Logo

தாமரைத் தொப்பி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6584
thamarai thoppi

ல வருடங்களுக்கு முன்பு மன்னன் ஒருவன் இருந்தான். மன்னனுக்கு ஒரு மகாராணி இருந்தாள். அவளைத் திருமணம் செய்தவுடன் மன்னன் தன்னுடைய மற்ற வைப்பாட்டிகளையெல்லாம் வேண்டாமென்று உதறிவிட்டான். ராணி மீது அவனுக்கு அந்த அளவிற்கு அதிகக் காதல் இருந்தது. அதற்குக் காரணம் இருந்தது. அவள் பிறப்பிலேயே ராணி இல்லை. மன்னன் ஒருநாள் மாலை நேர சவாரி போக வேண்டுமென்று குதிரைமீது ஏறிப் பயணித்தான்.

மாலை நேரத்தில் - மஞ்சள் நிறக் கதிர்கள் மறையப்போகும் நேரத்தில் மன்னன் ஒரு சிறு கிராமத்தை அடைந்தான். மன்னனும் குதிரையும் மிகவும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் குதிரையை விட்டு இறங்கி சுற்றிலும் பார்த்தான். பரந்து கிடக்கும் நெல் வயல்கள் மட்டும் தெரிந்தன. அவன் தன் குதிரையை ஒரு மரத்தில் கட்டிவைத்து விட்டு தான் மட்டும் தனியே கிராமத்திற்குள் நுழைந்தான். அங்கு ஒரு இளம்பெண் கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் அவன் முதன்முதலாகப் பார்த்தான்.

“அழகியே, எனக்கு ரொம்பவும் தாகமா இருக்கு. கொஞ்சம் நீர் தரமுடியுமா?” - மன்னன் கேட்டான்.

“எவ்வளவு வேணும்னாலும் தரலாமே!”- அவள் தொடர்ந்து சொன்னாள்: “பிறகு... என் பேரு அழகி ஒண்ணும் இல்ல. என் பேரு தாமரை.”

“தாமரை, கொஞ்சம் தண்ணி தா.”

மன்னன் கைகளைக் குவித்தவாறு அவளுக்கு முன்னால் குனிந்து நின்றான். தாமரை ஸ்படிகத்தைப் போல தெளிவாக இருந்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினாள். அதோடு சேர்ந்து தன்னுடைய நிலவைப் போன்ற புன்சிரிப்பையும் மன்னனின் முகத்தின்மீது சிந்த விட்டதை அந்த இளம்பெண் உணரவில்லை.

வயிற்றின் தாகம் தீர்ந்தவுடன் மன்னனின் இதயத்தின் தாகம் ஆரம்பமானது.

“தாமரை, நீ யாரு?” - மன்னன் கேட்டான்.

“நான் இந்த கிராமத்தில் விவசாயியாக இருக்கும் நீலனோட கடைசி மகள்!”

அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பது என்று மன்னனுக்குத் தெரியவில்லை. அவன் தயங்கியவாறு அங்கு நின்றிருந்தான்.

“ஏன் தயங்குறீங்க?”

“தாமரை, நான் யாருன்னு தெரிஞ்சுக்கணும்ன்ற ஆர்வம் உனக்கு இல்லையா?”

“சொன்னா கேட்டுக்குறேன்!”

“நான் கொஞ்சம் தூரத்துல இருந்து வர்றேன். என் பேரு மன்னன்.”

“நீங்க மன்னரா?”- அவளுடைய நீள விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. அந்த விரிந்த விழிகளை ரசித்தவாறு மன்னன் பதில் சொன்னான்: “என்னை மக்கள் மன்னன்னுதான் கூப்பிடுவாங்க.”

“ஓ... விஷயம் அவ்வளவுதானா? எங்க மாமாவோட மகன் ஒருத்தன் இருக்கான். அவன் பேரு சக்கரவர்த்தி. ஆனா, அரை காசுக்குக்கூட அவன் லாயக்கு இல்ல.”

அவள் அந்த நிலவு ஒளியைப் போன்ற புன்னகையை மீண்டுமொருமுறை சிந்தினாள். அது மன்னனின் மனதை என்னவோ செய்தது. அவன் கேட்டான்: “தாமரை, நான் ஒண்ணு கேட்கட்டுமா?”

“என்ன? உங்களுக்குச் சாப்பிடுறதுக்கு ஏதாவது வேணுமா? நான் உடனே கொண்டு வர்றேன்.”

“வேண்டாம். என் இதயத்துலதான் தாகம் இருக்கு.”

“அப்படின்னா பசுவோட பாலைக் கொண்டு வர்றேன்.”

