
இரண்டாவது திருமணம்
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
ஒரு இளம்பெண் ஆணைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு வயது இருக்கிறது. அவள் ஆணை, கனவு காணக் கூடிய இன்னொரு பருவதிற்குள் நுழைகிறாள். பிறகு... அவள் ஒரு ஆணுக்காக காத்திருக்கிறாள். அந்த காத்திருத்தல் ஒரு ஆண் வெறுப்பு என்ற நிலைக்கு மாறி விடக் கூடிய வாய்ப்பும் உண்டாகலாம். நாற்பத்தைந்தாவது வயதில் ஒருத்திக்கு திருமண அதிர்ஷ்டம் உண்டாகிறது என்றால், அது எப்படி இருக்கும்?
பார்கவி அம்மாவிற்கு நாற்பத்தைந்தாவது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு எழுபது வயது. அவருடைய இளைய மகள் பிரசவமாகி இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் சூழ்நிலையில்தான் அவர் பார்கவி அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணம் அந்த ஊரைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் அறிந்து, தாலி கட்டி, புடவை கொடுத்து நடைபெற்ற ஒரு சடங்காகவே நடைபெற்றது. சட்டப்படி திருமண மனுவில் அவர் கையெழுத்தையும் போட்டார். பார்கவி அம்மாவின் பக்கம் இருந்தவர்களுக்கு அப்படிப்பட்ட வெளிப்படையான விஷயங்கள் கட்டாயம் தேவைப்பட்டன. காரணம்- பிள்ளைகளுக்கெல்லாம் பிரித்துக் கொடுத்த பிறகு, ஒரு நல்ல தொகைக்கான சொத்து அவரிடம் எஞ்சியிருந்தது.
பரமுபிள்ளையின் மனைவி இறந்து ஆறு மாதங்கள் கடப்பதற்கு முன்பே, இரண்டாவது திருமணம் நடைபெற்றது. எழுபது வயதுகள் கொண்ட ஒரு ஆணுக்கு, மனைவி தேவையா என்று கேட்டால், 'ஆமாம்' என்றுதான் கூற வேண்டியதிருக்கும். எழுபதாவது வயதில் ஒரு பெண்ணின் உபசரிப்பு ஒரு மனிதனுக்கு தேவைப்படுகிறது. சிறிது நீரை ஆற்றி தருவதற்கு ஒருத்தி இருக்க வேண்டுமென்பதற்காக பரமுபிள்ளை திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகளுக்கு கணவர்கள் இருக்கிறார்கள். கணவர்களை அக்கறையுடன் கவனிக்கக் கூடிய பொறுப்பைக் கொண்ட பிள்ளைகளுக்கு தங்களின் தந்தையை வேண்டிய அளவிற்கு பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லாமல் இருக்கலாம். அப்படியே இல்லையென்றாலும், குறிப்பிட்ட வயதுகளை அடைந்து விட்ட பெண் பிள்ளைகளால் தங்களின் தந்தையை வேண்டிய அளவிற்கு கவனம் செலுத்தி பார்த்துகொள்ள முடியாதே!
நாழி கஞ்சியை தயார் பண்ணி தருவதற்கு ஒருத்தி கிடைப்பாளா என்று பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பார்கவி அம்மா, பரமுபிள்ளைக்குத் தெரிய வருகிறாள். அது ஒரு திருமண தரகரின் மூலம் நடைபெற்றது. பார்கவி அம்மாவின் குணமோ விருப்பங்களோ இந்த உறவில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக பரமுபிள்ளைக்கு தோன்றவில்லை. பெயர் மாறிய ஒருத்தி... வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்வதற்கு இயலும். பரமுபிள்ளைக்கு இவ்வளவு போதும்.
