Logo

இயேசுவும் கண்ணாடியும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6573
Yesuvum Kannaadiyum

ரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கதை இது. ஒரு பாலைவனத்தைத் தாண்டி, வறண்டுபோய்க் காட்சியளிக்கும் ஒரு நாட்டில் நடைபெற்றது இந்தச் சம்பவம். அங்கு தண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடு. வாரத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோதான் அங்குள்ள மக்கள் குளிப்பார்கள். தினமும் பல் தேய்க்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

குளிக்காததால் தாடியிலும் முடியிலும் வியர்வையும் தூசியும் கலந்து ஒருவித நாற்றம் உண்டாவது தவிர்க்க முடியாத ஒன்று. கையிடுக்குகளிலும் கால் இடைவெளிகளிலும் கூட இவ்வகை நாற்றம் இருக்கும். பாலஸ்தீன் போன்ற வறண்டு போன நாடுகளில் வாழ்பவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடுமையான விஷயங்கள் இவை. அதற்காக அங்குள்ள ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதோ, முத்தம் கொடுத்துக் கொள்வதோ, உடலுறவு கொள்வதோ அங்கு நடக்காமல் இல்லை. அது எந்தவித தடையும் இல்லாமல் அங்கு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த நாற்றம் கூட அவர்கள் விருப்பப்படக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்பதே உண்மை. நீங்கள் மிகவும் கவனமாகப் பார்த்தால் பாலஸ்தீனியர்களின் உடலில் ஒருவகை வெடிமருந்து வாசனை வீசுவதைக்கூட நம்மால் உணர முடியும். சாவுக்கடலில் கலந்திருந்த கந்தகத்தின் வாசனைக்கும் இவர்களின் உடம்பில் இருந்து வீசும் வெடிமருந்து வாசனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் தோன்றும். முன்பு பாவம் செய்தவர்கள் நிறைந்த ஸோதோம் - கொமோராவை தெய்வம் கந்தகத்தில் இறக்கிவிட்டு அழித்ததன் எச்சம்தான் சாவுக்கடல் என்று அழைக்கப்படுகிறது. தெய்வத்திற்கு கந்தகம் எங்கே இருந்து கிடைத்தது என்று கேட்பதை விட எளிது, பாலஸ்தீனியர்களின் உடலில் பழைய பாவத்திற்காகப் பெற்ற தண்டனையின் மணம் இன்னும் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறது என்று நம்புவதுதான். இங்கு கூறப்படும் சிறு சம்பவத்தில் வருகிற இயேசு என்ற இளைஞர் இன்று எல்லோராலும் அறியப்பட்டவரும் வணங்கப்படுபவருமான ஒரு மனிதர். அதனால், அவருக்குத் தனியான ஒரு அறிமுகம் தேவையில்லை. இந்தச் சம்பவம் நடக்கும்போது இயேசுவிற்கு முப்பது அல்லது முப்பத்தொரு வயது இருக்கும். முப்பத்து மூன்று வயது ஆகிறபோது, அவர் இந்த உலகத்தைவிட்டு நீங்கிவிட்டார். நடுத்தர வயதிற்குப்பிறகு உலக வழக்கங்களுடன் ஒத்துப்போயோ, வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக விட்டுக் கொடுத்துப் போகும் மனோபாவத்துடன் பார்த்தோ வாழாமலே அவர் இங்கிருந்து போய்விட்டார்.

