Logo

முதல் முத்தம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7433
muthal mutham

வர்களின் பேச்சில் முதல் முத்தம் என்ற விஷயமே வரவில்லை. அப்படியானால் அவர்கள் என்னதான் பேசினார்கள்? அவர்கள் எதையுமே பேசவில்லை. இருந்தாலும், எல்லாவற்றையும் பேசவும் செய்தார்கள். அந்தக் கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்? ஐந்து சிறுகதை ஆசிரியர்கள், மூன்று கவிஞர்கள், இரண்டு விமர்சகர்கள்- இதற்கு மேல் விஷயங்களைப் பேச வேறு யார் வேண்டும்?

அவர்கள் கூட்டிய கூட்டத்திற்கு ஒரு பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. இருந்தாலும் ஒரு இலக்கு இல்லாமல் இல்லை. அவர்கள் எல்லாரும் ஒரு கூட்டத்திற்குப் போய்விட்டு வந்து, சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனின் அறையில் ஒன்று கூடினார்கள்.

பொதுக்கூட்டத்தில் அவர்கள் எல்லாரும் நிலவி வரும் சமூக அமைப்பை ஒரு பிடி பிடித்தார்கள். கவிஞர்கள் தங்களின் கவிதைகளால் சமுதாயத்தை பலமாகச் சாடினார்கள். விமர்சகர்கள் சமூக விரோத சக்திகளைத் தங்களின் பேச்சால், கத்தியால் வீழ்த்துவதுபோல் வெட்டிச் சாய்த்தார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டு கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டார்கள். பண்பாட்டையும் நாகரீகத்தையும் விளக்கு வெளிச்சமென காப்பாற்றிக் கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதிகளைப் பார்த்துக் கைத்தட்டினார்கள். பாராட்டு மழையில் அவர்களை நனைய வைத்தார்கள். அந்தக் கூட்டம் முடிந்தபிறகுதான் அந்த இலக்கியவாதிகள் சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனின் அறைக்கு வந்தது. வாசல் கதவை மூடியதும், அவர்களின் முகபாவங்கள் அத்தனையும் முழுமையாக மாறிவிட்டன. அவர்கள் ஒரு நீண்ட பெருமுச்சு விட்டவாறு சாய்ந்து உட்கார்ந்து பொதுமக்களைக் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள். பொதுமக்களின் தாய், தந்தை பெயரைச் சொல்லி கெட்ட வார்த்தைகளில் திட்டினார்கள்.

"கழுதைகள்” என்று பொதுமக்களைப் பேச்சுவாக்கில் அவர்கள் குறிப்பிட்டார்கள். தங்களின் சொந்த தாய்- தந்தையரையே அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். எல்லாம் பேசியபிறகுதான் அவர்கள் மனதிலேயே சமாதானம் உண்டானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்- அவர்கள் பலரையும் திட்ட நினைத்த விஷயங்கள் அவர்களின் பேச்சுக்குக் கீழே யாருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்தன. அவற்றை வெளியில் தயக்கம் இல்லாமல் கொட்டியதன் மூலம் அவர்கள் தங்கள் இதயத்தையே சுத்தப்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்ததும் அவர்கள் தேநீர் அருந்தினார்கள். பலகாரம் சாப்பிட்டார்கள். அது முடிந்ததும் சிலர் சிகரெட் புகைத்தார்கள். சிலர் பீடி பிடித்தார்கள். சிலர் வெற்றிலை- பாக்கு போட்டார்கள். சிலர் பொடி போட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஒரு விமர்சகன் நம்முடைய சங்கோஜியும் அப்பாவியும் சிறுகதை எழுதக்கூடியவனும் வழுக்கைத் தலையனும் காதலனுமான அந்த நல்ல மனிதனைப் பார்த்துக் கேட்டான்:

“டேய் பையா... இந்த வழியா பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வருவாங்களா?''

