்ப்பதில்லை.

“அவன் சற்று தூங்கி விட்டிருந்தால்...? அப்படியென்றால், நானும் தூங்கலாம். சிங்கங்களைப் பற்றி கனவு காணலாம்.” அவன் நினைத்தான். “கனவில் சிங்கங்கள் ஏன் எப்போதும் வந்து கொண்டே இருக்கின்றன? சிந்தித்துச் சிந்தித்து தலையைப் புண்ணாக்கிக் கொள்ளாதே, கிழவா.” அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான்: “எதைப் பற்றியும் சிந்திக்காமல் பலகையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சுகமாக ஓய்வெடு. அவன் உழைத்துக் கொண்டிருக்கிறான். உன்னைப்போல எவ்வளவு குறைவாக முடியுமோ, அந்த அளவுக்கு...”

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது. படகு அப்போதும் மெதுவாக அசைவே இல்லாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கிழக்கு திசையிலிருந்து வந்த இளம் காற்று உண்டாக்கிய உற்சாகத்தில் கிழவன் கடலில் சுகமாக பயணம் செய்து கொண்டிருந்தான். முதுகில் இருந்த கயிறின் இழுப்பு மிகவும் சாதாரணமாகவும் மென்மையாகவும் இருந்தது.

மதியத்தைத் தாண்டியதும், ஒரு முறை கயிறு மீண்டும் மேல் நோக்கி உயர ஆரம்பித்தது. ஆனால் மீன் அப்படியொன்றும் உயரத்தில் இல்லாமல் நீந்திக் கொண்டிருந்தது. கிழவனின் இடது கையிலும் தோளிலும் முதுகிலும் வெயில் விழுந்து கொண்டிருந்தது. அதிலிருந்து மீன் வடகிழக்கு திசையை நோக்கித் திரும்பிவிட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டான்.

ஒரு முறை பார்த்து விட்டதால், மீன் நீரில் நீந்துவதை கற்பனை பண்ணிப் பார்ப்பதற்கு அவனால் முடிந்தது. நீல நிறத்தில் உள்ள காதுகளைச் சிறகுகளைப்போல விரியச் செய்து கொண்டும் நெடுங்குத்தாக எழுந்து நின்று கொண்டிருந்த பெரிய வாலால் இருட்டைக் கிழித்துக்கொண்டும் போய்க்கொண்டிருப்பதை அவன் கற்பனை பண்ணி பார்த்தான். “அந்த ஆழத்தில் அவனுக்கு எந்த அளவுக்கு பார்வை சக்தி இருக்கிறது என்பதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன்.” கிழவன் நினைத்தான்: “அவனுடைய கண்கள் மிகவும் பெரியனவாக இருக்கின்றன. அவனைவிட அளவில் சிறியனவாக இருக்கும் கண்களைக் கொண்ட குதிரையால் இருட்டில் பார்க்க முடியும். முன்பு இருட்டில் என்னால் மிகவும் அருமையாக பார்க்க முடிந்தது. முழுமையான இருட்டில் அல்ல. கிட்டத்தட்ட ஒரு பூனை பார்க்க முடிந்த அளவில்...”

வெயிலும் விரல்களின் தொடர்ந்த அசைவுகளும் இடது கையின் மரத்துப்போன தன்மையை இப்போது முழுமையாக இல்லாமற் செய்துவிட்டிருந்தன. வேலையின் பெரும் பகுதியை இடது கைக்கு அவன் மாற்ற ஆரம்பித்தான். கயிறை இழுப்பதன் மூலம் உண்டான வேதனைகளை குறைப்பதற்கு முதுகின் சதையைக் குலுக்கி அசைத்தான்.

“மீனே, நீ மிகவும் களைத்துப் போகாமல் இருந்தால்...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “நீ நிச்சயம் ஆச்சரியப்பட வேண்டியவனே...”

அவனுக்கு தான் மிகவும் களைத்துப் போய் இருப்பதைப்போல தோன்றியது. வெகு சீக்கிரமாக இரவு வந்துவிடும். அவன் மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். பெரிய லீக்குகளைப் பற்றி கிழவன் சிந்தித்தான். “க்ரான் லிகாஸை”ப் பற்றி சிந்தித்தான். நியூயார்க்கின் யாங்கிகளும் டிட்ரோய்ட்டின் டைகர்ஸும் ஒருவரோடொருவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும்.

“இது இரண்டாவது நாளாக ஆன பிறகும், “ஜ்யுகாஸி”ன் முடிவு என்ன என்று எனக்குத் தெரியவில்லை.” அவன் நினைத்தான். “ஆனால், எனக்கு தன்னம்பிக்கை கட்டாயம் இருக்க வேண்டும். காலின் பாதப் பகுதியில் எலும்பு பாதிப்பால் வேதனை உண்டாகி விட்டிருந்தபோதுகூட, எல்லா விஷயங்களையும் எந்தவித குறைபாடும் இல்லாமல் செய்து கொண்டிருக்கும் மிகப் பெரிய வீரரான டிமாக்கியோவைவிட திறமைசாலியான மனிதனாக நான் ஆக வேண்டும். எலும்பால் உண்டாகும் பாதிப்பு என்றால் என்ன?”

அவன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்: “அன் எஸ்ப்யூலா டே ந்யூஸோ... அது எங்களுக்கு உண்டானது. போர் புரியும் கோழிகளின் கால்களில் கட்டப்பட்டிருக்கும் கூர்மையான கருவியைவிட எலும்பு பாதிப்பால் மனிதனின் கால் பாதம் தரும் வேதனை அதிகமாக இருக்குமோ? அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதேமாதிரி ஒரு கண்ணோ இரண்டு கண்களோகூட போய்விட்டாலும், போர் புரிதலைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்க் கோழியைப்போல ஆவதற்கு என்னால் முடியாது. பெரிய பறவைகள், காட்டு மிருகங்கள் ஆகியவற்றின் அருகே மனிதர்கள் செல்வதில்லை. எனினும், கடலின் ஆழத்தில் இருட்டில் இருக்கும் உயிரினங்களாக ஆவதில்தான் எனக்கு அதிக விருப்பம்.”

“சுறா மீன்கள் வரவில்லையென்றால்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “சுறா மீன்கள் வருவதாக இருந்தால், அவன்மீதும் என் மீதும் தெய்வம் கருணை காட்டட்டும்.”

“இந்த மீனுடன் நான் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நேரம் அளவுக்கு டிமாகியோவால் நின்று கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” அவன் நினைத்தான்: “அவரால் முடியும். என்னைவிட இயலும் என்றுதான் உறுதியாக நம்புகிறேன். காரணம் அவர் இளைஞன், நல்ல பலசாலி. அது மட்டுமல்ல- அவருடைய தந்தை மீனவனாக இருந்தவர். ஆனால் பாதத்தின் எலும்பு தரும் வேதனை மிகுந்த வலியைத் தருமோ?”


“எனக்குத் தெரியாது.” அவன் உரத்த குரலில் கூறினான்: “எனக்கு எந்தச் சமயத்திலும் அது வேதனையைத் தராது.”

சூரியன் மறைந்தபோது, மேலும் தன்னம்பிக்கை கிடைப்பதற்காக கிழவன் கசான்ப்ளாங்காவில் உள்ள சத்திரத்தில் நடைபெற்ற கடந்த கால சம்பவங்களை நினைத்துப் பார்த்தான். கப்பல் தளத்திலேயே மிகவும் பலசாலியான ஸீயென் ஃப்யூகோவிலிருந்து வரும் கறுப்பின மனிதனுடன் அவன் கையைப் பிடித்து பலத்தைக் காட்டுவான். மேஜையில் சாக் பீஸால் வரையப்பட்டிருக்கும் கோடில் முழங்கைகளை ஊன்றி, அவர்கள் ஒரு பகலையும் ஒரு இரவையும் செலவழித்தார்கள். கைகள் நெடுங்குத்தாக நின்றிருந்தன. கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவனும் இன்னொருவனின் கையை மேஜைமீது தாழ்த்துவதற்கு பலத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தாராளமாக அதை வைத்து “பெட்” கட்டவும் செய்தனர். மண்ணெண்ணெய் விளக்குகளின் வெளிச்சத்தில் மனிதர்கள் தொடர்ந்து அறைக்குள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தனர்.

கிழவன் தன் கையையும் நீக்ரோவின் கையையும் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். முதல் எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு மணி நேரம் இடைவெளி விட்டு நடுவர்களை மாற்றிக் கொண்டிருந்ததால், நடுவர்களால் தூங்க முடிந்தது. அவனுடைய மற்றும் நீக்ரோவின் கைவிரல்களின் நகங்களிலிருந்த ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் கண்களையும் கைகளையும் கைத் தண்டுகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார்கள். பணம் கட்டி பந்தயம் வைத்தவர்கள் அறைக்குள் வந்து கொண்டும் போய்க் கொண்டும், உயரமான நாற்காலிகளில் அவருடன் சேர்ந்து உட்கார்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். பலகையாலான சுவர்களில் அடர்த்தியான நீலநிற சாயம் அடிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் விளக்குகள் நிழல்களை விழச் செய்து கொண்டிருந்தன. நீக்ரோவின் பயங்கரமான நிழல், விளக்கில் காற்று வீசியபோது, சுவரில் ஆடிக் கொண்டிருந்தது.

இரவு முழுவதும் பந்தயத் தொகை அதிகரித்துக் கொண்டும் குறைந்து கொண்டும் இருந்தது. பந்தயம் நடத்தியவர்கள் நீக்ரோவிற்கு குடிப்பதற்கு “ரம்” அளித்து, சிகரெட்டைப் பற்ற வைத்து தந்தனர். “ரம்”மைப் பருகி விட்டு நீக்ரோ மிகவும் கம்பீரமாக ஒரு முயற்சியைச் செய்தான். ஒருமுறை கிழவன் அன்று கிழவனாக இல்லாமலிருந்த சான்டியாகோ எல் சாம்பியன் சிரமப்பட்டு மூன்று அங்குலங்கள் கீழே போய் விட்டான். ஆனால், கிழவன் தன் கையை உயர்த்தி மீண்டும் சம நிலையை நிலவவிட்டான். மிகப் பெரிய விளையாட்டு வீரனும் நல்ல மனிதனுமான நீக்ரோவைத் தோல்வியடையச் செய்ய முடியும் என்று அந்த நிமிடமே அவனுடைய மனதில் உறுதி உண்டானது. பொழுது விடியும் நேரத்தில், பந்தயம் நடத்தியவர்கள் போட்டி சமநிலையை அடைந்து இருப்பதாக அறிவிக்கக் கூடாதா என்று கேட்க, நடுவர்கள் “முடியாது” என்று தலையை ஆட்டிக் கொண்டிருக்க, கிழவன் முழு சக்தியையும் பயன்படுத்தி நீக்ரோவின் கையை கிழே இறங்கும்படி செய்தான். மேஜை மீது போய் படும் வரை இறக்கினான். ஞாயிற்றுக் கிழமை காலையில் ஆரம்பித்த போட்டி திங்கட்கிழமை காலையில் முடிவுக்கு வந்தது. பணம் கட்டியவர்களில் பலரும் போட்டி சமநிலையை அடைந்து விட்டதாக அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்கள் பணிக்குச் செல்ல வேண்டியதிருந்தது. கப்பல் துறைமுகத்தில் சர்க்கரை நிறைந்த மூட்டைகளை அடுக்குவது, ஹவானா நிலக்கரி நிறுவனத்திற்குச் செல்வது... இப்படி பலவித பணிகள். இல்லாவிட்டால் போட்டி அதன் போக்கில் முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து நடைபெறட்டும் என்றுதான் அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எது எப்படி இருந்தாலும், பணிக்குச் செல்ல வேண்டியவர்கள் புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்பே அவன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்திருந்தான்.

அந்த போட்டிக்குப் பிறகு நீண்ட காலம் அவனை எல்லாரும் “சேம்பியன்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். வசந்த காலத்தில் இன்னொரு போட்டி நடைபெற்றது. ஆனால், அதிகமாக பணம் பந்தயம் வைக்கப்படவில்லை. முதல் போட்டியிலேயே ஸீயென் ஃப்யூகோவிலிருந்து வந்திருந்த நீக்ரோவின் தன்னம்பிக்கையை அவன் தகர்த்தெறிந்துவிட்டிருந்ததால், மிகவும் எளிதில் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டான். அதற்குப் பிறகு மேலும் பல போட்டிகளில் பங்கு பெற்றான். அதற்குப் பிறகு, எதுவும் இல்லை. தேவைப்பட்டால் தன்னால் யாரையும் தோல்வியடையச் செய்ய முடியும் என்று அவனுக்குள் உறுதியான தீர்மானம் இருந்தது. மீன் பிடிக்கக் கூடிய வலது கையால் விளையாடுவது இல்லை என்று அவன் முடிவு செய்து வைத்திருந்தான். அதனால் இடது கையால் சில போட்டிகளில் விளையாடிப் பார்த்தான். ஆனால், இடது கை எப்போதும் அவனை ஏமாற்றிக் கொண்டிருந்தது. அவன் மனதில் நினைத்ததைப்போல அந்த கை செயல்படவில்லை. அவன் அதன்மீது நம்பிக்கை வைக்கவும் இல்லை.

“இடது கையை வெயிலில் சூடு பண்ணி விட்டிருக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “இரவில் மிகுந்த குளிர் இருந்தால் மட்டுமே, கையில் மரத்துப் போகக் கூடிய நிலைமை உண்டாகும். இன்று இரவு என்ன நடக்கப் போகிறதோ?”

மியாமிக்கு செல்லக்கூடிய ஒரு விமானம் அவனுடைய தலைக்கு மேலே பறந்து போய்க் கொண்டிருந்தது. விமானத்தின் நிழல் பறக்கும் மீன்களின் கூட்டத்தை பயப்பட செய்ததை கிழவன் கவனித்தான்.

“இந்த அளவுக்கு பறக்கும் மீன்கள் இருந்தால், அங்கு டால்ஃபின் இருக்கு.” கிழவன் சொன்னான். தொடர்ந்து கயிறைப் பிடித்தவாறு, பின்நோக்கி சாய்ந்து கொண்டு, அவற்றில் ஒன்றைப் பிடிக்க இயலுமா என்று பார்த்தான். ஆனால், கயிறு மிகவும் முறுகிப் போய் இருந்ததால், அவனால் அதைப் பிடிக்க முடியவில்லை. கயிறு அறுபடப் போவதற்கு அறிகுறி என்பதைப்போல நீர்த் துளிகள் தெறித்து விழுந்து கொண்டிருந்தன. படகு மெதுவாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கண்களிலிருந்து மறையும் வரை கிழவன் விமானத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“விமானத்தில் பயணம் செய்வது வினோதமான அனுபவமாக இருக்கும்.” அவன் நினைத்தான்.

“அந்த அளவுக்கு உயரத்திலிருந்து பார்க்கும்போது, கடல் எப்படி இருக்கும்? அதிகமான உயரத்தில் பறக்கவில்லையென்றால், மீன்களை மிகவும் நன்றாக பார்ப்பதற்கு அவர்களால் முடியும். இருநூறு ஆட்கள் உயரத்தில் மிகவும் மெதுவாகப் பறந்து, மேலே இருந்து மீன்களைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆமைகளைப் பிடிப்பதற்காகச் செல்லும் படகுகளில் செல்லும்போது பாய்மரத்திற்கு மேலே கட்டப்பட்டிருக்கும் மரத் தடியில்தான் நான் எப்போதும் உட்கார்ந்திருப்பேன். அந்த உயரத்திலிருந்துகூட நான் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்திருக்கிறேன். அங்கிருந்து பார்க்கும்போது டால்ஃபின் பச்சை நிறத்தில் இருக்கும். அவற்றின்மீது இருக்கும் கோடுகளையும் நீல நிறத்தைக் கொண்ட புள்ளிகளையும் பார்க்கலாம்.


இருண்ட நீர்ப்பரப்பில் மிகவும் வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களுக்கு நீல நிறத்தைக் கொண்ட முதுகுகளும் சாதாரணமாகவே நீலநிறக் கோடுகளும் புள்ளிகளும் இருப்பதற்குக் காரணம் என்ன? டால்ஃபின் பச்சை நிறத்தில் இருப்பதைப்போல தோன்றுவதென்னவோ உண்மைதான். உண்மையாகக் கூறப்போனால், அவனுக்கு பொன் நிறம். நன்றாகப் பசி எடுத்து உணவைத் தேடும்போது மார்லின் மீனின் உடலில் இருப்பதைப்போல அவனுடைய உடலிலும் நீல நிறக் கோடுகளைப் பார்க்கலாம். கோபமோ அல்லது மிகுந்த வேகமோ... இவற்றில் எது கோடுகளை உடலின்மீது கொண்டு வருகிறது?”

இருட்டுவதற்கு சற்று முன்பு நடைபெற்றது அது. சர்காஸோ பாசிகள் நிறைந்த பெரிய ஒரு தீவுக்கு அருகில் அவன் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு மஞ்சள் நிற போர்வைக்குக் கீழே எதனுடனோ கடல் காம விளையாட்டுகளில் மூழ்கியிருப்பதைப்போல சர்காஸோ பாசிகள் மேலே உயர்வதும் இப்படியும் அப்படியுமாக ஆடுவதுமாக இருந்தன. அப்போது கிழவனின் சிறிய தூண்டிலில் ஒரு டால்ஃபின் சிக்கியது. காற்றில் குதித்து தாவியபோதுதான் அவன் அதை முதல் முறையாகப் பார்த்தான். டால்ஃபின் வளைந்து திரும்பி, பதைபதைப்புடன் சிறகுகளை அடித்துக் கொண்டிருந்தது. சூரிய அஸ்தமனத்தின் இறுதி ஒளிக் கதிர்கள் பட்டு அது முழுமையான பொன் நிறத்தில் காணப்பட்டது. பதைபதைப்பின் காரணமாக ஒரு விளையாட்டு வீரனைப்போல அது மீண்டும் மீண்டும் தாவிக் கொண்டே இருந்தது. கிழவன் படகின் பின்பகுதிக்குச் சென்று, குனிந்து வலது கையால் பெரிய தூண்டில் கயிறை இழுத்துப் பிடித்தான். தொடர்ந்து காலணிகள் அணியாத இடது பாதத்தை, இழுத்துக் கட்டப்பட்ட கயிறில் ஒவ்வொரு முறையும் மிதித்து, இடது கையால் டால்ஃபினை படகுக்குள் இழுத்துக்கொண்டு வந்தான். படகின் பின்பகுதியில் அவன் கலக்கமடைந்து இரு பக்கங்களிலும் குதித்துக் கொண்டும் வாலால் அடித்துக் கொண்டும் இருந்தான். கிழவன் குனிந்து, நீல நிறப் புள்ளிகளைக் கொண்டு மின்னிக் கொண்டிருந்த அந்த பொன் நிற மீனை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அதன் தாடை எலும்புகள் தூண்டிலின் கொக்கியில், துடிப்பதைப்போல படுவேகமாக கடித்துக் கொண்டிருந்தன. நீளமும் அகலமும் உள்ள உடலையும் வாலையும் தலையையும் அது படகின் அடித்தளத்தில் அடித்துக் கொண்டிருந்தது. கிழவன் மீனின் பொன் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த தலையில் அடித்தவுடன், அது அடங்கி அசைவே இல்லாமல் ஆனது.

கிழவன் டால்ஃபினை தூண்டிலில் இருந்து பிரித்தெடுத்தான். தொடர்ந்து ஒரு மத்தி மீனைக் கோர்த்து தூண்டிலை கடலுக்குள் எறிந்தான். பிறகு உட்காரக் கூடிய பலகைக்கு மெதுவாகத் திரும்பி வந்து இடது கையைக் கழுவினான். நீரைக் காற்சட்டையில் துடைத்தான். பிறகு... கனமான கயிறை வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றி வலது கைகயை கடல் நீரில் கழுவினான். அப்போது சூரியன் கடலில் மறைவதையும் பெரிய கயிறு சாய்ந்து கொண்டிருப்பதையும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவனுடைய பயணிக்கும் திசை சிறிதும் மாறவில்லை.” கிழவன் சொன்னான். கையை நீரில் மூழ்க வைத்து, நீரின் அசைவைப் பார்த்துக் கொண்டே வேகத்தைச் சீராகவும் சிறிது குறைவாகவும் ஆக்கினான்.

“இரண்டு துடுப்புகளையும் பாய் மரத்திற்குக் குறுக்காக நான் இணைத்து வைப்பேன். இரவு வேளையில் அது அவனுடைய வேகத்தைக் குறைக்கும்.” கிழவன் சொன்னான்: “இரவில்தான் அவனுடைய சாமர்த்தியம். நானும் அப்படித்தான்...”

“மாமிசத்தில் ரத்தம் வெளியே வராமல் இருக்க டால்ஃபினை இன்னும் சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்வது நல்லது.” அவன் நினைத்தான்: “அதை கொஞ்ச நேரம் கழித்து செய்வோம். அதே நேரத்தில் படகுக்கு பின்னாலிருந்து தள்ளுதல் கிடைப்பதற்காக, துடுப்புகளை ஒன்றாகக் கட்டி வைக்கலாம். சூரியன் மறையும் நேரத்தில், மீனை மிகவும் தொல்லைக்கு ஆளாக்காமல் அமைதியாக இருக்கச் செய்வதுதான் நல்லது. சூரியனின் அஸ்தமனம் எல்லா மீன்களுக்கும் பிரச்சினைகளை உண்டாக்கக் கூடிய நேரம் என்பதே உண்மை.”

