Logo

பேர் சொல்லும் பிள்ளை

Category: மர்ம கதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 7729
per sollum pillai

"இந்த தடவையும் உன் பொண்டாட்டி பெண் குழந்தை பெத்தாள்னா என் சொத்துக்கள் எல்லாத்தையும் தர்மத்துக்கு எழுதி வச்சுடுவேன். எனக்கும் வயசாகிட்டே போகுது... திட்டவட்டமா உயில் எழுதி வச்சுட்டு மண்டையைப் போட்டாத்தான் என் கட்டை வேகும். சொல்லிட்டேன்."

சிங்கம் போல் கர்ஜித்த அப்பாவைப் பார்த்து தலை குனிந்து நின்றான் பிரசாத்.

"என்னடா பேசாம நிக்கறே?... உன்னோட முதல் குழந்தையை எவனோ கடத்திட்டுப் போய் கொன்னுட்டான். இப்ப மறுபடியும் உண்டாகியிருக்கிற உன் பொண்டாட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தாத்தான் உனக்கு என்னோட சொத்து. புரிஞ்சுதா?"

"சரிப்பா..."

"என்னடா, இவன் இப்படி இரக்கமே இல்லாம பேசறானேன்னு பார்க்கறியா? சென்னையில நீ நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்கற இன்டஸ்ட்ரீஸ்கள், பங்களா, கார்கள், இந்த ஏற்காடுல இருக்கற எஸ்டேட் எல்லாமே என்னோட சுய சம்பாத்யத்துல கஷ்டப்பட்டு நான் சேர்த்து வச்சது. வயசான காலத்துல ஓய்வா இருக்கலாமேன்னு உன் பொறுப்புல விட்டுட்டு இந்த ஏற்காடு பங்களாவுல வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். நான் உயிரோடு இருக்கும்போதே, என் சொத்து பத்துக்களை உனக்கும் உன் ஆண் வாரிசுகளுக்கும் எழுதி வெச்சுட்டுப் போனாத்தான் என் ஆத்மா சாந்தி அடையும்..."

"ராஜசேகரன்...." பங்களா வாசல் பக்கம் இருந்து குரல் கேட்டது.

"வாங்க நீலகண்டன். பிரசாத் வந்திருக்கான். உயில் பத்தின விஷயம் பேசிக்கிட்டிருக்கேன்..."

"இன்னிக்கு கோர்ட்டுக்கு போகலியா லாயர் ஸார்?.." உள் மனதின் உளைச்சலை மறைத்தபடி 'கடனே’ என்று கேட்டு வைத்தான் பிரசாத்.

"கோர்ட்டுக்கு போயிட்டுத்தான் வரேன். நீ எப்படி இருக்கப்பா? பிஸினஸ் எல்லாம் உங்க அப்பா மாதிரியே ஸ்மார்ட்டா பார்த்துக்கறியா?"

"அதிலயெல்லாம் அவன் படு ஸ்மார்ட். பிரசாத்! நீ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்க. ஒரு மணி ஆனதும் லஞ்ச் சாப்பிடலாம்."

"சரிப்பா. சாப்பிட்டதும் நான் சென்னை கிளம்பறேன்." பிரசாத் மாடியில் உள்ள தன் அறைக்குப் போவதற்காக படிகட்டுகளில் ஏறினான்.

'சற்று ஓய்வு எடுக்கலாம்’ என்று நினைத்தவன் படுக்கையில் தலையணைகளை முதுகுக்குப் பின்பக்கம் வைத்தான். அதன்மீது சாய்ந்து உட்கார்ந்தான். கட்டிலின் பக்கவாட்டில் இருந்த சிறிய மேஜையின் மீது ராஜசேகரனின் ஃப்ரேம் போட்ட புகைப்படம் இருந்தது.

அடர்ந்த தலைமுடியை அழுந்த வாரி இருந்தார். விசாலமான நெற்றியின் நடுவே மெல்லிய கோடுகள் மட்டுமே அவரது வயதைக் கூறியது. புருவங்களும் அடர்த்தியாக கருமையாக இருந்தன. தீர்க்கமான கண்களில் ஒரு கடுமை காணப்பட்டது. காமிராவிற்காக புன்னகைத்த செயற்கைத்தனம் வெளிப்படையாகத் தெரிந்தது.

'ஆண் குழந்தை பிறந்தாத்தான் உனக்கு சொத்து’ அப்பாவின் கண்டிப்பான பேச்சு மறுபடி காதில் ஒலிப்பது போல் தோன்றியது. 'இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டுல, காலம் எவ்வளவு மாறி இருக்கு?! பெண்கள், ஆண்களுக்கு நிகரா எல்லா துறையிலயும் முன்னுக்கு வந்திருக்காங்க. வெற்றி அடைஞ்சிருக்காங்க. சொந்தக்கால்ல நின்னு சுயமா சம்பாதிக்கறாங்க. சொந்தமா நிறுவனங்கள் துவக்கி அதை நிர்வாகம் பண்ணி, ஜெயிக்கறாங்க. அப்பா என்னடான்னா சொத்துக்கு வாரிசு ஆண் குழந்தைதான்னு விதண்டாவாதம் பேசிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தையும் என்னோட ரத்தம்தானே? அது மட்டும் வாரிசு இல்லைன்னு ஆகிடுமா? நான் என்ன பிரம்மாவா? படைக்கறதுக்கு? அவரோட சொத்து கிடைக்கலைன்னா கூட பரவாயில்லை" எவ்வளவு கடுமையா, வெறுப்பா பேசறார்? அதைத்தான் என்னால தாங்க முடியலை…’

மன வேதனை கிளப்பிய துன்ப நினைவுகளைத் தூர எறிந்து விட்டு எழுந்தான். மாடிப்பகுதி முழுவதையும் சுற்றி வந்தான். ஒவ்வொரு அறையும் விசாலமாக இருந்தது. பழங்காலக் கலைப்பொருட்களைக் கொண்டு அவ்வறைகள் மிகுந்த கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த ஓவியங்கள், சுவர்களை அலங்கரித்தன. வேட்டைத் துப்பாக்கிகள் தொங்கிக் கொண்டிருந்தன. தேக்கு மரத்தால் ஆன அலங்கார வீட்டுப் பொருட்கள் நிறைந்து இருந்தன.

"நான் பிறந்தப்ப கூட அப்பா இவ்வளவு பெரிய செல்வந்தரா ஆகலை. நான் அஞ்சு வயசா இருக்கும்போது இந்த பங்களாவை  வாங்கினார். இருபத்தஞ்சு வருஷ காலத்துல அவர் சம்பாதிச்ச சொத்துக்கள் ஏராளம்! என்னை மான்ஃபோர்ட் கான்வென்ட் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு, அவர் எக்கச் சக்கமா பணம் சம்பாதிக்கணும்னு அதில தீவிரமா இருந்தாரே தவிர, என்னைப் பத்தின அக்கறையே இல்லாம அலட்சியமா இருந்துட்டார். அப்பாதான் இப்படி ஆஸ்திக்கு ஆசைப்பட்டவராய் இருந்துட்டார்னா, அன்பா ஆசையா அரவணைச்சு வளர்க்க வேண்டிய என் அம்மாவும் நான் ரெண்டு வயசு குழந்தையா இருக்கறப்பவே இறந்து போகணுமா?"

வேதனை நிரம்பிய உள்ளத்துடன் அங்கிருந்த சிறிய அறைக்குள் நுழைந்தான். அங்கே ராஜசேகரனின் மனைவியும், பிரசாத்தின் அம்மாவுமான வடிவுக்கரசியின் முழு உருவப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதன் அருகே இருபக்கங்களிலும் மின்சார பல்புகள் 'மினுக்’கென்று மங்கலான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வடிவுக்கரசி நோயுற்று இருந்தபொழுது அவருடன் இருந்த அவரது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடிவுக்கரசியின் உருவப்படத்தை அந்த அறைக்குள் வைத்து மின்சார பல்புகள் எரியும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

மற்றபடி அத்தனை பெரிய பங்களாவில் பூஜை அறை என்பதெல்லாம் கிடையாது. வடிவுக்கரசி போய் சேர்ந்த மறுவருடமே அவளது தாயாரும் அவரைத் தேடி மேல் உலகம் சென்று விட்டார்.

பிரசாத்தை, கான்வென்ட் ஹாஸ்டலில் சேர்க்கும் வரை வேலைக்காரர்கள், ஆயாக்களின் கடமை உணர்வில் வளர்ந்தான். ராஜசேகரன் கொடுக்கும் சம்பளப் பணத்திற்காக மட்டுமே அவனை கவனித்துக் கொண்டனர். தாயின் மடியும் இல்லாமல், தந்தையின் தோளும் இல்லாமல் தனக்குள் எரியும் தனிமைத் தீயை அணைக்கும் வழி தெரியாமல் மனது வலிக்க வளர்ந்தான். அன்பினால் இதயம் இனிக்க வளர்க்கப்படவில்லை.

பிஞ்சுப் பருவத்தில் இழந்த தாயின் முகத்தை, நினைவில் கூட வைத்துக் கொள்ள இயலாதவனாய் புகைப்படத்தில் மட்டுமே அடையாளம் கண்டான்.

'அம்மா, நான் அப்பாவான பிறகும் கூட தாயன்புக்கு ஏங்கற உன் மகன் பிரசாத் வந்திருக்கேன்மா. இத்தனை செல்வம் இருந்தும் 'என் செல்லமே’ன்னு கொஞ்சி வளர்க்க நீ இல்லாம போயிட்டியேம்மா. அப்பாவோட ஆதிக்கம் செலுத்தற அன்பு என்னை ரொம்ப பாதிக்குதும்மா.’ மனசுக்குள் உருகிய அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஆண் பிள்ளை அழுவது அழகல்ல என்றாலும் மனம்விட்டு அழுவதால் நெஞ்சத்தின் சுமை குறைவதற்கு ஆணென்ன பெண்ணென்ன பாகுபாடு?

அழுது முடித்ததும் பிரசாத்தின் கனத்துப் போயிருந்த இதயம் சற்று லேசாகிப் போனது. பஞ்சு மெத்தையும், பால், பழமும் தராத சுகத்தை பெற்றவர்களின் அன்பில் அடையலாம். அடையாத ஒன்றிற்காக அலை மோதும் நெஞ்சத்துடன் போராடுவதே வாழ்வாகிப் போன நிலையில், திருமணம் என்னும் பந்தத்தினால் ஸ்வர்ணாவின் அன்பை அனுபவித்தான்.


பெற்றோரை இழந்து விட்ட ஒரே பெண்ணான ஸ்வர்ணாவை கைப்பிடித்த பிறகுதான் பிரசாத்தின் வாழ்வெனும் பாலைவனம், பூஞ்சோலையானது. பெற்றோர் இல்லாத ஸ்வர்ணாவுக்கு பிரசாத்தும், பிரசாத்துக்கு ஸ்வர்ணாவுமாக, அன்பு நதியாய் குடும்ப நீரோட்டம் ஓடியது.

அந்த இல்லற வாழ்வின் இன்ப வெள்ளமாக, தனக்கு பிறந்த குழந்தையும் பணம் என்னும் அரக்கத்தனமான ஆசைக்குப் பலியான துயரம் தொடர்ந்தது. பணத்திற்காக குழந்தையை சில கயவர்கள் கடத்திச் சென்று, மீட்பதற்கான நடவடிக்கைகள் முடிவதற்குள் குழந்தையையே முடித்து விட்டனர் பாவிகள். பெண் குழந்தை என்று வெறுத்துப் போயிருந்த ராஜசேகரன், மறுபடியும் பெண் குழந்தையே பிறந்தால் சொத்துக்கள் கிடையாது என்று விதித்த நிபந்தனை தந்த வேதனையும் சேர்த்து நெஞ்சை நிரப்பியது.

சென்னையில் பல நிறுவனங்களைத் துவக்கி அதன் வெற்றிக்காக வெறியுடன் உழைத்தார் ராஜசேகரன். அவருக்குப் பிடித்தமான ஏற்காட்டில் ஒரு பங்களாவைக் கட்டி, சென்னைக்கும் ஏற்காட்டிற்கும் பிரயாணித்துக் கொண்டிருந்தார்.

பிரசாத்திற்கு படிப்பு முடிந்து உரிய வயது வந்ததும் அவனிடம் சென்னையில் உள்ள நிறுவனங்களின் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஏற்காடு பங்களாவில் தங்கினார். அவர் எதிர்பார்த்த மன அமைதியும், உடல் ஓய்வும் இயற்கை எழில் நிறைந்த ஏற்காட்டில் கிடைத்தது. ஓய்வு என்பதற்காக அவர் ஒரேயடியாக ஓய்ந்து போகவும் இல்லை. ஏற்காட்டில் இருந்தபடியே பிரசாத்தின் நிர்வாகப் பொறுப்பை கண்காணித்தபடியும், கண்டித்தப்படியும் வழி காட்டினார்.

சகல சொத்துக்களும் ராஜசேகரனின் பெயரிலேயே இருந்தன. அரசுக்கு வரி கட்டினாலும் பரவாயில்லை. தான் சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள், தன்னுடைய காலம் வரை தன் பெயரிலேயே இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.  'பெற்ற மகன் கூட ஒருநாள் மற்றவன் ஆகிப் போகலாம்’ என்று சிந்தித்து செயல்பட்டார்.

பிரசாத் தனக்குள் இருக்கும் மனக்குறைகளை தந்தையிடம் வெளியிடும் அளவிற்கு அவர், அவனிடம் மனம் விட்டு பழக வில்லை.  அவர் உட்கார் என்றால் உட்கார்வது, நில் என்றால் நிற்பது என்று சொன்னதைச் செய்யும் பள்ளிக்கூட மாணவனாகவே வீட்டிலும் இருந்தான். அவர்கள் இருவருக்கும் இருந்த இடைவெளி, அன்புப் பரிமாற்றத்திற்குத் தடைபோடும் வேலியாக இருந்தது. என்றாலும் பிரசாத், ஏறிவந்த பாதை ஏறுமாறாகவோ தாறுமாறாகவோ இன்றி, ஏற்றமிகு குணநலன்களோடுதான் வளர்ந்தான்.

ராஜசேகரனிடம் காணாத அன்பை எல்லாம் மனைவி ஸ்வர்ணாவிடம் கண்டான். பாசத்தைக் கொடுத்து பாசத்தைப் பெற்றான். வெறுமையாகிப் போயிருந்த அவனது இதயக்கூட்டில் மகிழ்ச்சிப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன. அப்பா அளித்திருந்த வசதியான வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தான். ஆனால் தானும் அவரைப் போல பெற்ற பிள்ளையிடம் பாசத்தை வெளிப்படுத்தாத தகப்பனாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். குழந்தை சௌம்யா மீது கொள்ளைப் பிரியம் வைத்து, அதை "கண்ணே, மணியே" என்று கொஞ்சி வளர்த்தான். கொஞ்சி வளர்த்த செல்ல மகளும் பூமியில் மிஞ்சவில்லை. மறுபடி ஸ்வர்ணா கர்ப்பமாகி இருக்கும் இந்த நேரத்தில், அப்பாவின் தீவிரமான விதிமுறைகள், கட்டு திட்டங்கள், சட்டங்கள் மூலம் தான் நினைத்ததை செயல்படுத்தும் பிடிவாதம் மனதை வாட்டியது. 'அன்பே உருவான என் மனைவியும், எங்கள் அன்பின் விளைவாக பிறக்கப் போகும் குழந்தையும் நல்லபடியாக இருந்தால் அதுவே போதும். பணமும் சொத்துக்களும் குடுக்க முடியாத சந்தோஷத்தையும், பாசத்தையும் என் குடும்பம் எனக்குத் தரும். அதுதான் எனக்குப் பெரிது. எது நடந்தாலும் சரி’ என்ற மனநிலையில் தைரியமாக இருந்தான் பிரசாத்.

மாடிப்பகுதி முழுவதும் சுற்றி வந்தவன், மறுபடியும் படுக்கையில் சாய்ந்தான். அவனையும் அறியாமல் கண் அயர்ந்தான்.

2

க்கீல் நீலகண்டன் தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பாக்குப் பொட்டலத்தை எடுத்தார். பிரித்தார். வாயில் கொட்டிக் கொண்டார்.

"உங்களுக்கு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. பாக்கு போடாதீங்கன்னு. வாய்ல கான்ஸர் வரும்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா பத்து நிமிஷத்துக்கு ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாய்ல கொட்டிக்கறீங்க. உங்களைத் திருத்தவே முடியாது."

"என்ன பண்றது ராஜசேகரன்? மனுஷன், தன்னோட மனசுக்குக் கட்டளையிட்டு அடக்கி வைக்கணும். மனசு போடற கட்டளைக்கு நாம அடங்கிப் போகக் கூடாது. இது தெரிஞ்சும் சில பழக்கங்களுக்கு நாம அடிமையாகித்தான் போறோம். இந்த பாக்குப் போடற விஷயம் அப்படித்தான் என்னை அடிமையாக்கிடுச்சு. நிறுத்த முடியலை."

ராஜசேகரன், தனக்கு சரி சமமாக உட்கார வைத்து, தன்னை பேர் சொல்லிக் கூப்பிடும் அளவு சம உரிமை கொடுப்பது வக்கீல் நீலகண்டனுக்கு மாத்திரமே.

தொழில் முறையில் உருவாகிய அறிமுகம், நாளடைவில் நட்பாக மலர்ந்தது. வளர்ந்தது. ராஜசேகரனின் நிறுவனங்களில் அவ்வப்போது ஏற்படும் பல சிக்கல்கள் கோர்ட்டில் வழக்குகளான பொழுது அதிதிறமையாக வாதாடி வெற்றி பெற்று ராஜசேகரனின் பணத்தை மட்டுமல்ல, கௌரவத்தையும் பாதுகாத்தார் என்பதில் நீலகண்டன் மீதுள்ள மரியாதையும், நட்பும் கூடியது. அதன் பலனாய் தன்னிடம் மனம் விட்டுப் பேசும் உரிமையை வழங்கி இருந்தார் ராஜசேகரன். இருந்தாலும் அந்த உரிமையையும் சலுகையையும் துஷ்பிரயோகம் செய்யாமல் அளவாகவே அவருடன் எதையும் வாக்குவாதம் செய்வார் நீலகண்டன்.

நெருப்பின் நெருக்கம் குளிருக்கு இதமாக இருப்பினும் அளவுக்கு அதிகமானால், சுட்டெரித்து விடும் என்ற எச்சரிக்கை உணர்வு நீலகண்டனுக்குள் மணி அடித்துக் கொண்டே இருக்கும். நட்போ, பாசமோ எதிலுமே ராஜசேகரன் தாமரை இலைத் தண்ணீராகத்தான் பட்டும் படாமல் இருப்பார். ராஜசேகரனின் குணசித்திரத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்தபடியால் அவர்களது நட்பு முறிந்து போகாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

நீலகண்டனுக்கு, பிரசாத்தின் உணர்வுகள் புரிந்திருந்தது. அவனுக்காக பேசக்கூடிய ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

பிரசாத் மாடிக்குச் சென்றதும், ராஜசேகரனிடம் மெதுவாக பேச்சைத் துவங்கினார்.

"என்னங்க ராஜசேகரன், சிறந்த தொழிலதிபருக்கான அரசாங்க விருதை ரெண்டு தடவை வாங்கிட்டீங்க. ஹிண்டு பேப்பர்ல உங்க இன்ட்டர்வியூவும், உங்க இன்டஸ்ட்ரீஸ் பத்தின சகல விஷயங்களும் ஃபுல் பேஜ் கவர் பண்ணி உங்க போட்டோ கூட போட்டிருந்தாங்களே. அதைப் பார்த்துட்டு என்னோட க்ளையண்ட்சும், ஃப்ரெண்ட்சும் போன் மேல போன் போட்டு உங்களைப் புகழ்ந்துத் தள்ளிட்டாங்க. இவ்வளவு பெருமைகளுக்கும், புகழுக்கும் உரிய உங்களை க்ளையண்ட்டாவும், நண்பராகவும் அடைஞ்சதுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம்னு இல்லாம வாழ்ந்தோம், சாதிச்சோம்னு உங்களுக்கு ஒரு அடையாளத்தை அறிவிக்கும்படியா உயர்ந்துட்டீங்க. இதுக்காக நீங்க பல வருஷங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்.


பரம்பரைப் பணக்காரங்க, முன்னோர்கள் சேர்த்து வச்ச சொத்தை பல மடங்கா பெருக்குவாங்க அல்லது ஆண்டு அனுபவிச்சுட்டு அவங்க ஆயுசுக்குள்ள அழிக்கவும் செய்வாங்க. ஆனா நீங்க தனி ஆளா படிப்படியா முன்னேறி இவ்வளவு பெரிய ஆளா ஆகி ஏகப்பட்ட சொத்துக்கள் சேர்த்திருக்கீங்க."

"நீலகண்டன், கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க. ஒரேயடியா புகழ்ந்துகிட்டே போறீங்க? சின்ன வயசுல ஒரு வேளைக்கு அரை வயிறு சாப்பாடு கூட கிடைக்காம, வயிறு காயும்பொழுதெல்லாம், தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டணும்னு வெறி ஏறுச்சு. ஒரு பன் கூட வாங்கி சாப்பிடக் காசு இல்லாம தவிச்சிருக்கேன். உதவின்னு கேக்கப் போன இடங்கள்ல உனக்கென்னடா தெரியும்னு கேவலமா பேசி  ஓட ஓட விரட்டினாங்க. அன்னிக்கு எனக்குள்ள எழுந்த வேகம்! நான் நிக்கணும்னு எழுந்தேன். உழைச்சேன். களைப்பைப் பத்தி கவலைப்படாம உழைச்சேன். நடைபாதையில லாட்டரி டிக்கெட் வித்தேன். வயித்தைக் காயப் போட்டு கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். சேர்த்த பணத்துல சின்னச் சின்ன பொருட்கள் வாங்கி லாபம் வச்சு விக்க ஆரம்பிச்சேன். பணம் சம்பாதிக்கற வழி, என்  மனவலியைப் போக்குச்சு. மேல மேல பணம் பணம்னு அலைஞ்சேன். திரிஞ்சேன். பாடுபட்டு சம்பாதிச்சு நான் யார்னு நின்னு காட்டினேன். உறவுக்காரங்க என்னை உதாசீனம் செஞ்சதுனாலதான் உயரணும்ங்கற வெறி வந்தது. எனக்கு இடைஞ்சலாக இருந்த தடைக்கற்களே நான் முன்னேறுவதற்கு படிக்கட்டுகளா அமைஞ்சது.

சொத்துக்கள் வந்ததும், சொந்தங்களும் தேடி வந்துச்சு. யாரையும் நான் கிட்ட நெருங்க விடலை. நெறிஞ்சு முள்ளா இருந்து உறவுகளை முறிச்சுட்டேன். 'பசிச்ச வயிறுக்கு ஒரு பிடி சோறு போட்டா, கூடவே வந்து ஒட்டிக்குவானே’ன்னு இரக்கம் இல்லாம துரத்தி அடிச்ச உறவுக் கூட்டத்துக்கு வாழ்க்கைன்னா ஏற்ற, இறக்கம் இருக்கும்ங்கறது தெரியாம போச்சு. இதைப் பார்த்து என் மனசு வெறுத்துப் போச்சு. என்னோட இந்த ஏராளமான சொத்துக்கள்ங்கற விளைநிலத்துல விதையும் நான்தான், தண்ணீர் ஊத்தினதும் நான்தான். உரமும் நான்தான். நான், என் வாழ்க்கையின் உயர்வு, நான் ஆரம்பிச்ச நிறுவனங்கள், சேர்த்த சொத்துக்கள் இவைதான் என் உலகம்னு வாழறதுலதான் எனக்கு சந்தோஷமும், அமைதியும், வேற எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை."

கடந்த காலத்தின் கசப்பான உணர்வுகளையும், நிகழ்காலத்தில் ஜெயித்துக்காட்டிய இனிய அனுபவங்களையும் தன் கணீர் குரலில் ராஜசேகரன் பேசியதைக் கேட்ட நீலகண்டனுக்கு பிரமிப்பாக இருந்தது.

பிஞ்சு வயதில் மனதில் பட்ட காயம் ராஜசேகரனின் மனித நேயத்தைப் பதம் பார்த்திருந்தது. இதைப் புரிந்து கொண்ட நீலகண்டன் பேச்சை மாற்றினார்.

"உங்களை மாதிரி அபூர்வமான மனிதர்கள் இந்த உலகத்துல அரிதானவர்கள் ராஜசேகரன். உங்களோட சொத்துக்களுக்கு வாரிசா பிரசாத் இருக்கான். அதுபோல உங்களோட தைர்யம், விடாமுயற்சி, நிர்வாகத் திறமையிலயும் பிரசாத் உங்க வாரிசா இருப்பான்."

"பிரசாத் என்னோட வாரிசுதான். ஆனா அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தா அது என்னோட வாரிசா ஆகாது."

"அட, என்னங்க நீங்க, அதெல்லாம் அந்தக் காலம். பொண்ணுங்க சமையல் கட்டில முடங்கிக் கிடந்தாங்க. இப்ப டாக்டரா, இன்ஜினியரா, பைலட்டா, அமைச்சர்களா, தொழில் அதிபர்களா கொடி கட்டிப் பறக்கறாங்க. வாழ்க்கையில தோல்வி அடைஞ்சு சோர்ந்து போன பெண்கள் கூட ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாம, தங்களோட சொந்தக்கால்கள்ல நிக்கறாங்க. ஆண்தான் வாரிசுன்னு நீங்க பேசறது சரி இல்லைங்க."

"நோ.. நீலகண்டன், ஆண்தான் குடும்பத்துக்கு வாரிசு."

"பெண் குழந்தை உடம்புலயும் உங்க ரத்தம்தானே ஓடும்?"

"ஆனா, பொண்ணு வேற குடும்பத்துக்குப் போயிடுவா. வேற ஒரு பரம்பரையோட ரத்தம், புதுசா வந்து சேருதுல்ல? அதே மாதிரி சொத்துக்களும் வேற குடும்பத்துக்குதானே போகும்?"

"உங்களோட இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லை ராஜசேகரன். இந்த விஷயத்துல நீங்க பழமைவாதியா இருக்கீங்க. ஆண் பிள்ளைகளை சொத்துக்கு வாரிசா நினைக்கிறோம். அவங்க அந்த சொத்துக்காகத்தானே சுத்தி நிப்பாங்க? ஆனா பொண்ணுங்க நம்ப மேல உண்மையான பாசத்தோட இருப்பாங்க. நமக்கு ஒரு நோய், நொடின்னா நம்ப கிட்ட இருந்து கவனிக்கறது பெண் பிள்ளைங்கதான்..."

"அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு, நம்ப வசதிக்கு ஏற்ப கார், வீடு, நகை, நட்டு போட்டுத்தானே அனுப்பறோம்? பிறகென்ன சொத்து வேண்டிக் கிடக்கு? சொத்துக்களுக்கு சரிநிகர் வாரிசாக்கி, சொத்துக்களையும் குடுக்கறோம்னு வச்சுக்கோங்க, தகப்பன் வழி சொத்துக்கள் மட்டுமே இருக்கும்.. பேர் சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்."

"உங்க பேர் சொல்லத்தான் ஆண் வாரிசு பிரசாத் இருக்கானே?"

"அவன் தலைமுறையோடு என் பெயரும் அழிஞ்சுடுமே, அவனுக்கு ஆண் வாரிசு இல்லாமப் போனா?"

"சொத்துக்கள் பிரசாத்துக்கு கிடையாதுன்னு எழுதினா மட்டும் உங்க பேர் சொல்ல என்ன வாய்ப்புகள் இருக்கு?" நீலகண்டன் இவ்வாறு கேட்டதும், ராஜசேகரன் லேசாக சூடேறினார்.

"கோர்ட்ல குறுக்குக் கேள்வி கேக்கற மாதிரி என் கிட்ட கேக்காதீங்க நீலகண்டன். நான் ஒரு முடிவு எடுத்தா அதை எந்தக் காரணத்துக்காகவும் மாத்த மாட்டேன். அவனோட பெண் வாரிசுகளுக்கு அவன்தான் சொத்துக்களை சேர்க்கணும். என்னோட சொத்துக்கள் அவனுக்கு ஆண் வாரிசு பிறந்தாத்தான். இதில எந்த மாற்றமும் கிடையாது. இதுக்கு மேல நாம இதைப் பத்தி பேச வேணாம்னு நினைக்கிறேன் நீலகண்டன். என் மனசை மாத்தற உங்க முயற்சி நிச்சயமா நடக்காது. உங்களுக்குத்தான் தெரியுமே, இந்த ராஜசேகரனோட பிடிவாதத்தைப் பத்தி?" ராஜசேகரனின் குரலில் லேசான கடுமை எட்டிப் பார்த்தது.

"அது சரிதாங்க. வாதத்துக்கு மருந்து உண்டு. பிடிவாதத்துக்கு ஏது மருந்து?" ராஜசேகரனின் பிடிவாதமான மனநிலையை மாற்ற எண்ணி சிரித்துக் கொண்டே கேட்டு, இறுக்கமான அந்த சூழ்நிலையை இயல்புக்கு மாற்றினார் நீலகண்டன். மேலும் தொடர்ந்தார். "நீங்க சொன்னபடியே உயில் எழுதற வேலைகளை சீக்கிரமா ஆரம்பிச்சுடறேன்."

"வேற என்ன சேதி? உங்க மகன் விஜயகுமார் விஷயம் என்ன ஆச்சு? மும்பையில ஏதோ ஒரு கம்பெனியில வேலைக்குச் சேர்ந்திருக்கான்னு சொன்னீங்க?"

"அந்தக் கதையை ஏன் கேட்கறீங்க? போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடங்கற மாதிரி அந்த கம்பெனியில சேர்ந்த ஒரு வாரத்துல திரும்ப இங்கேயே வந்துட்டான்."

"ஏன்? என்ன ஆச்சு?"

"வழக்கம் போலத்தான். எனக்கு அது பிடிக்கலை. இது பிடிக்கலைன்னு விதண்டாவிதமா பேசறான்."


"நீலகண்டன், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. விஜயகுமாருக்கு வெளி இடங்கள்ல யாருக்குக் கீழேயும் வேலை செய்றதுல உடன்பாடு இல்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான் ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்துடறான்."

"இருக்கலாம். அதை என்கிட்ட வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே? அதுவும் சொல்ல மாட்டான். நான் எனக்குத் தெரிஞ்ச நண்பர்கள் கிட்ட எல்லாம் சிபாரிசு பண்ணி, கஷ்டப்பட்டு வேலை வாங்கிக் குடுக்க வேண்டியது. இவன் பாட்டுக்கு ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்காம சுவர்ல அடிச்ச பந்து மாதிரி திரும்ப வந்துட வேண்டியது. இதுக்குத்தான் அவனையும் என்னை மாதிரியே எம்.ஏ.பி.எல். படிக்க வச்சு லாயராக்கிடலாம்னு நினைச்சேன்."

"கரெக்ட். அவனும் உங்களை மாதிரி லாயரா ஆகி இருக்கலாம்."

"அதுக்கும் அவன் ஒத்து வரலையே? தகப்பன் சொல்றதை தட்டாம கேக்கற பிள்ளைங்க கிடைக்கறதுக்கு குடுப்பினை வேணும். நான் சொன்னதைக் கேக்காம எம்.பி.ஏ. படிக்கப் போறேன்னான். அதையாவது ஒழுங்கா படிச்சானா? அன்டர் கிரவுண்ட் வேலை பார்த்து, அவன் பாஸ் பண்றதுக்கு எக்கச்சக்கமா செலவழிச்சேன். இந்த லட்சணத்துல கிடைச்ச வேலையை பொறுப்பா செய்யாம வந்து சேர்ந்துடறான். பேர் சொல்ல பிள்ளை வேணும் வேணும்ங்கறீங்க. இவன் என்னோட பேரை ரிப்பேராக்கிடுவான் போலிருக்கே. சேலத்துல பெரிய லாயர் நீலகண்டன்னு நான் பேர் எடுத்திருக்கேன். 'நீலகண்டன் பையனை வளர்த்திருக்கற லட்சணத்தைப் பாரு’ன்னு என்னோடப் பேரைக் கெடுத்து வச்சிருக்கான். அவனோட கவலையே எனக்கு பெரிசா இருக்கு. இவனைப் பெத்து எடுக்கும்போதே என் பொண்டாட்டி உயிரை விட்டுட்டா. இவன் என் உயிரை வாங்கறான்."

"அட, என்ன நீலகண்டன் நீங்க இதுக்குப் போயி இவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு? சென்னையில எங்க ஆபிஸ்ல சேர்த்துடறேன். பிரசாத்தோட கண்ட்ரோல்ல உங்க விஜயகுமார் நல்லபடியா பொறுப்பானவனா ஆயிடுவான். பிரசாத் வந்தப்ப சொல்லிக்கிட்டிருந்தான். ரெண்டு போஸ்ட்டுக்கு ஆள் தேவைப்படுதுன்னு. விளம்பரம் குடுக்கச் சொல்லியிருந்தேன். விளம்பரமும் வந்தாச்சு. இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணச் சொல்லுங்க. உங்க விஜயகுமாருக்கு அதில ஒரு போஸ்ட் கிடைக்க நான் ஏற்பாடு செய்யறேன். உங்க க்ளையண்ட் ஒருத்தர், அவர் பேர் கூட என்னமோ சொல்லுவீங்களே? சேதுபதின்னு... அதான் நீலகண்டன், அந்த சேலம் ரைஸ் மில் காரர் சேதுபதி, அவரோட கேஸ் கோர்ட்ல இழுத்துக்கிட்டே இருக்குன்னீங்க? அது என்ன ஆச்சு..?"

"ஓ! சேலம் சேதுபதியோட டிரைவர் கேஸா? அந்த டிரைவர், சேதுபதியோட காரை ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டான்ல? அவனுக்கு அப்போ தலையில அடி. அடிபட்டு துடிக்கறானேன்னு கூட பார்க்காம போலீஸ்காரங்க அவசர அவசரமா அவன் கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க...."

"எதுக்காக? எதில கையெழுத்து வாங்கினாங்க?"

"அந்த டிரைவர் குடி போதையில கார் ஓட்டினதா எழுதி அவன்கிட்ட போலீஸ் கையெழுத்து கேட்டிருந்தாங்க. அந்த டிரைவரும் தலையில அடிபட்ட வேதனையில விட்டா போதும்டான்னு அந்நேரத்துக்கு கையெழுத்தைப் போட்டு தொலைச்சுட்டான். உண்மையில அவன் குடிச்சுட்டு கார் ஓட்டலை. எதிரே வந்த லாரி டிரைவர்தான் ராங் சைடில வந்திருக்கான்."

"அடப்பாவமே, அவன் கையெழுத்துப் போட்டதுனாலதான் மாட்டிக்கிட்டானா? இல்ல... நிஜமாவே குடிச்சிருந்தானா?"

"உண்மையிலேயே அந்த டிரைவருக்கு குடிப்பழக்கமே கிடையாது. அதோட, சேலம் சேதுபதிக்கு அவன் உண்மையான விசுவாசமான ஊழியன். அதனாலதான் சேதுபதி இந்தக் கேஸ்ல இருந்து அவனை மீட்கறதுக்காக நிறைய செலவு பண்றார். சேதுபதியோட டிரைவருக்கு சாதகமா கேஸ் ஜெயிச்சுடுச்சு..."

"அதானே, நீலகண்டனா கொக்கா? நீங்க எடுக்கற எந்தக் கேஸும் இதுவரைக்கும் ஜெயிக்காம விட்டதில்லையே? ஆமா... நாம பாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியலை. லஞ்ச் டைம் ஆச்சு. பிரசாத் மாடிக்குப் போனான். இருங்க. அவனைக் கூப்பிடறேன். உங்களுக்கும் லஞ்ச் இங்கதான்" என்றவர் இன்ட்டர்காமில் மாடி அறையின் எண்களை அழுத்தினார்.

"பிரசாத் என்ன தூங்கிட்டியா? வா சாப்பிடலாம்" பிரசாத்தை வரச் சொல்லிவிட்டு இன்ட்டர்காமில் வேறு எண்களை அழுத்தினார்.

"டைனிங் ரூமுக்கு வர்றோம். எல்லாம் ரெடியா எடுத்து வைங்க. வக்கீல் ஐயாவும் வந்திருக்கார்."

கைதேர்ந்த சமையல் வல்லுநர்கள் இருவரை சமையல் வேலைக்கு நியமித்திருந்தார். அவர்களிடம் மதிய உணவை சாப்பிடும் மேஜையில் எடுத்து வைக்கும்படி பணித்தார்.

3

மாடியில் இருந்து பிரசாத் இறங்கி வந்தான். தூங்கி எழுந்ததால் முகத்தைக் கழுவி விட்டு, தலைமுடியை சீர் செய்த பின்பே வந்தான். தலைமுடி லேசாக கலைந்திருந்தாலும் அப்பாவிற்கு கோபம் வரும்.

ராஜசேகரனுக்கு காலை, மதியம் இரண்டு வேளைகளும் வகைவகையான உணவுகள் தேவை. சிறு வயதில் கஷ்டப்பட்டதற்கெல்லாம் சேர்த்து ருசியான உணவு வகைகளை காலையிலும், மதியமும் ஒரு பிடி பிடிப்பார். மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் பங்களா தோட்டத்தில் நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்வார். அதன்பின் இரவில் ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, வாழைப்பழம் என்று அனைத்துப் பழங்களையும் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குப் போகும் முன் பெரிய வெள்ளி டம்ளர் நிறைய பால் குடித்துவிட்டுப் படுத்து விடுவார். அந்தப் பாலில் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டிருக்க வேண்டும். உணவுப் பட்டியலில் எந்த ஒன்று குறைந்தாலும் கோபம் தலைக்கேறும். எனவே அவரது தேவைகளை அங்கே வேலை பார்க்கும் இரண்டு சமையல் வல்லுனர்களும் மிகுந்த கவனத்துடன் கவனித்துக் கொண்டனர்.

