Logo

கடிதம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7124
kaditham

நான் மீண்டும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறேன். வெளியே வருவதேயில்லை. ஏதாவது படிக்கலாம் என்றாலோ அதில் கொஞ்சம்கூட கவனம்போக மாட்டேன் என்கிறது. என்னுடைய புத்தகங்கள் அலமாரியில் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. எழுதுவதற்கு ஒன்றுமே தோன்றவில்லை. மனதில் அழகுணர்வு பற்றிய நினைவு கொஞ்சம்கூட இல்லை. நான் உனக்கு இந்தக் கடிதத்தை மிகவும் அவசர அவசரமாக எழுதுகிறேன்.

நாளைக்கு அவர்கள் என்னை வேறெங்கோ கொண்டு போகப் போகிறார்கள் என்று என் மனதிற்குத் தோன்றுகிறது. டிரைவரிடம் நாளைக்குப் பொழுது புலர்வதற்கு முன்னால் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் சொன்னது மட்டும் என் காதில் விழுந்தது. ஒருவேளை அவர்கள் என்னைக் கொண்டு போகப்போகும் இடத்தில் பேப்பரும் பேனாவும் இல்லாமல் இருந்தால்...? அதனால்தான் இந்த இரவு நேரத்தில் அமர்ந்து இந்தக் கடிதத்தை உனக்கு அவசர கதியில் எழுதுகிறேன். நீ என்னுடைய கடைசி மகனாக இருப்பதால், என்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் உன்னிடம் கூறிவிடுவதுதான் சரியான விஷயமென்று நான் நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ரகசியங்கள் உன்னுடைய கற்றலின் ஒரு பாகமாக இருக்கட்டும். இவற்றைப் பற்றி நீ வீணாக சிந்தித்துப் பார்த்து வருத்தப்பட வேண்டாம். நான் சொல்லப் போகும் விஷயங்களை, ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்கள் என்ற அளவில் மட்டும் நீ எடுத்துக் கொண்டால் போதும். இந்த அறைக்குள் இப்போது ஆக்கிரமித்திருக்கும் இருட்டு வெகு சீக்கிரமே என் ஆத்மாவிற்குள்ளும் நுழையும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உன்னை அந்தச் சமயத்தில் யார் என்றே தெரியாத ஒரு ஆளைப் போல நான் பார்க்கலாம். ஆனால், உண்மையை நீ தெரிந்து கொள்ள வேண்டும். பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே, சில காரியங்களை எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் செய்ய முயன்று தோல்வியடைந்த வேதனையை பலமுறை அனுபவிக்க நேர்ந்த ஒரு மனிதனாக மட்டுமே உன் தந்தையை நீ எடுத்துக் கொண்டால் போதும். என் கண்களில் தெரியும் பரிச்சயமின்மையைப் பார்த்து நீ துணுக்குற வேண்டாம். அதனால்தான் அவசர அவசரமாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நீ எல்லாவற்றையும் அறிய வேண்டும். யாருக்குமே தெரிந்திராத ஒரு சம்பவத்தை நான் உனக்குக் கூறுகிறேன். நாற்பது வருடங்கள் கடந்தோடிய பிறகும், என் மனதில் அந்த நிகழ்ச்சி அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. என் மனதால் அந்தச் சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. நான் இங்கு அமர்ந்து இந்த இரவு வேளையிலும் என் நகத்தைக் கடித்து தின்று கொண்டிருக்கிறேன். என் கைகள் வலிக்கின்றன. அவற்றில் இருந்த பலம் குறைந்துவிட்டது. பலம் குறைந்த வேதனையை என்னால் உணர முடிகிறது. ஒரு வேளை புதிய தலைமுறையைச் சேர்ந்த, புதிய அனுபவங்களைத் தேடும் உன்னால் என்றைக்காவது என்னுடைய அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியலாம். சரி - நான் சொல்வதைக் கேள். திருமணம் செய்வதற்கு முன்பு இளைஞனாக இருந்த நான் ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் நண்பன் ஜானுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. ஏழு மாதமே ஆன சிறு குழந்தை அவனுக்குப் பிறந்திருந்தது. பிரசவமானபோது, நான் போய் வியப்புடன் பார்த்த குழந்தை அது. மதியம் ஆவது வரை நானும் ஜானும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். சீட்டு விளையாடினோம். மற்றவர்களைப் பற்றி கிண்டல் பண்ணி பேசினோம். ஆபாசக் கதைகள் எவ்வளவோ பேசினோம். வாய்விட்டு சிரித்தோம். மதிய உணவு முடிந்து நாங்கள் திண்ணையில் வந்து மீண்டும் உட்கார்ந்தோம். ஜானின் மனைவி அவர்களின் குழந்தையைக் கையில் எடுத்தவாறு வந்து எங்கள் உரையாடலில் அவளும் கலந்து கொண்டாள். நான் திண்ணையில் உட்கார்ந்தவாறு குழந்தையைப் பார்த்து நாக்கை நீட்டி காண்பித்து சிரித்தேன். கைகளைத் தட்டினேன். கையை நீட்டினேன். விசிலடித்தேன். நான் கேட்டேன்: “மகனே... உனக்கு என்னைத் தெரியுதா? என் கூட நீ வர்றியா?” என்னுடைய கண்ணாடியைக் கழற்றி அவன் முன் நீட்டியவாறு நான் கேட்டேன்: “மகனே, உனக்கு கண்ணாடி வேணுமா? வா... நான் உனக்கு போட்டு விடுறேன்!” நான் அதற்கு முன்பு எந்தக் குழந்தையையும் தூக்கியதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதையோ என்ன நினைக்கிறார்கள் என்பதையோ என்னால் புரிந்து கொள்ள முடியாததால் பொதுவாக குழந்தைகளைத் தூக்க எனக்கு பயம்தான். தெய்வங்களைப் போல புரிந்து கொள்ள முடியாத மனதைக் கொண்டவர்களாயிற்றே குழந்தைகள்! அந்த தைரியத்துடன் நான் அந்தக் குழந்தையைத் தொட்டேன். “மகனே வா” என்று சொல்லியவாறு நான் மீண்டும் என் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டினேன். என் நண்பனின் மனைவி சிரித்தவாறு குழந்தையை என் கைகளில் தந்தாள். நான் அந்தக் குழந்தையின் குளிர்ந்து போயிருந்த மென்மையான இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து வாங்கினேன். சிரித்துக் கொண்டே விசிலடித்தவாறு குழந்தையை நான் வாங்கியபோது, குழந்தை என் கைகளை விட்டு நிலத்தில் விழுந்தது.