கிழவன் கையை காற்றில் காய வைத்துவிட்டு, கயிறைப் பிடித்தான். பிறகு, முடிந்தவரை உட்காரும் பலகையை விட்டு விலகி நின்று ஓய்வெடுத்தான். இப்போது அவன் அளவுக்கோ அல்லது அவனைவிட அதிகமாகவோ படகு சிரமப்பட்டு பயணித்துக் கொண்டிருந்தது.

“அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன்.” கிழவன் நினைத்தான்: “குறிப்பாக தூண்டிலில் சிக்கிய பிறகு மீனுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அளவில் பெரியவனாக இருக்கும் அவனுக்கு நிறைய உணவு தேவைப்படுகிறது. முழு மீன் துண்டுகûயும் நான் சாப்பிட்டு தீர்த்துவிட்டேன். நாளைக்கு டால்ஃபினையும் சாப்பிட்டு விடுவேன். “டொராடோ” என்று பொதுவாக அதைக் குறிப்பிடுவார்கள். பாதுகாத்து வைப்பதற்காக உள் பகுதியைச் சுத்தம் செய்யும்போது, அதிலிருந்து கொஞ்சத்தை நான் சாப்பிடலாம். முதலில் சாப்பிட்ட மீனைவிட டால்ஃபினின் மாமிசம் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் எதுவுமே எளிதானது இல்லை.”

“இப்போது எப்படி இருக்கிறது, மீனே?” அவன் தன் குரலை உயர்த்திக் கேட்டான்: “எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது. இடது கை சரியாகிவிட்டது. ஒரு இரவுக்கும் பகலுக்கும் தேவைப்படும் உணவு என்னிடம் இருக்கிறது. மீனே, படகை இழு...”

உண்மையாகக் கூறுவதாக இருந்தால், அவனுக்கு மனதில் நிம்மதி இல்லை. முதுகில் கயிறு இழுக்கப்படுவதால் உண்டான வேதனை படிப்படியாக இல்லாமல் போய் விட்டிருந்தது. அவனே நம்ப முடியாத அளவுக்கு ஒரு வகையான மரத்துப் போன நிலையை அவன் அடைந்து விட்டிருந்தான். “ஆனால், இதைவிட மோசமான விஷயங்களும் எனக்கு உண்டாகி விட்டிருக்கின்றன. என் கை சிறிய அளவில்தான் காயம்பட்டி ருக்கிறது. இன்னொரு கையில் இருந்த மரத்துப்போன தன்மை இல்லாமற் போய் விட்டது. கால்களுக்கும் பிரச்சினையில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்திலும் நான் அவனைவிட மேம்பட்டவனாக இருக்கிறேன்.” கிழவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

இருட்டாகி விட்டிருந்தது. செப்டம்பரில் சூரியன் மறைந்துவிட்டால், உடனடியாக இருட்டாகிவிடும். தளத்தின் பழைய பலகையில் படுத்து முடிந்த வரையில் அவன் ஓய்வெடுத்தான். முதலில் தோன்றக் கூடிய நட்சத்திரங்கள் உதித்து விட்டிருந்தன. “ரிகேல்” என்ற பெயர் கிழவனுக்குத் தெரியாமல் போயிருந்தாலும், அவன் அதைப் பார்த்தான். அவை உதித்து வெளியே வரும் என்பதையும் தாமதிக்காமல் அவன் தெரிந்து வைத்திருந்தான். இனி தூரத்திலிருக்கும் தன்னுடைய எல்லா நண்பர்களும் தன்னுடன் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.


“மீன் என்னுடைய நண்பனும்கூட...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “இப்படிப்பட்ட ஒரு மீனை நான் எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், நான் அவனைக் கொன்றே ஆக வேண்டும். நமக்கு நட்சத்திரங்களைக் கொல்ல வேண்டிய சூழ்நிலை வருவதில்லையே என்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.”

“ஒவ்வொரு நாளும் மனிதன் நிலவைக் கொல்வதற்கு முயற்சி செய்தே ஆக வேண்டும் என்பதைப் பற்றி சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள். நிலவு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிச் செல்லும். ஆனால், சூரியனை தினமும் கொல்வதற்கு முயற்சிக்க வேண்டியதில்லையே! நாம் அதிர்ஷ்டசாலியாகத்தான் பிறந்திருக்கிறோம்.” கிழவன் சிந்தித்தான்.

சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காமற் போன அந்த பெரிய மீன் மீது அவனுக்கு இரக்கம் தோன்றியது. ஆனால், அவனைக் கொல்ல வேண்டும் என்ற திடமான முடிவுக்கு இரக்கம், மாறுதல் எதையும் உண்டாக்கவில்லை. “அவன் எத்தனை மனிதர்களுக்கு இரையாக இருப்பான்?” அவன் சிந்தித்தான்: “இவனைச் சாப்பிடக்கூடிய அளவுக்கு தகுதி கொண்டவர்களா அவர்கள்? உண்மையாகவே இல்லை. இவனுடைய நடவடிக்கைகளையும் மதிக்கக் கூடிய நிலையையும் வைத்துப் பார்க்கும்போது, இவனைச் சாப்பிடக் கூடிய தகுதி படைத்தவர்களாக யாருமில்லை.”

“இப்படிப்பட்ட விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை.” அவன் சிந்தித்தான்: “ஆனால், சூரியனையோ நிலவையோ நட்சத்திரங்களையோ நாம் கொல்வதற்கு முயற்சிக்க வேண்டியதில்லை என்ற விஷயம் நல்லதுதான். கடலில் வாழும் நம்முடைய உண்மையான சகோதரர்களைக் கொல்வதே போதும்.”

“இனி தூண்டிலை இழுத்து உயர்த்துவதைப் பற்றி சிந்திக்க வேண்டியதிருக்கிறது.” கிழவன் நினைத்தான்: “அதற்கு அதற்கே உரிய கெட்ட விஷயங்களும் இருக்கின்றன; நல்ல விஷயங்களும் இருக்கின்றன. அவன் பலமாக இழுக்கிறானென்றால், எனக்கு மிகவும் அதிகமான கயிறு நஷ்டமாகும். அவனையும் இழக்க வேண்டியதிருக்கும். துடுப்புகளைக் கொண்டு படகைச் செலுத்துவது பழைய நிலையிலேயே இருந்தது. இறுதியில் படகின் எடை குறையும். படகின் எடை குறைவது எங்கள் இருவரின் சிரமங்களையும் அதிகரித்துக் கொண்டு போகும். ஆனால், அவன் இதுவரையில் சிறிதும் உபயோகப்படுத்தாத மிகுந்த வேகம்தான் என்னுடைய பாதுகாப்பு. எது வந்தாலும் பிரச்சினையில்லை. குடலையும் உடலின் மற்ற பகுதிகளையும் எடுத்து விட்டு, டால்ஃபினைச் சுத்தம் செய்ய வேண்டும். அப்படியென்றால் அவன் அழுக மாட்டான். உடலில் தெம்பு உண்டாவதற்கு அவனுடைய மாமிசத்தைக் கொஞ்சம் சாப்பிட வேண்டும்.

இன்னும் ஒரு மணி நேரம் நான் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். அவனுடைய உறுதியான குணத்தையும் நிலையான போக்கையும் புரிந்து கொண்டு விட்டதால், பாய் மரத்திற்குத் திரும்பிச் சென்று வேலை செய்யவும் தீர்மானம் எடுக்கவும் செய்யலாம். இதற்கிடையில் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவன் ஏதாவது மாறுதல்களை வெளிப்படுத்துகிறானா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். சீரான முறையில் துடுப்பைப் போடுவது நல்ல ஒரு தந்திரச் செயல். ஆனால், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு செயல்பட நேரம் நெருங்கி விட்டிருக்கிறது. அவன் இப்போதும் மீனின் பலத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறான். தூண்டிலின் கொக்கி அவனுடைய வாயின் ஒரு மூலையில் இருக்கிறது என்பதையும், வாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். ஒரு வகையில் பார்க்கப் போனால், தூண்டிலின் கொக்கி மூலம் உண்டாகக் கூடிய தண்டனை பெரிதே அல்ல. பசியால் உண்டாகக் கூடிய துன்பமும் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஏதோ ஒன்றுடன் போராடிக் கொண்டிருப்பது என்ற விஷயமும்தான் அவனைப் பொறுத்த வரையில் எல்லாமே. இனி ஓய்வெடு கிழவா... உன் அடுத்த வேலை ஆரம்பிக்கும் வரை அவனை அவனுடைய போக்கிலேயே விடு!”

இரண்டு மணி நேரம்தான் ஓய்வெடுத்ததாக அவன் நினைத்தான். இரவு நீண்ட நேரமான பிறகும் நிலவு உதிக்கவில்லை. நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது. உண்மையாகக் கூறப்போனால், அவன் எடுத்தது ஓய்வே இல்லை. முதுகில் மீன் இழுத்துக் கொண்டிருப்பது அப்போதும் நடந்து கொண்டிருந்தது. அமர்ந்திருந்த பலகையின் அருகில் இடது கையை வைத்து மீனுக்கும் படகுக்கும் பிரச்சினை இல்லாத அளவில் வெறுமனே நின்று கொண்டிருந்தான்.

“கயிறை இழுத்து நிறுத்த முடிந்திருந்தால், காரியங்கள் எந்த அளவுக்கு எளிதாக இருந்திருக்கும்!” கிழவன் நினைத்தான். “ஆனால், சிறிய ஒரு துடித்தலில் அவன் அதை அறுத்து விடுவான். கயிறின் இழுப்பை நான் உடலால் தாங்கித்தான் ஆக வேண்டும். இரண்டு கைகளாலும் கயிறை கீழே இறக்கி விடுவதற்கு நான் கட்டாயம் இருந்தாக வேண்டும்.”

“இவ்வளவு நடந்த பிறகும் நீ தூங்கவே இல்லையே, கிழவா.” அவன் உரத்த குரலில் சொன்னான்: “நீ உறங்கி ஒரு பாதி பகலும் ஒரு இரவும் இப்போது இதோ இன்னொரு பகலும் கடந்து விட்டிருக்கின்றன. அவன் அமைதியாக முன்பைப்போலவே திசை மாறாமல் நீந்திக் கொண்டிருந்தால், நீ தூங்குவதற்கு ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். தூங்கவில்லையென்றால் தலையில் தெளிவே இல்லாமல் போய்விடும்.”

“என் தலை நல்ல தெளிவுடன்தான் இருக்கிறது.” கிழவன் நினைத்தான்: “தேவைக்கும் அதிகமான தெளிவுடன் இருக்கிறது. என் சகோதரர்களான நட்சத்திரங்களின் அளவுக்கு நான் தெளிவுடன் இருக்கிறேன். எனினும் தூங்கியாக வேண்டும். நட்சத்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. சந்திரனும் சூரியனும் தூங்கிக் கொண்டிருக்கின்றன. கடல்கூட உறங்கிக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சில குறிப்பிட்ட நாட்களில்தான் கடல் உறங்குகிறது- நீரோட்டம் இல்லாமல் இருக்கும்போதும் பரவலான அமைதி நிலவிக் கொண்டிருக்கும்போதும்.

“ஆனால், தூங்க வேண்டிய விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.” அவன் நினைத்தான்: “அதை நீயேதான் செயல்படுத்த வேண்டும். பிறகு கயிறுகளின் விஷயத்தில் எளிதாகவும் உறுதியாகவும் இருக்கக்கூடிய ஏதாவது வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இனி டால்ஃபினை சாப்பிடுவதற்கு தயார் பண்ண வேண்டும். தூங்கியே ஆக வேண்டுமென்றால் துடுப்புகளை இணைத்து வைப்பது மிகவும் ஆபத்தான விஷயம்.”

“என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்காமல் இருக்க முடியும்.” கிழவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான். ஆனால், அது மிகுந்த ஆபத்து நிறைந்த விஷயம்.

மீனுக்கு எந்தவிதமான அசைவும் உண்டாகாத விதத்தில், மிகவும் எச்சரிக்கையுடன் கைகளையும் கால்களையும் ஊன்றி கிழவன் பாய் மரத்தை நோக்கி நடந்தான். “அவன் பாதி உறக்கத்தில் இருக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “ஆனால், ஓய்வெடுப்பதற்கு நான் அவனை அனுமதிக்கவில்லை. இறக்கும் வரை அவன் படகை இழுத்துக் கொண்டிருப்பான்.”


கிழவன் பாய் மரத்திற்குத் திரும்பி வந்தான். தொடர்ந்து திரும்பி, தோளில் இருந்த கயிறின் எடையை இடது கைக்கு மாற்றினான். வலது கையால் உறைக்குள்ளிருந்த கத்தியை உருவி எடுத்தான். இப்போது நட்சத்திரங்களுக்கு பிரகாசம் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவன் டால்ஃபினை தெளிவாகக் கண்டான். கத்தியின் வாய்ப் பகுதியை அவனுடைய தலைக்குள் நுழைத்து பாய் மரத்திற்குக் கீழேயிருந்து வெளியே எடுத்தான். மீனை மிதித்துப் பிடித்துக் கொண்டான். மல துவாரத்திலிருந்து கீழ்த்தாடையின் ஓரம் வரை மிகவும் வேகமாக கிழித்தான். பிறகு, கத்தியைக் கீழே வைத்து விட்டு வலது கையால் குடலையும் உடலின் பிற உறுப்புகளையும் பிடுங்கி வெளியே எடுத்தான். உணவுப் பை மிகவும் கனமாக இருந்தது. வழுவழுப்பாக இருந்தது. அவன் அதை கிழித்துத் திறந்தான். உள்ளே இரண்டு பறக்கும் மீன்கள் இருந்தன. அவை மிகவும் புதியனவாகவும் கடினமானவையுமாக இருந்தன. மீன்களை அருகருகில் வைத்துவிட்டு, குடலையும் செவிகளையும் கடலுக்குள் வீசி எறிந்தான். நீர்ப் பரப்பில் ஒளி நிறைந்த ஒரு கோட்டைப் போட்டவாறு, அவை கிழே இறங்கிச் சென்றன. டால்ஃபின் குளிர்ந்து உறைந்து போய் காணப்பட்டது. நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் அது சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிறத்தில் இருந்தது. வலது காலை மீனின் தலையில் வைத்து அழுத்தி, கிழவன் அதன் ஒரு பகுதியின் தோலை உரித்தான். தொடர்ந்து அதை திருப்பிப் போட்டு, இன்னொரு பகுதியின் தோலை உரித்தான். தலையிலிருந்து கால் வரை இரண்டு பக்கங்களையும் கிழித்து அறுத்தான்.

கிழவன் தேவையற்ற உடலின் பகுதிகளை நீருக்குள் வீசி எறிந்தான். தொடர்ந்து நீரில் ஏதாவது சுழல் தெரிகிறதா என்று பார்த்தான். அவை கீழே இறங்கிச் செல்லும்போது உப்பு நீரில் உண்டாகக்கூடிய பிரகாசம் மட்டுமே தெரிந்தது. அவன் திரும்பி, இரண்டு பறக்கும் மீன்களையும் டால்ஃபினின் இரண்டு துண்டுகளுக்குள்ளே வைத்தான். கத்தியை எடுத்து உறைக்குள் போட்டு மீனை எடுத்துக்கொண்டு அவன் மெதுவாக பலகை இருந்த இடத்திற்குச் சென்றான். கயிறு இழுக்கப்பட்ட எடையின் காரணமாக கிழவனின் முதுகு வளைந்து போயிருந்தது. வலது கையில் மீனை அவன் பிடித்திருந்தான்.

பலகை இருக்குமிடத்திற்கு வந்து, மீனின் எலும்புகள் இல்லாத இரண்டு துண்டுகளை பலகையில் பறக்கும் மீன்களுக்கு அருகில் அவன் வைத்தான். கயிறின் முனைப் பகுதியை தோளில் இன்னொரு இடத்திற்கு மாற்றினான். இடது கையின் மேற்பகுதியில் தாங்கிக் கொண்டே அவன் அதை மீண்டும் பிடித்தான். தொடர்ந்து ஒரு பக்கமாக குனிந்து, பறக்கும் மீனை கடல் நீரில் கழுவினான். கையில் நீர் மோதும் வேகத்தை அவன் கவனித்தான். மீனின் தோலை உரித்ததன் காரணமாக கை பிரகாசமாக இருந்தது. நீரோட்டத்தின் சக்தி குறைந்து விட்டிருந்தது. கையின் ஓரத்தை படகின் பலகையில் துடைத்தபோது, பாஸ்ஃபரஸ் மிதந்து விலகி, படகின் பின்பகுதி வழியாக மெதுவாக கீழே இறங்கிச் சென்றது.

“அவன் தளர்ந்து போய்க் கொண்டிருக்கிறான். இல்லாவிட்டால் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.” கிழவன் சொன்னான்: “இனி இந்த டால்ஃபினைச் சாப்பிட்டு நான் கொஞ்சம் தெம்பு கொண்டவனாக ஆக வேண்டும். சிறிது ஓய்வு வேண்டும். கொஞ்சம் தூக்கமும்.”

நட்சத்திரங்களுக்குக் கீழே உட்கார்ந்து, இரவு முழுவதும் நிலவிக் கொண்டிருந்த குளிர்ச்சியில், டால்ஃபின் துண்டுகளில் ஒன்றின் பாதியை அவன் சாப்பிட்டான். தலை அறுத்து நீக்கப்பட்டு, உள்ளே சுத்தம் செய்யப்பட்ட ஒரு பறக்கும் மீனையும் சாப்பிட்டான்.

“சமையல் செய்து சாப்பிடுவதற்கு டால்ஃபின் மிகச் சிறந்த மீன்..” கிழவன் சொன்னான்: “பச்சையாக சாப்பிடுவது என்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. இப்போது உப்போ எலுமிச்சம் பழமோ இல்லை. அவை இல்லாமல் இனிமேல் எந்தச் சமயத்திலும் நான் மீன் பிடிப்பதற்கு படகில் வரவே மாட்டேன்.”

“அறிவு இருந்திருந்தால், பகல் நேரத்தில் நான் படகுக்குள் நீரைக் கொண்டு வந்திருப்பேன். அப்படியென்றால், அது உலர்ந்து காய்ந்து உப்பாக ஆகி விட்டிருக்கும்.” அவன் நினைத்தான். “ஆனால், பெரும்பாலும் சூரிய அஸ்தமனம் வரை என்னால் டால்ஃபினை தூண்டிலில் சிக்க வைக்க முடியவில்லை. எது எப்படி இருந்தாலும், அது சரியான முறையில் தயார் பண்ணிக் கொள்ளாதால் உண்டானது. எனினும், மீன் துண்டுகள் அனைத்தையும் நான் நன்கு மென்று விழுங்கியிருக்கிறேன். மனதைப் புரட்டிக் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை.”

வானம் கிழக்கு திசையில் உருண்டு திரண்டு காணப்பட்டது. அவனுக்கு நன்கு தெரிந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறைந்து கொண்டிருந்தன. மேகங்களின் ஆழமான ஒரு குகைக்குள் தான் நகர்ந்து கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. காற்று நின்று விட்டிருந்தது.

“மூன்றோ நான்கோ நாட்களுக்குப் பிறகு காலநிலை மோசமாகும்.” கிழவன் சொன்னான்: “ஆனால், இன்று இரவிலும் நாளையும் எந்தவித பிரச்சினையும் இருக்காது. மீன் அசையாமலும் அமைதியாகவும் இருக்குபோது, சற்று தூங்குவதற்கு முயற்சி செய். கிழவா.”

“வலது கையில் சுற்றியிருப்பது வரை காலம் வலது கையால்தான் அதைப் பிடித்திருக்கும்.” கிழவன் நினைத்தான்: “உறக்கத்தில் கயிறு நழுவிச் சென்றால், இடது கை என்னை கண் விழிக்கச் செய்துவிடும். வலது கையில் அந்த விஷயம் மிகவும் சிரமமானது.” ஆனால், துயரங்களுடன் அவன் பழகிப்போய் விட்டிருந்தான். இருபது நிமிடங்களோ அரை மணி நேரமோ மட்டும்தான் தூங்க முடியும். அப்படியென்றால்கூட அது நல்லதுதான். எடை முழுவதையும் வலது கைக்குக் கொண்டு வந்து, உடல் முழுவதையும் இழுத்துப் பிடித்து நிமிர்ந்து, முன்னோக்கி நீட்டிக் கொண்டு, கயிறுடன் அழுத்திக் கொண்டு, கிழவன் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கிழவன் கனவில் சிங்கங்களைப் பார்க்கவில்லை. எட்டோ பத்தோ மைல்கள் வரை பரவிக் கிடக்கும் காட்டுப் பன்றிகளின் ஒரு மிகப் பெரிய கூட்டத்தை கனவில் பார்த்தான். அது அவற்றின் உடலுறவு நேரமாக இருந்தது. இந்த நேரத்தில் கடல் பன்றிகள் காற்றில் உயர்ந்து குதித்துக் கொண்டிருக்கும். பிறகு தாங்கள் உண்டாக்கிய அதே இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லவும் செய்யும்.

அதற்குப் பிறகு தன் கிராமத்தில் மெத்தையில் படுத்திருப்பதைப் போல கிழவன் கனவு கண்டான். வடக்கு திசைக் காற்று பட்டு அவன் குளிர்ந்து போயிருந்தான். தலையணைக்கு பதிலாக வலது கையின் மீது தலையை வைத்திருந்தான். அதனால் கை மரத்துப் போய் விட்டிருந்தது.


