Logo

வெறும் ஒரு இனிப்புப் பலகாரம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6774
verum-oru-inippu-palakaram

விமலா, ஏன் உன் கணவர் வரவில்லை?" வாசலில் நின்று கொண்டு என்னை அழைத்திருந்த கிருஷ்ணமூர்த்தி கேட்டார்:"ஒரு மணி நேரமாவது வர வேண்டுமென்று நான் கூறினேன் அல்லவா? குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை... உணவு சாப்பிடுவதற்காவது..."

"டூர் முடிந்து இன்றுதான் பாட்னாவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார்." நான் சொன்னேன்: "மிகவும் சோர்வடைந்து போய் இருக்கிறார். படுத்து சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டுமென்று சொன்னார்."

"நீயாவது வந்தாயே! சந்தோஷம்". அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "வா... வராந்தாவில் அவர்கள் எல்லாரும் உன்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள். நாங்கள் குடிக்க ஆரம்பித்திருக்கிறோம் அவ்வளவுதான்."

என்னை அழைத்திருந்தவர் ஐம்பத்தைந்து வயதான- ஒரு திருமணம் ஆகாத மனிதர் தடிமனான கழுத்தையும் கனமான கைகளையும் கொண்ட ஒரு மனிதர்.

வராந்தாவில் நான் எதிர்பார்த்திருந்த அனைவரும் இருந்தார்கள். பொதுவாக அந்த வீட்டிற்கு வரக்கூடிய விருந்தாளிகள். பொருளாதார நிபுணர், அவருடைய மனைவி, ஷிப்பிங் கம்பெனியின் இயக்குநரும் திருமணமாகாதவருமான இன்னொர நடுத்தர வயது மனிதர், வெளுத்து தடிமனான கர்ப்பிணிப் பெண்களை ஞாபகப்படுத்தும் உடலமைப்பைக் கொண்ட வக்கீல் ராய், அழகியும் கவிதை எழுதும் பெண்ணுமான மனைவி, கல்கத்தா சொசைட்டியின் விளக்கான மிஸ். இந்திரா ராவ், பந்தயக் குதிரைகளின் உரிமையாளரான மார்வாடி கிழவர், தடித்துப் போய் வெள்ளை நிற ஆடை அணிந்த மகாராணி...

"மேனன் எங்கே?" பொருளாதார நிபுணர் கேட்டார்.

"டூர் முடிந்து இப்போத்தான் திரும்பி வந்திருக்கிறார். மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொன்னார்." நான் சொன்னேன்.

"மிஸ்டர் மேனனுக்கு எங்களைப் பிடிக்காது. அதனால் இப்படிப் பட்ட சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்." கவிதை எழுதும் பெண் சொன்னாள். அவள் ஒரு திண்டின் மீத கால்களைத் தூக்கிக் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கையில் இருந்த கண்ணாடிக் குவளையில் இரண்டு அங்குலம் விஸ்கி மட்டுமே மீதமாக இருந்தது.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. களைப்பாகத்தான் இருந்தார்." நான் சொன்னேன்.

"விமலா தேவி, விமலா ராணி, பிரியமான விமலா... நீங்கள் எனக்கு அருகில், இந்த ஸோஃபாவில் உட்காருங்க." வக்கீல் தடிமனான கண் இமைகள் வழியாகப் பார்த்துக் கொண்டே தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார்: "நான் உங்களைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது!"

"ஹ... ஹ... ஹ... என் கணவர் உங்கள் மீது காதல் கொண்டிருக்கும் ஒரு மனிதர், விமலா." கவிதை எழுதும் பெண் சொன்னாள்: "எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு."

பொருளாதார நிபுணரின் மனைவி என்னுடைய முகத்தையே பார்த்தாள். தொடர்ந்து வக்கீலின் சிவந்த முகத்தையும். அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசாமல் முகத்தைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு தன்னுடைய கால் விரல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சிந்துராணி, உங்களுக்குப் பொறாமை சிறிதும் இல்லை?" மகாராணி சிவந்த பற்கள் வெளியே தெரியும் வண்ணம் ஒரு சிரிப்பைச் சிரித்தவாறு கேட்டாள்: "இந்தப் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வினோதமான பிறவிகள் தான்."

"மகாராஜா இன்னொரு பெண்ணைப் பற்றிப் புகழ்ந்து பேசினால், உங்களுக்குக் கோபம் வருவதுண்டா?" சிந்துராணி கேட்டாள்.

"புகழ்ந்து பேசினாலும் ஆட்சேபனை இல்லை. பேசி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் என்னுடைய முகத்தைப் பார்த்தே எவ்வளவு காலம்ம ஆகிவிட்டது!"

மகாராணி தன்னுடைய மெல்லிய சில்க் புடவையின் ஓரத்தை எடுத்து சுருக்கங்கள் விழுந்திருந்த தன்னுடைய முகத்தை ஒரு முறை துடைத்தாள். அவளுடைய கண்களுக்கு நடுவில் கறுத்த நிழல்கள் விழுந்திருந்தன.

"விமல்... உனக்கு என்ன வேண்டும்?" என்னை அழைத்திருந்தவர் கேட்டார்: "கொஞ்சம் குளிர்ந்த ஷெரி வேணுமா? இல்லாவிட்டால் வெர்முத்... ஒயின்... விஸ்கி... கொஞ்சமாவது குடிக்கணும்."

"எனக்கு தக்காளி சாறோ வேறு ஏதாவதோ கொடுத்தால் போதும். நான் குடிப்பதில்லை என்று சத்தியம் பண்ணியிருக்கிறேன்."

"குழந்தைகளின் சத்தியம்! இந்த வயதில் சத்தியத்திற்கு விலை மதிப்பே இல்லை." ஷிப்பிங் இயக்குநரான அருண் சொன்னார்: "எனக்கு நாற்பத்தொன்பது வயது கடந்துவிட்டது. எனினும், சத்தியத்தின் தேவை புரியவில்லை."

