Logo

என் தந்தை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7778
En Thandai

ன் தந்தை ஒரு அப்பிராணி மனிதராக இருந்தார். அவரை நினைத்து நான் பல நேரங்களில் கவலைப்பட்டிருக்கிறேன். என் சின்னப் பையன் சேட்டை செய்யும் சமயங்களில் நான் அவனைப் பார்த்து சொல்வேன்: “டேய், உன்னோட தாத்தா எவ்வளவு அமைதியான ஆளு தெரியுமா? நீ ஏன்டா இப்படி நடக்குற? சேட்டை பண்ணவே கூடாது. நாம எப்பவும் அமைதியா, எளிமையா வாழணும்.” அப்படிச் சொல்லும் அதே நேரத்தில் நான் நினைப்பேன், என் தந்தையைப் போல நானும் கஷ்டப்பட்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறேனோ என்று. என் தந்தை வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். அவர் அடைந்த இழப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல.

என் தந்தைக்கு மிகவும் பிடித்த ஒரு வார்ப்பு அவரிடம் இருந்தது. என் தாத்தா சம்பாதித்த அழகான, விலை மதிப்புள்ள ஒரு வார்ப்பு அது. அருமையான வேலைப்பாடுகள் அமைந்த புன்னகை புரியும்  கம்பீரமான தலைகளைக் கொண்ட - இரண்டு கைப்பிடிகளையும் கொண்ட வார்ப்பு அது. என் தாத்தா யாருமே செய்யாத ஒரு காரியத்தைச் செய்தார். நாற்புறமும் அமைந்திருந்த வீட்டின் ஒரு முற்றத்தில் ஒரு தென்னங்கன்றை கொண்டு வந்து வைத்தார். அது வளர்ந்து பெரிதாகி வீட்டின் ஓடுகளை காய்களாலும், ஓலைகளாலும் தகர்க்க ஆரம்பித்தபோது, எல்லாரும் என் தாத்தாவைக் குறை சொல்லத் தொடங்கினார்கள். அப்போது என் தந்தை சொன்னார்: “தென்னை ஒரு கற்பக விருட்சம். நடு முற்றத்துல அது இருக்கட்டும். நாம எல்லோரும் செத்துப் போனாக்கூட, அதுக்குப் பிறகும் அது அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கும்.” என் தாத்தா இந்தத் தென்னை மரத்திலிருந்து ஒரு இளநீரைக்கூட குடிக்க முடியாமலே போய்விட்டது. அவர் நடுத்தர வயதிலேயே இந்த உலகை விட்டு போய்விட்டார்.

தென்னைமரத்தின் அடியில் இருந்த வார்ப்பு மழை நீரால் நிறைகிறபோது, நான் அதில் ஒரு சிறு குளத்தில் குளிப்பதைப்போல குளித்திருக்கிறேன். நெல் அவிக்கிறபோது, அதிலிருந்து கிளம்பி வருகிற அருமையான வாசனையை நான் என்னையே மறந்து உள்வாங்கி மகிழ்ந்திருக்கிறேன். வார்ப்பு நெருப்பு ஜுவாலைகளால் சூழப்பட்டு அடையாளம் தெரியாத ஒன்றைப்போல அடுப்பின்மீது இருக்கும். எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலையின் நிழலுக்குள் நானும் யாரோ ஒரு ஆள்போல மறைந்து போவேன். வேக வைத்த நெல்லின் மணத்துடன் வார்ப்பு மீண்டும் இருட்டில் என்னைத் தேடி வரும்.

ஒருநாள் ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது என்னைவிட வயதில் மூத்த பையன்களில் யாரோ மேலே கிடந்த வார்ப்பை தூக்கி எடுத்து அதற்கு அடியில் என்னைப் போட்டு மூடி விட்டார்கள். என்னை வார்ப்பிற்கு அடியில் ஒளியச் செய்தவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு எப்போதே தங்களின் வீடு தேடிச் சென்று விட்டார்கள்.

