Logo

சிங்கிடி முங்கன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6557
singdi mungan

சுராவின் முன்னுரை

‘சிங்கிடி முங்கன்’ (Singidi Mungan) 1991-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய இறுதி நாவல் இது. இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு கருவை வைத்து மிகவும் சுவாரசியமான ஒரு கதையை பஷீரைத் தவிர வேறு யாரால் எழுத முடியும்?

மிகவும் கனமான ஒரு விஷயத்தை- கயிறுமீது நடப்பதைப் போன்ற ஒரு கதைக் கருவை தன்னுடைய அபாரமான எழுத்துத் திறமையாலும், கூர்மையான சிந்தனையாலும் பஷீர் எந்த அளவிற்கு ஒரு அருமையான இலக்கியப் படைப்பாக வடிவமைக்கிறார் என்பதை நினைக்கும்போது, பஷீர்மீது நமக்கு வியப்பும் மதிப்பும் உண்டாவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

நான் மொழி பெயர்த்த இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா(Sura)


"யார் அது?''

"அதுவா?''

"ஆமா...''

"அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம். சொல்றேன், கவனமா கேட்டுக்கணும். பக்தியோட, வணக்கத்தோட, எளிமையோட எல்லாத்தையும் கேட்டுட்டு முடிவுக்கு வந்தா போதும். அதுதானே சரியான வழி?''

"ஆள் யார்னு சொல்லவே இல்லியே!''

"அதுதான் சொல்றேன்னு சொன்னேனே. முழுமையான பக்தி வேணும். கேக்குறீங்களா?''

கரியாத்தன், அப்துல் ரசாக், ஆயிஷா பீபி- இவர்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் இது.... ஆமாம்... யார் இந்த சிங்கிடி முங்கன்? அந்த அற்புத ரகசியத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களையும் கூறி ஆக வேண்டும். அப்துல் ரசாக் வளைகுடாவில் வேலை பார்க்கும் ஒரு மனிதன். அதாவது... சவுதி அரேபியாவில். அவனுடைய எல்லாச் செலவுகளும் போக மீதியாக ஒரு மாதத்திற்கு எட்டாயிரம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும். அவன் மனைவி ஆயிஷா பீபியும் வேலைக்குப் போகிறவள்தான். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு முஸ்லிம் பள்ளிக்கூடத்தில் அவளுக்கு டீச்சர் வேலை.... மாதாமாதம் ஆயிரம் ரூபாய் சம்பளமாகத் தருகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு அழகான வீட்டை இரண்டு லட்ச ரூபாய் செலவில் கட்டினார்கள். அந்த வீட்டில்தான் இப்போது வசிப்பதும். அப்துல் ரசாக்கிற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு மாதங்கள் விடுமுறை கிடைக்கும். இங்கும் அங்கும் போய் வரக்கூடிய விமானச் செலவை அவன் வேலை பார்க்கும் நிறுவனமே ஏற்றுக் கொள்ளும். சொல்லப் போனால், மகிழ்ச்சியான வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரே ஒரு குறை. திருமணம் நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இதுவரை அவர்களுக்குக் குழந்தை என்ற ஒன்று பிறக்கவில்லை. இதுதான் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு குறை. ஆயிஷா பீபி ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை?

ஜின்னு, சைத்தான், இஃப்ரீத், ருஹானி போன்ற கண்ணுக்குப் புலப்படாத உயிர்களின் செயலாக இது இருக்கலாம். பெயர் பெற்ற ஒரு முஸ்லிம் பெரியவரை வீட்டுக்கு வரவழைத்தார்கள். வீட்டில் சில நாட்கள் அவரைத் தங்க வைத்து சில மந்திரச் செயல்களை நடத்தினார்கள். வாசல் படிக்கு முன்னால் முட்டையில் எழுதி பூமிக்குக் கீழே புதைத்தார்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் மந்திரங்கள் எழுதப்பட்ட குப்பிகளைக் கட்டித் தொங்க விட்டார்கள். ஆனால், அதனால் ஒரு பயனும் இல்லை.

இனி என்ன செய்வது?

குழந்தை வேண்டுமென்று அல்லாவிடம் வேண்டிக்கொள்ளலாம். அவர்கள் கவலையை அவர் நீக்கலாம். ஆனால், அங்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லாவிடம் நேரடியாக வேண்ட முடியாது என்றொரு நிபந்தனை இருக்கிறது. அவருடன் உரையாட இடையில் ஒருவர் வேண்டும். அதற்காக இருக்கும் மகான்தான் ஷேக் முஹையதீன். அப்துல் காதர் ஜெய்லானி என்றும் அவரை அழைப்பார்கள். அந்த மகான் மரணத்தைத் தழுவிச் சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அவரை அடக்கம் செய்திருப்பது பாக்தாத்தில். அவரை அழைத்து தங்களுக்கு ஒரு குழந்தையைத் தரும்படி அல்லாவிடம் வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதனாலும் பிரயோஜனம் இல்லை. பிறகு புண்ணிய ஆத்மாக்களான மம்புரத்து ஓலியா, காஞ்ஞிரமிற்றத்து பரீத் ஓலியா போன்ற பல இடங்களுக்கும் பிரார்த்தனைகளை அனுப்பினார்கள். பீமாப்பள்ளி, காஷ்மீரில் உள்ள பால் சரீஃப், நாகூர் ஆண்டவரான வீராசாயூ, அஜ்மீர் கோஜாகரீ நவாஸ், தாதா ஹயாத்துல்கலந்தர்- இப்படிப் பல இடங்களுக்கும் ஆயிஷா பீபி கர்ப்பம் உண்டாக வேண்டும் என்று பிரார்த்தனைகள் அனுப்பினார்கள். கணக்குப் பார்க்காமல் பணமும் அனுப்பினார்கள். இருந்தாலும், ஒரு பயனுமில்லை.

முஸ்லிம்கள் விஷயம் இப்படி. சரி... கிறிஸ்துவ மதத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் என்ன?

கடவுளின் ஒரே மகனான இயேசுநாதரிடம் நேரடியாகவே வேண்டினார்கள். ஒரு பிரயோஜனமும் உண்டாகவில்லை. செயின்ட் பால், செயின்ட் பீட்டர், மேரி அன்னை, மதர்தெரேசா, அல்ஃபோன்சா, வேளாங்கன்னி- இப்படிப் பல இடங்களுக்கும் நபர்களுக்கும் பிரார்த்தனைகள் அனுப்பினார்கள். பணமும் அனுப்பினார்கள். குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. ஆயிஷா பீபி கர்ப்பம் தரிக்கவில்லை. இனி என்ன செய்வது?

இந்துக்கள் தனித்துவம் உள்ளவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு ஏகப்பட்ட தெய்வங்கள்... ஏகப்பட்ட அவதாரங்கள்! புண்ணிய இடங்களும் ஆயிரக்கணக்கில். சரி... அதையும்தான் எப்படி என்று பார்த்து விடுவோமே என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். காசி விஸ்வநாதன், குருவாயூரப்பன், மதுரை மீனாட்சி, கூடல் மாணிக்கம், ஸ்ரீ பத்பநாபசுவாமி ஆலயம், வைக்கத்தப்பன், வேட்டைக்கொரு மகன், கொடுங்கல்லூர் அம்மா, திருச்சூர் வடக்கும்நாதன், திருமலைத்தேவன், ஏற்றுமானூர் அப்பன், இளங்காவில் அம்மா, சபரிமலை அய்யப்பன், வாவூர் சுவாமி, சாய்பாபா, சத்ய சாய்பாபா- இப்படிப் பலருக்கும் வேண்டுகோள்கள் போயின. பிரார்த்தனைகள் சென்றன. பணம் அனுப்புவது என்பதுதான் ஒரு பிரச்சினையே இல்லையே! எல்லாம் செய்து என்ன பிரயோஜனம்? ஆயிஷா பீபி கர்ப்பம் தரிக்கவில்லை. என்ன செய்வது?

இரண்டு பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால் என்ன என்று பலரும் கருத்துக் கூறினார்கள். அதையும் செய்து பார்த்தாகிவிட்டது. அப்துல் ரசாக்கையும் ஆயிஷா பீபியையும் பெரிய மேதைகள் என்று சொல்லப்படும் டாக்டர்கள் சோதித்துப் பார்த்தார்கள். இருவரிடமும் எந்தவிதக் குறைபாடும் இல்லை. பிறகு...?

நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற உயிரினங்கள் எத்தனை கோடி! இந்த எல்லா உயிரினங்களிலும் பெண் வர்க்கம் உரிய நேரம் வருகிறபோது யாரும் சொல்லாமலே முட்டையிடுவதும், குட்டி போடுவதும், குழந்தை பெற்றெடுப்பதும் காலம் காலமாக நடந்துகொண்டுதானே இருக்கின்றன! ஆனால், அந்த உரிய நேரம் வருவதற்காக எல்லாரும் காத்திருக்க வேண்டும். யார் இதைச் சொன்னது? யார் சொன்னால் என்ன? ஆனால், இப்படிப் பார்த்தால்கூட எவ்வளவு காலம் காத்திருப்பது! திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. நூற்று இருபது மாதங்கள். மூவாயிரத்து அறுநூற்றைத் தாண்டிய நாட்கள்! இவ்வளவு நாட்கள் ஆகியும் ஒன்றுமே நடக்கவில்லை என்றால்...? இப்படியே கவலையுடன் எவ்வளவு காலம் வாழ்வது!

அப்போது வருகிறது அந்த மகிழ்ச்சியான செய்தி... குட்டிச் சாத்தான்....! பத்திரிகைகளில் வந்த விளம்பரத்தை வைத்து அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் குட்டிச் சாத்தானின் பெருமைகளை அறிந்து கொள்கிறார்கள். கடிதம் எழுதினார்கள். கேட்ட பணத்தையும் பிரார்த்தனையையும் அனுப்பினார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது பத்திரிகைகளில் வேறொரு குட்டிச் சாத்தானைப் பற்றிய பெரிய பெரிய விளம்பரங்கள். இதுதான் உண்மையான குட்டிச்சாத்தானாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.


