Logo

நான் நடிகன் ஆன கதை

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 7006
naan nadigan aana kathai

மொழி பெயர்ப்பாளரின் முன்னுரை

மிக சாதாரண சூழ்நிலையில் பிறந்த ஒரு மனிதன் நினைத்தால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், தொடர் முயற்சிகளாலும் முன்னுக்கு வர முடியும். அதற்கு உதாரணம்தான் சார்லி சாப்ளின். வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்து, எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்க வாய்ப்பில்லாமல் ஒவ்வொரு நாளும் பசி, பட்டினி ஆகியவற்றை மட்டுமே பார்த்த அவர் எப்படி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து உலகமெங்கும் தெரியக் கூடிய மனிதராக ஆனார் என்பது நாம் எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமே.

வாய்ப்புகள் சாப்ளினைத் தேடி வந்திருக்கலாம். அதே நேரத்தில் தன்னுடைய முயற்சிகளாலும், திறமையாலும் அவர் வாய்ப்புகளை உருவாக்கினார் என்பதும் உண்மை. அப்படி உருவாக்கப்பட்ட வாய்ப்புகள்தான் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தன. வறுமையின் பிடியிலிருந்து விலகி ஓட வேண்டும், எல்லோருக்கும் தெரியக் கூடிய ஒரு மனிதனாக ஆக வேண்டும் என்ற சாப்ளினின் உள்ளுணர்வும் வேட்கையும்தான் அவரின் உயர்நிலைக்கான உண்மைக் காரணங்கள்.

சார்லி சாப்ளினின் வாழ்க்கை முன்னுக்கு வர துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம். அவரின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் நிச்சயம் தானும் அதே மாதிரி முன் நிலைக்கு வர வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெறுவார்கள் என்பது மட்டும் உண்மை.

மிக உயர்ந்த நிலைக்கு முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேறிய அந்தக் கலைமேதையின் வாழ்க்கைக் கதையை மொழி பெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காக மனதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அன்புடன்,
சுரா


சார்லி சாப்ளின்

(1889 - 1977)

1889ஏப்ரல் 16ஆம் நாள் லண்டனில் பிறந்தார். அவருடைய முழு பெயர் சால்ஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். தந்தை: சால்ஸ் சாப்ளின். தாய்: ஹன்னா ஹில். இருவரும் நாடகங்களில் நடித்தவர்கள். சாப்ளின் குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர்கள் தனித்தனியாக பிரிந்து விட்டார்கள்.

வறுமையும், கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்தது சாப்ளினின் இளமைக் காலம். தந்தை அகால மரணமடைந்தார். தாய் மனநோய் மருத்துவமனையில் இருந்தார். சாப்ளினும் சகோதரன் சிட்னியும் அனாதை இல்லத்தில் அபயம் தேடினார்கள்.

பன்னிரெண்டு வயது முதல் சாப்ளின் நாடகங்களில் நடித்தார். 1910இல் நாடக கம்பெனியுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு பல்வேறு கம்பெனிகளுக்காகவும் படங்கள் தயாரித்துக் கொடுத்தார். பிறகு சொந்தத்தில் சினிமா கம்பெனியும் ஹாலிவுட்டில் ஸ்டூடியோவும் உண்டாக்கினார்.

‘தி க்ரேட் டிக்டேட்டர்’ என்ற திரைப் படம் திரைக்கு வந்தவுடன் அமெரிக்கா அரசாங்கம் சாப்ளினை கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தியது.  அமெரிக்காவிற்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டது.  தொடர்ந்து சாப்ளின் தன் குடும்பத்துடன் ஸ்விட்சர்லாண்டில் வசித்தார்.

1975இல் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. 1972இல் சிறப்பு ஆஸ்கார் விருது தரப்பட்டது. 1977 டிசம்பர் 25ஆம் தேதி அந்த மிக உயர்ந்த கலை மேதை இந்த உலகை விட்டு விடை பெற்றார்.


1889ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் நாள் இரவு 8 மணிக்கு நான் பிறந்தேன். லண்டனில் இருக்கும் வால்வர்த் என்ற இடத்திலுள்ள ஈஸ்ட்லேன் என்ற இடம்தான் நான் பிறந்த இடம். நான் பிறந்த சில நாட்களிலேயே நாங்கள் லாம்பெத்தில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சாலையிலுள்ள வெஸ்ட் ஸ்கொயருக்கு இடம் பெயர்ந்தோம். அந்தக் காலத்தில் எங்களின் பொருளாதார சூழ்நிலை பொதுவாக பரவாயில்லை என்பது மாதிரி இருந்தது என்று என் தாய் கூறியிருக்கிறார். அழகாக அலங்கரிக்கப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் நாங்கள் அப்போது வசித்தோம்.

குழந்தைப் பருவத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கையில், முதலில் என் கண் முன்னால் தெரிவது எல்லா இரவு நேரங்களிலும் என் தாய் நாடக சாலையை நோக்கி செல்வதுதான். என்னையும், என்னுடைய அண்ணன் சிட்னியையும் அன்புடன் படுக்கையில் படுக்க வைத்து, கம்பளியால் மூடிவிட்டு, வீட்டு வேலைக்காரியிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு... அதற்குப் பிறகுதான் என் தாய் கிளம்புவார். இரவில் மிகவும் தாமதமாக நாடக சாலையிலிருந்து திரும்பி வரும்போது சிட்னிக்கும் எனக்கும் கோக்கோமிட்டாயோ அல்லது வேறு ஏதாவதோ கொண்டு வந்து என் தாய் மேஜை மீது வைத்திருப்பார். காலையில் நாங்கள் எழுந்து அதை எடுப்போம். அந்த நேரத்தில் என் தாய் நல்ல உறக்கத்தில் இருப்பார். அப்போது ஓசை உண்டாக்கி தொந்தரவு செய்யக் கூடாது என்ற ஒப்பந்தம் காரணமாக எங்களுக்கு அவருடைய அந்தப் பரிசு கிடைத்துக் கொண்டிருந்தது.

சிட்னிக்கு என்னைவிட நான்கு வயது அதிகம். அவன் பலவிதப்பட்ட செப்படி வித்தைகளையெல்லாம் செய்வான். மூன்றரை வயது உள்ள என்னாலும் பல விஷயங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைப்பேன். சிட்னியால் ஒரு நாணயத்தை விழுங்கவும் அதை தலைக்குப் பின் வழியாக வெளியே எடுக்கவும் முடியும் என்றால் என்னால் ஏன் அது முடியாது? மிகவும் எளிதாக நான் ஒரு அரை பெனி நாணயத்தை விழுங்கினேன். ஆனால், தலைக்குப் பின்னால் வழியாக அதை எடுக்க என்னால் முடியவில்லை. என் தாய் பதைபதைத்துப் போய் ஒரு டாக்டரை ஆளனுப்பி வரவழைத்தார். டாக்டர்தான் நாணயத்தை வெளியே எடுத்தார்.

நாடகத்தில் என் தாய்க்கு விலை மாதுவின் வேடம். அழகான நீலநிற கண்களையும் நீளமான கூந்தலையும் கொண்ட ஒரு அழகியாக இருந்தார் என் தாய். நானும் சிட்னியும் என் தாயின் ரசிகர்களாக இருந்தோம். அந்தக் காலத்தில் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து நடக்க செல்வோம். அந்தப் பயணங்களின்போது எனக்கும் சிட்னிக்கும் அழகான ஆடைகள் அணிவித்து என் தாய் அழைத்துச் செல்வார். கென்னிங்டன் சாலை வழியாக நடந்து செல்வதில் எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.

என் தாய்க்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்த நாட்களில் லண்டனில் புகழ் பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் சாலையில் எங்களின் வீடு இருந்தது. என்னுடைய குழந்தைப் பருவத்தில் லண்டன் நகரம் மிகவும் அமைதியான ஒரு நகரமாக இருந்தது. அழகான கடைகளும் உணவு சாலைகளும் இசை சாலைகளும் சேர்ந்து அங்கு உல்லாசத்தின், நட்பின் சுற்றுச் சூழலை உண்டாக்கின.

அப்போது என்னவெல்லாம் நடந்தன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் என்னவோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் என் தாயின் நடவடிக்கைகளிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லா நாட்களிலும் என் தாய் ஒரு சினேகிதியுடன் வெளியே எங்கோ போவதும், பார்க்க சகிக்காத ஒரு முகத்துடன் திரும்பி வருவதும் வாடிக்கையாக நடந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்த பிறகு ஒரே அழுகையும் சத்தமும்தான். அதற்கிடையில் ‘ஆம்ஸ்ட்ராங் இப்படிச் சொன்னார்... ஆம்ஸ்ட்ராங் அப்படிச் சொன்னார்’ என்று கோபத்துடன் கூறியது காதுகளில் விழுந்தது. யாராக இருந்தாலும் அந்த ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதன் ஒரு மோசமான மனிதனாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஒரு நாள் அவை எல்லாவற்றையும் பார்த்து விட்டு நானும் உரத்த  குரலில் அழ ஆரம்பித்தேன். என் தாய் வந்து என்னைத் தூக்கி தன் தோளில் படுக்க வைத்து ஆறுதல் சொன்ன பிறகுதான் நான் அழுகையையே நிறுத்தினேன்.

பல வருடங்களுக்குப் பின்னால்தான் அந்தச் சம்பவம் என்ன என்பதே எனக்கு தெரிய வந்தது. என் தாயிடமிருந்து பிரிந்து வேறொரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்த என் தந்தைக்கு எதிராக, பிள்ளைகளுக்கு செலவிற்கு பணம் வேண்டும் என்பதற்காக என் தாய் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு அப்படியொன்றும் சாதகமாக இருக்கவில்லை. அந்த விஷயம்தான் என் தாயை மிகவும் கவலைப்படச் செய்தது. ஆம்ஸ்ட்ராங் என்ற மனிதர் என் தந்தையின் வழக்கறிஞராக இருந்தவர்.

எனக்கு சொந்தமாக ஒரு தந்தை இருக்கிறார் என்று எந்தச் சமயத்திலும் நான் நினைத்ததில்லை. அவர் எங்களுடன் தங்கியிருந்தது எனக்கு ஞாபகத்திலேயே இல்லை. அவரும் ஒரு நாடக நடிகர்தான். என் தந்தை பார்ப்பதற்கு நெப்போலியனைப் போல இருப்பார் என்று என் தாய் கூறுவார். கம்பீரமான குரலையும் நடிப்புத் திறமையையும் கொண்ட ஒரு நல்ல நடிகராக அவர் இருந்திருக்கிறார். அதனால் அந்தக் காலத்தில் அவருக்கு ஒரு வாரத்திற்கு நாற்பது டாலர் வருமானமாக கிடைத்திருக்கிறது. ஆனால், என் தந்தையின் அளவுக்கு மீறிய குடிப்பழக்கம் அவரை பலவிதப்பட்ட பிரச்னைகளிலும் சிக்க வைத்துவிட்டது. என் தாயும் தந்தையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததற்கு முக்கிய காரணமே அதுவாகத்தான் இருந்திருக்கிறது. நகைச்சுவையும் வருத்தமும் கலந்துதான் என் தந்தையைப் பற்றிய கதைகளை என் தாய் கூறுவார்.

அந்தக் காலத்தில் நாடக சாலைகளுக்குள்ளேயே மதுச்சாலைகளும் இருந்ததால் நடிகர்களால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. நாடகக் கம்பெனியை நடத்தியவர்கள் நாடகங்கள் மூலம் சம்பாதித்ததை விட அதிகமாக மது விற்பனை மூலம் சம்பாதித்தார்கள். பல நாடக நடிகர்களுக்கு நல்ல சம்பளம் தந்தது அவர்களின் திறமைக்காக மட்டுமல்ல- அவர்கள் தாங்கள் சம்பளமாக வாங்கிய பணத்தில் பெரும் பகுதியை அங்கு இருக்கும் மது அருந்தும் இடத்திற்கே கொடுத்து விடுவார்கள் என்பது கூட ஒரு காரணம்தான். மது அருந்திய காரணத்தால் அழிந்து போன ஏராளமான நடிகர்களில் ஒருவர் என் தந்தை.  என் தந்தை. தன்னுடைய முப்பத்தேழாவது வயதில் அளவுக்கும் மீறி மது அருந்திய காரணத்தால் மரணத்தைத் தழுவியவர் என் தந்தை.


என் தாயின் தந்தை சால்ஸ் ஹில் அயர்லாண்டிலிருந்து வந்து லண்டனில் நிரந்தரமாக தங்கிய ஒரு செருப்பு தைப்பவர். என் பாட்டி பாதி நாடோடி என்று கூறுவதே சரியானது. கொஞ்சியவாறு என்னுடன் பேசக் கூடிய என் பாட்டி எனக்கு ஆறு வயது நடந்தபோது மரணமடைந்துவிட்டார். என் தாய்க்கு கெய்ட் என்ற பெயரைக் கொண்ட ஒரு சகோதரி இருந்தார். என் தாயும் கெய்ட் பெரிம்மாவும் இளம் வயதிலேயே நாடகத்தின் மீது ஈர்ப்பு உண்டாகி வீட்டைவிட்டு போனவர்கள்.

தனக்கு பதினெட்டு வயது நடக்கும்போது என் தாய் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு மனிதரை திருமணம் செய்து ஆஃப்ரிக்காவிற்குச் சென்று விட்டார். தோட்டங்கள், வேலைக்காரர்கள் என்று படு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த அந்த காலத்தைப் பற்றி என் தாய் அவ்வப்போது கூறுவதுண்டு. அங்கு இருக்கும் போதுதான் சிட்னி பிறந்திருக்கிறான். சிட்னி பணக்காரரான ஒரு பிரபுவின் மகன் என்றும் இருபத்தொரு வயது வரும்போது அவனுக்கு இரண்டாயிரம் டாலர் வாரிசுப் பணமாக கிடைக்குமென்றும் யாரோ என்னிடம் கூறியிருந்தார்கள். அந்த விஷயம் என்னை ஒரு பக்கம் சந்தோஷம் கொள்ள வைத்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் கவலைப்படச் செய்யவும் செய்தது.

நீண்ட காலம் ஆஃப்ரிக்காவில் தங்கியிராத என் தாய் லண்டனுக்கே திரும்பி வந்து விட்டார். பிறகு என் தந்தையை அவர் திருமணம் செய்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்தேன். எனக்கு ஒரு வயது நடக்கும்போது என் தாயும் தந்தையும் பிரிந்துவிட்டார்கள். என் தாய் ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை. வாரமொன்றுக்கு இருபத்தைந்து டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த ஒரு நடிகை என்ற நிலையில் எங்களை வளர்க்க என் தாயால் முடிந்தது. சிறிதும் எதிர்பார்க்காமல் கஷ்டங்கள் வந்து சேர்ந்தபோதுதான் வேறு வழியில்லாமல் என் தாய் செலவிற்கு இருக்கட்டும் என்று சட்ட நடவடிக்கைகள் எடுத்தார்.

என் தாய்க்கு அவ்வப்போது தொண்டையில் ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு சாதாரண தலைவலியைத் தொடர்ந்து மூச்சுக் குழலில் அவருக்கு ஒரு வீக்கம் உண்டானதால்... அவருடைய குரல் பாதிக்கப்பட்டது. எனினும், என்தாய் தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தார். படிப்படியாக அவருடைய குரல் மோசமாகிக் கொண்டே வந்தது. அதை என்னால் நம்பவே முடியவில்லை. நாடகத்தில் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் திடீரென்று குரலில் பிசிறு உண்டானதும், பிறகு குரலே வராமற் போய், நாடகம் பார்க்க வந்தவர்கள் கிண்டல் பண்ணி சிரித்ததும்... அவை ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து என் தாயின் உடல் நிலை மிகவும் மோசமானது. அத்துடன் நாடக வாய்ப்புகள் அவருக்கு குறைந்தன. கடைசியில் நாடக கம்பெனியை விட்டு வெளியேற வேண்டிய நிலை அவருக்கு உண்டானது.

என் தாயின் குரலுக்கு ஏற்பட்ட அந்த விபத்தின் காரணமாகத்தான் ஐந்தாம் வயதில் நான் முதல் தடவையாக அரங்கத்தில் கால் வைத்தேன். அந்நாட்களில் என் தாய் நாடக சாலைக்குச் செல்லும்போது என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் என் தாயின் குரலில் பிரச்னை ஏற்படுவதையும், தொடர்ந்து அது முணுமுணுப்பாக மாறுவதையும் நான் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரிப்பிலும், கிண்டல் பண்ணுவதிலும் இறங்கினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு தெளிவாக தெரியவில்லை. ஆரவாரம் அதிகமானதும் என் தாய் மேடையை விட்டு இறங்கி பின்னால் வந்தார். என் தாயின் தோழிகளுக்கு முன்னால் நான் வெளிப்படுத்தும் சில திறமைகளை நாடகத்தின் மேனேஜர் பார்த்திருக்கிறார். அவர் என்னை வற்புறுத்தி மேடைக்குக் கொண்டு போனார். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் சில வார்த்தைகளைச் சொல்லி என்னை தனியாக விட்டு விட்டு அவர் போய் விட்டார். அன்று புகழ் பெற்றிருந்த ஜாக்ஜான்ஸ் என்று ஆரம்பிக்கும் பாடலை இசைக் குழுவினரின் பங்களிப்புடன் நான் பாடினேன்.

பாதி பாடலைத்தான் நான் பாடியிருப்பேன்- மேடையில் நாணயங்கள் வந்து விழ ஆரம்பித்தன. அதைப் பார்த்த நான் பாட்டு பாடுவதை நிறுத்தி விட்டேன். நாணயங்களைப் பொறுக்கி எடுத்தால்தான் பாடலைத் தொடர்வேன் என்று நான் அறிவித்தேன். அதைக் கேட்டு அங்கு குழுமியிருந்தவர்கள் உரத்த குரலில் சிரிக்க ஆரம்பித்தார்கள். உடனே நாடகத்தின் மேனேஜர் ஒரு கைக்குட்டையுடன் வந்து நாணயங்களை அதில் எடுத்தார். அந்த நாணயங்களுடன் அவர் எங்கே ஓடி விடப் போகிறாரோ என்ற பயம் எனக்குள் உண்டானது. நான் அதை எனக்கு முன்னால் அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களிடம் கூறவும் செய்தேன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! நாணயங்களுடன் நடந்து சென்ற நாடகத்தின் மேனேஜருக்குப் பின்னால் ஓடிய என்னைப் பார்த்து அங்கிருந்தவர்கள் மீண்டும் சிரித்தார்கள். அந்த மனிதர் அந்த நாணயங்களை என் தாயின் கையில் கொடுத்த பிறகு, நான் மீண்டும் வந்து பாடலைத் தொடர்ந்தேன். சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுதான் அப்போது எனக்கு உண்டானது. நான் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் பேசினேன். நடனம் ஆடினேன். பல நடிகர்களும் நடிகைகளும் நடிப்பது மாதிரி நடித்துக் காட்டினேன். பிறகு என் தாய் பாடக் கூடிய ஐரிஷ் பாடலைப் பாடினேன். என் தாய் பாடியதையும் அவருடைய குரலில் பிசிறு உண்டானதையும் கள்ளங்கபடமே இல்லாமல் நான் நடித்துக் காட்டினேன். அதைப் பார்த்து அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் தலையே வெடிக்கிற அளவிற்கு சிரித்தார்கள். மேடையை நோக்கி மீண்டும் அவர்கள் நாணயங்களை எறிந்தார்கள். கடைசியில் என் தாய் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போன போது, அரங்கம் முழுக்க பலத்த கைத்தட்டல் எழுந்தது. அந்த இரவு நாடக மேடையில் என் தாய்க்கு இறுதி நாளாக இருந்தது. என்னுடைய முதல் நாளும்.

விதி என் தாய் விஷயத்தில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டது. அவருக்கு பழைய குரல் மீண்டும் கிடைக்கவில்லை. நாட்கள் ஆக ஆக எங்களின் சூழ்நிலை மிகவும் மோசமாகிக் கொண்டே வந்தது. என் தாயின் கையில் மீதமிருந்த பணமும் நகைகளும் மறைந்தன. குரல் மீண்டும் சரியானால் அவற்றைத் திரும்பவும் சம்பாதித்து விட முடியும் என்ற எதிர்பார்ப்பில் பல பொருட்களையும் அவர் பணயம் வைத்தார். மூன்று அறைகளைக் கொண்ட வீட்டில் வாழ்ந்த நாங்கள் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டிற்கும், பிறகு ஒரே ஒரு அறை உள்ள வீட்டிற்கும் மாறினோம்.


என் தாய் முழுமையான மத நம்பிக்கை கொண்ட பெண்ணாக மாறினார். பிரார்த்தனை மூலம் எல்லாம் சரியாகும் என்று அவர் நம்பினார். எல்லா நாட்களிலும் தேவாலயத்தைத் தேடிச் செல்வார். அதற்குப் பிறகு நாடக உலகைச் சேர்ந்த நண்பர்கள் யாரையும் நாங்கள் பார்க்கவில்லை. அந்த உலகம் ஒரு ஞாபகம் மட்டுமே என்பது மாதிரி ஆகிவிட்டது. முதலிலிருந்தே நாங்கள் மோசமான பொருளாதார நிலையில்தான் இருந்து வந்திருக்கிறோம் என்பதை என்னால் உணர முடிந்தது. நடிப்பு என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது என்ற காரணத்தால் என் தாய்க்கு ஒரு வேலை கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது. நாடகங்களில் நடிப்பதற்குத் தேவைப்படும் ஆடைகளை என் தாயே தைத்துக் கொள்வார். அந்த அனுபவங்கள் காரணமாக தேவாலயங்களிலிருக்கும் அனாதைகளுக்கு ஆடைகள் தைத்து சிறிது பணம் சம்பாதிக்க என் தாயால் முடிந்தது. மூன்று பேர்கள் சாப்பிட்டு வாழ அந்தப் பணம் போதுமானதாக இல்லை. மது அருந்துவதன் காரணமாக என் தந்தையின் வருமானம் குறைவாக வந்ததால் வாரத்தில் எங்களுக்கு அவர் தந்து கொண்டிருந்த பத்து ஷில்லிங் கூட நிரந்தரமில்லை என்றாகிவிட்டது.

என் தாயின் கை வசமிருந்த எல்லா ஆடைகளும் கிட்டத்தட்ட விற்கப்பட்டு விட்டன. இனி மீதமென்றிருந்தது நாடக சாலையில் பயன்படுத்திய ஆடைகள் அடங்கிய ஒரு பெட்டி மட்டுமே. அவ்வப்போது அதிலிருந்து ஒவ்வொரு ஆடைகளையும் எடுத்து அணிந்து என் தாய் எங்களுக்கு முன்னால் பல்வேறு கதாபாத்திரங்களையும் நடித்துக் காட்டுவார். ஒரு நீதிபதியின் வேடமணிந்து தளர்ந்து போன குரலில் என் தாய் பாட்டு பாடும் காட்சியை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஒருவருக்கு மட்டுமே புரிகிற மாதிரி என் தாய் பல விஷயங்களையும் அப்போது விளக்கி கூறுவார்.

நாங்கள் ஒக்லே தெருவிலிருந்த ஒரே ஒரு அறையில் வசித்துக் கொண்டிருந்த காலமது. நான் காய்ச்சல் வந்து படுத்துக் கிடந்தேன். சிட்னி இரவு பள்ளிக் கூடத்திற்குப் போயிருந்தான். ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு ‘புதிய ஏற்பாடு’ நூலை எனக்குப் படித்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார் என் தாய். நான் கேட்டதிலேயே மிகவும் அருமையான பைபிள் விளக்கத்தை எனக்கு அளித்தவர் என் தாய்தான். இயேசுவை சிலுவையில் அறைந்ததைப் பற்றியும் இறுதி நிமிடங்களைப் பற்றியும் விளக்கி கூறியபோது என் தாயின் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. கடைசி நிமிடங்களில் மரண வேதனையுடன் ‘என் தெய்வமே என் தெய்வமே, நீ ஏன் என்னை கை விட்டு விட்டாய்?’ என்று இயேசு உரத்த குரலில் கதறி அழுததை வாசித்தபோது, நாங்கள் இருவரும் அழுதுவிட்டோம். அப்போது என் தாய் சொன்னார்: ‘இயேசு எந்த அளவுக்கு மனிதத்தன்மை உள்ளவராக இருந்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கணும். நம்மை மாதிரியே அவரும் சந்தேகத்துக்கு அடிமையாகியிருக்கிறார்.’

அவை எல்லாவற்றையும் கேட்டு அன்று இரவு உயிரைத் துறந்து இயேசுவிற்கு அருகில் போக வேண்டுமென்று நான் நினைத்தேன். ‘நாம் இங்கே வாழ்ந்து நம்முடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று இயேசு கூறியிருக்கிறார்’- என் தாய் சொன்னார்.

ஓக்லே தெருவிலிருந்த அந்த இருண்ட அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த உலகத்தில் இருப்பதிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த கருணையின் ஒளியைப் பற்றி என் தாய் எனக்கு கூறினார். அன்பு, கருணை, மனிதாபிமானம் என்ற மதிப்பு மிக்க, உயர்ந்த விஷயங்கள் நாடக அரங்குகளுக்கும், இலக்கியத்திற்கும் அளித்த அதே கொடையை எனக்கும் அவர் வழங்கினார்.

2

ங்களைப் போல கீழான சூழ்நிலையில் வாழும்போது பொதுவாகவே பேசக் கூடிய மொழியையும், உச்சரிப்பையும் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், நாங்கள் மொழியைத் தெளிவாக பேச வேண்டுமென்ற விஷயத்தில் என் தாய் மிகவும் கண்டிப்புடன் இருந்தார். அவர் அவ்வப்போது நாங்கள் பேசக் கூடிய வார்த்தைகளைத் திருத்துவார்.

கடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தபோது, சரியான சிந்திக்கும் திறன் இல்லாததால் நாடகத் துறைக்கு மீண்டும் போகாமல் இருந்ததற்காக சில நேரங்களில் நான் என் தாயைக் குறை கூறுவேன். அப்போது அப்படிப்பட்ட வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும் என்றும் பிரச்னைகள் நிறைந்ததாக இருக்குமென்றும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடவுளை மிகவும் எளிதில் மறந்து விடுவோம் என்றும் ஒரு புன்சிரிப்புடன் என் தாய் கூறுவார். அது ஒரு பக்கம் இருந்தாலும், நாடக சாலையைப் பற்றி ஏதாவது கூறிவிட்டால் போதும், என் தாய் தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய் விடுவார். பழைய நினைவுகளில் சிறிது நேரம் மூழ்கியிருந்துவிட்டு, சிறிது நாட்களுக்கு என் தாய் தையல் வேலைகளில் மூழ்கிப் போய் அமைதியாகி விடுவார். அந்த மாய உலகத்திலிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறோம் நாங்கள் என்பதை நினைத்து மனக் கவலையுடன் நானும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விடுவேன். சிறிது நேரம் சென்றதும் நான் உட்கார்ந்திருக்கும் நிலையைப் பார்த்து என் தாய் எனக்குப் பக்கத்தில் வந்து எனக்கு ஆறுதல் கூறுவார்.

பனிக்காலம் ஆரம்பமானது. சிட்னிக்கு ஆடைகள் முற்றிலும் இல்லை என்ற நிலை உண்டானது. தன்னிடமிருந்த ஒரு பழைய வெல்வெட் ஆடையை வைத்து என் தாய் சிட்னிக்கு ஒரு கோட் உண்டாக்கினார். அதன் கைகளில் சிவப்பும் கறுப்பும் நீளமான கோடுகளும் இருந்தன. தோள் பகுதியில் இருந்த சுருக்கங்கள் தெரியாமல் இருக்க என் தாய் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதை அணிவதற்கு தந்தபோது சிட்னி மன வருத்தப்பட்டவாறு சொன்னான்: ‘மற்ற பையன்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க?’

‘மத்தவங்க என்ன நினைச்சாலும் அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? அது மட்டுமில்லை. இது ரொம்பவும் வித்தியாசமா வேற இருக்கு...’- இதுதான் அதற்கு என் தாய் சொன்ன பதில். கடைசியில் சிட்னி அதை அணிந்து கொண்டுதான் பள்ளிக் கூடத்திற்குச் சென்றான். அவனுடைய ஷூக்களும் என் தாய்க்குச் சொந்தமானவைதான். பள்ளிக் கூடத்திற்குப் போனதும் மாணவர்கள் எல்லோரும் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு ஆரவாரம் செய்தார்கள். ‘ஜோசஃப்பும் அவனுடைய பல வர்ண ஆடையும்’ என்று கூறியவாறு அவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள். என் தாய்க்குச் சொந்தமான இறுக்கமான காலுறையை வெட்டி ஸ்டாக்கிங்க்ஸ் ஆக மாற்றி அணிந்து நடந்த என்னை ‘சர் ஃப்ரான்சிஸ் ட்ரேக்’ என்று மாணவர்கள் கிண்டலுடன் அழைத்தார்கள்.


அந்த கஷ்டங்களுக்கு மத்தியில் என் தாய்க்கு திடீரென்று ஒரு தலைவலி வந்தது. அதனால் அவர் தையல் வேலைகளைவிட்டு விட்டார். நாட்கணக்கில் கண்களுக்கு மேலே தேயிலை பேண்டேஜ் கட்டி இருண்ட அறைக்குள் படுத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை என் தாய்க்கு உண்டானது. அந்தச் சமயங்களில் சூப் டிக்கெட்டுகளும் உணவு பொட்டலங்களும் தந்து அருகிலிருந்தவர்கள் எங்களுக்கு உதவினார்கள். பள்ளிக் கூடம் செல்வதற்கு முன்பு நாளிதழ்களை வினியோகம் செய்து சிட்னியும் சிறிய அளவில் ஒரு வருமானத்தைச் சம்பாதித்தான். எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு என்ற ஒன்று கட்டாயம் இருக்கும் அல்லவா? எங்கள் விஷயத்தில் அந்த முடிவு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது.

என் தாயின் உடல் நிலை பரவாயில்லை என்றிருந்த சமயமது. பத்திரிகை விற்பதற்காகச் சென்றிருந்த சிட்னி அன்று உரத்த குரலில் ஆரவாரித்தவாறு திரும்பி வந்தான். ‘எனக்கொரு பர்ஸ் கிடைச்சது’ என்று கத்திக் கொண்டே அவன் வந்தான். பத்திரிகைக் கட்டை படுக்கையின் மீது வீசி எறிந்த அவன் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டவாறு அந்த பர்ஸை என் தாயின் கையில் தந்தான். என் தாய் அதை மெதுவாக திறந்தார். அதற்குள் நிறைய வெள்ளி நாணயங்களும், செம்பு நாணயங்களும் இருந்தன. அதை மூடிய என் தாய் படுக்கையில் போய் சாய்ந்தார்.

சிட்னி பேருந்துகளுக்குள் நுழைந்து பத்திரிகைகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில்தான் ஒரு பேருந்தின் ஆள் இல்லாத இருக்கையில் அவன் அந்தப் பர்ஸைக் கண்டெடுத்திருக்கிறான். அடுத்த நிமிடம் அவன் அதன்மீது ஒரு பத்திரிகையைப் போட்டு மூடி, பத்திரிகையோடு சேர்த்து பர்ஸை எடுத்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கிவிட்டான். ஆள் யாரும் இல்லாத ஒரு இடத்தில் போய் நின்று பர்ஸைத் திறந்து பார்த்தபோதுதான் இந்த அளவிற்கு பணம் அதற்குள் இருப்பதே அவனுக்கு தெரியவந்திருக்கிறது. மகிழ்ச்சி பொங்க அதை அவன் எண்ணிக்கூட பார்க்காமல் வீட்டிற்கு வேகமாக ஓடி வந்துவிட்டான்.

உடல் நிலை சற்று தேறியவுடன் என் தாய் எழுந்து அந்த பர்ஸிலிருந்த நாணயங்களை படுக்கை மீது கொட்டினார். அப்போதும் பர்ஸின் கனம் குறையவில்லை. அதன் நடுப் பகுதியில் மேலும் ஒரு பாக்கெட் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டோம். அதற்குள் ஏழு தங்கக் காசுகள் இருந்தன. கடவுளுக்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும். பர்ஸில் எந்தவித முகவரியும் இல்லை. அதனால் என் தாயின் தர்ம உணர்விற்குச் சிறிதும் குறைபாடு உண்டாகவில்லை. அந்த பர்ஸின் சொந்தக்காரருக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதை நினைத்து வருத்தப்பட்ட அதே நேரத்தில் அது சொர்க்கத்திலிருந்து கடவுள் எங்களுக்காக அனுப்பி வைத்த பரிசு என்றும் என் தாய் நினைத்தார்.

என் தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டது மன ரீதியாகவா இல்லாவிட்டால் உடல் ரீதியாகவா என்பதைப் பற்றி என்னால் உறுதியாக கூற முடியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஒரே வாரத்தில் என் தாய் முழுமையாக குணம் அடைந்தார். அவர் எங்களுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்தார். விடுமுறை நாளைக் கொண்டாடுவதற்காக நாங்கள் செளத் என்ட்டில் இருந்த கடற்கரைக்குச் சென்றோம்.

முதல் தடவையாக கடலைப் பார்த்த மயக்கத்தில் இருந்தேன் நான். உயர்ந்த தெருவிலிருந்து அதை நெருங்கிய போது, அது அசைவே இல்லாமல் இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். பிறகு ஒரு பயங்கரமான உருவத்தைப் போல அது ஆர்ப்பரித்தவாறு என் மீது வந்து பாய்வதைப் போல ஓடி வந்தது. ஷூக்களை கழற்றி வைத்துவிட்டு நாங்கள் மூன்று பேரும் நீரில் இறங்கி குளித்தோம். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு மாலை நேரமாக அது இருந்தது. அந்த நாளைப் பற்றிய நினைவு இப்போதுகூட எனக்கு இருக்கவே செய்கிறது.

மணல் கடிகாரத்தில் இருக்கும் மணலைப் போல எங்களின் கையிலிருந்த பணம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து கொண்டிருந்தது. என் தாய் தனக்கு ஏதாவதொரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தாலும், அது அவருக்குக் கிடைக்கவில்லை. தவணைப் பணத்தை ஒழுங்காக கட்ட முடியாமற் போனபோது, என் தாயின் தையல் இயந்திரத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். என் தந்தையிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்த பத்து ஷில்லிங் பணம் முழுமையாக வராமல் நின்றுவிட்டது.

வாழ்வதற்கு எங்களுக்கு ஒரு வழியும் இல்லாமற் போய்விட்டது. கடைசியில் நாங்கள் மூன்று பேரும் லாம்பெத்திலிருந்த அனாதை இல்லத்தைத் தேடிச் சென்றோம்.

