Logo

சாயங்கால வெளிச்சம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 5606

சாயங்கால வெளிச்சம்

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

தவைத் திறந்தபோது, தாங்கமுடியாத ஒரு வாசனை வெளிப்பட்டது. விரித்துப் போடாமலிருக்கும் ஈரத்துணியின் வாசனை. அங்கு காற்றில் ஈரப்பதம் இருப்பதைப் போல தோன்றியது. சிமெண்ட் பெயர்ந்து சிதிலமாகியிருந்த தரையில், பணியாள் பெட்டிகளையும், தோள் பையையும் அடுக்கி வைத்தான். அந்த இருண்ட சூழலில், அறையின் நடுப்பகுதியில் கண்களைப் பதிய வைத்து நின்றிருந்தான் அவன்.

மூடப்பட்டிருந்த சாளரங்களைத் திறக்கும் முயற்சிக்கிடையே மேனேஜர் சொன்னார்:

“இதுதான் சார் அறை. நல்ல வியூ இருக்கும்.”

அவன் மெதுவாக ‘உம்’ கொட்டினான்.

சாளரங்கள் சிறிது எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மெதுவாகக் கீழ்ப்படிந்தன. வெளியிலிருந்த மஞ்சள் வெயில் உள்ளே பரவியது.

அழுக்குப் படிந்த சுவர்களுக்கும், வார்னீஷ் அழிந்துபோன மேஜையின் மேற்பகுதிக்கும், அருகில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலிக்கும் அவனுடைய கண்கள் பயணித்தன.

நரை விழுந்த இமைகளையும், சிறிய கண்களையும் கொண்ட மேனேஜர் வேகமான குரலில் சொன்னார்:

“நல்ல வென்டிலேஷன் இருக்கு.”

அதற்கும் அவன் ‘உம்’ கொட்டினான்.

“இரவில் சோறும் குழம்பும் இருக்கும். ஸ்பெஷலாக ஏதாவது...?”

“வேண்டாம்.”

அவன் ரப்பர் ஷூக்களைக் கழற்றி, கட்டிலுக்குக் கீழே வைத்துவிட்டு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான்.

மேனேஜருக்கு என்ன காரணத்தாலோ மனதில் திருப்தி உண்டாகவில்லை. அவர் சாளரத்தின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டே பலவற்றையும் கூறினார்.

அந்த நகரத்தின் வரலாறு... அது ஃப்ரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்தது... அதோ... சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது தெரியக்கூடிய அந்த பிரம்மாண்டமான கட்டடம்தான் கவர்னரின் பங்களா. அதைக் கடந்து தெரிவது ராணுவத்திற்கு சொந்தமான கேம்ப். பழைய பெருமைகளை அவர் பெருமூச்சுடன் நினைத்துப் பார்த்தார். அந்தக் காலத்தில் ஹோட்டல் இந்த நிலையில் இல்லை. ‘பார்’ இருந்தது. ஆங்கில டின்னர் இருந்தது. அறைகள் காலியாக இருக்காது.

‘காலம் போய்க் கொண்டிருக்கும் போக்கு!’

மேனேஜர் ஒரு நிமிடம் எதையோ நினைத்துக் கொண்டதைப்போல நின்றார்.

அவன் அனைத்தையும் கேட்டான். பிறகு அனுபவித்து சிரித்தான்.

“இனி என்னிடமிருந்து என்ன வேணும்?”

“ஒண்ணும் வேண்டாம்.”

மேனேஜர் வெளியேறினார். வாசலில் நின்றவாறு அவர் உரத்த குரலில் கூறினார்:

“ஏதாவது வேண்டுமென்றால் சார்... இந்தப் படியில் அருகில் நின்று கூப்பிட்டால் போதும்.”

“சரி...”

கதவை அடைத்துவிட்டு அவன் மீண்டும் பிரம்பு நாற்காலியில் அமர்ந்தான். என்ன ஒரு களைப்பு! சாளரத்தின் வழியாக வந்து கொண்டிருந்த காற்றுக்கு குளிச்சி இருந்தது. கண்கள் எட்டும் தூரம்வரை முழுவதும் நீர்தான். மீன்பிடிக்கப் பயன்படும் சிறிய படகுகள் பயணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சாயங்கால வெளிச்சம் நதியின் நீர்ப்பரப்பில் கரைந்து விட்டிருந்தது. தொலைவில் தென்னந்தோப்புகள் இருந்தன. ஒரு ஓவியனின் கற்பனையைத் தட்டியெழுப்பக்கூடிய இயற்கையின் தோற்றம்...

முன்பு ஒரு ஓவியன் நண்பனாக இருந்தான். எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு. எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் என்பது மாதிரி தோன்றும்- நினைத்துப் பார்க்கும்போது. நேற்று அந்த மனிதனைப் பற்றி பத்திரிகையில் வாசித்தான். அவன் தன்னுடைய ஓவியங்களை பாரிஸில் காட்சிக்கு வைக்கப் போகிறானென்ற தகவலை.

அவர்களைப் பற்றி எதுவும் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தக் காலத்தில் நண்பர்கள் எல்லாருமே கலைஞர்களாகத்தான் இருந்தார்கள்.

