Logo

டி.க்யூலாவின் முத்தம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6563
D.Culavin-mutham

ன்று என் பெரிய மாமா என்னை அழைத்துச் சொன்னார்:

"டேய், கோபி. நாளைக்குத்தான் உஷாவோட நாள். சிஸேரியன். கட்டாயம் இரத்தம் வேணும். ஓ-நெகட்டிவ் இரத்தம் இருக்கிற ஆளுங்க யாரையும் உனக்குத் தெரியுமா?"

"பெரிய மாமா...." - நான் சொன்னேன்: "எனக்கு இருக்கிறது ஓ- நெகட்டிவ் இரத்தம்தானே?"

"அப்படின்னா நல்லதாப் போச்சு"- பெரிய மாமா சொன்னார்: "நீ ஒருத்தன் மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா, பின்னாடி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதுனால, உன்னோட நண்பர்கள் யாருக்காவது ஓ-நெகட்டிவ் இரத்தம் இருக்குதான்னு பாரு. முரளியும் ஒரு பக்கம் இரத்தம் சம்பந்தமா விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கான்."

உஷாவுக்கு இரத்தம் கொடுப்பதற்கு உண்மையாகவே நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவளின் வயிற்றில் இருக்கும் குழந்தை அவள் கணவன் முரளிக்குக் சொந்தமானதாக இருந்தால்கூட என்னைப் பொறுத்தவரை அது என் குழந்தை என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு உஷாவை நான் காதலிக்கிறேன். ஆனால் பெரிய மாமாவுக்கு பயந்துகொண்டு நான் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்பதே உண்மை.

நான் சொன்னேன்: "பெரிய மாமா, அதைப்பத்தி நீங்க கவலையேபடாதீங்க. இரத்தம் கிடைக்கிறதுக்கான வழிகளை நான் பார்க்கிறேன்." ஆனால் நான் வங்கிக்குச் சென்று காலை நேர கடுமையான பணிகளுக்கு மத்தியில் ஒவ்வொருத்தரையும் அழைத்துக் கேட்டபோது, இரண்டே இரண்டு பேரிடம்தான் ஓ-நெகட்டிவ் இரத்தம் இருந்தது. ஜார்ஜும் இராமச்சந்திரனும். அவர்களோ எல்.டி.ஸி. எடுத்து குடும்பத்துடன் ஊட்டிக்குப் போய் விட்டிருந்தார்கள்.

வேகமாக வவுச்சர் எழுதிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் உஷாவின் வயிறு எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தேன். மதியநேரம் கழிந்தபிறகு எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது. நான் பெரிய மாமாவை தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: "பெரிய மாமா, ஒரு பிரச்னை. இரத்தம் வாங்கிடலாம்னு நான் நினைச்சு வச்சிருந்த யாரும் இப்போ இங்கே இல்ல. முரளி என்ன சொன்னான்?"

"அவன் யார்கிட்டயோ சொல்லி வச்சிருக்கான்னு நினைக்கிறேன். எனக்கு அதைப்பத்தி சரியா தெரியல!"

"பெரிய மாமா..."- நான் சொன்னேன்: "ரிஸ்க் எடுக்க வேண்டாம். கொஞ்சம் இரத்தம் வாங்கினா நல்லதுன்னு நான் நினைக்கிறேன்."

"சரி... அப்படியே செய்வோம்"- பெரிய மாமா சொன்னார்.

"ஆனா, ரொம்ப கவனமா இருக்கணும். இப்போ எய்ட்ஸ் அது இதுன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு!"

"அதைவிட பயங்கரம் ஹெப்பட்டைட்டீஸ்-பீ" நான் சொன்னேன்: "அதை நான் கவனமா பார்த்துக்குறேன்."

"உன் கையில பணம் இருக்கா?"

"இருக்கு!"

"அப்படின்னா நீ உஷா இருக்கிற மருத்துவமனைக்குப் போயி சீட்டு வாங்கிட்டு இரத்த வங்கிக்குப் போயி ஆகவேண்டிய வேலைகளைப் பாரு. அவளோட அறை எண்: 34."

நான் மூன்று மணி கழிந்ததும், மெதுவாக எழுந்துபோய் மேலாளரிடம் சொன்னேன்: "சார்... நான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும். என்னோட பெரிய மாமா மகளுக்கு சிஸேரியன். அதுக்கு இரத்தம் தயார் பண்ண வேண்டியதிருக்கு..."

இரண்டு கைகளிலும் ஒவ்வொரு தொலைபேசியை வைத்துப் பேசிக் கொண்டிருந்த மேலாளர் நான் சொன்னதைக் கேட்பதற்காக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினார். பிறகு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவாறு என்னிடம் கேட்டார்: "இரத்தமா?"

உலர்ந்து போயிருந்த உதடுகளை நாக்கால் நக்கி நனைத்தவாறு அவர் என்னைப் பார்த்தார்.

"ஆமா, சார்..." - நான் சொன்னேன்.

"வெரிகுட்..." -மேலாளர் சொன்னார்: "ஆமா... நீ எந்த ப்ளட் பேங்குக்குப் போற?"

"ஒரு நல்ல ப்ளட் பேங்கா பார்க்கணும், சார்"- நான் சொன்னேன்.

"நல்ல ஒரு ப்ளட் பேங்க் இருக்கு"- மேலாளர் சொன்னார்: "புல்காடு பள்ளி கல்லறைக்குப் பின்னாடி கற்பகுஸுமம் சாலை தெரியுமா?"

"தெரியும்!"

