Logo

முட்டாள்களின் சொர்க்கம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6615
muttalkalin sorgam

வள் ஏன் அவனை அப்படி வெறித்துப் பார்க்க வேண்டும்? இதயத்தையே வெளியே பிடுங்கி எடுப்பதைப்போல பார்க்கிறாளே! ஒருவித குழப்பத்துடன் புத்தகத்தை மீண்டும் புரட்டினான் அவன். சிறிது நேரம் கழித்து மைதானத்தின் பக்கம் தன் கண்களை ஓட்டினான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. சூரியன் வானத்தில்”சுள்”என்று காய்ந்து கொண்டிருந்தது. லேசான தயக்கத்துடன் அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தான்.

அவள் அந்த இடத்தை விட்டுப் போகவேயில்லை.

அவனையே பார்த்தவாறு அப்போதும் நின்றிருந்தாள். பாதையின் ஒரு ஓரத்தில்தான் அவள் நின்றிருந்தது. நல்ல சதைப்பிடிப்பான உடம்பு. பார்க்க அழகாகவே இருந்தாள். ரோஸ் வண்ணத்தில் இருந்த புடவைக்குள் வெள்ளை பாடி அணிந்திருந்தாள். பாடி வெள்ளை நிறமா கருப்பா? அவனால் இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. முகம் வட்டமாக இருந்தது. நெற்றியின் அகலம் சற்று குறைவானதே. கண்கள் ஏற்கெனவே நன்றாக அழுதவை போலிருந்தன. சிறிய பொன்னாலான மூக்குத்தி ஒரு பக்கத்தில் அழகாக மின்னியது. அவ்வப்போது தலைமுடியை அவிழ்ப்பதும் தூக்கிக் கட்டுவதுமாக இருந்தாள் அவள். அதனால் கையைத் தூக்கும்போது அவள் கை இருக்கும் பகுதியை அவனால் அடிக்கொரு தரம் பார்க்க முடிந்தது. இளமையின் மதர்ப்பு அவளின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. அவளின் பெரிய மார்பகங்களும் தடிமனான பின்பகுதியும் அவன் மனதை என்னவோ செய்தன. அதைப் பார்த்த கணத்தில் அவனின் நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்ததுபோல முறுக்கேறி நின்றன.

அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் உதயமாயின.அவள் ஒரு அழகு தேவதையாக அவனுக்குப் பட்டாள். அவளை அப்படியே வாரி எடுத்து மார்போடு சேர்த்து வைத்து இறுகக் கட்டிப்பிடித்து மூச்சு முட்ட அணைக்க வேண்டும்;அவளின் அதரங்களில் தன் உதடுகளைப் பதித்து முத்தம் தரவேண்டும் என்று அவன் மனம் வேட்கை கொண்டது. யாரென்றே தெரியாத ஒரு ஆண், இதற்குமுன் பார்த்தே இராத ஒரு பெண்ணைப் பற்றி இப்படி எண்ணிப் பார்ப்பது என்பது... தப்பான ஒன்றுதானே இது! அவன் எழுந்து கால்போன போக்கில் நடந்து போனான். திரும்பிப் பார்த்தால்  ஒருவேளை மீண்டும் அந்தப் பெண் அவன் கண்களில் படலாம்- மீண்டும் அந்த ஆசைகள் அவன் மனதின் அடித்தளத்தில் எழுந்து பூதாகார வடிவம் எடுக்கலாம்...!

மறுநாள் அவன் அதே இடத்திற்குப் போனான். அவள் அங்கு இல்லை. போகும் பாதையில் மைதானத்தை அடுத்து இருந்த பெஞ்ச்சுகளில் ஒன்றில் போய் அவன் அமர்ந்தான். அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று அவன் மனம் முடிவெடுத்திருந்தாலும், அதை எல்லாம்மீறி அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் போகத்தான் செய்தன.

அவள் அங்கு இல்லை.