கடிதங்கள் போயின. தேவையான பணத்தை மணி ஆர்டர் மூலம் அனுப்பினார்கள். என்ன காரணத்திற்காகப் பணம் அனுப்பப்படுகிறது என்பதைப் பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஆயிஷா பீபியின் உடலில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. இதன் அர்த்தம் என்ன? இனி யாரிடம் போய் முறையிடுவது? கவலையுடன் அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தபோது அவர்கள்முன் வந்து நின்றான் கரியாத்தன்.

கரியாத்தன் ஒரு புலையன். கரிய உருவத்துக்குச் சொந்தக்காரன். வயது முப்பத்தொன்பது. திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை குழந்தை பிறக்கவில்லை. உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் குறை கூறுவதற்கில்லை. சிந்திக்கத் தெரிந்தவன். பரந்த மனம் கொண்டவன். பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று நாளிதழ்களையாவது படிப்பான். கையில் கிடைக்கிற எல்லா புத்தகங்களையும் படிப்பான். எந்த விஷயத்தைப் பற்றியும் அவனுக்கென்று தனியான கருத்து இருக்கும். நன்றாகப் பேசக்கூடியவன். ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பும், ஒரு வீடும் சொந்தத்தில் இருக்கின்றன. அவன் மனைவி பெயரில் பெரிய காய்கறித் தோட்டம் இருக்கிறது. கரியாத்தனுக்கும் குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு கோவில் இருக்கிறது. மொத்தத்தில் அவர்கள் சுகமாகவே வாழ்கிறார்கள். மீன் சாப்பிட வேண்டும், கள்ளு குடிக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயத் தேவை என்றுகூடச் சொல்லலாம்.

அப்துல் ரசாக் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கும் மலையாளி அல்லவா? அவனைப் பொறுத்தவரை பணம் என்பது சாதாரண ஒரு விஷயம். மீன் சாப்பிடவும், கள்ளு குடிக்கவும் பத்து ரூபாய் அங்கு கிடைக்குமா என்று எதிர்பார்த்துதான் கரியாத்தன் அவர்களைத் தேடிப்போனான். சென்ற பிறகுதான் அவர்களின் சோகக் கதை அவனுக்குத் தெரிய வந்தது. திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை குழந்தை இல்லை. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள், குட்டிச் சாத்தான்கள் வரை எல்லாம் பார்த்தாகிவிட்டது. எத்தனை எத்தனையோ வழிபாடுகள்! எத்தனை எத்தனையோ அர்ச்சனைகள்! நேர்த்திக் கடன்கள்!

கரியாத்தன் அவர்கள் கூறியது அனைத்தையும் மிகவும் கவனமாகக் கேட்டான். கேட்டுத் தலையாட்டினான். சில இடங்களில் சிரிக்கவும் செய்தான். அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் ஒரு மாதிரியாக அவனைப் பார்த்தார்கள். சிரிக்கிற அளவிற்கு என்ன விஷயம் இருக்கிறது? அவனையே இது குறித்து கேட்கவும் செய்தார்கள். அப்போது கரியாத்தன் சொன்னான்:

"பிரார்த்தனை இதுவரை எங்கு போகணுமோ, அங்கு போகலை. அதுதான் காரணம்.''

"இப்போ பிரார்த்தனை எங்கே போகணும்ன்ற?''

"சொல்றேன். பக்தியோட கேக்கணும். எளிமையோட கேக்கணும். மிகமிகப் பணிவோட வேண்டிக்கணும். ஆள் ரொம்ப முன்கோபி. புரியுதா?''

"ஆள் யார்னு சொல்லலியே?''

"சிங்கிடி முங்கன்!''

"சிங்கிடி முங்கனா? யார் அது சிங்கிடி முங்கன்?''

"நான்தான் சொன்னேனே... அற்புதங்களில் எல்லாம் அற்புதம். அதுதான் சிங்கிடி முங்கன். அப்துல் ரசாக் முதலாளிக்கும் ஆயிஷா பீபிக்கும் அருமையான ஒரு குழந்தையை சிங்கிடி முங்கன் தருவான். பக்தியோட, வணக்கத்தோட, எளிமையோட பிரார்த்திக்கணும். ஆதிபுலையரின் தெய்வம். அவன்தான் சிங்கிடி முங்கன்.''

"புலையர்களுக்குச் சிங்கிடி முங்கன் என்ற பெயரில் ஒரு தெய்வம் இருப்பதாகக் கேள்விப்பட்டதே இல்லையே! மற்ற புலையர்கள் இதை ஒத்துக் கொள்வார்களா?''

கரியாத்தன் சொன்னான்: "இங்கேதான் பிரச்சினையே இருக்கு. காளன், கூளன், மரப்போதன், சாமுண்டி, சிண்டோப்பன், சக்கிலிப் பொத்தன், பழஞ்ஞாடன், சிண்டோதி சிப்பன், சர்களுக்குண்டன், சுங்குளாட்டன்- இப்படி எத்தனையோ தெய்வங்களைக் கும்பிட்டுகிட்டு இருக்காங்க புலையர் ஜாதியைச் சேர்ந்தவங்க. ஒரு ஒற்றுமை கிடையாது. புலையர்னா யாரு? மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்லித் திரிகிற நம்பூதிரிமார்கள், பட்டர்கள், கொங்கிணிகள், நாயர்கள், ஈழவர்கள், திய்யர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், செருப்புத் தைப்பவர்கள்- இவங்களோட அடியையும் உதையையும் வாங்கிட்டு அடிமைகளா வாழ்ந்திட்டு இருக்கானே- அவன்தான் புலையன்!''

"அப்போ அரிஜனங்கள்னு சொல்றது...?''

"சே... இந்து மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்லிக்கிற யாரோ கொடுத்த செல்லப் பெயர்- அரிஜனங்கள்ன்றது.''

அப்போது தேநீரும் பலகாரங்களும் பழமும் வந்தன. அதை எல்லாம் சாப்பிட்டு முடித்து, வளைகுடா நாட்டில் இருந்து கொண்டு வந்த விலை உயர்ந்த டண்ஹில் சிகரெட்டைப் புகைத்தவாறு கரியாத்தன் சொன்னான்:

"ஆரம்பத்துல தெய்வம் புலையரைப் படைச்சது. அவன்தான் முதன்முதலா படைக்கப்பட்டவன். அதற்குப் பிறகு படைக்கப் பட்டவங்க பறையரும் உள்ளாடன்மார்களும். மீதி இருந்த அண்டி குண்டன் சாமான்களை வச்சு மற்ற ஜாதிக்காரர்களை தெய்வம் உண்டாக்கிச்சு. ஆனா... இப்போ என்ன நடக்குது? கடைசியா படைக்கப்பட்ட அண்டனும் அடகோடனும் சொல்றான் இவங்கதான் மேல்ஜாதிக்காரங்களாம்.'' மேல்ஜாதிக்காரர்கள்மேல் இருக்கும் வெறுப்பை வெளிக்காட்டுகிற மாதிரி காரித் துப்பிவிட்டு டண்ஹில் புகைத்தவாறு கரியாத்தன் சொன்னான்:

"நாங்கதான் உண்மையிலேயே முதன்முதலாக படைக்கப்பட்ட ஆதி மனுஷங்க. அதாவது... ஆதி புலையர்கள். புலையர்களின் ராஜா. எங்களோட சிம்மாசனமும் கிரீடமும் செங்கோலும், மேல்ஜாதிக்காரர்கள்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்கதான்.'' இதைச் சொல்லி விட்டு மேல்ஜாதிக்காரர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஆடிப்போகிற மாதிரிக் காரித் துப்பிவிட்டு, டண்ஹில் புகைத்தவாறு கரியாத்தன் தொடர்ந்தான்: "நான் சொன்னேன்ல, அவுங்க புலையர்களை ஏமாத்திட்டாங்க. புலையர்களைத் தனித்தனியாப் பிரிச்சிட்டாங்க. புலையர்களை அவங்களோட அடிமைகளா ஆக்கிட்டாங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி எல்லா புலையர்களையும் ஒண்ணு சேர்த்து "சிங்கிடி முங்கர்" என்ற அமைப்பின்கீழ் கொண்டு வந்து எல்லாரையும் "சிங்கிடி முங்க" மதக்காரங்களா ஆக்க, நாங்க- ஆதி புலையர்கள் முயற்சி பண்ணினோம். ஆனா, பிரயோஜனம் இல்லாமப் போச்சு. புலையர்கள் பல பெயர்களை வச்சுக்கிட்டுத் தனித்தனி குழுவா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தப் பேருக்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்கா என்ன?''

"சிங்கிடி முங்க மதம்னா என்ன? ஏதாவது கொள்கைகள், வழிபாட்டு முறைகள் அதுக்கு இருக்கா?''

"சிங்கிடி முங்க மதம் உலகம் முழுக்க நிச்சயம் பரவும். அது அப்படிப் பரவ ரொம்ப நாள் ஆகாது. இந்த மதத்துல சேர அப்படி ஒண்ணும் வெட்டி முறிக்க வேண்டியது இல்லை. கழுத்துல எதையாவது மாட்டிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. காவி உடைகள் அணிய வேண்டாம். பூணூலோ, உச்சிக்குடுமியோ தார் பாய்ச்சிக் கட்டலோ ஒண்ணும் வேண்டாம். முழுமையா இந்த மதம்மேல நம்பிக்கை வச்சா போதும். தெய்வமான சிங்கிடி முங்கனை முழுமையா நம்பணும். கள்ளு குடிக்கணும், மீன் சாப்பிடணும். அவ்வளவுதான். ஹர ஹர... சிங்கிடி முங்கன்!


இனிதான் சிங்கிடி முங்கனோட அற்புதங்களை உங்களுக்கு நான் சொல்லப் போறேன்.'' கரியாத்தன் சிகரெட்டை இழுத்து, இருமியவாறு சொன்னான்: "இதை எவ்வளவு இழுத்தாலும், தீரவே மாட்டேங்குது.''

"சிகரெட்டுக்கு நீளம் அதிகம்.'' அப்துல் ரசாக் கூறினான்: "ஆமா... அப்படி என்ன அற்புதங்கள்? சொல்லு..''