இயேசு பாலஸ்தீனில் உள்ள கலீலி என்ற இடத்தில்தான் பதின்மூன்று வயது வரை வளர்ந்தார் என்றாலும் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் பாலஸ்தீனை விட்டு அவர் எங்கோ இருந்துவிட்டுத் திரும்பி வந்ததால், மேலே சொன்ன வியர்வை நாற்றமும், மற்ற வாசனைகளும் அவரிடம் இல்லாமல் இருந்தன. பாலஸ்தீனை விட்டு வெளியே வாழ்ந்த கால கட்டத்தில் இயேசு தண்ணீர் அதிகமாக நிறைந்திருக்கும் பல நாடுகளில் வாழ்ந்ததால், பல் தேய்க்கவும், குளிக்கவும், ஒழுங்காகத் தலை வாரவும், தாடியைச் சீராக வைக்கவும் அவர் நன்கு படித்திருந்தார். அப்படி இருப்பதுதான் சொல்லப்போனால் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பயணத்தின்போது கிடைத்த உலக அனுபவங்களிலிருந்தும், வழியில் சந்தித்த குருக்களிடமிருந்தும் தனக்குக் கிடைத்த அறிவுடன் - மொத்தத்தில் முழுமையான நம்பிக்கையுடன் கலீலியில் இருக்கும் நாசரேத் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாயையும், தந்தையையும் தேடி வந்த இயேசு, இனி என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த காலம் அது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், இயேசுவிற்குக் குளிக்க வேண்டும் என்று தோன்றும். குறைந்தபட்சம் தலையையும் தாடியையும் கழுத்தையும் நீரில் கழுவி சுத்தப்படுத்த வேண்டும என்று தோன்றும். ஆனால், ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் இருந்து தன் வயதான தாயும், சகோதரிமார்களும், சகோதரர்களின் மனைவிமார்களும் சுமந்துகொண்டு வரும் தண்ணீர்தான் தற்போது வீட்டில் இருப்பது என்பதை இயேசு நன்றாகவே அறிவார். அது குளித்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக அல்ல. குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் உள்ள நீர் அது. சிறு பிள்ளையாக இருந்தபோது, இயேசுவும் தண்ணீர் சுமந்துகொண்டு வருவதில் அவர்களுக்கு உதவியாக இருந்திருப்பதால், அது எவ்வளவு கஷ்டமானது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்திருந்த தான் உயிருடன் திரும்பி வந்ததில் அவர்கள் எவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அந்த மகிழ்ச்சியில் எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்கள் தனக்கு குளிக்க நீர் கொண்டு வந்து தருவார்கள் என்பதையும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். ஆனால், அது நியாயமாகப்படவில்லை அவருக்கு. ‘நான் இவ்வளவு காலம் பல நாடுகளையும் சுற்றி அலைந்து அறிவு சம்பாதிச்சதாலும், குளித்து சுத்தமாக இருக்க படிச்சதாலும், இவர்களின் கஷ்டங்கள் குறைந்திருக்கிறதா என்ன!’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுப் பார்த்தார் இயேசு. விளைவு - குளிக்க வேண்டும் என்ற ஆசையை அவர் ஒதுக்கி வைத்தார். ஆனால் தாடி, மீசை இவற்றிலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மணமும், மீசைக்குள்ளே பேன் இருக்கிறதோ என்று சந்தேகப்படும்படி உண்டான அரிப்பும் இயேசுவை என்னவோ செய்தது. என்ன செய்வது என்று இயேசு யோசித்துப் பார்த்தார். மீசையை நீக்கிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமே என்று நினைத்தார். முற்றத்தில் இருந்த ஒரு மர நிழலில் கிடந்த ஒரு கட்டிலில்தான் இயேசு அமர்ந்திருந்தார். மெதுவாக எழுந்து நின்று அவர் உடலை நிமிர்த்தினார். தன்னையும் அறியாமல் அவர் தான் அணிந்திருந்த ஆடையின் தோள் பாகத்தை நுகர்ந்து பார்த்து, முகம் சுளித்தார். ஆடையை நீரில் சுத்தம் செய்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. சரி... முகத்தைச் சவரம் செய்துவிட்டு, கலீலித் தடாகத்தை நோக்கிப் போகலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அங்கே போனால் நன்றாகக் குளித்து முடித்து, அணிந்திருக்கும் ஆடையைத் துவைத்துக் காயப்போட்டு, காற்று வாங்கி, கிடைத்தால் கொஞ்சம் நல்ல மீன்களையும், அத்திப் பழத்தையும் வாங்கிக் கொண்டு வந்து தாயையும் சகோதரிகளையும் மகிழ்ச்சிப்படுத்தலாம் என்று தீர்மானித்தார் இயேசு.

