Logo

உன் நினைவாக...

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6750
un-ninaivaga

20.9.1954

சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லீலாவைப் பற்றி இன்று நினைத்தேன்.

லீலா என்றதும் நீங்கள் திடீரென்று ஒரு எண்ணத்திற்கு வரலாம். தவறாக நீங்கள் நினைத்து விடுவதற்கு முன்னால் நானே சொல்லி விடுகிறேன்- அவள் என் சகோதரி.

இந்த உண்மையை அறிந்திருக்கும் நபர்கள் உலத்திலேயே மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர்.

லீலாவைப் பற்றிய நினைவு இன்று எனக்கு வந்ததற்குக் காரணம் பெட்டிக்கு அடியிலிருந்து எனக்குக் கிடைத்த ரப்பரால் ஆன ஆந்தை. வேண்டாமென்று ஒதுக்கி வைத்த சட்டையும் பேன்ட்டும் பழைய தாள்களும் இருந்த பெட்டியை இன்று நான் சோதித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கும் போதுதான் அந்தப் பழைய ரப்பர் ஆந்தை என் பார்வையில் பட்டது. அதன் நிறம் மங்கலாகி கவர்ச்சி இல்லாத ஒரு பொருளாகக் காட்சியளித்தது. கண்ணாடியால் ஆன கண்கள் மட்டும் சிறிதும் ஒளி குறையாமல் அப்படியே இருந்தன.

ஒரு காலத்தில் அது என்னுடைய நெருங்கிய தோழனாக இருந்தது. அதன் சொந்தக்காரனாக நான் இருந்ததற்காக நானே மிகவும் பெருமைப்பட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு எனக்குக் கிடைத்த பொருள் அது. அதைப் பையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது நான் எனக்குள் மிகவும் உயர்ந்து விட்டதைப் போல் உணர்வேன். அதற்குக் காரணம் என் பைக்குள் இருந்த அந்த விலை மதிப்புள்ள பொருள்தான். அப்புக் குட்டனின் கண்ணாடி டப்பாவை விட, எம்ப்ராண்குட்டியின் மவுத்ஆர்கனைவிட விலை மதிப்புள்ளது என்னுடைய ஆந்தை. உண்மைதான். அது கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்டது.

ரப்பர் ஆந்தையிடம் இரண்டு சிறப்புகள் இருந்தன. அடிப்பகுதியை இலேசாகத் தட்டினால் அதன் வயிற்றுப்பகுதி திறக்கும். வயிற்றிற்குள் மெத்தென்று இருக்கும். ஒரு சிறிய மெத்தைக்கு மேலே அடர்த்தியான நீல நிறத்தில் ஒரு சிறு புட்டி இருக்கும். அதில் சென்ட் இருந்தது. அதன் மூடியைத் திறந்தால் முல்லை மலரின் மணம் வகுப்பு முழுவதும்  பரவும். அப்போது மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்ச் பகுதியிலிருந்து முணுமுணுப்புகள் அப்போது உண்டாகும்.

"அந்தப் பையனோட கையில இருக்குது."

"அந்தப்பையன்..." என்று சொல்லப்படுபவன் நான் என்பதில் எனக்குப் பெருமையாக இரக்கும்.

அதைத் தொடர்ந்து அது முஸ்லிம்கள் பயன்படுத்தும் சென்ட் என்று முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்ன சங்குண்ணியுடன் சண்டை போட்டதற்காக இப்போதும் நான் வருத்தப்படவில்லை.

இரண்டாவது சிறப்பு: பின்னாலிருந்த கம்பியைப் பிடித்து இழுத்தால் ஆந்தை கண்களை உருட்டும்.

மதிய நேரத்தில் எல்லோர் முன்னாலும் ஆந்தையைக் காட்டியவாறு உட்கார்ந்திருக்கும் போது மாயக்குதிரையின் சொந்தக்காரனான இளவரசனின் கதையை பாட்டி சொன்னது என்னுடைய ஞாபகத்தில் வரும். அந்த ஆந்தை என்னுடைய உயிராக இருந்தது. வேறு யாரிடமும் அதைத் தர எனக்கு மனமே வராது. அதை எப்படி இயக்க வேண்டும் என்ற 'மெக்கானிஸம்' எனக்கு மட்டும் தானே தெரியும்?

நான் ஆரம்பித்தது... ஓ, லீலாவைப் பற்றி அல்லவா? நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன். அந்த ரப்பர் ஆந்தையை எனக்குப் பரிசாகத் தந்தது லீலாதான்.

வாழ்க்கையிலிருந்து பிரித்து எடுக்கின்ற ஒரு பழைய தாள் அது.

பட்டன்கள் சரிவர போடப்படாத ஒரு கசங்கிப் போன பேண்ட்டை இடுப்பில் கஷ்டப்பட்டு இறுக்கிக் கொண்டு நடந்து திரிந்த காலமது. அப்போது எனக்கு வயது பத்தோ அல்லது பதினொன்றோ இருக்கும். என் தாயிடமும் அண்ணன்மார்களிடமும் அவ்வப்போது அடி, உதை வாங்கிக் கொண்டிருப்பேன். அம்மாளு அம்மாவின் மகன் வாசு நிறைய சேட்டைகள் செய்யக்கூடிய பையன் என்ற பெயரை பொது மக்களிடம் நான் பெற்றிருந்தேன். அப்படியொரு கருத்தைப் பெரிய அளவில் பரவவிட்டது பக்கத்து வீட்டிலிருக்கும் பாருவம்மாதான். மதிய நேரத்தில் அவள் மெதுவாக எங்கள் வீட்டிற்குள் வருவாள் என் தாயின் தலையில் பேன் பார்த்துக் கொண்டே பாருவம்மா ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள். அதைக் கேட்க பொதுவாகவே நான் விரும்புவேன். தன் வீட்டில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தைப் பற்றியோ, கர்ப்பமாக இருக்கும் ஆட்டைப் பற்றியோ- ஏதாவதொன்றைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேச்சு கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பேச்சுக்கு இடையில் பாருவம்மா கூறுவாள்:

"மகனே, அந்த வெற்றிலைப் பெட்டியை இங்கே கொஞ்சம் எடுத்துட்டு வா."

