Logo

தண்ணீர்... தண்ணீர்...

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6504
Thanneer... Thanneer...

சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கல்தூண் ஒன்றில் சாய்ந்தவாறு, தன்னைச் சுற்றிலும் ஒரு முறை அவள் தன் தளர்ந்து போன கண்களால் நோட்டம் விட்டாள். அவளுக்கு மிகவும் அருகில் கோவில் கோபுரம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. பல வகைப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படும் கடைகள் இருக்கும் இரு வீதிகளும் இங்கிருந்தே அவளின் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன.

எந்தப் பக்கம் பார்த்தாலும் கோவிலுக்குத் தரிசனம் பண்ண வந்தவர்களின் கூட்டமாகவே இருந்தது.

நாதஸ்வர இசையும், மேள சத்தமும் காற்றில் மிதந்து வந்து அவளின் காதுகளில் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. மக்களின் ஆரவாரம், கேலி. சிரிப்பு, கும்மாளம், குழந்தைகளின் அழுகைக் குரல்கள் - இவை நிறைந்த கோவில் சுற்றுப்புறம் இதற்கு முன் அவள் கண்டிராத ஒரு புதிய சூழ்நிலையை உண்டாக்கியது. கோவில் பிரகாரத்தில் பூசாரி உச்சரிக்கும் அடுக்கடுக்கான மந்திரிங்களும், தீபாராதனை செய்யும்போது அடிக்கப்படும் மணியோசையும் அவளுக்குத் தெளிவாகக் கேட்டன. அதனுடன், சந்தன மணமும், மலர்களின் இனிய நறுமணமும், கற்பூர வாசனையும் கலந்து வந்து அவளின் நாசிக்குள் நுழைந்து அவளிடம் ஒருவகை புத்துணர்வை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

இந்த தன்னுடைய அறுபத்தைந்து வருட வாழ்க்கையில் இந்த மாதிரி எத்தனையெத்தனை திருவிழாக்களை அவள் கண்டிருப்பாள்!

இன்று கூட திருவிழா கோலாகலமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அவளின் உள்ளத்தின் அடித்தளத்தில் இனம் புரியாத ஒரு குறை... சலனம்.

வாழ்க்கையே ஒரு பெரிய புதிரைப் போல் தோன்றியது அவளுக்கு.

அவள் அமர்ந்திருந்த அந்த சதுர வடிவுள்ள கருங்கல் மண்டபம், கோபுரத்திற்கு நேர் எதிராக அமைந்திருந்தது. அங்கும் பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் புளியோதரையையும், அதிரசத்தையும் சாப்பிட்டு விட்டு அவர்கள் விட்டெறிந்த எச்சில் இலைகள் கூட்டம் கூட்டமாக மண்டபத்தை சுற்றிலும் கிடந்தன.

அந்த இடத்தில் கூட அவளைத் தனியாக, நிம்மதியாக உட்கார அவர்கள் விடவில்லை.

நேற்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அடிவயிற்றில் ஒரே வலி. என்னவோ கனமாக அடியிலிருந்து மேல்நோக்கி புறப்பட்டு வருவதைப் போல் ஒரு தோணல். மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு அப்படியொரு அவஸ்தை. யாரோ கழுத்தைப் பிடித்து நெறிப்பதைப் போலிருந்தது அவளுக்கு.

இருந்தாலும், வழக்கம்போல விடிந்தும் விடியாமலும் இருக்கும் பொழுதே காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐயர் வீட்டுக்கு அவள் வேலை செய்ய போய்விட்டாள். குளிர் காலமாக இருந்ததால் குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. அவள் அதை கொஞ்சமேனும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சேலைத் தலைப்பால் தலையை முழுமையாக மூடிக் கொண்டு 'விசுக் விசுக்' கென்று நடக்க ஆரம்பித்தாள். வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து, கோலம் போடுவதில் ஈடுபட்டிருந்தனர் சில பெண்கள். அவர்களைப் பார்த்தவாறு அவள் தெருவில் நடந்து சென்றாள். கார்ப்பரேஷன் விளக்குக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த எருமைகள் தங்களுக்கு முன்னால் கூடையில் வைக்கப்பட்டிருந்த வைக்கோலை அசைபோட்டு நின்று கொண்டிருந்தன.

