
மேற்கு திசையில் தெரிந்த மாலை நேரம் ஒரு விளக்கைப் போல ஜொலித்தது. வானத்தின் விளிம்பில் வர்ணங்கள் நதியைப் போல கலங்கியிருந்தன. அது அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடங்கியபோது இருந்த நிலை. சிறிது நேரத்தில் நிறங்கள் முற்றிலுமாக மறைந்தன. மேகங்களில் இருட்டு நிறம் வந்து சேர்ந்தது. மாலை இரவு நேரத்திற்குள் சங்கமமானது.
ஏற்கனவே எரிய வைத்திருந்த பாதை விளக்குகள் இப்போது நல்ல வெளிச்சத்துடன் காட்சியளித்தன. மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்ற இளைஞன் கையில் சில புத்தகங்களை மார்போடு சேர்த்து பிடித்திருந்தான். பாதை விளக்குகளுக்கு மத்தியில் அவனின் நிழல் நீண்டும் சுருங்கியும் அவனைப் பின் தொடர்ந்தது. மெதுவாக அவன் பாதையின் ஒரு பக்கத்தில் இருந்த கள்ளிச் செடிகளுக்கும் மரங்களுக்கும் நடுவில் இருந்த ஒரு குளத்தினருகில் வந்தான். பாதையை விட்டு கள்ளிவேலியில் இருந்த ஒரு இடைவெளி வழியே அவன் மரங்களுக்குக் கீழே நடந்து குளக்கரையை அடைந்தான். குளத்தையொட்டி இருந்த கருங்கல்லின் அருகில் பசு ஒன்று அசையாமல் நின்றிருந்தது. எந்தவித காரணமும் இல்லாமல் அந்த இளைஞன் எதைப் பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே அங்கு நின்றிருந்தான். இந்த குளத்தைப் பார்த்து அவன் எப்போதும் ஆச்சரியப்படுவான். வெளிச்சம் ஆட்சி செய்யும் நகரத்தின் நடுவில் இருட்டு முழுமையாக மூடி விட்டிருக்கும் ஒரு குளம். எப்போதாவது ஒரு ஆள் நடந்துவரும் பாதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கத்தில் மரங்களின் அடர்த்தியினூடே நகரத்தின் மின்சார விளக்குகளும் வாகனங்களின் இரைச்சலும், தூரத்தில் ஒரு தொழிற்சாலையிலிருந்து சங்கொலி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகாயத்தில் நகரத்தின் வெளிச்சம் சற்று மங்கலாகத் தெரிகிறது. ஒரு குளிர்ச்சியான காற்று அவ்வப்போது விட்டுவிட்டு வீசிக் கொண்டிருக்கிறது. குளத்தின் கரையில் இருட்டில் நின்று கொண்டு அவன் தனக்கு மட்டுமே புரியக் கூடிய ஒரு மொழியில் தனக்குத்தானே ஏதோ பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்களிடம் பயன்படுத்தாத புது மொழியால் அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். கவலையில் மூழ்கிப் போன மாலை எங்கே போய் ஒளிந்து கொண்டது? அடுத்த நிமிடம் அவனே அந்தக் கேள்விக்குப் பதிலும் சொல்லிக் கொண்டான்: இந்தக் குளத்தில் இந்த மரங்களுக்கு மத்தியில் தனியாக நின்று கொண்டிருக்கும் இந்தப் பசுவிற்குப் பின்னால்... அவன் பசுவைப் பார்த்து கேட்டான்: “நீ ஏன் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்? அடுத்த நிமிடம் வெட்கம் வந்து அவனை அணைத்துக் கொண்டது. தான் தானல்ல என்ற உண்மையை உணர்ந்த அவன் தனியனாக ஆனான்.
