Logo

ஒளியைப் பரப்பும் இளம்பெண்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6428
Oliyai Parappum Ilampen

காலையில் நீண்ட தூரம் பயணம் போய் விட்டு வரலாம் என்று வீட்டைவிட்டுப் புறப்பட்ட நான் போகும் வழியில் என் பழைய நண்பன் ஒருவனைப் பார்த்தேன். அவனும் நானும் நடந்து இரவின் மது போதையில் இருந்து இன்னும் மீண்டிராத ஒரு பாருக்கு முன்னால் நடந்தோம். பாதி திறந்திருக்கும் அதன் வாசல் கதவைப் பார்த்தவாறே நாங்கள் சிறிது நேரம் பாதையின் எதிர்ப்பக்கத்தில் இருந்த சாய்வு பெஞ்சில் உட்கார்ந்தோம். பறவைகள் ஆகாயத்தில் ஓசை எழுப்பியவாறு பறந்து போய்க்கொண்டிருந்தன. காற்று, “ஸ்ஸ்ஸ்...’ என்று பலமாக வீசி மரத்திலிருந்த இலைகளை வீழ்த்தியது. கீழே விழுந்த இலைகள் எங்களைச் சுற்றிலும் பரவிக்கிடந்தன. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாங்கள் பாதி அடைக்கப்பட்டிருக்கும் பாரின் கதவை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

பாரில் மது ஊற்றிக் கொடுக்கும் பரிசாரகன் கொஞ்சம் கோபக்காரன் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம். அந்த ஆளின் முகம் எப்போதும் வெளிறிப்போய் பார்க்க சகிக்க முடியாத அளவுக்கு அவலட்சணமாக இருக்கும். அவன் வாயைத் திறந்தால், அவன் குரல் அவ்வளவு கர்ண கொடூரமாக இருக்கும். அவன் பேச ஆரம்பித்தால், வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் காதால் கேட்க முடியாது. பண வசதி இல்லாத சாதாரண மனிதர்களைக் கண்டால், அந்த ஆளுக்குப் புழு, பூச்சி மாதிரி அவ்வளவு கேவலமாகத் தெரியும். இருந்தாலும், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நாங்கள் பாதி திறந்திருக்கும் கதவை நெருங்கினோம். நாங்கள் மிகவும் அலட்சியமாக அந்த பாரைப் பார்த்தோம். ஆனால், எங்களின் பார்வை என்னவோ கதவுக்குப் பின்னால் இருந்த இருட்டை நோக்கியே இருந்தது. நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்து கொண்டிருந்தது. ஆகாயத்தில் மேகங்கள் படு வேகமாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. பாரின் முற்றத்தில் இருந்த விசிறிப் பனை மரத்தின் காய்ந்துபோன ஓலையில் இருந்து ஒரு வவ்வால் குஞ்சை வாயில் கவ்வியவாறு பாம்பு ஒன்று வேகமாக ஓடியது.

மங்கலாக ஒரு பல்பு பாரின் ஹாலில் எரிந்துகொண்டிருந்தது. இரவில் நிறுத்துவதற்கு மறந்துபோன ஒரு மின்விசிறி உறக்கத்தில் இருப்பதுபோல மெதுவாகச் சுற்றிக்கொண்டிருந்தது. தாங்க முடியாத வீச்சம் தரையில் இருந்தும் மேஜையில் இருந்தும் மூலைகளில் இருந்தும் புறப்பட்டு எங்களை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஒரு மூலையில் சுவரோடு சேர்த்துப் போடப்பட்டிருந்த மர நாற்காலிகளின் மேல் எங்களுக்குப் பிடிக்காத மது ஊற்றும் மனிதன் இருண்டுபோன முகத்துடனும், தடிமனான உதடுகள் வழியே குறட்டை விட்டவாறும் உலகையே மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். அந்த ஆளுக்கு மேலே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த எண்கள் அழிந்து போயிருக்கும் கடிகாரம் ஏழுமுறை அடித்தது. படுத்திருந்த நாற்காலிகள் மிகவும் சிறியதாக இருந்ததால், வசதியாகப் படுக்க முடியாமல் இப்படியும் அப்படியுமாய் நெளிந்த மது ஊற்றும் மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பக்கமாய்த் திரும்பிப் படுத்தான்.