ஐயர் வீட்டு கொல்லைப்புறத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் அவளுக்காக காத்திருந்தன. அவை ஒவ்வொன்றையும் சுத்தமாகத் துலக்கி வைக்க வேண்டும். கொஞ்சம் அழுக்கு இருந்தாலும், ஒரு வசை கவியே பாடி விடுவாள் ஐயரின் மனைவி. அவள் அப்படி திட்டும்போது அவளின் காதுகளிலிருக்கும் வைரக் கம்மல்களின் பிரகாசம் அவளுடைய கன்னத்தில் தெரியும்.

இன்று வெள்ளிக்கிழமையாதலால் வேலை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வீடு முழுவதையும் சுத்தமாகக் கழுவித் துடைப்பதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எங்காவது ஒரு சிறு கறை இருந்தால் கூட போதும் - "கண்ணம்மா, நீ என்ன கழுவியிருக்க? இவ்வளவு வயசானதுதான் மிச்சம். வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்கிறதுன்னு  கொஞ்சமாவது தெரிய வேண்டாமா?' என்று பொரிந்து தள்ள ஆரம்பித்து விடுவாள் ஐயரின் மனைவி.

ஐயர் எப்போது பார்த்தாலும் பூஜை அறையில்தான் இருப்பார். ஏதாவது மந்திரங்களைக் கூறிக் கொண்டே அவர் அமர்ந்திருப்பார். தன் மனைவியைப் போல கோபப்பட அவருக்குத் தெரியாது என்றாலும், சில நேரங்களில் அவளுக்கு அவர் புத்திமதி கூறுவதுண்டு.

முதல் நாள் மீதமாகிப் போன சாதத்தையும், குழம்பையும் கொண்டு வந்து கொடுத்த போது, அவளுக்கு என்னவோ போலிருந்தது. அதை சாப்பிடுவதைவிட பட்டினி கிடப்பது எவ்வளவோ மேல் என்று நினைத்த அவள் அருகிலிருந்த குப்பைக்குள் அதைக் கொட்டினாள். அதை அவளுடைய துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்- வாசலருகில் நின்றிருந்த ஐயர் பார்த்துவிட்டார். அங்கிருந்தவாறே "கண்ணம்மா, சாதத்தைக் குப்பையில் போடாதே. அன்னம் பிரம்மம்னு பெரியவங்க சொல்லுவாங்க" என்றார்.

கெட்டுப் போன அந்த சாதத்தில் என்ன இருக்கிறது என்று ஐயர் கூறினார்? எவ்வளவு யோசித்துப் பார்த்தும் அவளால் அதை ஞாபகப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

இருந்தாலும், ஐயரின் மனைவியின் மேல் அவளுக்கு எப்போதும் ஒரு விசுவாசம் உண்டு. ஐயரின் வீடு மட்டும் இல்லாமல் போயிருந்தால், என்றோ பட்டினியின் கொடும்பிடியில் சிக்கி அவள் இந்த உலகத்தை விட்டே போயிருப்பாள்.

கிராமத்தை விட்டு புறப்பட்டு வந்து இரண்டு மாதங்களும் இருபது நாட்களும் ஆகிவிட்டன. அப்பப்பா.... காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!

மரத்தைப் போன்ற இரண்டு ஆண் பிள்ளைகளை அவள் பெற்றெடுத்து என்ன பயன்? ஒன்றுக்குமே உதவாத தறுதலைகள். கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் கஷ்டப்பட்டு வளர்த்த அவளுக்கு அவர்கள் பிரதிபலனாகக் கொடுத்த பரிசு இதுதான்.

ம்.... பெற்ற பிள்ளைகளுக்கே தாய் வேண்டாதவளாகி விட்டாள்.

