Logo

பலாத்காரம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7453
bhalaathkaaram

ங்களுக்குத் தெற்குப் பக்கம் இருந்த வீட்டின் முன்னாலிருந்த வழியில் நான் போனபோது, வாசலிலிருந்து ஒரு கேள்வி வந்தது.

"அண்ணே, நீங்க இப்போத்தான் வர்றீங்களா?"

எனக்கு நன்கு பழக்கமான குரல். நான் திரும்பிப் பார்த்தேன். பிரகாசமான ஒரு புன்சிரிப்புடன் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்திருந்த ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். உடனடியாக அவள் யார் என்று என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த வீட்டில் இருந்த அந்தச் சிறுபெண் மாலதிதான். நான்கே வருடங்களில் அவளிடம் தான் எந்த அளவிற்கு மாற்றம் உண்டாகியிருக்கிறது! அப்போது பாவாடை மட்டும் அணிந்து ஓடித் திரிந்த ஒரு சிறுமியாக அவள் இருந்தாள். என் முதுகில் அவள் ஏறி சவாரி செய்திருக்கிறாள். நான் அவளுக்கு ஒரு ஃப்ராக் தைத்துக் கொடுத்திருக்கிறேன். நான் கேட்டேன்:

"மாலதி, அம்மா இங்கே இல்லையா?"

அவள் சொன்னாள்:

"உள்ளே இருக்காங்க."

"நான் போயிட்டு வர்றேன். அம்மாக்கிட்ட சொல்லு."

நான் நடந்தேன். சிறிது தூரம் நடந்த பிறகு நான் திரும்பிப் பார்த்தேன். அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.

அந்த முகத்திற்கு ஒரு தனிப்பட்ட புதுமை இருந்தது. கன்னங்களில் ஒன்றோ இரண்டோ முகப்பருக்கள் வெளியே தெரியும் படிஇருந்தன. அவளுடைய கண்கள் மிகவும் பெரிதாக இருந்தன. அவற்றுக்கு ஒரு நீல நிறம் இருந்தது. அழகு இருந்தது. அவை ஒரு சிறுமியின் கள்ளங்கபடமில்லாத கண்கள் இல்லை. அவை கனவு காண்பதைப் போல எனக்குத் தோன்றியது. அவை எப்போதும் துடிப்புடன் இருந்தன. அவளுக்கு நல்ல இரத்த ஓட்டம் இருந்தது. அவளிடம் உற்சாகம் இருந்தது. அவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். மலர்ந்து கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தாய்தான் என்னுடைய செவிலித்தாய். நான் அவளுடைய மார்பகத்திலிருந்துதான் முதலில் பாலையே குடித்தேன். அதனால் அவளையும் நான் அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை மகனைப்போல நினைத்து அன்பு வைத்திருந்தாள்.

அன்று பிற்பகல் நேரத்தில் நான் தெற்குப் பக்க வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த அம்மாவிற்கு கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு, ஒரு புடவை, நான்கைந்து ரூபாய்கள் ஆகியவற்றைக் கொண்டு போயிருந்தேன். அவளுக்காக நான் ஒரு நல்ல ரவிக்கையும் தைத்து வைத்திருந்தேன்.

அம்மா என்னைப் பார்த்தவுடன் ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னாள்:

“என் மகனே, இந்த அளவுக்கு வளர்ந்துட்டியா?’’ அவள் என்னைப் பார்த்து கண்கள் குளிர்ந்தாள். ஆனந்தத்தில் திளைத்தாள்.

“ஆனால், அண்ணன் மெலிஞ்சு போயிருக்காரும்மா.’’

வாசலில் நின்று கொண்டு அவள் சொன்னாள். நான் அவளையே பார்த்தேன்.

