Logo

ஒரு பிறந்தநாள் ஞாபகம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6435
oru-piranthanaal-enabagam

நாளை என்னுடைய பிறந்த நாள்.

        எனக்கு இது ஞாபகத்திலேயே இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கே இது தெரிய வந்தது.

அவள் எழுதியிருக்கிறாள்: "வரும் வியாழக்கிழமை பிறந்த நாள். காலையில் எழுந்து குளித்து முடித்தபிறகுதான் எதையும் சாப்பிட வேண்டும். வியாழக்கிழமை பிறந்தநாள் வருவது என்பது பொதுவாகவே நல்ல விஷயம். நான் சிவன்கோவிலில் சாதமும் பாயசமும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். அங்கு அருகில் கோவில் இருக்கிறது அல்லவா? இருந்தால், குளித்து முடித்து அங்கு போய் கடவுளைத் தொழ வேண்டும்..."

என்னுடைய நன்மைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அது எல்லாவற்றையும் என்னுடைய மனைவி செய்து கொள்வாள். அந்த உறுதியான நம்பிக்கைதான் என்னை வழிநடத்திச் செல்ல வைக்கிறது. அவள் நீண்ட காலமாகவே எனக்காக கடவுளிடம் வேண்டி வருகிறாள். அவளின் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்க வழி இருக்கிறது. தேவர்களின், தேவிகளின் உயிருக்குயிரான ஒருத்தியாக வளர்ந்தவள் அவள்.

நாளை எனக்கு விடுமுறை நாள்தான். பிறந்தநாள் என்ற உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைப்பதே நல்ல விஷயமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இந்த விஷயம் தெரிந்தால் நண்பர்கள் எல்லோரும் இங்கு வந்து விடுவார்கள். பார்ட்டி வேண்டுமென்று சொல்வார்கள். பிறகு பர்ஸ்தான் காலியாகும். நண்பர்கள் பலரின் பிறந்த நாட்களன்று நடைபெறும் பார்ட்டியிலும், விருந்துகளிலும் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.

பிறந்த நாள் நெருங்க நெருங்க முன்பெல்லாம் மனதில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். இப்போது அதற்கு மாறாக, மனமெங்கும் வேதனைதான் நிறைந்திருக்கிறது. வாழ்க்கையில் வசந்த காலம் என்று கவிஞர்கள் குறிப்பிடுகிற இந்தக் கட்டத்தின் இறுதி நெருங்கி விட்டிருக்கிறது.

நாளை செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்பதை நினைத்துப் பார்த்தேன். காலை ஒன்பது மணி வரை இருக்கும் தூக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சாதாரணமாக விடுமுறை நாள் என்றாலே, ஒன்பது மணி வரை தூங்குவதுதான் வழக்கம். அதற்குப் பிறகு குளிக்க வேண்டும். அப்படித்தானே என்னுடைய மனைவி கடிதத்தில் எழுதியிருக்கிறாள்! பிறகு ஆனந்தபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட பூரி மசாலாவையும், காப்பியையும் சாப்பிட வேண்டும். இருந்தாலும் ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை மேஜை மீது வைத்துவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட் கொண்டு வரும்படி சொல்லும்போது ராஜன் கேட்பான். "என்னடா... ரொம்பவும் குஷியா இருக்கே! உன் மனைவி பிரசவம் ஆயிருக்காளா என்ன?"

"அப்படின்னா நான் வருத்தப்பட இல்ல செய்வேன்?"- என்று கூறும் நான் பின்னர் மெதுவாக என்னுடைய பிறந்த நாள் விஷயத்தைச் சொல்வேன். சாப்பாட்டிற்கு ஸ்பெஷல் குருமா கொண்டு வரும்படி சொல்லலாம். பிறந்த நாளன்று மாமிசம் சாப்பிடும் உண்மை அவளுக்குத் தெரியப் போவதில்லை. சாயங்காலம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாம். நாள் அத்துடன் முடிந்துவிடும். பிறந்தநாள் மாதத்தின் ஆரம்பத்திலேயே வருவதாக இருந்தால், பட்ஜெட்டில் புகைப்படம் எடுக்கும் திட்டத்தையும் அரங்கேற்றியிருக்கலாம்.

ராஜன் இன்னும் வரவில்லை. அவன் தினமும் அலுவலகம் முடிந்த பிறகு, க்ளப்பிற்குப் போவான். "பிஸ்பாங்" விளையாடாவிட்டால் அவனுக்குத் தூக்கமே வராது.

கூஜாவிலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து குடித்த நான் வாசலுக்கு வந்து சாய்வு நாற்காலியில் படுத்தேன்.

பக்கத்து வீட்டுக்கார சேட்டின் ஐந்து வயதுள்ள மகன் எதிர்பக்கமிருந்த வீட்டின் முன்னால் புகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான்.

நான் பலவித ஞாபகங்களிலும் ஆழ்ந்துவிட்டேன். நான் சிறு குழந்தையாக இருந்த காலத்தை மனதில் நினைத்துப் பார்த்தேன். கடந்து போன பிறந்தநாள்கள் ஒவ்வொன்றாக என் மனதில் வலம் வந்தன. இருபது வருடங்களுக்கு முன்னால் கடந்து போன ஒரு பிறந்த நாள் என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கிறது.

அந்தப் பிறந்தநாளைப் பற்றி நினைக்கும் போது வேதனை தரும் நினைவுகள் நிறைய இருக்கின்றன என்பது வேறு விஷயம். அது மட்டுமல்ல- அன்று இன்னொரு சம்பவமும் நடந்தது. அன்று நான் ஒரு மனிதனைக் கொலை செய்ய திட்டமிட்டேன்.

கொலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் பலமாக இருந்தது. எந்த விதத்திலும் கட்டாயம் கொலையைச் செய்தே ஆக வேண்டும் என்று திட்டமிட்டேன். பழைய முறைகளைப் பின்பற்றி கொலை செய்ய ஆறோ ஏழோ வயதான எனக்குத் தெரியவில்லை. கடைசியில் கொலைச் செயலுக்கு ஒரு புதிய நாகரீக வழியைக் கண்டு பிடித்தேன். அது- குளித்துவிட்டு கடவுளைத் தொழுவது.

எனக்கு இந்த வழியை யார் சொல்லித் தந்தார்கள் என்பது தெரியாது. விஷயம் இதுதான். ஊரில் இருக்கும் தெய்வங்களின் கூட்டத்தில் கொல்வதில் பிரபலமான சில தெய்வங்கள் இருக்கின்றன. அய்யப்பன், பகவதி ஆகியோர் இதில் வரமாட்டார்கள். அவர்களுக்கும் கீழே உள்ளவர்கள்தான் இந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள். அவர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் எதிரிகளின் கதை முடிந்தது.

நான் பிரார்த்தனை செய்தேன். மனம் உருக வேண்டினேன். என்னுடைய விரோதி என்ன காரணத்தாலோ இறக்கவில்லை. அவனைக் கொல்ல நான் தீர்மானித்தது என்னுடைய பிறந்த நாளன்று.

இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். பிறந்தநாள் என்பது ஒரு முக்கியமான நாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அது மிகவும் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அது வயதான மனிதர்களின் விஷயத்தில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தேன்.

எங்களின் பள்ளிக்கூடத்தில் வருடத்திற்கொருமுறை அவல், சர்க்கரை ஆகியவற்றை எல்லோருக்கும் தருவார்கள். அன்று மேனேஜரின் பிறந்தநாள். அவருடைய வீட்டில் மதிய நேரம் அடை, அவியல், பெரிய அப்பளம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் விருந்து. எங்களின் ஆசிரியர்களுக்கு அன்று மதியம் மேனேஜரின் வீட்டில்தான் சாப்பாடு. தம்பிடி மாஸ்டர் மட்டும் போகவில்லை. அவர் மேனேஜரை விட உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். அப்படியென்றால் அங்கு போய் சாப்பிடக்கூடாது அல்லவா?

ஓணம் பண்டிகையைவிட பிறந்தநாள் சிறப்பானதா என்று நான் மனதில் நினைத்தேன். எங்கள் வீட்டில் ஓணத்திற்கு விருந்து இருக்கும். ஆனால், பாயசம் இருக்காது.

மேனேஜர் மிகவும் வயதானவர். அவருக்குத் தலை முழுவதும் நரைத்திருக்கும். என்னுடைய பெரிய மாமாவின் தலையும் முழுமையாக நரைத்திருக்கும். ஆனால், அவருக்குப் பாட்டி அளவிற்கு வயதாகவில்லை. பாட்டியின் மகன்தானே பெரிய மாமா!

பெரிய மாமாவின் பிறந்த நாளும் படு அமர்க்களமாகக் கொண்டாடப்படும். அன்று மதிய நேரம் எராளமான ஆட்கள் சாப்பிட வருவார்கள். வாசலிலும் திண்ணையிலும் கூட வரிசையாக இலை போடுவார்கள்.