என்னைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் மறந்து போனார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. நான் வார்ப்பின் உட்பாகத்தைக் கைகளால் தடவியவாறு, வெளி உலகம் ஒருவகை ஓசையுடன் இயங்கிக் கொண்டிருப்பதைக் காதால் கேட்டவாறு, வார்ப்பின் அடைக்கப்பட்ட இருண்ட உலகத்திற்குள் இருந்தவாறு என்னை அவர்கள் எப்போது கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். என்னைத் தேடி வந்தவர்களில் என் தந்தைக்கு மட்டுமே வார்ப்பை உயர்த்திப் பார்க்கத் தோன்றியது. என் தந்தை அழுதவாறு என்னைத் தூக்கிய காட்சி இப்போதும் என் ஞாபகத்தில் பசுமையாய் நிற்கிறது. ஞாபக சக்தி என்றால் என்ன? என் தந்தை தூக்கி எடுத்த அந்தச் சின்ன பையனும், தந்தையும் இப்போது இல்லை. என் தந்தையின் கவலைகளையும் அன்பையும் வேறு யாரோவாக மாறிய நான் மனதில் போட்டு காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

 அந்த வார்ப்பை என் தந்தை தொலைத்து வட்டார். ஒருநாள் என் தந்தை வியர்வை வழிய முற்றத்தில் ஓடி வந்து நின்றதை இப்போது நினைத்து பார்க்கிறேன். வாசலில் இருந்த மணலில் வெயிலின் உக்கிரம் தெரிகிறது. என் தந்தையைப் பார்த்ததும் பெரிய திண்ணையில் இருந்த தூணில் சாய்ந்தவாறு உட்கார்ந்து சிறிய திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த பாட்டி ‘சரக்’கென்று எழுந்தாள். பாட்டியிடம் ஒரு நடுக்கம் தெரிந்தது. தந்தைக்கு நேராக அவள் சுண்டு விரலை நீட்டியபோது, அதில் சுண்ணாம்பு காய்ந்து போய் ஒட்டியிருந்தது. பாட்டிக்கு தூணின் அளவுக்கு உயரம் இருந்தது என்று சிறுவர்கள் அனைவரும் கணக்கு போட்டிருந்தோம். உயரத்திற்கேற்றபடி அவளிடம் தடிமனும் இருந்தது. நரை கொஞ்சம் கூட இல்லாமல் அடர்த்தியாக இருந்த கறுத்த கூந்தலை பல அடுக்குகளைக் கொண்ட தலைப்பாகையைப் போல தலையில் அவள் சுருட்டி வைத்திருந்தாள். இப்போது நினைத்துப் பார்க்கிறபோது அந்த வயதில் கூட பாட்டி எவ்வளவு அழகான பெண்ணாக இருந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. ஒருமுறை என் தாயின் ஞாபகத்தில் பாட்டியின் மார்பகத்தின்மேல் போய் சாய்ந்து கொண்டது இப்போதும் மனதில் வலம் வருகிறது. பாட்டி என் கைகளைத் தன் கைகளால் நீக்கினாள். ஆனால் ஒரு இளம் பெண்ணின் ‘சிக்’ என்று இருந்த மார்பகங்களாக அவை இருந்தன என்பது மட்டும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. மார்பகங்களின் கடினத்தன்மை ஏன் பெண்களின் இதயங்களிலும் இருக்கிறது? மார்பகங்களின் மென்மைத் தன்மையும், அது தரும் பாலின் இனிமையும் யாருக்காக? என் பாட்டி யாருக்குமே பயப்படாத ஒரு பெண்ணாக இருந்தாள்.

பாட்டியின் சுண்டுவிரல் என் தந்தையை அப்படியே முற்றத்தில் மணலில் கட்டிப் போட்டது. “நீ உள்ளே வராதே. போயி அவளோட வர்றதுக்கு வழியைப் பாரு. வெட்கம் இல்லாத பய...”

இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் நான் வாசலின் ஒரு மூலையில் இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தவாறு என் தாயின் சின்ன மார்பகங்களின் கதகதப்பை நினைத்து அழுதேன். என் தாய் என்னை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு என்னுடைய நெற்றியில் முத்தம் கொடுப்பாள். அவள் காணாமல் போனபோது என் பாட்டி முதல் தடவையாக தன் நெஞ்சில் ஓங்கி அடித்துக் கொண்டாள். பிறகு வேலைக்காரப் பெண்ணை பிரம்பை வைத்து அடித்து கீழே தள்ளினாள். வேலை செய்பவர்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களையும் வரச்சொன்னாள். என் தந்தைக்கு ஆள் அனுப்பினாள். என் தாய் இல்லாத படுக்கையில் பரவிக் கிடந்த இலஞ்சி பூக்கள் விரிப்பில் இருந்த பூக்களோடு சேர்ந்து காணாமல் போயிருந்தன. அவற்றைப் பொறுக்கி என் நாசியின் அருகில் வைத்து என் தாயை மீண்டும் நினைத்துப் பார்த்தவாறு நான் வாசல் கதவின் பின் நின்றிருந்தேன்.


இலஞ்சிப் பூக்கள் பொறுக்கப் போகும்போது நான் எத்தனையோ அதிகாலைப் பொழுதுகளில் தாய்க்குத் துணையாகப் போயிருக்கிறேன். ஒருமுறை மறைந்து கொண்டிருந்த நிலவொளியில் ஒரு மோகினியைப்போல தோன்றி, என் தாய் நடந்தவாறு ‘நீ பார்க்காதே’ என்று என்னிடம் கூறிவிட்டு ஒரு செண்பக மரத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டு மூத்திரம் பெய்தாள். நான் ஓடிச் சென்று அதைப் பார்த்தேன். என் தாயின் சிரிப்பு நிலவொளியில் பிரகாசித்தது. என் தாய் என்னிடம் கேட்டாள்: “உனக்கு வெட்கமாக இல்லையா?” என் தாய் மூத்திரம் பெய்து முடிக்கும்வரை நான் அவளின் தோளைப் பிடித்துக் கொண்டு ஒரு துவாரபாகனைப்போல அங்கேயே நின்றிருந்தேன். பனித் துளிகள் விழுந்திருந்த புற்களில் இருந்து கிளம்பிய ஒரு அழகிய நறுமணம் என்னைத் தழுவி தாலாட்டியது. செண்பக மரத்தின் கிளைகள் காலை நேரக் காற்றில் அழகாக ஆடின.

“ஓரு நிமிஷம் கூட இங்கே நிற்காமப் போடா” - செண்பக மரத்தினடிவரை பாட்டியின் சத்தம் கேட்டது. என் தந்தை தோளில் இருந்த துண்டால் முகத்தைத் துடைத்தவாறு முற்றத்தில் நின்றிருந்தார். பாட்டி கொஞ்சம் பணத்தை எடுத்து அவர் முன் நீட்டியவாறு சொன்னாள்: “அவளை இங்கே பிடிச்சிட்டு வா. அவனையும்தான். என் உடம்பே நடுங்குது. என்னால முடியல... போடா...”

மறுநாள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த முற்றத்தில் ஒரு இளைஞன் வந்து அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தான். “யார்டா நீ?” பாட்டி கேட்டாள். “நான் ஒரு கொல்லன். பெருவந்தானம் என் சொந்த ஊர். எந்த வேலை வேணும்னாலும் நான் செய்வேன்” - அவன் மரியாதை நிமித்தமாக கையில் இருந்த துண்டை கையிடுக்கில் வைத்தபோது அவனின் மார்பும் மற்ற உடம்பின் பகுதியிலும் வேலை செய்து இரும்பாகிப் போயிருந்த அவனின் சதைகள் ஆடின. “ம்....” - பாட்டி சொன்னாள்.

“நாராயணன் வர்றது வரை நீ இங்கே இரு. நீ எப்படி வேலை செய்யிறன்னு நானும் பார்க்கணும்ல! சரி... உன்னோட பேரு என்ன?”

“குட்டன்”

பாட்டி முற்றத்திற்கு இறங்கி வந்து அவனைப் பார்த்தாள். உயரத்திலும் சரி தடிமனிலும் சரி... குட்டனுக்கு இணையாக இருந்தாள் பாட்டி.

நான் எப்போதும் குட்டனுக்கு பின்னால் ஒரு நிழலைப் போல நடந்து திரிந்தேன். பெருவந்தானத்தில் இருந்து என்னுடைய உலகத்தில் திடீரென்று வந்து குதித்த ஒரு மனிதனின் எல்லா விஷயங்களையும் எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது.