அவள் உயரமாக வளர்ந்திருக்கிறாள். உடலில் இளமையின் புதுக்களை தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அவளுடைய மார்பகங்கள் பெரிதாகி இருந்தன. சொல்லப்போனால் ஒவ்வொரு நிமிடமும் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்துத்தான் அப்படிப் பார்ப்பது மரியாதைக் குறைவான செயல் என்ற விஷயமே எனக்குத் தோன்றியது. என்னுடைய பார்வை பட்டதன் விளைவாக அவளுடைய மார்பகங்கள் கீழ்நோக்கி இறங்கியதைப்போல எனக்குத் தோன்றியது. ஒரு அம்பு பாய்ந்ததைப் போல, அதனால் பாதிக்கப்பட்டதைப் போல அவள் கதவுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள். அவளுடைய கண்கள் துடித்தன. வெட்கத்தால் அவை மேலும் அழகாயின. அவளுக்குள் இருக்கும் பெண்மைத்தனம் நன்கு வெளிப்பட்டது. எல்லாவற்றையும் அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் அம்மாவும் நீண்ட நேரம் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டிருந்தது. நான் ஒரு குழப்ப நிலையில் இருப்பதைப்போல் உணர்ந்தேன். என்னுடைய பார்வைகளை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தேன். அவ்வப்போது என் பார்வை அவளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. என் உணர்ச்சிகள் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தது. அப்படி நான் அவளை பார்க்கக் கூடாது தான். அவளுடைய மார்பகங்களில் என் பார்வை பதியக் கூடாதுதான்.

மறுநாளே நான் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இரண்டு வருடங்கள் மீண்டும் கடந்தன. என்னுடைய திருமணத்தையொட்டி ஒரு நீண்ட விடுமுறையில் நான் ஊருக்கு வந்திருந்தேன்.

என் வீட்டின் தெற்குப் பகுதியில் சற்று தள்ளி பாதையோரத்தில் ஒரு பொதுக்குளம் இருந்தது. நான் வரும் வழியில் அந்தக் குளத்திற்குப் பக்கத்தில் வந்தபோது குளித்து முடித்த ஒரு பெண் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் உருவம் என்னை மிகவும் ஈர்த்தது. பின்னால் இருந்து பார்த்தபோது - இந்த அளவிற்கு அளவெடுத்தாற்போல் இருந்த ஒரு வடிவத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அவளுடைய ஒவ்வொரு அசைவும் அந்த அளவிற்கு மனதைக் காந்தமென இழுத்தது. அதிக உயரமில்லை. உயரத்திற்கேற்ற சதைப்பிடிப்பு. தலைமுடி அடர்த்தியாக இருந்தது. கச்சிதமான உடலமைப்பு. அவள் ஈரத்துணியை அணிந்திருந்தாள். ரவிக்கையையும் பாடியையும் நனைத்துத் தோளில் இட்டிருந்தாள். துண்டை மடித்து தன் மார்புகளை மறைத்திருந்தாள். ஒரு கையால் ஈரமான முண்டின் கீழ்ப்பகுதி முனைகளை இறுகப் பிடித்திருந்தாள். கடைந்தெடுத்ததைப்போல் அவளின் கணுக்கால்கள் இருந்தன. அவள் வேகமாக நடந்தாள். அவள் அப்படி வேகமாக நடக்கும்போது உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த ஈர முண்டில் சுருக்கங்கள் விழுந்து, கண்களை அதை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது. அவள் இடுப்பில் ஒரு மெல்லிய அரைஞாண் அணிந்திருந்தாள்.

நான் வேகமாக நடந்தேன். அவள் திரும்பிப் பார்த்தாள். நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அழகான முகம். எனக்கு அவளை யாரென்று தெரியவில்லை. அவளுடைய வேகம் மேலும் அதிகரித்தது. நானும் விடுவதாக இல்லை. அவள் சிறிது தூரம் மெதுவாக ஓடினாள்.

தெற்கு வீட்டின் வாசலை நெருங்கியபோது, நான் அவளை கிட்டத்தட்ட அடைந்துவிட்டேன். அவள் வாசல் வழியாக உள்ளே ஓடினாள். அப்போது தான் அது மாலதி என்ற விஷயமே எனக்குத் தெரிந்தது.

