Logo

ஒரு காதல் கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7801
Oru Kadhal kathai

ஒரு காதல் கதை

தகழி சிவசங்கரப் பிள்ளை

தமிழில் : சுரா

து ஒரு சாதாரண காதல் கதை. அவளொரு கூலிவேலை பார்ப்பவனின் மகள். அவன் ஒரு பெரிய பணக்காரரின் மகன்.

அவன் படிப்பை முழுமை செய்துவிட்டு, தன் ஊருக்குவந்து சொந்தமாக சில வியாபாரங்களைச் செய்தவற்கு திட்டமிட்டிருக்கிறான். அதன் ஆரம்ப வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. தன் தந்தையின் தோட்டத்தில் சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் வந்தபோதுதான் அவன் அவளை முதல்முறையாகப் பார்த்தான்.

தோட்டத்திற்கு மிகவும் அருகிலிருந்த மலைச்சரிவில் அவளுடைய குடிசை இருந்தது. அவளுடைய தந்தை சாதாரண கூலிக்காரன். பாத்தி கட்டுவது, மரவள்ளிக் கிழங்கை நடுவதற்கு மண்ணைக் கிளறுவது இவைதாம் அவனுடைய வேலை. ஒரே மகள். தாயும் இருக்கிறாள்.

அந்த இளம்பெண் கிராமத்து லட்சுமியே உடலெடுத்து வந்ததைப்போல காட்சியளித்தாள். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டிருந்தது. அந்த அழகு, பெண்மையின் அழகல்ல. சௌந்தர்யத்தின் அழகு. அந்த சிறப்புப் படைப்பில் வெறுக்கிற மாதிரி எதுவுமில்லை. மலர்ந்துகொண்டிருக்கும் ஒரு பன்னீர் மலர்! கொஞ்சுவதற்கென்றே இருப்பது. தொட்டால், அடுத்த நிமிடமே வாடிவிடும். முகர்ந்து பார்த்தால், அந்த மூச்சுக் காற்று பட்டே வாடிவிடும். உரக்க பேசினால் அவள் நடுங்கி விடுவாள். அவள் நடந்துபோகும்போது, பாதத்திற்குக் கீழிருக்கும் புற்களுக்குக்கூட அது ஒரு தொல்லையாக இருக்காது. அந்த அளவிற்கு மென்மையான ஒரு படைப்பு படைக்கப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. அந்த இளம்பெண் இன்றுவரை சத்தம் போட்டுப் பேசியதில்லை. அவளுக்கு கோபம் என்பதே வராது.

அந்த ஏழைத் தாயும், தந்தையும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷத்தைப்பற்றி நன்கு புரிந்துவைத்திருந்தார்கள். அவர்கள் அவளைத் திட்டியதில்லை. அவளுக்கு முன்னால் இருக்கும்போது உரத்த குரலில் பேசியதுகூட இல்லை. அவளைப் பார்க்கும்போது, அவள் தன்னுடைய மகள்தானா என்று அந்த தந்தை ஆச்சரியப்படுவான். தன்னுடைய ரத்தம்தானா அது என்பதை அந்தத் தாயால் நம்பவே முடியவில்லை. வாழ்வின் அனைத்துமே அவள்தான் என்று நினைத்து அவர்கள் அவளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அவர்களுக்கு அவள் ஒரு பிரச்சினையாக இருந்தாள். குறிப்பிட்ட பருவத்தை அடையும்போது என்ன செய்வது?

மண்வெட்டி பிடித்துக் காய்த்துப்போன கரங்களில், இளந்தளிரைப் போல மென்மையாகவும், தாமரைக் கொடியைப் போன்ற மெதுமெதுவென்றிருக்கும் கையைப் பிடித்துக் கொடுப்பார்கள். அவளின் தந்தையைப்போன்ற ஒரு வேலைக்காரன்தானே அவளுக்கு கிடைப்பான்! அவளைக் காப்பாற்றக்கூடிய திறமை உள்ளவனாக இருக்க வேண்டுமென்றால், அவனுக்கு நல்ல ஆரோக்கியமும் உடல் பலமும் வேண்டும். அந்த தடிமாடனின் கைகளில் சிக்கி தன்னுடைய மகள் கசங்கிப் போய்விடுவாள் என்று அவன் பயந்தான். அவனுடைய அன்பைக்கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

அவன் பூவன்பழத்தையொத்த இளைஞர்களைப் பார்த்திருக்கிறான். அவர்கள் அனைவரும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிடைப்பார்களா? வரதட்சணை கொடுக்க வேண்டுமே!

சில நேரங்களில் அந்த தந்தையின் மனம் பல விஷயங்களையும் அளவே இல்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த ஆண்கள் அனைவரும் முரடர்கள். நல்ல உடல் பலத்தைக் கொண்டவர்கள்... அவன் வேலைக்காரனாக இருந்தாலும், பெரிய வீடுகளில் பிறந்தவனாக இருந்தாலும் அவளை கசக்கிப் பிழியக் கூடியவனாகத்தான் இருப்பான். இதுவரை தன் மகளுக்குப் பொருத்தமாக இருக்கும் ஒரு இளைஞனை அவன் பார்த்ததில்லை. அவளை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

அப்போது அவனுடைய மனைவி மெதுவாக சிரித்துக்கொண்டே கூறுவாள் :

‘என்ன... பைத்தியக்காரத்தனமாக பேசிக்கொண்டிருக்கீங்க! பொண்ணை நெரிச்சு கொன்னுடுவாங்களா?’

பிறகு ஒரு வசீகரமான சிரிப்பைக் கலந்துகொண்டே அவள் தொடர்ந்து கூறுவாள் : ‘அவளும் நெரிப்பாள். அதற்கான பலம் அவளிடமும் இருக்கு!’

எனினும், அந்த தந்தை தன் மனதிற்குள் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு - இந்த அளவிற்கு தன்னுடைய மகள் பேரழகு படைத்தவளாக இருந்திருக்க வேண்டியதில்லை என்று.