அன்று...

பறித்துக் கிழித்தெறிந்த அந்த நாட்களை நினைத்து இனி பெருமூச்சு விடக் கூடாது என்ற எண்ணம் அவனிடம் உறுதியாக இருந்தது.

தோள் பையைத் திறந்து கட்டிலில் விரித்துப் போட்டான். சூட்கேஸிலிருந்து சோப்பையும் கண்ணாடியையும் சீப்பையும், ஏற்கெனவே பிரிக்கப்பட்ட ஒரு கட்டு சுருட்டையும் வெளியே எடுத்து வைத்தான். அழுக்குத் துணியை நாற்காலியின் பின்னால் போட்டான். சுவரில் சட்டையைத் தொங்க விடக் கூடிய ஸ்டாண்ட் இல்லை.

கட்டிலில் அமர்ந்தபோது, அதன் கால்கள் தாங்கள் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் வகையில் ஓசை உண்டாக்கின. அதிகமான வருடங்கள் பாரத்தைச் சுமந்ததன் காரணமாக இருக்க வேண்டும். அந்தக் கட்டில் தன்னுடைய சுயசரிதையைக் கூறுவதாக இருந்தால்...?

தன்னைச் சுற்றிலும் காலத்தின் காலடிகள் இருக்கின்றன என்பதாக அவன் உணர்ந்தான். நிறம் மங்கிப் போய் காணப்படும் சுவர்கள் முன்பு பிரகாசமானவையாக இருந்திருக்க வேண்டும். இரும்புக் கம்பிகளில் பச்சை வண்ணத்தின் எச்சங்கள் காணப்பட்டன. பாசி படர்ந்த சாளரங்கள்...

வாழ்க்கையின் மறுகரையை அடையும்போது கிடைக்கக்கூடிய அனுபவம் இப்படித்தான் இருக்குமோ?

நாளையைப் பற்றி நினைத்துப் பார்க்காமலிருப்பது என்பதுதான் அவனுடைய கொள்கை. அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நிமிங்களில்... அவற்றின் செயல்பாட்டின் உச்சத்தில் வாழ்வது. கண்ணாடியைத் திருப்பி முன்னால் வைத்துப் பார்த்தான். தலையில் இங்குமங்கும் சில செம்பட்டை படர்ந்த முடிகள் மட்டும் தெரிகின்றன. ஓரங்களில் நரை ஏறியிருக்கிறது. ஆழமான தாழ்வாரங்களைப் போல நெற்றியிலும் கன்னங்களிலும் சுருக்கங்கள் காணப்பட்டன.

முப்பத்தைந்து வயதில் சரீரத்தில் முதுமையின் அடையாளங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்றல்ல. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தில் வாலிபம் தெரியவில்லை. அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறான்.

சுருட்டு புகைத்தவாறு அவன் சாளரத்தின் அருகில் நின்றிருந்தான். சாயங்கால வெளிச்சத்தில் பிரகாசமாகத் தெரிந்த இயற்கை, அழுது முகத்தைச் சிவப்பாக்கிய ஒரு கன்னிப் பெண்ணைப் போல காணப்பட்டது. நதியின் நீர்ப்பரப்பையும் தென்னை ஓலைகளுக்கு மத்தியில் தெரிந்த நீல நிற வெறுமையையும் பார்த்தபோது, அமைதியற்ற தன்மையை அவன் உணர்ந்தான்.

சுற்றிலும் சத்தமோ அசைவோ எதுவுமில்லை. அருகிலிருக்கும் இரண்டு அறைகளும் காலியாக இருக்கின்றன என்று மானேஜர் கூறியிருந்தார். கீழே ஹோட்டலில் அதிகமாக ஆட்கள் வந்து செல்வதில்லை என்பதைப் போல தோன்றியது. சாலைகளிலும் பரபரப்பில்லை. அந்த இடம் நினைவிலிருந்து மறந்துவிட்ட ஒன்றைப் போல அவனுக்குத் தோன்றியது. இரவு வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. அங்கு மிகவும் மெதுவாகவே நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.

என்ன ஒரு தளர்ச்சி.

அவன் அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினான்.

நிழல் பரவிவிட்டிருந்த பாதையின் வழியாக நடந்தான். அந்த சாலை படித்துறையின் அருகில் போய் முடிந்தது. நதியின் கதையில் கற்களாலான படிகள் இருந்தன. இரண்டு சிமெண்ட் பெஞ்ச்சுகள் இருந்தன. ஆனால், ஆட்கள் யாருமில்லை. அங்கு நின்றால், தூரத்தில் கடலும் நதியும் ஒன்றோடொன்று இணைவதைப் பார்க்கலாம். அலைகள் உயர்வதையும் தாழ்வதையும் பார்க்கலாம். முன்னால் மிகவும் அமைதியாக இருந்தது. ஆழமான அமைதி. சொரசொரப்பான கற்படிகளில் மென்மையான நீர்ப் திவலைகள், பாவாடையின் நுனிப்பகுதியைப் போல நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அவன் சிறிது நேரம் நின்றிருந்தான்.