அதற்குப் பிறகு கிழவன் நீண்டு நிமிர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற கடற்கரைகளைப் பற்றி கனவு காண ஆரம்பித்தான். இருட்டு விழ ஆரம்பித்தபோது, சிங்கங்களில் முதல் சிங்கம் அங்கு வந்திருப்பதை அவன் பார்த்தான். பிறகு மற்ற சிங்கங்களும் வந்தன. சாயங்கால கடல்காற்று நேரத்தில் கப்பல் நங்கூரமிட்டு நின்றிருக்கும் இடத்தில், படகில் இருந்த பலகையில் தாடையைத் தடவிக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். அதற்கும் அதிகமாக சிங்கங்கள் இருக்குமோ என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவன் காத்திருந்தான். அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

நிலவு உதித்து மேலே வந்து நீண்ட நேரமாகி விட்டிருந்தது. அதற்குப் பிறகும் அவன் உறங்கிக் கொண்டேயிருந்தான். மீன் தன்னுடைய பயணிக்கும் திசையை மாற்றாமல் ஒரே திசையில் நீந்திக் கொண்டிருந்தது. மேகங்களின் சுரங்கத்தின் வழியாக படகு முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வலது உள்ளங்கை முகத்தில் வந்து மோதவும், வலது கையின் வழியாக கயிறு நழுவிப் போய்க் கொண்டிருக்கவும் செய்தபோது கிழவன் கண் விழித்தான். இடது கையில் எந்தவொரு தொடுதல் உணர்ச்சியும் தெரியவில்லை. வலது கையால் இயலும் அளவுக்கு கயிறைக் கட்டுப்படுத்தினான். தூண்டில் கயிறு மிகவும் வேகமாக நழுவியது. இறுதியில் இடது கையாலும் கயிறைப் பிடித்து பின்னோக்கி நகர்ந்து நின்று கொண்டு இழுத்தான். கயிறு இறுக்கமாகி அவனுடைய முதுகும் இடது கையும் வலித்தன. எடை முழுவதையும் இடது கைக்குக் கொண்டு வந்ததன் காரணமாக, குறிப்பிட்டுக் கூறும் வகையில் காயம் உண்டானது. அவன் தூண்டில் கயிறுகள் சுருள்களாக இருப்பதை திரும்பிப் பார்த்தான். அவை இயல்பாக கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. திடீரென்று கடலில் மிகப் பெரிய சத்தத்தை உண்டாக்கிக் கொண்டு மீன் குதித்துத் தாவியது. தொடர்ந்து எடை அதிகம் கொண்ட ஏதோ விழும் சத்தமும் கேட்டது. மீன் மீண்டும் குதித்துத் தாவியது. படகு மிகவும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அதே நேரத்தில், கயிறு நழுவிப் போய்க் கொண்டிருந்தது. இறுக்கம் காரணமாக கயிறு அறுந்து விடக்கூடிய நிலையை எட்டி விட்டிருந்தது. கயிறு அறுந்து விடாத மாதிரி பிடித்து நிறுத்துவதற்கு கிழவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். முயற்சிக்கு மத்தியில் அவன் பலகையின்மீது தடுமாறி விழுந்தான். டால்ஃபினின் அறுத்தெடுத்த மாமிசத் துண்டில் முகம் மோதியது. அவனால் அசைய முடியவில்லை.

“இதற்குத்தான் நாம் காத்திருந்தோம்.” கிழவன் நினைத்தான்: “இனி நாம் அதை கவனித்துக் கொள்ளலாம்.”

“கயிறின் விலையை அவன் கொடுக்கட்டும்.” கிழவன் நினைத்தான்: “இதற்கான விலையை அவன் கொடுக்க வேண்டும்.”

மீனின் தாவலை கிழவனால் பார்க்க முடியவில்லை. கடலில் தாவும்போது உண்டாகக்கூடிய சத்தத்தையும் அது விழும்போது எழக்கூடிய நீரின் ஓசையையும் மட்டுமே அவன் கேட்டான். கயிறின் வேகம் கைகளில் காயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆனால், இது நடக்கும் என்று அவனுக்கு நன்கு தெரியும். அதனால் கையின் மரத்துப்போன பகுதிகளில் கயிறை ஒதுக்கி நிறுத்தவும் உள்ளங்கைக்கு நழுவிப் போகாமல் இருக்கவும் விரல்களில் காயம் உண்டாகாமல் இருக்கவும் கிழவன் முயற்சித்தான்.

“சிறுவன் இங்கே இருந்திருந்தால், அவன் கயிறின் சுருள்களை நனைத்துத் தந்திருப்பான்.” அவன் நினைத்தான். “ஆமாம்.. சிறுவன் இங்கே இருந்திருந்தால்... சிறுவன் இங்கே இருந்திருந்தால்...”

கயிறு விலகி வெளியே... வெளியே... வெளியே போய்க்கொண்டிருந்தது. ஆனால், இப்போது அதன் வேகம் குறைந்திருந்தது. கயிறின் ஒவ்வொரு அங்குலத்தின் பயனும் மீனுக்குக் கிடைக்கக் கூடிய விதத்தில் அவன் செயல்பட்டான். பலகையில் வைத்து முகம் சிதைக்கப்பட்ட மீன் துண்டிலிருந்து அவன் தலையை உயர்த்தினான். பிறகு முழங்கால் போட்டு மெதுவாக எழுந்தான். கிழவன் கயிறை நழுவ விட்டுக் கொண்டிருந்தான். ஆனால், முன்பைவிட மிகவும் மெதுவாக விட்டான். கயிறின் சுருள்களை அவனால் பார்க்க முடியவில்லையென்றாலும், பாதத்தை வைத்து தெரிந்து கொண்டு பணியைத் தொடர்ந்தான். கயிறு இப்போதும் தாராளமாக இருந்தது. இப்போது புதிதாக அனுப்பிவிட்ட முழு கயிறின் எடையை நீரில் இருக்கும் மீன் தாங்கிக் கொள்ள வேண்டியதிருந்தது.

“ஆமாம்...” கிழவன் நினைத்தான்: “மீன் ஒரு டஜன் முறைக்கும் அதிகமாக குதித்துத் தாவி விட்டது. அவனுடைய முதுகில் உள்ள பைகளில் காற்று நிறைந்திருக்கிறது. இனி இறப்பதற்காக அவனால் ஆழத்திற்குச் செல்ல முடியாது. அங்கேயிருந்து அவனை மேலே கொண்டு வருவதற்கு என்னாலும் முடியவில்லை. அவன் உடனே வட்டமடிக்க ஆரம்பித்து விடுவான். தொடர்ந்து அவனைப் பிடிக்க வேண்டும் என்ற என்னுடைய முயற்சியும் நடந்து கொண்டிருக்கும். இப்படி திடீரென்று குதித்துத் தாவுவதற்கு அவனைத் தூண்டிவிட்டது என்னவாக இருக்கும் என்பதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவனை சாகசம் பண்ண வைத்தது பசியாக இருக்குமோ! இரவில் அவனை வேறெதுவும் பயப்படச் செய்திருக்குமோ? நினைத்துப் பார்த்திருக்காத பயம் தோன்றியிருக்கலாம். ஆனால் அவன் மிகவும் அமைதியான, தைரியசாலியான மீனாயிற்றே! அளவுக்கு அதிகமான துணிச்சல் மிக்கவனாகவும் தன்னம்பிக்கை கொண்டவனாகவும் தெரிகிறான். அப்படிப் பார்க்கும்போது இது வினோதமாகத்தான் இருக்கிறது.”

“கிழவா, நீதான் அதிகமான தைரியசாலியாகவும் தன்னம்பிக்கை கொண்டவனாகவும் இருக்க வேண்டியவன்.” அவன் சொன்னான்: “நீ அவனை மீண்டும் பிடிக்கிறாய். ஆனால், கயிறை திருப்பி எடுக்க முடியவில்லை. ஆனால், வெகு சீக்கிரமே அவன் வட்டமடிக்க வேண்டியதிருக்கும்.”

கிழவன் மீனை கயிறில் இடது கையாலும் தோளாலும் பிடித்தான். பிறகு, குனிந்து வலது கையால் நீரை அள்ளித் தெளித்து முகத்தில் ஒட்டியிருந்த டால்ஃபினின் மாமிசப் பகுதிகளைக் கழுவினான். அது மனதைப் புரட்டிப்போடும் என்றும், வாந்தி எடுக்கச் செய்து தன்னுடைய தைரியத்தை இல்லாமற் செய்துவிடும் என்றும் அவன் பயப்பட்டான். முகம் சுத்தமானதும், வலது கையைக் கழுவினான். கையை உப்பு நீரிலேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் சூரிய உதயத்திற்கு முந்தைய முதல் ஒளிக் கீற்றுகள் மலர்வதை அவன் பார்த்தான். கிட்டத்தட்ட கிழக்கு திசையை நோக்கித்தான் படகு நகர்ந்து கொண்டிருந்தது. அவன் நினைத்தான்: “அதற்கு அர்த்தம், அவன் தளர்ந்து போய் விட்டான் என்பதும் நீரோட்டத்தின் போக்கிற்கு ஏற்றபடி போய்க் கொண்டிருக்கிறான் என்பதும்தான். உடனே அவன் வட்டமடிக்க வேண்டியதிருக்கும். அப்போதுதான் நம்முடைய உண்மையான வேலை ஆரம்பமாகிறது.”

வலது கை உப்பு நீரில் தேவைப்படும் நேரம் அளவுக்கு இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தவுடன், கையை இழுத்து, அதைப் பார்த்துக் கொண்டே அவன் சொன்னான்: “பிரச்சினையில்லை. மனிதனுக்கு வேதனை என்பது அந்த அளவுக்கு பெரிய பிரச்சினையொன்றுமில்லை.”


புதிதாக ஏற்பட்ட காயங்களில் படாத மாதிரி பார்த்துக் கொண்டு கிழவன் மிகுந்த எச்சரிக்கையுடன் கயிறைப் பிடித்து இறுக்கினான். படகின் இன்னொரு பக்கத்தில் இடது கையை வைக்கக் கூடிய விதத்தில் அவன் உடலின் எடையை அந்தப் பக்கமாக சாய்த்தான்.

“ஏதாவது காரணமில்லாமல் நீ அந்த அளவுக்கு மோசமாக நடந்திருக்க மாட்டாய்.” அவன் இடது கையிடம் கூறினான். “ஆனால், உன்னை இந்த அளவுக்கு கிடைக்காத நேரமும் இருந்தது.”

“நான் ஏன் நல்ல கைகளுடன் பிறக்கவில்லை?” அவன் சிந்தித்தான். “அவற்றில் ஒன்றை தேவையான வகையில் பயிற்றுவிக்காமல் இருந்தது என்னுடைய தவறாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு படிக்கும் அளவுக்கு தேவையான சந்தர்ப்பங்கள் இருந்தனவே! கடவுளுக்குத் தெரியும். இரவில் கை அந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளவில்லை. எனினும், ஒரு முறை மட்டும் அவன் மரத்துப் போய் மயங்கி விட்டிருக்கிறான். இனியும் மரத்துப் போவதாக இருந்தால், கயிறு அவனைத் துண்டாக்கிக் கொள்ளட்டும்.”

தன்னுடைய தலை ஒழுங்கான முறையில் செயல்படவில்லை என்பதை கிழவன் உணர்ந்தவுடன், மேலும் கொஞ்சம் டால்ஃபின் மாமிசத்தைச் சாப்பிட்டால் என்ன என்று நினைத்தான். “ஆனால், என்னால் அது முடியாது.” அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். மனம் புரட்டல் காரணமாக என்னுடைய தைரியத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாவதைவிட, இப்படி தெளிவில்லாமல் இருப்பது எவ்வளவோ மேல். முகம், மாமிசத்தின்மீது போய்ப்பட்டதால், “மனம் புரட்டல் காரணமாக அதைச் சாப்பிட முடியவில்லை என்பதையும் உணர முடிகிறது. அவசரமான சூழ்நிலைக்காக, மாமிசம் கெட்டுப் போவது வரை, நான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன். நல்ல சத்து நிறைந்த உணவைச் சாப்பிட்டு உடலில் பலத்தை உண்டாக்கிக் கொள்ள முயற்சிப்பதில் மிகுந்த தாமதம் உண்டாகிவிட்டது. நீ சரியான முட்டாள்!” அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான்: “மற்ற பறக்கும் மீன்களைச் சாப்பிடு!”

சாப்பிடுவதற்கு ஏற்றபடி சுத்தம் செய்து வைக்கப்பட்ட பறக்கும் மீன் அங்கே இருந்தது. இடது கையை நீட்டி அவன் அதை எடுத்தான். எலும்புகளை கவனமாக மென்று வால் வரை முழு மீனையும் சாப்பிட்டான்.

“மற்ற பெரும்பாலான மீன்களைவிட இந்த மீன் நல்ல சத்து நிறைந்தது.” கிழவன் நினைத்தான்: “குறைந்தபட்சம் எனக்குத் தேவையான அளவு பலத்தையாவது கொடுக்கும். என்னால் முடியக் கூடியதை நான் இப்போது செய்துவிட்டேன். அவன் சுற்றித்திரிய ஆரம்பிக்கட்டும். போராட்டம் தொடங்கட்டும்.”

மீன் வட்டமிட ஆரம்பித்தபோது, சூரியன் உதித்து மேலே வந்து கொண்டிருந்தது. கிழவன் கடலுக்கு வந்தபிறகு ஏற்பட்ட மூன்றாவது சூரிய உதயம் அது.

மீன் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை தூண்டில் கயிறு சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவனால் பார்க்க முடியவில்லை. வட்டமிடுவது அவன் நினைத்திருந்ததைவிட சற்று முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. கயிறின் இறுக்கத்தில் மெல்லிய ஒரு நெகிழ்தல் தெரிந்தது. கிழவன் வலது கையால் கயிறை மெதுவாக இழுக்க ஆரம்பித்தான். எப்போதும்போல கயிறை இறுக்கினான். ஆனால், அறுந்து விடும் என்ற நிலைக்கு வந்தவுடன், கயிறு விலகி கைக்கு வர ஆரம்பித்தது. கயிறுக்குக் கீழே இருந்து தோளையும் தலையையும் விலக்கிக் கொண்டு, எந்தவித ஆரவாரமும் இல்லாமல் கிழவன் மெதுவாக தூண்டில் கயிறைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். ஊஞ்சலாடுவதைப்போல அவன் இரண்டு கைகளையும் பயன்படுத்தினான். உடலையும் கால்களையும் பயன்படுத்தி தன்னால் முடிகிற அளவுக்கு அவன் அதை பலம் கொண்டு இழுக்க முயற்சித்தான். தூண்டில் கயிறின் ஆட்டத்துடன் சேர்ந்து அவனுடைய முதுமை அடைந்த கால்களும் தோள்களும் செயல்பட்டன.

“அது ஒரு பெரிய வட்டமிடல்தான்...” கிழவன் சொன்னான்: “அதற்குப் பிறகும் அவன் வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறானே!”

அதற்குப் பிறகு கயிறு மேலே தொடர்ந்து வரவில்லை. சூரியனின் வெளிச்சத்தில் நீர்த் துளிகள் அதிலிருந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் வரை அவன் அதைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். இறுதியில் கயிறு கீழே இறங்கிப் போக ஆரம்பித்தபோது, கிழவன் முழங்கால் கீழேபட விழுந்துவிட்டான். இருண்டு போய்க் காணப்பட்ட நீர்ப் பரப்பை நோக்கி கயிறு திரும்பிப் போய்க் கொண்டிருப்பதை செயலற்ற தன்மை நிறைந்த வெறுப்புடன் பார்த்து நின்று கொண்டிருக்க மட்டுமே அவனால் முடிந்தது.

“இப்போது தூரத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.” அவன் சொன்னான்: “முடிந்த வரை, நான் கயிறை இறுகப் பிடிக்கவேண்டும். கயிறின் அழுத்தம் ஒவ்வொரு முறையும் அவனுடைய வட்டத்தைச் சிறிதாக்கிக் கொண்டே வரும். ஒரு வேளை, ஒரு மணி நேரத்திற்குள் நான் அவனைப் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது. இப்போது நான் அவனுக்கு என்னுடைய திறமை என்ன என்று காட்டப் போகிறேன். அதற்குப் பிறகு கொல்லவும் செய்வேன்.”

அதற்குப் பிறகும் மீன் மெதுவாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் கடந்த பிறகு, கிழவன் வியர்வையில் மூழ்கி விட்டிருந்தாள். எலும்புக்குள் வரை அவன் மிகவும் தளர்ந்து போயிருந்தான். மீன் உண்டாக்கிய வட்டங்கள் இப்போது மேலும் சிறிதாகி விட்டிருந்தன. நீந்திக் கொண்டிருக்கும்போது, மீன் இங்குமங்கும் போகாமல் நேராக மேலே வந்திருக்கிறது என்பதை கயிறின் சாய்விலிருந்து அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு மணி நேரம் கிழவன் தன்னுடைய கண்களுக்கு முன்னால் ஆபத்து நிறைந்த இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். வியர்வை கண்களிலும் கண்களுக்கு மேலே இருந்த காயத்திலும் நெற்றியிலும் உப்புத் தன்மையைப் பதித்துக் கொண்டிருந்தது. ஆபத்து நிறைந்த இடங்களைப் பற்றி அவனுக்கு பயம் எதுவும் உண்டாகவில்லை. கயிறில் செலுத்தும் அழுத்தத்தை வைத்துப் பார்க்கும்போது, அப்படிப்பட்ட விஷயங்கள் இயல்பானவை என்று அவன் நினைப்பது தெரிந்தது. எனினும், இரண்டு முறை தலை சுற்றலும் மயக்கமும் உண்டானது அவனை பதைபதைக்கச் செய்தது.

“இப்படிப்பட்ட ஒரு மீனிடம் என்னால தோல்வியடைய முடியாது. இறப்பதற்கும்...” அவன் சொன்னான்: “இப்போது அவன் மிகவும் அழகாக எனக்குக் கீழ்ப்படியப் போகிறான். பொறுமை சக்தி இருப்பதற்கு கடவுள் எனக்கு உதவட்டும். “நம்முடைய தந்தை”யின் பெயரையும் “புனித மரிய”த்தின் பெயரையும் நூறு முறை நான் உச்சரிக்கிறேன். ஆனால், இப்போது என்னால் அதை உச்சரிக்க முடியவில்லை.”

“அவை உச்சரிக்கப்பட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்...” “அவன் சொன்னான்: “நான் அவற்றை பின்னால் கூறிக் கொள்கிறேன்.”

திடீரென்று கிழவன் தன் இரண்டு கைகளாலும் பிடித்திருந்த தூண்டில் கயிறில் பலமான அசைவும் இழுத்தலும் உண்டாவதாக உணர்ந்தான். அது கூர்மையானதாகவும் கடினமானதாகவும் கனமானதாகவும் இருந்தது.


“கயிறுடன் இணைக்கப்பட்டிருந்த உலோகத்தாலான வளையத்தில் தன் முன் பகுதியைக் கொண்டு மீன் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது. அது நடக்கக் கூடியதுதான். அவன் அதைச் செய்ய வேண்டியதிருந்தது. அது அவனை தாவச் செய்யும். எனினும், அவன் வட்டமடிப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. காற்று வேண்டுமென்றால், அவன் கட்டாயம் குதித்துத் தாவ வேண்டியதிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை தாவும்போதும் தூண்டிலின் கொக்கி உண்டாக்கிய காயம் படிப்படியாகப் பெரிதாகும். கொக்கியிலிருந்து விடுபட்டு, அவன் தப்பித்துப்போய் விட முடியும்.”

“மீனே, குதித்துத் தாவாதே.” அவன் சொன்னான்: “தாவாதே.”

மீன், மேலும் பல முறை கயிறில் வந்து மோதிக் கொண்டே இருந்தது. அவன் தலையால் மோதிய ஒவ்வொரு முறையும் கிழவன் கயிறை கொஞ்சம் விட்டுக் கொடுத்தான்.

“அவனுடைய வேதனை எங்கே இருக்கிறதோ, அதை அங்கேயே இருக்கும்படி நான் செய்வேன்.” அவன் நினைத்தான்: “என்னுடைய வேதனை பரவாயில்லை. என் வேதனையை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், வேதனை அவனை பைத்தியம் பிடிக்கச் செய்யும்.”

சிறிது நேரம் கழித்து, மீன் கயிறில் மோதுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மெதுவாக வட்டமடிக்க ஆரம்பித்தது. கிழவன் கயிறை முறைப்படி இழுத்துக் கொண்டிருந்தான். ஆனால், மீண்டும் அவனுக்கு தலை சுற்றுவதைப் போல தோன்றியது. இடது கையால் சிறிது கடல் நீரை மொண்டு தலையில் ஊற்றினான். பிறகு மேலும் சிறிது நீரை எடுத்து ஊற்றி பின் கழுத்துப் பகுதியில் தடவினான்.

“இப்போது எனக்கு மரத்துப்போன நிலை இல்லை.” கிழவன் சொன்னான்.

“அவன் உடனே மேலே வருவான். என்னால் பிடித்து நின்று கொண்டிருக்க முடியும். நான் பிடித்து நின்று கொண்டிருக்க வேண்டும். அதைப் பற்றி பேசுவதுகூட தேவையில்லை.”

கிழவன் பலகைக்கு அருகில் முழங்காலிட்டு உட்கார்ந்தான். ஒரு நிமிட நேரத்திற்கு அவனுடைய முதுகிலிருந்து தூண்டில் நூல் மீண்டும் விலகி நகர்ந்தது. “வட்டமிடுவதற்கு அவன் விலகிச் செல்லும்போது, நான் ஓய்வெடுப்பேன். பிறகு அவன் நெருங்கி வரும்போது எழுந்து வேலையை ஆரம்பிப்பேன்.” அவன் தீர்மானித்தான்.

