Logo

முள் மேல் மனசு

Category: மர்ம கதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 7873
Mull mal manasu

“என்னங்க பிறந்த நாளுக்கு வைர நெக்லஸ் வாங்கி தரீங்களா?” மதனின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் போட்டபடி கேட்டாள் பத்மினி. சிவந்த நிறம் கொண்ட முகம். நீச்சலடிக்கும் மீன் போன்ற கண்கள். செழுமையான அங்கங்கள் அவளது இளமைக்கு மேலும் வனப்பைக் கூட்டி இருந்தது. அவளை இறுக அணைத்துக் கொண்டான் மதன். “பத்மினி, இப்பத்தான் இந்த புது பங்களா கட்டி இருக்கோம். நம்ப பிரிண்டிங் பிரஸ்ல எக்கச்சக்கமான ஆர்டர் வந்திருக்கிட்டிருக்கு. தினமும் எல்லா மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது. நல்ல டர்ன் ஓவர். நல்ல வருமானம்தான்.

இருந்தாலும் ப்ரிண்ட் பண்றதுக்காக பேப்பர் வாங்கறோம்ல? அந்த பேப்பர் டீலருக்கு நிறைய பணம் நம்ப குடுக்க வேண்டியதிருக்கு. உனக்கு வேற, கார் வேணும்னு வாங்கி இருக்க. நாம பாட்டுக்கு ஈஸியா லோன் கிடைக்குதுன்னு வாங்கிட்டோம். வாங்கின பணத்தைக் திரும்பக் கட்டியாகணுமில்ல. வட்டியோட சேர்த்துக் கட்டணும். தெரியும்ல?”

“எல்லாம் தெரியும். நீங்க உங்க செலவு எதையாவது குறைக்கிறீங்களா. நல்லா ஊர் சுத்தறது... லூட்டி அடிக்கறது...”

“சச்ச... ஊட்டிக்கு போவேனே தவிர இந்த லூட்டி கீட்டியெல்லாம் நமக்குத் தெரியாதும்மா...”

செல்லமாக அவனைத் தள்ளி விட்டாள் பத்மினி.

“இந்தச் சுருட்டை முடி. புசு புசுன்னு மீசை, செக்கச் செவேர்னு ஹீரோ மாத்திரி இருக்கீங்க. உங்களை சுத்தாத பட்டாம்பூச்சிகளா...”

“எத்தனை பட்டாம்பூச்சிகள் என்னைச் சுத்தினாலும், நான் சுத்தறது இந்த பூனையைத்தானே” அவளது கன்னத்தில் கிள்ளினான்.

இன்டர்காம் ஒலித்தது. மதன் எடுத்தான்.

“ஹலோ, அப்படியா இதோ வரேன்.”

“செக்யூரிட்டி எதுக்காக உங்களைக் கூப்பிடறான்?”

“பக்கத்து பங்களாக்காரன் பாலு, அவனோட பங்களா கேட்கிட்ட நம்ப கார் நிக்குதுன்னு காரை எடுக்க சொல்றான். தினமும் அவனோட பெரிய தொல்லையா போச்சு.”

 “வீடு கட்டும்போதே சொன்னேன். கார் பார்க்கிங்கும் சேர்த்து இடம் விட்டுக் கட்டுங்கன்னு.”

“ஒரு காருக்கு இடம் விட்டுத்தான் பிளான் போட்டேன். நீ வேற உனக்கு கார் வேணும்னு வாங்கிக்கிட்ட. சரி, சரி நான் காரை எடுத்துட்டு பிரஸ்க்கு கிளம்பறேன். வரட்டுமா?”

“சரிங்க.”

“ஏன்யா உனக்கு எத்தனை தடவை சொல்றது? உன் காரை இங்கே நிறுத்தாதேன்னு?” பக்கத்து பங்களாவின் உரிமையாளர் பாலு எடுத்த எடுப்பிலேயே கத்தத் துவங்கினான்.

“சரியான டென்ஷன் பார்ட்டியா இருக்கியே, உன் பங்களா கேட்டை விட்டுத் தள்ளித்தானே நிறுத்தி இருக்கேன்...”

“ஒரு நாளைக்குன்னா பரவாயில்ல. தினமும் இதே வேலையா போச்சு உனக்கு?” சூடு ஆறாமல் பொரிந்தான் பாலு.

“உன் வேலையைப் பத்தி எனக்குத் தெரியாதா? என் க்ளையண்ட்ஸைப் பார்த்து பிரிண்டிங் கூலி குறைச்சு, கோட்டேஷன் குடுத்து என்னோட ஆர்டரை எல்லாம் தட்டிப் பறிக்கறதுதானே உன் வேலை?”

“உன்னோட பிரிண்டிங் குவாலிட்டி நல்லா இல்லைன்னு என் ப்ரஸ்சுக்கு வர்றாங்க. அதுக்காக நீ வெட்கப்படணும்.”

“நீதான்யா வெட்கப்படணும். குறுக்கு வழியில என்னோட க்ளையண்ட்ஸை வளைச்சுப் போடறதுக்கு. என்னோட பிரிண்டிங் குவாலிட்டியைப் பத்தி பேச வந்துட்டான்...”

 “அதிகமா பேசாதே. சொல்லிட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச என் பிரஸ்ஸை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கேன். நீ போட்டிக்கு வந்துதான் என் பிரஸ் டல் அடிக்குது. நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி.”

“உன்னை ஒழிச்சுக் கட்டிட்டுத்தான் எனக்கு மறு வேலை...” சண்டைக் கோழியாய் சிலிர்த்துக் கொண்டு போனான் மதன்.

ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, வெளியே வந்தாள்.

“மூர்த்தி...” செக்யூரிட்டியை அழைத்தாள்.

“ஐயா சண்டை போட்டிட்டிருக்காரு. நீ வேடிக்கை பார்க்கிறியா? அவரை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிட்டு வா.”

மூர்த்தி வேகமாய் மதனின் அருகே போனான். “ஸார், வாங்க ஸார். அம்மா உள்ளே கூப்பிடறாங்க. இன்னிக்கு பத்து மணிக்கு மீட்டிங்னு அம்மா சொல்றாங்க.”

‘ஓ’ நினைவுக்கு வந்ததும் மதனுக்கு டென்ஷன் குறைந்தது.

பாலுவை முறைத்துப் பார்த்துவிட்டு, காருக்குள் உட்கார்ந்தான். ஜன்னல் வழியே பத்மினி கையசைப்பது தெரிந்தது. பதிலுக்குக் கையசைத்து விடை பெற்றான். காரை ஸ்டார்ட் செய்தான். அடம்பிடிக்கும் சிறு குழந்தையைப் போல செல்லமாய் சிணுங்கியபடி கார் கிளம்பியது.

“ஆண்டவன் படைச்சான். என் கிட்ட குடுத்தான். அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்” பாடியபடியே காரை ஓட்டினான் மதன். காருக்குக் குறுக்கே ஒருவன் ஓடிவந்தான். ‘ச்... ர்... ர... க்...’ கார் அதிர்ச்சியுடன் நின்றது.

“ஏய், பார்த்து வரத் தெரியாது?” கோபமாகக் கத்தியவன், அந்த மனிதனைப் பார்த்ததும் வாயடைத்துப் போனான்.

“ஒன்னைப் பார்த்துதாண்டா வர்றேன்” மதனின் சட்டையைப் பிடித்தான்.

“கணேஷ், சட்டையை விடு, இது பப்ளிக் ப்ளேஸ்...”

 “ப்ரைவஸியா என் தங்கச்சிக்கிட்ட பழகிட்டு, பப்ளிக் முன்னால அவளைக் கல்யாணம் பண்ணிக்காம கை கழுவிட்ட. இப்ப உனக்கு மட்டும் பப்ளிக் ப்ளேஸ்ல நான் உன் சட்டையைப் பிடிச்சது அவமானமா இருக்கோ?”

“கணேஷ், உனக்கு என்ன வேணும்? பகையை மறந்துட்டு ஒரு தொகையைச் சொல்லு...”

“சீச்சீ... உன்னைப் போல பணத்துக்காக அலையற ஜாதி இல்ல நான். கேவலம் இந்தப் பணத்துக்காகத்தானே என் தங்கச்சி அம்ருதாவை விட்டுட்டு எவளோ ஒரு பத்மினியை கல்யாணம் பண்ணி இருக்க? அம்ருதா கல்யாணமே வேண்டாம்ன்னு கண் கலங்கி கன்னியாவே நிக்கறதைப் பார்க்கும் போது என் கண்ணுல ரத்தம் வடியுதே? இதுக்கு யார் காரணம்? நீ ஆசை காட்டி மோசம் பண்ணின பாவி. உன்னைப் பழி வாங்கணும்னு நான் துடிக்கிறேன். நீ எவ கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கியோ அவளைக் கொன்னு, உன்னைத் தனி ஆளா பார்க்கணும். அப்பதான் எனக்கு நிம்மதி...”

“ஐயய்யோ, கணேஷ்... ப்ளீஸ் அவளை என்னிடம் இருந்து பிரிச்சுடாதே. நீ நினைக்கிற மாதிரி பணத்துக்கு ஆசைப்பட்டு நான் அவளைக் கல்யாணம் பண்ணலை. சேலத்துல அவளோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரு விபத்துல இறங்துட்டாங்க. அவங்க எனக்கு தூரத்து சொந்தக்காரங்கதான். உறவுக்காரங்கள்லாம் சேர்ந்து, நீ முறைப் பையன்தானே. இவளை நீதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு வற்புறுத்தினதுல திடீர்னு கல்யாணம் நடந்துடுச்சு.”

“அப்போ, அவ அழகுல மயங்கி, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே? அம்ருதாவை விட அவ அழகா இருந்ததுனால அவளை உனக்குப் பிடிச்சுடுச்சு. நாளைக்கு உன் பொண்டாட்டியை விட அழகா இன்னொருத்தியைப் பார்த்தா?”

“அதெல்லாம் என்னோட பர்ஸனல் மேட்டர். பத்மினி மேல என் உயிரையே வச்சிருக்கேன்.”


“அதெல்லாம் உன்னோட பர்ஸனல் மேட்டரா இருக்கலாம். ஆனா... என் தங்கச்சி சம்பந்தப்பட்ட மேட்டர் என்னோட மேட்டராச்சே? அதனாலதான் உன் மனைவியோட உயிரை எடுக்கணும்னு துடிக்கிறேன். அவளை இழந்துட்டு நீ துடிக்கிறதை நான் பார்க்கணும்.”

இவர்கள் பேசுவதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான் பைக்கில் உட்கார்ந்திருந்த மோகன். மதனைப் பார்ப்பதற்காக அவனுடைய பிரஸ்சுக்குப் போய்க் கொண்டிருந்தவன், மதனின் காரைப் பார்த்ததும் நிறத்தினான். நிறுத்தியவன், கணேஷும் மதனும் சண்டை போட்டதையும் மதனின் மனைவியைக் கொல்லப் போவதாக கணேஷ் மிரட்டியதையும் கவனித்தபடி மதனுக்காகக் காத்திருந்தான்.

அவர்களது வாக்குவாதம் ஓய்வது போல இல்லை என்றதும் குரல் கொடுத்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ”

கணேஷும் மதனும் திரும்பினார்கள்.

“மதன் ஸார், உங்களைப் பார்க்கத்தான் போய்க்கிட்டிருக்கேன். க்ளையன்ட் மீட்டிங் இருக்கறதாகவும் அது முடிஞ்சதும் என் கூட பேசறதாகவும் சொன்னீங்க...”

 “மோகன், நீ போய் பிரஸ்ல இரு. இதோ இப்ப வந்துடறேன்.”

“சரிங்க ஸார்.” மோகன் பைக்கைக் கிளப்பினான். ‘மதனிடம் இத்தனைக் கோபமாக பேசும் அந்த மனிதன் யார்? கொலை கிலை என்கிறானே பயங்கரமான ஆளா இருக்கான். மதனுக்கும், அந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்?’ அடுக்கடுக்காய் சந்தேகங்கள் கிளம்ப, வண்டியை ஓட்டிச் சென்றான்.

“கணேஷ், முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போணும். ப்ளீஸ் என்னை விட்டுடு.”

“உன்னை விட்டுடுவேன். ஆனா உன் பொண்டாட்டியை உயிரோட நடமாடவிட மாட்டேன். ஞாபகம் வச்சுக்க.” கடுமையா மிரட்டிய கணேஷ் ஒதுங்கிக் கொள்ள, மதன் காரைக் கிளப்பினான்.

2

டாட்ஸ் அப்பளக் கம்பெனி நிறுவனத்திருடன் நடத்திய மீட்டிங் முடிந்தது. தனக்கே அவர்களது அட்டைப் பெட்டி பிரிண்ட் அவர்களது அட்டைப் பெட்டி பிரிண்ட் அடிக்கும் ஆர்டர்கள் கிடைத்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க இயலாத மனநிலைக்கு ஆளாகி இருந்தான் மதன். அவனுடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது கணேஷின் மிரட்டல். அதன் எதிரொலியாக அம்ருதாவின் நினைவும் கூடவே தோன்றியது.

காதலிக்கும்போது காதல் மயக்கத்தில் வாக்குக் கொடுத்த தன்னையே நொந்து கொண்டான். அவளை ஏமாற்றுவது தவறு என்று தெரிந்தும் அந்தத் தவறை செய்தான். அம்ருதாவை விட பல மடங்கு அழகாகவும், இளமை செழிப்புடனும் காணப்பட்ட பத்மினியைக் கண்டதும் மனம் மாறினான். திருமணத்தினால் மட்டுமே பத்தினியை அடைய முடியும் என்ற நிலையில் அவளை மணந்தான். அதன் பின்பும் அவனது மலர் விட்டு மலர் தாவும் வண்டின் குணம் மாறவில்லை. உல்லாசமாக ஊர் சுற்றுவதும் அந்நியப் பெண்களுடன் சல்லாபமாக இருப்பதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தது. இதற்காக ஏராளமான பணத்தைச் செலவு செய்தான். பத்மினிக்கு இலை மறைவுக் காயாக மதனுடைய லீலைகள் தெரிந்தும் மெளனம் காத்தாள்.

வெளிப்படையாக எதையும் கேட்டு, அவன் முரண்டு பிடித்து “ஆமா, நான் அப்படித்தான்” என்று சொல்லிவிட்டால்? இப்போது இருக்கும் கொஞ்சம் பயமும், உறுத்தலும் இல்லாமல் போய் விடுமே’ என்ற எச்சரிக்கை உணர்வில் தன் வாய்க்கு மெளனப் பூட்டு போட்டாள். பெற்றோரை இழந்து அவள், மதன் மட்டுமே தன் உலகமாக எண்ணி வாழ்ந்தாள். அமைதியான நதி என்னும் வாழ்வில் நிம்மதி எனும் ஓடத்தை ஓட்டினாள். அதைக் கவிழ்த்துவதற்கு ஒரு புயல் உருவாகுவதை அறியாத பேதையாய் இருந்தாள்.

காலையில் ஜாக்கிங் போவதற்காக ட்ராக்-சூட்டுடன் வெளியில் வந்தான் மதன். காம்பவுண்ட் கேட்டில் மாட்டி இருந்த தபால் பெட்டியில் ஒரு கடிதம் வெளியே தெரியும்படி செருகப்பட்டிருந்தது. கவர் இல்லாமல் கடிதம் மட்டுமே இருந்ததால் வியப்படைந்த மதன், கடிதத்தைப் பிரித்தான். படித்தான்.

கிறுக்கலான எழுத்துக்கள் காணப்பட்டன. முயற்சி செய்து படித்தான். ‘உன் உயிர் உன் மனைவியிடம், உன் மனைவியின் உயிர் என் கையில்,’ இவ்விதம் எழுதி இருந்தது.

“இது அந்த கணோஷோட வேலையாத்தான் இருக்கும்... கிறுக்கன்... நேத்துதானே நேர்ல என்னை மிரட்டினான்? அதுக்குள்ள இப்படி ஒரு மொட்டை மிரட்டல் கடிதம் தேவையா?’ அசட்டையாக இருப்பது போல தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டாலும் உள்ளுக்குள் உருவாகிய பயம் இதயத்தை மெள்ளப் பிறாண்டியது.

‘நிம்மதியா இருக்க விட மாட்டானா?’ சிந்தனை அவனது காலைப் பொழுதின் உற்சாகத்தினைக் குறைத்தது. வழக்கமாய் உற்சாகமாக ஓடுபவன் தளர்ந்த நடை நடந்தான். நீண்ட தூரம் கலக்கத்தில் இருந்து மாறவில்லை.

“என்னங்க இன்னிக்கு இவ்வளவு நேரமா ஜாகிங் போயிட்டீங்க? ஆபீசுக்கு கரெக்ட் டைமுக்கு போணும்னு சொல்வீங்களே...?”

“அ... அ... அது வந்து ஒண்ணுமில்ல பத்மினி. இன்னிக்கு என்னவோ ஒரு மூடு கொஞ்சம் அதிக தூரம் போயிட்டேன். இன்னிக்கு நடந்துதான் போனேன். ஜாக்கிங் பண்ணலை.”

“ஆச்சர்யமாத்தான் இருக்கு. சரி, சரி ஹீட்டர் போட்டுட்டேன். குளிச்சுட்டு வாங்க. லஞ்ச் எடுத்து வைக்கவா? வெளியில சாப்பிட்டுக்கறிங்களா?”

“ம்...? இன்னிக்கு வெளியில போற வேலை எதுவும் இல்லை. வீட்ல இருந்தே லஞ்ச் எடுத்துட்டுப் போறேன்.”

“சரிங்க. குளிச்சுட்டு வாங்க. நான் போய் டிபன் ரெடி பண்றேன்.”

புடவை முந்தானையை இடுப்பில் செருகியபடி சமையலறைக்குள் நுழைந்தாள் பத்மினி.

குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தான் மதன். எதுவும் பேசாமல் மெளனமாக சாப்பிட்டான். தினமும் காலை டிபனை ரசித்து, ருசித்து சாப்பிடுபவன், அன்று ஏனோதானோ என்று சாப்பிட்டு முடித்தான்.

“நான் கிளம்பறேன்மா” தன்னுடைய ப்ரீஃப் கேஸை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“என்னங்க இது. லஞ்ச எடுத்து வச்சத்தை மறந்து போய் விட்டுட்டு போறீங்க. இந்தாங்க” அவனிடம் எடுத்துக் கொடுத்தாள்.

“ஸாரிம்மா, மறந்துட்டேன்.”

“இன்னிக்கு என்னமோ நீங்க வித்தியாசமா இருக்கீங்க. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”

“சேச்ச... அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சரி, நீ வந்து வாசல் கதவைப் பூட்டிக்க. வெளி கேட்டுக்கு செக்யூரிட்டி இருக்கான். இருந்தாலும் கவனமா இரு. செக்யூரிட்டி மூர்த்தி ராத்திரி ரெண்டு மணி ஆனா நல்ல குறட்டை விட்டுத் தூங்கிடறான். ரிமோட் ஏரியாவுல வீட்டைக் கட்டிட்டு இது வேற பெரிய பிரச்சினையா இருக்கு. ”

 “அட, என்னங்க நீங்க! ஆபீஸ் முடிஞ்சு அமைதியா வீட்ல வந்து ரெஸ்ட் எடுக்கணும்னுதானே இவ்வளவு தூரம் தள்ளி வந்து வீட்டைக் கட்டினீங்க? இப்ப என்னடான்னா இப்படி அலுத்துக்கறீங்க?”

“கொஞ்ச நாளா பேப்பர்ல திருட்டு, கொள்ளை பத்தின செய்திகள்தான் நிறைய வருது. நாம ஜாக்கிரதையா இருந்துக்கிட்டா நல்லதுதானே?”

“சரிங்க. நீங்க புறப்படுங்க.”


மதன் காரில் எறினான். கார் தன் தொண்டையை லேசாகக் கனைத்து விட்டுப் புறப்பட்டது.

‘இன்னிக்கு என்னமோ இவர் மூடே சரி இல்லை. டிபன் கூட ஏதோ கொறிச்சுட்டுப் போனார். ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையோ என்னமோ’ எண்ணக் கடலில் நினைவுகள் நீச்சலடிக்க, சமையலறைக்குள் நுழைந்தாள்.

‘பத்து நாள் லீவுன்னு சொல்லிட்டு ஊருக்குப் போன வேலைக்காரி வள்ளி இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை. எந்த நேரமும் வேலையாத்தான் இருக்கு’

சலிப்புடன் சமையலறையை சுத்தம் செய்து முடித்தாள். ஒரு மணி நேரம் போனது தெரியாமல் துப்புரவு செய்தாள்.

அழைப்பு மணி ஒலித்தது. ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்?’

கலைந்திருந்த தலைமுடியைச் சரிப்படுத்திக் கொண்டாள். புடவை ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். கதவைத் திறந்தாள். திடுக்கிட்டாள்.

வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் பத்மினிக்கு தலை சுற்றியது. நெஞ்சிற்குள் அபாய சங்கு ஒலிப்பது போல் இருந்தது.

“நீங்க... நீ...” பத்மினி தடுமாறினாள்.

“என்னை அடையாளம் தெரியலயா? இந்த குறுந்தாடியும் நீளமா வளர்ந்திருக்கற தலைமுடியும் என்னை ரொம்ப மாத்திடுச்சோ? என்ன, அப்பிடியே திகைச்சுப் போயிட்ட? என்னை எதிர்பார்த்திருக்க மாட்டே. வாசல்லயே வழிமறிச்சா என்ன அர்த்தம்?”

“வெளி... கேட்ல... செக்யூரிட்டி... எப்படி...” சொற்கள் கோர்வையாக வராமல் மீண்டும் தடுமாறினாள் பத்மினி.

“செக்யூரிட்டி என்ன பெரிய ஐ.பி.எஸ். ஆபீசரா? உன்னோட நெருங்கிய உறவுக்காரன்னு சொன்னேன். உள்ளே அனுப்பிட்டான்...”

“பகையாளியை உறவாடிக் கெடுக்கலாம்னு வந்திருக்கீங்களா?” அதிர்ச்சியில் இருந்து மீண்ட பத்மினி, அவனிடம் கடுமையாகக் கேட்டாள்.

“உறவாடினதுக்கப்புறம்தானே என்னை பகையாளியாக்கிட்டே?”

 “அதெல்லாம் நடந்து முடிஞ்ச கதை. கெட்ட கனவா நான் மறந்துட்ட அந்தக் கதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சாச்சு.”

“என் உறவைத் தொடரலாம்னு நான் இங்கே வரலை. அது எனக்குத் தேவையும் இல்லை. என்னோட தேவை பணம்.”

“பணமா? எதுக்காக நான் உனக்குப் பணம் கொடுக்கணும்? ” அவள் கேட்டுக் கொண்டே இருக்க முரட்டுத்தனமாக பத்மினியைத் தள்ளியபடி அவன் உள்ளே நுழைந்தான்.

 ஹாலில் இருந்த பெரிய சோபாவில் காலை நீட்டி சாய்ந்து உட்கார்ந்தான். ஷர்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து நிதானமாக பற்ற வைத்தான். கோபத்துடன் முறைத்துப் பார்த்த பத்மினியைப் பார்த்து ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தான்.

“சுந்தர்...!” பத்மினி கத்தினாள்.

“அட...! என் பேர் கூட உனக்கு ஞாபகம் இருக்கா?”

“இந்தக் குத்தல் பேச்செல்லாம் என்கிட்ட வச்சுக்காதே...”

“என்ன... மரியாதை தேயுது?”

“திறந்த வீட்டுக்குள்ள என்னமோ நுழைஞ்சுச்சாம்... அதுக்கு மரியாதை ஒரு கேடா...?”

“என்னை நாய்னு சொல்றியா? தப்பில்லை. இந்த நாய் நன்றி உள்ள நாய். கொஞ்ச நாள் என்னைக் காதலிச்சியே அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்.”

 “உன் காதல் உண்மையான காதல் இல்லை. நீ நல்லவன் இல்லை. கெட்டவன். உன் வேஷம் கலைஞ்சுது. உன் மேல நான் கொண்ட நேசமும் முடிஞ்சு போச்சு. நல்லவனா நடிச்சு என் மனசைக் கெடுத்துட்ட. உன்னோட சுயரூபம் வெட்ட வெளிச்சம் ஆனதும் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டேன். எனக்கு என் கணவர்தான் உலகம்.”

“ஓ!... கணவனே கண் கண்ட தெய்வமா?” மறுபடியும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தான்.

“சுந்தர், முதல்லே நீ இங்கே இருந்து போயிடு. குருவிக் கூட்டைக் கலைக்கற மாதிரி என்னோட வாழ்க்கையைக் கலைக்காதே.”

“கலைக்கக் கூடாதுன்னா அதுக்கு ஒரு விலை வேணுமே.”

“விலையா?”

“ஆமா. உன் கணவன் மதன் உன்னை, ஐ மீன் இந்த பத்மினியை பத்தினின்னு நம்பிக்கிட்டிருக்கானே... அதை என்னால ஒரு நொடியில் மாத்த முடியும்” பத்மினியின் முகத்திற்கு நேராக சொடக்கு போட்டான் சுந்தர்.

“நீ சொன்னாலும், சொல்லாட்டாலும் நான் பத்தினிதான்.”

“அப்போ நாம காதலிச்சது?”

“காதல் தப்புன்னு என் கணவர் நினைக்கக் கூடியவரும் இல்ல. சொல்லக் கூடியவரும் இல்ல.”

 “அவர்கிட்ட நம்ப முன்னால் காதலைப் பத்தி சொல்லிட்டியா?”

“சொல்லலை. உன்னோட பழகியதை மறந்து ஒரு புது பத்மினியாகத்தான் நான் அவருக்கு மனைவியானேன். விபத்துல என்னப் பெத்தவங்க இறந்ததுக்கப்புறம் சொந்தக்காரங்கதான் சேர்ந்து, அவரை எனக்குக் கணவராத் தேர்ந்தெடுத்தாங்க. அதுக்கு பல மாசங்கள் முன்னாடியே நீ அயோக்கியன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அடியோட உன்னை மறந்துட்டுத்தான் இந்தப் புது வாழ்க்கையில நான் அடி எடுத்து வச்சிருக்கேன். நல்லபடியா ஸெட்டில் ஆகி இருக்கேன்.”

“நீ செட்டில் ஆயிட்ட. நான் செட்டில் ஆக வேண்டாமா...?”

“சுந்தர்... வெளியே போயிடு. இல்லைன்னா உன் மரியாதை போயிடும்.”

“மானம் மரியாதையைப் பத்தியெல்லாம் கவலைப்படறவன் நான் இல்லைன்னு உனக்குத் தெரியாதா? நீ என்னை உருகி உருகி காதலிச்சப்ப காதல் பெருகப் பெருக எக்கச்சக்கமா லெட்டர் குடுத்தியே? அதுக்கு ஒரு ரேட் குடுத்துடு. உன் ரூட்டுக்கு வராம எங்கயாவது போயிடறேன்.”

“ஓ... அந்த லெட்டர்ஸைக் கையில வச்சுக்கிட்டுதான் என்னை இந்த மிரட்டு மிரட்டறியா?” பத்மினியின் குரலில் இருந்த கடுமை குறைந்து லேசான பயம் எட்டிப் பார்த்தது.

“சுந்தர், என் வாழ்க்கையோட விளையாடாதே. ப்ளீஸ்... என்னை நிம்மதியா வாழ விடு. உன் சுண்டு விரலைக் கூட என் மேல பட விட்டதில்ல. வயசுக் கோளாறுல உன்னை விரும்பினதுக்குப் பேர்தான் காதல்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். நீ ரைட்பர்ஸன் இல்லைன்னு தெரிஞ்சதும் என்னோட கணக்கை நேர் பண்ணிட்டேன்.”

“உன் கூட ‘ரைட்டா ராங்கா’ விளையாட்டு விளையாட வரலை. நீதான் எனக்கு கிடைக்கல. உன்னோட பணமாவது கிடைச்சா எனக்கு ஒரு வழி பண்ணிக்குவேன்.”

“சுந்தர், ப்ளீஸ்... அந்த லெட்டர்ஸ் எல்லாம் என்கிட்ட குடுத்துடு.”

“கையில காசு, வாயில தோசை... பணம் குடு...”

அப்போது டெலிபோன் ஒலித்தது.

சுந்தர் சோபாவில் இருந்தபடியே அலட்சியமாக ரிசீவரை எடுத்தான்.

“ஹலோ” குரல் கொடுத்தான்.

அவனிடம் இருந்து ரிசீவரைப் பிடுங்கினாள் பத்மினி. சுந்தரை முறைத்தபடி ரிசீவருக்குக் காதைக் கொடுத்தாள்.

“பத்மினி, யாரது, முதல்ல ஃபோனை எடுத்துப் பேசினது?”

மதன்! பத்மினியின் இதயத்துடிப்பு அதிகமாகியது.

“அ... அ... அது வந்து ஏதாவது க்ராஸ் டாக்கா இருக்கும்ங்க.”

சாதாரணமாக சொல்வது போல சொல்வதற்கு மிகவும் முயற்சித்துப் பேசினாள்.

“இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு ரெடியா இரு. வீட்ல எதுவும் சமைக்க வேண்டாம்.


