
அது அவர்களின் முதல் இரவு. பாதி இரவு முடிகிற வரையில் அவன் அவளிடம் பல கதைகளையும் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு வகையான அனுபவங்களையும் அவன் கூறினான்.
சிறுவனாக இருந்தபோது ஒரு கன்றுக்குட்டியின் மேல் ஏறி தான் சவாரி செய்ய முயற்சித்த கதையைக் கூறிய போது, அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஒரு வேலைக்காக வேற்றூரில் போய் தங்கி அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி அவன் சொன்னபோது, அவளுடைய கண்களில் கண்ணீர் வந்தது.
அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் நீண்டு தொங்கும் தலைமுடியைக் கொண்ட ஒரு இளம்பெண் மீது தனக்கு உண்டான காதலைப் பற்றி அவன் சொன்னபோது, அவள் தன்னுடைய கீழுதட்டைக் கடித்துச் சிவப்பாக்கினாள்.
கடைசியில் ராக்கோழி கூவும் நேரத்தில், அவன் சொன்னான்:
'சுஜாதா, நீ ஏதாவது சொல்லு..."
"எதைப் பற்றி வேணும்னாலும்" - அவளின் இடது கையின் மேல் தன் தலையை வைத்து சாய்ந்து படுத்திருந்த அவன் சொன்னான்:
"வாழ்க்கையில கிடைச்ச ஏதாவது அனுபவத்தைப் பற்றி..."
அவளின் கழுத்தில் ஒரு தங்க மாலை இருந்தது. அதில் இருந்த லாக்கெட்டில் குழந்தைப் பருவ கண்ணனின் ஒரு சிறிய படம் வைக்கப்பட்டிருந்தது. ஆல இலையில் படுத்து கால் விரலைச் சூப்பிக் கொண்டிருக்கும் மயில் பீலி சூடிய சின்ன கண்ணன்.
"நான் இந்த மாலையைப் பற்றிச் சொல்லட்டுமா?"
"சரி சொல்லு..."
அவன் படுத்தவாறே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.
"நான் பூப்பறிக்க போயிட்டு வரட்டுமா?"
பச்சை வர்ணம் பூசப்பட்ட வெளிக் கதவுக்கு அப்பால் உள்ள பாதையில் சித்ராவும் வத்சனும் அவளுக்காகக் காத்திருந்தார்கள்.
அவர்கள் சுஜாதாவை விட வயதில் இளையவர்கள். சித்ரா எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் தம்பி வத்சன் ஆறாம் வகுப்பு. சுஜாதா சொன்னதைக் கேட்டு ஏதோ ஒரு வார இதழை வாசித்துக் கொண்டிருந்த அவளின் தாய் முகத்தை உயர்த்தினாள்.
"உனக்கு இப்போ என்ன வயசு?"
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்... தான் மலர் கொய்யப் போவதாகக் கூறுகிறாள்.
"இனி எப்பவும் நான் போக மாட்டேன். இன்னைக்கு மட்டும்..."
அவள் கெஞ்சினாள். சுஜாதாவிற்குப் பூப் பறிக்கப் போவதில் அப்படியொரு விருப்பம்!
எல்லா சமயத்திலும் பூக்கூடைகளை எடுத்துக் கொண்டு வண்ணான் பாறைக்கு அவள் பூ பறிக்கப் போவதுண்டு. இரண்டு வருடங்களாக வழக்கமாக நடைபெறும் அந்தக் காரியம் நடைப்பெறாமல் நின்றுவிட்டது. காரணம் - அவள் வயதிற்கு வந்து விட்டாள்.
சித்ராவும் வத்சனும் வெளிக் கதவிற்கு அப்பால் எதிர்ப்பார்ப்புடன் அவளுக்காகக் காத்திருந்தார்கள். அவர்கள் எங்கே தன்னை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்று சுஜாதா பயந்தாள்.
நேற்று கல்லூரியை விட்டுத் திரும்பி வருகிறபோது அவள் சித்ராவைப் பார்க்க நேர்ந்தது. அப்போது சித்ரா கேட்டாள்:
"அக்கா... பூ அலங்காரம் பண்ணுறீங்களா?"