வானம் மங்கலானது. நிழல்கள் இருட்டில் மறைந்தன. மாலைப் பொழுது இருளுக்குள் மூழ்கியது. அவனைப் பொறுத்தவரையில் அந்த வேளைதான் சிறிதும் தாங்கிக் கொள்ள முடியாத வேளை. இனம்புரியாத வேதனைகளின் நிழல்கள் இதயத்திற்குள் நீண்டு நீண்டு வந்து சேர்ந்து கொண்டிருந்தன. அவனுக்கு வெறுப்பு உண்டானது.

அவன் மீண்டும் நடந்தான்.

வெறுப்பும் அன்பும் எவ்வளவு வேகமாக இடத்தைப் பிடிக்கின்றன! பனியும் நிலவும் சங்கமமாகும் இரவுகள். பவுடரின் வாசனை... செவ்வந்திப் பூக்கள்... குலுங்கல் சிரிப்புகள்... அனைத்தும் அவனை அமைதியின்றி இருக்கும்படிச் செய்தன. அவன் வெறுப்படைந்தான்.

மழைக்கோட்டை தோளில் போட்டபடி ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சிவப்பு நிற ஆடை கட்டிய இளைஞனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தபோது பெங்களூரில் பார்த்த மார்க்கரட் ஞாபகத்தில் வந்தாள். மாகியின் சாயல் சிறிதளவு அவளுக்கிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு... ஆமாம்... மூன்று நாட்களுக்கு முன்பு இதே நேரத்தில் மாகியுடன் அவன் இருந்தான். பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்தவாறு பீரை சுவைத்துப் பருகிக் கொண்டிருந்தாள். மின்னிக் கொண்டிருந்த ரோஸ் நிற ஃப்ராக் இடுப்புவரை ஏறிக்கிடந்தது.

அவள் சொன்னாள் - ஜெர்மன் பீரும் மென்மையான ஆண்களும்தான் அவளுக்கு விருப்பமென்று.

மாகி தான் மிகவும் புனிதமானவளென்று கூறிக் கொள்ளவில்லை. பீருக்கும் சிகரெட்டிற்கும் பதிலாக முத்தங்களைத் தந்தாள். மாகி, நீ நல்லவள்!

சாலையில் கடைகள் ஆரம்பமாகும் இடத்தை அடைந்தபோது முதலில் பார்த்தது அந்த அறிவிப்புப் பலகையைத்தான்: Drink & Enjoy!

அவன் அங்கு நுழைந்தான்.

உள்ளே ஆட்கள் அதிகமில்லை. வெறுமனே கிடந்த ஒரு மேஜைக்கருகில் அமர முயற்சித்தபோது வெய்ட்டர் சொன்னான்:

“சார்... மேலே போகலாம்.”

நெடுங்குத்தாக இருந்த ஏணியில் ஏறி மாடியை அடைந்தான். ஒரே ஒரு அறைதான் இருந்தது. அந்த அறை தாறுமாறாக இருந்தது. நடுவில் ஒரு வட்ட வடிவ மேஜையும் நான்கு நாற்காலிகளும் இருந்தன. ஒரு பகுதியில் உடைந்த மரச்சாமான்கள் கிடந்தன. மூலையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டான். இரண்டு கண்கள். ஒரு நீளமான சங்கிலியின் நுனியில் ஒரு பெரிய அல்சேஷன் கிடந்தது.

“ஒண்ணும் செய்யாது சார். வயசாயிடுச்சு...”

பார்த்தால் உயிர் இருக்கிறது என்றே தெரியவில்லை. தரையில் முகத்தை வைத்துக் கொண்டு அசைவே இல்லாமல் படுத்திருந்தது அந்த நாய். ஓரங்கள் சிதைந்த ஒரு கிண்ணம் அதற்கு முன்னால் காய்ந்து போய்க் கிடந்தது. அந்தக் கண்களில் உயிர்ப்பற்ற தன்மை தெரிந்தது. அவன் விரல்களைக் கொண்டு சத்தம் உண்டாக்கிப் பார்த்தான். அசைவே இல்லை. இடையில் அவ்வப்போது அந்தக் கண்கள் அசைந்து கொண்டிருந்தன.

எதற்காக அதை மேலே கொண்டு வந்து கட்டினார்கள்? அவன் கேட்கவில்லை. வேதனையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கண்கள்... வாழ்க்கையில் பிரகாசம் நிறைந்த நாட்களைப் பற்றி ஒரு வேளை அவன் நினைத்துக் கொண்டிருக்கலாம்...

அந்த கண்களை சிறிது நேரம் பார்த்தவுடன், இனம்புரியாத ஒரு பயம் அவனை ஆட்கொண்டது.

“என்ன கொண்டு வரணும் சார்?”

அவன் ஒரு குவார்ட்டர் க்வீன் ஆனிக்கும் சோடாவுக்கும் ஆர்டர் கொடுத்தான். வெய்ட்டர் ஏணியில் இறங்கியபோது, உரத்த குரலில் கூப்பிட்டுச் சொன்னான்: “ஒரு தட்டு சிப்ஸும்...”

