Logo

வளர்ப்பு மகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6603
valarppu magal

ந்தக் கொலை வழக்கு விசாரணையின் கடைசி நாள் அது. பிரபலமான அந்த வழக்கைப் பார்ப்பதற்காக நீதிமன்றத்தில் நிறைய மக்கள் கூடியிருந்தார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவன் செய்த குற்றத்தை நிரூபிப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் இரண்டு மணி நேரம் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தைக் காட்டிப் போராடினார்.

குற்றம் சாட்டப்பட்ட மனிதன் குற்றம் செய்தவனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பெருமதிப்பிற்குரிய நீதிபதி ஜுரிமார்களுக்கு அரை மணிநேரம் அனுமதித்தார். அவர்கள் தங்களுக்குள் கலந்து பேசுவதற்காக பக்கத்திலிருந்த அறைக்குள் போனார்கள்.

ஜுரிமார்கள் மீண்டும் வந்து கூடினார்கள். குற்றம் சாட்டப்பட்ட மனிதன் கொலை செய்தது உண்மைதான் என்று அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

நீதிபதி தீர்ப்பு சொல்வதற்காக வழக்கை அடுத்த நாளுக்கு மாற்றி வைத்தார். இரண்டு போலீஸ்காரர்கள் குற்றம் சாட்டப்பட்ட சங்கரனைக் கையில் விலங்கு மாட்டி குற்றவாளிக் கூண்டைவிட்டு வெளியில் இறக்கி, அவனைத் திரும்பவும் சிறைக்குக் கொண்டு சென்றார்கள்.

"அதோ போறான்ல, அவன்தான் கொலை செய்த ஆளு. குறைஞ்சது பத்து தடவையாவது அவனைத் தூக்குல தொங்க விட்டாத்தான் நல்லா இருக்கும்." “சின்ன பொண்ணைக் கொலை செய்த அந்த மகாபாவியை உயிரோட தோலை உரிச்சு நெருப்பில போட்டு பொசுக்கணும்"- இப்படி அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவரும் மனதில் பயங்கர கோபத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஆளைப் பார்த்துப் பேசினார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதைப் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வேட்டி மட்டும் கட்டியிருந்த கிராமத்து மனிதர்கள். சாதாரண ஒரு சிறு கிராமமான பதியனூரை உலகமெங்கும் தெரிய வைத்த கொலை வழக்கு அது. அப்பிராணி விவசாயிகள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் அதற்கு முன்பு ஒரு கொலைச் சம்பவம் நடந்ததாக இதுவரை யாரும் காதால்கூட கேட்டதில்லை. ஆனால், இப்போது மிகப் பெரிய அந்தக் கொலை வழக்கில் அந்த ஊர்க்காரர்கள் சாட்சி சொல்லவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது. பதியனூரில் ஒரு பழமையான குடும்பம் 'பாலியாட்டு'. அந்த ஊரின் பெரிய ஜமீந்தார்கள், லட்சாதிபதிகள் அனைவரும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நொடிந்து நொடிந்து, கடைசியில் இப்போது 'ராவ்பகதூர் ராமனுண்ணி' மட்டும்தான் அந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒரே ஆணாக இருக்கிறார். ராவ் பகதூர் முன்பு அரசாங்க உத்தியோகத்தில் இருந்து நல்ல வசதியுடன் வாழ்க்கையை நடத்தியவர். ஐந்து மைல் தூரத்திலிருக்கும் பெரும்பாலான வயல்களும் நிலங்களும் தோட்டங்களும் 'பாலியாட்டு' குடும்பத்திற்குச் சொந்தமானவையே.

சாதாரண ஜமீந்தார்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ராவ்பகதூர் ஒரு இரக்க குணம் கொண்ட மனிதராகவும் வறுமையில் உழலும் மக்கள் மீது கருணை கொண்டவராகவும் இருந்தார்.

ராவ்பகதூர் ராமனுண்ணியின் மகள் அம்புஜம் அந்த ஊர்க்காரர்களின் அன்பிற்குரிய பெண்ணாக இருந்தாள். ஒரு வன தேவதையைப் போல அந்தச் சிறுபெண் எல்லா ஏழைமக்கள் வீடுகளுக்கும் செல்வாள். அவளை ராவ்பகதூர் 'என் செல்லக் கண்ணு' என்றுதான் அழைப்பார். அவர் அப்படி அழைப்பதைப் பார்த்து ஊர்க்காரர்கள் எல்லோரும் அவளை அப்படியே அழைக்க ஆரம்பித்தார்கள். 'செல்லக்கண்ணு' அந்த ஊரில் உள்ள எல்லோருக்குமே கண்ணில் தெரியும் லட்சுமியாக இருந்தாள்.

ராவ்பகதூரின் வளர்ப்பு மகள் தான் அந்த செல்லக்கண்ணு. இந்த உண்மை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.தனக்கு குழந்தை எதுவும் இல்லாமற் போனதால், ராவ் பகதூர் சிறு குழந்தையாக இருந்தபோதே அவளைத் தத்து எடுத்துக் கொண்டார். 

