Logo

ஒரு இலையுதிர் கால மாலை வேளை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5029
oru-ilaiyudhir-kaala-maalai-velai

ஒரு இலையுதிர் கால மாலை வேளை

மாக்ஸிம் கார்க்கி

தமிழில் : சுரா

ரு இலையுதிர் கால மாலை வேளையில் நான் தாங்கிக் கொள்ள முடியாத, சந்தோஷமற்ற நிலையில் இருந்தேன். நான் சமீபத்தில் வந்து சேர்ந்த நகரத்தில் கையில் காசு எதுவும் இல்லாமல், தலைக்கு மேலே ஒரு கூரை இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். அந்த ஊரில் எனக்குத் தெரிந்தவர் என்று கூறுவதற்கு ஒருவர் கூட இல்லை.

என்னிடம் இருந்த துணிகளில் தேவையற்றது என்று நினைத்த ஒரு துண்டுத் துணியைக் கூட விற்று விட்டு, நகரத்தை விட்டு நீங்கி, புறப் பகுதியில் இருந்த உஸ்ட்டை என்ற இடத்திற்குக் கிளம்பினேன். அங்குதான் ஏற்றுமதி, இறக்குமதி செய்யக் கூடிய இடங்கள் இருக்கின்றன. கப்பல் ஓடும் நாட்களில் அந்த இடம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், இப்போது அது மிகவும் அமைதியாகவும், அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களை நகர்த்திக் கொண்டும் இருந்தது.

ஈரமாக இருந்த மணலில் நடந்தவாறு, ஏதாவது மிச்சம் மீதி உணவு கிடைக்காதா என்று அதை உண்ணிப்பாக கூர்ந்து கொண்டிருந்தான். ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாக கிடந்த கட்டிடங்களுக்கும், கடைகளுக்கும் மத்தியில் நான் சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு முழு சாப்பாடு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது நான் நினைத்தேன்.

இப்போதைய நம்முடைய வாழ்க்கை முறையில் உடலின் பசியை விட மனதின் பசியை மிகவும் எளிதாக சரி பண்ணி விட முடியும். நீங்கள் தெருக்களின் வழியாக சுற்றிக் கொண்டிருப்பீர்கள், அருமையான புறத் தோற்றத்துடன் உங்களைச் சுற்றி கட்டிடங்கள் நின்று கொண்டிருக்கும். உள்ளேயும் அவை அழகாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வந்து விடுவீர்கள். கட்டிடக் கலை, சுகாதாரம் - இவை போன்ற முக்கியமான தலைப்புகள் எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதற்கான ஒரு நடைமுறையை அது ஆரம்பித்து வைக்கலாம். நீங்கள் அதற்குப் பொருத்தமான, நன்கு ஆடைகள் அணிந்திருக்கும் மனிதர்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் மிகவும் நாகரீக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உங்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். உங்களிடம் குடி கொண்டிருக்கும் சோகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் கவனித்து விடவே கூடாது என்பதில் தந்திர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உண்மையிலேயே சொல்வதாக இருந்தால்- சாப்பிட்டு இருக்கக் கூடிய ஒரு மனிதனின் மனதை விட பசியில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனின் மனம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். நன்றாக சாப்பிட்டு இருக்கக் கூடிய ஒரு மனிதனைப் பற்றி எண்ணும்போது, கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு முடிவு வெளிப்படுத்தும் உண்மை இதுதான்.

மாலைப் பொழுதின் ஆட்சி அதிகமாக பரவிக் கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது. வடக்கு திசையிலிருந்து காற்று பலமாக வீசியடித்துக் கொண்டிருந்தது. காலியாகக் கிடந்த கட்டிடங்கள், கடைகள் வழியாக அது ஓசை உண்டாக்கியவாறு, வாடகைக்கு தங்கும் விடுதிகளின் சாளரங்களில் மோதிக் கொண்டிருந்தது. காற்று வீசிக் கொண்டிருக்க, அதற்குக் கீழே நதி நுரையுடன் ஓடிக் கொண்டிருந்தது. அதன் அலைகள் மணல் நிறைந்த கரையில் சத்தமாக அடித்துக் கொண்டிந்தது. அவை தங்களுடைய வெண்ணிற நுரையை ஒன்றின் மீது ஒன்று ஏறும் வண்ணம், தூரத்து இருட்டை நோக்கி வேகமாக பாயச் செய்து கொண்டிருந்தன. குளிர் காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நதி உணர்ந்திருப்பதைப் போல தோன்றியது. பனியின் ஆகிரமிப்பிற்கு பயந்து அது வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அதை வடக்கு திசையிலிருந்து வீசிய காற்று சங்கிலி போட்டு அந்த இரவு வேளையில் கட்டி நிறுத்திக் கொண்டிருந்தது. வானம் மிகவும் அடர்த்தியானதாகவும் கட்டி நிறுத்திக் கொண்டிருந்தது. வானம் மிகவும் அடர்த்தியானதாகவும் தாழ்வான நிலையிலும் காணப்பட்டது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இரண்டு பட்டைகள் கொண்ட ஒழுங்கற்று வளர்ந்திருந்த  வில்லோ மரங்களும், அவற்றின் வேர்கள் இருந்த பகுதியில் தலை கீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு படகும் தங்களைச் சுற்றியிருந்த இயற்கையின் மரணத்தின் போது இருக்கக் கூடிய சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அடிப் பகுதி உடைந்து போய் காணப்பட்ட ஒரு படகு, குளிர் காற்று மோதி, பரிதாபப்படும் நிலையில் இருந்த வயதான மரங்கள்... அனைத்தும் நாசமாகி விட்டிருந்தன. அவை எதுவுமே இல்லாமல், மரணத்தைத் தழுவியிருந்தன. வானம் சிறிதும் நிறுத்தாமல் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றிலும் ஒரே இருண்ட வெற்றிடம்... அந்த மரணத்திற்கு மத்தியில் நான் மட்டுமே உயிருடன் இருக்கக் கூடியவன் என்பதைப் போல எனக்கு தோன்றியது. அந்த மரத்துப் போன மரணம் என்னையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதைப் போல நான் உணர்ந்தேன்.

