Logo

நிஸாகந்தி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7007
nisakanthi

னக்கு மிகவும் பிடித்தது ‘நிஸாகந்தி’யின் வாசனைதான்.‘நைட்குயின்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தச் செடியின் சிறிய மலர்களிலிருந்து வெளியேறி காற்றில் கலந்து வரும் வாசனைக்கு ஈடு இணையாக வேறு எந்த வாசனையும் இல்லை என்பதே உண்மை.

வேலியில் படர்ந்திருக்கும் கொடிகளிலிருந்தும், வீட்டு முகப்பிலிருந்தும் புறப்பட்டு வரும் அந்தப்புதிய மணம், இருட்டு நேரத்தில் காற்றில் கலந்து வந்து என் மனதை ஒரு ஆனந்த அனுபவத்தில் மூழ்கடிப்பதுண்டு. ‘இந்த இரவுராணி’மலர்களின் விலைமாது என்பதுதான் என் எண்ணம். பகல் முழுவதும் நன்றாக உறங்கிவிட்டு, மாலைநேரம் கடந்ததும், இருட்டில் பதுங்கிச் சென்று யாருக்கும் தெரியாமல் ஆட்களை இறுகத் தழுவி தன் மீது அவர்களை முழுமையாக ஈர்த்து... ஆமாம், அந்த மனதை மயக்கக்கூடிய மணம் ஒரு விலைமாதுவிடம் மட்டுமே இருக்கக்கூடியது.

ஆனால், என்னுடைய சொந்த தோட்டத்தில் ஒரு நிஸாகந்திச் செடியை நட்டு வைக்க நான் எப்போதும் சம்மதித்ததில்லை. பலவகைப்பட்ட பூச்செடிகள் வளர்ந்திருக்கும் என்னுடைய தோட்டத்தில் ஒரு நிஸாகந்திச் செடியைக்கூட உங்களால் பார்க்க முடியாது. அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம் இருக்கிறது. அதற்குப்பின்னால் ஒரு பழைய கதை இருக்கிறது.

அப்போது நான் பதினேழு வயது நிரம்பிய ஒரு கல்லூரி மாணவனாக இருந்தேன். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பதினேழு வயது என்பது சிறிது ஆபத்து நிறைந்த ஒரு கட்டம் என்பது உண்மை. ஆங்கிலேயர்கள் இந்தப் பதினேழாம் வயதை ‘ஸ்வீட் ஸெவன்டீன்’ என்று கூறினாலும், நான் அதற்கு ‘ஆபத்து நிறைந்த பதினேழு’ என்றுதான் பெயரிட்டு அழைக்க நினைக்கிறேன். புதுமையின் ஈர்ப்பில் இந்தப் பதினேழு வயது வாலிபன் மனதில் என்னவெல்லாமோ தோன்றும். தேவையற்ற காதல் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பலவற்றையும் உளறிக் கொண்டு, புதிது புதிதாகக் கேட்கிற ஒவ்வொரு கொள்கையின் பின்னாலும் ஓடி அலைந்து, கீழே விழுந்து, மண்ணில் புரண்டு பார்க்க அழகாக இருக்கும் ஒவ்வொரு இளம்பெண்ணையும் தேவதையாக மனதில் நினைத்து வழிபட்டு, ஏமாற்றமடைந்து நடந்து திரியும் யாருக்கும் எந்தவித கெடுதலும் செய்ய நினைக்காத ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவனாக அந்தப் பதினேழு வயது இளைஞன் இருப்பான். இந்தப் பதினேழு வயது வாலிபனை பத்திரிகை ஆசிரியர்கள் பலவித கஷ்டங்களுக்கும் ஆளாக்குவதுண்டு. காரணம்- எந்தக் கழுதையின் மூளைக்கும் கவிதை எழுதத் தோன்றும் ஒரு வயது அது. அவன் அந்தச் சமயத்தில் பெரும்பாலும் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்க்கும் சராசரி மனிதர்களில் ஒருவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ளாமல், அப்படி ஆக விரும்பாமல், ஆன்மிகவாதி போல் ஒரு வகைப்பட்ட தத்துவம் பேசும் மனிதனாக அவன் இருப்பான்.