"அதனால்தான் உங்களுக்கு ஒரு மனைவி கிடைக்கவில்லை." சிந்துராணி சொன்னாள்.

"சிந்துராணி, நான் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? எனினும், நீங்கள் என்னைக் கிண்டல் பண்ணுவது..."

"நான் கிண்டல் எதுவும் செய்யவில்லை. எனக்கு கிண்டல் பண்ணுவது சிறிதும் பிடிக்காத விஷயம். இவ்வளவு காலம் ஆன பிறகும் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லையே, அருண்? ஆச்சரியம்தான்..."

'உங்களைப் புரிந்து கொள்வதற்கு முடிந்தால், நான் எந்த அளவிற்கு அதிர்ஷ்சாலியாக இருப்பேன்!' பொருளாதார நிபுணர் ஒரு சிகரெட்டை எடுப்பதற்காக நான் உட்கார்ந்திருந்த ஸோஃபாவைத் தேடி வந்தார். "நீ ஏன் என்னுடைய கடிதத்திற்கு பதில் எழுதவில்லை?" அவர் தலையைக் குனிந்து கொண்டு சிகரெட்டை எடுப்பதற்கு மத்தியில் தாழ்ந்த குரலில் கேட்டார்: "என்னுடைய பொறுமையைச் சோதித்துப் பார்க்கிறாயா,"

"சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது, மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி." என்னை அழைத்திருந்தவரிடம் வக்கீல் உரத்த குரலில் சொன்னார்: "இதோ, இங்கே இவர்கள் இருவரும் சேர்ந்து சொந்தவிஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்."

ஒரு சிறிய குவளையில் ஒயினை வைத்துக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எனக்கு அருகில் வந்தார்.

"குடி..." பொருளாதார நிபுணா சொன்னார்: "இன்று என் மனைவி கூட குடிக்க ஆரம்பித்திருக்கிறாள்."

"ஆனால், எனக்கு தலை சுற்ற ஆரம்பித்திருக்கிறது." அவருடைய மனைவி சொன்னாள்: "எனக்கு இதைவிட காப்பி மீதுதான் விருப்பம். காப்பி இல்லாவிட்டால், நிறைய பால் ஊற்றி சேர்க்கப்பட்ட தேநீர்."

"நான் தேநீரில் பால் ஊற்றுவதே இல்லை." அருண் சொன்னார்: "வெறும் எலுமிச்சம்பழத்தை மட்டும் சேர்ப்பேன்."

"அருண், அதனால்தான் நீங்கள் இப்படி ஒரு எலும்புக்கூடாக இருக்கிறீர்கள்." சிந்துராணி சொன்னாள்.

"தேநீர் குடிப்பதைப் பற்றி கூறியபோதுதான் எனக்கு ஞாபகத்தில் வருகிறது..." மிஸ் இந்திரா ராவ் சொன்னாள்: "நேற்று சாயங்காலம் நான் தேநீர் பருகுவதற்காக திருமதி போஸின் வீட்டிற்குப் போயிருந்தேன். பத்திரிகை ஆசிரியர் வாட்ஸன், நம்முடைய அந்த தடிமனான ராணா... இப்படி பலரும் இருந்தார்கள். வாட்ஸன் தேநீர் கோப்பையைத் தரையில் போட்டுவிட்டார். "பரவாயில்லை... பரவாயில்லை..." என்று திருமதி போஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். ஆனால், அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் விழுந்து கொண்டிருந்தன. சைனாவின் வேலைப்பாடுகள் கொண்ட கோப்பை அது. வாட்ஸன் சமீப காலமாக பெரிய கவனக்குறைவான மனிதராக ஆகியிருக்கிறார்.


முந்தாநாள் நடனம் ஆடும்போது, என்னுடைய காலின் மீது ஒரேயொரு மிதி! இப்போதுகூட அந்த விரலின் வேதனை போகவில்லை.'

"உங்களுக்கு நடனம் ஆடத் தெரியாதா?" வக்கீல் கேட்டார்.

"தெரியாது."

"அப்படின்னா, கற்றுக் கொள்ள வேண்டும், விமலாதேவி அதற்குப் பிறகு நான் உங்களுடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். ஒரு நாள் சாயங்காலம் என்னுடைய வீட்டின் டான்ஸ் ஹாலில் அது நடக்க வேண்டும்."

"விமல், இங்கே வந்து உட்காரு. இங்கே உனக்கு மேலும் கொஞ்சம் காற்று கிடைக்கும்." என்னை அழைத்திருந்தவர் உரத்த குரலில் சொன்னார்.

"நீங்கள் மிகவும் மோசமானவர், மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி." வக்கீல் சொன்னார்:

"நான் அவளைத் தத்து எடுத்திருக்கிறேன், ராய். நான்தான் அவளின் காப்பாளன். அதனால் அவள் எனக்கு அருகில் அமர்ந்திருப்பது தான் எனக்குப் பிடிக்கும்."

"விமலாவின் அதிர்ஷ்டம். விமலாவிற்கு எத்தனை காப்பாளர்கள்!" மிஸ் இந்திரா ராவ் சொன்னாள்.

"மிஸ் ராவ், நீங்கள் சீக்கிரமாக யாரையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்." பொருளாதார நிபுணர் சொன்னார். "அப்போது உங்களையும் தத்து எடுப்பதற்கும் கொஞசுவதற்கும் பலர் இருப்பார்கள்."

"என்னை தத்து எடுப்பதற்கு யாரும் இல்லையே!" மகாராணி சொன்னாள்: "என்னுடைய பிள்ளைகள் எல்லாரும் வளர்ந்து திருமணம் முடிந்து போய்விட்டார்கள். இப்போது என்னைத் தத்து எடுப்பதற்கு யாராவது வந்தால் உபயோகமாக இருக்கும். எனக்கு நேரம் போகவில்லை."

