Logo

நீல வெளிச்சம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9473
Neela velicham

சுராவின் முன்னுரை

நான் மொழி பெயர்த்த ''நீல வெளிச்சம்'' என்ற சிறுகதை மலையாளத்தில் வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதியது. ஏ. வின்சென்ட் இயக்கத்தில் பிரேம் நசீர், மது, விஜய நிர்மலா நடிக்க ''பார்கவி நிலையம்'' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற கதை இது.

பத்திரிகைகளில் கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் பஷீர் ஒரு பாழடைந்து கிடக்கும் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கச் செல்கிறார். அந்த வீட்டில் பார்கவி என்ற பெண் காதல் தோல்வியால் ஏற்கனவே தற்கொலை செய்திருக்கிறாள். இரவு நேரங்களில் அவளின் காலடிச் சத்தம் கேட்கிறது. கொலுசு சத்தம் கேட்கிறது. ஒரு நாள் அங்கிருந்த ஒரு அறைக்குள் ஒரு நீல வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சம் அங்கு எப்படி வந்தது ?

சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்த இந்தக் கதையை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


"நீல வெளிச்சம்” என்ற இந்தக் கதை என் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புதச் சம்பவங்களில் ஒன்று. சம்பவம் என்று கூறுவதைவிட சம்பவத்தின் ஒரு ரேகை என்று கூறுவதே பொருத்தமானது. விஞ்ஞானம் என்ற ஊசியை வைத்து இதை ஓட்டை போட்டு ஆராயப் பார்க்கிறேன். ஆனால், என்னால் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

ஒருவேளை, உங்களால் முடியலாம். ஆராய்ச்சி செய்து, விளக்கம்கூட உங்களால் கூற முடியலாம். இது ஒரு அற்புதச் சம்பவம் என்று நான் முதலிலேயே சொன்னேன் அல்லவா? ஆமாம்... அப்படி அல்லாமல் நான் வேறு என்ன பெயரிட்டு அதைச் சொல்ல முடியும்?

சம்பவம் இதுதான்.

நாள், மாதம், வருடம் எல்லாம் தேவையில்லை அல்லவா? நான் ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தேன். வீடு தேடுவது என்பது என்னைப் பொறுத்த வரை புதிய ஒரு விஷயமில்லை. அடிக்கடி நான் இப்படி வீடு தேடி அலையக் கூடிய ஆள்தான். ஆனால், நான் விருப்பப்படுகிற மாதிரி எனக்கு வீடோ, அறையோ கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் வீட்டைப் பற்றிக் கூறுவது என்றால்... நூறு குறைகளைக் கூறலாம். ஆனால், இதை யாரிடம் சொல்வது? பிடிக்கவில்லை என்றால், இடத்தை காலி பண்ணி விட்டுப் போக வேண்டியதுதானே என்று கூறுவார்கள். ஆனால், நான் எங்கே போவது? இப்படி பயங்கர வெறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை. நான் வெறுத்து வேண்டாம் என்று சொன்ன வீடுகளும், அறைகளும் மட்டும் எத்தனை வரும் தெரியுமா?

இதற்காக நான் வேறு யாரையும் குறை சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை. நான் காலி செய்து விட்டுப் போகிறேன். இதே இடத்தை விருப்பப்படுகிற இன்னொரு ஆள் இங்கு வருவார். வாழ்க்கையை நடத்துவார். இதுதானே வாடகை வீடுகளின் நிலை! இருந்தாலும் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம்தான். பத்து ரூபாயில் கிடைக்கக்கூடியது சில நேரங்களில் அறுபது ரூபாய் கொடுத்தால்கூட கிடைக்காது. இப்படி நான் வீடு தேடி அலைந்து கொண்டிருந்தபோது என் பார்வைக்கு வருகிறது ஒரு வீடு!

அதை வீடு என்று சொல்வதைவிட, ஒரு சிறு மாளிகை என்று கூறுவதே பொருத்தமானது. பெயர்- பார்கவி நிலையம். நகரத்தின் ஆரவாரங்களில் இருந்து விலகியிருக்கும் ஒரு இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. கிட்டத்தட்ட நகராட்சியின் எல்லையில் என்று சொல்லலாம். "இந்த வீடு வாடகைக்கு விடப்படும்'' என்ற பலகை அங்கு தொங்கிக்கொண்டிருந்தது.

பொதுவாகவே எனக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது. வீடு பழையதுதான். மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. இருந்தாலும் பரவாயில்லை. வசிப்பதற்குப் போதுமே! மேலே இரண்டு அறைகளும் ஒரு போர்ட்டிக்கோவும். கீழே நான்கு அறைகள். அவற்றுடன் குளியலறையும் சமையலறையும். தண்ணீர் வரும் குழாய் இருந்தது. ஆனால், வெளிச்சத்திற்கு மின்சாரம் மட்டும் இல்லை. சமையலறைக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஒரு மூலையில் கக்கூஸ் அமைக்கப்பட்டிருந்தது. முற்றத்தில் இருந்த கிணறு மிகமிகப் பழையது. கிணற்றைச் சுற்றிலும் கற்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. முன்னால் இருந்த காலி இடம் முழுக்க ஏகப்பட்ட மரங்கள். வீட்டைச் சுற்றிலும் மதில் எழுப்பப்பட்டிருந்தது. பொதுச் சாலையை ஒட்டி அந்த வீடு அமைந்திருந்தது.

எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை ஏன் அந்த வீட்டை யாரும் வாடகைக்கு எடுக்கவில்லை? மிகவும் அழகான ஒரு இளம்பெண்ணை... இவளை யாருக்கும் காட்டக்கூடாது என்று நாம் நினைத்து பர்தா போட்டு மூடி மூடி வைத்தால் எப்படி இருக்கும்? அத்தகைய ஒரு எண்ணத்தைதான் அந்த வீடு என் மனதில் உண்டாக்கியது. வீட்டைப் பார்த்த அடுத்த கணமே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தே ஆவது என்பதில் பிடிவாதமாகி விட்டேன் நான். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் படு வேகமாகச் செயல்பட்டேன் என்பதே உண்மை. ஓடிச் சென்று ஓர் இடத்தில் பணம் கடன் வாங்கினேன். இரண்டு மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தேன். சாவியைக் கையில் வாங்கினேன். அடுத்த நிமிடமே மாளிகையின் மாடிக்கு குடிபெயர்ந்தேன். என்னுடைய பொருட்களை ஏற்றி வந்த வண்டிக் காரர்கள் ஏதோ ஒருவித அச்சத்துடன், வீட்டிற்குள் பொருட்களைக் கொண்டு வராமல், கேட்டுக்கு வெளியிலேயே அவற்றை வைத்து விட்டுப் போய்விட்டார்கள். அன்றே ஒரு புதிய அரிக்கன் விளக்கை வாங்கி மாட்டினேன். மண்ணெண்ணெய் வாங்கவும் மறக்கவில்லை.