சேலைத் தலைப்பால் கண்ணிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் கண்ணம்மா. துடைக்கத் துடைக்க கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

பெற்ற தாய்க்கு ஒரு நேர உணவு கொடுத்து வீட்டில் வைத்து காப்பாற்றும் எண்ணம்கூட அந்தப் பிள்ளைகளுக்கு இல்லாமல் போய்விட்டது. மகன்கள், மகன்களின் மனைவிமார்கள். அவர்களின் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து குடும்பம் பெரிதாகி விட்டது. எப்போது பார்த்தாலும் ஒரே சண்டைதான், அழுகைதான். உறவுக்காரர்களுடன் கூட நாளடைவில் அவர்களுக்குத் தொடர்பு என்ற ஒன்றே இல்லாமல் போய் விட்டது.

ம்.... அவர்களைக் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்?

மூத்தவனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். இளையவனுக்கு நான்கு. அவர்களையெல்லாம் இந்தக் கஷ்ட காலத்தில் காப்பாற்றுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? பெற்ற தாயை அதற்காக மறக்க வேண்டுமா என்ன?


முதலில் எதை மறக்கக் கூடாதோ, அதை மறந்து விட்டனர் அவளின் பிள்ளைகள். ஐயர் வீட்டு எச்சில் பண்டங்களும், இந்தக் கருங்கல் திண்ணையுமே அவளின் தற்போதைய நண்பர்களாகிப் போயின.

அவளின் அடிவயிற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வலி மேல் நோக்கி எழுந்து அவளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. தலை பயங்கரமாக கனத்து அவனை உட்கார விடாமல் செய்து கொண்டிருந்தது.

ஆமாம்... இந்த ஜனங்கள் ஏன் இப்படி கூச்சலும் ஆரவாரமும் எழுப்பிக் கொண்டு திரிகிறார்கள்? கோவிலுக்குக் கடவுளைத் தேடி வரும் நேரத்திலாவது அவர்களால் கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாதா? ஒரு நிமிடம் கூட வாயை மூடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்களே!

ஜனங்களின் சத்தமும், ஆரவாரமும் ஒரு பக்கம் அவளின் மனதில் வெறுப்பை உண்டாக்கியது.

இந்த நகரத்திலேயே என்றாவதோர் நாள் அவள் உயிர்விட நேர்ந்தால், அவளைப் பற்றி கவலைப்பட இங்கு யார் இருக்கிறார்கள்? ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் பேசாமல் சகித்துக் கொண்டு கிராமத்திலேயே இருந்திருக்கலாம். கிராமத்தில் அவள் சாகக் கிடக்கும் நேரத்தில் கூட ஒரு வாய் தண்ணீர் தர ஆள் இருக்கிறார்கள். இங்கிருக்கும் இத்தனை லட்சம் உயிர்களில் அவளுக்கென்று சொந்தமென்று கூற- அவள் மேல் அக்கறை செலுத்த யார் இருக்கிறார்கள்?

மணி அனேகமாக இப்போது ஐந்தரையைக் கடந்து விட்டிருக்கும். ஐயர் வீட்டுக்கு சாயங்காலம் வேலைக்குப் போவதென்றால்... நேரமாகிவிட்டது. இனி அங்கு போய் பயன் இல்லை. எழுந்து நிற்கக் கூட அவளுடைய உடம்பில் தெம்பு இல்லை. உடம்பு எழுந்து நடமாடக்கூடிய அளவில் இருந்தால், ஒரு நாளும் வேலைக்குப் போகாமல் அவள் இருக்க மாட்டாள்.

வேலைக்குச் செல்லாமல் முதல் தேதி வந்ததும் சம்பளம் வாங்கும் வழக்கம் என்றுமே கண்ணம்மாவுக்கு இருந்ததில்லை.

மக்கள் கூட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே இருந்தது. கூட்டத்தைக் காணக் காண அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

அவளுக்குத் திருமணம் நடந்த புதிதில் அவளையும் மாரியம்மன் திருவிழாவுக்கு அழைத்துக் கொண்டு போயிருந்தான் அவளின் கண்வன்.