"அந்த சாலையில ஒரு புதிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கு. பாத்திருக்கியா? நித்யஜீவன் ப்ளாஸா, அந்தக் கட்டிடத்தோட மூணாவது மாடிக்குப் போனா, சிரஞ்சீவி ப்ளட் பேங்க்னு ஒண்ணு இருக்கு. நல்ல நம்பிக்கையான பேங்க். நாமதான் அதுக்கு பண உதவி செஞ்சிருக்கோம்!"

"அப்படியா? ரொம்ப ரொம்ப நன்றி, சார்"- நான் சொன்னேன்: "நமக்குத் தெரிஞ்ச இடமா இருக்குறது ஒரு வகையில நல்லதாய் போச்சு!"

"நோ மென்ஷன்" -மேலாளர் சொன்னார்.

நான் உஷாவின் வார்டுக்குப் போய் 34ஆம் எண் கொண்ட அறையைப் தேடிப்போனேன். இதோ.... 34ஆம் எண் அறை! உஷாவிற்கு இப்போது பிரசவம் ஆகிக்கொண்டிருக்குமோ என்றொரு நினைப்பு மனதில் எழுந்தது. என் நெஞ்சு என்ன காரணத்தாலோ 'படபட'வென்று அடித்தது. நான் கதவை இலேசாகத் தள்ளித் திறந்து, ஒரு கண்ணால் உள்ளே பார்த்தேன். உஷா ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்திக்கொண்டு மேற்சுவரைப் பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தாள். உஷாவின் வயிறு துணிக்கு மேலே வீங்கி குன்றைப் போல உயரமாகத் தெரிந்தது. பக்கத்துக் கட்டிலில் அத்தை படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள். உஷாவை மூடியிருந்த வெள்ளைத் துணியை நீக்கி தொப்புள்வரை ரோமங்கள் இலேசாகப் படர்ந்திருந்த அவளின் வயிற்றின்மேல் தலையை வைத்து, என் தலையையும் துணியால் மூடிப் படுத்துக் கொள்ள வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. உஷாவின் குன்றைப்போல் உயர்ந்திருக்கும் வயிற்றின்மேல் இன்னொரு சிறு குன்றுபோல் என் தலை இருக்கும். முரளியின் குழந்தை உஷாவின் வயிற்றுக்குள் நீந்திக் கொண்டிருப்பதை நான் கேட்கலாம் அல்லவா?

நான் மெதுவாக அழைத்தேன்: "உஷா..."

உஷா மேலே இருந்த தன் பார்வையை விலக்கி என்னைப் பார்த்தவாறு சொன்னாள்: "யாரு...? கோபியா? நான் நினைச்சேன் முரளின்னு." மீண்டும் அவள் மேற்சுவரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

நான் அறைக்குள் ஒரு காலை எடுத்து வைத்து அத்தை எங்கே எழுந்துவிடப் போகிறாளோ என்று எண்ணியவாறு சொன்னேன்: "உஷா... நான் ப்ளட் வாங்குறதுக்காகப் போறேன். இங்கே அதற்காக சீட்டு வாங்கணும். உன்னோட பதிவு எண் என்ன?"

அத்தை என் பேச்சைக் கேட்டு உறக்கம் நீங்கி எழுந்து பாதி திறந்த கண்களால் என்னைப் பார்த்தவாறு கேட்டாள்: "ப்ளட்டா?" எச்சியை உள்ளே விழுங்கினாள் அத்தை.

உஷா ஒரு கையால் மேஜைப்பக்கம் சுட்டிக்காட்டியவாறு சொன்னாள்: "அங்கே இருக்குற பேப்பர்ல இருக்கு. பார்த்துக்கோ கோபி"- சொல்லிவிட்டு அவள் கண்களை மூடிக் கொண்டாள். அத்தையும் குறட்டைவிடத் தொடங்கினாள்.

நான் பதிவு எண்ணைத் தேடிக் கொண்டே உஷாவைப் பார்த்தேன். துணிக்கு அடியில் உஷாவின் வயிறு அவள் மூச்சு விடுவதால் உயர்வதும் தாழ்வதுமாய் இருந்தது. கீழே ஒரு குழியைப் போல் துணிக்குக் கீழே அவளின் தொடைகள் தெரிந்தன.


ஒரு பாதம் போர்த்தியிருந்த துணிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. பாதம் பஞ்சைப்போன்று மென்மையாக இருந்தது. நகங்களுக்குப் பொன்நிறத்தில் பாலீஷ் தீட்டியிருந்தாள். இரண்டு விரல்களில் வெள்ளியால் ஆன மெட்டிகள் இருந்தன. உஷாவின் பொன்நிற நகங்களின் பிரகாசம் என் கண்களில் பட்டு எனக்கு மூச்சை அடைப்பதுபோல் இருந்தது. அதற்குள் நான் பதிவு எண்ணைத் தேடி எடுத்து ஒரு பேப்பரில் எழுதினேன். தொடர்ந்து உயிரற்ற ஒரு சவத்தைப்போல அங்கேயிருந்து நான் கிளம்பினேன். சீட்டு வாங்கி, ஒரு ஆட்டோரிக்சாவில் ஏறி அமர்ந்த நான் சொன்னேன்: "சிரஞ்சீவி ப்ளட் பேங்கிற்குப் போகணும். சீக்கிரமா "ப்ளட்..." -டிரைவர் சொன்னான்: "தெரியும் சார்...." ஒரு சினிமா பாட்டை முணுமுணுத்தவாறு அவன் ஆட்டோரிக்சாவைக் கிளப்பினான்.