கரியாத்தன் சொன்னான்: "ம்... சொல்றேன். ஒருநாள் தெய்வமான சிங்கிடி முங்கன் கீழே பாக்குறப்போ பூமியில் அக்கிரமம் நடக்குது... மேல்ஜாதிக்காரர்கள்னு சொல்லிக்கிற நம்பூதிமார்களும், நாயர்களும், கொங்கிணிகளும், பட்டர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், திய்யர்களும், ஈழவர்களும் ஒண்ணு சேர்ந்து புலையர், பறையர், உள்ளாடன்மார்கள் முதலான பாவப்பட்டவங்களை அடிச்சு மிதிச்சு அடிமைகள் ஆக்கிக்கிட்டு இருக்காங்க. உண்மையிலேயே கொடூரமான நிகழ்ச்சிதான்! சிங்கிடி முங்கனால் இதைச் சகித்துக் கொள்ள முடியுமா?''

கரியாத்தன் தன் பேச்சை சிறிது நேரம் நிறுத்தினான். ஏதோ சிந்தனை வயப்பட்டு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். பிறகு ஒரு டண்ஹில்லை எடுத்து உதட்டில் வைத்துப் புகைத்து, இருமியவாறு தொடர்ந்தான்: "அதான்... ஆதிபுலையலரான நாங்க... புலையர்களோட ராஜான்ற சரித்திர உண்மைகளைச் சொன்னேனே! ஒருநாள் ஒரு புலையப் பெண்- எங்களோட மூதாட்டி புல்லறுக்கப் போனாள். புல்லறுத்துக்கிட்டு இருக்கிறப்போ காட்டில் ஒரு நீண்ட கல்லைப் பார்த்தாள். கருங்கல். அதுல மூதாட்டி கையில இருந்த அரிவாளைத் தேய்ச்சுத் தேய்ச்சு தீட்டி இருக்கா. அப்பத்தான் அந்த அற்புதம் நடந்தது!''

"என்ன அற்புதம்?'' ஆயிஷா பீபி ஆவலுடன் கேட்டாள்.

கரியாத்தன் சொன்னான்: "ரத்தம்...''

"ரத்தமா?'' அப்துல் ரசாக் கேட்டான்.

"ஆமா... கருங்கல்ல இருந்து சிவப்பா ரத்தம் வழியுது. நிற்காமல் தொடர்ந்து ரத்தம் கொட்டிக்கிட்டே இருக்கு. மூதாட்டி பயந்துபோய் வீட்டுக்கு ஓடி வந்து பெரியவங்ககிட்டே விவரத்தைச் சொன்னாள். என்னவா இருக்கும்னு அவங்க அலசி ஆராயிறப்போதான் அவங்களுக்கே தெரிய வருது அந்த அற்புதங்களின் அற்புதத்தைப் பற்றி. உலக நன்மைக்காக வந்த அவதாரத்தைப் பற்றி அப்போதுதான் தெரிய வருது. அந்த அவதாரம்தான் சிங்கிடி முங்கன்! உக்கிரமூர்த்தி... முன்கோபி... சுயம்பு!''

கரியாத்தன் தன் பேச்சை நிறுத்தினான். சில நிமிடங்கள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு பக்திப் பெருக்கோடு கூறினான்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"அதுக்குப் பிறகு...?'' ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒரே குரலில் கேட்டார்கள். கரியாத்தன் சொன்னான்:

"பிறகு என்ன? எல்லாமே வேகவேகமாக நடக்க ஆரம்பிருச்சு. நைவேத்தியம், மந்திர உச்சரிப்புகள், ஸ்ரீகோவில், கற்பூர தீபங்கள், தங்க சிம்மாசனம்- கோவில் உண்டாக்கிப் பிம்ப பிரதிஷ்டை நடத்தணும். மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்றவங்க இடம் தருவாங்களா? உடனே ஆதிபுலையரான நாங்க ஒண்ணு சேர்ந்து பணம் தயார் பண்ணி மேல்ஜாதிக்காரங்கன்னு சொல்லித் திரிகிறவங்களோட வயல்ல ஒரு பகுதியை விலைக்கு வாங்கி கோவில் கட்டி பிம்ப பிரதிஷ்டையும் செஞ்சாச்சு. ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"நாங்க என்ன செய்யணும்?''

"விஷயத்தைதான் நான் ஏற்கெனவே சொல்லிட்டேனே! பக்தி வேணும். எளிமை வேணும். நம்பிக்கை வேணும். கோவிலுக்குப் போகலாம். கீர்த்தனைகள் சொல்லலாம். தெய்வத்தைத் தொழலாம். நம்ம பிரச்சினை என்னன்னு சொல்லலாம். ஒரு குழந்தை வேணும்னு கடவுள்கிட்ட கெஞ்சி நிற்கலாம். குழந்தைக்குச் சரிசமமா தராசுல மீன் வச்சு தெய்வத்துக்குத் தரலாம். ஒரு பானைக் கள்ளு தரலாம். என்ன சொல்றீங்க?''

இதில் சிந்திக்க என்ன இருக்கிறது? அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் கரியாத்தனும் கோவிலை நோக்கி கிளம்பினார்கள். ஒரு காரில்தான். மதிய நேரம் ஆனபோது காரை சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். கோவிலுக்கு சிறிது தூரம் கால்நடையாக நடந்து செல்ல வேண்டும். போகிற வழியில் நிறைய வீடுகள். எல்லாம் கிட்டத்தட்ட குடிசைகள்தாம். அந்தக் குடிசைகளுக்கு மத்தியில் அவர்கள் நடந்து சென்றார்கள். நிறைய நாய்கள், நிறைய பூனைகள், நிறைய பன்றிகள், நிறைய கோழிகள், நிறைய ஆடுகள். இவை எல்லாவற்றையும் தாண்டி, வயலின் வழியே நடந்து சென்று அவர்கள் கோவிலை அடைந்தார்கள். ஓலையில் வேயப்பட்ட- இன்றோ நாளையோ என்று சிதிலடைந்துபோய்க் காணப்பட்ட ஒரு சிறிய கட்டடம். அதுதான் கோவில். மரக்கம்புகளை ஆங்காங்கே தூணாக நிறுத்தி இருந்தார்கள். சுற்றிலும் ஓலையால் மறைக்கப்பட்டிருந்தது.

கோவிலைப் பார்த்த ஆயிஷா பீபிக்கும் அப்துல் ரசாக்கிற்கும் பெரிய அற்புதம் ஒன்றும் மனதில் தோன்றவில்லை.

கயிறு கொண்டு கட்டப்பட்ட வாசல் கதவின் கட்டை அவிழ்த்து கரியாத்தன் உள்ளே நுழைந்தான். அவனைத் தொடர்ந்து அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் நுழைந்தார்கள். உள்ளே நல்ல இருட்டு. வெளிக் காற்று உள்ளே வராததால், ஒரு வகை வாசனை அங்கு வியாபித்து நின்றது. இருட்டோடு இருட்டாய் சங்கமமாகி நின்று கொண்டிருக்கிறபோது, ஆயிஷா பீபிக்கும் அப்துல் ரசாக்கிற்கும் தெய்வ தரிசனம் கிடைத்தது. கரியாத்தன் தீப்பெட்டியை உரசி உண்டாக்கிய வெளிச்சத்தில் கோவிலுக்குள் இருந்த தெய்வச் சிலை தெரிந்தது. சாட்சாத் சிங்கிடி முங்கன்தான்!

தங்கத்தாலான சிம்மாசனமோ கருவறையோ எதுவுமே அங்கு இல்லை. கரியாத்தன் தீக்குச்சியால் உண்டாக்கிய வெளிச்சம் தீர்ந்தவுடன், மீண்டும் ஒரே இருட்டு. எல்லாரும் இருட்டில் கரைந்து போய் நின்றிருந்தார்கள். கண்களோ, மூக்கோ, வாயோ, காதுகளோ, தலையோ, கையோ, காலோ ஒன்றையும் பார்க்க முடியவில்லை. மொத்தத்தில் பார்த்தது கறுத்துப்போன- கிட்டத்தட்ட எடை குறைந்த நீளமான கருங்கல் ஒன்றைத்தான். வெறும் நிலத்தில் குழி தோண்டி நிறுத்தி இருக்கிறார்கள்.

கைகளால் தொழுது மனதிற்குள் தியானம் செய்தவாறு வேண்ட நினைப்பதை வேண்டும்படி கேட்டுக் கொண்டான் கரியாத்தன். எங்கோ இருந்து மணி ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து கரியாத்தன் அதை ஆட்டினான். ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒன்றாக நின்று பிரார்த்தித்தார்கள்.

"எங்களுக்கு ஒரு குழந்தையைத் தரணும். குழந்தை எடைக்கு எடை மீன் தர்றோம். ஒரு பானைக் கள்ளும் தர்றோம்.''

கரியாத்தனும் ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் ஒன்றாக நின்று பக்தியுடன் வேண்டினார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்! ஹர ஹர சிங்கிடி முங்கன்! ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

மனம் வேண்டுவதை சிங்கிடி முங்கனிடம் கூறி முடித்தவுடன் அப்துல் ரசாக் கேட்டான்:

"கரியாத்தா, கோவிலுக்கு நாங்க என்ன கொடுக்கணும்?''

"கோவிலுக்கு ஒண்ணும் தர வேண்டாம். பிரதிஷ்டைக்கு ஏதாவது கொடுத்தா போதும். பிரியப்படறது...''

அப்துல் ரசாக் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்தான். அதை கரியாத்தனிடம் கொடுத்தான். கரியாத்தன் சொன்னான்:

"இதை வாங்க எனக்கு அதிகாரமில்லை. சிங்கிடி முங்கன் பயங்கர முன்கோபி. அங்கே கொடுத்தா போதும்.''


"கல்மேல வைக்கட்டா?''

"அது தலை ஆச்சே! பாதத்தில் வையிங்க.''

