Logo

நீ எங்கே? என் அன்பே !

Category: மர்ம கதைகள்
Published Date
Written by chitralekha
Hits: 8277

1

“மவராசன் அந்த ராம்கொமாரு சிரிக்கறதைப் பாருடி அந்த படத்துல, என்ன... அளகு... என்ன அளகு...”

“ஏம் பாட்டி வயித்துக்கு இல்லைன்னாலும் இந்த வயசான காலத்துலயும், ராம்குமார் சினிமான்னா முதநாளே வந்துடறியே!”

“அடி போடீயம்மா அந்த மவராசன் முகத்தைப் பார்த்தாலே போதும். பசி ஆறிடும். எம்பேரன் இன்னிக்குக் காலையில, ரொட்டியும், டீயும் வாங்கிக்கன்னு பத்து ரூவா குடுத்தான். அதை அப்பிடியே வச்சிருந்து இங்க வந்து நின்னுட்டேன், டிக்கெட் வாங்க.”

“காலையில இருந்து கால் கடுக்க நின்னுட்டிருக்கோம். இன்னும் டிக்கெட் குடுக்கற கவுண்டர் திறந்த பாடில்ல!”

“தொறக்கறப்ப தொறக்கட்டும். இன்னிக்கு இந்த சினிமாவைப் பார்த்துட்டுதான் வேற வேலை. ஆமா, நீ இன்னிக்கு கட்டிட வேலைக்குப் போகலியா?”

“இன்னிக்கு ராம்குமாரோட புது சினிமா ரிலீஸ்ன்னு தெரியுமே. அதான் நேத்து வாங்கின கூலியில செலவு போக மீதி காசை அப்படியே வெச்சிருந்தேன்.”

“அப்போ இன்னிக்கு மத்தியானம், ராத்திரிக்கு சாப்பாட்டு செலவுக்கு என்னடி செய்வ?”

“ம்... அது கெடக்கு. வீட்ல அம்மா பழையது வெச்சிருந்தா சாப்பிடறது. இல்லைன்னா போய் படுத்துக்க வேண்டியது. என் கூட வேலை பார்க்கறவளுக எல்லாம் இன்னிக்கு புது சினிமா பார்த்துடுவாளுக. நா மட்டும் பார்க்க வேணாமா.”

“அது சரிதான் புள்ள. இந்த ராம்கொமாரு சினிமாவுல காட்டற மாதிரியே நெசமாலுமே ரொம்ப நல்லவராமே? ஏழை, பாழைங்களுக்கெல்லாம் நெறய தருமம் பண்ணுவாராம்ல. கட்டைல போறதுக்குள்ள இந்த ராசாவை என் கண்ணால, நேர்ல ஒரு தடவை பார்த்துடணுண்டி.”

“ஐய, பாட்டிக்கு ஆசையைப் பாரு. ராம்குமாரை நேர்ல பார்க்கணுமாம்.”

“என் ஆசை, ஒனக்கேண்டி கேலியா இருக்கு...”

“பாட்டி, பாட்டி நகரு. டிக்கட் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்க பாரு கவுண்ட்டர் தொறந்துட்டாங்க.” பக்கத்து வீட்டு பருவப் பெண் பட்டுவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பாட்டியையும் பரபரப்பு பற்றிக் கொண்டது. அவள் கண்களில் ஆர்வம் பொங்கியது.

“நம்ம தலைவர் ராம்குமாருக்கு எம்மாம் பெரிய கட்-அவுட் வச்சிருக்காங்க. பாருடா மச்சான். அடேங்கப்பா... இது வரைக்கும் வேற எந்த ஆக்டருக்கும் இம்மாம் பெரிய கட்-அவுட் வச்சதில்லப்பா.” சென்னையின் செந்தமிழ் அந்த விடலைகளிடம் விளையாடியது.

“அட நீ வேற மாப்பிள, நம்ம தலைவர் என்ன லேசுப்பட்ட ஆளா? சூப்பர் ஹீரோ கண்ணு அவுரு. ரசிகர் மன்றதுக்குக்காரனுக இன்னமாதிரி தியேட்டரை அலங்கரிச்சிருக்கானுங்க பாருடா.”

‘எங்க நாட்டுராசா’, ‘இளம் தென்றல்’ ராம்குமார், ‘நெருங்காதே நெஞ்சமே’ புதிய படத்தின் நாயகன் ராம்குமார் வாழ்க!- அகில இந்திய ராம்குமார் நற்பணி மன்றம்.

புகழ்வரிகள் எழுதப்பட்ட துணி பானர்கள்! வண்ணக் காகிதங்களின் தோரணங்கள், பிரமிக்க வைக்கும் கட்-அவுட்! அதில் போடப்பட்டிருந்த ஜிகினா மாலைகள். தியேட்டர் வளாகம் திருவிழாக் கோலமாக இருந்தது கண்டு வாயைப் பிளந்தான் அந்த ரசிகன்.

“செம கூட்டண்டா. அங்க பாரு. தாய்க்குலத்தை. கூட்ட நெரிசல்ல எவ்வளவு கஷ்டப்பட்டு நிக்கறாங்க.”

“தலைவர் படத்தைப் பார்க்கணுங்கறதுக்காக, வேகாத வெயில்ல நிக்கறாங்க. ஏன் மச்சான், அங்க இன்னா மச்சான் அம்மாம் ஜனம் நிக்குது?!”

“ஓ, நீ இன்னிக்குதான் எங்க ஏரியாவுல படம் பார்க்க வர்றியோ? மாப்பிள, இது ரெண்டு தியேட்டருங்க சேர்ந்தாப்ல இருக்கற பில்டிங். ஒரு தியேட்டர்ல நம்ம தலைவர் படம். அந்த தியேட்டர்ல நிரஞ்சன் இல்லை? அவரோட படம். அதுவும் புதுசா இன்னிக்குதான் ரிலீஸ் ஆகுது.”

“படம் பேரு இன்னா மச்சான்?”

“நிரஞ்சன் நடிக்கற படம் பேரா? ‘கண்ணுக்குள் மின்னல்’ ரெண்டு ஆக்டருங்களுக்கும் செம போட்டிடா மாப்ள. இவரோட மன்றத்துக்காரனுவ கலர் காயிதத்துல தோரணம் கட்டிட்டானுங்க. அவரோட ஆளுகளைப் பாரு, பூவாலேயே ஜோடிச்சுக்கிட்டிருக்கானுக. ஒருத்தன் போஸ்ட்ல ஏறிக்கிட்டிருக்கான் பாரு தோரணம் கட்டறதுக்கு. கீழே விழுந்தான்னா அதோ கதிதான். ”

ராம்குமாரின் புதுப்படத்தைப் பார்க்கவென்று வந்திருந்த அவனது விசிறிகள், தங்கள் தலைவரின் வீர பிரதாபத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

தியேட்டர் வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி, திணறிக் கொண்டிருந்தது. இரண்டு பிரபல ஹீரோக்களின் புதுப்பட ரிலீஸ் என்பதால் சமாளிக்க இயலாத கூட்டம். தங்கள் வேலை, உணவு எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் அபிமான நடிகர்களின் புதுப்படங்களைப் பார்த்து விடுவதே பிறவிப் பயன் என்பது போல வரிசையில் தடுமாறி, திண்டாடிக் கொண்டிருந்தது அலை மோதிய மக்கள் வெள்ளம்.

மாடியில் இருந்த அலுவலக அறையிலிருந்தபடி கண்ணாடி ஜன்னல் வழியாக மேனேஜர் நரசிம்மன் கீழே பார்த்துக் கொண்டிருந்தார். குழுமி இருந்த ஜனத்திரளைப் பார்த்துக் கவலை அடைந்தார்.

“என்னங்க, நரசிம்மன்! ரெண்டு டாப் ஹீரோவோட படங்களையும் வளைச்சுப் போட்டுக்கிட்டீங்க. எக்கச்சக்கத்துக்கும் வசூலாகும். நீங்க என்னன்னா சுரத்தே இல்லாம கவலையா இருக்கீங்க?” நண்பர் கேட்டதும் அவர் பக்கமாக திரும்பினார் நரசிம்மன்.

“இந்த இரண்டு ஹீரோக்களோட படத்துக்கும் வசூல் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆனா அப்புறம் தியேட்டரை புதுப்பிச்சே ஆகணும். கோயிலுக்கு செய்யற திருப்பணி போல இது தவிர்க்க முடியாதது. படத்தைப் போட்டு, ஒழுங்கா பங்கு பிரிச்சுக் குடுத்துடுவோம்ங்கற நல்ல எண்ணம் எங்க தியேட்டர் மானேஜ்மெண்ட்டைப் பத்தி விநியோகஸ்தர்கள் கிட்ட இருக்கு. ஆனா... இந்த ரசிகர்கள், ஹீரோக்கள் மேல வச்சிருக்கற அன்பு, ஏன் வெறின்னு கூட சொல்லலாம் எங்களைப் போல தியேட்டர்காரங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. என் முதலாளிக்கு நிறைய பிஸினஸ் இருக்கு. இந்த தியேட்டர் மேனேஜ்மென்ட் பொறுப்பை என் கையில ஒப்படைச்சிருக்கார். என் மேல அவ்வளவு நம்பிக்கை. அந்த நிம்பிக்கையைக் காப்பாத்தணுமில்ல?”

“அது நியாயந்தாங்க. உங்க வேலை கொஞ்சம் சிக்கலானதுதான். ஹி... ஹி... வீட்ல பேரக்குழந்தைகள்லாம் ராம்குமார் படத்துக்கு பாஸ் வாங்கிட்டு வா; நிரஞ்சன் படத்துக்கு பாஸ் வாங்கிட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சாங்க. ஹி... ஹி... குடுத்தீங்கன்னா...”

“இந்த வாரம் போகட்டும் நாதன். புதுப்படம் ரிலீஸானா ஒரு வாரத்துக்கு யாருக்குமே பாஸ் குடுக்கறதில்ல. அடுத்த வாரம் வாங்க. கண்டிப்பா தரேன்.”

“சரிங்க. நான் வர்றேன்.”

கீழே இறங்கி வந்த நாதன், வெளியில் போக வழி இன்றி, ‘காட்சி துவங்கிய பின் போகலாம்’ என்றெண்ணி ஓர் ஓரமாக நின்று கொண்டார்.

“பார்த்தியாடா, எங்க தலைவர் ராம்குமார் படத்துக்குக் கூட்டத்தை? தலைவர் டாப் ஸ்டாருடா,” பீடித்துண்டின் கடைசிப் பகுதி வரை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி எறிந்தான் ஒரு விடலை.


அவனது சினிமாத்தனமான வண்ணக்கலவை சட்டையின் மேல் பொத்தான்கள் போடப்படாத நிலையில் உள்ளே தெரிந்த பனியனில் ராம்குமாரின் படம், ஸ்டைலான போஸில் அச்சடிக்கப்பட்டிருந்தது. காலர் அருகே குத்தப்பட்டிருந்த வட்ட வடிவமான பாட்ஜில் ‘ராம்குமார் ரசிகர்’ மன்றம் என்று எழுதி, அதன் நடுவிலும் ராம்குமாரின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

“எங்க நிரஞ்சன் சினிமாவுக்குதான்டா நிறைய ஜனம் நிக்குது. நிரஞ்சன் ஆக்ஷன் மன்னன். அங்க பாரு. வரிசையில் கூட நிக்க  இடமில்லாம ஜனங்க திணர்றதை” கூட வந்த இன்னொரு விடலை தன் ஹீரோவிற்காக வரிந்து கட்டினான்.

“அட போடா, பொங்கலுக்கு வந்த உங்க நிரஞ்சனின் படம் ஒரு வாரத்துல ஊத்திக்கிச்சு. பெரிசா பேச வந்துட்டான்.”

“டேய், எங்க டாப் ஸ்டாரைப் பத்தி எதுனா பேசின, ராஸ்கல் உன் கால், கை ஒனக்கு சொந்தம் இல்லை.”

“உள்ளதைச் சொன்னா ஒடம்பு எரியுதோ? டாப் ஸ்டாராம். டாப் ஸ்டார்.”

இருவரின் குரலும் உயர்ந்தது. சுற்றிலும், வரிசையிலும் நின்று கொண்டிருந்த கூட்டத்தின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.

“நீ ஆயிரம் சொல்லு. எங்க தலைவர்தாண்டா ஹீரோ. சும்மா டூப் போட்டுக்கினு ஜனங்களை ஏமாத்தறவனெல்லாம் ஆக்ஷன் மன்னனாம்...”

“டா...ய்... என்னடா சொன்ன? டூப்பா? யாருடா டூப்பு? உன் ஆளுதாண்டா தலையில டோப்பா மாட்டிகிட்டு ஊரை ஏமாத்தறான். வழுக்கைத் தலையன்,” கோப வெறி ஏற, எதிராளியின் மீது பாய்ந்தான் நிரஞ்சனின் ரசிகன்.

ராம்குமாரின் ரசிகன் தன் காலை உயரத் தூக்கி ஓர் உதை கொடுத்தான். (உபயம் நிரஞ்சனின் படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள்) பனியனில் இருந்த ராம்குமாரின் படத்தின் மீது அவனது கால் பட்டதும், இவனும் சிலிர்த்துக் கொண்டு எதிர்த்து அடித்தான். வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இருதரப்பு ரசிகர்களும் ரோஷம் தலை தூக்க, அங்கே இரண்டு கோஷ்டியாக ரசிகர்கள் பிரிந்தனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்து பெரிய கலவரமாகியது.

தாய்க்குலங்கள் பயத்தில் அலற, கூட்டம் அடிதடியில் இறங்கியது. மேனேஜர் நரசிம்மன் போலீஸிற்கு போன் செய்தார். “ஹலோ? பி.லெவன் போலீஸ் ஸ்டேஷன்? சார், அரசன் தியேட்டர் காம்ப்ளெக்ஸ் மானேஜர் பேசறேன். இங்கே நடிகர் நிரஞ்சன், ராம்குமார் ரசிகர்களுக்குள்ள மோதலாய்ப் பேச்சு. ரொம்ப கலாட்டாவா இருக்கு. சீக்கிரமா வாங்க சார்.”

உடனே ஜீப் வளாக வாயிலில் வந்து நின்றதைப் பார்த்ததும் கூட்டத்தில் பாதி சிதறி ஓடியது. லத்தியினால் அடி வாங்கியபடி சில பேர் தப்பித்தால் போதும் என ஓடினார்கள். சில பேரை போலீஸ் கைது செய்து இழுத்துச் சென்றது. சற்று முன்பு விழாக் கோலம் பூண்டிருந்த அந்த அரங்க வளாகம் பயங்கரமாக காட்சி அளித்தது.

“அப்பா, தொழிலாளர்கள் உழைப்பு இல்லைன்னா நமக்கு பிழைப்பு இல்லை. அவங்களுக்கு கொஞ்சம் அதிகமா சம்பளம் குடுக்கறதுனால நாம ஒண்ணும் குறைஞ்சிடப் போறதில்லை. இந்த வருஷம் பொங்கலுக்கு ஆறு மாச போனஸ் குடுத்தே ஆகணும்ப்பா. ப்ளீஸ்.”

“கட்”

நிரஞ்சன் திரும்பினான். இயக்குநரைப் பார்த்தான்.

“நிரஞ்சன், டயலாக் ஓக்கே. ஆனா கடைசியில ப்ளீஸ் சொல்றப்ப அப்பாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு சொல்லணும்.”

“ஓக்கே ஸார்”

“லைட்ஸ் ஆன். ஸ்டார்ட் காமிரா. ஆக்ஷன்”

மறுபடியும் நிரஞ்சன், “அப்பா, தொழிலாளர்கள்...” வசனம் பேசி டைரக்டர் சொன்னது போல செய்தான்.

இந்த முறை அப்பா நடிகரது முகபாவம் இயக்குநருக்கு திருப்தி இல்லாமல் போக மீண்டும் அதே காட்சி படமாக்கப்பட்டது. இயக்குநருக்கு திருப்தியாகும் வரை அப்பா நடிகரிடம் ஒரே வசனத்தை பல முறை பேசினான் நிரஞ்சன். தொடர்ந்து காட்சிகள் மளமளவென படமாக்கப்பட்டன.

“லஞ்ச் ப்ரேக்” இயக்குநர் அறிவித்ததும் படப்பிடிப்பு குழுவினர் கலைந்தனர். சாப்பிடும் இடத்திற்கு விரைந்தனர். நிரஞ்சன் சற்று ஓய்வு எடுப்பதற்காக தனது சாய்பு நாற்காலியில் உட்கார்ந்து, சிகரெட் ஒன்றினை எடுத்து பற்ற வைத்தான். ரசித்து புகைத்தவன் வட்ட வட்ட வளையங்களாக புகையை ஊதி விளையாடினான்.

ஒரு தட்டில் சிக்கன் வறுவல், அளவாய் சாதத்துடன் தயிர் கலந்து கொண்டு வந்த யூனிட் பையன் கோபியை விரட்டினான். “எனக்கு பசிக்கலை. நீ போ” கோபி ஓடினான்.

“சார்” என்று கூழைக் கும்பிடு போட்டபடி வந்து நின்றான் கமாலி.

பொருந்தாத தொள தொளவென்று லூசான பான்ட், ஷர்ட்டில் கோமாளி போல காட்சி அளித்தான். கையில் அழுக்கேறிய சிறிய டர்க்கி டவல். அடிக்கடி அதைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

அவனைப் பார்த்த நிரஞ்சன், சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டான். குழுவினர் அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், சற்று தூரத்தில்.

“ஏன்ய்யா உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன். இப்படி பப்ளிக்கா வந்து மீட் பண்ணாதன்னு, கொஞ்சமாவது புத்தி இருக்கா?”

“எங்க சார் உங்களைப் பார்க்க முடியுது? பங்களாவுக்கு நிறைய வாட்டி தேடி வந்தேன். நீங்க இல்லை. கோவிச்சுக்கறீங்களே சார்.”

“சரி, சரி. வந்த விஷயத்தைச் சொல்லு.”

“சூப்பரா ஒரு பார்ட்டி. ஆந்திராவுல இருந்து வந்திருக்குது. புதுசு. இளசு. மூணு நாளா உங்களைத் தேடி அலுத்துப் போயிட்டேன்.”

“சும்மா ராமாயணம் பாடாதய்யா. வர்ற சனிக்கிழமை செகன்ட் சன்டே. ஷுட்டிங் கிடையாது. நான் ஊட்டிக்குப் போயிடறேன். நீ பார்ட்டியை ஃப்ளைட் ஏத்தி ஊட்டி பங்களாவுக்கு வரச் சொல்லிடு. அட்ரஸ் வச்சிருக்கீல்ல?”

“ஓ, அதெல்லாம் பத்திரமா வச்சிருக்கேன்.”

“சரி, சரி இடத்தைக் காலி பண்ணு. யூனிட் ஆளுக எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்துடப் போறாங்க. நீ புறப்படு... ம்... ம்...”

கமாலி தலையை சொறிந்தபடி நின்றான்.

“புரியுது. புரியுது இந்தா”

நூறு ரூபாய் நோட்டுக்களைப் பார்த்ததும் வாயெல்லாம் பல்லாகி, நிரஞ்சனின் காலில் விழப் போனான். கமாலி.

“அட, நீ வேற. கிளம்பி போயிட்டே இருய்யா. போ.”

“தாங்க்ஸ் சார்.”

கமாலி சட்டைப் பையில் பணத்தை வைத்துக் கொண்டு, மறுபடியும் அழுக்கு துண்டினால் முகத்தைத் துடைத்தபடி புறப்பட்டு சென்றான்.

“சூப்பர், புதுசு, இளசு”- கமாலியின் வார்த்தைகள் தந்த உற்சாகத்தில், சந்தோஷத்தில் மிதந்தான் நிரஞ்சன்.

‘டேய் நிரஞ்சா, உனக்கு அதிர்ஷ்ட மச்சம்டா. டக்கர் ஃபிகருங்களையெல்லாம் தொட்டுப் பார்க்க குடுத்து வச்சிருக்கணுண்டா. அனுபவி ராஜா அனுபவி’ டச்சப் பாய் வைத்துவிட்டு போயிருந்த கண்ணாடியில் தெரிந்த தன்னை பார்த்துக் கண் அடித்துக் கொண்டான், நிரஞ்சன்.


ஸ்பானரையும், ஸ்க்ரூ டிரைவரையும் பிடித்துக் கொண்டு கார் வர்க் ஷாப் முதலாளியிடம் அடியையும் வாங்கிக் கொண்டிருந்த பழைய சுப்பையன் இன்றைய சினிமா நட்சத்திரமாகிவிட்ட நிரஞ்சனின் நினைவிற்கு வந்தான். நினைவுகள் சுழன்றன.

“டேய் சுப்பையா, வேலைக்குப் போகலியா? மணி என்ன ஆச்சு பாரு. ஓகோ, துரை சினிமாவுக்கு புறப்பட்டாச்சாக்கும். ஏண்டா, வர்க் ஷாப்ல வேலை செஞ்சா சோத்துக்கு நாலு காசு கிடைக்கும். சினிமாவாடா சோறு போடப் போகுது?” பெரியம்மா கத்தினாள்.

“ஆமா, சினிமாதான் எனக்கு சோறு போடப் போகுது. நானும் ஒரு நாள் பெரிய ஸ்டாராகி, சோறு என்ன சோறு தினமும் பிரியாணியாவே சாப்பிடப் போறோம் பாரு, பெரியம்மா.”

“பேசாம மெட்ராசுக்கு போய் ஒரு ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தா என்ன? அங்க சினிமா ஆளுகளை பழக்கம் பண்ணி எப்படியாவது சினிமாவுல நடிக்கற சான்ஸ் வாங்க முடிஞ்சா...’ சிந்தனையின் முடிவில் தீவிரமானான். தாய், தந்தையை இழந்துவிட்ட அவனை வளர்த்து வரும் பெரியம்மாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரயில் ஏறினான்.

ரயிலில், சக பிரயாணிகளின் இலவச ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அலட்சியப்படுத்தி சென்னை வந்து இறங்கினான். சிறுவனாகவும் இன்றி, வாலிபனாகவும் இன்றி இரண்டுங்கெட்டான் தோற்றத்தினால் வாய்ப்பு இன்றி பட்டினி கிடந்த நாட்கள் எத்தனை?

ஸ்டுடியோவிலேயே வேலைக்கு சேர்ந்து, அங்கே வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களிடமெல்லாம் வாய்ப்பு கேட்டு கெஞ்சினான். இரண்டு வருடங்களில் முழு வாலிபனாக பரிமளித்த நிரஞ்சனின் கனவுகள் நிறைவேறும் நாளும் வந்தது. அன்று குட்டியண்ணக் கவுண்டரின் கே.கே.பிலிம்ஸ் தயாரிக்கும் புதுப் படத்தின் பூஜை. சினிமா தயாரிப்பாளராகி, பெரும் பணமும், புகழும் சேர்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்தவர் குட்டியண்ண கவுண்டர். அவருடைய நல்ல நேரம். திறமையான இயக்குனர்களும், அபார திறமை உடையவர்களும் கிடைத்து, அவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்தன. புகழும், பணமும் ஏராளமாய் சேர்ந்தது. அவர் அறிமுகப்படுத்தும் புதுமுகங்கள் வெகு வேகமாய் முதலிடத்தைப் பெறுவார்கள் என்ற சென்டிமென்டான நம்பிக்கை, படவுலகில் பரவலாக இருந்தது. அன்றைய டாப் ஹீரோ சுகுமாருக்காக மந்திரி உட்பட பிரபல பிரமுகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.

சுகுமாரின் வீட்டிற்கும் ஃபோன் கால்கள் பறந்தன. இதோ வருகிறார்; இதோ வருகிறார் என்ற பதில் வந்தும், அவன் வரவில்லை. அவனுடைய பணியாளர் ஒருவன் வந்தான். கவுண்டரின் அருகே சென்றான்.

“கவுண்டர் சார். சுகுமார் ஜலபானத்துல மிதந்துட்டிருக்காரு. அவருகிட்ட யாரும் நெருங்க முடியலை. எக்கச்சக்கமான போதை. தெளியட்டும். கூட்டிட்டு வரேன்.”

“அட போய்யா. மந்திரி வந்து காத்துக்கிட்டிருக்காரு; அவனுக்கு தெளிஞ்சு, நீ கூட்டுட்டு வந்து அதுக்கப்புறம் நான் பூஜை போடணுமாக்கும். கெட் அவுட்.” கவுண்டர் கத்திய கத்தலில் வந்தவன் தலை தெறிக்க வெளியே ஓடினான்.

பூஜைக்காக காத்திருந்த ஸ்டுடியோ ஊழியர்களுடன் முன்னால் நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சனைப் பார்த்தார் கவுண்டர்.

தன்னிடம் பல முறை வாய்ப்பு கேட்ட அந்த இளைஞனின் வசீகர முகத்தினால் கவரப்பட்டார். சுருள் சுருளான அடர்த்தியான தலைமுடி ஒரு தனிக் கவர்ச்சி அளித்தது. செதுக்கியது போன்று அமைந்திருந்த மூக்கு அவன் முகத்திற்கு அதிகப்படியான கம்பீரத்தைக் கொடுத்தது. பல வகையான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஒளி பொருந்திய, தீர்க்கமான கண்கள் அவனுக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட்டாக இருந்தன.

“டைரக்டர் சார், இவனைப் பாருங்க. இவனையே ஹீரோவா போட்டுடலாம்னு நினைக்கிறேன். ஒரு டெஸ்ட் பாருங்க. இன்னிக்கே அடுத்த நல்ல நேரத்துல நம்ம திட்டப்படி பூஜையைப் போடறோம்; ஒரு சீன் எடுக்கறோம்.”

உறுதியாக வந்த கவுண்டரின் கட்டளைக்கு பணிந்து, நிரஞ்சனை மேக்கப் டெஸ்ட் செய்த இயக்குநர், அவனது நடிப்பாற்றலிலும் முழு திருப்தி அடைய, அன்றைய சுப்பையா, நிரஞ்சன் என பெயர் மாறினான். மிக விரைவில் தன் திறமையால் புகழ் ஏணியில் ஏறினான். நன்கு முன்னேறி, வசதிகள் கூடிய பின் சொந்த ஊர் சென்று, தன்னை வளர்த்த பெரியம்மாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டான்.

“நிரஞ்சன்,” பின்னால் இருந்து குரல் வந்தது. நினைவுகளில் இருந்து மீண்ட நிரஞ்சன் திரும்பினான். குட்டியண்ண கவுண்டர் புன் சிரிப்போடு நின்றிருந்தார்.

“வாங்க கவுண்டரே. வணக்கம். உட்காருங்க.”

“வணக்கம். பார்த்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப பிஸியாயிட்டீங்க.”

“ஆமா கவுண்டர். ஏகப்பட்ட படங்கள் ஒத்துக்கிட்டிருக்கேன்.”

“நிரஞ்சன், நானும் புதுசா படம் ஒண்ணு பண்ணலாம்னு கதை வாங்கி வச்சிருக்கேன். இயக்குநர் பல்லவராஜா சொன்ன கதை. ரொம்ப நல்லா இருக்கு. அடுத்த மாசம் ரெண்டாந்தேதில இருந்து அறுபது நாளைக்கு ஷெட்யூல் கூடப் போட்டாச்சு.”

“வெரி குட். ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள் கவுண்டர் சார்.”

“வாழ்த்துக்களோடு உங்க கால்ஷீட்டும் சேர்ந்து குடுத்தா நல்லது.”

“என்ன? அடுத்த மாசம் ஷெட்யூல்ங்கறீங்க. என்னோட கால்ஷீட் கேக்கறீங்க? ஸாரி கவுண்டர் ஸார்? நைன்ட்டி நைன் முடிய டேட்ஸ் குடுத்தாச்சே சார். என் பி.ஏ. சோமுவை கேக்கணும். இதோ சோமு வந்தாச்சே.”

சோமு நிரஞ்சனின் காரியதரிசி. உயரம் சத்யராஜ். உடற்பயிற்சியினால் உரமேறி இருந்த உடல்; இறுகிய முகம்; கொஞ்சமாய் பயமுறுத்தும் பார்வை. இதுதான் சோமு.

“சோமு கவுண்டர் புதுப்படம் ஆரம்பிக்கிறாராம்… என் கால்ஷீட் கேக்கறாரு.”

“கவுண்டர் சார், நிரஞ்சன் சாரோட கால்ஷீட் தொண்ணுத்தி ஒன்பது முடிய கிடைக்காது. இங்க பாருங்க டைரியை.”

“டைரி எல்லாம் பார்க்கணுங்கறது இல்லை. நீங்க மனசு வச்சா எனக்கு எப்படியாவது கால்ஷீட் குடுக்கலாம் நிரஞ்சன்.”

சோமுவைப் பொருட்படுத்தாமல் நிரஞ்சனிடம் தொடர்ந்தார் கவுண்டர்.

“சாரி சார். நான் என்ன வச்சுகிட்டா இல்லைங்கறேன். முன்னாடி கேட்டவங்களுக்கெல்லாம் கால்ஷீட் குடுத்துருக்கேன் சார்.”

“நீங்க முயற்சி பண்ணா உங்களால முடியும் நிரஞ்சன். இந்த கதையில வர்ற காரெக்டர் நீங்க செஞ்சாத்தான் நல்லா வரும். உங்களாலதான் முடியும்.”

“கவுண்டர் சார். ப்ளீஸ். நான் சொல்றேன்ல. டேட்ஸ் இல்லை சார்.”

“நீங்க கேக்கற தொகையை தர்றதுக்கு தயாரா இருக்கேன் நிரஞ்சன்.”

“சார். இப்போ ரேட் ஒரு பிரச்சனையே இல்லை. டேட் தான் பிரச்சனை. ரேட்டைக் கூட்டறதுக்காக நான் சும்மா சொல்றேன்னு நினைக்கறீங்க போலிருக்கு. டைரியையும் பார்க்க மாட்டேங்கறீங்க.”

“நீங்க மனசு வச்சா எனக்கு எப்படியாவது கால்ஷீட் குடுக்கலாம்.”


“இவ்வளவு தூரம் என் நிலைமையை எடுத்துச் சொன்ன பிறகும் நீங்க இப்படி கேட்டா நான் என்ன சார் பண்றது?”

“இந்த சினிமா உலகத்துல உங்களை அறிமுகப்படுத்தினதே நான்தான்ங்கறதை மறந்துடாதீங்க.”

“அதை எப்படி சார் மறக்க முடியும்? ரெண்டு வருஷம் ஸ்டுடியோவில எடுபிடி வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் உங்ககிட்ட சான்ஸ் கேட்டு கெஞ்சினதையும், நீங்க பார்த்து எனக்கு வாய்ப்பு அதுவும் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாகப் போட்டதையும் மறக்கவா முடியும். உங்களாலதான் இன்னிக்கு இந்தத் திரை உலகில் நிக்கறேன். நிக்கற நான் நிலைக்கணும் பாருங்க. அதனாலதான் மத்த கம்பெனிக்கு குடுத்த டேட்ஸைக் கான்சல் பண்ணி உங்களுக்கு குடுக்க முடியலை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சார்.”

“என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. அடுத்த மாசம் ரெண்டாந்தேதிக்கப்புறம் அறுபது நாள் ஷெட்யூல். அதுல இருபது நாளாவது உங்க கால்ஷீட் தேவைப்படும். எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணி குடுத்துடுங்க.” கவுண்டரின் குரல் சற்று உயர்ந்தது.

“எப்படியாவது, எப்படியாவதுன்னு சொல்றீங்களே, எப்படி முடியும்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்துதான் பேசறீங்களா?” நிரஞ்சனின் குரலிலும் கடுமை தலை தூக்கியது.

“இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? ஒன்னைக் கை தூக்கி விட்டவன் நான். பங்களா, கார், பேர், புகழ் எல்லாம் என்னாலதானே கிடைச்சது? டாப் ஸ்டாரா ஆயிட்டோம்ங்கற அகம்பாவமா? நான் மட்டும் அன்னிக்கு சான்ஸ் தரலைன்னா இன்னிக்கு நீ அன்னக்காவடிதானே?”

“கவுண்டரே. கொஞ்சம் மரியாதையா பேசுங்க.” சோமு பதறினான்.

“யோவ், உன் கூட என்னய்யா பேச்சு, நீ வாயை மூடு.”

நிரஞ்சன் எழுந்தான். “இன்னொரு ப்ரொட்யூசருக்கு குடுத்திருக்கிற டேட்ஸை உங்களுக்கு குடுத்துட்டா அவரோட கதி? என்னை வச்சு படம் பண்றதா பப்ளிசிடி எல்லாம் குடுத்துட்டாங்க. நீங்க இப்பத்தானே கதையைக் கேட்டு முடிவு பண்ணி இருக்கீங்க?”

“அதைப் பத்தி உனக்கென்ன? எனக்கு கால்ஷீட் குடுக்க முடியுமா? முடியாதா?”

“முடியாது” அவருடைய கோபம் நிரஞ்சனையும் பற்றிக் கொண்டது.

“என்ன சொன்ன? முடியாதா?”

“முடியாது. முடியாது. முடியாது.”

“ஏ? நிரஞ்சா, என்னைப் பகைச்சுக்கிட்டா சீக்கிரமாகவே காணாம போயிடுவ. தெரிஞ்சுக்க.”

“உங்களால என்னை என்ன பண்ண முடியும்?”

“ஓ, அந்த அளவுக்கு தைரியம் வந்தாச்சா? உன்னைத் தொலைச்சுக் கட்டறேன் பாருடா.”

“யோவ், டா போட்டெல்லாம் பேசின, பார்த்துக்க” சோமு சிலிர்த்துக் கொண்டு அவரிடம் நெருங்கினான்.

“சோமு, நீ சும்மா இரு. இந்த ஆள்கிட்ட நான் பேசிக்கறேன்.”

“நீ என்னடா பேசப் போறே? நன்றி கெட்ட நாயே! உன்னை ஒழிச்சுக் கட்டாம விடப் போறதில்லை. திமிர் பிடிச்ச ராஸ்கல். இவனெல்லாம் டாப் ஸ்டாராம் டாப் ஸ்டார். உன்னை என்ன பண்றேன் பாருடா.”

கவுண்டரின் ஓங்கிய குரல் கேட்டு படப்பிடிப்பு யூனிட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். நிரஞ்சனை அடிக்க முயன்று கொண்டிருந்த கவுண்டரை, சோமுவும், மற்றவர்களும் சேர்ந்து பிடித்து கூட்டிச் சென்று அவரது காரில் ஏற்றி விட்டார்கள். கார் புறப்படும் வரை கவுண்டரின் கோபமான சொற்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவரது கோபம் விளைவிக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், மீண்டும் படப்பிடிப்பிற்கு ஆயத்தமானான் நிரஞ்சன்.

2

ட்ராக் சூட் போட்டுக் கொண்டு, வியர்க்க விறுவிறுக்க, தன் பங்களாவின் முன்புறம் இருந்த தோட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அதிகாலையில் ஒரு மணி நேரம் ஓடுவது அவன் வழக்கம்.

“சார், நீங்க கவுண்டர்க்கிட்ட கால்ஷீட் இல்லைன்னு சொன்னீங்கள்ல? அதைப்பத்தி திரை உலகம் பத்திரிகையில கிழிகிழின்னு கிழிச்சிருக்கானுக. பாருங்க.” ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சன், ‘டக்’ என்று நின்றான். சோமுவிடம் இருந்த பத்திரிகையை பிடுங்கினான். படித்தான்.

“இந்த ராஸ்கல் தானேடா கிசு கிசு எழுதறவன்? போன வாரம் என்னடான்னா’ ரஞ்ச நடிகருக்கும், ஜகதாஸ்ரீக்கும் காதல், ரகசிய திருமணம் விரைவில்” அப்படி இப்படின்னு அசிங்கமா எழுதி இருந்தான். இப்ப இல்லாதது பொல்லாததையும் சேர்த்து அவன் இஷ்டத்துக்கு எழுதி இருக்கான். இவனுக்கு வேற வேலையே இல்லையா?”

“அவன் வேலையே இதான் சார்.”

நிரஞ்சன் முறைத்ததும், சோமு வாயை மூடிக் கொண்டான்.

“என்னோட இமேஜை கெடுக்கறதுலேயே குறியா இருக்கான், இந்த ரிப்போர்ட்டர் பாலு.”

“ஏதாவது பரபரப்பா எழுதினா பத்திரிகை சர்க்குலேஷன் அதிகமாகும்ல. இவனுக்கும் நாலு காசு சேர்த்து குடுப்பாங்க. காசுக்காக, கண்ணு, மூக்கு ஒட்ட வச்சு எழுதறான்.”

“அதுக்கு நான்தான் கெடச்சேனா? தயாரிப்பாளர்களுக்கு நான் பெரிய தலைவலியாம். அட்வான்ஸை மட்டும் வாங்கிக்கிட்டு கால்ஷீட் தர்றதில்லையாம். இவன் என்னத்தைக் கண்டான் நான் கால்ஷீட் தர்றதில்லைன்னு. அப்படியே தரலைன்னே வச்சுக்குவம், இவன் குடியா முழுகிப் போகுது?”

“டென்ஷன் ஆகாதீங்க சார். எல்லா ரிப்போர்ட்டர்களும் இப்படித்தான். பிரபலமானவர்களைப் பத்தி எழுதற கிசுகிசுவைத்தான் இப்ப ஜனங்க விரும்பி படிக்கறாங்க?”

“நீ சொல்லுவ. என் இமேஜ் டமால்னு கீழே இறங்குதில்ல. நான் பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கேன்னு வேற எழுதி இருக்கான், இந்த அயோக்கிய ராஸ்கல்.”

“ஓக்கே. மணியாகுது. நீங்க குளிக்கப் போங்க. இன்னிக்கு ஷூட்டிங் அவுட்டோர்ல.”

“அவுட்டோரா? எங்கே?”

“எண்ணூர்ல ஒரு சவுக்குத் தோப்புல?”

“சரி. நான் குளிக்கப் போறேன்.”

“சார், குட்மார்னிங்” குரல் வந்த திக்கில் திரும்பினான் நிரஞ்சன். ரிப்போர்ட்டர் பாலுவைப் பார்த்ததும் கடுப்பானான்.

“ம்...ம்... என்னன்னு கேளு.”

“திரை உலகம் பத்திரிகையில அடுத்த வாரம் நிரஞ்சன் சிறப்பிதழ் போடறாங்க. அதுக்காக நிரஞ்சன் சாராடே பேட்டி வேணும். அவர் கூட நிறைய பேசணும்.”

“ஓ! திரை உலகம் பத்திரிகை! நீ ரிப்போர்ட்டரா இருக்கற பத்திரிகை பேட்டிதான? இதோ ஒரு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடறேன். சார் உட்கார்ந்து காபி, டிபனெல்லாம் சாப்பிடுங்க.”

நக்கலாக பேசிய நிரஞ்சனைப் பார்த்து ஜுரம் கண்டது போலானான் பாலு.

“என்ன முழிக்கற? உன் இஷ்டப்படி மனம் போன போக்குல கிசுகிசு எழுதித் தள்ளற? சிறப்பிதழ்ன்ன உடனே வழிஞ்சுக்கிட்டு வந்துடற? பேட்டி வேணுமாம் பேட்டி.”

“சார், பிரபலமானவங்களைப் பத்தி எழுதறது இப்ப ஃபேஷன். எல்லா பத்திரிகைக்காரங்களும் செய்யறதுதான்.”

“ஓ, இதுதான் உனக்கு ஃபேஷன்னா, நான் பேட்டி குடுக்காம இருக்கறதுதான் எனக்கு ஃபேஷன். நீ போகலாம்.”

“சார், ஆசிரியர் இந்த சிறப்பிதழ் பொறுப்பை என்னை நம்பித்தான் ஒப்படைச்சிருக்கார். ப்ளீஸ் சார்.”

“ப்ளீசாவது, க்ளீசாவது. என் இமேஜை நாசம் பண்ணி, உங்க பத்திரிகை வளரணுமா? ஒரு நாளும் பேட்டி கிடையாது.”


“சார், நீங்க வளர்றதுக்கு காரணம் பத்திரிகைதான் சார். இதை மறந்துடாதீங்க. நாங்க ஒண்ணுமே எழுதலைன்னா மக்களுக்கு உங்களைத் தெரியவே தெரியாது. ஞாபகம் வச்சுக்குங்க.”

“என்ன ரொம்ப மிரட்டற? நீ நல்லதும் எழுத வேணாம், கெட்டதும் எழுத வேணாம். மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கற வழி எங்களுக்குத் தெரியும்.”

“சார் உங்களுக்காகவே சிறப்பிதழ் தயார் பண்ணிக்கிட்டிருக்கோம். பின்னால வருத்தப்படாதீங்க.”

“வருத்தப்படப் போறது நீயா நானான்னு பார்த்துடுவோண்டா. கெட் அவுட்.”

“ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டரை அவமானப்படுத்தீட்டீங்கள்ல, நிச்சயமா இதோட பலனை நீங்க அனுபவிப்பீங்க.”

“சரிதான் போடா. சோமு, என்ன பார்த்துகிட்டே நிக்கற? இவனை வெளியே தள்ளு.” நிரஞ்சன் பங்களாவிற்குள் நுழைந்தான். பாலு மெளனமாக வெளியே நடந்தான். உள்ளே வந்த நிரஞ்சன் தொலைபேசி அருகே சென்று திரை உலகம் பத்திரிகையாளரின் வீட்டு எண்களை சுழற்றினான்.

“ஹலோ, திரை உலகம் எடிட்டர் சார் இருக்காரா? நான் நிரஞ்சன் பேசறேன். சார் கூட அவசரமா பேசணும்.” மறுமுனையில், குரல் நிரஞ்சனைக் காத்திருக்கப் பணித்தது. சில நிமிடங்களில் எடிட்டர் நர்மதனின் குரல் ஒலித்தது.

“ஹலோ, நிரஞ்சன், வணக்கம். என்ன காலை நேரத்துல திடீர் டெலிபோன்?”

“வணக்கம் சார். நிரஞ்சன் சிறப்பிதழ் போடப்போறதா கேள்விப்பட்டேன். ரொம்ப தாங்க்ஸ். நீங்க எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பராச்சே. உடனே கூப்பிட்டு நன்றி சொல்லலாம்னுதான் ஃபோன் பண்ணினேன்.”

“ரொம்ப சந்தோஷம் நிரஞ்சன்.” நிரஞ்சனின் கனிவான நட்புப் பேச்சில் குளிர்ந்து போனார் நர்மதன். “சமீபகாலமா என்னோட இந்த திரை உலகம் பத்திரிகைதான் சர்க்குலேஷன் அதிகம்னு சொல்றாங்க. உங்களைப் போல பிரபலங்கள் ஆதரிச்சா நாங்களும் முன்னேறுவோம்.”

“நீங்க என்ன சார் இப்படி சொல்றீங்க? உங்களை மாதிரி பத்திரிகைகாரங்கதான் சார் கலை உலகுல இருக்கறவங்களைத் தூக்கி விடணும். ஆ... ஒரு விஷயம் உங்ககிட்ட மனம் விட்டு பேசலாம்னு...”

“அதுக்கென்ன நிரஞ்சன், சொல்லுங்க. தயக்கமே வேண்டாம்.”

“உங்க பத்திரிகை ரிப்போர்ட்டர் பாலு கண்டபடி, கொஞ்சமும் யோசிக்காம எதையாவது எழுதிடறாரு. நீங்களும் அப்படியே பப்ளிஷ் பண்ணிடறீங்க.”

“இணை ஆசிரியர் எடிட் பண்ணி இருப்பார். நான் பிஸியா இருக்கறப்ப அவர்தான் பிரிண்ட்டுக்கு அனுப்புவார்” சமாளித்துப் பேசினார் நர்மதன்.

“எனக்குத் தெரியாதா சார், உங்களைப் பத்தி. நீங்க எம்மேல ரொம்ப மதிப்பு, மரியாதை வச்சிருக்கீங்க. அந்த பாலு இப்போ கொஞ்சம் முன்னால இங்க வந்தான் என் பேட்டிக்கு டேட் கேட்டு. முடியாதுன்னு மறுத்துட்டேன்.”

“சார், நிரஞ்சன் சிறப்பிதழ் பாதிக்கு மேல ரெடியாயிடுச்சு. மூணு வாரமா பப்ளிசிட்டியும் பண்ணியாச்சு. உங்களோட சிறப்பு பேட்டி, ரசிகர்களின் டெலிபோன் கேள்வி இதெல்லாம் கூட விளம்பரத்துல அறிவிச்சுட்டோம்.” நர்மதன் பதறினார்.

“நர்மதன் சார், என்னோட முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. அதாவது என்னோட ஒரு நிபந்தனைக்கு நீங்க ஒத்துகிட்டா.” பேசி முடித்து விட்டு ரிசீவரை வைத்தான் நிரஞ்சன்.

கடற்கரை மணலை கையில் அள்ளுவதும், போடுவதுமாய் வெறித்த பார்வையுடன் உட்கார்ந்திருந்தான் பாலு.

“டேய், பாலு என்னடா ரொம்ப டல்லா இருக்கு?” நண்பன் ஆனந்தின் குரல் கேட்டும், பதில் பேசாமல் மெளனமாக இருந்த பாலுவை உலுக்கினான் ஆனந்த்.

“என்னடா பாலு. கேக்கறன்ல. சொல்லுடா. ஏன் இப்படி டல்லடிக்கற?”

“உருப்படியா வேலை கிடைச்சு, மூணு மாசமா வாழ்க்கையில கொஞ்சம் வெளிச்சத்தைப் பார்த்துக்கிட்டிருந்தேன். மறுபடி லைஃப் இருண்டு போச்சு.”

“என்னடா வெளிச்சம், இருட்டுன்னுக்கிட்டு. போரடிக்காம விஷயத்தைச் சொல்லுடா.”

“ம்... என்னத்தைச் சொல்ல? வேலை போயிடுச்சு.”

“என்ன? வேலை போயிடுச்சா? ஏன்? திடீர்னு என்ன ஆச்சு?”