மாடியையும் கீழ்ப் பகுதியையும், எல்லா அறைகளையும், சமையலறையையும் நானே பெருக்கித் தண்ணீர் விட்டுக் கழுவினேன். ஆங்காங்கே அழுக்குப் படிந்திருந்தது. சில இடங்களில் தூசு தென்பட்டது. எல்லாவற்றையும் நீர் விட்டு சுத்தமாக்கினேன். எல்லாம் முடிந்த பிறகு பார்த்தேன். ஒரே ஒரு அறை மட்டும் பூட்டியிருந்தது. நானும் அதை ஏனோ திறக்க முயற்சிக்கவில்லை. குளியலறைக்குள் நுழைந்து ஆசை தீரக் குளித்தேன். உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சி வந்தது மாதிரி இருந்தது. கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கற்சுவர் மேல் ஏறி அமர்ந்தேன். மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உண்டானது. வெறுமனே அங்கு உட்கார்ந்து கனவு காணலாம் போலிருந்தது. வீட்டைச் சுற்றி இருந்த வெற்றிடத்தில் நடக்கலாம்... ஓடலாம். வாசலில் ஒரு தோட்டம் உண்டாக்க வேண்டும். பன்னீர் செடிகளை ஏராளமாக வைக்க வேண்டும். ஒரு சமையல்காரனை வேலைக்கு அமர்த்தினால் என்ன என்று நினைத்தேன். பிறகு ஏனோ அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். தேவையில்லாத தொல்லை எதற்கு என்று நினைத்ததே காரணம். காலையில் குளித்து முடித்து தேநீர் அருந்தப் போகிறபோது, ஒரு தெர்மோஃப்ளாஸ்க் நிறைய தேநீரை நிரப்பிக் கொண்டு வர வேண்டியதுதான். மதிய உணவை ஓட்டலிலேயே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது. இரவு உணவை இங்கேயே கொடுத்தனுப்பும்படி ஓட்டல்காரர்களிடம் சொல்லிவிட வேண்டியது. பிறகு... தபால்காரனைப் பார்த்து முகவரி மாறிய விஷயத்தை உடனடியாகக் கூறியாக வேண்டும். இந்த இடத்தை வேறு யாருக்கும் சொல்லக்கூடாது என்பதையும் கட்டாயம் கூறிவிட வேண்டும். தனிமையிலேயே கழியப் போகிற அழகான இரவுகள்... தனிமையிலேயே கழியப் போகிற பகல்கள்... இங்கு எவ்வளவோ எழுதலாம்... இப்படிப் பல விஷயங்களையும் மனதில் எண்ணியவாறு நான் கிணற்றுக்குள் பார்த்தேன். நீர் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. கிணற்றுக்குள் நிறைய செடிகள் முளைத்திருந்தன. அது போக, வேறு என்னென்னவோ வளர்ந்திருந்தன. நான் ஒரு கல்லை எடுத்து உள்ளே போட்டேன்.


"ப்ளும்” என்றொரு சத்தம் வந்தது. உள்ளே நீர் இருக்கிறது.

இவ்வளவும் நடந்தது பகல் பதினொரு மணிக்கு.

முதல் நாள் இரவு நான் சிறிதுகூட தூங்கவில்லை. இரவிலேயே ஓட்டலில் கணக்கை முடித்தேன். வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து விவரத்தைக் கூறினேன். கேன்வாஸால் ஆன கட்டிலை மடக்கிக் கட்டினேன். க்ராமஃபோன் ரெக்கார்டுகள் அனைத்தையும் பத்திரமாக அடுக்கிக் கட்டி வைத்தேன். பெட்டிகள், சாய்வு நாற்காலி, அலமாரி- எல்லாவற்றையும் தனித்தனியே எடுத்து வைத்தேன். பொழுது புலர்கிற நேரத்தில் சாமான்களை இரண்டு வண்டிகளில் ஏற்றி இங்கு கிளம்பிவிட்டேன்.

நான் புதிய வீட்டின் கதவுகள் அனைத்தையும் அடைத்து, முன்பக்கம் பூட்டினேன். சாலையில் இறங்கி கேட்டை அடைத்தேன். சாவியைப் பைக்குள் போட்டு பந்தாவாக நடந்தேன்.

நான் நினைத்தேன்- இன்று இரவு யாருடைய பாட்டை வைத்துப் புதிய வீட்டு வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று. என்னிடம்  நூற்றுக்கும் மேலான இசைத் தட்டுகள் இருக்கின்றன. இங்கிலீஷ், அராபிக், இந்தி, உருது, தமிழ், வங்காளம்- இப்படிப் பல மொழி இசைத்தட்டுகளும். மலையாளத்தில் ஒரு இசைத்தட்டுகூட என்னிடம் இல்லை. நன்றாகப் பாடக் கூடிய திறமைசாலிகள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் பாடிய இசைத்தட்டுகளும் நிறைய இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு சரியான இசையமைப் பாளர்கள் இல்லை. இப்போது மலையாளத்தில் நல்ல இசையமைப்பாளர்களும், நன்றாகப் பாடக் கூடிய பாடகர்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறார்கள். மலையாள இசைத்தட்டுகள் சில வாங்க வேண்டும். நான் யோசித்துப் பார்த்தேன். இன்று முதலில் யாரின் இசைத் தட்டைப் பாட வைக்கலாம்? பங்கஜ் மல்லிக், திலீப்குமார் ராய், சைகால், பிங்கிராஸ்பி, பால்ராப்ஸன், அப்துல் கரீம் கான், கனான் தேலி, குமாரி மஞ்சுதாஸ் குப்தா, குர்ஷித், ஜுதிகாரெ, எம்.எஸ். சுப்புலட்சுமி... இப்படி சுமார் இருபது பேரை நான்  யோசித்துப் பார்த்தேன். கடைசியில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். "தூர தேசத்துக்காரர் இதோ வந்திருக்கிறார்' என்றொரு பாட்டு இருக்கிறது. "தூரதேஷ் கா ரெஹ்னேவாலா ஆயா' என்று அந்தப் பாடல் தொடங்கும். இந்தப் பாடலைப் பாடியிருப்பது யார்? பெண்ணா? ஆணா? எனக்கு சரியாக ஞாபகம்  வரவில்லை. திரும்ப வந்தபிறகு பார்க்கலாம்... சிந்தித்தவாறே நான் நடந்து சென்றேன்.