நாம ஹோட்டல் போறோம். ப்ரிண்டிங் ஃபேர் ஒண்ணு நடக்குது. அதைப் பார்த்துட்டு ஜாலியா ஹோட்டல்ல போய் சாப்பிட்டுட்டு வரலாம். என்ன பேச்சே காணோம், உன் பேச்சுல சந்தோஷ ரியாக்க்ஷனே இல்லையே?”

“நிஜமா எனக்கு ஹாப்பி நியூஸ்தான் சொல்றீங்க. கரெக்டா ரெடியா இருப்பேன். வந்துடுங்க.”

“நோ. நோ. நான் எவ்வளவு தூரம் எதுக்கு வரணும்? நீயே உன் கார்ல வந்துடம்மா. காலையிலேயே போட்ட ப்ரோக்ராம்தான். உன்கிட்ட சொல்ல மறந்து போய் வந்துட்டேன்.”

 “சரிங்க. நானே வந்துடறேன். வச்சுடட்டுமா?”

ரிசீவரை ஓய்வெடுக்கச் செய்துவிட்டு சுந்தரிடம் திரும்பினாள்.

“சுந்தர். மடியிலே கனம் இருந்தாத்தானே வழியில பயப்படணும்? என் இதயம் சுத்தமா இருக்கு. நான் நேர்மையானவ. என் வாழ்க்கை உன் கையில இல்ல. அது கடவுள்கிட்ட இருக்கு ஆரம்பத்துல நான் பயந்தது நிஜம்தான்.ஆனா இப்ப தெளிவா ஆயிட்டேன். உன்னால ஆனதை நீ பார்த்துக்க. இந்த மேட்டரை எப்படி டீல் பண்ணணுமோ அப்பிடி நான் டீல் பண்ணிக்கிறேன்.”

திடீரென பத்மினியிடம் இருந்து இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்காத சுந்தர் எழுந்தான். “பத்மினி நீ எழுதிய காதல் கடிதங்களுக்குத்தான் இவ்வளவு நேரம் விலை பேசினேன். இதுக்கு உடன்பட்டா நீ இந்த மண்ணுக்கு மேல உயிரோட இருப்ப. இல்லேன்னா மண்ணுக்கு கீழே மறைஞ்சு போயிடுவ. ஸோ... இப்ப நான் விலை பேசறது உன் உயிருக்கு. எனக்கு பணம் குடுக்குறியா இல்ல நீ பிணமாகறியா?”

“சுந்தர், நான் ரொம்ப வசதியான வாழ்க்கை வாழறேன்னு கற்பனை பண்ணிக்கிட்டிருக்க. இந்த வீடு கட்டறதுக்காக வாங்கின லோன் இன்னும் முடிக்கலை. கார் கூட லோன்ல வாங்கினதுதான். பேப்பர் கடைக்கு ஏகமா பாக்கி இருக்குன்னு என் கணவன் சொல்லிக்கிட்டு இருந்தார். அவரும் செலவாளி. எங்க நிலைமை உண்மையா இப்பிடித்தான் இருக்கு. என்னை நம்பு. இதையெல்லாம் உன்கிட்ட ஏன் சொல்றேன்னா பணத்துக்காக நீ இங்கே வர்றதை நிறுத்திடணும்னு தான்.”

“திருட வந்தவன் கூட திருட்டு நடத்த வந்த வீட்டில் எதுவும் கிடைக்கலன்னா வீட்ல இருக்கறவங்களை கோபத்துல கொலை செஞ்சுடுவான். எனக்கும் இப்ப அப்பிடித்தான் இருக்கு. உன்னை... உன்னை...” பத்மினியின் கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தான்.

பத்மினியின் கண்கள் பிதுங்கின. அவளது கைகள் அவனைத் தடுத்தன. முயற்சிகள் தோல்வி அடையும் தறுவாயில் அவனது கரங்கள் மேலும் பலமாக அழுத்தின.

அப்போது காலிங் பெல் ஒலித்தது. பத்மினியின் கழுத்தில் இருந்த சுந்தரின் கைகள் நழுவியது. உள் அறையின் திரை மறைவிற்குச் சென்று மறைந்து கொண்டான். பத்மினி, வலித்த தன் கழுத்தைத் தடவியபடி வாசல் கதவைத் திறந்தாள்.

வழக்கமாய் அவளுடைய உடைகளைத் தைக்கும் லேடீ டெய்லர் இந்திரா கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன் நின்றிருந்தாள்.

“எ... என்ன இந்திரா...?”

“என்ன மேடம், உடம்பு சரி இல்லையா?”

“ஓ... ஒண்ணுமில்ல. தலைவலி... லேசா...”

“உங்க சுடிதாரும், ஜாக்கெட்டும் ரெடி பண்ணிக்கொண்டு வந்திருக்கேன் மேடம். போட்டுப் பார்த்துட்டீங்கன்னா, இங்கேயே வச்சு, சரி பண்ணிக் குடுத்துடுவேன்.”

“வே... வேண்டாம் இந்திரா. நான்... இப்ப... வெளியே கிளம்பறேன். நீ நாளைக்கு போன் பண்ணிட்டு வாயேன். நான் நிதானமா போட்டுப் பார்த்து வைக்கிறேன். இப்ப நீ கிளம்பு.”

 “சரி மேடம்” எப்போதும் உடனே போட்டுப் பார்த்து அங்கேயே சரி பண்ணித் தந்தாதான் ஆச்சுன்னு அடம் புடிக்கிற மேடம் இன்னிக்கு என்னை உடனே அனுப்பறாங்க. ஆச்சரியம்தான். நினைத்தபடியே வெளியேறினாள் இந்திரா.

திரை மறைவில் இருந்து வெளிவந்த சுந்தர், பத்மினியிடம் எச்சரித்தான். “இந்தக் கொலை முயற்சி இன்னைக்கு தடைபட்டுப் போச்சு. உன்னோட கடவுள் உன்னோட உயிர் தங்கறதுக்கு அவகாசம் குடுத்திருக்கார்னு நினைக்கறேன். அந்த அவகாசம் எனக்கும் அனுசரணையா இருக்கணும். அடுத்த முறை நான் வரும்போது போன் பண்ணிட்டு வருவேன். என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. பணம் ரெடி பண்ணி வச்சுடு. பத்தொன்பதாம் தேதி காலையில பத்து மணிக்கு போன் பண்ணுவேன். பத்தொன்பது எனக்கு ராசியான நம்பர். நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது கூட பத்தொன்பதுதானே?” மறுபடியும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்துவிட்டு புறப்பட்டு வெளியேறினான் சுந்தர்.

ஆபீஸில் தன் அறையில், அச்சடித்து முடிக்கப்பட்ட மாதிரி பேப்பர்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் மதன். அவனது அந்தரங்க தொலைபேசி ஒலித்தது. எடுத்தான். பேப்பர்கள் மீதிருந்த பார்வையின் கவனத்தை மாற்றாமல் தொலைபேசியில் குரல் கொடுத்தான்.

“ஹலோ...”

“ஹாய் டார்லிங்... நான் யார் பேசறேன்னு தெரியுதா?”

“நான் என்ன வீடியோவா பார்க்கறேன்? யார்னு தெரியறதுக்கு?”

“மதன், நான் நான்ஸி பேசறேன். இவ்வளவு நாள் பழகி இருக்கோம். என் குரல்கூட உங்களுக்குப் புரியலையா?”

“ஒ! நீயா? நான் உன் கூட பழகற மாதிரி எத்தனையோ பெண்கள் கூடப் பழகறேன். உன் குரல் எப்படிப் புரியும்? சரி சரி சொல்லு. என்ன விஷயம்?”

 “ஆசையா பேசலாம்னு பார்த்தா அஃபிஷியலா பேசற மாதிரி என்ன விஷயம்னு கேக்கறீங்களே...?”

“ஆபீஸ்ல பிஸியா இருக்கேன். ப்ரிண்டிங் சாம்பிள்ஸ் எல்லாம் செக் பண்ணிக்கிட்டிருக்கேன்...”

“ஸாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இன்னிக்கு சாயங்காலம் நாம சந்திக்கலாமா, ஹோட்டல் மாக்ஸ்ல ரூம் ரெடியா இருக்கு...”

அவள் முடிப்பதற்குள் மதன் குறுக்கிட்டான்.

“நோ நான்ஸி. நான் என் மனைவி கூட இன்னிக்கு வெளியே போறதுக்கு ப்ரோக்ராம் போட்டுட்டேன். நீ நாளைக்கு போன் பண்ணிப் பாரேன்.”

“ஓ. கே. மதன்.” நான்ஸியின் குரலில் ஏமாற்றத்தின் விளைவாக ஸ்ருதி இறங்கிப் போயிருந்தது.

ரிசீவரை அதற்குரிய ஆசனத்தில் பொருத்திய மதன், மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.

மீண்டும் ஆபீஸ் தொலைபேசி அழைத்தது. எடுத்தான். “ஹலோ மதன் ஹியர்.”

“நான் பிரபாகர் பேசறேன்.”

“ஹலோ பிரபாகர் ஸார். நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இல்ல ஸார். எக்கச்சக்கமா பேமெண்ட் பாக்கி வச்சிருக்கீங்க. நான் எப்பிடி ஸார் நல்லா இருக்க முடியும்? கிட்டத்தட்ட மூணு மாசம் முழுசா முடியப் போகுது... இன்னிக்கு ஆள் அனுப்பறேன். செக் குடுத்தனுப்புங்க...”

“இன்னிக்கா? இன்னிக்கு முடியாதே ஸார். கொஞ்சம் பொறுத்துக்கோங்க ஸார். ஒரு க்ளையண்ட் கிட்ட இருந்து பேமெண்ட் வர வேண்டி இருக்கு. வந்ததும் குடுத்துடறேன்”


“இதேயேதான் ஸார் எப்ப கேட்டாலும் சொல்றீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்டர்நேஷனல் ஆர்டர்லாம் எடுத்து செய்றீங்க. உடனுக்குடன் பணம் ஸெட்டில் பண்ணுவீங்கன்னுதான் நீங்க கேக்கறப்பல்லாம் பேப்பர் தூக்கி விடறேன். ஆனா நீங்க பில் ஸெட்டில் பண்றதுக்கு இவ்வளவு லேட் பண்றீங்களே ஸார்?”

“எனக்கு ஒரு வாரம் டைம் குடங்க பிரபா ஸார். அதுக்குள்ளயே உங்களுக்கு செக் குடுத்துடுவேன்.”

“என் நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு மதன் ஸார். இவ்வளவு பெரிய தொகையை மூணு மாசம் பாக்கி வச்சீங்கன்னா எப்பிடி சமாளிக்கிறது? ப்ளீஸ் முழுத் தொகைக்கும் பேமெண்ட் ரெடி பண்ணி ஸெட்டில் பண்ணிடுங்க ஸார்.”

“நிச்சயமா நான் எதிர்பார்க்கற செக் வந்ததும் முதல் பேமெண்ட் உங்களுக்குத்தான்.”

“ஓ.கே. ஓ.கே.”

ரிசீவரை வைத்த மதன் பெருமூச்சு விட்டான். `எந்த கிளையண்ட் கிட்ட இருந்தும் பேமெண்ட் வரவேண்டியது இல்லை. நான் பாட்டுக்கு ரீல் சுத்தி விட்டுட்டேன். பேப்பர் ஸ்டோர்ஸ் பாக்கியை எப்பிடி குடுக்கப் போறேன்னு எனக்கே தெரியலை. இந்த தொகையைக் குடுத்தாத்தான் அடுத்து பிரபாகர் பேப்பர் சப்ளை பண்ணுவார். பேப்பர் குவாலிட்டியும், பேப்பர் ரேட்டும் அவர்கிட்டதான் கரெக்ட்டா இருக்கும். வேற பேப்பர் ஸ்டோர்ஸ்க்குப் போறதும் சரிப்பட்டு வராது. ம்... என்ன செய்யலாம்’ நீளமாக யோசித்தான். இன்டர்காமை எடுத்தான்.

“உஷா, என் ரூமுக்கு வாங்க” காரியதரிசி உஷாவை அழைத்தான்.

பச்சை சூடிதாரில் நுழைந்திருந்த உஷாவிற்கு வயது முப்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது. கண்களில் அணிந்திருந்த சோடா புட்டி கண்ணாடி மட்டும் அவளுக்கு மைனஸ் பாயி்ண்ட்டாக இருந்தது. கணக்கில் புலி. கணினியியல் கல்வியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தாள்.

மதனின் அறைக்கதவை நாசூக்காய் தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

“உட்காருங்க உஷா. நமக்கு பிரிண்ட்டிங் ஆர்டர் எக்கச்சக்கமா வருது. இருக்கற எல்லா மிஷின்களும் நாள் தவறாம ஓடிக்கிட்டிருக்கு. க்ளையண்ட்சும் உடனுக்குடனே நம்ப பில்லை ஸெட்டில் பண்ணிடறாங்க. ஆனா ஏன் எப்பவும் நமக்கு ஃபைனான்ஸ் பிரச்சினையாவே இருக்கு? அக்கவுண்ட்ஸ் பார்த்து எனக்கு ஏன் இந்த நிலைமைன்னு சொல்லுங்க.”ஸார். அக்கவுண்ட்ஸ் எல்லாம் பார்த்துக்கிட்டுதான் ஸார் இருக்கேன். உங்க வீட்டோட லோன் வட்டியோட கட்டிறோம். மேடத்தோட காருக்கு லோன் கட்டறோம். உங்க காருக்கும் கட்டறோம். உங்க காருக்கு ரெண்டு மாசமா லோன் கட்டவும் இல்ல. நிறைய ஸெல்ஃப் செக் போட்டு பணம் எடுத்துருக்கீங்க. உங்களோட வெளிநாட்டு ட்ரிப் செலவு மட்டும் இந்த வருஷம் ஏழு லட்சம் ஆகி இருக்கு ஸார். நிலைமை ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்கு. பேப்பர் ஸ்டோர்ஸ் பிரபாகர் தினமும் போன் பண்றார். அவருக்கே ஏழு லட்சம் ரூபாய் குடுக்கணும்.”

“பிரபாகர் இப்பத்தான் என்னோட பெர்ஸனல் லைன்ல கூப்பிட்டு பேசினார். இப்போதைக்கு அவரோடதுதான் பெரிய பிரச்சினை. அடுத்து, நாம அவசரமா முடிச்சுக்கொடுக்க வேண்டிய ஆர்டருக்கு பேப்பர் வாங்கணும். பழைய பாக்கியை குடுக்காம அந்த மனுஷன் வாங்கணும். பழைய பாக்கியை குடுக்காம அந்த மனுஷன் பேப்பர் சப்பை பண்ண மாட்டார்.”

“வேற டீலர்ட்ட பேப்பர் வாங்கலாமே ஸார்?”

“உங்களுக்கு பிரபாகரைப் பற்றித் தெரியாது. அவர்தான் பேப்பர் டீலர்ஸோட அசோசியேஷன் தலைவர். அவர் ஒரு வார்த்தை சொன்னா போதும். எந்த டீலரும் நமக்கு ஒரு ரீல் பேப்பர் கூட சப்ளை பண்ண மாட்டாங்க... ம்... என்ன பண்றதுன்னே தெரியலையே...”

“நிலைமை ரொம்ப மோசமா இருக்கு ஸார். காருக்கு லோன் குடுத்த ஆரஞ்ச் ஃபைனான்ஸ் கம்பெனியில இருந்து தினமும் செக் கேட்டுக்கிட்டிருக்காங்க... உங்க ஸெல் போன் பில் கட்டறதுக்கும் பாங்க்ல பணம் இல்ல ஸார்... உடனே ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க ஸார். இல்லைன்னா கஷ்டம்.”

“ஓ.கே. உஷா. பணத்துக்கு அரேன்ஜ் பண்ண முயற்சி செய்றேன். நாம பிரிண்ட் பண்ணிக் குடுத்ததுக்கெல்லாம் வெளியில இருந்து வர வேண்டிய தொகை எல்லாம் வந்துருச்சுல்ல?”

“அநேகமா நம்ம க்ளையண்ட்ஸ் எல்லாருமே அட்வான்ஸாவே பணம் குடுத்துடறாங்க ஸார். பிரிண்ட்டிங் அடிச்சுக்குடுத்த வரைக்கும் பணம் வசூலாயிடுச்சி. யாருமே நமக்குத் தர வேண்டியது இல்லை ஸார்.”

“ஹும்...” நீண்ட பெருமூச்சு விட்டான் மதன்.

 “ஓ. கே. உஷா நீங்க போகலாம்.”

உஷா வெளியேறினாள். மீண்டும் பணப்பிரச்சினை. ஆபீஸிற்கு வரும்பொழுது கணேஷின் மிரட்டல். இவை எல்லாம் சேர்ந்து மன உளைச்சலை உண்டாக்கியது. தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

சொஸைட்டியில் பிரஸ் அதிபர் மதன். கார், பங்களா, வெளிநாட்டு விஜயம், ‘பெரிய ஆளுப்பா அந்த மனிதன்’ என்கிற இமேஜ்! அதைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயம் தன் சுகபோகங்களையும் இழந்துவிடக் கூடாது. பாடுபட்டு வளர்த்த பிரஸ்ஸின் பிரபலமும் மங்கிவிடக் கூடாது.

தண்ணீர் குடிக்கச் சென்ற யானையின் தும்பிக்கையை மெல்ல பிடித்து இழுக்கும் முதலையைப் போல, தன் காலைப் பிடித்த முதலை இப்போது கழுத்து வரை பிடித்துவிட்டதை உணர்ந்த மதன் செய்வதறியாது திகைத்தான். நீண்ட நேரம் சிந்தித்தான். இன்டர்காம் பட்டனை அழுத்தினான். அவனது காரியதரிசி ஷீலாவின் சாக்லேட் குரல் கேட்டது. அவளை உள்ளே வரும்படி பணித்தான்.

ஷீலா உள்ளே வந்தாள்.

சாயம் போன ஜீன்சும், தொப்புள் தெரியும்படியான குட்டை ஷர்ட்டும் அணிந்திருந்தாள். ஆண்களுக்கு நிகராகத் திறமை மட்டும் அல்லாது நடை, உடை, பாவனைகளிலும் இருப்போம் என்ற மனப்பான்மை உள்ள பெண்களைப் போலக் காணப்பட்டாள். தலைமுடியும் ஒட்ட வெட்டி இருந்ததால் மேலாடை மட்டுமே அவளை ஒரு பெண்ணாகக் காட்டியது சற்று தடித்திருந்த உதடுகளைப் பிரித்து பேச ஆரம்பித்தாள்.

“யெஸ் ஸார்”

“ஷீலா, யார்கிட்ட இருந்து போன் வந்தாலும் எனக்கு லைன் குடுக்க வேண்டாம். உங்க அங்கிள் யாரோ ஃபைனான்ஸ் கம்பெனி வச்சிருக்காங்கல்ல?”

“ஆமா ஸார். ஸ்டார் ஃபைனான்ஸன்னு என் அம்மாவோட தம்பி கம்பெனி நடத்தறார். என்ன ஸார் விஷயம்?”

“ஓ... ஒண்ணுமில்ல... எனக்கு ஒரு தொகை தேவைப்படுது. அதுக்காகத்தான்.”

“அதுக்கென்ன ஸார்? உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க. மாமாகிட்ட கேட்டுப் பார்க்கறேன். ”

“ஏழு லட்ச ரூபா இப்ப அவசரமா தேவைப்படுது.”

“அவ்வளவு பெரிய தொகையா...? நான் அவர்ட்ட கேக்கறேன் ஸார். ஊர்ல இருக்காரா என்னன்னு தெரியல. ஊருக்குப் போறதா சொல்லிக்கிட்டிருந்தார்.”


“தெரிஞ்சு சொல்லுங்க. மேட்டர் அர்ஜெண்ட். இன்னொரு விஷயம் ஷீலா... சாயங்காலம் மேடம் பத்மினி வருவாங்க. அது வரைக்கும் யார் ஃபோன் பண்ணாலும் எனக்கு லைன் கனெக்ட் பண்ணாதீங்க. என்னோட பெர்ஸனல் போன், ஸெல்போன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணிடப் போறேன். எனக்கு தனிமை தேவை.”

 “ஓ.கே. ஸார்” ஷீலா வெளியே நடந்தாள். ஜீன்ஸின் இறுக்கம் அவளது பின்பக்கத்தின் வடிவங்களை தெளிவாக எடுத்துக் காட்டியது.

பத்மினிக்கு மதனுடன் வெளியே போவது என்றால் மிகவும் ஆசை. மதன் அவளை வெளியே அழைத்துச் செல்வது அபூர்வம். சந்தனக் கலர் பொள்ளாச்சி காட்டனில் அரக்கு வண்ண ஜரிகை பார்டர் போட்ட புடவையைத் தேர்ந்தெடுத்தாள். மதனுக்கு அந்தப் புடவை பிடித்தமானது. பார்டருக்குப் பொருத்தமாக காதணிகள், வளையல்கள், செயின் அணிந்து, தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டாள். குட்டைக் கூந்தலும், குதிரை வாலும் நாகரீகம் எனக் கருதும் இந்த நாளில் வித்தியாசமாக தளரத் தளரப் பின்னல் போட்டு நிறைய மல்லிகைப் பூவை வைத்துக் கொள்வது அவளது வழக்கம். எல்லாம் முடிந்ததும் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசித்தாள். மகிழ்ச்சி பெருகிய மனநிலையில், அதை முழுமையாக அனுபவிக்க முடியாமல் சுந்தரின் வருகையும் அவனது மிரட்டலும் தாக்கியது. அனைத்தும் ஒரு சேர திடீரென நெஞ்சில் நெருடலை உண்டாக்கியது.

இதயத்தில் படபடப்பும், துடிப்பும் அதிகமாகியது.

‘சந்தோஷமான தன் வாழ்வில், சுந்தரால் இப்படி ஒரு சஞ்சலம் நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லையே’ இந்த எண்ணம் தோற்றுவித்த உணர்வுகளால் அவளது முகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் சற்று வாடின.

‘நான் நேர்மையானவள். என் நேர்மைக்கு எந்த சோதனையும் வராது. நான் வணங்கும் தெய்வம் என்னைக் கை விடாது.’ தளர்ச்சியும், தைரியமும் மாறி மாறி உருவாகியது. சமாளித்துக் கிளம்பினாள்.

வீட்டைப் பூட்டினாள்.

கார் சாவியை எடுத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து நிதானமாய் காரை செலுத்தினாள். குழப்பமான மனநிலையில் கார் ஓட்டுவது விபத்திற்கு வழி வகுக்கும் என்ற ஜாக்கிரதை உணர்வில் கவனமாக ஓட்டினாள்.

3

எம்.பி.டி. பிரிண்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்த காம்பவுண்டு சுவர் ஓரமாகக் காரை நிறுத்தினாள் பத்மினி. எம் என்ற எழுத்து மதனையும் பி என்ற எழுத்து மதனின் அம்மா பார்வதியையும் டி.மதனின் அப்பா தியாகராஜனையும் குறிப்பிடுவது. அவனது வளர்ச்சியினைப் பொறுத்தவரை அதைக் கண்டு மகிழ அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவனது வளர்ச்சியின் கூடவே சேர்ந்து கொண்ட அவனது வீழ்ச்சிக்கான தேவையற்ற கெட்ட பழக்கங்களைப் பொறுத்தவரை அதைக் கண்டு துன்புற அவர்கள் உயிரோடு இல்லாத பாக்யசாலிகள்.

பத்மினி, அலுவலகத்திற்குச் சென்றாள்.

“குட் ஈவினிங் மேடம். வாங்க. நீங்க வருவீங்கன்னு ஸார் சொன்னாங்க.” ஷீலா வரவேற்றாள்.

ஷீலாவின் அரை குறையான மேலாடை பத்மினிக்கு லேசான வெறுப்பைத் தோற்றுவித்தது. அவளது சிநேகமான பேச்சினால் அந்த வெறுப்பு மறைந்தது.

“ஹலோ மேடம்” உஷாவும் வரவேற்றாள்.

பத்மினி, மதனின் அறையை நோக்கி நடந்தாள்.

“மேடம் எவ்வளவு அழகா இருக்காங்க இல்ல?” உஷா, ஷீலாவிடம் கேட்டாள்.

“ஆமா. நல்ல நிறம். நல்ல அழகு. என்ன இருந்தாலும் சேலை, ஜாக்கெட், பின்னல் இந்த கெட் – அப்புக்கு ஒரு தனி மவுசுதான்.” ஷீலா சின்னதாய் ஒரு லெக்சர் அடித்தாள்.

“இதை நீ... சொல்றியா? சூடிதார்ல முழுசா உடம்பை மூடிக்கிட்டிருக்கிற நான் சொன்னா ஓ.கே. மூட வேண்டியதை மூடாம ஒரு டிரஸ் போட்டிருக்கற நீ சொல்றது...”

“பேருதான் உடம்பை மூடிக்கற சூடிதார்னு. துப்பட்டான்னு ஒண்ணு பேருக்கு மேல போட்டுக்கறது. அது உன் உடம்பை ஒழுங்கா மறைக்குதா? நீ என்னடான்னா என்னைக் கிண்டல் பண்ணறே...”

“ஆக மொத்தம் நீயும் ஜெயிக்கல. நானும் ஜெயிக்கல.”

இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

மதனின் அறைக்குள் நுழைந்த பத்மினி திடுக்கிட்டாள். மதன், அவனுடைய மேஜை மீது தலையைக் கவிழ்த்திருந்தான்.

“என்னங்க... என்னங்க... ” அவனுடைய தோளைத் தொட்டு உலுக்கினாள்.

கண் விழித்த மதன், பத்மினியைப் பார்த்தான்.

“என்னங்க உடம்பு சரி இல்லையா? ஆபீஸ் ரூம்ல தூங்கறீங்க? என்ன பண்ணுது உடம்புக்கு?”

“ஒண்ணுமில்லைம்மா. டயர்டா இருந்துச்சு. சும்மா டேபிள் மேல சாஞ்சேன். அப்பிடியே தூங்கிட்டேன் போலிருக்கு.”

“காலையில இருந்தே நீங்க சரி இல்ல. நம்ப டாக்டர்கிட்ட நீங்க செக்கப்புக்கு போயே ஆகணும்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்.”

சில வினாடிகளில் தெளிவான முகத்துடன் வந்தான் மதன்.

“இந்த சேலை உனக்கு அழகா இருக்கு” பத்மினியின் உருவத்தை ரசித்தான். மெள்ள, அவளது கழுத்தில் இருந்து, கன்னத்திற்குக் கைகளைக் கொண்டு சென்றான். மென்மையாகத் தடவினான். பின் மெதுவாக கழுத்துக்குக் கீழே இறங்கிய அவனது கைகளைத் தட்டிவிட்டாள் பத்மினி.

“என்னங்க இது?” செல்லமாக சிணுங்கினாள்.

“நேரமாச்சு. போலாமா?” கேட்டபடியே நகர்ந்தாள் பத்மினி.

“ஓ.கே.” மதன், கார் சாவியை எடுத்துக் கொண்டான். இருவரும் வெளியே வந்தனர்.

மதனுடைய காரில் இருவரும் ஏறிக் கொண்டனர்.

“ஆண்டவன் படைச்சான்... என் கிட்டக் கொடுத்தான்... அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்.” பாடியபடி காரை ஓட்டினான் மதன். பத்மினியின் உள்ளத்துள் சந்தோஷம் பொங்கியது. கூடவே சுந்தரின் வருகை வந்த நினைவில் அந்த சந்தோஷம் மங்கியது. பிரிண்டிங் ஃபேர் பார்த்துவிட்ட சோழாவில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்பொழுது மணி இரவு பன்னிரண்டுக்கு மேல் ஆகி இருந்தது.

வீட்டுக் கதவை திறப்பதற்காக பத்மினி முன்னே சொன்றாள். தன்னுடைய காரை நிறுத்திவிட்டு நிதானமாக நடந்து கொண்டிருந்த மதனின் கண்களில் தபால் பெட்டியில் செருகப்பட்டிருந்த வெள்ளைக் காகிதம் தென்பட்டது.

‘மறுபடியும் அந்த கணேஷ் லெட்டர் வச்சுட்டு போயிருக்கானே?’ நல்ல வேளை பத்மினி அதைப் பார்க்கலை... மனதிற்குள் அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து போக, ‘திக்... திக்...’ இதயத் துடிப்புடன் கடிதத்தை எடுத்துப் பிரித்தான். படித்தான்.

‘மதன். என் தங்கையின் வாழ்வைக் கெடுத்த உன் வாழ்வை நான் கெடுப்பேன்’ ஒரே வரியில் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தது. இந்த முறையும் கவர் இல்லாமல் கடிதம் மட்டும் செருகப்பட்டிருந்தது.

கடிதத்தை தன் ஷர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். சிறிது நேரம் மறந்திருந்த பிரச்சினை மீண்டும் மனதைக் குடைந்தது. கவலைகள், இலவசமாய் அளித்த பாரம் நெஞ்சை அழுத்தியது.


