Logo

திலகன் என்ற மகாதிலகம்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5981
thilakan endra magaathilagam

 சுராவின் கண்ணீர் அஞ்சலி...

நான் மிக உயர்வாக மதிக்கும்

நடிப்புக் கலையின் சிகரத்தைத் தொட்டு

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு

தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு

உயிர்ப்பையும், உன்னதத்தையும் தந்த

திரு.திலகன் அவர்களின் மரணத்தை

என்னால் அவ்வளவு

சாதாரணமாக எடுத்துக் கொள்ள

முடியவில்லை.

நடிகர் திலகம்

திரு.சிவாஜி கணேசன் அவர்கள்

இறந்த நாளன்று நான் எந்த அளவிற்கு

கண்ணீரில் கரைந்திருந்தேனோ,

அதே நிலையில்தான் இப்போது நின்று

கொண்டிருக்கிறேன்.

திலகன் என் மனதில் கூடு கட்டி

வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும்

என் இதயத்திற்குள் கம்பீரமாக

நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அங்கு

நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

திலகனும்தான்...

சாதனைகள் பல புரிந்த

அந்த சாகாவரம் பெற்ற பிறவி கலைஞனுக்கு

என்னுடைய

கண்ணீர் அஞ்சலி...

                    -    சுரா


ஏன் அந்த சண்டை?

   -    மம்மூட்டி

   தமிழில்: சுரா

முப்பது நாட்களாக திலகன் அண்ணன் மருத்துவமனையில் மரணத்துடன் போராடிக் கொண்டு படுத்திருந்தார். மருத்துவமனையில் இருப்பது, விபத்துகள், மாரடைப்புகள்- இவை எதுவுமே திலகன் அண்ணனுக்கு புதிய விஷயமே அல்ல. அதனால் இந்த போராட்டத்திலும் வெற்றி பெற்று திலகன் திரும்பி வருவார் என்று நான் நினைத்தேன்.

ஆலுவா நதியின் கரையில் பி.ஜெ.ஆன்டனியின் ‘பெரியார்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும்போதுதான் மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு நான் திலகனை முதல் தடவையாக பார்க்கிறேன். அப்போது நான் நடிகன் அல்ல.

கெ.ஜி. ஜார்ஜின் ‘யவனிக’யில் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். புதிய அலை திரைப்படங்களில்தான் ஆரம்பகாலத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து நடித்தோம். ஒருமுறை பி.ஜி.விஸ்வம்பரனின் ‘ஒன்னாணு நம்மள்’ என்ற திரைப்படத்தில் என்னுடைய தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்த நடிகர், நடிக்க வரவில்லை. நான்தான் திலகன் அண்ணனை அழைக்கும்படி கூறினேன். விஸ்வம்பரன் ‘அவர் கலைப் படங்களில் நடிப்பவராயிற்றே!’ என்றார். ஆனால், திலகன் அண்ணன் என்னுடைய தந்தையாக வந்தார்.

அப்போது திருவாங்குளத்தில் திலகன் அண்ணன் வசித்துக் கொண்டிருந்தார். எர்ணாகுளத்திலிருந்த வீட்டிற்குப் பயணிக்கும்போது, நான் அண்ணனை பல நேரங்களில் அங்கு ‘ட்ராப்’ செய்திருக்கிறேன். 85 காலகட்டத்தில் என்னுடைய திரைப்படங்கள் தோல்வியடைந்து கொண்டிருந்த நேரம்... நான் மனதில் கவலையுடன் இருந்தபோது, திலகன் அண்ணன் என்னிடம் ‘இதையெல்லாம் பார்த்து நீ கவலைப்பட வேண்டாம். நீ திரையுலகில் இருக்க வேண்டும் என்று விருப்பப்படும் காலம் வரையில், இங்கு இருப்பாய்’ என்றார். அந்த வார்த்தைகளில் இருந்த உறுதி என்னை எவ்வளவோ உயரத்திற்குக் கொண்டு சென்றது.

திலகன் அண்ணன் என்ன காரணத்திற்காக இடையில் அவ்வப்போது என்னுடன் சண்டை போட்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘இனிமேல் சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்’ என்று அறிக்கை வெளியிட்ட சில நாட்கள் கடந்த பிறகு, ‘பழஸ்ஸி ராஜா’வில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நடித்தோம்.

‘அண்ணே... சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று நீங்கதானே சொன்னீங்க?’- படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது நான் கேட்டேன்.

‘அது... சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து என்றுதானே நான் கூறினேன்! நீ சூப்பர் ஆக்டர் அல்லவா?’- இதுதான் அவருடைய பதிலாக இருந்தது.

‘தச்சிலேடத்து சுண்டன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் காலம். அண்ணன் வேலை முடிந்துவிட்டால், சற்று மது அருந்துவார். அறுவை சிகிச்சை முடிந்திருந்ததால், மது அருந்தக் கூடாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நேரமது. எனக்கு கோபம் வந்துவிட்டது. ‘இனி மது அருந்தினால், கொன்றுவிடுவேன்’ என்று நான் சற்று குரலை உயர்த்தி கூறினேன். ‘என் மகனின் கையால் மரணமடைந்துவிட்டேன் என்று நான் நினைத்துக் கொள்வேன்’ என்று அமைதியான குரலில் பதில் கூறினார். ‘இரண்டு பெக் அருந்துவதில் தவறில்லை என்று மருத்துவர் கூறியிருக்கிறார்’ என்று அவர் தன் பக்கத்தை நியாயப்படுத்தி கூறினார். அறுவை சிகிச்சை செய்த டாக்டர் பாஷியை நான் அழைத்தேன்.

இரவில் மீண்டும் திலகன் அண்ணனை அழைத்தேன். நான் கூறியதால் உண்டான பிடிவாதத்தில், எங்கே அதிகமாக மது அருந்திவிடப் போகிறாரோ என்பதுதான் என்னுடைய பயம். ‘உனக்கு கடுமையான வார்த்தைகளில் ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறேன்’ என்று கூறினார். ‘அய்யோ... அந்த கடிதத்தை அனுப்பி விடாதீர்கள். அன்பின் காரணமாகத்தானே நான் அப்படிச் சொன்னேன்!’ என்று நான் கூறியதும், எப்போதும்போல மனதில் சாந்தம் நிறைந்தவராக ஆகிவிட்டார்.

திருசூரில் இருந்த மருத்துவமனையில் படுத்திருந்தபோது, நான் அழைத்தேன். ‘ஒரு பிரச்னையும் இல்லை... நாளை டிஸ்சார்ஜ் ஆகி விடுவேன்’ என்றார். திருவனந்தபுரத்திற்குச் சென்றது கூட, கொஞ்சம் பேசுவோம் என்பதற்காகத்தான். முடியவில்லை. வேதனையுடன் திரும்பி வந்து விட்டேன். ‘திலகன்தானே! திரும்பி வருவார்...’ என்று வெறுமனே மனம் கூறியது.


அன்பு செலுத்தி, திருத்திய ஒரு மனிதர்!

-மோகன்லால்

தமிழில்: சுரா

திலகன் அண்ணனையும் என்னையும் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, பெரும்பாலானவர்களின் மனங்களில் – இறுதி நாட்களில் உண்டான சண்டைகள்தான் ஞாபகத்தில் வரும். திலகன் அண்ணனுக்கும் எனக்குமிடையே இருந்த உறவின் நிழலில், இந்த விஷயங்களையெல்லாம் என்னாலும் அண்ணனாலும் மறக்க முடிந்தது. அவற்றையெல்லாம் மறந்தும் விட்டோம். என்னுடைய அன்னை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்தபோது, அண்ணன் பல தடவைகள் விசாரித்திருக்கிறார். பல மருத்துவர்களின் பெயர்களையும் கூறினார். அவர்களில் பலர், அண்ணன் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள். அந்த அளவிற்கு அவர் அதிகமான அக்கறை கொண்டிருந்தார்.

சிலர் எந்தச் சமயத்திலும் நம்மைத் தேடி வர மாட்டார்கள். அவர்களை எப்போதும் அங்கு சென்று பார்க்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் விஷயம். திலகன் அண்ணனும் அப்படித்தான். யாரைத் தேடியும் செல்ல மாட்டார். அதனால் நான் எப்போதும் திலகன் அண்ணனைத் தேடிச் செல்வேன். என்னைப் பிடித்து இழுத்து நெருக்கமாக்கிக் கொள்வார் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். நான் அதற்கு எப்போதும் தயாராக இருந்தேன். திலகன் அண்ணனைத் தேடிச் சென்று, நான் அவருடைய பாசத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.

நானும் அவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை மிகச் சிறந்த படங்களாக இருந்தன. நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள், கிரீடம், செங்கோல், மணிச்சித்ரத்தாழ், கிலுக்கம், பஞ்சாக்னி- இப்படி பல படங்கள்... நடிகன் என்ற முறையில் எவ்வளவோ காலம் என்னை அவர் திருத்தி இருக்கிறார். நான் அந்த திருத்தங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறேன். வாழ்க்கையுடனும், நடிப்பு வாழ்க்கையுடனும் அவர் போராடினார். ஒவ்வொரு காட்சிக்கு முன்னாலும், அவர் அதை நன்றாக பயிற்சி செய்து பார்ப்பார்... வசனங்களை பல வகைகளில் கூறி பார்ப்பார்... அது நாடக மேடையிலிருந்து கிடைத்த பழக்கமாக இருக்க வேண்டும். வாழ்வின் இறுதி வரை அது தொடர்ந்தது. ஆனால், நான் எந்தச் சமயத்திலும் அப்படி இருந்ததில்லை. அதைப் பற்றி அவர் எதிர்வினை ஆற்றியதுமில்லை. எப்படிப்பட்ட சிறிய நடிகரையும் அவர் ஏற்றுக் கொள்வார்.

ஒருவித பக்குவப்படுத்தல்கள் எதுவுமே இல்லாத பச்சையான மனிதராக இருந்த காரணத்தால்தான், திலகன் அண்ணனின் எதிர்வினைகள் பலவும் சராசரி வாழ்க்கையில் கூறப்பட்டிருக்கக் கூடாது என்பதைப் போல நமக்குத் தோன்றும். நடிகர்களின் கூட்டமைப்பான ‘அம்மா’வுடன் சண்டை நடந்தபோது, அவர் வேதனைப்படுவது மாதிரி நான் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. எப்போதும் மிகுந்த மரியாதையுடன் மட்டுமே அவரை நான் பார்த்திருக்கிறேன்.

அவருக்குள் எப்போதும் ஒரு ‘ரிபெல்’ தூங்காமல் இருந்து கொண்டே இருந்தான். அதன் பலத்தை நாம் எப்போதும் பார்க்கலாம். அதை அவருடைய கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம். அந்த காரணத்தால்தான் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் அவர் நம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். அவருடன் நிற்கும்போது, ஒரு சக்தியை மனதிற்குள் பரிமாறித் தரக் கூடிய நடிகர்களில் ஒருவராக அவர் இருந்தார். ‘மணிச்சித்ரத்தாழ்’ படத்தில் என்னை அவர் அடையாளம் கண்டு கொள்கிற காட்சியில், அவருடைய நடிப்புதான் என்னுடைய கதாபாத்திரத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் அதிகம் கிடைக்கும்படி செய்தது.

இவற்றையெல்லாம் தாண்டி, பெரிய அளவில் அவர் மனதில் அன்பை நிறைத்து வைத்திருந்தார். ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கூட, நன்றாக இருக்கிறது என்று அவர் கூறியதே இல்லை. இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எனக்கு வேதனை இல்லை. காரணம்- எவ்வளவோ தடவைகள் அவர் செய்திருக்கும் ‘திருத்தங்கள்’ எனக்குள் இருந்த நடிகனை வளர்த்திருக்கிறது.

இறுதியாக சேர்ந்து நடித்த ‘ஸ்ப்ரிட்’ என்ற திரைப்படத்தில் என்னுடைய டி.வி. நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, கைகளைத் தட்டும் மனிதராக அவர் வந்தார். நடிகர் என்ற நிலையில், என்னிடம் காட்டிய பாசத்தின் அடையாளமாக நான் அதைப் பார்க்கிறேன்.

எப்போதும் நான் தேடிச் சென்று பார்த்த ஒரு மனிதர் இறுதி பயணம் செய்யும்போது தாங்க முடியாத வேதனை உண்டாகிறது. நாம் தேடிச் செல்வதற்கு மனிதர் இல்லையே என்ற வேதனை... உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், திலகன் அண்ணனின் அன்பையும் பாசத்தையும் தேடிச் செல்வதில் என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. திட்டுவதற்கு ஆள் இல்லை என்ற நிலை வரும்போது, உண்டாகக் கூடிய வேதனை இப்போது இருக்கிறது. திருத்தக் கூடிய இன்னொரு மனிதரும் பயணம் செய்து போய்விட்டார்.


உள் கடலில் இருந்து உள்ளே...

இயக்குநர் கெ.ஜி.ஜார்ஜ்

தமிழில் : சுரா

‘கோலங்கள்’ திரைப் படத்தில் கள்ளு வர்க்கி – திலகனின் அந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்தது. திலகனுக்கும்... அவர் முதல் தடவையாக என்னுடைய இயக்கத்தில் நடித்தது ‘உள் கடல்’ படத்தில்தான். முண்டக்கயம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தயாரிப்பாளர் கெ.ஜெ.தாமஸ்தான் திலகனைப் பற்றி என்னிடம் கூறினார். அதைத் தொடர்ந்து திலகனுக்கு வேடத்தைக் கொடுத்தேன். வேணு நாகவள்ளியின் தந்தை வேடம். அது கவனிக்கப்பட்டது. பிறகு... அவர் திரும்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரவே இல்லை. தொடர்ந்து கோலங்கள், யவனிக, ஆதாமின்றெ வாரியெல்லு, பஞ்சவடிப் பாலம், இரகள், மற்றொராள் தொடங்கி இலவங்கோடு தேசம் வரை உள்ள என்னுடைய படங்களில் திலகன் நடித்தார். திலகனுக்கு வேடம் இல்லாத ஒரு படத்தைப் பற்றி என்னால் சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியாகவே அவர் இருந்தார். எந்த விஷயத்திலும், தனக்கென்று கருத்தை வைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதராக அவர் இருந்தார். அதை வெளிப்படையாக கூறுவதற்கும் அவர் தயங்கியதில்லை. அவர் தன்னுடைய கருத்தைக் கூறியதற்கு- யாரையும் வேதனைப்படுத்த வேண்டும் என்பது அல்ல நோக்கம். எனினும், அந்த காரணத்தால்தான் எதிரிகள் உண்டானார்கள்.


சரீரத்தின் ஒவ்வொரு அணுவிலும் நடிகர்...

-எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

ப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் புரிந்து கொள்ளக் கூடிய அபார திறமை கொண்ட மிகப் பெரிய நடிகராக இருந்தார் திலகன். எல்லா அர்த்தத்திலும், சரீரத்தின் ஒவ்வொரு அணுவிலும் முழுமையான நடிகராக திலகன் இருந்தார். அழகான அசைவுகளாலும், உடல் மொழியாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய மிகப் பெரிய நடிகராக அவர் இருந்தார். நடிப்பின் மீது வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வும், ஒழுங்கும் கட்டாயம் கூறப்பட வேண்டிய உண்மைகள்...


ஒரு மிகப் பெரிய நடிகரின் பிரிவு!

நடிப்பின் எல்லையற்ற தன்மையை வெளிப்படுத்திய திலகன்!

-மலையாள மனோரமா (தலையங்கம்)

தமிழில்: சுரா

லையாள திரையுலகின் மரியாதைச் சின்னமாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார் திலகன். திரைச் சீலையில் நடிக்கக் கூடிய இடங்களின் சாத்தியங்களையும், திறமையையும் வெளிப்படுத்தி விட்டுத்தான் அவர் அரங்கத்தை விட்டு வெளியேறிச் செல்கிறார். இணை கூற முடியாதது என்று சாதாரணமாக கூறக் கூடிய சொற்களை கம்பீரமாக திலகன் என்ற பெயருடன் சேர்த்து நாம் இனிமேல் எல்லா காலங்களிலும் நி்னைத்துப் பார்ப்போம்.

எந்த இடத்திலும் தலை குனியாத போராளியாக இருந்தார் திலகன். சாதாரணமாக ஒரு நடிகனைச் சோதித்துப் பார்க்கும் கதாபாத்திரங்களை, அந்த காரணத்தால்தான் அவரால் மிகவும் அனாயாசமாக தோற்கடிக்க முடிந்தது. ஒரு மிகச் சிறந்த திறமையைக் கொண்ட நடிகரால் முடியக் கூடிய வகையில், அவர் தன்னுடைய ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அபூர்வமான உயிர்ப்பையும், சக்தியையும் அளித்து அவர்களை திரையுலக வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறச் செய்தார். திலகன் உயிர் கொடுக்காத அவருடைய கதாபாத்திரங்களின் பெயரை ஞாபகப்படுத்தி கூறும்படி சொன்னால், மலையாளிக்கு பதில் கூற முடியாது என்பது உறுதி. தானே கற்றுக் கொண்டும், கற்பித்துக் கொண்டும் இருந்த தன்னுடைய நடிப்புப் பள்ளியை வளர்த்து, அதைப் பெரியதாக ஆக்கி, திலகன் எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு நடந்தார். திரையுலகைத் தேடி வரும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, தான் படித்த பாடங்களை அன்புடன் சொல்லிக் கொடுத்தார். முன்னால் அமர்ந்திருக்கும் மிகப் பெரிய நடிகருக்குள் இருந்த பொக்கிஷத்திற்கு நிகரான நடிப்பு பல்கலைக் கழகத்தை அவர்கள் வியப்புடன் தெரிந்து கொண்டார்கள்.

இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, நாடக மேடையில் ஏறிய அந்தச் சிறுவனில் இருந்து, இந்த வருடம் திரைக்கு வந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் வரும் கதாபாத்திரம் வரை உள்ள தூரம், மலையாள திரையுலக வரலாறு கண்ட பெரிய நடிகர்களில் ஒருவரின் புதுமை நிறைந்த நடிப்பின் வரலாறும் கூட. கடல் ஆர்ப்பரிக்கக் கூடிய குரலில், ஒழுங்கும் தெளிவும் உள்ள உடல் மொழியில், உணர்ச்சிகளின் முழுமையில் – அந்த நடிகர் தன்னுடைய கதாபாத்திரங்களுக்குள் சுரேந்திர நாத திலகன் என்ற முத்திரையைப் பதித்தார். திரைப்படம் என்ற ஒன்று உருவான காலத்திலிருந்து, பலரும் பல தடவைகள் வெளிப்படுத்திய பாசத்தையும், அன்பையும், இரக்கத்தையும் கொடூரத்தையும், பகையையும், தோல்வியையும், வெற்றியையும் அந்தத் திலகம் அணிந்து கொண்டு, திரைச் சீலைக்கு வந்தபோது இதுவரை பார்க்காத வகையில், அவை மிகவும் வித்தியாசமாக வெளிப்படுவதை நாம் பார்த்தோம்.

கவனித்தலின் ஆழத்தாலும், அனுபவங்களால் மெருகேற்றப்பட்ட பாடங்களாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்குள் இருக்கும் நடிகனை புதுமையாக காட்டிய செயலில் திலகன் வேறுபட்டு நின்றார். அந்த கதாபாத்திரங்கள் சாகாவரம் பெற்றவையாக ஆயின. தன்னுடைய நெஞ்சுக்குள் அமைதியாக ஒலித்துக் கொண்டிருக்கும் உளியின் அழுகையை, திரை அரங்குகளின் அழுகையாக மாற்ற முடிந்த பெருந்தச்சன், ‘மூணாம் பக்கம்’ கடல் உண்டாக்கிய பெரிய இழப்பின் கையைப் பிடித்துக் கொண்டு, ஆழங்களுக்குள் கால் இடறாமல் இறங்கிச் செல்லும் தாத்தா, கவலை நிறைந்த விதியின் விளைவுகளான ‘கிரீட’த்தையும் ‘செங்கோ’லையும் அணிய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான மகனுக்காக, அமைதியை இழந்து துடித்த தந்தை, ஏதோ கணக்கு புத்தகத்தில் வாழ்க்கை ‘ஸ்படிக’த்திற்கு நிகராக பிரகாசிப்பதையும், விழுந்து உடைவதையும் பார்க்க நேர்ந்த சாக்கோ மாஷ்... திலகனின் உணர்ச்சிகள் நிறைந்த கதாபாத்திரங்களை ஒரு வெறும் பட்டியலில் எப்படி ஒதுக்கி நிறுத்த முடியும்? திரையுலகிற்குள் திரும்பி வரும் செயலை ஒரு நடிகர் எந்த அளவிற்கு மிக உயர்ந்த ஒரு செயலாக ஆக்க முடியும் என்பதை அவர் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். அமைதி நிறைந்த இடைவெளிக்குள்ளிருந்து உணர்ச்சி நிறைந்த உத்வேகத்துடன் மீண்டும் ‘இந்தியன் ருப்பி’ படத்தின் மூலம் திரைக்கு வந்தபோது, ‘இவ்வளவு காலமும் எங்கே இருந்தீங்க?’ என்று உடன் வரும் கதாபாத்திரம் கேட்டது- அந்தத் திரும்பி வந்த செயலை சூசகமாக வினவியதைப் போலவே இருந்தது.

கடுமையான கலகத்தையும், அதை விட கடுமையான அன்பையும் கொண்டு எழுதப்பட்ட சுயசரிதைதான் திலகனுடையது. நடிப்பு என்பது – குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால் – அவரவர்களுடைய ஆனந்தமே என்ற விஷயத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதை ரசிகனுக்கு வெளிப்படுத்துவது  என்பது ஒரு கலைஞனுக்கு கிடைத்த பாக்கியம் என்ற விஷயத்தையும் அவர் உணர்ந்திருந்தார். வேடத்தை அணிந்த மனிதர் இல்லாதபோதும், வேடங்கள் நீண்ட காலம் நிலை பெற்று நின்று கொண்டிருக்கும் என்ற உண்மையை திலகன் புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலை அவர் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையின் உண்மையாக ஆக்கினார்... அழகாகவும் ஆக்கினார்...


கிரீடத்தையும் செங்கோலையும் படைத்த ராஜகுரு

-இயக்குனர் சிபி மலயில்

தமிழில் : சுரா

ண்டை போட்டுக் கொண்டு நிற்கும்போது, கள்ளங்கபடமற்ற தன்மை விலகிப் போயிராத ஒரு குழந்தையைப் பற்றிய ஞாபகங்கள், திலகன் அண்ணனுடன் உண்டாகும் பழக்கத்தின் ஆரம்ப காட்சிகளில் தோன்றும். பேபி ஷாலினியை மலையாள மக்களுக்கு மிகவும் பிடித்தவராக ஆக்கிய ‘என்றெ மாமாட்டுக்குட்டியம்மைக்கு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் அது நடந்தது. இயக்குநர் ஃபாஸில் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, ஒரு வார காலத்திற்கு கேமராவிற்குப் பின்னால் நிற்கக் கூடிய பொறுப்பு இணை இயக்குனராக இருந்த என்னிடம் வந்து சேர்ந்தது. இப்படி தற்காலிகமாக இயக்குனர் தொப்பியை அணிபவர்களின் மீது பல நேரங்களில் நடிகர்கள் நம்பிக்கை வைக்க தயங்குவார்கள். அதற்கு அவர்களை குறை கூறவும் முடியாது. நான் சில காட்சிகளை எடுத்தபோது, திலகன் அண்ணனுக்கும் இப்படிப்பட்ட சந்தேகம் உண்டானது. ஆனால், என்னுடைய விளக்கங்களில் அவர் திருப்தியடைந்து விட்டார். எங்களுடைய நட்பு அங்கு தொடங்கியது.

நான் இயக்குனரான ‘ராரீரம்’ என்ற திரைப்படத்தில் திலகன் அண்ணனுக்கு டாக்டர் வேடம். டப்பிங் முடிந்து கிளம்பியபோது, அவர் ‘உங்களுடைய குணத்திற்கு ஏற்ற ஒரு ஆளை எனக்கு தெரியும். சாலக்குடியைச் சேர்ந்தவன். விருப்பம் இருந்தால், அந்த ஆளை வந்து பார்க்கச் சொல்கிறேன்’ என்றார். அந்த வார்த்தைகளைப் பின் தொடர்ந்து, எனக்கு முன்னால் வந்து நின்ற மனிதர் – பிற்காலத்தில் மலையாளப் பட உலகிற்கு தன்னுடைய பேனாவின் முனையில் கூடு உண்டாக்கிய லோஹிததாஸ். சாலக்குடி சாரதி தியேட்டர்ஸின் நாடகங்களை திலகன் அண்ணன் இயக்கிக் கொண்டிருந்த காலத்தில் லோஹி அந்த நாடகக் குழுவிற்கு உதவியாக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தின் பாதைதான் என்னை நோக்கி நீண்டிருக்கிறது.

அது என்னுடைய வாழ்க்கையையும், லோஹியின் வாழ்க்கையையும் புதிய ஒரு திசையை நோக்கி திருப்பிவிட்டது. ‘ஹிட் காம்பினேஷன்’ என்ற வார்த்தையில் ஒலிக்கும் வர்த்தக ரீதியான வெற்றியைவிட, சில நல்ல திரைப்படங்களை உருவாக்கிய இரசாயன முயற்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதன் காரணகர்த்தாவாக திலகன் அண்ணன் இருந்தார். கிரீடத்தையும், செங்கோலையும் எப்போதும் ராஜகுருக்கள்தான் உருவாக்கியிருக்கிறார்கள். என்னையும் லோஹியையும் ஒன்று சேர்த்த செயலின் மூலம், அவர் அப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் மலையாளப் பட உலகில் ஏற்றிருந்தார்.

‘கிரீட’த்தைப் பற்றி நினைத்தபோது, அச்சுதன் நாயராக எங்களால் வேறொரு முகத்தை கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியவில்லை. ஆனால், அந்தச் சமயத்தில் திலகன் அண்ணன் கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருந்தவர்களைவிட, மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் ‘சாணக்யன்’ என்ற திரைப் படத்திலும், பகலில் ‘வர்ண’த்திலும் நடித்துக் கொண்டிருந்தார். தூக்கம் கூட இல்லாத நடிப்பு வாழ்க்கை... அவர் அந்தப் படங்களில் நடித்து முடித்துவிட்டு வருவதை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தால், மோகன்லாலின் கால்ஷீட் தேதிகளில் பிரச்னை வந்து விடும். நேரில் சென்று திலகன் அண்ணனைப் பார்த்தேன். அண்ணன் இல்லையென்றால், அந்த திரைப்படம் எடுப்பதையே கைவிட வேண்டியதிருக்கும் என்று கூறியபோது, அவர் சிறிது நேரம் என்னுடைய முகத்தையே பார்த்தார். பிறகு ‘நான் அந்த அளவிற்கு அவசியம் வேண்டும் என்று தோன்றினால், வருகிறேன். ஆனால், பகலிலும் இரவிலும் கிடைக்கக் கூடிய ஒன்றோ இரண்டோ மணி நேரங்களில் மட்டுமே முடியும்’ என்று சொன்னார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். அச்சுதன் நாயர், திலகனுக்கென்றே பிறந்த கதாபாத்திரம். அவர் இல்லையென்றால், அச்சுதன் நாயர் மரணமடைந்து விட்டார் என்பதுதான் உண்மை.

இரண்டு திரைப்படங்களுக்கு நடுவில் கிடைக்கும் இடைவெளி நேரங்களில் திலகன் அண்ணன் ‘கிரீட’த்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வருவார். வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் ‘இப்போது... மூணு... நாலு மணி நேரங்கள் ஃப்ரீயா இருக்கு. ஷாட்டிற்கு தயாராகிக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நம்பவே முடியவில்லை. யாராக இருந்தாலும், மூச்சுவிட முடியாத அளவிற்கு இருந்த சூழ்நிலையிலிருந்து ஓடி வந்துதான் திலகன் என்ற நடிகர், அச்சுதன் நாயர் என்ற தந்தையின் முள் கிரீடத்தைத் தன் தலையில் அணிந்தார்.

‘கிரீட’த்தின் உச்சக் கட்ட காட்சி படமாக்கப்படும் நாள். ‘சாணக்ய’னின் படப்பிடிப்பிலிருந்து அவரை விடவில்லை. கீரிக்காடன் ஜோஸை ஒரு வழி பண்ணி விட்டு, சேது மாதவன் கத்தியை வீசுவது வரை படம் பிடித்தாகிவிட்டது. வெளிச்சம் போவதற்கு அதிகபட்சம் போனால், ஒரு மணி நேரம் ஆகும். இனி திலகன் அண்ணன் வரும் காட்சியைத்தான் எடுக்க வேண்டும். மீதியை பின்னால் இன்னொரு நாள் ‘ஷூட்’ பண்ணிக் கொள்ளலாம் என்பது முற்றிலும் இயலாத காரியம். கன்டின்யுட்டி உட்பட பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். அதை நன்கு புரிந்து கொண்டிருந்த காரணத்தால், திலகன் அண்ணன் ‘சாணக்யன்’ படப்பிடிப்பு குழுவினரிடம் ‘என்னைப் போக அனுமதிக்கவில்லையென்றால், நான் இந்த படத்தை முடித்துக் கொள்கிறேன். நான் போயே ஆக வேண்டும். நான் போவேன்...’ என்று கூறியிருக்கிறார். ‘சாணக்ய’னின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் நகரத்தில் நடந்து கொண்டிருந்தது. ‘க்ரீட’த்தின் படப்பிடிப்பு 22 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஆர்யநாட்டில்... அந்த தூரத்தையும், எதிர் குரல்களையும் கடந்து வந்து சூரியன் மறைவதற்கு முன்னால் திலகன் அண்ணன் சொன்னார் : ‘சேது, கத்தியைக் கீழே போடுடா... அப்பா சொல்றேன்டா...’

‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற திரைப்படம்தான் நாங்கள் இறுதியாக ஒன்று சேர்ந்து செய்த படம். அதன் திரைக்கதாசிரியரும் திலகன் அண்ணனுக்குத் தெரிந்த ஆள்தான். டி.எ.ரஸாக்... உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததற்கு மத்தியில் அவர் நடிப்பதற்கு வந்திருந்தார். ஆனால், கேமராவிற்கு முன்னால் வந்து நின்றதும், எல்லா வேதனைகளையும் மறந்துவிட்டார். முழுமையாக சினிமாவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது திலகன் அண்ணனின் வாழ்க்கை. முழுமை என்ற விஷயத்தில் சிறிதும் குறைபாடே இல்லாத நான்கு எழுத்துக்கள்... அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவில் அவர் இன்னொரு திரைக்கதாசிரியரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரின் பெயர் கெ.கிரீஷ்குமார் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் உண்டான நட்பு.... திலகன் அண்ணனின் மூலம் என்னிடம் வந்து சேர்ந்த மூன்றாவது ஆள் – கிரீஷ்.

‘பெருந்தச்சன்’ என்ற வார்த்தை திலகன் அண்ணனைப் பற்றி உள்ள கட்டுரைகளிலெல்லாம் இருக்கும். பயன்படுத்தி தேய்ந்து போன உளியைக் குறிப்பிடுவதைப் போல... அப்படி அவர்கள் பல நேரங்களில் பயன்படுத்துவது – அவருக்குள் இருக்கும் சிற்பியைப் புரிந்து கொண்டு அல்ல. ஆனால், என்னுடைய அனுபவத்தில் நடிகர் என்பதைத் தாண்டி, திலகன் அண்ணனிடம் மிகப் பெரிய ஒரு ஆற்றல் இருந்தது. அது – திறமை கொண்டவர்களை மெருகேற்றி உருவாக்கக் கூடிய ஆற்றல். லோஹியும் ரஸாக்கும் கிரீஷூம் அந்த விரலின் மூலம் படவுலகிற்கு வந்தவர்கள்.

ஒரு முழுமையடையாத நிலையுடன்தான் திலகன் என்ற நடிப்பு மேதை இங்கிருந்து சென்றிருக்கிறார். தகுதி உள்ளவராக இருந்தும், எவ்வளவோ தடவைகள் தேசிய விருது அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. அதனால் உண்டான வேதனை இறுதி வரை திலகன் அண்ணனின் இதயத்தில் இருந்தது. திலகன் என்ற திறமை வாய்ந்த நடிகருக்கு இந்தியாவின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது மரணம் வரை கிடைக்கவில்லை என்ற விஷயத்தில் வெட்கப்பட வேண்டியது அவரல்ல... இந்திய படவுலகம்தான்.

திலகன் அண்ணன் கோபித்துக் கொண்டிருக்கிறார். பல தடவைகள்... ‘தனியாவர்த்தனம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் மம்மூட்டி மிகவும் பிஸியாக இருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியதிருந்தது. செய்வது தவறு என்று தெரிந்திருந்தது. ஆனால், வேறு வழியில்லை. அந்த விஷயம் திலகன் அண்ணனை வேதனைப்படச் செய்தது. ‘ஷாட்’டிற்கு அழைத்தபோது, அவர் வரவில்லை. நான் சென்று அழைத்தபோது, திலகன் அண்ணன் ‘நீங்கள் கூறும்போது, என் முகத்தில் உணர்ச்சிகள் வரும் என்று நினைக்கிறீர்களா? அது உணர்வு ரீதியான ஒரு செயல். நேற்று எடுத்த காட்சியின் எஞ்சிய பகுதியில், அப்போது இருந்த உணர்ச்சிகள் இப்போதும் இருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ என்று கேட்டார். என்னிடம் பதிலெதுவும் இல்லை. ஆனால், அவர் அப்போதே வந்து நடித்தார். அதே நேரத்தில் – முகத்தில் ஒரு வருத்தம் சிவந்து காணப்பட்டது. அதற்குப் பிறகு திரையுலக அமைப்பின் மீது உண்டான வாக்குவாதங்கள் உட்பட என் மீது கருத்து வேறுபாடு கொண்டார். எதையும் மனம் திறந்து கூறக் கூடிய குணத்தின் அடையாளம் அது. கூற வேண்டியதை முகத்தைப் பார்த்து கூறுவார். கோபப்படுவார். ஆனால், அது நீடித்து நிற்காது.