வீட்டில் விருந்து நடப்பது நாங்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயம். நாங்கள் என்றால் குழந்தைகள் என்று அர்த்தம். தாமோதரனையும் சேர்த்தால் நாங்கள் மொத்தம் ஐந்து பேர். தாமோதரன் கோடை விடுமுறையின் போது மட்டும்தான் வீட்டிலிருப்பான். அவன் எங்களைவிட பலசாலி. படகு எருமை என்றுதான் நானும் அப்புவும் அவனைத் தனிப்பட்ட முறையில் அழைப்போம். அதை வெளியே தெரியும்படி அழைக்க மாட்டோம். என்ன இருந்தாலும் அவன் பெரிய மாமாவின் மகனாயிற்றே! நாங்கள் பல நேரங்களில் சேர்ந்து பந்து விளையாடுவோம். கல்லால் ஆன பந்தை வைத்து சில நேரங்களில் விளையாடுவோம். அந்தப் பந்தால் அடிபட்டவன் உடம்பில் வேதனை குறைந்தது மூன்று நாட்களாவது இருக்கும். பெரும்பாலும் தாமோதரனை அந்தக் கல் பந்தால் தான் நாங்கள் தாக்குவோம்.

பெரிய மாமாவின் பிறந்த நாளன்று நாங்கள் மதிய உணவு சாப்பிடுவது பிற்பகல் நேரத்தில்தான். அழைக்கப்பட்டு வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். தாமோதரன் மட்டும் மாமாவுடன் உட்கார்ந்து சாப்பிடலாம்.

சாதாரண நாட்களில் கூட தாமோதரன் பெரிய மாமாவுடன் உட்கார்ந்துதான் சாப்பிடுவான். வடக்கு பக்கம் பெரிய பலகையையும் நீளமான இலையையும் கொண்டு வந்து போட்டுவிட்டால் நாங்கள் அந்த இடத்தைவிட்டு போய்விட வேண்டும். போகவில்லையென்றால் எங்களைப் பார்த்து இந்த வார்த்தைகள் வரும். "சொல்றபடி ஒரு நாளும் நடக்கிறது இல்ல. எதைப் பார்க்குறதுக்குடா இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க?"

பெரிய மாமாவின் தாய்தான் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்பாள்.

சொன்னபடி கேட்காதவர்கள் நாங்கள் நான்குபேர். நான், கோபி, அப்பு, குஞ்ஞிமாளு, தாமோதரன் இந்தப் பட்டியலில் இடம் பெற மாட்டான். அவனைப் பாட்டி ராகத்துடன் அழைப்பாள். "தாமோதரா..."

அம்மாவோ, சித்தியோ சொல்வார்கள்: "நீங்க போயி விளையாடுங்க. பிறகு அழைக்கிறோம்."

அதன்படி நடக்க நாங்கள் தயாராக இருப்போம். அவர்கள் பார்வையில் நாங்கள் சொன்னபடி கேட்காதவர்களும், பிசாசுக்களும் அல்ல. தேவையில்லாமல் எங்களை அவர்கள் திட்டமாட்டார்கள். ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். தோட்டத்தை விற்கும் போது எல்லாவித கெட்ட நேரத்திற்கும் காரணம் நாங்கள்தான் என்ற விருதையும் எங்களுக்குப் பாட்டி தந்தாள்.

பல நேரங்களில் நான் நினைப்பேன். என் தாய் பாட்டிக்கு நான்கு உதைகள் கொடுத்தால் என்ன என்று.

என்ன இருந்தாலும் என் தாய்க்குப் பாட்டியைக் கண்டால் பயம் என்பது மட்டும் உண்மை. சித்திக்கும்தான். பெரிய மாமாவின் தாய் என்பது காரணமாக இருக்கலாம். பெரிய மாமா வாசலில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வழியே குளித்துவிட்டுப் போவதற்குக் கூட என் தாய்க்கும் சித்திக்கும் மிகவும் பயம்.

ஆனால், பாட்டி தானிய அறைக்குள் இருக்கும்போது என் தாயும் சித்தியும் அவளைப் பற்றி மெதுவான குரலில் ஏதாவது பேசிக் கொண்டிருப்பது காதில் விழும். பாட்டியின் கழுத்தில் டாலருடன் தொங்கிக் கொண்டிருக்கும் தங்க மாலையின் எடை நான்கு பவுனாம். காப்பு செய்ய கொடுத்திருக்கிறாளாம். புதிதாக நிலம் வாங்க இருக்கிறாளாம்... இப்படிப் பல தகவல்களும் நமக்கு அவர்கள் மூலம் தெரியவரும்.