பெருமூச்சு விட்டபடி படுக்கை அறைக்குள் நுழைந்தான். ஷர்ட்டில் இருந்த கடிதத்தை தன் லாக்கரில் வைத்தான். நைட் சூட்டிற்குள் நுழைத்தான். பாத்ரூம் சென்று குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவினான். வெளியே வந்தான்.

புடவையையும், ஜாக்கெட்டையும் அவிழ்த்துவிட்டு, நைட்டியை தலைவழியாக அணிய முயற்சி செய்து கொண்டிருந்தாள் பத்மினி. வெயில் படாததால் நிறம் மாறாமல் இருந்த முதுகுப் பகுதி சந்தனப்பலகை போல மினுமினுத்தது. இடுப்பில் வலது பக்கம் இருந்த பெரிய மச்சம் சூரியகாந்திப் பூவின் நடுப்பக்கத்தை ஞாபகப்படுத்தியது.

மதனுடன் சந்தோஷமாக வெளியே போய்விட்டு வந்த உல்லாசமான மனநிலையில் குதூகலமான உணர்வுகளுடன் வேண்டுமென்றே மிக மெதுவாக நைட்டியை அணிந்தாள்... அணிவது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

வழக்கமாக இப்படி ஒரு நிலையில் அவளைக் கண்டால் மென்மையாக அணைத்து, அவளைக் கண்மூடிக் கிறங்க வைக்கும் மதன், அன்று படுக்கையில் `தொப்’பென சரிந்தான். கண்களை மூடிக் கொண்டான்.

அவனை எதிர்பார்த்து ஏமாந்த பத்மினி, நைட்டியை முழுமையாக அணிந்து கொண்டாள். அவனருகே சென்றாள்.

“என்னங்க, என்ன ஆச்சு...? திடீர்னு டல்லாயிட்டீங்க?” பத்மினி கேட்டதும் கண்களைத் திறந்தான் மதன்.

“ஓ... ஒண்ணுமில்லையே. களைப்பா இருக்கு. படுத்திட்டேன்.”

“அப்ப சரி. நீங்க படுத்துக்கங்க. நான் போய் பாலுக்கு உறை ஊத்திட்டு எல்லாக் கதவையும் செக் பண்ணிட்டு வரேன்.”

“சரிம்மா.”

பத்மினி நகர்ந்ததும், மதனின் இதயத்தில், சிந்தனைகள் தங்கள் வேலையைத் திறம்படக் காட்டின.

“ம்... செக்யூரிட்டியையும் மீறி இந்த கணேஷ் எப்படி தபால் பெட்டியில லெட்டரைக் கொண்டு வந்து போடறான்... செக்யூரிட்டிக்கு டிப்ஸ் அடிச்சிருப்பானோ? வீட்டை விட்டு வெளியே போனா வழியில மடக்குறான். ஆபீஸ் போனா பிரபாகர் பணத்தைக் கேட்டு நெருக்கறார். பாவம் பத்மினி, என்னோட பிரச்சினைகளில் நான் மூழ்கி மூட் அப்செட் ஆக, அவ எதிர்பார்ப்புகள் நிறைவேறாம ஏமாந்திருப்பா. அதை வெளியே காட்டிக்காம உள்ளுக்குள்ளேயே மூடி மறைச்சிருப்பா. ம்... என்னோட பிரச்சினைகளை ஒதுக்கி வச்சுட்டு அவளை சந்தோஷப்படுத்தணும்தான் இன்னிக்கு ப்ரேக்ராம் போட்டேன். இப்ப இந்த கணேஷோட லெட்டர் என்ன மூடை மாத்திடுச்சு...’ கட்டிலை ஒட்டிய ஷெல்ஃபைத் திறந்தான். அங்கிருந்த தூக்க மாத்திரைகளில் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான்.

தாயின் தாலாட்டை விட மிக வேகமாய் அதனை சொக்க வைத்தது அந்தத் தூக்க மாத்திரை. பத்மினி வேலைகளை முடித்துவிட்டு வந்து படுப்பதற்குள் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவனருகே அவனது தோளில் முகம் பதித்துப் படுத்த பத்மினி தூக்கம் வராமல் துக்கத்தில் ஆழ்ந்தாள்.

அன்றைய மாலைப் பொழுதின் உற்சாகம் தந்த நிறைவில் தன்னை மதனிடம் முழுமையாக ஒப்படைக்க ஆசையாகக் காத்திருந்தும் அவன் அயர்ந்து தூங்கிவிட்டது ஒரு புறம் இருக்க, அன்று மதியம் சுந்தர் வந்து மிரட்டியதும், கழுத்தை நெரிக்கும் அளவு அவனது கோப வெறியும், பயமுறுத்தலும் சேர்ந்து அதிக மன உளைச்சலை உண்டாக்கியது.

‘மதன் நல்ல மூடில் இருக்கும்போது, இதைப் பற்றி எல்லாம் சொல்லி விடலாமா...’ முதல் இரவு அன்றே சொல்லிவிடலாம் என நினைத்தபோது இந்த கீதாதான் “சொல்லாதே புதுசா வாழ்க்கையைத் தொடங்கும்போது பழசை எல்லாம் கிளறாதே. பிரச்சினை ஏற்பட்டு விடும்” என்று பயமுறுத்திவிட்டாள். இப்போது மதனிடம் சொன்னால் “இத்தனை நாளாக ஏன் மறைத்தாய்?” என்று விஷயம் விஸ்வரூபமாகிவிட்டால்...?’ கவலை, பயம், துன்பம் மூன்றும் சேர்ந்து கொள்ள, தூக்கம் மட்டும் அவளிடம் நெருங்க மறுத்தது.

கீதா, பத்மினியின் உயிர்த்தோழி. இப்போது கணவனுடன் அமெரிக்காவில் வசிப்பவள். அவளுடைய அறிவுரையின் படிதான் மதனிடம் தன் காதல் விவகாரங்களை மறைத்திருந்தாள். நிம்மதியாக வாழ்ந்திருந்தாள். இப்போது செழித்து வளரும் பயிருக்கு நடுவே விஷச் செடி முளைத்தது போல் சுந்தரின் வருகை.

மதனை விட்டு எழுந்து, உட்கார்ந்தாள். கால்களை மடக்கி, தலையை முழங்கால்களுக்குள் புதைத்தபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தவள், பின்னிரவில்தான் தூங்கினாள்.

“அந்த மதனோட அகம்பாவத்தையும், ஆணவத்தையும் ஒழிச்சுக் கட்டணும்னா அவனோட ப்ரஸ் டெளன் ஆகணும்... எல்லாத்தையும் இழந்து அவன் தவிக்கணும். அவனோட ப்ரஸ்ல ஏழு மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது. என்னோட ப்ரஸ்ல ரெண்டு மிஷின் சும்மா கிடக்கு. எனக்கு வந்த ஆர்டர் எல்லாமே அநேகமா கை மாறிப் போச்சு. அவனைப் பழி வாங்கணும்” பாலுவின் கண்களில் கோபக்கனல் தெறித்தது.

“அப்பிடின்னா அந்த மதனை மயானத்துக்கு அனுப்பிடறேன். ‘ம்’னு ஒரு வார்த்தை சொல்லுங்க. அதை விட்டுட்டு அவனோட ப்ரஸ்ஸை ஒழிக்கணும்ங்கறீங்க?” வழக்கமாக சினிமாவில் வரும் அடியாள் போல இல்லாமல் சஃபாரி உடையில் கெளரவமாக உடை அணிந்திருந்தான் பாலுவுடன் பேசிக் கொண்டிருந்தவன்.

“என்னோட டெக்னிக் வேற. முதல்ல அவனோட ப்ரஸ்ஸை ஒழிக்கணும். அது அழிஞ்சு போச்சேங்கற வேதனையில அவன் துடிக்கணும். அதைப் பார்த்து நான் ரசிக்கணும். அதுக்கப்புறம் அவனோட கதையை முடிக்கணும்.”

“ஓ... நீங்க அப்பிடி வர்றீங்களா? எனக்கு என்ன ஸார்... நீங்க பணத்தை அள்ளி வீசுங்க. நான் அவனோட பிணத்தை வீசறேன்.”

“என்னை மாட்டி விட்றாம கவனமா செய்யணும். ஜாக்கிரதை!”

“எங்க வலையில மாட்டற மீனையும் விட்ற மாட்டோம். நாங்களும் எதிலயும் மாட்டிக்க மாட்டோம். நாங்க மாட்டினாத்தானே நீங்க மாட்டறதுக்கு?”

“ஆமா நீ ஒருத்தன்தானே வந்திருக்க. ‘நாங்க’ ‘நாங்க’ங்கறே?”

“நம்ம கூட்டாளி ஒருத்தன் இருக்கான் ஸார்.”

“நம்ம கூட்டாளியா? உன் கூட்டாளின்னு சொல்லு.”

 “ஆமா ஸார். நான் ஒருத்தனா செய்யறதில்லைங்க. கூட்டாளியும் என்னை மாதிரி கச்சிதமா காரியத்துல கை குடுக்கறவன்தான். நீங்க கவலைப்படாதீங்க.”

“அப்ப சரி? இந்தா மீதியை வேலையை முடிச்சப்புறம் வாங்கிக்க.”

“சரிங்க சார்.” பணத்தைக் கண்ட அந்த மனிதன் சிரித்தான்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைத் தொடர்பு கொள்ள என் வீட்டு போனுக்கோ செல்போனுக்கோ கூப்பிடக் கூடாது. நேர்ல வந்து பார்த்துத்தான் பேசணும். ஞாபகம் வச்சுக்க.”

“ஞாபகம் இருக்கு ஸார். வரட்டுமா?”

“ஓ.கே.”

‘தினமும் தன்னை சூடான காபியுடன் எழுப்பும் பத்மினி இன்னும் தூங்கிக்கிட்டிருக்கா? ஏன் உடம்பு சரி இல்லையோ? வேலைக்காரி வேற வராமல், பாவம் எல்லா வேலையும் தனியாளா செய்யறா...’

யோசித்துக் கொண்டே அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான்.

அவன் தொட்ட உணர்வில் விழித்துக் கொண்டாள் பத்மினி. “என்னங்க மணியாச்சு? அசந்து தூங்கிட்டேங்க.”


“அதனால என்ன. நல்லா ரெஸ்ட் எடு. என்ன அவசரம்?” தன் நெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்த அவனது கையைப் பற்றிக் கொண்டாள். நெஞ்சில் நிம்மதி பரவுவது போல் உணர்ந்தாள்.

“ராத்திரி என்னன்னே தெரியலை பத்மினி. திடீர்னு டயர்ட் ஆகி, நீ படுக்க வர்றதுக்குள்ள தூங்கிட்டேன். ஸாரி...”

 “ஐயயோ... அதுக்கு ஏங்க ஸாரி எல்லாம் சொல்லிக்கிட்டு? இருங்க. நான் போய் காபி கொண்டு வரேன். நீங்க ஜாக்கிங் போணுமில்ல?”

“சரி, நீ போ. நான் கிச்சனுக்கே வந்து காபி குடிச்சுக்கறேன்.”

“சரிங்க...”

பத்மினி எழுந்து சொன்றாள்.

முன் தினம் இரவு அவன் பிரித்துப் போட்ட தூக்க மாத்திரையின் அலுமினிய ஃபாயில் கவர் அவனைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

‘எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?’ என்று அலை பாய்ந்து தினம் தினம் தூக்க மாத்திரையிடம் தஞ்சம் புகுவது வாடிக்கையாகிப் போன வேதனை! அனுமதி இன்றி நெஞ்சில் சுமை ஏறிக் கொள்ள தளர்வான நடையுடன் காபி குடிப்பதற்காக சமையலறைக்கு சென்றான் மதன்.

பிரபாகர் டென்ஷனாகி இருந்தார்.

“என்ன மதன்? நீங்க சொன்ன தேதிக்கு மேல மூணு நாள் தாண்டியாச்சு. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. நாளைக்கு நீங்க எனக்குத் தர வேண்டிய தொகையை தரலைன்னா நடக்கறதே வேற. நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். நீங்க டீசன்ட்டா இருக்கற வரைக்கும் நானும் ஜென்டில் மேனா இருப்பேன். என்னை பண விஷயத்துல ஏமாத்தணும்னு நினைச்சா... அசிங்கமாயிடும். ஜாக்கிரதை.”

மதன் மீதிருந்த கோபத்தை எல்லாம் போன் ரிசீவர் மீது காட்டினார். கல்லடிபட்ட நாய்க்குட்டி போல ரிசீவர் துள்ளிக் குதித்தது, அதை வீசி எறிந்த வேகத்தில்.

“ராஸ்கல்... ஒரு மாசமா இதோ தரேன் அதோ தரேன்னு சாக்கு சொல்லிக்கிட்டிருக்கான். அவன் கிட்ட பணத்தை எப்பிடி வாங்கறதுன்னு அதிரடியா ஒரு திட்டம் போடணும். இந்த பேப்பர் ஸ்டோர்ஸ் ஆரம்பிச்ச இத்தனை வருஷத்துல இவ்வளவு பெரிய தொகை எந்த க்ளையண்ட் கிட்டயும் நின்னதில்லை. நான் பணம் தர வேண்டிய பார்ட்டிக்கெல்லாம் இவனால தவணை சொல்லிக்கிட்டிருக்க வேண்டி இருக்கு. இவனாலயே எனக்கு பிளட் பிரஷர் ஏறி ஹார்ட் அட்டாக் வந்துடும் போல இருக்கு?” கோபம் தந்த உணர்வுகள் அவரது இதயத் துடிப்பை படு வேகமாக்கின.

கோவிலில் தெய்வ சந்நிதி முன் கை கூப்பி, கண் மூடி நின்றிருந்தாள் பத்மினி. ‘தெய்வமே! என் கடந்த காலம் களங்கம் இல்லாதது. இது உனக்கே தெரியும். நான் காதலிச்சவன் அதற்கு தகுதி இல்லாதவன்னு தெரிஞ்சப்புறம் அவனை மறந்துட்டேன். உண்மையான காதல்னு நம்பி, பொய்மைக்குள் அடங்கப் பார்த்த என் வாழ்க்கையை அன்னிக்கு நீ காப்பாத்தின. அதே மாதிரி இப்பவும் அந்த சுந்தர்கிட்ட இருந்து என் வாழ்க்கையைக் காப்பாத்திக் குடுத்துடு தெய்வமே’ மனம் உருக வேண்டிக் கொண்டாள். கல்லால் ஆன விக்ரகம் தன் சொல்லால் மனம் இளகும் என்று நம்பி கண் மூடி வணங்கிவிட்டு, கண்களைத் திறந்தபோது அவளுக்கு நேராக சுந்தர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். பயந்தாள். வேகமாக நடந்தாள். பிரகாரத்தைச் சுற்றம் பொழுது அவளைப் பின் தொடர்ந்தான் சுந்தர்.

“பத்மினி” சுந்தர் கூப்பிட்டான். பத்மினி நின்றாள். “ப்ளீஸ்... ஏன் இப்படி என்னை நிழலா தொடர்ந்து வந்து தொந்தரவு பண்றே?” பயத்தில் அவளது குரலில் ஒலி மிக மெதுவாக வந்தது.

“உன் நிஜரூபம் உன் புருஷனுக்குத் தெரியாம இருக்கறதுக்கு நீ எனக்கு குடுக்க வேண்டியதைக் குடுத்துட்டா நான் நிழலா உன் பின்னால நிஜம்மாவே வரமாட்டேன்...”

“கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறியே? நீ எல்லாம் ஒரு மனுஷனா?”

“கேவலம் பணமா? தேவைகளுக்குத்தாம்மா பணம்! நான் கேட்கற பணத்தைக் குடுத்துட்டா உன் வழிக்கு நான் ஏன் வரப் போறேன்?”

“நான்தான் அப்பவே சொன்னேனே, பணம் தர முடியாதுன்னு.”

“நானும் அப்பவே சொன்னேனே, பணம் தரலைன்னா நீ பிணம்தான்னு. வருமான வரியை ஒழுக்கமா கட்டிட்டா எந்தத் தொல்லையும் இல்லாம நிம்மதியா பிஸினஸைக் கவனிக்கலாம். அது மாதிரி எனக்கு செட்டில் பண்ணிட்டீன்னா கண்ணியமான கணவனோட, காலமெல்லாம் கண் கலங்காம நீ வாழலாம். இல்லைன்னா... நீ செத்துப் போய் உன் புருஷனோட கனவுல ‘மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா’ன்னு நீ வெள்ளை டிரஸ்ல பாட வேண்டி இருக்கும். எப்பிடி வசதி, நீயே தீர்மானம் பண்ணிக்க. ரொம்ப லேட் பண்ணினா நீ லேட் பத்மினியாயிடுவே. புரிஞ்சுக்க” அழுத்தமாகக் கூறிவிட்டு நகர்ந்தான் சுந்தர்.

சுற்றும் முற்றும்தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, கோவிலை விட்டு வெளியேறினாள் பத்மினி.

இரண்டு நாட்கள் வீட்டிலேயே அடைந்த கிடந்தான் மதன். செல்போனை ஆப் செய்தான். வீட்டு போனில் ரிசீவரையும் கீழே எடுத்த வைத்தான்.

பொரும்பாலும் மெளனம் சாதித்தான். ஜாக்கிங் போகவில்லை. சரியாக சாப்பிடவில்லை. அவனது மாறுபட்ட நடவடிக்கைகள் பத்மினியை அதிகமாகக் கவலைப்படுத்தியது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல அவளது மனதில் பயம் தோன்றியது.

‘ஒருவேளை அந்த சுந்தர் இவரை சந்தித்து ஏதாவது உளறி இருப்பானோ’ அவளது இதயம் திகிலுடன் துடித்தது.

“என்னங்க, ஆபீஸ் போகலையா?” என்று முதல் நாள் கேட்டதுமே எரிந்த விழுந்தான். அதன் பின் எதுவும் கேட்காமல் பத்மினியும் மெளனம் சாதித்தாள்.

மதன் தனக்குள் ஏதோ சிந்தித்தபடியே இருந்தான். திடீரென சுறுசுறுப்பாய் எழுந்தான்.

‘ச்... ச... நாகரத்தினம் ஸாரை எப்படி மறந்தேன்?’

‘அவரால்தானே என்னோட இந்த எம்.பி.டி. பிரஸ் உருவாச்சு? இந்த இக்கட்டான சமயத்துல அவர்கிட்ட கேட்டா பணம் குடுத்து உதவி செய்வார். உடனே அவரைப் போய் பார்க்கலாம்’ சிந்தனையின் முடிவில் கிடைத்த யோசனையைச் செயல்படுத்த முனைந்தான். ‘பளிச்’ என்று வேறு உடை அணிந்தான். கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டிருந்த பத்மினியிடம் “இதோ வந்துடறேன்” என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.


4

ன் எஜமானனை சுமந்து கொண்ட கார். அலுங்காமல் குலுங்காமல் ஓடியது. பிரச்சினைக்குத் தீர்வு வரப் போகும் மகிழ்ச்சியில். வழக்கப்படி மதனின் வாயில் இருந்து பாடல் வெளிப்பட்டது.

‘ஆண்டவன் படைச்சான், என் கிட்டக் குடுத்தான்...’

அவன் இறங்க வேண்டிய இடத்தின் அருகே வந்ததும் காரை விட்டு இறங்கினான்.

பச்சைப் பசேல் என்ற தோட்டத்தின் நடுவே ஒரு பெரிய பங்களா. பச்சைக்கல் நெக்லஸ் அணிந்த மகாராணி போல கம்பீரமாய் காட்சி அளித்தது.

மனிதன் வாசனையை மோப்பம் பிடித்த நாய்கள் உரக்கக் குரைத்து தங்கள் கடமையைச் செய்தன. நாய்கள் பலத்த சங்கிலியால்கட்டப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் மதன், பங்களாவை நோக்கி நடந்தான்.

அதே சமயம் பங்களாவின் வெராண்டாவில் இருந்து வெளிவந்தார் ஒரு பெரியவர். பழமையான ஸ்டைலில் மெல்லிய ஜரிகை வேஷ்டியும், சந்தனக் கலர் முழுக்கை ஷர்ட்டும் அணிந்திருந்தார். கையில் தங்கச் செயினில் கோர்த்த கடிகாரம் லூஸாகஅவரது மணிக்கட்ட வரை வந்திருந்தது. கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினின் டாலரில் அவரது புகைப்படம் இருந்தது. நரைத்திருந்தாலும் மீசை அடர்ந்திருந்தது. அவரது கண்களில் வீசிய ஒரு ஒளி, அவர் மீது மிகுந்த மரியாதையைத் தோற்றுவிக்கும் விதத்தில் இருந்தது.

மதனைப் பார்த்த அவர் அவனை சற்று கூர்ந்து கவனித்தார். அதன் பின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து கண்ணாடியை எடுத்து அணிந்தார். “அட, மதன்! வாப்பா... வா... கண்ணாடி போடலைன்னா ஆள் கூட அடையாளம் தெரியமாட்டேங்குது...”

“வணக்கம் நாகரத்தினம் ஸார். எங்கயோ கிளம்பிட்டிருக்கீங்க போலிருக்கு?”

“பரவாயில்லை... நீ உட்கார்.”

அவனை உட்காரச் சொல்லிவிட்டு தானும் உட்கார்ந்தார்.

“என்ன மதன், பெரிய அளவுல முன்னேறிட்டேன்னு சொன்னியே? ரெண்டு வருஷமா நீ வர்றதே இல்லை. இப்ப ப்ரஸ் எப்பிடிப் போயிட்டிருக்கு? ஏன் இப்ப நீ ஒரு போன் கூட பண்றது இல்லை? அவ்வளவு பிஸியா?”

தான் அவரை நீண்ட காலமாகத் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டியதைப் புரிந்து கொண்டான்.

 “ஸார், நீங்க பார்த்து நட்டு வச்ச செடி என்னோட ப்ரஸ். இன்னிக்கு வளர்ந்து, பூத்துக் குலுங்குது. நீங்க பணம் குடுத்து உதவினதுலதான் எம்.டி.பி. ப்ரஸ் இன்னிக்கு இவ்வளவு பெரிய சென்னை ஸிட்டியில கூட பிரபலமா ஆகி இருக்கு. இந்த நன்றியை என்னிக்கும் நான் மறக்க மாட்டேன் ஸார்.”

“அதெல்லாம் சரி மதன். ஆனா நான் உன்னைப் பத்தி கேள்விப் படற விஷயங்கள். நான் சந்தோஷப்படற மாதிரி இல்லை. நீ சங்கடப் படற மாதிரி இருக்கு...”

“ஸார்... வந்து...”

“என்னை சமாதானப்படுத்தறது தேவை இல்லாத விஷயம்... அந்தக் காலத்துல உங்க அப்பா எனக்கு உதவி செஞ்சார். உரிமையோட அறிவுரையும் சொன்னார். அந்த அறிவுரை தான் இன்னிக்கு வரைக்கும் என் பிஸினஸோட அஸ்திவாரமா இருக்கு. சரி, திடீர்னு என்னைப் பார்க்க வந்த விஷயத்தைச் சொல்லு...”

“ஸார்...”

“நேரடியா விஷயத்துக்கு வா மதன். நான் ஒரு இடத்துக்கு போக வேண்டி இருக்கு.”

“ஸார்... அவசரமா ஏழு லட்ச ரூபா தேவைப்படுது ஸார். மூஸ மாசத்துக்குள்ளே திருப்பிக் குடுத்துடுவேன். நிறைய பிரிண்ட்டிங் ஆர்டர்ஸ் வருது. எல்லா மிஷினும் ரெண்டு ஷிப்ட் ஓடுது ஸார். அதனால சீக்கிரமாவே உங்க பணத்தைக் குடுத்துடுவேன் ஸார்.”

“ரெண்டு ஷிப்ட் ஓடுதுங்கற. அப்படின்னா நல்ல வருமானம் இருக்கணுமே? பின்ன எதுக்காக இப்ப ஏழு லட்ச ரூபா கடன் கேக்கற?”

“... அ... அது வந்து... ஸார்... ஆர்டர் வர வர அதுக்குத் தேவையான பேப்பர் வாங்கறேன். பேப்பர்ஸ் எக்கச்சக்கமா வாங்கறதுனால...”

“இரு... இரு...” அவனைக் கையமர்த்திய நாகரத்தினம் தொடர்ந்தார்.

“பேப்பர் வாங்கற. பிரிண்ட் பண்றே. பார்ட்டிக்கு டெலிவரி பண்றே. டெலிவரி பண்ணினதும் பேமெண்ட் குடுப்பாங்கள்ல்ல?”

“ஸார்...”

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மதன்.”

நாகரத்தினத்தின் குரலில் லேசான கடுமை தென்பட்டது.

“ஆமா ஸார். எல்லா க்ளையண்ட்சும் டெலிவரி குடுத்த ஒரு வாரத்துல பேமெண்ட் குடுத்துருவாங்க.”

“பேமெண்ட் குடுத்ததும் பேப்பர் கடைக்கு குடுத்திருக்கலாமே...?”

“ஸார்...”

 “மதன்... நான் வியாபாரத்துல பழம் தின்னு கொட்டை போட்டவன். நீ சொல்ற எந்தக் காரணத்தையும் என்னால ஒத்துக்க முடியாது. நீ அநாவசியமாகவும், அளவுக்கு மீறியும் செலவு பண்ணிட்டிருக்கேங்கற காரணத்தைத் தவிர...” நாகரத்தினத்தின் இந்த தாக்குதல் வாக்குவாதத்தை எதிர்பார்க்காத மதன் திகைத்தான்.

வாயடைத்துப் போய் மெளனமாய் தலை குனிந்தான்.

“மதன் ஒரு தொழில்ல கால் வச்சா அந்தத் தொழில்ல மட்டுமே முழுக்க முழுக்க கவனம் இருக்கணும். நிறைய ஆர்டர் வருது. நம்பளை யாரும் அசைக்க முடியாதுங்கற எண்ணம் வந்துட்டா பிஸினஸ் ஆட்டம் கண்டுடும். வியாபார வளம் போயிட்டா வாழ்க்கை நலமும் போயிடும். ஒரு மனுஷன், முன்னேற்றப் படிகள்ல ஏறிக்கிட்டிருக்கும்போது சறுக்கி விடறதுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கு. இன்னும் மேல ஏறிப் போறதுக்கு நல்ல விஷயங்கள் தாரளமா இருக்கு. மேல ஏறுவதும். சறுக்கி விழறதும் நம்ப கையில தான் இருக்கு. உடம்புல தெம்பு இருக்கும்போதே ஓய்வுக் காலத்துக்கு சேர்த்து வைக்கணும். எறும்பு கூட மழைக்காலம் வர்றதுக்கு முன்னால பாடுபட்டு சேர்த்து வைக்குது. உனக்கு பிஸினஸ் நல்லா நடக்குது. பேமெண்ட்டும் உடனே வந்துடுது. இத்தனை வருஷம் உழைச்ச உழைப்புக்குரிய பாங்க்- பாலன்ஸ் ஆறு டிஜிட்ல இருக்கணும். ஆனா நீ? அதே டிஜிட்ல எங்கிட்ட கடன் கேட்டு தடமாறிக்கிட்டிருக்க. ஸோ. நீ ஆரம்பரமா செலவு பண்ற. அதுவும் அடுத்தவன் பணத்தை. நான் சொல்றது சரிதானே?”

தலை குனிந்திருந்த மதன், அவரை நிமிர்ந்து பார்க்க தைரியம் இன்றி மெளனம் சாதித்தான்.

‘இவருக்கு எப்படித் தெரியும் இதெல்லாம்?’

“என்னடா, இவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்கிறியா?” கண்ணாடியைப் பார்த்தா நம்ம உருவம் தெரியற மாதிரி, சில பேரோட நடவடிக்கைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டா அவங்களைப் பத்தின உண்மையான ரூபம் தெரியும். உன் ஆபீஸ்ல வேலை செஞ்சவங்களோட சொந்தக்காரங்க, என் மகனோட ஆபீஸ்ல வேலை செய்றாங்க. அவங்க மூலமா தெரிஞ்சுதுன்னு வச்சுக்கோயேன். ஒரு மனுஷன் ஆரோக்கியமா இருக்கும்போது சேமிச்சு வைக்கணும்.

“பிற்காலத்தைப் பத்தி தற்காலமே யோசிச்சு எதையும் செய்யணும். சேமிச்சு வைக்க வேண்டிய நேரம் அதை செய்யத் தவறிட்டா செல்வம், செல்வோம் செல்வோம்னு நம்ம கையை விட்டுப் போயிடும்.”

“இன்னொரு விஷயம் செல்வைத்தை விட செல்வாக்குதான் முக்கியம். செல்வாக்குங்கறது நம்ப கிட்ட இருக்கற பணத்தை வச்சு மதிப்பிடறது கிடையாது.