நாங்கள் எதுவுமே பேசாமல், அமைதியாக நின்றவாறு மங்கலான வெளிச்சத்தில், எங்களுக்கு நன்கு பழக்கமான வயதான மனிதரைத் தேடினோம். ஆனால், யாருமே இல்லை. எங்கள் விரோதியான அந்த மது ஊற்றும் மனிதனின் குறட்டைச் சத்தம் மட்டும்தான் காதில் விழுந்துகொண்டிருந்தது. அதோடு மின்விசிறியின் ஓசை வேறு கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று எங்களுக்குப் பின்னால் இருந்த ஒரு சிறு அறைக்குள் இருந்து மங்கலான வெளிச்சம் புறப்பட்டு வந்தது. அதற்குள் இருந்து கொட்டாவி விட்டுக் கொண்டும், புகை பிடித்துக்கொண்டும் இரண்டு வேலைக்காரர்கள் வெளியே வந்தார்கள்.

நாற்காலிகள் தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மேஜைகளுக்கு நடுவே அவர்கள் இரண்டு பெருக்குமார்களைக் கையில் வைத்தவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். எலும்புத் துண்டுகளும், சிகரெட் துண்டுகளும், மீன் முற்களும், கறிவேப்பிலைகளும், அவர்கள் பெருக்க பெருக்க பெருக்குமார்களுக்கு முன்பு வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. நாங்கள் அவர்கள் பெருக்குவதற்கு வசதியாக ஒதுங்கி நின்றோம். பிறகு... மெதுவாக எழுந்து போய் வெளியே விசிறிப்பனை மரத்திற்குக் கீழே போய் நின்றோம். அருமையாக அங்கு காற்று வீசிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் சூரியன் சுள் என்று எரிந்து கொண்டிருந்தான். நான் மேலே அண்ணாந்து, காய்ந்து போன் பனை ஓலைகளைப் பார்த்தேன். ‘குஞ்சை இழந்த தாயே... நான் உனக்காக வருத்தப்படுறேன்’ - நான் சொன்னேன்.

நாங்கள் மீண்டும் பாருக்குள் திரும்பி வந்தபோது, எங்களின் விரோதியான பரிசாரகன் தூக்கம் கலைந்து எழுந்து, தொடர்ச்சியாக ‘லொக் லொக் என்று இருமியவாறு, வாய் நிறைய சளியை வைத்துக் கொண்டு ஒரு கையால் வேஷ்டியை இறுகப் பிடித்தவாறு உள்ளே போனான். நாங்கள் கொஞ்சம் பின்னால் நகர்ந்து நின்றோம். அப்போ எங்களுக்கு மிகவும் விருப்பமான வயதான ஆள் சோப் வாசனை கமழ, நெற்றியில் சந்தனம் அணிந்தவாறு, வாயில் வெற்றிலை போட்டு மென்றுகொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த ஆளைப் பார்த்ததும் எங்களின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டானது. அவர் எங்களைப் பார்த்துப் பிரியத்துடன் புன்னகைத்தார். தலையை ஆட்டி எங்களைப் பார்த்ததைக் காட்டிக் கொண்டார். வாயில் ஒதுக்கி வைத்திருந்த வெற்றிலைக்கு நடுவே என்னவோ அவர் சொல்ல முயற்சிப்பது தெரிந்தது. பிறகு... தலைகீழாக வைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை ஒரு மேஜையிலிருந்து கீழே இறக்கி, மேஜைகளை ஜன்னலையொட்டி போட்டார். மேஜையின் மேற்பகுதியை முழுமையான ஈடுபாட்டுடன் சுத்தம் செய்தார்.

நாங்கள் இவ்வளவு சீக்கிரம் அங்கு வந்து உட்கார்ந்திருந்ததை யாரும் கேள்வி கேட்கவில்லை. கண்ணாடி டம்ளர்களைக் கொண்டு வந்து வைத்தார்கள். எங்களுக்காக அடுப்பறையில் யாரோ தீ மூட்டுவதை எங்களால் உணர முடிந்தது. சோடா புட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ் பெட்டியின் சாவியைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். எங்களுக்காக அடுப்பறையில் முட்டை பொரித்துக் கொண்டிருந்தார்கள். நேற்று வறுத்த மீன் துண்டு கண்ணாடி அலமாரியில் இருந்தது. அதைச் சூடு பண்ண ஆரம்பித்தார்கள்.