அப்போது எனக்கு பதினேழு வயதுதான்- ஒரு அருமையான வயது!

குளிர்ந்து போய் காணப்பட்ட, ஈரமான மணலின் வழியாக நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். குளிராலும் பசியாலும் பற்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருந்தன. எதுவுமே இல்லாத நிலையில், நான் உணவிற்காக தேடினேன். நான் ஒரு கடையையே சுற்றிச் சுற்றி வந்தேன். பெண்களின் ஆடைகளை அணிந்திருந்த ஒரு ஒடுங்கிப் போன உருவத்தை நான் கவனித்தேன். அந்த ஆடைகள் மழையில் நனைந்திருந்தன. அவை அந்த உருவத்தின் வளைந்த தோள்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளுக்கு எதிரில் நின்று, அவள் என்ன செய்கிறாள் என்பதைப் பார்ப்பதற்கு நான் முயற்சி செய்தேன். அவள் தன்னுடைய கைகளால் மணலைத் தோண்டிக் கொண்டிருந்தாள். அதன் மூலம் அங்கிருந்த கடைகளின் ஒன்றிற்குள் நுழைவதற்கு அவள் முயன்று கொண்டிருந்தாள்.

'நீ ஏன் அதைச் செய்கிறாய்?'- அவளுக்கு அருகில் நின்று கொண்டு நான் கேட்டேன்.


அவள் மெதுவான குரலில் அழுது கொண்டே குதித்தாள். இப்போது அவள் நின்று, முழுமையாக பயம் நிறைந்து விட்டிருந்த, தன்னுடைய அகல திறந்த, சாம்பல் நிற கண்களைக் கொண்டு என்னையே பார்த்தாள். என் வயதைக் கொண்ட ஒரு பெண் அவள் என்பதை நான் பார்த்தேன். அவளுடைய முகம் மிகவும் அழகாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மூன்று பெரிய சிராய்ப்புகள் இருந்தன. அது அந்த முகத்தின் அழகைக் கெடுத்தது. அதே நேரத்தில்- அவை குறிப்பிடத்தக்க ஒழுங்கமைப்பில் இருந்தன. அவற்றில் இரண்டு ஒரே அளவைக் கொண்டிருந்தன. அவை கண்களுக்குக் கீழே இருந்தன. இன்னொன்று மூக்குத் தண்டுக்கு மேலே பெரிய அளவில், நெற்றியில் இருந்தது. மனித முகங்களைப் படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு கை தேர்ந்த கலைஞனின் கை வண்ணம் அந்த ஒழுங்கமைப்பில் வெளிப்பட்டது.

அந்த இளம் பெண் என்னையே பார்த்தாள். படிப்படியாக பயம் அவளுடைய கண்களிலிருந்து காணாமற் போயின. தன்னுடைய கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த மணலை அவள் தட்டி விட்டாள். தன் தலையில் கட்டியிருந்த பருத்தித் துணியால் ஆன கைக்குட்டையைச் சரி பண்ணினாள். தன் தோள்களை முன்னோக்கி வளைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:-

'உனக்கும் உணவு தேவைப்படும்னு நான் நினைகிறேன். போய் தோண்டு. என் கைகள் சோர்ந்து போய் விட்டன. அங்கே பார்...'- அவள் ஒரு கடை இருந்த பக்கம் தலையை ஆட்டியவாறு சொன்னாள்:- 'அங்கே கட்டாயம் ரொட்டி இருக்கும். அந்த கடையில் இப்போது கூட அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.'

நான் தோண்ட ஆரம்பித்தேன். சிறிது நேரம் காத்திருந்து, என்னை கவனித்து விட்டு, எனக்கு அருகில் உட்கார்ந்து அவள் எனக்கு உதவ ஆரம்பித்தாள்.

