Logo

காட்டு செண்பகம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7488
kattu shenbagam

காட்டு செண்பக மரத்தைப் பார்க்கும்போது என்னுடைய மனதில் பலவிதப்பட்ட உணர்ச்சிகளும் அலைமோதும். பல காரணங்களாலும் மற்ற பூ மரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்ற ஒரு வினோதமான மரம்தான் காட்டு செண்பகம். மலைச்சரிவிலும் கோவில் இருக்கும் இடங்களிலும் சுடுகாட்டிலும் மதில்களின் மூலையிலும் அது கொடிகுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும். கேரளத்தில் மட்டுமல்ல நிறத்திலும் மணத்திலும் வேறுபட்டிருக்கும் மலர்களுடன் அது சிலோனிலும் மலேயாவிலும் இந்தோனேஷியாவிலும் கூட இருக்கிறது.

இவைகளெல்லாம் உதிர்ந்து வயதாகி முற்றிப்போன அதன் கிளைகள் பொன் நிறத்தில் பூக்களைச் சூடி நிற்பதைப் பார்க்கும் போது இனம்புரியாத ஒரு பயம் மனதில் தோன்றும். முள்கிரீடம் போலவும், எலும்புக்கவசம் போலவும், பவளப்புற்று போலவும் குஷ்டரோகியின் கையைப் போலவும் அந்த மரம் என் கண்களுக்கு முன்னால் மாறி மாறித் தோன்றும்.

காட்டு செண்பகத்தைப் பற்றி இப்படிப்பட்ட எண்ணங்கள் நான் பாலித் தீவுக்குப் போவதற்கு முன்பு என்னிடம் இருந்தன. பாலியில் நான் பார்த்த ஒரு காட்டு செண்பக மரமும் அதற்கு அடியில் உட்கார்ந்திருக்கும் ஒரு வயதான கிழவியும்- அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல் கதையும்- என் மனதில் ஒரு புதிய ஓவியத்தை வரைந்தது. இப்போது காட்டு செண்பக மரத்தைப் பார்க்கும்போது அந்த ஓவியம்தான் என் மனதிற்குள் தோன்றுகிறது. விவசாயிகளின் வீடுகளில் கலை வேலைப்பாடுகளுடன் இருக்கும் மரச் சிற்பங்கள் இருப்பதைத் தேடி ஸாம்பி என்ற ஆசாரியுடன் நான் பாலித் தீவின் ஒரு மூலையில் இருக்கும் கிராமப் புறங்களில் நடந்து கொண்டிருந்தேன். அப்படிப் போகும்போது சம்புவன் என்ற ஒரு காட்டு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு மரத்தில் சிற்பங்கள் செய்யும் ஒரு வயதான மனிதர் இருக்கிறார் என்றும் 'கொடிகளில் ஓய்வெடுக்கும் பறவை'களும் 'தாமரை மொட்டுகளில் சிக்கிக் கிடக்கும் மீன்'களும் அந்த மனிதரின் அருமையான கலைப் படைப்புகளென்றும் சொல்லி, ஸாம்பி நடுப்பகல் நேரத்திற்கு என்னை சம்புவன் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்தச் சிற்பியின் வீட்டை நோக்கி நடக்கும்போது காட்டு மூலையில் ஆமையின் உடலமைப்பில் ஒரு பாறைக்குப் பின்னால் ஒரு காம்போஜ மரத்திற்கு அடியில் (காட்டு செண்பக மரத்தை காம்போஜம் என்றுதான் பாலிக்காரர்கள் அழைக்கிறார்கள்) ஒரு வயதான கிழவி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அவளுக்கு முன்னால் ஒரு கட்டு சுள்ளி விறகு இருந்தது. காட்டில் விறகு பொறுக்குவதற்காக வந்த ஒரு கிழவி களைப்பு போக்க அங்கு உட்கார்ந்திருக்கிறாள் போலிருக்கிறது என்று நான் நினைத்தேன்.

"பாத்ரீதேவி, உன் காதலன் வந்தாச்சா?"- என்னுடனிருந்த ஸாம்பி ஆசாரி அந்தக் கிழவியைப் பார்த்து மரியாதையுடன் அழைத்துக் கேட்டார்.

கிழவி ஈறுகள் தெரிய சிரித்தவாறு பதில் கூறுவதைக் கேட்டேன்.