அது சாகவில்லை.

உடம்பில் எந்த உறுப்பிற்கும் எந்தவித கேடும் உண்டாகவில்லை.

நான் அந்த நிமிடத்தில் செத்துப்போன மனிதனாகிவிட்டேன். என்னை மீறி கத்தினேன். தேம்பித் தேம்பி அழுதேன். ஒரு இயந்திரத்தைப் போல குழந்தையின் தாயையும் தந்தையும் வெறித்துப் பார்த்தேன். அவர்களின் பார்வை கூர்மையான கத்தியைப் போல என்னைக்குத்தியது. என் இதயத்தில் இரத்தம் வடிந்தது. கண்ணீர் விட்டு அழுதேன். கல்லாக மாறினேன். வாய்விட்டு உரத்த குரலில் கத்தினேன்.

மகனே, அதற்குப் பிறகுதான் எனக்கு திருமணம் ஆனது. உன்னுடைய அண்ணன்மார்கள் பிறந்தார்கள். உன்னுடைய சகோதரிகள் பிறந்தார்கள். நீயும் பிறந்தாய். ஒவ்வொருத்தரும் அந்தந்த நேரத்தில் போர்டிங்குகளிலும் ஹாஸ்டல்களிலும் லாட்ஜ்களிலும் பிறகு... வாடகை கட்டிடங்களிலும் வளர்ந்தீர்கள்.