ஒரு நாள் அதிகாலை வேளையில் பயங்கரமான ஒரு செய்தியைக் கேட்டுத்தான் பதியனூர் மக்களே படுக்கையை விட்டு எழுந்தார்கள். ஊர் மக்களின் அன்பிற்குப் பாத்திரமாக இருந்த அந்தச் 'செல்லக்கண்ணு'வை யாரோ கொலை செய்துவிட்டார்கள். பாலியாட்டு குடும்பத்தைச் சேர்ந்த வேலைக்காரர்கள் அவளுடைய அறை திறந்து கிடந்ததாகவும், அவள் கட்டில் மீது இறந்து கிடந்ததாகவும் சொன்னார்கள். ராவ்பகதூர் தன் நெஞ்சில் அடித்தவாறு அழுது கொண்டே அறைக்குள் வந்து தன் மகளின் இறந்துபோன உடம்பை கட்டிப் பிடித்தவாறு மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவர் அதிகாரிகளுக்கு விஷயத்தைச் சொல்லி அனுப்பினார். போலீஸுக்குத் தகவல் கொடுப்பதற்காக ஆட்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ஒரு துணியை அந்தப் பெண்ணின் கழுத்தில் சுற்றி கொலை செய்திருப்பதாகச் சொன்னார்கள். அறையைச் சோதனை செய்ததில் அலமாரியில் இருந்த அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான சிறு நகைப்பெட்டி காணாமல் போயிருப்பது தெரிந்தது.

அந்தப் பெண்ணின் இறந்துபோன உடலைச் சோதனை செய்த டாக்டர், பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவளை யாரோ பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

போலீஸ்காரர்கள் எல்லா இடங்களிலும் கொலை செய்த ஆளைத் தேடினார்கள். சந்தேகத்தின் பெயரில் பலரைக் கைது செய்தார்கள். ஆனால், தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் அவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. கொலைகாரனைப் பிடிப்பதற்கு உதவக்கூடிய ஆதாரத்தைத் தருகின்றவர்களுக்கு நூறு ரூபாய் பரிசாகத் தருவதாக ராவ்பகதூர் அறிவித்தார். அதன் விளைவாகவோ என்னவோ இக்கோரன் என்ற ஒருவன் போலீஸ்காரர்களிடம் சென்று, கொலைச்சம்பவம் நடைபெற்ற நாளன்று இரவு சுமார் ஒரு மணி அளவில் மலைப் பகுதியிலிருக்கும் சங்கரன் பாலியாட்டு வீடு இருக்கும் இடத்தை விட்டு ஓடிப்போகும் போது தான் பார்த்ததாகச் சொன்னான். இக்கோரன் அன்று கிழக்கு சந்தைக்குப் போய்விட்டு திரும்பிவந்து கொண்டிருந்தான்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம் போலீஸ்காரர்கள் மலைப்பகுதியில் குடியிருக்கும் சங்கரனைத் தேட ஆரம்பித்தார்கள். சங்கரன் இளம் வயதிலேயே ஊரை விட்டுப் போய் விட்டான். ரங்கூனில் சில வருடங்கள் வசித்து விட்டு, ஊருக்கு வெறும் கையுடன் திரும்பிவந்த மனிதன் அவன். பதியனூரில் தூரத்து சொந்தமென்று இருந்த ஒரு ஆளைத் தவிர, வேறு யாரும் அவனுக்கு இல்லை. பதியனூருக்கு அவன் திரும்பி வந்தே ஒரு மாதம்தான் ஆகிறது. மக்களின் ரசனையோடு ஒத்துப்போகிற ஒரு இளைஞனாக அவன் இருந்தான். ரங்கூனில் உள்ள விசேஷங்களைக் கூறிக்கொண்டு, கண்ணில் படுபவர்களெல்லாம் வாங்கித்தரும் ஓசி தேநீரையும், பீடியையும் அனுபவித்துக் கொண்டு அதற்குமேல் வேறு எந்த இலட்சியமும் இல்லாமல் அவன் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால், போலீஸ்காரர்களால் சங்கரனைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ போய்விட்டிருந்தான். அவன் அப்படிச் செய்தது. அவர்களின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவர்கள் ரகசியமாக தேடியதன் விளைவாக சங்கரனை அவர்களால் மட்டனூரில் கைது செய்ய முடிந்தது.


திருடு போன நகைகளும் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிடைத்தன. நீதிமன்றத்தில் தான் அந்தக் கொலையைச் செய்யவே இல்லை என்று சாதித்தான் சங்கரன். சம்பவம் நடந்த நாளன்று தான் ராவ்பகதூரின் வீட்டுப் பக்கம் போகவே இல்லை என்று முதலில் சொன்னான். பிறகு அரசாங்க வழக்கறிஞர் கேட்ட பல கேள்விகளையும் பார்த்து அவன் தடுமாறிப் போனான். தான் அங்கு போனது உண்மைதான் என்பதை அவன் ஒப்புக் கொண்டான். தான் அந்தப்பெண் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தபோது, அவள் தன்னை மறந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாளென்றும் அலமாரியிலிருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தான் திரும்பிவிட்டதாகவும், அதற்குப் பிறகு நடைபெற்ற எந்தச் சம்பவமும் தனக்குத் தெரியாதென்றும் முன்னுக்குப் பின் முரணாக அவன் சொன்ன பல விஷயங்கள் அவனையே ஆபத்தில் சிக்க வைத்தது. ஆனால், கடைசிவரை அந்தக் கொலை செய்த விஷயத்தை மட்டும் அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை.