குவளையும் தட்டும் புட்டிகளும் மேஜையின் மீது வந்தபோது, ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. வறுத்த உருளைக் கிழங்குத் துண்டுகளை நாய்க்கு முன்னால் எறிந்தான். மூக்கிற்கு மிகவும் அருகில் விழுந்த துண்டை மட்டும் நக்கி எடுத்த, அவனையும் பார்த்துக்கொண்டே அவன் தலையைச் சாய்ந்தவாறு படுத்துக்கிடந்தான். தான் அதைப் பார்க்கவில்லை என்பதைப் போல காட்டிக் கொண்டு, கண்ணாடி குவளையில் சோடாவை ஊற்றினான்.

நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது. நரம்புகளில் உஷ்ணத்தின் அலைகள் பரவின.

தனியாக அமர்ந்து குடிப்பதில் சுவாரசியமே இல்லை. நண்பர்கள் வேண்டும். தன்னுடைய பழைய நண்பர்களை நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு நல்லவை நடக்கட்டும்... கடந்துபோன நாட்களே, உங்களுக்கு முன்னால் தலைகுனிகிறேன்...

அவர்கள் அனைவரும் பலவற்றையும் அடைந்து விட்டார்கள். விரும்பிய பதவிகளைப் பெற்றார்கள். அவன் இப்போதும் பசுமையில்லாத புறம்போக்குகளில் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறான்.

பனிக்கட்டி இட்ட பீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, ஒரு சுரட்டைப் பற்ற வைத்தான்.

யாருடைய குற்றமுமல்ல. அப்படியென்றால்... வேதனைப்பட்டு பிரயோஜனமே இல்லை. உள்ளே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சிகள் அவனை எங்கோ கொண்டு போய்விட்டன. கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்துப் பயனில்லை. இப்படியே நாட்கள் கடந்து செல்லும். ஹோட்டல் அறைகளிலும் பார்களிலும் வாழ்க்கை வற்றிப்போன நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில்... இறுதியில் தளர்ந்து போய் விழுவான். ஒரு பிடி நினைவுகளும் எவ்வளவோ வேதனைகளும்... இவைதான் சம்பாத்தியத்தில் எஞ்சி நிற்பதாய் இருக்கும். நினைத்துப் பார்க்கும்போது... வேண்டாம்... நினைத்துப் பார்க்கவே வேண்டாம்.

ஒரு இரவு வேளையில், போதும் போதுமென்று தோன்றுகிற வரையில் குடித்துவிட்டு, மெத்தையில் சுய உணர்வே இல்லாமல் விழுவது... அடுத்த புலர்காலைப் பொழுதில் கண்விழிக்கக் கூடாது. அதுதான் வேண்டுதல். அதுமட்டுமே வேண்டுதல்.

‘காட் ஈஸ் ஆல்வேய்ஸ் மெர்ஸிஃபுல் டூ மீ’ என்று மாகி சொன்னாள்.

மாகியின் நியாயம் வினோதமாக இருந்தது. பதினாறு வயதிற்குப் பிறகு அவள் எந்தச் சமயத்திலும் சிரமப்பட்டதே இல்லை. சிறுவயதில் அவள் பட்டினி கிடந்திருக்கிறாள்.

தன்னுடைய இளம்வயது நாட்களைப் பற்றி அவன் யாரிடமும் பேசியதில்லை. நினைத்துப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கும். உணவென்பது ஒரு ஆச்சரியமான சம்பவமாக இருந்தது. கருணை நிறைந்த ஒரு வார்த்தை கிடைக்க முடியாத பொருளாக இருந்தது. அழகான ஒரு வீடு கனவாக இருந்தது. ஒரு ஆடையை கடனாகக் கேட்பதற்காக நண்பன் வீட்டு வாசற்படியில் பல மணி நேரம் காவல்காத்து நின்றிருக்கிறான்.

வயது அதிகமானபோது அதற்கெல்லாம் பழிவாங்கினான். கரன்ஸி நோட்டுகளை காய்ந்த சருகுகளைப் போல பறக்கச் செய்யும்போது, பழிக்குப் பழிவாங்கும் ஒரு செயல் தரும் முழுமையான திருப்தி உண்டானது.

நுரைகளுக்கு மத்தியில் நீந்திக் கொண்டிருந்த பனிக்கட்டிகளை நோக்கி அவன் கண்களைத் தாழ்த்தினான். ‘மக்’உதட்டோடு சேர்த்து வைத்தபோது, மீண்டும் மாகியை நினைத்தான். ஒரு இரவு வேளையில் காதல்! ஒரு இரவையும் கடந்து நீண்டு நிற்கக்கூடிய காதலின் மீது அவனுக்கு நம்பிக்கையில்லை. அதையும்விட அதிகமாக எதிர்பார்த்தவர்கள்தாம் பத்மாவும் சுசிதாம்ஸனும்.


பத்மாவின் கண்களில் நெருப்பு பறந்துகொண்டிருந்தது. பிறகு அவளை சந்தித்த வேளையில், அவளுடைய கணவனைப் பார்த்து நின்று கொண்டிருந்தபோது தனக்குள் அவன் நினைத்தான்: ‘முட்டாள்’ மனிதா, இந்த... உன்னுடைய மனைவி என் மெத்தையில் எத்தனை இரவுகள் உறங்கியிருக்கிறாள்.’