நித்ய ஜீவன் ப்ளாஸாவை எத்தனையோ தடவை நான் பஸ்ஸில் போகிறபோது பார்த்திருக்கிறேன். அப்படியொரு கட்டிடம் எங்கள் நகரத்தில் இன்னொன்று இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. அங்கிருந்த ஒவ்வொன்றுமே புதுமையான கோணத்தில் கட்டப்பட்டிருந்தன. முன்பக்கம் முழுவதும் கண்ணாடியால் கட்டப்பட்டிருந்தது. ஆகாயமும், எதிர்ப்பக்கத்தில் இருந்த கட்டிடங்களும், மரங்களும், கண்ணாடியில் தெரிந்தன. நகரத்திலேயே மிகவும் உயரமான கட்டிடம் இதுதான். இந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரர் யாராக இருக்கும் என்று பலமுறை நான் யோசித்திருக்கிறேன். வளைகுடா நாட்டில் உள்ள யாராவது இருக்கலாம். ஆனால், அதைப்பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.

நான் மார்பிளால் ஆன படிகளில் ஏறிச் சென்றபோது கதவின் இரண்டு பக்கங்களும் தானே திறந்து வழிவிட்டன. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னவெல்லாம் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்! நம்முடைய நகரத்திற்குக் கூட இதெல்லாம் வந்திருக்கிறதே என்று உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். பணம் கையில் இருந்தால் உலகத்தில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம்தான். என் கையில் மட்டும் பணம் இருந்திருந்தால், நான் மாமாவின் முகத்தைப் பார்த்து உஷாவை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று உரத்த குரலில் கேட்டிருப்பேன். பரவாயில்லை. அவள் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவனுக்குக் கிடைத்திருக்கிறாள். அவள் அவனோடு இன்பமாக வாழட்டும். உள்ளே ஒரு விசாலமான ஹால் இருந்தது. பேங்கில் கம்ப்யூட்டர் அறையில் ஏ.ஸி. பயங்கர குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. சிம்மாசனம் போன்ற பெரிய ஸோஃபாக்கள் அங்கு போடப்பட்டிருந்தன. ஆனால், அங்கு ஒரு மனிதனைக்கூட காணோம். கட்டிடத்தின் கம்பீரத்தை மனதிற்குள் இன்னொரு முறை நினைத்துப் பார்த்தேன். ஆனால், உள்ளே முழுவதும் காலியாகக் கிடந்தது. யாரோ பண வசதியுள்ள ஒரு மனிதர் இந்தக் கட்டித்தில் தன் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார். நான் லிஃப்ட் வாசலை அடைந்து, மேலே போவதற்கான பொத்தானை அழுத்தினேன். நான் மட்டும் தனியே லிஃப்டில் போக எப்போதும் எனக்குப் பிடிக்காது. கதவு அடைக்கப்பட்டதும், சில நேரங்களில் என் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். அதோடு மூச்சு விடவே மிகவும் சிரமப்படுவேன். ஆனால், நான் வந்திருப்பது உஷா சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக ஆயிற்றே! வெறுமனே பயந்து கொண்டு உட்கார்ந்திருந்தால் காரியம் எப்படி நடக்கும்?

ஆனால் லிஃப்ட் கீழே வருவது மாதிரி தெரியவில்லை. நான் சில நிமிடங்கள் கீழேயே நின்றிருந்தேன். அங்கிருந்த பெரிய ஸோஃபாவில் கொஞ்சம் உட்கார்ந்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் அப்போது உண்டானது. அதைத் தொடர்ந்து நான் திரும்ப நடந்து போய் ஒரு ஸோஃபாவில் உட்கார்ந்து பார்த்தேன். அடடா என்ன சுகம்! பஞ்சை விட மென்மையான ஒன்று கீழே இறங்குவதைப்போல் உணர்ந்தேன். அந்த ஸோஃபாவை விட்டு எழுந்திருக்கவே மனம் வரவில்லை. அப்போது லிஃப்டின் மணி அடிக்க, கதவு திறந்தது. அவ்வளவுதான்- நான் வேகமாக எழுந்தேன். லிஃப்டை விட்டு ஒரு மனிதர் இறங்கி வெளியே வந்தார். பார்க்க வாட்டசாட்டமாக இருந்தார். வெண்மை நிறத்தில் பேன்ட்டும் பிரகாசமான வெள்ளை நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தார். சிவப்பு வர்ணத்தில் கழுத்துப்பட்டை கட்டியிருந்தார். காலில் வெண்மை நிறத்தில் செருப்பு. முகத்தில் ஸ்டைலான கூலிங் க்ளாஸ். ஆறரை அடி உயரத்தில் அவர் இருந்தார். அவர் ஒரு கையால் லிஃப்டின் பொத்தானைப் பிடித்தவாறு சினிமாவில் பார்ப்பது மாதிரி இன்னொரு கையால் என்னை லிஃப்ட்டுக்குள் அழைத்தார். நான் நின்ற இடத்திலேயே தயங்கி நின்றேன். அந்த மனிதர் ஏன் என்னை அழைக்க வேண்டும்? இதில் ஏதோ கோளாறு இருக்கிறது. அப்போது அந்த மனிதர் புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு சொன்னார்: "பிளட்டுக்குத்தானே வந்திருக்கீங்க? நீங்கதானே மிஸ்டர் கோபி? மேனேஜர் ஏற்கெனவே சொல்லி இருக்கார். வாங்க..." அப்போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது. நான் இங்கு வரப்போகும் விஷயத்தை முன்கூட்டியே மேனேஜர் இந்த மனிதரிடம் தெரிவித்திருக்கிறார். என்ன இருந்தாலும், இந்த ப்ளட் பேங்கிற்கு ஃபைனான்ஸ் பண்ணியிருப்பது எங்கள் வங்கிதானே! அதனால்தான் இந்த அளவிற்கு ஒரு மரியாதையை இவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் வேகமாகச் சென்று லிஃப்டுக்குள் நுழைந்தேன். அந்த மனிதரும் எனக்குப் பின்னால் லிஃப்டிக்குள் நுழைந்தார். ஏழாவது மாடிக்கு உள்ள பொத்தானை அழுத்தினார். அந்த மனிதரை மிகவும் நெருக்கத்தில் நான் பார்த்தேன். நடுத்தர வயது. இருந்தாலும், முகத்தில் சுருக்கங்கள் எதுவும் இல்லை. நல்ல வெளுத்து சிவந்த முகம். என்னை உச்சந்தலையில் இருந்து பாதம் வரை அவர் பார்த்தார். மீண்டும் எதையோ நினைத்துப் புன்னகைத்தார். முகத்தில் இருந்த கண்ணாடியை எடுத்து பாக்கெட்டிற்குள் போட்டார். தொடர்ந்து வலது கையை நீட்டியவாறு என்னைப் பார்த்துச் சொன்னார்: "ஐ ஆம் டி.க்யூலா. ப்ளீஸ்ட் டு மீட் யூ..." நான் என் வியர்வை அரும்பிய வலது கையால் அவரின் கையைப் பற்றிக் குலுக்கினேன். அவர் என் கையில் இருந்த பிடியை விடாமல் மெல்ல தடவியவாறு என் கண்களையே உற்றுப் பார்த்தார். எனக்கு ஒரே வெட்கமாக இருந்தது.

