Logo

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6867
Trivandrum Lodge

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ் - Trivandrum Lodge

(மலையாள திரைப்படம்)

2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம். நடிகர் அனூப் மேனன் எழுதிய மாறுபட்ட ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் வி.கே.பிரகாஷ்.

ஜெயசூர்யா மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இப்படத்தில் படம் பார்ப்போரின் மனங்களில் இடம் பிடிக்கக் கூடிய ஒரு அருமையான கதாபாத்திரத்தில்- ஹனி ரோஸ்… அனூப் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பின்னணி பாடகர் பி.ஜெயசந்திரனும் இதில் நடித்து முத்திரை பதித்திருந்தார்.

கொச்சியில் இருக்கும் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்ற பெயரைக் கொண்ட கட்டித்தின் அறைகளில் தங்கியிருக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் கதையே இப்படம். எங்கெங்கோ இருந்து வந்து அங்கு தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்குப் பின்னால்தான் எத்தனையெத்தனை கதைகள்!

அந்தக் கதைகள் ஒவ்வொன்றையும் மாலை என கோர்த்து, ஒரு மிகச் சிறந்த படத்தை இயக்கியிருக்கும் வி.கே.பிரகாஷை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.

மாறுபட்ட ஒரு கதைக் கரு கொண்ட ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ படத்தின் கதை இதுதான்:

அப்து அந்த லாட்ஜில் தங்கியிருக்கும் ஒரு இளைஞன். யாரிடமும் அவன் அதிகமாக பேசுவதே இல்லை. மனதிற்குள் எதையெதையோ நினைத்துக் கொண்டு, ஆசைகளை வளர்த்துக் கொண்டு, மோகங்களில் மூழ்கிக் கொண்டு தனக்கென ஒரு உலகத்தை அமைத்துக் கொண்டு நடந்து திரியும் ஒரு மனிதன் அவன். அவன் இந்த வேலையைத்தான் செய்வான் என்றில்லை. எந்த வேலையும் செய்யக் கூடியவன் அவன். சில நாட்கள் ப்யூட்டி பார்லரில் ஏதாவது வேலையைக் கற்று, அதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பான். திடீரென்று அந்த வேலையை வேண்டாம் என்று உதறி விட்டு, ஒரு மிகப் பெரிய வசதி படைத்த தொழிலதிபரிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டிருப்பான்.

அவனுக்கு ‘செக்ஸ்’ விஷயத்தில் அளவற்ற ஈடுபாடு… மோகம். ஆனால், ஒரு பெண்ணையும் இதுவரை சுண்டு விரலால் கூட அவன் தொட்டதில்லை. எந்தப் பெண் நடந்து சென்றாலும், மோகம் முழுமையாக பிடித்து ஆட்ட, வெறுமனே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதோடு சரி, பெண்களைப் பார்த்தால் அப்படியொரு போதை. ஆனால், அவர்களிடம் போய் பேசுவதற்கோ தயக்கம்... பயம். மனதிற்குள்ளேயே தன் ஆசைகளை அடக்கி வைத்துக் கொண்டு தன்னுடைய ஒவ்வொரு நாளையும் ஏக்கத்துடனும், ஏக்க பெருமூச்சுகளுடனும் கடத்திக் கொண்டிருக்கிறான் அப்து.

அதே கட்டிடத்தின் ஒரு அறையில் தங்கியிருப்பவன் ஷிபு வெள்ளயானி. அவன் ஒரு சினிமா பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணி புரிபவன். ஆனால், அவன் வேலை பார்க்கும் அந்த பத்திரிகை அந்த அளவிற்கு பிரபலமானதில்லை.

அங்கு தங்கியிருக்கும் இன்னொரு மனிதர் - கோரா. அவர் தலைமைச் செயலகத்தில் க்ளார்க்காக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தான் இதுவரை 999 பெண்களுடன் உடலுறவு கொண்டிருப்பதாகவும், தன்னுடைய உடலுறவு எண் : 1000 ஒரு பெண் போலீஸுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் மனிதர் அவர்.

அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் இன்னொரு இளைஞன்-சதீஷன். ஒரு திரைப்பட நடிகனாக முயற்சித்துக் கொண்டிருப்பவன் அவன். சினிமா பத்திரிகையில் பணி புரிவதால், ஏகப்பட்ட வாக்குறுதிகளை அவனுக்கு அள்ளி வீசி இருக்கிறான் ஷிபு. தனக்கு மலையாளப் படவுலகின் முன்னணி இயக்குனர்கள் எல்லோரையும் நன்கு தெரியுமென்றும், எப்படியும் தன்னால் அவனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுக்க முடியுமென்றும் அவனுக்கு உறுதி தந்திருக்கிறான் ஷிபு. அதற்கு முன்னோடியாக சதீஷனின் பெயரைக் கூட அவன் ‘சாகர்’ என்று மாற்றி வைத்திருக்கிறான்.

