Logo

அக்கா

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 8435
akka

க்கா அழுது கொண்டிருக்கிறாள்.

             அக்கா அழுவதை எப்போதும் அப்பு விரும்பமாட்டான். வடக்குப் பக்கமிருக்கும் அறையின் ஜன்னல் படிமீது அமர்ந்து தன்னுடைய நெற்றியில் கையை வைத்துக் கொண்டு அக்கா அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது பார்த்தாலும் அழுகைதான். ஒரு வேளை பெரியம்மா அவளை ஏதாவது திட்டியிருக்கலாம்.

பெரியம்மா அப்புவைக்கூட பல நேரங்களில் கண்டபடி பேசுவாள். அப்போது அவன் அழமாட்டான்.

அதற்குப் பதிலாக அவனுக்குக் கோபம்தான் உண்டாகும். தன் அக்கா அளவிற்கு அவன் பெரியவனாக இருந்திருந்தால், தான் யார் என்பதை அவன் காட்டியிருப்பான். இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தும், பெரியம்மாவின் திட்டுகளைக் கேட்கும்போது அவளுடைய முகம் மிகவும் வாடிப் போகும். கண்கள் நீரால் நிறைந்துவிடும். அதைப் பார்க்கும் போது பொதுவாக அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவான்.

அழுது கொண்டிருக்கும்பொழுது அக்காவுக்கு அருகில் நிற்க அப்புவால் முடியாது. அழுவதற்கிடையில் அக்கா அவனைக் கட்டிப்பிடிப்பாள். அப்படி அவள் அன்புடன் தன்னை அணைத்துக் கொள்வது ஒருவிதத்தில் அவனுக்குக் பிடித்தமானதுகூட இருப்பினும் 'மகனே' என்று முணுமுணுத்தவாறு அவள் அவனுடைய நெற்றியிலும் தலையிலும் அடுத்தடுத்து முத்தம் தரும்போது சூடான கண்ணீர்த்துளிகள் அப்புவின் உடல்மீது தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும். அப்போது அவனுக்கும் அழ வேண்டும் போல் இருக்கும்.

பொதுவாக பெரியம்மா திட்டுவதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை. அவள் திட்டி அவன் எவ்வளவோ கேட்டு விட்டான். காலையில் படுக்கையைவிட்டு எழுந்தது முதல் பெரியம்மா அவனைத் திட்டிக் கொண்டே தான் இருப்பாள். "உச்சி நேரம் வர்றப்போதான் பையன் படுக்கையைவிட்டே எழுந்திரிக்கிறது. டேய், இங்க பாரு, உன் மண்டையை ரெண்டா பொளந்தாதான் நீ சரியா வருவே" என்று பெரியம்மா அவனைப் பார்த்து சத்தம் போடுவாள்.

வாசலில் கிடக்கும் அம்மிக்கல்லுக்கு அருகில் அமர்ந்து பல் தேய்க்கும் போது தரையில் சிறிது தண்ணீர் பட்டுவிட்டால்கூட போதும், பெரியம்மா வழக்கமான தன் திட்டுதலை ஆரம்பித்து விடுவாள். "மூளை இல்லாதவனே, உன் முதுகெலும்பு ஒடிய வேலை செய்தா இந்தத் தரையை நீ உண்டாக்கினே?" என்று மனம் போனபடியெல்லாம் பேசுவாள்.

வாசலை அசுத்தமாக்கினால், கிணற்றில் ஒரு கல்லை வீசி எறிந்தால், செப்புக்குடத்தின் மீது கையால் தட்டினால்& எல்லாமே பெரியம்மாவுக்கு கோபம் வர வைக்கக்கூடிய விஷயங்கள்தான். இப்போது அவன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருப்பதால் சற்று நிம்மதியாக இருக்கிறது. பகலில் அதிகம் தொந்தரவு இல்லை அல்லவா?

அக்கா பெரியம்மாவுக்கு இரண்டு உதைகள் கொடுத்தால் என்ன? ஆனால், பெரியம்மாவைப் பார்த்து பயப்படுவது அப்புவை விட அவனுடைய அக்காதான். அப்புவைத் திட்டும் போது அக்கா சில நேரங்களில் கூறுவாள்: "அம்மா அவனை அடிச்சே கொன்னுடுவாங்க..."

"என்ன சொன்ன....?"

அவளைப் பார்த்து பெரியம்மா தன் உடம்பை ஒரு ஆட்டு ஆட்டுவாள். அதற்குப் பிறகும் அவள் வெறுமனே இருக்கமாட்டாள். "அந்த அளவுக்கு அவன் உனக்கு சர்க்கரையா இருந்தான்னா, அதை உன்னோட நிறுத்திக்கோ... தெரியுதா?" என்பாள்.

"அவங்க குழந்தையோட அருமை அவங்கவங்களுக்குத்தான் தெரியும்."

அவள் அவனைத் தொடலாம் என்று ஆசையுடன் போனால்... அவ்வளவுதான்... அடுத்த நிமிடம் கையில் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டு வேகமாக வருவாள் பெரியம்மா.

"அடியே... அவன்கிட்ட போகாதே. இதுக்குமேல என்னைப் பேசவச்சே அவ்வளவுதான்" என்று அவள் கத்துவாள்.

இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகு அப்பு மெதுவாக வாசல் பக்கம் நடந்து போவான். பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சக்கனுடன் சேர்ந்து வயல் வெளிகளில் சுற்றித்திரிவான். சில நேரங்களில் பூசணிக்கொடிகளுக்கு மத்தியில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிவப்பு நிற பட்டுப்பூச்சியைப் பிடிப்பதற்காக முயற்சி பண்ணிப் பார்ப்பான். ஒருமுறை கூட அவன் அதைத் தன் கையால் பிடித்ததில்லை. பட்டுக் கோவணமணிந்த அந்தப் பூச்சி பயங்கர தந்திரசாலியாக இருக்க வேண்டும். நேரம் அதிகமான பிறகுதான் அவன் வீட்டிற்குள் மறுபடியும் வருவான். இதற்கிடையில் அவன் மனதில் நினைப்பான். 'அக்கா வடக்குப் பக்கம் இருக்கும் அறையின் ஜன்னல்படியில் நெற்றியை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பாள்.'

மாலை நேரங்களில் கடவுள் பெயர் சொல்லி பிரார்த்தனை செய்யும் சிரமமான ஒரு வேலையும் அவனுக்கு இருக்கிறது. தாழ்வாரத்தில் நின்றவாறு அப்பு கடவுள் நாமம் சொல்லி பிரார்த்திப்பான்.

சிறிது நேரம் நமச்சிவாயம் சொல்ல வேண்டும். பிறகு அஸ்வதி பரணி. கொஞ்சம் கூட பிசகாமல் அவன் அவற்றைச் சொல்லுவான். மலையாள மாதம் பன்னிரண்டையும் கூறிவிட்டால், பிறகு அவனுக்கு அக்காவின் உதவி தேவைப்படும். ஆங்கில மாதங்களின் பெயர்களையும் ஒன்&டூ&த்ரியும் அக்காதான் சொல்லித்தர வேண்டும்.

அக்காவுக்கு ஆங்கிலம் தெரியும். முன்னறையில் இருக்கும் கிருஷ்ணனின் உருவமிருக்கும் காலண்டரில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளை அக்கா நன்றாக வாசிப்பாள். அக்கா எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள்.

எல்லாம் சொல்லி முடித்தபிறகு அவன் அக்காவின் அருகில்போய் உட்காருவான். எதுவும் பேசமாட்டான். அக்காவின் விரல்கள் அவனுடைய தலைமுடிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து பாட்டு காற்றில் மிதந்து வரும். பக்கத்து வீடு மிகவும் பெரியது. அங்கு அவன் சென்றதில்லை. வேலிக்கப்பால் நின்று பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த வீட்டில் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.

