Logo

தேநீர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6720
Theneer

ப்பாவுக்கு வயதாகிவிட்டது. தலைமுடி முழுவதும் நரைத்துவிட்டது. தொடர்ந்து சவரம் செய்யாமல் இருந்ததால், முகம் முழுவதும் நரைத்த சிறுசிறு உரோமங்கள் காணப்பட்டன. அது முகத்திற்கு ஒரு பரிதாப வெளிப்பாட்டை உண்டாக்கி விட்டிருந்தது. எப்போதும் மெதுவாக, வேதனையைத் தரும் குரலில்தான் அவர் பேசுவார்.

எல்லா நாட்களிலும் மதிய வேளையில் நீண்ட நேரம் படுத்துத் தூங்குவது என்பது அப்பாவின் ஒரு குணமாக இருந்தது. தன் அளவிற்கு வயதைக் கொண்ட- வினோதமான கலைவேலைப்பாடுகள் கொண்ட அந்தக் கட்டிலின் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தவாறு, பாதி மூடிய கண்களுடன் அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு, பிள்ளைகள் வந்து ஆரவாரங்கள் உண்டாக்கியபோதுகூட அப்பா கண் விழிக்கவில்லை. இறுதியில் அம்மா சென்று குலுக்கிக் கொண்டே அழைத்தாள்: "மணி ஐந்தை தாண்டிவிட்டது.''

அப்பா உடனடியாகத் தூக்கத்திலிருந்து எழுந்தாலும், கண்களைத் திறக்காமலே அந்த இடத்தில் படுத்திருந்தார். தொடர்ந்து ஒரு சுருட்டைப் பற்ற வைத்தார். மெதுவாகப் புகையை விட்டுக்கொண்டே கூறினார்: "நான் எதுவுமே முடியாமல் உறங்கிவிட்டேன். உடலில் என்ன ஒரு அசதி!''

"தேநீர் கொண்டு வரட்டுமா?'' அம்மா கேட்டாள்.

“ம்...''

“நளினி...'' அம்மா உரத்த குரலில் அழைத்தாள்: “அப்பாவுக்கு தேநீர் கொண்டு வா.''

நளினி ஒரு சிறிய டம்ளரில் தேநீர் கொண்டு வந்தாள். நீளமான கண்களைக் கொண்ட, எப்போதும் சமையலறைக்குள்ளேயே வேலை செய்துகொண்டிருப்பதால் சிவந்துபோன முகத்தைக் கொண்டே ஒரு இளம் பெண் அவள். அவளுடைய ஆடைகள் அழுக்கடைந்துபோய் காணப்பட்டன. அவள் சொன்னாள்: “தேநீர் சூடாக இருக்கு!''

தேநீரின் வெப்பம் குறைந்தவுடன், டம்ளரை எடுத்துக்கொண்டு அம்மா கட்டிலின் அருகில் சென்றாள். கண்களை மூடிக்கொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்த அப்பா கூறினார்: “அங்கே வை. நான் பருகிக் கொள்கிறேன்.''

அம்மா கதவின்மீது சாய்ந்தவாறு அப்பாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அப்படியே கண்களை மூடிக்கொண்டு புகைபிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பாவின் முகம் மேலும் அதிகமாக கவலையில் மூழ்கிக் காணப்பட்டது. அப்பா இடையில் அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.

புகைபிடித்து முடிந்த பிறகும், அப்பா படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. அம்மா ஞாபகப்படுத்தினாள். “தேநீர் ஆறிப்போய் விடாதா?''

அப்பா கட்டிலிலிருந்து எழுந்தார். அவிழ்ந்துபோன வேட்டியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது, அம்மா தேநீரை எடுத்துக் கொடுத்தாள். தேநீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, டம்ளரை அப்பா மேஜையின்மீது வைத்தார். அம்மா கேட்டாள்: “என்ன?''

“ஒண்ணுமில்லை...''

“இனிப்பு இல்லையா?''