அப்துல் ரசாக் பக்தியுடன் கரியாத்தன் சொன்னபடி செய்தான். அவனும் ஆயிஷா பீபியும் வெளியே வந்தார்கள். கரியாத்தன் உள்ளே நின்று சிறிது நேரம் தனியாகப் பிரார்த்தனை செய்தான்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

அது முடிந்ததும் கரியாத்தனும் வெளியே வந்தான். வாசல் கதவை அடைத்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து காரை நோக்கி நடந்தான். போகிற வழியில் தன் வீட்டை கரியாத்தன் அவர்களுக்குக் காட்டினான். ஓடு வேய்ந்த வீடு. வீட்டில் இருந்து பார்த்தால் சாலை தெரியும். ஒவ்வொரு வருடமும் திருவிழாக் கொண்டாட்டம் இரண்டு மூன்று நாட்கள் வரை நடக்கும். இரவு பகல் பாராமல் திருவிழா நடக்கும். திருவிழாவைப் பார்க்க தூரத்தில் இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் புலையர்கள் வருவார்கள். புலையப் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும்கூட வருவார்கள். பறையர்களும் உள்ளாடன்மார்களும்கூட வருவார்கள். தேநீர் கடைகளும் பீடிக் கடைகளும் தொட்டில் ஆட்டமும் கட்டாயம் இருக்கும். திருவிழாவை முன்னிட்டுக் கள்ளு, மீன் சகிதமாகப் பெரிய அளவில் விருந்து நடக்கும். விழாவில் பல பெண்களும், பல ஆண்களும் சாமி ஆடுவார்கள். தீவிர பெண் பக்தைகள் சிலர் முடியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு ஆடுவது உண்மையிலேயே புண்ணியமான நேர்த்திக்கடன்தான். சுமார் இரண்டாயிரம் பேர்- ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களுமாய்க் குழுமி இருந்து பக்திவயப்பட்டு உரக்க சத்தமிடுவார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

அவர்கள் நாய்களையும் பூனைகளையும் பன்றிகளையும் கோழிகளையும் ஆடுகளையும் கடந்து, வீடுகளின் ஓரமாக நடந்து சென்று காரை அடைந்தார்கள். அப்போது அப்துல் ரசாக் கரியாத்தன் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

"மீனும் கள்ளும் சாப்பிடு. நான் அடுத்த வாரம் சவுதி அரேபியாவுக்குப் போறேன். ஆறு மாசம் கழிச்சு மீண்டும் வருவேன். ஆயிஷாவுக்காக தனியா வேண்டிக்கோ!''

கார் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டபோது, ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் கரியாத்தனும் கைகளைக் குவித்து தொழுதார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

கார் வேகமாக ஓடியது. ஒரு வாரம் கழித்து, அப்துல் ரசாக் விமானத்தில் சவுதி அரேபியாவுக்குப் பறந்தான். ஆயிஷா பீபி வீட்டில் தனியாக இல்லை. வீட்டில் அவளுடன் அம்மாவும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். மொத்தத்தில் அவள் வாழ்க்கை சுகமான வாழ்க்கையே. மாதம் ஒன்று கடந்தது. உலகத்தில் பெரிதாகச் சொல்கிற மாதிரி எதுவும் நடக்கவில்லை. எல்லாமே தன் போக்கில் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அற்புதங்களின் அற்புதமான அந்தச் சம்பவம்!

அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் நியூட்ரான் குண்டும் ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்து வெடித்தன! உலகம் அதிர்ந்தது. அப்படி என்ன சம்பவம் என்கிறீர்களா? கர்ப்பம்...!

ஆயிஷா பீபி கர்ப்பம் அடைந்து விட்டாள்!

உலகத்திற்கு இது தெரிய வேண்டாமா? சவுதி அரேபியாவில் இருக்கும் அப்துல் ரசாக்கிற்கு அவசரத் தந்தி போனது.

"கர்ப்பம்! ஹர ஹர சிங்கிடி முங்கன்! - ஆயிஷா."

வெகு சீக்கிரமே சவுதி அரேபியாவில் இருந்து பதில் அவசரத் தந்தி வந்தது.

"நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விடுமுறையில் வருகிறேன். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். ஹர ஹர சிங்கிடி முங்கன்! - அப்துல் ரசாக்."

ஆயிஷா பீபி கர்ப்பமடைந்திருக்கும் செய்தி கேட்டு கரியாத்தன் வந்தான். மகிழ்ச்சி அதிகமாகி வழக்கத்தைவிட கூடுதலாக மீன்களைச் சாப்பிட்டான். வழக்கத்தைவிட கூடுதலாகக் கள்ளைக் குடித்தான். அவனால் ஒழுங்காக நிற்கக்கூட முடியவில்லை. கீழே உட்கார்ந்தான். உட்கார்ந்தபடியே ஆடினான். ஆடியவாறே சொன்னான்-

"ஹர ஹர... சிங்கிடி... முங்கன்!''

அடிக்கடி அங்கு போவான். நன்றாக மீன்களைத் தின்பான். கள்ளு குடிப்பான். மிகமிகக் குதூகலமாக அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. மாதங்கள் ஒவ்வொன்றாகப் பறந்து கொண்டிருந்தன. சந்தோஷ சகிதமாக அப்துல் ரசாக் வந்தான். சந்தோஷத்துடன் கரியாத்தன், ஆயிஷா பீபி, அப்துல் ரசாக் மூவரும் கோவிலுக்குச் சென்றனர். ஆயிஷா பீபியின் வீங்கிப் போன வயிற்றைச் சிங்கிடி முங்கன் பார்த்தான். அப்துல் ரசாக் நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து சிங்கிடி முங்கனின் காலில் வைத்தான். கரியாத்தனுக்கு டண்ஹில் சிகரெட் பாக்கெட்டுகளையும், ஐம்பது ரூபாயும் தந்தான் அப்துல் ரசாக். அந்த அளவில் கரியாத்தனுக்கு சந்தோஷமே. நாய்களையும் பூனைகளையும் பன்றிகளையும் கோழிகளையும் ஆடுகளையும் கடந்து அவர்கள் நடந்து சென்றார்கள். அப்துல் ரசாக் திரும்பச் செல்வது வரை கரியாத்தன் பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் இருந்தான். நாட்கள் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தன. விடுமுறைக் காலம் முடிந்து அப்துல் ரசாக் சவுதி அரேபியாவிற்கு விமானத்தில் புறப்பட்டான். எல்லாம் சாந்தம். எல்லாம் மங்களம்.

ஆயிஷா பீபியின் வயிறு டங்குஃபுங்கோ என்று படிப்படியாக வீங்கி வீங்கி வந்தது. வயிற்றுக்குள் இருப்பது ஆணா பெண்ணா?

பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. ஆணாக இருந்தாலும் பரவாயில்லை. மென்மையாக அந்தப் பிஞ்சுக் கால்களைப் பார்க்க வேண்டும். பிஞ்சுக் கைகளைப் பார்க்க வேண்டும். குட்டிக் கண்கள், குட்டிப் புன்சிரிப்பு, குட்டி அழுகை- எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும். எல்லாம் நல்ல முறையில் முடிய வேண்டும். ஹர ஹர சிங்கிடி முங்கன்!

அப்போது வருகிறது செய்திகளில் எல்லாம் பெரிய செய்தியாக அந்தச் செய்தி. மிகமிக மகிழ்ச்சியான செய்தி.

ஆயிஷா பீபி பிரசவமாகிவிட்டாள். ஆண் குழந்தை. சொங்கன்!

"பிரசவமாகிவிட்டது. ஆண் குழந்தை. நல்ல சுகம். ஹர ஹர சிங்கிடி முங்கன்!- ஆயிஷா." தூரத்தில் கிடக்கும் சவுதி அரேபியாவிற்கு அவசரத் தந்தி பறந்தது. அங்கே இருந்து அப்துல் ரசாக்கின் பதில் அவசரத் தந்தி.

"மிகமிக சந்தோஷம். குழந்தையின், தாயின் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். ஒருசில மாதங்களில் வருகிறேன். ஹர ஹர சிங்கிடி முங்கன்! - அப்துல் ரசாக்."

கரியாத்தன் அவ்வப்போது வருகிறான். மீன் சாப்பிடுகிறான். கள்ளு குடிக்கிறான். மகிழ்ச்சி தாங்க முடியாமல் நடனம் ஆடுகிறான். கீழே விழுகிறான். மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறான். மீண்டும் ஆடுகிறான். எங்கு பார்த்தாலும் சந்தோஷத்தின் ரேகைகள்!

குழந்தை கொள்ளை அழகுடன் வளர்ந்து வருகிறான். அழகாக சிரிக்கிறான். யார் பார்த்தாலும் கையில் தூக்கி கொஞ்சுவார்கள். மிக மிக பத்திரமாக குழந்தையை வளர்த்தாள் ஆயிஷா பீபி. குழந்தைக்குத் தந்தையின் முகச்சாடையா? தாயின் முகச்சாடையா? வளர்ந்து வரட்டும். பிறகுதான் தெரியும் அது. குழந்தையின் சிரிப்பையும் அழகையும் கண் குளிரக் கண்டு களிக்க அப்துல் ரசாக் எப்போது வருவான்?


சில நாட்களிலேயே ஏகப்பட்ட பெட்டிகள் சகிதமாக அப்துல் ரசாக் வந்தான். குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டான்.

குழந்தையையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். தான் நினைத்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தது குறித்து அவனுக்கு ஏக சந்தோஷம். ஆயிஷா பீபியை அருகில் அழைத்துக் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

கரியாத்தன் வந்து மகிழ்ச்சியுடன் தேநீரும் பலகாரமும் சாப்பிட்டு முடித்து டண்ஹில் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது அப்துல் ரசாக் சொன்னான்:

"நாளைக்கே மகனோட துலாபார நிகழ்ச்சியை நடத்திட வேண்டியதுதான். மீனும் கள்ளும் நாளைக்கு வாங்குவோம். ஒரு பெரிய தராசு வாங்கணும். கரியாத்தா, நீ நாளைக்குக் காலையிலே இங்க வரணும். வந்த உடனே மார்க்கெட்டுக்குப் போனா நல்ல மீன் கிடைக்கும்.''

