Logo

நான் பட்டாளத்தில் சேர்ந்த கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6508
naan pattalathil serntha kathai

ற்றவர்களின் அனுபவம் எப்படி என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, என்னுடைய பட்டாள வாழ்க்கை வெற்றிகரமான ஒன்றுதான்.

அப்படியென்றால் எதற்காக முன்கூட்டியே பட்டாளத்தில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள் - இல்லையா? நான் ஓய்வெடுத்தது பட்டாளம் வெறுத்துப் போய்விட்டது என்பதற்காக அல்ல, சகோதரா. புதிய தலைமுறைக்கு நாம் வழிவிட்டுக் கொடுப்பதுதானே நியாயம்!

தவிர, தெய்வத்தை அடைவதற்கான நேரமும் கிட்டத்தட்ட எனக்கு நெருங்கிவிட்டது. உண்மையாகச் சொல்லப்போனால், பட்டாளத்தில் எனக்கு பிரச்னைக்குரிய ஒரு விஷயம் இருந்தது என்றால், அது- தெய்வீக காரியங்களில் என்னால் சரிவர ஈடுபட முடியாமல் இருந்ததுதான். நாம் நினைக்கிற மாதிரியே வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடக்குமா என்ன?

இன்று வைப்புத் தொகை கணக்கைப் புதுப்பிக்கலாம் என்று போனபோது புதிதாக வந்திருக்கும் மேனேஜர் கேட்டார்: "முப்பது வருஷங்கள் பட்டாளத்துல இருந்திருக்கீங்க. உங்களோட ரேங்க் என்ன இப்படி?..." என்று. நான் சொன்னேன்: "சார்... பொண்டாட்டியோ பிள்ளையோ இல்லாத ஒரு தனிக்கட்டையான எனக்கு எதுக்கு ரேங்க்? நான் பட்டாளத்துல சேர்ந்தது ரேங்க் வாங்கணும்ன்றதுக்காக இல்ல. பாரதமாதா மேல இருந்த ஒரு வெறியினாலதான் நான் பட்டாளத்துக்கே போனேன்.”

என்னுடைய சாதாரண அனுபவங்கள் புதிய தலைமுறைக்கு ஒரு உத்வேகமாக இருக்கட்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்தவாறு நான் என்னுடைய வாழ்க்கைப் பாதையில் நடந்த சில சம்பவங்களை மக்கள் முன் திறந்து வைக்கிறேன். இதில் சில தவறுகள் இருக்கலாம். எல்லோரும் அதைப் பெரிதுபடுத்தாமல் என்னை மன்னிக்க வேண்டும். காரணம்- நான் ஒரு எழுத்தாளன் அல்ல. வெறும் பட்டாளக்காரன்தான். நான் படித்ததே ஆறாம் வகுப்பு வரையில்தான். மலையாளத்தில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் வாங்கினேன். என்னால் முடிந்தவரை உண்மைகளையே சொல்ல முயற்சிக்கிறேன். முதலிலேயே சொல்லிவிடுகிறேன்- மலையாளத்தில் நான் வாங்கிய மதிப்பெண்கள்தான் நான் வாங்கிய மதிப்பெண்களிலேயே அதிகம். அந்த தைரியத்தை வைத்துத்தான் நான் இதை எழுதுகிறேன்.

பட்டாளத்தில் சேரும்போது என்னுடைய வயது பதினெட்டு. நான் பிறந்த நாட்டின் மீது எனக்கு பாசம் அதிகம் இருந்தாலும், என் தந்தை மீது எனக்கு வெறுப்புத்தான் இருந்தது. அது தேவையில்லாதது என்பதை இப்போது உணர்கிறேன். ஆனால், இப்போது இதைச் சொல்லி என்ன பயன்? என் தந்தை இறந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.