"மகாராணி, உங்களை நான் இன்றைக்கே தத்து எடுக்கிறேன்." அருண் சொன்னார்: "உங்களை மட்டுமல்ல. உங்களுடைய வீடுகளையும் வாகனங்களையும்ள வைர மாலைகளையும்... எல்லாவற்றையும்..."

"நீங்கள் ஆண்கள். உங்களை யார் நம்புவார்கள்?" மகாராணி சொன்னாள். அவள் தன்னுடைய காலி குவளையை பணியாளின் கையில் கொடுத்துக் கொண்டே தாழ்வான குரலில் சொன்னாள்: "மிஸ்கியும் ஜஸும் மட்டும். சோடாவும் நீரும் வேண்டாம்."

"உங்களை நான் முந்தாநாள் திரைப்பட அரங்கத்தில் பார்த்தேன்." மார்வாடி கிழவர் மிஸ். ராவிடம் சொன்னார்: "உங்களுடன் வேறொரு பெண்ணும் இருந்தாள்."

"அப்படியா? எனக்கு ஞாபகத்தில் இல்லை. நான் திரைப்படத்திற்குப் போகாத நாள் இல்லை. எனக்கு பொழுதைப் போக்குவதற்கு வேறொரு வழியும் தெரியவில்லை. சாயங்கால நேரம் வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கிறது. அதற்குப் பிறகு ஏதாவது பார்ட்டிகள் இரக்கும். அதுவரை..."

"நீங்கள் மதிய நேரத்தில் தூங்குவதில்லையா?" பொருளாதார நிபுணர் கேட்டார்.

"எனக்கு மதிய நேரத்தில் தூக்கம் வராது."

"மதிய வேளையில் தூங்காமலே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். அப்போ பகல் நேரத்தில் தூங்க ஆரம்பித்தால், நீங்கள் எந்த அளவிற்கு பேரழகியாக இருப்பீர்கள்?" அருண் கேட்டார்.

"அருண், என்ன இது?" சிந்துராணி கேட்டாள்:

"உங்களுடைய மனதிற்கு எந்தவொரு நிலையான தன்மையும் இல்லையா?"

"நீங்கள் அதைச் சொல்லக்கூடாது, சிந்துராணி." அருண் சொன்னார்: "நான் நிலையற்ற மனதைக் கொண்டவன் என்பதை வேறு யாராவது கூறட்டும். ஆனால், நீங்கள்..."

"இந்தக் காதல் திருவிளையாடல்களை இங்கே நடத்த வேண்டுமா?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார். "இவை எல்லாருக்கும் தெரியும்படி நடத்த வேண்டிய காரியங்கள் அல்ல."

"விமலாதேவி, கொஞ்சம் அந்தப் பக்கம் தள்ளி உட்காருங்க." வக்கீல் எனக்கு அருகில் வந்து கொண்டே சொன்னார்: "நானும் இங்கு உங்களின் இரண்டு ஆட்களுக்கும் அருகில் உட்காருகிறேன். என்னால் தனியாக அந்த ஸோஃபாவில் இருக்க முடியவில்லை. எனக்குத் தனியாக இருப்பது சிறிதும் பிடிக்கவில்லை."

"என் குவளையில் இரக்கும் விஸ்கியைப் பாருங்க." சிந்துராணி சொன்னாள்: "சூரியனை எடுத்து ஒரு எலுமச்சம் பழத்தைப் பிழிவதைப் போல பிழிந்து, சாறை எடுத்து கண்ணாடிக் குவளையில் ஊற்றி வைத்திருப்பதைப் போல¬ தோன்றும். இந்த ஜூலை மாதத்தின் சூரியன்தான் என் குவளையில்... நான் சூரியனைக் குடிக்கிறேன்."

"இதைக் குடித்தால் என்னுடைய உடல் குளிர்ச்சி அடைவதுதான் எப்போதும் நடப்பது." மகாராணி சொன்னாள்: "அதனால் இது உண்மையாகவே சந்திரன்தான். ஒரு குவளை நிலவு வௌச்சம்."

"உங்களை நான் சென்ற வாரமும் பார்த்தேன்." மார்வாடி கிழவர் மிஸ். இந்திரா ராவிடம் தாழ்ந்த குரலில் சொன்னார்: "உங்களடன் இன்னொர பெண்ணும் இருந்தாள்."

"நீங்கள் இந்திராவிடம் தனிப்பட்ட முறையில் என்ன சொன்னீர்கள்?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.

"அப்படியா?" இந்திரா கேட்டாள்: "எங்கு இருக்கும்போது?"

"ரேஸ் கோர்ஸில் இருக்கும் போது."

"ஆ... அது உண்மைதான்." இந்திரா தன் குரலை மேலும் சற்று உயர்த்தியவாறு சொன்னாள்: "என்னுடன் த... ராஜா இருந்தார். அவர் காலையில் ஆறரை மணிக்கு ஃபோன் பண்ணினார். "உங்களுடன் சேர்ந்து ரேஸுக்குப் போனதாகக் கனவு கண்டேன்." என்று சொன்னார். கொஞ்சம் பணம் கிடைத்ததாகவும் சொன்னார். அதற்குப் பிறகு, என்னால் போக முடியாது என்று கூற முடியவில்லை. போனேன். அவருடைய இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் கையை விட்டுப் போகவும் செய்தது. ஹ... ஹ... ஹ...'து

"எனக்கு இந்த மாதிரியான சொஸைட்டி பேச்சுக்களைக் கேட்பதற்கே விருப்பமில்லை." வக்கீல் என்னுடைய காதில் முணுமுணுத்தார்: "எப்போதும் ராஜாக்களைப் பற்றிய பேச்சுத்தான்."