“ஆமா ஆனந்த். எடிட்டர் என்னைக் கூப்பிட்டு, ‘இனிமே உனக்கு இங்க வேலை இல்லை’ன்னு சொல்லி அனுப்பிட்டாரு.”

“ஏன்? என்ன காரணம்?”

“அந்த நிரஞ்சன் இருக்கான்ல? அவன் என்னை வேலை நீக்கம் பண்ணாத்தான் சிறப்பிதழுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கறதா சொன்னானாம். அப்புறமென்ன, வேலை அவுட்டு.”

“அவருக்கென்னடா உன் மேல இந்த அளவு கோபம்?”

“அவரு என்ன அவரு, அவனைப் பத்தி கிசுகிசு எழுதிட்டேனாம். அந்தக் கடுப்பு. அவனெல்லாம் ஒரு மனுஷனா? என் வயித்துல அடிச்சுட்டான் பாவி.”

“இந்த வேலை போனா என்னடா? வேற எடத்துல வேலைக்கு முயற்சி பண்ணு.”

“அட போடா நீ வேற. இந்தப் பத்திரிகையில சேர்றதுக்கு நான் என்ன பாடுபட்டிருக்கேன். ஊர்ல வியாதியா படுத்திருக்கற அம்மாவுக்கு வைத்தியத்துக்குன்னு மூணு மாசமா கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டிருந்தேன். மகன் நாலு காசு சம்பாதிக்கறானேன்னு இப்பதான் அப்பா சந்தோஷமா இருந்தார். எல்லாம் போச்சு, இந்த நிரஞ்சனால. அவனை சும்மாவிட மாட்டேன்.” கோபத்தில் பாலு பற்களைக் கடித்தான். ஆனந்த், பாலுவின் கைகளைப் பிடித்தான்.

“உணர்ச்சி வசப்படாத பாலு.”

“நோ. என் வாழ்க்கையைக் கெடுத்த அந்தப் பாவியை நான் பழி வாங்கியே தீருவேன்.” ஆனந்தின் கைகளை உதறினான்.

பாலுவின் கண்களில் இருந்த பழிவாங்கும் வெறியினைக் கண்ட ஆனந்த், ‘இவன் என்ன செய்வானோ?’ என்ற பயத்தில் திகைத்துப் போனான்.

பத்திரிகைகளை பரப்பிக் கொண்டு மிகவும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்த காரியதரிசி அருண், ராம்குமாரின் உரத்த குரல் கேட்டு கண்களை எடுத்தான்.

“என்ன அருண்? கூப்பிடறது கூட காதுல விழாம, அப்படி என்ன இன்ட்ரஸ்ட் பத்திரிகைல?”

“நம்ம படம் கூடவே நிரஞ்சனோட புது படமும் ரிலீசாச்சுல்ல. அரசன் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்ல ரசிகர்கள் பயங்கர மோதலாம். போலீஸ் போய்தான் கன்ட்ரோல் ஆயிருக்கு.”

“எதுக்காகவாம்?”

“எல்லாம் வழக்கம் போலத்தான். உங்க ரசிகர்கள் அவரைப் பத்தி மட்டமா பேச, அவரோட ரசிகர்கள் உங்களைத் தாக்கிப் பேச, அப்புறமென்ன அடிதடிதான்.”

“அடப்பாவமே, ஏன் அருண் இந்த கலவரத்துக்கு ஏதாவது அறிக்கைவிட்டு பப்ளிசிட்டி பண்ணா என்ன?”

“ஓ. பண்ணலாமே. ‘நாங்க ரெண்டு ஹீரோக்களும் ஃப்ரெண்ட்ஸ்தான். ரசிகர்களான நீங்க வீணா அடிச்சுக்காதீங்க. இதெல்லாம் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு’ அப்படி, இப்படின்னு மலர்மாலை பத்திரிகைல அறிக்கை விட்டு தூள் கிளப்பிடுவோம்.”

“வெரி குட். வேற என்ன மேட்டர்?”

“நிரஞ்சனுக்கு மத்திய அரசு விருது குடுக்கப் போகுதாம்.”

“அப்படியா?”

“ஆமா சார். இங்க பாருங்க கொட்டை எழுத்துல போட்டிருக்காங்க. புதுசா ரெண்டு படத்துல வேற புக்காகி இருக்காராம். ஒரே தயாரிப்பாளரோட அடுத்தடுத்த ப்ரொடக்ஷனுக்கு டேட்ஸ் குடுக்கற அளவுக்கா நிரஞ்சன் ஃப்ரீ?”


“ப்ரொட்யூசர் செம பார்ட்டியாச்சே கன் பேமெண்ட். விட்ற முடியுமா? லோ பட்ஜெட் கம்பெனிக்கு குடுத்த கால்ஷீட்டை இந்தப் பெரிய கம்பெனிக்குக் குடுத்திருப்பாரு.”

“அதை விடு. வேற என்ன மேட்டர்?”

“நடிகை சூர்ய பிரபாவுக்கு கல்யாணமாம். இனிமே நடிக்க மாட்டாங்களாம்.”

“இடுப்புல டயர் மாதிரி சதை போட்டாச்சு. அக்கா, அண்ணி காரக்டர் பண்ற வயசாச்சு. இனிமே என்ன கல்யாணந்தான்.”

“இதில வேற பந்தா, இனிமே நடிக்க மாட்டேன்னு. இவங்களை யாரு நடிக்கக் கூப்பிடறாங்களாம்.”

“ஹா ஹா ஹா” ராகம் போட்டு சிரித்தான் ராம்குமார்.

“கூப்பிடறாங்களோ இல்லையோ, இந்த லேடி ஆர்ட்டிஸ்டுகளுக்கு அப்படி ஒரு பந்தா டைலாக் வுட்டே ஆகணும். சரி, இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்?”

“எட்டு மணிக்கு நேரா விஜயா கார்டன்ஸ் போறோம். அதுக்கப்புறம் ஆர்.கே.ஸ்டியோவில நைட் ஷிப்ட். ஃபைட் சீன் பண்ணணும்.”

“ஓ.கே. கிளம்பலாமா? மணி எட்டாகப் போகுதே?”

“அ... வந்து... ராம் ஒரு விஷயம். விஜயா கார்டன்ல லஞ்ச் ப்ரேக்ல மல்லிகா பத்திரிகைக்கு ஒரு பேட்டி...”

“வாட்? லஞ்ச் ப்ரேக்ல பேட்டி, ரிலாக்ஸ் மூடே இருக்காதே அருண்?”

“ப்ளீஸ், ராம், ப்ராமிஸ் பண்ணிட்டேன். அந்த ரிப்போர்ட்டர் பொண்ணுகிட்ட.”

“ஓகே, இப்ப புரியுது. ரிப்போர்ட்டர் ஒரு பொண்ணுல்ல. உடனே ஓக்கே சொல்லி இருப்ப. ஒரு புடவை, சூடிதார் வுட்றமாட்டியே.”

“பார்ட்டி இப்ப ஃபீல்டுல இருக்கறவங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுடும் பாஸ். டக்கர் ஃபிகர்.”

ராம்குமாருக்கு பால்யத்திலிருந்தே நெருங்கிய நண்பனான அருண், ராம்குமாரின் திரை உலக வாழ்க்கையிலும் நண்பனாகவும், காரியதரிசியாகவும் இருந்தான். நட்புறவு மாறாத உணர்வில் செல்லமாக ராம் என்றும், பாஸ் என்றும் அழைப்பான். பல வருட நட்பை நினைத்து பெருமைப்பட்டான் ராம்குமார்.

“என்ன பாஸ், யோசிக்கறீங்க? ஒரு பத்து நிமிஷந்தான் பாஸ்.”

“சரி, சரி. ஒழிஞ்சுப் போ.”

“தாங்க்யூ ராம்.”

“அருண், நீ இன்னிக்கு ஷுட்டிங்குக்கு என் கூட வரலை.”

“பாஸ்” அருண் அலறினான்.

“ஏன் இப்படி அலர்ற? அம்மாவுக்கு ஜெனரல் ஹெல்த் செக்-அப் பண்ணனும். டாக்டர் ராவ்கிட்ட கூட்டிட்டுப் போய் செக் பண்ணிட்டு, வீட்டில கொண்டு வந்து விட்டுட்டு விஜயா கார்டன்ஸ் வந்துடு.”

“அப்பாடா.”

“லஞ்ச் ப்ரேக்லதான் அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு வருவா? ஹாஸ்பிடல் போயிட்டு பதினொரு மணிக்கெல்லாம் கார்டன்ஸ் வந்துடுவ. நிம்மதியா போயிட்டு வா. இப்ப போய் அம்மாவைக் கூப்பிடு. நான் புறப்படணும்.”

அருண், ஹாலைக் கடந்து உள்ளே சென்று ராம்குமாரின் அம்மாவைக் கூட்டி வந்தான்.

“என்னப்பா குமாரு, புறப்பட்டுட்டியா?”

“ஆமாம்மா. நீங்க அருண் கூட டாக்டர் ராவ் கிளினிக் போயிட்டு வந்துடுங்க. நான் ஷுட்டிங் புறப்படறேன்.” அம்மாவின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு போர்டிகோவில் நின்றிருந்த பென்ஸ் காரில் ஏறினான் ராம்குமார். பங்களாவின் பெரிய கதவின் அருகே ஒரு இளம் பெண், காவல்காரனுடன் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். காவல்காரன் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

“காரை நிறுத்து.” ராம்குமார் சொன்னபடி காரை நிறுத்தினான்.

“வாட்ச்மேன், யார் இது? என்ன கலாட்டா?”

“சார், இந்தப் பொண்ணு உங்களைப் பார்க்காம போக மாட்டேன்னு...” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனைத் தள்ளிக் கொண்டு காருக்குள் எட்டிப் பார்த்தாள் அந்தப் பெண்.

“ராம்குமார் சார், என் பேர் ஷீலா. சார், எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை சார். எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் குடுங்க சார். ப்ளீஸ்.”

“எனக்கு இப்போ ஷூட்டிங்குக்கு லேட் ஆகுது. பொதுவா மார்னிங் ஏழு மணிக்கு முன்னால நான் விஸிட்டர்ஸைப் பார்க்கறதுண்டு. அந்த டைம்ல வந்து பாரு. டிரைவர் காரை எடு” அவளுடைய பதிலைக் கூட எதிர்பாராமல் கார் விரைந்தது.

சிவந்த நிறம். நல்ல உயரத்துடன் சினிமா நடிகைகளுக்கு வேண்டிய சகல அம்சங்களுடன் இருந்த அவளுக்கு ஏனோ திரைப்பட உலகம் தன் கதவுகளை இன்னமும் திறக்கவில்லை. ராம்குமாருடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு, தன் வாழ்நாளில் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தி, விரைவில் திரை உலகில் மின்னும் தாரகையாவோம் என்ற நம்பிக்கை உணர்வு தந்த நிறைவோடு பஸ் ஏறினாள் ஷீலா.

படப்பிடிப்பின் இடைவேளை, பால் கலக்காத டீயை குடித்துக் கொண்டிருந்தான் ராம்குமார்.

“மீட் மை பாஸ், ஆக்ஷன் கிங் மிஸ்டர் ராம்குமார்.” அருகில் நின்று கொண்டிருந்த அழகிய இளம் பெண்ணிடம் அறிமுகப்படுத்திய அருணை ஓரக்கண்ணால் பார்த்தான் ராம்குமார். அருண் அசடு வழிந்தான்.

“பாஸ், நான் சொல்லலை? மல்லிகா பத்திரிகை ரிப்போர்ட்டர்? அது இவங்கதான்.”

“ஹலோ சார். நான் மஞ்சுளா” ரிப்போர்ட்டர் மஞ்சுளா, எலுமிச்சம்பழ நிறத்தில், பெரிய கண்களுடன், ஏக அழகாய் இருந்தாள்.

“பேட்டியை ஆரம்பிக்கலாமா சாரி?”

“ஓ. ஆரம்பிக்கலாமே.”

குறிப்பு எழுதும் நோட்டை எடுத்தவின் சூடிதாரின் டாப்ஸில் செருகி இருந்த பேனாவை மஞ்சுளா எடுத்தபோது, அருணின் பார்வை தப்பான இடத்திற்குப் போனது. இதனை கவனித்த ராம்குமார் முறைத்ததும், பார்வையை நேராக்கினான்.

“உங்களுக்கு ஆக்ஷன் ஹீரோங்கற இமேஜ் உருவாகி இருக்கு. இதைப் பத்தி சொல்லுங்களேன்.”

“ஆக்ஷன் ஆக்ஷன்னு சொல்லிக்கிட்டிருந்தா மேலே மேலே முன்னேற முடியாது. நான் காரெக்டர் செய்தாலும் ரசிகர்கள் அதிலும் சண்டைக் காட்சிகளை எதிர்பார்க்கறாங்க. ஆனால் சண்டை இல்லாத கேரக்டர் ரோல் பண்ணவும் தயக்கமாத்தான் இருக்கு. இமேஜ் ஆயிடுச்சே! இருந்தாலும் ஆக்ஷன் ஹீரோங்கற இமேஜை உடைச்சுட்டு காரெக்டர் ரோல் பண்ணனும்னு ரொம்ப ஆசையாத்தான் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமாத்தான் இது முடியும்னு நினைக்கிறேன்.”

“ஒரு நடிகரோட, அல்லது நடிகையோட திறமை டைரக்டராலதான் உருவாக்கப்படுதா?”

“நமக்குள்ளே இருக்கற ஆற்றலை வெளிக் கொண்டு வர்றவர் டைரக்டர்தான். அவர் எனக்கு இப்படித்தான் வேணும், இன்னும் பெர்ஃபெக்டா வேணும்னு கேட்டு, திறமைகளை வெளிப்படுத்த வைக்கிறார். ஒரு டைரக்டர் களிமண்ணைப் பிள்ளையாராகவும் ஆக்கலாம். குரங்காகவும் ஆக்கலாம். உருவாக்கற காரக்டரும், நடிகரோட திறமையும் சிறப்பா அமையறது நிச்சயமா டைரக்டராலதான்.”

“சார், சமீபத்துல ஷூட்டிங்குக்காக அமெரிக்கா போனீங்க. அதைப் பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?”

“அமெரிக்கா போன அனுபவத்தைப் பத்தி கொஞ்சமென்ன? நெறயவே சொல்லலாம். ரொம்பப் பணக்கார நாடு அது. ஏராளமான வருமானம்; தாராளமான வசதிகள்.”

“உங்க மனசை ரொம்பவும் கவர்ந்தது எது?”

“அங்க என்னை பிரமிக்க வச்சது ஹாலிவுட் ஸ்டுடியோஸ். ரொம்பப் பிரமாதம். எல்லா செட்டும் ரொம்ப நெச்சுரலா இருக்கு. உலகத்துலயே பெரிய ஸ்டுடியோ ஹாலிவுட்ல இருக்கற யுனிவர்ஸல் ஸ்டுடியோதான்.”


“அவ்வளவு பெரிய ஸ்டுடியோவா சார்?”

“ஆமா. முழுசும் சுத்திப் பார்க்கணும்னா ஸ்டுடியோவுக்குள்ளே ஏற்பாடு செஞ்சிருக்கற ட்ராம்ல போய்த்தான் பார்க்க முடியும்.”

“நிறைய செட்டிங்ஸ் எல்லாம் இருக்கா சார்?”

“எக்கச்சக்கம். எல்லாம் ரெடிமேடா எப்பவும் தயாரா இருக்கும். பழைய காலத்துல நடக்கற மாதிரி கதையைப் படமெடுக்கணும்னா, அதுக்காக பல வருஷங்களுக்கு முன்னால இருந்த கட்டிடங்களை அதே மாடல்ல பண்ணி வச்சிருக்காங்க. நவீன கட்டிடங்கள் வேணும்னா அதுக்கும் செட் இருக்கு. ஒரு கட்டிட செட் நான் பார்த்துக்கிட்டிருக்கும்போதே தீப்பிடிச்சு எரிஞ்சது.”

“தீப்பிடிச்சா?”

“ஆமா, ஆனா ரெண்டே நிமிஷத்துல எரிஞ்சுக்கிட்டிருந்த சுவடு கொஞ்சம் கூட இல்லாம மறுபடியும் அழகான கட்டிடமாயிடுச்சு. அது போல ஒரு பெரிய பாலம் செட் திடீர்னு ரெண்டா உடைஞ்சு கீழே விழுந்தது. சில நிமிஷங்கள்ல பழையபடி இணைஞ்சுடுது. எல்லாமே எஃபெக்ட்ஸ். ரொம்ப சூப்பர். நீர்வீழ்ச்சி. கடல், சர்ச், தீவு, வெள்ளம் பொங்கற செட், குளம், மரம் கீழே விழற மாதிரி செட்-அப், மழை, பனி இப்படி எத்தனையோ. அந்த நாட்டு மக்களின் கலையறிவையும், செயல் திறனையும் எப்படி பாராட்டறதுன்னே தெரியாது. நான் பார்த்து ரசிச்ச எல்லாவற்றையும் விரிவா சொல்றதுக்கு ஒரு நாள் முழுசும் கூடப் பத்தாது.”

“அமெரிக்காவுல எல்லா இடங்களையும் பார்த்திட்டீங்களா சார்?”

“ஷூட்டிங் நேரம் போக, கிடைச்ச நேரத்துல முக்கியமா பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துட்டேன். வாக்ஸ் மியூசியம் என்னை ரொம்பக் கவர்ந்த ஒரு கலைக்கூடம்.”

“வாக்ஸ் மியூசியமா? அதென்ன சார்?”

“வாக்ஸ் மியூசியத்துல, பிரபல தலைவர்கள், பிரபல திரைப்பட நடிகர், நடிகையோட உருவங்களை சிலைகளாக வச்சிருக்காங்க. எல்லாமே ஒரு வித மெழுகுல செஞ்சது. நிஜ உருவத்துக்கும் சிலைக்கும் வித்தியாசமே தெரியாது.”

“அங்கே நிறைய பேரோட சிலைங்களை வச்சிருக்காங்களா சார்?”

“இருநூறுக்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கு. மர்லின் மன்றோ, சார்லி சாப்பின், லாரல்-ஹாடி, ரீகன், எலிஸபெத் டெய்லர் ஆகியோரோட சிலைங்க இருக்கு. அவங்களையெல்லாம் நேர்ல பார்க்கிற மாதிரியே இருக்கு. மைக்கேல் ஜாக்சனை அவரோட பிராண்ட் புன்னகையில் அசலா சிலை வடிவமைச்சிருக்காங்க. ஃபென்டாஸ்டிக்.”

“மெழுகு சிலைன்னு சொல்றீங்க? இதை எப்படிச் செய்யறாங்களாம்?”

“சிலை செய்யற விதத்தை விளக்கி காட்டறதுக்காக வீடியோ கேசட்ல படமெடுத்திருக்காங்க. இந்த காசெட் பாக்ஸ் மியூசிய ஆபீசுல விற்பனைக்கு வச்சிருக்காங்க.”

“நீங்க அந்த காசெட் வாங்கி இருக்கீங்களா சார்?”

“ஓ வாங்கி இருக்கேன். பார்க்கறதுக்குதான் நேரம் இல்லை.”

“சார், இன்னும் ஒரே கேள்வி...”

“கேளுங்க.”

“நிரஞ்சனுக்கு மத்திய அரசு விருது கிடைச்சுருக்கு. இதைப் பத்தி நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க.”

 “சக கலைஞர் ஒருத்தருக்கு மத்திய அரசோட விருது கிடைச்சிருக்குன்னா அது திரைப்பட உலகமே பெருமைப்படற விஷயம். நிரஞ்சன் ஒரு திறமையான நடிகர். மிகக் குறுகிய காலத்துல புகழின் உச்சிக்குப் போயிருக்கற அதிர்ஷ்டசாலியும்கூட. தகுந்த ஒரு கலைஞருக்கு அவார்ட் கெடச்சதுல ரொம்பப் பெருமைப்படறேன்.”

“நீங்க அவரைப் பத்தி இவ்வளவு பெருந்தன்மையாப் பேசறீங்க. ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் கடுமையான போட்டி இருக்குன்னு பேசிக்கிறாங்களே?”

“போட்டி இருக்கறதுல தப்பு இல்லை. பொறாமைதான் கூடாது. நிரஞ்சன் எனக்கு இனிய நண்பர். ரசிகர்கள் எங்க மேல வச்சிருக்கற அதிகப்படியான அபிமானத்துல பிரிச்சுப் பேசறாங்களே தவிர, நாங்க ரெண்டு பேரும் ஒற்றுமையாத்தான் இருக்கோம். நான் அமெரிக்காவுல பார்த்த வாக்ஸ் மியூசியம் போல இந்தியாவிலயும் வாக்ஸ் மியூசியம் அமைச்சு, நம்ப நாட்டு பிரமுகர்களுக்கு சிலை வச்சா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். நான் நினைச்ச நேரம் நல்ல நேரமோ என்னமோ, அரசாங்கமும் அதைப் பத்தி பரிசீலனை பண்ணி, வாக்ஸ் மியூசியம் அமைக்க முடிவு பண்ணி இருக்கு. அதுக்கு ஆரம்பமா நிரஞ்சனுக்கு மெழுகு சிலை வைக்கணும்னு பிரியப்பட்டு, அரசாங்கத்துக்கு எழுதிப்போட்டேன்.”

“அரசோட சம்மதம் கிடைச்சுடுச்சா சார்.”

“ஓ. சிலை செய்யறதுக்கு ஆகற செலவுல பெரும் பகுதியை நானே ஸ்பான்சர் செய்யறதா தெரிவிச்சிருக்கேன்.”

“உங்களைப் போல நல்ல இதயம் உள்ள கலைஞர் கிடைச்சதுக்கு தமிழ்நாடு பெருமைப்படணும் சார். சாரி, ஒரே ஒரு கேள்வின்னு சொல்லிட்டு நிறைய டைம் எடுத்துட்டேன்.”

“இட்ஸ் ஆல் ரைட். எனக்காக டைரக்டர் வெயிட் பண்ணிட்டிருக்கார்.”

“ஓ.கே. சார். தாங்க்யூ.”

“வெல்கம்.”

ராம்குமார் படபிடிப்பு நடைபெறும் இடத்திற்கு படு ஸ்டைலாக நடந்து சென்றான் வேகமாக. மஞ்சுளாவையே வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்த அருண், “என்ன மேடம்? பேட்டி ஓ.கே.வா?” அளவுக்கதிகமாகவே சிரித்துப் பேசினான்.

“வெரிமச் இன்ட்டரஸ்டிங் சார். உங்களுக்குத்தான் நான் ரொம்ப தாங்க்ஸ் சொல்லணும்.”

“அதுக்கென்னங்க, ஏதோ என்னால முடிஞ்சது.”

“அப்போ, நான் கிளம்பறேன் சார்.”

“அடுத்து எப்போ பார்க்கறோம்?”

“எதுக்கு?”

“அ... வந்து... சும்மாதான்.”

‘வழியறான்’ நினைத்துக் கொண்ட மஞ்சுளா, “ஸீ யூ சார்” கையை ஆட்டி விடை பெற்றாள்.

குளித்து, ஈரமான தலையைத் துவட்டிக் கொண்டே வந்தான் நிரஞ்சன். மூன்று மாத காலம் தொடர்ந்து ஓய்வின்றி படப்பிடிப்பில் ஈடுபட்ட களைப்பில் முகம் மிகவும் சோர்வாக இருந்தது. சரியான தூக்கம் இன்றி கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றி இருந்தன.

“சுப்பையா, இன்னிக்கு என்ன ரொம்ப சாவகாசமா இருக்க? ஷூட்டிங் இல்லையா?”

“பெரியம்மா, சுப்பையான்னு கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? சுப்பையா சுப்பையான்னுக்கிட்டு.”

“தில்லிக்கு ராஜான்னாலும் நீ எனக்கு புள்ளைதாண்டா. இந்த சினிமாப் பேரெல்லாம் என் வாய்ல நுழையாது. ஷூட்டிங் இல்லையான்னு கேட்டேன்ல?”

“ப்ரொட்யூசர் வீட்டில யாரோ இறந்துட்டாங்களாம். ஷூட்டிங் கான்ஸல்.”

“சரி, சரி சாப்பிட வா. இன்னிக்காவது இட்லி தோசைன்னு சாப்பிடக் கூடாதா?”

“என்னது? இல்லி தோசையா? இதெல்லாம் சாப்பிட்டா உடம்பு பருத்துடும். அப்புறம் வீட்லதான் உட்கார்ந்திருக்கணும்.”

“ஆமா... கேப்பை கூழும், வறட்டு சப்பாத்தியும் சாப்பிட்டுக்கிட்டு, சினிமா ஸ்டாரானா தினமும் பிரியாணியாவே சாப்பிடுவேன்னு சொன்ன?”

“சொன்னேந்தான். யார் இல்லைன்னா? பிரியாணி சாப்பிடற வசதிக்கு வந்துட்டோம்ல. கண்டதையும் சாப்பிடாம அளவா இருந்தாத்தான் கதாநாயகனா நிற்க முடியும். இல்லை... நிரஞ்சனை, அப்பா, தாத்தா வேஷத்துல தான் நடிக்கக் கூப்பிடுவாங்க.”

“என்ன சினிமாவோ... சரி, சாப்பிட வா.”

“ஹலோ சார், குட்மார்னிங்” சோமு வந்தான். “மன்றத் தலைவர் சக்திவேலை வரச் சொல்லி இருக்கேன்.”

“எத்தனை மணிக்கு வரச் சொல்லி இருக்க?”

“ஒன்பது மணிக்கு.”


நிரஞ்சன் ஒரு கோப்பை கூழையும், இரண்டு சப்பாத்திகளையும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான். அப்போது இன்ட்டர்காம் அழைத்தது. சோமு ரிசீவரை எடுத்தான்.

“ஹலோ.”

“சோமு சாரா? சார்! ஐயாவைப் பார்க்க ரசிகர் மன்றத் தலைவர் சக்திவேல் வந்திருக்கார். அனுப்பட்டுமா?”

“அனுப்பு” ரிசீவரை வைத்தான்.

“யார் சோமு?”

“சக்திவேல் வந்திருக்கானாம்.”

சோமு சொல்லி முடிப்பதற்குள் சக்திவேல் உள்ளே வந்துக் கொண்டு இருந்தான். நிரஞ்சனைப் பார்த்ததும் ட்யூப்லைட் போட்டது போன்ற வெளிச்சம் அவன் முகத்தில்.

“வணக்கம். சார்.”

“வணக்கம்.”

“என்னப்பா, நிரஞ்சன் இருக்கார்ன உடனே நம்பளை கண்டுக்க மாட்டேங்கற?”

“சோமு சார், வணக்கம்.”

“ம்... ம்... உட்காருப்பா.”

சக்திவேல் உட்கார்ந்தான். வயது இருபத்தி ஒன்று இருக்கலாம்.

சினிமாத்தனமான தலையலங்காரம், உடைகள் இத்யாதியுடன் காணப்பட்டான்.

“சார்! வாழ்த்துக்கள். உங்களுக்கு மத்திய அரசோட விருது கிடைச்சிருக்குன்னு செய்தி கேட்டோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.”

“நன்றி, இந்த விருது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. அரசு என்னை இந்த அளவுக்கு கெளரவப்படுத்தி இருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“சார், ராம்குமார் உங்களுக்கு சிலை செய்யறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்காராம். பாராட்டு விழா கூட நடத்தப் போறாராம்.”

“சிலை எல்லாம் வைக்கற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிசா சாதிக்கலை.”

“என்ன சார், இப்படி சொல்லிட்டீங்க. இது வரைக்கும் எத்தனையோ அவார்ட் வாங்கி இருக்கீங்க. இப்ப மத்திய அரசோட விருதும் கிடைச்சிருக்கு. நம்ப மன்றத்து மூலமா நற்பணிகள் செய்றதுக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க! யானைக்கு தன் பலம் தெரியாதும்பாங்க. அது போல...”

இடைமறித்தான் நிரஞ்சன். “ரொம்ப புகழாதீங்க. ஓ.கே. ஏதாவது குடியுங்களேன் முதல்ல. அப்புறம் பேசலாம். காபி ஆர் கூல் ட்ரிங்க்?”

“காபி.”

“சோமு, உள்ளே போய் காபி கொண்டு வரச் சொல்லு. அப்புறம் சக்திவேல், போன மாசம் ஒரு சின்னப் பையனுக்கு இதய ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணச் சொன்னேனே?”

“நர்ஸிங்ஹோம்ல போய் விசாரிச்சு, எங்கெங்கே பணம் கட்டணுமோ கட்டி, டாக்டருங்களை எல்லாம் பார்த்து பேசிட்டோம் சார். அடுத்த வாரம் புதன்கிழமை ஆப்ரேஷன் வச்சுக்கலாம்னு டாக்டர் சொன்னார். அந்த பையனோட அம்மா, நீங்கதான் பணம் குடுத்தீங்கன்னு சொன்னதும் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க.”

“ஆபரேஷன் முடிஞ்சதும் சொல்லுங்க. நான் அந்தப் பையனை வந்து பார்க்கறேன்.”

“சார், ராம்குமார் தன்னோட ரசிகர் மன்றத்து ஆட்கள் கூட சேர்ந்து உங்களுக்கு பாராட்டு விழா நடத்தப் போறாங்களாம். அது போல நாங்களும் உங்களுக்கு விழா எடுக்கணும்னு ஆசைப்படறோம் சார்.”

“உங்க ஆசை நியாயமானதுதான். எனக்குப் புரியுது. ஆனா ராம்குமார் விழா நடத்தறார். நீங்க வேற எதுக்கு தனியா விழா நடத்திக்கிட்டுன்னு நான் நினைக்கிறேன்.”

“நம்ப மன்றத்து ரசிகர்கள் உங்களுக்கு விழா எடுக்கணும்னு ரொம்ப ஆசையா காத்திட்டி...”

“நான் சொல்றதைக் கேளுங்க சக்திவேல். ராம்குமாரோட ரசிகர் மன்றத் தலைவர் சுரேஷ் சோமுகிட்ட பேசிட்டாராம், விழா ஏற்பாடு பத்தி. என் கூடவும் ராம்குமார் இதைப் பத்தி பேசினார். நானும் சம்மதிச்சுட்டேன். எனக்கு இமைடவிடாம ஷுட்டிங் இருக்கு. இன்னிக்கு ஒரு ப்ரொட்யூசர் வீட்டில சாவு. அதனால நாலு நாள் ஃப்ரீ. இந்த நாலு நாளில சிலைக்கு மாடலா நிக்கற வேலை வேற இருக்கு. அதுக்கப்புறம் மறுபடியும் ஷுட்டிங் இருக்கு. அதுவும் அவுட்டோர்ல. பத்து நாள் தொடர்ந்து கால்ஷுட் குடுத்திருக்கேன். இந்த ஷெட்யூல் முடிஞ்சதும் நல்ல ஓய்வு எடுக்கணும்னு இருக்கேன். ரெஸ்ட் இல்லாம நடிச்சதுனால பெஸ்ட் ஆக்டர் அவார்டெல்லாம் வாங்க முடிஞ்சது. ஆனா, உடல் ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டி இருக்கு. ஓய்வுக்காக எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன்.”

“நிரஞ்சன் சார், அவுட்டோர் ஷுட்டிங் போறதா சொல்றீங்க? விழாவுக்கு வந்துருவீங்கள்ல்ல?”

“ஓ! விழா பதினேழாந்தேதிதானே? கண்டிப்பா வந்துடுவேன்.”

சோமு ‘பக பக’வென சிரித்தான்.

நிரஞ்சன் முறைத்தான். “என்ன? என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு?”

“சாரோட பக்ஞ்சுவாலிட்டி எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே? அதான் இந்த பயம் பயப்படறாரு சக்திவேல்.”

“விழா நாயகனே நான்தானே சக்திவேல்? யூ டோன்ட் வொர்ரி. பதினேழாந்தேதி காலையில ‘டாண்’னு மெட்ராஸ் வந்துடுவேன். விழாவுல ஜமாய்ச்சுடலாம்.”

“நிரஞ்சன் சார், என்ன இருந்தாலும் நம்ம மன்றத்துல இருந்து, தனியா விழா எடுக்காதது ஒரு குறையாத்தான் இருக்கு...”

“நான்தான் சொன்னேனே சக்திவேல், நேரமே இல்லைன்னு. பத்து நாள் ரெஸ்ட்டுக்கப்புறம் ரொம்ப பிஸியா இருப்பேன். ரெண்டு மன்றத்து ரசிகர்களும் சேர்ந்து நடத்தற விழாங்கற புதுமையா இருக்கட்டுமே?”

“நீங்க சொன்னா சரிதான் சார். நம்ம ஆளுங்ககிட்ட தெளிவா எடுத்துச் சொல்லி, விழாவை சிறப்பா நடத்திடறோம்.”

“கலாட்டா கிலாட்டா எல்லாம் பண்ணாம ஒற்றுமையா சேர்ந்து நடத்துங்க.”

“ஓ.கே. சார். அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லாம நான் பார்த்துக்கறேன். அப்ப... நான் கிளம்பறேன் சார். சோமு சார் வரட்டுமா?”

“ஓ.யெஸ்” சோமு விடை கொடுத்தான்.

“சோமு, நாம்பளும் புறப்படலாமா? சிலைக்கு மாடலிங் பண்ணப் போகணுமில்ல?”

“புறப்படலாம், வாங்க.”

“இரு. டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்.”

தன் அறைக்கு உற்சாகமாக, துள்ளுலுடன் ஓடினான் நிரஞ்சன்.

சிலை திறப்பு விழாவினால், தான் எந்த அளவு பாதிக்கப்படப் போகிறோம் என்பதை அப்போது அவன் அறியவில்லை.

3

மிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரு கதாநாயகர்களின் ரசிகர்களும் குழுமி இருந்தது கலைவாணி கலைக்கூடம். பிரபலமானவர்களின் சிலைகளை பொது மக்களின் பார்வைக்காக வைப்பதற்கு அரசு நல்லதொரு இடத்தினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ‘கலைவாணி கலைக்கூடம்’ என்று பெயரிட்டிருந்தது. கலைக்கூடத்திற்கென்று விழா நடத்தும் அலுவலகமும் அமைக்கப்பட்டு இருந்தது. ஊரைவிட்டு சற்று தள்ளி ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தபோதிலும், போக்குவரத்திற்கு பிரச்சினை இன்றி பேருந்துகள் இயங்கின.

“சக்தி வேலண்ணே, என்ன அண்ணே இன்னும் நம்ம தலைவரைக் காணும். வீட்டுக்கு இன்னொரு தடவை போன் பண்ணிக் கேளுங்க அண்ணே” ரசிகர் மன்ற செயலாளர் வினோத் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம். பொறுமையா இருங்க. ரொம்ப உறுதியா சொல்லிட்டுப் போனார். நிச்சயமா வந்துடுவார்.”

“இது, என்னண்ணே நம்ப எவ்வளவு ஆசையா வந்திருக்கோம். தலைவர் ஏமாத்திடுவாரோன்னு சங்கடமா இருக்கு.”

“சேச்ச, அதல்லாம் வந்துடுவார். மாலை, பூச்செண்டெல்லாம் தயாரா வச்சிருக்கீங்கள்ல.”

“அதெல்லாம் ரெடிதான் அண்ணே, ஆனா இந்த ராம்குமார் ஆளுக இருக்கானுகளே, அவனுக, கிண்டலா பார்க்கறாங்க அண்ணே.” இன்னொரு ரசிகன் மனம் குமுறினான்.


“நீங்களா ஏதாவது அர்த்தம் பண்ணிக்கிட்டு வம்பு, கிம்பு எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல. தலைவர் ஏற்கெனவே இதைத்தான் என்கிட்ட வலியுறுத்தி சொன்னார். பிரச்சனை பண்ணாம இருங்க. நான் இன்னொரு தடவை நிரஞ்சன் சார் வீட்டுக்கு போன் பண்ணிட்டு வர்றேன்” சக்திவேலை சுற்றி நின்று கொண்டிருந்த ரசிகர்கள் கலைந்து இருக்கைகளுக்குப் போனார்கள்.

ராம்குமார் ரசிகர் மன்ற ஆட்கள் முகத்தில் குதூகலம் பொங்கியது. மன்றத் தலைவன் சுரேஷ் விழாவிற்கான ஏற்பாடுகளை விமரிசையாக, சிறப்பாகச் செய்திருந்தான். பெரும் செல்வந்தரின் ஏக புதல்வனான அவனுக்கு ராம்குமார் மீது ஒரு வித கண்மூடித்தனமான அபிமானம், ஏன் வெறி என்று கூடச் சொல்லலாம். ரசிகர்கள் சிலரை வேலை வாங்கிக் கொண்டு, விழா ஏற்பாட்டில் முனைப்பாக இருந்தான். சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“டேய், அதோ இங்குமங்குமா ஓடியாடி திரிஞ்சிக்கிட்டிருக்கானே, அவன்தான் ரசிகர் மன்றத் தலைவனாடா?”

“ஆமாடா. அவன்தான் கோயம்புத்தூர்ல பெரிய மில் அதிபரோட பையனாம்... காலேஜ்ல படிக்கறானாம். ஏக சொத்து கிடக்காம்.”

“பார்த்தாலே தெரியுது. அவன் கழுத்துல செயினை பார்த்தில்ல? பத்து சவரன் இருக்கும். புலி நக டாலர் வேற.”

“மன்றத்து மூலமாக வசூல் ஆகற காசு தவிர இவன் சொந்தமாக பணம் போட்டு ராம்குமாருக்கு விழா, விளம்பரம், வாழ்த்துச் செய்தி எல்லாம் குடுப்பான். ராம்குமார்னா இவனுக்கு உயிராம்.”

“அது மட்டுமில்லை. டி.வி.யில ராம்குமாரோட படம் மூணு மாசமா போடலைன்னு டி.வி. ஸ்டேஷன் முன்னாடி உண்ணாவிரதமெல்லாம் இருந்திருக்கான்” தனக்கு தெரிந்த தகவலை ஆர்வத்தோடு கூறினான் இன்னொரு கோவை வாசி.

“போன வருஷம் ராம்குமாரோட பிறந்தநாள் அன்னிக்கு, பெரிய வெள்ளித் தட்டில் அவர் நடிச்ச படங்களோட பேரையும் பொறிச்சு கொண்டு போய் குடுத்திருக்கான்.”

“பணம் செலவழிச்சு செய்றதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா, எங்க ஊர் ஆள் ஒருத்தன், ப்ளேடாலேயே ராம்குமார்னு கையில கீறி வச்சிருக்கான் தெரியும்ல.”

“இவன் மட்டும் என்னவாம், ராம்குமாரோட படம் நூறு நாள் ஓடினா திருப்பதிக்கு போய் அங்கப்பிரதட்சணம் பண்ணுவானாம்.”

“நம்பளை விடு. கொஞ்சம் வயசுக்காரங்க. ஆம்பளைங்க. எங்க பாட்டி இருக்கு பாரு. அது சோறு கூட வேணாமின்னு நம்ப ராம்குமார் படத்துக்கு ஓடிடும்.”

“பாட்டி என்னடா பாட்டி. டீன் ஏஜ் காலேஜ் பொண்ணுகளைப் பாரு. ராம்குமார் படம் ரிலீஸான முதநாள் மாட்னி ஷோல இருப்பாங்க, கட் அடிச்சுட்டுதான்.”

“அது மட்டுமா, எங்க ஊர்ல ஒரு பொண்ணு தொடர்ந்து தினமும் முப்பது நாளு நம்ப ராம்குமார் படத்தைப் பார்த்திருக்கா.”

“முப்பது தடவையா? என்ன படம்?”

“வெண்ணிலாவே வா.”

“ஆம்பளைங்களுக்கு கனவுக்கன்னிக இருக்கறாப்பல பொண்ணுகளுக்கு நம்ப ராம்குமார் கனவுக்கண்ணன்.”

“நம்ம ஆளு ரேட்டு இப்ப எவ்வளவு தெரியுமா? அறுபது லட்சம். ‘வெண்ணிலாவே வா’ படத்துக்கு சூப்பர் வசூலாம். அதுக்கப்புறம் ரேட்டைக் கூட்டிடுவாராம்.”

“டேய் அதோ பாருடா சுரேஷ் மேடையில ஏறிட்டிருக்கான்.” அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கவனம் மேடைக்குச் சென்றது. ராம்குமார் ஸ்டைலில் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு சுரேஷ் உடம்பை நெளித்து, வளைத்து மேடைக்கு ஏறிக் கொண்டிருந்தான். மைக்கில் பேசினான்.

“நண்பர்களே, சகோதர சகோதரிகளே, ராம்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டுட்டார். இன்னும் அரை மணியில இங்கு வந்திடுவார். சக நடிகர் நிரஞ்சனுக்கு சிலை திறப்பு விழாவும், பாராட்டு விழாவும் நடத்தற நம்ப தலைவர் ராம்குமார் பெருந்தன்மையான உயர்ந்த மனிதர். தலைவர் வந்துடுவார். அமைதியாக காத்திருப்போம்.” சுரேஷ் இறங்கினான். சக்திவேல் ஏறினான்.

“நண்பர்களே வணக்கம். டாப் ஸ்டார் நிரஞ்சனுக்காக நடத்தற இந்த விழாவை நாம சிறப்பா நடத்திக் குடுக்கணும்...” திடீரென அரங்கம் பரபரப்பானது. ராம்குமார் தனக்கே உரிய ஸ்டைலில் விழா மேடையை நோக்கி வந்து கொண்டிருந்தான். தன் கழுத்தில் போட்டிருந்த பெரிய மாலையை அருணின் கையில் கொடுத்துவிட்டு அனைவரையும் பார்த்து வணக்கம் தெரிவித்தான்.

“ராம்குமார் வாழ்க”, “ராம்குமார் வாழ்க” அரங்கம் அதிர்ந்தது. சக்திவேல் பரபரப்பானான். மறுபடி சோமுவிற்கு போன் செய்யப் புறப்பட்டான்.

இவனை எதிர்கொண்டு அரங்க அலுவலகப் பணியாள் வந்தான். “சார், நீங்கதானே சக்திவேல்? உங்களுக்கு போன் வந்திருக்கு.” அவன் சொன்னதும் மகிழ்ச்சிப் பூக்கள் உள்ளமெங்கும் மலர ஓடினான். அலுவலக அறைக்குச் சென்று தொலைபேசியை எடுத்துப் பேசினான்.

“ஹலோ! சக்திவேலா?”

“சோமு சாரா? சார் ரெடியாயிட்டாரா? உடனே வந்திருங்க. இங்கே ராம்குமார், வந்தாச்சு.”

“ஃபிளைட ரொம்ப லேட்டாயிடுச்சுப்பா. இதோ கிளம்பிக்கிட்டேயிருக்கார். இப்ப வந்துடுவோம்.”

“தாங்க்யூ சார். சீக்கிரமா வந்துருங்க.” தொலைபேசியின் ரிசீவரை வைத்துவிட்டு அரங்கத்தினுள் சென்றான் சக்திவேல்.

“என்னண்ணே, நிரஞ்சன் வந்துட்டாரா?” “வீட்டில இருந்து கிளம்பிட்டாரா?” மன்றத்து நண்பர்களின் பரபரப்பான கேள்வி.

“நிரஞ்சன் ஷுட்டிங் போயிருந்ததால், ஃப்ளைட் ரொம்ப டிலே ஆயிடுச்சாம். கிளம்பி வந்துகிட்டே இருக்காராம்.” சக்திவேல் சொன்னதும் அவர்களுக்கு புது வேகமும், உற்சாகமும் பொங்கியது.

மேடையில் அமர்ந்திருந்த ராம்குமார் அருகே சென்றான் சக்திவேல்.

“சார், நிரஞ்சன் புறப்பட்டு வந்துகிட்டே இருக்காராம்.”

“வந்த உடனே விழாவைத் துவங்கிடலாம்.” புன்னகையுடன் ராம்குமார் பதிலளித்தான். சில நிமிடங்களில், நிரஞ்சன் காரில் வந்து இறங்கினான். கூடவே சோமுவும், நிரஞ்சன் அரங்கத்தினுள் நுழைந்தான். சக்திவேல் ஓடிச் சென்று மாலையைப் போட்டான். நிரஞ்சனின் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்தச் சென்றான். ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகியது.

நிரங்சன் மேடை ஏறியதும், ராம்குமார் நிரஞ்சனைக் கட்டித் தழுவினான். நிரஞ்சனும் மகிழ்வுடன் ராம்குமாரை ஆரத் தழுவி, அணைத்துக் கொண்டான்.

இரண்டு சூப்பர் ஹீரோக்களின் இந்த கண்கொள்ளாக் காட்சியை கண்ட ரசிகப் பெருமக்கள் சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தார்கள்.

“ராம்குமார் வாழ்க” “நிரஞ்சன் வாழ்க.”

ஓங்கிய குரலில் எழும்பிய கரகோஷம் அரங்கத்தை அதிர வைப்பதாய் இருந்தது. புகைப்பட நிபுணர்களின் காமிராக்கள் ‘பளிச்’ ‘பளிச் என்று வெளிச்சம் போட்டது.

ராம்குமாரிடம் மென்மையாகப் பேசினான் நிரஞ்சன். “சாரி ராம்குமார், அவுட்டோர் ஷுட்டிங் போயிருந்தேன். வர்றதுக்கு லேட்டாயிடுச்சு.”

“ஓ.கே. ஓ.கே. இட்ஸ் ஆல் ரைட். நானும் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னதான் வந்தேன். வந்து உட்காருங்க.” நிரஞ்சனின் கையைப் பிடித்து மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் உட்கார வைத்தான் ராம்குமார்.

கூட்டம் முழுவதும் இவர்கள் இருவரையும் கண் கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தது.


சுரேஷ் மேடை ஏறினான். “ஆக்ஷன் மன்னன் ராம்குமார் அவர்களை விழாவினைத் துவக்கி வைத்து பேசும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

ராம்குமார் எழுந்தான். மைக்கின் முன் நின்றான். லேசாகக் கலைந்திருந்த தலைமுடியை ஸ்டைலாக சரிப்படுத்திக் கொண்டான். பேச ஆரம்பித்தான்.

