
சிறிதும் எதிர்பார்க்காமல் நடந்த சத்யனின் மரணம் பற்றிய செய்தி அந்த மனிதரைப் பாடாய் படுத்தியது. சத்யன் அவருடைய சொந்த சகோதரர் என்பதால் அல்ல அந்த மரணம் அவரைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. சத்யன் அளவிற்கு தான் நம்பிக்கை வைத்த ஆள் உலகத்தில் வேறொருவர் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார்.
யாருக்கும் ஒரு சிறு கெடுதல் கூட செய்யாத, என்ன கெடுதலை அவருக்கு யார் செய்தாலும் அதற்கு பதிலாக எதுவும் செய்ய நினைக்காத, சுருக்கமாக சொல்லப் போனால் ஒரு அப்பாவி மனிதரான சத்யனுக்கு மரணமடையும் அளவிற்கு எந்தவொரு நோயும் இருக்கவில்லை என்பதே உண்மை.
வாழ்க்கையின் கரையை எட்டி பிடிப்பதற்காக ஒன்று சேர்ந்து துடுப்பு போட்டவர்கள்தான் அவர்கள் இருவருமே. ஒரே வீட்டில் எத்தனையோ வருடங்களாக ஒன்றாகவே இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களையெல்லாம் வாழ்க்கையில் அனுபவித்தார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொத்தத்தில் ஒதுக்கப்பட்ட காலால் மிதித்து நசுக்கப்பட்ட பிள்ளைகளாக அவர்கள் இருந்தார்கள். சிறுவயதிலேயே அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடமிருந்து நிரந்தரமாக விடை பெற்றுவிட்டார்கள். அண்ணனுக்கு தம்பியும் தம்பிக்கு அண்ணனும் மட்டுமே துணையாக இருந்தார்கள்.
இரண்டு பேரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற வருடம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. தம்பியை விட நான்கு வயது அதிகமான அண்ணன் எல்லா வகுப்புகளிலும் விடாமல் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தார். ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய வகுப்புகளில் அவருக்கு தொடர்ந்து தோல்விதான் கிடைத்துக் கொண்டிருந்தது. பத்தாம் வகுப்பில் இரண்டு முறைகள் தோல்வியைத் தழுவிய முட்டாள் மனிதராக இருந்தார் அண்ணன். தம்பி படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். எந்த வகுப்பிலும் அவர் ஒருமுறை கூட தோல்வியைத் தழுவவில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் அவர் எல்லா வகுப்புகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அண்ணனை விட படிப்பில் புத்திசாலியாக இருந்த தம்பியை யாரும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க தயாராக இல்லை. அண்ணனை கல்லூரியில் சேர்த்தார்கள். கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் இன்டர்மீடியட் படித்தாலும், தொடர்ந்து படிக்காமல் கல்லூரியை விட்டு வெளியே வந்த அண்ணன் அரசியல்வாதி ஆடையை அணிந்தார். அரசியல் செயல்பாடுகள் அண்ணனுக்கு மிகப்பெரிய ஒரு நட்பு வளையத்தை உண்டாக்கிக் கொடுத்தன. தம்பி குடும்ப விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அருகிலிருந்த பள்ளிக் கூடத்தில் குமாஸ்தாவாக அவர் வேலை பார்த்தார். அண்ணனும் தம்பியும் இருபது வருடங்களுக்கும் அதிகமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் வேலைகளில் இருவரும் முழுமையாக மூழ்கினார்கள். அண்ணன் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடும் நிலமும் வாங்கினார். தம்பிக்கு பூர்வீகமாக இருந்த வீடும், நிலமும் கிடைத்தன. இருவரும் தனிதனியாக இருந்த இரு வீடுகளில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
அண்ணனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள். தம்பிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. தம்பிக்கென்று பல கடமைகள் இருந்தன. அண்ணனுக்கும் அத்தகைய கடமைகள் இருந்தாலும், அதைச் செய்யாமல் இருக்கக் கூடிய புத்திச்சாலித்தனமும், தந்திரங்களும் அவரிடம் நிறையவே இருந்தன.
இப்போது எல்லா விஷயங்களும் அவரின் ஞாபகத்தில் வந்து கொண்டிருக்கின்றன. காலம் படுவேகமாக கடந்து போய் விட்டது. அண்ணனுக்கு இப்போது எழுபது வயது. தம்பிக்கு அறுபத்தைந்து நெருங்கி விட்டிருக்கிறது.
