Logo

மரணத்தின் சறுக்கல்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6968
maranaththin-sarukkal

ப்ளாஸ்டிக் விரிப்பு போடப்பட்டிருந்த மேஜைக்கு இரு பக்கங்களிலும் அமர்ந்து 'அன்னபூர்ணா'வின் மாடியில் இருந்த அறையில் நாங்கள் உணவருந்திக் கொண்டிருந்தோம். எப்போதும் வரும் நேரத்தைவிட சற்று முன்பே வந்து விட்டது காரணமாக இருக்கலாம்& நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். என்னுடைய நண்பர் தனக்கு விருப்பமான இருக்கையில் அமர்ந்திருந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் என் நண்பர் எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய சில்க் சட்டையின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

கீழே தெரு இருக்கிறது. வண்டியிலிருந்து இறங்கி வரும் பயணிகள் அதன் வழியே நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் இருப்பதை விட அதிகமான தட்டுகள் அன்று மேஜை மீது பரவிக்கிடந்தன. ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கிடையில் என்னுடைய நண்பர் சொன்னார்: "நல்லா சாப்பிடணும் வாசு. நாளைக்கு நாம ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடப் போறது இல்லையே!"

ராமகிருஷ்ணன் சொன்னதென்னவோ உண்மைதான்.

இரண்டு மாதங்கள் நகரமென்றோ, கிராமமென்றோ சொல்ல முடியாத இந்த ஊரில் தங்கியிருந்த நான் நாளை இங்கிருந்து கிளம்புகிறேன். இது மனப்பூர்வமாக நான் விருப்பப்பட்ட ஒன்றல்ல. வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்தத் தொழிலை நான் ஏற்றுக் கொண்டபோது, எனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் சொல்கிறபடி நான் நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன் அல்லவா? அப்படியென்றால் இடமாற்ற உத்தரவு வரும்போது, அதன்படி நான் நடக்கத்தானே வேண்டும்!

ஆவி பறந்து கொண்டிருந்த மாமிசத் துண்டை கடித்துக் கொண்டே அவர் சொன்னார்: "இந்த வாழ்க்கையே மகிழ்ச்சியானது தான்."

"நிச்சயமா..." நான் உணர்ச்சி இல்லாமல் சொன்னேன்.

சாப்பிடுவதற்கு மத்தியில் என் நண்பர் தொடர்ந்து பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்.

நான் என்னவோ யோசனையில் இருந்தேன்.

தனியாகவும் கூட்டமாகவும் கீழே இறங்கும் தெருவழியாகப் பயணிகள் போய்க் கொண்டிருந்தார்கள்.

உண்பதற்கிடையில் எத்தனையோ விஷயங்களைப் பற்றி நான் பேச வேண்டியிருக்கிறது.

எனக்கு ஏனோ அன்று மனதில் ஆர்வமே இல்லை. பேசவேண்டும் என்று நினைக்கிறேன்& பல விஷயங்களைப் பற்றியும். ஆனால் முடியவில்லை.

நான் மீண்டும் சாலையைப் பார்த்தேன். மகிழ்ச்சியடைய முடியாத ஒரு காட்சி. திறந்திருக்கும் ஜன்னல் வழியாக நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு கீழே ஒரு சிறுவன் நின்றிருக்கிறான். ஆசையும் பசியும் தெரிகின்ற இரண்டு கண்கள்.

என் நண்பரும் அந்தக் காட்சியைப் பார்த்தார். அவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

"இங்கே உட்கார்ந்து நிம்மதியா சாப்பிடக்கூட முடியல."

எனக்குச் சாப்பிட்டது போதும் போல் இருந்தது. இலையில் இன்னும் சாதம் மீதமிருந்தது.

கீழே நின்றிருந்த சிறுவனின் கண்கள் இப்போதும் எங்களைப் பார்த்துக் ª££ண்டிருந்தன. அவனுக்கு வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்கும். கிழிந்து போன பனியனை அணிந்திருந்தான். காற்சட்டை... வாடிப் போயிருந்த முகத்தில் நெருப்பு போல சிவந்திருந்த இரண்டு கண்கள்.

ஆசையும் பசியும்.

கீழே ஹோட்டல் பணியாட்களில் யாரோ ஒருவரின் உரத்த குரல் கேட்டது. அந்தப் பையனை யாரோ திட்டுகிறார்கள் என்பது புரிந்தது. அவன் செய்வது தவறுதான். மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால்...

அவன் அந்த இடத்தைவிட்டு நகர்வதாகத் தெரியவில்லை.

"நீ போறயா இல்லையாடா?"

மீண்டும் உரத்த குரல்...

அவன் மெதுவாக அந்த இடத்தைவிட்டு அகன்றான். போவதற்கு முன்பு இன்னொரு முறை அவன் எங்களைப் பார்த்தான்.

சாப்பாடு முடிந்தது.

ஒரு இனிப்புப் பொருளை உள்ளே செலுத்தும் ஆவேசத்துடன் என் நண்பர் ஒரு டம்ளர் சுக்கு நீரைக் குடித்துவிட்டுச் சொன்னார்:

"சரி.. கிளம்புவோம்."

நாங்கள் பணத்தைச் செலுத்திவிட்டு கீழே வந்தோம்.

சிகரெட் புகையை ஊதியவாறு நான் மெதுவாக நடந்தேன். மனதில் ஒரு இனம்புரியாத நிலை... குறிப்பிட்டுக் கூறும்படியான காரணம் எதுவும் இல்லை.

"நீங்க போயிட்டா என் மகிழ்ச்சி ரொம்பவும் குறைஞ்சிடும்."

அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் அந்த அளவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாக கடந்த சில நாட்களாக வாழ்ந்திருக்கிறோம்.

