
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Zaytoun - ஜேடவுன்
(இஸ்ரேலிய திரைப்படம்)
2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் அதே ஆண்டில் நடைபெற்ற Toronto International Film Festival இல் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களை இயக்கி உலக அளவில் சிறந்த பெயரைப் பெற்றிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனர் Eran Riklis இயக்கியிருக்கும் அருமையான படம் இது.
1982ஆம் ஆண்டில் நடைபெற்ற Lebanon War இன் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
Nader Rizq எழுதிய இக்கதை திரைவடிவம் பெற்றபோது, நாற்காலியின் நுனியில் நம்மை முழுமையாக கட்டி போட்டு வைத்திருந்தார் இயக்குனர். அந்த அளவிற்கு படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு காட்சியும் நம்மை மறந்து ஒன்றிப் போகிற அளவிற்கு உயிர்ப்புடனும், உணர்ச்சிகரமாகவும், ஆழமானதாகவும் இருந்தது.
போரின் கொடுமையையும், அதனால் உண்டாகக் கூடிய இழப்புகளையும் படம் பார்க்கும் நாம் முழுமையாக உணரும் அதே நேரத்தில், படத்தின் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். அதுதான் இப்படத்தின் சிறப்பம்சமே.
107 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தில் ஆங்கிலம், ஹீப்ரு, அரேபிக் ஆகிய மொழிகளில் உரையாடல்கள் இருக்கின்றன.
இஸ்ரேல், யுனைட்டெட் கிங்டம், ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
படத்தின் கதை இதோ:
1982 லெபனான் போர் நடைபெற்றபோது, இஸ்ரேலைச் சேர்ந்த ‘யோனி’ என்ற போர் விமானத்தின் விமானி துப்பாக்கியால் சுடப்படுகிறான். விமானத்திலிருந்து ஆழமான காயங்களுடன் கீழே விழுந்து கிடக்கும் அவனை Palestine Liberation Organization கைப்பற்றி ஒரு முகாமில் கொண்டு போய் அடைக்கிறது.
எங்கு பார்த்தாலும் போர் சூழல்கள். பெரியவர்கள் மட்டுமல்ல- பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட பயந்து கொண்டேதான் சாலைகளிலும், தெருக்களிலும் நடக்கிறார்கள். வானத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ‘சர் சர்’ என்று பறந்து கொண்டிருக்கின்றன. மனித உயிர்களைப் பற்றியும், விலை மதிப்புள்ள கட்டிடங்களைப் பற்றியும், சொத்துக்களைப் பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் விமானங்களிலிருந்து இஸ்ரேலியர்கள் குண்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட பெய்ரூட் நகரமே ஒரு மயான பூமியைப் போல காட்சியளிக்கிறது.
மிலிட்டரியைச் சேர்ந்த ஜீப்களும் வாகனங்களும் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பள்ளிக் கூடம் செல்லும் சிறுவர்களைக் கூட ஏராளமான கேள்விகளைக் கேட்டு விசாரிக்கின்றனர். அதனால் ராணுவ ஜீப்களையும், சீருடை அணிந்த ராணுவ அதிகாரிகளையும் பார்த்தாலே, தலை தெறிக்க ஓடுகின்றனர் மாணவர்கள்.
அந்த மாணவர்களின் ஒருவன்தான் ஃபஹத். தன் தாயை இழந்து விட்ட அவனுடைய கண்களுக்கு முன்னால் அவனுடைய அன்பு தந்தை இஸ்ரேலியர்களால் நல்ல பகல் வேளையில் நடுத் தெருவில் சுட்டு கொல்லப்படுகிறார். அந்தச் சம்பவம் அவனுடைய மனதில் ஆழமான காயத்தையும், பாதிப்பையும் உண்டாக்கி விடுகிறது. இஸ்ரேலியர்களின் மீது அவனுக்கு தீர்க்க முடியாத அளவிற்கு மிகுந்த வெறுப்பு உண்டாகிறது.