“அது தாகத்தை அதிகப்படுத்தும்...”

“அடக் கடவுள்களே! அப்படின்னா நான் என்ன செய்றது? தயிரையும் சர்க்கரையையும் கலந்து தர்றேன்... வாங்க...”

“அது எதுவும் எனக்கு வேண்டாம்.”

“பிறகு?” - அவள் வேகமாகக் கண் இமைகளை வெட்டியவாறு மன்னனின் முகத்தை ஒரு குழந்தையைப் போல பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“அழகி...”

“என் பேரு தாமரை!”

“தாமரை, நீ என் கூட வர்றியா?”

“எங்கே?”

“என் வீட்டுக்கு என் கூட வாழறதுக்கு...”

அடுத்த நிமிடம் தாமரையின் முகம் மாறியது. அவளுடைய விழிகளில் ஒன்றிரண்டு இடி மின்னல்கள் தோன்றி மறைந்தன.

“டேய், பிணமே!”

அவ்வளவுதான்- மன்னன் அதிர்ச்சியில் உறைந்து போனான். திறந்த வெளியில் அவன் இப்படியொரு பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“டேய், பன்னி! உனக்கு வெட்கமா இல்லையா? நான் யாருன்னு நீ நினைச்சே? காட்டுப் பன்னி! உன் தலையை நான் அடிச்சுப் பிளக்கப் போறேன். இதுதான் உன் தாகம். அப்படித்தானே? நீ ஒரு மனிதன்னு நினைச்சுத்தானே நான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்! டேய் கரடி, என் அப்பாவுக்குத் தெரிஞ்சா உன் தலை உன்கிட்ட இருக்காது. ம்... ஓடு. பின்னாடி திரும்பிப் பார்க்காதே.”

அதற்குப் பிறகும் அவள் விடாமல் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

“தாமரை, என்னை மன்னிச்சிடு. நான்...”

“கழுதை... ஒழுங்கா இங்கேயிருந்து போ. இல்லாட்டி நான் என் அப்பாவைக் கூப்பிடுவேன்.”

“நான் சொல்றதும் அதுதான்.”

“எதுக்குடா பிணமே?”

அவள் திட்டியது மன்னனை மேலும் உற்சாகப்படுத்தியது மாதிரி இருந்தது. அவனுடைய மனதின் அடித்தளம் வரை அவள் பேசியது என்னவோ செய்தது. அவன் அந்தக் கணமே சொன்னான்:

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.”

“அப்படியா?”- தாமரை ஆச்சரியத்துடன் கேட்டாள்: “என் அப்பாகிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிட்டு, என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியா?”

“ம்...” - மன்னன் உறுதியான குரலில் சொன்னான்.

அதைக்கேட்டு தாமரை தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“தாமரை, என் செல்லமே... நீ எதுக்கு அழணும்?”- மன்னன் அவளைத் தேற்ற முற்பட்டான்.

“நான் எப்படியெல்லாம் உங்களைத் திட்டினேன்! இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா உங்களைத் திட்டியிருப்பேனா? என் மேல கடுகு அளவு பிரியம் இருந்திருந்தா, நான் இப்படியெல்லாம் உங்களைத் திட்டும்படி என்னை விட்டிருப்பீங்களா?”

“என் செல்லமே! பரவாயில்ல... விடு... நீ என்னைத் திட்டினதை நான் ரொம்பவும் ரசிச்சேன். நாம் உன் அப்பாகிட்ட போவோம்.”

“அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற விஷயத்துல நீங்க உறுதியா இருக்கீங்க?”- அவள் கேட்டாள்.

“ஆமா...”

“என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

“நீ என்னோட உயிர்.”

“நான் சொல்றதைக் கேட்பீங்களா?”

“கட்டாயம்...”

“கட்டாயமா?”

“கட்டாயம்...”

“இனி வார்த்தை மாறக்கூடாது...”

“இல்ல...”

அவள் கண்ணீரைத் துடைத்து, புன்னகைத்தவாறு- அந்த முழு நிலவைப் போன்ற சிரிப்பைச் சிந்தியவாறு - குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தாள். மன்னன் அவளைப் பின்பற்றி நடந்தான்.

தாமரையின் தந்தையிடம் சென்று எல்லா விஷயங்களையும் சொன்னான். கிழவனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டானது. தன் மகளை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்ட அவன் மன்னனை வணங்கினான். அவர்கள் மறுநாள் அரண்மனைக்குச் சென்றார்கள்.

இப்படித்தான் தாமரை மகாராணியாக ஆனாள். மன்னனைப் பொறுத்தவரையில் அவள், ஆசைப்படுகிற அளவிற்குச் சக்தியைத் தருகின்ற ஒரு போதைப் பொருளாக இருந்தாள்.