நான் சின்னப் பையனாக இருந்தபோது ஒருநாள் கதகளி பார்த்துக் கொண்டிருந்தபோது, அன்புடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு ஆள் இதே மாதிரிதான் என் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ அவர் என் அரைக்கால் ட்ரவுசரின் பொத்தான்கள் ஒவ்வொன்றையும் அவிழ்க்க ஆரம்பித்துவிட்டார். அப்போது நான் அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே! அப்பப்பா...!

என் கையை விட்டு, உதட்டை நாக்கால் நக்கிய அந்த மனிதர் சொன்னார்: "மிஸ்டர் கோபி, உங்களுக்கு எந்த க்ரூப் ப்ளட் வேணும்? என் கையில எல்லா க்ரூப்பும் இருக்கு!"


"ஓ-நெகட்டிவ்"- நான் சொன்னேன். தொடர்ந்து மருத்துவமனையில் தந்த சீட்டை அவருக்கு நேராக நீட்டினேன்.

"ஏய்... அதெல்லாம் தேவையில்ல... நோ ப்ராப்ளம்" -அந்த ஆள் சொன்னார்: "ஓ- நெகட்டிவ் இரத்தமா வேணும்? வெரிகுட். ரொம்ப ரொம்ப நல்ல ப்ளட். சொல்லப்போனா, சிறப்புத் தகுதி கொண்ட ப்ளட். நோ ப்ராப்ளம்..."

எனக்கு அதைக் கேட்ட பிறகுதான் நிம்மதியே வந்தது. அப்போது அந்த மனிதர் என்னைப் பார்த்து கேட்டார்: "மிஸ்டர் கோபி, உங்களுடைய ப்ளட் க்ரூப் என்ன?"

"ஓ-நெகட்டிவ்"- நான் சொன்னேன்.

"எக்ஸலன்ட். வெரிகுட்."- அவர் சொன்னார். பிறகு ஏதோ ரொம்ப நாட்கள் பழகிய மனிதரைப் போல அவர் என் கழுத்தில் கையைப் போட்டார். "எவ்வளவு நல்ல மனிதரா இருக்காரு'- நான் மனதிற்குள் நினைத்தேன். மேலாளரின் நண்பர்கள் என்றால் சும்மாவா?

லிஃப்ட் நின்றது. கதவு திறந்தது. டி.க்யூலா என் தோளில் கையைப் போட்டவாறு என்னையும் அழைத்துக் கொண்டு நடந்தார். கீழே விரிக்கப்பட்டிருந்த பச்சை வர்ண விரிப்பில் என் செருப்பு ஆழமாகப் பதிந்தது. இனிமையான புல்லாங்குழல் இசை எங்கோ இருந்து மெல்லிசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. "ப்ளட் பேங்க்ன்றது இவ்வளவு பெரிய பிஸினஸ்ஸா என்ன?"- நான் ஆச்சரியப்பட்டு நின்றேன். எல்லாமே பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிற ஒரு விஷயம் இது. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? காரணம் - இரத்தம் இல்லாமல் மனிதன் இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பிஸினஸ் என்ன சாதாரணமாகவா இருக்கும்? நடக்கட்டும். சம்பாதிக்கக் கூடியவன் சம்பாதிக்கட்டும். நம் வாழ்க்கை இப்போது போய்க் கொண்டிருக்கிற மாதிரி போனாலே போதும். இப்படிப் பல விஷயங்களையும் சிந்தித்தவாறு, கீழே இருக்கிற விரிப்பில் செருப்பு போட்டு நடக்கிறபோது கிடைக்கிற சுகத்தை மனதிற்குள் அனுபவித்துக்கொண்டே நான் நடந்து கொண்டிருந்தபோது, டி.க்யூலா ஒரு கதவுக்கு முன்னால் நின்றார். சித்திர வேலைப்பாடுகளால் ஆன மரத்தால் செய்யப்பட்ட கதவில் மின்னுகிற வெள்ளி எழுத்துக்களில் 'சிரஞ்சீவி ப்ளட் பேங்க். இங்கு எல்லாவித இரத்தமும் வாங்கப்படும். விற்கப்படும்' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே சிவப்பு எழுத்துக்களில் 'எனக்குத் தாகமாக இருக்கிறது' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. என்ன? நான் நினைத்துப் பார்த்தேன்... சரிதான்! இது இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளாயிற்றே! அது எப்படி இங்கே வந்தது?