வெளியே நாம் பார்க்கும் திலகனுக்குள் ஒரு சிறு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைதான் நம்மிடம் கோபித்துக் கொண்டு இருந்ததும், சண்டை போட்டதும்... முதல் காட்சியில் பார்த்ததைப் போலவே, திலகன் அண்ணனின் இறுதி காட்சியிலும் ஒரு குழந்தையின் இருத்தலை நான் உணர்கிறேன்....


இணை கூற முடியாத நடிப்பின் பெயர்...

-இயக்குனர் ரஞ்சித்

தமிழில் : சுரா

‘இந்தியன் ருப்பி’- ஒரு காரணமாக மட்டுமே இருந்தது. திலகன் அண்ணன் அதற்காகவாவது திரும்பி வருவார் அல்லவா? அந்த வகையில் யாரும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு மனிதரல்ல அவர். என்னுடைய அல்லது வேறு யாருடைய கண்டுபிடிப்பும் அல்ல இது. இணை கூற முடியாத நடிப்பின் இன்னொரு பெயரே அது...

இடைவெளிகள் எல்லோருக்கும் வரும், அதற்கு பல காரணங்களும் இருக்கும். சிலருக்கு அதைக் கடந்து வர முடியாத சூழ்நிலையும் உண்டாகும். ஆனால், அப்படிப்பட்ட ஏதாவது ஒரு இடைவெளியில் மூழ்கிப் போய் விடக் கூடிய ஒரு மனிதரல்ல திலகன் அண்ணன். நெருப்பில் புடம் போட்டு என்று கூறுவார்கள் அல்லவா? அதைப் போன்ற ஒரு பக்குவம்... எப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களிலும், எடுத்து அணிந்து கொள்ளக் கூடிய தைரியம் என்ற ஒன்று அந்த மனிதரின் குணத்திலேயே இயல்பாக கலந்திருந்தது. எதிர்ப்புக்கு அது தலை வணங்காது.

யாருடனும் போராடுவதற்கு அண்ணன் தயங்குவதே இல்லை. அமைப்புகளுடன் போராடி தனி மனிதனாக நின்று கொண்டிருந்தபோது, திலகன் அண்ணன் மட்டுமே ஏற்று நடிக்கக் கூடிய ஒரு வேடம் வந்தால், கட்டாயம் அவரை அழைப்பேன் என்ற முடிவை மலையாள படவுலகம் சந்தித்துக் கொண்டிருந்த அந்த மோசமான காலத்திலும் நான் எடுத்தேன். ‘இந்தியன் ருப்பி’ படப்பிடிப்பிற்கான நேரம் வந்தபோது, அண்ணனை அழைப்பதற்கு எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமலிருந்ததற்குக் காரணம் கூட அதுதான். திலகன் அண்ணன் இல்லாமல் அந்தத் திரைப்படம் அன்றைய நிலையில் நடந்திருக்காது. எங்களுக்கிடையே எவ்வளவோ கோபதாபங்கள் உண்டாகியிருக்கின்றன. அதற்கு மிகப் பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. அது – உரையாடலில் உண்டான ஒரு திருத்தத்தால் கூட இருக்கலாம். இல்லாவிட்டால்- உரிய நேரத்தில் கேமராவிற்கு முன்னால் வந்து நிற்காத காரணத்தால் இருக்கலாம். திரும்பிப் பார்க்கும்போது, அதெல்லாம் இயல்பானது... மிகவும் சாதாரணமானது...

அரை நூற்றாண்டு காலம் உண்டாக்கிய அனுபவங்களின் வெப்பத்தால் உண்டாக்கப்பட்டு, உயர்ந்து நின்ற மலைதான் திலகன் அண்ணன். அது நம்முடைய எல்லைக்குள் நின்று கொண்டிருக்க வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்க முடியாது.

விலக்கி வைக்கப்பட்ட காலத்தில் ‘இந்தியன் ருப்பி’ படத்திற்காக ஒரு நண்பரின் மூலம் அவரை முதலில் அழைத்ததற்கு ‘ரஞ்சித்துக்குத்தான் என்னைத் தெரியுமே! பிறகு எதற்கு நீங்கள் என்னை அழைக்க வேண்டும்?’ என்று பதில் கூறியிருக்கிறார் அண்ணன். அதற்குப் பிறகு நானே சென்று அழைத்தபோது, ‘அமைப்புகள் என்னை விலக்கி வைத்திருக்கின்றன. அது பிரச்னையாக இல்லையென்றால், நான் வருகிறேன்’ என்று கூறினார்.

திலகன் அண்ணனை நடிக்க வைக்கப் போகிறேன் என்று நான் இன்னஸென்ட் அண்ணனிடமும் மம்மூக்காவிடமும் தொலைபேசியில் கூறினேன். அண்ணனிடம் யாருக்கும் எந்தவித விரோதமும் இல்லை. என்னுடைய படத்தை யாரும் தடுக்கவும் இல்லை. அண்ணனுக்கு போடப்பட்டிருந்த தடை நீங்குவதற்கு ‘இந்தியன் ருப்பி’ வழி அமைத்துக் கொடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். சந்தோஷப்படுகிறேன்.

‘படப்பிடிப்பிற்கு வரும்போது ஏதாவது தயார் பண்ணிக் கொண்டு வர வேண்டுமா?’ என்று அண்ணன் கேட்டார். ‘எதுவுமே வேண்டாம்... செயற்கையான தாடி வேண்டாம் என்பதால், சற்று தாடியை நீளமாக வைத்திருந்தால் போதும்’ என்று மட்டும் கூறினேன். பிறகு... ‘எவ்வளவு நாட்கள் வளர்ந்திருக்கக் கூடிய தாடி வேண்டும்?’ என்று கேட்டார். அதுதான் திலகன் அண்ணனின் அர்ப்பணிப்பின் அடையாளம். சினிமாவிற்கு வெளியே உள்ள சினிமாவில் உள்ள போலித்தனமான நட்புகளிலோ தொலைபேசி அழைப்புகளிலோ – எந்த விஷயத்திலும் அண்ணன் சிறிது கூட ஆர்வம் காட்டமாட்டார். காரணமே இல்லாமல் வெறுமனே ஒருமுறை தொலைபேசியில் பேசுவோமே என்ற விஷயமெல்லாம் எந்தச் சமயத்திலும் நடக்காது. ‘இந்தியன் ருப்பி’க்குப் பிறகு, இரண்டோ மூன்றோ முறைகள்தான் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அதுகூட – அந்தப் படத்தின் மூலம் அண்ணனுக்குக் கிடைத்த அங்கீகாரங்களை சந்தோஷத்துடன் கூறுவதற்காக... கிடைக்காமற் போன அங்கீகாரத்தால் உண்டான வருத்தத்தை வெளிப்படுத்துவதற்காக... பிறகு... வெளியே அங்கீகாரம் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்... திலகன் அண்ணன் எங்களுக்கெல்லாம் பெரிய மனிதராக தெரிவது அதனால் அல்ல... அது இணை கூற முடியாத அந்த நடிப்புத் திறமையை மலையாளப் படவுலகில் வெளிப்படுத்தி, முத்திரை பதித்த பெருமைக்காக. அந்த அகங்காரத்தை நாங்கள் விரும்பினோம். வரவேற்றோம். எந்தவொரு சண்டையாலும், அதன் விலையையோ மதிப்பையோ குறைப்பதற்கு முடியவில்லை. அந்தப் பெயர் மலையாளத்தின்... என்பதைப் போல எங்களுடைய சொந்த அகங்காரமாகவும் இருந்தது. இணை வைக்க முடியாத, மரியாதைக்குரிய பெயராக அது இருந்தது. விடை கூற மாட்டேன்...


மிகப் பெரிய நடிப்பு கல்விக் கூடம்

-நடிகர் துல்கர் சல்மான் (மம்மூட்டியின் மகன்)

தமிழில் : சுரா

திலகன் அங்கிளுடன் ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற திரைப் படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, பயம் எழுந்தது. அங்கிளுடன் வரக் கூடிய எல்லா காம்பினேஷன் காட்சிகளிலும் இருக்கக் கூடிய உரையாடல்களை, தேர்வுக்குப் படிப்பதைப் போல யாருக்கும் தெரியாமல் படித்துவிட்டுத்தான் நான் சென்றேன். சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரை நன்கு தெரியும். என்றாலும், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்போது, பழைய பழக்கமோ வாப்பாவின் முகவரியோ எதுவுமே உதவாது. ஆனால், முதல் நாளிலேயே தன்னுடன் இருந்த எல்லோரையும் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றார். எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் தன்னுடன் நடிக்கச் செய்தார். ‘லுக்’ போன்ற விஷயங்களை மிகவும் சரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஒரு பள்ளிக் கூடத்தில் கற்றுத் தருவதைப் போல அவர் கற்றுத் தந்தார். எங்களுடன் சேர்ந்து அமர்ந்து, தமாஷான விஷயங்களையும் பழைய சம்பவங்களையும் கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் மரியாதையுடன் விலகி நின்று கொண்டிருந்தபோதுகூட, அவர் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதை ரசித்தார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சில நிமிடங்களுக்குள் நெருங்கி சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ‘உஸ்தாத் ஹோட்ட’லில் திலகன் அங்கிள் கற்றுத் தந்த முதல் பாடமே.

படத்தின் தொடக்க விழா நேரத்தில் நான் ‘சார்’ என்று இரண்டு தடவைகள் அழைத்தபோது, அவர் என்னையே கூர்ந்து பார்த்துவிட்டு, அருகில் வரும்படி அழைத்து தோளைப் பிடித்துக் கொண்டே ‘இங்கே யாரும் ‘சார்’ அல்ல. நீ அங்கிள் என்று கூப்பிடு’ என்றார்.

முன்பு ஏதோ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் அங்கிள் அந்த கட்டிடத்தில் படுத்து உறங்கியிருக்கிறார். இரவில் எல்லோரும் சென்றபோது, அவர் அங்கு படுத்திருந்த விஷயத்தை மறந்து விட்டார்கள்.

மறுநாள் காலையில்தான் விஷயமே தெரிய வந்திருக்கிறது. என்னுடைய வாப்பா அன்று படப்பிடிப்புத் தளத்தில் உண்டாக்கிய ஆரவாரத்தைப் பற்றி நகைச்சுவையுடன் அங்கிள் நினைத்துப் பார்த்தார். பிறகு... எவ்வளவோ தமாஷான விஷயங்களை அவர் கூறினார். பழைய சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிகவும் சரியாக ஞாபகத்தில் அவரால் வைத்திருக்க முடிந்தது.

சிறிது காலமாக அவர் திரை அரங்கத்திற்குச் சென்று திரைப் படங்கள் பார்ப்பதில்லை. இந்த திரைப்படத்தை அவர் திரை அரங்கிற்குச் சென்று பார்த்துவிட்டு, எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதற்குப் பிறகு எர்ணாகுளத்திற்கு வரும்போது, தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று கூறவும் செய்தார். ஆனால், அதற்கு முன்பே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டார். வப்பாவின் வாப்பா மருத்துவமனையில் மரணத்தைத் தழுவியபோது, நான் அமெரிக்காவில் இருந்தேன். உப்பூப்பா (தாத்தா)வை இறுதி நாட்களில் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

நேற்று வாப்பா என்னையும் அழைத்துக் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்த மருத்துவமனைக்குச் சென்றபோது, என்னுடைய உப்பூப்பாவைப் பார்க்காமல் போய் விட்டோமே என்ற கவலையைப் போக்கக் கூடிய செயலைப் போல அது இருந்ததாக எனக்குத் தோன்றியது. மிகவும் அருகில் நெருக்கமாக இருக்கும்படி நிற்க வைக்கும்போது, இந்த அளவிற்கு அன்பும், சந்தோஷமும் உண்டாகக் கூடிய மனிதர்களை நான் அதிகமாக பார்த்ததில்லை. ஒரு திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க முடிந்தது என்ற விஷயம் என்னுடைய அதிர்ஷ்டத்தாலும், வாப்பாவின் நல்ல செயல்களாலும் நடந்திருக்க வேண்டும்.


புதிய தலைமுறைக்கு திலகன் பாட புத்தகம்

-  நடிகர் அசோகன்

தமிழில் : சுரா

முரட்டுத்தனமான குணங்களுக்கு உள்ளே கள்ளங்கபடமற்ற முகத்துடன் இருந்தார் திலகன். முதலில் பார்க்கும்போது மிகவும் தூரத்தில் இருப்பதைப் போல தோன்றினாலும், மேலும் மேலும் புரிந்து கொண்ட பிறகு அந்த சுத்தமான இதயத்துடன் மிகவும் நெருங்கிச் செல்லும் அனுபவம் என்னைப் போல பலருக்கும் உண்டாகியிருக்கிறது.

திரையுலகத்திற்கு முன்பே நாடக நடிகர் என்ற நிலையில் அவரை எனக்கு தெரியும். பிறகு ‘யவனிக’ திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்தபோதுதான் நாங்கள் ஒருவரையொருவர் முதல் தடவையாக பார்க்கிறோம். நாங்கள் ஒன்று சேர்ந்து நடிக்கக் கூடிய காட்சி ஒன்றே ஒன்றுதான். தொடர்ந்து பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்தோம். இதற்கிடையில் அவர் மீது கொண்ட ஈடுபாடும் அதிகரித்துக் கொண்டு வந்தது. நடிப்பிலும், வாழ்க்கையிலும் அவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உறுதியான கொள்கைகளைப் பின்பற்றினார். நடிப்பைத் தவிர, வேறு எந்த விஷயத்திலும் அவருக்கு அக்கறை இருந்ததில்லை. இதைப் போன்ற மிகச் சிறந்த நடிப்புத் திறமை கொண்ட ஒரு நடிகர், இனிமேல் மலையாளப் படவுலகில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை காலம்தான் காட்ட வேண்டும். எல்லா காலங்களிலும் நடிப்புத் துறையில், புதிய தலைமுறைக்கு இருக்கக் கூடிய ஒரு பாட நூலாக திலகன் இருப்பார்.


திலகன் புகழ் பாடும் சுந்தர் சி., பார்த்திபன், ‘ஜித்தன்’ ரமேஷ்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில் : சுரா

ரணத்தைத் தழுவிய நடிகர் திலகன் (77) நிறைய தமிழ் படங்களில் நடிக்காமல் போயிருக்கலாம். ஆனால், தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் அவர் உண்டாக்கியிருக்கும் பாதிப்பு, அவர்களின் ஞாபகங்களில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த மிகச் சிறந்த நடிகரை தமிழ்ப் படவுலகிற்கு தன்னுடைய ‘மேட்டுக்குடி’ (1996) திரைப்படத்தின் மூலம் கொண்டு வந்த இயக்குனர் சுந்தர் சி ‘அந்தப் படத்தில் இடம் பெற்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தை எழுதும்போதே, திலகனைத் தவிர வேறு யாருமே என்னுடைய ஞாபகத்தில் வரவில்லை. அந்தப் படத்தில் மொத்தம் 12 பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் இருந்தன. இருந்த ஒரே ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம்தான் அவர்கள் எல்லோருக்கும் ஈடுகொடுக்க வேண்டும். திலகன் சார் அதைச் செய்தார்’ என்றார்.

அந்த மிகச் சிறந்த மலையாள நடிகர் இப்போதும் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சத்ரியன்’ (1990) படத்தில் ஏற்று நடித்த அருமைநாயகம் என்ற கதாபாத்திரத்திற்காக எல்லோராலும் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு அவர் நடித்த தமிழ் படங்கள் நீ வேணும்டா செல்லம் (2006), அலிபாபா (2008).

‘திலகன் ஐந்தரை அடி உயரமே உள்ள மனிதராக இருந்தாலும், திரையில் தோன்றும்போது, அவர் மற்ற எல்லோரையும் ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுவார்’ என்று கூறும் சுந்தர் சி. மேலும் கூறுகிறார்: ‘அவருடைய தோற்றத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருப்பது அவருக்கென்றே இருக்கக் கூடிய தனித்துவம் கொண்ட குரல்தான். சில தமிழ் படங்களில் அவருக்கு வேறு யாரோ குரல் தந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது. படங்களில் நடிக்கும்போது, அவர் காட்டிய ஒத்துழைப்பை கட்டாயம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு நேரம் சற்று நீண்டு சென்றாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஏற்றுக் கொண்டு அவர் உடனடியாக ஒத்துழைத்து நடிப்பார். அவர் ஒரு பிறவி நடிகர்... அவர் இயக்குனர்களை சந்தோஷப்படுத்தக் கூடியவர். இன்னும் சொல்லப் போனால்- அவர் நடிப்பதில்லை. அவர் அவராகவே இருப்பார். இயக்குனர்கள் மனதில் என்ன கற்பனை பண்ணி வைத்திருக்கிறார்களோ, அதை மனதில் வாங்கிக் கொண்டு, இரண்டு மடங்கு அழுத்தம் கொடுத்து அதை வெளிப்படுத்தக் கூடியவர்.

அவரை அதிகமான படங்களில் பயன்படுத்தாமல் போய்விட்டது உண்மையிலேயே தமிழ்த் திரையுலகம் செய்த தவறுதான்.’