என் தந்தை இறக்கும்போது எங்கள் யூனிட் சம்பலில் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. பூலான்தேவி அப்போது இளம் வயது பெண்ணாக இருந்தாள். அன்று அவளை நான் பார்த்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன். கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு அவளை அப்படியே இறுக அணைத்து அவளின் கறுத்த உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தத்தைப் பதித்திருப்பேன். பிறகு... ஒரு மூலையில் அவளை உட்கார வைத்து அவளின் கஷ்டங்கள் என்னென்ன என்பதை விளக்கமாகச் சொல்லும்படி கேட்பேன். அவளுக்கு விருப்பம் இருந்தால், குறுகிய நேரத்திற்கு அவளுடன் உல்லாசமாகவும் இருந்திருப்பேன். என்னுடைய வயதுதான் அவளுக்கு. எது எப்படியோ- என்னுடைய தந்தை இறந்த செய்தி எனக்குக் கிடைக்கும்போது, அவர் மண்ணுக்குக் கீழே புதைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. நான் அன்று இரவு கூடாரத்தைவிட்டு வெளியே வந்து ஒரு கல்லின் மேல் அமர்ந்து என்னைச் சுற்றிச் சுற்றி வந்த இரண்டு கொசுக்களை இரண்டு கைகளாலும் அடித்துக் கொன்றேன். என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைத் தொழுதேன். 'ஆகாயத்தில் இருக்கின்ற எங்களின் பிதாவே' என்று சொல்லியவாறு நான் ஆகாயத்தைப் பார்த்தபோது, ஆகாயம் இருண்டுபோய் காணப்பட்டது. நான் சிறிது நேரம் அந்த இருட்டையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். அங்கே என் தந்தையின் அடையாளம் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படியெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. என் கண்களில் வலி உண்டானதுதான் மிச்சம். எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. ஆனால், வரவில்லை. மெதுவாகக் கொசு வலைக்குள் புகுந்தேன். அடுத்த சில நிமிடங்களுக்கு எனக்குத் தூக்கமே வரவில்லை.

என் தந்தையிடம் நான் கோபமாக இருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் என்னை தன் விருப்பப்படி அடிப்பார். அவர் ஒரு கல்மனம் கொண்ட மனிதராக இருந்தார். அவரைப் பார்க்கும் போது அன்று அப்படித்தான் என் மனதில் தோன்றியது. இப்போதும் நான் அவரைப் பற்றிக் கொண்ட அபிப்பிராயம் மாறவே இல்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய கெட்ட மனிதர்கள் பலரையும் நான் பார்த்தாகிவிட்டது. என்ன இருந்தாலும், என் தந்தைதானே என்று நினைத்து அவரை ஒரு நல்ல வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் உண்டாகும். ஆனால், என் தந்தை எப்போதும் இருட்டுக்குள்ளேயே கிடந்தார். அவரை வெளிச்சத்தில் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் எப்போதும் இருட்டோடு சேர்ந்து நின்றுகொண்டிருப்பதும், நடப்பதும், படுப்பதும்தான் என் ஞாபகத்தில் வருகிறது.

சொல்லப்போனால்- எங்களின் குடிசை எப்போதும் இருட்டாகவே இருக்கும். மண்ணெண்ணெய் வாங்க முடியாததால் இரவில் இருட்டு. வேய்ந்த ஓலையின் ஓரத்தை வெட்டாமல் விட்டதால், அது எப்போதும் மறைத்துக்கொண்டிருப்பதால் பகலிலும் இருட்டு. என்னைப் பெற்றவுடன் என் தாய் இறந்துவிட்டாள். அதற்குப்பிறகு என் தந்தைதான் என்னை வளர்த்தார். என் தாயின் வயிற்றில் நான் இருந்தபோது என் தந்தை அடித்து உதைத்ததால்தான் என் தாய் குறிப்பிட்ட மாதம் ஆவதற்கு முன்பே குறைப்பிரசவத்தில் என்னைப் பெற்றதாகவும், அவள் மரணத்தைத் தழுவியதாகவும் என் சித்தி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாயின் வயிற்றில் இருக்கிறபோதே என்னை அடித்த என் தந்தை, அதற்குப் பிறகும் என்னை அடித்து உதைத்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது! என் தந்தை நல்ல உயரத்தைக் கொண்டவராகவும், ராட்சசத்தனமான பலத்தைக் கொண்ட மனிதராகவும் இருப்பார். அவரின் கண்கள் இரண்டும் எப்போதும் சிவந்தே இருக்கும். அவரின் சிவந்த கண்கள் மட்டும் என்னிடம் இல்லாமல் போய்விட்டது. மீதி அவரிடம் இருந்த பலமான உடலும், உயரமும் எனக்கும் இருந்தன. அவரின் நெஞ்சில் ரோமம் இருக்காது. என்னுடைய நெஞ்சிலும்தான். கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலிருந்தே என் தந்தை என்னை ஏன் அடித்திருக்க வேண்டும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். நிச்சயம் அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும் அல்லவா? ஒரு பையனை தோன்றும்போதெல்லாம் அடிப்பது என்பது மனதிற்கும் உடலுக்கும் சந்தோஷம் தரக்கூடிய ஒரு செயலும் அல்ல.