என் தாயிடம் தங்க மாலையோ தங்கக் காப்போ எதுவுமில்லை. சித்தியிடம் சிறு மாலையொன்றும் வளையலுமிருக்கின்றன. அப்புவின் தந்தை கடை வியாபாரம் செய்வதால் தாராளமாக அவர் கையில் பணம் புரள்கிறது. என் தந்தையின் கையில் காசு இல்லாததால் என் தாயிடம் தங்க மாலை இல்லை.

பெரிய மாமாவும் தாமோதரனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் வேலி வழியாக எட்டிப் பார்ப்போம். அப்பளமும் குழம்பும் மற்ற உணவுப் பொருட்களும் இலையில் இருப்பதை நாங்கள் பார்ப்போம். இலையில் பயறு கொண்டு செய்யப்பட்ட உருண்டை இருக்கும். அந்தப் பயறு உருண்டையை எனக்கு மிகவும் பிடிக்கும். தாமோதரன் அதைச் சாப்பிடும் போது என்னுடைய வாயில் நீர் நிறையும். நாங்கள் வேலி வழியே எட்டிப் பார்ப்பது பாட்டிக்குத் தெரியாது.

நாங்கள் நான்கு பேரும் மாமரத்தின் அடியை நோக்கி நடப்போம்.

பெரிய மாமாவைவிட நாங்கள் அன்பும், மதிப்பும் கொண்டிருந்தது அந்த மாமரத்தின் மீதுதான். அந்த மாமரத்திற்கு அடியில் இருந்த புற்களை முழுமையாக வெட்டி அகற்றி, குப்பைகளையெல்லாம் அங்கிருந்து நீக்கி, இடத்தைச் சுத்தப்படுத்தி, விடுமுறை நாட்களில் பகல் முழுவதும் அங்கு போய் நாங்கள் அமர்ந்திருப்போம். அந்த மாமரத்தில் காய்க்கும் மாங்காய்கள் மிகவும் சிறியதாக இருக்கும். ஒரு எலுமிச்சம்பழம் அளவிற்கே அது இருக்கும். இருப்பினும், அதன் சுவை இருக்கிறதே...

சுற்றிலும் மதிய நேர வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும். நாங்கள் நான்கு பேரும் இருக்கும் போது எங்களுக்குள் எந்தச் சண்டையும் உண்டாகாது. வடக்கு வீட்டைச் சேர்ந்த குழந்தைகள் வந்தால் மட்டுமே சண்டை வரும். அவர்களின் திமிர்த்தனமான போக்கை நாங்கள் ஒன்று சேர்ந்து பலமாக எதிர்த்து நிற்போம்.

அணில் மரத்தில் ஏறுவதையும் காற்று வீசுவதையும் அனுபவித்தவாறு நின்று கொண்டிருக்கும் போது எங்கள் மனம் வடக்கு வீட்டின் மீதே இருக்கும். ஆவி பறந்து கொண்டிருக்கும் சாதம், பயறு உருண்டை, அப்பளம்...

"நாமளும் பெரிய மாமாவுக்கு மகனா பொறந்திருக்கணும்."

அப்புவின் கருத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம்.

தாமோதரன் ஏப்பம் விட்டவாறு தன்னுடைய வயிறைத்தடவிக் கொண்டு எங்களை நோக்கி நடந்து வரும் போது குழம்பு மணம் எங்கள் நாசிக்குள் நுழையும். அது பெருங்காயத்தின் மணமாக இருக்குமா? பயறு உருண்டை எப்படி இருந்தது என்பதை அவனிடம் கேட்டால் என்ன என்று தோன்றும். இருந்தாலும் கேட்க மாட்டோம்.

சில வேளைகளில் இலையில் பரிமாறப்பட்ட பயறு உருண்டையைச் சாப்பிடாமல் தனியாக தன் கையில் அவன் எடுத்து வைத்திருப்பான். எங்கள் முன்னால் இருந்து அதைச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு. அதைப் பிய்த்து எங்களுக்கும் கொஞ்சம் தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பேன். அப்புவும், கோபியும், குஞ்ஞிமாளுவும் இருக்கும் பொழுது அதைக் கேட்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கும்.