“என் உயிருக்குயிரான ரசிகப் பெருமக்களே”

மீண்டும் ரசிகர்களின் ஆரவாரம்! அவர்களைப் பார்த்துக் கையமர்த்திய ராம்குமார் தொடர்ந்தான். “அனைவருக்கும் என் அன்பு வணக்கம். எனது அருமை நண்பர், திரைப்பட நட்சத்திரம் நிரஞ்சன்தான் இந்த விழாவின் நாயகன். நிரஞ்சனுக்கு மத்திய அரசு விருது கிடைச்சிருக்கு. திறமை வாய்ந்த ஒரு நடிகருக்கு விருது குடுத்து அரசு கெளரவிச்சிருக்கு. இதுக்காக சினிமா உலகைச் சேர்ந்தவங்க எல்லாருமே ரொம்ப சந்தோஷப்படறோம். நிரஞ்சன் புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் கூட அவர் மனசுல கர்வம்ங்கறது துளி கூடக் கிடையாது. வீண் பந்தா கிடையாது. பண்புள்ள மனிதர்...” நிரஞ்சனைப் பற்றிய பாராட்டுரையைக் கேட்ட அவனது ரசிகர்கள் மேலும் ஆர்ப்பரித்தனர்.

“என்னோட துறையைச் சேர்ந்த என் அருமை நண்பர் நிரஞ்சனின் சிலை திறப்பு விழாவில் தலைமை தாங்கி, அவரைப் பாராட்டறதுக்கு எனக்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது. என் ஆர்வத்தைப் புரிஞ்சுகிட்டு அனைத்து மாவட்ட ரசிகர் மன்றங்களும், நிரஞ்சனின் ரசிகர் மன்றங்களும் உதவி செய்ய முன் வந்தாங்க. நிரஞ்சனுக்கு சிலை வைக்கறதுக்கு அனுமதி அளித்த அரசுக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கேன். இன்னும் பல நூறு படங்களில் நிரஞ்சன் நடித்து மேன்மேலும் புகழ் பெறனும். ஏழை, எளியவங்களுக்கு மன்றங்கள் மூலமா அவர் செய்ற நற்பணி பெருமைக்குரியது.”

“இந்த விழாவில் எங்க ரெண்டு பேருடைய ரசிகர்களும் சேர்ந்து இருக்கிறதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்களோட நட்பைப் புரிஞ்சிருப்பீங்க. எங்க மேல இருக்கற அளவற்ற அபிமானத்துல நீங்க அடிச்சுக்கறது, வீணா தகராறு பண்றதை எல்லாம் இனிமேலாவது தவிர்த்திடுங்க. ஒற்றுமையா இருங்க. ஒற்றுமையா இருங்க. எல்லார்க்கும் என் நன்றி. இப்போது நிரஞ்சன் பேசுவார்.”

மீண்டும் கைத்தட்டல் ஒலி அடங்குவதற்குப் பல நிமிடங்கள் பிடித்தன. நிரஞ்சன் ராம்குமாரிடம், “என்னங்க ராம்குமார் நம்பளை இழுத்து வுட்டுட்டீங்க?” சிரித்துக் கொண்டே கேட்டான்.

“பேசுங்க நிரஞ்சன். ரசிகர்கள் எத்தனை ஆவலா இருக்காங்க பாருங்க.” நிரஞ்சனைப் பிடித்து இழுத்து, மைக்கின் முன் கொண்டு நிறுத்தினான். நிரஞ்சன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, கூட்டத்தினைப் பார்த்து வணங்கினான். பின் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு மேடையில நேருக்கு நேர் பேச வராது. என் இனிய நண்பர் ராம்குமார் ரொம்ப அழகா பேசினார். எனக்கு அந்த அளவுக்குப் பேச வராது. ராம்குமார் என்னை அதிகமா புகழ்ந்து பேசினார். எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இருக்கோ இல்லையோ, ஆனா அவருக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். நண்பர் ராம்குமார் சொன்னது போல ரசிகர்கள், நீங்க எப்பவும் ஒற்றுமையா இருக்கனும். கலைஞர்களோட வளர்ச்சி உங்ககிட்டதான் இருக்கு. உங்களோட ஆதரவும், அன்பும் தான் எங்களை உற்சாகப்படுத்தற டானிக். எனக்கு அரசு குடுத்திருக்கற இந்த கெளரவத்துக்கும், நண்பர் ராம்குமாரோட ஏற்பாட்டில் நடக்கற இந்த சிலை திறப்புக்கும் என் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்குது. உங்கள் அனைவர்க்கும் என் நன்றி. வணக்கம்.”

நிரஞ்சன் பேசி முடித்ததும், சுரேஷ் “இப்போது திரு.ராம்குமார் அவர்கள் திரு. நிரஞ்சனோட சிலையைத் திறந்து வைப்பார். இந்த அரங்கத்தின் முன் பகுதியில் உள்ள கலைக் கூடத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.”

ராம்குமாரும், நிரஞ்சனும் மேடையை விட்டு இறங்கி, கைகோர்த்தபடியே கலைக் கூடத்திற்குச் சென்றனர். அனைவரும் பின் தொடர்ந்தார்கள். அங்கே நிரஞ்சனின் சிலை அழகிய திரைச்சீலையினால் மூடப்பட்டிருந்தது.

ராம்குமார் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைப்பில் உள்ள பொத்தானை அமுக்கியதும் திரை மெல்ல விலகியது.

அங்கே நிரஞ்சனின் மெழுகு சிலையைக் கண்டு மக்கள் அனைவரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றனர்.

“நிரஞ்சன் நேர்ல நிக்கறாப்ல இருக்கே.”

“சிலை போலவே இல்லை. நிஜ நிரஞ்சனுக்கும், அதுக்கும் வித்தியாசமே இல்லை.” அனைவரும் வியப்பினால் விழிகளை விரித்தார்கள்.

சிலை அத்தனை தத்ரூபமாக அமைந்திருந்தது. உடைகள் கூட நிரஞ்சன் பொது நிகழ்ச்சிகளுக்கு உபயோகப்படுத்தும் வகை துணியில், அதே மாடலில் தைக்கப்பட்டு, சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

புதுமையான அந்த மெழுகுச் சிலையினைக் கண்ட மக்கள் மகிழ்ந்தார்கள். ராம்குமாரைக் கட்டித் தழுவி, தன் நன்றியைத் தெரியப்படுத்தினான் நிரஞ்சன். பத்திரிகைகளைச் சேர்ந்த புகைப்பட நிபுணர்களின் காமிராக்கண்களுக்கு அன்று அதிகமாகவே விருந்து கிடைத்தது. விழா இனிது முடிந்தது.

ராம்குமாரும், நிரஞ்சனும் புறப்பட்டார்கள். கலைக்கூடத்தில் இருந்து வெளியில் கார் நிற்கும் இடத்திற்கு நடந்தார்கள். சிலர் இவர்களின் காலில் விழுந்தனர். சில பேர் இருவரது உடைகளைத் தொட்டுப் பார்த்தனர்.

சக்திவேலும், சுரேஷும் இரு நட்சத்திரங்களிடமும் விடைபெறுவதற்காக அவர்களைச் சமீபிக்க பெரும் முயற்சி செய்தனர்.

“ராம்குமார் சார், ரொம்ப தாங்க்ஸ் சார். நல்லா பேசினீங்க.”

“நான்தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும். விழா ஏற்பாடெல்லாம் பிரமாதம். வரட்டுமா? வரேன், சக்திவேல்.”

“ஓ.கே. சார் ரொம்ப சந்தோஷம்” சக்திவேல் ராம்குமாரிடம் கைகளைக் குலுக்கி விடை கொடுத்தான். சுரேஷ், நிரஞ்சனிடம் சொல்லிக் கொண்ட பின், நிரஞ்சன் சக்திவேலிடம் திரும்பினான். “என்ன சக்திவேல் சந்தோஷம்தானே? நானும் கிளம்பட்டுமா?”

“புறப்படுங்க சார். ஓய்வுக்காக வெளியூர் போறதா சொன்னீங்க? எப்ப சார் போறீங்க?”

“எங்க போறீங்க?”

“மகாபலிபுரம்தான் போலாம்னு இருக்கேன். வீட்ல பெரியம்மாவுக்கு உடம்பு சரி இல்லை. அதனால் எப்ப போறேன்னு தெரியலை.”

“எத்தனை நாள் சார்?”

“அஞ்சு அல்லது ஆறுநாள்தான். அதுக்கு மேல நான் நினைச்சாலும் ரெஸ்ட் எடுக்க முடியாது. பெரிய கம்பெனிப்பட ஷூட்டிங் இருக்கு.”

“எந்த கம்பெனி சார்?”

“அன்னை ப்ரொடக்ஷன்ஸ். சரி சக்திவேல் நான் புறப்படறேன். ஸீ.யூ.”

நிரஞ்சன் அவனது வெளிநாட்டு பென்ஸ் காரிலும், ராம்குமார் அவனது நீல வண்ணக் கான்டெஸ்ஸாவிலும் ஏறிக் கொண்டார்கள். இரு நடிகர்களும் காரின் ஜன்னல் கண்ணாடி வழியாக மக்களைப் பார்த்துக் கையசைத்தனர்.

போர்டிகோவிலேயே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் பெரியம்மா. நிரஞ்சனும், சோமுவும் வருவதைப் பார்த்தாள். பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இதைப் புரிந்துக் கொண்ட நிரஞ்சன் பெரியம்மாவின் அருகே சென்று அவளது கைகளைப் பிடித்தான். கைகளை உதறினாள் பெரியம்மா.


“நீங்க மட்டும் என்னை விட்டுட்டுப் போயிட்டு வந்துட்டீங்கள்ல?”

“பெரியம்மா, உங்களுக்கு பி.பி. அதிகமாக இருக்கு. கூட்டத்துக்கெல்லாம் கூட்டிட்டுப்போக வேணாம்னு டாக்டர் சொன்னார்ல, அதான் வீட்ல ரெஸ்ட் எடுத்திட்டிருங்கன்னு விட்டுட்டுப் போனோம்.”

“சரி, சரி. அங்கே எல்லாம் நல்லபடியா நடந்துச்சா?”

“ஓ, பிரமாதம். நிரஞ்சனை மெழுகு சிலை செஞ்சு வச்சிருக்காங்கம்மா. ரொம்ப அழகா இருக்கு.” சோமு முந்திக் கொண்டு பேசினான்.

“ஏ, முந்திரிக் கொட்டை, ஒன்னையா நான் கேட்டேன்?”

“பெரியம்மா, நாளைக்கு வீடியோ கேசட் வந்துடும்... பாருங்க. அந்த ராம்குமாரும் நானும் ஒண்ணா இருந்ததைப் பார்த்துட்டு ரசிகர்கள் எல்லாம் ரொம்ப குஷியாயிட்டாங்க.”

“ஏ, சோமு இவனுக்குத் திருஷ்டி சுத்திப் போடணும். வேலம்மாவை தயாரா இருக்கச் சொன்னேன். உள்ளே போயி அவளை வரச் சொல்லு.”

சோமு வீட்டினுள் சென்றான். வேலம்மா, நிரஞ்சனுக்கு திருஷ்டி சுற்றி நெறித்து விட்டாள்.

“உள்ளே போய் படுத்துக்கோங்க, பெரியம்மா. நானும் தூங்கப் போகணும். ரொம்பக் களைப்பா இருக்கு.”

“தூங்கப் போறியா? இன்னும் நீ பால் குடிக்கலை. பழம் சாப்பிடலை. ராத்திரிக்கு சாப்பாடு, டிபன் எதுவுமே சாப்பிடமாட்டே. பால், பழமாவது சாப்பிட்டுட்டுப் படுத்துக்க.”

“நீங்க போய் படுங்க. நான் சாப்பிட்டுக்கறேன்.”

“எல்லாம் டேபிள் மேலே எடுத்து வச்சிருக்கு. வேலம்மா இருக்கா. அவகிட்ட கேளு வேற எதுவும் வேணுமின்னா.”

“சரி, பெரியம்மா. சோமு! நீ கிளம்பு. மாருதியை எடுத்துக்கிட்டு போ.”

“குட் நைட் சார்.”

“குட் நைட்.”

சோமு மாருதியின் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சோமுவின் உபயோகத்திற்கென நிரஞ்சன் வாங்கிக் கொடுத்திருந்த வெள்ளை நிற மாருதியைத் தானே ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.

செய்தித்தாளில் மூழ்கி இருந்தான் அருண். “என்ன? ஒரேயடியா நியூஸ் பேப்பர்ல மூழ்கிட்டாப்ல இருக்கு?” ராம்குமார் கேட்டான்.

காதில் வாக்மேனைப் பொருத்திக் கொண்டே அருகில் வந்த ராம்குமாரை நிமிர்ந்து பார்த்தான் அருண்.

“சூப்பர் கவரேஜ் பாஸ். விழாவைப் பத்தி எல்லா பேப்பர்லயும் நல்லா எழுதி இருக்காங்க. ‘சூப்பர் ஹீரோக்கள் இணைந்த விழா’ செய்திக்குத் தலைப்பு இப்படி போட்டிருக்காங்க. நீங்களும் நிரஞ்சனும் கட்டிப் பிடிச்சிட்டிருக்கிறாப்ல இருக்கற போட்டோவைப் போட்டிருக்காங்க.”

ராம்குமார் அவனிடம் இருந்து செய்தித்தாளை வாங்கிப் பார்த்தான்.

“ராம்குமார், இந்த பேப்பர்ல நிரஞ்சனோட அறிக்கை வெளியிட்டிருக்காங்க.”

“என்னவாம்?”

“நிரஞ்சனுக்கு இடைவெளி இல்லாத படப்பிடிப்பு இருந்ததுனால ஓய்வு தேவைப்படுதாம். அதனால் வெளியூர் போகப் போறாராம்.”

“எந்த ஊருக்குப் போறாராம்?”

“மகாபலிபுரத்துக்குப் போகப் போறாராம்.”

“எத்தனை நாளாகுமாம்?”

“ஒரு வாரம்னு போட்டிருக்கு பாஸ். ‘உடல் ஓய்வு நாடுகிறது; உள்ளம் அமைதி தேடுகிறது’ அப்படி இப்படின்னு டைலாக் விட்டிருக்காரு. ஒரு வாரத்துக்கு அப்புறம் அன்னை ப்ரொடக்ஷன்ஸ்ல ஷுட்டிங் இருக்காம்.”

“அன்னை புரொடக்ஷன்ஸா? பெரிய கம்பெனியாச்சே? எனக்கு ரொம்ப நாளா ஆசை அவங்க பேனர்ல நடிக்கணும்னு.”

“அவங்க எல்லா ஹீரோவையும் வச்சு எடுப்பாங்க பாஸ். உங்களையும் கூப்பிடுவாங்க.”

“கூப்பிடலையே.”

“அட என்ன ராம், ஒரேடியா அலுத்துக்கறீங்க. பெரிய கம்பெனிகளெல்லாம் கால்ஷீட் கேட்டு வந்துக்கிட்டேதான் இருக்காங்க.”

“வேற என்ன நியூஸ்?”

“வேற என்ன, சினிமா நியூஸ் முழுக்க முழுக்க நீங்க ரெண்டு பேரும்தான். அரசியல் உங்களுக்குப் பிடிக்காது. அது சரி, சாப்பிட்டுட்டீங்களா? ஷுட்டிங் புறப்படணும்ல?”

“இன்னிக்கு லொக்கேஷன் எங்கே?”

“ஏ.வி.எம்.ல.”

“முதல்ல அங்க போன் பண்ணி ஜிகினாஸ்ரீ வந்தாச்சான்னு கேளு. அவ வந்துட்டான்னு தெரிஞ்சப்புறம் தான் நாம புறப்படணும்.”

“ஏன் பாஸ்?”

“ஏனா? இன்னிக்கு அவகூட தான் காம்பினேஷன் ஷாட் இருக்கு. போன ஷெட்யூல்ல அவளுக்காக எவ்வளவு நேரம் காத்துக்கிடந்தேன், மறந்துட்டியா? போய் ஃபோன் பண்ணிக் கேள் மகாராணி வந்துட்டாங்களான்னு.”

அருண் தொலைபேசி இருக்குமிடத்திற்கு நகர்ந்தான்.

பெரியம்மா டிபன் காரியரில் வகை வகையான உணவு வகைகளை எடுத்து வைக்கச் சொல்லி ஆணையிட்டுக் கொண்டிருந்தாள் சமையல்காரி வேலம்மாவிற்கு.

வேலம்மாவின் மகள் லட்சுமி, நிரஞ்சனின் தேய்த்த துணிகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சோமு­­ டிஸ்க் ப்ளேயர், டார்ச் லைட் இவற்றை எடுத்து வைப்பதில் கவனமாக இருந்தான். நிரஞ்சன் மகாபலிபுரம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. எல்லாம் தயாரானதும் சோமு, நிரஞ்சனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.

“யெஸ், கம்-இன்” குரல் கேட்டதும், கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

“சார், நீங்க சாப்பிட வருவீங்களாம், அம்மா கூப்பிட்டாங்க.”

“அம்மா எப்படி இருக்காங்க? நேத்தைவிட தேவலையா?”

“அவங்களை வந்து பாருங்க. உங்களுக்கு சாப்பிடறதுக்கு என்னென்னமோ பார்சல் பண்ணிக்கிட்டிருக்காங்க.”

“அப்படியா? ஓய்வு எடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டாங்களே. நீ போ, இதோ வர்றேன்.” நிரஞ்சன் ஹாலுக்கு வந்தான். அங்கே இரண்டு பெரிய டிபன் காரியர்களைப் பார்த்தான்.

“பெரியம்மா இதென்ன? என் ஒருத்தனுக்கு இவ்வளவு சாப்பாடா?”

“சாப்பாடுதான் நீ சாப்பிட மாட்டியே? எல்லாம் பலகார வகைங்கதான்.”

“உங்களுக்கு உடம்புக்கு இப்போ எப்படி பெரியம்மா இருக்கு?”

“ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா. நீ சாப்பிட வா.”

வழக்கம் போல, அளவாக சாப்பிட்டு முடித்து, போர்டிகோவிற்கு வந்தான் நிரஞ்சன்.

“சோமு, சாமான்களை எல்லாம் கார்ல ஏத்தலாமே?”

“இன்னும் இந்த மணி வரலையே சார்?”

“மணியா? அவன் எதுக்கு? ஐயா ஜாலியா செல்ஃப் டிரைவ் பண்ணிக்கிட்டு போகப் போறேனாக்கும்.”

“நீங்களேவா காரை ஓட்டிக்கிட்டு போகப் போறீங்க?”

“ஆமா, அதனாலதான் நேத்தே மணிக்கிட்ட ஒரு வாரம் லீவுன்னு சொல்லி அனுப்பிட்டேன்.”

“நான் உங்க கூட வர்ரேன்னா அதுவும் வேண்டாங்கறீங்க. டிரைவரையும் வேண்டாங்கறீங்க...”

“அட, என்ன சோமு? இதோ இருக்கு மகாபலிபுரம். நான் கார் ஓட்டிக்கிட்டுப் போயிட மாட்டேனா? எனக்கு தனிமை வேணும்னுதானே போறேன்.”

“பத்திரமா போயிட்டு வாங்க. இருபத்தெட்டாம் தேதி அன்னை ப்ரொடக்ஷன்ஸ் ஷூட்டிங் இருக்கு. மறந்துடாதீங்க.”

“சச்ச... அதை மறப்பேனா? நான் இருபத்தேழாந்தேதி ராத்திரியே வந்துடுவேன்.”

“நீங்க பாட்டுக்கு தனிமை, இனிமைன்னு லேட் பண்ணிடாதீங்க சார். கம்பெனியும் பெரிசு. டைரக்டரும் பெரிசு. ஷாட் ஆரம்பிக்கும்போது ஆர்ட்டிஸ்ட் இல்லைன்னா அவர் பயங்கர டென்ஷன் ஆயிடுவார்.”

“முந்தின நாளே வந்துடுவேன் சோமு. எனக்குத் தெரியாதா, டைரக்டரைப் பத்தி. நீ கவலைப்படாத. ஷெட்ல போய் என் காரைக் கொண்டா.”

“எந்தக் கார் சார் வேணும்?”

“சியல்லோ.”

“இதோ நான் போய் கொண்டு வர்றேன்.”


“சோமு ஒரு நிமஷம்.”

சோமு நின்றான்.

“பெரியம்மாவை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. அவங்க மாத்திரை எல்லாம் நேரத்துக்கு சாப்பிட மாட்டாங்க. நீதான் சொல்லணும்.”

“நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. நான் பார்த்துக்கறேன்.”

சோமு நிரஞ்சனது கறுப்பு சியல்லோ காரை ஷெட்டில் இருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வந்தான். சாமான்கள் ஏற்றப்பட்டன.

“பெரியம்மா, நான் கிளம்பறேன்.”

“ஜாக்கிரதையா போயிட்டு வாப்பா.”

“வேளா வேளைக்கு மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க.”

“சீக்கிரம் வந்துருவீல்ல?”

“வந்துருவேன் பெரிம்மா.”

“சரிப்பா. நீ கிளம்பு.”

நிரஞ்சன் காரில் ஏறினான்.

“சோமு, வரேன்.”

“ஓ.கே. சார்.”

நிரஞ்சன் அவனுக்கு மிகவும் விருப்பமான சியல்லோவை மிக ஆவலுடன் தானே ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.

ஆறு நாட்கள் ஓடியது தெரியவில்லை சோமுவிற்கு. பெரியம்மாவை கவனித்து, நிரஞ்சனின் தேங்கிக் கிடந்த கணக்கு வழக்குகளை செம்மைப்படுத்தி, புதுப்பட கம்பெனிகள் கேட்டிருந்த கால்ஷீட் தேதிகளை சரிபார்த்து, நேரம் போவதே தெரியாமல் வேலைகள் இருந்தன. மாலை மணி ஆறில் இருந்து நிரஞ்சனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அப்போது தொலைபேசி ஒலித்து அழைத்தது. சோமு எடுத்துப் பேசினான்.

 “ஹலோ, யார் அன்னை கம்பெனி ஆபீசுல இருந்தா? மேனேஜரா? வணக்கண்ணே.” மறுமுனையில் குரல் மிகவும் சப்தமாக வந்தது.

“ஆமா. சோமு அண்ணன்தான் பேசறது?”

“ஆமாண்ணே. சொல்லுங்க.”

“நிரஞ்சன் வெளியூர் போயிருந்தாரா, வந்துட்டாரா? நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு ஷுட்டிங் இருக்கு. ஞாபகப்படுத்தலாம்னு தாண்ணே போன் பண்ணினேன்.”

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு அண்ணே. நிரஞ்சன் வந்திருவார். அவருக்காகத்தான் நானும் காத்திட்டிருக்கேன்.”

“காலையில ஒன்பது மணிக்கு முதல் ஷாட் எடுத்தாகணும்னு டைரக்டர் சொல்லி இருக்கார். அவருக்கு எல்லாமே குறிப்பிட்ட நேரப்படி நடக்கணும். இல்லைன்னா...”

“என்னண்ணே, டைரக்டரைப் பத்தி எனக்குத் தெரியாதா? நிரஞ்சன் இப்ப வந்துடுவார். காலையில் ஷெட்யூல்படி ஷீட்டிங்குக்கு கரெக்டா வந்துடுவாரு.”

தன்னுடைய நம்பிக்கை தவிடுபொடியாகப் போவதை அப்போது அறியாத சோமு, மேனேஜருக்கு உறுதி அளித்தான்.

4

காலை எட்டு மணி நிரஞ்சன் வீட்டிற்குச் சென்ற சோமு, காவல்காரனிடம் கேட்டான்.

“ஐயா, வந்துட்டாரா?”

“இல்லை சார். இன்னும் வரலை.”

“இன்னும் வரலையா?” பங்களாவிற்குள் சென்றான்.

“என்னம்மா, இன்னும் நிரஞ்சன் வரலையாமே, மணி எட்டாச்சு. ஒன்பது மணிக்கு ஷூட்டிங், வெராண்டாவில் அமர்ந்திருந்த பெரியம்மாவிடம் கேட்டான்.

“அவன் போகும்போது ஷுட்டிங் விஷயத்தை ஞாபகப்படுத்தினியா இல்லையா?”

“சொல்லித்தாம்மா அனுப்பினேன். நேத்து வந்துடறதா சொன்னாரே?”

“பார்க்கலாம். இன்னும் நேரம் இருக்கே! நீ காப்பி குடிக்கறியா?”

“வேண்டாம்மா. இப்பதான் வீட்டில குடிச்சுட்டு வந்தேன். நான் போய் ஷுட்டிங் போறதுக்குத் தேவையானதெல்லாம் எடுத்து வைக்கறேன். சார் வந்த உடனே புறப்பட்டு போயிடலாம்.”

சோமு நிரஞ்சனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துத் தயாரானான். இதற்குள் மணி ஒன்பதாகியது. நிரஞ்சனின் சார் டிரைவர் மணி வந்தான்.

“என்ன சோமு சார், ஐயா வந்துட்டாரா? புறப்படலாமா? எந்தக் காரை எடுக்கட்டும்?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

“நீ வேற அறுக்காத. அவர் இன்னும் வரலை. பென்ஸை துடைச்சிட்டிரு. போ.”

மணி கார் ஷெட்டை நோக்கி நடந்தான்.

டெலிபோன் கிணுகிணுத்தது. சோமு ரிசீவரை எடுத்துப் பேசினான்.

“ஹலோ.”

“யாரு? சோமு அண்ணனா? நான் பாஸ்கர். லேகா ப்ரொடக்ஷன்ஸ்ல இருந்து பேசறேன். நிரஞ்சன் ஏன் இன்னும் வரலை? இங்கே டைரக்டர் மத்த ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வந்தாச்சு. நிரஞ்சனுக்காகத்தான் வெயிட்டிங்.”

“இதோ வந்துருவார்ணே.”

“சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே. ஏற்கெனவே அரை மணி நேரம் லேட்டாயிடுச்சு.”

“கொஞ்சம் சமாளிச்சுக்கோங்க பாஸ்கரண்ணே. சீக்கிரமா வந்துடுறோம்.”

தொலைபேசியில் சாமர்த்தியமாக பேசிய போதிலும், நிரஞ்சன் வராதது வயிற்றில் கலக்கியது சோமுவிற்கு.

“என்னப்பா சோமு. இன்னும் இவன் வந்த பாடில்லை. மகாபலிபுரத்துல, வழக்கமா அவன் தங்கற ஓட்டலுக்குப் போன் பண்ணிப் பார்க்க வேண்டியதுதானே.”

“இதோ பண்ணத்தாம்மா போறேன்.”

சோமு தொலைபேசியில் எண்களைச் சுழற்றினான்.

“ஹலோ, ப்ளுலாகூன் ஹோட்டல்? நான் மெட்ராஸ்ல இருந்து சினிமா ஆக்டர் நிரஞ்சனோட பி.ஏ. பேசறேன். சார் அங்க இருந்து எத்தனை மணிக்குக் கிளம்பினார்?”

“யார்? நிரஞ்சன் சாரா? அவர் இங்க வரவே இல்லையே. என்னிக்கு வந்தார் அங்க இருந்து?”

“பதினெட்டாந்தேதி காலைல புறப்பட்டு வந்தாரே?”

“சார், எங்க ஹோட்டல்ல பதினாறாம் தேதில இருந்து இன்னி வரைக்கும் ரூம் காலி இல்லை. மும்பை பார்ட்டிங்க நிறைய பேர் மொத்தமா ரிசர்வ் பண்ணி, அவங்கதான் இருக்காங்க. நீங்க எதுக்கும் சன் மூன் ஹோட்டலுக்கு கூப்பிட்டுக் கேளுங்க.”

“ஒருவேளை இங்க ரூம் இல்லைன்னு அங்க போயிருப்பாரோ? ஓ.கே. சார் தாங்க்யூ.”

மீண்டும் வேறு எண்களைச் சுழற்றி பேசினான்.

“ஹலோ, சன் மூன் ஹோட்டல்ஸ்? சார், சினிமா ஆக்டர் நிரஞ்சனோட பி.ஏ. பேசறேன். நிரஞ்சன் அங்க இருந்து கிளம்பிட்டாரா? அவர் இருந்தா பேசச் சொல்லுங்க சார்.”

“யார்? நிரஞ்சனா? அவர் இங்க வரவே இல்லையே? ப்ளு லாகூன்ல ரூம் இல்லைன்னாத்தான் அவர் இங்கு வருவார். அங்க கேட்டுப் பார்த்தீங்களா?”

“கேட்டாச்சு சார். அவங்க இல்லைன்னு சொல்லிட்டாங்க. தாங்க்யூ சார்.”

இவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த பெரியம்மா, “என்னப்பா சோமு, சுப்பையா கிளம்பிட்டானா?”

“இல்லைம்மா. அவர் அங்க வரவே இல்லைன்னு சொல்றாங்க. இந்த ரெண்டு ஹோட்டல்ல தவிர எங்கயும் தங்கமாட்டார்.”

“எதுக்கும் நீ மத்த பெரிய ஹோட்டல்லயும் கேட்டுப் பாரு.”

“சரிம்மா.”

சோமு மேலும் சில ஓட்டல்களைக் கேட்க, அங்கே இருந்தும் ‘நிரஞ்சன் வரவில்லை’ என்ற தகவல்தான் கிடைத்தது.

“ஒரு வேளை திடீர்னு மனசு மாறி பெங்களூர், ஊட்டி எல்லா இடத்துக்கும் போன் பண்ணிக் கேளு.”

சோமு, பெங்களூர், ஊட்டி, கொடைக்கானல், மைசூர் என்று பல ஊர்களுக்கும் போன் செய்து ஏமாற்றத்துடன் ரிசீவரை வைத்தான்.

‘டைரக்டர் ரொம்ப கோபக்காரர். என்ன கத்து கத்தப் போறாரோ?’ சோமு கவலைப்பட்டான்.

“நீ ஏன் அவன்கூடப் போகலை? உனக்கு கூடவா தெரியாது. அவன் எங்கே போனான்னு?”  சற்று கடுமையாகக் கேட்டாள் பெரியம்மா.

“என்கிட்ட மகாபலிபுரம் போறேன்னுதான் சொல்லிட்டுப் போனார். நானும் கூட வர்றேன்னு சொன்னேன். அவர்தான் வேண்டாம்னாரு.”

“சரி, சரி முணங்காத. முன்ன பின்ன வருவான்.”

“ஷூட்டிங் இருக்கும்மா. அதனால கண்டிப்பா வந்துடுவார்.”


“சரி, சரி. கம்பெனி ஆளுங்களைக் கூப்பிட்டுப் பேசி சமாதானம் பண்ணு.”

“சரிம்மா” போனில் அன்னை கம்பெனியைத் தொடர்பு கொண்டான்.

“யாரு? பாஸ்கரண்ணனா?”

“என்ன சோமு சார்? நிரஞ்சன் வந்துட்டாரா?”

“இல்லை. இன்னும் வரலை. சீக்கிரம் வந்துடுவார். நீ கொஞ்சம் மனசு வச்சு தயாரிப்பாளரையும், டைரக்டரையும் சமாதானம் பண்ணிட்டிரு. நிரஞ்சன் வந்த உடனே கூட்டிட்டு வந்துடறேன். எப்படியும் வந்துடுவார். செல்ப் டிரைவ் வேற. கார் எங்கயும் நின்னுருச்சா என்னன்னு தெரியலை.”

“சோமு சார், எனக்கு பயமா இருக்கு. நீங்களே பேசிடுங்க.”

“இவ்வளவுதான் உன் வீரமாக்கும். போனைக் குடு. ப்ரொட்யூசர்கிட்ட.” தயாரிப்பாளர் லைனில் வந்தார்.

“என்னப்பா சோமு? உங்க நிரஞ்சன் இன்னுமா வரலை?”

அவரது குரலே இவனை பயமுறுத்தியது.

“சார், ஒரு வேளை கார் ப்ரேக் டவுனாகி இருக்கும். சார் தனியா வேற போயிருக்கார். ப்ளீஸ் சார். ரொம்ப சாரி சார்.”

“இன்னிக்கு மத்தியானம் வரைக்கும் வீணாய் போச்சு. இனியும் வரலைன்னா ஒரு நாள் முழுசும் வேஸ்ட். எவ்வளவு நஷ்டம் உனக்கும் தெரியும்தான? என்னமோ, அவர் செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை. டைரக்டர் வேற மூட் அவுட்டாயிட்டாரு.”

ரிசீவரை கோபமாக சப்தித்து வைப்பது கேட்டது. சோமு காதுகளை மூடிக் கொண்டான்.

மணி பன்னிரண்டு... ஒன்று... இரண்டு... மூன்று என்று ஓடிக் கொண்டே இருந்தது.

தொலைபேசி ஒலித்தது.

‘நிரஞ்சன் சாராத்தான் இருக்கும். கடவுளே!’ ஓடிச் சென்று ரிசீவரை எடுத்தான்.

“ச்ச ராங் நம்பர்.”

“யார் போன்? சுப்பையாவா?” மீண்டும் பெரியம்மா தொண தொணக்க ஆரம்பித்ததும் சோமு,

“அம்மா, மணி பத்தாச்சு. நீங்க போய் படுத்துக்கோங்க. நான் நாளைக்குக் காலைல வரைக்கும் போன் கிட்டயே உக்காந்து சார் எங்கெல்லாம் போவாரோ அங்கெல்லாம் இன்னொரு வாட்டி போன் பண்றேன். நான் இன்னிக்கு வீட்டுக்குக் கூடப் போகலை. காலைல என்ன செய்யறதுன்னு பார்ப்போம். நீங்க போய் தூங்குங்க” சமாதானமாகப் பேசினான்.

பெரியம்மா எழுந்து உள்ளே போனாள். சோமு தன் அறைக்குச் சென்று மறுபடியும் எல்லா ஊர்களுக்கும் போன் செய்து களைத்துப் போனான். எங்கிருந்தும் நிரஞ்சன் பற்றிய தகவல் கிடைக்காமல் மனம் சோர்ந்தான்.

‘நமக்கு இருக்கற டென்ஷன் பத்தாதுன்னு இந்த அம்மா வேற கேள்வி கேட்டுக் கொல்லுது. இனிமே நமக்குத் தாங்காது. நாளைக்குக் காலையில போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளெயின்ட் குடுத்துடணும். வேற வழி இல்லை.’ ஒரு முடிவுக்கு வந்ததும் சற்று ஓய்வாக சோபாவில் சாய்ந்தவன் தூங்கிப் போனான்.

மறுநாள் காலை. தோட்டத்தில் நின்றிருந்த பெரியம்மாவின் அருகே சென்றான் சோமு.

“மணி எட்டாகுது. இப்பதான் நீ கண் முழிக்கறியா? காபி கீபி குடிச்சியா இல்லையா? வேலம்மா கிட்ட போய் காபி போடச் சொல்லு.”

‘கிழவியின் பேச்சு அதட்டுவது போலிருந்தாலும் மனசுக்குள்ள எவ்வளவு அன்பு பாரு’ நினைத்துக் கொண்ட சோமு, “அம்மா, நேத்து முழுக்க பாத்துட்டோம். சார் வரலை. ராத்திரி நான் போன் பண்ணி பேசின இடங்கள்ல இருந்து தகவலும் இல்லை.”

“இப்போ என்ன செய்யறது? எனக்கு என்னமோ ரொம்ப கவலையா இருக்கு. நீ சொல்றதைப் பார்த்தா?”

“நான்... நான்... போலீஸ் ஸ்டேஷன் போய் நிரஞ்சன் சாரைக் காணலைன்னு ஒரு புகார் குடுத்துட்டு வந்துடறேன்ம்மா.”

“என்ன சொல்ற சோமு?”

“ஆமாம்மா. வேற வழியே இல்லாமத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நேத்து எப்படியோ பொய் சொல்லி சமாளிச்சுட்டோம். இன்னிக்கு சினிமா கம்பெனி ஆளுக சும்மாவுட மாட்டாங்க. என்ன சொல்லியும் இனிமே சமாதானம் பண்ண முடியாது. நான் வீட்டுக்குப் போயிட்டு, அப்படியே போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்துடறேன்ம்மா.”

“என்னமோ செய் சோமு. எனக்கு என்ன தெரியும். கொஞ்ச நாள் தள்ளி வர்றதா இருந்தாலும் போன் பண்ணி பேசுவான். என் மகன் எந்த தகவலும் சொல்லாம இப்படி எங்கயும் போய் இருந்ததே இல்லை.”

“நீங்க கவலைப்படாதீங்க அம்மா. நான் போயிட்டு வந்துடறேன்.”

சோமு புறப்பட்டான்.

காலை நேரத்து சுறுசுறுப்பு கூட இன்றி மந்தமாக இயங்கிக் கொண்டிருந்தது, பி.லெவன் போலீஸ் ஸ்டேஷன்.

“இன்ஸ்பெக்டர் சார் வந்துட்டாரா?” அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் கேட்டான் சோமு.

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவார்.”

சோமு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். பாதி உடம்பு மட்டுமே உட்காரக்கூடிய அளவில் பெஞ்ச். உயரமான இவனது கால்களை சற்று நீட்டித்தான் உட்கார வேண்டி இருந்தது.

தட்... தட்... தட்... தட்... தட்... புல்லட் ஒன்று வரும் சப்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் வந்து கொண்டிருந்தார். கொண்டிருந்தான் என்றே சொல்லலாம். இளம் இன்ஸ்பெக்டர் வாட்டசாட்டமாக, போலீஸ் துறைக்குத் தேவையான தீர்க்கமான பார்வையுடன் ‘டாக்’ ‘டாக்’ என காலணிகள் சப்திக்க நடந்து வந்தவன் அவனுடைய அறைக்குச் சென்றான். சோமு எழுந்து கான்ஸ்டபிளிடம், “நான் அவரைப் பார்க்கணும்.” சோமு கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டரின் அறைக்குள் நுழைந்தார் கான்ஸ்டபிள்.

“சார் நீங்க போங்க,” கான்ஸ்டபிள் சொன்னதும் சோமு எழுந்து சென்றான்.

“வணக்கம் இன்ஸ்பெக்டர் சார்,” இன்ஸ்பெக்டரின் சீருடை மீதிருந்த பெயர் தகட்டில் வி.செபாஸ்டியன் என இருந்ததைப் பார்த்து வைத்துக் கொண்டான் சோமு.

“வணக்கம். நீங்க சினிமா நடிகர் நிரஞ்சனோட பி.ஏ.வா?”

“ஆமா சார். நிரஞ்சனைக் காணலை.”

“வாட், நிரஞ்சனைக் காணோமா?”

“ஆமா சார். முந்தா நாள் ராத்திரியே வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனவர் இன்னும் வரலை சார்.”

“எங்க போறேன்னு சொல்லிட்டுப் போனார்?”

“மகாபலிபுரத்துக்கு போறேன்னுதான் சொல்லிட்டுப் போனார்.”

“அவர் கூட வேற யார் போனாங்க?”

“அவர் தனியாத்தான் சார் போனார்.”

“எதுல போனார்?”

“கார்ல போனார் சார்.”

“டிரைவர் போகலியா கூட?”

“இல்லை சார். தானே காரை ஓட்டிட்டு போறேன்னு சொன்னார்.”

“வழக்கமா அப்படிப் போறதுண்டா.”

“சில சமயங்கள்ல அப்படிப் போயிடுவார். அவருக்கு கார் ஓட்டறதுல ரொம்ப இன்ட்ரஸ்ட். பயங்கர ஸ்பீடுல தான் போவார். ‘டிரைவரை கூட்டிட்டுப் போங்க’ன்னு சொன்னேன். வேணாம். கார் ஓட்டி ரொம்ப நாளாச்சுன்னார்.”

“எல்லா இடங்களுக்கும் நீங்க அவர் கூட போக மாட்டீங்களா?”

“ஷூட்டிங் இருந்தா நான் போறது வழக்கம். மத்தபடி ரெஸ்ட் எடுக்கணும்னு தான் போனார்.”


“போனதுக்கப்புறம் போன் பண்ணினாரா?”

“பண்ணலை சார்.”

“நீங்க ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்துட்டுப் போங்க. அவரைத் தேடறதுக்கு தீவிரமா முயற்சி செய்றோம். உங்ககிட்ட அவர் எங்கே இருந்தாவது போன் பேசினார்னா உடனே எனக்குத் தகவல் சொல்லுங்க.”

“ஓ.கே. சார்! ப்ளீஸ் சார், அவரை சீக்கிரமா கண்டுபிடியுங்க சார்.”

“இத்தனை உறுதியா அவரைக் காணோம்னு எப்படிச் சொல்றீங்க?”

“எந்த ஊருக்குப் போனாலும் போன் போட்டு அவங்க பெரியம்மா கூட பேசுவார். அப்படி பேசலைன்னாலும் ஊர் திரும்பறதுக்கு லேட் ஆகுதுன்னா உடனே போன்ல என்னைக் கூப்பிட்டு விபரம் சொல்லிடுவார்.”

“இந்த தடவை மகாபலிபுரத்துல இருந்து போன் பண்ணினாரா?”

“இல்லை சார். வழக்கமா அவர் தங்கற ஹோட்டல்களை எல்லாம் கூப்பிட்டுக் கேட்டோம். அவர் அங்க வரவே இல்லைன்னு சொல்லிட்டாங்க.”

“மகாபலிபுரம் தவிர வேற எந்த ஊருக்கெல்லாம் போவார், ரெஸ்ட் எடுக்கறதுக்கு?”

“பெங்களூர், மைசூர் ஊட்டி, கொடைக்கானல்.”

“அங்கெல்லாம் போன் பண்ணி கேட்டீங்களா?”

“கேட்டோம் சார். அங்கெல்லாம் அவர் போகலை.”

“ஓ.கே. மிஸ்டர் சோமு. நீங்க புகார் எழுதிக் குடுத்துட்டுப் போங்க. நாங்க அவரை தீவிரமா தேடறோம்.”

“தாங்க்யூ சார்.”

தினசரி செய்தித்தாளை எடுத்துக் கொண்டு அருண், மாடிப்படிகளில் வேகமாக ஏறினான். படப்பிடிப்பிற்காக புறப்பட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்த ராம்குமாரின் மீது மோதிக் கொண்டான்.

“அட ஏன் இப்படி தலைதெறிக்க ஓடி வர்ற? எதிர்க்க நான் வர்றதைக் கூடப் பார்க்காம?”

“ராம்! இங்க பாருங்க, நிரஞ்சனைக் காணவில்லையாம். சோமு போலீஸ்ல புகார் குடுத்திருக்காராம்.”

“என்ன?! நிரஞ்சனைக் காணோமா?”

“ஆமா ராம். பேப்பர்ல தலைப்பு செய்தி இதுதான். இங்க பாருங்க.”

“என்ன இது! பயங்கர ஷாக்கா இருக்கு? எங்கயாவது போய் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சேருவாரு. அதுக்குள்ள சோமு ஏன் பெரிசு பண்றான்?”

“ஊருக்கு போறேன்னு போன மனுஷன் தகவலே இல்லைன்னா கவலை இருக்காதா பாஸ்? அதான் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கான்.”

“எனக்கென்னமோ தேவை இல்லாம பீதியைக் கிளப்பறாப்பல தோணுது. நாளைக்கு பேப்பர்ல, ‘நிரஞ்சன் மீண்டும் படப்பிடிப்பில்’னு செய்தி வரும்.”

“ம்... ம்... பார்க்கலாம். நீங்க சாப்பிட்டுட்டு வாங்க. புறப்படலாம்” ராம் தயாரானான்.

இரண்டு நாள்கள். நகர் எங்கும் பரபரப்பு. நிரஞ்சனைக் காணவில்லை என்று எல்லோருக்கும் இதுவே பேச்சாக இருந்தது.

“டீ அனிதா, உன் கனவுக் கண்ணனைக் காணோமாமே, ரெண்டு நாளா தகவலே இல்லை அவனைப் பத்தி.”

“ஏண்டி, அவளைப் போய் சீண்டற. ரெண்டு நாளா அவ சாப்பிடக் கூட இல்லை. அழுது அழுது கிடக்கா. நீ வேற?”

கல்லூரி மாணவிகளின் துக்க விசாரணை.

“ஏன் சார், நிரஞ்சனைப் பணத்துக்காக யாராவது கடத்தி இருப்பாங்களோ?”

“பணத்துக்காகன்னா, பணம் கேட்டு எவனாவது வந்திருப்பான்ல? அல்லது போன்லயாவது கேட்டிருப்பான்ல?”

“அப்ப, அவராவே உலகத்தை வெறுத்துட்டு சாமியாராயிட்டாரோ?”

“பணத்துக்காகன்னா, பணம் கேட்டு எவனாவது வந்திருப்பான்ல? அல்லது போன்லயாவது கேட்டிருப்பான்ல?”

“அப்ப, அவராவே உலகத்தை வெறுத்துட்டு சாமியாராயிட்டாரோ?”

“அட, நீ ஏம்ப்பா? இங்க பஸ் இன்னும் வர்லியே. ஆபீசுக்கு நேரமாச்சேன்னு தவிக்கிறேன். சினிமாக்காரன் காணாமப் போனதைப் பத்தி கவலைப்பட்டுக்கிட்டு.”

பஸ் ஸ்டாண்டில் விவாதம்.

சினிமா கம்பெனிகள் கதி கலங்கி போயிருந்தன.

“ஏன் டைரக்டர் சார், நிரஞ்சனை வச்சு பாதி படத்துக்கு மேல எடுத்துட்டோம். மத்த முக்கியமான நடிகர்களோட கால்ஷீட் எல்லாம் வேஸ்ட் ஆயிட்டிருக்கே? என்ன பண்ணலாம்? ரெண்டு நாள் ஷூட்டிங் கான்சல் ஆனதுல ஏகப்பட்ட நஷ்டம்.” ஏற்கெனவே பணமுடையால் திணறிக் கொண்டிருந்த தயாரிப்பாளர் மனமுடைந்து போய் பேசினார்.

