
என்னுடைய கிராமத்தில் ஒரு நதி. அதன்மீது முன்பு ஒரு பாலம் இருந்தது.
அந்தப் பாலத்தைக் குறித்துத்தான் இப்போது உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன். (அல்லது ஒருவேளை குஞ்ஞம்பு மாஸ்டரைப் பற்றியதாகவும் இருக்குமோ?)
பாலத்தையும், குஞ்ஞம்பு மாஸ்டரையும் குறித்துக் கூறுவதற்கு முன்னால் அந்தப் பாலத்திற்கடியில் ஓடும் நதியைப் பற்றிக் கூறிவிடுகிறேன். அதுதான் பொருத்தமும் கூட.
அந்த நதி எங்கள் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். எங்கள் கிராமத்தின் உயிர் என்று அதைச் சொல்வதுதான் இன்னும் சரியானது.
நதியைப் பற்றிய எனது எண்ணங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்துபோன அந்த இளம் பிராயத்து நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது முதலில் ஞாபகத்திற்கு வருவது அந்த நதிதான். கருங்கற்களால் ஆன ஐந்து தூண்களுக்கிடையே என்றும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் அதன் நிறம் கால மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும். ஆகாயமே நதிக்குள் வந்துவிட்டதோ என்று கூட சில சமயங்களில் எண்ணத் தோன்றும். புத்தாண்டு பிறக்கும் போது மலையின் உச்சியிலிருந்து குதித்தோடி வரும் ஆற்றுநீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடும்போது பார்க்க வேண்டுமே! மண்ணின் நிறத்துடன் கரை கடந்தோடி கடலுடன் சென்று கலக்கும் நீர், கல்தூண்களைக் கடந்து செல்லும்போது, தூணைச் சுற்றிலும் ஒரே அலையும், நுரையுமாக இருக்கும்.
ஆற்றில் ஒருமுறை கூட தண்ணீர் வற்றி நான் பார்த்ததேயில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே ஜலப் பிரவாகம்தான். மழைக் காலமாயிருந்தாலும் சரி; வெயில் காலமாக இருந்தாலும் சரி- வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியவண்ணம் இருக்கும். கடல் மிகவும் அருகில் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
என் தந்தை கொஞ்ச காலம் போத்தனூர் ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். எல்லா சனிக்கிழமைகளிலும் வீட்டிற்குள் வருவார். ஒருமுறை திரும்பிப் போகும்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு பள்ளியில் விடுமுறை விட்டிருந்தார்கள்.
தெற்கு நோக்கி நான் போகும் முதல் பயணமே அதுதான். (வடக்கே வளபட்டணம் வரை போயிருக்கிறேன்). பாரதப்புழை ஆற்றின் கரையில் ஒரு பயணம். கேட்கவே குதூகலமாயிருந்தது. எத்தனையோ வாய்களால் புகழ்ந்து பாடப்பட்ட பாரதப்புழை நதியைக் காண்பதென்றால்... அது என்ன சாதாரண விஷயமா?
திரூர் ஸ்டேஷனைக் கடந்ததுதான் தாமதம்- வெளியில் மேய்ந்து கொண்டிருந்த கண்களை நான் அகற்றவேயில்லை.
வெளியே வெயில் ‘சுள்’ளென்று காய்ந்து கொண்டிருந்தது. கண்களில் ஒரு சோர்வு. அப்படியே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். பிறகு என் தந்தை அழைக்கும் சத்தத்தைக் கேட்டு கண்விழித்தேன்.
“பாஸ்கரா, மகனே பாஸ்கரா, அதோ தெரியுது பார்... அதுதான் பாரதப்புழை.”
என் தந்தை தன் சுட்டு விரலால் காட்டியவாறு கூறினார்.
அங்கே மணல் பரந்து கிடந்தது. ஆற்றின்மீது மணல் ஏற்றப்பட்ட லாரி ஒன்று போய்க் கொண்டிருந்தது.
என் தந்தை வெறுமனே விளையாடுகிறாரோ என்று நினைத்தேன் நான்.
பாரதப்புழையைவிட எங்கள் கிராமத்தில் ஓடும் நதி எவ்வளவு பெரியது! எங்கள் கிராமத்து ஆற்றில் தண்ணீர் வற்றி நான் ஒருமுறை கூட பார்த்ததேயில்லை. அதை நினைத்துப் பார்த்தபோது, என்னையும் மீறி ஒரு பெருமிதம் உண்டானது என் மனதில்.
