
சமீபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்ரெண்ட் சங்கரமேனனின் மரணச் செய்தியைப் பத்திரிகையில் படிக்க நேர்ந்த போது, நான் என்னுடைய பழைய நண்பன் சந்திரனைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவனின் முட்டாள்தனமான காதலைப் பற்றியும்தான்.
மாணவர்களின் தலைவனாக இருந்தபோது சங்கரமேனனின் மகள் ராதிகாவைக் காதலித்தவன்தான் இந்த சந்திரன்.
அந்தக் காதலைப் பற்றி அது இதுவென்று பேசி என்னை பயங்கரமாக போரடித்தவனாயிற்றே இந்தச் சந்திரன்!
அந்த மடத்தனமான காதலின் முடிவு எப்படி இருந்தது என்பது உலகத்திலேயே ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவர்களில் குறிப்பிடத்தக்க மனிதன் நான்.
இது எல்லாமே நடந்தது எத்தனையோ வருடங்களுக்கு முன்பு.
நானும் சந்திரனும் கொல்லம் எஸ்.என்.கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது சங்கரமேனன் கொல்லம் மாவட்டத்திற்குக் காவல்துறை சூப்ரெண்ட்டாக இருந்தார். எங்களின் ஹாஸ்டலுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெரிய கட்டிடம்தான் அவரின் வீடு.
ஓணவிடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்த சந்திரன் என்னைப் பார்த்துக் கேட்டான் : 'என் கண்கள்ல புதுசா பிரகாசம் ஏதாவது தெரியுதா?'
'அப்படின்னா?...' - நான் கேட்டேன்.
'ஒரு புது வெளிச்சம் தெரியுதான்னு கேக்குறேன்...'
'சந்திரா, விஷயம் என்னன்னு சொல்லு!'
'என் கண்கள்ல உன்னால ஏதாவது வித்தியாசத்தைப் பார்க்க முடியுதா?'
'ஒரு வித்தியாசமும் தெரியலையே!'
'நல்லா உற்று பார்த்து சொல்லு.'
'ஓ... நல்லா பார்த்துத்தான் சொல்றேன். உன் கண்கள் எப்பவும் போல முட்டையா இருக்கு. ஆமா... ஏன் இப்படியெல்லாம் என்கிட்ட நீ கேள்வி கேக்குற?'
நான் இப்படிக் கேட்டதும் சந்திரன் நெளிந்தான் : 'டேய் நீ ஒத்தாலும் ஒத்துக்கிடலைன்னாலும் என் கண்கள்ல எப்பவும் இல்லாத ஒரு பிரகாசம் இப்போ இருக்குன்றது உண்மை. தெளிவு... அதாவது ஒளி. புதிய பிரகாசம்! காரணம் என்னன்னு தெரியுமா?'
'எனக்கென்னவோ அப்படி எந்த புது பிரகாசமும் உன் கண்கள்ல இருக்குறதா தெரியல. அது தெரிஞ்சாத்தானே என்னால அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்?'
'நான் சொல்றேன் - காரணம் என்னன்னு. நான் காதல்ன்ற புதிய உணர்வுல இப்போ ஆழமா சிக்கிக் கிடக்குறேன்...'
'சந்திரா, யார்டா உன்னோட காதலி? சொல்றதுக்கு தயக்கமா இருந்தா... வேண்டாம்...'
'தயக்கமும் இல்லை... ஒரு மண்ணும் இல்ல. சொல்லப் போனா உன்னைப் போல உள்ள ஒரு நெருங்கிய நண்பன்கிட்ட எல்லாத்தையும் மனம் திறந்து சொல்லணும்னுதான் நான் நினைக்கிறேன்.'
'சரி... ஆரம்பத்துல இருந்து சொல்லு...'
சந்திரன் சொன்னான்: 'என்னோட காதலி வேற யாருமில்ல.... நம்மோட இனப் பகைவனும் அரசாங்கத்துக்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்குற காக்கிச் சட்டை போட்ட போலீஸ் சூப்ரெண்ட்டுமான சங்கரமேனனோட மகள் ராதிகாதான். நான் சொல்றதைக் கேட்டு உனக்கு அதிர்ச்சியா இருக்கா?
நான் சொன்னேன் : 'அதிர்ச்ச்சியடையத்தான் செய்றேன். மரியாதைக்குரிய மாணவர்கள் தலைவனும் எதிர்காலத்துல இடதுசாரி அமைப்போட உயர்ந்த தூண்கள்ல ஒருவனுமான நீ ஒரு காவல் துறை அதிகாரியோட அதிர்ச்சியாத்தான் இருக்கு. சே... நீ செய்யிற காரியம் இயக்கத்துக்குச் செய்யிற துரோகமா உனக்குத் தெரியலையா? உன் தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கிற என்னைப் போல உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களைக் காட்டிக் கொடுக்குறதுதான் உன்னோட எண்ணமா?'