ஒரு வாரம் கழித்து என் தந்தை திரும்பி வந்தது தன்னந்தனியாகத்தான். அவரின் உதட்டிலும் காதுகளிலும் காயங்கள் இருந்தன.

அதற்கு முதல்நாள் உள்ளறையில் இருந்த குலுக்கையின் உள்ளே இருந்த மிட்டாய் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் பொன்னால் ஆன இடுப்புக் கொடி காணாமல் போய்விட்டது. அதற்கு முதல்நாள் பாட்டி குட்டனை வைத்து உள்ளறையை முழுவதுமாக பெருக்கி சுத்தப்படுத்தி அதற்கு மணியோசை உண்டாக்குகிற மாதிரி ஒரு புதிய பூட்டையும் போட்டாள். அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் இருளில் பாட்டியும் குட்டனும் என் காதுகளில் தெளிவற்ற குரல்களாக வந்து விழுந்தார்கள். உள்ளறையில் இருந்த பழைய நெல்லில் இருந்து கிளம்பிய தூசியும் வியர்வை நாற்றமும் நாசியை எட்டின. சிறிது நேரம் கழிந்ததும் காவல் காத்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு வாசலில் இருந்த காப்பி செடிகளில், விட்டில் பூச்சிகளைப் பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால், காப்பி பூக்கள் அவற்றின் அழகில் என்னை மயக்கின. விட்டில் பூச்சிகள் தடிமனான காப்பி கிளைகளை இறுக பற்றிக் கொண்டு வேனல் காற்றோடு சேர்ந்து ஓசை எழுப்பின. மெதுவாக ஆடிக் கொண்டிருந்த கிளையில் உட்கார்ந்தவாறு நான் பெருவந்தானத்தின் மாலைகளில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பதை கற்பனை பண்ணி பார்த்தேன்.

மறுநாள் இடுப்புக் கொடி மிட்டாய் பெட்டியில் காணாமல் போனது தெரிந்தவுடன், பாட்டி உரத்த குரலில் சத்தம் போட்டாள். நான் அறைக்குள் ஓடிச்சென்றபோது, உள்ளறையில் இருந்து பாட்டி ராட்சசியைப் போன்று ஒரு ஆடும் நிழலுடன் வந்ததை நான் பார்த்தேன். பயம் பெரிதாக என்னை ஆக்கிரமிக்க, நான் வெளியே வேகமாக ஓடினேன். வாசலில் போய்த்தான் நான் நின்றேன். அப்போது பாட்டி நிலத்தில் நடந்து கொண்டிருந்தாள்.

நிலத்தை கிளறிக் கொண்டிருந்த குட்டன், வியர்வையைத் துடைத்துக் கொண்டே கப்பைச் செடிகளை விட்டு பாட்டியின் பின்னால் நடந்து வாசலுக்கு வந்தான். திடீரென்று பாட்டி திரும்பி நின்றாள். என்ன நினைத்தாளோ, குட்டன் அணிந்திருந்த வேஷ்டியை அவள் வேகமாக இழுத்து அவிழ்த்தாள். அவன் இரண்டு கைகளாலும் தன் நிர்வாண உடம்பை மறைத்தான். பாட்டி அவனை ஒரு சிறு குழந்தையைப் போல நினைத்து ஒரு தள்ளு தள்ளி வராந்தா பக்கம் கொண்டு வந்தாள். குட்டினின் பிறப்பு உறுப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவனுக்கு இத்தகைய ஒரு உறுப்பு இருப்பதையே அப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்.