‘அரவிந்தன்’ (1997) படத்தில் திலகனுடன் நடித்திருக்கும் பார்த்திபன், ‘மறைந்த அந்த மாபெரும் நடிகரிடமிருந்துதான் தொடர்ந்து கடுமையாக உழைப்பது எப்படி என்பதை நான் கற்றுக் கொண்டேன்’ என்று கூறுகிறார்.

பார்த்திபன் மேலும் கூறுகிறார்: ‘நான் சமீபத்தில் கேரளத்திற்குச் சென்றிருந்தபோது, திலகனின் மகன்களில் ஒருவரிடம் அவருடைய தந்தையின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தேன். கலைஞர்களைப் பொறுத்த வரையில், மரணம் என்பது உடல் ரீதியானது மட்டுமே. திலகன் சார் படவுலகிற்கு ஆற்றியிருக்கும் பங்கு காலத்தைக் கடந்து நிற்கும்.’

‘ஜித்தன்’ படத்தின் மூலம் மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் ரமேஷ், ‘நீ வேணும்டா செல்லம்’ படத்தில் திலகனுடன் இணைந்து நடித்திருக்கிறார். ‘நாங்கள் அந்தப் படத்தின் படிப்பிடிப்பை நடத்தியபோது, திலகன் சாரால் அதிகமாக நடக்க முடியாது. ஆனால், அவரால் எந்த அளவிற்கு சிறப்பாகச் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு அந்த பாத்திரத்தில் சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். படப்பிடிப்பு முடிந்தபிறகு, அவர் எங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு, மிகவும் சாதாரணமாக படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவரிடமிருந்து நான் எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறுகிறார் ரமேஷ்.


அதிரும் குரல் அமைதியாகிவிட்டது

-திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.சிவபிரசாத்

தமிழில்: சுரா

1935ஆம் ஆண்டில் பிறந்த சுரேந்திர நாத திலகன் (77) கேரளத்திலுள்ள பத்தனம்திட்ட மாவட்டத்தில் இருக்கும் ப்ளங்கமான் என்ற ஊரைச் சேர்ந்தவர். ஒரு நாடக நடிகர் என்ற நிலையில் அவர் தன்னுடைய திறமையை 1950, 1960, 1970களில் நடத்தப்பட்ட ‘சரஸய்யா’ ‘துலாபாரம்’ ஆகிய நாடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். 1980களில் திரைப்படவுலகம் அவரை ஏற்றுக் கொள்ள, அவர் மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் சேர்ந்து நடித்தார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் திலகன் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. 1988ஆம் ஆண்டிலும் 2007ஆம் ஆண்டிலும் தேசிய விருதுகளும், ஒன்பது தடவைகள் கேரள மாநில அரசாங்கத்தின் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன. அவருக்கு 2009ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது.

நான் 1986ஆம் ஆண்டில் தயாரித்த ‘மிழிநீர் பூவுகள்’ என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு கால்நடை மருத்துவர் பாத்திரத்தில் திலகன் நடித்தார். திலகனுக்கு ஏற்ற புதிய ஷூக்களை அப்படத்தில் பணிபுரிந்த காஸ்ட்யூமர் தயார் செய்யாமல் போகவே, என்னுடைய பாதங்களைப் பார்த்த திலகன் சாதாரணமான குரலில் ‘உங்கள் காலணிகளை எனக்கு தருகிறீர்களா?’ என்று கேட்டார். அவருடைய அடக்கமும், சமயோசித அறிவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. இருபத்து ஆறு வருடங்கள் கடந்தோடி விட்டன. நான் இன்னும் அந்த ஷூக்களை வைத்திருக்கிறேன்.

அதே படத்திற்காக அவர் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு பறந்து வந்தார். அப்போது கேரளத்தில் நல்ல மழைக் காலம்.

அது – ஜூன் மாதம். வெப்பம் அளிக்கக் கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு, திலகன் சென்னையில் கால் வைத்தபோது, இங்கு தாங்க முடியாத அளவிற்கு உஷ்ணம்.... மின்சார வெட்டு என்பது பல மணி நேரங்கள் இருந்தன. ஏவி.எம். கார்டன் தியேட்டரில்தான் அவருக்கு வேலை.

இங்கு வந்து சேர்ந்த அரை மணி நேரத்திற்குள், திலகன் வியர்வையில் குளித்துவிட்டார். நல்ல காற்றை அனுபவிப்போமே என்ற எண்ணத்துடன் நான் வெளியே வந்தேன். இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு நான் திரும்பி வந்தபோது, திலகன் இடுப்பு வரை வேட்டியைக் கட்டிக் கொண்டு முழு வீச்சில் ‘டப்பிங்’கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, முதல் விமானத்தைப் பிடித்து ஊருக்குக் கிளம்பினார். தான் தங்குவதற்கு ஒரு ஹோட்டல் அறையைக் கூட அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு அவரிடம் எளிமை இருந்தது!

அவருடைய முதல் காதலே அவருடைய கார் மீதுதான். கேரளத்திற்குள் நீண்ட தூரம் பயணம் செய்து படப்பிடிப்பிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை எப்போதெல்லாம் உண்டாகிறதோ, அப்போது தானே காரை ஓட்டிக் கொண்டு அங்கு அவர் கிளம்பி விடுவார்.

மிகச் சிறந்த நாடக நடிகராக இருந்ததால், அவருக்கு எந்தச் சமயத்திலும் உரையாடலை ‘ப்ராம்ப்ட்’ செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அந்த ஏற்ற இறக்கங்கள் கொண்ட அருமையான குரல் அவருடைய சொத்தாக இருந்தது. திரையுலகிற்குள் நுழைந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தான் முத்திரை பதிப்பதற்கு மூல காரணமாக இருந்த நாடகம் என்ற ஏணியை அவர் எந்தக் காலத்திலும் மறந்ததில்லை. திலகனுடன் இணைந்து நடிப்பதை ஒரு மிகப் பெரிய கொடுப்பினை என்றே நெடுமுடி வேணு நினைத்தார். ஒரு நாடக நடிகர் என்ற முறையில், அவர் மீது மிகப் பெரிய மரியாதையை வேணு வைத்திருந்தார்.

சென்ற வருட தேசிய விருது குழு ஒரு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு நடிகரை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்த செயலின் மூலம் திலகனின் கனவும் கவலையும் நிறைவேறின. ஃபிலிம்ஃபேர் விருது குழுவும் அதையே பின்பற்றியது.

திலகனுடன் தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர் டாக்டர் ராஜேந்திரபாபு. அவருடைய தந்தை சி.ஜி.கோபிநாத்தின் பீப்புள்ஸ் தியேட்டர்ஸ் நடத்திய ‘அக்னி கோலம்’, ‘குருதி காலம்’, ‘தபஸ்’ போன்ற நாடகங்களில் திலகன் பிரதான நடிகராக இருந்திருக்கிறார். திலகனைப் பற்றி புகழ்வதற்கு ஏராளமான விஷயங்கள் ராஜேந்திரபாபுவிடம் இருக்கின்றன.

மோகன்லால் நடித்த ‘ஸ்படிகம்’, சுரேஷ்கோபி நடித்த ‘யுவ துர்க்கி’ ஆகிய பத்ரன் இயக்கிய இரண்டு திரைப்படங்களுக்கும் ராஜேந்திரபாபுதான் திரைக்கதாசிரியர். தன்னை வளர்த்து விட்டதே திலகன்தான் என்கிறார் அவர். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால், திலகன் தன்னுடைய வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை விஜயா மருத்துவமனைக்குச் சென்றபோது, அவருடன் ராஜேந்திரபாபுவும் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய இதயத்தில் சில தடைகள் இருப்பதை டாக்டர்கள் கவனித்திருக்கிறார்கள். உடனடியாக அவர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதை திலகன் தள்ளிப்போட முயன்றபோது, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். செரியன் ‘சார், உங்களுக்கு நீங்கள் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், உலகமெங்கும் இருக்கும் மலையாளிகளுக்கு நீங்கள் வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகள் இறுதியாக திலகனை அறுவை சிகிச்சையை நோக்கி செல்லும்படி செய்தன. டாக்டர் ராஜேந்திரபாபு அவருடைய படுக்கைக்கு அருகில் இருந்து கொண்டு, உதவியிருக்கிறார்.

திலகன் மரணமடைந்த செய்தி காதில் விழுந்ததும், இயக்குனர் ஹரிஹரன் அழுதுவிட்டார். ‘தென்னிந்திய திரையுலகத்தின் ஆலமரம் சாய்ந்து விட்டதே!’ என்றார் அவர்.

தென்னிந்தியாவின் நான்கு மொழி திரைப்படங்களிலும் திலகன் நடித்திருக்கிறார். அவர் எப்போதும் உரிய நேரத்திற்கு வேலைக்கு வந்துவிடுவார். தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை வாங்குவதில் அவர் மிகவும் கறாராக இருப்பார் என்று பொதுவாக பேசப்பட்டாலும், என்னுடைய எல்லா தயாரிப்புகளிலும் அவர் எந்தச் சமயத்திலும் பணம் விஷயத்தில் அழுத்தம் கொடுத்ததே இல்லை. தன்னுடைய நன்றியை அவர் வெளிப்படுத்தக் கூடிய முறை அதுதான்!

‘பரிணயம்’ படத்தில் வரக் கூடிய பிராமணராக இருந்தாலும், ‘பஞ்சாக்னி’யில் வரும் பத்திரிகையாளராக இருந்தாலும், ‘சர்க்கம்’ படத்தில் வரும் ஆயுர்வேத டாக்டராக இருந்தாலும் – என்னுடைய படங்களில் தான் ஏற்று நடித்த எல்லா கதாபாத்திரங்களுக்கும் திலகன் தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் அளித்திருக்கிறார். சொல்லப்போனால் – ‘பஞ்சாக்னி’ படத்திற்காக அவருக்கு மாநில அரசாங்கத்தின் விருது கிடைத்தது. எனினும், ‘கிரீடம்’ படத்தில் அவர் ஏற்று நடித்த அச்சுதன் நாயர் என்ற போலீஸ் கதாபாத்திரத்திற்காகவும், ‘பெருந்தச்சன்’ படத்தில் அவர் தச்சனாக நடித்ததும் எல்லா காலங்களிலும் எல்லோராலும் நினைக்கப்படும்.

‘சத்ரியன்’ தமிழ் படத்தில் தன் சொந்தக் குரலை அளித்து தன்னுடைய திறமையை திலகன் நிரூபித்திருக்க, தமிழ்த் திரைப்படவுலகம் திலகனின் குரலுக்கு பதிலாக சிறிதும் பொருத்தமற்ற குரல்களைக் கொண்டு திலகனுக்கு ‘டப்’ செய்து, அந்த கதாபாத்திரங்களை பாழ் செய்தது. அவர் செய்த குறிப்பிடத்தக்க தமிழ் படங்கள் – அலிபாபா, மேட்டுக்குடி, நீ வேணும்டா செல்லம், கருப்பு வெள்ளை, அரவிந்தன்.

இந்த சாதனை புரிந்த நடிகரை நடிப்பிலிருந்து சிறிது காலம் விலக்கி வைத்தது தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்குத்தான் இழப்பு! கேரள அரசாங்கம் அவருடைய மருத்துவமனை செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டதுடன், அவரின் இறுதிச் சடங்குகளை அரசாங்க மரியாதையுடன் நடத்தியிருக்கிறது. இக்கட்டான நிலை உண்டானபோது, அரசாங்கம் அவரைத் தாங்கியிருந்தால், திலகன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்.


அன்பு நிறைந்த சிங்கம்

-    நடிகை கவியூர் பொன்னம்மா

தமிழில்: சுரா

பெரியாரின் கரையில் ‘பெரியார்’ என்ற திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் காலம். சுருள் முடிகளைக் கொண்ட அந்த தடிமனான மனிதரை பி.ஜெ.ஆண்டனி அறிமுகப்படுத்தி வைத்தார். உதட்டில் எரிந்து கொண்டிருந்த பீடியின் புகையை மேலே விட்டுக் கொண்டே அவர் கூறினார்; ‘திலகன்...’ நான் வணங்கிவிட்டு, விலகி நின்றேன். பி.ஜெ. ஆண்டனியின் குழுவில் இருக்கக் கூடிய நாடக நடிப்புத் திறமையுடனும், தன்னம்பிக்கையுடனும் வந்து சேர்ந்திருக்கும் நடிகர். யாருடனும் உடனடியாக நெருங்கிப் பழகி விட மாட்டார். பி.ஜெ. ஆண்டனியைப் போலவே ஒரு நாகத்தின் குணம். ஒரு கெட்ட ஜந்துவைப் பார்ப்பதைப் போன்ற பார்வை...  இது என்ன ஜந்து என்று மனதில் தோன்றியது. அந்த திரைப்படத்தில் திலகனின் அன்னையாக நான் நடித்தேன். படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன், அந்த பனிமலை உருக ஆரம்பித்து விட்டது. எங்களுக்கிடையே நட்புணர்வு வளர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஜோடியாக நடிக்க, நிறைய படங்கள் திரைக்கு வந்தன. அதன் முழுமையில், தந்தை என்று நினைக்கும்போது திலகன் அண்ணனும், அம்மா என்று நினைக்கும்போது கவியூர் பொன்னம்மாவும் திரைப்படத்தை உருவாக்குவோரின் மனங்களில் வந்தார்கள்.

நானும் மோகன்லாலும் அம்மாவும் மகனுமாக தோன்றுதைப் போல, திலகன் அண்ணனும் நானும் கணவனும் மனைவியுமாக ரசிகர்களுக்குத் தோன்ற ஆரம்பித்தோம். அப்படிப்பட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போது, மிகப் பெரிய ஒரு கெமிஸ்ட்ரி எங்களுக்கு இடையே வேலை செய்வதுண்டு. அப்படிப்பட்ட காட்சிகளில் இழக்கப்பட்ட அன்பும், பாசமும், கவலைகளும், துன்பங்களும் எங்களுக்கிடையே ஓடிக் கொண்டிருக்கும்.

அனில்பாபுவின் நண்பர்கள் உருவாக்கிய ‘குடும்ப விசேஷம்’ என்ற திரைப்படத்தில் நாங்கள் கணவனும் மனைவியுமாக நடித்தோம். பிள்ளைகளுக்காக வாழ்ந்து, வாழ்க்கையின் இறுதி நாட்களில் உதவிக்கு யாருமே இல்லாமல், தனிமையாக இருக்கக் கூடிய சூழ்நிலை வந்து சேரும்போது, என்னுடைய கதாபாத்திரம் மரணத்தைத் தழுவிவிடும். உதவிக்கு யாருமே இல்லாமல், தன் மனைவியின் இறந்த உடலை படகில் ஏற்றிக் கொண்டு... தனக்குச் சொந்தமான மூன்று சென்ட் நிலத்தில் அவளை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் பயணத்தில்... ஏரியின் தனிமைச் சூழலில் அண்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரம் குலுங்கிக் குலுங்கி அழும் காட்சி இருக்கும். இப்போது கூட அதைப் பார்க்கும்போது, என்னால் கண்ணீரை அடக்க முடியாது. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை திரும்பத் திரும்பச் செய்யும்போது, நடிப்புத் திறமை கொண்டு அதை வெவ்வேறு வகைகளாக ஆக்கக் கூடிய அபார திறமை அவருக்கு இருந்தது. சில நேரங்களில் ரிகர்சல் செய்யும்போது, அதை நமக்கு அவர் வெளிப்படுத்துவார். மிகப் பெரிய திறமைசாலியின் முத்திரை நடிப்பு...

இதற்கிடையில் பல தடவைகள் நாங்கள் சண்டை போட்டிருக்கிறோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, ‘என்னைவிட பொன்னம்மாவுக்கு வயது அதிகம்’ என்று அவர் கூறினார். காரணம்- திலகன் அண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நான் படங்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் கூறியது எனக்கு பிடிக்கவில்லை. ‘நீங்களா என்னைப் பெற்றீர்கள்?’ என்று நான் திருப்பி கேட்டேன். அது திலகன் அண்ணனின் காதில் விழுந்தது. அந்த சண்டை சிறிது காலம் நீடித்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ‘கிரீடம்’ வந்தது. ‘கிரீட’த்தின் கதை விவாதத்தின்போது, திலகன் அண்ணனின் ஜோடியாக நடிப்பதற்கு என்னுடைய பெயரைக் கூறியபோது, அது வேண்டாம் என்று அவர் கூறியிருக்கிறார். இறுதியில் சிபி மலயிலின் கட்டாயத்தால், அந்த வேடம் எனக்குத்தான் கிடைத்தது.

‘கிரீட’த்தின் படப்பிடிப்பு தளத்தில் நான் திலகன் அண்ணன் மீது கொண்ட சண்டையை மனதில் வைத்துக் கொண்டு, விலகியே இருந்தேன். காலையில் இட்லி சாப்பிடக் கூடிய நேரம். தூரத்தில் விலகி உட்கார்ந்திருந்த என்னையே திலகம் அண்ணன் பார்த்தார். நான் பொருட்படுத்தவில்லை. மெதுவாக எனக்கு அருகில் வந்து உட்கார்ந்து, என்னுடைய பாத்திரத்திலிருந்து இட்லியை எடுத்து சாப்பிட்டார். அந்தச் சண்டை அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.