அந்த நதியின்மீது ஒரு பாலம்.
நான் முதன்முதலாகப் பள்ளியில் சேர்ந்த அன்றுதான் அந்தப் பாலத்தின் மேலேயே நடந்து போனேன்.
என் தந்தை என்னுடைய கையைத் தன்னுடைய கையுடன் பிணைத்திருந்தார். மற்றொரு கையில் சிலேட்டும், பயிற்சிப் புத்தகமும் இருந்தன. பயத்துடன் என் தந்தையிடம் கேட்டேன்: “பாலம் சரிந்துவிடாதா, அப்பா?”
“லாரியும், பஸ்ஸும் போற பாலம்டா பாஸ்கரா... ரயில் மேலே போனாக்கூட அப்படியே கொஞ்சமும் அசையாமல் இருக்கும்டா மகனே இது.”
அதைக் கேட்டு நான் சிரித்தேன்.
“யானை மேலே போனால்...?”
“நூறு யானைகள் நடந்து போனாக்கூட இந்தப் பாலத்துக்கு எந்தக் கேடும் உண்டாகாதுடா மகனே...”
எனக்கு அதற்குப் பிறகுதான் மனதிலிருந்த பயமே போனது. என் தந்தையின் கையைப் பற்றிக்கொண்டு குதூகலத்துடன் நான் நடந்து போனேன். பாலம் நடுங்குவதுபோல் ஒரு தோணல். கைவிரல்களைப் பற்றிக் கொண்டேன் நான்.
“பயப்படாதேடா, பாஸ்கரா. பஸ்ஸும் லாரியும் வர்றப்போ மட்டும்தான் பாலம் கொஞ்சம் அதிரும்.”
அவர் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு எதிர்திசையிலிருந்து பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பாலத்தின் அகலமோ மிகவும் குறைவு. பஸ் வேறு வந்து கொண்டிருந்ததால் பாலத்தின் ஒரு கைப்பிடிச் சுவரோரம் ஒதுங்கி நின்று கொண்டோம். பஸ் கடந்துபோனபோது, உள்ளபடியே பாலம் அதிரத்தான் செய்தது.
பெரியவனாக வளர்ந்து கல்லூரிக்குப் போகின்ற நாட்களில்கூட இந்தப் பாலத்தின் வழியே தான் நான் போனேன்.
இன்று அலுவலகம் போவதுகூட இந்தப் பாலத்தின் வழியேதான்.
-ஒரு விதத்தில் பார்க்கும்போது என் வளர்ச்சிக்கு சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது இந்தப் பாலம் என்றுகூட கூறலாம்.
சமீபத்தில் அலுவலக வேலை சம்பந்தமாக மேற்பயிற்சி பெறுவதற்காக வடஇந்தியாவில் இருக்கின்ற ஒரு நகரத்திற்குப் போயிருந்தேன். அப்போதுதான் எனக்கு, ‘ஹோம் ஸிக்னஸ்’ என்பதன் அர்த்தமே புரியத்தொடங்கியது. எவ்வளவோ படித்திருக்கிறேன். ஆனால், புத்தகத்தைத் திறந்துவிட்டால் போதும்- ஊர் பற்றிய நினைவுகள் மனதில் அலையடிக்கத் தொடங்கிவிடும். பல முகங்களும் கண்முன்னே வரிசையாக வலம் வரும். பல இடங்களும், பல சூழ்நிலைகளும்கூட. குழந்தைகளுக்கான அரைஞாண் கயிறும் ஊசியும் விற்கும் மாப்பிள்ளைக் கிழவன்... ஒரு வகையான துர்நாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் கக்கூஸ்... ஆனால், கண் முன்னே மறையாமல் கம்பீரமாக நின்றுகொண்டிருப்பது என்னவோ அந்தப் பாலம்தான். பாசிபிடித்த அந்தக் கல்தூண்களும், லாரியும், பஸ்ஸும் போகும் போதெல்லாம் ஓசையெழுப்பும் கைப்பிடிச்சுவரும் மனக்கண் முன்னால் வந்து நின்றன.
அப்போதுதான் அந்தச் செய்தி என்னை வந்தடைந்தது. எங்கள் ஊர் பாலத்திற்கு ஏதோ சேதம் ஏற்பட்டுவிட்டதாம்.