இந்தச் சம்பவம் அவர்கள் யாருக்கும் தெரியாது. என்னை அவர்கள் நாளை காலையில் வேறு எங்கோ கொண்டு போகப் போகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்துத்தான். எனக்கே தெரியாமல் சில விஷயங்கள் நடந்து விடுகின்றன என்பதையும், அந்த மாதிரியான நேரங்களில் நானே செயலற்று நின்று விடுகிறேன் என்பதையும் சிகிச்சை செய்து மாற்றி விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா என்ன? ஆனால், அப்படி நான் நினைக்கவில்லை. அவர்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியாததால், நான் அவர்களுக்கு கீழ்படிந்து நடக்க தயாராகிவிட்டேன். அவர்களின் உலகத்தில் இருக்கும் சட்டதிட்டங்கள் இனி எனக்குப் பொருந்தாது.


என் கண்களில் பரிச்சயமின்மைக்கான முகமூடி அணிவிக்கப்பட்டு விடும்போது, நான் அதற்குப் பின்னால் எதுவுமே தெரியாதது மாதிரி அமைதியாக உட்கார்ந்திருப்பேன். நீ அப்போது என்னைப் புரிந்து கொள்ள வேண்டும். சரி... நான் சொல்ல வந்த விஷயத்தை சீக்கிரமாக கூறிவிடுகிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சண்ணியின் திருமணத்திற்கு நீயும் வந்திருந்தாய் அல்லவா? திருமணம் முடிந்ததும் நீ உடனடியாக போர்டிங்குக்குப் போய்விட்டாய். இரவில் உணவு சாப்பிட்டு முடிந்தபிறகு, நாங்கள் எல்லோரும் சண்ணியின் வீட்டில்தான் தங்கினோம். நான் வராந்தாவில் ஒரு பாயை விரித்துப் படுத்துக் கிடந்தேன். மாலை முதலே சண்ணியிடமும் அவனின் மனைவியிடமும் மாமா என்ற முறையில் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை நான் சொல்ல விரும்பினேன் என்பதையும், அதை நான் மறந்துவிட்டேன் என்பதையும் என் மனம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தது. நான் திண்ணையில் பாயில் படுத்தவாறு வானத்தில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சண்ணியிடம் நான் சொல்ல வேண்டிய விஷயம் என் ஞாபகத்தில் வந்தது. மீண்டும் அதை நான் மறந்து போய் விடக்கூடாது என்பதற்காக வேகமாக நடந்து போய் சண்ணியும் அவன் மனைவியும் படுத்துக் கிடக்கும் அறை வாசல் கதவு அருகில் போனேன். கதவை மெதுவாகத் தட்டினேன். தொடர்ந்து பல தடவை தட்டிய பிறகு சண்ணி உள்ளேயிருந்தவாறு கேட்டான்: “யாரு?”

நான் சொன்னேன்: “தொம்மச்சனச்சன்...”

சண்ணி கதவைத் திறந்தான்: “என்ன தொம்மச்சனச்சா?”

நான் சொன்னேன்: “சண்ணி... உன்கிட்டயும் உன் மனைவிகிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். அது என்னன்னா...”

நான் சொல்ல வந்த விஷயத்தை முற்றிலுமாக மறந்து விட்டிருந்தேன். தயங்கிய குரலில் அவனைப் பார்த்து நான் சொன்னேன்: “சண்ணி... நான் திரும்பவும் அந்த விஷயத்தை மறந்துட்டேன். நீ போய் படு. நான் ஞாபகப்படுத்தி பார்க்குறேன்...”