"காலையிலே சீக்கிரம் வர்றேன்.'' கரியாத்தன் புறப்பட்டான்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் தயாராக இருந்தன. பெரிய ஒரு பாத்திரம் நிறைய துடித்துக் கொண்டிருந்த மீன்கள், ஒரு பெரிய பானை நிறையக் கள்ளு, ஒரு பெரிய தராசு. குழந்தையைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து கைகள், கால்கள், இடுப்பு, கழுத்து எல்லா இடங்களிலும் தங்க நகைகள் அணிவித்தார்கள். ஆயிஷா பீபியும் புறப்படத் தயாராக இருந்தாள். அப்துல் ரசாக்கும் புத்தாடை அணிந்திருந்தான். கரியாத்தனையும் அழைத்துக் கொண்டு எல்லாரும் கோவிலை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் எந்த விதப் பிரச்சினையும் உண்டாகவில்லை. எல்லாம் நல்லவிதத்திலேயே முடிந்தன.

அவர்கள் கோவிலை அடைந்தார்கள்.

ஆயிஷா பீபியும் குழந்தையும் அப்துல் ரசாக்கும் உள்ளே நுழைந்தார்கள். ஆயிஷா பீபி குழந்தையைத் தூக்கிச் சிங்கிடி முங்கனின் பாதத்தில் வைத்துக் காண்பித்தாள். பிறகு குழந்தைக்கு முத்தம் தந்தாள். அப்போது ஆயிஷா பீபியின் மனதிற்குள் ஒரு ஆசை உதித்தது. என்ன ஆசை? சிங்கிடி முங்கனைத் தொட்டுப் பார்க்க வேண்டும். நடக்குமா?

தன் ஆசையை அப்துல் ரசாக்கிடம் சொன்னாள் ஆயிஷா பீபி. அப்துல் ரசாக் மனைவியின் ஆசையை கரியாத்தனிடம் கூறினான். கரியாத்தன் கோவிலின் உத்திரத்தில் தராசைத் தொங்கவிட்டு கட்டிக் கொண்டிருந்தான். அப்துல் ரசாக் சொன்னதைக் கேட்டுக் கரியாத்தன் சொன்னான்: "சிங்கிடி முங்கன் ஒரு உக்கிர மூர்த்தி. முன்கோபி. சுயம்பு. பெண்கள் அவனைத் தொடக்கூடாது. தொட்டால் எரிஞ்சு சாம்பலாயிடுவாங்க... பத்தினி என்று தன்னை தைரியமா சொல்லிக்கிற பொம்பள மட்டும் சிங்கிடி முங்கனைத் தொடலாம்.''

இதைக் கேட்டதும் ஆயிஷா பீபி கண்களில் நீர் மல்க கணவனைப் பார்த்தாள். ஆயிஷா பீபிக்கு சிங்கிடி முங்கனைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

தொட்டால் கருகிச் சாம்பலாகிவிடுவாளா? ஆயிஷா பீபி வலது கையை நீட்டி, நடுங்கியவாறு சிங்கிடி முங்கனைத் தொட்டாள். ஒன்றுமே நடக்கவில்லை. ஆயிஷா பீபி பதிவிரதைதான்! உண்மையிலேயே திகில் நிறைந்த நிமிடங்கள்தாம் அவை!

ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் சேர்ந்து பிரார்த்தித்தார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

தொடர்ந்து குழந்தையை தராசின் ஒரு தட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டார்கள். மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாயிற்றே இது! இதைத்தான் துலாபார நிகழ்ச்சி என்று கூறுவார்கள். கரியாத்தன் அடுத்த தட்டில் மீன்களை வைத்தான். சமமாக அல்ல. மீன் இருந்த தட்டு கீழே இறங்கி இருந்தது. மங்களம்!

எப்படியோ- மகத்தான அந்த நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.

மீன்களைப் பாத்திரத்தில் போட்டு கரியாத்தன் கோவிலுக்கு உள்ளே சென்று, அதை பக்தியுடன் சிங்கிடி முங்கனின் பாதங்களில் வைத்தான். அருகில் கள்ளு நிரம்பிய பானையையும் வைத்தான். மூன்று பேரும் சேர்ந்து உரத்த குரலில் அழைத்தார்கள்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

எல்லாம் சுபம். எல்லாம் மங்களம். எல்லாம் நன்றாகவே நடந்து முடிந்தன.

கரியாத்தன் கோவில் வாசல் கதவை அடைத்தான். ஆனந்தத்துடன் அவர்கள் காரின் அருகே சென்றார்கள். காரில் ஏறிய அப்துல் ரசாக் சொன்னான்:

"கரியாத்தா, ஒரு ஆண் யானையை வாங்கி சிங்கிடி முங்கன் கோவில்ல இருக்க வச்சா எப்படி இருக்கும்?''

அருமையான விஷயம்தான். கோவிலில் யானையைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது சாதாரண ஒரு விஷயமா என்ன? ஆண் யானைகளைக் கோவிலில் கொண்டு வந்து நிறுத்தும் பாக்கியவான்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தாம். சந்தேகமே இல்லை.

முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அருமையான ஒரு ஆண் யானை கிடைக்கும்.

"ஆனால், யானையைப் பாக்குறதுன்றது அவ்வளவு இலேசுப்பட்ட விஷயம் இல்ல.'' கரியாத்தன் சொன்னான்: "அது நெனச்சா ஆளுங்களை சரமாரியாக் கொல்லும். யானைப் பாகர்களைக் குத்தி கொல்றதுன்றது யானைகளுக்கு ஒரு புண்ணிய காரியம்போல. ஒவ்வொரு நாளும் அதுக்குத் தீனி போட்டுக்கிட்டு இருக்கணும். குளிப்பாட்டணும். யானையை வளர்க்கிறதுனால என்ன பிரயோஜனம்? அதுக்கு பதிலா நல்ல ஒரு கறவை மாட்டை வாங்கி நடையில கட்டினா, பாலாவது கிடைக்கும். சிங்கிடி முங்கனுக்குப் பாலாபிஷேகம் பண்ணியது மாதிரியும் இருக்கும்.''

"அப்படியே செஞ்சிடுவோம்.'' அப்துல் ரசாக் சொன்னான்.

"ஆயிஷாவோட ஒரு விருப்பம் இருக்கு. அதை நாம செஞ்சே ஆகணும். கோவில் சிதிலமாகிப் போய், மோசமான நிலையில் இருக்குல்ல? உடனடியா கோவிலைப் புதுப்பிக்கணும். நல்ல மரத்தை வச்சு மேல் தளம் அமைச்சு கற்களை வச்சு சுவர்கள் கட்டி, மேலே ஓடு போட்டு வெள்ளை அடிக்கணும். திண்ணைக்கு சிமெண்ட் போடணும். உள் பகுதியைச் சுத்தமா வைச்சிருக்கணும். சிங்கிடி முங்கனை நல்ல ஒரு சிமெண்ட் பீடத்தின்மேல் வைக்கணும். கோவிலுக்கு இன்னும் பளபளப்பு ஏத்தணும். மின்சார விளக்குகள் அமைக்கணும். அப்படின்னாத்தான் கோவிலோட உள்பகுதியும் சரி, வெளிப்புறமும் சரி- ஒளிமயமா இருக்கும்.''

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"ஒரு தச்சனை வரவழைச்சு இவ்வளவும் செய்ய என்ன செலவாகும்னு பார்க்கணும். நான் போய் வந்தபிறகு வேலைகளை ஆரம்பிச்சா போதும். நாளைக்குக் காலையில கரியாத்தா, நீ வீட்டுக்கு வா. உனக்கு கொடுக்கிறதுக்குன்னு சில பொருட்கள் கொண்டு வந்திருக்கேன். நாளைக்குக் காலையில உனக்கு வீட்லதான் சாப்பாடு. சரி... நாங்க புறப்படறோம்.''

ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் கரியாத்தனும் கூறினார்கள்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

கார் புறப்பட்டது. வீட்டை நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.

பாக்யவான்! பாக்யவதி! பாக்ய குழந்தை!

கரியாத்தன் திரும்பவும் கோவிலுக்கு மெதுவாக நடந்தான். நாளை அப்துல் ரசாக் என்ன தருவான்? எது கிடைத்தாலும் சரிதான்.


என்னதான் கொடுக்கப் போகிறான் என்பதையும் பார்த்து விடுவோமே! உள்ளே வைத்திருந்த மீன்களையும் கள்ளையும் உஷாராக எடுக்க வேண்டும். கொஞ்சம் மீனைப் பொரிக்க வேண்டும். மீதி மீனைக் குழம்பு வைக்க வேண்டும். மீன் குழம்பில் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சரியான அளவில் சேர்க்க வேண்டும். புளி உரிய அளவில் இருந்தால் கள்ளு குடிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கும். ஐலா, மாலான் என்ற கணம்பு, சிறிய திருதகள், ஆகோலி, கரிமீன்- இப்படி எத்தனை விதவிதமான மீன்கள் இருக்கின்றன. இரண்டு கரிமீன்களை மிளகாய், மஞ்சள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொரித்து தீயில் வாட்டிய வாழை இலையில் கட்டி கள்ளுக்கடை உரிமையாளர் கேளுமூப்பனுக்குத் தர வேண்டும். ஆதி புலையவன் எப்படி வாழ்கிறான் என்பதைக் கேளுமூப்பன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

தின்பது, குடிப்பது, ஜாலியாக இருப்பது, தூங்குவது- இதுதான் வாழ்க்கை! இப்படிச் சொன்னது யார்? யாராக இருந்தாலும், சொன்னவன் உண்மையிலேயே பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும். தெளிவான பார்வை கொண்ட- ரசனை கொண்ட மனிதனாகத்தான் இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது உண்மையிலேயே சுகமான ஒரு விஷயம்தான். அதற்கு மறுப்பே கிடையாது. சுகம்... சுகம்... பரம சுகம். இப்படிப்பட்ட பலவித சிந்தனைகளுடன் கரியாத்தன் கோவிலை நெருங்கும்போது- என்ன இது? ஒரு வகை சோம்பல் முறிக்கும் சப்தம்... ஒரு குரைக்கும் ஓசை... ஒரு சீறல்... மொத்தத்தில் ஒரே ஆரவாரம்!