குட்டனின் மேல் வைத்திருந்த பிடியை விடாமல் பாட்டி பரணிலிருந்து ஒரு கயிறை எடுத்து அவனைத் தூணோடு சேர்த்து கட்டினாள். பாட்டியின் வலிமையைப் பார்த்து உண்மையிலேயே நான் நடுங்கினேன். குட்டன் உதறுகிறானா இல்லாவிட்டால் நிர்வாண கோலத்தை கைகளால் மறைக்கிறானா என்பதையெல்லாம் நான் சரியாக கவனிக்கவில்லை. குட்டன் பாட்டியை கீழே தள்ளிவிட்டு ஓடி விடுவான் என்று நான் எதிர்பார்த்தேன். சற்று தூரத்தில் இருந்தவாறு என் கைகளையும் கால்களையும் குட்டனுக்காக நான் காற்றில் ஆட்டினேன். அவன் ஒரு ராட்சசனைப் போல கயிறுகளை அறுத்தெறிந்து, பாட்டியைக் கொன்று வேகமாக ஓடிவந்து என் கையைப் பிடித்து பெருவந்தானத்தின் மேகங்கள் சூழ்ந்திருக்கும் மலைப்பக்கம் அழைத்துப்போக மாட்டானா என்று நான் மனதிற்குள் ஆசைப்பட்டேன். ஆனால், குட்டன் பலமே கொஞ்சமும் இல்லாதவனைப் போல அங்கேயே கட்டப்பட்டு நின்றிருந்தான்.

பாட்டி குட்டனை அடிக்க ஆரம்பித்தபோது நான் கண்களை மூடிக் கொண்டேன். “என் அருமை தாயே... நான் எடுக்கவே இல்ல...” என்ற அழுகைச் சத்தம் மட்டும் என் காதுகளில் விழுந்தது. பாட்டி குட்டனின் பிறப்பு உறுப்பிலும் அடிக்கிறாளோ என்ற ஒரு பெரிய பயம் என்னை வந்து ஆக்கிரமித்தது. நான் பார்த்தபோது பாட்டி வீட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தாள். நடு முற்றத்திற்குப் போய் நின்ற பாட்டி தாத்தா வளர்த்த தென்னை மரத்திற்குக் கீழே இருந்த வார்ப்பின் மேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஓலை செதுக்கப்பட்ட ஒரு மடலைக் குனிந்து எடுத்தாள். அரக்கர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.


கையில் இருந்த மடலால் முதலில் வார்ப்பின்மேல் பாட்டி ஒரு அடி கொடுத்தாள். மணிநாதத்தைப்போல, அரக்கர்கள் கூப்பாடு போடுவதைப்போல வார்ப்பின் அழுகைச் சத்தம் கேட்டது. அந்த மடலால் பாட்டி குட்டனின் தலையில் ஒன்றிரண்டு அடிகள் கொடுத்தாள். அப்போது அவனின் அழுகை தானாகவே நின்றது. அவன் தூணில் ஒரு கொடியைப் போல் துவண்டு கிடந்தான்.

அப்போது வேலைக்காரர்களும், பக்கத்தில் உள்ளவர்களும் ஓடிவந்து பாட்டியைப் பிடித்து ஒதுக்கினார்கள். பாட்டி குட்டனின் இடுப்பில் மீண்டும் முண்டைக் கட்டிவிட்டாள். குட்டனை எல்லோரும் சேர்ந்து தூக்கி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். பாட்டி எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் தூணருகில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியைத் திறந்து, அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், வெற்றிலை போடவில்லை.

மறுநாள் என் தந்தை வந்தார். “எங்கேடா அவள்?” - பாட்டி கத்தினாள். என் தந்தை சொன்ன கதை இதுதான். எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, தலைச்சேரி - எல்லா ஊர்களையும் தாண்டி மஞ்சேஸ்வரத்தில்தான் என் தந்தை என் தாயைப் பார்த்திருக்கிறார். வாசலில் நின்றவாறு அவர் என் தாயின் பெயரைச் செசல்லி கூப்பிட்டிருக்கிறார். அவள் வீட்டிற்குள் இருந்தவாறே மெதுவான குரலில் சொல்லியிருக்கிறாள்: “நான் இனி வர்றதா இல்ல” “அம்மாவுக்கு உன்னை உடனடியா பார்க்கணுமாம்...” - என் தந்தை சொல்லியிருக்கிறார். “நான் பார்க்க விரும்பல...” - என் தாய் சொல்லியிருக்கிறாள்: “என் மேல பாசம் உள்ளவங்கதான் எனக்கு வேணும். நான் நல்லா இருக்கேன்னு என் மகன்கிட்ட சொல்லுங்க.”