"எனக்கு விருப்பம்." நான் சொன்னேன்: "நான் வசதி படைத்த வீட்டிலொன்றும் பிறக்கவில்லையே! அதனால் இவர்களின் வாழ்க்கை எனக்கு சுவாரசியமாக இருக்கும்."

"விமலா ராணி, உங்களுக்கு எதற்குப் பணம்? உங்களுக்கு..."

"சொந்த விஷயங்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும்." அருண் உரத்த குரலில் சொன்னார்.

"அவர்களை வெறுமனே விடுங்க..." சிந்துராணி சொன்னாள்: "என்னுடைய கணவருக்கு விமலா மீது உண்மையிலேயே காதல் இருக்கிறது. இந்த அளவிற்கு புனிதமான காதலுக்கு முன்னால் பொறாமைக்கும் கோபத்துக்கும் தலையை உயர்த்தவே முடியாது. அவர்கள் ஜோடிக்குருவிகள்..."

என்னை அழைத்திருந்தவர் அப்போது எனக்கு நேராகத் திரும்பிக் கொண்டு கேட்டார்:

"விமல்... நீ வராந்தாவில் இருக்கும் படி மீது உட்கார வேண்டுமா? அதுதானே நீ எப்போதும் இருக்கக் கூடிய இடம்?"

"உண்மைதான். அப்படியென்றால்தான் நான் தோட்டத்தையும் பார்க்க முடியும்." நான் எழுந்து வராந்தாவின் படியில் போய் உட்கார்ந்தேன். கீழே, புல்வெளியில், என்னுடைய மகன் ஒரு பூனையுடன் விளையாடியவாறு மல்லாக்கப் படுத்திருந்தான்.

"அழகு என்றால் என்ன?" பொருளாதார நிபுணர் கேட்டார்: "மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, நீங்கள் எதை அழகு என்று அழைக்கிறீர்கள்?" அவருடைய கண்கள் சிவக்க ஆரம்பித்திருந்தன.

"அழகு..." மார்வாடி கிழவர் தாழ்ந்த குரலில் முணுமுணுத்தார்: "ஹா... அழகு...!" தொடர்ந்து இந்திராவின் பக்கம் திரும்பியவாறு சொன்னார்:

"நான் சென்ற வருடம் டார்ஜிலிங்கிற்குச் சென்ற போது, அங்கு உங்களைப் பார்த்தேன். உங்களுடன்..."


"அழகு என்று சொன்னால் ஒரு இளம்பெண்." வக்கீல் சொன்னார். அவருடைய மடியில் வைத்திருந்த மஞ்சள்நிறப் பட்டுத் தலையனையை எடுத்து, அதை அவர் இரண்டு முறை முத்தமிட்டார்.

"வக்கீல் கூறிய கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்." அருண் சொன்னார்.

"என்னுடைய இதயத்தை மேலும் அதிக வேகத்துடன் துடிக்கச் செய்பவள் யாரோ, அவள்தான் அழகி." கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சிந்துராணி தன்னுடைய கூந்தல் சுருள்களை ஒரு கையால் ஒதுக்கிவிட்டவாறு, கிருஷ்ணமூர்த்தியை அன்புடன் பார்த்தவாறு புன்னகைத்தாள். அதைப் பார்த்ததாலோ என்னவோ, அருண் மேலும் ஒரு பெக் விஸ்கியை உள்ளே தள்ளிவிட்டு, தலையைக் குனிந்து கொண்டு தன்னுடைய செருப்புகளின் அழகைப் பார்த்தவாறு எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்.

"எனக்கு தலை சுற்றுவதன் காரணமாக எழுந்திருக்க முடியாது." பொருளாதார நிபுணரின் மனைவி யாரிடம் என்றில்லாமல் கூறினாள்: "உணவு சாப்பிடுவதற்கு எப்படிப் போவேன்?"

"... உங்களுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள்." மார்வாடி கிழவர் சொன்னார்.

"என்னுடைய வாழ்க்கையைத் துன்பமயமாக ஆக்கியதே ஒரு இளம்பெண் தான்..." பொருளாதார நிபுணர் சொன்னார்: "இளம் பெண் என்று கூற முடியாது... முப்பது வயதிற்குக் கீழே..."

"நீங்கள் முகத்தைக் கழுவி விட்டு வாங்க..." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "வாங்க... நான் குளியலறையைக் காட்டுறேன்."

"முகம் கழுவுவதால் என்ன கிடைக்கப் போகிறது? என்னுடைய இதயத்தைத்தான் கழுவ வேண்டும். அவளுடைய குலுங்கல் சிரிப்பு நிறைந்திருக்கும் அந்த இதயம்..."

"இதைக் குடிச்சிருக்க வேண்டாம்." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்: "ஏதாவது எலுமிச்சம் பழ நீரையோ காப்பியையோ குடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பம்பாயைச் சேர்ந்த எங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லை."

அதுவரை உறங்கிக் கொண்டிருந்த மகாராணி உடல் முழுவதையும் சற்று அசைத்தவாறு கொட்டாவி விட்டாள்.

"ஹரே ராம்... பொழுது போனதே தெரியவில்லை. உணவுக்கான நேரம் ஆகவில்லையா?" அவள் கேட்டாள்.

கிருஷ்ணமூர்த்தி எழுந்து உள்ளே சென்றார்.

"என்னுடன் இருந்தது ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்." இந்திரா சொன்னாள்: "நாங்க ஒரு மாதம் அந்த ஹோட்டலில் ஒன்றாகத் தங்கினோம். அதற்குப் பிறகுதான் ஸ்விட்சர்லாண்ட்டிற்குச் சென்றோம். அங்கு இருக்கும் போது..."

"நானும் இங்கு உட்காரட்டுமா?" வக்கீல் மஞ்சள் நிறத் தலையணையை எடுத்தவாறு எனக்கு அருகில் வந்தார்.