என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்த அவனுக்கு குளத்தில் இருந்த நீரில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்ததும், தான் எதற்காகப் புறப்பட்டு வந்தோம் என்ற விஷயம் ஞாபகத்தில் வந்தது. அவன் பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பார்க்கப் போகிற இளம் பெண்ணைப் பற்றி மனதில் அசை போட்டவாறு அவன் பாதையில் முன்னோக்கி நடந்து போனான். அந்த மாலை நேரம் அவனுக்கு மிகவும் இனிமையான ஒன்றாகத் தோன்றியது. காற்று மிகவும் சுகமாக இருந்தது அவனுக்கு. கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. ‘எனக்குத் தெரிந்த அந்தப் பெண் எனக்கு மட்டுமே சொந்தம். எனக்கு மட்டுமே அவள் சொந்தம். லட்சுமி, உன்மேல் நான் எந்த அளவிற்கு காதல் வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாது. என் மனதிற்குள் நான் பூட்டி வைத்திருக்கும் ரகசியம் அது. நான் விரும்பி பூட்டி வைத்திருக்கும் ரகசியம். உனக்கு மட்டுமே நான் அதைச் சொல்வேன்’ - அவனின் மனம் காதல் வயப்பட்ட சந்தோஷத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தது. ‘என் காதல்... என் காதல்...’ என்று தனக்குத்தானே கூறியவாறு அவன் அந்தப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். ‘எவ்வளவு நாட்களாக என் மனதின் கம்பிகளுக்குப் பின்னால் கண்களை மூடிக் கொண்டு உன்னைக் காதலித்திருக்கிறேன்!’ - தான் பிதற்றிக் கொண்டிருப்பதை அவன் புரிந்து கொண்டான். ‘என்னை இந்த இருட்டுக்குள் இருந்து விடுதலை அடையச் செய். இந்தக் கட்டில் இருந்து என்னை அறுத்தெறிந்து உன்னோடு என்னை இணைத்துக் கொள். உன்னுடைய வலைப் பின்னல்களால் என்னை இறுக கட்டிப் போடு. உன்னை விட்டு என்னை வேறு எங்கும் விட்டுவிடாதே. விட்டு விடாதே. உன்னுடன் இருக்கும்போதே நான் இந்த உலகத்தைவிட்டு போய் விடுகிறேன்’ - தன்னுடைய சொற்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டதோ என்பதாக உணர்ந்த அவன் தனக்குத்தானே ஒரு மூன்றாவது மனிதனாக ஆனான். ஒரு நிமிடம் அவன் மனதில் சொற்களே முளைக்கவில்லை. அவன் தன்னுடைய இதயத் துடிப்பைக் கேட்டவாறு நடந்து போய்க் கொண்டிருந்தான். திடீரென்று அவன் அதிர்ச்சியடைந்து போனான். ஒருவித குழப்ப நிலைக்கு ஆளானான். சொற்கள் ஒரு அருவியைப் போல மனதிலிருந்து கொட்ட ஆரம்பித்தது. அதோடு சேர்ந்து அவனுடைய கால்கள் படுவேகமாக பாதையில் நடக்க ஆரம்பித்தன.
‘நான் நீண்ட நாட்கள் அமைதியான மனிதனாகவே இருந்து விட்டேனா? அவளின் மனதில் காதல் என்ற ஒன்று இன்னும் அரும்பாமல் இருப்பதன் அர்த்தம் என்ன? என்னுடைய மனதில் நான் கொண்டிருக்கும் காதல் ஒரு மூலையில் ஊமையைப்போல ஒளிந்து கொண்டிருப்பது ஏன்? மடையன்! மடையன்!’ - மனதை வெளிக்காட்ட, அதைக் கிழிக்க நினைத்தான் அவன். இதயத்தை அப்படியே கசக்கி பிழிய வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. ‘பேரைச் சொல்லி அழைத்து நான் அழட்டுமா? உரத்த குரலில் கூப்பாடு போடட்டுமா? கவலையில் உளறிக் கொட்டட்டுமா? பயம் கலந்த காதலை நான் கொண்டிருக்கிறேன். பயத்தைக் கொண்ட காதல். பயத்தை உள்ளடக்கிய காதல். கடைசியில் மீதி இருப்பதென்னவோ அழிவுதான்’ - தன்னுடைய சொற்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை உணர்ந்த அவனுக்கு அதை நினைத்துப் பார்ப்பதே ஒரு விஷயத்தை நினைப்பதைப் போல இருந்தது.
‘நான் மட்டும் அவளைக் காதலிக்கிறேன்’ - அவன் தேம்பி தேம்பி அழுதான். ‘என் மனதில் மட்டுமே காதல்’ - அச்ச அரக்கர்கள் சாபங்கள் இட்டவாறு அவனை முழுமையாக ஆக்கிரமித்தார்கள். அவனின் இதயம் வாளை வைத்து அறுத்ததைப்போல கவலையால் இரண்டாகப் பிளந்தது. அவன் என்ன செய்வது என்றே தெரியாமல் ஒரு விளக்கு மரத்தைப் பிடித்தவாறு தலை குனிந்து நின்றான். சிறகு கரிந்த பூச்சிகள் அவனைச் சுற்றிலும் குளிர்ந்த மண்ணில் சிதறித் துடித்துக் கொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து அவன் ஒரு பொம்மையைப்போல பயணத்தைத் தொடர்ந்தான். நிலவு வானத்தில் உதித்துக் கொண்டிருந்தது.