"ரெண்டு மனிதர்கள் இருந்தால்தான் வாழ்க்கையே சுவையா இருக்கும்." அவர் சொன்னது சரிதான் என்ற அர்த்தத்தில் நானும் தலையாட்டினேன்.

"சரளாவோட கொஞ்சலைக் கேட்குறது எவ்வளவு இனிமையான ஒரு அனுபவம்!"

எந்த சரளாவைச் சொல்கிறார்? நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என் நண்பர் அதற்குப் பிறகும் பல பெயர்களைச் சொன்னார்.

எல்லாமே அவர் மொழியில் உயிருள்ள கவிதைகள்.

சரளா, அம்மிணி, பேபி, ஆமினா... அவர் சொன்ன ஒவ்வொரு உருவமும் என் நினைவில் கடந்து போய்க் கொண்டிருந்தன.

இந்த நினைவிற்கு மத்தியில் நான் என் நண்பரைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பிரபஞ்சம் முழுவதிலும் கவிதை காண முயன்று கொண்டிருக்கும் ஒரு இளைஞர் அவர்.

லாட்ஜில் மற்ற நண்பர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து பேசியவாறு என் நண்பர் வேகமாக நடந்தார். நான் அவருக்குப் பின்னால் நடந்தேன்.

நாங்கள் தங்கியிருந்த லாட்ஜில் நிறைய பேசுவதும், ஆர்ப்பாட்டம் செய்தும் நான்தான் என்று பொதுவாக எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இன்று பார்ப்போமே...

இரயில் தண்டவாளத்தைத் தாண்டி இருக்கும் இரண்டு மாடிகள் கொண்ட ஒரு கட்டிடத்தில்தான் நாங்கள் தங்கியிருக்கிறோம். நான் அங்கிருக்கும் அறையில் தங்க ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகின்றன. எங்களின் கவனக் குறைவு காரணமாக இருக்கலாம்& அந்தக் கட்டிடம் எட்டுக்கால் பூச்சிகளின் பாதுகாப்பு இல்லத்தைப் போல் ஆகிவிட்டது. ஒழுங்காக அடுக்கப்படாமல் புத்தங்கள் தூசி படிந்து இங்குமங்குமாய் சிதறிக் கிடக்கின்றன. அரண்மனை என்று நாங்கள் எங்கள் அறையைப் பற்றிக் குறிப்பிட்டாலும், அங்குள்ளவர்களுக்கு அதைப்பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை.

அங்குள்ளவர்கள் என்றால் எங்களைச் சேர்க்காமல் அங்கு எஞ்சி இருக்கும் மற்ற ஏழு பேர்கள். அவர்களைப் பற்றி கூறுவதற்கு நிறைய இருக்கிறது. சீட்டு விளையாட்டையும் சமஸ்கிருத ஸ்லோகங்களையும் வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைக்காமல் இருக்கும் ராமு அண்ணன், திருமணமாகாத முப்பது வயது மனிதராக இருந்தாலும் ஒரு தாத்தாவின் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் வாரியர் மாஸ்டர், இளமையின் எல்லையைக் கடப்பதற்கு முன்பு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் கடைசித் துளியை ருசித்துவிட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஃப்ரான்சிஸ்... இப்படிப் போகிறது அந்தப் பட்டியல்.

அவர்கள் தான் எங்கள் அறையின் அலங்கோல நிலையைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பவர்கள். அதற்குப் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை.


அந்த அறை எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது. அங்கே அந்த ஜன்னலுக்கு முன்னால் நின்றால் மாலை நேரத்தின் துடிப்பையும், பொழுது புலரும் நேரத்தின் அழகையும் வெளிப்படுத்தக்கூடிய நதிக்கரை தெரியும். கட்டிடத்தின் முன்பகுதியில் வாழ்க்கையைப் போல இரயில் தண்டவாளங்கள் நீளமாகக் காட்சியளிக்கிறது. மரணத்தை நோக்கி சப்தித்து ஓடிக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையை நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு பெரிய பெரிய சரக்கு வண்டிகள் ஓசை எழுப்பியவாறு அந்தத் தண்டவாளங்களில் ஓடிக் கொண்டிருக்கும்.

இரவு உணவு முடிந்தபிறகு எல்லோரும் வராந்தாவில் கூடுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று.

நாங்கள் படிகளில் ஏறி மேலே வந்தவுடன், வாரியர் மாஸ்டர் எங்களை வரவேற்றார்.

"வாங்க, பிள்ளைங்களா, நாங்க உங்களுக்காகத்தான் காத்திருக்கோம்."

நாங்கள் போய் உட்கார்ந்தோம்.

"பிள்ளைங்களா" என்று அவர் அழைத்ததில் எங்களுக்கு எதிர்ப்பு இருப்பதென்னவோ உண்மை.

ராமகிருஷ்ணன் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவும் செய்தார்.

"பிள்ளைங்களான்னு நூறு தடவை அழைப்பேன். நீங்க பிள்ளைங்கதான். அதற்கு எதிர்ப்பு இருந்தா, காட்டுங்க... பார்ப்போம்..."

வராந்தாவின் ஒரு மூலையில் இருட்டில் இருக்கும் ஒரு தேரைப் போல கிடக்கும் நாற்காலியிலிருந்துதான் அந்தக் குரல் வந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யாரென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திரைப்படப் பாடல்களும் ஒட்டகம் மார்க் பீடியும் என்று சொர்க்க வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களின் இன்னொரு நண்பரே அது...