முதல் காரியமாக தபால்காரனைப் போய்ப் பார்த்தேன். முகவரி மாறியிருக்கிற விஷயத்தைச் சொன்னேன். இப்போது இருக்கும் முகவரியைக் கூறியதுதான் தாமதம் -அந்த ஆள் பயந்துபோய் விட்டான். அவன் சொன்னான்:

“அய்யோ... சார்... அந்த வீட்ல ஒரு துர்மரணம் இதுக்கு முன்னாடி நடந்திருச்சு... அங்கே யாருமே தங்க மாட்டாங்க. அதனாலதான் அந்த வீடு இதுவரை யாருமே குடிபோகாம சும்மா கிடந்துச்சு.''

துர்மரணம் நடைபெற்ற வீடா? ஒரு நிமிடம் எனக்கே அதிர்ச்சி யாக இருந்தது. அடுத்த நிமிடம் அந்த ஆவியிடம் நான் கேட்டேன்.

“என்ன நடந்தது அந்த வீட்ல?''

“அந்த வீட்டோட வாசல் பக்கத்துல ஒரு கிணறு பார்த்திருப்பீங்களே! அதுல யாரோ விழுந்து செத்துட்டாங்க. அவ்வளவுதான். அந்த வீட்ல அதுக்குப் பிறகு ஒரே ரகளைதான். பல பேரு அங்க வந்து தங்கி இருக்காங்க. ராத்திரி நேரங்கள்ல வாசல் கதவுகள் படார்படார்னு அடிக்கும். தண்ணீ வர்ற குழாய் அதுவாகவே திறந்து தண்ணீர் வழியும்...''

வாசல் கதவுகள் படார் படார் என்று அடிக்கும்! தண்ணீர்க் குழாய்கள் தானே திறக்கும்! உண்மையிலேயே கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அங்கிருந்த இரண்டு தண்ணீர்க் குழாய்களுக்கும் பூட்டு போடப்பட்டிருந்தது. “எதற்கு இந்த பூட்டு?'' என்று கேட்டதற்கு, “பாதையில் நடந்து போறவங்கள்லாம் சுவர் ஏறி  குதிச்சு வந்து இங்க குளிக்கிறாங்க. அதுனாலதான் பூட்டி வச்சிட்டேன்'' என்று கூறினார் வீட்டின் சொந்தக்காரர். அப்படியே எடுத்துக்கொண்டாலும், குளியலறைக்குள் இருக்கிற தண்ணீர்க் குழாய்க்கு எதற்குப் பூட்டு என்று அப்போது கேட்கத் தோன்ற வில்லை.

தபால்காரன் தொடர்ந்து சொன்னான்: “கழுத்தை நெரிக்கும்... சார், உங்கக்கிட்ட இதை எல்லாம் யாரும் சொல்லலியா?''

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரண்டு மாத வாடகையை முன்கூட்டியே கொடுத்தாகிவிட்டது. இனி என்ன செய்வது? நான் சொன்னேன்:

“சரி... அதனால பரவாயில்லை. ஒரு மந்திரத்தை வச்சு எல்லாத்தையும் இருந்த இடம் தெரியாம ஓட்டிடலாம். எது எப்படி இருந்தாலும் எனக்கு வர்ற கடிதங்களை அந்த முகவரியில கொண்டு வந்து குடுத்திடுங்க.''

நான் தைரியமாக அந்த ஆளிடம் கூறினேன். சாதாரணமாக எல்லாரும் பயப்படக்கூடிய விஷயங்களுக்கு நானும் பயப்படவே செய்கிறேன். அதனால், ஒருவிதத்தில் நான் பயந்தாங்கொள்ளி என்று கூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நான் மெல்ல நடந்தேன். என்ன செய்வது? அனுபவம் வேண்டும் என்பதற்காக ஓர் அனுபவத்தை நாமே உண்டாக்குவதா? அப்படிப் பட்ட மனிதன் இல்லை நான். ஆனால், அனுபவமே என்னைத் தேடி வருகிறது என்றால்...? சரி... அப்படி என்னதான் நடக்கும் என்பதையும் பார்த்துவிட்டால் என்ன?

நான் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தேன். தேநீர் அருந்தினேன். சாப்பிடத் தோன்றவில்லை. அடிவயிற்றில் தீ பிடித்த மாதிரி இருந்தது. பசி இல்லை. சாப்பாடு ரெகுலராக அனுப்பி வைக்க வேண்டும் என்ற விவரத்தை ஓட்டல்காரனிடம் விவரமாகக் கூறினேன். வீடு எங்கு இருக்கிறது என்று சொன்னவுடன், அந்த ஆள் சொன்னான்:

“பகல்ல வேணும்னா சாப்பாடு அனுப்பி வச்சிர்றோம். ராத்திரியில் நிச்சயமா நம்ம பசங்க யாரும் அங்கே வரமாட்டாங்க. ஒரு பொண்ணு அங்கே கிணத்துல குதிச்சு செத்துட்டா. அவ ராத்திரி நேரத்துல அங்க வர்றதா பேச்சு. சார்... உங்களுக்குப் பேயைப் பார்த்து பயம் கிடையாதா?''

என் பாதி பயம் குறைந்துவிட்டது. என்ன இருந்தாலும், செத்தவள் பெண்தானே! நான் கூறினேன்:

“அதைப் பற்றி நான் எப்பவும் பெரிசா எடுத்துக்கிறது இல்ல. சொல்லப்போனால்... பேய்களை விரட்டுறதுக்குத்தான் மந்திரங்கள் இருக்கே!''

உண்மை என்னவென்றால் பேய்களை விரட்டக்கூடிய மந்திரங்கள்  என்னவென்று எனக்கே தெரியாது. ஆனால், இறந்தவள் பெண் என்பது தெரிந்ததும், அதைப் பற்றிப் பெரிதாக நான் பயப்படவில்லை. அங்கே இருந்து நான் பக்கத்திலிருந்த வங்கியினுள் நுழைந்தேன். அந்த வங்கியில் என் இரண்டு மூன்று நண்பர்கள் க்ளார்க்குகளாக வேலை செய்கிறார்கள். அவர்களிடம் என் புதிய முகவரியைக் கூறினேன். அவர்களுக்கு என்மேல் சரியான கோபம்.


“என்னடா முட்டாள்தனமா நடந்திருக்கே! அந்தக் கட்டடத்துல பேயோட நடமாட்டம்  இருக்கு. சொல்லப் போனால் ஆண்களைத்தான் அந்தப் பேய் பயங்கரமாப் படாதபாடு படுத்துது.''

அவளுக்கு ஆண்கள்மேல் வெறுப்பு இருக்கலாம். அப்படி என்றால் அவள் செய்வது சரிதானே! நண்பர்களில் ஒருவன் சொன்னான்:

“பார்கவி நிலையத்தை வாடகைக்கு எடுக்குறதுக்கு முன்னாடி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா?''