சிறுவனாக இருந்தாலும், எந்தவிதமான பயமும் இல்லாமல் அவன் துப்பாக்கியைக் கொண்டு சுடுகிறான். அவன் மிகவும் திறமையாக துப்பாக்கி சுடுவதைப் பார்த்து, அவனுடன் படிக்கும் நண்பர்களே வியக்கின்றனர். வெட்ட வெளியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மேலே பறந்து கொண்டிருக்கும் ஒரு இஸ்ரேலிய போர் விமானத்தின் மீது, தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஃபஹத் சுடுகிறான். மிகவும் சரியாக துப்பாக்கியிலிருந்து புயலென சென்ற குண்டு விமானத்தில் பட்டு, விமானமே வானத்தில் அலைக்கழிக்கப்பட்டு படிப்படியாக கீழ் நோக்கி இறங்குகிறது. அவனுடைய துணிச்சலையும், இஸ்ரேலியர்களின் மீது கொண்ட ஆத்திரத்தையும் பார்த்து அவனுடன் இருப்பவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். தன்னுடைய துப்பாக்கி சுடும் திறனை நினைத்து தன் மீதே பெருமைப்பட்டுக் கொள்கிறான் ஃபகத்.
ஃபகத் தன் தந்தையுடன் வீட்டில் இருந்தபோது ஒரு சிறிய ஆலிவ் செடி ஒரு தொட்டியில் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் செடிக்கு தினமும் வாயின் மூலமாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிறார் ஃபகத்தின் தந்தை. செடியின் கிளைகளில் தெறிக்கும் வண்ணம் வாயில் இருக்கும் நீரை எப்படி செடியின் மீது விழச் செய்வது என்பதை அவர் செய்து காட்டுகிறார். அவர் செய்வதைப் பார்த்து, ஃபகத்தும் தன் வாயில் இருக்கும் நீரை ஆலிவ் செடியின் கிளைகளில் தெறிக்கும் வண்ணம் உமிழ்கிறான். இப்போது ஃபகத்தின் தந்தை உயிருடன் இல்லை. ஆனால், அவர் நீர் உமிழ்ந்து வளரச் செய்த ஆலிவ் செடி, தொட்டியில் உயிர்ப்புடன் இருக்கிறது.
பாலஸ்தீனிய அகதியான ஃபகத், முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய போர் விமானியான யோனி (Yoni) ஐப் பார்க்கிறான். பார்த்தவுடனே அவனின் மீது அவனுக்கு ஆத்திரம் உண்டாகிறது. தன் கையிலிருக்கும் துப்பாக்கியால் யோனியைச் சுடுகிறான் ஃபகத். அதில் யோனிக்கு காயம் உண்டாகிறது. பதிலுக்கு யோனியும் கையில் கிடைத்த பொருளை எடுத்து, ஆவேசமாக சிறுவனின் மீது வீசி எறிகிறான். அதைத் தொடர்ந்து சிறுவனுக்கு மேலும் ஆத்திரம் உண்டாகிறது. யோனியின் மீது திரும்பவும் சுடுகிறான்.
இது ஆரம்பம்... ஆனால், அதற்குப் பிறகு ஃபகத்திடமும், யோனியிடமும் பல மாற்றங்கள்... முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தான் அங்கிருந்து எப்படியும் தப்பித்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் யோனி. ஆனால், பி.எல்.ஓ. அமைப்பினரால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தான், தப்பிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். அவனுடைய மனதில் இருக்கும் நோக்கத்தை அறிகிறான் ஃபகத்.
எல்லையைத் தாண்டிச் சென்று, தன்னுடைய சொந்த கிராமத்திற்கு தான் செல்வதற்கு தனக்கு உதவியாக இருந்தால், அடைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு யோனிக்கு தான் உதவ தயாராக இருப்பதாக கூறுகிறான் ஃபகத். அதற்கு யோனி சம்மதிக்கிறான். அதைத் தொடர்ந்து, அடைக்கப்பட்ட அறையின் கதவுகள் திறக்கப்பட, காலில் உண்டான காயத்துடன் விந்தியவாறு வெளியே வருகிறான் யோனி. சிறிதும் எதிர்பாராமல், அவன் ஃபகத்தின் கைகளை பின்னால் வைத்து இறுக கட்டி, ஒரு இடத்தில் பிணைக்கிறான். இதை சிறிதும் எதிர்பாராத அந்தச் சிறுவன், ஃபகத்தையே வியப்புடனும், கோபத்துடனும், ஆத்திரத்துடனும் பார்க்கிறான்.