"பூப் பறிச்சுக் கொண்டு வர்றதுக்கு எனக்கு எந்தத் தம்பியும் இல்லியே!"
தனக்கு ஒரு தம்பி இல்லையே என்ற வருத்தம் தெரிந்தது அவள் குரலில்.
"அக்கா... நீங்க பூப்பறிக்க வர்றீங்களா?"
அவள் அதைக் கேட்டு நீண்ட பெருமூச்சு விட்டாள். தான் இழந்து விட்ட இளமைக் காலத்தைப் பற்றிய இனிய நினைவுகள்.
"அக்கா, நீங்க நாளைக்கு எங்க கூட வர்றீங்களா?"
"எங்கே?"
"வண்ணான் பாறைக்கு..."
"வர்றேன்."
கொஞ்சமும் யோசிக்காமலே சொன்னாள்.
"சரி... போயிட்டு வா...". அவளின் தாய் சொன்னாள் : "சாயங்காலம் ஆகுறதுக்கு முன்னாடி வீட்டுக்குத் திரும்பி வந்துடணும். உன் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சிச்சின்னா, என்னை ஒரு வழி பண்ணிடுவாரு..."
தாய் சொன்ன கடைசி வார்த்தைகள் அவள் காதில் விழவே இல்லை. அதற்குள் அவள் வெளி வாசலை அடைந்திருந்தாள்.
சித்ராவும் வத்சனும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் சுஜாதாவிற்குப் பூக்கூடைகளைத் தந்தார்கள். அவர்கள் மூன்று பேரும் வேகமாக வண்ணான் பாறையை நோக்கி நடந்தார்கள்.
வயல் வரப்பில் தும்பை மலர்கள் பூத்துக் குலுங்கின. கலங்கிப் போய் இருந்த நீரில் சிதறிக் கிடந்த வயலட் வர்ண காக்கா பூக்கள் மீது பூக்கூடைகளை வீசியவாறு அவள் நடந்தபோது தன்னுடைய கால்களில் கொலுசுகள் 'ஜல் ஜல்' என்று ஓசை உண்டாக்குவது போல் அவள் உணர்ந்தாள்.
முன்பு அவளின் கால்களில் கொலுசுகள் இருக்கவே செய்தன. அவள் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அவள் பத்தாம் வகுப்பை அடைந்தபோது, அவள் தன்னுடைய கொலுசுகளை இழக்க வேண்டிவந்தது.
"நீ பெரிய பொண்ணாயிட்டே! இனிமேல் உனக்கு கொலுசு வேண்டாம்." அம்மா சொன்னாள்.
அவளின் தாய் அவளுடைய கால்களில் இருந்து கொலுசுகளைக் கழற்றியபோது, அவளால் தன் கண்களில் வழிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த கொலுசோடு சேர்ந்து அவளின் இளமையான நாட்களும் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தன.
வண்ணான் பாறையை அடைந்த போது வேறு சில மாணவர் - மாணவிகளும் அங்கு இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் பூக்கூடைகள் இருந்தன. அவள் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல தும்பைப் பூக்கள் மேலும் காக்கா பூக்கள் மேலும் நடந்தாள்.
வண்ணான் பாறை மாலை நேர வெயில் பட்டு பொன் என மின்னிக் கொண்டிருந்தது. பாறைக்குப் பக்கத்தில் இருந்த காட்டில் இருள் படர்ந்தது.
நாளை காலையில் முற்றத்தில் ஏழு நிறங்களில் பூக்களைக் கொண்டு அவள் அழகுபடுத்த வேண்டும். காலையில் எழுந்தவுடன் தாயும், தந்தையும் கண் விழிப்பது அவள் பரப்பி வைத்திருக்கும் மலர் அலங்காரத்தின் மீதாக இருக்க வேண்டும். அவளின் பூக்கூடைகளில் தும்பைப் பூக்களும் காக்காப் பூக்களும் நிறைந்து இருந்தன.
"அக்கா... போகலாம்..."