ஒரு நாள் பாலத்தின் இரு பக்கங்களிலும் இரு அறிவிப்புப் பலகைகள் காட்சியளித்தன. அதில் ‘பாலம் அபாயம்’ என்ற எழுத்துக்கள்... தொடர்ந்து கனரகமான வாகனங்கள் பாலத்திற்கு மேலே போவது தடை செய்யப்பட்டது.
பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்க்க நகரத்திலிருந்து அதிகாரிகள் வந்தார்கள். படகொன்றில் ஏறி நதியில் பயணம் செய்தவாறு பாலத்தைப் பார்வையிட்டார்கள். அவர்களில் ஒரு மனிதர் தொப்பி அணிந்திருந்தார். கூட்டத்தில் சற்று தடிமனான ஒருவர் கையால் சுட்டிக் காட்டியவாறு என்னவோ கூறிக் கொண்டிருந்தார். நதிநீர் வெயில் பட்டு ‘தகதக’த்துக் கொண்டிருந்தது.
அவர்கள் என்னென்னவோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். தொப்பி அணிந்திருந்த மனிதர் நதியைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். என்னவோ நடக்கப் போகிறது என்பதை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதிகாரிகள் நகரத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
சிறிது நாட்களில் பாலம் அடைக்கப்பட்டது. அதன்மீது வாகனங்கள் செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதைப் பார்த்து உடலில் குருதியே நின்றுவிட்ட மாதிரி இருந்தது எங்களுக்கு. எதையோ இழந்துவிட்டதைப் போல் நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தோம்.
பாலத்தின் தூண்களில் பாசி படர ஆரம்பித்துவிட்டது. அதுவே பாலத்தின் பலவீனத்தையும் பறைசாற்றியது.
பாலத்தை முற்றிலுமாக அகற்றப் போகிறார்கள் என்பதை அறிந்த போது, அதனால் உண்டான அதிர்ச்சியை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பூமியை இரண்டாகப் பிளப்பதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். அது உண்மையான தகவல்தான் என்பதைக் கூட எங்களால் நம்பமுடியவில்லை.
நதியின்மீது பாலம் இல்லை! கனவில்கூட எங்களால் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எப்படி முடியும்? யாரால் முடியும்?
மொத்த கிராமமும் சுடுகாடு மாதிரி ஆகிவிட்டது. இறுதியில் துயரமான அந்த நாள் வந்து சேர்ந்தது. நான்கு தலைமுறையினரைச் சந்தித்ததும்- அவர்கள் பாதங்கள் படிய நடந்து சென்றதுமான அந்தப் பாலம் எங்களை விட்டுப்போகப் போகிறது… பாலத்தின் கரையில் ஊரே கூடிவிட்டது. கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும்... ஏன் முதியவர்களும்கூட இருந்தார்கள். பாலத்திற்கு இறுதி விடை கொடுக்க எல்லாரும் வந்திருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் என் கண்கள் இதுநாள்வரை சந்தித்திராத ஒரு மனித முகத்தைச் சந்தித்தது. ஒரு கிழவர்... வெள்ளை வேட்டியும், அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார். தோளில் ஒரு துண்டு, காதுகளில் கடுக்கன், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தது.
அது... அது... வேறு யாருமல்ல குஞ்ஞம்பு மாஸ்டர்தான். அவரை முதலில் கண்டபோது அவர்தான் குஞ்ஞம்பு மாஸ்டர் என்பதைக் கூட என்னால் நம்பமுடியவில்லை.
காலை பத்து மணிக்கே பாலத்தை இடிக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரம். பாலத்தின் மேல் பெரிய பெரிய இரும்புக் கம்பிகள் வந்து விழுந்தன. எங்களின் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் அந்தப்பாலம்...
சூரியன் வானத்தில் பயணம் செய்யச் செய்ய, பாலத்தின் தோற்றப் பொலிவும் மாறிக்கொண்டே இருந்தது. உழுத நிலத்தைப் போல காட்சியளித்தது பாலம்.
அப்போதுதான் எங்கிருந்தோ வந்த அந்த முதியவரை என் கண்கள் சந்தித்தன. தோளில் கிடந்த துண்டை வாயில் திணித்துக் கொண்டு தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தார் அவர்.