என்னை அடித்ததன் மூலம் என் தந்தையின் கையும் வலித்திருக்க வேண்டும். அறுபத்தைந்தாம் ஆண்டில் நான் வெடிவைத்துக் கொன்ற ஒரு பாகிஸ்தான் பட்டாளக்காரனின் பிணத்திற்குப் பக்கத்தில் நின்றிருந்தபோது, என்ன காரணத்தாலோ என் தந்தையை நினைத்தேன். இந்த மனிதனுக்கும் எனக்கும் என்ன விரோதம் இருக்கிறது? இவனை நான் ஏன் கொன்றேன்? இதே மாதிரிதான் எந்தவித காரணமும் இல்லாமலே என் தந்தை என்னை அடித்திருக்க வேண்டும். உண்மையில் அன்பின் காரணமாகத்தான் நான் இந்த மனிதனைக் கொன்றேன். அதாவது- நான் பிறந்த என் நாட்டின் மீது நான் கொண்ட அன்பு. இதுபோல வெளியே சொல்ல முடியாத அன்பு காரணமாக என்னை என் தந்தை அடித்திருக்க வேண்டும். அவனின் இரண்டு கண்களும் திறந்திருந்தன. நான் கீழே அமர்ந்து அவனின் கன்னங்களை வருடியவாறு சொன்னேன்: "ஸாரி தம்பி... பாரத மாதாவுக்கு ஜே!" நான் அவனையும் அவன் என்னையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டோம். நான் என் கால் சட்டை பையினுள் கையை விட்டுப் பார்த்தால், அங்கு நேரு தலை உள்ள ஒரு ரூபாய் நாணயம் ஒன்று இருந்தது. அந்தப் பையனின் வலது கண்ணில் அந்த நாணத்தையும், இடது கண்ணில் ஒரு சிறிய கல்லையும் வைத்து நான் அவனின் கண்களை மூடினேன். பிறகு... என்னுடைய நெற்றியில் சிலுவை வரைந்தேன். அது அவனுக்கும் சேர்த்துதான் என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால், என்னதான் இருக்கட்டும், ஒரு தந்தையுடன் ஒரு மகன் கோபம் கொள்ளலாமா? நிச்சயமாக கூடாது. ஆனால் என்னால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு விஷயம் இருந்தது. அது - பூனைக்கறி. பொதுவாகவே பூனைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என் தந்தையிடம் அடி வாங்கி நான் குடிசையின் ஒரு மூலையில் அமர்ந்து மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கும்போது, பூனைகள் அடுப்புக்கருகில் இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து என்னை வாலால் தடவுவதும், உடலால் உரசுவதும், என் முகத்தைப் பார்த்து 'மியாவ்' என்று சிறிய குரலில் அழுவதும்... பூனைகளின் உடலில் அடுப்பின் உஷ்ணம் இருக்கும். காச நோய்க்கு கரும்பூனைக்கறி நல்லது என்று யாரோ சொன்னார்கள் என்று என் தந்தை