அனாதை இல்லத்தில் போய் இருப்பது என்பது வெட்கக் கேடான ஒரு விஷயம் என்றாலும் ஒரே ஒரு அறையில் வாழும் வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்று நானும் சிட்னியும் விருப்பப்பட்டோம். அனாதை இல்லத்தின் வெளிக் கதவைத் தாண்டுவது வரையிலும் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி எனக்கு எந்த ஒரு தெளிவும் இல்லை. அங்கு போனவுடன் என் தாயை பெண்கள் பகுதிக்கும் எங்களை சிறுவர்கள் பகுதிக்கும் பிரித்து அனுப்பினார்கள். என் தாயிடமிருந்து உண்டான அந்தப் பிரிதல் என்னை மிகவும் கவலைப்பட வைத்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகுதான் நான் என் தாயைப் பார்த்தேன். அன்று நடந்த அந்த கவலை நிறைந்த காட்சியை இப்போது கூட நான் நினைத்துப் பார்க்கிறேன். பார்வையாளர்கள் அறையில் அனாதை இல்லத்தில் தரப்பட்ட சீருடையை அணிந்து அமர்ந்திருந்த என் தாயைப் பார்த்த நாங்கள் அதிர்ந்து போய் விட்டோம். ஒரே வாரத்தில் என் தாய் வயது அதிகமாகி விட்ட பெண்ணைப் போல ஆகி விட்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அந்த முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. சிட்னியும் நானும் அழுததைப் பார்த்து என் தாயும் தேம்பித் தேம்பி அழுதார். சிறிது நேரம் கழித்து நாங்கள் மூன்று பேரும் அங்கிருந்த சொரசொரப்பான பெஞ்சுகளில் ஒன்றில் போய் அமர்ந்தோம். என் தாயின் மடியில் வைத்திருந்த எங்களின் கைகளை அவர் வருடிக் கொண்டிருந்தார். எங்களின் ஒட்ட நறுக்கப்பட்ட தலை முடியைக் கையால் வருடியவாறு அவர் சிரித்துக் கொண்டே, ‘சீக்கிரம் நாம ஒண்ணா சேர்ந்து வாழுவோம்’ என்று கூறி எங்களைத் தேற்றினார். போவதற்கு முன்பு கொஞ்சம் மிட்டாய்களை எங்களிடம் தந்தார். யாருக்கோ துணி தைத்ததன் மூலம் கிடைத்த காசை வைத்து ஸ்டோரிலிருந்து அவற்றை அவர் வாங்கியிருந்தார். முதுமை வந்து விட்டதைப் போலிருந்த என் தாயின் தோற்றத்தைப் பற்றி பிறகு சிட்னி நீண்ட நேரம் கவலையுடன் கூறிக் கொண்டிருந்தான்.


கவலையுடன்தான் என்றாலும் நானும் சிட்னியும் அனாதை இல்லத்தின் வாழ்க்கையுடன் எங்களை சங்கமமாக்கிக் கொண்டோம். அந்தக் காலத்தில் நடந்த எல்லா விஷயங்களும் ஞாபகத்தில் இல்லையென்றாலும் நீளமான மேஜையைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டதை நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட எண்பத்தைந்து வயது இருக்கக் கூடிய வயதான ஒரு மனிதர்தான் தன் பொறுப்பாளராக இருந்தார். அவருக்கு என் மீது மிகுந்த அன்பு இருந்தது. அதற்குக் காரணம்- அங்கு இருந்தவர்களிலேயே மிகவும் வயது குறைவான சிறுவன் நான்தான். அதுமட்டுமல்ல- ‘க்ராப்’ வெட்டப்படும் வரை எனக்கு நல்ல சுருள் முடி இருந்தது. உணவு சாப்பிடும் நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் நான் எப்போதும் உட்கார்ந்திருந்ததால், எனக்கும் அவர் மீது ஒரு வித ஈடுபாடு உண்டானது. ஆனால், சில நாட்களில் பல விஷயங்களும் மாற ஆரம்பித்தன. என்னைவிட வயது குறைவானவனும் சுருள் முடியைக் கொண்வனுமான ஒரு சிறுவன அங்கு புதிதாக வந்து சேர்ந்தான். அத்துடன் என்னுடைய இடம் அவனுக்குக் கிடைத்தது. மிகவும் வயது குறைந்த சுருள் முடியைக் கொண்ட சிறுவன மீதுதான் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று அந்த வயதான மனிதர் ஒரு நாள் அதைப் பற்றி பேசும்போது சொன்னார்.

மூன்று வாரங்கள் கடந்ததும் எங்களை லண்டனிலிருந்து பன்னிரெண்டு மைல்கள் தூரத்திலிருந்த ஹான்வெல் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார்கள். அனாதைகளும், வறுமையின் பிடியில் சிக்கிய சிறார்களும் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடமது. ஒரு குதிரை வண்டியில் அங்கு போன பயணம் சுவாரசியமானதாகயும் சாகசங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அங்கு போய்ச் சேர்ந்தவுடன் எங்களை மருத்துவப் பரிசோதனைக்கு ஆளாக்கினார்கள். அங்கு வரும் சிறார்களில் சிலர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நோய்கள் காரணமாக பள்ளிக் கூடத்தில் சேர முடியாத நிலையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அந்த கட்டாய மருத்துவப் பரிசோதனையை நடத்தினார்கள்.

முதல் சில நாட்கள் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. லாம்பெத்திலிருந்த அனாதை இல்லத்தில் இருந்தபோது என் தாய் சற்று தூரத்தில் எங்கோ இருக்கிறார் என்ற நினைப்பு எப்போதும் எங்களிடம் இருக்கும். இப்போது என் தாய் எங்களைவிட்டு பல மைல்கள் தாண்டி இருந்தார். பள்ளிக்குள் அனுமதித்தபோது சிட்னியை சற்று வயதான சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கும் என்னை வயது குறைவான சிறுவர்கள் இருக்கும் பகுதிக்கும் அனுப்பினார்கள். அதற்குப் பிறகு நாங்கள் எப்போதாவதொரு முறைதான் பார்ப்போம் என்றாகிவிட்டது. ஆறு வயது கொண்ட நான் முற்றிலும் தனிமையில் விடப்பட்டவனாகவும், சிறிது கூட மதிப்பற்றவனாகவும் இருப்பதை உணர்ந்தேன்.

மாலை நேரத்தில் சிறுவர்கள் எல்லோரும் இரவு ஆடைகள் அணிந்து முழங்கால் போட்டு அமர்ந்து கொண்டு உரத்த குரலில் பாடல்களைப் பாடுவார்கள். அப்போது ஜன்னல் வழியே தெரியும் மறைந்து கொண்டிருக்கும் சூரியனும், அலைகளைப் போல தெரியும் மலைகளும் என்னைக் கவலையில் மூழ்கச் செய்யும். அர்த்தம் எதுவும் தெரியாவிட்டாலும் அந்தப் பாடல்களின் மெட்டுகள் என்னைக் கவலைக் கொள்ளச் செய்தன என்பதென்னவோ உண்மை.

நாங்களே ஆச்சரியப்படும் வகையில் என் தாய் இரண்டு  மாதங்களுக்குப் பிறகு எங்களை பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்கான அனுமதியுடன் வந்தார். ஒரு நாளாவது எங்களுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால்தான் என் தாய் அப்படியொரு அனுமதியுடன் வந்தார். சில மணி நேரங்கள் வெளியே இருந்துவிட்டு அன்றே அனாதை இல்லத்திற்குத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் என் தாய் இருந்தார். ஹான் வெல்லிலிருந்து நாங்கள் மீண்டும் லாம்பெத் அனாதை இல்லத்திற்குக் கொண்டு போகப்பட்டோம். அங்கு முதலில் போனவுடன் நாங்கள் அணிந்திருந்த எங்களுக்குச் சொந்தமான ஆடைகளை அவிழ்த்து வாங்கி சலவை செய்து வைத்திருந்தார்கள். இப்போது அவற்றை இஸ்திரி போடாமல் திருப்பி தந்தார்கள். சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த ஆடைகளை அணிந்து கொண்டு நாங்கள் வெளி கேட்டைக் கடந்து வெளியே வந்தோம். என் தாயும் தன்னுடைய சொந்த ஆடைகளை அணிந்திருந்தார். பொழுது விடிந்து அதிக நேரம் ஆகவில்லை. போவதற்கு ஒரு இடமும் இல்லாததால் நாங்கள் ஒரு மைல் தூரத்திலிருந்த கென்னிங்டன் பூங்காவை நோக்கி நடந்தோம். சிட்னி கொஞ்சம் நாணயங்களை கைக்குட்டையில் கட்டி வைத்திருந்தான். அதை வைத்து கொஞ்சம் செர்ரி பழங்கள் வாங்கினோம். பூங்காவிலிருந்த பெஞ்சில் அமர்ந்து அந்த பழங்கள் முழுவதையும் தின்றோம். கீழே ஒரு பழைய நாளிதழ் கிடந்தது. சிட்னி அதை எடுத்து சுருட்டி ஒரு பந்து உண்டாக்கினான். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பந்தை எறிந்து விளையாடினோம். மதிய நேரம் வந்ததும் மீதமிருந்த நாணயங்களுடன் ஒரு காப்பி கடைக்குள் நுழைந்தோம். இரண்டு காப்பியும் இரண்டு துண்டு கேக்கும் வாங்கி பங்கு போட்டு சாப்பிட்டு முடித்து மீண்டும் பூங்காவைத் தேடி வந்தோம்.

மாலை நேரம் வந்ததும் நாங்கள் திரும்பச் செல்ல தயாரானோம். ‘தேநீர் நேரம் வர்றப்போ நாம அங்கே போய் சேருவோம்’- என் தாய் சொன்னார்.

நாங்கள் அனாதை இல்லத்திற்கும், அங்கிருந்து ஹான்வெல் பள்ளிக் கூடத்திற்கும் திரும்பச் சென்றோம். பொறுப்பாளர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள். ஆடைகளை சலவை செய்ய வேண்டியிருக்கிறதே என்பதுதான் அதற்குக் காரணம். ஹான்வெல்லிற்கு வந்து சேர்வதற்கு முன்பு அதிக நேரம் நாங்கள் அனாதை இல்லத்தில் இருந்துவிட்டோம் என்பதும் அவர்களின் கோபத்திற்கு இன்னொரு காரணமாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நாங்கள் ஹான்வெல்லில் இருந்தோம். நான் படிக்க ஆரம்பித்தது அங்குதான். ‘சாப்ளின்’ என்று எழுத கற்றபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்தப் பெயர் பார்ப்பதற்குக் கூட என்னைப் போலவே இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன்.

ஹான்வெல் பாடசாலையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு மென்று தனித்தனியாக பிரிவுகள் உண்டு. சனிக்கிழமை மாலை நேரங்களில் வயது குறைவானவர்கள் குளியலறையை பயன்படுத்துவார்கள். வயது சற்று அதிகமான மாணவர்கள் அங்கு வந்து எங்களைக் குளிப்பாட்டுவார்கள். அவர்கள் குளிப்பாட்டும்போது, எனக்கு மிகவம் வெட்கமாக இருக்கும்.

ஏழு வயது ஆன போது, என்னை வயது குறைந்த மாணவர்கள் பிரிவிலிருந்து ஏழு முதல் பதினான்கு வயது வரை இருக்கும் மாணவர்கள் பகுதிக்கு மாற்றினார்கள். இப்போது நான் அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம். கேளிக்கைகளிலும், விளையாட்டிலும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாடசாலைக்கு வெளியே நடப்பதிலும் கூட.


ஹான்வெல்லில் நாங்கள் நன்கு நடத்தப்பட்டோம். எனினும், தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வு எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. அங்கிருந்த சூழ்நிலை கவலை நிறைந்ததாக இருந்தது. பாடசாலைக்கு வெளியே நடந்து செல்வதை நான் மிகவும் வெறுத்தேன். இரண்டு வரிசைகளாக ஒற்றையடிப் பாதைகள் வழியாக நடந்து சென்றபோது ஆட்கள் எங்களை கேவலமாக பார்த்தார்கள். ‘பைத்தியக்கார விடுதியில் தங்கியிருக்கும் அனாதைகள்’ என்றுதான் அவர்களுக்கு மத்தியில் நாங்கள் அறியப்பட்டிருந்தோம்.

பள்ளிக்கூடத்தில் விளையாடும் இடம் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்தது. அதைச் சுற்றியிருந்த ஒரே மாடியைக் கொண்ட செங்கற்களால் ஆன கட்டிடத்தில் அலுவலகம், பொருட்கள் வைக்கப்படும் அறை, டாக்டர்கள் மருந்து தரும் இடம், பல் மருத்துவரின் மருந்தகம், மாணவர்களின் ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறை ஆகியவை இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி மூலையில் ஒரு காலியான அறை இருந்தது. இப்போது அதற்குள் ஒரு பதினான்கு வயதைக் கொண்ட ஒருவனை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சற்று வயதான மாணவர்கள் கூறினார்கள். மாடியிலிருந்த ஜன்னல் வழியாக குதித்து பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி தப்பிக்க முயற்சித்தபோது, அவன் பிடிபட்டுக் கொண்டான். தன்னைப் பிடிக்க வந்த அதிகாரிகள் மீது அவன் கற்களை வீசி எறிந்திருக்கிறான்.

இப்படிப்பட்ட பெரிய குற்றங்களுக்கு தரப்படும் தண்டனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உடற்பயிற்சி கூடத்தில் வைத்து நிறைவேற்றப்படும்.

வெள்ளிக் கிழமை காலையில் சுமார் முன்னூறு மாணவர்கள் வரிசையாக நடந்து சென்று ஒரு சதுரத்தின் மூன்று பக்கங்களிலும் ராணுவத்தில் நிற்பதைப் போல நின்றிருப்பார்கள். நான்காவது பக்கம் போடப்பட்டிருக்கும் ஒரு நீளமான டெஸ்க்கிற்குப் பின்னால் குற்றவாளி விசாரணையையும் தண்டனையையும் எதிர்ப்பார்த்து காத்து நின்றிருப்பான். டெஸ்க்கிற்கு முன்னால் ஒரு முக்காலி போடப்பட்டிருக்கும். அதன் ஒரு பக்கத்தில் நடக்கப் போகும் விபரீதத்தைக் காட்டுவதைப் போல் ஒரு பிரம்பு தொங்கிக் கொண்டிருக்கும்.

சிறிய குற்றங்களுக்கு குற்றவாளியை டெஸ்க்கில் குப்புற படுக்க வைப்பார்கள். கால்கள் இரண்டையும் ஒரு ஆள் பிடித்துக் கொள்வான். இன்னொரு ஆள் குற்றவாளியின் சட்டையை மேல் நோக்கியும் காற்சட்டையை கீழ் நோக்கியும் இழுப்பான். கப்பல் படையிலிருந்து ஓய்வு பெற்ற இரு நூறு ராத்தல் எடையைக் கொண்ட கேப்டன் ஹின்ட்ரன் ஒரு பிரம்புடன் அங்கு நடந்து நெருங்கி வருவார். ஒரு ஆளின் பெருவிரல் அளவிற்கு தடிமனும் நான்கடி நீளமும் இருக்கும் அந்த பிரம்பிற்கு. அந்த பிரம்பை வைத்து பின் பகுதியில் மூன்று அடிகள் கொடுப்பதுதான் இருப்பதிலேயே குறைவான தண்டனை. அதிகமாக ஆறு அடிகள். மூன்று அடிகளைத் தாண்டும்போது குற்றவாளியிடமிருந்து பயங்கரமான ஒரு அலறல் சத்தம் கேட்கும். பெரும்பாலும் அவன் அப்போது மயக்கமடைந்து விடுவான். அப்போது அவனைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு ஓரத்தில் படுக்க வைப்பார்கள். உண்மையாகவே அது ஒரு பயங்கரமான காட்சிதான்.

குற்றம் செய்யாத நிரபராதியாகவே இருந்தாலும் குற்றத்தை மறுக்காமல் இருப்பதுதான் நல்லது என்று பொதுவாக சற்று வயதான மாணவர்கள் கூறுவார்கள். எப்படியாவது குற்றம் செய்தவன்தான் என்பது நிரூபணமாகிவிட்டால், பிறகு அதற்குக் கிடைக்கக் கூடிய தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க பொதுவாக மாணவர்கள் யாருக்கும் முடிவதுமில்லை.

சற்று வயது அதிகமான மாணவர்கள் பகுதிக்கு மாற்றிய பிறகுதான் முதல் தடவையாக அந்தத் தண்டனையை நேரில் பார்த்தேன். அதிகாரிகள் நடந்து வருவதைப் பார்த்த கணத்திலேயே என்னுடைய இதயம் படு வேகமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் கூடத்திலிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்த தைரியசாலியான குற்றவாளியை டெஸ்க்கிற்குப் பின்னால் நிறுத்தியிருந்தார்கள். அவன் மிகவும் இளையவனாக இருந்ததால் அவனுடைய தலையையும் தோளையும் மட்டுமே எங்களால் பார்க்க முடிந்தது.

தலைமை ஆசிரியர் மிடுக்கான குரலில் குற்றப் பத்திரிகையை வாசித்தார். அதற்குப் பிறகு அவர் கேட்டார்:

‘குற்றத்தைச் செய்தாயா இல்லையா?’

குற்றம் செய்தவன் அமைதியாக- அதே நேரத்தில்- கம்பீரமாக நின்றிருந்தான். அந்த நிமிடமே அவன் முக்காலியை நோக்கி கொண்டு போகப்பட்டான். உயரம் குறைவாக இருந்ததால் ஒரு சோப்பு பெட்டிக்கு மேலே அவனை ஏற்றி நிறுத்தி அவனுடைய கைகளை முக்காலியுடன் சேர்த்து கட்டினார்கள். இந்த முறை எப்போதும் பயன்படுத்துவதிலிருந்து மாறுபட்ட முறையில் இருந்த பிரம்பை பயன்படுத்தினார்கள். மூன்று முறை அடித்த பிறகு இரண்டு பணியாட்கள் வந்து அவனைத் தூக்கிக் கொண்டு சிகிச்சை அறைக்குச் சென்றார்கள்.

வியாழக் கிழமைகளில் மைதானத்தில் ப்யூகிள் சத்தம் கேட்கும். அந்த நிமிடமே நாங்கள் வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு மூச்சை அடக்கிய சிலைகளைப் போல நின்று கொண்டு அதன் மீது கவனத்தைச் செலுத்துவோம். அப்போது கேப்டன் ஹின்ட்ரம் ஒரு ஒலி பெருக்கியில் வெள்ளிக் கிழமை தண்டனைக்கு வர வேண்டியவர்களின் பெயர்களைக் கூறுவார்.

ஒரு வியாழக் கிழமை ஒலிபெருக்கியில் கேட்ட பெயர் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அது என் பெயராக இருந்ததுதான் காரணம். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எனினும், வாயால் சொல்ல முடியாத ஏதோ காரணத்தால் எனக்கு கோபம் வந்தது. ஒருவேளை, ஒரு நாடகத்தின் மைய கதாபாத்திரமாக நான் ஆக்கப்பட்டிருக்கிறேன் என்பது காரணமாக இருக்கலாம்.

விசாரணை செய்யப்பட்ட நாளன்று நான் முன்னோக்கி நடந்து சென்றேன். தலைமை ஆசிரியர் குற்ற பத்திரிகையைப் படித்தார்: ‘கழிப்பறையில் நீ எரித்தாய் என்பதுதான் நீ செய்த தவறு.’

அது உண்மையே அல்ல. சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து சில தாள்களை தரையில் குவித்து எரிய விட்டுக் கொண்டிருக்கும்பொழுது, நான் கழிப்பறையை பயன்படுத்தினேன் என்பதைத் தவிர, அந்த நிகழ்ச்சியில் எனக்கு எந்தவொரு பங்கும் இல்லை.

‘குற்றவாளியா இல்லையா?’- தலைமை ஆசிரியர் உரத்த குரலில் கேட்டார்.

‘குற்றவாளிதான்...’- ஏதோ சக்தி வந்ததைப் போல நான் சொன்னேன்.

டெஸ்க்கில் நிற்க வைத்து பின் பகுதியில் பிரம்பால் மூன்று முறை அடித்தபோது, அது ஒரு அநீதி என்ற உணர்வோ கோபமோ எதுவும் என்னிடம் இல்லை. அதற்கு பதிலாக பயமுறுத்தக் கூடிய ஒருவித தைரியம்தான் என்னிடம் இருந்தது. மூச்சே நின்றுவிடும் அளவிற்கு வேதனை இருந்தாலும் நான் அழவில்லை. வேதனை தாங்க முடியாமல் கீழே விழுந்தபோது அவர்கள் என்னை தூக்கி எடுத்துக் கொண்டு போய் படுக்க வைத்தார்கள். ஒரு வீரச் செயலில் வெற்றி பெற்று விட்டதைப் போல் நான் உணர்ந்தேன்.


சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளன்றுதான் அதைப் பற்றிய தகவலே சிட்னிக்குத் தெரிய வந்திருக்கிறது. மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து வரிசையில் மார்ச் செய்து வந்து நின்ற அவன் டெஸ்க்கிற்குப் பின்னால் என் தலையைப் பார்த்ததும் பதைத்துப் போய் விட்டான். என்னை அடிப்பதைப் பார்த்து தான் அழுது விட்டதாக பின்னால் அவன் சொன்னான்.

சிட்னியின் தம்பி நான் என்ற முறையில் மனதிற்குள் ஒரு சிறு பாதுகாப்பு இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். சாப்பாட்டு அறையை விட்டுச் செல்லும்போது நான் அவ்வப்போது அவனைப் பார்ப்பேன். சமையல் வேலைகளுக்கு மத்தியில் அவன் ஒரு பெரிய வெண்ணெய் துண்டை ரொட்டி மீது தடவி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக எனக்கு தருவான். நான் அதை சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வெளியேறுவேன். பிறகு அதை என் நண்பனுடன் பங்கு வைத்து நான் சாப்பிடுவேன். அது பசி இருக்கிறது என்ற காரணத்தால் அல்ல. கூடுதலாக வெண்ணெய் சாப்பிட முடிகிறதே என்ற சந்தோஷமே அதற்குக் காரணம். ஆனால், அது அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எக்ஸ்மவுத் பயிற்சிக் கப்பலில் சேர்வதற்காக சிட்னி ஹான்வெல்லை விட்டு வெளியேறினான்.

பதினொரு வயது வந்து விட்டால், அனாதை இல்லத்திலிருக்கும் சிறுவர்கள் தரைப் படையிலோ, கப்பல் படையிலோ சேரலாம். கப்பல் படை என்றால் எக்ஸ்மவுத்திற்கு அனுப்புவார்கள். போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும், ஒரு வேலை வேண்டும் என்று சிட்னி விருப்பப்பட்டான். அந்த வகையில் ஹான்வெல்லில் என்னைத் தனியாக விட்டு விட்டு அவன் பயணமானான்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் தனித்துவத்தின் ரகசிய வெளிப்பாட்டுப் பகுதி என்று தலைமுடியைச் சொல்லாம். முதல் தடவையாக முடியை வெட்டும்போது சிறுவர்கள் வாய் விட்டு அழுவார்கள். குட்டையானதாகவோ சுருண்டதாகவோ நீளமானதாகவோ- தலைமுடி எப்படி இருந்தாலும், அதை வெட்டி வேறு வகையில் மாற்றம் செய்யும்போது தங்களின் தனித்துவத்தின் ஒரு பகுதி வெட்டப்படுவதைப் போல் அவர்கள் உணர்வார்கள்.

அந்தச் சமயத்தில் சில சிறுவர்களுக்கு புழு காரணமாக ஒரு வகை தொற்று நோய் உண்டானது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் முதல் மாடியில் மைதானத்திற்கு எதிரே இருந்த தனி பகுதிக்கு மாற்றினார்கள். பரிதாபப்படும்படியான நிலையிலிருந்த அந்தச் சிறுவர்கள் எந்த நேரமும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருப்பார்கள். சவரம் செய்து மினுமினுத்துக் கொண்டிருந்த அவர்களின் தலை அயோடின் தேய்க்கப்பட்டு தவிட்டு நிறத்தில் இருக்கும். அது அருவருப்பு உண்டாக்கும் ஒரு காட்சி என்பதால் நாங்கள் வெறுப்புடன் அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருப்போம்.

ஒரு நாள் சாப்பாட்டு அறையில் வேலை பார்த்த ஆட்களில் ஒருவர் என் தலை முடியைக் கையால் பிரித்துக் கொண்டே சொன்னார்: ‘புழு...’ அடுத்த நிமிடம் நான் உரத்த குரலில் அழ ஆரம்பித்து விட்டேன்.

அதற்கான சிகிச்சை பல வாரங்கள் நீண்டு கொண்டிருந்தபோது அது சீக்கிரம் முடியாதா என்று நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். என் தலையை வழுக்கை ஆக்கி, அதன்மீது அயோடினைத் தடவினார்கள். அது போதாதென்று தலையை ஒரு துணியால் சுற்றி கட்டி விட்டார்கள். மொத்தத்தில்- என்னைப் பார்க்கும்போது நான் பருத்தி சேகரிக்கும் ஒரு மனிதனைப் போல இருந்தேன். மற்ற சிறுவர்கள் வெறுப்புடன் என்னைப் பார்ப்பார்கள் என்ற உண்மை எனக்கு தெரியுமாதலால் நான் ஒருமுறை கூட ஜன்னல் பக்கத்திலேயே போனதில்லை.

புழுக்கடி பாதிப்பிற்கு ஆளான அந்தச் சமயத்தில் ஒரு நாள் என் தாய் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். அனாதை இல்லத்தை விட்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாகத் தங்கலாம் என்ற சில திட்டங்களுடன் என் தாய் அங்கு வந்திருந்தார். என் தாயைப் பார்த்தது ஒரு பூச்செண்டைப் பார்த்த சந்தோஷத்தைத் தந்தது. நல்ல பிரகாசமான முகத்துடனும் அழகான தோற்றத்துடனும் அவரைப் பார்த்த போது எனக்கு என் தோற்றத்தைப் பார்த்து வெட்கம் வந்துவிட்டது.

‘அவனோட அசிங்கமான முகத்தைப் பார்த்து நீங்க எதுவும் நினைக்காதீங்க’- நர்ஸ் என் தாயிடம் சொன்னாள்.

அதற்கு என் தாய் விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு என்னை கட்டிப் பிடித்து முத்தம் தந்தவாறு என் தாய் சொன்ன வார்த்தைகளை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்: ‘உன் எல்லா அசிங்கங்களுடனும் உன் மீது நான் இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன்.’

சிறிதும் தாமதமில்லாமல் சிட்னி எக்ஸ்மவுத்தை விட்டும் நான் ஹான்வெல்லை விட்டும் தாயுடன் சென்றோம். கென்னிங்டன் பூங்காவிற்குப் பின்னாலிருந்த ஒரு அறையில்தான் நாங்கள் வசித்தோம். எங்களைச் சிறிது காலம் வைத்து பார்க்க மட்டுமே என் தாயால் முடிந்தது. சில நாட்களிலேயே நாங்கள் மீண்டும் அனாதை இல்லத்திற்கு வந்து விட்டோம்.

என் தாய்க்கு ஒரு வேலை கிடைப்பதிலிருந்த கஷ்டமும் என் தந்தைக்கு நாடக உலகில் வேலை இல்லாமற் போனதும்தான் நாங்கள் திரும்பவும் அனாதை இல்லத்திறகு வந்ததற்கான காரணங்கள். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்த அந்தக் குறுகிய கால கட்டத்தில் பல தடவைகள் எங்களின் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருந்தோம். கடைசி மாற்றம் அனாதை இல்லமாக இருந்தது.

நாங்கள் வசித்தது புதிய ஒரு இடமாக இருந்ததால் வேறொரு அனாதை இல்லத்திற்கு இந்த முறை எங்களை அனுப்பினார்கள். அங்கிருந்து நார்வுட் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். ஹான்வெல்லை விட இருட்டாக இருந்தது அந்த இடம். பாதைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சந்தோஷமில்லாத ஒரு சூழல் அங்கு நிலவிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது சிட்னியை இரண்டு நர்சுகள் வந்து அழைத்திருக்கிறார்கள். என் தாய்க்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், கெயின்ஹில் மனநோய் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் அவனிடம் கூறியிருக்கிறார்கள். எந்தவித உணர்ச்சி மாறுதலும் உண்டாகாமல் சிட்னி திரும்பப் போய் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறான். ஆனால், விளையாட்டு முடிந்த பிறகு அவன் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் அழுதிருக்கிறான்.

அவன் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அழவில்லை. ஆனால், பதைபதைப்பான ஒரு விரக்தி உணர்வு என்னை வந்து தழுவிக் கொண்டது. என் தாய்க்கு என்ன நேர்ந்தது? எப்படி அவர் மனநோயால் பாதிக்கப்பட்டார்?

தன்னுடைய சொந்த மனதை விட்டு தப்பித்து என் தாய் எங்களை தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டதைப் போல் நான் உணர்ந்தேன்.


3

ரு வாரத்திற்குப் பிறகு அந்தச் செய்தி எங்களை வந்து அடைந்தது. சிட்னியையும் என்னையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என் தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. என் தந்தையுடன் சேர்ந்து வசிப்பதைப் பற்றி மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பதுகூட சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. காரணம்- இரண்டு மூன்று முறைகளே நான் என் தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை மேடையில் வைத்து பார்த்திருக்கிறேன். பிறகு ஒரு முறை ஒரு பெண்ணுடன் சேர்ந்து கென்னிங்க்டன் சாலையில் அவர் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது பார்த்திருக்கிறேன். நான் மிகவும் எளிதாக என் தந்தையை அடையாளம் கண்டு கொண்டேன். என் தந்தை என்னையே பார்த்தார். நான் அந்த இடத்திலேயே நின்று விட்டேன். அப்போது என்னை அவர் அருகில் அழைத்து பெயரைக் கேட்டார். உணர்ச்சிகரமான ஒரு சம்பவமாக இருந்தது அது. நான் சிறிதும் கள்ளங்கபடமே இல்லாமல் சொன்னேன் ‘சார்லி சாப்ளின்.’

என்னை அடையாளம் கண்டு கொண்ட நினைப்புடன் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே அவர் தன்னுடைய பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு நாணயத்தை எடுத்து என் கையில் தந்தார். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் கூட நான் அங்கு நிற்கவில்லை. ஒரே ஓட்டமாக நான் வீட்டிற்கு வந்தேன். நான் என் தந்தையை நேரில் பார்த்த விஷயத்தை வந்த கணத்திலேயே என் தாயிடம் சொன்னேன்.

இப்போது இதோ நாங்கள் என் தந்தையுடன் போய் வசிக்கப் போகிறோம். தவிர, கென்னிங்டன் சாலை எங்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றே. அது எந்தச் சமயத்திலும் நார்வுட்டைப் போல வினோதமானதாகவும் இருண்டு போனதாகவும் இருந்ததே இல்லை.

அதிகாரிகள் எங்களை வேனுக்குள் ஏற்றினார்கள். 287, கென்னிங்க்டன் சாலை என்ற முகவரியில் வேன் போய் நின்றது. முன்பு நான் என் தந்தையுடன் பார்த்த பெண்தான் கதவைத் திறந்தாள். அவளுக்கு கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும். லூஸி- இதுதான் அவளுடைய பெயர். என் தந்தையின் இரண்டாவது மனைவி அவள். பிறரை ஈர்க்கிற மாதிரியான தோற்றத்தை அவள் கொண்டிருந்தாலும் முகத்தை எப்போதும் ‘உம்’ என்றே அவள் வைத்திருந்தாள். நாங்கள் போனபோது என் தந்தை வீட்டில் இல்லை. முக்கியமான பத்திரங்களில் கையெழுத்து வாங்கி முடித்து எங்களை லூஸியிடம் ஒப்படைத்துவிட்டு அதிகாரிகள் கிளம்பி விட்டார்கள். லூஸி எங்களை மேல் மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள். பார்ப்பதற்கு மிகவும் அழகானவனாக இருந்த ஒரு நான்கு வயது சிறுவன் அங்கு அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் லூஸியின் மகன். அதாவது- என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன்.

இரண்டு அறைகளைக் கொண்டிருந்த அந்த வீட்டில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருந்தது. அங்கிருந்த எல்லா பொருட்களும் லூஸியைப் போலவே முக அமைப்பைக் கொண்டவையாக இருப்பதைப் போல் எனக்கு தோன்றியது. பின்னாலிருந்த அறையில் எனக்கும் சிட்னிக்கும் சேர்த்து ஒரு படுக்கையை விரித்துப் போட்டாள் லூஸி. ஆனால், அது மிகவும் சிறியதாக இருந்தது. தான் அந்த அறையிலிருந்த சோஃபாவில் படுத்துக் கொள்வதாக சிட்னி சொல்லி பார்த்தான். தான் சொன்னதைக் கேட்டால் போதும் என்றாள் லூஸி.

எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு சந்தோஷப்படக் கூடிய விதத்தில் இல்லை. நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக லூஸி சமையல் செய்வதையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தோம். திடீரென்று அவள் சிட்னியிடம் சொன்னாள்: ‘எல்லோரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யணும். நீ அந்த அடுப்புக்கரி பாத்திரத்தை எடுத்து நிரப்பு.’

பிறகு என் பக்கம் திரும்பி சொன்னாள்:

‘அந்த வெள்ளை நிற கட்டிடத்தைத் தாண்டி இருக்கும் கடைக்குப் போய் ஒரு ஷில்லிங்கிற்கு உப்பு போட்டு காய வைத்த மாட்டு மாமிசம் வாங்கிக் கொண்டு வா.’

அந்தச் சூழ்நிலையிலிருந்து சிறிது நேரத்திற்காவது வெளியே போக முடிகிறதே என்பது குறித்து எனக்கு மனதிற்குள் சந்தோஷம்தான். அங்கு வந்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாத ஒரு பயம் வளர்ந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம். திரும்பவும் நார்வுட்டிற்கே போய்விட்டால்கூட நல்லதுதான் என்று நான் நினைக்க ஆரம்பித்து விட்டேன்.

நீண்ட நேரம் கழித்துத்தான் என் தந்தை வீட்டிற்கு வந்தார். மிகுந்த பாசத்துடன் அவர் எங்களை வரவேற்றார். என் தந்தை என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டார். சாப்பாட்டு மேஜை முன் உட்கார்ந்திருக்கும் பொழுது அவருடைய ஒவ்வொரு அசைவையும் நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அவர் சாப்பிடுவது, கத்தியை ஒரு பேனாவைப் போல பிடித்துக் கொண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் நான் கூர்மையாக பார்த்தேன். பிறகு நீண்ட காலம் நான் அவர் செய்வதைப் போலவே செய்து கொண்டிருப்பேன்.

சிறிய படுக்கையில் படுப்பதைப் பற்றியுள்ள சிட்னியின் குற்றச்சாட்டை லூஸி என் தந்தையிடம் சொன்னாள். அவனை உட்காரும் அறையிலிருந்த சோஃபாவில் போய் படுத்துக் கொள்ளும்படி என் தந்தை கூறினார். சிட்னியின் இந்த வெற்றி லூஸியைக் கோபம் கொள்ளச் செய்தது. அவள் சிட்னிக்கு ஒரு முறை கூட மன்னிப்பு கொடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் சிட்னியைப் பற்றி என் தந்தையிடம் குறைகள் கூறிக் கொண்டே இருந்தாள். லூஸியின் குணம் மிகவும் மோசமானதாக இருந்தாலும் அவள் ஒருமுறை கூட என்னை அடிக்கவோ திட்டவோ செய்யவில்லை. எனினும், சிட்னியிடம் அவள் நடந்து கொண்ட முறையைப் பார்த்து நான் அவளை நினைத்து பயந்தேன். அவள் மூக்கு முட்ட மது அருந்துவாள். அது என் பயத்தை இரண்டு மடங்கு அதிகமாக்கியது.