கோவில் வாசல் கதவு திறந்து கிடக்கிறது. அடைத்து வைத்திருந்ததுதான். எப்படி இது திறந்தது? யார் திறந்தது? உள்ளே... ஒரே ஆரவாரம்! ஊரில் இருக்கும் அத்தனை நாய்களும் பன்றிகளும் பூனைகளும்... எல்லாம் ஒன்று சேர்ந்து கோவிலைத் தேடி வந்திருக்கின்றன.

கரியாத்தன் வெளியே வந்து பெரிய ஒரு கம்பை எடுத்து நாய்களையும் பன்றிகளையும் பூனைகளையும் மனம் போனபடி அடிக்கத் துவங்கினான். அவ்வளவுதான்... சோம்பல் முறிப்பு, குரைத்தல், சீற்றல் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. எல்லாமே போய் இடம் காலியான பிறகு கரியாத்தன் திகைப்புடன் பார்த்தான். மீன்கள் இருந்த இடத்தில் ஒரு மீனாவது மீதி இருக்க வேண்டுமே! கள்ளுப் பானை உடைந்து கிடந்தது!

கரியாத்தன் உண்மையிலேயே கடுப்பாகிவிட்டான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முறுக்கேறி நின்றான். தன்னை மறந்து கத்தினான். அழுதான். சிங்கிடி முங்கனைப் பார்த்து உரத்த குரலில் கேட்டான்:

"சிங்கிடி முங்கா... கழுதையோட மகனே! என்னடா இங்க நடந்திருக்கு? டேய்... உன் முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கிறது யார்னு உனக்குத் தெரியுமா? நான் யார்? கரியாத்தன்... உன்னோட பூசாரி. நைவேத்தியம், மந்திரம், கற்பூர தீபங்கள், நெய் விளக்குகள், கீர்த்தனைகள், தீபாராதனை! இதெல்லாம் உனக்கு ஞாபகத்தில் இருக்கா? தேவடியா மகனே! டேய்... இங்க என்ன ஒவ்வொரு நாளுமா துலாபாரம் நடக்குது? தவமிருந்து நடந்த ஒரே துலாபாரம்! அதுவும் மீன்களை வச்சு...! போதாதுன்னு கள்ளு வேற... டேய்... கழுதைப் பயலே! நான் ஒரு மீனைச் சாப்பிட முடிஞ்சிச்சாடா? கள்ளு குடிக்க முடிஞ்சதா? டேய்... நாய்களும் பன்னிகளும் பூனைகளும் என்ன உன்னோட அப்பன்களா? டேய்... உன்னை என்னென்னவோ திட்டணும்போல இருக்கு. ஆனா, வார்த்தைகள் சரியா வரமாட்டேங்குது. இரு... பெரிய சுத்தியை எடுத்துட்டு வந்து உன்னைத் துண்டு துண்டா உடைச்சு சாக்குல கட்டி கடல்ல எறியிறேன். டேய்... கரியாத்தன்கிட்டயா நீ விளையாடுறே?''

இப்படிச் சொன்ன கரியாத்தன் சிங்கிடி முங்கனை காலால் எட்டி உதைத்தான். உதைத்த வேகத்தில் சிங்கிடி முங்கன் தரையில் போய் விழுந்தான்.

"அங்கேயே கெடடா தேவடியா மகனே... அங்கேயே கெட.''

கரியாத்தன் பார்த்தான். சிங்கிடி முங்கன் இப்போது கிடக்கும் இடத்தில் கோவிலுக்கு வந்த பக்தர்களில் சிலர் மலம் கழித்திருந்தார்கள். கரியாத்தன் வெளியே போய் கொஞ்சம் வைக்கோலும் குப்பைகளும் அள்ளிக் கொண்டு வந்தான். அவற்றை வைத்து மலத்தை வாரிக் கொண்டு போய் வெளியே போட்டான். தொடர்ந்து உடைந்து கிடந்த பானைத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்து வெளியே வீசி எறிந்தான். கோவிலின் உள் பகுதியை முழுமையாக சுத்தம் செய்தான். எல்லாம் முடித்து வெளியில் நின்றிருந்தபோது, தூரத்தில் வயலின் அந்தக் கரையில் இருந்து ஒரு பக்தனும் பக்தையும் ஒரு கோழியைக் கையில் வைத்துக் கொண்டு வருவது தெரிந்தது. கையில் இருப்பது சேவலா? கோழியா?

கரியாத்தன் அடுத்த நிமிடம் உள்ளே ஓடிச் சென்று கீழே விழுந்து கிடந்த சிங்கிடி முங்கனைத் தூக்கி நிறுத்தி அடிப்பாகத்தை மண்ணுக்குள் விட்டு காலால் மிதித்துவிட்டான். இப்போது சிங்கிடி முங்கன் மண்ணில் அசையாமல் இருந்தான். அங்குமிங்குமாய் இருந்த குப்பைகளையும் அசுத்தங்களையும் அப்புறப்படுத்தி முடிக்கவும், பக்தர்கள் கோழியுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவர்கள் பக்தியுடன் கோவில் வாசல் முன்வந்து நின்றவுடன், வித்தியாசமான மணம் அங்கு இருப்பதை உணர்ந்தார்கள்.

"கள்ளு மணமும் பச்சை மீன் வீச்சமும் வருதே!''

"மணம் இல்லாம இருக்குமா?'' கரியாத்தன் சொன்னான்: "மீன் துலாபாரம் இன்னைக்கு இங்கே நடந்துச்சு. முஸ்லிம் ஜாதிக்காரங்க. புருஷன் பொண்டாட்டி. கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆயிருச்சு. குழந்தையே பிறக்கல. பிரார்த்தனை, வழிபாடு, நேர்த்திக்கடன், முஸ்லிம் மதப் பெரியவர்கள், கிறிஸ்துவ பாதிரியார்கள், மதர்கள், நம்பூதிரிமார்களின்- பட்டன்மார்களின்- நாயர்களின்- கொங்கிணிமார்களின் தெய்வங்கள், கோவில்கள், திய்யர்களின்- ஈழவர்களின் கோவில்கள், தெய்வங்கள், குட்டிச்சாத்தான்மார், சபரிமலை அய்யப்பன், வாவருசுவாமி, பீமாப்பள்ளி- இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா... இப்படிப் பல இடங்கள்ள பிரார்த்தனையும் வழிபாடும் நடத்தினாங்க. எவ்வளவோ கணக்கு வழக்குப் பார்க்காம பணத்தையும் செலவழிச்சாங்க. ஒரு பிரயோஜனம் இருக்கணுமே.''

"பிறகு...?''

"கடைசியில சிங்கிடி முங்கனைத் தேடி இங்க வந்தாங்க.''

"சரியான இடத்திற்குத்தான் வந்திருக்காங்க. இங்க வந்துதானே ஆகணும்!''

"இங்க வந்து நின்னாங்க. சிங்கிடி முங்கன் முன்னாடி கைகூப்பிக் குறையைச் சொல்லி கெஞ்சினாங்க.''

"அதுக்கு பிறகு என்ன நடந்தது?''

"பிறகு என்ன? அந்த பொம்பளை கர்ப்பமாயிருச்சு. குழந்தையும் பொறந்திருச்சு. ஆண் குழந்தை! அந்தக் குழந்தைக்கு இன்னைக்கு மீன் துலாபாரம். கூடவே ஒரு பானை நிறைய கள்ளு.''

"கள்ளும் மீனும் எங்கே காணோம்?''

"மாயமா மறைஞ்சிடுச்சு.''

"அப்படின்னா...?''

"மறைஞ்சு போச்சு. காணோம்.''

பெண் பக்தியில் மூழ்கிப் போய் சொன்னாள்:

"எல்லாரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.''

எல்லாரும் உரத்த குரலில் சொன்னார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''


"நீங்க என்ன விஷயமா இங்க வந்தீங்க?''

"குழந்தை விஷயம்தான். எங்களோட பொட்டை ஆடு இன்னும் குட்டி போடல.''

"பக்கத்துல கிடா ஆடு எதுவும் இல்லியா?''

"ரெண்டு மூணு இருக்கு!''

"ஆடு நிச்சயம் குட்டி போடும். யானையும் நிச்சயம் குட்டி போடும். ஆமா... என்ன கொண்டு வந்தீங்க?''

"கோழி...''

"கால்களைக் கட்டி இருக்கீங்களா?''

"கட்டியிருக்கோம்.''

"கோழியைக் கொண்டு போய் சிங்கிடி முங்கனோட பாதத்துல வையுங்க. பத்திரமா வைக்கணும். ரொம்ப கவனமா இருக்கணும். சிங்கிடி முங்கன் ஒரு முன்கோபி! உக்ரமூர்த்தி! நினைச்சா யாரையும் சாம்பலாக்கிவிடுவான்.''

அவர்கள் கோழியைக் கொண்டு போய் சிங்கிடி முங்கனின் பாதத்தில் வைத்தார்கள். தங்கள் குறையைச் சொல்லி சிங்கிடி முங்கனிடம் நிவர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். கரியாத்தன் சொன்னான்:

"அந்த முஸ்லிம் ஜாதிக்காரங்க நம்ம கோவிலைப் புதுப்பிச்சு, ஓடு போட்டு, விளக்குப் போட்டுத் தர்றதா சொல்லி இருக்காங்க.''