மறுநாள் தீர்ப்பு சொல்லப் போவதைக் கேட்பதற்காக எப்போதும் வருவதைவிட அதிகமான ஆட்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தார்கள். பதியனூரிலிருந்து பதினைந்து மைல்கள் நடந்து சங்கரனைத் தூக்கில் போடும் தீர்ப்பைக் கேட்பதற்காக அந்த ஊர் மக்கள் ஒரு ஊர்வலத்திற்கு நிகராக நகரத்தைத் தேடி வந்திருந்தார்கள்.

பதினோரு மணி அடித்தது. குற்றம் சாட்டப்பட்ட சங்கரனைக் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார்கள். நீதிபதி வந்தார். ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. நீதிபதி கருப்புத் துணியைத் தலையில் வைத்ததைப் பார்த்த குற்றவாளி மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டான். 

அப்போது யாரும் எதிர்பார்த்திராத ஒரு சம்பவம் அங்கு நடந்தது. மக்களை இடித்துத் தள்ளிக் கொண்டு பைத்தியக்காரனைப் போல ஒரு மனிதர் நீதிபதியின் கால்களில் வந்து விழுந்தார்.

அங்கு வந்து நின்ற ஆளைப் பார்த்ததும் நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அங்கு வந்து நின்ற மனிதரின் வருகையும், அவரின் தோற்றமும், அவர் நடந்து கொண்ட விதமும், அவரிடமிருந்த ஒருவித பதைபதைப்பும் அவர்களால் நம்ப முடியாமல் இருந்தன.

அங்கு வந்து நின்றது- ராவ்பகதூர் ராமனுண்ணிதான்.

"தீர்ப்பு சொல்லக்கூடாது. தீர்ப்பு சொல்லக்கூடாது" என்று ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல அவர் அலறினார். "என் செல்ல மகளைக் கொலை செய்தது சங்கரன் இல்ல. நான்தான். ஆமா... நான்தான் கொலையாளி. அதற்கான ஆதாரங்கள் இதோ..."

ராவ்பகதூர் ஒரு பெரிய டைரியையும் ஒரு பத்திரிகையையும் நீதிபதியின் மேஜை மேல் வைத்தார்.

அவ்வளவுதான்- அங்கிருந்த ஒவ்வொருவரின் மூளையும் பயங்கர அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது. குண்டுபட்டு இறந்த காகத்தைப் போல நீதிபதி தன்னுடைய நாற்காலியில் வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்துவிட்டார்.

ஐந்து நிமிடங்கள் கழிந்த பிறகுதான் நீதிபதிக்கே சுயஉணர்வு நிலை உண்டானது. கருப்பு நிறத் துணியைக் கழற்றி வைத்த அவர் வக்கீல்களையே உற்று பார்த்தார். வக்கீல்மார்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

நீதிபதி சொன்னபடி போலீஸ்காரர்கள் ராவ்பகதூரை விலங்கு மாட்டி சங்கரனுடன் சேர்த்து சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றார்கள்.

ராவ்பகதூர் ராமனுண்ணி பாலியாடு நீதிமன்றத்தில் தந்த அவருடைய சொந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கியமான பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 15- நீண்ட நாட்களாக ஒரு கெட்ட சிந்தனை என்னுடைய இதயத்திற்குள் புகுந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்.

16- எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தக் கெட்ட சிந்தனை என்னுடைய மனதை விட்டு விரட்டியடிக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ பாவங்களை நான் செய்திருக்கிறேன். இருந்தாலும், இப்படியொரு பெரிய பாவத்தை நான் எந்தச் சமயத்திலும் செய்ய மாட்டேன்.

18- நேற்று இரவு எனக்குக் கொஞ்சம்கூட தூக்கம் வரவில்லை. இரண்டு முறை விலைமாதர்கள் இல்லத்திற்குச் சென்றேன். எப்போதும் குடிப்பதை விட அதிகமாகக் குடித்தேன்.

19- தூக்கம் கலைந்து எழுந்தபோது, என் முன்னால் அவள் நின்றிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எனக்குள் இருந்த மிருகத்தனம் தலையை நீட்டியது, ச்சே...! அவள் ஒரு சிறு குழந்தை ஆயிற்றே! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் அவளைத் தத்து எடுத்தேன். அப்போது அவளுக்கு ஒன்றரை வயது.

ஆகஸ்ட் 22- விலைமாதர்கள் இல்லத்தின் சொந்தக்காரியிடம் பதிநான்கு வயதுள்ள ஒரு பெண்ணை எனக்காக ஏற்பாடு செய்யும் படி சொன்னேன்.

23- அந்தச் சிறு வயது விலைமாது உண்மையிலேயே ஒரு தேவதைதான். ஆனால், எனக்கு ஒரு சுகமும் கிடைக்கவில்லை. எனக்கு  அவள்தான் வேண்டும்.

