
திருமண நாளன்று ஒரு பரிசு தருவதென்பது எப்போதும் வழக்கத்தில் இருக்கிற ஒன்று.
‘‘சீதா, உனக்கு என்ன வேணும் ? - திருமண நாள் நெருங்குகிற வேளையில் அவன் அவளைப் பார்த்து கேட்டான்.
‘‘புடவை வேணுமா ? மாலை வேணுமா ?
சென்ற ஆண்டு கல் பதித்த ஒரு ஜோடி வளையல்களை அவன் அவளுக்கு வாங்கித் தந்திருந்தான்.
இந்த வருடம் அவர்களுக்கு திருமணம் நடந்து ஐந்தாவது வருடம்.
இந்த வருடம் விலை மதிப்புள்ள ஒரு பொருளை அவளுக்கு வாங்கித் தர அவன் விரும்பினான். அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர வேண்டும் - அவளின் விருப்பம் எதுவோ அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான்.
அதனால் அவளுக்குத் தெரியாமலே அவன் ஒரு பெரிய தொகையைச் சேமித்து வைத்திருந்தான். பணத்தை வைத்து வாங்கக் கூடிய எந்தப் பொருளையும் இந்த முறை வாங்கிக் கொடுப்பதில் அவனுக்குப் பிரச்னையேயில்லை. இதை நினைத்து நினைத்து அவன் மனதிற்குள் சந்தோஷப்பட்டான்.
அக்டோபர் நான்காம் தேதிதான் அவர்களின் திருமண நாள். ஒரு மாதத்திற்கு முன்பே அவளிடம் பரிசு தரப் போகிற பொருளைப் பற்றி பேசி விட வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான்.
பெரிய விருப்பங்கள் எதுவும் இல்லாத பெண் அவள். இது வேண்டும் அது வேண்டும் என்று அவனை எப்போதும் அவள் கேட்க மாட்டாள்.
நகரத்தில் மயிலிறகுகளை ஞாபகப்படுத்துகிற புடவைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
‘‘வசந்த் அத்தான், எனக்கு அந்தப் புடவையை வாங்கித் தர முடியுமா ?’’
அவள் இப்படி கேட்க மாட்டாளா என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவள் கேட்கவில்லை. மயிலிறகுகளை வைத்து நெய்யப்பட்ட புடவையை அணிந்து ஃப்ரில் வைத்த வெள்ளை நிற படுக்கையில் படுத்திருக்கும் சீதாவைக் கனவு கண்டு கொண்டே அவன் நடந்து சென்றான்.
எதையும் விருப்பப்பட தெரியாமல் இருந்தாள் அவள். ஆனால்...
‘‘இந்த வருடம் எனக்கு பரிசா என்ன வாங்கித் தர போறீங்க -?’’ - அவனே ஆச்சரியப்படும் விதத்தில் அவள் கேட்டாள் : ‘‘நம்ம கல்யாண நாள் சீக்கிரம் வருதே !’’
அவள் கடைசியில் பொருட்களை விரும்ப தொடங்கியிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது அவனுக்கு அளவுக்கதிகமான ஆனந்தம் தோன்றியது.
‘‘என்ன வேணும்னாலும் கேளு, நான் வாங்கித் தர்றேன்.’’
‘‘என்ன வேணும்னாலும் ?’’
‘‘ஆமா...’’
‘‘ஒரு யானை முட்டையை எனக்கு வாங்கித் தர முடியுமா ?’’
வெளியே இரவு முல்லைகள் மலர்ந்து கொண்டிருந்தன. வாசலிலும் சுற்றுப் புறத்திலும் பரவியிருந்த நறுமணம் உள்ளேயும் வந்து கொண்டிருந்தது. தூரத்தில் எங்கோ செண்பக மலர்கள் பூத்திருந்தன. மோகினிமார்களின், மோகனமார்களின் இரவாக இருந்தது அது.
‘‘நான் சொன்னது காதுல விழுந்தது இல்ல ? என்ன, பதிலையே காணோம் ? நான் என்ன கேட்டாலும் வாங்கித் தருவேன்னு சொன்னீங்க ?’’
‘‘விளையாடாதே சீதா.’’
‘‘நான் ஒண்ணும் விளையாடல. திருமண நாள் வர்றதுக்கு முன்னாடி என் கையில யானை முட்டை இருக்கணும்.’’