'தோழரே, ராமா! உன்னோட கேள்விகள் அர்த்தம் நிரம்பியவைதாம். கொள்கைன்னு வர்றப்போ.... ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ. ராதிகாவை நான் காதலிக்கிறேன்ற ஒரே ஒரு காரணத்துக்காக போலீஸ் எனக்கு பெருசா ஆயிடுச்சுன்னு நீ தப்பு கணக்கு போடாதே. அவளோட அப்பா, அந்த சங்கரமேனன் கேடு கெட்ட அரசாங்கத்தின் காலை வருடி பிழைக்கிற ஒரு ஆள்ன்றதை நான் மறக்கவே இல்ல... ஹாஸ்டல் அறை ஜன்னல் வழியா எஸ்.பி.யோட பங்களாவின் மாடியில நின்னுக்கிட்டு இருந்த அவளை எதேச்சையா பார்த்த உடனே, என் மனசுல வந்து தோணினது எது தெரியுமா? நம்முடைய அடிப்படை அரசியல் கொள்கைகள்தான்...'
'நிறுத்து... கொள்கைகள் ஒரு பக்கம் கிடக்கட்டும். ராதிகாவைப் பற்றி சொல்லு!’
'ராமா... அவள் நல்ல அழகி. வயசு பதினெட்டு இல்லாட்டி பத்தொன்பது இருக்கும். உடலழகை வர்ணிக்கணும்னா...' சந்திரன் இலேசாக நிறுத்தினான்.
'பால்கனியில் நின்னுக்கிட்டு இருந்த அவளை நீ எதேச்சையா பார்த்தே சரி... பிறகு?' - நான் கேட்டேன்.
'ராமா, நான் நம்முடைய அடிப்படை அரசியல் கொள்கைகளைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். ஒரு போலீஸ் அதிகாரியோட மகள் மீது காதல் தோணுறதுன்றது அவ்வளவு சரியான விஷயமான்னு ஒரு நிமிடம் நினைச்சுப் பார்த்தேன். இருந்தாலும் அவளோட உடலழகு என்னை...'
நான் இடையில் புகுந்து சொன்னேன் : 'சந்திரா, பால்கனியில நின்னுக்கிட்டு இருந்த அவளைப் பார்த்ததும் அவள் போலீஸ் சூப்ரெண்டின் மகள்னு எப்படி கண்டுபிடிச்சே?'
நான் இப்படிக் கேட்டதும் சந்திரனின் புருவங்கள் வளைந்தன. 'இது ஒரு தேவையில்லாத கேள்வி. நான் சொல்லிக்கிட்டு வந்த விஷயத்தை விட்டு வேற எங்கேயோ என்னைத் தேவையில்லாம கொண்டு போற கேள்வி இது. நான் சொல்றதைக் கேட்க உனக்கு விருப்பமில்லைன்னா சொல்லிடு. நான் இதுக்கு மேல சொல்லாம நிறுத்திக்கிறேன்....'
'அய்யோ... எனக்கு எல்லா விஷயத்தையும் தெரிஞ்சிக்கணும். ப்ளீஸ்... நீ சொல்லி வர்றதை ஒழுங்கா சொல்லு!'
'ராதிகாவோட உடலழகால கவரப்பட்ட நான் கையை ஆட்டி காட்டினேன். ஸ்டைலா நான் கையை ஆட்டினேன்னு வச்சுக்கயேன். அப்போ...' - சந்திரன் நாடகத்தனமாக நிறுத்தினான்.
'அப்போ...?' - எல்லாவற்றையும் விவரமாக தெரிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
'அப்போ அவளும் நான் செய்ததற்குப் பதிலா நடந்தா. அதாவது - என்னை மாதிரியே அவளும் கையை ஆட்டினா. நான் வாய் விட்டு சிரிச்சுக்கிட்டே மீண்டும் கையை இப்படியும் அப்படியுமா ஆட்டினேன். அவளும் அதே மாதிரி கையை அசைச்சா. எனக்கு அப்போ ரொம்பவும் தைரியம் வந்திடுச்சு. என் உதடுகள்ல விரலை வச்சு ஒரு ஃப்ளையிங் கிஸ் நான் அனுப்பினேன்... ஒரு வெடி குண்டை கையால எறியிறதைப் போல அந்த கிஸ்ஸை அவளை நோக்கி செலுத்தினேன்.'