குணத்தைக் கொண்டு கிடைக்கிறது. கண் போன போக்கிலே கால் போகக் கூடாது. மனுஷனுக்கு சுயக் கட்டுப்பாடு வேணும். அடங்காம தறி கெட்டு ஓடற குதிரையைக் கடிவாளம் போட்டு அடக்கற மாதிரி மதிகெட்டு ஓடப் பார்க்கற மனசைக் கட்டுப்படுத்தணும். அப்பதான் வெளில இருக்கற எந்தக் கெட்ட விஷயங்களும் உன் மனசுக்குள்ள ஆதிக்கம் செலுத்த முடியாது. வேற எதனாலயும் மனசு பாதிக்காது. உன் உள் உணர்வு சுதந்திரமாயிடும். இப்படி ஒரு உறுதியான நிலைக்கு வந்துட்டா நீ என்னைக்கும் நல்லா வாழ முடியும். ரத்தத்துல இளமை இருக்கும்போது சித்தம் தடுமாறக் கூடாது. பச்சையா பேச வேண்டாமேன்னு பார்க்கறேன். புரியும்னு நினைக்கிறேன்.”

“புரியுது ஸார்”.... மதனின் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் ஒலித்தது. தொடர்ந்து மெதுவாகப் பேசினான்.

“ஸார் நான் கேட்டது...”

“ஸாரி மதன். உங்க அப்பாவுக்கு நான் பட்ட நன்றிக் கடனுக்காக ஆரம்ப காலத்துல உனக்கு பணம் குடுத்து உதவி செஞ்சேன். நீயும் உழைச்சு முன்னுக்கு வந்தே. ஆனா, நீ சம்பாதிச்ச பணமே உனக்கு சில கெட்ட பழக்கங்களையும் சேர்த்திருக்கு. மனுஷனா பிறந்து வாழ்வது ஒரு முறைதான். இன்னார் நல்லா வாழ்ந்தார்ன்னு வரும் தலைமுறை பெருமையா பேசணுமே தவிர ‘இப்படி வீழ்ந்துட்டாரே’ன்னு இழிவா பேசிடக் கூடாது. உன்னைப் பத்தி நான் கேள்விப் பட்ட தகவல்கள் மோசமானவை. உன் எதிர்காலத்தை நாசமாக்குபவை. பசுவுக்கு புல் வாங்கிப் போட்டு வளர்க்கலாம். ஆனா பாம்புக்குப் பால் வார்க்க நான் தயாரா இல்லை. ஸோ, என்கிட்ட பணத்தை எதிர்பார்க்காதே.”

உறுதியான குரலில் மறுப்பு கூறினார் நாகரத்தினம்.

எதுவும் பேசாமல் இருந்த மதனைப் பார்த்த அவர், “என் மேல கோபம் வருதில்ல மதன்? அதைப் பத்தி நான் கவலைப்படலை... ஒரு பள்ளத்துக்குள்ள சரிஞ்சு விழுந்துக்கிட்டிருக்கிற உன்னை இன்னும் படு குழிக்குள்ள தள்ளறதுக்கு நானே உடந்தையா இருக்க விரும்பலை. ப்ளீஸ் புரிஞ்சுக்க.”

குரலில் இருந்த கடுமையைக் குறைத்து தன்மையாய் பேசினார்.

 “சரி ஸார். நான் கிளம்புகிறேன்.”

“எடுத்த எடுப்பிலேயே சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டதால உன் மனைவியைப் பத்திக் கூட நலன் விசாரிக்கலை. நல்லா இருக்காளா?”

“அவ நல்லா இருக்கா ஸார்.”

“ஏதாவது சந்தோஷமான சமாச்சாரம் உண்டா?”

“இல்லை ஸார்.”

“ஓ! பேமிலி ப்ளானிங்கா? ஒரு நாளைக்கு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு வாயேன்.”

“சரி ஸார். நான் கிளம்புகிறேன்.”

“எடுத்த எடுப்பிலேயே சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டதால உன் மனைவியைப் பத்திக் கூட நலன் விசாரிக்கலை. நல்லா இருக்காளா?”

“அவ நல்லா இருக்கா ஸார்.”

 “ஏதாவது சந்தோஷமான சமாச்சாரம் உண்டா?”

“இல்லை ஸார்.”

“ஓ! பேமிலி ப்ளானிங்கா? ஒரு நாளைக்கு அவளையும் கூப்பிட்டுக்கிட்டு வாயேன்.”

“சரி ஸார். நான் கிளம்புகிறேன்” பணம் கிடைக்காத ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசுவதற்கு மிகுந்த சிரமப்பட்டான் மதன்.

“போயிட்டு வா மதன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.”

“சரி ஸார்.”

தளர்வான நடை நடந்து வெளியே நிறுத்தி இருந்த தன் காருக்குள் அமர்ந்தான். காரைக் கிளப்பினான்.

“யாருங்க வந்துட்டுப் போறது?” கோயிலுக்குப் போயிருந்த நாகரத்தினத்தின் மனைவி சரோஜா, பிரசாதத்தை அவரது கையில் கொடுத்தபடியே கேட்டார்.

“எம்.டி.பி.ன்னு பிரஸ் வச்சிருக்கான்ல மதன் அவன்தான். அவன் வந்ததால என் ப்ரோக்ராம் தள்ளிப் போயிடுச்சி....”

“நல்ல பையனாச்சேங்க. சும்மா உங்களைப் பார்க்க வந்தானா?”

 “நல்ல பையனா இருந்தான்ங்கறதெல்லாம் சம்பாதிச்சு நாலு காசு சேர்க்கறவரைக்கும்தான். லட்ச லட்சமா சம்பாதிக்க ஆரம்பிச்சப்புறம் லட்சியத்தைக் கோட்டை விட்டுட்டான். கூடவே, லட்சங்களையும் விட்டுட்டான்...”

“ஏங்க, என்ன ஆச்சர்யம்?”

“ஆடம்பரமான வாழ்க்கை. அநாவசியமான செலவுகள். மது மயக்கம். அது தரும் மாதுக்களின் பழக்கம். இதெல்லாம் சேர்ந்துட்டா பண முடக்கம் கழுத்தை நெரிக்கும் தானே?”

“அந்த மதன் இவ்வளவு மறிட்டடானா?”

“குடிப்பழக்கம் அதிகமாக இல்லையாம். அதாவது வீட்ல உட்கார்ந்து குடிக்கற அளவுக்கு. பிற பெண்களின் தகாத நட்பினால் வந்த மோகமும் அடிக்கடி வெளிநாடு போற ஆர்வமும் அவனுக்கு வெறி ஆகிப் போச்சாம். எல்லா தகவல்களும் என் காதுக்கு எட்டிக் கிட்டேதான் இருக்கு...”

“சுட்டிக்காட்டி புத்திமதி சொல்லி இருக்கலாமே?”

“ம்... ம்... ஒரு லெக்சரே அடிச்சாச்சு. அவன் இங்கே வந்தது அறிவுரை கேட்க இல்லை. அறிவு மழுங்கிப் போனதுனால ஏற்பட்ட கடனை அடக்க பணம் கேட்டு வந்தான். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேன்...”

“த்சு. பாவங்க. அவங்க அப்பா செஞ்ச உதவியினால தான் நாம இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்னு அடிக்கடி சொல்லுவீங்களே?”

“அவங்க அப்பாவோட சொத்தையெல்லாம் அவர் கூடப் பிறந்தவங்க நயவஞ்சகமா சுரண்டிட்டாங்க கடைசி காலத்துல. இந்த மதன் பாவம்... தனியா தவிச்சுக்கிட்டிருந்தான். நான்தான் பணம் குடுத்து ப்ரிண்டிங் ப்ரஸ் ஆரம்பிக்கச் சொன்னேன். சின்னதா ஆரம்பிச்ச பிரஸ் இவனோட உழைப்பால ஆப்செட் அளவுக்கு வளர்ந்துச்சு. வளரும்போதுதான் ஜாக்கிரதையா இருக்கணும். இவன் ஜாலியா இருந்தான். கஜானா காலியாயிடுச்சி. கடனும் ஜாஸ்தியா ஆயிடுச்சி. அவங்கப்பா எனக்கு உதவி செஞ்ச நன்றிக் கடனை அவனுக்கு பணம் குடுத்து அப்போ தீர்த்துட்டேன். இனிமேலும் அவனுக்குப் பணம் குடுத்தா அது அவனுக்கு நாம செய்யற உதவியா இருக்காது. பணத்தோட அருமையே தெரியாம அவன் நிலைமை இன்னும் மோசமாயிடும்.”

“நீங்க அனுபவசாலி. உங்களுக்குத் தெரியாததா? யாரையோ பார்க்கணும்னீங்களே, கிளம்பலியா?”

 “மணி ஒண்ணாச்சு. லஞ்ச் டைம்ல அங்கே போக வேண்டாம்னு பார்க்கறேன். சாப்பிட்டுட்டு ரெண்டு மணிக்கு கிளம்பறேன்.”

“சரிங்க. நான் போய் எடுத்து வைக்கறேன்.”

காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்த மதனின் இதயத்தில் திகில் பரவியது. ‘பிரபாகர்க்கு என்ன பதில் சொல்றது? செக் குடுக்காம எதுவுமே பேச முடியாதே அந்த ஆள்கிட்ட? சொஸைட்டியில பெரிய ப்ரிண்ட்ர்ன்னு பிரபலமாயாச்சு. இமேஜை உருவாக்கியாச்சு. ப்ரிண்ட்டிங் லைன்ல இருக்கற அத்தனை பேரும் என்னை ஒரு ஹீரோவா மதிச்சிட்டிருக்காங்க. பைனான்ஸ்ல நான் ஜீரோன்னு தெரிஞ்சுட்டா...? சொகுசான வாழ்க்கைக்கு அடிமையாகிட்ட நான் இனி என்ன செய்வேன்? ரெண்டு காரையும் விக்க முடியாது. லோன் முடியலை. வீட்டு லோன் இன்னும் மூணு வருஷம் கட்டணும். எல்லா லோனையும் ரெண்டு மாசமா காட்டாம வேற வச்சிருக்கேன்.


என்ன செய்யப் போறேன்? கை குடுப்பார்னு நம்பி போன நாகரத்தினம் ஸாரும் கை விட்டுட்டார். வானத்துல பறக்கற வரைக்கும்தானே பட்டத்துக்கு மதிப்பு? நூலறுந்த பட்டமாயிட்டா எங்கே போய் விழுவேனோ?’ மதனின் நெஞ்சத்தில் எழும்பிய ஒவ்வொரு கேள்வியும் இடி போலத் தாக்கின. இடிந்து போன மனதுடன் வீட்டின் அருகே வந்ததும் காரை விட்டு இறங்கினான்.

5

ள்ளிரவு சுமார் இரண்டு மணி இருக்கும். தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்ட மதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, அவனது மார்பின் மீது கைகளைப் போட்டபடி தூங்கிக் கெண்டிருந்த பத்மினி கண் விழித்தாள்.

ஏ.ஸி. அறை என்பதால் ஜன்னல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. ஜன்னலின் கண்ணாடி வழியாக ஒரு உருவம் தென்பட்டது.

கறுப்புப் போர்வையால் மூடிக் கொண்ட தலை தெரிந்தது. தற்செயலாக அந்தப் போர்வை சரிந்தது. அந்த உருவம், சமாளித்து மறுபடியும் மூடிக் கொள்வதற்குள் பத்மினியின் கண்களில் அந்த உருவத்தின் முகம் தென்பட்டுவிட்டது. அதிர்ந்தாள். அபாயத்தின் பயங்கரம் காலிங் பெல் அடித்து அவளது இதயக் கதவைத் தட்டியது. ஜன்னலுக்குப் பின் பக்கம் நின்றது சுந்தர்.

‘ஐயோ இவனா? மேலும் அதிர்ச்சி அடைந்த பத்மினி, மதனையும் எழுப்ப இயலாமல் தவித்தாள். இவளது அசைவைப் பார்த்து விட்டதாலோ என்னமோ சுந்தர் ஓட ஆரம்பித்தான்.

தைரியத்தைத் திரட்டிக் கொண்ட பத்மினி மெதுவாக எழுந்தாள். மதனின் மார்பின் மீதிருந்த கைகளை எடுத்த போதும் அவனது தூக்கம் கலையவில்லை. எழுந்த பத்மினி, நெஞ்சம் படபடக்க அறையை விட்டு வெளியே வந்தாள். இவள் பால்கனியை அடையும் முன் சுந்தர் அங்கிருந்து வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.

பூட்டு போட்டு பூட்டி இருந்த கேட்டின் மீது ஏறிக் குதித்து சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு வேகமாகப் போனான் சுந்தர்.

‘இந்த செக்யூரிட்டி வேற, ஒரு வாரம் லீவு போட்டுட்டு போய்த் தொலைஞ்சுட்டான். ஆனா அவன் இருந்தாலும் பிரயோஜனம் கிடையாது. முதல் நாள் சுந்தரை வீட்டுக்குள்ள அனுப்பிட்டானே? சரி... அவன் என்ன செய்வான்? சொந்தக்காரன்னு சொல்லும்போது...? சொந்தக்காரனாம் சொந்தக்காரன். உலகத்துல இருக்கற கெட்ட விஷயங்களுக்கெல்லாம் சொந்தக்காரன்!’ பயமும், யோசனையுமாக இருட்டில் நின்று கொண்டிருந்த பத்மினியின் ரத்தத்தை உறைய வைத்தது இன்னொரு காட்சி.

காம்பவுண்டு சுவரின் வலது பக்கம் கார் ஷெட்டின் அருகே பக்கத்து பங்களா பாலு பதுங்கி நின்றிருந்தான். லேசான நிலவு ஒளி, அது பாலுதான் என்று உறுதிப்படுத்தியது.

உள்ளங்கால்களில் இருந்து உச்சி வரை நடுங்கியது பத்மினிக்கு ‘இந்த ஆள் ஏன் இங்கே இப்படி பதுங்கியபடி நிற்க வேண்டும்? சுந்தர் இவரையும் கூட்டாளியாக்கிக் கொண்டானா? கடவுளே! எதிரியின் பகைவன் தனக்கு நண்பன் என்ற தந்திர வலையை பாலு மீது வீசி இருக்கிறானோ? கடவுளே, நான் என்ன செய்வேன்?’ சிங்கத்தின் கண்களில் பட்டுவிட்ட முயலைப் போல பயந்தாள். அவள் பார்த்துக் கெண்டிருக்கும்போதே பாலுவும் பதுங்கிப் பதுங்கி நடந்து சுவர் ஏறிக் குதித்து மறைந்தான்.

6

‘ஃபுட் வேர்ல்ட்’ சூப்பர் மார்க்கெட்! காண்போரை மயங்க வைத்து, தயங்காமல் வாங்கி விடத் தூண்டும் வண்ணம் அங்கே பல வகையான பொருட்கள் அலங்காரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எதையும் விட்டு வைக்கவும் மனம் இன்றி, எல்லாவற்றையும் வாங்கவும் பண வசதி இன்றி, பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர்.

வசதி மிக்கவர்கள் ஒரு ட்ராலியில் இடம் போதாமல் அடுத்ததை எடுத்து அதிலும் பொருட்களைப் போட்டு நிரப்பிக் கொண்டிருந்தனர்.

காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திய பத்மினி, ‘ஃபுட் வேர்ல்ட்’டுக்குள் நுழைந்தாள். கைப்பையில் இருந்த லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தாள்.

அதில் எழுதி இருந்த மளிகைப் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து ட்ராலியில் போட்டாள். ப்ளாஸ்டிக் மணிகள் போல அழகான, தரமான ஜவ்வரிசியைப் பார்த்ததும் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

‘நாளைக்கு அவருக்கு பிறந்த நாள். ஜவ்வரிசி பாயசம்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். நாளைக்கு செஞ்சு குடுக்கணும்.’ நினைத்தவள் ஒரு பாக்கெட் ஜவ்வரிசியை எடுத்தாள். அதன்பின் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, பாதாம், நெய், ஏலக்காய், மில்க்மெய்ட் என்று வரிசையாக எடுத்துக் கொண்டிருந்தாள்.

“பாதாம், நெய், சர்க்கரை... ம்... ராஜா சாப்பாடுதானா தினமும்?” குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். எரிச்சலூட்டும் அந்தக் குரலுக்கு உரிய சுந்தர் நின்றிருந்தான். “நீயா?”

“நானேதான். நேத்து ராத்திரி உன் வீட்டுக்கு வந்தேன்...”

“ஷட் அப்! உறவுக்காரன் முறைப்படி வந்துட்டுப் போன மாதிரியில்ல சொல்ற... திருடனா கேட் ஏறிக் குதிச்சு வந்துட்டு?”

“ரொம்ப பயந்துட்டியா? அதுக்காகத்தானே நான் வந்தேன்? உன்னை பயமுறுத்தி நீ நடுங்கறதைப் பார்த்து நான் சந்தோஷப்படறேன். நீ பயத்துல துன்பப்படறதைப் பார்க்க எனக்கு இன்பமா இருக்கு.”

“நீ ஒரு ஸாடிஸ்ட்...”

“என்ன வேண்ணாலும் திட்டிக்கோ. எல்லாம் கொஞ்சம் நாளைக்கோ அல்லது கொஞ்ச மணி நேரத்துக்குத்தான். ஆசை தீரத் திட்டிக்கோ. உன் கிட்ட இருந்து நான் கேட்ட தொகை கிடைக்கற வரைக்கும் காத்திருக்கலாம்னு நினைச்சேன். ஆனா நீ என் பொறுமையை சோதிக்கற. உன் உயிர் மேல உனக்கு ஆசை இருந்தா பணத்தை தயார் பண்ணு. உன்னை முடிக்கறதுக்கு ஒரு கெடு வச்சுட்டேன். நாளைக்கு சாயங்காலம் நீ அப்ளிகேஷன் போடற உன்னோட அம்மன் கோயிலுக்கு பணத்தோட வந்து சேரு. இல்லைன்னா உன் பிணத்தோட உட்கார்ந்து அழுதுக்கிட்டிருப்பான் அந்த மதன். உன்னோட மன்மதன்.”

சுந்தரின் பேச்சில் இருந்த கொடூரமும், குரூரமும் கண்டு பத்மினியின் உடம்பு முழுவதும் நடுங்கியது.

 “எதுக்காக இப்படி பயப்படணும், என்னைக் காதலிச்ச நீ, வேற ஒருவனைக் கைப்பிடிச்ச. அந்த துரோகத்துக்குத் தண்டனையா எதுக்கு நீ தண்டம் அழுதுதான் ஆகணும். இல்லைன்னா நீ எனக் காதலிச்சப்ப எழுதின சிருங்கார ரசம் சொட்டும் கடிதங்களை உன் செல்வச் செழிப்பான புருஷன்ட்ட கொண்டு போய் குடுத்துடுவேன். நான் கேட்ட பணத்தை நீ குடுத்துட்டா அந்தக் கடிதங்களை உன்கிட்ட குடுத்துடுவேன். அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில குறுக்கிடவே மாட்டேன். தூக்கம் வராம நீயும் தவிக்க வேண்டியது இல்லை. என்னோட... டீல் இதுதான். நல்ல முடிவு எடுத்துக்க. இல்லைன்னா உன் புருஷன் நம்பும்படியா பல ரீலை நான் அவன்கிட்ட சுத்த வேண்டி இருக்கும். உன்னோட லீலையைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட உன் புருஷன் உன்னை டீல்ல வுட்ருவான்.


உன்னோட இஷ்ட தெய்வம் அம்மன் கோயில் சந்நிதி உன் வாழ்க்கை தொடர்றதுக்கு அருள் புரியட்டும். நீ சமாதியாகிடாம பார்த்துக்கறது உன் கையிலதான் இருக்கு...”

“ஸ்டாப் இட். பப்ளிக் ப்ளேஸ்ல பல பேர் முன்னாடி நாகரீகமா நடந்துக்காம, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற. உனக்குத் தேவை பணம்தானே! போ இங்க இருந்து” சொல்லி விட்டு வேகமாக ட்ராலியை தள்ளிக் கொண்டு பில் பண்ணும் கவுண்டருக்குப் போனாள். பில்லிங் கவுண்டரில் கூட்டம். அவசரப்படுத்தி, தன் பில் தொகைக்கு க்ரெடிட் கார்ட் அடித்து விட்டு வேகமாக காருக்கு வந்தாள்.

பார்சல்களை காரில் ஏற்றிய பையனுக்கு அவசரமாய் டிப்ஸ் கொடுத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள். நெஞ்சம் படபடத்தது. இரண்டு கிலோ மீட்டர் தூரம் வந்ததும் காரை ஓரமாய் நிறுத்தினாள்.

வண்டுகள் துளைப்பது போல் உணர்ந்த மனதை அமைதிப்படுத்தினாள். டென்ஷனில் காரை ஓட்டுவது விபத்துக்கு ஆளாக்கும் என்ற எச்சரிக்கை உணர்வினால் ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை வந்தடைந்தாள். காரை ஸ்டார்ட் செய்து, வீட்டை வந்தடைந்தாள். காரை நிறுத்துவதற்கு சற்று முன்னரே பக்கத்து பங்களா பாலு, பத்மினியின் வீட்டு காம்பவுண்டு அருகே சந்தேகத்திற்குரிய விதத்தில் நின்றிருந்தான். இவனது காரைப் பார்த்ததும் வேகமாக நடந்து அவனுடைய பங்களாவிற்குள் சென்று மறைந்தான். ‘பட்ட காலிலே படும்’ங்கற மாதிரி அங்கே அந்த சுந்தர் தடியன். இங்கே இவன். பக்கத்து வீட்டுக்காரனை பகைச்சுக்காதீங்கன்னு பலமுறை சொல்லியும் இவர் வேற இந்த பாலு கிட்ட முறைச்சுக்கறாரு. ஆபீஸ்ல பிரச்சினையா இல்லை என் மேல எதுவும் கோபமான்னு தெரியலை. எதுவும் சொல்லவும் மாட்டேங்கறார். அவர் இருக்கற மூட்ல அவர்கிட்ட எதுவும் பேசவும் முடியலை. ச்சே... தெளிந்த நீரோடையா இருந்த வாழ்க்கை, கலங்கின குட்டையா ஆகிட்டிருக்கே? தெய்வம்தான் எனக்கு ஒரு வழியைக் காட்டணும்.’ பயம் மாறி, துன்பம் தோன்ற, கண்ணீர் பெருகியது. கனத்துப் போன இதயத்துடன் வீட்டுக் கதவைத் திறந்தாள். படுக்கையில் குப்புறப்படுத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

கண்களின் ஈரம் தலையணையை நனைத்தது. ஓரளவு பாரத்தைக் குறைத்தது. ‘என்ன செய்வது? என்ன செய்வது?’ என்ற கேள்வி எழுந்தது. ‘விடை கிடைக்கத் தடையாக இருக்கும் என் கடந்த காலம்தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது?’

7

சேலத்தில் கல்லூரி நாட்களின் கலகலப்பான சூழ்நிலையில், தன் கவனத்தைக் கவர்ந்த சுந்தரிடம் ஏற்பட்ட அனுதாபத்தை காதல் என்று தவறான கணித்துவிட்ட அவலத்தை நினைத்துப் பார்த்தாள்.

மாற்றுத் துணிக்குக் கூட வழி இல்லாத ஏழை என்றும், எளிய குடும்பத்தைச் சேர்ந்த அவனால் உயர் கல்வி கற்கக் கூட வசதி இல்லாததால் கல்லூரிக்கு வருவதை நிறுத்தப் போவதாகவும் கூறி, பத்மினியின் மனதில் அனுதாப அலையை உண்டாக்கினான். தன்னை நல்லவன் என்று நம்ப வைத்தான்.

வார்த்தை ஜாலம் என்னும் தூண்டிலைப் போட்டு காதல் என்னும் மீனைப் பிடித்தான். அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளிடத்தில் இருந்து பணம் பெற்றான். கூடவே அவளது மனதில் இடத்தையும் பிடித்தான். இரக்கத்தை உருவாக்கும் விதத்தில் பல கற்பனைக் கதைகளை அவளிடம் அள்ளி வீசினான்.

பத்மினி இன்றி ஒரு கணம் கூட தன்னால் வாழ இயலாது என்று திரும்பத் திரும்ப சொல்லி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தந்திரமாக அவளைத் தன் வசப்படுத்தினான்.

அதே மந்திரத்தைப் பிரயோகித்து வேறு சில கல்லூரிப் கன்னிகளுக்கும் கண்ணி வைத்து வேட்டை ஆடியுள்ளான் என்ற உண்மையை அறிந்து கொண்டாள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று உணர்ந்த பத்மினி, சுந்தரிடம் நேருக்கு நேர் விசாரணை செய்தாள். அவனது நேர்மையற்ற குணத்தைப் பற்றி அறிந்து அதிர்ச்சி கொண்டாள்.

ஆனால் அவனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்ட மறுகணமே அவனது நினைவுகளை மறந்தாள். அவன் மீதான காதலை மறந்தாள். இருட்டில் இருந்த தன் இதயத்தை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாள்.

மழையில் நனைந்த குருவியாக சில நாட்கள் குறுகிக் கிடந்த அவள், மனத் தெளிவு ஏற்பட்டதும் சந்தோஷமாய் பறக்கும் சிட்டுக் குருவியாய் சிறகடித்தாள்.

மழை பெய்து முடித்த வானம் போல பளிச் என்று சுத்தமானது அவளது மனம். அதன் பின் பெற்றோருக்கு ஏற்பட்ட விபத்து. அவர்களது மறைவு போன்ற பழைய நிகழ்ச்சிகள் அளித்த துயரம் தண்ணீர் பட்டு அழிந்த மாக்கோலம் போல கன்னங்களில் கண்ணீர்க் கோலம் போட்டது. எழுந்தாள். பேப்பர், பேனாவை எடுத்தாள். தன் பிரச்சினைகளை எழுதினாள். நடுநடுவே ஸ்ரீராம ஜெயமும் எழுதினாள். மன உளைச்சலால் அவதிப்படும் பொழுதெல்லாம் தெய்வங்களுக்கு என்று குறிப்பிட்டு மனதில் உள்ளதை எல்லாம் எழுதுவது அவளுக்கு சிறு வயதில் இருந்தே பழக்கமாகிப் போன ஒன்று. எழுதி முடித்த பின் மனம் லேசாகிப் போனது போல் உணர்ந்தாள்.

கண்ணீர்க் கோடுகள் உலர்ந்த நிலையில், அவளையும் அறியாமல் கண் உறங்க ஆரம்பித்தாள். அவளது உறக்கத்தைக் கலைக்கும் நோக்கத்துடன் தொலைபேசி ஒலித்தது. ரிசீவரை எடுத்துப் பேசினாள்.

“ஹாய் பத்மினி...” உற்சாகமான குரல்! ‘இந்த குரலுக்கு உரியவள் கீதாவாச்சே’ கீதாவின் குரல் பத்மினியின் உள்ளத்தில் புத்துணர்ச்சியைக் கிளப்பியது.

“ஹாய் கீதா... என்னடி ஒரு மாசமா உனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ கிடைக்கவே மாட்டேங்கற?”

“ஸாரி பத்மினி. நான் இப்ப கான்சாஸ்ல இல்ல. இடம் மாறிப் போயிட்டேன். ஊரும், வீடும் மாத்திக்கிட்டிருந்ததுனால வேலை சரியா இருந்துச்சு. அதனாலதான் உனக்கு என்னோட புது அட்ரஸ். புது போன் நம்பர். எதுவுமே எழுதி அனுப்ப முடியலை. இப்பத்தான் புது இடத்துல ஸெட்டில் ஆகி இருக்கேன். வேலைக்கும் போயிட்டு, வீட்டையும் பார்த்துக்கிட்டு குழந்தையையும் கவனிச்சு, டைம் பறக்குது. ஸாரிடி... சரி... சரி நீ எப்படி இருக்க, உன் மதன் எப்படி இருக்கார், ஏதாவது விசேஷம் உண்டா?”

அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டாள் கீதா.

“கீதா... நான்... அவர்... நாங்க ரெண்டு பேருமே நல்லா இல்லை கீதா...”

“என்ன பத்மினி? என்ன ஆச்சு? இரண்டு பேரும் சந்தோஷமாத்தானே இருந்தீங்க?”

“பிரச்சினை எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இல்லை கீதா. எனக்கு வேற பிரச்சினை. அவருக்கு வேற ஏதோ பிரச்சினை.


என்னோட பிரச்சினையாவது வெளியில சொல்ல முடியாது. ஆனா அவருக்கு என்னென்ன தெரியலை. எப்படிவும் டல்லா இருக்கார். கேட்டா எரிஞ்சு விழறார்.”

“என்ன பத்மினி. எனக்கு குழப்பமா இருக்கு. நீ சொல்றது எதுவுமே எனக்குப் புரியலை. பொதுவா புருஷன், பொண்டாட்டிக்குள்ளதான் பிரச்சினை இருக்கும். நீ என்னவோ உனக்கு தனி பிரச்சினை, அவருக்கு தனி பிரச்சினைங்கற? விவரமா சொல்லு. பத்மினி.”

“அ... அது வந்து கீதா... அந்த சுந்தர் இல்லை... அவன் என்னை மிரட்டிட்டிருக்கான்...”

 “என்ன? அந்த அயோக்கிய ராஸ்கல் சுந்தர் உன்னை மிரட்டறானா? எதுக்காக?”

“அவன் என்னோட பழைய விஷயத்தை என் கணவர்கிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டறான். சொல்லாம இருக்கணும்னா அவனுக்குப் பணம் தரணுமாம். நான் பணம் தரலைன்னா என்னைக் கொலை செஞ்சுடுவானாம்...”