நள்ளிரவுக்குப் பிறகு எனக்கு தூக்கம் இல்லாமல் போனது. அப்போதுதான் மறந்து போயிருந்த விஷயம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அவ்வளவுதான் - அடித்துப் புரண்டு எழுந்தேன். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. பயங்கர குளிர் வேறு. இங்குமங்குமாய் பனித்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. மூச்சு விடும் சத்தம், குறட்டைச் சத்தம், முணுமுணுப்புகள் ஆகியற்றைத் தட்டுத் தடுமாறித் தாண்டிப்போய் மீண்டும் நான் சண்ணியின் அறைக் கதவைத் தட்டினேன். திரும்பத் திரும்ப தட்டிக் கொண்டே இருந்தேன். இந்தத் தடவை நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துபோய்விடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தேன். என் மனது என்னுடைய ஞாபக சக்தியை இறுக பிடித்துக் கொண்டிருக்க, என் கைகள் கதவை வேகமாக தட்டியவண்ணம் இருந்தன. “சண்ணிசண்ணி...”- நான் குரலை உயர்த்தி கூப்பிட்டேன். என் சத்தத்தைக் கேட்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த எல்லோரும் எழுந்துவிட்டார்கள். சிலர் படுக்கையை விட்டு எழுந்து என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். சில குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. மூன்று நான்கு ஆட்கள் இருட்டைத் தாண்டி என்னருகில் வந்து என்னிடம் கேட்டார்கள்: “என்ன தொம்மச்சா?”

“சண்ணிக்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்”- நான் உண்மையைச் சொன்னேன்.

சண்ணி அப்போது கதவைத் திறந்தான். நான் சொன்னேன்: “சண்ணி, நான் மறந்த விஷயம் இப்போ எனக்கு ஞாபகத்துல வந்திருச்சு. விஷயம் இதுதான். நாமெல்லாம்...”

நான் சொல்ல வந்த விஷயத்தை முழுமையாக சொல்ல அவர்கள் யாரும் விடவில்லை. அவர்கள் என்னை பலவந்தமாக இழுத்துக்கொண்டு போனார்கள். சண்ணி என்னைத் தப்பாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் வெட்கக்கேடான முறையில் நடந்து கொண்டதாகவும், என் வயதுக்குத் தகுந்தபடி பக்குவமான முறையில் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் என் மீது குற்றம் சுமத்தினார்கள். உன் தாய் கூட என்னை சந்தேகம் கொண்ட நாணக்கேட்டின் வேதனையை அனுபவிக்கிற கண்களுடன் பார்த்தாள். நான் யாருக்காவது தொந்தரவுகள் கொடுத்தேனா? யாரையாவது கொன்றிருக்கிறேனா? யாரையாவது தாக்கி இருக்கேனா? யாருக்காவது துரோகம் செய்திருக்கிறேனா? யாரையாவது அவமானப்படுத்தியிருக்கேனா? யாரையாவது கற்பழித்திருக்கிறேனா? யாரையாவது மோசம் செய்திருக்கிறேனா? நான் அப்படி செய்து விட்டேன்?