நடக்க ஆரம்பித்த இயேசு பின்னர் என்ன நினைத்தாரோ திடீரென்று நின்றார். தன் கையில் காசு எதுவும் இல்லை என்பது அப்போதுதான் அவரின் ஞாபகத்தில் வந்தது. அணிந்திருந்த அங்கியின் பைக்குள் வெறுமனே கையை நுழைத்துப் பார்த்தார். ஒரு சல்லிக்காசு கூட அங்கே இல்லை. முதல்நாள் மாலை வீடு திரும்புகிறபோது வரும் வழியில் சீமோனின் பாட்டி தந்த, வறுத்த, உப்புப்போட்ட சோளத்தின் இரண்டு, மூன்று மணிகள் பைக்குள் கிடந்தன. அந்தச் சோளத்தைத் தின்றுகொண்டேதான் இயேசு வீட்டிற்கு வந்தார்.


இவ்வளவு வருடங்கள் கழித்து தான் வீடு திரும்பி வருகிறபோது, கையில் காசு எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்த்து யாரும் இதுபற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை என்றாலும்கூட, வீட்டில் உள்ளவர்கள் மனதில் அந்தக் கவலை இருக்கிறது என்பதை இயேசு உணராமல் இல்லை. அவரின் தந்தைக்கு வயதாகிவிட்டிருந்தது. அவரால் எதுவுமே பண்ண முடியாது. தம்பிமார்கள் வெறுமனே ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். திருமணம் செய்ய வேண்டிய சகோதரிகள் இன்னும் வீட்டில் இருக்கிறார்கள். மொத்தத்தில் - சொல்லப்போனால் பெண்களின் கடுமையான உழைப்பால்தான் அந்த வீட்டில் உள்ள வறுமையை வீட்டுவாசலுக்கு வெளியே நிறுத்தி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்த இயேசு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். ‘நான் கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய அறிவுடன் இந்த வீட்டுக்கு வந்து என்ன பிரயோஜனம்? அம்மாவையும், தங்கச்சிகளையும் இந்தக் கஷ்டத்திலிருந்து மீட்க என்னால் முடியலியே!’ என்று வருத்தத்துடன் நினைத்துப் பார்த்தார். அடுத்த நிமிடம் அவர் வீட்டைப் பார்த்தார். அவரின் தாய், அடுப்புக்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள். கடைசி தங்கை லைலா கறந்த ஆட்டுப்பாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். இயேசு தன் தங்கை லைலாவின் முகத்தைப் பார்த்தார். ‘உண்மையிலேயே இவள் ஒரு பேரழகிதான்!’ - இயேசு நினைத்தார். ‘வாழ்க்கையில் வாழ்வதற்கான வழியை நல்லா தெரிஞ்ச ஒரு பையன் இவளுக்குக் கணவனா வந்தா இவளோட அழகை அனுபவிக்கக்கூடிய பாக்யசாலியாகவும் அவன் இருப்பான்.’

மீசையை நீக்கலாமா என்று முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தீர்மானித்தார் இயேசு. புகையால் கண்கள் கலங்கிப் போயிருந்த அவரின் தாய், இயேசுவைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் சொன்னாள் : “உனக்குப் பசி எடுக்குதா? இதோ... வெந்த கொழுக்கட்டை இருக்கு. சாப்பிடு.” இயேசு சொன்னார் : “இப்ப ஒண்ணும் வேண்டாம்மா. தாடியையும் மீசையையும் இல்லாமப் பண்ணிடலாமான்னு பார்த்தேன். இது இருந்தா, ஒரே சூடா இருக்கு. அடிக்கடி சொறிய வேண்டியதிருக்கு!” லைலா பாலைச் சூடாக்குவதில் ஈடுபட்டிருந்தாள். தாயும் லைலாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்: “அய்யோ... வேண்டாம்.” லைலா தொடர்ந்து சொன்னாள் : “இப்படியிருக்கிறதுதாண்ணே உங்களுக்கு நல்லா இருக்கு! இதுதான் பார்க்குறதுக்கு அழகா இருக்கு. நீங்க எங்கேண்ணே இந்தத் தாடியையும், மீசையையும் வச்சீங்க?” இயேசு வீட்டை விட்டுப் புறப்பட்ட காலத்தில் லைலா பிறந்திருக்கவே இல்லை. ஆனால், இதுவரை கண்ணால் பார்த்திராத அண்ணனை அவள் ஏகப்பட்ட பாசத்துடன் வரவேற்றாள். லைலா அப்படிச் சொன்னதும், இயேசுவின் மனம் குளிர்ந்துவிட்டது. இயேசுவின் தாய் சொன்னாள் : “எது எப்படி இருந்தாலும், ரோமர்களைப் போல நாம முகத்தைச் சவரம் செய்றதுன்றது, அவ்வளவு நல்லதில்லை. தாடி, மீசை இருக்குறதுதான் யூதனுக்கு கவுரவம்.”