என்னுடைய காதல் விஷயமும் அப்படித்தான் இருந்தது. நளினி, லீலா என்று எல்லார் மீதும் காதல் கொண்டேன் அப்போது. என்னுடைய ஆதர்ச காதலன் இத்தாலிய ‘டான்டே’தான்.

பல பெண்களின் அழகையும், குணத்தையும் அவர்களுக்குத் தெரியாமலே அலசிப்பார்த்து, காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து, கடைசியில் என்னுடைய ஆதர்ச காதலி ஆகக்கூடிய அதிர்ஷ்டசாலி என்று நான் தேர்ந்தெடுத்தது மாலதியைத்தான். மாலதி உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி. நன்கு வெளுத்து, சற்று பருமனான உடலைக் கொண்டிருக்கும் பெண் அவள். உருண்டு திரண்டிருக்கும் மார்புகள். நிலவைப் போல வட்டமான முகம். அவளுடைய கண்களில் எப்போதும் பார்ப்போரைக் கிறங்க வைக்கும் ஒரு போதை இருக்கும். அவளின் அந்தக் கண்கள்தான் என்னை முதலில் கவர்ந்ததே. மொத்தத்தில் அவளிடம் அழகு கொலுவீற்றிருந்தது. ஒருமுறைகூட சிறிதும் சிரிக்காமல் மிடுக்குடன் இருக்கக்கூடியவள் மாலு. அவள் அப்படி கர்வத்துடன் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளம்பெண்கள் பொதுவாக அப்படித்தான் இருக்க வேண்டும். எப்போதும் சிரித்துக் கொண்டு, குதித்துக் கொண்டு தெருக்களில் நடந்து செல்லும் இளம்பெண்களை நான் எந்தச் சமயத்திலும் விரும்பியதில்லை. அடர்த்தியான பச்சை நிறத்தில் பருத்தித் துணியாலான பாவாடையையும் சிவப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நிற ப்ளவுஸையும் அணிந்துகொண்டு இடது கையில் மாங்காயின் வடிவத்தில் பிடியைக் கொண்ட ஒரு சிறிய குடையைப் பிடித்தபடி சாலையோரத்தில் முகத்தைக் குனியவைத்தவாறு அவள் நடந்து செல்வதை உற்சாகத்துடன் பார்த்தவாறு ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும் என் வீட்டு மாடியில் நான் நின்றிருப்பேன். நான் அங்கு நின்றிருப்பது அவளுக்குத் தெரியாது. நான் அவளை இரவும் பகலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதும் அவளுக்குத் தெரியாது. எங்கள் கணக்குப் பேராசிரியர் ராமநாத அயச்யர் ‘லாகரிதம்’ ‘டான்ஜன்ட்’ எல்லாம் அடங்கிய வீட்டுக்கணக்குகள் கொடுத்திருப்பதை ஒரு மூலையில் வைத்துவிட்டு நான் மாலதியைப் பற்றியும் அவள் குணத்தைப் பற்றியும் அவள் கையில் இருக்கும் புத்தகங்களைப் பற்றியும் அவளுடைய கவிதைகளைப் பற்றியும் சதா நேரமும் நினைத்துக் கொண்டிருப்பேன்.

‘குன்றென வளர்ந்து வரும் என் மார்பு

காண்பாய் என் இதயம் எரிவதை’

அவளின் கவிதையில் இருந்த அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆனால் கவிதை எழுதியிருக்கிறாள் என்பதற்காக அவளை மிகவும் விஷயம் தெரிந்த பெண் என்று நினைக்க நான் தயாராக இல்லை. புதுமையான லட்சியம் நிறைந்த ஒரு தெய்வீகக் காதல் என்றால் அதில் ஒரு சோகம், ஏமாற்றம் இதெல்லாம் இருக்க வேண்டும். மதனனைப் போல காதலில் ஏமாற்றமடைந்து தத்துவங்கள் கலந்த பாடல்களைப் பாடிக்கொண்டு நடந்து திரிவதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவேண்டுமென்று நான் கடவுளிடம் வேண்டினேன். மாலு என் தோள்மீது சாய்ந்துவிழும் அந்தக் காட்சியை நான் என் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பர்லாங் தூரத்திலிருக்கும் விசாலமான ஒரு நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பெரிய வீடுதான் மாலதியின் வீடு. நானும் அவள் தந்தையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது ‘என்ன?’ ‘நல்லது’ என்பதைத் தவிர வேறு எதையும் பேசிக் கொண்டதில்லை. எப்போதும் தரையைப் பார்த்து நடந்து கொண்டிருக்கும் மாலதி என்னுடைய முகத்தை ஒரு முறையாவது பார்த்திருப்பாளா என்பதுகூட சந்தேகம்தான்.