புதிய அணிகலன்களின் ஜொலிப்பு, புதிய வாசனைப் பொருட்களின் அலைகள், புதிய ஆடைகளின் பளபளப்பு- இவை எதுவுமே தாமரையைக் கவரவில்லை. மகாராணியாக ஆகும்போது இவை எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

“செல்லமே!”

“என் பேரு தாமரைன்றதை எவ்வளவு சீக்கிரமா நீங்க மறந்துடுறீங்க?”

“செல்லமே! என்னை நீ திட்டு”- அந்தப் பழைய சுவாரசியமான விஷயத்தை நினைத்துக் கொண்டு மன்னன் சொன்னான்.

அவள் வெட்கத்துடன் புன்னகைத்தவாறு தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். மன்னன் திரும்பத் திரும்ப அவளிடம் கேட்டான். அவளை முத்தங்கள் தந்து ஒரு வழி பண்ணினான். எனினும் அவள் அசைவதாகக் காணோம்.

“தாமரை, என்னைத் திட்டு...”

“நீங்க என் வாழ்க்கையின் கடவுளாச்சே!”

மன்னனுக்கு அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிவிட்டது. இத்தகைய வார்த்தைகளை அவன் ஆயிரம் வைப்பாட்டிகளிடம் கேட்டிருக்கிறான். அதைச் சொல்வதற்கு தாமரை தேவையில்லை. எனினும், திட்டுதல் என்ற இனிய சேமிப்பை அந்தச் சந்தர்ப்பத்தில் விட்டுவிட மன்னன் தயாரில்லை. அவன் மந்திர மண்டபத்தை நோக்கி எழுந்து போனான். தாமரையோ தன்னுடைய கிராமத்தைப் பற்றியும் இப்போதைய அரச வாழ்க்கையைப் பற்றியும் அவ்வப்போது மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

நாட்கள் கடந்தன. மன்னன் பல சமயங்களில் தாமரையிடம் கெஞ்சினான். எனினும், அந்த மகாராணி, “நீங்க என் உயிர் நாயகன்” என்று சொல்லிவிட்டு மௌனமாக இருந்துவிடுவாள். மன்னனுக்கு அதைக்கேட்டு என்னவோ போலாகிவிடும். இப்படி மன்னனும் மகாராணியும் மனதில் கவலையுடன் அரண்மனையின் ஏழாவது மாடியின் அறையில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தெரு மக்கள் கூட்டம் நிறைந்த ஒன்றாக இருந்தது. பலவிதப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் பலவித குணங்களைக் கொண்ட மனிதர்கள், பலவிதப்பட்ட ஆடைகள், பலவகைப்பட்ட சம்பவங்கள் பலவகைப்பட்ட பாராட்டுகள், பலவிதப்பட்ட பதில் பாராட்டுகள்! மகாராணி தாமரைக்கு உற்சாகம் உண்டாகிவிட்டது. அவள் கண்களை இமைக்காமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். தெருவில் இருந்த மனிதர்கள் கூட்டத்தில் ஒரு மனிதன் ஒரு ஜரிகைத் தொப்பியை அணிந்து போய்க் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது அந்தத் தொப்பி. பார்ப்பதற்கு நெருப்புக் கொழுந்துகளால் சூழப்பட்ட தலையுடன் அந்த மனிதன் போவதைப் போல் இருந்தது.

“பாருங்க... பாருங்க... அங்கே பாருங்க” - தாமரை மன்னனிடம் சொன்னாள். மன்னன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

“பாருங்க, மன்னரே!”

அப்போதும் மன்னன் அமைதியாகவே இருந்தான்.

“என் உயிர் கடவுளே, பாருங்க.”

மன்னன் அசையவில்லை.

தாமரைக்குக் கோபம் வந்தது. அந்தக் கோபத்தால் உண்டான மின்னல் வெட்டுகள் அவளுடைய கண்களில் வெளிப்பட்டன. அவள் சொன்னாள்:

“கிழட்டுப் பிணமே, அந்தத் தொப்பியைப் பாரு.”

மன்னன் சுய உணர்வுக்கு வந்தான்: “தாமரை...”

அப்போதும் அவளுடைய கோபம் தணியவில்லை. அந்த வாயிலிருந்து வார்த்தைகள் படுவேகமாக வெளியே வந்து கொண்டிருந்தன.

“காட்டுப் பன்னி! நான் என்ன சொல்வேனோ, அதைச் செய்றேன்னு சொன்னே. ஆனா, இப்போ... பிணம்!”

“என்ன வேணும், தாமரை?”