வெளியே வருகிறான் யோனி. சாலைகளில் ராணுவ ஜீப்களும், வாகனங்களும் விரைந்து கொண்டிருக்கின்றன ஆங்காங்கே ராணுவ அதிகாரிகள் சாலையில் செல்வோரை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு வாடகைக் காரின் ஓட்டுனரிடம், தன்னை borderஇல் கொண்டு போய் விட முடியுமா என்று கேட்கிறான் யோனி. சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, பேரம் பேசுகிறான் ஓட்டுனர், ஒரு பெரிய தொகையைக் கூறி, அதைத் தந்தால் borderஇல் கொண்டு போய் விடுவதாக கூறுகிறான். ‘ஆனால்,-borderஇல் போய் விட்ட பிறகுதான், பணத்தைத் தர முடியும்’ என்று கூறுகிறான் யோனி. அதற்கு சம்மதிக்கிறான் ஓட்டுனர்.
வாடகை காருக்குள் யோனி ஏற, வண்டியைக் கிளப்புகிறான் ஓட்டுனர். சிறிது தூரம் பயணித்தபிறகு, என்ன நினைத்தானோ, வண்டியை பின்னோக்கி திருப்பும்படி கூறுகிறான் யோனி. காரணம் தெரியாமல் யோனியின் முகத்தையே ஓட்டுனர் பார்க்க, ‘நான் கூறுவதைக் கேட்டு, அதன்படி நட. உனக்கு மேலும் அதிகமாக பணம் தருகிறேன்’ என்கிறான் யோனி. கார் திருப்பப்படுகிறது. மீண்டும் கார் முகாமிற்கு முன்னால் வந்து நிற்கிறது.
உள்ளே நடந்து வந்த யோனி, அங்கு தான் இறுக கட்டிவிட்டுச் சென்ற ஃபகத்தின் கட்டுகளை அவிழ்க்கிறான். சிறுவன் தன்னுடைய தோல் பையையும், தன் தந்தை தன்னிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற ஆலிவ் செடியையும் கையில் எடுத்துக் கொள்கிறான். அவற்றுடன் அவன் காருக்குள் ஏறி அமர்கிறான்.
ஃபகத்தும், யோனியும் காருக்குள் அமர்ந்திருக்க, கார் பயணிக்கிறது. மேடுகள், பள்ளங்கள், வெட்ட வெளிகள், மலைகள் எல்லாவற்றையும் தாண்டிச் செல்லும் கார் ஒரு இடத்தில் நிற்கிறது. ஓட்டுனர் ‘பருகும் பானம்’ வாங்குவதற்காக கீழே இறங்குகிறான். காருக்குள்ளேயே அமர்ந்திருக்கின்றனர் யோனியும், ஃபகத்தும். சற்று தூரத்தில் ராணுவ வாகனம் நின்று கொண்டிருக்கிறது. அதில் ரோந்து படையினர். அவர்கள் காருக்குள் இருக்கும் இருவரையும் பார்த்து விடுகின்றனர். ராணுவ அதிகாரிகள் அவர்களை கையைப் பற்றி வெளியே இழுக்கின்றனர்.
அந்த போராட்டத்தில் தன் கையிலிருந்த துப்பாக்கியால் ராணுவ வீரர்களைச் சுட்டு விடுகிறான் சிறுவன் ஃபகத். அவர்கள், யோனியையும் ஃபகத்தையும் சூழ, தாங்கள் வந்த காரின் டயர்களைத் துப்பாக்கியால் சுட்டு பஞ்சராக்குகிறான் சிறுவன். தொடர்ந்து வெறுமனே நின்றிருந்த ராணுவ ஜீப்புக்குள் வேகமாக இருவரும் ஏற, ஜெட் வேகத்தில் அதை ஓட்டிச் செல்கிறான் யோனி.
நீண்ட சாலைகளையும், குன்றுகளையும் கடந்து பயணிக்கிறது ஜீப். ராணுவ அதிகாரிகளிடமிருந்து முழுமையாக தப்பித்து விட்டார்கள் இருவரும். பாறைகள் நிறைந்த ஒரு இடத்தில் மிகவும் வேகமாக கொண்டு சென்று ஜீப்பை நிறுத்துகிறான் யோனி. இரவு வேளை... இருவரும் மரங்களின் மீது சாய்ந்து படுக்கிறார்கள்.