அதற்குப் பிறகு அதைப் பற்றி அவர்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கண்ணுக்குத் தெரியாத தூரத்தை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தூங்கும்போது நீராவியைப் போல வெப்பம் நிறைந்த கனவுகள் அவனுக்கு வந்து கொண்டிருந்தன.
மறுநாள் படுக்கையை விட்டு எழுந்தபோது இரவில் நடந்த சம்பவத்தை கிட்டத்தட்ட அவன் மறந்து போயிருந்தான்.
‘‘நான் சொன்னது ஞாபகத்துல இருக்குல்ல -? யானை முட்டையைத் தவிர, இந்த வருடம் எனக்கு வேற எதுவுமே வேண்டாம்...’’
அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவள் அதை ஞாபகப்படுத்தினாள். அவன் சுய நினைவிற்குத் திரும்பி வந்தான். மனக்கண்களுக்கு முன்னால் ஒரு பயமுறுத்தும் கனவைப் போல, ஒரு அணு குண்டைப் போல பெரிய ஒரு யானை முட்டை.
சாயங்காலம் மீண்டும் ஒரு சம்பவம்.
‘‘தேவையில்லாம விளையாடத’’ - அவன் சொன்னான் : ‘‘இனி இருக்குறதே நான்கு வாரங்கள்தான். தட்டான்மார்கள் வேலையில சுறுசுறுப்பா இருக்குற நேரமிது.’’
போன வருடம் கல் பதித்த வளையல்களை முடித்துத் தர தட்டான் வாசுவிற்கு ஒரு மாதம் ஆனது.
‘‘யாரு தங்கத்துல நகை கேட்டாங்க -? எனக்கு என்ன வேணும்ன்றதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன். சொன்ன வாக்கை காப்பாத்துற ஆளா இருந்தா, நான் என்ன கேட்டேனோ அதைக் கொண்டு வந்து தாங்க...’’
மை போட்டு கருப்பாக்கிய கண்களில்மிடுக்கின் வெளிப்பாடு தெரிந்தது.
அவனுக்கு தர்மசங்கடமான நிலையாகிவிட்டது. தன்னுடைய குரலை வேண்டுமென்றே சாந்தமாக்கிக் கொண்டு அவன் கேட்டான் :
‘‘யானை முட்டை போடாதுன்ற உண்மை உனக்கு தெரியாதா, சீதா ?’’
‘‘முட்டைபோடுற ஒரு யானை இருக்கு.’’
‘‘எங்கே இருக்கு ?’’
ஆர்வத்துடன் அவன் கேட்டான். யானை ஒரு பால் கொடுக்கும் உயிர் என்பதையும் குட்டிகளை ஈன்றெடுப்பதுதான் அதன் வழக்கம் என்பதையும் அவன் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான்.
‘‘சொல்லு... எங்கே இருக்கு ?’’
அவன் திரும்பவும் கேட்டான். இலட்சம் போய் கொடுத்தாவது அவன் அந்த யானையின் முட்டையை வாங்கிக் கொண்டு வருவதற்கு தயாராக இருந்தான்.
‘கிழக்கு திசையில் இருக்குற ஏதோ ஒரு இடத்துல அது இருக்கு...’
அவளுக்குத் தெரிந்தது அது மட்டுமே.
கல் வைத்த வளையல் வேண்டுமென்று அவள் சொன்னபோது பணத்தை எடுத்துக் கொண்டு மறு நிமிடமே தட்டானைத் தேடி தான் ஓடியதை அவன் நினைத்துப் பார்த்தான். காஷ்மீர் சில்க்கால் ஆன புடவை வேண்டுமென்று சொன்னபோது நாற்பது மைல் தூரத்தில் இருந்த நகரத்திற்கு தான் ஓடிச் சென்றதை அவன் நினைத்துப் பார்த்தான்.
‘‘இந்த முறையும் நான் உன் விருப்பத்தை கட்டாயம் நிறைவேற்றுவேன். என்கிட்ட உயிர் இருக்குறதுக்குள்ளே உன் காலடியில் அந்த யானை முட்டையைக் கொண்டு வந்து வைப்பேன்...’’ - அவன் தன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.
அப்போது கொளுத்திய சிகரெட்டை வீசி கீழே எறிந்தான். லுங்கியை அவிழ்த்துப் போட்டு விட்டு வேஷ்டியை எடுத்து கட்டினான். பனியனுக்கு மேலே சட்டையை எடுத்து அணிந்தான்.