மூவரும் சாப்பிடும் அறைக்குச் சென்று மேஜையின் முன் அமர்ந்தனர். சைவம், அசைவம் இரண்டிலும் வகை வகையான உணவு வகைகள், அழகிய வெளிநாட்டு கண்ணாடிக் கோப்பைகளில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறி சாலட், பழச்சாறு, சூப் வகைகள் உணவிற்கு முன் சாப்பிடுவதற்காக தயாராக இருந்தன. ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி வறுவல், மீன் வறுவல் நாவில் நீர் ஊற வைத்தன. சைவ பிரியாணி, காலிஃப்ளவர் குருமா, தயிர் பச்சடி இவை தனி வரிசையில் இருந்தன.

"என்னங்க ராஜசேகரன் பார்த்தாலே பசி ஆறிடும் போல இருக்கு?"

"பசிச்சுக் கிடந்த காலத்துல கடையில அலங்காரமா பலகாரங்கள் இருந்ததைப் பார்த்துக்கிட்டே நின்னிருக்கேன். நான் பார்த்ததைக் கூட தப்புன்னு கடைக்காரன் என்னை நாயை விரட்டின மாதிரி விரட்டினான். ஆனா வயிறை சுருட்டற பசி வந்தப்ப கூட நான் எங்கே இருந்தும் யார் கிட்ட இருந்தும் எதையும் சுருட்டலை. பசி வந்தா பத்தும் பறந்துடும்னு சொல்வாங்க. அந்த பத்தும் என்னன்னு எனக்குத் தெரியாது. ஆனா நேர்மையா, உண்மையா உழைச்சுத்தான் முன்னுக்கு வந்தேன். பணபலம் இல்லாத ஒருத்தன், மனவலிமையால அதை சம்பாதிக்கலாம். அந்த பணபலத்தை அடைஞ்சவன்..? இந்த உலகத்தையே வெல்லலாம்..."


ராஜசேகரன் பேசியதைக் கேட்ட பிரசாத்திற்கு அவரது அந்தப் பேச்சே பிடிக்கவில்லை. 'பணம்... பணம்... பணம்... அப்பாவுக்கு இதைத் தவிர வேற சிந்தனையே இருக்காது போலிருக்கு’ மௌனமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"என்னப்பா பிரசாத், சத்தத்தையே காணோம்?" நீலகண்டன் கேட்டார்.

"ஒண்ணுமில்லை அங்கிள். பசி இல்லை. அதான்..."

"இந்த வயசுல பசி இல்லைன்னா என்னப்பா அர்த்தம்? கல்லை மென்று தின்னாக்கூட ஜீரணிக்கிற வயசு உனக்கு. நல்லா சாப்பிடு" நீலகண்டன் சிரித்துப் பேசி பிரசாத்தின் மௌனத்தைக் கலைத்து, அவனை மூடுக்குக் கொண்டு வர முயற்சித்தார்.

"ஸ்வர்ணா நல்லா இருக்காளா பிரசாத்?" கோழிக்கறியில் ரோஸ்ட் செய்த தொடைப்பகுதியைக் கடித்தபடியே நீலகண்டன் கேட்டார்.

"நல்லா இருக்கா அங்கிள். ஆனா... முதல் குழந்தை சௌம்யா போன துக்கத்தில இருந்து அவ இன்னும் மீளலை. சரியா சாப்பிடறதில்லை. அதனால பலவீனமா இருக்கா."

"நல்ல ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக வேண்டியதுதானே?"

"அதெல்லாம் கூட்டிட்டுப் போய் காமிச்சாச்சு. எல்லா செக்-அப்பும் பண்ணிட்டாங்க. உடல் ரீதியா எந்த விதமான குறையும் இல்லை. மனதில இருக்கற சோகத்தை மறந்து, நேரத்துக்கு சாப்பிட்டாள்னா நல்லா இருப்பான்னு டாக்டர் சொன்னாங்க."

"சாப்பிடாம கிடந்தா மட்டும் போன குழந்தை உயிரோட கிடைச்சுடுமா?" ராஜசேகரன் குறுக்கிட்டார்.

"ராஜசேகரன், பெண்கள் மென்மையான மனசு உள்ளவங்க. அவங்க இப்பிடித்தான். இந்த லேடீஸ் சென்டிமென்ட்டெல்லாம் உங்களுக்குப் புரியாது."

"ஆமாம். பிரசாத்தோட அம்மா வடிவுக்கரசி மண்டையைப் போட்டதுக்கப்புறம் பொம்பளைங்க சமாச்சாரமே எனக்கு மறந்து போச்சுதான்" ஏதோ தமாஷான ஜோக் அடித்தது போல சிரித்துக் கொண்டார் ராஜசேகரன்.

"என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துடாதீங்க. என்னால அதையெல்லாம் மறக்கவும் முடியாது. துறக்கவும் முடியாது..."

"பொம்பளைங்க சமாச்சாரம்ன்னதும் உம்ம புத்தி எங்கேயோ தாவிடுச்சு பார்த்தீங்களா? சாப்பிட்டுட்டு ஒழுங்கா கேஸ் வேலைகளைப் போய் கவனிங்க..." மேலும் சிரித்தபடி நீலகண்டனின் முதுகில் ஓங்கித் தட்டினார் ராஜசேகரன்.

பிரசாத்துக்கும் சிரிப்பு வந்தது. சிரித்தான்.

"யப்பாடா.... உங்க பையனை சிரிக்க வைக்க, நான் எவ்வளவு பேச வேண்டி இருக்கு பாருங்க. பிரசாத், மனுஷனுக்கு கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் ஏற்படறது நம்பளோட அனுபவத்துக்காகத்தான். அனுபவங்கள் தான் மனுஷனுக்கு நிறைய பாடங்களைக் கத்துக் குடுக்குது. எப்பவும் மனசை எதுக்கும் தயாரா வச்சுக்கணும். தொழிற்சாலையில லேபர் பிரச்னைகள் இல்லாம கொஞ்ச காலம் சுமுகமா போயிட்டிருக்கும். அந்தக் கூட்டத்தில் எவனாவது ஒரு நக்ஸலைட் இருந்தா போதும் மத்தவங்க மனசையும் கலைச்சுடுவான். அப்புறமென்ன? ஸ்டிரைக்குன்னு கொடி பிடிப்பாங்க. சம்பள உயர்வுன்னு குரல் குடுப்பாங்க. அதையும் தைர்யமா எதிர் கொள்ளணும். அவனோட பலவீனம் எதுன்னு தெரிஞ்சு, அங்க அடிக்கணும். மிஞ்சி மிஞ்சிப் போனா ஏதோ கொஞ்சம் கூலியோ சம்பளமோ அதிகம் கேப்பான். அதையும் தூக்கி விட்டெறிஞ்சா, இந்த ஸ்ட்ரைக், போராட்டம் இதெல்லாம் உருவாகாது.

“முதலாளி, தொழிலாளிக்கு நடுவுல நீ பெரிசா நான் பெரிசான்னு ஒரு நிலைமை வர்றதுக்குள்ள நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்துட்டா கேஸும் தேவை இல்லை. கோர்ட்டும் தேவை இல்லை. நமக்கும் டென்ஷன் கிடையாது. சில நெளிவு சுளிவுகளைப் புரிஞ்சுக்கிட்டா தெளிஞ்ச நீரோடை மாதிரி மனசு ரிலாக்ஸ்டா இருக்கும்."

நீலகண்டன் பேசுவதை கேட்ட பிரசாத்திற்கு, அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் நடைமுறை உண்மை என்பது புரிந்தது. அதை புரிந்து கொண்ட உணர்வில் புன்னகைத்தான்.

"இதெல்லாம் நான் உங்க அப்பா கிட்ட கத்துக்கிட்ட பாடம். பிஸினஸ் மேக்னட் ராஜசேகரனோட மகன் நீ, உனக்கே நான் அல்வா குடுக்கறேன்னு பார்க்கறியா? நல்ல விஷயங்கள் நமக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்கு சொல்லி அவங்களும் நன்மை அடையணும். நீயும் உங்க அப்பாவை போல திறமைசாலிதான். ஆனா அவரைப் போல அனுபவசாலி கிடையாது. அதுக்குரிய வாய்ப்புகள் உனக்குக் குறைவு. அதனால உங்க குடும்ப நண்பனா உனக்கு அறிவுரை சொல்றேன். வாய்விட்டு சிரிக்கணும். மனம்விட்டு பேசணும். மானிடப்பிறவி மிக அரிதான பிறவி. இந்தப் பிறவியில நாம ஒரு அர்த்தத்தோட வாழ்ந்து முடியணும். பணமும் வாழ்க்கைக்கு தேவைதான். ஆனா அதுவே வாழ்க்கையாகிட முடியாது." ஜாடைப் பேச்சு பேசி, ஓரக்கண்ணால் ராஜசேகரனை பார்த்தார் நீலகண்டன்.

ம்கூம். அவருக்கு அதெல்லாம் ஏறவே இல்லை. அவர் பாட்டுக்கு கோழி வறுவலை ருசி பார்த்தபடி இருந்தார். நீலகண்டன் தன் சார்பாக பேசுவது ஓரளவு ஆறுதலாக இருந்தது பிரசாத்திற்கு.

சாப்பிட்டு முடிந்ததும் மூவரும் முன்பக்க ஹாலுக்கு வந்தனர். "அப்பா, நான் கிளம்பறேன்ப்பா. முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாம் உங்க கையெழுத்துக்காக அனுப்பி இருந்தேனே? அதெல்லாம் ஸைன் பண்ணிட்டீங்களா?"

"எல்லாம் நான் பார்த்து கையெழுத்துப் போட்டுட்டேன். ப்ரீஃப் கேஸ்ல எடுத்து வச்சிருக்கேன். ஜாக்கிரதையா எடுத்துட்டுப் போ."

"ஆபீஸ்ல உன்னோட ரூமுக்கு இன்னொரு ஏ.ஸி. போடணும்னியே. வாங்கி மாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணு."

"ஆமாம்ப்பா. சென்னை வெயில்ல ஏ.ஸி. இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலை. ஏற்கெனவே ஒரு ஏ.ஸி. இருக்கு. அந்த குளிர்ச்சி போதலை."

"போன உடனே புது ஏ.ஸி. வாங்கி மாட்டிடு. ஓப்பல் கார் வேணும்னு கேட்டிருந்தியே? அந்த டீலர் வந்து உன்னைப் பார்த்தாங்களா? ஏற்கெனவே சியோலா கார் ஒண்ணும், ஃபோர்ட் ஐக்கானும் வச்சிருக்கீல்ல? அது கூட புதுசா இப்ப வந்திருக்கற ஓப்பல் க்ளப் காரும் வாங்கிக்க. கார் வாங்கறதுக்குத் தேவையான பணத்துக்கு செக் அனுப்பு. நான் கையெழுத்துப் போட்டு கூரியர்ல அனுப்பி வைக்கறேன். இந்த கோடை காலத்துக்கு ஸ்விட்சர்லாந்த் போணும்னு சொன்னியே? அதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா?"

"இல்லைப்பா. ஸ்வர்ணாவை டாக்டர் ரமணி எங்கேயும் பிரயாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால போகலை."

"சரி, ஸ்வர்ணாவோட பிறந்த நாள் வருது. அவளுக்கு கிஃப்ட் பண்றதுக்காக வைர ஸெட் வாங்கணும்னியே அதையும் வாங்கிடு."

"தாங்க்ஸ்ப்பா. நீங்க எப்ப சென்னைக்கு வர்றீங்க?"

"நான் இப்போதைக்கு அங்கே வர்ற மாதிரி திட்டம் ஒண்ணும் இல்ல. சரி, நீ கிளம்பு. மணி இப்பவே மூணாச்சு."

"சரிப்பா. போயிட்டு வரேன். அங்கிள் பார்க்கலாம்." இருவரிடமும் விடைபெற்று புறப்பட்டான்.

'மகன் கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் மனசு இந்த ராஜசேகரனுக்கு. ஆனா சொத்து விஷயத்துல மட்டும் பிடிவாதம். மகனுக்கு வசதியான வாழ்க்கையை அவன் பிறந்ததில் இருந்தே அளித்து வந்த ராஜசேகரனுக்கு, அவனிடம் வாய் வார்த்தைகளாக ஏன் தன் அன்பை வெளிப்படுத்தும் மனம் மட்டும் இல்லாமல் போய்விட்டது? சிறு வயதில் ஏற்பட்ட தாக்கத்தின் எதிரொலி!

நாளடைவில் சரியாகும்னு நம்புவோம். மனதில் தோன்றும் இந்த எண்ணங்களை ராஜசேகரனிடம் வெளியிடும் நாள் விரைவில் வரணும். அதன் மூலம் பிரசாத்தின் எதிர்காலம் சிக்கல் இல்லாமல் அமைஞ்சுடணும்’ நினைவுகள் பின்னலிட்டது. கையசைத்து பிரசாத்திற்கு விடை கொடுத்தார் நீலகண்டன். பிரசாத் காரைக் கிளப்பினான்.


4

ற்காட்டில் இருந்து சேலம் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேரும்பொழுது மணி ஒன்பது ஆகி இருந்தது. பிரசாத், சென்னையில் உள்ள தன் பங்களாவை நோக்கி காரை செலுத்தினான். கார் ஹாரன் ஒலி கேட்டதும் எப்.எம். ரேடியோவில் திரை கானம் கேட்டுக் கொட்டிருந்த செக்யூரிட்டி உஷாரானான். ரேடியோவின் தொண்டையைத் திருகி நிறுத்தினான். ஓடிச் சென்று, காம்பவுண்ட் கதவுகளைத் திறந்து விட்டான். பிரசாத்தைப் பார்த்து சல்யூட் அடித்தான். கார் போர்டிகோவில் நின்றது.

கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, ஸ்வர்ணா வெராண்டாவிற்கு வந்தாள். கையில் ப்ரீஃப் கேசுடன் காரை விட்டு  இறங்கினான் பிரசாத்.

"நீங்க மட்டும் தனியா காரை ஓட்டிக்கிட்டு போனீங்கள்ல, அதனால எனக்கு ரொம்ப பயம்மா இருந்துச்சுங்க."

"நான் என்ன சின்ன பையனா? இல்லை கார் ஓட்ட இப்பத்தான் புதுசா கத்துக்கிட்டிருக்கேனா? எதுக்காக இந்த பயம்?"

"அதில்லைங்க... நம்ம குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொன்னுட்டாங்களே பாவிங்க. அவங்களாலே நம்ப குடும்பத்துக்கு மறுபடி ஏதாவது ஆபத்து வருமோன்னு எப்பவும் எனக்குள்ள பயம். அதனால நீங்க ஏற்காட்ல இருந்து இங்கே வர்றதுக்குள்ள டென்ஷன் ஆகிட்டேன்..."

"இப்படி தேவை இல்லாம டென்ஷன் ஆகித்தான் உடம்பைக் கெடுத்துக்கற. டாக்டரம்மா எவ்வளவு அட்வைஸ் பண்ணாங்க? தைர்யமா இரு. உன் மனசு ரிலாக்ஸ்டா இருந்தாத்தான் வயித்துல வளர்ற குழந்தையும் நல்லபடியா இருக்கும்னு சொன்னாங்கள்ல? பின்ன ஏன் இப்பிடி தேவையில்லாம டென்ஷன் ஆகற? மணியைப் பாரு ஒன்பதுதான் ஆகுது. இன்னிக்கு விடியற்காலை அஞ்சு மணிக்குத்தான் ஏற்காட்டுக்கு கிளம்பினேன். இதோ ஒன்பது மணிக்குள்ள வந்து சேர்ந்துட்டேன். இப்படியெல்லாம் வீணா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டிருக்காதம்மா."

"சரிங்க. பெட்டியைக் கொடுங்க. உள்ளே வைக்கிறேன்.

"முக்கியமான டாக்குமென்ட்ஸ் இருக்கு. பத்திரமா எடுத்துட்டுப் போய் என்னோட பீரோ லாக்கர்ல வச்சுடு. நாளைக்கு நான் ஆபீசுக்கு போகும்போது மறக்காம எடுத்துக் குடுத்துடு."

"சரிங்க. பத்திரமா எடுத்து வச்சுடறேன். அது சரி, ஏற்காடுல உங்க அப்பா எப்பிடி இருக்கார்?"

"அவருக்கென்னம்மா, நல்லா இருக்கார். எனக்குத்தான் அங்கே போனாவே மனசு ஒரு மாதிரியா டல்லாயிடுது."

"அங்கே உள்ள குளிரான க்ளைமேட், இயற்கை காட்சிகள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த சென்னையில இருக்கற உஷ்ணமும், ஜனநெருக்கடியும், இயந்திரகதியான ஓட்டமும் பார்க்கறதுக்கே வெறுப்பா இருக்குங்க..."

"உனக்கென்ன? ஜன நெருக்கடி, ஓட்டம்ங்கற? வீடு முழுசும் ஏ.ஸி. பண்ணி இருக்கு. என்ன உஷ்ணம்? சொல்லும்மா கண்ணு..."

கிண்டலாக கேட்ட பிரசாத்தின் கன்னத்தை செல்லமாக தட்டினாள் ஸ்வர்ணா.

"ஐய, நான் என்ன எனக்கு கஷ்டமா இருக்குன்னா சொல்றேன்? பொதுவா சென்னை நகரம் பரபரப்பான சூழ்நிலையைப் பார்க்கவே வெறுப்பா இருக்குன்னு சொல்ல வந்தா..."

"சச்ச, சும்மா விளையாட்டுக்குத்தான்மா கேட்டேன். நீ இந்த வீட்ல மகாராணி மாதிரி வாழணும்னுதானே சகல வசதிகளும் பண்ணி இருக்கு?"

"உண்மையிலேயே நான் மகாராணி மாதிரிதாங்க வாழறேன்,  வசதிகளைப் பொறுத்தவரைக்கும். ஆனா எதுவுமே இல்லாத பரம ஏழையா இருக்கேன், என் உள் உணர்வுகளைப் பொறுத்தவரைக்கும். நான் ஏன் இப்படிச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியும். நம்ப குழந்தை..."

"திரும்ப... திரும்ப... அதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு, பேசிக்கிட்டு... அழுதாவோ, புலம்பினாலோ மறுபடி நம்ப குழந்தை திரும்ப கிடைச்சுடுமா? இழப்புகளை ஏத்துக்கணும். பொறுத்துக்கணும். கடந்த காலத்தை மறக்கணும். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோட காத்திருக்கணும். எனக்கு மட்டும் வேதனை இல்லையா? உனக்கு ஆறுதல் சொல்றதுலதான் நான் ஆறுதல் அடையறேன். புரிஞ்சுக்க."

"சரிங்க. ஏற்காடு போன விஷயத்தை சொல்லுங்க. உங்க அப்பா வேற என்ன சொன்னார்?"

"அவர் என்ன சொல்லுவார்? வழக்கம் போல கம்பெனி நிர்வாகம், டாக்குமென்ட்ஸ், ஆபீஸ் பத்தி கேட்டார். நான் காலையில சீக்கிரமா எழுந்துட்டேன்ல? அதனால டயர்டா இருந்துச்சு. மாடிக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்னு போனேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்துச்சு. அம்மா படத்தைப் பார்த்ததும் சோகம் அதிகமாயிடுச்சு. மனசு தாங்காம அழுதுட்டேன். அப்புறம் கொஞ்ச நேரம் கண் அசந்து தூங்கிட்டேன். நீலகண்டன் அங்கிள் வந்திருந்தார்..."

"அதானே பார்த்தேன். உங்க அப்பாவுக்கு யாரை பார்க்கறாரோ இல்லையோ வக்கீல் நீலகண்டனைப் பார்க்கலைன்னா இருக்க முடியாதே? ம்... அவர் நல்லா இருக்காரா?"

"ஓ. உன்னை ரொம்ப விசாரிச்சார். உன் உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்டார். சொத்தைப் பத்தி அப்பாவோட முடிவு நீலகண்டன் அங்கிளுக்கும் பிடிக்கலை. அப்பா கிட்ட அதைப்பத்தி பேசறார்னு நினைக்கிறேன்..."

"இன்னும் உங்க அப்பா ஆண் வாரிசுக்குத்தான் சொத்துங்கற பிடிவாதத்துலதான் இருக்கார்னு சொல்லுங்க."

"அதில சந்தேகமே இல்லை. அவர் ஒண்ணு சொன்னா சொன்னதுதான்."

"பின்னே, எந்த ஐடியாவுல நீலகண்டன் அங்கிள் உங்க சார்பா அவர்கிட்ட பேசுவார்?"

"அவர், அப்பாவோட வக்கீல் மட்டும் இல்லையே, ஆத்ம நண்பராச்சே? அந்த உரிமையில பேசிப் பார்க்கலாம்னு முயற்சி எடுப்பார். எனக்கு விவரம் தெரிஞ்சு எங்கப்பா இவ்வளவு அந்நியோன்யமா பழகற ஒரே ஆள் நீலகண்டன் அங்கிள்தான். மதியம் சாப்பிடும்போது கூட, அப்பா கிட்ட அவரோட சுபாவத்தைப் பத்தி ஜாடை மாடையா பேசினார். அதையெல்லாம் அவர் கண்டுக்கவே இல்லை. நான் ஏற்காடு பங்களாவுல கால் வச்சதுமே அவர் சொன்னது, இந்த தடவை உனக்கு ஆண் குழந்தை பிறந்தாத்தான் சொத்துக்கள் கிடைக்கும்னு. அப்பவே எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு."

"இதில என்னங்க கஷ்டம்? இந்த சொத்து, மத்தவங்க கண்ணை உறுத்தறதுனாலதானே நம்ப குழந்தை நம்ப கண்ணை விட்டு மறைஞ்சுட்டா? பணம் குடுத்து அவளை நாம அடைய முடியுமா? உங்க அப்பாவுக்கு இதெல்லாம் புரியமாட்டேங்குதேன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..."

"அவருக்குப் புரியாட்டி போகுதும்மா. அவரோட சொத்து இல்லைன்னா நம்பளால வாழ முடியாதா? எங்க அப்பா என்ன... பிறக்கும்போதே கோடீஸ்வரனாவா பிறந்தார். அவரைப் போலவே என்னாலயும் சுயமா சம்பாதிச்சு, சொத்து, சுகம் வாங்க முடியாதா?"

"நீங்க இவ்வளவு தன்னம்பிக்கையாவும், சுயமரியாதையோடவும் பேசறப்ப எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?


உங்களோட அன்பு இருந்தா போதும். மாளிகை மாதிரியான இந்த வீடு, வசதியான வாழ்க்கையெல்லாம் இல்லாமல் போனாலும் குடிசையில கூட நாம சேர்ந்து சந்தோஷமா வாழ முடியும்ங்க. நம்ப முதல் குழந்தை சௌம்யாவை முகமூடிப் பாவி கொன்னுட்டானே? என் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க..."

"இந்த நிலைமையில ஏம்மா திரும்பத் திரும்ப அதையே நினைச்சு அழறே? நமக்குத்தான் இன்னொரு குழந்தை பிறக்கப் போகுதில்ல? அழாதே, கண்ணைத் துடைச்சுக்க."

"நீங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் என் மனசு ஆறாதுங்க. பத்து மாசம் வயித்துல சுமந்து, ஆறு மாசம் கையில தூக்கி வளர்த்த என்னோட முதல் வித்து. அவளை இழந்துட்ட துயரம் என் உயிர் உள்ளவரை மறையாதுங்க..."

"ஸ்வர்ணா, பழசையெல்லாம் மறந்துட்டு நிம்மதியா இரு. உடம்பை கவனமா பார்த்துக்க. நேரத்துக்கு சாப்பிடு. நல்லா தூங்கு. நான், பிஸினஸ், ஆபீஸ்னு ஓடிக்கிட்டிருக்கறவன். நீதான் பார்த்துக்கணும்."

"சரிங்க. நீங்களும் உங்க அப்பா சொன்னதை பத்தியெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க. நமக்கு கல்யாணம் ஆனதில இருந்து அவர், இதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கார்? புதுசாவா சொல்றாரு?"

பிரசாத்தின் நெஞ்சில் தன்னையும் ஒரு குழந்தை போல புதைத்துக் கொண்டாள் ஸ்வர்ணா.

5

யற்கையும், மனிதர்களின் செயற்கையும் இணைந்து உண்டாக்கிய ஒலிகள், ஒரு நாள் முடிந்து, மறுநாள் துவங்கி இருப்பதை அறிவித்தது.

கலைந்த தலைமுடியை அழுந்தப் படிய வைத்தபடி வாசலுக்கு வந்தாள் கமலா. கதவின் அருகில் கிடந்த பால் பாக்கெட்டை எடுத்தாள்.

'போன மாசமும் பாலுக்குப் பணம் குடுக்கலை. இந்த மாசம் குடுக்கலைன்னா பால் பாக்கெட் போட மாட்டான். வாசல்ல வந்து நின்னு பணத்துக்கு கத்துவான்’ நினைப்பே நெஞ்சில் கவலையை உண்டாக்கியது.

காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். அவளது கணவர் கோபால், தூக்கம் கலையாத கண்களோடு வந்து நின்றார்.

"ஸாரி கமலா. இன்னிக்கும் நியூஸ் பேப்பர் எடுக்கறதுக்காக வந்திருக்கேன் பாரு. இருபது வருஷப் பழக்கம். பல் கூட விளக்காம பேப்பர் படிக்கறது மறக்க மாட்டேங்குது.."

"பதினொரு மணி ஆகட்டும். பக்கத்து வீட்டில பார்வதி கிட்ட கேட்டு பேப்பர் வாங்கித் தரேன். படிச்சுட்டுத் திரும்பக் குடுத்துடலாம்."

"என்னாலதானே இந்த நிலைமை?.... உனக்குத்தான் ரொம்ப கஷ்டம். நீ பாவம்..."

"உங்களால உங்களாலன்னு சொல்றீங்களே? நீங்க என்ன ஊதாரித்தனமா செலவு பண்ணீங்களா? சீட்டு விளையாண்டிங்களா? ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்தறதுக்கும் தண்ணி அடிக்கறதுக்கும் பணத்தை தண்ணியா செலவு பண்ணீங்களா? உங்க வயித்துல கட்டி வந்து அதை ஆபரேஷன் பண்ணி எடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா? அந்த ஆபரேஷனுக்குத்தானே செலவும், கடனும் ஏகமா ஆகிப் போச்சு. நீங்க உயிர் பிழைச்சதும் உங்க ஆரோக்கியமும்தான் எனக்கு முக்கியம்."

"என்ன இருந்தாலும்... நம்ப சக்திக்கு மீறின செலவு. வைத்திய செலவுக்காக வாங்கின கடன்... வட்டி மட்டுமே ஆளை முழுங்குது. நான் வேலைக்குப் போறதுக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு. கை இருப்பு காலி. என்ன கமலா செய்யப் போறோம்? இதை நினைச்சா ராத்திரி முழுசும் தூக்கமே இல்லை."

"கவலைப்பட்டா மட்டும் கஷ்டம் தீர்ந்துடுமா? எந்தெந்த செலவைக் குறைக்க முடியுமோ குறைச்சாச்சு. நிறுத்தக் கூடியதை நிறுத்தியாச்சு. உங்க நியூஸ் பேப்பர், நான் வாங்கற மாசப்பத்திரிகை, கறி, மீன் வாங்கற செலவு, இதையெல்லாம் நிறுத்தியாச்சு. ரெண்டு பொரியல் ஒரு பொரியலாச்சு. வறுவலே கிடையாது. இதையெல்லாம் குறைச்சுதான் உங்க மருந்து வாங்க முடியுது. இருக்கற நகைங்க ஒவ்வொண்ணா வித்து, வட்டிக்குப் போகுது."

"எல்லாத்துக்கும் காரணம் எனக்கு வந்த நோய்தான்."

"இல்லைங்க, இவ்வளவு கஷ்டத்துக்கும் காரணம் நாம பெத்து, வளர்த்து, படிக்க வச்சு பட்டதாரி ஆக்கியிருக்கோமே அருமந்த மகன் சரவணன், அவன்தான். படிப்பு முடிஞ்சு அஞ்சு வருஷம் ஆச்சு. உருப்படியா ஒரு உத்தியோகத்துக்கு போயிருந்தான்னா, நாம கடனாளியா இப்பிடி கையை பிசைஞ்சுக்கிட்டிருக்க வேண்டியதில்லையே. கருவேப்பிலை கொத்து மாதிரி பெத்தது ஒண்ணே ஒண்ணு. எதுக்கும் உருப்படாம சும்மா இருக்கான்."

"சச்ச... பாவம் கமலா. சரவணனை அப்பிடியெல்லாம் பேசாதே. அவனுக்கு உத்யோகம் கிடைக்கலைன்னா அவன் என்ன பண்ணுவான்? அவனும் இன்ட்டர்வியூவுக்கு போய்கிட்டுதான் இருக்கான். எதுக்கும் வேளை வரணுமில்ல?"

"அஞ்சு வருஷமா வேலைக்குதான் வேளை வரலை. ஏதாவது பிஸினஸ் பண்ணுடான்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்?"

"பிஸினஸா? அதுக்கெல்லாம் நிறைய பணம் வேணுமில்ல கமலா? புரியாம பேசாதே...."

"அம்மா.... அம்மா.... " ஜாகிங் போவதற்காக கிளம்பிய சரவணன் கமலாவைக் கூப்பிட்டான்.

"வாங்க ஸார்... வாங்க. எது தவறினாலும் உங்க தினசரி நடவடிக்கை மட்டும் தவறவே தவறாதே. போங்க இதையாவது உருப்படியா செய்யறீங்களே..." அம்மா நக்கலாக 'ஸார் போட்டு பேசியதைக் கேட்ட சரவணனுக்கு முகம் மாறியது.

"அம்மா, நான் சோம்பேறியா ஊர் சுத்திக்கிட்டிருந்தா நீங்க என்னைத் திட்டறதுல நியாயம் இருக்கு. தினமும் இரவல் பேப்பர் வாங்கி, வேலைக்கான விளம்பரம் பார்த்து, அப்ளிகேஷன் எழுதி, நம்பிக்கையோட இன்ட்டர்வியூவுக்கு போய், ஏமாற்றத்தோட திரும்பி வந்து, நானும் வேதனைப்பட்டுக்கிட்டுதான்மா இருக்கேன்."

"த்சு... உன்னைப் படிக்க வைக்க, உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார்? இப்போ அவர் கஷ்டப்படறப்போ உன்னால எந்த பிரயோஜனமும் இல்லை."

"கமலா, நீ அவனை இப்பிடி திட்டிக்கிட்டே இருந்தா அவன் மனசு எவ்வளவு பாடுபடும்?" கமலாவைக் கேட்டவர், சரவணனைப் பார்த்து, "நீ போப்பா... " என்றார். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே வெளியேறினான் சரவணன்.

6

நீண்ட தூரம் ஓடியதும் மூச்சிறைத்தது வாசுவிற்கு. "என்னடா வாசு உனக்கு இப்படி மூச்சு வாங்குது? தினமும் ஓடறதை விட ஒரே ஒரு கிலோ மீட்டர்தான் அதிகமா ஓடி இருக்கோம்.." சரவணன், வாசுவை கேலி செய்தான்.

"படிக்கும்போது, வீட்டில அம்மா தினமும் முட்டை, பால் இப்பிடி சத்தானதா குடுப்பாங்க. படிச்சு முடிச்சு வீட்டுக்கு பாரமா உட்காந்திருக்கேன்ல? 'தண்ட சோத்து தடிராமன்’னு திட்டாத குறை. ஏதோ பெத்த கடனுக்காக மூணு வேளை தவறாம சோறு போடறாங்க. அதுவே பெரிய விஷயம். வெந்த சோத்தை விதியேன்னு தின்னுட்டு கிடக்கும்போது ஒரு கிலோ மீட்டர் எக்ஸ்ட்ரா ஓடறதுக்கு எப்பிடிடா தெம்பு இருக்கும்?"


"நாம ரெண்டு பேரும் இப்படிப் புலம்பிப் புலம்பி, கடைசியில நடக்கக் கூட முடியாத கிழவனா ஆகிடுவோம்ன்னு நினைக்கிறேன்."

"சரி சரி. கொஞ்ச நேரம் உட்கார். எங்க அண்ணன் கிட்ட கெஞ்சி கூத்தாடி இன்னிக்கு பேப்பர் வாங்கிட்டு வந்திருக்கேன். க்ளாஸிஃபைட் பார்க்கலாம் வா."

"அட போடா, வெறுத்துப் போச்சு. வீட்ல அப்பாவுக்கு வயித்துல ஆப்ரேஷன் பண்ணதுல இருந்து அம்மா என்னை வார்த்தைகளால வறுத்து எடுக்கறாங்க. அவங்களைக் குற்றம் சொல்லலை. அப்பாவோட ஆப்ரேஷன் செலவினால வீட்டில பயங்கரமான பணத்தட்டுப்பாடு. அதனால கோபப்படறாங்க. ஆனா அவங்க திட்டும் பொழுது மனசு படற வேதனை! தாங்க முடியலைடா. பேசாம கொள்ளை அடிச்சாவது வீட்டுக்குப் பணம் குடுத்து அம்மாவோட கடுமையான திட்டுகள்ல இருந்து தப்பிக்கலாம் போல இருக்குடா.."

"டேய்..." அவனது வாயைத் தன் கைகளால் பொத்தினான் வாசு.

"என்னடா பேசற? கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த நாம இந்த மாதிரி தவறான போக்கை மனசால கூட சிந்திச்சுப் பார்க்கக் கூடாதுடா."

"முடியலைடா. வீட்டுக்குள்ள இருக்க முடியலை. அம்மா அப்பா கஷ்டத்தைப் பார்க்கவும் முடியலை, அவங்க குத்திக் காமிச்சுப் பேசறதை சகிச்சுக்கவும் முடியலை..."

"அதுக்காக? திருட்டும், புரட்டும் பண்ணித்தான் வீட்டுக்கு பணம் குடுக்கணுமா? ஏதோ வெறுப்புல பேசிட்ட. இனிமேல விளையாட்டாக் கூட இப்படிப் பேசாதே."

"சரிடா. பேப்பரைப் பார்த்துத் தொலை. ஏதாவது விடிவு காலம் பிறக்குதான்னு பார்ப்போம்."

வாசுவின் கையில் இருந்த செய்தித்தாளைப் பிரித்தான். சரவணனும், வாசுவின் தலையோடு தலை ஒட்டியபடி வேலை வாய்ப்புக்கான விளம்பரங்கள் மீது கண்களை ஓட விட்டான்.

"டேய்... இதோ பாருடா..." திடீரென வாசு துள்ளிக் குதித்தான். தொடர்ந்தான். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் விளம்பரம் குடுத்திருக்காங்கடா. அந்த கம்பெனியோட ஆபிசுக்கு சீஃப் அக்கவுண்டண்ட் தேவையாம். அதுபோக செக்ரட்டரி போஸ்ட்டுக்கும் ஆள் தேவையாம். பெரிய கம்பெனிடா சரவணா. தனியார் நிறுவனம்ன்னாலும் சம்பளம் நிறைய குடுப்பாங்களாம். சலுகைகள் எல்லாம் தாராளமா இருக்குமாம். இங்கே மட்டும் நமக்கு வேலை கிடைச்சுடுச்சுன்னா... கவர்மெண்ட் வேலை கிடைச்ச மாதிரிடா. சொல்லி வச்ச மாதிரி ரெண்டு போஸ்ட்டுக்கு விண்ணப்பங்கள் கேட்டிருக்காங்க பாரேன்...."

"டேய்...டேய்.... நிறுத்துடா. என்னவோ நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ராஜசேகரன்  இன்டஸ்ட்ரீஸ்ல வேலையே கிடைச்சுட்ட மாதிரியில்ல அடுக்கிக்கிட்டே போற? பேப்பர்ல வந்திருக்கறது விளம்பரம் மட்டும்தாண்டா. உனக்கோ எனக்கோ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கிடைச்சுட்ட மாதிரி ஒரேயடியா குதிக்காத. இன்ட்டர்வியூன்னாலே அலர்ஜியா இருக்கு. பெரிய கம்பெனி. அவங்களுக்குள்ளயே வேண்டிய ஆளுக்குத்தான் வேலை குடுப்பாங்க. விளம்பரம், இன்ட்டர்வியூ இதெல்லாம் வெறும் கண்துடைப்புடா.."

"ப்ளீஸ் சரவணா, விரக்தி ஆகாத. நம்பிக்கைதாண்டா வாழ்க்கைக்கு ஆதாரம். முயற்சி செய்வோம். நல்ல வேலை. நம்ப கஷ்டமெல்லாம் தீர்ந்துடும். நாம்பளும் உத்யோகத்துல சேர்ந்து கௌரவமா தலைநிமிர்ந்து நிக்கணும். நீ எத்தனை நாளுக்கு உங்க அம்மா கிட்ட பேச்சு கேட்டுக்கிட்டிருக்கறது?... நான் எத்தனை நாள் என் அண்ணன் கையையே எதுக்கெடுத்தாலும் எதிர்பார்த்துக்கிட்டு நிக்கறது! இதுக்கெல்லாம் ஒரு முடிவு வர வேண்டாமா? டேய் சரவணா... எனக்கென்னமோ மனசுக்குள்ள பட்சி பறக்குதுடா நம்பளுக்கு அந்த ராஜசேகரன்  இன்டஸ்ட்ரீஸ்ல வேலை கிடைக்கும்னு..."