இரவில் சாப்பாடு முடிந்ததும், சிறிதுநேரம் நடந்துவிட்டு வரலாம் என்று நான் வெளியே போவேன். பாதையை விட்டுப் பிரிந்து போகும் அந்த ஒற்றையடிப்பாதை மாலதியின் வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் போய் முடியும். அதற்குப் பக்கத்தில் அந்தப் பகுதியின் ஒரு மூலையில் நிஸாகந்தி ஒரு புதரென வளர்ந்து ஒரு ஆள் உயரத்தில் நின்றிருக்கும்.


அந்தப்புதருக்குள் போய் உட்கார்ந்தால், மாலதி அவளுடைய அறையில் அமர்ந்து பாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக நன்றாகப் பார்க்கலாம். என்பதை ஒருநாள் நான் கண்டுபிடித்தேன்.

அந்த மேஜை விளக்கு வெளிச்சம் அவளின் ஒவ்வொரு அசைவையும் எனக்கு நன்றாக காட்டின. மார்புப் பகுதி இலேசாகத் தெரிகிற மாதிரியான ப்ளவுஸ் ஒன்றை அவள் அணிந்திருந்தாள். அவிழ்த்து விடப்பட்ட அவளின் கூந்தல் இரு தோள்கள் வழியாக மார்பின் மீது விழுந்து அந்த ப்ளவுஸை மறைத்துக் கொண்டிருந்ததால் மலையிலிருந்து வேகமாகப் புறப்பட்டு வரும் அருவியைப் போல அவளுடைய மார்பின் ஒரு பகுதியை மட்டுமே இங்கிருந்து என்னால் பார்க்க முடிந்தது. தனக்கு முன்னால் தன்னுடைய ஆங்கிலப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு இடதுகையால் நெற்றியைத் தாங்கியவாறு மேஜை மீது இலேசாகக் குனிந்து மெதுவாக முணுமுணுத்தவாறு அவள் படித்துக் கொண்டிருந்தாள். உரத்த குரலில் படிக்கும் வழக்கம் அவளுக்கு இல்லை. ‘அண்ட் சீதா வாண்டட் டூ கோ வித் ராமா’ - இப்படி அந்த இளம்பெண் மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருப்பாள். படித்துப் படித்து சில நேரங்களில் அப்படியே அவள் தூங்க ஆரம்பித்து விடுவாள். தூக்கம் கண்களைத் தழுவத்தழுவ அந்தப் பெண் தராசுத்தட்டு ஒரு பக்கம் இறங்குவதைப் போல முகத்தை கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்த்து கடைசியில் மேஜை மீது போய் முழுமையாகச் சாய்ந்து விடுவாள். தலை மேஜை மீது இடித்தவுடன் தன் நிலையை உணர்ந்து கண்களை மெதுவாகத் திறந்து முகத்தை மேல்நோக்கித் தூக்கி தன்னைச் சுற்றிலும் பார்ப்பாள். பிறகு அந்த ஜன்னல் வழியாக இருட்டையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். புதரின் அருகில் அமர்ந்து அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு அவளின் மீது பிறந்த கனிவு காரணமாக ‘என் செல்லமே படித்தது போதும்டா... இனி போய் நிம்மதியா தூங்கு’ என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும். ஆனால், சிறிதுநேரம் கண்களைக் கசக்கிக் கொண்டு அமர்ந்திருக்கும் அவள் மீண்டும் படிப்பதில் ஈடுபட ஆரம்பிப்பாள். தூங்காமல் அந்த இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கும் என் இதய தேவதையையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்தவாறு நான் அமர்ந்திருப்பேன். அப்போது நிஸாகந்தியின் மயங்க வைக்கும் நறுமணம் என் இதயம் வரை சென்று என்னை ஒரு ஆனந்த அனுபவத்திற்குள் மூழ்க வைக்கும். அந்த மலரின் மணத்தை முகர்ந்தவாறு அமர்ந்திருந்த அந்த ஒவ்வொரு நிமிடமும் நான் இனம் புரியாத ஒரு சுகத்தை அனுபவித்தேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆனந்தமான தூக்கத்திற்கு மத்தியில் ஒரு சுகமான கனவு தோன்றுவதைப்போல, அந்தப் பொன்னழகி என் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பாள். என் நினைவுகளிலும் கனவுகளிலும் அந்த நிஸாகந்தியின் நறுமணம் முழுமையாக நிறைந்திருப்பதைப் போல மனதில் ஒரு எண்ணம்.