முற்றத்தின் வழியாக அவள் ஓடி உள்ளே நுழைந்து திண்ணையில் இருந்து திரும்பிப் பார்த்தாள். பழக்கத்தை உணர்த்தும், அன்பை வெளிப்படுதுதும் ஒரு புன்சிரிப்பு அவளுடைய உதடுகளில் அரும்பியது. அந்த இளம்பெண்ணின் நாணம் கலந்த கண்கள் என்னைப் பார்த்ததால் உண்டான சந்தோஷத்தால் மலர்ந்தன.

நானும் அங்கு சென்றேன். திண்ணையை அடைந்தபோது அவளைக் காணவில்லை. நான் அம்மாவை அழைத்தேன். யாரும் அழைப்பைக் கேட்டதாகத் தெரியவில்லை.


“மாலதி, அம்மா எங்கே?’’

என்ன காரணத்தாலோ என் குரல் இலேசாக நடுங்கியதைப் போல் நான் உணர்ந்தேன். காரணமே இல்லாமல் என்னிடம் ஒரு பதைபதைப்பு உண்டானது. அங்கு மாலதி இருந்தாள். அவள் உள்ளேயிருந்த அறைக்குள் இருந்தவாறு முண்டு மாற்றிக் கொண்டிருந்தாள். நான் தளத்தில் போய் நின்றேன்.

“அண்ணே, நீங்க இப்போத்தான் வர்றீங்களா?’’

முற்றத்தில் நின்றுகொண்டு அவள் கேட்டாள்.

அவள் ஈர முண்டை மாற்றி விட்டிருந்தாள். எப்படி அவள் வெளியே வந்தாள்? எனக்குத் தெரியவில்லை. நான் சொன்னேன்:

“ஆமா... அம்மா எங்கே?’’

அவளுடைய கண்களில் பெண்மைத்தனத்தை வெளிப்படுத்தும் அழகான வெட்கம் முழுமையாக மலர்ந்து காணப்பட்டது. தன்னுடைய மார்பகங்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்பதையும்; தான் ஒரு ஆணை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மற்றவர்களும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள் என்பதையும்; தான் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளாக ஆகிவிட்டோம் என்பதையும் அவள் நன்கு புரிந்து கொண்டிருந்தாள். அந்தப் புரிதலை அவளுடைய கண்களில் நான் பார்த்தேன். அவள் சொன்னாள்:

“அம்மா பசுவைக் கொண்டு வர்றதுக்காக போயிருக்காங்க.’’

நான் எதுவும் பேசவில்லை. என் இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. எனக்கே புரியாத சில உணர்ச்சிகள் அப்போது உள்ளுக்குள் கிடந்து துடித்துக் கொண்டிருந்தன. நான் ஒரு ‘விஸில்’ அடித்தேன்.

சிறிது நேரம் நான் உள்ளேயும் அவள் வெளியேயுமாக நின்றிருந்தோம். அவள் உள்ளே வருவாள் என்று நான் எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு வளர்ந்து என்னையே அறியாமல் ஒரு கேள்வி என்னுடைய வாயிலிருந்து வெளியே வந்தது.

“நீ ஏன் அங்கே நிக்கிறே?’’

அந்தக் கேள்வியே மரியாதைக் குறைவான ஒன்று என்று எனக்குத் திடீரென்று தோன்றியது. அவளை எதற்காக நான் உள்ளே வரும்படி அழைத்தேன்? அதுவும் - தாழ்ந்த குரலில், இடறிய தொண்டையுடன். நான் கையில் தூக்கிக் கொஞ்சிய பெண் அவள். நான் எப்படி அவளுடைய முகத்தைப் பார்ப்பேன்?

தெற்குப் பகுதியிலிருந்து அவள் ‘அம்மா’ என்று அழைத்தாள். நான் பலவந்தமாக ஏதாவது செய்துவிடுவேன் என்று அவள் பயந்திருக்கலாம். என்மீது அவளுக்கு எந்த அளவிற்கு உயர்ந்த மரியாதை இருந்தது! எல்லாம் இப்போது இல்லாமற் போயிருக்கும்.

