Logo

தானியமும் கிழவர்களும்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6633
Thaniyamum Kizhavargalum

ரு நாள் ஒரு ஓடையில் சில குழந்தைகள் சோள விதையைப் போன்ற ஒன்றைக் கண்டெடுத்தார்கள். அந்த விதையின் நடுப்பகுதியில் ஒரு கோடு இருந்தது. ஆனால், அது ஒரு கோழி முட்டை அளவிற்குப் பெரியதாக இருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற ஒரு வழிப்போக்கர் அந்தக் குழந்தைகளிடம் ஒரு பென்னியைக் (காசு) கொடுத்து விட்டு, அதை வாங்கினான். ஆர்வ மிகுதியால் அதை நகரத்திற்குக் கொண்டு சென்று மன்னனிடம் விற்றுவிட்டான்.

மன்னன் தன்னிடமிருக்கும் பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து அந்த விதை என்ன என்பதைக் கண்பிடிக்கும்படி சொன்னார். அந்தப் பண்டிதர்கள் அந்த விதையை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்களே தவிர, அவர்களால் அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஒரு நாள் அந்த விதை ஜன்னலருகில் கிடக்கும்போது, ஒரு கோழி வேகமாக வந்து அந்த விதையைக் கொத்தி ஒரு சிறு துளையை அதில் உண்டாக்கியது. அதற்குப் பிறகுதான் அது ஒரு சோள விதை என்பதே எல்லோருக்கும் தெரிய வந்தது. பண்டிதர்கள் அனைவரும் மன்னனிடம் வந்து சொன்னார்கள். ‘‘அது ஒரு சோள விதை...’’ அதைக் கேட்டு மன்னன் ஆச்சரியப்பட்டுப் போனான். அவன் பண்டிதர்களிடம் அந்த விதை எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்கும்படி சொன்னான். பண்டிதர்கள் அந்த விதையைப் பற்றிய விவரங்கள் எந்த நூல்களிலாவது இருக்கின்றனவா என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஆனால், எந்த நூலிலும் அதற்கான ஆதாரமே இல்லை. அவர்கள் மன்னனிடம் வந்து சொன்னார்கள். ‘‘எங்களால எந்த பதிலும் கண்டுபிடிக்க முடியல. அநத் விதையைப் பற்றி நாங்க பார்த்த நூல்கள்ல எந்தத் தகவலும் இல்ல. நீங்க இதைப் பற்றி விவசாயிகள் கிட்டத்தான் கேக்கணும். அவங்கள்ல சிலபேராவது அவங்களோட தந்தைமார்கள் கிட்ட இதைப் பற்றி தெரிஞ்சு வச்சிருக்கலாம். இவ்வளவு பெரிய தானியம் எந்தக் காலத்துல இருந்துச்சுன்றதை அவங்கக்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கலாம்.’’ மன்னன் யாராவதொரு வயதான விவசாயியை தன்னிடம் கொண்டு வரும்படி ஆணை பிறப்பித்தான். அவனுடைய பணியாட்கள் அப்படிப்பட்ட ஒரு ஆளைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து மன்னன் முன்னால் நிறுத்தினார்கள். மிகவும் வயதாகி, முதுகு வளைந்து, வெளிறிப் போன முகத்துடன், பற்கள் இல்லாமல் இரண்டு கைத்தடிகளை ஊன்றியபடி மன்னன் முன்னால் வந்து நின்றான். மன்னன் கிழவனிடம அந்த தானியத்தைக் காட்டினான். ஆனால், கிழவன் கண்களுக்கு அந்த தானியம் சரியாகத் தெரியவில்லை. அவன் அதை எடுத்து கையால் தடவிப் பார்த்தான். மன்னன் அவனைப் பார்த்து கேட்டான். ‘‘பெரியவரே, இந்த தானியம் எந்தக் காலத்துல இருந்ததுன்ற உண்மையை உங்களால சொல்ல முடியுமா ? இந்த மாதிரியான ஒரு தானியத்தை நீங்க எப்பவாவது விலைக்கு வாங்கியிருக்கீங்களா ? இல்லாட்டி உங்க வயல்ல இந்த மாதிரியான ஒரு விதையை விவசாயம் பண்ணியிருக்கீங்களா ? அந்தக் கிழவன் செவிடாக இருந்தான். மன்னன் என்ன சொல்கிறான் என்பதே அவனுக்குச் சரியாக காதில் விழவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் மன்னன் என்ன சொல்கிறான் என்பதையே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘‘இல்ல...’’ - கடைசியில் அந்தக் கிழவன் சொன்னான். ‘‘நான் இந்த மாதிரியான தானியத்தை எப்பவும் விதைச்சது இல்ல. என் வயல்ல இப்படிப்பட்ட ஒரு தானியத்தை நான் அறுவடை செய்ததும் இல்ல. நாங்க தானிய விதையை வாங்குறப்போ, அது இப்போ எல்லா இடங்கள்லயும் எப்படி இருக்கோ, அப்படி சின்னதாகத்தான் இருக்கும். வேணும்னா இதைப் பற்றி நீங்க என்னோட அப்பாக்கிட்ட கேட்டுப் பாருங்க. இந்த தானியத்தைப் பற்றி அவருக்கு ஒரு வேளை தெரிஞ்சிருக்கலாம்.’’ அரசன் கிழவியின் தந்தையை அழைத்துக் கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அந்தக் கிழவனை ஆட்கள் மன்னன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அந்தக் கிழவன் ஒரு கம்பை ஊன்றியவாறு அங்கு வந்தான். அரசன் அங்கிருந்த தானியத்தைக் காட்டினான். அந்தக் கிழவனுக்கு நல்ல கண்பார்வை இருந்தது. அந்த தானியத்தையே அவன் உற்றுப் பார்த்தான். மன்னன் அவனைப் பார்த்து கேட்டான் : ‘‘வயதான பெரியவரே, இந்த மாதிரியான தானியம் எங்கே இருந்ததுன்னு உங்களால சொல்ல முடியுமா ? இப்படிப்பட்ட தானியத்தை நீங்க எப்போவாவது விலைக்கு வாங்கியிருக்கீங்களா ? இல்லாட்டி எப்பவாவது உங்களோட வயல்ல விவசாயம் பண்ணியிருக்கீங்களா ?’’ அந்தக் கிழவனுக்க கேட்கும் சக்தி சற்று குறைவுதான் என்றாலும் தன்னுடைய மகனின் கேட்கும் சக்தியை விட அவனுக்கு அது அதிகமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ‘‘இல்ல, மன்னா...’’ அவன் சொன்னான் : ‘‘நான் இந்த மாதிரியான தானியத்தை விதைச்சதும் இல்ல. அறுவடை செய்ததும் இல்ல. விலை கொடுத்து வாங்கியதும் இல்ல. சொல்லப்போனா, என் காலத்துல பணம்ன்றது புழகத்திலேயே வரல. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருளை தாங்களேதான் விவசாயம் பண்ணி உண்டாக்கிக்குவாங்க. அப்படி ஏதாவது தேவைப்பட்டாக்கூட நாங்க ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து உதவிக்குவோம். இப்படிப்பட்ட ஒரு தானியம் எப்போ இருந்துச்சுன்னு எனக்கு தெரியல. நாங்க விவசாயம் செஞ்ச தானியம் இப்போ இருக்குறதை விட அளவுல பெரிசா இருந்துச்சுன்றது உண்மை. அதுல இருந்து இப்போ கிடைக்கிறதை விட அதிகமா மாவு கிடைச்சது. ஆனா, நான் இப்படிப்பட்ட ஒரு தானியத்தை இதுவரை பார்த்தது இல்ல. ஆனா என்னோட அப்பா ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட காலத்துல தானியத்தோட அளவு ரொம்ப பெரிசா இருக்குமாம். இப்போ மாவு கிடைக்கிறதைவிட, அந்தத் தானியத்துல அதிகமா மாவு கிடைக்குமாம். இதைப் பற்றி நீங்க அவர்கிட்டேயே கேட்கலாமே !’’ அடுத்த நிமிடம் மன்னன் அந்தக் கிழவனின் தந்தையை உடனே தன்னிடம் அழைத்து வரும்படி ஆட்களை அனுப்பி வைத்தான். அந்த வயதான கிழவனைப் பார்த்த மன்னனின் ஆட்கள், அவனை அரசனிடம் கொண்டு வந்தார்கள். அவன் எந்தவித கம்பின் உதவியுமின்றி நன்றாக நடந்து மன்னனிடம் வந்தான். அவனுக்கு நல்ல கண்பார்வை இருந்தது. கேட்கு சக்திகூட மிகவும் சிறப்பாக இருந்தது. பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது. அரசன் அந்தக் கிழவனிடம் அங்கிருந்த தானியத்தைக் காட்டினான். வயதான அந்தத் தாத்தா அந்தத் தானியத்தைத் தன் கையில் வைத்து இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்தான்.