ஆர்தர் ரெல்ட்டான் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர். அவரும் அங்குதான் இருக்கிறார். அவர் அங்கு பியானோ கற்றுத் தருகிறார். அதே கட்டிடத்தில் தங்கியிருக்கும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண் பெக்கி ஆன்ட்டி. அந்த லாட்ஜில் ஒரு கேன்டீனை அந்த வயதான பெண் நடத்திக் கொண்டிருக்கிறாள். அந்த கட்டிடத்திலேயே நீண்ட காலமாக தங்கியிருப்பவர்கள் இவர்கள் இருவரும்தான்.

அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரவிசங்கர். அவர் நல்ல வசதி படைத்தவர். பெரிய தொழிலதிபர். மனைவியை இழந்து விட்டவர். அவருக்கு ஒரு மகன். அவனின் பெயர் அர்ஜுன். பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவன் ஒரு அபார திறமைசாலி. அவனுக்கு முழுமையான சுதந்திரம் தந்திருக்கிறார் ரவிசங்கர். ரவிசங்கரின் தாய் ஒரு விலைமாதுவாக இருந்தவள். நிறைய பணக்காரர்களுக்கு வைப்பாட்டியாக இருந்தவள் அவள். இன்று ரவிசங்கருக்குச் சொந்தமாக இருக்கும் மாளிகையும், ஏராளமாக கட்டிடங்களும், சொத்துக்களும் அவருடைய அன்னை பல வசதி படைத்த மனிதர்களுடனும் ‘படுத்து’ சம்பாதித்தவைதாம். தன் மனைவியின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுப்படைந்த ரவி சங்கரின் தந்தை நாராயணன் பல வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னுடைய மகனுடைய உலகத்திலிருந்து மிகவும் விலகிச் சென்று, அவர் ஒரு சிறிய ஹோட்டலை நடத்திக் கொண்டு, அதன் மூலம் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ரவி சங்கருக்குச் சொந்தமான பழமையான, சிதிலமடைந்த ‘ட்ரிவேன்டரம் லோட்ஜ்’ என்ற அந்த கட்டிடத்திற்குள் ஒரு நாள் ஒரு அழகு தேவதை நுழைகிறது. பேரழகு படைத்த அந்த பெண் ஒய்யார நடை நடந்து கட்டிடத்திற்குள் நுழைந்து வருவதை, அங்கிருக்கும் எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு பார்க்கின்றனர். அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கும் அவர்கள், அந்த அழகுப் பொக்கிஷத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பார்க்கும்போது நல்ல வசதி படைத்த நாகரீக மங்கை அவள் என்பது தெரிகிறது.

அந்த அழகுச் சிலையின் பெயர் த்வனி. அவள் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவள். தான் எந்த கட்டுப்பாடுகளின் கீழும் இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடியவள் அவள். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் அவள் திருமண பந்தத்தையே உதறி விட்டு வந்திருக்கிறாள். சுதந்திரப் பறவையாக வாழ்க்கையில் வாழ வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய ஒரே சிந்தனை. எந்தவித கவலைகளும் இல்லாமல் வாழ வேண்டும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், நல்ல உணவுகளைச் சாப்பிட வேண்டும், உயர்ந்த விஷயங்களைப் பார்க்க வேண்டும், வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் சொர்க்கமென கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவள் அவள்.


த்வனி அந்த லாட்ஜில் தங்கி, ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற தீர்மானத்துடன் வந்திருக்கிறாள். கொச்சியைப் பின்புலமாகக் கொண்ட நாவல் அது. அந்த கட்டிடத்தில் தங்கியிருக்கும் எல்லோரும் தன்னைப் பார்த்து எச்சிலை ஒழுக விடுகிறார்கள் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப் போனால்- அப்படி அவர்கள் தன்னைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பதையே அவள் விரும்புகிறாள். அவர்களின் அந்தச் செயலை ஓரக் கண்களால் பார்த்து, அவள் மனதிற்குள் ரசிக்கிறாள். இப்படி பலரும் ஏக்கத்துடன் பார்த்து, கனவு காணும் எட்டாக் கனியாக நாம் இருக்கிறோமே என்பதை நினைத்து அவள் தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறாள்.