அதுதான் பிரச்சினையே. அவள் சொன்னபடி நான் அதை எடுத்துக் கொண்டு வரவில்லையென்றால், பெரியவர்கள் சொன்னபடி நடக்காத பையன் என்ற முடிவுக்கு வந்துவிடுவாள் என் தாய். அதற்குப் பிறகு என் தாயும் சொல்லிப் பார்ப்பாள். நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கிண்டலாக ஏதாவது சொல்வேன். அடுத்த நிமிடம் என் முதுகில் விழும் அடி.

சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு சம்பவம் இது.

பக்கத்திலுள்ள பெண்கள் மத்தியில் என் தாய் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தாள். அதற்குக் காரணம் என் தாயின் கையிலிருந்து அவர்களுக்கு பணமோ, அரிசியோ கடனாகக் கிடைக்கும். ஏதாவது விசேஷங்களுக்குப் போவது என்றால் என் தாயிடமிருந்து யார் வேண்டுமானாலும் நகையைக் கடனாக வாங்கிச் செல்லலாம்.

"ஒவ்வொரு மாசமும் அந்த அம்மாவுக்கு எவ்வளவு பணம் வருது?"

"அந்த ஆளுக்கு கொழும்புல எவ்வளவு பணம் வருது தெரியுமா?"

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

என் தந்தை நீண்டகாலமாக கொழும்பில்தான் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் அவரிடமிருந்து தாராளமாகப் பணம் வரும்.

நாங்கள் மொத்தம் நான்கு ஆண்பிள்ளைகள். சகோதரிகள் என்று எங்களுக்கு யாருமில்லை. மற்றவர்களின் பார்வையில் அது ஒரு நல்ல விஷயமாகப்பட்டது. ஆனால், பாருவம்மாவின் பார்வையில் அது என் தாய் மனதில் இருக்கும் குறைபாடு. அதற்குக் காரணம் என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும். பாருவம்மாவின் வீட்டில் அடுத்தடுத்து பிறந்த பெண்களே அவள் அப்படி நினைப்பதற்குக் காரணம். பதின்மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமது.

ஒரு பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்குமென்று என் தாயும் தந்தையும் விரும்பினார்கள். மூன்று ஆண் குழந்தைகளுக்குப் பிறகு, என் தாய் கர்ப்பம் தரித்தபோது சோதிடர் சொன்னார்: "இப்போ பொறக்கப்போறது பெண் குழந்தை தான்."

அதைக் கேட்டு எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி. செய்யாத வழிபாடுகள் இல்லை. ஏறாத கோவில்கள் இல்லை.

ஆனால், எதிர்பார்ப்பைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு குறும்புக்காரப் பையன் பிறந்தான். அந்தத் துரதிர்ஷ்டசாலி பையன் நான்தான்.


எனக்கு பதிலாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்க வேண்டும். கடவுளை நான் மனப்பூர்வமாகத் திட்டினேன்.

பட்டன்களை சரிவர போடாமல் கசங்கிப்போன அரைக்கால் சட்டையுடன் பலவித சேட்டைகளும் செய்து நான் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது என் தந்தையை எனக்கு ஞாபகத்தில் இல்லை. தந்தையின் படம் அறையில் பல இடங்களிலும் இருக்க, நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நான்கு வயதான போது அவர் கொழும்பிற்குப் போனவர். அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

அதைப் பற்றி எப்போதாவது பேசினால் அண்ணன்மார்கள் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். அவர்கள் முன்னால் நான் சுருங்கிப் போய் உட்கார்ந்திருப்பேன். அவர்கள் கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். என்னைவிட உரிமையுடன் என் தந்தையைப் பற்றி பேசுபவர்கள் அவர்கள்தான்.

நான் என் தாயின் வயிற்றில் இருக்கும் போது என் தாயும் சகோதரர்களும் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தார்கள். அதற்குப் பிறகு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு என் தந்தை ஊருக்கு வருவார்.

என் தாய் என்னை அடிக்கடி அடித்துக் கொண்டே இருப்பாள். அண்ணன்மார்களும் கூட அவ்வப்போது என்னை அடிப்பார்கள். தனியாக இருக்கும் போது என்னுடைய மோசமான நிலையைப் பற்றி சிந்தனையில் ஆழ்ந்துவிடுவேன். ஒரு பெண் பிள்ளை பிறப்பதற்கு பதிலாக நான் பிறந்த வருத்தம் காரணமாகவே அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

என்மீது கொண்ட வெறுப்பு காரணமாகத்தான் ஒருவேளை என் தந்தை ஊர்ப்பக்கமே வரவில்லையோ?

இரவில் படுத்திருக்கும் பொழுது நான் பல விஷயங்களையும் மனதில் போட்டு அலசுவேன். நினைத்து நினைத்து கடைசியில் நானே வாயைத் திறந்து கேட்டும் விடுவேன்.

"அம்மா, நான் ஒரு வெள்ளைக்காரியாகப் பிறந்திருந்தால்...?"

"பேசாம படுடா."

அப்போதுதான் உறங்க ஆரம்பித்திருக்கும் என் தாய் கோபத்துடன் என்னுடைய தொடையில் மெதுவாகக் கிள்ளுவாள்.