நான் சொன்னேன்:

“இந்த வீடு இப்படிப்பட்டதுன்னு எனக்கு அப்போ எப்படித் தெரியும்? எனக்கொண்ணு தெரியணும். அந்தப் பொண்ணு எதுக்காக கிணத்துல விழுந்து சாகணும்?''

இன்னொரு நண்பன் கூறினான்: “வேறென்ன? காதல்தான்... அவளோட பேரு பார்கவி. வயசு இருபத்தியொண்ணு. பி.ஏ. பாசானவள். அதற்கு முன்னாடியே ஒரு ஆளுக்கும் அவளுக்கும் காதல். ஆனா, நடந்தது என்னன்னா... பார்கவியால அந்த ஏமாற்றத் தைத் தாங்கிக்க முடியல.. கிணத்துல விழுந்து உயிரை விட்டுட்டா...''

என் பயம் பெரும்பாலும் போய்விட்டது என்றே சொல்லலாம். இதுதான் அவள் ஆண்களை வெறுப்பதற்குக் காரணமா?

நான் கூறினேன்:

“பார்கவி என்னை ஒண்ணும் செய்ய மாட்டாள்.''

“எதை வச்சுச் சொல்றே?''

நான் சொன்னேன்:

“மந்திரம்! மந்திரம்!''

“அதையும் பார்க்கத்தானே போறோம்... ராத்திரி அய்யோ அய்யோன்னு அழப்போற பாரு.''

நான் ஒன்றும் பதில் பேசவில்லை.

நான் திரும்பவும் மாளிகையைத் தேடி வந்தேன். கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்தேன். பிறகு கீழே இறங்கி கிணற்றின் அருகில் சென்றேன்.

“பார்கவிக் குட்டி..'' நான் மெல்ல அழைத்தேன். “உனக்கும் எனக்கும் பழக்கம் கிடையாது. நான் இங்க தங்குறதுக்காக வந்திருக்கேன். ரொம்ப நல்ல மனிதன்னு நான் என்னைப் பற்றி நினைச்சுக்கிட்டு இருக்கேன். கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி நான். உன்னைப் பற்றி உண்மைகளைப் பலரும் சொன்னாங்க. இங்க யாராவது தங்க வந்தாங்கன்னா, அவுங்களத் நீ தங்க விட மாட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க. ராத்திரி தண்ணீர் குழாயைத் திறந்து விட்டுருவியாம். வாசல் கதவுகளைப் படார் படார்னு அடிக்க வைப்பியாம். ஆளுகளோட கழுத்தைப் பிடிச்சு நெரிப்பியாம். நான் பார்த்த ஆளுங்க உன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்கள்தாம் இதெல்லாம். நான் இப்போ என்ன செய்யிறது? ரெண்டு மாச வாடகையை முன்கூட்டியே கொடுத்திட்டேன். என் கையில் இப்போ பெரிசா காசு எதுவும் இல்ல. பார்கவிக் குட்டி... உன்னோட பேர்லதானே இந்த வீடே இருக்கு! பார்கவி நிலையம்...

எனக்கு இங்கே இருந்தே வேலை செய்யணும்னு ஆசை. அதாவது... கதைகள் நிறைய எழுத வேண்டியதிருக்கு. இப்போ ஒண்ணு கேட்கட்டுமா? உனக்குக் கதைகள் பிடிக்குமா? பிடிச்சி ருந்தா, நான் எழுதுற எல்லாக் கதைகளையும் உனக்கு படிச்சுக் காட்டுறேன். என்ன புரியுதா? பார்கவிக் குட்டி... உன்கூட எனக்கு எந்த தகராறும் இல்ல. இதுவரை அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவும் இல்ல. அறியாமல் நான் ஒரு கல்லை எடுத்து கிணத்துக்குள்ள போட்டுட்டேன். தெரியாம அதைச் செஞ்சிட்டேன். இனிமேல் நிச்சயம் அதுகூடச் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடு. நான் சொல்றதை நீ கேட்டியா பார்கவிக் குட்டி? என்கிட்ட ஒரு அருமையான க்ராமஃபோன் இருக்கு. அருமையான இருநூறு பாட்டுகள் இருக்கு. உனக்கு இசை பிடிக்குமா?''

இவ்வளவும் பேசிவிட்டு நான் வெறுமனே நின்றிருந்தேன். நான் யாரிடம் இதுவரை பேசினேன்? எதையும் விழுங்குவதற்குத் தயாராக வாய் பிளந்து காட்சியளிக்கும் கிணற்றுடனா? மரங்கள், வீடு, வாயு, பூமி, ஆகாயம், பிரபஞ்சம்... இவற்றில் யாரோடு இதுவரை நான் பேசினேன்? என் மனதில் உண்டான பாதிப்பால் இப்படி எல்லாம் பேசினேனா? ஏன் அப்படிப் பேசினேன்? என்னை நானே ஆராய்ந்தேன். அப்படி நான் பேசியதில் ஒரு மனிதத்தனம் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. பார்கவி... அவளை நான் இதுவரை பார்த்ததில்லை. இருபத்தொரு வயதே ஆன இளம்பெண்! அழகி! அவள் ஒரு ஆணைத் தீவிரமாகக் காதலித்திருக்கிறாள். அவனின் மனைவியாக, வாழ்நாள் முழுவதும் சிநேகிதியாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்திருக்கிறாள். ஆனால், அந்தக் கனவு...? கனவாகவே நின்றுவிட்டது. விரக்தி அவளை ஆக்கிரமித்துவிட்டது. அதோடு அவமானமும்...

“பார்கவிக் குட்டி...'' நான் சொன்னேன்: “நீ இப்படிச் செத்திருக்கக்கூடாது. உன்னை நான் குற்றம் சுமத்துறேன்னு நினைக்காதே. நீ விரும்பிய ஆண் உன்னை அந்த அளவுக்கு உண்மையா காதலிக் கல. அந்த ஆள் உன்னை விட்டுட்டு, உன்னைவிட இன்னொரு பெண்ணை அதிகமாகக் காதலிச்சிருக்கான்.

அதனால உனக்கு வாழ்க்கைமேல ஒரு வெறுப்பு உண்டாயிருச்சு. வாழ்க்கையே கசந்து போச்சு. அதுக்காக வாழ்க்கை என்பதே கசப்பானதுதான்னு சொல்லிட முடியாது. என்னைப் பொறுத்த வரை நடந்த விஷயங்கள் நடந்தவைதாம். அவை திரும்பி இன்னொரு முறை வரப்போவதில்லை.