“இருக்கு...''

“பிறகு ஏன் குடிக்கவில்லை?'' அம்மா தேநீர் டம்ளரைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்: “ரொம்பவும் காட்டமா இருக்கா?''

அப்பா அதற்கு பதில் கூறவில்லை. சாளரத்தின் திரைச்சீலையை விலக்கி, வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். மெல்லிய மழையின் சாரல் விழுந்து கொண்டிருந்த தெரு ஆள் அரவமற்று இருந்தது.

ஒரு கரண்டியைக் கொண்டு தேநீரை ருசி பார்த்தபோது, அம்மாவின் முகம் கோணியது. அம்மா அழைத்தாள்: “நளினி...''

ஈரமான கைகளை பாவாடையில் துடைத்துக்கொண்டே நளினி சமையலறைக்குள்ளிருந்து வந்தாள். அம்மா கேட்டாள்: “நீ இதில் சர்க்கரை போடலையா?''

அவள் யோசித்துப் பார்த்தாள். தவறைப் புரிந்துகொண்டதும், முகத்தைக் குனிய வைத்துக்கொண்டு நின்றாள். அவளுடைய முகத்தில் வியர்வைத் துளிகள் காணப்பட்டன. அம்மா சொன்னாள்: “உனக்கு என்ன ஒரு மறதி?''

சமையலறைக்குள் சென்று சர்க்கரை போட்ட தேநீரை திரும்பக் கொண்டு வந்துவிட்டு அம்மா கேட்டாள்: “தேநீர் ஆறிப் போய்விட்டது. நான் சூடு பண்ணட்டுமா?''

“வேண்டாம்...'' சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்த அப்பா சொன்னார்.

“இதைப் பருகுங்க.''

“நான் பருகிக் கொள்கிறேன் என்று கூறினேன் அல்லவா.'' - அப்பா சுருட்டின் நுனியிலிருந்த சாம்பலைத் தரையில் தட்டிவிட்டார்.

சர்க்கரை போட்ட, ஆற ஆரம்பித்திருந்த தேநீர் மேஜைமீது இருந்தது. மீண்டும் சுருட்டைப் பற்ற வைத்து, சாளரத்தின் அருகில், அப்பா வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். எவ்வளவு வற்புறுத்தியும், அதை அவர் பருகுவதற்குத் தயாராகயில்லை. வற்புறுத்தல் தொடர்ந்தபோது, அப்பா சொன்னார்: “நீ ஏன் என்னைத் தொல்லைப்படுத்துகிறாய்? எனக்கு விருப்பம் இருக்கும்போது நான் குடித்துக் கொள்வேன்.''

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? அவள் சர்க்கரை போட மறந்துவிட்டாளே!'' அம்மா வருத்தத்துடன் சொன்னாள்.

அப்பா எதுவும் கூறவில்லை. தேநீரைக் கையில் எடுத்தவாறு அம்மா சொன்னாள். “இதைக் குடிக்கவில்லையா?''

தேநீரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அப்பா சொன்னார்: “மறந்தாச்சா? நீங்கள் இதையெல்லாம் எப்படி மறக்கிறீர்கள்? உங்களுக்கு என்மீது அந்த அளவிற்குத்தான் அக்கறை இருக்கு!'' அப்பா புகையை நாசியின் துவாரங்கள் வழியாக வெளியேவிட்டார். அம்மா எதுவும் பேசாமல் இருக்க,  அப்பாவோ தொடர்ந்து சொன்னார்: “சமீபத்தில் சுருட்டு தீர்ந்தவுடன் நான் நூறு முறை சொன்னேன். ஆனால், நீ காதில் வாங்கினாயா? காலையில் டாக்டர் வந்தபோது, ஒரு நாற்றமெடுத்த வேட்டியைக் கொண்டு வந்து என்னை அணியச் சொன்னாய் அல்லவா? இவையெல்லாம் மறதியால் உண்டானவைதான். எல்லா விஷயங்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.''