"என்ன?! மனசுக்குள்ள பட்சி பறக்குதா? இப்ப என் வயித்துல பூச்சி பறக்குது பசியினால. காலையில காபியைக் கூட நிறுத்திட்டேன். ஓடின ஓட்டத்துக்கு, வயிறு கொண்டா கொண்டான்னு கேட்குது. அம்மா கிட்ட திட்டு வாங்கிக்கிட்டாவது ரெண்டு இட்லியோ தோசையோ சாப்பிட்டாத்தான் மதியம் வரைக்கும் தாக்கு பிடிக்கும். வாடா போலாம்." சரவணன், வாசுவின் கையைப் பிடித்து இழுத்தான்.

"டேய், பொறுமையா நான் சொல்றதைக் கேளுடா. எதிர்காலம் இருட்டா தெரியுதுடா. பயம்மாவும் இருக்கு. நமக்குன்னு எந்த வருமானமும் இல்லாம வாழ்நாள் முழுசும் எப்பிடிடா ஓட்ட முடியும்? அண்ணனோட நிழல்ல எத்தனை நாளைக்கு நிக்க முடியும்? அவனுக்கு ரெண்டு குழந்தைங்களாயிடுச்சு. அதுவே அவனுக்கு பாரம். நானும் சேர்ந்து அவனுக்கு கஷ்டத்தைக் குடுத்துட்டிருக்கேன். பஸ்சுக்கு காசு கேக்கறதுன்னா கூட அண்ணா, அண்ணி முகத்தைப் பார்த்து மூடைப் பார்த்துக் கேட்கணும். இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்து நிக்கற நாம, இன்னும் எவ்வளவு நாளைக்கு மத்தவங்க கையை எதிர்பார்க்க முடியும்? பெத்த பாசம், ரத்த பாசமெல்லாம் பணம் இல்லைன்னா சுத்தமா போயிடும்டா. இதை நான் தப்பா சொல்லலை. இன்னிக்கு நிலைமை அப்படி இருக்கு. ஒரு ஆண் வருமானத்துல குடும்பம் முழுசும் சாப்பிடறதே கஷ்டம். மத்த செலவுகள் எவ்வளவு இருக்கு? ஏதோ நம்பளால முடிஞ்ச ஒரு தொகையை மாசா மாசம் குடுத்துட்டா அவங்க பாரமும் குறையும். நம்பளும் இப்பிடி தண்டமா சுத்திக்கிட்டிருக்கோமேன்னு வருத்தப்பட வேண்டியதில்லை. கௌரவமா, தலை நிமிர்ந்து நடக்கலாம்" வாசு பேசுவதைக் கேட்ட சரவணன், சில நிமிடங்கள் யோசித்தான்.

"நீ சொல்றதும் நியாயமாத்தான் தோணுது. எங்க வீட்ல நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ஆபரேஷன் முடிஞ்சப்புறம் அப்பாவை ஆறு மாசம் வேலைக்குப் போகக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனாலதான் அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம். நீ சொல்ற மாதிரி, அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் நடத்தற இன்ட்டர்வியூவுக்குப் போகலாம்."

"தாங்க்ஸ்டா சரவணா. நிச்சயமா நமக்கு அங்கே வேலை கிடைக்கும். இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுட்டோம். இனிமேலும் நம்பளை அந்தக் கடவுள் கஷ்டப்பட விட மாட்டார். என் மனசுல இருந்த நம்பிக்கை ரொம்ப ஸ்ட்ராங்கா  வந்துருச்சு."

"பசுமரத்துல ஆணி அடிச்சாப்ல, நீ சொல்லச் சொல்ல உன்னோட நம்பிக்கை என் மனசுலயும் பச்சுன்னு பிடிச்சுருச்சு."

இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.

டீக்கடையைப் பார்த்ததும், புல்லைப் பார்த்த பசுவைப் போல இருவரும் நின்றனர். சரவணன், தன் சட்டைப் பையைத் துழாவினான். ஐம்பது பைசா நாணயம் மட்டும் கையில் வந்தது.

வாசு, தன் காலியான ஷர்ட் பையைப் பிதுக்கிக் காண்பித்தான்.

"இவ்வளவு நேரத்துக்கப்புறம் அம்மாகிட்டப் போய் காபியோ, டீயோ கேக்கறதுன்னா பயம்மா இருக்குடா. என்ன பண்றது? ஐம்பது காசை பிச்சைக்காரனுக்குப் போட்டா கூட திட்டிட்டு போறான். இந்த லட்சணத்துல நாம டீ குடிக்க முடியுமா?"

"சரி வாடா, இந்தப் பஞ்சமெல்லாம் இனி கொஞ்ச நாளைக்குத்தான்" நெஞ்சத்தில் நம்பிக்கை நட்சத்திரம் தோன்ற, இருவரும் களைப்பை உணராமல் உற்சாகமாக நடந்தனர்.


7

கரத்திலேயே மிக அதிகமான கட்டணம் வசூலிக்கும் நவீன வசதிகள் யாவும் அடங்கிய மருத்துவமனையின் முன் பிரசாத்தின் புது ஓப்பல் கார் நின்றது. காரில் இருந்து இறங்கி, ஸ்வர்ணாவை கைத்தாங்கலாக மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றான்.

வரவேற்பாளரிடம் சென்ற பிரசாத், "டாக்டர் ரமணி இங்கே அட்மிட் பண்ணச் சொல்லியிருக்காங்க..." என்று சொல்ல ஆரம்பித்தான்.

"பேஷண்ட் நேம் என்ன சார்."

"மிஸஸ். ஸ்வர்ணா பிரசாத்."

"ஓ.. அவங்களா? மேடம் ஏற்கெனவே போன்ல சொல்லிட்டாங்க. ஏ.ஸி. ரூம்தானே சார் வேணும்?"

"ஆமா. ஏ.ஸி. ரூம்தான் வேணும்."

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்."

"சரி!"

பிரசாத்தும், ஸ்வர்ணாவும் அங்கே போடப்பட்டுள்ள நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.

வரவேற்பாளர், இன்ட்டர்காமில் அறிவிப்புகளைக் கொடுத்து ஸ்வர்ணா அங்கே அட்மிட் ஆவதற்குரிய ஏற்பாடுகளை மிக விரைவாக செய்து முடித்தாள்.

அணிந்திருந்த யூனிஃபார்ம் பளிச்சென இருக்க, சிரித்த முகத்துடன் நர்ஸ் அர்ச்சனா அங்கே வந்தாள்.

"நீங்கதானே மிஸஸ். ஸ்வர்ணா பிரசாத்?"

"ஆமாம்" ஸ்வர்ணா பதில் கூறியதும் அவளை ஸ்பெஷல் ஏ.ஸி. ரூமுக்கு அழைத்துச் சென்றாள் அர்ச்சனா.

அவர்களைப் பின் தொடர்ந்தான் பிரசாத்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறை போல மிக வசதியாக இருந்த அறையினுள் அனுமதிக்கப் பட்டாள் ஸ்வர்ணா.

பிரசாத்தைப் பார்த்து, "வெயிட் பண்ணுங்க சார். டாக்டர் ரமணி இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க."

"சரி" பிரசாத் சொன்னதும் அர்ச்சனா வெளியேறி சென்றாள்.

"என்னங்க, வலி அதிகமாவே இல்லை. எதுக்காக என்னை இவ்வளவு சீக்கிரம் ஆஸ்பத்திரியில சேர்த்துட்டீங்க?"

"டாக்டர் ரமணி என்ன சொன்னாங்கன்னு மறந்திட்டியா? நீ பலவீனமா இருக்கறதுனால வலியோட அறிகுறி லேசா தெரிஞ்சவுடனேயே அட்மிட் பண்ணச் சொன்னாங்கள்ல? எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியா இரு."

"உங்க அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்களா?"

"டாக்டரை பார்த்ததுக்கப்புறம்தான் அவருக்கு போன் பண்ணனும்."

"என்னாலதான் உங்க அப்பாவுக்கும் உங்களுக்கும் பிரச்னை..."

"இத பாரு ஸ்வர்ணா, இந்த முறையும் பெண் குழந்தை பிறந்தா அவருக்குப் பிரச்னை. எந்தக் குழந்தை பிறந்தாலும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. டெலிவரி ஆகப் போற இந்த நேரத்துல கண்டதையும் நினைச்சு கவலைப்படாம இரு..." அவன் பேசி முடிப்பதற்குள் டாக்டர் ரமணி உள்ளே வந்தார்.

"என்ன பிரசாத், ஸ்வர்ணா என்ன சொல்லுது? வழக்கம் போல உங்க அப்பாவை நினைச்சு பயந்துக்கிட்டிருக்குதா?"

"அதை ஏன் டாக்டர் கேட்கறீங்க? எப்ப பார்த்தாலும் அது விஷயமாத்தான் இவளுக்கு கவலை."

"சரி பிரசாத், நீங்க கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. ஸ்வர்ணாவை செக் பண்ணிட்டு கூப்பிடறேன்."

பிரசாத் வெளியேறினான்.

ஸ்வர்ணாவிற்கு தைரியம் சொல்லிய அவன் மனதிற்குள் உளைச்சல் புயல் உருவானது. 'டாக்டர் ரமணி, ஸ்வர்ணா ரொம்ப பலவீனமா இருக்கறதா சொல்றாங்க. இந்த பிரசவம் நல்லபடியா நடந்து, ஸ்வர்ணா பழையபடி கலகலப்பா சந்தோஷமா வீட்டுக்கு திரும்பி வரணும். ஏற்கெனவே அவ பெற்றெடுத்த முதல் குழந்தைய பறி குடுத்த துயரம் இன்னும் அவளுக்கு மாறல. அந்தக் குழந்தையையே நினைச்சுக்கிட்டு தன்னைத்தானே வருத்திக்கறா. என் மேல உயிரையே வச்சிருக்கற ஸ்வர்ணா, இப்ப பிறக்கப் போற குழந்தையால சந்தோஷமா இருக்கணும்.’ பிரசாத்தின் மனதிற்குள் ஓடிய எண்ணங்களைத் தடுத்து நிறுத்தியது டாக்டர் ரமணியின் குரல்.

"உள்ளே வாங்க பிரசாத்."

பிரசாத் உள்ளே சென்றான்.

"நைட் பத்து மணிக்குள்ள குழந்தை பிறந்திடும் பிரசாத். ஒண்ணும் பயப்பட வேண்டியதில்ல. நீங்க இங்கே இப்ப வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. உங்க ஆபீஸ் போய் உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு எட்டு மணிக்கு வந்தா போதும். அதுக்கு முன்னாடி தேவைப்பட்டால் உங்க மொபைலுக்கு நானே கூப்பிடறேன். நர்ஸ் வந்து மெடிசின் லிஸ்ட் குடுப்பாங்க. அதை வாங்கிக் குடுத்துட்டு நீங்க கிளம்பலாம்."

"சரி டாக்டர்." டாக்டர் ரமணி வெளியேறியதும் ஸ்வர்ணாவின் அருகே வந்தான் பிரசாத்.

"பார்த்தியா, ஒண்ணும் பயம் இல்லைன்னு டாக்டரே சொல்லிட்டாங்க. உன்னோட ஹாண்ட் பேக்ல நிறைய புக்ஸ் கொண்டு வந்திருக்கியே, அதப் படிச்சிக்கிட்டிரு. ஏதாவது அவசரம்னா டாக்டரே என்னை மொபைலில் கூப்பிடறதா சொல்லியிருக்காங்க."

"சரிங்க."

பிரசாத் கிளம்பினான்.

டாக்டர் ரமணியின் வைத்திய அறிவையும் கணிப்பையும் மீறி ஸ்வர்ணாவிற்கு அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டது.

இதை அறிந்த டாக்டர் ரமணி, ஸ்வர்ணாவை லேபர் அறைக்கு அழைத்து வர அறிவிப்பு கொடுத்தார். பிரசாத்திற்கும் தகவலை கூறினார். இரவு எட்டு மணிக்கு ஸ்வர்ணாவிற்கு பெண் குழந்தை நல்லபடியாக பிறந்தது. குழந்தையைப் பார்த்த ஸ்வர்ணா மகிழ்ச்சி கொண்டாள். அவளது மகிழ்ச்சியில் பிரசாத்தும் பங்கு கொண்டான். ராஜசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

8

ராஜசேகரன்  இன்டஸ்ட்ரீஸ் தனக்கே உரிய கம்பீரத்துடன் காட்சி அளித்தது. எங்கெல்லாம் க்ரானைட் இழைக்க முடியுமோ அங்கெல்லாம் இழைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு அறையில் இருந்த மேஜை, சோஃபா ஸெட்கள் அனைத்தும் உயர்ந்த ரக தேக்கு மரத்தால் மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தன. வெளிநாட்டு நவீன காபி மிஷின், மேக்கப் போட்ட நடிகையைப் போல அழகாக இருந்தது. 'சில்’ என்ற ஏ.ஸி. குளிர், சென்னை என்பதையே மறக்க வைத்தது.

கையில் ஃபைலுடனும், கண்ணில் கனவுகளுடனும் பல பட்டதாரி இளைஞர்கள் பிரமிப்புடன் உட்கார்ந்திருந்தனர். நம்பிக்கை நிறைந்த நெஞ்சத்துடன் காத்திருந்தனர். இவர்களுள் சரவணனும், வாசுவும் அதே உணர்வுகளுடன் மௌனமாய் உட்கார்ந்திருந்தனர்.

இருப்பதில் சுமாரான பான்ட், ஷர்ட்டை பளிச் என துவைத்து அயர்ன் செய்து, பழைய ஷுக்களுக்கு பாலீஷ் போட்டு சற்று பளபளப்பாக்கி அணிந்து வந்திருந்தனர்.

"சரவணா, ஆபீஸ் எப்படி இருக்கு பார்த்தியாடா? நாம காத்துக் கிடந்ததுக்கு இங்கே வேலை கிடைக்கணும்டா. கிடைக்கும்டா." கிசு கிசுப்பாய் வாசு பேசினான்.

"இந்த இன்ட்டர்வியூவுக்கு இன்னும் ஆறு பேர் வந்திருக்காங்க."

"ஆறு பேர்தானே? நேர்மையான இன்ட்டர்வியூவா இருந்தா நம்பளோட தகுதிக்குத்தான் கிடைக்கணும்."

"சரி, சரி. பேசாம உட்கார். சத்தம் போடாதே." சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே யூனிஃபார்ம் அணிந்த ப்யூன் "ஸார் வந்துட்டார்" என்று சொல்லிக் கொண்டே பரபரப்பாக வெளியே ஓடினான். அங்கிருந்த அனைவரும் சுதாரித்துக் கொண்டு நேராக உட்கார்ந்தனர்.


பிரசாத், ஷுக்களின் ஒலி 'டாக் டாக் என ஒலிக்க உள்ளே வந்தான். அனைவரது வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டு புன்னகையோடு, தன் அறைக்குள் நுழைந்தான். எக்ஸிக்யூடிவ் சுழற்நாற்காலியில் இருந்த மிருதுவான குஷன், அவனை லாவகமாக ஏற்றுக் கொண்டது. இன்ட்டர்காமில் இரண்டு நம்பர்களை அழுத்தினான்.

"குட் மார்னிங் பாஸ்" சாக்லேட் குரலில் வந்தனா, காலை வணக்கத்தை தெரிவித்தாள். வந்தனா பிரசாத்தின் காரியதரிசி. அதிக அலங்காரம் இன்றி இயற்கையான அழகு. அடர்த்தியான கூந்தல். காதோரம் சுருண்டிருந்த முடிக்கற்றைகள், எடுப்பான மூக்கும், பெரிய கண்களும், சிறிய உதடுகளும் கொண்ட முகம். அளவான உயரம், கச்சிதமான உடல்கட்டு. இவற்றின் மொத்த உருவம் வந்தனா.

"வந்தனா, இன்ட்டர்வியூவுக்கு வந்திருக்கறவங்களோட பயோடேட்டா மற்றதெல்லாம் என்னோட டேபிள்ல இருக்கா?"

"யெஸ் ஸார். என் கிட்டயும் ஒரு காப்பி இருக்கு. ஒவ்வொருத்தரா அனுப்பட்டுமா ஸார்?"

"அனுப்பலாம். அதுக்கு முன்னால, லாயர் நீலகண்டனோட மகன் விஜயகுமாரோட ஃபைலை மறக்காம வச்சுட்டீங்களா?"

"அதையும் வச்சுட்டேன் சார். ஆனா அவர் இன்னும் வரலை."

"ஆமா, நானும் கவனிச்சேன். ஏன் இப்பிடி பொறுப்பில்லாம இருக்கான்னு எனக்குத் தெரியலை. சிபாரிசுக்காக வர்றவங்க இவ்வளவு அலட்சியமாவா இருக்கறது? சரி, நீங்க மத்தவங்களை அனுப்புங்க."

"சரி ஸார்." சரிந்து விழும் துப்பட்டாவை சரி செய்தபடி வரவேற்பு அறைக்கு வந்தாள்.

"மிஸ்டர் வினோத், கூப்பிட்டதும் ஒரு வாலிபன் எழுந்தான். "நீங்க உள்ளே போங்க." அவன் போனான்.

புதிதாக இன்னொரு இளைஞன் வந்தான்.

"ஹாய் வந்தனா..." அவன் கூப்பிட்டதும், கண்ணைச் சிமிட்டி அவனுக்கு சிக்னல் காண்பித்தாள். அதன்பின், வந்தவன் அமைதியாக ஸோஃபாவில் உட்கார்ந்தான். அவன், வந்தனாவை அதிகம் பழகியவன் போல கூப்பிட்டதையும், அவள் அவனுக்கு கண்ணைச் சிமிட்டி சிக்னல் கொடுத்ததும், அதைக் கவனித்த அவன் சமாளித்தபடி உட்கார்ந்ததையும் சரவணன் பார்த்து விட்டான். வாசுவை சுரண்டினான். வாசு திரும்பி, கண்களாலேயே 'என்ன’வென்று கேட்டான்.

வாசுவின் காதிற்குள் பேசினான் சரவணன்.

"டேய், இப்ப ஒருத்தன் உள்ளே வந்தான்ல?"

"ஆமா, அவனுக்கென்ன?"

"அந்த செக்கரட்டரி பொண்ணு வந்தாள்ல, அவளுக்கு அவன் ரொம்ப வேண்டியவன் போலிருக்கு?"

"ஏன்? எதை வச்சு அப்பிடி சொல்ற?"

"அவன் உள்ளே வந்து, அவளைப் பார்த்ததும் ஹாய் வந்தனான்னு ரொம்ப சிநேகிதமா பேசினான். அவ கண்ணைக் காட்டினதும் இவன் அவளைத் தெரியாத மாதிரி இருந்துட்டான்."

"கண்ணைக் காட்டினதுனால அவளுக்கு வேண்டியவனா இருக்கணும்னு சொல்ற. சரி. அதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப் படறே?"

வாசு அடிக்குரலில் கேட்டான்.

"சரியான மாங்கா மடையனா இருக்கியேடா. அவ, இவனுக்காக இந்த வேலையை சிபாரிசு பண்ணி இருப்பா. அது வெளியில தெரிஞ்சுடக் கூடாதுன்னு ஜாக்கிரதையா இருந்திருக்கா."

"ஓகோ..."

"என்னடா ஓகோ... இந்த இன்ட்டர்வியூ நேர்மையான இன்ட்டர்வியூ இல்லை. ஒண்ணு, இப்ப வந்தவன் இந்த வந்தனாவோட ஆளா இருக்கணும். அல்லது இந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் ஓனருக்கு வேண்டிய ஆளா இருக்கணும். என்னமோ பெரிய கம்பெனி, நேர்மையான நிறுவனம் அது இதுன்னு நீதான் அளந்து விட்ட. வாடா போலாம். இப்ப வந்தான் பாரு அவனுக்குத்தான் வேலை குடுப்பாங்க. இன்னொரு போஸ்ட்டுக்கு இந்த கும்பல்லயே வேற எவனாவது சிபாரிசோட வந்திருப்பான். நாம இந்த இன்ட்டர்வியூவை அட்டென்ட் பண்ணினா இளிச்ச வாயன்களாத்தான் திரும்பி போகணும்..."

"அவசரப்படாதேடா. அந்த வந்தனாவுக்கும், இவனுக்கும் வேற ஏதாவது தொடர்பு இருக்கலாம். அதாண்டா காதல் கீதல்னு..."

"காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இதையும் அதையும் முடிச்சுப் போடாத."

"இந்த இன்ட்டர்வியூல மட்டும் நேர்மை தவறி, சிபாரிசுக்காக எவனுக்காவது வேலை குடுத்துரட்டும் பார்த்துக்கறேன்" சரவணன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

"உன்னால என்னடா பண்ண முடியும்?"

"சட்டப்படி ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா திட்டம் போட்டு இந்த கம்பெனி முதலாளியை பழி வாங்குவேன்."

"எனக்கென்னமோ, நீ தேவை இல்லாம கற்பனை பண்ணி வீணா டென்ஷன் ஆகறியோன்னு தோணுது."

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்றவர்களின் இன்ட்டர்வியூ முடிந்து விட்டது.

"மிஸ்டர் சரவணன் வந்தனா கூப்பிட்டதும் வேறு வழியில்லாமல் சரவணன் உள்ளே போக நேரிட்டது. அவனுக்கு முடிந்ததும் கடைசியாக வாசுவின் முறை வந்து அவன் உள்ளே போனான். வெளியே வந்த சரவணன், வந்தனா அமர்ந்திருந்த அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.

"யெஸ். கம். இன்."

சரவணன் உள்ளே போனான். வந்தனாவின் மேஜை மீது மிஸஸ். வந்தனா ஸ்ரீதர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய ப்ளாஸ்டிக் போர்டு காணப்பட்டது.

"என்ன ஸார்? என்ன விஷயம்? உங்க இன்ட்டர்வியூ முடிஞ்சுதா?"

"என்னோட இன்ட்டர்வியூ முடிஞ்சது. உங்களை இப்ப நான் இன்ட்டர்வியூ பண்ணப் போறேன்."

"என்ன ஸார்? விளையாடறீங்களா?"

"நான் ஒண்ணும் விளையாடலை. நீங்கதான் இந்த ஆபிஸ்ல கண்ணாமூச்சி விளையாட்டு கண்ணைச் சிமிட்டி ஆடறீங்க..."

"மிஸ்டர்..."

"கோபமா கத்தினா நான் பயந்துடுவேனா? கேக்கற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொன்னா எல்லாமே தெளிவாயிரும். இன்ட்டர்வியூவுக்கு கடைசியா ஒருத்தன் வந்தானே அவனுக்கு கண்ணாலேயே சைகை காமிச்சீங்களே, எதுக்காக? அவன் உங்களுக்கு வேண்டியவனா?"

"சிச்சீ... இல்லை..."

"அப்போ... யார் அவன்?"

"அ... அ... அது வந்து... அவர்..."

"ம்.... சொல்லுங்க."

"அது... அதை ஏன் நான் உங்ககிட்ட சொல்லணும்?"

"சொல்லிட்டா நல்லது. ஒருத்தரோட மனைவியான நீங்க இன்னொரு அந்நிய வாலிபன் கிட்ட கண்ணால பேசினா அதுக்கு கண்ணு, மூக்கு வச்சு ஆயிரம் கதை திரிக்க முடியும். சொல்லுங்க. அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ ஓரளவுக்கு கண்ணியமா கேட்டுக்கிட்டிருக்கேன். சொல்லலைன்னா உங்களோட கௌரவம் கந்தலாகி மானம் கப்பலேறிடும். சொல்லுங்க.."

"அ... அவர்..."

"இங்க பாருங்க மேடம், எங்களை மாதிரி வேலை இல்லாத பட்டதாரிகள் நிலைமை ரொம்ப கேவலமா இருக்கு. ஒவ்வொரு தடவையும் நம்பிக்கையோட இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்றோம். நல்ல மார்க்கு, சிறந்த தகுதிகள் இருந்தும், எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை, சிபாரிசுக்காக தகுதியே இல்லாதவங்களுக்கு கிடைச்சுடுது. இது நியாயமே கிடையாது. ஏற்கெனவே வசதியா வாழறவங்க, சும்மா கௌரவத்துக்கு வேலைன்னு ஒண்ணு வேணும்னு நினைக்கறாங்க. அவங்களுக்கு பெரிய இடத்து சிபாரிசு இருந்தா போதும். உடனே வேலை கிடைச்சிடும்.


ஆனா பெத்தவங்களோட உழைப்பினால கஷ்டப்பட்டு படிச்ச எங்களை மாதிரி ஏழை பட்டதாரிகள் தகுதிகள் இருந்தும் வானம் பார்க்கற பூமியா காத்துக் கிடக்கணும். இது நியாயம்னு உங்களுக்குத் தோணுதா? இப்பவாவது சொல்லுங்க, அவன் யாரு? இந்த இன்ட்டர்வியூ நியாயமான இன்ட்டர்வியூதானா?"

"அது வந்து... அவர் பேர் விஜயகுமார். சேலத்துல பெரிய லாயர் நீலகண்டனோட மகன். என் பாஸோட அப்பாவுக்கு லாயர் நீலகண்டன் நெருங்கிய நண்பர். நீலகண்டன் ஸார், எங்க பெரிய பாஸ் மிஸ்டர் ராஜசேகரன்கிட்ட சிபாரிசுக்காக போயிருக்கார். ராஜசேகரன் ஸார், என்னோட பாஸ் மிஸ்டர் பிரசாத்தைக் கூப்பிட்டு சொல்லிட்டார். இந்த வேலையை விஜய்குமாருக்குத்தான் குடுக்கணும்னு. ஆனா சிபாரிசுக்காக வந்தவர்னு வெளியே தெரியக்கூடாதுன்னு மிஸ்டர் பிரசாத் சொல்லி இருந்தார். அதனாலதான் அந்த விஜயகுமார் வந்து என் கிட்ட சகஜமாக பேசினதும் கண்ணைக் காமிச்சேன். விஜயகுமார் இங்கேதான் படிச்சார். படிப்பெல்லாம் சுமார்தான். இங்கே படிச்சப்ப எங்க ஆபீசுக்கு பிரசாத் ஸாரை பார்க்க அடிக்கடி வருவார். அதனால என்னைப் பார்த்தும் ஹாய் வந்தனான்னு கூப்பிட்டார். மத்தபடி அவருக்கும் எனக்கும் வேற எந்த சம்பந்தமும் கிடையாது."

"அஞ்சு வருஷமா வேலை தேடி கிடைக்காம, பெத்தவங்களுக்கு பாரமா சும்மா உட்கார்ந்திருக்கறது எவ்வளவு கொடுமையா இருக்கு தெரியுமா? ஒவ்வொரு இன்ட்டர்வியூவுக்கு வரும்போதும் இந்த வேலை 'நமக்கு கிடைச்சுடும் ங்கற நம்பிக்கையை நெஞ்சுல சுமந்துக்கிட்டு வர்றோம். ஆனா சிபாரிசுக்கு முக்கியத்துவம் குடுத்து வேண்டப்பட்டவங்களுக்கு வேலையை குடுத்துடறாங்க. ஏதாவது சுயமா தொழில் செஞ்சு முன்னேறலாம்னா... முதல் போடற பணத்துக்கு ஏது வழி? தற்கொலை செஞ்சுக்கலாமான்னு கூட இருக்கு..." கோபமாக பேச ஆரம்பித்த சரவணன், சோகமாக பேச ஆரம்பித்தான்.

"ஸாரி மிஸ்டர் சரவணன். உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. ஆனா... இந்த ஆபீஸ்ல நானும் உத்யோகம் பார்க்கற ஒரு எம்ப்ளாயிதான். முதலாளி இல்லை. சம்பளம் குடுக்கற அவங்க சொல்றதை, சம்பளம் வாங்கற நான் செஞ்சுதானே ஆகணும்? இல்லைன்னா நானும் வேலை இல்லாத வெறும் ஆளா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கணும்."

"இங்கே வந்து இப்பிடி ஏமாந்து போய் அவமானப்படறதை விட பெத்த அம்மா திட்டிக்கிட்டே போடற சோற்றை சாப்பிடறதுல எந்தக் கேவலமும் இல்லை. ஆனா... ஒண்ணு மட்டும் சொல்றேன் வந்தனா. உங்க பாஸோட நண்பர் மகன் விஜயகுமாருக்கு இந்த உத்யோகத்தை குடுத்தாங்கன்னா உங்க பாஸ் மிஸ்டர் பிரசாத்தைப் பழி வாங்காம விடமாட்டேன். வயசான அம்மா அப்பாவை உட்கார வச்சு சோறு போட வேண்டிய நான் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் இது மானப்பிரச்னை. மனித நேயப் பிரச்னை. இந்த வேலை கிடைக்காட்டாலும் என்னை மாதிரி கஷ்டப் படற ஒரு பட்டதாரிக்கு, நியாயமான முறையில கிடைக்கணும். இல்லைன்னா... உங்க முதலாளியை எப்பிடி வஞ்சம் தீர்க்கறேன்னு பொறுத்திருந்து பாருங்க" மறுபடியும் கோபம் தலைக்கு ஏறியது சரவணனுக்கு.

"மிஸ்டர் சரவணன், கோபப்படாதீங்க. ப்ளீஸ்."

இதற்குள், வாசு அவனைத் தேடி அங்கே வர, அவனைப் பார்த்ததும் மேலும் கத்த ஆரம்பித்தான் சரவணன்.

"என்னடா, ரொம்ப இன்டலிஜெண்ட்டா கேள்வி கேட்டாரா அந்த பிரசாத்? அதெல்லாம் சும்மா வெத்து வேஷம்டா. உன் காதுல பூ சுத்தி விட்டிருக்காரா அந்தப் பணக்கார தொழில் அதிபர்? அவருக்கெல்லாம் கஷ்டம்னா என்னடா தெரியும்? ஏ.ஸி. ரூம்ல பிறந்து வளர்ந்து வாழற அவருக்கு பசின்னா என்னன்னு தெரியுமாடா? ருசிக்காக மட்டுமே சாப்பிடற அந்த பணக்காரருக்கு நம்பளோட பசி, பட்டினி தெரிஞ்சா இப்பிடி சிபாரிசுக்காக வர்ற இன்னொரு பணக்காரனுக்கு வேலை போட்டுக் குடுப்பாரா..."

சரவணன் கோபம் மாறாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான்.

வாசு அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவிற்கு பயத்தில் வயிறு கலங்கியது.

9

"அந்த பிரசாத்தைப் பழி வாங்காம விட மாட்டேன். அந்தப் பணக்காரப் படுபாவியை நிச்சயமா நான் பழி வாங்கியே தீருவேன்" ராயபுரம் ரௌடி ரங்கன், தன் முகத்தில், மூக்கின் அருகே உள்ள பெரிய கறுப்பு மருவைத் திருகியபடியே கோபத்தில் உறுமினான். ஆஜானுபாகுவான உடல். முகத்தில் முரட்டுத்தனம் காணப்பட்டது. பார்ப்பவர்கள் பயப்படும்படியாக அடர்ந்த மீசையை முறுக்கி விட்டிருந்தான். கட்டம் போட்ட லுங்கியும், பழுப்பு நிறத்தில் கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். கழுத்தில், தாயத்து கோர்த்த சிகப்புக் கயிற்றை கட்டி இருந்தான்.

"என்னடா வேம்புலி, நான் பேசிக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வாயை இறுக்கி மூடிக்கிட்டிருக்க? காலையில தின்ன பாப்பம்மா கடை இட்லி இன்னுமா உன் வாய்க்குள்ள அடைச்சிக்கிட்டிருக்கு?"

"ஐய்ய, கோவிச்சுக்காத அப்பாரு. யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன். பழி தீர்க்கணும்னா அந்த பிரசாத்தை தீர்த்துட வேண்டியதுதானே?"

"ஆளைத் தீர்த்துட்டா ஆயுசு முடிஞ்சுடும். ஆயுசு முடியறது அவனுக்கு தண்டனை கிடையாது. அவன் உயிரோட இருந்து அணு அணுவா வதைபடணும். உடம்பால வலி குடுக்கறதெல்லாம் அவனுக்கு தண்டனை கிடையாது. மனசால அவன் துன்பப்பட்டு ஒரு புழு மாதிரி துடிக்கணும். அதுக்கு ஏதாவது வழி சொல்லுடான்னா.. அந்த ஆளுக்கு குழி தோண்டச் சொல்றியே? நல்லா திங்கறதுக்குத்தாண்டா நீ லாயக்கு..."

"ஐடியா சொல்றதுக்குள்ள அவசரப்படாத அப்பாரு. புழுவாத் துடிக்கணும்னா, அவன் புள்ளக் குட்டிகளை எதுவாச்சும் பண்ணலாமா?" தீப்பெட்டி குச்சியினால் பல்லைக் குத்திக் கொண்டே கேட்டான் வேம்புலி.

சுமார் முப்பது வயதான வேம்புலி வாட்ட சாட்டமாய் இருந்தான். அவனது பேச்சில் சென்னைத் தமிழ் விளையாடியது. பான்பராக்கைப் போட்டு மெல்லுவதும், பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட துண்டுகளை குச்சியினால் குத்தி எடுப்பதும் வழக்கமாகி இருந்தது. தெருவில் விற்பனை செய்யப்படும் மலிவான முழுக்கால் சட்டையும், பல வண்ணங்களில் படம் வரையப்பட்ட டி.ஷர்ட்டும் அணிந்திருந்த வேம்புலி, அவனது பேட்டையில் சூப்பர் ஸ்டார். உடல் உழைத்து வேலை செய்வான். களைத்துப் போனால் வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவான். தினமும் காலையில் அரசு மைதானத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை வலுவாக உரம் ஏற்றி வைத்திருந்தான்.

நியாயம் என்று அவனது மனதிற்கு பட்டால் அதற்காக அடிதடியில் இறங்குவான். அடிதடியில் எப்போதும் வெற்றி இவன் பக்கம் என்பதால் பேட்டை ஸ்டார் ஆகி இருந்தான்.


அவ்வப்போது சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகளில் சண்டை போடும் கும்பலில் ஒருவனாக, சண்டை போடுவற்காக ஷுட்டிங் போவதுதான் அவனது தொழில். ஊரெங்கும் காலரா நோய் பரவியபோது, அவனது பெற்றவர்களையும் அந்த நோய் பற்றிக் கொள்ள, வேம்புலியை அநாதையாக்கிவிட்டு போய் சேர்ந்தனர்.

ரங்கனுக்கும் வேம்புலியின் வயதில் ஒரு மகன் இருந்தபடியால் அவனுடன் சேர்த்து வேம்புலியையும் தன் சொந்த மகனைப் போல வளர்த்தான். ரங்கனும், ரங்கனின் மகன் அழகிரியும், சென்னையில் ராஜசேகரனின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.

"ஏன் அப்பாரு, அழகிரி அண்ணன் தற்கொலை பண்ணிக்கினானே, அதுக்குக் காரணம் உங்க முதலாளி பிரசாத் ஐயான்னா சொல்ற?"

"அட, நீ என்னடா ஒண்ணும் வௌங்காதவனா இருக்க? அன்னிக்கு ஃபேக்டரிக்கு வெளியில  அந்த எறா மீசை ஏகாம்பரத்துக்கும், வரதனுக்கும் கைகலப்பு வந்ததுன்னு சொன்னேன்ல? நீ அப்ப ஷுட்டிங் போயிட்ட?..."

ரங்கனின் கோபத்திற்குக் காரணமான நிகழ்ச்சியின் காட்சிகள் அவனது கண்முன் விரிந்தன.

10

கால் கொலுசு கிணுகிணுவென்று ஒலிக்க, இடுப்பை அசைத்தபடி நளினமான நடைபோட்டு வந்து கொண்டிருந்தாள் மனோன்மணி.

நடிகை 'ரகசியா’வின் சாயலில் இருந்த மனோன்மணி வாலிபர்களை கவர்ந்திழுக்கும் அழகுடன் இருந்தாள். அவளைப் பார்த்ததும் ஏகாம்பரம் அவள் அருகே வந்தான்.

"ஏ பொண்ணு! ரொம்ப அழகா டிரஸ் பண்ணிக்கினு வந்திருக்கியே என்னா விசேஷம்?"

"உன்னைப் பார்க்க வர்றதுதான் எனக்கு விசேஷம்..."

"சரி வா, டீ கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு டீ குடிக்கலாம்."

இருவரும் அருகிலிருந்த டீ கடைக்கு நகர்ந்தார்கள்.

டீக்கடையில் இவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்த வரதன் சூடேறினான். வரதனின் முறைப்பெண்தான் மனோன்மணி. வரதன், மனோன்மணியை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தான். ஆனால் மனோன்மணி ஏகாம்பரத்தை விரும்பினாள். வரதனின் மொடாக் குடிப்பழக்கம் அவன்மீது அவளுக்கு வெறுப்பை வளர்த்திருந்தது.

கோபத்துடன் முறைத்துப் பார்த்த வரதனைக் கண்டு சிறிதும் பயப்படாமல் தைரியமாக நின்றிருந்தாள் மனோன்மணி.  ஏகாம்பரத்தின் அருகே வந்த வரதன், "ஏண்டா, காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தட்டிக்கினு போற மாதிரி என்னோட முறைப்பொண்ணு இவளை, நீ தட்டிக்கினு போலாம்னு பார்க்கறியா?"