அன்று அறைக்குத் திரும்பிச் சென்றபோது பழைய பெட்டியிலிருந்த அவளுடைய காதல் கடிதக்கட்டுகளை எடுத்து வாசித்து ரசித்தான்.

எனினும், அவளுடைய நெருப்பு பறந்து கொண்டிருக்கும் கண்கள்...

காதலுக்காக ஏங்கி நடந்து திரிந்த ஒரு காலம் இருந்தது! பிறகு அதையெடுத்துத் தட்டி விளையாடுவது சுவாரசியமாக இருந்தது.

அவன் காலியான ‘மக்’கை மேஜையின் மீது வைத்துவிட்டு தலையைத் திருப்பினான். அப்போதும் மங்கலான வெளிச்சத்தில் அந்தக் கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

அவன் அமைதியற்ற மனதுடன் எழுந்தான்.

கடற்கரை ஆளரவமற்று இருந்தது. தூரத்தில் தென்னை மரங்களின் நிழலில் மீனவர்கள் வலை பின்னிக் கொண்டிருந்தார்கள். அந்த மணலில் வீடு கட்டி விளையாடியிருக்கிறான். அந்த கிராமம், வைக்கோல் வேய்ந்த வீடும், வாசல்படிக்கு வெளியே இருக்கும் நெல்வயல்களும், மெற்கு திசையிலிருந்த மலையும்... இவையனைத்தும் ஒரு தெளிவற்ற ஓவியமாகத் தங்கி நின்றிருந்தது.

ஒரு வேளை அந்த கிராமம் அவனையும் மறந்து விட்டிருக்கலாம். பத்து வருடங்கள்... அல்ல... பதினொரு வருடங்களுக்கு முன்பு அவன் அங்கு இறுதியாக கால்களையும் பதித்தான்.

அவன் திரும்பி நடந்தான்.

மேடுகளில் ஏறினான். தென்னந்தோப்புக்கு மத்தியிலிருந்த ஒற்றையடிப் பாதையைக் கடந்து விட்டால் சாலையை அடையலாம். மணல் நிறைந்த பாதையில் நடந்து செல்லும்போது அந்தக் குரல் கேட்டது.

“அண்ணா!”

வெறுமனே திரும்பிப் பார்த்தான். பார்த்தபோது அதிர்ச்சியடைந்துவிட்டான். பச்சை வண்ணம் பூச்சப்பட்ட ஒரு கேட்டிற்கு அப்பால், அவள் நின்றிருந்தாள். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு தெளிந்து நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின.

‘நாசம்...’

அவன் அதைக் கூறவில்லை. ஆனால், துடித்துக் கொண்டிருந்த உதடுகளில், கண்களில் இறுக்கி பிடித்திருந்த விரல்களில்... அனைத்திலும் அது இருந்தது.

அதை அறிந்திருந்தால்...

அவன் சிரிப்பதற்கு முயற்சித்தான்.

“அண்ணா, எப்போ வந்தீங்க?”

“ஏழெட்ட நாட்களாச்சு.”

இனி என்ன கேட்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். ‘சாந்தா, நீ எப்போது இங்கே வந்தாய்? அதைத் தெரிந்து அவனுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

“அண்ணா, ஏன் நின்னுட்டு இருக்கீங்க! இங்கே வாங்க.” அங்கு அவளைப் பார்ப்போமேன்று நினைக்கவில்லை. விரும்பவும் இல்லை.

“பிறகு... பார்ப்போம்.”

அவள் வெளிவாசலைத் தள்ளித் திறந்தாள். மேற்படியில் நின்றுகொண்டு பதைபதைப்புடன் சொன்னாள்:

“அண்ணா, வாங்க. இந்தப் படியின் வழியாப் போய்...”

அவன் தயங்கிக் கொண்டே நின்றான். அவளுடைய முகத்தில் பதைபதைப்பும் தெரிந்தன.

இறுதியில் அவன் படிகளில் ஏறினான். இரு பக்கங்களிலிருந்து பூஞ்செடிகளுக்கு நடுவில் அவளைப் பின் தொடர்ந்து நடந்து போர்ட்டிகோவிற்குள் வந்தான்.

வாசலில் நின்றவாறு அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“மகளே, இதோ யார் வந்திருக்கிறதுன்னு பார்...”

அவள் அறைக்குச் செல்லும் வாசலில் தொங்க விடப்பட்டிருந்த திரைச்சீலையை விலக்கினாள். அவன் நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தவாறு வாசலில் குழப்பத்துடன் நின்றிருந்தான்.

“இங்கே வாங்க...”

தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்தான். பிளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கருகில் அமர்ந்தான். அப்போது உள்ளேயிருந்த கதவுக்கருகில் நான்கைந்து வயதுள்ள ஒரு சிறுமி வந்துநின்றாள். அழகான குழந்தை. சுருண்ட தலை முடியும், சிறிய நீலநிறக் கண்களும், சிவந்து பிரகாசமாக இருந்த முகமும்! ஆச்சரியம் நிறைந்திருந்த கண்கள் அவன்மீது விளையாடிக் கொண்டிருந்தன.