24- என் செல்லப் பெண்ணை மனதில் நினைக்கும்போது என்னுடைய நரம்புகளில் உணர்ச்சிகள் திரண்டு நிற்கின்றன. இனிப்புள்ள ஒரு நஞ்சு அவள். 25- காலையில் கோவிலுக்குச் சென்று கடவுளைத் தொழுதேன். அங்கு எதுவுமே இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். மனதில் அமைதி கிடைத்ததாக எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உலகமே பொய்யானது. வாழ்வது, எண்ணுவது, செய்வது- எல்லாமே பொய்யானது.சிந்தனையாளர்களின் வாதத்தில் அர்த்தமில்லாமலில்லை.

27- அவள் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருக்கிறாள். அதோடு எனக்குள் இருக்கும் மிருகத்தனமும் சேர்ந்து வளர்கிறது. அவள் "அப்பா" என்று என்னை அழைப்பது என்னைப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. இந்த வயதான காலத்தில் இப்படிப்பட்ட மோசமான உணர்வுகள் என்னை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? நிழலைப் போல விரட்டியடிக்க முடியாத அளவிற்கு அவை என்னைப் பின் தொடர்ந்து எங்கு வருகின்றன?

30- அதைச் செய்வது பாவமான ஒன்றோ? என் செல்லப் பெண் எனக்கு யார்? யாருமல்ல. யாரோ ஒரு தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த ஒரு பெண் குழந்தை. நான் எதற்குத் தயங்க வேண்டும்? ப்பூ! ஒழுக்கம்...

செப்டம்பர் 1 - நாளை இரவு நான் அதை நிறைவேற்றப் போகிறேன்.

செப்டம்பர் 2 - "அப்பா, எனக்கு ஒரு ஆர்மோனியம் வேணும்" -என்று நேற்று எனக்கருகில் வந்து கொஞ்சிக் குழைந்து சொன்ன போது என் இதயம் ஈரமாகிவிட்டது. இரவில் நான் அவளின் மெத்தைக்கு அருகில் சென்றேன். அவள் ஒரு குழந்தையைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். நான் திரும்பி பாரூவைத் தேடிப் போனேன்.

3- நான் அவளுக்கு விலை மதிப்புள்ள ஒரு ஆர்மோனியத்தை வாங்கிக் கொடுத்தேன். மகிழ்ச்சிப் பெருக்கால் எனக்கு நன்றி சொல்லும் வகையில் அவள் என்னைக் கட்டிப்பிடித்து என்னுடைய தாடி மீது ஒரு முத்தத்தைப் பதித்தாள்.


நான் என்னையே மனதிற்குள் திட்டிக் கொண்டேன். தான் வளர்ந்து ஒரு இளம் பெண்ணாக மாறியிருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியாது.

4. இல்லை. நான் அதை எந்தக் காரணம் கொண்டும் செய்ய மாட்டேன். அவள் என்னுடைய மகள்தான். பாவச் செயல்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது.

5. அவள் ஒரு பட்டாம்பூச்சியைப் போல பூந்தோட்டத்திற்குள் ஓடி மலர்களைச் சேகரித்து மடியில் அவற்றை வைத்துக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து நான் மனதில் மகிழ்ச்சியடைந்தேன்.

6. நான் மிகவும் வருத்தப்பட்டேன். இந்தக் குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மைக்குள் புகுந்து ஆக்கிரமிக்க அல்லவா நான் திட்டமிட்டிருந்தேன்? எவ்வளவு பெரிய பாவச் செயல் அது?

8. நள்ளிரவு நேரத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அந்த மோசமான கனவு என்னை ஒருவித குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. பழைய கெட்ட எண்ணங்கள் என்னுடைய இதயத்திற்குள் மீண்டும் வலம் வர ஆரம்பித்தன. அந்தக் கனவில் கண்ட சுகத்தை நான் நேரடியாக அனுபவிக்க வேண்டும். இந்தக் கெட்ட சிந்தனைகளைக் கட்டுப்படுத்த என்னுடைய அப்பாவி இதயத்தால் முடியவில்லை. அவை உயர்ந்தெழுந்து என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது.

9. அந்தச் செயலைச் செய்வது என்று நான் முடிவெடுத்தேன். நான் செய்த எத்தனையோ பாவச் செயல்களுடன் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே!