கரும்பூனைக் கறியைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். ஆனால், வீட்டில் பூனைகளுக்கு கறுப்பு குட்டிகள் எப்போதாவதுதான் பிறக்கும். அவை வளர்ந்து பெரிதாகிவிட்டால், என் தந்தை அதைக் கொன்று சாப்பிட்டு விடுவார். சில நேரங்களில் சாயங்கால நேரம் வந்துவிட்டால் ஒரு கோணியை எடுத்துக்கொண்டு வெளியே போவார். காலையில் சமையலறையின் மூலையில் கிடக்கிற கோணிக்குள் சாடுவதும், உறுமுவதும், கத்துவதுமாய்... பூனைகள். மதிய நேரம் அவருக்கு பூனைக்கறியுடன் சாப்பாடு. பூனைக்கறியைப் பார்க்கிற போது எனக்கு வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரும். அது வைக்கப்பட்டிருந்த பாத்திரம் எதுவாக இருந்தாலும், எனக்கு ஒத்து வராது. அந்தப் பாத்திரத்தில் என்னால் சாப்பிட முடியாது. ஆனால், என் தந்தை என்னை அடித்து சாப்பிடச் சொல்லுவார். என்னுடைய பன்னிரண்டாம் வயதில், ஏழாவது மைலில் இருக்கும் கள்ளுக்கடையில், பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் தண்ணீர் எடுத்துக்கொடுக்கும் வேலை எனக்குக் கிடைத்தது. என் சம்பளப் பணத்தில் மறைத்து வைத்திருந்த காசில் ராமன் நாயரின் சாயா கடையில் நான் காப்பியும் பலகாரமும் வாங்கிச் சாப்பிடுவேன். ராமன் நாயரின் மனைவி மாறுகண்ணால் என்னை அன்புடன் பார்த்தவாறு, புன்சிரிப்பு தவழ இலையில் வைத்து எனக்குத் தந்த ஏத்தக்கா அப்பமும், போளியும், உளுந்து வடையும் சாப்பிட்டபோது, பூனைக்கறியை நான் மறந்தே போனேன். மூன்று பலகாரங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்ததால்  கடைசியில் எதைச் சாப்பிடுவது என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தேன். காரணம்- கடைசியில் எதைச் சாப்பிடுகிறேனோ, அந்த ருசிதான் காப்பியின் இனிப்புடன் சேர்ந்து நான் வீட்டுக்குப் போகும்வரை வாயில் தங்கி இருக்கும். சில நேரங்களில் நான் தீர்மானம் எடுக்க முடியாமல் பலகாரத்தையே பார்த்தவாறு வாயில் எச்சில் ஊற உட்கார்ந்திருப்பேன். அப்போது ராமன் நாயரின் மனைவி வந்து மேஜைமேல் கையை ஊன்றியவாறு குனிந்து நின்று என்னையோ பார்த்துச் சிரித்தவாறு கூறுவாள்: "என்னடா தம்பி... எதையும் சாப்பிடாம பார்த்துக்கிட்டே இருக்கே! சாப்பிடு..." அவளின் சிரிப்பில் குளிர்ந்து போகும் நான் வேகமாக ஒரு பலகாரத்தை எடுத்துக் கடிப்பேன்.