டி.க்யூலா ஒரு பெரிய வெள்ளியால் ஆன சாவியால் கதவைத் திறந்தார். பிறகு புன்னகைத்தவாறு சொன்னார்: "மிஸ்டர் கோபி... வெல்கம். நீங்க வேலை பாக்குறதும் பேங்க். இதுவும் பேங்க். நோ ப்ராப்ளம். அங்கே பணம். இங்கே இரத்தம். அங்கே வட்டி இருக்கு. இங்கே இரத்த உறவு மட்டும். வெறும் இரத்த உறவு. வாங்க... வாங்க..."

நான் மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தேன். 'அவர் சொன்னது சரிதானே?'- நான் நினைத்தேன். இரண்டுமே பேங்குகள்தான். டி.க்யூலா கதவை அடைத்தார். புதிய கதவாக இருந்ததால், அடைக்கும்போது இலேசாக முனகியது. கதவு பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ஆசாரியின் வேலையில் குறைபாடு இருந்தது. அறைக்குள் நான் முன்பு அனுபவித்தே இராத ஒரு நல்ல நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. கண்ணாடி போல மினுமினுத்தன டி.க்யூலாவின் மேஜையும், அதற்குப் பின்னால் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலியும். டி.க்யூலா அதில் உட்கார்ந்தபோது, நாற்காலியில் பலப்பல நிறங்களும் தோன்றித் தோன்றி மறைந்தன. அவர் புன்சிரிப்பு தவழச் சொன்னார்: "இன்னைக்கு இருக்குற தொழில் நுணுக்கங்கள் பலவற்றையும் பயன்படுத்தி நாங்க இந்த பிஸினஸை நடத்திக்கிட்டு இருக்கோம். அதே நேரத்துல ஆயிரக்கணக்கான வருடங்களா இருக்கிற பாரம்பரியப் பெருமையையும் நாங்க காப்பாத்திக்கிட்டு வர்றோம். இதை வாசிச்சுப் பாருங்க." டி.க்யூலா தனக்குப் பின்னால் இருந்த வெள்ளைச்சுவரைச் சுட்டிக்காட்டினார். அங்கே கறுப்பு எழுத்துக்களில் 'மனித இனத்தை ஒன்று சேர்ப்பது இரத்தம். இரத்தத்தால் இணைந்ததை மனிதர்கள் பிரிக்காமல் இருக்க வேண்டும். ஆமென்' என்று எழுதப்பட்டிருந்தது. எழுத்துக்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றுவது மாதிரி சிவப்பு வர்ணத்தில் இரத்தத் துளிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள். நான் பார்க்கும்போது அதிலிருந்து ஒரு இரத்தத் துளி மெதுவாகக் கீழ்நோக்கி உருண்டு வருவது போல் இருந்தது. அதைப் பார்த்தும், சரியாகப் பார்க்காதது மாதிரி நடித்தேன். வீணாக ஏதாவது சொல்லி, அவரை ஏன் வருத்தத்திற்குள்ளாக்க வேண்டும் என்று நினைத்ததே காரணம். சுமாரான அறிவைக்கொண்ட யாரோ ஒரு பெயிண்டர் சிறிது நேரத்திற்கு முன்புதான் அதை வரைந்திருப்பார் போலிருக்கிறது! "நல்ல பெயிண்டர்களும், ஆசாரிமார்களும் இப்போ வளைகுடா நாடுகள்லதானே இருக்காங்க!"- நான் எண்ணிப் பார்த்தேன். இப்போது அதை நினைத்துப் பார்த்து என்ன பிரயோஜனம்? டி.க்யூலா திடீரென்று உதடுகளை அகல விரித்துச் சிரித்தார். அவர் சொன்னார்: "மிஸ்டர் கோபி.... ஒரு ப்ளட் பேங்கிற்கு இப்பத்தான் முதல் தடவையா நீங்க வர்றீங்கன்னு நினைக்கிறேன். சரியா?"

நான் சொன்னேன்: "ஆமா... மொத்தம் நாலு குப்பி இரத்தம் வேணும். அதுக்கு எவ்வளவு பணம் வேணும்?"

அப்போது டி.க்யூலா சிரித்துக் கொண்டுதான் இருந்தார். பார்க்க வாட்டசாட்டமாக அவர் இருந்தாலும் அவரிடம் இருக்கும் ஒரு குறைபாட்டை நான் கவனிக்கவே செய்தேன். அவர் சிரிக்கும்போது, மேல் வரிசையில் இரண்டு பக்கங்களிலும் இருந்த இரண்டு பற்களுக்கு சராசரியைவிட கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தது. அந்தப் பற்கள் கீழே இருக்கும் தோல் பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவர் சொன்னார்: "மிஸ்டர் கோபி.. இரத்தத்துக்கு என்ன விலைன்ற விஷயத்தை பிறகு சொல்றேன். வாங்க முதல்ல நாம இரத்த சேமிப்பு அறைக்குப் போவோம்." டி.க்யூலா எழுந்து என்னையும் உடன் அழைத்துக்கொண்டு நடந்தவாறு ஒரு சுவரை நோக்கி கையைக் காட்டினார். அங்கே திடீரென்று ஒரு கதவு புகைமண்டலத்துக்கு நடுவிலேயோ, பனிமண்டலத்துக்கு மத்தியிலேயோ திறந்தது. அங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமுமே எனக்கு வினோதமாகத் தெரிந்தது. நான் நினைத்துப் பார்த்தேன்: "எல்லாம் பணம் செய்யிற வேலை. எது எப்படியோ... நல்ல ஒரு பார்ட்டியைத்தான் மேனேஜர் பிடிச்சிருக்காரு. நாங்கள் உள்ளே சென்ற அறையின் அளவை என்னால் கணக்குப் போட முடியவில்லை. காரணம்- சபரிமலைக்குப் போகிற பாதை முழுக்க மூடுபனி மூடியிருப்பதைப் போல் அந்த அறை முழுவதும் ஒரு வெள்ளைப் புகைமயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெரிய ஹாலில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. மூடுபனிக்கு நடுவில் சவப் பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பது மாதிரி, பெரிய பெட்டிகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை மிகவும் கஷ்டப்பட்டு நான் பார்த்தேன்.