அவன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தான். இனிமேல் அங்கு போகக்கூடாது என்று முடிவெடுத்த அவன் தன் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தான். இருந்தாலும், மனதில் ஒரு நிறைவு கிடைக்கவில்லை. அவனுக்கு இதற்கு முன்பு பழக்கமே இல்லாத நகரம். பழக்கமே இல்லாத மொழி. எல்லாமே அவனுக்கு அறிமுகமே இல்லாதவை. அதனாலென்ன? ஆணும் பெண்ணும் இதற்கு முன்பு அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்திராதவர்களாக இருந்தால்தான் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது இயற்கையான ஒரு விஷயம்தானே? இந்த உலகத்தில் அவன் வாழ ஆரம்பித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன! அவன் உடம்புக்குள்ளும் ரத்தமும், உணர்ச்சியும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்படியே வெறுமனே எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரகதியாய் எத்தனை ஆண்டுகள்தான் வாழ்ந்து கொண்டிருப்பது? அவன் மனதில் சொல்லப்போனால் ஒருவித எரிச்சலே உண்டானது. இப்படி தனியாகவே வாழ்ந்து கொண்டிருப்பது நல்லதா? இரவு வந்ததும் வெளியே புறப்பட்டு நடந்தான். வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரமும், மகிழ்ச்சியின் வெளிப்பாடுமாய் இருந்தன. கூக்குரல்களும், பேச்சு சத்தமும், சிரிப்பொலிகளும்... மக்கள் சாலைகளிலும், தெருக்களிலும் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். வாகனங்கள் ஒலி எழுப்பியவாறு ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன. மைதானத்தை அவன் அடைந்தான். மரநிழலில் இருந்த பெஞ்ச்சில் போய் அமர்ந்தான். அவனது சூடாகிப் போயிருந்த உடல்மேல் மென்மையான காற்று பட்டு சுகமான அனுபவத்தைத் தந்தது. காற்று மேனியை வருடியதும், புத்துணர்ச்சி பெற்றதுபோல் உணர்ந்தான் அவன். ஆகாயத்தில் பூக்களென நட்சத்திரங்கள் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஆனால், பாதையைப் பார்த்தான்- யாருமில்லை.

அவள் எங்கே போனாள்?

அதற்குப்பின் ஒவ்வொரு நாளும் அவளை அவன் பார்ப்பான். அவளும் அவனைப் பார்ப்பாள். கண்களாலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டார்கள். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆணான அவனும் ஏன் பதிலுக்கு அவளை நோக்கி புன்னகை புரியக்கூடாது? ஏன் ஒரு ஆணால் புன்னகைக்க முடியவில்லை? கௌரவம் என்ற போலிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு மனதைக் குறுக்கியவாறு இருப்பதற்குப் பெயர்தான் ஆண்மை என்பதா? அவனாலும் சிரிக்க முடியும். ஆனால், அந்தச் சிரிப்பு அழகானதாக இல்லாமல், பார்க்கச் சகிக்க முடியாதது மாதிரி இருந்துவிட்டால்...? அவன் எழுந்து தான் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பினான்.

அவனைப்போல திருமணமாகாத அவனது நண்பர்கள் பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்களைப் பற்றிய உஷ்ணமான சிந்தனை எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கத்தான் செய்கின்றன. அவனைப் பார்த்ததும் அவர்கள் பேச்சை வேறு விஷயங்களுக்கு மாற்றினார்கள். எல்லாருமே காம விஷயத்தில் பயங்கரமான தாகத்துடன் இருந்தார்கள். இப்படியே வருடக்கணக்கில் மனதில் காம எண்ணங்களுடன் அவர்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்ததுதான் விந்தையிலும் விந்தை. அவர்களில் யாருக்குமே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அவளைக் காப்பாற்றும் அளவிற்கு வருமானம் இல்லை என்பதே உண்மை. நகரத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்களின் செலவுக்கே சரியாக இல்லை. இருந்தாலும், சாலையில் பெண்கள் யாராவது நடந்துபோனால் அவர்களை வெறித்துப் பார்ப்பதை மட்டும் அவர்களால் நிறுத்தவே முடிவதில்லை. ஆரம்பத்தில் அவனைப்போல் அவர்களும் கௌரவம்  பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், காலப்போக்கில் அந்த மாதிரியான குணமெல்லாம் அவர்களை விட்டுப் போயே போய்விட்டது. பெண்களைப் பற்றிப் பேசுகிறபோது, அவன் மட்டும் கூறுவான்:

“சே... சே... என்ன பேச்சு பேசுறீங்க? நாம நாகரீகம் உள்ள மனிதர்களாச்சே!”