“பேன் உள்ளே இருக்குதுன்னு நினைக்கிறேன். அதனால ஒரே அரிப்பா இருக்கு...” - இயேசு சொன்னார். அதற்கு லைலா சொன்னாள்: “பரவாயில்லண்ணே.. .நான் ஆடுகளை மேயவிட்டுட்டு வந்து பேன் எடுக்குறேன்!” ஒரு கோழியை வேகமாக விரட்டிக் கொண்டு வந்த ஒரு சேவல் சமையலறைக்குள் நுழைந்தது. இயேசு ஒரு காலால் வீசி இரண்டையும் விரட்டியடித்தார். அவர் சொன்னார் : “அம்மா, நான் பெத்தனிக்குப் போயிட்டு வரட்டா? லாஸரஸையும் மார்த்தாவையும் பார்த்து எவ்வளவோ நாட்களாயிடுச்சு!” இயேசு மனதிற்குள் நினைத்தார்: ‘மார்த்தா, லாஸரஸ் - இரண்டு பேர்கிட்டயும் நிச்சயம் ஏதாவது காசு இருக்கும். மரியம் அவ்வளவு விவரம் இல்லாதவளா இருந்தால்கூட, அவள்கிட்ட இருந்து இன்னும் கொஞ்சம் காசு கடன் வாங்கணும். ஏற்கனவே அவள்கிட்ட வாங்கின காசையே திருப்பித் தரல. அதனால பரவாயில்லை. ஏதாவதொரு வழி பிறக்காமலா இருக்கும்? குளத்துப் பக்கம் போயி ரெண்டு வார காலத்திற்கு வலை வீசினால்கூட போதும்... எதுவுமே சரியா வரலைன்னா, உளியை மீண்டும் கையில எடுக்க வேண்யடியதுதான். பல வருஷங்களுக்கு முன்னாடி அப்பா சொல்லித் தந்ததை நான் இப்பவும் மறக்கல. உண்மையிலிலேயே ஊர் ஊரா சுற்றித் திரிஞ்சது எவ்வளவு சுகமான அனுபவம்! அப்படி அலையுறவங்க மேலதான் இந்த உலகத்துல இருக்குற மனிதர்களுக்கு எத்தனை ஈடுபாடு!’ இயேசுவின் தாய் சொன்னாள் : “இந்த வெயில்லயா? ரெண்டு நாட்கள் பயணம் செஞ்சேன்னா, நீ ரொம்பவும் களைச்சுப் போயிட மாட்டியா?” அதற்கு இயேசு சொன்னார் : “பரவாயில்லம்மா... ஊர் ஊரா சுத்தி எனக்குப் பழகிப்போச்சு. நான் போயிட்டு ஒரு வாரத்துக்குள்ள திரும்பி வந்திர்றேன்.” லைலா சொன்னாள் : “அண்ணே, மீசையை எடுக்கக்கூடாது தெரியுதா?” அதற்கு இயேசு சிரித்தவாறே சொன்னார் : “பார்க்கலாம். முடியே இல்லைன்னா என் முகம் எப்படி இருக்குதுன்னு நான் பார்க்க வேண்டாமா?” லைலா சொன்னாள் : “அண்ணே, தாடியும், மீசையும் இல்லைன்னா, நீங்க ஒரு அழகான பெண்ணைப்போல இருப்பீங்க.” “அதாவது - உன்னைப்போல....” - இயேசு சிரித்தார். அவரின் தாய் மகிழ்ச்சியுடன் சொன்னாள் : ‘’எது எப்படி இருந்தாலும்... என் பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல்!” இயேசுவின் முகத்தைப் பார்த்து, அந்த முகம் முடியில்லாமல் இருந்தால் எப்படியிருக்கும் என்று அந்தத் தாய் நினைத்துப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்னால் கண்ட தேவதூதனைப் போன்ற ஒரு மனிதரின் முகம் ஒரே நிமிடம் மின்னலைப்போல அவள் மனதில் தோன்றி மறைந்தது. அவள் ஒரு கையால் தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தாள்.