அந்த வீட்டிலிருந்து பாட்டு சத்தம் வந்து கொண்டிருப்பது சமீபகாலமாகத்தான். பாட்டு பாடவும் பேசவும் செய்கின்ற ஒரு பெட்டி அங்கு புதிதாக வந்திருக்கிறது. பெட்டி எப்படி பாடவும் பேசவும் செய்கிறது?

சக்கன் சொல்வான், அந்தப் பெட்டிக்குள் ஆட்கள் நுழைந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்று. அவனுக்கு எதுவுமே தெரியாது. அவன் பள்ளிக்கூடம் போகிறவன் இல்லையே! அவனைக் கறவை மாடு கொம்பால் குத்தவே செய்யாது. அவன் பெரிய வீரன் என்பதற்காக அல்ல; அவனுடைய கையிலிருக்கும் பிரம்பைப் பார்த்துத்தான் மாடு அவனை நெருங்க பயப்படுவதே.

அந்தப் பாட்டுகள் திரைப்படங்களில் வருபவையாம். அப்பு இதுவரை திரைப்படம் பார்த்ததில்லை. அவனுடைய வகுப்பில் படிக்கும் யசோதாவும் மணியும் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள். திரைப்படத்தில் படங்கள் போட்ட ஒரு பையை மணி பார்த்திருக்கிறான்.

பாட்டைக் கேட்கும் போது அக்கா பைத்தியம் பிடித்தது மாதிரி ஆகிவிடுவாள். அதற்குப் பிறகு எந்தக் கேள்வி கேட்டாலும் அவள் பதில் சொல்ல மாட்டாள். அப்படி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருப்பதற்குக் காரணம் என்ன? சில நேரங்களில் அக்கா அப்படித்தான். பேசாமடந்தையாக மாறிவிடுவாள். அந்தச் சமயத்தில் அக்காவைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.


இருந்தாலும் அவனுக்கு அக்காவை மிகவும் பிடிக்கும். காலையில் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்புவதற்கு முன்பு அவனைக் குளிப்பாட்டுவது அக்காதான். பலமான கையால் தன் உடம்பில் அவள் தேய்ப்பதை பொதுவாக அவன் விரும்பமாட்டான். தன்னுடைய முண்டு துணியை லேசாக முறுக்கி கூர்மையாக வைத்து அதை அவனுடைய காதுக்குள் அவள் நுழைக்கும் போது, அவனுக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். அக்காதான் அவனுக்கு கஞ்சி ஊற்றித் தருவாள். கஞ்சி குடித்து முடித்து கையைக் கழுவியவுடன் ஈர முண்டால் அவனுடைய நெஞ்சில் பட்டிருக்கும் தண்ணீரைத் துடைத்துவிடுவாள். அதற்குப் பிறகு முந்தைய நாள் சலவை செய்து மடித்து வைத்த சட்டையையும், புள்ளி போட்ட காற்சட்டையையும் அணிவிப்பாள். தலைவாரி முடித்து முகத்திலிருக்கும் எண்ணெய்ப் பசையை மீண்டும் ஒரு முறை துடைத்துவிட்டால் அவன் பள்ளிக்கூடம் கிளம்பிவிடலாம்.

இரவில் அவன் சாப்பிட அமரும் போது அவனுக்குப் பக்கத்தில் அக்காவும் உட்காருவாள். அக்கா தன்-னுடைய வாயில் ஊட்டுவது என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், பெரியம்மா பார்க்கும் போது அக்கா சாதத்தை அவன் வாயில் ஊட்டமாட்டாள். அதற்குக் காரணம் ஒரு முறை பெரியம்மா சொன்னாள்: "சோறு உள்ளே இறங்க மாட்டேங்குதோ இந்தப் பச்சைப் பிள்ளைக்கு...?" என்று.

சில நேரங்களில் மட்டும்தான் பெரியம்மாவுக்கு பதில் என்று ஏதாவது சொல்லுவாள் அக்கா. அப்படி அவள் பதில் சொல்வதைக் கேட்டு, பெரியம்மாவிற்கு பயங்கரமாகக் கோபம் வரும். அதற்குப் பிறகு ஒரே ரகளைதான். சிறிது நேரம் சென்ற பிறகு பெரியம்மா ஏதாவது சொல்ல, அக்கா உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். சில நேரங்களில் பெரியம்மாவும் அழுவதுண்டு.

பெரியம்மா அழுதால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரே ஒரு தடவைதான் பெரியம்மா அழுவதைப் பார்த்து அவன் மனதில் வருத்தம் உண்டாகியிருக்கிறது. அது அக்காவுடன் சண்டை போட்டு அல்ல.

அந்தச் சம்பவத்தை அப்பு இன்னும் மறக்கவில்லை. பெரியம்மாவை அழ வைத்த அந்த மனிதரையும் அப்பு இன்னும் மறக்கவில்லை.

சக்கன் செய்து தந்த ஓலையால் ஆன பந்தைத் தட்டியவாறு அப்பு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வாசற்படியிலிருந்து ஒரு குரல் கேட்டது.

"அம்மா!"

யாரென்று பார்க்கும் போது ஒரு மனிதர் வேலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். நீளமான கையைக் கொண்ட சட்டையை அவர் அணிந்திருந்தார். அவருடைய கையிடுக்கில் ஒரு பை இருந்தது. பெரியம்மா வாசலில் இறங்கி வேலிப் பக்கமாகச் சென்றாள். அவள் அந்த மனிதரிடம் என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

"உன் அம்மாதானே சொல்றேன்! இவ்வளவு தூரம் வந்திட்டு வீட்டுக்குள்ள வந்தா என்ன குமாரா?"

பெரியம்மா சொன்னதில் நியாயம் இருப்பதாக அப்புவிற்குத் தோன்றியது. அப்படி என்ன அவருக்குப் பெரிய கௌரவம் வேண்டி இருக்கிறது! பெரியம்மாவிடம் அவருக்கு ஏதாவது சொல்ல வேண்டிய விஷயங்கள் இருக்கும்பட்சம், அவளை ஏன் அவர் வேலிப் பக்கம் அழைக்க வேண்டும்? வீட்டிற்குள் வந்து சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியதுதானே!

அவர் சொன்னார்: "இந்த படியில கால் வைக்க மாட்டேன்னு சொல்லி வீட்டைவிட்டு போயி அஞ்சாறு வருடங்கள் ஆயிடுச்சுல்ல? அப்படி இருக்கிறப்போ நான் எப்படி வீட்டுக்குள்ள வருவேன்மா?"

பெரியம்மா அந்த ஆளைப் பார்த்து கோபமாக இரண்டு வார்த்தைகள் திட்டினால் என்ன? எப்போதும் கன்னாபின்னாவென்று பேசக் கூடிய பெரியம்மா அந்த கவுரவம்  பார்க்கும் மனிதரிடம் அதற்குப் பிறகும் கெஞ்சிக் கொண்டிருந்தாள். "என் வயித்துல அவ பொறந்துட்டாளே! அவளை நான் கொல்ல முடியுமா?"

அதற்கு அந்த மனிதர் சொன்ன பதிலை அப்புவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"டேய், நான் சாகுற வரையாவது..."

"அது நடந்திருச்சுன்னா, நான் ஏன் இங்கே வரப்போறேன்?"

அவர் மீண்டும் என்னவோ ஆவேசமாகப் பேசினார்:

"இந்தத் தத்துவத்தையெல்லாம் மகள்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும்...."

இதற்கிடையில் அந்த மனிதர் அவனை முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. ‘வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொல்ல முயற்சிக்கும் அந்தப் பையத்தியக்காரன் இருக்கிறானே...! அவன் பார்க்கும் போது இந்த அளவிற்கு ஒரு பயம் அப்புவின் மனதில் உண்டானதில்லை. இந்த மனிதரும் ஒரு வேளை கழுத்தைப் பிடித்து திருகுவாரோ?’