நாங்கள் மிகவும் அமைதியாக வேலை செய்தோம். அந்த நேரத்தில் குற்றச் செயல் என்றால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் என் மனதில் இருந்தது என்று இப்போது நான் கூற மாட்டேன். ஒழுக்கம், சொத்துரிமை- இவை போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் நன்கு தெரிந்திருக்கும் மனிதர்கள் கூறுவதைப் போல, ஒருவன் தன்னுடைய ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். முடிந்த வரைக்கும் உண்மையானவனாக இருக்க வேண்டும்.

கடைக்குக் கீழே தோண்டுவதில் நான் மிகவும் சுறுசுறுப்புடன் இருந்தேன் என்பதை நான் கட்டாயம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அந்த கடையில் என்ன இருக்கும் என்ற ஒன்றைத் தவிர, நான் எல்லா விஷயங்களையும் முற்றிலும் மறந்து விட்டேன்.

இரவு நெருங்க நெருங்க, எங்களைச் சுற்றி குளிரும், ஈரமும், அடர்ந்த இருட்டும் மூட ஆரம்பித்தன. அலைகளின் சத்தம் சற்று அடங்கி கேட்டுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் - கடையின் பெயர் பலகைகளின் மீது மழை வேகமாக மோதி, உரத்த ஓசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. இரவு காவலாளியின் சத்தம் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தது.

'கடையின் தரைப் பகுதி தெரிகிறதா?' - எனக்கு உதவிக் கொண்டிருந்த இளம் பெண் ஒரு தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் என்ன சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எதுவும் கூறாமல் இருந்தேன்.

'நான் என்ன கேட்கிறேன் என்றால்... இந்த கடைக்கு தரைப் பகுதி தெரிகிறதா? அப்படி தெரிந்தால், நாம் ஒரு பிரயோஜனம் இல்லாத காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு குழியைத் தோண்டிய பிறகு, அதைத் தாண்டி கனமான பலகைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதை எப்படி உடைப்பது? பூட்டை உடைப்பது நல்லது என்று நினைக்கிறேன். பூட்டு அப்படியொன்றும் பெரிதாக இருக்காது.'

பெண்களின் மனங்களுக்குள் நல்ல திட்டங்கள் மிகவும் அரிதாகவே உதிக்கும். ஆனால், நீங்களே பார்க்கலாம்... அப்படிப்பட்ட விஷயங்கள் பல நேரங்களில் உண்டாகும். நல்ல திட்டங்களை நான் எப்போதும் மிகுந்த மதிப்புடன் நினைப்பேன். அவற்றை வைத்து ஆதாயம் அடைய வேண்டும் என்று முடிந்த வரைக்கும் நான் முயற்சி செய்து பார்ப்பேன்.

தாழ்ப்பாள் எங்கே இருக்கிறது என்று கவனித்த நான், அதைப் பிடித்து இழுத்து, வளையங்களுடன் கழற்றி தனியாக எடுத்தேன். எனக்கு உதவிக் கொண்டிருந்த இளம் பெண் உடனடியாக குனிந்து, கடையின் சதுர வடிவத்திலிருந்த வாசல் வழியாக ஒரு பாம்பு ஊர்வதைப்போல ஊர்ந்து சென்றாள். உள்ளே இருந்து அவளுடைய பாராட்டும் குரல் வெளியே வந்தது:

'அருமையான வேலை!'

அந்தக் காலத்திலிருந்த எல்லா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்களையும் ஒட்டு மொத்தமாக எடுத்து, அவர்களிடம் இருக்கக் கூடிய மிகச் சிறந்த தகுதிகள் அத்தனையும் இருக்கக் கூடிய ஒரு மனிதனின் புகழ்ச்சியை விட, ஒரு பெண்ணிடமிருந்து வரக் கூடிய சிறிய புகழ்ச்சியைத்தான் நான் பெரிதாக நினைப்பேன். ஆனால், இப்போது நான் பாராட்டப்படுவதை விட, அந்த நாட்களில் நான் மிகவும் குறைவாகவே பாராட்டப்பட்டேன். அந்த  இளம் பெண்ணின் பாராட்டில் சிறிது கூட கவனமே செலுத்தாமல், நான் அவளிடம் சுருக்கமாகவும் ஆர்வத்துடனும் கேட்டேன்:

'அங்கே ஏதாவது இருக்கா?'

அவள் தான் கண்டு பிடித்திருக்கும் பொருட்களை ஒரே தொனியில் கூற ஆரம்பித்தாள்:

'புட்டிகள் உள்ள ஒரு கூடை, காலியான கோணிகள், ஒரு குடை, ஒரு இரும்பு வாளி...'

அவை எதுவுமே சாப்பிடக் கூடியவை அல்ல. என்னுடைய நம்பிக்கைகள் மூழ்கிக் கொண்டிருப்பதைப் போல நான் உணர்ந்தேன். திடீரென்று அவள் உற்சாகக் குரலில் கத்தினாள்:

'ஆஹா! அதோ இருக்கு!'

'என்ன?'

'ஒரு ரொட்டி... ஆனால், அது ஈரமா இருக்கு. அதை எடுக்குறேன்!'

ஒரு ரொட்டி என் பாதத்திற்கு அருகில் உருண்டோடியது. அதைத் தொடர்ந்து என்னுடைய தைரியசாலியான அந்த உதவியாளரும். நான் ஏற்கெனவே ஒரு துண்டு ரொட்டியைப் பிய்த்து என் வாய்க்குள் போட்டு, மெல்ல ஆரம்பித்தேன்.