யானை முட்டையைத் தேடிச் செல்லும் நீண்ட பயணம் ஆரம்பமானது.
முதல் விசாரிப்பில் ஒரு விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. சீதா சொன்னது உண்மைதான். முட்டை இடும் யானை இருக்கவே செய்கிறது. அது எந்த ஊரில் என்பதுதான் தெரியவில்லை. அதைத்தான் அவன் கண்டுபிடிக்க வேண்டும்.
அவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்தான். இரண்டு வாரங்களுக்குள் தன் மனதில் நினைப்பதை நடத்திக் காட்ட வேண்டும். முட்டையுடன் திரும்பி வர வேண்டும். சீதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக எதையும் செய்ய தான் தயாராக இருக்க வேண்டும். மரணமே நேர்வதாக இருந்தால் கூட - என்றெல்லாம் அவன் மனதில் நினைத்தான்.
இரவு முழுவதும் அவன் நடந்து கொண்டேயிருந்தான். சிறிது கூட அவன் தன் கண்களை மூடவில்லை. உணவு உண்ணவோ நீர் அருந்தவோ கூட இல்லை.
‘‘முட்டை போடுற யானை எந்த ஊர்ல இருக்கு ?’’
வழியில் பார்த்தவர்களிடமெல்லாம் அவன் கேட்டான். அவர்கள் சொன்னார்கள் :
‘‘உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?’’
கிழக்கு திசையில் சூரியன் தன் முகத்தைக் காட்டியது. மிகவும் களைத்துப் போய் காணப்பட்ட அவன் பாதையோரத்திலிருந்த ஒரு மர நிழலில் போய் உட்கார்ந்தான். சிறிது நீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். அந்த இடத்தில் ஒரு கிணறோ குளமோ இருப்பது மாதிரி தெரியவில்லை.
மரத்தடியில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்த அவன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்பதை நிறுத்தினான். அப்படி கேட்பதால் எந்தவொரு பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
மாலை நேரம் ஆனபோது அவன் ஒரு நகரத்தையும் சில கிராமங்களையும் கடந்திருந்தான். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மலை அடிவாரத்தில் அவன் இப்போது நடந்து கொண்டிருந்தான். நிழல்விழுந்து கொண்டிருந்த ஒரு மாமரத்திற்கு அடியில் ஒரு ஆட்டு இடையன் உட்கார்ந்திருந்தான்.
இடையனின் புல்லாங்குழல் இசை நின்றது. அவன் எழுந்து புதிதாக வந்து நின்றிருந்த மனிதனின் அருகில் வந்தான்.
‘‘நீங்க யாரு ?’’ - இடையன் கேட்டான்.
‘‘என் பேரு வசந்தன். முட்டை போடுற யானையைத் தேடி நான் வந்திருக்கேன்.’’
அதற்கு மேல் அவனால் எதுவுமே பேச முடியவில்லை. உணவு உண்டு எவ்வளவோ நேரமாகியிருந்தது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் அவன் வயிற்றுக்குள் சென்றது அருவியொன்றிலிருந்து குடித்த தண்ணீர் மட்டுமே.
அவனுடைய கஷ்ட நிலையைப் பார்த்த இடையனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவன் ஒரு ஆட்டிடம் பால் கறந்தான்.
ஒரு பீங்கான் டம்ளர் நிறைய பாலைக் கொண்டு வந்து அவன் வசந்தனிடம் கொடுத்தான்.
பால் உள்ளே சென்றதும் உயிர் திரும்பி வந்ததைப் போல் உணர்ந்தான் வசந்தன்.
மீண்டும் தன்னுடைய பயணத்தைத் தொடர்வதற்காக அவன் மரத்திற்குக் கீழே எழுந்து நின்றான். அன்று இரவு தன்னுடைய குடிசையில் தங்கி ஓய்வெடுத்துப் போகும்படி சொன்ன இடையனின் வார்த்தைகளை நன்றியுடன் மறுத்தான் அவன்.
‘‘கிழக்கு நோக்கி நடந்தால் பொழுது புலர்ற நேரத்துல ‘க்ஷ’ என்ற கிராமத்தைப் போய்ச் சேர்வீங்க. அங்கே ‘ஸ’ன்ற ஒரு ஆறு இருக்கு’ - இடையன் சொன்னான் : ‘‘அந்த நதிக்கரையில ‘க’ன்ற முனிவர் இருக்காரு. அந்த முனிவரை நீங்க போய்ப் பாருங்க.