எனக்கு லூஸியின் மகனை விட நான்கு வயதுகள் அதிகமாக இருந்தன என்றாலும், அவனுடன் ஒரு வார்த்தை கூட பேசியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. மது அருந்தியவாறு உட்கார்ந்திருக்கும் லூஸியின் தோற்றமே மிகவும் பயத்தை வரவழைக்கக் கூடியதாக இருக்கும். எனினும், சிட்னி அவளைச் சட்டையே செய்வதில்லை. அவன் மிகவும் அபூர்வமாகத்தான் சீக்கிரம் வீட்டிற்கு வருவான். என் விஷயத்தை எடுத்துக் கொண்டால் நான் பள்ளிக்கூடம் விட்ட உடனே நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும். வீட்டிலும் வெளியிலும் இருக்கும் சிறு சிறு வேலைகளை நான்தான் செய்ய வேண்டும்.

லூஸி எங்களை கென்னிங்டன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாள். அது ஒரு நிம்மதி அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. மற்ற மாணவர்களுடன் பழகியது நான் தனியாக இல்லை என்ற உணர்வை என்னிடம் உண்டாக்கியது.


சனிக்கிழமை அரை நாள் விடுமுறை நாளாக இருந்தது. ஆனால், சனிக்கிழமை வருவதை நான் எப்போதும் விரும்பியதேயில்லை. காரணம்- அன்று தரையை சுத்தம் செய்வது, கத்திகளைச் சுத்தம் செய்வது என்று எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். அது மட்டுமல்ல, லூஸி அன்று சிறிதும் நிறுத்தாமல் மது அருந்திக் கொண்டே இருப்பாள்.

ஒரு சனிக்கிழமை லூஸி ஒரு சினேகிதியுடன் சேர்ந்து மது அருந்தியவாறு முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கத்திகள் சுத்தம் செய்து கொண்டிருந்த என்னைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தன் சினேகிதியிடம் சொன்னாள்: ‘இவனால எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், இன்னொருவன் இருக்கானே! அவனாலதான் பிரச்னையே. ஏதாவதொரு சீர்திருத்தப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆள் அவன். அது மட்டுமல்ல... அவன் சார்லியின் மகனே இல்லை.’

சிட்னியைப் பற்றி இப்படி கடுமையான குரலில் லூஸி கூறியதைக் கேட்டு எனக்கு வருத்தமும் பயமும் உண்டாயின. அன்று மிகுந்த கவலையுடன்தான் நான் படுக்கையிலேயே படுத்தேன். பயம் காரணமாக எனக்கு தூக்கமே வராமல் நீண்ட நேரம் இப்படியும் அப்படியுமாக புரண்டு கொண்டேயிருந்தேன். அப்போது எனக்கு எட்டு வயது கூட ஆகவில்லை. என் வாழ்க்கையில் மிகவும் நீளமான, மிகுந்த கவலைகள் நிறைந்த நாட்கள் அவை.

சில சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் கவலையுடன் படுத்திருக்கும்போது பின்னாலிருக்கும் ஜன்னலுக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும் பாடகர்கள் கூட்டத்தின் மகிழ்ச்சி நிறைந்த பாடல்களை நான் கேட்பேன். என்னுடைய அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றதாக அது இல்லையென்றாலும், அவர்களின் குரல் நீங்கி நீங்கி கடைசியில் முற்றிலும் இல்லாமற் போகும்போது என் மனதில் வேதனை உண்டாகும். மூன்று கட்டிடங்களைத் தாண்டி இருந்த மது அருந்தும் இடத்திலிருந்து, அது அடைக்கப்படும் நேரத்தில் வாடிக்கையான குடிகாரர்களின் பாட்டுச் சத்தத்தையும் நான் கேட்பேன். அதை ரசிக்க என்னால் முடியவில்லையென்றாலும், என்னுடைய தனிமைக்குக் கிடைத்த ஒரு நட்பாக, ஒரு தாலாட்டாக மாறி அது என்னை உறக்கத்திற்குக் கொண்டு செல்லும்.

சிட்னி இரவில் மிகவும் தாமதமாகத்தான் வீட்டிற்கே வருவான். படுப்பதற்கு முன்பு அவன் சாப்பிடுவதற்காக சமையலறையில் போய் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பான். அதைப் பார்த்து லூஸிக்கு பயங்கரமாக கோபம் வரும். அவள் ஒரு நாள் இரவு, உறங்கிக் கொண்டிருந்த சிட்னிக்கு அருகில் வந்தாள். அவள் அப்போது நன்கு குடித்திருந்தாள். சிட்னி மூடியிருந்த போர்வையை வேகமாக இழுத்து, அவனை வெளியே போகும்படி சொன்னாள். ஆனால், சிட்னி நல்ல முன்னெச்சரிக்கையுடன் இருந்தான். அவன் திடீரென்று தலையணைக்கு அடியிலிருந்து ஒரு வெட்டுக்கத்தியை வேகமாக எடுத்தான்.

‘என் பக்கத்தில் வந்து பார்... உன்னை ஒரே குத்துதான்’- அவன் சொன்னான். அவ்வளவுதான்- லூஸி பயந்து போய் பின்னோக்கி நகர்ந்தவாறு உரத்த குரலில் கத்தினாள்: ‘இந்த அசிங்கம் பிடிச்ச பய என்னைக் கொல்ல வர்றான்.’

‘ஆமா... நான் உன்னைக் கொல்லத்தான் போறேன்’- சிட்னி மிடுக்கான குரலில் சொன்னான்.

‘உன் அப்பா வருவது வரை நீ இரு.’

ஆனால், என் தந்தை அபூர்வமாகத்தான் வீட்டிற்கே வருவார். இதற்கிடையில் ஒரு சனிக்கிழமை நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தபோது, வீட்டில் யாரும் இல்லை. சிட்னி வழக்கம்போல கால்பந்து விளையாட போயிருந்தான். லூஸியும் அவளுடைய மகனும் காலையிலேயே எங்கோ போவதைப் பார்த்ததாக வீட்டுச் சொந்தக்காரர் சொன்னார். தரையையும் கத்திகளையும் சுத்தம் செய்ய வேண்டியதில்லையே என்ற அளவில் எனக்கு நிம்மதியாக இருந்தது.

மதிய உணவு நேரம் கடந்து நீண்ட நேரம் ஆன பிறகும் யாரையும் பார்க்காமல் இருந்தபோது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒருவேளை, அவளும் என்னை வேண்டாமென்று ஒதுக்கி விட்டாளோ? அதை நினைத்தபோது எனக்கு கவலையாக இருந்தது. வீட்டிற்குள் இருந்த பேரமைதி என்னை அச்சம் கொள்ளச் செய்தது. நல்ல பசியும் களைப்பும் எனக்கு இருந்தன. சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்குமா என்று நான் சமையலறையில் தேடினேன். அங்கு எதுவுமே இல்லை. நீண்ட நேரம் வீட்டில் தனியாக இருக்க பிடிக்காமல் நான் வெளியே வந்தேன். அருகிலிருந்த கடை வீதியில் நடந்து சென்றேன். உணவு விடுதிகளின் கண்ணாடி கூடுகளுக்கு உள்ளே இருந்த சுவையான பலகாரங்களை வேட்கையுடன் பார்த்து நின்றேன். தெரு வியாபாரிகள் வார்த்தை ஜாலங்களுடன் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து நின்றதில், சிறிது நேரத்திற்கு நான் என்னுடைய பசியையும் சோர்வையும் கூட மறந்து போய் விட்டேன்.

இரவு நேரம் வந்ததும் நான் திரும்ப வீட்டிற்கு வந்தேன். அப்போதும் அங்கு யாரும் இல்லை. மீண்டும் நான் வெளியே சென்றேன். கென்னிங்டன் தெருவின் ஒரு மூலையில் இருந்த கல்லின் மீது போய் உட்கார்ந்தேன். அங்கு உட்கார்ந்திருந்தால் வீட்டிற்கு யாராவது வந்தால், அங்கிருந்தே அதைப் பார்க்க முடியும். சிட்னி எங்கு போயிருக்கிறான் என்பதைப் பற்றி ஒரு நிச்சயமும் இல்லை. உட்கார்ந்து உட்கார்ந்து நள்ளிரவு நேரம் ஆகிவிட்டது. தெருவில் அலைந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆட்களை விட்டால், தெரு பெரும்பாலும் வெறுமையாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று கடைகளைத் தவிர, மீதி கடைகளில் விளக்குகள் அணைந்தன. மொத்தத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு இசை புறப்பட்டு வந்தது. அதைக் கேட்டபோது எனக்கு சிறிது நிம்மதியாக இருந்தது. ஒயிட் ஹார்ட்டிலிருந்த மது கடையிலிருந்துதான் அந்த இசை முழங்கிக் கொண்டிருந்தது. ஹார்மோனியமும் க்ளாரிநெட்டும் சேர்த்து வாசிக்கப்பட்ட அந்த இசை மிகவும் இனிமையாக இருந்தது. நான் என்னுடைய விரக்தியை முழுமையாக மறந்து சாலையைக் கடந்து, பாட்டு பாடிக் கொண்டிருந்தவர்களிடம் சென்றேன். ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் கண் பார்வை தெரியாதவராக இருந்தார். மிகவும் சாந்தமான ஒரு முகத்தைக் கொண்டிருந்தார் க்ளாரிநெட் வாசித்துக் கொண்டிருந்தவர்.

சிறிது நேரம் சென்றதும் இசை நின்றது. பாட்டு பாடிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து மறைந்தார்கள். இரவு மேலும் துக்கம் நிறைந்ததாக ஆனது. மிகவும் களைத்துப் போயிருந்த நான் வீட்டை நோக்கி நடந்தேன். எப்படியாவது படுக்கையில் போய் விழுந்தால் போதும் என்றிருந்தது எனக்கு. திடீரென்று எனக்கு முன்னால் தோட்டத்தின் வழியாக யாரோ மேல் நோக்கி ஏறிப் போவதை நான் பார்த்தேன். அது லூஸிதான். அவளுடைய மகன் அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான்.


ஆடியவாறு ஒரு பக்கம் விழும் நிலையில் இருந்த லூஸியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஏதாவது ஆபத்தில் சிக்கி அவளுடைய காலில் காயம் எதுவும் உண்டாகி விட்டிருக்குமோ என்று நினைத்து நான் பயந்தேன். ஆனால், சிறிது நேரம் கடந்த பிறகு எனக்கு விஷயம் என்னவென்பது புரிந்தது. மூக்கு முட்ட மது அருந்திவிட்டு அவள் வந்திருக்கிறாள். அவள் வீட்டிற்குள் செல்வது வரை நான் வெளியிலேயே நின்றிருந்தேன். சிறிது நேரம் சென்றதும் வீட்டுச் சொந்தக்காரர் அந்தப் பக்கம் போவதைப் பார்த்து, அவருடன் நானும் சென்றேன். எந்தவித ஓசையும் உண்டாக்காமல் படுக்கையில் போய் படுத்து விடுவோம் என்று எண்ணி நான் மெதுவாக படிகளில் ஏறினேன். ஆனால், லூஸி என்னைப் பார்த்துவிட்டாள்.

‘எந்த நரகத்துக்கு நீ போற? இது உன்னோட வீடு இல்லை...’- அவள் சொன்னாள்.

நான் இடி விழுந்ததைப் போல் நின்றுவிட்டேன். ‘இன்னைக்கு ராத்திரி நீ இங்கே உறங்கப் போறது இல்ல. நீங்க ரெண்டு பேரும் எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. சீக்கிரமா இந்த இடத்தை விட்டு புறப்படு. நீயும் உன் அண்ணனும்... உங்களை உங்க அப்பா பார்த்துக் கொள்வார்.’

நான் அதிர்ச்சியடைந்து போய் படிகளில் இறங்கினேன். என்னிடமிருந்த களைப்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து விட்டிருந்தது. என் தந்தையை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டுமென்று நான் தீர்மானித்தேன். என் தந்தை எப்போதும் வழக்கமாக போகக் கூடிய ஒரு இடம்- ப்ரின்சஸ் சாலையிலிருந்த க்வீன்ஸ் ஹெட் மதுச்சாலை. அங்கு போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு எனக்கு நேர் எதிரில் ஒரு மனிதர் நடந்து வருவதைப் பார்த்தேன். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அது என் தந்தைதான்.

‘அவங்க என்னை உள்ளே விடமாட்டேங்குறாங்க. நல்லா குடிச்சிருக்காங்க’- சிணுங்கி அழுதவாறு நான் என் தந்தையிடம் சொன்னேன். வீட்டை நோக்கி ஆடியவாறு நடந்து கொண்டிருந்த என் தந்தை சொன்னார்: ‘நானும் தெளிவா இல்ல...’

அவர் நல்ல சுய உணர்வுடன்தான் இருக்கிறார் என்பதைக் காட்ட நான் முயன்றேன். ‘இல்ல... நான் குடிச்சிருக்கேன்’- அவர் முணுமுணுத்தார்.

முன்னறையின் கதவைத் திறந்து நாங்கள் உள்ளே நுழைந்தோம். குளிர் காயும் கனப்பிற்குப் பக்கத்திலிருந்த திண்ணையைப் பிடித்து ஆடியவாறு நின்றிருந்தாள் லூஸி. அவளை வெறித்துப் பார்த்தவாறு என் தந்தை கேட்டார்:

‘நீ ஏன் இவனை உள்ளே விடல?’

‘நீங்களும் போங்க... நரகத்துக்குப் போய் தொலைங்க. எல்லாரும் போங்க...’ – லூஸி முணுமுணுத்தாள்.

அதைக் கேட்டு என் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது.  அவருக்கருகில் இருந்த தரையைச் சுத்தம் செய்யும் நீளமான ப்ரஷ்ஷை எடுத்து லூஸியின் மீது வீசி எறிந்தார். அது பலமாக அவளுடைய முகத்தில் போய் விழுந்தது. அடுத்த நிமிடம் லூஸி மயக்கம் போட்டு தரையில் விழுந்தாள்.

என் தந்தையின் அந்தச் செய்கை என்னை நிலைகுலையச் செய்தது. அத்தகைய செயல்கள் நான் அவர் மீது வைத்திருந்த மதிப்பைக் குறைக்கச் செய்தன. அதற்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எனக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை. சிட்னி வந்தபோது எங்கள் இருவரையும் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு என் தந்தை வெளியே போய்விட்டார் என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.

என் தந்தையின் பண வசதி படைத்த சகோதரர் ஸ்பென்சர் சாப்ளினின் வீட்டிற்குப் போவது குறித்து அன்று காலையில் லூஸி என் தந்தையுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அங்கு என் தந்தை செல்வதை சிறிதுகூட லூஸி விரும்பவில்லை. என் தந்தை மட்டும் தனியாக அங்கு போனதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அன்று முழுவதும் லூஸி வெளியே போய் எங்கோ தன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறாள்.

என் தந்தையும் லூஸியும் பல நேரங்களில் மிகவும் அன்புடன் நடந்து கொள்வதும் உண்டு. என் தந்தை நாடக சாலைக்குப் புறப்படும் போது அவர்கள் இருவரும் மிகுந்த அன்புடன் ஒருவருக்கொருவர் ‘நல் இரவு’ கூறிக் கொள்வார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காலை உணவு சாப்பிடும்போது என் தந்தை தனனுடைய நாடக உலக அனுபவங்களை விளக்கிக் கூறியதை நாங்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு கழுகைப் போல நான் என் தந்தையின் ஒவ்வொரு அசைவையும் எனக்குள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

நாடக சாலைக்குப் போவதற்கு சற்று முன்பு, இரவு கிட்டத்தட்ட ஏழு மணி ஆகும்போது என் தந்தை ஆறு பச்சை முட்டைகளை எடுத்து மதுவில் கலந்து குடிப்பார். அதுதான் அவருடைய முக்கிய உணவாக இருந்தது. எப்போதாவது ஒரு முறைதான் அவர் வீட்டிற்கே வருவார். முக்கியமாக வீட்டிற்கு வருவது அதிகமாக மது அருந்தி விட்டு தூங்குவதற்காகத்தான் இருக்கும்.

சிறுவர்- சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான ஒரு அமைப்பு அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் ஒருமுறை லூஸியைப் பார்க்க வந்தார்கள். லூஸியின் கோபம் அதற்குப் பிறகு மேலும் அதிகமானது என்பதுதான் உண்மை. அவள் எங்களை வெளியே போகச் சொன்ன ஒரு இரவு நேரத்தில், அதிகாலை மூன்று மணிக்கு நானும் சிட்னியும் ஒரு காவல் அறைக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த போலீஸ்காரர்கள் எங்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். போலீஸ்காரர்கள்தான் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தகவலைக் கூறியிருக்கிறார்கள்.

அப்படியே சில நாட்கள் கடந்தன. என் தந்தை நாடக சாலையில் இருந்தார். ஒரு நாள் லூஸி பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. என் தாய் மன நோய் மருத்துவமனையிலிருந்து வந்து விட்டார் என்ற செய்தி அதில் இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னையும் சிட்னியையும் எதிர்பார்த்துக் கொண்டு ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருக்கிறார் என்ற செய்தியை வீட்டு உரிமையாளர் சொன்னார்.

‘உங்க அம்மாதான்....’- லூஸி சொன்னாள்.

ஒரு நிமிடம் நாங்கள் மன ரீதியான குழப்பத்திற்கு ஆளாகிவிட்டோம். திடீரென்று சிட்னி கீழே ஓடினான். என் தாயின் கைகளில் போய் அவன் விழுந்தான். நானும் அதையேதான் செய்தேன். புன்னகை ததும்ப பாசத்துடன் எங்களை இறுக தழுவிக் கொண்டது பழைய, அன்புமயமான அதே தாய்தான்.


லூஸியும் என் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் ஏதோ ஒரு பிரச்னை இருப்பது தெரிந்தது. அதனால் நாங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வரும்வரை என் தாய் வெளியிலேயே நின்றிருந்தார். இரண்டு பேருக்கும் எந்தவொரு விதத்திலும் ஏமாற்றமோ, வருத்தமோ உண்டாகவில்லை. விடை பெற்றபோது சிட்னியிடம் கூட லூஸி நல்லவிதமாகவே நடந்து கொண்டாள்.

4

கென்னிங்க்டன் குறுக்கிற்குப் பின்னாலிருந்த ஒரு தெருவில் என் தாய் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தார். ஹேவார்ட் நிறுவனத்திற்கு அடுத்ததாக அது இருந்தது. மதிய நேரம் ஆகும்போது அங்கு அமிலத்தின் தாங்க முடியாத நாற்றம் பரவி இருக்கும். அதை நாங்கள் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம்- அந்த அறைக்கு மிகவும் குறைவான வாடகையே வசூலிக்கப்பட்டது. என் தாயின் உடல் நிலை அந்தச் சமயத்தில் சற்று தேறியிருந்தது. அதனால் என் தாய்க்கு இதற்கு முன்பு உடலில் பாதிப்பு இருந்தது என்ற உணர்வே எங்களுக்கு உண்டாகவில்லை. மொத்தத்தில்- மோசமற்ற நிலையில் நாங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தோம். என் தந்தையிடமிருந்து ஒவ்வொரு வாரமும் கிடைத்துக் கொண்டிருந்த பத்து ஷில்லிங் மீண்டும் கிடைக்க தொடங்கியது. என் தாய் தையல் பணியை மீண்டும் ஆரம்பித்தார். தேவாலயத்துடன் எங்களுக்கிருந்த உறவு மீண்டும் ஆரம்பித்தது.

இதற்கிடையில் ஒரு முக்கிய சம்பவம் நடைபெற்றது. தெருவின் எல்லையில் ஒரு கசாப்புக் கடை இருந்தது. வெட்டப்படும் ஆடுகளை எங்கள் வீட்டின் வழியாக கூட்டமாக கொண்டு செல்வார்கள். ஒரு நாள் ஒரு ஆடு அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து தெருவில் ஓடியது. அது ஆட்களுக்கு ஒரு சுவாரசியமான சம்பவமாக இருந்தது. சிலர் அதைப் பிடிக்க முயற்சித்தார்கள். வேறு சிலர் ஓடுவதற்கு நடுவில் தடுமாறி கீழே விழுந்தார்கள். ஆட்டின் ஓட்டத்தையும் பதைபதைப்பையும் பார்த்து நான் சிரித்தேன். மொத்தத்தில்- அது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாக இருந்தது.

கடைசியில் ஆட்டைப் பிடித்து கசாப்பு கடைக்குக் கொண்டு சென்றார்கள். அப்போதுதான் அந்த சம்பவத்தின் துயரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்கு அழுகை வந்தது. நான் வீட்டிற்குள் ஓடினேன். ‘அவங்க ஆட்டைப் பிடிச்சிட்டாங்க. இப்போ அவங்க அதைக் கொல்லப் போறாங்க’- தேம்பித் தேம்பி அழுதவாறு நான் என் தாயிடம் சொன்னேன்.

அந்த மாலை நேரமும் அன்றைய அந்த சுவாரசியமான சம்பவமும் பல நாட்களுக்குப் பிறகும் கூட என் மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தன. எதிர்காலத்தில் என்னுடைய திரைப்படங்களில் அடிநாதமாக இருந்த நகைச்சுவையும் துயரமும் கலந்த சம்பவங்கள் உருவானது இத்தகைய சம்பவங்களின் நினைவுகளில் இருந்துதானே என்று பல முறைகள் நான் நினைத்திருக்கிறேன்.

அந்தச் சமயத்தில் நான் மீண்டும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். வரலாறு, கவிதை, விஞ்ஞானம்- இவை ஒவ்வொன்றும் நான் ஆர்வம் கொண்டிருக்கும் விஷயங்களாக இருந்தன. அதே நேரத்தில் கணக்கு, புவியியல் போன்ற விஷயங்கள் எனக்கு பிடிக்காதவையாக இருந்தன.

ஒன்றாகச் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தபோது என் தாய் மீண்டும் என்னிடம் நடிப்பு ஆர்வத்தை உண்டாக்கினார். பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடக்கும் நிகழ்ச்சிகளில் இசை நாட்டிய நாடகமும் இருந்தது. அதற்காக மாணவர்களைத் தேர்ந்தெடுத்தபோது என்னைத் தேர்ந்தெடுக்காமல் விட்டு விட்டார்கள். அது எனக்கு மன வருத்தத்தையும் பொறாமையையும் உண்டாக்கியது. அதில் பங்கு பெற்ற மாணவர்களைவிட என்னால் மிகவும் சிறப்பாக அந்தக் காட்சிகளைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு பத்திரிகைகள் விற்கப்படும் ஒரு கடையில் என் தாய் ஒரு நகைச்சுவைப் பாடலைப் படித்திருக்கிறார். ‘ப்ரசில்லாவின் பூனை’ என்பது அதன் பெயர். அங்கிருந்தபடியே அதை அவர் முழுமையாக எழுதி முடித்தார். வீட்டிற்கு வந்து அதை மிகவும் அழகாக எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தார். வகுப்பில் என்னுடைய நண்பனுக்கு நான் கதைச் சொல்லிக் கொடுத்தேன்.

எங்களின் ஆசிரியரான திரு.ரீட் அதைக் கேட்க நேர்ந்தது. அவருக்கு அது மிகவும் பிடித்தது. வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் அந்தப் பாடலை என்னைக் கொண்டு பாட வைத்தார். மாணவர்கள் தலையே வெடிக்கிற அளவிற்கு சிரித்தார்கள். மறுநாள் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று அந்தப் பாடலை நான் பாடினேன். அதன் மூலம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு மத்தியில் நான் புகழ் பெற்றவனாக ஆனேன்.

ஐந்து வயது ஆனபோது என் தாய்க்கு பதிலாக நான் மேடையில் நிகழ்ச்சி நடத்தியிருந்தாலும், உண்மையாக சொல்லப் போனால்- அதுதான் என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் முதல் சம்பவமாக இருந்தது.  கூச்ச சுபாவம் கொண்ட சிறிய பையன் என்பதிலிருந்து மாறி ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஈர்க்கக் கூடிய மையமாக நான் ஆகிவிட்டிருந்தேன். அது என்னுடைய படிப்பு விஷயத்திலும் ஒரு வளர்ச்சியை உண்டாக்கியது. ஆனால், அந்தப் பள்ளி வாழ்க்கை திடீரென்று முடிந்து போனது. ‘எட்டு லங்காஷயர் சிறுவர்கள்’ என்ற இசை நாட்டிய நாடகக் குழுவில் நான் சேர வேண்டிய சூழ்நிலை உண்டானது.

அந்தக் குழுவின் உரிமையாளரான ஜாக்ஸன் என் தந்தைக்கு நன்கு தெரிந்தவராக இருந்தார். அந்தக் குழுவில் சேர்ந்தால் எனக்கு நடிப்பில் தேர்ந்த பயிற்சியும், அத்துடன் என் தாய்க்கு பொருளாதார ரீதியாக உதவியும் கிடைக்கும் என்று என் தந்தை கருதினார். இந்த விஷயத்தை என் தாயைப் பார்த்து அவர் கூறவும் செய்தார். எனக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு மேலாக என் தாய்க்கு வாரத்திற்கு அரை க்ரவுன் கொடுப்பதாகச் சொன்னார்கள். முதலில் என் தாய் அதற்குச் சம்மதிக்கவில்லை. பிறகு ஜாக்ஸனையும் அவரின் குடும்பத்தையும் நேரில் பார்த்து தெரிந்து கொண்ட பிறகுதான் அவர் அதற்குச் சம்மதித்தார்.

திரு.ஜான்ஸன் அதற்கு முன்னால் லங்காஷயரில் ஒரு பள்ளிக் கூட ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும். பன்னிரண்டிலிருந்து பதினாறு வயது வரைக்குள் இருந்த மூன்று ஆண் பிள்ளைகளும் ஒன்பது வயதைக் கொண்ட ஒரு மகளும் அவருக்கு இருந்தார்கள். குழுவின் மேற்பார்வை, அதை நடத்திக் கொண்டிருந்தது போன்ற விஷயங்களில் ஜாக்ஸனின் மனைவியும் நன்கு உதவினாள்.

ஆறு வாரங்கள் பயிற்சி பெற்றதன் விளைவாக என்னால் அந்த சிறுவர்கள் குழுவில் இருந்த மற்றவர்களைப் போல நன்கு நடனம் ஆட முடிந்தது. ஆனால், ஐந்து வயதில் முதல் தடவையாக மேடையில் நடித்துக் காட்டிய தைரியம் இப்போது எனக்கு இல்லாமலிருந்ததால் மற்றவர்களைப் போல மேடையில் தனியாக நடனம் ஆட எனக்கு மேலும் சில நாட்கள் ஆயின.


எட்டு சிறுவர்கள் கொண்ட அந்த குழுவில் வெறும் நடனம் ஆடக் கூடிய ஒரு சிறுவனாக இருக்க எனக்கு சிறிதும் விருப்பமில்லாமல் இருந்தது. சொந்தமாக ஏதாவது நடித்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு அதிகமாக பணம் கிடைக்கும் என்பது மட்டும் காரணமல்ல- நடிப்பு என்பது நடனத்தை விட மனதிற்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதும் கூட அதற்கு காரணமாக இருந்தது. ஒரு இளம் நகைச்சுவை நடிகனாக ஆவது என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. பிச்சைக்காரனைப் போல வேடமணிந்த இரண்டு பேர் பங்கு பெறும் ஒரு காட்சியை நான் மனதில் கற்பனை பண்ணினேன். எங்களின் குழுவிலிருந்த ஒருவனிடம் அதைப் பற்றி கூறவும் செய்தேன். ‘ப்ரிஸ்டலும் சாப்ளினும்- கோடீஸ்வரர்களான பிச்சைக்காரர்கள்’ என்று நாங்கள் அதற்கு பெயர் கூட இட்டோம். ஆனால், அந்த கனவு கடைசி வரை நிறைவேறவே இல்லை.

‘எட்டு லங்காஷயர் சிறுவர்கள்’ ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. மற்ற குழுக்களில் இருந்த சிறுவர்களிலிருந்து நாங்கள் மிகவும் வேறுபட்டிருந்தோம் என்பது ஜாக்ஸனின் கருத்தாக இருந்தது. சிவந்த பளபளப்பான கன்னங்கள் எங்களுக்கு இயற்கையாகவே இருந்ததால், எங்கள் யாருக்கும் வழக்கமாக செய்ய வேண்டிய மேற் பூச்சுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகவில்லை. மேடையில் போய் நிற்க வேண்டிய நேரத்தில் யாருடைய முகமாவது சற்று வெளிறிப் போய் காணப்பட்டால், அவனுடைய முகத்தைக் கிள்ளி சிவப்பாக வேண்டும் என்பார் ஜாக்ஸன். நாடகப் பயணங்களுக்கு மத்தியில் சில நகரங்களில் தங்கும்போது, அந்த வாரம் அங்கிருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்திற்கு நாங்கள் செல்வோம். ஆனால், அது என்னுடைய படிப்பு விஷயத்தில் குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த வளர்ச்சியையும் உண்டாக்கவில்லை.

அந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் எங்களின் குழு லண்டனிலிருந்த ஹிப்போட்ரோம் தியேட்டரில் ‘சின்ட்ரல்லா’ என்ற இசை நாட்டிய நாடகத்தை நடத்தியது. நாங்கள் பூனைகள், நாய்கள் ஆகியவற்றின் வேடங்களில் இருந்தோம். சர்க்கஸ், நாடகம் எல்லாம் நடக்கக் கூடிய ஒரு தியேட்டராக அது இருந்தது. மார்ஸலைன் என்ற ஃப்ரெஞ்ச் நகைச்சுவை நடிகர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். மார்ஸலைனும் நானும் ஒன்றாக வந்த ஒரு காட்சி பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது.

‘சின்ட்ரல்லா’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மார்ஸலைன்தான் அதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பிறகு மார்ஸலைன் நியூயார்க் ஹிப்போட்ரோமிற்குப் போய் விட்டார். அங்கும் அருமையான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ஹிப்போட்ரோம் பின்னாட்களில் சர்க்கஸ் வளையத்தை விட்டு வெளியே வந்தது. காலப் போக்கில் மார்ஸலைனை எல்லோரும் மறந்து விட்டார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு நான் லாஸ் ஏஞ்சலீஸில் மார்ஸலனை மீண்டும் பார்த்தேன். ரிங்க்லிங்க் சகோதரர்களின் த்ரீ ரிங் சர்க்கஸில் இருந்த பல கோமாளிகளில் ஒரு கோமாளியாக அந்த மிகப் பெரிய நடிகரை நான் பார்க்க நேர்ந்த போது, உண்மையாகவே நான்அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான் மீண்டும் அவருடன் நட்பைப் புதுப்பிக்க முயன்றபோது, அவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் ஏராளமான ஆங்கி நகைச்சுவை நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் ஏராளமான ஆங்கில நகைச்சுவை நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தார்கள். டி.இ.டன்வில், மார்க் ஷெரிடன், ஃப்ராங்க் காய்ன் ஆகியோர் அவர்களில் சிலர்.

ஜாக்ஸனின் சிறுவர்கள் சங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் சில நடிகர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அரங்கில் ஒளி வீசிக் கொண்டிருந்தவர்களை விட அரங்கிற்கு வெளியே தங்களின் தனித்துவத்தைக் காட்டிக் கொண்டிருந்தவர்கள் மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. சர்மோ என்ற நகைச்சுவை ஜால வித்தை செய்யும் மனிதர் அவர்களில் ஒருவராக இருந்தார். அவர் பல வகைப்பட்ட வித்தைகளையும் காட்டிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் தியேட்டரைத் திறந்தவுடன் சர்மோ தன்னுடைய பயிற்சிகளைத் தொடங்கி விடுவார். ஒரு பில்லியார்ட் க்யூவைத் தாடையில் வைத்துக் கொண்டு கைகளால் பந்துகளை மேல் நோக்கி எறிந்தவாறு அவற்றை பில்லியார்ட் க்யூவால் பிடிப்பார். இடையில் பந்து கீழே விழும். நான்கு வருடங்களாக தான் அதைப் பயிற்சி செய்து வருவதாகவும் பார்வையாளர்களுக்கு முன்னால் அதைச் செய்து காட்ட தனக்கு விருப்பம் இருப்பதாகவும் அவர் ஜாக்ஸனிடம் சொன்னார். அந்த நிகழ்ச்சியை நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம். ஒரு முறை கூட பந்து தரையில் விழவில்லை. எனினும், அந்நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு அந்த அளவுக்கு சுவாரசியமான ஒன்றாக இருக்கவில்லை. அன்று இரவு ஜாக்ஸன் சர்மோவிடம் சொன்னார்: ‘பார்வையாளர்களுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன தெரியுமா? நீங்க செய்யிறது ரொம்பவும் எளிதானதுன்னு அவங்க நினைச்சிட்டாங்க. பல தடவைகள் பந்து கீழே விழுந்து, அது மிகவும் சிரமமானதுன்னு மனசுல தோணுற மாதிரி அந்த நிகழ்ச்சியைச் செய்யணும். அப்படின்னாதான் அது வெற்றி பெறும்.’ அதற்கு சர்மோ சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘அதை விழ வைக்கிற ஒரு திறமைசாலியா இப்போ நான் இல்ல.’

சர்மோ தவிர, க்ரிஃபித் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இரண்டு சர்க்கஸ் கோமாளிகள், நடிகர்களான டான்லினோ, மேரிலாய்ட், ப்ரான்ஸ்பி வில்யம்ஸ்- இவர்கள் எல்லோரையும் நான் மிகவும் விரும்பினேன்.

ப்ரான்ஸ்பி வில்யம்ஸ் நடித்த டிக்கன்ஸ் கதாபாத்திரங்களைப் பார்த்து எனக்கு சால்ஸ் டிக்கன்ஸின் நூல்கள் மீது ஆர்வம் உண்டானது. படிப்பதற்குச் சரியாக தெரியாவிட்டாலும் நான் ‘ஆலிவர் ட்விஸ்ட்’டின் ஒரு பிரதியை வாங்கினேன். பல முறைகள் நான் ப்ரான்ஸ்பி வில்யம்ஸின் டிக்கன்ஸ் கதாபாத்திரங்களைப் போலவே நடித்துக் காட்டி மற்ற சிறுவர்களை மகிழச் செய்திருக்கிறேன். ஒரு முறை ‘தி ஓல்ட் க்யூர்யாஸிட்டி ஷாப்’பில் வரும் வயதான கிழவனைப் போல நான் நடித்துக் கொண்டிருப்பதை ஜாக்ஸன் பார்க்க நேர்ந்தது. அது பார்வையாளர்களுக்கு முன்னால் நடித்துக் காட்டப்பட வேண்டிய ஒன்று என்று சொன்னார் அவர்.

மிடில்ஸ் தியேட்டரில் சிறுவர்கள் சங்கத்தின் வழக்கமான நடன நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, ஜாக்ஸன் அரங்கிற்குள் நுழைந்து ஒரு புதிய நடிகனின் வரவைப் பற்றி சொன்னார். தன்னுடைய குழுவில் இருக்கும் ஒரு சிறுவனின் திறமையைத் தான் பார்த்துத் தெரிந்து கொண்டதாகவும், அவன் இப்போது ப்ரான்ஸ்பி வில்யம்ஸ் நடிக்கும் கிழவனை நடித்துக் காட்டப் போவதாகவும் சொன்னார்.