அந்த நல்லவன் சொன்னான்:

“குழந்தைகளே... பயப்படாதீங்க. இந்தப் பொடியன் இங்கே தங்கி இருக்கான்ற விஷயம் எல்லா பெரிய மனுஷங்களுக்கும் தெரியும். அதனால அவங்க யாரும் இந்தப் பக்கம் வரமாட்டாங்க. இந்த வழியே போற பொதுமக்கள் எல்லாருமே நம்மோட தோழர்கள்தான். கெட்ட வழியில போனவங்க. பல வகையிலயும் பாதிக்கப்பட்டவங்க.''

“அப்படியா?'' அவர்கள் பேச உட்கார்ந்தார்கள். இரண்டு பேரை விட்டால், மற்றவர்களுக்கு மனைவிகள் இருக்கிறார்கள். தங்களின் மனைவிகளைப் பற்றி ஒவ்வொருவரும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். மனைவிகளிடம் இல்லாத குணங்களை எல்லாம் அவர்களே இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு பேசினார்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு மனைவிமார்களைத் துதி பாடினார்கள். எல்லாமே பச்சைப் பொய்கள். அந்தப் பொய்களைப் பேசுவதில், சொல்லப்போனால் போட்டி போட்டார்கள். கவிஞர்கள் தங்களை மறந்து பாடினார்கள். அப்படியே அவர்கள் பேச்சு காதலில் போய் முடிந்தது. ஆமாம்... காதல் என்றால் என்ன?

அவர்கள் ஒவ்வொருவரும் காதலை மனோவிஞ்ஞானப்படி அலசிப் பார்த்து விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காதல் என்ற விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, பின்னர் அதை ஒட்டிப் பார்த்து... இப்படி என்னென்னவோ செய்தார்கள். ஒரு கதாசிரியர் சொன்னார்.

“காதல்! இது ஒரு உபாயம் அப்படின்னுதான் சொல்லணும். அதாவது- இது ஒரு வலை. குழந்தைகளை உற்பத்தி செய்வது- இதுதான் காதலோட லட்சியம்- குறிக்கோள்!''

“காதல்ன்றது அழிவே இல்லாதது. எல்லை அற்றது.'' ஒரு கவிஞர் சொன்னார்: “அதற்கு முடிவே கிடையாது. அது...''

“ஏய்... அவனை அடிச்சுக் கொல்லுங்கடா!'' ஒரு சிறுகதை எழுத்தாளர் சொன்னார். அவ்வளவுதான்- ஒரு விமர்சகன் அந்தக் கவிஞரின் கழுத்தைப் பிடித்தான்.

“நான் பேசப்போறது இல்ல... நான் போய் காதல் கவிதை எழுதப் போறேன்.''

“நாங்க உன்னைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.'' ஒரு கதாசிரியர் சொன்னார். “நீ இன்னையில இருந்து காதலைப்பற்றி கவிதையே பாடக்கூடாது.''

“நான் அதை பலமா எதிர்க்கிறேன்.'' அந்த நல்லவனான வழுக்கைத் தலை காதலன் தாழ்ந்த குரலில் சொன்னான்: “இதை எழுதக்கூடாது. இதைத்தான் எழுதணும்னு கட்டுப்பாடு போடுற விஷயத்தை நான் பலமா எதிர்க்கிறேன். அது தனி மனிதனோட சுதந்திரம். அதுல எப்படி நீங்க தலையிட முடியும்? பெரியோர்களே! நான் சொல்ற இந்தக் கருத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு...'' உயரமான மெலிந்துபோய் ஒட்டடைக்குச்சி மாதிரி இருக்கும், உடம்பெல்லாம் ரோமத்தைக் கொண்ட ஒரு சிறுகதை ஆசிரியர் சொன்னார்: “உனக்கு இதைப் பற்றி என்ன தெரியும்? நீ பேசாம உன்னோட அவளைப் பற்றி நினைச்சுக்கிட்டு கிட. டேய் பையா... நீ அவளை எத்தன தடவை முத்தம் கொடுத்திருப்பே?''

இப்படி காதலைப் பற்றிய பேச்சு முத்தத்தை நோக்கித் திரும்பியது. சிறிது நேரத்தில் பேச்சு அதையும் தாண்டி முதல் முத்தத்தில் போய் முடிந்தது.

நீங்கள் வாழ்க்கையில் யாரை முதல் தடவையாக முத்தமிட்டீர்கள்?