ஒரு பெண் குழந்தை வீட்டில் இல்லை என்பதில் என் தாய்க்கும் தந்தைக்கும் மனதில் நிறைய கவலை. அந்த விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும்.

வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருப்பது என்பது நல்ல விஷயம்தான். என் வகுப்பில் படிக்கும் பையன்களுக்கு அக்காமார்களும் தங்கைமார்களும் இருக்கிறார்கள். கோபியின் எல்லா புத்தகங்களுக்கும் காலண்டர் தாளில் அழகாக அட்டை போட்டுக் கொடுத்தது பானு அக்காதான். அவனுடைய பானு அக்காதான் புத்தகங்களின் மீது பெயர் எழுதுவதும் என்ன அழகான கையெழுத்து! கருணாகரனின் மூத்த அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. பெரிய மீசையும் சிறிய கைக் கடிகாரமும் உள்ள ஒரு ஆள்தான் அவனுடைய அக்காவைத் திருமணம் செய்தவர். அவரும் அவருடைய நண்பர்களும் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தபோது, அந்த ஆளின் கால்களைக் கழுவி விட்டது கருணாகரன்தான். அன்று இரவு முழுக்க குரவைச் சத்தமும், நாதஸ்வரமும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். இருந்தாலும், கால்களைக் கழுவிவிட்டது எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

"பிறகு..."- அவன் தன்னைப் பற்றி சொன்னான்: "நான் அந்த ஆளை எப்படி அழைக்கிறேன் தெரியுமா? அத்தான்னு..."

கருணாகரனும் கோபியும் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றியது. வீட்டில் ஒரு திருமணம் நடப்பதென்பது உண்மையிலேயே நல்ல விஷயம் தான். அலங்கரிக்கப்பட்ட பந்தலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் மனிதர்களின் கூட்டமும் உள்ளே நிறைந்திருக்கும் பெண்களும்... ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். க்ராமபோன் பாட்டும்...

என்னுடைய வீட்டில் ஒரு திருமணம் நடப்பதற்கான வழியே இல்லை. காரணம்- எனக்கு ஒரு சகோதரி இல்லை!

என்னுடைய புத்தகங்களுக்கு அழகான அட்டைகளுமில்லை. அழகான எழுத்துக்களில் பெயர் எழுதப்படவில்லை. எனக்கு ஒரு அத்தான் இல்லை.

அப்படி எனக்கு இருந்திருந்தால் எப்படி இருக்கும்? கருணாகரனின் வீட்டைவிட என் வீடு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அந்தச் சமயத்தில் கருணாகரன் என்னைப் பார்க்க வேண்டும். அவன் வீட்டில் திருமணம் அப்படியொன்றும் சிறப்பாக நடந்திருக்காது. அவன் என்ன பெரிய இவனா?

என்னுடைய புத்தகங்களுக்கு நான்தான் அட்டை போடுகிறேன். அது அப்படியொன்றும் பாராட்டக்கூடிய விதத்தில் இருக்காது. அண்ணன்மார்களிடமும் அட்டைபோட்டுத் தரச் சொன்னால் அவர்கள் ஏதாவது பேசுவார்கள்.

அவர்களுக்கு எதிராக நான் ஏதாவது சொன்னால் சேட்டை செய்யக்கூடிய பையன் என்று எல்லோரும் சொல்லக்கூடிய கருத்தை அவர்களும் ஒப்புக் கொண்டு என் தலையில் குட்டவோ அடிக்கவோ செய்வார்கள். என் தந்தையின் கடிதங்கள் முறை தவறாமல் வந்து கொண்டிருக்கும். என் தாய் அதை மிகவும் கவனமெடுத்துப் படிப்பாள். பத்தாம் வகுப்பில் படிக்கும் மூத்த அண்ணன் கடிதத்தைப் படிக்கும் போது இன்னொருமுறை அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொல்வோம்.

"........பிள்ளைகள் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தனியாக மறக்காமல் எழுதுவாய் அல்லவா?"

சிறிதும் குறையாத ஆர்வத்துடன் நான் அந்தக் கடிதம் படிக்கப்படுவதைக் கேட்பேன். பிள்ளைகள என்று குறிப்பிடப்படுவதில் நானும் அடங்கியிருக்கிறேன் அல்லவா?

முந்நூறு மைல்களுக்கப்பால் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தந்தையை நான் நினைத்துப் பார்ப்பேன். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய அண்ணன்கள் எல்லோரும் அவரின் அலுவலகத்திற்குப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் கொழும்பைப் பற்றி சொல்வது ஒவ்வொன்றையும் நான் மிகவும் கவனத்துடன் கேட்பேன்- எந்த இடத்தில் இருந்து சொன்னாலும் சரி. அங்குள்ள மனிதர்கள் பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் அவர்கள் பேசுவது வேறு ஏதோவொரு மொழியில். அங்குள்ளவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள். குழந்தைகளைச் சாலையில் பார்த்தால் இடுப்பிலிருந்து கத்தியை உருவி எடுத்து கழுத்தை அறுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று சொன்னார் சின்ன அண்ணன். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தன்னுடைய கண்களாலேயே பெரிய அண்ணன் பார்த்தாராம்.

அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது எனக்கு பயம் உண்டாக ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு கொடூர குணம் கொண்ட மனிதர்களுக்கு மத்தியிலா என் தந்தை வாழ்ந்து கொண்டிருக்கிறார்? கடவுளே!

"குழந்தைகளை மட்டும்தான் அவங்க கொல்லுவாங்க, இல்லியா?"

"பணம் கிடைக்கிறதா இருந்தா யாரை வேணும்னாலும் கொல்லுவாங்க."