'எனக்கு கொஞ்சம் கொடு,,, நாம் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும். நாம் எங்கே போவது?'- அவள் எல்லா திசைகளிலும் மூடியிருந்த ஈரமான, சத்தம் நிறைந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அங்கே... தலை கீழாக கவிழ்ந்திருக்கும் ஒரு படகு இருக்குது. நாம அதை நோக்கி போவோமா?'


'போவோம்!'- நாங்கள் புறப்பட்டோம். போகும்போதே எங்களிடமிருந்த ரொட்டியை துண்டு துண்டாக பிய்த்து, வாய்க்குள் போட்டு தின்றோம். மழை மிகவும் பலமாக பெய்து கொண்டிருந்தது. நதி பயங்கரமான இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது. அது எங்கோ தூரத்திலிருந்து கேலி செய்து ஊதும் விஷிலைப் போலவும், இந்த மோசமான இலையுதிர் கால மாலை வேளையில் எதற்கும் பயமில்லாத ஏதோ அரக்கன் பூமியில் உள்ள அனைத்து பொருட்களின் மீதும் அதன் கதாநாயகர்களான எங்களின் மீதும் ஆசையுடன் மோதுவதைப் போலவும்- பார்க்கும்போது இருந்தது. அந்த சத்தம் என்னுடைய இதயத்தில் வேதனையை உண்டாக்கியது. நான் இந்த அளவிற்கு வெறி பிடித்து, இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் சாப்பிட்டதே இல்லை. அந்த இளம் பெண்ணும் அப்படித்தான். அவள் என்னுடைய இடது பக்கத்தில் நடந்து வந்து பொண்டிருந்தாள்.

'உன் பெயர் என்ன?'- ஏன் கேட்டோம் என்று தெரியாமலே நான் கேட்டேன்.

'நடாஷா'- அவள் சத்தமாக மென்று கொண்டே பதில் கூறினாள்.

நான் அவளையே பார்த்தேன் என் இதய வேதனை குறைந்ததைப் போல இருந்தது எனக்கு முன்னால் கவிந்திருந்த இருட்டையே நான் பார்த்தேன். மோசமான நிலையிலிருந்த என்னுடைய விதி என்னைப் பார்த்து புதிர் தன்மையுடனும், எந்தவித உணர்ச்சி இல்லாமலும் சிரிப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

மழை படகின் மீது சிறிதும் சோர்வடையாமல் ஓசை உண்டாக்கியவாறு பெய்து கொண்டேயிருந்தது. அது எழுப்பிய சிறு சத்தம் சோகமான சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்தது. உடைந்திருந்த அடிப் பகுதியிலிருந்த ஒரு சிறு துளைக்குள் நுழைந்தபோது, காற்று விஷிலடித்தது. அதற்கு அருகில் எதனுடனும் பிணைக்கப்படாமல் இருந்த ஒரு குச்சி, ஓசை உண்டாக்கி, ஒரு முனகல் சத்தத்துடன் அதிர்ந்து கொண்டிருந்தது. அலைகள் கரையின் மீது வேகமாக மோதிக் கொண்டிருந்தன. அவற்றின் இரைச்சல் சத்தம் ஒரே சீரான தன்மையுடனும், நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதைப் போன்றும் இருந்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் பயங்கரமாக இருக்கக் கூடியதாகவும், அழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும் இருக்கக் கூடிய ஏதோவொன்றைப் பற்றி அவை வெளியே கூற நினைப்பதைப் போல இருந்தது. அதை பார்த்துப் பார்த்து களைத்துப் போனதைப் போலவும், அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு முயல்வதைப் போலவும் அதனுடைய செயல் இருந்தது. அதே நேரத்தில்- அதைப் பற்றி அது தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தது. மழையின் ஓசை அலைகளின் ஆர்ப்பரிப்புடன் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது. தலை கீழாக கவிழ்ந்து கிடந்த படகிற்கு மேலே முடிவற்று நீண்டு கொண்டிருந்த வெப்பம் நிறைந்த கோடையின் மீது கோபமும் எரிச்சலும் அடைந்து, குளிர்ந்த... ஈரமான... பனி முடிய இலையுதிர் காலம பூமிக்கு ஆறுதல் உண்டாக்குவதைப் போல அது உரத்து சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆள் அரவமற்ற கரையை நோக்கி காற்று வீசிக் கொண்டிருந்தது. நுரைந்து பொங்கிக் கொண்டிருந்த நதி அசைந்து கொண்டே, சோக பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தது.

படகிற்குக் கீழே நாங்கள் இருந்த இடம் எந்தவித சவுகரியங்களும் இல்லாமல் இருந்தது. அது அலங்கோலமாக சிதிலமடைந்து, ஈரமாக காணப்பட்டது. அடியிலிருந்த துளையின் வழியாக மழையின் அழகான, குளிர்ச்சியான துளிகளும் காற்றின் வீச்சுகளும் வந்து கொண்டிருந்தன. நாங்கள் மிகவும் அமைதியாக, குளிரில் நடுங்கிக் கொண்டே உட்கார்ந்திருந்தோம். நான் தூங்குவதற்கு விரும்பினேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். நடாஷா தன் முதுகை படகின் பக்கவாட்டில் சாய்த்துக் கொண்டு, ஒரு சிறிய பந்தைப் போல சுருண்ட நிலையில் காணப்பட்டாள். தன்னுடைய முழங்காலைக் கட்டிக் கொண்டு, தன்னுயை தாடையை அதன் மீது வைத்துக் கொண்டு, கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு அவள் நதியையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்திலிருந்த வெளிறிப் போன நிறம், அதற்குக் கீழே இருக்கும் சிராய்ப்புகளால் மிகவும் பயங்கரமாக தெரிந்தது. அவள் சிறிது கூட அசையவில்லை. அவளுடைய அசைவற்ற தன்மையும், அமைதியாக இருந்ததும் படிப்படியாக எனக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது. நான் அவளிடம் பேச வேண்டும் என்று விருப்பினேன். ஆனால், அதை எப்படி ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை.

அவள்தான் முதலில் பேசினாள்.

'என்ன நாசபாப் போன வாழ்க்கை!'- அவள் கூறினாள். அவளுடைய பேச்சு தனித்துவம் நிறைந்ததாகவும், வெளிப்படையானதாகவும், முழுமையாக தீர்மானிக்கப்பட்டதாகவும் இருந்தது.

அது ஒரு புகாராக இருக்கவில்லை. அவளுடைய குரலில் ஒரு மாறுபட்ட தன்மை இருந்தது. அதைப் பற்றி அவள் பல தடவைகள் திரும்பத் திரும்ப சிந்தித்திருக்கிறாள், பின்னர் ஒரு இறுதி தீர்மானத்திற்கு வந்திருக்கிறாள். அதை உரத்த குரலில் வெளியே கூறியிருக்கிறாள்- இதுதான் உண்மை. என்னை முரண்பாடாக நானே நினைக்காமல், அதை என்னால் மறுத்துப் பேச முடியாததால், நான் மிகவும் அமைதியாக இருந்தேன். அவள் அதே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு, எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தாள். என்னை கவனிக்காதது மாதிரியும் காட்டிக் கொண்டாள்.

'நான் வெடித்தால்...'- நடாஷா மீண்டும் ஆரம்பித்தாள். இந்த முறை அவளுடைய குரல் மிகவும் அமைதியானதாகவும், தெளிவு கொண்டதாகவும் இருந்தது. இப்போது அவளுடைய குரலில் எந்தவித புகாரும் இல்லை. வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கையையே அலசி ஆராய்ந்து பார்த்து, அவள் அமைதியாக இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதன் மூலம் வாழ்க்கையின் கிண்டல்களிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவள் தீர்மானித்தாள். அவள் வேறு எதுவும் செய்ய முடியாது. தான் கூறியதைப் போல உரத்த குரலில் அவளால் 'வெடிக்க' மட்டுமே முடியும்.

அவளுடைய சிந்தனையிலிருந்த தெளிவு, வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு என்னை பாடாய் படுத்தியது. இப்படியே இன்னும் அமைதியாக இருந்து கொண்டிருந்தால், கட்டாயம் அழுது விடுவேன் என்று எனக்கு தோன்றியது. அந்த இளம் பெண்ணுக்கு முன்னால் அதைச் செய்வதற்கு எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. குறிப்பாக- அவள் அழாமல் இருக்கும் சூழ்நிலையில். உரையாடலில் அவளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.


'உன்னை யார் அடித்தது?'- நான் அவளிடம் கேட்டேன். பெரிய அளவில் எதையும் மனதில் நினைக்க வேண்டுமென்றோ, அல்லது அவளிடம் ஏதாவது கூற வேண்டுமென்றோ நான் நினைக்வில்லை.

'பாஸ்கா...'- அவள் அதிர்வு கலந்த குரலில் கூறினாள்.

'அவன் யார்?'

'என் காதலன்... ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவன்.'

'அவன் உன்னை அடிக்கடி அடிப்பானா?'

'எப்போதெல்லாம் மது அருந்துகிறானோ, அப்போதெல்லாம் அவன் என்னை அடிப்பான்.'

