Logo

உண்ணி என்ற சிறுவன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7286
Unni Endra Siruvan

டம்பில் ஆடை எதுவும் அணியவே இல்லையே! அய்யய்யோ, என்ன வெட்கக்கேடு! உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான். உண்ணி வழியிலேயே நின்றிருந்தான். கடைகளில் இருந்த ஆட்கள் எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனைப் பார்த்து அவர்கள் சிரித்தார்கள். இங்கிருந்து உடனே எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடவேண்டும் என்று நினைத்தான் அவன். ஆனால், கால்கள் அசைந்தால்தானே! மனதில் வருத்தமும் குற்ற மனப்பான்மையும் உண்டானது. இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. அழுகை கிளம்பிக் கொண்டிருந்தது. ஆனால், அதன் ஒலி வெளியே கேட்கவில்லை.

அழுகையை எதுவோ பிடித்து நிறுத்தி விட்டதைப்போல இருந்தது!

அடுத்த நிமிடம் உறக்கம் தெளிந்தது. மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி கரை புரண்டு ஓடத் தொடங்கியது. ஓ... எல்லாமே கனவா? கனவு! உண்ணி போர்த்தியிருந்த போர்வையை மேலும் நன்றாக இழுத்து போர்த்தியவாறு திரும்பிப் படுத்தான். ஆமாம்... எல்லாமே கனவுதான்!

உண்ணியின் மனதில் மீண்டும் அந்த காட்சிகள் கடந்து போயின. கனவு... கனவு... மீண்டும் மீண்டும் அவன் அதை மனதில் ஓட்டிப் பார்த்தான். அப்படி நினைத்துப் பார்ப்பதில் அவனுக்கொரு திருப்தி கிடைத்தது. ஒருவகை நிம்மதி அலைகள் வீசி உண்ணியின் மனதின் மீது ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

சமையலறையில் புதிய விறகு எரியும் வாசனை காற்றில் தவழ்ந்து வந்தது. விறகு வெட்டும் குஞ்ஞாப்பு இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? காலையில் எழுந்து ஆற்றங்கரையில் இருக்கும் கல்லில் கோடரியை உரசி முனையை தீட்டிக் கொண்டிருப்பான். குஞ்ஞாப்பு எப்போதும் வராந்தாவில்தான் படுத்திருப்பான். அடடா... அங்கு படுப்பது என்பது எவ்வளவு சுகமான ஒரு அனுபவமாக இருக்கும்! இரவு நேரங்களில் எப்போது கண்களைத் திறந்தாலும் வானத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கலாம். வானத்தில் காய்ந்து கொண்டிருக்கும் நிலவையும் பார்க்கலாம். இல்லை.... நட்சத்திரங்கள் இருக்கிறபோது நிலவும் இருக்குமா? இருக்காது, இருக்கும். இருக்காது போகலாம்.

இருக்குமே! இதோ நிலவு ஆகாயத்தில் மெதுவாக நீங்கிக் கொண்டிருக்கிறதே! குஞ்ஞாப்புவின் வீட்டு திண்ணையில் படுத்துக் கிடந்தால் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பார்க்கலாம். உண்ணி திண்ணையில் மல்லாந்து படுத்தவாறு சந்திரனைப் பார்த்தான். அப்போதுதான் உதித்திருந்த நிலவு இரவின்மேல் தளர்ந்து கிடந்தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நட்சத்திரங்கள். நிலவு இதோ ஆகாய வெளியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து நட்சத்திரங்களும் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றன. சந்திரன் கீழே விழப் போகிறானா என்ன? அப்படியெல்லாம் விழமாட்டான் என்று அப்பா சொல்லியிருக்கிறாரே! இதோ நிலவு நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எங்கே ஓடுவது? ஓட முயற்சித்தான். உடல் அசைந்தால் தானே! வாய்விட்டு அழவேண்டும்போல் இருந்தது அவனுக்கு. தொண்டைக்குள் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒரு திணறல் மட்டும் வெளியே வந்தது.

உண்ணி மீண்டும் எழுந்தான். இதயம் அடித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே படுத்த இடத்திலேயே படுத்துக் கிடந்தான். காண முடியாத, புரிந்து கொள்ள முடியாத கண்களைக் கொண்டு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்த அறையைத் துலாவி பார்த்தான். இப்போது உண்ணிக்கு புரிந்தது. இதுவரை கண்டது எல்லாமே கனவு. ஒருவகை நிம்மதி உணர்வு அவன்மேல் கம்பளிப் போர்வையைப் போல் படர்ந்தது. தலையணை, போர்வை ஆகியவற்றின் இளம் சூட்டுக்குள் மீண்டும் தன்னை அடக்கமாக்கிக் கொண்டான் அவன்.