அவன் மெதுவாக வாசலுக்குள் நுழைந்தான். அவனுடைய அக்கா உள்ளே போயிருந்தாள். சமையலறையிலிருந்து வெளியே வரும் வாசலுக்குப் பக்கத்திலிருந்த வாழைத் தோட்டத்தைப் பார்த்தவாறு அக்கா நின்றிருந்தாள். முண்டின் நுனியைப் பற்றித் திருகியவாறு அப்பு அவளைப் பார்த்துக் கேட்டான். "வெளியில நிக்குறது யார் அக்கா?"

அக்கா அதைக் கேட்காதது மாதிரி இருந்தாள்.

"அக்கா, வெளியில நிக்கிறது யார்?"

அக்கா என்னவோ சொல்ல முயன்றாள். ஆனால், சொல்லவில்லை.

"யார் அக்கா அது?"

"அது...."

"கழுத்தைப் பிடிச்சு அந்த ஆளு நெரிப்பாரா?"

"யாரு?"

"அந்த ஆளைத்தான் சொல்றேன்... குழந்தைங்க கழுத்தைப் பிடிச்சு அந்த ஆளு நெரிப்பாருல்ல...?"

அதைக் கேட்டு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது அக்காவிற்கு. அவள் சொன்னாள்: "அது உன்னோட மாமா!"

அக்கா சொன்ன விஷயம் அவனுக்கு மிகவும் புதுமையாகத் தோன்றியது. மாமாவாக இருக்கக்கூடிய ஒரு ஆண் எதற்காக அப்படி நடக்க வேண்டும்? படியில் நின்று கொண்டு எதற்கு பெரியம்மாவை மெதுவான குரலில் அழைக்க வேண்டும்? எதற்காக பயமுறுத்துகிற மாதிரி தன்னை வெறித்துப் பார்க்க வேண்டும்? பொல்லாத மாமாதான்!

அக்கா பொய் சொல்லியிருப்பாளோ?

"உண்மையா அக்கா...?"

"ஆமாம்..."

"மாமா ஏன் இதுநாள் வரை இங்கே வரல?"

"மாமா வரமாட்டார்."

அதற்குப் பிறகு ஏதாவது கேட்கலாம் என்று அப்பு நினைத்த போது, அக்கா தன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

'இந்த அக்கா சுத்த பைத்தியம்...'

அப்போது பெரியம்மா உள்ளே வந்தாள். பெரியம்மாவைப் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகிவிட்டான் அப்பு. பெரியம்மா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அழுவதற்கிடையில் அவள் என்னென்னவோ சொன்னாள். அதைக் கேட்கும் போது அப்புவிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எவ்வளவு திட்டினாலும் அவள் அவனுடைய பெரியம்மா ஆயிற்றே!

எதையோ நினைத்தவாறு அவன் வாசலுக்கு வந்து படி இருக்கும் இடத்தைப் பார்த்தான்.

மாமா போய்விட்டிருந்தார்.

தனக்கு மாமா என்ற ஒரு மனிதர் இருப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா அவர் தன்னை வெறித்துப் பார்த்து பயமுறுத்த வேண்டும்; படியில் நின்று பெரியம்மாவை அழைத்து என்னவெல்லாமோ சொல்லி அவளை அழச் செய்ய வேண்டும்?


மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் ஜானுவிற்கு ஒரு மாமா இருக்கிறார். அவர் எங்கோ தூரத்தில் இருக்கிறார். ஏழு கடல்களைத் தாண்டிச் சென்றால்தான் அவர் இருக்கும் இடத்தை அடைய முடியும். அங்கு பட்டு ஆடைகளும் குடைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. அந்த மனிதர் வந்திருந்த போது, ஜானுவிற்கு இவை இரண்டுமே கிடைத்தன. அவர் கொண்டு வந்த குடை மிகவும் அழகாக இருந்தது. அது அப்படியொன்றும் கனமாக இல்லை. அவள் தன் தாயுடன் கோவிலுக்குச் செல்லும்போது மட்டும்தான் அந்தக் குடையையே கையில் எடுப்பாள். அவளுடைய மாமா வாங்கி வந்திருந்த ஆடையை இன்னும் தைக்காததால், அதை அவள் தன் பெட்டியிலேயே வைத்திருந்தாள்.

வீட்டிலிருக்கும் அவளுடைய மாமா அவளுக்கு இதுவரை எதுவும் கொடுத்ததில்லை. அவளுக்கு மிகவும் பிடித்தமானவர் ஏழு கடல்களைத் தாண்டி வந்த மாமாதான். அவர் இனிமேல் அடுத்த வருடமும் வருவார்.

தன்னுடைய மாமா வேறுவிதமான குணத்தைக் கொண்ட மனிதராக இருப்பதைப் பார்த்து உண்மையிலேயே வருத்தப்பட்டான் அப்பு. அவர் இனிமேல் வரமாட்டார் என்று அக்கா சொன்னாள். அவர் வேலை செய்கின்ற இடத்தில் குடை கிடைக்குமா? அப்படியே அது கிடைத்தாலும், அவர் அதை இங்கு கொண்டுவருவாரா? அவர் பார்வையைப் பார்க்க வேண்டுமே! பெரியம்மாவையே அந்த ஆள் அழ வைத்து விட்டாரே! வீட்டிற்குள் அவர் வராததற்குக் காரணம் சண்டையாக இருக்கலாம். ஆமாம்... யாருடன் சண்டை?

இனி வரும்போது அதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தான் அப்பு. ஆனால், அவனுடைய மாமா வரவேயில்லை.

மாமா எங்கிருக்கிறார்? அக்கா அதைப் பற்றி சொல்லவேயில்லை. ஜானுவிற்கு அப்புவின் மாமாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனுக்கு ஒரு மாமா இருக்கிறார் என்பதை நம்புவது கூட அவளுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. சக்கனுக்கு  அவனுடைய மாமாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது. "அவருக்கு அந்தக் கரையில வீடும் நிலமும் இருக்கு" என்று அவன் சொன்னான்.

சக்கன் அப்புவின் மாமாவைப் பார்த்திருக்கிறான். அவன் அந்த வழியே போகும் போது புதிதாக உருவாக்கிக் கொண்டிருந்த வீட்டிற்கு ஓடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

"மாமா ஏன் அங்க வரல?"

"அக்கா தப்பு பண்ணிட்டாங்கள்ல?"

எதற்காக அக்கா தப்பு பண்ணினாள் என்ற விஷயம் சக்கனுக்கும் தெரியவில்லை. சிந்தித்துப் பார்க்கும் போது அப்புவிற்கு எதுவுமே புரியவில்லை. அவனுடைய மனதில் பலவிதப்பட்ட சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதை அவன் யாரிடம் கேட்பான்?

அக்காதான் பொதுவாக அவனுடைய எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பாள். இரவில் படுத்திருக்கும் பொழுது அவன் கேட்கும் சந்தேகம் ஒவ்வொன்றிக்கும் அவள் பதில் கூறுவாள்.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வடக்குப் பக்கமிருக்கும் அறையில் பாய் விரிக்கப்பட்டிருக்கும். சிவப்பு நிறத்தில் பெரிய வெள்ளைநிறப் பூக்கள் போடப்பட்டிருக்கும் ஒரு பழைய புடவை பாய்க்குமேல் விரிக்கப்பட்டிருக்கும். அதில் படுக்கத்தான் அவனுக்கு எப்போதும் பிரியம். அது அவனுடைய அக்காவின் புடவை என்பதுதான் காரணம்.

அக்காவிடம் இன்னொரு புடவையும் இருக்கிறது. அதை அவள் பெட்டியில் மடித்து வைத்திருக்கிறாள். அக்கா அதை எடுத்து உடுத்தி அவன் பார்த்ததேயில்லை. அந்தப் பெட்டியைத் திறக்கும் போது நல்ல ஒரு வாசனை வரும். தாழம்பூவின் மணமது. தாழம்பூ வாசனை கொண்ட அந்தப் புடவையை உடம்பில் அணிந்து கொண்டு அக்கா நடப்பதைப் பார்க்கும் போது நன்றாகவே இருக்கும் என்று நினைத்தான் அவன்.