‘ததேவூஸ்கிட்ட கடன் சொல்லலாம்’ - நாவிதனின் சிறு வீட்டில் கால் வைக்கும் நிமிடத்தில் இயேசு மனதிற்குள் நினைத்துக் கொண்டார். அவர் போகும்போது கடையில் யாருமே இல்லை. ததேவூஸ் ஒரு பழைய பெஞ்சின் மேல் காலை நீட்டிப் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ‘எனக்கு முதல் முறையா முடி வெட்டின ததேவூஸ் இன்னைக்கும் அப்படியேதான் இருக்காரு!’ - இயேசு ஆச்சரியப்பட்டு நின்றார். ததேவூஸின் தலை முடி இலேசாக நரை விட்டிருந்தது. கொஞ்சம் தொந்தி போட்டிருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம். இன்னும் அவரிடம் இளமையின் மிடுக்கு இருந்தது. மனைவியும், மகளும் போக அவருக்கு மூன்று வைப்பாட்டிகள் வேறு. அந்த வைப்பாட்டிகளுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. சவரக்கத்தியை வைத்து அவர்கள் எல்லோரையும் அவர் எந்தவித குறைவும் இல்லாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இயேசு இலேசாகக் கனைத்தார். அடுத்த நிமிடம் ததேவூஸ் கண்களைத் திறந்தார்.