"எனக்கு கழுத்த நீட்ட சம்மதிச்சது மனோன்மணி. அவ கிட்டயே பேசு..?"

"அவ கிட்ட என்னடா பேசறது? அவ சின்ன பொண்ணு. காலுக்கு கொலுசு வாங்கிக் கொடுத்து அவ கையைப் பிடிக்கலாம்னு கனவு காணாதே. அது ஒரு நாளும் நடக்காது" என்று கத்திய வரதன் மனோன்மணியின் பக்கம் திரும்பினான்.

"நீ வீட்டுக்கு போம்மா." என்று சொல்லியபடியே அவளது கையைப் பிடிக்க முற்பட்டான். இதைக் கண்ட ஏகாம்பரத்திற்கு ரத்தம் கொதித்தது.

"டேய் வரதா, அவ உன் மாமன் பொண்ணா இருக்கலாம். ஆனா, அவ மனசை எனக்குத்தான் கொடுத்திருக்கா... எங்க வழியில குறுக்கே வராம நீ ஒதுங்கிடு. இல்லேன்னா நடக்கறதே வேற..."

"என்னடா பெரிசா மிரட்டறே..." என்று கத்திய வரதன், ஏகாம்பரத்தை அடிக்க ஆரம்பித்தான். அவன் அடித்ததும் ஏகாம்பரத்திற்கு கோப வெறி தலைக்கேறியது. எதிர்த்து வரதனை முரட்டுத்தனமாக அவனும் அடித்தான். கைகலப்பு முற்றியது. பயந்து போன மனோன்மணி வீட்டுக்கு ஓடி விட்டாள். டீக்கடையில் இருந்த நாலைந்து பேரும் ஓடி விட்டனர். தீவிரமாக நடந்த அடிதடியின் முடிவில் பேண்ட்டுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஏகாம்பரத்தின் வயிற்றில் செருகினான் வரதன்.

வயிற்றில் ஏகமாய் ரத்தம் வடிய சரிந்து கீழே விழுந்தான் ஏகாம்பரம்.  இதைப் பார்த்த வரதன் ஓடி விட்டான்.  

அச்சமயம் அங்கு வந்த அழகிரி உணர்ச்சிவசப்பட்டு ஏகாம்பரத்தின் வயிற்றில் இருந்த கத்தியை உருவினான். ஃபேக்டரிக்கு வெளியே அடிதடி நடந்ததை அறிந்த பிரசாத், போலீசுக்கு தகவல் சொல்லியிருந்தபடியால் போலீஸ் விரைந்து வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் அழகிரியைத் தவிர வேறு யாரும் இல்லை. கையில் ரத்தம் வழியும் கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்த அழகிரியை போலீஸ் கைது செய்தது. இந்தத் தகவலை அறிந்து அங்கு வந்தான் ரங்கன்.

"முதலாளி, என் பையன் தப்பு பண்ணல. சண்டையை பார்க்க வந்தவன், ஏகாம்பரம் வயித்துல குத்தியிருந்த கத்தியை கையில் எடுத்திருக்கான். அந்த நேரத்துல அவனுக்கு அப்படி செய்யக்கூடாதுன்னு தோணல. எப்படியாவது என் பையனை காப்பாத்துங்க..."

பிரசாத்தின் கால்களில் விழுந்து கெஞ்சினான் ரங்கன்.

"போலீஸோட நடவடிக்கையில நான் எப்படி தலையிட முடியும்? உன் மகன் நல்லவன்னா அதை கோர்ட் சொல்லட்டும்" என்று பிரசாத் தீர்மானமாகவும், உறுதியாகவும் பதில் கூறினான். போலீஸ், அழகிரியை அடித்து இழுத்துச் சென்றது. அன்று நிகழ்ந்த காட்சிகளை மீண்டும்  நினைத்துப் பார்த்த ரங்கன் வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

"அழாத அப்பாரு. அந்த சமயத்துல பார்த்து நான் வெளியூர் ஷுட்டிங்னு போயிட்டேனே... அழகிரி என்னோட உடன்பிறப்பு மாதிரி என் மேல பாசத்தோட இருந்தானே அப்பாரு..." கண் கலங்கினான் வேம்புலி.

"உனக்குத்தான் தெரியுமே, நம்ம அழகிரி மானஸ்தன். சுருக்குன்னு ரோஷப்பட்டுடுவான். அவன் மேல எந்த தப்பும் இல்லாதப்ப நடுரோடுல வச்சு போலீஸ் இழுத்துட்டுப் போன அவமானத்தை அவனால தாங்க முடியலை. பத்தாங்கிளாஸ் வரைக்கும் பெரிய படிப்பெல்லாம் படிச்சவனாச்சே. ஜெயில்ல வேற போலீஸ்காரங்க அடிச்சு துன்புறுத்தி இருக்காங்க. அதையெல்லாம் பொறுத்துக்க முடியாம, தற்கொலை பண்ணிக்கிட்டான்டா... ஐயோ நான் என்ன செய்வேன்?..."

ரங்கனின் கண்கள் சிவந்தது. சோகம் மாறி கோபம் ஏறியது. பற்களைக் கடித்தான்.

"அந்த பிரசாத் மட்டும் அன்னிக்கு ஒரு வார்த்தை நம்ம அழகிரிக்காக போலீஸ்ட்ட பேசி இருந்தார்னா, அவனை போலீஸ் இழுத்துக்கிட்டு போயிருக்காது. அவன் போலீஸ்ட்ட அடி வாங்கி இருக்க மாட்டான். அவமானப் பட்டிருக்கவும் மாட்டான். கேவலப்பட்டுப் போய், இப்படி என்னைத் தவிக்க விட்டுட்டு தற்கொலை பண்ணி இருக்கவும் மாட்டான். அந்த பிரசாத்தைப் பழி வாங்கினாத்தான் எனக்கு நிம்மதி..."

"ரத்தத்துக்கு ரத்தம். அடிக்கு பதிலடி. பழிக்குப்பழி, பலிக்கு பலி, உயிருக்கு உயிர். இந்தக் கணக்குப்படி பார்த்தா அந்த பிரசாத்தோட உயிரைத்தானே அப்பாரு எடுக்கணும்?"

"நான்தான் சொன்னேனடா அது சரிவராதுன்னு. நான் எப்படி என் மகனை இழந்து தவிக்கிறேனோ அது போல அந்த பிரசாத்தும் துடிக்கணும்."

"அப்படின்னா அவருக்கு புள்ள குட்டி இருந்தா அதுங்களை ஒரு வழி பண்ணிடுவோமா?"

"நீ உருப்படியா ஐடியா குடுக்கறதுக்குள்ள நானே செத்துடுவேன் போலிருக்கே? அந்த பிரசாத்துக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்தக் குழந்தையை நாம கடத்தணும்."


"கடத்திட்டுப் போய்..."

"காதைக் கொண்டா சொல்றேன்" வேம்புலியின் காதில் தன் திட்டத்தை ரசசியமாய் கூறினான் ரங்கன்.

"சூப்பர் அப்பாரு. அப்படி செஞ்சாத்தான், நீ எதிர்பார்க்கற மாதிரி அந்த பிரசாத் துன்பத்துல புழுவாய்த் துடிப்பார்."

"என்னோட இந்த திட்டத்துக்கு உன்னைத்தான் முழுசா நம்பி இருக்கேன்."

"உனக்காகவும், அழகிரிக்காகவும் நான் என்ன வேண்ணாலும் செய்வேன் அப்பாரு."

"நம்ப திட்டத்தோட முதல் படியா, நீ இன்னிக்கு முதலாளி பங்களாவுக்கு போ. போயி நோட்டம் விடு. எப்படி, எப்ப உள்ள நுழையறதுன்னு பார்த்து வச்சு, ஐடியா பண்ணிக்க."

"கவலையை விடு அப்பாரு. அந்த பிரசாத்தோட குழந்தையை நீ சொன்ன மாதிரியே செஞ்சுடறேன்."

11

குழந்தை கவிதாவைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஸ்வர்ணா.  இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற ஏமாற்றத்தில் குழந்தையைப் பார்ப்பதற்குக் கூட வராமல் இருந்து விட்ட மாமனார் ராஜசேகரனின் கல் மனது பற்றி நினைத்துப் பார்த்தாள்.

'நல்ல வேளை. என் கணவர் அப்படி இல்லை. அவரும் அவங்கப்பா மாதிரியே பெண் குழந்தையை வெறுக்கறவரா இருந்தா.. என் நிலைமை? பிரசாத்தின் நல்ல மனதிற்காவது இந்தக் குழந்தை கவிதா ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா’ என்று நினைத்தவள், மறுகணம் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள். ‘என் முதல் குழந்தை சௌம்யாவை கடத்திட்டுப் போய் கொன்னுட்டாங்க. இந்தக் குழந்தையாவது பத்திரமா எனக்கு இருக்கணும். அது போதும்’ குழந்தை பிறந்த அன்று பிரசாத் தனக்குக் கூறிய ஆறுதல் வார்த்தைகள் மனசுக்கு எத்தனை இதமாக இருந்தன!’

"நம்ம குழந்தைதான் நமக்குப் பெரிய சொத்து. இவளை பாதுகாப்பா வளர்க்கணும். அதுதான் முக்கியம். எங்க அப்பாவை நினைச்சு நீ உன் மனசை வருத்திக்காதே. நீ பாட்டுக்குக் கவலைப்பட்டுக்கிட்டிருந்தீன்னா உன் உடம்புக்கு ஏதாவது வந்துடும். ஜாக்கிரதையா இரு. தைர்யமா இரு." பொறுமையாகவும், பாசத்துடனும் பிரசாத் பேசியபோது மயிலிறகால் மனதை வருடிக் கொடுப்பது போல் இருந்தது.

குழந்தை அயர்ந்து தூங்கியதும், தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் விழிப்பதற்குள் குளித்து முடித்து விடலாம் என்று எண்ணிய ஸ்வர்ணா, அழைப்பு மணியின் ஒலியைக் கேட்டு கதவருகே சென்றாள். கதவைத் திறந்தாள். செக்யூரிட்டி காளி நின்று கொண்டிருந்தான்.

"அம்மா, இன்ட்டர்காம் வேலை செய்யலைம்மா. அதான் மணி அடிச்சேன்."

"சரி, என்ன விஷயம்?"

"தோட்ட வேலைக்கு ஆள் கேட்டிருந்தீங்களாம். ஒரு ஆள் வந்திருக்கான்."

"சரி, அவனை வரச் சொல்லு."

செக்யூரிட்டி, பங்களாவின் பெரிய கேட் அருகே சென்று, ஒரு ஆளை அழைத்து வந்தான். ஸ்வர்ணாவைப் பார்த்ததும் அவன் கும்பிடு போட்டான்.

"வணக்கம்மா."

"வணக்கம். உன் பேர் என்ன?"

"என் பேர் வேம்புலி."

"என்ன படிச்சிருக்க?"

"எழுதப் படிக்கத் தெரியும்மா. அவ்வளவுதான்."

"இதுக்கு முன்னால என்ன வேலை பார்த்த?"

"தோட்ட வேலைதான்மா பார்த்துக்கிட்டிருந்தேன்."

"எங்க? யார் வீட்டில?"

"வேலூர்ல, ஒரு பெரிய பணக்காரர் வீட்டிலதான் வேலை பார்த்தேன். அவர் இறந்துட்டாரு. அவரோட புள்ளைங்கள்லாம் வெளிநாட்டுல இருக்கறதுனால அந்த பங்களாவை வித்துட்டாங்க. அதனால இப்ப நான் சும்மாதான் இருக்கேன். வேலை இல்லாம வயித்துப் பாடு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. வேலை குடுங்கம்மா. உங்க தோட்டத்துல வளர்ற பூச்செடி, மரங்களயெல்லாம் புள்ள குட்டிகளைப் பார்த்துக்கற மாதிரி நல்லா பார்த்துக்குவேன்மா. வேலை இல்லாம வயிறும் காலியா இருக்கும்மா" வேம்புலி அடுக்கடுக்காய் பொய்களை அள்ளி வீசினான். சினிமாவில் சண்டைக் காட்சியில் நடிக்கும் அனுபவம் நன்றாக கை கொடுத்தது.

'பார்த்தா நல்லவனா இருக்கான். பாவம். பட்டினியா வேற இருக்கான்?’ யோசித்தாள் ஸ்வர்ணா.

"தோட்டத்துக்கும் ஆள் தேவையாதான் இருக்கு. பழைய ஆள் கிராமத்துக்கு போயிட்டாரு. செடியெல்லாம் வாட ஆரம்பிச்சுடுச்சு. கவனமா பார்த்துக்கணும். சம்பளம் எவ்வளவு கேட்ப?"

"நீங்க எவ்வளவு குடுத்தாலும் சரிம்மா. மூணு வேளை வயிறு ரொம்பணும்."

"சரி, பழைய ஆளுக்கு எவ்வளவு குடுத்தேனோ, அதே சம்பளத்தை உனக்கும் தரேன். நாளையில இருந்து வேலைக்கு வந்துடு."

"ரொம்ப நல்லதும்மா. காலையில சீக்கிரமா வந்துடறேன்."

"சரி."

வேம்புலி, பசியில் தளர்வாய் நடப்பது போல நன்றாக நடந்தான்.

ஸ்வர்ணா அவசர அவசரமாய் குளிக்கப் போனாள்.

12

தோட்ட வேலைக்கு சேர்ந்த வேம்புலி, புல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.

"வேம்புலி..."

செக்யூரிட்டி காளி கூப்பிட்டதும் திரும்பினான்.

"இன்னாபா கூப்டியா?" சென்னைத் தமிழில் வேம்புலி உரையாடுவது குறித்து ஆச்சர்யப்பட்டான் செக்யூரிட்டி காளி.

"ஆமா, தண்ணி பாய்ச்சற நீ ஒழுங்கா புல்தரையைப் பார்த்து பாய்ச்சாம பங்களாவையே அண்ணாந்து பார்த்துக்கிட்டிருக்கியே, என்ன விஷயம்?"

"இது இன்னாடா இது.. மழை வருமோ, மேகம் கூடுதேன்னு வானத்தை அண்ணாந்துப் பார்த்துக்கிட்டிருந்தா, பங்களாவைப் பார்க்கறேன்னு கேக்கறியே?"

"நீ பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் மழை பெய்யணும்னு இருந்தா பெய்யும். உன் வேலையை கவனமா செய்."

"சரிதாம்பா" வேலையில் மூழ்கினான் வேம்புலி.

"ஆமா, என்னமோ வேலூர்ல வேலை பார்த்ததா சொன்னியே? பக்கா மெட்ராஸ் தமிழ் பேசறவனா இருக்கியே?!"

"ஏன்? வேலூர் இன்னா வெளிநாடா? எந்த ஊருக்குப் போனாலும், எந்த நாட்டுக்குப் போனாலும் என் பேச்சு மட்டும் மாறாது. மாத்திக்க முடியாது. ஆமா... தெரியாமத்தான் கேக்கறேன், நான் இன்னா பேச்சு பேசுனா உனுக்கு இன்னா வந்துது?"

"அட, சும்மா ஒரு பேச்சுக்கு கேக்கறதுக்குள்ள இப்பிடி கோவிச்சுக்கறியே?"

"உன் வேலையை நீ ஒழுங்கா பாரு. என் வேலையை எப்படி பார்க்கணும்னு நீ சொல்லத் தேவலை. கம்முனு இரு."

முகத்தில் அடித்தது போல் வேம்புலி பேசியதும் செக்யூரிட்டி காளி எதுவும் பேசாமல் தன் இடத்திற்கு சென்றான்.

'இவன் மூஞ்சும் சரி இல்ல, பேச்சும் சரி இல்ல, அம்மா பாட்டுக்கு தீர விசாரிக்காம இவனை தோட்ட வேலைக்குப் போட்டுட்டாங்க. எப்ப பார்த்தாலும் பங்களாவையே ஒரு மாதிரியா நோட்டம் விட்டுக்கிட்டிருக்கான். பார்த்து ஜாக்கிரதையா இருக்கணும். சமயம் கிடைக்கும்போது, அம்மா கிட்டயும் கொஞ்சம் முன் எச்சரிக்கையா சொல்லி வைக்கணும்’ வேம்புலியின் மீது ஏற்பட்ட சந்தேகம் தோற்றுவித்த எண்ணங்கள் காளியின் மனசைக் குடைந்தது.

13

"தொழிலதிபர் சௌந்தரபாண்டியின் மகன் கடத்தல். ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு பயமுறுத்தல் கடிதம்" செய்திகளை உரக்க வாசித்துக் கொண்டிருந்தான் சரவணன்.

"டேய் வாசு, இந்த நியூஸைப் பார்த்தியா? அதைப் பார்த்தும் எனக்கு ஒரு சூப்பர் ஐடியா தோணுது."

"என்ன? சொல்லு..."


"இந்த குழந்தை கடத்தல் மாதிரியே, நாமளும் ஒரு குழந்தையை கடத்தல் செய்யணும்." அதிர்ச்சியானான் வாசு.

"என்னடா இது? உன் பேச்சு, பேச்சா இல்லாம பேத்தலா இருக்கு?!"

"நான் சீரியஸாத்தான் பேசறேன். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் பிரசாத்தோட குழந்தையை கடத்திக்கிட்டுப் போய் அந்த ஆளை மிரட்டணும்னு சொல்றேன்."

"என்னமோ கோவில் கும்பாபிஷேகம் நடத்தப் போறேன்னு சொல்ற மாதிரியில்ல ரொம்ப பெருமையா சொல்ற?"

"ஹும்... கோவிலாவது சாமியாவது... எல்லாமே வெறுத்துப் போச்சு. மரத்துப் போச்சு. எத்தனை பிள்ளையார் கோவிலுக்குப் போய் வேண்டி இருக்கேன் வேலை கிடைக்கணும்னு? கல்லான அந்த சாமி கண் திறப்பார்னு நம்பினேன்டா. ஆனா அது வெறும் கல்தான்னு ஆயிடுச்சு. இனிமேலும் நல்லவனா இருக்க நான் தயாரா இல்லை. அம்மா, அப்பா கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு, ஒரு வேளை சாப்பாட்டைக் கூட, நாமளும் சம்பாதிக்கறோம்ங்கற உரிமையோட சாப்பிட முடியாம, வேதனைப் பட்டு எத்தனை நாள்டா இப்படியே காலத்தை ஓட்டறது?"

"அந்த பிரசாத்தோட குழந்தையைக் கடத்திட்டுப் போற காரியத்தை பண்ணிட்டா மட்டும் உன் கஷ்டமெல்லாம் தீர்ந்துடுமா?"

"கஷ்டம் தீருமோ இல்லியோ? என்னோட கோபமும் வெறியும் அடங்கும். பழிக்குப்பழி வாங்கினாத்தான் என் மனசு ஆறும்..."

"பழிக்குப் பழி வாங்கறேன்னு ஏதாவது விபரீதமா செஞ்சு, நீ பலியாகிடாதே சரவணா..."

"என்னடா நீ புரியாதவனா பேசறே, அன்னிக்கு நாம எவ்வளவு நம்பிக்கையோட அந்த இன்ட்டர்வியூவுக்கு போனோம்?... நம்ப கவலையெல்லாம் தீர்ந்துடும்னு நம்பினோமே? நம்ப வச்சு கழுத்தறுத்த கதையாயிடுச்சேடா?"

"அதே நம்பிகையோட இன்னும் பல கம்பெனிக்கு போவோம். விடாமுயற்சியா வேலை தேடுவோம். விட்டுப் போனதை நினைச்சு கோபப்பட்டு என்ன ஆகப் போகுது?"

"விட்டுப் போனது வேலை மட்டும் இல்லைடா. தன்மானமும் சேர்ந்துதான். நம்பளை மாதிரி கஷ்டப்படற பட்டதாரிகளுக்கு அந்த வேலையைக் குடுத்திருந்தாலும் பரவாயில்லை. சிபாரிசுக்காக வந்தவனுக்கு, ஏற்கெனவே வசதியா வாழற ஒரு பணக்காரப் பயலுக்கு அந்த வேலையை குடுத்திருக்காங்க. அதாண்டா, அந்த வந்தனாவைப் பார்த்து பல்லைக் காட்டினானே விஜயகுமார்னு ஒருத்தன், அவனுக்குக் குடுத்திருக்காங்க. இன்னொரு வேலையை வேற எவனாவது பணக்காரப் பயலுக்கு குடுத்திருப்பாங்க. இது நியாயம்னு உனக்குத் தோணுதா?"

"நிச்சயமா அவங்க செஞ்சது அநியாயம்தான். ஆனா இந்த அநியாயம் எந்த கம்பெனியிலதான் நடக்கல? எந்த நிர்வாகத்துலதான் நடக்கல? இதையெல்லாம் மாத்தவே முடியாதுடா. உன் எதிர்காலத்தைப் பத்தி சிந்திக்காம பழி வாங்கணும்ங்கற எண்ணத்துல தவறான வழிக்குப் போக நினைக்காதே. முயற்சி செஞ்சா நமக்கும் ஒரு நல்ல வழி பிறக்கும்..."

"நிறுத்துடா... அஞ்சு வருஷமா முயற்சி செஞ்சு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. கை வலிச்சு அலுத்துப் போற வரைக்கும்தான் எதிர் நீச்சல் போட முடியும். மனசும் சேர்ந்து வலிக்கற மாதிரி நயவஞ்சகத்தையும், ஓர வஞ்சனையையும் சந்திக்கும்போது நான் எடுத்திருக்கற முடிவுதான் சரி."

"மலை ஏறும்போது ஒரு அடி ஏறினா மறுபடி அரை அடி சறுக்கும். மனசைத் தளர விடாம திரும்பத் திரும்ப முயற்சி செஞ்சாத்தான் உச்சியை அடைய முடியும். பாதியில முயற்சியை நிறுத்திட்டா... பழையபடி அடிவாரத்துக்குத்தான் போகணும்... அதிலயும் நீ இப்ப பழி வாங்கணும்னு நினைச்சுப் பேசற விஷயம் உன்னை அதல பாதாளத்துக்குத் தள்ளி விட்டுடும்."

"நான் ஆகாய கோட்டையைப் பிடிக்கணும்னு முயற்சி பண்ணலை. ஒரு ஆம்பளைக்குத் தேவையானது மரியாதையான உத்தியோகம். நான் ஒண்ணும் வேலை கிடைக்கலை வேலை கிடைக்கலைன்னு சொல்றதே வேலையா திரியலையே. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டு வீட்டுக்கு சுமையா இருக்கறது வேதனையா இருக்கு. அம்மா திட்டும்போது அவங்க போடற சாப்பாடு கூட உள்ளே இறங்க மறுக்குது..."

"ஏண்டா, திட்டறது யாரு? உன்னோட அம்மாதானே? பணக்கஷ்டத்துல மனசு தாங்காம, உன்னைத் திட்டறாங்க. பொறுக்க மாட்டாமத்தான் திட்டறாங்கன்னு ஏன் புரிஞ்சுக்க மாட்டறே? உன்னைத் திட்டறதுல அவங்களோட கோபம் தணியும். ஒரு வடிகாலா இருக்கும்னு நினைச்சு சகிச்சுக்கோயேன்."

"அதையெல்லாம் சகிச்சுக்கலாம். ஆனா அந்த ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் ஆபீஸ்ல தகுதி இல்லாத அந்த விஜயகுமாருக்கு வேலைப் போட்டுக் குடுத்ததை சகிச்சுக்கவே முடியலை."

"அந்த விஜயகுமாருக்கு தகுதியே இல்லைன்னு நீ எப்பிடிடா முடிவு பண்ணலாம்?"

"அப்படியெல்லாம் சாதாரணமா எதையும் முடிவு பண்ணிட மாட்டேன். அவனைப் பத்தின தகவல்கள் எல்லாம் விசாரிச்சுட்டேன். அந்த விஜயகுமாரோட அப்பா சேலத்துல பெரிய வக்கீலாம். பேர் நீலகண்டனாம். வக்கீல் தொழில் செஞ்சு ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சுட்டாராம். அந்த நீலகண்டனோட ஒரே மகன்தான் இந்த விஜயகுமார். அப்பாவுக்கு நேர் எதிரிடையான குணம் உடையவனாம். தன்னோட பையன் சும்மா இருக்கான்னு சொல்லிக்கறதை எந்தத் தகப்பன்தான் விரும்புவான்? அதனால சிபாரிசு பிடிச்சு இந்த வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு அந்த வக்கீல் நீலகண்டன். வீட்டில் எந்தக் கஷ்டமும் கிடையாது. வெளியில கௌரவமா சொல்லிக்கறதுக்காக பெரிய இன்டஸ்ட்ரீஸோட ஆபீஸ்ல உத்யோகம் வாங்கிக் குடுத்திருக்காரு. இதெல்லாம் தெரிஞ்சும் என்னை சும்மா இருக்க சொல்றியா?"

"ஏதாவது செஞ்சு போலீஸ், கேஸ்னு மாட்டிக்கிட்டு அவதிப்பட்டு அவமானப்படறதை விட சும்மா இருக்கறது உனக்கு நல்லது."

"நல்லது கெட்டதைப் பத்தி நினைச்சுப் பார்க்கற நிலைமையை கடந்துட்டேன் வாசு. அந்த பிரசாத்தோட குழந்தையை கடத்திட்டுப் போய், ஒரு பெரிய தொகையை வசூல் பண்ணனும். அதுக்கப்புறம் நேர்மையான முறையில ஏதாவது ஒரு பிஸினஸ் பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆகிடணும். அந்த பிரசாத்தை பழி வாங்கின மாதிரியும் இருக்கும். என்னோட எதிர்காலத்துக்கும் ஒரு வழி பிறக்கும்."

"எவ்வளவு நல்லவனா இருந்த நீ இப்பிடி மாறிட்டியேடா. வேணாம்டா. உன்னோட இந்த திட்டத்தை விட்டுடு ப்ளீஸ்... என்னோட அறிவுரைக்கு மதிப்பு குடுக்கலைன்னாலும் பரவாயில்லை. நம்பளோட பல வருஷ கால நட்புக்காவது மதிப்பு குடுத்து நான் சொல்றதைக் கேளுடா..."

"போதும் வாசு, இனிமேல நான் உன் பேச்சைக் கேக்கற மாதிரி இல்லை. என்னோட முடிவுல எந்த மாற்றமும் கிடையாது."

"இதுக்கு மேலயும் உனக்கு புத்திமதி சொல்றது வீணான வேலைன்னு புரியுது. ஆனா 'உயிர் காப்பான் தோழன்’ங்கற அடிப்படை உண்மைக்கு இலக்கணமா நம்ப நட்பு தொடரணும். அந்த நட்புல எந்த விரிசலும் ஏற்படக்கூடாது..."

உணர்ச்சிவசப்பட்டு வாசு பேசியதைக் கேட்ட சரவணனுக்கு மனதை என்னவோ செய்தது. சில விநாடிகள் மௌனமாக இருந்தான். சரவணனின் தோள் மீது வாசு தன் கைகளைப் போட்டான்.

"ஸாரிடா வாசு. என்னால... உன்னோட அறிவுரையை ஏத்துக்க முடியலை.. அதே சமயம் என்னோட திட்டத்தையும் மாத்திக்க முடியலை."


சரவணன் சற்று தளர்ந்த குரலில் பேசினாலும், தீவிரமான முடிவு எடுத்து விட்ட உறுதி தென்பட்டது.

தன் தோள் மீது கிடந்த வாசுவின் கையை மெதுவாக தள்ளிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான் சரவணன்.

14

கையில் குழந்தை கவிதாவுடன் இருந்த வேம்புலியைப் பார்த்து திடுக்கிட்டான் காளி.

"ஏ வேம்புலி, நீ ஏன் குழந்தையை வச்சிருக்க? அம்மா எங்கே?"

"அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க. நீதான் பகல் டூட்டிக்கு வராம லீவு போட்டுட்டு போயிட்டியே. அதனால குழந்தையை என்னைப் பார்த்துக்கச் சொல்லிட்டு போனாங்க. பக்கத்துலதானே கோவில் இருக்கு? பத்து நிமிஷத்துல வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனாங்க. ஆமா தெரியாமத்தான் கேக்கறேன், நான் குழந்தையைத் தூக்கினா உனக்கு இன்னா வந்துச்சு? நானும் ஒரு குடும்பத்துல இருந்து வந்தவன்தானே? குழந்தை சாமிக்கு சமம்னு சொல்லுவாங்க. எனக்கும் கைக்குழந்தைகளைத் தூக்கி வச்சுக்கறதுன்னா எவ்வளவு ஆசை தெரியுமா? எல்லா குழந்தைகளும் வேம்புலி மாமா  வேம்புலி மாமான்னு என்னை சுத்தி சுத்தி வருவாங்க."

"உன்னை நம்பி குழந்தையை குடுத்துட்டு போயிருக்காங்க. பத்திரம்..."

"இங்க பாரு காளி. நானும் உன்னாட்டும் பஞ்சம் பொழைக்கத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். சும்மா எப்பப் பார்த்தாலும் ஏடா கூடமா கேட்டுக்கினே இருக்க. இது சரி இல்ல. என்னோட பேசறதா இருந்தா மரியாதையா பேசு. இல்லைன்னா கம்முனு உன் கூண்டுல போய் குந்திக்கினு கெட சொல்லிட்டேன்."

வேம்புலி கோபமாகப் பேசியதும், காளி எதுவும் பேசாமல் தன் இருப்பிடத்திற்கு சென்றான்.

கோவிலில் இருந்து திரும்பிய ஸ்வர்ணாவைக் கண்டதும் குழந்தையுடன் அவள் அருகே சென்றான் வேம்புலி.

"என்ன வேம்புலி.. குழந்தை அழுதுச்சா?"

"இல்லைம்மா. தூக்கி வச்சிருந்தா போதும்மா. நல்லா வேடிக்கை பார்த்துக்கினு இருக்கும்மா."

"சரி. குழந்தையைக் குடு" வேம்புலியிடம் இருந்து கவிதாவை வாங்கிக் கொண்ட ஸ்வர்ணா, காளி வந்து விட்டதையும் கவனித்தாள்.

"என்ன காளி, நீ எப்ப வந்தே? கொஞ்ச நாளா அடிக்கடி லீவு போட ஆரம்பிச்சிருக்க. கேட்டா ஏதாவது சாக்கு சொல்ற..."

"அது வந்தும்மா... வீட்டில பிரச்னை... அதனாலதான். இனிமே லீவு போட மாட்டேன்மா" என்று சொன்னவன், தலையை சொறிந்தான்.

"என்ன காளி, பணம் எதுவும் வேணுமா? ஏற்கெனவே ஏகப்பட்ட பணம் அட்வான்ஸா வாங்கி இருக்க..."

"அதில்லம்மா... இந்தத் தோட்டக்காரன் வேம்புலியைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும். அவன் ஆளே சரியில்லம்மா. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கம்மா... அவன் பேசி முடிப்பதற்குள் ஸ்வர்ணா குறுக்கிட்டாள்.

"நீ பாட்டுக்கு அடிக்கடி லீவு போட்டுட்டு போனப்பவெல்லாம் அவன்தான் உன்னோட வேலையையும் சேர்த்து செஞ்சான். எனக்கென்னமோ அவன் நல்லவனாத்தான் தோணுது. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னைன்னா நீயே பேசி தீர்த்துக்க. பாவம் ஏதோ வயிறு காயுதுன்னு பொழைக்க வந்தவனைப் பத்தி எதையாவது வம்பு பேசாதே" என்று கூறி காளியின் வாயை அடைத்தாள்.

வேம்புலி மிக உண்மையாகவும், பவ்யமாகவும் நடித்துக் கொண்டிருந்தபடியால், காளி சொன்னதை ஸ்வர்ணாவால் நம்ப முடியவில்லை. காளியின் வாயை அடைத்த அவளுக்கு, விதியின் கதவு திறந்து கொண்டதை அறிய முடியவில்லை.

15

நாட்கள், தன் போக்கில் மிக வேகமாக நகர்ந்தன. ஏற்காட்டில் இருந்த பெரியவர் ராஜசேகரனின் வாழ்வு முடிந்தது. நோய் நொடி என்று கஷ்டப்படவில்லை. கடைசிவரை தன் இஷ்டப்படி சப்பிட்டு, தன் தினசரி வேலைகளை செவ்வனே முடித்து, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரின் இதயம் இயங்க மறுத்து நின்று போனது. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நெஞ்சு வலியில் அவதிப்பட்ட, அவர் வேரறுந்த மரமாய் சாய்ந்தார்.

வேலைக்காரர்கள் கவனித்து, பிரசாத்திற்கும், நீலகண்டனுக்கும் டெலிபோனில் செய்தியைக் கூறினர். நீலகண்டன் விரைந்து வந்தார். பெரியவரின் இறுதிச்  சடங்குகளுக்குரிய வேலைகளை துரிதமாக ஏற்பாடு செய்தார். பிரசாத்தின் வருகைக்காக காத்திருந்தார். ஏற்காடு பகுதியின் பொதுமக்களும், அவர்களது குடும்பத்தினரும் கூடி விட்டனர்.

பிரசாத்தும், ஸ்வர்ணாவும் குழந்தை கவிதாவுடன் வந்து இறங்கினர். ராஜசேகரனின் தகனக் கிரியைகள் அனைத்தும் முடிந்தன. துக்கத்திற்காக வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

வக்கீல் நீலகண்டன் கையில் ஒரு ஃபைலுடன் பிரசாத்தின் அருகே வந்தார்.

"இதோ பாருப்பா பிரசாத். உன்னோட அப்பாவின் உயில். உனக்கு ரெண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துட்டதால உன் அப்பா அவரோட சகல சொத்துக்களையும் தரும ஸ்தாபனங்களுக்கு எழுதி வச்சுட்டார். சென்னையில நீ இருக்கற பங்களாவுல இன்னும் ஆறு மாசம் நீயும்,  உன் மனைவி ஸ்வர்ணாவும் குடி இருக்கலாம். அதுக்கப்புறம் அந்த பங்களாவையும் காலி பண்ணிடனும்னு உயில் எழுதி வச்சிருக்கார். ஐயம் வெரி ஸாரி பிராசாத். உங்க அப்பாகிட்ட உனக்காக நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். கடைசி வரைக்கும் அவர் மாறவே இல்லை. ஒரேயடியா சாதிச்சுட்டார்."

"என்னோட வேதனை அவருக்கு சாதனையா இருக்கறப்ப, உங்களோட போதனை எப்படி ஏறும்? நான் வேதனைன்னு சொல்றது அவரோட சொத்துக்கள் எனக்கு கிடைக்கலைங்கற விஷயம் கிடையாது. எப்பப் பார்த்தாலும் பெண் குழந்தை பெண் குழந்தைன்னு மட்டமா பேசறதைத்தான் சொல்றேன்."

"எப்பிடியாவது அவர் மனசை மாத்திடலாம்னு முயற்சி பண்ணினேன். அவர் நல்ல மூட்ல இருக்கறப்ப சமயம் பார்த்து பல தடவை இதைப் பத்தி பேசியும் இருக்கேன். கொஞ்ச நேரம் பொறுமையா மறுத்துப் பேசுவார். நான் திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சதும் கோபப்படுவார். "வேற விஷயம் இருந்தா பேசுங்க"ன்னு கண்டிப்பா சொல்லிடுவார். ராஜசேகரனோட சொத்துக்கள் உனக்குக் கிடைக்கறதுக்காக நான் செஞ்ச முயற்சிகள் எல்லாமே தோல்வியாயிடுச்சு. திடீர்னு இப்பிடி இறந்துடுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நோய்ன்னு படுக்கையில படுக்கவும் இல்லை. ஒண்ணும் இல்லை. அஞ்சு நிமிஷம் நெஞ்சுவலியில் உயிர் போயிருச்சு."

"அப்பாவோட உயிர் போனதைப் பத்தித்தான் எனக்குக் கவலையே தவிர. அவரோட உயிலைப் பத்தின கவலை எனக்குத் துளியும் இல்லை. எனக்கு பெண் குழந்தை பிறந்ததுக்கு தண்டனைன்னு நினைச்சு இப்படி எழுதி இருக்காரு. ஆனா இதை ஒரு பரிசாத்தான் நான் நினைக்கிறேன். நானே என்னோட சொந்தக்கால்கள்ல நின்னு, உழைச்சு அவரைப் போலவே செல்வச் சீமானா முன்னுக்கு வந்து காட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்காரு. சின்ன வயசில இருந்தே அவரோட அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கி இருக்கேனே தவிர அவரோட சொத்துக்காகவும், பணத்துக்காகவும் இல்லை."


"ரிலாக்ஸ் பிரசாத். உன்னோட மனநிலை எனக்குப் புரியுது. உங்க அப்பாவோட குணச்சித்திரம் அப்படி அமைஞ்சுடுச்சு. அவரைப் புரிஞ்சுக்கிட்டவங்க யாருமே கிடையாது."

"நான் அவரைப் புரிஞ்சுக்கிட்டேன். அவருக்கு பெத்த மகனை விட பணம், சொத்து, பேர் இதுதான் முக்கியம். இதை நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். அதனாலதான் அவரோட சொத்துக்கள் எதையுமே நான் எதிர்பார்க்கலை. எதிர்ப்பார்ப்புகள் இருந்தாத்தானே ஏமாற்றங்கள்? ராஜசேகரனோட மகன் ராஜசேகரனைவிட பெரிய ஆளா வந்துட்டார்னு அவரோட பேரை சொல்ல வைப்பேன்" உள் மனதின் வெறுப்பு வெளிப்பட பேசிய பிரசாத், அதற்கு மேல் எதுவும் நீலகண்டனிடம் பேச விரும்பாமல் நகர்ந்தான்.