“டாக்டர் திடீரென்று வருவார் என்று நான் நினைக்கவேயில்லை. வரும்போது வேட்டியை எடுத்துத் தருவோம் என்று மனதில் நினைத்திருந்தேன். இவையெல்லாம் அறிந்துகொண்டே செய்யும் செயல்களா?'' அம்மா தலையை குனிந்துகொண்டே சொன்னாள்.

“அனைத்து விஷயங்களும் நீங்கள் தெரிந்துகொண்டே செய்பவைதான். நான் அழுக்கடைந்த வேட்டியை அணிந்துகொண்டு நடந்தால் உங்களுக்கு என்ன? நான் தேநீர் பருகுவதையும் சுருட்டு புகைப்பதையும் செய்யாமல் இருந்தால், அதுவும் உங்களுக்கு லாபம்தான்.''

“இப்படியெல்லாம் பேசாதீங்க....'' அம்மாவின் கண்கள் ஈரமாயின. அம்மாவின் முகத்தில், நரைக்க ஆரம்பித்திருந்த தலைமுடிகள் விழுந்து கிடந்தன. ஏராளமான கவலைகளை மனதில் வைத்துக்கொண்டு நடந்து திரியும் அம்மாவின் கண்கள் ஈரத்தை வெளியே காட்டின.

சிதறிக் கிடந்த தலைமுடியை சரிப்படுத்தி கொண்டு அம்மா சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். மழை பெய்து ஈரமாகிவிட்டிருந்த தெருவின் வழியாக கையில் கொஞ்சம் தாள்களை வைத்துக்கொண்டு மகன் நடந்துவந்து கொண்டிருந்தான். தன் தந்தையைப்போல ஒரு பக்கமாக சாய்ந்துகொண்டு, ஒரு தனித்துவத்துடன் நடந்துவந்து கொண்டிருந்த மகனை அம்மா பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அம்மா சொன்னாள்: “ரவி வருகிறான்.''

தாள்களை மேஜையின்மீது பத்திரமாக வைத்துவிட்டு, வியர்வையை ஒற்றிக்கொண்டே நடந்து வந்த அவன் சொன்னான்: “அம்மா, தேநீர் தாங்க...'' தன் தந்தையின் அறைக்குள் சென்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு ரவி சொன்னான்: “அப்பா, உங்களுடைய சுருட்டு...''


எல்லா நாட்களிலும் அலுவலகத்திலிருந்து வரும்போது, மகன் தன் தந்தைக்குத் தேவையான சுருட்டுகளைக் கொண்டு வருவான். வெள்ளை நிறத்தைக் கொண்ட மேலட்டை போட்ட இரண்டு கட்டு சுருட்டுகள் அவை. பொட்டலத்தை அவிழ்த்து, சுருட்டின் லேபிளைப் பார்த்துக்கொண்டே நாடகத்தனத்துடன் அப்பா சொன்னார்: “நான் உன்னிடம் எவ்வளவு நாட்களாக கூறிக் கொண்டிருக்கிறேன். இந்த இன சுருட்டு வேண்டாம் என்று... இதைப் புகைத்துப் புகைத்து என்னுடைய தொண்டையே கிழிந்து போய்விட்டது. இந்த ஊரில் வேறு சுருட்டு கிடைக்காதா?''

மகனின் முகத்தில் இதுவரை இருந்த சந்தோஷ வெளிப்பாடு திடீரென்று இல்லாமல் போனது. மெதுவான குரலில் அவன் சொன்னான். “அப்பா, வேறு சுருட்டு கொண்டுவரும்படி நீங்கள் சொன்னீர்களா? எனக்கு ஞாபகத்தில் இல்லை...''