திருமணம் நடைபெற்ற நாளன்றே பெண்ணை பரமுபிள்ளையின் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அஷ்டமாங்கல்யம், விளக்கு ஆகியவற்றுடன் மணப் பெண்ணை வரவேற்பதற்கோ, ஆரத்தி நீரில் மூழ்கி வைக்கப்பட்ட அரிசியையும், நெல்லையும் மணப்பெண்ணின் தலையில் தூவுவதற்கோ, இலையின் நடுப்பகுதியில் திரியை வைத்து மணப் பெண்ணின் முகத்தில் காட்டி திருஷ்டியை அகற்றுவதற்கோ அங்கு யாருமே இல்லை. முதல் தடவையாக திருமணமாகும் ஒருத்தி, கணவனின் வீட்டிற்குள் நுழையும்போது, இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் எதிர்பார்க்கப்படுபவைதாம். இவை எதுவும் இல்லை என்று ஆனதும், அவளுக்குள் ஒரு ஏமாற்றத்தின் நிழல் பரவி விட்டிருக்குமோ? யாருக்குத் தெரியும்?
என்ன காரணத்திற்காக வேண்டியவர்கள் கூட பார்கவி அம்மாவை திருமணம் செய்து கொள்ள வைத்தார்கள்? பார்கவி அம்மா எதற்காக அந்த திருமணச் சடங்கிற்கு ஒத்துக் கொண்டாள்? இறக்கும் வரையில் மூன்று நேரமும் உணவு உண்டு. பார்கவி அம்மாவைப் பொறுத்த வரையில், வாழ வேண்டும். ஆடை அணிய வேண்டும். இந்த விஷயங்களுக்கு எந்தவித தடங்கல்களும் வந்து விடக் கூடாது. இவை அனைத்திற்கும் சிறிதாவது வழி உண்டாக வேண்டாமா? இறக்கும் வரையில் கவனித்துப் பார்த்துக் கொள்வதற்கு பரமு பிள்ளைக்கு ஒரு ஆள் வேண்டும். அப்படியென்றால், அந்தத் திருமண உறவில் உடல் இச்சைக்கு இடமே இல்லையா என்ன?
படுக்கையறை. அது தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. ஒரே நீளத்தையும், உயரத்தையும் கொண்ட இரண்டு கட்டில்கள் சேர்த்து போடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. பழைய பாணியில் உயரம் கொண்ட பலகைக் கட்டில்கள் அவை. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு தரமான மரக் கொம்புகளைக் கொண்டு அவை செய்யப்பட்டிருந்தன. தாத்தாவும் பாட்டியும் படுத்துத் தூங்கின கட்டில்கள் அவை என்று தோன்றும். மெத்தைகள் தரமான துணியைக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாக இருந்தன. பழைய கதைகள் அவற்றிற்கும் கூறுவதற்கு இருக்கும். அந்த ஏற்பாடுகள் உண்மையிலேயே படுப்பதில் கிடைக்கும் சுகத்தைப் பற்றி நன்கு தெரிந்திருக்கக் கூடிய ஒருவர் செய்தவையாகத்தான் இருக்கும்.