சாப்பிட்டு முடித்தவுடன் படுக்கையில் போய் படுத்தாலும், அக்கா வரும்வரையில் அப்பு உறங்காமலே இருப்பான். சமையலறையைப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி முடித்த பிறகே அக்கா அங்கு வருவாள். அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தவாறே அவன் தன் மனதில் இருக்கும் சந்தேகங்கள் ஒவ்வொன்றையும் வெளியிடுவான். ஜானு அன்று சொன்னது பொய்யாக இருக்குமோ என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம்.

சில நேரங்களில் அவள் என்னவெல்லாம் பொய் சொல்கிறாள்! ஒன்பது குட்டிகளைத் தின்ற ஒரு பாம்பு அவளின் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கும் பாம்புப் புற்றில் இருக்கிறதாம். அது எவ்வளவு பெரிய பொய்! ஒரு பாம்பின் வயிற்றில் ஒன்பது குட்டிகள் இருக்க முடியுமா?

ஒரு முறை ஜானு சொன்னாள், அவள் கடவுளைப் பார்த்தாளாம்.

அவள் சொன்னதில் அப்புவிற்கு சிறிது கூட நம்பிக்கையில்லை. அப்பு கடவுளைப் பார்த்ததில்லை. சக்கன் பார்த்ததில்லை. அக்கா கூட பார்த்ததில்லை.

ஜானு இரவு நேரத்தில் கடவுளைப் பார்த்தாளாம். கோவில் திருவிழாவின் போது பார்த்த பூசாரிக்கு இருந்ததைவிட தாடியும் மீசையும் பெரிதாக இருந்ததாம் கடவுளுக்கு. அவள் சொல்வது பொய்யா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அப்பு கேட்டான்: "தலையில என்ன இருந்துச்சு?"

"யார் தலையில?"

"கடவுளோட தலையில?"

ஜானு சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னாள்: "தலை முடி...."

"புப்புப்பூய்..."& அப்பு உரத்த குரலில் சொன்னான்: "கடவுளோட தலையில கிரீடம் இருக்கும்." அதை ஜானு பார்த்ததில்லை. அவள் உண்மையாகவே தலை குனிந்துவிட்டாள்.

பொய் சொல்லக்கூடியவளாக இருந்தாலும், அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவள் இருந்தால் அவனுக்கு விளையாடுவதற்கு ஒரு ஆள் கிடைத்த மாதிரி இருக்கும். இப்போது அவள் இல்லை. ஜானுவை அவளுடைய தந்தை அழைத்துக்கொண்டு போய்விட்டார். காடும் மலைகளும் நிறைந்த ஒரு இடத்திற்கு அவர்கள் போய் விட்டார்கள். ஆனால், கடலைக் கடக்க வேண்டாம். ஏழு கடல்களையும் கடந்து போக வேண்டியது அவளுடைய மாமா இருக்கக் கூடிய இடத்திற்குத்தானே? தன் தந்தையுடன் போகும் போது அவள் புகை வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். புகைவண்டி பெரிய மலைகளின் வயிற்றைக் கீறிக் கொண்டு பாய்ந்தோடும்.

ஊரை விட்டுச் செல்வதற்கு முந்தையநாள் ஜானு அப்புவின் வீட்டிற்கு வந்தாள். அப்போது அவள் தாயும் உடனிருந்தாள்.

"நாங்க நாளைக்கு ட்ரெயின்ல ஏறிப்போறோம்" என்று அவள் சொன்னபோது, அவள் மீது அவனுக்குச் சிறிது பொறாமை உண்டானதென்னவோ உண்மை. அவள் எப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்க்கலாம்! அவள் சொல்லும் இடத்தில் நல்ல ரப்பர் பந்துகளும் சைக்கிள்களும் இருக்கலாம்.

எங்காவது போனால் நன்றாக இருக்குமென்று நினைத்தான் அப்பு. யாராவது வந்து அழைத்துக் கொண்டு போகாமல் அவனால் என்ன செய்ய முடியும்?


பலா மரங்கள் நிறைந்திருக்கும் மலையைத் தாண்டி அவன் எதையும் பார்த்ததில்லை. ஏழு கடல்களைத் தாண்டியிருக்கும் ஊர்கள், உயர்ந்துநிற்கும் மலைகளைக் கீறிக் கொண்டு செல்லும் புகைவண்டி... குடைகளும் பட்டாடைகளும் நிறைந்த அந்த ஊரில் இருக்கும் குழந்தைகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்!

ஜானுவின் தாய் அப்புவின் அக்காவிடம் விடைபெற்றாள். அவர்கள் ஒன்றாய்ப் படித்தவர்கள் ஆயிற்றே! ஜானு தன் தந்தையுடன் சேர்ந்து எத்தனையோ இடங்களுக்குப் போயிருப்பாள்!

பிறகு ஒரு தமாஷான விஷயம்... ஜானுவின் தந்தையைப் பற்றி அவளுடைய தாய் என்ன சொல்வாள் தெரியுமா? 'அம்முவோட அப்பா' என்பாள்.

ஜானுவின் தாய் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததம் அக்காவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ஒருவேளை மலைகளைக் கீறிக் கொண்டு பாய்ந்து செல்லும் புகைவண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று அக்கா ஆசைப்படுகிறாளோ?

அக்கா வேறெங்கும் போவதில்லை. சொல்லப்போனால் கோவில் குளத்திற்குக் கூட செல்வதில்லை. அவள் குளிப்பது கூட வீட்டிலிருக்கும் கிணற்றின் அருகில்தான். பகவதி கோவிலில் பாட்டும் மேளச் சத்த கேட்கும் போது, பெரியம்மா அங்கு போனாள். அப்புவும் போனான். அப்போது கூட அக்கா கோவிலுக்குப் போகவில்லை.

"அக்கா வரலியா பெரியம்மா?"

அதைக் கேட்டு பெரியம்மா கோபத்தில் சத்தம் போட ஆரம்பித்து விட்டாள்: "டேய், நீ பேசாம இருக்கியா இல்லியா?"

கடந்த வருடம் தான் அவன் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தான். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வு வருகிறது. அதில் வெற்றி பெற்றால் அவன் இரண்டாம் வகுப்பில் போய் உட்காரலாம்.

ஜானு அவளின் தந்தை இருக்கும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தபிறகு பள்ளிக்கூடம் போவாளா? அங்கேயும் பள்ளிக்கூடம் இருக்குமே! கேளு வாத்தியார் அங்கு இருப்பாரா? அங்கு அவர் இல்லாமல் இருக்கட்டும். அடி வாங்காமல் அவள் இருக்கலாமே!

வகுப்பில் அப்புவிற்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் பெயர் குட்டிசங்கரன். வயலுக்கு அந்தப் பக்கத்தில் அவனுடைய வீடு இருக்கிறது. அவர்கள் இருவரும் சேர்ந்துதான் பள்ளிக்கூடம் போவார்கள், வருவார்கள். கேளு வாத்தியார் சில வேளைகளில் குட்டி சங்கரனை குட்டிச்சாத்தான் என்று அழைப்பார். அதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். அந்தச் சிரிப்புச் சத்தம் அவனுடைய காதுகளில் விழும். என்ன இருந்தாலும், கேளு வாத்தியார் தரும் அடிகளைத் தாங்குவது கஷ்டம்தான்.

குட்டிசங்கரன் ஒரு முறை அவனுக்கு எலுமிச்சம் பழத்தைப் பரிசாகத் தந்தான்.

அந்தப் பழத்தை அவன் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தான். அவன் வீட்டில் முந்தைய நாள் கொஞ்சம் எலுமிச்சம் பழங்கள் இருந்தனவாம். அவனுடைய சின்ன அக்காவுக்கு அன்று திருமணமாம்.