காமவெறி தலைக்குள் முழுமையாக குடி கொண்ட நிலையில், ஒரு பைத்தியக்காரனைப் போல அங்கு நடமாடிக் கொண்டிருக்கும் அப்துவை த்வனி பார்க்கிறாள். தன் மீது வெறித்தனமான மோகத்துடன் அவன் இருக்கிறான் என்பதையும் அவள் நன்கு அறிவாள். அப்துவை அழைத்து அவனைப் பற்றிய பல விஷயங்களையும் அவள் கேட்டு, தெரிந்து கொள்கிறாள். தனக்கு உதவியாக அவள் பல வேலைகளுக்கும் அவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவன்தான் என்ன வேலை சொன்னாலும் செய்யக் கூடியவன்தானே! த்வனி செய்யச் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறான் அப்து.

இதற்கிடையில், ஒரு நாள் த்வனியைத் தேடி அவளுடைய கணவனாக இருந்த மனிதன் வரும் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. அவனை இனிமேல் வராத அளவிற்கு, கடுப்பாகி ஓடச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள் த்வனி. அதைத் தொடர்ந்து நல்ல வசதி படைத்த ஒரு ஹோட்டலில் ஒரு அறையை அவள் எடுக்கிறாள். அந்த அறையில் படுக்கையில் அப்துவை, மேலே சட்டை அணியாமல் படுக்க வைக்கிறாள். ‘வெறுமனே படுத்துக் கிடந்தால் போதும், எதுவுமே பேசக் கூடாது, வாயில் சுருட்டை வைத்துக் கொண்டு தன்னுடைய புதிய கணவனாக நடித்தால் போதும்’ என்று த்வனி, அப்துவிடம் கூறுகிறாள். அவள் கூறியபடி லாட்ஜின் அறையில் படுத்துக் கிடக்கிறான் அப்து.

அப்போது அறைக்குள் வருகிறான் த்வனியின் கணவனாக இருந்தவன். ஒரே அறைக்குள் தன்னுடைய மனைவியாக இருந்த த்வனியும், அப்து என்ற இளைஞனும் இருப்பதைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைகிறான். ஆனால், அவனுடைய பரிதாபமான நிலைமையைப் பார்த்து, அவன் மீது இரக்கமடையும் அப்து, தன்னை மறந்து உளறி, த்வனியின் திட்டத்தையே பாழாக்கி விடுகிறான்.

இன்னொரு நாள் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்துவிடம் ‘என் மீது உனக்கு ஏகப்பட்ட ஆசை இருக்கிறது அல்லவா?’ என்று கேட்கிறாள் த்வனி. அவன் ‘ஆமாம்’ என்கிறான். தொடர்ந்து அவள் ‘சரி... என் உடலில் உனக்கு பிடித்தது எது?’ என்று கேட்கிறாள். அவன் சிறிதும் தயங்காமல் ‘உங்களுடைய பின் பாகம்’ என்கிறான். அதைக் கேட்டு தன்னையே மறந்து சிரிக்கிறாள் த்வனி.

இந்தச் செயல்களுக்கு மத்தியில், ரவிசங்கரைப் பார்க்கிறாள் த்வனி. அவனிடம் ஏராளமான பணம் இருக்கிறது, நிறைய சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள். தன் மனைவியை இழந்து, சிறு மகனுடன் தனிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் அந்த பணக்காரரின் பார்வை தன் பக்கம் திரும்பி, தான் அவனுடைய வாழ்க்கையில் நடைபோட வாய்ப்பிருக்கிறதா என்று அவள் ஒரு ஓரத்தில் முயற்சி செய்து பார்க்கிறாள். ஆனால், தன் மனைவி மரணமடைந்து விட்டாலும், தன்னுடைய இதயத்தில் அவளைத் தவிர வேறு யாருக்குமே இடமில்லை என்ற கறாரான முடிவுடன் அவன் வாழ்ந்து கொண்டிருப்பதை காலப் போக்கில் அவள் தெரிந்து கொள்கிறாள். இது அவள் சிறிதும் எதிர்பாராத ஒன்று.

இவ்வளவு சம்பவங்களுக்கும் மத்தியில், அந்த கட்டிடத்திற்குள் அழைத்துக் கொண்டு வரப்படும் ஒரு ‘லோக்கல்’ விலைமாது… அவளின் நடவடிக்கைகள்… அங்கு யாருக்குமே தெரியாமல் நடைபெறும் கில்லாடித் தனங்கள்… எதுவுமே தெரியாமல் காம விஷயத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் அப்துவின் அப்பாவித்தனம்....