அவன் சொல்வதை அவர்கள் யாரும் மறுப்பதில்லை. நாகரீகம் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன? மேடைப் பேச்சுக்களில், பத்திரிகைகளில்... பகல் நேரங்களில்... எல்லாரும் நாகரீகமாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.


நண்பர்களை அவன் எப்போதும் குற்றம் சொல்லுவான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பெண்களை விரும்புவது மாதிரி அவர்கள் வேறு பலவற்றையும்கூட விரும்புகிறார்கள். ஒருவன் கிளியை விரும்புகிறான். இன்னொருவன் நாய்மீது அன்பு செலுத்துகிறான். வேறொருவனுக்குப் பூனையைப் பிடிக்கிறது. இன்னொருவன் ஒரு அணிலைப் பிடித்து வளர்த்துக் கொண்டிருக்கிறான். கொஞ்சம்கூட நாகரீகமே இல்லாதவர்கள்- அவன்  அவர்களைத் திட்டுவான். அவன் முகத்திற்குப் பவுடர் இட்டான். தலைமுடியை நன்றாக வாரினான். ஒரு திருடனைப்போல வெளியே இறங்கி நடந்தான். நாகரீகம் பார்க்கும்- கௌரவம் பார்க்கும் அவன் எங்குதான் போகிறான்? சில நிமிடங்களில் அவன் வழக்கமாக உட்காரும் அந்த பெஞ்ச்சில் ஒரு காலை வைத்தவாறு, சாலைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த பாதையைத் தாண்டி இருந்த இறக்கத்தைப் பார்த்தான். மரங்களுக்கு மத்தியில் இருந்த ஒரு சிறு குடிசை வாசலில் அந்தப் பெண் நின்றிருந்தாள். அவள் கூந்தலில் காட்டுப் பூக்களைச் சூடியிருந்தாள். மார்பகத்தின் வனப்பை அவள் உள்ளே அணிந்திருந்த வெள்ளை நிற பாடி மேலும் கூட்டியது. மெல்லிய புடவைக்குள் பாவாடை தெரிந்தது. அதற்குள்... ஓ... மனம்தான் எத்தனை வேகமாக இயங்குகிறது! கடைசியில்... அவனை அவள் பார்த்துவிட்டாள்.

வேறு யாராவது அவனை கவனிக்கிறார்களா என்ன?

வாய் வறண்டு போய்விட்டது. உடம்பில் ரத்தமே இல்லாதது போல் உணர்ந்தான் அவன். எதுவுமே செய்யாமல் மவுனமாக பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தான். மைதானத்திற்குச் சற்று தூரத்தில் காக்கி ட்ரவுசர் அணிந்த கருத்த மனிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்த பெஞ்ச்சுகளில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள்தான் இருந்தார்கள். அவனுக்கு ஒருவிதத்தில் பொறாமையும் கவலையும் உண்டானது. வேறு யாரும் அவளைப் பார்த்துவிடக் கூடாது! இப்போது என்ன செய்வது? மனதிற்குள் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான். மற்ற யாரும் அந்த அற்புத ரத்தினத்தைப் பார்த்துவிடக்கூடாது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவன் மீண்டும் எழுந்தான்.

அவள் அதே இடத்தில்தான் நின்றிருந்தாள்.