"கல்யாணத்துக்கு எதுக்கு எலுமிச்சம்பழம்?"

"முட்டாள், இது கூடவா தெரியல?"

அவன் திரும்பவும் அப்புவைப் பார்த்து கேட்டான். ஏதோ ஏகப்பட்ட திருமணங்களைத் தான் பார்த்திருப்பதைப் போலிருந்தது அவனுடைய செயல். திருமணத்தைப் பற்றி குட்டிசங்கரன் விளக்கமாகவே சொன்னான். "ஏராளமான பேர் வீட்டிற்கு வருவார்கள். பந்தலில் வந்து உட்கார்ந்திருப்பவர்கள் மீது புட்டியில் பன்னீர் நிறைத்து தெளிக்க வேண்டும். பன்னீர் நல்ல வாசனை கொண்டதாக இருக்கும். பிறகு சந்தனத்தையும் எலுமிச்சம்பழத்தையும் எல்லோருக்கும் கொடுப்பார்கள்."

அவன் சொன்னதை அப்பு நம்பவேயில்லை. அவன் கூறியது அனைத்தும் பொய் என்று சொன்னால், அவன் கேட்பான்: "நீ கல்யாணத்தைப் பார்த்திருக்கியா?"

அப்போது அவன் 'இல்லை' என்று பதில் சொல்ல வேண்டி வரும்.

குட்டி சங்கரன் மகிழ்ச்சியடையட்டும் என்ற எண்ணத்துடன் அப்பு சொன்னான்: "எங்க அக்காவுக்குக் கல்யாணம் நடக்குறப்போ எலுமிச்சம்பழம் தருவோம்."

அதற்கு குட்டிசங்கரன¢ சொன்னான்: "அதுக்கு உனக்கு அக்கா வேண்டாமா?"

அதைக் கேட்டு அப்புவிற்கு பலமான கோபம் வந்தது. 'குட்டிச்சாத்தா' என்று உரத்த குரலில் சத்தமிட்டு கன்னத்தில் அடிக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. குட்டிசங்கரன் அவனைவிட தோற்றத்தில் பெரியவன். அதனால் அவன் அதைச் செய்யவில்லை.

"என் அக்கா பிறகு யாருடா...?"

"முட்டாள்... நீ அக்கான்றது உன் அம்மாடா!"

அப்போது குட்டிசங்கரனின் முட்டாள்தனத்தைப் பார்த்து அப்புவிற்குச் சிரிப்பு வந்தது. காரணமில்லாமலா கேளு வாத்தியார் குட்டிச்சாத்தானுக்கு அறிவு இல்லை என்று கூறுகிறார்?

"போடா... உனக்கு அறிவுன்றது கொஞ்சம் கூட இல்ல."

"நான் சொல்றது உண்மை. எங்கம்மா சொன்னாங்க."

"உங்கம்மாவுக்கு என்ன தெரியும்?"

அதற்குப் பிறகு அவர்களுக்குள் சண்டை உண்டாகிவிட்டது. குட்டிசங்கரன் தான் தந்த ஏலுமிச்சம் பழத்தைத் திரும்பக் கேட்டான். எலுமிச்சம் பழத்தை அவனுக்கு முன்னால் எறிந்த அப்பு அவனைப் பார்த்து வக்கனை காட்டினான்.

பள்ளியை விட்டு வெளியே வரும்போது அவன் மனதிற்குள் நினைத்தான்& 'அக்கா எப்படி அம்மாவாக முடியும்? அவனுக்கு அம்மா, அப்பா இருவருமே இல்லை. அக்காவும், பெரியம்மாவும் மட்டுமே இருக்கிறார்கள். இதில் பெரியம்மாவைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியாது. 'டேய், அதைச் செய்ய வேண்டாம். டேய், இதைச் செய்ய வேண்டாம்... டேய் உன் தலையைப் பாக்குறப்போ..' என்று கத்துவாள்.

அவனுக்கு அக்கா மட்டும் போதும். அப்படியென்றால் நல்ல அக்காவை அம்மா என்று சொல்லும் குட்டிச்சாத்தானை என்ன செய்வது?

அவனுக்கு அம்மா வேண்டாம்.

அம்மா இருந்தால் உண்டாகக்கூடிய பிரச்சினைகளை அவன் நன்கு அறிவான். அக்காவின் தாய்தானே பெரியம்மா? அப்படி இருக்கும் போது அக்கா எப்போதாவது மன சந்தோஷத்துடன் இருக்க முடிகிறதா?

கடந்த நான்கைந்து நாட்களாக அக்கா இரவு, பகல் எந்நேரமும் அழுதவண்ணம் இருக்கிறாள். பெரியம்மா அப்படியொன்றும் திட்டியதாகவும் தெரியவில்லை. எனினும் அவள், ஏனோ அழுதவண்ணம் இருக்கிறாள்.

'இந்த அக்காவுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?'

அக்காவுக்கு அப்புமீது எந்த வருத்தமுமில்லை. இரவு நேரத்தில் கட்டிப்பிடித்து படுத்திருக்கும் போது அக்கா பல விஷயங்களையும் சொன்னாள். அவள் சொன்னது கதை அல்ல. கதை கேட்பதென்றால் அப்புவிற்கு மிகவும் பிடிக்கும். அக்காவிற்கு நிறைய கதைகள் தெரியும். மாணிக்கக் கல்லைத் தேடிக் கண்டுபிடித்த இளவரசனின் கதை... அந்தக் கதையைக் கேட்ட பிறகுதான் மாணிக்கக்கல்லைப் பார்க்க நேர்ந்தால் அதை எப்படி ஒளித்து வைக்க வேண்டும் என்ற விஷயத்தையே அப்பு தெரிந்து கொண்டான். அந்த மாணிக்கக்கல்லை சாணத்திற்குள் மறைத்து வைக்க வேண்டும். அப்படி அதை மறைத்துவிட்டால், ஒளி வெளியே தெரியாது. அதற்குப் பிறகு கல்லாக மாறிய இளவரசியைப் பற்றிய கதை... உயிர் வாழ்வதற்காக குழந்தையை அறுத்து கல்லில் இரத்தம் ஒழுகச் செய்ததைக் கேட்ட போது அவனுக்குத் தாங்க முடியாத அழுகை வந்தது.


இப்போது அக்கா கதை எதுவும் கூறுவதில்லை. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருப்பாள். சிறிது நேரம் சென்ற பிறகு கேட்பாள்: "அப்பு, தூங்கிட்டியா?"

"இல்ல..."

"நீ நல்லா படிக்கணும்..."

"ம்..."

"நீ நல்ல பையனா இருக்கணும்."

"ம்..."

"பெரிய ஆளா ஆன பிறகு அக்காவை நல்லபடியா பார்த்துக்குவியா?"

இதென்ன அர்த்தமே இல்லாத கேள்வி! இருந்தாலும் அவன் மெதுவான குரலில் கூறுவான்: "ம்..."

"அக்காவுக்கு இருக்குறது நீ மட்டும்தான்..."

இரண்டு மூன்று நாட்களாகவே அக்காவுக்குச் சரியாக உடல்நலமில்லை. குளிப்பாட்டும்போதும், சாதத்தைப் பிசைகிறபோதும் தலையை வாரும்போதும் அவள் எதுவுமே பேசவில்லை. வெறுமனே அவனுடைய முகத்தையே பார்த்த வண்ணம் இருப்பாள். பிறகு என்ன நினைப்பாளோ, எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருப்பாள்.

'இந்த அக்காவுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு...'

மதிய நேரத்தில் அக்காவும் பெரியம்மாவும் நடுவிலிருக்கும் அறையில் தரையில் படுத்திருக்கும் பொழுது, பெரியம்மா பேசுவது கேட்டது.

"அப்புவைப் பற்றி நினைச்சு நீ மனசைத் தேவையில்லாம புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்."