வானம் இருண்டு கொண்டு வருவதைப் பார்த்து வத்சனுக்குப் பயம் வர தொடங்கியது.
"கோவில்ல சங்கு ஊதிட்டாங்க. நாம போகலாம்."
சுஜாதா அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவளின் பூக்கூடைகளில் ஆறு வகை பூக்களே இருந்தன. இன்னொரு வகை பூ கட்டாயம் வேண்டும்.
"பயமா இருக்கு."
எங்கோயிருந்து வந்த ஒரு காட்டுக் கோழியின் சத்தத்தைக் கேட்டு வத்சன் பயந்து நடுங்கினான்.
"நாம போகலாம்..."
"கொஞ்சம் நில்லுங்க பிள்ளைங்களா..."
சுஜாதா சொன்னாள். "அக்கா நான் இதோ வந்துர்றேன்."
ஏழாவது பூவைத் தேடி சுஜாதா கொடிகள் பரவிக் கிடக்கும் காட்டிற்குள் நுழைந்தாள். அதைப் பார்த்த சித்ராவும் வத்சனும் பயந்தார்கள். அவர்கள் ஒரு நாள்கூட அந்த கொடிகள் ஓடி கிடக்கும் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தது கிடையாது. அதற்குள் நுழைவது என்றால் அவர்களுக்கு மிகவும் பயம்.
கொடிகள் ஓடி கிடக்கும் அந்தக் காட்டிற்குள் கொடிகளை மாதிரியே பாம்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். அந்தக் காடு எந்த இடத்தில் முடிகிறது என்று அவர்கள் யாருக்குமே தெரியாது. முன்பு ஒருமுறை தைரியசாலியான ஒரு பையன் அந்தக் காட்டிற்குள் போனான். அதற்குப் பிறகு அவன் வெளியே வரவே இல்லை.
இளம் சிவப்பும் வெளிச்சமும் இருட்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அடர்ந்த காட்டிற்குள் நுழைந்த சுஜாதா பூக்களைப் பறித்துப் பறித்து கூடைக்குள் போட்டாள்.
ஆனால், ஏழாவது பூ அவளுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
"அக்கா, போகலாம்" - வெளியே நின்றிருந்த சித்ராவும் வத்சனும் சொன்னார்கள் "எங்களுக்குப் பயமா இருக்கு..."
மலர் பறிக்க வந்த மற்ற சிறுவர் - சிறுமிகள் அனைவரும் திரும்பிப் போய் விட்டிருந்தார்கள்.
சுஜாதா கொடிகளைக் கைகளால் நீக்கி விட்டவாறு காட்டிற்குள் மேலும் சென்றாள். இலைகளே இல்லாத ஒரு வகையான கொடிகள் அங்கே நிறைய தொங்கிக் கிடந்தன. அவளைச் சுற்றிலும் கொடிகள் முழுமையாக பரவிக் கிடந்தன. நீர் தாவரங்களுக்கு மத்தியில் தான் நீந்திச் செல்வதைப் போல் அவள் உணர்ந்தாள்.
திடீரென்று சற்று தூரத்தில் கொடிகளுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதைப் பார்த்த அவளின் கண்கள் கூசின. கொடிகளுக்கு மத்தியில் ஒரு அரண்மனை. அதன் சுவர்களும் தூண்களும் கூரைகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. பொன்னால் ஆன சுவர்களில் இருந்து கொடிகள் கீழ் நோக்கி தொங்கிக் கொண்டிருந்தன.
"பெண்ணே... வருக... வருக..."
அரண்மனைக்குள் இருந்து யாரோ சொன்னார்கள். அவள் திடுக்கிட்டு நின்றாள்.
"வருக..."
கரகரப்பான ஒரு ஆண் குரல்.
அவள் முன்னோக்கி நடக்காமல் தயங்கி நின்றாள்.
திடீரென்று பொன்னால் ஆன வாசலில் ஒரு பெரிய உருவம் தெரிந்தது. அந்த ஆள் அசாதாரணமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தான். அவன் ஒரு ராட்சசன் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. இடுப்பைச் சுற்றியிருந்த கொடிகளை விட்டால் அவன் உடம்பில் வேறு ஆடை எதுவுமே இல்லை.