அவன் இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. என்ன காரணம்? சாலைகளிலும் தெருக்களிலும் நூற்றுக்கணக்கான பெண்களை          அவன் தினமும் பார்க்கத்தானே செய்கிறான்! மற்றவர்களிடமிருந்து  இவள் மட்டும் என்ன வித்தியாசம்? பெண் என்ற அந்த உருவத்தை ஆண் என்ற இந்த உருவம் ஏன் இப்படி அடக்கமுடியாத ஆவலுடன் வெறித்துப் பார்க்க வேண்டும்?
அதில் என்னவோ மகத்துவம் இருக்கிறது. அது மட்டும் உண்மை.காதல் என்ற மொட்டு விரிந்து காயாக மாறுவதற்குப் பெயர்தான் காமமா? பெண் இந்த மண் என்று வைத்துக்கொண்டால், வித்து என்று ஆணின் சக்தியைத்தான் சொல்ல வேண்டும். சிந்தனைக்கு ஒரு முடிவே இல்லாமல் அவன் சிந்தித்துக் கொண்டே இருந்தான். விளைவு- அவனே தளர்ந்துபோய்விட்டான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்- அவன் மனம் முழுக்க அவள் இருந்தான்.

சில நிமிடங்களில் சூரியன் மறைந்து போனான். மின்விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இப்போதும் அந்தப் பாதையில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

அவன் உடல் நெருப்பென எரிந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் எல்லாரும் போய் விட்டிருந்தார்கள். அவன் மட்டும் தனியே இருந்தான்.

அவள் அவனுக்கு அருகில் வந்தாள்.

எழுந்து அவளைக் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தால் என்ன? வந்து நின்றவுடன், அவள் மெதுவான குரலில் கேட்டாள்:

“ஒரு அஞ்சு பைசா எனக்குத் தர முடியுமா?”

ஐந்து காசு! ஓ... அவள் தன்னை இவ்வளவு விலை குறைந்தவளாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள்!

அவனால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் இந்த அளவுக்குத் தாழ்ந்தவள் இல்லை. அவன் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பர்சை எடுத்தான். அதில் இருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவள் கையில் தந்தான். பிறகு மெதுவான குரலில் சொன்னான்:

“சில்லரையில்லை...”

அவள் கேட்டாள்:

“நான் மாத்திக்கிட்டு வரட்டா?”

அவன் சொன்னான்:

“வேண்டாம்...”

அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். அவனுக்கு மிகமிக சமீபத்தில். அவளிடம் பவுடர் வாசனை எதுவும் வரவில்லை. வியர்வை நாற்றம் லேசாக வந்தது. பெண்ணின் உடம்புக்கென்றே இருக்கும் அற்புதமான அந்த மணம் அவளின் உடலில் இருந்து வந்தது. அந்த மணம் நாசித்துவாரத்திற்குள் நுழைந்ததுதான் தாமதம், அவன் மேலும் அதிக உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தான்.

அவளின் கையைத் தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தால் என்ன என்று நினைத்தான்.

அவள் சொன்னாள்:

“உங்களைப் பார்த்தப்போ இந்த ஊர் ஆள் இல்லைன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். எங்களோட மொழியைச் சரியா பேசத் தெரியாதா?”

“தெரியாது...”

“இங்க என்ன வேலை பாக்குறீங்க?”

அவன் தான் பார்க்கும் வேலையைச் சொன்னான். அவளுக்கு அது புரிந்ததோ என்னவோ? அவள் கேட்டாள்:

“உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”

“இல்ல...”

“எங்கே தங்கி இருக்கீங்க?”

அவன் தெருப் பெயரையும், வீட்டு எண்ணையும் சொன்னான்.

அப்போது அவள் சொன்னாள்:

“அப்ப ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க...”

அவன் கேட்டான்:

“உன்னோட பேர் என்ன?”

அவள் தன் பெயரைச் சொன்னாள். தாழ்ந்த குரலில் சில நிமிடங்கள் தன்னைப் பற்றிய சில தகவல்களை அவள் சொன்னாள். அவளுக்குத் தந்தையும், தாயும் இருக்கிறார்கள். கணவனும் இருக்கிறான். ஆனால், கணவன் வீட்டிற்கு வருவதில்லை. அவன் பக்கத்தில் இருக்கிற நகரத்தில் ஒரு சிறு ஹோட்டலை நடத்திக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அங்கே ஒரு வைப்பாட்டி இருக்கிறாள். அவன் அப்படிச் செய்வது நல்லதா என்ன?

