Logo

சத்யஜித் ரே

Category: சினிமா
Published Date
Written by sura
Hits: 5505
satyajit ray

1

குடும்பம்

1934ஆம் ஆண்டு. கல்கத்தாவிலிருந்த பாலிகஞ்ச் அரசாங்க உயர்நிலைப் பள்ளி தன்னுடைய வருடாந்திர பரிசு அளிக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. அந்த விழாவிற்காக எப்போதும் செய்யக் கூடிய வழக்கமான கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ‘இசை - ஓவியம்’ என்றொரு வித்தியாசமான நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஒரு சிறுவன் ஒரு குறிப்பிட்ட காட்சியை விளக்கி, ஒரு பாடலைப் பாடுவான். இன்னொரு சிறுவன் அந்த காட்சியை மிகவும் வேகமாக அந்த பாடலைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, ஓவியமாக வரைவான். இதுதான் அந்த நிகழ்ச்சி.

படம் வரைவது என்பது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால், அந்த வருடம் ஒரு பிரச்னை உண்டானது. காட்சியைப் படமாக எப்போதும் வரையக் கூடிய சிறுவன் பள்ளிக்கூட கல்வியை முடித்து விட்டான். அவனுக்கு மாற்றாக வேறொரு மாணவனைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்த விஷயத்தை பிரச்னைக்குரிய ஒன்றாக ஓவிய ஆசிரியர் நினைக்கவில்லை. தன்னை மிகவும் கவரும் அளவிற்கு அருமையாக படங்கள் வரையக் கூடிய ஒரு திறமை வாய்ந்த சிறுவனை அவருக்குத் தெரியும். ஆனால், அதற்காக அணுகியபோது, அந்தச் சிறுவன் மேடைக்குச் சென்று படம் வரைவதற்கு அப்போது மறுத்து விட்டான். ஒரு மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்னால் நின்று கொண்டிருப்பது என்ற விஷயமும், எல்லோருடைய கவனமும் குவிந்திருக்கக் கூடிய மையப் புள்ளியாக இருப்போம் என்ற விஷயமும் அவனை அதைச் செய்ய தடுத்தன. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவன் சில பரிசுகளைப் பெற்றிருந்தான். அவற்றைப் பெறுவதற்காக அவன் மேடைக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அதைத் தாண்டி ஒரு நிமிடம் கூட செலவழிப்பதற்கு அவன் தயாராக இல்லை.

ஏமாற்றமடைந்த ஓவிய ஆசிரியர் வேறொரு சிறுவனைத் தேட வேண்டியதிருந்தது. ஆனால், அவன் முன்பு பார்த்த மாணவன் அளவிற்கு திறமை கொண்டவனாக இல்லை.

அந்த கூச்ச சுபாவம் கொண்ட, தன்னை நன்கு புரிந்து வைத்திருந்த சிறுவனுக்கு அப்போது பதின்மூன்று வயது. அவன் பெயர் சத்யஜித். ஒருகாலத்தில் தன்னுடைய வாழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை மிகப் பெரிய மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் தான் செலவிட வேண்டியதிருக்கும் என்பதையோ விருதுகளை வாங்க வேண்டியதிருக்கும் என்பதையோ, ஃப்ரான்ஸின் மிக உயர்ந்த ‘லீஜியன் டி ஹானியர்’ விருதினை தான் வாங்க வேண்டியதிருக்கும் என்பதையோ, வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுவோம் என்பதையோ அவன் அந்தச் சமயத்தில் சிறிது கூட நினைக்கவில்லை.