மஞ்சேஸ்வரத்தில் இருக்கும் தாய் என்னை நினைத்ததற்காக சந்தோஷப்பட்ட நான் காயம் பட்டிருந்த என் தந்தையின் முகத்தையே பார்த்தவாறு  நின்றிருந்தேன்.

பாட்டியின் வார்த்தைகளை ஞாபகப்படுத்திப் பார்த்த என் தந்தை வீட்டிற்குள் நுழைந்து என் தாயின் கைகளைப் பிடித்திருக்கிறார்... தாயின் காதலனின் ஆட்கள் என் தந்தையை அடியோ அடி என்று அடித்திருக்கிறார்கள். தாய் அழுதவாறு என் தந்தையைக் கட்டிப் பிடித்திருக்கிறாள். மன்னிப்பு கேட்டிருக்கிறாள். “வெட்கம் கெட்ட நாயே... நீ என் மகன்தானா?” என்று கூறியவாறு பாட்டி அடுப்பில் இருந்த ஒரு விறகுக்கட்டையை வேகமாக எடுத்தாள். வேலைக்காரி பாட்டியை இறுக பிடித்துக் கொண்டு விறகுக் கட்டையை அவளிடமிருந்து பிடுங்கினாள். தந்தை என்னைத் தூக்கி மார்போடு சேர்த்து அணைத்தவாறு திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.

குட்டனைச் சேர்ந்தவர்கள் போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு வந்தபோது, பாட்டி வீட்டில் கட்டிலில் படுத்திருந்தாள். என் தந்தைதான் எல்லோரிடமும் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தார். 

பாட்டி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு நடந்தது. வக்கீல் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நடு முற்றத்தில் இருக்கும் தென்னை மரத்தைப் பார்த்தவாறு சொல்லுவார்: “அருமையான வார்ப்பு இது நாராயணபிள்ளை... நான் இந்த வழக்குல இருந்து எப்படியும் காப்பாற்றி விட்டுர்றேன். இந்த வார்ப்பை எனக்கு நீங்க தந்திடணும்....” நான் சற்று தூரத்தில் நின்றவாறு எனக்குள் கூறுவேன்: “இல்ல... இல்ல... தர்றதா இல்ல...”

குட்டன் கொஞ்ச நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்தான். அங்கிருந்தவாறே பெருவந்தானத்திற்குப் போனான். வழக்கை அப்படியே விட்டு விட்டான். அதற்கெல்லாம் முன்பு என் தந்தை, என் தாயைத் தேடிப் போய்விட்டு திரும்பி வந்த நாளன்று கிணற்றின் கரையில் மறைவிடத்தில் பாட்டிக்கு எண்ணெய் தேய்க்கிறபோது வேலைக்காரி இடுப்புக் கொடியை பாட்டியின் இடுப்பில் பார்த்திருக்கிறாள். உள்ளறையைச் சுத்தம் செய்த அன்று தான் அதை எடுத்து அணிந்ததை மறந்துபோய்விட்டதை பாட்டி அவளிடம் கூறியிருக்கிறாள். அவற்றை இப்போது அசை போட்டுப் பார்க்கிறபோது, பாட்டி அந்த தங்கத்தால் ஆன இடுப்புக் கொடியை உள்ளறையின் இருட்டுக்குள் இருந்தவாறு குட்டனுக்காக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனைக்கொண்டு அவள் தன் இடுப்பில் அதை அணியச் செய்திருக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்குத்தான் என்னால் வர முடிகிறது.

என்னுடைய அப்பாவித் தந்தை என்ன நினைத்திருப்பார் என்பதைப் பற்றி என்னால் அறிய முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து நான் அழ... அழ.. வக்கீல் ஸ்ரீதரன் நாயர் என் தந்தைக்கு மிகவும் பிடித்த அந்த வார்ப்பை எடுத்துக்கொண்டு போனார்.

என் தந்தை அழுதவாறு என்னைக் கண்டுபிடித்த, அவரின் அன்பிற்கு சாட்சியாக இருந்த, அந்த வார்ப்பு கூட இப்போது இங்கு இல்லாமல் போய்விட்டது. எதுதான் நிரந்தரம், தந்தையே?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.