திடீரென்று என்னை நெருங்கி வந்த அவள் தன்னைப் பற்றியும் பாஸ்காவைப் பற்றியும், அவர்களுக்கிடையே நிலவிய உறவைப் பற்றியும் என்னிடம் கூற ஆரம்பித்தாள். அவள் ஒரு ஏழை இளம் பெண். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவன் சிவப்பு நிற மீசையைக் கொண்ட ஒரு இளைஞன். ஹார்மோனிக்காவை மிகவும் அருமையாக இசைப்பான். அவன் அவளுடைய வீட்டிற்கு வந்தான். அவன் மிகவும் தமாஷாக பேசக் கூடியவன் என்பதாலும், சுத்தமாக ஆடைகள் அணியக் கூடியவன் என்பதாலும், அவனை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது அவன் பதினைந்து ரூபிள்கள் விலை மதிப்புளள ஒரு கோட்டையும் அக்கார்டியன் இசை ஒலிக்கும் ஷூக்களையும் அணிந்திருப்பான். இந்த காரணங்களுக்காக அவள் அவனுடைய காதல் வலையில் விழுந்தாள். அவன் அவளுடைய 'ஆளாக' ஆனான். அந்த அளவிற்கு தனகென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அவன் மற்ற விருந்தாளிகள் இனிப்புகள் வாங்குவதற்காக அவளிடம் கொடுத்திருந்த பணத்தைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தான். அந்த பணத்தைக் கொண்டு மது அருந்தி விட்டு, அவளை அவன் அடிக்க ஆரம்பித்தான். இதை விட மோசமான விஷயம் என்னவென்றால், அவளுடைய கண்களுக்கு எதிரிலேயே அவன் மற்ற இளம் பெண்களுடனும் பழகிக் கொண்டிருந்தான்.

'அந்தச் செயல்கள் என்னை காயப்படுத்தாதா? மற்றவர்களை விட நானொன்றும் மோசமல்ல. அவன் என்னை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அயோக்கியப் பயல்! முந்தா நாள் நான் எஜமானி அம்மாவிடம் கூறி விட்டு 'வாக்கிங்' கிளம்பினேன். நான் அவனுடைய இடத்திற்குச் சென்றேன். துன்கா அவனுடன் உட்கார்ந்து, மது அருந்திக் கொண்டிருக்கிறாள். அவனும் முழு போதையில் இருந்தான். நான் அவனைப் பார்த்து சொன்னேன்- 'நீ அயோக்கியன்... நீ போக்கிரி'ன்னு. அவன் எனக்கு ஏராளமான அடிகளைக் கொடுத்தான். அவன் என்னை கால்களால் உதைத்தான். என்னுடைய தலை முடியைப் பிடித்து இழுத்தான். இது இல்லாமல், இன்னும் என்னென்னவோ... இவ்வளவும் செய்த பிறகும் கூட, நான் அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பேன். ஆனால், அவன் என் ஆடைகளைக் கிழிக்க ஆரம்பிச்சான். இப்போ நான் என்ன செய்வது? இந்தக் கோலத்தோட நான் எஜமானி அம்மாவுக்கு முன்னால் எப்படி போய் நிற்பது? அவன் என் ஆடையில இருந்த ஒவ்வொண்ணையும் பிடிச்சு தாறுமாறாக கிழிச்சான். என் ஜாக்கெட்... அது இப்போதான் வாங்கியது. என் தலையில இருந்த கைக்குட்டையைப் பிடிச்சு இழுத்தான். கடவுளே! இப்போ என் நிலைமை என்ன?'- திடீரென்று அவள் ஒரு ஆவேசமான, உடைந்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

காற்று ஓசை உண்டாக்கியவாறு, பலமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர் அதிகமாகவும், கூர்மையாகவும் தொடங்கியது. என் பற்கள் தாளம் போட ஆரம்பித்தன. அவளும் குளிரில் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்து கொண்டு அழுத்தினாள். அதனால் அந்த இருட்டில் அவளுடைய பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களை என்னால் பார்க்க முடிந்தது.

'நீங்க ஆம்பளைங்க எல்லாரும் எந்த அளவிற்கு துஷ்டர்களாக இருக்கீங்க! நான் உங்களை மிதிக்க நினைக்கிறேன். நான் உங்களை ஊனமாகக்க விரும்புறேன். உங்களில் யாராவது ஒருத்தன் சத்தம் போட்டு வெடித்தால், நான் எந்தவித இரக்கமும் இல்லாமல் அவன் மேல காறித் துப்புவேன். கேவலமான... ஈனப் பிறவிகள்! நீங்க இனிக்க இனிக்க பேசுவீங்க. நீங்க உங்களோட வால்களை கேவலமான பிறவிகளைப் போல ஆட்டிக்கிட்டு திரியிறது! நாங்க எங்களையே ஒரு முறை முட்டாள்தனமா தந்திட்டோம்னா, அதற்குப் பிறகு எங்க கதை... அவ்வளவுதான்! எங்களை விட்டு விலகி ஓடிடுங்க. நீங்க... கீழ்த் தரமான ஊர் சுற்றிப் பசங்க!'

அவள் சத்தம் போட்டு சாபமிட்டாள். ஆனால், அவள் கருவின விஷயங்கள் பலமில்லாமல் இருந்தன. இப்படி இருக்கக் கூடிய கீழ்த் தரமான ஊர் கூற்றிகளின்' மீது அவளுக்கு பொறாமையோ, அல்லது வெறுப்போ... நான் கேட்ட வரையில், இருப்பது மாதிரி தெரியவில்லை. அவளுடைய குரலின் தொனி அதற்குக் காரணமான விஷயத்திலிருந்து விலகி காணப்பட்டது. அவள் மிகவும் அமைதியாக பேசினாள். அவளுடைய குரலில் எந்தவித மாறுபாடும் இல்லை. ஆனால், என் வாழ்க்கையில் நான் வாசித்த மிகவும் அருமையான, எனக்குப் பிடித்த புத்தகங்களையும், எதிர்மறையாக பேசக் கூடிய சொற்பொழிவாளரின் சொற்பொழிவுகளையும் விட அவளுயை குரல் என்னை மிகவும் பலமாக தாக்கியது. நீங்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மரணத்தைப் பற்றி மிகவும் கச்சிதமாகவும், அழகியல் உணர்வுடனும் விளக்கங்கள் கூறிக் கொண்டிருப்பதைவிட, மரணத்தைப் பற்றிய உண்மையான பயம்தான் அதிக இயல்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.