சமையலறைக்குள் இருந்து வரும் வெளிச்சத்தின் ஒரு நீண்ட கோடு ஜன்னல் திரைச்சீலையின் இடைவெளி வழியாக சுவர் மேல் விழுந்தது. அடுப்பில் ஆடிக் கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைக்கேற்ப அது பிரகாசமாவதும், மங்கலாவதும், அணைவதுமாக இருந்தது. பார்க்க அது நன்றாகவே இருக்கிறது - உண்ணி மனதிற்குள் நினைத்தான். இப்போது அடுப்புக்கு அருகில் போய் நின்று நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன என்று அவனுக்கொரு ஆசை வந்தது. இல்லாவிட்டால், நெருப்பைப் பற்ற வைப்பதற்கு முன்பே அங்கு போய் நின்று விட வேண்டும். நேற்றைய சாம்பலை இன்று அடுப்பில் இருந்து மாற்றுவார்கள். அப்போது அடுப்பின் இருண்ட சிறு மூலையில் என்னவோ ஒன்று இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றும். அந்த இருண்ட மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும் போல் அவனுக்கு இருக்கும். ஒரு எறும்பைப் போல சின்னஞ்சிறியதாய் அந்த மூலையில் போய் உட்கார்ந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்தான். ‘அடுப்பின் அந்த இருண்டு போன மூலையைப் பற்றிய மர்மம் எனக்கு தெரியும். நன்றாகவே தெரியும். என்னுடைய அந்த மனதில் மூலைகளும், சிறு மேடுகளும் உள்ளதைப் போலத்தான் அங்கும் இருக்கின்றன. ஆனால் அங்கே நான் போய் உட்கார முடியாதே! உண்ணி நினைப்பான்.

அப்படிப்பட்ட மூலைகள் எங்கெல்லாம் இருக்கின்றன? உண்ணி மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். முற்றத்தில் விறகுகள் அடுக்கி வைக்கும் பழைய வீட்டில் அத்தகைய மூலைகள் இருக்கவே செய்கின்றன. குளிர்ச்சியான மண்ணும் தனிமையும் அங்கு குடிகொண்டிருக்கும். தூண்களில் வைக்கப்பட்டிருக்கும் விறகுகளுக்குக் கீழே குனிந்து உட்கார வேண்டும். வண்டுகள் மண்ணை ஆங்காங்கே கிளறி குழிகள் உண்டாக்கி விட்டிருக்கின்றன. அந்தக் குழிகளுக்கு மத்தியில், அந்த குளிர்ச்சியான மண்ணில், கற்களின் மூலையில் அந்த வண்டுகளுக்குப் பக்கத்தில் போய் உட்கார வேண்டும். அடடா.... அப்படி அமர்ந்திருப்பதில்தான் என்ன சுகம்!

உண்ணி மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். சமையலறையில் இருந்து பாத்திரங்களின் சத்தம் கேட்டபோது, அவனின் தூக்கம் கலைந்தது. பொழுது இன்னும் சரியாகப் புலரவில்லை பொழுது விடிந்தபிறகு முற்றத்தில் போய் நிற்பது உண்மையிலேயே ஒரு சுகமான அனுபவம்தான். தூரத்தில் மலைகளுக்கு மத்தியில் மேகங்களுக்கு நடுவில் ஆங்காங்கே இடைவெளி தெரிந்தது. சூரியன் உதித்துக் கொண்டிருந்தான். மலைகளைப் போலவே மேகங்களும் நீளமாக இருந்தன. மென்மையான பனிப் படலத்தினூடே பார்க்கும்போது மலை எது மேகம் எது என்பதையே சில நேரங்களில் பிரித்து பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அடடா... என்ன மேகம் அது! காலை நேரத்தில் ஆகாயத்தில் காற்று இருக்காதா என்ன? இல்லாமல் இருக்கலாம். குஞ்ஞாப்புவிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆள்! அவனுக்கு எல்லாமே தெரியும். ஆகாயத்தைப் பார்த்தவாறு அவன் கூறுவான்: “ம்... மழை வரப்போகுது. கோடாரியைத் தோளில் வைத்துக் கொண்டு எவ்வளவு வேகமாக அவன் நடந்து போவான்! இப்போது அவன் அனேகமாக மலைக்குக் கீழே போயிருக்க வேண்டும். அப்படிப் போயிருந்தால்...? அது ஒரு சுகமான அனுபவம்தான். உடம்பில் கீறல்கள் உண்டாகும், கால் அடிபடும், இரத்தம் வரும்... குஞ்ஞாப்பு அழுவானா? கட்டாயம் அழுவான்.