பலகையில் ஓய்வெடுப்பது, கயிறை சிறிதுகூட இழுக்காமல் மேலும் ஒரு வட்டம் போடும்படி மீனை அனுமதிப்பது- இவை மீனுக்குச் சாதகமான விஷயங்களாக இருக்கும். ஆனால், தூண்டில் நூல் இறுக்கமாக இருந்தவுடன், மீன் திரும்பி படகிற்கு நேராக வந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. கிழவன் எச்சரிக்கையுடன் எழுந்து நின்றான். உடலை நன்கு நிமிர வைத்துக் கொண்டு, கயிறு முழுவதையும் படகிற்குள் வரும்படி செய்தான்.

“நான் முன்பு இருந்ததைவிட மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்.” அவன் நினைத்தான்: “இப்போது, இதோ காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அவனைப் பிடிப்பதற்கு இந்தக் காற்று நல்லதுதான். எனக்கு இது கட்டாயம் வேண்டும்.”

“அடுத்த முறை அவன் வட்டமிடப் போகும்போது, நான் ஓய்வெடுப்பேன்.” அவன் சொன்னான்: “நான் இப்போது மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறேன். இன்னும் இரண்டோ மூன்றோ வட்டமடித்தல்களுக்குள் நான் அவனைப் பிடித்துவிடுவேன்.”

வைக்கோல் தொப்பி தலையின் பகுதியில் மிகவும் தள்ளிப் போய் விட்டிருந்தது. கயிறு இழுந்ததால் உண்டான பலத்தால் கிழவன் பலகையில் சாய்ந்தான். மீன் திரும்பிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

“மீனே, நீ இப்போது உன் விருப்பப்படி முன்னோக்கிச் செல்.” அவன் நினைத்தான்: “நீ திரும்பி வரும்போது பிடிக்கிறேன்.”

காற்றின் மூலம் அலைகள் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அதிகரித்திருந்தது. ஆனால், அது நல்ல காலநிலையை முன்கூட்டியே காட்டக்கூடிய இளம் காற்றாக இருந்தது. கரையில் போய்ச் சேர்வதற்கு அவனுக்கு காற்று இருக்க வேண்டியது அவசிய தேவையாக இருந்தது.

“நான் இப்போது தென்கிழக்கு திசையை நோக்கி படகைத் திருப்புகிறேன்.” அவன் சொன்னான்: “ஒருவனுக்குக்கூட கடலில் வழி தவறாது. இது ஒரு நீண்ட தீவு.”

மூன்றாவது வட்டம் சுற்றும்போதுதான் கிழவன் மீனை முதல் முறையாகப் பார்த்தான்.

அவன் ஒரு கறுத்த நிழலாக மீனை முதல் முறையாகப் பார்த்தான். அந்த நிழல் படகிற்குக் கீழே கடந்து செல்வதற்கு நீண்ட நேரமானது. அதன் நீளத்தை அவனால் நம்ப முடியவில்லை.

“இல்லை...” அவன் சொன்னான்: “அவன் அந்த அளவிற்குப் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.”

ஆனால், அவன் அந்த அளவிற்குப் பெரிய அளவைக் கொண்டவனாகத்தான் இருந்தான். இந்த முறை வட்டம் சுற்றுவதன் இறுதியில் அவன் மேற்பரப்பிற்கு வந்தான். முப்பது அடி தூரத்தில் அவன் இருந்தான். வால் நீருக்கு மேலே வெளியே தெரிந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். இருண்ட நீலநிற நீர்ப் பரப்பிற்கு மேலே பெரிய ஒரு அரிவாளைவிட பெரிதாக, இளம் கற்பூரவல்லியின் நிறத்தில் அது இருந்தது. அது பின்னோக்கி சாய்ந்தது. நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே மீன் நீந்திக் கொண்டிருக்க, அவனுடைய மிகப் பெரிய உருவத்தையும் நீல நிறத்திலிருந்த கோடுகளையும் கிழவனால் பார்க்க முடிந்தது. முதுகில் சிறகுகள் கீழே இறங்கியும் ஓரங்களில் இருந்த பெரிய சிறகுகள் விரிந்தும் இருந்தன.

இந்த சுற்றித் திரிதலில் கிழவனால் மீனின் கண்களைப் பார்க்க முடிந்தது- அத்துடன் அவனைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த சாம்பல் நிறத்தைக் கொண்டு இரண்டு இரும்பு மீன்களையும் சில நேரங்களில் அவை இரண்டும் அவனுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டு இருந்தன. வேறு சில நேரங்களில் மிகுந்த வேகத்தில் விலகிப் போய்க் கொண்டிருந்தன. இன்னும் சில நேரங்களில் அவனுடைய நிழலின் மறைவில் சந்தோஷமாக நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் மூன்று அடிகளையும்விட நீளமுள்ளவையாக இருந்தன. மிகவும் வேகமாக நீந்தும்போது அவை தங்களின் முழு உடல்களையும் ஆரல் மீன்களைப்போல ஆட்டிக்கொண்டேயிருந்தன.

கிழவன் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தான். ஆனால், அது சூரியனின் வெப்பத்தால் மட்டுமல்ல. மீனின் அமைதியான- அலட்சியமான ஒவ்வொரு திரும்பலின் போதும் அவன் கயிறை மேல் நோக்கி இழுத்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு முறை திரும்பி வந்தால், குத்தீட்டியைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

“ஆனால், எனக்கு அவன் மிகவும் அருகில் கிடைத்தே தீர வேண்டும். அருகில்... மிகவும் அருகில்.” அவன் நினைத்தான்: “குத்தீட்டியை தலையில் குத்த முயற்சிக்கக் கூடாது... இதயத்திற்குள் குத்த வேண்டும்.”

“அமைதியானவனாகவும், தைரியமானவனாகவும் இரு கிழவா.” அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.


அடுத்த சுற்றின்போது மீனின் முதுகுப் பகுதியை வெளியே பார்க்க முடிந்தது. ஆனால், படகிலிருந்து சற்று தூரத்தில் அவன் இருந்தான். அடுத்த சுற்றின்போதும் அவன் சற்று தூரத்தில் இருந்தான் என்றாலும், நீரின் மேற்பரப்பிலிருந்து மேலே நின்று கொண்டிருந்தான். கயிறை மேலும் சற்று இழுத்தால், அவனை படகிற்கு அருகில் கொண்டு வர முடியும் என்பதில் கிழவன் உறுதியாக இருந்தான்.

குத்தீட்டியை மிகவும் முன்கூட்டியே கிழவன் தயார் நிலையில் வைத்திருந்தான். ஈட்டியில் கட்டப்பட்டிருந்த எடை குறைவான கயிறின் சுருள் ஒரு வட்ட வடிவ கூடையில் இருந்தது. கயிறின் சுருள் ஒரு வட்ட வடிவ கூடையில் இருந்தது. நுனியில் நுனிப்பகுதி பலகையில் இருந்த ஒரு கொக்கியில் கட்டப்பட்டிருந்தது.

சுற்றிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் மீன் மிகவும் நெருக்கமாக வந்து கொண்டிருந்தது. அவன் மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவனாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் இருந்தான்.

அவனுடைய பெரிய வால் மட்டுமே அசைந்து கொண்டிருப்பதைப் போல தோன்றியது. அவனை படகிற்கு அருகில் நெருக்கமாக கொண்டு வருவதற்கு கிழவன் சிரமப்பட்டு முயற்சித்தான். ஒரு நிமிட நேரத்திற்கு மீன் அவன் பக்கம் சிறிது திரும்பி நின்றது. பிறகு பழைய நிலைக்குச் சென்று இன்னொரு வட்டம் சுற்ற ஆரம்பித்தது.

“நான் அவனை நீந்த விட்டிருக்கிறேன்...” கிழவன் சொன்னான்: “இதோ... நான் அவனை நீந்தவிட்டிருக்கிறேன்.”

அவனுக்கு மீண்டும் தலை சுற்றுவதைப் போல இருந்தது. ஆனால், முழு சக்தியையும் பயன்படுத்தி அவன் மீனை அடக்கி நிறுத்தினான். “நான் அவனை நீந்த விட்டிருக்கிறேன்.” அவன் நினைத்தான்: “இந்த முறை நான் அவனைப் பிடித்து விட முடியும். கைகளே, இழுங்கள்... கால்களே, உறுதியாக நில்லுங்கள்... தலையே, எனக்காக நிமிர்ந்து இரு. நீ எந்தச் சமயத்திலும் ஏமாற்றியது இல்லை. இந்த முறை நான் அவனைப் பிடித்து விடுவேன்.”

ஆனால், கிழவன் முழு சக்தியையும் பயன்படுத்தி மீனை நெருங்குவதற்கு முன்பே அதை இழுக்க ஆரம்பித்து விட்டானென்றாலும், மீன் தான் வந்து கொண்டிருந்த பாதையிலிருந்து விலகி, வலது பக்கமாக நகர்ந்து நீந்திச் சென்றது.

“மீனே...” கிழவன் சொன்னான்: “எது எப்படி இருந்தாலும் நீ சாகப் போகிறாய். நீ என்னையும் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயா?”

“அந்த வழியில் எதுவுமே செய்ய முடியாது.” அவன் நினைத்தான். பேச முடியாத அளவிற்கு அவனுடைய வாய் வறண்டு போயிருந்தது. ஆனால், இப்போது நீருக்காக கையை நீட்ட முடியாத நிலையில் அவன் இருந்தான். “இந்த முறை நான் அவனை படகிற்கு அருகில் கொண்டு வருவேன்.” அவன் நினைத்தான்: “இன்னும் அதிகமான முறை வட்டமிடுவதுதான் அவனுடைய எண்ணமென்றால், என்னை எதுவுமே செய்ய முடியாது. ஆமாம்... உன்னால் முடியும்...” கிழவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: “நீ எந்தச் சமயத்திலும் தைரியசாலிதான்...”

அடுத்த முறை திரும்பும்போது மிகவும் சிரமப்பட்டு அவன் அருகில் கிடைத்தான். ஆனால், மீன் மீண்டும் வலது பக்கம் திரும்பி, மெதுவாக நீந்திச் சென்றது.

“மீனே, நீ என்னைக் கொல்கிறாய்.” கிழவன் நினைத்தான்: “ஆனால், உனக்கு அதற்கான உரிமை இருக்கிறது. சகோதரா, உன்னைவிட பெரியவனையோ அழகானவனையோ அமைதியான குணத்தைக் கொண்டவனையோ மிக உயர்ந்த தன்மை கொண்ட இன்னொருவனையோ நான் இதுவரை பார்த்ததே இல்லை. வந்து என்னைக் கொல். யார் யாரைக் கொல்கிறோம் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.”

“உன் தலைக்குள் இப்போது நீ குழம்பிப் போய் இருக்கிறாய்.” அவன் சொன்னான்: “நீ தலையைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். தலையைத் தெளிவாக வைத்திருந்து, ஒரு மனிதனைப் போல் எப்படி கஷ்டப்படுவது என்பதைத் தெரிந்து கொள். அல்லது- ஒரு மீனைப் போல...”

“குழம்பி தெளிவாக ஆவாய், தலையே...” தனக்குத் தானே சிரமப்பட்டு கேட்கக் கூடிய குரலில் அவன் சொன்னான்: “குழம்பி, தெளிவாக ஆவாய்...”

மேலும் இரண்டு முறை வட்டமிடுவது முன்பைப் போலவே நடந்தது.

“எனக்குத் தெரியாது.” கிழவன் நினைத்தான்: “ஒவ்வொரு முறையும் தப்பித்து விட முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பவன் அவன். எனக்குத் தெரியாதே! எனினும், இன்னுமொரு முறை நான் முயற்சிப்பேன்.”

கிழவன் மீண்டுமொரு முறை அதற்கு முயற்சி செய்தான். மீனைத் திருப்பிக் கொண்டு வந்தபோது, தானே போய்க் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மீன் வலது பக்கம் திரும்பி, பெரிய வாலை காற்றில் உயர்த்தி வீசியவாறு மீண்டும் மெதுவாக நீந்திச் சென்றது.

“நான் மீண்டும் முயற்சி செய்வேன்.” கிழவன் மனதில் உறுதி எடுத்தான். எனினும், கைகள் பலமில்லாமல் இருந்தன. மின்னலில் மட்டுமே அவனால் நன்றாகப் பார்க்க முடியும்.

கிழவன் மீண்டும் முயற்சி செய்தான். பழையபடியேதான். முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே தான் அதை நோக்கி பிடித்து இழுக்கப்படுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான்: “இன்னுமொரு முறை நான் முயற்சி செய்வேன்.”

மிகவும் சிரமப்பட்டு, எஞ்சியிருந்த சக்தியை ஒன்று சேர்த்து, கையை விட்டுப்போன நம்பிக்கையை மீண்டும் தன்னிடம் கொண்டு வந்து, மீனின் துன்பத்துடன் கிழவன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தான். மீன் அவனுக்கு அருகில் அமைதியாக நீந்தி வந்து தூண்டிலின் நுனியை படகின் கீழ்ப்பகுதியில் சிரமப்பட்டு தொட்டது. மிகவும் ஆழமான, விசாலமான, வெள்ளி நிறத்தைக் கொண்ட, நீலக் கோடுகளைக் கொண்ட, நீரில் முடிவே இல்லாதது என்று தோன்றிய மீன், படகைக் கடந்து செல்ல ஆரம்பித்தது.

கிழவன் தூண்டில் கயிறைக் கீழே போட்டுவிட்டு, பாதத்தால் அழுத்திப் பிடித்துக் கொண்டு, சக்தி முழுவதையும் சேர்த்துக் கொண்டு, புதிதாகப் பெற்ற அதிக பலத்துடன் குத்தீட்டியை முடிந்த வரைக்கும் உயர்த்தி பலத்துடன் எறிந்தான். மனிதனின் மார்பு உயரத்தில், காற்றில் உயர்ந்த மீனின் காதிற்குச் சற்று பின்னால் குத்தீட்டி பாய்ந்து விட்டிருந்தது. குத்தீட்டி துளைத்து உள்ளே நுழைந்ததாக அவன் உணர்ந்தான். கிழவன் குத்தீட்டியின்மீது சாய்ந்து, தன்னுடைய முழு எடையையும் அதன்மீது செலுத்தி, மேலும் ஆழத்தில் பாய்ச்சினான்.

உள்ளுக்குள் மரணத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, மீன் உயிருடன் நீருக்கு வெளியே வந்தது. தன்னுடைய நீளத்தையும் அகலத்தையும் பலத்தையும் அழகையும் வெளிப்படுத்தி அவன் நீருக்குள்ளிருந்து மேலே வந்தான். படகில் தனக்கு மேலே காற்றில் அவன் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று கிழவனுக்குத் தோன்றியது. தொடர்ந்து கிழவனின் உடலிலும் படகிலும் நீரைச் சிதறடித்துக் கொண்டு ஒரு அசைவுடன் அவன் நீருக்குள் சென்றுவிட்டான்.


கிழவனுக்கு தலை சுற்றுவதைப் போல இருந்தது. எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. எனினும், குத்தீட்டிக் கயிறைச் சுத்தம் செய்து, உறுதியான கையின் மூலம் மெதுவாகச் செலுத்திப் பார்த்தான். பார்வை தெளிவானபோது, வெள்ளி நிறத்தைக் கொண்ட வயிறு மேலே தெரிகிற மாதிரி மீன் மல்லாந்து படுத்துக் கிடப்பதை அவன் பார்த்தான். மீனின் தோளிலிருந்து ஒரு ஓரத்தில் குத்தீட்டியின் கைப்பிடி தெரிந்தது. அவனுடைய இதயத்திலிருந்து வந்த குருதி கடலில் சிவப்பு நிறத்தைக் கலந்து விட்டிருந்தது. ஒரு மைல் தூரத்தைவிட அதிகமான ஆழத்தில், நீல நிற நீரில் முதலில் அது நிலக்கரியைப்போல இருண்டு காணப்பட்டது. பிறகு அது மேகத்தைப்போல படர்ந்தது. மீன் வெள்ளி நிறத்தில் இருந்தது. அசைவே இல்லாமலிருந்த மீன் அலைகளுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது.

தனக்கு கிடைத்த காட்சியின் வெளிச்சத்தை நோக்கி கிழவன் கவனத்துடன் கண்களைச் செலுத்தினான். உட்காரும் பலகைக்கு அருகில் இருந்த கொம்பிலிருந்து குத்தீட்டிக் கயிறின் இரண்டு சுருள்களை அவன் அவிழ்த்து எடுத்தான். பிறகு தலையை கைகளில் தாங்கிக் கொண்டான்.

“என் அறிவு தெளிவாகவே இருக்கட்டும்.” பலகையில் சாய்ந்து கொண்டே கிழவன் சொன்னான்: “நான் களைத்துப் போன ஒரு வயதான கிழவன். எனினும், என்னுடைய... சகோதரனான இந்த மீனை நான் இதோ கொன்றிருக்கிறேன். இனி நான் அடிமைப் பணி செய்தே ஆக வேண்டும்.”

“அவனை இழுத்து நெருங்கச் செய்து, படகுடன் சேர்த்து கட்டுவதற்கு கயிறை தயார் பண்ணி வைக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தாலும், படகைத் தாழ்த்தி அதில் மீனை ஏற்றினால், படகினால் அவனை எந்தச் சமயத்திலும் தாங்கிக் கொள்ள முடியாது. நான் எல்லா விஷயங்களையும் சரி பண்ணி வைத்தே ஆக வேண்டும். அவனை நெருக்கமாகக் கொண்டு வந்து, கயிறைக் கொண்டு நன்கு கட்டி, பாய் மரத்தை உயர்த்தி, வீட்டிற்குப் பயணத்தைத் திருப்ப வேண்டும்.”

படகுடன் நெருக்கமாகக் கொண்டு வந்து நிறுத்துவதற்காக கிழவன் மீனை இழுக்க ஆரம்பித்தான். காதுகளின் வழியாக கயிறை இழுத்து, வாயின் வழியாக வெளியே கொண்டு வந்து, தலையைத் தூணுடன் சேர்த்துக் கட்டினான். “நான் அவனைப் பார்க்க வேண்டும். அவனைத் தொட வேண்டும். தொட்டு உணர வேண்டும்.” கிழவன் நினைத்தான்: “அவன் என்னுடைய செல்வம். ஆனால், அந்த காரணத்திற்காக நான் அவனைத் தொட்டு உணர வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் இதயத்தை நான் தொட்டு உணர்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன். குத்தீட்டியை இரண்டாவது முறையாக எறிந்துபோதுதான் அது... இப்போது அவனை படகிற்கு அருகில் கொண்டு வந்த சேர்த்துக் கட்ட வேண்டும். வாலைச் சுற்றி இறுகக் கட்ட வேண்டும். படகுடன் சேர்த்துக் கட்டுவதற்காக இன்னொரு சுருக்கை நடுப்பகுதியில் போட வேண்டும்.”

“கிழவா, வேலையை ஆரம்பி..” அவன் சொன்னான். தொடர்ந்து ஒரு மடக்கு நீரைக் குடித்தான். பிறகு சொன்னான்: “போராட்டம் முடிந்து விட்ட நிலையில், இனி ஏராளமான அடிமைப் பணிகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது.”

கிழவன் வானத்தைப் பார்த்தான். தொடர்ந்து தன்னுடைய மீனையும்... அவன் சூரியனையே வெறித்துப் பார்த்தான். “மதிய நேரம் தாண்டி அதிக நேரமாகவில்லை.” கிழவன் நினைத்தான்: “காற்று வீச ஆரம்பித்திருக்கிறது. இப்போது கயிறுகளால் எந்தவொரு பயனுமில்லை. வீட்டை அடைந்தவுடன், சிறுவனும் நானும் சேர்ந்து அவற்றைப் பிரித்தெடுத்து விடுவோம்.”

“வா... மீனே...” கிழவன் சொன்னான். ஆனால் மீன் வரவில்லை. அதற்கு பதிலாக அவன் அலைகளில் உருண்டு புரண்டு கிடந்தான். கிழவன் படகை மீனை நோக்கி நகரச் செய்தான்.

மீனின் அருகில் சென்ற பிறகும், அவனுடைய தலை படகின் வளைவான பலகைக்கு நேராக இருந்தபோதும், கிழவனால் அவனுடைய பெரிய அளவை நம்ப முடியவில்லை. அவன் குத்தீட்டிக் கயிறை பலகைக்கு அருகிலிருந்த கொம்பிலிருந்து அவிழ்த்தெடுத்து, மீனின் காதுகளின் வழியாக நுழைந்து வாயின் வழியாக வெளியே கொண்டு வந்தான். தொடர்ந்து வாலில் ஒரு சுற்று சுற்றி, கயிறை இன்னொரு காதின் வழியாக நுழைத்து தூண்டில் கயிறில் சுற்றிக் கட்டினான். இறுதியில் இரட்டைக் கயிறுகளை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டி பலகையிலிருந்த கொம்புடன் இணைத்துக் கட்டினான்.

மீன் தன்னுடைய இயல்பான நீல நிறம் கலந்த வெள்ளி நிறத்திலிருந்து உண்மையான வெள்ளி நிறத்திற்கு மாறிவிட்டிருந்தது. உடலிலிருந்த கோடுகளுக்கும், வாலின்மீது இருந்த அதே வெளிறிப் போன வயலட் நிறமிருந்தது. கோடுகளுக்கு மனிதனின் உள்ளங்கையைவிட அகலம் இருந்தது. மீனின் கண்கள் “பெரிஸ்கோப்”பின் கண்ணாடிகளைப் போலவோ ஊர்வலத்தில் வரும் சாமியாரின் உருவத்தைப் போலவோ கலங்கமற்று இருந்தன.