அவர்கள் ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தச் சம்பவத்தையே மறந்து போயிருந்தார்கள். இருந்தாலும் தாகம் மேலோங்க- உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் வாழ்க்கையில் முதல் தடவையாக யாருக்காவது கட்டாயம் முத்தம் கொடுத்திருப்பீர்கள் அல்லவா?

அதுதான் யார்?

அந்த இனிய நிகழ்ச்சி நிச்சயம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கும். அதை அவ்வளவு சாதாரணமாக மறந்துபோய்விட முடியுமா என்ன? அதை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். முகம் இதயத்தின் கண்ணாடி என்றால்... அந்த முகத்தின் பாவங்கள் அப்போது எப்படி இருந்தன?


எல்லாரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். யாரை நாம் முதன்முதலாக முத்தமிட்டோம்? அவர்கள் ஒவ்வொருவரும் அந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். ஆனால் அவர்களுக்கு அது ஞாபகத்திலேயே இல்லை. உண்மையிலேயே அது எவ்வளவு பெரிய நஷ்டம்! அந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அவர்களின் வாழ்க்கையில் வரப்போகிறதா என்ன? "ஓ... கடந்துபோன காலமே! உன்னை ஏன் மறைத்துக் கொண்டிருக்கிறாய். கொஞ்சம் வெளியே வா. இதயத்திற்குக் கிளர்ச்சியூட்டும் அந்த இனிய சம்பவத்தை மீண்டும் ஒருமுறை நான் காண விரும்புகிறேன்...” அங்கு கூடியிருந்த எல்லாருமே இறந்த காலத்தில் மூழ்கிப்போய்க் கிடக்க, அங்கிருந்தவர்களிலேயே வயது குறைந்தவனும் திருமணமாகாதவனும் கூச்ச சுபாவம் உடையவனுமான ஒரு சிறுகதை எழுத்தாளன் திடீரென்று சொன்னான்:

“என்னால சொல்ல முடியும்.''

“சரி... சொல்லு...'' எல்லாரும் அவனையே பார்த்தனர். “நீ  யாரை முதல் முறையாக முத்தமிட்டே?''

அவன் கூச்சத்துடன் நெளிந்தவாறு சொன்னான்:

“ஒரு விமர்சகியை.''

“விமர்சகியையா?'' ஒரு விமர்சகன் கேட்டான்: “யார் அவ?''

“அவள் என்னோட ரசிகையா இருந்தா. அவளைத்தான் நான் வாழ்க்கையிலேயே முதல் தடவையா முத்தமிட்டேன். அந்தக் காட்சி இப்பவும் மனசுல பசுமையா நிக்குது...''

“அந்தக் காட்சியை இப்ப விவரமா எங்களுக்குச் சொல்லுடா தம்பி...'' கருப்பு நிறத்தைக் கொண்டவரும் பென்சிலால் மீசையை வரைந்து வைத்திருப்பவரும் தடிமனான தேகத்தைக் கொண்ட கண்ணாடிக்காரக் கதாசிரியருமான மனிதர் சொன்னார்: “நீ முத்தமிட்ட அந்தக் கதையைக் கேட்க நாங்க ரொம்பவும் ஆவலா இருக்கோம்.''

கதைகள் இல்லாமல் முத்தம் தர முடியுமா? கூர்மையான- சிறிய கண்களைக் கொண்ட, வெற்றிலை- பாக்குப் போட்டு பற்கள் சிவப்பாகிப் போயிருந்த, உயரம் குறைந்த, மெலிந்துபோய் காணப்பட்ட கதாசிரியர் சொன்னார்:

“அந்தக் கதையை உடனே இங்க எடுத்து விடுடா படவா!''

அந்தக் கூச்ச சுபாவம் உள்ள சிறுகதை எழுத்தாளன் நல்லவனான வழுக்கைத் தலையனைப் பார்த்தான். வழுக்கைத் தலை மனிதன் சொன்னான்:

“சும்மா சொல்லு... பயப்படாதே... மனசுல என்ன தோணுதோ அதை அப்படியே சொல்லு...''