“இல்லை... நான் சொல்லவில்லை...'' தன் மகனின் முகத்திலிருந்து கண்களை எடுத்தவாறு அப்பா சொன்னார்: “இந்த விஷயத்தில் இரண்டு முக்கால் காசு லாபம் இருந்தால், இனிமேலும் இதையே கொண்டு வா... கொஞ்சம் கொஞ்சமாக நான் இறந்துவிடுகிறேன். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு தொல்லை இல்லாமல் போகுமல்லவா?

“அப்பா, உங்களுக்கு இந்த சுருட்டு வேண்டாமென்றால், நான் இப்போதே வேறு சுருட்டு வாங்கி வந்து தருகிறேன்.''

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாததைப்போல அப்பா தொடர்ந்து சொன்னார்: “நான் கூறுவதைக் கேட்பதற்கு இங்கு யாருக்காவது நேரம் இருக்கிறதா? அப்படியே இல்லையென்றாலும், என்னுடைய சந்தோஷத்தையும் கவலையையும் பற்றித் தெரிந்துகொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது? நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும்.'' அப்பாவின் குரல் மெலிதானது. யாரிடம் என்றில்லாமல் அப்பா சொன்னார்: “சற்று தூங்கலாமென்று நினைத்தால், நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கண்களை மூடிவிட்டால், எல்லாவற்றையும் சிறிது நேரம் மறந்துவிடலாம். அந்த நேரத்தில் அழைத்து விழிக்கச் செய்வதற்கு ஆள் வந்துவிடும்.''

அம்மா, மகனிடம்  சொன்னாள்: “ஐந்து மணி தாண்டியபிறகுதான் நான் எழுப்பினேன். தேநீர் ஆறி விடாதா? நான் என்ன செய்கிறேனோ, அதெல்லாம் குற்றம்..'' அம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

அப்பா சொன்னார்: “நீ செய்வது எதுவும் தவறானதே இல்லை. அழுக்கடைந்த ஆடையைச் சலவை செய்து தராததும், சர்க்கரை போடாமல் தேநீர் தருவதும் என்னுடைய குற்றம்தான்.''

“விருப்பப்படும் எல்லாவற்றையும் கூறிக்கொள்ளுங்கள். நான் பொறுத்துக்கொள்கிறேன். எல்லாம் என்னுடைய தலைவிதி. இது இன்றும் நேற்றும் ஆரம்பமான விஷயமில்லையே! என் மனதிற்கு எப்போதாவது நிம்மதி தந்திருக்கிறீர்களா?'' அம்மாவின் கண்கள் திடீரென்று கண்ணீரால் நிறைந்தன.

“நீ சொற்பொழிவு ஆற்றுகிறாயா?'' முடிவடைய இருந்த சுருட்டை தரையில் எறிந்துகொண்டே அப்பா கேட்டார். அம்மா எதுவும் பேசவில்லை. கூறக்கூடாத ஏதோ ஒன்றைக் கூறிவிட்டதைப்போல தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவின் அந்த நடவடிக்கை அப்பாவை மேலும் தூண்டிவிட்டது. அப்பா சொன்னார். “நீ எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு செய்துகொண்டிருக்கிறாய். இல்லையா? அதே அளவிற்குத்தான் உங்களுக்கெல்லாம் என்மீது மதிப்பு இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உழைத்து, கையும் காலும் தளர்ந்துபோன நிலையில் இருக்கும் எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கிறாய். அந்த அளவிற்கு நீ வளரவில்லை. அதை மனதில் வைத்துக்கொள்...''

மகன் சொன்னான்: “அம்மா வேறு தேநீர் உண்டாக்கித் தருவாங்க. அப்பா, நான் உங்களுக்கு பிடித்த இனத்தைச் சேர்ந்த சுருட்டை வாங்கித் தருகிறேன். பிறகு ஏன் அப்பா... கோபப்படுறீங்க?''

