Logo

முழுமையற்ற சிலை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4038

முழுமையற்ற சிலை
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா

வுக்கார் கோவிந்தரேயின் மாளிகையிலிருந்து சாயங்காலம் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன் மாலி, சங்கரபாபாவிடம் கூறினான்:

‘பாபா, உங்களை நாளைக்கு காலையில் எஜமானன் பார்க்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்.’

நரைத்த தாடி மண்ணில் படுகிற அளவிற்கு குனிந்து அமர்ந்து, மினியுடன் ‘யானை’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த பாபா அதை கேட்டாரா என்பதென்னவோ சந்தேகம்தான்.

அதற்குப் பிறகு மாலி அதைப் பற்றி எதுவும் கூறவுமில்லை, வழக்கம்போல அன்றும் புகைந்து கொண்டிருக்கும் மண்ணெண்ணெய் விளக்கிற்கு முன்னால் அமர்ந்திருந்து அவர்கள் எல்லோரும் இரவு உணவு சாப்பிட்டார்கள். தூங்குவதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை நண்பனான ஃபிடிலை எடுத்து அன்றும் பாபா சுருதி கூட்டினார். அப்போதும் பாபாவிடம் மாலி, சவுக்காரின் விஷயத்தை நினைவுபடுத்தவில்லை.

அதனால்தான் மறுநாள் மாளிகைக்குச் சென்றவுடன், திரும்பி வந்து பாபாவை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை மாலிக்கு உண்டானது.

தன்னை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதைப் பற்றி பாபாவிற்கு எந்தவொரு வடிவமும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும்? சிலை செய்யும் அந்த செயலை பாபா நிறுத்தி சில வருடங்கள் ஆகி விட்டன. அப்போதுதான் சவுக்காருக்கு அப்படிப்பட்ட ஒரு தேவை உண்டாகிறது. சவுக்கார் கூறும்போது, மறுத்து கூறுவதும் இயலாது சங்கர பாபு குழப்பத்திற்கு ஆளானார். எப்படியாவது ஒரு சாதகமான பதிலைக் கூற வேண்டுமே!

பணத்திற்கான தேவை காரணமாக இருக்கலாம் – சவுக்காருக்குத் தோன்றியது. அதை நினைத்து ஒதுங்கிச் செல்ல வேண்டியதில்லை. கூற வேண்டியது மட்டும்தான் பாக்கி. எதை வேண்டுமானாலும் கொடுப்பதற்கு தயார். இலட்சப் பிரபு ஆயிற்றே! ஆனால், ஒரே ஒரு விஷயம்தான். கூடுமான வரை மிகவும் வேகமாக சிலையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். விநாயக சதுர்த்திக்கு அப்படியொன்றும் அதிக நாட்கள் இல்லை. அதிக பட்சம் போனால், ஒரு எட்டு நாட்கள். இதற்கிடையில் எல்லா விஷயங்களும் அவர் நினைத்ததைப் போல நடந்தே ஆக வேண்டும். களி மண், சாயம், எண்ணெய் ஆகியவற்றை பணியாட்கள் உடனடியாக பாபாவின் வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கிறார்கள். அனைத்தும் முதல் தரம் கொண்டவை! அந்த வருடம் சதுர்த்தி நாளன்று உருவாகும் கணபதி சிலைகளில் முதல் பரிசு சவுக்காரின் சிலைக்குத்தான் என்று ஊரில் உள்ளவர்களெல்லாம் தலையைக் குலுக்கி ஒத்துக் கொள்ள வேண்டும்.

கல் மோதிரம் அணிந்த விரல்களைக் கொண்டு மீசையின் ஓரத்தைத் தடவியவாறு, சவுக்கார் புன்னகைத்தார். அவருக்கு முன்னால் எளிமையின் சின்னமாக நின்று கொண்டிருந்த கிழவர் கூறினார்:

‘எனக்கு வயதாகி விட்டது. முன்பு போல எதையும்...’

‘அதெல்லாம் எனக்கு தெரியும். மறுத்து கூறக் கூடாது.’