'அப்போ அவளும் வெடிகுண்டைத் திருப்பி எறியிறது மாதிரி முத்தத்தை அனுப்பியிருப்பா... இல்லே?'
'அதேதான் நடந்தது. ராமா, இது தினமும் நடக்குற ஒரு விஷயமாயிடுச்சு. இப்படி ஒவ்வொரு நாளும் விஷயம் நடந்துக்கிட்டு இருக்க, அவளுக்கு ஒரு கடிதம் எழுதினா என்னன்னு நினைச்சேன். கடிதம் எழுதறதைப் பற்றி நான் நீண்ட நேரம் உட்கார்ந்து யோசிச்சேன். கடிதத்தைத் தபால் மூலம் அனுப்புறது ரொம்பவும் ஆபத்தானதுன்னு பட்டது. சூப்ரெண்டோட கேம்ப் க்ளார்க்கோ இல்லாட்டி சூப்ரெண்டோ கூட அந்தக் கடிதத்தைப் பிரிக்க வேண்டி நேரிடலாம். அப்போ என்னதான் செய்யிறது? கொஞ்சமும் எதிர்பார்க்காம நான் ஒரு நாள் கோபியை ரோட்ல வச்சு பார்த்தேன். கோபி சின்னக் கடையில ஹோட்டல் தொழிலாளர்கள் யூனியன்ல இருந்த ஒரு ஆளு. எனக்கு நல்லா தெரிஞ்சவன். அவன் இப்போ...உன்னால யூகிக்க முடியுதா ராமா?'
'நீ சொல்லு... நான் கேக்குறேன்...'
'அவன் இப்போ போலீஸ் சூப்ரெண்டோட பங்களாவுல சமையல்காரன். காய்கறி வாங்குறதுக்காக ரோட்டுக்கு வந்திருந்தான். நான்தான் சொன்னேனே அவன் நம்மளோட ஆளுன்னு. சின்னக்கடை யூனியன்ல இருந்தான்னும் சொன்னேன்ல... நான் இதுக்கு மேல இதை நீட்டல. அவனை நான் கைக்குள்ளே போட்டுக்கிட்டேன். ஓணவிடுமுறை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே நான் ராதிகாவுக்கு என்னோட முதல் காதல் கடிதத்தை எழுதினேன். அந்தக் கடிதத்தைக் கோபி கையில கொடுத்தேன். அதுல என்னோட ஊர் அட்ரஸை எழுதியிருந்தேன். ஆச்சரியம்னுதாண்டா சொல்லணும். கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காம அப்படி ஒரு காரியம் நடந்துச்சு. ராதிகா பதில் கடிதம் எழுதியிருந்தா. ஊர் முகவரிக்குத்தான். அதாவது - என்னோட வீட்டு அட்ரஸீக்கு. அதனாலதான் சொல்றேன் என் கண்கள்ல இன்னைக்கு ஒரு புது பிரகாசம் இருக்குன்னு...'
மாதங்கள் கடந்தன. ஹாஸ்டல் அறையின் ஜன்னல் வழியே சந்திரன் மாடியில் நின்றிருக்கும் ராதிகாவைப் பார்த்து கைகளை ஆட்டுகிறான். ஃப்ளையிங் கிஸ்ஸைப் பரிசாக அனுப்புகிறான். அவ்வப்போது கோபி மூலம் ராதிகாவிற்குக் கடிதங்களையும் அனுப்புகிறான்.
காதலின் வளர்ச்சியைப் பற்றி சந்திரன் நேரம் கிடைக்கிறபோது என்னிடம் கூறவும் மறக்கவில்லை.
ஒரு நாள் என்னுடைய அறைக்குச் சந்திரன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான். அவன் கையில் ஒரு கவர் இருந்தது. எனக்கு நேராக அதை நீட்டியவாறு அவன் சொன்னான் : 'ராதிகாவோட கடிதம்... படிச்சுப் பாரு!'
'வேண்டாம். உனக்கு அவ எழுதின காதல் கடிதத்தை நான் படிக்கிறது நல்லது இல்ல. அது மரியாதையான ஒரு விஷயமும் இல்ல...'
அவன் அந்தக் கடிதத்தை என் மூக்கிற்கு மிகவும் அருகில் வைத்தான். அருமையான ஒரு வாசனை அந்தக் கடிதத்தில் இருந்து வந்தது. ராதிகா தான் எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு வாசனை திரவியத்தைத் தடவியிருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
மீண்டும் சந்திரனைத் தேடி ராதிகாவின் கடிதங்கள் வந்தன. அவர்கள் இருவருக்குமிடையில் தூதனாகச் செயல்பட்டவன் கோபிதான்.