தொண்ணூறு வயதான கிழவனைப் போல நடித்துக் காட்ட என்னுடைய நடன ஆடைகளுடன் நான் மேடையில் போய் நின்றேன். எங்கிருந்தோ பெற்ற பொருத்தமற்ற ஒரு வழுக்கைத் தலை விக்கைத் தலையில் வைத்திருந்தேன். கிழவனைப் போல குனிந்து நடக்கும் என்னை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போல் பார்வையாளர்கள் பார்த்தார்கள். பார்வையாளர்கள் கத்தினார்கள். அவர்களை அமைதிப்படுத்த என்னால் முடியவில்லை. கிழவனின் உரையாடல்களை யாரும் கேட்கவில்லை. அத்துடன் என்னுடைய டிக்கன்ஸ் கதாபாத்திர நடிப்பு நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.

நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் ‘லங்காஷயர் சிறுவர்கள்’ குழுவிலிருந்த சிறுவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை பரவாயில்லை என்றிருந்தது. அவ்வப்போது எங்களுக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் உண்டாவதுண்டு. எங்களுடன் இருந்த இரண்டு சர்க்கஸ் பயிற்சி மாணவர்கள் தங்களுக்கு நல்ல சம்பளம் கிடைப்பதாக எங்களிடம் கூறினார்கள். அதைக் கேட்டு எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த குறைந்த அளவு சம்பளத்தைச் சொல்லி எங்களுக்குள் நாங்கள் குறைப்பட்டுக் கொண்டோம்.

அந்தக் குறைப்பாட்டைப் பற்றி கேட்டதற்கு திரு.ஜாக்ஸனின் மகன் தேம்பித் தேம்பி அழுதான். சில இடங்களில் நிகழ்ச்சி நடக்கும்போது தன் தந்தைக்கு ஏழு பவுண்டுகள்தான் கிடைக்குமென்றும், அதனால் அந்த குழுவை நடத்துவதற்கே அவர் மிகவும் சிரமப்படுகிறார் என்றும் அவன் அழுது கொண்டே சொன்னான்.

எனினும், எங்களில் சிலருக்கு சர்க்கஸ் வித்தைகள் செய்பவர்களாக ஆனால் என்ன என்ற எண்ணம் உண்டானது. அந்த இரண்டு சர்க்கஸ் வித்தைக்காரர்களின் கவலையில்லாத வாழ்க்கைதான் எங்களை அப்படி நினைக்கச் செய்தது. அன்று முதல் தினமும் காலையில் தியேட்டர் திறக்கப்பட்டவுடன் நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு அதை ஒரு சக்கரத்தில் இட்டு அதன் மறுமுனையை நண்பர்களில் ஒருவன் பிடித்துக் கொள்வான். இப்படி குட்டிக்கரணம் அடிப்பதில் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டு வந்தோம் என்றாலும் ஒரு தடவை விழுந்து காலில் பெருவிரலில் சுளுக்கு வந்ததுதான் தாமதம், நான் பயிற்சியை நிறுத்திவிட்டேன்.

வெறும் நடனத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் எங்களை வெளிப்படுத்துகிற மாதிரி வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாங்கள் ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருந்தோம். பந்துகளை பயன்படுத்தி ஏதாவது வித்தைகள் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். எப்படியோ கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி நான்கு ரப்பர் பந்துகளையும் நான்கு தகர தட்டுக்களையும் நான் வாங்கினேன். மணிக்கணக்கில் படுக்கைக்கு அருகில் நின்று நான் பயிற்சி செய்தேன்.

இதற்கிடையில் என் தந்தைக்கு உடல் நலக் குறைவு உண்டானது. நாடக உலகத்தைச் சேர்ந்த பல வகைப்பட்ட மனிதர்களும் அவருக்காக பணம் திரட்டிக் கொண்டிருந்தார்கள். லங்காஷயர் சிறுவர்கள் குழுவும் அதற்காக பணம் திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதைப் பார்ப்பதற்காக என் தந்தையும் வந்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு என் தந்தை மிகவும் சிரமப்பட்டு மேடைக்கு ஏறி வந்தார். மூச்சுவிட மிகவும் கஷ்டப்பட்டதால் மேடையில் பேசுவதற்கே அவர் சிரமப்பட்டார். மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் அவர் என்பதைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் உற்சாகத்துடன் நான் அவர் பேசுவதைக் கேட்டவாறு நின்றிருந்தேன்.

சிறுவர்கள் குழு நிகழ்ச்சிகள் அடங்கிய பயணத்திற்கு மத்தியில் லண்டனுக்குச் செல்லும்போதெல்லாம் நான் வார இறுதியில் என் தாயைப் போய் பார்ப்பேன்.  ஒரு தடவை போனபோது நான் மிகவும் வெளிறிப் போய் இருக்கிறேனென்றும் நடனம் என்னுடைய மூச்சுப் பையை மோசமாக பாதித்து விட்டிருக்கிறது என்றும் என் தாய் நினைத்தார். தன்னுடைய மனக்கவலையை அவர் ஜாக்ஸனிடம் கூறவும் செய்தார். என் தாயின் வருத்தத்தைப் பார்த்து அவர் அந்தக் குழுவிலிருந்து என்னை விடுதலையாகும்படி செய்தார். அதன் மூலம் லங்காஷயர் சிறுவர்களுடன் இருந்த என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

சில நாட்களுக்குப் பிறகு எனக்கு ஆஸ்த்துமா நோய் வந்தது. அது சயரோகமாக இருக்குமோ என்று என் தாய் அப்போது பயந்தார். அவர் வெகு சீக்கிரமே என்னை ப்ராம்ப்டன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். சுவாசப் பையில் குறிப்பிட்டுக் கூறும்படி எந்தவித  பிரச்னையுமில்லை என்று முழுமையாக சோதித்துப் பார்த்ததில் கண்டு பிடித்தார்கள். எனக்கு வந்த கேடு ஆஸ்துமாதான். மாதக் கணக்கில் எனக்கு மூச்சு விடுவதில் பிரச்னை இருந்து வந்தது. சில நாட்கள் கடந்த பிறகுதான் நோய் முழுமையாகக் குணமடைந்தது. நாங்கள் பெளனல் டெரஸ்ஸில் சிறிய ஒரு அறையில் அப்போது வசித்துக் கொண்டிருந்தோம். என் தாயின் சிரமங்களைக் குறைப்பதற்காக சிட்னி அந்தச் சமயத்தில் என் தாத்தாவுடன் போய் தங்கிக் கொண்டான்.

நாங்கள் கடுமையான வறுமையில் இருந்த காலம் அது. மிகவும் வறுமையில் இருக்கும் சிறுவர்கள் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சமையல் செய்த உணவைத்தான் சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வீட்டில் உணவு சாப்பிட முடியாதவர்கள் பிச்சைக்காரர்களைப் போன்றவர்கள்தான். நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். என் தாய் என்னை அருகிலிருந்த கடைக்கு அனுப்பி ஆறு பெனிக்கு கிடைக்கக் கூடிய உணவை (வேக வைத்த ஒரு துண்டு மாமிசமும் இரண்டு காய்கறிகளும்) வாங்கிக் கொண்டு வரும்படி கூறுவார். கடையில் போய் அதை வாங்குவது என்பது மிகவும் அவமானமான ஒரு விஷயமாக இருந்தது. குறிப்பாக- ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சமையல் செய்யாமல் இருப்பதற்காக சில நேரங்களில் நான் என் தாயைக் குறை கூறுவேன். கடையில் இருந்து வாங்குவதை விட இரண்டு மடங்கு அதிகமாக பணம் செலவழித்தால்தான் வீட்டில் சமையல் செய்ய முடியும் என்று கூறுவார் என் தாய்.

இதற்கிடையில் ஒரு வெள்ளிக் கிழமை குதிரைப் பந்தயத்தில் 5 ஷில்லிங் சம்பாதிக்க என் தாயால் முடிந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய அவர் தீர்மானித்தார். நான் அதற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். ருசியான சில உணவுப் பொருட்களுடன் வறுப்பதற்காக ஒரு துண்டு மாமிசத்தை நான் வாங்கினேன். ஐந்து ராத்தல் எடையைக் கொண்ட அது மாட்டு மாமிசமா அல்லது கொழுப்புத் துண்டா என்பதைக் கண்டு பிடிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எது எப்படியோ, அதற்கு மேலே ‘வறுப்பதற்காக உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்தது.


சொந்தமாக அடுப்பு இல்லாததால் வீட்டுச் சொந்தக்காரரின் அடுப்பைத்தான் என் தாய் பயன்படுத்தினார். அவரின் சமையலறைக்குள் அவ்வப்போது நுழைவதற்கு தயக்கம் உண்டானதால் என் தாய் அது வேகுவதற்கு ஆகக் கூடிய நேரத்தை மனதிற்குள் கணக்குப் போட்டார். அப்படி தீர்மானித்த நேரம் தாண்டி போய் பார்த்தபோது மாமிசத்துண்டு சுருங்கி ஒரு கிரிக்கெட் பந்தைப் போல் ஆகிவிட்டிருந்தது. எனக்கு அந்த உணவு சுவையே இல்லாத ஒன்றாக இருந்தது. ஆனால், எங்களின் ஆறு பெனிக்கு வாங்கப்பட்ட உணவு இதைவிட ருசியானதாகவும் சிரமங்கள் இல்லாததாகவும் இருந்தது என்பது என் தாயின் கருத்து.

நிலைமை அப்படியிருக்க, எங்களுடைய வாழ்க்கையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டானது. முன்பு நாடக உலகில் இருந்த ஒரு சினேகிதியை ஒரு நாள் என் தாய் பார்த்திருக்கிறார். அவள் இப்போது நாடக உலகத்தை முழுமையாக துறந்துவிட்டு ஒரு ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு ஸ்டாக்வெல்லில் வசித்துக் கொண்டிருந்தாள். அதிக விலை மதிப்புள்ள ஆடைகளணிந்து மிடுக்காக உலாவிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண் அவள். அந்த கோடை காலத்தில் தன்னுடன் வந்து இருக்கும்படி எங்களை அவள் அழைத்தாள். சிட்னி தூரத்தில் எங்கோ வேலைக்குப் போயிருந்தான். அதனால் என்னைத் தன்னுடன் அழைத்துச் செல்ல என் தாய்க்கு தயக்கமெதுவும் இல்லாமலிருந்தது. அவர் தானே ஒரு ஆடையை தைத்தார். என்னிடம் நாடக சாலையில் அணிந்த ஒரு நல்ல சூட் இருந்தது.

நாங்கள் லான்ஸ்டெளன் சதுக்கத்திலிருந்த ஆடம்பரமான அந்த வீட்டிற்குச் சென்றோம். வாடாமல்லி நிறத்திலும் நீல நிறத்திலும் இருந்த படுக்கை அறைகள், அழகான திரைச் சிலைகள், ஏராளமான பணியாட்கள்... சுருக்கமாக சொல்லப் போனால் அந்த வீட்டில் நாங்கள் எல்லாவித வசதிகளுடனும் இருந்தோம்.

ஒரு சமையல் செய்யும் பெண்ணும் மூன்று வேலைக்காரிகளும் அந்த வீட்டில் இருந்தார்கள். நாங்கள் இல்லாமல் வேறொரு விருந்தாளியும் அங்கு இருந்தான். சீராக வெட்டி ஒதுக்கப்பட்ட மீசையைக் கொண்ட அழகான ஒரு இளைஞன்தான் அது. மிகவும் மரியாதையுடன் நடக்கக் கூடியவனாக அவன் இருந்தான். நரைத்த முடியைக் கொண்ட ராணுவ அதிகாரி வந்தவுடன், அவன் வீட்டிலிருந்து மறைந்து விட்டான்.

அந்த ராணுவ அதிகாரி வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ முறைகள்தான் வீட்டிற்கு வருவார். அவர் வந்திருக்கும்போது வீட்டில் இனம் புரியாத அமைதி நிலவும். அந்தச் சமயத்தில் அவருடைய கண்களில் படாமல் எங்காவது என்னை மறைந்து இருக்கும்படி என் தாய் கேட்டுக் கொள்வார். ஒரு நாள் ராணுவ அதிகாரி படிகளில் இறங்கி வந்தபோது நான் கூடத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். கோட்டும் தொப்பியும் அணிந்த, உயரம் அதிகமான ஒரு மிடுக்கான மனிதராக அவர் இருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு அவர் நடந்து சென்றார்.

ராணுவ அதிகாரி வரும் நேரங்களில் அந்த வீட்டில் அந்த அளவிற்கு அமைதியும் பதைபதைப்பும் ஏன் இருக்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அங்கிருந்து போய் விட்டால் வீட்டின் சூழ்நிலை மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடும்.

அங்கிருந்த இளைஞனுடன் நான் வெகு சீக்கிரமே நெருக்கமாகிவிட்டேன். வீட்டுச் சொந்தக்காரப் பெண்ணின் இரண்டு நாய்களுடன் நாங்கள் நடப்பதற்காக வெளியே செல்வோம். அந்தத் தெருவின் காற்றில் கலந்திருந்த வாசனைகளை நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய ஆஸ்துமா குணமாக வேண்டுமென்றால் ஒவ்வொரு நாள் காலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது என்று அந்த இளைஞன் என் தாயிடம் சொன்னான். அது என்னைப் பெரும்பாலும் குணப்படுத்தவும் செய்தது.

வெகு எளிதில் நான் ஆடம்பர வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்டேன். அந்த வீட்டிற்குப் பின்னாலிருந்த தோட்டத்துடன் சேர்ந்து வேறொரு வீடு இருந்தது. அங்கும் ஏராளமான வேலைக்காரர்கள் இருந்தார்கள். என் வயதைக் கொண்ட ஒரு சிறுவனும் அவனுடைய தந்தையும் தாயும் அங்கு இருந்தார்கள். அந்தச் சிறுவன் ஏராளமான விளையாட்டு சாமான்களை வைத்திருந்தான்.  ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதற்கும் சாப்பிடுவதற்கும் அவன் அவ்வப்போது என்னை அழைப்பான். அவனுடைய தந்தை சிட்டி வங்கியில் உயர்ந்த பதவியில் இருந்தார்.

‘இவனுக்கு நல்ல ஒரு மேற்பார்வைப் பெண் வேணும்’- அவனுடைய ஆயா ஒரு நாள் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வேலைக்காரியிடம் சொன்னதை நான் கேட்டேன். அப்போது எங்களின் வேலைக்காரி சொன்னாள்: ‘இவனுக்கும் ஒரு ஆள் வேணும்’. என்னை வசதி படைத்த ஒரு சிறுவனாக அவர்கள் எண்ணியதைப் பார்த்து எனக்கு மனதில் மகிழ்ச்சி உண்டானது. எனினும், இனம் புரியாத ஒரு கவலையும் மனதில் தோன்றாமலில்லை.

அதற்குப் பிறகு அந்தச் சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிடும் நேரங்களில் எனக்கு நானே முழுமையாக மாறி விட்டதைப் போல் தோன்றும்.

அந்த வீட்டிலிருந்து மீண்டும் எங்களின் பெளனல் டெரஸ்ஸிருந்த சிறிய அறைக்கு திரும்பி வந்தபோது, மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் எங்களுடைய சுதந்திரம் மீண்டும் எங்களுக்கு திரும்ப கிடைத்தது குறித்து ஒரு வித நிம்மதி கிடைத்ததென்னவோ உண்மை. காரணம் – விருந்தாளிகளாக அந்த வீட்டில் தங்கியபோது, வார்த்தையால் கூற முடியாத ஒரு மனப் போராட்டத்தை நாங்கள் அனுபவித்தோம். விருந்தாளிகள் கேக்குகளைப் போல என்று என் தாய் கூறுவார். அதிகம் வைத்திருந்தால் புளித்துப் போய் ருசி கெட்டு விடும். எது எப்படியோ, சுருங்கிய, ஆரம்பரமான அந்த இடத்தின் பட்டு நூல்களை அறுத்தெறிந்து விட்டு நாங்கள் மீண்டும் துயரங்களில் கால் பதித்தோம்.

5

ன்னர்களின், பிரபுக்களின், பட்டாளக்காரர்களின், கப்பற்படையைச் சேர்ந்தவர்களின், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் காலமாக இருந்தது 1899. அர்த்தமற்றவைகளின், தற்பெருமைகளின் நம்பிக்கையற்ற காலமாக அது இருந்தது. மிகப் பெரிய செல்வம் படைத்தவர்களின், மிக வறுமையில் சிக்கியவர்களின் காலமாகவும் அது இருந்தது. இங்க்லாண்ட் போயர் போரைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டான காலமும் அதுதான்.

எனக்கு போரைப் பற்றி எதுவும் தெரியாது. நாட்டுப் பற்று பாடல்கள் வழியாகவும், நகைச்சுவைச் சித்திரங்கள் மூலமாகவும் சிகரெட் மேலட்டைகள் மீது இருந்த ஜெனரல்மார்களின் படங்களைக் கொண்டும் நான் போரைப் பற்றி தெரிந்து கொண்டேன். இறுதியில் போரில் இங்க்லாண்ட் வெற்றி பெற்றது. என் தாயைத் தவிர மீதியிருந்த எல்லோரும் போரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். என் தாய்க்கு போராட தன்னுடைய போரே இருந்தது.


பதினான்கு வயது ஆன சிட்னி இப்போது ஸ்ட்ரான்ட் தபால் அலுவலகத்தில் தந்தி ஊழியராக வேலை செய்து கொண்டிருந்தான். சிட்னியின் வருமானமும் என் தாயின் தையல் வேலைகள் மூலம் கிடைத்த வருமானமும் கொண்டு நாங்கள் ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தோம். ஒரு கடையிலிருந்து வெட்டிக் கொடுத்திருந்த ரவிக்கைகளைத்தான் என் தாய் தைத்தார். ஒரு டஜன் ரவிக்கைகளுக்கு ஒரு ஷில்லிங் ஆறு பென்ஸ் கூலியாக கிடைத்தது. மேலும் அதிகமாக ரவிக்கைகள் தைப்பதற்காக என் தாய் சிறிது கூட ஓய்வு என்பது இல்லாமல் வேலை செய்தார். வாரத்திற்கு ஐம்பத்து நான்கு ரவிக்கைகள் கூட அவர் தைத்திருக்கிறார்.

என் தாய் வேலை செய்வதைப் பார்த்தவாறு சில இரவு வேளைகளில் நான் கண் விழித்துக் கொண்டு படுத்திருப்பேன். தையல் இயந்திரத்தை நோக்கி குனிந்து கொண்டு, களைப்பால் உதடுகள் சற்று பிரிந்திருக்க, மண்ணெண்ணெய் விளக்கொளியில் மிகவும் கவனம் செலுத்தி துணி தைத்துக் கொண்டிருக்கும் என் தாயைப் பார்த்துக் கொண்டே நான் தூங்கி விடுவேன். தவணை முறையில் பணம் செலுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்ததால்தான் என் தாய் இப்படி கஷ்டப்பட வேண்டி வந்தது.

இந்தச் சூழ்நிலையில் எங்களுக்கு இன்னொரு இக்கட்டான கட்டம் உண்டானது. சிட்னிக்கு ஒரு புதிய சூட் தேவைப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து எல்லா நாட்களிலும் அவன் தந்தி அலுவலகத்தின் சீருடையைத்தான் அணிந்து கொண்டிருந்தான். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அவன் அந்த சீருடையை அணிந்து சென்றபோது அவனுடைய நண்பர்கள் அவனைக் கிண்டல் பண்ணினார்கள். அவர்கள் செய்த கேலிகளைப் பொறுக்க முடியாமல் வார இறுதிகளில் வெளியே செல்லாமல் அவன் வருத்தத்துடன் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்திருந்தான். என் தாய் எப்படியோ பதினெட்டு ஷில்லிங் உண்டாக்கி ஒரு புதிய சூட் வாங்கிக் கொடுக்கும் வரையில் இதுதான் எங்களின் நிலைமையாக இருந்தது. அது எங்களின் பொருளாதார நிலைமையை மிகவும் மோசமாக ஆக்கியது. இறுதியில் என் தாய் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார். திங்கட் கிழமை சிட்னி சீருடை அணிந்து வேலைக்குப் போய்விட்டால் புதிதாக உண்டாக்கிய நீல நிற சூட்டை என் தாய் ஒரு கடையில் கொண்டு போய் அடகு வைப்பார். அதற்கு ஏழு ஷில்லிங் கிடைக்கும். அதிகமாக வேலை செய்து எப்படியாவது பணம் உண்டாக்கி சனிக்கிழமை அதை அவர் திரும்ப வாங்கிவிடுவார். ஞாயிற்றுக் கிழமை சிட்னி அதை பயன்படுத்திய பிறகு மீண்டும் திங்கட் கிழமை அதைக் கொண்டு போய் என் தாய் பணயம் வைப்பார். இந்த வழக்கம் ஒரு வருட காலம் விடாமல் தொடர்ந்தது. இறுதியில் ஒரு திங்கட் கிழமை கடைக்காரன் நாங்களே அதிர்ந்து போகிற அளவிற்கு அந்த தகவலைச் சொன்னான்:

‘மன்னிக்கணும், திருமதி. சாப்ளின். இனிமேல் இந்த ஆடைக்கு ஏழு ஷில்லிங் தர முடியாது. இந்த ட்ரவுசர் நூல்கள் பிரிஞ்சு நாசமாயிடுச்சு.’

என் தாய் அந்த ஆளிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்து பார்த்தும் கோட்டுக்கும் வெயிஸ்ட் கோட்டுக்கும் சேர்த்து அதிக பட்சம் மூன்று ஷில்லிங்குகள்தான் தர முடியும் என்று அவன் உறுதியான குரலில் கூறி விட்டான்.

அதைக் கேட்டு அழுது கொண்டே என் தாய் வீட்டிற்கு திரும்பி வந்தார். ஒரு வார காலம் வாழ்வதற்கு அந்த ஏழு ஷில்லிங் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

என்னுடைய ஆடைகளின் நிலைமையும் அப்படியொன்றும் சிறப்பாக இல்லை. லங்காஷயர் சங்கத்தில் இருக்கும்போது அணிந்திருந்த சூட்டின் முழங்கையிலும் ட்ரவுசரிலும் ஷூவிலும் எல்லா இடங்களிலும் துண்டு துணிகள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஒரு நாள் ஸ்டாக்வெல்லிலிருந்த பக்கத்து வீட்டு சிறுவனை நான் கென்னிங்டன் சாலையில் பார்த்தேன். என்னுடைய தோற்றத்தைப் பார்த்து அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அதிகமாக எதுவும் பேசாமல் நான் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து வந்து விட்டேன்.

ஒரு நாள் நானும் என் தாயும் ப்ராம்ப்டன் மருத்துவமனைக்குப் போய் விட்டு திரும்பி வரும்போது ஒரு சம்பவத்தைப் பார்க்க நேர்ந்தது. தலைமுடியை முழுமையாக கத்தரித்து, அவலட்சணமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சுற்றிலும் நின்று கொண்டு சில சிறுவர்கள் அவளைப் பார்த்து என்னவோ சொல்லி கேலி செய்து கொண்டு, அவளை ஒவ்வொருவரும் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். என் தாய் அதைப் பார்த்து வேகமாகச் சென்று சிறுவர்களைத் தடுத்தார். அந்த அப்பிராணி பெண் பயந்து நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். திடீரென்று அவள் என் தாயை அடையாளம் தெரிந்து கொண்டதைப் போல ‘லில்’ என்று அழைத்தாள். என் தாய்க்கு நாடக மேடையில் வழங்கிய பெயர் அது. ‘உனக்கு நான் யார்னு தெரியலையா? நான்தான் ஈவா லெஸ்ட்டாக்’ என்றாள் அவள்.

அந்த நிமிடமே என் தாய் அவளை அடையாளம் தெரிந்து கொண்டார். முன்பு அவள் என் தாயுடன் நாடகங்களில் நடித்திருக்கிறாள். என்னைக் சுட்டிக் காட்டியவாறு என் தாய் கேட்டார்: ‘சின்ன சார்லியை ஞாபகத்துல இருக்குதா?’

‘ஞாபகத்துல இருக்கான்னா கேக்குற? நல்ல கதைதான். இவனை எப்படி மறக்க முடியும்? சின்ன பிள்ளையா இருந்தப்போ இவனை நான் எத்தனை தடவை தூக்கி நடந்திருக்கேன்!’

அழுக்கு பிடித்த, வெறுப்பு உண்டாக்கக் கூடிய தோற்றத்துடன் இருந்த அந்தப் பெண்ணுடன் பேசியவாறு நாங்கள் நடந்து செல்வதை ஆட்கள் வெறித்து பார்த்தார்கள்.

அழகும் சுறுசுறுப்பும் சேர்ந்து இருந்ததால் ‘குதிரைக்குட்டி’ என்றுதான் ஈவாலெஸ்ட்டாக் நாடக உலகில் எல்லோராலும் அறியப்பட்டாள். உடல் நலம்  பாதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாக அந்தப் பெண் என் தாயிடம் சொன்னாள்.  அங்கிருந்து வெளியே வந்தவுடன் கடைகளின் திண்ணைகளிலும் கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கத்தின் கருணை இல்லத்திலும் அவள் தன் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறாள்.

என் தாய் அவளை ஒரு பொது குளியலறையில் குளிப்பாட்டினார். பிறகு நானே நடுங்கிப் போகிற அளவிற்கு அவளை எங்களின் சிறிய அறைக்கு என் தாய் அழைத்துக் கொண்டு வந்தார். அவளின் இப்போதைய நிலைமைக்குக் காரணம் நோய் மட்டும்தானா என்பது தெரியாது. எது எப்படி இருந்தாலும் அவள் சிட்னியின் படுக்கையில் படுத்து உறங்கியது சற்று ஜீரணிக்க முடியாத விஷயம் என்பதென்னவோ உண்மை. என் தாய் தன்னுயை மோசமில்லாத ஒரு ஆடையை அவளுக்குக் கொடுத்திருந்தார். மூன்று நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து விட்டுத்தான் அவள் வெளியேறினாள். ‘குதிரைக் குட்டி’யான ஈவாலெஸ்ட்டாக்கை அதற்குப் பிறகு நாங்கள் பார்க்கவேயில்லை.


இதற்கிடையில் நாங்கள் பெளனல் டெரஸ்ஸிலிருந்து என் தாயின் சினேகிதியான திருமதி. டெய்லரின் வீட்டிற்கு இருப்பிடத்தை மாற்றினோம். அவளும் தேவாலயத்திற்கு எப்போதும் வரக் கூடியவள்தான். கிட்டத்தட்ட ஐம்பது வயது இருக்கும் அவளுக்கு. தேவாலயத்தில் பாட்டு பாடும்போதுதான் அவளிடம் இருப்பது செயற்கைப் பற்கள் என்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது. பாடிக் கொண்டிருந்தபோது மேலே இருந்த பற்கள் அவ்வப்போது நாக்கில் விழுந்து கொண்டிருந்தன.

தைரியமும் உற்சாகமும் கொண்ட அவள் என் தாயை தன்னுடைய கிறிஸ்தவ பிரிவில் சேர்த்து விட்டாள். அவளின் பெரிய வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த அறையை பரவாயில்லாத தொகைக்கு எங்களுக்கு அவள் வாடகைக்குத் தந்தாள். சுடுகாட்டிற்கு அடுத்து இருந்தது அந்த வீடு.

ஒரு டிக்கன்ஸ் கதாபாத்திரத்தின் தனி நகலான திரு. டெய்லருக்கு ரூலர் தயாரிப்பதுதான் தொழில். வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறைதான் அவருடைய தொழிற்கூடம். நல்ல வெளிச்சத்தைக் கொண்டிருந்த அந்த அறையை ஒரு சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். திரு.டெய்லர் வேலை செய்வதைப் பார்ப்பதற்காக நான் எப்போதும் அங்கு செல்வேன். அவர் மட்டும் தனியே வேலை செய்து கொண்டிருப்பார். ஏதாவது இடங்களுக்குப் போவதற்கும் தகவல்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கும் நான் அவருக்கு உதவியாக இருந்தேன்.

திருமதி. டெய்லரின் கிறிஸ்துவ நம்பிக்கைகளின்படி அவளுடைய கணவர் ஒரு பாவியாக இருந்தார். அவரை நல்ல ஒரு மனிதராக மாற்ற வேண்டும் என்று அவள் தீவிரமாக ஆசைப்பட்டாள். ஆணவம் பிடித்த ஒரு இளம் பெண் அவர்களுக்கு மகளாக இருந்தாள். பார்ப்பதற்கு தன் தாயைப் போல தைரியம் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவளும் தன்னுடைய தந்தையைப் போலவே தேவாலய விஷயங்களை விட்டு விலகி நின்றிருந்தாள். தன் செல்ல மகளையும் கணவரையும் மாற்றுவதற்காக திருமதி. டெய்லர் நிரந்தரமாக முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ஒரு மாலை நேரத்தில் நான் திரு.டெய்லரின் தொழிற் கூடத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கீழேயிருந்து ஒரு ஆரவாரம் கேட்டது. என் தாயும் டெய்லரின் மகளும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் அழைத்துக் கொண்டார்கள். திருமதி.டெய்லர் அப்போது வீட்டில் இல்லை. இதற்கு மேல் கூறுவதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் மீண்டும் பெளனல் டெரஸ்ஸிற்கே வந்து விட்டோம்.

ஒரு நாள் நான் கென்னிங்டன் சாலையிலிருந்த த்ரீ ஸ்டாக்ஸ் மது கடைக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தேன். என் தந்தை பொதுவாக அங்கு இருக்க மாட்டார். எனினும், நான் வெறுமனே கடைக்குள் என் தலையை விட்டு பார்த்தேன். என் தந்தை அதோ அங்கிருந்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். நான் அடுத்த நிமிடம் அங்கிருந்து போக முயன்றேன். ஆனால், என் தந்தை என்னைப் பார்த்து விட்டார். என்னைக் கை அசைத்து அவர் அழைத்தபோது, நான் ஆச்சரியத்துடன் அவருக்குப் பக்கத்தில் போய் நின்றேன். உடல் வீங்கிப் போய், கண்கள் சோர்வடைந்து ஒரு நோயில் சிக்கிய மனிதரைப் போல இருந்தார் என் தந்தை. ஒரு கையை நெப்போலியனைப் போல பாக்கெட்டிற்குள் வைத்திருந்தார். மூச்சு திணறலைக் குறைப்பதற்காக அவர் செய்த காரியம் அது. மிகுந்த ஆர்வத்துடன் அவர் என் தாயைப் பற்றியும் சிட்னியைப் பற்றியும் விசாரித்தார். அவரை விட்டுப் பிரியும் நேரத்தில் வாழ்க்கையில் முதல் தடவையாக என் தந்தை என்னை இறுக கட்டித் தழுவி எனக்கு முத்தம் கொடுத்தார். அவரை இறுதி முறையாக நான் பார்த்தது அன்றுதான்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு என் தந்தையை புனித தாமஸ் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக அவரை அவருடைய நண்பர்கள் நன்கு குடிக்கச் செய்திருந்தார்கள். எனினும், போதை நீங்கி சுய உணர்விற்கு வந்தவுடன், அவர் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்தார். ஆனால், அவர் இறந்து கொண்டிருந்தார். மிகவும் இளம் வயதில், முப்பத்து ஏழாவது வயதில் அவர் மரணத்தைத் தழுவினார்.

என் தாய் சில முறைகள் என் தந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். என் தாய் மிகவும் கவலையில் இருந்தார். என் தந்தை இறந்தபோது அவரின் இறுதிச் சடங்கை செய்யப் போவது யார் என்று மருத்துவமனை அதிகாரிகள் கேட்டார்கள். என் தாயின் கையில் காசு எதுவும் இல்லை. நாடகக்காரர்களுக்கென்று இருக்கும் கருணை அமைப்பு இறுதிச் சடங்கை நடத்தும் என்று என் தாய் சொன்னார். அதைத் தெரிந்து கொண்டு என் தந்தையின் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முணுமுணுத்தார்கள். என் தந்தையின் கடைசி சகோதரரான ஆல்பர்ட் அந்தச் சமயத்தில் ஆஃப்ரிக்காவிலிருந்து லண்டனுக்கு வந்திருந்தார். அவர் இறுதிச் சடங்குக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

பிணத்தை அடக்கம் செய்யும் நாளன்று நானும் என் தாயும் வெகு சீக்கிரமே மருத்துவமனைக்குச் சென்று விட்டோம். அடக்கம் செய்வதற்கு சற்று முன்னால் என் தந்தையைப் பார்க்க என் தாய் விரும்பினார். சிட்னிக்கு வேலை இருந்ததால் அவனால் வர முடியவில்லை. சவப்பெட்டியின் உட்பகுதி வெள்ளை துணியால் மறைக்கப்பட்டிருந்தது. என் தந்தையின் தலையைச் சுற்றி வெள்ளை டெய்ஸி மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யார் கொண்டு வந்து வைத்தது என்று என் தாய் விசாரித்தார். ஒரு  சிறுவனுடன் வந்த பெண் என்று மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள். அது லூஸிதான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சாப்ளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். டுட்டிங் சுடுகாட்டிற்குப் போகும் பயணத்தில் முதல் வண்டியில் நானும் என் தாயும் ஆல்பர்ட் சித்தாப்பாவும் ஏறிக் கொண்டோம். நாங்கள் முதல் தடவையாக அவரைப் பார்ககிறோம். அதனால் அவருடன் சென்ற அந்தப் பயணம் என் தாய்க்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

இறதிச் சடங்கு செய்யும் நேரத்தில் மழை பெய்தது. குழியை வெட்டுபவர்கள் பெட்டியின் மீது மண்ணை எடுத்து போடும்போது நான் தேம்பித் தேம்பி அழுதேன். உறவினர்கள் அனைவரும் அதன்மீது பூக்களை எறிந்தார்கள். எங்கள் கையில் எதுவும் இல்லை. என் தாய் எனக்குப் பிடித்த கைக்குட்டையை எடுத்து எறிந்தவாறு மெதுவான குரலில் சொன்னார்: ‘நாம ரெண்டு பேருக்கும் சேர்த்துத்தான் இது.’

திரும்பி வரும் வழியில் சாப்ளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் சாப்பிடுவதற்காக அவர்களின் உணவு சாலைகளில் ஒன்றில் நுழைந்தார்கள். எங்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்.


வீட்டிற்குத் திரும்ப வந்தபோது, நாங்கள் பசியின் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தோம். கொஞ்சம் மாட்டு மாமிசத்தைத் தவிர, அங்கு வேறு எதுவும் இல்லை. என் தாயின் கையில் ஒரு பெனி கூட இல்லை. இருந்த இரண்டு பெனிகளை சிட்னிக்கு மதிய உணவிற்காக கொடுத்திருந்தார். என் தந்தையின் உடல் நலக் குறைவு, மருத்துவமனைக்குப் போய் வந்தது ஆகிய காரணங்களால் என் தாயால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. சிட்னியின் அந்த வார சம்பளம் முழுவதையும் செலவழித்தாகிவிட்டது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்த நேரத்தில் பழைய சாமான்கள் வாங்கக் கூடிய ஒரு மனிதன் அந்த வழியே வந்தான். பழைய ஒரு மண்ணெண்ணெய் அடுப்பை நாங்கள் அரை பெனிக்கு அவனுக்கு விற்றோம். அரை பெனிக்கு ரொட்டி வாங்கி, மாட்டு மாமிசத்தைச் சேர்த்து சாப்பிட்டோம்.