இயேசு ததேவூஸைப் பார்த்துப் புன்னகைத்தார். ததேவூஸ் எழுந்து உட்கார்ந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல், சவரம் செய்யும் நாற்காலியில் அமரும்படி சைகை காட்டினார். இயேசுவை அவர் அடையாளம் கண்டது மாதிரி தெரியவில்லை. அப்போதுதான் நாற்காலிக்கு முன்னால் இருந்த தட்டில் ஒரு பொருளை இயேசு பார்த்தார். அது ஒரு கண்ணாடி! பூக்கள் கொத்தப்பட்ட பலகையால் ஆன சதுரத்திற்குள் ஒரு கண்ணாடி! இயேசு கண்ணாடியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை ததேவூஸ் கவனித்தார். அவர் கொட்டாவி விட்டவாறே சொன்னார் : “ரோம் நாட்டுப் படைத் தளபதியோட மகளுக்கு நடந்த கல்யாணத்தப்போ கிடைச்ச பரிசுப்பொருள் இது. இரண்டு வாரம் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு முடி வெட்டிவிட்டதும், சவரம் செய்ததும் நான்தான். ஆனால், இந்தக் கண்ணாடி அதற்காகக் கிடைச்சது இல்ல. படைத் தளபதியோட மனைவியின் சில உறுப்புகளுக்குச் சவரம் செய்ததனால் இது கிடைச்சது. படைத்தளபதி அதைப் பார்த்திருப்பார் போல! ஹோ... ரோமர்களோட இந்தப் போக்கு எங்கு போய் முடியப்போகுதோ? வாழ்க்கையில அவங்களுக்கு எப்பவும் இருக்குறது ஒரே ஒரு சிந்தனைதான்!” – ததேவூஸ் தன் கைவிரலால் ஒரு மாதிரி காட்டினார். அதைப்பார்த்து இயேசு புன்னகைத்தார். இயேசு இப்போதும் கண்ணாடியையே பார்த்தார். திடீரென்று தன்னை எதுவோ பிடித்துக் குலுக்குவதுபோல் அவர் உணர்ந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டி எழுப்புவதைப்போல, யாரோ தனக்குள் இருந்துகொண்டு தன் மனக்கதவைத்தட்டி என்னவோ சொல்வது போல் உணர்ந்தார் இயேசு: ‘போ... போ... கண்ணாடிக்குப் பக்கத்தில் போ. இந்தக் கண்ணடியை எடுத்து உன்னோட முகத்தைப் பார். நீ அழகானவன்தானா? தெய்வத்தின் சாயல் உனக்கு இருக்குதா? கடவுள் ராஜ்யத்தின் அடையாளம் எதுவாவது உன்னோட முகத்தில் தெரியுதா? இதையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா? சவரம் செய்றதுக்கு முன்னாடி உன்னோட மீசை எப்படி இருக்குன்னு நீ பார்க்க வேண்டாமா?’ அவ்வளவுதான் - அடுத்த நிமிடம் இயேசுவின் உடல் நடுங்கியது. விரல்கள் ஏனோ துடித்தன. இயேசு ஒருவித நடுக்கத்துடன் தன் இரு கைகளையும் மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார். இயேசுவின் தலைக்குள் யாரோ பேசினார்கள். ‘ரெண்டடி முன்னால் வா. பிறகு... குனிந்து பார். நீ யார்னு உனக்குத் தெரியும். உன்னைப் பற்றிய எல்லா ரகசியங்களையும் நீ தெரிஞ்சுக்கலாம். தண்ணீர்லயும், சீனப் பீங்கான்லயும் பார்த்திருக்கிற உன்னோட முகத்தை இல்ல.. வா... வா... உன்னோட உண்மையான முகத்தைக் காண வா...’ வெளியே காய்ந்துகொண்டிருந்த வெயிலை ஒரு விளக்கு போலக் காட்டிய கண்ணாடி இயேசுவை அழைத்தது. இயேசு உண்மையிலேயே நடுங்கினார். அவருக்கு மூச்சடைப்பதுபோல் இருந்தது. ‘வேண்டாம்... வேண்டாம்...’ - இயேசு நிசப்தமாக கண்ணாடியைப் பார்த்துச் சொன்னார்: “நீ என்னை எனக்குக் காட்டித் தரவேண்டாம். நான் என்ன பார்க்கிறேன் என்பது எனக்குத் தெரியவே வேண்டாம். எனக்கு பயமா இருக்கு!” - கண்ணாடி மணி முழக்கம் போன்ற உரத்த குரலில் சொன்னது: “வா இயேசு வா... உனக்கு தெரியுமா? நீ எனக்குள்ளே இருக்கே. ரெண்டே ரெண்டடி முன்னாடி வந்து நின்னு கொஞ்சம் குனிந்து பார். நாம மூணு பேருமே ஒண்ணு!” இயேசு சொன்னார் : “இல்ல... இல்ல... நான் பார்க்க வேண்டியதை நீ காட்டுவியா? இல்ல... இல்ல...” - தன் அங்கிக்கடியில் வியர்வை ஆறாய் பெருகி வழிவதை இயேசுவால் உணரமுடிந்தது. கொடுங்காற்றில் தான் சிக்கிக் கொண்டதைப்போல இயேசு ஆடினார். மணி ஒலிப்பதுபோல கண்ணாடி மீண்டும் பேசியது. “நீ முதல்ல என் முன்னாடி வந்து என்னைப்பார். உன் உதடுகளைப்பார். உன் கண்களைப்பார். தாடி, மீசையைப் பார். மூக்கைப் பார். நெற்றியைப் பார். எல்லாம் பார்த்தப்புறம் மற்ற விஷயங்களை நாம தீர்மானிப்போம்.” “வேண்டாம்... வேண்டாம்...” - இயேசு நிசப்தமாக அலறினார். வெயிலின் ஒரு கீற்றை எடுத்துப் பிரதிபலித்த கண்ணாடி கரகரப்பான சத்தத்தில் சொன்னது: “முட்டாள்... நீ தேடுறதெல்லாம் இங்கே இருக்கு. நீ ஒரு தடவை என்னைப் பார்த்தால் போதும். நீ ஏன் இப்பவும் பார்க்கத் தயங்குறே? சக்திகள்... மரணமில்லாமை...” - இயேசு தன் இருகைகளாலும் தன் காதுகளை இறுக மூடிக்கொண்டார். ஓங்கிக் கத்த வேண்டும் போலிருந்தது. அதை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.