“அவனைக் கொல்லக் கூடிய ஒரே வழி இதுவாகத்தான் இருந்தது.” கிழவன் சொன்னான். நீரைப் பருகிய பிறகு அவனுக்கு நிம்மதி தோன்றியது. மீனால் ஓடிச் செல்ல முடியாது என்றும், தன்னுடைய தலை கலங்கிப் போய் இப்போது தெளிவடைந்த நிலையில் இருக்கிறது என்றும் அவனுக்குப் புரிந்தது. “இப்போதைய நிலையில் மீனுக்கு ஆயிரத்து ஐநூறு ராத்தல்களுக்கு மேல் எடை இருக்கும். ஒருவேளை இதைவிட அதிகமாகக்கூட இருக்கும். தோலை உரித்து துண்டு துண்டாக ஆக்கும்போது, மூன்றில் இரண்டு மடங்கு இருக்கும். ராத்தலுக்கு முப்பது சென்ட் வைத்துப் பார்த்தால்...?”

“அதை கணக்கிட்டுப் பார்ப்பதற்கு ஒரு பென்சில் வேண்டும்.” அவன் சொன்னான்: “என் அறிவு அந்த அளவிற்குத் தெளிவாக இல்லை. எனினும், மிகப் பெரிய மனிதரான டிமாகியோ இன்று என்னைப் பற்றிக் கூறி பெருமைப் படுவார் என்று நான் நினைக்கிறேன். எனக்கு பாதத்தில் எலும்பால் உண்டான நோய் இல்லை. ஆனால், கைகளிலும் முதுகிலும் பலமான காயங்கள் உண்டாகி இருக்கின்றன. பாதத்தில் எலும்பால் உண்டான நோய் என்றால் எப்படி இருக்கும்?” அவன் ஆச்சரியப்பட்டான்: “நமக்குக்கூட அது உண்டாகலாம். நமக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்....”

கிழவன் மீனை படகின் வளைவான பகுதியிலும் பாய் மரத்திலும் படகின் நடுப்பகுதியில் இருந்த பலகையிலும் சேர்த்துக் கட்டினான். படகுடன் இன்னுமொரு பெரிய படகை இணைத்துக் கட்டியதைப் போல அந்த அளவிற்கு அவன் பெரிதாக இருந்தான். தொடர்ந்து ஒரு துண்டு கயிறை அறுத்தெடுத்து மீனின் கீழ்தாடை உதட்டுடன் சேர்த்துக் கட்டினான். இனி அவனுடைய வாய் திறக்காது. அது மட்டுமல்ல- முடிந்த வரை உற்சாகத்துடன் பயணத்தைத் தொடரலாம்.

இறுதியில் பாய்மரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்து, பாய் கட்டுவதற்குப் பயன்படக்கூடிய கழியால் பாயை விரித்தான். துண்டுகள் தைத்து இணைக்கப்பட்ட பாயில் காற்று மோதியது. படகு நகர ஆரம்பித்தது. பாய் மரத்திற்கு அருகில் பாதி அளவில் படுத்துக் கொண்டே அவன் தென்மேற்கு திசையை நோக்கி துடுப்புகளைப் போட்டான்.

தென்மேற்கு திசையைத் தெரிந்து கொள்வதற்கு அவனுக்கு ஒரு “வடக்கு நோக்கி”யின் தேவை இருக்கவில்லை. காற்றின் தாலாட்டும் பாயின் அசைவும் மட்டுமே தேவையாக இருந்தன. இனி உடலில் ஈரத் தன்மையை இருக்கச் செய்வதற்காக ஏதாவது சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். நீளம் குறைவாக இருந்த ஒரு கயிறில் ஒரு கரண்டியைக் கட்டி கடலுக்குள் போட்டால் நன்றாக இருக்கும். ஆனால், கரண்டி இல்லையே! மத்தி மீன்கள் கெட்டுப் போய் விட்டிருந்தன. மிதந்து வந்த மஞ்சள் நிற கடல் பாசிகள் நிறைந்த ஒரு கூட்டத்தை அவன் குத்தீட்டியில் கோர்த்து எடுத்தான். பாசியை விலக்கிப் பார்த்தபோது, அதற்குள் இருந்த சிறிய செம்மீன்கள் பலகையில் விழுந்தன. ஒரு டஜனுக்கும் அதிகமாக இருந்த அவை மணல் பூச்சிகளைப் போல துள்ளிக் கொண்டிருந்தன. செம்மீன்களின் தலைகளைக் கிள்ளி நீக்கி, வெளி ஓடு, வால் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டான். மிகவும் சிறியதாக இருந்தாலும், அவை நல்ல சத்து நிறைந்தவை என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். அதற்கு நல்ல ருசி இருந்தது.

கிழவனின் புட்டியில் இன்னும் இரண்டு மடக்கு நீர் மீதமிருந்தது. செம்மீனைச் சாப்பிட்டு முடித்து, அரை மடக்கு நீரைக் குடித்தான். சிரமங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, படகு நன்றாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுக்கானைப் பிடித்து அவன் படகைச் செலுத்தினான். அவனால் மீனைப் பார்க்க முடிந்தது. இது உண்மையிலேயே நடந்தது என்பதையும் ஒரு கனவு அல்ல என்பதையும் நம்புவதற்காக அவன் தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டே பாய் மரத்தில் சாய்ந்து கொண்டு நின்றான். போராட்டத்தின் இறுதியை நெருங்கி விட்டபோது, மனம் பதறிப் போய் இருந்த ஒரு சூழ்நிலையில், இது ஒரு கனவாக இருக்குமோ என்று கிழவன் நினைத்தான். தொடர்ந்து மீன் நீருக்குள்ளிருந்து வெளிவே வந்து, மேல் நோக்கி உயர்ந்து, கீழே விழுவதற்கு முன்னால் வெற்றிடத்தில் அசைவே இல்லாôமல் இருந்ததைப் பார்த்தபோது, ஏதோ மிகப்பெரிய அசாதாரணமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று கிழவன் உறுதியாக நினைத்தான். அதை அவனால் நம்பவே முடியவில்லை. இப்போது எப்போதும்போல நன்றாகப் பார்க்க முடிகிறது என்றாலும், அப்போது எதையும் நன்றாகப் பார்க்க முடியவில்லை.

அங்கு ஒரு மீன் இருக்கிறது என்பதும், தன்னுடைய கைகள், முதுகு எதுவுமே கனவு அல்ல என்பதும் இப்போது கிழவனுக்குப் புரிந்தது. “கைகள் மிகவும் வேகமாக குணமாகிக் கொண்டிருக்கின்றன.” அவன் நினைத்தான்: “கையில் இருக்கும் ரத்தத்தைக் கழுவி விட்டு, உப்பைத் தேய்த்தால் உடனடியாகக் காய்ந்துவிடுகிறது. உண்மையாகச் சொல்லப் போனால் கடலுக்குள் இருக்கும் இருண்ட நீர் மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது. இனி நான் செய்ய வேண்டியது- என் தலையை மிகவும் தெளிவாக வைத்திருப்பதுதான். கைகள் அவற்றின் வேலையை முழுமையாகச் செய்து முடித்துவிட்டன. நாங்கள் மிகவும் நன்றாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். மீனின் வாயை மூடிக் கட்டி, அவனுடைய வாயை நெடுங்குத்தாக உயர்த்தியும் தாழ்த்தியும், நாங்கள் சகோதரர்களைப் போல பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.” சிறிது நேரம் சென்றதும், கிழவனின் சுய உணர்வு சற்று குறையத் தொடங்கியது. “அவன் என்னை இழுத்துக் கொண்டு செல்கிறானா அல்லது நான் அவனை இழுத்துக் கொண்டு போகிறேனா?” கிழவன் சிந்தித்தான்: “நான் அவனை பின்னால் கட்டி இழுத்துக் கொண்டு வந்திருந்தால், இப்படியொரு கேள்வியே எழுந்திருக்காது. அனைத்துப் பெருமைகளும் முடிவுக்கு வந்து, மீன் படகிற்குள் கிடந்து கொண்டிருந்தால்கூட, இந்தக் கேள்வி எழுந்திருக்காது. ஆனால், இருவரும் ஒருவரோடொருவர் பக்கவாட்டில் இருக்கிற மாதிரி சேர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அவனுடைய விருப்பம் அதுவாக இருந்தால், அவன் என்னை இழுத்துக் கொண்டு போகட்டும். தந்திரச் செயல்களில் மட்டும்தான் நான் அவனைவிட உயர்ந்தவன். அவன் எனக்கு எந்தவொரு கெடுதலையும் செய்யவில்லை.”

அவர்கள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். கிழவன் கைகளை நீண்ட நேரம் உப்பு நீருக்குள் மூழ்க வைத்துக் கழுவினான். தலை தெளிவுடன் இருப்பதற்கு முயற்சி செய்தான். அவர்களுக்கு மேலே கறுத்து இருண்டு போய் காணப்பட்ட கோடைகால மேகங்களும் சிறு சிறு மேகக் கூட்டங்களும் இருந்தன. அதனால் இளங்காற்று இரவு முழுவதும் வீசிக் கொண்டிருக்கும் என்பதை கிழவன் புரிந்து கொண்டான். இது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவன் இடையில் அவ்வப்போது மீனை நோக்கிப் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். முதல் சுறா மீன் அவனை ஆக்கிரமிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முந்தை சூழ்நிலை அது.

சுறா மீன் வந்தது எதிர்பார்த்த ஒன்றல்ல. கடல் நீரின் ஆழத்திற்குள்ளிருந்து அவன் மேலே வந்தான். கறுத்த மேகத்தைப் போல இருந்த மீனின் ரத்தம் மிகவும் ஆழமான நீரில் கலந்து கடல் முழுக்க பரவி விட்டிருந்தது. சிறிதும் முன்னறிவிப்பு எதுவுமே இல்லாமல் திடீரென்று சுறா மீனின் வரவு நடந்தது. நீல நிற நீர்ப் பரப்பைக் கிழித்துக் கொண்டு சூரியனின் வெளிச்சத்தில் அவன் தோன்றினான். தொடர்ந்த அவன் கடலின் ஆழத்திற்குள் திரும்பிச் சென்று, வாசனை பிடித்துக் கொண்டே படகு, மீன் ஆகியவை பயணிக்கும் திசையை நோக்கி நீந்த ஆரம்பித்தான்.

சில நேரங்களில் சுறா மீனுக்கு வாசனை எட்டவில்லை. எனினும், அவன் அதை எப்படியும் பிடித்துவிடுவான். இல்லாவிட்டால் அதன் ஒரு அடையாளத்தையாவது அவன் கண்டுபிடித்து விடுவான். அவன் மிகவும் வேகமாக அவர்களை நோக்கி நீந்தினான். மிகவும் வேகமாக நீந்தக் கூடிய மாக்கோ சுறாவாக அவன் இருந்தான். கடலில் மிகவும் வேகத்தைக் கொண்ட மீனைப்போல நீந்தக் கூடிய அளவிற்கு படைக்கப்பட்டவன் அவன். அவனுடைய தாடை எலும்பைத் தவிர, மீதி பகுதிகள் மிகவும் அழகானவை. அவனுடைய முதுகு வாள் மீனைப்போல நீல நிறத்தில் இருந்தது. வயிறு வெள்ளி நிறத்தில் இருந்தது. உடல் மென்மையானதாகவும் அழகானதாகவும் இருந்தது. நீர்ப்பரப்பிற்குச் சற்று கீழே சிறிதும் நிறுத்தாமல் அவன் நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் கொண்டிருந்தான்.


இரட்டை உதடுகளைக் கொண்ட, இறுக மூடியிருக்கும் தாடை எலும்புகளுக்குள் எட்டு வரிசைப் பற்களும் உள்நோக்கி சாய்ந்து நின்றிருந்தன. பெரும்பாலான சுறா மீன்களுக்கும் இருப்பதைப்போல சாதாரண பிரமிடுகளைப்போல இருக்கக் கூடிய பற்கள் அல்ல அவை. பறவைகளின் நகங்களைப் போல- வளையும் போது அவை மனித விரல்களைப்போல இருந்தன. கிழவனுடைய விரல்கள் அளவிற்கு அந்த பற்கள் நீளமாக இருந்தன. அவற்றின் இரு பக்கங்களிலும் சவரக் கத்தியைப் போல கூர்மையான ஓரங்கள் இருந்தன. கடலில் உள்ள எல்லா வகையான மீன்களையும் சாப்பிடுகிற அளவிற்கு படைக்கப்பட்ட மீன் அது. மிகுந்த வேகமும் பலமும் ஆக்கிரமிக்கக்கூடிய உறுப்புகளும் இருந்ததால், அவற்றிற்கு எதிரிகள் என்று யாருமில்லை. ரத்த வாசனை புதிதாக வந்தவுடன், அவனுடைய வேகம் அதிகமானது. அவனுடைய நீல நிறத்தைக் கொண்ட மேல் சிறகுகள் நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன.

சுறா மீனின் அந்த வருகையைப் பார்த்தவுடனே, பயம் என்ற ஒன்று சிறிதுகூட இல்லாதவனும், ஆசைப்படுவதை உடனடியாக செயல்படுத்தக் கூடியவனுமாக அவன் இருக்கிறான் என்ற உண்மையை கிழவன் தெரிந்துகொண்டான். சுறா மீன் வந்திருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் குத்தீட்டிக் கயிறைக் கட்டி தயார் பண்ணினான். மீனை இறுகக் கட்டுவதற்காக அறுத்தெடுத்திருந்ததால், கயிறுக்கு நீளம் குறைவாக இருந்தது.

இப்போது கிழவனின் தலைக்கு தெளிவும் சுயஉணர்வும் வந்து சேர்ந்த விட்டிருந்தன. தெளிவான தீர்மானம் உள்ளுக்குள் இருந்தாலும், மிகவும் குறைவான எதிர்பார்ப்பே இருந்தது. அது நீண்ட நேரம் நிலை பெற்று இருக்க முடியாத அளவிற்கு நல்லதாக இருந்தது. சுறா மீன் நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் பெரிய மீனை ஒரு பார்வை பார்த்தான். “இதுவும் ஒரு கனவாக இருக்கலாம்.” அவன் நினைத்தான்: “என்னை ஆக்கிரமிப்பதிலிருந்து அவனைத் தடுக்க முடியாது. ஆனால், என்னால் அவனைப் பிடிக்க முடியும். டென்ட்யூஸோ...” அவன் நினைத்தான்: “உன்னுடைய தாய்க்கு அதிர்ஷ்டமில்லை.”

சுறா மிகவும் வேகமாகப் பாய்மரத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது. அவன் மீனை ஆக்கிரமித்தபோது, அவனுடைய திறந்த வாயையும் வினோதமான கண்களையும் கிழவன் பார்த்தான். வாலுக்குச் சற்று மேலே இருந்த மாமிசத்தில் பற்கள் அழுத்தும் “கரகரா” சத்தத்தை கிழவன் கேட்டான். சுறாவின் தலை நீருக்குள் இருந்து உயர்ந்து மேலே தெரிந்தது. முதுகு நீருக்கு வெளியே தெரிந்தது. பெரிய மீனின் உடலில் இருந்து தோலும் மாமிசமும் தனித்தனியாகப் பிரியக்கூடிய சத்தத்தை கிழவனால் கேட்க முடிந்தது. சுறாவின் கண்களுக்கு நடுவில் இருக்கக் கூடிய கோடும் மூக்கும், பின்னாலிருந்து ஆரம்பிக்கக் கூடிய கோடும் ஒன்றாகச் சந்திக்கக் கூடிய இடத்தில் குத்தீட்டியை எறிய வேண்டும் என்று கிழவன் நினைத்தான். ஆனால், அப்படிப்பட்ட கோடுகளை அங்கு பார்க்க முடியவில்லை. கூர்மையான, நீல நிறத்தைக் கொண்ட பெரிய தலையையும், பெரிய கண்களையும், “கரகரா” என்ற சத்தத்தை உண்டாக்கிக் கொண்டு, ஆக்கிரமித்து, எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்த தாடை எலும்புகளையும் மட்டுமே அங்கு பார்க்க முடிந்தது. ஆனால், மூளை இருக்குமிடம் அது. அங்குதான் கிழவன் தாக்கினான். முழு பலத்தையும் ஒன்று சேர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த கைகளால் கிழவன் குத்தீட்டியை எறிந்தான். அதை எதிர்பார்ப்புடன் எறியவில்லையென்றாலும், நிச்சயமான தீர்மானத்துடனும் கடுமையான பகை உணர்வுடனும் அவன் எறிந்தான் என்பதுதான் உண்மை.

சுறா மீன் நீர்ப்பரப்பில் வட்டம் போட்டது. அவனுடைய கண்கள் உயிரற்று இருப்பதை கிழவன் பார்த்தான். கயிறின் இரண்டு சுருக்குகளில் தன்னைத்தானே கட்டிக்கொண்டு மீண்டுமொரு முறை அவன் வட்டம் சுற்றினான். அவன் இறந்துவிட்டான் என்ற விஷயம் கிழவனுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்வதற்கு சுறா தயாராக இல்லை. பிறகு மல்லாந்து படுத்தும், வாலால் நீரில் அடித்துக்கொண்டும், தாடை எலும்புகளை ஒன்று சேர்த்துக் கடித்துக் கொண்டும் ஒரு வேகமாகச் செல்லும் படகைப்போல சுறா நீரை உழுது புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. அவன் வாலால் அடித்துக் கொண்டிருந்த நீரின் பகுதி வெள்ளை நிறமாக ஆனது. உடலின் முக்கால் பகுதியையும் நீருக்கு மேலே பார்க்க முடிந்தது. தொடர்ந்து கயிறு இழுக்கப்பட்டு, துடித்து, அறுந்தும் போனது. சிறிது நேரம் சுறா நீர்ப்பரப்பில் எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடப்பதை கிழவன் பார்த்தான். பிறகு அவன் மெதுவாகக் கீழே தாழ்ந்து சென்றான்.

“நாற்பது ராத்தல் மாமிசத்தை அவன் எடுத்துக் கொண்டு போய்விட்டான்.” கிழவன் உரத்த குரலில் கூறினான். “அதோடு சேர்ந்து அவன் என்னுடைய குத்தீட்டியையும் எல்லா கயிறுகளையும் கொண்டு போய் விட்டான். இப்போது இதோ என் மீன் மீண்டும் ரத்தத்தைச் சிந்தியிருக்கிறது. இனி மற்ற மீன்களும் தாமதிக்காமல் வரும்.”

மீனின் உடல் பகுதிகள் பலவும் இழக்கப்பட்டு விட்டதால் அவனை நேரடியாகப் பார்க்க கிழவன் விரும்பவில்லை. மீன் தாக்கப்பட்டபோது, அது அவனையே தாக்கியதைப்போல இருந்தது.

“ஆனால், என் மீனை தாக்கிய சுறாவை நான் கொன்றுவிட்டேன்.” அவன் நினைத்தான்: “நான் பார்த்தவற்றிலேயே மிகப் பெரிய டென்ட்யூஸோ அவன்தான். நான் உண்மையாகவே பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறேனா என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.”

“உயிருடன் இருக்க முடியாத அளவிற்கு நல்லதே நடந்திருக்கிறது.” கிழவன் நினைத்தான்: “இது ஒரு கனவாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நான் மனதில் நினைக்கிறேன். இந்த மீனைத் தூண்டிலின் கொக்கியில் சிக்க வைக்காமல் நான் செய்தித் தாள்களின்மீது படுக்கையில் தனியாகப் படுத்துக் கொண்டிருந்தால்...?”

“ஆனால், மனிதன் படைக்கப்பட்டது தோல்வி அடைவதற்காக அல்ல.” கிழவன் சொன்னான்: “மனிதனை அழிக்க முடியும். ஆனால், அவனைத் தோல்வியடையச் செய்ய முடியாது. எனினும், மீனைக் கொன்றதில் எனக்கு வருத்தம் உண்டு. இனி வரப்போவது மோசமான காலம். என் கையில் குத்தீட்டிகூட இல்லை. டென்ட்யூஸோ பயங்கரமானவனும் திறமைசாலியும் பலம் கொண்டவனும் புத்திசாலியும் ஆவான். ஆனால், அவனைவிட புத்திசாலி நான். ஒருவேளை, அப்படி இல்லாமல் இருக்கலாம். என் கையில் மேலும் நல்ல ஆயுதங்கள் இருக்கின்றன என்பது காரணமாக இருக்கலாம்.”

“சிந்தனை செய்யாமல் இரு, கிழவா!” அவன் உரத்த குரலில் கூறினான்: “இதே மாதிரி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிரு. அதுவாக எப்போது வருகிறதோ, அதை எடுத்துக் கொள்.”


“எனினும், நான் சிந்தித்தே ஆக வேண்டும்.” அவன் நினைத்தான்: “காரணம்- சிந்தனைகள்தான் இறுதியாக எஞ்சியிருக்கக் கூடியது. அதுவும் பேஸ் பாலும். மீனின் மூளையில் நான் உண்டாக்கிய பாதிப்பைப் பற்றி மிகப் பெரிய மனிதரான டிமாகியோ என்ன நினைப்பார்? அது அந்த அளவிற்கு மிகப் பெரிய ஒரு காரியமில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதைச் செய்ய முடியும். ஆனால், எலும்பால் உண்டாகக் கூடிய பாதிப்பைப்போல பெரிய ஒரு நோய் என் கைகளுக்கு உண்டாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்னால், அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சிக்கிக் கொண்ட மீன் குத்திய சந்தர்ப்பத்தைத் தவிர, வேறு எந்தச் சமயத்திலும் என் பாதத்திற்கு பிரச்சினையே உண்டானதில்லை. நீந்தும்போது நான் மீனின்மீது காலை வைத்திருந்தேன். காலின் கீழ்ப்பகுதி மரத்துப்போய் தாங்க முடியாத அளவிற்கு வேதனையைத் தந்தது.”