அதைக் கேட்டதும் எனக்குள் ஒரு நடுக்கம் உண்டானது. ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. கடவுளே... என் தந்தையின் கையில் நிறைய பணம் இருக்கிறது என்று பொதுவாக ஆட்கள் எல்லோரும் கூறுவார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தந்தி ஒன்று வருகிறது. என் தந்தை ஊருக்குப் புறப்பட்டு வருகிறாராம்.


எங்கேயோ போர் நடந்து கொண்டிருந்த காலமது. என் தந்தை வேலை செய்யும் இடத்திலும் போர் நடந்திருக்கிறது. அதுதான் என் தந்தை உடனே புறப்பட்டு வருவதற்கான காரணம். தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிக்கக்கூடிய பெரிய அண்ணனுக்கு போர்களைப் பற்றிய சகல விஷயங்களும் நன்றாகத் தெரியும்.

என் வீட்டின் சூழ்நிலையே மாறியது. என் தந்தை வரப்போகிறார்! ஆறு வருடங்களுக்குப் பிறகு நான் என் தந்தையைப் பார்க்கப் போகிறேன்.

"கொழும்புல இருந்து இங்கே வர்றதுக்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?"

நான் விசாரித்தேன். மூன்று நாட்கள் கப்பலில் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வண்டியில் பயணம் செய்ய வேண்டும்.

கப்பல்நீர் மீது பயணம் செல்கின்ற வாகனம் என்று ஐந்தாம் பாடத்தில் படித்திருக்கிறேன். நீர் மீது பயணம் செய்கின்ற வாகனங்களை நினைக்கும் போது எனக்கு ஒரே பயமாக இருக்கும். பகவதி கோயிலுக்கு கடவுளைத் தொழப் போகும் போது படகில்தான் போக வேண்டும். அப்போது பயத்தில் நான் நடுங்கிப் போவேன். எங்கே கீழே விழுந்து இறந்து விடுவோமோ என்ற பயமே காரணம். படகு ஆற்றில் இருக்கிறது. கப்பல் கடல் மீது செல்கிறது. கடலில் பெரிய பெரிய அலைகள் உண்டாகும். கப்பல் கீழே விழுமோ?

என் தந்தையே, நீங்கள் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும்.

என் தாயின் கணக்குப்படி திங்கட்கிழமை என் தந்தை இங்கு வந்து சேர வேண்டும்.

அன்று பள்ளிக்கூடம் இருந்தாலும் போகக்கூடாது என்று நான் முடிவெடுத்தேன். அண்ணன்மார்களும் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று தீர்மானித்தார்கள். எல்லோருக்குமே விடுமுறை அளிக்கப்பட்டது.

தூக்கம் வரும்வரை வாசல்படியையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என் தந்தை இன்னும் வரவில்லை.

அடுத்தநாள் பொழுது புலரும் நேரத்தில் என் தந்தை வந்தார்.

தானிய அறைக்கு மேலே நின்றிருந்த சின்ன அண்ணன்தான் முதலில் அவரைப் பார்த்தார். வயல்வரப்பு வழியாக என் தந்தை வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் பெரிய பெட்டிகளைச் சுமந்து கொண்டு கூலிக்காரர்கள்.

வாசலில் கால் வைத்த உடனே, என் தந்தை என்னை வாரி எடுத்தார்.

ஒரு விஷயத்தை மட்டும் எனனால் உறுதியாகக் கூற முடியும் அண்ணன்மார்களுக்கு முன்னால் எப்போதாவது நான் என்னைப் பற்றி உயர்வாக நினைத்திருக்கிறேன் என்றால், அது அந்த நிமிடத்தில்தான்...

அடுத்தது அவர்கள் முறை. என் தந்தை ஒவ்வொருவரையும் வாஞ்சையுடன் தடவினார். காற்சட்டையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு சிறிது வெட்கப்பட்டவாறு நின்றிருந்த நான் என் தந்தையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

புகைப்படத்தில் இருந்ததைவிட அதிகமாக அவர் கறுத்திருந்தார். பருமனும் சற்று அதிகம்தான். நல்ல சித்திர வேலைப்பாடுகளமைந்த சால்வை ஒன்றை கழுத்தில் சுற்றியிருந்தார்.

அப்போதுதான் நான் ஒரு ஆச்சரியமான விஷயத்தைப் பார்த்தேன். என் தந்தைக்குப் பின்னால் ஒரு சிறுமி நின்றிருந்தாள்.

வெளுத்த நிறத்தில் வட்ட முகத்தையும் மலர்ந்த கண்களையும் கழுத்து வரை வளர்ந்திருக்கும் செம்பு நிற முடியையும் கொண்டிருந்த ஒரு சிறுமி அவள்.

வெண்மையான சில்க்கில் சிவப்பு நிறத்தில் பெரிய பூக்கள் போட்ட ஒரு கவுனை அவள் அணிந்திருந்தாள். என்னைவிட அவள் உயரமாக இருந்தாள். என் தந்தை அவளிடம் என்னவோ சொன்னார். அவர் பேசிய மொழி எனக்குத் தெரியாத ஒன்றாக இருந்தது. அவள் தலையை ஆட்டினாள். பிறகு மெதுவாக முன்னறைக்குள் நுழைந்து ஒருவித பதைபதைப்புடன் நின்றாள்.

வாசலிலும் ஜன்னல் வழியாகவும் ஆர்வம் நிறைந்த கண்கள் தெரிந்தன.

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வரும் என் தந்தையைவிட மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது அந்தச் சிறுமிதான்.

கூலிக்காரர்கள் பெட்டியையும் பொருட்களையும் கீழே இறக்கி வைத்தார்கள். மிகவும் பெரிய பெட்டிகள். அவற்றுடன் வெளிர் நீல நிறத்தில் துணி உறை போட்ட ஒரு தோல் பெட்டியும் இருந்தது. அதைத் தரையில் வைத்த போது அந்தச் சிறுமி மெதுவாக அதைத் தனக்கு அருகில் நகர்த்தி வைத்தாள்.