ஒரு நாள் நான் சந்திரனைப் பார்த்து கேட்டேன்: 'இதனால் என்ன பிரயோஜனம், சந்திரா? அவளை மிகவும் பக்கத்துல இருந்து பார்க்கவோ, தொடவோ, முத்தம் கொடுக்கவோ உன்னால இதுவரை முடிஞ்சிருக்கா?'
சந்திரன் நான் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 'அதற்கான நேரம் இன்னும் வரல. அவசரப்பட்டு விஷயம் ஆபத்துல போய் முடிஞ்சிடக் கூடாதே! இன்னொரு விஷயம்... நான் ஏன் அவசரப்படணும்? ராதிகாவும் நானும்தான் ஆழமான காதல்ல ஈடுபட்டிருக்கோமே! கல்யாணத்துக்குப் பிறகு நாங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கலாமே! கல்யாணம்ன்றதும் புரட்சி மாதிரிதாண்டா...! டைமிங்... அதாவது கரெக்ட் டைமிங்... அதுதான் இங்க முக்கியம்!"
காதல் நதி இப்படி ஓடிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று மாணவர்கள் போராட்டங்கள் வந்தன. அவற்றிற்குத் தலைமை தாங்கியது சந்திரன்தான். அவன் கைது செய்யப்பட்டான். லாக் அப்பில் அடைக்கப்பட்டான். ஊர்வலங்கள் நடந்தன. கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
'போலீஸ் எங்களுக்குப் புல்!
சங்கு வேண்டாம் சங்கரமேனன்
சங்கைத் துளைக்க நாங்கள் இருக்கோம்!’
நான் சந்திரனிடம் சொன்னேன். 'டேய், நீ சங்கரமேனனின் குறியில இருக்குற ஆளா இருந்தா, உன்னோட காதலுக்குப் பிரச்சனை வராதா?'
சந்திரன் கையைச் சுருட்டி விட்டவாறு சொன்னான்: 'காதலுக்குப் பிரச்சனை வருமா? அப்படி ஒரு பிரச்சனை வராத அளவுக்கு நான் பார்த்துக்குவேன். கோபி சொல்றான் - என் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்குக் கூட ராதிகா தயாரா இருக்காளாம்....'
'கோபி சொன்னாப் போதுமா? அவ சொல்ல வேண்டாமா சந்திரா?'
'அவளும்தான் சொல்லியிருக்கா... அதாவது - குறிப்பா சொல்லியிருக்கா... அவ கடைசியா எழுதின கடிதத்துல! கடிதத்தை நீ பார்க்கணுமா? ஓ... இன்னொருத்தனுக்கு வர்ற காதல் கடிதத்தைப் படிக்க விரும்பாத மரியாதையான மனிதனாச்சே நீ! எது எப்படியோ அந்தக் கடிதத்தோட சேர்த்து அவ அனுப்பின ஒரு 'டோக்கன் ஆஃப் லவ்' வை நான் இப்போ உனக்கு காண்பிக்கிறேன்.
சந்திரன் தன்னுடைய அறைக்குச் சென்றான். திரும்பி வந்த அவன் கையில் ஒரு சிறு லாக்கெட் இருந்தது. அவன் அதைத் திறந்து காட்டினான்.
லாக்கெட்டிற்குள் ஒரு சுருண்ட முடி இருந்தது.
'அவளோட முடி....' சந்திரன் சொன்னான்.
'கோபியோட முடியாக ஏன் இது இருக்கக் கூடாது?'- நான் கேட்டேன்.
'ச்சீ... மனசுக்குத் தோணினபடியெல்லாம் பேசாதே' - சந்திரன் என்னைப் பார்த்துச் சொன்னான்.
ஒரு போலீஸ் ஜீப்பின் மேல் சில மாணவர்கள் கல்லெறிந்ததாக இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு போலீஸ்காரனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதன் விளைவாக ஆதாரங்கள் சரியாக இல்லாவிட்டால் கூட மாணவர் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.
ஒரு மாலை நேரம்.
நான் ஹாஸ்டலில் சந்திரனின் அறையில் இருந்தேன்.
ஹாஸ்டல் வாசலில் பயங்கர சத்தத்துடன் போலீஸ் ஜீப்புகள் வந்து நின்றன.
ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவர்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் திகைத்த நிலையில் இருந்தனர்.
நான் சந்திரனிடம் சொன்னேன் : ' நீ சரியா மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.'