இருவருக்குமே அது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. பாலஸ்தீன அகதியான சிறுவன் ஃபகத்தும், இஸ்ரேலிய போர் விமானியான யோனியும் இப்போது மிகவும் நெருக்கமானவர்களாக ஆகி விட்டார்கள். காலில் இருக்கும் காயத்தால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் யோனியையே வாஞ்சையுடன் பார்க்கிறான் ஃபகத். அடுத்த நிமிடம் அவனுடைய காயத்தின் மீது சில மூலிகை இலைகளைக் கொண்டு வந்து வைத்து, அதற்கு கட்டு போடுகிறான் ஃபகத். தன்னை துப்பாக்கியால் சுட்ட சிறுவனே தன்னுடைய காயத்திற்கு மருந்து போடும் வினோதத்தை நினைத்து, மனதிற்குள் சந்தோஷப்பட்டு சிரிக்கிறான் யோனி. அந்த இரவை அங்கேயே இருவரும் கழிக்கின்றனர்.
மறுநாள் பொழுது புலர்கிறது. அருகிலிருந்த நீரோட்டத்தில் முகத்தைக் கழுவி விட்டு வருகிறான் யோனி. அவனை அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு, சிறுவன் மட்டும் அங்கிருந்து ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறி விட்டு கிளம்புகிறான்.
அவன் போவதையே பார்த்துக கொண்டிருக்கும் யோனி, சிறுவனின் தோல் பையை எடுத்து சோதித்துப் பார்க்கிறான். அதற்குள் பென்சில்கள், நோட்டுகள்... அவற்றுடன் சிறுவனின் தாயின் ஒரு கருப்பு - வெள்ளை புகைப்படம் ஃப்ரேம் செய்த நிலையில் இருக்கிறது. அவற்றுக்கு மத்தியில் முகாமில் அடைக்கப்பட்டிருந்தபோது, யோனியிடமிருந்து கைப்பற்றிய யோனியின் மனைவியின் சிரித்துக் கொண்டிருக்கும் வண்ண புகைப்படம். அந்த புகைப்படத்தை எடுதது தன்னுடைய பாக்கெட்டிற்குள் சிரித்துக் கொண்டே வைத்துக் கொள்கிறான் யோனி.
ஊருக்குள் சென்ற ஃபகத் ரொட்டி, சில உணவுப் பொருட்கள் ஆகீயவற்றுடன் திரும்பி வருகிறான். வழியில் அவனைப் பார்க்கும் ராணுவ அதிகாரிகள் அவனிடம் பல கேள்விகளையும் கேட்கின்றனர். ‘யார் நீ? இங்கு எதற்காக வந்திருக்கிறாய்? எங்கு போகிறாய்? கையில் என்ன இருக்கிறது?’ என்றெல்லாம் துருவித் துருவி கேட்கின்றனர். எல்லாவற்றுக்கும் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக புத்திசாலித்தனத்துடன் பதில் கூறுகிறான் ஃபகத். அவனுடைய பதில்களில் திருப்தியடைந்த அதிகாரிகள், அவனைப் போகும்படி விடுகின்றனர்.
உணவுடன் ஃபகத் வர, இருவரும் அமர்ந்து சாப்பிடுகின்றனர். எல்லாம் முடிந்து, தங்களுடைய உடமைகளுடன் ஜீப்பை கையால் தள்ளி விட்டு, ஒரு இடத்தில் நிறுத்துகின்றனர். ஜீப் பின்னோக்கி தானாகவே நகர்ந்து சென்று, நிலை தடுமாறி கவிழ்கிறது. சக்கரங்கள் அதிலிருந்து கழன்று கீழே விழுகின்றன. இனி அதில் அவர்கள் பயணிக்க முடியாது.
அதற்குப் பிறகும் அவர்களுடைய பயணம் தொடர்கிறது. நடந்து... சில வாகனங்களில் பயணித்து... இறுதியில் ஐ.நா. படை வீரர்களின் உதவியுடன் எல்லைக்கு வருகிறார்கள். ஆபத்தான கட்டங்களைத் தாண்டியாகி விட்டது.
இரவில் ஒரு அறையில் நிம்மதியாக உறங்குகிறான் சிறுவன் ஃபகத். எனினும், சுற்றிலும் வாகனங்கள் சகிதமாக இப்படியும் அப்படியுமாக வேகமாக நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. அதிகாரிகளையே வெறித்த கண்களுடனும், பதட்டத்துடனும் பார்க்கிறான் ஃபகத்.