என் தந்தையின் சட்ட ரீதியான மனைவி என் தாய்தான். அதனால் மருத்துவமனையிலிருந்த என் தந்தையின் பொருட்களை வாங்குவதற்காக மறுநாள் என் தாயை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார்கள். இரத்தத் துளிகள் விழுந்திருந்த கருப்பு நிற சூட், உள்ளாடை, சட்டை, கருப்பு நிற டை, பழைய ஒரு கவுன், வீட்டில் பயன்படுத்தும் செருப்பு- இவைதான் என் தந்தையின் சொத்துக்கள். வீட்டுக்கு வந்தவுடன் அந்தச் செருப்புகளை என் தாய் வெறுமனே குடைந்தார். திடீரென்று அதற்குள்ளிருந்து அரை டாலர் கீழே விழுந்தது. உண்மையாகவே கடவுள்தான் அதை அனுப்பியிருக்க வேண்டும்!

வாரக் கணக்கில் கையில் ஒரு துக்க சின்னத்தைக் கட்டிக் கொண்டு நான் நடந்து திரிந்தேன். ஒரு சனிக்கிழமை மாலை நேரம். நான் கொஞ்சம் பூக்களை விற்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றேன். அந்த துக்கச் சின்னம் என் மலர் விற்பனைக்கு மிகவும் உதவியாக இருந்தது. என் தாயிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டு நான் ஒரு ஷில்லிங் கடன் வாங்கினேன். அதைக் கொண்டு ஒரு குலை பூக்களை வாங்கி, ஒரு பெனிக்கு விற்கக் கூடிய சிறு சிறு கட்டுகளாக ஆக்கினேன். எல்லாம் விற்று முடிந்தபோது நூறு சதவிகிதம் லாபமாகக் கிடைத்தது.

உணவு விடுதிகளுக்குள் நுழைந்து எதிர்பார்ப்புடன் பெண்களிடம் மலர்களுடன் போய் நிற்கும்போது, என் கையிலிருந்த கட்டைப் பார்த்து அவர்கள் கேட்பார்கள்: ‘யார் மகனே, இறந்தது?’

‘என் தந்தை’- நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு முணுமுணுப்பேன். அவர்கள் அப்போது பரிசாக எனக்கு ஏதாவது தருவார்கள். சனிக்கிழமைகளில் நான் மலர் வியாபாரம் செய்வதை வாடிக்கையாக்கி விட்டிருந்தேன். ஒரு நாள் மாலை நேரத்தில் நான் வீட்டிற்கு வந்தபோது, என் கையில் ஐந்து ஷில்லிங்கிற்கும் அதிகமாக இருந்தது. அதைப் பார்த்து என் தாய் ஆச்சரியப்பட்டார்.

ஒருமுறை மது கடைக்குள் பூ விற்பதற்காக நான் சென்று வெளியே வருவதை என் தாய் பார்த்துவிட்டார். அது என் தாயின் கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானதாக இருந்தது. ‘குடிப் பழக்கம்தான் உன் தந்தையை அழிச்சது. அப்படி வர்ற காசு நம்ம கஷ்டத்தை மேலும் அதிகமாக்கவே செய்யும்’ என்றார் என் தாய். அதற்குப் பிறகு ஒரு நாள் கூட பூ வியாபாரம் செய்ய என் தாய் என்னை அனுமதிக்கவில்லை.

எனக்குள் ஒரு வியாபாரியின் பலமான அம்சம் இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு வியாபார தந்திரங்களைப் பற்றியும் மனதில் அசைபோட்டுக் கொண்டே இருப்பேன். காலியாக இருக்கும் கடைகளைப் பார்த்தால் அங்கு நான் என்ன வியாபாரம் செய்ய முடியும் என்று யோசிப்பேன். மீன், பலகாரங்கள், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களைத்தான் நான் வியாபாரத்திற்காக மனதில் தேர்வு செய்து வைத்திருந்தேன். எனக்கு தேவையாக இருந்தது வியாபாரம் ஆரம்பிப்பதற்கான மூலதனம் மட்டுமே. ஆனால், அது எங்கே கிடைக்கும்? இறுதியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஒரு வேலையைத் தேட நான் என் தாயிடம் அனுமதி பெற்றேன்.

நான் பல வகைப்பட்ட வேலைகளையும் செய்து அவற்றின் மூலம் ஏராளமான அனுபவங்களைப் பெற்ற ஒருவனாக ஆனேன். ஒரு மெழுகுவர்த்தி விற்பனை செய்யும் மனிதனுக்காக செய்திகளைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை நான் முதலில் செய்தேன். பிறகு த்ரோமார்ட்டன் அவென்யூவிலிருந்த ஒரு டாக்டரிடம் பணி புரிந்தேன். முன்னால் சிட்னி அங்கு வேலை செய்தான். வாரத்திற்கு பன்னிரெண்டு ஷில்லிங் வருமானம் வந்து கொண்டிருந்த லாபமான வேலையாக அது இருந்தது. சோதனை செய்கிற நேரத்தில் ரிஸப்ஷனிஸ்ட்டாகவும், எல்லோரும் போன பிறகு சுத்திகரிப்பு செய்யும் மனிதனாகவும் நான் அங்கு வேலை செய்தேன். ரிஸப்ஷனிஸ்ட் வேலையை நான் மிகவும் நன்றாகச் செய்தேன். அங்கு காத்திருக்கும் நோயாளிகள் எல்லோரையும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படி செய்தேன். ஆனால், அலுவலகத்தைச் சுத்தம் செய்யும் வேலை எனக்கு சிறிது கூட ஏற்றதாக இல்லை. சிட்னி என்னைவிட பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறுநீர் உள்ள புட்டிகளை காலி செய்து கழுவி வைப்பது என்பதை நான் ஒரு பிரச்னையாக எடுக்கவில்லை. ஆனால், பத்தடி உயரம் கொண்ட ஜன்னல்களைத் துடைத்து சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான ஒரு வேலையாக இருந்தது. அதனால் அலுவலகம் படிப்படியாக தூசு உள்ள ஒன்றாக ஆகிவிட்டது. கடைசியில் அந்த வேலையைச் செய்யுமளவிற்கு எனக்கு வயது வரவில்லை என்று சொல்லி அவர்கள் என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள்.

அந்த தகவலைக் கேட்டு நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். என் அழுகையைப் பார்த்து டாக்டர் கின்ஸி டெய்லருக்கு என் மீது இரக்கம் தோன்றியது. என்னைத் தன்னுடைய வீட்டில் வேலைக்காரனாக ஆக்குவதாக அவர் சொன்னதால் நான் அமைதியானேன். அவருடைய மனைவி மிகவும் வசதி படைத்தவள். அவர்களின் ஆடம்பரமான மாளிகையில் வேலைக்காரனாக ஆவது என்பது மதிப்புமிக்க ஒரு விஷயம்தான். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அங்கு வேலை பார்ப்பது சந்தோஷத்தைத் தரக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அங்கு வேலை செய்த பணியாட்கள் எல்லோரும் என் மீது நிறைந்த அன்பு செலுத்தினார்கள். அவர்கள் என்னை ஒரு குழந்தையைப் போல எண்ணினார்கள். இரவு தூங்கச் செல்லும்போது, ‘இனிய இரவு’ என்று கூறி எல்லோரும் என்னை முத்தமிடுவார்கள்.


ஒரு நாள் டாக்டரின் மனைவி என்னிடம் தரைப் பகுதியிலிருந்த அறையை சுத்தம் செய்யும்படி சொன்னாள். அங்கு ஏராளமான அட்டைப் பெட்டிகளும் தேவையானதும் தேவையற்றதுமான பொருட்களும் குவிந்து கிடந்தன. அவற்றை தனித்தனியாகப் பிரித்து சுத்தம் செய்து வைக்க வேண்டும். பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் என் வேலையை மறந்துவிட்டு, குழலை ஊதி விளையாட ஆரம்பித்துவிட்டேன். அந்த சமயத்தில் டாக்டரின் மனைவி அங்கு வந்து விட்டாள். அவளுக்கு என்னைப் பார்த்து மிகுந்த கோபம் வந்துவிட்டது. மூன்று நாட்களில் வேலையை விட்டு போய் விடும்படி என்னிடம் அவள் சொன்னாள். அந்தச் சம்பவத்தால் அந்த வேலையும் முடிவுக்கு வந்தது.

அதற்குப் பிறகு நான் பத்திரிகைகள் விற்கும் டபிள்யூ. எச். ஸ்மித்திடமும், அவருடைய மகனிடமும் பணி புரிந்தேன். அதுவும் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த ஒரு வேலையே. ஆனால், நான் வயதில் மிகவும் சிறியவனாக இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர்கள் என்னை வேலையை விட்டு போகும்படி கூறிவிட்டார்கள்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கண்ணாடி செய்வதைப் பற்றி நான் படித்திருந்தேன். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம் அதுவென்று நான் நினைத்தேன். அதனால் நான் ஒரு கண்ணாடி செய்யும் ஆளிடம் போய் வேலையில் சேர்ந்தேன். வேலை ஆரம்பித்த முதல் நாளிலேயே நான் அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்து விட்டேன். அந்த மனிதர் என்னைத் தூக்கி வெளியே கொண்டு வந்து படுக்க வைத்தார். அந்த ஒரு நாளே எனக்கு போதும் என்றாகி விட்டது. அந்த நாளுக்கான சம்பளத்தை வாங்கக் கூட பிறகு நான் அங்கு போகவில்லை.

அச்சக உரிமையாளரும் ஸ்டேஷனரி கடைக்காரருமான ஸ்ட்ரெய்க்கரிடம் பிறகு வேலை பார்த்தேன். அங்கிருந்த மிகப் பெரிய அச்சு இயந்திரத்தை இயக்கத் தெரியும் என்று கூறித்தான் நான் அந்த வேலையிலேயே சேர்ந்தேன். இருபதடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டிருந்த அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு நான் ஐந்தடி உயரம் கொண்ட ஒரு பீடத்தின் மீது ஏறி நிற்க வேண்டும். ஃபோர்மேன் சொன்னது மாதிரி செயல்பட என்னால் முடியாமற் போனபோது, நான் பொய் சொல்லியிருக்கிறேன் என்பதையும் அந்த இயந்திரத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதையும் அவர் தெரிந்து கொண்டார். என்னிடம் கோபம் எதுவும் கொள்ளாமல் அதை எப்படி இயக்குவது என்பதை அவர் எனக்கு சொல்லித் தந்தார். அங்கிருந்த பேப்பர் ஷீட்டுகளுக்கு  என்னை மூடுகிற அளவிற்கு அகலமும் நீளமும் இருந்தன. படிப்படியாக நான் அந்த வேலையைக் கற்றுக் கொண்டேன். அதன் மூலம் வாரத்திற்கு பன்னிரெண்டு ஷில்லிங் வருமானம் எனக்குக் கிடைத்தது.

குளிர் நிறைந்திருக்கும் அதிகாலை வேளைகளில் சூரியன் உதயமாவதற்கு முன்பு வேலைக்குப் புறப்படுவது என்பது ஒரு சாதனையாகவும் சுவாரசியமான அனுபவமாகவும் இருந்தது. தேநீர் கடைக்குச் செல்லும் ஒன்றிரண்டு நிழல் உருவங்களைத் தவிர தெரு முற்றிலும் வெறிச்சோடிப் போயிருக்கும். அச்சுத் தொழில் அந்த அளவிற்கு வெறுப்பு உண்டாக்கக் கூடியதாக இல்லை. ஆனால், வார இறுதியில் மிகப் பெரிய இயந்திரங்களிலிருக்கும் மையைக் கழுவி சுத்தம் செய்யும் வேலை மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது. அங்கு மூன்று வாரங்கள் வேலை செய்த நிலையில், எனக்கு காய்ச்சல் வந்தது. அத்துடன் நான் வேலைக்குப் போவதை விட்டு விட்டேன். என் தாயின் வற்புறுத்தல் காரணமாக நான் மீண்டும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

6

சிட்னிக்கு இப்போது பதினாறு வயது நடந்து கொண்டிருந்தது. அவன் அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். ஆஃப்ரிக்காவிற்குச் செல்லும் ஒரு பயணக் கப்பலில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருந்தது. மதிய உணவு நேரத்தில் பயணிகளுக்கு அறிவிக்கக் கூடிய சங்கு ஊதும் வேலைதான் அவனுக்கு கிடைத்திருந்தது. இரண்டு டாலர் பத்து ஷில்லிங் ஒவ்வொரு மாதமும் அவனுக்கு சம்பளமாகக் கிடைக்கும். அது தவிர, கப்பலில் இரண்டாம் வகுப்பிலிருக்கும் மூன்று மேஜைகளுக்கு அவன் உணவு பரிமாறுபவனாக வேலை செய்ய வேண்டும். அதற்கு அன்பளிப்பு தனியாக கிடைக்கும்.

சிட்னிக்கு முப்பத்தைந்து ஷில்லிங் முன் பணமாக கிடைத்தது. போவதற்கு முன்பு அவன் அதை என் தாயிடம் தந்தான். நிலைமைகள் முன்பிருந்ததை விட பரவாயில்லை என்று ஆன போது, செஸ்ட்டர் தெருவில் ஒரு பார்பர் ஷாப்பிற்கு மேலே இருந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டிற்கு நாங்கள் இருப்பிடத்தை மாற்றினோம்.

சிட்னியின் முதல் வருகை ஒரு மிகப் பெரிய வருகையாக எங்களுக்கு இருந்தது. நாங்கள் அதை முழுமையாகக் கொண்டாடினோம். மூன்றுக்கும் அதிகமான டாலர்களுடன் அவன் வந்திருந்தான். எல்லாம் வெள்ளி நாணயங்கள். பாக்கெட்டிற்குள்ளிருந்து அவன் நாணயங்களை எடுத்து படுக்கையில் போட்டதை நான் இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் முதல் முறையாக அவ்வளவு பணத்தை அப்போதுதான் பார்த்தேன். அதிலிருந்து என்னால் கண்களையும் கையையும் எடுக்கவே முடியவில்லை. அதைக் குவியலாகக் கூட்டியும், பரவலாக இருக்கும்படி செய்தும், மீண்டும் குவியலாகக் குவித்தும்... இப்படியே நான் நீண்ட நேரம் செய்து கொண்டிருந்தேன். கடைசியில் நான் ஒரு அற்பன் என்று என் தாயும் சிட்னியும் கூறும் வரை நான் அந்த விளையாட்டைத் தொடர்ந்தேன்.

என்ன ஆடம்பரம்! என்ன சந்தோஷம்! அந்த கோடை காலம் எங்களுக்கு கேக்குகளின், ஐஸ் க்ரீம்களின் காலமாக இருந்தது. ஒரு நாள் ஒரு பெனிக்கு ஐஸ்க்ரீம் வாங்குவதற்காக நான் ஒரு பெரிய பாத்திரத்துடன் சென்ற விஷயம் கடைக்காரனை ஆச்சரியப்பட வைத்துவிட்டது. அடுத்த தடவை ஒரு குளியல் தொட்டியுடன் வரும்படி அவன் சொன்னான்.

பயணத்தில் கிடைத்த ஏராளமான அனுபவங்களை சிட்னி எங்களிடம் சொன்னான். பயணம் ஆரம்பிப்பதற்கு முன்பே அவனுக்கு வேலையை இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானதாம். மதிய உணவிற்காக அவன் சங்கை ஊதியபோது பயிற்சிக் குறைவு காரணமாக வினோதமான ஒரு சத்தம் வெளியே வந்திருக்கிறது. தலைமை சமையல்காரர் அவனிடம் சண்டை போட்டிருக்கிறார். சிட்னி மன்னிப்பு கேட்டு எப்படியோ தப்பித்துக் கொண்டான். சாப்பாடு நேரத்தில் ஆர்டர் எடுக்கும்போதும் பரிமாறும் போதும் அவன் ஆரம்பத்தில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறான்.


சில நாட்கள் சிட்னி ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்திருந்தான். என் தாயும் நானும் அவனை நன்கு கவனித்துக் கொண்டோம். பணம் முழுவதும் செலவழிந்துவிட்டது. அடுத்த பயணத்துக்காக முன் பணமாகக் கிடைத்த முப்பத்தைந்து ஷில்லிங்கை அவன் என் தாயிடம் கொண்டு வந்து தந்தான். அதுவும் நீண்ட நாட்கள் கையில் இருக்கவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் காசில்லாதவர்களாகி விட்டோம். சிட்னியின் பயணத்திற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. என் தாய் தையல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், அது எங்களுக்குப் போதுமானதாக இல்லை. நாங்கள் வேறொரு கஷ்ட நிலையை நோக்கி நீங்கிக் கொண்டிருந்தோம்.

எப்படியோ கொஞ்சம் பணம் சம்பாதிக்க நான் ஒரு வழி கண்டு பிடித்தேன். என் தாயின் கையில் கொஞ்சம் பழைய ஆடைகள் இருந்தன. சனிக்கிழமை நான் அவற்றை ஒரு விரிப்பில் சுற்றி விற்பதற்காக கடைத் தெருவிற்குப் புறப்பட்டேன். அதைப் பார்த்து என் தாய் பதைபதைத்து விட்டார். அந்த ஆடைகள் எதற்குமே லாயக்கில்லை என்றார் அவர். எனினும், நான் அந்த ஆடைகளுடன் சென்றேன். ஒன்றுக்கும் உதவாத அந்தப் பழைய ஆடைகளைத் தெருவின் ஓரத்தில் பரப்பிப் போட்டு விட்டு நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘இங்கே பாருங்க... இதோ ஒரு ஆடை. நீங்க இதற்கு எவ்வளவு தருவீங்க? ஒரு ஷில்லிங்? ஆறு பென்ஸ்? மூன்று பென்ஸ்? ரெண்டு பென்ஸ்?’ ஒரு பெனிக்குக் கூட அந்த ஆடை விற்பனை ஆகவில்லை. ஆட்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்தவாறு கடந்து போனார்கள். எதிர் பக்கமிருந்த நகைக் கடையில் வேலை பார்க்கும் மனிதர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்ப்பதைப் பார்த்து எனக்கு வெட்கமாக இருந்தது. எனினும், நான் பின் வாங்கவில்லை. இறுதியில் அதிகமாக பயன்படுத்தப்படாமலிருந்த ஒரு ஜோடி முழங்காலுறையை ஆறு பெனிக்கு நான் விற்றேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு சோர்வு உண்டாக ஆரம்பித்தது. இதற்கிடையில் நகைக் கடையிலிருந்து ஒரு மிடுக்கான மனிதர் எனக்கு நேராக நடந்து வந்தார். நான் வியாபாரத்தில் கால் வைத்து எவ்வளவு நாட்கள ஆயின என்று அவர் ரஷ்யன் சுவையுடன் கேட்டார். அந்த மனிதரின் முகத்தில் மிடுக்கு இருந்தாலும், அவருடைய கேள்வியில் கிண்டல் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ‘நான் இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன்’ என்று அவருக்கு பதில் சொன்னேன். சிரித்துக் கொண்டிருக்கும் நண்பர்களை நோக்கி அவர் திரும்பச் சென்றார். கண்ணாடி ஜன்னல் வழியாக அவர்கள் அப்போதும் என்னைப் பார்த்துகொண்டிருந்தார்கள். அத்துடன் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. பொருட்களை இறுக கட்டி திரும்பிப் போக நேரமாகிவிட்டது என்று நான் நினைத்தேன்.

முழங்காலுறையை ஆறு பெனிக்கு விற்பனை செய்திருக்கிறேன் என்பதைத் தெரிந்ததும், என் தாய்க்கு கோபம் வந்துவிட்டது. ‘அந்த காலுறைகள் எவ்வளவு அழகானவை! என்ன இருந்தாலும், ஆறு பென்னிகளை விட அதற்கு அதிகம் கிடைத்திருக்க வேண்டும்’- என் தாய் சொன்னார்.

அந்த நேரத்தில் வீட்டு வாடகையைப் பற்றி நாங்கள் நினைக்கவேயில்லை. வீட்டுச் சொந்தக்காரி வந்து அங்கிருந்து எங்களை வெளியே போகச் சொன்னவுடன் அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் 3, பெளனல் டெரஸ் என்ற முகவரிக்கு திரும்ப வந்தோம்.

கென்னிங்டன் சாலைக்குப் பின்னால் ஒரு இடத்தில் விளையாட்டு பொம்மைகள் தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான மனிதருடனும் அவருடைய மகனுடனும் நான் பழக்கமானேன். பொம்மைகள் தயாரித்து நடந்து சென்று விற்பவர்கள் அவர்கள். எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருந்த அவர்களைப் பார்த்து எனக்கு பொறாமை உண்டானது. அவர்கள் செய்யும் தொழிலுக்கு குறைந்த மூலதனம் இருந்தாலே போதும். ஒரு ஷில்லிங்கை வைத்தே அந்தத் தொழிலைத் தொடங்க முடியும். அதற்குத் தேவையான செருப்பு பெட்டி, மரப் பெட்டி எல்லாமே இலவசமாகக் கிடைக்கும். சிறிய விலைக்குக் கிடைக்கக் கூடிய பசை, வர்ண தாள், மரத்துண்டு, நூல், நிறமுள்ள பந்துகள்- இவைதான் தேவைப்படும் மற்ற பொருட்கள். ஒரு ஷில்லிங் இருந்தால் அதை வைத்து ஏழு டஜன் விளையாட்டு படகுகளை அவர்கள் உருவாக்கி விடுவார்கள். படகின் ஓரங்களை செருப்பு பெட்டிகளை பிய்த்து உண்டாக்குவார்கள். அதற்குப் பிறகு அதை ஒரு கார்ட் போர்டு துண்டில் சேர்த்து தைப்பார்கள். மினுமினுப்பான பக்கத்தில் பசையைத் தேய்த்து மரப்பொடியைத் தூவுவார்கள். வண்ண தாளைக் கொண்டு பாய்மரம் உண்டாக்கி, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் தாளால் ஆன கொடிகளைக் குத்துவார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு படகுகளை ஒரே நேரத்தில் நிறுத்தி வைத்திருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அந்த வர்ண ஜாலத்தைப்  பார்த்து ஆட்கள் அதை சீக்கிரமே விலைக்கு வாங்கி விடுவார்கள்.

விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பவர்களுடன் பழக்கம் அதிகமானபோது, நான் அவர்களின் உதவியாளராக மாறினேன். வெகு சீக்கிரமே நான் படகு தயாரிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் எங்களின் இடத்தை விட்டுச் சென்றபோது நான் தனியாக படகுகள் தயாரிக்க ஆரம்பித்தேன். ஆறு பெனி தயார் பண்ணி மூன்று டஜன் படகுகளை ஒரே வாரத்தில் நான் உண்டாக்கினேன்.

 ஆனால், எங்களின் ஒரே ஒரு சிறிய அறை என் தாயின் தையல் வேலைக்கும் என்னுடைய விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பிற்கும் போதுமானதாக இல்லை. அது மட்டுமல்ல- பசை உண்டாக்கும்போது வெளியான நாற்றத்தைப் பற்றி என் தாய் எப்போதும் குறைப்பட்டுக் கொண்டே இருப்பார். நாற்றம் ஒரு பக்கம் இருக்க, அது என் தாய் தைக்கும் ரவிக்கைகளுக்கு ஒரு ஆபத்தான விஷயமாகவும் இருந்தது. என்னுடைய தயாரிப்புப் பொருட்கள் அறையின் அதிகமான இடத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, நாங்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி நேரிட்டது. விளையாட்டு பொம்மைகள் மூலம் வந்த என்னுடைய வருமானம் என் தாயின் வருமானத்தை விட குறைவாக இருந்ததால், பொம்மைகள் தயாரிப்பதை நான் விட வேண்டிய கட்டாயம் உண்டானது.

நாங்கள் தாத்தாவை எப்போதாவது ஒருமுறை பார்த்திருக்கிறோம். போன வருடத்திலிருந்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். பக்கவாதம் வந்ததால் அவருடைய கைகள் வீங்கிப் போய் காணப்பட்டன. அதனால் அவரால் செருப்பை நன்றாக ஆக்கும் வலையைச் செய்ய முடியவில்லை. முன்பு அவ்வப்போது தாத்தா என் தாய்க்கு பணம் கொடுத்து உதவுவதுண்டு. சில நேரங்களில் தானே சமைத்த ருசியான உணவுப் பொருட்களை எங்களுக்கு அவர் தருவார்.


பார்க்கும் போதெல்லாம் தாத்தா என்னுடைய பேச்சையும் நடந்து கொள்ளும் முறைகளையும் திருத்துவார். அதனால் அவரை எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. இப்போது அவர் வாத நோயால் பாதிக்கப்பட்டு எதுவுமே செய்ய முடியாமல் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய எல்லா நாட்களிலும் என் தாய் மருத்துவமனைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அவர் பார்த்தது எங்களுக்கு ஒருவிதத்தில் லாபகரமாகவே இருந்தது. காரணம்- திரும்பி வரும்போதெல்லாம் என் தாய் ஒரு பை நிறைய முட்டைகள் கொண்டு வருவார். அந்த நாட்களில் எங்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது. என் தாய்க்கு போக முடியாத நேரங்களில் என்னை மருத்துவமனைக்கு அவர் அனுப்புவார். என்னைப் பார்க்கும்போது தாத்தா மிகவும் சந்தோஷப்படுவார். நர்ஸ்மார்களுடன் அவர் நல்ல உறவு வைத்திருந்தார். எப்போதும் அவர்களுடன் ஏதாவது நகைச்சுவையாகப் பேசி அவர் சிரித்துக் கொண்டிருப்பார். உடல் நலம் சற்று பரவாயில்லை என்று தோன்றுகிற நாட்களில் சமையலறையில் நுழைந்து சிறிய சிறிய வேலைகளைச் செய்வார். அப்படித்தான் அவருக்கு முட்டைகள் கிடைத்தன. பார்வையாளர்கள் வரும் நாட்களில் தாத்தா படுக்கையில் படுத்திருப்பார். அருகிலிருக்கும் அலமாரியிலிருந்து முட்டைகள் நிறைக்கப்பட்ட பை எனக்கு கை மாறும். நான் அதை உடனே சட்டைக்குள்ளே திணிப்பேன்.

வாரக் கணக்கில் நாங்கள் முட்டைகள் உண்டு வாழ்ந்தோம். வேக வைத்து, பொரித்து, மிளகு சேர்த்து... இப்படி பல வகைகளில் அதைச் சாப்பிட்டோம். நர்ஸ்மார்கள் தாத்தாவிற்குத் தோழிகளாக இருந்ததால் அவர்களுக்கு நன்கு தெரிந்துதான் இந்த முட்டை கை மாறும் சம்பவம் நடந்தது. முட்டைகளை ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு மருத்துவமனை வார்டு வழியாக நடந்து வரும்போது எங்காவது கீழே கால் தடுக்கி விழுந்து விடுவோமோ என்றும், பிடிபட்டு விடுவோமோ என்றும் நான் பயப்படுவேன். வாதநோய் குணமாகி தாத்தா மருத்துவமனையை விட்டது எங்களைப் பொறுத்த வரையில் ஒரு வருத்தமான விஷயம்தான்.

ஆறு வாரங்கள் கடந்த பிறகும் சிட்னி திரும்பி வரவில்லை. முதலில் என் தாய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் ஒரு வாரம் கடந்ததும் என் தாய் கப்பல் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். சிட்னி மூட்டு வலி சிகிச்சைக்காக கேப்டவுனில் இறங்கிக் கொண்டான் என்று அவர்களிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அது என் தாயை மிகவும் கவலைப்படச் செய்தது. என் தாயின் உடல் நலத்தை அது மிகவும் பாதித்தது. எனினும், அவர் தன்னுடைய தையல் வேலையை நிறுத்தவேயில்லை. இதற்கிடையில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது.  பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒரு கும்பத்திற்கு நடனம் சொல்லித் தரவேண்டும். அதன் மூலம் வாரத்திற்கு ஐந்து ஷில்லிங் வருமானமாகக் கிடைத்தது.

அந்தச் சமயத்தில்தான் மக்கார்த்தியின் குடும்பம் கென்னிங்டனிற்கு வசிக்க வந்தது. ஐரிஷ் நகைச்சுவை நடிகையான திருமதி.மக்கார்த்தி என் தாயின் பழைய சினேகிதி. ஒரு சார்ட்டட் அக்கவுண்ட்டான வால்டர் மக்கார்த்தியை அவள் திருமணம் செய்திருந்தாள். ஏழு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் அவளை திரும்பப் பார்க்கிறோம். அவளுடைய மகன் வாலி மக்கார்த்தியும் நானும் ஒரே வயதைக் கொண்டவர்கள். நாங்கள் இரண்டு தாய்களுக்கு முன்னாலும் பல நகைச்சுவை நடிகர்களையும் போல நடித்துக் காட்டுவோம். கற்பனையாக சிகரெட் பிடிப்பது போலவும், குதிரை மீது சவாரி செய்வதைப் போலவும் நாங்கள் நடித்துக் காட்டுவதைப் பார்த்து, அவர்கள் இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் சிரிப்பார்கள்.

கென்னிங்டன் சாலையில் வால்க்காட் மேன்ஷனில்தான் அவர்கள் தங்கியிருந்தார்கள். என் தாய் அவர்களை மிகவும் அபூர்வமாகத்தான் சந்திப்பார் என்றாலும் நானும் வாலியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். பள்ளிக்கூடம் விட்ட உடனே, நான் வீட்டிற்கு வந்து என் வேலைகளை படு வேகமாக செய்து முடிப்பேன். பிறகு வாலியின் வீட்டிற்கு ஓடுவேன்.

நாங்கள் வீட்டின் பின் பகுதிக்குப் போவோம். நாடகம் நடிப்பதுதான் எங்களுடைய முக்கிய நிகழ்ச்சியாக இருக்கும். இயக்குனர் என்ற நிலையில் வில்லன் வேடத்தையும் நான்தான் ஏற்று நடிப்பேன். கதாநாயகனை விட திறமைசாலி வில்லன்தான் என்றொரு எண்ணம் எனக்குள் இருந்தது. இரவு உணவு நேரம் வரை நாங்கள் நாடகம் நடித்துக் கொண்டிருப்போம். வாலியுடன் சேர்ந்து உணவு சாப்பிட பெரும்பாலும் என்னையும் அழைப்பார்கள். உணவு நேரத்தில் அங்கு இருப்பது மாதிரி தந்திரத்தனமாக நான் பார்த்துக் கொள்வேன். சில நேரங்களில் என்னுடைய தந்திரங்கள் பலிக்காமல் போய் விடுவதும், உணவு சாப்பிடாமலே வீட்டிற்குத் திரும்பி வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுவதும் உண்டு. அப்போது என் தாய் மகிழ்ச்சியுடன் தேநீரும் ஒரு துண்டு ரொட்டியும் அத்துடன் தாத்தாவிடமிருந்து கொண்டு வந்த முட்டையையும் எனக்குத் தருவார். பிறகு என் தாய் எனக்கு ஏதாவதொரு புத்தகத்தைப் படித்துக் காட்டுவார். சில நேரங்களில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருப்போம். தெருவில் நடந்து செல்லும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே என் தாய் தன்னுடைய கருத்துக்களைக் கூறுவார். ‘அதோ அங்கே போகும் ஆளின் பெயர் திரு. ஹோவான்ட்ஸ்காட்ச். அவர் இப்போ ஒரு போட்டிக்குப் போகிறார். அதில் வெற்றி பெற்றால், ஒரு சைக்கிள் அவருக்குக் கிடைக்கும்’-- இந்த மாதிரி மனிதர்களைப் பற்றி ஒவ்வொரு கதையாக கூறிக் கொண்டிருப்பார். மிகவும் மெதுவாக நடந்து செல்லும் மனிதரைப் பார்த்து ‘இன்னைக்கு அந்த ஆளோட வீட்டில் அவருக்குப் பிடிக்காத உணவு’ என்று கூறுவார்.

அதிகார மமதையுடன் நடந்து செல்லும் ஒரு ஆளைப் பார்த்து ‘அதோ அங்கே நடந்து வரும் ஆள் ஒரு நல்ல இளைஞன்தான். ஆனா, இப்போ அவனோட கவலை- தன் காற்சட்டைக்குப் பின்னாலிருக்கும் கிழிசலைப் பற்றித்தான்’ என்று கூறுவார். அவை ஒவ்வொன்றையும் கேட்டு நான் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

சிட்னியைப் பற்றிய எந்தவித தகவலும் இல்லாமல் மேலும் ஒரு வாரம் கடந்து சென்றது. சிறிய பையனாக இருந்தாலும் என் தாயின் கவலைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். என் தாய் தைப்பதை நிறுத்தி விட்டு, ஜன்னலுக்கு அருகில் போய் உட்கார்ந்திருப்பார். அறையைச் சுத்தம் செய்வதில் கூட சிறிதும் கவனமில்லாமல் மிகவும் அமைதியாக அவர் அமர்ந்திருப்பார். அவரிடம் துணி தைக்க கொடுத்திருந்தவர்கள் அவரைக் குற்றம் சுமத்தினார்கள்.


சிலர் அதற்குப் பிறகு தைப்பதற்கு துணி தருவதை நிறுத்திக் கொண்டார்கள். தவணைப் பணம் கட்டுவது தவறியபோது, தையல் இயந்திரத்தையும் இழக்க வேண்டி நேரிட்டது. நடனம் கற்றுத் தருவதற்கு எனக்கு வருமானமாக வந்து கொண்டிருந்த ஐந்து ஷில்லிங்கும் நின்று போனது. என் தாயின் நடவடிக்கைகளில் உண்டான மாறுதலை என்னால் உணர முடிந்தது.

ஒரு நாள் நான் என் தாயிடம் சென்னேன்: ‘அம்மா, முன்னாடி மாதிரி நல்ல ஆடைகளை அணியக் கூடாதா? எப்போ பார்த்தாலும் அறைக்குள்ளே இப்படி உட்கார்ந்து கொண்டே இருந்தா எப்படி?’

பாவம் என் தாய். நான் சொன்ன வார்த்தைகள் நினைத்து பின்னால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். பட்டினி காரணமாகத்தான் என் தாய் இந்த அளவிற்கு தளர்ந்து போயிருக்கிறார் என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

7

ள்ளிக்கூடத்தில் கோடை கால விடுமுறை ஆரம்பித்தது. அறையில் சோர்வடைந்து உட்கார்ந்து கொண்டிருப்பதை இல்லாமற் செய்வதற்காக நான் அன்று சற்று முன் கூட்டியே மக்கார்த்தியின் வீட்டிற்குச் சென்றேன். அவள் என்னை சாப்பிட அழைத்திருந்தும், நான் சாப்பிட மறுத்துவிட்டு என் தாயைத் தேடி திரும்பி வந்து விட்டேன். பெளனல் டெரஸ்ஸிற்கு நான் வந்தபோது, அங்கு நின்றிருந்த சிறுவர்கள் சிலர் என்னை வெளி கதவிற்கு அருகிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

‘உன் அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு...’- ஒரு சிறுமி சொன்னாள்.

அதைக் கேட்டு முகத்தில் யாரோ அடித்ததைப் போல நான் உணர்ந்தேன்.

‘நீ என்ன சொல்ற?’- நான் முணுமுணுத்தேன். ‘நாங்க உண்மையைத்தான் சொல்றோம். அவங்க அடுப்புக் கரி துண்டுகளை கையிலெடுத்து வச்சிக்கிட்டு ஒவ்வொரு கதவா தட்டினாங்க. இது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பிறந்த நாள் பரிசுன்னு சொல்லிக்கிட்டு எல்லா வீடுகள்லயும் இந்த அடுப்புக் கரியைக் கொடுத்தாங்க’- இன்னொரு சிறுவன் சொன்னான்.