முன்னறைக்கு தேநீர் வந்தது. உள்ளேயிருந்து என்னவோ முணுமுணுத்தவாறு பாட்டி முன்னறைக்கு வந்தாள்.

"காலை வண்டியில வந்தியா?"

"ஆமா... நல்ல கூட்டம். இரண்டாம் வகுப்புல இருக்குறதுக்குக் கூட இடம் இல்லைன்னா பார்த்துக்கங்களேன்."

கண்களைக் கசக்கியவாறு என் தந்தை சொன்னார்.

"காலம் எவ்வளவோ மாறிடுச்சு. முன்பெல்லாம் ஆளுங்க காசிக்குப் போறதுன்னா கூட நடந்து தான் போவாங்க."

"எல்லாம் கொழும்புல இருந்து வர்றவங்கதான். அங்கே குண்டு போட்டவுடனே, எல்லாரும் கிளம்பிட்டாங்க..."

பாட்டி அவ்வப்போது சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமியையே பார்த்தாள். அவளோ பூமிக்குள்ளிருந்து முதல் தடவையாக பகல் வெளிச்சத்தில் வந்து நின்று கொண்டிருக்கும் ஒரு வினோத உயிரைப் போல நின்றிருந்தாள்.

என் தாய் இன்னும் முன்னறைக்கு வரவில்லை. அவளை அழைத்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது- ஆறு வருடங்களுக்குப் பிறகு என் தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்படியென்றால் என் தாய் உடனே வெளியே வரவேண்டுமா இல்லையா? வீட்டில் அர்த்தம் நிறைந்த ஒரு அமைதி நிலவிக் கொண்டிருந்தது. எனக்கு அதற்கான காரணம் என்னவென்று புரிந்தது.

பாட்டியிடம் கூறுவது மாதிரி தான் வேலை பார்க்கும் இடத்தில் குண்டுபோட்ட விவரத்தை எல்லோரும் தெரிந்து கொள்வதுமாதிரி என் தந்தை கூறிக் கொண்டிருந்தார். என் தந்தை வசிக்கும் தெருவின் ஒரு முனையில் கூட குண்டு போடப்பட்டதாம். ஒரு பெரிய துணிக்கடை முழுவதும் நெருப்பில் எரிந்து விட்டதாகச் சொன்னார். கட்டிடங்கள் பலவும் தரையோடு தரையாக இடிந்து விட்டனவாம். பலரும் அந்த விபத்தில் இறந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் பட்டியலில் என் தந்தையின் ஒரு நண்பர் கூட இருக்கிறார். அந்த மனிதர் ஒரு சிங்களர். அவரின் மகள்தான் இப்போது என் தந்தையுடன் வந்திருக்கும் லீலா.

லீலாவிற்குச் சொந்தமென்று இந்த உலகில் யாருமில்லை. அவளுடைய தாய் அவள் சிறு குழந்தையாக இருந்தபோதே இந்த உலகைவிட்டுப் போய்விட்டாள். தந்தை குண்டு விபத்தில் மரணத்தைத் தழுவிவிட்டார். இனிமேலும் அங்கு குண்டுகள் போடப்படலாம். அப்போது அவளை எந்தவித அபாயமும் உண்டாகாமல் காப்பாற்ற வேண்டுமானால் உடன் அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை.

நான் தந்தையும் தாயும் இல்லாத அந்தச் சிறுமியையே பார்த்தேன். என் மனதில் வேதனை தோன்றியது. பாவம்...


அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். என் வகுப்பில் இருக்கும் சிறுமிகளைவிட அவள் அழகு என்பதென்னவோ உண்மை. பாட்டி அவளை உள்ளே அழைத்தாள். அவள் அதைக் கேட்காதது மாதிரி இருந்தாள். அருகில் சென்று கையைப் பிடித்ததுதான் தாமதம். அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். தொடர்ந்து அவள் அழைத்தாள்.

"டாடி..."

என் தந்தையின் அருகில் வந்து பாட்டியைச் சுட்டிக்காட்டியவாறு அவள் மெதுவான குரலில் என்னவோ சொன்னாள்.

அது எனக்குப் பிடிக்கவில்லை. அவள் பேசியது அல்ல. என் தந்தையுடன் மிகவும் நெருக்கமாக அவள் நின்றிருந்ததை நான் விரும்பவில்லை.

அன்று இரவு என் தந்தைக்கும் தாய்க்குமிடையில் மணிக்கணக்காக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. எதற்காக என் தாய் என் தந்தையுடன் சண்டை போட வேண்டும்?

நான் எதிர்பார்த்ததைப் போல் வீட்டிற்குள் சூழ்நிலை விரும்பத்தக்கதாக இல்லை. ஆங்காங்கே ஒவ்வொருவரும் முணுமுணுப்புக் குரலில் பேசிக் கொண்டார்கள். தாங்கள் பேசுவதை என் தாய் கேட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் அந்தச் சிறுமிதான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

பக்கத்து வீட்டு பாருவம்மாவிடம் சித்தி மெதுவான குரலில் சொன்னாள்:

"பார்த்தா தெரியலியா?"

"தெரியாம என்ன?"

"அக்காவுக்குத் தெரிய வேண்டாம். இதுதான் மூத்த மகள்..."

விஷயம் கிட்டத்தட்ட எனக்கும் புரிந்து விட்டது. வீட்டிற்குள் இருக்கும் முணுமுணுப்புகளுக்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். லீலா என் தந்தையின் மகள்!

என் தந்தையின் மகள்! அப்படியென்றால் என்னுடைய சகோதரி. நான் இவ்வளவு நாட்களும் மனதில் நினைத்திருந்தது தவறு என்பது புரிந்தது. எனக்கும் ஒரு சகோதரி இருக்கிறாள்!