நான் வெளியில் இறங்கி ஓடினேன்.

எனினும் அவளுடைய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச்செய்யும் உடலமைப்பு - அதை வேறொரு விதத்தில் நினைத்துப் பார்க்க முடிந்திருந்தால்...! அது முடியாது. எப்படி முடியும்? அந்த அரைஞாண் அணிந்த இடுப்பு, ஈரமான உதடுகள், எப்போதும் அவளிடம் காணப்படும் நாணம், வளர்ந்து கொண்டிருந்த உணர்ச்சியை அடக்க முயற்சித்ததன் வெளிப்பாடுதான் அந்த நாணம் என்பதாக நான் உணர்ந்தேன்.

எப்போதும் அங்கு போய் அமர்ந்திருப்பது என்பது சரியான ஒரு விஷயம் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்டாயம் அதனால் கெட்ட பெயர் வரும். எனினும், நான் எப்போதும் அங்கு இருந்தேன். திண்ணையின் தெற்குப் பகுதியில் ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டிருக்கும். அதில் சாய்ந்தவாறு நான் படுத்திருப்பேன். அங்கு படுத்திருந்தால் சமையலறையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்க்கலாம். அந்த வகையில் அவளை நான் பார்த்துக் கொண்டே படுத்திருப்பேன்.

ஆனால், நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை. நான் அங்கு இருப்பதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், நான் அங்கு இருப்பதைப் பற்றிய நினைப்பு அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

எனக்கு மிக அருமையான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால், நான் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் மட்டுமே தனியாக இருக்கக்கூடிய நேரங்கள் நிறைய கிடைத்தன. பேசாமல், அசையாமல் நான் அப்படியே வேட்கையுடன், ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டு அந்த நாற்காலியில் படுத்திருப்பேன். சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் என்னுடைய கண்களுக்கு முன்னால்தான் இருந்தாள். அந்த சந்தர்ப்பம் கடந்து போனவுடன், அதை வீணாக்கி விட்டோமே என்று நான் கவலைப்படுவேன்.

ஒருநாள் அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பம் வந்தபோது, நான் நீண்ட நேரம் சிந்தித்த பிறகு சொன்னேன்.

"கொஞ்சம் தண்ணி கொண்டு வா மாலதி."

அவள் நீருடன் அருகில் வரும்போது - நான் ஏற்கெனவே மனதில் நினைத்து வைத்திருந்தேன். இன்று எப்படியாவது காரியத்தை நிறைவேற்றிட வேண்டும்- அவள் நீருடன் என்னை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவள் பக்கத்தில வந்து, நீரை வைத்துவிட்டுப் போய் விட்டாள். நான் அதே நிலையில் உட்கார்ந்திருந்தேன்.

என்னால் இப்படி எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை. எத்தனை நாட்கள் இப்படியே இருப்பேன்? ஒரு வேளை என்னுடைய முட்டாள்தனம் காரணமாக இது நடக்காமல் போயிருக்கலாம். எனக்கு தைரியம் இல்லை. தைரியத்துடன் அணுகினால்... ஆமாம்... அவளும் ரத்தமும் சதையும் கொண்டவள்தானே! கொதிக்கும் ரத்தமும் எலும்புச் சோறும் ஊறிக் கொண்டிருக்கும் சதையும்! இப்படி நான் தொடுவதை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் பெண் முதலில் செயல்படமாட்டாள். அடிபணிவது மட்டுமே அவளின் பழக்கமாக இருக்கும்.

ஒரு மாலை வேளையில் அங்கு யாருமில்லை. தெற்குப் பக்கத்தில் வாழை மரங்கள் இருந்த இடத்தில் அவள் தலையைக் கோதியவாறு நின்றிருந்தாள். நான் திடீரென்று அவளுக்கு முன்னாள் போய் நின்றேன். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தோம். அவள் தலையைக் குனிந்து கொண்டாள். நான் அவளின் கையைப் பிடித்தேன்.