காதலைப் பற்றி மட்டுமே எப்போதும் இதயத்தில் நினைத்துக் கொண்டிருக்கும் கவிஞர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னார்:

“நான் உன் கதையைக் கேட்க மிகவும் ஆர்வம் உள்ளவனா இருக்கேன். சீக்கிரம் சொல்லு தம்பி...''

கூச்ச சுபாவம் கொண்ட அந்த இளைஞன் பேச ஆரம்பித்தான்:

“அவளோட உதடுகள் சிவப்பு ரோஜாப்பூவைப்போல சிவந்து இருக்கும்.''

“அடடா...'' எல்லாரும் ஒரே குரலில் சொன்னார்கள்: “அப்படியா?''

“அவளோட முகமும் உடலும் வெள்ளை வெளேர்னு இருக்கும்.'' அவன் உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னான்: “அவளோட தலைமுடி கருப்பா சுருள் சுருளா இருக்கும். அவளோட மார்பகங்கள்  அப்பத்தான் முளைச்சு லேசா வந்துக்கிட்டு இருக்கு. கண்கள் பிரகாசமா இருக்கும். அவ நல்லா பாடுவா. அவளைப் பார்க்கிறப்போ எனக்கும் பாடணும்போல இருக்கும். சில நேரங்கள்ல நான் உதட்டளவுல பாடவும் செய்வேன். அவளை அப்படியே இறுக மார்போடு சேர்த்துக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும்போல இருக்கும். அவள் என்னோட ஜாதியைச் சேர்ந்தவள் இல்ல... இருந்தாலும் என்னை அவளுக்கு மிகவும் பிடிக்கும். நான் அவள் மேல் வெறித்தனமான காதல் வச்சிருந்தேன். அவள் எதுவுமே தெரியாத ஒரு சின்னப் பொண்ணு. அவளோட வயசு வெறும் பதினாலுதான். அந்தச் சின்ன வயசுல காதலைப்பற்றி அவளுக்கு என்ன தெரியும்?

அவளோட அக்காமார்கள் என் பேரைச் சொல்லி அவளைக் கிண்டல் பண்ணுவாங்க. என்னைப் பார்க்குறப்போ அவங்க அவளைப் பார்த்துச் சொல்லுவாங்க:

"அதோ வர்றார்டி உன்னோட கதைக்காரர்!'

அவர்கள் அப்படிச் சொல்றதைக் கேட்குறப்போ எனக்கே கூச்சமா இருக்கும். அவள் வெறுமனே எதுவும் பதில் பேசாம நின்னுக்கிட்டு இருப்பா. நான் ஏதோ அவளோட சொந்த சொத்து அப்படின்ற மாதிரி அவளோட செயல் இருக்கும். அவள் புன்சிரிப்பு தவழ  ஓடி வருவா... என்னைப் பார்த்துக் கேட்பா:

"கதை கொண்டு வந்திருக்கீங்களா?'

அதாவது- நான் போறப்ப எல்லாம் என்கிட்ட ஒரு புதுக் கதை இருக்கணும். நான் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட நாலு தடவையாவது அவளைப் பார்க்கப் போவேன்.  நாளொண்ணுக்கு ஒரு கதையாவது கட்டாயம் என்கிட்ட இருக்கும். அவள் என்னோட கதையைப் படிக்கிறப்போ அவளோட முகத்தையே நான் பார்ப்பேன். கதை அவளுக்குப் பிடிச்சிருக்கா, அவள் முகம் வெளிறிப் போகுதா, இல்லாட்டி சிவப்பாகுதா, வியர்க்குதா அப்படீன்னெல்லாம் பார்ப்பேன். துடிக்கிற இதயத்தோட அவளை அப்படியே பார்த்துக்கிட்டே இருப்பேன். கதையைப் படிச்சு முடிச்சப்புறம் அவள் சொல்லுவா:

"கதை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...'

சொன்னதோடு நிற்காமல் அவள் அந்தக் கதையை முத்தமிடுவா. அதற்குப் பிறகு கதையை என்கிட்ட தருவா. நான் மனசுக்குள் நினைப்பேன்- என் முகத்துல அவ ஒரு முத்தம் தந்தால் என்னன்னு.