10. நள்ளிரவு நேரம் ஆன போது நான் அவளுடைய அறைக்குள் மெதுவாக நுழைந்தேன். கட்டில் மீது விரிக்கப்பட்டிருந்த கனமான மெத்தையில் வெள்ளை நிறப் பட்டுத் துணியால் செய்யப்பட்ட தலையணையில் கையை மடக்கி வைத்தவாறு அவள் சரிந்து படுத்திருந்தாள். அறையில் புழுக்கம் இருப்பதாக அவள் உணர்ந்திருக்க வேண்டும். ஒரு மெல்லிய துவாலையை மட்டுமே அவள் தன் உடம்பில் கட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த முண்டும் ப்ளவ்ஸும் மெத்தையின் தலைப் பகுதியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் வழியாக நிலவு அவள் முகத்திலும் மார்பிலும் பவுடர் இட்டுக் கொண்டிருந்தது. அடடா! எப்படிப்பட்ட காட்சி! இது வரை அவளை ஒரு குழந்தை என்று நினைத்திருந்த நான் உண்மையிலேயே மிகப் பெரிய முட்டாள்தான். அவளுடைய மார்புகள் முழுமையான வளர்ச்சியைப் பெற்றிருந்தன. அவள் ஒரு முழுமையான இளம் பெண்ணாக மாறியிருந்தாள்... என்னால் அதற்குமேல் தாங்க முடியவில்லை... நான் படுக்கையில் சரிந்து படுத்தவாறு அவளை மெதுவாகத் தடவினேன். அவள் திடுக்கிட்டு கண் விழித்து பாதி தூக்கத்தில் "அப்பா" என்று அழைத்தவாறு மெத்தையைவிட்டு எழ முயற்சித்தாள். "கண்ணு, பயப்படாதே. நான் தான்..."என்று ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தவாறு மெல்லிய குரலில் நான் சொன்னேன். அவள் தன்னுடைய ப்ளவ்ஸை படுக்கையில் தேடியவாறு "அப்பா... இப்போ இங்கே எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டாள். நான் அதற்கு பதிலொன்றும் கூறவில்லை. அவள் உடம்பு மீது கொண்ட ஆவேசம் என்னை அதிகமாக ஆக்கிரமிக்க, நான் அவளை இறுக அணைத்தேன். அவள் என்னைப் பார்த்து பயப்பட்டாள். "அப்பா... என்னைக் கொன்னுடாதீங்க அப்பா..." என்று என்னைப் பார்த்து கெஞ்சினாள். காமப்பெருங்கடலில் மூழ்கி இறக்கப்போகிற நான் அதிலிருந்து தப்பிப்பதற்காக அவளை இறுகக் கட்டிப் பிடித்தேன்.

அவள் ஒரு புள்ளிமானைப் போல கண்ணீர் வழிய தேம்பித் தேம்பி அழுதவாறு என்னையே பார்த்தாள். அந்தப் பார்வை தளர்ந்து குளிர்ந்து போயிருந்த என்னுடைய நரம்புகளில் நெருப்பு பிடிக்கச் செய்தது. நான் ஒரு கொலைகாரனைப் போல ஓடிப்போய் என்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து தாழிட்டேன்... மிகப் பெரிய ஏமாற்றம்! வெறுப்பு! விரக்தி! அந்த சுடுகாட்டு நெருப்பு பற்றி எரிந்து அடங்கியது. ஆனால் பரிதாபமான நிலையில் இருந்த என்மீது அந்தச் சுடுகாட்டின் சாம்பல் பறந்து வந்து என் கண்களை மூடியது. என் இதயத்தில் கிடந்த அந்தக் காமத்தின் பிணத்தை கொடூர எண்ணங்களான கழுகுகள் இதய நரம்புகளுடன் கொத்திப் பிடுங்கின. எனக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது. என் உடம்பின் சதைகள் ஒவ்வொன்றும் பிய்ந்து கீழே விழுவதைப் போல் நான் உணர்ந்தேன். என் இரத்தக் குழாய்களில் ஓடிக் கொண்டிருப்பது குளிர்ந்து நாறிப்போன அழுக்கு நீராகத்தான் இருக்கும் என்பதைப் போல் நான் உணர்ந்தேன். ஹா! அந்தச் சம்பவத்தைப் பற்றிய சிந்தனை உஷ்ணமான ஆவி வெளியேறிக் கொண்டிருக்கும் ஆயிரம் டன் எடை கொண்ட ஒரு நீராவி உருளையைப் போல என் இதயத்தில் இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருந்தது. நாளை அதிகாலையில் அவள் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? என் பெண்ணின் முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? "மோசமான மனிதனே, நீ என்ன செஞ்சே?" என்று என்னுடைய மனசாட்சியின் ஆழத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. எனக்கு உடனே சாகவேண்டும் போல் இருந்தது. நான் மேஜையைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்தேன். ஆனால், வாழ வேண்டும் என்ற மிருகத்தனமான ஒரு ஆசை மீண்டும் என்னை வந்து ஆக்கிரமித்தது... ஒரு மணி நேரம் சென்றது.

எதற்கு என்று எனக்கே தெரியவில்லை- ஒரு பைத்தியக்காரனைப் போல அவளுடைய அறைக்குள் நான் மீண்டும் நுழைந்தேன். படுக்கையின் தலைப் பகுதியில் ஒரு அணில் குஞ்சைப் போல அவள் தன்னைச் சுருக்கிக் கொண்டு பயந்து நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் எங்கே கத்தி விடுவாளோ என்று எனக்குத் தோன்றியது. அவளின் வாயை நான் கையால் பொத்தினேன்... தொடர்ந்து அவளின் முண்டை எடுத்து அவளுடைய கழுத்தில் சுற்றி அதை முறுக்கியவாறு நான் மெதுவான குரலில் முணுமுணுத்தேன். "சாகுடி... சாகு... உன் முகத்தை இனிமேல் பார்த்தா நிச்சயம் நான் பைத்தியமாயிடுவேன்." அவள் இப்படியும் அப்படியுமாகத் திமிறினாள்... நெளிந்தாள்... கண்கள் நிலைகுத்தி நின்றன. நாக்கு வெளியே வந்தது... என்ன காரணத்தாலோ என்னிடம் எந்தவித உணர்ச்சியும் உண்டாகவில்லை... ஒரு கோழிக்குஞ்சை கழுத்தை நெரித்துக் கொல்வதைப் போல நான் அவளைக் கொன்றேன். 