பார்கவி அம்மா என்ற புதிய பெண்ணை வற்புறுத்தி தள்ளி, படுக்கையறைக்குள் போகும்படி செய்வதற்கு யாரும் இருக்கவில்லை. புதிய மணப் பெண்ணை எதிர் பார்த்துக் கொண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஒரு ஆண் அங்கு காத்துக் கொண்டு அமர்ந்திருக்கவில்லை. அந்த படுக்கையறை காலியாகக் கிடந்தது. அறையின் மூலையில் ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒரு வண்டு முரண்டு பிடித்தவாறு இங்குமங்குமாக தட்டி, மோதியவாறு பறந்து கொண்டிருந்தது. சுவர்கள் அனைத்திலும் ஏதோ இனம் புரியாத வாழ்க்கையின் அடையாளங்கள் என்பதைப் போல சில கீறல்கள் விழுந்து கொண்டிருந்தன. பார்கவி அம்மாவிற்கு பயம் உண்டானது. இதற்கு முன்பு தெரிந்திராத ஒரு வாழ்க்கை என்ற வர்த்தகத்தைத் தெரிந்து கொள்வதைப் போல தோன்றியது. யாருடைய நீண்ட பெருமூச்சோ தோளில் மோதிக் கொண்டிருந்தது. பரமு பிள்ளையின் இறந்து போன மனைவி என்ற உயிரைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். பரமுபிள்ளை இளைஞனாக இருந்த காலத்தில், உணர்ச்சி வசப்பட்ட நிலையிருந்த பரமுபிள்ளை இளம் பெண்ணாக இருந்த தன்னுடைய மனைவியை அந்த அறையில் இருந்து கொண்டுதான் முதலிரவின்போது வரவேற்றிருக்க வேண்டும். ஒரு இரண்டாவது மனைவிக்கு முதலிரவின் போது, அந்தப் பழமைச் சூழலில் இப்படித் தோன்றத்தானே செய்யும்?
உணர்ச்சிகள் நிறைந்த முத்தத்தின் சத்தம் அங்கு கேட்பதைப் போல இருந்தது. உடலுறவு ஆசையை வெளிப்படுத்தும் சீட்டியடிக்கும் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அங்கு எதிரில் இருந்த சுவற்றில் எவ்வளவோ இணை சேரல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பின்னால் கோபத்துடன் யாரோ பற்களைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வண்டு பார்கவி அம்மாவின் தலையில் மோதி தடுமாறியவாறு பறந்து சென்றது. குத்து விளக்கின் தீபத் தழல் ஆடி அசைந்து கொண்டிருந்தது. யாருகோ சொந்தமான படுக்கையறைக்குள் அதிகாரமில்லாமல் நுழைந்து வந்து விட்டோமோ என்பதைப் போல ஒரு எண்ணம் பார்கவி அம்மாவிற்கு உண்டானது.
'நீ ஏன் அழுதாய்?'
பரமுபிள்ளை பார்கவி அம்மாவின் தோளில் கையை வைத்தவாறு கேட்டார். அழுததாக பார்கவி அம்மாவிற்கு தோன்றவில்லை. பயந்தோம் என்பது அவளுக்குத் தெரியும்.
பரமுபிள்ளை பார்கவி அம்மாவை அந்த கட்டிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார். அவள் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக தன் கணவரின் மென்மையான அணுகு முறையில் சிக்கியவாறு அமர்ந்திருந்தாள். ஆனால், புதிய மணப் பெண்ணுக்கே இருக்கக் கூடிய பதைபதைப்பு அவளுக்குள் இருக்கிறதோ என்னவோ... யாருக்குத் தெரியும்?
ஒருவனுக்கு சிறிது கஞ்சித் தண்ணீரைத் தயார் பண்ணி தருவதற்கு ஒருத்தி வேண்டும். அவளுக்கு வாழ்வதற்கான ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டும்- இதுதான் திருமண உறவா? அப்படியென்றால், பரமுபிள்ளைக்கும் பார்கவி அம்மாவிற்குமிடையே உண்டாகியிருக்கும உறவு உண்மையான திருமண உறவுதான். அதையும் தாண்டி என்னவெல்லாமோ இருக்கின்றன. இங்கு பரமுபிள்ளை என்ற மணமகனுக்கு அனுபவங்கள் இருக்கின்றன. நினைவுகள் இருக்கின்றன. சந்தோஷம் உண்டாகியிருக்கிறது. ஒரு மனைவியின் கவனிப்புகள், ஒரு மனைவி தரக் கூடிய ஆனந்தங்கள்- இவை அனைத்தையும் அவர் அனுபவித்திருக்கிறார். இனி ஒருத்தியை இதய அறைக்குள் வைத்து அன்பு செலுத்துவதற்கு அவரால் முடியுமா? இன்னொரு பக்கத்தில் ஒரு இதய அறை நீண்ட காலமாக ஒரு கடவுளை பிரதிஷ்டை செய்வதற்காக தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்ப்புகள் உண்டாகி தங்கி நின்று கொண்டு, ஆரோக்கியமற்ற ஒரு சூழ்நிலை தானாகவே உண்டாக்கப்பட்டிருக்கிறது. அங்கு இன்னொரு பெண்ணைத் தொடாத கடவுள் நுழைந்து சென்றாலும், அந்த கடவுளால் மிகுந்த நாயகத் தன்மையுடன் அங்கு குடி கொண்டிருக்க முடியுமா? யாருக்குத் தெரியும்? அதுவும் சந்தேகம்தான். பொருத்தமற்ற ஒரு உறவு!