காட்டருவியைவிட்டு அவள் குளித்து முடித்து, படிகளில் ஏறிச் செல்வதை பேபி- அதுதான் அந்த இளைஞனின் பெயர் - பார்த்தான். அப்போது அவன் எதிர்கரையில் நின்றுகொண்டிருந்தான். அவள் வழியில் திரும்பி மறைந்துவிட்டாள். அந்த இளைஞனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அந்த வன தேவதை யாராக இருக்கும்?

சற்று முன்பு அங்கு வந்துசேராமல் போய்விட்டோமே என்று அவன் கவலைப்பட்டான். அங்கு சுற்றிலும் யாருமில்லை. அவள் குளித்துக்கொண்டிருந்தாள்.

அவனுடைய ஒழுக்கம் நிறைந்த உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. கட்டுப்பாட்டைவிட்டு பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் மனதைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. அந்த ஆளரவமற்ற இடத்தில் ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டு நின்றிருக்கும்போது, தான் எதற்கு அங்கு வரவேண்டும்? யாரோ மனதிற்குள் இருந்து கொண்டு அவனிடம் கேட்டார்கள். அப்படியென்றால், அவள் ஈரமான துணியை அணிந்து நின்றுகொண்டிருப்பதைப் பார்க்க வேண்டுமா?

எனினும், பேபியின் மனதிற்குள்ளிருந்து அந்தக் காட்சி மறையவேயில்லை. அந்த அழகுச் சிலை யார்? அதை சற்று கேட்டுத் தெரிந்துகொள்வதில் என்ன தவறியிருக்கிறது?

‘நீங்கள் யார்?’

இப்படி கேட்பது ஒழுக்கத்திலிருந்து தவறியதாகுமா என்ன?

தோட்டத்தின் ஒரு பக்கத்தில், கிளைகள் பரப்பி பரந்து நின்றுகொண்டிருந்த மாமரத்தின் ஒரு கிளையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு பேபி அமர்ந்திருந்தான். வாசிப்பதற்கு மனம் வரவில்லை. அந்த உருவம் மனதைவிட்டு மறையவே இல்லை. அது மட்டுமல்ல; அந்த இளைஞனின் மனம் கட்டுப்பாட்டைவிட்டு பல இடங்களுக்கும் போய்விட்டிருந்தது.

சிறிதும் எதிர்பாராமல் அங்கு... கீழே இருந்த சிறிய குடிசையின் பின்பகுதியில், அடர்த்தியாக வளர்ந்து நின்றிருந்த மிளகாய்ச் செடியிலிருந்து அவள் மிளகாயைப் பறித்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். குதித்து கீழே இறங்கினான். அவளுடைய தாய் அழைக்க, அவள் போய்விட்டாள்.

மறுநாள் அந்த படித்துறையின் எதிர்கரையிலிருந்த புதருக்குள், முன்பே வந்து அவன் மறைந்திருந்தான். அவள் குளிப்பதற்காக வந்தாள். குளித்துவிட்டுத் திரும்பிச் சென்றாள்.

மிக உயர்ந்த விஷயங்களை மட்டுமே சிந்திக்கும் மனநிலையைக்கொண்ட ஒரு இளைஞன், ஒரு இளம்பெண் குளிப்பதை மறைந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். எப்படிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அவனிடம் ஏற்பட்டிருக்கும்! வேறொரு ஆள் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தால், அந்தச் செயலும் தன்னையும் அறியாமல் அவன் வெளிப்படுத்திய சேட்டைகளும் எந்த அளவிற்கு கேலிக்குரியவையாக ஆகியிருக்கும்! மனிதன் மிருகமாக ஆவதைப் பார்க்கலாம்.

ஆனால், அதற்கு அவனைக் குறைசொல்ல வேண்டுமா என்ன?

பணக்காரரின் மகனாகப் பிறந்தான். தாராளமாகப் பணத்தை செலவு செய்தான். எனினும், எந்த கெட்ட வழிகளிலும் அவன் சென்றதில்லை. பணம் வரக்கூடிய மோசமான சூழ்நிலைகளிலிருந்து அவன் விலகியே வளர்ந்தான். உயர்ந்த ஒரு பண்பாட்டுடன் அவன் இருந்தான். பேபி ஒரு பிரம்மச்சாரியாகவே இருந்தான்.


எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒருவனைப்போல பேபி திரும்பி வந்தான். அவன் தன்னையே வெறுத்தான். எந்த அளவிற்கு கேவலமான முறையில் அவன் நடந்திருக்கிறான்? அதைச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது? சாத்தானின் வெறி இந்த அளவுக்கு தனக்குள் இருப்பதை உணர்ந்த ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது. அவன் தன்னையே ஆராய்ந்தான். அந்த செயலைச் செய்வதற்கு தனக்கு எப்படி மனம் வந்ததென்று அவனுக்கே தெரியவில்லை. குரங்கைப்போல பற்களை இளித்துக்கொண்டு, வலிய நின்றுகொண்டு வெறித்துப் பார்ப்பது ! என்ன ஒரு கேவலமான செயல்! அதைச் செய்வதற்கும் தயாராக இருந்தானே!

அப்படியென்றால் சட்டபடி அவளை நீ உனக்குச் சொந்தமானவளாக ஏன் ஆக்கிக்கொள்ளக்கூடாது என்று யாரோ மனதிற்குள்ளிருந்து கேட்டார்கள்: ‘நீ எல்லாவற்றையும் ஒளிந்திருந்து பார்த்தவன்தானே? அவ்வாறு பார்த்த நீ அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

எனினும், பரந்து கிடந்த அந்த மாமரத்தின் கிளையில், ஒரு புத்தகத்துடன் அவன் எப்போதும் உட்கார்ந்திருப்பான். படித்துறைக்குச் செல்வதற்கான நேரம் வரும் போது, மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ‘ஒரு முறை பார்த்துவிட்டாய் அல்லவா? நீ திருமணம் செய்துகொள்வதற்கு கடமைப்பட்டவன் அல்லவா?’ என்ற ஒரு கேள்வி. சாத்தானிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தீவிரமான முயற்சி இன்னொரு பக்கம்... அவன் போகமாட்டான்.