ஒரு நாள் நான் மெதுவான குரலில் கேட்டேன்: "எனக்கு கொஞ்சம் தா..."

அவன் வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டி காட்டியவாறு கேட்டான்: "அவ்வளவு பிரியமா உனக்கு?"

அவ்வளவுதான் என்னுடைய ஆசையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் ஒளிந்து கொண்டது.

மாங்காய் கிடைக்கும் போது அவன் ஏங்கும் வண்ணம் தின்பது, ஒரு சிறு துண்டு கூட அவனுக்குக் கொடுக்காமல் தின்பது, இப்படித்தான் நான் அவனை பதிலுக்கு பதில் பழி வாங்கினேன்.


தாமோதரன் எதைப் பார்த்தாலும் எச்சில் ஒழுக விடுவான். ஆனால், பாட்டியின் பார்வையில் நான்தான் எச்சில் ஒழுக விடுபவன். தாமோதரனுக்கு வயிற்றுபோக்கு உண்டானதற்குக் காரணம் கூட நான் அவனைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொண்டதுதான் என்றாள் பாட்டி.

சிறிது நேரம் சென்றதும் என் தாய் அழைப்பது கேட்கும். "குஞ்ஞி கிருஷ்ணா, இங்கே வாங்க..."

எங்களுக்கு முன்னறையில் பரிமாறி வைத்திருப்பார்கள். சாதமல்ல. வரிசையாக மண் பாத்திரங்களில் கஞ்சி. கஞ்சி மஞ்சள் நிறத்தில் இருக்கும். காரணம், குழம்பும் அதில் கலந்திருக்கும்.

அதைப் பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். யார் மீது என்றில்லை. முழு உலகத்தையும் மனதில் திட்டிக் கொண்டே நான் அதை வயிற்றுக்குள் தள்ளுவேன்.

அப்பு ஒரு வழியைப் பின்பற்றுவான். அவன் பாத்திரத்தை உதட்டோடு சேர்த்து வைத்துக் கொண்டு வேகமாக ஒரு இழு இழுப்பான். கீழே பாத்திரத்தை வைக்கும் போது வற்றிப்போன குளத்தைப் போல அது முழுமையாக ஒன்றுமே இல்லாமல் இருக்கும்.

கஞ்சி சாப்பிடும் சமயத்தில் நான் வெறுமனே என் தாயுடன் சண்டை போடுவேன். அம்மா இதில் எதுவுமே செய்ய முடியாது என்ற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கஞ்சி குடிக்க என்னவோ போல் இருக்கும். அப்படி கஞ்சி குடிப்பதையே நான் மிகவும் தாழ்வான ஒரு விஷயமாக நினைத்தேன். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சாத்தனின் குடிசைகளிலும் வாசல் பெருக்கும் மாணியின் வீட்டிலும் அவர்கள் குடிப்பது கஞ்சிதான். அவர்களிடம் நெல் இல்லாததால் கஞ்சி குடிக்கிறார்கள். என் வீட்டில் தானியக் கிடங்குகளில் எவ்வளவோ நெல் இருக்கிறது. மாமாவும் தாமோதரனும் சாதம் சாப்பிடுகிறார்கள். எங்களுக்கு மட்டும் ஏன் அவர்கள் கஞ்சி தர வேண்டும்?

பெரிய மாமாவிற்கு எங்கள் மீது அந்த அளவிற்கு விரோதம் இருப்பதற்குக் காரணம் என்ன? எவ்வளவு யோசித்தும் என்னால் அதை மட்டும் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. தாமோதரனுக்குக் கொடுப்பதைப் போல புதிய பந்தும், ஜாகை போட்ட முண்டும் எனக்குத் தர வேண்டாம். வாய்க்கு வந்தபடி பேசாமல் இருக்கலாமே? எப்போது பார்த்தாலும் எங்களைத்திட்டிக் கொண்டே இருப்பார்.

"என்னடா சைத்தான்களா... என்ன பண்ணுறீங்க?" எங்களைப் பார்த்து அவர் கேட்கும் கேள்வி இது.

வாயில் நெருப்பை வைத்துக் கொண்டு நாங்களொன்றும் நள்ளிரவு நேரத்தில் நடந்து திரியவில்லை. பிறகெப்படி நாங்கள் சைத்தான்களாக ஆனோம்?

உள்ளேயிருந்து ஏதாவது சத்தம் கேட்டால் போதும். எங்களைப் பார்த்து ஒரே கூச்சல்தான்.

"பேசாம இருக்கீங்களா என்ன? கொன்னுடுவேன் நான்."