திருவாய்க்கு எதிர் வாய் கூறாமல் பாபா திரும்பி வந்தார். அன்று மாலி பணத்தைக் கொண்டு வந்தபோது, சிலை செய்யும் விஷயத்தில் அதற்குப் பிறகு எந்தவொரு பிரச்னையும் இல்லை என்ற நிலை உண்டானது. சவுக்காரின் மானத்தைக் காப்பாற்றுவதற்கு தன்னுடைய திறமை முழுவதையும் பயன்படுத்தி பாபா முதல் தரம் கொண்ட ஒரு கணபதி சிலையைச் செய்ய வேண்டும்!

கிராமத்தில் மட்டுமல்ல – நகரத்திலும் விநாயக சதுர்த்தி இருக்கிறது. இரு திசைகளிலும் மக்கள் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டத்தின் அளவிலும் முறையிலும் வேறுபாடு தெரியலாம். கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஒருவரோடொருவர் பழகிக் கொள்வதற்கும், அன்பு செலுத்துவதற்கும், ஆசீர்வதிப்பதற்குமான ஒரு சந்தர்ப்பம் அது. நகரத்தில் இருப்பவர்களுக்கோ – தங்களுடைய பெருமையை மற்றவர்களுக்கு முன்னால் வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பம்.

அதற்கான ஒரு வழிதான் விநயாக சதுர்த்தி நாளன்று விக்னேஸ்வரனின் சிலை உருவாகுவது. யாருடைய சிலைக்கு அதிக அழகு இருக்கிறது என்ற விஷயத்தில் அதன் சொந்தக்காரருக்கு பெருமைப்பட்டுக் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் கொஞ்ச நாட்களுக்கு அது ஒரு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயமாக இருக்கும்.

எல்லோரும் கூறினார்கள் – இந்த முறை சவுக்கார்தான் பரிசைப் பெறுவாரென்று. இதற்கு முன்பும் சவுக்காரின் நிலையைக் கேள்வி கேட்பதற்கு யாருமே இருந்ததில்லை. இரண்டு மூன்று வருடங்களாக அவர் அதில் போட்டியிடவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதற்கு காரணமும் இருக்கிறது. பாபா அந்த பணியிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். பாபாவின் கணபதியே கணபதி. கணபதி என்றல்ல.... எதுவுமே! அது தவிர, சில முக்கியமான விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையும் சவுக்காருக்கு உண்டானது. ஒரு சர்க்கரை ஆலையின் தொடக்கம், நகராட்சிக்கான தேர்தல்.

இப்போது எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய சூழ்நிலை. இந்த முறை சதுர்த்தியை நன்றாக கொண்டாட வேண்டும். அருகிலும் தூரத்திலும் இருக்கக் கூடிய அன்பு செலுத்தும் அனைத்து மக்களும், உறவினர்களும் வந்து சேர்வார்கள். எதற்கும் எந்தவொரு குறையும் இருக்காது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் – இது எதுவுமே இல்லையென்றாலும் கூட, விக்னேஸ்வரனை சந்தோஷமடையச் செய்வது எப்படி பார்த்தாலும் நல்ல ஒரு விஷயம்தானே?

ஆனால், ஒரு விஷயத்தை சவுக்கார் நினைத்துப் பார்க்கவில்லை. பாபாவிற்கு வயதாகி விட்டது என்பதைத்தான். அந்த ஏழையின் சுருக்கங்கள் விழுந்த தோலைக் கொண்ட கைகளுக்கு களி மண்ணை வைத்து பணி செய்யக் கூடிய பலம் குறைவாக இருக்கிறது என்பதை.... இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் - அது ஒரு முக்கியமான விஷயமா? அப்படியும் நியாயமான ஒரு சந்தேகம் உதித்தது. சவுக்கார் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வார். நல்ல ஒரு தொகையையும் தருவார். அதற்குப் பிறகு ஏன் பாபா சிலையை உண்டாக்கக் கூடாது?