அவள் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய கை என் பிடியில் இறுகிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் நாங்கள் நின்றிருந்தோம் என்று எனக்கே தெரியாது. நீண்ட நேரம் நின்றிருக்க வேண்டும். அவள் கையை இழுத்தாள். நான் என் பிடியை விட்டேன். அவள் போய்விட்டாள்.

நன்கு இருட்டியிருந்தது. எவ்வளவு நேரம் அவள் நின்றிருந்தாள்! நான் அடிமுட்டாளேதான்! ஒரு வேளை, முழுமையான வெறுப்புடன் அவள் போயிருப்பாளோ?

"ஓ... இந்த அண்ணனுக்கு எப்பவும் விளையாட்டுதான்...'

அவள் போய் விட்டாள். என் மனதிற்குள் முழுமையாக நிறைந்திருந்த ஆசையை அவள் ஒரு விளையாட்டாக நினைத்து விட்டாள்.

மீண்டும் சந்தர்ப்பம் பார்த்து நான் கெஞ்சுகிற குரலில் சொன்னேன்.

"நான் எவ்வளவு நாட்களாக ஆசைப்படுறேன், மாலதி"

"ஓ! அப்படியா?"

அவள் போய்விட்டாள்.

அவள் என்னுடைய வேண்டுகோள்களுக்கு நேரடியாக பதில் கூறாமல் என்னைவிட்டு விலகிப் போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய பைத்தியம் பிடிக்கச் செய்யும் அந்த நாணம் ஒவ்வொரு விஷயத்திலும் ஈர்ப்பு அதிகம் உண்டாகும் வண்ணம் வெளிப்பட்டது. அவள் என்னுடைய வேண்டுகோள்களை மறுக்கவுமில்லை.


ஒருவேளை பயம் காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் சந்தர்ப்பங்கள் சரி இல்லாமல் இருக்கலாம். அவள் என்மீது கோபப்படவும் இல்லை.

ஒரு நாள் நான் அவளிடம் சொன்னேன்:

"கதவுக்குத் தாழ்ப்பாள் போடாதே... தெரியுதா?"

அவள் எதுவும் பேசாமல் போய்விட்டாள்.

ஒருவேளை, அவள் காதில் என் வார்த்தைகள் விழாமல் போயிருக்கலாம்.

நான் மீண்டும் சொன்னேன்.

ஒரு இரவு முழுவதும் அந்த கதவிற்கு வெளியே தட்டிக் கொண்டும் அழைத்துக் கொண்டும் உட்கார்ந்திருந்ததைப் பற்றி அவளிடம் நான் மிகவும் வருத்தத்துடன் சொன்னேன்.

எல்லா முயற்சிகளும் செய்தாகிவிட்டன. என்னுடைய மனதில் வெறுப்பு உண்டானது. ஒருநாள் நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூட சொன்னேன். அதைக் கேட்ட பிறகும், அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. எப்படியும் நினைத்ததை செயல்படுத்தியே ஆவது என்று நான் முடிவெடுத்தேன்.

'ஒரு நாள், எப்படியாவது நான் உன் அறையில் இருப்பேன்.'

அறையின் மூலையில் நான் மறைந்து நின்று கொண்டிருந்தேன். அவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். கையில் ஒரு விளக்கு இருந்தது. என்னை அவள் பார்த்தாள். அவள் நடுங்கினாள். திடீரென்று அவள் விளக்கை ஊதி அணைத்தாள். பிறகு நுழைந்து வந்த வாசல் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டாள்.

அடடா! அவள் என் மன விருப்பப்படி நடக்கிறாள் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. நான் மெதுவாக, அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி அவளின் அருகில் சென்றேன். என் கைகள் அவளுடைய உடம்பில் பட்டன. அவள் என்னுடைய இரண்டு கைகளையும் நன்றாகச் சேர்த்து பிடித்துக் கொண்டு என்னை அந்தக் கட்டிலில் உட்காரச் செய்தாள். அவளும் அருகில் உட்கார்ந்தாள்.