“அங்கே பாரு”- தன்னுடைய மெல்லிய விரல்களால் சுட்டிக் காட்டியவாறு அவள் மன்னனிடம் சொன்னாள்: “அந்த ஜரிகைத் தொப்பியைத் தலையில் வச்சு போய்க்கிட்டு இருக்குற மனிதனைப் பாரு. என்ன அழகா இருக்கு. பார்க்கறதுக்கு!”

“சரிதான், செல்லமே!”

“செல்லமே இல்ல. என் பேரு தாமரை!”

“தாமரை என்ன வேணும்?”

“எனக்கு அந்தத் தொப்பி வேணும். சீக்கிரம்... சீக்கிரம்... ம்... சீக்கிரமா போய் கொண்டு வா!”

மன்னன் உடனே அமைச்சருக்கு ஆள் அனுப்பிவிட்டு உடனடியாகத் தொப்பியைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தான்.

“அந்தத் தொப்பிதான் வேணும், தெரியுதா அமைச்சரே?” -தாமரை ஞாபகப்படுத்தினாள்.

தூதர்கள் நான்கு திசைகளுக்கும் பறந்தார்கள். அரண்மனையில் கூட்டம் கூட ஆரம்பித்தது. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று பலருக்கும் புரியவில்லை. பலரும் பலவிதத்திலும் சிந்திக்க ஆரம்பித்தார்கள். மன்னன் அருகிலுள்ள நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறான் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன என்றும் போர் வீரர்கள் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.

மாலை நேரம் வந்ததும் இருந்த ஆரவாரமெல்லாம் அடங்கிவிட்டது. தொப்பி கிடைத்துவிட்டது. அமைச்சர் ஒரு பட்டு சால்வையில் மூடி அந்தத் தொப்பியை மன்னருக்குக் கிடைக்கும்படி அனுப்பி வைத்தான். மன்னன் அந்தத் தொப்பியுடன் அந்தப்புரத்திற்கு ஓடினான்.

“தாமரை, தொப்பி கிடைச்சிடுச்சு...”

அவள் விரிந்த கண்களுடன் அந்தப் பட்டு சால்வையைப் பிரித்து தூரத்தில் எறிந்தாள். அந்த ஜரிகை தொப்பி! ஜன்னல் வழியாக வந்த மாலை நேர வெயில் பட்டு தொப்பி ஜொலித்தது. அவள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஜரிகையில் ஆன அந்தத் தொப்பியின் உட்பகுதியில் வியர்வையுடன் கலந்த அழுக்கு சற்று காணப்பட்டது. எனினும், தாமரை அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. எப்படி ஜொலிக்கிறது தொப்பி என்பதை மட்டும்தான் அவள் பார்த்தாள்.

“உண்மையிலேயே நீங்க என் உயிருக்குயிரான நாயகன்தான்”- அவள் உற்சாகம் கரைபுரண்டோட மன்னனைப் பார்த்தாள். மன்னனின் முகம் மிகவும் வாடிப்போய் காணப்பட்டது.

“ஏன் உங்க முகம் திடீர்னு இப்படி வாடிடுச்சு?”

“நான் உனக்காக இவ்வளவு பண்ணியும், என் தாமரையே, உன்னால என்னைக் காதலிக்க முடியலையே!”

“என்ன நீங்க பேசுறீங்க! நீங்க என் உயிருக்குயிரான நாயகன்”

“நிறுத்து!”- மன்னன் மனக் கவலையுடன் சொன்னான்: “உயிருக்குயிரான நாயகன்- மண்ணாங்கட்டி!”

அதைக்கேட்டு தாமரை பதைபதைப்புக்குள்ளாகி விட்டாள். “மன்னரே, ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு?”

“நான் உன்னோட உயிர் நாயகன் இல்ல. காட்டுப் பன்னி. புரியுதா?”

தாமரை தரையைப் பார்த்துப் புன்னகைத்தாள். நிலவைப் போன்ற புன்சிரிப்பு அது! அந்தப் புன்னகையில் மன்னனின் கோபம் கரைந்து காணாமல் போனது. மீண்டும் விளையாட்டும் சிரிப்பும் ஆரம்பமானது. தாமரை அந்தத் தொப்பியின் பெருமைகளைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாள். கடைசயில் அவள் ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்.

“நான் ஒண்ணு கேட்கட்டுமா?”

“கேளு, செல்லமே!”

“செல்லமேன்னுதானே என்னைக் கூப்பிட்டீங்க?” அவள் தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டாள்.

“தாமரை, என்ன வேணும்?”

அவளுடைய முகத்தில் அந்த நிலவு தோன்றியது.