ஆனால், அவன் அந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் போது, அவன் பார்க்கமுடியாத ஒரு இடத்தில், மிளகுக் கொடிக்குக் கீழே... களை எடுப்பதைப்போலவோ, இஞ்சிக்கு உரம் போடுவதைப்போலவோ நடித்தபடி ஒருத்தி நின்றுகொண்டு, அவனை இலைகள் கொண்ட கிளைகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மரியா...” என்று அவளுடைய அன்னை அழைத்த போது, அவள் அதைக் கேட்டாள். அப்போதுதான் பேபி பார்த்தான்... ஒரே இடத்தில்... பல நாட்களாக அதே நிலையில் அவளை அவன் பார்த்தான்.

தனக்கு விருப்பமான ஆயிரம் நினைவுகளை அசை போட்டவாறு அவன் அங்கிருந்து கிளம்பினான். போவதற்கு அவனுக்கு சிறிதும் மனம் வரவில்லை. ஆனால், போகாமல் இருக்க முடியாது. அவன் தொழிலைத் தொடங்கி, வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறான். அனைத்திற்கும் பணம் வேண்டும் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். பணம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது. பணம் சம்பாதிப்பதுதான் எல்லா காரியங்களையும்விட முக்கியமான பிரச்சினை. அவன் இளம் வயதிலிருந்தே படித்த பாடம் அது. பணம் உண்டாக்குவதற்கு சில கணக்குகளும், முறைகளும், உறுதியான முயற்சிகளும் கட்டாயம் வேண்டும். அந்த வகையில் அவன் வந்தபோதே, எப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானம் செய்துவைத்திருந்தானோ, அதே நாளிலும் நேரத்திலும் அவன் திரும்பிச் சென்றான்.

ஆனால், போகும் வழியில் அவனனுடைய மனதில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களல்ல நிறைந்து நின்றிருந்தவை. அவளுடைய அழகான சிரிப்பு காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் கிளியின் கொஞ்சல்களை எத்தனை முறை கேட்டாலும், அவனுக்கு போதும், போதும் என்றே தோன்றவில்லை. அவன் அவளைத் தொட்டான். இல்லை... முந்தைய நாள் அவள் கன்னத்தில் கொடுத்த முத்தம் தந்த சுகம் இப்போதுகூட மறையாமலே இருந்தது. அதன் மயக்கவைக்கும் உஷ்ணம் உண்டாக்கிய உணர்வு இப்போதும் கன்னத்தில் அப்படியே இருக்கிறது.

ஆமாம்... அவர்கள் மறைவிடத்தில் சந்தித்தார்கள். காதல் வயப்பட்ட இளம்பெண்ணும் இளைஞனும் சந்திப்பார்கள். எப்படியும் அது நடக்கும். அது விபச்சாரமல்ல. அவளுக்கு அவன் ஒரு செல்லப் பெயர் வைத்தான்... ‘டாலி’ என்று.

அந்த வேலைக்காரனான தந்தை - பாவம் அவன் அந்த இளைஞனை நம்பினான். ஒன்றிரண்டு வார்த்தைகளை மறக்க முடியாது.

‘நீங்கள் உயர்ந்தவர்கள்... நீங்க நினைச்சாலும், சில விஷயங்கள் நடக்காது.’

இன்னொரு வார்த்தை:

‘என் தங்க மகளை சிரமப்படுத்திவிடக்கூடாது, குழந்தை!’

எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சிந்தித்துப் பார்த்த போது அவனுக்குத் தோன்றியது - பணம் உள்ளதால் இருக்கக்கூடிய வசதிகள் - அது படைத்துவிடக்கூடிய சூழ்நிலைகள்தாமே இதுவெல்லாம் என்று- ஆனால், அவள் காதலித்தாள்! பணம் இல்லாவிட்டாலும், அவள் காதலிப்பாள்!

அவனும் அவளைக் காதலித்தான். அவள் இல்லாமலிருக்கும் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அவனால் முடியாது. அது எதுவுமே இல்லாமல் வெறுமையாக இருக்கும். இல்லை... வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டுமென்று அவன் நினைத்தான். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும். அதற்கு அவன் ஒரு திட்டமே வகுத்தான்.

ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை உருவாக்குவதற்கு அவன் முயற்சி செய்தான். ஆரம்ப நிலையில் கொஞ்சம் பணத்தையும் தயார் பண்ணினான். நகரத்திற்கு வந்து அவன் அதற்கான முயற்சியில் மூழ்கினான். அந்த ஏராளமான வேலைகளுக்கு மத்தியில் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போது, அந்த அழகான வடிவத்தைப் பற்றி அவன் நினைப்பான். இயந்திரப் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்தான். ஆரம்ப நிலையில் கொஞ்சம் பணத்தையும் தயார் பண்ணினான். நகரத்திற்கு வந்து அவன் அதற்கான முயற்சியில் மூழ்கினான். அந்த ஏராளமான வேலைகளுக்கு மத்தியில் - ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போது, அந்த அழகான வடிவத்தைப் பற்றி அவன் நினைப்பான். அவனை நினைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருப்பாள். அவளை மனதில் நினைத்துக்கொண்டு கண்கள் மூடியவாறு, மூச்சை அடக்கிக் கொண்டு அவன் அமர்ந்திருப்பான்.

அந்த இளைஞனின் முதல் அனுபவம்... அதற்கு பலம் இல்லாமல் போகுமா? பல நேரங்களில், யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிகொண்டு அங்கு போய்வந்தாலென்ன வென்று அவன் நினைப்பான். ஆனால், அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வான். தான் ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று அவன் நினைப்பான்.