அப்போது ராமு அண்ணன் அங்கே வந்தார். அவரின் கையிடுக்கில் நான்கு பக்கம் 'மாத்ருபூமியும்' இடது கையில் இரண்டு சீட்டுக்கட்டுகளும் இருந்தன. தன் தலைக்கு மேலே பெரிய அமெரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உயரம் சற்றுக் குறைவான ராமு அண்ணன் வாசலில் வந்து நின்றார்.

"வாசு..."

"ம்.."

"ஒரு ஐடியா..."

"சொல்லுங்க..."

"நாளைக்கு நீ... கூட இருப்பே. இன்னைக்கு மட்டும்தான் நாம ஒண்ணா உட்கார்ந்து விளையாட முடியும். அப்படின்னா...."

நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.

"கடவுளே, இன்னைக்கு என்னை வற்புறுத்தாதீங்க..."

"இன்னைக்கு என்னை விட்டுடுங்க, ராமு அண்ணே!"

"ஏன்? என்ன விஷயம்?"

"ஒண்ணுமில்ல...."

ராமு அண்ணன் தரையில் பேப்பரை விரித்து உட்கார்ந்தார். தொடர்ந்து எல்லோரையும் பார்த்து சொன்னார்:

"சீக்கிரமா எழுந்திரிக்கணும். மணி ஒன்பதாயிருச்சு."

யாரும் அதைக் கேட்டது மாதிரி தெரியவில்லை. தீப்பெட்டியின் மீது தாளம் போட்டவாறு பாடகர் நண்பர் தனக்குள் முனகினார்.

"அனுரா... காம்ருதம் தருவாய் தோழா..."

இருந்த இடத்தைவிட்டு எழுந்து ஒரு மல்யுத்த பயில்வானைப் போல கையில் 'மஸில்'ஸைக் காட்டியவாறு ராமகிருஷ்ணன் கேட்டார்:

"வாட் அபௌட் வாசு?"

"நான் வரல. நீங்க விளையாடுங்க."

அதுவரை அமைதியாக உட்கார்ந்திருந்த ஃப்ரான்சிஸுக்குத் திடீரென்று ஆவேசம் வந்துவிட்டது. உரத்த குரலில் கத்தியவாறு அவர் வேகமாக எழுந்தார்.

"யாரும் விளையாட வேண்டாம். நான் சொல்றேன்."

"என்ன?"

ராமு அண்ணனுக்குக் கோபம் வராமல் இருக்குமா? அவருடைய கண்கள் விரிந்தன. தீவிரமாக ஏதாவது பேசும்போதோ, ஏதாவது செய்யும் போதோ ராமு அண்ணனின் கண்கள் அப்படி விரிவதுண்டு. சீட்டு விளையாடும் போது நாங்கள் பொதுவாக அதைக் கவனிப்பதுண்டு.

"சீட்டு விளையாடத் தெரியலைன்னா, பேசாம இருக்கணும்."

"விளையாடக்கூடாது. ஒவ்வொரு நாளும் இதேதான் வேலை..."

ஃப்ரான்சிஸுக்கு சீட்டு விளையாட்டு மீது பயங்கர வெறுப்பு!

பாடகர் நண்பர் தன் பாட்டை நிறுத்திவிட்டு தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

"என்ன நண்பரே, அப்படியொரு தீவிர சிந்தனை?"

ராமகிருஷ்ணனின் கேள்வி அவரை சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.

"விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான்."

"அப்படியா?"

"அது என்னன்னு நான் சொல்றேன்..."& ராமு அண்ணன் இடையில் புகுந்து சொன்னார்.

"பீடியில்லாத ஒரு உலகமா, இல்லாவிட்டால் தேநீர் இல்லாத ஒரு உலகமா? இதுல வாழ்க்கைக்கு ஏற்றது எது? விஷயம் கொஞ்சம் சீரியஸ்தானே!"

நான்கைந்து டம்ளர்கள் ஒரே நேரத்தில் கீழே விழுந்து உடைந்ததைப் போல எல்லோரும் சிரித்தார்கள்.

பேச்சுக்கு ஏற்ற பலம் சேர்ந்தது மாதிரி இருந்தது. வாரியர் மட்டும் ஒரு அட்டையைக் கையில் வைத்து வீசிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். திருவாதிரைக் காற்று வீசும் போது கூட அவருக்கு வியர்த்துக் கொட்டும் என்பதுதான் அவரின் தனித்துவம்.

ராமு அண்ணனுக்குப் பொறுமை என்பதே இல்லாமல் போனது. சீட்டுக்கட்டைக் கையால் தடவியவாறு சில நிமிடங்கள் அசையாமல் அவர் உட்கார்ந்திருந்தார். பகல் நேரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வெறுமனே அமர்ந்திருக்க அவர் தயார். ஆனால், இரவு நேரம் வந்துவிட்டால்& பரதய்யரின் சாப்பாடு வயிற்றுக்குள் போய்விட்டால் ராமு அண்ணனுக்கு இரண்டு கைகள் சீட்டு விளையாடியே ஆக வேண்டும். வராந்தாவில் அமெரிக்கன் விளக்கைக் சுற்றி மூன்று பக்க 'மாத்ருபூமி'யும் ராமு அண்ணனும் இடம்பிடித்துவிட்டால் விளையாடுவதற்கு மற்றவர்கள் தயாராகிவிடவேண்டும் என்பது சட்டம்.

"டேய்? நீங்க எழுந்திருக்கீங்களா?"

அதற்குப் பதில் இல்லை.

"யாரும் எழுந்திரிக்க வேண்டாம். நாம உட்கார்ந்தே பேசுவோம். வாசு, அந்த 'தெக்கன் காயல்'ல ஒண்ணு பாடு..."

ஃப்ரான்சிஸ் ராமு அண்ணனுக்கு எதிராகத் தன்னுடைய பிரச்சார வேலையை ஆரம்பித்தார்.