பார்கவிக் குட்டி... நான் உன்னைக் குறை சொல்றேன்னு நினைக்காதே. உண்மையாகவே நீ காதலுக்காகத்தான் உயிரை விட்டியா? காதல்ன்றது என்ன தெரியுமா? வாழ்க்கையோட பொன்னான விடியலே காதல்தான். முட்டாள் கழுதையான உனக்கு காதலைப்பற்றி ஒண்ணுமே தெரியலைன்னு நான் சொல்றேன். ஆண்களை நீ வெறுக்கிறே பாரு.... அதுலயே இது தெரியுது. உனக்கு மொத்தத்துல ஒரே ஒரு ஆணைத்தான் தெரியும். பேச்சுக்காக எடுத்துக்குவோம். அவன் உனக்குத் துரோகம் செஞ்சிட்டான்னே வச்சுக்குவோம். அதுக்காக அவன் மாதிரியே மற்ற எல்லா ஆண்களும் ஏமாற்றுப் பேர்வழிகள்தான்னு நினைச்சா எப்படி? அப்படி நினைச்சா சரியா? தற்கொலை பண்ணிக்காம இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருந்திருந்தா, நீ எடுத்த முடிவு தப்பானதுன்னு உனக்கே தெரிஞ்சிருக்கும். உன்மேல் உயிருக்குயிரா அன்பு செலுத்தவும், "என் ஈஸ்வரி...'ன்னு பாசத்தோட கூப்பிடுற துக்கும் இந்த உலகத்துல ஆண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க. அதுதான் நான் சொன்னேன்... உன்னோட விஷயத்தைப் பொறுத்தவரை நடந்தது நடந்ததுதான். இனிமேல் திரும்பவும் அது வரப் போறதா என்ன? பார்கவிக் குட்டி... உன்னோட வாழ்க்கையை முழுசா நான் எப்படித் தெரிஞ்சிக்கிறது?

எது எப்படியானாலும் என்னைத் தொந்தரவு செய்யாதே. நான் இதைச் சவாலா சொல்லல. கட்டளையாகவும் சொல்லல. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். நீ இன்னைக்கு ராத்திரியே என் கழுத்தை நெரிச்சுக் கொன்னாலும், ஏன் இப்படிச் செஞ்சேன்னு உன்னைக் கேக்குறதுக்கு இங்கே யாரும் இல்ல... கேட்க முடியுமான்னு இதுக்கு அர்த்தம் இல்ல... யாரும் இங்கே இல்லைன்றதுதான் உண்மை. ஏன்னா... எனக்கு இந்த உலகத்துல சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல...


பார்கவிக் குட்டி... இப்போ எல்லாம் புரிஞ்சிக்கிட்டியா? நாம இங்கே வாழ்றோம். அதாவது... நான் இந்த வீட்லதான் தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன். நியாயமாகப் பார்த்தால் கிணறு, வீடு எல்லாம் எனக்குத்தான். பரவாயில்ல... நீ கீழே இருக்கிற நாலு அறைகளையும் கிணறையும் பயன்படுத்திக்கோ. சமையலறையையும் குளியலறையையும் நாம ரெண்டு பேரும் சரி பாதியா வச்சிக்குவோம். சம்மதம்தானா?''

இரவு ஆகிவிட்டது. சாப்பாடு முடிந்து, தெர்மோ ஃப்ளாஸ்க்கில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்தேன். என் கையில் இருந்த டார்ச் விளக்கை எரியவிட்டவாறு அரிக்கேன் விளக்கை ஏற்றினேன். அறை முழுவதும் மஞ்சள் வெளிச்சத்தில் மூழ்கியது.

டார்ச் விளக்கைக் கையில் பிடித்தவாறு நான் கீழே இறங்கினேன். நல்ல இருட்டு. சில நிமிடங்கள் அசையாமல் அங்கு நின்றேன். தண்ணீர்க் குழாய்களைப் பூட்டி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்தேன். கிணற்றின் அருகில் இருந்த சமையலறைப் பக்கம் போனேன். அப்போது நினைத்தேன்- தண்ணீர்க் குழாய்களைப் பூட்டாமல் விட்டால் என்ன?

வாசல் கதவுகளை அடைத்தேன். தாழ்ப்பாள் போட்டேன். படிகள் வழியே ஏறி மாடிக்கு வந்து எந்தவித பரபரப்பும் இல்லாமல் அமர்ந்து தேநீர் குடித்தேன். பிறகு ஒரு பீடி புகைத்தவாறு சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். அமர்ந்தவாறே எழுதத் தொடங்கினேன். அப்போது என் மனதில் பட்டது. நான் அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் பார்கவி நின்று கொண்டிருக்கிறாள்!

நான் சொன்னேன்:

“நான் எழுதறப்போ யாராவது பார்த்தாங்கன்னா எனக்குப் பிடிக்காது.''

நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன்... யாரும் இல்லை!

எதனாலோ, தொடர்ந்து என்னால் எழுத முடியவில்லை. நான் ஒரு நாற்காலியை எடுத்து முன்னால் போட்டேன். “பார்கவிக் குட்டி... இதுல உக்காரு!'' நாற்காலி வெறுமையாக இருந்தது. நான் எழுந்துபோய் இரண்டு அறைகளிலும் இப்படியும் அப்படியுமாய் உலாத்தினேன். காற்று சரியாக வரவில்லை. வெளியே மரங்களில் இலைகள் ஆடாமல் அசையாமல் இருந்தன. ஜன்னல் வழியே கீழே பார்த்தேன்.... ஒரு வெளிச்சம்!

நீல வெளிச்சமா... சிவப்பா... மஞ்சளா... எதுவென்று சரிவரப் புரிந்து கொள்ள முடியாத ஒரு வெளிச்சம். ஒரு நிமிட நேரம் மட்டுமே அது தெரிந்தது.

ஒருவேளை இந்தப் பிரகாசம் என் கற்பனையாக இருக்குமோ என்று என்னை நானே சந்தேகப்பட்டேன். நிச்சயம் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன் என்று சத்தியம் செய்து என்னால் கூற முடியவில்லை. இருந்தாலும் பார்க்காததைப் பார்த்ததாக எப்படிக் கூற முடியும்? ஒருவேளை ஏதாவது மின்மினிப் பூச்சியாக இருக்குமோ?

நான் நீண்ட நேரம் அங்கேயே நடந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரம் ஜன்னல் அருகிலேயே நின்றிருந்தேன். பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது படித்துக் கொண்டிருக்கலாமா என்று பார்த்தேன். மனம் ஒரு நிலையில் இல்லை. நாற்காலி தனியே யாரும் அமராமல் இருந்தது.