தன்னுடைய வாழ்நாளில், வெவ்வேறு மூலைகளிலிருந்தும் சத்யஜித் ரே ஏராளமான பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் வாங்கிக் கொண்டிருந்தார். இருப்பினும், உலக திரைப்பட வரை படத்தில் இந்திய திரைப் படங்களை இடம் பெறச் செய்த முதல் மனிதர் அவர்தான் என்று யாராவது குறிப்பிட்டால், அதற்கு எதிராக நிறைய குரல்கள் எழாது என்பதே உண்மை. ஒரு மிகச் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக வரக் கூடியதற்கான சூழ்நிலைகள் இருக்க, அவர் தன்னை படங்களை இயக்கும் மனிதர் என்ற அளவில் நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால், அவருடைய ஆர்வங்களும் ஆற்றல்களும் அதையும் தாண்டி இருந்தன. திரைப்பட உருவாக்கத்தில் ரே கையாளாத ஒரு சிறிய பகுதிகூட இல்லை என்பதுதான் உண்மை. திரைக் கதையை எழுதுவதிலிருந்து, ஆடைகளுக்கான துணிகளைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, தன்னுடைய படங்களுக்கு சுவரொட்டிகளை வரைவதிலிருந்து, இசையமைப்பதிலிருந்து, கேமராவைக் கையாள்வதிலிருந்து, படப்பிடிப்பு முடிந்த பிறகு படத் தொகுப்பு செய்வதிலிருந்து எல்லாவற்றையும் அவர் செய்திருக்கிறார்.

ஆனால், அத்துடன் அது நின்று விடவில்லை. அந்த திரைப்பட படைப்பாளி பின் இருக்கையில் போய் அமர்ந்து கொண்ட சில தருணங்களும் இருக்கின்றன. அவருடைய கையிலிருந்த கேமராவை ஒரு பேனா ஆக்கிரமித்தது. அவர் சிறு கதைகள், புதினங்கள், விளையாட்டுப் பாட்டுகள், குழந்தைகளுக்கான பாடல்கள் என்று பலவற்றையும் எழுதினார். மூளை விளையாட்டுக்களையும், விடுகதைகளையும் எழுதினார். முடிவே இல்லாத அளவிற்கு ஓவியங்களை வரைந்தார். இவை அனைத்துமே குழந்தைகளின் பத்திரிகையான ‘சந்தேஷ்’க்காக. அதன் ஆசிரியராக அவர் இருந்தார்.

இந்த எல்லா செயல்களுக்கும் மத்தியில், அவர் தொலைபேசியில் பதில் கூறுவதற்கு நேரம் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய எல்லா தொடர்பு விஷயங்களையும் அவரே பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு கடிதத்திற்கும் அவரே நேரடியாக பதில் எழுதினார். அவருக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் ‘சந்தேஷ்’ பத்திரிகையின் இளம் வாசகர்களிடமிருந்து வந்தன.

ரேயைச் சந்திக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அவருடைய படைப்பாற்றலைப் பார்த்து மட்டும் ஆச்சரியம் உண்டாகவில்லை. அவருடைய எல்லையற்ற ஆற்றலைப் பார்த்தும்தான்.  கூர்ந்து கவனம் செலுத்துதலில் அவருக்கு இருந்த ஆழத்தைப் பார்த்து அவருடைய மனைவி பிஜோயா ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டாராம். அவர் கூறுகிறார்: ‘ஒரு அறை முழுக்க ஆட்கள் அமர்ந்திருக்க, அவரை நான் பார்ப்பேன்’- அவர் ஒரு முறை குறிப்பிட்டார் : ‘தன்னுடைய புகழ் பெற்ற சிவப்பு நிற நோட்டு புத்தகத்தை திறந்த நிலையில் தன் மடியின் மீது வைத்துக் கொண்டு தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே அவர்களுடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார். அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அவருடைய கை எந்தச் சமயத்திலும் எழுதிக் கொண்டிருப்பதை நிறுத்தாது. நான் அதைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன். அப்போது ஒரே நேரத்தில் மூன்று, நான்கு காரியங்களை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே தான் கற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். அவர்கள் இருப்பதைப் பற்றி அவர் கவலைப் படவே மாட்டார்.’