அதை இப்போது அவள் நினைத்துப் பார்த்தாள். அன்று அவளுக்கு சுமார் பதினான்கு இருக்கும். நடக்கும்போது காலில் அணிந்திருந்த கொலுசு 'சல் சல்' லென்று ஓசையெழுப்பி சுற்றி இருந்தவர்களின் கவனத்தை அவள் பக்கம் ஈர்த்தது : அன்று ஜாக்கெட் அணியவில்லை. மஞ்சள் கறை போட்ட சிவப்பு வர்ண சேலை அணிந்துதான் திருவிழாவுக்குப் போயிருந்தாள். கண்மை, நெற்றியில் குங்குமம் - இந்தக் கோலத்துடன் அவளைப் பார்க்கும்போது மங்களகரமாக இருக்கும்.

அவள் கணவன் அன்று அவளின் விருப்பப்படி கண்ணாடி வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். வறுத்த பட்டாணியையும், நிலக்கடலையையும் தின்றவாறு தங்களை மறந்து இருவரும் நடந்து திரிந்தார்கள்.

மலர்கள் கொண்டும், நகைகள் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் விக்கிரகத்தை அன்று பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். திருவிழா என்றால் அதுதான் திருவிழா. இதைப்போய் திருவிழா என்கிறார்களே!

இறந்து போன தன் கணவனின் முகத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்து கொண்டாள் கண்ணம்மா. கருங்கல்லால் ஆனது போன்ற உறுதியான உடலுக்குச் சொந்தக்காரன் அவன். இரண்டு காளைகள் இழுக்கவே கஷ்டப்படும் பாரம் ஏற்றிய வண்டியை அவன் ஒருவனே சர்வ சாதாரணமாக இழுத்து விடுவான். வயலில் இறங்கினான் என்றால் நான்கு ஆட்கள் செய்யும் வேலையை அவன் ஒருவனே செய்வான். அப்படிப்பட்ட அவன் இரண்டு நாள் காய்ச்சலில் இறப்பான் என்று யாரும் கனவில்கூட கருதியதில்லை. யாருடைய கையையும் எதிர்பார்க்காத மனிதன், பிறருக்கு கேடு செய்ய வேண்டும் என்று கனவில்கூட கருதாதவன், நிலம் சம்பந்தமாக பக்கத்து வீட்டு முத்துவுடன் சண்டை உண்டான போது, கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடிய காட்சி இன்னும் அவள் மனதின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது. அன்று அவனைத் தடுத்து வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவதற்குள் கண்ணாம்மாவுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

அவளின் இரண்டு மகன்களில் ஒருவனாவது தங்களின் தந்தை மாதிரி இருந்திருக்கக் கூடாதா? அவளால் ஏங்கத்தான் முடிந்தது.

“சே... பெண்புத்தி பின்புத்தின்றது சரியாத்தான் இருக்கு. இல்லாட்டி பெத்த பிள்ளைங்க மேல கோவிச்சுக்கிட்டு பிறந்த கிராமத்தை விட்டு அனாதை மாதிரி இந்த ஊரைத் தேடி வருவேனா?" என்று மனதிற்குள் தன்னையே திட்டி தீர்த்து கொண்ட கண்ணம்மா தன் கிராமத்து சிந்தனையில் தன்னை மறந்து லயித்துப் போனாள்.

உயரமாக வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கரும்பனை மரங்கள், அவற்றுக்கு மத்தியில் வைக்கோல் வேயப்பட்ட குடிசைகள்... குடிசைகளாக இருந்தால்தான் என்ன சாப்பாட்டுக்கும், தண்ணீருக்கும் கஷ்டமே இல்லை என்கிற போது?

அவளிடம் அந்த இரண்டு எருமை மாடுகளும் இருக்கும்போது, பணம் கொஞ்சம் தாராளமாகவே அவளின் கையில் புழங்கியது. பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து விற்கவும் அவள் தயங்கவில்லை. அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு காதுக்கு சிவப்பு வர்ணத்தில் கல்வைத்த கம்மல்கள் வாங்கி அணிந்து கொண்டாள்.

அதையெல்லாம் பின்னர் விற்றுத் தீர்த்து விட்டார்கள் அவளின் பிள்ளைகள்.