“யோசிக்கலாம் சார். நிரஞ்சன் இல்லாம கதையை மாத்தி ஏதாவது செட்-அப் பண்ண முடியுதான்னு பாக்கறேன். ஆள் இல்லைன்னா கதையைத்தான் மாத்தி ஆகணும்.”

“அது... சரியா... வருமா டைரக்டர் சார்?”

“இன்னும் ஒரு வாரம் பார்த்துட்டு அப்புறமா என்ன செய்யலாம்னு பார்க்கலாம் சார். எதுவும் சரிப்படலைன்னா ராம்குமாரைப் போட்டு மறுபடியும் இந்தக் கதையை எடுக்கணும்.”

“மறுபடியுமா? தாங்காதே சார்” அலறினார் தயாரிப்பாளர்.

“வேற வழி இல்லை சார்.”

தமிழ்நாடெங்கும் நிரஞ்சன் காணாமல் போனது பற்றி செய்திகள் பலவிதமாகப் பேசப்பட்டன.

டாக்டர் ராவ், நிரஞ்சனின் வீட்டிற்கு வந்து, பெரியம்மாவை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கவலையான முகத்தோடு சோமு.

“மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிட வைங்க சோமு. மகனைக் காணோம்ங்கற அதிர்ச்சியில பி.பி. அதிகமா ஏறி இருக்குன்னு நினைக்கிறேன்.”

“ஆமா டாக்டர் சார். பெத்த தாயைப் போல வளர்த்தவங்க இல்லியா. ரொம்ப கவலையா இருக்காங்க.”

“இப்போ தூக்கத்துக்கு ஒரு ஊசி போட்டிருக்கேன். மூணு மணி நேரம் அமைதியா தூங்குவாங்க. எழுந்ததுக்கப்புறம் போன் பண்ணுங்க. மறுபடி நான் வந்து பார்க்கறேன்.”

“ஓ.கே. சார்.”

டாக்டர் ராவை வழியனுப்பிவிட்டு சோமு வீட்டிற்குள் நுழைந்தபோது தொலைபேசி கிணுகிணுத்தது.

சோமு எடுத்துப் பேசினான்.

“ஹலோ, மிஸ்டர் சோமு இருக்காரா?”

“சோமுதான் சார் பேசறேன். நீங்க யார்?”

“நான் இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன்.”

“குட்மார்னிங் சார்.”

“சாரி சோமு. உங்களுக்கு குட்மார்னிங் இல்லை.”

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சொன்ன தகவலைக் கேட்ட சோமு, ஒரு வினாடி இதயத் துடிப்பே நின்று விட்டது போன்ற அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

5

“மிஸ்டர் சோமு. என்ன சார். ரொம்ப ஷாக் ஆயிட்டீங்களா? மகாபலிபுரம் ரூட்ல கவிழ்ந்து கிடக்கற கார் நிரஞ்சனோடதா, அதில சிதைஞ்சு போய் கிடக்கறது நிரஞ்சனோட உடல்தானான்னு நீங்க வந்து அடையாளம் காட்டணும். உடனே வர்றீங்களா?”

“இதோ இப்பவே புறப்பட்டு வரேன் இன்ஸ்பெக்டர். நான் நேரா வந்துடறேன். கரெக்டா ஸ்பாட் சொல்லுங்க.”

“மகாபலிபுரம் போற வழியில முட்டுக்காட்டுல இருந்து பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு பெரிய மரம் ஒண்ணு இருக்கு. அதுகிட்டதான் காரும், பாடியும் கிடக்குதாம். கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேர் அங்கேயே நிக்கிறாங்க.”

“ஓ.கே. சார் நான் வந்துடறேன்.”

“சீக்கிரமா வந்துடுங்க.”

“இதோ இப்பவே புறப்படறேன் சார்.”

இயந்திர கதியாய், ரிசீவரைப் பொருத்தினான். இதயம் மட்டும் படபடவென வேகமாக துடித்தது. சமையலறைக்குச் சென்றான்.

“வேலம்மா, உன் பொண்ணு லட்சுமியை அம்மாகிட்டயே இருக்கச் சொல்லு. நீயும் அம்மாவைப் பார்த்துக்க. நல்லா தூங்குவாங்க. யாரும் எழுப்பாதீங்க. எனக்குக் கொஞ்சம் வெளில வேலை இருக்கு.”


“நம்ம ஐயாவைப் பத்தி எதுனா தகவல் வந்துதாப்பா?” தயக்கமாய் கேட்டாள் வேலம்மா. உதட்டைப் பிதுக்கி விட்டு, பங்களாவை விட்டு வெளியேறினான். கார்ஷெட்டில் இருந்த வெள்ளை நிற மாருதி காரை வெளியே எடுத்தான்.

‘கடவுளே, ஆக்ஸிடென்ட் ஆகிக் கிடக்கற அந்தக் காரும் நிரஞ்சனோடதா இருக்கக் கூடாது. அந்த பாடியும் அவரோடதா இருக்கக் கூடாது.’ இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டே காரை விரைவாகச் செலுத்தினான்.

கார், சென்னையின் நெரிசலைக் கடந்து, அடையாறு, திருவான்மியூர் தாண்டவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. வழக்கத்தைவிட சற்று வேகமாக காரை ஓட்டினான்.

இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் நிறுத்தினான்.

அங்கே ஏறக்குறைய சிதைந்து போன கறுப்பு சியோல்லா கார். மரத்தின் மீது மோதிய நிலையில் கிடந்தது. ‘கறுப்பு சியோல்லா! கடவுளே! கடவுளே!’ காரை விட்டு இறங்கினான் சோமு. நம்பர் ப்ளேட்டைக் காணவில்லை.

காவல் துறையினருடன் சீரியஸான முகத்துடன் செபாஸ்டியன் நின்றிருந்தான். சோமுவின் அருகே வந்தான்.

“முதல்ல பாடியை பார்த்துடுங்க சோமு.”

சோமு. தெருவோரமாய் கிடத்தப்பட்டிருந்த உடலை நெருங்கிச் சென்று பார்த்தான். வலது கை துண்டாகி இருந்தது. முகம் அடையாளமே தெரியாத நிலையில் சேதமாகி, காரின் கண்ணாடித் துண்டுகள் குத்தியதால் ஏற்பட்ட காயங்களினால் வழிந்த ரத்தம் உறைந்து முகம் முழுவதும் அப்பியிருந்தது.

சோமு, உடலின் முகப்பகுதிக்குக் குனிந்தான். மூக்கைப் பிடித்துக் கொண்டான். துர்வாசனை வீசியது. ஒன்றும் புலப்படவில்லை.

“இன்ஸ்பெக்டர் சார், அடையாளமே தெரியலையே. உயரம், வயசு எல்லாம் ஓரளவு ஒத்துப் போகுது. ஆனா... முகம்...” தயக்கமாய் பேசிக் கொண்டிருந்தவன் சுறுசுறுப்பானான்.

“இன்ஸ்பெக்டர் சார், நிரஞ்சனுக்கு இடது கையில் முழங்கைக்கு கீழே ஒரு ஆழமான, பெரிய தழும்பு இருக்கும்.”

“அப்படியா? அதையும் பார்த்துடுவோம்.” செபாஸ்டியன் தன் கையில் இருந்த லத்தியினால் மெதுவாக அந்த உடலின் இடது கையைத் திருப்பினான். சோமு உட்கார்ந்து கவனித்தான். மறுபடி, மறுபடி நிதானமாகக் கவனித்தான்.

“அப்பாடா, இது எங்க நிரஞ்சன் இல்லை சார். அவர் கையில அந்தத் தழும்பு ரொம்ப நல்லாவே தெரியும். இந்த பாடியில விபத்துனால ஏற்பட்ட புது காயங்கள் தான் இருக்கே தவிர, எந்தத் தழும்பும் இல்லை. கடவுள் கைவிடவில்லை சார். எங்க நிரஞ்சன் திடீர்னு எங்க இருந்தாவது வந்துடுவார்னு நான் நம்பறேன் சார்.”

“ஓ.கே. மிஸ்டர் சோமு. நீங்க புறப்படுங்க. நாங்க சோதனைக்காகவும், விசாரணைக்காகவும் நிரஞ்சனோட வீட்டுக்கு வரவேண்டி இருக்கும். நீங்க அங்கதான் இருப்பீங்க?”

“வாங்க சார். நான் அங்கதான் இருப்பேன். நிரஞ்சனோட பெரியம்மா உடம்பு சரியில்லாமப் படுத்திருக்காங்க.”

“அப்படியா? அவங்கதான் வீட்ல இருக்கறவங்களா? அவங்களையும் விசாரிக்கணுமே.”

“நீங்க அங்க மூணு மணி நேரத்துக்கப்புறம் வந்தீங்கன்னா நல்லது சார். பெரியம்மா உடம்பு சரி இல்லாம இருக்காங்க. தூக்கத்துக்கு ஊசி போட்டிருக்கார் டாக்டர். அதனாலதான் சொல்றேன். மூணு மணி நேரத்துக்கப்புறம் வந்தீங்கன்னா அவங்க கூடப் பேசலாம்.”

“ஓ.கே. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்.”

“அப்போ, நான் கிளம்பறேன் இன்ஸ்பெக்டர் சார்.”

சோமு மீண்டும் சென்னையை நோக்கி மாருதியை செலுத்தினான்.

காவல் துறையினர், காவல் நிலையம் வந்து சேர்ந்ததும், போலீஸ்காரர் ஒருவர் செபாஸ்டியனிடம் ஓடிவந்தார்.

“சார், ஏ.சி. உங்களுக்கு போன் பண்ணினார் சார்.”

“நிரஞ்சன் விஷயமா போயிருந்தேன்னு சொன்னியா?”

“சொன்னேன் சார். நீங்க வந்த உடனே, அவருக்கு உங்களை போன் பண்ணச் சொன்னார் சார்.”

செபாஸ்டியன், அசிஸ்டென்ட் கமிஷனர் குணாளனுக்கு போன் செய்தான். “குட் ஆப்டர்நூன் சார். போன் பண்ணதா சொன்னாங்க.”

“யெஸ். நீங்கதானே நிரஞ்சன் கேஸை பார்த்துட்டிருக்கீங்க?”

“ஆமா சார்.”

“இப்போதைக்கு தெரிஞ்ச தகவல்?”

“மகாபலிபுரம் போற ரூட்ல ஒரு கறுப்பு சியோல்லா காரும், ஒரு டெட் பாடியும் கிடக்கறதா தகவல் கிடைச்சது சார். முகம் அடையாளம் தெரியலை. நிரஞ்சனோட பி.ஏ.வைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னோம்.”

“அது நிரஞ்சனோட உடல் இல்லைன்னு சொல்லிட்டார் சார்.”

“அப்படியா? இப்போ நிரஞ்சனோட கேஸை என்னோட தலைமையில டீல் பண்ணச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. எனக்கு நிரஞ்சனோட கேஸ் விபரங்கள் வேணும். நீங்க இங்க ஆபீசுக்கு உடனே வாங்க.”

“இதோ வரேன் சார்.”

நிரஞ்சனின் கேஸ் ஃபைலை எடுத்துக் கொண்டு செபாஸ்டியன், கமிஷனர் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.

அங்கிருந்து குணாளனும், செபாஸ்டியனும் சில போலீஸ்காரர்களுடன் நிரஞ்சனது பங்களாவிற்குப் போனார்கள்.

போலீஸ் ஜீப்பையும் காவல் துறையினரையும் பார்த்த காவல்காரன், பயம் கலந்த மரியாதையோடு காம்பவுண்டு கேட்டைத் திறந்து விட்டான். பின் இன்ட்டர்காமை எடுத்தான்.

“சோமு சார், போலீஸ் வந்திருக்காங்க” சொல்லிவிட்டு திரும்பினான். அதற்குள் காவல் துறையினர் போர்டிகோவில் ஏறிக் கொண்டிருந்தார்கள். இவர்களை சோமு எதிர் கொண்டு அழைத்தான்.

“வாங்க சார். உள்ளே வாங்க.”

“சார். இது நிரஞ்சனோட பி.ஏ. மிஸ்டர் சோமு. இவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் மிஸ்டர் குணாளன். சாரோட தலைமையிலதான் இந்தக் கேஸை டீல் பண்ணப் போறோம்.”

“வணக்கம் சார்.” வணக்கம் தெரிவித்த சோமுவை கூர்ந்து கவனித்தார் குணாளன்.

“நிரஞ்சன் ஷூட்டிங் இல்லாத நேரத்துல வெளியூருக்குப் போயிடுவாரா?”

“ஆமா சார். பெரும்பாலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்கள்ல ஊருக்குப் போயிடுவார்.”

“எத்தனாம் தேதி போனார்?”

“பதினெட்டாம் தேதி காலைல போனார் சார். அதுக்கப்புறம் அவர்கிட்ட இருந்து போன் கால் வரவே இல்லை சார்.”

“நீங்க ஏன் கூடப் போகலை?”

“படப்பிடிப்பு இருந்தா மட்டும்தான் சார் நான் போவேன்.”

“டிரைவர் எங்கே?”

“நிரஞ்சன் சார் ஊர்ல இல்லாத நாட்கள்ல அவன் வேலைக்கு வரமாட்டான் சார்.”

“அவன் பேர் என்ன?”

“மணி.”

“அவனோட அட்ரஸ் எழுதிக் குடுங்க.”

சோமு ஒரு காகிதத்தில் டிரைவர் மணியின் விலாசத்தை எழுதிக் கொடுத்தான்.

“வேற யார் இங்கே நிரஞ்சன் கூட இருக்காங்க?”

“நிரஞ்சனோட பெரியம்மா இருக்காங்க.”

“வேலைக்காரங்க?”

“சமையல்காரம்மா, அவங்களோட பொண்ணு, தோட்டக்காரன், வாட்ச்மேன் இருக்காங்க சார்.”

“முதல்ல, சமையல்காரம்மாவையும், அவங்க பொண்ணையும் கூப்பிடுங்க.”

சோமு உள்ளே சென்று சமையல்கார வேலம்மாவையும், மகள் லஷ்மியையும் அழைத்து வந்தான்.

வேலம்மாவின் கண்களில் பயம் மின்னியது. அவள் மகள் லஷ்மி. ‘கல்லுக்குள் ஈரம்’ விஜயசாந்தி ஜாடையில் பாவாடை, தாவணியில் இருந்தாள்.

கண்களில் வெகுளித்தனமும், முகத்தில் மாறாத இளம் சிரிப்புடனும் தென்பட்டாள்.


“நீ இங்கே எவ்வளவு நாளா வேலை பார்க்கற?” வேலம்மாவைப் பார்த்து குணாளன் கேட்டார்.

“நாலு வருஷமா வேலை பார்க்கறேன்ங்க. இப்ப எனக்குக் கொஞ்சம் தள்ளாமை. அதான் எம் பொண்ணையும் கூட்டிட்டு வந்துடறேன். கூட மாட ஒத்தாசையா இருக்கட்டுமேன்னு.”

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும். சரியா?”

“சரிங்க ஐயா.”

“நிரஞ்சன் ஊருக்கு கார்ல புறப்பட்டுப் போனதை நீ பார்த்தியா?”

“நான் சமையல் கட்டுக்குள்ள இருந்தேனுங்க. அவர் கூட வேற யாரும் போனாங்களா இல்லையான்னு தெரியாதுங்க.”

“நீ இங்கேயே தங்கி வேலை பார்க்கறியா? இல்லை, உன் வீட்டுக்குப் போயிட்டு வருவியா?”

“வீட்டுக்குப் போயிட்டுதாங்க வருவேன். காலையில ஆறு மணிக்கெல்லாம் வந்துட்டு ராத்திரி ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். இப்ப பெரியம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சோமு ஐயா இங்கேயே தங்கிக்கச் சொன்னார். அதனால இங்கேயே தங்கறேன்.”

குணாளன் கேட்பதையும், வேலம்மா பதில் சொல்வதையும் மாறி மாறி பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டு நின்ற லஷ்மியிடம் திரும்பினார் குணாளன்.

“நிரஞ்சனை கடைசியா நீ எப்போ பார்த்த?” லஷ்மி தலையை சாய்த்து யோசித்தாள்.

“அவர் ரூமை பெருக்கி அள்ளப் போனேன்.”

“அப்போ அவர் கூட வேற யாரும் இருந்தாங்களா?”

“யாருமே இல்லை. ஐயா மட்டும் பாட்டு கேட்டுகிட்டு இருந்தார்.”

“நீங்க ரெண்டு பேரும் போகலாம். மிஸ்டர் சோமு. நிரஞ்சனோட பெரியம்மாவைப் பார்க்கணும்.”

“வாங்க சார்.” சோமு பெரியம்மா படுத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். குணாளனைத் தொடர்ந்தான் செபாஸ்டியன்.

கவலையுடன், தூக்க மருந்தின் சோர்வும் சேர்ந்துகொள்ள மிகவும் அயர்ச்சியான முகத்துடன் தளர்ந்திருந்தாள் பெரியம்மா.

“அம்மா, உங்க மகன் நிரஞ்சனைக் காணோம்னு சோமு புகார் குடுத்திருக்கார். பணத்துக்காக யாராவது அவரைக் கடத்திட்டுப் போயிருப்பாங்களோன்னு நாங்க சந்தேகப்படறோம். யாராவது உங்களைப் போன்லயோ, லெட்டர் போட்டோ மிரட்டி பணம் கேட்டாங்களா?”

 “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க.”

“நாங்க போலீஸ்ங்கறதுனால பயப்படாதீங்க. உண்மையைச் சொன்னாத்தான் உங்க மகனை சீக்கிரமாக் கண்டுபிடிக்க முடியும்.”

“பணம் என்னய்யா பெரிய பணம்? அதை எவனாவது கேட்டுத் தொலைச்சாக் கூட குடுத்துட்டு என் பையனை மீட்டுக்கலாம். அப்படியும் கூட ஒண்ணும் இல்லையே. ஒண்ணுமே புரியாம கண்ணைக் கட்டி காட்டில விட்டாப்ல இருக்கய்யா” பெரியம்மா அழ ஆரம்பித்தாள்.

“சரிம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க வீடு முழுக்க சோதனை போடணும்.”

குணாளன் நகர்ந்தார். சோமு ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்றான்.

கான்ஸ்டபிள்களைக் கூப்பிட்டான் செபாஸ்டியன்.

“மிரட்டல் கடிதம் எங்கயாவது சிக்குதான்னு பாருங்க.”

“எஸ் சார்.” கான்ஸ்டபிள்கள் நகர்ந்தனர்.

“இதுதான் சார் நிரஞ்சனோட அறை. சோமு காட்டினான்.”

குணாளன், செபாஸ்டியன் இருவரும் உள்ளே சென்றனர். நான்கு பேர் தாராளமாக படுத்துக் கொள்ளக் கூடிய பெரிய கட்டில், அதன் மீது சொகுசான மெத்தை, ஸ்டீரியோ, டிஸ்க்பிளேயர், காசெட் பிளேயர், டி.வி. வீடியோ அனைத்தும் இணைக்கப்பட்டிருந்த சாதனம் கட்டிலின் மிக அருகே இருந்தது. ஏராளமாக வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த படுக்கை அறையைத் தாண்டியதும் ஒரு சிறு அறை. அலங்கரித்துக் கொள்ளும் அறை. ஆளுயரக் கண்ணாடிகள். சுவரில் பதித்த அலமாரிகள். வண்ண விளக்குகள். அவற்றையே ஒட்டி நவீன குளியலறை.

செபாஸ்டியன் குளியலறைக்குள் சென்று பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு வந்தான். அங்கே குணாளன் கையில் ஒரு டைரியையும், சில புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

“செபாஸ்டியன், இந்த டைரியில ஒரு அட்ரஸ் இருக்கு. அட்ரஸ்க்கு உரிய பேர் சுனிதான்னு எழுதி இருக்கு.”

“பெண்ணோட அட்ரஸா?”

“ஆமா, இங்க பாருங்க. போட்டோ கூட இருக்கு. இவர் கூட சினிமாவுல நடிக்கற பொண்ணா இருக்குமோ? நான் சினிமா அதிகம் பார்க்கறதில்லை. அதனால எனக்குத் தெரியலை.”

“இந்தப் பொண்ணு சினிமாவுல ஆக்ட் பண்ணதில்லை சார்.”

“அப்போ? இது எப்படி நிரஞ்சன்கிட்ட வந்திருக்க முடியும்?”

“அதுதான் சார் தெரியலை. சோமுகிட்ட கேட்டுப் பார்ப்போம்.”

“இதைத் தவிர வேறு தடயம் எதுவும் கிடைக்கலையா சார்?”

“இல்லை. வாங்க போய் சோமுவை விசாரிப்போம்.”

இருவரும் வெளியில் வந்தார்கள். சோமு அறைக்கு வெளியே காத்திருந்தான்.

அவன் அவசர அவசரமாகப் போய் நின்றது போல் இருந்தது. இத்தனை நேரம் ஒட்டுக் கேட்டிருப்பானோ என்ற சந்தேகம் குணாளனுக்கு ஏற்பட்டது.

“மிஸ்டர் சோமு, இந்த போட்டோவுல இருக்கற பொண்ணு யார்?”

“இது... இது... சார்...”

“லுக் மிஸ்டர், போலீஸ்கிட்ட எதையும் மறைக்க நினைக்காதீங்க.”

“சார்... நிரஞ்சனுக்கு பொண்ணுங்கன்னா கொஞ்சம் சபல புத்தி உண்டு. படப்பிடிப்பு இல்லாத நாள்கள்ல வெளியூருக்கு என்னைத் தவிர்த்துவிட்டுப் போறதுக்குக் காரணமே இதுதான். இதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. நிரஞ்சன் என்கிட்ட இதுபத்தின மேட்டர் பேசவும் மாட்டார்.”

“அப்போ, அன்னிக்கு மகாபலிபுரம் போறதா சொல்லிட்டுப் போனதும் இதுக்காகத்தானா?”

“அது எனக்குத் தெரியாது சார். மூணு மாசம் தொடர்ந்து வொர்க் பண்ணினார். அதனால ரொம்ப மென்ட்டல் டென்ஷனா இருக்கு. உடம்புக்கும் ரெஸ்ட் வேணும்னுதான் என்கிட்ட சொன்னார்.”

“மகாபலிபுரம் போறப்ப எத்தனை நாள்ல திரும்பறதா சொல்லிட்டுப் போனார்?”

“இருபத்தியெட்டாந்தேதி ஷூட்டிங் இருக்குன்னு அவருக்குத் தெரியும். முந்தின நாளே வந்துடறதா உறுதியா சொல்லிட்டுத்தான் போனார்.”

செபாஸ்டியன் கோபமாக குறுக்கிட்டான். “ஏன் சோமு, புகார் குடுத்தப்பவும் அதுக்கப்புறமும் நிரஞ்சனோட இருந்த விளையாட்டு புத்தியை என்கிட்ட ஏன் சொல்லலை? தகவல்களை மறைச்சா அவரை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?”

“சார் அது வந்து... நிரஞ்சன் ஒரு டாப் ஸ்டார். தமிழ் நாட்டில் ரொம்ப பிரபலமானவர். அவரைப் பத்தி உள்ள இமேஜ் ஸ்பாயில் ஆயிடுமேன்னுதான் இந்த விஷயத்தை... உங்க கிட்ட மறைச்சட்டேன். ஐ அம் சாரி சார்.”

“வேற எந்த விஷயத்தையும் மறைச்சிருந்தா இப்பவே சொல்லிடுங்க.”

குணாளனின் குரலில் கடுமை கலந்திருந்தது.

“மறைக்க மாட்டேன் சார். எங்க நிரஞ்சனை சீக்கிரமா கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க சார். ப்ளீஸ்.” சோமுவின் பேச்சில் ஒரு பாவ்லா இருப்பதைப் போல தோன்றியது குணாளனுக்கு.

“செபாஸ்டியன், நிரஞ்சனோட போட்டோ ஒண்ணு வாங்கிட்டு வாங்க. தோட்டக்காரன் கிட்ட ஏதாவது விஷயம் சிக்குதான்னு பார்க்கலாம். சோமு, தோட்டக்காரனைக் கூப்பிடுங்க.”

தோட்டக்காரன் தலையில் கட்டி இருந்த முண்டாசை அவிழ்த்தபடியே வந்தான். போலீஸ் என்ற பயத்தில் அதிகமாக குனிந்து கும்பிடு போட்டான்.


 “நிரஞ்சனைப் பார்க்கறதுக்குப் பொண்ணுக இங்க வருவாங்களா?”

“சாமி, தப்பு சாமி. ஐயா பத்தரை மாத்துத் தங்கம். பொண்ணுக விவகாரமே கிடையாதுங்க.” செபாஸ்டியனும், குணாளனும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டார்கள்.

“சரி, நீ போ.” விட்டால் போதும் என்று விரைந்தான். காவல்காரனிடம் கேட்ட போதும் இதே பல்லவியைப் பாடினான். செபாஸ்டியன், குணாளன் இருவரும் ஜீப்பில் ஏறிக் கொண்டார்கள்.

“அசோக் நகர் போற வழியில அம்பேத்கார் சிலையைத் தாண்டி ஃபர்ஸ்ட் லெஃப்ட்ல வுடு ஜீப்பை.” ஜீப் விரைந்தது.

குணாளன் சொன்ன தெருவில் ஜீப் திரும்பியதும் அவர் சொன்னபடி ஒரு குடிசை வாரியத்தின் முன் நின்றது. போலீஸ் ஜீப் நின்றதும், சிறு கூட்டம் சூழ்ந்து கொண்டது.

“இங்கே மணின்னு ஒரு டிரைவர்...” அங்கே நின்றிருந்த ஒரு பெரியவரிடம் செபாஸ்டியன் கேட்டு முடிப்பதற்குள், “அதோ அந்த வீடுதான் சார்” என்று சொல்லிக் கையைக் காட்டினார்.

“கான்ஸ்டபிள்ஸ், அந்த ஆளைப் போய் கூட்டிட்டு வாங்க.”

குணாளன் சொன்னதும் அவர்கள் இறங்கி மணியின் வீட்டிற்குப் போய் விட்டு, அவர்கள் மட்டும் திரும்பி வந்தார்கள்.

“சார் மணி வேலைக்குப் போகலைன்னா சாராயக் கடையிலதான் இருப்பானாம். இங்கே பக்கத்துக்குக் கடைக்குத்தான் போயிருக்கானாம். கூட்டிட்டு வரட்டுமா சார்? அவனை அடையாளம் காட்டறதுக்கு இந்தப் பையன் வரேன்னான் சார்.”

“சரி, போய் கூட்டிட்டு வா.”

சில நிமிடங்களில் போலீஸ்காரர்களுடன் ஒரு ஓடிசலான மனிதன் வந்தான். சுத்தமான கறுப்பு நிற முகம். சிவப்பேறிய கண்களுடன் காணப்பட்டான். இரண்டு அடி தூரத்திற்கு முன்பாகவே சாராய நெடி வீசியது.

“உன் பெயர் என்ன?”

“மஷி சார்” பயத்திலும், கள்ளின் போதையிலும் அவன் வாய் குளறியது.

“நீ எங்க வேலை பார்க்கறே?”

“நம்ம டாப் ஸ்டார் நிரஞ்சனோட கார் டிரைவர் நான்.” போதையிலும் பெருமை வழிந்தது.”

“நிரஞ்சன் பொண்ணுகளோட வெளியூருக்குப் போவாராமே? இதப்பத்தி உனக்கு என்ன தெரியும்?”

“ஐயோ, ஐயோ, ஐயோ” லப லபவென்று வாயில் அடித்துக் கொண்டான்.

“எந்தப்பாவி சார் அப்படி சொன்னான்? எங்க ஐயா அப்படிப்பட்டவர் இல்லை சார்.” மணி தலையைத் தொங்கப் போட்டான்.

குணாளன் செபாஸ்டியனிடம் இருந்து லத்தியை வாங்கி அவனது நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தினார்.

“உண்மையை சொல்லலைன்னா...? என்ன ஆகும்னு தெரியும்ல? ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் சொல்ற விதமா சொல்ல வைப்பேன்.”

குணாளன் மிரட்டியதில் போதை தெளிந்து பேச ஆரம்பித்தான் மணி.

“சார்... சார்... சொல்லிடறேன் சார். கமாலின்னு ஒருத்தன் அடிக்கடி ஐயாவைத் தேடி வருவான். ரகசியமா பேசுவான். பொண்ணுக, அது இதுன்னு, மத்தபடி எனக்கு வேற ஒண்ணும் தெரியாது சார்.”

“கமாளியா? அவன் அட்ரஸ் தெரியுமா உனக்கு?”

“தெரியாது சார். நான் அவன்கிட்ட பேசினது கூட கிடையாது சார். ஐயா அவனுக்கு நிறைய பணம் குடுக்கறதைப் பார்த்திருக்கேன்.”

“சரி, சரி கூப்பிட்டனுப்பிச்சா உடனே ஸ்டேஷனுக்கு வரணும். தெரிஞ்சுதா?”

“சரிங்க சார். எங்க ஐயாவை சீக்கிரமா கண்டுபிடிச்சிடுங்க சார்.” கைகூப்பி வணங்கினான்.

“எங்க ஐயா ரொம்ப நல்லவர் சார். என் பொண்ணை ஐயாதான் படிக்க வைக்கிறார். அவர் எனக்கு தெய்வம் சார்.”

“ஜீப்பை எடு” குணாளன் சொன்னதும் ஜீப் கிளம்பியது.

“செபாஸ்டியன், நிரஞ்சன் பெண்பித்து உள்ளவரா தெரியாது. அவருக்கு ஆபத்து வர்றதுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம்னு நான் நினைக்கிறேன்.”

“இருக்கலாம் சார். இமேஜ் போயிடுமேங்கற பயத்துல ரொம்ப ரகசியமா பெண்களை சந்திச்சிருக்காரு. எவளாவது ப்ளாக் மெயில் பண்றதுக்காக மறைச்சு வச்சிருக்காளோ என்னமோ?”

“அப்படிப் பார்த்தா, மிரட்டல் கடிதமோ, போனோ வரலைங்கறாங்களே?”

“ஒரு வேளை ஜாலியா இருந்துட்டு வரலாமேன்னு, போன இடத்துல இருந்து தகவல் குடுக்காம இருக்காரோ?”

“அவர் போன இடமே தெரியலையே?”

“பொண்ணுங்களைக் கூட்டிட்டுப் போறதுனால, தன்னைத் தேடி யாரும் வந்துடக் கூடாதுன்னு கான்ட்டாக்ட் பண்ணாம இருக்கலாம்.”

“இந்த கேஸ்ல ஒரு நூலளவு பிடி கூட இல்லையே? ஒண்ணுமே புரியல. நிரஞ்சனோட ரூம்ல எடுத்த அட்ரசுக்குப் போவோம். இந்த பொண்ணுகிட்ட கேட்டா ஏதாவது தகவல் கிடைக்கும்.”

குணாளன் ஜீப் டிரைவரிடம், “ஜீப்பை பெசண்ட் நகருக்கு விடு.” போகும் இடத்தைச் சொன்னார். அவர் சொன்ன இடத்தில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார்கள். கதவு திறந்தது. ஒரு அழகிய இளம் பெண் நின்றிருந்தாள். உடம்பின் வளைவு, நெளிவுகளையும் அவற்றின் கவர்ச்சியையும் வெளிக்காட்டும் மிக மெல்லிய நைட்டியில் இருந்தாள். மென்மையான ஒரு வாசனை அவளிடத்தில் இருந்து வீசியது.

கண்களில் ஒருவித அழைப்பு தென்பட்டது. போட்டோவில் இருந்ததை விட நேரில் இன்னும் அழகாக இருந்தாள்.

“நீங்க...?”

“உங்க பேர் சுனிதாவா?”

“ஆமா, உள்ளே வாங்களேன்.” குணாளனும், செபாஸ்டியனும் உள்ளே நுழைய முற்பட்ட போதிலும் அவள் நகராமல் அதே இடத்தில் நின்றிருந்த படியால் அவளை இடிக்காமல், அவள் மீது படாமல் உள்ளே செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.

“உட்காருங்க” சோபாவைக் காட்டினாள்.

இருவரும் உட்கார்ந்தார்கள்.

“மிஸ் சுனிதா... சினிமா நடிகர் நிரஞ்சனை உங்களுக்கு எப்படி பழக்கம்?”

“நிரஞ்சன்? அவரைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்...”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க” குணாளன் குரலில் எரிச்சல் இருந்தது.

“கமாலிதான் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினான். பெங்களூர்ல அவர் கூட தங்கி இருந்தேன்.”

“நீங்க...” செபாஸ்டியன் தயங்கினான்.

“ஏன் சார் தயங்கறீங்க? நான் ஒரு கால் கேர்ள். அநாதையான எனக்கு படிப்பும் இல்லை. அதனால வேலையும் கிடைக்கல. என் அழகே எனக்கு ஆபத்தாச்சு. தானா பறிபோன கற்பை அதுக்கப்புறம்  நானா வியாபாரமாக்கி, வாழ்க்கையை ஓட்டறேன். என் தலைவிதி.”

அவள் குரலில் சோகம் மென் இழையாகப் பின்னி இருந்தது.

“நிரஞ்சனைக் கடைசியா நீங்க எப்பப் பார்த்தீங்க?”

“ரெண்டு மாசத்துக்கு முன்னால கமாலி என்னை பெங்களூருக்குப் போகச் சொன்னான். அப்பதான் கடைசியா பார்த்தேன்.”

 “எத்தனை நாள் இருந்தீங்க?”

“ரெண்டு நாள் இருந்தேன்.”

“எந்த ஹோட்டல்ல தங்கி இருந்தீங்க?

“சென்ட்ரல் பார்க் ஹோட்டல்ல சார்.”

“அதுக்கப்புறம் நீங்க அவரை சந்திக்கவே இல்லையா?”

“வீடியோவுல சினிமா பார்க்கும்போது பார்க்கறதோட சரி. ஒரு நாள் கூட அதுக்கப்புறம் நான் அவரைப் பார்க்கலை.”


“நீங்க, தனியாத்தான் இருக்கீங்களா?”

“ஆமா...”

“கமாலியோட அட்ரஸ் குடுங்க.”

சுனிதா எழுதிக் கொடுத்தாள்.

“தாங்க்யூ மிஸ் சுனிதா.”

இருவரும் வெளியில் வந்து ஜீப்பில் ஏறினார்கள்.

“செபாஸ்டியன், அந்த சுனிதா இவ்வளவு அப்பட்டமா தன்னை கால் கேர்ள்னு சொல்லிக்கறது ரொம்ப ஆச்சரியமா இல்லை?”

“அதிர்ச்சியாவும் இருந்துச்சு சார்.”

“ஒரு விலை மாதுகிட்ட ‘நீ கெட்டவள் கெட்டுப் போனவள்’னு சொன்னாக் கூட உடனே கன்னத்தில் அறைவா அல்லது கண்ணீர் விடுவா. இவ என்னடான்னா...”

“விரக்தியின் எல்லைக்குப் போயிட்டா போலிருக்கு. அதான் அவ பேச்சு அப்படி இருக்கு.”

சில தெருக்களைக் கடந்து வந்தபின் ஒரு மெயின் ரோட்டில் மூன்று தீயணைப்பு வண்டிகள் கிணுகிணுவென்று ஓசை எழுப்பிக் கொண்டு விரைந்து கொண்டிருந்தன.

“ஃபயர் இஞ்சின் மூணு போகுது. எங்கேயோ தீ விபத்தாயிருக்கும்.”

ஜீப், கமிஷனர் அலுவலகத்தின் முன் நின்றது. ஒரு போலீஸ்காரர் கமிஷனரை நோக்கி ஓடி வந்தார். பரபரப்பாக அவர் சொன்ன தகவலுக்கு செபாஸ்டியனும், குணாளனும் அதிர்ச்சியானார்கள்.

6

“என்ன? கலைவாணி கலைக்கூடத்துல தீ பிடிச்சிருக்கா? அங்க நிரஞ்சனோட பிணம் கிடக்குதா?”

“ஆமா சார்.”

“உண்மையான தகவல்தானா?”

“ஆமா சார். நிரஞ்சனோட பிணம்தான் கிடக்குதாம். ரொம்ப கெட்ட வாடை வீசுதாம் சார். ரெண்டு கான்ஸ்டபிள்ஸ் அங்க போயிருக்காங்க சார்.”

“கம் ஆன் செபாஸ்டியன், நாம இப்ப உடனே கலைக்கூடத்துக்குப் போகலாம்.”

ஜீப் கலைவாணி கலைக்கூடத்திற்கு விரைந்தது.

கலைக்கூடத்தில் பரவிக் கொண்டிருந்த நெருப்பைத் தீ அணைப்புப் படையினர் அணைத்துக் கொண்டிருப்பதில் தீவிரமாக இருந்தனர். புகையும், அதன் நெடியும் பெருகிக் கொண்டிருந்தது. அலுவலக அறையில் இருந்த மேசை, நாற்காலிகள் அறை குறையாக எரிந்து அணைக்கப்பட்ட நிலையில் கருகிக் கிடந்தன. எரிந்து போன பொருட்களின் கரித்துண்டுகள் கீழே சிதறிக் கிடந்தன. அலுவலக அறையைத் தாண்டி, தீ அணைக்கப்பட்ட கலைக்கூடத்தில் போலீஸ்காரர்கள் பிணத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்கள். செபாஸ்டியன் நிரஞ்சனின் பிணத்தை நெருங்கிச் சென்று குனிந்து பார்த்தார். தலை முடியில் ஒரு பகுதி கருகிப் போய் இருந்தது. முகம் ஏறக்குறைய நெருப்பில் எரிந்திருந்தது. உடம்பின் மேல் பாகம் கருகி இருந்தது. நெருப்பு படாத ஓரிரு பகுதிகள் அவனது உண்மையான நிறத்திலும், மற்ற இடங்கள் கருப்பாகவும் இருந்தது.

திடீரென செபாஸ்டியனுக்கு ஒரு நினைவு வந்து குணாளனைக் கூப்பிட்டான். “சார் சோமு சொன்னார் நிரஞ்சன் இடது கையில முழங்கைக்குக் கீழே பெரிய தழும்பு ஒண்ணு இருக்கும்னு. அதைவச்சு தான் சார் மகாபலிபுரம் போற ரூட்ல கிடந்த பாடியை அடையாளம் கண்டுபிடிச்சார்.”

“அப்படியா. இடது கையில முழங்கைப் பக்கம் தீப்படலைன்னு நினைக்கிறேன். பாருங்க.”

“கான்ஸ்டபிள்ஸ்! இடது கை பாடிக்கு அடியில அமுங்கி இருக்கு அதை எடுங்க.” குணாளன் கட்டளை இட்டதும் போலீஸ்காரர் ஒருவர் பிணத்தின் இடது கையை எடுத்தார்.

“மை குட்னஸ். நல்ல வேளை இந்தக் கையில நெருப்பு படலை. இதோ தழும்பு” சோமு சொன்ன அதே தழும்பு நல்ல ஆழமாக, அழுத்தமாக இருந்தது.

குணாளன் எழுந்தார், “அப்போ இது நிரஞ்சனோட பிணம்தான்னு உறுதியா தெரியுது. செபாஸ்டியன், நீங்க ஃபெரான்ஸிக் லாபுக்கும், போட்டோ கிராபருக்கும் சொல்லி அனுப்புங்க. நிரஞ்சனோட வீட்டுக்கும் தகவல் சொல்லிடுங்க. போஸ்ட் மார்ட்டம் முடிச்சு, எல்லா ஃபார்மாலிட்டீசும் முடிக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.”

“யெஸ் சார்.”

“போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சப்புறம் நிரஞ்சன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணி பிணத்தை வந்து எடுத்துக்கச் சொல்லுங்க.”

செபாஸ்டியன் புறப்பட்டுச் சென்ற பின் குணாளன் யோசித்தார். குழப்பமாக இருந்தது. ‘சிலை இருந்த இடத்தில் சிலை இல்லை. ஆனால் நிரஞ்சனின் பிணம் கிடக்கிறது. மகாபலிபுரம் போவதாக சொல்லிவிட்டு போன நிரஞ்சன் எப்படி...?’ ஒன்றும் புரிபடாமல் கேஸ் மிகவும் சிக்கலாகி இருப்பதைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்தார்.

புகைப்பட நிபுணர், ஃபெரான்சிக் லாப் டெக்னிஷியன், வந்து சம்பிரதாயங்களை முடித்தபின், நிரஞ்சனின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

“டேய், நம்ப பால்பாண்டி தீ வச்சுக்கிட்டானாண்டா!”

“எதுக்குடா?”

“அவனுக்கு நிரஞ்சன்னா உயிராம். அவர் செத்ததுக்காக இவனும் உடம்புல மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சுக்கிட்டானாம்.”

“நல்ல கிறுக்குப் பய வந்தாண்டா.”

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு.

“ஏ பொன்னி, இன்னாடி அந்த சினிமாக்காரன் என்ன உன் புருசனா? இப்படி அழுது புலம்பற? அடச்சீ!”

“அட சர்த்தான் போய்யா, சாகற வயசாய்யா அந்த மனுசனுக்கு. எந்தப் பாவி அவரைக் கொன்னு போட்டாணோ. அவன் கையில பாம்பு புடுங்க.” மூக்கை சிந்திப் போட்டு மீண்டும் ஒப்பாரி வைத்தாள் பொன்னி.

“அனிதா, நிரஞ்சனைக் காணோம்னு சொன்னாங்க. எப்படியாவது வந்துடுவார்னு நெனச்சோம். இப்ப அவரோட பிணத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களே. அவரைப் போல நடிக்கற ஆளு யாரு இருக்கா?”

“கொலை செய்யற அளவுக்கு அவர் மேல அப்படி என்ன கோபமோ தெரியலையே? சிலை திறப்பு விழாவில் நேர்ல பார்த்தேனே, என்ன ஒரு அழகா இருந்தார். சிரிச்சு சிரிச்சு பேசினாரே, யார் கண்ணுதான் பட்டுதோ?”

உஷா, அனிதாவிடம் தன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டாள்.

செய்தித்தாள்களில் கலைக்கூடத்தில் கிடந்த நிரஞ்சனின் பிணம் பற்றி தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. தமிழ்நாடு முழுவதிலும் மிகுந்த பரபரப்பும், பீதியுடனும் காணப்பட்டது. முதல்வர் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் நிரஞ்சன் கொலை பற்றி தீவிரமாக புலன் விசாரிக்கும்படி கமிஷனர் அலுவலகத்திற்கு கோரிக்கை அனுப்பினார்.

கமிஷனர் அலுவலகத்தின் முன், தன் புல்லட்டை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார் செபாஸ்டியன்.

“குட்மார்னிங் சார்.”

“குட்மார்னிங். வாங்க செபாஸ்டியன்” வரவேற்றார் குணாளன்.

“நிரஞ்சனோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சா சார்.”

“இப்பத்தான் டாக்டர் கொண்டாந்து குடுத்துட்டுப் போறார். நிரஞ்சனுக்கு அளவுக்கு மீறின தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டிருக்குன்னும் அதனாலதான் மரணம்னும் ரிப்போர்ட்ல இருக்கு.”

“தற்கொலையா இருந்தா பாடியை மறைக்க வேண்டியதில்லை...”

“அது மட்டுமில்லை செபாஸ்டியன். பாடியை பதப்படுத்தி வச்சிருக்காங்க. அதுக்குத் தேவையான கெமிக்கல்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி இருக்காங்களாம்.”

“சார், நிரஞ்சனுக்கு சிலை வைக்கறதுக்கு இன்ட்ரஸ்ட் எடுத்தது நடிகர் ராம்குமார். அதனால முதல்ல அவரை விசாரிக்கணும்.”

“நிரஞ்சனும், ராம்குமாரும் விரோதிங்களா?”

“விரோதம் ஒண்ணும் கிடையாது. ரொம்ப நெருக்கமான சிநேகம்தான். நேத்து பேப்பர்ல ஃபுல் பேஜ் இரங்கல் செய்தி குடுத்திருக்காரு ராம்குமார். அவரை விசாரிச்சா ஏதாவது நமக்கு உதவிகரமான தகவல் கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்.”


“மகாபலிபுரத்துக்குப் போறதா சொல்லிட்டுப் போன நிரஞ்சனை யாரோ பின் தொடர்ந்து போயிருக்காங்க. கொலை பண்ணி இருக்காங்க. பாடியை சிலை போல செட்-அப் செஞ்சுட்டாங்க. இது ரொம்பவும் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைதான். அந்த சோமுவையும் தரோவா விசாரிக்கணும்.”

“ஆமா சார், நிரஞ்சனுக்குப் பெண்கள் மேல ஆர்வம் உண்டுங்கற விஷயத்தை மறைச்சான். கேட்டா இமேஜ் பாழாயிடும்னு சொல்றான்.”

“முதல்ல சோமுகிட்ட நிரஞ்சனுக்கு யாராவது விரோதிங்க இருக்காங்களான்னு விசாரிப்போம். அதுக்குப் பிறகு ராம்குமாரையும் விசாரிப்போம். முதல்வர் இந்தக் கேஸ்ல ரொம்ப பிரஷர் குடுத்திருக்காங்க. சீக்கிரமா கொலையாளி யார்னு கண்டு பிடிச்சு கேஸை முடிக்கணும்.”

“ஓ.கே. சார்.”

“செபாஸ்டியன்! சோமுவை விசாரணை பண்ணினதுக்கப்புறம் ரெண்டு கான்ஸ்டபிள்ஸை அனுப்பி அவனைக் கண்காணிக்கச் சொல்லுங்க. மஃப்டியில் போகச் சொல்லுங்க.”

“சோமு இந்தக் கொலையைச் செஞ்சிருப்பான்னு நினைக்கிறீங்களா சார்?”

“ஆமா. அவன் பேச்சு யதார்த்தமா இல்லை.”

“நிரஞ்சனைக் கொலை செய்றதுனால அவனுக்கு என்ன சார் லாபம்?”