அதற்கு அக்கா ஒன்றும் சொல்லவில்லை.

"நடந்தது நடந்திருச்சு. அதையும் இதையும் நினைச்சுக்கிட்டு இருந்தா, சரிப்பட்டு வராது. இது நடந்தாதான் எல்லாம் சரியா வரும்."

அதற்கும் அக்கா எந்த பதிலும் கூறவில்லை.

"அதை சங்கரன்நாயர் பார்த்துக்குவார். அந்த அளவுக்குச் சரியான ஆளுதான் அவர்."

"அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?"

"உன்னை..."& பெரியம்மாவின் குரல் வேறுமாதிரி ஒலித்தது. "வெறுமனே ஏதாவது பேசிக்கிட்டு இருக்காதே. இதுவும் நடக்காமப் போனா பிறகு வாழ்க்கை முழுவதும் இப்படியேதான் இருக்கணும்."

"இது சரியில்லம்மா..."

"அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்."

"அதுனால வர்ற கெட்ட பேரு எனக்குத்தானே?"

"அதை சங்கரன்நாயர் பார்த்துக்குவாரு. வயநாட்டுல இருக்குற ஆளுக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?"

"அம்மா, அப்புவைப் பற்றி..."

"அப்பு கிப்புன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காதே. உன்கிட்ட நான் சொல்றேன். அர்த்தமில்லாம இப்படி ஏதாவது பேசுறதை உடனே நிறுத்து..."

அக்கா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

மீண்டும் பெரியம்மா சொன்னாள்: "எல்லா பொறுப்புகளையும் சங்கரன் நாயரே ஏத்துக்கிட்டாரு..."

யார் சங்கரன் நாயர்? அவ்வளவு பெரிய ஆளான அவரை நான் பார்க்க வேண்டுமே!

சில நாட்கள் கழித்து ஒருநாள் அந்த சங்கரன் நாயர் வீட்டிற்கு வந்தார்.

பார்க்கும் பொழுது அவர் ஒரு நல்ல மனிதராகவே தோன்றினார். அவர் திண்ணையிலமர்ந்து பெரியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பளத்தைப் போல வட்டமாக இருந்த நரைத்துப் போன தலைமுடியை அவன் பார்த்தான்.

அவருக்கு பெரியம்மாவிடம் எவ்வளவோ விஷயங்கள் பேச வேண்டியிருந்தது.

அதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற அவசியமே அவனுக்கு இல்லை. வயநாட்டில் வைத்து திருமணத்தை நடத்த போகிறார்களாம். நடத்திக் கொள்ளட்டும். பையனின் காதில் விஷயம் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். பார்த்துக் கொள்ளட்டும். அப்புவைப் பொறுத்தவரை அந்த அப்பளம் போன்ற வட்டத்தில் இருக்கும் தலைமுடியை நன்றாய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தான். அந்த வட்டத்திற்கு நடுவில் நான்கு நீளமான தலைமுடிகள் இருந்தால் நன்றாக இருக்குமென்று அவன் நினைத்தான். பள்ளிக்கூடத்திலிருக்கும் தோட்டத்திற்கு நடுவில் சட்டியில் செடியை வைத்திருப்பதைப் போல் அது பார்ப்பதற்கு அழகாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் தலையை வெளியே நீட்டி மீண்டும் அந்த மனிதரின் தலையை நன்றாகப் பார்த்தான்.

சங்கரன்நாயர் தன்னுடைய குரலை மிகவும் தாழ்த்தினார். பெரியம்மா திரும்பி அப்புவைப் பார்த்தாள்.

"அப்பு... வாசல்ல போய் விளையாடு..."

அவன் போனான். 'ஓ... அவர்களுக்கிடையே ஏதோ முக்கிய சமாச்சாரம்!’

வயநாட்டில் திருமணம் நடப்பதால் அவனுக்கென்ன? ஒரு எலுமிச்சம்பழம் கூட கிடைக்காது. யார் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். அதனால் அப்புவிற்கு என்ன பாதிப்பு உண்டாகப் போகிறது?

உள்ளேயிருக்கும் அறையில் அரிசி போட்டு வைத்திருந்த பெட்டியை அவன் திறந்து மூடினான். அந்தப் பெட்டிக்குள் சிறகு முளைக்காத ஒரு கரப்பான்பூச்சிக் கண்களை அகலவிரித்து பார்த்துக் கொண்டிருந்தது. ஜன்னலில் ஏறி சுவரில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி ஜாடியைப் பார்த்தது.

சமையலறையில் பீங்கான் டம்ளர் கீழே விழும் சத்தம் கேட்டது. அங்கு அக்கா இருக்கிறாள்.

பெரியம்மா அழைத்தாள். "மாளு..."

டம்ளர் கீழே விழுந்ததற்கு அவள் திட்டுவாளோ?

"அடியே மாளு..."

அக்கா வாசலில் வந்து நின்றாள்.

அக்காவிடம் இப்போது பெரியம்மா என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்க பயந்தவாறு அப்பு காதுகளைத் தீட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"எல்லாம் அம்மா சொன்னாங்கள்ல?"

சங்கரன்நாயர்தான் கேட்டார்.

"எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். அந்த ஆளு நல்ல மனிதர். தனியா இருக்காரு. இது எதுவும் அந்த ஆளுக்குத் தெரியப் போறது இல்ல..."

அதற்கு அக்கா எந்தப் பதிலும் கூறவில்லை.

"எல்லா விஷயத்தையும் அங்கேயே நடத்துவோம். நாலு ஆளுங்களைக் கூப்பிடணும்."

"அது நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு நான் சொல்லலியா?" பெரியம்மா சொன்னாள்.

"நீங்க என் சொந்தக்காரங்க. உங்களுக்குன்னு யாரும் இல்ல. என்னை எடுத்துக்கிட்டா, நான் பத்து இருபது வருடமா அங்கே இருக்குறேன். இப்போ தேவகி அம்மாவுக்கு விஷயம் புரியுதா?"

"என்ன சொல்றீங்க, சங்கரன்நாயர்?"

"அதாவது, என் இடத்துல எளிமையா கல்யாணம் வச்சிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?"

"அது சரிதான் சங்கரன் நாயர். நீங்கதான் எனக்குன்னு இருக்குற ஒரே ஆதரவு!"

"அதுனாலதான் நான் இந்த விஷயத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வர்றேன். அந்த ஆளு பொண்ணைப் பார்க்கணும்னு சொன்னாரு. தெரியுதா?"

பெரியம்மா அதற்கு என்னவோ முணுமுணுத்தாள்.

"இந்த விஷயம் யார் காதுலயும் விழாம நான் பார்த்துக்குறேன்."

"எல்லாம் சரி நடந்தா கீழே இருக்குற கோவில்ல பாயசம் போடறதா நேர்ந்திருக்கேன்."

"எல்லாம் ஒழுங்கா நடக்கும். மகளுக்கு எந்த கஷ்டமும் இருக்காது. அந்த ஆளுக்கு அரசாங்கத்துல இருந்து கிடைச்ச நாலு ஏக்கர் நிலமிருக்கு. அதைச் சரி பண்ணினா கடைசி வரை சுகமா வாழலாம்!

அப்போது திண்ணைக்குக் கீழே காலியாக வைக்கப்பட்டிருந்த ஒரு தாம்பாளத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கொம்பு உள்ள பூச்சியை அப்பு பார்த்தான். அதை வெறுமனே விடக்கூடாது. அடிக்கலாம் என்று பார்த்தால் துடைப்பத்தைக் காணவில்லை. ஒரு ஈர்க்குச்சி இருந்தால் கூட போதும், அதை ஒரு வழி பண்ணிவிடலாம்.