“நம்ம மக்கள் எல்லாரும் இந்த மாதிரி தொப்பி அணிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்?”

“மக்கள் இந்த மாதிரி தொப்பியை அணியிறதா?”

“ஆமா... இதுல ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு?”


“அது ரொம்பவும் கஷ்டமான விஷயம்!”

“என்ன கஷ்டம்? உங்களுக்கு அதுனால ஒரு மதிப்பு கிடைக்கும்ல?”

“பைத்தியம் மாதிரி ஏதாவது பேசாதே, தாமரை நடைமுறையில அது சாத்தியமே இல்ல.”

“இவ்வளவுதானா? நான் என்ன சொன்னாலும் கேக்குறதா எனக்கு நீங்க சத்தியம் பண்ணித் தந்தீங்க... ஆனா, இப்போ...”

“தாமரை, இது மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். வேறு எது வேணும்னாலும் கேளு...”

தாமரையின் கண்களில் மீண்டும் மின்னல் வெட்டுகள் ஆர்ப்பாட்டம் பண்ணின. “சொன்ன வார்த்தைக்கு இந்த அளவுக்குக் கூட மதிப்பு இல்லாமப் போச்சில்ல? மன்னராம் மன்னர்! எங்க கிராமத்துல இருக்குற அந்தப் பிச்சைக்காரனான சக்கரவர்த்தி எவ்வளவோ பரவாயில்ல. அவன் நான் என்ன சொன்னாலும் செய்யிறதா சொல்லிட்டு, சொன்ன மாதிரியே நடப்பான். எனக்காக மாங்காய் பறிக்கிறதுக்காக வானத்தையே முட்டிக்கிட்டு இருக்குற உயரமான மரத்துல ஏறினான். எறும்புகள் கடிச்சப்போ கீழே உருண்டு விழுந்து இடது கால் ஒடிஞ்சப்போகூட என்னைப் பார்த்து, ‘தாமரை, நான் இந்தக் காயத்துக்குக் கட்டுப் போட்ட பிறகு திரும்பவும் மாமரத்துல ஏறி உனக்கு மாங்காய் பறிச்சுத் தருவேன்’னு சொன்னான். அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா?”

“தாமரை, நீ யார்கிட்ட இப்போ பேசுறேன்னு தெரியுதா?”

“ம்... தெரியுது. நீங்க ஒரு சாதாரண மன்னர். எங்க கிராமத்தோட சக்கரவர்த்தி ஒண்ணுமில்ல...”

“தாமரை...!” -மன்னனுக்குக் கோபம் வந்தது.

“பிணமே, சத்தியம் பண்ணித் தந்துட்டு இப்போ கோபம் வேறயா? காட்டுப் பன்னி! உன்னை எனக்குத் தெரியாதா? கரடிக்குட்டி!”- அவள் இப்படித் தொடர்ந்து திட்டியவுடன், மன்னனுக்குத் திருப்தியாகிவிட்டது. அவனுடைய முகத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது தெரிந்தது. அவன் தாமரையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னான். “செல்லமே, நான் உத்தரவு போடுறேன். நம்ம மக்கள் ஒரு ஆள்கூட விடாம எல்லாரும் இந்தத் தொப்பியை அணிஞ்சு நடப்பாங்க. போதுமா?”

அவனுடைய கைகளில் சாய்ந்தவாறு அவள் கேட்டாள்: “எப்போ இருந்து மக்கள் தொப்பி அணிய ஆரம்பிப்பாங்க?”

“எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா!”

“நாளையில இருந்து... சரியா?”

“நாளைக்குத் தொப்பி தைச்சு தயாரா இருக்காது. நாளை மறுநாள்ல இருந்து. என்ன, சரிதானா?”

“நீங்க சொன்னதை எப்பவாவது நான் கேட்காம இருந்திருக்கேனா? நாளை மறுநாள் போதும்.”

மன்னன் அவளுடைய மார்பிலிருந்து விலகி வாசல் கதவுக்கு அருகில் சென்றான். உடனே திரும்பி வந்து சொன்னான்: “மகாராணி!”

“தாமரைன்னு கூப்பிடுங்க.”

“தாமரை, இந்தத் தொப்பிக்கு நான் உன் பெயரை வைக்க விரும்புறேன்.”

அவள் புன்னகை செய்து அடக்கமாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாள். பிறகு கிளி கொஞ்சும் குரலில் கேட்டாள்: “என்ன இது?”

“மகாராணி தொப்பி...”

“ச்சே... அவமானம்! எனக்குன்னு ஒரு பேர் இல்லையா என்ன?”