நீலகண்டன் கிளம்பினார்.

16

காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. ராஜசேகரன் எழுதி வைத்த உயிலின்படி, சென்னையில் உள்ள பங்களாவை காலி செய்வதற்குரிய கெடு முடிய இன்னும் சில மாதங்களே இருந்தன.

பங்களாவின் காம்பவுண்டு ஓரமாக மறைந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கனை தற்செயலாய் பார்த்து விட்ட வேம்புலி திடுக்கிட்டான்.

வேகமாக அவனிடம் நெருங்கி ரங்கனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு, பங்களாவை விட்டு சற்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டான். பதற்றமான குரலில் பேச ஆரம்பித்தான்.

"இன்னா அப்பாரு, நீ இன்னாத்துக்கு இங்கே வந்தே?"

"நீ பாட்டுக்கு இங்க வந்து வேலைக்கு சேர்ந்துக்கின. ஆனா நம்ப வேலை ஒண்ணும் நடக்கலியே. அதான் இன்னா ஏதுன்னு கண்டுக்கினு போலாம்னு வந்தேன்."

"ஐயோ அப்பாரு, நீயி இங்கே வர்றது ரொம்ப டேஞ்சரு. சும்மாவே அந்த செக்யூரிட்டி காளி என் மேல சந்தேகப்பட்றான். உன்னை வேற பார்த்துட்டான்னா போச்சு. நீ கௌம்பு. நம்ப ப்ளான் படி எல்லாம் கச்சிதமா நடக்கும். இந்த வூட்டுக்கார எஜமானியம்மா என்மேல அசைக்க முடியாத நம்பிக்கை வச்சிருக்கிறாங்கோ. இதுக்காக நான் எவ்வளவு பாடு பட்டிருக்கேன்.. நீ இன்னாடான்னா திடுதிப்புன்னு இங்க வந்து நிக்கற... கிளம்பு கிளம்பு.  பிரசாத், பங்களாவை காலி பண்ணப் போறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்க. அதுக்குள்ள நம்ப விஷயத்தை முடிச்சுடுவேன். நீ கௌம்பு" வேம்புலி, ரங்கனைத் துரத்தினான்.

"அட இன்னாதான் பண்ணப் போறேன்னு சொல்லிட்டா நான் போயிடறேன்."

"ஐயோ அப்பாரு, நீ வளர்த்த என்மேல உனக்கு இத்தினி டவுட்டா? நல்லா கேட்டுக்க. இந்த வீட்டு அம்மா, வெள்ளிக்கு வெள்ளி கோயிலுக்குப் போவாங்க. அவங்க போகச் சொல்ல, என் கையில் குழந்தையை குடுத்துட்டு போற அளவுக்கு ஸ்ட்ராங்கா நம்ப வச்சிருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. காரியத்தை கச்சிதமா முடிச்சுடுவேன். ஒரே இடைஞ்சல் என்னான்னா இந்த காளி ஒருத்தன்தான். அதை எல்லாம் நான் சமாளிச்சு, பளிச்னு விஷயத்தை முடிக்கறேன். நீ இங்க இருந்து இடத்தை காலி பண்ணு. டீ குடிக்கப் போன காளி வந்துடப் போறான். ம்..ம்.. போ."

ரங்கன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.

17

குழந்தை கவிதாவை தங்கள் கண்மணி போல காத்து வளர்த்தனர் ஸ்வர்ணாவும், பிரசாத்தும். குழந்தை கவிதா, ஸ்வர்ணாவின் மடியில் படுத்தபடி விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் சிரிப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பிரசாத்தின் முகத்தில் திடீரென வேதனை ரேகைகள் தென்பட்டன.

"ஸ்வர்ணா, நான் ராஜகுடும்பத்தை சேர்ந்தவன் மாதிரி வளர்ந்தேன். வாழ்ந்தேன். நம்ப குழந்தை கவிதா எப்படி வளரப் போறா? வாழப் போறா?"

"ஏங்க இப்படி கவலைப்படறீங்க? நீங்கதான் உங்க அப்பாவை விட செல்வந்தரா பெரிய ஆளா வந்துடணும்னு தீவிரமா இருக்கீங்களே?"

"அதில எந்த சந்தேகமும் இல்லை. கஷ்டப்படப்படத்தான் முன்னுக்கு வரணும்ங்கற வேகமும், வெறியும் அதிகமாகும். எங்க அப்பாவே அப்படித்தானே? அவருக்கென்ன அவங்க அப்பன், பாட்டனா சொத்து சேர்த்து வச்சுட்டுப் போனாங்க? கஷ்டப்பட்டாரு. கஷ்டங்கள் குடுத்த வெறியினாலதானே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி பெரிய கோடீஸ்வரன் ஆனார். அது மாதிரி நானும் என் லட்சியத்தை எட்டிப் பிடிப்பேன்."

"நிர்வாகத் திறமையில உங்களுக்கு இருக்கற அனுபவம், உங்க திறமை இதெல்லாம் நிச்சயமா உங்களை ரொம்ப சீக்கிரமாவே உயர்த்தும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்குங்க."

"நம்பிக்கை வேற. நடைமுறை வாழ்க்கை வேற ஸ்வர்ணா. ஏன் சொல்றேன்னா, ஏதாவது பிஸினஸ் துவங்கலாம்னு தெரிஞ்ச இடங்கள்ல எல்லாம் கடன் கேட்டுப் பார்த்துட்டேன். எல்லாரும் கையை விரிச்சுட்டாங்க. 'உங்க அப்பா உனக்கு சல்லிக்காசு எழுதி வைக்கலயாமே? எதை வச்சு இங்கே வந்து கடன் கேக்கற’ முகத்துக்கு நேரே கேக்கறாங்க ஸ்வர்ணா" பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான் பிரசாத். "உழைக்கத் தேவையான மனோ பலம் என்கிட்ட நிறையவே இருக்கு. ஆனா பண பலம் இருந்தா அது ஒரு கூடுதல் சக்திதானே?"

"உங்க அப்பா கோடி கோடியா சம்பாதிச்சார். என்ன பிரயோஜனம்? தன்னோட சொந்த மகன் அதுவும் ஒரே மகனுக்கு இப்பிடி எதுவுமே எழுதி வைக்காம விட்டுட்டாரே, இப்பிடி ஒரு தகப்பன் இந்த உலகத்துல எங்கேயும் இருக்க மாட்டாங்க. அவர் உயிரோடு இருக்கும்பொழுது நமக்கு எல்லா சௌகர்யங்களையும் செஞ்சு குடுத்தார். சகல வசதிகளோடு வாழ வச்சார். ஆனா ஒரு அல்பமான காரணத்துக்காக ஆஸ்தி முழுசையும் தருமத்துக்கு எழுதி வச்சுட்டாரு."

"உனக்கு அது அல்பமான காரணம். அவருக்கு அது ஆணித்தரமான காரணம். பேர் சொல்ல பிள்ளை இல்லைன்னு தத்து எடுத்துக் கூட வளர்க்கறாங்க. தத்து எடுத்த பிள்ளைகளுக்கு தங்களோட சொத்துக்களை எழுதியும் வைக்கறாங்க. ஆனா இவரோட பேர் சொல்ல பெத்தபிள்ளை நான் இருந்தும் அவரோட வாரிசுன்னு பேர் சொல்ல பேரப்பிள்ளை இல்லைங்கறதுக்காக என்னை இப்பிடி ஒண்ணுமில்லாதவனா விட்டுட்டாரு. மனோ பாவங்களும், குணநலன்களும் மனிதருக்கு மனிதர் வேறுபடறது சகஜம்தானே? இதைப்பத்தி எல்லாம் நான் பெரிசா கவலைப்படறதில்லை."

"உங்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக்கிட்டிருக்கேன். என்னோட பிரார்த்தனை நிச்சயமா பலிக்கும். பிஸினஸ் பண்றதுக்கு பணம் கிடைக்கலைன்னா என்ன? நல்ல கம்பெனியா பார்த்து வேலைக்கு சேர்ந்துடுங்க."

"ஆமா, நானும் அதையேதான் நினைச்சேன். வேலை பார்த்துக்கிட்டே, பணம் புரட்டறதுக்கு முயற்சி பண்ணனும். எப்பாடு பட்டாவது வாழ்க்கையில முன்னுக்கு வரணும். முதல்ல இந்த பங்களாவை காலி பண்ணனும். இங்கே வாழறது நரகத்துல வாழற மாதிரி இருக்கு..."

"சும்மா அதையே நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டிருக்காதீங்க. சாப்பிட வாங்க." பிரசாத்திற்கு சாப்பிட எடுத்து வைப்பதற்காக சமையலறைக்கு சென்றாள் ஸ்வர்ணா.


18

சில நாட்களாக தன்னைப் பார்ப்பதை சரவணன் தவிர்த்து வருவதை உணர்ந்த வாசு மிகவும் கவலைப்பட்டான். சரவணனை அவனது வீட்டுக்குச் சென்று சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

காலையில் ஜாக்கிங் கிளம்புவதற்கு முன் சரவணனின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். சரவணனின் அம்மா கமலா கதவை திறந்ததும் வாசுவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள்.

"வாப்பா வாசு"

"சரவணனை பார்க்கணும்மா"

வாசு சொன்னதும் கமலா மேலும் வியப்படைந்தாள்.

"என்னப்பா வாசு. உன் கூட வரலையா அவன்?" கமலா கேட்டதும் வாசு திகைத்தான். அதன்பின் தன்னை சுதாரித்துக் கொண்டான்.

"அ... அது வந்தும்மா... நான் இன்னிக்கு வீட்டுக்குப் பால் வாங்கிக் குடுத்துட்டு வர லேட்டாயிடுச்சு. சரவணன் இருந்தா அவனைக் கூப்பிட்டுக்கிட்டு போயிடலாம்னு வந்தேன்" சமாளித்துப் பேசுவதற்குள் அந்த அதிகாலைப் பொழுதிலும் வாசுவிற்கு வியர்த்தது.

"என்னமோப்பா... கொஞ்ச நாளா சரவணன் போக்கே சரியில்லை. உருப்படியா வேலைக்குப் போகாட்டாலும் ஒழுங்காவாவது இருந்தான். இப்ப என்னடான்னா வீட்லயே சரியா இருக்கறதில்லை. கேட்டா மழுப்பலா ஏதாவது சொல்றான். இப்பிடி திடீர்னு மாறிட்டான். அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? நீயும் அவனும்தானே எப்பவும் சேர்ந்து இருப்பீங்க?"

"வேலை கிடைக்காத மனக்குறைதான் அவன் மனசுல ரொம்ப இருக்கு. பெத்தவங்களுக்கு பாரமா இருக்கோமேன்னு என்கிட்ட சொல்லி ரொம்ப வேதனைப்படறான். இதே கவலைதான் எனக்கும். மத்தபடி சரவணன் கிட்ட தப்பா எதுவும் இருக்காதும்மா, நீங்க கவலைப்படாதீங்க." கமலாவிற்கு ஆறுதல் சொன்னாலும் வாசுவின் இதயம் திகிலுடன் துடித்தது.

"நீ சொல்றதும் சரிதான். கொஞ்ச நாளா சரவணன் சரியா சாப்பிடறதும் கிடையாது. எதையோ பறிகுடுத்த மாதிரி எப்ப பார்த்தாலும் ஏதாவது யோசனையிலேயே இருக்கான். வேலை கிடைக்காத வேதனையிலதான் அவன் அப்படி இருக்கான்னு தெரிஞ்சும், கஷ்டம் பொறுக்காம சில சமயம் அவனை கடுமையா திட்டிடறேன். அதுதான் அவன் மனசை பாதிச்சிருக்கு போலிருக்கு. இனிமே திட்டாம இருக்க முயற்சி பண்றேன். உங்க ரெண்டு பேருக்கும் கூடிய சீக்கிரம் வேலை கிடைக்கணும்னு நான் சாமியை வேண்டிக்கிறேன்."

"ரொம்ப தாங்க்ஸ் மா. நான் கிளம்பறேன். சரவணன் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பான்." பொய்யை உண்மை போல் சொல்வதற்கு வாசு மிகவும் கஷ்டப்பட்டான். பெற்ற தாயின் மனது பரிதவித்ததால், வெளிவந்த வார்த்தைகளின் பாரம் அவன் மனதிலும் ஏறிக் கொண்டது. 'சரவணனை எங்கே சந்திப்பது? என் வீட்டுல போன் இருக்கு போன் நம்பரும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு போன் கூட பண்ணலையே’ சிந்தித்தபடியே நடந்தான் வாசு.

சிறிது தூரம் நடந்தபின் டெலிபோன் பூத்திற்குள்ளிருந்து சரவணன் வருவதைப் பார்த்தான். வேகமாக அவனிடம் சென்றான். வாசுவை பார்த்துவிட்ட சரவணன், பார்க்காதது போல எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தான்.

'இன்னிக்கு இவனை விடக்கூடாது. பார்த்துப் பேசியே ஆகணும்’ விடாப்பிடியாக சரவணனை பின் தொடர்ந்தான் வாசு. ஆனால் தான் பின் தொடர்வதை சரவணன் தெரிந்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அரை கிலோ மீட்டர் சென்றபின் சரவணனின் அருகே சைக்கிளில் வந்த ஒருவன் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். சைக்கிளில் வந்தவனின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. அடிதடிகளில் ஈடுபடும் ரௌடி போல காட்சி அளித்தான்.

அந்த மனிதன் சரவணனின் தோளைத் தொட்டதும் சரவணன் தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பதை வாசு கவனித்தான். தன்னைப் பார்த்து விடாமல் மறைந்து நின்று கொண்டான். இருவரும் ரகசியமாக பேசிக் கொள்வது வாசுவிற்குப் புரிந்தது. 'யார் இவன்? இதுக்கு முன்னால இவனை எங்கேயும் பார்த்ததில்லை. ஆளைப் பார்த்தாலே தப்புக்களை தப்பாமல் செய்பவன் என்று தெரிகிறதே, இவனுடன் சரவணனுக்கு என்ன சகவாசம்?’ வாசுவின் மனதில் அடுக்கடுக்காய் கேள்விகள் எழுந்தன.

மறுபடியும் சரவணனை நோட்டமிட்டான். அந்த புதிய மனிதனை அவசர அவசரமாக அங்கிருந்து அனுப்புவது வாசுவிற்கு நன்றாக புரிந்தது. திடீரென்று பெயிண்ட் உதிர்ந்த நிலையில் இருந்த ஒரு பழைய அம்பாஸிடர் கார் சரவணன் அருகே நின்றது. சரவணன் அதில் ஏறிக்  கொள்ள அந்தக் கார், விர்ரென்று விரைந்தது.

19

காளியின் முகத்துக்கு நேரே பார்சலை நீட்டினான் வேம்புலி.

"அட! பிரியாணி வாசனை ஆளையே தூக்குது?! என்ன விசேஷம் இன்னிக்கு தடபுடலா பிரியாணி கொண்டு வந்திருக்க?"

"அது ஒண்ணும் இல்ல. எங்க வூட்டாண்ட எல்லாருமா சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பிரியாணி செஞ்சாங்க. உனக்குதான் பிரியாணின்னா போதுமே. மனசு கேக்கல. அதான் உனக்காக எடுத்தாந்தேன்"

"என்னையும் நினைச்சு எனக்காக ஆசையா கொண்டு வந்திருக்க. கல்லுக்குள்ள ஈரம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி."

"நான் கல்லும் இல்ல. மண்ணும் இல்ல. சாதாரண மனுஷன்தான். ஒரே இடத்துல வேலை பார்க்கறோம். நமக்குள்ள ஒத்துப் போறதுதானே நல்லது. இந்தா பொட்டலத்தைப் புடி" பிரியாணி பார்சலை காளியிடம் கொடுத்தான் வேம்புலி.

'இந்த காளியோட வீக்னஸ் பிரியாணின்னு தெரிஞ்சுக்கிட்டது எவ்வளவு நல்லதாப் போச்சு? இத வச்சே இன்னிக்கு என்னோட திட்டத்தை முடிக்கணும்’ உள்ளுக்குள் தோன்றிய எண்ணங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் பேசுவது வேம்புலிக்கு கைவந்த கலை என்பதை அறியாமல் காளி, தூக்க மருந்து கலந்த பிரியாணியை சுவைக்க ஆரம்பித்தான்.

கோவிலுக்குப் போய்விட்டு திரும்பிய ஸ்வர்ணா, பங்களாவினுள் நுழைந்ததும், காளி தூங்குவதைப் பார்த்து திகைத்தாள். கூடவே கோபமும் கொண்டாள். காளியின் அருகே சென்றாள்.

"காளி, ஏ காளி..."

காளியிடம் சிறிதும் அசைவு இல்லை.

'இவனுக்கு குடிக்கறப் பழக்கமும் கிடையாதே... ஏன் இப்படி பேச்சு மூச்சு இல்லாம கிடக்கறான்?’ யோசித்த ஸ்வர்ணா வேம்புலியைத் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவன் தென்படவில்லை.

"வேம்புலி.... வேம்புலி..." குரல் கொடுத்தாள். பதில் இல்லை. எதுவும் புரியவில்லை. நெஞ்சில் சின்னதாய் ஒரு திகில் பரவ, வேகமாய் வீட்டினுள் சென்றாள். நிலைகுலைந்து, குப்புறப் படுத்துக் கிடந்த பிரசாத்தைப் பார்த்தாள்.

"ஐயோ, என்னங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?" ஸ்வர்ணாவின் கையில் இருந்த பூக்கூடைக்குள் இருந்த பூக்களும் பிரசாத பொட்டலங்களும் சிதறின. மயங்கிக் கிடந்த பிரசாத்தின் அருகே சென்றாள். அவனுடைய தலையில் அடிபட்டிருந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

"என்னங்க... என்னங்க.." பதறியபடி அவனைத் திருப்பினாள். கண்களில் அசைவு இல்லை. அதிர்ச்சியுடன் அலறியபடியே தண்ணீரை எடுத்து வந்து அவனுடைய முகத்தில் தெளித்தாள்.


முகத்தில் தண்ணீர் பட்டதும் லேசாக கண் விழித்தான் பிரசாத்.

"என்னங்க, என்ன ஆச்சு?" திடீரென ஸ்வர்ணாவின் மூளையில் பொறி தட்டியது. கவிதா எங்கே? தொட்டிலை நோக்கி பார்வையை வீசியவள், திடுக்கிட்டாள். திரும்பினாள். மெள்ள எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்த பிரசாத்திடம் கேட்டாள். "குழந்தை எங்கேங்க?"

"கவி... கவிதாவை முகமூடிக்காரன் தூக்கிட்டுப் போயிட்டான் போலிருக்கு ஸ்வர்ணா. என் தலையில எதையோ வச்சு அடிச்சான். நான் வலி தாங்காம மயக்கமாயிட்டேன். இப்பத்தான் தெரியுது. அவன் கவிதாவைத் தூக்கிட்டுப் போயிட்டான் போலிருக்கு... ஐயோ கவிதா.." நெற்றியில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

"ஐயோ முகமூடிக்காரனா? என்னங்க சொல்றீங்க? நான் போகும்போது வேம்புலி தோட்டத்தில் இருந்தானே?..."

"வேம்புலி?... நீ போகும்போது அவன் இருந்தானா?!..."

"ஆமாங்க. அவனும் காளியும் இருந்தாங்களே?! ஆனா நான் திரும்பி வரும்போது காளி மயக்கமா விழுந்து கிடக்கறான்."

"காளி மயக்கமா விழுந்து கிடக்கானா? முகமூடிக்காரன் அவனை அடிச்சுப் போட்டுட்டுதான் உள்ளே வந்திருக்கணும்..."

நடந்ததை அறிந்த ஸ்வர்ணாவும் சுவரில் முட்டிக் கொண்டு அழுதாள்.

"கோயிலுக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள இப்படி பொறுப்பில்லாம குழந்தையை பறிகுடுத்துட்டீங்களே..." குழந்தையை காணவில்லை என்ற அதிர்ச்சியில் பிரசாத்தின் தலைக் காயத்தை மறந்தாள்.

"ஸாரி ஸ்வர்ணா, ஒரு கணம் என்ன நடந்ததுன்னே தெரியலை. கவிதா தொட்டில்ல தூங்கிட்டுதான் இருந்தா. நான் பேப்பர் படிச்சுக்கிட்டிருந்தேன். முகமூடி அணிஞ்ச ஒருத்தன் உள்ளே வந்தான். திடீர்னு என் தலையில இடி விழுந்தாப்ல அடி விழுந்துச்சு. நான் மயக்கமாயிட்டேன். யப்பா... ஆ...  தலைவலிக்குது  ஸ்வர்ணா...   ம்மா..."

"ஐயோ... நான் என்ன பண்ணுவேன்?! உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதா, கவிதாவை தேடறதான்னே புரியலையே?... கடவுளே.... நீங்க வாங்க முதல்ல டாக்டர்கிட்ட போலாம்..."

கைத்தாங்கலாக பிரசாத்தைப் பிடித்தபடி தெருமுனை வரை சென்று ஆட்டோ பிடித்தாள். பிரசாத்தை ஏற்றினாள். அரைகுறை மயக்கத்தில் அவள் மீது சாய்ந்தான் பிரசாத்.

20

லையில் கட்டுடன் சோர்வாக சோபாவில் சாய்ந்திருந்தான் பிரசாத். போன தடவை போல தாமதம் செய்யாமல் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்திருந்தான். போலீஸார் விசாரணைக்கு வந்தனர்.

"மிஸ்டர் பிரசாத். உங்க குழந்தையைக் கடத்திட்டுப் போயிட்டதா கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்கீங்க. அந்த விசாரனைக்காக வந்திருக்கோம்.”

"உட்காருங்க இன்ஸ்பெக்டர்!"

"தாங்க்ஸ். என்ன ஆச்சு உங்களுக்கு? தலையில பெரிசா கட்டு போட்டிருக்கீங்க?"

"குழந்தையை கடத்த வந்தவன், என் தலையில தாக்கிட்டு நான் மயக்கமா கீழே விழுந்ததும், என் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டான் இன்ஸ்பெக்டர்."

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் தன் விசாரணையைத் துவங்கினார்.

"குழந்தைக்கு என்ன வயசு?" அழுது கொண்டிருந்த ஸ்வர்ணாவிடம் கேட்டார்.

"ஆறு மாசம்தான் ஆகுது இன்ஸ்பெக்டர்."

"இந்த பங்களாவுல எத்தனை பேர் வேலை பார்க்கறாங்க?"

"மூணு பேர். ஒரு செக்யூரிட்டி, தோட்டக்காரன், சமையலுக்கு ஒரு லேடி. வீட்டுவேலைக்கு அந்த லேடியோட மகள். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் முடிவாகி இருக்குன்னு ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போயிருக்காங்க. ரெண்டு மாசம் கழிச்சு வந்துடுவாங்கங்கறதுனால வேற ஆள் போடலை."

"செக்யூரிட்டி எத்தனை வருஷமா இங்க வேலை செய்யறான்?"

"அவன் மூணு வருஷமா வேலை செய்யறான்."

"ஓகோ, அவன் பேர் என்ன?

"காளி."

"நீங்க கோயில்ல இருந்து வரும்போதே அவன் மயங்கித்தான் கிடந்தானா?"

"ஆமா இன்ஸ்பெக்டர். குடிக்கற பழக்கமே அவனுக்குக் கிடையாது. அதான் எனக்கு எதுவும் புரியலை."

"இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுடும். அவனை கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில சேர்க்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம். மெடிக்கல் செக்கப்ல அவன் எதனால மயக்கமாகிக் கிடந்தான்னு தெரிஞ்சுடும். உங்க தோட்டக்காரனும் வருஷக்கணக்கா இங்க வேலை பார்க்கறானா?"

"இல்லை இன்ஸ்பெக்டர். அவன் வேலைக்கு சேர்ந்து மூணு மாசம்தான் ஆகுது."

"நீங்க கோயிலுக்குப் போகும்போது வேம்புலி இருந்தான். ஆனா வரும்போது இல்ல. அப்படித்தானே?"

"ஆமா இன்ஸ்பெக்டர்."

"புதுசா மூணு மாசத்துக்கு முந்திதான் அவனை வேலைக்கு சேர்த்திருக்கீங்க. அவனோட அட்ரஸ் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டீங்களா?"

"ஸாரி ஸார். வேலூர்ல இருந்து வர்றதா சொன்னான். அட்ரஸ் கேட்டு வைக்கலை."

"படிச்ச நீங்களே இப்படி முன்ன பின்ன தெரியாத ஆட்களை சரியா விசாரிக்காம வேலைக்கு வைக்கலாமா?"

"காளி கூட வேம்புலியைப் பத்தி சந்தேகப்பட்டு என்கிட்ட சொன்னான். ஆனா வேம்புலி நல்லவனா இருந்ததுனால, காளி சொன்னதை நான் பெரிசா எடுத்துக்கலை இன்ஸ்பெக்டர்..." ஸ்வர்ணா தயக்கத்துடனும், பயத்துடனும் கூறினாள்.

"நானும் இதையேதான் சொன்னேன் இன்ஸ்பெக்டர். ஏற்கெனவே ஒரு குழந்தையை இதே மாதிரிதான் கடத்திட்டுப் போய் கொன்னுட்டாங்க. அதனால ஜாக்கிரதையா இருன்னு ஸ்வர்ணாகிட்ட நான் சொல்லிக்கிட்டே இருந்தேன்."

"என்ன?! இதுக்கு முன்னாலயும் உங்க குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொன்னுட்டாங்களா? அது எப்ப நடந்தது? எப்படி நடந்தது? விவரமா சொல்லுங்க."

"எங்களோட முதல் குழந்தை சௌம்யா. அவளையும் முகமூடிக்காரன் கடத்திட்டுப் போய் பணம் கேட்டு மிரட்டினான். பரங்கிமலை அடிவாரத்துக்கு பணம் கொண்டு வரச் சொன்னான். நான் பணம் எடுத்துக்கிட்டு போறதுக்குக் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."

"ஏன்?"

"இங்க இருந்து பரங்கிமலை தூரமும் அதிகம். அந்த சமயம் பார்த்து என்னோட கார் டயர் வேற பங்க்ச்சர் ஆயிடுச்சு. அதை ரெடி பண்ணிக் கொண்டு போறதுக்குள்ள அவசரப்பட்டு குழந்தையைக் கொன்னுட்டான். அவன் பணம் கொண்டு வந்து தரச் சொன்ன இடத்துல என் குழந்தையோட பிணம்தான் இருந்துச்சு."

"போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் கொடுத்தீங்களா?"

"போலீஸுக்கு சொன்னா குழந்தையைக் கொலை செஞ்சுடுவேன்னு முதல்லயே எச்சரிக்கை பண்ணி இருந்தான். அதனாலதான் போலீஸ்க்கு சொல்லாம  பணம் எடுத்துக்கிட்டு கிளம்பினேன்..."

"குழந்தையைக் கொன்னுட்டார்னு தெரிஞ்சப்புறம் போலீஸ்ல புகார் குடுத்தீங்களா?"

"ஆமா இன்ஸ்பெக்டர். அதுக்கப்புறம் புகார் குடுத்தேன். ஆனா அந்தக் கேஸ் இன்னும் கூட அப்பிடியே நிக்குது. என்னோட முதல் குழந்தை சௌம்யாவைக் கடத்திட்டுப் போய் கொன்னவன் யார்னு கண்டுபிடிக்க போலீஸ் நல்லா முயற்சி பண்ணாங்க. ஆனா கண்டு பிடிக்க முடியலை."

"அந்தக் கடத்தலும், கொலையும் நான் இங்கே ஜாயின் பண்றதுக்கு முன்னால நடந்திருக்கணும். அந்தக் கேஸ் ஃபைலை நான் ஸ்டேஷனுக்குப் போய் பார்த்துக்கறேன்."

"என் குழந்தை கவிதாவை உயிரோட கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க இன்ஸ்பெக்டர்" சோகத்தில் மூழ்கி இருந்த ஸ்வர்ணா, வேதனை வெளிப்படும் குரலில் மெதுவாகப் பேசினாள்.


"உங்க செக்யூரிட்டி காளியோட மெடிக்கல் ரிப்போர்ட் வந்ததும் எனக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கும்னு நம்பறேன். உங்க தோட்டக்காரன் வேம்புலி தலைமறைவாகி இருக்கான். இவங்க ரெண்டு பேரும் என்னோட சந்தேக லிஸ்ட்ல இருக்காங்க. கூடிய சீக்கிரம் குழந்தையை யார் கடத்தினாங்கன்னு கண்டுபிடிச்சுடுவேன். கவலைப்படாதீங்க. உங்க குழந்தையை பத்திரமா கண்டு பிடிச்சுக் குடுக்க என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணுவேன்."

"தாங்க்ஸ் இன்ஸ்பெக்டர்."

"உங்க பங்களாவுக்கு பக்கத்துல உள்ள மத்த பங்களாக்காரங்க கூட உங்களுக்கு நல்ல பழக்கம் உண்டா?”

"இந்த ஏரியாவுல எல்லா பங்களாவுமே இடைவெளி தள்ளி தள்ளித்தான் இருக்கும். அதனால யார் கூடயும் நெருக்கமான பழக்கம் கிடையாது. ஏதாவது விசேஷம்னா இன்விடேஷன் குடுத்துப்போம். அதுவும் கூட ஃபார்மலாத்தான்."

"எதுக்கும் நான் அந்த பங்களாக்காரங்களையும் விசாரிச்சுப் பார்க்கணும். அந்த வேம்புலி எந்த ஏரியாவுல இருந்து வர்றான்னாவது தெரியுமா?"

"ஸாரி இன்ஸ்பெக்டர், தெரியாது. இங்க வேலைக்கு வர்றதுக்கு முன்னால வேலூர்ல வேலை பார்த்ததா மட்டும்தான் சொன்னான்.”

"செக்யூரிட்டி காளிகிட்ட விசாரிச்சா வேம்புலியோட அட்ரஸ் கிடைச்சுடும். காளியையும், வேம்புலியையும் விசாரிச்சா கூடுதலான தகவல்கள் கிடைக்கும். இப்ப நான் கிளம்பறேன். உங்க போனை டேப் பண்றதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். மிரட்டல் போன் வந்தா உடனே என்னைக் கூப்பிடுங்க. என்னோட செல் நம்பரை எழுதிக்கோங்க."

ஸ்வர்ணா இன்ஸ்பெக்டர் சொன்ன நம்பரைக் குறித்துக் கொண்டாள். இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.

21

றுநாள் விடியற்காலைப் பொழுது. தினமும் ஜாக்கிங் போவதற்காக காரில் புறப்பட்ட தொழிலதிபர் ராபர்ட், தெரு ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியைப் பார்த்ததும் ஞாபகம் வந்தவராக, காரை ஓரமாக நிறுத்தினார்.

முன்தின இரவு கார் டிக்கிக்குள் ஏகமாய் சேர்ந்து விட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுடலாம் என்று நினைத்தவர் காரில் இருந்து இறங்கினார். டிக்கியைத் திறந்தார். காலியான பாட்டில்களை எடுத்தார். குப்பைத் தொட்டியின் அருகே போனார். குப்பைத் தொட்டிக்குள் போடப் போனவர், அங்கே கறுப்பு நிறக் குப்பைப் பை முழுவதும் நிரப்பப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தார்.

"இயேசுவே" அவரது இதயம் வேகமாக துடித்தது. அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த பாட்டில்கள் கீழே சரிந்தன.

குப்பைப் பையின் மேல் பகுதியில் வெள்ளை வெளேரென்று இரண்டு பிஞ்சுக் கைகள் கொஞ்சமாய் விறைப்பாய் நீட்டிக் கொண்டிருந்தன. தன்னைத்தானே சமாளித்துக் கொண்ட ராபர்ட், மெதுவாக ஒரு பாட்டிலின் மேல் பகுதியினால் குப்பைப் பையைப் பிரிக்க முயற்சித்தார். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தார்.

"ஸார், நான் ராபர்ட். ஜோ அண்ட் ஜோ இன்டஸ்டரி ஓனர். பீச் ரோடு ஓரமா இருக்கற குப்பைத் தொட்டியில ஒரு கவருக்குள்ள குழந்தை கிடக்கு ஸார். கைகள்லாம் விறைச்சுடுச்சு ஸார். உயிர் இருக்காது...."

மறுமுனையில், செய்தியின் பரபரப்பு குரலில் வெளிப்பட்டது.

"நீங்க எதையும் டிஸ்டர்ப் பண்ணாம அங்கேயே வெயிட் பண்ணுங்க. இதோ நாங்க வந்துடறோம்" இன்ஸ்பெக்டர் ப்ரேம் குமாரும், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கும் தங்கள் துறை குழுவுடன் வந்து சேர்ந்தனர். குழந்தை இருந்த குப்பைப் பையை எடுத்து, குழந்தையின் உயிரற்ற உடல் என்பதை ஊர்ஜிதம் செய்தனர்.

"நீங்கதான் மிஸ்டர் ராபர்ட்டா?"

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் விசாரணையைத் துவங்கினார்.

"ஆமா இன்ஸ்பெக்டர். நான்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்."

"குப்பைத் தொட்டியில இருந்த குழந்தை எப்படி உங்க கண்ல பட்டது?"

"நான் தினமும் ஜாக்கிங் பண்றதுக்காக இங்கே வருவேன். ஒரு வாரமா என்னோட கார் டிக்கியில காலியான வாட்டர் பாட்டில்கள் சேர்ந்துடுச்சு. அதை குப்பைத் தொட்டிக்குள்ள போட்டுடலாம்னு போனேன். ஒரு கறுப்பு ப்ளாஸ்டிக் கவர்ல சின்னக் குழந்தையோட கை தெரிஞ்சது. அதைப் பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சியாயிட்டேன். போலீசுக்கு சொல்றதுதான் நல்லதுன்னு உங்களுக்கு போன் பண்ணினேன். நீங்க வர்ற வரைக்கும் இங்கே யாருமே இல்லை இன்ஸ்பெக்டர்."

இதற்குள் காவல்துறையைச் சேர்ந்த போட்டோகிராபர் குப்பைத் தொட்டிக்குள் குழந்தையின் பிணம் கிடந்த கறுப்பு நிற கவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். பெண் குழந்தையின் உயிரற்ற உடல் சற்று ஊதிப் போய் இருந்தது.

"இயேசுவே."

குழந்தையின் முழு உடலையும் பார்த்த ராபர்ட் மறுபடியும் அதிர்ச்சி அடைந்தார்.

"ஆறு மாசக் குழந்தையை இப்படி பண்றதுக்கு எந்தப் பாவிக்கு மனசு வந்துச்சோ இன்ஸ்பெக்டர்...?" ராபர்ட் பரிதாபத்துடன் பேசினார்.

"இந்த மாதிரி கேஸ் எல்லாம் எங்களுக்குப் பார்த்து பார்த்துப் பழகிப் போச்சு மிஸ்டர் ராபர்ட். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து எப்.ஐ.ஆர் போட்டதும் கையெழுத்து போட்டுட்டுப் போயிடுங்க."

"ஓ. கே. இன்ஸ்பெக்டர்."

22

ண்ணீர் மிதக்கும் கண்களோடு, பூஜை அறையே கதியாய் கிடந்தாள் ஸ்வர்ணா. பிரசாத்தும் ஆபீஸிற்கு சரியாகப் போகாமல் விரக்தியான மனநிலையில் இருந்தான். ஷேவ் செய்யாமல் முள் முள்ளான தாடியுடன் இருந்தான். குழந்தையைப் பற்றிய தகவல் கிடைக்காதா என்ற பரிதவிப்பில் நிமிடங்கள் ஒவ்வொன்றும் யுகமாய் கழிந்தன.

டெலிபோன் மணி ஒலித்தது. பரபரப்புடன் சென்று ரீசிவரை எடுத்தான். ஸ்வர்ணாவும் ஓடி வந்து பிரசாத்தின் அருகே நின்றாள்.

"ஹலோ!"

மறுமுனையில் இருந்து கிடைத்த செய்திக்கு ஏகமாய் அதிர்ந்தான் பிரசாத். ரிசீவரை சரியாக வைக்கக்கூட இயலாதவனாய் அருகில் இருந்த சோஃபாவில் சரிந்தான்.

"என்னங்க? என்ன ஆச்சு?" ஸ்வர்ணா பயத்தில் நடுங்கினாள்.

"ஸ்வர்ணா... பீச் ரோடு குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தையோட பிணம் கிடைச்சிருக்காம். அது... அது... நம் கவிதாவா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படறாங்க. நம்பளை வந்து அடையாளம் காட்டச் சொல்றாங்க..."

"ஐயோ... கடவுளே அது என் குழந்தையா இருக்கக் கூடாது. இருக்கவே இருக்காது..." அதற்கு மேல் பேச இயலாதவளாய் பிரசாத்தின் மடிமீது சாய்ந்தாள்.

"எழுந்திரும்மா. இன்ஸ்பெக்டர் நம்பளை உடனே கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்றார். கிளம்பு."

கண்களைத் துடைத்தபடி எழுந்தாள்.

இருவரும் கிளம்பினார்கள்.

குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையின் பிணம், தங்கள் குழந்தை கவிதாதான் என்று அடையாளம் காட்டிய ஸ்வர்ணாவும், பிரசாத்தும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

"பிரசாத், நீங்க தைரியமா இருந்தாத்தான் உங்க மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியும்.  அவங்களை கவனிங்க. ரொம்ப அதிர்ச்சியாகி இருக்காங்க. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. நான் மத்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு. நீங்க கிளம்புங்க.


போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சப்புறம்தான் குழந்தையோட உடலை உங்க கிட்ட ஒப்படைக்க முடியும். மனசைத் தேத்திக்கோங்க."

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பிரசாத்தின் தோளைத் தட்டி ஆறுதலாகப் பேசினார். சோகத்தால் நிலைகுலைந்து போயிருந்த ஸ்வர்ணாவை அணைத்தபடி அழைத்துச் சென்றான் பிரசாத். கார் புறப்பட்டது.

23

போலீஸ் ஸ்டேஷன். இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் கேஸ் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

"கார்த்திக், குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை பிரசாத்தோட குழந்தைன்னு அடையாளம் காமிச்சுட்டாங்க. குற்றவாளி யார்? எதுக்காக குழந்தையைக் கொன்னு குப்பைத் தொட்டியில போடணும்? கொலை செஞ்சப்புறம் குழந்தையைக் குப்பைத் தொட்டியில போட்டாங்களா... அல்லது குப்பைத் தொட்டியில வீசினப்புறம் குழந்தை இறந்துச்சாங்கற விபரமெல்லாம் தெரியணும்."

"பணத்துக்காகன்னு பார்த்தாலும், அப்படி யாரும் மிரட்டலைன்னு பிரசாத் சொன்னாரே? ஏதாவது முன் விரோதமா இருக்குமா ஸார்?"

"இருக்கலாம். ஒரு விஷயம் கார்த்திக், மூத்த குழந்தையையும் இதே மாதிரிதான் கடத்திட்டுப் போய் கொலை செஞ்சுருக்காங்க."

"இந்தக் கேஸ்ல தீவிரமா ஈடுபட்டு, இந்தத் தடவை குற்றவாளியை கண்டுபிடிச்சுடணும். குழந்தையோட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா, ஏதாவது தகவல் கிடைக்கும்."

ப்ரேம்குமார் சொல்லி முடிப்பதற்குள் டெலிபோன் கிணுகிணுத்தது.

"ஹலோ! டாக்டர் திவாகரா? சொல்லுங்க திவாகர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரெடியாயிடுச்சா?"

"ரெடியாயிடுச்சு ஸார்"

"இப்ப உடனே ஸ்டேஷனுக்குக் கொண்டு வர்றீங்களா?"

"சரி ஸார்"

ரிஸீவரை வைத்த இன்ஸ்பெக்டர், கார்த்திக்கிடம் திரும்பினார்.

"குழந்தையோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ரெடியாயிடுச்சாம். எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன்."

"போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல நமக்குத் தேவையான அளவுக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கும்ல ஸார்?"

"நிச்சயமா விஷயங்கள் கிடைக்கும். ஆனா அது எந்த அளவுக்கு குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவியா இருக்கும்ங்கறது சொல்ல முடியாது."

"பிரசாத்தோட போனை டேப் பண்ணதுல, மிரட்டல் எதுவும் வரலைன்னு தெரிஞ்சுடுச்சு... அப்பிடின்னா இந்தக் குழந்தைக் கொலைக்கு மோட்டிவ் நிச்சயமா பணம் இல்லை. ஒரே குழப்பமா இருக்கே ஸார்?"

"கார்த்திக், நீங்க ஒரு விஷயத்தை கவனிக்கணும். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ், சென்னையில நம்பர் ஒன். ஏராளமான பணம், சொத்துக்கள் கொண்ட ஒரு ஸ்தாபனம். தற்சமயம் தொழில் போட்டி ஏகமா இருக்கு. தொழில் போட்டி காரணமா யாராவது பழி வாங்கி இருக்கலாம். ஒரு பெரிய பணக்காரன் வீட்ல க்ரைம் நடந்திருக்குன்னா அதுக்கு மோட்டிவ் பணமா மட்டும் இருக்காது. வேற ஏதாவது சிக்கல், பகை, பெண் விஷயம் அதனால பயமுறுத்தல் ஐ மீன் ப்ளாக் மெயில் இப்படி பல காரணங்கள் இருக்கு... பிரசாத்தோட பங்களாவுல எதுவுமே களவு போகலை. இந்தக் கேஸ்ல இருக்கற மர்ம முடிச்சுக்களை மெதுவாத்தான் அவிழ்க்க முடியும். தலைமறைவாகி இருக்கற தோட்டக்காரன் வேம்புலியை யாரோ பயன்படுத்தி இருக்காங்க. எனக்கு அந்த வேம்புலி மேலதான் சந்தேகம். காளியோட மெடிக்கல் ரிப்போர்ட்டையும், குழந்தையோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டையும் பார்ப்போம்...." இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது டாக்டர் திவாகர் ஸ்டேஷனுக்குள் வந்தார்.

"ஹலோ டாக்டர், வாங்க உட்காருங்க."

டாக்டர் திவாகர் உட்கார்ந்தார்.

"இந்தாங்க இன்ஸ்பெக்டர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்" ஒரு வெள்ளைக் கவரை இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரிடம் கொடுத்தார் டாக்டர் திவாகர். கவரைப் பிரித்து, படித்தார் ப்ரேம்குமார்.

அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து மற்றொரு கவரை ப்ரேம்குமாரிடம் கொடுத்தார். அதையும் பிரித்துப் பார்த்தார்.

"காளியோட மெடிக்கல் ரிப்போர்ட் ஹாஸ்பிட்டல்ல இருந்து குடுத்து அனுப்பி இருக்காங்க. அவன் சாப்பிட்ட உணவுல மயக்க மருந்து அதாவது தன்னை மறந்து ஆழ்ந்து தூங்கற அளவுக்கு மருந்து கலந்திருக்காம். அதனாலதான் அவன் அப்படி அடிச்சுப் போட்ட மாதிரி மயங்கிக் கிடந்திருக்கான். டாக்டர் திவாகர், நீங்க கிளம்புங்க. நானும், கார்த்திக்கும் இந்த ரிப்போர்ட்ஸ் விஷயமா பிரசாத் கிட்ட பேச வேண்டியதிருக்கு."

"ஓ.கே. இன்ஸ்பெக்டர். ரிப்போர்ட்ல வேற ஏதாவது விளக்கம் வேணும்னா என்னோட செல்போன்ல கூப்பிடுங்க."

"தாங்க்யூ"

திவாகர் விடைபெற்று கிளம்பியதும் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் பிரசாத்தின் பங்களாவுக்குக் கிளம்ப ஆயத்தமாயினர்.

"ஸார், குப்பைத் தொட்டிகிட்ட கிடைச்ச ஷு தடயங்களை வச்சு சில தகவல்கள் கிடைச்சது. அதோட சைஸ் நம்பர் ஒன்பது. வெளிநாட்டு கம்பெனியோட தயாரிப்பு. இங்கே உள்ள எந்தக் கடையிலுமே விற்பனை ஆகலை. வெளிநாட்டுப் பொருட்கள் விக்கற எல்லா பஜார்லயும் கூட பார்த்தாச்சு. விசாரிச்சாச்சு." கார்த்திக், இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரிடம் தகவல்களை சொல்லிக் கொண்டே போக, குழப்பம் இருவருக்கும் அதிகரித்தது.

"இதென்ன கார்த்திக், இந்த கேஸ் இப்பிடி நம்பளை ட்ரில் வாங்குது? இந்த ஷு தடத்தைப் பத்தி தகவல்கள் கிடைச்சா கேஸை நகர்த்தறது சுலபமா இருக்கும்ன்னு நம்பினேன். அதுக்கும் இப்ப வழி இல்ல...."

டெலிபோன் ஒலித்தது. கார்த்திக், ரிசீவரை எடுத்தான். "இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் கூட பேசணுமா? நீங்க யார்?"

"ஏற்காடுல இருந்து லாயர் நீலகண்டன் பேசறேன்..."

கார்த்திக், ரிசீவரைக் கையால் மூடிக் கொண்டு, ப்ரேம்குமாரிடம் சொன்னான். "ஸார், லாயர் நீலகண்டனாம். உங்ககிட்ட பேசணுமாம்."

ப்ரேம்குமார் ரிசீவரை வாங்கினார்.

"ஹலோ, சேலத்துல இருந்து நான் லாயர் நீலகண்டன் பேசறேன். உங்ககிட்ட ஒரு கேஸ் விஷயமா பேசணும்."

"எந்தக் கேஸ்? என்ன விஷயம்? விபரமா சொல்லுங்க" தொடர்ந்து லாயர் நீலகண்டன் சொன்ன தகவல்களுக்கு ஏகமாய் அதிர்ந்தார் ப்ரேம்குமார்.

24

"கார்த்திக், எஃப்.ஐ.ஆர் குடுத்த ராபர்ட்டை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்க..."

"இதோ சொல்றேன் ஸார்."

கார்த்திக், அழைத்த அரைமணி நேரத்தில் ராபர்ட் ஸ்டேஷனுக்கு வந்தார்.

"மிஸ்டர் ராபர்ட்! பிரசாத்தோட குழந்தை குப்பைப் பையில பிணமா கிடந்துச்சே, அதுக்கு முந்தின நாள் நீங்க, இங்கே சென்னையிலதான் இருந்தீங்களா?" ப்ரேம்குமாரின் கேள்வியில் மறைந்து நின்ற சந்தேகம் ராபர்ட்டிற்குப் புரிந்தது.

"இயேசுவே, என்ன இன்ஸ்பெக்டர்! எஃப்.ஐ.ஆர் குடுத்த என் மேலயே சந்தேகமா? ஐ எம் ய ட்ரூ கிறிஸ்டியன். பொய் சொல்றதைக் கூட பாவமா நினைக்கறவன் நான்..."

ப்ரேம்குமார் இடைமறித்தார். "எங்க போலீஸ் கண்ணோட்டம் எல்லார் மேலயும்தான் சந்தேகம் வரும். விசாரணை நடத்தினாத்தானே துப்பு துலக்க முடியும்?"

"ஓ.கே. இன்ஸ்பெக்டர். உங்க கடமையை நீங்க செய்யறீங்க."

"குப்பைத் தொட்டியில குழந்தையோட உடலைப் பார்த்ததுக்கு முந்தின நாள் நீங்க எங்கே இருந்தீங்க?"

"நீலாங்கரையில இருக்கற என்னோட ஃபார்ம் ஹவுஸ்ல பார்ட்டி வச்சிருந்தேன். அங்கே போயிருந்தேன்."

"எத்தனை பேர் வந்திருந்தாங்க?"


"சுமாரா அம்பது பேர் இருக்கும்."

"உங்களுக்கு பிரசாத்தை இதுக்கு முன்னால தெரியுமா?"

"ஃபேமஸ் பிஸினஸ் மேனா, தொழிலதிபரா தெரியும். ஆனா நேரடியான பழக்கம் கிடையாது. அவ்வளவு ஏன், அறிமுகம் கூட கிடையாது."

"நீங்க சொல்றதை எந்த அளவுக்கு நம்பலாம் மிஸ்டர் ராபர்ட்?"

"நீங்க எந்த அளவுக்கு நம்பினாலும் உண்மை அதுதான். எனக்கும் பிரசாத்துக்கும் எந்த விதத்திலும் தொடர்பே கிடையாது. குப்பைத் தொட்டியில குழந்தைக் கிடந்ததைப் பார்த்துட்டு கடமை உணர்ச்சியோட போலீசுக்கு போன் பண்ணினேன். அவ்வளவுதான்."

"ஓ.கே. மிஸ்டர் ராபர்ட். எங்க ட்யூட்டியை நாங்க செய்யறதுக்கு ஒத்துழைச்ச உங்களுக்கு நன்றி. ஸாரி ஃபார் த ட்ரபிள்."

"நீங்க எப்ப வேணும்னாலும், எதைப்பத்தி வேணும்னாலும் என் கிட்ட விசாரணைக்கு வரலாம் இன்ஸ்பெக்டர்."

"தாங்க்யூ".

ராபர்ட் கிளம்பினார்.

"என்ன ஸார், அந்த ராபர்ட்டை என்கொய்ரி பண்ணதில ஏதுவும் உபயோகமான தடயம் கிடைச்ச மாதிரி தெரியலையே?"

"கார்த்திக், அது ஒரு மேலோட்டமான விசாரணை. ராபர்ட் ஓரளவுக்கு வெளி உலகுக்கு, ஐ மீன், பப்ளிக்குக்கு தெரிஞ்ச கௌரவமான மனிதர். திடுதிப்புன்னு அவர்கிட்ட நம்பளோட சந்தேகத்தை வெளிப்படுத்திட முடியாது. இன்னும் அவரை கவனமா கண்காணிக்கணும். அவரோட வீடு, அவரோட ஜோ அண்ட் ஜோ இன்டஸ்ட்ரீஸ், ஆபீஸ், இப்படி அவர் சம்பந்தப்பட்ட எல்லா இடத்துலயும் அவரைப் பத்தி விசாரிக்கணும். நீலாங்கரையில இருக்கற அவரோட ஃபார்ம் ஹவுஸ் போய் அங்கேயும் விசாரிக்கணும். அதுக்கப்புறம்தான் அவரைப் பத்தின எந்த விஷயமும் தெரியவரும்."

"அவரே தப்பு பண்ணிட்டு அவராகவே ஏன் ஸார் போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும்?"

"தான் நல்லவன்னு காட்டிக்கவும், போலீஸ் கவனத்தை திசை திருப்பவும் அப்படி செஞ்சிருக்கலாம்."

"இனி நம்பளோட அடுத்தக் கட்ட நடவடிக்கை?"

"பிரசாத் வீட்டுக்கு நான் போய் என்கொய்ரி பண்றேன். நீங்க ராபர்ட் சம்பந்தப்பட்ட எல்லா இடங்கள்லயும் விசாரிங்க."

"ஓ. கே. ஸார்."

25

"மி ஸ்டர் பிரசாத், அன்னிக்கு உங்க மனைவி சொன்னாங்க. பணம் இருந்தப்ப முதல் குழந்தையைக் கடத்திட்டுப் போனாங்க. இப்ப எதுவுமே இல்லாத எங்ககிட்ட எதுக்காக இப்பிடி குழந்தையைக் கடத்திட்டுப் போணும்னு. அதுக்கு என்ன அர்த்தம்? எதுக்காக அப்படி சொன்னாங்க?"

"எங்க அப்பா, தன்னோட சொத்துல எனக்கு எதுவுமே கிடையாதுன்னு உயில் எழுதி வச்சுட்டார். இந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும். அப்பிடி இருந்தும் இப்ப எங்க குழந்தையை ஏன் கடத்தணும்னு ஸ்வர்ணா வருத்தப்பட்டா."

"அவர் அப்படி செஞ்சதுக்குக் காரணம்?"

"எனக்கு ஆண் குழந்தை பிறக்கலை. அதுதான் காரணம். அதனால என்ன? எனக்கு வயசு இல்லையா? உழைக்கக்கூடிய தெம்பு இல்லையா? அவரைப் போல என்னாலயும் சுயமா சம்பாதிச்சு முன்னுக்கு வரமுடியாதா? இந்த சொத்து என்ன ஸார் பெரிசு? பெத்த குழந்தைங்கதான் பெரிய சொத்து. அதையே இழந்துட்டு தவிக்கிறோம்..."

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வர்ணா, சோகத்தில் இருந்து கோபத்திற்கு மாறினாள்.

"இன்ஸ்பெக்டர் ஸார், என் மாமனார் ஆண் குழந்தை ஆண் குழந்தைன்னு சொல்ல சொல்ல பெண் குழந்தைதான் பிறந்துச்சு. இதுக்காக நாங்க கவலைப்பட்டதே கிடையாது. எங்க குழந்தைங்க அநியாயமா இறந்து போனதுதான் தாங்க முடியாத துக்கம். என் மாமனாரைப் பெத்தவளும் பொண்ணுதான். அவர் கல்யாணம் பண்ணி, அவருக்கு ஒரு வாரிசைப் பெத்துக் குடுத்ததும் பொண்ணுதான். அந்த வாரிசுக்கும் வாரிசு உருவாகணும்னு கல்யாணம் பண்ணி வச்சாரே, நானும் பொண்ணுதான். இதையெல்லாம் மறந்துட்டு ஆண் குழந்தை வேணுமாம், ஆண் குழந்தை. அழகா, சிகப்பா பிறந்த ரெண்டு குழந்தைகளைப் பறி குடுத்துட்டு நிக்கிறோம்...." இதற்கு மேல் பேச முடியாதவளாய் அழ ஆரம்பித்தாள்.

"அவருக்கு பெண் குழந்தைன்னா ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு? இதுக்கு அடிப்படையா ஏதாவது காரணம் இருக்கா மிஸ்டர் பிரசாத்?"

"எனக்குத் தெரிஞ்சு, அப்படியெல்லாம் பெரிசா எந்தக் காரணமும் இல்லை சார்? அவர் சின்ன வயசுல இருந்தே சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சவர். நிறைய பணம், சொத்துக்களெல்லாம் சேர்ந்ததும் அவரோட குணமும் மாறிடுச்சு. பணம் பணம்ன்னு அலைஞ்சார். சேர்க்கும் சொத்துக்களுக்கும், தன் பேர் சொல்லவும், ஆண் வாரிசு வேணும்னு ஆசைப்பட்டார். அவரோட ஆசைப்படியே நான் பிறந்தேன். எனக்கும் ஆண் குழந்தைதான் வாரிசா வரணும்னு தீவிரமா இருந்தார். 'பெண் குழந்தைன்னா அவரோட சொத்துக்கள் எல்லாம் பெண் வழியில, வேற குடும்பத்துக்குப் போயிடுமேன்னு ஆதங்கப் பட்டார். தன்னோட பெயரும் மறைஞ்சுப் போயிடுமேன்னு ஒரு தப்பான, மூடத்தனமான சித்தாந்தத்துல சிக்கிக்கிட்டார்."

"பேத்திப் பெண்ணோட புகுந்த வீட்டுக்குத் தன் சொத்துக்கள் போறதை 'யாருக்கோ போவதாக’ நினைக்கற அவர், முன்ன பின்ன அறியாதவங்களுக்கு தர்ம ஸ்தாபனங்கள் மூலமா போறதை எப்படி ஏத்துக்கிட்டார்?"

"அதான் சொன்னேனே ஸார்... ஒரு மூடத்தனமான மனப்பான்மையை அவரே வளர்த்துக்கிட்டார்ன்னு. தர்ம ஸ்தாபனங்களுக்கு சொத்துக் கொடுத்தா, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் இதிலயெல்லாம் பெரிசு பெரிசா அவரோட பேரை போடுவாங்க. இதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தோணலை. மேல போய் சேர்ந்துட்ட அவர்கிட்ட போய் கேட்க முடிஞ்சா கேட்கலாம்.." வெறுப்பும், வேதனையும் கலந்து வெளிப்பட்டது பிரசாத்தின் பதிலில்.

"இந்த பங்களாவும் உங்க அப்பாவோடதுதானே?"

"ஆமா ஸார்."

"பங்களா ரொம்ப அழகா, நல்லா ப்ளான் போட்டு கட்டி இருக்கீங்க. சுத்திப் பார்க்கலாமா?"

"ஓ. தாராளமா. இந்த பங்களா ப்ளான், டெக்கரேஷன் டிசைனிங் எல்லாமே அப்பாவோட ஐடியாதான்."

ப்ரேம்குமார் பங்களா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த மரச்சாமான்கள் அனைத்தும் தேக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன.

"சுவர்ல மாட்டி இருக்கற ஓவியங்கள், படங்கள், அங்கங்கே இருக்கற கலைப் பொருட்கள் எல்லாமே கலா ரசனையோட இருக்கு."

"அதுவும் கூட அப்பாவோட செலக்ஷன்தான்."

சமையல் அறை ஒரு பெரிய ஹால் அளவுக்கு இருந்தது. நவீன சாதனங்கள் அனைத்தும் இருந்தன. ஒரு மூலையில் யானையில் கால் வடிவத்தில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டி இருந்தது.

சமையலறைக்குக் கீழே சில படிக்கட்டுகள் இருந்தன. "கீழேதான் ஸார் விருந்தினர்க்குன்னு இடம் ஒதுக்கி இருக்கோம்."

"ஓகோ, பேஸ்மென்ட் கெஸ்ட் ரூமா?"

"ஆமா ஸார்."

"அதையும் பார்த்துரலாமா?"

"வாங்க ஸார் பார்க்கலாம்."

ப்ரேம்குமார் பேஸ்மென்ட் கெஸ்ட் ரூம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார்.


"எல்லா இடமும் ரொம்ப அழகா, நேர்த்தியான கலை அம்சத்தோட இருக்கு. ஒரு கலைக்கூடம் மாதிரிதான் கட்டி வச்சிருக்கார் உங்க அப்பா. ஓ.கே. மிஸ்டர் பிரசாத், நான் கிளம்பறேன்"  இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் விடைபெற்றார்.

ப்ரேம்குமார் ஜீப்பில் ஏறுவதற்காக பங்களாவை விட்டு வெளியே வந்தார். பங்களாவின் காம்பவுண்டு கேட் அருகே மண்ணிற்குள் இருந்து சிகப்பு நிறத்தில் ஏதோ ஒரு சிறு புத்தகம் தென்பட்டது. ப்ரேம்குமார் அதை எடுத்துப் பார்த்தார். அதில் மண் ஒட்டிக் கொண்டிருந்தது. மண்ணைத் தட்டினார். உற்றுப் பார்த்தார். அது ஷர்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறிய டெலிபோன் புக். அதன் பக்கங்களை புரட்டினார். சில பக்கங்களில் மட்டுமே பெயர், தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. மறுபடி மறுபடி புரட்டிப் பார்த்தார். சமையல் காஸ் ஏஜென்ஸி நம்பர், கன்ஸ்யூமர் நம்பர், டாக்டர் நரசிம்மன், வேலை வாய்ப்பு அலுவலகம், வெங்கடேஸ்வரா மெடிக்கல்ஸ், வாசு ஆகியோரது டெலிபோன் எண்கள் குறிக்கப்பட்டு இருந்தன. 'தனி நபர் என்று பார்த்தால் வாசு என்ற பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டுமே இருக்கு’  எண்ணங்கள் இதயத்தில் உருவாக, டெலிபோன் புக்கை தன் ஷர்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டார். ஜீப்பில் ஏறினார். ஜீப் கிளம்பியது.

26

போலீஸ் ஸ்டேஷன். வீட்டில் இருந்து, கொண்டு வந்த ஃப்ளாஸ்க்கில் இருந்து டீயை இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றினார். எதிரே உட்கார்ந்திருந்த கார்த்திக்கிடம் ஒன்றைக் கொடுத்தார்.

"என்ன ஸார், ரொம்ப நேரமா ஏதோ யோசனையிலயே இருக்கீங்க?" டீயை சுவைத்தபடி கார்த்திக் கேட்டான்.

"நேற்று பிரசாத் வீட்டுக்குப் போனப்ப வாசல் கிட்ட இந்த சின்ன டெலிபோன் புக் கிடந்துச்சு. இதில இருக்கற நம்பரை வச்சு இந்த புக் யாருக்கு சொந்தமானதுன்னு கண்டுபிடிக்கணும்."

"பிரசாத்தோட பங்களா வாசல்ல கிடைச்சதுங்கறீங்க. இது ஏன் அவரோடதா இருக்கக் கூடாது?"

"உங்க கேள்வி புத்திசாலித்தனமானதுதான் கார்த்திக். ஆனா ஒரு விஷயம் இந்த புக் மிஞ்சிப் போனா அஞ்சு ரூபாய்க்கு மேல் இருக்காது. இவ்வளவு மலிவான டெலிபோன் புக், பிரசாத்தோடதா இருக்க வாய்ப்பு இல்லைன்னு நான் நினைக்கிறேன். இது ஒரு முக்கியமான தடயமா எனக்குத் தோணுது. முதல்ல இதில இருக்கற நம்பர்களை வச்சு இந்த புக்குக்கு சொந்தக்காரன் அல்லது சொந்தக்காரி யார்னு கண்டு பிடிக்கணும்."

"அது எப்படி சார் முடியும்?"

"பொதுவா ஒரு வீட்டுக்குத் தேவையானது காஸ். காஸ் ஏஜென்ஸியோட நம்பர் இதில இருக்கு. கூடவே கன்ஸ்யூமர் நம்பரும் இருக்கு. அடுத்தது மெடிக்கல் ஷாப். அந்த ஏரியாவுல இருக்கற மெடிக்கல் ஷாப் நம்பரைத்தான் எழுதி வைக்கறது வழக்கம். அது மட்டும் இல்லை, வாசுன்னு ஒரு தனி நபரோட போன் நம்பரும் இருக்கு. அதனாலதான் இது ஒரு முக்கியமான தடயம்னு சொல்றேன்."

"அந்த புக்கை குடுங்க ஸார். இப்பவே போன் பண்ணிப் பார்க்கலாம்" கார்த்திக் கேட்டதும் ப்ரேம்குமார் அவனிடம் கொடுத்தார்.

கார்த்திக் வெங்கடேஸ்வரா மெடிக்கல்ஸ்க்கு போன் செய்தார். அந்த ஏரியா மைலாப்பூர் என்று தெரிய வந்தது.

காஸ் ஏஜென்ஸியை அழைத்தான். கன்ஸ்யூமர் நம்பர் கூறி பெயரையும் அட்ரஸையும் கேட்டான்.

"எதுக்காக கேக்கறீங்க?" கீச் கீச்என்ற குரலில் ஒரு பெண் கேட்டாள்.

"நான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து பேசறேன்."

கார்த்திக் சொன்னதும் கீச் குரல் மறுபடி கீச்சிட்டது.

"போலீஸா?"

"ஆமா மேடம்."

"இதோ ஒரு நிமிஷம் ஸார்." பக்கங்களை புரட்டும் ஒலி கேட்டது. ஒரு நிமிட அவகாசம் கேட்ட 'கீச்’ சில நிமிடங்கள் ஆன பிறகு பெயரையும், அட்ரஸையும் தெளிவாகக் கூறியது.

"கோபால், நம்பர் இருபது, சந்நிதி தெரு, மைலாப்பூர்."

"தாங்க்யூ." கார்த்திக் ரிசீவரை வைத்தான்.

"ஸார், அட்ரஸ் கிடைச்சுடுச்சு."

"வாங்க கிளம்பிப் போய் விசாரிக்கலாம்"

இருவரும் கிளம்பினார்கள்.

27

வாசலில் ஜீப் வந்து நிற்கும் ஒலி கேட்டது. பழைய பத்திரிகை படித்துக் கொண்டிருந்த கமலா, அதை கீழே வைத்தாள்.

"என்னங்க, நம்ப வாசல் பக்கம் கார் வந்து நிக்கற சத்தம் கேக்குது. திருச்சியில இருந்து என்னோட தங்கை கமலி வர்றதா சொல்லி இருந்தா. அவளா என்னன்னு பாருங்களேன்."

கோபால் வாசலுக்கு சென்று எட்டிப் பார்த்தார். போலீஸ் ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் இறங்கி தங்கள் வீட்டை நோக்கி வருவதைப் பார்த்து திடுக்கிட்டார்.

"உங்க வீட்டு நம்பர் இருபதுதானே?" திகைத்து நின்ற கோபாலிடம் ப்ரேம்குமார் கேட்டார்.

"அ... ஆமா ஸார்."

"உங்க பேர்?"

"கோபால்." கோபாலின் குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல மெதுவாகக் கேட்டது.

"உங்க வீட்டில வேற யார் யார் இருக்காங்க. உள்ளே வரலாமா?"

"வா... வாங்க... ஸார்..."

வீட்டிற்குள் போலீஸ் வருவதைப் பார்த்த கமலாவும் அதிர்ந்தாள்.

"என்னங்க இது? போலீஸ்காரங்க வந்திருக்காங்க?"  அலறினாள்.

"அம்மா பதட்டப்படாதீங்க. ஒரு விசாரணைக்காகத்தான் வந்திருக்கோம். உங்க காஸ் கன்ஸ்யூமர் நம்பர் இதுதானா?" பேப்பரில் எழுதியதைக் காண்பித்ததும் கமலா மௌனமாய் ஆமோதித்தாள்.

"உங்க வீட்டில வேற யாரெல்லாம் இருக்காங்க?"

"எங்களுக்கு ஒரே மகன். அவன் பேர் சரவணன்."

"என்ன வயசு?"

"இருபத்தஞ்சு வயசு ஆகுது."

"என்ன பண்றார்?"

"படிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்காம சும்மாத்தான் இருக்கான்." ப்ரேம்குமாரின் தொடர் கேள்விகளுக்கு கோபால் பதில் கூறிக் கொண்டிருந்தார்.

அதுவரை பொறுமையாக இருந்த கமலா பதட்டத்துடன் குறுக்கிட்டாள்.

"ஸார், என் பையனை பத்தி எதுக்காக விசாரணை பண்றீங்க?"

"சொல்றேன்மா. இந்த டெலிபோன் புக்கை இதுக்கு முன்னால பார்த்திருக்கீங்களா?"

கமலாவிடம் டெலிபோன் புக்கை கொடுத்தார் ப்ரேம்குமார்... கமலா அதை புரட்டிப் பார்த்தாள்.

"இது எங்க சரவணனோடது. இதுக்கும், உங்க விசாரணைக்கும் என்ன சம்பந்தம் இன்ஸ்பெக்டர்?"

நடுக்கமான குரலில் கேட்டார் கோபால்.

"நீங்க பயப்படும்படியா எதுவும் இல்லை ஸார். அது சரி, இந்த டெலிபோன் புக்ல வாசுன்னு ஒரு பேர் எழுதி நம்பரும் குறிச்சு வச்சிருக்கே. இந்த வாசு யார்னு உங்களுக்குத் தெரியுமா?"

"வாசு எங்க சரவணனோட ஃப்ரெண்டு. ஸ்கூல்ல இருந்து காலேஜ் முடிச்சு வேலை தேடற வரைக்கும் ரெண்டு பேரும் நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ். தினமும் காலையில ரெண்டு பேரும் ஜாகிங் கூட ஒண்ணாத்தான் போவாங்க."

"அந்த வாசுவோட அட்ரஸ் தெரியுமா?"

"தெரியும் ஸார்"

"எழுதிக் குடுங்க."


கோபால் எழுதிக் கொடுத்தார்.

"இப்ப உங்க மகன் சரவணன் வீட்ல இல்லையா?"

"இல்லை ஸார்."

"உங்க பையனோட வழக்கமான நடவடிக்கைகள்ல ஏதாவது மாறுதல் தெரிஞ்சுதா?"

"இல்லை ஸார். வேலை கிடைக்காத கவலையில சோகமா இருப்பான். மத்தபடி வேற எதுவும் வித்தியாசமான நடவடிக்கை கிடையாது இன்ஸ்பெக்டர்" கூறிய கோபால், பின் தயக்கமாக கேட்டார்.

"ஸார், இந்த விசாரணை எதுக்குன்னு சொல்லலையே..."

"சொல்றேன். நீங்க கொஞ்சம் தனியா வாங்க." ப்ரேம்குமார் கிசுகிசுப்பாய் கோபாலிடம் சொன்னார்.

கமலா கவலையுடன் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

மற்ற மூவரும் வாசலுக்கு சென்றனர். ப்ரேம்குமார் குரலை தாழ்த்திப் பேசினார்.

"மிஸ்டர் கோபால், பேப்பர்ல நியூஸ் படிச்சிருப்பீங்க. டி.வி.யில கூட நியூஸ் பார்த்திருப்பீங்க. பிரபல ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரசாத்தோட குழந்தை கடத்தப்பட்டு கொலையாகி, அதோட பிணம் குப்பைத் தொட்டியில கிடந்த விஷயம் பத்தி... அந்தக் கேஸ் விஷயமா பிரசாத்தோட பங்களாவுக்குப் போனேன். அங்கே இந்த டெலிபோன் புக் கிடைச்சது. இது உங்க மகன் சரவணனோடதுதான்னு நீங்களும் சொல்லிட்டீங்க. இப்ப சொல்லுங்க. அந்த பிரசாத் உங்க உறவினரா? குடும்ப நண்பரா? எதுக்காக சரவணன் அங்கே போனார்?"

"அந்த பிரசாத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை நாங்க ரொம்ப கீழ் மட்டத்துல இருக்கோம். ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ் பெரிய லெவல்ல இருக்காங்க. மலைக்கும் மடுவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே?..."

"கரெக்ட். ஒரு வேளை உங்க மகனுடைய இந்த புக்கை வேற யாராவது எடுத்திருக்கலாம். எடுத்தவங்க பிரசாத்தோட பங்களாவுக்குப் போயிருக்கலாம். இதை அங்கே தவற விட்டிருக்கலாம். ஒரு கேஸ்னு வந்துட்டா எல்லா தரப்புலயும் விசாரணை செய்ய வேண்டியது எங்க கடமை. அதைத்தான் நாங்க செய்யறோம். உங்க மனைவி ரொம்ப பயந்து போயிருக்காங்க. அதனாலதான் உங்களைத் தனியா கூப்பிட்டு விசாரிக்கிறேன்."

"எங்க பையன் நல்ல பையன் இன்ஸ்பெக்டர். எங்க வீட்டுக் கஷ்டத்துல பங்கு எடுத்துக்க முடியாத துக்கத்துல இருக்கான். நாங்க ஏழையா இருந்தாலும் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவங்க இன்ஸ்பெக்டர்."

"ஓ.கே. மிஸ்டர் கோபால். விசாரணைக்கு ஒத்துழைச்ச உங்களுக்கு நன்றி. நாங்க வர்றோம்." ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் ஜீப்பில் ஏறிப் போகும்வரை படபடக்கும் இதயத்துடன் நின்றிருந்த கோபால், தளர்வான நடையுடன் உள்ளே சென்றார்.

28

வாசுவின் தொலைபேசி எண்களைச் சுற்றி பதிலுக்காக காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.

மறுமுனையில் குரல் கேட்டது.

"ஹலோ?"

"ஹலோ, மிஸ்டர் வாசு இருக்காரா?"

"நான் வாசுதான் பேசறேன். நீங்க?"

"நான் போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் பேசறேன். ஒரு விசாரணைக்காக கூப்பிட்டேன். நீங்க பி.ஒன். போலீஸ் ஸ்டேஷனுக்கு உடனே வாங்க.."

"என்ன விசாரணைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா இன்ஸ்பெக்டர்?"

"நீங்க இப்ப வர்றீங்கள்ல. அப்ப தெரிஞ்சுக்கலாம்."

"சரி சார். இதோ வந்துடறேன்."

ரிசீவரை வைத்த ப்ரேம்குமார் வாசுவுக்காக காத்திருந்தார்.

அப்போது முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு முரடனை கான்ஸ்டபிள்கள் கூட்டி வந்தனர்.

"இவன்தான் ஸார் தொழிலதிபர் பிரசாத்தோட வீட்டுல தோட்டக்காரனா வேலை பார்த்த வேம்புலி. செக்யூரிட்டி காளி சொன்ன அடையாளத்தை வச்சு இவனைப் பிடிச்சுட்டோம்."

"இவனை லாக்கப்புக்கு கூட்டிட்டுப் போய் அங்கே இருக்கற காளி கிட்ட காமிச்சு இவன்தான் வேம்புலியான்னு விசாரிங்க."

வேம்புலியை லாக்கப்புக்கு கூட்டிச் சென்றனர். அங்கே காளி இருந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காளியை லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர்.

"ஏ காளி, இவனைப் பாரு. இவன்தான் வேம்புலியா?"

"ஆமா ஸார். இந்த படுபாவிதான் வேம்புலி. எங்க முதலாளியோட குழந்தையைக் கடத்திக்கிட்டுப் போய் கொலையும் பண்ண கல்நெஞ்சக்கார பாவி. பிரியாணியில மயக்க மருந்தைக் கலந்துக் குடுத்துட்டுக் குழந்தையை கடத்திட்டு போன துரோகி சார். இவனை விட்டுட்டு என்னை உள்ளே தள்ளிட்டீங்களே ஸார்...?"

"ஏய், கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. இவன்தான் பிரசாத் பங்களாவுல வேலை பார்த்த வேம்புலியா?"

"ஆமா."

"போதும் வாயை மூடிக்க." சொல்லிவிட்டு கான்ஸ்டபிள்கள் வேம்புலியை ப்ரேம்குமாரிடம் கூட்டிச் சென்றனர்.

"அவனை விடுங்க." ப்ரேம்குமார் ஆணை இட்டதும் வேம்புலியை விடுவித்தனர் கான்ஸ்டபிள்கள்.

"உன் பேர் என்ன?"

"வேம்புலி."

"நீ எங்க வேலை பார்த்த?"

"மு... முதல்ல...."

"என்னடா உளர்ற? கடைசியா எங்க வேலை பார்த்த?"

"ராஜசேகரன் ஐயாவோட புள்ள பிரசாத் ஐயா பங்களாவுல ஸார்."

"அவங்க வீட்டுக் குழந்தையை நீதானே கடத்திட்டுப் போய் கொலை செஞ்ச? எதுக்காக இப்பிடி பண்ணின?"

"அ... அது... வந்து... நான் எந்த தப்பும் பண்ணல சாரு, எனக்கும் அந்த குழந்தை மேட்டருக்கும் எந்த கனெக்ஷனும் இல்ல சாரு."

"உண்மையை நீயாவே சொன்னா உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. இல்லைன்னு உன்னை சொல்ல வைக்கற வழி எனக்குத் தெரியும்."

"சத்தியமா ஸார். காலரா வந்து வாரிக்கினு போன என் ஆயி, அப்பன் மேல சத்தியமா சொல்றேன் ஸாரு. நான் எந்தத் தப்பும் பண்ணலீங்க ஸாரு."