நான் அவளைப் பற்றி நெனச்சுப் பார்ப்பேன்- என்ன இருந்தாலும்  சின்னப் பொண்ணுதானே! இதைப் பற்றியெல்லாம் அவளுக்கு எங்கே தெரியப்போகுது?

சில நேரங்கள்ல அவள் கதையைப் படிச்சிட்டு கேட்பா:

"கதையைக் கிழிச்செறியட்டா?'

கதையை முத்தம் எதுவும் கொடுக்காம என்கிட்ட தருவா... நான் அதைக் கிழிச்சி சின்னச் சின்ன துண்டா ஆக்கி காத்துல பறக்கவிடுவேன். அந்தக் கதை அவளுக்குப் பிடிக்கல. கதையை வாசிக்கிறப்போ அவள் விரும்புற மாதிரி அது இல்ல... ஏதோ நான் எழுதினேன்றதுக்காகப் படிச்சா, அவ்வளவுதான். முதல்லயே அவளுக்கு அது பிடிக்காமப் போனா, பிறகு எப்படி அவள் அதைப் படிக்கிறா?

இதை அவள் சொல்லல. என் மனசுல அப்படித் தோணிச்சு. அவள் இப்படித்தான் நடக்கணும்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? அவள் கதையைக் கிழிச்சு எறியச் சொன்னா நான் எறிவேன். அவளுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன். காரணம்- நான் அவள் மேல அளவுக்கு மேல் காதல் வச்சிருக்கேன். அவள் உடம்புல இருந்து வர்ற மணம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சோப்பு, பவுடர், சென்ட் மணத்தை நான் சொல்லல. அவளோட ஆத்மாவின், அவளோட இதயத்தின், அவளோட உடம்பின் மணத்தை நான் சொல்றேன். அவளோட உடம்பை கால்ல இருந்து தலை வரை முத்தம் கொடுக்கலாமான்னு நினைப்பேன். மனசுல- சொல்லப்போனா அந்த  எண்ணம் ஒரு தாகமாகவே எனக்கு இருக்கும். இருந்தாலும் நான் அதை வெளியே காட்டிக்க மாட்டேன். மனசுக்குள்ளயே வச்சு மூடிக்குவேன். என்ன இருந்தாலும் அவ சின்னப் பொண்ணாச்சே!


அவளோட இதயத்தைத் தொட்ட என்னோட ஒரு கதையைப் பற்றி அவளோட ஒரு தோழி அவகிட்ட குறை சொல்லியிருக்கா. அவ்வளவுதான்- அவங்க ரெண்டு பேர்க்குள்ளயும் ஒரே சண்டை. அவ கோபத்துல தோழியோட வயித்துல பென்சில வச்சு குத்திட்டா. இந்த விஷயம் தலைமை ஆசிரியை வரை போயிடுச்சு. தலைமை ஆசிரியை நடந்த விஷயத்தை இவளோட அப்பாகிட்ட சொல்லிட்டாங்க.

இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி அவளோட அக்காமார்கள் எங்களைக் கிண்டல் பண்ணினாங்க. அப்போ நாங்க ஒரு வட்ட மேஜை முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தோம். என்னையும் மீறி அவளோட கைகள் ரெண்டையும் என் கைகளில் நான் வச்சிருந்தேன். அதைப் பார்த்து அவளோட அக்காமார்கள் கேலி பண்ணிச் சிரிச்சப்போதான் எங்களுக்கே இது தெரிய வந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு அப்படிச் செய்யல. நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்காம, திட்டம் போடாம அப்படி நடந்திடுச்சு. எனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சொல்லப்போனா ஒரே கூச்சம். அவ முகத்தை கோபமா வச்சிக்கிட்டு அக்காமார்களைப் பார்த்தா. அடுத்து என்னைப் பார்த்தா... அவளோட முகத்துல ஒரு பிரகாசம்... உதட்டுல ஒரு புன்சிரிப்பு!