அந்தச் சண்டைக்கு இந்த அளவிற்குத்தான் ஆயுள் இருந்தது. அந்த காரணத்தால்தான்- திலகன் அண்ணன் என்ன கூறினாலும், திரையுலகில் இருப்பவர்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம்- அவர் மலையாள படவுலகத்தின் தலைமகனாக இருந்தார்.

சரீரம் தளர்ந்தபோதும், தளராத மனதை அந்த கலைஞர் கொண்டிருந்தார். பைப்பாஸ் சர்ஜரி முடிந்த பிறகும், தனக்குச் சொந்தமான காரை அவரே ஓட்டிக் கொண்டு நடிப்பதற்காக வருவார். அவருடன் ஒற்றப்பாலத்திலிருந்து, எர்ணாகுளத்திற்கு நான் பயணம் செய்தேன். எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று, அன்று நான் கூப்பிடாத தெய்வங்கள் இல்லை.

யாருக்கு முன்னாலும் தோற்று நின்று கொண்டிருப்பதற்கு அந்த மனதால் முடியவே முடியாது. அதை மிகப் பெரிய குறைபாடாக அவர் நினைத்தார். நல்லதற்காக ஏதாவது கூறினால் கூட, ‘எனக்கு அறிவுரை கூற வர வேண்டாம். புரியுதா?’ என்று திலகன் ஸ்டைலில் பதிலடி கொடுப்பார்.

திலகன் அண்ணனுடன் சேர்ந்து நான் இறுதியாக நடித்த படம் ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘இவிடம் சொர்க்கமாணு.’ அதற்குப் பிறகு சேர்ந்து நடிக்க முடியவில்லை. எனினும், அண்ணன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். என்ன நடக்கிறது என்று விசாரிப்பார்.

சமீபத்தில் என்னுடைய லேண்ட் ஃபோனில் ஒரு ஆள் அழைத்தார். ‘துபாயில் இருந்து அழைக்கிறேன்... உங்களுடைய மிகப் பெரிய ரசிகன்... நேரில் பார்க்க முடியுமா?’ என்று கேட்டார். நான் தயங்கிக் கொண்டு நின்றிருந்தபோது, அந்தப் பக்கத்திலிருந்து முரட்டுத்தனமான சிரிப்புச் சத்தம் கேட்டது. எனக்கு ஆள் யார் என்பது புரிந்துவிட்டது. திலகன் அண்ணன்தான் தன் குரலை மாற்றி வைத்துக் கொண்டு, அழைத்திருக்கிறார். ஆள் யார் என்று தெரியக் கூடாது என்பதற்காக லேண்ட் ஃபோனில் அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஃபோன் அழைப்புகள் அவ்வப்போது வரும். ‘மனைவி நட்சத்திரமே!’ என்பதுதான் அவருடைய ஆரம்ப அழைப்பாக இருக்கும்.

முரட்டுத்தனமான குணத்திற்குப் பின்னால், அவருக்குள் ஒரு சிறிய குழந்தை இருந்தது. அந்த காரணத்தால்- அவரை நெருக்கமாக தெரிந்தவர்களால் எந்தச் சமயத்திலும் வெறுக்க முடியாது. இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால்- கலைஞர்களால் எந்தக் காலத்திலும் கெட்ட மனிதர்களாக ஆக முடியாது- கெட்ட மனிதர்களால் கலைஞர்களாக ஆகவும் முடியாது.

மலையாள சினிமா என்ற ஒன்று இருக்கும் காலம் வரை, திலகன் என்ற நிகரற்ற நடிகரை மறக்கவே முடியாது. அந்த திறமை வாய்ந்த மனிதருக்கு நிகர் வைத்து இன்னொரு நடிகரை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

இப்போதும் லேண்ட் ஃபோனில் அழைப்பு வரும்போது, நான் என்னை மறந்து ஆசைப்படுவேன் - ‘மனைவி நட்சத்திரமே!’  என்று அழைக்கும் குரல் வராதா என்று... குரலை மாற்றி பேசும் அந்த அன்பு கலந்த பேச்சு கேட்காதா என்று... அவை அனைத்தும் இல்லாமல் போய் விட்டனவே என்பதை நினைக்கும்போது...


திரையை நீக்கி வந்த திறமைசாலி

-    இயக்குனர் கெ.ஜி.ஜார்ஜ்

    தமிழில்: சுரா

திலகனை முதல் தடவையாக நான் பார்த்தது அவருடைய சொந்த ஊரான முண்டக்கயத்தில்தான். பார்த்தது மட்டுமல்ல- ‘உள் கடல்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தையும் அளித்தேன். எங்களுடைய உறவின் மிகச் சிறந்த ஒரு ஆரம்பமாக அது இருந்தது.

‘யவனிக’ என்ற திரைப்படத்திற்குப் பிறகு திலகன் என்ற நடிகர் என் மனதில் நீக்க முடியாத ஒரு பிம்பமாக நிலை பெற்று நின்று விட்டார். ‘யவனிக’ படத்திற்கு அடுத்து ஒரு திரைப்படத்தை எடுக்கலாம் என்று நினைத்தபோது, எந்தவித அனுமதியும் கேட்காமலேயே திலகன் என்ற திறமைசாலி மனதின் கதவை அகல திறந்து, வந்து கொண்டிருந்தார். திலகனுக்குப் பொருத்தமான ஒரு வேடம் இருக்கும் பட்சம், அதை அவருக்குத் தராமல் என்னால் படத்தை ஆரம்பிக்கவே முடியாது. திலகன் என்ற மனிதரும் நடிகரும் எனக்கே தெரியாமல் என்னுடைய வாழ்வின் பகுதியாக ஆகிவிட்டார்கள். ஒரு இயக்குனருக்கும் நடிகருக்குமிடையே இருக்கக் கூடிய இரசாயன உறவு எங்களுக்கிடையே பலமாக இருந்தது. ‘உள் கடல்’ படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும், அதற்குப் பிறகு வந்த ‘யவனிக’யில் வக்கச்சன் முதலாளி என்ற கதாபாத்திரம் திலகனின் நடிப்பு வாழ்க்கையின் முக்கிமான ஆரம்பமாக மாறியது என்று நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் அதிகமான புகழைப் பெற்றுத் தந்த படம் ‘லேகயுடெ மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த படம் ‘யவனிக’தான். நாடகத்தையும், நாடகக்காரர்களையும் பார்த்து வளர்ந்தது காரணமாக இருக்க வேண்டும்.

பள்ளிக் கூடத்தில் படிக்கின்ற காலத்தில், நான் சங்ஙனாசேரியில் தங்கியிருந்தேன். வீட்டிற்கு மிகவும் அருகிலேயே பாப்பச்சன் என்பவரின் கீதா தியேட்டர்ஸின் பயிற்சிப் பட்டறை இருந்தது. அவர்கள் நாடகப் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, பார்வையாளனாக நான் போய் அங்கு உட்கார்ந்திருப்பேன். படிப்படியாக அவர்களுடன் சேர்ந்து நானும் எப்போதும் பயணம் செய்தேன். கீதா தியேட்டர்ஸில் திலகன் உறுப்பினராக இருந்தார். ‘யவனிக’யில் திலகன் ஏற்று நடித்த வக்கச்சன் முதலாளி என்ற கதாபாத்திரம், பாப்பச்சனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதே. கிட்டத்தட்ட பதினொரு திரைப்படங்களில் நாங்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றியிருக்கிறோம். ‘உள் கடல்’ படத்தைத் தொடர்ந்து கோலங்கள், பிறகு... யவனிக, லேகயுடெ மரணம் ஒரு ஃப்ளாஷ் பேக், ஆதாமின்றெ வாரியெல்லு, பஞ்சவடிப்பாலம், இரகள், கதைக்குப் பின்னில், மற்றொராள், ஈ கண்ணி கூடி... பிறகு... மிகவும் கடைசியாக செய்த ‘இலவங்கோடு தேசம்’. நான் தயாரித்த ‘மகா நகர’த்திலும் திலகனுக்கு வேடமிருந்தது.

‘கோலங்கள்’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. பிரதான கதாபாத்திரமான அதை திலகனைத் தவிர வேறொரு ஆளிடம் ஒப்படைப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. மது அருந்துவது என்பதை வாழ்வின் ஒரு நிரந்தர அம்சமாகவே ஆக்கிக் கொண்ட அந்த கதாபாத்திரத்தை திலகன் மறக்க முடியாத ஒன்றாக ஆக்கினார். நானும் திலகனும் செய்த அருமையான திரைப்படங்களில் ஒன்று ‘கோலங்கள்’. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது.

தன்னுடைய அபிப்ராயத்தை யாரிடமும் மனம் திறந்து கூறுவதற்கு தயங்காத நடிகர் அவர். யாருடைய முகத்தையும் பார்த்து தன்னுடைய அபிப்ராயம் இதுதான் என்பதைத் தெளிவாக அவர் கூறுவார். யாருடனும் சண்டை போட வேண்டும் என்று அவர் விரும்பியதேயில்லை என்ற உண்மை திலகனை மிகவும் நெருக்கமாக தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். வெள்ளித் திரையில் நாடக மேடையின் திறமையை வெளிப்படுத்திய நடிகராக திலகன் இருந்தார். நடிப்பு விஷயத்தில் நாடகத் துறையின் அடிப்படை அம்சங்களை சிறந்த முறையில் கொண்டிருந்த நடிகர்... அவருடைய நடிப்பும் வசனத்தைப் பேசும் முறையும் மிகவும் பண்பட்டவையாக இருந்தன. அதன் மொத்தம்தான்- அந்த நடிகரின் மகத்துவம்...


மலையாள சினிமாவின் திலகம்   

-    மதுராஜ் (பத்திரிகையாளர்)

 தமிழில்: சுரா

டப்பிடிப்பு நடந்த இடம் – குட்டிக்கானம். புதிய இயக்குனரான ஸோஹன்லாலின் ‘ஓர்க்குக வல்லப்போழும்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு. திலகனும் நடிகர் ஜெகதீஷும் சேர்ந்து நடிக்கும் ஒரு காம்பினேஷன் காட்சிக்கான ஆயத்தம் அந்த உயரமான மலைப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெளிவாக இருந்த வானத்திற்குக் கீழே குட்டிக்கானத்தின் குளிர்ச்சியான அதிகாலைப் பொழுது. மலைப் பகுதியில் இருந்த புல்வெளியில் பிரகாசித்துக் கொண்டிருந்த வெயில். இடையில் சூரியனை மறைத்துக் கொண்டிருந்த மேகங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ‘பளீர்’ என்று இருந்த ஒரு நாள். 2008 செப்டெம்பர் 23. திலகன் என்ற மலையாளத்தில் இணை வைத்து கூறுவதற்கு யாருமே இல்லாத மிகப் பெரிய நடிகரை மிகவும் நெருக்கமாக பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம்...

காப்பி நிறத்திலிருந்த புள்ளிகள் போட்ட லுங்கியை அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த திலகனின் முகத்தில் சாயம் தேய்க்கும் ஒப்பனையாளர். அருகில் குடையைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் உதவியாளரான பெண். ஒப்பனையின் சுகமான இன்பத்தில் கண்களை மூடிக்கொண்டு அவர் அமர்ந்திருந்தார். களைப்பிலிரூந்து விடுபட்டு கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு தனக்குத்தானே ஒரு லாஸ்ட் டச்... தொடர்ந்து சிவப்பு நிற சட்டைக்கும் கறுப்பு நிற பேன்ட்டிற்கும் ஆடை மாற்றம்... கையில் தங்க நிறத்திலிருந்த கைக்கடிகாரம், ஊன்றுகோல் – 70 வயது நிறைந்த சேதுமாதவன் தயார். மிகப் பெரிய நகரத்திலிருந்து ஹை ரேஞ்ச்சில் தன்னுடைய நினைவுகள் தங்கியிருக்கும் மலைப் பகுதிக்கு பல மணி நேரங்கள் பயணம் செய்து அவர் வந்து சேர்ந்திருக்கிறார். இப்போது தன்னுடைய நாற்காலியில் தனி மனிதனாக அமர்ந்திருக்கும் சேதுமாதவன் முன்னால்... கதாபாத்திரமான சேதுமாதவனாக ஆவதற்கு முன்னால், திலகன் என்ற நடிகரிலிருந்து முக்தி தேடி ஒரு திரிசங்கு உலகத்தில்... ஒப்பனைக் கலைஞரின் குடையின் நிழலில்... சேதுமாதவனின் கொஞ்சம் முக வெளிப்பாடுகளை என்னுடைய கேமராவில் படம் பிடித்தேன்.

காம்பினேஷன் காட்சிக்கான நேரம் வந்தது. ஊன்று கோலை ஊன்றியவாறு, இன்னொரு மனிதரின் உதவியுடன் சிறிது தூரம் நடந்தார். முன்னால் – மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமான தோற்றம்! பனியின் குளிர்ச்சியில் தூக்கத்தை விட்டு கண் விழித்திராத அடிவாரம்... சிறிது நேரம் அந்த அழகை அனுபவித்துக் கொண்டே அந்த இடத்தில் உட்கார்ந்தார் திலகன். இதற்கிடையில் தன்னுடைய ‘பேக்’கிற்குள்ளிருந்த கேமராவைக் கொண்டு வரச் செய்து, இயற்கையின் அழகை படம் பிடித்தார். பிறகு... இன்னொரு சூழ்நிலையில் ஃபோட்டோகிராபியுடன் தனக்கு இருக்கும் உறவைப் பற்றி அவர் கூறிய விஷயங்களை நினைத்துப் பார்க்கிறேன். மூணாரிலிருந்து ஷொர்னூருக்கு ஒரு முறை பயணம் செய்தபோது நடைபெற்ற சம்பவம் அது. ‘சித்ரபூமி’யின் சக பத்திரிகையாளரான ப்ரதீஷ் அப்போது என்னுடன் இருந்தார். நாடகத்தையும், ஃபோட்டோகிராபியையும் தலைக்குள் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பால்ய காலத்தைப் பற்றி அவர் நீண்ட நேரம் கூறிக் கொண்டிருந்தார். பயன்படுத்திய பழைய காலத்தைச் சேர்ந்த பல வகையான கேமராக்களைப் பற்றி... வீட்டில் சொந்தமாக ஒரு டார்க் ரூம் உண்டாக்கி, தான் எடுத்த ப்ளாக் அண்ட் வைட் புகைப் படங்களை தானே ப்ரிண்ட் போட்டதைப் பற்றி... இப்போதும் ஃபோட்டோகிராபியில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதைப் பற்றி... ஆல்பத்தில் பழைய நண்பர்களைப் போல புரண்டு கொண்டிருக்கும் பழைய நினைவுகள்...

கேமராவும் வெளிச்சமும் தயாராகி விட்டன. சென்னையிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருக்கும் சேதுமாதவன் கேமராவிற்கு முன்னால் இதோ... வந்து நின்று கொண்டிருக்கிறார். மலை உச்சியில் முக்காலியில் வைக்கப்பட்டிருந்த கேமரா தன்னுடைய செல்லுலாய்டில் திலகன் என்ற மிகப் பெரிய நடிகரின் மூச்சு பதிந்த சேதுமாதவனை வேட்கையுடன் படம் பிடித்தது... மலையாளத்தின், மலையாளியின் சக்தி....


திலகனின் குரல் மிடுக்கு          

-பி.ஆர்.நாதன் (எழுத்தாளர், திரைப்பட கதை- வசனகர்த்தா)

தமிழில்: சுரா

முப்பத்தாறு வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்திலிருந்த அமிர்தா ஹோட்டலின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தபோது, பத்மராஜன் சிரித்துக் கொண்டே அருகில் வந்தார். அவருடன் கறுத்து, உயரம் குறைவான ஒரு நடுத்தர வயது மனிதர் இருந்தார். அவருடைய தோளில் தட்டிக் கொண்டே பத்மராஜன் அறிமுகப்படுத்தி வைத்தார்: ‘என்னுடைய நண்பர்... திலகன்... நாடக நடிகர்.’