“உற்சாகத்தைத் தரக் கூடிய எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிரு, கிழவா.” அவன் சொன்னான்: “இப்போது ஒவ்வொரு நிமிடமும் நீ வீட்டை நெருங்கிப் போய்க் கொண்டிருக்கிறாய். நாற்பது ராத்தல் மாமிசம் குறைந்து விட்டிருப்பதால், உன்னுடைய பயணம் மிகவும் எளிதாக இருக்கிறது.”

நீர்ப் பெருக்கின் உட்பகுதியை அடையும்போது என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அவன் நன்கு அறிந்திருந்தான். ஆனால், இப்போது இனிமேல் செய்வதற்கு எதுவுமில்லை.

“இருக்கிறது... செய்வதற்கு இருக்கிறது.” கிழவன் குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “துடுப்புகளில் ஒன்றின் கைப்பிடியில் என்னுடைய கத்தியை வைத்துக் கட்டலாம்.”

சுக்கானின் கைப்பிடியை தன் கைக்கு அடியிலும் பாய்மரத்தின் கயிறை பாதங்களுக்கு அடியிலும் வைத்த அவன் அந்த மாதிரிதான் செய்தான்.

“பார்...” அவன் சொன்னான்: “நான் இப்போதும் கிழவன்தான். ஆனால், எந்த ஆயுதமும் இல்லாதவன் இல்லை.”

இளம் காற்று உற்சாகத்தைத் தந்தது. கிழவன் சந்தோஷத்துடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் மீனின் முன்பகுதியை மட்டும் பார்த்தான். சில எதிர்பார்ப்புகள் திரும்பவும் வந்தன.

“எதிர்பார்க்காமல் இருப்பது முட்டாள்தனமானது.” அவன் நினைத்தான்: “அது மட்டுமல்ல- அது ஒரு பாவம் என்று நான் நினைக்கிறேன். பாவத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. பாவம் இல்லாமலே தேவையான அளவிற்கு பிரச்சினைகள் இருக்கத்தானே செய்கின்றன! போதாததற்கு அதைப் பற்றி எனக்கு ஒரு புரிதலும் இல்லை.

எனக்கு பாவத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அதைப் பற்றி எனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. மீனைக் கொல்வது என்பது பாவமான செயலாக இருக்கலாம். என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் வேறு ஏராளமான மனிதர்களுக்கு உணவு கொடுப்பதற்கும்தான் நான் அவனைக் கொன்றிருந்தாலும் அது பாவம்தான் என்பதே என்னுடைய கருத்து. அப்படியென்றால், எல்லா விஷயங்களுமே பாவமானவைதான். பாவத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது. சிந்திப்பதற்கு நேரம் மிகவும் தாண்டி விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல- சிந்திப்பதற்கு பணத்தைத் தந்து ஏற்பாடு செய்திருக்கும் மனிதர்கள்கூட இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றி சிந்திக்கட்டும். மீன், மீனாக இருக்க வேண்டும் என்று பிறவி எடுத்ததைப் போல, நீ பிறவி எடுத்தது மீனவனாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான். மிகப் பெரிய மனிதரான டிமாகியோவின் தந்தை மீன் பிடிப்பவராக இருந்ததைப்போல சான்பெட்ரோவும் மீன் பிடிப்பவராக இருந்தார்.”

ஆனால், தன்னையும் சேர்த்து எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு கிழவன் விருப்பப்பட்டான். படிப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வானொலிகூட இல்லை. அதனால் அவன் அதிகமாக சிந்தித்தான். பாவத்தைப் பற்றி அவன் சிந்தித்துக் கொண்டேயிருந்தான். “உயிரை நிலை நிறுத்திக் கொள்வதற்கோ, உணவாக்கி விற்பதற்கோ மட்டுமல்ல நீ மீனைக் கொன்றது.” அவன் நினைத்தான்: “பெருமைக்காகத்தான் நீ அவனைக் கொன்றாய். காரணம்- நீ ஒரு மீனவனும்கூட. அவன் உயிருடன் இருந்தபோதும், அதற்குப் பிறகும் நீ அவன்மீது அன்பு வைத்திருந்தாய். நீ அவன்மீது அன்பு வைத்திருக்கும் பட்சம், அவனைக் கொல்வது பாவம் அல்ல. அப்படியென்றால், அதைவிட வேறு ஏதோவா?”

“கிழவா, நீ அளவுக்கும் அதிகமாகச் சிந்திக்கிறாய்.” அவன் உரத்த

குரலில் கூறினான்.

“ஆனால், சென்ட்யூஸோவைக் கொல்வதை நினைத்து நீ சந்தோஷப்பட்டாய்.” -அவன் நினைத்தான்: “நீ செய்வதைப்போல, உயிருள்ள மீனை சாப்பிட்டுத்தான் அவனும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் இறந்த மீனை சாப்பிடுபவன் அல்ல. சில சுறா மீன்களைப் போல பயணித்துக் கொண்டிருக்கும் தீனிப் பண்டாரம் இல்லை. அவன் அழகானவன்... மிக உயர்ந்த தன்மையைக் கொண்டவன். அவனுக்கு பயமென்றால் என்னவென்று தெரியாது.”

“என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் நான் அவனைக் கொன்றேன்.” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “நான் அவனை எப்படி கொல்ல வேண்டுமோ, அப்படிக் கொன்றேன்.”

“அது மட்டுமல்ல...” அவன் சிந்தித்தான்: “ஒரு விதத்தில் இல்லையென்றாலும் இன்னொரு விதத்தில் எல்லாரும் கொல்லப்படப் போகிறவர்கள்தான். என் உயிரை நிலைநிறுத்தி இருக்கும்படி செய்யக்கூடிய மீன் பிடிக்கும் செயல், அதே கடமை உணர்வுடன் என்னைக் கொல்லவும் செய்கிறது. சிறுவன் என்னை உயிருடன் இருக்கும்படி செய்திருக்கிறான். என்னை நானே தேவையில்லாமல் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.”

கிழவன் படகின் ஒரு பக்கமாக சாய்ந்தான். சுறா மீன் கடித்தெடுத்த இடத்திலிருந்து நீட்டிக் கொண்டிருந்த ஒரு மாமிசத் துண்டை அவன் பிடித்து இழுத்தான். அந்தத் துண்டை மென்று அதன் சிறப்பையும் ருசியையும் உணர்ந்தான். மாமிசத்தைப்போல உறுதியாகவும் ஈரத் தன்மையுடனும் இருந்தது. ஆனால், அதன் நிறம் சிவப்பாக இல்லை. அதில் நார்கள் இல்லை. சந்தையில் அதற்கு மிகவும் உயர்ந்த விலை கிடைக்கும் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், நீரிலிருந்து அதன் வாசனையை நீக்குவதற்கு எந்தவொரு வழியும் தெரியவில்லை. மிகவும் மோசமான காலம் வரப்போகிறது என்பதை கிழவன் தெரிந்து கொண்டிருந்தான்.

இளம் காற்று நிற்காமல் வீசிக் கொண்டிருந்தது. காற்று வட கிழக்கு திசையை நோக்கி சற்று மாறி வீசிக் கொண்டிருந்தது. காற்று வீசுவதிலிருந்து நிற்கப் போவதில்லை என்பதுதான் அதன் அர்த்தம் என்பது கிழவனுக்குத் தெரியும். அவன் எதிர்பார்ப்புடன் முன்னோக்கி கண்களைப் பதித்தான். ஆனால், பாய்மரங்களையோ, கப்பலின் பகுதிகளையோ, ஏதாவது கப்பலிலிருந்து வரக்கூடிய புகையையோ அவனால் பார்க்க முடியவில்லை. படகின் வளைவான பகுதிக்கு மேலே இரண்டு பக்கங்களிலும் குதித்துக் கொண்டிருந்த பறக்கும் மீன்களையும் கடல் பாசிகளின் மஞ்சள் நிற கூட்டத்தையும் மட்டுமே பார்க்க முடிந்தது. அவனால் ஒரு பறவையைக்கூட பார்க்க முடியவில்லை.


பாய்மரத்திற்கு அருகில் ஓய்வெடுத்துக் கொண்டும், மார்லின் மீனின் ஒரு துண்டு மாமிசத்தை மென்று கொண்டும் இரண்டு மணி நேரம் கிழவன் படகைச் செலுத்தினான். அப்படி ஓய்வெடுத்து உடலில் பலத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, அந்த இரண்டு சுறா மீன்களில் முதல் சுறா மீனை அவன் பார்த்தான்.

“அய்...” - கிழவன் உரத்த குரலில் கூவினான். இந்த வார்த்தையை மொழிபெயர்த்துக் கூற முடியாது. கையில் ஆணி நுழைந்து பலகையில் ஊன்றும்போது, மனிதன் தன்னையே அறியாமல் உண்டாக்கக் கூடிய ஒரு சத்தத்தைப் போன்றது அது.

“கலானோஸ்...” கிழவன் உரத்த குரலில் சொன்னான். முதல் சிறகிற்குப் பின்னால் இரண்டாவதாக ஒன்று உயர்ந்து வருவதை அவன் பார்த்தான். தவிட்டு நிறத்தில் முக்கோண வடிவத்திலிருந்த சிறகுகளையும், வாலின் வீசியடிப்பதைப் போன்ற அசைவுகளையும் பார்த்து அவை கரண்டியைப் போன்ற மூக்கைக் கொண்ட சுறாமீன்கள் என்பதை அடையாளம் கண்டு கொண்டான். அவற்றுக்கு ரத்த வாசனை கிடைத்து விட்டிருந்தது. அது அவற்றை உற்சாகமடையச் செய்திருந்தது. அதிகமான பசியின் காரணமாக அவற்றுக்கு வாசனை இல்லாமற் போய், ஆவேசம் காரணமாக வாசனை மீண்டும் கிடைத்திருந்தது. அவை எப்போதும் மிகவும் அருகிலேயே இருந்தன.

கிழவன் நேரத்தை வீண் செய்யாமல் பாய்மரத்தை இணைத்துக் கட்டி சுக்கானை அழுத்தி நிறுத்தினான். பிறகு கத்தியைக் கட்டி விட்டிருந்த துடுப்பைக் கையிலெடுத்தான். முடிந்த வரைக்கும் மெதுவாகத் துடுப்பைப் போட்டான். காரணம்- கைகள் வேதனையுடன் நிம்மதி கிடைக்கட்டுமே என்பதற்காக அவற்றைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தான். பின்னர் கைகளை இறுக மூடிக் கொண்டான். அப்போது கைகளே வேதனையை ஏற்றெடுத்துக் கொண்டன. அதிலிருந்து அவை பின்வாங்காது. கிழவன் சுறா மீன்கள் வருவதைப் பார்த்தான். அவற்றின் அகலமான பரவியிருக்கும் கரண்டியைப் போன்ற தலையையும், நுனி வெண்மையாக இருந்த அகலமான காதுகளையும் அவனால் பார்க்க முடிந்தது. வெறுப்பை உண்டாக்கக் கூடிய சுறா மீன்கள் அவை. கெட்ட நாற்றத்தை அவை கொண்டிருந்தன. பிணத்தை தின்னக் கூடியவையாகவும், கொலை செய்யக் கூடியவையாகவும் அவை இருந்தன. பசி அதிகமாக வாட்டி எடுக்கும்போது, படகின் நங்கூரமாக இருந்தாலும், துடுப்பாக இருந்தாலும் அவை அவற்றைக் கடித்து ஒரு வழி பண்ணிவிடும். நீர்ப் பரப்பில் தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் கால்களையும் பிற பகுதிகளையும் கடித்துத் துண்டாக்குவதுகூட இந்த சுறா மீன்கள்தான். பசியாக இருக்கும்போது, கடலில் மனிதனைக்கூட அவை ஆக்கிரமிக்கும். மீன் ரத்தத்தின் வாசனையோ ஈர்ப்போகூட மனிதனின் உடலில் இருக்க வேண்டும் என்பதில்லை.

“அய்...” கிழவன் சொன்னான்: “கலானோஸ், அருகில் வா... கலானோஸ்...”

அவை வந்தன. ஆனால், “மாக்கோ” சுறா மீன் வந்ததைப் போல அவற்றின் வரவு இல்லை. ஒரு மீன் திரும்பி படகுக்கு அடியில் போய் மறைந்து கொண்டது. அது மீனைத் தள்ளி, கடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது படகு அசைவதை கிழவன் தெரிந்து கொண்டான். இன்னொரு சுறாமீன் கிழவனை மஞ்சள் நிறக் கண்களால் பார்த்தது. பிறகு முன்பு கடித்த பகுதியை ஆக்கிரமிப்பதற்காக அரை வட்ட வடிவத்தில் இருந்த வாயைத் திறந்து வைத்துக் கொண்டு மிகவும் வேகமாகப் பாய்ந்து வந்தது. அவனுடைய தவிட்டு நிறத்தைக் கொண்ட தலையின் மேலும், பின்பகுதியிலும், மூளை நடு எலும்புடன் சேரக் கூடிய இடத்திலும் கோடு தெளிவாகத் தெரிந்தது. கிழவன் துடுப்புக்கு மேலே வைத்துக் கட்டிய கத்தியை அந்த கோட்டில் குத்தி இறக்கினான். கத்தியை இழுத்துப் பிடுங்கி, சுறாவின் மஞ்சள் நிற பூனைக் கண்களில் மீண்டும் இறக்கினான். சுறா, மீனிடமிருந்த பிடியை விட்டது. தான் கடித்தெடுத்த மீன் துண்டை விழுங்கிக் கொண்டே அது மரணத்தைத் தழுவியது.

இன்னொரு சுறா, மீனின்மீது தன்னுடைய தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், படகு அப்போதும் அசைந்து கொண்டிருந்தது. கிழவன் காற்றுப் பாயை விடுதலை செய்தான். அப்படிச் செய்யும்போது, படகு இரு பக்கங்களிலும் இப்படியும் அப்படியுமாக ஆடி, சுறா வெளியே வந்துவிடும் என்று அவன் கணக்குப் போட்டான். சுறாவைப் பார்த்ததும் கிழவன் படகின் ஒரு பக்கம் குனிந்து அவனை பலமாகக் குத்தினான். மாமிசமிருந்த பக்கத்தில்தான் குத்தினான். தோல் மிகவும் கனமாக இருந்ததால், கத்தி ஆழமாக இறங்கவில்லை. அந்த தாக்குதலின் மூலம் கிழவனின் கைகள் மட்டுமல்ல- தோள்களும் வலித்தன. சுறா தன் தலையை வெளியே காட்டியவாறு மிகவும் சீக்கிரமே வெளியே வந்தது. அவனுடைய மூக்கு நீரிலிருந்து உயர்ந்து மீனை நோக்கி நகர்ந்த அதே நிமிடத்தில், கிழவன் சுறாவின் வெளியே தெரிந்து கொண்டிருந்த தலையின் நடுப்பகுதியில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். கத்தியை இழுத்துப் பிடுங்கி, மீண்டும் சரியாக அதே இடத்தில் கிழவன் ஓங்கிக் குத்தினான். தாடை எலும்புகள் மூடப்பட்டு அவன் மீனின்மீது கடித்துக்கொண்டே தொங்கிக் கொண்டிருந்தான். அவன் சுறாவின் இடது கண்ணில் கத்தியைக் குத்தி இறக்கினான். அதற்குப் பிறகும் அவன் அங்கேயே கடித்தவாறு தொங்கிக் கிடந்தான்.

“நீ விடுவதாக இல்லை.... அப்படித்தானே?” கிழவன் கேட்டான். சுறாவின் முதுகெலும்புக்கும் மூளைக்கும் நடுவில் அவன் கத்தியை அழுத்தி இறக்கினான். இந்த தாக்குதல் மிகவும் எளிதாக இருந்தது. எலும்புகள் நொறுங்குவதைப் போல அவனுக்குத் தோன்றியது. கிழவன் துடுப்பைத் திருப்பிப் பிடித்தான். பிறகு தாடை எலும்புகளைத் திறப்பதற்காக கத்தியை சுறாவின் வாய்க்குள் நுழைத்தான். கத்தியை வாய்க்குள் அழுத்தித் திணித்தவுடன், சுறா தன்னுடைய பிடியை விட்டு கீழே சென்றது. அவன் சொன்னான்: “போ... கலானோ... ஒரு மைல் ஆழத்திற்குச் சென்று உன் நண்பனை- ஒருவேளை அது உன்னுடைய அன்னையாகக்கூட இருக்கலாம்... பார்...”

கிழவன் கத்தியின் வாய்ப் பகுதியைத் துடைத்து துடுப்பைக் கீழே வைத்தான். படகின் பாயில் காற்று நுழைந்து நிறைவதை அவன் பார்த்தான். படகை அதன் போக்கிலேயே அவன் போகவிட்டான்.

“மீனின் கால் பகுதி மாமிசத்தை அவை கொண்டு போயிருக்கும். மிகவும் நல்ல மாமிசத்தை...” கிழவன் குரலை உயர்த்திக் கொண்டு சொன்னான்: “இது வெறும் ஒரு கனவாக மட்டுமே இருந்திருக்கக் கூடாதா என்றும், அவனை நான் எந்தச் சமயத்திலும் தூண்டிலில் சிக்க வைத்துப் பிடிக்கவே இல்லையென்றும் நான் மனதில் நினைக்கிறேன். மீனே, எனக்கு இதில் வருத்தம் இருக்கிறது.


அது எல்லா விஷயங்களையும் தவறாக ஆக்குகின்றன.” அவன் பேச்சை நிறுத்தினான். இப்போது மீனைப் பார்ப்பதற்கு அவன் விரும்பவில்லை. ரத்தம் வழிந்ததாலும், நீரில் நீண்ட நேரம் கிடந்ததாலும் அவனுக்கு கண்ணாடியின் பின்பகுதியில் பூசப்பட்டிருக்கும் வெள்ளி நிறம் வந்து சேர்ந்திருந்தது. உடலில் இருந்த கோடுகள் அப்போதும் தெளிவாகத் தெரிந்தன.

“மீனே. நான் அந்த அளவிற்கு தூரத்திற்குப் போயிருக்கக் கூடாது.” அவன் சொன்னான்: “எனக்கும் நல்லது நடக்கவில்லை. உனக்கும் நல்லது நடக்கவில்லை. என்னை மன்னித்து விடு, மீனே.”

“இனி... கத்தி கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, கட்டு அறுந்து போய் விட்டதா என்பதைப் பார்.” அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான்: “அதற்குப் பிறகு கையைச் சரி பண்ணி வை. ஏனென்றால், இனியும் சில வருவதற்கு இருக்கிறது...”

“கத்தியைத் தீட்டுவதற்கு ஒரு கல் இருந்தால்...” துடுப்பின் கைப்பிடியில் இருந்த கட்டைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்துவிட்டு கிழவன் சொன்னான்: “நான் ஒரு கல்லைக் கொண்டு வந்திருக்க வேண்டும்...”

“நீ ஏராளமான சாமான்களை உன்னுடன் கொண்டு வந்திருக்க வேண்டும்.” அவன் நினைத்தான்: “ஆனால், நீ எதையும் கொண்டு வரவில்லையே!”

“கிழவா, உன்னிடம் என்னவெல்லாம் இல்லை என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரமில்லை இது. இங்கு இருக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்.”

“நீ எனக்கு தாராளமாக நல்ல அறிவுரைகளைக் கூறுகிறாய்.” அவன் உரத்த குரலில் சொன்னான்: “அறிவுரைகளால் நான் வெறுப்படைந்து போய் இருக்கிறேன்.”

அவன் சுக்கானை கைக்கு கீழே அழுத்திப் பிடித்தான். படகு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்க, இரு கைகளையும் நீருக்குள் மூழ்க வைத்தான்.

“கடைசியாக வந்த சுறா மீன் எந்த அளவிற்கு கொண்டு போனது என்ற விஷயம் கடவுளுக்குத் தெரியும்.” அவன் சொன்னான்: “ஆனால், படகின் எடை முன்பைவிட மிகவும் குறைந்து போய்விட்டது.” மீனின் உடலின் பகுதிகள் கிழிந்து தாறுமாறாக்கப்பட்ட கீழ்ப்பகுதியைப் பற்றி சிந்திப்பதற்கு அவன் விரும்பவில்லை. சுறா மீனின் ஒவ்வொரு குதித்தலிலும் தாவலிலும் மாமிசம் கடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் இதற்குள் எல்லா சுறா மீன்களுக்காகவும் கடலின் தேசிய பாதை அளவிற்கு விசாலமான ஒரு ரத்தத்தாலான பாதை போடப்பட்டிருக்கிறது என்பதும் கிழவனுக்குத் தெரியும்.

“ஒருவனுக்கு குளிர் காலத்திற்கு முழுமையாகப் போதும் என்று கூறக் கூடிய அளவிற்கு அந்த மீன் இருந்தது.” கிழவன் நினைத்தான்: “இனி அதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிரு. அவனிடம் எஞ்சியிருக்கும் மாமிசத்தை பத்திரமாக பாதுகாக்கக் கூடிய வகையில் கைகளைச் சரி பண்ணிவை. கடல் நீரில் கலந்திருக்கும். ரத்தத்தின் வாசனையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என் கைகளில் இருக்கும் வாசனை எந்த அளவிற்கு மிகவும் சாதாரணம் என்பது மட்டுமல்ல- கைகளிலிருந்து அப்படியொன்றும் ரத்தம் அதிகமாக வெளியேறவில்லை- குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி காயம் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. ரத்தம் வெளியே வந்தது- இடது கையை மரத்துப் போகும் தன்மையிலிருந்து காப்பாற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.”