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

பக்தர்களான கணவனும் மனைவியும் அந்த இடத்தை விட்டு அகன்ற பிறகு, கரியாத்தன் மனதிற்குள் நினைத்தான்: "இனி கோவிலில் எப்போதும் ஆள் இருக்க வேண்டும். பூட்டும் சாவியும் உள்ள ஒரு பெரிய உண்டியல் வைக்க வேண்டும். பக்தர்கள் பொதுவாக வாசலைத் திறந்து உள்ளே வருவார்கள். தங்கள் குறைகளைச் சிங்கிடி முங்கனிடம் தெரிவித்து, கையில் ஏதாவது கொண்டு வந்திருந்தால் சிங்கிடி முங்கனின் பாதத்தில் வைத்து விட்டுப் போவார்கள். பணம் இதுவரை திருடு போனதில்லை. திருடுவதற்கு யாருக்குத் தைரியம் வரும்? இருந்தாலும் உண்டியல் வைக்க வேண்டும். மாலை நேரத்தில் தீபாராதனை, பூஜை எல்லாம் செய்ய வேண்டும். அதிகாலை நேரத்திலும் பூஜை செய்ய வேண்டும். இதெல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஆள் கட்டாயம் இருக்க வேண்டும். நிச்சயம் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும்." கரியாத்தன் சிங்கிடி முங்கனுக்கு அருகில் போய் நின்று கொண்டு சொன்னான்: "சிங்கிடி முங்கா! இப்போ நிக்கிறது பழைய கரியாத்தன். தெரியுதா? நமக்குள்ள ராசியா போய்டுவோம். நான் உன்னை கன்னாபின்னான்னு திட்டினதை எல்லாம் மனசுல வச்சுக்காதே. உன்னை நான் மிதிச்சதையும் பெரிசா எடுத்துக்கிடாதே. எல்லாத்தையும் மறந்து மன்னிச்சுடு. கோயில்ல இந்த வருஷம் நடக்கப் போற திருவிழாவிலே சிங்கிடி முங்கா, உனக்குத் தனியா நான் மட்டும் பதினொரு வெடி வெடிக்கப் போறேன். ட... ட... டட்டான்னு தொடர்ச்சியா பதினொரு வெடி. இப்போ உன்மேல நூற்றியொரு மந்திரங்கள் சொல்லப் போறேன். கொஞ்ச நேரம் போன பிறகு கோழி ரத்தம். இப்போ உனக்கு திருப்திதானா?''

கரியாத்தன் அங்கேயே நின்று முழுமையான பக்தியுடன், "ஹர ஹர சிங்கிடி முங்கன்" என்று மனதிற்குள் எண்ணியவாறு நூற்றியொரு முறை ஒரே மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறினான். அது முடிந்ததும் கோழியின் கழுத்தை அறுத்து, வழிந்த ரத்தத்தின் ஒரு பகுதியை சிங்கிடி முங்கனுக்குக் கொடுத்தான். மீதியைக் கரியாத்தன் குடித்தான். கோவிலின் வாசல் கதவைப் பூட்டி விட்டு கோழியைக் கையில் எடுத்துக் கொண்டு கரியாத்தன் புறப்பட்டான். கோழிக்கறி சகிதமாக சாப்பிட்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்தபோது, சிங்கிடி முங்கன் கரியாத்தன் கனவில் வந்து "உன்னை நான் மன்னிச்சுட்டேன்" என்று சொன்னான். சிங்கிடி முங்கன் இரவில் தன் கனவில் வந்ததை மனைவியிடம் கூறினான் கரியாத்தன். அப்போது அவள் சொன்னாள்:

"நமக்கு கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆச்சு. நமக்கு ஏன் இதுவரை சிங்கிடி முங்கன் ஒரு குழந்தையை தரல?''

"அதற்கு நான் என்ன செய்யிறது?''

கரியாத்தன் காலையிலேயே அப்துல் ரசாக்- ஆயிஷா பீபி வீட்டில் போய் நின்றான். எல்லாருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

புட்டு, கடலை, அப்பளம், பழம்- எல்லாம் சாப்பிட்டு தேநீர். அதற்குப் பிறகு பந்தாவாக டண்ஹில் சிகரெட் ஊதல். அது முடிந்ததும் மிக முக்கியமான அந்தச் சடங்கு. பொன்னாடை போர்த்துதல்!

அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் ஒன்றாக நின்று கரியாத்தனுக்குப் பொன்னாடை அணிவித்தார்கள்.

பொன்னாடை என்றால் பொன்னால் செய்யப்பட்டது அல்ல. விலை உயர்ந்த ஒரு வெளிநாட்டு சால்வை. அவ்வளவுதான். தொடர்ந்து கரியாத்தனின் இடது கை மணிக்கட்டில் ஒரு வெளிநாட்டு கடிகாரத்தைக் கட்டினான் அப்துல் ரசாக்.

"கடிகாரத்திற்குச் சாவி எதுவும் கொடுக்க வேண்டாம். கையில் வெறுமனே கட்டியிருந்தா போதும். அதுபாட்டுக்குத் தானே ஓடிக்கிட்டிருக்கும்.''

பிறகு ஒரு சட்டைத்துணி, ஒரு டபுள் வேஷ்டி, ஒரு முழுக்கை பனியன், பவுண்டன் பேனா, பெரிய டார்ச் விளக்கு, சோப்புகள், ஷேவிங் செட், தலைவலிக்குத் தடவக்கூடிய டைகர்பாம், ஒரு பெல்ட், ஒரு குடை- எல்லாமே வெளிநாட்டு சரக்குகள்தாம். கரியாத்தனின் மனைவிக்கு ஒரு புடவை, ஒரு ப்ளவுஸ் துணி- இரண்டுமே வெளிநாட்டு சரக்கே. வெளிநாட்டுக் குடையை எப்படி விரிக்க வேண்டும் என்ற விஷயத்தையும் அப்துல் ரசாக் கற்றுக் கொடுத்தான்.

"கரியாத்தா, உனக்கு எத்தனை குழந்தைங்க?'' ஆயிஷா பீபி கேட்டாள். கரியாத்தன் சொன்னான்:

"கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆச்சு. இதுவரை ஒரு குழந்தை கூட இல்லை...''

"இதென்ன? சிங்கிடி முங்கன் கருணை வைக்கலியா?''

"அவனோட அருள் சில பேருக்கு சீக்கிரம் கிடைச்சிடும். சில பேருக்குத் தாமதமா கிடைக்கும். தெய்வ ரகசியத்தை நாம என்னன்றது?''

ஆயிஷா பீபிக்கும் அப்துல் ரசாக்கிற்கும் சிங்கிடி முங்கனின் கருணை உடனடியாகக் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்.

ஆயிஷா பீபி சொன்னாள்:

"நான் மனசுக்குள்ள ஒண்ணு வேண்டி இருக்கிறேன். அது என்னன்னா... திருவிழா சமயத்துல நான் முடியை விரிச்சுப் போட்டு ஆடணும்.''

"முடியை விரிச்சுப் போட்டு ஆடுறது உண்மையிலேயே ஒரு புண்ணியச் சடங்கு. சரியான நேர்த்திக்கடன்தான்.''

"கரியாத்தா, உன்னோட பொண்டாட்டிய இங்க வரச் சொல்லி, முடிய விரிச்சுப் போட்டு எப்படி ஆடுறதுன்னு கொஞ்சம் சொல்லித் தரச்சொல்லு.''

"சாமி சமாச்சாரமாச்சே! நிச்சயம் அவள் இங்க வந்து சொல்லித் தருவாள்.''

அப்துல் ரசாக் கூறினான்:

"கோவில் திருவிழாவில நான்கூட சாமி ஆட நினைச்சிருக்கேன்.''

"பெரிய புண்ணிய காரியமாச்சே! நிச்சயமா கடவுளோட அருள் உங்களுக்கும் கிடைக்கும்.''

"ஆனா... அதை எப்படி ஆடுறதுன்னு கரியாத்தா, நீதான் எனக்குச் சொல்லித் தரணும்.''

"நிச்சயமா நான் சொல்லித் தர்றேன்.''

"நாம ஒரு தப்புப் பண்ணிட்டோம்.''அப்துல் ரசாக் சொன்னான்: "துலாபாரம் நடத்தியதையும் மற்ற விஷயங்களையும் போட்டோ எடுத்து செய்தியோட சேர்த்து எல்லாப் பத்திரிகைகளுக்கும் கொடுத்திருக்கலாம்.''


"நான்கூட அதை மறந்துட்டேன்.''

ஆயிஷா பீபி கூறினாள்:

"குழந்தையும் நானும் என் கணவரும் சிங்கிடி முங்க மதத்துல சேர்றதுன்னு முடிவு செஞ்சாச்சு. உண்மையிலேயே சிங்கிடி முங்கனைப் பெரிசா நம்புறோம்.''

"முஸ்லிம் ஜாதிக்காரங்க மோசமானவங்க.'' கரியாத்தன் சொன்னான்:

"உங்க மூணு பேரையும் துண்டு துண்டா அறுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க.''

"எங்களையா?''

"யாரையும்.''

"நாங்க ஒண்ணும் அவுங்கள நம்பி இல்ல... பிரியப்படுகிற மதத்துல சேர்றதுக்கான முழு சுதந்திரம் இந்த நாட்டில எல்லாருக்கும் இருக்கு. எங்களுக்கு இந்த செல்லக் குழந்தையைக் கொடுத்தது யாரு?''

"அதுதான் அற்புதமான ஒரு செயலாச்சே! ஒவ்வொரு நாளும் இங்க அற்புதங்கள் நடந்துகிட்டுதான் இருக்கு. யார் இதைக் கவனிக்கிறாங்க? சிங்கிடி முங்க மதத்தோட வாசல் கதவுகள் திறந்தே விடப்பட்டிருக்கு. முஸ்லிம் ஜாதிக்காரங்க எல்லாருமேகூட வாங்க. அவுங்களோட முஸல்யாக்கன்மார்கள், தங்கன்மார்கள், மௌலிமார்கள் எல்லாரும் கூட வரட்டும்.''

"சைகன்மார்களும் இருக்காங்க.''

"சைகன்மார்களும் வரட்டும். கிறிஸ்துவர்களும் கூட்டத்தோடு வந்து சேரட்டும். அவுங்களோட ஃபாதர்களும் கன்னியாஸ்திரீகளும் பிஷப்மார்களும்- எல்லாருமே வரட்டும். நம்பூதிரிமார்களும், நாயர்களும் பட்டன்மார்களும் கொங்கிணிகளும் சீக்கியர்களும் ஜைனர்களும் புத்தமதக்காரர்களும்கூட வந்து சேரட்டும். திய்யர்களும் ஈழவர்களும்கூட வரட்டும். எல்லா மதத்தைச் சேர்ந்த எல்லாருமே இங்கு வரட்டும். எல்லாருக்கும் சிங்கிடி முங்க மதத்தோட வாசல் கதவுகள் திறந்தே இருக்கு. சிங்கிடி முங்க மதம்தான் நவீன இந்தியாவோட புதிய பாதை. இதுவே உலகத்தோட பாதையாகவும் சீக்கிரமே ஆகும். காது இருக்கிறவங்க இதைக் கேட்டுக்கட்டும்.''