அவ்வளவுதான்- நாங்கள் நடுங்கிப் போவோம்.

வீட்டிலுள்ள எல்லார்மீதும் மாமாவுக்கு வெறுப்பு.

"இந்த வீட்டைத் தரை மட்டம் ஆக்க ரெண்டு கரும்பூதங்கள் இருக்கு..."

அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்கள் சென்ற பிறகுதான் எங்களுக்கே புரிந்தது. கரும்பூதம் என்பது என் தாய்க்கும் சித்திக்கும் அவர் வைத்த பட்டப்பெயர் என்பதே.

பாட்டிக்குக் கூட மாமா பயப்படமாட்டார். என் தாய் என்னை அடிப்பாள். அதே மாதிரி பாட்டி மாமாவை அடித்தாலென்ன?

ஒரு நாள் கோபியை நடு முற்றத்துத் தூணில் கட்டிப் போட்டு ஒரு புளியங்கொம்பால் அது ஒடியும் வரை மாமா அடித்தார். அதைப் பார்த்த பாட்டி சொன்னாள். "டேய், இந்த அளவுக்கு மோசமானவனா நடக்காதே. சின்னப்பிள்ளைங்களோட சாபம் காலைப் பிடிச்சாலும் போகாது."

அதற்குப் பெரிய மாமா சொன்னார். "அம்மா, நீங்க உங்கப் பாட்டுக்கு இருங்க. இதுல எல்லாம் தலையிடாதீங்க."

அதற்கு மேல் பாட்டி வாயைத் திறக்கவில்லை.

பெரியவர்களின் பிறந்த நாட்களின் போது மட்டுமே விருந்துகள் இருந்தன என்பதுதான் என் எண்ணம். பள்ளிக்கூட மேனேஜரும் பெரிய மாமாவும் வயதானவர்கள்தானே? வயதான பிறகு என்னுடைய பிறந்த நாளையும் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும். ஊரிலுள்ளவர்கள் எல்லோரையும் அழைக்க வேண்டும்.

என்னுடைய பிறந்தநாள் ஒரு சாதாரண நாளைப் போலத்தான் இருக்கும். காலையில் குளிக்க வேண்டும் என்பதொன்றுதான் விசேஷம். அது எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். என் தாயின் கட்டாயத்தின் காரணமாகவே நான் அதைச் செய்வதற்கு உடன்படுவேன்.

பெரியவர்களின் பிறந்த நாட்களின் போது மட்டுமல்ல, குழந்தைகளின் பிறந்த நாட்களின் போதும் விருந்து இருக்குமென்று முதல் முறையாகச் சொன்னது எங்கள் வகுப்பில் இருந்த மணிதான். அவனுடைய பிறந்த நாளின் போது விருந்து இருக்குமாம். அவனுடைய பிறந்த நாள் மட்டுமல்ல, அவன் தங்கையின் பிறந்த நாளுக்குக் கூட விருந்து இருக்குமாம். எனினும், அவன் சொன்ன அந்த விஷயத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. அவன் எப்போதும் பொய் சொல்வான். தன்னுடைய வீட்டில் பாம்பு புற்றுக்குப் பக்கத்தில் மூன்று செப்புக் குடங்கள் நிறைய தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது என்று சொன்ன வீரனாயிற்றே அவன்!

ஆனால், பிறந்த நாள் விஷயமாக மணி சொன்னது உண்மைதான் என்பது தெரிய வந்தது. என்னுடைய வீட்டில் தாமோதரனின் பிறந்த நாள் முதல் தடவையாகக் கொண்டாடப்பட்டது.

பொதுவாக தன்னுடைய பிறந்த நாளின்போது தாமோதரன் அவன் வீட்டில்தான் இருப்பான். அந்த வருடம் முதல் தடவையாக அது என் வீட்டில் கொண்டாடப்பட்டது.

அதற்கு முந்தைய நாள் மாமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போது தாமோதரன் சொன்னான். "நாளை என்னோட பிறந்த நாள்."

அதனால் எங்களுக்கு என்ன? நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை.

"நாளைக்கு பாயசம் செய்வாங்க."

பூ! எங்களுக்குச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது. அவன் சொன்னதைக் கேட்டீர்களா?

ஆனால், அடுத்த நாள் நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்று விட்டோம். தாமோதரனின் பிறந்த நாளுக்கு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். அப்படியென்றால் குழந்தைகளின் பிறந்த நாளன்றும் விருந்து பண்ணலாம் என்பதுதானே அர்த்தம்! என் தாய்க்கு இதுவரை இந்த உண்மை தெரியாதா என்ன?