"என்னால் தனியாக ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்திருக்க முடியாது. ஒரு சந்தோஷமில்லாத செயலைச் செய்வதைப் போல... ஒரு பயம்... விமலா ராணி, என் கையைப் பிடிச்சுப் பாருங்க... இங்கே... எந்த அளவிற்கு குளிர்ச்சியா இருக்கு... இல்லையா?" அவர் சொன்னார்.

"என் கைக்கு அருகில் உங்களுடைய கை எந்தஅளவிற்கு வெள்ளையா இருக்கு. இரவும் பகலும் போல...

விமலாராணி, விமலா... இந்த இரவு இல்லாமல் நான் என்ற பகலால் வாழ முடியாது. ஓய்வெடுக்க முடியாது..."

"நீங்கள் இந்த அளவிற்கு குடித்திருக்க வேண்டியதில்லை." நான் சொன்னேன்.

"கல்கத்தாவில் யார்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்? மற்றவர்களின் மதுவைக் குடிப்பதுதானே எல்லாருடைய முக்கிய பொழுதுபோக்காக இருக்கிறது!" அருண் சொன்னார்.

"எனக்கு காப்பிதான் பிடிக்கும். நிறைய பால் ஊற்றப்பட்டது." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள். அவளுடைய வைர நகைகளின் பிரகாசம் திடீரென்று குறைந்துவிட்டதைப் போல தோன்றியது. முகம் வியர்வை காரணமாக நிறம் குறைந்து காணப்பட்டது.

"என் வாழ்க்கையிலேயே சோகம் எது தெரியுமா?" பொருளாதார நிபுணர் கேட்டார். அவருடைய கண்ணாடிக் குவளையில் அப்போதும் கொஞ்சம் ஜின் மீதமிருந்தது. "உங்களுக்கு என்னுடைய சோகம் தெரியுமா?"

"எங்களுக்கு தெரிய வேண்டாம்." மகாராணி சொன்னாள்: "வெறுமனே தேவையற்ற விஷயங்களை இப்போது கூறாமல் இருப்பதே நல்லது."

"இல்லை... நீங்கள் எனக்கு விருப்பமுள்ள நண்பர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நான் ஐம்பத்து மூன்றாவது வயதில் முதல் தடவையாக ஒரு காதலில் சிக்கியிருக்கிறேன்."

"என்னவெல்லாமோ கூறுகிறார்." அவருடைய மனைவி வெறுப்புடன் சொன்னாள்: "இதையெல்லாம் குடித்திருக்க வேண்டியதேயில்லை."

"காதல் என்பது ஒரு கொலைச் செயலொன்றும் இல்லையே! பிறகு எதற்கு அதைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டும்?" மகாராணி கேட்டாள்.

"நான் காதலிக்கும் பெண் என்னைச் சிறிது சிறிதாக கொன்று கொண்டிருக்கிறாள். பைத்தியம் பிடிக்க வைத்துக் கொல்வது..." அருண் சொன்னார்.

"நீங்கள் திருமணமாகாத பெண்களைக் காதலித்துப் பார்த்திருக்கிறீர்களா?" மகாராணி கேட்டாள்.

"திருமணமாகாத பெண்கள்! அவர்களை யாருக்கு வேண்டும்?" வக்கீல் கேட்டார். அவர் ஒரு மஞ்சள் நிறத் தலையணையில் தன்னுடைய கை நகங்களை அழுத்தினார். "அவர்களை யாருக்கு வேண்டும்?" வக்கீல் மீண்டும் கேட்டார்.

"நீங்கள் மிகவும் மோசமான மனிதர்." இந்திரா சொன்னாள்: "என்னை அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை."

"ஓ... உங்களைப் பற்றிச் சொல்லவில்லை." வக்கீல் சொன்னார்: "இந்திராதேவி! நீங்கள் ஒரு அனைத்துலக அழகி! தேவதை! உங்களைப் பற்றி நான் இந்தச் சூழ்நிலையில் நினைத்ததேயில்லை."

"அனைத்துலக அழகு! அழகு இருந்தாலும், பரவாயில்லை." இந்திரா தன்னுடைய கை விரல்களை இப்படியும் அப்படியுமாகப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

"உங்களடைய அழகில் நான்கில் ஒரு மடங்கு அளவு என்னிடம் இருந்தால்...?" நான் சொன்னேன்.

"விமலா ராணி, உங்களுக்கு அப்படிப்பட்ட அழகு எதற்கு? உங்களுக்கு..."

"காதல் பேச்சுகள் ஆரம்பமாகிவிட்டன! எனக்கு வெறுப்பா இருக்கு!" அருண் சொன்னார்: "எங்கு பார்த்தாலும் காதல்... காதல்..."

"உங்களுக்க காதலைப் பற்றி எதுவும் தெரியவில்லை." பொருளாதார நிபுணர் சொன்னார்: "அது ஒரு சதுரங்க விளையாட்டு. விமலாவிற்கு ஒரு வேளை அதைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கலாம்."

"என்னிடம் எதுவம் கேட்க வேண்டாம்." நான் சொன்னேன். கீழே இருந்த புல்வெளியில் படுத்துக் கொண்டே என்னுடைய மகன் பூனையிடம் சொன்னான்: "இபிட்டி பிபிட்டி ஸிபிட்டி பாஸ்..."

"வாங்க... உணவு தயாராக இருக்கு." கிருஷ்ணமூர்த்தி வராந்தாவிற்கு வந்து எங்களை அழைத்தார். நாங்கள் உணவு இரந்த அறைக்குள் நுழைந்தபோது, பொருளாதார நிபுணர் தாழ்வான குரலில் என் காதில் முணுமுணுத்தார்:

"கிருஷ்ணமூர்த்தியா காரணம்?"

"காரணமா? எதற்குக் காரணம்?"

"உன்னுடைய இந்தப் புதிய நடவடிக்கைகளுக்கு..."

"சொந்த விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்." அருண உரத்த குரலில் கூறினார்.