அன்று  அந்த கிராமத்தில் கண்ணம்மா மிகவும் முக்கியமான ஒரு நபராக இருந்தாள். பிரசவம் ஒன்று ஊரில் நடக்கிறதென்றால், அங்கு கண்ணம்மா நிச்சயம் இருப்பாள். சாவு நடக்கும் இடத்திலும் கண்ணம்மாவின் தலையைக் கட்டாயம் பார்க்கலாம்.

ம்... அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது! சூரியன் மறைந்து எவ்வளவோ நேரம் ஆகிவிட்டது. மின்விளக்குகள் 'பளிச்' எனப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கோவிலிலும் இப்போது முழுமையாக மின்விளக்குகள் தாம். எல்லாம் கால மாற்றத்தில் ஏற்பட்ட வளர்ச்சி.

'ம்... சரியா மூச்சுவிடக்கூட முடியலியே... இங்கேயே நான் செத்துப் போயிடுவேனோ? என்ன இருந்தாலும், கிராமத்தை விட்டு நான் வந்தது என் தப்புதான்.' தனக்குள் முனகிக் கொண்டாள் கண்ணம்மா.

பத்து நாட்களில் ஐயர் வீட்டில் சம்பளம் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கே திரும்பிப் போய்விட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள் கண்ணம்மா. வீட்டை விட்டு புறப்பட்ட போது மூத்த மகன் அவளைத் தடுத்து ஒரு வார்த்தை கூறவில்லை.

"என்னம்மா எங்கே போறே?" என்று அவன் தடுத்திருக்கலாம். ஒரு வேளை தன் தாய் அப்படி எங்கே போய் விடப் போகிறாள்" கிராமத்துக்கு வெளியே கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பவும் வந்து விடுவாள் என்று அவன் நினைத்திருப்பானோ?


அப்போது இளைய மகன் வீட்டில் இல்லை. அவனுடைய மகன் சுப்பு மட்டும் இருந்தான். பாட்டி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் அவன் ஓடி வந்தான். கையைப் பிடித்து அவளை அவன் இழுத்தான். கண்ணம்மாவின் கணவன் ஜாடை அவன். பெரிய ஆளாக வரும் போது நிச்சயம் தன் தாத்தா மாதிரியே இருப்பான் அவன்.

'பாட்டி பாட்டி... நீ போயிட்டா எங்களை யார் கவனிக்குறது?' அவளால் அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது.

சேலைத் தலைப்பால் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் கண்ணம்மா.

அப்போதும் சுப்பு போவதாக இல்லை. 'போடா என் ராசா! பாட்டி நான் எங்கே போயிற போறேன்? திரும்பி வந்திருவேன். பேசாம வீட்டுக்குப் போ. என் கூட வந்தா உன் அப்பன் அடிப்பான்' என்றாள் கண்ணம்மா.

'அப்ப... வர்றப்போ எனக்கு அச்சு வெல்லம் வாங்கிட்டு வருவியா?' என்றான் சுப்பு.

தந்தைக்கு பயந்து வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்த சுப்பு அங்கிருந்தவாறே உரத்த குரலில் 'மறந்திராத பாட்டி அச்சு வெல்லம்..." என்றான்.

போன மாதம் வாங்கிய சம்பளம் அவள் சேலை தலைப்பில் பத்திரமாக இருந்தது. அதில் சுப்புவுக்கு நல்ல ட்ரவுசரும், சட்டையும் வாங்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டாள் கண்ணம்மா.

சுப்புவின் முகத்தைக் காண வேண்டும்போல் இருந்தது அவளுக்கு.

இந்த நகரத்தில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்பது அவளுடைய தலையெழுத்து, அதுவும் இந்த வயதான காலத்தில்...

இந்த ஊருக்கு வந்த புதிதில் முதல் இரண்டு நாட்கள் அவள் முழு பட்டினி...

உடம்பை கிடத்த ஒரு இடமில்லை. சாப்பாடு வேண்டுமென்றால், பிச்சை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை. அதை நினைத்து பார்த்த போது அவளுக்கே வெட்கமாயிருந்தது.

நான்காவது நாள் ஐயர் வீட்டில் வேலை கிடைத்தது. ஐயர் வீட்டில் ஏதாவது சோறு கிடைக்குமா என்றுதான் முதலில் அவள் போனாள்.