அவன் கேட்டான்:

“உனக்கு குழந்தைகள் இருக்கா?”

அவள் சொன்னாள்:

“எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ளேயே நாங்க பிரிஞ்சிட்டோம். இது நடந்து மூணு வருஷமாச்சு...”

அதற்குப் பிறகு ஒரே அமைதி. மூன்று வருடங்கள்! அவளைத் தனக்குப் பக்கத்தில் பெஞ்ச்சில் அமரச் சொன்னால் என்ன என்று அவன் நினைத்தான்.

நாட்கள் கடந்துபோயின. எத்தனையோ நாட்கள்! இப்படித்தான் ஒருநாள் மதிய நேரத்தில் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு முன்னால் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையிலிருந்து அவன் தன்னை மறைத்துக் கொண்டான். ஆனால், அவனின் நண்பர்கள் அவளைப் பார்த்து விட்டார்கள். “அடடா... என்ன சரக்கு!” அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்: “அவள் இங்கேயே உற்றுப் பார்த்தாளே!”

அவர்கள் பேச்சில் அவன் கலந்து கொள்ளவில்லை. நாகரீகம் கருதி அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.

கிளியின் சொந்தக்காரன் சொன்னான்:

“அவள் இங்கேயிருக்கிற யாரையோ குறிப்பா பாக்குற மாதிரியில்ல தெரிஞ்சது!”


அணிலை வளர்ப்பவன் சொன்னான்:

“யாராக இருக்கும் அது?”

அவர்கள் பேச்சில் கொஞ்சமும் அவன் கலந்து கொள்ளாமல் இருந்தான். சாயங்காலம் ஆவதற்கு முன்பே அவன் வெளியே புறப்பட்டான். அவன் கால்கள் ஏதோ பழக்கப்பட்ட மாதிரி வழக்கமான இடத்தை நோக்கி நடந்தன. பாக்கெட்டில் பதினைந்து ரூபாய் இருந்தது. அதில் ஒன்பது ரூபாயை சாப்பிடும் இடத்திற்கு பாக்கி என்ற முறையில் அவன் கொடுக்க வேண்டும். அவன் நடந்தான். குளிர் காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்திருந்தன. பூமி அவனைப்போலவே வறண்டு போய் எவ்வளவோ காலமாகிவிட்டது! மழை வருமா? அது பெய்தால் என்ன, பெய்யாவிட்டால் என்ன? அவன் அந்த பெஞ்ச்சிற்குப் பக்கத்தில் போய் எட்டிப் பார்த்தான். இல்லை... எங்கே போயிருப்பாள்? ஒருவேளை வீட்டிற்குள் இருப்பாளோ?

அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது. எங்கே அவள் தன் பக்கத்தில் வந்து நின்றுவிடப் போகிறாளோ என்று பயந்த அவன், ஒரு மாதிரி கண்களை மூடி மூடிக் காண்பித்தான். என்ன இருந்தாலும் பகல் நேரமாயிற்றே! யாராவது பார்த்துவிட்டால் அது பிரச்சினை ஆகிவிடுமே! அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.

மாலை முடிந்ததும், அவள் வந்தாள்.

“என்ன, கொஞ்ச நாளா உங்களை ஆளையே காணோம்!” அவள் வருத்தம் கலந்த குரலில் கேட்டாள்.

அவன் சொன்னான்:

“ஆமா...”

அவள் சொன்னாள்:

“நான் ஆஸ்பத்திரிக்குப் போற வழியில உங்களோட வீட்டைப் பார்த்தேன். அங்கே இருக்குறவங்கள்லாம் யாரு?”

“என்னோட நண்பர்கள்.”

அவள் லேசாகச் சிரித்தாள்.

அவன் கேட்டான்:

“ஏன் சிரிக்கிறே?”

அவள் சொன்னாள்:

“நாம போகலாம்.”

“எங்கே?”

“என்னோட வீட்டுக்கு...”