"எனக்கு தூக்கம் வருகிறது." நான் சொன்னேன்: "ஒரு வேளை, நான்இந்த மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கினாலும் தூங்கிவிடலாம். ஒன்பதரை மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று என்னுடைய கணவர் கூறியிருக்கிறார்."


"நீங்கள் ஏன் அந்த ஆளை விட்டெறியக் கூடாது?" அருண் கேட்டார்: "ஒரு திருமண ரத்து செய்து கொள்ளக் கூடாதா?"

அறையின் இன்னொரு பகுதியில் இருந்து மார்வாடி கிழவரின் குரல் உரத்தர ஒலித்தது:

"நான் உங்களுடைய புகைப்படத்தை கடந்த மாதத்தின் 'ஆன்லுக்க'ரில் பார்த்தேன்."

"அப்படியா?" இந்திரா கேட்டாள்: "அது அந்த அரசாங்க இல்லத்தின் விருந்தின் போதுஎடுத்த புகைப்படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். என்னிடம்... ஓ... மகாராஜா ஃபோன் பண்ணி சொன்னார். நல்ல புகைப்படம் அது இது என்று... உண்மையிலேயே எனக்கு இந்த விஷயங்களில் எல்லாம் சிறிதும் விருப்பமில்லை. புகைப்படம்... பப்ளிசிட்டி..."

"நல்ல உணவு கிடைக்க வேண்டுமென்றால், இந்த வீட்டிற்கு வரவேண்டும். சந்தேகமேயில்லை. "சிந்துராணி சொன்னாள்: "இங்குள்ள சமையல்காரனைப் போன்ற சமையல்காரன் கல்கத்தாவில் வேறு எங்குமேஇல்லை."

"கல்கத்தாவில் என்ன இருக்கு?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்: "சிந்துராணி, உங்களுடைய வங்காளிகளுக்கு வாழ்வதற்கே தெரியவில்லையே! சோம்பேறிகள்..."

"வங்காளிகள் அனைவரையும் எதிர்த்துப் பேசுவது சிந்துராணியை அவமானப்படுத்துவதைப் போன்றது..." அருண் சொன்னார்: "என்னைப் பற்றி கேவலமாக பேசினாலும் பரவாயில்லை. ஆனால், ஒரு முக்கியமான பெண்ணை..."

"பேசாம இருங்க, அருண்." சிந்துராணி சொன்னாள்: "என்னை அவமானப்படுத்துவதற்கு மட்டுமல்ல- என் உடலில் காயம் உண்டாக்குவதற்குக்கூட கிருஷ்ணமூர்த்திக்கு அதிகாரம் இருக்கிறது!"

"பேஷ்!" மார்வாடி கிழவர் சொன்னார்: "பேஷ்! உங்களை விரும்பாத பெண் இல்லை, கிருஷ்ணமூர்த்திஜி."

"பெண்களின் வழிபாட்டை அடைவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். அழகோ அறிவோ அதற்குத் தேவையில்லை." அருண் சொன்னார்: "நல்ல அதிர்ஷ்டம்தான் தேவை. எனக்கு அது சிறிதும் இல்லை."

"நீங்கள் ஏன் சாப்பிடுவதற்கு எதுவுமே எடுக்கவில்லை, விமலாதேவி?" வக்கீல் எனக்-கு அருகில் வந்து கேட்டார்: "நான எடுத்துத் தரட்டுமா? கொஞ்சம் பிரியாணி?"

"எனக்கு தூக்கம் வருகிறது." நான் சொன்னேன்: "அதனால்தான் நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு குடித்துப் பழக்கமில்லை."

"உணவு சாப்பிட்டால் அதெல்லாம் போய்விடும்." வக்கீல் சொன்னார்: "நான் உருளைக்கிழங்குகள், தக்காளிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து தருகிறேன். இல்லாவிட்டால் ஒரு கட்லெட்."

வக்கீல் என் கையில் ஒரு ப்ளேட்டைத் தந்துவிட்டு, எனக்கு அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தார். அவருடைய முகம் சிவந்திருந்தது. கறுத்த முந்திரிப் பழங்களைப் போல இரந்த கண்களில் ஒரு கலக்கம் தெரிந்தது.

"உங்களைப் போன்ற மலையாளிகள் ஒரு நாளில் மூன்று முறையாவது குளிப்பீர்கள் என்று கேள்விப்பட்டது உண்மைதானா?" அவர் கேட்டார்: "நீங்கள் மூன்று முறை குளிப்பீர்களா, விமலா ராணி?"

"இல்லை... இரண்டு முறை மட்டும் குளிப்பேன். ஆனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளிப்பது விருப்பமான விஷயம்தான்." நான் சொன்னேன்.

"ஒரு உதவி செய்யுங்க, விமலாதேவி." வக்கீல் தன் குரலைத் தாழ்த்தியவாறு சொன்னார்: "என் வீட்டிற்கு வந்து ஒரு நாள் குளிங்க.. என் குளியலறைக்குள் ஒவ்வொன்றும் இந்த அறையைவிட பெரியனவாக இருக்கும். குளியல் தொட்டிக்கு அருகில் ஃபோனும் இருக்கு. ஒரு முறை அங்கு வந்து குளிங்க..."

"யோசிக்கிறேன்."

"யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? குளிங்க... குளிக்கும் போது உதவி செய்வதற்கு ஆள் வேண்டுமென்றால்..."

"நீங்கள் ஏன் இந்த கிச்சடியைச் சாப்பிடவில்லை மிஸ்.ராவ்?" மார்வாடி கிழவர் உரத்த குரலில் கேட்டார்: "இது மிகவும் சுவையாக இருக்கிறதே-?"

"எனக்கு தானியங்களைக் கண்டால் பயம்." இந்திரா ராவ் ஒரு வெள்ளரித் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே சொன்னாள்: "சாதத்தையோ சப்பாத்தியையோ சாப்பிட்டால், ஒரே நாளில் நான் தடியாகிவிடுவேன். தடிமனாகிவிட்டால், பிறகு... வாழ்ந்து பிரயோஜனமே இல்லை."