சவுக்கார் பொறுமையற்ற மனிதராக இருந்தார். அதைப் பார்த்து அவருடைய மனைவியும், பிள்ளைகளும் கூட சிரித்தார்கள். என்ன ஒரு பிடிவாதம்! ஆனால், அவருக்கு மனதில் சமாதானம் இருந்தது. சதுர்த்திக்கு இனி அதிக நாட்கள் இருக்கிறதா என்ன? இல்லை – எவ்வளவு சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நல்லது.

பாபா மீண்டும் அழைக்கப்பட்டார்.

சவுக்காரின் கேள்வியைக் கேட்கும்போதுதான், பாபாவிற்கு நினைவே வந்தது. அவர் என்ன கூறுவார்?

‘வேலை எந்த அளவில் இருக்கிறது?’

நல்ல கதை! அவர் ஒரு விஷயத்தை அப்படியே மறந்து விட்டிருக்கிறார். பாபாவிற்கு வெட்கமாக இருந்தது. வயதாகி விட்டாலும், ஒரு விஷயத்தை ஒப்படைத்தால், அதில் கவனம் இருக்க வேண்டாமா? வாழ்க்கையில் முதல் தடவையாக அப்படியொரு பிரச்னை உண்டாகியிருக்கிறது என்பதை நினைத்தபோதுதான், கிழவருக்கு மேலும் அதிகமாக கவலை உண்டானது.

சவுக்காருக்கு கோபம் உண்டானது. கடுமையான குரலில் அவர் கூறினார்:

‘நன்றி இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்தவை எதையும் மறக்கக் கூடாது.’


அது சற்று காரம் அதிகம்தான். பாபாவின் கண்களில் நீர் நிறைவதைப் பார்த்தபோது, அப்படி கூறியிருக்க வேண்டியதில்லை என்று அந்த செல்வந்தருக்குத் தோன்றியது. ஒரே நொடியில் பழைய காலங்களைப் பற்றிய நினைவு பாபாவின் மனதில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது அது. அங்கிருந்த தெருக்களின் வழியாக கலையின் காதலனாக இருந்தாலும், வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றியிருந்த எங்கிருந்தோ வந்திருந்த ஒரு இளைஞன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். சவுக்கார் தன்னுடைய மிகப் பெரிய மாளிகையைக் கட்டிக் கொண்டிருந்த காலமது. அந்த கலைஞனுக்கு சவுக்கார் உதவினார். ஆனால், அது வெறுமனே அல்ல. அந்த மாளிகையை ஒரு கனவு இல்லத்தைப் போல அழகாக ஆக்கியது அந்த கலைஞனின் கைத் திறமைதான். அவனுடைய மனமும் கையும் ஒன்று சேர்ந்து இயங்கியதன் விளைவுதான் அங்கிருந்த ஒவ்வொரு ஓவியமும்...

ஆட்கள் விசாரித்தார்கள் – இந்த புதுமை எண்ணம் கொண்ட கலைஞன் எங்கிருந்து வந்தான்? ஊர்? ஜாதி? யாருக்கும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. மாளிகை முழுமையானது. அந்த கலைஞனுக்கு கூலியும் கிடைத்தது. ஆனால், போவதற்கு அவனுக்கு ஒரு இடம் இல்லாமலிருந்தது.

அப்போதும் அவனைக் காப்பாற்றுவதற்கு சவுக்கார்தான் முன் வந்தார். தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு குடிலில் தன்னுடைய தோட்டக்காரனுடன் சேர்ந்து தங்கிக் கொள்வதற்கு சவுக்கார் அவனை அனுமதித்தார். கஷ்டம் இல்லாத விஷயம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை தனக்குக் கீழே இருக்க வைப்பதில் பெருமைப்படவும் செய்யலாம். ஆனால், அவையெல்லாம் சவுக்கார் சம்பந்தப்பட்ட விஷயங்கள். இரு கரைகளையும் பார்க்க முடியாத அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கலைஞன் அவை எதையும் சிந்திக்கவேயில்லை.