நான் நாடகங்களில் திலகனைப் பார்த்திருக்கிறேன். சில திரைப் படங்களிலும் அந்தச் சமயத்தில் திலகன் தன் முகத்தைக் காட்டியிருந்தார். திலகனின் வசனம் பேசும் முறை அசாதாரணமானது. பார்த்த நிமிடத்திலேயே அவர் என்னிடம் கூறினார்: ‘நான் இப்போது ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். முப்பத்து மூன்று காட்சிகள் எழுதி முடித்து விட்டேன். உங்களுடைய ‘ஸ்வப்னங்கள் வில்க்குன்ன கச்சவடக்காரன்’ என்ற புதினம்தான் அதற்கு அடிப்படை’. நாவலை எழுதிய ஆசிரியரைச் சந்தித்துப் பேசாமலேயே, திரைக்கதை எழுத ஆரம்பித்திருந்த தைரியத்தை நான் மனதிற்குள் பாராட்டிக் கொண்டேன். அது ஒரு பலமான நட்பிற்கான ஆரம்பமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

என்னைப் பொறுத்த வரையில் திலகன் மிகவும் மரியாதைக்குரிய ஒரு நண்பர். கூற வேண்டியதை முகத்தைப் பார்த்து கூறுவார். இறுதியாக பார்த்தபோது கூட அவருடைய குணம் அதுவாகத்தான் இருந்தது. மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறுவார். வருத்தப்படுபவர்கள் வருத்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு ஒரு மிகப் பெரிய கலாரசனை கொண்ட இதயம் இருந்தது. நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘த்வனி’ என்ற திரைப் படத்தில் திலகன் ஏற்று நடித்த கதாபாத்திரம்கூட அப்படிப்பட்டதாகத்தான் இருந்தது. திரைக்கதையை எழுதும்போதே அரசியல்வாதியான வெட்டுக்குழி என்ற கதாபாத்திரத்தை திலகன்தான் செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றியது. ப்ரேம் நஸீரின் இறுதி படமாக ‘த்வனி’ அமைந்தது.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் நாங்கள் தமாஷாக என்னவோ பேசிக் கொண்டிருந்தோம். நஸீரும், அப்படத்தின் தயாரிப்பாளரான மஞ்ஞளாங்குழி அலியும் அங்கே இருந்தார்கள். திடீரென்று இயக்குனர் அபு அறைக்குள் வந்தார். அபுவைப் பார்த்ததும், திலகன் மிடுக்கான குரலில் கூறினார்: ‘நாளை படம் பிடிக்கப் போகும் காட்சிகளுக்கான ஸ்க்ரிப்டை நான் சற்று பார்க்க வேண்டும்.’

திலகன் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்தார். வசனத்தில் சிறிய ஒரு மாறுதல் உண்டாக்கினால் என்ன என்று அவர் அன்புடன் என்னிடம் கேட்டார். அப்படிப்பட்ட ஒரு ரீதிதான் திலகனுக்கு ஏற்றதாக இருக்கும். எந்த கதாபாத்திரத்தையும் மிகவும் அருமையாக ஏற்று நடிப்பார். தன்னம்பிக்கை நிறைந்த அவருடைய பேச்சைக் கேட்டு ப்ரேம் நஸீர் புன்னகைத்துக் கொண்டிருந்த நிமிடங்களை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஏராளமான நாடகங்களில் வேடமிட்டு நடித்த திலகன் படவுலகத்தின் தவிர்க்க முடியாத மனிதராக ஆனார். ‘பெருந்தச்சன்’ திரைப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை, கலைத் தன்மை கொண்ட இதயம் கொண்டவர்களால் மறக்கவே முடியாது. எதைச் செய்தாலும், சிறப்பாகச் செய்வது... அதுதான் திலகன். மிகவும் அருமையாக நகைச்சுவை வேடங்களையும் திலகன் ஏற்று நடித்தார்.

உடல் ரீதியாக திலகன் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சூழ்நிலை... பல வருடங்களுக்கு முன்பு தான் திரைக்கதை எழுதி வைத்த புத்தகத்தின் ஒரு பிரதி வேண்டும் என்பது அவருடைய ஆசை... என்னுடைய நூல்களில் காலாவதியாகிப் போன ஒன்று என்று நான் நினைத்துக் கொண்டிருந்த ஒரே நாவல் அதுதான். அந்த நூலில் வரும் பின்புலம் இப்போது சிறிதும் சரியாக இருக்காது என்று நான் கூறிப் பார்த்தேன். நூலின் ஒரு பிரதி வேண்டும் என்று திலகன் உறுதியான குரலில் கூறினார். கை வசமிருந்த ஒரே ஒரு பிரதியை அவரிடம் தந்தால் சரியாக இருக்காது என்றேன் நான். பல நூல்கள் அந்த மாதிரி காணாமல் போயிருக்கின்றன. பிறகு திலகனின் மகன் ஷம்மி திலகன் என்னை அழைத்தார். நான் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அசாதாரணமான பண்பாட்டினை அவர் வெளிப்படுத்தினார். புத்தகத்தை ‘ஃபோட்டோஸ்டாட்’ எடுத்துவிட்டு, அதை அழகாக பைண்ட் செய்து எனக்கு அன்புடன் திருப்பி அனுப்பி வைத்தார். அந்த மிகப் பெரிய கலைஞர் வார்த்தை தவறாத நாகரீகம் உள்ள மனிதராக இருந்தார். தன்னிடம் வார்த்தை தவறியவர்களை திட்டக்கூடிய தைரியத்தை அவர் வெளிப்படையாக காட்டவும் செய்திருக்கிறார்.

திலகனின் வாசிக்கும் பழக்கமும், வெளிப்படையாக பேசக்கூடிய முறையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இறுதியாக பார்க்கும்போதுகூட சிறிதும் குறையாத தன்னம்பிக்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இணையாக கூறுவதற்கு இன்னொரு ஆள் இல்லை என்ற எண்ணம் உண்டாகும் அளவிற்கு கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு திலகனால் முடிந்தது. திலகன் திரைக்கதை எழுதிய (அதை முழுமை செய்துவிட்டாரா என்று நான் கேட்கவில்லை) நாவலில் வரும் பிரதான கதாபாத்திரம் யாருக்கும் பயப்படாத ஒரு மனிதன்... துணிச்சல் நிறைந்தவன்... அதே நேரத்தில் – கருணை உள்ளவன். ஒத்துவராத சூழ்நிலைகளுக்கு எதிராக போராடிய மனிதன்... ஒரு அர்த்தத்தில் பார்க்கப் போனால் – திலகனின் வாழ்வும் அப்படித்தான் இருந்தது என்றே கூறலாம். அந்த குரல் மிடுக்கை மலையாளிகள் மறக்கவே மாட்டார்கள்.


திலகன் கண்களில் கண்ணீர்... என் கண்களிலும்தான்...

-பல்லாவூர் உண்ணிக்கிருஷ்ணன் (பத்திரிகையாளர்)

தமிழில்: சுரா

ருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு –

‘சூப்பர் ஸ்டார்’ மாதமிருமுறை வரக் கூடிய சினிமா பத்திரிகை பிரசுரம் சம்பந்தமாக எர்ணாகுளம் லூஸியா ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது, நான் என் மனதில் திட்டமிட்டிருந்தேன் – கார் விபத்தில் காயம் ஏற்பட்டு சிட்டி மருத்துவமனையில் படுத்திருந்த திலகன் அண்ணனை ‘ஏதாவது வகையில்’ ஒரு முறை போய் பார்க்க வேண்டும் என்று. ‘ஏதாவது வகையில்’ என்ற வார்த்தைக்கு எண்பதுகளில் முக்கியத்துவம் இருந்தது.

அன்று ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நண்பர்கள் எல்லோரும் திலகன் அண்ணனை போய் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய தீர்மானத்தை எதிர்த்தார்கள். நேர்காணலுக்காகச் சென்ற ஒரு மிகப் பெரிய பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளரையே அவர் அவமானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டார் என்று ஒரு நண்பர் கூறினார். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சில சினிமா பத்திரிகையாளர்கள் திலகனைப் படவுலகத்திலிருந்து ‘அவுட் ஆக்குவோம்’ என்று கூட அறிவித்தார்கள்.

ஒரு பத்திரிகை நிருபர் இந்த மாதிரி கூறி விட்டார் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பத்திரிகை துறையில் பணியாற்றக் கூடிய எல்லோரிடமும் பகையை வெளிப்படுத்த வேண்டுமா? இந்த ஒரே ஒரு கேள்வியைத்தான் நான் திலகன் அண்ணனை நேரில் பார்த்து கேட்க வேண்டுமென்று நினைத்தேன்.

நண்பர்கள் வெளியே சென்ற பிறகு, நான் ஹோட்டலின் வரவேற்பறையிலிருந்து மருத்துவமனைக்கு ஃபோன் பண்ணினேன். அறையில் திலகனின் மகன் ஷம்மியின் குரல்... ரிஸீவர் திலகன் அண்ணனின் கைக்கு மாறியது.

‘ஹலோ... நான் ‘சூப்பர் ஸ்டார்’ மாதமிருமுறை வரக் கூடிய பத்திரிகையிலிருந்து பேசுகிறேன். எப்போது நேரில் பார்க்கலாம்?’

‘வெல்கம்... நாளை மதியம் இரண்டு மணிக்கு...’

சந்தோஷத்தில் என்னால் மூச்சு விடவே முடியவில்லை. எனினும், ஒரு பதைபதைப்பு...

மறுநாள் சரியாக இரண்டரை மணிக்கு சிட்டி மருத்துவமனையை அடைந்தேன். வடக்கு மூலையில் இருந்தது 208 என்ற எண்ணைக் கொண்ட அறை. டாக்டரும் நர்ஸும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

தங்களுக்கு மிகவும் விருப்பமான நடிகரை வெளியில் இருந்தாவது பார்க்க முடிகிறதே என்று நின்று கொண்டிருந்தவர்கள்... கதவின் இடைவெளி வழியாக விசிட்டிங் கார்டை ஷம்மி திலகனின் கையில் கொடுத்தேன். சிறிது நேரம் கூட ஆகவில்லை. ஷம்மி கதவைத் திறந்து அறைக்குள் வரும்படி கூறினார். அறையின் வடக்கு பகுதியில் சுவருடன் சேர்த்து போடப்பட்டிருந்த கட்டிலில் கிழக்கு திசை நோக்கி தலையை வைத்து படுத்திருந்தார் திலகன் அண்ணன். உதட்டில் புன்னகை... கண்களுக்கு முன்னால் விசிட்டிங் கார்ட்...

‘நான் பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதில்லை என்ற விஷயம் தெரியுமல்லவா? சூப்பர் பிலிம் இண்டர்நேஷனலைச் சேர்ந்த ஆட்கள் அட்வான்ஸ் பணத்துடன் இங்கு வருவதாக கூறியிருந்தார்கள். அவர்கள்தான் வருகிறார்கள் என்று நினைத்தேன். ஸாரி...’

‘பேட்டி எடுப்பதற்காக வரவில்லை. எல்லா விஷயங்களும் மற்ற எல்லாரையும் விட எனக்கு மிகவும் நன்றாக தெரியும். ‘நிர்மால்யம்’ திரைப்படத்தில் வரும் வெளிச்சப்பாடைப்போல மனதில் நிறைந்து நிற்கும் திலகன் அண்ணனிடம் என்னுடைய இந்த கேள்வியைக் கேட்கவில்லை. ‘பஞ்சாக்னி’யில் வரும் ராமேட்டனிடம்தான்...’- ஒரு நிமிடம் நான் நிறுத்தினேன்.

‘பஞ்சாக்னி’யில் வரும் ராமேட்டன்...

அவருடைய கண்கள் நிறைந்து விட்டன. என்னுடைய கண்களும்...

‘ஷம்மி... அந்த நாற்காலியை இங்கே இழுத்துப் போடு...

மிகவும் அருகில் அமர்ந்தவுடன், இருவரும் மனதிலிருந்த கவலையின் சுமையைக் குறைத்தோம்.

‘உண்ணீ... என் குருநாதர் பி.ஜெ.ஆண்டனி ‘பெரியார்’ என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தைத் தந்த பிறகு, பதினேழு வருடங்களுக்குப் பிறகுதான் நான் மீண்டும் திரைப் படத்திலேயே நடித்தேன். பத்திரிகையாளர்களுக்கு மதுவையும் பெண்ணையும் கொடுத்து, பலரும் படவுலகிற்குள் நுழையவில்லையா? நான் என்னுடைய திறமைகளை வைத்து வளர்ந்தவன். பத்திரிகை நிருபர் என்ற மேலாடையை அணிந்து கொண்டு ஒருவன் மிரட்டினால், அதை நான் கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருக்க மாட்டேன். இப்போது நீங்கள் குறிப்பிட்டதைப் போல, அந்த நிழல் யுத்தத்தில் வேறு யாரையும் நான் கவனிக்கவில்லை. என் பக்கம் இருந்த தவறை யாரும் தைரியத்துடன் சுட்டிக் காட்டவில்லை. இல்லை... இனி எந்தச் சமயத்திலும் மற்ற பத்திரிகையாளர்களை அந்த ஆளைப் போல நினைக்க மாட்டேன்.’

ராமேட்டன் மீது என்னைவிட என் தந்தைக்குத்தான் விருப்பம் அதிகம். ஆர்.எஸ்.பி. கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், அவருக்கென ஒதுக்கப்பட்ட அமைச்சர் பதவியையே வேண்டாம் என்று கூறிவிட்டு, பத்திரிகைத் துறையில் உறுதியாக காலூன்றி நின்ற முகுந்தன் மேனனின் மகன் நான் என்ற விஷயமே அப்போதுதான் அவருக்குத் தெரியும். ‘சமதா’வின் பத்திரிகை ஆசிரியராக இருந்த ஏரூர் வாசுதேவும், பி.ஜெ.ஆண்டனியும், வயலார் ராமவர்மாவும், மலயாற்றூர் ராமகிருஷ்ணனும், என் தந்தையும் சேர்ந்த நண்பர்களின் கூட்டங்கள் தன்னுடைய மனதில் கடந்து சென்றபோது, அவர்களைப் பார்த்து வளர்ந்த மகனின் கவலைச் சுமையை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘நடிகர் திலகனிடம் அல்ல... ‘பஞ்சாக்னி’யின் ராமேட்டனிடம்...’ என்ற தலைப்புடன் பிரகரமான ‘சூப்பர் ஸ்டார்’ இதழை திலகன் அண்ணனிடம் கொடுப்பதற்காக ஜோசப் பெருமாலியையும் அழைத்துக் கொண்டு நான் சென்றேன்.

மிகுந்த சந்தோஷத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெறும்போது, திலகன் அண்ணன் கூறினார்: ‘நான் எந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்தாலும், அங்கு வந்து பார்க்க வேண்டும்.’ இருவரின் கண்களிலும் கண்ணீர் நிறைந்து விட்டது. இதோ... அந்த மிகப் பெரிய புகழைச் சம்பாதித்த மனிதர் பயணமாகியிருக்கிறார் – அரங்கத்திலிருந்து. ஆனால்...


இந்த அழகான கரையில் தருவாயா இனியொரு பிறவியை...?

சுரேந்திரநாத திலகன் 1935 – 2012

தமிழில்: சுரா


இனியொரு பிறவி இருந்தால்...

நன்றி: ‘நானா’ வார இதழ்

தமிழில் : சுரா

பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார் தயாரித்து, டாக்டர் சந்தோஷ் செளபர்ணிகா இயக்கும் ‘அர்த்தநாரி’ என்ற திரைப்படம். அரவாணிகளைப் பற்றி எடுக்கப்படும் கதை. இந்த படத்தில் நடிகர் திலகன் ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் பெயர் நாயக். அரவாணிகளின் தலைவி என்பதுதான் அந்த கதாபாத்திரத்தின் இன்னொரு சிறப்பு.

பட்டணம் ரஷீத்தின் ஒப்பனையில் திலகனை அரவாணியாக ஆக்கியிருக்கிறார்கள். கூந்தலை அள்ளி முடித்து, தலை முடியில் பூ சூடி, புடவை அணிந்து வரும் ஒரு பெண் வேடம்... கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே, தென்காசியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்தில் இருக்கும்போது திலகன் சொன்னார்: `ஜகதி ஸ்ரீகுமாரும் மற்றவர்களும் பல திரைப் படங்களிலும் பெண் வேடமிட்டு நடிக்கும்போது, அதே மாதிரி ஒரு கதாபாத்திரத்தைச் செய்ய வேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். இந்த திரைப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது.’

அரவாணிகளின் கதை கூறும் இந்த திரைப் படத்திற்காக கதாசிரியரும் இயக்குனருமான சந்தோஷ் இப்படி ஒரு வசனத்தை தான் எதற்காக எழுதினோம் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறார்.

‘இனியொரு பிறவி இருந்தால், முழுமையான ஒரு பெண்ணாக பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.’

திலகனின் கலையுலகப் பயணத்தில், அவர் இறுதியாக பேசிய வசனம் இதுதான்.


திலகன்: நடிப்புக் கலையின் தலைமைச் சிற்பி

நன்றி : ‘நானா’ வார இதழ்

தமிழில் : சுரா

த்தாலியின் ‘மறுமலர்ச்சி காலம்’ மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை, நினைவில் நின்று கொண்டிருக்கக் கூடிய ஒன்று. மைக்கேல் ஆஞ்சலோ, லியானார்டோ டா வின்ஸி, ரூபன் ஆகியோர் வாழ்ந்த காலமது. தலைமுறைகள் எவ்வளவோ மாறி வந்து விட்டாலும், ‘மறுமலர்ச்சி காலம்’ உண்டாக்கிய உயர்வான வெளிச்சத்தைப் பரப்பும் கோபுரம், இப்போதும் ஒளியைத் தந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு உன்னதம் நிறைந்த, மிகச் சிறந்த காலகட்டமாக அது இருந்தது.