யாரோ டார்ச் விளக்கை அடிப்பதைப் போன்று ஒரு விளக்கு வெளிச்சம் அவ்வப்போது தெரிந்தது. நான் நிற்குமிடத்திற்குப் பக்கத்தில் டி.க்யூலாவின் மேஜைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே கண்ணாடி பொருட்களால் செய்யப்பட்ட, டாக்டர்கள் சோதித்துப் பார்ப்பதற்காக நோயாளிகளைப் படுக்கச் செய்வார்களே, அதே வகைப்பட்ட ஒரு கட்டில் இருந்தது. அதில் இருந்த தலையணைமேல் உள்ளே இருந்து வந்த ஒரு துளி விழுந்து கொண்டிருந்தது. நான் அதைத் தொட்டுப் பார்த்தேன். யாரோ முத்தம் கொடுப்பதைப் போன்ற ஒரு சுகம் என் விரல் நுனியில், அதைத் தொட்டதும் எனக்கு உண்டானது. அது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தந்தது. அதே நேரத்தில் அதிர்ச்சியையும். அந்த உணர்வுடனே நான் நினைத்துப் பார்த்தேன்: "ப்ளட் பிஸினஸ் இப்படி எல்லாம் நடக்குதுன்னு யாருக்குத் தெரியும்? காசு தயார் பண்ண என்னவெல்லாம் மனிதர்கள் செய்யிறாங்க? உஷாவுக்கு இரத்தம் தேவைப்படலைன்னா, இங்க இருக்குற வினோத விஷயங்களை எல்லாம் நான் பார்த்திருக்க முடியுமா?" போர்த்தியிருந்த துணிக்குக் கீழே இருந்த உஷாவின் பந்துபோன்று வீங்கியிருந்த வயிறை நான் நினைத்துப் பார்த்தேன். ஓ... அந்த வயிறில் எனக்கு மட்டும் ஒரு முத்தம் பதிக்க முடிந்தால்...! இந்தக் கண்ணாடித் தலையணையின் முத்தத்தைப் போலத்தான் இருக்கும். உஷாவின் உதடுகள் தரும் முத்தம். அது மட்டும் நிச்சயம். எது எப்படியோ... இரத்தத்தை வாங்கிக் கொண்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று எண்ணியவாறு நான் பார்த்தபோது டி.க்யூலாவைக் காணவில்லை. லிஃப்டில் நான் தனியாக சிக்கிக்கொண்டதைப் போன்ற ஒரு அனுபவத்தை நான் உணர்ந்தேன். தனியாக அங்கு நின்று கொண்டிருப்பதற்கு உண்மையிலேயே நான் பயந்தேன். அப்போது டி.க்யூலா புகை மண்டலத்துக்கு உள்ளேயிருந்து நீளமான பெட்டிகளுக்குப் பக்கத்தில் நடந்து வருவதைப் பார்த்தேன். அவர் இப்போது சிவப்பு வர்ணத்தில் ஒரு கவுன் அணிந்திருந்தார். காலில் செருப்பு இல்லை. கைகளை நெஞ்சின் மீது கோர்த்திருந்தார். என்னைப் பார்த்துச் சிரித்தவாறு வந்தார். 'ப்ளட் எடுக்குறதுன்னா கவுன் அணியணும் போல இருக்கு' என்று நான் நினைத்துக் கொண்டேன். எது எப்படியிருந்தால் நமக்கென்ன? எல்லாமே விஞ்ஞானபூர்வமாக நடப்பதுபோல் நான் உணர்ந்தேன். மேனேஜர் தேர்வு செய்த ஆள் உண்மையிலேயே தரமான மனிதர்தான். சந்தேகமே இல்லை. அவர் அருகில் வந்து எனக்கு நேராகக் கையை நீட்டினார். நான் மருத்துவமனையில் வாங்கி வந்த சீட்டை அவர் கையில் கொடுத்தேன். டி.க்யூலா அதைப் பெறாமல் என் கையைப் பிடித்தவாறு சொன்னார்: "மிஸ்டர் கோபி... இங்கே எந்தவிதமான ஃபார்மாலிட்டியும் தேவையில்ல. வாங்க..."

நான் அவர் பற்றியிருந்த கையை விலக்கினேன். கையிலிருந்த பர்ஸைத் திறந்தவாறு சொன்னேன்: "பணம் கொண்டு வந்திருக்கேன். ஒரு குப்பிக்கு எவ்வளவு நான் தரணும்?" நான் இப்படிக் கேட்டதற்குக் காரணம் திடீரென்று என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்ததே. இந்த ஷோ வேலைகளை எல்லாம் காண்பித்து, இந்த ஆள் என்னிடம் அதிக பணம் வாங்கலாம் என்று பார்க்கிறாரோ? அது முன்கூட்டியே தெரிந்துவிட்டால், வேறொரு இரத்த வங்கியைத் தேடிப் போகலாமே!