அந்த தோட்டக்காரன் மரணத்தைத் தழுவினான். அவனுடைய மகனுக்கு வேலை கிடைத்தது. அவன் திருமணம் செய்து கொண்டான். ஒரு குழந்தையின் தந்தையாக ஆனான். அப்போதும் அவன் அவர்களுடன்தான் இருந்தான்.

பழைய கதை. எனினும், பாபா அதை மறக்கவில்லை. சிறிதும் மறக்கவும் முடியாது. நினைவுகளின் ஒரு வெள்ளப் பெருக்கு அந்த கிழவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

நன்றி?

அந்த வார்த்தை ஒரு ஊசியைப் போல அவருடைய இதயத்திற்குள் நுழைந்தது. அதை பாபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீருடன் அவர் சவுக்காருக்குப் புரிய வைத்தார். தான் உயிருடன் இருந்தால், சதுர்த்தி நாளுக்கு முன்பு சிலையை உருவாக்கிக் கொடுப்பதுதான்! பயமுறுத்தும் ஒரு வாக்குமூலம்! சவுக்காருக்கு திருப்தி உண்டானது.

அந்த செயலில் ஈடுபட்ட பிறகு, அதுவரை அனுபவித்திராத சில தொந்தரவுகளை பாபா சந்திக்க வேண்டியதிருந்தது. கை முன்பைப் போல ஒத்துழைக்கவில்லை. இடைவெளியால் உண்டான குறைபாடு! அவற்றையெல்லாம் வேண்டாம் என்று நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகி விட்டனவே! அப்படியென்றால், அப்படித்தான் இருக்கும். பிறகு... முதுமையால் உண்டான சோர்வு. ஆனால், அதை பொறுத்துக் கொள்ளலாம். உடலை மட்டுமே பாதிக்கக் கூடிய விஷயங்கள்தாமே அவை! மனதையும் சேர்த்து பாதித்து விட்டால்.... சோர்வு, ஒரு சுமையாக ஆகி விடும்!

மினிதான் அந்தச் சுமையாக இருந்தாள். யாரையும் கூறி புரிய வைக்கலாம். யாரையும் தடுத்து நிறுத்தலாம். யாரிடமும் எதையும் மறுக்கலாம். ஆனால், அவளிடம் மட்டும அது எதுவும் நடக்காது. பாபா தன்னுடைய விளையாட்டுத் தோழன் என்று மினி மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த வயதான மனிதர் களி மண்ணைக் குழைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவள் ஓடிவந்து, தன்னுடைய பாபாவின் மீது விழுந்தாள். கழுத்தில் கையைப் போட்டு, அந்த வெள்ளைத் தாடியைப் பிடித்து இழுப்பதில்தான் அவளுக்கு சுவாரசியம் இருந்தது. பாபா தடுமாறினார். அவளைத் தொட்டால், அவள் மீது அழுக்கு படியும். அதனால் அந்த கிழவர் சற்று விலகி, கோபமாக இருப்பதைப் போல வேண்டுமென்றே காட்டியவாறு கூறினார்:

‘ச்சீ.... விடு... விடு.... குறும்புக்காரி...!’

மினி தன்னுடைய நண்பனை விட்டு விலகி, தூரத்தில் நின்றாள். இல்லை... அவள் இனிமேல் பாபாவுடன் பேச மாட்டாள். அவளுக்கும் கோபப்பட தெரியும். முகத்தை ‘உம்’ என்று வைத்தவாறு, அவள் அங்கேயே நின்றிருந்தாள்.

அந்த நின்று கொண்டிருக்கும் செயலைப் பார்க்காதது போல காட்டிக் கொள்வதற்கு பாபாவால் முடியவில்லை. அவர் கைகளைக் கழுவி விட்டு, அவளுக்கு முன்னால் போய் சேற்றில் முழங்காலிட்டு நின்றார். ‘யானை’ விளையாட்டு விளையாடுவதற்காக. தன் மீது ஏறி சவாரி செய்வதற்கு பாபா அவளை அழைத்தார்.