எனக்கு அருகில் இருந்த அந்த இளம் பெண்ணின் வார்த்தைகளைவிட, சிறிதும் சந்தேகமே இல்லாமல்- அங்கு நிலவிக் கொண்டிருந்த குளிரால் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டேன். நான் மெதுவாக முனகினேன். என் பற்களால் தாளம் போட்டேன்.

உடனடியாக என் மீது இரண்டு சிறிய குளிர்ந்த கைகள் விழுந்தன. ஒரு கை என் கழுத்தைத் தொட்டது. இன்னொரு கை என் முகத்தைத் தொட்டது. அதே நேரத்தில் - ஒரு மென்மையான, ஆர்வம் கொண்ட வாஞ்சையான குரல் ஒலித்தது:

'என்ன விஷயம்?'

இந்தக் கேள்வியை வேறு யாரோ கேட்கிறார்கள்- நிச்சயம் நடாஷா அல்ல என்று நான் நினைத்தேன். எல்லா ஆண்களும் துஷ்டர்கள் என்றும், அவர்கள் எல்லோரும் அழிந்து, இல்லாமற் போவதைப் பார்ப்பதற்கு தான் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் சிறிது நேரத்திற்கு முன்புதானே அவள் தீர்மானமான குரலில் சொன்னாள்! ஆனால், அவள் அவசர அவசரமாக பேசினாள்:


'ஏய்... என்ன விஷயம்? உனக்கு குளிருதா? நீ உறைஞ்சு போயிட்டியா?' ஓ... நீ என்ன வாத்து மாதிரி இருக்கே! அங்கே ஒரு ஆந்தையைப் போல அமைதியா உட்கார்ந்து கொண்டு இருகே! உனக்கு குளிர் அதிகமா இருக்குன்னு நீ ஏன் என்கிட்ட சொல்லல? வா... காலை நீட்டி படு. நானும் கீழே படுக்குறேன். இப்போ உன்னோட கைகளை என்னைச் சுற்றி இறுக்கி போட்டுகோ. சரி... இப்போ உனக்கு சூடு தேவைப்படுது. அதற்குப் பிறகு நாம ஒருத்தர் முதுகை இன்னொருத்தர் முதுகு பக்கம் காட்டிக் கொண்டு படுப்போம். எப்படியோ இரவு வேளையை நகர்த்த வேண்டியதுதான்! இங்கே பாரு... நீ மது அருந்தியிருக்கிறாயா? அவங்க உன்னை போகச் சொல்லிட்டாங்களா? அதையெல்லாம் பொருட்படுத்தாதே.'

அவள் எனக்கு ஆறுதல் சொன்னாள். என்னை ஊக்கப் படுத்தினாள்.

மூன்றாவது முறையாக நான் தண்டிக்கப்பட்டிருக்கிறேனா? எனக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை? அதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! அந்த நேரத்தில் மனித இனத்தின் விதியைப் பற்றி நான் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருந்தேன். சமூக நிலையை மீண்டும் மாற்றியமைப்பதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தேன். அரசியல் மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தேன். புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட எல்லா வகையான தீவிரமான நூல்களையும் நான் வாசித்தேன். அந்த நூல்களில் எழுதப்பட்டிருந்த ஆழங்களை அவற்றை எழுதிய ஆசிரியர்கள் கூட அந்த நாட்களில் ஆழமாக உணர்ந்திருக்க மாட்டார்கள்- நான் முடிந்த வரைக்கும் என்னை ஒரு சுறுசுறுப்பான, குறிப்பிடத்தக்க சக்தியாக ஆக்குவதற்கு முயற்சி செய்தேன். இங்கே ஒரு விலை மாது தன்னுடைய உடலைக் கொண்டு எனக்கு வெப்பமூட்டிக் கொண்டிருக்கிறாள். பரிதாபப்படும்படியான, அழுத்தப்பட்ட, வேட்டையாடப்பட்ட உயிர்... அவளுகென்று எந்த மதிப்பும் இல்லை. வாழ்க்கையில் ஒரு இடமும் இல்லை. எனக்கு அவள் உதவி செய்யும் தருணம் வரை, நான் உதவி செய்ய வேண்டும் என்று எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியிருந்தாலும், மிகவும் அரிதாகவே அவளுக்கு நான் உதவி செய்திருப்பேன். ஓ! இப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் எனக்கு ஒரு கனவில், முட்டாள்தனமான- வெறுக்கக் கூடிய கனவில்தான் நடக்கின்றன என்று நான் நம்புவதற்கு தயாராக இருந்தேன்.