சீக்கிரம் தூங்கலாமே என்று நினைத்தேன். படுக்கையை விரித்துப் போட்டு விளக்கை அணைத்தேன். அப்போது மனதில் ஒரு எண்ணம் வந்தது- ஒரு இசைத்தட்டை முழங்கச் செய்தால் என்ன?

மீண்டும் விளக்கை ஏற்றினேன். க்ராமஃபோனைத் திறந்து வைத்தேன். ஒரு புதிய ஊசியை எடுத்து சவுண்ட் பாக்ஸில் பொருத்தினேன். அதன் பிறகு க்ராமஃபோனுக்கு சாவி கொடுத்தேன்.

யாருடைய பாட்டைப் போடலாம்? உலகமே மிகவும் அமைதி யாக இருந்தது. ஆனாலும், ஒரே ஒரு ஒலி மட்டும் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. "ஹூ' என்று என் இரண்டு காதுகளிலும் ஒரு ரீங்காரம் தொடர்ந்த ஒலித்துக் கொண்டே இருந்தது. பயம் என்னை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதோ? என்னைச் சுற்றிலும் ஒரே மயான அமைதி. பயங்கரமான அந்த அமைதியை லட்சம் லட்சம் துண்டுகளாக சிதறடிக்க நினைத்தேன் நான். அதற்கு யாருடைய பாட்டைப் பாட வைப்பது? பின்னால் திரும்பி, அமெரிக்காவின் நீக்ரோ பாடகனான பால் ராப்ஸன் பாடிய ஒரு இசைத்தட்டை எடுத்து வைத்தேன். க்ராமஃபோன் பாடத் தொடங்கியது. காற்றில் அவனுடைய இனிய குரல் தவழ்ந்து வந்தது.

“ஓர்ள்ட்ன்ஹ ச்ண்ற் ற்ட்ங் க்ஷஹற்ற்ப்ங் ர்ச் த்ங்ழ்ண்ஸ்ரீர்.''

அது முடிந்தது. அதற்குப் பிறகு பங்கஜ் மல்லிக் பாடிய இசைத்தட்டு.

“து டர்னா சராபி...''

“பார்கவிக் குட்டி... ஒரேயடியா பயந்திடாதே. இப்போ இனிய பெண் குரல்ல ஒரு இசைத்தட்டைப் போடப் போறேன்.'' நான் மெதுவான குரலில் சொன்னேன்.

“காற்றினிலே வரும் கீதம்...''

எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய அந்தப் பாட்டும் முடிந்தது.

இந்த மூன்று பாட்டுகளும் முடிந்தபோது, என் மனம் இலேசானது மாதிரி உணர்ந்தேன். சில நிமிடங்கள் அசையாமல்- ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். பிறகு என்ன நினைத்தேனோ- சைகால் பாடிய ஒரு இசைத்தட்டை எடுத்தேன். அவரின் மென்மையான குரல் காற்றில் மிதந்தது.

“ஸோ ஜா ராஜகுமாரீ...''

ராஜகுமாரியே நீ உறங்கு... இனிமையான கனவுகள் கண்டுகொணடே உறங்கு...

அந்தப் பாட்டும் முடிந்தது.

“அவ்வளவுதான். மீதியை நாளைக்குப் பார்ப்போம்'' என்று சொல்லியவாறு நான் க்ராமஃபோனை மூடி வைத்தேன். ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்துப் புகைத்தேன். விளக்கை அணைத்து விட்டுப் படுத்தேன். பக்கத்திலேயே டார்ச் விளக்கு இருந்தது. கடிகாரம் இருந்தது. அரிவாள் ஒன்று இருந்தது. மிக அருகிலேயே நாற்காலியும்..

போர்டிக்கோவிற்குப் பக்கத்தில் இருந்த வாசல் கதவை நான் அடைத்துவிட்டேன். நேரம் பத்து மணி இருக்கும். காதுகளைத் தீட்டியவாறு படுத்துக்கிடந்தேன்.

கடிகாரத்தின் "டிக் டிக்' சப்தத்தைத் தவிர, வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை. நிமிடங்கள் மணிகளாகி நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என் மனதில் இப்போது பயமில்லை. இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருந்தேன். எனக்கு இது ஒன்றும் புதிய அனுபவ மில்லை. எவ்வளவோ வருடங்கள்... எத்தனையோ மாநிலங்களில் என்னென்னவோ இடங்களில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தன்னந்தனியே என் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியிருக்கிறேன். அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத பல அனுபவங்களும் பல்வேறு சூழ்நிலைகளில் கிடைத்திருக்கின்றன. அதனால் என் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் திரும்பத் திரும்பப் போய் வந்து கொண்டிருந்தது. இந்த எண்ண ஓட்டத்திற்கு மத்தியில்... வாசல் கதவை யாராவது தட்டுவார்களா? தண்ணீர்க் குழாயில் இருந்து நீர் ஒழுகும் சப்தம் கேட்குமா? என் கழுத்தை யாராவது நெரிப் பார்களா? இந்த நினைப்புடன் மூன்று மணிவரை தூங்காமலே இருந்தேன்.


ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. ஒரே அமைதி. நான் உறங்கத் தொடங்கினேன். உறக்கத்தில் கனவு எதுவும் வரவில்லை. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு நான் எழுந்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை.

“குட்மார்னிங் பார்கவிக் குட்டி.... ரொம்ப நன்றி. ஒண்ணு மட்டும் எனக்குப் புரிஞ்சு போச்சு. ஆளுங்க உன்னைப் பற்றித் தேவை யில்லாத கற்பனையை எல்லாம் சேர்த்துப் பேசுறாங்கன்னு நினைக்கிறேன். அவங்க அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கட்டும்... என்ன நான் சொல்றது?''

இப்படியே இரவும் பகலும் மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தன. பார்கவிக் குட்டியைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பேன். அம்மா, அப்பா, சகோதர- சகோதரிகள்... அவளைப் பற்றித் தெரியாத கதைகள் எத்தனை இருக்கும்! இரவு முழுக்க உட்கார்ந்து கதை எழுதுவேன். உடலில் சோர்வு உண்டாகிற நேரத்தில் இசைத் தட்டைப் பாட வைப்பேன். பாடல் ஒலிப்பதற்கு முன்பு யார் இந்தப் பாட்டைப் பாடப் போவது, பாட்டின் பொருள் என்ன போன்ற விவரங்களை நான் அறிவிப்பேன். நான் சொல்வேன்: “இப்போ ஒரு பாட்டு போடப் போறேன். இதைப் பாடியது பங்கஜ் மல்லிக் என்ற வங்காள மொழிப் பாடகன். துக்கம் கலந்த பாட்டு. மனதின் நினைவுகளைக் கிளறிப் பார்க்கிற பாட்டு. கடந்துபோன நாட்களை நினைத்துப் பார்த்து அசை போடுகிற பாட்டு. கவனமா நீ கேளு...''