“கண்ணாடியை உனக்கு மிகவும் பிடிச்சிருக்குல்ல...?” - ததேவூஸ் கேட்டார். தட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து இயேசுவிற்கு நேராக நீட்டிய அவர் சொன்னார் : “வா... வாசலுக்கு நேராகத் திரும்பி வெளிச்சத்தில் நின்னு நல்லா இதைப்பாரு. இப்பவும் உனக்கு நல்ல பிரகாசமான முகம்தான். இவ்வளவு காலம் நீ எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு திரும்பியிருந்தாலும், உன்னோட முகத்துல ஒரு ஒளி இருக்கவே செய்யுது!” இயேசு அதிர்ந்துபோய் பின்னால் நகர்ந்து நின்று தளர்ந்து போன குரலில் சொன்னார்: “வேண்டாம்... வேண்டாம்... நான் இன்னொரு நாள் வர்றேன்.” ததேவூஸ் சிரித்தார்: “சரி இயேசு... என்னோட மூணாவது மகளை நீ பார்த்திருக்கியா? இவ்வளவு அழகான ஒரு பெண் கலீலில் இல்லவே இல்ல... லைலாவோட தோழிதான் அவள். அவள் எப்போதும் உன்னைப் பற்றிச் சொல்லுவா. இனியாவது நீ ஒரு குடும்பமா - நான்கு பேர் மதிக்கிற மாதிரி வாழவேண்டாமா?” - இயேசு ஒரு அப்பாவியைப் போல ததேவூஸை உற்று நோக்கியவாறு சொன்னார்: “எனக்கு நேரமாயிடுச்சு... எனக்கு நேரமாயிடுச்சு... நான் ஓடிப்போகட்டுமா?” அடுத்த நிமிடம் ததேவூஸுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெளியே இறங்கி படுவேகமாக நடக்க ஆரம்பித்தார் இயேசு.

இரண்டு நாட்கள் கழித்து இயேசு பெத்தனியில் இரக்கும் மார்த்தாவின் வீட்டிற்கு வரும்போது சாயங்காலம் ஆகிவிட்டிருந்தது. மரியம் மாலை வெயிலைப் பார்த்தவாறு வாசலில் உட்கார்ந்திருந்தாள். இயேசுவின் முகம் காற்றும், வெயிலும், குளிரும் பட்டு மிகவும் கருத்துப் போயிருந்தது. கண்கள் குழிக்குள் கிடந்தன. அங்கி வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக்கிடந்தது. கால்களில் முட்டிவரை செம்மண்ணும், தூசியும், அழுக்கும் ஒட்டி இருந்தன. இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மரியம் அடித்துப் பிடித்து எழுந்து நின்றாள். இயேசு தன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தபோது, அதிலிருந்து தூசு பறந்தது. மரியம் மகிழ்ச்சியுடன் முற்றத்தை நோக்கி வந்தாள் : ‘’மரியம்...” - இயேசு சொன்னார் : “எனக்கு ரொம்பவும் தாகமா இருக்கு. குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடு.” “மது இருக்கு. தரட்டுமா?” - மரியம் கேட்டாள்.


