Logo

படகு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6942
padagu

துறைமுகத்திற்கு மிகவும் அருகிலேயே இருக்கிறது. அந்தப் படகுத்துறை. அங்குப் படகு ஓட்டும் மம்முவைத் தெரியாத ஆள் அந்தப் பகுதியிலேயே இருக்க முடியாது என்பதுதான் உண்மை. மம்மு அங்கு படகோட்டியாக வந்து ஏழு வருடங்களாகி விட்டன. இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கிறது.

மாநிறமாக இருந்தாலும் நல்ல அழகையும், உடல் பலத்தையும், நல்ல உடலமைப்பையும், பிரகாசமான முகத்தையும் கொண்ட மம்முவை ஒரு முறை பார்த்துவிட்டால், அதற்குப்பிறகு அவனை யாரும் மறக்க மாட்டார்கள்.

வேலையில் சேர்ந்ததிலிருந்து இன்று வரை ஒருநாள் கூட அவன் படகோட்ட வராமல் இருந்ததே இல்லை. பொழுது புலரும் நேரத்திலிருந்து நள்ளிரவு ஆகும்வரை அவன் தன்னுடைய படகைவிட்டுப் பிரியமாட்டான். அவனுக்கு வாப்பா, உம்மா யாரும் இல்லை. அவனுக்கு இருந்தது ஒரே ஒரு சகோதரிதான். ஆயிஷாவைத் திருமணம் செய்தது படகுத் துறைக்கு அருகிலேயே வசித்துக் கொண்டிருக்கும் ஒரு மாட்டு வண்டிக்காரனான மாப்பிள்ளைதான்.

படகு மம்முவிற்குச் சொந்தமானதுதான் வாப்பாவின் சொத்திலிருந்து கிடைத்த நாற்பது ரூபாய்க்கு அவன் அதை விலைக்கு வாங்கினான். அந்தப் படகு! அது ஒன்றுதான் அவனுக்கென்று இருக்கும் ஒரே சொத்து! அவனுக்குப் பிரச்சினை இல்லாமல் சாப்பிட உதவியாக இருக்கும் ஒரே கருவி அதுதான். அவனுடைய விலை மதிப்புள்ள விளையாட்டுப் பொருள்கூட அதுதான்.அந்தப் படகில்தான் அவன் தன்னுடைய ஏழு வருட வாழ்க்கையைச் செலவிட்டிருக்கிறான். அந்தப் படகு முழுக்க ஏராளமான நினைவுகள் இருக்கின்றன. அவனைத் தாங்கிக் கொண்டிருக்கும் துணையே அந்தப் படகுதான்.அவனுடைய காதல், இரக்கம், சிந்தனை எல்லாவற்றுக்கும் அந்தப் படகுதான் ஒரே சாட்சியாக இருந்திருக்கிறது. அவனுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. எனினும், அந்த படகின் பலகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த வெள்ளை எழுத்துக்கள் 'டி.மம்மு' என்பதை அவன் நன்கு அறிவான். அவன் அந்த எழுத்துக்களை ஆச்சரியத்துடனும் மதிப்புடனும் பல நேரங்களில் தன்னையே மறந்து பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் படகிற்கு உயிரில்லை என்பதை அவன் நம்பத் தயாராக இல்லை. சூழ்நிலைக்கேற்றபடி இருக்கும் அதன் அசைவையும் குலுக்கலையும் துள்ளலையும் சிணுங்கலையும் கொஞ்சலையும் பார்க்கும்போது அவன் எப்படி வேறு மாதிரி நினைக்க முடியும்?   

ஆறும் கடலும் உயிரோட்டத்துடன் சங்கமமாகிற அந்த இடம். உண்மையிலேய ஆபத்தான ஒரு இடம்தான். இருப்பினும் அந்த இடத்தில் படகோட்டுவது என்பது மம்முவிற்குப் பிடித்த ஒரு விஷயம். அங்கு நீரோட்டத்தால் உண்டான ஆழமும் சுழியும் ஆபத்தும் கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டமும் அவனுக்கு நன்கு பழக்கமானவையே. எவ்வளவு பெரிய அளவில் நீரோட்டமிருந்தாலும் நீரே நோகாதவண்ணம் படகை ஓட்டும் வித்தையை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அந்த வித்தை அவனுக்கு மட்டுமே தெரியும்.

எவ்வளவு காற்று வீசினாலும் சரி, எவ்வளவு அலை உண்டானாலும் சரி, எவ்வளவு நேரமானாலும் படகைத் தேடி வந்தவர்களை அக்கரையில் கொண்டுபோய்விட மம்மு தயங்குவதேயில்லை. படகில் ஏறியிருப்பவர்கள் தனக்கு நன்கு தெரிந்தவர்களாக இருந்தால் மம்மு ஒரு 'கெஸ்' பாடுவான். அவனுக்கு நன்றாகவே பாடத் தெரியும்.

படகுத் துறைக்குச் சொந்தக்காரர் முஸ்ஸஹாஜியார் முதலாளி. ஹாஜியாருக்கு படகுத் துறைக்குப் பக்கத்திலேயே அரிசி வியாபாரமும் நடக்கிறது. மம்முவிற்கு ஒவ்வொரு நாளும் ஐந்தணா கூலியாகக் கிடைக்கும். நான்கணா படகு ஓட்டியதற்கான கூலி. மீதி ஒரு அணா படகிற்கான வாடகை. இது தவிர, நல்ல வசதி படைத்த முதலாளிகள் யாராவது படகுத் துறைக்கு வந்தால், அவனுக்கு 'இனாம்' என்ற பெயரில் ஏதாவது கிடைக்கும். ஹாஜியாருக்கு மம்முவை மிகவும் பிடிக்கும். இரவு நேரம் வந்து விட்டால் ஹாஜியார் படகுத் துறையை மம்முவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்குப் புறப்பட்டு போவார். மறுநாள் காலையில் முதல் நாள் இரவில் கிடைத்த பணத்தில் காலணா கூட குறையாமல் அவன் முதலாளியின் கையில் ஒப்படைப்பான். முதலாளி அந்தப் பணத்தை எண்ணிப் பார்க்கக்கூட செய்யாமல் அப்படியே பைக்குள் போடுவார்.