"வருவார்... வருவார்... இன்னைக்கு ராத்திரி கட்டாயம் வருவார்."

நான் அந்தக் கிழவியை உற்றுப் பார்த்தேன். காய்ந்துபோன அன்னாசிப் பழத்தைப் போல சுருக்கங்கள் விழுந்த முகம். ஆடை எதுவும் இல்லாத மார்பில் முன்பு இளமை ஆட்சி செய்து கொண்டிருந்த அடையாளங்கள் இடிந்து கிடந்தன. உடுத்தியிருந்த ஸாரோங் பழையதாக மாறி, அழுக்குப் படிந்து புள்ளிமானின் தோலைப்போல மாறியிருந்தது. துளைபோடப்பட்ட காதில் ஓலைச் சுருள்கள் நுழைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெண் சாமரத்தைப் போல இருந்தது தலைமுடி. அந்த முடியில் காட்டு செண்பக மலர்கள் சூடப்பட்டிருந்தன.

அந்தக் கிழவியின் கண்கள்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தன. முதுமை சற்றும் தொட்டுப் பார்த்திராத அற்புதமான கண்கள். நீல இரத்தினங்களைப் போல அவை பிரகாசித்துக் கொண்டிருந்தன.

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபோது நான் ஸாம்பியிடம் கேட்டேன்: "அந்தப் பாட்டி யாருக்காகக் காத்திருக்கா?"

"அவளோட காதலன் முளுக்கு ஆசாரிக்காக..." ஸாம்பி சிரித்துக்கொண்டே சொன்னார்.

காதலன் முளுக்கு ஆசாரி! எனக்கு எதுவும் புரியவில்லை. இப்படி எடுத்தவுடன் புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் பாலியில் இருக்கின்றன.

ஸாம்பி தொடர்ந்து சொன்னார்: "பாத்ரித் தம்புராட்டி தன்னோட காதலனை எதிர்பார்த்து இப்படி உட்கார்ந்திருக்கிறது எப்போயிருந்துன்னு நினைக்கிற... நான் பிறக்கறதுக்கு முன்னாடியிருந்தே..."

ஸாம்பிக்கு வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்துக்குள் இருக்கும். அதாவது- நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்து அந்தப் பெண் யாரையோ எதிர்பார்த்து அங்கு உட்கார்ந்திருக்கிறாள்.

"எதுக்காக அவள் அங்கு அப்படி உட்கார்ந்திருக்கா? அவளுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா?"- நான் ஸாம்பியைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்ல... அவள் ஒரு தேவதை"- ஸாம்பி பக்தி கலந்த குரலில் சொன்னார்: "கிராம மக்கள் வழிபடுற ஒரு புதிய தேவதை."

நாங்கள் மரச் சிற்பியின் இடத்தை அடைந்தோம். அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது. ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததோம்.

திரும்பி வரும்போது ஸாம்பி காம்போஜ மரத்திற்குக் கீழே விறகு கட்டுடன் காத்திருக்கும் கிழவியின் கதையை விளக்கமாக என்னிடம் சொன்னார். சம்புவன் மலையின் மறுபக்கத்தின் அடிவாரத்தில் பழைய பாலி அரச பரம்பரையில் ஒரு சத்திரிய குடும்பம் இருந்தது. தங்களிடமிருந்த சொத்துக்களையெல்லாம் இழந்து பழைய புகழின் நிழலில் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பரிதாபமான குடும்பம் அது. இடிந்து விழுந்து கிடக்கும் மதில்களுக்குள் அரண்மனை என்ற பெயரில் ஒரு கட்டிடம்... அதற்குள் சில மனிதப் பிரேதங்கள் வசித்தன. சொக்கோர்தெ (சத்திரியன்) ஹ்ராயி என்பதுதான் குடும்பத் தலைவரின் பெயர்.

மலையின் இந்தப் பக்கத்தில் ஒரு சூத்திரக் குடும்பம் புதிதாக வந்து குடியேறியது. அந்தக் குடும்பத்தில் முளுக்கு என்ற இளைஞன் இருந்தான். அவன் ஒரு மர வேலைக்காரன். பாலியின் கலைப்பொருட்களை- குறிப்பாக மரச்சிலைகளை கிராமங்களிலிருந்து பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களை வாங்கி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்திற்குக் கொடுக்கக்கூடிய ஒரு வியாபாரத்தையும் முளுக்கு செய்து கொண்டிருந்தான்.