எனக்கு விளையாடுவதற்குச் சிறிது கூட மனதில் ஆர்வம் உண்டாகவில்லை. ஒரு மாதிரியாக இருந்தது எனக்கு. மனதிற்குள் புரட்டல் இருக்கிறதோ என்றொரு சந்தேகம் எனக்கு. சாப்பாட்டிற்குப்பிறகு 'பெர்க்கிலி' புகைத்ததால் இருக்குமோ?

எல்லோரும் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார்கள். பெரிய உடம்பை சாய்வு நாற்காலியிலிருந்து நகர்த்தி பக்கத்தில் விரித்திருந்த 'மாத்ருபூமி'க்குக் கொண்டு போவது என்பது வாரியருக்குச் சற்று சிரமமான காரியம்தான்.

ஆனால், எங்கள் கூட்டத்திலேயே மிகவும் நன்றாகச் சீட்டு விளையாடக்கூடிய மனிதர் என்ற பெருமையைப் பெற்றிருந்ததால் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மைபுட்டி அளவு இருக்கும் ஒரு புட்டி நிறைய பொடியும் ஒரு தூக்குப் பாத்திரம் நிறைய குளிர்ச்சியான நீரும் ஒரு அட்டை விசிறியும் இருந்தால் போதும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கொஞ்சங்கூட சோர்வே இல்லாமல் அவர் சீட்டு விளையாடுவார்.

நான்கு ஆட்கள் சேர்ந்தவுடன் விளையாட்டு ஆரம்பமானது. ஃப்ரான்சிஸ் ஒருவித வெறுப்புடன் சீட்டு விளையாடும் மனிதர்களைப் பார்த்து என்னவோ மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு கீழே இறங்கிப் போனார்.

சீட்டு விளையாட்டு ஆரம்பமாகிவிட்டால் லாட்ஜின் சூழ்நிலையே மிகவும் அமைதியாகிவிடும். பெயர் சொல்லி அழைப்பது, சீட்டு போடும் சப்தம், உட்கார்ந்தவாறு உறங்கிக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனுக்கு ராமு அண்ணன் தரும் 'டோஸ்'& இவை மட்டுமே அங்கு கேட்கும்.


இரயில் தண்டவாளத்தையே எந்தவித நோக்கமும் இல்லாமல் பார்த்தவாறு நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். தண்டவாளத்தைத் தாண்டி இருந்த வெட்டவெளியில் மூடுபனி சூழ்ந்திருந்தது. கிழக்குப் பக்கம் இருந்த மலைகளுக்குப் பின்னால்& தனியாக நின்றிருந்த மேகக் கூட்டத்திற்குப் பின்னால் சந்திரன் உதித்துக் கொண்டிருந்தான். வெட்கப்பட்டு நின்றிருந்த ஒரு அழகான புன்னகை ததும்பும் இளம் பெண்ணை அது ஞாபகப்படுத்தியது. நதிக்கரையைத் தொட்டு வந்து கொண்டிருந்த இளங்காற்று எல்லா பக்கமும் குளிரைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சரக்கு இரயில் ஒருவித 'கரகர' சத்தத்துடன் முன்னால் போய்க் கொண்டிருந்தது. கறுப்பு நிற இரயில் பெட்டிகள் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. ஒன்று, இரண்டு, மூன்று..."

அதற்கு மேல் என்னால் எண்ண முடியவில்லை.

கறுப்பு நிற சரக்கு இரயில் பெட்டிகளின் முடிவில்£த ஊர்வலம் முடிந்தது. 'கரகர' சத்தம் உண்டாக்கியவாறு வண்டிச் சக்கரங்கள் உருண்டு சென்றன.

இதற்கு முன்பு இதே இடத்தில் அமர்ந்து நான் அதைப் பார்த்திருக்கிறேன். சரக்கு ஏற்றப்பட்ட பெட்டிகள்... பயங்கரமான என்ஜின்... இரும்புச் சக்கரங்கள்...

அப்போதெல்லாம் நான் நினைப்பேன். வண்டிச்சக்கரங்கள் மனித உடம்பின் மீது கடந்து செல்லும்போது&

அதை என்னால் நினைக்கவே முடியவில்லை.

தலை பிளந்து, எலும்புகள் நொறுங்கி, இரத்தமும் சதையும் சிதறி...

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அதற்கு மேல் அதைப்பற்றி நினைக்கவேண்டாம் என்று நேற்றே நான் மனதிற்குள் முடிவு செய்திருந்தேன். அதற்குக் காரணம் இருக்கிறது. நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன்.

கனவுகள் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயமாக மாறியிருக்கின்றன. நான் நிறைய கனவுகள் காணக்கூடியவன்தான். பெரும்பாலும் நான் காணும் கனவுகள் நல்ல கனவுகளாகவே இருக்கும். தூங்காமல் விழித்திருக்கும் போது கூட நான் கனவு காண்பதுண்டு என்று ராமகிருஷ்ணன் தான் சொன்னார். அது வெறுமனே தமாஷுக்காகச் சொல்லப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.

மிகுந்த வேதனையுடன் நான் அந்தக் கனவை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். இதயம் துடிக்க, நான் அதைக் கூறுகிறேன். கேட்கும் போது அது சாதாரணமான ஒன்றாக உங்கள் மனதிற்குப் படலாம். ஆனால், வேதனையுடன்தான் நான் அதை உங்களிடம் சொல்கிறேன். இருபத்து மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதன் வண்டிச் சக்கரங்களுக்கு இடையில் கிடந்தான்.

சரக்குகள் ஏற்றப்பட்ட பெட்டிகள்... சக்கரங்கள்... எல்லாம் கடந்து போயின.

என்னுடைய உடல்மீது ஏறி....