அவனுடைய இதயத்தின் ஒரு மூலையில் மென்மையான சில உணர்ச்சிகள் எழுந்துநின்றன. அவன் கைகளை நீட்டினான். அந்தக் குழந்தை வெட்கப்பட்டுக் கொண்டே தயங்கித் தயங்கி அருகில் வந்தது.

“போ மகளே, மகளோட மாமாதானே!”

அவன் சிறுமியைத் தன்னோடு சேர்த்து நின்றச் செய்தபடி கேட்டான்:

“உனக்கு என்னைத் தெரியுமா?”

குழந்தை விரல்களைக் கொண்டு கண்களை மூடியவாறு சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள்.

“இதுதான் மூத்த குழந்தையா?”

“ஒரு குழந்தைதான் இருக்கு. இதையெல்லாம் யார் கேட்கிறாங்க?”

சாந்தாவின் குரலில் கவலை இருந்தது. சாந்தாவிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை அவன் கவனித்தான். அவள் தடித்திருக்கிறாள். ஒரு குடும்பப் பொண்ணின் தகுதியும் திருப்தியும் முகத்தில் தெரிந்தன.

“உன் பெயரென்ன?”

குழந்தை சந்தேகத்துடன் காணப்பட்டது.

“பெயரைச் சொல்லு மகளே.”

தாய் சொன்னாள்.

“ச... ந்திரி... கா.”

“எனக்கு முதலில் தெரியல... கடைசியில ரெண்டு மனசோடதான் கூப்பிட்டேன்.”

சாந்தா மேஜை விரிப்பிலிருந்த சுருக்கங்களை சரி செய்தாள்.

அவன் மேஜையின் மீதிருந்த காகித மலர்களை வருடிக் கொண்டே சொன்னான்.

“நான் ரொம்பவும் மாறிட்டேன்.”

“மகளின் அப்பா காலையில் போனாரு. இந்த வண்டிக்கு வர்றதா சொல்லிட்டுப் போனாரு. நான் அதைப் பார்த்துக்கிட்டு நின்னிருந்தேன்.”

தன்னுடைய கணவனைப்பற்றி கூறுவதற்கு அவளிடம் பலவும் இருந்தன.

“அண்ணா, உங்களுக்கு அறிமுகமில்லைல்ல..?”

“இல்லை...”

அவள் சுவரிலிருந்த கணவனின் புகைப்படத்தை எடுத்து நீட்டினாள். சாந்தாவின் தோளில் கையை வைத்து நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை அவன் பார்த்தான். ஆர்வம் நிறைந்த கண்களும் அழகான முகமும் கொண்ட ஒரு இளைஞன்.

“அண்ணா, உங்களோட புத்தகங்கள்னா ரொம்பவும் விருப்பம்.”

அவன் அலட்சியமாகப் புன்னகைத்தவாறு, ஒரு சுருட்டையெடுத்துப் பற்றவைத்தான்.

அதற்குப் பிறகு அவள் கூறினாள். அவர்கள் அங்கு வந்து ஆறு மாதங்களே ஆகியிருக்கின்றன. நல்ல இடம். அங்கிருந்து சமீபகாலத்தில் ‘அவருக்கு’ மாறுதல் எதுவும் உண்டாகாது. அந்த விடு சொந்தவீடு.

“அண்ணா, நீங்க ஊர், வீடு எல்லாவற்றையும் மறந்துட்டீங்க. அப்படித்தானே?”

அதற்கு அவன் பதிலெதுவும் கூறவில்லை. மகளின் முடிச் சுருள்களில் விரல்களை வைத்து வருடிக் கொண்டே அவன் தலையை குனிந்து கொண்டிருந்தான். சோகமான ஒரு பாடலைக் கேட்கும்போது இருப்பதைப்போல இதயம் கனமாக இருந்தது.

வேலைக்காரன் காப்பி கொண்டு வந்தான். அவள் பொன்னிறக் கோடுகள் போட்ட வெள்ளை நிற கப்பில் ஊற்றி வைத்தாள். பலகாரம் வைக்கப்பட்டிருந்த ஒரு பீங்கான் ப்ளேட்டை மேஜையின் மீது வைத்துவிட்டு, மகளை நாற்காலியில் தூக்கி வைத்தாள்.

சுவரில் மகளின் ஒரு பெரிய வண்ண ஓவியம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே காபியைப் பருகியபோது சாந்தா சொன்னாள்:


“பள்ளிக்கூடத்திற்கு அனுப்புற வயசு வந்திடுச்சு. ஆனா, எனக்கு பயம், மகளின் அப்பாவுக்கும். இங்கு ட்யூஷன் மாஸ்டரை வச்சு படிக்க வைக்கிறோம்.”

“மாஸ்டர் இல்ல. டீச்சர்.” மகள் இடையில் புகுந்து சொன்னாள்.

தாய் சிரித்துக் கொண்டே அவளுடைய கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.

“ரொம்பவும் குறும்புக்காரி. நான் சொன்னால் கேட்கவே மாட்டாள். அப்பா என்றால் கொஞ்சம் பயம்.”