* * *
அந்த மனைவி தன் கணவரின் அன்றாடச் செயல்கள், பழக்க வழக்கங்கள் - அனைத்தையும் நன்கு புரிந்து கொண்டாள். மிகவும் அதிகாலையிலேயே அவள் எழுந்து போய் விட்டாள். அந்த கணவர் அவளை அந்த அளவிற்கு அதிகாலை வேளையில் போகாமல் இருக்கும் வகையில் கட்டிலுடன் சேர்த்து பிடித்துக் கொண்டிருக்கவில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே காலையில் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளை அவள் செய்து முடித்தாள். அப்படித்தான் அவருடைய முதல் மனைவி நடந்து கொண்டாள். அவருடைய பிள்ளைகளின் தாய் எப்படி வாழ்ந்தாளோ, அதே போல அவளும் வாழ வேண்டும். பகல் வேளையில் உணவு சாப்பிடுவதற்காக அமர்ந்தபோது, அவர் சொன்னார்:
'எது எப்படி இருந்தாலும், என்னுடைய ஜானு வைக்கும் குழம்பின் ருசி வரவில்லை.'
கூறி விட்டு அவர் சற்று சிரித்தார். அவருடன் சேர்ந்து சிரிக்க அவளால் முடியவில்லை. அவளுடைய கணவரின் முதல் மனைவியின் ஆவி அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணைப் பற்றிய நினைவுகளைக் கொண்டிருக்கும் மனிதரின் மனைவி, அந்த வகையில் சில ஆவிகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பார்கவி அம்மாவின் கண்கள் ஈரமாயின. ஆனால், அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவமானத்திற்குள்ளான மனைவி அன்று இரவு நீண்ட நேரம் அழுதாள். அந்த அழுகைக்கான காரணம் என்ன என்று கணவர் கேட்கவில்லை. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். உணவு சாப்பிட்டு முடித்து விட்டு, சுகமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் தேவையாக இருந்தது. ஒருவேளை- அழுது அழுது பார்கவி அம்மா கண் அயர்ந்திருக்கலாம். இரவின் இருள் சுருள்களுக்கு மத்தியிலிருந்து, அந்தப் படுக்கையறையின் கதாநாயகியான பெண்ணின் திருப்தி அடையாத ஆசைகள் ஆழமாக இறங்கி, அவளுக்கு முன்னால் கெட்ட கனவுகளாக நடனமாடிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு தடவைகள் பார்கவி அம்மா சத்தம் போட்டு கத்தினாள். தூக்கத்திலிருந்து கண் விழித்து விஷயம் என்ன என்று பரமுபிள்ளை விசாரித்தார்.