அப்போது அவர் எனக்கு மிகவும் அருகில் வந்து என் தோளில் கை வைத்தவாறு, புன்சிரிப்பு தவழ ஒரு மெல்லிய குரலில் சொன்னார்: "பணம் எதுவும் வேண்டாம். இரத்தத்துக்கு யாராவது பணம் வாங்குவாங்களா, மிஸ்டர் கோபி? இரத்த உறவுக்குத்தான் விலை. இரத்தத்துக்குப் பணம் வாங்குறவங்க உண்மையிலேயே கொடுமைக்காரங்கன்னுதான் சொல்லுவேன்..." அவரின் கண்கள் நெருப்பு போன்று சிவப்பாக இருந்தன. "நாம ஒருவருக்கொருவர் இரத்தம் கொடுத்துக்கறோம். அந்த வகையில நாம நிரந்தர வாழ்க்கைக்குள்ளே நுழையிறோம். என் மூலமா நீங்க. உங்க மூலமா நான். நம்ம மூலமா உஷா."

நான் அதிர்ந்து போனேன். உஷாவைப் பற்றி இந்த மனிதருக்கு எப்படித் தெரியும்? அப்போது அவர் சொன்னார்: "இங்கே இரத்த உறவு தேடுறவங்களோட எல்லா விவரங்களையும் நான் தேடிக் கண்டுபிடிச்சிடுவேன். காரணம்- இரத்த உறவுன்றது அவ்வளவு பெரிய விஷயம். அந்த உறவு எல்லைக்குள் அடங்காதது. வாங்க... மிஸ்டர் கோபி. பயப்பட வேண்டாம். நான் உங்களுக்கு இரத்தம் தர்றேன். நீங்க அதுக்கு பதிலா எனக்கு இரத்தம் தர்றீங்க. அவ்வளவுதான் விஷயம். அதாவது -இரத்த மாற்றம்..."

"அப்படின்னா... ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ்ன்னு அழைக்கிற மாதிரி, ப்ளட் எக்ஸ்சேஞ்ஜ்ன்னு இந்த இடத்தை அழைக்கணும். அதுதான் சரியா இருக்கும்"- நான் மனதிற்குள் நினைத்தேன். ப்ளட் பேங்க் என்று அழைப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

டி.க்யூலா என் கையைப் பிடித்து, என்னை கட்டிலில் படுக்க வைத்தார். "இதற்காகவா நான் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன்" -நான் எண்ணினேன். இதை மருத்துவமனையிலேயே செய்திருக்கலாமே!

நான் கட்டிலில் படுத்தேன். கட்டிலும் தலையணையும் என்னை கால் முதல் தலை வரை முத்தம் கொடுப்பது போலவும், தாலாட்டுவது மாதிரியும் நான் உணர்ந்தேன். அந்த சுகத்தை அனுபவித்தவாறு, நான் கண்களை மூடினேன். "சாதாரணமா ஊசி போடறப்போ என்ன வலி தெரியுதோ, அந்த அளவுக்கு வலி இரத்தம் எடுக்குறப்போ இருக்காது" என்று நினைத்தேன். அப்படியே வலித்தாலும், பரவாயில்லை. உஷாவிற்காக நான் எந்த வலியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன்.

என் மார்பின்மீது டி.க்யூலா கையை வைத்தார். நான் கண்களைத் திறந்தேன். டி.க்யூலா என் மார்பில் இருந்த கைகளை எடுக்காமல் எனக்கு நேராகக் குனிந்தார். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர் சிரித்தவாறு தன் முகத்தை என் முகத்திற்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்தார். அவரின் இரண்டு நீளமான பற்களையும் நான் பார்த்தேன். அறத்தை வைத்துக் கூர்மையாக்கியதுபோல் அவற்றின் முனைகள் இருந்தன. டி.க்யூலா முதலில் என் உதடுகளில் ஒரு முத்தம் தந்தார். அங்கே இருந்து அவரின் உதடுகள் என் கழுத்துப் பக்கம் வருடியவாறு நகர்ந்தன. என் மார்பின் மீது இருந்த அவரின் கை இப்போது உதடுகளுக்கு மத்தியில் தொடுவதை என்னால் உணர முடிந்தது. பல வருடங்களுக்கு முன்னால் கோவில் மைதானத்தில் கதகளி பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிர்ச்சியடைந்ததுபோல் இப்போது அதிர்ச்சியடைந்தேன். "ஓ... இதுதான் விஷயமா?”- நான் ஒரு மின்னலைப் போன்ற வேகத்தில் நினைத்தேன். இந்த ஆள் வேறு மாதிரியான ஆள் போலிருக்கிறது! எனக்கு பயங்கரமான கோபம் வந்தது. ச்சே... வெட்கக் கேடு! எனக்கு இப்போது இருபத்தெட்டு வயது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னதான் உஷாவுக்காகக் கஷ்டப்படுகிறேன் என்றாலும், இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமா என்ன? நான் வேகமாக எழுந்து டி.க்யூலாவைத் தள்ளிவிட்டேன்.


அப்போதுதான் நான் பார்த்தேன். அவரின் உடம்பில் இருந்த கவுனை அவர் முழுமையாக நீக்கி இருந்தார். அவர் உடம்பில் மருந்துக்குக்கூட துணி எதுவும் இல்லை. முகத்தில் இருந்த சிவப்பு உடம்பில் இல்லை. அவரின் உடம்பு சுருங்கிப் போயிருந்தது. சிரித்தவாறு இரண்டு கைகளையும் எனக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தார் அந்தக் கிழட்டு மனிதர்.