'எனக்கு கூட ஒரு வேலைக்காரி தேவைப்படுது. வேணும்னா நீயே இருந்துர்றியா?' - ஐயரின் மனைவி கேட்டாள்.

முதல் நாள் அவள் வேலைக்குப் போனபோது, ஐயர் தன் மனைவியிடம் கூறி கொண்டிருந்தது அவள் காதில் நன்றாகக் கேட்டது:

'வயசு அதிகமாயிடுச்சு... இனி பயணம் போற வழிதான்.'

வேலை முடிந்ததும், எந்த திண்ணையிலாவது போய் அமர்ந்து விடுவாள். கோவிலின் கிழக்கு கோபுரத்தின் அருகில் உள்ள கருங்கல் மண்டபத் திண்ணையில் தான் அவளின் இரவு நேரப் பொழுது கழியும்.

ஐயர் கூறியது உண்மைதான். அவளுக்கும் வயது அறுபத்தைந்து ஆகிவிட்டது. வேலையைக் கூட ஒழுங்காக, நிதானம் தவறாமல் அவளால் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு உடம்பில் ஒரு தளர்ச்சி...

'ம்.... கிராமத்துக்கு எப்படியும் திரும்பி போயிடணும். செத்தாலும் பெத்த பிள்ளைங்க மடியிலதான் சாகணும். பத்து நாள் தானே? ஒரு நாளு மாதிரி வேகமா ஓடிரும். சுகமா ஊர் போய் சேர்ந்தா, மாரியம்மன் கோவில் உண்டியல்ல ஒரு ரூபா போடணும்' - மனதிற்குள் கூறிக் கொண்டாள் கண்ணம்மா.

தலையைச் சுற்றிக் கொண்டு வருவது போலிருந்தது அவளுக்கு.

'ஒரு சோடா குடிச்சா என்ன? கண்ணாவது சரியா தெரியும். முனுசாமி கடையில சோடா இருக்கும். பத்தடி தூரம் இருக்குமா கடை?' - மெல்ல தூணைப் பிடித்து எழுந்து நிற்க முயன்றாள் கண்ணம்மா.

சேலைத் தலைப்பிலிருந்த முடிச்சை அவிழ்த்து ஒரு பத்து பைசாவை எடுக்க அவள் படாத பாடுபட்டாள்.

அதற்குள் நிலை தடுமாறி திண்ணையில் ' பொத்' தென்று விழுந்து விட்டாள்.

அவளுக்கு ஒரு வாய் நீர் தர அந்த இடத்தில் ஒரு உயிர் இல்லை.

இத்தனை லட்சம் மக்கள் இருக்கின்ற அந்த நகரத்தில் சாகக் கிடக்கும் ஒரு உயிருக்கு ஒரு துளி நீர் கொடுக்க ஒரு ஆள் இல்லை.

அறுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்து விட்ட கண்ணம்மா - இதோ அனாதையாக - ஆதரவு யாருமில்லாமல் கிடக்கிறாள்.

அவள் மட்டும் இப்போது கிராமத்தில் இருந்திருந்தால்...!

மூச்சு விடவே அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கல் மண்டபத்தின் கூரைகளில் செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் அவளை நோக்கி இறங்கி வருவது போல் அவளுக்குத் தோன்றியது.

தொண்டை கொஞ்சம் கொஞ்சமாக வறண்டு கொண்டே வந்தது. கோவில் விளக்குகள் முற்றிலுமாக அணைந்து விட்டிருந்தன.

இருட்டு... ஒரே இருட்டு...

'யாராவது கொஞ்சம் தண்ணி தாங்களேன்...' - மெல்ல முனகினாள் கண்ணம்மா.

யாரும் வருவதாகத் தெரியவில்லை. நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பக்தனொருவன் யாரோ தரையில் கிடப்பதைப் பார்த்ததும் அருகில் சென்று மூக்கில் விரலை வைத்து பார்த்து விட்டு மற்றவர்களிடம் கூறினான்: 'பாக்கியவதி... நல்ல நாளு பாத்து போயிருக்கா...'

Page Divider

 

 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.