அம்மா அழுவாள். அப்பா முன்னால் அம்மா அழுவதை எத்தனை தடவை அவன் பார்த்திருக்கான்! அந்த மாதிரியான நேரங்களில் அப்பாவுக்கு பயங்கர கோபம் வரும். அம்மாவின் தோளைப் பிடித்து பக்கத்தில் இழுத்தவாறு என்னவெல்லாமோ கூறுவார். அடுத்த நிமிடம் அம்மா அழுகையை நிறுத்தி விட்டு சிரிப்பாள். அப்பாவும் சிரிப்பார். எப்போதும் அப்பா ஒரே விஷயத்தைப் பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருப்பாரா என்ன? நிச்சயமாக இல்லை. இந்த உலகத்தில் அப்பாவுக்குத் தெரியாத விஷயம் என்ன இருக்கிறது? புகைவண்டி எத்தனை மணிக்கு வருகிறது எத்தனை மணிக்கு போகிறது என்பதைப் பற்றியெல்லாம் மிகவும் சரியான தகவல்களை அவர் வைத்திருப்பார். காரின் மூடியைத் திறந்து விட்டு, அதில் அவர் செய்யும் வேலைகளைப் பார்க்க வேண்டுமே!”

உண்ணி மீண்டும் உறங்கினான். காரில் ஏறி ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் பாதையில் போவதுபோல அவன் கனவு கண்டான். திடீரென்று கார் நகராமல் நின்றுவிட்டது.

உண்ணி போர்வையை நீக்கி எழுந்து நின்றான். குளிர் பயங்கரமாக வாட்டிக் கொண்டிருந்தது. ட்ரவுசரை ஒரு கையால் பிடித்தவாறு வேக வேகமாக நடந்து சென்று சமையலறையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான்.

“ஆஹா... உண்ணி, இன்னைக்கு காலங்காத்தால படுக்கையை விட்டு எழுந்துட்டியே!” - அம்மா சொன்னாள்.

அதைக் கேட்டு உண்ணிக்கு கோபம்தான் வந்தது. ‘நான் என்னைக்குமே காலையில் சீக்கிரம்தான் எழுந்திருக்கிறேன். பிறகு ஏன் அம்மா இப்படிக் கூறி சிரிக்க வேணும்?’ என்று மனதிற்குள் நினைத்தவாறு உண்ணி அடுப்பிற்கு அருகில் போய் நின்றான். “வேண்டாம் வேண்டாம். அப்படியொண்ணும் குளிரு இல்ல...” - அம்மா அவனைத் தடுத்தாள். உண்ணியின் கோபம் மேலும் அதிகரித்தது. தன்னை தேவையில்லாமல் அம்மா தடுப்பதாக அவன் நினைத்தான். இனி அம்மா அழுகிறபோது எப்போதும் கூறும் வார்த்தைகளை அப்பா மறந்துவிட வேண்டும். அப்போது பார்க்க வேண்டும் அம்மா எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை.

உண்ணி மீண்டும் அடுப்பை நெருங்கிப் போய் நின்றான். நெருப்பு வெளிச்சத்தில் இருட்டான மூலைகள் எல்லாம் மறைந்து போயிருந்தன.

“உண்ணி... இன்னைக்கு காலையிலேயே எழுந்திட்டியே!” - அம்மா சிரித்தாள்.

மூலையில் குவிக்கப்பட்டிருந்த விறகுகளுக்கு இடையே இருட்டு ஆக்ரமித்திருந்தது. உண்ணி விறகுகளுக்கு அருகில் போய் நின்றான். அந்தச் சிறிய இருட்டான பகுதியையே உற்று பார்த்தான். விறகுக்குக் கீழே கரையான் இருக்குமா? இருக்கும். இருக்காது. அப்படி இருக்க வாய்ப்பில்லை. புதிய விறகாயிற்றே! சில நேரங்களில் இருக்காது. யாருக்குத் தெரியும்? இருந்தாலும் இருக்கலாம். எந்த மாமரத்தை வெட்டியிருக்கிறார்கள்? உண்ணி சிந்தித்தாள்.