அவர் யாராக இருக்கக்கூடும்; அவர் எதற்காக அழவேண்டும் என்பதை அறியவேண்டும் என்ற ஆவல் எனக்குள் பிறந்தது. என்னுடைய துயரத்தை மறைத்துக் கொண்டு அவரருகில் போனேன் நான்.
வேறு யாரும் அந்த முதியவரைக் கவனித்தது மாதிரி தெரியவில்லை. ஒவ்வொருவருடைய கவனமும் வாழ்வை முடித்துக் கொள்ளப் போகும் பாலத்தின் மீதே இருந்தது. காதுகளில் பணியாட்களின் கூக்குரலும், இரும்புக் கம்பிகளின் ‘ணங் ணங்’ ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்தன. எத்தனை கொடூரமான ஓசைகள் அவை.
அருகில் சென்று நான் நிற்பதைக்கூட அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. மெதுவாகத் தோளைப் பற்றியவாறு அவரிடம் நான் கூறினேன்.
“மாமா...”
அவருடைய காதில் என் வார்த்தைகள் விழவில்லை போலிருக்கிறது. பாலத்தைப் பார்த்தவாறு இருந்த அவருடைய விழிகள் இரண்டிலுமிருந்தும் கண்ணீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.
மீண்டும் அவரின் தோளைக் குலுக்கி அழைத்தேன். அப்போதுதான் நான் கூறியது காதில் விழுந்த மாதிரி லேசாகத் தலையைத் திருப்பி என்னை அவர் பார்த்தார். கன்னங்கள் இரண்டிலும் அப்போதும் கண்ணீர் வழிந்து கொண்டுதானிருந்தது.
“மாமா, நீங்க எங்கேயிருந்து வந்திருக்கீங்க...?”
“...”
“மாமா... ஏன் அழறீங்க?”
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறுவதாகத் தெரியவில்லை. பாலத்தின் கைப்பிடிச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழும் ஓசை காதில் கேட்டது. அதைக் கேட்டு முதியவரின் அழுகை மேலும் மேலும் பெரிதானது.
வெயில் படிப்படியாக கூடிக்கொண்டேயிருந்தது. தண்ணீரில் வெயில் பட்டு மேற்பகுதி ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாலத்தின்மீது போடப்பட்டிருந்த தார் சூரியனின் கடுமையைத் தாங்க முடியாமல் பாகென உருகிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் தங்களின் வீடு நோக்கிப் புறப்பட ஆரம்பித்தனர். கரையில் நின்றிருந்த மனிதக் கூட்டம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்தது.
பிற்பகல் ஆனபோது, சுமார் இருபது பேர் மட்டுமே அங்கு எஞ்சி நின்றனர். அவர்களிலும், பெரும் பகுதியினர் குழந்தைகளே.
இப்போதும், முதியவரின் பார்வை சூரியனை நோக்கியே இருந்தது. அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிவது சிறிதும் நிற்கவில்லை. பாலத்தின் கடைசி நிமிடங்களைப் பார்ப்பதற்காக எங்கோயிருந்து வந்திருக்கும் இந்த மனிதர் யாராக இருக்கமுடியும்? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவருடைய கண்ணீருக்குப் பின்னால் ஏதோ ஒரு கதை இருக்கிறது. இந்தப் பாலத்திற்கும் முதியவருக்கும் இடையில் உள்ள அந்தத் தொடர்பு என்னவாக இருக்க முடியும்? அதை அறிய ஆசைப்பட்டது என் மனம்.
“மாமா, உங்களுக்குப் பசியொன்றும் எடுக்கலையா?”
நான் அவரின் அருகில் போய் நின்றேன். என்னைக் கண்டதும் தோளில் கிடந்த துண்டால் தன் கண்களை ஒற்றிக்கொண்டார். அப்போது அவருடைய உடலில் ஒரு நடுக்கம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.
“தேநீர் குடிப்போம், வாங்க...”
பாலத்திற்கு வெகு அருகிலேயே இருந்தது பீட்டரின் தேநீர்க் கடை. கடைக்கு அவரையும் அழைத்துச் செல்லலாம் என்று பார்த்தேன். அழைத்துப்போயாவது, கண்ணீருக்குப் பின்னால் மறைந்திருக்கும் அந்தக் கதையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
ஆனால், மனிதர் வந்தால்தானே?