“ஓஹோ...” - அப்போதுதான் மன்னனுக்கு அந்த விஷயமே ஞாபகத்துக்கு வந்தது: “சரி... தாமரைத் தொப்பின்னு பேர் வச்சிடலாம்.”

அந்த அறை முழுவதும் அவளுடைய புன்னகையால் நிறைந்தது.

மன்னன் அமைச்சருக்கு விஷயத்தைச் சொன்னான். அமைச்சர் படைத்தளபதிக்குச் சொன்னான். படைத்தளபதி அரண்மனை அதிகாரியிடம் சொன்னான். இப்படி தொப்பி விஷயம் அரண்மனை தையல்காரனிடம் போய்ச் சேர்ந்தது.

“நாளைக்கு இது முடியுமா?”- அவன் சந்தேகத்துடன் கேட்டான்.

“முடியணும்... இது மன்னரோட ஆணை; பெரியவரே!” - அரண்மனை அதிகாரி கோபக்குரலில் சொன்னான்: “பிறகு- இந்தத் தொப்பி மாதிரியே இருக்கணும் எல்லாத் தொப்பிகளும். கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லாம பார்த்துக்கணும். இந்த நாட்டுல இருக்குற குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாருக்கும் தொப்பி இருக்கணும். புரியுதா?”

“இதுக்குக் கொஞ்சம் வேலைக்காரர்கள் வேணும்.”

“எவ்வளவு வேணும்னாலும் வச்சுக்கோ!”

நாட்டிலுள்ள எல்லா தையல்காரர்களும் வரவழைக்கப்பட்டார்கள். துணி கிழிக்கப்பட்டது. ஜரிகை சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு மணி நேரம் ஆகும்போதும் அரண்மனை அதிகாரி போய்க் கேட்டான்: “என்ன தையல்காரரே, எவ்வளவு தொப்பிகள் தயாரா இருக்கு?” அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் ஆனவுடன் மீண்டும் அவன் சென்று கேட்டான்: “இப்போ எவ்வளவு தொப்பிகள் தயாரா இருக்கு?” தொப்பிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தன.

இதற்கிடையில் அமைச்சர் பல ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான். தாமரைத் தொப்பியின் பெருமைகளைப் பற்றி நாடு முழுவதும் பிரச்சாரம் பண்ண ஏற்பாடுகள் செய்தான். ஊர் கூட்டங்களிலும் கோவில் பகுதிகளிலும் மக்கள் பெரும் அளவில் வரவழைக்கப்பட்டு, மன்னன் அறிவித்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. யானை உயரத்திற்குக் குவிந்து கிடந்த தொப்பிகளைத் தலையில் வைத்துக் கொண்டு நான்கைந்து பேர் ஒவ்வொரு தெருவாக நடந்தார்கள். அந்த வாரம் முழுவதும் தொப்பி வாரமாகக் கொண்டாட உத்தரவிடப்பட்டது.

அப்போது மக்களுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது. எதற்காக மன்னர் தங்களை இப்படி தொப்பி அணியும்படி செய்கிறார் என்பதே அது.

“நம்ம எல்லாரையும் புதிய ஏதாவது மதத்துல சேர்க்க முயல்கிறாரோ என்னவோ?” - ஒரு பால் விற்கும் பெண் சொன்னாள்.

“அதுனால என்ன? மன்னர் அணியிற தொப்பி நமக்கும் பொருத்தமாத்தான் இருக்கும்” - அவளுடைய கணவன் சொன்னான்.

“அய்யோ... மதம் மாற என்னால முடியாது”- அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்தாள்.

“பேசாம இரு... தலையில தொப்பி இருக்கணுமான்றது இப்போ முக்கியமில்ல. உடல்ல தலை இருக்கணுமான்றதுதான் முக்கியம்” - கணவன் அவளைப் பார்த்து சொன்னான். இப்படிப் பலவிதப்பட்ட குழப்பங்களும் பரபரப்பும் நிறைந்திருக்க மக்கள் தங்களுக்குள் பலவகைகளில் முணுமுணுத்துக் கொண்டார்கள். எனினும், தெருவில் கால் வைக்கும்போது அவர்கள் சிரித்து சகஜமாகத் தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.