வாசலில் அப்போதும் பேச்சு நடந்து கொண்டிருந்தது. சங்கரன் நாயரும் பெரியம்மாவும் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் அந்த உரையாடல் நடப்பதைப் போலிருந்தது. அதனால்தானோ என்னவோ மிகவும் மெதுவான குரலில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எது வேண்டுமானாலும் நடக்கட்டும்& துடைப்பம் எங்கு போனது? ஓரத்தில் பதுங்கியிருக்கும் கொம்பு மீசைக்காரனை ஏதாவது பண்ண வேண்டுமே!

துடைப்பத்தைத் தேடி சமையலறைக்குச் சென்றபோது அங்கு அக்கா இருந்தாள். சிறிது நேரத்திற்கு முன்புதானே அக்கா சங்கரன் நாயரின் பஞ்சாயத்தைக் கேட்பதற்காகப் போனாள்? அக்காவிடம் துடைப்பம் எங்கே என்று கேட்டபோது அப்புவை அப்படியே வாரி எடுத்துத் தூக்கிக் கொண்டாள். தொடர்ந்து நெற்றியிலும் தலையிலும் முத்தங்கள் பதித்தாள். அக்காவின் கண்களிலிருந்து நீர் வழிந்து அவனுடைய முகத்திலும் தலையிலும் விழுந்தது.

சங்கரன் நாயர் அப்படியொன்றும் அனாவசியமாகத் திட்டியதாகத் தெரியவில்லை. கோபமாக ஏதாவது சொன்னது மாதிரியும் தெரியவில்லை. பிறகு எதற்கு அக்கா அழ வேண்டும்?

இந்த அக்காவுக்கு உண்மையிலேயே பைத்தியம்தான்...

இரவில் அவள் கேட்டாள்: "அக்கா இல்லைன்னா நீ பெரியம்மா பக்கத்துல படுத்துக்குவியா?"

"அக்கா, உன் கூடத்தான் எப்பவும் படுப்பேன்."

"நான் போயிட்டா?"

"அக்கா, நீங்க எங்கே போறீங்க?"

அதற்கு அக்கா பதில் எதுவும் கூறவில்லை. திரும்பத்திரும்ப அவன் கேட்டபிறகு, பதில் வந்தது.

"எங்கேயும் போகல. சும்மா விளையாட்டுக்காகச் சொன்னேன்...."

அதற்குப் பிறகுதான் அப்புவிற்கு நிம்மதியாக இருந்தது.

ஒரு மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் அவனுக்கு அடை கிடைத்தது. அது வழக்கமாகக் கிடைக்கக்கூடியதல்ல. அப்படி விசேஷமாக ஏதாவது கிடைத்தால், அதை சக்கனின் முன்னால் வைத்து தின்ன வேண்டும் என்ற ஆசை அப்புவிற்கு உண்டு. அந்தச் சக்கனின் மன எரிச்சலை அப்போது பார்க்க வேண்டும். அவனுக்கு அப்போது பயங்கர பொறாமையாக இருக்கும். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எதையும் சாப்பிடக்கூடாது என்று அக்கா பலமுறை கூறியிருக்கிறாள். இருந்தாலும் சக்கனுக்கு சாட்டை செய்யத் தெரியும். கறவைப்பசு அவனை மட்டும் குத்தவே குத்தாது. சொல்லப்போனால் தன் விருப்பப்டி அவன் கறவை மாட்டின் கழுத்தைக் கட்டிப்பிடித்து விளையாடுவான்.

அடையைத் தின்னாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அக்காவுக்குத் தெரியாமல் அவன் வாசலை விட்டு இறங்கினான். சக்கன் வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை இழுத்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல 'எனக்குக் கொஞ்சம் தா' என்று அப்புவைப் பார்த்து அவன் கெஞ்சவில்லை.

"எனக்கு பெரியம்மா தந்தாங்களே!" என்றான்.

"பொய் சொல்ற"& அப்பு சொன்னான்.

"அவங்க வந்தப்போ சாயப் பொடி, சர்க்கரை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததே நான்தான்..."

"யாரு வந்தது?"

"விருந்தாளிங்க... இதோ பாரு..."

சக்கன் தன்னுடைய மடியை அவிழ்த்துக் காட்டினான். அதில் மூன்று பீடித் துண்டுகள் இருந்தன.

"அங்க வந்த தம்புரான் இழுத்தது இதெல்லாம்..."

பீடி பிடிக்க வேண்டுமென்றால் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டும். சங்கரன் நாயருக்கு அப்பள வடிவத்தில் தலையில் முடி இருக்கிறது என்றாலும் கூட, அவரால் பீடி பிடிக்க முடியாது. அவர் சென்ற முறை வந்தபோது பெரியம்மாவைப் போல வெறுமனே& வெற்றிலைப் பாக்குத்தான் போட்டார்.

விருந்தினர்கள் எங்கே? அக்காவைப் பார்த்துக் கேட்கவேண்டுமென்று அப்பு வீட்டிற்குள் ஓடினான். அக்கா வீட்டின் பின் பக்கத்தில் இருந்தாள். பெரியம்மா காய்கறி வெட்டிக் கொண்டிருந்தாள்.

"எங்கே பெரியம்மா, விருந்தாளிங்க?"

"எந்த விருந்தாளிங்கடா? இங்கே யாருடா விருந்தாளியா வந்தது?

எமன்தான் விருந்தாளியா வரணும்..." யார் வந்தது என்று சக்கன் கூறவில்லை. எமனாம் எமன். விருந்தாளி யார்? அதைத்தான் அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

"என்னடா கேள்வி கேக்குற நீ? உன்னை அடிச்சாத்தான் நீ சரியா வருவே..." அவன் வாயே திறக்கவில்லை. விருந்தாளி வந்ததைப்போன்ற ஆரவாரத்தைக் காட்டினாள் பெரியம்மா.

அதற்கு மேல் அவன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை.

இரவில் ஒரு தூக்கம் முடித்து கண்களைத் திறந்த போது பாயில் அப்புவிற்கு அருகில் படுத்திருந்த அக்காவைக் காணவில்லை. அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அக்கா பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு என்னென்னவோ சாமான்களையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள். அறையில் தாழம்பூவின் வாசனை கமழ்ந்து கொண்டிருந்தது. அவன் தூங்கும் போது அருகில் அக்கா இருந்தாள். பிறகு எதற்கு அவள் எழ வேண்டும்? இரவில் விளக்கை எரிய வைத்துக் கொண்டு பெட்டியில் முண்டையும் ப்ளவ்ஸ்களையும் ஏன் எடுத்து வைக்க வேண்டும்? மெதுவாக எழுந்து எந்தவித ஓசையும் உண்டாக்காமல் நடந்து சென்று அக்காவின் கழுத்தைப் பிடித்து பயமுறுத்த வேண்டுமென்று அவன் நினைத்தான். ஆனால், அவனால் எழ முடியவில்லை. கண்கள் மெதுவாக மூடின. இளவரசன் மாணிக்கக் கல்லைக் கண்டெடுத்த காடு அவனுடைய ஞாபகத்தில் வந்தது. தாழம்பூவின் மணம் வேறு. அவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

காலையில் அக்கா தட்டி எழுப்பிய பிறகுதான் அவன் எழுந்தான். கிணற்றுக்கருகில் குளித்துவிட்டு கஞ்சி குடித்து முடித்தவுடன் அக்கா அவனுக்கு ஆடைகளை அணிவித்தாள். தலையை வாரும் போது அக்கா சொன்னாள்: "பள்ளிக்கூடத்துக்குப் போறப்போ நல்லா பார்த்துப் போகணும். மாடுகள் வழியில வரும்."

அது எப்போதும் அவள் சொல்வதுதான்.

அவன் 'சரி' என்று தலையை ஆட்டினான்.

"பசங்ககூட சண்டை போடக்கூடாது."

"ம்..."

"பெரியம்மா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க..."

"ம்..."

"பெரியம்மா சொல்றபடி சேட்டை பண்ணாம இருக்கணும்!"

"பெரியம்மா மோசம். எனக்கு அக்கா, நீங்க இருந்தா போதும்."