"கரியாத்தா...'' ஆயிஷா பீபி கேட்டாள்: "சிங்கிடி முங்க மதத்துல கள்ளு குடிக்கிறதுன்றது கட்டாயமா என்ன?''

"முதல்ல கள்ளோட சரித்திரத்தைக் கேட்டுக்கோங்க. ஆரம்பத்துல சிங்கிடி முங்கன் மூணு நாலு தென்னை மரங்களையும் நாலஞ்சு பனை மரங்களையும் படைச்சான். சிங்கிடி முங்கனே அதைச் செதுக்கவும் செஞ்சான். ருசியான கள்ளு கெடைச்சது. குடிச்சுப் பார்த்தான்... மது! பிறகு என்ன பண்ணினான் தெரியுமா? அந்தத் தென்னை மரங்களையும் பனைமரங்களையும் பார்த்து, இன்னும் பல நூறு மடங்கு பெருகச் சொன்னான். அந்த தென்னை மரங்களோட, பனை மரங்களோட சந்ததிகள்தாம் நாம் இப்போ பார்த்துக்கிட்டு இருக்கிற தென்னை மரங்களும் பனை மரங்களும்.''

சோறு, மீன் குழம்பு, பொரித்த மீன், இஞ்சிக் கூட்டு, தயிர்.

சோறு, திருத மீன் குழம்பு, பொரித்த மீன், பச்சை மிளகாய்க் கூட்டு, தயிர், புட்டு.

சோறு, உருளைக்கிழங்கு குழம்பு, பழம், தேநீர்.

பனியாரம், ஆட்டுக்கறிக் குழம்பு, பொடி அரிசிக் கஞ்சி.

சோறு, கோழிக்கறி, பொரித்த கோழி, அப்பளம்.

புரோட்டா, இறைச்சி, தேநீர்.

பிரியாணி (வெஜிட்டபிள்), சட்னி, பால் இல்லாத தேநீர்.

பிரியாணி (முட்டை), சட்னி, பால் இல்லாத தேநீர்.

தேங்காய் சோறு, ஆட்டுக்கறி, பருப்பு, அப்பளம், சட்னி.

நெய்சோறு, கோழிக்கறி, அப்பளம், கூட்டு.

பிரியாணி (ஆடு), தயிர், சட்னி, பால் இல்லாத தேநீர்.

பிரியாணி (திருதமீன்), நாரத்தங்காய் ஊறுகாய், பால் இல்லாத தேநீர்.

மேலே சொன்ன உணவு அயிட்டங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், கரியாத்தன் உடம்பில் ஒருவகை மினுமினுப்பு தெரிய ஆரம்பித்தது. சாப்பாட்டு விஷயங்கள் பஞ்சமில்லாமல் கிடைத்ததால், "இஸ்லாம் மதம் பரவாயில்லையே!" என்று நினைக்கத் தொடங்கினான். மத சம்பந்தமான இந்தத் தடுமாற்றம் அவனுக்கு சில நாட்கள் மட்டுமே இருந்தன. சிங்கிடி முங்க மதத்தில் ஆழமாக அவன் பற்று வைத்திருந்ததே இதற்குக் காரணம். இப்படிப்பட்ட சிறு சிறு தடுமாற்றங்கள் மனித வாழ்க்கையில் சகஜமாக நடக்கக் கூடியதுதான்.

இதற்கிடையில் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டிய விஷயத்தைப் பல முறை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள், அப்துல்

ரசாக்கின் உம்மா- அதாவது அவனுடைய தாய். பையனின் தாத்தாவின் பெயர், கடவுள்களின் பெயர், புகழ்பெற்ற அரசர்களின் பெயர், பிரதம மந்திரிகள், ஜனாதிபதிகள் ஆகியோரின் பெயர்- இப்படி யாருடைய பெயரை வேண்டுமானாலும் பையனுக்கு வைக்கலாம். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், பெயர் அழகானதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். கூப்பிடுவதற்குக் கஷ்டமில்லாமல் இருக்க வேண்டும். எளிமையான, அழகான பெயர்! விஷயம் நல்ல விஷயம்தான். என்ன பெயர் வைப்பது?

அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் தீவிரமாக மூழ்கிப் பேனார்கள். விரைவில் அந்த நிகழ்ச்சியும் நடக்கப் போகிறதே!

பசுவும் காளையும் வந்தன. நன்றாகப் பால் தரக்கூடிய இனம். நல்ல லாபத்தில் கிடைத்தது. நான்காயிரத்து ஐநூறு ரூபாய்!

பசுவும் காளையும் வேலை செய்யும் ஒரு ஆள் மூலம் கோவிலுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டன. பிறகு காரில் அப்துல் ரசாக், ஆயிஷா பீபி, செல்வ மகன், கரியாத்தன் ஆகியோர். கார் மெதுவாகவே சென்றது. தவமிருந்து பெற்ற குழந்தை காரில் அமர்ந்திருக்கிறானே- வேகமாகச் சென்றால் அவனுக்குத் தொந்தரவாக இருக்குமே என்றுதான் காரை மெதுவாகப் போகும்படி செய்தான் அப்துல் ரசாக். அவர்கள் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினார்கள். மெதுவாக கோவிலை நோக்கி நடந்தார்கள். நாய்களை, பன்றிகளை, ஆடுகளைக் கடந்து அவர்கள் நடந்து சென்றனர். கரியாத்தன் நாய்களையும், பன்றிகளையும், பூனைகளையும் தன் முழு பலத்தையும் கொண்டு உதைத்து விரட்டினான். குழந்தைக்கு மீன் துலாபாரம் நடத்தியவர்களும் கோவிலைப் புதுப்பிக்கப் போகிறவர்களுமான முஸ்லிம் ஜாதியைச் சேர்ந்தவர்கள் கோவிலைத் தேடிவந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும்- அப்துல் ரசாக், ஆயிஷா பீபி, குழந்தை, கரியாத்தன் ஆகியோருக்குப் பின்னால் திரண்டு நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரே ஆரவாரம்!

அவர்கள் கோவிலை அடைந்தார்கள். கரியாத்தன் பசுவைக் கோவிலின் கம்பு ஒன்றில் கட்டினான்.

கரியாத்தன் சொன்னபடி அப்துல் ரசாக் காளையைப் பிடித்தபடி கோவிலுக்கு உள்ளே போனான். சிங்கிடி முங்கனுக்குக் காண்பித்து விட்டு காளையையும் பசுவையும் கோவில் நடையில் கட்டலாம் என்பது திட்டம். ஆனால், மங்கிய வெளிச்சத்தில் பார்த்த அப்துல் ரசாக் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனான்.

கரியாத்தனும் ஆயிஷா பீபியும் குழந்தையும் உள்ளே வந்தார்கள். அவர்களும் பார்த்தார்கள். அதிர்ச்சியடைந்து நின்றார்கள்.

கூடி நின்ற மக்களில் சில முக்கியமான பெரியவர்கள் உள்ளே வந்தார்கள். பார்த்தார்கள். அவர்களுக்கும் அதிர்ச்சி!

அதிர்ச்சியடைய காரணம்?

சிங்கிடி முங்கனைக் காணோம்?


யாரோ சிங்கிடி முங்கனைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!

பக்தர்கள் கூட்டம் தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டது- சிங்கிடி முங்கனை திருடிக் கொண்டு போன அயோக்கியர்கள் யார்?

அவர்களின் காலை பாம்பு கடிக்கட்டும்!

அப்துல் ரசாக் எல்லோரையும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டான். பிரதம மந்திரி, பாதுகாப்பு அமைச்சர், முதலமைச்சர் ஆகியோருக்கு உடனடியாக அர்ஜண்ட் தந்தி கொடுக்கச் சொன்னான். தந்தி அடிப்பதற்காக கரியாத்தனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தான். போலீஸ்காரர்களுக்கும் பத்திரிகை நிருபர்களுக்கும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். தந்திகள் அடிக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் பார்த்து நடந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் தேவையான பணத்தை வாங்கிக் கொண்டு முக்கிய நபர்கள் ஓடினார்கள்!

மக்கள் முன்னிலையில் பசுவையும் காளையையும் அப்துல் ரசாக் சிங்கிடி முங்கன் கோவில் நடையில் கட்டினான். இப்படி ஒரு மங்கள நிகழ்ச்சி முடிந்தது!

இனி குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். சிங்கிடி முங்கனைத் திறமை வாய்ந்த போலீஸ்காரர்கள் எங்கேயாவது கண்டு பிடித்து கொண்டு வருவார்கள்! மீண்டும் அவனை இருந்த இடத்தில் கொண்டு வந்து வைப்பார்கள்! இது மட்டும் நிச்சயம்.

அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் கரியாத்தனும் குழந்தைக்குப் பெயர் வைக்கும் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் கூட்டம் அவர்களையே பார்த்தவாறு நின்றிருந்தது. அப்துல் ரசாக் கரியாத்தனின் காதில் ஏதோ சொன்னான். அடுத்த நிமிடம் கரியாத்தனின் கண்களில் ஒரே பிரகாசம்!

கரியாத்தன் மணியை ஆட்டினான். மக்களும் அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் பக்தி வயப்பட்டுத் தியானத்தில் நின்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, எல்லாரும் கண்களைத் திறந்தார்கள். பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டிருந்தது.

ஆயிஷா பீபியின்- அப்துல் ரசாக்கின் செல்ல மகனை அப்துல் ரசாக் பக்தி கலந்த குரலில் மெல்ல அழைத்தான்:

"சிங்கிடி முங்கன்!''

மக்கள் கூட்டமும் கரியாத்தனும் அப்துல் ரசாக்கும் ஆயிஷா பீபியும் உரத்த குரலில் முழங்கினார்கள்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.