மீண்டும் அவர் என்மீது இருந்த பார்வையை அகற்றி பாலத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இப்போது பாலத்தின் ஒரு கைப்பிடிச் சுவர் முழுமையாக அகற்றப்பட்டிருந்தது. இருந்தாலும், என்னுடைய முயற்சியை நான் கைவிடுவதாக இல்லை. இத்தனைக் காலமும் எங்கள் மத்தியில் இருந்துவிட்டு இதோ வாழ்க்கையை முடிக்கப் போகும் பாலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவராகத்தான் இந்த வயதான கிழவர் இருக்கமுடியும் என்று என் உள்மனம் கூறியது. அந்தக் கதையை என் மனம் அறியத் துடித்தது. என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போய்விடவில்லை.
பசியை மறந்து தாகத்தை மறந்து கண்ணீர் வழியும் விழிகளுடன் வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும் அந்த முதியவர் வேறு யாருமல்ல- குஞ்ஞம்பு மாஸ்டர்தான்.
இந்த உண்மையை அறிய நேரிட்டபோது, என் உடலிலிருந்த ரோமங்கள் ஒவ்வொன்றும் சிலிர்த்து நின்றன. கோவிலின் சந்நிதானத்தில் நிற்பதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது.
அவர்... குஞ்ஞம்பு மாஸ்டர்... குஞ்ஞம்பு மாஸ்டர்...
நான் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பு... அப்போது இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கவில்லை. ஆற்றிற்கு அக்கரை தனியாக இருந்தது.
கிராமத்திலிருந்த பள்ளிக் கூடத்திற்குப் பாடம் சொல்லிக் கொடுக்க எங்கோ இருந்து ஒரு இளைஞர் வந்தார். அவருடன் நான்கு வயதான ஒரு பெண் குழந்தையும். அது அவருடைய மகள்தான். முதல் பிரசவத்திலேயே அவருடைய மனைவி இந்த உலகைவிட்டுப் போய் விட்டாளாம்.
அரைப் பாவாடை அணிந்து, கால்களில் கொலுசு அணிந்து பட்டாம்பூச்சியெனத் திரிந்தாள் வனஜா. மாஸ்டரின் உயிரே அவள்தான். அவளுக்கு உணவு புகட்டுவது- விளையாட்டு காண்பிப்பது, உறங்கவைப்பது எல்லாமே அவர்தான். பள்ளிக்கூடம் போகும்போது, அவளையும் தன்னுடன் அவர் அழைத்துப் போவார். வகுப்பறையில் மாஸ்டரின் மேஜைக்கருகில் ஒரு சிறிய ஸ்டூல் இருக்கும். அதில்தான் வனஜா எப்போதும் அமர்ந்திருப்பாள்.
மாஸ்டருக்கு மட்டுமல்ல- கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவருக்குமே செல்லக் குழந்தையாக இருந்தாள் வனஜா.
அப்போதுதான் நதியின்மீது பாலம் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை அது ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் என்றுதான் கூறவேண்டும். பாலம் மட்டும் உருவாகிவிட்டால் அக்கரையிலிருக்கும் அற்புத உலகுடன் நாங்களும் தொடர்பு கொள்ள முடியும் அல்லவா? அத்துடன் எங்கள் கிராமத்தின் தோற்றமே முற்றிலும் மாறிவிடும். பல வகைகளிலும் கிராமம் முன்னேறத் தொடங்கிவிடும்.
வெளியூர்களிலிருந்து என்ஜினியர்களும் பணியாட்களும் வந்தனர். பாலம் உருவாகத் தொடங்கியது. அந்த அற்புதத்தைக் காண கிராமமே ஆற்றின் கரையில் திரண்டு நின்றது. நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் நதியின் மீது எப்படி பாலம் அமைப்பது? தண்ணீருக்குள் நிரந்தரமாக நிற்கும்படி எப்படிக் கல்தூண்களை அமைப்பார்கள்? ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தபோது வியப்பாகத்தான் இருந்தது.
மழைக் காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் நதியின் இரு கரைகளும் இடியக்கூடிய அளவிற்கு நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறாயிற்றே அது! பாலம் அமைப்பது அப்படியொன்றும் எளிதான காரியமாக இருக்கவில்லை. தூண்களை நிற்கவைப்பதுகூட மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்தது.
என்ஜினியர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். தூண் நிற்பதாகத் தெரியவில்லை. தூண் இல்லாமல் எப்படிப் பாலம் அமைப்பது?