"தப்பு செஞ்ச எவன்டா உடனே உண்மையை சொல்லி இருக்கான்?! கான்ஸ்டபிள், இவனை தனி லாக்கப்புல போடுங்க. இவனுக்குக் குடுக்க வேண்டியதைக் குடுத்தா நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும்."

தனி லாக்கப்பில் வேம்புலிக்கு ப்ரேம்குமார் குடுத்த பூஜா பலன், வேம்புலியின் வாய் உண்மை பேசுவதற்காகத் திறந்தது. டேப் ரிக்கார்டர், பேப்பர் பேனா சகிதம் கான்ஸ்டபிள்கள் தயாராக, வேம்புலி வாக்கு மூலம் கொடுத்தான்.

29

முதன் முதலாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடி எடுத்து வைத்தான் வாசு. பிரேம்குமாருக்காகக் காத்திருந்தான்.

வேம்புலியிடம் வாக்குமூலம் வாங்கும் முயற்சியில் களைத்துப் போயிருந்த ப்ரேம்குமார் மின்விசிறியை வேகமாக சுழலவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தார்.

"ஸார், இவர் பேரு வாசுவாம். நீங்க வரச் சொன்னதா சொன்னார். அதனால காத்திருக்கச் சொன்னேன்." கான்ஸ்டபிள் வாசுவைக் காண்பித்தார்.

"அவரை இங்கே கூட்டிட்டு வா."

வாசு வந்தான்.

"வணக்கம் ஸார்."

"வணக்கம். நீங்கதான் வாசுவா?"

"ஆமா ஸார்."

"அதாவது ஜி. சரவணனோட ஃப்ரெண்டு வாசு?!"

"ஆமா ஸார்..."

"சரவணனை தினமும் பார்ப்பீங்களா?"

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் தினமும் நான் சரவணனை பார்த்துக்கிட்டிருந்தேன். காலையில ரெண்டு பேரும் ஒண்ணா ஜாகிங் போவோம். வருவோம். ஆனா இப்ப கொஞ்சநாளா அவன் ஜாகிங் பண்றதுக்கு வர்றது இல்ல ஸார்."


"ஏன்? என்ன காரணம்? உங்களுக்குள்ள ஏதாவது தகராறா?"

"ம்... அ... அது... வந்து ஸார்..."

"வாசு, இது போலீஸ் ஸ்டேஷன். முக்கியமான விசாரணைக்காக உங்களை இங்கே வரவழைச்சிருக்கோம். உண்மையை மறைக்காம சொன்னா உதவியா இருக்கும். அது மட்டுமில்ல. நீங்களும் சிக்கல்ல மாட்டிக்காம இருக்கலாம். சொல்லுங்க. ஏன் தயங்கறீங்க? நீங்க படிச்ச பட்டதாரி. பாமர மக்களைப் போலவோ பரம ரௌடிகளை ட்ரீட் பண்றது போலவோ உங்களை ட்ரீட் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு நான் நினைக்கிறேன். சொல்லுங்க."

"சொல்றேன் ஸார்... நானும் சரவணனும் நெருங்கிய நண்பர்கள் ஸார். நாலு வயசுல இருந்து டிகிரி முடிக்கற வரைக்கும் சேர்ந்து படிச்சோம். படிச்சு முடிச்சப்புறம் ஒரே கம்பெனியில ரெண்டு பேருக்கும் வேலை கிடைக்கணும்னு ஆசைப்பட்டோம். படிச்சு முடிச்சதும் வேலை கிடைச்சுடும்னு எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சது. சிபாரிசு பண்றதுக்கு பெரிய ஆளுக யாரையும் தெரியாது. லஞ்சம் குடுத்து வேலை தேடிக்கற அளவுக்கு நாங்க வசதியானவங்களும் இல்லை. எங்க ரெண்டு பேர் குடும்பமும் ஏழைக் குடும்பம்தான். படிக்க வச்சதே பெரிய விஷயம்."

"வேலை கிடைக்கலைன்னா என்ன? சுயமா ஏதாவது தொழில் செய்யக் கூடாதா?"

"சுய தொழில் செய்ற அளவுக்கு எங்க அம்மா, அப்பாவால பண முதலீடு செய்ய முடியாது ஸார். ஒவ்வொரு ஞாயிறும் பேப்பர்ல வர்ற வேலை விளம்பரங்களைப் பார்த்து இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணி... இந்த வேலை கிடைச்சுடும்னு நம்பிக்கையோட இருந்தோம். நம்பிக்கைதானே வாழ்க்கைன்னு ஒவ்வொரு கம்பெனி இன்ட்டர்வியூவுக்கும் போய்க்கிட்டிருந்தோம். ஆனா 'ராஜசேகரன் இன்டஸ்ட்ரீஸ்’ ஆபிசுக்கு இன்ட்டர்வியூ போனதோட விளைவு, சரவணனோட மனநிலையையே மாத்திடுச்சு. சிபாரிசுல வர்றவங்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்த அந்தக் கம்பெனி அதிபர் பிரசாத் மேல ரொம்ப கோபமாயிட்டான் சரவணன்."

சரவணனுக்கும், தனக்கும் உள்ள நெருக்கமான நட்பு முதல் அந்த நட்பு முறிவடையக் கூடிய சூழ்நிலை வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பிரேம்குமாரிடம் வெட்ட வெளிச்சம் ஆக்கினான். சரவணன் பிடிவாதமாக பிரசாத்தைப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்தது உட்பட சகல விஷயங்களையும் தெளிவாகக் கூறினான். கவனமாகக் கேட்டுக் கொண்ட ப்ரேம்குமார் தன் மனதில் தோன்றிய சந்தேகக்கணைகளை வீசினார்.

"சரவணனோட பழி வாங்கற படலத்துல உங்களுக்குப் பங்கு இல்லைன்னு சொல்றீங்களா?"

"நிச்சயமா இல்லை ஸார். எங்க வீட்டிலயும் கஷ்டம்தான். என்னோட அண்ணன் குடும்பத்துக்கு நானும் பாரமாதான் உட்கார்ந்திருக்கேன். ஆனா இந்த மாதிரி தப்பெல்லாம் செஞ்சு, பணக்கஷ்டத்தை விட அதிகமான மனக்கஷ்டத்தைக் குடுத்துடக் கூடாதுன்னு உறுதியான மனசு உள்ளவன் ஸார் நான். தவறான பாதைக்குப் போக திட்டமிட்ட சரவணனை எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன் ஸார். ஆனா... அவன் சுபாவத்துல ரொம்ப நல்லவன் ஸார். இந்த அளவுக்கெல்லாம் போக மாட்டான் ஸார்."

"அதை முடிவு செய்ய வேண்டியது நாங்களும் கோர்ட்டும். நீங்க இல்லை. எனிவே, நடந்ததை ஒப்புக்கிட்ட உங்க நேர்மையை பாராட்டறேன். இப்ப நீங்க போகலாம். ஆனா தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போடணும். எப்ப வேணும்னாலும் விசாரணைக்குக் கூப்பிடுவோம்."

"சரி ஸார். ஆனா ஒரு சின்ன வேண்டுகோள் ஸார். நானே தினமும் ஸ்டேஷனுக்கு வந்துடறேன் ஸார். வீட்டுக்கு போன் பண்ணாதீங்க ஸார். அண்ணாவும், அண்ணியும் ரொம்ப கவலைப்படுவாங்க ஸார். ப்ளீஸ் ஸார்."

"பார்க்கலாம். இப்போதைக்கு தள்ளிப் போடத்தான் முடியுமே தவிர, பேப்பர்ல நியூஸ் வர்றதையெல்லாம் எங்களால தடுக்க முடியாது வாசு. யூ கேன் கோ நௌ." வாசுவை அனுப்பிய ப்ரேம்குமார் அயர்ச்சியுடன் நாற்காலியில் சாய்ந்தார்.

30

"மிஸ்டர் பிரசாத், ஸாரி... குழந்தையை பறி குடுத்துட்ட துக்கத்துல இருக்கறப்ப விசாரணைக்காக வர்றது கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா... எங்க ட்யூட்டி, சாதாரண மனித உணர்ச்சிகளை மீறினது. பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வந்துருச்சு. குழந்தையை மூச்சுத் திணற வச்சு கொன்னுருக்காங்க...."

"ஐயோ...." இதைக் கேட்ட ஸ்வர்ணா, கதறி அழுதாள்.

"அழாதேம்மா..." பிரசாத், அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

"மிஸ்டர் பிரசாத், குழந்தையோட உடல் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கு. அதனால உடலின் உள்பாகங்கள் மட்டுமே அழுகிப் போக ஆரம்பிச்சிருக்கு. வெளிப்பகுதி மட்டும் ஃப்ரெஷ்ஷா இருந்ததுக்கு காரணமும் அதுதான். அதனால இது உறுதியா திட்டமிட்ட கொலைதான்."

"இதனால கொலைகாரனுக்கு எந்தவித ஆதாயமும் இல்லையே ஸார்!"

"அமா. எங்களுக்கும் அதுதான் புரியாத புதிரா இருக்கு. நீங்களோ, உங்களுக்கு யாருமே எதிரிகள் கிடையாது. யார் கூடயும் முன் விரோதமும் இல்லைங்கறீங்க. ஸோ, பழி வாங்கணும்ங்கற உணர்ச்சியும் இதுக்கு மோட்டிவ் இல்லை. இந்தக் கேஸ் எங்களுக்கு சவால் விடற கேஸாத்தான் இருக்கு..."

"எங்க தரப்புல வேம்புலியையும், வாசுன்னு ஒரு பையனையும் விசாரணைப் பண்ணிட்டோம். புதுசா வேலைக்கு சேர்ந்த ஒரு தோட்டக்காரனை நம்பி குழந்தையை அவன்கிட்ட குடுத்துட்டுப் போனதெல்லாம் புத்திசாலித்தனமான விஷயம் கிடையாது. அவனை வெளியே விடாம வச்சிருக்கோம். வாசு, நிறைய தகவல்கள் சொல்லி இருக்கான். நீங்க உங்க குடும்ப நண்பர் லாயர் நீலகண்டனோட மகன் விஜயகுமாருக்கு சிபாரிசின் பேர்ல வேலை குடுத்தீங்களா?"

"ஆமா ஸார். அப்ப எங்க அப்பா உயிரோட இருந்தார். அவர் சொன்னதுனால விஜயகுமாருக்கு வேலை குடுத்தேன். அதுக்கும் என் குழந்தையோட கொலைக்கும் என்ன சம்பந்தம் இன்ஸ்பெக்டர்?"

"அதை இப்ப சொல்ல முடியாது. பல நிறுவனங்களை பெரிய அளவுல நடத்தற நீங்க, பாரபட்சமா வேலை போட்டுக் குடுக்கறது மனிதநேயப்படி தர்மம் கிடையாது. மத்தபடி இதைப் பத்தி அதிகமாக நான் பேச விரும்பலை. மிஸஸ். ஸ்வர்ணா, குழந்தை கடத்தப்பட்ட அன்னிக்கு வேற யாராவது இங்கே வந்தாங்களா? அதாவது உங்களுக்கு வேண்டியவங்க, சொந்தக்காரங்க... இப்பிடி?"

"யாருமே வரலை ஸார்." ஸ்வர்ணா கூறினாள்.

சரவணனின் டெலிபோன் புக்கை மேஜை மீது போட்டார் ப்ரேம்குமார்.

"இந்த டெலிபோன் புக்கை இதுக்கு முன்னால பார்த்திருக்கீங்களா?"

"இல்லை ஸார்" ஸ்வர்ணா மறுத்தாள்.

"நீங்க பிரசாத்?"

பிரசாத்தும் மறுத்தான்.

"அப்படின்னா ஒரு அந்நிய நபர் இங்கே நுழைஞ்சிருக்கான். அது யார்னு கூட கண்டுபிடிச்சுட்டோம். அவனை விசாரிச்சா உங்க குழந்தை விஷயமா ஒரு முடிவுக்கு வர முடியும்னு நான் நம்பறேன்."

"சீக்கிரமா கொலைகாரனைக் கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக் குடுங்க இன்ஸ்பெக்டர்.


 குழந்தை போனதில இருந்து எனக்கும், ஸ்வர்ணாவுக்கும் வாழ்க்கையே நரகமாயிடுச்சு. அந்த கொலைகாரன் யார்னு தெரிஞ்சு, அவன் தண்டனை அடையறதுலயாவது கொஞ்சம் ஆறுதல் கிடைக்குமே..."

"ஆனா நம்ப குழந்தை திரும்ப உயிரோட கிடைக்கவா போகுது?" ஸ்வர்ணா குழந்தையை நினைத்து கதறி கதறி அழ ஆரம்பித்தாள். பிரசாத்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் முயற்சித்தான்.

"ப்ளீஸ், ரெண்டு பேரும் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. கண்ட்ரோல்  யுவர்செல்ஃப். கொலைகாரனைக் கண்டுபிடிக்க ரொம்ப தீவிரமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கோம். குழந்தையோட உடல் கிடந்த இடத்துல கிடைச்ச ஷு தடயங்களைப் பத்தின தகவல்களை விசாரிக்கப் போயிருக்கார் இன்ஸ்பெக்டர் கார்த்திக். அது மூலமா கண்டிப்பா கொலைகாரனைப் பத்தின விபரம் தெரியும். நான் கிளம்பறேன்."

 "ஓ.கே. ஸார்." தளர்வான குரலில் விடை கொடுத்தான் பிரசாத்.

31

ரவணன் தலை குனிந்து நின்றிருந்தான்.

"அரை மணிநேரமா எதுவுமே பேசாம என்னை ரொம்ப எரிச்சல் படுத்தற. உண்மைகள் எல்லாத்தையும் உன் நண்பன் வாசு சொல்லிட்டான். நீ மௌனமா இருந்தா மட்டும் தப்பிச்சுடலாமா?"

ப்ரேம்குமாரின் குரலில் கோபம் அதிகமாக வெளிப்பட்டது.

தலை குனிந்திருந்த சரவணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. ப்ரேம்குமாரின் கோபம் தொனித்த குரலைக் கேட்டதும் பயத்தில் மேலும் அழுதான். தலை நிமிர்ந்தான்.

"இன்ஸ்பெக்டர் ஸார். சத்தியமா அந்தக் குழந்தையை நான் கடத்தலை சார். கொலை செய்யவும் இல்லை."

இதைக் கேட்டதும் மீண்டும் அதிக கோபத்திற்கு மாறினார் ப்ரேம்குமார்.

"ஒண்ணு, வாயை மூடிக்கிட்டிருக்க. இல்லைன்னா கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ற. இனி அடுத்த கட்டம் போலீஸ் மரியாதைதான்..."

அவர் சொல்லி முடிப்பதற்குள் அவரது கால்களில் விழுந்தான் சரவணன்.

"சத்தியமா நான் தப்பு பண்ணலை ஸார். ஆனா... தப்பு பண்ணனும்னு நினைச்சேன். என் ஃப்ரெண்டு வாசு புத்திமதி சொன்னப்ப அதைக் கேட்காம திட்டம் போட்டேன். என்னோட திட்டத்தின் முதல் கட்டமா பிரசாத் சாரோட பங்களாவுக்குப் போனேன். ஒரு நோட்டம் விட்டு வைக்கலாமேன்னு. பிரசாத் ஸாரோட வீட்டு அட்ரஸை டெலிபோன் டைரக்டரியில பார்த்துட்டு அங்கே போனேன். நான் போன சமயம் முகத்தோட முகம் தெரியாத இருட்டு. ஆனா பங்களாவுல இருந்து லைட் வெளிச்சம் வந்துச்சு. பிரசாத் சாரோட மனைவி, குழந்தையை கையில வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க கையில இருந்த குழந்தையைப் பார்த்ததும் என் மனசு மாறிடுச்சு. இந்த பச்சைக் குழந்தையையா நாம கடத்த நினைச்சோம்னு வேதனைப் பட்டேன். வெட்கப்பட்டேன். அப்பிடியே வந்த சுவடு தெரியாம நழுவிட்டேன். அப்பதான் என்னோட டெலிபோன் புக் காம்பவுண்டுக்குள்ளே விழுந்திருக்கணும். அதை நான் கவனிக்கலை. இதைத் தவிர வேற எந்த விஷயத்திலயும் அந்த குழந்தை கேஸ்ல எனக்கு தொடர்பு இல்லை இன்ஸ்பெக்டர்" கதறி அழுதான் சரவணன். மேலும் தொடர்ந்தான்.

"தப்பு செய்யணும்னு நினைச்சதுக்கே தண்டனை கிடைக்கும்ங்கறதை நான் உணர்ந்துட்டேன்."

"அப்படியே நீ சொல்றது உண்மைன்னே வச்சுக்கிட்டாலும் உன் ஃப்ரெண்டு வாசு சொன்னானே ரௌடிகள் கூடயெல்லாம் உனக்கு தொடர்பு இருந்ததுன்னு? அதுக்கு என்ன சொல்ற? பழைய அம்பாஸிடர் கார்ல யாரோ உன்னை வற்புறுத்தி கூட்டிட்டுப் போனாங்களாமே அதுக்கு என்ன சொல்ற?"

"சொல்றேன் ஸார். நான் எதையும் மறைக்காம சொல்றேன். பிரசாத் ஸாரோட குழந்தையைப் பார்த்தப்புறம் மனசு மாறிய நான், ஒரு பார்க்ல போய் உட்கார்ந்து இருந்தேன். யாரோ படிச்சுட்டு விட்டுட்டுப் போன மாலை நியூஸ் பேப்பர் பெஞ்சு மேல இருந்துச்சு. அதில பெரிசா ரூபாய் ஒரு லட்சம்ன்னு  கட்டம் கட்டி போட்டிருந்த விஷயத்தை கவனிச்சேன். எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். ஒரு கோடீஸ்வரனின் மகன் இளைஞன். அவனுக்கு ஒரு சிறுநீரகம் பாதிச்சுடுச்சுன்னும், மாற்று சிறுநீரகம் குடுக்க முன் வர்றவங்களுக்கு ஒரு லட்சம் தரப்படும்னு விளக்கமா விளம்பரம் குடுத்திருந்தாங்க.

“அதைப் படிச்சதும் என்னோட சிறுநீரகத்தைக் குடுத்து ஒரு லட்ச ரூபாயை அடையலாமேன்னு முடிவு பண்ணினேன். அந்த விஷயமா அந்தக் கோடீஸ்வரரைப் போய் பார்த்தேன். பேசினேன். டாக்டர்கள் செஞ்ச எல்லா பரிசோதனைகளும் சரியா இருந்துச்சு. அந்தப் பையனுக்கு என்னோட சிறுநீரகம் பொருத்தமா இருக்கும்னு டாக்டர்கள் சொன்னாங்க. இதை எங்க வீட்டில எங்க அம்மா, அப்பா கிட்ட சொல்லலை... "

"அந்த கோடீஸ்வரர் பேர் என்ன?"

"அவர் பேர் ராகவேந்திரராவ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவரோட பையன் ராமோஜி ராவ். அவனுக்குத்தான் என்னோட சிறுநீரகத்தைக் குடுக்க முடிவு பண்ணினேன்."

"சரி, தப்பு செய்ய திட்டம் போட்ட நீ, மனசு திருந்தின பிறகு ஏன் வாசுவை சந்திக்கலை? சிறுநீரகம் குடுக்கறதைப் பத்தி ஏன் அவன் கிட்ட சொல்லலை?"

"அவன் எங்க அம்மா, அப்பாகிட்ட உடனே போய் சொல்லி இதைத் தடுத்துடுவான். அதனால அவனைப் பார்க்கறதைத் தவிர்த்தேன். தப்பு செஞ்சு, அதில கிடைக்கற பணத்துல பிஸினஸ் செய்யலாம்னு நினைச்ச நான் எந்தத் தப்பும் செய்யாம ஒரு லட்ச ரூபாய் கிடைக்குதேன்னு சந்தோஷப்பட்டேன்."

"நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலையே? ரௌடி ஒருத்தன் வந்து பேசினது, அந்த கார் விஷயம்...?"

"சிறுநீரகத்தைக் குடுக்கலாம்னு முடிவு பண்ணின நான் ஆபரேஷனுக்கு நாள் குறிச்சப்புறம் கொஞ்சம் பயந்துட்டேன். பெத்தவங்களுக்கும், நண்பனுக்கும் கூட தெரியாம ஆபரேஷன் பண்ணிக்கப் போறோமே, ஒரு வேளை ஆபரேஷன் தோல்வியாகி நான் இறந்துட்டா? அநாதையா சாகணுமேன்னு பயம் வந்துடுச்சு. ஒரே ஒரு தடவை ராகவேந்திர ராவ் கிட்ட மறுத்துப் பேசினேன். அவ்வளவுதான். அன்னில இருந்து அவரோட அடியாட்கள் என்னைப் பின் தொடர்ந்தாங்க. கண்காணிச்சாங்க. நான் எங்கேயாவது அவங்க கண்ல பட்டா உடனே கார்ல ஏத்திட்டுப் போய் ராகவேந்திர ராவ் கிட்ட விட்டுடுவாங்க. அவர் என்னை மிரட்டி அனுப்புவார். அதனாலதான் நான் ஓடி ஒளிஞ்சேன். வாசுவையும் சந்திக்கலை. நீங்க என்னை அடிச்சாலும், சித்ரவதை பண்ணினாலும் இதைத்தான் ஸார் திரும்பத் திரும்ப சொல்வேன். ஏன்னா உண்மையிலேயே நடந்ததும் இதுதான். இனி என்ன நடந்தாலும் சரி ஸார்..."

"சரி, அந்த ராகவேந்திர ராவோட அட்ரஸை இதில எழுதிக் குடு. என்னிக்கு ஆபரேஷன் நடக்க இருக்கு?"

"பதிமூணாம் தேதி ஸார்" ப்ரேம்குமார் கொடுத்த பேப்பரில் ராகவேந்திரராவின் அட்ரஸை எழுதிக் கொடுத்தான் சரவணன். கான்ஸ்டபிளுக்கு கண் அசைக்க, அவர் சரவணனை  லாக்கப்பில் அடைத்தார்.


32

ராயபுரம் வந்தனர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும். போலீசைக் கண்டதும் அங்கங்கே வெட்டி வம்பு பேசிக் கொண்டிருந்தவர்கள் நைஸாக நழுவினார்கள். டீக்கடையில் 'நான் ஆணையிட்டால்’ எம்.ஜி.ஆரின் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டு இருந்தது. டீக்கடை அருகே நின்றிருந்த ஒரு பெரியவரின் அருகே சென்றார் கார்த்திக்.

"ராயபுரம் ரங்கன் யாரு?" கார்த்திக் கேட்டார்.

"ரங்கனா? அதோ அந்த மரத்தடியில காசு வச்சு சீட்டாடிக்கிட்டிருக்கான். முகத்தில் பெரிய மரு இருக்கும். போய் பிடிங்கய்யா." பெரிசு பதவிசாகப் பேசியது.

ரங்கன் இருந்த இடம் நோக்கி நடந்தான் கார்த்திக்.

போலீஸைப் பார்த்ததும், குடித்திருந்த சாராயத்தின் போதை தெளிந்தவனாய் ரங்கன் எழுந்தான்.

"என் கூட நட. “கார்த்திக்கைப் பின் தொடர்ந்தான் ரங்கன். அவனை அழைத்துக் கொண்டு ஜீப் அருகே நின்றிருந்த ப்ரேம்குமாரிடம் வந்தார் கார்த்திக்.

"ஸார், இவன்தான் ராயபுரம் ரௌடி ரங்கன்."

ப்ரேம்குமார் தன் விசாரணையைத் துவக்கினார்.

"நீதான் வேம்புலியை வளர்த்தவனாமே?"

"அ... ஆமா ஸார்."

"தொழிலதிபர் ராஜசேகரனின் மகன் பிரசாத்தை பழி வாங்கறதுக்கு திட்டம் போட்டுக் குடுத்தியாமே?"

"அ... அது... வந்து ஸார். ஆமா ஸார். ஆனா அவன் பண்றதுக்கு முன்னால வேற யாரோ அந்த வேலையை செஞ்சிட்டாங்க சார். இவன் மாட்டிக்கிட்டான் ஸார். வேம்புலி, பிரசாத் ஐயாவோட குழந்தையைக் கடத்தறதுக்காக உள்ளே போன சமயம், சின்ன முதலாளி பிரசாத் ஐயா, தலையில அடிபட்டு கிடந்திருக்காரு. குழந்தையையும் காணலை. அதனால பயந்து  போய் ஓடியாந்துட்டான் ஸார் வேம்புலி."

"கடத்தலுக்கும், கொலைக்கும் என்ன தண்டனைன்னு தெரியுமா உனக்கு? பழி வாங்கறியா பழி? நீ சொன்னதெல்லாம் நிஜம்ங்கறதுக்கு என்ன சாட்சி?"

ரங்கனால் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை. மௌனமாக இருந்தான்.

"அவன் ஓடி வந்ததும் போலீசுக்கு வந்து சொல்லி இருக்கலாம்ல?"

"தப்பு செய்ய திட்டம் போட்ட நாங்களே எப்படி ஸார் போலீசுக்கு சொல்லுவோம்? நான் சொன்னதெல்லாம் நிஜம் ஸார். இந்த தடவை எங்களை ஒண்ணும் பண்ணிடாதீங்க ஸார். இனிமேல இந்த மாதிரி பழி வாங்கற வேலையெல்லாம் செய்ய மாட்டேன் ஸார்."

"சரி, சரி, ஜீப்ல ஏறு."

"ஐயோ என்னை விட்டுடுங்க ஸார். ஏதோ ஒரு கோபத்துல பழி வாங்கணும்னு நினைச்சேன். மன்னிச்சிடுங்க ஸார்."

"அதெல்லாம் முடியாது. கேஸ் கோர்ட்டுக்குப் போய் ஜட்ஜ் தீர்ப்பு சொன்ன பிறகுதான் வெளியே விடறதா என்னன்னு தெரியும். புரிஞ்சுதா?"

"புரிஞ்சுது ஸார்."

ரங்கனை ஏற்றிக் கொண்டு போலீஸ் ஜீப் புறப்பட்டது.

ரங்கன், தங்களுடன் ஜீப்பில் இருந்ததால் கார்த்திக் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான்.

"என்ன ஸார்? ரங்கன் சொல்றதும் வேம்புலி சொல்றதும் ஒரே மாதிரி விஷயமா இருக்கு? இத வச்சு பார்க்கும்போது இவங்க சொல்றது நிஜம்தான்னு தோணுது? அப்ப குழந்தை கடத்தலும், குழந்தையைக் கொன்னு குப்பைத் தொட்டியில போட்டதும் யார்? ஒண்ணும் புரியலையே ஸார்?"

"ஆமா. எதுவுமே புரியாம உண்மையின் கண்ணை கட்டிவிட்ட மாதிரிதான் இருக்கு. சரவணன் சொல்றதும் நிஜம்னு ஆந்திரத்து கோடீஸ்வரர் ராகவேந்திர ராவை விசாரிச்சப்ப தெரிஞ்சுடுச்சு. திட்டம் போட்டவங்க யாரும் செய்யாம வேற ஒரு நபர் இதில சம்பந்தப்பட்டிருக்கான். அந்த நபர்தான் குற்றவாளி."

"அந்த நபர் யாரா இருக்கும்னு உங்களால யூகிக்க முடியுதா ஸார்?"

"ம்... அன்னிக்கு லாயர் நீலகண்டன் சேலத்துல இருந்து போன் பண்ணினார்ல? பிரசாத்தோட குழந்தை கேஸ் விஷயம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க போன் பண்ணினதா சொன்னார். அப்ப, அவர் சொன்ன சில தகவல்கள் என் மூளைக்குள்ள கம்ப்யூட்டர் பதிவு மாதிரி ஆகி இருக்கு."

"அப்படி என்ன ஸார் சொன்னார்?"

"ராஜசேகரனோட நெருக்கமான நண்பர் நீலகண்டன். ஃபேமிலி டாக்டர் மாதிரி ஃபேமிலி லாயரும் கூட. ராஜசேகரன் அவரோட ஒரே மகன் பிரசாத்துக்கு சொத்து எதுவும் எழுதி வைக்கலைங்கற தகவலைச் சொன்னார்."

"இதே தகவலைத்தான் பிரசாத்தும் அவரோட மனைவி ஸ்வர்ணாவும் நம்பகிட்ட சொன்னாங்களே ஸார்?"

"அவங்க சொல்றதுக்கு முன்னாலயே நீலகண்டன் என் கிட்ட சொல்லிட்டார். அந்த தகவலை ஒதுக்கி வச்சுட்டுத்தான் காளி, வேம்புலி, சரவணன், வாசு இவங்களை என்கொய்ரி பண்ணினேன். இப்ப அந்தத் தகவல் குறிச்சு ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பார்க்கணும். லாயர் நீலகண்டன் எனக்கு மறுபடியும் போன் பண்ணினார். பிரசாத்தோட குழந்தையைக் கொலை பண்ணினது யார்னு தெரிஞ்சுக்கணும்னு கேட்டார்."

"அவருக்கு ஏன் சார் அவ்வளவு ஆவல் இந்த விஷயத்துல? அது சரி, அந்த நீலகண்டன், கேஸ் பத்தின விஷயத்தை பிரசாத்துக்கே போன் போட்டுக் கேட்டிருக்கலாமே?"

"நீங்க சொன்ன இதே பாயிண்டைத்தான் நானும் லாயர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில்தான் இந்தக் கேஸை கொஞ்சம் நகர்த்துது. ஆனா, நான் நினைக்கறது எந்த அளவுக்கு சரியா இருக்கும்னு இனி போகப் போகத்தான் தெரியும்."

"சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க ஸார்."

"அவசரப்படாதீங்க கார்த்திக். சொல்றேன். ராஜசேகரன் அவரோட சொத்துக்களை தருமத்துக்கு எழுதி வச்சதுல பிரசாத்துக்கு பயங்கர கோபம். உயிலை எழுதின லாயர்ங்கற முறையில நீலகண்டனோட கடமைதான்னு பிரசாத்துக்கு புரிஞ்சாலும் நீலகண்டன் மேலயும் அவனுக்கு கோபம்தான். வெறுப்பும் கூட. இதனால அவர் பல முறை பிரசாத்துக்கு போன் செஞ்சப்பல்லாம் லைனை கட் பண்ணி இருக்கான். விடாப்பிடியா அவர் போன் பண்ணினப்ப 'உங்க கூட பேச விரும்பலை, இனிமேல் உங்களுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது’ன்னு சொல்லிட்டு லைனை கட் பண்ணிட்டானாம். அதுதான் அவர் கடைசியா பிரசாத்துக்கு போன்  பண்ணினது. அதுக்கப்புறம் அவரும் அவனுக்கு போன் போடலையாம்."

"அப்பாவோட சொத்து தனக்கு இல்லைங்கறதுல எந்த வருத்தத்தையும், கோபத்தையும் பிரசாத் வெளிக்காட்டவே இல்லையே ஸார்?"

"ஆமா. கடுகளவு கூட ரியாக்ஷன் இல்லைதான். ஆனா லாயர் மேல அவன் காட்டின அந்தக் கோபமும், எரிச்சலும் ஒரு வகையில எனக்கு சந்தேகத்தைக் கிளப்புது. அது மட்டும் இல்ல... பிரசாத்தோட பங்களாவுல பெண் குழந்தை படங்களோ, ஓவியங்களோ, விளையாட்டு சாமான்களோ இல்லை. என்னோட சந்தேகம் இன்னொன்ணு. ராஜசேகரனைப் போலவே பிரசாத்துக்கும் பெண் குழந்தைன்னாலே பிடிக்கலையோன்னு. அதாவது, சொத்துக்கள் கிடைக்காததுக்கு அதுதானே காரணம்?"

"ஸார்... அப்படின்னா பிரசாத்....?"

"ஆமா கார்த்திக். பிரசாத் மேல எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கு.


முதல்ல ராபர்ட் மேல் சந்தேகப்பட்டேன். ஆனா உங்களோட விசாரணையில அவருக்கும், பிரசாத்துக்கும் தொடர்பே இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சு. சொத்துக்கள் கிடைக்காத ஏமாற்றமும், கோபமும் அவனோட பெண் குழந்தைகள் மேல அவனுக்கு வெறுப்பு உண்டாகி, அந்த வெறுப்பினால அவனே குழந்தைகளைக் கொலை செஞ்சிருக்கலாமோன்னு எனக்குத் தோணுது. இந்த சந்தேகம் வந்தப்புறம்தான் நான் பிரசாத்தோட பங்களா முழுசையும் சுத்திப் பார்த்தேன். சமையல் அறையில இருந்த குப்பைப் பை, குழந்தையோட உடல் கிடந்த குப்பைப் பை மாதிரியே இருந்துச்சு. பிரசாத் வீட்டில அவங்க யாருக்கும் தெரியாம குப்பைப் பைகளை எடுத்துட்டு வந்து, ஆய்வுக்கு அனுப்பி வச்சிருக்கேன். குழந்தையோட பிணம் இருந்த குப்பைப் பையோட ரிப்போர்ட்டையும், பிரசாத் வீட்டில இருந்த குப்பைப் பையோட ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்து தகவல்கள் சேகரிக்கணும்."

"அந்த பிரசாத் என்னவோ தனக்கு சொத்துக்கள் மேல அதிக நாட்டம் இல்லாத மாதிரியும், தன்னால் உழைச்சு சம்பாதிக்க முடியும் அப்படி இப்படின்னு சவாலா பேசினாரே சார்?"

"அது, தன் மேல சந்தேகம் வராம இருக்கறதுக்காக பேசப்பட்ட நாடக வசனமா ஏன் இருக்கக் கூடாது? இதெல்லாம் என் தலையைக் குடையற சந்தேகங்கள்."

"உண்மைகளைக் கண்டுபிடிச்சு யார் குற்றவாளின்னு நிரூபிக்கணுமே சார்?"

"அதுதானே நம்பளோட டியூட்டி? நாளைக்கு பிரசாத்தோட பங்களாவை மறுபடியும் முறைப்படி சோதனை போடணும். நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கெல்லாம் நான் பிரசாத் வீட்டுக்குப் போயிடுவேன். நீங்க குப்பைப் பையைப் பத்தின ரிப்போர்ட் ரெடியாயிடுச்சான்னு போய் பாருங்க. அவசரம்னு சொல்லுங்க."

"ஓ.கே. ஸார்." கார்த்திக் கிளம்பினான்.

33

ற்கெனவே நலிந்து போயிருந்த கமலா, மகன் சரவணன் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டது பற்றி அறிந்த நிமிடத்தில் இருந்து பட்டினி கிடந்து மேலும் வாடினாள். அழுதாள்.

"இப்ப அழுது என்ன பிரயோஜனம்? 'சும்மா உட்கார்ந்திருக்க.. சும்மா உட்கார்ந்திருக்க’ன்னு அவனை சதா சர்வ காலமும் குத்திக் காமிச்சிக்கிட்டிருந்த. அதனாலதான் அவன் புத்தியே தடுமாறிப் போச்சு. அவனைத் திட்டாதே திட்டாதேன்னு எத்தனை தடவை சொன்னேன்? கேட்டியா?" கோபால் கோபத்துடன் கத்தினார்.

"ஏதோ கஷ்டத்துல திட்டிட்டேன். பெத்து வளர்த்தவளுக்கு திட்டறதுக்கு உரிமை கிடையாதா?"

"அதெல்லாம்   உன் காலத்துல. என் காலத்துல. இப்ப காலம் மாறிப் போச்சு. பெத்தவங்க திட்டினா பொறுமையா இருக்கறதெல்லாம் மலை ஏறிப் போச்சு. இப்ப உள்ள பிள்ளைங்க சுருக்குன்னு ரோஷப்பட்டுடறாங்க. சொல்லச் சொல்ல  கேட்காம அவனைத் திட்டிக்கிட்டே இருந்த. இப்ப என்ன ஆச்சு பாத்தியா?"

"வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுற மாதிரி நொந்துப் போய் கிடக்கற என் மனசை நீங்களும் நோக வைக்கறீங்களே. என் மகன் சரவணன் நல்லவன். ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்ல மாட்டானே, அவன் மேல இப்படி ஒரு பழி வந்துடுச்சே? இதில இருந்து எப்படி மீண்டு வரப் போறான் என் மகன்?" நெஞ்சில் அறைந்து கொண்டு அழுத கமலாவைப் பார்த்த கோபாலுக்கு பரிதாபமாக இருந்தது.

"எழுந்திரு கமலா, அழாதே. கடவுளை நம்பறதைத் தவிர வேற வழியே கிடையாது நமக்கு. ஆஞ்சநேயர் நம்பளை கைவிட மாட்டார். ஆஞ்சநேயர் கவசத்தைப் படி. எல்லாத்தையும் அவன் காலடியில் ஒப்படைச்சுட்டு அழாம இரு" கமலாவிற்கு ஆறுதல் கூறிய கோபாலின் உள்ளம் அழுததை கமலா அறியவில்லை.

34

ப்ரேம்குமார், பிரசாத்தின் பங்களாவை சோதனை போட்டபிறகு ஸ்டேஷனுக்குத் திரும்பினார். கேஸ் ஃபைலை எடுத்து, மறுபடியும் கவனமாகப் படித்துப் பார்த்தார்.

"இன்ஸ்பெக்டர் ஸார்."

ப்ரேம்குமார் நிமிர்ந்து பார்த்தார்.

கார்த்திக்கும், ஆய்வாளர் சபரியும் வந்திருந்தனர்.

"வாங்க மிஸ்டர் சபரி. உட்காருங்க."