“நிரஞ்சனுக்கு ஆல்-இன்-ஆல் இவன்தான். பண விஷயம் முதற்கொண்டு கணக்கு வழக்கெல்லாம் இவன் தான் பார்த்துக்கறான். ஏதாவது ஊழல் பண்ணி இருக்கலாம். இது நிரஞ்சனுக்குத் தெரிஞ்சுப்போயி, ஏதாவது தகராறு ஆகியிருக்கலாம்.”

“நிரஞ்சனுக்கு பெண்கள் தொடர்பு இருந்ததையும் நம்மகிட்ட மறைச்சுட்டார்.”

“அதனாலதான் எனக்கு அவன் மேல சந்தேகமா இருக்கு.”

“நிரஞ்சன் மகாபலிபுரம் போன தேதியில் சோமு இங்க இருந்தானாங்கறதை விசாரிக்கணும்.”

“செபாஸ்டியன், நிரஞ்சனோட கொலை கேஸ் விபரங்கள் எல்லாம் நல்ல ஸ்டடி பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.”

“இந்த கேஸ்ல ஏகப்பட்ட முடிச்சு இருக்கு சார்.”

“யெஸ். சிக்கலான கேஸ்தான். ஓ.கே. வாங்க புறப்படலாம்.”

இருவரும் போலீஸ்காரர்களுடன் ஜீப்பில் ஏறிக் கொள்ள, ஜீப் நிரஞ்சனின் வீட்டிற்கு விரைந்தது. பங்களாவின் முகப்பில் நின்றுக் கொண்டிருந்த காவல்காரன் ஜீப்பைப் பார்த்ததும், கதவை விரியத் திறந்துவிட்டான். போர்டிகோவில் சோகமான முகத்துடன் செய்தித்தாள்களில் மூழ்கி இருந்த சோமு, இவர்களைப் பார்த்ததும் எழுந்து வந்தான்.

“வாங்க சார்.”

“நிரஞ்சன் கொலை கேஸ் விஷயமா விசாரணை நடத்த வேண்டியிருக்கு.” குணாளன் சொல்லிவிட்டு அவன் முகத்தை ஊடுருவினார்.

“எங்க நிரஞ்சனைக் கொலை செஞ்சப் பாவியை சீக்கிரமா கண்டுபிடிக்கணும் சார். என்ன தகவல் தேவையோ, நான் சொல்றேன் சார்.”

அவனது பேச்சில் ஒருவித செயற்கைத் தனம் தெரிந்தது. குணாளன் மேலும் தொடர்ந்தார்.

“நிரஞ்சன் மகாபலிபுரம் போன தேதி என்ன?”

“பதினெட்டாந்தேதி புறப்பட்டுப் போனார்.”

“நீங்க அன்னிக்கு இங்க இருந்தீங்களா?”

“ஆமா சார். நான் இங்கேதான் இருந்தேன். அவர் புறப்படறதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சுக் குடுத்தேன்.”

“அவர் போனதுக்கப்புறம் நீங்க வெளியூர் எங்கயாவது போனீங்களா?”

“இல்லை சார். நான் எங்கேயும் போகலை. பெரியம்மாவுக்கு பி.பி. ரொம்ப இருக்கு. அவங்களைக் கூடவே இருந்து பத்திரமா பார்த்துக்கன்னு நிரஞ்சன் சொல்லிட்டுப் போனார். நான் இங்கேதான் இருந்தேன்.”

“நிரஞ்சனைக் கொலை செய்யற அளவுக்கு விரோதிங்க, அவரைப் பிடிக்காதவங்க யாராவது இருக்காங்களா?”

“விரோதம்னு சொல்ல முடியாது. ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னால கே.கே.பிலிம்ஸ் குட்டியண்ணக் கவுண்டருக்கும், நிரஞ்சனுக்கும் தகராறு நடந்துச்சு.”

“கொஞ்ச நாளைக்கு முன்னாலன்னா? என்னைக்கு நடந்ததுன்னு கரெக்டா சொல்ல முடியுமா?”

“மூணு வாரத்துக்கு முன்னால சார். ஒரு நிமிஷம் டைரியைப் பார்த்தா கரெக்டா சொல்லிடுவேன்.”

“பார்த்து சொல்லுங்க.”

சோமு டைரியை எடுத்துப் பார்த்தான். “ரெண்டாந்தேதி படப்பிடிப்பு நடந்த அன்னிக்குத்தான் இந்த தகராறு நடந்தது சார்.”

“என்ன தகராறு?”

“கால்ஷீட் தகராறு. நிரஞ்சனுக்கு இரண்டு வருஷத்துக்கு டேட் இல்லாததுனால கவுண்டர் கேட்ட தேதியில கால்ஷீட் குடுக்க முடியலை. வேற படக்கம்பெனிக்கு ஏற்கெனவே குடுத்தாச்சு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கவுண்டர் பிடிவாதமா சார்கிட்ட டேட்ஸ் கேட்டுக்கிட்டே இருந்தார். நிரஞ்சன் சாரை அறிமுகப்படுத்தினது அவர்தான். அதனால மத்தவங்களுக்குக் குடுத்த கால்ஷீட்டை கான்சல் பண்ணி தனக்குத் தரச் சொல்லி வற்புறுத்தினார். அவர் கேட்க, இவர் மறுக்க கடுமையான வாக்குவாதம் நடந்துச்சு.”

“நீங்கதான் நிரஞ்சனோட கால்ஷீட் பார்த்து டேட்ஸ் குடுப்பீங்க? பிறகு ஏன் அவர் நிரஞ்சனைக் கேட்டார்?”

“நிரஞ்சனை கவுண்டர் அறிமுகப்படுத்தினதுனால ஒரு உரிமை எடுத்துக்கிட்டு நேரடியா நிரஞ்சன் கிட்ட பேசினார். நிரஞ்சன் ஒரேடியா மறுத்தும், கவுண்டருக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. ‘உன்னைத் தொலைச்சுக் கட்டறேன் பாரு’ன்னு கத்தினார். மரியாதை இல்லாம பேசினார். தடுக்கப் போன என்னையும், ‘நீ தலையிடாத’ன்னு விரட்டினாரு. வாய் வார்த்தை ரொம்ப முற்றிப் போச்சு. சத்தம் கேட்டு யூனிட்ல இருந்த ஆளுங்க எல்லாம் ஓடி வந்துட்டாங்க. கார்ல வலுக்கட்டாயமாக கவுண்டரை ஏத்திவிட்டாங்க. நிரஞ்சனை அடிக்கக் கூடி கையை ஓங்கினார்.”

“கவுண்டரோட கம்பெனி அட்ரஸ், வீட்டு அட்ரஸ் எல்லாம் எழுதிக் குடுங்க. சரி, நிரஞ்சனோட பெரியம்மா எங்கே?”

“நிரஞ்சன் இறந்துபோன அதிர்ச்சியில ரொம்ப உடம்புக்கு முடியாம படுத்திருக்காங்க.”

“பேசக் கூடிய நிலைமைல இருக்காங்களா இல்லையா?”

“பேசுவாங்க சார். வாங்க.”

மூவரையும் உள் அறைக்கு சோமு அழைத்துச் சென்றான். அங்கே பெரியம்மா படுத்திருந்தாள். சமையல்காரியின் மகள் லஷ்மி துணைக்காக உடன் இருந்தாள். செபாஸ்டியன் பெரியம்மாவின் அருகில் சென்றான்.

“அம்மா, அம்மா.”

சுவரைப் பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்த பெரியம்மா சோகம் கப்பிய முகத்துடன் திரும்பினாள்..

“அம்மா, உங்க கவலை எங்களுக்குப் புரியுது. இருந்தாலும் நிரஞ்சனோட கொலைக்குக் காரணமானவங்களை கண்டுபிடிக்க வேண்டியது எங்க கடமை. சில விபரங்கள் மட்டும் சொன்னீங்கன்னா உதவியா இருக்கும்.”

செபாஸ்டியன் பேசிய பிறகும் மெளனமாக இருந்த பெரியம்மாவை நெருங்கினான் சோமு.

“அம்மா, போலீஸ்ல இருந்து வந்திருக்காங்க. அவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்கம்மா. ஏ, லஷ்மி, அம்மாவைக் கைத்தாங்கலா உட்கார வை.”

லஷ்மியின் உதவியோடு உட்கார்ந்து பெரியம்மா, காக்கி சட்டையுடன் இருந்த இரண்டு பேரையும் பார்த்ததும், வெறுப்பாக பார்வை ஒன்றை செலுத்தினாள்.

“நிரஞ்சனுக்கு வேண்டாதவங்க, நிரஞ்சனைப் பிடிக்காதவங்க யாரைப் பத்தியாவது உங்க கிட்ட அவர் சொல்லி இருக்காராம்மா?” ஏ.ஸி. கேட்டார்.

“சிரிச்சு சிரிச்சுதான் பேசுவான். எல்லார் கூடயும் சிநேகமாகத்தான் இருப்பான். கோபம் வர்றது ரொம்ப அபூர்வம்.”

“குட்டியண்ண கவுண்டர்னு ஒரு தயாரிப்பாளர் கூட தகராறு ஆச்சாமே, இது பத்தி உங்ககிட்ட சொன்னாரா?”

“கவுண்டர் கூட தகராறா? அவருதான் என் மகனை சினிமாவுல நடிக்க வச்சவர். அவரை தெய்வம்னு சொல்லுவானே எம் மகன்?”


“அவரோட புதுப்பட விஷயமா ரெண்டு பேருக்குள்ள வாக்குவாதம் நடந்திருக்கு...”

“அப்போ? அந்த ஆளுதான் என் மகனைக் கொன்னுட்டானா? அடப்பாவி! இந்த சோமு கூட என்கிட்ட ஒண்ணும் சொல்லலையே?”

“கவுண்டர் மேல நாங்க சந்தேகப் படறோமே தவிர அவர்தான் கொலை செஞ்சிருப்பாருன்னு இன்னும் நிச்சயமாத் தெரியலை. உங்களுக்கு எந்த விபரம் தெரிஞ்சாலும் எங்ககிட்ட சொல்றதுதானம்மா உங்களுக்கும் நல்லது; எங்களுக்கும் நல்லது.”

“எனக்கென்னய்யா விபரம் தெரியும்? என் மகன்தான் உலகம்னு வாழ்ந்துட்டேன். சினிமா நடிகனா ஆகணும்னு ஆசைப்பட்டான். ‘சாப்பாடு கூட இஷ்டப்பட்டதை சாப்பிடாம, அப்படி என்னடா சினிமா’ன்னு கேட்பேன்... ம்... அவனைப் பறி குடுத்துட்டு நான் உயிரோட இருக்கேன்.”

“சரிம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க வர்றோம்.”

சோமு பின் தொடர, மூவரும் நிரஞ்சனின் பங்களாவை விட்டு வாசலுக்கு வந்தார்கள்.

“சார்” சோமு தொடர்ந்தான். “எனக்கு இன்னொரு ஆள் மேல சந்தேகம் இருக்கு சார். திரை உலகம் பத்திரிகை ரிப்போர்ட்டர் பாலுன்னு ஒருத்தன் இருக்கான். அவன் நிரஞ்சனைப் பத்தி கிசுகிசு எழுதினான். அவன் ஒரு நாள் நிரஞ்சன் பேட்டிக்காக இங்க வந்தப்ப நிரஞ்சன் பேட்டி குடுக்க மறுத்து அவனைத் திட்டினார். அவனும் நிரஞ்சனை எதிர்த்து திட்டினான். இந்தத் தகராறு கொஞ்சம் சீரியசாகத்தான் இருந்தது.”

“எந்தப் பத்திரிகைன்னு சொன்னீங்க?”

“திரை உலகம்னு ஒரு பத்திரிகை சார்.”

“அந்த பத்திரிகை ஆபீசு அட்ரசும் குடுங்க.”

சோமு அவர் கேட்டிருந்த எல்லா விலாசங்களையும் எழுதிக் கொடுத்தான்.

“ஓ.கே. மிஸ்டர் சோமு. தாங்க்யூ.”

“வெல்கம் சார். சீக்கிரமா நிரஞ்சனைக் கொன்ன பாவியைக் கண்டுபிடியுங்க சார்.” செயற்கைத்தனமான அவனது பதற்றம் ஏ.ஸி. குணாளனை மேலும் சிந்திக்க வைத்தது. ஜீப் கே.கே. பிலிம்ஸ் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

“ஏ.ஸி. சார், இந்த சோமு சொன்ன கே.கே. பிலிம்ஸ் கம்பெனி அதிபரைப் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கேன். பெருத்த பண முதலை. அரசியல் செல்வாக்குக் கூட இருக்கு இந்த ஆளுக்கு.” செபாஸ்டியன் கூறினான்.

“கவுண்டர்ங்கறாங்களே, கோயம்புத்தூர்க்காரரா?”

“ஆமா சார். இவர் எடுக்கற படங்கள் எல்லாம் ஹிட்டாயிடும். சினிமா உலகத்துல ரொம்ப பிரபலமான ஆளுதான்.”

“அரசியல் செல்வாக்கு வேற இருக்கோ? நல்லா தரோவா விசாரிக்கணும்.”

கே.கே. பிலிம்ஸ் என்று எழுதப்பட்ட பித்தளை போர்டு போட்ட ஒரு கட்டிடத்தின் முன் ஜீப் நின்றது.

“கான்ஸ்டபிள், உள்ளே போய் குட்டியண்ணக் கவுண்டர் இருக்காரான்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்க.”

ஒரு போலீஸ்காரர் இறங்கி உள்ளே சென்றார். திரும்பி வந்தார். “அவரோட வீட்ல இருக்காராம் சார்.”

“சரி, நீ ஏறு.”

“போயஸ் கார்டன் விடுப்பா.”

குட்டியண்ணக் கவுண்டரின் பங்களா முன் நின்றது ஜீப். முன் வாசலில் இருந்து பங்களாவின் வாசல் வரை செல்வதற்கே இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. அரண்மனை போன்ற பங்களாவைக் கட்டி இருந்தார் கவுண்டர்.

போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் கேட்டைத் திறந்துவிட்டான் காவல்காரன். இவர்களைப் பார்த்து, கட்டிப் போட்டிருந்த இரண்டு ராஜபாளையம் நாய்கள், சீற்றத்துடன் குரைத்தன. நாய்களின் சப்தம் கேட்டு, உள்ளிருந்து சிறுவன் ஒருவன் வெளியே வந்து பார்த்தான். கொஞ்சமாய் கண்களில் மிரட்சியைக் காட்டினான்.

“ஏ தம்பி, கவுண்டர் இருக்காரா?” செபாஸ்டியன் கேட்டார்.

அவன் பதில் சொல்வதற்குள், இவர்கள் நின்றிருந்த போர்டிகோவிற்கு கவுண்டர் வந்தார்.

“வாங்க சார். உள்ளே வாங்க” மூவரும் உட்கார்ந்த பின் தானும், அவர்களுக்கு எதிர்புறம் இருந்த சோபாவில் உட்கார்ந்தார். அவருடைய கனத்த சரீரத்தைத் தாங்கிய குஷன், இரண்டு அங்குலத்திற்கு அமுங்கி, எழும்பியது.

சுவரில் ஆங்கங்கே முதல்வர், மற்ற சில மந்திரிகளுடன் சினிமா விழாக்களில் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்தன.

நவநாகரீகமான, விலையுயர்ந்த வீட்டு அலங்காரப் பொருட்கள், அவருடைய பணக்காரத்தனத்தைப் பறை சாற்றுவதாய் இருந்தன. குணாளன் ஆரம்பித்தார்.

“மிஸ்டர் கவுண்டர், நாங்க நிரஞ்சனோட கொலை வழக்கு விஷயமா விசாரணைக்கு வந்திருக்கோம். நிரஞ்சனை திரைப்படத்துல அறிமுகப்படத்தினது நீங்கதான்னு சொல்றாங்க.”

“ஆமா சார். ஸ்டுடியோவில எடுபிடியா வேலை பார்த்துக்கிட்டிருந்த அவனுக்கு முதல்ல ஹீரோ சான்ஸ் குடுத்தது நான்தான்.”

“சமீபத்துல ஒரு புதுப்படத்துக்கு நீங்க கால்ஷீட் கேட்டு, அவர் மறுத்ததாக செய்தி வந்ததே. அது உண்மையா?”

“ஆமா சார். அந்தக் கதையில் வர்ற கதாநாயகனோட காரக்டர் நிரஞ்சன் மட்டுமே செய்யக் கூடியதா இருந்துச்சு. அவர் செஞ்சாதான் சிறப்பா இருக்கும்னு டைரக்டர் சொன்னதால நிரஞ்சனை இருபது நாள் கால்ஷீட் கேட்டேன். ஆனா நைன்ட்டி நைன் வரைக்கும் டேட்ஸ் இல்லைன்னு சொன்னார். ரொம்ப கெஞ்சி கேட்டும் கூட பிடிவாதமா மறுத்துட்டார்.”

“உங்க ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துச்சு. அவரைத் தொலைச்சுக் கட்டறதாகவும் சொன்னீங்க. சொன்னது போலவே அவரைத் தீர்த்தும் கட்டிட்டீங்க...” கவுண்டர் கோபத்தில் முகம் மாறினார். பதில் சொல்ல வாயெடுத்தார். அதற்குள் தொலைபேசி கிணுகிணுத்தது.

வேலைக்காரச் சிறுவன் எடுத்துப் பேசிவிட்டு கவுண்டரிடம் வந்தான். “ஐயா, உங்களுக்கு போன்” என்றான்.

“யாருடா” எரிச்சலாக கேட்டார் கவுண்டர்.

“மந்திரி மகாதேவனோட பி.ஏ. தென்னரசுவாம் சார்.”

உடனே கவுண்டரின் முகம் மலர்ந்தது. ரிசீவரை எடுத்துப் பேசினார்.

“ஹலோ, என்னங்க தென்னரசு? என் புதுப்படத்துல ஹீரோ ராம்குமார். ஜோடி, உங்க அக்கா பொண்ணுதான். அதுல ஒண்ணும் மாற்றம் இல்லை. கவுண்டர் சொன்னா சொன்னதுதான் தெரியும்ல? நம்ம புதுப்பட பூஜைக்கு குத்துவிளக்கேத்தறது மகாதேவன் சார்தான். ஞாபகம் இருக்குல்ல?”

“......”

“நானா? இப்பவா? இல்லீங்க தென்னரசு. நிரஞ்சன் கொலை விஷயமா போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ஏ.ஸி. இன்ஸ்பெக்டரெல்லாம் இங்க வந்திருக்காங்க. இப்ப என்னால வரமுடியாது.”

“......”

“மடியில கனம் இருந்தாதான வழியில பயப்படணும். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. சாயங்காலம் பார்க்கலாம்.”

மந்திரி அளவில் தனக்கு செல்வாக்கு இருப்பதைக் காட்டிக் கொண்ட பெருமிதத்துடன் இவர்களை ஒரு பார்வைவிட்டார் கவுண்டர்.

“ஏ.ஸி. சார். நான் அன்னிக்கு நிரஞ்சன் கூட கோபமா பேசினது உண்மைதான். தொலைச்சுக் கட்றதா சொன்னதும் உண்மைதான். அது அவரை சினிமா உலகத்துல இருந்துங்கற அர்த்தத்துலதானே தவிர, இந்த உலகத்துல இருந்துங்கற அர்த்தத்துல இல்லை.

“நிரஞ்சனோட கொலைக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.”

“நிரஞ்சன் மகாபலிபுரம் போன பதினெட்டாம் தேதில இருந்து இருபத்தொன்பதாம் தேதிவரைக்கும் நீங்க உள்ளூர்ல தான் இருந்தீங்களா?”


“அந்த தேதிகள்ல்ல நான் கோபியில அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்தேன்.”

“ஆதாரம்?”

“எத்தனையோ இருக்கு. என்னோட யூனிட்டைக் கேளுங்க. டைரக்டர் அரவிந்தைக் கேளுங்க. ஷூட்டிங்ல கலந்துக்கிட்ட ஆர்ட்டிஸ்ட் அத்தனை பேரையும் கேளுங்க.”

“அன்னிக்கு நிரஞ்சன் கூட தகராறு பண்ணினதுக்கப்புறம் அவரைப் பார்த்தீங்களா?”

“இல்லை. ஆனா ராம்குமார் இன்வைட் பண்ணினதால சிலை திறப்பு விழாவுக்குப் போயிருந்தேன். நீங்க என்னை வீணா சந்தேகப்படறீங்க சார்” கவுண்டரது பேச்சில் மிரட்டல் மறைமுகமாகக் கலந்திருந்தது.

“ஒரு கொலைக் கேஸ்னு வந்தா சம்பந்தப்பட்டவங்க எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டுதான் பார்ப்போம். நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட். நாங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை. மறந்துடாதீங்க. நாங்க கிளம்பறோம். எப்ப தேவைப்பட்டாலும் விசாரணைக்கு வருவோம்.”

அவருக்கு மேல் தன்னாலும் மிரட்ட முடியும் என்பதை உணர்த்தும் நோக்கில் சற்று கடுமையாகவே பேசினார் குணாளன்.

“செபாஸ்டியன், ராம்குமார் வீட்டுக்கு போன் பண்ணி, அவர் எங்க இருக்கார்னு கேளுங்க.” செபாஸ்டியன் ராம்குமார் வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

“சார், அவர் வீட்லதான் இருக்காராம்.”

“நாம புறப்படலாம்.”

புறப்பட்டார்கள்.

ராம்குமாரை ஒரு புகைப்பட நிபுணர் வித விதமான போஸ்களில் க்ளிக்கிக் கொண்டிருந்தார்.

போலீஸ் குழுவினரைப் பார்த்ததும் ராம்குமார் புகைப் பட நிபுணரிடம், “எக்ஸ்க்யூஸ் மீ” சொல்லிவிட்டு வந்தான்.

“வாங்க. வாங்க சார். உட்காருங்க.”

“தாங்க் யூ.” உட்கார்ந்தார்கள்.

“நிரஞ்சன் கொலை விஷயமா விசாரணைக்கு வந்திருக்கோம்.”

“முதல்ல கூல்ட்ரிங்க்ஸ், காப்பி ஏதாவது சாப்பிடுங்க சார்.” அழகிய வெள்ளி டம்ளர்களில் காப்பி வந்தது.

“மிஸ்டர் ராம்குமார், நிரஞ்சனுக்கு சிலை செய்யறதுக்கு ஏற்பாடு செஞ்சது நீங்கதான?”

“ஆமா சார். அமெரிக்காவுல வாக்ஸ் மியூசியம் பார்த்தப்ப, நம்ப நாட்லயும் இதுபோல அமைச்சா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். அதே சமயம் நம்ப கவர்மென்டும் வாக்ஸ் மியூசியம் அமைக்கணும்னு அறிவிச்சாங்க. அதில நிரஞ்சனோட சிலையை முதல் முதலா வைக்கறதுக்கு நான் ஸ்பான்சர் பண்ணினேன்.”

“உங்க ரெண்டு பேரோட ரசிகர்களும் எப்பவும் சண்டை, சச்சரவுன்னு கலாட்டா பண்றாங்க, உங்களுக்குள்ள போட்டி அது, இதுன்னு...” ராம்குமார் இடைமறித்தான்.

“சார், நானும், நிரஞ்சனும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள், ரசிகர்கள் அவங்களாகவே எங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு கலாட்டா பண்றாங்க. நாங்க சிநேகிதமாத்தான் இருந்தோம்.”

“நிரஞ்சனுக்கு விரோதிங்க யாராவது இருந்தாங்களா? அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”

“நிரஞ்சனுக்கு விரோதிங்களா? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அப்படி யாரும் இல்லை சார். எல்லார் கூடவும் நட்பா, பண்பாதான் பழகுவார்.”

“ஓ.கே. மிஸ்டர் ராம்குமார். தாங்க் யூ ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்ஸ்.” மூவரும் புறப்பட்டார்கள்.

திரை உலகம் பத்திரிகை அலுவலகத்தின் முன் ஜீப் நின்றது. அதே சமயம் கரும்பச்சை வண்ண மாருதி வேன் ஒன்றும் வந்து ஜீப்பிற்கு எதிராக நின்றது. அதில் இருந்து இறங்கினார் திரைஉலகம் பத்திரிகையின் ஆசிரியர் நர்மதன்.

போலீஸ்காரர் ஒருவர் அவரை நெருங்கிக் கேட்டார்.

“சார், திரை உலகம் ஆசிரியர்...”

“நான்தான்.”

“சார், நிரஞ்சன் கொலைக் கேஸ் சம்பந்தமா உங்களை சில விபரங்கள் கேட்கணும் ஏ.ஸி. சார் வந்திருக்கார்.”

“உள்ளே வரச் சொல்லுங்க.”

அனைவரும் உள்ளே சென்றனர்.

போலீஸ் அதிகாரிகளை அமர வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தார் நர்மதன்.

“உங்க பத்திரிகை ரிப்போர்ட்டர் பாலுவுக்கும், நிரஞ்சனுக்கும் தகராறு நடந்ததாமே?” செபாஸ்டியன் கேட்டார்.

“தகராறு என்னன்னு தெரியாது. போன வாரம் நிரஞ்சன் சிறப்பிதழ் போடறதா இருந்தோம். அதுக்காக ஒரு விசேஷமான பேட்டிக்காக நிரஞ்சனைப் பார்க்கப் போயிருந்தான் பாலு.”

“நிரஞ்சன் பேட்டி குடுத்தாரா?”

“இல்லை சார். முடியாதுன்னு கண்டிப்பா சொல்லி அனுப்பிட்டார்.”

“இது தெரிஞ்சதுக்கப்புறம் நீங்க நிரஞ்சன் கிட்ட கேட்டீங்களா?”

“ரொம்ன வேண்டிக்கிட்டப்புறம் சம்மதிச்சார். ஆனா பேட்டிக்கு பாலு வரக்கூடாதுன்னு சொல்லிட்டார்.”

குணாளன் குறுக்கிட்டுக் கேட்டார்.

“இதனால பாலுவுக்குத்தான் அதிக பாதிப்போ?”

நர்மதனை ஆழம் பார்த்தார் குணாளன். நர்மதனின் முகத்தில் கறுப்பு நிழலாடி மறைந்தது.

“பாலுவை கொஞ்சம் கூப்பிட முடியுமா?”

“அது... அ... பா... பாலு வேலையை ரிசைன் பண்ணிட்டான்.”

“வேலையை ரிசைன் பண்ணிட்டாரா, அவரோட அட்ரஸ் குடுங்க.”

நர்மதன் கொடுத்த விலாசத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள். விலாசம் எழுதிய காகிகதத்தைக் கொடுக்கும்போது நர்மதனின் கை லேசாக நடுங்குவதை மனதில் குறித்துக் கொண்டார் குணாளன்.

பல குடித்தனங்கள் குடி இருக்கும் வரிசையான வீடுகள். வீடுகள் என்பதைவிட சிறு அறைகள் என்று சொல்லலாம். முதல் வீட்டிற்குச் சென்றார் போலீஸ் கான்ஸ்டபிள் கண்ணாயிரம்.

கதவின் வெளிப்பக்கம் பூட்டு தொங்கியது. துணுக்குற்றார். ‘பக்கத்து வீட்டில் விசாரிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினார். உள்ளிருந்து சூடிதாரில் இருந்து ஒரு கல்லூரி இளசு எட்டிப் பார்த்தது.

சீருடையில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிளைப் பார்த்து விட்டு ஒரு கணம் மிரண்டது. பின் சுதாரித்துக் கொண்டு சற்று தைரியமாக முன்னே வந்தது.

“நீங்க?... உங்களுக்கு என்ன வேணும்?”

“நான் ஒரு விசாரணைக்காக வந்திருக்கேன். இது திரை உலகம் பத்திரிகை நிருபர் பாலுவோட வீடுதானே?”

“ஆமா சார். ஆனா...”

“ஆனா என்னம்மா? தயங்காம சொல்லு.”

தயக்கம் மாறாமல் அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார் கான்ஸ்டபிள் கண்ணாயிரம்.

7

மிஷனர் அலுவலகத்தில் நிரஞ்சனது கொலைக் கேஸ் குறித்து விவாதத்தில் இருந்தனர் குணாளனும், செபாஸ்டியனும்.

“சார், ரிப்போர்ட்டர் பாலு வேலையை ரிசைன் பண்ணிட்டதா நர்மதன் சொன்னார். ஆனா, பாலுவோட பக்கத்து வீட்டுப் பொண்ணு பாலுவை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கன்னு சொல்றா.” செபாஸ்டியன் குணாளனின் பதிலுக்காக அவரை ஏறிட்டார்.

“ஆமா செபாஸ்டியன். நர்மதன் பொய் சொல்றது கொஞ்சம் நெருடலாத்தான் இருக்கு.”

“தகராறு என்னமோ நிரஞ்சனுக்கும், பாலுவுக்கும்தான். ஆனா நர்மதன் ஏதோ தடுமாற்றமா பேசறாப்ல தோணுது.”

“சில பேர் எவ்வளவு பெரிய மனுஷங்களா இருந்தாலும் சரி, பதவியில இருந்தாலும் சரி. போலீஸ் விசாரணைன்னா அதிகமா பயப்படுவாங்க. தங்கள் மேல் தப்பு இல்லைன்னா கூட எதுலாவது மாட்டிக்குவோமோன்னு நெனச்சு, சின்ன விஷயங்களை கூட போலீஸ்கிட்ட மறைச்சிருவாங்க. இந்த நர்மதன் அந்த ரகமாத் தெரியுது.”

“சார்,” செபாஸ்டியன் குணாளனைக் கூப்பிட்டான். “பாலு வீட்டைக் காலி பண்ணிட்டு போன தேதியும் நிரஞ்சன் மகாபலிபுரம் போன தேதியும் ஒரே தேதிதானான்னு விசாரிக்க கான்ஸ்டபிளை அனுப்பி இருக்கேன்.”


“வெரிகுட். இந்த இரண்டு தேதியும் ஒண்ணா இருக்கக் கூடிய பட்சத்துல நாம உடனே பாலுவைக் கைது செய்யணும்.”

பாலுவின் வீட்டருகே விசாரிக்கச் சென்ற போலீஸ்காரர் திரும்பி வந்தார்.

“சார், பதினெட்டாம் தேதிதான் பாலு வீட்டைக் காலி பண்ணிட்டுப் போனாராம்.”

“என்ன? வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டானா? பதினெட்டாந்தேதியா? அதே தேதியிலதான் நிரஞ்சனும் மகாபலிபுரம் போயிருக்கார். செபாஸ்டியன், நீங்க திரை உலகம் ஆபீஸ் போய் பாலுவோட பெர்மனன்ட் அட்ரஸ் ஏதாச்சும் இருக்கான்னு கேட்டு வாங்கிட்டு வாங்க. அப்படியே பாலு ரிசைன் பண்ணினானா, டிஸ்மிஸ் பண்ணப்பட்டானான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க.”

“ஓ.கே. சார்.”

செபாஸ்டியன், திரை உலகம் அலுவலகத்திற்குப் போனான். அங்கே இணை ஆசிரியர் ராமபத்ரன் மட்டுமே இருந்தார்.

“நர்மதன் இல்லையா?” செபாஸ்டியன் கேட்டான்.

“அவர் வெளியே போயிருக்கார். நீங்க உட்காருங்க.”

“உங்ககிட்ட இருந்த ரிப்போர்ட்டர் பாலுவோட சுபாவம் எப்படி?”

“ரொம்ப திறமைசாலி சார். தைரியசாலியும் கூட. அவனாலதான் எங்க சர்க்குலேஷன் ரொம்ப அதிகமாச்சு. ஒரு மைனஸ் பாயிண்ட் அவன்கிட்ட என்னன்னா, கோபம் மூக்குக்கு மேல வந்துடும்.”

“அப்படி அவன் கோபப்படற அளவுக்கு ஏதாவது நடந்திருக்கா?”

“அவன் எழுதிக் குடுக்கற மேட்டரை அப்படியே வார்த்தை மாறாம பப்ளிஷ் பண்ணனும்பான். பிரபலங்களோட சொந்த விஷயத்தை அதிகமா எக்ஸ்போஸ் பண்ணி எழுதாதன்னு சொன்னா ரொம்ப கோபப்படுவான்.”

“நடிகர் நிரஞ்சன்கிட்ட கூட இது விஷயமா சண்டை போட்டானாமே.”

“ஆமா. அதனாலதான் அவன் சீட்டே கிழிஞ்சது. பாவம் ரொம்ப ஏழைக் குடும்பத்து பையன். வேலையே கிடைக்காம அலைஞ்சிருக்கான். மூணு மாசமா செஞ்சுக்கிட்டிருந்த வேலையும் போச்சுன்னதும் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டான். நிரஞ்சனாலதான் தன்னோட வேலை போயிடுச்சின்னு தெரிஞ்சு நிரஞ்சன் மேல ரொம்ப கோபமா இருந்தான். நான்தான் சமாதானமா பேசி வீட்டுக்கு அனுப்பினேன்.”

“நிரஞ்சனாலதான் வேலை போச்சா?”

“ஆமா சார். பாலுவை டிஸ்மிஸ் பண்ணினாத்தான் சிறப்பிதழுக்கு ஒத்துழைப்பு தருவேன்னு கண்டிஷன் போட்டார், எடிட்டர்கிட்ட.”

முடிச்சு அவிழத் துவங்குவது போல் உணர்ந்தார்கள், செபாஸ்டியனும், மோகனும்.

“பாலுவோட சொந்த ஊர் அட்ரஸ் இருந்தா குடுங்க சார்.”

மோகன் கேட்டதும் ராமபத்திரன் எழுதிக் கொடுத்தார்.

பாலு,

மே\பா, சத்தியமூர்த்தி,

கதவு எண்: 17, கலெக்டர் ஆபீஸ் ரோடு,

திருச்சி.

விலாசத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கமிஷனர் அலுவலகம் வந்து குணாளனிடம் விபரங்களைக் கூறினார்கள்.

“பாலுவுக்கு வேலை போனதுக்குக் காரணம் நிரஞ்சன். இதனால் நிரஞ்சன் மேல பழி வாங்கும் உணர்ச்சி அதிகமாகவே பாலுவுக்கு இருந்திருக்கு. பாலுதான் இந்தக் கொலையை செஞ்சிருக்கான். திருச்சிக்குப் போய் உடனே அவனை அரெஸ்ட் பண்ணனும்.”

“ஓ.கே. சார்.”

செபாஸ்டியனும், குணாளனும் திருச்சிக்குப் புறப்பட்டார்கள்.

திருச்சியில் வெய்யில் கொளுத்தியது. ஒரு குளிர்பானக் கடையில் செபாஸ்டியனும், மோகனும் தாகசாந்தி செய்த பின் கலெக்டர் ஆபீஸ் ரோட்டை அடைந்தனர். தெரு முனையிலயே ஜீப்பை நிறுத்தச் சொல்லிவிட்டு, நடந்து சென்று பாலுவின் வீட்டைக் கண்டு பிடித்தனர்.

சிறிய ஓட்டு வீடு. மிகவும் பழையது. வெளிப்புறம் இருந்த குட்டையான திண்ணையில் வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர். காக்கி சட்டைகளில் இருவர் வருவதைப் பார்த்த கிழவர் கண்களை இடுக்கியபடி, கண்களுக்கு மேல் தன் கையை வைத்து கூர்ந்து கவனித்தார்.

“மீனாட்சி. போலீஸ்காரங்க வர்ற மாதிரியில்ல தெரியுது.” அவருடைய மனைவியைக் கேட்டார்.

இதற்குள் திண்ணைக்கு வெகு சமீபத்தில் நெருங்கிய செபாஸ்டியன் பெரியவரிடம் “இது பாலுவோட வீடுதான? பாலு இருக்காரா?”

“பாலு வெளியே போயிருக்கான். இப்பதான் கொஞ்சம் வெத்தலை வாங்கிட்டு வாப்பான்னு அனுப்பினேன். நீங்க...?”

பாலு அங்கே இருப்பதாக அறிந்து மிகுந்த வியப்புக்குள்ளானார்கள், செபாஸ்டியனும், மோகனும்.

“நாங்க போலீஸ் இலாகாதான். சினிமா நடிகர் நிரஞ்சன் கொலை விஷயமா உங்க மகன் பாலுவை விசாரிக்க வேண்டி இருக்கு.”

“என்னங்கய்யா சொல்றீங்க? கொலை விஷயத்துல என் மகன் சம்பந்தப்பட்டிருக்கானா? இருக்காதுங்கய்யா. அவன் அப்படிப்பட்டவன் இல்லை.” ‘லொக்... லொக்...’ இருமினார்.

“கொஞ்சம் கோபக்காரன்தான்ய்யா என் மகன். ஆனா கொலை செய்யற அளவுக்கு கெட்டவன் இல்லீங்கய்யா” பெரியவர் தொடர்ந்து பேசினார்.

பாலுவின் தாயார் அழுது விடுவாள் போலிருந்தது.

“அம்மா? உங்க மகனை குற்றவாளின்னு நாங்க சொல்லலை. சில தகவல்கள் தேவைப்படுது. அதுக்காகத்தான் நாங்க வந்திருக்கோம்.”

“ரொம்ப நாள் அலைஞ்சப்புறம் கெடச்ச வேலையும் போயிருச்சேங்கற கவலையில் சரியாக்கூட சாப்பிடாம கொள்ளாம கிடக்கான்...” ‘லொக்... லொக்’ இருமல் பேச்சைத் தடுத்தது.

இதற்குள் கையில் வெற்றிலை, பாக்குடன் பாலு இவர்களை சமீபித்திருந்தான்.

“தம்பி பாலு, உன்னைத் தேடி போலீசு வந்திருக்கு. இதெல்லாம் என்னப்பா?”

“அப்பா, நீங்க ஏன் பயப்படறீங்க? நான் எந்தத் தப்பும் பண்ணலியே?”

“மிஸ்டர் பாலு, நிரஞ்சன் கேஸ் விஷயமா உங்களை விசாரிக்க வந்திருக்கோம்.”

செபாஸ்டியன் சொன்னதும், இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்றான். மிகவும் பழையதாகிப் போன நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். வீடு இருட்டாக இருந்தது. ஏழ்மையை அறிவித்தது.

“மிஸ்டர் பாலு, திரை உலகம் பத்திரிகையில ரிப்போர்ட்டரா இருந்த நீங்க, அந்த வேலையை ரிசைன் பண்ணினீங்களா? உங்களை டிஸ்மிஸ் பண்ணினாங்களா?” கேள்வி கேட்ட மோகனை நிமிர்ந்து பார்த்தான் பாலு.

“வேலையை ரிசைன் பண்றதா? நானா? வேலைகிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டு வேலை கிடைச்சு, ரொம்ப சந்தோஷமா இருந்தேன் சார். என்னோட கெட்ட நேரம், என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.”

“காரணம்?”

“எல்லாம் அந்த சினிமா நடிகர் நிரஞ்சனாலதான் சார். அவரைப் பத்தின சொந்த விஷயங்களை எழுதினேன்னு கோபப்பட்டு, எடிட்டர்கிட்ட சொல்லி என்னை டிஸ்மிஸ் பண்ண வச்சது அவர்தான் சார்...”

“இதனால நிரஞ்சன் மேல ரொம்ப ஆத்திரமா, பழி வாங்கற வெறியில நீங்க இருந்திருக்கீங்க....?”

“கோபமா இருந்ததும் நிஜம்தான். பழி வாங்கணும்னு துடிச்சது நிஜம்தான். வேலை போயிடுச்சேங்கற ஆத்திரத்தில் அப்போ அந்த மனநிலையிலதான் இருந்தேன். நிதானமா யோசிச்சுப் பார்த்ததுல வேற வேலையைத் தேடிக்கிட்டு, அம்மா அப்பா கூடவே இருந்திடலாம்னு இங்கேயே வந்துட்டேன்.”

“நீங்க டிஸ்மிஸ் ஆனதுக்கப்புறம் நிரஞ்சனை சந்திக்கவே இல்லையா?”

“இல்லை சார். பேட்டிக்காக டேட் கேட்கப் போனப்பதான் கடைசியா நான் அவரைப் பார்த்தேன்.”

“நிரஞ்சனைக் கொலை பண்ற அளவுக்கு உங்களுக்குள்ள ஏதோ நடந்திருக்கு. இது சம்பந்தமா உங்களைக் கைது செய்றோம்.”

பாலு அதிர்ந்தான்.


“சார். நான் எந்தத் தப்பும் பண்ணலை. கே.கே. பிலிம்ஸ் குட்டியண்ணக் கவுண்டருக்கும், நிரஞ்சனுக்கும் தகராறு நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்துல மோதல் பகிரங்கமாகவே நடந்தது. குற்றவாளி அவராத்தான் இருக்கணும்.”

“நீங்க மெட்ராஸ்ல இருந்து திருச்சிக்கு எந்த தேதியில வந்தீங்க?”

“பதினெட்டாம் தேதி சார். வேலையை இழந்தப்புறம், நான் திருச்சியில தான் சார் இருந்தேன். இங்க வந்ததில இருந்து அக்கம் பக்கம் வீடுகள்ல உள்ள பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டிருக்கேன். இதெல்லாம் எனக்கு ஆதாரம் சார்.”

“அதை எல்லாம் கோர்ட்டில் வந்து சொல்லுங்க...”

பாலுவை கைது செய்து அழைத்துச் செல்வதைப் பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதனர். பாலுவை ஜீப்பில் ஏற்றினார்கள்.

ஜீப் சென்னைக்குப் புறப்பட்டது.

சாந்தி தியேட்டரை ஒட்டி உள்ள நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறையினர் கொடுத்த எச்சரிக்கையையும், கெடு நாளையும் மீறி சில பேர் கடைகளை எடுக்காமல் வைத்திருந்தனர்.

வர்ணம் பூசப்பட்ட குருவிகள், பிளாஸ்டிக் பூக்கள், மலிவு ஹேர் கிளிப்புகள், சடை மாட்டிகள், முகம் பார்க்கும் கண்ணாடி, ரூபாய்க்கு இரண்டு கைக்குட்டைகள், குழந்தைகளின் வண்ணப்பட போஸ்டர்கள், சினிமா நடிகர், நடிகைகளின் அச்சடிக்கப்பட்ட படங்கள் முதலிய பொருட்கள் பரப்பி வைத்து சில கடைகள் இருந்தன.

ஜீப்பில் வந்த காவல் துறையினர், கீழே இறங்கி, பரப்பி இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஊரில் இருந்து வந்திருந்த தன் தங்கைக்கும், அவன் கணவனுக்கும் சாந்தி தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் ரிசர்வ் செய்வதற்காக, செபாஸ்டியன் பைக்கில் வந்து கொண்டிருந்தான். மஃப்டியில் இருந்த அவன், கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்துவதைப் பார்த்தான். பைக்கை நிறுத்தினான்.

காவல் துறையினர் வீசிய பொருட்களில் இருந்து பறந்து வந்த சில படங்கள் அவன் அருகிலும் விழுந்தன. குறிப்பிட்ட ஒரு படம் அவன் கவனத்தை அதிகமாக ஈர்த்தது.

அந்தப் படத்தில் ஒரு ஜோடி கடற்கரை அருகே நடந்து செல்லும் காட்சி அச்சடிக்கப்பட்டிருந்தது. அச்சு சுமாராக இருந்தது. ஆகவே, அதில் இருந்தவர்களின் முக அடையாளம் தெளிவாக தெரியவில்லை. என்றாலும் அதில் உள்ள ஆணின் முகம் மட்டும் மிகப் பரிச்சயமாக இருந்தது.

கூர்ந்து கவனித்த செபாஸ்டியனின் மூளையில் ‘பளிச்’ என பிரகாசமான ஒரு வெளிச்சம் அடித்தது. ‘இது... இது கொலையாகிப் போன நடிகர் நிரஞ்சன் மாதிரியே இருக்கே?’ மீண்டும் கூர்ந்து கவனித்தவன், அது நிரஞ்சன்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். சுறுசுறுப்பானான்.

நடைபாதைக் கடைகளில் வியாபாரம் செய்து வந்தவர்களில் சிலர் ஓர் ஓரமாக, பரிதாபமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை அணுகினான்.

“இந்தப் படத்தை இங்கே கடையில விற்பனைக்கு வச்சிருந்தது யார்?” செபாஸ்டியன் மஃப்டியில் இருந்தபடியால் அவனை எரிச்சலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெளனமாக இருந்தார்கள்.

“நான் போலீஸ் டிபார்ட்மென்ட். இதோ பாருங்க கார்ட்.” தன் அடையாள அட்டையை செபாஸ்டியன் எடுத்துக் காட்டியதும், கெச்சலான ஒரு வாலிபன் முன் வந்தான். சில பேர் ‘நமக்கென்ன வம்பு’ என்று கலைந்து சென்றனர்.

செபாஸ்டியன் முன் வந்து நின்ற வாலிபன், “சார். இந்த படம் என்னோட கடையில தான் சார் இருந்தது.” நடுங்கிய குரலில் வார்த்தைகள் மிகவும் மெதுவாக வெளி வந்தன. அவன் கண்கள் மிகப் பெரியதாக இருந்தன. தொண்டைக் குழியில் ஒரு கோலி அளவு உருண்டை இருந்தது.

“பயப்படாம நான் கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லு தம்பி. இந்தப் படத்துல இருக்கறது யார்?”

“இது சினிமா நடிகர் நிரஞ்சன். அவர் கூட இருக்கற பொண்ணு யார்னு எனக்குத் தெரியாது.”

“இந்தப் படம் உனக்கு எப்படி கிடைச்சது?”

“வியாபாரத்துக்காக இது போல சினிமா ஸ்டாருங்க படங்களை மொத்தமா வாங்குவேன் சார்.”

“எங்கே வாங்குவ?”

“சிவகாசியில ஒரு பிரிண்டிங் பிரஸ்லதான் வழக்கமா வாங்குவேன். இந்தப் படத்துல ஆயிரம் பிரிண்ட் அங்கதான் சார் வாங்கினேன். அங்கே போய் வாங்கினாத்தான் சீப்பா கிடைக்கும்.”