வசந்தன் நல்லவனான அந்த இடையனைக் கட்டிப் பிடித்துவிட்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான்.
கால்களுக்கு இழந்த பலம் மீண்டும் கிடைத்ததுபோல் இருந்தது. மனதில் மீண்டும் எதிர்பார்ப்புகள் குடிகொள்ள ஆரம்பித்தன. வானத்தில் நட்சத்திரங்களும் நிலவும் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. ‘க்ஷ’ என்ற கிராமத்தை நோக்கி அவன் வேகமாக நடந்தான்.
பொழுது புலர்வதற்கு முன்பு அவன் அந்த கிராமத்தை அடைந்தான். ‘ஸ’ என்ற நதியின் கரையில் ஒரு ஏலக்காடு இருந்தது. அங்குதான் ‘க’ என்ற முனிவர் இருந்தார்.
அங்கு அவன் போய்ச் சேரும்போது அவன் பயணத்தைத் தொடங்கி ஐந்து நாட்கள் ஆகியிருந்தன. ஊரும் வீடும் சீதாவும் எத்தனையோ மைல்களைத் தாண்டி தூரத்தில் இருந்தார்கள். ஆனால், சீதா சதா நேரமும் தன்னுடன் கூடவே இருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். அவள் எல்லா நேரமும் அவன் மனதில் யானை முட்டை என்ற ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.
நதிக்கரையில் ஏலத்தின் வாசனை எங்கும் பரவியிருந்தது. ஏலக்காட்டிலிருந்த பர்ணசாலைக்கு மேலே பஞ்சவர்ணக் கிளிகள் நிறைய உட்கார்ந்திருந்தன.
முனிவர் தியானத்திலிருந்து வருவதுவரை அவன் அவருக்காக வெளியில் காத்திருந்தான். ஒரு பஞ்சவர்ணக் கிளி பறந்து வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்தது. ஏலத்தின் வாசனையால் அவனக்கு பித்து பிடித்ததைப் போல் இருந்தது.
முனிவர் எழுந்து ஆஸ்ரமத்திற்கு வெளியில் வந்தார். ‘‘முட்டை இடுற யானையைத் தேடி வந்திருக்கே... அப்படித்தானே -?’’
முனிவர் புன்னகைத்தார். வசந்தன் வாய் திறக்கவில்லை. முனிவர் அவனின் மனதில் உள்ளதை முன்பே நன்கு அறிந்திருந்தார்.
‘‘எனக்கு உதவணும்’’ - அவன் முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான்: ‘‘என்னைக் காப்பாத்தணும்.’’
‘‘கிழக்கு திசையில இங்கேயிருந்து எண்பது மைல்கள் தூரத்துல ‘ஷ’ என்ற ஒரு நாடு இருக்கு. அங்கே இருக்குற அரசனோட அரண்மனையில ஒரு யானையைக் கட்டிப் போட்டு வச்சிருப்பாங்க. அதுதான் உலகத்திலேயே முட்டை போடுற ஒரே யானை...’’
அதைக் கேட்டு அவனுடைய மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.
முனிவரின் கால்களில் மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கிவிட்டு, அவன் கிழக்கு திசையை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
‘ஷ’ என்ற நாட்டின் அரசன் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான் ? தன் மீது அவனுக்கு இரக்கம் உண்டாகுமா ? இனி இருப்பதே ஒன்பது நாட்கள்தான். அதற்கு முன்பு முட்டை தன் கையில் வந்து சேருமா ?
இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளுடன் அவன் ‘ஷ’ என்ற நாட்டை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
நடந்து சென்ற பாதை மிகவும் மோசமானதாக இருந்தது. விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு, எங்கு பார்த்தாலும் மேடுகளும் மலைகளும். பகல் நேரத்தில் கூட சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு இருண்டு போய் காணப்படும் காடுகள். அந்த எண்பது மைல் தூரத்தைக் கடப்பதற்கு அவனுக்கு நான்கு நாட்கள் ஆயின.
ஐந்தாவது நாள் அவன் ‘ஷ’ என்ற நாட்டின் ஆரம்பத்தில் இருந்த கோபுரவாசலில் போய் நிற்கும்போது, அவனுக்குப் பின்னால் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.