கடைசியில் சென்ற வாரம் என்னைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு அவர்களுக்குக் கிடைத்தது. உன்னுடைய பெரிய பாட்டியின் தங்கை காலமாகிவிட்டாள். தேவையில்லாமல் உனக்கு இந்த விஷயத்தைச் சொல்லி எதற்கு வீணாக படிப்பிற்கு தொந்தரவு வருவது மாதிரி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லோரும் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து அழுதார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டார்கள். பலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்கள். சிலர் தாங்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார்கள். நான் போன அறை ஒவ்வொன்றிலும் துக்கம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சாம்பிராணி புகையில் துக்கத்தின் வாசனை இரண்டறக் கலந்து போயிருந்தது. நான் சுற்றிலும் பார்த்துக் கொண்டு நின்றேன். எண்பது வயது பூர்த்தியான கிழவியை வெள்ளைத துணியில் சுற்றி கைகளில் சிலுவையையும், பூச்செண்டையும் கொடுத்து படுக்கப் போட்டிருக்கிறார்கள். இதில் துக்கப்படுவதற்கு ஒரு காரணமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எண்பது வயதான அந்தக் கிழவி இன்னும் மரணமடையாமல் இருந்தால்தான் உண்மையிலேயே கவலைப்பட வேண்டும்! கண் பார்வை தெரியாமல், நடக்க முடியாமல், மலம் - மூத்திரம் கழிப்பதற்கு இன்னொருத்தர் உதவியை நாடாமல் காய்ந்து கருவாடாகப் படுத்துக் கொண்டு இருக்காமல் இவ்வளவு சீக்கிரம் அந்தக் கிழவி மரணத்தை தழுவியது எவ்வளவு பெரிய விஷயம்! தன்னுடைய மக்கள் விவசாயம் செய்தும், வியாபாரம் செய்தும் பணக்காரர்கள் ஆனதை அந்த வயதான தாய் வாழும் காலத்திலேயே பார்த்து விட்டாள். கார்கள் வாங்கியதையும், பங்களாக்கள் கட்டியதையும் பார்த்து விட்டாள். பேரக் குழந்தைகளின் ஆர்ப்பாட்டமான திருமணங்களில் கலந்து கொள்ள நீளமான கார்களில் முகம் முழுக்க புன்னகையுடன் அவள் போனாள். தன்னுடைய மக்கள் தன்னைச் சுற்றிலும் நின்றிருக்க, திருமண நிகழ்ச்சிகளை கண் குளிர கண்டாள். வீட்டில் மொசைக் போட்ட அறையில் அமர்ந்து கண்ணாடி ஜன்னல்கள் வழியாக புதுப்புது இசையும் தானே இயங்கும் இயந்திரங்களில் இருந்து புறப்பட்டு வருவதை காது குளிர கேட்டாள். மொத்தத்தில் - அவள் பூரண மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினாள். பாக்யசாலியான அந்த வயதான தாய்க்காக இவ்வளவு உரத்த குரலில் அழுவது, மயக்கமடைவது, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கூப்பாடு போடுவது, கண்களில் சுய உணர்வே இல்லாமல் இங்குமங்குமாய் அலைந்து திரிவது - இவற்றையெல்லாம் உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.


இவர்களின் துக்கத்திற்கு ஒரு மாற்றம் உண்டாக்க நான் நினைத்தேன். வயதான கிழவியின் பிணத்தைச் சுற்றிலும் அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, அந்த அழுகைச் சத்தத்திற்கு மத்தியில் வேறு எந்தவொரு சத்தமும் அங்கு கேட்காமல் இருக்க, நான் இந்த துக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்களின், பேரக் குழந்தைகளின் மனதில் சிறிது மாற்றம் உண்டாகட்டும், கொஞ்சம் அங்கு குளிர்ச்சி உண்டாகட்டும் என்றெண்ணி பிணம் இருந்த கட்டிலுக்குப் பின்னால் அந்த ரேடியோகிராமின் அருகில் சென்று ஷெல்ஃபில் இருந்து ஒரு லாங்க் ப்ளே இசைத் தட்டை எடுத்து,  ரிக்கார்ட் சேஞ்சரில் வைத்து பொத்தானை அழுத்தி, ஒலியின் அளவைக் குறைத்து வைத்தேன். இருந்தாலும் நான் செய்த செயல் அங்கு அழுது கொண்டிருந்தவர்களின் முகத்தில் இலேசான ஒரு பிரகாசத்தை உண்டாக்கியதை என்னால் உணர முடிந்தது. ரேடியோகிராமின் மினுமினுக்கும் மேற்பகுதியில் கையை வைத்தவாறு நான் காத்திருந்தேன். க்ளிக்... க்ளிக் இசைக்கருவிகள் இயங்க ஆரம்பித்தன. குழல்கள் ஊதின. மணியோசை கேட்டன. இனிமையான ஒரு பாடல் காற்றில் தவழ்ந்து வந்தது. ‘சாந்த் கோ க்யா மாலும்...’