முதலில் சக்கரம் ஏறியது எந்த உறுப்பின் மீது? ஞாபகப்படுத்திப் பார்த்தால் நிச்சயம் பதில் தெரிய வரும். ஆனால், அதைப்பற்றி நினைக்க வேண்டாம் என்று நான் தீர்மானித்திருக்கிறேன்.

காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் நான் இந்த விஷயத்தை என் நண்பனிடம் சொன்னேன்.

"ஓ... பரவாயில்லை. என்ன இருந்தாலும் கனவுதானே!" என்று அவர் சொல்லுவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் சொன்னார்:

"நீங்க சீக்கிரமே தற்கொலை செய்துக்குற மாதிரி சந்தர்ப்பம் வரும்..."

அவர் அப்படிச் சொன்னதை விரும்பவில்லை என்பதை நான் சொல்லவில்லை. எனக்குள் ஒரு நடுக்கம் உண்டானது.

"வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் போது, சிலர்..."

என்னால் அதை முடிக்க முடியவில்லை.

மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை! எழுதவும் பேசவும் மட்டுமே தெரிந்து அதை அனுபவித்தே இராத நான்...

என் நண்பர் விழுந்து விழுந்து சிரித்தார்.

"நீங்க சறுக்கி இருக்கலாம். மரணத்திற்கு ஒருமுறை கூட சறுக்கல் உண்டாகாது... வாழ்க்கையைச் சுகமாக அனுபவித்து வாழணும்னு ஆசைப்படுறவங்களைத்தான் அது வந்து ஆக்கிரமிக்கும். மரணத்தை ஒரு வரமா மனிதன் நினைக்க ஆரம்பிச்சான்னா, அவனை அது நெருங்கவே நெருங்காது..."

இப்படி என்னென்னவோ அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் அதற்கு மேல் அதிகமாகச் சிந்திக்கவில்லை.

காரணமொன்றுமில்லை. இருப்பினும் ஒரு துக்கம் இதயத்திற்குள் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

நிலவு எனக்கு முன்னால் இருந்த இருளை அகற்றி வெளிச்சம் பரவச் செய்து கொண்டிருந்தது. நிலவொளியுடன் இணைந்து காட்சியளித்த மூடுபனி.

"என்ன வாசு, தூங்குறியா?"

சீட்டு விளையாட்டுக்கு மத்தியில் ராமு அண்ணன் கேட்டார்.

"இல்ல..."

"வாசு என்னை மாதிரி உட்கார்ந்துக்கிட்டே தூங்குறது இல்ல. ஆனா, கண்களைத் திறந்து வச்சுக்கிட்டே கனவு காண்பாரு."

ராமகிருஷ்ணன் பல நேரங்களில் சொல்லும் அதே கருத்தை மீண்டும் சொன்னார்.

"யாரைப் பற்றி கனவு காண்பீங்க?"

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

"........லிருந்து போகுறப்போ யாருடைய இதயத்தையும் எடுத்துட்டுப் போகலியே!"

"தட் ஈஸ் ராங். இனிமேல் இவரோட இதயத்துல வேக்கன்ஸியே இல்ல. இருந்த ஒரே ஒரு இடத்தை ஏற்கெனவே யாரோ ஆக்கிரமிச்சுட்டாங்க.."

"அப்படியாடா? அப்படின்னா இந்த விஷயத்தை என்கிட்ட ஏன்டா இதுவரை சொல்லல?"& வாரியர் மாஸ்டர் கேட்டார்.

ராமு அண்ணன் ஒரு விளக்கம் கூற முற்பட்டார்.

"நீ ஒரு முட்டாள். அதை வாய் திறந்து சொல்லணுமா? அந்தக் கதைகளை எல்லாம் ஒருமுறை படிச்சுப் பாரு. எல்லாக் கதைகள்லயும் இவனோட காதல் உணர்ச்சிகள் பரவிக்கிடக்கும்."

சீட்டுகள் மீண்டும் கையில் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் விளையாட்டில் மூழ்கினார்கள்.

மறுகரையில் இருந்த ஏதோ ஒரு வீட்டிலிருந்து ஒரு இனிய பாட்டு காற்றில் மிதந்து வந்தது.

அங்கே ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

நிலவும் குளிர்ச்சியான காற்றும் உள்ள ஒரு இரவில் இரண்டு வாழ்க்கைகள் ஒன்று சேர்கின்றன.

திருமணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். காதலைப் பற்றியும்தான்.

விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

மணி எத்தனை ஆகியிருக்கும்? நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே போய்ப் பார்த்தால் நேரம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், முடியாது. அந்த அளவிற்கு சோம்பேறித்தனமாக இருந்தது. நாற்காலியை விட்டு எழுவதற்கே கஷ்டமாக இருந்தது. தலை லேசாக கனப்பதைப் போல் இருக்கிறதோ? தலையில் கனம் இருக்கும் அளவிற்கு அப்படியொன்றும் நடக்கவில்லை. போன வருஷமென்றால் அது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம்.

வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.

"யார் கதவைத் திறக்குறது?"

"சேகரனாக இருந்தாலும் சரி... சீட்டை போடு."

படிகள் மெதுவாக ஒலித்தன.

யாரோ ஏறி வருகிறார்கள். மெதுவாக...

சேகரனாத்தான் இருக்குமோ? சேகரா...!

பதில் இல்லை.

"போளாக இருக்குமோ?"

"மிஸ்டர் போள்...!"

பதில் இல்லை.

ஏறி வந்தது சேகரனுமில்லை, போளுமில்லை. ஒரு சிறுவன்.

அவன் படியின் மேற்பகுதியை அடைந்ததும், திகைத்து நின்றான்.