அவளுக்கு நான்தான் கணவன்... அவளோட ஒரு தோழிகிட்ட அவ சொல்லி, இந்த விஷயம் அவளோட வீடு வரை போயிடுச்சு. என்னை மதம் மாறச் சொல்லுவா. இல்லாட்டி அவ மதம் மாறுவா. என்னோட மதத்துல சேருவா. இப்படி எல்லாம் அவ சொன்னதா அவளோட அக்காமார்கள் சொன்னாங்க. அவளைப் பார்த்து அவங்க கேட்டப்போ அவ ஆமாம்னும் சொல்லல. இல்லைன்னும் சொல்லல. அவ என் பக்கத்துல வந்து- மிகமிக நெருக்கமா வந்து உட்கார்ந்தி ருப்பா. அப்போ அவளை அப்படியே தூக்கி மடியில வச்சு முத்தம் கொடுத்து கட்டிப்பிடிக்கணும்போல எனக்கு இருக்கும். ஆனா, அவ சின்னப் பிள்ளையாச்சே! அவளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?

இப்படி நாட்கள் போய்க்கிட்டிருக்கிறப்பதான் ஒரு சம்பவம் நடந்திச்சு. அவளுக்குக் காது வலி. வேதனை தாங்க முடியாம அவ படுத்துக் கிடந்து அழுறா. நான் அந்தச் சமயத்துல அங்கே போறேன். அவளோட அப்பாவும் அம்மாவும் அக்காமார்களும் அவளோட காதுல மருந்து ஊத்தப் பாக்குறாங்க. ஆனா அவ, அவங்களை விடல... என்ன செய்றதுன்னு தெரியாம அவங்க சிலை மாதிரி நின்னுக்கிட்டு இருக்காங்க.

"நான் மருந்து ஊத்துறேன்'னு சொல்லிட்டு, நான் அவ பக்கத்துல போய் நின்னப்ப அவ என்னையே உற்றுப் பார்த்தா. அப்ப அவளோட கண்கள்ல இருந்து நீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு.

நான் சொன்னேன்:

"என் கையில இப்ப ஒரு கதை இருக்கு...'

அவ கண்களில் நீர் வழிந்தவாறு கையை நீட்டினா. நான் ஒரு கதையை எடுத்து அவ கையில தந்தேன். அதோடு அவளைத் தேற்றி அவளோட அழுகையை மாற்றி, அவ காதுல மருந்தை ஊற்றினேன். அவ கதையைப் படிக்கல. அதை நெஞ்சு மேல வச்சுக்கிட்டு அப்படியே படுத்துக் கிடந்தா. கண்கள் ரெண்டுல இருந்தும் கண்ணீர் வழிஞ்சுக்கிட்டே இருக்கு.

கொஞ்ச நேரம் ஆனதும் நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருந்தோம். அவ அப்பவும் சத்தமே இல்லாம அழுதுக்கிட்டு இருந்தா. நான் நினைச்சேன்- காது வலி தாங்க முடியாம அவ அழறான்னு. அதைப் பற்றி அவகிட்டயே கேட்டேன். அப்போ அவ சொன்னா:

"காதுல இப்போ ஒண்ணும் வலி இல்ல...'

"பிறகு எதுக்கு அழறே?'

நான் இப்படிக் கேட்டதும் அவ மீண்டும் அழுதா. இதயமே வெடித்துவிடும்போல இருந்துச்சு. அவளை ஏதோ ஒரு பெரிய கவலை வாட்டிக்கிட்டு இருக்குன்றதை மட்டும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.

"என்ன விஷயம்? ஏன் அழறே?'ன்னு நான் கேட்டேன். அப்போ அவ சொன்னா:

"என்னை நீங்க காதலிக்கவே இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். பொய் சொல்லாதீங்க. எனக்கு எல்லாமே தெரியும்.'

அவ்வளவுதான்-

நான் செயலற்று நின்னுட்டேன். அவ சின்னப் பொண்ணு! அவளுக்குக் காதலைப் பற்றி என்ன தெரியும்? நான் சொன்னேன்.

"நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன். உலகத்துலயே- உன்னை மட்டும்தான். உன்னால என் காதலைப் புரிஞ்சுக்க முடியுதா?'

அவ சொன்னாள்:

"இது ஒண்ணும் கதை கிடையாது. சும்மா பொய் சொல்லாதீங்க. என்னோட இதயமே வெடிச்சிடும்போல இருக்கு!'