அவன் அதைக் கேட்கவேயில்லை. சுருள் சுருளாக ஆவி உயர்ந்து கொண்டிருந்த காப்பி பாத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தபோது, சந்தோஷமளிக்காத பல விஷயங்களும் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தன. தனக்கு முதன்முதலாக காதல் உணர்வை ஏற்படுத்திய இளம் பெண்தான் அவனுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாள். அவனுக்கு முதல்முறையாக வெறுப்பு தோன்றச் செய்த பெண்ணும்...

அன்பு, வெறுப்பு ஆகியவற்றின் எல்லைகள் எந்த அளவிற்கு மெல்லியவையாக இருக்கின்றன!

உறவினரின் வீட்டு வாசலில் உட்கார்ந்தவாறு, தார் பூசப்பட்டிருந்த கம்பிகளின் வழியாக, கீழே முற்றத்திலும் வாசலிலும் நடமாடிக் கொண்டிருந்த அவளை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்-தாகத்துடன்.

பாவாடையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்த ஒரு சிறுபெண் அவள். அவளுடைய கூந்தலில் ஒரு மந்தாரை மலர் இருந்தது.வெறுக்க மட்டுமே தெரிந்திருந்த மனதில், அவளைப் பார்த்த போதுதான் ஒரு குளிர்ச்சியே உண்டானது.

பிறகு நினைத்து வெட்கப்பட்டிருக்கிறான். உலகம் என்றால் என்னவென்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அது. இருபத்தொன்றாம் வயதில்.

அதற்குப்பிறகு அவன் வாழ்க்கையில் அதிகமான பெண்களுடனும் பழகியிருக்கிறான். சினேகிதிகள், ரசிகைகள், காதலிகள், வெறும் படுக்கைக் கருவியாக இருப்பவர்கள். அவர்களில் பலரும் இன்று நினைவுகளின் வெளிச்சம் விழாத மூலைகளில் இருக்கிறார்கள். ஆனால், சாந்தா நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் இல்லையென்றும் நடித்தாலும், அன்பு நிறைந்த ஒரு வார்த்தைக்காக ஏங்கிய அந்தக் காலத்தில், கிழிந்து போன ஓலைப்பாயில் படுத்து அழுது இரவுகளைக் கரித்த அந்தக் காலத்தில், பாசத்துடன் நடந்து கொண்டது அவள் மட்டும்தான். அவளைப் பார்க்கும்போது, அவள் அருகில் வந்து நிற்கும்போது, உரையாடும்போது இதயம் நிறைந்து நின்றது.

அவனைப் பற்றி அவளுக்கு மதிப்பிருந்தது. அவன் கூறிய எல்லா விஷயங்களையும் அவள் பெரிதாகவே நினைத்தாள்.

வேண்டாம்... அது எதையும் நினைக்க வேண்டாம்.

“ஹோட்டலில் எப்படி?”

“பரவாயில்லை...”

“இங்கே வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதே!”

இருள் நிறைந்த ஒரு ஒற்றையடிப்பாதையில் அவளைக் கட்டிப்பிடித்தான். உணர்ச்சிவசப்பட்டு ஒரு பெண்ணை முதல் முறையாகத் தொட்டதே அப்போதுதான். வழிபாடு நிறைந்திருந்த அவள் கண்களிலிருந்து அப்போது நெருப்புப் பொறி பறந்தது. அவனை தட்டி விலக்கிவிட்டவாறு அவள் கர்ஜித்தாள்:

“அண்ணா, என்ன காரியம் செஞ்சீங்க?”

அந்த கண்களின் நெருப்புப் பொறிக்கு முன்னால் அவன்

 ஒடுங்கிப் போய் விட்டான். எனினும், கைகள் மீண்டும் நீண்டன.

“என்னைத் தொடக்கூடாது.” அவள் உரத்த குரலில் சொன்னாள்.

அவள் செல்வதை அவன் வெறுப்புடன் பார்த்தவாறு நின்றருந்தான். அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நடப்பாள் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால், மறுநாளும் தலையிலிருந்த மந்தார மலரைவிட வெண்மையாகச் சிரித்தவாறு அவள் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தாள்.

ஆனால், அவன் வெறுப்பை தனக்குள் வைத்தே பார்த்துக் கொண்டிருந்தான். உறங்கிக்கிடக்கும் நினைவுகள் எந்த சமயத்திலம் மேலேழுந்து வராமல் இருக்கட்டும். இருபத்தொன்றாவது வயதில் நடைபெற்ற அந்த சபலம் நிறைந்த செயலைப் பற்றி அவன் வெட்கப்படுகிறான்... வெட்கப்படுகிறான்...

அவள் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற தகவலை அவன் அறிந்தான். அவள் தன்னுடைய கணவனுடன் சேர்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் அந்த வீட்டில் காலெடுத்து வைக்கவேயில்லை. அவனுக்கே தெரியாமல், வெறுப்பென்று ஒரு பாறை மனதில் இடம்பிடித்துவிட்டிருந்தது.

“அண்ணா, என்ன சிந்திக்கிறீங்க?”

அவன் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதைப் போல கூறினான்:

“ஒண்ணுமில்ல...”

அறையின் மூலையில் தரையிலமர்ந்து, படங்கள் நிறைந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மகள்.