அவன் மதிய நேரமும் இரவிலும் சாப்பிடுவது தன்னுடைய சகோதரி ஆயிஷாவின் வீட்டில்தான். அதற்காக அவன் தினமும் இரண்டணாவை அவளிடம் கொடுத்துவிடுவான். இரவில் படகுத்துறையிலேயே படுத்துவிடுவான்.

அங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கும் ஒரு பள்ளி வாசலில் ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழாவைப் பார்க்க அவன் போவான். அதாவது- வருடத்திற்கொரு முறைதான் அவன் அந்தப் பகுதியைவிட்டே வெளியே செல்வான்.

இப்படியே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. பிரகாசமும் குளிர்ச்சியும் நிறைந்த ஏழு வருடங்கள் அவனுடைய வாழ்க்கையை வருடியபடி கடந்தோடிவிட்டன. மிதுன மாதத்தின் ஓர் இரவு. சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் மேகங்கள் எதுவும் இல்லாமல் வானம் மிகவும் தெளிவாக இருந்தது. வெண்பட்டு போல ஒரு நிலவொளி பூமியை மூடிக் கொண்டிருந்தது. அது புழுதியை பளிங்கென பிரகாசிக்கச் செய்தது; கடல் நீரை 'தகதக'வென மின்னச் செய்தது.

மம்மு படகுத் துறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று தன்னை யாரோ அழைப்பதைக் கேட்டு அவன் கண் விழித்தான். தூக்கத்தின் ஒரு மெல்லிய இனிய அனுபவத்துடன் அவன் கண்களைக் கைகளால் கசக்கியவாறு எழுந்து உட்கார்ந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். மறுகரையில் ஆற்றோரத்தில் வெண்மையான ஒரு உருவம் நிற்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது.

"பொழுது புலர்றதுக்கு இன்னமும் நேரமிருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல யார் அக்கரையில இருந்து என்னைக் கூப்பிடுறது?" என்று கூறியவாறு அவன் தென்னையுடன் சேர்த்துக் கட்டியிருந்த படகை அவிழ்த்தான். லுங்கியை மடித்துக் கட்டியவாறு படகை நதிக்குள் செலுத்தினான். படகின் முன்பகுதியில் பாய்ந்து உட்கார்ந்து துடுப்பை எடுத்து மெதுவாகத் துழாவ ஆரம்பித்தான்.

தூரத்தில் இருக்கும் பாறைகள்மீது அலைகள் வந்து மோதி உண்டாக்கிய ஓயாத அந்த சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. நிலவு வெள்ளி பூசிக்கொண்டிருந்த சிறு சிறு அலைகளைக் கடந்தவாறு படகு மறு கரையை நோக்கி மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அவன் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.

'எதற்காக பூங்கொத்தே

பன்னிரண்டு ஆக வேண்டும்?

எப்போது இப்பூமரம் விரிந்து

நான் தேன் குடிப்பது?'

அக்கரையில் படகைக் கொண்டுபோய்விட்ட அவன் கரையில் ஏறினான்.

அந்த உருவம் சற்று தூரத்தில் நின்றிருந்தது. மம்மு அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தான். ஒருவேளை அது பேயாக இருக்குமோ என்று எண்ணி அவன் திடுக்கிட்டு நின்றான். பின்பு சற்று நெருங்கி நன்றாக உற்றுப் பார்த்தான்.


ஒரு தாயும் அவளின் இடுப்பில் ஒரு குழந்தையும்!

"எங்களை அந்தக் கரையில கொண்டுபோய் விடணும்."

அந்தச் சலனம் உண்டாக்கக்கூடிய இனிமையான வார்த்தைகள் அவன் மனதில் ஒரு சிறு பாதிப்பை உண்டாக்கியது. அவன் மனதில் இருந்த சந்தேகம் முழுமையாக நீங்கிவிட்டது. ஆனால், ஆச்சரியம் அவனைவிட்டு சிறிதும் நீங்கவில்லை. அவன் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். வெண்மையான துணியால் தலை வரை அவள் மூடியிருந்ததால் அவளுடைய முகத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அந்த முகமோ முழு நிலவைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. குழந்தையை இறுக அணைத்திருந்த அவளின் இடதுகை நிறைய தங்க வளையல்களும் கைவிரல்களில் கல்வைத்த தங்க மோதிரங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மருதாணி போட்டு சிவப்பாக இருந்த கால் பாதங்களில் பாதி மணலில் மறைந்திருந்தது. ஒரு பட்டுக் குடையை விரித்துப் பிடித்திருந்ததில் அவள் அதற்குப் பின்னால் அவ்வப்போது மறைந்து கொண்டிருந்தாள்.

மொத்தத்தில் அவள் தாமரை இலைக்குப் பின்னால் தலையை மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னப் பறவையைப் போல் இருந்தாள். அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர மம்முவால் எதுவும் பேசமுடியவில்லை. கடைசியில் மம்மு கேட்டான்: "தன்னந்தனியா இந்த ராத்திரி நேரத்துல நீங்க எங்கே போறீங்க?"

அவள் தலையைக் குனிந்தவாறு பதில் சொன்னாள்: "நிலவைப் பார்த்துட்டு பொழுது விடிஞ்சிருச்சுன்னு நினைச்சு வீட்டை விட்டு கிளம்பிட்டேன். நாங்க ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகணும்."

மம்மு அதற்குமேல் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அவள் ஒரு கையால் புடவையைச் சற்றுத் தூக்கிப் பிடித்து, முழங்கால்வரை இருக்கும் தண்ணீரில் படகை நோக்கி நடந்தாள்.

மம்மு படகில் ஏறி அதிலிருந்த தண்ணீரை வெளியேற்றி ஒரு பாயை விரித்துப் போட்டான். அவள் குழந்தையைப் பாயில் படுக்க வைத்து சற்று குனிந்து கணுக்கால்களை உயர்த்தியவாறு அதே இடத்தில் நின்றிருந்தாள்.

மம்மு படகை அவிழ்த்து முன்னால் உட்கார்ந்து துடுப்பைப் போட்டு துழாவி படகைச் செலுத்தினான். பலம் படைத்த அவனுடைய கைகள் தொடர்ந்து செயல்பட அந்தச் சிறிய படகு நிலவொளியில் உணர்ச்சிவசப்பட்டுக் கிடக்கும் நதியின் விரிந்த மார்பின் வழியாக நீந்திக் கொண்டிருந்த இதயபூர்வமான காட்சியைப் பார்ப்பதற்கு வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

இதற்கு முன்பு அனுபவித்திராத ஒரு புதிய ஆனந்தத்தின் ருசியை அனுபவித்தவாறு அவன் படகைச் செலுத்தினான். அந்த ஆனந்தம் ஆயிரம் மடங்காகப் பெருகி அவனுடைய உள்மனதில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது.

தான் இப்போது கண்டுகொண்டிருக்கும் காட்சியை அவனால் சிறிதுகூட நம்ப முடியவில்லை. நிலவொளியில் மூழ்கிக் கிடக்கும் பொழுது புலராத நேரம். எல்லாரும் ஆழமான தூக்கத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு உயிரின் சத்தமோ, அசைவோ அப்போது கேட்கவேண்டுமே! தூரத்தில் கடலிலிருந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் இரைச்சல் சத்தம் மட்டும் கேட்ட வண்ணம் இருந்தது. தூக்கத்தில் மூழ்கிவிட்டிருக்கும் இயற்கையின் குறட்டை ஒலியைப் போல அது இருந்தது. அவனுடைய சிறு படகு நதியின் குளிர்ச்சியான மார்பின் வழியாக மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அதில் துணைக்கு என்று யாருமில்லாத ஒரு அழகான இளம்பெண் அமர்ந்திருக்கிறாள். அவள் உலகில் வந்து விழுந்த தேவகன்னிகளில் ஒருத்தியாக இருப்பாளோ என்று அவன் நினைத்தான். அவன் அவளைப் படகில் உட்கார வைத்து அதைச் செலுத்திக் கொண்டிருந்தான். அவர்கள் நதியின் மையப்பகுதியில் இருந்தார்கள். தூரத்தில் பாறைமீது அலைகள் விடாமல் மோதிக் கொண்டேயிருந்தன. மெல்லிய குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. பலவிதமான இனிய விஷயங்களும் ஒன்று சேர்ந்து படகை நதியில் நீந்தச் செய்து கொண்டிருந்தன. 'க்ல-களக்ல' என்ற ஒலி அவனுடைய காதுகளில் ஒலித்து அவனை புதுவகையான ஒரு உணர்வுக்கு ஆளாக்கியது. கனவு உலகத்தை நோக்கி ஆயிரம் வெள்ளிக் கீற்றுகளைப் பாய்ச்சியவாறு பிறைநிலவு வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்தக் காட்சி மிகவும் இனிமை பயக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. கவிதையின் உயிர்ப்பு கொண்ட ஒரு அழகு ஓவியம் அது!

அவனுக்குப் பாட வேண்டும் போல் இருந்தது. எனினும் வெட்கம் அதைச் செய்யவிடாமல் அவனைத் தடுத்தது.

அவன் அவளைப் பார்த்தான். அவளின் கறுத்த அகலமான கண்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அவர்களின் பார்வைகள் ஒன்றையொன்று மோதியபோது அவள் ஒரு வகை அதிர்ச்சியுடன் தன் முகத்தை மூடியவாறு தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளின் அந்தச் செயல் அவனுடைய இதயத்தை என்னவோ செய்தது. நிலவொளியில் வெள்ளரிக்காயைப் போல இருந்த அந்த முகத்தையும் கருகருவென்றிருந்த அந்தக் கண்களையும் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே அவன் பார்த்தான்.

அவளுடைய குழந்தை மெதுவாக ஊர்ந்துவந்து அவன் காலைப் பிடித்துக்கொண்டு நின்றது. அதைப் பார்த்ததும் அவனுடைய இதயத்தில் ஒருவித உணர்ச்சி கொந்தளித்தது. அவன் குழந்தையின் முகத்தைப் பார்த்தான். அது 'உப்பா' என்று அழைத்தவாறு அவளைப் பார்த்து சிரித்தது. "ஆமினா... ஆமினா... இங்கே வா"- அந்தக் குழந்தையின் தாய் ஆவேசத்துடன் கையை நீட்டி அழைத்தாள். ஆனால், அவள் அழைத்ததை காதிலேயே வாங்கவில்லை ஆமினா. அவள் மம்முவின் கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

'ஆமினா' என்ற பெயர் மம்முவின் இதயத்தை நிலைகுலையச் செய்தது. அது இறந்துபோன அவனுடைய உம்மாவின் பெயர்.

படகு லேசாகக் குலுங்கியது. அந்தக் குழந்தை எங்கே கீழே விழுந்துவிடப்போகிறதோ என்று நினைத்த மம்மு அவளைத் தன் கால்களுக்கிடையில் இறுகப் பற்றிக் கொண்டான்.

ஆமினா குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு மம்முவின் தொடைகளைக் கைகளால் அடிக்க ஆரம்பித்தாள்.

மம்மு குனிந்து ஒரு கையால் குழந்தையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு இன்னொரு கையால் படகைச் செலுத்தினான்.

ஆமினா அவனுடைய தாடையைக் கையால் அடிப்பதும் சிரித்துக்கொண்டே கிள்ளுவதுமாக இருந்தாள். அவனுடைய மடியில் அவள் உட்கார்ந்திருக்க, படகு நகர்ந்து கொண்டிருந்தது.

மம்மு குழந்தையைப் பார்த்ததும் உணர்ச்சிமயமாகிவிட்டான். அவன் ஆமினாவின் தடித்த உதடுகளிலும் சதைப்பிடிப்பான கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்.

மம்மு கேட்டான்: "ஆமினா, உனக்கு உப்பா இல்லியா?"

"இல்ல..."- வருத்தம் கலந்த குரலில் அந்தப் பெண் பதில் சொன்னாள்: "அவர் இறந்து மூணு மாசமாச்சு. உப்பான்னு நினைச்சுத்தான் அவ உங்கக்கிட்ட இவ்வளவு நெருக்கமா இருக்கா."

மம்மு ஆமினாவை மீண்டுமொருமுறை முத்தமிட்டான். அவள் அலைகளைப் போல குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு தன்னுடைய பிஞ்சு விரல்களை மம்முவின் வாய்க்குள் வைத்தாள்.


அவனுடைய இதயம் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப்போய் நின்றுவிடும் போலிருந்தது. அவன் ஒரு நீண்ட பெருமுச்சை விட்டான்.

படகு மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

மம்மு தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்தான். விரிந்து கிடந்த கடல் நிலவொளியில் ஆகாயத்தின் தொடர்ச்சியைப் போல் தோன்றியது. அவன் அக்கரையைப் பார்த்தான். நட்சத்திரமொன்று கண்சிமிட்டியவாறு அந்தத் தென்னந்தோப்பில் போய் விழுந்தது. அவன் அந்த அழகிய பெண்ணின் முகத்தைப் பார்த்தான். அவளும் அந்த நட்சத்திரம் விழுவதைப் பார்த்துக் கொண்டுதானிருந்தாள்.

படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் குழந்தையை மடியிலிருந்து தூக்கி முத்தமிட்டு கீழேவிட்டான். படகு இன்னும் முழுமையாக நிற்கவில்லை. அந்த இளம் பெண் குழந்தையை எடுப்பதற்காக படகில் நடந்ததும் படகின் ஒரு பக்கம் சாய, அவள் கால் தடுமாறி முன்னோக்கி- மம்முவை நோக்கி - விழுந்ததும், அவன் தன்னுடைய இரண்டு கைகளாலும் அவளை இறுகப் பிடித்ததும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தன. ஒரு நிமிடம்... அவள் பின்னோக்கி நெளிந்தாள்.

மம்மு அதிர்ச்சியில் உறைந்து போய் ஒருவித உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலையென அதே இடத்தில் நின்றிருந்தான்.

அவள் கரையில் கால் வைத்து குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, புடவையின் முந்தானையிலிருந்து முக்கால் பைசாவை எடுத்து மம்முவிடம் நீட்டினாள்.

அதை அவன் வாங்கிக் கொள்ள வேண்டியது முறையான ஒன்று தானே! அவன் கையை நீட்டி அந்தக் காசை வாங்கிக் கொண்டான்.

விடைபெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மம்முவைத் திரும்பிப் பார்த்த அவள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள்.

அந்த இரவு நேரத்தில் அவள் அப்படி தனியாக நடந்து போவதைப் பார்த்த மம்முவிற்கு என்னவோ போல் இருந்தது. எனினும் அவளைப் பின்பறற்றி நடந்து செல்லும் தைரியம் அவனுக்கு இல்லை.

அவள் நடந்துபோன பாதையைப் பார்த்தவாறு அவன் அதே இடத்தில் சிறிது நேரம் அசையாமல் நின்றிருந்தான். அதிகாலைக் கோழி அப்போது கூவியது. அவன் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுவதைப் போல சுயநினைவிற்கு வந்து படகில் போய் உட்கார்ந்தான். அப்போது படகில் என்னவோ மினுமினுப்பாக கிடப்பதை அவன் பார்த்தான். அவள் அமர்ந்திருந்த பாயில் ஒரு தங்க வளையல் கிடந்தது- அவன் அந்த வளையலைக் கையில் எடுத்துக்கொண்டு கரையில் குதித்தான். அவள் நடந்து போன திசையில் அவன் வேகமாக ஓடினான். ஒரு மைல் தூரம் ஓடியபிறகு அவன் அவளைப் பார்த்தான். மூச்சிரைக்க தன்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் மம்முவைப் பார்த்த அவள் வாய்விட்டு கத்திவிட்டாள். ஆனால் அவன் அந்தத் தங்கவளையலை நீட்டிவாறு மூச்சுவிட்டுக் கொண்டே தெளிவில்லாமல் ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொன்னவாறு தனக்கு முன்னால் சற்று தயக்கத்துடன் நின்றிருந்ததைப் பார்த்ததும், அவள் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டாக ஆரம்பித்தது.

அவள் கேட்டாள்: "ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போறதுன்னா இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?"

மம்மு சொன்னான்: "இன்னும் ரெண்டு மைல் தூரம் போகணும்." தொடர்ந்து தன் மனதில் சொல்ல நினைத்த விஷயத்தை தயங்கிய குரலில் தட்டுத்தடுமாறி மெதுவாக அவன் சொன்னான்: "வழி தெரியலைன்னா நான் கூட வந்து காட்டுறேன்."

அவள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.

புழுதி நிறைந்த அகலமான ஒரு பாதை அது. கண்ணாடித் துகள்களைப் போலிருந்த அந்த மண்ணில் நிலவொளி பிரகாசித்தது. இரு பக்கங்களிலும் இருந்த உயரமான வேலிகளில் மருதாணிச் செடிகள் வளர்ந்து படர்ந்து காணப்பட்டன. அங்கு அரிப்பூச் செடிகளும் தெச்சி மரமும் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டன. அந்த அமைதியான சூழ்நிலையில் அந்தத் தன்னந்தனியான பாதையில் என்னவோ பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் மெதுவாக நடந்து சென்றார்கள். குளிர்ச்சியான அதிகாலைக் காற்று அவர்கள்மீது பட்டு போய்க் கொண்டிருந்தது.

ஆமினா அந்த இளம்பெண்ணின் இடுப்பிலிருந்து மம்முவிடம் வருவதற்கு என்னென்னவோ சாகசங்களைச் செய்து கொண்டிருந்தாள்.மம்மு கையை நீட்டினான். அவள் தன் குழந்தையை அவனிடம் தந்தாள்.

அருகிலிருந்த ஒரு நெல்லி மரத்தின் மீதிருந்த குருவியும் புறாவும் அதிகாலை நேரம் வந்துவிட்டதை அறிவிப்பதற்காக சத்தமிட ஆரம்பித்தன.

அவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நெருங்கினார்கள். மம்மு மனமே இல்லாமல் ஆமினாவைத் திரும்பவும் அந்த இளம் பெண்ணின் கையில் கொடுத்தான். அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் இப்படி முடிந்தது:

"ஆமா... நீங்க எங்கே போகணும்?"

"கோழிக்கோட்டுக்கு..."

"அங்கே யாரு இருக்காங்க?"

"அண்ணன்..."

"கோழிக்கோட்டுல எங்கே?"

"நகரத்துலதான்..."

"எப்போ திரும்பி வருவீங்க?"

"இப்போ திரும்பி வர்றதா இல்ல..."

சிறிது நேரம் அவர்களுக்கிடையில் ஒரே அமைதி நிலவியது.

பிறகு அவள், "நீங்க செய்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். ஆமா... நீங்க எப்பவாவது கோழிக்கோட்டுக்கு வருவீங்களா?" என்று கேட்டாள். மம்மு சிறிது நேரம் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தான். பிறகு வருத்தம் தோய்ந்த குரலில் அவன் சொன்னான்: "நான் வந்துட்டா இங்கே யாரு படகு ஓட்டுவாங்க?"

மீண்டும் அமைதி.

மம்மு மிகவும் தயங்கியபடி தடுமாறிய குரலில் மெதுவாக அவளைப் பார்த்துக் கேட்டான்: "உங்க பேரு என்ன...?"

அவள் சிறிது நேரம் தயங்கியபடி எதுவும் பேசாமல் நின்றாள். மம்முவின் முகத்தில் ஒருவித பிரகாசம் உண்டானது. 

பிறகு அவள் மெதுவான குரலில் "அலீமா" என்றாள்.

'அலீமா! அலீமா!'- மம்மு மனதிற்குள் கூறிப் பார்த்தான். அவர்கள் அதற்குள் ரயில்வே ஸ்டேஷனுக்கு மிகவும் நெருக்கமாக வந்திருந்தார்கள். "அதுதான் அலுவலகம் நான் புறப்படுகிறேன். சந்தையில இருந்து வர்றவங்க சுமைகளோட படகுத்துறையில காத்திருப்பாங்க..."

பிரிந்துபோகும் அவனையே அலீமா ஒருவகை ஆர்வத்துடன், ஈர்ப்புடன் பார்த்தாள். 

மம்முவின் இதயம் நீரில் மூழ்க வைத்த பூசணிக்காயைப் போல மேலே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. அவன் திரும்பிப் பார்க்காமல் தலையைக் குனிந்தவாறு நடந்தான். சிறிது தூரம் நடந்தபிறகு அவனால் திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. உள்ளே எழுந்த ஒருவகை உணர்வுடன் அவன் திரும்பிப் பார்த்தான். அலீமா அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்டவுடன் அவள் ஆமினாவின் பிஞ்சுக் கரங்களைக் கையிலெடுத்து அவற்றால் அவனை அழைத்தாள்.

மம்மு படகுத் துறையை நோக்கி சிரமமான மனதுடன் நடந்தான்.

அக்கரையில் இருந்த சுமை வைத்திருந்தவர்கள் உரத்த குரலில் அவளை அழைத்தார்கள். அவன் படகை நகர்த்தினான். ஆனால், எப்போதும் போல அதில் வேகமாக அவன் பாய்ந்து உட்காரவில்லை.


அதில் அமர்ந்துகொண்டு பாடவில்லை. ஒரு இயந்திரத்தைப் போல அவனுடைய கைகள் இயங்கிக் கொண்டிருந்தன.

வானம் நன்கு வெளுத்திருந்தது. நிலவு ஒரு நீர்க்குமிழியைப் போல காணாமல் போயிருந்தது.

படகு மூன்றாவது முறையாக ஆற்றின் நடுப்பகுதியை அடைந்த போது, பாலத்தின் மீது புகைவண்டி போய்க்கொண்டிருக்கும் சத்தம் அவனுடைய காதுகளில் விழுந்தது. புகைவண்டி அவளையும் ஏற்றிக் கொண்டு கோழிக்கோட்டை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

அவன் அமைதியாய் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று முதல் மம்முவின் நடவடிக்கை ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்தன. அவனிடமிருந்த உற்சாகம் முற்றிலும் காணாமல் போயிருந்தது. தமாஷாகப் பேசுவதும் பாடுவதும் முழுமையாக நின்றுவிட்டிருந்தது. படகில் பயணம் செய்பவர்கள் தங்களுக்குள் தமாஷாகப் பேசிக் கொள்ளும்போது, அதில் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதேயில்லை. யாரிடமும் அவன் பேசுவதே கிடையாது. அவன் எப்போது பார்த்தாலும் தீவிர சிந்தனையில் இருப்பது மாதிரியே இருந்தான்.

பல புதிய ஆசைகளும் நோக்கங்களும் அவனை வந்து ஆக்கிரமித்தன. அவன் பல புதிய காட்சிகளைக் கண்டான். புதிதான ஒரு ஆனந்தமயமான பாடல்வரிகள் எங்கோ தூரத்திலிருந்து அவனைத் தடவிச் சென்றன. மரணமடையாத பலப்பல இனிய நினைவுகளில் அவன் மூழ்கிக் கிடந்தான். உயிருள்ள பல கனவுகள் அவன் கண்களில் குடிகொள்ள ஆரம்பித்தன. மம்முவிடம் உண்டான இந்த மாறுதல்களை ஹாஜியார் கவனிக்காமலில்லை. "என்ன... நம்ம மம்முவோட குணம் எவ்வளவோ மாறினது மாதிரி இருக்கே?" என்று ஹாஜியார் ஒருநாள் விசாரித்தார். ஆனால், அதற்கு மம்மு எந்த பதிலும் கூறவில்லை.

மூன்று நாட்கள் கடந்தன. நான்காம் நாள் காலையில் மிகவும் மனவருத்தத்துடன் தயங்கியவாறு மம்மு ஹாஜியாரைத் தேடிச் சென்றான். மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்ட அந்த உடலையே ஹாஜியார் உற்றுப் பார்த்தார்.

முந்தைய நாள் தரவேண்டிய பணத்தை ஹாஜியாரிடம் ஒப்படைத்த மம்மு சொன்னான்: "முதலாளி, நீங்க என் படகை வாங்கிக்கோங்க..."

ஹாஜியார் ஆச்சரியம் மேலோங்க அவனைப் பார்த்தார்.

"என்ன மம்மு, உனக்கு ஏதாவது செலவுக்குப் பிரச்சினையா?"

"இல்ல... நான் இங்கேயிருந்து போகப்போறேன்."

"எங்கே?"

"கோழிக்கோட்டுக்கு..."

"எதுக்கு?"

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

ஹாஜியார் அதற்குப் பிறகும் அவனைப் பார்த்து பல கேள்விகள் கேட்டார். ஆனால், மம்மு கவலையுடன் தலையைக் குனிந்து கொண்டு எதுவுமே பேசாமல் நிற்க மட்டுமே செய்தான்.

கடைசியில் ஹாஜியார் பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐந்து ருபாய் நோட்டையும் எடுத்து அவன் கையில் தந்தார். முந்தைய நாள் தரவேண்டிய அவனுடைய கூலி ஐந்தணாவுடன் இனாமாக ஒரு ரூபாய் சேர்த்து இரக்க குணம் கொண்ட அந்த முதலாளி அவனிடம் தந்தார். கண்ணீருடன் மம்மு அவரிடம் விடைபெற்றான். அந்தப் பணத்தைக் கையில் இறுகப் பிடித்தவாறு தன்னுடைய செல்லமான படகை கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதற்குக் கூட தைரியமில்லாமல் தலையைக் குனிந்தவாறு அவன் நேராக ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடந்தான். அன்று மதிய நேரத்தில் அவன் கோழிக்கோட்டை அடைந்தான். அந்தப் புதிய நகரத்தைப் பார்த்து அவன் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டான். தான் பிறந்து வளர்ந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர, ஒரு சிறு நகரத்தைக் கூட அவன் தன் வாழ்க்கையில் அதுவரை பார்த்ததில்லை. கோழிக்கோடு நகரத்தின் ஜனக் கூட்டத்தையும், ஆடம்பரத்தையும் சாலைகளில் வந்து கொண்டிருந்த வாகனங்களையும் உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களையும் வியப்பைத் தரும் காட்சிகளையும் நவநாகரீகமாக இருந்து மக்களின் ஆடைகளையும் பார்த்து அவன் திகைத்துப்போய் நின்று விட்டான். நுரை எழுந்து கொண்டிருக்கும் மதுவில் சிக்கிக்கொண்ட ஒரு ஈயைப்போல அவன் குழப்பமடைந்து நின்றான்.

அவன் சிறிது நேரம் உட்காரலாம் என்ற எண்ணத்துடன் ஆளில்லாத ஒரு கடைத்திண்ணைப் பக்கமாகச் சென்றான். காலில் நாற்றமெடுத்த புண்களைக்கொண்ட ஒரு பிச்சைக்காரனும் அதே நேரத்தில் அந்தக் கடைத் திண்ணையைத் தேடி வந்தான். அவ்வளவுதான்- மம்மு அந்த இடத்தைவிட்டு அப்போதே புறப்பட்டு விட்டான்.

நகரத்தின் ஆரவாரமும் தூசிப் படலமும் அவன் மனதை நோகடித்தன. எங்கு பார்த்தாலும் இருந்த கெட்ட நாற்றமும் ஈக்களின் கூட்டமும் அவனை வெறுப்படையச் செய்தன.

அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பிட நினைத்தான். யாரோ ஒரு பெரிய ஹோட்டலை அவனுக்குக் காட்டினார்கள். அவன் அங்கு நுழைந்து சாப்பிட உட்கார்ந்தான்.  பத்துப் பன்னிரண்டு பாத்திரங்களில் என்னென்னவோ வைத்து அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள். அவன் அவற்றில் எதையும் தொட்டுக்கூட பார்க்காமல், ஒருபிடி சோற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழுந்து கையைக் கழுவினான். ஹோட்டல் பணியாட்கள் அவனைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தார்கள்.

சாப்பிட்டதற்குக் கட்டணம் எட்டு அணா.

தனக்கு ஒரு புதிய துணியும் சட்டையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். முதலில் பார்த்த ஒரு துணிக்கடைக்குள் அவன் நுழைந்தான். கடைசியில் வேலை பார்ப்பவர்கள் அவனுக்கு என்னென்னவோ துணிகளைக் காட்டி ஆறு ரூபாய் அவன் செலவழிக்கும்படி செய்துவிட்டார்கள்.

புதிய ஆடையும் சட்டையும் தொப்பியும் பச்சை நிற பெல்ட்டும் தலைப்பாகையும் அணிந்து அவன் நகரத்தில் சுற்றித் திரிந்தான்.

அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அறிமுகமான முகங்கள் இல்லை. சொல்லித் தருவதற்குக்கூட ஆள் இல்லை. கடைகள் இருக்குமிடங்களிலும் ஒவ்வொரு தெருக்களிலும் அந்தப் பாழும் ஏழை யாரையோ தேடினான். ஒவ்வொரு வீடுகளின் வாசலையும் அவன் ஆர்வத்துடன் பார்த்தான். பல அழகான முகங்களைக் கண்டான். ஆனால், அந்த ஒரு அழகான முகத்தை மட்டும் அவனால் பார்க்கவே முடியவில்லை. அந்தப் பெரிய நகரம் அந்த முகத்தை முழுமையாக விழுங்கி விட்டிருந்தது. அவன் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் அதைத் தேடி அலைந்தான்.

அன்று இரவு படுப்பதற்கு அவன் ஒரு ஹோட்டலைத் தேடிச் சென்றான். ஆனால், ஒரு பொட்டு கூட அவன் தூங்கவில்லை. வெளியில் மூட்டைப்பூச்சிகளும், கொசுக்களும் உள்ளே நினைவுகளும் அவனைப் பாடாய்ப்படுத்தின. சிறிது நேரம் புரண்டும் திரும்பியும் படுத்துப் பார்த்தான். கடைசியில் பாயை விட்டு எழுந்து உட்கார்ந்தான். அந்த இருட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டு பொழுது புலர்வது வரை அவன் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

இப்படியே பதினைந்து நாட்கள் ஓடி முடிந்தன. அவன் கையிலிருந்த கடைசி காசும் செலவானது.


அன்று இரவு அவன் வெற்று வயிற்றுடனும் குழம்பிப்போன சிந்தனையுடனும் கையைத் தலைக்கு வைத்து ஒரு கடைத்திண்ணையில் படுத்துக்கிடந்தான்.

ஹாஜியார் படகுத் துறையை அடைத்துவிட்டுப் போய் சிறிது நேரம் ஆகிவிட்டது. நள்ளிரவு தாண்டிவிட்டிருந்தது. அப்போது ஒரு உருவம் அந்தப் படகுத் துறையை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது.

பார்த்தால், ஒரு பேயைப்போலவே நமக்கு அது தோன்றும். மிகவும் சோர்ந்து மெலிந்து போய்ப் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு இருந்த அந்த உடல் படகுத்துறையின் அறைக்குப் பக்கத்தில் வந்து நின்று நான்கு பக்கங்களிலும் பார்த்தது. 

மழை முழுமையாக நின்றுவிட்டிருந்தாலும் வானம் இன்னும் தெளிவாகாமல் இருந்தது. நிலவு மேகங்களுக்குப் பின்னாலிருந்து லேசாக முகத்தைக் காட்டிக் கொண்டிருந்ததால் மங்கலான நிலவொளி எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அந்த மங்கிய நிலவு வெளிச்சத்தில் சுற்றிலுமிருந்த இடங்கள் இதற்கு முன்பு பார்த்த இடங்கள் என்பதைப்போல் தோன்றின.

நதி ஆவேசத்துடன் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள் கூட்டம் கூட்டமாகமேற்குப் பக்கத்திலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு உள்ளே ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக்கொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு சூறாவளி உண்டாகப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது மாதிரியான ஒரு பயங்கரமான அமைதி சுற்றிலும் நிலவிக் கொண்டிருந்தது.

அந்த உருவம் மீண்டும் ஏதோ உள்ளுணர்வால் உந்தப்பட்டு நான்கு பக்கங்களிலும் பார்த்தது.

படகுத்துறைக்கு அருகில் படகு ஒரு தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. சொடக்கு போடும் நிமிடத்தில் அந்த உருவம் அந்த இடத்தை அடைந்தது. அந்தப் படகு அந்த உருவத்தை யாரென்று புரிந்துகொண்டு விட்டதைப்போல நீரில் லேசாகத் திரும்பிக் குலுங்கியது. மெதுவாக அசைந்து அசைந்து அந்த உருவத்தை நோக்கி படகு நகர்ந்தது. அதற்கு உயிர் இல்லை என்று யார் சொன்னது?

அந்த உருவம் அந்தப் படகின் முன்பக்கத்தைப் பிடித்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டது. அதன் பலகையில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை அந்த உருவம் பார்த்தது. அடுத்த நிமிடம் அதன் கண்கள் நீரால் நிறைந்தது.

மம்மு கிட்டத்தட்ட ஒரு உயிரற்ற உடலைப்போலவே இருந்தான். ஒரு இடத்தில் கூட நிற்காமல் ஐம்பது மைல் தூரம் அவன் நடந்து வந்திருக்கிறான். அவன் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவன் கட்டியிருந்த துணியும் சட்டையும் செம்மண் படிந்திருந்தன.

அவன் படகுத்துறையில் இருந்த அறையைப் பார்த்தான். அந்தத் திண்ணையின் மீது ஒரு தகரவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதையொட்டி விரிக்கப்பட்டிருந்த பாயில் ஒரு பெட்டியைத் தலைக்கு வைத்து தாடி வளர்த்திருந்த ஒரு குள்ளமான முஸ்லீம் உரத்த குரலில் குறட்டை விட்டவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.

தன்னுடைய இப்போதைய நிலை என்னவென்பதை அவன் நன்கு அறிவான். அந்தப்படகு இப்போது அவனுக்குச் சொந்தமானது இல்லை. அந்தப் படகுத்துறையில் அவனுக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்குப் படகில் போக வேண்டுமென்றால் அவனும் கூலியாக முக்கால் பைசா தந்தாக வேண்டும். அவன் பொறாமையுடனும் வெறுப்புடனும் அந்தக் குறட்டைவிட்டுக் கொண்டிருக்கும் காக்காவையே பார்த்தான். இந்த ஜந்து எங்கேயிருந்து வந்தது?

அலைகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தது. அடியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நதியின் மேற்பகுதியில் விழுந்து கொண்டிருந்த நிலவொளியை ஒரு 'க்லகள' சத்தத்துடன் ஏற்றுக்கொண்டு ஆயிரம் அலைகள் நடனமாடிக் கொண்டிருந்த அந்தக் காட்சி அவனுடைய இதயத்தில் ஒருவித உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. நதியின் அக்கரையிலிருந்த குடிசைகளையும் தென்னந்தோப்புகளையும் இருண்ட நிழல் வடிவத்தில் அவன் பார்த்தான்.

அவன் மெதுவாகப் படகில் ஏறினான். அதில் தேங்கியிருந்த தண்ணீரை எடுத்து வெளியேற்றினான். பிறகு படகின் கட்டை அவிழ்த்து அதில் காலை நீட்டி உட்கார்ந்து மேற்குப் பக்கமிருந்த கடலை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.

அவனுடைய இதயத்தில் ஒரு புதிய துணிவு உண்டாகியிருந்தது. அவன் மனம் பலவித சிந்தனைகளிலும் மூழ்கியது. அவன் உயிரோட்டமுள்ள ஒரு பாடலாக மாறினான்.

'எதற்காக பூங்கொத்தே

பன்னிரண்டு ஆக வேண்டும்?

எப்போது இப்பூமரம் விரிந்து

நான் தேன் குடிப்பது?’

மகிழ்ச்சியான எண்ணங்களில் மூழ்கிப்போன அவன் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தான்.

படகின் வேகம் கூடியது. தொடர்ந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலைகளின் சத்தம் படிப்படியாக அவன் செவிகளிலிருந்து மறைந்தது. அது அவனுக்கு ஒரு ஆபத்தை அறிவிப்பதைப் போல் இருந்தது.

வானம் இருண்டது. காற்று ஆவேசமாக வீசத் தொடங்கியது. முழுக்கடலும் நுரைகள் சகிதமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அலைகள் மயமாக இருந்தது. அந்தப் படகு கடலும் தநதியும் சந்திக்குமிடத்தில் ஒரு குதி குதித்தது.

மம்மு சுக்கானைக் கீழே இறக்கிவிட்டு புன்சிரிப்பு தவழ படகின் இரண்டு பக்கங்களையும் பிடித்தவாறு முன்னால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த நீர்ப்பரப்பைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

இரண்டு முறை அந்தப்படகு நீரில் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அந்த இறுதிக் கட்டம் வந்தது. ஒரு பெரிய அலை அவனை 'வா' எனஅழைத்தது.

கர்ஜித்து வரும் சிங்கத்தைப் போல பயங்கர ஆவேசத்துடன் பாய்ந்தோடி வரும் ஒவ்வொரு அலையும் அங்கிருந்த பாறைகள் மீது மிகவும் பலமாக மோதியவுடன் உண்டான ஆயிரக்கணக்கான நீர் முத்துக்கள் நான்கு பக்கங்களிலும் சிதறின.

அந்தப் படகு சாய்ந்து ஆடிக்கொண்டே சிறிது தூரம் பயணித்தது. அடுத்த நிமிடம் உயரமாக எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டு வந்த ஒரு அலை அதைப் பின்னோக்கி ஒரு அடி அடித்தது.

மறுநாள் புதிய படகோட்டி முஸ்ஸஹாஜி முதலாளியின் அருகில் சென்று பதைபதைப்புடன் சொன்னான்: "முதலாளி, நேற்று வீசின பலமான காற்று, மழையால் நம்ம படகு கயிறு அறுந்து தண்ணியில போயிருச்சு..."

ஹாஜியார் கவலையுடன் உட்கார்ந்திருந்தாரே தவிர, அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.