“கூட இருக்கற பொண்ணு சினிமா நடிகையா?”

“தெரியலை சார். நிரஞ்சன் ரசிகர்கள் வாங்குவாங்கன்னு தான் சார் இதை நான் வாங்கினேன்.”

“சிவகாசியில எந்த ப்ரஸ்ல வாங்கின?”

“குவாலிட்டி பிரிண்டர்ஸ்னு ஒரு பிரஸ்ல வாங்கினேன் சார்.”

“சரியான அட்ரஸ் சொல்லு.”

“நம்பர் பதினொன்னு, நியூ ரோடு, சிவகாசி.”

“போன் நம்பர் தெரியுமா?”

“72439”

“சரி நீ போகலாம்.”

‘விட்டால் போதும்’ என்று ஓட்டம் பிடித்தான் அந்த வாலிபன். கீழே கிடந்த படங்களை பத்திரமாக எடுத்துக் கொண்டான் செபாஸ்டியன்.

கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்று குணாளனைச் சந்தித்தான்.

“சார், இந்தப் படத்தைப் பாருங்க.”

குணாளன் படத்தை எடுத்துக் கூர்ந்து கவனித்தார். அந்தப் படத்தில் உள்ள ஆண் நிரஞ்சன் என புரிந்து கொள்ள அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.

“இது நிரஞ்சன்தானா?”

“ஆமா சார்.”

“இந்தப் பொண்ணு?”

“அது யார்னு தெரியலை சார்.”

“இந்தப் படம் உங்களுக்கு எப்படி கிடைச்சது?”

“சாந்தி தியேட்டரை ஓட்டியுள்ள ஃப்ளாட்ஃபார்ம் கடைகளை நம்ம டிபார்ட்மென்ட் ஆளுக டிஸ்போஸ் பண்ணிக்கிட்டிருந்தப்ப தற்செயலா நான் அந்தப் பக்கம் போயிருந்தேன். அங்கே தான் இந்தப் படம் கிடைச்சது.”

“விற்பனைக்காக வச்சிருந்த படமா?”

“ஆமா. சார் இதை வச்சிருந்த பையனை உடனே கூப்பிட்டு விசாரிச்சேன். சிவகாசியில ‘குவாலிட்டி பிரிண்டர்ஸ்’ல வாங்கினதா சொன்னான்.”

“அந்த பிரஸ்ஸோட அட்ரஸ் வாங்கிட்டீங்களா?”

“இருக்கு சார்.”

“அப்போ நீங்க சிவகாசிக்குப் போய் நிரஞ்சனும், இந்தப் பொண்ணும் சேர்ந்து இருக்கிற போட்டோ எப்படி கிடைச்சதுன்னு கேளுங்க.”

“இன்னைக்கே புறப்பட்டுப் போறேன் சார்.”

குணாளனின் மனைவி காபி கொண்டு வந்ததும் இருவரும் குடித்தனர். மேஜை மீதிருந்த புகைப் படத்தைப் பார்த்த குணாளனின் மனைவி ஒரு கணம் யோசித்தார்.

“என்னங்க, நிரஞ்சன் கூட இருக்கற இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குங்க.”

“நிஜமாவா? எல்லா ஞாபகப்படுத்திப் பார்த்து சொல்லேன்” மிகவும் ஆர்வமாகக் கேட்டார் ஏ.ஸி.

“இந்தப் பொண்ணை ஒரு விளம்பரத்துல பார்த்திருக்கேங்க.”

“விளம்பரத்துலயா?”

“ஆமாங்க. பத்திரிகையில வர்ற சோப் விளம்பரத்துல இவ மாடலிங் பண்ணி இருக்கா.”

“ஆர் யூ ஷ்யூர்?”

“வெரி ஷ்யூர். நீங்க டியூட்டிக்கு போயிட்டு வர லேட்டா ஆயிடுதுல்ல. ராத்திரி நேரங்கள்ல நிறைய படிக்கற பழக்கம் வந்துருச்சு.  தமிழ் வார இதழ் ஒண்ணுல இவ மாடலிங் பண்ணிய சோப் விளம்பரம் பார்த்திருக்கேன்.”


“அந்த வார இதழை இன்னும் வச்சிருக்கியா?”

“சமீபத்துல வந்ததுதான். இருக்கும். இருங்க எடுத்துட்டு வரேன்.”

குணாளனின் மனைவி கொண்டு வந்ததும் இருவரும் அதை கவனித்துப் பார்த்தனர்.

“செபாஸ்டியன் நீங்க சிவகாசிக்குப் போங்க. அங்கே அந்த குவாலிட்டி பிரஸ்ல விசாரிச்சிட்டு வாங்க. நான் இந்தப் படத்துல இருக்கற பொண்ணைப் பத்தின விபரங்களை சேகரிக்கிறேன். அந்த ப்ரொட்யூசர் கவுண்டரையும் மறுபடியும் விசாரிக்கணும்.”

“சாந்தி தியேட்டர் பக்கம் வாங்கின இந்த ஃபோட்டோவுல நடிகர் நிரஞ்சன் வழக்கத்தைவிட கொஞ்சம் வித்தியாசமான டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாம் பண்ணி இருக்கார். பிரிண்ட் பண்ணின படம்ங்கறதுனால அவங்களோட பின்னணி கடற்கரை மட்டும் தான் தெரியுது.” செபாஸ்டியன் சொன்னதும், மீண்டும் படத்தை வாங்கிப் பார்த்தார் குணாளன்.

இதற்குள் குணாளனின் மனைவி வார இதழ் ஒன்றைக் கொண்டு வந்து “இதாங்க அந்த விளம்பரம். பாருங்க.”  குணாளனிடம் அதில் வெளிவந்திருந்த சோப் விளம்பரத்தையும் காண்பித்தாள்.

நடைபாதைக் கடைகளில் கிடைத்த படத்தில் இருந்ததற்கும், விளம்பரத்தில் இருந்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டிலும் அவளே என உறுதிப்படுத்திக் கொண்டார்.

“விளம்பரத்தின் ஓரத்தில் விளம்பர ஏஜென்ஸியின் பெயர் இருக்கு. பார்க்கலாம்.” செபாஸ்டியன் பத்திரிகையை வாங்கிப் பார்த்தான் சில்வர் ஸ்பூன் (Silver spoon/lavan/5 Tam) என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.

“சார் இந்த சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனிக்குப் போய் கேட்டா, இவளைப் பத்தின விபரங்கள் தெரியறதுக்கு வாய்ப்பு இருக்கு சார்.”

“இந்த அட்வர்டைசிங் கம்பெனி இங்க மெட்ராஸ்லதான் இருக்கா?”

“ஆமா சார். டி.நகர்ல தான் இருக்கு.”

“நீங்க சிவகாசிக்குப் புறப்படுங்க. எந்தத் தகவல் கிடைச்சாலும் உடனே எஸ்.டி.டி.ல என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்க.”

“ஓ.கே. சார் நீங்க குட்டியண்ண கவுண்டரை என்கொய்ரி பண்ணப் போறீங்களா?”

“ஆமா. நான் இப்போ கே.கே. பிலிம்ஸ் ஆபீசுக்குப் போய் கவுண்டரைப் பத்தின சில தகவல்கள் தெரிஞ்சுகிட்டு வரேன். அவர் இருந்தாலும் அவர்கிட்ட மறுபடியும் விசாரணை நடத்தியே ஆகணும். அதுக்கு முன்னால இந்த விளம்பரக் கம்பெனியில விசாரணை நடத்தணும்.”

“இந்தாங்க. நீங்க ஒரு படத்தை எடுத்துக்கோங்க.”

செபாஸ்டியன் ஒரு படத்தை எடுத்துக் கொண்டான்.

‘சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனியில் இந்தக் கேசுக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்க வேண்டுமே’ என்ற கவலையான முகத்துடன் குணாளன் புறப்பட்டார்.

8

‘சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங்’ என்று பளபளவென்ற பித்தளைத் தகட்டில் மின்னும் போர்டு இருந்த ஸ்பார்டெக் பதித்த மிகப் பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தார் குணாளன்.

கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கதவினைத் தள்ளியதும் ஏ.ஸி.யின் மென் குளிர் காற்று வீசியது.

ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் இன்முகத்துடன் வரவேற்றாள். “யெஸ் சார், வாட் கான் ஐ டு ஃபார் யூ?”

குணாளன் சீருடை அணியாமல் மஃப்டியில் இருந்தார்.

“அட்வர்டைசிங் விஷயமா வந்திருக்கேன்.”

“மூணாவது காபினுக்குப் போங்க சார். அங்கே சுஜாதான்னு மீடியா எக்ஸிக்யூட்டிவ் இருப்பாங்க. அவங்க கிட்ட சொல்லுங்க. ஷீ வில் ஹெல்ப் யூ.”

“தாங்க்யூ.”

குணாளன் மூன்றாவது காபினை அடைந்தார். ‘சுஜாதா என்று ப்ளாஸ்டிக் தகட்டில் எழுதி வைக்கப்பட்ட பெயர் பலகை இருந்த மேஜைக்கு அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் பெண் கோப்புகளில் மூழ்கியிருந்தாள். அவளது மேஜைக் கண்ணாடிக்கு அடியில் ராகவேந்தர் படம் வைக்கப்பட்டிருந்தது. மேஜை மீது இருந்த அவளது கைப் பையிலும், சாவிக் கொத்திலும் ராகவேந்தர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ‘தீவிரமான ராகவேந்திரர் பக்தை போலும்’ நினைத்துக்  கொண்ட குணாளன் “எக்ஸ்க்யூஸ் மீ” என்றார்.

“யெஸ். ப்ளீஸ் பீ ஸீட்டட்.”

குணாளன் உட்கார்ந்தார். தான் கொண்டு வந்திருந்த வார இதழை எடுத்துப் பிரித்தார்.

லவன் சோப் விளம்பரத்தைக் காட்டினார். “இந்த விளம்பரம் உங்க கம்பெனி குடுத்தது தானே மேடம்.”

“ஆமா.”

 “இதிலே மாடலிங் பண்ணியிருக்கற பொண்ணு யார். இவ பேர் என்ன? சினிமா நடிகையா?”

“இதெல்லாம் எதுக்காக நீங்க கேக்கறீங்க?”

அவள் குரலில் லேசான உஷ்ணம் தெரிந்தது. தொடர்ந்தாள். “உங்களுக்கு விளம்பரம் பண்ணனுமா? அதுக்கு இந்த மாடல் வேணுமா? அப்படின்னா அதைச் சொல்லியில்ல கேட்டிருக்கணும். ஒண்ணுமே சொல்லாம இவ யாரு. பேரு, சினிமா நடிகையான்னு கேட்டா என்ன சார் அர்த்தம்?” தேவை இல்லாமல் டென்ஷன் ஆனாள்.

அவள் வெடித்து முடிக்கும் வரை காத்திருந்த குணாளன் புன்னகைத்தபடியே தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார்.

“சார், நீங்க போலீஸ் டிபார்ட்மென்ட்டா? உங்களுக்கு இந்தப் பெண்ணைப் பத்தின டீடெய்ல்ஸ் வேணும், அவ்வளவு தானே சார்? இந்த காபின்ல இருந்து ரைட் சைட்ல போங்க. கடைசியா ஒரு காபின் இருக்கும். அங்க ஒருத்தர் இருப்பார். பேர் சம்பத். அவர்தான் மாடலிங் கேர்ள்ஸ் அரேன்ஜ் பண்றவர். அவர்கிட்ட கேளுங்க சார்.”

“தாங்க் யூ.”

குணாளன் அவள் சொன்ன காபினுக்குள் சென்றார். அங்கே மேஜை மீது பல புகைப் படங்கள் கிடக்க, எதிரில் இருந்தவருக்கு அதில் உள்ளவர்களின் விபரங்களைக் கூறிக் கொண்டிருந்தான் ஒருவன்.

“எக்ஸ்க்யூஸ் மீ” என்றார்.

“யெஸ் சார்.”

“மிஸ்டர் சம்பத்...?”

“நான்தான் சார். உட்காருங்க. ஒரு நிமிஷம். இவரைக் கவனிச்சுட்டு வந்துடறேன்.”

குணாளன் உட்கார்ந்தார். அவருக்கு அருகில் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர் அவரது தயாரிப்பின் விளம்பரத்துக்காக மாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார். சம்பத்திடம், “சார், இவங்க நல்லா இருக்காங்க. வேணும்னா கேளுங்களேன்” என்றார்.

சம்பத் சிரித்தார். “சார் இவங்க ஒரு நல்ல ஷூட்டிங்குக்கு டேன் தெளசண்ட் கேட்பாங்க. உங்க பட்ஜெட்டுக்கு ஒத்துவராதே சார்?”

“டென் தெளசண்டா? வாயைப் பிளந்தார்.”

“இந்தப் பொண்ணைப் பாருங்க சார். த்ரீ தெளசண்ட் தான். உங்க விளம்பரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்க.”

பல படங்களைப் பார்த்து, புரட்டி எடுத்து, பின் அரை மனதுடன் சம்பத் காண்பித்த பெண்ணையே தேர்ந்தெடுத்து விட்டு புறப்பட்டார் அந்த மனிதர்.

“சொல்லுங்க சார்.” குணாளனிடம் சம்பத் கேட்டான்.

வார இதழை எடுத்து மேஜை மீது போட்டார் குணாளன். லவண் சோப் விளம்பரத்தை எடுத்து, அதில் உள்ள பெண்ணின் படத்தைக் காண்பித்தார்.

 “நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வந்திருக்கேன். இந்தப் பெண்ணைப் பத்தின தகவல்கள் எனக்குத் தேவைப்படுது.”

“இந்தப் பொண்ணு வேப்பேரியில இருக்கா.”


“கரெக்ட் அட்ரெஸ் இருக்கா?”

“இருக்கு சார்.”

“இவளை எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“நாங்க மாடலிங்குக்காக ஆண் – பெண்கள் தேவைன்னு இங்கிலீஷ், தமிழ் செய்தித்தாள்கள்ல விளம்பரம் குடுப்போம். அதைப் பார்த்துட்டு மாடலிங் செய்ய விருப்பமானவங்க, அவங்களோட ஃபோட்டோ, அட்ரஸ் அனுப்புவாங்க. இதை நாங்க கலெக்ட் பண்ணி வச்சிருந்து க்ளையண்ட்ஸ் கிட்ட காட்டுவோம். அவங்க செலக்ட் பண்ணுவாங்க. இந்தப் பொண்ணு நாங்க குடுத்த அட்வர்டைஸ்மென்ட்டைப் பார்த்து போட்டோ அனுப்பி இருந்தா.”

“பத்திரிகை விளம்பரம் மட்டும்தான் உங்க நிறுவனத்துல ரிலீஸ் பண்றீங்களா?”

“டி.வி. விளம்பரப் படம் கூட தயாரிக்கிறோம். எங்க பாஸ்தான் டைரக்டர்.”

“இந்த லவண் சோப் பொண்ணோட போட்டோ வேற எதுவும் இருக்கா உங்ககிட்ட?”

“லவன் சோப் விளம்பரத்துக்காக எடுத்த சில படங்கள் இருக்கு. அந்தப் பொண்ணு கேட்டுக்கிட்டதால அவ அனுப்பின போட்டோவை அவளுக்கே திருப்பி அனுப்பிட்டோம்.”

“அவளோட பேர் என்ன?”

“ஷீலா.”

“ஷீலாவா?” ஒரு வினாடி குணாளன் சிந்தித்தார்.

“இவ அட்ரஸ் கேட்டேனே?”

“இதோ ஒரு நிமிஷம் சார். எழுதிக் குடுத்துடறேன்.”சம்பத் தன் கிறுக்கலான கையெழுத்தில் விலாசத்தை எழுதிக் கொடுத்தான்.”

“சார், போலீஸ் டிபார்ட்மென்டுங்கறீங்க. இந்தப் பொண்ணைப் பத்தி கேக்கறீங்க. என்ன சார் விஷயம்?” வம்புக்கு அலைந்தான்.

“அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம். இந்த ஷீலாவைப் பத்தி நாங்க விசாரிச்சதை உங்க ஆபீஸ்ல இருக்கற யாரும் வெளில சொல்லக் கூடாது. மீறினா நீங்கதான் ரொம்ப சிரமப்படுவீங்க. பீ கேர்ஃபுல்.”

“ஓ.கே. சார் நான் மூச்சு விடமாட்டேன்.”

குணாளன் புறப்பட்டார்.

வழியில் மீடியா எக்ஸிக்யூடிவ் சுஜாதா, தன்னை விரோதமாகப் பார்ப்பதை அலட்சியப்படுத்தி அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார்.

சிவகாசியில், நியூ ரோடு தெருவில் நிறைய பேப்பர் கடைகளும், அச்சகங்களும் வரிசையாக இருந்தன. ‘ரோஸ் பேப்பர் ஸ்டோர்ஸ்’ கம்பெனியை ஒட்டிய ஒரு கட்டிடத்தின் மேல் ‘குவாலிட்டி பிரிண்டர்ஸ்’ என எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகையைப் பார்த்த செபாஸ்டியன் அந்த அச்சகத்திற்குள் சென்றான்.

வேலைக்கு வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள், செபாஸ்டியனைப் பார்த்ததும், தங்களுக்குள் பதற்றமாய் பேசிக் கொண்டார்கள்.

“என்ன அண்ணாச்சி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்கார். என்ன விஷயம்னு தெரியலையே?”

“உனக்கென்னதுக்குடா அதெல்லாம்? நீ பாட்டுக்கு உள்ள போய் வேலையைப் பாருடா.” அண்ணாச்சி விரட்டினார்.

‘நோ அட்மிஷன்’ என எழுதப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் போர்டு வைத்திருந்த லேபர் அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். வெளியில் இருந்து உள்ளே வந்த ஒருவர் செபாஸ்டியனைப் பார்த்தார்.

“என்ன சார்? என்ன விஷயமா வந்திருக்கீங்க?” வந்தவர் கேட்டார்.

“நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் இந்த பிரஸ் மேனேஜர். ஆபீஸ் நிர்வாகம் முழுவதும் நான்தான் கவனிச்சுக்கறேன். என் பேர் முருகேசன். உள்ளே உட்காருங்க இன்ஸ்பெக்டர்.” முருகேசன் ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்றார். மின்விசிறி விசையைத் தட்டி விட்டார்.

செபாஸ்டியன் உட்கார்ந்தார். ஏகப்பட்ட சுவாமி படங்கள் சுவரில் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. ஊதுபத்தியைப் பொருத்தி ஒரு படத்தின் சட்டத்தில் வைத்துவிட்டு, தானும் உட்கார்ந்தார் முருகேசன்.

“சார், சர்பத் குடிக்கறீங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். தாங்க்ஸ். இந்தப் படம் உங்க பிரஸ்ல பிரிண்ட் பண்ணினதுதான?” நிரஞ்சனும், ஷீலாவும் இருந்த படத்தை எடுத்து மேஜை மீது வைத்தான் செபாஸ்டியன்.

முருகேசன் எடுத்துப் பார்த்தார்.                  

அப்போது மெல்லிய ஃப்ரேமில் கறுப்புக் குளிர் கண்ணாடி அணிந்த ஒல்லியான இளைஞன் ஒருவன் உள்ளே வந்தான்.

“முருகேச அண்ணாச்சி, எங்க காலண்டர் பிரிண்ட்டிங் என்ன ஆச்சு? நானும் மெட்ராஸ்ல இருந்து வந்து ரெண்ட நாளா ரூம் போட்டு உட்கார்ந்திருக்கேன். இன்னும் நீங்க எங்க ஜாபை மிஷின்ல ஏத்தவே இல்லையே அண்ணாச்சி.”

“அசோக் தம்பி, கொஞ்சம் பொறுமையா இருங்க. முதலாளி திடீர்னு அவசர வேலையா ஊருக்குப் போயிட்டார். நாளைக்கு வந்துடுவார். உங்க ஆர்டர் பெரிய ஆர்டர்ல? அதனால அவர் வந்தப்புறம் தான் பிரிண்ட்டிங் ஆரம்பிக்கணும்னு கண்டிசனா சொல்லிட்டுப் போனார்.”

“நீங்க வந்தாத்தான் மிஷின்ல ஏத்துவோம். உடனே புறப்பட்டு வாங்கன்னு சொல்றீங்க. அடிச்சு புடிச்சு நான் இங்க வந்தா ‘முதலாளி வெளியூர் போயிட்டார், அவர் வந்தாத்தான் ஏத்துவோம்’கறீங்க. ரொம்ப லேட் ஆகுது அண்ணாச்சி.”

“எங்க ஊர் பரோட்டா, சால்னாதான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல? நல்லா சாப்பிட்டுட்டு இருங்க. நாளைக்கு முதலாளி வந்துடுவார்.”

“நாளைக்காவது ஆரம்பிச்சா சரிதான். பரோட்டாவா முக்கியம்? எனக்கு எங்க வேலைதான் முக்கியம். நேத்தே எங்க பாஸ் போன்ல கூப்பிட்டுத் திட்டினாரு.”

“ஒரு முக்கியமான விஷயமா பிஸியா இருக்கேன் அசோக்.” அசோக் என்ற அந்த கறுப்புக் கண்ணாடி இளைஞன் முணுமுணுத்தபடி வெளியேறினான்.

மீண்டும் படத்தைப் பார்த்த முருகேசன், “இது எங்க பிரஸ்ல பிரிண்ட் பண்ணினதுதான் சார். நிரஞ்சன் கொலை கேஸ் விஷயமா விசாரிக்கறீங்களா?”

“ஆமா, நிரஞ்சன் கூட இருக்கற இந்தப் பெண்ணை பத்தி ஏற்கெனவே சில தகவல்கள் கிடைச்சிருக்கு. இதை பிரிண்ட் பண்றதுக்கு நெகடிவ் யூஸ் பண்ணினீங்களா? போட்டோவா?”

“போட்டோவை யூஸ் பண்ணித்தான் பிரிண்ட் பண்ணினோம்.”

“இந்த போட்டோவை யார்கிட்ட இருந்து வாங்கினீங்க...?”

“இந்த மாதிரி நிறைய ட்ரான்ஸ்பரன்ஸி, போட்டோ எல்லாம் நாங்க மெட்ராஸ் போய் சில போட்டோ கிராபர்கள் கிட்ட இருந்து வாங்குவோம். சில சமயம், சிலர் கொண்டு வந்தும் சேல்ஸ் பண்ணுவாங்க.”

“குறிப்பா இந்த போட்டோவை யார்கிட்ட இருந்து வாங்கீனீங்க?”

“ஒரு நிமிஷம் சார், குறிப்பு நோட்ல இருக்கும். பார்த்து சொல்றேன்.”

மேஜை இழுப்பறையை திறந்து ஒரு தடிமனான நோட்டை எடுத்துப் பார்த்தார் முருகேசன்.

“சார், இதை எங்களுக்கு விற்பனை செய்த போட்டோ கிராஃபர்தான் பேர் அருண். அமெச்சூர் போட்டோகிராஃபர்தான். சின்னதா ஒரு லாப் கூட மெட்ராஸ்ல வச்சிருக்கான்.”

“நீங்க அவரோட இடத்துக்குப் போய் வாங்கினீங்களா?”

“இல்லை சார். அவனே நிறைய கொண்டு வந்தான். அதில எனக்குத் தேவையானதை வாங்கிட்டோம். பில் செட்டில் பண்றப்ப அவங்க பேர், அட்ரஸ் எழுதி வச்சிக்குவோம்.”

“அவரோட பேர், அட்ரஸ் எழுதித் தரணுமே?”

“இதோ எழுதித் தர்றேன் சார்.”

முருகேவனிடம் இருந்து போட்டோகிராஃபர் அருணின் விலாசத்தைப் பெற்றுக் கொண்டான் செபாஸ்டியன்.

“தாங்க்யூ மிஸ்டர் முருகேசன்.”


செபாஸ்டியன் அங்கிருந்து புறப்பட்டான். அவன் வெளியேறும்போது குளிர் கண்ணாடி இளைஞன் அசோக் அவசர அவசரமாகச் சென்று அங்கிருந்து நாற்காலியில் உட்கார்வதைப் பார்த்தான் செபாஸ்டியன். வெளியில் வந்து எஸ்.டி.டி.யில் குணாளனைத் தொடர்பு கொண்டு, தான் சேகரித்த தகவல்களைக் கூறினான்.

“கவுண்டரை மறுபடி விசாரிக்கப் போறேன்னு சொன்னீங்களே சார் விசாரிச்சீங்களா?” மறுமுனையில் குணாளன் பேசினார்.

“அவர்கிட்ட இருந்து புதுசா எந்தத் தகவலும் கிடைக்கல. கோபி செட்டி பாளையத்துல ஷூட்டிங்ல இருந்தார்ங்கறதுக்கு ஸ்டிராங்கா ஆதாரம் இருக்கு. நீங்க வந்ததும் நாம அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம்.”

“ஓ.கே. சார், நான் புறப்பட்டு வரேன்.” பேசி முடித்து, பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பினான் செபாஸ்டியன்.

சில்வர் ஸ்பூன் அட்வர்டைசிங் கம்பெனியில் சம்பத் கொடுத்த விலாசத்திற்கு பைக்கில் வந்து இறங்கினார் குணாளன். அநேக வீடுகள் நெருக்கமாய் இருந்தன. போர்ஷன் வீடுகளாகவே பெரும்பாலும் இருந்தன. விலாசத்தில் இருந்த பதினெட்டாம் நம்பர் வீடும் ஒரு பெரிய வீட்டின் பகுதி வீடாக இருந்தது. சிறிய வெராண்டாவின் படிகள் மீது ஏறிக் கதவருகே போன குணாளன், அங்கே பூட்டு தொங்குவதைப் பார்த்தார்.

அக்கம் பக்கம் விசாரிக்கலாம் என இறங்கி வந்தவரைப் பார்த்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்மணிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். அந்த வழியாக நடந்து போகும் அனைவருமே குணாளனை ஒரு வித்தியாசமான பார்வை பார்த்தபடியே போனார்கள். ஒன்றும் புரியாமல் குழம்பினார் குணாளன். மஃப்டியில் இருந்தபடியால் அவர் ஷீலாவின் வாடிக்கையாளர் என நினைத்துக் கொண்டார்கள்.

“சார்... சார்...” தெருவில் போன ஒருவரை குணாளன் கூப்பிட்டார். அவர் திரும்பினார்.

“சார், இந்த வீட்ல ஷீலான்னு...” இவர் கேட்டு முடிப்பதற்குள் அவர், “எனக்குத் தெரியாது சார்” வெறுப்பாக பதில் சொல்லியபடி வேகமாக நகர்ந்து விட்டார்.

‘என்ன செய்யலாம்’ என நினைத்துக் கொண்டிருந்த குணாளனைப் பக்கம் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பினார். ஷீலாவின் வீட்டை ஒட்டி இருந்த வீட்டின் வெளிப்புறம் நின்றிருந்த ஒரு வயதான மனிதர் மீண்டும் கூப்பிட்டார்.

“சார் இங்கே வாங்க.”

குணாளன் போனார்.

“சார், ஷீலாவைத் தேடியா வந்தீங்க? பார்த்தா ரொம்ப டீசன்ட்டா இருக்கீங்க. அந்தப் பொண்ணு சினிமாவுல நடிக்கணும்னு ஊரை விட்டு வந்து சான்ஸ் கிடைக்காததுனால தன்னையே வித்து பொழைப்பு நடத்திக்கிட்டிருந்துச்சு. என் வீட்லதான் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடி இருந்தா. நிறைய பொய் சொல்லி வீட்டைப் புடிச்சுக்கிட்டா. அப்புறம்தான் தெரிஞ்சது அவளைப்பத்தி.”

இப்போது குணாளனுக்கும் புரிந்தது. ‘ஏன் மற்றவர்கள் தன்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். சிரித்தார்கள்’ என்று.

“சார், நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக இந்தப் பொண்ணைத் தேடி வந்தேன்.”

“அப்படியா? அவ என்னமோ சினிமாவுல நடிக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சிருச்சு. அட்வான்ஸ் கூட வாங்கியாச்சுன்னு சொல்லி வீட்டை காலி பண்ணிட்டா. ‘விட்டதுடா தொல்லை’ன்னு நானும் பெரிய கும்பிடு போட்டு அனுப்பிட்டேன். இந்த ஏரியாவுல எல்லோரும் ரொம்ப டீசன்ட். இவ இங்க இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ராத்திரியானா அவளைத் தேடி பல பேர் வருவாங்க. எப்படியோ அவ போனதே பெரிய விஷயம்னு வாடகை பாக்கி கூட கேக்காம அனுப்பிட்டேன்.”

“வீடு மாத்தறப்ப உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே போயிருப்பா.”

“சொன்னா. கதாநாயகியா நடிக்கப் போறேன்னு ரொம்ப சந்தோஷமா சொல்லிட்டுத்தான் போனா.”

“சார், அவ புதுசா குடி போகிற வீட்டு அட்ரஸ் சொன்னாளா? நீங்க கேட்டீங்களா?” ஆர்வத்துடன் கேட்ட குணாளனுக்கு அவரது பதில் அதிக ஏமாற்றத்தை அளித்தது. கூடவே கொஞ்சம் திகைப்பும்.

‘முடிச்சுகள் அவிழும் நிலையில் இருக்கும்போது, மேலும் சிக்கல்கள் தோன்றுகிறதே’ நினைத்தபடியே அவரிடம் விடைபெற்று, பைக் நிறுத்தி இருந்த இடத்திற்குள் நடந்தார் குணாளன்.

9

மிஷனர் அலுவலகத்தில் செபாஸ்டியன், குணாளன் இருவரும் அமர்ந்திருக்க, கான்ஸ்டபிள் முன்னூத்தி பன்னிரண்டு இரண்டு டம்பளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். இருவரும் தேநீர் பருகியபடியே தங்கள் அடுத்த முயற்சி பற்றி பேச ஆரம்பித்தனர்.

“அந்த சோப் விளம்பரத்துப் பொண்ணு தங்கியிருந்த ஹவுஸ் ஓனர்கிட்ட அவ புது வீட்டு அட்ரஸ் கேட்டேன். தெரியாதுன்னு அவர் மறுத்தப்ப ரொம்ப அப்செட் ஆயிட்டேன் சார்.”

 “இதுக்காக ஏன் அப்செட் ஆகறீங்க சார்? உங்களுக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா? நாம அந்த கமாலியை இன்னும் விசாரிக்கவே இல்லை.” குணாளனுக்கும் பொறி தட்டியது.

“ஆமா சார், கமாலியை விசாரிச்சா அட்ரஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கு சார்.”

“செபாஸ்டியன் ‘குவாலிட்டி பிரிண்டர்ஸ்’ல இருந்து ஒரு போட்டோ கிராபர் அட்ரஸ் வாங்கிட்டு வந்தீங்கள்ல? அங்கேயும் நாம விசாரிக்கணும்.”

“ஓ.கே.சார்.”

“வாங்க, முதல்ல கமாலி வீட்டுக்குப் போகலாம். செபாஸ்டியன், கமாலியோட அட்ரஸ் எடுத்துக்கிட்டீங்களா?”

“இருக்கு சார்.”

மூவரும் ஜீப்பில் ஏறினார்கள்.

“கோடம்பாக்கம் ராம் தியேட்டருக்கு எதிர்த்த தெருவுக்குப் போகணும்.” ஜீப் டிரைவரை பணித்தார் செபாஸ்டியன். ராம் தியேட்டருக்கு எதிர்ப்புறம் உள்ள தெருவின் கடைசியில் பல ஒண்டுக் குடித்தனங்கள் இருந்தன. அதில் நாற்பத்தி இரண்டாம் வீட்டை சிரமப்பட்டு கண்டுபிடித்தனர்.

அந்த வீட்டு வாசலில் இரண்டு பெண் குழந்தைகள் பரட்டைத் தலையுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசைப் பார்த்ததும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

“இங்க, கமாலின்னு ஒரு ஆள் இருக்கிறாரா? நாற்பத்தி ரெண்டாம் நம்பர் வீடு.” செபாஸ்டியன் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த எண்ணிட்ட வீட்டிற்குள் இருந்து ஒரு பெண் வேகமாக வெளியில் வந்தாள்.

“கேட்டாரா, இந்த ஆளு. ஒழுங்கா சம்பாரிச்சு குடும்பம் நடத்துன்னா? இப்போ பாரு, போலீஸ் வந்து நிக்குதே. பாவி மனுஷன். இந்த ஆளுக்கெல்லாம் பொண்டாட்டி, பிள்ளைங்க ஒரு கேடு. சினிமாவாம் சினிமா” உரத்த குரலில் புலம்பிக் கொண்டே இவர்களை நோக்கி வந்தாள் அவள்.

“ஏம்மா, கமாலி யாரு? இப்ப எங்க?”

“அந்த ஆளு எம் புருஷன்தான்யா. ஸ்டுடியோவில வேலை பார்க்கறேன்னு சொல்லுவாரே தவிர என்ன வேலைன்னு இன்னி வரைக்கும் எனக்குத் தெரியாது. சில சமயம் கை நிறைய கொண்டு வந்து குடுப்பாரு. சில நேரம் வெறும் கையை விரிப்பாரு. ஏதாவது தப்பு பண்ணிட்டாராய்யா? எனக்கு பயம்மா இருக்கே?” மறுபடி பெருங்குரலில் புலம்ப ஆரம்பித்தவளைத் தடுத்தார் குணாளன்.

“இந்தாம்மா, உன் புருஷன் இப்ப எங்கே? அதைச் சொல்லு முதல்ல.”


கடுமையாக அவர் கேட்டதும் அவள் மேலும் பயந்தாள்.

“இன்னிக்கு வேலை ஒண்ணும் இல்லைன்னு பக்கத்துத் தெரு பெட்டிக்கடையிலதான் காலைல இருந்து உக்காந்திட்டிருக்கார். “ஏ பொம்மி, உங்க அப்பனை கூட்டிட்டு வாடி.” பரட்டைத் தலை சிறுமிகளில் ஒருத்தியை அனுப்பிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“ஐயா, அவரைப் புடிச்சிக்கிட்டு போயிடாதீங்கய்யா. அவரு சம்பாத்தியம் இல்லைன்னா நாங்க பட்டினிதான்யா கிடக்கணும்.”

கையில் பையுடன் ஒரு கிழவி வந்தாள். “ஏம்மே? உனக்கு அறிவு இருக்கா? எதுக்குமே இப்படி கத்தி கத்தி சாகற? கம்முனு கெடம்மே” அதட்டியதும் வாயை மூடிக் கொண்டாள் கமாலியின் மனைவி.

இதற்குள் கமாலியை சிறுமி அழைத்து வந்தாள்.

சல்யூட் அடித்தான் கமாலி. குணாளன் விசாரணையை ஆரம்பித்தார்.

“நீதான் கமாலியா?”

“ஆமா சார்.”

“எங்க வேலை பார்க்கற?”

“நிரந்தரமான வேலை கிடையாது சார். ஸ்டுடியோவில் அப்பப்ப கிடைக்கற வேலை செய்வேன் சார்.”

“ஸ்டுடியோவில் உனக்கு என்ன வேலை?”

ஒரு நிமிடம் மெளனம் சாதித்த கமாலி, “சில சினிமா கம்பெனிகளுக்கு ஆர்ட்டிஸ்ட் அரேன்ஜ் பண்ணிக் குடுப்பேன் சார்.”

“சினிமா கம்பெனிகளுக்கா? இல்லை... சினிமா நடிகர்களுக்கா?”

“சார்...” திகைத்தான் கமாலி.

“இங்க பாரு, உன்னைப் பத்தின எல்லா உண்மைகளும் எங்களுக்குத் தெரிஞ்சாச்சு. உண்மையைச் சொல்லலைன்னா முட்டியைப் பேத்துடுவோம். நிரஞ்சனை உனக்கு ரொம்ப பழக்கமோ?”

“நிரஞ்சன்... நிரஞ்சன் சாரா சார்?” இழுத்தான்.

வார்த்தைகள் சரளமாக வெளிவராமல் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டன.

“சார்... சார்... அது... வந்து... வந்து நிரஞ்சன் சாருக்குப் பொண்ணுங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் சார்.”

“அறிமுகப்படுத்தியா?”

“வந்து... சார் அவர் கூட வெளியூர் தங்கறதுக்கு ரெண்டு மூணு தடவை பொண்ணுகளை அனுப்பி இருக்கேன் சார்.”

 “இதுதான் அறிமுகமா? இதுக்கு நிரஞ்சன் கிட்ட பணம் வாங்குவியா?”

“ஆமா சார்.”

“அப்போ உன் பொழைப்பே இதுதான்னு சொல்லு.”

“அ... அ... ஆமா சார். சில ப்ரொட்டியூசருங்க, நடிகருங்க அழகான பொண்ணுகளை அனுபவிக்கணும்னு கேப்பாங்க. பப்ளிக்குக்கு தெரியாத முகமாகவும் இருக்கணும்பாங்க. அதை நான் ஏற்பாடு... செய்வேன்...”

“நிரஞ்சனைக் கடைசியா நீ எப்போ பார்த்த?”

“சுமாரா ஒரு மாசம் இருக்கும் சார். ஊட்டிக்குப் போறதா சொன்னார். ஒரு பொண்ணை அனுப்பி வச்சேன் சார்.”

குணாளன், ஷீலாவும் நிரஞ்சனும் இருந்த படத்தைக் காண்பித்தார். கமாலி வாங்கிப் பார்த்தான்.

“இந்தப் பொண்ணா நீ அனுப்பி வைச்சது?”

“இது இல்லை சார்.”

“ஏய் பொய் சொல்லாத. ஜாக்கிரதை.”

“இல்லை சார். சத்தியமா இந்தப் பொண்ணை எனக்குத் தெரியாது சார். இதுக்கு முன்னால நான் இவளைப் பார்த்ததே கிடையாது சார். என்னை நம்புங்க.”

“சும்மா பொய் சொல்லாத மேன். லாக்-அப்ல தள்ளினாத்தான் உண்மையைச் சொல்லுவியா? ம்...?”

குணாளன் மிரட்டினார்.

“நான் பொய் சொல்லலை சார். எனக்கு இவளைத் தெரியவே தெரியாது சார்” பேசிக் கொண்டே சட்டைப் பையில் இருந்து ஒரு சின்ன டைரியை எடுத்தான். பயத்தில் பொடித்திருந்த வியர்வையை வழக்கம் போல அழுக்குத் துண்டினால் துடைத்துக் கொண்டு, டைரியை குணாளனிடம் காண்பித்தான்.

“இங்க பாருங்க சார். இதுலதான் சார் பொண்ணுக அட்ரஸ், ரேட் எல்லாம் எழுதி வச்சிருக்கேன்.”

குணாளன் டைரியை வாங்கி அதன் பக்கங்களைப் புரட்டினார். சீதா, மாலா, ரீடா, சுனிதா என்று எழுதி அதன் கீழே விலாசமும் அதற்கு நேராக ரேட்டும் எழுதி வைத்திருந்தான். அது போக சில சினிமா கம்பெனிகளின் விலாசங்களைக் குறித்து வைத்திருந்தான். ஷீலாவின் விலாசமோ, பெயரோ அதில் இல்லை.

“இங்க பாரு. டைரியைக் காண்பிச்சு தப்பிச்சுட்டமேன்னு நினைக்காத. வீட்டுக்குள்ள பார்க்கணும்.”

“கான்ஸ்டபிள்ஸ். இவன் வீட்டுக்குள்ள போயி, ஏதாவது டைரி, அட்ரஸ், போட்டோ கிடைக்குதான்னு நல்லா, தரோவா சோதனை போடுங்க.”

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தை, கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர் கமாலியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போட்டனர். அவன் மனைவி வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

“சார், எதுவும் இல்லை சார்.” போலீஸ்காரர்கள் வெளியே வந்து குணாளனிடம் அறிவித்தார்கள்.

“ஏ, மேன் ஊரைவிட்டு எங்கேயும் போயிடாத. தெரியுதா? விசாரணைக்கு கூப்பிட்டனுப்பிச்சா உடனே ஸ்டேஷன் வந்து சேரணும் புரிஞ்சுதா?”

“சரி சார்.”

“ஏன் சார், பெரும்பாலும் நிரஞ்சனுக்கு இவன்தான் பொண்ணுகளை அறிமுகப்படுத்தி இருக்கான். இந்தப் பொண்ணை மட்டும் தெரியலைங்கறானே?”

“எனக்கும் இதே சந்தேகம்தான். இவன் மேல எப்பவும் ஒரு கண் இருக்கணும். கான்ஸ்டபிள் ஒருத்தரை மஃப்டியில் இவனைக் கண்காணிக்கச் சொல்லணும்.”

“சார், இந்த ஷீலாவோட அட்ரஸ் கிடைச்சுட்டா, நமக்கு ஏறக்குறைய கேஸ் முடிஞ்சது போலத்தான்.”

செபாஸ்டியன் சொன்னதை ஆட்சேபித்த குணாளன், “நாம இப்ப அந்த போட்டோ கிராஃபர் அருணை போய்ப் பார்க்கலாம். செபாஸ்டியன், அட்ரஸ் சொல்லுங்க.”

“பாளையக்காரன் தெருவில் பதினாலாம் நம்பர் சார்.” செபாஸ்டியன் டைரியைப் பார்த்து சொன்னார்.

“ஓ, இங்க பக்கத்துல தான். டிரைவர், பாளையக்காரன் தெருவுக்கு விடு.”

பாளையக்காரன் தெருவில் பதினாலாம் நம்பர் வீட்டின் முன் ஜீப் நின்றது. கீழே இறங்கினார்கள், இருவரும். வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

“சார், இங்க ஒரு போட்டோ கிராஃபர், பேர் அருண். அவர் இருக்காரா?” போலீஸ் சீருடையில் ஆட்களைப் பார்த்ததும் புருவங்களைச் சுருக்க, நெற்றியில் முடிச்சுகளை உண்டாக்கிய பெரியவர், “அருண் மாடியில இருக்கான்” ரத்தினச் சுருக்கமாக பதில் கூறிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாழ்போட்டுக் கொண்டார்.

மாடிப்படிகளில் ஏறிச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தார் செபாஸ்டியன். குணாளனும் பின் தொடர்ந்தார்.

கதவு திறந்திருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் வந்து நின்றான். ஊதினால் பறந்து விடுவான் போன்ற மெல்லிய தேகம். தாடிக்கு நடுவில் முகம்.

“சாரே... நீங்க...”மலையாளத்தில் பொழிந்தான்.

“ஒரு மர்டர் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கோம்.” செபாஸ்டியன் சொன்னான்.

“மர்டர் கேஸா? எண்டே குருவாயூரப்பா?” அதிர்ந்தவன், நெஞ்சில் கை வைத்து குருவாயூரப்பனைக் கூப்பிட்டான். பின் சுதாரித்து, “உள்ள வெரணும் சாரே.” அழைத்தான். உள்ளே சென்றார்கள்.

குணாளன் ஆரம்பித்தார், “மிஸ்டர் அருண், நீங்க போட்டோ, டிரான்ஸ்பரன்ஸி எல்லாம் எடுத்து விற்பனை செய்றதுண்டா?”

“அதன்னே என்டே பிஸினஸ்.”

“இந்தப் படத்தைப் பாருங்க.”

அருண் வாங்கிப் பார்த்தான்.

“ஈ பிக்சர் ஞான் எடுத்ததல்லோ?”

“எங்கே எடுத்தீங்க?”

“கோவாவில எடுத்து.”

“என்ன? கோவாவிலயா?”


“அதே சாரே. ஞான் கோவாக்கே போயிருன்னப்ப பீச்சிலே ஈ கப்பிளைக் கண்டு சினிமா நடிகர் நிரஞ்சன் ஒரு வித்தியாசமான செட்டப்-ல கண்டு. உடனே ஞான் அவரு ரெண்டு பேரையும் போட்டோ எடுத்து.”

“நிரஞ்சன் கூட இருக்கற இந்தப் பொண்ணு யார்னு தெரியுமா உங்களுக்கு?”

“எனக்கு அறியலில்லா சாரே. பச்சே இவளு சினிமாவுல நடிக்கான போகனுண்டுன்னு ஞான் கேட்டுட்டுண்டு.”

“எந்தக் கம்பெனின்னு தெரியுமா?”

அரை நிமிடம் யோசித்த அருண் உடனே சொன்னான். “த்ரீ எஸ் கம்பெனியா விஜாரிக்குன்ன. பட் ஷ்யூர் அல்ல.”

 “இந்தக் கம்பெனி நல்ல கம்பெனியா?”

“அதெல்லாம் எனிக்கு அறியில்லா சாரே.”

“கோவாவுல எடுத்த போட்டோன்னு சொல்றீங்க, கரெக்டா எந்த தேதின்னு சொல்ல முடியுமா?”

“ஓ. டுவன்டியத் சாரே.”

“ஓ.கே. மிஸ்டர் அருண். தாங்க்யூ.”

இருவரும் கீழே இறங்கி ஜீப்பின் அருகே வந்தார்கள்.

“பக்கத்துல டெலிபோன் பூத்ல இறங்கி டைரக்டரியைப் பார்த்து த்ரீ எஸ் சினிமா கம்பெனிக்கு போன் பண்ணித்தான் பார்க்கலாமே?”

“செபாஸ்டியன், நீங்க போய் போன் பண்ணி அட்ரஸ் கேட்டுப் பாருங்க.”

செபாஸ்டியன் இறங்கி பூத்திற்குள் சென்று தொலைபேசியில் எண்களைச் சுழற்றினான்.

“ஹலோ, டவுள் செவன் த்ரீ எய்ட் செவன்?”

மறுமுனையில் குரல் ஆமோதித்தது.

“த்ரீ எஸ் புரொடக்ஷன்ஸ்?” உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் கேட்டான் செபாஸ்டின்.

“ஆமா சார். த்ரீ எஸ்தான். அந்தக் கம்பெனி மேனேஜர் தான் பேசறேன். என்ன விஷயம்?”