திடீரென்று ஒரு நாள் ஒரு பேரிடியைப் போல ஒரு தகவல் வருகிறது. அந்த பழமையான கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே அது. காரணம்- அந்த கட்டிடத்தின் உரிமைச் சான்றிதழ் வேண்டும் என்று நகராட்சி கேட்கிறது. அப்படியொரு சான்றிதழ் ரவிசங்கரிடம் இல்லவே இல்லை. அந்த கட்டிடத்தில் எங்காவது ஒரு மூலையில் அது இருக்குமா என்று எல்லோரும் தேடிப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு மூலை, முடுக்கையும் அலசிப் பார்க்கிறார்கள்.

அப்போது பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அறையிலிருந்து ஒரு பழைய கருப்பு - வெள்ளை புகைப்படம் கிடைக்கிறது. அதில் இப்போது பியானோ கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ரெல்ட்டானும், கேன்டீன் நடத்திக் கொண்டிருக்கும் பெக்கியும் ஜோடியாக இருக்கிறார்கள். இப்போது தனித்தனியாக இருக்கும் அவர்களுக்குப் பின்னால் ஒரு காதல் கதை மறைந்து கிடப்பது அப்போதுதான் எல்லோருக்கும் தெரிய வருகிறது.

இவ்வளவு காலமாக எந்தவித கவலையும் இல்லாமல் தங்கிக் கொண்டிருந்த அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ கட்டிடத்தை விட்டு வெளியேறப் போகிறோம் என்பதை யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் முழுக்க கவலையுடன் ஒவ்வொருவரும் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் நடந்து கொண்டிருக்கும் அந்த கட்டிடத்தை இடிப்பதற்காக புல்டோசர்கள் சகிதமாக கட்டிடத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பதைபதைப்புடன், இதுவரை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த உயிர்கள் நின்று கொண்டிருக்கின்றன. அப்போது, புயலென அங்கு வருகிறார் ரவிசங்கரின் தந்தை நாராயணன். பழைய, பழுப்படைந்த பேப்பர் கட்டைத் தூக்கிப் போடுகிறார். அது - அந்த கட்டிடத்திற்கான அத்தாட்சிப் பத்திரம். தன் இறந்து போன மனைவியின் மீதும், பலரிடமும் ‘படுத்து’ சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை வைத்துக் கொண்டு, அதில் சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மகனின் மீதும் கோபமும் வெறுப்பும் இருந்தாலும், உரிய நேரத்தில் அந்த அத்தாட்சிப் பத்திரத்தைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அந்த கட்டிடம் இடிக்கப்படாமல் காப்பாற்றுகிறார் அந்த உயர்ந்த மனிதர்!

‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்ற அந்த பழமையான கட்டிடத்தையும், அதில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் அன்றாட வாழ்க்கையையும் காப்பாற்றிய அந்த நல்ல மனிதரையே சந்தோஷத்துடனும் வியப்புடனும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர் எல்லோரும்.


அங்கிருக்கும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த சந்தோஷப் பெருமிதத்துடன் எல்லோரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கின்றனர்... ஒருவரையொருவருவர் அன்புடன் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர்... ஆனந்தக் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவரையொருவர் மவுனமாக பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். எங்கே அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு, படுப்பதற்குக் கூட இடமில்லாமல் நடுத் தெருவில் நிற்கக் கூடிய நிலைமை நமக்கு வந்து விடுமோ என்று மனதில் பயத்துடனும் நடுக்கத்துடனும் இருந்த அவர்களுக்கு இனி கவலைப் படுவதற்கு என்ன இருக்கிறது?

அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ கட்டிடம் அங்குள்ள எத்தனை உயிர்களின் வாழ்க்கைக் கதைகளைத் தெரிந்து வைத்திருக்கும்!

அந்த கட்டிடத்திற்குள் தங்குவதற்காக வந்த அப்துவும், நாவல் எழுதுவதற்காக வந்த அழகுப் பெட்டகம் த்வனியும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து சந்தோஷ நடைபோட்ட சம்பவமும் அங்கு நடக்கத்தான் செய்தது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிறிதும் நினைத்துப் பார்த்திராத பல சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றன! அப்பாவி மனிதனான அப்து நினைத்திருப்பானா ஒரு அழகு மயிலுடன் தான் வாழ்க்கையில் இணைவோம் என்று? மேல் தட்டு பழக்க வழக்கங்கள் கொண்ட ஒரு ‘அல்ட்ரா மாடர்ன்’ இளம் பெண்ணான தான், தனக்கு சிறிது கூட பொருத்தமே இல்லாத ஒரு ‘லூஸ் பையனுடன்’ இணைவோம் என்று த்வனிதான் இதற்கு முன்பு நினைத்திருப்பாளா? எல்லாமே புதிராகத்தான் இருக்கின்றன!