ஒரு வயதான கசாப்புக் கடைக்காரனைப் போல அவள் துடிதுடித்து இறந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த இறந்துபோன உடலை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு நான் என்னுடைய அறைக்குள் நுழைந்து படுக்கையில் போய் விழுந்தேன். போர்வையை எடுத்து மூடிப் படுத்தேன். மனதில் இனம்புரியாத ஒரு அமைதி நிலவிக்கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. ஆனால், அது ஒரு வகை மயான அமைதி என்பதுதான் உண்மை.


அதிக நேரம் என்னால் அப்படியே படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளை மீண்டும் போய் பார்க்க வேண்டும் என்றொரு ஆசை மனதில் பிறந்தது.  கொலை செய்யும் நபர்களுக்கு பொதுவாகவே கொலை நடந்த இடத்தின்பால் ஒரு ஈர்ப்பு கட்டாயம் இருக்கும் என்ற மனரீதியான தத்துவத்தை நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு எண்ணம் எனக்கு உண்டானது.

நான் மெதுவாக நடந்து சென்று பார்த்தேன். இல்லை. எந்தவொரு அசைவுமில்லை. அந்த உடலைத் தொட்டுப் பார்த்தபோது பனிக்கட்டியைப் போல குளிர்ந்து போயிருந்தது. அந்தப் பிணத்தை அப்படியே அங்கு போட்டிருப்பது நல்லதல்ல என்று எனக்குப்பட்டது. அவளை நெரித்துக் கொன்ற அவளின் முண்டை விரித்து அதனால் அவளை நன்றாக மூடினேன். இனிமேல் உள்ளதை போலீஸ்காரர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தவாறு நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். போலீஸ்காரர்கள் நிச்சயம் என்னைச் சந்தேகப்பட மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை.

11- இன்று காலையில் நான் நல்லவனைப் போல நடித்தேன். போலீஸ்காரர்கள் மிகவும் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களால் உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியுமா என்ன? அந்தக் கொலைக்குப் பின்னால் எவ்வளவு சுவாரசியமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன? அவளுடைய நகைப் பெட்டியை யார் எடுத்துச் சென்றது? அது இன்னொரு ரகசியம்.

13- கொலைகாரனைப் பிடிப்பதற்கான ஆதாரங்களைத் தருபவர்களுக்கு 100 ரூபாய் பரிசு தருவதாக நான் விளம்பரம் செய்தேன்.

14- பயங்கரமான கனவுகள் என்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தன. என்னுடைய மெத்தையின் தலைப்பகுதியில் கழுத்தில் ஒரு முண்டு சுற்றப்பட்ட பிணம் எல்லா நேரத்திலும் வந்து நிற்பதைப் போல் நான் உணர்ந்தேன்.

16- நான் படுக்கையறையை மாற்றினேன்.

அக்டோபர் 2- அவர்கள் சங்கரனைக் கைது செய்திருக்கிறார்கள். அது உண்மையிலேயே ஆச்சரியமான ஒரு செய்திதான். சம்பவங்களின்

தொடர்ச்சியில் யாருமே நினைத்திராத ஒரு கட்டம் அது என்பது மட்டும் உண்மை. அதாவது சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு திருப்பம் அது. விதி என்ற ஒன்று எனக்கு உதவப் போகிறதா? இல்லாவிட்டால் என்னை அழிக்கப் போகிறதா என்பது எனக்கே தெரியவில்லை. ஹா! சங்கரன்- மலைப்பகுதியில் இருக்கும் சங்கரன்- அவன் என்னுடைய மகன். ஆனால், அந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. இருபது வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் வேலைக்காரியாக இருந்த அம்முவிற்கு என் மூலம் பிறந்தவன்தான் அவன். அம்மு கர்ப்பம் தரித்தபோது கல்வேலை செய்யும் வேலுவிற்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து அவனை அம்முவிற்குத் தாலி கட்ட வைத்தேன். பிரசவமானவுடன் அம்மு இறந்துவிட்டாள். கல்வேலைக்காரன் வேலுவிற்கு மட்டுமே அந்த ரகசியம் தெரியும். ஒரு நாள் இரவும் நானும் வேலுவும் மது அருந்தச் சென்றோம். அவனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை நான் ஊற்றிக் கொடுத்தேன். திரும்பி வரும்போது அவனை நான் அடித்துக் கொன்று தெற்குப் பக்கமிருந்த கல் எடுக்கப்பட்ட குழிக்குள் போட்டு மூடினேன். இப்போதுகூட அவனுடைய எலும்புக்கூடு அங்குதான் இருக்கிறது. அந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். சங்கரன் சிறு வயதிலேயே ஊரைவிட்டுப் போகாமலிருந்தால், நான் அவனை நன்றாக கவனம் செலுத்தி வளர்த்திருக்கவோ, தத்து எடுக்கவோ செய்திருப்பேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் திரும்பி வந்த விஷயம் எனக்குத் தெரியவே தெரியாது.