பார்கவி அம்மா பொறுப்புணர்வு கொண்ட ஒரு மனைவியாகத்தான் அங்கு நடந்து கொண்டாள். தன் கணவரை அவள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். பக்கத்து வீடுகளிலிருக்கும் பெண்களிடமிருந்து இறந்து போன ஜானகி அம்மா எப்படி இருந்தாள் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். கணவரை கவனமாக பார்த்து, கணவருக்காக வாழ்ந்து மரணமடைந்த ஒரு பெண்ணாக அவள் இருந்திருக்கிறாள். ஒரு மனைவி இல்லாமல் பரமுபிள்ளையால் வாழ முடியாது என்ற நிலையை ஜானகி அம்மா உண்டாக்கி வைத்திருந்தாள். அந்த வாழ்க்கைக்கு ஒரு தொடர்ச்சி தேவைப்பட்டது. அந்தத் தொடர்ச்சியை மிகவும் கவனத்துடன் முன்னோக்கி எடுத்துக் கொண்டு செல்வதுதான் பார்கவி அம்மாவின் கடமையாக இருந்தது. அந்தக் கடமையை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டு செல்வதில் என்ன காரணத்தாலோ தனக்கு ஒரு இயலாமை இருக்கிறது என்று பார்கவி அம்மாவிற்குத் தோன்றியது.
அந்த வீட்டில் சண்டை உண்டாகவில்லை. கிண்டல்கள் உண்டாகவில்லை. போராட்டங்கள் உண்டாகவில்லை. ஒரு நாள் காலையில் ஒரு சுமையுடன் பார்கவி அம்மா பரமுபிள்ளையின் முன்னால் போய் நின்றாள். அவள் புறப்படுவதற்கு அனுமதி கேட்கிறாள். பரமுபிள்ளை கேட்டார்: 'நீ போறியா?'. உணர்ச்சியே இல்லாமல் பார்கவி அம்மா சொன்னாள்: 'ஆமாம்... என்னால் இந்த வாழ்க்கை வாழ முடியாது.'
'வாழ முடியாத அளவிற்கு நான் உனக்கு என்ன செய்தேன்?'
'எதுவும் செய்யல. அதனால்தான் என்னால முடியல.'
பரமுபிள்ளைக்கு அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை தான் கூறியதன் அர்த்தம் முழுமையாக பார்கவி அம்மாவிற்கும் தெளிவாக புரியாமலிருந்திருக்கலாம்.
பரமுபிள்ளை கேட்டார்: 'நீ போய் விட்டால், நான் என்ன செய்றது?'
ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் ஒரு கணவருக்காக காத்திருந்த அந்தப் பெண் சொன்னாள்:
'அதை நானும் சிந்திக்கத்தான் செய்யிறேன்.'
அந்தப் பெண் வெடித்தாள்:
'ஓ. இப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டாகியிருக்க வேண்டியதே இல்லை.'
ஒரு பெண் மனைவியாக ஆகியிருக்க வேண்டியதில்லை என்று மனப்பூர்வமாக விருப்பப்படும் நிமிடம் அது. ஒரு பெண்ணாக பிறப்பதே மனைவியாக ஆவதற்குத்தான். ஒரு பெண் குழந்தை தாய்ப்பாலின் மூலமாக படிப்பதே மனைவியாக இருக்கக் கூடிய தர்மத்தைத்தான். அவளுடைய பாரம்பரியமே கணவனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது எப்படி என்பதுதான். அந்த அப்பிராணிப் பெண்ணுக்கு அது இயலாமற் போய் விட்டது.
பார்கவி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக வெளியேறிச் செல்வதைப் பார்த்தவாறு பரமுபிள்ளை அமர்ந்திருந்தார். அவள் சிறிது தூரம் சென்றதும், திடீரென்று பரமுபிள்ளை ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தார். அவர் பார்கவி அம்மாவை அழைத்தார். பார்கவி அம்மா திரும்பி நின்றாள். அவர் கேட்டார்:
'நீ போறியா? அப்படின்னா... அப்படின்னா... ஒரு விஷயம் இருக்கு.'
* * *
அது என்ன என்ற அர்த்தத்துடன் பார்கவி அம்மா ஈரமான கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
பரமுபிள்ளை ஒரு தந்தை. சிலரின் தாயின் கணவர்.
'அப்படின்னா... நாம இங்கே விலகி, பிரிந்து விடுவோம்.'
