
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
செல்லுலாய்ட் - (Celluloid)
(மலையாள திரைப்படம்)
2013பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்து, படவுலகில் பரபரப்பை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கும் ஒரு சிறந்த படம்.
பல மாறுபட்ட மலையாள திரைப்படங்களை இயக்கி, தனக்கென ஒரு நல்ல பெயரைப் பெற்று வைத்திருக்கும் கமல் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதாநாயகன் ப்ரித்விராஜ். அவரின் மனைவியாக நடித்திருப்பவர் திறமை வாய்ந்த நடிகையான மம்தா மோகன்தாஸ்.
‘மலையாள சினிமா’வின் பிதாமகன் என்று அழைக்கப்படும் ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கியிருக்கும் இந்த வித்தியாசமான படத்திற்கு அடிப்படையாக அமைந்தவை சேலங்காட் கோபாலகிருஷ்ணன் எழுதிய ஜே.ஸி.டேனியலின் வாழ்க்கைக் கதையும், வினு ஆப்ரஹாம் எழுதிய ‘நஷ்ட நாயிக’ என்ற நூலும்தான்.
இவ்விரு நூல்களில் இடம் பெற்ற சம்பவங்களைத் திரைக்கதையாக்கி, நேர்த்தியான ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கும் கமலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஜே.ஸி. டேனியல் அடிப்படையில் ஒரு தமிழர். நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருவாங்கூர் பகுதியில் குடியிருந்தவர். நல்ல வசதி படைத்த குடும்பப் பரம்பரையில் வந்தவர். அவருக்கு கலையின் மீதும், சினிமாவின் மீதும் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும். அவர் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து, பல்வேறு இடங்களையும் பார்க்கிறார். பல வகையான மனிதர்களையும் சந்திக்கிறார். பல்வேறு மனித வாழ்க்கைகளையும் தெரிந்து கொள்கிறார். சினிமா சம்பந்தப்பட்ட பலருக்கும் கடிதங்கள் எழுதுகிறார்.
சினிமாவை இந்தியாவிற்கு முதன் முதலாக கொண்டு வந்த இந்திய படவுலகின் தந்தையான தாதா சாஹிப் பால்கேயை பம்பாய்க்குச் சென்று நேரில் சந்திக்கிறார். தான் தென்னிந்தியாவிலிருந்து வந்திருப்பதையும், சினிமாவின் மீது தான் கொண்டிருக்கும் அளவற்ற வெறியையும், தான் வசிக்கும் திருவாங்கூர் பகுதிக்கு சினிமாவைக் கொண்டு வருவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் பால்கேயிடம் அவர் வெளியிடுகிறார். சினிமாவின் மீது ஜே.ஸி.டேனியல் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாட்டைப் பார்த்து பால்கே மனதில் மகிழ்ச்சி அடைகிறார். அப்போது பால்கேயின் படப்பிடிப்பு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்குக் கிளம்பும் பால்கேயிடம், படப்பிடிப்பைப் பார்க்க தான் விரும்புவதாக கூறுகிறார் டேனியல். வெளி மனிதர்கள் யாரையும் பொதுவாக தன்னுடைய படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று கூறும் பால்கே, டானியலை அனுமதிக்கிறார். டேனியல் படப்பிடிப்பு நடப்பதை நேரில் பார்க்கிறார்.
அதைத் தொடர்ந்து வெளி நாட்டிற்குச் சென்று படப்பிடிப்பு கருவியுடன் ஊருக்குத் திரும்புகிறார். படம் பிடிக்க பயன்படும் கேமராவை அவர் எல்லோருக்கும் காட்ட, அனைவரும் அதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். காணாமல் போகும் ஒரு சிறுவனை மையமாக வைத்து கதையை தான் உருவாக்கியிருப்பதாக கூறுகிறார் டேனியல். ஒரு சிறுவன் திடீரென்று காணாமல் போகிறான். அவனைத் தேடி பல இடங்களிலும் அலைந்து, இலங்கைக்கு கடத்தப்பட்டிருக்கும் அவனை எப்படி கதாநாயகன் கண்டு பிடித்து, கொண்டு வந்து சேர்க்கிறான் என்பதே கதை. படத்தின் கதாநாயகன் வேடமிட்டு நடிப்பவர் ஜே.ஸி.டேனியல். படத்தை இயக்குபவரும் அவரே. ஒளிப்பதிவாளர் வெளிநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரர்.