"அதெல்லாம் இந்த வயதில் தோன்றும்." மகாராணி சொன்னாள்: "என் வயதை அடைந்துவிட்டால் உடலில் தடிமனும் மெலியும் முக்கியமே இல்லாத விஷயங்களாக ஆகிவிடும். ஜீரணம் சரியாக இருக்க வேண்டும். தூக்கமும் அப்படித்தான். மனிதர்களுக்கு வேறு எதுவுமே தேவையில்லை.

"நான் காலையில் 'த்ரிபாலா' சாப்பிடுவது உண்டு." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "அதைச் சாப்பிட ஆரம்பித்த பிறகு, என்னுடைய உடல் நலம் மிகவும் நன்றாக ஆகிவிட்டிருக்கிறது."

"எனக்கு உடல் நலம் முற்றிலும் சரி இல்லை." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்: "வாந்தி வருவதைப் போல இருக்கு. நான் அதையெல்லாம் குடித்திருக்கவே கூடாது."

"உங்களை நான் மெட்ரோவில் பார்த்தேன்." மார்வாடி கிழவர் இந்திரா ராவின் ப்ளேட்டில் சில உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டே சொன்னார்: "உங்களுடன் ஒரு ஆள் இருந்தார். சிவப்பு நிறத்தில் தலையில் துணி அணிந்திருந்த ஒரு வயதான மனிதர்."

"அது பேராசிரியர் கீர்த்திக்கர்." இந்திரா கூறினாள்: "அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே! அமெரிக்காவில்..."

"விமலா ராணி, நீங்கள் ஏன் எதுவுமே சாப்பிடவில்லை?" வக்கீல் கேட்டார்.

"நான் இங்கு அமர்ந்திருப்பதில் ஆட்சேபனை இருக்கிறதா?" பொருளாதார நிபுணர் ஒரு நாற்காலியை எங்களுக்கு அருகில் எடுத்துப்போட்டுக் கொண்டே கேட்டார்.

"ஆட்சேபனை!" வக்கீல் உதடுகளைக் காட்டிக் கொண்டே சொன்னார்: "என்னுடைய ஆட்சேபனை! அதை யார் பொருட்படுத்துவார்கள்?"

"விமலா, நீ நான் கூறுவதை கவனமாகக் கேட்க வேண்டும்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "மனிதனின் வெளிச்சம் எது? சூரியன். சூரியன் இல்லாவிட்டால் சந்திரன். சந்திரன் இல்லாவிட்டால் நெருப்பு. நெருப்பு அணைந்துவிட்டால் சத்தம். சத்தம் நின்று விட்டால் எது வெளிச்சத்தைத் தருகிறது? ஆன்மா... அப்படித் தானே?"

"நீங்கள் நிறைய குடித்திருக்கிறீர்கள்!" நான் சொன்னேன்: "இப்போது உபநிஷத்தைக் கற்றுத் தர முயற்சிக்காமல் இருப்பது நல்லது."

"நீங்கள் விமலாவின் குருவா?" வக்கீல் கேட்டார்.

"குருவாக இருப்பதற்கு சிறிதும் விருப்பமில்லை." பொருளாதார நிபுணர் சொன்னார்: "விருப்பம் இருந்தது. அது சிறிதும் இல்லாமல் போய்விட்டது."

"இப்போது என்ன விருப்பம் இருக்கிறது?" வக்கீல் கேட்டார்.

"விமலா... இங்கே பார்..." பொருளாதார நிபுணர் சொன்னார்: "நான் கூறுவதைக் கேள்."

"நான் வீட்டிற்குப் போகிறேன்." நான் சொன்னேன்: "என் கணவர் என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்."

"நீங்கள் உங்களுடைய கணவர் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா?" வக்கீல் கேட்டார்: "உண்மையாகவே நீங்கள் அவரைக் காதலிக்கிறீர்களா?"

நான் தலையைக் குலுக்கினேன்.

"காதல் பற்றிய பேச்சு ஆரம்பமாகிவிட்டது." அறையின் இன்னொரு ஓரத்தில் நின்று கொண்டு அருண் உரத்த குரலில் கூறினார்: "எப்போதும் காதல்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மனசே வெறுப்பாயிடுச்சு."

"உங்களுக்கு இதயம் இருக்கிறதா?" சிந்துராணி ரசகுல்லாவைத் தின்று கொண்டே கேட்டாள்: "உங்களுடைய இதயமும் உங்களைப் போல ஈரமே இல்லாத ஒரு பொருளாகிவிட்டது."


"ஓ... என் சிந்துராணி..." அருண் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டே சொன்னார்: "என் சிந்துராணி, நீங்கள் இப்படி கூறியிருக்கக் கூடாது. இதை நீங்கள் சொல்லியிருக்கக் கூடாது."

"த்ரிபலாவை உண்டாக்குவது என்பது பெரிய சிரமமான விஷயமில்லை. "கிருஷ்ணமூர்த்திசோர்வடைந்து போய் காணப்பட்ட பொருளாதார நிபுணரின் மனைவியிடம் சொன்னார்: "முக்கியமான ஒரு பொருள் நெல்லிக்காய். காய வைக்கப்பட்ட நெல்லிக்காய்."

"நான் தட்சிணேஷ்வரத்திற்குப் போயிருந்த போது, என்னுடன் ஐ.வைச் சேர்ந்த ராஜகுமாரன் இருந்தார். அவர் விரைவில் மேற்படிப்பிற்காக இங்கிலாண்டிற்குச் செல்கிறார்." இந்திரா சொன்னான்.

"நீங்கள் கோவில்களுக்குப் போவதுண்டா?" வக்கீல் என்னிடம் கேட்டார்.