சம்புவன் மலையின் அந்தப் பக்கத்தில் ஹ்ராயி தம்புரானின் அரண்மனையில் அற்புதமான சில பழைய மரச் சிற்பங்கள் இருக்கின்றன என்பதை முளுக்கு எப்படியோ தெரிந்து கொண்டான். பிராமண புரோகிதர் இடுபாகுஸ் மகாதேவனுக்குச் சிறிது பணத்தைக் கொடுத்து அவர் மூலம் முளுக்கு, ஹ்ராயுடைய அரண்மனையில் இருக்கும் பழைய மரச்சிற்பங்களைப் போய்ப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினான். அரண்மனைக்குள் நுழைந்து பார்த்த போது முளுக்கு ஆச்சரியத்தில் உறைந்துபோய் விட்டான். விலை மதிக்க முடியாத பழைய மரச்சிற்பங்கள் ஏராளமாக அங்கு ஒட்டடை படிந்தும் தூசு படிந்தும் கிடந்தன. நடனமாடும் பெண்கள், நடனமாடும் ஆண்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆகியவை அற்புதமான கலை வேலைப்பாடுகளுடன் பல இனத்தைச் சேர்ந்த மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தன.


வாத்தியம் வாசிப்பவர்களும் பாடகர்களும் கூட்டமாக இருப்பது போன்ற ஒரு மரச்சிற்பம் அங்கு இருந்தது.

வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஹ்ராயி தம்புரான் அந்த மரச் சாமான்களை விற்பதற்குத் தயாராக இருக்கிறார் என்பதை முளுக்கு தெரிந்து கொண்டான். அவன் பக்குவமாக அவரைப் பார்த்துப் பேசினான். இதுவரை ஹ்ராயி அவற்றை விற்காமல் இருந்ததற்குக் காரணம் சுய கௌரவமே. கடைசியில் அவற்றை விற்க ஹ்ராயி சம்மதித்தார். ஒரே ஒரு நிபந்தனையை அவர் விதித்தார். மரச்சாமான்களை அவர் விற்கும் விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும். முளுக்கு ஒருவனுக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

முளுக்கு அப்படியே செய்வதாக அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தான்.

பழைய கலை வேலைப்பாடுகளின் மதிப்பு என்ன என்பதைப் பற்றிய தெளிவான அறிவு இல்லாத ஹ்ராயிக்கு, அந்த மரப்பொருட்களுக்கு முளுக்கு தீர்மானித்த பணம் மிகவும் அதிகம் என்பதைப் போல் தோன்றியது.

மரச்சிற்பங்கள் ஒவ்வொன்றையும் யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக இரவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம். முளுக்கைத் தவிர வேறு யாரும் அங்கு நுழையக்கூடாது என்றும் ஹ்ராயி சொன்னார்.

அந்த வகையில் ஹ்ராயியின் அரண்மனையில் எந்நேரமாக இருந்தாலும், சர்வ சாதாரணமாக நுழைவதற்கான வாய்ப்பை முளுக்கு உருவாக்கிக் கொண்டான்.

ஒருநாள் இரவு முளுக்கு ஒரு மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் நிலவறையில் இருந்த கலைப் படைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் இருந்த முழங்காலிட்டு நடனமாடிக் கொண்டிருந்த ஒரு நடன மங்கையின் புதிய சிற்பம் முளுக்கின் கவனத்தை ஈர்த்தது. முளுக்கு அந்தப் பெண் சிற்பத்தின் தோளைத் தடவினான். அடுத்த நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்து போய்விட்டான். அந்த நடன மங்கையின் கைகள் அசைந்தன. கண்களும் கால்களும் நடன முத்திரைகளுடன் இயங்கின.

திடீரென்று மெழுகுவர்த்தி அணைந்து விட்டது- யாரோ ஊதி அணைத்ததைப் போல் முளுக்கு உரத்த குரலில் கத்த நினைத்தான். ஆனால், ஓசை வெளியே வந்தால் தானே!