படத்தின் பெயர் ‘விகத குமாரன்’. தனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு ஸ்டூடியோவை அமைக்கிறார் டேனியல். அங்கு படப்பிடிப்பு அரங்குகள் உருவாக்கப்படுகின்றன. படத்திற்கு டேனியல் கதாநாயகன். கதாநாயகி? அந்தக் காலத்தில் படத்தில் நடிப்பதற்கு பொதுவாக பெண்கள் அவ்வளவு எளிதில் முன் வருவதில்லை. அதற்காக கதாநாயகியைத் தேடி பம்பாய்க்குச் செல்கிறார் டேனியல். அங்கு இந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை அவர் தேர்வு செய்கிறார். அவளை திருவாங்கூருக்குக் கொண்டு வரவும் செய்கிறார். இப்போதைய சினிமா நடிகைகள் பண்ணக் கூடிய அவ்வளவு அட்டகாசங்களையும் அந்த நடிகை அப்போதே பண்ணுகிறாள். பயணம் செய்வதற்கு விமானம் கேட்கிறாள். தங்குவதற்கு நட்சத்திர விடுதி கேட்கிறாள். அந்த வசதிகளைச் செய்து கொடுக்க மறுக்கும் டேனியல், அவளை மீண்டும் பம்பாய்க்கே திருப்பி அனுப்பி வைத்து விடுகிறார்.
இப்போது கதாநாயகிக்கு என்ன செய்வது? அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது- ரோஸம்மா என்ற இளம் பெண்ணைப் பற்றி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவள் வயலுக்கு கூலி வேலைக்குச் சென்று கொண்டிருப்பவள். நாற்று நட்டும், களை பறித்தும் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவள். தன் ஏழை பெற்றோருடன் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாநிறம் கொண்ட பெண் அவ்வப்போது அந்த பகுதியில் நடக்கும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நாடகங்களில் நடிப்பதுண்டு. அவளைப் பற்றி கேள்விப்பட்ட டேனியல், அவள் நடிக்கும் நாடகத்தைப் போய் பார்க்கிறார். ரோஸம்மாவின் நடிப்பு அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அவள்தான் தன்னுடைய கதாநாயகி என்ற முடிவுக்கு அப்போதே வந்து விடுகிறார் டேனியல். அவளின் குடிசைக்குச் சென்று, டேனியல் அவளின் பெற்றோரிடம் பேசுகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பா என்று அவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
முதலில் தயங்கும் ரோஸம்மாவிற்கு டேனியல் தைரியம் கூறுகிறார். தான் கூறும் வசனத்தைப் பேசி, தான் கூறியபடி நடித்தால் போதும் என்கிறார். முதல் நாள் படப்பிடிப்பிற்கு மாட்டு வண்டியில், சோற்றுப் பாத்திரத்துடன் முண்டு, ரவிக்கை கோலத்துடன் வந்து இறங்குகிறாள் அந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கள்ளங்கபடமற்ற ஏழைப் பெண். அவளுக்கு ஒப்பனை செய்யப்படுகிறது. ஜரிகை போட்ட புடவையும் ரவிக்கையும் தரப்படுகிறது. கண்ணாடியில் தன்னைப் பார்த்த ரோஸம்மாவால் சிறிதும் நம்ப முடியவில்லை. தானா அது?
டேனியல் கூறியபடி ரோஸம்மா நடிக்கிறாள்... வசனம் பேசுகிறாள்... நடக்கிறாள்... அமர்கிறாள்... பார்க்கிறாள்... சிரிக்கிறாள்... டேனியல் அவளை மனம் திறந்து பாராட்டுகிறார். ரோஸம்மா என்ற பெயர் ரோஸி என்று மாற்றப்படுகிறது. படப்பிடிப்பு நடப்பதை டேனியலின் மனைவி ஜேனட் அங்கு ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன் அன்பு கணவரின் கனவு நல்ல முறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் பிரகாசமும், பூரிப்பும் அவளுடைய முகத்தில்...