“குஸர்கயா வஹ் ஸமானா கைஸா... கைஸா...''

அது முடிந்ததும் நான் கூறுவேன்:

“இப்போ பாடப் போறது பிம்ங்க்ராஸ்பி. 'ஒய் ற்ட்ங் ம்ர்ர்ய்ப்ண்ஞ்ட்ற்' என்ற பாட்டு அப்படின்னா...

"நிலா வெளிச்சத்தில்'னு அர்த்தம், ஓ... இப்பத் தான் ஞாபகம் வருது. நீ பி.ஏ. படிச்சவளாச்சே! மன்னிச்சுக்கோ...''

எனக்கு நானே பேசிக் கொள்வேன். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. நான் தோட்டம் அமைத்தேன். தோட்டத்தில் பூக்கள் மலர்கிறபோது, அவை எல்லாமே பார்கவிக்குட்டிக்குத்தான் என்று  கூறவும் செய்தேன். இடையில் நான் ஒரு சிறு நாவலை எழுதி முடித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலர் இரவு நேரங்களில் இங்கேயே தங்கவும் செய்திருக்கிறார்கள். உறங்குவதற்கு முன்பு, அவர்களுக்கே தெரியாமல் நான் கீழே இறங்கிச் சென்று இருளைப் பார்த்தவாறு மெல்லிய குரலில் கூறுவேன்:

“பார்கவிக்குட்டி... நல்லா கேட்டுக்கோ. என்னோட நண்பர்கள் சிலர் ராத்திரி இங்க தூங்குறாங்க. அவுங்க யாரையும் கழுத்தை நெரிச்சு கொன்னுடாதே. அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா போலீஸ்காரங்க என்னைப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்க. அதை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. குட் நைட்!''

பொதுவாக வெளியே புறப்படுகிற சமயத்தில் எல்லாம் நான் கூறுவேன்:

“பார்கவிக்குட்டி... வீட்டை பத்திரமா பாத்துக்கோ. யாராவது திருட்டுப் பசங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்கன்னா, கழுத்தை நெரிச்சிக் கொன்னுடு. கொன்ன பிறகு பிணத்தை இங்கே போட்டுடாதே. இழுத்துட்டுப் போயி மூணு மைல் தூரத்துல கொண்டு போட்டுடு. இல்லாட்டினா நமக்குத் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்.''

இரவில் இரண்டாம் ஆட்டம் படம் பார்த்துவிட்டுத் திரும்பி வருகிறபோது நான் சொல்வேன்:

“நான்தான்... தெரியுதா?''

பல நாட்களாக நடந்து வந்த விஷயங்கள் இவை. காலம் இப்படி ஓடிக்கொண்டிருக்க, நாளடைவில் நான் பார்கவிக்குட்டியை மறந்தே போனேன். அதாவது பெரிதாக ஒன்றும் பேசிக் கொள்வதில்லை. அவ்வப்போது சில நேரங்களில்  அவளைப் பற்றி நினைப்பேன். அவ்வளவுதான்.

அவளைப் பற்றிய அந்த நினைப்புக்கூட எப்படி என்றும் கூறுகிறேன். இந்த பூமியில் எத்தனையோ கோடி.. அதாவது... மனிதப் பிறவிகள் இங்கு இறந்திருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் இந்த பூமியில் மறைந்தும், ஆவியாகவும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய காட்சியாகவும் இரண்டறக் கலந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இது நமக்கே தெரியும். அந்த வரிசையில் ஒரு நினைவுச்  சின்னமாக பார்கவிக்குட்டியும் நின்றுவிட்டாள்.

இப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் நடக்கிறது. அதைத்தான் இப்போது நான் கூறப் போகிறேன்.

ஒரு இரவு. நேரம் கிட்டத்தட்ட பத்து மணி இருக்கும். ஒன்பது மணியில் இருந்து நான் உட்கார்ந்து ஒரு கதை எழுதிக் கொண்டிருந் தேன். மர்ம நிகழ்ச்சிகள் நிறைய உள்ள கதை அது. மிகவும் வேகமாக நான் அதை எழுதிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் விளக்கில் வெளிச்சம் குறைந்தது மாதிரி எனக்குத் தெரிந்தது.

நான் விளக்கை எடுத்துக் குலுக்கிப் பார்த்தேன். மண்ணெண் ணெய் இல்லை. இருந்தாலும், இந்தக் குறைந்த வெளிச்சத்திலேயே இன்னும் ஒரு பக்கம் எழுதி முடித்துவிடலாம் என்று நினைத்தேன். எழுதி முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. என் முழுக் கவனமும் கதையிலேயே இருந்தது. சிறிது நேரத்தில் விளக்கின் ஒளி மேலும் குறைந்தது. இனி என்ன செய்வது? திரியைச் சிறிது நீட்டி விட்டேன். தொடர்ந்து எழுதினேன். சில நிமிடங்களில் ஒளி மேலும் குறைந்தது. மீண்டும் திரியை நீட்டி விட்டேன். சில நிமிடங்களில் விளக்கின் திரி அரை அங்குல அகலமும், நான்கு அங்குல நீளமும் கொண்ட சிவந்த கனலாக மாறியது.

நான் டார்ச் விளக்கொளியைப் பரவவிட்டேன். அரிக்கன் விளக்கின் திரியை முழுவதும் இறக்கிவிட்டேன். விளக்கு இப்போது முழுமையாக அணைந்துவிட்டது.

நான் மெதுவான குரலில் கேட்டேன்:

“வெளிச்சத்துக்கு இப்போ என்ன செய்யிறது?''

இப்போது உடனடியாக மண்ணெண்ணெய் வேண்டும். வங்கிக்குச் சென்றால் என் நண்பர்களிடம் கேட்டு, அவர்களின் ஸ்டவ்வில் இருந்து கொஞ்சம் மண்ணெண்ணெய் வாங்கலாம். நான் டார்ச் விளக்கையும், மண்ணெண்ணெய்க் குப்பியையும் கையில் எடுத்துக் கொண்டு வாசல் கதவை இழுத்துப் பூட்டினேன். கீழே இறங்கி முன்பக்க வாசலையும் பூட்டி வெளியே இறங்கினேன். வெளிகேட்டை அடைந்து தனிமையான பெரிய சாலையில் காலாற நடந்தேன். சிறிது நிலா வெளிச்சம் வானத்தில் இருந்தது. மழை வரும் போலிருந்தது. நான் வேகமாக நடந்தேன்.