அவன் அமைதியில்லாத மனதுடன் எழுந்து அவளை நோக்கி நடந்தான். அப்போதுதான் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களுக்கிடையில் பார்த்து ஆச்சரியத்துடன் நின்றுவிட்டான்! அவனுடைய படம்!

பதினைந்து வருடங்கள் ஒரு ஆளிடம் எப்படியெல்லாம் மாற்றங்களை உண்டாக்குகின்றன! கறுத்து மின்னிக்கொண்டிருந்த அடர்த்தியான தலை முடியை பின்னோக்கி சீவிவிட்டிருக்கிறான். பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள். மீசை இன்னும் கறுக்கக்கூட இல்லை. அழகான ஒரு இளைஞன். அவனுடைய ஆல்பத்திலிருந்து முன்பு அவள் பிரித்தெடுத்த படமது.

சாந்தா, அதற்கு இங்கு இடம் கொடுத்திருக்கத் தேவையில்லை.

“அண்ணா...”

அவன் திரும்பிப் பார்த்தான்.

“அண்ணா, இங்கே உட்காருங்க.”

அவன் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தான். “அண்ணா, சொன்னா... நீங்க வருத்தப்படக்கூடாது.”

“சொல்லு...”

“அண்ணா, உங்களைப் பற்றி பலவற்றையும் கேள்விப்பட்டேன்.”

நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே அவன் பலவீனமான குரலில் சொன்னான்.

“அவை என்னவோ உண்மைதான்...”

“அண்ணா, நீங்க ஒரு விடு, குடும்பம்னு இருக்கக் கூடாதா?”

அதற்கு அவன் பதில் கூறவில்லை.

வெளியே மாலைப் பொழுது கறுக்க ஆரம்பித்திருந்தது. அவன் எழுந்தான்.

“இங்கே தங்கலாம். இரவு வண்டியில் மகளோட அப்பா வராமலிருக்க மாட்டாரு.”

“இல்ல... நான் வரட்டுமா?”

“அண்ணா, நீங்க ஏன் ஹோட்டல்ல தங்கியிருக்கீங்க? எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கக்கூடாதா?”

அவன் வேதனையுடன் புன்னகைத்தான். சாந்தாவின் கண்களில் ஈரம் உண்டாகிவிட்டிருந்தது.

“எங்கே தங்கினா என்ன?”

அவன் மகளைத் தூக்கி, அவளுடைய சிறிய கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு கீழே நிற்கவைத்தான். சாந்தாவின் முகத்தைப் பார்ப்பதற்கு தைரியம் போதவில்லை. வெளியே வந்தபோது, மகள் கையை உயர்த்திக் கூறினாள்:

“டா...ட்டா...”

நடக்கும்போது, அவன் அமைதியாக தனக்குள் கூறினான்:

‘சாந்தா, நான் உன்னை வெறுக்கவில்லை. நீ தப்பித்ததில் எனக்கு சந்தோஷமே.

அந்த இடம் புண்ணிய பூமி; என்னை அங்கு நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது.’

அவன் வேகமாக எட்டுகள் வைத்து, ஆற்றின் படித்துறையை நோக்கி நடந்தான்.

நாளை அவன் இந்த இடத்திலிருந்து புறப்படுகிறான்.

இன்று மாலையில் மட்டுமே அவன் இங்கு வரமுடியும். இருட்டில் ‘ஸைன்போர்ட்’களில் சிவப்பு எழுத்துகள் பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது அவன் நினைத்தான்.

வழக்கம்போல நெடுங்குத்தாக இருந்த ஏணியிலேறி மேலே சென்றான். மங்களலான வெளிச்சத்திற்குக் கீழே அமர்ந்தான். வழக்கம்போல விஸ்கிக்கும் சோடாவுக்கும் ஆர்டர் கொடுத்தான். அறையின் இருள் நிறைந்த மூலையைப் பார்த்ததம் அதிர்ச்சியடைந்து விட்டான். வயதான அல்சேஷன் அங்கில்லை! நீளமான சங்கிலியும், காய்ந்துபோய் காணப்பட்ட கிண்ணமும் மட்டுமே இருந்தன. அது எங்கே போனது? கேட்பதற்கு தைரியமில்லை.

அவிழ்ந்து கிடக்கும் இரும்புச் சங்கிலியை அவன் பார்க்கிறான். அது தன்னுடைய வாழ்க்கையையே வளைத்துப் பிடிக்கின்றதோ? ஓரங்கள் உடைந்து காய்ந்த நிலையிலிருக்கும் அந்தக் கிண்ணம் சந்தோஷமற்ற பலவற்றையும் ஞாபகப்படுத்தியது...

அவன் தளர்ந்துவிட்டதைப் போல காணப்பட்டான்.

நீர்ப்பரப்பின் குளிர்ச்சியை சுமந்துவந்த காற்று காதில் என்னவோ முணுமுணுத்தது...

வெளியே இருள் மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அவன் நடுங்கும் கைகளுடன் கண்ணாடிக் குவளையை உதடுகளை நோக்கி உயர்த்தினான்.

அந்த இருட்ட பயத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.