என்னுடைய பிறந்த நாள் வரட்டும்... அடுத்த என் பிறந்த நாள் வருவதை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன்.

பாட்டிக்கு ஊரிலுள்ளவர்கள் எல்லோருடைய பிறந்த நாட்களும் இறந்த நாட்களும் மனப்பாடம். பல விஷயங்களுக்கும் அவள் நாள் குறித்துத் தருவாள். கணக்குக் கூட்டிப் பார்த்து சொல்லுவாள். "வர்ற புதன்கிழமை இந்த விசேஷத்தை வச்சுக்கடா..."

நான் மனதிற்குள் முணுமுணுப்பேன். "பாட்டிக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?"

நான் என் தாயைப் பார்த்துச் சொன்னேன்.

"என் பொறந்த நாளுக்கு விருந்து வைக்கணும்."


"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்காடா?"

என் தாய் இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வாள் என்று நான் நினைக்கவில்லை.

எனக்கு அழுகை வந்தது.

"தாமோதரனோட பொறந்த நாளுக்கு..."

"யானை சாணி போடுறதைப் பார்த்துட்டு முயல் முக்கினா எப்படி இருக்கும்? தாமோதரன் பெரிய மாமாவோட மகன்டா..."

என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

என் தாய்க்கு என்னுடைய மன வேதனையைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிந்தது. "அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? மாமாதானே நமக்கு நெல் அளந்து தர்றது?" என்றாள் அவள்.

என் தாய் சொன்னது சரிதான். மாமாதான் வீட்டுக்குத் தேவைப்படும் நெல்லை அளந்து கொடுப்பார். தானிய அறைகளின் சாவிகள் அவர் கையில்தான் இருக்கின்றன.

வாரத்திற்கொருமுறை தானிய அறைக்குள் கீழே இருக்கும் பெரிய பெட்டியை மாமா திறப்பார். நான்கு வீடுகளையும் பார்த்தவாறு அடுத்த நிமிடம் உரத்த குரலில் சத்தமிடுவார். "யாரு உள்ளே இருக்குறது?"

என் தாய் உடனே வெளியே வராவிட்டால் மாமாவின் குரல் மேலும் சற்று உயர்ந்து ஒலிக்கும். "இந்த நாசம் பிடிச்சவங்க காதுல விழுந்தால் தானே!"

அதற்குள் என் தாய் கூடையை எடுத்துக் கொண்டு அங்கு வந்து நின்றிருப்பாள். மாமா மூன்றுபடி நெல் அளந்து போடுவார். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தக்கூடியது அது. அந்த நெல் போதாது என்று பாட்டி சொன்னபோது, பெரிய குரலில் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார் மாமா.

"இங்கே என்ன பத்தாயிரக்கணக்குல விளைஞ்சா கிடக்கு? அஞ்சுக்கு ரெண்டாவது கிடைக்குதேன்னு நினைச்சு கடவுளைக் கும்பிடுறதை விட்டுட்டு..."

அப்படியென்றால் என்னுடைய பிறந்த நாளுக்கு விருந்து படைக்க வேண்டுமென்றால் மாமா கூடுதலாக நெல் அளக்க வேண்டும். மாமாவுக்குத் தருவதற்கென்ன? தானிய அறைகளில்தான் நெல் ஏராளமாக இருக்கிறதே!

என்னால் அந்தக் கேள்வியைக் கேட்க முடியாது. கேட்டு, அவர் எங்கே அடித்து விடுவாரோ என்ற பயமே காரணம். என் தாய் கேட்டால் நன்றாக இருக்கும்.

மாலையில் குளித்துவிட்டு வரும் போது நான் என் தாயிடம் சொன்னேன். "அம்மா, கேளுங்க..."

"என்னடா சொல்ற?"

நான் எதுவும் பதில் சொல்லவில்லை.

"என்ன கேட்கணும்?"

"மாமாக்கிட்ட..."

"உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?"

அவ்வளவுதான்- என் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நான் என்ன சொன்னாலும் எனக்குக் கிடைப்பது "பைத்தியக்காரன்" பட்டம்தான்.

என் தாய் என் முகத்தையே பார்த்தாள். அப்போது என் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

"டேய், அதுக்கு உன் தலையெழுத்து நல்லா இருக்கணும்."

என் தாய் ஈரத்துணியால் என் கண்களைத் துடைத்துவிட்டாள்.