"இன்ஸ்பெக்டர் ஸார். அன்னிக்கு குழந்தையோட உடல் இருந்த குப்பைப் யையும், தொழிலதிபர் பிரசாத்தோட பங்களாவில் இருந்த குப்பைப் பையும் ஒரே கம்பெனி தயாரிப்பு. அது மட்டும் இல்லை.. பை ஜாயிண்ட் ஆகற இடமும் மிஷின் பங்க்ச் பண்ணின அடையாளமும் எல்லா கவர்லயுமே ஒரே மாதிரி இருக்கு பார்த்தீங்களா? பிரசாத்தோட பங்களாவிலுள்ள கவர்களும், குழந்தையோட உடல் கிடந்த கவரும் ஒரே ரோல்ல இருக்கக்கூடிய கவர்கள்தான். ஒரு தடவை மிஷின் ஓடும்போது ஏறத்தாழ பதினோறாயிரம் ரோல்கள் ரெடியாயிடும். அந்த ஒரு லாட்ல தயாரான ரோல்ல, இந்த ஒரு ரோலும் தயாராகி இருக்கு. ஏறக்குறைய பத்து விநாடிகளுக்குள்ள அடுத்த ரோல் தயாராயிடும். அப்படி பத்து விநாடி நேரத்துக்குள்ள தயாரானதுதான் இந்தப் பை." ஆய்வாளர் சபரி திட்டவட்டமாக தன் ரிப்போர்ட்டைக் கூறினார்.

"அப்பிடின்னா, குழந்தையோட பிணம் கிடந்த குப்பைப்பையும், பிரசாத்தோட பங்களா சமையலறை குப்பைத் தொட்டியில கிடந்த குப்பைப் பையும் ஒரே ரோல்ல தயாரானவை. அப்படித்தானே?" ப்ரேம்குமார் ஆவலுடன் சபரியிடம் கேட்டார்.

"அதில ஒரு பர்ஸென்ட் கூட சந்தேகமே கிடையாது இன்ஸ்பெக்டர். உறுதியா சொல்ல முடியும். ரெண்டும் ஒரே ரோல்ல இருந்து உபயோகிச்ச கவர்கள்தான்."

"பார்த்தீங்களா கார்த்திக்! என்னோட அனுமானம் சரியா இருக்கு. பிரசாத்தோட பங்களாவை மறுபடியும் முறைப்படி சோதனை போட்டப்ப, ஒரு படுக்கையறைக் கட்டில் அடிப்பக்கத்துல ஷெல்ஃப் மாதிரி அமைஞ்ச மாடல் இருந்துச்சு. அந்த ஷெல்ஃப் வெளியே தெரியாது. ஷெல்ஃபைக் கூர்ந்து கவனிச்சாத்தான் அது கட்டிலோட இணைஞ்ச ஷெல்ஃபுன்னு தெரியும். இல்லைன்னா தெரியாது. ஷெல்ஃப் இருந்ததை கவனிச்ச நான், அதைத் திறந்தேன். அதுக்குள்ள ஒரு ஜோடி ஷுஸ் இருந்துச்சு. அந்த ஷுஸ், குழந்தை கிடந்த குப்பைத் தொட்டிக்கிட்ட கிடைச்ச ஷு தடயத்துக்காக நாம தேடின வெளிநாட்டு ஷுஸ்."

"ஓகோ! நாம ஷு தடயத்தைப் பத்தி அறிவிச்ச உடனேயே உஷாராகி அந்த ஷுக்களை பிரசாத் மறைச்சிருக்கார். அப்படித்தானே சார்?"

"ஆமா கார்த்திக். இன்னொரு விஷயம், பங்களாவின் கீழ்த்தளத்துல இருந்த விருந்தினர் அறையில ஒரு ஃப்ரிட்ஜ் இருந்துச்சு. அது காலியா இருந்துச்சு. குழந்தையோட உடலை அந்த ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கணும்ங்கறதுதான் என்னோட அனுமானம். அங்கே சில தேவை இல்லாத சாமான்கள் எல்லாம் நிறைய பெட்டிகள்ல போட்டு வச்சிருந்துச்சு..."

"எந்த மாதிரி பெட்டிங்க இருந்துச்சு ஸார்?"

"வெளிநாட்டுக்குக் கொண்டு போற மாதிரி பெரிய சைஸ் சூட்கேஸ்கள், எல்லாமே வெளிநாட்டுத் தயாரிப்புதான். அதுக்குள்ளதான் நிறைய பழைய பேப்பர்கள், டாக்குமெண்ட்ஸ், ஃபைல்ஸ் அது இதுன்னு நிறைய இருந்துச்சு. அதிலே இருந்த புது ஃபைல் ஒண்ணு என் கண்ணுல பட்டுச்சு. அது, பிரசாத்தோட மெடிக்கல் ஃபைல்.


அதில எக்ஸ்ரே படம், அதோட ரிப்போர்ட்ஸ், நிறைய ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் இருந்துச்சு. அதில இருந்த ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கனகதுரை எழுதிக் குடுத்தது. அதை எடுத்துட்டு வந்துட்டேன்.

பேஸ்மென்ட்ல இருக்கறதுன்னாலயோ என்னவோ கொஞ்சம் இருட்டாவும் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னிக்கு, பிரசாத்தோட மனைவி கோயிலுக்குப் போயிருந்ததாகவும், அவங்க திரும்பி வந்தப்ப குழந்தையைக் காணோம்னும் சொன்னாங்கள்ல? அவங்க கோயிலுக்குப் போயிருக்கும்போது, பிரசாத் குழந்தையைக் கொன்னுருக்கணும். குழந்தையோட உடலை கீழ்த்தளத்துல, ஃப்ரிட்ஜுக்குள்ள மறைச்சுட்டு, பிறகு சந்தர்ப்பம் பார்த்து குப்பைத் தொட்டியில குப்பைக் கவர்ல சுத்தி போட்டிருக்கணும். ஃப்ரிட்ஜுல வச்சிருந்ததுனாலதான் குழந்தையோட உடல் முழுசும் அழுகிப் போகாம இருந்திருக்கு." ப்ரேம்குமார் சொல்ல சொல்ல பிரசாத்தின் மீதுள்ள சந்தேகம் கார்த்திக்குக்கும் வலுவானது. கூடவே குழப்பமும் தோன்றியது. அதன் விளைவாக ப்ரேம்குமாரிடம்  தன் குழப்பம் எழுப்பிய கேள்வியைக் கேட்டான்.

"ஆனா ஸார்..., பிரசாத்தோட மனைவி கோயில்ல இருந்து திரும்பி வந்தப்ப பிரசாத் அடிபட்டு மயக்கமாகி கிடந்ததாகச் சொன்னாங்களே?"

"ஆமா.. அந்த ஒரு சிக்கலைத் தீர்க்கறதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். அடி பட்டதுக்கு ட்ரீட்மெண்ட்டுக்காக பக்கத்துல அவங்களோட டாக்டர்கிட்ட போயிருக்காங்க. தலையில அடி பட்டதுக்கு பெரிய அளவுல ட்ரீட்மெண்ட் எதுவும் எடுத்த மாதிரி தெரியலை. அதனால அங்கே எடுத்த எக்ஸ்ரே, அதோட ரிப்போர்ட் இதை எல்லாம் எடுத்துக்கிட்டு, நியூரோ சர்ஜன் டாக்டா ரீத்திகாவைப் போய் பார்க்கணும். அவங்கதான் இன்னிக்கு நியூராலஜி டிப்பார்ட்மெண்ட்ல நம்பர் ஒன் நிபுணர். அது மட்டுமில்ல.. இவங்கதான் ஒரே பெண் நியூரோ சர்ஜன். அவங்களை பார்த்த பிறகு டாக்டர் கனகதுரையையும் பார்த்துடலாம். டாக்டர் கனகதுரையும் பிரபலமான சைக்யாட்ரிஸ்ட். இந்த ரெண்டு டாக்டர்களையும் நாம நேர்ல சந்திச்சு தகவல்களை சேகரிச்சா, நிச்சயமா இந்தக் கேஸ்ல இருக்கற முக்கியமான சந்தேகங்கள் தெளிவாகும்."

35

"மேடம், இதுதான் அந்த பிரசாத்தோட எக்ஸ்ரே. இது ரிப்போர்ட். கேஸைப் பத்தின எல்லா டீடெய்ல்சும் சொல்லிட்டேன். இனிமே நீங்க சொல்ற தகவல்கள், குற்றவாளின்னு நாங்க சந்தேகப்படற நபரை அவன்தான் குற்றவாளின்னு நிரூபிக்க உதவிகரமா இருக்கும்னு நம்பறேன்."

டாக்டர் ரீத்திகா, பிரசாத்தின் எக்ஸ்ரே, மற்றும் ரிப்போர்ட்களைப் பார்வையிட்டார். கேஸின் விபரங்களைக் கூர்மையாக கவனித்துக் கேட்டுக் கொண்டார்.

"இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், தன்னை யாரோ முகமூடிக்காரன் இடி இடிச்சது போல தலையில அடிச்சுத் தாக்கியதாகவும், தான் மயக்கமாயிட்டதாகவும் அந்த பிரசாத் சொன்னதாக சொன்னீங்க. எந்த ஒரு மனுஷனையும் மயக்கமாகற அளவுக்கு அடிச்சா, அவனுக்கு ஞாபக சக்தியே இருக்காது. அதாவது அவனோட மூளையில இருக்கற ஞாபகசக்திக்கான இயக்க செல்கள் செயல் இழந்துடும். அதுக்கப்புறம் அவனுக்கு நீண்டகால வைத்தியம் பண்ணினாத்தான் பழைய நினைவுகள் வர்றதுக்குக் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு. நினைவு வராமலே போகக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம். ஆனா இவன் என்னமோ, தான் தூங்கி எழுந்திருச்சது போலவும், முகமூடிக்காரன் தன்னைத் தாக்கிட்டு, குழந்தையைத் தூக்கிட்டுப் போனதாகவும் சொல்றது முட்டாள்தனமானது."

"இதுக்கு முன்னால அவனோட முதல் குழந்தை கேஸ்லயும் இதே போலத்தான் சொல்லி இருக்கான் மேடம்."

"ஒரு தடவை அடிபட்டாலே நினைவு திரும்பறது கஷ்டம். திரும்பவும் அடிபட்டு, உடனேயே நினைவு திரும்பி நடந்ததை எல்லாம் கரெக்டா சொல்றானாமா? கேலிக்குரிய விஷயம். நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விஷயம். நிச்சயமா அவன்கிட்ட தப்பு இருக்கு. முதல் குழந்தை கேஸ்ல அவன் போட்ட நாடகத்துல தப்பிச்சுட்டதால மறுபடியும் அதே நாடகம் ஆடி இருக்கான்னு நான் நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்." ஆணித்தரமாக அடித்துச் சொன்னார் நரம்பியல் நிபுணர் டாக்டர் ரீத்திகா.

"தாங்க்ஸ் மேடம். நாங்க கிளம்பறோம்."

"ஓ.கே."

"உங்களோட தகவல்கள் நிச்சயமா எங்களுக்கு உதவியா இருக்கும் மேடம். தேங்க்யூ" இருவரும் டாக்டர் ரீத்திகாவின் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர்.

36

"பார்த்தீங்களா கார்த்திக். பிரசாத் கிட்ட தப்பு இருக்கு. தப்பு பண்ணியவன் குழந்தையோட தகப்பனா இருக்கறதால அவன்தான் குற்றவாளிங்கறதை நிரூபிக்கறதுக்கு, இன்னும் நமக்கு அழுத்தமான ஆதாரங்கள் வேணும். அந்த ஆதாரம் டாக்டர் கனகதுரையைப் பார்த்தப்புறம் கிடைக்கும்னு நான் நம்பறேன்."

"டாக்டர் ரீத்திகாவோட ரிப்போர்ட்டே நமக்கு நல்ல ரிசல்ட்தானே ஸார்?"

"நீங்க சொல்றது சரிதான். ஆனா கையில இன்னொரு தடயத்தை வச்சிருக்கோம். அதன் மூலமா இன்னும் வலுவான காரணங்கள் கிடைச்சா நமக்கு நல்லதுதானே?"

"அந்த ப்ரிஸ்க்ரிப்ஷன் இப்ப உங்க கையில இருக்கா ஸார்?"

"ஆமா. என்கிட்டதான் இருக்கு."

"அப்பிடின்னா இப்பவே நாம டாக்டர் கனகதுரையைப் போய் பார்த்துடலாமே?"

"நானும் அப்படித்தான் ப்ளான் பண்ணி இருக்கேன். நேரா இப்ப அங்க போயிடலாம்."

ஜீப் விரைந்தது.

37

னோதத்துவ டாக்டர் கனகதுரையின் அறை. ஏ.ஸியின் 'ஹம்’ ஒலியைத் தவிர வேறு எந்த சப்தமும் இன்றி அமைதியாக இருந்தது.

தடிமனான புத்தகம் ஒன்றை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தார் டாக்டர். நடுத்தர வயது. தலையில் தென்பட்ட வழுக்கையை மறைக்க முயன்று தோல்வி அடைந்திருந்தார் என்பது தெரிந்தது. தங்க நிறக்கண்ணாடி ஃப்ரேம் மூக்கின் நடுவே உட்கார்ந்திருந்தது. சற்று இடுங்கிய கண்களும், குறுந்தாடியும் அவருக்கு ஒரு பிரத்தியேகமான இமேஜை உருவாக்கி இருந்தது.

'டக் டக்..’ அறைக் கதவை தட்டும் ஒலி கேட்டது.

"யெஸ் கம் இன்" டாக்டர் குரல் கொடுத்தார்.

ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் உள்ளே நுழைந்தனர்.

"ஹலோ டாக்டர்."

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரையும், கார்த்திக்கையும் பார்த்த டாக்டரின் விழிகள் விரிந்தன. புருவங்கள் கேள்விக்குறி அடையாளத்திற்கு உயர்ந்தன.

"வாங்க இன்ஸ்பெக்டர் உட்காருங்க."

இருவரும் உட்கார்ந்தனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், டாக்டர் கனகதுரை பிரசாத்திற்கு எழுதிக் கொடுத்திருந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை டாக்டரின் மேஜை மீது வைத்தார்.

"பிரபல தொழில் அதிபர் பிரசாத்தோட குழந்தை கொலை கேஸ் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன்."

"என்ன?! பிரசாத்தோட குழந்தை கொலையா? மை காட்!" டாக்டர் கனகதுரையின் குரலில் அதிர்ச்சி வெளிப்பட்டது.

"நான் வெளிநாட்டுக்கு போயிட்டு நேற்று நள்ளிரவுதான் இந்தியா வந்தேன். அதனால எனக்கு எதுவும் தெரியாது." டாக்டரின் குரலில் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளும் ஆவல் தென்பட்டது.

ப்ரேம்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

"ஸோ, எங்க சந்தேகம் சரிதானான்னு தெரிஞ்சாகணும் டாக்டர்."

"பிரசாத் உங்க கிட்ட எதுக்காக வந்தார்? என்ன சொன்னார்? இதைப் பத்தின விவரம் எல்லாம் சொன்னீங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும் டாக்டர்."

டாக்டர் கனகதுரையின் நினைவில் பிரசாத் தன்னிடம் வந்து சென்ற நிகழ்ச்சி மனதில் நிழலாடியது.


38

டாக்டர் கனகதுரையின் அறைக்குள் பிரசாத் நுழைந்தான்.

"ஹலோ, பிரசாத் வாங்க வாங்க."

"என்ன டாக்டர் இவ்வளவு ஃப்ரீயா இருக்கீங்க! பேஷண்ட்ஸ் யாருமே இல்லையே?" பிரசாத் கேட்டதும் கனகதுரை சிரித்தார்.

"கூட்டமே இல்லாததுனால மனோதத்துவ ரீதியா பாதிக்கப் படாதவங்களே கிடையாதுன்னு அர்த்தம் இல்லை பிரசாத். உடல்ரீதியா வியாதி வந்துட்டா, உடனே டாக்டர்கிட்ட போற இந்த மக்கள், மனநலம் பாதிக்கப்பட்டது தெரிஞ்சாலும் அலட்சியமா இருந்துடறாங்க. தங்களோட மனநிலை பாதிப்புனாலதான் குடும்பத்துல பிரச்சனைகள்ன்னு தெரிஞ்சாலும் கூட சைக்யாட்ரிஸ்டை பார்க்க வர்றவங்க ரொம்ப குறைவு. 'தங்களை பைத்தியம்னு மத்தவங்க நினைச்சுடுவாங்களே’ங்கற தவறான கருத்து பரவலா இருக்கு. ஆனா இப்பக் கொஞ்சம் எஜுகேட் ஆகி இருக்காங்க. அதெல்லாம் சரி. நீங்க என்ன திடீர்னு என்னோட க்ளினிக்குக்கு வந்திருக்கீங்க? பிஸியான தொழிலதிபராச்சே?"

"அ...அ… அது வந்து டாக்டர்... என்னோட பெர்ஸனல் விஷயமா உங்ககிட்ட..."

மேற்கொண்டு எதுவும் பேசாமல் தயக்கமாக தவிப்புடன் காணப்பட்ட பிரசாத்தை கூர்ந்து கவனித்தார் டாக்டர் கனகதுரை.

"என்ன விஷயம் பிரசாத்? ஏன் இந்த தயக்கம்? நான் என்ன உங்களுக்கு அன்னியனா? பல வருஷ கால நண்பன்தானே? சொல்லுங்க. எனி ப்ராப்ளம்? எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க பிரசாத்."

"டாக்டர்.. நான்.. எனக்கு மனசே சரி இல்லை டாக்டர்."

"பிஸினஸ் பிராப்ளமா?"

"இல்லை டாக்டர்..."

"தொழில் போட்டியினால பிரச்சனையா?"

"இல்லை டாக்டர்..."

"பின்னே குடும்பத்துல, ஐ மீன்... உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதாவது..."

"சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்லை டாக்டர். எங்க அப்பா... அவர், எனக்கு ஆண் குழந்தை பிறக்கலைன்னா அவரோட சொத்துக்கள் எதுவுமே எனக்குக் கிடையாதுன்னு சொல்லி இருக்கார். எனக்கும் ரெண்டாவதா பிறந்ததும் பொண்ணாயிடுச்சு. அதனால அவர் சொன்னபடி எனக்கு எதுவுமே எழுதி வைக்காம இறந்தும் போயிட்டார்."

"உங்க அப்பா இறந்துட்டாரா? எனக்கு நீங்க சொல்லவே இல்லியே?"

"த்சு... மனசுக்குள்ள ஏகப்பட்ட உளைச்சல். அதான் உங்களுக்கு சொல்லாம விட்டுப்போச்சு..."

"உயில் எழுதி வச்சிருக்காரா?"

"ஆமா டாக்டர். எல்லாம் முடிஞ்சது. அவர் எனக்குக் கல்யாணம் ஆனதில இருந்து இதையே சொல்லிக்கிட்டு இருந்தார். சொன்னபடியே செஞ்சும் முடிச்சுட்டாரு. அவரோட இந்த பிடிவாதத்துனால...." மேலே பேசத் தயங்கினான் பிரசாத்.

"சொல்லுங்க பிரசாத். என்ன விஷயம்?"

"அவரோட வறட்டுப் பிடிவாதத்துனால என் மனநிலை பாதிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன் டாக்டர்."

"ஏன்? எதை வச்சு நீங்களாவே இப்பிடி ஒரு முடிவுக்கு வந்தீங்க?"

"வந்து.. அது வந்து டாக்டர்.. ராத்திரி நேரத்துல தூக்கமே வர்றது இல்லை. படுக்கையில இருந்து எழுந்து போய் ஹால் சோபாவில உட்கார்ந்துடறேன். அந்த சமயத்துல என் மனசுல அலை அலையா நினைவுகள் மோதுது. என் குழந்தை கவிதா மேல நான் உயிரையே வச்சிருக்கேன். ஆனா இந்த மாதிரி சமயத்துல மட்டும் எனக்கு அந்த பிஞ்சுக் குழந்தை மேல ரொம்ப வெறுப்பா இருக்கு. நானா என் குழந்தையை இப்படி வெறுக்கறேன்னு எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு. அதிர்ச்சியாவும் இருக்கு. சில சமயம் பயமாவும் இருக்கு டாக்டர். ஏன் டாக்டர் எனக்கு இப்படி?"

"உங்களை மீறி, உங்களுக்குள்ளேயே தனியா ஒரு ட்ராக் அதாவது நினைவலைகள் போய்க்கிட்டிருக்கு. இதுக்கு சப்-கான்ஷியஸ் மைண்ட்ன்னு (Subconscious mind) சொல்றதுண்டு. உங்களோட சப் கான்ஷியஸ் மைண்ட்தான் உங்க இயல்புக்கு மாறான விஷயங்களை சிந்திக்க வைக்குது."

"இதுக்கு என்ன காரணம் டாக்டர்?"

"ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பிரச்சனையா எடுத்துக்கிட்டு அதைப் பத்தியே யோசிச்சிக்கிட்டிருந்தா, சில பேருக்கு இப்படி ஆகறது உண்டு. இப்படி தங்களோட இயற்கையான குணத்துக்கு மாறுபட்ட சிந்தனைகள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். இதை கவனிக்காம அலட்சியமா விட்டுட்டா பாதிப்புகள் அதிகமா இருக்கும். நல்ல வேளை, நீங்க என்கிட்ட வந்திருக்கீங்க.."

"டாக்டர், எந்த பாதிப்பும் ஆகறதுக்குள்ள என்னை இந்த பிரச்சனையில இருந்து மீட்டுடுங்க டாக்டர் ப்ளீஸ்."

"கவலைப்படாதீங்க பிரசாத். சரி பண்ணிடலாம். உங்க அப்பாவோட சொத்துக்கள் உங்களுக்குக் கிடைக்காததுனால ஏமாற்றம் அடைஞ்சிருக்கீங்க. இந்த ஏமாற்றத்துக்குக் காரணம் உங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அதோட பிரதிபலிப்புதான் உங்க சப்-கான்ஷியஸ் மைண்ட் தேவையற்ற சிந்தனைகளை உருவாக்குது."

"நீங்க சொல்றது கரெக்ட் டாக்டர். என் மனசை அப்பிடியே ஸ்கேன் பண்ணிப் பார்த்தது மாதிரி சொல்றீங்களே. உண்மையிலேயே எனக்கு சொத்துக்கள் இல்லாம பண்ணிட்ட எங்க அப்பா மேலயும், அதுக்குக் காரணமான என் குழந்தை மேலயும் எனக்குக் கோபம் அதிகமா  வருது. ஆனா நான் என் குழந்தை மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன். சில சமயங்கள்ல மட்டும்தான் இப்படி ஆகுது டாக்டர். என்னோட இந்த மனநிலையில இருந்து, என்னை நீங்கதான் டாக்டர் காப்பாத்தணும். என் குழந்தையை நான் வெறுக்கக்கூடாது. இந்த பிரச்சனையில் இருந்து நான் விடுபடணும். உங்களைத்தான் டாக்டர் நம்பி வந்திருக்கேன்."

"நான் என்னோட ட்ரீட்மெண்ட்டை நம்பறேன். நிச்சயமா என்னோட ட்ரீட்மெண்ட் உங்களை குணமாக்கிடும். மாத்திரைகள் எழுதித் தரேன். மூணு மாசம் தொடர்ந்து சாப்பிடுங்க. ராத்திரியில தூக்கம் நல்லா வரும். சப் கான்ஷியஸ் மைண்ட் தோற்றுவிக்கிற மாறுபட்ட எண்ணங்கள் நாளடைவில் மறையும். தியானம் பண்ணுங்க. தியானம் பண்ணத் தெரியாதுன்னா பழகிக்கோங்க. யோகா கூட ரொம்ப நல்லது. ஒரு மாசம் கழிச்சு மறுபடியும் வாங்க. இடைப்பட்ட நேரத்துல எந்த ப்ராப்ளம் வந்தாலும் உடனே இங்கே வந்து என்னைப் பாருங்க" பேசிக் கொண்டே மாத்திரைகளின் பெயரை எழுதி பிரசாத்திடம் கொடுத்தார் டாக்டர்.

"தாங்க் யூ டாக்டர். நான் கிளம்பறேன்."

"ஓ.கே. விஷ் யூ ஆல் த பெஸ்ட்."

அவனுக்குக் கை குலுக்கி விடை கொடுத்தனுப்பினார் டாக்டர்.

39

"இதுதான் இன்ஸ்பெக்டர் நடந்தது. இந்த மருந்துச் சீட்டு நான் பிரசாத்துக்கு எழுதிக் குடுத்ததுதான். அவர் இந்த மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிட்டாரா என்னன்னு தெரியலை. சாப்பிட்டிருந்தா இந்த அளவுக்கு அவருடைய மனநிலை பாதிச்சிருக்காது. மறுபடியும் அவர் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை."

"அப்படின்னா, பிரசாத் தன்னோட சுய உணர்வுல திட்டமிட்டு குழந்தையைக் கொலை செய்யலைன்னு சொல்றீங்களா டாக்டர்?" இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார் கேட்டதும் ஆணித்தரமாக ஆமோதித்தார் டாக்டர்.

"யெஸ் இன்ஸ்பெக்டர். பிரசாத், அவரோட குழந்தையை தன் உணர்வு இல்லாத சப்-கான்ஷியஸ் மைண்ட்லதான் கொலை செஞ்சிருக்கார். இதை உறுதியா என்னால சொல்ல முடியும்."


"பிரசாத், தன் மனைவியையும், குழந்தையையும் உயிருக்குயிரா நேசிச்சிருக்கார்ன்னு எங்களுக்கும் தெரிய வந்துச்சு. விசாரணையைப் பொறுத்த வரைக்கும் அவரோட நார்மல் நடவடிக்கைகள் இதை நல்லாவே தெளிவு படுத்தி இருக்கு. கார்த்திக், டாக்டர் நம்பகிட்ட சொன்னதையெல்லாம் எழுத்து மூலமா ரிப்போர்ட் வாங்கிக்கோங்க."

டாக்டரின் விரிவான விளக்கம் அடங்கிய ரிப்போர்ட்டைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரும், கார்த்திக்கும் புறப்பட்டனர்.

"டாக்டர் ரீத்திகா சொன்ன தகவல்களும் இப்ப டாக்டர் கனகதுரை சொன்ன தகவல்களும் பிரசாத்தை குற்றவாளின்னு நிரூபிக்கிற அழுத்தமான சாட்சிகளா இருக்கு. நாம இப்ப பிரசாத்தை கைது செய்யறதுக்கு வேண்டிய ஏற்பாட்டுடன் அங்கே போகலாம்."

"ஓ. கே. ஸார்."

இருவரும் பிரசாத்தின் பங்களாவிற்கு சென்றடைந்தனர்.

40

"பிரசாத்! உங்க தலையில அடிபட்டதும், நீங்க மயக்கமானதும் அப்பட்டமான பொய் நாடகம். இதற்கான ஆதாரங்களை நரம்பியல் நிபுணர் டாக்டர் ரீத்திகா குடுத்திருக்காங்க. சைக்யாட்டிரிஸ்ட் டாக்டர் கனகதுரையும் சில நம்பகமான தகவல்களை கொடுத்திருக்கார். குப்பைத் தொட்டிக்கிட்ட கிடைச்ச ஷு தடயங்கள் உங்க வெளிநாட்டு ஷு தடயங்கள்தான். இது தெரிஞ்சு நீங்க, ஷுக்களை மறைச்சுட்டீங்க. உங்க குப்பைக் கவர் பத்தின என்கொய்ரியிலயும் எங்களுக்கு சாதகமான தகவல் கிடைச்சது. இது எல்லாத்தையும் விட இரண்டு டாக்டர்கள் கொடுத்த மெடிக்கல் சம்பந்தப்பட்ட தகவல்கள்தான் உங்களை ஆதாரங்களோட பிடிக்க எங்களுக்கு வலுவான  காரணங்களா அமைஞ்சுடுச்சு. இதுக்கும் மேல உண்மையை மறைக்க மாட்டீங்கன்னு நம்பறேன்."

"ஆமா இன்ஸ்கெ்டர், நான்தான் என்னோட ரெண்டு குழந்தைகளையும் கொலை செஞ்சேன். இதுக்குக் காரணம் பெண் சிசு பத்தி எங்கப்பா கொண்டிருந்த வெறுப்புதான். அவர் எனக்கு எந்த சொத்தும் இல்லாம நடுத்தெருவுல நிக்கற அளவுக்கு ஆக்கினதுக்குக் காரணம் பெண் குழந்தைதானேங்கற ஆத்திரமும், வெறியும் என் இதயத்துல நிரந்தரமாயிடுச்சு. அதோட விளைவு? என் குழந்தைகளைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை. அதுங்களைப் பார்க்கற ஒவ்வொரு நிமிஷமும் என் அப்பாவோட கடுமையான விதிமுறைகள்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால ஏற்பட்ட வெறுப்பை எப்படியாவது மாத்திடணும்ன்னுதான் டாக்டர் கனகதுரையை சந்திச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். ஆனா அவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடாம விட்டுட்டேன்.  அதன் விளைவுதான் என் குழந்தைகளை நான் இழந்துட்டேன்."

"சுயமா சம்பாதிப்பேன், உழைப்பேன்னு சவால் விட்டுப் பேசினீங்க? அதெல்லாம் நாடகந்தானா?" ப்ரேம்குமார் கேட்டதும், வெறித்த பார்வை மாறாமல் தன் வாக்கு மூலத்தைத் தொடர்ந்தான் பிரசாத்.

"எங்க அப்பா, சின்ன வயசுல கஷ்டப்பட்டு உழைச்சு முன்னுக்கு வந்தார். ஆனா நான் பிறக்கும்போதே பணக்கார சூழ்நிலையில பிறந்தேன். வளர்ந்தேன். இதனால சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கமாயிட்டேன். என்னால கீழ்மட்ட வாழ்வை ஏத்துக்க முடியலை. நான் பெரியவனா ஆனப்புறம் எங்க இன்டஸ்ட்ரீஸை நிர்வாகம் பண்ணினேன். பலபேர் என் கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கினாங்க. நான் மத்தவங்ககிட்ட கைநீட்டி சம்பளம் வாங்க முடியுமா? பஞ்சு மெத்தையில படுத்த நான், பாயில படுத்துத் தூங்க முடியுமா? பால் பழம் சாப்பிட்டு பழகிய நான் பழங்கஞ்சியைக் குடிக்க முடியுமா?

“அரண்மணை மாதிரி பங்களாவை விட்டுட்டு ஆறடிக்கு ஆறடி ரூம்ல வாழ முடியுமா? ஒரு முதலாளியான நான் தொழிலாளி ஆக முடியுமா? விதம் விதமான கார்கள்ல உலா வந்த நான், என் கால்கள் வலிக்க நடக்க முடியுமா? களைப்புன்னா என்னன்னே தெரியாத நான் உழைச்சுப் பிழைக்க முடியுமா? சுகவாசியாவே வாழ்ந்து பழகிட்ட என்னால, அந்த சுகங்களைக் கொடுத்த எங்கப்பாவோட பணம், சொத்துக்கள் இவை இல்லாம வாழ முடியுமா? இதுக்கெல்லாம் காரணமான என் குழந்தைங்க மேல எனக்கு வெறுப்புதான் வளர்ந்துச்சு. என் மனநிலையும் பாதிச்சுடுச்சு. மனநிலை பாதிச்சதுனாலதான் என்னோட குழந்தைகளை நானே கொலை செய்யும்படி ஆயிடுச்சு. என்னோட இந்த நிலைக்குக் காரணம் எங்க அப்பா... எங்க அப்பா..." ஆவேசமாகக் கத்திய பிரசாத், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தான்.

"என்னோட திட்டத்தை செயல்படுத்தறதுக்கு முன்னால, காளியை மாத்திரை வாங்கிட்டு வரச் சொல்லி வெளியே அனுப்பினேன். அந்த சமயத்துல வேம்புலி, வேலையை முடிச்சுட்டு போயிட்டான்னு நான் நினைச்சது தப்பா போச்சு. அவன், தோட்டத்துல எந்தப் பக்கமோ இருந்திருக்கான். மாத்திரை வாங்கறதுக்காக வெளியே போன காளி திரும்பி வந்தபிறகு வேம்புலி அவனை மயங்க வச்சானா அல்லது காளி போறதுக்குள்ளயே மயங்க வச்சுட்டானான்னு எனக்குத் தெரியலை. பங்களா காம்பவுண்டுக்குள்ள யாருமே இல்லைங்கற தவறான கணிப்புல, ஒரு தகப்பன் செய்யக் கூடாத கொடூரமான செயலை நான் செஞ்சுட்டேன். மனநிலை பாதிச்சுடுச்சுன்னு தெரிஞ்சும், டாக்டரைப் பார்த்து ட்ரீட்மென்ட் பத்தி பேசினதுக்கப்புறமும் நான் அலட்சியமா இருந்துட்டேன். என் தலையில நானே அடிச்சுக்கிட்டு ஏற்படுத்தின காயமும், மயக்க நாடகமும் இந்த முறை என்னை ஏமாத்திடுச்சு. ஸ்வர்ணாவுக்கு என் மனநிலை பாதிப்பு பத்தி எதுவும் தெரியாது. நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்றேன்" நீளமாக பேசி முடித்த பிரசாத், ஸ்வர்ணாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் தலை குனிந்தான். தகுந்த ஆதாரங்களோடு பிடிபட்ட அவனது கைகளில் விலங்கு பூட்டப்பட்டது.

41

கோர்ட்டில் தீர்ப்பு வழங்கும் நாள்.

ஜட்ஜ் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்.

"சந்தேகத்தினால் போலீஸின் பிடியில் இருக்கும் சரவணன், தவறு செய்ய திட்டமிட்டிருந்தபோதும் அதைக் கைவிட்டு மனம் மாறி விட்டார் என்பதை ராகவேந்திரராவ் கொடுத்துள்ள சாட்சி நிரூபிக்கின்றது. எனவே சரவணன் குற்றவாளி அல்ல என்று இந்த கோர்ட் தீர்மானித்துள்ளது. சரவணனின் நண்பன் வாசு குற்றமற்றவர் என்று அறிவிக்கின்றேன்.

ரங்கனின் தூண்டுதலால், வேம்புலி பழி வாங்கும் எண்ணத்தில் பிரசாத்தின் குழந்தையைக் கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தான். பிரசாத் அடிபட்டுக் கிடந்ததைப் பார்த்த வேம்புலி பயந்து போய் ஓடி விட்டான் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆகவே வேம்புலியை எச்சரித்து விடுதலை செய்கிறேன்.

எஃப்.ஐ.ஆர். குடுத்த மிஸ்டர் ராபர்ட் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகிறார். குழந்தையின் உடல் கிடந்தது பற்றி உடனே போலீசுக்குத் தகவல் சொன்ன அவரது கடமை உணர்வை பாராட்டுகிறேன்.

போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரசாத், பல வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் கனகதுரையின் மெடிக்கல் ரிப்போர்ட் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றது.


எனவே பிரசாத் குற்றவாளி என்றாலும் அவர் ஒரு மன நோயாளி என்பதால் அவரை அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறேன். கிராமங்களில் படிக்காத பாமர மக்களும், பரம ஏழைகளும்தான் பெண் குழந்தை என்றால் அதிக செலவு என்று கருதி வெறுக்கிறார்கள். பெண் சிசு கொலைக்குத் துணிந்து விடுகிறார்கள். இது நியாயமில்லாத செயல். படித்த பிரசாத்தும், பணக்காரர் ராஜசேகரனும் பெண் குழந்தையை வெறுத்தது மிகவும் அநியாயமான விஷயம். மண்ணில் பிறந்த உயிர்களை மதிக்க வேண்டும். ஆணோ பெண்ணோ ரத்தமும், உயிரும் இணைந்த மனிதப் பிறவி. பிரசாத், தன் குழந்தைகளை நேசித்தவர். ஆனால் அவரது தந்தையின் தவறான நடவடிக்கையால் மன நோயாளியாகி இன்று குற்றவாளியாக நிற்கிறார்."

ஸ்வர்ணாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

'பல ராத்திரிகள்ல பிரசாத், தூங்காம சோஃபாவுல போய் உட்கார்ந்திருந்ததையும், தான் போய் கேட்ட பொழுது, ‘தனக்குத் தூக்கம் வரவில்லை’ என்று சொல்லி அவன் சமாளித்ததையும் நினைத்துப் பார்த்தாள். பாவம் இவர், குழந்தை சௌம்யா மேலயும், கவிதா மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருந்தார்... தன்னையறியாமலே இப்படி செய்யணும்னா எந்த அளவுக்கு இவரோட மனநிலை பாதிச்சிருக்கணும்? எல்லாம் அவரோட அப்பாவோட பிடிவாதத்தினாலதான்’ நினைத்து நினைத்துத் துடித்தாள் ஸ்வர்ணா.

ஆண் குழந்தைதான் வாரிசு. ஆண் குழந்தை மட்டுமே பரம்பரை பரம்பரையாக பேர் சொல்லும் என்ற மூடக்கருத்துக்களால் தவறான முடிவுகளை எடுத்தார் ராஜசேகரன். இதனால் அவரது பெயரை 'ராஜசேகரனின் மகன் கொலைகாரன்’ என்று சொல்ல வைத்து விட்டார். ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வும் வீணாகியது. தன் உதிரத்தில் உதித்த பிள்ளைக் கனிகளை, அவர்களின் தகப்பனே இவ்வுலகில் இருந்து உதிர்த்து விட்ட கொடுமை அறிந்து ஸ்வர்ணாவின் தாய்மை உள்ளம் தவியாய் தவித்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.