அதற்கு மேல் எதையும் கேட்காமல் நான் படிகளில் ஏறி அறைக்குள் நுழைந்தேன். சிறிது நேரம் என் தாயையே வெறித்துப் பார்த்தேன். அவர் வழக்கம் போல ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது. அதிகமான துன்பங்களை அனுபவிக்கிற முக பாவத்துடன் என் தாய் என்னைப் பார்த்தார்.

‘அம்மா...’- அழும் குரலில் நான் அழைத்தேன்.

‘என்ன?’- என் தாய் அலட்சியமாக கேட்டார்.

நான் ஓடிச் சென்று என் தாயின் மடியில் முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.

‘என்ன நடந்தது?’- என் தலையில் விரலால் வருடியவாறு என் தாய் கேட்டார்.

‘அம்மா, உங்களுக்கு உடல் நலம் சரியில்லை’- நான் அழுவதற்கிடையில் சொன்னேன்.

‘எனக்கு எந்த பிரச்னையுமில்லை...’ – என் தாய் என்னைத் தேற்றினார். அவர் மன அமைதி இல்லாமல் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

‘இல்ல... இல்ல... அவங்க எல்லோரும் சொன்னாங்களே! அம்மா, நீங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போயி...’- என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

‘நான் சிட்னியைத் தேடினேன். அவங்க அவனை ஒளிச்சு வச்சிருக்காங்க’- சோர்வான குரலில் என் தாய் சொன்னார்.

அந்தச் சிறுவர்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

‘அம்மா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாம ஒரு டாக்டர்கிட்ட போவோம்’- நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னேன்.

‘அவன் எங்கே இருக்கான்னு மக்கார்த்திக்கு நல்லா தெரியும். அவள் அவனை என்கிட்ட இருந்து மறைச்சு வச்சிருக்கா’- என் தலையைப் பிடித்து ஆட்டியவாறு என் தாய் சொன்னார்.

‘அம்மா, தயவு செய்து.... நான் ஒரு டாக்டரை அழைக்கிறேன்.’

நான் எழுந்து கதவை நோக்கி நடந்தேன்.

என் தாய் திடீரென்று கேட்டார்: ‘நீ எங்கே போற?’

‘டாக்டரை அழைக்கிறதுக்கு.... நான் சீக்கிரம் வந்திடுறேன்.’

அதற்கு என் தாய் எந்த பதிலும் கூறவில்லை. உள் கவலையுடன் அவர் என்னையே பார்த்தார். நான் உடனடியாக கீழே இறங்கி வீட்டுச் சொந்தக்காரியிடம் சென்றேன்.

‘அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. நான் டாக்டரை அழைக்கிறதுக்காக போறேன்’- நான் அவளிடம் சொன்னேன்.

‘டாக்டருக்கு ஆள் அனுப்பியாச்சு’- அவள் சொன்னாள்.

அடுத்த சில நிமிடங்களில் வயதான டாக்டர் ஒருவர் வந்தார். அவர் வீட்டுச் சொந்தக்காரி சொன்ன ஒவ்வொன்றையும் காது கொடுத்து கேட்டார். சிறுவர்கள் சொன்ன கதையைத்தான் அவளும் சொன்னாள். டாக்டர் என் தாயை ஆழமாக சோதித்துப் பார்த்தார். ‘பைத்தியம் பிடிச்சிருக்கு. இவங்களை உடனடியா மருத்துவமனைக்கு அனுப்புங்க’- அவர் சொன்னார். தொடர்ந்து ஒரு தாளில் என்னவோ எழுதினார். அதில் என் தாய்க்கு உடலில் சத்து மிகவும் குறைவாக இருக்கிறது என்று எழுதியிருந்தார். அதை அவர் எனக்கு விளக்கிச் சொன்னார்.

‘மருத்துவமனையில் இருந்தால் அவங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும்’- வீட்டுச் சொந்தக்காரி என்னிடம் சொன்னாள். என் தாயின் ஆடைகளை மாற்றவும், தேவைப்படும் துணிகளை எடுத்து வைப்பதற்கும் அவள் எனக்கு உதவினாள். ஒரு குழந்தையைப் போல என் தாய் நாங்கள் சொன்னபடி நடந்தார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியபோது பக்கத்து வீடுகளிலிருந்த பெண்களும் சிறுவர்- சிறுமிகளும் கூட்டமாக வந்து கேட்டிற்கருகில் நின்றிருந்தார்கள்.

மருத்துவமனைக்கு ஒரு மைல் தூரம் இருந்தது. நடந்து செல்லும்போது என் தாய் சோர்வு காரணமாக மது அருந்திய பெண்ணைப் போல இப்படியும் அப்படியுமாக ஆடினார். நான் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டேன். உச்சி வெயில் எங்களை மேலும் கஷ்டப்படுத்தியது. கடந்து சென்ற ஒவ்வொருவரும் என் தாய் மது அருந்தியிருப்பதாகவே எண்ணினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கனவில் வரும் மாய உருவங்களைப் போலவே எனக்கு தோன்றினார்கள். எதுவும் பேசவில்லையென்றாலும் நாங்கள் எங்கு போகிறோம் என்ற விஷயம் என் தாய்க்கு நன்கு தெரிந்திருந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்ல முயன்றேன். என் தாய் வெறுமனே புன்னகைத்தார். அவ்வளவுதான்.

மருத்துவமனையை அடைந்தபோது இளைஞரான ஒரு டாக்டர் என் தாயைச் சோதித்துப் பார்த்தார். வயதான டாக்டரின் குறிப்பைப் படித்து விட்டு மிகுந்த கனிவுடன் அவர் சொன்னார்: ‘சரி... திருமதி. சாப்ளின்... இப்படி வாங்க.’

என் தாய் அவர் சொன்னபடி நடந்தார். நர்ஸ்மார்கள் வந்து அழைத்துக் கொண்டு சென்றபோது திடீரென்று திரும்பிய என் தாய் என்னைக் கவலையுடன் பார்த்தார்.

‘நாளைக்கு பார்க்கிறேன்’- சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு நான் சொன்னேன்.


அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டே என் தாய் அவர்களுடன் சென்றார். ‘மகனே, இனிமேல் உன் நிலைமை என்ன?’- டாக்டர் என்னிடம் கேட்டார்.

அனாதை இல்லத்தில் தங்குவதில் விருப்பமில்லாததால் நான் சொன்னேன்: ‘நான் என் பாட்டியுடன் போய் இருக்கப் போகிறேன்.’

மீண்டும் வீட்டை நோக்கி நடந்து வந்தபோது நான் முற்றிலும் உணர்ச்சியற்றுப் போயிருந்தேன். இருட்டறைக்குள் எதுவும் சாப்பிடாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை விட என் தாய் மருத்துவமனையில் இருப்பதே நல்லது என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஆனால், என்னைத் திரும்ப பார்த்தவாறு நடந்து மறைந்த என் தாயின் உருவம் என்னுடைய மனதை விட்டு மறையவே இல்லை. இதயத்தை நெகிழச் செய்வதாக இருந்தது அந்தக் காட்சி. என் தாயுடன் வாழ்ந்த நிமிடங்களைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். என் தாயின் பாசம், தளர்ந்து போன உருவம், புன்னகை, வெளியே போய் விட்டு வரும்போது கையிலிருக்கும் பையில் எனக்கும் சிட்னிக்கும் ஏதாவது பலகாரங்கள் கொண்டு வருவது... இப்படி ஒவ்வொன்றையும் நான் நினைத்துப் பார்த்தேன். இன்று காலையில் கூட நான் என் தாயின் மடியில் அமர்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழுதபோது அவர் எனக்கு ஒரு மிட்டாய் தருவதாகக் கூறினார்.

நேராக வீட்டிற்குச் செல்ல என்னால் முடியவில்லை. நேரம் இருட்டும் வரை நான் கடை வீதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். திரும்ப வீட்டிற்கு வந்தபோது பயங்கரமான ஒரு வெறுமையை நான் உணர்ந்தேன்.

அங்கு நாற்காலியில் அழுக்குத் துணிகள் ஊறப் போட்ட பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. என்னுடைய இரண்டு சட்டைகளும் ஒரு பாவாடையும் அதில் இருந்தன. எனக்கு நல்ல பசி எடுத்தது. நான் எல்லா இடங்களிலும் சோதித்துப் பார்த்தேன் சாப்பிடுவது மாதிரி அங்கு எதுவும் கண்ணில் படவில்லை. பாதி தேநீர் தூளைக் கொண்ட ஒரு பாக்கெட் மட்டும் கையில் கிடைத்தது. திண்ணையில் என் தாயின் பர்ஸ் இருந்தது. நான் அதைத் திறந்து பார்த்தேன். மூன்று அரை பென்களும் பயணச் சீட்டுகள் சிலவும் அதில் இருந்தன. மேஜையின் மூலையில் என் தாய் தருவதாகச் சொன்ன மிட்டாய் கிடப்பதை நான் பார்த்தேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கவலையிலேயே நான் தளர்ந்து போய் உறங்கிவிட்டேன். காலையில் மீண்டும் பயங்கரமான ஒரு வெறுமை உண்டானது. சிறிது நேரம் கழித்து வீட்டுச் சொந்தக்காரி மேலே வந்தாள். அந்த அறையை வேறு யாருக்காவது கொடுப்பது வரையில் அங்கேயே நான் இருக்கலாமென்றும் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமென்றால் கேட்க சிறிதும் தயங்க வேண்டாமென்றும் அவள் என்னிடம் சொன்னாள். அதற்கு நான் நன்றி சொன்னேன். சிட்னி திரும்பி வந்து விட்டால் எல்லா கடன்களையும் அடைத்து விடலாம் என்று நான் சொன்னேன். சாப்பிடுவதற்கு எதையாவது கேட்டு வாங்க எனக்கு வெட்கமாக இருந்தது.

சொன்னது மாதிரி நான் மறுநாள் என் தாயைப் பார்க்க போகவில்லை. என்னால் போக முடியவில்லை. அது எங்களை மீண்டும் கவலைக்குள்ளாக்கும். ஆனால், வீட்டுச் சொந்தக்காரி டாக்டரைப் போய் பார்த்திருக்கிறாள். என் தாயை கெய்ன்ஹில் மனநல மருத்துவ மனைக்கு மாற்றி விட்டிருக்கிறார்கள் என்பதை அவள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். கவலை தரக் கூடிய அந்தத் தகவல் எனக்கு சற்று ஆறதலைத் தந்தது. காரணம்- என் தாயைப் பார்க்க போகவில்லையே என்ற குற்ற உணர்வு என் மனதில் இருந்தது. கெய்ன்ஹில் இங்கிருந்து இருபது மைல் தூரத்தில் இருந்ததால், அங்கு போவது என்பது சாதாரண விஷயமில்லையே! சிட்னி வந்த பிறகு, நாங்கள் சேர்ந்து போய்க் கொள்ள வேண்டியதுதான். முதல் சில நாட்கள் நான் யாரையும் பார்க்காமலே இருந்தேன்.

அதிகாலை நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். பகல் முழுவதும் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். எல்லா நாட்களிலும் ஏதாவது சாப்பிடுவதற்குக் கிடைக்கிற மாதிரியான வழிகளை நான் எப்படியோ உண்டாக்கிக் கொள்வேன். ஒரு நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பதென்பது அப்படியொன்றும் கஷ்டமான விஷயமாக இல்லை. ஒரு நாள் காலையில் நான் மெதுவாக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதை வீட்டுச் சொந்தக்காரி பார்த்தாள். காலை உணவு சாப்பிட்டேனா என்று அவள் கேட்டதற்கு நான் தலையை ஆட்டினேன். ‘அப்படின்னா வா...’ என்று அவள் வழக்கமான தன்னுடைய மிடுக்கான குரலில் சொன்னாள்.

மக்கார்த்தி குடும்பத்திற்கு நான் போகவேயில்லை. என் தாயைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம். யார் கையிலும் பிடிபடாத ஒருவனைப் போல நான் எல்லோரிடமிருந்தும் விலகி ஓடிக் கொண்டிருந்தேன்.

என் தாய் மருத்துவமனைக்குப் போய் ஒரு வாரம் முடிந்து விட்டது.

நிரந்தரமற்ற அந்த வாழ்க்கையுடன் என்னை நான் பழக்கப்படுத்திக் கொண்டேன். நான் அதை விரும்பவும் இல்லை, வெறுக்கவும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரிதான் எனக்கு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தாள். சிட்னி சீக்கிரமே திரும்பி வரவில்லையென்றால், அவள் அதிகாரிகளிடம் என்னைப் பற்றிக் கூறுவாள். என்னைத் திரும்பவும் ஹான்வெல்லிற்கு அனுப்புவார்கள். அதனால் நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். சொல்லப் போனால்-- தூங்குவதைக கூட நான் வெளியே வைத்துக் கொண்டேன்.

கென்னிங்டன் சாலைக்குப் பின்னால் ஒரு ஷெட்டில் விறகு வெட்டக் கூடிய சில பணியாட்கள் இருந்தார்கள். நான் அவர்களுடன் நட்பு உண்டாக்கிக் கொண்டேன். இருட்டு நிறைந்த ஷெட்டில் அவர்கள் நாள் முழுவதும் விறகை வெட்டி, அதை அரை பெனி விலை வரக் வடிய கட்டுகளாக கட்டுவார்கள். மிகவும் தாழ்ந்த குரலில்தான் அவர்கள் பேசுவார்கள். கதவிற்கு அருகில் சென்று நின்று கொண்டு அவர்கள் வேலை செய்வதை தினமும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். பெரிய ஒரு மரத்துண்டை எடுத்து ஒரு அங்குலம் அகலத்தில் அவர்கள் பலகையாக மாற்றுவார்கள். மீண்டும் அதைப் பிளந்து விறகு எரிக்க பயன்படும் துண்டுகளாக ஆக்குவார்கள். அந்த வேலை எனக்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருந்தது. சிறிதும் தாமதிக்காமல் நான் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன். வெள்ளி, சனிக் கிழமைகளில் அவர்கள் விறகு விற்பனை செய்வார்கள். விற்பனை வேலை எனக்கு அந்த அளவிற்கு சுவாரசியமான ஒன்றாக தோன்றவில்லை.


மரியாதை கொண்டவர்களும், அமைதியான குணத்தை உடையவர்களுமான அந்த பணியாட்கள் பெரும்பாலும் முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குள் இருந்தார்கள். நாங்கள் ‘பாஸ்’ என்று அழைத்த சிவந்த மூக்கைக் கொண்ட மரக்கடை உரிமையாளருக்கு மேல் வரிசையில் கூர்மையான ஒரே ஒரு பல் மட்டும்தான் இருந்தது. எனினும், அவருடைய முகம் எப்போதும் மலர்ச்சியுடன் காணப்பட்டது. அவ்வப்போது அவர் தன்னுடைய ஒற்றை பல்லைக் காட்டிக் கொண்டு அசிங்கமாக சிரிப்பார்.  பகல் ஒரு மணி ஆனவுடன் என் கையில் இரண்டு பெனிகளை அவர் எடுத்துத் தருவார். அருகிலிருந்த கடைக்குப் போய் நான் ரொட்டியும் வெண்ணெய்யும் வாங்கிக் கொண்டு வருவேன். உப்பும் மிளகும் சேர்த்து நாங்கள் அதைச் சாப்பிடுவோம். வார இறுதியில் கடை உரிமையாளர் எனக்கு ஆறு பெனி தந்தார். எனக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் உண்டாயின.

வெளிறிய முகத்தைக் கொண்டிருந்த ஜோ ஒரு வலிப்பு நோய் உள்ள மனிதராக இருந்தார். அவருக்கு வலிப்பு நோய் வரும்போது கடை உரிமையாளர் ஒரு தவிட்டு நிற தாளை எரிய வைத்து ஜோவின் மூக்கிற்கருகில் கொண்டு செல்வார். சில நேரங்களில் வாயிலிருந்து நுரை நுரையாக வந்து கொண்டிருக்கும். நாக்கை அவர் கடிப்பார். சிறிது நேரம் கழித்து அந்த நிலை மாறும்போது, அவர் மிகவும் களைத்துப் போய் அவமான உணர்வுடன் உட்கார்ந்திருப்பார்.

காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை விறகு வெட்டுபவர்கள் வேலை செய்வார்கள். வேலை முடிந்து ஷெட்டைப் பூட்டி விட்டு அவர்கள் எல்லோரும் போனவுடன், எனக்கு கவலை வந்து விடும். ஒரு இரவு கடை உரிமையாளர் எங்கள் எல்லோரையும் செளத் லண்டன் ம்யூசிக் ஹாலில் நடக்கும் நாடகத்தைப் பார்க்க அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஜோவும் நானும் வேகமாகச் சென்று கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக்கி போவதற்கு தயார்படுத்திக் கொண்டு கடை உரிமையாளருக்காக காத்திருந்தோம். ஃப்ரெட்கார்னோவின் நகைச்சுவை நாடகம்தான் அந்த வாரம் நடந்து கொண்டிருந்தது. ஜோ ஷெட்டின் கதவுக்குப் பக்கத்திலும் நான் அதன் எதிரிலும் நின்று கொண்டிருந்தோம். திடீரென்று ஜோ ஒரு அலறலுடன் கீழே விழுந்து கைகளையும் கால்களையும் உதைக்க ஆரம்பித்தார். கடை உரிமையாளர் வந்தபோது ஜோவைப் பார்த்துக் கொள்ள அங்கேயே தான் இருக்கப் போவதாகச் சொன்னார். ஆனால், ஜோ அதற்கு சம்மதிக்கவில்லை. காலைக்குள் தன்னுடைய உடல் நிலை சரியாகிவிடுமென சொல்லி ஜோ எங்களை நாடகம் பார்க்க அனுப்பி வைத்தார்.

பள்ளிக்கூடம் என்பது எப்போதும் நான் பயப்படக் கூடிய ஒரு இடமாகவே இருந்தது. விடுமுறைக்காலம் முடிந்த பிறகும் நான் பள்ளிக் கூடத்திற்குப் போகாமல் இருப்பதைப் பார்த்த விறகு வெட்டுபவர்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். இறுதியில் நான் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தேன். நாலரை மணி ஆகும்வரை நான் தூரத்தில் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பேன். பள்ளிக்கூடம் விடும் நேரம் ஆனவுடன், நான் விறகு வெட்டுபவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து விடுவேன். தெருக்களில் தனியாக அலைந்து திரிந்தபோது, பகல் மிகவும் நீளமாக இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

ஒரு இரவு நேரம் நான் தூங்குவதற்காக எந்தவித சத்தமும் உண்டாக்காமல் அறைக்கு ஏறி நடந்தபோது, வீட்டுச் சொந்தக்காரி கண்களில் நான் பட்டு விட்டேன். அவள் என்னை எதிர்பார்த்து காத்திருந்தாள். உணர்ச்சி பொங்க அவள் ஒரு தந்தியை என்னிடம் நீட்டினாள். நான் அதைப் படித்தேன். ‘நாளை காலையில் எட்டு மணிக்கு வாட்டர் லூ ஸ்டேஷனில் நான் இருப்பேன். அன்புடன்- சிட்னி’ என்று அதில் தகவல் இருந்தது.

கிழிந்து போன அழுக்கான ஆடைகள், பிய்ந்த செருப்பு, ஓரத்தில் பாவாடையைப் போல தொங்கிக் கொண்டிருந்த தொப்பி- ஸ்டேஷனில் சிட்னியை எதிர்பார்த்து நின்றிருந்த என்னுடைய தோற்றம் விரும்புகிற மாதிரி இல்லை.

‘என்ன ஆச்சு?’- என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்த சிட்னி கேட்டான்.

‘அம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு. அவங்க மருத்துவமனையில் இருக்காங்க’- நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தத் தகவலைச் சொன்னேன். அதைக் கேட்டு சிட்னியின் முகம் மிகவும் கவலைக்குள்ளானது. அவன் கேட்டான்: ‘இப்போ நீ எங்கே இருக்கே?’

‘பழைய பெளனல் டெரஸ்ஸில்தான்.’

அவனுடைய பொருட்களுடன் ஒரு கூடை பழம் இருந்தது. ‘இது நம்மோடதா?’- நான் ஆச்சரியத்துடன் கேட்டேன். சிட்னி தலையை ஆட்டினான். ‘அது பச்சை. ஒன்றிரண்டு நாட்கள் கழித்து பழுத்த பிறகுதான் அதைச் சாப்பிட முடியும்.’

வீட்டிற்குச் செல்லும் வழியில் சிட்னி என் தாயைப் பற்றிய எல்லா தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டான். தான் கேப்டவுனிலிருந்த ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்ததாக அவன் சொன்னான். திரும்ப வரும் போது பட்டாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்ட சீட்டு, பந்தயங்கள் போன்றவை நடத்தி அவன் இருபது டாலர்கள் சம்பாதித்திருக்கிறான். அவன் அதை மிகவும் சீக்கிரமே என் தாயிடம் கொடுப்பதற்காக காத்திருந்தான்.

பிறகு சிட்னி தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றி என்னிடம் விளக்கமாகச் சொன்னான். கப்பல் வேலையை விட்டுவிட்டு, ஒரு நடிகனாக மாற அவன் தீர்மானித்திருந்தான். கையிலிருந்த பணம் எங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு சரியாக இருக்குமென்றும் இதற்கிடையில் ஏதாவதொரு தியேட்டரில் வேலை தேடி பிடிக்க வேண்டும் என்றும் அவன் சொன்னான்.

ஒரு வண்டியில் சாமான்கள், பழங்கள் ஆகியவற்றுடன் நாங்கள் வந்து சேர்ந்தபோது, வீட்டுச் சொந்தக்காரி, பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஆகியோர் மத்தியில் எங்களுக்கு ஒரு மதிப்பு உண்டானது. என் தாயைப் பற்றிய தகவல்களை வீட்டுச் சொந்தக்காரி சிட்னியிடம் கூறினாலும், கவலை தரக் கூடிய விளக்கங்களை அவள் வேண்டுமென்றே தவிர்த்தாள்.

சிட்னி அன்றே எனக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்தான். இரவில் நாங்கள் செளத் லண்டன் ம்யூசிக் ஹாலிற்குச் சென்றோம். நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது சிட்னி சொன்னாள்: ‘அம்மா இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு கொஞ்சம் நினைச்சுப் பாரு.’

அந்த வாரமே நாங்கள் கெய்ன்ஹில்லிற்கு என் தாயைக் காணச் சென்றோம். பார்வையாளர்கள் அறையில் உட்கார்ந்திருக்க என்னவோ போல இருந்தது. சாவிகள் திரும்புவதையும் என் தாய் நடந்து வருவதையும் நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். அவர் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டார். உதடுகள் நீல நிறத்தில் இருந்தன. எங்களை அடையாளம் தெரிந்து கொண்டாலும், உடனடியாக ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. பழைய அவருடைய உற்சாகம் முழுமையாக இல்லாமற் போயிருந்தது.


‘நீங்க இந்த நேரத்தில் வந்தது ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு. காரணம் – நாங்க இன்னைக்கு முழுசா தயாராகல. இல்லையா டியர்?’- நர்ஸ் என் தாயைப பார்த்து சொன்னாள்.

என் தாய் மரியாதையுடன் அவளைப் பார்த்து ஒரு சிறு புன்சிரிப்பைத் தவழ விட்டார்.

‘நாங்கள் மீண்டும் தயாரா இருக்குறப்போ, நீங்க திரும்பவும் வரணும். சரியா?’- அதைச் சொல்லிவிட்டு நர்ஸ் புறப்பட்டாள். நாங்கள் தனியாக உட்கார்ந்திருந்தோம். சிட்னி தன்னுடைய வசதிகளைப் பற்றியும், பணம் சம்பாதித்ததைப் பற்றியும் சொல்லி என் தாயை சந்தோஷப்பட வைக்க முயற்சி செய்தாலும், அவர் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். ‘அம்மா, சீக்கிரம் நீங்க குணமாயிடுவீங்க’- நான் சொன்னேன். ‘நிச்சயமா... அன்னைக்கு நீ எனக்கு ஒரு கப் காப்பி தந்திருந்தால், அப்பவே நான் நல்லா ஆகியிருப்பேன்’- என் தாய் கவலையுடன் சொன்னார்.

சத்துணவு இல்லாததால் என் தாயின் மனம் மிகவும் சோர்வடைந்து போயிருக்கிறது என்றும், அதற்கு இனியும் சிகிச்சையைத் தொடர வேண்டும் என்றும், முழுமையாக குணம் ஆக பல மாதங்கள் ஆகும் என்றும் டாக்டர் சிட்னியிடம் சொன்னார். என் தாயின் கவலை நிறைந்த அந்த வார்த்தைகள் என்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்தன.

‘நீ எனக்கு ஒரு கப் காப்பி தந்திருந்தால், அப்பவே நான் நல்லா ஆகியிருப்பேன்.’

8

கவல் கொண்டு போய் சேர்ப்பவன், அச்சுத் தொழிலாளி, பொம்மை செய்பவன், கண்ணாடி செய்பவன், டாக்டரின் உதவியாளர் என்று பல வகைப்பட்ட தொழில்களில் நான் ஈடுபட்டிருந்தாலும், ஒரு நடிகனாக ஆவது என்பதுதான் சிட்னியைப் போல என்னுடைய இலட்சியமாகவும் இருந்தது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஷூக்களுக்கு பாலீஷ் போட்டு, நல்ல ஆடைகளை அணிந்து, கவர்ச்சியான காலரை அணிந்து பெட்ஃபோர்ட் தெருவிலிருந்த ப்ளாக் மூர்ஸ் நாடக ஏஜென்ஸிக்கு நான் அவ்வப்போது செல்வேன். இனியொரு முறை போவதற்கு சரியில்லாதபடி என்னுடைய ஆடைகள் அழுக்காகும் வரையில் நான் அங்கு போய்க் கொண்டிருந்தேன்.

நான் முதல் தடவையாக அங்கு சென்றபோது, மிடுக்காக உடைகளணிந்து ஏராளமான நடிகர்- நடிகைகள் அங்கு நின்றிருந்தார்கள். தையல் போட்ட காற்சட்டையையும் கிழிந்த காலணியையும் மறைக்க முயற்சி செய்தவாறு வெட்கத்துடன் நான் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தேன். உள்ளேயிருந்த அறைக்குள்ளிருந்து வந்த க்ளார்க் ஒருவர் ஒவ்வொருவரையும் பார்த்து ‘உனக்கு பொருத்தமா ஒண்ணும் இல்ல. உனக்கும்... உனக்கும்...’ என்று சொல்லச் சொல்ல... இறுதியில் அலுவலகம் யாருமே இல்லாமல் காலியானது. ஒரு மூலையில் நான் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த க்ளார்க் திடீரென்று நின்றார். ‘ம்... என்ன வேணும்?’- அவர் கேட்டார்.

‘உங்களுக்கு குழந்தை நட்சத்திரம் தேவைப்படுதா?’- நான் திக்கிக் திணறி கேட்டேன்.

‘நீ உன் பெயரைப் பதிவு பண்ணியிருக்கியா?’- அவர் கேட்டார்.

நான் ‘இல்லை’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினேன். அவர் என்னை அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், முகவரி ஆகியவற்றை அவர் எழுதினார். ஏதாவது வாய்ப்பு இருந்தால், தெரிவிபபதாகச் சொன்னார். நான் மிகுந்த சந்தோஷத்துடன் திரும்பி வந்தேன்.

சிட்னி திரும்பி வந்து ஒரு மாதம் ஆனவுடன், தபாலில் எனக்கு ஒரு கார்டு வந்தது. ‘நீங்கள் பெட்ஃபோர்டில் இருக்கும் ப்ளாக் மூர்ஸ் ஏஜென்ஸியுடன் தொடர்பு கொள்ள முடியுமா?’ என்று கார்டில் எழுதப்பட்டிருந்தது.

நான் உடனே நல்ல ஆடையை எடுத்து அணிந்து கொண்டு ப்ளாக் மூர்ஸ் ஏஜென்ஸி முகவரிக்கு புறப்பட்டேன். ப்ளாக் மூர் மிகுந்த நட்புணர்வுடன் புன்னகை தவழ என்னை வரவேற்றார். தொடர்ந்து சால்ஸ் ஃபோர்மானின் அலுவலகத்திலிருக்கும் ஹாமில்ட்டனைப் போய் பார்க்கும்படி சொன்னார். அவருக்கு ஒரு கடிதமும் தந்தார்.

கடிதத்தைப் படித்த ஹாமில்ட்டன் நான் மிகவும் வயதில் குறைந்தவனாக இருக்கிறேனே என்று வியப்புடன் கேட்டார். எனக்கு பன்னிரெண்டு வயதுதான் அப்போது நடந்து கொண்டிருந்தது என்றாலும், நான் பதினான்கு வயது நடப்பதாக பொய் சொன்னேன். அடுத்த பருவத்தில் ஆரம்பிப்பதாக இருக்கும் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தில் பில்லி என்ற சிறுவனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். அது ஆரம்பிப்பதற்கு முன்னால் எச்.ஏ. ஸெயின்ஸ்பரியின் ‘ஜிம்’ என்ற நாடகத்திலும் ஒரு சிறுவன் கதாபாத்திரம் தருவதாக அவர் எனக்கு உறுதி அளித்தார். வாரத்திற்கு இரண்டு டாலர் பத்து ஷில்லிங் சம்பளமாக தருவதாக அவர் சொன்னார். இதுவரை அப்படியொரு சம்பளத்தை நான் வாங்கியிருக்கவில்லை என்றாலும், எல்லா விஷயங்களைப் பற்றியும் என் அண்ணனிடம் பேசி விட்டு கூறுகிறேன் என்று நான் பதில் சொன்னேன்.

ஹாமில்ட்டன் தன் அலுவலகத்திலிருந்த எல்லோரையும் அழைத்து சந்தோஷத்துடன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்: ‘இதுதான் நம்முடைய பில்லி. எப்படி இருக்கிறான்?’

எல்லோரும் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்து சிரித்தார்கள். உலகமே மாறி விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். ஹாமில்ட்டன் ஸெய்ன்ட்ஸ்பரியிடம் கொடுக்கும்படி தந்த கடிதத்துடன் நான் லெய்செஸ்ட்டர் சதுக்கத்திலிருந்த க்ரீன் ரூம் க்ளப்பிற்கு கனவில் நடப்பதைப் போல நடந்தேன். க்ரீன் ரூம் க்ளப்பிலும் அதேதான் நடந்தது. ஸெய்ன்ட்ஸ்பரி உறுப்பினர்களையெல்லாம் அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ஸாம்மியை ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வசன தாள்களை என் கையில் தந்தபோது, அதை அங்கேயே என்னை வாசித்துக் காட்டும்படி கூறி விடுவார்களோ என்று நான் பயந்தேன். மிகவும் சிரமப்பட்டே என்னால் படிக்க முடியும் என்பதுதான் அதற்குக் காரணம். நல்லவேளை அப்படியொரு விஷயம் நடக்கவில்லை. நடிப்புப் பயிற்சி அடுத்த வாரமே தொடங்குகிறது என்றும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வசனங்களைப் படித்தால் போதும் என்றும் அவர் சொன்னார்.

சந்தோஷத்தால் என்னையே முழுமையாக மறந்துதான் நான் வீட்டிற்கு பேருந்திலேயே ஏறினேன். பட்டினி, வறுமை ஆகியவற்றின் உலகத்திலிருந்து நான் இதோ செல்வம் நிறைந்த உலகத்திற்கு சிறிதும் எதிர்பாராமலே நுழையப் போகிறேன். நான் ஒரு நடிகனாகப் போகிறேன். ப்ரவுன் நிற தாளில் சுற்றப்பட்டிருந்த அந்த புத்தகம் என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்திராத மிக மிக முக்கியமான ஆதாரம் என்பதென்னவோ உண்மை. நான் பக்கங்களைத் திருப்பி நான் ஏற்று நடிக்கப் போகும் கதாபாத்திரம் சந்பந்தப்பட்ட பகுதிகளில் விரல்களை ஓட்டினேன்.


வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இனிமேல் எந்தச் சமயத்திலும் நான் வறுமையின் குழந்தை அல்ல. மாறாக, அரங்கத்தின் கதாபாத்திரம்... எனக்கு தேம்பித் தேம்பி அழவேண்டும்போல் இருந்தது.

நடந்தவை ஒவ்வொன்றையும் கேட்டபோது சிட்னிக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அவன் சிறிது நேரம் அமைதியாக எதுவும் பேசாமல் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். பிறகு மிடுக்கான குரலில் சொன்னான்: ‘இது நம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. நம்முடன் கூட நம் அம்மாவும் இப்போ இருந்திருந்தா...?’

‘நீ சிந்திச்சுப் பாரு. ரெண்டு டாலர் பத்து ஷில்லிங் வீதம் நாற்பது வாரங்களுக்கு... பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நீ பேசிக்குவேன்னு நான் திரு.ஹாமில்ட்டனிடம் சொல்லிட்டேன். ஒரு வேளை நமக்கு கொஞ்சம் அதிகமா கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், இந்த வருடம் அறுபது டாலர்களாவது நாம மிச்சம் பிடிக்கலாம்’- நான் உற்சாகத்துடன் சொன்னேன்.

சிறிது நேரம் பேசிய பிறகு இவ்வளவு பெரிய கதாபாத்திரத்திற்கு இரண்டு டாலர் பத்து ஷில்லிங் போதாது என்று நாங்கள் நினைத்தோம். சற்று அதிகமாக வேண்டும் என்று சிட்னி முயற்சித்தான். ஆனால், ஹாமில்ட்டன் தான் நின்ற இடத்திலேயே நின்றார். இரண்டு டாலர் பத்து ஷில்லிங் நல்ல ஒரு தொகை என்று அவர் சொன்னார். எது எப்படியிருந்தாலும், நாங்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்தோம்.

என்னுடைய வசனப் பகுதியைப் படிக்கவும், பார்க்காமல் கூறுவதற்கும் சிட்னி எனக்கு உதவினான். முப்பத்தைந்து பக்கங்கள் வரை நீண்டிருக்கும் ஒரு பெரிய கதாபாத்திரம் அது. எனினும், மூன்றே நாட்களில் நான் அதை மனப்பாடமாக்கினேன். சிட்னி மிகவும் நனறாக எனக்குச் சொல்லித் தந்ததால் ரிகர்சல் நேரத்தில் வசனங்களை மிகவும் அருமையாகப் பேச என்னால் முடிந்தது. சில சொற்களின் உச்சரிப்பை ஸெயின்ட்ஸ்பரி திருத்தினார். முதல் ரிகர்சல் என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் காட்ட நல்ல ஒரு வாய்ப்பாக இருந்தது. அது நாடகக் கலை என்னும் புதிய உலகத்தை எனக்கு திறந்து தந்தது. நடிப்புத் திறமை, நேர உணர்வு, நிற்பது, திரும்பும்போதும் அமரும்போதும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்- இப்படி பல அம்சங்கள் இருக்கின்றன என்பதை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் என் இயல்புப்படி செய்து கொண்டிருந்தேன். என்னிடமிருந்த இன்னொரு தவறையும் ஸெயின்ட்ஸ்பரி திருத்தினார். வசனம் பேசும்போது நான் தலையை ஆட்டுவதும், தேவையில்லாமல் அலட்டிக் கொண்டும் இருந்தேன். அதைத்தான் அவர் திருத்தினார்.