11. சங்கரன் சம்பவம் நடந்த நாளன்று இரவு இங்கு வந்ததாக நீதிமன்றத்தில் சொன்னான். அவளுடைய நகைகளைத் திருடுவதற்காக அவன் வந்திருக்க வேண்டும். அந்தக் கொலைச் சம்பவம் நடந்த பிறகு அவன் வந்திருக்கிறான் என்பதை யூகிக்க முடிகிறது.

12. நான் எதற்காக வாழ வேண்டும்? இரண்டு கொலைகளுக்கு காரணமாக இருந்தவன் நான் என்பதை ஒப்புக் கொள்ளவா?

13. ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லியாக வேண்டும். மன அமைதியுடன் என்னால் இனிமேல் இந்த வேடத்தில் வாழ்வது என்பது கஷ்டமான ஒரு விஷயமே. நான் எனக்குள் யாருக்குமே தெரியாமல் மறைத்து வைத்த ரகசியங்கள், பாவச் செயல்கள் காலப்போக்கில் இதோ வேரிட்டு முளைத்து உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேவலப்படுத்தி அழிப்பதற்கு முன்பு நானே இறந்துவிட விரும்புகிறேன்.

17. ஆமாம்... வாழ்க்கை என்பது எதற்கு? எல்லாமே பைத்தியக்காரத்தனம்! பைத்தியக்காரத்தனம்! படைத்த கடவுளின் பைத்தியக்காரத்தனத்தால்தான் இந்த உலகமே உண்டாகியிருக்கிறது...

16. சொந்த மனதைப் போல தொந்தரவு தரக்கூடிய வேறொன்று உலகத்தில் இல்லை. எனக்குள் இருந்து என்னை பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் சிந்தனைகளை இனிமேலும் பொறுமையாக என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மரணம்! அந்த நிரந்தர அமைதியை நான் விரும்புகிறேன். அதை நோக்கி நான் என் கைகளை நீட்டுகிறேன். வன்முறையைப் பயன்படுத்தித் தான் நான் என்னுடைய சொத்துக்கள் முழுவதையும் சம்பாதித்திருக்கிறேன். என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இதைச் சொல்லுகிறேன். தவறான பாதைகளில் போகாமல் தேவைக்கதிகமாக யாராலும் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க முடியாது. இனிமேல் அப்படிப்பட்ட வன்முறை வழிகளை வாழ்க்கையில் நான் பின்பற்றப் போவதில்லை. தற்கொலை! அது மரணத்தின் அமைதி மீது நான் செய்யும் ஒரு வன்முறையாக இருக்கும்.

17- நேற்று இரவு முழுவதும் நான் அழுது கொண்டேயிருந்தேன். நான் வாழ்க்கையில் இதுவரை செய்த எல்லா பாவச் செயல்களும் திரையை நீக்கிக் கொண்டு என்னை வெறித்துப் பார்க்கின்றன. அந்த காதல் சம்பவமும்தான்... அய்யோ... என்னால் அதற்கு மேல் நினைக்க முடியவில்லை.

18- வாழவும், மரணத்தைத் தழுவவும் முடியாத ஒரு இக்கட்டான நிலையை விட மோசமான ஒன்று வாழ்க்கையில் இருக்கிறதா?

19- இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் சிறிதுகூட தூக்கமில்லாமல் என் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

21- இப்படி பல பைத்தியக்காரத்தனமான செயல்களையும், பாவங்களையும் நான் வாழ்க்கையில் செய்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி ஆலோசித்துப் பார்த்தபோது ஒரு விஷயம் எனக்கு நன்றாகத் தெரிந்தது. பணவசதி கொண்ட மனிதனாக ஆனபோது, நான் எல்லோருக்கும் கடவுளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், நான் பிணத்தைத் தின்னும் ஒரு சுடுகாட்டு பிசாசாக காலப்போக்கில் மாறிப் போனேன். ஒரு சாதாரண மனிதன் அனுபவிக்கிற சுகங்களைப் பார்த்து எனக்கு வெறுப்பாக இருந்தது. பணக்காரன் என்ற பைத்தியக்காரத்தனமான நினைப்பு என்னிடம் சதா நேரமும் ஓடிக்கொண்டிருந்ததால், அந்த என் அந்தஸ்தை வைத்து எப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களையும் செய்ய நான் தயாராகி விட்டேன்.