நானும் நண்பனும் அவர்கள் மவுனமாகச் செய்துக்கொண்டிருந்த எல்லா வேலைகளையும் வாய் திறந்து பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். பாரின் உள்ளறைக்குள் நுழைந்துபோன அந்த முரட்டுத்தனமான பரிசாரகன் திரும்பி வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனப்பூர்வமாகக் கடவுளிடம் பிரார்த்தித்தோம். அந்த ஆளுக்கு நாங்கள் தரவேண்டிய பணம் எவ்வளவு என்று மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்த்தோம். வயதான பெரியவர் மதுவை எங்களுக்கு ஊற்றினார். நாங்கள் குடிக்க ஆரம்பித்தோம். தொண்டை வழியாக சூடாக மது இறங்கி, உள்ளே சென்றது.


நேரம் செல்லச் செல்ல பாருக்குள் ஆட்கள் வரத் தொடங்கினார்கள். அவர்களுக்குள் நாங்களும் சங்கமம் ஆனோம். மூத்திரம் பெய்யலாம் என்று நான் போனால், அங்கு எங்களின் விரோதியான அந்த ஆளைப் பார்க்க வேண்டி நேரிட்டுவிட்டது. சிறுநீர் கழிக்கும் இடத்திற்கு வெளியே இருந்த சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த ஒரு சிறு கண்ணாடியைப் பார்த்து அந்த ஆள் தலைவாரிக் கொண்டிருந்தான். சிவந்துபோய் காணப்பட்ட தன் கண்களை அகலமாக விரித்துப் பார்த்து, முகத்தைக் கைகளால் தடவி தன் அழகை அவன் ரசித்துக் கொண்டிருந்தான். நான் அந்த ஆளைக் கடந்து போவதற்கு தைரியமில்லாமல், தயங்கி நின்றேன். அவன் சமையலறைப் பக்கம் போகட்டும் என்பதற்காக நான் அங்கேயே நின்றிருந்தேன். ஆனால், அந்த ஆள் போகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு மாறாக, கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு தன் முக அழகை ரசித்தவாறு, புகை பிடிக்க ஆரம்பித்தான். நான் மீண்டும் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்து, அங்கு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்த என் நண்பனைத் தட்டி எழுப்பினேன். சிறுநீர் கழிப்பதற்காக எழுந்த அவன், நான் சொன்ன செய்தியைக் கேட்டதும், மீண்டும் நாற்காலியிலேயே அமர்ந்து தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டான். “நாம வெளியே போய் ஒண்ணுக்கு இருந்துக்குவோம்”’ - நான் சொன்னேன். “அங்கே பாம்பு இருக்கே!” - நண்பன் சொன்னான். நான் பாம்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன்.

சிறிது நேரம் சென்றதும், பார் பயங்கர சுறுசுறுப்பானது. எப்போதும் போல உள்ளே நல்ல கூட்டம். கதவு திறப்பதும் மூடுவதுமாக இருந்தது. அதனால் உள்ளே இருட்டும் வெளிச்சமும் மாறி மாறித் தெரிந்து கொண்டிருந்தது. இருட்டுக்கு மத்தியில் அவ்வப்போது வெளிச்சத்தின் கீற்று... அப்போது தெரிந்த வெளிச்சத்துக்கு நடுவில் எங்களின் விரோதியான அந்தப் பரிசாரகன் தெரிந்தான். அந்த ஆள் எங்களின் மேஜைமேல் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் கண்கள் கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல படுபிரகாசமாக இருந்தது. நாங்கள் அசட்டுத்தனமாகச் சிரித்தவாறு அந்த ஆளைப் பார்த்தோம். அந்த ஆள் மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு, தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கொண்டு, எங்கள் இருவர் முதுகையும் தட்டினான். வேண்டுமென்றே, அந்த ஆள் எங்களைக் கேலி செய்கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, நாங்கள் இவருரும் மரம் மாதிரி அசைவே இல்லாமல் உட்கார்ந்திருந்தோம். அப்போது அந்த ஆள் எங்களை பார்த்துச் சொன்னான்: “பரவாயில்ல... கையில காசு இருக்குறப்போ தந்தா போதும். இன்னைக்கு சரியா சாப்பிட்ட மாதிரி தெரியலியே!” நாங்கள் நன்றிப் பெருக்குடன் அந்த ஆளைப்பார்த்துப் புன்னகைத்தோம்.