ஒரு இந்தியனுக்கு, ரே மிகவும் உயரமான மனிதராக தோன்றுவார். 6.4’ அடி உயரத்தில் நின்று கொண்டு, தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பவர்களை அவர் குனிந்து பார்ப்பார். தன்னுடைய உயரத்திற்கேற்ற குரலும் அவருக்கு இருந்தது. ஒரு ஸ்டூடியோவின் தளத்தில் எல்லோருடைய குரல்களுக்கும் மத்தியில் அவருடைய கம்பீரமான குரல் தனித்து கேட்கும். இவ்வளவிற்கும் அவர் எந்தச் சமயத்திலும் குரலை உயரத்தி பேசவும் மாட்டார். மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த ஒரு அமைதித் தன்மையுடன் அவர் வேலை செய்து கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையை அவர் உண்டாக்குவார். இன்னும் சொல்லப் போனால் – வாழ்வில் நாம் பார்ப்பதைவிட அந்தத் தோற்றம் மிகப் பெரியதாக இருக்கும். பணியில் ஈடுபட்டிருக்கும்போது பல நேரங்களில் அவரைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ‘இந்த அளவிற்கு இயல்பான மனிதரா!’


மற்ற மனிதர்களிலிருந்து வேறுபட்டு இப்படித்தான் தன்னை செதுக்கிக் கொண்டிருந்தார் சத்யஜித் ரே. அவர் என்ன செய்தாலும், என்ன புகழை அவர் பெற்றிருந்தாலும் அவருடைய கால் பாதங்கள் உண்மையான உலகத்தில் மிகவும் உறுதியாக ஊன்றி நின்றிருந்தன. அவர் சிரித்தார், தமாஷ்கள் கூறினார், மற்றவர்களுடன் தன்னுடைய கருத்துக்களைப் பரிமாறினார், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கூர்ந்து கேட்கவும் செய்தார். படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டால், அவருடைய குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் அதே மரியாதையுடனும், பாசத்துடனும், நன்றியுடனும் நடத்தப்பட்டார்கள் – அது ஒரு ஆறு வயது குழந்தையாக இருந்தாலும், ஒரு எண்பத்து இரண்டு வயது பெண்ணாக இருந்தாலும்.

அவரைப் பற்றி கேள்விப்பட்டவர்கள் அல்லது அவருடைய வேலை செய்யும் முறையையும், உத்தியையும் பற்றி தெரிந்திருந்தவர்கள் அவரின் தலைமைப் பண்பு கொண்ட பணியைப் பற்றிய தங்களுடைய கருத்துக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். எனினும், எந்தச் சமயத்திலும் பதில்களே கிடைத்திராத சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை : அவர் அதை எப்படிச் செய்தார்? முன்னோக்கி அவரை செயல்பட வைத்த சக்தி எது? அவருக்கென்று இருந்த பார்வையைத் தந்தது எது?

இந்தக் கேள்விகளுக்கான பாதி பதிலைப் பெற வேண்டுமென்றால் கூட, ரேயின் குடும்பப் பின்னணியைப் பற்றி அவசியம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அவர் பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பே சத்யஜித் ரேயின் கதை ஆரம்பமாகி விட்டது.

1880ஆம் ஆண்டில் மாஸுவா என்று அழைக்கப்பட்ட ஒரு சிறிய கிராமத்திலிருந்து (இப்போது அது வங்காள தேசத்தில் இருக்கிறது) கல்கத்தாவிற்கு ஒரு இளைஞர் வந்தார். அவருடைய பெயர் உபேந்திரகிஷோர் ரே சவுதரி. பண வசதிகளுக்கு நிகராக கல்வியும் சேர்ந்தே போய்க் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் அவர். அவருடைய முன்னோர்கள் நிலக்கிழார்களாக இருந்தவர்கள். ஆனால், உபேந்திர கிஷோரோ அறிவைத் தேடிப் பெறுவதில் அதிகமான நாட்டம் கொண்டவராக இருந்தார். அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியராக இருந்தார். இசையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்கத்தாவில் படிப்பதற்கு ஒரு ஸ்காலர்ஷிப்பை அவர் பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து பிரஸிடென்ஸி கல்லூரிக்குச் சென்ற அவர், 1884ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரியாக ஆனார்.