அவள் அசையவில்லை.

அந்த கோபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாபா சற்று சிரமப்பட வேண்டியதிருந்தது. அதுவும் ஒரு ஒப்பந்தத்தின் மீது, பாபா அவளுக்கு ஒரு பொம்மையைத் தயார் பண்ணி தர வேண்டும். ஒரு மறுப்பும் கூறாமல், பாபா அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றித் தந்தார். முழுமையான ஒரு பொம்மை அல்ல அது. எனினும், மினிக்கு அது புரிந்தது.

அடர்த்தியான சிவப்பு நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் இருந்த பாவாடையும், மஞ்சள் நிற இரவிக்கையும் அணிந்த, ஏழு வயது மட்டுமே உள்ள அந்த பட்டாம் பூச்சி, தான் உருவாக்கித் தந்த விளையாட்டு பொம்மையை வைத்துக் கொண்டு அங்கு சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை பாபா சாயங்கால வெயிலில் ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த கிழவரின் மனதில் சவுக்காரும் விநாயக சதுர்த்தியும் கணபதி சிலையும் அப்போது இல்லை.

ஒரு நிமிட நேரம் அவர் சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தார். வாழ்க்கையின் அந்திப் பொழுதில் ஓய்வு தேடிக் கொண்டிருக்கும் தனக்கும், வாழ்க்கை என்றால் என்னவென்று இன்னும் புரிந்து கொண்டிராத அந்த இளம் குழந்தைக்குமிடையே உள்ள உறவு என்ன என்பதைப் பற்றி.... அன்பு நிறைந்த உறவுதான்... ஆனால், எப்படிப்பட்ட அன்பு? தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை நிறைந்த சிந்தனையில் உண்டான அன்பா? அவர் தொடர்ந்து சிந்திக்கவில்லை.

இனம் புரியாத ஒரு உறவு அது – பாபாவும், மினியும்? அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள்! பாபா இல்லையென்றால், மினி இல்லை. மினி இல்லையென்றால், பாபாவும். பல வேளைகளில் மாலியே ஆச்சரியப்பட்டிருக்கிறான் – அவர்கள் இருவரும் இந்த அளவிற்கு தீவிரமாக எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஏழு வயது கொண்ட மினியும் எழுபது முடியப் போகும் பாபாவும்!

நாட்கள் கடந்து சென்றன. விநாயக சதுர்த்தி, கணபதி சிலை ஆகியவற்றைப் பற்றி பாபா திரும்பவும் மறந்து விட்டார்.


சதுர்த்திக்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும்போது, பாபாவிற்கு அந்த நினைவு வந்தது. அவர் பதைபதைப்பு அடைந்தார். இன்னும் வேலையைச் சரியாக ஆரம்பிக்கவே இல்லை. மூன்று நாட்களே இருந்தன! இதற்கிடையில் முழுமையான அளவைக் கொண்ட ஒரு சிலையை உருவாக்க வேண்டும். ஆனால், பரவாயில்லை. இரவும், பகலும் வேலை செய்வதாக இருந்தால், இயலும்.

உணவும் தூக்கமும் இல்லாமல் பாபா வேலை செய்தார். தன்னுடைய மொத்த சக்தியையும் முழுமையான முயற்சி என்ற நெருப்பு குண்டத்தில் பயன்படுத்தும் ஒரு கலைஞனின் இறுதி முயற்சியாக அது இருந்தது.

மினிக்கு முன்னால் அவருடைய கவனம் பல வேளைகளிலும் சிதறி விடும். உண்ணாமலும் உறங்காமலும் இருக்கலாம். ஆனால், மினியைப் பார்த்து விட்டு, எப்படி பார்க்காததைப் போல நடிக்க முடியும்? பெரியவருக்கு பெரிய அளவில் மனவேதனையைத் தரக் கூடிய விஷயமாக அது இருந்தது. எனினும், அவர் தன்னுடைய பணியை நிறுத்தி வைக்கவில்லை.