சில வேளைகளில் அவள் மலையாளக் கவிதைகளைப் படிப்பாள். ‘மஞ்சரி...” - அவள் அழகாகச் சொல்லுவாள்.

‘அம்மாவுக்கு மட்டுமல்ல மற்ற எல்லோருக்குமே எடுத்து முத்தம் கொடுக்க வேண்டும்போல் தோன்றுமல்லவா?...’ - ஹா! அந்த வரிகளை அவள் பாடும்போது கேட்கவேண்டுமே! அப்போது அவளுடைய உதடுகளில் முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருக்கும்.

இப்படி ஒருநாள்கூட விடாமல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒவ்வொரு இரவிலும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த நிஸாகந்திச் செடிகள் இருக்குமிடத்தில் பதுங்கிக் கொண்டு அவளுடைய அழகை நான் அமைதியாக அனுபவித்தேன். நிஸாகந்தியின் மணமும் மாலதியின் முக அழகும் என்னுடைய மனதில் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டன. அந்த நறுமணம் கலந்த அழகை நான் ஒவ்வொரு நாளும் கண்டு ஆனந்த அனுபவத்தை அடைந்தேன்.

கோடைக்காலம் முடிந்தது. மழைக்காலம் தொடங்கியது. நாற்று நடும் வேலைகள் ஆரம்பமாயின.

மழை பெய்வதால் என்னுடைய செயல்கள் சிறிதும் பாதிக்கவில்லை. ஆனால், சில நேரங்களில் மழை பெய்வதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகும்போது, அவள் அந்த ஜன்னல் கதவுகளை மூடிவிடுவாள். அதுதான் பிரச்சினையே. அப்போது என்னுடைய இதயக் கதவுகளும் அதோடு சேர்த்து அடைக்கப்பட்டு விடும். ஒருவகை ஏமாற்றத்துடன் அந்த மழையில் நனைந்தவாறு இறுகிக் கல்லாகிப்போன இருண்ட இதயத்தைத் தாங்கிக் கொண்டு நான் என்னுடைய வீடு நோக்கித் திரும்புவேன்.

ஒருநாள் அந்த நிஸாகந்திச் செடிகள் இருக்குமிடத்தில் அமர்ந்திருந்தபோது, அவளுடைய தந்தை அவள் சகோதரனிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது. “நாளைக்கு நம்ம தோட்டத்துல இருக்குற எல்லாச் செடிகளையும் வெட்டணும். படர்ந்திருக்கிற கொடிகளையும் முழுசா வெட்டிட வேண்டியதுதான்.”

அதைக் கேட்டதும் என்னுடைய இதயமே நெருப்பில் எரிந்து விட்டதைப்போல் நான் உணர்ந்தேன். தோட்டத்திலுள்ள செடிகளை முழுமையாக வெட்டி வீழ்த்த அவர்கள் தீர்மானத்திருக்கிறார்களென்றால் அந்த நிஸாகந்தி செடிகளையும் அவர்கள் வெட்டி வீழ்த்தப் போகிறார்கள் என்பதென்னவோ நிச்சயம். அந்தச் செடிகள் நன்கு வளர்ந்து பரந்து கிடந்தன. என்னுடைய காதல் தளம் அவர்களால் அழியப்போகிறது என்றால் என்னுடைய நிலைமை எப்படி இருக்கும்? என்னுடைய மகிழ்ச்சியும், கனவுகளும் குடி கொண்டிருந்ததே அந்த இடத்தில்தான். கூடு கலைந்துபோன கிளியைப்போல அதற்குப் பிறகு நான் எங்கு போவேன்? தனிமையில் அவள் அழகு முகத்தை அதற்குப் பிறகு நான் எப்படிப் பார்க்க முடியும்?