பிறகு... நான் கண்களைத் திறந்து பார்த்தபோது முல்லைப்பூ வாசனை மூக்கைத் துளைத்துக்கொண்டிருந்தது. என்னைச்சுற்றிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நான் மழையை நோக்கிக் கையை நீட்டினேன். என் கை ஒரு கண்ணாடிப் பலகையில் போய் இடித்தது. முல்லை பூ மணம் என் முகத்தை நோக்கி காற்றில் மிதந்து வந்துகொண்டே இருந்தது. மழையோடு சேர்ந்து கீழே இறங்கி வந்த ஆகாயம் நிலத்தைத் தொட்டுக் காட்சியளிக்கும். இதற்கு முன் எனக்கு அறிமுகமே இல்லாத ஒரு சமவெளியில் ஓடும் ஒரு பஸ்ஸுக்கள் நான் உட்கார்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால், என்னை எனக்குப் புரியவில்லை. நான் ஆச்சரியத்துடன் என்னைச் சுற்றிலும் பார்த்தேன்.

பல பயணிகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருக்கும் நான் உண்மையில் யார்? என்னுடைய பெயர் என்ன? இந்த மழை விழுந்து கொண்டிருக்கும் இடம் எங்கே இருக்கிறது? இந்த முல்லைப்பூ வாசனை எங்கே இருந்து வருகிறது? எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளம் பெண்ணின் கூந்தலில் சூடியிருந்த முல்லைப்பூ மாலையில் இருந்து புறப்பட்டு காற்றில் மிதந்து வரும் மணம்தான் என் நாசித் துவாரத்திற்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நான் அந்தப் பூமாலை சூடியிருக்கும் இளம் பெண்ணையே பார்த்தேன். திடீரென்று - கொஞ்சமும் எதிர்பாராமலே முல்லைப்பூ மாலைக்குச் சொந்தக்காரியான அந்த இளம் பெண் மையிட்ட கண்களால், வெள்ளி போல் மின்னிக்கொண்டிருந்த பொட்டு இட்ட நெற்றியால், அமைதியான கறுத்த உதடுகளால் என்னையே பார்த்தாள். நான் பதறிப்போய், உடம்பே குளிர்ந்து போய் ஒரு மூலையில் சுருண்டு உட்கார்ந்தேன். இனி என்ன செய்வது? நான் யார்? நான் ஜன்னலைக் கொஞ்சம் திறந்து வைத்து, மழைத் துளிகளைக் கண்ணீரோடு சேர்ந்து என் முகத்தில் விழும்படிச் செய்தேன். பயணத்தின் இலக்கு தெரியாத, எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எனக்காக, மரண நிமிடம் என்ற எண்ணத்தில் நான் தேம்பித்தேம்பி அழுதேன்.

அப்போது நான் அதிர்ச்சியடையும் வண்ணம் அந்த இளம் பெண்ணின் கூந்தலில் இருந்து ஒரு முல்லைப்பூ உதிர்ந்து ஒரு வெளிச்சம்போல என் மடியில் வந்து விழுந்தது. நான் ஒரு நிமிடம் அந்தப் பூவையே நம்பிக்கை இல்லாமல் பார்த்தேன். பிறகு... அதைக் கையிலெடுத்து, கண்ணீர் வழிந்து கொண்டிருந்த என் கன்னத்தில் வைத்து, மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தேன். அந்தப் பூவிற்கு குளிர்ச்சி, மென்மை, பிரகாசம் எல்லாம் கலந்து இருந்தன. அந்தப் பூவின் வாசனை என்னை பலமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி என் மேல் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது. மழைத் துளிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு, அதுவும் என்னைத் தாலாட்டியது. நான் புன்சிரிப்புத் தவழ, பூவை மீண்டும் முகர்ந்து பார்க்க முயற்சித்தபோது, கறுத்த உதடுகளைக் கொண்ட, மினுமினுக்கும் வெள்ளிப் பொட்டு இட்டிருக்கும் அந்த இளம் பெண் கேட்டாள் : “இந்த பஸ்.... க்குத்தானே போகுது?” “ஆமா... ஆமா... மூச்சுவிடாமல் நான் சொன்னேன்: “…க்குப்போற பஸ் இது. என்னோட பேரு... நான்... இருந்து வர்றேன். இந்த முல்லைப் பூவை நான் வச்சுக்கலாமா?” அவள் கறுத்த உதடுகளை விலக்கி வெண்மையான பற்களால் என்னை மயக்கியவாறு சிரித்தாள். தொடர்ந்து சொன்னாள் : “உங்களை நான் புரிஞ்சிக்கிட்டேன்.” நான் மூச்சை அடக்கிக்கொண்டு என் நெஞ்சு ‘டிக் டிக்’ என்று அடிக்க, சொன்னேன் : “நானும்தான். நானும் உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன்... ஒளியைப் பரப்பும் இளம் பெண் நீ.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.