“என்ன? கொலை செஞ்சுடுவானா? அடப்பாவி. அவன் வலையில சிக்கிக்காம உன் வழியில நீ பாட்டக்கு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்தியே... இப்ப வந்து தொந்தரவு பண்றானா?”

“ஆமா, கீதா. நான் எங்கே போனாலும் என்னைப் பின் தொடர்ந்து வர்றான். நான் அவனுக்கு எழுதின லெட்டர்களையெல்லாம் கையில வச்சுக்கிட்ட பணம் கேட்டு தொல்லை பண்றான். ஒரு நாள் வீட்டுக்குள்ளேயே வந்துட்டான். இன்னொரு நாள் நடுராத்திரி பால்கனி வழியா இறங்கிப் போறதைப் பார்த்தேன். பயத்துலயே என் வாழ்க்கை போய்க்கிட்டிருக்கு. சரி, நம்ப மனசுலதான் களங்கம் இல்லையே. அவர்கிட்ட இதெல்லாம் சொல்லி... விளங்க வைக்கலாம்னு பார்த்தா... இவர் வேற மூட அவுட் ஆகி இருக்கார். நடுக்கடல்ல தத்தளிக்கிற மாதிரி தவிச்சுக்கிட்டிருக்கேன் கீதா. என்ன பண்றதுன்னே தெரியலை.”

“ஏதாவது ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை கான்ட்டாக்ட் பண்ணி இந்த விஷயத்தை எப்படி முடிக்கறதுன்னு கேக்லாம்ல?”

“இந்த விஷயத்துல இந்தியா இன்னும் எந்த அளவுக்கு முன்னேறலை கீதா. பெண்ணான நான், உதவிக்கு யாரும் இல்லாம எப்பிடி, எங்கே போக முடியும்? ரொம்ப பயமா இருக்கு கீதா.”

“உன் கல்யாணத்தப்ப இந்த விஷயத்தை மதன்கிட்ட சொல்லிடலாம்னு, நீ சொன்னப்ப நான்தான் உன்னைத் தடுத்தேன். அப்பவே சொல்லி இருந்தா இந்த விஷயத்தை மதன் ஈஸியா எடுத்துப்பாரோ என்னமோங்கற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆண்கள் அவங்க எவ்வளவோ தப்பு செய்வாங்க. ஆனா தங்களோட மனைவி நூத்துக்கு நூறு சதவிகிதம் சுத்தமானவளா இருக்கணும்னு தீவிரமான மனப் போக்குல இருப்பாங்க. கல்லூரியில் காதலா? இதெல்லாம் சகஜம். வயசுக் கோளாறு அப்பிடின்னு சாதாரணமா எடுத்துக்கறவங்களும் இருக்காங்க. ‘கல்யாணத்துக்கு முன்னால வேற எவனோடயோ காதலா? அப்பிடின்னா நம்ப மனைவி கெட்டுப் போயிருப்பாளோ’ன்னு எடுத்த எடுப்பிலேயே சந்தேகப்படற ஆண்களும் இருக்காங்க. இதில மதன் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்னு தெரியாததுனால, சுந்தர் பற்றின விஷயத்தைச் சொல்ல வேண்டாம்னு நான் சொன்னேன். அன்னிக்குச் சொல்லாம விட்டதுனால இன்னிக்கு சுந்தரோட மிரட்டலுக்கு பயப்பட வேண்டி இருக்கு? என்னாலதான் உனக்கு இந்த பிரச்சினை. நான் கல்யாணம் ஆகி அமெரிக்காவுக்கு வந்துட்டதால நமக்குள்ள தொடர்பு குறைஞ்சு போச்சு. என்னதான் போன்ல பேசினாலும் உடனே வந்து பார்க்கவும், உதவி செய்யவும் முடியுதா?”

“நீ நல்லதுக்குதானே சொன்ன? இப்பிடியெல்லாம் பின்னால நடக்கும்னு எதிர்பார்த்தா செய்யறோம்? ஏதோ என்னோட போறாத காலம். அந்த சுந்தர் தடியனால அவதிப்படறேன். ஆனாலும் ரொம்ப மோசம் கீதா. பயங்கரமான அயோக்யனா இருக்கான். மனசு ரொம்பக் கஷ்டப்பட்டு இப்பத்தான் கொஞ்ச நேரத்தக்கு முன்னால நான் தெய்வங்களுக்கு லெட்டர் எழுதினேன்.”

“இன்னும் நீ அந்தப் பழக்கத்தை விடலியா பத்மினி? நல்ல பொண்ணு வந்த...”

 “நீயும் முன்ன மாதிரிதான் இன்னும் தெய்வங்களுக்கு நான் லெட்டர் எழுதறதைப் பத்தி கேலி பண்றதை விடலை. நான் எழுதி முடிச்ச பத்து நிமிஷத்துல இதோ உன்னோட போன் வந்துடுச்சே! யார்கிட்டயும் சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் கஷ்டப்பட்டு தவிச்ச நேரத்துல அந்த தெய்வங்கள் பார்த்து உன் கூட பேச வச்சுடுச்சு பார்த்தியா?”

“இன்னும் அதே இன்னஸென்ட் பத்மினியாத்தான் இருக்க. சரி, இப்ப இந்த பிரச்சினைக்கு என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கு. எதுக்கும் என் கணவர் கோபிகிட்ட கலந்து பேசி ஒரு ஐடியா பண்றேன். நாளைக்கு காலையில உன்னைக் கூப்பிடறேன். கோபி ரொம்ப நல்லவர். இந்த மாதிரி விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கிட்டு பிரச்சினையை தீர்க்கறதுக்கு வழி சொல்லுவார். என்னதான் பெண்கள் முன்னேறினாலும், பெரிய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகி ஆனாலும் சில சமயங்கள்ல நமக்கும் ஆண்களின் உதவி, ஆலோசனை தேவைப்படுதுதானே? நீ கவலைப்படாதே. கண்டிப்பா நாளைக்கு நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசறேன். அது சரி, மதனுக்கு என்ன பிரச்சினைன்னு உன்னால கண்டு பிடிக்க முடியலியா?”

“ம்கூம்... அவரும் நல்லவர்தான். ஆனா மூட் அவுட் ஆனார்னா அவர்கிட்ட எதுவும் பேச முடியாது. என் மேல அன்பா இருக்கார். கொஞ்சம் அப்பிடி இப்பிடி சபலப் பேர்வழிதான். நான் கண்டுக்காம விட்டுடுவேன். மேலோட்டமான விஷயத்தை பெரிசாக்கி அவரை எரிச்சல் படுத்தி, தப்புக்கு மேல தப்பு பண்ண நானே காரணமாயிடக் கூடாதுல்ல? அதனால கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பொறுமையா இருக்கேன். அதுக்குள்ள இந்தப் பிரச்சினை.”

“பத்மினி, நீ சும்மா கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதே. நிம்மதியா இரு. உன் மேல எந்தத் தப்பும் இல்லை. தைரியமா இரு. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் உனக்கு உதவி செய்யறேன்.”

“காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாதுன்னு சொல்லுவாங்க. அந்த சுந்தர் பாம்பு என் கழுத்தையே பிடிச்சுடுச்சே.”

“பாம்புக்கு விஷம் பல்லுல. பல்லைப் பிடுங்கிட்டா? நீ அதேயே நினைச்சுக்கிட்டிருக்காதே. ஒழுங்கா சாப்பிடறியா, நேரத்துக்கு தூங்கு. குட் நைட்.”

ரிசீவரை வைத்துவிட்டு மறுபடியும் படுக்கையில் சரிந்த பத்மினி, லேசான நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘கீதாவுக்கு எத்தனை தடவை போன் பண்ணிப் பார்த்தேன்? நல்ல வேளை இன்னிக்காவது அவளோட பேச முடிந்ததே. நான் ஒருத்தியா, தனியா இந்தக் கவலை சுமையை சுமந்தது, போதும் போதும்னு ஆயுடுச்சு. தெய்வங்களே! உங்களுக்கு ஓராயிரம் நன்றி. கீதாவை பேச வச்சதுக்கு. அதே மாதிரி அந்த அயோக்யன் சுந்தரால வந்திருக்கற சிக்கலையும் நீங்க தான் தீர்க்கணும்.’

துன்பச் சிறையில் இருந்து தற்காலிக விடைபெற்ற பத்மினி அந்த விடுதலை உணர்வில் சற்று கண் அயர்ந்தாள்.


8

“பத்மினி பத்மினி” மதனின் பலத்த குரல் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள் பத்மினி.

“என்ன பத்மினி. வீட்டுக் கதவு திறந்து கிடக்கு. நீ பாட்டுக்கு பெட்ரூம்ல வந்து படுத்துத் தூங்கிகிட்டிருக்க? இவ்வளவு கேர்லஸ்ஸா இருக்கியே?” கோபமாகக் கத்தினான் மதன்.

“ஸாரிங்க. ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன் போலிருக்கு. வாங்க உங்களுக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன்.”

அவளது குரலில் வழக்கத்திற்கு மாறாகத் தெரிந்த அயர்ச்சியைக் கண்டு மதனுக்கு பாவமாக இருந்தது.

“என்னம்மா உடம்பு சரியில்லையா? ஏன் இப்படி டல்லா இருக்க?”

 “ஒண்ணும் இல்லைங்க. நான் நல்லாத்தான் இருக்கேன்...”

“இல்லை. நீ சரி இல்லை. உன் முகமே காட்டுதே. நீ படுத்திரு. நானே எடுத்து சாப்பிட்டுக்கறேன்.”

“அதெல்லாம் வேண்டாங்க. நேத்து சமைச்சது ஃப்ரிஜ்ல இருக்கு. அதை எடுத்து மைக்ரோ – வேவ்ல வச்சு சூடு பண்ணித் தரப் போறேன். இது ஒரு பெரிய வேலையா? வாங்க.”

டைனிங் டேபிளின் மீது சூடு பண்ணிய உணவு வகைகளை எடுத்து வைத்தாள். ஃப்ரிஜ்ல வைத்து எடுத்த உணவுகள் ஆவி பறக்க இருப்பதைப் பார்த்தான் மதன்.

“மைக்ரோ வேவ் ஓவன் நல்ல உபயோகமா இருக்குல்லம்மா? பாரேன். ஜில்லுன்னு இருந்த குழம்பு எவ்வளவு சூடாயிடுச்சு? அதுவும் ஒரு நிமிஷத்துல...?”

சாப்பிட்டுக் கொண்டே பேசினான் மதன்.

‘கொஞ்சம் நல்ல மூட்ல இருக்கார். என்னோட பிரச்சினையை சொல்லிடலாமா? நான் அதைச் சொல்லி அவர் திரும்பவும் மூட் மாறிட்டார்னா? வேண்டாம். பழங்கதையை கிளறி, என் வாழ்க்கை நலம் கெட, நானே அந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ இப்படியும் அப்படியும் சிந்தித்து மனம் நொந்து போன பத்மினி, தன் உணர்ச்சிகளை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள்.

சாப்பிட்டு முடித்த மதன், சற்று காலாற நடக்கலாம் என்ற எண்ணத்தில் வெளியே வந்தான். பாலுவும் அதே சமயத்தில் வெளியே வர, மதனுக்கு வெறுப்பாக இருந்தது. பாலுவும் இவனைப் பார்த்து முறைத்தான். இருவருக்கும் இடையே மெளன யுத்தம் நடந்தது. அந்த மெளனத்தின் பின்னணியில் பயங்கரமான வஞ்சம் இருந்தது.

‘எனக்கு இருக்கற பிரச்சினை போதாதுன்னு இவன் வேற. ஒரு பக்கம் பேப்பர் ஸ்டோர்ஸ் பிரபாகர். மறுபக்கம் அந்த கணேஷ். இன்னொரு பக்கம் பண நெருக்கடின்னு நான் படற பாடு! இந்த லட்சணத்துல இந்த பாலு என்னடான்னா... என்னோட க்ளையண்ட்ஸைக் கலைச்சுக்கிட்டிருக்கான். எல்லா பிரச்சினையும் ஒரே சமயம் சேர்ந்து உயிரை வாங்குது’ எண்ணங்களில் நெஞ்சம் புதைய, மிக மெதுவாக நடந்தான். ஒரு மணி நேரம் வரை நடந்தவன் மனக் கசப்புடன் உடல் சோர்வும் சேர்ந்து கொள்ள வீடு திரும்பினான்.

“என்னங்க, இன்னிக்கு இந்த நேரத்துல வாக்கிங் போயிருக்கீங்க?” பத்மினி கேட்டாள்.

“என்னமோ... தோணுச்சு... போனேன்.”

சுருக்கமாக பதில் சொன்னான்.

“நாளைக்குக் காலையில நான் ஒரு கல்யாணத்துக்கு போகணும்ங்க... பியூட்டி பார்லர் ரோஸியோட அக்காவுக்கு கல்யாணம். இவ்வளவு தூரம் வீட்டுக்கு வந்து இன்விடேஷன் குடுத்துட்டுப் போனா. நீங்களும் வாங்களேன்.”

“நான் வரலை. நீ போயிட்டு வா. எத்தனை மணிக்கு முகூர்த்தம், நீ எத்தனை மணிக்குக் கிளம்பப் போறே?”

“காலையில ஏழு மணிக்கெல்லாம் நான் கிளம்பணும்ங்க. நீங்க சாப்பிடறதுக்கு...”

 “ஃப்ரிஜ்ல ரொட்டி, ஜாம் இருக்குல்ல? அது போதும் எனக்கு. நீ போயிட்டு வா.”

“சரிங்க.”

“கிஃப்ட் வாங்கிட்டியா?”

“ஓ... நேத்து ஷாப்பிங் போகும்போது வி.டி.ஐ. போய் கிஃப்ட் வாங்கிட்டேன்” ஷாப்பிங் பறப் பேசும்போது ஃபுட் வேல்ட் போனதும் அங்கே சுந்தர் தன்னை மிரட்டியது பற்றியும் நினைவில் வந்தது. உள்ளத்தில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்த சம்பவங்கள். அவளை ஆழ்ந்த சங்கடத்திற்குள்ளாக்கியது.

“பத்மினி... என்ன ஆச்சு? ஏன் உக்காந்துக்கிட்டே தூங்கறே...?”

“இல்லைங்க... சும்மாதான்...”

“சரி, சரி வா... படுத்துக்கலாம்.”

“நீங்க படுங்க. நான் சமையலறை சுத்தம் பண்ணிட்டு வரேன்.”

“சரி.”

9

காலை ஏழு மணி இருக்கும். பயங்கரமாக ஏதோ சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தான் மதன். ஜன்னலைத் திறந்து பார்த்தான்.

“ஐயோ...” அலறினான்.

மதனின் கார். தூரத்தில் நின்றபடியால் சரியாகத் தெரியவில்லை. கார் அரை குறையாக சிதறி இருந்தது.

 “ஐயோ... பத்மினி” கத்தினான். வீட்டை விட்டு வெளியே வந்தான். இவன் போவதற்குள் பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருந்தனர்.

அவர்களுக்கு நடுவே உடல் முழுவதும் ரத்தக் களறியாக இருந்த பத்மினி கீழே கிடந்தாள்.

“உயிர் போயிருச்சு...”

“இல்லை... மூச்சு இருக்கு...” 

“யாருன்னே அடையாளம் தெரியாம முகம் முழுக்க ரத்தமா இருக்கே...”

ஆளாளுக்கு பேசிச் கொண்டிருக்க, ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

“ஐயோ... இது அச்சாபீஸ் ஓனரோட காராச்சே? அந்த வீட்டு அம்மாவுக்கா அடிபட்டுடுச்சு?”

“நீ யாருடா?” கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் முரட்டுத்தனமான குரலில் கேட்டார்.

“நான் அந்தம்மா வீட்டுக்கு பால் பாக்கெட் போடறவன் சார்...”

அவன் சொல்லிக கொண்டிருக்கும்போதே மதன் அங்கு மூச்சிரைக்க வந்து நின்றான். பத்மினிக்கு உயிர் இருப்பதை அறிந்து கொண்டான். ஆறுதல் அடைந்தான்.

பதற்றத்தில் அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ‘ஆம்புலன்சுக்கு போன் பண்ணலாமா? அவங்க வர லேட்டாயிடுச்சுன்னா... பத்மினியோட நிலைமை?’ குழம்பினான். ‘எது வந்தாலும் வரட்டும். பத்மினியின் காரையே எடுத்தப் போவோம்’ முடிவு செய்தவன், மறுபடி ஓடிச் சென்று பத்மினியின் கார் சாவியை எடுத்து வந்தான்.

மயங்கிக் கிடந்த பத்மினியை தூக்கினான். கூட்டத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வந்தனர். பத்மினியை பின் இருக்கையில் படுக்க வைத்தனர். கார் விரைந்தது.

இதற்குள் யாரோ போலீசுக்கு சொல்லிவிட, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுநாத், தன் குழுவினருடன் ஜீப்பில் வந்து இறங்கினார்.

“இங்கே கார்ல குண்டு வெடிச்சுதாமே? தகவல் வந்துச்சு. போன்ல தகவல் குடுத்தவங்க, அவங்க பேரைச் சொல்லலை.” பேசிக் கொண்டே சிதறிக் கிடந்த மதனின் காரைப் பார்வையிட்டார் ரகுநாத்.

அதுவரைக்கும் கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் நைஸாக நழுவ ஆரம்பித்தனர். சிலர் மட்டுமே இருந்தனர்.

போட்டோகிராஃபர் காரையும், சுற்றுப்புறத்தையும் தன் காமிராவின் பசி தீர க்ளிக்கித் தள்ளினார்.

காருக்குள்ளும், வெளியிலும் ரத்தத் துளிகள் மாடர்ன் ஆர்ட் போல அங்கங்கே தன் வண்ணத்தைத் தெளித்திருந்தது. காரின் முன் பக்கம் ஸீட் இருக்க வேண்டிய இடத்தின் மேல் பகுதி சிதறி விட்டதையும் பார்த்தார் ரகுநாத். அவர் அங்கே கண்ட காட்சி போலீஸ் இன்ஸ்பெக்டரான அவரையே ஸ்தம்பிக்க வைத்தது.


காருக்குள் பல இரும்புக் குழாய்கள் கிடந்தன. அதாவது ஆக்ஸிஜன் சிலிண்டர் அளவுள்ள குழாய்கள் இருந்தன. அங்கங்கே குண்டுகள் ஈயப்பூக்களாய் பரவி இருந்தன. மறுபடியும் காரைச் சுற்றி அரை கிலோ மீட்டர் தூரம் வரை பார்த்தார். வெளியிலும் ஆங்காங்கே சில குழாய்கள் கிடந்தன. ஏகப்பட்ட ஈயக் குண்டுகளும் சிதறக் கிடந்தன. சில குண்டுகள், குழாய்களுக்குள்ளும் இருந்தன.

ஃபோட்டோகிராபர் திலீப்பை அழைத்தார்.

“இந்தக் குழாய்களையும் காருக்குள்ள இருக்கற குழாய்களையும் போட்டோ எடுத்துங்க திலீப்.”

“ஓ.கே. ஸார்.”

சுறுசுறுப்பாக செயலாற்றினார் திலீப். அங்கே இருந்த சிலரை பொதுவாகப் பார்த்து கேள்விகளை ஆரம்பித்தார் ரகுநாத்.

“இந்தக் கார் யாரோடது?”

யாருமே வாய் திறக்காததால் ரகுநாத்தின் மூக்கு நுனி கோபத்தால் சிவந்தது.

“யாராவது பதில் சொல்லப் போறீங்களா?... இல்லை மொத்தமா எல்லோரையும் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போகட்டுமா?” உறுமினார்.

பால் பாக்கெட் போடும் சிறுவன் முன் வந்தான். “ஸார் இந்தக் கார் அச்சாபீஸ் ஓனரோடது. நான் அவங்க வீட்டுக்கு பால் போடறவன்.”

“உன் பேர்?”

“கிருஷ்ணன்.”

“அந்த வீட்டை வந்து காட்டு.”

“அதோ அங்கே டிஷ் ஆன்ட்டெனா பொருத்தி இருக்காங்க பாருங்க மாயில. அந்த பங்களாதான் ஸார். இந்த ஏராயாவுல அவங்க வீட்டில மட்டும்தான் ஸார் டிஷ் ஆன்ட்டெனா இருக்கும்.”

“சரி, என் கூடவா” ரகுநாத், மதனின் வீட்டை நோக்கி நடந்தார். கிருஷ்ணன் பின் தொடர்ந்தான்.

செக்யூரிட்டி மூர்த்தி வந்தான். ரகுநாத்தைப் பார்த்து ஸல்யூட் அடித்தான்.

“யார் மேன் நீ?”

“நான் மதன் ஐயாவோட பங்களா செக்யூரிட்டி மூர்த்திங்க.”

“செக்யூரிட்டிங்கற! யூனிஃபார்ம்ல இல்லையே?”

“நான் ஒரு வாரம் லீவுல ஊருக்கு போயிருந்தேங்க. போன வேலை சீக்கிரமாவே முடிஞ்சுட்டுதுங்க. அதனால முன்னாடியே வந்துட்டேங்க. பஸ் ஸ்டேண்டுல இருந்து நேரா இங்கதாங்க வரேன். யூனிஃபார்ம் கார் ஷெட்லதான் வச்சிருக்கேன். ஐயாவோட கார் இந்தக் கதியில இருக்கறதைப் பார்த்தீங்களாய்யா?” அவனுடைய குரலில் பதற்றம் தென் பட்டது.

‘பதற்றமா இருக்கற மாதிரி நடிக்கிறானோ?’ ரகுநாத்தின் போலீஸ் மூளை சந்தேகப்பட்டது.

“சரி, சரி... நீயும் வா.”

பங்களாவின் கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் இல்லாதபடியால் போலீஸார் உள்ளே நுழையவில்லை.

“டூ நாட் ஃபோர், நீ ஹாஸ்பிடல் போய், அந்த மதனை இங்கே கூட்டிட்டு வா. அவரோட வீட்டுக்குள்ள சோதனை போடணும்.”

“டூ நாட் ஃபோர் போனதும் மூர்த்தியிடம் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தார்.”

“இந்த பங்களாக்காரர் பிரிண்டிங் பிரஸ்ஸா வச்சிருக்கார்?”

 “ஆமா ஸார். பெரிய பிரஸ். எம்.டி.பி. பிரஸ்னு பேரு.”

“அந்த மதன் எப்படிப்பட்ட ஆள்?”

“கொஞ்சம் முன் கோபக்காரருங்க. மத்தபடி நல்லவர்தான்.”

“அவருக்கும். அவரோட மனைவிக்கும் தகராறு வருமா?”

“அப்பிடியெல்லாம் எதுவும் கிடையாதுங்க. என்னைப் பொறுத்தவரையிலும் அவங்க ரெண்டு பேரும் ஒற்றமையாத்தான் குடும்பம் நடத்தினாங்க.”

“எப்பவும் வெளியிலயே இருக்கற உன்னைப் பொறுத்தவரைக்கும், உள்ளுக்குள்ள நடக்கறது உனக்குத் தெரியாது. அப்படித்தானே?”

“........அ... ஆமாங்க.”

“சரி, அந்த மதன் கோபக்காரர்னு சொன்னியே, எதை வச்சு அப்படிச் சொன்ன?”

“அது... அது.. வந்துங்க...?”

“ஏன் தயங்கற? சும்மா பயப்படாம தைரியமா சொல்லு. நீ வேலை செய்ற வீட்டு அம்மாவை யாரோ கொலை பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க. உனக்குத் தெரிஞ்ச தகவல்களை சொன்னாத்தான் எங்களுக்கு குற்றவாளி யார்னு கண்டு பிடிக்க முடியும்.”

“அது வந்துங்க? பக்கத்து பங்களாவுல பாலுன்னு ஒருத்தர் இருக்கார்... அ... அவருக்கும் மதன் ஐயாவுக்கும் ஆகாதுங்க...”

“ஆகாதுன்னா?”

“ரெண்டு பேருக்கும் விரோதம் இருந்துச்சுங்க. பாலுவும் பிரிண்டிங் பிரஸ் வச்சிருக்காருங்க. தொழில் போட்டி ரெண்டு பேருக்கும் கடுமையாவே இருந்துச்சுங்க. என்னோட பார்ட்டியை நீ கலைச்சு விடறேன்னு மதன் ஐயா கோபமா கத்துவாருங்க. நீ ஒழிஞ்சாத்தான் எனக்கு நிம்மதின்னு அவரும் சொல்றதை நான் நேர்ல இருந்து கேட்டிருக்கேங்க.”

“ஓகோ... அந்த பாலு வீட்டுல யார் யார் இருக்கா?”

“அவரோட குடும்பம் மதுரையில இருக்குதாம்ங்க. பொண்ணு பிளஸ் டூ முடிச்சதும் குடும்பத்தை இங்கே கூட்டிக்கிட்டு வரணும்னு சொல்லிக்கிட்டிருந்தார்ங்க. அது கூட இங்கே வந்த புதுசுல பேச்சுக் குடுத்தப்ப சொன்னதுதாங்க. அதிகமா யார் கிட்டயும் பேச மாட்டார்ங்க.”

“என்னைக்காவது அந்த பாலு சந்தேகப்படும்படியா இந்த பங்களாவுக்குள்ள நடமாடுறதைப் பார்த்திருக்கியா?”

“இல்லை ஸார்... பத்மினியம்மாவோட கார், ஷெட்ல இருந்தா, மதன் ஐயாவோட கார் வெளியில நிக்கும். ‘என் காம்பவுண்ட் கிட்ட நீ எப்படி உன் காரை நிறுத்தலாம்’ன்னு பாலு சண்டைக்கு வருவாரு. கத்துவாரு. இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்குங்க.”

“தொழில் போட்டியினால ரெண்டு பேருக்கும் கடுமையான விரோதம் இருந்திருக்கு...”

ரகுநாத் பேசி முடிப்பதற்குள் டூ நாட் ஃபோர், மதனை அழைத்து வந்திருந்தான்.

 “மிஸ்டர் மதன், உங்க மனைவி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டாங்களா? டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” கலைந்து கிடந்த தலைமுடி, சிவந்திருந்த கண்கள், கசங்கிய உடைகள் இவற்றுடன் காணப்பட்ட மதன், சோகம் கப்பிய குரலில் சொல்ல ஆரம்பித்தான்.

“ஐ.சி. யூனிட்ல இருக்கா. டாக்டர்ஸ் நம்பிக்கை இல்லைன்னு சொல்றாங்க. ஆனா அவளைக் காப்பாத்தறதுக்கு ஒரு மருத்துவக் குழுவே முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க” தளர்ந்த குரலில் பதில் சொன்னான்.

“உங்களோட இந்த மனநிலையில விசாரணை பண்றதுக்கு ஸாரி. ஆனா நான் என்னோட ட்யூட்டியை பண்ணியே ஆகணும். ப்ளீஸ் ஒத்துழைப்பு குடுங்க.”

“யூ கே புரொஸீட் இன்ஸ்பெக்டர்.”

போலீஸார் மதனின் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டனர்.

ரகுநாத்தும் வீடு முழுவதையும் பார்வையிட்டார். மதனின் அறையில் ஃப்ரெஞ்சுத் தயாரிப்பான மர அலமாரிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றிற்குப் பூட்டுகள் கிடையாது. அவற்றை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தார் ரகுநாத். ஒரு அலமாரியில் புத்தகங்கள், லெட்டர் பேட், பேனா போன்றவை இருந்தன.

மற்றதில் பத்மினியின் புடவைகள் சூடிதார்கள். ஜாக்கெட்டுகள், மிகவும் நேர்த்தியாகவும் சீராகவும் அடுக்கப்பட்டிருந்தன.

மற்றொரு சிறிய அலமாரியைத் திறந்தார்.

பாக்கெட் சைஸில் லேமினேஷன் செய்யப்பட்ட அம்மன், ஆஞ்சநேயர், பாண்டிச்சேரி அன்னை படங்கள் ஏகப்பட்டவை இருந்தன.

பேப்பரில் மடிக்கப்பட்ட கோயில் பிரசாதங்கள் மஞ்சள் குங்குமம் வாசனையுடன் காணப்பட்டன.

அவற்றின் நடுவே கடிதம் போல ஒரு பேப்பர் இருந்தது. அதை எடுத்து, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

எல்லா அறைகளிலும் சோதனையிடப்பட்டபின் மதனிடம் வந்தார் ரகுநாத்.


“மிஸ்டர் மதன். உங்களுக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா? இந்தக் கொலை முயற்சியை செஞ்சது யாரா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?”

“ரெண்டு பேர் மேல எனக்கு சந்தேகம் இருக்கு இன்ஸ்பெக்டர். முதல் நபர் பக்கத்து வீட்டு பாலு என்னோட பிரஸ்சுக்கு வர்ற ஏகப்பட்ட ஆர்டர்ஸ் பார்த்து அவனுக்கு பொறாமை. வேணும்னே என் கிளையண்ட்சுக்கு குறைஞ்ச அளவுல பிரிண்டிங் கூலி போட்டு கொட்டேஷன் குடுத்து, வர்ற ஆர்டர்ஸ் எல்லாத்தையும் கலைப்பான். என்னோட பிரிண்டிங் குவாலிட்டி சூப்பரா இருக்கும். அதனால நிறைய பேர் என் பிரஸ்சுக்குத்தான் வருவாங்க. இந்தப் போட்டியும், பொறாமையும் அந்த பாலுவுக்கு என் மெல வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துடுச்சு. அவன் என்னைப் பழி வாங்கணுங்கற நோக்கத்துல இருந்தான்” ரகுநாத் இடைமறித்தார்.