கிழிந்த, கசங்கிப்போன ட்ரவுசர், மஞ்சள் நிறத்தில் பெரிய ஓட்டைகளிருந்த ஒரு பனியன். அமெரிக்கன் விளக்கு பரப்பிவிட்ட வெளிச்சத்தில் நான் அவனுடைய வாடித் தளர்ந்து போன முகத்தையும் ஈரமான கண்களையும் பார்த்தேன்.

சிறிது நேரத்திற்கு முன்பு 'அன்னபூர்ணா'வின் மாடியில் அமர்ந்து சாப்பிடும் போது நாங்கள் பார்த்த பையன்.

பசியும், ஆசையும் பிரதிபலித்துக் கொண்டிருந்த கண்கள்.

"ஹூ ஈஸ் இட்?"

ராமகிருஷ்ணன் முகத்தை உயர்த்தாமல் கேட்டார்.

"யாரோ ஒரு பையன்."

ராமு அண்ணன் கவனத்தைத் திருப்பினார். சீட்டிலிருந்த தன் பார்வையை உயர்த்தினார். ஆகாயத்திலிருந்து அறுந்து கீழே விழுந்தவனைப் போல் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவனையே அவர் உற்றுப் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்தார்.

"மிஸ்டர் வாசு?"

"என்ன?"

"தப்பு உங்களோடதுதான். நான் சொன்னேன்ல சாப்பிட்டு முடிஞ்சு வர்றப்போ கேட்டை அடைச்சிட்டு வரணும்னு..."

"தப்பு என்னோடதா இருக்கலாம்."

"டேய் இது ஆபீஸ். இங்கே தர்மம் தர வழியில்ல..."

சாதாரண பிச்சைக்காரன் வரும்போது சொல்லப்படும் வார்த்தைகளை பாடகர் நண்பர் சொன்னார்.

"நான்சென்ஸ். இப்போ என்ன தர்மம் கொடுத்தாச்சு?"

ராமுஅண்ணன் மீண்டும் சீட்டு விளையாட்டில் மூழ்கிவிட்டார்.

அந்தச் சிறுவன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான்கு பேரையும் பார்த்தான். தொடர்ந்து என்னையும் பிறகு மெதுவாக எனக்கருகில் வந்தான்.

"சார்..."

நான் தலையை உயர்த்தினேன்.

"சாப்பிட்டு ரெண்டு நாட்களாச்சு. ஏதாவது..."

அவனுடைய கண்களில் நீர் ததும்பியது.

சீட்டுகளை எண்ணிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ராமகிருஷ்ணன் என்னையும் என்னுடைய நாற்காலியையொட்டி நின்று கொண்டிருந்த சிறுவனையும் உற்றுப் பார்த்தார்.

"இவனைத்தானே நாம அன்னபூர்ணாவுல இருக்குறப்போ பார்த்தோம்!"

"ஆமா..."

"என்னடா நீ விடாம எங்க பின்னாடி வந்துக்கிட்டு இருக்கே?"

சிறுவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த ஆளையே பார்த்தான்.

நான் கேட்டேன்.

"உனக்கு ஹோட்டல்ல ஒண்ணும் கிடைக்கலியா?"

"இல்ல சார்... சுவாமியோட ஹோட்டல்ல கிடைச்சது இது..."

அவன் காண்பித்தான். தின்னுவதற்குக் கிடைத்தது அல்ல. இடது கையிலும் இடுப்பிலும் வெந்து போன இடங்கள்...

"ஒரே எரிச்சலா இருக்கு சார். சுடுதண்ணியை என் மேல ஊத்துறாங்கன்றதை நான் அப்போ நினைக்கல..."

அவனுடைய வாடிப்போன கன்னங்கள் வழியாக கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

"அந்த நீக்ரோ கிருஷ்ணனோட வேலையா இருக்கும்."

"சுவாமிக்கு ஏற்ற வேலைக்காரன்தான்."

"அது இருக்கட்டும்.. விளையாட்டைப் பாருங்க."

சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள். சீட்டாட்டம் தொடர்ந்தது.

"உன் ஊர் எது?"

"பறளி."

"எதுக்காக ஊர்ல இருந்து வந்தே?"

அதற்குப் பதில் இல்லை.

அவன் அழுது கொண்டிருந்தான்.

அவனை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் இரண்டு. பசியை உடனடியாக அடக்க ஏதாவது அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். ஊருக்குப் போக ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும்.

வீட்டைவிட்டு புறப்பட்டு வந்ததற்கான காரணத்தை அவன் விளக்கிச் சொன்னான்.

அவனுடைய தாயும் அக்காவும் வீட்டில் இருக்கிறார்கள். சொந்தமென்று கூற எந்த சொத்துமில்லை. அவர்கள் தற்போது வசித்து கொண்டிருப்பது வேறொருவரின் இடத்தில். எனினும், அவர்கள் வாழ்கிறார்கள். உணவிற்கும் உடைக்கும் பிரச்சினையில்லை.

"பிறகு ஏன் வீட்டை விட்டு ஓடி வரணும்?"

"நான் வீட்டுல இருக்குறது அவங்களுக்குப் பிடிக்கல. எப்போ பார்த்தாலும் என்னைக் கண்டபடி பேசுவாங்க. அடிப்பாங்க. எப்பவாவது கொஞ்சம் கஞ்சி தருவாங்க."

என்னால் அதை நம்ப முடியவில்லை.

தாயும் சகோதரியும் பட்டினி போடுவது சொந்த மகனை& சகோதரனை.

உலகத்திற்கு தேவையில்லாத ஒரு மனிதன். அவன் இறந்தால் யாருக்கும் ஒரு இழப்பும் உண்டாகப் போவதில்லை.