பொழுது விடிகிறது. ஃபகத்திற்கு புதிய ஆடைகள் கொண்டு வந்து தரப்படுகின்றன. அந்த ஆடைகளை அணிந்து கொள்கிறான் ஃபகத். யோனி காரில் ஏறி உட்கார, ஃபகத் அதற்குள் ஏறி அமர்கிறான். மறக்காமல் தன்னுடன், தன் தந்தை தந்த ஆலிவ் செடியை எடுத்துக் கொள்கிறான். இருவரும் காரில் விரைகிறார்கள். நீண்ட தூர பயணம். போய்க் கொண்டே இருக்கிறார்கள். ஒரு இடத்தில் இருவரும் அமர்கிறார்கள். அப்போது அந்த சாலையில் ஒரு பேருந்து வளைந்து வளைந்து போய்க் கொண்டிருக்கிறது. அதை பார்த்ததும், அதை நிறுத்துவதற்காக சத்தம் போடுகிறான் சிறுவன். ஆனால், அந்த பேருந்து நிற்காமல் செல்கிறது ‘அது விரைவு பேருந்து, நினைத்த இடத்திலெல்லாம் அது நிற்காது’ என்கிறான் யோனி. அந்த பேருந்து தன்னுடைய கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்கிறான் ஃபகத்.
மீண்டும் அவர்களின் பயணம் தொடங்குகிறது. பெரிய சாலை, குறுகலான சாலை என்று மாறி மாறி கார் விரைகிறது. ‘உனக்கு உன்னுடைய கிராமத்திற்குச் செல்லும் பாதை சரியாக தெரியுமா?’ என்று யோனி கேட்க, ‘இடது பக்கம் திரும்பணும்...’ ‘வலது பக்கம் திரும்பணும்’ ‘கீழே போய் இடது பக்கம் திரும்பணும்’ என்று கூறிக் கொண்டே வருகிறான் ஃபகத்.
இறுதியில் கார், ஃபகத்தின் கிராமத்தை அடைகிறது. கிராமம் என்று பெயருக்குத்தான். அங்கு எதுவுமே இல்லை. மருந்துக்குக் கூட மனித நடமாட்டம் இல்லை. போரினால் பாதிக்கப்பட்டு, கிராமமே அழிந்து போய் விட்டிருக்கிறது. இடிந்து போன சில பழைய கட்டிடங்கள் மட்டுமே அங்கு எஞ்சி இருக்கின்றன. அவையும் செடிகளாலும், கொடிகளாலும் மூடப்பட்டிருக்கின்றன. இடிந்து, தகர்ந்த வீடுகளைப் பார்த்த ஃபகத்தின் கண்கள் பனிக்கின்றன. யுத்தத்தால் வீழ்ச்சியடைந்த நிலையில் இருக்கும் அந்தச் சிறிய கிராமத்தின் அவல நிலையை நினைத்து, யோனியின் மனம் கனக்கிறது.
தன்னுடைய தாயும், தந்தையும் இருந்த தங்களின் பூர்வீக வீடு எங்கே இருக்கிறது என்று தேடுகிறான் ஃபகத். இறுதியில் அதை கண்டு பிடித்து விடுகிறான். கற்களால் ஆன படிகளில் ஏறி. தகர்ந்த நிலையில் இருக்கும் அந்த வீட்டை அடைகிறான். கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அவனிடம் தான் அந்த வீட்டின் சாவி இருக்கிறதே? அந்தச் சாவியை நுழைத்து கதவைத் திறக்கிறான். கதவு ‘கிர்’ என்ற ஓசையுடன் திறக்கிறது. வீட்டிற்குள் நுழைகிறான். யோனியும்தான். வீட்டில் எதுவுமே இல்லை. சுற்றிலும் சிதிலமடைந்த அடையாளங்கள். எங்கு பார்த்தாலும் தூசியும், குப்பையும்... வெளியே வருகிறார்கள். வீட்டிற்கு முன்னாலிருக்கும் வெற்றிடத்தில் குழி தோண்டி, அதில் தான் கையில் கொண்டு வந்திருந்த ஆலிவ் செடியை நடுகிறான் ஃபகத். நட்டு முடிந்தவுடன், அதன் மீது வாயிலிருக்கும் நீரை உமிழ்கிறான். (அரேபிய மொழியில் ‘Zaytoun’ என்றால் ‘ஆலிவ் செடி’ என்று அர்த்தம்) அந்த ஆலிவ் செடியை தன்னுடைய சொந்த கிராமத்திலிருக்கும் பூர்வீக வீட்டிற்கு முன்னால் நட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஃபகத்தின் தந்தை. அவர் இறந்து விட்டார். தன் தந்தையின் இறுதி ஆசையை, பலவித சிரமங்களுக்கும், அலைச்சல்களுக்கும் பிறகு நிறைவேற்றி வைத்தான் அவருடைய அன்பு மகன் ஃபகத். அந்த ஆலிவ் செடியையே வைத்த கண் எடுக்காது பார்த்தான் ஃபகத். யோனியும்தான்.