திருமண நாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருக்கின்றன என்பதை மனதில் ஒருவித நடுக்கத்துடன் அவன் நினைத்துப் பார்த்தான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாத மனநிலையுடன் இருந்த அவன் பைத்தியம் பிடித்தவனைப் போல் கோபுர வாசல் கதவுகளை வேகமாக தட்டினான்.
மதிய நேரம் ஆனபோது ஒரு பணியாள் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றான்.
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசனைப் பார்த்தபோது அவனுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அரசனின் கீரிடத்தில் வைரக் கற்கள் மின்னிக் கொண்டிருந்தன. கால் பாதங்களில் பவளம் கொலித்தது. கழுததில் இரத்தின மாலைகள்.
அவன் அரசனுக்கு முன்னால் போய் நின்று தன் மனதில் உள்ள கவலையைச் சொன்னான். அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்ட அரசன் சொன்னான் :
‘‘முட்டை தர்றேன். ஆனால்...’’
‘‘நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க தயாரா இருக்கேன். முதல்ல முட்டையைத் தாங்க...’’
அரசன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து இங்குமங்குமாய் நடக்க ஆரம்பித்தான். இரண்டு பக்கங்களிலும் நின்றிருந்த சேவகர்களின் தலைகள் அரசன் நடந்து செல்லும்போது அடுத்தடுத்து குனிந்தன.
இரண்டு முறை நடந்த பிறகு திரும்பி வந்து மீண்டும் அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். அவனுடைய கண்கள் வசந்தனையே உற்றுப் பார்த்தன.
‘‘இரண்டு நிபந்தனைகளின் பேரில் நான் உனக்கு முட்டை தர தயாரா இருக்கேன்.’’
‘‘நீங்க என்ன நிபந்தனை சொன்னாலும் அதை ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்...’’
வெளியில் ஒரு யானையின் கழுத்து மணியோசையை வசந்தன் கேட்டான். பூமியில் முட்டை போடும் ஒரே யானையின் மணியோசை அது.
‘‘என் மகள் ராஜகுமாரியை நீ திருமணம் செய்யணும்.’’
‘‘ஆனால், நான் ஏற்கெனவே திருமணம் ஆனவனாச்சே !’’
அதை காதில் வாங்காததைப் போல் அரசன் சொன்னான் :
‘‘ராஜகுமாரிக்கு குஷ்டம் இருக்கு.’’
‘‘பிரபு...’’
‘‘நல்லா சிந்திச்சுப் பாரு...’’ - அரசன் சிம்மாசனத்தை விட்டு எழுந்தான். ‘‘சூரியன் மறையிறதுக்குள்ளே பதில் சொல்லணும்’’ - அவன் சொன்னான்.
சிம்மாசனத்திற்குப் பின்னாலிருந்த பட்டு திரைச் சீலைகளை விலக்கியவாறு அரசன் காணாமல் போனான். அமைச்சரும் படைத் தலைவனும் படை வீரர்களும் சேவகர்களும் மறைந்தார்கள். வசந்தன் இப்போது தனியே இருந்த சிம்மாசனத்திற்கு முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தான்.
அப்போது அவன் முன்னால் ஒரு கூனன் வந்து நின்றான்.
கூனன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய வீட்டிற்கு வசந்தனை அழைத்தான்.
அந்த வீட்டில் வைத்துத்தான் வசந்தன் ராஜகுமாரியைப் பற்றியும் யானையைப் பற்றியும் தெரிந்து கொண்டான்.
யானை வருடத்தில் ஒருமுறை மட்டுமே முட்டை போடும். இதுவரை அது பதினேழு முட்டைகள் போட்டிருக்கின்றன. அந்த முட்டைகளை ராஜகுமாரி ஒரு தங்கத்தால் ஆன பெட்டியில் பத்திரமாக வைத்திருக்கிறாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆணுக்கு முன்னால் மட்டுமே அவள் அந்த பெட்டியைத் திறப்பாளாம்.
கூனன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான். வசந்தன் அதை காதிலேயே வாங்கவில்லை. அவன் மனம் முழுக்க சீதாதான் நிறைந்திருந்தாள்.