அடிக்கடி அவன் கடிதங்கள் எழுதுவதுண்டு ஆனால், எந்தவொரு கடிதம் எழுதியும், அவனுக்கு சந்தோஷமே உண்டாகவில்லை என்ன காரணம்? அவளுடைய தந்தைக்குதான் அவன் கடிதமே எழுதினான். அதில் ஒரேயொரு வாக்கியம்தான் அவளைப்பற்றி எழுத முடியும். ‘டாலி நலமாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்’ என்பதே அது. அவளுக்கு எழுத முடிந்தால் எழுதியிருப்பான் - ஒரு முத்தத்தை அனுப்பி வைத்திருப்பான்.

எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு கிராமப் பகுதியில், அன்பும் மோகங்களும் நிறைந்த உணர்வுகளைக் கொண்ட நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு அவள் இருந்தாள். பரந்து கிடக்கும் உலகில் அவளுடைய காதலன் அப்படி நடந்துகொண்டிருப்பதை அவள் பார்க்கிறாள். அந்த காதல் காட்சிகள் நடைபெற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அவளுடைய இதயம் மெதுவாக கேட்கும்:


‘என்ன இங்கே, வெட்கமே இல்லாமல்..?’

அவன் இருப்பதைப் போலவே அவள் உணர்வாள். ‘டாலி...’ என்று காதுகளுக்குள் முணுமுணுக்கப்படுகிறது. அந்த மரங்களும் கொடிகளும் ‘டாலி... டாலி... என்று எதிரொலிக்கும். நாணம் கலந்த சிரிப்புடன் அவள் ஓடி மறைவாள்.

தன் தந்தைக்கு வரும் கடிதங்களில், அந்த கிராமத்து இளம்பெண்ணை சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்கு அந்த ஒரு வாக்கியம் போதும்.

‘டாலி நலமாக இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.’ அவளுக்கு அதுவே போதும்.

தான் ஒரு காமதேவனின் சொந்தம் என்பதை நினைத்து அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அனைத்துமே அவனுக்குச் சொந்தமானவையே.

காதல் உணர்வுகள் அவளிடம் சில சிறுசிறு மாற்றங்களை உண்டாக்கிவிட்டிருந்தன. அவளுடைய கன்னங்களின் நிறமும் அவளுடைய சரீரத்தில் பிரகாசமும் மெருகேறிக் காணப்பட்டன. அவள் வெறும் இளம்பெண்ணாகத் தோன்றவில்லை. பெண்ணாக ஆனதன் அழகு தெரிந்தது. முகத்தில் செம்பருத்தி மொட்டுகளைப்போல இரண்டு மூன்று முகப்பருக்கள் காணப்பட்டன. அங்கு முத்தங்கள் பதிந்திருக்கலாம். நினைத்து...நினைத்து... அமர்ந்துகொண்டிருந்த அவளுடைய நீலநிறக் கண்கள் முன்பிருந்த கள்ளங்கபடமற்றவளுக்குச் சொந்தமானவையாக இல்லை. காதலனுடன் சங்கமமாவதற்கு இடம் தீர்மானித்த சிந்தனையின் வெளிப்பாடு அந்தக் கண்களில் தெரிந்தது. அவளுடைய உறுப்புகளுக்கு ஒரு தளர்ச்சி உண்டாகி விட்டிருந்தது. அவள் கட்டியணைக்கப்பட்டவள் !

அவளிடம் உண்டாகியிருக்கும் மாறுதல்கள் அவளின் தாய்க்கு நன்கு தெரிந்தன. ஒரு சிறிய பெண்ணாக அல்ல; ஒரு பெண்ணாக அவள் அவளை நினைத்தாள். அன்னை கேட்டாள்:

“அவர் ஏன் வரவில்லை மகளே?”

“வேலை அதிகம் அம்மா!”

“எப்போ வர்றேன்னு சொல்லியிருக்காரு?”

“வேலை முடிஞ்சபிறகு வருவார்.”

தொழிற்சாலை உண்டாக்குவதற்கான ஆரம்ப வேலைகள் அனைத்தும் ஒரு வகையாக முடிவடைந்தன. வெகு சீக்கிரம் இயந்திரப் பொருட்கள் வந்து இறங்கும். செயல்படுத்தத் தேவையான பணம் வேண்டும்.

ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, அவனுடைய தந்தை கணக்குகளைக் கேட்டார். பல நாட்களுக்குப் பிறகு அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவன் எல்லா விஷயங்களையும் கூறினான். ஒரு பெரிய தொகை வேண்டும்.

அவனுடைய தந்தை சொன்னார் :

“இங்கு இப்போ அவ்வளவு பணம் இல்லையே! கையில் பணம் இல்லை.”

பேபி சற்று பதைபதைப்பு அடைந்தான். அந்த பதைபதைப்பை அவனுடைய தந்தை பார்க்காமலில்லை.

உடனடியாக தேவைப்படும் பணம் எவ்வளவு என்பதை பேபி கணக்கு வட்டி விளக்கிக் கூறினான். அவனுடைய தந்தை அமைதியாக இருந்தார். பிறகு கூறினார்.

“அந்த நீதிபதி திருமண விஷயமாக வந்திருந்தார். பொண்ணு உன்னுடன் சேர்ந்து படிச்சவள்தானே! இருபத்தய்யாயிரம் ரூபாய் தர்றதா சொன்னாரு. அவங்க குடும்பம் நல்ல குடும்பம். நல்ல கட்டுப்பாடுகள் கொண்ட குடும்பமும் கூட”

உண்மையிலேயே பேபி அதிர்ச்சியடைந்து விட்டான். அந்த கிராமத்தின் எல்லையிலிருந்த செடிகளுக்கு மத்தியிலும், படர்ந்து கிடக்கும் கொடிகளுக்கு மத்தியிலும், காட்டாற்றின் பாறைகளிலும் எதிரொலித்து, காட்டு மலர்களில் மது அருந்திக் கொண்டிருந்த வண்டுகளை அதிர்ச்சியடையச் செய்து, ஒரு மென்மையான இதயம் வெடித்துச்சிதறி, குயிலின் குரலில் எழுப்பிய அழுகைச் சத்தத்தை அவன் கேட்டான். அதற்குப்பிறகு அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தொழிற்சாலையும் செயல்பாடுகளும் மறந்து போய்விட்டன. அவனுடைய தந்தை என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார். அந்த திருமணத்தால் கிடைக்கக்கூடிய நல்ல விஷயங்கள்! சொந்தக்காரர்களின் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள்! அவன் ‘சரி’ என்று சம்மதித்துவிட்டார். இனி சடங்குகள் நடந்தால் போதும். ஆனால், பேபி எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவனுடைய அன்னையும் என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தாள். ஆனால், அவர் திடீரென்று தான் கூறிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு, அவனையே கூர்ந்து பார்த்தாள். அவனுடைய முகத்தில் தெரிந்த மாறுதல்களை அவள் பார்த்தாள்.