ஆனால், அடடா! என்னாலேயே நம்ப முடியவில்லை. குளிர்ச்சியான மழை துளிகள் என் மீது விழுந்து கொண்டிருந்தன. ஒரு பெண்ணின் மார்பகம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. என் முகத்தில் அவளுடைய சூடான மூச்சுக் காற்று பட்டுக் கொண்டிருந்தது. அந்த மூச்சுக் காற்றில் சிறிது வோட்காவின் வாசனை கலந்திருந்தது. எனினும், அவை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தது. காற்று ஓசை உண்டாக்கியவாறும், முனகிக் கொண்டும் வீசிக் கொண்டிருந்தது. மழை படகின் மீது வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அலைகள் மோதியவண்ணம் இருந்தன. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுக அழுத்திக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு எந்தச் சமயத்திலும் குளிர் காரணமாக நடுங்கவேயில்லை. நடந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க, மோசமான கனவு உண்மையிலேயே நனவாக வேண்டும் என்று யாருமே கனவு கூட காண மாட்டார்கள் என்பதை மட்டும் என்னால் உறதியான குரலில் கூற முடியும்.

நடாஷா பேசிக் கொண்டேயிருந்தாள். பெண்களுகே இருக்கக் கூடிய மென்மைத்தன்மையுடனும், பரிதாபம் வருகிற மாதிரியும் அவளுடைய பேச்சு இருந்தது. அவளுடைய அந்த எளிமையான, நட்புணர்வுடன் பேசிய சொற்களின் மூலம், எனக்குள் ஒரு சிறிய நெருப்பு கிளர்ந்தெழுந்தது. அது என் இதயத்திற்குள் எதையோ உருகச் செய்தது.

அதைத் தொடர்ந்து என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அது கெட்ட எண்ணங்கள், முட்டாள்தனம், கடுமைத் தன்மை, அழுக்கு என்று அந்த இரவிற்கு முன்பு எப்போதிருந்தோ சேர்ந்து விட்டிருந்த என் இதயத்தைக் கழுவி சுத்தம் செய்தது. தொடர்ந்து நடாஷா எனக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.

'அது... அது... கண்ணு... அது போதும்! அழாதே! அது போதும். கடவுளின் அருளால் நீ நல்லா ஆயிடுவே! உனக்கு வேறொரு இடம் கிடைக்கும்.'

அவள் தொடர்ந்து எனக்கு முத்தங்கள் தந்தாள். கணக்கே இல்லாமல், அவள் எனக்கு சூடான முத்தங்களைத் தந்தாள்.

வாழ்க்கையில் ஒரு பெண்ணிடமிருந்து நான் பெற்ற முதல் முத்தங்களே அவைதாம். அவைதாம் சிறந்த முத்தங்கள். அதற்குப் பிறகு நான் பெற்ற முத்தங்கள் அனைத்தும் மிகவும் விலை மதிப்பு உள்ளவை. அந்த முத்தங்களின் மூலம் கிட்டத்தட்ட நான் எதையுமே பெற்றதில்லை.

'வா... அழுவதை நிறுத்து. நீ... வாத்து மடையா! உனக்கு போவதற்கு வேறு இடம் எதுவுமே இல்லைன்னா, நாளைக்கு உனக்கு நான் உதவுறேன், அவளுடைய மென்மையான, ஆறுதல் கலந்த முனகல் சத்தம் ஒரு கனவில் ஒலிப்பதைப் போல காதுகளில் விழுகின்றது.

பொழுது புலரும் வரை, நாங்கள் ஒருவர் கையில் ஒருவர் என்று படுத்துக் கிடந்தோம்.

பொழுது விடியும் நேரத்தில், நாங்கள் படகிற்கு அடியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்து, நகரத்திற்குள் சென்றோம். அங்கு ஒருவருகொருவர் நட்பு முறையில் 'குட் பை' கூறிக் கொண்டோம். அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவே இல்லை. எனினும், இப்போது விளக்கிக் கூறிய இலையுதிர் காலத்து இரவு வேளையை யாருடன் செலவழித்தேனோ அந்த இனிய நடாஷாவை, நான் அரை வருட காலம் மூலை முடுக்கெல்லாம் தேடித் திரிந்தேன்.

அவள் ஏற்கெனவே மரணத்தைத் தழுவியிருந்தால், அவளுக்கு அது நல்லதே. அப்படி நடந்திருக்கும் பட்சம், அவள் அமைதியில் ஓய்வு எடுக்கட்டும்! அதே நேரத்தில்- அவள் உயிருடன் இருந்தால், அவளுடைய மனதிற்கு அமைதி கிடைக்கட்டும்! தன்னுடைய வீழ்ச்சியைப் பற்றிய புரிதலுக்குள் அவள் எந்தச் சமயத்திலும் தட்டி எழுப்பப்படக் கூடாது அது தேவையற்ற துன்பமாகவும், இனி இருக்கும் வாழ்க்கைக்கு வேண்டாத ஒரு வேதனையாகவும் இருக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.