மதிய வேளையில் சாப்பிடுவதற்காக எல்லோரும் அமர்ந்திருக்க, எங்கோ ஒரு மூலையில் தரையில் அமர்ந்து, தான் கொண்டு வந்திருந்த ஈயப் பாத்திரத்திலிருந்து கஞ்சியை எடுத்து குடித்துக் கொண்டிருக்கிறாள் ரோஸம்மா. அங்கு வந்த டேனியல் ‘நீ ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய்? எங்களுடன் வந்து உட்கார்ந்து, அங்கிருக்கும் உணவைச் சாப்பிடு. நீ இப்படத்தின் கதாநாயகி’ என்கிறார். ஆனால், அதற்கு மறுத்து விடுகிறாள் ரோஸம்மா. வயலுக்கு கூலி வேலைக்குச் செல்லும்போது, அவள் இப்படித்தானே மண்ணில் அமர்ந்து தூக்குப் பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் கஞ்சியைக் குடிப்பாள்?
தினமும் படப்பிடிப்பு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்கும் ரோஸம்மாவிற்கு அன்றன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் சம்பளம் முறைப்படி தரப்பட்டு விடுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறுவதற்காக தன் சொத்துக்கள் பலவற்றையும் விற்கிறார் டேனியல். இது தவிர, தன் உறவினர்கள், நண்பர்கள் என்று பலரிடமும் கடனாகவும் அவர் பணம் வாங்கி, படத்திற்குச் செலவழிக்கிறார்.
‘விகதகுமாரன்’ படப்பிடிப்பு முடிவடைகிறது. இறுதி நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ரோஸம்மாவிற்கு பிரியா விடை தரப்படுகிறது. கண்களில் கண்ணீர் மல்க, கனத்த இதயத்துடன் அனைவரிடமும் விடை பெற்று, தூக்கு பாத்திரத்துடன் நடந்து செல்கிறாள் ரோஸம்மா.
‘விகதகுமாரன்’ திரைப்படம் ‘கேப்பிட்டல் தியேட்டர்’ என்ற திரை அரங்கில் திரையிடப்படுகிறது. முதல் நாளன்று பல பெரிய மனிதர்களை படத்தைக் காண அழைத்திருக்கிறார் டேனியல். படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, உயர்ந்த ஜாதிகளைச் சேர்ந்த அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிக்கின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண், நாயர் பெண்ணாக வேடமிட்டு வருவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் படத்தை ஓட்டக் கூடாது என்கின்றனர் அவர்கள். படம் அத்துடன் நிறுத்தப்படுகிறது. திரை அரங்கின் இருக்கைகள் வீசி எறியப்படுகின்றன. திரை அரங்கம் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிறது. அதைப் பார்த்து கண்ணீர் விடுகிறார் டேனியல். அவர் எவ்வளவு மன்றாடியும், அவர்கள் அவரின் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொள்வதாகவே இல்லை. படம் பாதியில் நிற்க, திரை அரங்கிலிருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்.
நாயர் பெண்ணாக நடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண் ரோஸம்மாவை அவர்கள் வலை வீச, அவள் உயிருக்கு பயந்து அந்த கிராமத்தை விட்டு வெளியேறி, எங்கோ தூரத்தை நோக்கி பயணமாகிறாள். அதற்குப் பிறகு, வேறு இரண்டு ஊர்களில் ‘விகதகுமாரன்’ திரையிடப்பட, அங்கும் அதே அனுபவம்தான்... அத்துடன் படம் திரையிடுவதே நிறுத்தப்பட்டு விடுகிறது.
தன்னுடைய கனவு நொறுங்கி சுக்கு நூறாக, மிகப் பெரிய கடனாளியான டேனியல் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, தன் மனைவி ஜேனட்டுடன் வேறு ஒரு தொலை தூரத்திலிருக்கும் ஊரில் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வருடங்கள் கடந்தோடுகின்றன.
சேலங்காட் கோபாலகிருஷ்ணன் என்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனிதர் ஒரு தேநீர் கடைக்கு முன்னால் நின்று கொண்டிருக்க, அங்கு தேநீர் அருந்தி விட்டு மெதுவாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார் தலையில் நரை விழுந்த ஒரு வயதான மனிதர். தேநீர் கடைக்கார் ‘அந்த வயதான மனிதர் யார் என்று தெரிகிறதா?’ என்று கேட்க, ‘தெரியலையே’ என்கிறார் கோபாலகிருஷ்ணன். ‘அந்த கிழவரின் பெயர் ஜே.ஸி.டேனியல். பல வருடங்களுக்கு முன்பு ‘விகத குமாரன்’ என்ற ஊமைப் படத்தைச் சொந்தமாக தயாரித்து, இயக்கியவர் அவர். உயர்ந்த ஜாதிக்காரர்கள் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில், அந்தப் படம் திரையிட்டவுடனே நிறுத்தப்பட்டு விட்டது. அதன் மூலம் தன் சொத்துக்களை இழந்து, கடனாளியான அவர், இப்போது தன் மனைவியுடன் தமிழ்நாட்டில் நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எப்போதாவது இந்தப் பக்கம் வருவார்...’ என்று தேநீர் கடைக்காரர் கூற, அந்த எழுத்தாளருக்கு, டேனியலின் மீது ஆர்வம் உண்டாகி விடுகிறது.