முதலில் மரணத்தைத் தழுவ வேண்டியவரென்னவோ அண்ணன்தான். ஆனால், மரணமடைந்தது தம்பி. தம்பி மரணமடையாமல் இருக்க வேண்டும் என்று அண்ணன் விரும்பினார். தான் மரணமடையும் போது தன்னுடைய தலையை பிடிக்க வேண்டியவர் தம்பிதான். ஆனால் எல்லாம் நேர்மாறாக நடந்து விட்டது. தான் மரணமடைந்த பிறகுதான் தம்பி மரணத்தைத் தழுவ வேண்டும் என்று அண்ணன் பலமுறை கடவுளிடம் வேண்டினான். ஆனால், சிறிதும் எதிர்பாராமல் பின்புற வாசல் வழியே இந்த மரணம் உள்ளே நுழைந்து விட்டது. ஒவ்வொரு மரணமும் ஓரு அர்த்தத்தில் பார்க்கப்போனால் கொல்லைப்புற வழியில்தான் நடக்கிறது. இதுவும் அப்படித்தான் நடந்திருக்கிறது என்று மனதில் நினைத்து ஏன் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை?
சத்யநாதன் பிரகாசமான பகல் நேரமென்றால் அண்ணனான அந்த மனிதர் கோபிநாதன் இருண்டு போன இரவு என்பதே உண்மை. இருவரின் குணத்திலும், தோற்றத்திலும் சிறிது கூட ஒற்றுமை கிடையாது. தொடர்ந்து வந்து கொண்டிருந்த நினைவு வெள்ளத்தில் அண்ணன் முழுமையாக மூழ்கிப் போயிருந்தார்.
வழக்கத்திற்கு மாறாக தொலைபேசி அமைதியாகி விட்டிருந்தது. நேற்று இரவு செய்த மழை மின்சாரத்தையும் தொலைபேசியையும் செயல்பட விடாமல் செய்தது. தெளிவான ஒரு அறிவிப்பு கடைசிவரை கிடைக்கவில்லை. தம்பி மரணத்தைத் தழுவியது எப்போது என்பதையோ மரணத்திற்குக் காரணமான நோய் எது என்பதையோ அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒன்று மட்டும் உண்மை. இனிமேல் ஐந்தாவது கல்லில் பஸ்ஸை விட்டு இறங்கும்போது சத்யநாதன் அவருக்காக அங்கு காத்து நிற்கப் போவதில்லை. ஆற்றைக் கடந்து ஐந்தாம் கல்லில் குண்டலியூர் பஸ் நிறுத்தத்தில் எப்போதும் அவருக்காக காத்து நின்றிருப்பார் சத்யநாதன். அங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது வீடு. வீட்டில் பலரும் இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தவரும் அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தவர் சத்யநாதன்தான். எப்போதும் அவரைப் பின்பற்றி வாழ்க்கையில் நடந்த, அவருடைய வளர்ச்சியைப் பார்த்து மனதில் மகிழ்ச்சியடைந்திருந்த மனிதர் அவர். இனி அதையெல்லாம் நினைத்து நினைத்து மனதில் கவலைப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை. சத்யனின் பிரிவு அவரை மிகவும் வேதனைப்படச் செய்தது.
கடந்த இரண்டு நாட்களாக மழை இடைவிடாது பெய்தவண்ணம் இருக்கிறது. தென்னை மரத் தோப்பில் நீர் தேங்கியிருக்கிறது. வாசலில் மழை நீர் தங்கியிருக்கிறது. பாதையில் நீர் நிறைந்திருக்கிறது. குளமும் கிணறும் மழை நீரால் நிரம்பியிருக்கின்றன. மழையால் போக்குவரத்து பெரிதும் பாதித்து விட்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் இந்த பெரு மழை கொஞ்சம் நின்றிருந்தால்? பிணத்தை எரியூட்டும்போது இந்த மழை நிச்சயமாக தொந்தரவு தராமல் இருக்காது.