‘சாதாரணமாக இரண்டு கேள்வி கேட்பதற்குள் படு டென்ஷனாகிறானே மனுஷன்’ செபாஸ்டியன் நினைத்துக் கொண்டான்.

‘இருய்யா, உனக்கு ஐஸ் வச்சே விஷயத்தை வாங்கறேன் பாரு’ தொடர்ந்து பேசினான் செபாஸ்டியன்.

“ஓ. மேனேஜர் சாரா? நீங்கதான் த்ரீ எஸ் கம்பெனியில ஆல் இன் ஆலாம். உங்களாலதான் கம்பெனி நிர்வாகம் வெற்றிகரமா நடக்குதுன்னு பேசிக்கிறாங்க சார்.”

“அதுக்கெல்லாம் தனி திறமை வேணும் சார். லட்சக்கணக்கா புழங்கற இடத்துல நாணயமா மேனேஜ் பண்ணனும்னா சும்மாவா சார்?” செபாஸ்டியன் அந்த ஆள் தலையில் வைத்த ஐஸ் நன்றாக உருகி வழிந்தது.

“சார், என்ன விஷயமா போன் பண்ணினீங்க? நீங்க யாரு?” மிகவும் குழைவாக மாறியது மேனேஜரின் குரல்.

“நானும் உங்களைப் போல ஒரு சினிமா கம்பெனி மேனேஜர்தான். ஆனா உங்களோடது பெரிய கம்பெனி. நான் வேலை பார்க்கற கம்பெனி சோட்டா சார். ரொம்ப சோட்டா. நமக்கு வேண்டிய ஒரு பொண்ணு ஷீலான்னு, அது ரொம்ப சான்ஸ் கேட்டு நடையா நடக்குது.”

“அட? ஷீலாவா? அது இப்ப எங்க கம்பெனி எடுக்கப் போற புதுப் படத்துல ஹீரோயின் சார். சினிமாவுக்காக மதுமதின்னு இப்பதான் பேரை மாத்திக்கிச்சு.”

“எங்க கம்பெனியிலயும் புது ஆளா தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பொண்ணு ஞாபகம் வந்தது. ஆனா இதோட அட்ரஸ் தொலைச்சுட்டேன்.”

“அட இவ்வளவுதானா? உங்களுக்கென்ன மதுமதியோட அட்ரஸ் வேணும். அவ்வளவுதானே? எழுதிக்கோங்க. நம்பர் இருபத்தியெட்டு, பார்கவி விலாஸ், அசோக் நகர், சென்னை, எண்பத்தி மூணு.”

“ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“தாங்க்ஸ் இருக்கட்டும். நான்தான் உங்க கம்பெனி படத்துக்கு சிபாரிசு பண்ணினேன்னு மதுமதிகிட்ட நீங்களும் சொல்லுங்க.”

“உங்க பேரை சொல்லிதான் சார் எங்க படத்துல புக் பண்ணப் போறேன்.”

“ஹி... ஹி... ஹி...” ஏகப்பட்ட வழிசல் வழிந்தது. போனில் மறுமுனை. ரிசீவரைப் பொருத்திவிட்டு அட்ரசுடன் நடந்தான், ஜீப் நின்ற இடத்திற்கு.

பார்கவி விலாஸ், சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த காம்பவுண்டு சுவரை ஒட்டி, தன் காரை நிறுத்திவிட்டு, இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போனார் குணாளன். ஜன்னல் வழியாகப் பார்த்திருப்பாள் போலும், ஒரு சிறுமி ஓடி வந்தாள். “நீங்க யாருங்க?” கேட்டாள்.

“மதுமதியம்மா இருக்காங்களா?”

“இருக்காங்க. நீங்க யாருன்னு சொல்லுங்க.”

“நான் பத்திரிகையில இருந்து வந்திருக்கேன்னு மதுமதியம்மாகிட்ட சொல்லு.”

“நீங்க உட்காருங்க. நான் உள்ள போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்.”

பால்கனியில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியைக் காண்பித்தாள்.

குணாளன் உட்கார்ந்தார். சுற்றிலும் நோட்டம் விட்டார். அது ஒரு மினி பங்களாவாக இருந்தது. ‘ஒரு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கின உடனே இவ்வளவு பெரிய வீட்டுக்கு வந்துட முடியுமா?’ சிந்தித்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.

“வணக்கம் சார்” மதுமதி பவ்யமாக கும்பிடு போட்டாள்.

“நான் வெள்ளித் திரை பத்திரிகை நிருபர். என் பேர் மதன். நீங்க த்ரீ எஸ் ப்ரொடக்ஷன்ஸ் எடுக்கற படத்துல புதுமுகமா அறிமுகமாறீங்களாமே. புதுமுகம்- அறிமுகம்னு எங்க பத்திரிகையில ஒரு பகுதி இருக்கு. அதுக்காக உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கேன்.”

“ரொம்ப சந்தோஷம் சார். காபியா, கூல்டிரிங்ஸ்ஸா சார்? ஏதாவது குடிங்க சார்.”

“நோ, தாங்க்ஸ். நாம பேட்டியை ஆரம்பிக்கலாமா? நீங்களும் உட்காருங்க.”

மதுமதி எதிர்த்த நாற்காலியில் உட்கார்ந்தாள். அவசர ஒப்பனையிலும் அதிக அழகாகவே இருந்தாள்.

அவள் பேசும்பொழுது அடிக்கடி கண் இமைகளை மூடித் திறந்தாள்.

“மதுமதிங்கற பேர் நீங்க சினிமாவுக்காக வச்ச பேரா?”

“இல்லை சார். என் பேர் மதுமதிதான். சினிமாவுக்காக பேர் மாத்தலை.”

“உங்களுக்கு சொந்த ஊர்?”

“இதே மெட்ராஸ்தான்.”

“எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? எங்க படிச்சீங்க?”

“ஸ்கூல் படிப்பு சர்ச் பார்க் கான்வென்ட்டில முடிச்சேன். மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சது. அதுக்குள்ள சினிமா சான்ஸ் கிடைச்சிட்டதால, மெடிக்கல் காலேஜ் போகலை.”

“சினிமான்னா உங்களுக்கு அத்தனை ஆர்வமா?”

“ஆமா சார். எனக்கு நடிப்புன்னா ரொம்ப இஷ்டம். அதனால படிப்பைக் கூட விட்டுட்டேன்.”

“உங்களுக்கு சினிமா சான்ஸ் எப்படி கிடைச்சது?”

“சோப் விளம்பரத்துக்கு மாடலிங் பண்ணி இருந்ததை ஒரு பத்திரிகையில பார்த்த டைரக்டர் பரத் எனக்கு சான்ஸ் குடுத்தார். பரத் கிட்ட அந்த விளம்பரத்தை காண்பிச்சு எனக்காக சிபாரிசு பண்ணியது நடிகர் ராம்குமார்.”

“எடுத்த உடனேயா கதாநாயகியா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு?”

“ஆமா சார். இது எல்லோருக்குமே கிடைக்கறது இல்லை. அது மட்டும் இல்லை. என்னோட முதல் படத்துலயே நான் ராம்குமாருக்கு ஜோடியா நடிக்கறேன். என்னோட அழகும், முகவெட்டும் ரொம்ப நல்லா இருக்குன்னு ராம்குமார் சொல்வார்.”

“உங்களுக்கு தாய் மொழியே தமிழ்தானே?”

“ஆமா சார், நான் தமிழ்ப் பொண்ணுதான்.”

“சில பேர் பணம் சம்பாதிக்கறதுக்காக நடிக்க வருவாங்க. சிலர் கலை ஆர்வத்துக்காக இதுல ஈடுபடுவாங்க. நீங்க எப்படி?”


“பணமா? பணம் என்ன சார் பணம்? அது என்கிட்ட ஏராளமா இருக்கு. என்னோட திறமைகளை வெளிப்படுத்தணும். நடிப்புக் கலையில் உள்ள ஆர்வம் அடங்கற வரைக்கும் நடிச்சுக்கிட்டே இருக்கணும்.”

“எக்கச்சக்கமான கலைச்சேவை மனப்பான்மையில இருக்கீங்க. ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம்.”

“சார், பத்திரிகைகாரங்கதான் ஒரு கலைஞரை தூக்கி விடவும் முடியும். தூர எறியவும் முடியும். என்னோட திரை உலக பிரவேசத்தைப் பத்தி நல்லா எழுதுங்க சார்.”

“அதுக்கென்ன, எழுதிட்டாப் போச்சு. அதுக்காகத்தான பேட்டி எடுத்துட்டிருக்கேன். மதுமதி, நீங்க வெளிநாடுகளெல்லாம் போயிருக்கீங்களா? அங்க எல்லாம் சினிமாத்துறை ரொம்ப முன்னேறி இருக்குன்னு சொல்றாங்க.”

“என்னோட வாழ்க்கையில நான் ரொம்ப ஆசைப்படறது இந்த வெளிநாட்டுப் பிரயாணம்தான் சார். இது வரைக்கும் போனதில்லை. சீக்கிரமா போறதுக்கு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்.”

“இந்தியாவுல உங்களுக்குப் பிடிச்ச ஊர் எது? உதாரணமா சம்மர் டேஸ்ல ஊட்டி, கொடைக்கானல் போறோம் இல்லையா? அதே மாதிரி இடங்கள்ல உங்களுக்குப் பிடிச்சது எது?”

“நான் அது போல எந்த ஊருக்கும் போனது இல்லை.”

“உங்களைப் பார்த்தா ரொம்ப ரிச்சா தெரியுது. ஒரு ஹில் ஸ்டேஷன், டூரிசம் ப்ளேஸ் கூட இந்தியாவுக்குள்ள போனது இல்லையா?”

“இல்லை சார். நான் எங்கயும் போனது இல்லை.”

“நீங்க எந்த நடிகருடைய படங்களை விரும்பிப் பார்ப்பீங்க.”

“எனக்கு ராம்குமார் படங்கள்னா ரொம்ப இஷ்டம். அப்புறம் பழைய படங்கள் அதிகமா விரும்பிப் பார்ப்பேன். சாவித்திரிம்மா, சரோஜாதேவிம்மா, பண்டரிபாயம்மா இவங்கள்லாம் நடிக்கறதைப் பார்த்து நானும் அந்த மாதிரி நடிக்கணும்னு முயற்சி பண்ணுவேன்.”

“நிரஞ்சன் படம் பார்க்க மாட்டீங்களா?”

“நிரஞ்சன்? ஓ... பார்ப்பேனே?”

“அவரை நேர்ல பார்த்துப் பேசி இருக்கீங்களா?”

அடுக்கடுக்காய் பொய்களை அள்ளி வீசிய மதுமதி கடைசியாய் சொன்ன, ‘நிரஞ்சனைப் பார்த்ததே இல்லை’ என்ற பொய் குணாளனை திகைக்க வைத்தது.

நிரஞ்சனும், மதுமதியும் இணைந்திருந்த படத்தினைத் தூக்கி அவர் முன் இருந்த மேஜையின் மீது போட்டார் குணாளன்.

“இது யார்? நிரஞ்சன் இல்லையா? கூட இருக்கறது நீங்க இல்லையா?”

“சார்... நீங்க... இது... இது?”

குணாளன் தன் கார்டை எடுத்து அவள் முன் காட்டினார்.

“நான் அஸிஸ்டென்ட் கமிஷனர். நிரஞ்சனைப் பார்த்ததே இல்லைன்னு சொன்னியே, இப்போ இதுக்கு என்ன அர்த்தம்? உன் அண்டப்புளுகு எல்லாம் சினிமா ஆளுககிட்ட வுட்டீனா நம்புவாங்க. போலீஸ் டிபார்ட்மென்ட் நம்பாது.”

“சார்... இது... நான்...”

“நிரஞ்சனை நீதான் கொலை செஞ்சிருக்க. அதுக்கு ஆதாரம் நீ சொன்ன பொய்யும், இந்தப் படமும்.”

“சார், நான் சொல்றதைக் கேளுங்க சார். இந்தப் படத்துல இருக்கறது நான்தான் சார். உங்ககிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன் சார். நிச்சயமா இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது சார்.”

“அப்போ உண்மைகளைச் சொல்லு.”

“சொல்லிடறேன் சார்.”

சில நிமிடங்களுக்கு மெளனம் சாதித்தாள். குணாளனைப் பார்த்தாள். தலையைக் குனிந்தாள். பின் தயக்கமாக, மெதுவான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“சார், நான் சினிமாவுல நடிக்க ஆசைப்பட்டு ஊரை விட்டு இங்க வந்தேன். இங்கே வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சது அழகா மட்டும் இருந்தா போதாது. அதிர்ஷ்டமும் கூடி வரணும்னு. சினிமா சான்சுக்காக அலைஞ்சு நான் கையில இருந்த காசெல்லாம் கரைஞ்சு போக பட்டினி கிடந்தேன். வயித்துப் பிழைப்புக்காக...”

“அதெல்லாம் தெரியும். மேலே சொல்லு.”

“காசுக்காகத்தான் நிரஞ்சன் கூடவும் நான் கோவாவுக்குப் போனேன். அவர் கூட தங்கி இருந்துட்டு நான் மட்டும் திரும்பிட்டேன்.”

“நிரஞ்சன்தான் உன்னைப் போகச் சொல்லிட்டாரா?”

“ஆமா சார்.”

“அவர் மட்டும் அங்கேயே தங்கிக்கிட்டாரா?”

“நான் அங்கிருந்து கிளம்பற வரைக்கும் அவர் அங்கதான் இருந்தார். அதுக்கப்புறம் எனக்குத் தெரியாது சார்.”

“இதை ஏன் நீ என்கிட்ட மறைச்சே? எந்த ஊருக்கும் போனதில்லைன்னு சொன்ன? நிரஞ்சனையே பார்த்தது இல்லைன்னு சொன்ன?”

“சார், நான் தப்பானவள்தான். அதுக்காக நான் நிரஞ்சன்கூட வெளியூர்ல தங்கி இருந்தேன்னு வெளிப்படையா சொல்லிக்க முடியுமா சார்? அதனாலதான் மறைச்சேன். மத்தபடி அவரோட கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.”

“கோவாவுல நிரஞ்சனைப் பார்க்க யாராவது வந்தாங்களா?”

“நான் அவர் கூட இருந்த வரைக்கும் யாரும் வரலை.”

“இதை நான் நம்பலாமா?”

“நம்பலாம் சார். நான் இப்பதான் சினிமாவுல காலடி வச்சிருக்கேன். இதுக்காக ரொம்ப கக்ஷ்டப்பட்டிருக்கேன். என்னைக் காப்பாத்துங்க சார். நான் எந்தக் குற்றமும் பண்ணலை.”

“குற்றம் செய்யலைன்னா உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இதில் நான் காப்பாத்தறதுக்கு என்ன இருக்கு?”

“உண்மைகளை அப்பட்டமா சொல்லிட்டேன் சார். என் மேல எந்தத் தப்பும் இல்லை.”

“கோவாவுல எந்த ஹோட்டல்ல தங்கி இருந்தீங்க?”

“பீச் பாம் ஹோட்டல் சார்.”

“இந்தப் படம்?”

 “இது பீச்ல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும்போது யாரோ எடுத்திருக்காங்க சார்.”

“நிரஞ்சன் கேஸ் முடியற வரைக்கும் நீ எங்கேயும் வெளியூருக்கு போகக் கூடாது. தேவைப்பட்டா மறு விசாரணைக்கு வருவேன்.”

“சரி சார்.”

அவர் காரைக் கிளப்பிக் கொண்டு போகும் வரை, ஜன்னல் வழியாக பார்த்திருந்து விட்டு தொலைபேசி அருகே வேகமாகச் சென்றாள் மதுமதி.

பதற்றத்துடன் சில எண்களைச் சுழற்றினாள். “சார், போலீஸ் என்னைத் துறுவ ஆரம்பிச்சுட்டாங்க. எதுவுமே தெரிய வாய்ப்பு இல்லைன்னு சொன்னீங்க. இப்ப நான் மாட்டிக்குவேன் போலிருக்கே. இப்ப நான் என்ன செய்யறது?” தொலைபேசியின் மறுமுனை கூறியதை கவனமாகக் கேட்ட மதுமதி மேலும் அதிக பதற்றம் அடைந்தாள்.

மறுநாள், காலை மறுபடியும் மதுமதியின் வீட்டிற்கு விசாரணைக்காகத் தன்னுடன் இரண்டு கான்ஸ்டபிள்களை அழைத்துச் சென்றார் குணாளன்.

மதுமதியின் மினி பங்களாவின் வெளிப்புறக் கதவில் பெரிய பூட்டு தொங்கியது.

போலீஸ் ஜீப்பை பார்த்து பக்கத்து பங்களாவில் இருந்து சிலர் எட்டிப் பார்த்தனர்.

“கான்ஸ்டபிள், அவங்க கிட்ட போய், இந்த வீட்ல இருந்த மதுமதி எங்கன்னு கேளுங்க.”

“யெஸ் சார்.”

அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை நெருங்கினார் போலீஸ்காரர்.

“சார், பக்கத்துல மதுமதின்னு ஒரு அம்மா இருந்தாங்களே, அவங்க வெளில போயிருக்காங்களா? வீடு பூட்டியிருக்கு?”

“அந்தம்மா எங்கே போனாங்கன்னு தெரியாது. ஒரு பெரிய கார்ல ஏறிப் போனாங்க.”


“நேத்து ராத்திரியே போயிட்டாங்க. காலைல கூட திரும்பி வர்லை.”

“யாராவது வந்து கூட்டிட்டுப் போனாங்களா?”

“அதெல்லாம் நான் பார்க்கலை. பெரிய கார்ல போறதை மட்டும்தான் பார்த்தேன்.”

‘இதற்கு மேல் பேசினால் வீண் வம்பு’ என நினைத்த அவர் நகர்ந்தார். போலீஸ்காரர் குணாளனிடம் விபரங்களைக் கூறினார்.

“கான்ஸ்டபிள்ஸ் பூட்டை உடைங்க. வீட்டுக்குள்ள போய் பாருங்க. சாமான்கள் எதுவும் இருக்கா? சுத்தமா காலி பண்ணிட்டாங்களான்னு” குணாளன் கட்டளை இட்டதும் போலீஸ்காரர்கள் பூட்டை உடைக்க முனைந்தனர்.

பூட்டு உடைபட்டு கதவு திறந்தது. உள்ளே போனார்கள். மேஜை, நாற்காலி, சோபா போன்றவை அப்படியே போட்ட இடத்தில் இருந்தன. சமையலறையில் கூட  அத்தனை பொருட்களும் அப்படியே இருந்தன.

குணாளன் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு அலமாரியையும் திறந்து பார்த்தார். பழைய காகிதங்கள் சுருட்டப்பட்டுக் கிடந்தன. ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். ஒரு அலமாரியில். மதுமதியின் விதவிதமான போஸ்களில் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பங்கள் கிடந்தன. அவற்றையும் புரட்டிப் பார்த்தார்.

சில பழைய கைப்பைகள் கிடந்தன. அவற்றைத் திறந்து பார்த்தார். ஒவ்வொரு அறையையும் சோதனை போட்ட குணாளன், சமையலறையின் உள்ளே நுழைந்து பார்த்தார். அங்கேயும் எந்தப் பொருட்களும் அகற்றப்படாமல் இருந்தன.

சமையல் மேடை மீது ஒரு புது காஸ் அடுப்பு இருந்தது. மேடையில் வலது பக்க மூலையில் ஏதோ கறுப்பும், வெள்ளையுமாகத் தெரிந்தது.

அருகில் சென்று கூர்ந்துக் கவனித்த குணாளன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தார். முக்கியமான தடயம் கிடைத்த ஆர்வத்தில் அவற்றை மிகவும் கவனமாக ஆய்ந்து பார்த்தார்.

10

குணாளன், செபாஸ்டியன் இருவரும் கலந்து உரையாடிக் கொண்டிருந்தனர். மதுமதியின் வீட்டில் கிடைத்த தடயங்களை வைத்து அதன் மூலம் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி குணாளன் எடுத்துக் கூறினார்.

“இந்த பில் ஒரு டெய்லர் கடையோடது. இதைப் பார்த்தாலே தெரியுது. ரொம்ப பெரிய, காஸ்ட்லி டெய்லரிங் ஷாப்பாத்தான் இருக்கணும்னு.”

அதை வாங்கிப் பார்த்தான் செபாஸ்டியன். “சார், இதுல ஷாப்போட பேர் இருந்த பக்கம் பாதி எரிஞ்சு போயிருக்கே?”

“அதுக்குக் கீழே பாருங்க. எந்த ரோடுன்னு முழுசா இல்லாவிட்டாலும் கண்டுபிடிச்சுடற மாதிரி இருக்கு.” குணாளன் சுட்டிக்காட்டினார்.

“சார், இது நுங்கம்பாக்கம் ஹைரோடா இருக்கலாமோ? பாக்கம்ங்கற வார்த்தை மட்டும் தான் இருக்கு. ஆனா மெட்ராஸ் சிக்ஸ் நல்லா தெளிவா தெரியுது சார்.”

“ஆமா, இது நிச்சயமா நுங்கம்பாக்கம் ஹைரோடிலதான் இருக்கணும்.”

“இது யாருக்கு பில் பண்ணியதுன்னும் தெரிஞ்சுக்க முடியாம, மேல பேர் எழுதற இடம் முழுசும் கருகிடுச்சு. ஆனா பில் நம்பர் இருக்கு. பில் நம்பரை வச்சு பார்ட்டி யார்னு கண்டுபிடிச்சுடலாம். கடை எதுன்னு தெரியணும்.”

“அவசர அவசரமா எரிச்சதுனால முழுசும் எரிஞ்சுருச்சான்னு கூட பார்க்காம விட்டிருக்காங்க.”

“இன்னொரு பில் இருக்கே? அது என்ன சார்?”

“இதுதான் ரொம்ப முக்கியமான தடயம். ஆனா பெரும்பாலும் எரிஞ்சாச்சு.” அந்த பில்லைக் காட்டினார் குணாளன்.

“கெமிக்கல்ஸ்ங்கற வார்த்தை மட்டும் தெளிவா இருக்கு. பிராண்ட் பேரோ, கடை பேரோ ஏதோ ஒண்ணு இருந்திருக்கணும். அந்தப் பகுதி எரிஞ்சு போயிருக்கு.”

“சார், கீழே பாருங்க சார், கோவான்னு இருக்கு. சைடில பில் நம்பர் கூட அப்படியே இருக்கு.”

“கோவாவுல இருக்கற கெமிக்கல் ஷாப் அத்தனையும் கான்ட்டாக்ட் பண்ணனும்.”

“சார், நிரஞ்சன் மதுமதி கூட தங்கி இருந்த ஹோட்டல்ல விசாரிக்கலாம். நமக்கு இன்னும் உபயோகமா இருக்கும் சார்.”

“ஆமா. நானும் நேத்தே இதைப்பத்தி யோசிச்சேன். நீங்க நுங்கம்பாக்கம் ஹைரோடில இருக்கற டெய்லர் ஷாப்புங்களுக்குப் போய் விசாரிங்க. இந்த பில்லைக் காண்பிச்சு டெய்லர் ஷாப் எதுன்னு கண்டுபிடிங்க.”

“டெலிவரி பண்ணின ஐட்டங்கள் என்னன்ன சார்?”

“ஒரு பான்ட், ஒரு ஷர்ட் அவ்வளவுதான்.”

“இது எந்த அளவுக்கு நமக்கு உதவியா இருக்கும்னு தெரியலையே?”

“மதுமதி வீட்டில் கிடைச்சதால கண்டிப்பா நமக்கு தேவையான தகவல் கிடைக்கும். அவ மேல தப்பு இல்லைன்னா ஏன் அவ வீட்டை விட்டுப் போகணும்? அதுவும் அவசர அவசரமா காலி பண்ணி இருக்கா. முக்கியமான துணிமணிகள் தவிர மற்ற சாமானெல்லாம் அப்படியே இருக்கு.”

“இந்த டெய்லர் ஷாப் பில்லை வச்சு அந்த நபர் யாருன்னு கண்டுபிடிச்சா, அந்த நபருக்கும், மதுமதிக்கும் என்ன தொடர்புன்னு தெரிய வரும்.”

“இந்த கெமிக்கல்ஸ் பில்லை ஃபொரான்சிக் லாபுக்கு அனுப்பினா இது என்ன உபயோகத்துகாகன்னு தெரியும். சாதாரணமா இருந்தா ஏன் இதை எரிக்கணும்? இன்னொன்னு இதுல பில் பண்ணி இருக்கற கெமிக்கல்ஸ் ரொம்ப பெரிய தொகையாயிருக்கு. அந்த அளவு இதோட உபயோகம் என்னன்னு தெரிஞ்சா குற்றவாளியை ட்ரேஸ் அவுட் பண்றது ரொம்ப ஈஸி.”

“லாப் இன்சார்ஜ் திவாகரை கான்ட்டாக்ட் பண்ணனும்.”

“நான் முதல்ல நுங்கம்பாக்கம் ஹைரோட் போய் இந்த பில்லுக்குரிய டெய்லரிங் ஷாப்பை தேடிப் பார்க்கறேன் சார்.”

“ஓ.கே. செபாஸ்டியன். இந்த பில்லை எடுத்துக்கோங்க. இந்த கெமிக்கல் ஷாப் பில்லை ஃபாரான்சிக் லாப் திவாகர்கிட்ட குடுத்து இம்மீடியட்டா விபரங்கள் வேணும்னு சொல்லிடுங்க.”

“சரி சார்.” செபாஸ்டியன் இரண்டு பில்களையும் பத்திரமாக ஒரு கவரில் போட்டு எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தான் செபாஸ்டியன்.

வலது பக்கம் ‘ஸ்டைல்கிங் டெய்லரிங்’ என்ற போர்டு தென்பட்டது. செபாஸ்டியன் பைக்கை நிறுத்தி இறங்கினான். அந்தத் தையலகத்திற்குள் சென்றான்.

அங்கே சராசரி உயரத்தை விட மிகவும் குள்ளமான ஒருவர் பான்ட் துணிகளை லாவகமாக வெட்டிக் கொண்டிருந்தார்.

“நீங்கதான் இந்தக் கடை உரிமையாளரா?”

“ஆமா சார். டிரஸ் தைக்கணுமா?”

“இல்லை. நான் கேஸ் விஷயமா விசாரிக்க வந்திருக்கேன்.”

மலர்ந்திருந்த அவர் முகம் இதைக் கேட்டதும் இருட்டானது.

“கேஸா?”

“ஆமா. இதோ இந்த பில்லைப் பாருங்க. மெதுவா... பாதி தீயில் எரிஞ்சிருக்கு. கேர்ஃபுல்லா பாருங்க.”

அவர் பில்லை வாங்கிப் பார்த்தார்.

“இது எங்க கடையோட பில் இல்லை சார்.”

“உங்க கடை பில்லைக் காமிங்க பார்க்கலாம்.”

அவர் பில் புக்கை எடுத்து வந்தார். செபாஸ்டியனிடம் காண்பித்தார். அந்தக் கடையின் பில் வேறு வண்ணத்தில், வேறு அமைப்பில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

“ரொம்ப நாளாவே இந்தக் கலர்லதான் பில்புக் பிரிண்ட் பண்றீங்களா? இல்லை, டிசைன், கலரெல்லாம் மாத்தி இருக்கீங்களா?”


“இந்த ஷாப் ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆச்சு சார். அன்னில இருந்து இன்னி வரைக்கும் அதே டிசைன். அதே கலர்தான் சார்.”

“பழைய பில் புக் இருந்தா காட்டுங்க.”

பழைய பில் புக்குகளை எடுத்து வந்து காண்பித்தார். எல்லாம் ஒரே வண்ணத்தில், ஒரே டிசைனில் இருந்தன.

“ஓ.கே. தாங்க்யூ.”

செபாஸ்டியன் வெளியேறி பைக் நிறுத்தும் இடத்திற்கு வந்து பைக்கைக் கிளப்பினான்.

அதே தெருவில் இருந்த மூன்று தையலகங்களில் விசாரித்தான்.

பின் ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸ் வழியாக போனபோது யோசித்தான்.

“இந்தக் காம்ப்ளெக்ஸில் ஏதேனும் டெய்லரிங் ஷாப் இருக்குமோ?”

உடனே பார்சன் வளாகத்தின் உள்ளே சென்று பைக்கை நிறுத்தி விட்டு முதலில் அடிவாரப் பகுதியைச் சுற்றினான். பின், மேலே ஏறி வந்து முதல் தளத்தில் சுற்றியபோது அங்கே ஒரு தையலகத்தைப் பார்த்தான். நின்றான். பெயர் பலகையில் ‘ஹீரோ டெய்லரிங் ஷாப்’ என்று எழுதப்பட்டிருந்தது, ஆங்கிலத்தில்.

மிகப் பெரியதான, நவீனமாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றான். முன்பக்கம் இருந்த மேஜை அருகே ஒருவன் நின்றிருந்தான். அவனிடம், “இந்த பில் உங்க கடை பில்லா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் செபாஸ்டியன்.

திடீரென செபாஸ்டியன் கேட்டதும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்ஸ்பெக்டர் என்று இனம் கண்டு கொண்டதும் அதிகமாக குழம்பினான்.

“ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன். இந்த பில் உங்க கடையோட பில்லான்னு பார்த்து சொல்லுங்க.” செபாஸ்டியன் கேட்டான்.

பில்லை நன்கு கவனித்துப் பார்த்தான் அவன்.

“ஆமா சார். இது எங்க கடை பில்தான்.”

“நீங்க இந்தக் கடையில வேலை பார்க்கறீங்கா? ஓனரைக் கூப்பிடுங்க.”

“இதோ ஒரு நிமிஷம் சார்.”

அவன் உள்பக்கம் சென்று ஒருவரை அழைத்து வந்தான். அந்த ஆள் மைக்கேல் மதன காமராஜன் படத்தில், கமலின் பாடிகார்ட் பீம்பாய் போல் வாட்ட சாட்டமாக இருந்தார். வெள்ளை ஜிப்பா, குர்தாவில் வட இந்தியத் தோற்றத்தில் காணப்பட்டார்.

“வாங்கோ சார். என்ன விசயம்? நமக்கு தமில் குஞ்சம் குஞ்சம் தெரியும். மேம் பம்பாய் வாலா சார்.”

“உங்க பேர்?” செபாஸ்டியன் உற்சாகத்துடன் விசாரணையை ஆரம்பித்தான்.

“சுதிர்கான்.”

“மிஸ்டர் சுதிர், முக்கியமான ஒரு விஷயமா உங்களை என்கொய்ரி பண்றதுக்காக வந்திருக்கேன். இந்த பில்லைப் பாருங்க. இது உங்க ஷாப்போட பில். இதில் பாதி எரிஞ்சு போச்சு. ஆனா டெலிவரி பண்ணின ஐட்டம் எழுதி இருந்த இடம், பில் நம்பர் எல்லாம் தெளிவா இருக்கு, பாருங்க.”

சுதிர் வாங்கிப் பார்த்தார்.

“பாய், பாய்,” உள்பக்கம் பார்த்து கூப்பிட்டார்.

ஒரு சின்னப் பையன் ஓடி வந்தான்.

“க்யா சாப்?” பையன் கேட்டான்.

“நைன்டீன் நைன்டி எய்ட்கா பில்புக் லாவோ”

மேஜை டிராயரைத் திறந்து, பையன் ‘லாவிக்’ கொண்டு வந்தான். அதை வாங்கிய சுதிர் நம்பர் வாரியாக கவனமாக பார்த்தார். செபாஸ்டியன் சொன்ன நம்பர் உள்ள பில்லின் காப்பி வந்ததும், அதைக் காண்பித்தார். செபாஸ்டியன் வாங்கிப் பார்த்தான். ஆர்டர் கொடுத்த ஆளின் பெயர், மேலே எழுதப்பட்டிருந்தது.

‘எம்.சுரேஷ், டோர் நம்பர் 12, ரேஸ் கோர்ஸ், கோவை’ விலாசத்தைப் பார்த்தான் செபாஸ்டியன்.

“மிஸ்டர் சுதிர், இந்த காபி பில் எனக்கு வேணுமே...”

“ஓ.கே. சார். எடுத்துக்கோங்க.”

“இந்த சுரேஷ்ங்கற ஆள் உங்களுக்கு ரெகுலர் கஸ்டமரா?”

“இல்லை சார்.”

“கோயமுத்தூர்ல இருந்து இங்க வந்து தைக்கக் குடுத்திருக்காங்க. என்ன டிரஸ் தைக்கக் குடுத்தாங்க.”

“ஒரு பான்ட், ஒரு ஷர்ட். ரொம்ப காஸ்ட்லி மெட்டீரியல்.”

“ஆர்டர் குடுத்ததும், டெலிவரி எடுத்ததும் ஒரே ஆளா?”

“ஹாங் சார். சேம் ஆள்தான் டெலிவரி எடுத்தார்.”

“ஓ.கே. மிஸ்டர் சுதிர். தாங்க்யூ ஃபார் யுவர் கோஆப்பரேஷன்” செபாஸ்டியன் காப்பி பில்லை பெற்றுக் கொண்டு ஃபாரான்சிக் லாப் திவாகரை சந்திக்க விரைந்தான்.

திவாகர் முக்கியமான குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். செபாஸ்டியனைப் பார்த்ததும் வரவேற்றார்.

“வாங்க செபாஸ்டியன். உட்காருங்க. டீ சாப்பிடறீங்களா?”

“டீ வேண்டாம். சார். ஏதாவது கூல்ட்ரிங்க் ப்ளீஸ்.”

“ஏதாவது புது கேஸா?”

 “அந்த நிரஞ்சன் கேஸ்தான். இன்னும் முடிஞ்ச பாடில்லையே?”

“ஏதாவது க்ளு கிடைச்சதா?”

“இப்பதான் கொஞ்சம் உபயோகமான க்ளு கிடைச்சிருக்கு. இந்த பில்லைப் பாருங்க” செபாஸ்டியன் தொடர்ந்தான். “இதில சில கெமிக்கல்ஸ் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கு. அது என்ன உபயோகத்துக்குன்னு தெரியணும்.”

“கடையோட பேர் கருகிப் போயிருக்கு போலிருக்கு.”

“ஆமா திவாகர். கோவாவில இந்தக் கடையைத் தேடி விசாரிக்கணும். அதுக்கு முன்னால நான் கேட்ட விபரங்கள் தெரியணும். இம்மீடியட்டா ரிப்போர்ட் குடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. ஏ.ஸி.யும் சொல்லச் சொன்னார், அவசரமா வேணும்னு.”

“உடனே குடுத்துடறேன்.”

“இந்தக் கேஸை சீக்கிரமா முடிக்கணும்னு முதல்வர் ரொம்ப பிரஷர் குடுத்திருக்காங்க.”

“என்ன பொசிஷன்ல இருக்கு கேஸ்?”

“ஒரு பொண்ணு, சினிமா நடிகையாம். அவ அதுல சம்பந்தப்பட்டிருக்கான்னு சந்தேகப்படறோம்.”

“பொண்ணா?”

“ஆமா. அவ வீட்லதான் இந்த பில்லும், இன்னொரு டெய்லர் ஷாப் பில்லும் கிடைச்சிருக்கு. இந்த ரொண்டு தடயங்களையும் வச்சு குற்றவாளியைக் கண்டு பிடிச்சுரலாம்னு நம்பறோம். நீங்க ரிப்போர்ட்டை சீக்கிரமா குடுத்துடுங்க திவாகர்.” மீண்டும் திவாகரை வலியுறுத்தினான்.

“கவலைப்படாதீங்க செபாஸ்டியன். உடனே குடுத்துடறேன்.”

“அப்போ நான் கிளம்பறேன் திவாகர்.”

“ஓ.கே.”

செபாஸ்டியன் வெளியேறினான்.

கோவா. குணாளன், குளித்து முடித்து மதுமதி குறிப்பிட்ட ஹோட்டலுக்குச் செல்வதற்குத் தயாரானார். ரிசப்ஷனுக்குச் சென்றார். அங்கே கோதுமை நிறப் பெண் ஒருத்தி வரவேற்புப் பெண்ணாக நியமிக்கப்பட்டிருந்தாள். மலர்ந்த முகத்துடன், குயிலின் குரலில் வருவோர்க்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்தாள். பெரும்பாலும் கொங்கனி மொழியில் பேசினார்கள்.

குணாளனைப் பார்த்ததும், “மே ஐ ஹெல்ப் யூ சார்?” கேட்டாள். இனிமை வழிந்தது.

“பீச் பாம் ஹோட்டல் எந்த ஏரியாவுல இருக்கு? கரெக்ட் அட்ரஸ் வேணும்.”

“ஒன் செகன்ட் சார்” ஒரு சிறிய டெலிபோன் குறிப்பு புத்தகத்தை எடுத்துப் பார்த்துச் சொன்னாள்.

தாராளமாய் ‘தாங்க்யூ’ ஒன்றை உதிர்த்து விட்டு குணாளன் புறப்பட்டார்.

பீச் பாம் ஹோட்டல். மிகப் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ரிசப்ஷன் சென்றார் குணாளன்.

“மெட்ராஸ்ல இருந்து ஒரு கேஸ் சம்பந்தமா விசாரணைக்கு வந்திருக்கேன்.” ஆங்கிலத்தில் சொன்னார்.

“மெட்ராஸ்ல இருந்தா?”


“ஆமா. பதினெட்டாம் தேதில இருந்து ஒரு பத்து நாள் டைம்ல உங்க ஹோட்டல்ல நிரஞ்சன்ங்கற ஒருத்தர் தங்கினாரா?”

“ஒரு நிமிஷம் சார். லெட்ஜரைப் பார்த்துச் சொல்றேன். என்ன தேதி சார்?”

“நவம்பர் பதினெட்டாந் தேதிக்கப்புறம் பத்து நாள் டைம்ல.”

ரிசப்ஷனிஸ்ட் லெட்ஜரைப் புரட்டிப் பார்த்தான். “ஆமா சார். நிரஞ்சன்னு ஒருத்தர் ஸ்பெஷல் சூட் எடுத்து தங்கியிருக்கார்.”

“அவரை நீங்க பார்த்தீங்களா?”

“இல்லை சார். இந்த தேதியில நான் இங்க இல்லை. நான் புதுசா இந்த வாரம்தான் ஜாயின் பண்ணினேன்.”

“இவர் இங்க தங்கியிருந்தப்ப ரூம் சர்வீஸ் பண்ணினவங்களை சில விஷயங்கள் கேட்கணும்.”

இளைஞன் இன்டர்காமை எடுத்துப் பேசினான். சில நிமிடங்களில் ஐந்து பையன்கள் வந்து நின்றனர். எல்லோரும் பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள்.

ரிசப்ஷன் இளைஞன் அவர்களிடம் ‘கொங்கனி’ மொழியில் ஏதோ பேசினான். நிரஞ்சன் என்ற பெயரை சொல்லிக் கேட்டதால் அது பற்றியதாகத்தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டார் குணாளன்.

ஐந்து பையன்களில் ஒருவன் முன் வந்தான். “சார், இவன்தான் நிரஞ்சன் தங்கியபோது ரூம் சர்வீஸ் செய்தது.”

அந்தப் பையன் சட்டையில் குத்தி இருந்த பெயர் வில்லையில், சண்முகநாதன் என ஆங்கிலத்தில் எழுதி இருந்தது.

“நீ தமிழா?” கேட்டார் குணாளன்.

“ஆமா சார்.” தமிழ் ஆள் ஒருத்தரைப் பார்க்கும் மகிழ்ச்சி அவன் கண்களில் தென்பட்டது.

“நிரஞ்சன் தங்கி இருக்கும் போது நீதான் ரூம் சர்வீஸ் பண்ணியா?”

“ஆமா சார். அவர் எனக்கு ரொம்ப பிடிச்சமான நடிகர். அவரை நேர்ல பார்ப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை சார். நிறைய டிப்ஸ் குடுத்தார். சில நேரம் பொழுது போகலைன்னா கூப்பிட்டு வச்சு பேசுவார் சார்.” அபிமான நடிகருடன் பழகிய அனுபவத்தை மிக உற்சாகமாக அளந்தான் பையன்.

“அதெல்லாம் இருக்கட்டும் தம்பி. நிரஞ்சன் கூட வேற யார் தங்கி இருந்தா?”

“ஒரு லேடி தங்கி இருந்தாங்க சார்.”

“இந்த லேடியான்னு பார்த்துச் சொல்லு.”

நடைபாதைக் கடையில கிடைத்த படத்தை அவனிடம் காட்டினார் குணாளன். பையன் உற்றுக் கவனித்தான்.

“ஆமா சார். இவங்கதான் இருந்தாங்க.”

“வேற யாராவது நிரஞ்சனைப் பார்க்க வந்தாங்களா?”

“இல்லை சார். வேற யாருமே வரலை.”

குணாளன், ரிசப்ஷன் இளைஞனிடம் திரும்பினார்.

“நிரஞ்சன் எத்தனை நாள் இங்க தங்கி இருந்தார்?”

அவன் லெட்ஜரைப் பார்த்தான்.

“இருபத்தஞ்சாம் தேதி வரைக்கும் தங்கியிருக்கார் சார்.”

“புக்கிங் லெட்ஜர்ல கையெழுத்து வாங்கியிருக்கீங்களா?”

“இதோ பார்த்துச் சொல்றேன் சார்.”

நிரஞ்சன் கையெழுத்திட்டிருப்பதைக் காண்பித்தான்.

“ரெசிப்ட் காப்பி இருக்கா? வெக்கேட் பண்ணும்போது சைன் பண்ணி இருக்காரா? இருந்தா, அதைக் காண்பிங்க.”

தேடி எடுத்துக் காண்பித்தான். அதில் நிரஞ்சனின் கையெழுத்து இல்லை. வேண்டுமென்றே கிறுக்கலாக கையெழுத்திடப்பட்டிருந்தது. கூர்ந்து கவனித்தும் கண்டுபிடிக்க இயலவில்லை.

‘நிரஞ்சனுக்கு, அந்த மதுமதியாலதான் ஆபத்து ஏற்பட்டிருக்கு’ நினைத்துக் கொண்டார் குணாளன்.

“மெட்ராசுக்கு எஸ்.டி.டி. பேசணும். உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கலாமா?”

“பண்ணுங்க சார்.”

குணாளன் ஃபாரன்சிக் லாப் திவாகரை போனில் அழைத்தார்.

“திவாகரா? நான் குணாளன். கோவாவுல இருந்து பேசறேன். கெமிக்கல்ஸ் ரிப்போர்ட் எழுதிட்டீங்களா?”

“எழுதிட்டேன் சார்.”

“என்ன உபயோகம் அந்த கெமிக்கல்ஸ்னால?”

“சார், அந்த கெமிக்கல்ஸ் இறந்து போனவங்க உடலை அப்படியே கொஞ்சம் கூட பாழாகாம ஃப்ரெஷ்ஷா வக்கிறதுக்கு யூஸ் பண்றது சார். ப்ரிசர்வ் பண்றதுக்காக தேவையான கெமிக்கல்சோட பேருங்கதான் அந்த பில்லுல இருக்கு.”

“பிரிசர்வ் பண்றதுக்கா?”

“ஆமா சார். கோவாவுல செயின்ட் சேவியரோட பாடி நூறு வருஷமா அப்படியே வச்சிருக்காங்கள்ல? அது மாதிரி கெமிக்கல்ஸ்.”

“இந்த பில் நிரஞ்சன் பாடியை பிரிசர்வ் பண்றதுக்காகத்தான் வாங்கப்பட்டிருக்குன்னு உறுதியா தெரியுமா சார்.”

“அந்த கெமிக்கல்ஸ் இங்க கோவாவுலதான் வாங்கி இருக்காங்க. அதனால இங்க கெமிக்கல் ஷாப்ல விசாரிக்கலாம்னு இருக்கேன்.”

“விசாரிச்சா நிச்சயமா சரியான தகவல் கிடைக்கும் சார். ஏன்னா, இது ரொம்ப ரேர் சேல்ஸாத்தான் இருக்கும்.”

“ஓ.கே. திவாகர். தாங்க்யூ.”

ரிசீவரை வைத்து விட்டு மீண்டும் எண்களைச் சுழற்றினார் குணாளன்.

“ஹலோ? பி.லெவன் ஸ்டேஷன்? யார், செபாஸ்டியனா?”

“ஆமா சார். செபாஸ்டியன்தான் பேசறேன். கோவாவில இருந்தா பேசறீங்க?”

“ஆமா. அந்த டெய்லர் ஷாப் விபரம் என்னாச்சு?”

“ஒரு நல்ல தடயம் கிடைச்சிருக்கு சார். டெய்லர் ஷாப்பில பான்ட்-ஷர்ட் டெலிவரி எடுத்த ஆளோட முழு அட்ரசும் கிடைச்சிருக்கு.”

“மெட்ராஸ் ஆளா? வெளியூரா?”

“கோயம்புத்தூர் சார்.”

“அப்படியா? அப்போ நீங்க கோயம்புத்தூர் போய் அந்த அட்ரஸ்ல விசாரிங்க. மதுமதி கிடைச்சாளா?”

“இல்லை சார்.”

“சரி. நான் இங்க வேலையை முடிச்சுட்டு வரேன். நீங்க இம்மீடியட்டா கோயம்புத்தூர் புறப்படுங்க.”

“ஓ.கே. சார்.”

பேசி முடித்ததும், குணாளன் ஒரு டாக்ஸி பிடித்தார். கோவாவில் உள்ள கெமிக்கல்ஸ் விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று விசாரித்தார். சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அடுத்து, ஒரு கடையில் கேட்டபோது, கடைக்காரன் பில் புக்குகளை தேடிப் பார்த்து எடுத்தான். பில்லின் நம்பர் இருந்தபடியால் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது.

பில்லின் தொகையையும், வாங்கிய பொருளின் அளவையும் பார்த்தான்.

“சார், இந்த கெமிக்கல்ஸை வாங்கினது ஒரு வெளிநாட்டுக்காரர் சார்!”

“வெளிநாட்டுக்காரரா?”