டேனியலைப் பின் தொடர்கிறார். டேனியல் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கே செல்கிறார். தன் மனைவியுடன், நோயால் பாதிக்கப்பட்டு, பலவித கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் டேனியலிடம், கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார் கோபாலகிருஷ்ணன். ஆரம்பத்தில் தன்னைப் பற்றி எதுவும் கூறுவதற்கு தயாராக இல்லாத டேனியல், மிகவும் விரக்தியுடன் பேசுகிறார். காலப்போக்கில்... இரண்டாவது சந்திப்பின்போது தன்னைப் பற்றி கோபாலகிருஷ்ணனிடம் கூறுவதற்கு தயாராகிறார் டேனியல். தன்னுடைய சினிமா ஆர்வம், படத்தைச் சொந்தத்தில் தயாரித்து இயக்கியது, பம்பாய்க்குச் சென்றது, பால்கேயைச் சந்தித்தது, கதாநாயகி தேடியது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக ஆக்கியது, தனக்கு உண்டான பாதிப்புகள், இப்போதைய அவல வாழ்க்கை என்று அனைத்தையும் அவர் கூறுகிறார்.
அந்தக் காலகட்டத்தில்தான் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய ‘செம்மீன்’ புதினத்தை ராமு காரியாட் இயக்க, அதற்கு மத்திய அரசாங்கத்தின் தங்கப் பதக்கம் கிடைக்கிறது. அந்தச் செய்தி வானொலியில் ஒலிபரப்பப்படுவதையும் காட்டுகிறார்கள். அதைப் பற்றி சேலங்காட் கோபாலகிருஷ்ணன் கேட்க, ‘அந்த கதாநாயகன் சத்யன் எங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான். அவரும் எங்க நாடார் ஜாதிதான்’ என்கிறாள் டேனியலின் மனைவி ஜேனட்.
நாளடைவில் டேனியல் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகிறார். அதைப் பற்றி டேனியலின் மனைவி, கோபாலகிருஷ்ணனிடம் கூற, டேனியலுக்கு ‘ஏதாவது பொருளாதார உதவி கிடைக்கும்படி செய்ய வேண்டும். அதே நேரத்தில் மலையாளத்தில் தயாரான முதல் படம் ‘விகத குமாரன்’தான் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்’ என்பதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார் கோபாலகிருஷ்ணன். அதற்காக அரசு செயலாளர் ராமகிருஷ்ண அய்யரை நேரில் போயும் பார்க்கிறார். ஆனால், அவரோ அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் திரைப்படப் பாடலாசிரியர் வயலார் ராம வர்மாவைச் சென்று பார்க்கிறார். அவரின் நண்பர்தான் ராமகிருஷ்ண அய்யர். அவர் கூறி, மீண்டும் கோபால கிருஷ்ணன் ராமகிருஷ்ண அய்யரின் முன்னால் போய் நிற்கிறார். ‘நீங்கள் கூறும் ‘விகத குமாரன்’ படத்தின் நெகட்டிவ் எதுவும் கையில் இல்லை. படத்திற்கான எந்த சான்றுகளும் கிடையாது வெறும் சில புகைப்படங்களை வைத்து அந்தப் படத்திற்கோ, அதைத் தயாரித்த ஜே.ஸி.டேனியலுக்கோ எதுவும் செய்ய முடியாது. தவிர, அந்த ஆள் ஒரு தமிழர். நாடார்... தமிழ் நாட்டில் இருப்பவர். அவருக்கு கேரள அரசாங்கம் என்ன உதவி செய்ய முடியும்? எதுவுமே செய்வதற்கில்லை என்று நம் முதலமைச்சர் கூறி விட்டார். நீங்கள் போய் அணுக வேண்டியது தமிழக அரசாங்கத்தைத்தான். ஒரு தமிழனாக இருக்கும் டேனியலுக்கு அந்த அரசாங்கம்தான் எதையாவது செய்ய வேண்டும்’ என்று கூறுகிறார் ராமகிருஷ்ண அய்யர் என்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.