ம்... எது எப்படியோ.... வாழ்க்கையில் நடைபெறும் அனைத்துச் சம்பவங்களுக்கும் அடையாளச் சின்னமாக நின்று கொண்டிருப்பது அந்த ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’தானே!

அப்துவாக ஜெய சூர்யா. அடடா! என்ன அப்பாவித்தனமான நடிப்பு! பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் இவர் உயிர் தந்திருக்கிறார் என்பதே உண்மை. இதற்கு முன்பு நாம் வேறு எந்தப் படத்திலும் பார்த்திராத முற்றிலும் வித்தியாசமான ஜெயசூர்யா!

த்வனியாக - ஹனி ரோஸ். என்ன பொருத்தமான தேர்வு! அந்த அழகு முகமும், அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடியும், கிறங்க வைக்கும் அசால்ட்டான சிரிப்பும், அருமையான தோற்றமும்... ஹனி ரோஸைத் தவிர, வேறு யாருமே இவ்வளவு அருமையாக பாத்திரத்திற்கு பொருந்தியிருக்க மாட்டார்கள்!

மனதில் நிற்கும் அருமையான பாத்திரத்தில் அனூப் மேனன். தொழிலதிபர் ரவிசங்கராக வந்து, நம் இதயங்களில் இடம் பிடிக்கிறார். அவரின் மகன் அர்ஜுனாக மாஸ்டர் தனஞ்செய். சிறுவனிடம்தான் என்ன அபார திறமை!

கோராவாக பி.பாலசந்திரன். பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மனிதர்!

ஷிபுவாக ஸைஜு குரூப்... ஆர்த்தர் ரெல்ட்டானாக ஜனார்த்தனன்... பெக்கி ஆன்ட்டியாக சுகுமாரி... ரவிசங்கரின் மனைவி மாளவிகாவாக பாவனா...  பெண்களைக் ‘கூட்டிக் கொடுக்கும் மாமா’வாக பாபு நம்பூதிரி... சதீஷனாக அருண்- எல்லோருமே தங்களின் பாத்திரத்திற்குச் சிறப்பு சேர்த்திருக்கின்றனர்.

ரவிசங்கரின் தந்தை நாராயணனாக - பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன். இந்த அருமையான பாடகரிடம் வியக்கத்தக்க நடிப்புத் திறமையும் இருக்கிறதே!

இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர் எம்.ஜெயசந்திரன், பின்னணி இசை அமைத்திருப்பவர் பிஜி பால். இருவரும் தங்களின் பணிகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு : பிரதீப் நாயர் (ஒரு கட்டிடத்திற்குள்ளேயே பெரும்பாலும் நடைபெறும் கதை. இன்டோர் லைட்டிங்! அதை அருமையாக செய்து, முத்திரை பதித்திருக்கிறார்.)

படத்தொகுப்பு: மகேஷ் நாராயணன். தேர்ந்த எடிட்டிங்!

வழக்கமான கதை, உரையாடல்கள் என்றில்லாமல் மாறுபட்ட கதைக் கரு, புதுமையான பாணியில் அமைந்த வசனங்கள் என்ற பாதையில் நடைபோட முயற்சித்திருக்கும் அனூப் மேனன்- ஒரு இலக்கணம் மீறிய கவிதை! நிச்சயம் வரவேற்க வேண்டும்... போற்ற வேண்டும்... இவரின் இத்தகைய புதுமைப் போக்குகள் இனியும் தொடரட்டும்!

படத்தின் பெயர் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ என்று இருந்தாலும், இதன் படப்பிடிப்பு நடைபெற்றது என்னவோ கொச்சியில் இருக்கும் மட்டாஞ்சேரியில்தான்.

‘ப்யூட்டிஃபுல்’ மலையாளப் படத்தை இயக்கி, வெற்றிப் படியில் ஏறி சாதனை புரிந்த வி.கே. பிரகாஷ் ‘ட்ரிவேன்ட்ரம் லோட்ஜ்’ படத்தின் மூலம் இன்னொரு வெற்றிக் கனியைப் பறித்து, தன் கையில் வைத்திருக்கிறார்! சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.