அவன் வெளியே போக முயன்றபோது அப்பா தடுத்தார்: “நீ எங்கே போகிறாய்? எனக்கு உங்களுடைய சுருட்டும் வேண்டாம், தேநீரும் வேண்டாம். நான் உங்களிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க மாட்டேன்டா. வயதாகிவிட்டிருக்கிறது. உழைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அப்பா இருக்கிறார் என்ற புரிதல் உங்களுக்கு இருக்கிறதா? அந்தப் புரிதலை மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் சுருட்டு வாங்கித் தரணும். அப்பாவின் மீது கவனம் வைக்கணும். தேவையில்லாமல் நான் கெஞ்சமாட்டேன்டா. எந்தக் காலத்திலும். அப்படியொரு காலம் வந்தால், அதற்குப் பிறகு நீங்கள் யாரும் அப்பாவைப் பார்க்க மாட்டீங்க....'' அப்பாவின் குரல் தடுமாறியது.

“அப்பா, ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? நாங்கள் உங்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், மன்னிக்க அல்லவா செய்யணும்?''

“மன்னிக்கிறேன்டா. மன்னிக்கிறேன். உன்னையெல்லாம் வளர்த்தேன். குடிப்பதற்கு கஞ்சியும் படுக்குறதுக்கு வீடும் இன்றைக்கு உங்களுக்கு இருக்கின்றன. இவற்றைச் சம்பாதிப்பதற்காக நான் ரத்தத்தைச் சாம்பலாக ஆக்கினேன். கடைசியில் இந்த வயதான காலத்தில் என்னை பட்டினி போட்டு படுக்க வைத்துக் கொன்றுவிடணும்னு நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அதைப் புரிந்துகொண்டு கூறும்போது... மன்னிக்கணும். அப்படித்தானே?''

அப்பாவின் அருகில் சென்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மகன் சொன்னான்.

“அப்பா, உங்களிடம் உண்டான மாற்றங்களை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய மனதில் என்ன இருக்கிறது? அப்பா, நாங்கள் எப்போதுமே உங்கள்மீது பிரியம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.''

அப்பா ஒரு நிமிடம் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, அமைதியான குரலில் சொன்னார். “அப்படியென்றால் இந்தக் கிழவனை நீங்கள் மறக்கவில்லை.'' அப்பா சிரித்தார். “டேய், இந்த மேலோட்டமான பேச்செல்லாம் என்னிடம் வேண்டாம். நீங்கள் செய்துகொண்டிருக்கும் காரியங்கள் ஒவ்வொன்றையும் நான் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருப்பேன் என்று நினைத்தீர்களா? அது எந்தச் சமயத்திலும் நடக்காதுடா. என்னுடைய நாக்கிற்கு பலம் இருக்கும்போதெல்லாம் நான் என்னுடைய காரியங்களைக் கூறுவேன். நீங்கள் நினைப்பதையெல்லாம் நான் அனுமதிக்கவும் மாட்டேன். புரியுதா?''

அவன் சொன்னான். “நாங்கள் மேலோட்டமான செயல்கள் என்ன செய்துவிட்டோம்? அப்பா, மனதைத் திறந்து சொல்லுங்க. உங்களின் மனதில் என்னவோ தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.''

“நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கூறுவது எதிலும் எந்தவொரு அர்த்தமும் இல்லை. இன்னும் கொஞ்சம் போனால், எனக்கு சுயஉணர்வு இல்லை என்றும், பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் நீ சொல்லுவாயடா...''

மகன் வாய் திறக்கவில்லை. தன் அன்னையின் சுருக்கங்கள் விழுந்த கன்னங்கள் நனைய ஆரம்பித்திருந்தன. முகத்திலிருந்து நரைத்த ரோமங்களைத் தடவிக்கொண்டே அப்பா தொடர்ந்து சொன்னார்.

“என்னை ஒரு பைத்தியக்காரன் என்று நீங்கள் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். அதற்குப் பிறகு ஒரு கிழட்டு நாயைப்போல என்னை விரட்டி விட வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஊரில் உள்ளவர்கள் கேட்டால், அப்பாவிற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று கூறலாமென்று நினைக்கிறீர்கள். என்ன மேலோட்டமான பேச்சு?''