அது உண்மையிலேயே ஒரு முக்கியமான விஷயம்தான் என்று நான் நினைத்தேன். இருந்தாலும் இதற்காக இவர்கள் எல்லோரும் ஏன் முணுமுணுக்க வேண்டும்?

அவள் பேசுவது எதுவும் எனக்குப் புரியவில்லை. அவளின் கூர்மையான பார்வையின் அர்த்தமும் விளங்கவில்லை. இருந்தாலும், அவளின் எந்தச் செயலையும் நான் எதிர்க்கவில்லை. காரணம்- அவள் என் சகோதரி ஆயிற்றே!

அவள் என்னுடைய தங்கையா, அக்காவா? சொல்வது சற்று கடினமான விஷயம்தான். என் தந்தையிடம் கேட்டால் உண்மை தெரிந்துவிடும். ஆனால் கேட்க முடியாதே! தங்கையாக இருப்பதற்கான வாய்ப்புத்தான் அதிகம். என்னுடைய மொழி அவளுக்குப் புரிந்து விட்டால் நான் அவளை 'தங்கை' என்றே அழைக்க ஆரம்பித்துவிடுவேன்.

தங்கையுடன் நெருங்கிப் பழக நான் முயற்சித்தாலும், நடைமுறையில் அது நடக்காமலே இருந்தது. அவள் எங்களைவிட்டு மிகவும் விலகி நின்றிருந்தாள். என் தந்தையுடன் மட்டுமே அவள் பேசுவாள். எப்போதும் அவளுக்கு 'டாடி' மட்டும் போதும். 'டாடி' என்றால் 'அப்பா' என்று பெரிய அண்ணன் தான் அர்த்தம் சொன்னார். பெரிய அண்ணனுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்

பகல் முழுவதும் அவள் அந்தத் தோல் பெட்டிக்கு மேலேயே உட்கார்ந்திருப்பாள். சாவிக்கொத்தை எப்போது பார்த்தாலும் சுண்டு விரலில் வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டே இருப்பாள். பெட்டியின் பக்கத்தில் யாராவது சென்றால் பாம்பைப் போல அவள் சீற ஆரம்பித்துவிடுவாள்.

அந்தப் பெட்டி நிறைய அவளுடைய ஆடைகள்தாம். அழகான துணியால் அமைந்த ஆடைகள். பெட்டியைத் திறந்தால் பாச்சா உருண்டையின் வாசனை 'குப்'பென்று வரும். அதோடு சேர்ந்து வேறு ஏதோவொரு அருமையான நறுமணமும்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் நான் அந்த ரப்பர் ஆந்தையைப் பார்த்தேன். அவள் பெட்டியைத் திறந்தபோது நான் பின்னால் நின்று மெதுவாக எட்டிப் பார்த்தேன். அப்போதுதான் அது என் கண்ணில் பட்டது. ஆடைகளுக்கு மத்தியில் அழகான ஒரு ரப்பர் ஆந்தை.

"அது என்ன?"

என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.

அவள் கண்களைச் சுருக்கி வைத்துக் கொண்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள். நான் என்ன சொன்னேன் என்பது அவளுக்குப் புரியவில்லை போலிருக்கிறது-.

"அதோ இருக்கே அதைச் சொல்றேன்."

நான் கையால் சுட்டிக் காட்டினேன்.

அவள் அந்த ரப்பர் ஆந்தையை வெளியே எடுத்தாள். அதன் அழகை தனக்குள் ஒரு முறை ரசித்துவிட்டு அவள் என்னைப் பார்த்தாள். அவளின் மென்மையான விரல்கள் அந்த ரப்பர் ஆந்தைக்குப் பின்னால் இயங்கின. அடுத்த நிமிடம் ஆந்தையின் நீலக்கண்கள் அசைந்தன.

"நான் கொஞ்சம் பார்க்கட்டுமா?"

நான் வெட்கத்துடன் சொன்னேன். யாராவது நான் சொன்னதைக் கேட்டால் என்னைக் கேலி பண்ணுவார்களோ என்ற பயம் வேறு.

மீண்டும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவள் என்னைப் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ மெதுவாக அந்த ரப்பர் ஆந்தையை பெட்டிக்குள் வைத்து பத்திரமாகப் பூட்டினாள். அதைப் பார்த்து எனக்கு என்னவோ போலாகிவிட்டது. என்னுடைய தந்தையின் மகள்தான் என்றாலும் அவள் பயங்கர பிடிவாதக்காரிதான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அந்த ரப்பர் ஆந்தை மீது எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது என்பதை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் ஏன் அவ்வப்போது பெட்டியைத் திறந்து அந்த ரப்பர் ஆந்தையை நான் பார்க்கும்படி காண்பித்து என்னை வெறுப்படையச் செய்ய வேண்டும்?

அவளுடைய அந்தப் போக்கை பொதுவாகவே நான் விரும்பவில்லை. என் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னால் அதே போல ஒன்றை எனக்கு அவர் வாங்கித் தராமல் இருக்க மாட்டார். அப்படி ஒன்று என் கைக்கு வந்தால் நான் அதை என் வகுப்பறைக்குக் கொண்டு சென்று என் நண்பர்கள் முன்னால் வைத்து கண்களை அசையச் செய்யலாம்; வயிறைத் திறக்கச் செய்யலாம்.

என் தந்தையிடம் சொன்னால் என்ன?

அவரிடம் நெருங்க எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. விஷயமொன்றுமில்லை. அவளைப் போல 'டாடி' என்று அழைத்தவாறு ஓடிச் சென்று அவருடைய மடியில் போய் உட்கார எனக்கு என்னவோ போல் இருந்தது.