சில நாட்களாகவே அவர் காணும் ஒவ்வொரு கனவும் கெட்ட செயல்களுக்கு காரணமாகவே அமைந்து கொண்டிருக்கிறது. வாசலில் மாமரத்தின் கிளையில் அமர்ந்து ஆந்தை அலறுவது அவர் காதில் விழுகிறது. அந்த அலறல் சத்தம் காதில் வந்து விழும்போது தன்னையும் மீறி அவர் நடுங்கிப் போகிறார். எங்கோ என்னவோ நடக்கப் போகிறது என்பதற்கான கெட்ட அறிகுறிகளே அவை என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.
நடு அறையில் பிணம் படுக்க வைக்கப்பட்டிருக்கிறது. முகத்தைத் தவிர, மீதி உடம்பு முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. சத்யநாதனின் முகத்தை நீண்ட நேரம் அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. கண்கள் நீரால் நிரம்பின.
மகன் வந்த பிறகுதான் பிணத்தை எரிக்க முடியும் கோல்ஹாப்பூர் என்ற ஊரில் அவன் வேலை செய்கிறான். கோல்ஹாப்பூர் எங்கே இருக்கிறது? மகாராஷ்ட்ரத்திற்கும் புனேய்க்கும் இடையில் இருக்கிறது அந்த ஊர். ரகு தங்கியிருக்கும் இடம் எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
அவனின் யாரோ ஒரு நண்பனின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். அவன் அப்போது அங்கு இல்லை. வேலை செய்யும் நிறுவனத்தின் அலுவல் காரணமாக பெங்களூருக்குப் போயிருக்கிறானாம். பெங்களூரிலிருந்து சிக்கமங்களூருக்குப் போவதாக அவன் சொல்லிவிட்டு போனானாம். அங்குதான் புதிய கம்பெனி ஆரம்பிக்கப்படப் போகிறதாம். அங்கு அவனுக்கு வேலை மாற்றமாம். புதிய கம்பெனி, புதிய வீடு, புதுப்பிக்கப்பட்ட சம்பளம், இரவு வந்தால்தான் தகவல் தெரியுமாம்.
எல்லாம் ஒரு நிச்சயமற்ற நிலையில் நடந்து கொண்டிருந்தது. மரணம் நிகழ்ந்து பல மணி நேரம் தாண்டிவிட்டது. இவ்வளவு நேரமாகியும் மகன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதைப் பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை.
மரணமடைந்து ஒருநாள் ஆகிவிட்டால் பிணம் நாற்றமெடுக்க ஆரம்பித்து விடும். ஈக்களும் எறும்புகளும் மொய்க்க தொடங்கிவிடும். சிறிது சிறிதாக நீர் வழிய ஆரம்பிக்கும். அதோடு தாங்க முடியாத அளவிற்கு கெட்ட வாடை வேறு. ‘சத்யா, நீ எப்பவும் சொல்வேயில்லே, மழைக் காலத்துல மரணமடைஞ்சிடக் கூடாதுன்னு. நீ எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சியோ, அதுதான் உனக்கு நடந்திருக்கு’ - அவர் மனதிற்குள் கூறினார்.
மழை நிற்பது மாதிரி தெரியவில்லை. மிகவும் பலமாக அது பெய்து கொண்டே இருந்தது. சபிக்கப்பட்ட சிங்க மாதம் முதல் தேதி, மோசமான நாள், மரணம் முதல் தேதி என்பதைப் பற்றியோ வருடப் பிறப்பு என்பதைப் பற்றியோ, எண்ணி பார்ப்பது இல்லையே! இரவானாலும் பகலானாலும் மழையாக இருந்தாலும் வெயிலாக இருந்தாலும் மரணத்திற்கு அவை எல்லாமே ஒன்றுதானே! தேவைப்படும் நேரத்திற்கு வேண்டிய நிமிடத்திற்கு மரணம் வந்து வாயில் கதவைத் தட்டும் என்பதே உண்மை.
உறவினர்களும் பக்கத்திலுள்ளவர்களும் அறிமுகமானவர்களும் ஒவ்வொருவராக பிணத்தைப் பார்ப்பதற்காக வந்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் ஒரு முறை பார்த்து விட்டு திரும்பிச் செல்கிறார்கள் – சடங்கு என்ற முறையில்.