அந்த வகையில் அவளின் கைப்பிடிக்குள் சிக்கி நான் உட்கார்ந்திருந்தேன். நீண்ட நேரம் கழித்து, நான் மிகவும் மெதுவான குரலில் சொன்னேன்:

"நான் சாயங்காலத்துக்கு முன்னாடியே இந்த அறைக்குள்ளே நுழைஞ்சிட்டேன்."

ஒரு கைக்குள் என் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அவள் என் வாயை மூடினாள். அதற்குப் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.

நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயாராக இருந்தேன்.

மேலும் சில மணி நேரங்கள் ஓடி முடிந்தன. அவள் என் கைகளைச் சேர்த்துப் பிடித்து வைத்திருந்தாள்.

சுற்றிலும் ஒரே அமைதி. எல்லாரும் உறங்கிவிட்டார்கள். ஒரு இரவுக் கோழி கூவியது.

அவள் மெதுவான குரலில் என் காதில் கேட்டாள்:

"இது சரியான செயலா, அண்ணே?"

அவள் சற்று கடுமையான குரலில் கேட்டதைப் போல் நான் உணர்ந்தேன். அர்த்தத்துடன் சரியான பதிலை எதிர்பார்த்து அவள் அந்தக் கேள்வியைக் கேட்டாள். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் தொடர்ந்து சொன்னாள்:

"அண்ணே, நான் இப்படி உங்களை நினைக்கல."

என் ரத்தம் குளிர ஆரம்பித்தது. அந்த இருட்டில் நான் அவளுடைய முகத்தைப் பார்த்தேன். ஒரு குடும்பத்தனமான கன்னிப் பெண்ணின் பிரகாசமான முகம்! அவள் கேட்கிறாள். அவள் தொடர்ந்தாள்.

"அண்ணே, நீங்க என்னைக் கையில் தூக்கி வச்சு விளையாடி இருக்கீங்க. என்னைக் கூடப் பிறந்த தங்கச்சியா நினைச்சு..." அவள் பாதியைக் கூறிவிட்டு நிறுத்தினாள். ஆமாம்... அவள் கூறுவது சரிதான்.

அவள் மீண்டும் சொன்னாள்:

"இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா... அண்ணே, நினைச்சுப் பாருங்க..."

அவள் மீண்டும் என்னவெல்லாமோ கூறினாள். அவள் கர்ப்பிணி ஆகிவிட்டால் என்ன செய்வது? அவளுக்கு ஒரு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லையா என்று அவள் கேட்டாள். அவள் ஒரு கணவனுக்காக, அவர்களுக்கிடையே உள்ள உறவுக்காகத் தன்னுடைய கன்னித்தன்மையை பத்திரமாகக் காப்பாற்ற வேண்டாமா? நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு காரியம் நடந்தால்- அதைப் பற்றி நான் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றாள் அவள்.

அவளுடைய எண்ணங்கள் பலித்தன. நான் சிந்தித்தேன். என் ரத்தம் உறைந்து போய்விட்டது. ஒரு வார்த்தைகூட நான் பேசவில்லை. ஆமாம்... இது ஒரு தவறான செயல்தான்.

அவள் தன்னுடைய பிடியை விலக்கி என் கைகளை சுதந்திரமாக்கிவிட்டு சொன்னாள்: "அண்ணே, இதற்கு மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நான் தயார்..."

நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். எனக்கு எப்படியாவது அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது. யாருக்காவது இது தெரிந்துவிடுமோ என்ற பயம் எனக்கு.

நான் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அவளும் அருகில் உட்கார்ந்திருந்தாள். ஏழரைக் கோழி கூவியது. இப்போது நிலவு வெளிச்சம் இருக்கும். நான் சொன்னேன்.

"கதவைத் திற... நான் போறேன்."

அவள் கேட்டாள்:

"போறீங்களா?"

"ஆமா..."

அவள் கதவைத் திறந்தாள். நான் வெளியில் இறங்கி ஓடினேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.