ராமகிருஷ்ணன் சொன்னது ஞாபகத்தில் வந்தது. மரணத்திற்கு சிறிது கூட சறுக்கல் உண்டாகாது. முனகி நீங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வாழ்க்கையை அவனுக்கு அது அனுமதிக்கும்.

அவன் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சகோதரனைப் பட்டினி போடுவது! மகனைப் பட்டினி போடுவது....

"நீ பொய் சொல்ற."

"இந்த ரெண்டு கண் மேல சத்தியமா சொல்றேன், சார். நான் சொல்றது உண்மை. அவங்க கூட சண்டை போட்டுட்டுத்தான் நான் வெளியே வந்ததே!"

"உன்னால அவங்களுக்கு என்ன கஷ்டம்?"

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை.

"நீ எப்படி இங்கே வந்தே?"

"டிக்கெட் இல்லைன்னு இறக்கி விட்டுட்டாங்க."

அவனுக்கு ஏதாவது தர வேண்டும். ஆறணா தந்தால்தான் ஒரு சாப்பாடு கிடைக்கும். என்னுடைய பர்ஸில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை யோசித்துப் பார்த்தேன். பணத்திற்கு மிகவும் சிரமமாக இருந்ததால் சாயங்காலம் ஒரு பாக்கெட் பெர்க்லி வாங்கினேன். அப்போது மீதி இருந்தது ஒரு ஓட்டை முக்காலணாதான்.

நாளை இருபத்தொரு மைல் தூரத்தில் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும். புதிதாக வேலை பார்க்கப் போகும் இடத்திற்கு பயணத்திற்குத் தேவையான பணத்தை காலையில் இரயில்வே க்ளார்க் கடனாகத் தருவதாகக் கூறியிருக்கிறார்.

மூன்றாம் தேதிதான் ஆகியிருக்கிறது. சம்பளம் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.

"ஏதாவது வேலை தந்தா நான் செய்யிறேன், சார்."

"வேலை?"& நான் பெருமூச்சு விட்டேன். வாழ்வதற்குப் போதுமான வருமானத்தைத் தரக்கூடிய வேறொரு வேலை இருக்கும்பட்சம், நிச்சயம் நான் இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டேன்.

"ராமகிருஷ்ணா..."

நான் என் நண்பரை அழைத்தேன்.

"ம்...?"

"வாட் ஈஸ் டூ பி டன்?"

பதில் இல்லை.

"ராமு அண்ணே..."

யாருக்கும் அதில் கவனமில்லை.

"மிஸ்டர் வாரியர்"

"முப்பத்தொண்ணு க்ளாவர்"

"அஞ்சு ஸ்பேட்..."

"ஒன்பது க்ளாவர்."

"பாஸ்..."

மீண்டும் சீட்டாட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. நான் ராமகிருஷ்ணனை மீண்டும் அழைத்தேன்.

"பர்ஸ்ல சில்லறை இருக்கா?"

"செல்லாத ஒரு அணா இருக்கு. மொத்தம் இருப்பதே ரூபா மைனஸ் ஃபைவ்."

விஷயம் புரிந்தது. அதற்கு மேல் கேட்கவில்லை. கேட்டாலும் பிரயோஜனமில்லை.

"ராமு அண்ணே..."

"அவனைப் பேசாம போகச் சொல்லு..."

"நண்பர்களே, கிவ் ஹிம் சம்திங்க..."

நான் அப்படிக் கெஞ்சி கேட்டது பாடகர் நண்பரின் உரத்த சத்தத்தில் ஒன்றிப் போனது.

"தப்பா விளையாடுறீங்க."

"மிஸ்டர். வாரியர்..."

"நீங்க க்ளாவர் விளையாடணும்."

நான் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன்.

டார்ச் விளக்கை எடுத்து அறைக்குள் இங்குமங்குமாய் அலசினேன். மொத்தம் இரண்டு நாணயங்கள் இரண்டு பேரிடமும் இருக்கின்றன. ஒரு ஓட்டை காலணாவும் ஒரு செல்லாத நாணயமும்.


ஒரு காலணா கிடைத்து அவனுக்கு என்ன பிரயோஜனம்? நான் அதை எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் சென்றேன்.

"காலணா மட்டும்தான் இருக்கு.."

"மோர் தென் இனஃப் ஸென்ட் ஹிம் அவே..."

"காலணான்னா சாதாரணமா? காலணாவுக்கு ஒரு ஸ்டார் கிடைக்கும்."

"ஒட்டகமார்க்னா மூணு கிடைக்கும்."

அதற்குமேல் அங்க தயங்கி நிற்கவில்லை. அவர்களிடமிருந்து அதற்குமேல் எதிர்பார்க்க முடியாது.

நான் அந்தச் சிறுவனின் கையில் காலணாவைக் கொடுத்தேன்.

அவனுக்கு ஒரு சாப்பாடு வாங்குவதற்கான காசைத் தரவேண்டுமென்று எனக்கு விருப்பமுண்டு. ஆனால், என்னிடம் அதைத் தர முடியாத நிலை. இதை அவனிடம் சொல்லிவிட்டுத்தான் அந்தக் காசை அவனுடைய கையில் தர வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், அதைச் சொல்ல என்னால் முடியவில்லை.

அவன் நன்றிப் பெருக்கு நிறைந்த கண்களுடன் அந்தக் காசை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு நடந்தான்.

படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது.

வாசல் கதவு மீண்டும் 'க்ரீச்'சென்றது.

"இப்பத்தான் விளையாட்டு நல்லா போய்க்கிட்டு இருக்கு, வாசு ஒரு சிகரெட்."

"சிகரெட் இல்ல...."

"ச்சே... சிகரெட் இல்லாம எப்படி?"

மீண்டும் விளையாட்டு தொடர்ந்தது.

"இருபத்தெட்டு..."

"முப்பது..."

"முப்பத்தொண்ணு..."

நான் சிந்தித்தேன். கையில் ஒரு காசு கூட இல்லை. அறிமுகமே இல்லாத ஒரு இடம். என்னவெல்லாம் கஷ்டங்கள்! ஏதாவது வேண்டுமென்று கெஞ்சிக்கேட்டால் கிடைப்பது அடியும் துப்பலும் சில நேரங்களில் வெந்நீர்.

அந்தச் சிறுவனின் வீங்கி வெந்து போயிருந்த இடுப்பும் கையும் நினைவில் வந்தது. சுடுநீர் மனித உடலில் படும் போது...

அவன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகும் போது.. அவனை வரவேற்பார்களா?

தாயும் சகோதரியும்! உருக்கைப் போல உறுதியான உறவுகள் அவை.

அவன் திரும்பிப் போகாதபட்சம், உலகிற்கு ஒரு பிச்சைக்காரன் அதிகமாகக் கிடைக்கிறான்.

நேரம் இப்போது பதினொன்றைத் தாண்டியிருக்கும். நிலவு வெளிச்சம் சற்று மங்கலாகி இருக்கிறது. சந்திரன் ஏதாவது மேகக் கூட்டங்களுக்குப் பின்னால் மறைந்து போயிருக்கலாம்.

உறக்கம் வந்தால் பேசாமல் போய் படுக்கலாம். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன், பயணத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும். இந்த லாட்ஜும் இந்த இடமும் இந்த நண்பர்களும் என்னைவிட்டு விலகி நிற்பார்கள்.

ஒரு சிகரெட் இருந்தால்! அமைதியாக உட்கார்ந்து புகை பிடிப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.

ஜக்... ஜக்...ஜக்...

தூரத்தில் வண்டி வந்து கொண்டிருக்கிறது. சரக்கு இரயிலோ பயணிகள் வண்டியோ? சரக்கு வண்டிதான். எனக்கு அதைப் பார்க்கும் போது மனதில் ஒரு வித வருத்தம் உண்டாகிறது. மனிதர்கள் பயணம் செய்யும் வண்டியாக இருந்தால் என்னால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

வண்டிச் சக்கரங்களின் சத்தம்.

ஜக்... ஜக்...

கறுப்பு நிற இரயில் பெட்டிகள்.

ஒன்று... இரண்டு... மூன்று... ஒன்று... இரண்டு... மூன்று. வண்டிச் சக்கரங்களின் சத்தத்தில் இருந்து வேறுபட்டு ஒலிக்கும் ஒரு சத்தம்.

சில நிமிடங்கள் கடந்தன. வண்டி நின்றது. என்ஜின் அறையிலிருந்தும் கார்டு இருந்த அறையில் இருந்தும் சிலர் வெளியே வந்தார்கள். என்ன நடந்தது?

ஆட்கள் சிறிது சிறிதாகக் கூட ஆரம்பித்தார்கள். நான் மெதுவாகப் படிகளில் இறங்கினேன். படிகளைக் கடந்து இரயில் தண்டவாளத்தில் ஏறினேன்.

பலரின் குரல் கேட்டது.

"வாட்ஸ் தி மேட்டர்?"

"ஒன்லி அன் ஏன்ஸிடென்ட்."

"ஃபினிஷ்ட்?"

"திங் ஸோ"

நான் அருகில் போகவில்லை. அந்த வழியே வந்த ஒரு ஆள் அருகில் வந்தபோது நான் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

"வேலை முடிஞ்சிடுச்சு. ஒரு பிச்சைக்காரப் பையன். சக்கரம் அவன் நெஞ்சு மேல ஏறிடிச்சு."

அந்த மனிதன் நடந்து சென்றான்.

நான் சில நிமிடங்கள் அங்கே நின்றேன். சிறிது தூரம் நடந்தால் அந்தக் காட்சியைக் காணலாம். வண்டிச்சக்கரங்களுக்கிடையே சிக்கிக் கிடக்கும் மனித உருவம்.

தலை பிளந்து, எலும்புகள் நொறுங்கி, சதையும் இரத்தமும் சிதறி...

ச்சே...

எனக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. காற்றில் ஈரப்பசை அதிகமாக இருப்பது காரணமாக இருக்கலாம்.

நான் லாட்ஜுக்குத் திரும்பி வந்தேன். என்னுடைய நண்பர்கள் அப்போதும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணனின் தலைக்கு அருகில் இருந்த ஜன்னல் படியில் ஜோக்கர் நடனமாடிக் கொண்டிருந்தான்.

"வாசு..."

"ம்..."

"எங்கே போயிருந்தே?"

"வெளியே போய் பார்த்தேன். என்ன விஷயம்னு தெரிஞ்சிக்க..-"

"என்ன விஷயம்?"

நான் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன்.

"சரக்கு இரயிலை நிறுத்தியதை பார்த்தீங்கள்ல."

"யாரு அதை நிறுத்தச் சொன்னது?"

மனதைக் கட்டுப்படுத்த நான் படாதபாடுபட்டேன்.

"ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு சிறுவன் வண்டியில மாட்டிக்கிட்டான்.

"ஓ... அப்படியா? செத்துட்டானா?"

"ஆமா..."

நான் நாற்காலியில் மீண்டும் சாய்ந்தேன்.

சீட்டு விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

வெந்நீர் உடம்பில் விழும் போது... கனமான வண்டிச்சக்கரங்கள் உடம்பின் மீது ஏறி.... சிதைந்து, நொறுங்கி... சதையும் இரத்தமும் சிதறி... நான் எதையெதையோ நினைக்கிறேன்.

"எனக்கு தலை சுற்றுவதைப் போல் இருக்கிறது."

நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.