சில காட்சிகளில் ரிகர்சல் முடிந்தவுடன் நான் இதற்கு முன்பு நடித்திருக்கிறேனா என்று ஸெயின்ட்ஸ்பரி ஆச்சரியத்துடன் கேட்டார். என்னுடைய நடிப்பு விஷயத்தில் அவரும் உடனிருந்தவர்களும் முழுமையான திருப்தியில் இருந்தார்கள்.

‘ஜிம்’ நாடகம் ஒரு வாரம் கிங்ஸ்டன் தியேட்டரிலும் இன்னொரு வாரம் ஃபுல்ஹாமிலும் நடந்தது. ஞாபக சக்தி இல்லாத ஒரு பணக்காரனின் மகன், ஒரு பூக்காரி, ஒரு பத்திரிகையாளன் பையன்- இவர்களின் கதைதான் அது. பத்திரிகையாளன் ஸாம்மியின் கதாபாத்திரத்தைத்தான் நான் ஏற்று நடித்தேன். நான் பேசிய வசனம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

‘ஜிம்’ அந்த அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. விமர்சகர்கள் கடுமையாக அதற்கு விமர்சனம் எழுதினார்கள். எனினும், நான் கவனிக்கப்பட்டேன். எங்கள் கம்பெனியின் உறுப்பினரான சால்ஸ்ராக் நாடகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தை என்னிடம் காட்டியவாறு சொன்னார்: ‘டேய், பையா... இதைப் படிச்சிட்டு நீ அளவுக்கு அதிகமா துள்ளிடாதே.’ பிறகு அடக்கம், கடவுள் அருள் போன்ற விஷயங்களைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திய பிறகு, ‘லண்டன் ட்ராபிக்கல் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்திருந்த அந்த விமர்சனத்தை எனக்கு அவர் படித்துக் காட்டினார். அதிலிருந்த ஒவ்வொரு வாரத்தையையும் நான் இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.

நாடகத்தைப் பற்றி மோசமாக நிறைய கருத்துக்களைக் கூறிய பிறகு, அந்த விமர்சனம் இப்படி தொடர்கிறது: ‘எனினும், அதில் பத்திரிகையாளன் ஸாம்மி கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருந்தது. ஏற்கெனவே பல நாடகங்களில் நாம் பார்த்த பழமையான கதாபாத்திரமாக அது இருந்தாலும், துடிப்பும் திறமையும் கொண்ட மாஸ்டர் சார்லி சாப்ளின் அந்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்திருந்தார். இந்த குழந்தை நட்சத்திரத்தைப் பற்றி முன்பு ஒரு முறை கூட நாம் கேள்விப்பட்டதில்லை. எனினும், குறுகிய எதிர்காலத்தில் சார்லி சாப்ளின் மகத்தான சாதனைகளைச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்பதை என்னால் உறுதிபட கூற முடியும்.’ சிட்னி அந்தப் பத்திரிகையின் ஒரு டஜன் பிரதிகளை வாங்கினான்.

‘ஜிம்’ இரண்டு வாரங்கள் நடித்த பிறகு, ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் ரிகர்சல் ஆரம்பமானது. பொருளாதார ரீதியாக நாங்கள் குறிப்பிட்டுக் கூறும் வகையில் சிறப்பான ஒரு நிலையில் இல்லாததால் நானும் சிட்னியும் அப்போது பெளனல் டெரஸ்ஸில்தான் இருந்தோம்.

ரிகர்சலுக்கு மத்தியில் ஒரு நாள் நான் சிட்னியுடன் சேர்ந்து கெய்ன்ஹில்லிற்குச் சென்றேன். என் தாய்க்கு அன்று அந்த அளவிற்கு உடல் நலம் சரியாக இல்லையென்று நர்ஸ் எங்களிடம் சொன்னாள். பிறகு சிட்னியை ஒரு பக்கம் அழைத்து குரலைத் தாழ்த்திக் கொண்டு என்னவோ சொன்னாள். ‘அவனால் அது முடியும்னு நான் நினைக்கல’- சிட்னி கூறுவதை நான் கேட்டேன்.

சிட்னி மிகுந்த கவலையுடன் எனக்கருகில் வந்தான். அவன் மெதுவாக என்னிடம் கேட்டான்: ‘அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் இருக்கும் அம்மாவைப் பார்க்க உன்னால் முடியுமா?’

‘வேண்டாம்... வேண்டாம்.... என்னால் அப்படிப் பார்க்க முடியாது’- நான் பின்னால் போய் நின்றேன்.

சிட்னி மட்டும் தனியே போனான். என் தாயைப் பார்த்தான். அவர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்து என் தாய் இப்போது சுகமாக இருக்கிறார் என்றும், பார்க்க விருப்பப்பட்டால் போய் பார்க்கலாமென்றும் என்னிடம் சொன்னாள். நாங்கள் மூன்று பேரும் என் தாயின் அறையில் இருந்தோம். திரும்பும் நேரத்தில் என் தாய் என்னை அருகில் அழைத்து சொன்னார்:

‘எந்தச் சமயத்திலும் பாதை மாறிவிடக் கூடாது. காரணம் அது உன்னை இங்கே கொண்டு வந்துவிடும்.’


முழுமையான உடல் நலத்தைத் திரும்பப் பெறும் வரையில், பதினெட்டு மாதங்கள் என் தாய் கெய்ன்ஹிஸ்ல்லில்தான் இருந்தார். நான் நாடகக் கம்பெனியுடன் பயணத்தில் இருக்கும்போதெல்லாம், சிட்னி அவ்வப்போது வந்து அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நாடகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது ஸெயின்ட்ஸ்பரி. ஹோம்ஸ் நாடகங்களில் நடித்திருந்தவர்களில் மிகவும் சிறப்பான ஹோம்ஸ் அவர்தான் என்று பொதுவாக எல்லோருமே கூறுவார்கள்.

நாடகக் கம்பெனியுடன் சேர்ந்து பயணம் செய்கிற காலத்தில் நாங்கள் ஆங்காங்கே ஒவ்வொரு வீடுகளிலும் தங்குவோம். பகல் நேரங்களில் நான் மட்டும் தனியாக இதற்கு முன்பு பார்த்திராத பாதைகள் வழியாக அலைந்து திரிவேன். சாயங்காலம் நாடகம் ஆரம்பிக்கிற நேரத்தில்தான் நான் கம்பெனியைச் சேர்ந்த மற்றவர்களையே பார்ப்பேன். வார இறுதியில் பொருட்கள் வாங்கி வீட்டுச் சொந்தக்காரியிடம் கொடுப்பேன். அவள் சமையல் செய்து தரும் உணவைச் சாப்பிடுவது மிகவும் சந்தோஷமான ஒன்றாக இருக்கும்.

வீட்டிலிருந்து வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் சிட்னி நடிப்பு ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறொரு வேலையில் நுழைந்தான். அவன் தவறாமல் எனக்கு கடிதங்கள் எழுதினான். என் தாயைப் பற்றிய தகவல்களை எனக்கு தெரியப்படுத்தினான். ஆனால், நான் பதில் கடிதமே எழுதவில்லை. வார்த்தைகளைச் சரியாக எழுதத் தெரியாமல் இருந்ததே முதற் காரணம். அவன் எழுதிய ஒரு கடிதம் என்னை பலமாக பாதித்து விட்டது. பதில் கடிதம் எழுதாததற்கு அவன் என்னைக் குற்றம் சுமத்தினான். நாங்கள் ஒன்றாக அனுபவித்த கஷ்டங்களையும் ஒன்றாகச் செலவழித்த நாட்களையும் அவன் தன்னுடைய கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தான். ‘அம்மா சுய நினைவுடன் இல்லாமல் இருந்தால் இந்த உலகத்தில் நம் இரண்டு பேருக்கும் நாம் மட்டுமே உள்ளோம். எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்பதைக் கூறுவதற்காகவாவது நீ அவ்வப்போது கடிதம் எழுத வேண்டும்’ என்று அவன் எழுதியிருந்தான். அவனுடைய அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு எனக்கு கவலையாகிவிட்டது. நான் உடனே பதில் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் வாழ்க்கையின் இறுதி வரையில் எங்களுக்கிடையே இருந்த அன்பை மேலும் பலப்படுத்தியது.

தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே போகும்போது வழியில் கம்பெனியைச் சேர்ந்த யாரையாவது பார்த்தால், பேசுவதற்கு எனக்கு என்னவோபோல இருந்தது. கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்ல என்னால் முடியவில்லை. அதனால் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால், நான் தந்திரமாக ஓடி ஒளிந்து கொள்வேன்.

நான் என்னை கவனிப்பதையே கூட விட்டுவிட்டேன் எதிலும் ஒரு ஒழுங்கு இல்லாமலிருந்தது. இரயில்வே ஸ்டேஷனுக்கு கடைசி நிமிடத்தில்தான் நான் போய் சேர்வேன். அது கூட சரியாக ஆடை அணியாமலேயே. தொடர்ந்து என் மீது குறைகள் சொல்லப்பட்டன.

அறையில் தனியாக இருந்ததால் என்னுடன் இருக்கட்டுமே என்று நான் ஒரு முயலை வளர்த்தேன். இந்த விஷயம் நான் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரிக்குத் தெரியாது. தூய வெண்மை நிற ரோமங்களைக் கொண்டிருந்த ஒரு அழகான முயல் அது. எனினும், அது இருந்ததால் ஒரு தாங்கிக் கொள்ள முடியாத நாற்றம் இருந்ததென்னவோ உண்மை. கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு மரப்பெட்டிக்குள் நான் அதை மறைத்து வைப்பேன். வீட்டின் சொந்தக்காரி தினமும் காலையில் பிரகாசமான முகத்துடன் காலை உணவுடன் அறைக்கு வருவாள். முயலின் நாற்றம் மூக்கில் வந்து மோதுவதன் காரணமாக முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டுதான் அவள் அங்கிருந்து கிளம்புவாள். அவள் சென்றவுடன் நான் கதவை அடைத்துவிட்டு பெட்டியைத் திறந்து முயலை வெளியே எடுப்பேன். அது அறை முழுவதும் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருக்கும்.

கதவை யாராவது தட்டும் ஓசை கேட்டு விட்டால் போதும், ஓடிப் போய் பெட்டிக்குள் ஒளிந்து கொள்ள நான் அதை பழக்கி விட்டிருந்தேன். வெவ்வேறு இடங்களில் மாறி மாறி வசிக்க நேர்ந்தபோது வீட்டின் சொந்தக்காரிகள் முயலைப் பார்த்து விட்டால், நான் இந்த தந்திரம் செய்துதான் அவர்களின் கோபத்தை மாற்றினேன். பிறகு அவர்கள் முயலை அங்கேயே வைத்துக் கொள்ள சம்மதித்து விடுவார்கள்.

ஒரு முறை வெய்ல்ஸில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது நான் பெட்டிக்குள் முயலை மறைக்கும் விஷயத்தை அந்த வீட்டின் சொந்தக்காரியிடம் சொன்னேன். அப்போது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஆனால், நாடகம் முடிந்து திரும்பி வந்தபோது முயலின் எந்தவொரு அடையாளமும் அங்கு இல்லாமலிருந்தது. நான் அதைப் பற்றி கேட்டதற்கு அவள் கையை விரித்து விட்டாள். ‘அது எங்கேயாவது ஓடிப் போயிருக்கும். இல்லாவிட்டால், யாராவது திருடிக் கொண்டு போயிருப்பார்கள்’ என்று கூறி அவள் அந்தப் பிரச்னைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

நகரத்தை விட்டு நகரத்திற்கு நாங்கள் நாடகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தோம்.

9

நாற்பது வார பயணத்திற்குப் பிறகு நாங்கள் லண்டனுக்குத் திரும்ப வந்தோம். ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், மூன்று வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இன்னொரு பயணம் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இந்த முறை நானும் சிட்னியும் பெளனல் டெரஸ்ஸிலிருந்த சிறிய அறையை விட்டு கென்னிங்டன் சாலையில் மேலும் கொஞ்சம் வசதிகள் கொண்ட இன்னொரு வீட்டிற்குக் குடி பெயர்ந்தோம். பாம்புகள் சட்டைகளைக் கழற்றுவதைப் போல கடந்த காலத்தின் எல்லா அடையாளங்களையும் நாங்கள் உதறித் தள்ள விரும்பினோம். ‘ஷெர்லாக் ஹோம்ஸி’ன் அடுத்த பயணத்தில் சிட்னிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்க வேண்டுமென்ற என்னுடைய வேண்டுகோளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. சம்பளம்- வாரத்திற்கு முப்பத்தைந்து ஷில்லிங்! பயணத்தில் சிட்னியும் என்னுடன் இருந்தான்.

சிட்னி ஒவ்வொரு வாரமும் என் தாய்க்கு கடிதம் எழுதினான். பயணம் முடிகிற நேரத்தில் எங்களுக்கு கெய்ன் ஹில்லில் இருந்து என் தாயின் உடல் நிலை சரியாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் வந்தது. மிகுந்த சந்தோஷத்தைத் தந்த செய்தியாக அது இருந்தது.

என் தாய் அங்கிருந்து வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்தோம். இரண்டு படுக்கை அறைகளும் ஒரு உட்காரும் அறையும் கொண்ட ஒரு வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம். அழகான அந்த அறையில் பியானோவும், என் தாயின் படுக்கையறையில் மலர்களும் இருக்கும்படி செய்தோம். மிகவும் சுவையான உணவு தயாரித்தோம்.


ரெயில்வே ஸ்டேஷனில் வேகமாக அடித்துக் கொண்டிருந்த இதயத்துடன் என் தாயை எதிர்பார்த்து நாங்கள் நீண்ட நேரம் நின்றிருந்தோம். கடைசியில் வண்டி ஸ்டேஷனுக்கு வந்தது. இறங்கி வரும் ஒவ்வொரு பயணியையும் நாங்கள் கூர்ந்து பார்த்தோம். அதோ! சிரித்துக் கொண்டே என் தாய் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அன்புடன் அவர் எங்களைப் பார்த்து தன் கைகளை ஆட்டினார்.

வழியில் நாங்கள் தேவையானது, தேவையற்றது என்று நூற்றுக் கணக்கான விஷயங்களைப் பேசினோம். மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அறையை மகிழ்ச்சியுடன் பெருமையுடன் நாங்கள் என் தாய்க்குக் காட்டினோம். அவர் வயதில் சற்று கூடிவிட்டதைப் போல காணப்பட்டார். உடல் சற்று தடித்து விட்டிருந்தது. நல்ல ஆடைகளை அணியச் செய்து, அழகான தோற்றத்துடன் என் தாயை நாடகக் கம்பெனிக்காரர்களுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். என் தாயிடம் நான் அதைக் கூறவும் செய்தேன். இப்போதும் தான் உயிருடன் இருப்பது குறித்து தனக்கு உண்மையிலேயே சந்தோஷம்தான் என்று அப்போது என் தாய் சொன்னார்.

நாங்கள் நாடகக் குழுவினருடன் இருக்கும்போது, வேண்டிய பொருட்களை வாங்கச் செல்வது, உணவு தயாரிப்பது எல்லாமே என் தாய்தான். ஒரு மாதம் கடந்ததும், லண்டன் நகரத்திலேயே எங்கேயாவது குடியிருப்பதுதான் நல்லது என்று என் தாய் சொன்னார். அதனால் செஸ்ட்டர் தெருவில் ஒரு பார்பர் ஷாப்பிற்கு மேலேயிருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பத்து டாலர்களுக்கு தவணை முறையில் வீட்டு சாமான்களை வாங்கினோம். அறைகள் அப்படியொன்றும் பெரிதாக இல்லை. ஆனால், என் தாயின் மந்திரக் கை அந்த வீட்டை மிகவும் அழகானதாக ஆக்கியது. நானும் சிட்னியும் வாரத்திற்கு சம்பாதித்த நான்கு டாலர் ஐந்து ஷில்லிங்கிலிருந்து ஒரு டாலர் ஐந்து ஷில்லிங்கை என் தாய்க்கு அனுப்பி விடுவோம்.

இரண்டாவது பயணத்திற்குப் பிறகு நானும் சிட்னியும் சில வாரங்கள் என் தாயுடன் செலவழித்தோம். அடுத்த பயணத்திற்குப் புறப்படும்போது எங்களை வழியனுப்பி வைக்க என் தாய் புகை வண்டி நிலையத்திற்கு வந்திருந்தார். வெளியே சந்தோஷம் இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், என் தாய்க்கு உள்ளே கவலை இருந்தது.

சிறிதும் தவறாமல் என் தாய் எங்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய கடிதத்திலிருந்துதான் நாங்கள் லூஸியின் மரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டோம். நாங்கள் முன்பு வசித்த லாம்பெத் அனாதை இல்லத்தில்தான் அவள் இறந்திருக்கிறாள். என் தந்தை மரணமடைந்ததற்குப் பிறகு நான்கு வருடங்கள் மட்டுமே அவள் உயிருடன் இருந்தாள். அனாதையாகிவிட்ட அவளுடைய மகன் நாங்கள் படித்த ஹான்வெல் பள்ளிக்கூடத்தில்தான் படித்தான். என் தாய் அவனைப் பார்ப்பதற்காக போயிருக்கிறார். பழைய விஷயங்கள் எதுவும் அவனுக்கு ஞாபகத்தில் இல்லை என்று என் தாய் எழுதியிருந்தார். நானும் சிட்னியும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நான்கு வயது. அவனுக்கு தந்தை ஞாபகத்திலேயே இல்லை. இப்போது அவனுக்கு பத்து வயது ஆகிவிட்டது. என் தாய் அவனுக்கு பழங்களும் பலகாரங்களும் கொண்டு போய் கொடுத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கெய்ன் ஹில்லிற்குத் திரும்பவும் போவது வரையில் அவ்வப்போது என் தாய் அவனைப் போய் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

என் தாய்க்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்து நாங்கள் உண்மையாகவே அதிர்ச்சியடைந்து விட்டோம். இதயத்தில் மிகப் பெரிய ஒரு அடி விழுந்ததைப் போல எனக்கு அது இருந்தது. அதைப் பற்றி அலுவலக ரீதியாக ஒரு கடிதம் மட்டும்தான் எங்களுக்குக் கிடைத்தது. தெளிவான விவரங்கள் எதுவுமே எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

என் தாய் தெருக்களில் அலைந்து திரிந்தார் என்று பிறகு யாரோ சொன்னார்கள். பாவம்... எல்லாம் என் தாயின் தலையெழுத்து என்று எடுத்துக் கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லாமற் போய் விட்டது.

அதற்குப் பிறகு எந்தச் சமயத்திலும் என் தாய்க்கு முழுமையான மன ஆரோக்கியம் திரும்ப கிடைக்கவேயில்லை. அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் படுக்க வைத்து எங்கள் கையில் பணம் இருக்கும் வரையில் அவருக்கு சிகிச்சை கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம். வருடக் கணக்கில் அவர் கெய்ன் ஹில்லில்தான் இருந்தார்.

வாழ்க்கையின் இறுதி நாட்களில் தெய்வம் என் தாய்க்கு கருணை காட்டியது. கடைசி ஏழு வருடங்களில் என் தாய் நிறைய வசதிகளை அனுபவித்தார். எல்லா வகைப்பட்ட சுக சவுகரியங்கள், வளர்ந்து பிரபலமான பிள்ளைகள் என்று எந்த நாளிலும் மனதில் கற்பனை பண்ணி பார்க்க முடியாத வாழ்க்கை என் தாய்க்குக் கிடைத்தது.

‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடக பயணத்திலேயே இருந்ததன் காரணமாக வாரக் கணக்கில் சிட்னியும் நானும் என் தாயைப் பார்க்காமல் இருப்போம். இறுதியில் ஃப்ரோமான் கம்பெனியுடன் இருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு தியேட்டர் ராயலின் உரிமையாளர் ஹாரியார்க் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் உரிமையை வாங்கியபோது, நாங்கள் அந்தக் கம்பெனிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். எனக்கு பில்லி என்ற பையன் வேடம்தான். சம்பளம் மிகவும் குறைவாக இருந்தது. வாரத்திற்கு முப்பத்தைந்து ஷில்லிங் கிடைத்தது. சிறிய சிறிய நகரங்களில் ஹோம்ஸ் நாடகங்களுடன் நாங்கள் மீண்டும் பயணித்தோம்.

அந்தச் சமயத்தில் எங்களுடைய நிலைமை அப்படியொன்றும் பெரிதாகக் கூறுமளவிற்கு இல்லை. அது மட்டுமல்ல- புகழ் பெற்ற ஒரு கம்பெனியில் வேலை செய்து விட்டு சிறிய ஒரு கம்பெனியில் வேலை செய்ய வேண்டி வந்தது எனக்கு மனதில் வருத்தத்தைக் கொடுத்தது. இதற்கிடையில் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் கதாசிரியரான வில்யம் கில்லட் ‘க்ளாரிஸ்’ என்ற ஒரு புதிய நாடகத்துடன் லண்டனுக்கு வந்தார். அவருடன் மேரி டோரோவும் இருந்தார். விமர்சகர்கள் அந்த நாடகத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள். அதைத் தொடர்ந்து அவர் ‘ஷெர்லாக் ஹோம்ஸின் கவலைப்படும் நிலை’ என்றொரு நாடகத்தை எழுதினார். அதில் மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள்தான். ஷெர்லாக் ஹோம்ஸ், உதவியாளரான பில்லி, பிறகு ஒரு பைத்தியம். அந்த நாடகத்தில் பில்லியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியுமா என்று கேட்டு ஒரு கடிதம் எனக்கு வந்தது. வில்யம் கில்லட்டின் மேனேஜர் பாஸ்டன்ஸ் அதை எழுதியிருந்தார். அந்த கடிதம் சொர்க்கத்திலிருந்து வந்திருப்பதைப் போல எனக்கு இருந்தது. நான் ஆர்வத்தாலும், சந்தோஷத்தாலும் பரவச நிலையில் இருந்தேன்.


இப்போது நடித்துக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு வேறொரு பில்லியை உடனடியாக கண்டு பிடிக்க முடியுமா என்று எனக்கு பயமாக இருந்தது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும் அவர்களுக்கு உடனடியாக வேறொரு சிறுவன் கிடைத்தான்.

வெஸ்ட் எனடிலிருந்த தியேட்டரில் நாடகத்தில் நடிப்பதற்காக லண்டனுக்குத் திரும்ப வந்தது என்னுடைய நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். மிகுந்த ஆர்வத்துடன் மாலை நேரத்தில் ‘ட்யூக் ஆஃப் யார்க்ஸ் தியேட்டரி’ல் பாஸ்ட்டன்ஸுடன் என்னுடைய சந்திப்பு நடந்தது. அவருடன் உள்ளே போய் வில்யம் கில்லட்டைப் பார்த்தேன். ‘என்னுடன் ‘ஷெர்லாக் ஹோம்ஸி’ல் நடிக்க விருப்பம் இருக்கிறதா?’- அவர் கேட்டார்.

‘நிச்சயமாக. மிகுந்த ஆர்வம் இருக்கிறது மிஸ்டர். கில்லட்’- பதில் சொன்னபோது நான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன்.

நாடகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் கில்லட்தான். அவருக்கு வசனம் எதுவும் கிடையாது. மிகச் சிறந்த நடிகையான ஐரீன் வான்ப்ரா பைத்தியக்காரியாக நடித்தார். அமைதியாக இருக்கும் ஹோம்ஸிடம் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். இது விமர்சகர்களைப் பார்த்து அவர் கேலி செய்வதைக் காட்டியது. நாடகம் தொடங்கும்போது நான் வெளியிலிருந்து ஓடி வந்து ஹோம்ஸின் வீட்டு வாசல் கதவைப் பிடித்துக் கொண்டு எவ்வளவோ விஷயங்களைச் சொல்லுவேன். ஆனால், பைத்தியக்காரியின் சத்தத்தில் அவை எல்லாம் கரைந்து போய் விடுகிறது. பைத்தியக்காரி ஹோம்ஸிற்கு அருகில் வந்து இருபது நிமிடங்கள் ஏதோ ஒரு வழக்கைப் பற்றி நிறுத்தாமல் பேசுவாள். நான் அவ்வப்போது ஒரு வித பதைபதைப்புடன் ஹோம்ஸிடம் விஷயங்களை விளக்கிக் கூற முயன்றாலும், பைத்தியக்காரியின் சத்தம் காரணமாக அது முடியாமல் போகிறது. ஹோம்ஸ் இதற்கிடையில் ஒரு குறிப்பை எழுதி, மணியடித்து, அதை என் கையில் தருகிறார். அதற்குப் பிறகு இரண்டு முரட்டுத் தனமான ஆண்கள் வந்து பைத்தியக்காரியைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். காட்சியில் ஹோம்ஸும் நானும் மட்டும் இருக்கிறோம். நான் அவரிடம் கூறுகிறேன்: ‘நீங்கள் செய்ததுதான் சரி. அதுதான் அவளுக்கு ஏற்ற இடம்’ என்று.

விமர்சகர்கள் அந்த நகைச்சுவையை நன்கு ரசித்தார்கள். ‘க்ளாரிஸ்’ என்ற நாடகம் தோல்வியடைந்ததால், அந்த சீசன் முழுவதும் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’தான் நடித்தோம். வில்யம் கில்லட் என்ற மிகச் சிறந்த நடிகருடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் சம்பளம் பற்றி பேசுவதற்கே நான் மறந்து போயிருந்தேன். வார இறுதியில் பாஸ்ட்டன்ஸ் மன்னிப்பு கேட்டவாறு பணம் கொண்ட கவரை எனக்கு நேராக நீட்டினார். ஃப்ரோமான் கம்பெனியில் நான் பெற்ற அதே தொகைதான். இரண்டு டாலர் பத்து ஷில்லிங்குகள். எனக்கு ஆச்சரியம் உண்டானது.

‘ஹோம்ஸ்’ நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்று தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு முறை அலெக்ஸாண்ட்ரா மகாராணி நாடகம் பார்க்க வந்திருந்தார். ஆடம்பரமான இருக்கைகளில் அவருடன் க்ரீஸ் நாட்டு மன்னரும் கிறிஸ்டியன் இளவரசனும் அமர்ந்திருந்தார்கள்.

அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் சர் ஹென்றி இர்விங் மரணமடைந்தார். வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் நடந்த இறுதிச் சடங்கில் நானும் பங்கு பெற்றேன். வெஸ்ட் என்ட்டின் நடிகன் என்ற முறையில் எனக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு கிடைத்திருந்தது. நான் சந்தோஷப்பட்ட ஒரு விஷயம்- இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த முக்கியமானவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன். ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகம் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் புகழ்பெற்ற கென்டோல் நாடக தம்பதியர்க்கு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு மனிதர் எனக்கு கடிதம் தந்தார். அவர்களின் புதிய நாடகத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தர வேண்டுமென்று அதில் எழுதியிருந்தார். காலை பத்து மணிக்கு நான் அவர்களைப் போய் பார்க்க வேண்டும். இருபது நிமிடங்கள் தாமதமாக திருமதி. கென்டோல் வந்தார். பார்த்தவுடன் என்னைப் பார்த்து கையை ஆட்டிய அவர் ‘ஓ... அப்படின்னா நீதானா அந்தப் பையன்? உடனடியாக நாங்கள் ப்ராவின்ஸிற்கு ஒரு பயணம் போக இருக்கிறோம். கட்டாயம் நீ இருக்கணும். ஆனால், இப்போ நான் பிஸியா இருக்கேன். நாளைக்கு இதே நேரத்திற்கு வர முடியுமா?’ என்று கேட்டார்.

‘மன்னிக்கணும். மேடம். நகரத்திற்கு வெளியே எதிலும் பங்கு பெற என்னால் முடியாது’- இதைக் கூறி விட்டு தொப்பியை உயர்த்தி அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு நான் திரும்பி வந்து விட்டேன். ‘ஹோம்ஸ்’ நாடகம் முடிந்த பிறகு, பத்து மாதங்கள் நான் வேலை இல்லாமல் இருந்தேன்.

இதற்கிடையில் சிட்னியும் வேலை இல்லாதவனாகிவிட்டான். எனினும், வெகு சீக்கிரமே அவனுக்கு வேறொரு வேலை கிடைத்து விட்டது. பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அவன் சார்லி மானனின் நாடகக் குழுவில் போய் சேர்ந்தான்.பல இடங்களுக்கும் போய்க் கொண்டிருக்கும் நாடகக் குழு அது. அவர்கள் ஊமை நடிப்பு நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட குழுக்கள் அப்போது ஏராளமாக இருந்தன. அதில் மிகவும் புகழ் பெற்ற கம்பெனி ஃப்ரெட் கார்னோவுக்குச் சொந்தமானது. அவர்கள் நிறைய நாடகங்களை அரங்கேற்றியிருந்தார்கள் ஃப்ரெட் கிச்சான், ஜார்ஜ் க்ரெய்வ்ஸ், ஹாரி வெல்டன், பில்லி ரீவ்ஸ், சார்லி பில் போன்ற ஏராளமான மிகச் சிறந்த நடிகர்களை ஃப்ரெட்கார்னோ பார்த்தவர்.

‘சார்லிமானன் குழு’வில் வேலை செய்து கொண்டிருந்தபோது சிட்னியை ஃப்ரெட் கார்னோ பார்த்திருக்கிறார். அதன் மூலம் ஃப்ரெட் கார்னோ கம்பெனியில் வேலை கிடைத்தது. வாரத்திற்கு நான்கு டாலர்கள் சம்பளம். அப்படிப்பட்ட நாடகங்களில் என்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்கள் எதுவும் இருக்காது. சிட்னி நாடகக் குழுவுடன் சேர்ந்து போன பிறகு, நான் லண்டனிலேயே இருந்தேன். ஏற்கெனவே மிச்சம் பிடித்து வைத்திருந்த பணம் கையில் இருந்ததால் செலவுகளுக்குப் பிரச்னை இல்லாமலிருந்தது.

10

வாலிப வயதில் சாகசம், வீரம் போன்றவற்றின் ரசிகனாக நான் இருந்தேன். கனவுகளுடன் அலைந்து திரியும் ஒருவனாக நான் இருந்தேன். உடைந்த கண்ணாடிகளுக்கு நடுவில் வழியைத் தேடும் இக்கட்டான நிலையில் நான் இருந்தேன். அப்படியே என் நாட்கள் நீங்கிக் கொண்டிருந்தன. எனினும், விருப்பங்கள் எனக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டுதானிருந்தன. ‘கலை’ என்ற சொல் எனக்குள் இருந்ததே இல்லை. வாழ்வதற்கான ஒரு வழியாக மட்டுமே நான் நாடகத்தைப் பார்த்தேன்.


‘காஸேஸ் சர்க்கஸ்’ என்ற நகைச்சுவை நடிகர்களின் குழுவில் எனக்கு வேலை கிடைத்தது. அந்த கம்பெனியின் முக்கிய நடிகராக இருந்தேன் நான். வாரத்திற்கு மூன்று டாலர்கள் சம்பளமாக கிடைத்தது. ஒரு நகைச்சுவை நடிகன் என்ற நிலையில் நான் வளர்ந்தது அங்குதான். ‘காஸேஸ் சர்க்கஸி’ல் வேலை முடிந்தவுடன் மீண்டும் மூன்று மாதங்கள் நான் வேலை எதுவும் இல்லாமல் இருந்தேன். சிட்னிதான் அந்தச் சமயத்தில் என்னுடைய செலவுகளைப் பார்த்துக் கொண்டான். அவன் இப்போது ஃப்ரெட்கார்னோ கம்பெனியில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவனாக இருந்தான். பல நேரங்களில் அவன் ஃப்ரெட்கார்னோவிடம் என்னைப் பற்றி கூறினாலும், நான் வயதில் மிகவும் குறைந்தவனாக இருக்கிறேன் என்று நினைத்து அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அப்போது யூத நகைச்சுவை நடிகர்களுக்கு லண்டனில் நல்ல பெயர் இருந்தது. ஃபாரஸ்டர்ஸ் ம்யூசிக் ஹாலில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த நான் தீர்மானித்தேன். ஒரு அமெரிக்கன் புத்தகத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகளை எடுத்து வாரக் கணக்கில் அதை பயிற்சி செய்தேன். சிட்னி இரண்டு டாலர்கள் தந்திருந்தான். அதைக் கொண்டு நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் இசைக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.  வயது சற்று கூடுதலாக தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கைத் தாடியும் மீசையும் வைத்து ஒப்பனை செய்து கொண்டேன். சிறிது நேரம் சென்ற பிறகு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆரஞ்சு பழ தோல்களை மேடை மீது எறிந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். நான் வசனங்களை வேகமாகச் சொல்லி நிகழ்ச்சியை முடித்து விட்டு, அந்த நிமிடமே அங்கிருந்து கிளம்பி விட்டேன். அந்த மாதிரியான நகைச்சுவை நடிகனாக என்னால் ஆக முடியாது என்பதை அன்று நான் தெரிந்து கொண்டேன்.

ஒரு தொழில் முறை நடிகனாக ஆவதற்கு முன்னால் இதே மாதிரி எனக்கு ஏமாற்றமளித்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பதினேழு வயது நடந்தபோது, ‘மெரி மேஜர்’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாற்பது வயது கொண்ட ஒரு பெண் கதாநாயகி. மதுவின் தாங்க முடியாத நாற்றத்துடன் அவள் இரவு நேரங்களில் நாடகத்தில் நடிக்க வருவாள். அவளுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் எனக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆர்வமே இல்லாமற் போய்விட்டது.

இன்னொரு முறை நான் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதினேன். ‘பன்னிரெண்டு நீதிபதிகள்’ என்பது அதன் பெயர். அதைப் பற்றி நகைச்சுவை நடிகனான சார்கோட்டிடம் நான் சொன்னேன். நான் அதை இயக்குவதாக இருந்தால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தான் பார்த்துக் கொள்வதாக அவர் எனக்கு உறுதியளித்தார். தொடர்ந்து கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து ரிகர்சல் ஆரம்பித்தோம். ரிகர்சல் ஆரம்பித்து மூன்றாவது நாள் சார்க்கோட் எனக்கு ஒரு குறிப்பு எழுதி கொடுத்தனுப்பி இருந்தார். அந்த நாடகத்தை இனிமேல் தொடர வேண்டாம் என்று தான் தீர்மானித்திருப்பதாக அவர் எழுதியிருந்தார். நான் அதைச் சுருட்டி பாக்கெட்டிற்குள் போட்டு விட்டு ரிகர்சலைத் தொடர்ந்தேன். அந்த விஷயத்தை நடிகர்களிடம் கூறுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. அதற்கு பதிலாக நான் அவர்களை வீட்டிற்குக் கொண்டு போனேன். என் அண்ணனிடம் என்னவோ கூற வேண்டும் என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போனேன். அந்தக் குறிப்பை சிட்னியிடம் காண்பித்தேன். அதைப் படித்த சிட்னி கேட்டான்:

‘நீ அவங்கக்கிட்ட சொல்லிட்டியா?’

‘இல்ல...’- நான் மெதுவான குரலில் சொன்னேன்.

‘பொய் சொல்லு.’

‘என்னால முடியாது. மூன்று நாட்கள் ரிகர்சல் பார்த்து விட்டு எப்படி சொல்வது?’