அப்போது இருட்டில் மணிகள் குலுங்கியதைப் போல ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. தொடர்ந்து முளுக்கின் கன்னத்தில் யாரோ மூச்சு விடுவதைப் போல இருந்தது. அவனுடைய காதில் ஒரு மென்மையான குரல் சொன்னது: "பயப்படாதே... நான் பேயோ, கெட்ட ஆவியோ இல்ல... என் பேரு பாத்ரி..."

பாத்ரி... ஹ்ராய தம்புரானின் ஒரே மகள்.

முளுக்கு ஒரு கனவுலகில் மூழ்கித் தன்னையே மறந்து விட்டான்.

பாத்ரி தம்புராட்டியின் மெல்லிய கைகள் முளுக்கின் கழுத்தை இறுகச் சுற்றின.

நிலவறையில் முளுக்கிற்கு ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த இரத்தினம் சொந்தமானது.

பாத்ரி வேறொரு கிராமத்தைச் சேர்ந்த சத்திரிய இளவரசனான ஹுராவைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தாள். பழைய அந்தஸ்துக்கு ஏற்றபடி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் திருமணத்தை நடத்துவதற்கு கையில் பணமில்லாத ஹ்ராயி தன் மகளின் திருமணத்தை நடத்தாமல் நீட்டிக்கொண்டே போனார். இப்போது அரண்மனையிலிருந்த மரச் சிற்பங்களை விற்றுக்கிடைக்கும் பணத்தைக் கொண்டு பாத்ரியின் திருமணத்தை மிகவும் விமரிசையாக அவர் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில்தான் பாத்ரி, இளைஞனும் கலை விற்பன்னனுமான முளுக்கை அரண்மனையில் தனியாகப் பார்க்க நேர்ந்தது. எல்லாவற்றையும் மறந்து அவள் அந்த காதலனிடம் தன் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.

மரச் சாமான்களை அரண்மனையிலிருந்து எடுத்துக் கொண்டு போகும் வேலையை முளுக்கு மிகவும் மந்தமாகச் செய்து கொண்டிருந்தான். அப்படியே பல இரவுகள் கடந்து போயின. நிலவறையில் பாத்ரி, முளுக்கு- இருவரின் காதல் நடனங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.

மரச்சிற்பங்களும் கலை வேலைப்பாடுகள் கொண்ட வீட்டுப் பொருட்களும் முடிந்த பிறகு, அரண்மனையின் தூண்களிலும் கதவுகளிலும் ஜன்னல்களிலும் சுவர்களிலும் மேற்கூரையிலும் இருந்த மர வேலைப்பாடுகளில் முளுக்கு கவனம் செலுத்த ஆரம்பித்தான். பணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்த ஹ்ராயி அவற்றையும் எடுத்துக் கொள்ளும்படி அவனிடம் கூறினார்.

அந்த கலை வேலைப்பாடுகள் கொண்ட பலகைகள் ஒவ்வொன்றையும் மிகவும் கவனத்துடன் பெயர்த்து எடுக்க முளுக்கிற்கு பல இரவுகள் ஆனது. இப்படி முளுக்கு மூன்று மாத காலம் ஹ்ராயியின் அரண்மனையில் ஒரு புது மணமகனைப் போல வலம் வந்து கொண்டிருந்தான்.

அரண்மனையிலிருந்த கலைப்பொருட்களெல்லாம் எடுக்கப்பட்டு விட்டன. முளுக்கிற்கு தன் காதல் தேவதையிடம் இறதி விடை பெற்றுக் கொள்வதற்கான இரவு வந்தது.

பாத்ரி முளுக்கிடம் 'த்யாங் பாமித்' (இறுதி விடை) சொல்லவில்லை. அவள் மனதில் உள்ளதை திறந்து கூறினாள். அவளுக்கு சத்திரிய இளவரசனான ஹுரோவை வேண்டாமாம். இளம் அழகனும் கலைஞனுமான முளுக்கின் மனைவியாக ஆவது என்று மனதில் தீர்மானித்துவிட்டதாக அவள் சொன்னாள்.

ஒரு சத்திரிய இளவரசியை ஒரு ஆசாரி இளைஞன் திருமணம் செய்து கொள்வது என்றால்...! சூறாவளியும் காட்டுத்தீயும் கிராமத்தில் உண்டாகப்போவது நிச்சயம்.

என்ன செய்வது என்று தெரியாமல் முளுக்கு குழம்பி நின்றான்.