அழகான பெண்கள் எனக்கு சுகம் தரவில்லை. நல்ல உணவு வகைகள்கூட எனக்குச் சுவையாகத் தோன்றவில்லை. எனக்குள் இருந்த ஆர்வம் எல்லைகளைத் தாண்டி தவறான பாதைகளை நோக்கி செல்ல ஆரம்பித்தது. பழுத்த பழங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கு மாறாக கெட்டுப்போன பழங்கள், இல்லாவிட்டால் கசக்கக்கூடிய இளம் காய்கள்! பிணம் இல்லாவிட்டால் குழந்தை! குற்றம் செய்ய வேண்டும் என்ற வெறி மனம் முழுக்க தலை கீழான சுக வேட்கை! அவை என்னை மிகவும் பாதித்துவிட்டன. அவற்றைச் செய்வதற்காக நான் மனப்பூர்வமாக ஆசைப்பட்டேன். பிணத்தைத் தின்னும் நாய்களுக்குப் பிடிப்பதைப் போல பணக்காரர்களுக்கும் ஒரு வகை பைத்தியம் பிடிப்பது உண்டு. அந்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுகள்தான் என்னுடைய சகலவிதமான  கெட்ட செயல்களும். திருந்துவதற்கான வழி சிறிதும் இல்லாமல் நான் முழுமையாகக் கெட்டழிந்து விட்டேன். மரணத்தில் மூழ்கினால் மட்டுமே எனக்கொரு நிம்மதி கிடைக்கும். ஆனால், பணக்காரர்களை ஆக்கிரமிக்கும் இந்தப் பெரிய வியாதியைப் பற்றி உலகத்திற்கு நன்கு தெரிய வைத்த பிறகே நான் மரணத்தைத் தழுவுவேன். என்னுடைய நண்பர்களே, பணக்காரர்களே… முதலாளிமார்களே... அமைதியான மனதுடன் நான் மரணமடைய வேண்டும்.

25- சங்கரன் குற்றவாளி என்று ஒரே குரலில் ஜுரிமார்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவனை நாளை நீதிபதி தூக்கில் தொங்கவிடச் சொல்லி தீர்ப்பு சொல்லப் போவதும் உறுதி. கடைசி தீர்மானம் எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நள்ளிரவு தாண்டிவிட்டது. இரண்டு மணி நேரத்தில் நான் இந்த விஷயங்களை எழுதுகிறேன். ஒருவேளை இதுவே என்னுடைய கடைசி எழுத்தாகக்கூட இருக்கலாம். காரணம்- நாளை நீதிமன்றத்திற்குச் சென்று என்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்ள நான் தெளிவாகத் தீர்மானித்து விட்டேன். என்னுடைய சொத்துக்கள் முழுவதையும் சங்கரனுக்கு எழுதியும் வைத்துவிட்டேன்.

கடைசியாக இரண்டு வார்த்தைகள் எழுத நான் விரும்புகிறேன். நான் செய்த எத்தனையோ கெட்ட செயல்களில் ஒன்று என் செல்லப் பெண்ணை பலாத்காரம் செய்ததும், அவளைக் கழுத்தை நெரித்துக் கொன்றதும். அப்படி நான் செய்தது என் குற்றமல்ல. பணக்காரத்தனம்தான் என்னை அப்படியொரு செயலுக்குத் திருப்பிவிட்டது; அந்தச் செயலை என்னைச் செய்ய வைத்தது. அனுபவிப்பதற்கு உலகத்தில் வேறு சுகங்களே இல்லை என்ற நிலை உண்டாகும்போது, இயற்கைக்கு விரோதமான சுகங்களைத் தேடி பின்னால் அலைய அநியாய வழிகளில் சம்பாதித்த பணமும், சுயநலப் பாசி பிடித்த குணமும் சம்பந்தப்பட்ட பணக்காரனைத் தூண்டி விடுகின்றன. சட்டமென்ற பாம்பின் விஷத்தை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய பணம் என்ற மருந்து என் கையில் இருக்கும் காலம் வரையில் எப்படிப்பட்ட மோசமான செயல்களைச் செய்யவும் நான் தயங்க மாட்டேன். பணக்காரன், முதலாளி என்று எடுத்துக் கொள்ளும்போது அது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. எல்லாமே ஒரே வகையில் சேர்ந்ததுதான். அது அதிகமாக இருக்கலாம். இல்லாவிட்டால் குறைவாக இருக்கலாம். அவ்வளவு தான். அழகான உறைக்குள் மறைந்திருக்கும் திருட்டுத்தனம், வஞ்சனை, சுயநலம், பொறாமை, மோசடி- இதுதான் முதலாளி... பணக்காரன். இவனை வளர அனுமதிக்கவே கூடாது. அப்படி அனுமதித்ததால் இவன் சமுதாயத்தின் நல்ல வாழ்க்கைக்குள் வெடி குண்டை மறைத்து வைப்பான். உலகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் செய்வான். ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் கேடு நினைப்பான். மானிட ஒழுக்கத்தை அழிக்க நினைப்பான். நாட்டை ஒன்றுமில்லாமல் ஆக்கப் பார்ப்பான். அது மட்டும் உண்மை.

இப்படி ராவ்பகதூரின் சொந்த டைரி சுவாரசியமான பல உண்மைகளையும், தத்துவங்களையும் கொண்டிருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து, ஒரு சுபமுகூர்த்த வேளையில் அவரை கண்ணூர் சிறையில் தூக்கில் தொங்கவிட்டார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.