விலைமாதர்கள் தங்கியிருக்கும் பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் முன்பாக நடந்து சென்று அவன் மெயின்ரோட்டை அடைந்தான். விளக்கு வெளிச்த்தில் இங்குமங்குமாய் நகர்ந்து கொண்டிருந்த மக்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் தான் தேடிவந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றான். வெளி வாசலுக்கு மேலே படர்ந்திருந்த செடிகளுக்குக் கீழே நின்றவாறு கேட்டைத் திறக்க முயற்சித்தபோது, அந்த இளம் பெண்ணின் சகோதரன் முன்னால் நடந்து வந்தான். அடுத்த நிமிடம் அந்த இளைஞன் என்ன செய்வது என்று தெரியாமல், கேட்டின் மேல் இருந்த தன்னுடைய கையை எடுத்தான்.
“என்ன?” - இருட்டில் நின்றவாறு அவன் கேட்டான்.
“நான் இந்த புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கேன். லட்சுமி கொண்டு வரச் சொல்லியிருந்தா...” - இளைஞன் சொன்னான்.
“லட்சுமி இங்கே இல்லையே!”
“ஆனா. நான் ஏழு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தேனே!” - இளைஞன் தடுமாறிய குரலில் சொன்னான்.
“எனக்கு அதைப்பற்றி தெரியாது. புத்தகங்களை என்கிட்ட கொடுத்துட்டுப் போனா, நான் கொடுத்திர்றேன்...”
அவன் ஜன்னலில் இருந்து விழுந்த வெளிச்சத்திற்கு மாறி நின்று கொண்டு தன் கைகளை நீட்டினான். அவனின் முகத்தில் அர்த்தமே இல்லாத ஒரு புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த இளைஞன் லட்சுமியின் சகோதரன் கையில் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களைக் கொடுத்தான். அப்போது ஜன்னல் திரைச்சீலைக்குப் பின்னால் யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணர்ந்தான். ஜன்னலை இரண்டாவது தடவையாக பார்க்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை. அவன் மனதிற்குள் சந்தேகப்பட்டான். ‘என்னைப் பார்க்கக் கூடாது என்று வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பார்கள்!’ அப்படி நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. புத்தகங்களைக் கொடுத்துவிட்டு அவன் தெருவில் வந்து நின்றான். லட்சுமியின் சகோதரன் புத்தகங்களுடன் உள்ளே போய் கதவை அடைத்தான். என்ன நினைத்தானோ அந்த இளைஞன் அமைதியாக பின்னால் நடந்து சென்று கேட்டுக்கு அருகில் இருந்த தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான். அப்போது அவனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே படர்ந்திருந்த செடியில் மின்மினிப் பூச்சிகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. மறைந்திருந்த இடத்தில் இருந்தவாறு அவன் தான் தேடிவந்த பெண்ணின் குரலைக் கேட்டான்.
“அந்த ஆள் போயாச்சா?”
அவளின் சகோதரன் சிரித்துக் கொண்டே சொல்வதை அவன் கேட்டான்: “போயாச்சு...”
“பைத்தியக்காரன்...” - லட்சுமி சிரித்துக் கொண்டே கூறுவதை அவன் கேட்டான்.
அவன் தூணுக்குப் பின்னால் ஒரு நிமிடம் மனவேதனையுடன் நின்றான். அடுத்த நிமிடம் மீண்டும் தெருவிற்கு வந்தான். தெருவின் விளக்கு வெளிச்சத்திற்கு மத்தியில் இலேசாக அழுதவாறு பைத்தியத்தைப்போல ஓடினான். தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு ஓடிய அவன் குளத்தின் கரைக்கு வந்தான். அங்கே கீறல் விழுந்த ஒரு இடத்தில் நின்றிருந்த அவன் தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தான். குளத்தில் குதித்து மரணமடைவதைப் பற்றி யோசித்துப் பார்த்த அவன் நீண்ட நேரம் அங்கே இருட்டையே பார்த்தவாறு நின்றிருந்தான்.
அவன் முன்பு பார்த்த பசு அதே இடத்தில் அப்போதும் நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அது கருங்கல் பாதையில் இறங்கி நீரைக் குடித்துவிட்டு மெல்ல நடந்து சென்று புல் மேல் போய் படுத்துக் கொண்டது. அவன் அதன் அருகில் சென்று அமர்ந்து அதன் கன்னத்தை இலேசாக சொறிந்து கொடுத்தவாறு அதனிடம் என்னவோ சொன்னான். சிறிது நேரம் சென்றபின் அவன் மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்து வாயில் வைத்து கடித்து சுவைத்தவாறு வெளியே மண் பாதையில் இறங்கி அசைவே இல்லாத மனதோடு தன் நிழலுடன் சேர்ந்து நடந்து போனான்.