 “வேண்டாம்...” - இயேசு சொன்னார்: “மது பிறகு... இப்போ குளிர்ச்சியான நீர் கொடு....” தண்ணீர் எடுக்கப்போகும் வழியில் மரியம் சொன்னாள்: “நீ இங்கே வருவேன்னு என் உள்மனசுல தோணுச்சு. அதனாலதான் நான் உனக்காக வாசல்ல காத்திருந்தேன். நீ வந்தப்போ மூவந்தி நட்சத்திரம் வானத்துல தெரிஞ்சது. நீ நட்சத்திரம் உதிப்பதைப் பார்த்திருக்கியா?” இயேசு அதற்கு ஒன்றும் பதில் பேசவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். இயேசு அதை வாங்கி பாதி குடித்தார். மீதியை கையில் கொட்டி முகத்தையும் கண்களையும் கழுவினார். மரியம் மீண்டும் வராந்தாவில் வந்து உட்கார்ந்தாள். இயேசு அவளின் மடியில் தலையை வைத்தவாறு வராந்தாவில் படுத்தார்.

“மார்த்தாவும் லாஸரஸும் எங்கே?” - இயேசு கேட்டார். “சந்தைக்குப் போயிருக்காங்க. இப்போ வந்திடுவாங்க” - இயேசுவின் நெற்றியில் கை வைத்தவாறு மரியம் சொன்னாள். இயேசு கேட்டார்: “மரியம்... நீ கண்ணாடி பார்த்திருக்கியா?” “இல்ல...” - மரியம் சொன்னாள்: “கண்ணாடி ரோமன் பணக்காரர்கள் கிட்டதான் இருக்கு. நீ அதைப் பார்த்திருக்கியா என்ன?” இயேசு சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. சிறு இடைவெளிக்குப் பிறகு மரியத்தின் முகத்தைப் பார்த்தவாறு சொன்னார்: “இல்ல...” “அதை மட்டும் நீ பார்த்திருந்தா, நீ ஒரு அழகான இளைஞன்றதை நீ தெரிஞ்சிருப்பே!” - குனிந்து இயேசுவின் வறண்டுபோன உதடுகளில் முத்தத்தைப் பதித்த மரியம் சொன்னாள். இயேசு அதற்கு பதிலொன்றும் சொல்லவில்லை. அவர் தலையைத் திருப்பி ஆகாயத்தைப் பார்த்தார். வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்து கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. திடீரென்று மரியம் தலையைத் தாழ்த்தி இயேசுவின் முகத்தையே உற்று நோக்கினாள். அவள் ஆச்சரியத்துடன் இயேசுவின் கண்களையும், கன்னத்தையும் தொட்டவாறு கேட்டாள்: “என்ன பேசாம இருக்குறே? அழறியா என்ன?” மரியம் தன் முகத்தை இயேசுவின் முகத்தோடு ஒட்டி வைத்துக்கொண்டு சொன்னாள் : “இயேசு.... உனக்கு என்ன ஆச்சு?” இயேசு மரியத்தின் கழுத்தைச் சுற்றிலும் தன் இரு கைகளையும் கோர்த்தார். அவரின் கன்னங்கள் மீண்டும் நனைந்தன. இயேசு சொன்னார்: “மரியம்… எனக்கு பயமா இருக்கு!” மரியம் இயேசுவின் இருட்டில் தெரிந்த முகத்தை கவலையுடன் பார்த்தாள். பிறகு... தன் ஒரு கையை அவரின் உதடுகளில் வைத்தவாறு மெதுவான குரலில் அவள் சொன்னாள் : “ஷ் சாயங்கால நேரத்துல தேவையில்லாதது எல்லாம் பேசாதே. தெய்வ கோபம் உண்டாகப் போகுது.” இயேசு இலேசாக அழுதவாறு தலையைத் திருப்பி, தன்னோட நனைந்த முகத்தை மரியத்தின் சூடுள்ள மடியில் அமர்த்தினார்.

(புனுவலுக்கு நன்றி. புனுவலின் ‘மில்க்கி வே’ என்ற படத்தில் இயேசு முகத்தைச் சவரம் செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கிற காட்சி இருக்கிறது என்று சமீபத்தில் என்னுடைய நண்பர் சுரேஷ் பாட்டாலி சொன்னதைக் கேட்டு, நான் எழுதிய கதை இது.)

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.