சின்னப்பையனாக இருந்தபோது என் தந்தை புளியங்கொம்பாலும், கையாலும் என்னை அடித்தார் என்றால், எனக்கு பதினாலு வயது ஆனதிலிருந்து மூங்கிலாலும், தென்னை மட்டையாலும் என்னைத் தாக்குவார். காரணம், அப்போது என் தந்தையைப் போலவே நான் கருங்கல் போன்ற தேகத்தையும், ராட்சசன் போன்ற தோற்றத்தையும் கொண்டிருந்ததுதான். என்னைக் கையால் அடிக்கிறபோது, என் தந்தையின் இரண்டு விரல்களில் பலமாக வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கையால் அடிப்பதை நிறுத்தி விட்டார். அந்தச் சமயத்தில்தான் நான் ஆறாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அப்போதே எனக்கு போர் என்றால் மிகவும் பிடிக்கும்.

போரைப் பற்றி நான் படித்த ஒரு பாட்டை மெட்டுடன் உரத்த குரலில் பாடியவாறு நான் வெட்ட வெளிகளில் சுற்றித்திரிவேன். ஆறாம் வகுப்பு முடித்தவுடன் நான் முழு நேரமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினேன். அப்போது நான் ஒரு பாறைபோல வளர்ந்துவிட்டிருந்தேன். ஆனால் என் தந்தையை விட எனக்கு பலம் அதிகம் என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் அவர் என்னை அடிக்கும்போது நான் எதுவுமே செய்யாமல் அமைதியாக நின்று கொண்டிருப்பேன். கடைசியில்... ஒரு ஞாயிற்றுக்கிழமை- அன்று வேலை இல்லாததால், ஓய்வாக திண்ணையில் உட்கார்ந்து- மடியில் ஒரு பூனையை வைத்துத் தடவியவாறு என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த குளத்தில் குளிப்பதற்காக என்னுடன் படித்த மூன்று பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் அந்தப் பெண்கள் ப்ளவுஸ், பாவாடை ஆகியவற்றைக் கழற்றி வைத்துவிட்டு, துண்டை உடம்பில் சுற்றுவதையும், துணி துவைப்பதையும், சோப்பு போடுவதையும், பூனையின் காதுக்குக் கீழே சொறிந்தவாறு இங்கிருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவர்களின் வயிறுகளைப் பார்த்தேன். நல்ல பரந்த- மினுமினுப்பான வயிறுகள். தொப்புகளைக் கூட இங்கிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. இந்த வயிறுதானே பெண்கள் கர்ப்பமான பிறகு பந்து மாதிரி ஊதிப் போய்த் தெரிவது என்பதை யோசித்துப் பார்த்தேன். அந்தப் பந்தில் பலூனின் வாய்போல இருக்கும் தொப்புள்.


என் தந்தை, என் தாயையும், அவள் வயிற்றில் இருந்த என்னையும் அடித்து உதைத்த மாதிரி இந்தப் பெண்களையும் யாராவது அடிப்பார்களோ? ஊஹூம்... நிச்சயமாக இருக்காது- நானே எனக்குள் சொல்லிக்கொண்டேன். எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் இந்த மாதிரி நடக்குமா என்ன? ஒரு சில பெண்களுக்கு மட்டுமே இத்தகைய விரும்பத்தாக அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதே உண்மை. இப்படி நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து என் கழுத்தை இறுகப் பிடித்தார் என் தந்தை. அவர் சொன்னார்: "நீ இந்த வேலையும் ஆரம்பிச்சிட்டியா?"- அவர் என் கழுத்தை இறுகப் பிடித்திருந்ததால், என்னால் வாய் திறந்து எதுவும் பேச முடியவில்லை. "என்ன வேலை?" என்று அவரைக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். என் மடியில் இருந்த பூனை தாவி ஒரே ஓட்டமாக ஓடியது.  என் தந்தை என் முதுகில் ஓங்கி மிதிக்க நான் வாசலில் போய் விழுந்தேன். நான் அடுத்த நிமிடம் பதறிப்போய் எழுந்து நிற்க, குளத்தில் நின்றிருந்த அன்னம், பத்மினி, கமலாட்சி- மூவரும் சிரிப்பது என் காதில் விழுந்தது. அவர்கள் ஒரு கல்லின் மேல் ஏறி நின்று என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். அப்படி அவர்கள் சிரித்தபோது அவர்களின் சிறிய மார்பகங்கள் குலுங்கின. நின்றிருந்த இடத்தில் இருந்து என் தந்தையை ஒரு நிமிடம் வெறித்துப் பார்த்தேன். அடுத்த நிமிடம்- அந்த இடத்தை விட்டு நான் ஓடினேன்.