"சமீபத்தில் எங்கும் போகவில்லை."

"விமலா ஒரு கம்யூனிஸ்ட்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "அவளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை."

"கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள் தேவையில்லை என்று உறுதியான குரலில் யாரால் கூற முடியும்?" மகாராணி எங்களை நெருங்கி நடந்து வந்து கொண்டே சொன்னாள்: "அறிவியல், இலக்கியம், கலை... இவை போதும் வாழ்வதற்கு என்று இப்போது உங்களைப் போன்ற இளம் வயதில் உள்ளவர்களுக்குத் தோன்றும். ஆனால், சில சிரமமான தருணங்களில் அவை மட்டுமே போதாது என்பது தெரிய வரும். காதலன் கைவிட்டுப் போகும்போது, பிள்ளைகள் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவும் போது, தொண்ணூறு வயது தாண்டி முதுமையன் தொல்லைகளால் துயரங்களைச் சந்திக்கும் போது... அப்போதுத கலை உதவிக்கு வருமா? இல்லை... என் மகளே, கடவுள் மட்டுமே நமக்கு ஒரு அபயத்தை அளிப்பார்."

"நீங்கள் எங்களை பயமுறுத்துகிறீர்கள்." வக்கீல் சொன்னார்.

"பயமுறுத்துகிறேனா? நான் உன்னை பயமுறுத்தினேனா?" மகாராணி என்னிடம் கேட்டாள்.

"இல்லை."

"என் உடலில் சதைப் பிடித்தால், என் இதயத்திற்கும் அழகு கிடைக்குமா? என்ன சொல்றீங்க? சொல்லுங்க சிந்துராணி..." அருண் கேட்டார்.

"நீங்கள் அமைதியாக உட்கார்ந்து உணவைச் சாப்பிடுங்க. எனக்கு பேச வேண்டும் என்று தோன்றவில்லை." சிந்துராணி சொன்னாள்.

"தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கணும்." அருண் சொன்னார்: "மன்னிப்பு தருவீர்கள் அல்லவா?"

"பேசாம இருங்க..." சிந்துராணி சொன்னாள். அவருடைய கண்கள் நான் அமர்ந்திருந்த மூலையில் நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.

"அப்படியென்றால் மன்னிக்க மாட்டீங்க. அப்படித்தானே சிந்துராணி?" அருண் ஒரு கெஞ்சுகிற குரலில் கேட்டார்.

"கடவுளே! இந்த முட்டாளின் வாய் கொஞ்சம் மூடியிருந்தால் நன்றாக இருக்கும்!" சிந்துராணி ஒரு கையை நெற்றியின்மீது அடித்துக் கொண்டே சொன்னாள். அவளுடைய முகம் மிகவும் சிவந்து போய் காணப்பட்டது.

"வாந்தி எடுக்க வேண்டும் என்று தோன்றியும் பிரயோஜனமில்லை. குளியலறையில் எவ்வளவு நேரமாக நான் நின்றிருந்தேன். வாந்தி எடுக்கவே முடியவில்லை." பொருளாதார நிபுணரின் மனைவி சொன்னாள்.

"வாந்தி எடுப்பதை விட த்ரிபலா நல்லது." கிருஷ்ணமூர்த்தி சொன்னார்: "நீங்கள் பயன்படுத்திப் பாருங்க...

நான் எழுந்து நின்றேன்.

"விமல், நீ புறப்பட்டுவிட்டாயா?" கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.

"ஆமாம்..."

"விமலா ராணிக்கு என் மீது வெறுப்பு." வக்கீல் சொன்னார்.

"விமலா ராணிக்கு காதல் என்ற விஷயமே வெறுப்பை உண்டாக்கியிருக்கும்." சிந்துராணி உரத்த குரலில் சொன்னாள்.

"அது உண்மையாக இருக்கும்." பொருளாதார நிபுணர் சொன்னார்: "விமலாவிற்கு காதல் என்ற விஷயமே வெறுப்பை அளிக்கக் கூடிய ஒன்றாக ஆகிவிட்டது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது."

"காதல்!" மகாராணி சொன்னாள்.

"காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம்கூட உங்களில் யாருக்கும் தெரியும் என்று நான் நினைக்கவில்லை."

"மகாராணி, உங்களுக்குத் தெரியுமா?" வக்கீல் கேட்டார்: "நீங்கள் காதலில் சிக்கியிருக்கிறீர்களா?"

மகாராணி புகையிலைக் கறை படிந்த பற்களை வெளிப்படுத்திச் சிரித்தாள். ஆனால், எதுவும் கூறவில்லை.

"மகாராணி, உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயது குறைவாக இருந்திருந்தால், நான்உங்களுடன் காதல் கொண்டிருப்பேன்." கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

"அப்படியென்றால், அது என் மீது கொண்ட காதலாக இருக்காது. என்னுடைய இளமையின் மீது கொண்ட காதலாகத்தான் இருக்கும். அதைத்தான் நான் சொன்னேன்- என் நண்பர்களே, உங்களுக்கு காதல் என்றால் என்ன என்று தெரியவில்லையென்று."

"காதல் என்பது ஒரு இனிப்புப் பலகாரம் அவ்வளவுதான்." அருண் சொன்னான்: "வெறும் ஒரு இனிப்புப் பலகாரம்."

"என்னால் வாந்தி எடுக்கக் கூட முடியவில்லையே!" பொருளாதார நிபுணரின் மனைவி குறைபட்டுக் கொண்டாள்: "இது என்ன ஒரு கஷ்டம்! என்னால் வாந்தி எடுக்கக் கூடமுடியவில்லை."

சிந்துராணி வெறுப்புடன் அந்த நடுத்தர வயதைக் கொண்ட பெண்ணின் முக வெளிப்பாடகளைப் பார்த்துக் கொண்டே, யாரிடம் என்றில்லாமல் புன்னகைத்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.