பாத்ரி காதலனிடம் சொன்னாள்: "நாம கந்தர்வ திருமணம் செய்துக்கிட்டு கிராமத்தை விட்டுப் போயிடுவோம்."

முளுக்கு இந்த விஷயத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அரண்மனையிலிருந்து கொண்டுபோன மரச் சிற்பங்களை விற்பனை செய்த வகையில் டச் நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய தொகையை முளுக்கு சம்பாதித்திருந்தான். அந்தப் பணத்தைக் கொண்டு இருவரும் தூரத்திலிருக்கும் சிங்கராஜாவில் போய் வாழலாம். அங்கு அவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது.

திருமணம் எளிமையாக என்றாலும் பழைய ஆச்சாரங்களின் படிதான் நடக்க வேண்டும் என்பதில் பாத்ரி உறுதியாக இருந்தாள். பாத்ரி மாலை நேரத்தில் விறகு பொறுக்குவதற்காக சம்புவன் காட்டிற்கு வருவாள். விறகுக் கட்டுடன் அவள் காட்டின் வடகிழக்கு மூலையில் ஆமைப் பாறைக்குப் பின்னால் காம்போஜ மரத்திற்குக் கீழே அவனுக்காகக் காத்திருப்பாள். அப்போது அவளுடைய காதலன் முளுக்கு அங்கு வந்து அவளைத் தட்டிக்கொண்டு போக வேண்டும். (விறகுக் கட்டும் அதன் மீது ஒரு இடுப்புக் கச்சையும் யாருமில்லாமல் கிடப்பதைப் பார்த்து மக்கள் தங்களுக்குள் நினைத்துக் கொள்வார்கள்- அவளை 'கந்தர்வன்' கவர்ந்து கொண்டு போய் விட்டான் என்று இதுதான் ஆச்சாரம்)

சொன்னது மாதிரியே அன்று மாலை பாத்ரி இளவரசி அரண்மனையிடம் இறுதிவிடை பெற்றுக் கொண்டு சம்புவன் காட்டை நோக்கி நடந்தாள். விறகு பொறுக்கி கட்டி, ஆமைப் பாறைக்குப் பின்னாலிருந்த காம்போஜ மரத்திற்குக் கீழே போய் அமர்ந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.


ஆகாயம் அந்திச் சிவப்பு நிறத்தல் காட்சியளித்தது.

அவளுடைய கந்தர்வன் வரவில்லை.

மாலை மறைந்தது. காட்டில் இருள் படர்ந்தது.

அதற்குப் பிறகும் அவளுடைய காதலன் வரவில்லை.

ஆகாயம் புள்ளி ஆடையை உடுத்தியது. இரவில் நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.

அவளுடைய காதலன் வரவில்லை.

மறுநாள் பொழுது விடிந்த பிறகும் அவள் விறகுக் கட்டுடன் அந்தக் காட்டு செண்பக மரத்திற்குக் கீழே அவனுக்காகக் காத்து அமர்ந்திருந்தாள்... ஒரு பித்துப் பிடித்த பெண்ணைப் போல.

பாத்ரியின் காதலனுக்கு என்ன ஆனது? அந்த ஆசாரி அவளை ஏமாற்றி ஓடிவிட்டானா?

பாத்ரி சம்புவன் காட்டில் முளுக்கை எதிர்பார்த்து காத்திருந்தபோது, மலையின் மறுபக்கத்தில் ஒரு சம்பவம் நடந்தது அவளுக்குத் தெரியாது. இன்றுவரை அவளுக்கு அந்த விஷயம் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. பாத்ரி தம்புராட்டியும் ஆசாரி முளுக்கும் அரண்மனையின் நிலவறையில் கடைசி தடவையாக அங்கு பேசியதை அங்கு இருக்கும் கிழவியான தாசி ராக்கா தானிய அறையில் ஒளிந்திருந்து கேட்டாள்.