கைகளால் தன்னுடைய முகத்தைத் தாங்கிக்கொண்டு அம்மா தேம்பித் தேம்பி அழுதாள். அந்த சத்தத்தைக் கேட்டதும், அப்பா தன் தலையை உயர்த்தினார். அம்மாவின் கண்ணீர் அரும்பிய கண்களைப் பார்த்துக்கொண்டே அப்பா கேட்டார். “ஏன் அழுகிறாய்?''

“உன் கண்ணீரைப் பார்த்தோ, உன் மகனின் நியாய வார்த்தைகளைக் கேட்டோ நான் அதிர்ந்து போய்விடமாட்டேன். நீங்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நான் வாலை ஆட்டிக்கொண்டிருப்பேன் என்று நினைத்தீர்களா? இது என்னுடைய வீடு. நான் கஷ்டப்பட்டு உழைத்து உண்டாக்கிய வீடு. இங்கு இருப்பவர்கள் நான் கூறியதைப் பின்பற்றி நடக்க வேண்டும். எனக்கு முன்னால் நின்றுகொண்டு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கக் கூடாது.''

அம்மா எதுவுமே பேசாமல் கலங்கிப்போன கண்களுடன் தரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். மகனும் எதுவும் பேசவில்லை. அவனுடைய எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டிருந்தன. முகத்தைத் தடவிக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த மகனைப் பார்த்து அப்பா கேட்டார்: “என்ன... எதுவும் பேசாமல் இருக்கே? கிழவனை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றலாம் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாய். அப்படியென்றால்... அதற்காக எந்தச் சமயத்திலும் ஆசைப்பட வேண்டாம்டா. நான் இந்த வீட்டில்தான் சாகும்வரை கிடப்பேன். புரியுதா?''

“புரிந்தது....'' தாங்கிக்கொள்ள முடியாமல் மகன் சொன்னான்: “அப்பா, அம்மாவின் கண்ணீரை நீங்க குடிக்கணும்னு நினைக்கிறீங்களா? நாங்கள் ஒரு நாளாவது நிம்மதியாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அப்பா, உங்களுக்கு என்ன வேணும்? மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டு, தனியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அப்பா, நீங்க சொல்லுங்க...''

மகன் தன் கைகளைப் பிணைத்து பிசைந்துகொண்டே, அடுத்த நிமிடமே அறையை விட்டு வெளியேறி, படிகளில் இறங்கி இருள் விழுந்திருந்த தெருவின் வழியாக, ஒருபக்கமாக சற்று சாய்ந்து ஒரு தனித்தன்மையுடன் நடந்து சென்றான். அப்பா பாதி எரிந்துவிட்டிருந்த சுருட்டை சாளரத்தின்மீது வைத்துவிட்டு, தன் முகத்திலிருந்த ரோமங்களைத் தடவிக்கொண்டே வாசலில் போய் நின்றார்.

நீண்ட நேரம் தூணின்மீது சாய்ந்தவாறு சிந்தனையில் மூழ்கியிருந்த அப்பா மெதுவாக சாய்வு நாற்காலியை விரித்தார். மேலும் ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, அதில் படுத்தவாறு நனைந்து போய்விட்டிருந்த விளக்கு கம்பங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். மழை மெதுவாக அதிகமானது. திடீரென்று வாசலில் நீர் அதிகமாக நிறைந்து கொண்டிருந்தது. அந்த நீரில் பெரிய குமிழ்கள் தோன்றிய நிமிடத்திலேயே அழிந்து கொண்டிருந்தன.

மழை முற்றிலும் நின்ற நேரத்தில், மகன் திரும்பி வந்தான். அவனுடைய உடைகள் நனைந்திருந்தன. தலைமுடியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்த அப்பாவையோ, கைகளில் முகத்தை வைத்தவாறு குனிந்து அமர்ந்திருந்த அம்மாவையோ பார்க்காததைப்போல, மகன் தன் தலையைக் குனிந்துகொண்டே உள்ளே சென்றான்.