 “இந்தக் கொலை முயற்சி ரொம்ப புதுமையா பயங்கரமானதா இருக்கு. உங்க காரோட ஸீட்டுக்கு அடியில இரும்புக் குழாய்கள் அடுக்கப்பட்டிருக்கு. அந்தக் குழாய்களுக்குள்ள ஈயக் குண்டுகள் ஏகப்பட்டவை நிரப்பப்பட்டிருக்கு. ஸீட்ல ஏறி உட்கார்ந்ததும் குண்டுகள் வெடிக்கற மாதிரி பட்டன் வச்சிருக்கு. அதனாலதான் உங்க மனைவி ஏறி உட்கார்ந்ததும் அந்த பட்டன் செயல்பட்டு, குண்டுகள் வெடிச்சு, காரும், சிதறி இருக்கு. உங்க மனைவியோட உயிர் அந்த ஸ்தலத்திலேயே போயிருக்க வேண்டியது. ஸாரி. நான் இப்டிச் சொல்றதுக்கு, அந்த கொலை முயற்சி ஏற்பாடு அத்தகையது அதுக்காகச் சொல்ல வந்தேன்.”

“அவளோட உடம்பின் பாகங்கள் எல்லாம் உதிரி உதிரியா உடைஞ்சிருக்கலாம். மல்ட்டிபிள் ஃப்ராக்சர் மட்டும் இல்ல. அதிகமா உடல் சேதம் ஆகி இருக்குன்னு பயங்கரமா சொல்றாங்க டாக்டர்ஸ்.”

“ஓ.கே... ஓ.கே. மிஸ்டர் மதன். உங்களோட இன்னொரு விரோதி யார்?”

“அ... அ... அது வந்து... என்னோட அந்தரங்கமான விஷயம் இன்ஸ்பெக்டர். ஸம்திங் பெர்ஸனல்...” என்ற மதன் மற்ற போலீஸாரைப் பார்த்தான்.

அவர்களை வெளியே போகும்படி ரகுநாத் கண் அசைத்ததும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

“சொல்லுங்க மிஸ்டர் மதன்.”

“கல்யாணத்துக்கு முன்னால நான் ‘அம்ருதா’ன்னு ஒரு பொண்ணைக் காதலிச்சேன். அவளைக் கல்யாணமும் பண்ணிக்கறதா பிராமிஸ் பண்ணி இருந்தேன். ஆனா சந்தர்ப்பமும், சூழ்நிலையும் திடீர்னு பத்மினியை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கிடுச்சு. அம்ருதா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா. அதுக்குக் காரணம் நான்தான்ங்கற கோபத்துல அவளோட அண்ணன் கணேஷ் என்னை அப்பப்ப மிரட்டிக்கிட்டிருந்தான்.”

“என்ன சொல்லி மிரட்டினான்?”

“என் தங்கச்சியை ஏமாத்தின நீ. உன் மனைவியோட சந்தோஷமா வாழக்கூடாது. உன் மனைவியை கொலை செய்யப் போறேன்னு மிரட்டினான். நேர்ல மிரட்டினது மட்டும் இல்ல இன்ஸ்பெக்டர், என் வீட்டு கேட்ல இருக்கற லெட்டர் பாக்ஸ்ல அப்பப்ப மிரட்டல் கடிதமும் போட்டு வைப்பான்.”

“அந்தக் கடிதங்கள் எங்கே?”

“அது என்னோட ஆபீஸ்ல இருக்கு இன்ஸ்பெக்டர்.”

“உங்க ஆபீஸ் எங்க இருக்கு?”

“அடையார்ல இருக்கு.”

“அட்ரஸ் எழுதிக் கொடுங்க.”

“விசிட்டிங் கார்ட் இருக்கு. தரேன்,” விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் மதன்.

“ஸோ, இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம்ங்கறீங்க?”

“ஆமா இன்ஸ்பெக்டர்.”

“அந்த பாலு உங்களைத்தானே ஒழிப்பேன்னு சொன்னான்? உங்க மனைவியை இல்லையே?”

“அவ வெளியில போக எடுத்த கார், என்னோட கார். எனக்கு வச்ச கொலைப் பொறியில அவ மாட்டிக்கிட்டா.”

“ஏழு மணிக்கெல்லாம் உங்க மனைவி எங்கே கிளம்பினாங்க?”

“அவ வழக்கமா போற பியூட்டி பார்லர் ஓனர், ரோஸியோட வீட்டுக் கல்யாணம். முகூர்த்தம் ஏழரை மணிக்குங்கறதுனால ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டா. பொதுவா நான் அயர்ந்து தூங்கிட்டிருந்தா என்னை எழுப்ப மாட்டா. நேத்தும் அதனால அவ என்னை எழுப்பலை.”

“அவங்க கார்ல போகாம ஏன் உங்க கார்ல போகணும்?”

“சில சமயங்கள்ல அவளோட கார்ல பெட்ரோல் இல்லைன்னா என்னோட காரை எடுத்துட்டு போவா. நேத்து ஏன், என் காரை எடுத்தான்னு அவளோட காரை செக் பண்ணாத்தான் தெரியும்.”

“ஓ.கே. மிஸ்டர் மதன். இப்ப நாங்க கிளம்பறோம். நாளைக்கு அந்த மிரட்டல் கடிதங்களை எடுத்து வையுங்க.”

“சரி ஸார்.”

ரகுநாத். போலீஸ் படையின் தொடர, ஜீப்பில் ஏறினார். ஜீப் உறுமலுடன் புழுதியைக் கிளப்பியபடி புறப்பட்டது.

10

“ஏண்டா மோகன், காபிப் பொடி வாங்கிட்டுவான்னு ஏழு மணிக்கே சொல்லிட்டேன். வாக்கிங் போன உங்கப்பா வந்ததும் வராததுமா ‘காபி’ ‘காபி’ன்னு பறப்பார். வீட்டில ஒரு டீஸ்பூன் காபிப் பொடி கூட இல்லை. நான் சொல்றதை கவனிக்காம அப்பிடி என்ன பேப்பர்ல ஒரேயடியா மூழ்கிட்ட... டேய் மோகன்...”

அம்மா கத்துவதைக் கேட்ட மோகன், பேப்பருடன் சமையலறைக்குள் நுழைந்தான்.

“அம்மா நான் கம்மிங் பண்ணிக் குடுப்பேனே எம்.டி.பி. பிரிண்டர்ஸ் மதன் ஸாருக்கு?”

“என்னடா நீ, காபி பொடிக்கு நான் தவிச்சுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா அந்த மதனைப் பத்திப் பேசற? நீதான் எம்.டி.பி. பிரஸ், மதன்னு அடிக்கடி பேசுவ. எனக்கென்ன தெரியும்?”

“அம்மா, அந்த மதன் ஸார் எனக்கு நிறைய கம்மிங் ஆர்டர் குடுக்கறதுனாலதான் கொஞ்ச நாளா நானும் சம்பாதிக்கிறேன். அவரோட மனைவியை யாரோ கொலை செய்ய முயற்சி பண்ணி இருக்காங்களாம். அவங்க, நர்ஸிங் ஹோம்ல உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்களாம்...”

“என்ன! கொலையா? என்னடா இது! பயங்கரமான செய்தியா இருக்கு? ஏனாம்? நகை அல்லது பணத்தக்காகவா?”

“இல்லைம்மா. ஏதோ விரோதமாம். கார்ல குண்டு வச்சுட்டாங்களாம்.”

“ஐயய்யோ...”

திடீரென கையை சொடுக்கினான் மோகன்.

“அம்மா...”

“ஏண்டா கத்தறே? உன் பக்கத்துலதானே நிக்கறேன்.”

“அதில்லம்மா. மதன் ஸாரை ரோடுல வழி மறிச்சு ஒருத்தன் மிரட்டிக்கிட்டிருந்ததை நான் நேர்ல பார்த்தேன்மா. ‘என் தங்கச்சியை காதலிச்சு கைவிட்டு, வேற ஒருத்தியை கைப்பிடிச்சுட்ட. என் தங்கச்சி வாழ வேண்டிய இடத்துக்கு வந்துட்ட உன் மனைவியை ஒழிச்சுக் கட்டறேன் பார்’ன்னு கோபமா பேசிக்கிட்டிருந்ததை என் கண்ணால பார்த்தேன்மா.”

“கத்தித் தொலையாதேடா. இதை என்கிட்ட சொன்னதோட நிறுத்திக்க. வெளியில யார்கிட்டயும் உளறி வைக்காத. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு தினமும் அலையணும்.”

“இப்படி எல்லாரும் பயந்து பயந்து ஒதுங்கினா எப்பிடிம்மா உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியும்? நான் போய் இன்ஸ்பெக்டர் ரகுநாத்தைப் பார்த்து இந்த மிரட்டல் விஷயத்தைச் சொல்லப் போறேன்.”

“என்னமோ செய். உனக்கு சொன்ன புரியாது. பட்டாத்தான் தெரியும். இப்ப போய் காபி பொடி வாங்கிட்டு வா.”

மோகன் பேப்பரை பத்திரப்படுத்திவிட்டு கிளம்பினான்.


11

த்து மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்ட ஒன்பதரை மணிக்கெல்லாம் எம்.டி.வி. பிரிண்டர்ஸ் ஆபீசுக்குப் போனார் ரகுநாத்.

முதலாளி இல்லாத சமயம் போனால்தான் அங்கே வேலை பார்ப்பவர்கள் பயப்படாமல் உண்மையைச் சொல்லுவார்கள் என்ற அவரது கணிப்பை உண்மையாக்கி இருந்தன அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.

ரிஸப்ஷனிஸ்ட்டிடம் சென்னார். அங்கே வேலை பார்க்கும் மற்றவர்களையும் வரச் சொல்லி, அவளிடம் சொன்னார்.

உஷாவும், ஷீலாவும் வந்தனர்.

அவர்களது முகத்தில் பத்மினி பற்றிய செய்திகளின் பிரதிபலிப்பு தெரிந்தது. ஷீலாவின் அரை குறை ஆடையில் வெளியே தெரிந்த தொப்புகள், ரகுநாத்தை இம்சித்தது.

“நான் இங்கே செக்ரட்ரியா வேலை பார்க்கறேன் ஸார். என் பேர் ஷீலா.” தானே முன் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உங்க பாஸ் மிஸ்டர் மதனோட மனைவியை யாரோ கொலை முயற்சி செஞ்ச நியூஸை பேப்பர்ல பார்த்திருப்பீங்க. இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? ஐ மீன், அந்தக் கொலை முயற்சிக்கு யார் காரணமா இருக்கும்னு நினைக்கறீங்க?”

“எனக்கு எதுவும் தோணலை ஸார். எங்க எம்.டி.யோட மனைவி ரொம்ப நல்லவங்க. எப்பவாச்சும் இங்கே வருவாங்க. ஃப்ரெண்ட்லியா பழகற டைப்.”

“மிஸ்டர் மதன் எப்படி?”

“அவரும் நல்லவர்தான்... ஆனா...”

“ஆனா... என்ன ஷீலா... சொல்லுங்க. போலீஸ் டிபார்ட்மென்ட் விசாரணைக்கு வர்றப்ப உங்களுக்குத் தெரிஞ்ச உண்மைகளைத் தயங்காம சொல்லுணும்.”

“எங்க எம்.டி. மிஸ்டர் மதன் பெண்கள் விஷயத்துல சபலிஸ்ட்...”

“சபலிஸ்ட்? புது வார்த்தையா இருக்கே?”

“உமனைஸர்ங்கற அடைமொழிக்கு கொஞ்சம் கெளரவம் கூடுதலான வார்த்தைப் பிரயோகம்தான் இந்த சபலிஸ்ட். ‘நான்ஸி, ரீட்டா, அனுஸா, காமினி, மோகினி’ன்னு நிறைய பொண்ணுங்க போன் பண்ணுவாங்க. அவங்க போன் வந்ததும் அன்னிக்கு எந்த புரோக்ராம் இருந்தாலும் மீட்டிங் இருந்தாலும் கான்ஸல் பண்ணிடுவாரு. உடனே கிளம்பி விடுவாரு.”

“ஓகோ... அது சரி, இந்த விஷயத்துக்கும் மதனோட மனைவி கொலை முயற்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”

“அதை நீங்கதான் ஸார் கண்டு பிடிக்கணும்.”

துணிச்சலாய் பேசிய ஷீலாவின் பின்பக்கம் கிள்ளினாள் உஷா. உடனே வாயை மூடிக் கொண்டாள் ஷீலா.

உஷாவிடம் தன் விசாரணையைத் தொடங்கினார்.

“நீங்க...”

“நான் இங்கே சீஃப் அக்கவுண்ட்டண்ட். என் பேரு உஷா. பிரஸ்ஸோட கணக்குகளை நான்தான் பார்த்துக்கறேன். ஷீலா உங்ககிட்ட சொன்ன தகவல்கள் எல்லாம் நிஜம். எங்க எம்.டி.யோட நடவடிக்கைகள்ல கொஞ்ச நாளா சில மாறுபாடுகள் தெரிஞ்சது.”

“மாறுபாடுகள்னா?”

“அவரோட வழக்கத்துக்கு மாறான சில செயல்களை நாங்க கவனிச்சோம். திடீர்னு மூட் அவுட் ஆகிடுவாரு. எந்த போன் வந்தாலும் அவருக்கு கனெக்ஷன் குடுக்கக் கூடாதுன்னு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சாரு. சில சமயம் டேபிள் மேல கவிழ்ந்து படுத்துடுவாரு. கொங்ச நாளாவே ரெஸ்ட் லெஸா இருந்தார். எனக்குத் தெரிஞ்சு, இதுக்கெல்லாம் காரணம் அவரோட பண நெருக்கடிதான் ஸார். இது என்னோட சொந்த அபிப்ராயம். ஏன்னா... பாங்க்ல பணம் போட்டதும் உடனே எடுத்து செலவு பண்ணிடுவாரு. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் பணத்தை தண்ணீரா செலவு பண்ணிட்டு வருவாரு. பேப்பர் ஸ்டோர்ஸ்க்கு கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் இப்படிச் செலவு பண்ணிட்டதால பேப்பர் ஸ்டோர்ஸ்க்கு லட்சக் கணக்குல பேமெண்ட் சேர்ந்துருச்சு. பேப்பர் ஸ்டோர்ஸ் ஓனர் பிரபாகர் ரொம்ப எரிச்சலாகி தினமும் போன் போட்டு கத்திக்கிட்டிருக்காரு பணத்துக்காக.”

ஷீலா குறுக்கிட்டாள். “ஆமா ஸார். எங்க மாமா நடத்தற பைனான்ஸ் கம்பெனியில கூட என்னை ஏழு லட்ச ரூபா கடனா கேட்டு வாங்கித் தரச் சொன்னார். எங்க மாமா அவ்வளவு பெரிய தொகை தர முடியாதுன்னு சொல்லிட்டார்.”

“ஓ.கே. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கணேஷ்னு ஒரு ஆள் மதனோட மனைவியைக் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினானாமே? இதைப் பத்தி ஏதாவது தெரியுமா?”

“என்ன? மிரட்டலா, இந்த விஷயம் எங்களுக்குத் தெரியாது ஸார்.” ஷீலா சொன்னதும் மற்ற இருவரும் அதை ஆமாதித்தனர்.

“கணேஷ்ங்கறவன் தன்னை மிரட்டினதாக மதனே என்கிட்ட சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை.”

“அது உண்மைதான் ஸார்.” தனக்குப் பின்னால் இருந்து குரல் கேட்டதும் திரும்பினார் ரகுநாத்.

மோகன் நின்றிருந்தான்.

 “நீ யாரு? உன் பேர் என்ன?”

“என் பேர் மோகன். மதன் ஸாரோட பிரஸ்ல அடிக்கற ஸ்டிக்கர்க்கெல்லாம் கம்மிங் பண்ணிக் குடுக்கறது நான்தான் ஸார்.”

“கம்மிங்ன்னா?”

“ஸ்டிக்கர்களுக்கு பின் பக்கம் கம்மிங் செஞ்சாத்தான் ஸ்டிக்கர் ஒட்டும். இல்லைன்னா ஒட்டாது. மதன் ஸாரோட ரெகுலர் ஆர்டர் எனக்குக் கிடைக்கும். இது விஷயமா அப்பப்ப அவரைப் போய் நான் பார்ப்பேன். அன்னிக்கும் அவரைப் பார்க்க போனப்பதான் வழியில அவரோட கார் நிக்கறதைப் பார்த்து நானும் என் டூ வீலரை நிறுத்தினேன்.”

“எந்த ஏரியாவில் நடந்தது அந்த சம்பவம்?”

“தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி கொங்சம் தூரம் தள்ளி ஸார்.”

“சரி, என்ன நடந்ததுன்னு கொஞ்சம் சொல்லு.”

“ஒரு ஆள், மதன் ஸாரை மிரட்டிக்கிட்டிருந்தாரு.”

“என்ன சொல்லி மிரட்டிக்கிட்ருந்தாரு?”

“என் தங்கச்சியை ஏமாத்தி, வேற பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்ட. ஆசை காட்டி மோசம் பண்ணின பாவி. உன்னைப் பழி வாங்கணும்னு துடிக்கறேன். உன் மனைவியைக் கொன்னு உன்னைத் தனி ஆளா பார்க்கணும். அப்பதான் எனக்கு நிம்மதின்னு கோபமா பேசினார்.”

“அப்போ மதன் என்ன ரியாக்ஷன் பண்ணினார்?”

“மதன் ரொம்ப பயந்து போயிருந்தார். மிரட்டின அந்த ஆள் கிட்ட கெஞ்சி கெஞ்சி ஏதோ பேசினார். அந்த ஆள் சத்தமா பேசினதுனால எனக்கு அவர் பேசினது நல்லா கேட்டுச்சு. ஆனா மதன் மெதுவா பேசினதுனால எனக்குத் தெளிவா கேட்கல ஸார். யாரும் பார்த்துடக் கூடாதேங்கற தவிப்புல அவர் சுத்தி, முத்தி பார்த்துக்கிடே ரொம்ப மெதுவாப் பேசினார்.”

“அப்புறம் அந்தப் பேச்சு எப்பிடி முடிஞ்சது?”

“எனக்கு வேற ஒரு இடத்துக்குப் போக வேண்டி இருந்ததுனால நான் அவங்க பேசிக்கிட்டிருந்த இடத்துக்கே போய் மதன் ஸாரைப் பார்த்து பேசினேன். அதனால அவங்களோட பேச்சு அத்தோட நின்னுடுச்சு.”

“மதன் உன்கிட்ட அப்ப என்ன சொன்னார்?”

“நீ போய் பிரஸ்ல இரு. நான் வந்துடறேன்னு சொன்னார். அதுக்கப்புறம் அந்த ஆள் கிட்ட நான் போகணும்னு சொல்லிட்டு மதன் ஸாரும் கிளம்பினார். அப்பவும் அவன்கிட்ட ப்ளஸ் பண்ணித்தான் பேசினார்.”

“அதுக்கு அந்த கணேஷ் என்ன சொன்னான்?”


“உன்னை இப்ப விட்டுடுவேன். ஆனா உன் பொண்டாட்டியை உயிரோட நடமாட விடமாட்டேன். ஞாபகம் வச்சுக்க! அப்படின்னு கடுமையான மிரட்டினதுக்கப்புறம் மதன் ஸாரை விட்டான்.”

“அதுக்கப்புறம் மதன் போயிட்டாரா?”

“ஆமா ஸார். மதன் காரில் ஏறி போயிட்டாரா?”

“அவன் எந்தப் பக்கம் போனான்னு நான் பார்க்கலை ஸார்.”

“அதுக்கப்புறம் நீ மதனைப் பார்த்தியா?”

“ஆமா. அன்னிக்கே பார்த்தேன். ஸ்டிக்கர் அர்டர் விஷயமா பேசறதுக்காக வரச் சொல்லி இருந்ததுனால அவரோட பிரஸ்க்குப் போனேன்.”

“கணேஷ், மதனை மிரட்டின சம்பவம் பத்தி ஏதாவது அவர் கிட்ட கேட்டியா?”

“யம்மா! மதன் ஸார் எவ்வளவு பெரிய ஆள்? சொஸைட்டியில முக்கியமான புள்ளி. ‘பெரிய பிரிண்ட்டர்’ங்கற இமேஜ் உள்ள வி.ஐ.பி. ஸார் அந்த மதன். அவர்கிட்ட நான் எப்பிடி ஸார் அவரோட பர்ஸனல் மேட்டர் பத்தி பேச முடியும்? அப்பாயிண்மென்ட் இல்லாம அவரை சந்திக்கவே முடியாது.”

“ஓகோ! அதுக்கப்புறம் மதனை நீ சந்திக்கவே இல்லையா?”

“ஸ்டிக்கர் வேலை இருந்தா மட்டும்தான் அவரோட ஆபீஸ்ல இருந்து போன் வரும். ரொம்ப நாளா ஆர்டர் இல்லைன்னா அவரோட அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டுப் போய் பார்ப்பேன். ஆர்டர் கேப்பேன். தொடர்ந்து அவர் குடுக்கற ஆதரவு, தொழிலின் ஆரம்ப நிலையில் இருக்கற எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.”

“தாங்க்ஸ் தம்பி. உன்னைப் போல இளைஞர்கள் ஓடி ஒளியாம, தேடி வந்து தகவல் குடுக்கறது பாராட்டுக்குரியது. உன் அட்ரஸ் குடுத்துட்டுப் போ, தேவைப்படும்போது ஸ்டேஷனுக்குக் கூப்பிடுவோம்.”

“ஓ.கே. ஸார்.” இன்ஸ்பெக்டர் தன்னைப் பாராட்டியதில் மோகனின் தலையில் ஐஸ் வைத்தது போல் இருந்தது. அட்ரஸ் எழுதிக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

“ஸாரி இன்ஸ்பெக்டர். ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததுனால பத்து நிமிஷம் லேட்டாயிடுச்சு” பேசியபடியே மதன் வந்தான்.

“பரவாயில்லை மிஸ்டர் மதன்.”

“உள்ளே என் ரூமுக்கு வாங்க இன்ஸ்பெக்டர். ப்ளீஸ்.”

ரகுநாத்தை தன் அறைக்குள் அழைத்துச் சொன்றான். ரகசிய பூட்டறை இருந்த பீரோவைத் திறந்தான். ரகசிய பூட்டறையையும் திறந்து இரண்டு பேப்பர்களை எடுத்து ரகுநாத்திடம் கொடுத்தான்.

ரகுநாத் அந்தப் பேப்பர்களைப் பார்த்தார்.

‘உன் உயிர் உன் மனைவியிடம், உன் மனைவி உயிர் என் கையில்’ கிறுக்கலாக எழுதி இருந்தது. “இந்த ரெண்டு லெட்டருமே உங்க வீட்டு பாக்ஸ்லதான் கிடந்துச்சா?”

“ஆமா ஸார். கவர் இல்லாம பாக்ஸ்ல சொருகி வச்சிருந்துச்சு.”

“சரி. இந்த லெட்டர்ஸ் இரண்டும் என்கிட்ட இருக்கட்டும்.” தன் ஷர்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்ட ரகுநாத், தன் செல்போனை எடுத்தார். அது இயங்கியதும் “யாதவ் ஹியர்” குரல் கேட்டது.

“ரகுநாத் ஸ்பீக்கிங் யாதவ். இப்ப நீங்க அடையார் எம்.டி.பி. பிரஸ்க்கு வரணும். என்ன பக்கத்துலதான் இருக்கீங்களா? வாங்க.”

“மதன், அந்த கணேஷோட அட்ரஸ் வேணுமே?”

“அ... அது... வந்து...”

“என்ன மதன் காதலிக்கும்போது அட்ரஸ் தெரியாமலா காதலிச்சீங்க?”

“அதில்லை ஸார்... அப்போ இருந்த அதே அட்ரஸ் தாானன்னு எனக்குத் தெரியாது...”

“பரவாயில்லை மதன். அதே அட்ரஸைக் குடுங்க.”

மதன் எழுத ஆரம்பித்தான்.

டெலிபோன் ஒலித்தது. மதன் எடுத்தான்.

“என்ன? யாதவ்வா? இன்ஸ்பெக்டரைப் பார்க்கணுமா? உள்ளே அனுப்புங்க.”

ஆறு அடி உயரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் வந்தான்.

சிகப்பாக, ஒல்லியாக இருந்த அவன் ரகுநாத்தின் கைகளைப் பிடித்துக் குலுக்கினான்.

“வாங்க யாதவ். இவர் மிஸ்டர் மதன். எம்.டி.பி. பிரஸ்ஸோட மேனேஜிங் டைரக்டர்.”

“மதன், இவர் ஹாண்ட் ரைட்டிங் எக்ஸ்பர்ட் யாதவ்.”

மதன் “ஹலோ” சொல்ல, யாதவ்வும் பிதிலுக்கு “ஹலோ” சொன்னான்.

ரகுநாத், தன் ஷர்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கணேஷின் மிரட்டல் கடிதங்களை யாதவ்விடம் கொடுத்தார்.

“இதை ஸ்டடி பண்ணி ரிப்போர்ட் குடுங்க யாதவ். ரிப்போர்ட் ரெடியானதும், என் செல் நம்பர்ல கூப்பிடுங்க.”

“ஓ.கே.ஸார். நான் கிளம்பட்டுமா?”

“கிளம்புங்க யாதவ்.”

யாதவ், மதனிடம் விடை பெற்று விட்டுக் கிளம்பினான்.

அவன் போனதும் வேறொரு பேப்பரை எடுத்து மதனின் மேஜை மீது போட்டார் ரகுநாத்.

“இதை எடுத்து படிச்சுப் பாருங்க மதன்.”

மதன் படிக்க ஆரம்பித்தான்.

படிக்கப் படிக்க அவனுக்கு வியர்த்தது. அவனால் நம்ப முடியவில்லை. மறுபடியும் படித்தான்.

“தெய்வங்களே, நான் அமைதி இல்லாமல் தவிக்கிறேன். மன நிம்மதி இன்றி துடிக்கிறேன். திரமணத்திற்கு முன் கல்லூரியில் படிக்கும்போது கயவன் ஒருவன் விரித்த வலையில் விழுந்துவிட்டேன். அவன் என்னை ஏமாற்றும் முன்பே அவனது முகத்திரை கிழிந்து விட்டது. நல்லவன் என நினைத்து அவனுடன் நான் பழகிய நாட்களிலும் நான் நேர்மையாகத்தான் இருந்தேன். அவன் சுண்டு விரல் நுனி கூட என் மீது பட விட்டதில்லை. அவனை அடியோடு மறந்தும் விட்டேன். அதன் பின் எனக்கு அமைந்த திருமண வாழ்க்கை அருமையானது. இதை அழிக்கவென்று அந்தக் கயவன் சுந்தர் என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். நான் அவனுக்கு எழுதிய கடிதங்களை என் கணவரிடம் காட்டாமல் இருக்க, கூலியாக பணம் கேட்டு தொல்லைப் படுத்துகிறான். என் கணவரிடம் சொல்லவும் வழி இல்லாமல், அந்தக் கயவனின் மிரட்டலையும் சமாளிக்க இயலாமல் தவிக்கிறேன். தெய்வங்களே, ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெய ஆஞ்சநேயா... அவன் கேட்ட பணத்தைத் தர மறுத்தால் என்னைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறான்.  தெய்வங்களே. யாரிடமும் சொல்ல இயலாத பேதையாக நான் வணங்கும் தெய்வங்களான உங்களுக்கு எழுதுகறேன். காவல் தெய்வங்களாக இருந்து என்னைக் காக்க வேண்டும். ஸ்ரீராமா, ஜெயராமா...” பேப்பர் முழுக்க ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருந்தன.

“என்ன மதன்? இது உங்க மனைவி எழுதினதுதானே? அவங்க கையெழுத்துதானே?”

“ஆமா ஸார்.”

“அப்போ... உங்க மனைவி... கல்யாணத்துக்கு முன்னால எவனையோ காதலிச்சிருக்காங்கற கோபத்துல, அவளைப் பழி வாங்கணும்ங்கற வெறியில... கொலை செய்ய திட்டம் போட்டிருக்கீங்க. அதுக்காகத்தான் கார் ஸீட்டுக்கு அடியில குண்டுகள் நிரப்பப்பட்ட குழாய்களை அடுக்கி... அவங்க உட்கார்ந்ததும் வெடிக்கற மாதிரி சிஸ்டம் ரெடி பண்ணி இருக்கீங்க....”

“ப்ளீஸ் ஸ்டாப் இட் இன்ஸ்பெக்டர். இந்த பேப்பரை நான் இப்பதான் என் கண்ணால பார்க்கறேன். இதில என் மனைவி எழுதி இருக்கற விஷயங்கள் எனக்கு புதுசு. ஷாக்கிங்காவும் இருக்கு. என் கிட்ட சொல்ல முடியாம அவ எப்படி தவிச்சிருக்கான்னு நினைச்சுப் பார்க்கவே நெஞ்சு வலிக்குது... அது மட்டுமில்ல... காதல் பாவப்பட்ட விஷயம்னு நினைக்கறவனும் நான் இல்ல கோவப்படறதுக்கு.”