மலையாளிகளின் சினிமா வரலாற்றிலும் அப்படிப்பட்ட ஒரு காலகட்டம் இருந்தது. எழுபதுகளில் ஆரம்பித்து, எண்பதுகளில் வளர்ந்து, தொண்ணூறுகளில் இந்திய திரையுலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய தன்மைகள் கொண்ட அடையாளங்களாக மாறிய, ஏராளமான திரைப் படங்களும் புதிய அம்சங்களும் பிறந்து கலாச்சாரப் புரட்சியாக மாறிய காலகட்டம் அது. மிகச் சிறந்த திறமைகளைக் கொண்ட பல இயக்குனர்களையும், பல நடிகர் – நடிகைகளையும் அந்த காலகட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகத் தரம் கொண்டவர்களாக இருந்தார்கள். உலகத்தில் உள்ள எந்த நடிகருடனும் இணையாக நிற்கக் கூடிய திறமை கொண்ட நட்சத்திரங்கள் இந்தச் சிறிய கேரளத்தில் உருவானார்கள். திறமை கொண்ட நிறை குடங்களாக அவர்கள் இருந்தார்கள். அந்த நடிகர்களின் கூட்டத்தில் என்றைக்கும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய மனிதராக திலகன் இருந்தார். நடிப்பதற்காக மட்டுமே பூமியில் பிறந்த ஒரு தனி மனிதன்... ஆட்களின் கூட்டத்தில் தனியாக நடந்து சென்ற மனிதர்... கலை, சொந்த வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை – எதற்கு முன்னாலும் எந்தச் சமயத்திலும் கீழ்ப்படியாத கறாரான மனிதர்...

சிற்பத்தின் அழகை மனதிற்குள் உருவாக்கிக் கொண்டு நடந்த மிகப் பெரிய சிற்பியான பெருந்தச்சனையும், கனவுகளை மனதில் நிறைத்துக் கொண்டு புதிய தலைமுறையின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ‘கிரீட’த்தின் போலீஸ்காரனான தந்தையையும், அன்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் கண்டிப்பு நிறைந்த முள் முனைகளை மட்டுமே வெளியே காட்டும் ‘ஸ்ஃபடிக’த்தின் ஆசிரியரையும் மறக்க முடியாத மனிதர்களாக ஆக்கி, நடிப்புக் கலையின் ஆழம் என்ன என்பதை நமக்கு உணர்த்திய நடிகராக இருந்தார் திலகன்.

நாடகம் அவருடைய உயிராக இருந்தது. வாழ்வே நாடகமாக இருந்தது என்று கூறினாலும், தவறல்ல. நாடக அரங்கின் பல சோதனைகளும் பயிற்சிகளும் பிறந்த போதிலிருந்தே இருந்த ரசனைகளுடன் ஒன்று சேர்ந்தபோது, திலகன் என்ற அசாதாரணமான திறமைசாலி உருவானார்.

ஒரு நடிகருக்கு இருக்க வேண்டிய எல்லாவித தகுதிகளும் திலகனிடம் இருந்தன. எந்த விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்றக் கூடிய உணர்ச்சிகள் நிறைந்த தைரியம் அவரிடம் முக்கியமாக இருந்தது. ஒரு வகையில் அது ஒரு தார்மிக கோபமாகவே அவரிடம் குடி கொண்டிருந்தது என்றே கூறலாம். பிறகு... கொடை என்று கூறும் அளவிற்கு இருந்த அவருடைய குரல்... தனியாக அது விலகி நின்றது. அத்துடன் தனித்துவம் நிறைந்த அசைவுகள்... எப்படிப்பட்ட அசைவுகளையும் எந்த உணர்வுகளையும் அனாயாசமாக வெளிப்படுத்தக் கூடிய முகம்... குரலைக் கட்டுக்குள் வைத்திருப்பதிலும், அசைவில் அனாயாச தன்மையை வெளிப்படுத்துவதிலும் ஒரு ‘திலகன் டச்’ இருக்கவே செய்தது. ஒரு புருவத்தின் அசைவில் கூட உணர்ச்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நாடக அரங்கிலிருந்து பெற்ற அந்த அனுபவங்கள், பிற்காலத்தில் கதாபாத்திரங்களுடன் நூறு சதவிகிதம் ஒன்றிச் செல்வதற்கு திலகனுக்கு உதவின. போலீஸ்காரனாக ஆனபோதும், சிற்பியாக ஆன போதும், தாத்தாவாக ஆன போதும், ஆசிரியராக ஆனபோதும், அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் ஆனபோதும் நாம் கதாபாத்திரங்களை மட்டுமே பார்த்தோம். திலகனின் நடிப்புத் திறமை ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதை நாம் பார்க்கலாம்.

முதல் வகுப்பில் படித்தபோது மேடையில் ஏறிய திலகனின் நடிப்புத் திறமையின் பிரகாசத்தை சமீபத்தில் திரைக்கு வந்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ வரை நம்மால் பார்க்க முடிந்தது. ஒரு கிராமத்தின் கள்ளங்கபடமற்ற தன்மையிலிருந்து நடிப்புப் பாடத்தைப் படித்து, மேற்படிப்பிற்கு கொல்லம் எஸ்.என். கல்லூரியை அடைந்தபோது, திலகனுக்கு முன்னால் புதிய ஒரு உலகம் திறந்தது. அரசியல், நடிப்பு ஆகியவை அங்கு படிக்கக் கூடிய விஷயங்களாக இருந்தன. அன்று சுரேந்திரநாத திலகனாக இருந்த மனிதர் ‘திலக’னாக மாறியது நாடகங்களில் தீவிரமாக ஈடுபட்டபோதுதான்... கேரளத்தின் பெரும்பாலான நாடக கம்பெனிகளிலும் திலகன் நடிகராகவும் இயக்குனராகவும் செயலாற்றியிருக்கிறார். ஆயிரக்கணக்கான மேடைகளில் நடித்து கலக்கிய திலகன் முதல் தடவையாக படவுலகிற்கு வந்தது பி.ஜெ.ஆண்டனியின் ‘பெரியார்’ திரைப் படத்தின் மூலம்தான். தொடர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் மாறுபட்ட தன்மைகளும் முத்திரைத் தன்மைகளும் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் இதயங்களில் அடையாளங்களாக மாறின. அபூர்வ கதாபாத்திரங்களின் பிறப்பு... அங்கீகாரங்கள் ஒவ்வொன்றாக தேடி வந்தன. தாமதமாக நடந்தது என்றாலும், திலகனிடமிருந்த நடிப்புத் திறமையை உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தெரிந்து கொண்டார்கள். 1988ஆம் ஆண்டில் ‘ருதுபேதம்’ படத்தின் மூலம் சிறந்த துணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் (தேசிய விருது). ‘ஏகாந்தம்’ திரைப்படம், தேசிய விருது குழுவினரின் சிறப்பு பாராட்டிற்கு வழி வகுத்தது. 1990, 1994 வருடங்களில் சிறந்த நடிகருக்கான மாநில விருதுகள் கிடைத்தன. மாநில அரசாங்கம் அளிக்கும் சிறந்த இரண்டாவது நடிகருக்கான விருதை ஏழு முறைகள் பெற்றிருக்கிறார். 2005ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனைகளுக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்தது. 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது அளித்து அவருக்குச் சிறப்பு சேர்த்தது.

விவாதங்களின் நண்பனாக இருந்தாலும், திலகன் மலையாளிகளின் எல்லா காலங்களிலும் விரும்பக் கூடிய நடிகராக இருந்தார். எதற்கும் பயப்படாத அந்த ‘தான் என்ற எண்ணம்’ அந்த நடிகரின் தனித்துவ குணத்தின் சிறப்பைக் குறைத்துவிடவில்லை. எனினும், நோய் அவரை ஆக்கிரமிக்க ஆரம்பித்து சில நாட்கள் ஆகிவிட்டன. நோயுடன் பலமாக போராடினார் என்றாலும், முழுமையாக மருத்துவமனை படுக்கையில் போய் விழுந்தது செப்டெம்பர் 22ஆம் தேதிதான். எதனிடமும் தோல்வியைச் சந்திக்காத திலகன் இறுதியில் இயற்கையின் செயலுக்கு அடி பணிய வேண்டி வந்தது. அந்த மிகப் பெரிய கலைஞன் தன்னுடைய அழியாத முத்திரைகளை இருக்கச் செய்துவிட்டு, என்றென்றைக்குமாக விடைபெற்றுக் கொண்டார்.

அந்த பதிவுகள் ஒவ்வொரு மலையாளியின் மனதிலும் எந்தக் காலத்திலும் சிறிதும் மறையாமல் நிலை பெற்று நின்றிருக்கும்.

காலம் எவ்வளவு கடந்து சென்றாலும், அதை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு யாராலும் முடியாது. பெயர் என்ற அளவில் திலகன் ஒரு திறமைமிக்க நடிகராக இருந்தார். அந்த நினைவிற்கு முன்னால் துக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் உறவினர்களும் நண்பர்களும் திரைப்பட அபிமானிகளும் இருக்கிறார்கள். எவ்வளவு அழித்தாலும், அழியாத நினைவுகளைத் தந்து விட்டுச் சென்ற அந்த மகத்தான கலைஞனைப் பற்றிய நினைவிற்கு முன்னால் கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் எல்லோருடைய துக்கங்களையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடன் நாங்களும் அந்த துக்கத்தில் பங்கு கொண்டு, தலை குனிந்து நிற்கிறோம்.


கேமராவிற்கு முன்னால் நடிப்புப் போட்டி

-இயக்குனர் டி.கெ.ராஜீவ்குமார்

தமிழில் : சுரா

‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ என்ற திரைப் படத்தில் நடிப்பதற்காக வந்தபோது, திலகன் அண்ணன் ஒரே ஒரு விருப்பத்தை மட்டும் என்னிடம் வெளியிட்டார். அவருக்கு இதய சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், அதை காரணம் காட்டி ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவர் கேட்கவில்லை.

‘ராஜீவ் குமார், அதிகாலை நான்கு மணிக்கு வந்துவிட வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டாலும், நான் வருவேன். ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் எனக்கு உறுதிமொழி தர வேண்டும். நான் இல்லாதபோது மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியைக் கூட எடுக்கக் கூடாது. அந்த பெண் நடிப்பதை நான் பார்க்க வேண்டும்’- அவர் கூறினார்.

‘அது என்ன அண்ணே? நீங்கள் வரும்போது, நாங்கள் ஒன்றோ இரண்டோ ஷாட்கள் மட்டுமே பாக்கி வைத்திருந்தால்தானே உங்களுக்கு எளிதாக இருக்கும்?’ – நான் கேட்டேன்.

‘அந்தப் பெண் டேஞ்சரஸ் ஆக்ட்ரஸ். அந்தப் பெண்ணுக்கு முன்னால் நாம் தோற்று விடக் கூடாது. நான் பயப்படக் கூடிய ஒரு நடிகை – மஞ்சு. சில நேரங்களில் நாம் சிறிதும் எதிர்பாராத தளத்திற்கு அந்தப் பெண் உயரச் சென்று நடித்து விடுவாள்.’

அதுதான் திலகன். ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், தன்னுடன் சேர்ந்து நடிப்பவர்களைவிட சிறப்பான முறையில் அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் அவருக்கு இருந்தது. அதற்காக தன்னுடன் நடிப்பவர்களை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். அதையும் தாண்டி செல்ல வேண்டுமென்று முயற்சி செய்வார்.

முதல் திரைப் படமான ‘சாணக்ய’னிலிருந்து என்னுடைய ஆறு திரைப் படங்களில் திலகன் அண்ணன் நடித்திருக்கிறார். திலகனை மனதில் நினைத்துக் கொண்டுதான் ‘சாணக்ய’னில் வரும் வில்லனான முதலமைச்சர் கதாபாத்திரத்தையே உருவாக்கினேன். கமலஹாசனைத் தீர்மானிப்பதற்கு முன்பே திலகனை முடிவு செய்திருந்தேன். ‘சாணக்யன்’ படத்தின் கதையைக் கூறுவதற்காகச் சென்றபோதுதான் நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறோம். அந்தச் சமயத்தில் அவர் கேட்டுக் கொண்டபடிதான் ஷம்மி திலகன் என்னுடைய உதவி இயக்குனராக ஆனார். பிறகு பல நேரங்களிலும் ஷம்மியைப் பற்றிய விஷயங்களை அவர் என்னிடம் கலந்து பேசியிருக்கிறார்.

முகத்தை மட்டுமே காட்டக் கூடிய க்ளோஸ்-அப் ஷாட்களில் பொதுவாக நடிகர் – நடிகைகள் கைகளை அசைத்து நடிக்க மாட்டார்கள். ஆனால், க்ளோஸ் – அப்பில் கூட உடல் முழுவதையும் அசைத்து நடிக்கக் கூடிய மனிதராக இருந்தார் திலகன். எந்த அளவிற்கு மிகவும் நெருக்கமாக க்ளோஸ் – அப்பை எடுத்தாலும், கைகள் முகத்தோடு சேர்ந்து மேலே வரும். சில படங்களில் நாம் எழுதும் உரையாடல்கள் அந்த அளவிற்கு நன்றாக இல்லை என்று நமக்கே தோன்றும். ஆனால், அதைப் பேசி நடிக்கும்படி திலகன் அண்ணனிடம் கூற வேண்டும். அவர் அதை பேசுவதைக் கேட்கும்போது, அது நாம் எழுதியதுதானா என்று ஆச்சரியப்பட்டு விடுவோம். அதுதான் திலகன்.

எந்த திரைப் படத்தில் நடித்தாலும், புதியதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற வெறிதான் அந்த நடிகரை முன்னோக்கிக் கொண்டு சென்றது. அவருடன் அரை டஜன் திரைப் படங்கள் செய்தும், எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு என்ற ஒன்று உண்டானதே இல்லை.

சில விஷயங்களில் திலகன் அண்ணனுக்கென்று தெளிவான தீர்மானங்கள் இருந்தன. திரைக்கதை முன் கூட்டியே கிடைக்கவில்லையென்றால், சண்டை போடுவார். நடிப்பதற்காக செல்லும் காட்சிக்கு முன்பும் பின்பும் இருக்கும் காட்சி என்ன என்பதைக் கூற வேண்டும். நடிக்கும் காட்சி படத்தில் எந்தப் பகுதியில் வருகிறது என்பதையும் விளக்கிக் கூற வேண்டும். காட்சியை எடுத்து முடிக்கும் வரை, அவர் திரைக் கதையை வாசித்து, உரையாடல்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பார். கேமராவிற்கு முன்னால் வந்து நின்று விட்டால், அதற்குப் பிறகு அவர் கதாபாத்திரமாக மாறி விடுவார். உரையாடலை ‘ப்ராம்ப்ட்’ செய்யும் பழக்கம் அவருக்கு கிடையாது. ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ படத்தின் இறுதி காட்சிகளைப் படமாக்கியபோது, குட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் அந்த நடிகரின் நடிப்பைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தங்குவதற்காக தரப் பட்டிருந்த அறை மோசமாக இருக்கிறது என்றோ, ஷாட் எடுப்பதற்கு தாமதமாகி விட்டது என்றோ கூறி அவர் கோபப்படுவதில்லை. வாழ்க்கையில் எவ்வளவோ போராடி வளர்ந்த மனிதர் அவர். பழைய கதைகளைப் பற்றி கேட்டால், கூறுவார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், ஒரு தனியார் தொலைக்காட்சியின் ‘ரெக்கார்டிங்’ நேரத்தில் நாங்கள் இறுதியாக சந்தித்து உரையாடினோம். அதற்குப் பிறகு சுய உணர்வற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்த திலகன் அண்ணனைத்தான் நான் பார்த்தேன்.


நேருவும் திலகனும்... இரண்டு கால்களும்

 -திரைப்பட கதாசிரியர் ஜான் பால்

தமிழில் : சுரா

ல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கதை. கதை அல்ல. உண்மைச் சம்பவம். இரத்தத்தில் கலகம் செய்யும் அடையாளங்களுடன் பிறந்த ஒரு இளைஞன் வீட்டில் இருந்தவர்களுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினார். தந்தைக்கும் தாய்க்கும் வேண்டாத மனிதராக ஆனார். படித்த கல்லூரிக்கும் வேண்டாதவராக ஆனார். அந்தந்த நேரத்தில் இருக்கக் கூடிய மனநிலைக்கு ஒத்து வராத எல்லா விஷயங்களுடனும் முதுகெலும்பு வளையாமல் துணிச்சலாக சண்டை போட்டார். சண்டை போடக் கூடியவர் என்றும், எதையும் எதிர்க்கக் கூடியவர் என்றும், அகங்காரம் பிடித்தவர் என்றும் முத்திரை விழுந்தது. எல்லா இடங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட போது, அன்றாட வாழ்க்கை இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டபோது, சரணாகதி அடைவதற்கு மனம் வராமல் ஊரை விட்டு வெளியேறினார்.

அவர் போய் நின்றது மிலிட்டரிக்கு ஆட்கள் எடுக்கும் வரிசையில்... அதற்கேற்ற உடல் வலுவும் சதைப் பிடிப்பும் தேவையான அளவிற்கு இருந்தன. முழுமை செய்யாவிட்டாலும், அடிப்படை கல்வி உதவிக்கு இருந்தது. ஆட்கள் எடுத்ததில் பச்சைக் கொடி காட்டப்பட்டது. எதிர்க்கும் குணம் கொண்டவர் ராணுவத்தின் ஒரு உறுப்பினராக ஆனார்.