அவனுக்கு இப்போது பயம் வந்துவிட்டது. ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டால்...? நண்பர்களுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? இருந்தாலும் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு முன்னால் போகும் குதிரைக்காரனைப் பின்பற்றும் குதிரையைப்போல் அவள் பின்னால் அவன் நடந்தான். இருண்டு போயிருந்த மரங்களுக்கிடையே இருந்த அந்தச் சிறு குடிசை இருளோடு இருளாய்க் கலந்து போயிருந்தது. சொல்லப்போனால் குடிசையே இருளில் சரியாகத் தெரியவில்லை. அங்கு எந்தவித வெளிச்சமும் இல்லை. எந்த சத்தமும் இல்லை. ஒரே அமைதி. அவன் தயங்கியவாறு நின்றான்.

“பயப்படாதீங்க... வாங்க...” அவள் அவன் கையைப் பற்றி அழைத்தாள்.

அவன் பதற்றத்துடன் கேட்டான்:

“பக்கத்துல யாராவது?...”

அவள் தைரியமான குரலில் சொன்னாள்:

“ஓ... இது என்னோட வீடு. நான்ல இதுக்கு வாடகை கொடுத்துக்கிட்டு இருக்கேன்! என்னோட உத்தரவு இல்லாம ஒரு ஆள் கூட இங்கே வரமுடியாது. அப்படி யாராவது வந்தா, கண்ணைத் தோண்டி எடுத்திடுவேன்...”

உண்மையிலேயே அவள் தைரியசாலிதான்.

அவன் அவளுடனே நடந்து சென்று வராந்தாவை அடைந்ததும் தீக்குச்சியை உரசினான். அடுத்த நிமிடம் அதிர்ச்சியடைந்தான். அந்த மங்கலான வெளிச்சத்தில் ஒரு பெண் கூனிக்குறுகிப்போய் வாசலில் உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்தான்.

“அம்மா...” அவள் சொன்னாள். “இங்கே வாங்க...”

அவ்வளவுதான்- அவனின் உணர்ச்சிகள் அடங்கத் தொடங்கின. அவளின் தாயைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. பேசாமல் திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தான்.

அவள் வாசல் கதவைத் திறந்தாள். அப்போது கதவு எழுப்பிய சத்தத்தைக் கேட்டு உலகமே எழுந்து வந்துவிடும் போலிருந்தது.

அவன் உள்ளே வந்தான். பழைய துணிகளின் தாங்க முடியாத நாற்றம்.

அவள் சொன்னாள்:

"ஒரு தீக்குச்சியை உரசுங்க.”

அவன் உரசினான்.

அடுத்த நிமிடம்- ஒரு மண்ணெண்ணெய் விளக்கு அங்கு ஒளி கொடுக்க ஆரம்பித்தது. அவள் இன்னொரு கதவைத் திறந்தாள். அவனின் உணர்ச்சிகள் அத்தனையும் மரணித்துவிட்டன என்றுகூடச் சொல்லலாம்.  செத்துப்போன பிணத்தைப் போல வெளிறிப்போன இரண்டு குழந்தைகள்! எந்தவித அசைவும் இல்லாமல் வாசல் பக்கத்தில் மல்லாக்கப் படுத்திருக்கின்றனர். வீங்கிப்போன வயிறுகள்! மெலிந்துபோன குச்சியான கை, கால்கள்! அவர்களுக்கு அருகில் ஒரு கிழவன்-

“என்னோட அப்பா...” அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “இவருக்கு கண் தெரியாது!”

அவன் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்:

“குழந்தைங்க...”

அவள் அதைக் கேட்காதது மாதிரி, தன்னுடைய ஆடைகளை நீக்கினாள். அவற்றை அவிழ்த்துக் கீழே போட்டாள். இப்போது அவள் முழு நிர்வாணமாக அவன் முன் நின்றிருந்தாள். ஒரு பெண்ணை நிர்வாணமாக அவன் வாழ்க்கையில் பார்ப்பது இதுவே முதன்முறை. அவள் விளக்கை அணைத்தாள். அவனுக்கு என்னவோபோல் இருந்தது. மனம் மிகவும் கனத்தது. வாய்விட்டு உரத்த குரலில் அழவேண்டும் போலிருந்தது. அவன் உணர்ச்சிகள் செத்துப்போய்க் கிடந்தன. என்ன வாழ்க்கை இது!