“இருக்கலாம். பொதுவா காதல் தப்பு இல்லை. பாவம் இல்லைன்னு. ஆனா காதலிச்சது உங்க மனைவி. அதை மறைச்சதும் உங்க மனைவி. கோபம் வர்றது நியாயம்தானே?”

“அதனால அநியாயமா என் மனைவியைக் கொலை செய்ய முயற்சி பண்ணேங்கறீங்களா இன்ஸ்பெக்டர்? அவ எப்பவும் இப்படித்தான் எதையாவது எழுதி எழுதி வைப்பா. கேட்டா தெய்வத்துக்கு எழுதறேன். இப்பிடி எழுதினா மனசுல இருக்கற பாரம் குறைஞ்சு லேசாயிடும். ஸோ, அவ எழுதற எதையுமே நான் பார்க்கறதும் இல்லை. படிக்கறதும் இல்லை. இதையும் நான் பார்த்ததே இல்லை.”

“இந்த லெட்டர் எங்கே இருந்தது தெரியுமா? உங்க வீட்ல, உங்க படுக்கையறை அலமாரியில இருந்துச்சு. இந்த பேப்பரை நீங்க பார்க்கவே இல்லைன்னு சொன்னா... அதை நான் நம்பணுமா? கூடிய சீக்கிரம் அரெஸ்ட் வாரண்ட்டோட வரேன். அதுக்கப்புறம் கோர்ட்ல உங்களை நீங்க நிரூபிச்சிக்கோங்க. முக்கியமான விஷயம். எங்கயும் வெளியூர் போயிடாதீங்க. நான் வரேன்” டேபிள் மீது இருந்த பேப்பரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ரகுநாத்.

12

ண்ணீர் வழிய அழுது கொண்டிருந்தாள் அம்ருதா. அம்ருதா! வட இந்திய பெண்களில் கோதுமை நிறத்தில் அழகாக இருந்தாள். ஐஸ்கிரீமில் மிதக்கும் செர்ரி பழம் போன்ற சிவந்த உதடுகள். எடுப்பான மூக்கில், ஒரு பக்கம் அவள் அணிந்திருந்த ஒற்றைக்கல் மூக்கத்தி அவளுக்கு அதிகப்படியான வசீகரத்தை கொடுத்தது.

அடர்ந்து, சுருண்டிருந்த தலைமுடி சற்று கலைந்திருந்தாலும், அதுவே அவளது அழகை மிகைப்படுத்தியது. புருவத்தைத் திருத்துவதோ, கண்ணில் மை வரையவோ அவசியம் இன்றி இயற்கை அழகில், இளம் நெஞ்சங்களைக்கிள்ள வைக்கும் தேவதையாக இருந்தாள்.

“நீ... நீங்க ஏன் அழறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? நான் இன்னும் உங்ககிட்ட கணேஷைப் பத்தின விசாரணையே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள ஏன் இப்படி அழறீங்க....?”

“இன்ஸ்பெக்டர். என் அண்ணன் கணேஷைப் பத்தி விசாரிக்கணும்னா நீங்க என்கிட்ட துக்கம் தான் விசாரிக்க முடியும். ஏன்னா அவன் நிரந்தரமான தூக்கத்துக்குப் போய்ட்டான்...”

மறுபடியும் அழ ஆரம்பித்தாள் அம்ருதா.

“நீங்க... என்ன சொல்றீங்க?”

“ஆமா இன்ஸ்பெக்டர். என் அண்ணன் இப்போ உயிரோட இல்ல, எனக்குன்னு இருந்த ஒரே ஆதரவு என் அண்ணன்தான். நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசா இருக்கறப்பவே எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. எங்க அம்மா, அப்பா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க. அதனால சொந்தக்காரங்க ஆதரவு இல்லாம தனியா வாழ்ந்தாங்க. எங்களை நல்லபடியா வளர்க்கற அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதிச்சிட்டிருந்தாங்க. ஒரு ரயில் விபத்துல அவங்க இறந்ததுக்கப்புறம் நாங்க ஒரு தனித் தீவா ஆகிட்டோம். அப்போ எனக்கு எட்டு வயசு. அப்பவே என் அண்ணன் வேலைக்கு போக ஆரம்பிச்சான். என்னைப் படிக்க வைக்கறதுக்காக அவன் உழைச்சான். ஆனா நிலையான வேலை கிடையாது. உன்னோட படிப்பு செலவுக்காக உதவி கேட்டு, உறவுக்காரங்க வீட்டுப்படி ஏறி இறங்கினான். பலன் ஜீரோ. எங்களைப் பாதிச்சது. ‘காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னங்கடா? நீங்கள்லாம் ஒரே ஜாதியில கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேற ஜாதி பொம்பளைங்க கூட இருட்டுல திருட்டுத் தனமா படுத்துக் கிடந்துட்டுத்தானேடா வீட்டுக்கு வர்றீங்க? என்னமோ காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டா பாவம் செஞ்சது போல இப்படி விரட்டறீங்கன்னு எங்க அப்பாவோட தம்பி, எங்க அம்மாவோட அண்ணன் வீட்டுக்கெல்லாம் போய் கத்திட்டு வந்துட்டான்.

தன்னோட கோபம், மத்தவங்களை பயப்படுத்துதுன்னு தெரிஞ்சப்புறம் அவனோட சுபாவமே மாறிப்போச்சு. ஒரு முரடன் போல தன்னை உருவகப்படுத்திக்கிட்டானே தவிர, அவன் உண்மையிலேயே முரட்டுத் தனமானவன் இல்ல. சின்ன வயசுல வீடு வீடா பேப்பர் போட்டு, பாக்கெட் பால் போட்டு, கார் துடைச்சு சம்பாதிச்சான். அப்புறம் வளர, வளர வேற தொழில்கள் நிறைய கத்துக்கிட்டான். நான் நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டு என்னோட படிப்பு செலவுக்காக எந்த வேலை கிடைச்சாலும் செய்ய ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சான். பிறகு லாரி ஓட்டினான்.

நிரந்தமான வேலை எதுவும் செய்யாம... மாத்தி மாத்தி ஏதாவது வேலை செய்வான். எனக்காக அவன் தன்னோட சுகங்களைத் தியாகம் செஞ்சான். ஆனா நான்? அவனுக்கு, அவனோட அன்புக்கு துரோகம் செஞ்சுட்டேன்?”

“என்னம்மா சொல்றீங்க? துரோகமா?”

“ஆமா இன்ஸ்பெக்டர். எனக்காக உடல் தேய உழைச்ச என் அண்ணனோட அன்பை மறந்து, அவன் ஆசைப்பட்ட படிப்பை மறந்து, அந்த மதனைக் காதலிச்சேன். இந்த விஷயம் தெரிஞ்ச என் அண்ணன் துடிச்சுப் போயிட்டான். ‘பணக்காரப் பையனா இருக்கானே? இது சரிப்படுமா?’ன்னு பயந்தான். மதன் உண்மையாததான் என்னைக் காதலிக்கிறார்னு நம்பின நான், என் அண்ணனுக்கும் அந்த நம்பிக்கையைக் கொடுத்தேன். ‘படிப்புதான் முக்கியம். முதல்ல படிப்பை முடி. அப்புறம் அவனைப் பார்த்து நான் பேசறேன்’னு அண்ணன் சொன்னான்.

ஆனா நான் அவன் பேச்சைக் கேக்கலை. மதனைப் பார்க்காம என்னால இருக்க முடியலை. அவர் கூட நல்லா கத்தினேன். ஆனா நான் சுத்தமாத்தான் பழகினேன். ‘கல்யாண சடங்குக்குப் பிறகுதான் நம்ப தாம்பத்தியம் தொடங்கும்’ன்னு உறுதியா சொல்லிட்டேன். மதனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா சத்தியம் பண்ணினார். அவர் மேல நான், என் உயிரையே வச்சிருந்தேன். இப்பிடி என் அண்ணனோட உயிரைக் குடிக்கிற எமனா அந்த மதன் இருப்பார்ன்னு, நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை இன்ஸ்பெக்டர்...”

மேலே பேச இயலாமல் தவித்தாள் அம்ருதா.

“அம்ருதா, உங்க வேதனை எனக்குப் புரியுது. இருந்தாலும் நீங்க சொல்ல வேண்டியதை முழுசா சொன்னாத்தான் இந்தக் கேஸ்ல யார் குற்றவாளின்னு கண்டுபிடிக்க முடியும். உங்க அண்ணன் இறந்து போனதுக்கும் மதனுக்கும் என்ன சம்பந்தம்?”

“நிறைய சம்பந்தம் இருக்கு இன்ஸ்பெக்டர். திடீர்னு ஒரு நாள் சேலத்துக்குப் போறதாகவும், ஒரே நாள்ல திரும்பி வந்துடறதாகவும் சொல்லிட்டு மதன் கிளம்பிப் போனார்.”

அம்ருதாவின் நினைவுகள் அந்த நாளின் நிகழ்ச்சிகளில் நீந்தின.

13

“என்ன மதன்? திடீர்னு சேலத்துக்குப் போறீங்க? உங்களைப் பார்க்காம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாதே” கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி இடையாள், அம்ருதா கேட்ட அழகில், அந்த ஸ்டைலில் மூச்சுத் திணறினான் மதன்.

“ஸ்வீட்டி, எனக்கு மட்டும் என்ன, உன்னைப் பிரிஞ்சு இருக்கவா முடியும்? நேத்து ராத்திரி என்னோட மாமா சேலத்துல இருந்து போன் பண்ணினார். என்னை ‘உடனே கிளம்பி வா சேலத்துக்கு’ன்னு சொன்னார். ‘நான் எதுக்கு’ன்னு கேட்டேன். அதுக்கு அவர் ‘எல்லாம் நேர்ல பேசுவோம் வா’ அப்படின்னு சொல்லிட்டார்.”


“எங்க அம்மா வழியில அவர் ரொம்ப பெரியவர். அவர் கூப்பிட்டு நான் போகாம இருக்க முடியுமா?... சேலம் என்ன வெளிநாடா? கார்ல அஞ்சு மணி நேரத்துல போயிடுவேன்.  மாமாகிட்ட என்ன ஏதுன்னு பேசிட்டு உடனே கிளம்பி வரப்போறேன். அவ்வளவுதானே?”

“நிஜம்மா, ஒரே நாள்ல வந்துருவீங்கள்ல?” படபடக்கும் பட்டாம் பூச்சிகள் போல் கண்ணில் இமைகள் படபடக்க, அம்ருதா கேட்ட விதம், மதனைக் கிறங்கடித்தது.

“சத்தியம் பண்ணட்டுமா?” கேட்டபடியே அவளது கைகளைப் பிடிக்க முயற்சித்தான்.

“இதானே வேணாங்கறது? சத்தியம் பண்ற சாக்குல தொட்டுப் பாக்கலாம்னு ஐடியா பண்றீங்களா?” செல்லமாகக் கோபித்தாள் அம்ருதா.

“தொட்டுப் பார்க்காட்டி விட்டுப் போயிடுச்சுன்னா?” மதன் குறும்பாகக் கேட்டாலும் அந்தக் கேள்விக்கு அம்ருதாவின் நெஞ்சம் குறுகுறுத்தது.

“மதன்! விளையாட்டாகக் கூட இப்பிடி எல்லாம் நெகட்டிவ்வா பேசாதீங்க. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும்... நம்ப உறவு.”

“தமாஷா பேசறதுக்குக் கூட இப்பிடி பயந்துக்கற? உங்க அண்ணன் உன்னை நல்ல பயந்தாங்கோழியா வளர்த்திருக்கான்...”

“மதன் எங்க அண்ணனைப் பத்தி ஏதாவது பேசினீங்க..? உங்களை சும்மா விட மாட்டேன். அவன்தான் நம்ப காதலுக்குப் பச்சைக் கொடி காமிச்சுட்டான்ல?”

“யப்பா... அண்ணனைப் பத்தி பேசினா கோபம் பொத்துக்கிட்டு வர்றதைப் பாரேன்...”

“என் அண்ணன் உங்க மேல நல்ல அபிப்ராயம் வச்சிருக்கான் மதன். நம்ப காதலைப் பத்தி ஆரம்பத்துல அவன்கிட்ட சொன்னப்ப ‘பணக்காரனோட நட்பு, ஒரு உயிர் கொல்லும் வியாதி போன்றது. அந்த வர்க்கம் இனிப்பு தடவின மாத்திரை மாதிரி. உதடுகள் இனிப்பான வார்த்தையைப் பேசினாலும் உள்ளுக்குள்ள இழிவான எண்ணங்கள் நிறைஞ்ச கூட்டம், அந்த பணக்காரக் கூட்டம். நம்ப தகுதிக்கு மேல நீ ஆசைப்பட்டுட்டியே’ன்னு அண்ணன் புலம்பினான். உங்களைப் பத்தி நல்ல எண்ணங்களை அவன் மனசுல பதிய வைக்கிறதுக்கு ரொம்ப பாடு பட்டிருக்கேன். அந்த நல்ல எண்ணங்களை நீங்க காப்பாத்தணும். நீங்க எனக்குக் குடுத்த நம்பிக்கையை நான் அவனுக்குக் குடுத்திருக்கேன். நம்பியவங்களை கை விட்டுடாதீங்க மதன். தன்னோட பன்னிரண்டாவது வயசுல இருந்து... தனக்குன்னு எந்த சுகமும் தேடாம, நாடாம, என்னோட முகமலர்ச்சி மட்டுமே முக்கயம்னு என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தான் என் அண்ணன். அவன் மனம் வாடாம பார்த்துக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. செருப்பா தெஞ்சு உழைச்ச அவனுக்குப் பொறுப்பான தங்கச்சியா நான் இருக்கணும். எனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு... நான் சந்தோஷமா வாழறதுதான் அவனோட லட்சியம். அந்த உயர்ந்த லட்சியத்தை, லட்சாதிபதியான நீங்க அலட்சியப்படுத்திடாதீங்க.”

“அம்ரு. பணக்காரனா இருக்கறது ஒரு மைனஸ் பாயிண்ட்டா? உங்க அண்ணன் மனதளவில பாதிச்சதுனால பணத்தைப் பார்த்ததும், பணக்காரனைப் பார்த்ததும் அலர்ஜி ஆகறார். எங்க அப்பா பிறக்கும்போது பணக்காரராத்தான் பிறந்தார். வளர்ந்தார். வாழ்ந்த்தார். தன்னோட வாழ்நாள்ல அவர் பணம் குடுத்து உதவி செஞ்சு... முன்னுக்கு வந்தவங்க நிறைய பேர், ஆனா நான் வளர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டிய சரியான சந்தர்ப்பத்துல வர்கூடப் பிறந்தவங்களே வட இருந்து குழி தோண்டிட்டாங்க. அதனால வியாபாரத்துல நஷ்டம் சிகரத்தோட உச்சிக்குப் போன என் அப்பா, அதல பாதாளத்துல விழற மாதிரி கம்பெனி, பள்ளத்துல விழுந்துடுச்சு. மறுபடியும் அவரால எழுந்திருக்க முடியலை. அதிர்ச்சியில அகால மரணம் அடைஞ்சுட்டாரு. அவரால பெரிய ஆளானவங்கள்ல ஒருத்தர்.... தாமோதர் ஸார். அவர் எனக்கு பண உதவி செஞ்சதுனால நான் சின்னதா பிரிண்ட்டிங் பிரஸ் ஆரம்பிச்சேன். படிப்படியா அடி எடுத்து வச்சு முன்னேறினேன். பணம்! அது மனுஷனோட குணத்தை மாத்தக் கூடியதுதான். ஆனா நான் அப்படிப்பட்டவன் இல்லை. உன் அண்ணன் மனசுல எனக்கு நீ ஏத்தி வச்சிருக்கற இமேஜை நான் காப்பாத்துவேன். இப்ப என்னை சிரிச்சுக்கிட்டே வழி அனுப்பும்மா?”

தன் நிலைமை சந்தி சிரிக்கப் போவதை அப்போது அறியாத அம்ருதா, மதனை சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தாள். தன் இதயத்தை விட்டு, தன் வாழ்க்கையை விட்டு, தன் எதிர்காலத்தை விட்டு, அவனை வழி அனுப்பி வைக்கிறோம் என்று அறியாத பேதையாய் ஆகிப் போனாள் அந்தப் பூவிழி. அன்று அவளிடம் வாக்குக் கொடுத்துப் புறப்பட்டவன் திரும்பி வரும் பொழுது பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்ளும் சாஸ்திர சம்பிரதாயங்களுடன் பத்மினியை மணந்து கொண்ட மணாளனாய் திரும்பி வந்தான்.

14

“கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்ட நீங்க, சேற்றில் கிடக்கும் புழுவை விடக் கேவலமானவர்” மதனைத் திட்டினாள்.

“அம்ரு..... நான்...”

“நோ. அப்படிக் கூப்பிடாதீங்க. அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முக்கியமான விஷயம் பேசறதுக்காக மாமா கூப்பிட்டார்னு பொய் சொல்லிட்டுப் போனீங்க. எவளையோ கல்யாணம் பண்ணிக்கத்தான் போறீங்கன்னு சொல்லிட்டுப் போயிருந்தா... என் அண்ணனை விட்டு உங்களுக்கு மொய் எழுத வச்சு அனுப்பி இருப்பேன்.”

“ஐயோ அம்ருதா. இது பிளான் பண்ணி நடந்த கல்யாணம் இல்லை. மாமாவுக்கு அவரோட மனைவி வழியில இந்தப் பொண்ணு சொந்தம். ஒரு ஆக்ஸிடெண்ட்ல இந்த பொண்ணோட அம்மா, அப்பா இறந்துட்டாங்க. அநாதரவா நிக்கற இந்தப் பொண்ணுக்கு ஆதரவா நான் இருக்கணும்னு... மாமா இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டார். எ... என்னால எதுவுமே எதிர்த்துப் பேச முடியாத நிலைமை உருவாயிருச்சு. ஐ ஆம் ஸாரி...”

“ஸாரி கட்டின பொம்பளைன்னால.... வெறும் ஸாரி சொல்லி சரி பண்ணிடலாம்னு நினைக்கறீங்க. சரி பண்றதுக்கு இது உங்க வாட்ச்சோ, காரோ இல்லை. என்னோட வாழ்க்கை. நீங்க சேலத்துக்குப் போறதுக்கு முன்னால என் நம்பிக்கையைப் பத்தியும், என் அண்ணனோட லட்சியத்தைப் பத்தியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்... எள்ளளவு கூட அக்கறை இல்லாம இப்பிடி புது மாப்பிள்ளையா வந்து நிக்கறீங்களே? ஒரே நாள்ல வந்துடறதா சொல்லிட்டுப் போன நீங்க... ஒரே ஒரு  தடவையாச்சும் என்னை, என் காதல், அதைப்பத்தின என் கனவு இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தீங்களா? போய் ரெண்டு வாரத்துக்கு மேல உங்களைக் காணாம நான் தவிச்ச தவிப்பு?...”

“அம்ருதா... உன்னை ஏமாத்தணும்ங்கற எண்ணம் எனக்கு இல்லை. மாமா எடுத்த முடிவை மறுக்க முடியாத சூழ்நிலை எனக்கு. சொந்தக்காரங்கள்ளாம் ஒண்ணா கூட என்னை எதுவுமே பேச விடாம பண்ணி... இந்தக் கல்யாணத்தை நடத்திட்டாங்க.”


“இந்த விஷயம் என் அண்ணனுக்குத் தெரியாது. தெரிஞ்சா? கடவுளே அவன் மனசு என்ன பாடுபடும்? இத்தனை நாள் எனக்காக அவன் பட்டபாடு அத்தனையும் வீணாகிப் போச்சே.”

“அம்ருதா... நீ... என்னை...”

“என்ன? மன்னிச்சுடு. மறந்துடு. வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கன்னு டைலாக் பேசப் போறீங்க. அப்படித்தானே?”

“அ... அது... வந்து... அம்ருதா...”

“உங்களை மாதிரி மனசை ஒருத்திக்குக் கொடுத்துட்டு, உடம்பை இன்னொருத்திகிட்ட அடகு வச்சு வாழற அவலமான வாழ்க்கை வாழ அற்பப் பிறவி இல்லை இந்த அம்ருதா. ஆத்மார்த்தமா நேசிச்ச ஒருத்தனை மறந்துட்டு... வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு... வேசித்தனமா வேஷம் போடற வித்தை எல்லாம் தெரியாது எனக்கு. ஏழ்மையில ஏங்கினாலும் நேர்மையான பாதையில தான் நாங்க வளர்ந்தோம். எங்க மனசல ஊனம் இல்லாததுனால மானம், மரியாதையோட வாழ்ந்தோம். எங்க அண்ணன் சொன்ன மாதிரி நீங்க ஒரு பணக்காரப் பாம்பு. அதிலயும் சாதாரண பாம்பு இல்ல. விஷப் பாம்பு. உங்க மூச்சுக் காத்தைக் கூட என் மேல பட விடாம என் ஒழுக்கத்தை நான் காப்பாத்திட்டேன். அண்ணன் சொன்ன அறிவுரையை பெரிசா நினைக்காம... அறிவு கெட்டுப் போய் உங்களை நம்பினேன். நம்ம வச்சு என் கழுத்தை அறுத்துட்டீங்க. அம்ருதான்னு ஒருத்தியை சந்திச்சதை, அடியோட மறந்துடுங்க. என் எதிர்கால வாழ்க்கையோட அத்தியாயமும் இதோட முடிஞ்சு போச்சு. பகல்லயே சூரியன் அஸ்தமிச்சுப் போனது மாதிரி என் வாழ்வு இருண்டு போச்சு... போங்க... உங்க முகத்துல விழிக்கறதே பாவம்” ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டிய அம்ருதாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது. வில்லில் இருந்த புறப்பட்ட அம்பு போல விர்ரென்று வேகமாய் போனாள்.

உண்மையிலேயே மதனுக்கு, அம்ருதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் எண்ணம் கிடையாது. அதே சமயம் பத்மினியை திருமணம் சமயம் பத்தினியை திருமணம் செய்து கொள்ளும் திட்டமும் கிடையாது. அவனுடைய தாய் மாமனின் மனைவிக்கு நெருங்கிய உறவான பத்மினி, பெற்றோரை இழந்து நின்றாள். அதுவும் திருமண வயதில், அவள் மீது அதிக பாசம் வைத்திருந்த மதனின் அத்தை, மதன் நல்ல நிலையில் இருப்பது அறிந்து மாமா மூலம் அவனை வரவழைத்து காரியம் சாதித்துக் கொண்டாள். உறவினர்கள் ஒன்று கூடி அவனை மறுத்துப் பேச விடாமல் அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தையும் நடத்தி விட்டனர். அம்ருதாவின் அழகை அள்ளிப் பருகும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவன், அவளை விட வித்தியாசமான அழகில் இருந்த பத்மினியைப் பார்த்ததும் ஆசை கொண்டான். மனதைக் கண்டபடி தாவ விட்டான். நேர்மைப் பாதை மாறி, வழி தவறி ஓடவிட்டான். பாவப் படுகுழியில் இறங்கினான். மதன் ஒரு பெண் பித்தன் என்று அறியாத அவனது மாமாவும் அத்தையும் பத்மினிக்கு அருமையான மண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிறைவில் உள்ளம் பூரித்தனர். மதனையும், பத்மினியையும் தேன் நிலவிற்கு ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு வாரங்கள் தேன்நிலவை அனுபவித்த தம்பதிகளாய் மதனும், பத்மினியும் சென்னைக்குத் திரும்பினர். பிற பெண்களுடன் பழகும் சபல புத்தி உள்ளவன்தான் எனினும் பத்மினிக்கு தன் மனைவி எனும் அந்தஸ்தை மனதார வழங்கினான் மதன். அவளிடம் அன்பாகவும் நடந்து கொண்டான். என்றாலும் அவனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொது நீதியைப் பின்பற்ற முடியவில்லை. பின்பற்றவும் அவன் விரும்பவில்லை. தன் மீது அன்பாக இருக்கும் கணவன் மதனை பத்மினி அதிகமாக நேசித்தாள். பெற்ற தாய், தந்தை இல்லாத அவள், அவனே உலகமாக வாழ்ந்தாள். அவனது படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே பெண் அவனது மனைவியான தான் அல்ல என்பதையும் அறிந்து கொண்டாள்.

‘அவன் மனம் போகும் போக்கில் போனாலும், தன் மனம் நோகும் வண்ணம் நடந்து கொள்வதில்லையே’ என்று ஆறுதல் அடைந்தாள்.

அம்ருதாவின் அழகை அள்ளிப் பருக எண்ணிய மதன் அவள் உள்ளம் உருகும் விதத்தில், கல்யாணம் என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தினான். அந்த வார்த்தை வித்தைகளையெல்லாம் நம்பினாலும் அவனுக்குத் தன் பெண்மையை விட்டுக் கொடுக்காமல், பட்டும் படாமல் இருந்து கவனமாக நடந்து கொண்டாள். தன் கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள். ஆனால் தன்னை விட்டு விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்பது அவள் எதிர்பாராத துன்பு அதிர்ச்சி. பல பெண்களிடம் பழகுவதும் விலகுவதுமாக இருந்த அவனுக்கு நெருப்பாக இருந்த அம்ருதாவிடம் அதுபோல நெருங்கிப் பழக முடியவில்லை. எப்படியாவது அவளை, தன் ஆசைக்கு இணங்க வைக்கும் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் பொழுது தான் சேலத்தில் இருந்து மாமாவின் அழைப்பு, அதைத் தொடர்ந்து அவனது திருமணம்.

அம்ருதாவிடம் சொல்லாமல் விட்டால் ‘அவள் தன்னைத் தேடி வீட்டிற்கே வந்துவிடக் கூடும்’ என்ற எச்சரிக்கை உணர்வில் அவளைச் சந்தித்தான். திருமணம் நடந்து விட்டதைப் பற்றிக் கூறினான். அவள் அவனைத் திட்டித் தீர்த்துவிட்டு போன பின் அவளைச் சந்திக்கவும் முயற்சிக்கவில்லை.

அம்ருதா, கணேஷின் மூட் பார்த்து தன் வாழ்வில், விஷமாகிப் போன மதனின் திருமண விஷயத்தை பயந்தபடியே சொன்னாள்.

“என்ன? அந்த பணக்கார ராஸ்கல், தன் வர்க்கத்தோட புத்தியைக் காமிச்சுட்டானா? படிப்புதான் முக்கியம். ‘படிப்பு’ன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். காலேஜுக்கு படிக்க அனுப்பினா, பாவிப்பயலோட, காதல் கத்தரிக்கான்னு வந்து நின்ன. நான் சொன்னபடி கேட்டிருந்தா... இப்ப இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்குமா? உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டியே. என் தலையிலயும் இடியை இறக்கிட்டியே... இப்பவே போய் அந்த ஃப்ராடு பயலை, ரெண்டா கூறு போட்டுட்டு வரேன்...”

கணேஷின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள் அம்ருதா.

“வேண்டாம்ண்ணா. உன்னோட கோபத்தால... நான் இழந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்குமா? உன் பேச்சைக் கேட்டு நடக்காம... அவரோட வார்த்தை ஜாலத்தைக் கேட்டு மயங்கினது என்னோட தப்பு அண்ணா. என்னைத் தோள்ல தூக்கி வளர்த்த உன் நெஞ்சுல குத்திட்டேன். தெய்வம் பல அவதாரம் எடுத்த மாதிரி நீ என் அம்மாவா, அப்பாவா, அண்ணனா, தோழனா, வழிகாட்டியா பல அவதாரம் எடுத்து என்னை வளர்த்த. என்னைப் பத்தியும் என் எதிர்காலத்தைப் பத்தியும் எவ்வளவு கனவு கண்டிருப்பே? உன் கனவை எல்லாம் பாலைவனமாக்கிட்டேன்.


உனக்காக எதுவுமே ஆசைப்படாத நீ, எத்தனையோ ஆசைகளை கற்பனை பண்ணி வச்சிருந்த. அந்த ஆசையெல்லாம் நிராசையாக்கிட்டேன். ஆறு அறிவு உள்ள மனுஷியான நான், அஞ்சு அிறிவுள்ள நாள் காட்டற நன்றியைக் கூட உன்கிட்ட காட்டல. என்னை மறந்து... உன்னை மறந்து அந்த மதனின் காதலை மட்டுமே நிஜம்ன்னு நினைச்சு, இப்ப ஏமாந்து போய்... உன் நெஞ்சல நெருப்பை அள்ளி வீசிட்டேன். என் அதிர்ஷ்டம், நீ எனக்கு அண்ணனா கிடைச்சது. உன்னோட துரதிர்ஷ்டம், நான் உனக்குத் தங்கச்சியாப் பிறந்தது. என்னை மன்னிச்சுடு அண்ணா. களங்கம் நிறைஞ்ச அந்த மதன்கிட்ட இதைப் பத்தி பேசி உன்னோட அன்புங்கற புனித உள்ளத்தை மாசுபடுத்திக்காத. என் சட்டையில் ஒட்டின தூசியைத் தட்டற மாதிரி... இந்த விஷயத்தை தட்டி விட்டுட்டு நிம்மதியா இரு அண்ணா...”