மறுநாள் பொழுது விடிந்தவுடன் ராக்கா பாத்ரியின் எதிர்கால கணவனான ஹுராவைத் தேடிச் சென்று தான் கேட்ட விஷயத்தை அவனிடம் கூறினாள். ஹுராவிடமிருந்து அவளுக்கு நல்ல ஒரு பரிசு அதற்காகக் கிடைத்தது. அன்று மாலை ஹுராவும், உடல் பலம் கொண்ட மூன்று நான்கு ஆட்களும் சம்புவன் மலையின் மூலையில் ஒளிந்திருந்தார்கள். பயணத்திற்கான மூட்டையுடனும், பணப்பையுடனும் சம்புவன் காட்டை நோக்கி பாத்ரியைத் தேடிவந்த முளுக்கை அவர்கள் ஓடிப்போய்ப் பிடித்தார்கள். அவர்கள் அவனை அடித்துக் கொன்றார்கள். பிணத்தை அங்கேயே ஒரு குழியைத் தோண்டி புதைத்து மூடிவிட்டார்கள். பணப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் திரும்பிப் போனார்கள்.

அரண்மனையில் மகள் இல்லாததைத் தெரிந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளான ஹ்ராயி மறுநாள் காலையில் அவள் சம்புவன் காட்டில் அமர்ந்திருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டார் ஹ்ராயி அங்கு சென்றார். கிராம மக்கள் சிலரும் அங்கு இருந்தார்கள்.

ஹ்ராயி தன் மகளை வாரி அணைத்துக் கொண்டார்.

பாத்ரி அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழவில்லை.

"நான் என்னோட காதலனுக்காகக் காத்திருக்கேன்... நான் என் காதலன் முளுக்குகூட போகப்போறேன்."

அவள் எல்லாருக்கும் தெரியச் சொன்னாள்.

மகளின் வார்த்தைகளைக் கேட்ட ஹ்ராயி தன் காதுகளை மூடிக்கொண்டு அரண்மனையை நோக்கித் திரும்பி ஓடினார்.

அன்றே ஹ்ராயி, இடு பாகுஸ் மகாதேவனை வரவழைத்து பாத்ரிக்குப் பிண்டம் வைத்து, அவளை குலத்திலிருந்து நீக்கி வைத்தார்.

அதே நேரத்தில், கிராம மக்கள் பாத்ரியை சம்புவன் காட்டின் ஒரு தேவதையாக வழிபட்டார்கள்.

கிராம மக்கள் காம்போஜ மரத்தடியில் தேவியைப் பூ அணிவித்து பூஜை செய்தார்கள். அவர்கள் தேவிக்கு அப்பத்தையும், பழங்களையும் மற்ற உணவுப் பொருட்களையும் நிவேதனமாகத் தந்தார்கள். விறகுக் கட்டையும் அவர்கள் பூஜை செய்து வணங்கினார்கள்.

ஆட்களுக்கு காய்ச்சல் வந்தால் அவர்கள் பாத்ரிதேவிக்கு நேர்ந்தார்கள். சிலரின் காய்ச்சல் நீங்கும். அப்போது தேவியின் புகழ் மேலும் பெருகும். இப்படியே வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

பாலித்தீவில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தன.

டச்சுக்காரர்கள் போய் நாடு விடுதலை ஆனது.

ஹ்ராயியின் வம்சம் வேரோடு ஒன்றுமில்லாமல் போனது. அரண்மனை இருந்த இடத்தில் இப்போது ஒரு மாம்பழத் தோப்பு இருக்கிறது. டச்சுக்காரர்களுக்கு எதிராக நடந்த போரில் ஹுரா கொல்லப்பட்டான்.

இருந்தாலும், பாத்ரி நாற்பத்தைந்து வருடங்கள் கடந்த பிறகும் அங்கு- அந்த காட்டு செண்பக மரத்திற்குக் கீழே விறகுக் கட்டுடன் தன்னுடைய காதலனை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது தொடர்கிறது...

பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பாலியில் சம்புவன் காட்டில் செண்பக மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்தக் காதல் தேவியை நான் பார்த்தேன். பாத்ரி இப்போதும் அதே இடத்தில்தான் அமர்ந்திருக்கிறாளா? இல்லாவிட்டால், வேறொரு காதலன்- மரணம் என்ற பெயரைக் கொண்ட காதலன்- அவளைத் தட்டிக்கொண்டு போயிருப்பானா?

எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம் மிகவும் வயதாகி முதுமை நிலையில் இருக்கும் கிளைகளில் பொன் நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்க நின்றிருக்கும் அந்தக் காட்டு செண்பக மரம் இப்போதும் அங்கு இருக்கத்தான் செய்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.