‘ஆனால், அது உன் குற்றம் இல்லையே! போய் சொல்லு’- அவன் தன் குரலை உயர்த்தினான்.

எனக்கு சிறிது கூட தைரியமே இல்லாமற் போய்விட்டது. ‘நான் என்ன சொல்வேன்?’- நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.

‘ஒரு முட்டாளைப் போல இருக்காதே.’

அவன் எழுந்து அடுத்த அறைக்குப் போனான். சார்க்கோட் எழுதிய குறிப்பை அவன் அவர்களிடம் காட்டி விஷயத்தை விளக்கினான். பிறகு அவன் எங்கள் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தான். நடிகர்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் என்னிடம் கோபப்படவில்லை.

தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம் என்னை ஆசீர்வதித்தது. ஒரு நாள் திரு.கார்னோ என்னைப் பார்க்க விரும்புவதாக சிட்னி சொன்னான். ‘ஃபுட்பால் மேட்ச்’ என்ற நாடகத்தில் புகழ் பெற்ற நடிகரான ஹாரி வெல்டனுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் எதிர்பார்த்த அளவிற்கு திறமையை வெளிப்படுத்தவில்லை என்று கார்னோ நினைத்தார். அதற்காகத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். காம்பர்வெல்லிலுள்ள கார்னோவின் இல்லத்தை நான் அடைந்தேன். மிகுந்த அன்புடன் அவர் என்னை வரவேற்றார். பிரகாசமான கண்கள்... ஒரு உடற்பயிற்சி பண்ணும் மனிதரின் உறுதியான உடல்... முன்பு அவர் நீளமான இரும்பு பார்களைத் தூக்கி உடற்பயிற்சி செய்யக் கூடிய ஆளாக இருந்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நகைச்சுவை நடிகர்களுடன் அவர் நாடக உலகத்திற்கு வந்தார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக இருந்த அவர் பிற்காலத்தில் ஆறு நாடக கம்பெனிகளை சொந்தத்தில் வைத்திருந்தபோதும் நீண்ட காலம் நடிப்பைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பதை நாடகக் கம்பெனியில் இருந்த வயதான ஒருவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

ஒரு முறை மாஞ்செஸ்ட்டரில் ஒரு காட்சி முடிந்தவுடன் கார்னோவின் குழுவில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கார்னோ நகைச்சுவை முழுவதையும் கெடுத்து விட்டார் என்று குற்றம் சுமத்தினார்கள். அதைக் கேட்டு அவர் சொன்னார்: ‘சரி... உங்களுக்கு அப்படி தோன்றினால், நான் நடிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன். இதை என்னோட ராஜினாமாவா வச்சுக்கங்க.’ தன்னுடைய ‘விக்’கை அவர் அங்கிருந்த மேஜை மீது வீசி எறிந்தார். அதற்குப் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

‘நீ ரொம்பவும் சிறப்பாக நடிக்கிறேன்னு சிட்னி சொன்னான் ஹாரிவெல்டனோடு சேர்ந்து ‘ஃபுட்பால் மேட்ச்’ நாடகத்தில் நடிக்க முடியும்னு உனக்கு தோணுதா?’- கார்னோ என்னைப் பார்த்துக் கேட்டார். அன்று வாரத்திற்கு முப்பத்து நான்கு டாலர்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பெரிய நடிகராக இருந்தார் ஹாரி வெல்டன்.

‘எனக்கு தேவை நடிப்பைக் காட்டக் கூடிய வாய்ப்புதான்’- நான் தன்னம்பிக்கையுடன் சொன்னேன்.


‘பதினேழு வயது ரொம்பவும் குறைந்த வயது. பார்க்குறதுக்கு நீ அதையும் விட சின்ன பையனா தெரியிறே!’- அவர் புன்னகைத்தவாறு சொன்னார்.

‘ஒப்பனையால் மாற்றி விட முடிகிற பிரச்னை அது’- நான் தோளைக் குலுக்கியவாறு சொன்னேன். அதைக் கேட்டு கார்னோ விழுந்து விழுந்து சிரித்தார். அந்தத் தோளைக் குலுக்கியதுதான் எனக்கு வேலை கிடைப்பதற்கு காரணமாக இருந்தது என்று அவர் பின்னர் சிட்னியிடம் சொன்னார்.

‘சரி... சரி... நாம் பார்ப்போம்’- அவர் சோதனை அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு எனக்கு அந்த கதாபாத்திரத்தைத் தந்தார். வாரத்திற்கு மூன்று டாலர்கள் பத்து ஷில்லிங் சம்பளம். திறமை நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கான ஒப்பந்தம் போடப்படும்.

லண்டன் கொளீஷ்யத்தில் ‘ஃபுட்பால் மேட்ச்’ காட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு வாரம் நான் என்னுடைய கதாபாத்திரத்தை நன்கு படித்தேன். ஷெப்பேர்ட்ஸ் புஷ் எம்பயரில் அப்போது அந்த நாடகம் நடந்து கொண்டிருந்தது. அங்கு போய் என்னுடைய கதாபாத்திரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளும்படி கார்னோ என்னிடம் சொன்னார். அப்போது அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் ஆளை விட மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு உண்டானது. அந்தக் கதாபாத்திரத்தை இப்போது செய்வதை விட மேலும் கொஞ்சம் கிண்டலுடன் செய்ய வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

இரண்டு முறைகளே ரிகர்சல் செய்ய நேரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில் என்னுடைய நடிப்புத் திறமை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லாமலிருந்தது. சிட்னி எனக்குக் கொஞ்சம் உதவினான்.

‘ஃபுட்பால் மேட்ச்’ மிகவும் நகைச்சுவை நிறைந்ததாக இருந்தாலும், ஹாரிவெல்டன் காட்சியில் தோன்றுவது வரை ஆட்கள் மிகவும் அமைதியாகவே உட்கார்ந்திருந்தார்கள். அவரைப் பார்த்தவுடன், ஆட்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு கடைசி வரை சிரிப்பை நிலை நிறுத்த திறமைசாலியான வெல்டனால் முடிந்தது.

கொளீஷ்யத்தில் நாடகத்தில் நடிக்கப் போகும் முதல் நாள். அது எனக்கு மிகவும் முக்கியமான நாளாக இருந்தது. பயம் காரணமாக என்னுடைய நரம்புகள் முறுக்கேறி விட்டிருந்தன. பிரார்த்தனை செய்தவாறு நான் அங்குமிங்குமாக நடந்தேன்.

இசை ஆரம்பமானது! அதோ திரை மேலே உயர்கிறது! மேடையில் முதலில் ஒரு குழு பாட்டு. சிறிது நேரம் கழித்து அவர்கள் மறைந்தார்கள். இனி என்னுடைய முறை. மிகப் பெரிய மனப் போராட்டத்துடன் நான் நடந்து சென்றேன். மேடையை அடைந்தவுடன், நான் மன நிலையைத் திரும்ப பெற்றேன்.

பின் பக்கத்தைப் பார்வையாளர்களை நோக்கி திருப்பி காட்டியவாறு நான் தோன்றினேன். அது என்னுடைய சொந்த முடிவு என்றே சொல்ல வேண்டும். ஒரு ஃப்ராக் கோட்டும் நீளமான தொப்பியும் கையில் ஒரு குச்சியும் என்று ஒரு யதார்த்தமான எட்வார்டியன் வில்லனின் எல்லா அடையாளங்களுடனும் நான் தோன்றினேன். நான் பார்வையாளர்களுக்கு நேராக திரும்பினேன். என்னுடைய சிவப்பு மூக்கைப் பார்த்து பார்வையாளர்கள் பக்கம் சிரிப்புச் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு நான் அவர்களை என் வசப்படுத்திவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அழகாக தோள்களைக் குலுக்கி, விரல்களை நொடித்து, வட்டம் போட்டு நடந்தபோது, திடீரென்று தரையில் இருந்த ‘டம்பெல்’ தட்டி நான் விழுகிறேன். எழும்போது கையிலிருந்த குச்சி, முஷ்டியால் இடிக்கும் பையில் பட்டு பின்னோக்கி தெறித்து என்னுடைய முகத்தில் வந்து இடிக்கிறது. அடியை வாங்கி நான் ஆடியபடியே கீழே விழுகிறேன். பார்வையாளர்கள் உரத்த குரலில் சிரித்தார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க என்னால் முடிந்தது. இதற்கிடையில் என்னுடைய காற்சட்டையும் அவிழ்ந்து விழ தொடங்கியது. அதன் பொத்தான்கள் கீழே விழுந்திருந்தன. நான் அதைத் தேட ஆரம்பித்தேன். தரையிலிருந்து எதையோ எடுப்பதைப் போல காட்டியவாறு, அதை ஒரு பக்கம் வீசி எறிந்து விட்டு நான் சொன்னேன்: ‘ச்சே...’- மற்றொரு உரத்த சிரிப்பு.

திரைக்குப் பின்னாலிருந்து முழு நிலவைப் போல ஹாரி வெல்டன் தோன்றினார். இதற்கு முன்பு அந்த நாடகம் நடக்கும்போது, அவர் வருவதற்கு முன்னால் ஒரு சிறிய சிரிப்பு கூட நாடகம் பார்ப்போர் மத்தியில் எழுந்ததில்லை.

அவர் வந்தவுடன் நாடகத்தனமாக நான் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு மெதுவான குரலில் சொன்னான்: ‘என் காற்சட்டை அவிழ்ந்து கீழே விழுகிறது. சீக்கிரமா ஒரு பின் தாங்க...’ இது எதையும் ரிகர்சல் சமயத்தில் நான் செய்யவேயில்லை. நாங்கள் சேர்ந்தும், அவர் தனியாகவும் நல்ல நகைச்சுவைக் காட்சிகளை உண்டாக்கினோம். நாடகம் முடிந்தவுடன் குழுவில் இருந்த எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். ‘நல்லா இருந்தது!’- ஹாரி வெல்டன் அமைதியான குரலில் சொன்னார்.

அன்று வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது சந்தோஷத்தால் எனக்கு அழுகை வந்துவிட்டது.

சிட்னி நாடகம் சம்பந்தமான பயணத்தில் இருந்தான். அவன் என்னுடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஏதாவது பேசுவதற்குக் கூட யாரும் இல்லை. இரவில் தூக்கம் வராமல் நான் தெருவில் அலைந்து திரிந்தேன். எனக்கு நானே பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு, நடந்து நடந்து அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையில் வந்து விழுந்தேன்.

நாடகம் ஆரம்பித்த மூன்றாவது நாள் கார்னோ வந்தார். அன்று நாடகத்தைப் பார்த்த பிறகு, என்னிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்படி அவர் சொன்னார். வாரத்திற்கு நான்கு டாலர்கள் சம்பளம் எழுதி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்ட விஷயத்தைச் சொல்ல நான் சிட்னிக்கு தந்தி அடித்தேன். லண்டனில் சில வாரங்கள் நடந்த பிறகு ‘ஃபுட்பால் மேட்ச்’ பயணம் போக ஆரம்பித்தது.

ஹாரி வெல்டன் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு வடக்கு இங்க்லாண்டில் உண்டான அளவிற்கு வெற்றி தெற்கு பகுதிகளில் கிடைக்கவில்லை. அதனால் உண்டான கோபத்தை அவர் என்னிடம் காட்டினார். மேடையில் அவர் என்னுடைய முகத்தில் அடிப்பது மாதிரி ஒரு காட்சி இருந்தது. அடிப்பதைப் போல நடிக்கும்போது மேடைக்குப் பின்னாலிருந்து யாராவது கையைத் தட்டி சத்தம் உண்டாக்குவதுதான் வழக்கமாக நடப்பது. சில நேரங்களில் அவர் என்னை பலமாகவே அடித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை பொறமை காரணமாக இருக்கலாம்.


பெல்ஃபாஸ்ட்டில் விமர்சகர்கள் வெல்டனை நிறைய விமர்சித்தும், என்னைப் புகழ்ந்தும் எழுதியதை வெல்டனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அன்று இரவு மேடையில் இருக்கும்போது அவர் எனக்கு பலமான ஒரு அடியைத் தந்தார். என் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. இன்னொரு முறை அவர் அப்படி நடந்தால், மேடையில் இருக்கும் பொருட்களை எடுத்து அவருடைய தலையை அடித்து உடைத்து விடுவேன் என்று நான் அவருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்தேன்.

சிட்னி திரும்ப வந்தபோது நாங்கள் ப்ரிக்ஸ்டன் சாலையில் ஒரு ஃப்ளாட் வாடகைக்கு எடுத்தோம். சில பழைய வீட்டுச் சாமான்களையும் வாங்கினோம். நன்றாக அலங்கரிக்கப்பட்ட அந்த வீடு எங்களின் கனவாக இருந்தது.

தாத்தாவிற்கு உதவும் அளவிற்கு பொருளாதார வசதி எங்களுக்கு இருந்தது. அதனால் வாரத்திற்கு பத்து ஷில்லிங் தாத்தாவிற்குத் தருவதை நாங்கள் வழக்கமாக்கி விட்டிருந்தோம். வாரத்திற்கு இரண்டு தடவைகள் ஃப்ளாட்டைச் சுத்தம் செய்ய ஒரு வேலைக்காரியையும் நியமித்தோம்.

எனக்கு பத்தொன்பது வயதானது. கார்னோ கம்பெனியின் நகைச்சுவை நடிகர் என்ற முறையில் நான் புகழ் பெற்றவனாக இருந்தேன்.

1909-இல் கார்னோ கம்பெனியுடன் நான் பாரீஸிற்கு நாடகம் நடிக்கச் சென்றிருந்தேன். அங்கு எங்களின் நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பிறகு இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தோம். சில மாதங்கள் கடந்த பிறகு ‘ஃபுட்பால் மேட்ச்’ நாடகத்தில் ஹாரிவெல்டனுக்கு பதிலாக நடிக்கும்படி கார்னோ என்னைக் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. ஆனால், முதல் ரிகர்சலிலேயே மூச்சு பிரச்னை காரணமாக என்னுடைய குரல் வெளியே வரவில்லை. நாடகம் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் ஆனபிறகும் பார்வையாளர்கள் கேட்கிற மாதிரி என்னுடைய குரல் உரத்து ஒலிக்கவில்லை. அந்த நாடகத்தில் தொடர்ந்து நடிக்க என்னால் முடியவில்லை.

அந்த உடல் நல பாதிப்பு குணமாக ஒரு மாதமானது. மீண்டும் கார்னோவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இந்த முறை சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். மக்களிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கை நன்கு அறிந்திருந்த கார்னோ அதற்கு சம்மதித்தார்.

கார்னோவின் அமெரிக்கன் கம்பெனியின் மேனேஜர் ஆல்ஃப் ரீவ்ஸ் இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தார். அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல நல்ல ஒரு நகைச்சுவை நடிகர் வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இங்கு வந்திருந்தார். அமெரிக்காவிற்குச் செல்வதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். அன்று நாங்கள் நடித்துக் கொண்டிருந்த ‘ஸ்கேட்டிங்’ என்ற நாடகத்தில் முக்கிய நகைச்சுவை நடிகர் நான்தான். என்னுடைய நடிப்பு ரீவ்ஸுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் நினைத்த நகைச்சுவை நடிகரைக் கண்டுபிடித்து விட்டதாக ரீவ்ஸ் கார்னோவிடம் கூறினார். ஆனால், கார்னோ பெரிய அளவில் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிக் கொள்ளவில்லை. இறுதியில் கார்னோ எழுதிய ‘வவ்வவ்ஸ்’ என்ற நாடகத்துடன் அமெரிக்காவிற்குப் போவது என்று தீர்மானித்தோம். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அமெரிக்காவில் நல்ல ஒரு எதிர்காலம் அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

1910ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அது நடந்தது. புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் லண்டன் வெஸ்ட் என்ட் தெருக்களில் அலைந்து திரிந்தேன். இனி நான் லண்டனுக்குத் திரும்பி வரவேமாட்டேன் என்று நினைத்தேன். அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட வேண்டுமென்று நான் மனதில் திட்டம் போட்டிருந்தேன். இரவு இரண்டு மணி ஆகும் வரை நான் நடந்து கொண்டேயிருந்தேன்.

காலையில் சீக்கிரமாக படுக்கையை விட்டு எழுந்தேன். சிட்னியை எழுப்பாமல் மேஜை மீது ஒரு குறிப்பை எழுதி வைத்தேன்:

‘அமெரிக்காவிற்குப் பயணமாகிறேன். உனக்கு எழுதுகிறேன். அன்புடன், சார்லி.’

Page Divider

சார்லி சாப்ளினின் பிற்கால வாழ்க்கை

கார்னோவின் நாடகமும் சாப்ளினின் நடிப்பும் அமெரிக்காவில் மக்களால் கவனிக்கப்பட்டன. சிக்காகோ, நியூயார்க், சான் ஃப்ரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா, டெக்சாஸ் ஆகிய இடங்களில் நாடகங்களில் நடித்து விட்டு சாப்ளின் மீண்டும் இங்க்லாண்டிற்குத் திரும்பினார்.

அந்தச் சமயத்தில் அவருடைய தாய்க்கு உடல் நலம் பலமாக பாதிக்கப்பட்டிருந்தது. சாப்ளின் தன் தாயை ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார். சிட்னி திருமணமாகி வேறொரு இடத்தில் வசித்துக் கொண்டிருந்தார். ப்ரிக்ஸ்டன் சாலையிலிருந்த ஒரு அறையில் தனியாக வசித்தபோது சாப்ளினுக்கு தனிமை உணர்வு உண்டானது. அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. கார்னோ கம்பெனியுடன் மீண்டும் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, சாப்ளின் ஏராளமான நூல்களைப் படித்து அறிவைப் பெற்றார். நாடகங்களில் சாப்ளினின் நகைச்சுவை நடிப்பைப் பார்த்து கீஸ்டோன் காமெடி ஃபிலிம் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான சால்ஸ் கெஸ்ஸல் அவரை திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்.

கார்னோ கம்பெனி இங்க்லாண்டிற்குத் திரும்பி வந்தபோது, சாப்ளின் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார். தொளதொள காற்சட்டை, வட்ட தொப்பி, பெரிய ஷூ, பிரம்பு என்றிருக்கும் சாப்ளினின் தோற்றம் கீஸ்டோன் கம்பெனியில் அவர் உருவாக்கியதுதான். அங்குதான் சார்லி சாப்ளினின் திரையுலக வாழ்க்கை ஆரம்பமானது. பிறகு சிட்னியும் அந்த கம்பெனியில் சேர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஹென்றிலெஹர்மான், மாக்ஸென்னட் ஆகியோரின் இயக்கத்தில்தான் சாப்ளின் நடித்தார். முதலில் கதையும் பிறகு இயக்கமும் கூட அவரே செய்ய ஆரம்பித்தார். கீஸ்டோன் கம்பெனியுடன் போட்ட ஒப்பந்தம் முழுமை பெற்றவுடன் சாப்ளின் எஸ்ஸனே கம்பெனியுடன் சிக்காகோவிற்குச் சென்றார். ‘ஹிஸ் நியூ ஜாப்’ (1915) தான் அங்கு சாப்ளினின் முதல் படம். தொடர்ந்து உள்ள திரைப் படங்களுக்காக நல்ல ஒரு கதாநாயகியைத் தேடி சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்தார். அங்குதான் சாப்ளினின் பல திரைப்படங்களிலும் நாயகியாக நடித்த எட்னா பர்வ்யன்ஸை அவர் பார்த்தார். தொடர்ந்து நைல்ஸிலும் லாஸ் ஏஞ்சலீஸிலும் நிறைய திரைப்படங்களைத் தயாரித்தார். ஒவ்வொரு திரைப்படம் வெளியே வரும்போதும், சாப்ளினின் புகழும் வருமானமும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவருடைய எல்லா வர்த்தகங்களையும் கவனித்துக் கொண்டிருந்தது சிட்னிதான். பிறகு ம்யூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். திரைப்படம் தயாரிப்பதற்காக ஹாலிவுட்டின் இதய பகுதியில் ஒரு ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்தார். ‘தி ஃப்ளோர் வாக்கர்’ (1916) தான் அங்கு உருவான முதல் திரைப்படம். தொடர்ந்து பதினொரு காமெடிகள் அங்கு தயாரிக்கப்பட்டன.


சாப்ளின் எங்கு சென்றாலும், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். மிகப் பெரிய பல மனிதர்களுடன் அவருக்கு நட்பு உண்டானது. 1917ஆம் ஆண்டு இறுதியில் சாப்ளினும் நடிகையான மில்ட்ரஸ் ஹாரிஸும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், ஒரு வருடம் ஆன போது அவர்கள் மன ரீதியாக பிரிந்து விட்டார்கள். ம்யூச்சுவலுடன் இருந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் ‘ஃபஸ்ட் இண்டர்நேஷனல்’ என்ற கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சாப்ளின் ஹாலிவுட்டில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி ஸ்டூடியோ உண்டாக்கியது அந்தக் கால கட்டத்தில்தான். ‘ஏ டாக்ஸ் லைஃப்’ (1918) தான் அங்கு எடுக்கப்பட்ட முதல் படம். 1920இல் நியூயார்க்கில் சாப்ளினின் புகழ் பெற்ற படமான ‘தி கிட்’ திரைக்கு வந்தது. ஜாக்கி குகன் என்ற நான்கு வயது சிறுவன்தான் அதில் மைய பாத்திரம். ‘தி கிட்’ ஒரு க்ளாஸிக் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது.

அந்தச் சமயத்தில் சாப்ளினின் தாய்க்கு உடல் நலம் முழுமையாக குணமானது. அவர் தன் தாயை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். மிகுந்த வசதிகள் கொண்ட ஒரு வீட்டை தன் தாய்க்காக கடற்கரையில் அவர் கட்டினார். ஃபஸ்ட் இண்டர்நேஷனலுக்காக ஒன்பது திரைப்படங்களை சாப்ளின் முழுமை செய்தார். இதற்கிடையில் சாப்ளினும் சிட்னியும் டக்ளஸ்ஃபெயர்பாக்ஸ், மேரி பிக்ஃபோர்ட் ஆகியோருடன் சேர்ந்து ‘யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கினார்கள். பிறகு பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்கள் இக்கம்பெனியுடன் இணைந்து பங்கு பெற்றதன் மூலம் ‘யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்’ வடிவமெடுத்தது. பெரிய அளவில் லாபம் சம்பாதித்த ‘கோல்ட் ரஷ்’ (1925) என்ற சாப்ளினின் படம் அந்த கம்பெனியின் மூலமாகத்தான் வெளியே வந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் வேலை செய்ததன் காரணமாக சாப்ளின் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்து போய்விட்டார். திரைப்படங்களுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து விட்டு அவர் நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு வந்தார். அங்கு சாப்ளினுக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு நன்கு பழக்கமான கென்னிங்டன் பூங்கா, பெளனல் டெர்ரஸ், ப்ரிக்ஸ்டன் சாலை ஆகிய இடங்கள் வழியாக ஒரு கனவில் செல்வதைப் போல அவர் கடந்து சென்றார். லண்டன் பத்திரிகைகள் சாப்ளினின் வருகைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தன.

நியூயாக்கிற்கு திரும்பியவுடன் சாப்ளின் தன் தாயைக் காண வந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். லிடாக்ரேயைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சாப்ளினுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சார்லியும் சிட்னியும். சாப்ளினின் தாய் அவ்வப்போது அவர்களை வந்து பார்த்துக் கொண்டிருந்தார். சாப்ளினின் இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது.

‘தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது தன் தாய்க்கு உடல் நலக்கேடு உண்டாகிவிட்டது என்ற தந்தி சாப்ளினுக்கு வந்தது. அவர் மருத்துவமனையை அடைந்தபோது அவருடைய தாய் சுய நினைவு இல்லாமல் இருந்தார். மறுநாள் அவருடைய தாய் மரணத்தைத் தழுவினார். நோய்வாய்ப்பட்டு ஐரோப்பாவில் இருந்ததால் சிட்னியால் இறுதிச் சடங்குக்கு வர முடியவில்லை. ஹாலிவுட் சுடுகாட்டில்தான் சாப்ளினின் தாய் அடக்கம் செய்யப்பட்டார்.

பேசும் படங்கள் வந்த பிறகும் சாப்ளின் ஊமைப் படங்களைத் தயாரிக்கத்தான் விருப்பப்பட்டார். வார்னர் பிரதர்ஸ் கம்பெனியும் எம்.ஜி.எம். கம்பெனியும் பேசும் படங்களை தயாரித்த காலத்தில் அவர் தைரியமாக ‘சிட்டி லைட்ஸ்’ (1931) என்ற ஊமைப் படத்தைத் தயாரித்தார். முதல் காட்சிக்கு ஆட்கள் குறைவாக இருந்தாலும், பிறகு அந்த திரைப்படம் ரசிகர்களின், விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்ததென்னவோ உண்மை.

பத்து வருடங்களுக்குப் பிறகு சாப்ளின் மீண்டும் லண்டனுக்கு வந்தார். ‘சிட்டி லைட்ஸி’ன் திரையிடல்களில் பங்கு பெறுவதற்காக அந்தப் பயணம். அந்தப் பயணத்தின்போதுதான் அவர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். காந்தியை அவர் சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

ஹாலிவுட்டில் தான் செய்வதற்கு இனிமேல் எதுவும் இல்லையென்று சாப்ளின் நினைத்தார். ஊமைப் படங்களின் காலம் முடிந்து விட்டது. பேசும் படங்களைத் தயாரிப்பதில் அவருக்குச் சிறிது கூட ஆர்வம் இல்லை. ‘சிட்டி லைட்ஸ்’ அப்போதும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. பிறகு அவர் தயாரித்த ‘மாடர்ன் டைம்ஸ்’ (1936) என்ற படமும் ஊமைப் படமாகவே இருந்தது. பவுலட் கோடார்ட் என்ற நடிகைதான் அதன் கதாநாயகி. அந்தத் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பவுலட்டும் சாப்ளினும் திருமணம் செய்து கொண்டாலும், அதுவும் பிரிதலில்தான் போய் முடிந்தது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். ரஷ்யாவில் போரால் உண்டான துயரங்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு அமெரிக்கன் அமைப்பு நடத்திய போருக்கு எதிரான ஊர்வலத்தை சாப்ளின் பாராட்டினார். இன்னொரு போருக்கு எதிரான ஊர்வலத்திலும் சாப்ளின் பேசினார். அத்துடன் பத்திரிகைகள் சாப்ளினுக்கு எதிராக திரும்பின. அவர் கம்யூனிஸ்ட் என்று பத்திரிகைகள் கூறின. அமெரிக்காவில் தங்க ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆன பிறகும் சாப்ளின் பிரிட்டிஷ் குடிமகனாகவே இருந்தார். அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு வெளிநாட்டுக்காரரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவைதான் என்று எல்லா தரப்புகளிலிருந்தும் சாப்ளினுக்கு எதிராக எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

1947இல் தயாரித்த ‘மொஸ்யே வெர்தோ’ என்ற திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. மனரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சமயத்தில் முழுமையான மன பக்குவத்துடன் ஊனா சாப்ளினுக்கு ஆறுதல் அளித்தார். அவர்களுக்கு ஜெரால்டின், மைக்கேல், ஜோஸஃபைன், விக்டோரியா என்று நான்கு குழந்தைகள் இருந்தார்கள்.

1952இல் ‘லைம் லைட்’ திரைக்கு வந்தது. மிகச் சிறந்த சாப்ளின் படம் அது. அதில் மூத்த மகனான சிட்னி, சாப்ளினுடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெரால்டின், மைக்கேல், ஜோஸஃபைன் ஆகியோர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு சாப்ளின் தன் குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார். அங்கிருக்கும்போது அவருக்கு ஒரு தகவல் வந்தது. ‘கம்யூனிஸ்ட் தொடர்புகள் காரணமாகவும், அமெரிக்க குடிமகன் என்ற தகுதியை இதுவரை எடுக்காமல் இருந்ததற்காகவும் அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டதற்காகவும் இனிமேல் தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை உண்டாக்கப்பட்டிருக்கிறது’- இதுதான் அட்டர்னி ஜெனரலின் செய்தி. தொடர்ந்து ஊனா மட்டும் தனியாக அமெரிக்காவிற்குச் சென்றார். தேவையான பணத்துடன் திரும்பி வந்தார். மீதி விஷயங்களை சாப்ளினின் சகோதரர் சிட்னியிடம் ஒப்படைத்தார்.


சாப்ளினும் குடும்பமும் லண்டனுக்கு வந்தார்கள். அங்கிருந்து ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றார்கள். எல்லா இடங்களிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இறுதியில் சுவிட்சர்லாண்டில் தங்க முடிவெடுத்தார்கள். அங்கு அவர்களுக்கு மேலும் நான்கு குழந்தைகள் பிறந்தன. சாப்ளின் அமெரிக்காவுடன் கொண்டிருந்த எல்லா வர்த்தக விஷயங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஊனா அமெரிக்கா குடிமகள் என்ற தகுதியைத் தூக்கியெறிந்தார்.

சாப்ளினுக்குக் கீழே வேலை செய்து கொண்டிருந்த எட்னா பர்வ்யன்ஸ் அந்தச் சமயத்தில் அவருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். சில நாட்களில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி மரணத்தைத் தழுவினார்.

ஊனாவுடன் வாழ்ந்த வாழ்க்கை சாப்ளினுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. 1964ஆம் ஆண்டில் பிரசுரமான தன்னுடைய சுய சரிதையை அவர் ஊனாவிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். 1965இல் அவருடைய அண்ணன் சிட்னி மரணமடைந்தார். ‘எ கிங் இன் நியூயார்க்’ (1957) ‘எ கெளண்ட்ஸ் ஃப்ரம் ஹாங்காங்க்’ (1966) ஆகியவை அவருடைய இறுதி படங்கள். 1968இல் இரண்டாவது மகனான சாப்ளினின் அகால மரணம் அவரை மிகவும் வேதனைப்பட வைத்தது.

1972இல் அமெரிக்காவின் திரைப்பட விஞ்ஞான கலை அகாடெமியும், ஒரு ஃபிலிம் சொசைட்டியும் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு சாப்ளின் ஊனாவுடன் நியூயார்க்கிற்குச் சென்றார். இதய பூர்வமான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. குடிமகன் என்ற தகுதியை ஏற்றுக் கொள்ளும் நேரத்தில் உரையாற்றுவதற்காக சாப்ளின் எழுந்தபோது அரங்கில் கூடியிருந்தவர்களில் நிறைய பேர் அழ ஆரம்பித்துவிட்டார்கள். சாப்ளினும் அழுதார். ‘என்னுடைய மறு பிறவி இது. நான் மீண்டும் பிறந்திருக்கிறேன்’- இதுதான் அவர் பேசியது.

1975இல் பிரிட்டிஷ் மகாராணி சார்லி சாப்ளினுக்கு ‘சர்’பட்டம் வழங்கினார். 1977 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளன்று மாலை 4 மணிக்கு மிகப் பெரிய அந்தக் கலைமேதை இந்த உலகத்திடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

மிக மிக தாழ்ந்த சூழ்நிலைகளில் இருந்து கூட ஒரு மனிதன் தன்னுடைய சொந்த முயற்சிகளால் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பால் வளர முடியுமென்று அந்த உன்னத மனிதர் தன் சொந்த வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டினார்.

Page Divider

சாப்ளின் திரைப்படங்கள்

கீஸ்டோன் கம்பெனி

1914    மேக்கிங் எ லிவிங்

           கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனீஸ்

           மேபல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் ப்ரெடிக்காமென்ட்

           பிட்வீன் ஷவேர்ஸ்

           எ ஃபிலிம் ஜானி

           டாங்கோ டாங்ல்ஸ்

           ஹிஸ் ஃபேவரிட் பாஸ்டைம்

           க்ரூவல் க்ரூவல் லவ்

           தி ஸ்டார் பார்டர்

           மேபல் அட் தி வீல்

           ட்வென்ட்டி மினிட்ஸ் ஆஃப் லவ்

           காட் இன் எ காபரே

           எ ப்யூஸி டே

           தி ஃபேட்டல் மாலிட்

           ஹெர் ஃப்ரன்ட் தி பான்டிட்

           தி நாக் அவுட்

           மேபல்ஸ் ப்யூனி டே

           மேபல்ஸ் மேரிட் லைஃப்

           லாஃபிங் க்யாஸ்

           தி ப்ராப்பர்ட்டி மேன்

           தி ஃபேஸ் ஆன் எ பார் – ரூம் ஃப்ளோர்

           ரிக்ரியேஷன்

           தி மாஸ்க்வரெய்டர்

           ஹிஸ் நியூ ப்ரொ ஃபஷன்

           தி ரவுண்டேர்ஸ்

           நி நியூ ஜானிட்டர்

           தோஸ் லவ் பாங்க்ஸ்

           டஃப் அன்ட் டைனமைட்

           ஜென்டின்மேன் ஆஃப் நெர்வ்

           ஹிஸ் ம்யூசிக்கல் கேரியர்

           ஹிஸ் ட்ரிஸ்ட்டிங் ப்ளெய்ஸ்

           டில்லீஸ் பங்க்ச்யூ என்ட் ரொமான்ஸ்

           கெட்டிங் அக்வய்ன்டட்

           ஹிஸ் ப்ரீஹிஸ்டாரிக் பாஸ்ட்

எஸ்ஸனே கம்பெனி

1915   ஹிஸ் நியூ ஜாப்

          எ நைட் அவுட்

          தி சேம்பியன்

          இன் தி பார்க்

          தி ஜிட்னி எலோப்மென்ட்

          தி ட்ராம்ப்

          பை தி ஸீ

          வர்க்

          எ உமன்

          தி பாங்க்

          ஷாங்ஹாய்ட்

          எ நைட் இன் தி ஷோ

1916   கார்மென்

          பெலீஸ்

1918   ட்ரிப்ள் ட்ரப்ள்

ம்யூச்சுவல் கம்பெனி

1916   தி ஃப்ளோர் வாக்கர்

          தி ஃபயர் மேன்

          தி வாகாபாண்ட்

          ஒன் ஏ.எம்.

          தி போன்ஷாப்

          பிஹைன்ட் தி ஸ்க்ரீன்

          தி ரிங்

1917   ஈஸி ஸ்ட்ரீட்

          தி க்யூவர்

          தி இம்மிக்ரான்ட்

          தி அட்வெஞ்சரர்

ஃபஸ்ட் நேஷனல் கம்பெனி

1918   எ டாக்ஸ் லைஃப்

          தி பாண்ட்

          ஷோல்டர் ஆம்ஸ்

1919   சண்ணி ஸைட்

          எ டெய்ஸ் ப்ளெஷர்

1920   தி கிட்

          தி ஐடில் க்ளாஸ்

1922   பே டே

1923   தி பில்க்ரிம்

யுனெட்டெட் ஆர்ட்டிஸ்ட்

1923   எ உமன் ஆஃப் பாரீஸ்

1925   தி கோல்ட் ரஷ்

1928   தி சர்க்கஸ்

1931   சிட்டி லைட்ஸ்

1936   மாடர்ன் டைம்ஸ்

1940   தி க்ரேட் டிக்டேட்டர்

1947   மொஸ்யே வெர்தொ

1953   லைம் லைட்

அட்டிக்கா ஆர்ச்வே

1957   எ கிங் இன் நியூயார்க்

யூனிவர்சல்

1966   எ கவுண்ட்ஸ் ஃப்ரம் ஹாங்காங்

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.