அதற்கு கோபாலகிருஷ்ணன் ‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? ‘விகத குமாரன்’ படம் எடுக்கப்படும்போது ஜே.ஸி.டேனியல் இருந்தது திருவாங்கூரில். அது கேரளத்துடன்தான் இருந்தது. அது பிரிக்கப்பட்டு, இபபோது தமிழகத்தில் இருப்பது அவருடைய குற்றமா? தவிர, அவர் தயாரித்தது மலையாளப் படம். ஒரு தமிழராக இருந்தாலும், மலையாளப் படத்தைத்தான் டேனியல் தயாரித்திருக்கிறார். மலையாளப் படத்தைத் தயாரித்தவருக்கு கேரள அரசாங்கம்தான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே தவிர, தமிழக அரசாங்கம் எப்படி உதவி செய்யும்? இன்னொரு விஷயம்...
நீங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பாலன்’ படத்தை முதல் மலையாளப் படம் என்கிறீர்கள். ‘விகதகுமாரன்’ படத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதற்குக் காரணம்- ‘விகத குமார’னை தயாரித்த டேனியல், நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ சுந்தரம் ஒரு பிராமணர். அதனால், அதை தலையில் வைத்து கொண்டாடுகிறீர்கள்’ என்கிறார் கோபத்துடன். அதைக் கேட்டு ஆடிப் போய் சிலை என உட்கார்ந்திருக்கிறார் அந்த பிராமண ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமகிருஷ்ண அய்யர்.
அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், அங்கீகாரமும் கிடைக்காமலே ஜே.ஸி.டேனியல் இந்த உலகை விட்டு நீங்குகிறார்.
சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் பல வருட கடுமையான முயற்சிகளின் விளைவாகவும், ஊடகங்களின் தீவிர பங்களிப்பாலும் ‘விகத குமாரன்’தான் முதல் மலையாள திரைப்படம் என்றும், ஜே.ஸி.டேனியல்தான் மலையாள படவுலகின் தந்தை என்றும் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது. அதற்கென நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிறார் டேனியலின் மகன் ஹரீஸ்.
ஹரீஸ் விழாவில் பேசுகிறார்-‘இப்போது என் தந்தை ஜே.ஸி.டேனியல் இயக்கிய ‘விகத குமாரன்’ படத்தின் படமாக்கப்பட்ட பிரதி எதுவும் உலகில் இல்லாமற் போனதற்குக் காரணம் நான்தான். உண்மையிலேயே நான்தான் குற்றவாளி. நான் சிறுவனாக இருந்தபோது, வீட்டில் இருந்த அப்படத்தின் ஃபிலிம் சுருள்களின் மதிப்பு தெரியாமல், அதற்கு நெருப்பு வைத்து விளையாடினோம். தீயில் அது கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்து ரசித்தோம். ஃபிலிம் வைக்கப்பட்டிருந்த வட்ட வடிவமான பெட்டிகளை, வண்டியாக உருட்டி விளையாடினோம். நான் எவ்வளவு பெரிய பாவச் செயலைச் செய்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்து வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்’.
ஹரீஸ் தன் தந்தை ஜே.ஸி.டேனியலை நினைத்து கண் கலங்க, அருகிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் கலையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் டேனியலின் நினைவுகளுடன் சிலையென அமர்ந்திருக்கின்றனர்.
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை சுவாரசியமான ஒரு படமாக எடுப்பது என்பது எவ்வளவு பெரிய சிரமமான விஷயம்! அதை மிகவும் செவ்வனே செய்திருக்கிறார் இயக்குநர் கமல். சிறிது கூட தொய்வு இன்றி, இறுதிவரை ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகளுடன் படமாக்கி இருக்கும் அவரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.
ஜே.ஸி.டேனியலாகவே வாழ்ந்திருக்கிறார் ப்ரித்விராஜ். சிறிதும் மிகைப்படுத்தல் இல்லாத, இயல்பான நடிப்பு! மகனாக வருபவரும் அவரே.
டேனியலின் மனைவி ஜேனட்டாக, மம்தா மோகன்தாஸ். பாத்திரத்துடன் ஒன்றிய, இயற்கை நடிப்பு.