"என் கண்ணு..."

மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க அவள் அப்புவைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு தடுமாறிய குரலில் அழைத்தாள்: "என் கண்ணு..."

அக்கா அழுதுவிடுவாளோ என்று பயந்தான் அப்பு. இல்லை. இந்த முறை அக்கா அழவில்லை. அதனால் அவனுக்கும் பதைபதைப்பு உண்டாகவில்லை.

அப்போது அவனுக்கு என்னவோ சொல்ல வேண்டும் போல் இருந்தது.

"அப்போ, அக்கா..."

"நீ என்னை அம்மான்னு கூப்பிடு..."

அது அவனுக்குப் பிடிக்கவில்லை.

"எதுக்கு அப்படி நான் அழைக்கணும்?"

"ஒண்ணுமில்ல... சும்மாதான்..."

"என் அம்மா எங்கே இருக்காங்க அக்கா?"

அக்கா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அவளின் கைகள் மெதுவாக அவனிடமிருந்து விலகின. அவன் முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தான். சிறிது நேரம் கழித்து ஆணியில் மாட்டப்பட்டிருந்த பையை எடுத்து அவன் கையில் தந்த அக்கா சொன்னாள்: "சரி... நீ பள்ளிக்கூடத்திற்குப் புறப்படு..."


அப்பு ஓலையால் ஆன குடையைத் தோளில் வைத்து, அதன் சாயம் பூசின காலில் பையைத் தொங்கவிட்டுக் கொண்டு வாசலில் இறங்கி நடந்தான். படியைத் தாண்டியபோது அவன் கீழே விழப் பார்த்தான். ஆனால், விழவில்லை. யாராவது அதைப் பார்த்து விட்டார்களா என்பதை அறிவதற்காக அவன் திரும்பிப் பார்த்த போது வசாலைப் பிடித்து நின்றவாறு அக்கா அவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் ஏன் தன்னை அப்படி உற்று நோக்க வேண்டும்? அவன் பார்த்தவுடன், அக்கா ஆமையைப் போல தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

'இந்த அக்காவுக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு!'

வயலின் மறுகரையை அடைந்தபோது ஆமணக்குச் செடிக்கு அருகில் குட்டி சங்கரன் நின்றிருந்தான். அவனுடைய பையில் இரண்டு நெல்லிக்காய்கள் இருந்தன. சிறிய நெல்லிக்காயை அப்புவிடம் அவன் தந்தான். நெல்லிக்காய் சிறியதாக இருந்தாலும், அது மிகவும் இனிப்பாக இருந்தது. நீரில்லாத ஒரு ஓடையையும் ஒரு சிறு குன்றையும் தாண்டித்தான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும்.

குன்றைத் தாண்டும் போதுதான் அப்புவிற்கு பயமாக இருக்கும். எருமைகளும் பசுக்களும் ஏராளமாக அங்கு நின்றிருக்கும். அதுகூட பரவாயில்லை. சில நேரங்களில் அங்கு குட்டிச்சாத்தான் இருக்குமாம். அப்பு ஒரு நாளும் அதைப் பார்த்ததில்லை. எப்போதும் பார்க்காமல் இருக்க வேண்டும்.

மதியம் நாராயணனின் சிலேட், பென்சில் அப்புவின் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்தது. அதைப் பார்த்து நாராயணன் அழுதான். ஆசிரியரிடம் அவன் இந்த விஷயத்தைச் சொல்லலாம் என்று போகும் போது, அவனைத் தடுத்தான் குட்டிசங்கரன். "கேளு வாத்தியாரிடம் போய் விஷயத்தைச் சொன்னால் அப்புவுக்கு தர்மசங்கடமான நிலையாகிவிடும். இதை அப்படியே விட்டுவிட்டால், நாளைக்கு அப்பு நாராயணனுக்கு முக்கால் அணா கொண்டு வந்து கொடுப்பான்."

அதைக் கேட்டு அப்புவிற்கு நிம்மதி உண்டானது. ஒரு முக்கால் அணா வேண்டும் என்று அக்காவிடம் கேட்டால், அவள் கட்டாயம் கொடுக்கவே செய்வாள்.

மாலை நேரம் வீட்டிற்கு வந்து திண்ணையில் புத்தகங்கள் அடங்கிய பையை வீசி எறிந்த அப்பு தன் அக்காவை அழைத்தான்.

"அக்கா..."

அவன் அழைத்ததைக் கேட்டது அக்கா அல்ல. பெரியம்மா தான். பெரியம்மா சமையலறையை விட்டு வெளியே வந்து கேட்டாள்: "என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டே?"

'இன்னைக்கு என்ன இப்படியொரு கேள்வி?' என்று கேட்கத்தான் அவனுக்குத் தோன்றியது. ஆனால், கேட்கவில்லை. அடி விழுந்து விட்டால்...

"எங்கே அக்கா?"

"கஞ்சி இருக்கு. துணியை மாத்திட்டு வா..." அவனுக்குத் தேவை கஞ்சி அல்ல... அக்காதான். நாளைக்கு ஒரு முக்கால் அணா இல்லையென்றால், மானம் போய்விடும்.

"அக்கா எங்கே?"

அவன் வடக்குப் பக்கமிருந்த அறைக்குள் சென்றான். அங்கு அக்கா இல்லை. தாழம்பூவின் வாசனை அந்த அறையெங்கும் பரவி இருந்தது.

"அக்கா எங்கே பெரியம்மா?"

"அக்கா... இங்கே இல்ல..."

"அப்போ எங்கே போயிருக்காங்க?"

"அக்கா... ஒரு இடத்துக்குப் போயிருக்கா."

"எங்கே?"

"அக்கா... வருவா.. வர்றப்போ அப்பு. உனக்கு பந்து கொண்டு வருவா!"

பந்து கொண்டு வரட்டும். அதற்காக அவன் இல்லாமல், அவனிடம் ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அவள் எப்படிப் போகலாம்?

அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அக்காவாம் அக்கா... அக்கா இப்படி நடக்கலாமா? அப்பு இனிமேல் அவளுடன் பேச மாட்டான். இந்த அக்காவை என்ன செய்வது?

அக்காவின் பெட்டியின் முக்கால் அணா இருக்கும். ஒரு முக்கால் அணா அல்ல. இரண்டு முக்கால் அணா எடுக்க வேண்டும். அதற்கு ஏதாவது அவள் சொன்னால், அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால், அக்காவின் பெட்டி எங்கே?

அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

பெரியம்மா மீண்டும் அவனை அழைத்தாள். அப்புவிற்கு கஞ்சி தேவையில்லை. அவன் வாசலுக்கு வந்தான். கீழே கிடந்த கல்லை எடுத்து தூரத்தில் எறிந்தான். பிறகு மேற்குப் பக்கமாக நடந்தான்.

"அப்பு, வா...கஞ்சி சாப்பிடு..."

அப்புவிற்கு பெரியம்மாவின் உபசரிப்பு தேவையில்லை.

அக்கா வரட்டும். ரப்பர் பந்தை அவள் தந்தால், அதை வாங்கி தூரத்தில் விட்டெறிய வேண்டும். பெரியம்மா மீண்டும் அவனை அழைத்தாள்.

அப்புவிற்கு எதுவுமே தேவையில்லை. அவனுக்கு அழ வேண்டும் போல் இருந்தது. அக்கா மீது கொண்ட கோபம் முழுவதையும் வெளிப்படுத்தும் விதத்தில் உரத்த குரலில் அழ வேண்டும் போல்...

அக்கா வரும் போது அவனுக்கு உறை போட்ட பந்தும் மிட்டாயும் கொண்டு வந்தால்...? அப்போது என்ன செய்வது?

இருந்தாலும், அக்கா ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய் விட்டாளே!

அக்காவாம் அக்கா...

'இந்த அக்காவுக்கு உண்மையிலேயே பைத்தியம்தான் பிடிச்சிருக்கு...'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.