“இப்போது நான் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பது?” அவன் நினைத்தான். “எதுவும் இல்லை. அடுத்த சுறா மீன்களின் வருகைக்காக காத்திருப்பதைத் தவிர, வேறு எதுவும் சிந்திப்பதற்கு இல்லை. இது ஒரு கனவாக இருந்திருக்கக் கூடாதா என்று நான் மனதில் நினைக்கிறேன். ஆனால், யாருக்குத் தெரியும்? எல்லா விஷயங்களும் நல்ல முறையில் முடிந்தன என்று வரலாம்.”

தொடர்ந்து தனியாக இருந்த ஒரு கரண்டியைப் போன்ற மூக்கைக் கொண்ட சுறா மீன் வந்தது. நீர்த்தொட்டிக்குள் தலையை நுழைப்பதற்கு வரக் கூடிய ஒரு பன்றியைப்போல அவனுடைய வரவு இருந்தது- உங்களுடைய தலையை நுழைக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு பெரிய வாய் பன்றிக்கு இருக்கும்பட்சம் மீனைத் தாக்குவதற்கு கிழவன் அவனுக்கு நேரம் தந்தான். பிறகு துடுப்பில் கட்டப்பட்டிருந்த கத்தியை அவனுடைய மூளைக்குள் குத்தி இறக்கினான். ஆனால், சுறாமீன் பின்னோக்கி திடீரென்று திரும்பி உருண்டு புரண்டு விலகிச் சென்றது. கத்தியின் வாய்ப் பகுதி அறுந்துவிட்டது.

கிழவன் படகைக் கட்டுப்படுத்துவதில் மூழ்கினான். அந்த பெரிய சுறா மீன் நீருக்குள் மூழ்குவதை அவன் பார்க்கக்கூட இல்லை. முதலில் அவன் தன்னுடைய முழு உருவத்தையும் வெளியே காட்டினான். பிறகு அந்த உருவம் சிறியதாகவும், இறுதியில் ஒரு துகளைப் போலவும் தெரிந்தது. அந்த காட்சி கிழவனை எப்போதும் ரசிக்கச் செய்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது அவன் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

“என் கையில் பாய்மரம் இருக்கிறது.” அவன் சொன்னான்: “ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. இரண்டு துடுப்புகளும் சுக்கானும் சிறிய கொம்பும் என்னிடம் இருக்கின்றன.”

“இப்போது அவை என்னை கீழே விழச் செய்திருக்கின்றன.” அவன் நினைத்தான்: “சுறா மீன்களை அடித்துக் கொல்ல முடியாத அளவிற்கு வயதான மனிதனாக நான் ஆகிவிட்டேன். எனினும் துடுப்புகளும் சிறிய கொம்பும் சுக்கானும் இருக்கும் காலம்வரை நான் முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.”

கிழவன் மீண்டும் கைகளை நீரில் நனைத்தான். மதிய நேரம் தாண்டி நீண்ட நேரமாகி விட்டிருந்தது. கடலையும் வானத்தையும் தவிர, அவன் வேறு எதையும் பார்க்கவில்லை. வானத்தில் முன்பைவிட காற்று அதிகமாக இருந்தது. சீக்கிரமே கரையைப் பார்க்க முடியும் என்று கிழவன் நினைத்தான்.

“கிழவா, நீ மிகவும் தளர்ந்து போய்விட்டாய்.” அவன் சொன்னான்: “உள்ளுக்குள் நீ களைத்துப் போனவன்தான்.”

சூரியனின் அஸ்தமனத்திற்குச் சிறிது முன்பு வரை சுறா மீன்கள் மீண்டும் மீனைத் தாக்கவில்லை.

தவிட்டு நிறத்தைக் கொண்ட சிறகுகள் முன்னோக்கி வந்து கொண்டிருப்பதை கிழவன் பார்த்தான். மீன் நீரில் உண்மையாகவே உண்டாக்கி விட்டிருந்த பரவலான ரத்தப் பாதையின் வழியாகத்தான் அவற்றின் பயணம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவற்றின் நோக்கம் ரத்த வாசனை அல்ல. ஒன்றாகச் சேர்ந்து நீந்தியவாறு படகைத் தேடி அவை வந்து கொண்டிருந்தன.

கிழவன் சுக்கானை அழுத்திக்கொண்டு, காற்றுப் பாயின் கயிறைக் கட்டி, சிறிய கழியை எடுப்பதற்காக பாய்மரத்தை நோக்கி கையை நீட்டினான். இரண்டரை அடி நீளத்தில் அறுத்தெடுக்கப்பட்ட, ஒடிந்துபோன துடுப்பின் கைப்பிடியே அது. கைப்பிடியின் வளையத்தின் மூலம் ஒரு கையால் மட்டுமே அதை பலன் கிடைக்கிற வகையில் பயன்படுத்த அவனால் முடியும். சுறா மீன்கள் வருவதைப் பார்த்துக்கொண்டே அவன் தன் வலது கையை அதில் இறுக பிடித்தான். அவை இரண்டுமே “கவானோ” இனத்தைச் சேர்ந்தவையே.


“முதல் சுறா மீனுக்கு ஒரு நல்ல மாமிசத் துண்டை வாய்க்குள் கொண்டு போவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மூக்கின் நுனியிலோ தலைக்கு மேலேயோ அடி கொடுக்க வேண்டும்.” அவன் நினைத்தான்.

இரண்டு சுறா மீன்களும் ஒன்றாகச் சேர்ந்து படகை நெருங்கி விட்டிருந்தன. மிகவும் அருகில் வந்து சேர்ந்தவன் வாயைத் திறந்து, மீனின் வெள்ளி நிறத்திலிருந்த உடலின் பகுதியை அழுத்துவதை கிழவன் பார்த்தான். அவன் சிறிய கழியை உயர்த்தி சுறா மீனின் அகலமான தலையின்மீது ஓங்கி அடித்தான். கழி கீழே பட்டபோது, ஏதோ ரப்பரைத் தொடுவதைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு உண்டானது. எலும்பின் கடினத் தன்மையையும் அவன் உணராமல் இல்லை. சுறா, மீனின்மீது இருந்த தன்னுடைய பிடியை விட்டு விலகியபோது அவன் மூக்கின் நுனியை நோக்கி மேலும் ஒரு தடவை பலத்துடன் அடித்தான்.

இன்னொரு சுறா மீன் நெருங்கியும் சற்று விலகியும் மாறி மாறி செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது இதோ தாடை எலும்புகளைத் திறந்து கொண்டு மீண்டும் வந்திருக்கிறது. அவன் மீனை ஆக்கிரமித்து தாடை எலும்புகளை மூடியபோது, அவனுடைய வாயின் ஓரத்தின் வழியாக மாமிசத்துண்டுகள் வெள்ளை நிறத்தில் சிதறுவதை கிழவனால் பார்க்க முடிந்தது. அவன், சுறா மீனுக்கு நேராக குனிந்து, தலையைப் பார்த்து அடித்தான். சுறா மீன் அவனைச் சிறிது பார்த்துக் கொண்டே மாமிசத்திலிருந்த தன்னுடைய பிடியை விட்டது. அவன் கடித்தெடுத்த கனமான ரப்பரைப் போனற் மாமிசத் துண்டை விழுங்குவதற்காக தூரத்தை நோக்கி விலகிச் சென்றபோது, கிழவன் கழியைத் தாழ்த்தி, வீசி அடித்தான்.

“வா, கலானோ!” கிழவன் உரத்த குரலில் சொன்னான்: “இன்னுமொரு முறை வா.”

சுறாமீன் வேகமாகப் பாய்ந்து வந்தது. தாடை எலும்புகள் மூடிக் கொண்டிருக்க, கிழவன் அவனை ஓங்கி அடித்தான். கழியை முடிந்த வரைக்கும் உயர்த்தி, ஓங்கி ஓங்கி அடித்தான். இந்த முறை அடி மூளைக்குக் கீழே இருந்த எலும்பின்மீது விழுந்தது. அவன் அதே இடத்தில் மீண்டும் அடித்தான். சுறா, மாமிசத்தைக் கடித்து எடுத்து, மீனிடமிருந்து அலட்சியமாக விலகிச் சென்று கொண்டிருந்தபோது அந்த அடி விழுந்தது.

அவன் மீண்டும் மேல் நோக்கி வருவதை எதிர்பார்த்துக் கொண்டு கிழவன் காத்திருந்தான். ஆனால், சுறா மீன்கள் எதுவுமே வரவில்லை. சிறிது நேரம் தாண்டியவுடன், ஒரு சுறா மீன் நீரின் மேற்பரப்பில் வட்டமிட்டு நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இன்னொரு சுறா மீனின் சிறகை அவன் பார்க்கவேவில்லை.

“அவற்றைக் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.” கிழவன் நினைத்தான்: “என்னுடைய நல்ல காலம்... அதை என்னால் செய்ய முடிந்தது. எது எப்படி இருந்தாலும் இரண்டு சுறா மீன்களுக்கும் நான் நிறைய காயங்களை உண்டாக்கி விட்டிருக்கிறேன். அவற்றில் யாருக்கும் அந்த அளவிற்கு சுகமாக இருப்போம் என்று தோன்றுவதற்கு வழியில்லை. இரண்டு கைகளாலும் ஒரு கழியைப் பிடிக்க என்னால் முடிந்திருந்தால், முதலில் வந்த சுறாவை என்னால் நிச்சயமாகக் கொன்றிருக்க முடியும். இப்போதுகூட...”

மீனை நோக்கிப் பார்ப்பதற்கு கிழவனுக்கு விருப்பமில்லை. மீனின் பாதி அளவு இழக்கப்பட்டுவிட்டது என்பதை அவன் புரிந்து கொண்டான். சுறா மீன்களுடன் போராடிக் கொண்டிருந்தபோது, சூரியன் மறைந்துவிட்டிருந்தது.

“வெகு சீக்கிரமே இருள் வந்துவிடும்.” அவன் சொன்னான்: “அப்போது ஹவானாவில் இருந்து வரும் வெளிச்சத்தை என்னால் பார்க்க முடியும். கிழக்கு திசையிலிருந்து மிகவும் தூரத்தில் நான் இருக்கும் பட்சம், புதிய கடற்கரைகளில் ஒன்றிலிருந்து வரும் விளக்கு வெளிச்சத்தை நான் பார்ப்பேன்.”

“இப்போது நான் மிகவும் தூரத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை.” அவன் நினைத்தான்: “என்னைப்போல வேறு யாரும் இந்த அளவிற்கு கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். சிறுவன் மட்டும் கவலைப்பட்டிருப் பான் என்பதுதான் உண்மை.

ஆனால் அவனிடம் மிகுந்த நம்பிக்கை இருக்கும் என்பது மட்டும் உறுதி. வயதான மீனவர்களில் பலரும் கவலைப் படுவார்கள். மீனவர்களின் கூட்டத்தில் வேறு பலரும் கூட! நான் ஒரு நல்ல நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

மீனுடன் கிழவனால் அதிகம் பேசிக்கொண்ருக்க முடியவில்லை. காரணம் மீன் அந்த அளவிற்கு அதிகமாக நாசம் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் வேறு சில விஷயங்கள் அவனுடைய தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

“இப்போது நீ ஒரு பாதி மீன்...” அவன் சொன்னான். “நீ ஒரு முழு மீனாக இருந்தாய் அல்லவா? கடலின் உட்பகுதிக்கு, மிகவும் தூரத்தை நோக்கிச் சென்றதற்காக நான் வருத்தப்படுகிறேன். நம் இருவரையும் நான் நாசம் பண்ணிவிட்டேன். எனினும், நாம் -நீயும் நானும் நிறைய சுறா மீன்களைக் கொன்றிருக்கிறோம். வேறு பல மீன்களையும் கூட அழித்திருக்கிறோம். வயதான மீனே, எவ்வளவு மீன்களை நீ இதுவரை கொன்றிருப்பாய்? உன் தலையில் இருக்கும் அந்த ஈட்டி வெறும் அலங்காரத்திற்காக இருப்பது அல்லவே!”

மீனைப் பற்றியும், அவன் சுதந்திரமாக நீந்திக்கொண்டிருந்தால் சுறாவை என்ன செய்திருப்பான் என்பதைப் பற்றியும் சிந்திப்பதற்கு கிழவன் ஆர்வமாக இருந்தான். “அவற்றுடன் போராடுவதற்கு நான் ஒரு மரக்கொம்பை அறுத்துத் தயார் பண்ணியிருக்க வேண்டும்.” அவன் நினைத்தான். “ஆனால், என் கைவசம் கோடரி இல்லை. கத்தியும் இல்லாமற் போய்விட்டது.”

“கத்தி இருந்திருந்தால், நான் அதை துடுப்புடன் சேர்த்து கட்டியிருப்பேன். என்ன ஒரு ஆயுதம் அது. அது இருந்திருந்தால், நாம் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுடன் போராடியிருக்கலாம். இரவு நேரத்தில் அவை வருவதாக இருந்தால், நீ இப்போது என்ன செய்வாய்? உன்னால் என்ன செய்ய முடியும்?” கிழவன் கேட்டான்.

“அவற்றுடன் போராட வேண்டும்...” கிழவன் சொன்னான்: “இறக்கும்வரை நான் அவற்றுடன் போராடுவேன்.”

ஆனால், இப்போது இருட்டில் ஒளி இல்லை... வெளிச்சமும் இல்லை. கடல் காற்றும் காற்றுப் பாயின் அசைவும் மட்டுமே இருந்தன.

தான் மரணமடைந்துவிட்டதைப்போல கிழவன் உணர்ந்தான். இரண்டு கைகளையும் நீட்டி உள்ளங்கைகளைத் தடவிப் பார்த்தான். அவை இறக்கவில்லை. கைகளை வெறுமனே திறந்தும் மூடியும், வாழ்க்கையின் வேதனையைக் கொண்டுவர அவனால் முடிந்தது. பாய்மரத்தின் மீது சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தபோது, தான் இறக்கவில்லை என்பதை அவன் அறிந்துகொண்டான். அவனுடைய தோள்கள்தான் அவனிடம் அதைக் கூறின.

“மீனைப் பிடிப்பதற்காக நேர்ந்திருந்த எல்லா பிரார்த்தனைகளையும் நான் கூற வேண்டியதிருக்கிறது. கிழவன் நினைத்தான். “ஆனால், அவற்றை இப்போது கூற முடியாத அளவிற்கு, நான் மிகவும் தளர்ந்துபோய் விட்டிருக்கிறேன். கோணியை எடுத்து தோளின்மீது இட்டால், சுகமாக இருக்கும்.”


பாய்மரத்திற்கு அருகில் படுத்துக்கொண்டே அவன் சுக்கானைப் பிடித்தான். வானத்தில் ஒளி வருவதை எதிர்பார்த்து அவன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான். “மீனின் பாதியளவாவது கிடைத்ததே!” அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். “முன் பகுதியில் மீதமிருக்கும் மாமிசத்தை கரையில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு எனக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். சிறிது அதிர்ஷ்டம் எனக்கு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.... இல்லை... கடலின் உட்பகுதிக்கு, மிகவும் தூரத்தை நோக்கி நீ சென்றபோதே உன்னுடைய அதிர்ஷ்டத்தை நீ இழந்துவிட்டாய்...”

“முட்டாள்தனமாகப் பேசாதே.” அவன் உரத்த குரலில் கூறினான். “கண் விழித்திருந்து படகைச் செலுத்து. இன்னும் உனக்கு நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.”

“அதிர்ஷ்டம் விற்கப்படும் ஏதாவது ஒரு இடம் இருந்தால், நான் சிறிது அதிர்ஷ்டத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” கிழவன் சொன்னான்.

“எதைக்கொடுத்து நான் அதை வாங்குவது?” அவன் தனக்குத் தானே கேட்டுக்கொண்டான். “கையை விட்டுப் போய்விட்ட ஒரு குத்தீட்டியையும், ஒடிந்து போன கத்தியையும், காயம் உண்டான இரண்டு கைகளையும் என்னால் வாங்க முடியுமா?”

“ உன்னால் முடியும்.” கிழவன் சொன்னான்: “கடலில் செலவழித்த எண்பத்து நான்கு நாட்களைக் கொண்டு நீ அவற்றை வாங்குவதற்கு முயற்சி செய்தாய். கிட்டத்தட்ட அவை உனக்கு விற்கப்பட்டுவிட்டன.”

“நான் முட்டாள்தனமாக சிந்தித்துக்கொண்டிருக்கக் கூடாது.” கிழவன் நினைத்தான்: “அதிர்ஷ்ட தேவதை பல வடிவங்களிலும் தோன்றுகிறது. அவளை யாரால் அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது? எந்த வடிவத்தில் வந்தாலும், சிறிது அதிர்ஷ்டத்தை நான் எடுத்துக் கொள்வேன். அவள் கேட்கக்கூடிய விலையை நான் தரவும் செய்வேன். விளக்குகளின் வெளிச்சத்தை இப்போது என்னால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவோ விஷயங்களை நான் விரும்புகிறேன். ஆனால், இப்போது நான் ஆசைப்படுவது, அதை மட்டும்தான்.” மேலும் சற்று சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு கிழவன் படகைச் செலுத்த முயற்சித்தான். வேதனை தோன்றியபோது, தான் இன்னும் இறக்கவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

இரவு பத்து மணி இருக்கும். நகரத்தின் விளக்குகளின் பிரகாசத்தை கிழவன் பார்த்தான். நிலவு உதிப்பதற்கு முன்பு வானத்தில் தெரியக்கூடிய வெளிச்சத்தைப் போல மட்டுமே முதலில் அது தோன்றியது. பிறகு அது வானத்திற்கும் குறுக்காக எந்தவொரு மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரி தோன்றியது. காற்று அதிகமானபோது... வெளிச்சம் தெளிவற்று இருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் கிழவன் படகைச் செலுத்தினான். வெகு சீக்கிரமே கரையை அடைந்துவிடுவோம் என்று அவன் எதிர்பார்த்தான்.

“இப்போது இது முடிவுக்கு வந்திருக்கிறது.” கிழவன் நினைத்தான். “அவை மீண்டும் என்னைத் தாக்கும். எந்தவொரு ஆயுதமும் இல்லாமல், அவற்றுக்கு எதிராக ஒரு மனிதனால் என்ன செய்ய முடியும்?”

கிழவன் குளிர்ந்துபோய் நடுங்கிக்கொண்டிருந்தான். இரவின் குளிரில் காயங்களும், சிரமங்களை அனுபவித்த உடலின் அனைத்துப் பகுதிகளும் வலித்தன. “மீண்டும் நான் போராடவேண்டிய சூழ்நிலை வராது என்று நம்புகிறேன். மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலை வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.”

ஆனால், நள்ளிரவு நேரத்தில் கிழவன் மீண்டும் போராடினான். போராடுவது வீணானது என்ற விஷயத்தை இந்த முறை அவன் நன்கு அறிந்திருந்தான். ஒரு கூட்டமாக அவை வந்தன. சுறா மீன்கள் மீனை நோக்கி வேகமாகப் பாய்ந்து நெருங்கி வந்தபோது... அவற்றின் சிறகுகள் நீரில் உண்டாக்கிய கோடுகளையும் நீர் வட்டங்களின் பிரகாசத்தையும் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவற்றின் தலைகளில் அவன் ஓங்கி அடித்தபோது, தாடை எலும்புகள் ஒன்றோடொன்று மோதி உண்டாக்கிய சத்தத்தை அவன் கேட்டான். படகுக்கும் கீழே நீந்திக்கொண்டிருந்த சுறா மீன்கள் படகை அசைத்துக்கொண்டிருந்தன. படகிலும் மற்ற இடங்களிலும் அவன் விரக்தியில் உண்டான சாகச அறிவுடன் செயல்பட்டான். கழியை ஏதோ பிடித்து இழுப்பதைப் போலத் தோன்றியது. இறுதியில் அதுவும் படிப்படியாக இல்லாமற் போனது.

கிழவன் சுக்கானின் வளையத்திலிருந்து துடுப்பை வெளியே எடுத்தான். தொடர்ந்து அதை இரண்டு கைகளாலும் பிடித்து மீண்டும் மீண்டும் வீசி அடிக்கவும்... ஓங்கி வெட்டவும் செய்தான். ஆனால் அதற்குள் சுறா மீன்கள் படகின் வளைவான பகுதிக்கு அருகில் வந்துவிட்டிருந்தன. அவை ஒன்றிற்குப் பின்னால் இன்னொன்று என்ற விதத்திலும், கூட்டமாகவும் சத்தத்தை உண்டாக்கி, ஏறி, மாமிசத் துண்டுகளைப் பிடித்துப் பிய்த்துக் கொண்டு போயின. இன்னொரு முறை வருவதற்காக அவை திரும்பியபோது, மாமிசத் துண்டுகள் கடலுக்கு அடியில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

இறுதியில் மீனின் தலையை நோக்கி ஒருவன் வந்தான். அத்துடன் அனைத்தும் முடிவடைந்துவிட்டன என்பதை கிழவன் புரிந்துகொண்டுவிட்டான். அந்த சுறா மீனின் தலைக்குக் குறுக்கே அவன் சுக்கானால் ஓங்கி அடித்தான். மீனின் கிழிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் கனமான தலையில், தாடை எலும்புகளைக் கொண்டு அழுத்தமாகக் கடித்துக்கொண்டு அந்த சுறா மீன் நின்றிருந்தது. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, பல முறை அவன் ஓங்கி அடித்தான். சுக்கான் ஒடியும் சத்தத்தைக் கிழவன் கேட்டான். ஒடிந்த சுக்கானை அவன்மீது குத்தி இறக்கினான். அது உள்ளே ஆழமாக இறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் தெரிந்துகொண்டான். அதன் கூர்மைத் தன்மையை நன்கு அறிந்திருந்த கிழவன், அதை மீண்டும்... மீண்டும் உள்ளே இறக்கினான். அங்கு வந்திருந்த சுறா மீன்களின் கூட்டத்தில் இறுதியானவனாக அவன் இருந்தான். அவற்றிற்கு சாப்பிடுவதற்கு இனி எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

கிழவனுக்கு சுவாசிப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. வாயில் வினோதமான ஒரு ருசி தோன்றியது. புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு ருசியாக அது இருந்தது. ஒரு நிமிட நேரத்திற்கு அவன் திகைத்துப் போய் நின்றுவிட்டான். ஆனால், தொடர்ந்து குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் நடக்கவில்லை.