ரோஸம்மா என்ற ரோஸியாக உயிர்ப்புடன் வாழும்- சாந்த்னி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் இந்தப் பெண்ணிடம் இப்படியொரு திறமையா? இவரைத் தேர்வு செய்ததற்காகவே தனியாக பாராட்ட வேண்டும்.
‘ராமகிருஷ்ண அய்யர் ஐ.ஏ.எஸ்.’ஸின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் சித்திக் (எழுத்தாளர் மலையாற்றூர் ராமகிருஷ்ணன்தான் அவர் என்பதை சூசகமாக வசனத்தின் மூலம் வெளிப்படுத்தும் உத்தியைப் பாராட்டலாம்.)
சேலங்காட் கோபாலகிருஷ்ணனாக ஸ்ரீனிவாசன் (பொருத்தமோ பொருத்தம்! இவரைத் தவிர, வேறு யார் இதற்கு பொருந்துவார்கள்?)
‘செல்லுலாய்ட் மத்திய அரசாங்கத்தின் சிறந்த மலையாளப் படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது.
கேரள அரசாங்கத்தின் ஏழு விருதுகளை இப்படம் அள்ளிச் சென்றிருக்கிறது. அவை;
சிறந்த படம்
சிறந்த நடிகர் - ப்ரித்விராஜ்
சிறந்த இசையமைப்பாளர் - எம்.ஜெயச்சந்திரன்
சிறந்த பாடகி - சித்தாரா
சிறந்த கலை இயக்குநர் - சுரேஷ் கொல்லம்
சிறந்த உடையலங்கார நிபுணர் - எஸ்.பி.சதீஷ்
நடுவர் விருது - பாடகர்கள் ஜி.ஸ்ரீராம், வைக்கம் விஜயலட்சுமி
இயக்குநர் கமலின் படம் என்றாலே, எனக்கு மிகவும் பிடிக்கும். ‘ஸெல்லுலாய்ட்’ படத்தை ஒரு தவம் என்றே நினைத்து, மிகுந்த ஈடுபாட்டுடன் இயக்கியிருந்தார் கமல். ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலுடன் பதிவு செய்து, அதை ஒரு வெற்றிப் படமாகவும் ஆக்கிய கமலின் திறமையை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். இத்தகைய முயற்சிகளை இனியும் பலர் செய்ய, கமலின் இந்தச் செயல் ஒரு தூண்டுகோலாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கட்டும்.
பின் குறிப்பு : ‘விகத குமாரன்’ திரைப்படத்தைத் தயாரித்தன் மூலம் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பிற்கு ஆளான ஜே.ஸி.டேனியல், தன்னுடைய ஊரான அகஸ்தீஸ்வரத்தை விட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய பல இடங்களிலும் பல் மருத்துவராக இருந்திருக்கிறார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறார். 1900ஆம் ஆண்டில் பிறந்த டேனியல் 1928ஆம் ஆண்டில் ‘விகதகுமாரன்’ முயற்சியில் இறங்கியிருக்கிறார். அப்படம் 1930ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. பல்வேறு இடங்களிலும் இருந்து விட்டு, இறுதியில் தன் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கே வந்து விட்டார். 1975ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய 75வது வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார். ‘விகதகுமாரன்’ முயற்சியில் பணத்தை இழந்து கடனாளியாக ஆன டேனியல், மருத்துவர் தொழிலின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் பணம் சம்பாதித்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் நடிகர் பி.யூ.சின்னப்பா ஒரு முறை டேனியலைச் சந்தித்திருக்கிறார். சின்னப்பாவுடன் இருந்த ‘அடி வருடிகள்’ சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி, மீண்டும் சினிமா ஆசையில் சென்ற டேனியல் கையிலிருந்த பணம் முழுவதையும் இழந்திருக்கிறார். டேனியலுக்கு 2 மகன்கள், 3 மகள்கள். தற்போது அவரின் ஒரு மகளும் ஒரு மகனும் உயிருடன் இருக்கிறார்கள். மகன் ஹரீஸ் சேலத்தில் இருக்கிறார். மகள் திருவனந்தபுரத்தில். டேனியல் இறக்கும்போது, அவரின் பிள்ளைகள் யாருமே அருகில் இல்லை என்று சொல்லப்படுகிறது. டேனியலின் மனைவி 1992இல் மரணத்தைத் தழுவினார். டேனியலின் பெயரில் கேரள அரசாங்கம் ‘ஜே.ஸி.டேனியல் விருது’ என்றொரு விருதை ஒவ்வொரு ஆண்டும் கடந்த சில வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது.