Logo

புதிய மனிதன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7592
pudhiya manithan

சோட்டா நாகப்பூரிலிருக்கும் முஸாபணி செம்பு சுரங்கத்துக்கு சமீபத்திலுள்ள ஒரு வீட்டு வாசலில் சங்குண்ணிநாயர் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். சுரங்கத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருக்கும் இயந்திரசாலைக்கு தாமிரத் தாதுக்களை ஏற்றிக் கொண்டு செல்லும் பெரிய இரும்புத் தொட்டிகள் மின்கம்பிகள் வழியே மேலே போய்க் கொண்டிருக்கும் சத்தம் அந்த மாலை நேரத்தின் அமைதியான சூழ்நிலையை நிரந்தரமாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.

மேகங்கள் மறைத்திருந்ததால் பிரகாசம் குறைவாகத் தெரிந்த சூரியன் மேற்குப் பக்கமிருந்த மலைக்குப் பின்னால் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த வயல்களிலும், மலைப்பள்ளத் தாக்குகளிலும் பனிப்போர்வை போர்த்தியிருந்தது. ஒரு கடுமையான குளிர் எங்கும் பரவியிருந்தது.

சங்குண்ணி நாயர் கால்களிரண்டையும் மடக்கி வைத்து உட்கார்ந்தவாறு தாடையில் கையை வைத்து என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மனதில் அசை போட்டுக் கொண்டிருப்பது தன்னுடைய சொந்த ஊரைப் பற்றித்தான். அவர் கேரளத்தில் தன் சொந்த மண்ணை கடைசியாக மிதித்து இருபத்தொரு வருடங்களாகி விட்டன. இந்த இருபத்தொரு வருடங்களில் இன்றுபோல ஒருநாளும் கேரளத்தைப் பற்றிய நினைவுகள் இந்த அளவிற்கு அவர் மனதில் வலம் வந்ததில்லை.  சங்குண்ணி நாயர் தன் கையை நீட்டி வெற்றிலைப் பெட்டியை அருகில் இழுத்து வைத்துக்கொண்டு அதிலிருந்து சிறிது வெற்றிலையையும் பாக்கையும் எடுத்து சுண்ணாம்பு தடவாமல் அதைச்சுருட்டி ஒரு சிறிய உரலுக்குள் போட்டு மெதுவாக இடிக்க ஆரம்பித்தார். வெற்றிலையையும் பாக்கையும் இடித்துக் கொண்டிருக்கும் பொழுதும் அவர் தனக்கு முன்னால் எல்லையற்று பரந்து கிடந்த ஆள் அரவமில்லாத வெட்டவெளியையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த நரை விழுந்த கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததென்னவோ ஆயிரத்து நானூறு மைல்களுக்கப்பால் இருக்கும் காட்சிகளைத்தான். கதிர்களை நீட்டி சாய்ந்தாடிக் கொண்டிருக்கும் நெல் வயல்கள், கதிர்களைக் கொத்தித் தின்பதற்காகக் கூட்டமாகப் பறந்து வரும் கிளிகள், அவற்றைத் துரத்தும் காவல் காக்கும் சிறுவர்களின் 'ஊயோ' என்ற குரல், மலைச்சரிவில் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும் புற்கள்... அடர்த்தியாக இருக்கும் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் மறைந்து கிடக்கும் ஒரு வீடு.

புற்றுக்குள் இருந்து கூட்டமாகப் புறப்பட்டுவரும் கரையான்களைப் போல சுரங்கத்திற்குள்ளிருந்து உடம்பெல்லாம் மண் ஒட்டியிருக்கும் பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் 'கார்பைட்' விளக்குகள் இருந்தன. பூமிக்குக் கீழே இரண்டாயிரம் அடி தூரத்தில் உள்ள நரகத்தனமான இருட்டுக்குள்ளிருந்தும், மூச்சு விடவே சிரமப்படக்கூடிய வாசனையிலிருந்தும் தூசுப் படலத்திலிருந்தும் விடுபட்ட அந்த அப்பிராணி மனிதர்கள்- மனித இனத்தின் கறுத்த நிழல் வடிவங்கள்- வெளியே இருக்கும் நல்ல காற்றை ஆவேசத்துடன் உள்ளுக்குள் இழுத்து தங்களிடமிருக்கும் சோர்வைப் போக்கியவாறு தங்களின் வீடுகளை நோக்கி அமைதியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

மேலே இருக்கும் மின் கம்பிகள் கட்டப்பட்டிருக்கும் தூண்களில் இருந்த மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒருவித ஓசையை உண்டாக்கியவாறு நகர்ந்து கொண்டிருந்த இரும்புத் தொட்டிகளின் நிழல்கள் சங்குண்ணி நாயரின் வீட்டு வாசலில் வளைந்து வளைந்து தெரிந்தன. அவர் அந்த நிழலையே வெறித்துப் பார்த்தார். தொடர்ந்து அவர் மனம் அவருடைய ஊரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியது.

மலையின் அடிவாரத்தில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கும் நதியில் சங்குண்ணி நாயரின் படகு நகரத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருக்கிறது. அந்த வலியபாலா மரம் இருக்குமிடத்தை- நதியின் திருப்பத்தை அடைந்தபோது அவரின் இதயம் என்ன காரணத்தாலோ வேகமாக அடிக்க ஆரம்பிக்கிறது. கண்களில் எப்போதும் இருப்பதைவிட ஒருவித நிலையற்ற தன்மை தெரிகிறது. அவரால் படகை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. உடம்பை ஒருமாதிரி ஒடுக்கியவாறு அவர் வலது பக்கம் இருக்கும் கரையை உற்று நோக்குகிறார். அவர் முகத்தில் பிரகாசம் தெரிகிறது. அவள் வாசலில் நின்றிருக்கிறாள். சங்குண்ணி நாயர் படகிலிருந்து ஒரு கட்டைக் கையிலெடுத்து பாலா மரத்திற்கருகில் வீசியெறிகிறார். படகு முன்னோக்கி நகர்கிறது. ஆனால், அவர் வைத்த கண் எடுக்காமல் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த பாலா மரத்தின் கிளையில் ஒரு புதிய பறவை வந்து அமர்கிறது. இனிய குரலில் அது பாட ஆரம்பிக்கிறது. 'கிழக்கே வா' என்று சொல்லியவாறு ஒரு குயில் கிழக்கு திசை நோக்கிப் பறக்கிறது. நதியின் வளைவு வரும்போது, சங்குண்ணி நாயர் தென்னை மரத்தினூடே தூரத்தில் பார்க்கிறார். அவள் பாலா மரத்திற்கருகில் வந்து அவர் வீசியெறிந்த அந்தக் கட்டைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து போகிறாள். அவள் தன்னுடைய பரிசை ஏற்றுக்கொண்டு எடுத்துப்போகும் காட்சியைப் பார்த்து சங்குண்ணி நாயர் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்று சிலிர்ப்படைந்து தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறார்... அவள் ஒரு மலர் நிலவு. அந்தப் பாலா மரத்திற்கடியில் அவர்கள் இணைகிறார்கள்.  காதல் உணர்வால் துடிக்கும் இரண்டு கிராம மணம் கமழும் இதயங்கள் பலவகைப்பட்ட சரஸ சல்லாபங்கள், ரகசியங்களின் வெளிப்பாடுகள், இனிய எதிர்பார்ப்புகள், வாக்குறுதிகள் என ஐந்து மாதங்கள் இப்படியே ஓடி மறைகின்றன. கடைசியில் ஒருநாள் இரவு அவள் அவரிடம் பயங்கரமான ஒரு ரகசியத்தை வாய் திறந்து கூறுகிறாள். விரைவில் தான் ஒரு தாயாகப் போகும் அறிகுறிகள் தன் உடம்பில் தெரிய ஆரம்பித்து விட்டன என்கிறாள். அவள் சொன்ன அந்த விஷயம் சங்குண்ணி நாயரின் நரம்புகளைச் செயலிழக்கச் செய்கின்றன. அவர் ஒரு முழு பயந்தாங்கொள்ளியாக மாறுகிறார். ஒழுக்கம் அவரின் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையைக் கேள்வி கேட்கிறது. கடைசியில் அவளை அந்த பரிதாப நிலையில் விட்டுவிட்டு சங்குண்ணி நாயர் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்.

ஊரைவிட்டு வெளியேறிய அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும் போனார். பல கஷ்டங்களையும் அனுபவித்தார். பல திசைகளிலும் பணி செய்தார். இறுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு பயணச்சீட்டு இல்லாமலேயே காட்ஸ்லா புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கினார். முபண்டாரில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். பிறகு முஸாபணியிலிருக்கும் சுரங்கத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும் விட்டார்.

இந்த நீண்ட வெளியூர் வாழ்க்கைக்கு மத்தியில் ஒருதடவை கூட அவர் தன்னுடைய ஊரைப்பற்றியோ தான் ஏமாற்றிவிட்டு வந்த இளம்பெண்ணைப் பற்றியோ விசாரித்துப் பார்ப்பதற்கான தைரியம் அவருக்கு இல்லவே இல்லை. சங்குண்ணி நாயருக்குச் சொந்தம் என்று கூற ஊரில் யாரும் இல்லை. இருந்தாலும் ஊரைப்போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலமுறை அவர் மனதில் தோன்றியதுண்டு.


இங்குள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 'ஜம்க்லி' பெண்கள் வேலை முடிந்து கூட்டத்துடன் மகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டு தங்கள் வீடுகளை நோக்கிப் போகும்போது, மலபாரின் கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் நாற்று நடும்போது பாடும் பாட்டுகளை அவர் நினைத்துப் பார்ப்பார். அப்போது கேரளத்தில் பரந்து கிடக்கும் நெல் வயல்களுக்கு மத்தியில் நடந்து திரிய வேண்டுமென்றும், உணர்ச்சி நிரம்பிய வடக்கன் பாட்டுக்களைக் கேட்டு கண்ணீர் வழிய நிற்க வேண்டுமென்றும் அவரின் இதயம் வேட்கை கொள்ளும். அவர் பலமுறை கல்க்காப்பூர், ஹெல்திப்புக்கூர் ஆகிய கேரளத்தின் கிராமங்களை ஞாபகப்படுத்துகிற சோட்டா நாகப்பூரின் கிராமங்களுக்குப்போய், தான் கிராமப் பகுதியில்தான் இப்போதும் வசிப்பதாக தன்னைத்தானே நம்பிக்கை கொள்ளுமாறு செய்வதுமுண்டு. ஆனால், இன்றுபோல ஒருநாள் கூட தன்னுடைய ஊரைப்பற்றிய ஞாபகம் இந்த அளவிற்கு பலம் மிக்கதாக அவரிடம் உண்டானதில்லை. இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் செழிப்பான கேரளமும் அங்கு வசித்துக் கொண்டிருக்கும் தூய ஆடைகள் அணிந்திருக்கும் ஊர் மனிதர்களும் தனக்கு முன்னால் வந்து நின்று கொண்டிருப்பதைப்போல் அவர் உணர்ந்தார். அவருக்கு மலையாளத்தைப் பற்றி இனிய நினைவுகளைத் தவிர வேறு எதுவும் உண்டாகவில்லை. எனினும் அவ்வப்போது அந்த இளம் பெண்ணின் மங்கலான முகம் அவர் மனதில் தோன்றும். அப்போது தன்னையும் மீறி அவர் அதிர்ந்து போவார். தான் செய்த அந்த பாவச் செயலை நினைத்து மனவருத்தம் கொள்ளுவதற்குக்கூட அவர் பயந்தார்.

சங்குண்ணி நாயர் இதுவரை திருமணம் கொள்ளவில்லை. சுரங்கத்தில் அவருக்கு நாளொன்றுக்கு பதினான்கணா சம்பளமாகக் கிடைக்கும்.

குடிப்பழக்கம் இல்லாததாலும், மற்ற ஆடம்பரச் செலவுகள் எதுவுமே இல்லாமல் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு மாதமும் அவர் பத்து ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கிறார் என்று பரவலாக எல்லோரும் கூறுவார்கள்.

குளிர்ந்த காற்று வீசியது. சங்குண்ணி நாயர் ஒரு பழைய கம்பளியால் தன்னுடைய தலையையும் உடம்பையும் போர்த்திக் கொண்டார். அடிக்கொரு தரம் அவர் தன்னுடைய சொந்தக் கதையை மனதில் அசை போட்டுக் கொண்டும் கேரளத்தை நோக்கி மனதைச் செலுத்திக் கொண்டும் உட்கார்ந்திருந்தார்.

முஸாபணியில் அவருடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறிவிடுவதற்கில்லை. ஒரு உணவு விடுதியில் தாழ்ந்த தரத்தில் இருக்கும் சோற்றைத் தின்று அவருக்கே அலுத்துப் போய்விட்டது. அவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்கோ, அவர் மீது அன்பு செலுத்துவதற்கோ ஒரு உயிர்கூட இல்லை. வயிற்றுப்பிழைப்பிற்காக நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் வந்து சேர்ந்த நான்காயிரம் சுரங்கத் தொழிலாளர்களில் அவரும் ஒருவராக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், சங்குண்ணி நாயருக்கு ஒரு விஷயத்தில் மனதிற்குள் திருப்தியே. மற்றவர்களைப்போல் கையில் கிடைக்கும் பணம் முழுதையும் கள்ளு குடித்து செலவழித்தும், கடைகளில் கடன் வைத்து திரியும் மனிதனல்ல தான் என்பதை நினைக்கும்போது அவருக்கே பெருமையாக இருக்கும். வாழ்க்கையில் அவர் அனுபவித்த பலவிதப்பட்ட சிரமங்களும், அவர் பழக நேர்ந்த மனிதர்களின் குணங்களும் அவரை ஒரு தத்துவ ஞானியாக மாற்றிவிட்டிருந்தன. பெயருக்குக்கூட நண்பர் என யாருமில்லாமல், சுரங்கத்தில் வேலை பார்க்கும் நேரத்தைவிட்டால் இருக்கும் மற்ற நேரங்களில் வெளி உலகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல், தன்னுடைய வீட்டில் அவர் தனியாக ஒரு துறவியைப் போல்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

வெளியே இருட்டில் மின்மினிப் பூச்சிகளைப் போல ஏராளமான சிறு வெளிச்சங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பாதாளத்தில் இறங்குவதற்காக 'கார்பைட்' விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு போகும் மூன்றாவது கட்டப் பணியாட்கள் அவர்கள்.

சங்குண்ணி நாயர் எழுந்து உள்ளே போய் ஒரு கார்பைட் விளக்கை எரிய வைத்துவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்து, மீண்டும் தன் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார்.

சங்குண்ணி நாயரின் இதயத்தில் இந்த இருபத்தொரு வருடமும் இடைவிடாது ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அது- 'அதற்குப் பிறகு அவளுக்கு என்ன நடந்திருக்கும்?' என்பதுதான். இப்போது கூட அந்தக்கேள்வி தன் மனதிற்குள்ளிருந்து உரத்த குரலில் ஒலிப்பதை அவர் கேட்கவே செய்தார். ஆனால், அதற்கு பதில்தான் எதுவும் கிடைக்கவில்லை. முன்பிருந்த இருட்டு மீண்டும் அதிக இருட்டானது. அந்த இளம் பெண்ணின் முகம் அந்த இருட்டில் தெரிவதைப்போல் அவர் உணர்ந்தார். அவளுடைய கண்கள்- கறுத்து விரிந்த, எப்போதும் ஒரு பயம் கலந்த அந்த கண்கள்- இருட்டுக்குள்ளிருந்து தன்னையே உற்று நோக்குவதைப் போல சங்குண்ணி நாயருக்குத் தோன்றியது. நீண்ட ஒரு பெருமூச்சைவிட்டவாறு அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

திடீரென்று உடம்பு வாதநோயால் பாதிக்கப்பட்டு மரத்துப் போனதைப் போல் தோன்றியது அவருக்கு. வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு முகம் மட்டும் சற்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு உருவம் எந்தவித அசைவும் இல்லாமல் அவருக்கு முன்னால் நின்றிருந்தது.

சங்குண்ணி நாயருக்கு சிறிதுநேரம் பேசுவதற்கான சக்தியே இல்லாமல் போய்விட்டது. அவரின் நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது. அசையவோ பேசவோ முடியாத அவர் தனக்கு முன்னால் நின்றிருந்த அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் சென்றதும் மெதுவாக அவருக்கு தைரியம் வந்தது. அவர் விளக்கைக் கையிலெடுத்துக்கொண்டு அந்த உருவத்தின் முகத்திற்கருகில் அதைக்காட்டினார். அடுத்த நிமிடம் தன்னையும் மீறி சங்குண்ணி நாயர் அதிர்ந்து போனார். அந்தக் கண்கள் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

அவர் பயந்தாலும் பதைபதைப்பாலும் கீழே விழுந்து விடுவார் போல் இருந்தது. உரத்த குரலில் கத்தவேண்டும் போல் இருந்தது அவருக்கு. ஆனால், குரல் வெளியே வந்தால்தானே! ஒரு புயலைப் போல அவர் மனம் சுழன்று கொண்டிருந்தது. சங்குண்ணி நாயர் கடந்து போன தன்னுடைய வாழ்க்கையை மனதில் நினைத்துப் பார்த்தார். அந்த உருவம் அப்போதும் அங்கேயே அசையாமல் நின்றிருந்தது.

"கோன் ஹை?"- சங்குண்ணி நாயர் உரத்த குரலில் சற்று தடுமாறியவாறு கேட்டார்.

"நான்தான்"- அந்த உருவம் மலையாளத்தில் பதில் சொன்னது.

சங்குண்ணி நாயருக்கு உண்டான ஆச்சரியம் மேலும் அதிகமானது. அவர் மீண்டும் விளக்கை அந்த உருவத்தின் முகத்திற்குப் பக்கத்தில் காட்டினார். அந்த உருவத்தால் அதற்கு மேல் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. அது இலேசாக நடுங்கியவாறு அங்கிருந்த வாசலில் உட்கார்ந்தது தலையில் இருந்த துணியை நீக்கியது.

வெளுத்த ஒரு இளைஞன் அவன்!

"எங்கேயிருந்து வர்ற?"- சங்குண்ணி நாயர் அவனையே வெறித்துப் பார்த்தவாறு கேட்டார்.


"நான்... வர்றதா? பல இடங்களுக்கும் போனேன். கொஞ்சம் தண்ணி..."

சங்குண்ணி சிறிது நேரம் தயங்கியவாறு நின்றார். பிறகு உள்ளே போய் ஒரு மண் பானையிலிருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து அங்கு உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கொடுத்தார். அவன் ஒரே மூச்சில் அந்தத் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தான். மீண்டும் தண்ணீர் வேண்டுமென்று பாத்திரத்தை நீட்டிக் கேட்டான்.

சங்குண்ணி நாயர் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அவன் அது முழுவதையும் குடித்தான். பாத்திரத்தைக் கீழே வைத்தான்.

"என்ன, உடம்புக்கு சரியில்லையா?"- சங்குண்ணி நாயர் கேட்டார்.

"காய்ச்சல்... குளிர் காய்ச்சல்... ஹும்... ஹும்... ஹும்..."

அவன் துணியை விரித்து வெறும் தரையில் படுக்க முயற்சித்தான்.

"இங்கே குளிர்ல படுக்க வேண்டாம். உள்ளே வா..."

சங்குண்ணி நாயர் அவனைக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார். உள்ளே இருந்த ஒரு கட்டிலில் ஒரு பழைய போர்வையை விரித்துப்போட்டு அவனை அதில் படுக்கச் சொன்னார். ஒரு கம்பளியால் அவனை மூடிவிட்ட சங்குண்ணிநாயர் இரக்கத்துடனும் ஒருவித சந்தேகத்துடனும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஆமாம்... அதே கண்கள்தான்... அதே முகம்... கடவுள் என்னைச் சோதிச்சுப் பார்க்கிறாரோ?"- வெளியே வந்த சங்குண்ணி நாயர் தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

பின் என்ன நினைத்தாரோ அவர் மீண்டும் அந்த இளைஞன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் போய் அமைதியாக நின்றார்.

அந்த இளைஞன் கண்களைத் திறந்தான்.

"என்ன வேணும்?"- சங்குண்ணி நாயர் குனிந்தவாறு கேட்டார்.

"எனக்கு இன்னும் தாகமா இருக்கு. தண்ணி... சுடுதண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்..."

சங்குண்ணி நாயர் வெளியே வந்து இருட்டுக்கு மத்தியில் தேநீர் கடையை நோக்கி நடந்தார். அங்கிருந்து ஒரு பாத்திரத்தில் தேநீரும், இரண்டு மூன்று ரொட்டிகளும் வாங்கிக்கொண்டு அவர் திரும்பினார்.