நான் சொன்னேன்: "மிஸ்டர் டி.க்யூலா... எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள்ல விருப்பமே இல்ல... இரத்தம் இருந்தா தாங்க. இல்லாட்டி சொல்லிடுங்க. நான் வேற எங்கேயாவது போயி வாங்கிக்கிறேன்..."

டி.க்யூலா நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒருவித வெறியுடன் என்னையே பார்த்தவாறு நின்றிருந்தார். உண்மையிலேயே எனக்கு வெட்கமாக இருந்தது. 'சில ஆண்களோட பார்வையைப் பார்த்தா பொம்பளைகளுக்கு இப்படித்தான் தோணும்"- நான் மனதிற்குள் நினைத்தேன். திடீரென்று அவர் எனக்கு நேராக ஓடிவந்தார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் என் கழுத்தின்மீது தன் முகத்தைத் தாழ்த்தினார். நான் பதறிப்போய் விலகி நின்றேன். அப்போது அவர் என் கால்களில் விழுந்து, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். 'கஷ்டம்!'- நான் நினைத்தேன். ஒரு மனிதனின் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? இந்தப் பணமும் பகட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?' நான் நினைத்தேன்: 'உஷாவுக்காகத்தானே இதெல்லாம்? பரவாயில்ல...' நான் அந்த ஆளை அழைத்தேன்: "மிஸ்டர் டி.க்யூலா... பரவாயில்ல... வாங்க. ஆனா, இங்கே வாங்குற இரத்தத்துக்கு க்யாரண்டி இருக்குல்ல?" டி.க்யூலா எழுந்து தன் இரண்டு கைகளையும் பிடித்தவாறு சொன்னார்: "எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற மாதிரி க்யாரண்டி.... மிஸ்டர் கோபி. மரணமே இல்லாத க்யாரண்டி..." நான் கட்டிலில் படுத்தேன். டி.க்யூலாவின் முகம் என் முகத்திற்கு நெருக்கமாக வருவதும், ஊசி குத்துவதைப் போல சுகமான இரண்டு இலேசான வேதனைகள் என் கழுத்தில் உண்டாவதும் மட்டும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு நான் சுய நினைவை இழந்துவிட்டேன்.

பிறகு... இரத்தம் இருந்த பெட்டியை என் கையில் எடுத்துத் தருகிறபோது, டி.க்யூலா என்னிடம் சொன்னார்: "மிஸ்டர் கோபி... என் நண்பரே... இனியும் நீங்க இங்கே வரணும்."

"வர்றேன்"- நான் சொன்னேன்.

"நாம இரத்த உறவுக்காரங்களாயிட்டோம். ஞாபகத்துல வச்சுக்கோங்க"- அவர் சொன்னார். "ஆமா"- நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்து நான் சொன்னேன். உண்மையிலேயே அது ஒரு சுகமான அனுபவம்தான்! நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "எல்லாம் விஞ்ஞானத்தோட வளர்ச்சிகள்! இரத்தம் தர்றது இவ்வளவு சுகமான அனுபவம்னா, என்னோட முழு இரத்தத்தையும் தர்றதுக்கு நான் தயாராக இருந்தேன்."

நான் மருத்துவமனையை அடைந்தபோது, அத்தை கட்டிலில் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தாள். பெரிய மாமா ஒரு நாற்காலியில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். உஷாவுக்கு இன்னும் பிரசவம் ஆகவில்லை. உஷா நான் எப்போதும் தொட்டுப் பார்க்க ஆசைப்படும் அவளின் அழகான கண்களால் மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் சொன்னாள்: "யாரு... கோபியா? நான் முரளின்னு நினைச்சேன்..."

"இரத்தம் கிடைச்சிடுச்சு, உஷா-"- நான் சொன்னேன்.

அத்தை கண்களைத் திறந்து எங்கேயோ பார்த்தவாறு சொன்னாள்: "இரத்தமா?" அடுத்த நிமிடம் குறட்டைவிடத் தொடங்கினாள்.

உஷா சொன்னாள்: "மீதி காசை அலமாரியில வச்சிரு கோபி. இரத்தத்தை சிஸ்டர்ஸ் கையில கொடுத்திடு..."

நான் கொண்டு போனது பெரிய மாமாவின் பணம் இல்லை என்பதையும், என் சொந்தப் பணத்தைத்தான் என்பதையும், அதைக் கொஞ்சம்கூட செலவழிக்காமல் இரத்தம் வாங்கி வந்திருக்கிறேன் என்பதையும் நான் உஷாவிடம் கூறவில்லை. அதைச் சொல்லி என்ன ஆகப் போகிறது?

என் பல் நுனியை நாக்கால் தொட்டு ரசித்தவாறு நான் உஷாவின் வெளுத்து சிவந்த கழுத்தின் அழகைப் பார்த்த நின்றிந்தபோது, டி.க்யூலா என் இரத்தத்தை எடுக்கும்போது உண்டானதுபோல ஒரு சுகம் எனக்கு கால் முதல் தலை வரை உண்டானது. இலேசாக உணர்ச்சிவசப்பட்ட நான் என் மனதிற்குள் கூறினேன்: 'என் அன்பு உஷா... உன்கிட்ட அந்த சுகம் எப்படின்னு என்னால சொல்ல முடிஞ்சதுன்னா, நீ ஒரு நாள் கூட அந்த முரளியோட முகத்தைப் பார்ப்பியா?'

தொடர்ந்து பெரிய மாமாவின் பல் இல்லாத வாயைப் பார்த்தவாறு நான் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னேன்: "பெரிய மாமா, போய்த் தொலைங்க... இரத்த பந்தத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.