சாலையில் நடந்த சென்று வங்கியை அடைந்ததும், மாடியைப் பார்த்தேன். ஒரு க்ளார்க்கின் பெயரைச் சொல்லி அழைத்தேன். இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, ஒரு ஆள் இறங்கி வந்தான். பக்கவாட்டில் இருந்த கேட்டைத் திறந்து வங்கிக் கட்டடத்தின் பின் பக்கமாய்ச் சென்று படிகளில் ஏறி மாடிக்குப் போனோம். அப்போதுதான் தெரிந்தது- அவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே.

நான் மண்ணெண்ணெய் வாங்க வந்திருக்கிற விஷயத்தைக் கூறியவுடன், அவர்களில் ஒருவன் கேட்டான்:


“உனக்குப் பிடிச்ச பார்கவிக்குட்டிக்கிட்ட மண்ணெண்ணெய் வேணும்னு கேட்க வேண்டியதுதானே! பார்கவிக்குட்டியோட வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிச்சாச்சா?''

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. எழுத வேண்டும். அவர்களில் ஒருவன் ஸ்டவ்வில் இருந்த மண்ணெண்ணெயைக் குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

நான் சொன்னேன்:

“ஒரு குடை வேணும்.''

அவன் சொன்னான்:

“இப்போ போயி என்ன செய்யப் போறே? பேசாம இங்க இருந்து சீட்டு விளையாடு. மழை விட்டபிறகு அங்கே போனாப் போச்சு..''

அவன் சொன்னபடி நான் அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட உட்கார்ந்துவிட்டேன். என்னதான் சீட்டு விளையாடினாலும், என் கவனம் முழுவதும் எழுதிக் கொண்டிருந்த கதையிலேயே இருந்தது. அதனால், சீட்டு விளையாட்டில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. ஒரு மணி ஆனபோது மழை நின்றது. விளையாட்டை நிறுத்திவிட்டு, மண்ணெண்ணெய் குப்பியையும், டார்ச் விளக்கையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அவர்களும் படுக்கத் தொடங்கினார்கள். நான் கீழே இறங்கிச் சாலையை அடைந்தவுடன், அவர்கள் விளக்கை அணைத்தார்கள்.

சாலையில் ஒரு அசைவும் இல்லை. மருந்துக்குக்கூட வெளிச்சம் இல்லை. மெதுவாக நடந்தேன். வளைவு திரும்பி, நான் தங்கியிருக்கும் வீடு நோக்கி நடந்தேன். அந்த மங்கலான நிலா வெளிச்சத்தில், முழு உலகமும் புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மத்தில் மூழ்கிக் கிடப்பதை உணர முடிந்தது. பலவிதச் சிந்தனைகளும் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மயான அமைதியுடன் இருந்த- இருண்டு போயிருந்த சாலை வழியே டார்ச் விளக்கைப் பிடித்தவாறு நான் மட்டும் தனியே நடந்தேன். சாலையில் ஓர் உயிரைக் காண வேண்டுமே!

நான் தங்கியிருக்கும் வீட்டை அடைந்து கேட்டைத் திறந்து உள்ளே போய், வாசல் கதவைத் திறந்தேன். உள்ளே நுழைந்தேன். வாசல் கதவைப் பூட்டினேன். நான் இல்லாத நேரத்தில் மாடியில் ஏதாவது, அதிசயிக்கத்தக்க வகையில் நடந்திருக்கும் என்றெல்லாம் நான் எண்ணி இருக்கவில்லை. ஆனால், அப்படி நடந்திருந்ததுதான் ஆச்சரியம். இது எப்படி என்று தெரியாமல், உள்ளபடியே என் மனதில் ஒருவிதக் கவலை அரும்பத் தொடங்கியது. வாய்விட்டு அழ வேண்டும் போல்  இருந்தது. சாதாரணமாக நான் மிகவும் எளிதில் சிரித்துவிடுவேன். ஆனால், ஒரு துளி கண்ணீர் விடுவது என்றால் அது என்னால் முடியாத ஒரு விஷயம். கண்ணிலிருந்து நீர் வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வருகிறபோது என் மனதை நானே தேற்றிக்கொள்வேன்.

இப்போதும் அதே மாதிரி மனதைத் தேற்றிக்கொண்டு மாடிக்குப் போனேன். எப்போதும் போவதைப் போலத்தான்.... ஆனால், ஒரு ஆச்சரியமான சம்பவத்தை என் கண்கள் சந்தித்தன! இது எப்படி என்ற கேள்வி மனதின் அடித்தளத்தில் எழுந்தது. விஷயம் இதுதான்.

நான் அறையை அடைத்துவிட்டுப் போகிறபோது மண்ணெண் ணெய் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதால், விளக்கு அணைந்து விட்டது. அறை முழுக்க இருட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது.  அதற்குப் பிறகு ஒரு பெரிய மழை. இரண்டு மூன்று மணிகள் ஓடிவிட்டன. ஆனால், இப்போது அறையில் ஆச்சரியமாக அரிக்கன் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. வாசல் கதவின் இடைவெளியில் அது தெரிகிறது. இந்த வெளிச்சத்தைத்தான் என் கண்கள் பார்த்தன. மனதின் அடித்தளத்தில் உண்டான கேள்வியும் இதையொற்றித்தான். இது எப்படி? எனக்குப் புரியவில்லை.

நான் சாவியை எடுத்தேன். தாழ்ப்பாள் மேல் டார்ச் விளக்கை அடித்தேன். தாழ்ப்பாள் வெள்ளியென மின்னியது என்று கூறுவதை விட, அது சிரித்தது என்று கூறுவதே சரியானது.

நான் அறையைத் திறந்து உள்ளே போனேன். அதிர்ச்சியுடன் எல்லாவற்றையும் நோக்கினேன். என் ஒவ்வொரு அணுவிலும் அந்த அதிர்ச்சி பரவி பல உண்மைகளைச் சொன்னது. நான் கொஞ்சம்கூட பயப்படவில்லை. நடுங்கவில்லை. மனதில் அன்பும், கருணையும் மட்டுமே குடிகொண்டிருந்தன. சிலையென நான் நின்றிருந்தேன் என்பதே உண்மை. இலேசாக உடல் வியர்த்தது. அழ வேண்டும் போலவும் இருந்தது.

நீல வெளிச்சம்!

வெள்ளை நிற சுவர்களும், அறையும் நீல வெளிச்சத்தில் மூழ்கிப் போயிருந்தன. விளக்கில் இருந்து இரண்டு அங்குல நீளத்தில் ஒரு நீல வெளிச்சம்... நான் ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டேன்.

மண்ணெண்ணெய் இல்லாமல் அணைந்துபோன விளக்கை யார் எரிய வைத்தது? பார்கவி நிலையத்தில் இந்த நீல வெளிச்சம் எங்கே இருந்து வந்தது?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.