பேபிக்கு மூச்சு அடைப்பதைப்போல இருந்தது. அவனால் எதுவுமே பேச முடியவில்லை. தொண்டை வறண்டுபோய்விட்டது. அவன் எதுவுமே பேசாமல், சுய உணர்வை இழந்துவிட்டவனைப்போல, ஒரு சாய்ந்துகொண்டிருக்கும் பொம்மையைப்போல எழுந்து சென்றான். எல்லாரும் அதைப் பார்த்தார்கள்.

அதற்கு காரணம் என்ன? அவன் எங்காவது சிக்கிக்கொண்டு விட்டானோ? மனைவியும் கணவரும் ஒருவரோடொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

அப்படி ஒரு இளைஞன் எங்கு செல்கிறான்? எங்குபோய் தன்னுடைய இதயச் சுமையை இறக்கி வைக்கிறான்? ஒரே ஒரு இடத்தில்தான் நிம்மதி கிடைக்கும். காதலி இருக்குமிடத்தில்! அவள் ஆறுதல் கூறுவாள்... அவள் சிரிக்கச் செய்வாள். அங்கு மனக் கஷ்டங்கள் மறக்கப்படும்.

பேபியின் கார் நேராக அந்த கிராமத்தை நோக்கி விரைந்தது.

ஆனால், அங்கு அவனுக்கு மன அமைதியும், சந்தோஷமும் கிடைக்கவில்லை. அவனுடைய மனம் குழப்பத்தில் இருந்தது. அவளுடைய இதயத்தை அபகரித்துச் சென்ற மென்மையான மனதைக் கொண்ட அந்த இளைஞனையல்ல அவள் இப்போது பார்ப்பது... மனதில் குழப்பங்களுடன், ஒரு இடத்தில் அமர முடியாமல், இரு இடத்தில் நிற்க முடியாமல், மறந்து கொண்டு நடந்து திரியும் இளைஞன்!

அந்த முத்தங்கள் மிகவும் உஷ்ணம் நிறைந்ததாக இருக்கும். இறுக அணைக்கும்போது அவள் ஒடுங்கிப்போய் விடுவாள். அந்த சமயத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு என்னென்னவோ அவள் முணுமுணுப்பாள்... அப்படி அவளை கொஞ்சுவதில்லை. செல்லமாகப் பேசுவதில்லை. இதயம் உணர்ச்சிவசப்படும்படி நடப்பதில்லை. விளையாட்டும் சிரிப்புமாக அப்படி தொட்டுத்தொட்டு ரசிப்பதில்லை. சற்று வாய்விட்டு சிரிக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள்.

அவிழ்த்துவிடப்பட்ட கூந்தலுடன் அவள் அமர்ந்திருப்பாள் - அதில் அவன் விரலை நுழைத்து வருடவேண்டும் என்பதற்காக பாறையின் மீது தாடையில் கையைவைத்து அமர்ந்திருப்பாள் - பின்பக்கமாய் அவன் வந்து தலையை உயர்த்தி முத்தமிட வேண்டும் என்பதற்காக. அது எதுவுமே அவளுக்குக் கிடைக்காது. வெப்பம் நிறைந்த இரத்தத்தின் வெறிபிடித்த முரட்டுத்தனம்! அவளுடைய மலரைப் போன்ற மேனி பல நேரங்களில் வேதனைப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? அதை அவன் அவளிடம் கூறவில்லை. அவனுடைய திருமண விஷயம்! கூற வேண்டுமென்று அவன் நினைக்கவுமில்லை. சாயங்காலமாகி விட்டது. மலர்வாடி விடும். அதற்குமுன்பே முடியும் வரையில் மதுவைப் பருகிவிட ÷ண்டும் என்ற வெறிகொண்ட உன்மத்த நிலையில் இருக்கும் பைத்தியக்காரனைப் போல அவன் இருந்தான். அந்த மலரின் மென்மையான இதழ்களில் அவனுடைய கொம்புகளால் காயங்கள் உண்டாகியிருக்கின்றன. கிறகடிப்புகள் பட்டு சில இடங்கள் வாடியும் போயிருக்கின்றன.  அதற்குப் பிறகும் அந்த மலர் அவனுக்காக மேலும் மேலும் மலர்ந்துகொண்டிருந்தது.

ஒருநாள் அவள் கேட்டாள் :


“இது என்ன பைத்தியக்காரத்தனம்? நான் உங்களுக்குச் சொந்தமானவள்தானே?”

“ம்..”

அவன் கோபத்துடன் மெதுவான குரலில் முனகினான். அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள்.

ஒருமுறை அவன் அவளை மார்போடு அணைத்து, கையால் இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டே பற்களைக் கடித்தவாறு கேட்டான் :

“நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வில்லையென்றாலும், நீ என்னைக் காதலிப்பாயா?

அவளால் அந்த கேள்வியைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“என்ன சொல்றீங்க?”

அவன் திரும்பக் கூறவில்லை.

“ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை...

பின்னர் ஒருமுறை அவன் கேட்டான் !

“நான் பிஸினஸ் செய்து பணக்காரனாகி வாழக்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை உனக்கு இல்லையா?”