என் தந்தை அதிகம் பேசக்கூடியவர் இல்லை. தூரத்தில் நின்று கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவரையே நான் பார்த்துக் கொண்டிருப்பேன். தடித்த ஃப்ரேமைக் கொண்ட அந்த கண்ணாடி அவர் முகத்தைத் திருப்பும் போது பிரகாசமாகத் தெரிவதைப் பார்ப்பதற்கே சுவாரசியமாக இருக்கும்.

ஒருமுறை மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் கேட்கலாம் என்று தீர்மானித்து விட்டேன். லீலாவின் முன்னால் கேவலமான மனிதனாக நான் இருந்துவிடக்கூடாது அல்லவா? அவரின் அருகில் சென்று நின்றபோது அவர் கேட்டார்:


"என்ன?"

அவர் தலையை உயர்த்தியபோது, அவரின் கண்ணாடி பிரகாசித்தது.

என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. என்னுடைய தலைமுடியை வருடியவாறு என் தந்தை கேட்டார்.

"பள்ளிக்கூடத்துக்கு போறேல்ல?"

"ம்..."

அதற்குமேல் அவர் எதுவும் கேட்கவில்லை. நானும் எதுவும் சொல்லவில்லை.

ரப்பர் ஆந்தை ஒரு பக்கம் இருக்கட்டும். வகுப்பறையில் தேவையில்லாமல் பையன்கள் என்னை ஏன் வெறுப்பேற்ற வேண்டும்?

என் தந்தை வந்திருக்கும் விஷயமும் அவருடன் ஒரு சிறுமி வந்திருப்பதும் எவ்வளவு வேகமாக ஊர்க்காரர்கள் மத்தியில் பரவியிருக்கிறது! என் வீட்டிற்கு ஒரு சிறுமி வந்திருப்பதை அறிந்து கொண்டு அதைப் பற்றி முதலில் பேசியது என் வகுப்பில் இருக்கும் ஜானுதான்.

என் காதில் விழ, அவள் சொன்னாள்:

"இவனோட அப்பா வர்றப்போ அவர் கூட ஒரு சின்ன பொண்ணையும் அழைச்சிட்டு வந்திருக்காரு."

"எங்கேயிருந்து?"- அருகில் அமர்ந்திருந்த நாணி கேட்டாள்.

"கொழும்புல இருந்து. பிறகு... எங்கம்மா சொன்னாங்க. இவனோட அப்பாவுக்கு அங்கே ஒரு பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்களாம்..."

அவ்வளவுதான். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அந்த ஒல்லிப்பெண்ணின் கன்னத்தில் ஒரு அடி கொடுக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு. ஆனால், நான் அதைச் செய்யவில்லை. காரணம்- அவள் எனக்கு முந்திரிப்பருப்பு தந்திருக்கிறாள்.

இருந்தாலும் அவள் சொன்னது ஒரு அக்கிரமமான காரியம்தான். என் தந்தையைப் பற்றி... அதுவும், அவர் கொழும்பில்... சே... அது பொய்! அவளுடைய தாய்க்கு என்ன கேடு வந்தது? அவளின் தாயும் பாட்டியும் எப்போதும் நிறைய பொய் சொல்லக்கூடியவர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

அவள் அப்படி என் தந்தையைப் பற்றி சொன்னதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். மனதில் உண்டான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மாலையில் குளத்திலிருந்து திரும்பி வரும்போது நான் என் தாயிடம் கேட்டேன்...

"அம்மா, என் வகுப்புல இருக்குற ஜானு சொன்னா...-"

"என்ன சொன்னா?"

"அப்பாவைப் பற்றி... அவருக்கு கொழும்புல ஒரு பொண்டாட்டியும் பிள்ளைங்களும் இருக்காங்கன்னு...."

ஜானுவிற்கு நான் தரவேண்டுமென்று நினைத்திருந்த அடி எனக்குக் கிடைத்தது.

"உன் அப்பாகிட்டயே போயி இதைக் கேளு..."

இந்த விஷயத்தைப் பற்றி இனிமேல் யார் எது சொன்னாலும், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தேன். யாரிடமும் எதுவும் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

என் தந்தை வந்த ஆறாம் நாள் இரவில் அது நடந்தது-.

அவர் படுத்திருக்கும் அறைக்கு அடுத்த அறையில்தான் நான் படுத்திருந்தேன். இரவு சாப்பாடு முடிந்து படுப்பதற்காகச் சென்ற போது என் தந்தையுடன் நெருக்கமாக நின்று கொண்டு லீலா பேசிக் கொண்டிருந்தாள். அறைக்குள்ளிருந்து சுருட்டின் வாசனை வெளியே வந்து கொண்டிருந்தது.

நான் அதைப் பார்க்காததைப் போல் நடித்தேன். என் தந்தையுடன் அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டு நான் எந்தச் சமயத்திலும் பேசியதில்லை. அதைப் பார்த்து என் மனதில் பொறாமை தோன்றியது. நான் மிகவும் அசிங்கமாக இருக்கிறேனோ என்ற எண்ணம் உண்டானது. நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் ஆடைகளும், ரப்பர் ஆந்தையும், பார்ப்பதற்கு அழகான முகமும் என்னிடம் இல்லை என்பதென்னவோ உண்மை. பட்டன்கள் இல்லாத என் காற்சட்டையில் பெரும்பாலும் சேறும் அழுக்கும் இருக்கும். ஒருவேளை அதனால்தான் தனக்கு அருகில் வைத்து என்னுடன் என் தந்தை பேசமாட்டேன் என்கிறாரோ?

எனக்கு அழ வேண்டும்போல் இருந்தது. படுக்கையில் முகத்தை புதைத்துக் கொண்டு நான் அசையாமல் படுத்திருந்தேன்.