"என்னோட இதயமும் வெடிச்சிடும். நான் இங்கே வர்றதே உன்னைப் பார்க்கத்தான்!”

"பொய்!” அவ சொன்னா: "என் மேல உங்களுக்குக் கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது. நீங்க இங்கே வர்றது என்னோட அக்காவைப் பாக்குறதுக்கு- எனக்கு அது நல்லாவே தெரியும். உங்களோட பிரியம் எல்லாமே அவங்க மேலதான். எனக்கு இது தெரியாதுன்னு நெனைச் சீங்களா? ஆதாரங்களோட இதை என்னால நிரூபிக்க முடியும்.”

அவளை அப்படியே கட்டிப்பிடிச்சு அணைக்கணும்போல இருந்துச்சு எனக்கு. இருந்தாலும் நான் அதைச் செய்யல. நான் நேரா நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். இது ஒரு முக்கியமான விஷயம். நான் ஏன் அவளை முத்தமிடணும்? ஏன் அவளைக் கட்டிப்பிடிக்கணும்? என்னால அவளைக் கல்யாணம் செய்ய முடியுமா? எனக்கும் அவளுக்கும் எத்தனை வயசு வித்தியாசம் இருக்கு? என்னைவிட பதினோரு வயசு இளையவ. நான் இதையெல்லாம் உண்மையாகவே நினைச்சுப் பார்த்தேன்.  என் கைக்குள் இருக்கிற ஒரு அழகான பனிநீர் மொட்டு.

நான் எதுக்கு அதைத் தேவையில்லாம கிள்ளி வாடிப்போக வைக்கணும்? நான் இப்படியெல்லாம் சிந்திக்கிறதுக்குக் காரணம்- நான் அவளை மனப்பூர்வமா விரும்புறதுதான். நான் அடுத்த ரெண்டு மூணு நாட்கள் அந்தப் பக்கமே போகல. சூரியன் மறையிற நேரத்துக்குக் கொஞ்சம் முன்னாடி நான் சாலை வழியே கடல் பக்கம் போனேன். அவ வீட்டு முன்னாடி நான் போனேன். ஆனா, அவ வீட்டை நான் பார்க்கல. அவ வீட்டுச் சுவரை ஒட்டி நான் நடந்து போனேன். அப்போ எல்லாரும் கேட்கிற மாதிரி என்னை யாரோ கூப்பிடுறாங்க- அழுகையோட சேர்ந்து. என் பேரைச் சொல்லித்தான்! ஒரே ஒரு தடவை! கூப்பிட்டது அவதான்! வீட்டோட மாடியில அவ நின்னுக்கிட்டு இருக்கா!

நான் மேலே ஏறிப்போனேன். அவளை நெருங்க நெருங்க என் உடம்புல உஷ்ணம் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சு. என்னோட காதுகள் ரெண்டும் அடைச்சுப்போன மாதிரி இருந்துச்சு. எனக்கு அழணும்போல இருந்துச்சு.


ஒரு புதிய உலகத்துல இருந்து சந்திரன் உதிச்சு வர்றதுபோல எனக்கு முன்னாடி அவ நின்னுக்கிட்டு இருக்கா. 

நான் அவ பக்கத்துல போனேன். அவ அசையவே இல்ல. நான் அவளோட வலது பக்கத்துல நின்னேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னு முன்னாடி பார்த்தவாறு நின்னுக்கிட்டு இருந்தோம். நகரம்... வாகனங்கள்... மக்கள்... அவர்களைத் தாண்டி கடல்... சூரியன் நெருப்பு உருண்டைபோல கடலைத் தொட்டுக்கிட்டிருக்கு... நான் என்னோட இடது கையால அவ கழுத்துல கிடக்குற முடியை மேல்நோக்கித் தடவியவாறு நின்னுக்கிட்டு இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டிருக்கோம். என்னோட இதயம் வெடிச்சிடும்போல நான் உணர்ந்தேன். அவளோட உடம்புல இருந்து வர்ற மணம்! எனக்கு மூச்சையே முட்டும்போல இருந்துச்சு! நான் திரும்பிப் பார்த்தேன். அவ தன் கண்களால் என்னையே பார்த்து நின்னுக்கிட்டு இருந்தா.