அந்தக் கேள்வி அவளிடம் கேட்கப்பட வேண்டியதா? அந்தக் கேள்விக்கான நோக்கம் என்ன? ஏதோ இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அதற்குத் தேவையானவற்றை நீ செய்வாய் அல்லவா? சகித்துக்கொள்ள வேண்டியவற்றையெல்லாம் சகித்துக் கொள்வாய் அல்லவா?”

அதற்கு பதில் கூறவேண்டிய அவசியமில்லை.

அந்த கிராமத்து இளம்பெண்ணிடம் அவன் மிடுக்கான குரலில் நீளம் நீளமாக சொற்பொழிவாற்றுவான். அடுத்தடுத்து இரண்டு பாறைகளின்மீது அமர்ந்து அவன் பெரிய விஷயங்களைக் கூறுவான். அவள் எதுவுமே புரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். தன்னை அன்புடன் கொஞ்சிய அந்தக் காதலனா என்று அவள் சந்தேகப்பட்டிருக்கிறாள். பயந்திருக்கிறாள்...  அதே உருவம்தான்... குரல்கூட மாறியிருக்கிறது.

வாழக்கையைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு பெண்! விளையாடி, சிரித்து வாழவேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாள். ஆனால், விளையாட்டு இல்லை... சிரிப்பு இல்லை. சுமைகள் நிறைந்த ஒரு வாழ்க்கையாக அது இருந்தது. அது அவளை பயமுறுத்தியது.

அவன் கூறுவது வாழ்க்கை பற்றிய தத்துவஞானம். தாயின் பாலிலிருந்து அவனுக்கு கிடைத்த ஒரு தத்துவ ஞானம்! பிஸினஸ் செய்பவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமானது அவனுடைய பிஸினஸ்தான். அதன் வெற்றிக்கான சூழ்நிலைகளை அவன் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். சில நேரங்களில் கடுமையான செயல்களை அவன் செய்ய வேண்டியதிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் அவன் இருண்ட இதயத்தைக் கொண்டவனாக இருப்பானோ என்று தோன்றும்- யாருமே கேட்காத அந்தச் சொற்பொழிவு அவ்வாறு போய்க்கொண்டிருந்தது. பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியுமே!

உண்மையிலேயே அப்படி எதையும் கூறவேண்டும் என்று பேபி நினைக்கவில்லை. ஆனால், தன்னையே அறியாமல் அவன் கூறிவிடுவான். அதற்குப்பிறகு எதற்கு இதையெல்லாம் கூறினோம் என்று அவன் சிந்திப்பான். அந்த நேரங்களில் ஒரு சிறிய குழந்தையைப்போல அவளை அவன் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான். அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்துவிடும்.

ஒருநாள் அவளுடைய தந்தை சொன்னான் :

“தோட்டத்தை விற்கப் போறாங்க.”

பேபியால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை.

மறுநாள் மூன்று நான்கு பேர் தோட்டத்தைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அன்றே பேபி நகரத்திற்குத் திரும்பிவிட்டான்.

பேபிக்கும் அவனுடைய தந்தைக்குமிடையே உரசல் உண்டாகிவிட்டது என்ற தகவல் பரவியது. பேபிக்கு கிழக்கு திசையில் எங்கோ ஒரு பெண் இருக்கிறாள் என்ற தகவலும்... அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற செய்தியும் இனிமேல் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட விஷயம் நடக்கப் போவதில்லை. பணத்திற்கு எங்கே போவது? அவனுடைய தந்தை தோட்டத்தை விற்று விட்டார். சொத்துக்கள் சம்பந்தமாக சில ஏற்பாடுகளைச் செய்யப் போகிறார். பேபிக்கு எதுவும் கொடுப்பார் என்று தோன்றவில்லை. நீதிபதியின் மகளை பேபிக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவனுடைய தந்தை வாக்களித்திருந்தார். பேபிக்கு அதில் சம்மதமில்லை.

இப்படிப்பட்ட ஒரு காட்டுத்தீக்கு மத்தியில் நகரத்திற்கு வந்தான். எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் இதே கேள்விதான். தோட்டத்தை எதற்காக விற்பனை செய்தார்கள் என்ற விஷயம் இப்போது பேபிக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது.

வயதானவர்கள் அறிவுரை கூறினார்கள். “நல்ல பெயன். கஷ்டம்! கிறுக்கு பிடித்து அலைகிறானே!” என்று அவர்கள் பரிதாபப்பட்டார்கள். பேபிக்கு அது புரிந்தது. ஆனால், அது மனதை வேதனைப் படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது.

தந்தையை எதிர்த்தவன் என்ற கெட்ட பெயர். அதை எப்படி அவன் சந்தித்து வாழ்வான்? அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. தன் தந்தையைப் பற்றி பேபிக்கு நன்றாகத் தெரியும். ஒரு கண்டிப்பான மனிதர். ஒரு மகனை வேண்டாம் என்று உதறிவிட நினைத்தால், எந்தவொரு சக்தியாலும் அதை திரும்பக் கொண்டுவர முடியாது. தந்தை வீசியெறிந்து விட்டால்... அதற்குப் பிறகு என்ன செய்வது?

பேபி தளர்ந்து போய்விட்டான். எதிர்காலம் இருண்டு கிடப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. கனவு கண்டு கொண்டிருந்த பிஸினஸ் - அது நடக்கப் போவதில்லை. பிறகு? பேபிக்கு ஒரு வழியும் தெரிய வில்லை.

எனினும், அந்த திருமண உறவில் ஈடுபடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை.

அந்த திருமண உறவைப்பற்றி அவனுடைய தந்தை கூறிய நாளிலிருந்து அவனுடைய மூளையில் ஒரே குழப்பங்களாகவே இருந்தது. தெளிவான ஒரு வடிவுமே அவனுக்குக் கிடைக்கவில்லை. என்ன செய்ய வேண்டுமென்பதும் பற்றி முடிவு செய்வதற்கே அவளால் முடியவில்லை.