அந்தச் சமயத்தில் கல்கத்தாவில் ஒரு மிகப் பெரிய சமூக மாற்றம் உண்டாகிக் கொண்டிருந்தது. வங்காள ஹிந்துக்களின் ஒரு குறிப்பிட்ட குழுவினரை மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் ஆழமாக பாதிக்க, அதன் விளைவாக அவர்கள் தங்களுடைய பழமையான, கறாரான கொள்கைகளைக் கொண்ட மதத்திலிருந்து விலகி, ப்ரமோ சமாஜ் என்ற மதத்தை உருவாக்கினார்கள். ஹிந்துக்களிடமிருந்து இரண்டு முக்கியமான விஷயங்கள் ப்ரமோக்களை வேறுபடுத்தின. ஒன்று – ஒரே கடவுள் என்ற கொள்கை. இன்னொன்று – ஆண், பெண் என்ற இருபாலருக்கும் கல்வி விஷயத்தில் இருந்த சுதந்திரம்.

கல்கத்தாவிற்கு வந்தபோதே, உபேந்திர கிஷோருக்கு ப்ரமோக்களின் கொள்கைகளின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. பல முன்னணி ப்ரமோ மனிதர்களை அவர் சந்தித்தார். அவர்களில் ஒருவர் துவாரகநாத் கங்குலி. எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசக் கூடிய மனிதர் என்ற அளவில் அவருக்கு ஒரு பெயர் இருந்தது. ஒருமுறை – பெண்களுக்கு கல்வி கற்கும் விஷயத்தில் ப்ரமோக்களுக்கு இருக்கும் விருப்பத்தைப் பற்றி ஒரு பழமை கொள்கை கொண்ட ஹிந்து மத பத்திரிகை தாங்கிக் கொள்ள முடியாத, கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது. அதிகமான கோபத்திற்கு ஆளான துவாரகநாத் கங்குலி அந்த வரிகள் இருந்த பேப்பரை தனியாக வெட்டி எடுத்து, அந்த துண்டு பேப்பரை தன்னுடைய பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு, ஒரு பெரிய வாக்கிங் ஸ்டிக்கைப் பற்றிக் கொண்டே, அந்த பத்திரிகையின் ஆசிரியரைப் பார்ப்பதற்காகச் சென்றார்.

‘இந்த குறிப்புகளை நீங்கள்தான் எழுதினீர்களா?’ – அவர் ஆசிரியரைப் பார்த்து கேட்டார்.

‘ஆமாம்... அதனால் என்ன?’ – ஆசிரியர் திரும்ப கேட்டார்.

‘இதுதான் அதற்கு பதில்...’ – கங்குலி மிகவும் அமைதியாக பதில் கூறினார்: ‘உங்களுடைய வார்த்தைகளை உங்களையே சாப்பிட வைப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். வாங்க... இவற்றைத் தின்னுங்க...’ இவ்வாறு கூறிக் கொண்டே அவர் அந்த துண்டுத் தாளை ஒரு பந்தைப் போல சுருட்டி, ஆசிரியரிடம் கொடுத்தார். சிறிது நேரம் அங்கேயே வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்துக் கொண்டு, அந்த மனிதர் உண்மையாகவே அந்தத் தாளை மென்று விழுங்கி, ஒரு குவளையில் நீர் பருகுவது வரை அவர் நின்றிருந்தார். ‘நாளைக்கே இந்த வார்த்தைகளை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லையென்றால், நான் மீண்டும் வருவேன்’- அந்த இடத்தை விட்டு நகர்வதற்கு முன்னால் கங்குலி எச்சரித்தார். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றி கூறவே வேண்டாம், அவர் என்ன சொன்னாரோ, அதன்படி அந்த ஆசிரியர் நடந்தார்.

துவாரகநாத் கங்குலியால் உபேந்திர கிஷோர் மிகவும் கவரப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதில்லை. காலப் போக்கில், அவரே ஒரு ப்ரம்மோவாக மாறி, துவாரகநாத்தின் மகள் பிதுமுகியை திருமணம் செய்து கொண்டார். 1887ஆம் ஆண்டில், அவர்களுக்கு முதல் மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் சுகுமார் என்று பெயர் வைத்தார்கள்.