அவள் அவனின் கையை எடுத்து முத்தமிட்டு, அதை அவளின் மார்பகத்தின்மேல் வைத்தாள். கல்லாலான பழமைவாய்ந்த ஒரு பெண் சிலையின் மார்பகத்தைத் தொட்டதைவிட அப்படியொன்றும் எந்தவித வேறுபாட்டையும் அவனால் அப்போது உணரமுடியவில்லை. அவளின் வயிறு ஒட்டிப் போய்க் காணப்பட்டது. என்ன காரணமாக இருக்கும்?

அவன் கேட்டான்:

“சாப்பிடலியா?”

“இல்ல...” அவள் சொன்னாள்: “காலையில கொஞ்சம் அவிச்ச பயறைச் சாப்பிட்டேன்.”

அவன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து, ஒரு நோட்டை எடுத்தான். பத்து ரூபாயா? ஐந்து ரூபாயா?

“இந்தா... இதை வச்சுக்கோ...” அவன் சொன்னான்: “மற்ற எதையும் நினைக்காதே...”

அவள் அந்த நோட்டை வாங்கி வாசல் கதவைத் திறந்து தாயிடம் என்னவோ சொல்லிக் கொடுத்துவிட்டு, திரும்பி வந்தாள். மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. கடைசியில் எப்படியோ மழை வந்துவிட்டது!

அவன் சொன்னான்:

“நான் போறேன்...”

அவள் அவனை இறுகக் கட்டிப்பிடித்தாள்:

“நான் போக விடமாட்டேன்.”

அவன் சொன்னான்:

“எனக்கு மனசு என்னவோ போலிருக்கு!”

அவள் கேட்டாள்:

“என்ன காரணம்?”

அவன் பதில் பேசவில்லை.

மேலே வேயப்பட்டிருந்த ஓலைகளை ஊடுருவி குளிர்ந்த காற்று வீசியது. சிறிய கற்களை எடுத்து எறிவதைப்போல, மழைத் துளிகள் வீட்டின் கூரைமேல் விழுந்தன. மழை கொஞ்சம் பெரிய மழைதான். மழையால் பூமி குளிர்ந்தது. அவன் உன்மனம் உணர்ச்சியே இல்லாமல் செயலற்று இருந்தது. மூச்சு முட்டுவதுபோல் உணர்ந்தான் அவன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பசியால் வாடிப் போயிருக்கும் ஒருவன் முன்னால் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி செத்துக்கிடந்தால் எப்படி இருக்கும்? அப்படி உணர்ந்தான் அவன். அவனால் இனிமேலும் அங்கிருக்க முடியாது. உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும்போல் உணர்ந்தான் அவன். இதயத்தைப் பிளந்து ஓங்கி அழவேண்டும்போல் இருந்தது அவனுக்கு.

அவன் சொன்னான்:

“நான் போறேன்...”

அவள் கேட்டாள்:

“ஏன், என்னைப் பிடிக்கலியா?”

அவன் ஒன்றுமே பேசாமல் மீதியிருந்த ரூபாய் நோட்டையும் எடுத்து அவள் கையில் தந்துவிட்டு வெளியே வந்தான். எதையோ உடலில் சுற்றிவிட்டுக் கொண்ட அவளும் வெளியே வந்தாள். மழையில் நனைந்தவாறு அவளும் அவனுடன் சாலை வரை வந்தாள். அவன் திரும்பிப் பார்க்காமல் மழையில் நனைந்தவாறு நடந்து போனான். லேசாக அவன் அழவும் செய்தான். வினோதமான வாழ்க்கை... அவள்... தாய்... தந்தை... பிணத்தையொத்த குழந்தைகள்... அந்த நாற்றம்... நடந்தவாறே அவன் சிந்தித்தான். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்குத்தான் இதயத்தையே பிடுங்கி எடுப்பது மாதிரி என்னையே அவள் பார்த்தாளா?

மங்களம்

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.