‘‘இப்படிப்பட்ட ஒரு தானியத்தைப் பார்த்து எவ்வளவோ நாட்களாயிருச்சு !’’ அந்தக் கிழவன் சொன்னான். தொடர்ந்து அவன் அந்த விதையின் ஒரு பகுதியைப் பிரித்து வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தான். ‘‘நான் பார்த்த அதே விதைதான் இது.’’ - அந்தக் கிழவன் சொன்னான். ‘‘சொல்லுங்க, தாத்தா...’’ - மன்னன் சொன்னான் : ‘‘இந்த தானியம் எங்கோ எப்போ இருந்துச்சு ! இந்த மாதிரி விதையை நீங்க முன்னால் பணம் கொடுத்து வாங்கி இருக்கீங்களா ? இதை நீங்க உங்க வயல்ல விதைச்சு விவசாயம் பண்ணியிருக்கீங்களா ?’’ அதற்கு அந்த வயதான கிழவன், ‘‘என் காலத்துல இந்த மாதிரியான சோளம் எல்லா இடங்கள்லயும் இருந்துச்சு. நான் சின்னப்பையனா இருந்தப்போ, இந்தச் சோளத்தை நிறைய சாப்பிட்டிருக்கேன். மற்றவங்களுக்கும் இதைச் சாப்பிட கொடுத்திருக்கேன். இந்த சோளத்தைத்தான் நாங்க பொதுவா நிலத்துல விதைப்போம். அறுவடை செய்வோம்.’’ அப்போது மன்னன் கிழவனைப் பார்த்து ‘‘தாத்தா... இந்த தானியத்தை நீங்க எங்கேயிருந்தாவது வாங்கினீங்களா ? இல்லாட்டி நீங்களே அதை விதைச்சு வளர்த்தீங்களா ?’’ என்று கேட்டான். அதற்கு அந்தக் கிழவன் சிரித்தான். ‘‘என் காலத்துல காசு கொடுத்து சாப்பிடுற பொருளை விலைக்கு வாங்குறது இல்லாட்ட விக்கிறதுன்ற பாவச்செயலை அப்போ யாரும் மனசுல நினைச்சுக்கூட பார்க்கல. எங்களுக்குப் பணத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. எல்லா மனிதர்கிட்டேயும் அவங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் கைவசம் இருக்கு.’’ ‘‘பிறகு... சொல்லுங்க, தாத்தா...’’ உங்க வயல் எங்க இருந்தது ? இப்படிப்பட்ட ஒரு தானியத்தை எங்கே நீங்க விதைச்சு, வளர்த்தீங்க ?’’ அதற்கு அந்த வயதான கிழவன் சொன்னான் : ‘‘என் வயல்ன்றது கடவுளோட பூமிதான். எங்கெல்லாம் நான் உழுதேனோ, அதெல்லாம் என்னோட வயல்தான். நிலம் இலவசமா கிடைக்கிறது தான். எந்த மனிதனும் அதைச் சொந்தமா நினைக்கிறது இல்ல. உழைப்பு ஒண்ணைத்தான் மனிதன் தனக்குச் சொந்தமானதா நினைச்சான்.’’ ‘‘மேலும் இரண்டு கேள்விகளுக்கு நீங்க இப்போ பதில் சொல்லணும். முதல் கேள்வி - இப்படிப்பட்ட ஒரு தானியத்தை உற்பத்தி செய்த பூமி அதுக்குப் பின்னாடி ஏன் அதை நிறுத்திடுச்சு ? ரெண்டாவது கேள்வி - ஏன் உங்க பேரன் ரெண்டு கம்புகளின் துணையோட நடக்குறாரு ? உங்க மகன் ஒரே ஒரு கம்பை மட்டும் வைத்து நடக்குறாரு ? ஆனா, நீங்க எந்தக் கம்பின் துணையுமில்லாம நடக்கிறீங்களே ! உங்க கண் பார்வை மிகவும் நல்லா இருக்கு. உங்களுக்கு எல்லா பற்களும் வரிசையா இருக்கு. பேச்சு தெளிவா இருக்கு. நீங்க பேசுறது காதுக்கு ரொம்பவும் இனிமையா இருக்கு. இந்த அற்புதங்களுக்கு நீங்கதான் விளக்கம் சொல்லணும்...’’ அதற்கு அந்த வயதான கிழவன் சொன்னான் : ‘‘இந்த விஷயங்கள் அப்படித்தான் நடக்கும். ஏன்னா... மனிதன் தானே தன் சொந்த உழைப்புல வாழ்றதை நிறுத்திட்டான். அவன் மத்தவங்களோட உழைப்பை நம்ப ஆரம்பிச்சிட்டான். பழைய காலத்துல, கடவுளோட விதிகளின்படி மனிதர்கள் நடந்தாங்க. அவங்களுக்குச் சொந்தமானது எதுவோ, அதைத்தான் அவங்க வச்சிருந்தாங்க. மத்தவங்க உருவாக்கினது எதையும், தங்களுக்குச் சொந்தமா வச்சுக்க அவங்க விரும்பினதே இல்ல.’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.