காலக் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும் – பிரம்மோயிசத்திற்கு மாறியதன் காரணமாக அவருடைய தந்தைக்கும் (அவர் ஹிந்து மதத்தின் தீவிர ஆதரவாளர்) உபேந்திர கிஷோருக்குமிடையே ஒரு விரிசல் உண்டானது. உபேந்திர கிஷோர் மாஸுவாவிற்கு திரும்பி வரக் கூடாது என்று முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து தன்னுடைய பெயருடன் சேர்ந்து இருந்த, தான் நிலச்சுவாந்தார்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் குறிப்பிடும் ‘சவுதரி’ என்ற பதத்தை அவர் நீக்கினார்.

நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்களைத் தொடர்ந்து கல்கத்தாவிலிலேயே இருப்பது என்று அந்தச் சமயத்தில் உபேந்திர கிஷோர் எடுத்த முடிவு ஒரு சிறந்த முடிவாக இருந்தது. அந்த நகரத்திலேயே வாழ்ந்ததால், அவருடைய எல்லா திறமைகளும், அனைத்து அறிவுகளும் நல்ல முறையில் செயலாக்கம் பெற்றுக் கொண்டிருந்தன. உபேந்திர கிஷோர் எழுதினார், வரைந்தார்... வெகு சீக்கிரமே தான் ஒரு இசை கலைஞர் என்பதையும் நிறுவினார். அவர் வயலின் இசைத்தார், பக்காவாஜ், புல்லாங்குழல் ஆகியவற்றையும் இசைத்தார். அவரால் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்ட பல பாடல்கள் இன்றும் ப்ரமோக்களாலும் ஹிந்துக்களாலும் ஒரே மாதிரி பாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


ஆனால், உண்மையிலேயே அவருடைய பெயரை நிலை நிறுத்தியவை அவருடைய பாடல்கள் அல்ல. குழந்தைகளுக்காக அவர் எழுதிய கதைகள்தான் அவரின் பெயரை கூறிக் கொண்டிருக்கின்றன. உபேந்திரகிஷோரின் வருகை நடப்பதற்கு முன்பு வரை, வங்காளத்தில் குழந்தைகளுக்கான கதைகள் என்பதே இல்லை என்றுதான் கூற வேண்டும். தான் எடுத்துக் கொண்ட கதையை அபாரமான உணர்ச்சிகளுடனும் புரிதலுடனும் எழுதிய முதல் எழுத்தாளரே உபேந்திரகிஷோர்தான். ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ இரண்டையும் குழந்தைகள் படிப்பதற்கான வடிவத்தில் அவர் முதலில் எழுதினார். கதைகளுக்கு அவரே படங்களை வரைந்தார்.

அந்த நூல்கள் பிரசுரமானபோதுதான், அந்த பிரசுர முறை எந்த அளவிற்கு மிகவும் கேவலமான முறையில் இருக்கிறது என்பதே அவருக்குத் தெரிந்தது. அவர் வரைந்த படங்கள் தெளிவற்றவையாகவும், இங்குமங்குமாக புள்ளிகள் விழுந்தவையாகவும் இருந்தன. யாராக இருந்தாலும், உடனடியாக அந்த வேலையையே ஏமாற்றமடைந்து நிறுத்தி விடுவார்கள். உபேந்திர கிஷோர் அந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நினைத்தார். அவர் பிரிட்டனிலிருந்து சில அச்சு கருவிகளைக் கொண்டு வருவதற்கு கட்டளை பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து 1895ஆம் ஆண்டில் தன்னுடைய வீட்டிலேயே ‘யூ ரே அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் ஒரு அச்சகத்தை அவர் ஏற்படுத்தினார். குறிப்பாக - ‘ஹாஃப் டோன் ப்ளாக் ப்ரிண்டிங்’ என்ற விஷயத்தில் அவர் உண்டாக்கிய வளர்ச்சி நிலைகளுக்காக இன்றும் உபேந்திரகிஷோர் நினைக்கப்படுகிறார்.