ஆனால், தொப்பி கையில் வந்தவுடன் சிலர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். குறிப்பாக- வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் தொப்பியை அணிந்திருந்தார்கள். படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களின் தலையிலிருந்து அவர்களுடைய மனைவிமார்கள் அதை மெதுவாகக் கழற்றி எடுத்து வைத்தார்கள். தொடர்ந்து அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பாமல் அந்த வழுக்கைத் தலையில் அவர்கள் முத்தமிடவும் செய்தார்கள். அதே நேரத்தில் பொதுமக்களுக்குச் சிறிய சிறிய குழப்பங்கள் இல்லாமலில்லை. எல்லாத் தொப்பிகளும் ஒரே அளவில் இருந்தன. சிறிய தலையைக் கொண்டவர்களுக்குப் பால் பாத்திரத்தை மூடியதுபோல தொப்பி முகம் முழுவதையும் மூடி தோள் வரை அது இருந்தது. பெரிய தலையை உடையவர்களுக்கு ஒரு ஜரிகையால் ஆன மலரைச் சூடியதைப்போல தலை மீது அது இருந்தது. இரண்டு வகைப்பட்ட மனிதர்களுக்கும் அந்தத் தொப்பி உகந்ததாக இல்லை.


தலை சிறியதாக இருந்தவர்களுக்கு கண்களால் எதையும் பார்க்க முடியவில்லை. தலை பெரியதாக இருந்தவர்களுக்கு எங்கே தொப்பி தலையிலிருந்து கீழே விழுந்து விடுமோ என்ற சந்தேகம். வண்டிக்காரர்களுக்கும் தொப்பி அணிவது என்பது பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்தது. ஒரு கையால் புருவத்திற்கு மேலே தொப்பியை உயர்த்தியோ அல்லது தலையில் அழுத்தியோ அவர்கள் நிலைமையைச் சரி பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கையால் அவர்கள் குதிரையை விரட்ட வேண்டும். பெண்களின் தலையின் எடை இந்தத் தொப்பிக்குள் சிக்கிக் கொண்டு படாதபாடுபட்டது. தொப்பிக்குள் தலை இருந்ததால் பலவிதப்பட்ட பிரச்சினைகளும் உண்டாயின. குழந்தைகள் தொப்பி தங்களின் இடுப்பு வரையில் கீழே இறங்காமல் இருக்க, பல பொருட்களை உள்ளே திணித்து வைத்தார்கள். கண்கள் தெரியாத நாயகியும் தலையைத் தூக்க முடியாத எதிர்நாயகனும் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். அவள் பிடிவாதமாகப் பல விஷயங்களையும் சொன்னபோது அவன் கூறுவான்: “தொப்பியை மீறக்கூடாது!” அதைக்கேட்டு அந்த இளம்பெண்கள் தேம்பித் தேம்பி அழுதவாறு கடந்து சென்றார்கள். எது எப்படியோ எல்லாரும் மன்னரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார்கள்.

எங்கு பார்த்தாலும் ஜரிகைத் தொப்பி! மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களில் சேறு படிந்த தன்னுடைய கால்களை வெளியே காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் தலையிலும் தாமரைத் தொப்பி ஜொலித்துக் கொண்டிருந்தது! ஆங்காங்கே கண்களில் தென்படும் சிறு கடைகளிலும் ஜரிகைத் தொப்பிகள் தொங்கிக் கொண்டிருந்தன. இடுப்பு சிறுத்து, மார்புப் பகுதி முன்னால் தள்ளி பல்லிகளைப் போல் இருந்த குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தாய்மார்கள் தங்களின் ஒரு கையால் அந்தக் குழந்தைகளின் தலையில் தொப்பியைக் கீழே விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், தங்க மொட்டுகளால் ஆன செழிப்பான ஒரு பூந்தோட்டத்தைப் போல் இருந்தது அந்த நாடு.

தாமரையும் மன்னனும் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து தொப்பிகளை அணிந்து செல்லும் மக்களைப் பார்த்தார்கள்.

“தாமரை, பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கு!”

“ம்...”- அவள் புன்னகைத்தாள்.

தொப்பி வாரத்தின் கடைசி நாளன்று மன்னனும் மகாராணியும் நகரத்தை வலம் வருவார்கள். நகரத்தின் முக்கியமான மனிதர்கள் அப்போது அவர்களுடன் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே இந்த விஷயம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொப்பியின் அளவிலிருந்த ஏராளமான தோரணங்களால் நகரம் அழகுபடுத்தப்பட்டது. தாமரைத் தொப்பி அணிந்த மக்கள் இரண்டு வரிசையில் நின்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தொப்பி அணிந்து நடந்து சென்று தாமரையின் கவனத்தைக் கவர்ந்த அந்தக் கிழவனும் இருந்தான். தன் தலையில் அணிந்திருந்த தொப்பி இந்த அளவுகஅகுப் பிரபலமானதில் அவனுக்குப் பெருமையாக இருந்தது.

அப்போது பட்டாசு வெடிச்சத்தமும் செண்டை ஒலிக்கும் சத்தமும் ஆரவாரச் சத்தங்களும் கேட்டன. அவர்கள் வருகிறார்கள்- மன்னனும், ராணியும்!