மீண்டும் இருவரும் நடந்து வருகிறார்கள். காருக்கு அருகில் வந்ததும், காரின் சாவியை யோனி, ஃபகத்திடம் தருகிறான். ஃபகத் ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டுகிறான் - மனதிலும் முகத்திலும் சந்தோஷம் கொப்பளிக்க. அவன் வேகமாக வண்டி ஓட்டுவதைப் பார்த்து ரசித்தவாறு அவனுடன் பயணிக்கிறான் யோனி.
இரவு நெருங்கும் நேரம். சுற்றிலும் இருள் பரவி விட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த ஜீப்களும், கார்களும் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு இருவரும் வருகிறார்கள். காரிலிருந்து இருவரும் இறங்கி நிற்கிறார்கள். சுற்றிலும் அதிகாரிகள்.
யோனி, பிரிய மனம் இல்லாமல் ஃபகத்திற்கு விடை கொடுக்கிறான். யோனியைப் பிரிவதற்கு மனமே இல்லாமல் அவனிடம் விடை பெறுகிறான் ஃபகத்.
வேறொரு காரில் சிறுவன் ஃபகத் ஏற்றப்படுகிறான். அவனுடன் அதிகாரிகள். திரும்பிச் செல்லும் அவனுடைய பயணம் ஆரம்பமாகிறது.
கார் புறப்படுகிறது. தான் நின்ற இடத்திலேயே நின்றவாறு புறப்பட்டுச் செல்லும் காரையும், அதற்குள் அமர்ந்திருக்கும் ஃபகத்தையும் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறான் யோனி.
கார் விரைகிறது. முதலில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் ஃபகத், சிறிது நேரத்தில், நடந்த சம்பவங்கள் அனைத்தையும் நினைத்து, இதழ்களில் புன்னகை அரும்ப, கண்ணாடியின் வழியே வெளியே பார்த்தவாறு தன் பயணத்தைத் தொடர்கிறான்.
அத்துடன் படம் முடிவடைகிறது.
யோனியாக- Stephen Dorff. என்ன அற்புதமான நடிப்பு! துப்பாக்கிக் குண்டு உடலுக்குள் பாய்ந்து இரத்தம் கசிய, வேதனையை அனுபவிக்கும்போதும் சரி... சிறுவனின் நட்பு கிடைத்து, அவன் மீது அளவற்ற அக்கறை செலுத்தும்போதும் சரி... மனிதர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
சிறுவன் ஃபகத்தாக Abdullah El Akal இந்தச் சிறுவனுக்குள்தான் என்ன அபாரமான திறமை! படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாத அளவிற்கு, மிகவும் இயல்பான நடிப்பு வெளிப்பாடு! படம் முடிந்த பிறகும், நம் உள்ளங்களில் வாழ்கிறான் பையன்!
லெபனானின் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கும் ராணுவ ஜீப்கள், வானத்திலிருந்து குண்டு மழை பொழியும் இஸ்ரேல் விமானங்கள், பயந்து நடுங்கிக் கொண்டே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வயதையும் மீறி துப்பாக்கியைத் தூக்கி போர் விமானத்தையே ஆத்திரத்துடன் சுடும் சிறுவன் ஃபகத், தன் தந்தை தன்னிடம் தந்த ஆலிவ் செடியை கையிலேயே தூக்கிக் கொண்டு திரியும் அவனின் கடமை உணர்வு, அவனும் யோனியும் மேற்கொள்ளும் சிரமங்கள் நிறைந்த சாலை பயணம், தன் சொந்த கிராமத்தைத் தேடிச் சென்று, ஆலிவ் செடியை நட்டு நீர் வார்க்கும் செயல், எல்லாவற்றையும் தாண்டி அவனுக்கும் யோனிக்குமிடையே அரும்பும் இனம் புரியாத அன்பும், பாசமும்...
இவற்றில் எதை நம்மால் மறக்க முடியும்?.