அந்த நிலத்தின் ஒரு மூலையில் காயே காய்க்காமல் நின்றிருந்த மாமரத்தைத்தான் வெட்டியிருக்கிறார்கள். மாங்காய்களுக்குள் நீர் கூடு கட்டியிருந்தது. மாங்காய்களாக வெளியே தெரியும் நீர் கூடுகள் அவை. அவற்றுக்குள் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. நீரைப்போல தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். மாங்காய்கள் கீழே விழுந்து அவற்றில் இருக்கும் நீர் காய்ந்துபோன இலைகள்மேல் படுவதை அவன் பார்க்க நினைத்தான்.

உண்ணி ட்ரவுசரை இழுத்துப் பிடித்தவாறு மெதுவாக மாமரத்தை நோக்கி நடந்தான். பனித் துளிகள் விழுந்திருந்த புல்லின்மேல் நடப்பது அவனுக்கு ஒரு ஆனந்த அனுபவத்தைத் தந்தது. உண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் அவனின் கால் சுவடுகள் தெரிந்தன. அவனுக்கு அதைப் பார்த்தபோது மேலும் உற்சாகமாக இருந்தது. கால்களை வேகமாக நகர்த்தி அவன் நடந்து போனான். மாமரத்தை இப்போது பார்த்தால் அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. நிலத்தில் விழுந்து கிடக்கிறபோது அது மிகவும் சிறியதாகத் தெரிந்தது. உயரமே குறைந்துவிட்டதைப்போல் அது இருந்தது. குறைந்துதான் போயிருக்கும்.

இந்தத் தென்னை மரத்தையும் வெட்ட வேண்டும் - உண்ணி நினைத்தான். டக், டக், டக், டக்... குஞ்ஞாப்பு வெட்டுவான். அவனின் உடம்பில் இருக்கும் தசை வியர்வையில் குளித்து, திரள்வதும் தாழ்வதுமாக இருக்கும். மரத்தை வெட்ட, வெட்ட கீழே சாயும் நிலைக்குவரும். க்ரிக், க்ரிக்... என்ற ஓசை உண்டாகும். தென்னை மரம் ஆடும். பிறகு அது அழுதவாறு கீழே விடும். அடுத்த நிமிடம் தரையில் அது விழுந்து கிடக்கும். தக்! “மரம் கீழே விழும்போது நான் கீழே நின்றிருந்தால் என்ன நடக்கும்? பேசாமல் சாக வேண்டியதுதான். மரணம் என்றால் என்ன? குஞ்ஞாப்புவிடம் கேட்க வேண்டும்” - உண்ணி நினைத்தான்.

தென்னை மரத்தின் உச்சியிலும் அடுப்பில் இருப்பதைப்போல மூலைகள் இருக்கவே செய்கின்றன. உண்ணிக்கு அது நன்றாகத் தெரியும். தென்னை மரத்தின் மடல்களுக்கு மத்தியில், பூக்களுக்கிடையே, குருத்துக்கு நடுவில், தேங்காய்களுக்கு இடையில் இடம் இருக்கத்தான் செய்கிறது. இருண்டு போய் காணப்படும் ஒரு சிறு இடம். அங்கே போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது உண்ணிக்கு. குஞ்ஞாப்பு தேங்காயை உரித்துவிட்டு வருகிறபோது, அவனிடம் ஒரு வாசனை வரும். அந்த மணம் நிச்சயமாக அங்கே இருக்கும். அங்குதான் உட்கார வேண்டும் என்று ஆசைப்பட்டான் உண்ணி. அடடா... எவ்வளவு சுகமாக இருக்கும்?

உண்ணி வீட்டை நோக்கி நடந்தான். அப்பா கிளம்பிக் கொண்டிருந்தார்.

“காலை நேர வாக்கிங் முடிஞ்சு உண்ணி வந்துட்டான்” - அப்பா சொன்னார்.

உண்ணி காரையே உற்றுப் பார்த்தவாறு நினைத்தான். கார் சிரிக்கிறதா என்ன? சிரிப்பது மாதிரிதான் இருக்கிறது. யாரையாவது மோதுகிறபோது கார் சிரிக்குமா? சிரித்தாலும் சிரிக்கலாம்.