ஒரு ஜீப்பை விட்டு போலீஸ் சூப்ரெண்ட் சங்கர மேனன் வேகமாக இறங்கினார். சந்திரனின் அறையை நோக்கி நடந்தார். அவர் முகத்தில் ஒரு கடுமை தெரிந்தது. இடுப்பில் ரிவால்வர் இருந்தது.
என்னையும் சந்திரனையும் மாறி மாறி பார்த்த சங்கரமேனன் வெடி வெடிக்கிற சத்தத்தில் கேட்டார் : ‘உங்கள்ல யாரு சந்திரன்?'
சந்திரன் சொன்னான்: 'நான்தான்.'
'ராஸ்கல்! நீ என் மகளுக்குக் கடிதம் எழுதினியாடா?'
சந்திரன் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான்.
'சொல்லுடா...'
'ஆமா...' - சந்திரன் சொன்னான்.
தன் யூனிஃபார்ம் பைக்குள் கையை விட்ட போலீஸ் சூப்ரெண்ட் அடுத்த நிமிடம் சுமார் இருபது கடிதங்களை வெளியே எடுத்தார்.
'நாயோட மகனே! இந்தா... நீ என் மகளுக்கு எழுதின கடிதங்கள். அவளும் உனக்குப் பதில் கடிதங்கள் எழுதியிருப்பான்றதை ஒரு தந்தைன்ற முறையில் என்னால புரிஞ்சிக்க முடியுது. ம்... அவ எழுதின கடிதங்களை எடு. வேகமா...'
புரட்சிவாதியும் காதலனுமான சந்திரன் போலீஸ் சூப்ரெண்டை எதிர்த்து ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
சந்திரன் பெட்டியைத் திறந்து ராதிகா அவனுக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் வெளியே எடுத்தான். சிவப்பு நிற ரிப்பன் ஒன்றால் அந்தக் கடிதங்கள் அனைத்தையும் அவன் கட்டி வைத்திருந்தான்.
சங்கரமேனன் அந்தக் கடிதங்களை வாங்கி தன் பைக்குள் வைத்தார்.
'அந்தக் கடிதங்களை கிழிச்செறி...' - சந்திரனிடம் திருப்பிக் கொடுத்த அவனின் கடிதங்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது சங்கரமேனனின் விருப்பம்.
சந்திரன் அவர் சொன்னபடி நடந்தான்.
'ராஸ்கல்! என் மகள் உனக்கு எழுதின கடிதங்கள் எல்லாத்தையும் என்கிட்ட திருப்பி தந்துட்டே இல்ல...? இல்லாட்டி இதுல ஏதாவது பாக்கி வச்சிருக்கியா?'
'இனி இருக்குறது இது மட்டும்தான்...' - பெட்டியைத் திறந்து சந்திரன் அந்த லாக்கெட்டை எடுத்தான். அதை போலீஸ் சூப்ரெண்டின் கையில் தந்தான்.
மேனன் அதைத் திறந்து பார்த்தார். அடுத்த நிமிடம் பயங்கரமாக சிரித்தார். வேகமாக அவர் ஊத, லாக்கெட்டில் இருந்த முடி மேலே பறந்து சென்றது. காற்றில் சில நொடிகள் பறந்த அது தரையில் அறையின் ஒரு மூலையில் அது கிடந்தது.
காலணிகளால் தரையில் ஓசை எழுப்பியவாறு சங்கரமேனன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
கல்லெறிந்த சம்பவத்தை விசாரிப்பதற்காகத்தான் எஸ்.பி. அங்கு வந்திருந்தார் என்று கூறி தன்னுடைய மானத்தை மறைக்க சந்திரனால் முடியவில்லை.
உள்ளே என்ன நடந்தது என்பதை முழுமையாக வெளியே நின்றிருந்த மாணவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அறையை விட்டு வெளியே சென்றபோது, சந்திரனைப் பார்த்து அவர்கள் கூக்குரல் எழுப்பினார்கள்.
அடுத்த நாள் சந்திரன் காணாமலே போனான். போலீஸுக்குப் பயந்து அல்ல - மாணவர்களின் கேலி, கிண்டலுக்குப் பயந்துதான்.
அந்தக் காதல் கதை சங்கரமேனனுக்கு எப்படி தெரியவந்தது?
தெரியவில்லை.
எது எப்படியோ மேனனின் மரண செய்தியைப் படித்தபோது, சந்திரனையும் அவனின் முட்டாள்தனமான காதலையும் நினைத்துப் பார்த்தவாறு நான் நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன் என்பது மட்டும் உண்மை.