அன்று இரவு என் தந்தை கறும்பூனையைக் கொண்ட கோணியுடன் வீட்டிற்கு வந்து, அதை சமையலறையின் ஒரு மூலையில் வைத்தார். அடுத்த நிமிடம்- இருட்டில் மறைந்து நின்றிருந்த நான் ஒரு தடியால் ஓங்கி என் தந்தையின் தலையில் ஒரு போடு போட்டேன். அடி விழுந்தது என் தந்தையின் பின்தலையில். அடி விழுந்ததும் அப்படியே கீழே சாய்ந்துவிட்டார் அவர். என் தந்தை கொண்டு வந்த கோணியை அவிழ்த்து, அதற்குள் அவரின் தலையை நுழைத்து அவரின் கழுத்துப் பகுதியில் கோணியோடு சேர்த்து கயிறால் கட்டினேன். என் தந்தையும் பூனையும் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டேன். ஒரு அட்டைப்பெட்டியில் என்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு, குளத்தைக் கடந்து, பலா குன்றைத் தாண்டி, வியர்வை அரும்ப வேகமாக ஓடி சாலையை அடைந்து பொன்குன்னத்தில் இருந்து பத்தரை மணிக்கு வருகிற கடைசி பேருந்தில் கோட்டயத்திற்கு வந்து, பொழுது புலரும் நேரத்தில் எர்ணாகுளத்திற்கு வந்தேன். அங்கே ஒரு சாயா கடையில் நுழைந்து ஒரு சாயா போடச் சொன்னேன். ஆனால், சாயா கடைக்காரனும் மற்றவர்களும் கூட்டமாக அமர்ந்து அன்றைய நாளிதழை ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தார்கள். "இதென்ன! சாயா போடச் சொல்லி எவ்வளவு நேரமாச்சு! நீங்க பாட்டுக்கு பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்தா...?" என்றேன் நான். என் தந்தையும், பூனையும் இந்நேரம் பேசி முடித்திருப்பார்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்களுக்குள் பல விஷயங்களையும் பேசி சுகமாக வாழட்டும். என் தந்தை இந்த மகனை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பார். எந்தக் காலத்திலும் மறக்க மாட்டார். இனி என் தந்தை யாரை அடிப்பார்? இதை நினைத்தபோது மனதில் இனம் புரியாத ஒரு கவலை வந்தது. நான் கண்களைத் துடைத்தவாறு சுற்றிலும் பார்த்தேன். எனக்கு யாரும் சாயா தரவில்லை. எல்லோரும் பத்திரிகையைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். அவ்வளவுதான்- எனக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அவர்கள் அருகில் சென்ற உரத்த குரலில் சொன்னேன்: "ஒரு சாயா தர முடியுமா? முடியாதா?" இப்படிக் கேட்டவாறு நான் பத்திரிகையைப் பார்த்தேன். நான் நின்றிருந்த தரை விலகுவது போல் இருந்தது எனக்கு. நம்பிக்கை வராமல் மீண்டும் அந்தத் தலைப்பைப் படித்தேன்.

'சைனா இந்தியா மீது படையெடுப்பு! சைனா இந்தியா மீது படையெடுப்பு' என் தலையில் ஏதோ பெரிதாக விழுந்ததுபோல் இருந்தது. நான் பலத்திற்காக சுவரில் சாய்ந்து நின்றேன். கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. தெளிவற்ற குரலில் நான் சொன்னேன்: "இந்தியா மீது சைனா படையெடுப்பு!"

எனக்கு அதற்குப் பிறகு நடந்தது எதுவும் ஞாபகத்தில் இல்லை. மயக்கம் தெளிந்து பார்த்தபோது என்னை சாயா கடையில் ஒரு பெஞ்சில் படுக்க வைத்திருந்தார்கள். தண்ணீர் தெளித்திருந்ததால், என் முகமும் சட்டையும் நனைந்திருந்தன. நான் திடுக்கிட்டு எழுந்தேன். கடையின் சொந்தக்காரன் ஒரு பீடியைப் பிடித்தவாறு வெளியே நின்றுகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்: "உனக்கு என்ன ஆச்சு? நேத்து ஒண்ணும் சாப்பிடலியா? இல்லாட்டி அளவுக்கு மேல சாப்பிட்டு ஏதாவது பிரச்சினையா? ஒரு சாயா போடட்டுமா?