அந்த இளைஞன் சிறிது தேநீரை அருந்தி, ஒரு சிறு ரொட்டித் துண்டைத் தின்றான். மீதி இருந்ததை சங்குண்ணி நாயர் சாப்பிட்டார்.

"எந்த ஊரு?"- சங்குண்ணி நாயர் ஆர்வம் மேலோங்கக் கேட்டார்.

"கண்ணூர் தாலுகாவுல இருக்கு."

சங்குண்ணி நாயரின் இதயம் 'படபட'வென அடித்தது. அவரின் ஊர் கூட அந்த தாலுகாவில்தான் இருக்கிறது.

"இங்கே எப்படி வந்தே?"

"பல இடங்களுக்கும் போனேன். கடைசியில் இந்த ஊருக்கு வந்திருக்கேன்."

"இந்த வீட்டை யாரு காட்டினது?"

"யாரும் காட்டல. நானேதான் இங்கே வந்தேன்."

"உன் பேரு என்ன?"

"குட்டப்பன் நாயர்."

"ஊர்ல இருந்து புறப்பட்டு எவ்வளவு நாட்களாச்சு?"

"ஒரு மாசம் முடிஞ்சது."

"ஊர்ல யார் யாரெல்லாம் இருக்காங்க?"

"யாருமில்ல..."

அந்த இளைஞன் மிகவும் களைத்துப்போய் காணப்பட்டான். அவன் படுக்கையில் படுத்தவாறு நடுங்கிக் கொண்டிருந்தான்.

"அதிகம் பேச வேண்டாம். பேசாம தூங்கு-..."

சங்குண்ணி நாயர் அவனுக்கு நன்றாகப் போர்த்தி விட்டார். பிறகு கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு பாயை விரித்து அதில் அவர் படுத்தார்.

"நான் இதோ... இங்கேதான் படுத்திருக்கேன். ஏதாவது தேவைன்னா என்னைக் கூப்பிடு..."

சங்குண்ணி நாயருக்கு ஒரு பொட்டுகூட தூக்கம் வரவில்லை. ஆனால், அவரின் பல சந்தேகங்கள் அடங்கிய சிந்தனைகளுக்கும், ஞாபகத்தில் வந்த பழைய நினைவுகளுக்கும் கீழே, முன்பு அவர் எப்போதும் அனுபவித்து அறிந்திராத ஒரு ஆனந்தம் கலந்திருந்ததென்னவோ உண்மை. நீண்ட காலமாக அவர் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரும் நிதி இப்போது சிறிதும் எதிர்பார்க்காமலேயே தனக்குக் கிடைத்துவிட்டதைப் போல அவர் உணர்ந்தார்.

மறுநாள் சங்குண்ணிநாயர் வேலைக்குப் போகவில்லை. அதிகாலை நான்கு மணிக்கு அவர் சுரங்கத்திற்குப் பணிக்குப் போகவேண்டும்.

"மகனே... எப்படி இருக்கு? உனக்கு என்ன வேணும்?"- அந்த இளைஞன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பரிவுடன் கேட்டார் சங்குண்ணி நாயர்.

அதைக் கேட்டதும் அந்த இளைஞனின் கண்களில் நீர் அரும்பிவிட்டது. அவன் கேட்டான்: "என்கிட்ட இந்த அளவுக்கு கனிவா நடக்குற நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?"

சங்குண்ணி நாயர் காட்டாறைப்போல அடக்க முடியாமல் அழுதார். அந்த இளைஞனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.

சிறிது நேரம் சென்றதும் சங்குண்ணிநாயர் தன்னுடைய பணப்பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு அவருடைய நண்பர் உண்ணிக்கிருஷ்ண மேனனைத் தேடிப்போனார்.

"நீங்க இப்பவே ஜாம்ஷெட்பூருக்குப் போயி ஒரு நல்ல டாக்டரை அழைச்சிட்டு வரணும். தனியா ஒரு கார் ஏற்பாடு செஞ்சிக்கோங்க. பணம் செலவாகுறதைப் பற்றி கவலைப்படவேண்டாம்"- சங்குண்ணி நாயர் உண்ணிக்கிருஷ்ண மேனனின் கையில் ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களைத் தந்தார்.