அந்த ஏழைப்பெண் அவனை நம்பினாள். நம்பாதே என்று கூறவேண்டுமென்று நினைத்தான். ஆனால், கூறவில்லை. அவள் அந்த அளவிற்கு புத்திசாலித்தனம் கொண்டவளில்லை. அவனால் புரிந்து கொள்ள முடியாத வகையில் கூறியிருப்பதாக பேபி நினைத்தான்.

அவள் அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்!

கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அந்த கிராமத்தின் எல்லையில் ஒரு பட்டாம்பூச்சியைப்போல அவள் நடந்து திரிந்தாள். யாராவது ஒரு வேலைக்காரன் அவளுடன் வந்துசேர்ந்திருக்கலாம். ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்து, குழந்தைகளும் பிறந்து, சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். அந்த வாழ்க்கையில் மிகுந்த சுகங்களைக் கண்டு திருப்தியடைந்து, துயரங்களை சகித்துக்கொண்டு, அந்த வாழ்க்கையை முடித்திருக்கலாம். அவளை எதற்காக தட்டியெழுப்ப வேண்டும்? சாத்தானின் வெறி!

வரக்கூடிய நல்லது, கெட்டதுகளைப் பற்றிக்கூட சிந்திக்காமல் அவள் கீழ்ப்படிந்தாள். அவளை அவன் என்னவெல்லாம் செய்யவைத்தான்! அவளுடைய கன்னித்தன்மையை நாமசாக்கவில்லையா? அதுவும் அந்த தாயிடமும், தந்தையிடமும் கூறி நம்பவைத்து, அவர்களுடைய கண்களில் மண்ணைத் தூவிவிட்டு!

அதே நேரத்தில் முழுமையாகப் பார்த்தால்... தான்தான் அதற்குப் பொறுப்பா? அவள் அந்த இடத்தில் மறைந்துநின்று பார்த்துக் கொண்டிருந்தது? அவன் ஒரு எட்டு முன்னோக்கி வைக்காமல் இருந்திருந்தால், அவனுடைய புத்தியும் பணக்கொழுப்பும் செயல்படாமல் இருந்திருந்தால் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது முடிவுக்கு வந்திருக்கும்- அவளும் ஆனந்தத்தை அனுபவித்தாள் அல்லவா? ஆமாம்... அந்த மறைவிடங்களில் நடைபெற்ற சந்திப்புகள் அவளுக்கு இன்பத்தை அளித்திருக்கின்றன.


தான் மட்டுமே குற்றவாளி அல்ல... அவள் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், அது போதாதா? ஆண்கள் அப்படியெல்லாம் நடக்கத்தான் செய்வார்கள். பெண்கள் அல்லவா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? அப்படியென்றால் அவளும், அவளுடைய தாயும் தந்தையும் வேண்டுமென்றே வலைவிரித்து ஒரு நல்ல பையனைப் பிடித்திருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாதா என்ன?

இல்லை... அவள் காதலித்தாள். அவன் அவளையும். எல்லா விஷயங்களையும் சவாலாக எடுத்துக்கொண்டு அவளை ஏற்றுக்கொண்டால் என்ன? தந்தையிடமிருந்து எந்தவொரு சொத்தும் கிடைக்க வேண்டாம். சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை ஆரம்பித்தால் என்ன? அந்த வாழ்க்கைக்கு குறிப்பிட்டுக் கூறும்படியான இனிமை இருக்கிறது.

நகரத்தில் பலரையும் அவன் அணுகிப் பார்த்தான் பணத்திற்காக. யாரும் அவனுக்கு பணம் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு ஆள பணம் இல்லை என்று கூறினார். இன்னொரு ஆள் அவனுடைய தந்தை சொன்னால் பணம் தருவதாகக் கூறினார். நான்காவதாக ஒரு ஆள் நேரடியாகவே கேட்டார் - தந்தை கைகழுவி விட்டார்... அவனுக்கு எந்த உறுதியை வைத்துக்கொண்டு பணம் கொடுப்பதென்று.

ஒரு நண்பன் அவனிடம் கூறினான் :

‘காரியம் நடக்க வேண்டுமென்றால், உன் அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்துகொள். பணத்தை வாங்கு. பிஸினஸ் செய். பணத்தை சம்பாதி...’

அந்தக் காதல் கதையை எப்படி மறப்பதென்று பேபிக்கு தெரியவில்லை. அவனுடைய நண்பன் அதற்கு வழி கூறினான்.

“திருமணம் செய்து கொள்கிறாய் என்பதற்காக அந்த காதலை விட்டெறிய வேண்டுமா என்ன?”

ஒரு துரும்பு கிடைத்ததைப்போல பேபி உணர்ந்தான்.

ஆமாம்... அந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி, அவர்களுடைய நம்பிக்கைக்கு மோசம் உண்டாகாமல், அந்தக் காதல் உறவைக் கைவிடாமல் தொடர்ந்தால் என்ன? இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிட்டோம் என்பதற்காக, அவளைக் காதலிக்கக் கூடாதா என்ன? அவனுக்குத் தெரிந்திருந்த எல்லாருக்கும் அதைவிட குற்றங்கள் நிறைந்த உறவுகள் இருந்தன.

இயந்திரப் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டதாகத் தகவல் வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேபி தன்னுடைய தந்தையை நேரில் சந்திக்கிறான். அவர் எதுவும் பேசவில்லை. மகனைப் பார்த்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை. என்ன கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், தன் தந்தையிடம் அவன் பேசியாக வேண்டும்.

நிசப்தம் அந்த சூழலின் இறுக்கத்தை அதிகரித்துக் காட்டியது. பேபிக்கே தெரியாமல் அவனுடைய நாவில் இருந்து ஒரு வாக்கியம் வெளியே வந்து விழுந்தது.

“அந்த திருமணத்தை நிச்சயம் செய்யணும்.”