"போலோ பாரத மாதா கீ ஜே"- நான் உரத்த குரலில் சொன்னேன். அவ்வளவுதான்- கடைக்காரன் நடுங்கியே விட்டான். நடுங்கிய குரலில் என்னைப் பார்த்துக் கேட்டான்: "உனக்கு என்ன ஆச்சு?" முஷ்டியைச் சுருட்டிவிட்டு, வலது கையை உயர்த்தியவாறு நான் உரத்த குரலில் கத்தினேன்: "போலோ பாரதமாதா கீ ஜே!" அடுத்த நிமிடம்- கடைக்காரன் சற்று தள்ளி நின்று என்னையே பார்த்தான். அவனின் முகத்தில் பயமும், கவலையும் தெரிந்தது.  நான் என்னைச் சுற்றிலும் பார்த்தேன். நான் கொண்டு வந்த அட்டைப் பெட்டி எங்கே? இரண்டு சட்டைகளும், ஒரு வேஷ்டியும், ஒரு கைலியும், இரண்டு ஜட்டிகளும், ஒரு துண்டும் அதில் இருந்தன. சாயா கடைக்காரன் தூரத்தில் இருந்தே கேட்டான்: "என்னத்தைத் தேடுற?" நான் சொன்னேன்: "என்னோட பெட்டியை..." அவன் கேட்டான்: "சாக்கு நூல் போட்டு கட்டிய ஒரு அட்டைப் பெட்டியா?" நான் சொன்னேன்: "ஆமா.. அதுலதான் என்னோட எல்லா துணிகளும் இருந்துச்சு." கடைக்காரன் என்னையே பரிதாபமாகப் பார்த்தான். அவன் சொன்னான்: "அதை யாரோ எடுத்துட்டு போனாங்களே! சரி... சைனா நம்ம நாட்டு மேல படை எடுத்திருக்கு! உனக்குத் தெரியுமா?" நான் சொன்னேன்: "தெரியும். பரவாயில்ல. அதுல இருந்தது எல்லாம் பழைய துணிங்கதான். போனா போயிட்டுப்போகுது. இன்னைல இருந்து நான் புதிய ஒரு ஆடை அணியப்போறேன். பட்டாள ட்ரெஸ்!" நான் இப்படிச் சொன்னதும் அந்த ஆள் கேட்டான்: "அதை வாங்க உன் கையில காசு வச்சிருக்கியா?" அந்த ஆள் கேட்டதற்கு நான் பதில் சொல்லவில்லை. வேகமாகக் கடைக்காரனின் அருகில் போய் நின்றேன். அவன் பயந்துபோய் என்னைப் பார்த்தான். நான் அந்த ஆளின் வலது கையைப் பிடித்து என் வலது கையுடன் சேர்த்து, தலைக்கு மேலே உயர்த்தியவாறு உரத்த குரலில் கத்தினேன்: "போலோ பாரத மாதா கீ ஜே... சொல்லு..." நான் அந்த ஆளிடம் சொன்னேன். அவன் வெட்கம் கவிய சொன்னான்: "கீ ஜே...!" நான் கேட்டேன்: "இங்க பட்டாளத்துக்கு ஆள் எடுக்குற இடம் எங்க இருக்கு தெரியுமா?"- அந்த ஆள் எனக்கு வழி சொல்லித் தந்தான்.

நான் வேஷ்டியை மடித்துக் கட்டி தலைமுடியை கையால் நீவிவிட்டு, தலையை உயர்த்தி, கம்பீரமாக அங்கு நடந்து சென்றேன். நான் மனதிற்குள் சொன்னேன்: "அப்பா... உங்களோட மகன்... நான் இப்போ போறேன்... என்னை ஆசீர்வதியுங்க." என் இரண்டு கண்களில் இருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. கண்ணீர் வழிந்தது, என் தந்தையை நினைத்து அல்ல- பாரத மாதாவை நினைத்து. "சைனாக்காரா... இதோ நான் வர்றேன்"- என் மனதிற்குள் நான் கூறினேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.