சாயங்காலம் டாக்டர் வந்து சிகிச்சையை ஆரம்பித்தார். சங்குண்ணிநாயர் அந்த இளைஞனையே பார்த்தவாறு அருகிலேயே நின்றிருந்தார்.

அன்று இரவு அவர் அந்த இளைஞனிடம் கேட்டார்:

"அம்மா இல்லையா?"

"இல்ல..."

சிறிது நேரம் அவன் சங்குண்ணி நாயரின் முகத்தையே ஒருவித உணர்ச்சி மேலோங்கப் பார்த்தான். பிறகு தழுதழுத்த குரலில் அவன் சொன்னான்:

"என் கதையை நான் யார்கிட்டேயும் இதுவரை சொன்னது இல்ல. ஆனால், உங்களுக்குத் தெரியாம அதை மறைச்சு வைக்கணும்னு நான் நினைக்கல. என்னுடைய அப்பா யார்னு எனக்கு இதுவரை தெரியாது. என்னுடைய தாய் என்னை ஒரு மருத்துவமனையில பெத்தாங்க. என்னை ஒரு டாக்டர் தத்து எடுத்தாரு. பதினாறு வருடங்கள் என்னை வளர்த்தது அவர்தான். டாக்டர் வீட்டுல ஒரு வேலைக்காரி இருந்தா. நான் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன். கடைசியில அவ வயித்துல ஒரு குழந்தை உருவாகி இருக்குன்னு எனக்குத் தெரிய ஆரம்பிச்சவுடனே, என் நடவடிக்கை மாற ஆரம்பிச்சிடுச்சு. டாக்டர் தன்னோட சொந்த மகனைப்போல என்னை வளர்த்தாரு. அவமானம் வரப்போறது உறுதின்னு தெரிஞ்சவுடனே நான் ஒரு மனிதன்றதையே முழுசா மறந்துட்டேன். ஒரு மிருகத்தைப்போல நான் மாறிட்டேன். அவளை கொலை செய்ய திட்டம் போட்டேன். ஆனால், நான் செய்த முயற்சி பலிக்கல. அவள் சாகல. கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக எனக்கு அஞ்சு வருட சிறைத்தண்டனை கிடைச்சது. தண்டனை முழுசா முடிஞ்சதும் நான் அந்த ஊரை விட்டு வெளியேறிட்டேன். பல இடங்கள்லயும் அலைஞ்சு திரிஞ்சு கடைசியில உடம்புக்கு முடியாத நிலையில நான் உங்க காலடியில வந்து சேர்ந்திருக்கேன்."

அவன் சொன்னதை சங்குண்ணி நாயர் மிகவும் கவனமாகக் கேட்டார்.


வாசல் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை, பாக்கு மென்று கொண்டிருந்த சங்குண்ணி நாயரின் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

டாக்டர் மீண்டும் ஒருமுறை வந்தார்.

டாக்டர் கூறியபடி விலை அதிகமான மருந்துகளை சங்குண்ணி நாயர் கல்கத்தாவிலிருந்து வரவழைத்தார். பணக்கார நோயாளிகளுக்குத் தருகின்ற உணவை அந்த இளைஞனுக்கு அவர் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், என்ன பண்ணியும் குட்டப்பனின் நோய் குணமாவதாகத் தெரியவில்லை.

டாக்டரை மாற்றினார் சங்குண்ணி. குளிர்க் காய்ச்சலும், விஷ ஜுரமும் ஒன்று சேர்ந்து குட்டப்பனைப் பிடித்திருப்பதாக புதிய டாக்டர் சொன்னார். ஏழு நாட்கள் அவரின் சிகிச்சை தொடர்ந்தது. கடைசியில் அங்கு வந்த இருபதாவது நாளில் அந்த இளைஞன் மரணத்தைத் தழுவினான்.

சங்குண்ணி நாயர் தன்னுடைய பணப்பெட்டியைத் திறந்து பார்த்தார். அவருடைய மூன்று வருட சம்பாத்தியமான 350 ரூபாயில் மீதி 85 ரூபாய் இருந்தது.

அதை எடுத்துக் கொண்டு உண்ணிக்கிருஷ்ண மேனனைத் தேடிவந்த சங்குண்ணி நாயர் சொன்னார்:

"சவ அடக்கத்தை மிகவும் சிறப்பா நடத்தணும்."

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.