இதை விட்டால் வேறு வழியில்லை- அவர்களின் செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் இதுமட்டுமே வழி என்று நினைத்த நான் மாலதிக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமென்று தீர்மானித்தேன்.

அன்று இரவு மூன்று மணி வரை அமர்ந்து சிந்தித்து இப்படி ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதினேன்.

இதய நாயகியே,

கடந்த மூன்று மாத காலமாக ஒவ்வொரு நாள் இரவிலும் உன்னுடைய அறைக்குச் சமீபத்தில் இருக்கும் நிஸாகந்தி செடிகள் அடர்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு உன்னையே நான் மனதிற்குள் தொழுதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்படியே யாருக்கும் ஏன் உனக்கும் கூட தெரியாமல் அமைதியாக அமர்ந்துகொண்டு எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால், விதியை நம்மால் மாற்ற முடியுமா? அதை நினைத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அந்த நிஸாகந்தி செடிகள் நாளை காலையில் உன்னுடைய தந்தையால் முழுமையாக அழிக்கப்படப் போகின்றன. அதற்குப்பிறகு எங்கே அமர்ந்து உன்னை நான் காண்பேன்? அந்தச் செடிகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் அழிக்கக் கூடாது என்று மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நான் உன் மீது கொண்டிருக்கும் காதல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால், அதற்கு உன்னுடைய கருணை எனக்குக் கட்டாயம் வேண்டும். ஓம் சாந்தி. மற்றவை பிறகு-

உன்னுடைய காதலன்.


கடிதம் சீக்கிரம் அவள் கையில் போய்ச் சேரவேண்டுமென்று எண்ணிய நான் அதிகாலை நேரத்திலேயே மாலதியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். ஒரு வெளுத்த ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ செடியின் கொம்பைக் கேட்டு வாங்க வந்திருப்பதாக காரணம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் மாலதியின் தோட்டத்தைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு ஒரு சிறு ஆரவாரம் கேட்டது. அருகிலுள்ள சுமார் பத்துப்பேர் மாலதியின் வீட்டு வாசலில் கூட்டமாக நின்றிருந்தார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் நுழைந்து எட்டிப் பார்த்தேன்.

பயங்கரமான ஒர பாம்பை அடித்து வாசலில் போட்டிருந்தார்கள். அந்த பாம்பு சுமார் மூன்றடி நீளத்தில் இருந்தது.

அது ஒரு நல்ல பாம்பு!

“இந்த நல்லபாம்பு அந்தச் சாயங்காலம் பூக்குற பூச்செடிகள் இருக்குற இடத்துல இருந்துச்சு. நாங்க அந்த இடத்த வெட்டி சுத்தமாக்குறப்போ, அங்கே ஒரு பெரிய புற்றைப் பார்த்தோம். அதை இலேசா இடிக்கும்போது இந்தப் பாம்பு வெளியே வந்தது. இவ்வளவு காலமாக இந்த நல்ல பாம்பு இவ்வளவு பக்கத்துல இருந்திருந்தும் நம்ம யார் கண்ணுலயும் படாம இருந்ததுதான் அதிசயம்” - அந்தப் பாம்பை அடித்து நசுக்கிய வேலு ஆசாரி தன்னுடைய மூக்கில் விரல் வைத்துக் கொண்டு என்னுடைய முகத்தைப் பார்த்தவாறு சொன்னான்: “அது எப்படி கிடக்குதுன்னு பார்த்தியா? உடம்புல பாரு எவ்வளவு புள்ளிகள்னு!”

அந்த நல்ல பாம்பின் வால் தந்தி அலுவலகத்திலிருக்கும் மின்சார ஊசியைப்போல இலேசாக நகர்வதைப் பார்த்த ஆசாரி உஷாரானான். “என்ன... இன்னும் நீ சாகலியா?” என்று சொல்லியவாறு அவன் கையில் வைத்திருந்த பெரிய கொம்பால் அதன் தலையை மீண்டும் வேகமாக அடிக்கத் தொடங்கினான். பாம்பின் தலை நசுங்கி, இரத்தம் தெறித்தது.