அம்மா சாய்வு நாற்காலியைப் பார்த்தவாறு, தாழ்வான குரலில் கேட்டாள்:

“சாதம் வைக்கட்டுமா?''

“ம்...'' அப்போதும் அப்பா புகை பிடித்துக்கொண்டிருந்தார்.

அவன் நனைந்து போய்விட்டிருந்த ஆடைகளை மாற்றிக்கொண்டு வந்தபோது, அம்மா மேஜையின்மீது உணவை வைத்துக்கொண்டிருந்தாள். தட்டில் சாதத்தைப் பரிமாறுவதற்கு  மத்தியில் கட்டியிருந்த முண்டின் நுனிப்பகுதியால் அம்மா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். மகன் பாத்திரத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான்:

“அம்மா, நீங்க ஏன் அழுறீங்க?''

அம்மா எதுவும் பேசாமல் மேல் துண்டால் கண்களையும் முகத்தையும் அழுத்தித் துடைத்தாள். அம்மாவின் முகம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் முகத்தைப்போல வெளிறிப் போயிருந்தது. உணவு வைத்து முடித்தவுடன், சாய்வு நாற்காலிக்கு அருகில் போய் நின்றுகொண்டு, மெதுவான குரலில் அம்மா சொன்னாள்: “இந்தக் குளிரில் ஏன் வெளியே படுத்திருக்கீங்க? நான் படுக்கையை விரித்துப் போட்டிருக்கிறேன். கொஞ்சம் சாதம் சாப்பிட்டுவிட்டு, அறையில் போய் படுக்கக்கூடாதா? நாங்கள் செய்தவற்றையெல்லாம் மன்னிச்சிடுங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் கேட்க மாட்டீங்களா?''

“எனக்கு பசியில்லை...''

“மத்தியானம் ஒரு பிடி சாதம் சாப்பிட்டீங்க... சாயங்காலம் தேநீரையும் குடிக்கவில்லை....''

“எனக்கு சாப்பாடு வேண்டாம்.'' அப்பா சொன்னார். “ரவி சாப்பிட்டுட்டானா! இல்லாவிட்டால், அவனைச் சாப்பிடச் சொல்லு...''

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டுகளுக்கு முன்னால் ரவி அமர்ந்திருந்தான். அம்மா சொன்னாள்:

“நீங்க இல்லாமல் அவன் சாப்பிடுவானா? அவன் உங்களை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.''

“ரவி...'' அப்பா அழைத்தார். அவன் கதவுக்கு அருகில் வந்து நின்றான். அப்பா சொன்னார்:

“நீ சாப்பிடு... அப்பாவை எதிர்பார்க்க வேண்டாம். அப்பாவின் தலைவிதி இதுதான்... என்ன செய்வது?''

எதுவுமே கூறாமலிருந்த அவனுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே அப்பா தொடர்ந்து சொன்னார்: “ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்? சாப்பாடு ஆறிவிடும். ம்... போ...''

“அப்பா, உங்களுக்கு எதுவும் வேண்டாமா?''

“என்னை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாமென்று சொன்னேன் அல்லவா? நான் எப்போதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன். நீங்க சாப்பிடுங்க...''

அவனும் அவனுடைய தாயும் உணவு  சாப்பிடச் செல்லவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. குளிர்ச்சியான காற்றும் வானத்தின் மூலையில் மின்னலும் இருந்தன. மழைத் துளிகள் காற்று வீசும்போது வாசலில் தெறித்து விழுந்து கொண்டிருந்தன. அப்பா சொன்னார்: “மழையும் காற்றும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் போய் ஏதாவது சாப்பிட்டு, கதவைமூடிப் படுத்துக் கொள்ளுங்கள்.''