இயந்திரத்தனமாக அவனுடைய தந்தை சொன்னார்.

“போய் எல்லாவற்றையும் சரி செய்.”

அந்த அடர்ந்த காட்டில் எதிரொலித்த அழுகைச் சத்தம் இப்போது கேட்கவில்லை. பேபியின் காதுகளுக்குள் ஒரு சங்கொலி நிற்காமல் உரத்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆரம்பிக்கப் போகிற தொழிற்சாலையின் சங்கொலியாக இருக்கலாம்.

தான் என்ன கூறினோம் என்பதை அவன் சிந்தித்துப் பார்த்தான். அவனுடைய தந்தையைத் தவிர வேறு யாரும் அதைக் கேட்கவில்லை.

பேபி தளர்ந்து போய்விட்டான். தனக்குப்ப பிரியமான ஏதோவொன்றை இழந்துவிட்டதைப்போல அவன் உணர்ந்தான். ஆனால், ஒரு தீர்மானத்திற்கு வந்த நிம்மதி இருந்தது. எனினும், நடைப்பிணத்தைப்போல அவன் விட்டிலிருந்து வெளியேறி நடந்தான்.

அந்த நினைவுகளை எப்படி புதைத்து மூடுவது?

அதற்குப் பிறகும் ஒருமுறை பேபி அந்த கிராமத்திற்குச் சென்றான். ஒருவேளை தன் நண்பன் கூறிய திட்டத்தை விளக்கிக் கூறுவதற்காக இருக்கலாம். அதற்குப் பிறகு பயனற்ற வாக்குறுதிகளையும் சபதங்களையும் கூறுவதற்காகவும் இருக்கலாம். அந்த சபதங்களை நிறைவேற்றுவதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறதா என்ன? அவற்றிற்கு உண்மைத்தன்மை இருக்கிறதா? அந்த வகையில், அவனது ஜாதியின் புனிதத்தைக் காட்டும் முகத்தில் மிதிக்கும் குணத்தில் சிக்கி, அந்த நல்ல இளைஞன் மேலும் மேலும் கட்டப்பட்டுக் கிடக்கலாம். மனைவி இருக்க, வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறேன் என்று! திருமணத்தின் புனிதத்தன்மையை இதைவிட கேலி செய்வதற்கு இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால், எல்லாவற்றையும் மனதிற்குள் மறைத்து வைத்துக்கொண்டு, அவளை மேலும் ஒருமுறை பயன்படுத்திக் கொள்வதற்காக சென்றிருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால், அவள்மீது குற்றம் சுமத்திவிட்டு, அவளை விலைமாது என்று கூறுவதற்காகச் சென்றிருக்கலாம்.

எது எப்படியோ, ஆன்மாவின் புனிதத்தன்மையை இழந்தவனாக அவன் திரும்பிவந்தான். அந்த முகத்தில் பிரகாசம் இல்லை.

முள்கிரீடம் அணிந்து சிலுவையில் தொங்க விடப்பட்டு நின்றுகொண்டிருக்கும் அந்த அன்பு நிறைந்த புனித உருவத்திற்கு முன்னால், ஒரு வாழ்க்கையை பலியிடும் ஆரம்ப வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாதிரியார் கேட்டார் :

“சாக்கோவின் மகன் பேபி என்று அழைக்கப்படும் ஜார்ஜ், உனக்கு யோகன்னாவின் மகள் க்ளாராவை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதமா?”

கண்களில் நிறைந்து நின்றிருந்த நீரின் வழியாக அந்த வடிவத்தை பேபி பார்த்தான். அந்த உதடுகள் மவுனமாக இருந்தன. பாதிரியார் தன்னுடைய கேள்வியை திரும்பவும் கேட்டார். பேபியின் காதில் விழுந்தது ‘தேவஸ்யாவின் மகள் மரியாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதமா? என்றுதான். உயிர் வந்ததைப்போல உணர்ந்த அவன் சொன்னான்:

“ஆமாம், ஃபாதர்...”

அந்த இளம்பெண்ணும் சம்மதம் சொன்னாள்.

அதே ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்திலிருந்த தேவாலயத்தில் இன்னொரு ‘சம்மதம் கேட்கும் நிகழ்ச்சி’ நடைபெற்றுக் கொண்டிருந்தது. மரியா, புனித மேரியின் முன்னால் அழைத்துக்கொண்டுபோய் நிறுத்தப்பட்டாள். அந்த அன்னையும் அவளுடன் சேர்ந்து தேம்பித் தேம்பி அழுவதைப்போல தோன்றியது. மணமகன் தூரத்திலுள்ள ஒரு சுற்றுலா மாளிகையில் வேலை பார்ப்பவன். ஒருமுறையல்ல; பலமுறை மரியாவிடம் கேட்கப்பட்டது. “பேபியைத் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதமா?” என்று காதில் விழுந்ததைப்போல உணர்ந்திருக்க வேண்டும்... அவளும் ‘ஆமாம்... ஃபாதர்’ என்று கூறினாள்.

பல வருடங்கள் கடந்தோடின. மலைப்பகுதியில் ஒரு சுற்றுலா ஊரின் விருந்தினர் மாளிகையில், ஒரு பெரிய தொழிலதிபர் வந்து சேர்ந்திருந்ததன் ஆரவாரம் நிலவிக்கொண்டிருந்தது. இரவு நன்கு இருட்டிய பிறகு, ஒரு அறையின் வாசல் வழியாக தலையை முழுமையாக மூடி மறைந்திருந்த ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அந்தக் கதவு மூடியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மதுவில் மூழ்கிய ஒரு வெடிச்சிரிப்பு!

“டாலி...”

அவள் சிலையைப்போல நின்றுவிட்டாள். குடித்து குதித்துக் கொண்டு நின்றிருந்தவன் அவளுடைய பேபி!

அந்தப் பெண்ணின் அனைத்து அழகுகளும் போய்விட்டன.

ஆமாம்... அந்த அழகு... பிறகு ஏன் இல்லாமற் போனது?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.