ஒரு மனிதன் மரணத்தைத் தழுவும்போது மரணமடைந்த மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். அடுத்த மனிதனுக்கு மட்டுமே உள்ளே தாங்க முடியாத துக்கம் உண்டாகும். மற்ற பலருக்கும் மரணமடைந்து கிடப்பவன் வெறும் ஒரு காட்சிப் பொருள் மட்டுமே.
பிணத்தை சவப் பெட்டியில் வைக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பனிக்கட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் தற்காலிகமான சவப்பெட்டி. மகன் வரும்வரை பிணத்தை அதற்குள் வைத்திருக்க வேண்டும். அவன் வந்த பிறகுதான் சவ அடக்கம் நடத்த முடியும். பனிக்கட்டி வைக்கப்பட்டிருக்கும் சவப்பெட்டியான ‘மார்ச்சுவரி காஃபின்’ தேவாலயத்தில் இருக்கிறது. ஜான்பாஸ் கோக்காருக்குச் சொந்தமானது அது. கிறிஸ்தவர்களுக்கான சவப்பெட்டி அது. நாயர்களுக்கு ‘மார்ச்சுவரி பாக்ஸ்’ கிடையாது. ஏங்ஙண்டியூரில் ஏதோ ஒரு க்ளப்புக்காரர்களுக்குச் சொந்தமான ஒரு சவப் பெட்டி இருக்கிறது. அவர்களைப் போய் பார்க்க வேண்டும். வாடானப்பள்ளியிலும் த்ருத்தல்லூரிலும் பொக்காளாம்கரையிலும் திருமங்கலத்திலும் பள்ளிக் கடலிலும் ‘மார்ச்சுவரி பாக்ஸ்’ வாடகைக்கு கிடைக்கின்றன. அது மட்டும் கிடைத்துவிட்டால் போதாது. பனிக்கட்டிகள் கிடைக்கவேண்டும். பையில் நிறைக்கப்பட்ட ஐஸ் கட்டிகள், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவை பிணத்தைப் பத்திரமாக பாதுகாக்கும். பிணத்திற்கு எந்தவொரு கேடும் வராது. அனுபவம் உள்ளவர்கள் விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் இதயம் மிகவும் மரத்துப் போய் விட்டிருந்தது. தம்பியின் பிணத்தை அடக்கம் செய்வதற்கு அண்ணன் அதிக ஆர்வம் காட்டி கொள்ள வேண்டிய அவசியமில்லை. எதுவும் பேசாமல் வெறுமனே ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருந்தால் போதும்.
வெகு விரைவிலேயே மரணம் தன்னையும் வந்து அணைக்கத்தான் போகிறது. அது மிகவும் தூரத்தில் இல்லை - சீக்கிரமே நடக்கப் போகிற ஒன்று அது என்ற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். அவரின் இதயம் பலமுறை பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. பலமுறை ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டிருக்கிறது. எக்ஸ்ரே எடுக்கப்பட்டிருக்கிறது. எக்கோடெஸ்ட் நடத்தப்பட்டிருக்கிறது. டி.எம்.டி. செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவில் ஆன்ஜியோக்ராம் எடுக்க வேண்டும். பலூன் சர்ஜரி போதும். பைபாஸ் தேவையில்லை. இதய அறுவை சிகிச்சை இல்லாமலேயே விஞ்ஞான ரீதியான புதிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மருத்துவமனைகள் இருக்கின்றன. திறமை வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர் தன் தம்பியின் பிணத்திற்கருகில் உட்கார்ந்து தன்னுடைய மரணத்தைப் பற்றிய நினைவுகளில் தன்னையும் மீறி மூழ்கிப் போனார்.
அவசர நடவடிக்கைகள் சில எடுத்ததன் மூலம் சத்யனின் பிணம் பனிப் பெட்டிக்குள் எடுத்து வைக்கப்பட்டது. அவர் வெளியே இறங்கி பார்த்தார். அப்போதும் வெளியே கனமான மழை பெய்து கொண்டுதானிருந்தது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசிக் கொண்டிருந்தது. மரங்களின் தலைப் பகுதிகள் காற்றில் இங்குமங்குமாய் ஆடிக் கொண்டிருந்தன.
வெளியே இறங்கி நடப்பதற்கான சூழ்நிலை இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்ட அவர் மீண்டும் மரண வீட்டை நோக்கி நடந்தார் - மூச்சு அடைக்க.