நான் மெதுவா அவளோட முகத்தை ரெண்டு கைகளாலும் பிடிச்சேன். அவளோட உதட்டுல என் உதடுகளால் முத்தம் பதிச்சேன். அவ அப்படியே தளர்ந்து போய்... மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு, என்னை இறுகக் கட்டிப்பிடிச்சு முத்தமிட்டா. நான் அவ முகத்தையே பார்த்தேன்.

அவள் முகம் தீக்கனல்போல இருந்துச்சு. அந்தக் கண்கள்! அதில் மகிழ்ச்சி... திருப்தி... வெட்கம்... பயம்... உரிமை... காதல்... இப்படி எவ்வளவோ விஷயங்களை அதில் என்னால் பார்க்க முடிஞ்சது!''

அந்த கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் கூறி முடித்தபோது கூட்டத்தில் வயது அதிகமாகிப் போயிருந்த ஒரு சிறுகதை ஆசிரியர்  உணர்ச்சி வசப்பட்டு சொன்னார்:

“பேஷ்... நீ சொன்ன கதை நல்லவே இருக்கு...''

“உண்மையாகப் பார்த்தா இவர் சொன்ன கதையை ஒரு ஓவியன் ஓவியமா தீட்டணும்.'' இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சொன்னார். “இல்லாட்டி ஒரு சிற்பி சிலையா இதை வடிச்சிருக்கணும்.''

“இதைப் பற்றி ஒரு காவியமே எழுதலாம்.'' ஒரு கவிஞர் சொன்னார். “அடடா... முதல் முத்தம்!''

“ஆனால்...'' ஒரு விமர்சகன் அந்த கூச்சம் மிகுந்த இளைஞனின் இதயத்தில் கத்தியைக் குத்துவது மாதிரி கேட்டான்: “அவளை முதன் முதலா முத்தம் கொடுத்தது நீங்கதான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?''

அவன் கேட்டது சரிதானே? எல்லாரும் அதே கேள்வியைக் கேட்டார்கள்! எப்படித் தெரியும்?

“அது எனக்குத் தெரியும்'' -அந்த கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் சொன்னான். அவன் குரலில் வேதனை கலந்திருந்தது.

அவன் சொல்லிவிட்டால் போதுமா! எல்லாரும் அந்த விமர்சகனின் பக்கம் சேர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள். “எங்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவான உண்மை தெரியணும். அப்படின்னாத்தான் நாங்க ஒத்துக்குவோம்.''

கதையைச் சொல்லி முடித்த அந்த இளைஞனின் முகம் வெளிறிப்போய் இருந்தது. வாழ்க்கையில் சூடும் வெளிச்சமும் பறிபோய்விட்ட மாதிரி அவன் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

அங்கு கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்.

“இதை உன்னால தெளிவா நிரூபிக்க முடியுமா?''

அவன் சொன்னான்:

“நம்பிக்கைதான். வாழ்க்கையில இதைவிட வேறு என்ன ஆதாரம்  வேண்டி இருக்கு?''

“அப்படிச் சொன்னால் போதுமா?'' ஏதோ மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டதைப்போல் அங்கு கூடியிருந்த எல்லாரும் உரத்த குரலில் சிரித்தார்கள்.

அப்போது அந்த கூச்ச சுபாவம் உடைய இளைஞன் அங்குள்ளவர்களின் மனம் வேதனைப்படக் கூடிய விதத்தில்- யாராலும் பதில் கூற முடியாத ஒரு கேள்வியை மெதுவான குரலில் கேட்டான்:

“உங்களோட மனைவியை... இல்லாட்டி... காதலியை முதல் தடவையா முத்தமிட்டது நீங்கதான்றதுக்கு ஏதாவது ஆதாரம் உங்ககிட்ட இருக்கா? எனக்கு ஆதாரம் எதுவுமே வேண்டாம். தளர்ந்து துவண்டுபோய்க் கிடந்த அவள்... சூடாகிப்போன பிரகாசமான அவளோட முகம்... கள்ளம் கபடமில்லாத அவளோட பார்வை... நான் எப்பவும் மறக்க மாட்டேன்... அந்த முதல் முத்தத்தை!''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.