இறுதியில்தான் தெரிந்தது- ஒரே வழிதான் இருக்கிறது... பாலத்திற்கு மொத்தம் ஐந்து தூண்கள். நடுவில் இருக்கின்ற தூணுக்கு அடியில் உயிர் பலி ஒன்று கொடுக்க வேண்டும். சாதாரண பலி அல்ல. குழந்தையின் குருதி. சூடான குருதியில் மட்டுமே தூண் நிலையாக நிற்குமாம்.
ஒவ்வொரு வீட்டிலும் எட்டு, ஒன்பது என்று குழந்தைகள் இருந்தனர். ஆனால், ஒருவராவது குழந்தையை இழக்கத் தயாராக இருந்தால்தானே? கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவத்தானே இந்தப் பாலம்? வரும் தலைமுறையினரின் நன்மைக்காகத்தானே எல்லாம்? ஆனால்...
பாலம் கட்டும் வேலை முழுமையாகத் தடைப்பட்டு நின்றுவிட்டது. வேலை செய்ய வந்தவர்கள் ஆற்றின் கரையில் அமர்ந்து, சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் கற்களும், மணலும் சிதறிக் கிடந்தன. நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வருடம் வேறு முடியும் தறுவாயில் இருந்தது. அதற்கு முன்பே பாலத்திற்கான தூண்கள் நாட்டப்பட்டுவிட வேண்டும். ஆனால்...
அப்போதுதான், எல்லாரையும் விலக்கிக்கொண்டு குஞ்ஞம்பு மாஸ்டரின் குரல் ஒலித்தது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தன்னுடைய சொந்த மகளையே...
பாலத்திற்கு தூண் நாட்டப்பட்டுவிட்டது. அதன்பின் வேலை ‘மள மள’வென்று நடைபெற்றது. வகுப்பறையில் மாஸ்டருக்கு அருகில் இருந்த ஸ்டூல் காலியாகவே கிடந்தது.
அதற்குப் பிறகு குஞ்ஞம்பு மாஸ்டர் அதிக நாட்கள் ஊரில் இருக்கவில்லை. ஒருநாள் அவர் ஊரைவிட்டே போய்விட்டார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் ஊருக்குத் தெரியவில்லை.
பாலத்தின் வேலை முற்றிலுமாக முடிந்துவிட்டது. கிராமம் வேறு உலகுடன் தொடர்புகொள்ள ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் தேங்காயையும், பழத்தையும், மரவள்ளிக் கிழங்கையும் கரை கடந்து சென்று விற்பனை செய்துவிட்டுத் திரும்பி வந்தனர். குறுகிய நாட்களிலேயே கிராமம் நன்கு வளர்ந்துவிட்டது. ஓலை வேய்ந்த வீடுகள் எழும்ப ஆரம்பித்தன. திண்ணைப் பள்ளிக்கூடம் உயர்நிலைப் பள்ளியாக மாறியது.
எல்லாம் நான் பிறப்பதற்கு முன்பே நடந்தவை.
ஏழு நாட்களுக்குப் பின் பாலத்தின் மீதியாக நின்றது அந்த ஐந்து தூண்கள் மட்டும்தான். அப்போதும் குஞ்ஞம்பு மாஸ்டர் கரையில் நின்று கொண்டிருந்தார். அவருடைய விழிகளில் கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவே இல்லை.
தூண்களும் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. எங்கள் கிராமத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைத்த- எங்கள் முன்னோர்களின் காலத்தில் பிறந்த- நாங்கள் பாதங்கள் படிய நடந்த அந்தப் பாலத்தின் இடத்தில் இப்போது எஞ்சி இருப்பது ஒரே சூன்யம்... ஒரே சூன்யம்...
அன்று இரவுவரை ஆற்றின் கரையிலேயே நான் நின்றிருந்தேன். சூன்யமான நதியின் மேற்பரப்பின்மீது காற்று பட்டுக் கொண்டிருந்தது. நிலவொளி தண்ணீரில் பாய் விரித்துக் கொண்டிருந்தது. அப்போது நதியின் மேற்பகுதியில் கொலுசுச் சத்தம் கேட்பதைப்போல் இருந்தது. ஆற்றின் சலசலப்புக்கு மத்தியில் இரண்டு இளம்பாதங்கள் நடந்துபோவது என் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன.