Logo

அழகான மகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7741

ந்தத் தாய் தன்னுடைய சிறிய வீட்டின் வாசலில் அமர்ந்து மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். வெளியே வெளிச்சம் குறைந்திருக்க வேண்டும்- அவள் நினைத்தாள்- இல்லாவிட்டால் திடீரென்று தன் கண்களைப் பாதிக்கக்கூடிய 'மூடல்' வழக்கம்போல இப்போது வந்து மூடியிருக்க வேண்டும். அப்படியாக இருந்தால் சிறிதுநேரம் சென்றபிறகு, கண்கள் மீண்டும் சிறிதாவது தெரிய ஆரம்பிக்கும். மீண்டும் தன்னைச் சுற்றிலும் இருக்கும் பொருட்களை கொஞ்சமாவது காணமுடியும்.

"பெண்ணே... நேரம் சாயங்காலம் ஆயிட்டது தெரியலியா? ஆமா... நீ அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"

மகளிடம் பேசும்போது ஒருமுறைகூட அவள் தன்னுடைய குரலைத் தாழ்த்தியே பேசுவதில்லை. எப்போது பார்த்தாலும் மகளை அவள் திட்டிக் கொண்டே இருப்பாள். அவளை தான் வெறுக்கிறோமா இல்லாவிட்டால் அன்பு செலுத்துகிறோமா என்பதைப் பற்றி அவளுக்கே தெளிவான ஒரு கருத்து இல்லை என்பதே உண்மை. அவளின் கண்பார்வை பாதிக்கப்பட்டு விட்டது. உடல்நலக்குறைவு காரணமாக படுத்திருக்கும் இடத்திலிருந்து நேராக எழுந்து நடக்கும் சக்தியும் இல்லாமல் போய்விட்டது. தன்னால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த பிறகுதான் அவளிடம் இந்த கறாரான போக்கும், திட்டும் குணமும் வந்து ஒட்டிக் கொண்டன.   

"நான் பார்க்கலைன்னு நினைச்சுக்கிட்டு இருக்காதே பெண்ணே. இந்த வீட்டுல நடக்கிற எல்லா விஷயங்களும் எனக்கு நல்லாவே தெரியும். ஞாபகத்துல வச்சுக்கோ!"- அவள் அவ்வப்போது அவளைப் பார்த்து கூறுவாள். தினமும் கத்தி கத்திப் பேசி அவளின் குரலே சகிக்க முடியாத அளவிற்கு மோசமாகிவிட்டது. மகள் தன் தாய் திட்டுவதையோ- கன்னாபின்னாவென்று பேசுவதையோ காதிலேயே போட்டுக் கொள்ளாதது மாதிரி இருப்பாள். பொதுவாக அந்தப்பெண் தன் தாயின் விருப்பத்திற்கெதிராக எப்போதும் நடந்ததேயில்லை. இருப்பினும், தாயின் கண்களில் மகள் குற்றவாளியாகவே தெரிந்தாள். மகள் மவுனமாக இருப்பதும் அவ்வப்போது சாந்தமான குரலில் பதில் சொல்வதும் அந்தத் தாயை அதிகமாகக் கோபம் கொள்ளச் செய்தது.

"நான் எவ்வளவு கேவலமா பேசட்டும், கொஞ்சம்கூட இந்தப் பெண்ணுக்கு வெட்கம்ன்ற ஒண்ணு இல்லவே இல்ல. நாணமும் மானமும் இல்லாத ஜாதி..."

தான் வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவள் அப்படியே தன் தாயின் கையில் கொண்டுவந்து கொடுத்து விடுவாள். காலையில் வீட்டை விட்டு புறப்படுவதற்கு முன்பு அவள் கஞ்சி தயாரித்து உப்பு கலந்து தன் தாய்க்குத் தருவாள். சாயங்காலம் வேலை முடிந்து திரும்பி வந்தவுடன் குளித்துவிட்டு மீண்டும் சாப்பாடு தயாரிக்க ஆரம்பித்து விடுவாள். இரவில் எவ்வளவு ஆழமான தூக்கமாக இருந்தாலும் தன் தாய் அழைத்தாள் என்றால் அக்கணமே தூக்கத்திலிருந்து அவள் எழுந்து விடுவாள். வண்டிக்காரன் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் பொறுமையாக இருக்கும் சாந்தமான ஒரு காளையைப் போல அவள் தன் தாயின் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு வாழ்ந்தாள். சொல்லப்போனால் அப்படி சகிப்புத்தன்னைமயுடன் வாழ்வதுகூட அவளுக்கு நன்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. தாய்க்கு மகளைப் பார்க்கக்கூட முடியவில்லை. இருந்தாலும் அவளின் நடையில் இருக்கும் இளமைத் துள்ளலையும் அவள் அருகில் வரும்போது அவளிடமிருந்து புறப்பட்டு வரும் 'கமகம'வென்ற வாசனையையும் உணரும்போது அந்தத் தாய் மிகவும் பயப்படுவாள். அவளுக்கு நிச்சயம் காதலன் இல்லாமல் இருக்கமாட்டான் என்று அவள் உறுதியாக நம்பினாள். ஆனால், அதற்கு ஆதாரமாக ஏதாவது விசில் சத்தமோ- யாராவது ஓடும் ஓசையோ அவள் காதில் விழவில்லை.

"நீ இவ்வளவு நேரம் குளத்துல என்ன பண்ணிக்கிட்டு இருந்தே? யாருடி உன் காதலன்? தேவிடியா, நீ என்னை ஏமாத்தலாம்னு நினைக்காதே. ஞாபகத்துல வச்சுக்கோ!"

மகள் முண்டைப் பிழிந்து விரித்து வீட்டிற்கு முன்னாலிருக்கும் கொடியில் காயப்போடுவாள். வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் சமையலறையை நோக்கி அவள் நடப்பாள். சாப்பிட்டு முடித்து மகள் விரித்துப் போட்ட பாயில் படுத்து உறங்கும்வரை அவளின் தாய் ஏதாவது முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள்.  மகள் ஏதாவது பதில் சொன்னாளென்றால், அவ்வளவுதான். அவளுக்கு ஏகப்பட்ட திட்டுகள் கிடைக்க ஆரம்பித்துவிடும்; அவள் 'ஆமாம்' என்று சொன்னாலும் சரி; 'இல்லை' என்று சொன்னாலும் சரி.

"அடியே... யாருடி உன் காதலன்?"

"அம்மா, கொஞ்சம் பேசாம இருக்கியா? எனக்கு அந்த மாதிரி யாரோட தொடர்பும் இல்ல..."

"நீ பொய் சொல்லாதே. எனக்கு எல்லாம் தெரியும். ஞாபகத்துல வச்சுக்கோ!"

மீண்டும் ஒரே அமைதி நிலவும். மகள் கை, கால்களை நீட்டி படுத்து உறங்க ஆரம்பித்திருப்பாள். அவள் சீராக விடும் மூச்சுகளையே கவனித்துக் கொண்டிருக்கும் தாய் நீண்ட நேரம் ஏதாவது முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். கடைசியில் அவளும் தூங்க ஆரம்பித்து விடுவாள்.

பொழுது விடிந்துவிட்டால் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிடும். சிலநேரங்களில் அவளின் தாய், தான் அமர்ந்திருக்கும் பலகையை எடுத்து மகள் மீது வேகமாக வீசி எறிவாள். நிச்சயம் குறி தப்பாது என்ற உண்மை இருவருக்குமே நன்றாகத் தெரியும். "நான் உன்னைக் கொல்லாம விடமாட்டேன். என்னைப் பைத்தியம் பிடிக்க வச்சிடாதே" என்று அவள் உரத்த குரலில் கத்துவாள்.

மகள் தலைவாரி முண்டு மாற்றி வேலை செய்யும் இடத்திற்குப் புறப்படுவாள்.

"நீ அவங்ககிட்ட ஒண்ணும் கேட்கலியா? எனக்காக ஒரு முண்டோ போர்வையோ ஏதாவது... நீ இதுவரை எதுவும் கேட்கல. எனக்காக எதுவும் கேட்க உனக்கு விருப்பமில்ல. நீ நன்றி இல்லாதவ. சொறியும் சிரங்கும் பிடிச்சு நாறிப்போய் கிடந்தப்போ உன்னைத் தோள்ல போட்டு நான் ஒவ்வொரு நாளும் வைத்தியரைத் தேடி நடப்பேன். எல்லோரும் அப்போ என்னைப் பாத்துக் கேட்பாங்க: 'எதற்கு இதைத் தூக்கிக்கிட்டு அலையுறே? இது மாறவே மாறாது'ன்னு. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த நீ இப்போ கொஞ்சம் கூட நன்றி இல்லாதவளா ஆயிட்டே..."

எவ்வளவோ தடவைகள் கேட்ட விஷயம்தான். இருப்பினும், அந்தப் பழைய கதையைக் கேட்கும்போது உள்ளம் நெகிழ்ந்து விடுவாள் மகள்.

"அம்மா... எனக்கு உலகத்துல உனக்குப் பிறகுதான்மா வேற யாரா இருந்தாலும்..."

ஒருநாள் மதிய நேரத்தில் வாசலில் பரவியிருந்த வெயிலை உற்றுப் பார்த்தவாறு அவளின் தாய் அமர்ந்திருக்க,அவளுடன் பேசுவதற்கு ஒரு பெண் வந்தாள். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அந்தப் பெண் சொன்னாள்: "பார்க்குறதுக்கு உன் மக நல்ல ஒரு பொண்ணா தெரியிறா. அவளுக்கு சரியான மாப்பிள்ளை கிடைச்சா..."


அதைக் கேட்டு அந்தத் தாய் அப்படியே சிலையென உட்கார்ந்து விட்டாள். பத்து வருடங்களுக்கு முன்பிருந்த தன்னுடைய மகளின் முகத்தை அவள் அப்போது தன் மனதில் நினைத்துப் பார்த்தாள். சப்பையான மூக்கும் பல் இல்லாத வாயும்... அப்போது அவளைப் பார்த்தவர்கள் யாரும் அவளை அழகானவள் என்று சொல்லவில்லை.

அன்று மகள் திரும்பி வந்தபோது, தாய் சொன்னாள்: "நீ சிங்காரிச்சு மினுக்கிக்கிட்டு நடக்கவேண்டாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, உன்னைச் சும்மாவிடமாட்டேன். அவமானத்தைத் தேடித் தந்திடாதடி... ஞாபகத்துல வச்சுக்கோ!"

"நான் ஒண்ணும் சிங்காரிச்சு மினுக்கிக்கிட்டு நடக்கல..."

"சிங்காரிச்சு மினுக்காமலே நீ அழகின்றே... அதுதானே? அடியே தேவிடியா..."

அதற்கு மேல் மகள் எதுவும் பேசவில்லை. அவள் அப்படி அமைதியாக இருந்ததைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டாள் தாய். அப்போது அவள் இளமை பூத்துக்குலுங்க நின்றிருக்கிறாள் என்பது மட்டுமல்ல; ஒரு அழகியாகவும் மாறியிருக்கிறாள். அதற்காக உண்மையிலேயே அந்தத் தாய் பெருமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவள் தன் மகளைச் சகட்டுமேனிக்குத் திட்ட ஆரம்பித்தாள்.

"உன் அழகால எனக்கு என்ன கிடைக்குது? கொஞ்சம் சாமர்த்தியம் இருக்கிற பொண்ணா எனக்குப் பிறக்கலையே! எல்லாம் என் தலைவிதி.-.."

மகள் அடுப்பை ஊதிக்கொண்டே திரும்பிப் பார்த்தாள். அவளின் தாய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அந்த அறையில் பரவியிருந்த இருட்டில் வெள்ளை நிறம் கலந்த தன் தாயின் கண்கள் மட்டும் தெளிவாகத் தெரிந்தன.

"எனக்கு ஒரே வெறுப்பா இருக்கு!" - அவளின் குரல் உரத்து இல்லையென்றாலும் அந்தத்தாய் அதைக் கேட்கவே செய்தாள்.

"என்னடி... பதிலுக்குப் பதில் பேச ஆரம்பிச்சிட்டியா! நீ என்னைக் கொல்லாம விட மாட்டே..."

அவள் தலையைக் குனிந்து கொண்டு மீண்டும் அடுப்பிலிருந்த நெருப்பை ஊதத் தொடங்கினாள்.

தாய் தானே வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன் சிறிது நேரம் என்னவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அப்படி உட்கார்ந்தபடியே சிறிது நேரத்தில் தன்னை மறந்து தூங்கி விட்டாள். கனவுகள் நிறைந்த அந்த தூக்கத்திலிருந்து அவள் கண் விழித்தது தன்னுடைய மகளின் வார்த்தைகளைக் கேட்டுத்தான்.

"பேசாம போறீங்களா இல்லியா? என் வாயால தேவையில்லாம பேச விடாதீங்க. நான் ஒரு ஏழை. அதுக்காக செய்யக்கூடாததைச் செய்ய நான் தயாரா இல்ல..."

மெதுவாக ஒலிக்கும் ஒரு ஆணின் குரலையும் அந்தத் தாய் கேட்டாள். சிறிது நேரம் பேசிய பிறகு வந்த ஆள் திரும்பிப் போனான்.

"அது யாருடி பெண்ணே?"

மகள் தன் தாயின் காதில் அந்தப் பெயரைச் சொன்னாள்.

"அடியே... அறிவு இல்லாத கழுதை! தேடி வந்த அதிர்ஷ்டத்தை நீ காலால மிதிச்சு அனுப்பிட்டியே! அவ்வளவு நல்ல ஆளு உன்னைத்தேடி வந்தது எவ்வளவு பெரிய விஷயம்! நன்றியில்லாதவ..."

மகள் அன்று அழுதுகொண்டே உறங்கினாள். இருட்டில் அவ்வப்போது கேட்ட அவளுடைய தேம்பல் சத்தத்தைக் கேட்ட அவளின் தாய் வழக்கமான தன்னுடைய முணுமுணுப்பை நிறுத்தி வைத்துவிட்டு அமைதியாகப் படுத்திருந்தாள். அவளின் முகத்தைச் சுற்றி கொசுக்கள் ஓசை எழுப்பியவாறு பறந்து கொண்டிருந்தன. அவை அவளின் முகத்தில் அமர்ந்து கடித்தபோதும் அவளுக்கு வலி என்ற ஒன்று உண்டாகவேயில்லை.

மறுநாள் காலையில் மகள் சொன்னாள்:

"அம்மா... நான் கல்யாணம் செய்துக்கப்போறேன் வேலுவை..."

"என்ன? அந்தத் தரித்திரம் பிடிச்சவன் உன் புருஷனா? என்னடி சொல்ற? குழந்தைகள் பிறந்து கஷ்டப்படுறப்போ என்ன செய்வே? ஒரு பெண்ணைக் காப்பாத்துற அளவுக்கு அவனுக்குத் திறமை இருக்கா என்ன?"

அதற்கு மகள் எந்தப் பதிலும் கூறவில்லை. அவளின் தாய் முணுமுணுத்தாள். அவளைத் திட்டினாள். நீண்டநேரம் ஆனபிறகு தாய் பாயில் சுருண்டு படுத்து உறங்கினாள்.

மாலையில் மகள் திரும்பி வந்தவுடன் தாய் கேட்டாள்: "அடியே... நீ ஏதாவது பிரச்சினையில மாட்டிக்கிட்டியா? அந்த வேலு உன்னை கெடுத்திட்டானா?"

"நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்புறோம் அம்மா. உனக்கு சம்மதம்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்குறதா முந்தாநாள் சொன்னாரு."

"திருட்டு நாயே! உயிரோட இருக்குற காலம் வரைக்கும் அதற்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். ஞாபகத்துல வச்சுக்கோ. இனி அவன் இந்தப் பக்கம் வரட்டும். அதுக்குப் பிறகு நான் யார்ன்றதை அவனுக்குக் காட்டுறேன். பொண்ணுகளைக் கெடுக்குறதுக்குன்னே இருக்கான்... தரித்திரம் பிடிச்ச பய!"

இரவில் படுப்பதற்கு முன்பு அவர்கள் இருவருக்குமிடையே பயங்கர சண்டை நடந்தது. தாய் பலகையை எடுத்து மகளுக்கு நேராக எறிந்தாள். வலியால் மகள் அழுததைக் கேட்ட பிறகும் தாயின் கோபம் சிறிது கூட தணியவில்லை. அவள் கத்தியைக் கையில் எடுத்தவாறு அடுப்பு இருக்கும் இடத்திற்கு வந்தாள்.

"அடியே... நான் உன்னைக் கொல்லப்போறேன். நன்றியில்லாதவ... தேவிடியா..."

சிறிது நேரம் சென்றபிறகு தாய் தன்னுடைய பாயில் சுருண்டு படுத்து உறங்கினாள். இரத்தத்தில் மூழ்கி மரணத்தைத் தழுவும் அழகான தன்னுடைய மகளை கனவில் கண்ட தாய் பயந்துபோய் உரத்த குரலில் கத்தினாள். படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்து தேடியபோது அவளுடைய மகளைக் காணவில்லை. வெளியே காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. தாய் வாசல் பகுதிக்கு வந்தாள். முற்றத்தில் பார்த்தவாறு உரத்த குரலில் அழைத்தாள்:

"மாதவி... எங்கேடி இருக்கே?"

அந்தத்தாயின் குரல் அங்கிருந்த காகங்களை பயப்படச் செய்தது. காற்றில் தென்னை மரங்கள் ஆடிக் கொண்டிருந்தன.

"நீ என்னை விட்டுப் போயிட்டியா மாதவி? என் மகளே..."

அன்று சாயங்காலம் ஊர்க்காரர்கள் சிலர் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்ல வந்தபோது சொன்னார்கள்:

"இந்த அளவுக்கு நன்றியில்லாத பொண்ணா அவள்! பாசத்தோடு வளர்த்த தாயை வயசான காலத்துல தனியா விட்டுட்டு ஒருத்தன் கூட ஓடிப்போகணும்னு அவளுக்கு எப்படித்தான் தோணுச்சோ? இவ்வளவு கல்மனசு அவளுக்கு இருக்குன்னு யாரும் நினைக்கலியே!"

தாயின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால், அவள் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய மகளை இதுவரை தோன்றாத பாசத்துடன் அவள் அப்போது மனதில் நினைத்தாள்... 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.