அன்று அந்த எதிர்ப்பு குணம் வாய்ந்த மனிதருக்கு 22 வயது. பத்து வருட காலம் ராணுவ சேவை. கடுமையான நடைமுறைகள்... கண்டிப்பு நிறைந்த கீழ்ப்படிதல்... கண்டிப்பு நிறைந்த சட்டங்கள்... அந்த சண்டை போடும் குணம் கொண்ட மனிதர் அதற்கு எப்படி ஒத்துழைத்தார்? கீழ்ப்படிந்தார்? பதில் மிகவும் எளிதானது.

அங்கு... ராணுவத்திலிருந்த சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானது. பந்தியில் பாரபட்சம் எதுவும் இல்லாமலிருந்தது. எல்லோரும் பின்பற்றக் கூடிய சட்டங்களை மீறி செயல்படும் அளவிற்கு தான் ஒரு வினோத பிறவி எதுவுமில்லை என்ற புரிதல் கதையின் நாயகனுக்கு இருந்தது.

கால ஓட்டத்தில்... எல்லைப் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலையில்... முணுமுணுப்புகள் புகைந்து எரிந்து போர் முழக்கம் செய்து கொண்டிருந்தன. ‘இந்தோ சீனி பாயி பாயி...’ என்று உரத்த குரலில் முழங்கிய ஜவஹர்லாலின் இதயத்தில் காயத்தை உண்டாக்கிக் கொண்டு சீனா எதிரிகளின் பக்கம் நின்று கொண்டிருந்தது. அதே வாய்ப்பிற்காக பாகிஸ்தான் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லையில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. படையில் பெரிய ஒரு பிரிவு, போர் முனைக்காக உண்டாக்கப்பட்டது. அந்தக் குழுவில் கதையின் நாயகனும் இருந்தார்.

எலும்புகளுக்குள் நுழைந்து செல்லக் கூடிய கடுமையான குளிர் போர் நடந்த இடத்தில்... குண்டுகள் ஓசை உண்டாக்கியவாறு சீறி பாய்ந்து கொண்டிருந்தன. எறி குண்டுகள் சிதறி விழுந்து கொண்டிருந்தன. குண்டுகளின் தொடர் மழை... குன்றுகள் சில நிமிடங்களில் குழிகளாக ஆகிக் கொண்டிருந்தன. வெடி மருந்தின் கனமான வாசனையுடன் மனித மாமிசம் கருகியதால் உண்டான தாங்க முடியாத வாசனையும் கலந்து விட்டிருந்தது. சிதறி இங்குமங்குமாய் கிடக்கும் கைகளும் கால்களும்... சின்னாபின்னமாகி கிடந்து நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் மூளைகள்... பதறாமல், தளராமல் போர்க்களத்தில் தைரியத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த வீரம் நிறைந்த போர் வீரர்களின் கூட்டத்தில் கதையின் நாயகனும் இருந்தார்.

கையில் வைத்திருந்த சிறிதளவு நீர், அதையும் விட குறைவாக இருந்த கொஞ்சம் காய்ந்து போன உணவு... பாம்பும் மண்ணில் வாழும் உயிரினங்களும் அங்கிருந்த குளிருடன் போராடிக் கொண்டிருந்தன. நாட்கள் கடந்து போய்க் கொண்டிருப்பது தெரியவில்லை. இரவின் நீல நிறத்தில் வானத்தில் பூக்களாக மலர்ந்தவை நட்சத்திரங்கள் அல்ல. எதிரிகள் படை சிதறிவிட்ட மரண தீபங்கள் அவை. போர்க்களத்தில் இரவிலும் பகலிலும் மரணத்தின் நிரந்தர துடிப்பு ஒரே மாதிரி அச்சப்படக் கூடிய அளவிற்கு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

முழு கவனமும் எதிரிகளின் நிழல் சலனங்களுக்குப் பின்னால், எச்சரிக்கை உணர்வுடன் திரும்ப தாக்குவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தது. இறந்தும் கொன்றும் ஸ்கோர் போர்டுகளைத் திரும்பத் திரும்ப அழித்து எழுதி, நாட்கள் எரிந்து முடியும்போது, அந்த வெறிக்கு மத்தியில் குளிரின் டிகிரிகள் பூஜ்யத்தைத் தாண்டி கீழே போய்க் கொண்டிருந்த விஷயத்தை மனம் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், சரீரத்திற்கு, உரோமத்திற்கு, உறுப்புகளுக்கு, நாடிகளுக்கு, எலும்புகளுக்கு அது தெரியாமல் இருக்க முடியாது. கதையின் நாயகனின் கால் பாதங்கள் இரண்டும் இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. குளிருக்கு முன்னால் செயல்படும் சக்தியை இழந்துவிட்ட பாதங்களுடன் தளர்ந்து கீழே விழுந்துவிட்ட எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரை சீறிப் பறந்து கொண்டிருந்த வெடிகுண்டுகளுக்கு மத்தியில் ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து ராணுவ மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். கால்கள் மரத்துப் போகவில்லை- முற்றிலும் இறந்து போய்விட்டன என்று மருத்துவ அறிவியல் தலைவிதியை எழுதியது. மரணம் கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி படர்வதற்கு முன்பே முழங்காலுக்குக் கீழே பாதங்களை வெட்டி நீக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

வளைவதற்கு கற்றிராத முதுகெலும்பையும், கீழ்ப்படிந்து பழக்கமில்லாத நாக்கையும் வைத்துக் கொண்டு இரண்டு பாதங்களையும் இழந்து சொந்த ஊருக்கு கையற்ற நிலையில் ஒரு திரும்பி வரும் செயல்!

அதை கதையின் நாயகனால் மனதில் கற்பனை பண்ணி பார்க்கக் கூட முடியாது. அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரின் உள் மனம் துடித்தது.

போர் முனைகளைப் பார்ப்பதற்காக வரும் பிரதம அமைச்சர், மருத்துவமனைகளையும் வந்து பார்ப்பது என்பது வழக்கமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். ஜவஹர்லால் நேரு பார்வையிடுவதற்கு வருவதற்கு முன்னால் ராணுவ அதிகாரிகள் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள்.

பிறந்த நாட்டிற்காக போர்க் களத்தில் போர் புரிந்து காயம் பட்டு கீழே விழுந்தவர்களும், பாதி இறந்தவர்களும்.... இவர்கள்தான் நோயாளிகள். ஆனால், அவர்கள் யாரும் தங்களுடைய வேதனைகளைப் பற்றி புலம்பவே கூடாது.... தங்களுடைய கஷ்டங்களை வெளியே கூறக் கூடாது... அவற்றை வெளியிட்டு பிரதம அமைச்சரின் இதயத்தில் கவலைகளை உண்டாக்கக் கூடாது... ‘ஃபர்ஸ்ட் ஒபே... தென் கம்ப்ளைய்ன்’- என்பதுதானே ராணுவ முகாமின் முதல் வேத பாடமே!

நோயாளிகளை பகட்டாக ஆக்கி, இடுப்பு வரை கம்பளியைக் கொண்டு மூடி, கட்டிலில் சாய்த்து படுக்க வைத்திருந்தார்கள். பிரதம அமைச்சர் கடந்து செல்லும்போது, வேதனைகளால் மறந்து போய்விட்ட சிரிப்பை வலிய வரவழைத்து உதட்டில் மலரும்படி செய்ய வேண்டும்...

கதையின் நாயகனின் மனதிற்குள் இருந்த தைரியம் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. செயற்கையான ஒரு காரியத்தைச் செய்கிறோம் என்ற பதைபதைப்பு மனதிற்குள் முரசடித்துக் கொண்டிருந்தபோது, அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதர் தனக்குள் உறுதியான குரலில் கூறிக் கொண்டார்: இங்கு சட்டத்தை மீறியே ஆக வேண்டும்... அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவர் இருந்தார்.

நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்த ரோஜா மலருடனும் உதட்டில் அமைதியான சிரிப்புடனும் சுறுசுறுப்புடனும் ஜவஹர்லால் ராணுவ மருத்துவமனையின் வார்டுகளின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். பின் பற்றும்படி கூறப்பட்டவர்கள் பின்பற்றினார்கள். புன்னகைத்தார்கள். வாழ்த்தினார்கள். பாதி மூடப்பட்டிருந்த கம்பளிக்குள் வாழ்க்கை தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்ததை வேதனையுடன் மறைத்து வைத்தார்கள். எச்சரித்திருந்த கட்டளையை கண்கள் மூலம் வெளிப்படுத்தி, எரிந்து கொண்டிருக்கும் கண்டிப்பைக் காட்டியவாறு ராணுவ அதிகாரிகள் ஜவஹர்லாலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.


கதையின் நாயகனின் படுக்கைக்கு முன்னால் ஜவஹர்லால் வந்தார். அதுதான் உரிய நேரம். அங்கு பேசியே ஆக வேண்டும்... இனி ஒரு சந்தர்ப்பம் வராது. மனம் கண் விழித்தது. பணிவை விடாமல், தடுமாறாத குரலில் நோக்கத்தின் ஆழத்தை மனதில் தெளிவாக வைத்துக் கொண்டு அழைத்தார்: ‘ப்ரைம் மினிஸ்டர்ஜி... மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர்....’ மருத்துவமனை வார்டில் அந்த அழைப்பு, இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலித்தது.

உயர் அதிகாரிகள் பதைபதைத்துப் போய் விட்டார்கள். அங்கிருந்த மற்ற நோயாளிகள் பயந்து விட்டார்கள். ஆனால், கதையின் நாயகனின் முகத்தில், எதையோ எதிர் பார்ப்பவனின் கலப்படமில்லாத ஆர்வத்தைக் காட்டும் கம்பீரம் மட்டும்... ‘கூடாது’ என்று அமைதியாக தடுத்த, எச்சரித்த விழிகளை, முகங்களை மீறிக் கொண்டு கேள்வி கேட்பதைப் போல தன்னை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த ஜவஹர்லாலிடம் சுருக்கமான வார்த்தைகளில் தான் கூற நினைத்ததை கூறினார்.

போர்க் களத்தில் பதுங்கு குழிக்குள் இருந்தபோது கடுமையான குளிர் பாதித்து, இரண்டு கால் பாதங்களும் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. அவற்றை வெட்டி நீக்க வேண்டும் என்று ஒரேயடியாக ராணுவ டாக்டர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். தனக்கு அந்த விஷயத்தில் எதிர்ப்பு இருக்கிறது. தான் முழுமையாக நம்பக் கூடிய ஒரு சிவில் டாக்டரிடம் காண்பித்த பிறகுதான், சிகிச்சை பற்றி முடிவு செய்ய முடியும். அதற்கான சுதந்திரத்திற்கு அனுமதி தர வேண்டும். டிஸ்சார்ஜ் செய்ய அனுமதித்து, சர்வீஸிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு, சொந்த ஊருக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்...

நேரு மிகவும் கவனமாக அவர் கூறியதைக் கேட்டார். ஒரு நிமிடம் சிந்தித்தார். கேள்வி கேட்க நினைப்பதைப் போல உடன் நின்று கொண்டிருந்த அதிகாரிகளின் வெளிறிப் போய் காணப்பட்ட முகங்களையே பார்த்தார். கைகளைப் பிசைந்து கொண்டே இரண்டு அடிகள் எடுத்து வைத்து நடந்தார். கதையின் நாயகனின் அருகில் வந்து, தோளில் கையை வைத்தவாறு அமைதியான குரலில் கூறினார்: ‘தேட் வில் பி டன்... நீங்கள் கூறியபடி நடக்கும்...’

வேண்டுகோளை அனுமதிப்பது என்பதோடு மட்டும் பிரதம அமைச்சர் நிறுத்திக் கொள்ளவில்லை. ராணுவ டாக்டர்கள் மட்டுமே இத்தகைய முடிவுகளை எடுத்துவிடக் கூடாதென்றும், நோயாளிக்கு நன்கு தெரிந்த ஒரு டாக்டரும் சேர்ந்து தீர்மானித்த முடிவின்படிதான் இறுதி காரியங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றும் அச்சம்பவத்தைத் தொடர்ந்து, வரும் காலத்திற்காக எழுதி வைத்தார். பிறகு அது சட்டமாகவே ஆகி விட்டது.

செயல்படும் சக்தி இழக்கப்பட்ட பாதங்களுடன் சொந்த ஊரில் வண்டியிலிருந்து இறங்கியபோது, வளையாத முதுகெலும்பின் பலத்தால், அந்த நெஞ்சுக்குள் இலட்சியம், தன்னம்பிக்கை ஆகியவை நிறைந்த பிடிவாதம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமே மூலதனமாக இருந்தது. காலம் அந்த தன்னம்பிக்கையை கனிவுடன் தழுவிக் கொண்டு வருடியது. சிகிச்சை வெற்றி பெற்றது. நோயின் பாதிப்பிலிருந்து குணமான கால்களை மண்ணில் அழுத்தமாக மிதித்து, நடிப்பின் வழியாக வாழ்வின் நான்கு முனை சந்திப்பிலிருந்து இரண்டாவது பயணத்தை ஆரம்பித்தபோது, வயது முப்பத்து இரண்டு... அல்லது முப்பத்து மூன்று....

சண்டை போட்டு... அதிலிருந்த ஆர்வம் சிறிதும் குறையாத நிலையில் இருக்கும் போராளியின் பிறவியை ஒரு நிமிட நேரம் கூட குறைபாடு இல்லாமல் எப்போதும் சீரான அளவில் வைத்துக் கொண்டிருந்தார் அந்த கதையின் நாயகன்.

எல்லா இடங்களிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடிய மனிதர்... சண்டை போடக் கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வீணாக்கியதில்லை. காரணங்களுடனும், காரணங்கள் இல்லாமலும் வாளை எடுத்தார். குறும்புத்தனங்களைக் கை விடாத முதிர்ச்சியடைந்த குழந்தை என்று நண்பர்கள் கூறியபோது, அவர்களுக்கு எதிராகவும் சீறினார். இறுதியாக... அந்தச் சண்டை தன்னுடன்தான் என்பதைப் புரிந்து கொள்ளும் காலம் வரை பொறுமையுடன் சண்டையின் உச்சிக்கு சாட்சியாக நின்று கொண்டிருந்தார். விழிப்புடன் இருந்த இறுதி நிமிடம் வரை சண்டை போட்டுக் கொண்டே இருந்தார் என்று யாரைப் பற்றியாவது நிகழ் கால சூழ்நிலையில் கூறுவதாக இருந்தால், அது அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரைப் பற்றி மட்டுமே... எல்லா சண்டைகளுக்கு மத்தியிலும் ஜவஹர்லாலின் நெஞ்சோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த சிவந்த ரோஜா மலரின் மீது கொண்ட ஆர்வத்தை அந்த மனிதர் தன் மனதிற்குள் அணையாமல் பத்திரமாக காப்பாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும். போர் வெறி கொண்டு சுவடுகள் வைத்து குதிப்பதற்கு கால்களை இறுதியாக தந்த அந்த மிகப் பெரிய மனதிற்கு நன்றி செலுத்தும் குணம்...

அரங்கத்திலும், நான்கு சுவர்களுக்குள்ளும் ஒரே மாதிரி, சிறிதளவு கூட போலித்தனமில்லாமல் இருந்த நடிப்பு அர்ப்பணிப்பை நெஞ்சில் வைத்துக் கொண்டு, காலம் அந்த எதிர்ப்பு குணம் கொண்ட மனிதரின் பெயரை தாளில் எழுதியது- சுரேந்திரநாத திலகன்.

திலகன் என்ற சுருக்கமான பெயர் மிகப் பெரிய நடிகர்களின் வரிசையில் இடம் பெற்றபோதும், அந்த மனிதரால் சண்டை போடாமல் இருக்க முடியவில்லை. அது பிறவியிலேயே உண்டான இயல்பு குணம். மரணத்தையே கூட போராக ஆக்கி, ஆரவாரம் செய்து, தன்னை அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலையை அழகாக பழிக்குப் பழி வாங்கிய நடிகராக இருந்தார் திலகன்.

வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரிசையில் அந்தப் பெயரை வாசிப்போம் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அரங்கிலும் திரையிலும் நடிப்பில் எந்தச் சமயத்திலும் தோற்றிராத மிகப் பெரிய நடிகர்களின் வரிசையில் காலம் அந்தப் பெயரை இடம் பெறச் செய்திருக்கிறது.

நடிப்புப் பாதையில் திலகன் நடந்து கடந்த வந்த அந்த நீண்ட தூரத்தில் இப்படியொரு பழைய கதை மறைந்திருக்கிறது என்பதும், அந்த கதையின் நாயகனாக வேடமிட்டவர் ஜவஹர்லால் நேரு என்பதும் கொண்டாடப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் குறிப்புகளில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சுரேந்திரநாத திலகனின் தாத்தாவின் சகோதரரின் மகன் சி.ஆர்.ஓமனக்குட்டன் கூறியபோது மட்டுமே, நமக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. ஓமனக்குட்டன் மாஸ்டருக்கு நன்றி.

திலகன் சண்டை போட்டவர்களும், திலகனுடன் சண்டை போட்டவர்களும், அந்தச் சண்டைகளும் கால ஓட்டத்தில் மறக்கப்பட்டு விடும். ஆனால், அரங்கிலும் திரையிலும் அந்த நடிகர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் வெளிப்படுத்திய வாழ்வின் அடையாளங்களை மலையாள சமூகம் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும்.

வாழ்க சுரேந்திரநாத திலகன்!

 

 

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.