“இந்த மழையிலும், காற்றிலும் பட்டினியுடன் வெளியே படுத்துக் கிடந்து, ஏதாவது உடல்நலக் கேட்டை வரவழைத்துக் கொள்ளவேண்டுமா? மற்றவர்களை ஏன் இப்படி சிரமப்படுத்துகிறீர்கள்?''

“நீங்கள் ஏன் என்னை சிரமப்படுத்துகிறீர்கள்?'' அப்பா கேட்டார்: “மழையிலும் வெயிலிலும் கிடந்து நான் பழகிப்போய் விட்டிருக்கிறேன். எனக்கு எந்தவொரு உடல்நலக் கேடும் வராது. அப்படியே வந்தால்கூட, அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

“நான் ஏதாவது கூறினால், அதன்படி நடக்கக்கூடாது என்ற நிச்சயமான எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.'' அப்பா முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னார்: “நான் பட்டினி கிடக்கிறேன். மழையையும் காற்றையும் அனுபவிக்கிறேன். ஆனால், நான் கூறுவது எதன்படியும் நீங்கள் பின்பற்றி நடக்கவில்லையென்றால்...?''

அம்மா சொன்னாள்: “கூறுவதை நாங்கள் பின்பற்றாமல் இருந்திருக்கிறோமா?''

“அப்படியென்றால், நீங்கள் உள்ளே போய் விளக்கை அணைத்துவிட்டு படுங்க. என்னைப் பற்றி நீங்கள் அதிகமாக எதுவும் சிந்திக்க வேண்டாம். இதெல்லாம் என்னுடைய தலையெழுத்து... நீங்க அதிக காலம் என்னைப் பற்றி சிரமப்பட வேண்டியதிருக்காது. அதிகபட்சம் போனால்- ஐந்தோ ஆறோ மாதங்கள் மட்டுமே கஞ்சியும் சுருட்டும் தர வேண்டியிருக்கும். ஐந்தோ ஆறோ மாதங்கள் மட்டுமே... அதற்குப் பிறகும் நான் சாகவில்லையென்றால், யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஏதாவது வழியைக் கண்டுபிடிப்பேன்.'' அப்பாவின் தொண்டை தடுமாறியது.


“சாதம் முழுவதும் குளிர்ந்து போய்விட்டது. அம்மா.'' கதவிற்கு அருகில் வந்து நின்றுகொண்டு மகள் மெதுவான குரலில் சொன்னாள். அதைக் கேட்டதும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்த அப்பா சொன்னார். “இந்த பிடிவாதத்தை விட்டுட்டு, நீங்கள் கதவை மூடிவிட்டு படுக்குறீங்களா? இல்லையென்றால்....?''

அப்பா நாற்காலியை விட்டு எழுந்து, அவிழ்ந்து போன வேட்டியைச் சரி செய்து அணிந்தார். “கூறுவதைக் கேட்பதுதான் உங்களுக்கு நல்லது. இல்லாவிட்டால்... இந்த மழையில் நான் இறங்கி நடப்பேன். பட்டினியுடன் நான் இந்த குளிரில் வெளியே படுத்திருப்பது உங்களுக்கு விருப்பமான விஷயம்தானே? தெருவில் படுத்துக்கொண்டு நாயைப்போல சாவதைப் பார்க்க வேண்டுமென்பதுதானே உங்களுடைய ஆசை?''

கதவு முரட்டுத்தனமான சத்தத்துடன் மூடப்பட்டது. விளக்கு அணைக்கப்பட்டது. இருட்டில் மழையையும் காற்றையும் அனுபவித்துக்கொண்டு அந்த நாற்காலியில் சாய்ந்து படுத்துக்கொண்டு அப்பா தன் மீசையைத் தடவியவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். சுருட்டு தீர்ந்து போய்விட்டிருந்தது. நாற்காலியைச் சுற்றி சிதறிக் கிடந்த துண்டுகளிலிருந்து ஒன்றை குனிந்து எடுத்து, சிரமப்பட்டு பற்ற வைத்து, அப்பா புகைத்தார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.