"பெண்ணே... வா..."
அவள் கொடிகளுக்கு இடையே அந்த மனிதனின் அருகில் போய் நின்றாள். அவள் எந்தச் சமயத்திலும் ராட்சசர்களைக் கண்டு பயந்ததில்லை. ராட்சசன் அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான்.
"உன் பேர் என்ன?"
"சுஜாதா... ப்ரீடிக்ரி முதல் வருடம் படிக்கிறேன்..."
அவளின் கையில் இருந்த பூக்கூடையில் இருந்த ஒரு பிடி பூக்களை எடுத்து அந்த ஆள் முகர்ந்து பார்த்தான்.
"நான் யார்னு தெரியுமா?"
"நீங்க ராட்சசனா?"
அவள் வியப்பு மேலோங்க அந்த மனிதனின் பெரிய முகத்தைப் பார்த்தாள்.
"ஆமாம்... நான் இந்தக் கொடிகள் அடர்ந்த காட்டுல இருக்குற ராட்சசன்தான். இது என்னோட அரண்மனை."
பிறகு அந்த மனிதன் அவளுக்கு அரண்மனை முழுவதையும் சுற்றிக் காட்டினான். அதற்குள் இருந்த அலங்கார பொருட்களைப் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டாள். நாற்காலிகளும் கட்டில்களும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன.
ராட்சசன் தன்னுடைய பெரிய சிம்மாசனத்தின் மேல் அமர்ந்தான். சுஜாதாவைத் தனக்கு முன்னால் இருந்த ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னான்.
"இந்தக் காட்டுக்குள் வர்ற முதல் பெண்ணே நீதான்..." ராட்சசன் சொன்னான்: "உனக்கு நான் இப்போ ஒரு பரிசு தரப் போறேன்."
அவளின் கண்கள் விரிந்தன.
"உனக்கு என்ன வேண்டும்?"
"எனக்கு..."
"பிரியப்படுறது எதை வேணும்னாலும் நீ கேட்கலாம்."
"லாக்கெட்ல குழந்தைப் பருவ கண்ணன் படம் இருக்குற மாலை..."
அவள் வெட்கத்துடன் சொன்னாள்.
நீண்ட காலமாக தன்னுடைய மனதில் அவள் வைத்துக் கொண்டிருந்த ஒரு ஆசை அது. தன் தந்தையிடமும் தாயிடமும் பலமுறை சொன்னாள். ஒரு பயனுமில்லை. அவர்கள் சொல்வார்கள்: "உனக்கு ஏற்கெனவே ஒரு மாலை இருக்கு. நெக்லஸ் வேற இருக்கு. இதுக்கு மேல இனியும் தேவையா என்ன?"
நல்ல மூடில் இருந்தபோது ஒரு நாள் அவளின் தந்தை சொன்னார்: "கடவுள் படம் இருக்குற மாதிரி ஒரு மாலை நான் வாங்கித் தர்றேன் உன்னோட கல்யாணத்திற்கு..."
திருமணம் எப்போது? பி.ஏ. முடிப்பது வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அவளின் தந்தையின் கட்டளை. அதற்குப் பிறகுதான் அவளின் திருமண விஷயம் நடக்கும். அதுவரை மாலைக்காக அவள் காத்திருக்க வேண்டுமா?
ராட்சசன் உள்ளே போனான். அவள் விருப்பப்பட்ட மாலையுடன் திரும்பி வந்தான். அவன் அந்த மாலையை அவளின் கைகளில் கொண்டு வந்து தந்தான். "எப்படியும் மூணு பவுன் இருக்கும்" - அவள் தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
அவள் மாலையைக் கழுத்தில் அணிந்தாள். அதன் கொக்கிகளை மாட்ட ராட்சசன் உதவினான்.
எது எப்படியோ அவளின் வாழ்க்கையில் இருந்த ஒரு மிகப் பெரிய விருப்பம் அன்று நிறைவேறியது.
காட்டை விட்டு வெளியே வந்த அவள் தன் வீட்டை நோக்கி ஒடினாள். ஏழாவது பூ அவளுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ராட்சசனை அவள் பார்த்து விட்டாளே! அவனின் அரண்மனைக்குள் அவள் நுழைந்து விட்டாளே! பிறகு.. ஒரு மாலையும் கிடைத்து விட்டதே!
சிவப்பு ப்ளவிஸீக்கு மேலே மார்புக்கு அருகில் இருக்கும் குழந்தைப் பருவ கண்ணனின் படம் இருக்கும் லாக்கெட்டிற்கு அவள் முத்தம் தந்தாள்.
" நீ எங்கேடி போயிருந்தே? உண்மையைச் சொல்லு..."
தன் தாயின் குரலைக் கேட்டு அவள் சொன்னாள்:
"நான்தான் பூப்பறிக்க போயிருந்தேன்ல?"
"அப்ப உன் பூவெல்லாம் எங்கே?"
அவள் பூக்கூடைகளை ராட்சசனின் அரண்மனையிலேயே மறந்து வைத்து விட்டு வந்திருந்தாள்.
"இது என்னடி?"
தாயின் கண்கள் அவளின் மார்பு மீது சென்றன.
"இதை யார் உனக்குத் தந்தது? உண்மையைச் சொல்லு.
உண்மையைச் சொல்லல, நடக்குறதே வேற..."
"ராட்சசன்..."
"ராட்சசனா?"
"ஆமாம்மா. காட்டுக்குள்ள இருக்குற ராட்சசன்..."
உள்ளேயிருந்து அவளின் தந்தை வந்தார்.
"நீங்க இதைப் பார்த்தீங்களா?" தாய் தன் கணவனை நோக்கி திரும்பினாள்: "ராட்சசன் கொடுத்தானாம்..."
"யார்டி உன்னோட ராட்சசன்? அவனோட பேரு என்ன?"
அவளின் தந்தை கேட்டார் : "மாளிகையில இருக்குற முதலாளியோட மகனைச் சொல்றியா ராட்சசன்னு...?"
தன் தந்தை இப்படிச் சொன்னதைக் கேட்டு அவளின் மனதில் வேதனை உண்டானது. மாளிகையில் இருக்கும் முதலாளியின் மகன் பெண்களுக்குப் பொருட்கள் வாங்கித் தருகின்ற கதைகளை அவளும் கேட்டிருக்கிறாள்.
"அப்பா, நான் சொல்றது உண்மை. அவன் உண்மையிலேயே ராட்சசன்தான். அந்தக் காட்டுக்கு அந்த ஆளுதான் ராஜா..."
அவள் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்கவில்லை. அதற்குள் அவளுக்கு அடி விழுந்தது.
அவளின் தந்தை அவளை அறைக்குள் அடைத்து வைத்து வெளியே தாழிட்டார். அவளுக்குக் குடிக்கவோ, தின்னவோ எதுவும் கொடுக்கக் கூடாது என்றார்.
"இந்தக் குடும்பத்துல இதுவரைக்கும் ஒரு பெண்ணால கெட்ட பெயர் உண்டாகல. உன்னை நான்..."
மூடப்பட்ட கதவுக்கு வெளியே தன் தந்தை பண்ணும் ஆர்ப்பாட்டங்களை அவளும் கேட்கவே செய்தாள்.
அவளுக்கு மீண்டும் பல அடிகள் கிடைத்தன. அவள் அறைக்குள்ளேயே அடைக்கப்பட்டுக் கிடந்தாள். அவளுக்கு எதுவும் தராமல் பட்டினி போட்டார்கள். அடர்ந்த காட்டின் ராஜாவான ராட்சசன் தான் அவளுக்கு மாலை தந்தான் என்ற உண்மையை யாருமே நம்பத் தயாராக இல்லை.
அவளின் இரண்டு கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்த வெள்ளை ப்ளவுஸின் மேல் கிடந்த மாலையை அவன் எடுத்தான். குழந்தைப் பருவ கண்ணனை உள்ளங்கையில் வைத்து தடவியவாறு அவன் சொன்னான்: "நான் நம்புறேன்..."