காலில் விழுந்து கதறி அழுத தங்கையைத் தோள் தொட்டு தூக்கி நிறுத்தினான்.

அவளது கண்ணீரைத் துடைத்தான். தலையை வருடிக் கொடுத்தான். “அழாதம்மா நீ இப்படி அழறதைப் பார்க்கவா நான் அலைஞ்சு திரிஞ்சு சம்பாதிச்சு உன்னைப் படிக்க வச்சேன். இன்னும் மேல படி. செலவைப் பத்தி கவலைப்படாதே. அலைபாயும் உன் மனசை ஒரு நிலைப்படுத்த, படிப்பில கவனம் செலுத்து. புண்பட்டுப் போன உன் மனசு கொஞ்சம் ஆறுதல் அடைஞ்ச பிறகு, ஒரு நல்ல பையனைப் பார்த்து நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்மா” இந்த வார்த்தையைக் கேட்டதும் தலையை நிமிர்த்தி, அண்ணனை கை எடுத்துக் கும்பிட்டாள் அம்ருதா.

“அண்ணா, நீ சொன்னபடி நான் மேல படிக்கிறேன். ஆனா... ஆனா கல்யாணம்ங்கற பேச்சு மட்டும் வேண்டாம்ண்ணா. ப்ளீஸ் அண்ணா. அது மட்டும் என்னால முடியாது அண்ணா. பானைக்குள்ள தலையை விட்டு... சூடான பாலை ருசி கண்டு சூடுபட்ட பூனை, மறுபடியும் அந்தப் பானை பக்கமே போகாது. அது போல இனிமேல் என்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கும். என் வாழ்க்கையில இருக்கற ஒரே பிடிப்பு நீதான். கடைசி வரைக்கும் உன்னோட தங்கச்சியா வாழ்ந்து, இந்த வாழ்வு முடியணும்.”

“சரிம்மா” துன்பத்தில் துவண்டிருந்த அம்ருதாவை சமாதானப்படுத்தினான். அருமைத் தங்கையின் வாழ்வு இப்படி ஆனதே என்ற வேதனை அவனையும் வாட்டியது. அன்று அம்ருதாவிற்காக தன் துயரங்களை, வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான் கணேஷ். அதன்பின், குடித்துவிட்டு அந்த மதனைப் போய்ப் பார்ப்பதும், அவனை மிரட்டுவதுமாய் இருந்தான்.

மதனின் மனைவி பத்மினியைக் கொன்றால்தான் தன் ஆத்திரம் தீரும் என்று கடுமையாக அவனை மிரட்டியதையும், மதுவின் போதையில் உளறினான்.

“அண்ணா, அந்த மதனை நானே மறந்துட்டேன். நீ ஏன் அண்ணா அவனைப் போய் பார்த்து பேசிட்டிருக்கே?” கோபமும், அழுகையுமாக கேட்ட அம்ருதாவைப் பார்த்து கத்த ஆரம்பித்தான்.

“நீ... அந்த மதனை மறந்துட்டியா? என்கிட்டயே பொய் சொல்றியா? உங்க அண்ணன். என்ன மறத்துப்போன மரக்கட்டைன்னு நினைச்சுட்டியா? நீ அவனை நினைச்சு உருகறதும், அழுகறதும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டியா? உன்னை இப்படி கண்ணீர் விட வச்ச அந்தப் பாவியும் அவன் பொண்டாட்டியை இழந்து கண்ணீர் விடணும்...”

அடிக்கடி, கணேஷ் இப்படி கத்தி கலாட்டா செய்துவிட்டு அவள் தடுக்க, அவளையும் மீறி மதனைப் போய் சந்திப்பதையும், மிரட்டுவதையும் வழக்கமாக ஆக்கி இருந்தான்.

தன் நினைவலைகளில் மீண்டும் தோன்றிய நிகழ்ச்சிகளை விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொன்னாள் அம்ருதா. இன்ஸ்பெக்டர் ரகுநாத்தும் அவள் சொன்னதையெல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டார்.

“என் காதல் வாழ்க்கைதான் கானல் நீராயிடுச்சுன்னு வாழ் நாட்களோட போராடிக்கிட்டிருக்கேன்னு பார்த்தா, என் மேல உயிரையே வச்சிருந்த என் அண்ணனும் இப்ப உயிரோட இல்லை இன்ஸ்பெக்டர். மதனைப் பார்த்து ‘நியாயம் கேக்கறேன்னு’ சொல்லி அவரைப் போய்ப் பார்த்திருக்கான். ஆத்திரத்துல அவரோட மனைவியை கொலை செய்யப் போறதா கடுமையா மிரட்டி இருக்கான். இதுக்காக நான் அண்ணனைத் திட்டினேன். கண்டிச்சேன். அந்தக் கோபத்துல அளவுக்கு மீறி தண்ணி அடிச்சுட்டு, ராத்திரி நேரம் பைக்ல வந்த என் அண்ணனோட உயிர், ஒரு லாரி மேல மோதினதுனால ஸ்பாட்லயே போயிருச்சு...” மேலே பேச இயலாமல் கதறி அழுதாள் அம்ருதா.

“ஸாரிம்மா. வெரி ஸாரி. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப். கணேஷ் ஆக்ஸிடெண்ட்ல இறந்தது என்னிக்கு?”

“போன மாசம் இருபத்தி மூணாம் தேதி நள்ளிரவு ஸார். போலீஸ்கூட பதிவு செஞ்சுருக்காங்க. அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சுதான் ஸார்... மதனோட மனைவியைக் கொல்ல முயற்சி செஞ்சுருக்காங்க. என் அண்ணன் கோபத்துல வார்த்தைகளைக் கொட்டறவன்தான். ஆனா உண்மையிலேயே கொலை செய்ற அளவுக்கெல்லாம் அவனோட இயல்பு ஒத்துப் போகாது. கடைசியில இந்தக் கோபம் கூட என் மேல வச்சிருந்த பாசத்துனாலேயொழிய அவனோட சுபாவம் முரட்டுத்தனமானதோ, பயங்கரமானதோ கிடையாது.” தகவல்களை சேகரித்ததும் அங்கிருந்து கிளம்பினார் ரகுநாத்.

15

காலதேவன் சுறுசுறுப்பாக செயலாற்றினான். அதைவிட சுறுசுறுப்பாக ரகுநாத், விசாரணையில் தீவிரம் காட்டினார்.

அப்போது கையெழுத்து நிபுணர் யாதவ், இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “இன்ஸ்பெக்டர் ஸார், நீங்க குடுத்த ரெண்டு கடிதங்களோட கையெழுத்து ரிப்போர்ட் கொண்டு வந்திருக்கேன் ஸார்.”

கையெழுத்து நிபுணர் யாதவ், ரிப்போர்ட்ஸை ரகுநாத்திடம் கொடுத்தார்.

ரகுநாத், ரிப்போர்ட்ஸைப் பார்த்தார். அம்ருதாவின் அண்ணன் கணேஷ் எழுதிய மிரட்டல் கடிதங்கள் பற்றிய தகவல்கள் தேவைப்படாத போதிலும் அந்த ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்று பார்த்தார்.

‘ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளவர் எழுதி இருக்கக்கூடும். எழுத்துக்களில் உயர் கல்வியின் தரம் இல்லை. கிறுக்கலான எழுத்துக்கள் தெளிவற்ற மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. மிக அவசரமாகவும் எழுதப்பட்டுள்ளது. எழுதியவர் சுபாவத்தில் முரடனாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவரது உருவத்திலும் பேச்சிலும் முரட்டுத்தனம் இருக்கலாம்.’

படித்து முடித்த ரகுநாத், கையெழுத்து நிபுணர் யாதவ்வின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

“வெல்டன் யாதவ். உங்களோட ரிப்போர்ட்... அநேகமா அந்த கணேஷோட குணச்சித்திரத்தோட ஒத்துப் போகுது. ஆனா உங்க ரிப்போர்ட்... இந்த கேஸ்ல உதவக் கூடிய வாய்ப்பே இல்லை.”

“ஏன் ஸார்? ஏன் அப்படிச் சொல்றீங்க?” யாதவ் பரபரப்புடன் கேட்டார்.

“அந்த கணேஷ் இறந்து போயிட்டான்.”

“அப்பிடியா? எப்பிடி ஸார்?”


“அவனோட பைக் மேல ஒரு லாரி மோதி அந்த ஸ்பாட்லயே இறந்துட்டானாம். இதுக்கான ரிக்கார்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டேன்.”

“அப்போ நீங்க இந்தக் கடிதங்களை எழுதினதாக சந்தேகப்பட்ட நபர், குற்றவாளி இல்லைன்னு சொல்றீங்களா?”

“ஆமா யாதவ். குற்றவாளி அவன் இல்லை. உங்களோட ரிப்போர்ட்டுக்கு நன்றி. தேவைப்பட்டா மறுபடியும் கூப்பிடறேன்.”

“ஓ.கே. இன்ஸ்பெக்டர். விஷ் யூ ஆல் த பெஸ்ட்” விடை பெற்று, தன் பைக்கில் ஏறி அமர்ந்த யாதவ், பைக்கிற்கு உதை கொடுத்துக் கிளம்பினார்.

16

தனின் பக்கத்து பங்களா பாலு, ரகுநாத்தைக் கண்டதும் டீச்சரைப் பார்த்த எல்.கே.ஜி. பையனாய் மருண்டான்.

“மிஸ்டர் பாலு, தொழில் போட்டி, பொறாமை காரணமா... மதனைக் கொலை செய்ய திட்டம் போட்டு, காருக்குள்ள குண்டுகள் வைக்க ஏற்பாடு பண்ணி இருக்கீங்க. அந்த கார்ல மதன் ஏறிப் போவான்னு எதிர்பார்த்தீங்க. ஆனா அவனோட மனைவி ஏறிப் போயிருக்காங்க. உண்மைகளை சொல்லிட்டா உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது.”

“சொல்லிடறேன் இன்ஸ்பெக்டர். நான் மதனைக் கொலை செய்ய திட்டம் போட்டது உண்மை. அதுக்காக ஒரு ஆளை ஏற்பாடு பண்ணினதும் உண்மை. ஆனா அந்த திட்டத்தை நான் ஆரம்பிக்கவே இல்லை. காருக்குள்ள குண்டுகள் வெடிக்க ஏற்பாடு செஞ்சது நான் இல்லை. அதுக்கும் எனக்கும் ஒரு துளி சம்பந்தமும் கிடையாது இன்ஸ்பெக்டர். பொறாமை உணர்வுல அவனைக் கொலை செய்யணும்னு திட்டம் போட்டதுக்கே எனக்கு தண்டனைக் கிடைச்சுடுச்சு. ஒரே ஒரு நாள் ராத்திரி... மதனோட பங்களா காம்பவுண்டுக்குள்ள போய், அவன் பங்களாவுக்குள்ள முன் பக்கமா நுழையறது எப்பிடி, பின்பக்க வாசலுக்கு வழி எப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்காக போனேன்.”

“எதுக்காக?”

“நான் ஏற்பாடு செஞ்ச ஆளுக்கு அடையாளம் காட்டறதுக்கு. ஆரம்பத்துல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் பகை இருந்ததுனால அவன் வீட்டுக்குள்ள நான் போனது கிடையாது. அதனாலதான் ஒரு நாள் ராத்திரி சுவர் ஏறிக் குதிச்சு போனேன். இதைத் தவிர நான் வேறு எதுவுமே செய்யலை இன்ஸ்பெக்டர். ப்ராமிஸ். என்னை நம்புங்க...” பயத்தில் அவனது உடம்பு முழுக்க நடுங்கியது.

அவன் பேசியதை எல்லாம் ரகுநாத்தின் செல்போனுக்குள் இருந்த ரகசிய ரெக்கார்டர் தனக்குள் பதிவு செய்து கொண்டது. “கொலை முயற்சிக்கும் தண்டனை உண்டு. போலீஸ் உங்க மேல கேஸ் பதிவு செய்யும். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது” ரகுநாத் கிளம்பினார்.

“மதனோட மனைவி பத்மினி கொலையான தேதியும், கணேஷ் இறந்து போன தேதியும் வேறுபடுது. ஸோ, குற்றவாளி லிஸ்ட்ல இருந்து கணேஷ் நீக்கப்படுறான். அடுத்தது சுந்தர். பத்மினியைக் காதலித்தவன். அவனைப் பற்றி சேலத்துல விசாரிக்க சொல்லி இருந்தேன். என்ன ஆச்சுன்னு தெரியலேயே?” யோசித்தவரை ஸெல்ஃபோன் அழைத்தது.

“ஹலோ ரகுநாத் ஹியர்.”

“ஸார், சேலம் ஜி2. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் குரு பேசறேன். நீங்க சொன்ன தகவல்கள்படி சுந்தர்ங்கற ஆளை ட்ரேஸ் பண்ணோம் ஸார்.”

“ஆள் கிடைச்சுட்டானா?”

“இல்லை ஸார். அவன் ஈரோடுல ஒரு பெரிய பணக்காரரோட பொண்ணைக் காதலிக்கறதா சொல்லி... அந்தப் பொண்ணை இழத்துக்கிட்டு ஓடிட்டானாம் ஸார். ஏகப்பட்ட பணம், நகைகளோட அந்தப் பொண்ணும் அவன் கூட ஓடிப் போயிட்டாளாம். ஈரோடு ஸ்டேஷன்ல இந்தக் கேஸ் ரெக்கார்ட் ஆகி இருக்கு. அவனை இப்ப ஊட்டியில பிடிச்சுட்டாங்க ஸார்.”

“அப்பிடியா குரு? இங்கே மதனோட மனைவி கொலை முயற்சி நடந்தப்ப அந்த சுந்தர் எங்கே இருந்தான். அவனுக்கு இந்தக் கேஸ்ல சம்பந்தம் இருக்கா என்னங்கறதைப் பத்தி விசாரிங்க.”

“ஊட்டி போலீஸ்ல அவனைக் கைது பண்ணி... கூப்பிட்டுக்கிட்டு வராங்க ஸார். வந்ததும் டீடெய்லா விசாரிச்சு... மறுபடியும் உங்க செல்போனுக்குக் கூப்பிடறேன்.”

“ஓ.கே. குரு தாங்க்யூ.”

மற்ற விசாரணைகளை ரகுநாத் ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருந்தார். ஹாஸ்பிடலில் மருத்துவக் குழுவினர் பத்மினியைப் பிழைக்க வைப்பதற்காக போராடிக் கொண்டிருக்க, உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பத்மினிக்கு நினைவு திரும்பிய தகவலை ரகுநாத்துக்குத் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்ததும் ரகுநாத் உஷார் ஆனார். மருத்துவமனை தலைமை டாக்டரை போன் மூலம் தொடர்பு கொண்டார்.

“ஹலோ ரகுநாத் ஹியர். டாக்டர் ராமகிருஷ்ணனா?”

“போலீஸ் கேஸ், பத்மினிக்கு நினைவு திரும்பி இருக்கற விஷயத்தை மதனுக்கு சொல்லிட்டீங்களா?”

“உங்களுக்கு சொன்னதும்... மதனுக்கும் சொல்லிட்டோம் ஸார். அவர் இப்பக் கிளம்பி வர்றதா சொன்னார்.”

“மை காட்! ஒரு ஹெல்ப் பண்ணுங்க டாக்டர். நான் வர்ற வரைக்கும் பத்மினியை பார்க்க மதனை அனுமதிக்காதீங்க.  இதோ நான் அங்கே வந்துடறேன்.”

“ஓ.கே. ரகுநாத் நீங்க வாங்க.”

“பத்மினியோட நிலைமை?”

“முகம் முழுக்க ஏற்பட்டுள்ள காயங்களுக்கு பாண்டேஜ். ஒரு காது போச்சு. ஒரு கண்ணும் கூட, உடம்பு உள்ள பல எலும்புகள் நொறுங்கிடுச்சு. அவங்களுக்கு நினைவு மட்டும்தான் திரும்பி இருக்கு. உயிர் பிழைச்சாலும் கூட ஊனமுற்ற ஒரு குழந்தை போலத்தான் அவங்க வாழ முடியும். இருபத்திநாலு மணி நேரமும் ஒருத்தரோட உதவி தேவை.”

“த்சு... த்சு... பாவம்... ஓ.கே. டாக்டர். நான் இப்ப அங்க வரேன்.” ரகுநாத், ஜீப்பில் போனால் தாமதமாகி விடும் என்று தன் பைக்கில் வேகமாய் பறந்தார்.

17

ருத்துவமனைக்குள் பரபரப்பாக ஓடி, பத்மினியின் அறைக்குள் போனார். மதன் வந்திருக்கவில்லை. ரகசிய டேப் ரெக்கார்டரை மறைவான ஒரு பகுதியில் பொருத்தினார். குண்டூசி விழும் ஒலியைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும் சக்தி பெற்றது அந்த ரெக்கார்டர்.

அறையை விட்டு வெளியே வந்தார். தலைமை டாக்டர் ராமகிருஷ்ணனின் அறையை நோக்கி நடந்தார்.

அவர் போன சில நிமிடங்களில் மதன் வந்தான். தலைமை நர்ஸ் அவனை உள்ளே அனுமதித்தார்.

“ஸார்... சீக்கிரமா வந்துடுங்க. அதிகமா பேச்சுக் குடுக்காதீங்க.”

“சரி.”

படுக்கையில வலது கண்ணும், உதடுகளும் தவிர மற்ற இடங்கள் முழுக்க பாண்டேஜ் மூடி இருக்க, ட்யூப்கள் செருகப்பட்டிருந்த பத்மினி கிடந்த நிலை, அவன் மனதை உருகியது. கண்கள் கலங்கியது.

அவள் தலையருகே குனிந்தாள்.

“பத்மினி” கூப்பிட்டான்.

அவனது அழைப்பிற்கு வெளியில் தெரிந்த வலது கண் மட்டுமே அசைந்தது.

“பத்மினி உனக்கு ஒரு பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லக் கூடாதா? நான் உனக்கு உதவி செஞ்சிருக்க மாட்டேனா?”


“நீங்க கொஞ்ச நாளாவே சரியான மூட்ல இல்லை. அதனால உங்ககிட்ட எதுவும் பேசறதுக்கே பயம்மா இருந்துச்சு. என்னோட கடந்த காலத்துல, நான் எந்த தப்பும் பண்ணலைன்னு நிரூபிக்கவும் அந்த அயோக்யன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கவும், அமெரிக்காவுல இருக்கற என் ஃப்ரெண்டு கீதாவுக்கு போன் பண்ணேன். அவகிட்ட யோசனை கேட்டேன். அவ இன்னிக்கு போன் பண்றதா சொல்லி இருந்தா...”

“பத்மினி, உன் பழைய காதல் விஷயத்தை பேப்பர்ல எழுதி வச்ச நீ, மனம் விட்டு என்கிட்ட சொல்லி இருக்கக் கூடாதா? இப்பப் பாரு. நீ எழுதியதைப் பார்த்துட்டு போலீஸ் என்னை சந்தேகப்படறாங்க...”

“நான் சந்தேகமே படலைங்க. உறுதியா சொல்றேன். என்னைக் கொலை செய்ய ஏற்பாடு பண்ணினது நீங்கதான். ஆனா ஏன் பண்ணீங்கன்னு எனக்குத் தெரியலை. என்னோட கடந்த கால விஷயம், இன்ஸ்பெக்டர் சொல்ற வரைக்கும் உங்களுக்கு தெரியாதுல்ல? பின்னே! வேற யாராவது என்னைப் பத்தி தப்பா சொன்னாங்களா? எதுக்காக என்னை, உங்க காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தினீங்க?” வார்த்தைகள் திக்கித் திணறியபடி வெளி வந்தன.

“உன்னைப் பத்தி யாரும் எதுவும் சொல்லலைம்மா. அப்பிடியே சொல்லி இருந்தாலும், உன்னை நான் தப்பா நினைப்பேனா?”

“பின்னே ஏன் என்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டீங்க? காரணத்தைத் தெரிஞ்சுக்கலைன்னா என் நெஞ்சு வேகாது...” மதன் மெளனமாக இருந்தான்.

“என்னோட கார்ல முந்தின நாள் நான் வெளில போகும்போது கூட பிரேக் சரியாதான் இருந்துச்சு. நீங்க என்கிட்ட உங்க காரை எடுத்துட்டு போகச் சொன்னீங்க. ‘பிரேக் கரெக்டாதான் இருக்கு. பெட்ரோலும் நிறைய இருக்குன்னு’ நான் சொன்னதும்... லேஸா எரிச்சல் பட்டு, ‘நான் சொன்னதை செய். ரிஸ்க் எடுக்காதே’ன்னீங்க. காலையில கல்யாணத்துக்கு சீக்கிரமா கிளம்பின நான், என்னோட காரை எடுத்துப் பார்த்தேன். ப்ரேக் ‘சக் சக்’ன்னு ஷார்ப்பா பிடிச்சது. இருந்தாலும் நான் உங்க கார்லதான் ஏறினேன். ஏன் தெரியுமா? நீங்க, என்னைக் கொலை பண்ண நினைப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை. அதனாலதான் உங்க சொல்லை மீறி அதை எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னுதான் உங்க காரை எடுத்துட்டுப் போக, காருக்குள்ளே ஏறி உட்கார்ந்தேன். என் காரோட டூப்ளிகேட் சாவிதான் உங்ககிட்ட இருக்கே. இப்ப கூட நீங்க போய் செக் பண்ணிக்கலாம். சொல்லுங்க. என்னை எதுக்காக கொலை பண்ண நினைச்சீங்க? சொல்லுங்க...” மேலே பேச இயலாமல் தவித்தாள் பத்மினி.

தலைமை டாக்டரை சந்தித்துவிட்டு பத்மினியின் அறைக்கு வெளியே காத்திருந்தார் ரகுநாத். உள்ளே மதன் இருந்தபடியால் தலைமை நர்ஸ் அவரை வெளியே காத்திருக்கும்படி பணிவாக வேண்டிக் கொண்டாள்.

அப்போது செல்போன் ரகுநாத்தின் கவனத்தைக் கலைத்தது.

“ஸார், நான் குரு. ஊட்டியில இருந்து சுந்தரை எங்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. லேசா ரெண்டு தட்டு தட்டினதுலயே உண்மைகளைக் கக்கிட்டான். பத்மினியை பணத்துக்காக மிரட்டினானாம். அவளிடமிருந்து எதுவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் ஈரோடுக்கு போயிட்டானாம். அவனுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தமே இல்லை ஸார். பத்மினி கொலையான தேதியில... அவன் சென்னையில இல்லை. ஈரோடுலதான் இருந்திருக்கான். அதற்கான சாட்சிகள் ஸ்ட்ராங்கா இருக்கு ஸார்.”

“ஓ.கே. இந்தக் கேஸ்ல உண்மை வெளிவரப் போற டைமுக்காக நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் குரு. தாங்க்ஸ் ஃபார் யுவர் இன்ஃபர்மேஷன்ஸ்.”

18

“பணத்தேவை என்னை இப்பிடி ஒரு இழிவான செயலைச் செய்ய வச்சுடுச்சு பத்மினி. பண நெருக்கடி, பேப்பர் ஸ்டோர்ஸ் பிரபாகரோட கெடுபிடி... இதையெல்லாம் சரி பண்றதுக்கு எனக்குத் தேவை பணம். இந்தப் பிரச்சினையை சரி பண்ணலைன்னா, எம்.பி.டி. பிரஸ்ஸோட புகழ், என்னோட இமெஜ், வசதியான, உல்லாசமான வாழ்க்கை எல்லாமே என் கையை விட்டுப் போய்.... பழையபடி கஷ்டப்படற நிலைமை வந்துடுமோங்கற பயத்துல... பயத்துல... உன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டேன். நீ இறந்த பிறகு உன்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பத்து லட்சம் எனக்கு வரும். அதை வச்சு சமாளிச்சுடலாம்னு நினைச்சேன். என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட். அவன் வற்புறுத்துனதுனால தற்செயலா உன் பேர்ல இன்ஸ்யூரன்ஸ் போட்டு வச்சிருந்தேன்...”

“என்னோட லைஃபை முடிச்சாத்தான் உங்க ஜாலியான லைஃபை தொடர முடியும்ன்னு என்னைக் கொலை செய்ய திட்டம் போட்டுட்டீங்க...” பத்மினி மேலே பேச முடியாமல் உடல் உபாதையால் அவதிப்பட்டாள்.

“ப்ளீஸ் பத்மினி. என்னை மன்னிச்சுடும்மா. பல பெண்கள் பின்னால நான் சுத்தினாலும்... என் மனசுக்குள்ள நீ மட்டும் தான் இருக்க. ஆனா... மிக மிக மோசமா பணத் தேவையில இருந்த நான் இப்படி ஒரு இழிவான செயலைச் செஞ்சுட்டேன்...”

காரணம் தெரியாவிட்டால் நெஞ்சு வேகாதுன்னு சொன்ன பத்மினி, பணத்துக்காக மதன் தன்னைக் கொலை செய்ய திட்டம் போட்டான்ங்கற காரணத்தைத் தெரிந்த பின், நெஞ்சு வெடித்து இறந்து போனாள்.

“பத்மினி...” மதன் அலறினான். நர்சுகள் ஓடி வந்தனர். ரகுநாத் உள்ளே வந்தார். ரெக்கார்டரை எடுத்தார். மதனும் பத்மினியும் பேசியதை கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தது அந்த ரெக்கார்டர்.

இன்ஸ்பெக்டர் ரகுநாத் தலைகுனிந்தபடி நின்று கொண்டிருந்த மதனிடம் சென்றார்.

“மதன்! உங்க பக்கத்து வீட்டு பாலுவுக்கும் உங்களுக்கும் இருந்த விரோதத்தை பயன்படுத்திக்கலாமுன்னுதான் உங்க கார்ல குண்டு வெடிக்க ஏற்பாடு பண்ணி இருந்தீங்க. அந்த விரோதத்தை காரணமா வச்சு... பாலு மேல பழி போட்டுடலாம்னு கணக்கு போட்டீங்க. கணேஷ், உங்க மனைவியைக் கொலை செய்வேன்னு நேர்ல மிரட்டினதாலயும், லெட்டர் போட்டதாலயும் அவன் மேலயும் சந்தேகப்படறதா சொன்னீங்க. அந்த கணேஷ் இறந்து போயிட்ட விஷயம் உங்களுக்குத் தெரியாதே?

உங்க மனைவி பத்மினிகிட்ட, கல்யாணத்துக்குப் போகும்போது உங்க காரை எடுத்துட்டுப் போகச் சொல்லி வற்புறுத்தி இருக்கீங்க. இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டீங்க. கொலை முயற்சிக்கான நடவடிக்கை அதுன்னு அவங்களுக்குத் தெரியாததுனால நீங்க சொன்னபடி உங்க கார்லே கிளம்பி இருக்காங்க. உங்க மனைவி, உயிர் பிழைச்சுக்குவாங்கன்னோ நினைவு திரும்பி உங்க வாயாலயே உண்மையை வரவழைப்பாங்கன்னோ... நீங்க எதிர்பார்க்கலை. ஆனா பாவம் உங்க மனைவி, உங்க கொலைத் திட்டத்துக்கு பலியாயிட்டாங்க. மருத்துவக் குழுவோட முழு முயற்சிகளுக்கும் குண்டு வெடிப்போட கொடுமைக்கும் நடந்த போராட்டத்துல டாக்டர்ஸ் தோல்வி அடைஞ்சுட்டாங்க. அது மட்டும் இல்ல. கார்ல குண்டுகள் வெடிச்சதுமே... போயிருக்க வேண்டிய உங்க மனைவியின் உயிர்... இவ்வளவு நேரம் தாங்கினதே ரொம்ப ஆச்சரியமான விஷயம். தப்பு செஞ்ச நீங்க, தண்டனை அடையணும்ங்கறதுக்காகவே... உண்மை வெளியே வர்றதுக்காக, உங்க மனைவியோட உயிர் ஊசலாடிக்கிட்டிருந்திருக்கு. அந்த ஸ்பாட்லயே அவங்க இறந்திருந்தா, இவ்வளவு சீக்கிரமா தகுந்த ஆதாரங்களோட உங்களைப் பிடிச்சிருக்க முடியாது. உயர்ந்த இமேஜைக் காப்பாத்தவும், வசதியான வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவிக்கவும் தேவைப்பட்ட பணத்துக்காக... உங்க மனைவி பத்மினியைக் கொலை செஞ்சீங்க. ஆனா மிஞ்சியது? ‘மதன் கொலைகாரன்’ங்கற இழிவான இமேஜ் மட்டுமே. உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான். உங்க வாயாலயே உண்மையை ஒத்துக்கிட்டதுக்கு இந்த ரெக்கார்ட்தான் சாட்சி” இன்ஸ்பெக்டர் ரகுநாத், தலைகுனிந்து நின்றிருந்த மதனைக் கைது செய்தார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.