அவனைத்தான் புளியங்கொம்பால் நான்-கு முறை சாத்த வேண்டும். என்னுடைய தலையிலும் என் தாயின் தலையிலும் தவறான கோடுகளைப் போட்ட அவனை.

இரண்டு இரவுகளும் ஒரு பகலும் கடந்து போயின. மனம் முழுக்க வேதனையாக இருந்தது. யாரிடமும் ஒரு வார்த்தை கூட நான் பேசவில்லை. என்ன செய்வது? அந்த அளவிற்கு நான் தரம் தாழ்ந்தவனாகிவிட்டேன்.

புதன்கிழமை பிறந்தது. அன்றுதான் என்னுடைய பிறந்தநாள். என் மனதில் சிறிது கூட உற்சாகம் தோன்றவில்லை. அன்று என்னுடைய பிறந்தநாள் என்பது தாமோதரனுக்குத் தெரியக்கூடாதே!

அன்று நெல் அளந்து கொடுக்கும் நாள். காலையில் தானிய அறை திறக்கப்பட்டது. மாமா உள்ளே நுழைந்தார். "யார் அங்கே?"

என் தாய் கூடையை எடுத்துக் கொண்டு தானிய அறையை நோக்கி நடந்தாள்.

வாசலில் மேற்குப் பக்கத்தில் சிதிலமடைந்து போயிருக்கும் தூணின் மீது சாய்ந்தவாறு நான் நின்றிருந்தேன்.

ஜன்னல் வழியாகப் பார்க்கும் போது, மாமா நெல் அளந்து போடுவதை நன்றாகப் பார்க்கலாம்.

மூன்று படிகள் அளந்த பிறகு மாமா தானிய அறையை அடைக்க போனபோது, என் தாய் மெதுவாகச் சொன்னாள். "இன்னைக்கு குஞ்ஞி கிருஷ்ணனோட பிறந்த நாள்..."

என் இதயம் 'டக்...டக்...'கென்று அடித்துக் கொண்டது. நான் மனதில் நினைத்ததைப் போல் அல்ல. "என் அம்மா எவ்வளவு நல்ல அம்மா..."

"அதுக்கு?"

"நம்ம கோவில்ல பாயசம் போடுறதா நேர்ந்திருக்கேன். நாலு படி அரிசி அதிகமா..."

இடி முழங்கும் குரலில் மாமா கூறினார். "யாரு கடவுள்கிட்டட வேண்டச் சொன்னது? அப்படி நேர்த்திக்கடன் செய்யிறதா சொல்லியிருந்தா, அப்படிச் சொன்னவங்க செய்துக்கட்டும்..."

"அவனுக்குக் காய்ச்சல் வந்திருந்தப்போ நேர்ந்தது அது."

"இதை அவனோட அப்பாக்கிட்ட போய் சொல்லு. அந்த ஆளால காலணாவுக்குப் பிரயோஜனம் உண்டா?"

"விருப்பப்படி நடந்தது இல்லியே அது!"

"என்னடி சொல்ற?"

"அண்ணன்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்ல முடியும்? அண்ணனை விட்டா...."

"என்ன பேசுற? உன்னை நான்..."

ஒரு அடி விழும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது என் தாய் தானிய மூட்டைகள் மீது குப்புற விழுந்து கிடப்பது தெரிந்தது.

"அம்மா..."

நான் என்னையும் மீறி, உரத்த குரலில் கத்தினேன்.

உள்ளேயிருந்தவர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். தானிய அறையைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனார்கள். பாட்டி மட்டும் இரண்டு முறை உரத்த குரலில் சொன்னாள். "நாராயணா... நாராயணா..."

சிறிது நேரம் சென்றதும் நெல் கூடையை எடுத்துக் கொண்டு தானிய அறைக்கு வெளியே என் தாய் வந்தாள்.

அப்போது அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இடது பக்க புருவத்திற்கு மேலே இரத்தம் தெரிந்தது.

அந்தப் பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை. என் தாய் என்னைக் கட்டாயப்படுத்தவுமில்லை.

அதற்குப் பிறகு இருபது பிறந்த நாட்கள் கடந்து போய்விட்டன. இப்போது என் தாய், மாமா, பாட்டி யாரும் இல்லை.

இருள் படர்ந்திருக்கும் வெட்ட வெளியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது நான் என் மனதிற்குள் நினைக்கிறேன். "நாளை என்னோட பிறந்தநாள்...."

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.