இரண்டு வரிசைகளாக நின்றுகொண்டிருந்த தொப்பிகளைப் பார்த்தவாறு மன்னரும் தாமரை ராணியும் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது மாதிரி தொப்பிக்காரனான கிழவன் சொன்னான்: “மன்னர் தொப்பி அணியல.”

“ராணியும் தொப்பி அணியல” - அருகில் நின்றிருந்த ஒரு கிழவி கூறினாள். அதைச்சொல்லிச் சொல்லி மக்கள் மத்தியில் அதுவே பேசப்படும் விஷயமாகி விட்டது. உரத்த குரலில் எல்லாரும் அதைச் சொன்னார்கள். கூப்பாடு போட்டார்கள். அழைத்துச் சொன்னார்கள்.

மக்களின் தலைவனான மன்னன் தேரை நிறுத்திவிட்டு கேட்டான்: “என்ன அது அமைச்சரே?”

“உங்க பக்கம் தவறு எதுவும் இருக்கக்கூடாது.”

“என்னன்னு சொல்லுங்க?”

“உங்க தலையில தொப்பி இல்லைன்னு அவங்க சொல்றாங்க.”

"சரி... தொப்பிகளைக் கொண்டுவரச் சொல்லுங்க. ஒண்ணு எனக்கு. ஒண்ணு உங்களுக்கு. இன்னொன்னு மகாராணிக்கு.”

“எனக்கு வேணுமா என்ன?” - தாமரை கேட்டாள்.

“தாமரை, மக்களோட விருப்பத்தை நிறைவேற்ற வேண்டாமா?”

தொப்பிகள் கொண்டு வரப்பட்டன. மன்னனின் கழுத்துவரை தொப்பி இறங்கியிருந்தது. மக்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவனால் மக்களைப் பார்க்க முடியவில்லை. அமைச்சரின் தலையில் சரியாக நிற்காமல் அவனைக் கஷ்டப்படுத்தியது. அந்தத் தொப்பிகளை அவர்கள் இருவரும் மாற்றி அணிந்து பார்த்தார்கள். அப்போதும் அதே நிலைதான். கடைசியில் எதையும் பார்க்க முடியாத மன்னன் தொப்பியைச் சுமந்து கொண்டு தேரில் உட்கார்ந்திருந்தான். சற்று திரும்பக்கூட முடியாத அமைச்சர் மன்னனுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தான். தாமரை சிறிது நேரம் என்னவோ சிந்தித்தாள். பிறகு தன்னுடைய கணுக்கால்வரை தொங்கிக் கொண்டிருந்த தலைமுடியைப் பந்து போல் சுருட்டி அதன்மீது தொப்பியை வைத்தாள். மிகவும் சரியாகப் பொருந்தியது தொப்பி. மக்கள் மகாராணியைப் பார்த்து சந்தோஷத்துடன் ஆரவாரம் செய்தார்கள். தேர் நகர்ந்தது.

மன்னன் அழைத்தான்: “தாமரை!”

“என்ன?”

“உனக்கு ஏதாவது தெரியுதா? எப்படி தெரியுது? இந்தத் தொப்பி உனக்கு சரியா இருக்கா?”

“இல்ல. ஆனா, எனக்குத் தலைமுடி இருக்கே! மன்னரே, கொஞ்சம் தலைமுடியை வளருங்க.”

“அப்படியா தாமரை?”

“உங்களுக்கு என்ன வேணும்?”

“நான் உனக்காக என்னவெல்லாம் அனுபவிக்கிறேன்! இனிமேலாவது அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடு...!”

“எந்தப் பேரு மன்னரே?”

“உனக்கு என் மேல இரக்கமே இல்ல. எல்லாம் சும்மாதான்.”

தாமரைக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் மன்னனுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு காதில் மெதுவான குரலில் சொன்னாள்:

“என் காட்டுப் பன்னி!”

“என் தாமரை!”- ஒரு முழக்கத்தைப் போல மன்னனின் தொப்பிக்குள்ளிருந்து அந்தக் குரல் வெளியே வந்தது.

“என் காட்டுப் பன்னி! நான் சொல்றதைக் கேப்பியா?”

“கட்டாயமா!”

“என் கிழட்டுப் பிணமே! அப்படின்னா... தலைமுடி வளரு- தொப்பி அதுல பொருந்தி நிக்கிற மாதிரி...”

“சரி...”

அமைச்சர் அப்போதும் தொப்பியைச் சுமந்துகொண்டு ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருந்தான். அந்த ரதம் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.