கடலுக்குள் துப்பிக்கொண்டே அவன் சொன்னான்: “கலானோக்களே, இதை சாப்பிடுங்க. பிறகு... நீங்கள் ஒரு மனிதனைக் கொன்றிருக்கிறீர்கள் என்று கனவு காணுங்கள்.”

இறுதியாக, சிறிதும் பரிகாரம் காண முடியாத அளவிற்கு தான் வீழ்த்தப்பட்டிருக்கிறோம் என்பதைக் கிழவன் உணர்ந்துகொண்டான். அவன் படகின் வளைவான பகுதிக்கு வந்தான். சுக்கானின் கூர்மையான முனை துடுப்பின் சிறிய துவாரத்திற்குள், சுக்கானை இயக்கக்கூடிய அளவிற்கு மிகவும் சரியாக இருக்கிறது என்பதை அவன் பார்த்தான். கோணியைத் தோளில் இட்டு, படகை அதன் போக்கில் விட்டான். எடை எதுவும் இல்லாமல் அவன் படகுப் பயணத்தைச் செய்தான்.


அவனிடம் எந்தவொரு சிந்தனைகளோ உணர்ச்சிகளோ இல்லவே இல்லை. இப்போது எல்லாவற்றிடமிருந்தும் அவன் சுதந்திரமானவனாக ஆகியிருக்கிறான். தன்னுடைய திறமைக்கும் சாமர்த்தியத்திற்கும் ஏற்றபடி அவன் படகை துறைமுகத்தை நோக்கிச் செலுத்தினான். சாப்பிடும் மேஜையிலிருந்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை எடுப்பதைப் போல, இரவு நேரத்தில் சுறா மீன்கள் மீனின் உடலின் எஞ்சிய பகுதிகளைச் சாப்பிட்டு உற்சாகமடைந்தன. கிழவன் அவற்றைப் பார்க்கவேயில்லை. படகைச் செலுத்துவதைத் தவிர, வேறு எந்த விஷயத்திலும் அவன் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது படகிலிருந்த பெரிய சுமை இல்லாமல் போனதால், எந்த அளவிற்கு பிரச்சினை இல்லாமலும் எளிதாகவும் படகு நகர்ந்துக்கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை மட்டும் அவன் கவனித்தான்.

“படகிற்கு எந்த பிரச்சினையுமில்லை.” கிழவன் சிந்தித்தான்: “நல்ல உறுதியுடன் இருக்கிறது. சுக்கான் ஒன்றைத் தவிர, வேறு எதிலும் எந்தவொரு கேடும் உண்டாகவில்லை. அதை மிகவும் சாதாரணமாக சீர் செய்துவிட முடியும்.”

அதற்குள் தான் நீரோட்டத்திற்குள் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதை கிழவன் புரிந்துகொண்டான். கரையில் இருந்த காலனிகளின் விளக்குகள் கண்களுக்கு முன்னால் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன. தான் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதையும் வீட்டை அடைவது சிறிதும் சிரமமான விஷயமல்ல என்பதையும் கிழவன் அறிந்துகொண்டிருந்தான்.

“என்ன இருந்தாலும், காற்று நம்முடைய நண்பனாச்சே!” அவன் சிந்தித்தான்: “ஆனால், சில நேரங்களில் மட்டும்... அதே மாதிரிதான் நம்முடைய நண்பர்களும் பகைவர்களும் உள்ள கடலும் நம்முடைய நண்பன்தான். அதற்குப் பிறகு... படுக்கையும். படுக்கை என்னுடைய நண்பன். வெறும் படுக்கை... நீங்கள் தோல்வியடையும் போது, அது ஆறுதலைத் தருகிறது. அது எந்த அளவிற்கு ஆறுதலை அளிக்கக்கூடியது என்பதை நான் எந்தச் சமயத்திலும் அறிந்த தில்லை. உங்களைத் தோல்வியடையச் செய்தது எது என்பதையும்...”

“எதுவுமே இல்லை...” கிழவன் உரத்த குரலில் கூறினான்: “நான் மிகவும் தூரத்தை நோக்கிப் போயிருந்தேன்...”

அந்தச் சிறிய துறைமுகத்தை கிழவன் படகின் மூலம் அடைந்தபோது, மேலே இருந்த விளக்குகள் அணைந்து விட்டிருந்தன. எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். காற்று படிப்படியாக அதிகமாகி, இப்போது பலமாக வீசிக்கொண்டிருந்தது. எனினும், துறைமுகம் மிகவும் அமைதியாக இருந்தது. சிறிய பாறைகளுக்குக் கீழே இருந்த சரளைக் கற்களின்மீது கிழவன் படகை துடுப்பு போட்டு ஏற்றினான். உதவி செய்வதற்கு யாரும் இல்லை. அதனால், முடிந்த வரையில் படகை மேலே இழுத்து ஏற்றினான். தொடர்ந்து, இறங்கி படகை ஒரு கல்லுடன் சேர்த்துக் கட்டி வைத்தான்.

கிழவன் பாய்மரத்தை அவிழ்த்து, கீழே இறங்கி, படகின் பாயை சுருட்டிக் கட்டினான். பிறகு பாய் மரத்தைத் தோளில் வைத்து ஏற ஆரம்பித்தான். தன்னுடைய தளர்ச்சியின் ஆழம் அப்போதுதான் அவனுக்கே புரிந்தது. ஒரு நிமிடம் அவன் நின்று திரும்பிப் பார்த்தான். மீனின் மிகப் பெரிய வால், பாய்மரத்திற்குப் பின்னால் உயர்ந்து நிற்பதை தெருவிளக்கின் பிரகாசத்தில் அவன் பார்த்தான். அவனுடைய முதுகெலும்பின் வெண்மை நிறம் கொண்ட தெளிவான கோடுகளையும், நீட்டிக் கொண்டிருந்த கொம்புகளைக் கொண்ட கறுத்த தலையையும் தெளிவாக அவனால் பார்க்க முடிந்தது.

கிழவன் மீண்டும் ஏற ஆரம்பித்தான். மேலே சென்றடைந்தவுடன், அவன் கீழே விழுந்து விட்டான். பாய்மரத்தைத் தோளில் வைத்துக் கொண்டு, அவன் சிறிது நேரம் அதே இடத்தில் படுத்திருந்தான். கிழவன் எழுந்திருக்க முயற்சித்தான். ஆனால், அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. பாய்மரத்தைத் தோளில் வைத்துக் கொண்டே அவன் பாதையில் கண்களைப் பதித்தான். ஒரு பூனை தன்னுடைய வேலையை மனதில் வைத்துக் கொண்டு தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தது. கிழவன் அதைப் பார்த்தான். தொடர்ந்து பாதையில் வெறுமனே கண்களை ஓட்டினான்.

இறுதியாக கிழவன் பாய் மரத்தைக் கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்றான். பிறகு, பாய் மரத்தை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு பாதையில் நடந்து சென்றான். குடிசையை அடைவதற்கு முன்னால் ஐந்து முறை அவன் உட்கார வேண்டியதிருந்தது.

குடிசையை அடைந்தவுடன், கிழவன் பாய்மரத்தைச் சுவரின்மீது சாய்த்து வைத்தான். இருட்டில் நீர் இருந்த ஒரு புட்டியைத் தேடி எடுத்து, ஒரு மடக்கு நீரை குடித்தான். பிறகு படுக்கையில் போய் படுத்தான். தோள்களுக்கு மேலேயும், முதுகிலும், கால்களிலும் போர்வையை இழுத்து மூடினான். செய்தித்தாள்களில் முகத்தை அழுத்திக் கொண்டு, கைகளை நீட்டி விரித்துக்கொண்டு, உள்ளங்கைகள் மேலே தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு அவன் தூக்கத்தில் மூழ்கினான்.

காலையில் சிறுவன் வாசல் கதவின் வழியாகப் பார்த்தபோது, கிழவன் உறக்கத்தில் இருந்தான். காற்று மிகவும் பலமாக வீசிக் கொண்டிருந்ததால், மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறுவன் மிகவும் தாமதமாகவே தூங்கச் சென்றிருந்தான். எல்லா நாட்களிலும் காலையில் எப்போதும் போல கிழவனின் குடிசைக்கு வருவதைப்போல, அவன் அன்றும் வந்திருந்தான். கிழவன் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை சிறுவன் பார்த்தான். அதற்குப் பிறகுதான் கிழவனின் கைகளையே பார்த்தான். அத்துடன் அவன் அழ ஆரம்பித்துவிட்டான். சிறிது காப்பி கொண்டு வருவதற்காக அவன் மிகவும் அவசரமாக வெளியே சென்றான். போகும் வழியெல்லாம் அவன் அழுதுகொண்டேயிருந்தான்.

ஏராளமான மீனவர்கள் கிழவனின் படகைச் சுற்றி நின்று கொண்டு அதோடு சேர்த்துக் கட்டியிருப்பது என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு ஆள் காற்சட்டையை மேலே ஏற்றி, மீனின் எலும்புக் கூட்டின் நீளத்தைக் கயிறால் அளந்து கொண்டு, நீரிலேயே நின்றிருந்தான்.

சிறுவன் கீழே இறங்கிச் செல்லவில்லை. அவன் முன்பே அங்கு சென்றிருந்தான். மீனவர்களில் ஒருவன் அவனுக்காக படகில் காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“அவருக்கு எப்படி இருக்கு?” மீனவர்களில் ஒருவன் உரத்த

குரலில் கேட்டான்.

“தூங்கிக் கொண்டிருக்கிறார்.” சிறுவன் உரத்த குரலில் சொன்னான். தன்னுடைய அழுகையை அவர்கள் எல்லாரும் பார்ப்பார்களே என்பதைப் பற்றி அவன் கவலையே படவில்லை. “அவரை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது.”

“அவனுக்கு மூக்கிலிருந்து வால் வரை பதினெட்டு அடி நீளம் இருக்கிறது.” அளந்து பார்த்துக் கொண்டிருந்த மீனவன் உரத்த குரலில் கூறினான்.

“நான் அதை நம்புகிறேன்.” சிறுவன் சொன்னான்.

அவன் வெளியே சென்று “ஒரு பாத்திரத்தில் காப்பி வேண்டும்” என்று கேட்டான்.

“நல்ல சூட்டுடன் நிறைய பாலும் சர்க்கரையும் சேர்த்து...”

“வேறு ஏதாவது?”

“வேண்டாம். அவரால் என்ன சாப்பிட முடியும் என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு கூறுகிறேன்.”


“என்ன ஒரு மீன் அது.” அந்தக் கடையின் உரிமையாளர் கூறினார்: “இப்படியொரு மீனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. நேற்று நீ கொண்டு வந்த அந்த இரண்டு மீன்களும்கூட பரவாயில்லை.”

“என் மீன்கள் நாசமாகப் போகட்டும்!” சிறுவன் சொன்னான். அவன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

“உனக்கு ஏதாவது குடிப்பதற்கு வேண்டுமா?” கடையின் உரிமையாளர் கேட்டார்.

“வேண்டாம்.” சிறுவன் சொன்னான்: “சான்டியாகோவை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அவர்களிடம் கூறுங்கள். நான் உடனடியாகத் திரும்பி வந்து விடுவேன்.”

“நான் மிகவும் கவலைப்பட்டேன் என்று அவரிடம் கூறு.”

“நன்றி.” சிறுவன் சொன்னான்.

கிழவனின் குடிசைக்கு சூடுள்ள காப்பி பாத்திரத்தை அவன் கொண்டு சென்றான். அவன் கண் விழிக்கும் வரை சிறுவன் அருகிலேயே காத்திருந்தான். ஒருமுறை அவன் கண் விழிக்கப் போகிறான் என்று தோன்றியது. ஆனால், ஆழமான உறக்கத்திற்கு கிழவன் திரும்பவும் சென்றுவிட்டான். காப்பியைச் சூடு பண்ணுவதற்காக சிறிது விறகு கடனுக்கு வாங்க, சிறுவன் பாதையைக் குறுக்காகக் கடந்தான்.

இறுதியாக கிழவன் கண் விழித்தான்.

“எழுந்திருக்க வேண்டாம்.” சிறுவன் சொன்னான்: “இதை குடிங்க.” அவன் சிறிது காப்பியை கண்ணாடிக் குவளையில் ஊற்றினான். கிழவன் அதை எடுத்துப் பருகினான்.

“அவை என்னை தோல்வியடையச் செய்துவிட்டன,

மனோலின்.” அவன் சொன்னான்: “அவை என்னை முற்றிலும் தோல்வியடையச் செய்துவிட்டன.”

“அவன் உங்களைத் தோற்கடிக்கவில்லை. உங்களைத் தோற்கடித்தது மீன் அல்ல.”

“இல்லை... உண்மையாகவே இல்லை. எல்லாம் பின்னால் நடந்தது...”

“படகிற்கும் பொருட்களுக்கும் பெட்ரிகோ காவலாக நின்று கொண்டிருக்கிறார். தலையை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“மீன் வலைகளில் பயன்படுத்துவதற்காக, பெட்ரிகோ அதை வெட்டி அறுக்கட்டும்.”

“அப்படியென்றால், ஈட்டியைப் போல கூர்மையாக இருக்கும் பகுதி?”

“உனக்கு வேண்டுமென்றால், எடுத்துக்கொள்.”

“அது எனக்கு வேண்டும்.” சிறுவன் சொன்னான்: “இனி நாம் மற்ற விஷயங்களைப் பற்றி திட்டம் போட வேண்டும்.”

“எனக்காக அவர்கள் தேடல் நடத்தினார்களா?”

“உண்மையாகவே நடத்தினார்கள். கடலோரப் படையையும் விமானத்தையும் பயன்படுத்தி...”

“கடல் மிகவும் பெரியது. படகு மிகவும் சிறியது. கடலைத் தெரிந்து கொள்ள சிரமப்படும் அளவிற்கு அது சிறியது.” கிழவன் சொன்னான். தன்னுடனும் கடலுடனும் மட்டுமே எதையாவது பேசிக் கொண்டிருப்பதைவிட, பேசிக் கொண்டிருப்பதற்கு வேறு யாரேனும் அருகில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவோ சந்தோஷத்தை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். “உன்னைப் பார்க்காமல் நான் மிகவும் கவலைப் பட்டேன்.” அவன் சொன்னான்: “நீ என்ன மீனைப் பிடித்தாய்?”

“முதல் நாள் ஒரு மீன். இரண்டாவது நாள் ஒரு மீன். மூன்றாவது நாள் இரண்டு மீன்கள்.

“மிகவும் நல்லது.”

“இப்போது மீண்டும் நாம் இருவரும் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்வோம்.” சிறுவன் சொன்னான்.

“வேண்டாம். நான் அதிர்ஷ்டசாலி அல்ல. இனிமேல் எந்தச் சமயத்திலும் நான் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போவதில்லை.”

“அதிர்ஷ்டம் நரகத்திற்குச் செல்லட்டும்...” சிறுவன் சொன்னான்: “நான் என்னுடன் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவேன்.”

“உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறுவார்கள்?”

“அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நேற்று நான் இரண்டு மீன்களைப் பிடித்தேன். ஆனால், இப்போது நாம் இருவரும் சேர்ந்து மீன் பிடிப்போம். உங்களிடம் நான் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.”

“நமக்கு கொல்வதற்கு பயன்படக் கூடிய நல்ல ஒரு ஈட்டி வேண்டும். அதை எப்போதும் படகில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பழைய ஃபோர்ட் காரின் ஸ்ப்ரிங் லீஃபிலிருந்து ஈட்டியின் முனைப் பகுதியை உண்டாக்கலாம். குவானபகோவாவிற்குக் கொண்டு சென்று கூர்மைப்படுத்தலாம். நல்ல கூர்மை இருக்க வேண்டும். ஆனால், இறுக்கமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது உடைந்துவிடும். என் கத்தி உடைந்துவிட்டது.”

“நான் இன்னொரு கத்தியைக் கொண்டு வருகிறேன். ஸ்ப்ரிங்கிற்கு கூர்மை உண்டாக்கி விடலாம். பலமான இந்த காற்று இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்?”

“மூன்று நாட்களுக்கு இருக்கும். ஒருவேளை அதைவிட அதிக நாட்கள் கூட இருக்கலாம்.”

“நான் எல்லா காரியங்களையும் முறைப்படி செய்கிறேன்.” சிறுவன் சொன்னான்: “உங்களுடைய கைகள் குணமாகட்டும், தாத்தா.”

“கைகளை எப்படி கவனமாகப் பார்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியும். இரவில் நான் எப்போதுமில்லாமல் எதையோ துப்பினேன். நெஞ்சில் ஏதோ உடைந்துவிட்டதைப்போல எனக்குத் தோன்றியது.”

“அதுவும் குணமாகட்டும்.” சிறுவன் சொன்னான்: “படுங்கள் தாத்தா. உங்களுடைய சுத்தம் செய்யப்பட்ட சட்டையை நான் கொண்டு வந்து தருகிறேன். பிறகு சாப்பிடுவதற்கு ஏதாவது...”

“நான் கடலுக்குள் போய் விட்டிருந்த நாட்களில் வந்த ஏதாவது பத்திரிகைகளைக் கொண்டு வா.” கிழவன் சொன்னான்.

“நீங்கள் வேகமாக குணமாக வேண்டும். உங்களிடமிருந்து ஏராளமான விஷயங்களை நான் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. எல்லா விஷயங்களையும் எனக்கு கற்றுத் தருவதற்கு உங்களால் முடியும். நீங்கள் எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவித்தீர்கள்?”

“நிறைய...” கிழவன் சொன்னான்.

“நான் உணவு, பத்திரிகைகள் ஆகியவற்றைக் கொண்டு வருகிறேன்.” சிறுவன் சொன்னான்: “நன்றாக ஓய்வெடுங்கள், பெரியவரே. மருந்துக் கடையிலிருந்து உங்களுடைய கைகளுக்குத் தேவையான மருந்தையும் நான் கொண்டு வருகிறேன்.”

“பெட்ரிக்கோவிடம் தலை அவருக்குத்தான் என்று கூறுவதற்கு மறந்து விடாதே.”

“இல்லை. நான் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்.”

கதவிற்கு வெளியே சென்று பவளப்புற்றுகள் நிறைந்த பாறைகளின் மீது நடக்கும்போது, சிறுவன் மீண்டும் அழுதான்.

அன்று சாயங்காலம் சுற்றுலாப் பயணிகளின் ஒரு கூட்டம் மேல் தளத்தில் ஒன்று சேர்ந்தது. கீழே நீர்ப்பரப்பை அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். காலியான பீர் டின்களுக்கும் இறந்து கிடக்கும் மீன்களுக்கும் மத்தியில், நுனியில் பெரிய வாலைக் கொண்ட மிகவும் நீளமான ஒரு எலும்புக் கூட்டை, அந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்திலிருந்த ஒரு பெண் பார்த்தாள். துறைமுகத்திற்குச் செல்லும் நுழைவுவாயிலுக்கு வெளியேயிருந்து, கீழ்காற்று கடலில் பலமாக வீசும்போது உண்டாகக்கூடிய அலைகளுடன் சேர்ந்து எலும்புக் கூட்டின் முனையில் இருந்த வால் அசைந்து கொண்டிருந்தது.

“அது என்ன?” பெரிய மீனின் நீளமான முதுகெலும்பைச் சுட்டிக்காட்டியவாறு ஒரு பணியாளிடம் கேட்டாள். அலைகளுடன் சேர்ந்து கடலில் போய் சேர்வதற்காக காத்துக் கிடக்கும் ஒரு குப்பை மட்டுமே இப்போது அது.

“டிபுரான்.” பணியாள் சொன்னான்: “இல்லாவிட்டால் சுறா.” என்ன நடந்தது என்பதை விளக்கிக் கூறுவது அவனுடைய முயற்சியாக இருந்தது.

“சுறா மீன்களுக்கு இந்த அளவிற்கு அழகும் கம்பீரமும் உள்ள வால்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது.”

“எனக்கும் தெரியாது.” அவளுடைய நண்பன் சொன்னான்.

மேலே பாதைக்கு அப்பாலிருந்த தன்னுடைய குடிசையில் கிழவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தான். முகத்தை படுக்கையில் அழுத்தி வைத்துக் கொண்டுதான் தூக்கமே. அவனையே பார்த்துக் கொண்டு அவனுக்கு அருகில் சிறுவன் உட்கார்ந்திருந்தான். கிழவன் சிங்கங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.