நான் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. நான் எப்படி வீட்டிற்கு வந்தேன் என்று எனக்கே தெரியாது. அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னுடைய இதயத்தில் யாரோ நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப்போல் உணர்ந்தேன். நான் அந்தப் பூச்செடிகள் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு அழகுப்பெட்டகத்தை தினமும் பார்த்தவாறு இருக்க, எனக்கு அருகில் ஒரு பயங்கரமான விஷப்பாம்பு வாயைப் பிளந்து கொண்டு அந்த நிஸாகந்தியின் நறுமணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது என்ற உண்மையை நினைத்துப் பார்க்கும்போது உண்டான பயத்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எனக்குப் பின்னால் விரித்துக்கொண்டு நிற்கின்ற ஒரு நல்லபாம்பை என்னுடைய மனத்திரையிலிருந்து அகற்றவே முடியவில்லை.

அன்று இரவு எனக்கு காய்ச்சல் வர ஆரம்பித்தது. அது நேரம் செல்லச் செல்ல அதிகரித்தது. நான் பயங்கரமான பல கனவுகளைக் கண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறிக் கொண்டிருந்தேன். பார்க்கிற ஒவ்வொரு இடத்திலும் பாம்பு இருப்பதைப்போல் எனக்குத் தோன்றியது. கட்டிலின் மேல் ஒரு பாம்பு. ஜன்னல் வழியாக ஏராளமான பாம்புகள் நெளிந்து கொண்டு உள்ளே வருகின்றன. பெட்டியின் மேல் ஒரு நல்ல பாம்பு தலையை உயர்த்தி நின்று கொண்டிருக்கிறது. அதற்கருகில் ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

“அய்யோ... பாம்பு... பாம்பு...” என்று நான் வாய்விட்டு அலற ஆரம்பித்தேன். அதைக்கேட்டு வீட்டிலிருந்தவர்கள் கொம்பை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அறை முழுவதையும் அலசோ அலசு என்று அலசினார்கள். பின்னாலிருந்து ஒரு பாம்பு படத்தை விரித்துக் கொண்டு என் தோளையே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று மனதில் நினைத்ததுதான் தாமதம், திடுக்கிட்டு நான் எழுந்துவிட்டேன்.

அப்படி எனக்கு வந்த கனவுகளில் நான் மாலதியை பாம்பின் உடலையும் பெண்ணின் முகத்தையும் கொண்டிருக்கும் ஒரு நாகக்கன்னியாகப் பார்த்தேன். அவள் முகத்தைப் பார்த்து ஆனந்தத்தில் நான் திளைத்த நானேதான் இப்போது அவள் உடலைப் பார்த்துப் பயந்தேன்.

காய்ச்சல் எனக்கு ஒரு மாதம் நீடித்தது. படிப்படியாக நான் குணமானேன். ஒருநாள் நடந்து செல்லும்போது மாலதி வசித்த வீட்டின் முன்னால் ‘வாடகைக்கு இந்த வீடு விடப்படும்’ என்றொரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். விசாரித்ததில் அவளுடைய தந்தைக்கு கண்ணூருக்குத் தொழில் மாற்றம் கிடைத்து விட்டதாகவும், அதனால் அவர்கள் குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு முன்பு கண்ணூருக்குப் போய் விட்டதாகவும் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நான் மாலதியைப் பார்க்கவேயில்லை. அவளுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டாள் என்று சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அவளிடம் தர வேண்டும் என்று எழுதி வைத்த அந்தக் கடிதத்தை என்னுடைய பழைய கடிதங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்து அதை நான் கிழித்தெறிந்தேன்.

நிஸாகந்தியின் நறுமணம் எங்கிருந்தாவது காற்றில் கலந்து வந்தால் என்னுடைய பதினேழாம் வயதில் நடந்த அந்த பைத்தியக்காரத்தனமான காதலைப்பற்றிய சுவாரசியமான நினைவுகள் என் மனதில் வலம் வர ஆரம்பிக்கும். அந்த வாசனையில் மூழ்கிக் கொண்டே தூக்கக் கலக்கத்துடன் பாடம் படிக்கும் ஒரு மாணவியின் முகமும் படம் விரிந்து நிற்கும் ஒரு நல்லபாம்பின் உருவமும் ஒரே நேரத்தில் என் மனதில் தோன்றும். இனம் புரியாத அந்த பயத்தின் காரணமாகத்தான் என்னுடைய தோட்டத்தில் நிஸாகந்தி செடியையே நான் வைக்கவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.