“ஆமா சார்.”

“எந்த நாட்டுக்காரர்னு தெரியுமா?”

“அமெரிக்காவைச் சேர்ந்தவர் சார்.”

“காப்பி பில்லுல அவரோட கையெழுத்து இருக்கா?”

“இருக்கு சார்.”

 “எங்கே? காட்டுங்க பார்க்கலாம்?”

காப்பி பில்லில் ‘செம்யோன் லெஸ்டர்’ என்று ஆங்கிலத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்தது.

“இந்த காப்பி பில் எனக்கு இன்வெஸ்டிகேஷனுக்கு தேவைப்படும்.”

“எடுத்துக்கோங்க சார்.”

குணாளன் எடுத்துக் கொண்டு, அவனுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

சென்னை வந்து சேர்ந்த குணாளன், அலுவலகத்தில், திவாகர் அனுப்பி இருந்த கெமிக்கல் ரிப்போர்ட்டை ஒருமுறை படித்துப் பார்த்தார்.

படித்து விட்டு நிமிர்ந்தபோது, செபாஸ்டியன் வந்து கொண்டிருந்தார்.

“ஹலோ சார், கோவாவில ஏதாவது உபயோகமான தகவல் கிடைச்சுதா?”

“கிடைச்சிருக்கு. ஆனா அது நமக்கு எந்த அளவுக்கு உபயோகமா இருக்கும்னு தெரியலை. மதுமதியைப் பத்தின தகவல் ஏதாவது தெரிஞ்சுதா?”

“இல்லை சார். எங்கேயோ தலைமறைவாயிட்டா. அவ நடிக்க ஒப்பந்தமாயிருக்கற சினிமா கம்பெனில கேட்டாச்சு. ஷுட்டிங்குக்கும் வரலைன்னு சொன்னாங்க.”

“தொடர்ந்து அவளைத் தேடறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா?”

“ஆமா சார். அவ வீட்டுகிட்ட கூட இரண்டு கான்ஸ்டபிள்ஸை நிறுத்தி வச்சிருக்கேன்.”


“அவ வீட்ல கிடைச்ச கெமிக்கல் பில்லை ஃபாரான்சிக் லாபுக்கு அனுப்பி இருந்தேன். திவாகர் குடுத்த ரிப்போர்ட் படி அந்த கெமிக்கல்ஸ் இறந்து போனவங்க பாடியைப் பாதுகாக்கறதுக்கு யூஸ் பண்றதாம்.”

“அப்படியா? இந்த பில் எப்படி சார் மதுமதி வீட்ல...?”

“அதுதான் மர்மமா இருக்கு. ஆனா இந்தக் கொலையில இவ இன்வால்வ் ஆகி இருக்கா. அதுல சந்தேகமே இல்லை.”

“நாம இப்ப கலைவாணி கலைக்கூடத்துக்குப் போய், நிரஞ்சனோட சிலையை செஞ்ச சிற்பியோட அட்ரஸ் கேட்போம். அங்க போய், விசாரணை செஞ்சா, ஏதாவது தகவல் கிடைக்கும்னு நான் நினைக்கிறேன்.”

“ஓ.கே. சார். போகலாம்.”

ஜீப் விரைந்துக் கொண்டிருந்தது. அடையாறு, திருவான்மியூரைத் தாண்டி, பாலவாக்கத்தை அடுத்த நீலாங்கரையில் கலைக்கூட அலுவலகத்தில் கிடைத்த விலாசத்தில் நின்றது.

மெழுகுச் சிலை செய்வதற்கென அந்த இடத்தை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இறங்கி நடந்தார்கள், செபாஸ்டியனும், குணாளனும்.

அங்கே திருமதி இந்திராகாந்தியின் உருவத்தினை மெழுகுச் சிலையாக வடிவமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் சிற்பி.

அவரிடம் நெருங்கிய குணாளன் தன்னுடைய கார்டை எடுத்துக் கொண்பித்தார்.

“கொஞ்ச நாளைக்கு முன்னால சினிமா நடிகர் நிரஞ்சனோட சிலையைச் செஞ்சதும் நீங்கதானா?”

“ஆமா சார். நான்தான் செஞ்சேன்.”

“நிரஞ்சனோட சிலையை இங்க இருந்து கலைக்கூடத்துக்கு நீங்கதான் எடுத்துக்கிட்டுப் போனீங்களா?”

“இல்லை. கலைக்கூடத்து ஆபீசுல இருந்து வேன் அனுப்பி இருந்தாங்க. அந்த வேன்லதான் கொண்டு போனாங்க.”

“யார் வந்து எடுத்துட்டுப் போனாங்க?”

“வேன் டிரைவர் வந்தார்.”

“வேற யாரும் வந்தாங்களா?”

“இல்லை சார். கலைக்கூட ஆபீசுல இருந்து டிரைவர்கிட்ட லெட்டர் குடுத்து அனுப்பி இருந்தாங்க. அதைப் பார்த்தப்புறம் சிலையை டெலிவரி குடுத்தேன்.”

“அந்த வேனோட நம்பர் தெரியுமா?”

“தெரியாது சார்.”

“என்ன மாடல் வேன்?”

“மெட்டோடர் சார்.”

“ஓ.கே. தாங்க்யூ.”

செபாஸ்டியனும் குணாளனும் கிளம்பினார்கள்.

“சார், மறுபடியும் கலைக்கூட ஆபீசுல போய், டெலிவரிக்கு அனுப்பின வேன் ஆளுங்களைப் பத்தி விபரம் கேட்டுரலாமா?”

“கேட்டுரலாம்.”

ஜீப் மீண்டும் கலைக்கூட அலுவலகத்திற்குச் சென்றது. கலைக்கூட அலுவலக மேலாளரை சந்தித்துப் பேசினார்கள்.

“சிற்பக் கூடத்துக்கு நிரஞ்சனோட சிலையை டெலிவரி எடுக்க அனுப்பின வேன் நம்பர் என்ன?” குணாளன் கேட்டார்.

“இருங்க சார், ஃபைலைப் பார்த்து சொல்றேன்.” தடிமனான கண்ணாடியின் வழியே ஃபைலைப் பார்த்து வேன் நம்பரைச் சொன்னார்.

“விநாயக் டிராவல்ஸ் வேன் சார்.”

“ஓ.கே. செபாஸ்டியன், இந்த டிராவல்ஸ் நம்பருக்கு போன் பண்ணி நிரஞ்சனோட சிலையை டெலிவரி எடுத்த ஆளை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க.”

அங்கிருந்த தொலைபேசியில், விநாயக் ட்ராவல்சைக் கூப்பிட்டு நிரஞ்சனோட சிலையை டெலிவரி குடுக்கப் போன வேன் டிரைவரை ஸ்டேஷனுக்கு வரச் சொன்னான் செபாஸ்டியன்.

“செபாஸ்டியன் நீங்க ஸ்டேஷன்ல இறங்கிக்கோங்க. அந்த வேன் டிரைவர் வந்தான்னா விஷயங்களைக் கேட்டு வையுங்க.”

“ஓ.கே. சார்.”

கலைக் கூட மேலாளரிடம் திரும்பினார்.

“நாங்க கிளம்பறோம் சார். வாங்க செபாஸ்டியன் போகலாம்.”

செபாஸ்டியன் போலீஸ் ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டார். உள்ளே வந்து அமர்ந்தான். சரியாக அரை மணி நேரத்தில் கான்ஸ்டபிள் அழைக்க, நிமிர்ந்து பார்த்தான். முன்னூத்து பன்னிரண்டு ஒரு ஆளுடன் நின்றிருந்தார்.

“சார், இந்த ஆள் விநாயக் ட்ராவல்ஸ் வேன் டிரைவராம்.”

பயத்தில் மருண்ட பார்வையுடன் அந்த ஆள் நின்றிருந்தான்.

“ஏம்ப்பா, சினிமா நடிகர் நிரஞ்சனோட சிலையை நீலாங்கரை சிற்பக் கூடத்துல இருந்து நீதான் டெலிவரி எடுத்தியா?”

“ஆமா சார்.”

“உன் கூட வேற யாராவது வந்தாங்களா?”

“இல்லை சார்.”

“சிலையை டெலிவரி எடுத்துட்டுப் போறப்ப யாரையாவது ஏத்தினியா?”

“இல்லை சார். நான் யாரையுமே ஏத்தலை.”

“பொய் சொல்லாத.”

“நிஜம்மா நான் யாரையுமே ஏத்தலை சார். நேரா சிலையைக் கொண்டு போய் கலைவாணி கலைக்கூடத்துல ஒப்படைச்சிட்டேன் சார்.”

“நீலாங்கரையில சிலையைத் தூக்கி வேனுக்குள்ள யார் வச்சா?”

“நானும், அந்த சிலை செய்றவரும் தான் சார்.”

“கலைக் கூடத்துல சிலையை இறக்கும்போது?”

“அங்க ஆபீசுல உள்ள மானேஜரும், நானும் சேர்ந்து இறக்கினோம் சார்.”

“நல்லா ஞாபகப்படுத்தி சொல்லு. வழியில நீ யாரையுமே ஏத்தலையா?”

“இல்லை சார்.”

“சரி, நீ போ. விசாரணைக்கு கூப்பிடும் போதெல்லாம் ஸ்டேஷனுக்கு வரணும். தெரியுதா?”

“சரி சார்.” கும்பிடு போட்டுவிட்டுப் போனான்.

நீலகிரி எக்ஸ்பிரஸ், விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் மிக சுறுசுறுப்பாக கோவையை அடைந்து பயணிகளை உதிர்த்தது.

செபாஸ்டியன் ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து வழக்கமாக கோவை வந்தால் தங்கும் சீதாராம் ஹோட்டலுக்குச் சென்றான்.

‘ஆஹா, என்ன அருமையான க்ளேமேட்’ கோவையின் மென்குளிர் காற்று தந்த புத்தம்புது சுவாசத்தை அனுபவித்தான்.

மஃப்டியில் இருந்தபடியால், அவனிடமே மீட்டர் போடாமல் அதிக கட்டணம் வாங்கினான் ஆட்டோ ஓட்டுநர்.

ஏற்கெனவே அறை பதிவு செய்திருந்தபடியால் விரைவாக குளித்து முடித்து வெளியேறினான். மஃப்டியில் புறப்பட்டிருந்தான்.

மீண்டும் மீட்டர் போடப்படாத ஆட்டோவில் ஏறி ரேஸ்கோர்ஸ் சென்றான். மணி ஏழாகியிருந்தது.

ஆண்களும், பெண்களும் உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்தனர். அனைத்துக் குடைகளும் திறக்கப்பட்டு கோவை மக்களின் சுறுசுறுப்பையும், புத்துணர்வையும் வெளியிட்டுக் கொண்டிருந்த காட்சிகளை செபாஸ்டியன் ரசித்துக் கொண்டிருக்க, ஆட்டோ, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 12-ஆம் நம்பர் பங்களா அருகே நின்றது.

அந்த வட்டாரத்தில் உள்ள அத்தனை வீடுகளும் மிகப் பெரிய பங்களாக்களாகவே உருவாக்கப்பட்டிருந்தன. அப்பகுதி மிக அமைதியாக இருந்தது.

பங்களாவிற்குள் சென்ற செபாஸ்டியன் அழைப்பு மணியை ஒலிக்கச் செய்ததும், நைட்டியில் இருந்த ஒரு இளம் பெண் கதவைத் திறந்தாள்.

“நீங்க யாருங்க? யாரைப் பார்க்கணும்ங்க?”

ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘ங்க’ போட்டு மரியாதையாக, கோவையின் அழகிய கொங்கு தமிழில் பேசினாள்.

“இங்க சுரேஷ்னு ஒருத்தர் இருக்காராம்மா?”

“எங்க அண்ணன்தாங்க சுரேஷ். ஜாகிங் போயிருக்காங்க. பத்து நிமிஷத்துல வந்துருவாங்க. ப்ளீஸ் உட்காருங்க.” கதவை திறந்து உள்ளே அழைத்தாள்.

செபாஸ்டியன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். “அம்மா, அம்மா” என்று சத்தமாக கூப்பிட்டபடி அந்தப் பெண் உள்ளே சென்றாள்.

சில நிமிடங்களில் அழகிய கோப்பையில் ஆவி பறக்கும் டீயுடன் பணியாள் வந்தான்.

“ஐயா, அம்மா உங்களுக்கு டீ குடுக்கச் சொன்னாங்கங்க.” டீயைக் கொடுத்தான். செபாஸ்டியன் வாங்கிக் குடித்தான்.


வாசலில் நிழலாடியது. ட்ராக் சூட்டுடன் ஒரு இளைஞன் துள்ளிக் குதித்தபடி ஓடி வந்தான். “ராணி, ஏ ராணி” கத்தியவன், செபாஸ்டியனைப் பார்த்ததும் கத்துவதை நிறுத்தினான்.

இதற்குள் உள்ளே இருந்து ஓடி வந்த ராணி என்ற நைட்டி பெண், “அண்ணா, இவர் உன்னைப் பார்க்கணும்னு வந்திருக்கார்.” சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே மறைந்தாள்.

“சார்... நீங்க...?”

முன்பின் பார்த்தறியாத ஒருவர் தன்னைப் பார்க்க வந்திருக்கும் குழப்பத்தில் வார்த்தைகள் தயக்கமாய் வெளி வந்தன.

“மிஸ்டர் சுரேஷ். ஐ ஆம் செபாஸ்டியன். போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக வந்திருக்கேன். நீங்க மெட்ராஸ்ல ஹீரோ டெய்லரிங் ஷாப்லதான் வழக்கமா டிரெஸ் தைக்கறதா?”

பய உணர்ச்சியில் ரத்த நாளங்கள் சூடேறி, சுரேஷின் முகம் சிவப்பேறியது.

“சார், நான் அங்க தைக்கிறதில்லீங்களே? கோவை ஸ்மார்ட் டெய்லர்ஸ்லதான் தைக்க குடுத்துட்டிருக்கேனுங்க.”

செபாஸ்டியனின் கண்களை சந்திக்க தைரியம் இன்றி பேசினான்.

“மிஸ்டர் சுரேஷ், உண்மையைச் சொன்னா உங்களுக்குத்தான் நல்லது.”

“சார்...”

செபாஸ்டியன் தையலகத்தின் காபி பில்லை எடுத்து அவனிடம் காண்பித்தார்.

“இதைப் பாருங்க. இது உங்க கையெழுத்துதானே?”

“அ... அ... ஆமாங்க சார்.”

‘அது... அது... என் ஃப்ரெண்டுக்காக தச்சது சார்.’

“சுரேஷ், திரும்ப திரும்ப பொய் சொல்லாதீங்க. முதல்ல மெட்ராஸ்ல தைக்கறதில்லைன்னு சொன்னீங்க. இந்த பில் புதுமுக நடிகை மதுமதி வீட்டில கிடைச்சது. நாங்க எல்லா உண்மைகளையும் கண்டு பிடிச்சுட்டோம். கன்ஃபார்ம் பண்றதுக்குதான் இப்போ நான் வந்திருக்கேன். இப்பவாவது எல்லா உண்மைகளையும் சொல்லிடுங்க.”

ஏற்கெனவே பயந்த சுபாவமான சுரேஷ், செபாஸ்டியன் கடுமையாக மிரட்டியதும் மேலும் பயந்து போனான்.

“சொல்லிடறேனுங்க” என்று மிகவும் பயங்கரமான உண்மைகளைத் தொடர்ந்து கூற ஆரம்பித்தான்.

11

சுரேஷ் ராம்குமாரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான். “என்ன சார்? நிரஞ்சனுக்குப் பாராட்டு விழாவெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க? சிலை வைக்கறதுக்கு வேற ஸ்பான்சர் பண்ணி இருக்கீங்களாம்?”

“ஆமா, எல்லா ஏற்பாடும் நீங்கதான் பார்த்துக்கணும்.”

“என்னங்க ராம்குமார் சார். நிரஞ்சன், அவரோட ஆளுக எல்லாம் எங்களுக்கு எனிமீஸ்: உங்களுக்காக நாங்க எத்தனை சண்டை, தகராறு பண்ணியிருக்கோம். நானே எத்தனை தடவை அந்த நிரஞ்சனுக்கு எதிரா போஸ்டர் அடிச்சிரக்கேன்? அந்த ஆளோட படத்தை நூறு நாள் ஓடாதபடி செய்ய ஆயிரக்கணக்கா செலவு பண்ணி இருக்கேன். நீங்க என்னன்னா அவருக்கு பாராட்டு விழா, அதையும் நம்ப மன்றத்து ஆளுக நடத்தணும்ங்கறீங்க?”

“என் மேல இவ்வளவு அபிமானம் வச்சிருக்கீங்க. நான் சொன்னா கேட்க மாட்டீங்களா?”

 “நீங்க என்ன சொன்னாலும் கேட்பேங்க ராம்குமார் சார். உங்களுக்காக உண்ணாவிரதம் கூட இருந்திருக்கேன். உங்களை என் உயிருக்குயிரா விரும்பறேன்ங்க சார்.”

“அப்படின்னா இந்த விழாவை நீங்க நல்ல முறையில நடத்துங்க. நீங்க வெறுக்கற நிரஞ்சனை நானும் வெறுக்கறேன்.”

சந்தோஷம், குழப்பம் மாறி மாறி உள்ளத்தில் தோன்ற, ஒன்றும் புரியாமல் ராம்குமாரைப் பார்த்தான் சுரேஷ்.

“எம்மேல உயிரையே வச்சிருக்கேன்னு சொல்றீங்க. உங்ககிட்ட சொல்றதுக்கென்ன? சமீப காலமா என்னோட சினிமா உலக புகழ் வாய்ப்புகள் எல்லாம் அந்த நிரஞ்சனால குறைஞ்சிக்கிட்டே வருது.”

“பின்னே ஏன் சார் அந்த ஆளுக்கு...” இடைமறித்தான் ராம்குமார். “அதுலதான் சுரேஷ் விஷயமே இருக்கு. நீங்க உதவி செஞ்சா அந்த நிரஞ்சனை சினிமா உலகத்துல இருந்து என்ன? இந்த உலகத்துல இருந்தே தூக்கிரலாம்.”

“புரியலையே சார்.”

“நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன். அதில நீங்க உதவியாக இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.”

“சார், நான்தான் ஏற்கெனவே சொன்னேனுங்களே, உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்யக் காத்திருக்கேன். சொல்லுங்க சார்.”

“இந்த சிலை திறப்பு விழா முடிஞ்ச பிறகு நிரஞ்சன் தனியா வெளியூருக்கு போகப் போறாராம். இந்த சமயத்தை பயன்படுத்தி, நிரஞ்சனைக் கொலை செய்றதுக்கு ஏற்பாடு செஞ்சுடுவேன்.”

“கொ... கொலையா?!” பயத்தில் மிடறு விழுங்கினான் சுரேஷ்.

“ஆமா, அவனை ஒழிச்சாத்தான், நான் திரை உலகத்துல இன்னும் மேல வர முடியும். என்ன சுரேஷ், பயப்படறீங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க சார். நீங்க சொல்லுங்க.” சுரேஷ் சுதாரித்துக் கொண்டான்.

“நீங்க இன்னும் பத்து, பதினைஞ்சு நாளைக்கு கோயம்புத்தூர்லதான் இருப்பீங்க? வெளியூர் எங்கேயும் போகலியே?”

“நான் எங்கேயும் போறதா இல்லீங்க சார்.”

“நான் உங்களுக்கு போன் பண்ணி, குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்வேன். அங்கே இருந்து நிரஞ்சனோட பாடியை எடுத்துக்கிட்டு வரணும்.”

“எங்கேங்க சார் வரணும்? பாடியை எப்படிங்க கொண்டு வரணும்? எங்கே கொண்டு வரணும்?”

“எல்லா விபரமும் உங்களுக்கு போன்ல சொல்றேன்.”

“உங்க ப்ளான் என்னன்னு விபரம் தெரியலிங்களே?”

“நிரஞ்சனோட சிலை இருக்கற இடத்துல, அவரோட பாடியை வச்சிட்டு, சிலையை அப்புறப்படுத்தணும்.”

“சிறையை என்ன சார் செய்யறது?”

“எரிச்சுடலாம். ஆனா எந்தக் காரியத்துலயும் நான் சம்பந்தப்பட மாட்டேன். நிரஞ்சனைத் தீர்த்துக் கட்டறதுக்குக் கூட, வேற ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”

“பாடி பாழாயிடாதுங்களா சார்?”

“கோவாவில செயின்ட் சேவியரோட பாடியை நூறு வருஷத்துக்கு மேல பாதுகாப்பா வச்சிருக்காங்க. நிரஞ்சனோட பாடியையும் கெட்டுப் போகாம இருக்க, வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நான் கவனிச்சுக்குவேன். சிலையை அகற்றிட்டு, பாடியை வைக்கற வேலையை நீங்கதான் பார்த்துக்கணும்.”

“அதெல்லாம் நான் பார்த்துக்குவேனுங்க சார். எந்த இடத்துக்கு, என்றைக்கு வரணும்ங்கற விஷயத்தைத் தெளிவா போன்ல சொல்லிடுங்க. நீங்க சொல்றபடி வேலைகளை முடிச்சுடறேன்.”

“தாங்க்யூ சுரேஷ். அந்த நிரஞ்சனை ஒழிச்சுட்டா, சினிமா உலகத்துல நான்தான் தனிக்காட்டு ராஜா. எனக்காக நீங்க ஹெல்ப் பண்ணுங்க சுரேஷ்” ராம்குமார், சுரேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டதும், அவன் மேலுள்ள அபிமான மயக்கத்தில் புல்லரித்துப் போனான் சுரேஷ்.

“என் உயிரைக் குடுத்தாவது உங்களுக்கு இந்த உதவியை நான் செய்வேனுங்க சார்.”

“ரொம்ப தாங்க்ஸ் சுரேஷ்.”

“விழா வேலையெல்லாம் நம்ம ஆளுங்களை வச்சு பிரமாதமா செஞ்சுடறேன்ங்க சார்.”

“ஆமாமா. அதிலயெல்லாம் எந்த மாற்றமும் கிடையாது.”

“அப்போ நான் புறப்படட்டுங்களா சார்?”

“என்ன அதுக்குள்ளயா? இருங்க. என் கூட சாப்பிட்டுட்டுப் போங்க.” ராம்குமார், தன்னுடன் சாப்பிட அழைத்த மகிழ்ச்சியில் பூரித்துப் போனான் சுரேஷ்.

 

தொலைபேசி கிணுகிணுத்தது. ராணி ஓடி வந்து எடுத்தாள்.

“ஹலோ. யாருங்க பேசறது?”


“மிஸ்டர் சுரேஷ் இருந்தா பேசச் சொல்லுங்க.”

“ஒரு நிமிஷம்.”

ரிசீவரை டேபிள் மீது வைத்துவிட்டு, “அண்ணா... அண்ணா... உங்களுக்கு ஃபோன்.” குரல் கொடுத்தாள்.

மாடியில் இருந்த சுரேஷ் இறங்கி வந்தான். ரிசீவரை எடுத்து பேசினான். எதிர் முனையில் சற்று மெதுவாக பேசத் தொடங்கியதை மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டான்.

“சரிங்க. அதெல்லாம் நான் பார்த்துக்கறேனுங்க.”

ரிசீவரைப் பொருத்திவிட்டு ராணியின் அறைக்குப் போனான். குப்புறப்படுத்துக் கொண்டு கால்களால் தாளம் போட்டபடி, ஸ்டீரியோவில் ‘ஹைர, ஹைர ஹைரப்பா’வைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ராணி.

“ஏ, ராணி பாட்டு சத்தம் அலறுது. கொஞ்சம் சன்னமா வால்யூம் வச்சு கேளுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். அப்பா சாப்பிட்டுட்டு கம்பெனி போயிட்டாரா?”

“இல்லீங்கண்ணா, அப்பா இன்னும் போகலையே, அவரோட ரூம்லதான் இருக்கார்.” சுரேஷ் தன் அப்பாவின் அறைக்குள் சென்றான். ஏதோ ஒரு வார இதழை படித்துக் கொண்டிருந்தார், சுரேஷின் அப்பா தாமோதரன்.

“அப்பா.” சுரேஷ் கூப்பிட்டதும் திரும்பினார்.

“என்ன விஷயம்?” கேட்டார்.

“அப்பா... நானும் என் ஃப்ரென்ட்சும் நார்த் இண்டியா டூர் ப்ரோக்ராம் போட்டிருக்கோம்ப்பா.”

“என்னடா நீ? இப்படியே சுத்திக்கிட்டு இருந்தா காலேஜ், படிப்பெல்லாம் என்னடா ஆகறது?”

“இல்லைப்பா ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் போறாங்க. அதான்...?”

“சரி, சரி போயிட்டு வா. படிப்பு கெட்டுப் போகாம பார்த்துக்கோ.”

“ஓ.கே. டாடி. தாங்க்யூ.”

சுரேஷ் மனதில் ஒரு துள்ளலுடன் அறையை விட்டு வெளிப்பட்டான்.

தொலைபேசியில் ராம்குமார் கூறியபடி உடனே விமானத்தில் கோவாவிற்குப் பறந்தான் சுரேஷ். கோவாவை அடைந்தவன், ராம்குமார் குறிப்பிட்ட இடத்தில் மதுமதியை சந்தித்தான். மதுமதியின் புகைப்படத்தை ராம்குமார் ஏற்கனவே சுரேஷிடம் காட்டி இருந்ததால் அவளை சுலபமாக அடையாளம் கண்டு கொண்டான்.

“நீங்க மதுமதிதானே?” சுரேஷ் கேட்டான்.

“ஆமாம். நீங்கதான் சுரேஷா?”

“ஆமா. இப்ப என்ன செய்யணும்?”

மதுமதி சுரேஷை நெருங்கி, மெதுவாக அவன் காதில் கிசுகிசுப்பாகப் பேசினாள். கவனமாக கேட்டுக் கொண்ட சுரேஷ், மதுமதியின் அருகில் நின்றிருந்த காரின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டான். டிரைவர் இவனைத் திரும்பி பார்த்தான். எதுவும் கேட்கவில்லை. மதுமதி கற்றையாக ரூபாய் நோட்டுக்களை அந்த டிரைவர் கையில் திணித்தாள்.

கார் புறப்பட்டது. இரண்டு நாட்கள் தொடர் பிரயாணத்தில் சாப்பிடுவதற்கும், காபி, டீ குடிப்பதற்கும் மட்டும் இருவரும் இறங்கினார்கள்.

காரின் கண்ணாடிக் கதவுகள் பூட்டியே வைக்கப்பட்டிருந்தன.

சென்னையை சமீபித்துக் கொண்டிருந்தது கார். மெழுகுச் சிலை இருந்த கலைவாணி கலைக்கூடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காரை நிறுத்தச் செய்தான் சுரேஷ். நள்ளிரவானதும், மதுமதி தன்னிடம் கொடுத்த சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு சிற்பக் கூடத்தை அடைந்தான். பூட்டுப் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு சாவியாகப் போட்டுப் பார்த்தான். சற்று விரைவாகவே அதிக சிரமம் இன்றி ஒரு சாவியினால் பூட்டு திறந்து கொண்டது.

மறுபடியும் பூட்டி விட்டுக் கார் நின்றிருந்த இடத்திற்கு சென்றான். தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பினான். காரை கிளப்பச் சொன்னான். கார் கிளம்பியது.

கலைக்கூடத்தின் அருகே நிறுத்தச் சொன்னான். நின்றது. காரின் பின் பக்கம் கதவைத் திறந்தான். அங்கே நிரஞ்சனின் பதப்படுத்தப்பட்ட பிணம் இருந்தது. அதை இருவருமாகத் தூக்கினார்கள். உள்ளே சென்றார்கள்.

நிரஞ்சனின் பதப்படுத்தப்பட்ட உடலும், அங்கு இருந்த நிரஞ்சனின் சிலையும் எவ்வித வேறுபாடும் இன்றி மிக இயற்கையாக இருந்ததைப் பார்த்து இருவருமே ஒரு கணம் பிரமித்தார்கள். நிரஞ்சனின் உடலை வைத்து விட்டு, சிலையைக் காருக்குள் கொண்டு வந்தார்கள்.

கலைக்கூடத்திற்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சவுக்குத் தோப்புக்குள் சென்று சிலையை அழித்தார்கள். சென்னைக்குப் பயணமானார்கள். சென்னையில் தேனாம்பேட்டை அருகே இறங்கிக் கொண்டான் சுரேஷ்.

ராம்குமாரின் அறிவுரைப்படி கூடியவரை டிரைவருடன் பேசாமலே காரியத்தை முடித்து மேலும் பணம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான்.

மூன்று நாட்கள் சரியான தூக்கம் இன்றி காரியத்தில் கண்ணாய் இருந்த சுரேஷிற்கு, உடம்பு அயர்ச்சியாய் இருந்தது. ராம்குமாரின் பங்களாவிற்கு சென்றான். அங்கே ராம்குமார் இவனுக்காக தூங்காமல் காத்திருந்தான்.

தன் அறைக்கு அழைத்துச் சென்றான். “என்ன சுரேஷ், எல்லாம் முடிஞ்சதா?”

“முடிஞ்சது சார். நீங்க சொன்ன ப்ளான் பிரமாதம். சிலை இருந்த இடத்துல பாடிய வச்சிட்டு சிலையை அழிச்சாச்சு.”

“பாடிக்கு நான் சொன்னாப்ல டிரெஸ் போட்டுட்டீங்களா?”

“ஓ. கார் மெட்ராஸ் வந்ததும் அவுட்டர்ல நிறுத்திட்டு வாங்கிட்டு வந்தேன். டிரஸ்ஸை மாட்றதுக்குதான் சார் ரொம்ப சிரமமாயிடுச்சி.”

“என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம் சுரேஷ். வெறும் தாங்க்ஸ்னு சொல்லி முடிச்சுக்கற உதவியாவா செஞ்சிருக்கீங்க. யூ ஆர் கிரேட்.”

தன் ஹீரோ தன்மை அகமகிழ்ந்து பாராட்டுவதில் சோர்வெல்லாம் பறந்து போனது போல் இருந்தது சுரேஷிற்கு.

“சுரேஷ், நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. பக்கத்து ரூம்ல எல்லா வசதியும் இருக்கு. போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.” ராம்குமார் அன்புடன் கூறியவற்றை அனுபவித்தபடி, பக்கத்து அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் தூங்கிப் போனான்.

சுரேஷின் வாக்குமூலத்தைக் கேட்ட செபாஸ்டியன், உடனே அவனைக் கைது செய்தான். கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.டி. செய்து தொடர்பு கொண்டான்.

“ஏ.சி. இருக்காரா?”

குணாளன் லைனிற்கு வந்தார்.

“சார், உடனே ராம்குமாரைக் கைது செய்யுங்க. ராம்குமார்தான் திட்டம் போட்டு நிரஞ்சனைக் கொலை பண்ணி இருக்கான். மதுமதி இதுக்கு உடந்தையா இருந்திருக்கா.”

“அப்படியா?! கோயம்புத்தூர்ல பிடிச்ச ஆளு யாரு?”

“ராம்குமார் ரசிகர் மன்றத்துத் தலைவன் சுரேஷ். சின்னப் பையன். நடிகர் மேல உள்ள ஆர்வக்கோளாறுல இவனும் உடந்தையா இருந்திருக்கான். இவனே எல்லா உண்மையையும் சொல்லிட்டான். ஆனா நிரஞ்சன் கொலையானது எப்படின்னு நிஜமாவே இவனுக்குத் தெரியாதுன்னு சொல்றான்.”

“அப்போ மதுமதி, ராம்குமார் கஸ்டடியிலதான் இருக்கணும். இப்பவே இம்மீடியட்டா அவங்க ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிடறேன்.” ரிசீவரைப் பொருத்தினார்.

குணாளன் போலீஸ்காரர்களைக் கூப்பிட்டார்.

“ஜீப்பை எடுங்க” துரிதப்படுத்தினார்.

ஜீப் தயாரானதும், குணாளன் போலீஸ்காரர்களுடன் ஜீப்பில் ஏறினார்.

ஜீப் ராம்குமாரின் பங்களாவிற்கு விரைந்தது.

ராம்குமாரின் பங்களாவிற்குள் ஊடுருவச் செய்து சோதனை போட்டனர் காவல்துறையினர். அங்கே எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

ராம்குமாரின் அம்மாவிடம் விசாரித்தார்கள்.

“உங்க மகன் எங்கே?”

“அவன் ஷுட்டிங் போயிருக்கான்.”

“எந்த ஸ்டுடியோவில?”


“ஸ்டுடியோவுல இல்லை. போக் ரோட்ல ஆனந்த் ஹவுஸ்ல. எதுக்காக எம்மகனைக் கேக்கறீங்க?” பரிதாபமாக கேட்ட அந்த தாயிடம் பதில் கூடக் கூற இயலாத குணாளன், தன் குழுவினருடன் ஜீப்பிற்கு சென்றார்.

“போக் ரோடு போ.”

ஜீப் போக் ரோடு ‘ஆனந்த் ஹவுஸின்’ முன் நின்றது. படப்பிடிப்பிற்கென வாடகைக்கு விடப்படும் வீடு ஆனந்த் ஹவுஸ். அங்கே படப்பிடிப்புக் குழுவினர் குழுமி இருக்க, ராம்குமாரின் கைதேர்ந்த நடிப்பைக் காமிராவிற்குள் அடக்கிக் கொண்டிருந்தார்கள்.

இயக்குநர் ‘கட்’ சொல்லும் வரை பொறுத்திருந்தார் குணாளன். அதன்பின் ராம்குமார் கைது செய்யப்பட்டான். மதுமதி இருக்குமிடத்தை அவனிடமிருந்து அறிந்து கொண்ட போலீசார், மதுமதியைக் கைது செய்ய, அங்கே போனார்கள்.

“மாட்டிக் கொண்டு விட்டோம். இனி தப்ப முடியாது” எனப் புரிந்து கொண்ட மதுமதி உண்மைகளை உடைத்தாள்.

சினிமாவில் சேர்ந்து நடிக்க விருப்பம் கொண்டு ஊரை விட்டு வந்த ஷீலா என்ற மதுமதி, ராம்குமாரை சந்தித்தாள். மறுநாள் ஏழு மணிக்கு தன்னை ராம்குமார் வரச் சொன்னதால் சரியாக ஏழு மணிக்கு அவனது வீட்டில் சந்தித்தாள்.

“ராம்குமார் சார், எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. என் அம்மா, அப்பாவை எல்லாம் விட்டுட்டு ஊரை விட்டே வந்துட்டேன். சினிமாவுல நடிச்சு பிரபல நடிகைன்னு ஆகணும், நிறைய பணம் சம்பாதிக்கணுங்கறது என்னோட ஆசை மட்டும் இல்லை, ஒரு வெறியும் கூட.”

தன் ஆசைகளை மடமடவென கொட்டிக் கொண்டிருந்த ஷீலாவைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான் ராம்குமார். “உனக்கு ஹீரோயின் சான்ஸ் நான் வாங்கித் தரேன். அதுக்கு பதிலா, நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.”

“ஹீரோயின் சான்சா? எனக்கா?”

விழிகளை அகலத் திறந்த ஷீலாவின் கண்களில் அளவற்ற ஆவலும், மகிழ்ச்சியும் ததும்பியது.

“நான் உன்னை ஹீரோயினா ஆக்கறேன். ஆனா... நான் கேட்ட விஷயம்?”

“நான் என்ன சார் செய்யணும்? சொல்லுங்க. எதுவானாலும் செய்யறேன். எப்படியாவது நான் சினிமா நடிகையாகணும்.”

“நீ பிரபல நடிகையாகணும்னா. இப்ப இருக்கற ஒரு பிரபல நடிகரை இல்லாம பண்ணிடணும்.”

 “புரியலையே?”

“புரியும்படியாவே சொல்றேன். எனக்குப் போட்டியா, என்னைவிட முதன்மையான இடத்துல இருக்கற நடிகர் நிரஞ்சனை நீ கொலை செய்யணும்.”

“நி... நி... நிரஞ்சனைக் கொலை... செய்யணுமா?”

“ஆமா. இதுக்கு நீ சரின்னு சொன்னா, புதுப்படத்துல எனக்கு ஜோடியாவே நடிக்கறதுக்கு சான்ஸ் வாங்கித் தரேன்.”

“நிரஞ்சனை எப்படி... நான்... சொல்றது?”

“சொல்றேன். நிரஞ்சனுக்குப் பெண்கள்னா சபலம் உண்டு. அதிலயும் உன்னைப் போல அழகான பெண்கள்னா கேக்கவே வேண்டாம். நிரஞ்சன் மகாபலிபுரம் போறாராம். அவர் மகாபலிபுரம் போறதுக்கு முன்னாடி, அவர்கூட கோவா போறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கோ. அங்க, சமயம் பார்த்து அவனை முடிச்சுடு.”

“எப்படி சார்?”

“உன்கிட்ட சில மாத்திரைகளை தரேன். பத்திரமா வச்சிக்கோ. நல்ல சந்தர்ப்பமா பார்த்து அதை ட்ரின்க்ஸ்ல கலந்து குடுத்துடு. நிரஞ்சன் கதை முடிஞ்சதும் எனக்கு போன் பண்ணு. அவனோட பாடியை பதப்படுத்தறதுக்கு ஆளெல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டேன். நீ எனக்கு போன் பண்ணினதும், அந்த ஆள் நீ இருக்கற இடத்துக்கு வந்து நிரஞ்சனோட பாடியை எடுத்துட்டுப் போய் பதம் பண்ணி குடுத்துடுவார். அந்த வேலை முடிஞ்சதும் மறுபடி என்னைக் கூப்பிட்டுப் பேசு. சுரேஷ்னு என் ரசிகள் மன்றத்து ஆளை அனுப்பறேன். ஒரு டாக்ஸி அரேன்ஜ் பண்ணி, அதில் நிரஞ்சனோட பாடியை வச்சுரு. சுரேஷ் அந்தக் கார்ல மெட்ராசுக்கு பாடியைக் கொண்டு வந்துடுவான். நீ ப்ளேன்ல மெட்ராஸ் வந்துடு.”

“நிரஞ்சனோட பாடியை பதம் பண்ணி என்ன சார் செய்யப் போறீங்க?”

“நிரஞ்சனுக்கு மெழுகு சிலை செஞ்சு, கலைக்கூடத்துல வச்சிருக்காங்கள்ல்ல...? பதம் பண்ணின பாடிக்கும், அந்த சிலைக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. வழக்கமா பொது நிகழ்ச்சிக்கு நிரஞ்சன் போடற டிரஸ்ஸைப் போல தைச்சுதான் சிலைக்கு போட்டிருக்காங்க. அதே டிரஸ் நானும் ஒரு செட் தைக்க சுரேஷ் மூலமா அரேன்ஜ் பண்ணியிருக்கேன். அவன் அதை பாடிக்கு மாட்டி விட்ருவான்.”

“அந்த சுரேஷ் இதை எல்லாம் கவனமா செஞ்சுடுவானா சார்?”

“அவனுக்கு நான்னா ரொம்ப அபிமானம். உயிரையே குடுப்பான். எல்லாம கரெக்டா செஞ்சுருவான். பாடியைக் கொண்டு போய் கலைக்கூடத்துல வச்சிட்டு, சிலையை எடுத்து டிஸ்போஸ் பண்ணிடுவான். பதம் பண்ணின பாடியைக் கலைக்கூடத்துல வச்சிருவாங்க.”

“அது ஒண்ணும் ஆகாதா சார்.”

“ஒண்ணும் ஆகாது. கோவாவில ஒரு சர்ச்சில ஒரு ஃபாதரோட பாடியை நூறு வருஷங்களா பாதுகாத்து வச்சிருக்காங்க. அதே போல இந்த நிரஞ்சனோட பாடியைப் பதம் பண்ணி எக்கச்சக்கமா பணம் செலவு பண்ணி ஒரு அமெரிக்கரை அங்கிருந்து வரவழைச்சிருக்கேன். அவர் கரெக்டா அந்த வேலையை முடிச்சுடுவார்.”

“எனக்கு பயமாத்தான் சார் இருக்கு. இருந்தாலும் எப்படியாவது நடிகை ஆயிடணும்ங்கற ஆசையில இந்த வேலையை நான் முடிச்சுடறேன் சார்.”

“நீ நிரஞ்சனை சந்திக்கற விஷயம் வேற யாருக்கும் தெரியக்கூடாது.”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார். ஹீரோயின் சான்ஸ் நிச்சயமா உண்டுதானே?”

“அதில உனக்கு சந்தேகமே வேண்டாம். த்ரீ எஸ் ப்ரொடக்ஷன்ஸ்னு ஒரு கம்பெனி புதுப்படத்துக்குக் கூப்பிட்டிருக்காங்க. அவங்களோட படத்துல உனக்கு சான்ஸ் வாங்கித் தரேன். ஆனா, அதுக்கு முன்னால ஏதாவது ஒரு விளம்பரத்துல நீ மாடலிங் பண்ணற மாதிரி செட்-அப் செய்யணும்.”

“மாடலிங்கா?”

“ஆமா. பத்திரிகை விளம்பரத்துல உன்னை எக்ஸ்போஸ் பண்ணனும். ஒரு சோப் கம்பெனி முதலாளி எனக்கு தெரிஞ்சவர். அவர்கிட்ட பேசி, உன்னை அவரோட சோப்பு விளம்பரத்துக்கு மாடலிங் பண்ண வைக்கறேன். அந்த விளம்பரத்தை த்ரீஎஸ் கம்பெனியில காமிச்சு உன்னைக் கதாநாயகியா போட சிபாரிசு செய்யறேன். நிச்சயமா உனக்குத்தான் அந்த சான்ஸ்.”

“சரி சார். உங்க ப்ளான்படி நான் எல்லாத்துக்கும் ஒத்துழைக்கறேன்.”

“ஓ.கே. நீ புறப்படு. வந்து ரொம்ப நேரமாச்சு. இந்தா இது என்னோட செல்லுலார் ஃபோன் நம்பர். இந்த நம்பர்ல என்னை நீ தொடர்பு கொள்ளலாம். சொன்ன ராம்குமார், கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுக்களை அள்ளி ஷீலாவிடம் கொடுத்தான். இதை நம்ம ப்ளானோட செலவுக்கு வச்சுக்கோ. அது போக உனக்கு அம்பதாயிரம் தனியா இருக்கு.”


“ரொம்ப தாங்க்ஸ் சார்.” அத்தனைப் பணத்தை மொத்தமாக அதுவரை பார்த்து அறியாத ஷீலா மகிழ்ச்சியில் திக்கு முக்காடினாள்.

“இன்னொரு விஷயம். நீ உன் பெயரை மாத்திக்கணும்.”

“நீங்களே ஒரு பேரை சொல்லுங்க சார்.”

“ம்.... ம்... மதுமதி, இந்தப் பேர் பிடிக்குதா?”

“ஓ. நல்லா இருக்கு சார்.”

“ஓ.கே. நீ கிளம்பு.”

ஷீலா என்ற மதுமதி கிளம்பினாள்.

ராம்குமார் சொன்னபடி நிரஞ்சனைத் தனிமையில் சந்தித்தாள். ஆசை வலை வீசினாள். மகாபலிபுரம் போவதாக சொல்லிக் கொண்டிருந்த நிரஞ்சனை கோவாவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே ஹோட்டல் ‘பீச் பாம்’ல தங்கினாள். அவனுடன் சுற்றினாள். தக்க சமயம் பார்த்து ராம்குமார் கொடுத்த தூக்க மாத்திரைகளை விஸ்கியில் கலந்து கொடுத்தாள். அவ்வப்போது ராம்குமாரை தொடர்பு கொண்டு தகவல்கள் கூறினாள். அவன் கொடுத்த அறிவிப்புகளின்படி நிரஞ்சனின் உடலை பதம் பண்ணுவதற்கு ராம்குமார் செய்திருந்த ஏற்பாடுகளில் தானும் கவனமாக, அக்கறை கொண்டு காரியத்தை முடித்தாள். சுரேஷிடம் நிரஞ்சனின் பாடியை ஒப்படைத்தாள்.

“சினிமா ஆசையினால் ஊரைவிட்டு, உறவை விட்டு வந்தேன். அதே ஆசையில ஒரு கொலைக்கும் உடந்தையாயிட்டேன். இப்போ எல்லாமே போச்சு.” கண்களில் நீர் மல்க, உண்மைகளைக் கூறி முடித்தாள் மதுமதி.

“அப்போ, டெய்லர் ஷாப் பில்லும், கெமிக்கல் ஷாப் பில்லும் உன்கிட்ட எப்படி வந்தது?”

“ராம்குமார் சில பேப்பர்களை என்கிட்ட குடுத்து வச்சார். இது என்னன்னு கூடப் பார்க்காம வச்சிருந்தேன். முதல் தடவை இன்ஸ்பெக்டர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் ராம்குமாருக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன்.”

“அவர், ‘உன்கிட்ட இருக்கக்கூடிய முக்கியமான ஹோட்டல் பில் மற்றும் நான் கொடுத்த பேப்பர்களை எல்லாம் எரிச்சுட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்துடு’ன்னாரு. நான் அவசர அவசரமாக எரிச்சுட்டு, கிளம்பி அவரோட வீட்டுக்குப் போயிட்டேன்.”

“அன்னிக்கு நீ போனது ராம்குமாரோட காரா?”

“ஆமா. அவர்தான் காரை அனுப்பி அவரோட தோட்டத்து பங்களாவுல என்னைத் ‘தலைமறைவா கொஞ்ச நாளைக்கு இரு’ன்னு சொன்னார்.”

“அப்போ, நிரஞ்சனோட கார் எங்கே?”

“காரை ஏர்போர்ட்ல நிறுத்தி விட்டு நாங்க ப்ளேன்ல கோவா போயிட்டோம். கார் ஏர்போர்ட் பார்க்கிங் ஏரியாவுலதான் இருக்கும்.”

மதுமதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். குற்றம் சுமத்தப்பட்டிருந்த பத்திரிகை நிருபர் பாலு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.