அவளுக்கு தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். சீதாவின் விருப்பம் நிறைவேற வேண்டும். தான் செய்ய வேண்டிய முதல் வேலை அதுதான். யானை முட்டையைத் தேடித்தான் தான் பயணம் புறப்பட்டதே. அது இல்லாமல் சீதாவிடம் மீண்டும் திரும்பிச் செல்லவே முடியாது.
அதே நேரத்தில் அந்த முட்டைக்காக சீதாவை நிரந்தரமாக இழக்க முடியுமா ? இப்படி பலவிதப்பட்ட சிந்தனைகளும் ஆணியைப் போல் அவனுடைய மனதில் நுழைந்து அவனை பாடாய்படுத்தின. ‘‘என் சீதா...’’ அவன் மனதிற்குள் சொன்னான்.
கூனன் இப்போது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். வெயிலின் கடுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருவதையும் சூரியன் மேற்கு திசை நோக்கி நகர்வதையும் வசந்தன் மூச்சடைக்க பார்த்துக் கொண்டிருந்தான். அசோக மரங்களின் நிழல்கள் நீண்டு கொண்டிருந்தன.
சூரியன் என்ற பெரிய சிலந்தி சிறிது சிறிதாக நகர்ந்து வானத்தின் விளிம்பை அடைந்தபோது, ஒரு படைவீரன் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றான். அவன் வசந்தனை சிம்மாசனத்திற்கு முன்னால் வரும்படி அழைத்தான்.
‘‘நீ என்ன தீர்மானிச்சே ?’’
அரசன் கேட்டான். அவன் அரசனுக்கு முன்னால் தலைகுனிந்து நின்றான். அவனின் மனக் கண்கள் திறந்திருந்தன. தென்னை மரங்களும், குத்து விளக்குகளும் அநத மனக்கண்ணில் தோன்றின. நிறைய முல்லைப் பூக்களைச் சூடிய சீதாவின் தலையில் அரிசி இருந்தது. கழுத்தில் அவன் அணிவித்த தங்கத் தாலி.
‘‘சொல்லு...’’
அரசனின் குரல் உயர்ந்தது.
‘‘நீங்க சொன்ன நிபந்தனையை நான் ஏத்துக்கறேன்.’’
நம்பிக்கை வராததைப் போல அரசன் அவனுடைய முகத்தையே பார்த்தான்.
அப்போது சிம்மாசனத்திற்குப் பின்னால் பட்டு திரைச்சீலைகள் அசைந்தன. பணியாட்கள் ஒரு பெரிய தங்கப் பெட்டியைச் சுமந்து கொண்டு வந்தார்கள். பெட்டிக்குப் பின்னால் பட்டாடைகளும் பொன் நகைகளும் அணிந்த ராஜகுமாரி வந்தாள். அவளுடைய மூக்கின் ஒரு பக்கம் சப்பிப் போயிருந்தது. இரு கன்னங்களிலும் பரவியிருந்த புண்கள்...
அவள் தங்கப் பெட்டியைத் திறந்தாள்.
பஸ்ஸை விட்டு இறங்கிய வசந்தன் தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தான். வழியில் பார்த்த யாருக்கும் அவனைஅடையாளம் தெரியவில்லை. அவன் அணிந்திருந்த ஆடைகள் அழுக்காகிப் போய் நாறின. முகத்தில் காடென முடி வளர்ந்திருந்தது. கண்களில் குழி விழுந்திருந்தது.
அவன் தோளில் ஒரு பெரிய பை தொங்கிக் கொண்டிருந்தது.
சீதா உறங்கிக் கொண்டிருந்தாள். நாளை அவர்களின் ஐந்தாவது திருமண நாள். அதன் நினைவு காரணமாக இருக்கலாம் - அவளின் உதடுகளில் புன்னகை முழுமையாக பரவி விட்டிருந்தது.
அவன் அவளுக்கருகில் அமைதியாக நின்றான். குனிந்து அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். அவளின் கன்னங்களை மெதுவாக தன் விரல்களால் தடவினான்.
கடைசியில் பையைத் திறந்து உள்ளே இருந்த பொருளை எடுத்து அவளுக்கு அருகில் வைத்தான். தூக்கத்தில் தன்னுடைய குழந்தையைப் போல அவள் முட்டையை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
ஒரு நிமிடம் அவள் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெதுவாக வெளியே நடந்தான்.
பொழுது புலர்ந்திருக்கும் பாதை வழியே அவன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். ‘ஷ’ என்ற நாட்டின் ராஜகுமாரி அவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.