அந்தச் சமயத்தில், சுகுமாருக்கு எட்டு வயது. அவன் முற்றிலும் ஒரு மாறுபட்ட குடும்பச் சூழலில் வளர்ந்தான். ஒரு அச்சகம் இருந்தது மட்டுமல்ல- அதை அவனுடைய தந்தையே செயல்படுத்திக் கொண்டிருந்தார். கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த அதே சம அளவு ஆர்வத்தை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அவர் செலுத்தினார். புகழ் பெற்ற பிரிட்டிஷ் பத்திரிகையான ‘பென்ரோஸ் ஆனுவ’லில் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் அவர் எழுதிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதினார். தன்னுடைய தந்தையிடமிருந்த திறமைகளை அதே அளவு என்று கூறுவதைவிட, அவரிடமிருந்து அதிகமாகவே பாரம்பரிய ரீதியாக தான் பெற்றிருந்ததை சுகுமார் செயல் வடிவில் நிரூபித்தான்.

1910ஆம் வருடம் உபேந்திரகிஷோர் ‘டுன்டுனிர் பாய்’ (தையல் பறவையைப் பற்றிய புத்தகம்) என்ற குழந்தைகளுக்கான பாரம்பரிய கதைகள் கொண்ட நூலை பிரசுரித்தார். காலப் போக்கில் அது வங்காளத்தின் காவியங்களில் ஒன்றாக ஆனது. அந்த நேரத்தில் சுகுமார் தன் கல்லூரிப் படிப்பை இயற்பியலிலும் வேதியியலிலும் இரண்டு முத்திரைகள் பெற்று முடித்தார். தன்னுடைய தந்தையைப் போலவே, சுகுமாரின் மனமும் எந்தவித பாகுபாடும் இல்லாத ஒன்றாக இருந்தது. கிழக்கு, மேற்கு இரண்டிலிருந்தும் கிடைக்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். எனினும். ஒவ்வொரு வங்காள மக்களின் இதயத்திலும் அவருக்கு ஒரு நிரந்தரமான இடத்தைச் சம்பாதித்துத் தந்தது – அவரிடமிருந்த அபாரமான நகைச்சுவை உணர்வுதான்.

உபேந்திரகிஷோரின் நகைச்சுவையில் எந்தவித தவறும் இருக்காது. அதே நேரத்தில் அது மிகவும் மென்மைத் தன்மை கொண்டது. சுகுமாரின் நகைச்சுவை இன்னும் அதிகமான உயிரோட்டம் கொண்டதாக இருக்கும். அதில் பிறர் மனம் புண்படும்படி எதுவும் இருக்காது. அவர் ‘நான்சென்ஸ் க்ளப்’ என்ற பெயரில் ஒரு க்ளப்பை நிறுவினார். கையால் எழுதப்பட்ட ஒரு பத்திரிகையை தயாரிப்பது அந்த க்ளப்பின் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தது. அந்த பத்திரிகையில் சுகுமார் ‘ஜாலபாலா’, ‘லக்ஷ்மணர் ஷக்திஷெல்’ என்ற இரண்டு நாடகங்களை எழுதினார். முதல் நாடகம் ஒரு பணக்கார மனிதரின் செயல்களைக் கிண்டல் பண்ணுவதாக இருந்தது. இரண்டாவது நாடகம் ‘இராமாயண’த்தை மிகவும் துணிச்சலாக, இதுவரை பார்க்காத பார்வையுடன் பார்ப்பதாக இருந்தது.

1911ஆம் ஆண்டு லண்டனுக்குச் செல்வதற்காக ஒரு கல்வி உதவித் தொகையை சுகுமார் பெற்றார். அங்குதான் அவர் அச்சு மற்றும் புகைப்படக் கலை சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப விஷயங்களை கற்றார். அவர் அங்கு இருந்தபோது, உபேந்திர கிஷோர் ‘சந்தேஷ்’ என்ற ஒரு பத்திரிகையை (இப்போது அந்த பத்திரிகையின் ஆசிரியராக அவருடைய கொள்ளுப் பேரன் சந்தீப் இருக்கிறார்) ஆரம்பித்தார். அதன் முதல் இதழ் 1913ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளிவந்தது. அதிலிருந்த பெரும்பாலான படைப்புகளை உபேந்திரகிஷோரே எழுதினாலும், சுகுமார் லண்டனிலிருந்து பல படங்களையும் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார்.