“உண்ணி இன்னைக்கு ஒண்ணுமே பேசாமல் மவுனியா அமைதியா இருக்குறானே!” - அப்பா சிரித்தார். மவுனி என்றால் என்ன அர்த்தம்? முனி என்று அர்த்தமா என்ன? முனியாக இருக்கலாம். முனி என்றால் அவரைப் போல தாடியை வளர்த்துக் கொண்டு காடுகளைத் தேடிப்போய் யாருமே பார்க்க முடியாத இடத்தில் செடிகளுக்கு மத்தியில் சென்று அமர்ந்து கொள்ள வேண்டும். சுற்றிலும் குளிர்ந்துபோன காய்ந்த இலைகள் கிடக்கும். அந்த இலைகளை நீக்கினால் கீழே குளிர்ச்சியான மண் இருக்கும். காய்ந்த இலைகளுக்கு மத்தியில் போய் இருப்பது எவ்வளவு சுகமாக இருக்கும்! - உண்ணி நினைத்துப் பார்த்தான். 

குட்டிகள் பால் குடிக்கிறபோது லிஸ்ஸிக்கு வலிக்குமா? உண்ணி ஒரு நாய் குட்டியைத் தூக்கினான். அது அழுதது. குட்டியை மீண்டும் கீழே விட்ட அவன் நாயின் அருகில் போய் உட்கார்ந்தான்.


சாயங்காலம் குஞ்ஞாப்பு போகும்போது, அவனுடன் சேர்ந்து ஆற்றுக்குப் போக வேண்டும். கல் மேல் ஏறி அமர வேண்டும். நீரையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அங்குகூட ஒரு மூலை இருக்கவே செய்கிறது. பாசியும் புல்லும் நிறைந்த ஒரு இடம். இருண்டுபோய் பச்சை நிறத்தில் ஒட்டுப் புல்களுக்கு நடுவில். பாசிக்கு மத்தியில் வெண்மை நிற மீன்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும். அழுகிப் போன இலைகளும், மீன் குஞ்சுகளும் அங்கு கண்ணில் படும். நீருக்குள் இறங்கி... மீனைப் போல குஞ்சாக மாற வேண்டும்... பிறகு...

உண்ணி தூணில் சாய்ந்தவாறு உறங்கினான். கனவு கண்டான்.

அவன் நீரில் இறங்கினான். நீருக்கு அடியில் பாசி பிடித்த காய்ந்த இலைகள் மீது, மீன் குஞ்சுகளைக் கடந்து நடந்தான். பஞ்சைப் போல மென்மையான இலைகள். அந்த மூலையை நோக்கி நடந்தான். மேலே பார்த்தால் பச்சை நிறம் மட்டுமே தெரிந்தது. சுற்றிலும் ஒரே பச்சை நிறம் மட்டும். பாசிக்கு மத்தியில் நடந்து சென்று அவன் கடைசியில் அந்த மூலையை அடைந்தான். அந்த மூலை இருண்டு போய் சின்னதாக இருந்தது. இந்த உலகத்தில் இல்லாத ஒரு குளிர்ச்சியான மூலை அது. ஒட்டுப் புற்கள் அங்கு ஏராளமாக வளர்ந்திருந்தன. ஒரு கல் வேறு அங்கு இருந்தது. அதன்மேல் ஏறி அமர்ந்து சுற்றிலும் உண்ணி பார்த்தான். உறக்கத்தில் அவன் சிரித்தான். என்ன சுகமான அனுபவம்! ‘யாரும் என்னைப் பார்க்க போவதில்லை. யாருக்கும் நான் இருக்கும் விஷயம் தெரியப் போவதில்லை. நான் நிரந்தரமாக இங்கேயே இருந்துவிடப் போகிறேன்’ - உண்ணி தனக்குள் சொல்லிக் கொண்டான். சத்தமும் ஆரவாரமும் இல்லாத, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இருட்டான நீர்பரப்பு உண்ணியைச் சுற்றிலும் இருந்தது. அவனின் உதடுகளில் ஒரு புன்சிரிப்பு மீண்டும் தவழ்ந்து வந்தது.

அம்மா வந்து அந்த புன்னகை அரும்பிக் கொண்டிருந்த உதடுகளில் முத்தமிட்டாள். உண்ணியைத் தூக்கிக் கொண்டு போய் சூடான தோசை முன்னால் பெஞ்சில் உட்கார வைத்தாள். அவன் திடுக்கிட்டு விழித்து சுற்றிலும் பார்த்தான். அம்மா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

உண்ணி மனதிற்குள் நினைத்தான்: ‘தோசைக்கு மாவு அரைச்சது யாரா இருக்கும்?’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.