துக்கம் கலந்த அழுகைக் குரல்கள் திடீரென்று நின்றவுடன் நான் சந்தோஷம் கொள்ள ஆரம்பித்தேன். நான் நினைத்தது நடந்துவிட்டது. நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் கண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்த முகங்கள் ஒவ்வொன்றும் எனக்கு நேராக இயந்திரங்களைப் போல் திரும்பின. என்னுடைய நீட்டப்பட்ட கைகளுக்குக் கீழே பாடிக் கொண்டிருந்த ரேடியோகிராமையும் அவர்கள் நம்ப முடியாத கண்களுடன் பார்த்தார்கள்.

அவர்களின் கண்கள் என்னைக் கழுகுகளைப்போல கொத்தப் பார்த்தன. அந்தப் பார்வைகளைப் பார்த்து பனிக் கட்டியைப்போல் நான் உறைந்து போனேன். பந்தத்தால் நெருப்பு வைப்பதைப் போல என்னை அவர்கள் பார்த்தார்கள்.  அவர்களின் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த கன்னத்தில் கோபத்தின் சிவந்த ஜுவாலைகளையும் நான் பார்த்தேன். அவர்களின் முகங்களில் வெறுப்பு, ஏமாற்றம், அவமானம், கண்டனம் எல்லாமே இருப்பதை என்னால் உணர முடிந்தது.

“தொம்மச்சனச்சா!” - யாரோ உரத்த குரலில் என்னை அழைத்தார்கள்.

அவர்களின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமல் நின்றிருந்த என்னுடைய கைகளைப் பிடித்து இழுத்து அறைக்கு வெளியே கொண்டு போனாள் உன் தாய். பிறகு அவள் தேம்பித் தேம்பி அழுதாள். உன்னுடைய அண்ணன்மார்கள் என்னை சுற்றி நின்றார்கள். “அப்பா...” அவர்கள் அழைத்தார்கள். “அப்பா உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்தீங்க?” என்றார்கள்.

உன்னுடைய டாக்டர் அண்ணன் சொன்னான்: “அப்பா, யூ ஆர் லூஸிங் யுவர் ஹோல்ட் ஆன் திங்க்ஸ். யூ நீட் எ லாங் ரெஸ்ட்!” ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் அவர்கள் என்னைப் பார்த்து என்னென்னவோ சொன்னார்கள். என்னைக் காரில் ஏற்றி நேராக வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் எதற்காக அந்த ரேடியோகிராமை இயங்க வைத்தேன் என்பதற்கான காரணத்தை அங்குள்ளவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்? நான் சொல்வதை அவர்கள் காது கொடுத்து கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் களைப்படைந்து விட்டேன். மகனே, மற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து போவதுதான் சரியான விஷயமாக இருக்கும். யாருடனும் பேச எனக்கு விருப்பம் இல்லை. என்னுடைய புத்தகங்களும், நான் எழுதிய புத்தகங்களும், என்னுடைய நண்பர்கள் எழுதிய கடிதங்களும், என்னுடைய  ஆடைகளும், என் பேனாவும், என் ஷேவிங் செட்டும், என்னுடைய பேரக் குழந்தைகளின் படங்களும், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் தாயின் படமும் என்னைச் சுற்றிலும் இருந்து என்னையே பார்க்கின்றன. நான் அவற்றிலிருந்து மாறுபட்டு தெரிகிறேன். இனிமேல் நான் மவுனமாக இருப்பதே சரியானது. நீ என்னைப் பார்க்க வருகிறபோது, நான் உன்னை அடையாளம் தெரியாதது மாதிரி நடந்துகொண்டால் அதற்காக நீ வருத்தப்படாதே. நான், நீ அறியும் நான், எனக்குள் மறைந்திருக்கிறேன். ஆனால், நான் வெளி உலகத்திற்கு வர விரும்பவில்லை. அது என்னை மோசம் செய்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.