"வாசு..."

என் தந்தை அழைத்தார்.

"ம்..."

"வா... இங்கே வா..."

நான் மெதுவாக அந்த அறைக்குள் சென்றேன். என் தந்தையின் தோளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த லீலாவை நேருக்கு நேராகப் பார்க்க எனக்கு என்னவோ போல் இருந்தது.

"வா மகனே..."

என் தந்தை என்னைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து வைத்துக் கொண்டு என் தலைமுடியைக் கையால் கோதியவாறு லீலாவிடம் என்னவோ சொன்னார்.

அந்தமொழி இப்போது கூட எனக்குத் தெரியாத ஒன்று. ஆனால், அதன் அர்த்தம் இப்போது எனக்குத் தெரியும்.

"மகளே, இவன் உன் அண்ணன்."

மனதில் வேதனையுடன் இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.

அன்று குடும்பத்திற்குள் ஒரு சூறாவளியே வீசியது. கடந்த ஆறு நாட்களாகவே அது வடிவமெடுத்து வந்திருக்கிறது என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. என் தந்தையும் தாயும் ஒருவருக்கொருவர் சண்டை போட ஆரம்பித்தார்கள். வீட்டிலுள்ள யாரும் அவர்கள் சண்டையில் தலையிடவில்லை. வார்த்தைகளின் கனமும் கூர்மையும் படிப்படியாகக் கூடின. என் தந்தை தன்னால் முடிந்தவரை அமைதியாக இருக்க முயன்றார்.

"நீ தேவையில்லாம என்னை தப்பா நினைக்கிற."

"நீங்க சொல்றதைக் கேட்க நான் தயாரா இல்ல. எனக்கு எல்லாம் தெரியும்."

"என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

"என் வாயாலயே அதைச் சொல்ல வைக்காதீங்க. மாதவன் எனக்கு எல்லா விஷயத்தையும் எழுதிட்டான்."

மாதவன் யார் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில்தான் மாதவன் மாமாவின் வீடு இருக்கிறது. என் தாயின் சகோதரர் அவர்.

அதற்குப் பிறகு என் தந்தை எதுவும் பேசவில்லை. என் தாய்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் வாயிலிருந்து நெருப்பென வார்த்தைகள் சிதறிக் கொண்டிருந்தன.

நான் முகத்தை மூடிக் கொண்டு படுத்திருந்தேன். இதயம் அழுதது. நான் என் மனதிற்குள் பிரார்த்தித்தேன்:

"பகவதி... எதுவும் நடந்திடக்கூடாது."

மேஜை மீது கண்ணாடி டம்ளர்கள் நொறுங்கின.

நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.

தலையணை மீது என்னுடைய கண்ணீர்த் துளிகள் விழுந்த வண்ணம் இருந்தன.

"கடவுளே..."

சிறிது நேரம் சென்றதும் என் தாய் படிகளிலிறங்கிச் செல்வதைப் பார்த்தேன். அடக்கி வைக்கப்பட்டிருந்த அழுகை...

அடுத்த நாள் அதிகாலையில் நான் படுக்கையைவிட்டு எழுந்தபோது நான் கண்ட காட்சி- என் தந்தையும் லீலாவும் பயணம் புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்தார்கள். முன்னறையில் பெட்டிகள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

"அப்பா எங்கே கிளம்பிட்டாரு?"

நான் என் அண்ணனிடம் மெதுவாகக் கேட்டேன்.

என் அண்ணன் எரிச்சல் குரலில் சொன்னான்: "யாருக்குத் தெரியும்?"

அப்போது வேதனையுடன் நான் நினைத்தேன்- இங்குள்ளவர்களுக்கு என்ன ஆயிற்று?

என் தந்தை முதலில் பாட்டியிடம் விடை பெற்றார். பிறகு எங்களிடம்.

அண்ணன்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.


என் தந்தை அதை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். வாசலுக்குச் சென்றவர் பெரிய கொழும்பு குடையைக் கையில் வைத்துக் கொண்டு அழைத்தார்:

"லீலா.."

"டாடி..."

அவள் கிளம்பத் தயாரான நிலையுடன் வெளியே வந்தாள். பெரிய சூரியகாந்திப் பூக்கள் வரையப்பட்ட கவுனை அவள் அணிந்திருந்தாள். இடையில் நீலவண்ணப்பட்டு நாடா ஒன்றைக் கட்டியிருந்தாள். கையில் ரப்பர் ஆந்தை இருந்தது.

வாசலில் தூணின் மீது சாய்ந்தவாறு நின்றிருந்த என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். நான் சிரிக்கவில்லை. என் பக்கத்தில் வந்து என் கைகளில் அந்த ரப்பர் ஆந்தையை அவள் தந்தபோது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். மீண்டும் ஒரு முறை என்னைப் பார்த்து புன்னகைத்த அவள் என்னவோ மெதுவான குரலில் சொன்னாள். அவள் தன் சிறிய குடையை ஆட்டியவாறு வாசலை விட்டு நகர்ந்தாள்.

என் தந்தை முன்னாலும் லீலா அவருக்குப் பின்னாலும் படிகளில் இறங்கினார்கள். நீண்டு கிடக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை விட்டுப் போகிறார்களா?

தூரத்தில் அந்த சூரியகாந்திப் பூக்களும் நீலவண்ணப்பட்டு நாடாவும் என் பார்வையிலிருந்து மறைந்தன.

இருபது வருடங்களுக்குப் பிறகு இன்று நான் லீலாவைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்துவிட்டேன்.

அன்புள்ள சகோதரி, எத்தனையோ மைல்களுக்கப்பால் இருந்து உன்னை நான் வாழ்த்துகிறேன்.

உன் நினைவாக நான் இதை எழுதுகிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.