இந்த விஷயத்தில் சிந்தித்துப் பார்ப்பதற்கு பார்கவி அம்மாவிற்கு எதுவுமில்லை. அவள் ஓஹோ என்று சம்மத்தைத் தெரிவிக்கும் வகையில் முனகினாள்.
அது 'உதவி பதிவாளர் நீதிமன்ற'த்திற்குச் செல்லக் கூடிய பயணமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏழாவது நாள் இப்படி ஒரு திருமண உறவு விடுதலை பெற்றது.
* * *
திரும்பவும் தன்னுடைய அக்காமார்களின் வீட்டிற்குத்தான் பார்கவி அம்மா செல்ல வேண்டும். அவள் அங்குதான் சென்றாள். திருமணமாகாத தங்கை என்ற சுமையை இறக்கி வைத்திருந்த அக்காமார்களுக்கு ஒரு சுமையுடன் வந்து நுழைந்த தங்கை ஒரு பிரச்சினையாக இருந்தாள். அவர்கள் நியாயமான சில கேள்விகளைக் கேட்டார்கள்:
'நீ எதற்காக வந்தாய்?'
பதிலுக்காக சிந்திக்க வேண்டிய நிலை பார்கவி அம்மாவிற்கு உண்டாகவில்லை.
'எனக்கு அங்கு இருக்க முடியல.'
அவர்களுடைய அடுத்த கேள்வி மேலும் நியாயம் உள்ளதாக இருந்தது.
'நீ எதற்கு விவாகரத்து செய்தாய்?'
அதற்கும் அந்தப் பெண்ணிடம் உடனடியாக பதில் இருந்தது.
'அந்த திருமணமே எனக்கு தேவையில்லாத ஒன்று.'
அடுத்த கேள்வி சாதாரணமான, தனிப்பட்ட விஷயம் சார்ந்ததாக இருந்தது.
'இனி நீ எப்படி வாழ்வாய்?'
பார்கவி அம்மாவிடம் பதில் இல்லை.
வேண்டியவர்கள் ஒரு வாழ்வதற்கான வழியைக் காட்டினார்கள். அதை விட்டெறிந்து விட்டு, தன்னுடைய விருப்பப்படி அவள் திரும்பி வந்திருக்கிறாள். இனிமேலும் அவளுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
ஓச்சிற கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண் காவித் துணி அணிந்து துறவிக் கோலத்தில் அமர்ந்திருப்பது தெரிந்தது. அது - பார்கவி அம்மா.
* * *
அதிக நாட்கள் கடக்கவில்லை. இன்னொரு துறவியும் ஓச்சிற கோவிலுக்குச் சொந்தமான இடத்திற்கு வந்தார். அது - பரமுபிள்ளை. அங்கு மீண்டும் அந்த மனைவியும் கணவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள். மாறிய சூழ்நிலையில், மாறிய சிந்தனைப் போக்கில் எழுபது வயதான பரமுபிள்ளைக்கு, தன்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆள் வேண்டும். அது இல்லாமற் போய் விட்டது. அவர் ஓச்சிற கோவிலுக்கு வந்து விட்டார். யாருமே இல்லாத பார்கவி அம்மாவிற்கு பரப்ரம்ம சன்னிதி அபயம் தேடும் இடமாக ஆனது. அங்கு அவர்களுக்கு நடுவில் ஜானகி அம்மா இல்லை பரமுபிள்ளையின் எஞ்சியிருக்கும் சொத்துக்களைப் பற்றிய சிந்தனை இல்லை, படுக்கையறைக்குள் உண்டாகக் கூடிய உணர்ச்சி வசப்படும் வாய்ப்புகள் இல்லை. கவனிப்பும், பாதுகாப்பும் வேண்டும் என்று நினைக்கும் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்ந்தன. முதுமைக் காலத்தின் குடும்ப வாழ்க்கைக்கு அந்த வகையில் பொருத்தமான ஒரு சூழலும் உண்டானது.