சுகுமார் 1913ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பி வந்து, ஒரு ப்ரம்மோ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகான, திறமை வாய்ந்த சுப்ரபா தாஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் உபேந்திர கிஷோர். ஆனால், அந்த நேரத்தில் அவர் உடல் நல பாதிப்பை அடைந்தார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1915ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவினார்.

தன்னுடைய தந்தையின் பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு சுகுமாரின் மீது வந்து விழுந்தது.  அதை அவர் பாராட்டத்தக்க திறமையுடன் செய்தார். ‘சந்தேஷ்’ பத்திரிகை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சுகுமாரின் குறிப்பிடத்தக்க திறமையின் வெளிப்பாடுகளைக் கொண்ட எழுத்துக்களும் படங்களும் அதன் பக்கங்களில் வந்து கொண்டிருந்தன. அதன் வாசகர்களுக்கு அவர் ஒரு புதிய ‘நான்சென்ஸ் உலக’த்தைப் படைத்தார். அத்தகைய விஷயங்கள் அதற்கு முன்பு யாரும் பார்க்காதவையாக இருந்தன.

வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த போக்கு சில வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. மிகவும் இளம் வயதிலேயே, சுகுமாருக்கு ‘காலா அஸார்’ (கருங் காய்ச்சல்) என்ற நோய் வந்து ஆக்கிரமித்தது. அதற்கு மருந்து கிடையாது. அதைத் தொடர்ந்து ரே குடும்பத்தில் கவலையின் நிழல்கள் வந்து படர்ந்தன. திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு சுகுமாருக்கும் சுப்ரபாவிற்கும் 1921ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி ஒரு மகன் பிறந்தபோதுதான் அந்த கவலையின் நிழல்கள் அந்தக் குடும்பத்திலிருந்து நீங்கின. ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக அவர்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். பையன் பிறந்ததும், அவனுக்கு அவர்கள் சத்யஜித் என்று பெயரிட்டனர். அவனுடைய செல்லப் பெயர் ‘மானிக்’. அதற்கு அர்த்தம் ‘நகை’. அந்த அளவிற்கு அவன் மதிப்பு கொண்டவனாக இருந்தான்.


அதற்கு மேல் சுகுமார் இரண்டு வருடங்கள் உயிருடன் இருந்தார். உடல் நிலை எப்போதெல்லாம் சரியாக இருக்கிறதோ, அந்தச் சமயத்தில் அவர் எழுதுவார், படம் வரைவார். பெரும்பாலும் ‘நான்சென்ஸ் குழந்தைப் பாடல்கள்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றவற்றைத்தான் அவர் அப்போது எழுதினார் (அவற்றில் பெரும்பாலானவை ‘சந்தேஷ்’ பத்திரிகையில் பிரசுரமானவையே). அந்தத் தொகுப்பின் பெயர் ‘அபோல் டபோல்’ (நான்சென்ஸ் என்பது அதன் அர்த்தம்). அந்தப் புத்தகத்திற்காகத்தான் இன்று கூட அவர் மிகவும் உயர்வாக நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். தான் அதன் பக்கங்களை வடிவமைத்தாலும், அதன் இறுதி வடிவத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நாட்கள் அவர் உயிருடன் இருக்கவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு ஒன்பது நாட்கள் கழித்துத்தான் அந்தப் புத்தகம் வெளியே வந்தது.

1923ஆம் ஆண்டு செப்டெம்பர் 10ஆம் தேதி சுகுமார் ரே, தன்னுடைய சொத்துக்களை தன் இரண்டு வயது மகனுக்கு அளித்து விட்டு, மரணத்தைத் தழுவினார். தன் இறுதி மூச்சை விடும் தருணத்தில், தன்னுடைய சிறிய ‘மானிக்’ தன் பெயரைப் பெரிய அளவில் காப்பாற்றக் கூடிய அளவிற்கு மிகப் பெரிய மனிதராக வருவான் என்ற உண்மை அவருக்குத் தெரியுமா?

 

 

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.