மறுநாளும் மினி களி மண்ணை வைத்து சிலையை உருவாக்கும் பாபாவின் அருகில் போய் அமர்ந்திருந்தாள். ஆனால், அவள் மேலே ஏறவோ, தாடியைப் பிடித்து இழுக்கவோ செய்யவில்லை. கவலையின் நிழல் பதிந்த முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு தூரத்தில் நிற்க மட்டும் செய்தாள். ஒன்றிரண்டு முறைகள் பாபா தலையை உயர்த்திப் பார்த்தார். ஆனால், அதிக நேரம் அப்படியே நின்று கொண்டிருக்கவில்லை. சிலையை முழுமை செய்ய வேண்டுமே!

சதுர்த்திக்கு முந்தைய நாள் சாயங்காலம் கணபதி சிலை தயாராகி விட்டது. பாபாவின் இதயத்தில் நிம்மதியும் முழுமையான திருப்தியும் வழிந்து ஒழுகின. இனி சாயம் பூசும் வேலை மட்டும் பாக்கி இருந்தது. அதையும் செய்து முடித்து விட்டால், வேலை முழுமையாக முடிந்து விடும். அதற்கு அதிக நேரம் எதுவும் தேவையில்லை. சில மணி நேரங்கள் மட்டும் போதும்.

பாபாவிற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அவருக்கு ஒரு வெறுமை தோன்றியது. அந்த நினைவு தடுத்து வைக்கப்பட்ட நீர், அணைக்கட்டின் மதகை உயர்த்தும்போது, வேகமாக பாய்ந்து ஓடுவதைப் போல, அதன் முழு பலத்துடன் காணப்பட்டது. மினி! அவள் எங்கு போனாள்? அன்று முழுவதும் பாபா அவளைப் பார்க்கவில்லை. அப்போது மட்டும்தான் பாபாவிற்கு அந்த ஞாபகம் உண்டானது. நினைக்க... நினைக்க பாபாவிற்கு தலையைச் சுற்றுவதைப் போல தோன்றியது.

பொறுமையை இழந்த அந்த கிழவர் மினியை அங்கு எல்லா இடங்களிலும் தேடினார். சாயங்கால நேரம். பொதுவாக அந்த நேரத்தில்தான் அவள் பாபாவிடம் மிகவும் அதிகமாக குறும்புத்தனங்களைக் காட்டுவாள். ஆனால், பாபா அங்கு எந்த இடத்திலும் மினியைப் பார்க்கவில்லை.

அந்த நாளின் மாலை வேளையில் வாடி விழப் போகும் மலரைப் போல மினி, அறைக்குள் மயங்கி கிடந்தாள். அந்த காட்சியைப் பார்த்ததும், பாபாவின் சரீரம் முழுவதும் குளிர்ந்து மரத்துப் போனது. அந்தக் குழந்தையின் அருகில் அவளுடைய தந்தையும், தாயும் இல்லை. இருவரும் வெளியே வேலைக்குச் சென்றிருந்தார்கள்.

வெளிறிய முகத்தை படுக்கையில் அழுத்தி வைத்தவாறு அவள் படுத்திருந்தாள். அருகில் சென்று அவளுடைய நெற்றியை மெதுவாக வருடியவாறு பாபா அழைத்தார்:

‘மினீ.... மினீ.... இதோ... உன்னுடைய பாபா... நீ பார்க்க வேண்டாமா?’

அந்தச் சிறிய குழந்தையின் நெற்றி சூடாக இருந்தது. அவள் கண்களைத் திறந்து பார்த்தாள் – சிறிது நேரத்திற்கு மட்டும். பாபாவை அவள் பார்த்தாளோ என்னவோ? எனினும், அவளுடைய கண்களில் சந்தோஷத்தின் ஒரு வானவில் நொடி நேரத்திற்கு பிரகாசமாக தோன்றியது. அவளுடைய சிறிய அளவில் விரிந்திருந்த உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது. அவள் ஏதோ கனவு காண்பதைப் போல பாபாவிற்குத் தோன்றியது.

காய்ச்சலின் ஆரம்பமாக இருந்தது.

இரவில் விளக்குடன் சிலைக்கு முன்னால் சாயத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், பாபாவால் பணியைத் தொடர முடியவில்லை. கண்களுக்குள் இருட்டு நுழைவதைப் போல இருந்தது. நிமிடங்கள் கடந்து செல்லச் செல்ல, மினியைப் பற்றிய நினைப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. வழக்கம்போல தன்னுடைய கொஞ்சுதலுக்காக அவள் வந்தபோது, எந்த அளவிற்கு கொடூரமாக தான் நடந்து கொண்டோம் என்பதை நினைத்துப் பார்த்த நிமிடத்தில் பாபாவின் தலையிலிருந்து பாதம் வரை வியர்த்தது. காய்ச்சலின் ஆரம்பத்தில் அவள் அவரைத் தேடி வந்திருக்க வேண்டும். அவளுடைய ஆசைகள்...

பாபாவின் கையிலிருந்து பாத்திரம் கீழே விழுந்து, சாயம் தரையில் கொட்டியது. அந்த சிலையின் பார்வையே அவருக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஒன்றாகப் பட்டது. பார்க்கப் பார்க்க அதற்கு எதிராக ஒரு வெறுப்புணர்வு பாபாவின் இதயத்தில் எழ ஆரம்பித்தது. அது இல்லாமற் போயிருந்தால், மினிக்கு நோய் பாதித்திருக்காது. அவருக்கு அப்படித்தான் தோன்றியது. சவுக்காரின் புகழையும், பணப் பெருமையையும்தான் அந்த கணபதி சிலைகளில் அவர் பார்த்தார். ப்ளேக் நோயாலோ, காலராவாலோ பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து அதிர்ச்சியடைந்து விலகுவதைப் போல, பாபா வெறுப்புடன் அந்தச் சிலைக்கு முன்னாலிருந்து எழுந்து நடந்தார்.

வாழ்க்கையில் முதல் முறையாக யாரின் மீதாவது பாபா அன்பு வைத்தார் என்றால், அது மினியின் மீதுதான். அதற்கு முன்பு அன்பின் சக்தியை அவர் உணர்ந்திருக்கிறார் – ஃபிடிலின் மீதும், சாயத்தின் மீதும், களி மண்ணின் மீதும்தான் அது இருந்தது என்பது மட்டும்தான் உண்மை. தன்னைப் போல இருக்கும் ஒரு மனித ஆன்மாவின் மீது இதயம் திறந்து அன்பு செலுத்த பாபாவிற்கு மிகவும் தாமதமாகத்தான் முடிந்தது.

அன்று இரவு பாபா மினிக்கு அருகில் தூக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு அமர்ந்து, நீண்ட நேரம் தன்னுடைய பழைய ஃபிடிலை மீட்டினார். பிணக் கட்டிலை அலங்கரிக்கும் இறுதி ஆடையைப் போல, அந்த அறையை மூடிக் கொண்டிருந்த பேரமைதியில், கம்பியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த சோக ரசம் கொண்ட சப்தம் கரைந்து இணைந்தது. ஆனால், பாபா தாமதமாகி விட்டார். மினி அவை எதையும் கேட்கவில்லை. காய்ச்சலின் கடுமையால் அந்த குழந்தை வாய்க்கு வந்ததையெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

குற்றவுணர்வு கிழவரை அந்த அறைக்குள்ளிருந்து வெளியேற்றியது. நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் அவர் வெளியேறி நடந்தார். எங்கே போகிறோம் என்பதைப் பற்றி அவருக்கே எந்தவொரு வடிவமும் இல்லாமலிருந்தது.

சவுக்காரால் பங்கு பெற முடியாமற் போய் விட்டாலும், சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தன்னை உருவாக்கியவர் மீண்டும் வர மாட்டாரா என்பதை எதிர்பார்த்தவாறு, முழுமையற்ற அந்த சிலை சிறிது காலம் அனாதையாக அங்கேயே கிடந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.